All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "தழலாய் நின் நேசம்..!!" - கதை திரி

Status
Not open for further replies.

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ அடுத்த கதைக்கான அறிவிப்போடு வந்துவிட்டேன்..

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக செய்ய நினைத்து தள்ளிப் போய் கொண்டே இருந்த ஒரு சிறு முயற்சி இது. இந்த முறை செய்தே தீருவது என்ற முடிவோடு வந்து விட்டேன்..

அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா.. அது வந்து.. அது வந்து நான் ஒரு சீரிஸ் எழுத போறேன்.. ஹிஹிஹி.. யாரும் அடிக்க வராதீங்க, அதற்கும் வழக்கம் போல் உங்களில் அன்பும் ஆதரவும் கிடைக்குமென நினைத்தே இந்த முயற்சியில் இறங்கி இருக்கேன்..

இதில் மொத்தம் ஆறு கதைகள் வரும்.. ஆறு கதைகளின் கதாபாத்திரங்களும் ஒருவரோடு ஒருவர் எப்படி தொடர்பு உடையவர்கள் என்பதை எல்லாம் கதையின் போக்கில் தெரிந்துக் கொள்ளுங்கள்..

இந்த கதைகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று இழைந்து வருவதால் இழை என்ற பெயரிலேயே இவை வெளி வரும்..

இனி கதையை பற்றி பார்ப்போமா..?

முதல் கதை அதாவது இழை 1..

இதன் நாயகன் இதுவரை நான் என் கதைகளில் தொடாத ஒரு பின்னணியை கொண்டவன்.. யாரென ஏதாவது உங்களால் கணிக்க முடிகிறதா..?

1.. 2.. 3..

ஒகே நானே சொல்லி விடுகிறேன்.. இந்த கதையின் நாயகன் அரசியல் பின்னணியைக் கொண்டவன், கதையும் அரசியல் பின்புலத்தை கொண்டே நகரும்..

கதையின் தலைப்பு : தழலாய் நின் நேசம்..!!

34888

நாயகன் : நிமலன் நெடுஞ்செழியன்

நாயகி : தமயந்தி ஜெயதேவன்


ஏப்ரல் 12 முதல் நம் வழக்கமான நாட்களான வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கதை தொடர்ந்து வரும்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34889
தழல் – 1

கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தைக் கலிதோஷம் நீங்கிடவே

திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்

என்று எங்கோ ஒலித்துக் கொண்டிருக்க.. அந்த அதிகாலை அமைதியில் மெலிதாக அந்தப் பாடல் காற்றைக் கிழித்துக் கொண்டு காரில் பறந்து கொண்டிருந்த நிமலனின் செவியை வந்து தீண்டியது.

அதில் இனிமையான அந்த இசையை விழிமூடி ஒரு நொடி உள்வாங்கியவனுக்கு மனம் ஒருவித அமைதியை கொடுக்க.. இதே மனநிலையை நீடிக்க விரும்பி, காரில் இருந்த இசை தட்டில் பாடலை ஒலிக்க விட்டான் நிமலன் நெடுஞ்செழியன்.

அனைவரையும் போலவே நிமலனுக்கும் கார் பயணத்தின் போது இளையராஜாவையே கேட்க பிடிக்கும். மெல்லிய குரலில் அங்கு இசை வழிந்தோட.. அதை ரசித்தவாறே பயணித்துக் கொண்டிருந்தவனின் மனம் சற்று அமைதியானது.

கடந்த சில நாட்களாகவே அவன் மனம் ஒருவித அழுத்தத்தையும் வலியையும் உணர்ந்து கொண்டே இருந்தது. அதிலிருந்து வெளி வரும் வழியும் தெரியாமல், வெளி வரவும் முடியாமல் தவித்திருந்தவனுக்குத் தன் மனநிலையை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியா ஒரு நிலை தான்.

அதனாலேயே ஒரு மாற்றத்திற்காக பெங்களூர் சென்று விட்டவனுக்கு இப்போதைக்கு இங்குத் திரும்பி வரும் எண்ணமே இல்லை. ஆனால் கட்சி மேலிடத்தில் இருந்து அவனுக்கு இன்று இங்கு வந்தேயாக வேண்டுமென்ற கட்டளை வந்திருக்க.. அதை மீற முடியாமல் கிளம்பி வந்து கொண்டிருந்தான் நிமலன்.

மனம் முழுக்க அவ்வளவு கோபமும் வெறுப்பும் இருந்தது. அதை மறைத்துக் கொண்டு ஊர் உலகத்திற்காக அங்குச் சென்று எதுவுமே நடக்காதது போல் புன்னகை முகமாக ஊடகங்கள் முன்பு நிற்க வேண்டிய சூழல்.

ஆனால் இதைத் தவிர்க்கவும் முடியாது என்று புரிந்தே நேற்றில் இருந்து எது நடந்தாலும் எத்ர்வினையாற்றவே கூடாது என்று தன் மனதை பெருமளவில் தயார் செய்து கொண்டே கிளம்பி வந்து கொண்டிருந்தான் நிமலன்.

நேற்று இரவு கிளம்பும் போதே தன் பாட்டி சூர்யகலாவுக்கு அழைத்து விவரம் சொல்லி இருந்தான் நிமலன். இல்லையெனில் அவர் அங்குச் செல்ல வேண்டாமெனப் பெரும் பிரச்சனை செய்ய வாய்ப்பிருப்பது அறிந்தே முதலில் இதைச் செய்திருந்தான் நிமலன்.

அப்போதும் அவன் எதிர்பார்த்தது போலவே, “அதெல்லாம் நீ அங்கே போகணும்னு அவசியமில்லை நிமலா.. அப்பறம் ஏதாவது காரணம் சொல்லிக்கலாம், நீயும் இப்போ ஊரில் இல்லை.. அதனால் இதையே கூட நீ காரணமா சொல்லிக்கலாம்..” என்று அவனை வர விடாமல் தடுக்கவே முயன்றார் சூர்யகலா.

அவனே விருப்பமில்லாமல் கிளம்பி வந்து கொண்டிருக்கும் நிலையில் இது வேறு அவனுக்கு எரிச்சலை தர.. அவரை எதிர்த்து பேச விரும்பாமல் “தலைவர் உத்தரவு பாட்டி..” என்று ஒருவித அழுத்தத்தோடு சொல்லி முடித்திருந்தான் நிமலன்.

இதுவே நிமலன் இனி இதைத் தட்ட மாட்டான் என்பதை அவருக்குப் புரிய வைக்கப் போதுமானதாக இருக்க.. அதோடு அமைதியாகிப் போனார் சூர்யகலா.

இதையெல்லாம் யோசித்தவாறே பயணித்துக் கொண்டிருந்தவனின் கவனத்தை கமலின் குரலில் வழிந்த பாடல் கலைக்க.. தன் கவனத்தை அந்தப் பக்கம் திருப்பினான் நிமலன்.

எந்தன் காதல் என்னவென்று…

சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது…
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்…
என்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது…
மனிதர் உணர்ந்து கொள்ள…
இது மனிதக் காதலல்ல…

அதையும் தாண்டிப் புனிதமானது…

என கமல் காதலில் உருகி பாடிக் கொண்டிருக்க.. தன் மனநிலையை மாற்ற வேண்டி, அதனோடு சேர்ந்து மெல்ல முணுமுணுத்தவாறே ஸ்டேரிங்கில் தன் விரல்களால் லேசாக தாளமிட்டப்படியே மிதமான வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தான் நிமலன்.

அந்த அதிகாலை மூன்று மணியளவில் ஊர் உலகமே அமைதியாக இருக்க.. அந்தத் தனிமையும் குளுமையும் மனதிற்குப் பிடித்த இசையுமாக ஆள் அரவமற்ற சாலையில் பயணித்துக் கொண்டிருந்தவனின் மனம் பல மாதங்களுக்குப் பின் எந்த ஒரு யோசனையோ இறுக்கமோ இல்லாமல் கொஞ்சமே கொஞ்சம் நிர்மலமாக இருந்தது.

பெங்களூர் நெடுஞ்சாலையின் வழியே சென்னையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தவன், இன்னும் ஒரு மணி நேரத்தில் சென்னையைச் சமீபிக்க இருந்த போது திடீரென அதீத வேகத்தில் வந்த கார் ஒரு திருப்பத்தில் நிமலனின் கார் மேல் மோதுவது போல் வந்து கடைசி நொடியில் சுதாரித்து விலகி ஒடித்துத் திரும்பியது.

அதே நேரம் தன் மேல் மோத வந்த காரில் இருந்து தப்பிப்பது போல் நிமலனும் காரை சடன் பிரேக்கிட்டு அந்தக் காருக்கு எதிர் பக்கமாகத் திருப்பி இருந்ததில் பெரும் விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது.

அதில் உண்டான படபடப்போடு நிமிர்ந்து அந்தக் காரை பார்த்தவன், “ஏய் அறிவில்லை உனக்கு..? பார்த்து வர மாட்டே..? என்ன ரேஸிலேயா ஓட்டறே..?” என்றான் எரிச்சலோடு நிமலன்.

அதில் அந்தக் காரின் ஓட்டுனர் இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்தவன், “சாரி சார்.. டிரைவர் திடீர்னு கண் அசந்துட்டான்.. நான் தான் காரை ஒடிச்சு திருப்பினேன்.. ரொம்பச் சாரி..” என்று மிகப் பணிவாகப் பேசவும், இரவு நேர பயணங்களில் சில சமயம் இதையெல்லாம் தவிர்க்க முடியாது என்று புரிந்து அப்படியே அமைதியானான் நிமலன்.

அதே நேரம் எதிரில் வந்த கார் ஒடித்துத் திருப்பி இருந்ததில் அங்கிருந்த சாலை தடுப்பில் மோதி முன் பக்கம் லேசாக இடித்து அதிலிருந்து புகை வர துவங்கி இருக்க.. அதை கண்டு நிமலன் தயங்கும் போதே, “நீங்க கிளம்புங்க சார்.. நாங்க பார்த்துக்கறோம்..” என்றான் அந்தக் காரில் வந்தவன்.

அதில் நிமலன் தன் காரை நகர்த்த முயல.. அதற்கு வாய்ப்பே இல்லாமல் நிமலனின் வழியைப் பாதிக்கு மேல் மறைத்துக் கொண்டிருந்தது அந்தக் கார்.

பின்னுக்கு நகர்த்தி எடுக்கவும் முடியாதவாறு அங்கு ஒரு பள்ளம் இருந்தது.
அவர்கள் நகர்ந்தால் மட்டுமே நிமலனால் காரை எடுக்க முடியும். இதில் உண்டான சலிப்போடு “எங்கே போறது..? நீங்க நகர்ந்தா தான் நான் போக முடியும்..” என்றான் நிமலன்.

அதற்கும் மிகப் பணிவாகவே “இதோ சார், நகர்த்திடறோம்..” என்றவன் டிரைவர் இருக்கையில் இருந்தவனைப் பார்த்து, “இறங்கி காரை தள்ளு பாபு.. அப்பறம் இதெல்லாம் பார்த்துக்கலாம்..” என்றான் சிறு கட்டளை குரலில்.

அதில் அவர்கள் இருவரும் இறங்கி காரை நகர்த்த முயல.. பின்னால் நிமலனின் கார் இருந்ததோடு முன் பக்கம் சாலை தடுப்பில் எக்குதப்பாக அந்தக் கார் மோதியும் இருந்ததால் காரை அத்தனை எளிதாக அவர்களால் நகர்த்தவே முடியவில்லை.

இதைக் கண்டு பொறுமை காணாமல் போக.. ஒரு உஷ்ண பெருமூச்சோடு அவர்களையே வெறித்திருந்தான் நிமலன்.

ஏற்கனவே பல நாட்களுக்குப் பின் கிடைத்த இந்த அதிகாலை நேரத்து அமைதியையும் நிம்மதியையும் கலைத்திருந்தவர்களின் மேல் உண்டான கோபத்தோடு காரையே எரிச்சலோடு பார்த்திருந்தவனுக்கு அப்போதே பின் இருக்கையில் ஒரு பெண்ணும் இரு ஆண்களும் அமர்ந்திருப்பது தெரிந்தது.

‘அவர்கள் உள்ளே அமர்ந்திருக்கும் போது காரை எப்படி எளிதாக நகர்த்த முடியும்..? அவர்களும் இறங்கி தள்ளினால் இன்னும் வேகமாக வேலை நடக்குமே..!’ என்று தோன்றவும், அவர்களையே பார்த்தவாறு, “இப்படியே இன்னும் எவ்வளவு நேரம் நான் காத்திருக்கிறது..? எனக்கு நேரமாகுது..” என்றான் நிமலன்.

சரியாக அதைக் கவனித்து விட்ட அந்தக் காருக்கு உரியவனும், “அது எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க சார்.. அதான் இறங்கி வரலை, இதோ எழுப்பிடறேன்..” என்று அவசரமாகப் பின் பக்க கதவை திறந்து அங்கு அமர்ந்திருந்தவனிடம் எதுவோ சொல்ல.. அதற்கு அங்கிருந்தவன் ஏதோ பதிலளித்தான்.

இப்போது வார்த்தைகளால் இல்லாமல் விழியால் நிமலனை சுட்டி காண்பித்து வெளியே நின்றிருந்தவன் எதையோ புரிய வைக்க முயல.. அதில் உள்ளே இருந்தவனும் உடனே இறங்கி வந்தான்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த நிமலனுக்கு இவர்களிடம் எதுவோ சரியில்லை என மனம் அடித்துக் கூறியது. பின்னால் இருக்கும் அவர்கள் இருவரையும் பார்த்தால் தூங்குவது போலும் தெரியவில்லை.

அங்கிருந்தவாறே அவர்கள் தன்னை இருமுறை திரும்பி பார்த்ததை நிமலனும் கவனித்து இருந்தான்.
அவர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்த பெண் மட்டும் தலை சாய்ந்து இருப்பதில் உறங்கிக் கொண்டிருப்பது புரிய.. ஆரம்பத்தில் இருந்தே அந்தக் காரில் இருந்தவன் காண்பித்த அதீத பணிவும், எந்தப் பிரச்சனையும் வேண்டாம் என்பது போல உடனே தணிந்து வருவதுமாக அவன் பேசியதிலேயே முரணை உணர்ந்திருந்தவன், இப்போதே அவர்களின் தோற்றத்தை நன்கு கவனிக்கத் தொடங்கினான்.

கடோத்கஜன் போல் இருந்த நால்வரும் அவர்களுக்குக் கொஞ்சமும் சம்பந்தமே இல்லா வகையில் பட்டு வேட்டி சட்டை அணிந்திருப்பதும், இத்தனை குளுமையிலும் வேர்த்து வடிய அவர்கள் நிற்பதோடு அவ்வபோதான அவர்களின் கள்ள பார்வை தன் மேல் படித்து விலகுவதும் என எல்லாம் சேர்ந்து நிமலனின் சந்தேகத்தை அதிகமாக்கியது.

அதற்கேற்றார் போல் இப்போதும் அவர்களில் ஒருவன் காரிலிருந்து இறங்காமலே இருக்க.. அவனுக்கு அருகில் அந்தப் பெண் இத்தனை நடந்தும் கொஞ்சமும் அசைவில்லாமல் உறங்கிக் கொண்டிருந்தது வேறு எதுவோ இங்குத் தவறாக இருப்பதை மீண்டும் உறுதியாக்க.. “என்ன நடக்குது இங்கே..?” என்றவாறே காரிலிருந்து கீழிறங்கி வந்தான் நிமலன்.

அதில் நிமலனை காருக்கு அருகில் வர விடாமல் செய்ய முயன்றவாறே முதலில் பேசியவன், “ஒண்ணுமில்லை சார்.. இப்போ காரை நகர்த்திடுவோம்.. நீங்க உள்ளே உட்காருங்க..” என்று நிமலனின் வழியை மறித்தது போல் வந்து நின்றான்.

இதில் கூர்மையாக நிமலன் அவனையே பார்த்துக் கொண்டிருக்க.. அதேநேரம் தன் வழியை மறித்தது போல் நின்றிருந்தவனின் அலைபேசி சிணுங்கியது..
அதை ஒரு பதட்டத்தோடே பார்த்தவன், அழைப்பை எடுக்காமல் தவிர்க்க.. அதே நேரம் அந்தக் காரை நோக்கி செல்ல இருந்த நிமலனை கண்டவனுக்கு ஆத்திரம் தலைக்கேற “ஏய் சொல்லிட்டே இருக்கேன்.. எங்கே போறே..?” என்று தன் பணிவு, மரியாதையை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு லேசான மிரட்டல் குரலில் கேட்டவாறே நிமலனின் தோளை பிடித்து நிறுத்தினான் அவன்.

அதில் தன் மேல் கை வைத்தவனை விழியை மட்டும் திருப்பி ஒரு பார்வை பார்த்தவன், அடுத்த நொடி ஒரே சுழற்றில் அவனைத் தூக்கி கீழே வீசி அவன் மார்பில் ஒற்றைக் காலை வைத்து நின்றிருந்தான் நிமலன்.

இதைக் கண்டு திகைத்த மற்றவர்களும் வேகமாக நிமலனை தாக்க வர.. மொத்தமாக ஒரு ஐந்து நிமிடத்திற்குள் மற்ற மூவரையும் கூடச் சுருண்டு கீழே விழ செய்திருந்தான் நிமலன்.

காரை சுற்றி விழுந்திருந்தவர்களைப் பார்த்தவாறே சென்று காரின் பின் பக்க கதவை நிமலன் திறக்கவும், நிமலன் தன்னைச் சேர்ந்தவர்களை அடிப்பதை கண்ட பதட்டத்தில் வேகமாக இறுதியாக இறங்கியவனின் செயலில், கிட்டத்தட்ட இருக்கையில் சரிந்த நிலையில் இருந்த அந்தப் பெண், இப்போது மொத்தமாகக் கதவை நோக்கி சரிய.. வெளியே வந்து விழ இருந்த அவளின் முகத்தைத் தன் வலது உள்ளங்கையில் தாங்கி பிடித்து நிறுத்தியிருந்தான் நிமலன்.

மணப்பெண் அலங்காரத்தில் அழகோவியமாகத் தேவதை போல் தன் கையில் சரிந்திருந்தவளையே சில நொடிகள் இமைக்காமல் பார்த்தவன், அவள் மயக்கத்தில் இருப்பதைப் பார்த்தவுடனே புரிந்து கொண்டிருந்தான்.

பின் என்ன செய்வது என்பது போல் ஒரு நொடி தயக்கத்தோடு அவளின் முகத்தையே பார்த்தப்படி யோசித்தவன், பின் சட்டென அவளைத் தன் கைகளில் ஏந்திக் கொள்ள.. அதற்காகவே காத்திருந்தது போல் நிமலனின் மார்பில் சாய்ந்தது தமயந்தியின் முகம்.

இதில் லேசாக அதிர்ந்து அவளைப் பார்த்தவனின் நடை ஒரு நொடி தடைப்பட, பின் வேகமாகத் தன் காரை நோக்கி நகர்ந்தான் நிமலன்.

அதில் பலமாக அடிபட்டு விழுந்திருந்ததில் எழுத்துக் கொள்ள முடியாமல் இருந்த அவர்களில் தலைவன் போல் இருந்தவன், சட்டென இந்தக் காட்சியைப் படமெடுத்து தனக்கு இந்த வேலையைக் கொடுத்திருந்தவனுக்கு அனுப்பி வைத்தான்.

அதற்குள் தன் காரின் பின் இருக்கையில் அவளைக் கிடத்தி இருந்த நிமலன் சட்டென நிமிர.. அதற்கு வாய்ப்பளிக்காமல் அவளின் கழுத்தாரம் நிமலனின் சட்டை பட்டனில் சிக்கி இருந்தது.

இதை எதிர்பார்க்காமல் வேகமாக நிமிர்ந்தவன், இந்தச் சிக்கலில் தடுமாறி அவள் மேல் சாய இருந்த இறுதி நொடியில் சட்டெனத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு நின்றான் நிமலன்.

அந்தத் தடுமாற்றத்தில் அவள் மேல் சரிய இருந்தவனின் முகம் தமயந்தியின் முகத்துக்கு வெகு அருகில் நெருங்கி இருக்க.. தன்னை மறந்து ஒரு நொடி அந்த அழகிய முகத்தைக் கண்டவன், பின் சட்டென அவளிடமிருந்து வேகமாக விலகி, முன் பக்கம் சென்று முகம் இறுக அமர்ந்தான்

நிமலன்.

******************

அதே நேரம் இங்குத் திருமண மண்டபமே அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது. “என்ன நடக்குது இங்கே..? செக்யூரிட்டின்னு இத்தனை பேர் இங்கே எதுக்கு இருக்கீங்க..? நம்ம இடத்துக்குள்ளேயே நுழைஞ்சு நம்ம பொண்ணையே தூக்கிட்டு போயிருக்காங்கனா என்ன அர்த்தம்..? ஒரு முன்னாள் முதல்வர் பொண்ணுக்கே இந்த நிலைமைனா அப்போ மத்தவங்க நிலை எல்லாம் என்னவாகும்..?” என்று ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருந்தான் கிருபாகரன்.

“இல்லை சார், செக்யூரிட்டி எல்லாம் ரொம்பவே டைட்டா தான் இருந்தது.. அப்பறமும் இது எப்படின்னு தான் தெரியலை..” என்றார் அந்தச் செக்யூரிட்டி ஏஜென்சியின் தலைமை அதிகாரி ஜோஷ்வா.

“இப்படிச் சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லை.. உங்க மேலே இருக்க நம்பிக்கையில் தானே இவ்வளவு பெரிய வேலையையும் பொறுப்பையும் உங்ககிட்ட ஒப்படைச்சேன்..” எனச் சிடுசிடுத்தான் கிருபா.

அதில் சட்டென ஜோஷ்வா தலைக்குனிய.. “நான் கமிஷனர்கிட்ட பேசறேன் ப்பா.. அன்அபிஷியலா தேட சொல்றேன்..” என்று ஒரு வார்த்தை தன் தந்தையிடம் அனுமதிக்கு சொல்லி விட்டு வேகமாகக் கமிஷனர் புகழேந்திக்கு அழைத்தான் கிருபா.

அதற்கு ஒரு தலையசைப்பையே பதிலாகக் கொடுத்த ஜெயதேவின் மனம் முழுக்க வேதனை நிரம்பி இருக்க.. இருக்கையில் சாய்ந்திருந்தவரின் மனம் முழுக்க மகளையே சுற்றி வந்து கொண்டிருந்தது.

‘இப்போது எங்கு எப்படி இருக்கிறாளோ..?’ என்று எண்ணி தவித்தவருக்கு, “நீ நினைச்சதை எல்லாம் நடத்தின காலம் எப்போவோ மலையேறி போச்சு மிஸ்டர் ஜெயதேவ்.. இப்போ இது நிமலனோட காலம்.. நான் நினைச்சது மட்டும் தான் இனி இங்கே நடக்கும், நடத்தியும் காட்டுவேன், பார்க்கறியா..?” என்று சொடக்கிட்டு சவால் விட்ட நிமலனின் முகம் ஏனோ இப்போது அவரின் மன கண்ணில் வந்து நின்றது.

இதற்குப் பின் நிச்சயம் நிமலன் இருக்க வாய்ப்பில்லை என அவருக்குமே நன்றாகவே தெரியும். நிமலனுக்கு எதையுமே நேரடியாகச் செய்து தான் பழக்கம். அதிலும் வீட்டு பெண்கள் விஷயத்தில் அவன் தலையிடவே மாட்டான்.

தங்கள் எந்த ஒரு பிரச்சனையும் வீட்டில் உள்ள பெண்களைப் பாதிக்கக் கூடாது என்பதில் நிமலன் எப்போதும் தெளிவாக இருப்பான் என்று அறிந்திருந்தவர், கவலை, அசிங்கம், பயம், அவமானம், பதட்டம் என்று கலவையான மனநிலையில் அமர்ந்திருந்தார்.

வெளி தோற்றத்துக்குக் காண்பித்துக் கொள்ளவில்லை என்றாலும் ஜெயதேவனுக்கு மகளை எண்ணி மனம் பதைக்கத் தான் செய்தது. ஆனால் அப்படி அமைதியாக இருக்க முடியாமல் தமயந்தியின் அன்னை வளர்மதி அழுது கதறிக் கொண்டிருந்தார்.

‘இத்தனை அவசரமாக இந்தத் திருமண ஏற்பாட்டைச் செய்திருக்கக் கூடாதோ..?’ என்று யோசித்தவருக்கு துருவ்வின் நினைவு வரவும், “கிருபா..” என்று மகனை அவசரமாக அழைத்தார் ஜெயதேவன்.

அதில் யார் யாருக்கோ அழைத்துக் கட்டளைகளிட்டுக் கொண்டிருந்தவன், வேகமாக “சொல்லுங்க ப்பா..” என்று ஜெயதேவனை நெருங்கவும், “துருவ்..” என்று யோசனையாக நிறுத்தி மகனின் முகம் பார்த்தார் ஜெயதேவன்.

“அவனை தவிர வேற யாரு..? அவனா தான் இருக்கும், ஆளுங்களை விட்டு விசாரிக்கச் சொல்லி இருக்கேன்..” என்றான் கிருபா. அதற்குள் மணமகன் கார்த்திக்கின் தந்தை ராகவன் முகமெங்கும் கலவரத்தோடு இவர்களை நெருங்கினார்.

சற்று முன்பே தமயந்தி காணவில்லை எனத் தெரிய வந்ததும் அவர்களிடம் ஜெயதேவன் விவரம் சொல்லி மன்னிப்பும் அவகாசமும் கேட்டிருக்க.. முதலில் இதைக் கேட்டு கொந்தளித்த சில உறவினர்களையும் ராகவன் தான் அமைதிப்படுத்தினார்.

“பிரபலமா இருக்கறதே பிராப்ளம் தான் சம்பந்தி.. இதையெல்லாம் கண்டுக்காதீங்க.. நீங்க முதலில் பொண்ணுக்கு என்னாச்சு எங்கே இருக்கான்னு பாருங்க..” என்று ஆதரவாகப் பேசி இருந்தார் ராகவன்.

அதிலேயே கொஞ்சம் தைரியமாக இருந்த ஜெயதேவன், இப்போது ராகவன் பதட்டமாக வருவதைக் கண்டு அவரைப் பார்க்க.. “இதைப் படிச்சு பாருங்க..” என்று தன் கையில் இருந்த காகிதத்தை ஜெயதேவனிடம் நீட்டினார் ராகவன்.

அதை கிருபா வேகமாக வாங்கிப் படிக்க..

சாரி டேட்..

இந்தக் கல்யாணம் நடந்தா குடும்பத்தோட நம்மை வெச்சு கொளுத்திடுவேன்னு எனக்கு மிரட்டல் தொடர்ந்து வந்துட்டே இருக்கு.. மிரட்டினது வேற யாராவதா இருந்தா கூட நான் அதைப் பெருசா எடுத்துட்டு இருக்க மாட்டேன்.. ஆனா பணமும் பதவியும் கையில் இருக்க ஆள் சொல்லும் போது என்னால் அதை அப்படியே விட முடியலை டேட்..

கல்யாணம் நிச்சயமானதில் இருந்து போனில் நேரில்னு தினமும் அத்தனை மிரட்டல் வருது.. இதை உங்ககிட்ட நான் இத்தனை நாள் சொல்லாம மறைச்சுட்டேன் டேட், இப்போ என் வேலைக்கும் ஆபத்து வரும் போல் இருக்கு..

நான் லஞ்சம் வாங்கிட்டு ஒரு காப்ரேட் கம்பெனி ஆதரவா மக்களுக்கு எதிரா வேலை செய்யறதா என் மேலே போலியா ஒரு குற்றசாட்டை உருவாக்கி இருக்காங்க.. அதுக்குப் போலி ஆதரங்களையும் சாட்சிகளையும் கூடத் தயார் செஞ்சு இருக்காங்க..

இதையெல்லாம் மீடியா முன்னே கொண்டு வந்து என் பெயர் பதவின்னு எல்லாத்தையும் அழிச்சுடுவேன்னு மிரட்டறாங்க.. உங்களுக்கே தெரியும் எனக்கு இந்தப் படிப்பும் வேலையும் எவ்வளவு பெரிய கனவுன்னு, அப்படி இருக்கும் போது இதையெல்லாம் இழந்து இப்படி ஒரு கல்யாணம் எனக்கு வேண்டவே வேண்டாம் டேட்.. ஒருமுறை பெயர் கெட்டுப் போனா போனது தான், அதை சரி செய்யவே முடியாது..

இந்தக் கல்யாணம் என்னால் நிற்பதன் மூலமா என்ன பிரச்சனைகள் வரும்னு தெரிஞ்சே இப்படி ஒரு முடிவுக்கு வரேனா ஏன்னு உங்களுக்கு புரியும்னு நினைக்கறேன்..
இதனால் என்ன பிரச்சனை வந்தாலும் நான் சமாளிச்சுக்கறேன்.. ஆனா வீம்பா இந்தக் கல்யாணத்தைச் செஞ்சுட்டு உங்களையும், வேலையையும், மரியாதையையும், கௌரவத்தையும் இழந்து என்னால் வாழ முடியாது டேட்..

ஜெயதேவ் அங்கிள்கிட்டேயும் தமயாகிட்டேயும் என் மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக்கறேன்.. இப்படி ஒரு லெட்டர் எழுதி வெச்சுட்டு ஒடறதால் என்னை எல்லாம் கோழைன்னு நினைச்சாலும் பரவாயில்லை..

நானும் எல்லாரையும் போல எந்தப் பிரச்சனையிலும் சிக்காம சாதாரண ஒரு வாழ்க்கை வாழ நினைக்கற கோழையாவே இருந்துட்டு போறேன்.. ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட் இட்..

யூவர்ஸ்
கார்த்திக்

என்று எழுதியிருந்த கடிதத்தை வாய் விட்டே படித்து முடித்தான் கிருபா.

“இதைப் பார்த்தா கார்த்திக் நைட்டே இங்கே இருந்து கிளம்பி இருக்கணும்னு தோணுது.. இப்படி ஒரு முடிவுக்கு வந்தவன், முன்னேயே இதை பற்றி என்கிட்டே பேசி இருக்கலாம்.. ஆனா ஏனோ..” என்றவர், “சரி விடுங்க.. இப்போ உங்க பொண்ணு கடத்தலுக்குப் பின்னாலும் இதே ஆட்கள் இருக்க வாய்ப்பு அதிகம்னு நினைக்கறேன் சம்பந்தி..” என்றவர், “சாரி.. இனி அப்படிச் சொல்ல முடியாது இல்லையா..” என்றார் கவலை குரலில் ராகவன்.

அதே நேரம் அங்கு வந்த ஜோஷ்வா, “சார்.. இது ஒரு வெல் பிளான்ட் கிட்நாப் போலத் தெரியுது.. நம்ம இத்தனை செக்யூரிட்டியையும் மீறி, எந்தச் சிசிடிவியும் வொர்க் செய்யாம செஞ்சு கல்யாண பொண்ணை உள்ளே வந்தே தூக்கிட்டு போகணும்னா நிச்சயம் அதுக்கு இங்கே உள்ளே இருந்து யாரோ உதவி செஞ்சு இருக்கணும் சார்.. இல்லைனா இப்படி ஒரு விஷயம் நடக்க வாய்ப்பே இல்லை..” என்றார்.

இவ்வளவு நேரம் ஒருவேளை இதில் துருவ் ஏதாவது செய்திருக்கலாமோ என்ற சந்தேகத்தோடே இருந்த கிருபா மற்றும் ஜெயதேவனுக்கு இப்போது அது முழுக்க முழுக்க அவனின் வேலைதான் என்று உறுதியாகி இருந்தது.

“அவனை..” என்று ஆத்திரத்தோடு கிருபா அங்கிருந்து கிளம்பவும், “கிருபா.. இரு அவசரப்படாதே..!” என்றிருந்தார் ஜெயதேவன்.

“இதுக்கு மேலேயும் என்னை அமைதியா இருக்கச் சொல்றீங்களா ப்பா.. அப்போவே அவன் மிரட்டும் போதே இதை நான் என் வழியில் சரி செய்யறேன்னு சொன்னேன்.. அப்போவே நீங்க விட்டிருந்தா இது இன்னைக்கு இவ்வளவு தூரம் வந்து இருக்காது.. ஆனா அப்போவும் விடலை, இப்போவும் என்னை அமைதியா இருக்கத் தான் சொல்றீங்க இல்லையா.. சரி இன்னும் எவ்வளவு நாள் அமைதியா இருக்கணும் ப்பா..? அவனால் நம்ம தமயா வாழ்க்கை அழியற வரைக்குமா இல்லை அவளே இல்லாம போகற வரைக்குமா..?” என்றான் ஆத்திரத்தோடு கிருபா.

அதில் வேதனையோடு மகனை பார்த்தவர், “அவ எனக்கும் பொண்ணு தான் கிருபா, உனக்கும் மேலே எனக்குத் துடிக்குது.. ஆனா இது நம்ம பொண்ணு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமில்லை, இது இரண்டு கட்சி சம்பந்தப்பட்ட விஷயம் கிருபா.. எடுத்தோம் கவிழ்த்தோம்னு எதுவும் செஞ்சுட கூடாதுன்னு தான் இத்தனை நாளா அமைதியா இருந்தேன்.. இந்த அவசர கல்யாணமே அதுக்காகத் தான்னு உனக்கே தெரியும்.. ஆனா இத்தனைக்குப் பிறகும் நான் அப்படி இருப்பேன்னு உனக்குத் தோணுதா..? இதை எப்படி முடிக்கணும்னு எனக்குத் தெரியும்..” என்றார் ஜெயதேவன்.

அதற்குள் அவரின் அலைபேசிக்கு ஏதோ மெசேஜ் வந்த ஒலி கேட்க.. தன் அலைபேசியை எடுத்து பார்த்த ஜெயதேவன் அப்படியே திகைத்து நின்றார்.

**************

அதேநேரம் காரிலிருந்து இறங்கி தமயந்தியை தன் கைகளில் ஏந்திக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் நிமலன். அவனின் வருகைக்காகவே தன் அறையில் காத்திருந்த சூர்யகலா கார் வந்த சத்தம் கேட்டு வேகமாக எழுந்து வெளியில் வருவதற்குள், அங்கிருந்த விருந்தினர் அறைக்குள் அவளைத் தூக்கி சென்றிருந்தவன், தமயந்தியை படுக்கையில் கிடத்தி விட்டு நிமிர முயல.. அவளின் நெற்றி முடி கலைந்து தமயந்தியின் முகத்தில் வந்து விழுந்தது.
அதைத் தன் ஒற்றை விரல் கொண்டு ஒதுக்கி விட நிமலன் முயலவும், “யாரு நிமலா இது..?” என்று கேட்டப்படியே அங்கு வந்து நின்றார் சூர்யகலா.

அதில் சட்டெனத் தன் கையை மடக்கிக் கொண்டு நிமிர்ந்தவன், சுருக்கமாக நடந்ததை அவரிடம் சொன்னான். அதில் திரும்பி படுக்கையில் மயங்கிக் கிடந்தவளை கவலையோடு பார்த்த சூர்யகலா “என்ன நிமலா இது..? மணக் கோலத்தில் இருக்கப் பொண்ணை இப்படித் தூக்கிட்டு வந்து இருக்கே..?” என்றார்.

“என்னை என்ன செய்யச் சொல்றீங்க பாட்டி..? ஏதோ தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சும் அப்படியே விட்டுட்டு வர சொல்றீங்களா..?” என்றான் உணர்வற்ற குரலில் நிமலன்.

“அதுக்கில்லை ராஜா.. மணக்கோலத்தில் இருக்கப் பொண்ணு வேற.. நாளைக்கு நமக்கு ஏதாவது இதனால் பிரச்சனை வர கூடாது பாரு.. இவ யாரு..? என்னன்னு கூடத் தெரியலை..? மயக்கத்தில் வேற இருக்கா.. அதோட..” என்று மேலும் எதுவோ சொல்ல முயன்றவரின் பேச்சு அதே நேரம் அங்கு வந்த நிகிலனை கண்டு அப்படியே நின்றது.

அதற்குள் இந்த நேரத்தில் நிகிலனை இங்குக் கண்டதில் விழிகளைச் சுருக்கிய நிமலன், “நீ எப்போ வந்தே..?” என்றான்.

“கொஞ்சம் நேரம் ஆச்சு ண்ணா..” என்றான் நிகிலன்.
“அவனும் இப்போ தான் வந்தான் நிமலா.. நீயும் வந்துட்டு இருக்கேன்னு போன் செஞ்சியா.. அதான் உன்னைப் பார்த்துட்டு தூங்க போகலாம்னு காத்திருந்தான்..” என்றார் சூர்யகலா.

அதற்கு ஒரு தலையசைப்பையே பதிலாகக் கொடுத்தவன், “ஆல் ஒகே தானே..! எதுவும் பிராப்ளம் இல்லையே..?” என அக்கறையோடு தம்பியை பார்த்து ‘கேட்கவும், “நத்திங் ண்ணா.. ஒன் வீக் இங்கே ஒரு செமினார் இருக்கு.. அதுக்காகத் தான் வந்தேன்..” என்றதும் அதற்கும் ஒரு தலையசைப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்தான் நிமலன்.

அப்போதே மற்ற இருவரின் முகத்தில் இருந்த பதட்டத்தைக் கவனித்த நிகிலன், “என்னாச்சு..?” எனும் போதே உள்ளே படுத்திருந்தவளின் மேல் நிகிலனின் பார்வை பதிய.. விழிகளைச் சுருக்கி அவளைப் பார்த்தவன், “தமயா..?” என்றான் நம்ப முடியா திகைப்போடான குரலில் நிகிலன்.

அதில் திகைப்போடு அவனைத் திரும்பி பார்த்து “யாரு..?” என்றார் அதிர்வும் ஆத்திரமுமான குரலில் பாட்டி. “தமயா பாட்டி.. தமயந்தி ஜெயதேவ..” என்றவனின் வார்த்தையைக் கூட முடிக்க விடாமல் “போதும்..” என்றிருந்தார் அந்தப் பெயரைக் கூடத் கேட்க விரும்பாத வெறுப்பான குரலில் பாட்டி.


நேச அலை வீசும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ கதையின் முதல் அத்தியாயத்தை பதித்து விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

TNN - 1

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34910
ஹாய் பிரண்ட்ஸ்..

எல்லாரும் எப்படி இருக்கீங்க..

நாங்கள் நலம் இப்போது ஓரளவு மனதை தேற்றிக் கொள்ள பழகி கொண்டிருக்கிறோம்.. எதிர்பாரா பெரிய இழப்பிலிருந்து மீண்டு வர முயன்று கொண்டிருக்கிறோம்..

நாங்கள் தேறி வர நேரம் கொடுத்து காத்திருந்ததோடு தொடர்ந்து என்னோடு பேசி எனக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

வயதானவர் தான் என்றாலும் இயல்பாக நடமாடிக் கொண்டிருந்தவரின் இந்த திடீர் இழப்பு எங்கள் மொத்த குடும்பத்தையும் பெருமளவில் அசைத்துப் பார்த்திருக்கிறது..

எங்களுக்கே அதை ஏற்றுக்கொள்ள இவ்வளவு சிரமமாக இருக்கும்போது என் அத்தையின் நிலை எப்படி இருக்கும்..? அவரால் இதிலிருந்து வெளிவரவே முடியவில்லை..

அதோடு அவருக்கு பல உடல் உபாதைகள் வேறு இருக்கிறது.. கடந்த மூன்று வருடங்களாகவே இவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்..

அதனால் அவரை கவனித்து அவரைத் தேற்றி இதிலிருந்து மீட்டுக் கொண்டு வரவே எங்களுக்கு சில மாதங்கள் கூட ஆகலாம்..

ஆனால் எடுத்த வேலையை முடிக்காமல் விட்டு விட முடியாதே..! அதோடு முதல் அத்தியாயம் மட்டும் போட்டு விட்டு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் இந்தப் பக்கமே நான் வரவில்லை..

எங்களின் குடும்ப சூழ்நிலையும் மனநிலையும் புரிந்து பொறுமை காத்த உங்களுக்காகவாவது அந்தக் கதையை நான் மீண்டும் தொடங்கி தானே ஆக வேண்டும்..

தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் மீண்டும் ஆரம்பிக்கிறேன்.. இடையில் ஏதாவது இடையூறோ விடுமுறையோ எடுக்க வேண்டி வந்தால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்..

என்னால் முடிந்த அளவுக்கு இதற்குப் பிறகு கதையை நிறுத்தாமல் கொடுக்க முயல்கிறேன்...

புரிதலுக்கு நன்றி🙏

நாளை முதல் நம் வழக்கமான நாட்களான வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் "தழலாய் நின் நேசம்..!!" கதை தொடர்ந்து வரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34911
தழல் – 2

அதற்குள் படுக்கையை வேகமாக நெருங்கி இருந்த நிகிலன் “என்னாச்சு இவளுக்கு..?” என்றான். “உனக்கு நல்லா தெரியுமா நிகிலா..? இது அவ தானா..?” என்று மீண்டும் பல்லைக் கடித்தவாறே கேட்டார் பாட்டி.


“ம்ப்ச்.. என் தமயாவை எனக்குத் தெரியாதா பாட்டி..?” என்று ஏதோ ஒரு வேகத்தில் சலிப்போடு துவங்கியவன், பின் சட்டென அப்படியே பேச்சை நிறுத்தவும், “போதும்.. என்ன பேச்சு இது..?” என்று முகத்தைச் சுழித்தார் பாட்டி.


அதேநேரம் இதையெல்லாம் கண்டு முகம் இறுக அந்த அறையின் ஜன்னல் அருகே சென்று நின்று கொண்டான் நிமலன். துவண்ட கொடி போல் கிடந்தவளை கண்ட நிகிலனால் அப்படியே எப்படியோ போகட்டுமென அவளை விட்டு செல்ல முடியவில்லை.


அதில் தன் கோபத்தை எல்லாம் தள்ளி வைத்து விட்டு, ஒரு மருத்துவனாக அவளருகில் இருந்த மோடாவில் அமர்ந்தவாறே தன் அண்ணனை பார்த்து “என்னாச்சு ண்ணா..? ஏன் இப்படி இருக்கா..?” என்றான் கவலைக் குரலில் நிகிலன்.


அதில் தன் தம்பியின் கேள்வியைத் தவிர்க்க முடியாமல் எங்கோ ஜன்னலுக்கு வெளியில் பார்வையைப் பதித்தப்படியே நடந்ததை எல்லாம் சொல்லி முடித்தான் நிமலன்.


“அப்போ இது கண்டிப்பா அவ தான்.. இன்னைக்கு இவளுக்குக் கல்யாணம் தானே..!” என்றார் சூர்யகலா. அதற்கு மற்ற இருவரும் எதுவும் பேசாமல் இருக்க.. “அந்த கேடு கேட்டவனுக்கு, நம்பிக்கை துரோகிக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்..” என்றார் வெறுப்பான குரலில் பாட்டி.


“மயக்கமாக்க ஏதாவது கொடுத்து இருப்பாங்க.. அதான் இப்படி இருக்கா, சீக்கிரம் கண் விழிச்சுடுவா..” என்று மேலோட்டமாக அவளைப் பரிசோத்தித்து விட்டுக் கூறினான் நிகிலன்.


விழிகளை மட்டும் திருப்பி அவனைப் பார்த்த நிமலனின் பார்வை தமயந்தியின் இடக் கரத்தை தன் இரு கரங்களுக்குள் பொத்தி வைத்தது போல் கவலையாக அவள் முகத்தையே பார்த்தவாறு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நிகிலனின் கைகளில் படிந்தது.


“அவ எப்படி இருந்தா உனக்கு என்ன..? நீ அங்கே இருந்து எழுந்திரு..?” என்று கண்டிப்பான குரலில் பாட்டி சொல்லவும், “ஒரு டாக்டரா நான் என் கடமையைத் தான் செய்யறேன் பாட்டி..” என்றான் நிகிலன்.


“ஒரு டாக்டரா கூட நாம அந்தக் குடும்பத்துக்கு எதுவும் செய்யக் கூடாது..” என்றார் கட்டளைக் குரலில் பாட்டி. அதை மீறும் தைரியம் இல்லா நிகிலன் மனமே இல்லாமல் அங்கிருந்து எழுந்து கொண்டான்.


சூர்யகலாவின் கட்டுப்பாட்டிலும் பராமரிப்பிலுமே வளந்தவனுக்கு அவரின் வார்த்தையை மீறும் பழக்கமே இல்லை. அவர் சொல்வதில் உடன்பாடு இல்லையென்றால் நேராக நிமலனிடம் தான் சென்று நிற்பான் நிகிலன்.


சில நேரங்களில் வார்த்தைகளில் இல்லையென்றாலும் பாவமாக நிகிலன் ஒரு பார்வை பார்த்தாலே போதும் அவன் மனதை புரிந்து பாட்டியிடம் தம்பிக்காகப் பேசி பிரச்சனையைச் சரி செய்து விடுவான் நிமலன்.


இப்போதும் நிகிலன் தன் அண்ணனை தனக்குச் சாதகமாக எதுவும் சொல்வானா என்பது போல் பார்க்க.. அவனோ நிகிலனை பார்க்கவே இல்லை. பார்வையை எங்கோ பதித்து விரல்களை அழுந்த மூடி கைகளைப் பின்னால் கட்டியவாறு நின்றிருந்தவனின் தோற்றத்தை கண்டவனுக்கு சூர்யகலாவை போலவே நிமலனும் கோபத்தோடு இருப்பது புரிந்தது.


அதில் நிகிலன் அமைதியாகிப் போக.. பெரிய பேரனின் பக்கம் தன் பார்வையைத் திருப்பிய சூர்யகலா “இன்னும் எவ்வளவு நேரம் இவ இங்கே இருக்கப் போறா நிமலா..?” என்றார்.


அதில் பார்வையை மட்டும் திருப்பி அவரைப் பார்த்தவன், பதிலேதும் சொல்லாமல் திரும்பிக் கொள்ள.. “உன்னைத் தான் கேட்கறேன் நிமலா..? இப்படிப் பதில் பேசாம இருந்தா என்ன அர்த்தம்..?” என்றார் சற்று அழுத்தமான குரலில் பாட்டி.


அதில் ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், “என்னை என்ன செய்யச் சொல்றீங்க பாட்டி..?” என்றான். “என்ன செய்யச் சொல்றீங்கனா..? இவளை எல்லாம் வீட்டுக்குள்ளே வெச்சு அழகா பார்க்க முடியும்..? தூக்கி இவளை வெளியே வீசு..” என்றார் வெறுப்பு மண்டிய குரலில் பாட்டி.


இதில் நிகிலன் முகம் கசங்க தவிப்போடு தன் அண்ணனின் முகத்தைப் பார்க்க.. “அப்படித் தூக்கி வீச, நான் அவங்ககிட்டே இருந்து காப்பாற்றாமலே இருந்திருக்கலாம்.. கொஞ்ச நேரம் இருங்க.. மயக்கம் தெளிஞ்சதும் அவளே போயிடுவா..” என்றான் வெற்றுக் குரலில் நிமலன்.


“அவளுக்கு எப்போ மயக்கம் தெளியறது..? அவ எப்போ இங்கே இருந்து போறது..? இதெல்லாம் சரிபட்டு வராது நிமலா, அவ இந்த வீட்டுக்குள்ளே ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.. அந்தத் தகுதியும் தரமும் இவளுக்கு மட்டுமில்லை, இவங்க குடும்பத்துக்கே கிடையாது..” என்றார் ஆத்திரத்தோடு சூர்யகலா.


இதற்கு நிமலன் ஏதாவது சொல்வான் எனக் காத்திருந்து பார்த்த நிகிலன், அவன் அமைதியாகவே நிற்கவும், “அவ என்ன இங்கேயேவா இருக்கப் போறா பாட்டி.. மயக்கம் தெளிஞ்சதும் போயிட போறா, இதுக்கு ஏன் நீங்க கத்தி உங்க உடம்பை கெடுத்துக்கறீங்க..? பொழுது விடிய போகுது பாருங்க.. போய்க் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க..” என்று அங்கிருந்து நகர மறுத்தவரை மெல்ல சமாதானம் செய்து அழைத்துச் சென்றான் நிகிலன்.


அந்த வீட்டின் கடைக் குட்டியான நிகிலனின் மேல் எப்போதுமே தனிப் பிரியம் சூர்யகலாவுக்கு உண்டு. அதிலும் தன் கைகளில் அதிகம் வளர்ந்தவன் என்பதோடு தன் பேச்சை தட்டாமல் கேட்பவன் என்பதும் சேர.. இப்போதும் அவனைக் குழந்தை போலவே பார்ப்பார் சூர்யகலா.


அதில் அவரும் அவனோடு பேசியவாறே வெளியேற.. அப்போதும் “இவளை கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளணும்.. அவ என்னவோ உரிமைப்பட்டவ போல ஒய்யாரமா படுத்து இருக்கா..” என்று பொருமிக் கொண்டே அவர் செல்ல.. இதையெல்லாம் முகமும் மனமும் இறுக வெற்று பார்வையோடு நிமலன் பார்த்துக் கொண்டிருக்க.. மெல்ல தமயந்தியிடம் அசைவு தெரிந்தது.


அதில் நன்றாகத் திரும்பி நின்று நிமலன் அவளைப் பார்க்கவும், மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தாள் தமயந்தி. அதில் கேள்வியாக அவளைப் பார்த்தவன், மெல்ல அவளருகில் வரவும், அவனின் அலைபேசி அடிக்கவும் சரியாக இருந்தது.


அதை எடுத்து பார்த்தவன், அழைப்பு துருவிடம் இருந்து வருவதைக் கெண்டு கேள்வியாகப் புருவத்தைச் சுருக்கியவன் யோசனையோடே அழைப்பை ஏற்று இருக்க.. “உனக்குத் தேவையில்லாத விஷயத்தில் இருந்து தள்ளியே இரு நிமலன், அது தான் உனக்கு நல்லது..” என்றான் ஆத்திரத்தோடான குரலில் துருவ்.


அதற்குக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத குரலில் “நான் உன் பக்கத்தில் வருவதே இல்லையே துருவ்..” என்றான் நிமலன். அதில் வெறியானவன், “ஏய் என்ன கொழுப்பா..?” என்று கத்த, “ஆமாடா.. நீயும் உங்க அப்பனும் கொள்ளையடிச்ச பணத்தில் சாப்பாடு போட்டு வளர்த்தீங்க இல்லை.. அதில் வளர்ந்த கொழுப்பு..” என்றான் நிமலன்.


அதில் சட்டென அமைதியான துருவ், முயன்று தன் குரலை மாற்றிக் கொண்டு, “அவ விஷயத்தில் தலையிடாதே நிமலன்..” என்றவனை இடையிட்டிருந்தவன் “எவ விஷயத்தில்..?” என்றான் வேண்டுமென்றே நிமலன்.


“எதுவும் தெரியாத மாதிரி நடிக்காதே நிமலன்.. அவ.. தமயா.. தமயந்தி எனக்கானவ.. அவளை என்கிட்டே கொடுத்துடு..” எனச் சீறினான் துருவ். “ஐயோ துருவ்.. இதையெல்லாம் நீ பேச வேண்டிய ஆளே வேற.. நீ தப்பான ஆள்கிட்டே பேசிட்டு இருக்கே..” என்றான் நிமலன்.


“அந்த விளக்கெண்ணையை எல்லாம் எனக்குத் தெரியும், நீ இதில் தலையிடாதே.. இது எங்களுக்கான பிரச்சனை, நான் பார்த்துக்கறேன்..” என்றான் ஆத்திரமான குரலில் துருவ்.


அப்போதும் கொஞ்சமும் குரலை உயர்த்தாமல், “உங்க விஷயம்னா ஏன் என்கிட்டே சொல்லி நேரத்தை வேஸ்ட் செஞ்சுட்டு இருக்கே..?” என்றான் நிமலன். அதற்கு அந்தப் பக்கம் பொறுமையற்று துருவ் வேக மூச்சுக்களை வெளியிடுவது நன்றாகத் தெரிந்தது.


நிமலனும் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.. “லுக் நிமலன், இது எங்க தனிப்பட்ட விஷயம்.. இதை நான் எங்க வழியில் தீர்த்துக்கறேன்.. அவளை என்கிட்டே கொடுத்துடு..” என்றான் துருவ்.


இதற்கு நொடியும் தாமதிக்காது “அது முடியாது..” என்று நிமலனிடம் இருந்து பதில் வரவும், “அவளை ஏன் உன் வீட்டுக்கு கூட்டிட்டு போனே..?” என்றான் துருவ்.


“அதை நான் ஏன் உன்கிட்டே சொல்லணும்..?” என்று வேண்டுமென்றே அவனை வெறுபேற்றுவது போலவே பேசிக் கொண்டிருந்தான் நிமலன். எப்போதுமே துருவ் அவசரக்காரன், பொறுமை என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்க கூடியவன், “நிமலன் மறுபடியும் சொல்றேன் இவ விஷயத்தில் தலையிடாதே.. அது தான் உனக்கு நல்லது.. இப்போவே இடையில் வந்து நீ ரொம்பப் பெரிய தப்பு செஞ்சுட்டே.. இனியும் நீ இதில் இருந்து விலகலைனா விளைவுகள் மோசமா இருக்கும்..” என்றான் மிரட்டலாகத் துருவ்.


“அச்சோ பயந்துட்டேன்..” என்று நிமலன் கேலி செய்யவும், உடனே தணிந்து வந்தவன், “நிமலன் இங்கே பார் நமக்குள்ளே வீணா பிரச்சனை வேண்டாம்.. உனக்கும் ஜெயதேவனுக்கு ஆயிரம் பஞ்சாயத்து இருக்கலாம்.. ஆனா அதை நீ இவ மூலமா தீர்த்துக்க நினைக்காதே.. இவ எனக்கானவ.. என்கிட்டே கொடுத்துடு..” என்றான் உன் திட்டத்தைக் கண்டுப்பிடித்து விட்டேன் என்பது போலான குரலில் துருவ்.


அதற்கு லேசான கேலி புன்னகையோடு “உன் அறிவை கண்டு நான் வியக்கேன்..” என்றான் ஒரு மாதிரியாக இழுத்து நிறுத்தி நிமலன்.


அதில் அந்தப் பக்கம் துருவ் யாரையோ வசைப்படுவது கேட்டது. அதற்குள் இடையிட்டிருந்த நிமலன், “டோன்ட் வேஸ்ட் மை டைம் துருவ்.. இனி இது விஷயமா எனக்குக் கால் செய்யாதே..” என்று அழைப்பை துண்டிக்க முயன்றான்.


“ஹே.. வெயிட், கட் செஞ்சுடாதே, அவளை என்கிட்டே கொடுத்துடு.. உனக்கு வேணும்னா நான் வேற பொண்ணுங்களை ஏற்பாடு செஞ்சு தரேன்..” என்றிருந்தான் துருவ்.


அதில் சட்டென முகம் இறுகி விட.. “சொல்லவே இல்லை பொண்ணுங்க ப்ரோக்கராடா நீ..? இதுக்கு உங்க அப்பனே பரவாயில்லை, ஆனா எனக்கு இந்தப் பழக்கமெல்லாம் இல்லை.. வேற யாருக்காவது தேவைப்ப்படுமான்னு பார்த்து பிசினஸை டெவலப் செய்..” என்று நக்கல் குரலில் கூறிய நிமலன் அழைப்பை துண்டித்து இருந்தான்.


இதில் செய்வதறியாது திகைத்து அந்தப் பக்கம் பல்லை கடித்த துருவ் அடுத்து தமயாவை பறிக் கொடுத்து விட்டு வந்து தன் முன் நின்றிருந்தவர்களை அருகில் இருந்த பொருட்களைத் தூக்கி வீசி, பீப் வார்த்தைகளால் வசைப் பாடினான்.


“ஒரு பொண்ணை ஒழுங்கா கடத்திட்டு வர துப்பில்லை.. இதில் உங்களுக்கு சில லட்சத்தில் சம்பளம்.. நீங்க அப்படி இப்படின்னு பில்டப் செய்ய ஒரு ஏஜென்ட்.. ச்சீ, போங்க போய்ச் சேலையைச் சுத்திட்டு கும்மி அடிங்க..” என்று ஆத்திரப்பட்டவன், யாருக்கோ அலைபேசியில் அழைத்தவாறே அங்கிருந்து எழுந்து சென்றான் துருவ்.


அதில் அவமானத்தில் முகம் கறுக்க நின்றிருந்த முதலில் நிமலனிடம் அடி வாங்கிய தலைவன் போல் இருந்தவன், தன் இத்தனை வருட செய்கையில் முதன்முறை தோற்று நிற்பதையும், இத்தனை பேச்சுக்களை வாங்க வேண்டி இருப்பதையும் எண்ணி “உன்னைச் சும்மா விட மாட்டேன்டா..” என ஆத்திரத்தில் பல்லை கடித்தான் டேனியல்.


*************


அலட்சியத்தோடு அலைபேசியைத் துண்டித்து இருந்த நிமலன், நெற்றியை யோசனையோடு கீறிக் கொள்ளவும், லேசான அசைவோடு விழிகளைத் திறந்தாள் தமயா.


அதில் அவள் பக்கம் நிமலன் கவனத்தைத் திருப்பினான். விழிகளை மெல்ல திறந்தவள், அருகில் நிற்பவனைக் குழப்பமாகப் பார்த்தவாறே, விழிகளைச் சுழற்றியப்படியே “நான் எங்கே இருக்கேன்..? எனக்கு என்னாச்சு..?” எனக் காலம் காலமாக மயக்கத்தில் இருந்தவர்கள் கண் விழிக்கும் போது கேட்கும் அதே கேள்வியையே ஒரு எழுத்து மாறாமல் கேட்டிருந்தாள் தமயந்தி.


அதில் அவளையே நிமலன் பதிலின்றி இறுக்கமான முகத்தோடு பார்த்திருக்க.. நெற்றியோடு சேர்த்து தலையையும் பிடித்துக் கொண்டவள், விழிமூடி தலையில் உண்டான வலியை பொறுத்துக் கொள்ள முயன்றாள் தமயா.


“என்ன செய்யுது உனக்கு..?” எனக் கேட்க முயன்றவாறே திரும்பி நிகிலனை அழைக்க முயன்ற நிமலன், சட்டென ஏதோ தோன்ற அப்படியே அவளை நோக்கி நீண்ட கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு அமைதியானான்.


அதற்குள் நிமிர்ந்து அவனைப் பார்த்திருந்தவள், “யார் நீங்க..? சார்ல்ஸ் எங்கே..?” என்றாள் கேள்வியாக அவனைப் பார்த்து தமயா. அதில் புருவத்தைச் சுருக்கியவன், பதிலேதும் சொல்லாமல் அவளைப் பார்க்க.. அவனை எரிச்சலோடு பார்த்தவள், தன்னைச் சுற்றி வேகமாகத் தேடி விட்டு “என் போன் எங்கே..? சார்ல்ஸ் எங்கே போனான்..?” என்றாள் மீண்டும் தமயா.


‘அவள் கடத்தி செல்லப்பட்டதே இவளுக்கு நினைவில்லையா..? இத்தனை இயல்பாகப் பேசுகிறாளே..? யாரை தேடுகிறாள்..?’ என அவளைப் பற்றிய யோசனையோடே நிமலன் நின்றிருக்க.. “ஹலோ.. ஹலோ மிஸ்டர் லேம்ப் போஸ்ட்.. உங்களைத் தான் கேட்கறேன் நான் எங்கே இருகேன்..?” என்று தன்னருகில் நின்டிருந்தவனின் முன் கையை அசைத்து அவனின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப முயன்றாள் தமயா.


அதில் அவளின் விளிப்பில் உண்டான எரிச்சலோடு பல்லை கடித்தவன், “கான்ஷியஸ் வந்தாச்சு இல்லை.. கிளம்பு..” என்று ஒற்றை விரலை நீட்டி வெளியே போ எனும் தொனியில் நிமலன் சற்றே கடினமான குரலில் சொல்லவும், “வாட்..? போறதா எங்கே..? சார்ல்ஸ் வரட்டும், நெக்ஸ்ட் மூவ் என்னன்னு இன்னும் எனக்குச் சரியா தெரியலையே..” என்றாள் அவனை விட எரிச்சலான குரலில் நிமலனை பார்த்து தமயா.


“ஹேய்.. பைத்தியமா நீ..? ஆமா யார் அந்தச் சார்ல்ஸ்..? போனா போகுதுன்னு கடத்திட்டு போனவங்ககிட்டே இருந்து உன்னை காப்பாற்றிக் கூட்டிட்டு வந்தா, ஏதேதோ உளறிட்டு இருக்கே.. தலையில் ஏதாவது அடிபட்டு இருக்கா உனக்கு..?” என்று சிடுசிடுத்தான் நிமலன்.


இவள் யார் என்று தெரிந்த பின் சூர்யகலா பேசியது எல்லாம் நினைவுக்கு வர, இவள் விழித்து விட்டதைப் பார்த்து அவரே தமயாவை இழுத்து சென்று வெளியில் தள்ளும் முன் இவளை அனுப்பி விட நினைத்து இவன் பேசிக் கொண்டிருக்க.. அவளோ ஏதேதோ உளறிக் கொண்டிருந்ததில் உண்டான எரிச்சலில் பேசி இருந்தான் நிமலன்.


“ஹலோ யாரை பார்த்து பைத்தியமான்னு சொல்றீங்க..? இதில் என்னைக் கடத்தலில் இருந்து வேற காப்பாற்றினீங்களா..? நீங்க தான் பைத்தியம் போலப் பேசிட்டு இருக்கீங்க..? இது கடத்தலே இல்லை.. நான் தான் அப்படிச் செட்டப் செஞ்சுட்டு வெளியே வந்தேன்..” எனப் படபடவெனப் பொரிந்தாள் தமயா.


அதில் அவள் சொன்ன செய்தியில் ‘தன் காதில் சரியாகத் தான் விழுந்ததா..?’ என ஒரு நொடி திகைத்து அவளைப் பார்த்தவன், “வாட்..? கம் அகெய்ன்..” என்றான் நிமலன்.


“ஓப்ஹோ.. சார்ல்ஸ் எங்கே மேன்..?” என்று பொறுமையின்றி தமயா படபடக்கவும், “ஹு இஸ் தட் இடியட்..? எனக்கு அப்படி யாரையும் தெரியாது.. முதலில் இங்கே இருந்து கிளம்பு..” என்றான் வெறுப்பும் எரிச்சலுமாக நிமலன்.


“போ.. போன்னா நான் எங்கே போக..? நெக்ஸ்ட் பிளான் என்னன்னு சார்ல்ஸ் தான் சொல்லணும்.. அவன் எங்கே..? என் மொபைல் எங்கே..?” என்று கத்தினாள் தமயா.


“என்னைக் கேட்டா எனக்கு என்ன தெரியும்..? அந்தக் காரில் இருந்து உன்னை மட்டும் தான் கூட்டிட்டு வந்தேன்..” என்றான் நிமலன். அதில் நெற்றியை பிடித்துக் கொண்டவள், சட்டென நிமிர்ந்து நிமலனின் கையில் இருந்த அலைபேசியைப் பார்த்து விட்டு, “ஒரு போன் செஞ்சுக்கட்டுமா..? உங்க மொபைல் தரீங்களா..?” என்றாள் தமயா.


அதில் சுள்ளெனக் கோபம் உண்டானாலும் அதை மறைத்துக் கொண்டு தன் அலைபேசியை அவளிடம் நீட்டினான் நிமலன். வேகமாக வாங்கி யாருக்கோ அழைக்க முயன்றவள், அந்தப் பக்கம் அது எடுக்கப்படாமல் போனதில் பதட்டமாகி மீண்டும் முயற்சிக்க.. இந்த முறை அழைப்பு எடுக்கப்பட்டது.


அந்தப் பக்கமிருந்து கேட்ட குரலில் ஆத்திரமானவள் “ஹே சார்ல்ஸ் வேர் ஆர் யூ..? யூ இடியட் இப்படித் தான் முக்கியமான நேரத்தில் கூட இருக்காம விட்டு போவியா..? நீ அனுப்பின குண்டாஸ் உன்னை விட யூஸ்லெஸ்.. அவங்ககிட்டே இது ஒரு பேக் கிட்நாப்னு நீ சொல்லலையா.. தே ஹிட் மீ வெரி பேட்லி..” என்று தலையில் அடிப்பட்டிருந்த இடத்தை தடவிக் கொடுத்தப்படியே பொறிந்து தள்ளினாள் தமயா.


அதற்கு அந்தப் பக்கமிருந்து “பேப்.. பேப் லிசன் மீ..” என்று சோர்ந்த குரலில் சார்ல்ஸ் முணுகவும், கொஞ்சம் தணிந்தவள் “ஹே என்னாச்சு உனக்கு..?” என்றாள்.


அடுத்து அந்தப் பக்கமிருந்து அவன் சொல்வதைக் கேட்க, கேட்க பல வித பாவங்கள் அவளின் முகத்தில் வந்து போக.. “அப்போ இது நீ அனுப்பின ஆளுங்க இல்லையா..?” என்றாள் கலவரமான குரலில் தமயா.


அதற்கு அந்தப் பக்கமிருந்து எதுவோ சொல்லப்பட.. “இப்போ நீ எங்கே இருக்கே..?”


“ஓ, அடி பலமா..?”


“ஒகே.. சார்ல்ஸ் டேக் ரெஸ்ட்..” என்று சொல்லி அழைப்பை துண்டித்து இருந்தவளின் முகம் கலவரத்தை தத்து எடுத்திருந்தது.


அவளையே அதுவரை பார்த்திருந்தவனுக்கு ஏதோ புரிவது போல் இருக்க.. அவளிடம் எதுவும் கேட்டுக் கொள்ளாமல் அலைபேசிக்காக தமயாவின் முன் கையை நீட்டினான் நிமலன்.


அதில் தன் சிந்தனை கலைந்தவள், “சா.. சாரி..” என்றவாறே அவனிடம் அலைபேசியைக் கொடுக்கும் போது தன்னையுமறியாமல் “தேங்க்ஸ்..” என்றிருந்தாள் தமயா.


இது எதற்கு என்பது போல் லேசாகப் புருவத்தை உயர்த்தி நிமலன் அவளைப் பார்க்கவும், சற்று முன் சார்ல்ஸ் தன்னிடம் பகிர்ந்ததை நிமலனிடம் சொல்ல துவங்கினாள் தமயா.


இந்த அவசர திருமணத்தில் விருப்பமில்லை என்று எத்தனை முறை சொல்லியும் ஜெயதேவன் கேட்காமல் போன கோபத்தில் சார்ல்ஸோடு சேர்ந்து திட்டமிட்டவள், தானாகவே அதன் படி சார்ல்ஸ் மெசேஜ் செய்த பின் அங்கிருந்த அத்தனை சிசிடிவியையும் செயலிழக்க செய்து விட்டு வேகமாகத் திருமணப் பண்டபத்தின் பின் பக்கமாக இவளின் அறை பால்கனி வழியே பக்கத்தில் இருந்த மரத்தில் ஏறி வெளியே குதித்து வர.. அங்கு நான்கு பேர் சுவரேறி குதித்தவளை தலையில் அடித்துக் காருக்குள் ஏற்றினர்.


சார்ல்ஸும் கிட்டத்தட்ட இது போல் தான் திட்டமிட்டிருந்தான். ஒருவேளை அவள் வெளியேறுவதை யாராவது பார்த்து விட்டாலும் கூட யாரோ அவளைக் கடத்தி செல்வதாகத் தெரியட்டும், இவளாக வெளியேறுவதாகத் தெரியாமல் இருப்பதே சரி.


அப்போதே யார் எதற்கு இவளை கடத்தினார்கள் என அவர்கள் தேடிக் கொண்டிருக்கும் நேரத்தை பயன்படுத்தி, அனைவரின் கவனத்தையும் திசை திருப்பி விட்டு இரண்டு நாள்கள் எங்காவது தங்கி இருந்து விட்டு அவர்களின் கவனம் வேறு பக்கம் இருக்கும் போது இருவரும் ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்பி செல்ல சரியாக இருக்குமென சார்ல்ஸ் சொல்லி இருக்க.. அதை நம்பி அமைதியாக எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவர்கள் கையில் சிக்கி இருந்தாள் தமயா.


அப்போதே தமயாவுக்கு மெசேஜ் செய்து முடித்து விட்டு அவளுக்காக மண்டபத்துக்கு வெளியே காத்திருந்த சார்ல்ஸ் தன் திட்டத்தை மீண்டும் ஒருமுறை தன்னோடு அழைத்து வந்திருந்த ஆட்களுக்கு விளக்கிக் கொண்டிருக்க.. இதில் தமயா சம்பந்தபட்டிருப்பது தெரியாமல் அவளைக் கடத்தி செல்ல வேறு ஒரு குழுவும் வந்திருப்பதைக் கண்டு உஷாரான டேனியல் இவர்களைப் பலமாகத் தாக்கி இவர்கள் வந்திருந்த காரிலேயே போட்டிருந்தான்.


சில மணி நேரங்களுக்குப் பிறகே லேசாக நினைவு திரும்பிய அவர்களில் ஒருவன் ஆம்புலென்ஸ் உதவியோடு மற்றவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தான்.


இதில் சார்ல்ஸுக்குக் கொஞ்சம் அடி பலமாகவே விழுந்திருந்தது. மற்றொருவனுக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க.. இதையெல்லாம் அறிந்த தமயாவுக்கு மனம் நடுங்கிப் போனது.


அவர்களையே இத்தனை மூர்க்கமாகத் தாக்கி இருப்பவர்களிடம் அவள் சிக்கிக் கொண்டிருந்தால் என்னவாகி இருப்பாள் என்று எண்ணும் போதே பதறியது.


இதைச் சொல்லி தமயா மீண்டும் நிமலனுக்கு நன்றி தெரிவிக்க.. “த்ரோ இட் யுவர் தேங்க்ஸ் இன் தி டிராஷ்..” என்று முகத்தைக் கடினமாக்கியவன், விபரீதம் புரியாமல் அவள் செய்திருந்த விளையாட்டில் தான் தேவையில்லாமல் தலையிட்டிருக்கக் கூடாது என்றெண்ணினான் நிமலன்.


அதில் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தவள், “ஒரு டூ டேஸ் நான் இங்கே இருந்துக்கட்டுமா..?” என்று கெஞ்சலாகக் கேட்கவும், அவளை ஆத்திரத்தோடு முறைத்தவன், “ஹே.. என்ன எல்லாம் உனக்கு விளையாட்டா போச்சா..? உன் இஷ்டத்துக்கு வந்து தங்கி போக இது என்ன ஹோட்டலா..? கெட் லாஸ்ட்..” என்றான் வாயில் பக்கம் கையை நீட்டி நிமலன்.


அதைக் கண்டு முகம் சுருங்க, “நான் ஒண்ணும் சும்மா தங்கறேன்னு சொல்லலை.. உனக்கு எவ்வளவு பணம் வேணுமோ கொடுத்துடறேன்.. நான் இங்கே இருந்து இப்போ வெளியே போனா மறுபடியும் என்னைப் பிடிச்சுக் கல்யாணம் செஞ்சு வெச்சுடுவாங்க.. சார்ல்ஸுக்குக் கொஞ்சம் சரியானதும் நாங்க ஆஸ்திரேலியா கிளம்பிடுவோம்..” என்றாள் முகத்தில் நூற்றியெட்டு பாவனைகளைக் காண்பித்து எப்படியாவது அவனைச் சம்மதிக்க வைத்து விடும் நோக்கில் தமயா.


அதில் அவள் பேச, பேச உண்டான ஆத்திரத்தில் அருகில் இருந்த மேஜையை அடித்து நொறுக்கும் அளவுக்கு உண்டான கோபத்தை வெகு சிரமப்பட்டு அடக்கியவன் விழிகள் சிவக்க, அவள் மேலும் எதுவும் பேசுவதற்கு முன், “ஷ்ஷ்ஷ்ஷ்..” என்றான் தன் வாயின் மேல் விரல் வைத்து பல்லை கடித்தவாறே முகமும் தாடையும் இறுக நிமலன்.


அவனின் விழிகளில் தெரிந்த கோபத்தில் மிரண்டு போய் தமயா அவனைப் பார்த்திருக்க.. அதே நேரம் நிமலனின் அலைபேசிக்கு ஏதோ குறுந்தகவல் வந்து இருப்பதற்கான ஒலி கேட்டது.


அதில் நிமலனின் பார்வை அலைபேசியில் பதிய.. அதில் வந்திருந்த புகைப்படத்தைக் கண்டு நெற்றியை சுருக்கினான் நிமலன். அவர்களை அடித்து போட்டு விட்டு, நிமலன் அவளைத் தூக்கிக் கொண்டு சென்று காரில் ஏற்றும் போது எடுத்த மூன்று புகைப்படங்களை அனுப்பி இருந்தான் துருவ். அதில் மற்றதெல்லாம் தெரியாமல் நிமலன் அவளை தூக்கிக் கொண்டிருக்கும் காட்சியும், அவளின் முகம் அவன் மார்பில் பதிந்திருப்பதும், காரில் ஏற்றும் காட்சியும் மட்டுமே பிரதானமாக இருந்தது.


அதனோடு “நான் சொல்லும் போதே கேட்டுடு நிமலன், அதான் உனக்கு நல்லது.. இல்லைனா சொந்த கட்சியிலேயே உனக்குப் பிரச்சனை வரும்.. உனக்கும் அவ அப்பனுக்கும் இருக்க விரோதம் எல்லாருக்கும் தெரியும்.. ஒழுங்கா நான் சொல்றதை கேட்டு உன் பெயரை காப்பாத்திக்கப் பார்.. இல்லைனா மீடியாவில் இதை லீக் செஞ்சேன்னா என்னாகும்னு யோசி..” என்று மிரட்டல் தொனியில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தான் துருவ்.


அதைக் கண்டு பதட்டமாக வேண்டியவனோ, இகழ்ச்சியான இதழ் வளைவோடு “இந்த மாதிரி நேரத்தில் வீரனுங்க பேசற வார்த்தை என்னன்னு தெரியுமா..?” என்று கேட்டு ஒரு நொடி இடைவெளி விட்டு “**தா உன்னால் முடிஞ்சதை செய்டா..” என்று பதிலுக்கு நக்கல் தூக்கலாக இருக்கும் தன் குரலில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தான் நிமலன்.

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தை பதித்து விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

TNN - 2

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34913

தழல் – 3

தன் முன் நின்று அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவனையே சிறு மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் தமயா. அலைபேசியில் கேட்ட குரலில் இருந்தே, அது துருவ் என கண்டுக் கொண்டிருந்தவள், பதிலுக்கு பேசிய நிமலனின் குரலிலும் வார்த்தையிலும் இருந்த நக்கலிலும் கேலியிலும் உண்டான திகைப்போடே அமர்ந்திருந்தாள் தமயா.


அதற்குள் பேசி முடித்து விட்டு பார்வையைத் திருப்பியவன் தமயா தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு நெற்றியை சுருக்க.. இனியும் இங்கே இரண்டு நாள் தங்க வேண்டுமென யோசிக்க விரும்பாத தமயா, “நான் இன்னொரு போன் செஞ்சுக்கட்டுமா..? கொஞ்சம் போன் தரீங்களா..?” என்றாள் முன்பை போல் இல்லாமல், இப்போது லேசான தயக்கத்தோடான குரலிலேயே தமயா.


சற்று முன் சார்ல்ஸ் அனுப்பிய நபர் என நினைத்துக் கொஞ்சம் அதிகாரமாகவே பேசி இருந்தவள், துருவிடம் நிமலன் பேசியதை கேட்டதிலிருந்து தேவையில்லாமல் எதுவும் பேசி அவனிடம் சிக்கிக் கொள்ளாமல் இங்கிருந்து நல்லபடியாகக் கிளம்பி விட வேண்டும் என்று மட்டும் தோன்றியதில் தணிவாகவே பேசினாள் தமயா.


ஆனால் அவளின் அமைதிக்கு அப்படியே நேர்மாறான குரலில் “என்னைப் பார்த்தா பப்ளிக் டெலிபோன் பூத் வெச்சு இருக்கறது போல இருக்கா என்ன..?” என்றான் நிமலன்.


அதில் சட்டெனப் பதில் சொல்ல முடியாமல் திணறியவள், அவனையே திருதிருவெனப் பார்த்திருக்க.. அதே நேரம் மீண்டும் அவன் அலைபேசி அடித்தது.


தன் கையில் இருந்த அலைபேசியை நிமலன் திருப்பிப் பார்க்கவும், அதில் அழைப்பது கட்சி தலைவர் கோமகன் என்பதைக் கண்டு சட்டென நிமலனின் முகம் மாறியது.


உடனே அதை எடுத்துக் கொண்டு அறையில் இருந்து நிமலன் வெளியே வரவும், சூர்யகலாவை உறங்க வைத்து விட்டு நிகிலன் வெளியே வரவும் சரியாக இருந்தது.


அதில் பார்வையாலேயே உள்ளே இருப்பவளை பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு நிமலன் நகர.. சம்மதமாகத் தலையசைத்த நிகிலன் அறைக்குள் பார்க்க தமயா எழுந்து அமர்ந்திருப்பது தெரிந்தது.


இதில் லேசாகத் தயக்கம் உண்டாக அப்படியே சில நொடிகள் நின்றவன், விஷயமில்லாமல் நிமலன் பார்த்துக் கொள்ளச் சொல்லி இருக்க மாட்டான் என்று புரிய.. சட்டென உள்ளே செல்ல முடியாமல் ஏதோ ஒன்று தடுக்க.. மெதுவாக நெற்றியை தேய்த்து விட்டவாறே யோசித்தவன், பின் ஒரு முடிவுக்கு வந்தவனாக நடை தடுமாற அந்த அறையை நோக்கி சென்றான் நிகிலன்.


நிகிலன் அறை வாயிலில் வந்து நின்றதை கூடக் கவனிக்காமல் நகத்தைக் கடித்தப்படி தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள் தமயா. அவள் முகத்தை இயல்பாகப் பார்க்க முடியாமல் தடுமாறியவன், தலையைக் கோதியவாறே உள்ளே வர.. அப்போதே அவனைத் திரும்பி பார்த்திருந்தவள், சட்டென உண்டான உற்சாகத்தோடு “ஹே, நிக்கி..” என்றாள் நம்ப முடியாத ஆச்சர்யத்தோடான குரலில் தமயா.


அந்தக் குரலில் இருந்த உற்சாகமும் சந்தோஷமும் அவனை லேசாகத் தடுமாறச் செய்ய.. ஆனாலும் நடந்து முடிந்த விஷயங்களை மனதில் நிறுத்தி முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு ஜன்னலுக்கு அருகில் சென்று நின்றான் நிகிலன்.


தன்னைப் போல் அவனுக்கு இங்குத் தன்னைக் கண்டத்தில் உற்சாகமோ சந்தோஷமோ இல்லை என்று புரிய.. ‘அதையெல்லாம் நீ இன்னும் மறக்கலையா நிக்கி..? இன்னும் என் மேலே கோபமா தான் இருக்கியா..?’ என்று எண்ணிக் கொண்டவள், கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு அவன் நின்றிருந்த விதத்தைக் காண.. சற்று முன் அங்கு நிமலன் இதே போல் நின்றிருந்தது நினைவுக்கு வந்தது.


“ஹே நிக்கி.. இது உன் வீடா..? அந்த மிஸ்டர் லாம்ப் போஸ்ட் தான் உன் அண்ணனா..? என்னவோ பேர் கூடச் சொல்லுவியே..” என்று வேகமாகப் பேசிக் கொண்டிருந்தவள், இவளின் பேச்சில் திரும்பி அவன் முறைப்பதை கண்டு அப்படியே அமைதியானாள் தமயா.


“இன்னும் நீ கொஞ்சம் கூட மாறலை.. பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்து பேசு..” என்று நிக்கி சற்று அழுத்தமான குரலில் கூறவும், “ஆமா, இனி நான் மாறினா என்ன..? மாறலைனா உனக்கு என்ன..? அதான் நான் வேண்டாம்னு நீ முடிவு செஞ்சுட்டே இல்லை..” என்று முகத்தைத் திருப்பினாள் தமயா.


அவளின் அந்தச் செயலில் லேசாக உண்டான புன்னகையை அவளுக்குக் காண்பிக்காமல் மறைத்துக் கொண்டவன், முகத்தை இறுக்கமாக வைத்தப்படி நின்றிருந்தான் நிகிலன்.


அவள் கண் விழிக்கும் வரை அவளுக்காகக் கவலைப்பட்டவன் அதை அவள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தான்.


அதற்குள் இங்கு வெளியே வந்திருந்த நிமலன், கோமகனின் அழைப்பு ஏற்று “சொல்லுங்க தலைவரே.. என்ன இவ்வளவு காலையில் கூப்பிட்டு இருக்கீங்க..?” என்றான் இலகுவான குரலில் நிமலன்.


“என்னத்தைச் சொல்ல..? அதான் எதுக்குக் கூப்பிட்டேன்னு உனக்கே இவ்வளவு நேரத்தில் தெரிஞ்சு இருக்குமே..” என்றார் கவலைக் குரலில் கோமகன்.


“இது நல்லா இருக்கே.. நீங்க ஏன் கூப்பிட்டீங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்..?” என்றவனுக்கும் இந்த அழைப்புக்கான காரணம் புரிந்தே இருந்தது.


ஆனாலும் அவன் அமைதியாகவே இருக்க.. “உடனே இங்கே கிளம்பி வா நிமலா..” என்றிருந்தார் கோமகன். “உடனேவா..? இன்னும் விடிய கூட இல்லை தலைவரே..” என்றவனைக் கோபத்தோடு இடையிட்டவர், “விளையாட்டு எல்லாம போதும் நிமலா.. உடனே வந்து சேர்..” என்று விட்டு அவர் அழைப்பை துண்டித்து இருந்தார்.


அதில் ஒரு நொடி யோசனையாக நின்றவன், பின் ஒரு முடிவுக்கு வந்தவனாக வேகமாக தமயா இருந்த அறைக்குள் வர.. “நிஜமாவே என்னை மறந்துட்டியா நிக்கி..? என்னைப் பற்றி ஒரு நாள் கூட நீ நினைச்சது இல்லையா..? ஆனா என்னால் இத்தனை வருஷமாகியும் உன்னை அப்படி மறக்கவே முடியலை.. ஏதோ ஒரு பொருளோ விஷயமோ உன்னை எனக்குத் தொடர்ந்து ஞாபகப்படுத்திட்டே இருக்கு.. நாம பழகினது எல்லாம் உனக்கு ஞாபகத்திலேயே இல்லையா..? நடந்ததில் என் தப்பு என்ன நிக்கி இருக்கு.. ஏன் என் கூடப் பேசலை நீ..?” என்று நிகிலனின் அருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்தாள் தமயா.


அதற்குப் பதிலேதும் சொல்லாமல் நின்றிருந்தாலும் நிகிலனின் முகத்தில் அத்தனை வேதனை இருந்தது. தன் வலக்கையை இறுக மூடி அவன் நின்றிருந்த விதத்திலேயே தன் சகோதரனின் மனதை கண்டு கொண்டிருந்தான் நிமலன்.


அதில் முகம் இறுக, இருவரையும் பார்த்தவன், “நிக்கி..” எனவும், இருவரும் சட்டெனத் திரும்பி வாயிலை பார்த்தனர். ‘வெளியே வா..’ என்பது போல் விழியாலேயே நிமலன் சொல்லவும், யோசனையாகத் தன் அண்ணனை விழியைச் சுருக்கி பார்த்தவனின் பார்வை ஒருமுறை தயக்கத்தோடு தமயாவை தொட்டு மீண்டது.


அவளும் நிகிலனையே தான் புரியாமல் பார்த்திருந்தாள். ஆனாலும் ஒரு வார்த்தையும் அவளோடு பேசாமல் நிகிலன் விறுவிறுவென வெளியேற.. தமயா இருந்த அறையின் கதவை சட்டென இழுத்து மூடினான் நிமலன்.


அதைக் கண்டு “அண்ணா என்ன செய்யறே..?” என்று நிகிலன் பதறவும், “என்னைத் தலைவர் வர சொல்லி இருக்கார்.. நான் திரும்ப வர வரைக்கும் இந்தக் கதவை திறக்க வேண்டாம்..” என்றவாறே திரும்பி நடக்க முயன்றவன், பின் அப்படியே நின்று “கதவை திறக்க கூடாதுனா என்ன அர்த்தம்னு தெரியுமில்லை..” என்று ஒரு வித அழுத்தத்தோடான குரலில் கேட்டான் நிமலன்.


தன்னை எக்காரணம் கொண்டும் உள்ளே செல்ல வேண்டாமென நிமலன் சொல்வதைப் புரிந்து கொண்ட நிகிலன், பார்வையைத் தழைத்துக் கொண்டு சம்மதமாகத் தலையசைக்க.. அப்போதும் தன் சகோதரனை நம்பாத பார்வை பார்த்தான் நிமலன்.


“நீங்க சொல்லி எதையும் நான் மீற மாட்டேன் ண்ணா.. என்னை நீங்க நம்பலாம்..” என்றான் நிகிலன். அதற்குள் தன்னை உள்ளே வைத்துப் பூட்டியத்தைக் கண்டு அதிர்ந்திருந்த தமயா “ஹலோ.. என்ன செய்யறீங்க..? கதவை திறங்க, நான் வெளியே போகணும்..” என்று தொடர்ந்து தட்டக் கொண்டிருக்க.. “இப்.. இப்படி ஏன்..? அவளை அனுப்பிடலாமே..?” என்று தன் மனதில் எழுந்த கேள்வியைக் கேட்டே விட்டிருந்தான் நிகிலன்.


அதில் வழக்கத்திற்கு மாறான இந்த நிகிலனின் எதிர் கேள்வி தமயாவுக்காக என்று புரிய.. சட்டென உண்டான கோபத்தை ஆழ்ந்த மூச்செடுத்து தலையை லேசாகக் கோதி தன்னை அமைதிப்படுத்திக் கொண்டவன், “அப்படியெல்லாம் அவளை வெளியே அனுப்பிட முடியாது நிக்கி.. இது வெறும் கடத்தல் இல்லை, இவளே அங்கிருந்து பிளான் செஞ்சு எஸ்கேப் ஆகி இருக்கா.. அதோட வேற யாரோ இவளை தூக்கவும், மேபி அது துருவ்.. அவங்ககிட்ட இருந்து நான் கூட்டிட்டு வந்து இருக்கேன், இப்போ இவளை வெளியே விட்டு மறுபடியும் யார் கையிலாவது சிக்கினா..? நாம தான் பதில் சொல்லணும்..” என்றான் நிமலன்.


அதைக் கேட்டு திகைத்தவன், “என்னது இவளே வெளியே வந்தாளா..? ஏன்..?” எனவும், “அதெப்படி எனக்குத் தெரியும்..” என்று தோள்களைக் குலுக்கியவன், “இப்போ தலைவர் வரைக்கும் விஷயம் போய் இருக்கு.. சரியான பைத்தியமா இருக்கா, இவளை நம்பி ரிஸ்க் எடுக்க நான் தயாரா இல்லை.. பார்த்துக்கோ.. நான் திரும்ப வர வரைக்கும் கதவை திறக்காதே, பாட்டிக்கும் சொல்லி வை..” என்று வேகமாகப் பேசியவாறே வெளியேறினான் நிமலன்.


அவன் பின்னேயே சென்ற நிகிலன், “நான் பார்த்துக்கறேன் ண்ணா..” எனவும், காரை சமீபித்து இருந்த நிமலன் நின்று திரும்பி தம்பியை பார்த்து “பழைய பாசம் எதுவும் எட்டி பார்த்துடாதுன்னு நம்பறேன்..” என்றான் வெற்றுக் குரலில் நிமலன்.


அதற்கு வலியோடான பார்வையோடு நிகிலன் தன் அண்ணனை பார்க்கவும், லேசாக நிகிலனின் தோளில் கையை வைத்து அழுத்தி விட்டுக் காரில் ஏறிக் கிளம்பினான் நிமலன்.


இப்போதும் தன் முகமாற்றத்தை கண்டே ஆதரவாக நிமலன் தட்டிக் கொடுத்து விட்டு செல்வது புரிய.. அவனின் சந்தேகம் சரி என்பது போல் அவளுக்கு எங்கும் இளக்கம் காண்பிக்கக் கூடாது என்ற எண்ணத்தோடே வீட்டிற்குள் வந்தான் நிகிலன்.


தமயா அப்போதும் கதவை தட்டி கத்திக் கொண்டிருக்க.. வேலையாட்கள் ஆங்காங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதைக் கண்டு எரிச்சலான நிகிலன், ‘எங்கே பாட்டி எழுந்து வந்துவிடுவாரா..?’ என்று கவலையோடே, அங்கு நின்றிருந்தவர்களைக் கோபமாகப் பார்க்க.. சட்டென அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


நிமலனுக்கு வீடு அமைதியாக இருக்க வேண்டும். அதிகம் சத்தம் போடுவதோ தேவையில்லாத பேச்சோ இருக்கவே கூடாது. அவனே பெரும்பாலும் வார்த்தைகளில் இல்லாமல் தலையசைப்பிலும் விழியசைவிலும் தான் பேசுவான்.


அப்படிபட்டவனின் வீட்டில் இப்படி வேலை செய்பவர்கள் முன் தமயா இப்படிக் காட்சிப் பொருளாக மாறிக் கொண்டிருப்பதில் கண்டுப்பான நிகிலன், அந்த அறையில் ஜன்னல் பக்கமாகச் சென்று, “இப்போ எதுக்கு அமர்க்களம் செஞ்சுட்டு இருக்கே..? அமைதியா இரு..” என்றான் அதட்டலான குரலில் நிகிலன்.


“நிக்கி.. நிக்கி நீ இங்கே தான் இருக்கியா..? தேங் காட்.. எதுக்கு என்னை லாக் செஞ்சு இருக்கான் அந்த லாம்ப் போஸ்ட்..? டோர் ஓபன் செய் நிக்கி..” என்று படபடத்தவளை, “மரியாதையா பேசு தமயா..” என்று இடையிட்டு இருந்தான் நிகிலன்.


“ம்ப்ச்.. இப்போ அது தான் முக்கியமா..? சரி.. மிஸ்டர் லாம்ப் போஸ்ட் எதுக்கு என்னை வெச்சு லாக் செஞ்சார்.. பிளீஸ் ஓபன் செய் நிக்கி.. நான் போகணும்..” என்று சலிப்போடு சொல்லவும், “எங்கே போகப் போறே..?” என்றான் நிகிலன்.


இதில் சட்டெனப் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாலும், “அது எதுக்கு உனக்கு..? நான் போகணும்..” என்று கொஞ்சம் கோபமும் கொஞ்சம் தடுமாற்றமுமான குரலில் கூறினாள் தமயா.


“ஏன் மறுபடியும் போய்த் துருவ்கிட்டே மாட்டிக்கணுமா..?” என்று அவளின் இந்த அடத்தில் உண்டான கோபத்தில் சுள்ளெனக் கேட்டிருந்தான் நிகிலன். அதில் திகைத்து நின்றாலும், “ஓ.. என்னைப் பற்றி இவ்வளவு தெரியுமா உனக்கு..? பரவாயில்லையே டாக்டர் சாருக்கு என்னைப் பற்றித் தெரிஞ்சுக்க கூட நேரம் இருக்கா..?” என நக்கலானக் குரலில் கேட்டிருந்தாள் தமயா.


அதில் அவள் கேலி புரிய.. “என்ன செய்ய வேண்டாம்னு நினைச்சாலும் சில விஷயங்கள் தவிர்க்க முடியாதது ஆகிடுதே.. இதுவும் அப்படித் தான், எப்போ நீ எங்கே அண்ணா மூலமா எங்க வீட்டுக்குள்ளே வந்தியோ அப்போவே உன்னைப் பற்றின எல்லா விஷயமும் எங்களுக்கு வந்தாச்சு..” என்றான் இறுக்கமான குரலில் நிகிலன்.


“ஓஹோ.. அப்போ கூட இதுக்காகத் தான் தெரிஞ்சுகிட்டே, எனக்காக இல்லை.. அப்படித் தானே..” என்றவள் நிகிலனின் பதிலை எல்லாம் எதிர்பார்க்காமல், “ஒரு காலத்தில் உன்னால் மட்டும் தான் என்னைப் பத்திரமா பார்த்துக்க முடியும்னு நான் நினைச்சுட்டு இருந்தேன் நிக்கி, நீயும் அப்படி தான் இருந்தே..” என்றாள் வெறுமையான குரலில் தமயா.


அவளின் குரலில் இருந்த ஏமாற்றம் சரியாய் சென்று நிகிலனை சேர.. வேதனையோடு திரும்பி அவளைப் பார்த்தவன், முகம் கசங்க தமயா நின்றிருந்த நிலையைக் கண்டு வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.


அவனுமே இப்படி ஒரு பிரிவு தங்களுக்குள் வருமென எதிர்பார்த்திருக்கவில்லையே. ஆனால் விதி செய்த சதியினால் இப்படி இருவரும் இரு வேறு கோணங்களாய் பிரிந்து நிற்க வேண்டிய சூழல். இதில் தமயாவின் தவறு என எதுவுமில்லை என்றாலும், அனைத்தையும் மறந்து அவளோடு இயல்பாய் இருக்க அவனாலும் முடியவில்லை.


இப்போதும் அவளின் வலி அவனையும் பாதித்தாலும் அன்றைய நாள் மீண்டும் மனதில் வந்து அவனை இறுக செய்கிறது. அதில் ஆறுதலாகக் கூட இயல்பாக அவளோடு பேச முடியாமல் விலகி சென்றான் நிகிலன்.


எப்போதும் அவள் முகம் கசங்கினாலும் உடனே அதற்குக் காரணமானவர்களை ஒரு வழியாக்கி விடுபவன் இன்று தன் கண்ணீரை கண்டும் காணாமல் சென்றதில் தோய்ந்து போய் அப்படியே அமர்ந்தாள் தமயா.


************


தலைவரின் வீட்டுப் போர்டிகோவில் காரை நிறுத்தி விட்டு இறங்கிய நிமலன், அங்கு ஜெயதேவனின் கார் முன்பே நின்றிருப்பதைக் கண்டு முகம் இறுக உள்ளே நுழைந்தான்.


வெளி வாயிலுக்கு அருகிலேயே கோமகனின் உதவியாளர் பாண்டியன், நிமலனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பது போலவே நின்றிருந்தார். வேக நடையோடு நிமலன் உள்ளே நுழையவும், அலுவலக அறையை நோக்கி கையைக் காண்பித்தார் பாண்டியன்.


அதற்கு ஒரு தலையசைப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்த நிமலன், அலுவக அறையை நோக்கி நகர்ந்தான். மரியாதையின் நிமித்தம் லேசாகக் கதவை நிமலன் தட்டவும், “வா நிமலா..” என்ற கம்பீரமான குரலில் உள்ளிருந்து வந்தது.


வயதின் காரணமாகக் கொஞ்சம் தளர்ந்திருந்தாலும் அந்தக் குரலில் இருந்த கம்பீரம் அந்த நிலையிலும் நிமலனை லேசாக முறுவலிக்கச் செய்ய.. கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் நிமலன்.


அங்கே நெற்றியை பிடித்தப்படி ஜெயதேவ் அமர்ந்திருக்க.. அவருக்கு அருகில் முகத்தில் கோபத்தின் ரேகைகள் அப்பட்டமாகத் தெரிய அமர்ந்திருந்தான் கிருபா.


இருவரையும் கண்ட நொடி நிமலனின் முகம் பாறையாய் இறுகியது. அதில் அவர்கள் பக்கமாகக் கூடப் பார்வையைத் திருப்பாமல் “சொல்லுங்க தலைவரே.. என்ன விஷயம்..?” என்றான் நிமலன்.


“சொல்றேன்.. முதலில் உட்கார்..” என்றவரை பார்த்து மறுப்பாகத் தலையசைத்தவன், வேறு எதுவோ சொல்ல வருவதற்குள் “உன்னை உட்காருன்னு சொன்னேன் நிமலா..” என்றார் அழுத்தமான குரலில் கோமகன்.


அதில் மறுப்பேதும் சொல்லாமல் நிமலன் அமர்ந்து கொள்ள.. நெற்றியை ஒருமுறை நீவி விட்டுக் கொண்டவர், “என்ன இதெல்லாம் நிமலா..?” என்றார் கவலைக் குரலில் கோமகன்.


“என்னன்னு கேட்டா நான் என்ன சொல்ல தலைவரே..? நீங்க எதைப் பற்றிப் பேசறீங்கன்னு முதலில் சொல்லுங்க..” என அவர் மூலமே விஷயத்தை வாங்க நினைத்துப் பேசினான் நிமலன்.


“ஓஹோ.. உனக்கு ஒண்ணும் தெரியாது இல்லை..” என்ற கோமகனுக்கு ஆம் என்பது போலான முகப்பவத்தோடே அமர்ந்திருந்த நிமலனை கண்டு கோபம் வருவதற்குப் பதில் இந்த நிலையிலும் அவனின் எதற்கும் பதறாத தோற்றம் ரசிக்கவே வைத்தது.


ஆனாலும் அதை முகத்தில் காண்பித்துக் கொள்ளாமல் தன் முன் இருந்த மடி கணினியை அவன் பக்கம் திருப்பியவர், “நான் இதைப் பற்றிக் கேட்டேன்..” என்றார்.


நிமலனுக்கு அனுப்பிய அதே புகைப்படங்களை இவர்கள் இருவருக்கும் கூட துருவ் அனுப்பி வைத்திருந்தான். அதைப் பார்த்து “ஓ, இதுவா..” என்று நிமலன் அசால்ட்டாகச் சொல்லவும், நிமலனை முறைத்தான் கிருபா.


“துருவ் இதை அனுப்பி இருக்கான், நீ சொல்லு நிமலா.. என்ன இதெல்லாம்..? இதுக்கு என்ன விளக்கம் கொடுக்கப் போறே..?’ என்றார்.


“இதில் நான் விளக்கம் கொடுக்க என்ன இருக்கு தலைவரே..?” என்றவனை முறைத்தவர், “தமயா எப்படி உன்கிட்டே வந்தா..? அதைச் சொல்லு முதலில்..” என்றார் லேசான முறைப்போடு கோமகன்.


“ஓ.. அதுவா..” என்றவன், முழுதாக இரண்டு நிமிடங்களைச் செலவழித்து நடந்தது அனைத்தையும் சொல்லி முடித்தான் நிமலன். “ஓ..” என்று அனைத்தையும் உள் வாங்கிக் கொண்டவர், “ஜெயதேவ் மேலே இருக்கப் பகையில் நீ தான் பிளான் செஞ்சு தமயாவை கடத்தினதா துருவ் சொல்றான்..” என்றார் கோமகன்.


“சொன்னா சொல்லிட்டு போகட்டுமே.. வீட்டில் இருக்கப் பொண்ணுங்களை வெச்சு பகையைத் தீர்த்துக்கும் அளவுக்கு நான் கையாலாகாதன் இல்லை..” என்றான் என்னை அவை எதுவும் பாதிக்காது என்பது போலான குரலில் நிமலன்.


“நானும் அதை நம்பலை நிமலா.. உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா..?” என்ற கோமகன், “ஆனா ஜெயதேவ் தான்..” என்று சொல்லி அவர் அடுத்து சொல்ல வருவதைக் கொஞ்சம் யோசித்து நிறுத்தவும், ‘இவர் நம்பாம இருந்தா தான் ஆச்சர்யம்..!’ என இகழ்ச்சியான இதழ் வளைவோடு முகத்தைத் திருப்பிக் கொண்டான் நிமலன்.


“இப்போ இதையே அவன் மீடியாவில் போடுவேன்னு சொல்றான்..” என்ற கோமகனை நெற்றியை சுருக்கி பார்த்தவன் “போட்டா போடட்டும்..” என்று இலகுவாகக் கூறினான் நிமலன்.


அப்படி அவன் சொன்ன விதத்தில் சட்டென உண்டான கோபத்தோடு எழுந்து விட்டான் கிருபா. அதைக் கண்டு கோமகன் கண்டனமாகத் திரும்பி கிருபாவை பார்க்க.. அதே நேரம் மகனின் கையைப் பிடித்து அமர வைத்திருந்தார் ஜெயதேவ். மீண்டும் தன் பார்வையை நிமலனின் பக்கம் திருப்பிய கோமகன், “இப்போ அது இல்லை பிரச்சனை நிமலா..” என்றார்.


“வேற என்ன..?” என்று புரியாமல் பார்த்தவன், “தலைவரே, அது எதுவா வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும்.. அதை நீங்களே பேசிக்கோங்க..” என்று எழுந்து விட்டான் நிமலன்.


“ம்ப்ச்.. உட்கார் நிமலா..” என்று சற்றுக் கண்டிப்பான குரலில் கோமகன் கூறவும், கொஞ்சமும் பிடித்தமில்லாமல் அங்கு அமர்ந்தான் நிமலன். “இதில் நீ உள்ளே வந்து இருக்கக் கூடாது நிமலா.. இல்லைனா இதை வேற மாதிரி கொண்டு போய் இருக்கலாம்..” என்று கோமகன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் மனைவி மாதவி அனைவருக்கும் சூடாகக் காபியோடு அங்கு வந்தார்.


அவரைக் கண்டதும் அவ்வளவு நேரம் இருந்த இறுக்கமான முகபாவம் மாற.. லேசாகப் புன்னகைத்தான் நிமலன். அவனை கண்டு அன்போடு சிரித்தவர் “எப்படிக் கண்ணா இருக்கே..?” எனவும், “நல்லா இருக்கேன் மாதும்மா.. நீங்க எப்படி இருக்கீங்க..?” என்றான் நிமலன்.


“ஆமாமா, ரொம்பத் தான் அக்கறை.. நான் எப்படி இருந்தா உனக்கு என்ன..? நீ என்ன என்னைப் பார்க்கவா இங்கே வந்தே..?” என்றார் போலி கோபத்தோடு மாதவி.


“அட, எங்க மாதும்மாக்கு கூடக் கோபப்பட வருமா..?” என்று ஆச்சர்யமாகக் கேட்டவன், “நிக்கி வந்து இருக்கான் மாதும்மா.. சாயந்திரமா உங்களைப் பார்க்க கூட்டிட்டு வரேன்..” என்றான் அவரைச் சமாதானம் செய்யும் விதமாக.


“நிஜமாவா..? சரி, நான் உங்களுக்குப் பிடிச்சது எல்லாம் சமைச்சு வைக்கறேன்..” என்று உற்சாகத்தோடு பேசிக் கொண்டிருந்தவர், கோமகனின் கண்டன பார்வையில் அப்படியே அமைதியாகி, “சரி நீங்க பேசுங்க..” என்று விட்டு வெளியேறி இருந்தார் மாதவி.


அவர் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டிருந்த கோமகன் “என்ன பேசிட்டு இருந்தோம்..?” என்று யோசனையாக நெற்றியை நீவ.. “நான் உள்ளே வந்து இருக்கக் கூடாதுன்னு சொன்னீங்க தாத்தா..” என்று சற்று முன் மாதவியோடு பேசிய இலகுவான குரலிலேயே கூறியவன், பின் சட்டென நிறுத்தி விழிகளை மூடி தன்னைக் கட்டுப்படித்திக் கொண்டு, “நானும் விரும்பி இதுக்குள்ளே வரலை தலைவரே.. இன்னும் சொல்லப் போனா அந்தப் பொண்ணு யாருன்னு தெரிஞ்சு இருந்தா..” என கடினமான குரலில் கூறியவன் மற்றதை சொல்லாமல் அப்படியே நிறுத்தினான்.


ஆனாலும் அங்கிருந்த அனைவருக்குமே அவன் சொல்ல வந்தது புரிந்தது. “ஆனா அங்கே யார் இருந்து இருந்தாலும் என்ன செஞ்சு இருப்பேனோ அதைத் தான் நான் செஞ்சேன், அப்பறம் ஒரு முக்கியமான விஷயம் தலைவரே..” என்று துவங்கியவனை, இடையிட்டு இருந்த கோமகன், “இங்கே நம்மைத் தவிர யாரு இருக்கா நிமலா..? தாத்தானே கூப்பிடேன்.. எத்தனை வருஷம் ஆச்சு நீ அப்படிக் கூப்பிட்டு..” என்றார் நெகிழ்வான குரலில் கோமகன்.


“ம்ப்ச்.. இல்லை தலைவரே, அது சரிப்பட்டு வராது..” என்றவன், மேலும் எதுவோ பேச வர, “தமயா எங்கே தலைவரே..? நாங்க அவளைப் பார்க்கலாமா..?” என்றான் கிருபா.


அதில் உண்டான நக்கல் புன்னகையோடு “அந்தப் பொண்ணு இவங்களை எல்லாம் பார்க்க விரும்பலை போலத் தலைவரே.. ஆஸ்திரேலியா போறேன்னு நிக்குது..” என்றான் நிமலன்.


“நிமலா என்ன பேச்சு இது..?” என்று கோமகன் கண்டிக்க.. “அட, நிஜமா தான் சொல்றேன் தலைவரே, நீங்க நினைக்கறது போல இது துருவ் செஞ்ச வேலை மட்டுமில்லை.. அந்தப் பொண்ணே இந்த அவசரக் கல்யாணம் பிடிக்காம தான் வீட்டை விட்டு ஓடி வந்து இருக்கு.. இடையில் அவனுங்ககிட்ட சிக்கிடுச்சு..” என்றான் நிமலன்.


“என்ன ஜெயதேவ் இது..? பொண்ணுக்கு விருப்பமில்லாம கட்டாயக் கல்யாணம் செய்யப் பார்த்தியா..?” என்றார் கண்டிப்பான குரலில் கோமகன். “அப்படி இல்லை தலைவரே..” என்று ஜெயதேவ் தயங்கவும், “அப்போவே நான் சொன்னேன், இதெல்லாம் வேண்டாம் இதை நான் பார்த்துக்கறேன்னு இவர் தான் கேட்கலை.. கட்சி பிரச்சனை வேண்டாம் அது இதுன்னு சொல்லி..” என்று எரிச்சலோடு நிறுத்தினான் கிருபா.


“இல்லை கிருபா.. இது தேவையில்லாத கட்சி பிரச்சனையா மாற வேண்டாம்னு நான் தான் தமயாவுக்குச் சீக்கிரம் கல்யாணம் செஞ்சுட சொன்னேன்.. ஆனா கட்டாயப்படுத்திச் செய்யச் சொல்லை.. அவளுக்கு இதில் விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சு இருந்தா நானே தடுத்திருப்பேன்..” என்றார் கோமகன்.


இதில் எதிலும் தலையிடாமல் நிமலன் அமர்ந்திருந்தான். ஜெயதேவ் வேதனையோடு அமர்ந்திருப்பதைக் கண்டு “இப்போ இதை எந்தப் பிரச்சனையும் இல்லாம எப்படி முடிக்கறதுன்னு தான் யோசிக்கணுமே தவிர.. முடிஞ்சதை பற்றிப் பேசி பயனில்லை..” என்றார் கோமகன்.


அது அவர்கள் பிரச்சனை என்பது போல் “சரி தலைவரே நான் கிளம்பறேன்.. நீங்க பேசி முடிவு செஞ்சுட்டு சொல்லுங்க.. அந்தப் பொண்ணை இங்கேயே கொண்டு வந்து விடச் சொல்றேன்.. இல்லைனா அது வேற எங்கேயாவது நாளைக்கு ஓடி போச்சுனா கூட நான் பத்தி சொல்ல வேண்டி இருக்கும்.. தேவையில்லாத தலைவலி எனக்கு..” என்று எழுந்து கொண்டான் நிமலன்.



அதில் கண்டிப்போடு நிமலனை பார்த்த கோமகன் “என்ன பேச்சு இது நிமலா..?” என்றார். அதற்கு பதிலேதும் சொல்ல விரும்பாமல் நிமலன் நின்றிருக்க.. “இப்போ இது உட்கட்சி பிரச்சனையா மாற்ற பார்ப்பாங்க.. சும்மாவே அவன் அப்பா எதில் வாய்ப்பு கிடைக்கும்னு பார்த்துட்டு இருப்பான்.. இப்போ நாமே அல்வா துண்டு போல அவனுக்கு சான்ஸ் எடுத்து கொடுக்க கூடாது.. எல்ச்க்ஷன் வேற வருது..” என்று யோசனையாக அமர்ந்திருந்தவர், சட்டென்று உண்டான எரிச்சலில் நிமலன் சொல்லியதை கேட்டு அவனை திகைப்பாக பார்க்க.. அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஜெயதேவோ பதறி மறுப்பாக பார்த்தார்.

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தை பதித்து விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

TNN - 3

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34914

தழல் – 4

“தப்புச் செஞ்சுட்டேன்.. ரொம்பப் பெரிய தப்புச் செஞ்சுட்டேன்.. அவனைப் பற்றித் தெரிஞ்சும் பார்த்துக்கலாம்னு நான் நினைச்சு இருக்கக் கூடாது..” என்று ஜெயதேவ் புலம்பவும், “ம்ப்ச்.. நீ மட்டுமா..? நானும் தான் தப்புச் செஞ்சுட்டேன், நம்ம பொண்ணு வாழ்க்கை இதில் இருக்கேன்னு யோசிச்சு பிரச்சனையாகாம முடிக்கப் பார்த்தேன்.. அது இன்னைக்கு இப்படி வந்து நிற்குது..” என்றார் வருத்தத்தோடான குரலில் கோமகன்.


“இப்போவும் அமைதியாவே என்னை இருக்கச் சொல்றீங்களா தலைவரே..? அப்போவே நான் பார்த்துக்கறேன்னு சொன்னேன், அப்பா தான் விடலை..” என்றான் கிருபா.


“ம்ப்ச்.. உன்னாலேயே பார்த்துக்க முடியும் போது எங்களால் முடியாதுனா நினைச்சே..? கார்வேந்தன் நல்லா இருந்திருந்தா அது வேற.. எங்களுக்குள்ளே கட்சி விஷயத்தில் தான் போட்டி பொறாமை முட்டல் மோதல் எல்லாம் இருக்கும்.. ஆனா மற்ற விஷயங்களில் ஒருத்தர் எல்லை தெரிஞ்சு ஒருத்தர் நடந்துப்போம்.. அதுவே இப்போ அப்படியா இருக்கு.. நம்மைத் தேவையில்லாம சீண்டி, வம்பிழுத்து, குடும்பத்தை அசிங்கப்படுத்தின்னு அருவருப்பான அரசியலை முரளிதரன் நடத்திட்டு இருக்கான்.. சுமித்ராவும் பாவம் வாயில்லா பூச்சியா அவன் சொன்னதுக்கு எல்லாம் தலையாட்டுட்டு இருக்கு.. இதில் இந்த விஷயமும் அவன் காதுக்குப் போனா பிள்ளையைக் கண்டிச்சு தடுக்க வேண்டிய அவனே எங்கே பொண்ணைத் தூக்க இறங்கி வேலை பார்ப்பானோன்னு தான் அமைதியா இதை முடிச்சுக்கச் சொன்னேன்..” என்றார் வருத்தமான குரலில் கோமகன்.


இதுவே ஜெயதேவ் பேசி இருந்தால் கொஞ்சமும் கண்டு கொண்டிருக்க மாட்டான் நிமலன். ஆனால் பேசியது கோமகன் எனும் போது அவர் குரலில் இருந்த வருத்தம் அவனையும் தாக்க.. “இப்போ வரை இது பற்றி எதுவும் அவருக்குத் தெரியாதுன்னு நினைக்கறீங்களா தலைவரே..?” என்றான் நிமலன்.


அதில் கவலையாக அவனை நிமிர்ந்து பார்த்தவர், “தெரிஞ்சு இருக்கும் தான் நிமலா.. துருவ் பொண்ணுங்க விஷயத்தில் எப்படின்னு உனக்குத் தெரியாதது எதுவுமில்லை.. அதனால் இதுவும் அப்படிப் பத்தோட பதினொன்னு நினைச்சு கூடக் கண்டுக்காம இருப்பான் முரளிதரன், அதுவே நாம இதை அவன்கிட்டே கொண்டு போனோம்னு வை, அவ்வளவு தான் இதையே சாக்கா வெச்சுப் பொண்ணைத் தூக்கி அவன் பையனுக்குக் கட்டியே வெச்சுடுவான்..


அப்பறம் கட்சி பாகுபாடு எங்களுக்குக் கிடையாது.. ஒற்றுமையா இருக்கத் தான் முயற்சிக்கறோம்.. இவங்க தான் அதுக்கு ஒத்துழைக்கலைன்னு ஊரைக் கூட்டி நம்ம மேலேயே பழியைப் போடுவான்.. நம்ம பொண்ணு விஷயம் பட்டி தொட்டி எல்லாம் விவாதம் ஆகுமேன்னு தான் சீக்கிரம் கல்யாணம் செஞ்சு வெச்சுடுன்னு சொன்னேன்.. ஆனா அது இப்படி ஆகும்னு நான் நினைக்கலை..” என்றார் கோமகன்.


“இப்போ என்ன செய்யறது தலைவரே..?” என்ற ஜெயதேவ்வை யோசனையோடு பார்த்த கோமகன், ‘தெரியவில்லை’ என்பது போல் தலையசைக்க.. அவர்களைக் குழப்பத்தோடு பார்த்தான் நிமலன்.


“நம்ம தமயா தான் சேஃபா இருக்காளே, இன்னும் என்ன தலைவரே..?” என்ற கிருபாவை மறுப்பாகப் பார்த்தவர், “இது தான் உன் வேகத்துக்கும் எங்க விவேகத்துக்கும் இருக்க வித்தியாசம்.. அவ நம்ம கூட இருக்கா.. ஆனா நீ சொன்னது போலப் பாதுக்காப்பா இருக்காளானா..? நிச்சயம் இல்லை..” என்றார் கோமகன்.


இதில் கிருபா மட்டுமல்ல நிமலனும் அவரைக் கேள்வியாகப் பார்க்கவும், “நாம இரண்டு கட்சிக்குள்ளே பிரச்சனையாக வேண்டாம்னு நினைச்சா.. அவன் இதையே பயன்படுத்தி உள்கட்சிக்குள்ளே பிரச்சனை செய்யப் பார்க்க்கறான்.. புரியலையா உங்களுக்கு..?” என்றார் கோமகன்.


அவர் சொல்ல வருவது புரிய.. “இப்போ என்ன பிரச்சனை வரும் தலைவரே..? தப்பு முழுக்க அவன் மேலே தானே..?” என்றான் கிருபா.


“ம்ப்ச், புரியாம பேசாதே கிருபா.. அவன் ஒரு கிறுக்கன், நினைச்சதை சாதிச்சே பழக்கப்பட்டுட்டான்.. இப்போ அது நடக்கலைனும் போது அவன் என்ன செய்வான்னு சொல்லவே முடியாது.. அதுவும் இப்போ ஆட்சி அவங்க கையில் இருக்கு..” என்றார் ஜெயதேவ்.


அவனைச் சரியாகப் புரிந்து வைத்தது போல் ஜெயதேவ் சொல்லவும், ஆமோதிப்பாகத் தலையசைத்த கோமகன், “அதிலும் நிமலன் இதில் உள்ளே வந்தது, அவனுக்கு வசதியா போகும்..” என்றார்.


அதே நேரம் ஜெயதேவின் அலைபேசி அடித்தது. அதை எடுத்து பார்த்தவர், துருவ் அழைப்பதை கண்டு யோசனையாகத் திரும்பி தலைவரை பார்க்க.. ‘எடு’ என்பது போல் கையசைத்தார் கோமகன்.


அதில் ஜெயதேவ் அழைப்பை ஏற்று இருக்க.. “என்ன ஜெயதேவ்.. ஓ, இனி மாமான்னு கூப்பிடணுமோ..! சரி கழுதை கூப்பிட்டா போச்சு.. என்ன மாமா முடிவு செஞ்சு இருக்கே.. ஒழுங்கா நீயா உன் பொண்ணை எனக்குக் கட்டி கொடுக்கறியா..? இல்லை, உன் பொண்ணு போட்டவை எல்லா மீடியாவிலும் போட்டு கேவலப்படுத்தவா..? நல்லா யோசிச்சு சரியா ஒரு பதிலை சொல்லு, இத்தனை நாள் உனக்குக் கொடுத்தது போல நிறைய நேரம் இப்போ என்கிட்டே இல்லை..


வெறும் பத்து நிமிஷம்.. அதுக்குள்ளே உன் முடிவை சொல்லு, இல்லைனா உன் மேலே இருக்கக் கோபத்தில் உன் பொண்ணை அந்த நிமலன் கடத்திட்டுப் போய்க் க*ப*ச்சுட்டான்னு எல்லாப் பக்கமும் தீயை விட வேகமா செய்தி பரவும், அப்பறம் உன் பொண்ணை ஒரு பையன் கட்டிக்க வர மாட்டான்.. அப்போவும் நான் தான் அவளுக்கு வாழ்க்கை தரணும்.. ஆனா போன மானம் போனது தானே..! யோசிச்சுக்கோ, பத்து நிமிஷத்தில் கூப்பிடறேன்..” என்று விட்டு அழைப்பை துண்டித்து இருந்தான் துருவ்.


இதையெல்லாம் ஸ்பீக்கரின் வழியே அனைவரும் கேட்டுக் கொண்டிருக்க.. “எவ்வளவு திமிர் இருந்தா நமக்கே டைம் பிக்ஸ் செய்வான்.. தப்பையெல்லாம் அவன் செஞ்சுட்டு நம்மைப் பிளாக் மெயில் செய்யறான்.. என்ன தலைவரே இது..?” என்று கொந்தளித்தான் கிருபா.


அவரோ ஏதோ தீவிர சிந்தனையில் இருக்க.. “இப்போ என்ன செய்யறது தலைவரே..?” என்றார் ஜெயதேவ். “அதைத் தான் நானும் யோசிச்சுட்டு இருக்கேன்..” என்றார் கோமகன்.


“இதில் யோசிக்க என்ன இருக்கு தலைவரே.. தமயாவை அவன் கடத்தினதுக்கே அவன் மேலே கேஸ் கொடுக்கணும், இப்போ பிளாக் மெயில் வேற செய்யறான்..” என்று படபடத்த கிருபாவை சோர்வாகப் பார்த்தவர், “எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்ய இது விளையாட்டு விஷயம் இல்லை கிருபா.. கொஞ்சம் பொறுமையா இரு, இது நம்ம வீட்டு பொண்ணோட வாழ்க்கை.. ஒரு முறை பேர் கெட்டுப் போனா போனது தான்.. அதுக்குப் பிறகு நாம எவ்வளவு தான் விளக்கம் கொடுத்தாலும் இந்தப் பேர் வாழ்க்கை முழுக்கப் பின் தொடர்ந்துட்டே தான் இருக்கும்..” என்றார் கோமகன்.


“அதுக்கு என்ன செய்யச் சொல்றீங்க தலைவரே..? அவனுக்குக் கல்யாணம் செஞ்சு கொடுக்கச் சொல்றீங்களா..? எனக்கு ஒரு மணி நேரம் கொடுங்க, அவனைத் தேடி பிடிச்சு கையைக் காலை உடைச்சு போடறேன்..” என்றான் கிருபா.


“இப்போ தான் சொன்னேன் கிருபா.. அமைதியா இரு, உன்னால் செய்ய முடிஞ்சதை எங்களால் செய்ய முடியாதுன்னு நீ நினைக்கறியா..? இங்கே முள்ளு மேலே சேலை விழுந்தது போல, அவன் கையில் நம்ம பொண்ணு வாழ்க்கை சிக்கி இருக்கு.. அதை எப்படிச் சரி செய்யணும்னு தான் நாம பார்க்கணும்.. சேலையைக் கிழியாம எடுக்கறதில் தான் இப்போ நம்ம கவனம் இருக்கணும்.. முள்ளை எப்போ வேணும்னாலும் முறிச்சுக்கலாம்..” என்றார் கோமகன்.


அவர் சொல்வது எல்லாம் சரி தான் என்றாலும் இப்படி வெளிப்படையாக அவன் மிரட்டியும் தன் தங்கையின் மேல் கை வைத்தும் எதுவும் செய்யாமல் கைக் கட்டி நிற்பது கிருபாவுக்கு அவமானமாக இருந்தது.


அதில் கவலையோடு திரும்பி அவன் ஜெயதேவை பார்க்க.. “இதுக்காகத் தான் அவ வேண்டாம்னு சொல்லியும் அவ்வளவு அவசரமா கல்யாணம் செய்ய நினைச்சேன்.. ஆனா அதைப் புரிஞ்சுக்காம இப்படி அவசரப்பட்டுச் சிக்கலை உண்டாக்கிட்டா..” என்றார் வேதனையோடான குரலில் ஜெயதேவ்.


“இப்போ சிக்கல் அவளுக்கு மட்டுமில்லை.. நிமலனுக்கும் தான்..” என்று கவலைக் குரலில் கோமகன் கூறவும், “எனக்கு என்ன சிக்கல் தலைவரே..? அவன் என்ன செஞ்சாலும் என்னை எந்த விதத்திலும் அது பாதிக்காது..” என்றான் சட்டென்று நிமலன்.


“ம்ப்ச்.. நிலைமை புரியாம பேசாதே நிமலா.. இது பொண்ணு விஷயம், அதிலும் ஜெயதேவ் பொண்ணு.. உனக்கும் ஜெயதேவுக்கும் இடையில் இருக்கப் பிரச்சனை ஊரறிந்த ரகசியம், இப்போ வரை இரண்டு பேரும் அதை வெளிப்படையா ஒத்துக்கலைனாலும் எல்லாருக்கும் இது தெரிஞ்ச விஷயம் தான்..


இப்போ இப்படி ஒரு செய்தி புகைப்பட ஆதாரத்தோடு வெளியே வந்தா ஒரு நொடிக் கூட யோசிக்காம எல்லாரும் நம்புவாங்க.. அதோட இன்னும் ஆறு மாசத்தில் எலக்ஷன் வர போகுது.. இப்போ போய் இப்படிப் பெயரை கெடுத்துக்கிட்டா அப்பறம் எல்லாமே வீணா போகும்.. அதிலும் கார்வேந்தன் கட்சிக்கு இப்போ பரவலா அவ்வளவு சப்போர்ட் இல்லை..


முரளிதரன் செஞ்சு வெச்சு இருக்க வேலை அப்படி, கண்டிப்பா இந்த முறை நம்ம கட்சி தான் ஜெயிக்கும்னு உனக்கும் தெரிஞ்சு இருக்கும்.. இந்த நேரத்தில் நீ எடுத்து வைக்கற ஒவ்வொரு அடியும் ரொம்பக் கவனமா இருக்கணும்..


வழக்கமா பதவி நம்ம கையில் இருக்குன்னு எவ்வளவு திமிரா எத்தனை ஆட்டம் போடறவனா இருந்தாலும் பொண்ணுங்க விஷயத்தில் சிக்கிக்காம இருக்கத் தான் பார்ப்பானுங்க.. திரைமறைவில் தான் அவனுங்க அத்தனை தகிடுதத்தமும் இருக்கும்..


ஏன்னா அவனுங்களுக்கு நல்லாவே தெரியும் ஒருமுறை இந்த விஷயத்தில் பேர் அடிபட்டுட்டா அப்பறம் அதை மாற்றவே முடியாது.. எத்தனையோ பெரிய சாம்ராஜியங்களே இப்படிப் பொண்ணுங்க விஷயத்தால் சரிஞ்சு இருக்கு..


அவனுங்களே அதையெல்லாம் யோசிக்கும் போது எந்தத் தப்பும் செய்யாத நீ ஏன் இந்தப் பெயரை தூக்கி சுமக்கணும்.. அப்பறம் இத்தனை நாள் உன் மேலே இருந்த மரியாதை நல்லெண்ணம் எல்லாம் காணாம போயிடும்.. இதை வெச்சே உன்னைக் காலத்துக்கும் பேசுவாங்க..


அப்பறம் அரசியலில் உனக்கு எதிர் காலமே இல்லாம போகும்.. இதுக்கா நீ இவ்வளவு உழைச்சே.. இது உன் கனவு மட்டுமில்லை, உன் அப்பா கனவும் கூட நிமலா.. பார்த்து தான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கணும்.. கீழே ஆயிரக்கணக்கான கன்னி வெடி உனக்காக.. ஏன் நமக்காகக் கூடக் காத்திருக்கும்..” என்றார் வேதனையான குரலில் கோமகன்.


வேறு எதையாவது அவர் சொல்லி இருந்தால் கூடப் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டான் நிமலன். ஆனால் அரசியலில் அவன் எதிர்காலத்தைப் பற்றிக் கோமகன் கூறவும், தன் தந்தையை எண்ணி மறுத்து பேச முடியாமல் நிமலனும் யோசனையானான்.


“அவன் அந்தப் படத்தையெல்லாம் மீடியாவில் போடறதுக்கு முன்னே தடுக்கணும் தலைவரே..” என்றார் பதட்டமான குரலில் நேரத்தை பார்த்தவாறே ஜெயதேவ்.


“ஹ்ம்ம்.. நானும் அதைத் தான் யோசிச்சுட்டு இருக்கேன்.. இதில் நிமலன் வராம இருந்தா நாம இந்த விஷயத்தை வேற மாதிரி கொண்டு போய் இருக்கலாம்.. ஆனா இப்போ..” என்று அவர் தயங்கி இழுக்கவும், “அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்றீங்க தலைவரே..? இப்படி ஒரு தலைவலி இந்த விஷயத்தில் இருக்கும்னு எனக்குத் தெரியாதே..! அந்தப் பொண்ணே வீட்டை விட்டு ஓடி வந்ததுன்னு தெரிஞ்சு இருந்தா கூட எப்படியோ போன்னு அப்படியே விட்டு வந்திருப்பேன்.. யாருக்கோ நல்லது செய்யப் போய் இப்போ அது எனக்கே பிரச்சனையாகுது..” என்றிருந்தான் எரிச்சலான குரலில் நிமலன்.


தன் பெண்ணை அவன் பேசிய விதத்தில் ஜெயாதேவின் முகம் கசங்கி போக.. கிருபா நிமலனை முறைத்தான். “என்ன பேச்சு இதெல்லாம் நிமலா..?” என்று கண்டிக்கும் குரலில் கேட்டார் கோமகன்.


“வேற என்ன தாத்தா சொல்ல சொல்றீங்க..? இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவன்னு தெரிஞ்சு இருந்தா அவ பக்கம் கூடத் திரும்பி இருப்பேனா நான்..?” என்றான் நிமலன்.


தன்னையும் மறந்து அவன் தாத்தா என்று அழைத்ததிலேயே அவனின் கோபம் புரிய.. “உன்னை யாரும் தப்பு சொல்லலை நிமலா.. உங்களுக்குள்ளே பிரச்சனை இருக்க நிலையில் நீயும் வந்து இதில் சிக்கிட்டியேன்னு தான் சொன்னேன்.. இதுக்குள்ளே நீ வரலைனா வேற மாதிரி இதைக் கையாண்டு இருக்கலாம்.. இப்போ இரண்டு பேருக்கும் பிரச்சனையாகாம என்ன செய்யறதுன்னு தான்..” என்று யோசனையோடு பேசிக் கொண்டிருந்த கோமகனை வேகமாக இடையிட்டு இருந்த நிமலன் “அதுக்காக.. என்னை என்ன செய்யச் சொல்றீங்க..? அவளை நான் கால்யாணமா செஞ்சுக்க முடியும்..?” என்றிருந்தான் வெறுப்பான குரலில் நிமலன்.


அதில் இவ்வளவு நேரம் இதை தான் அவனிடம் எப்படிச் சொல்வதென அவர் தயங்கிக் கொண்டிருக்க.. அதையே நிமலன் சட்டெனச் சொல்லி விட்டதில் கோமகன் கண்கள் மின்ன நிமலை பார்த்து “அது மட்டும் தாம் சரியா இருக்கும்னு..” என்று மேலும் எதுவோ சொல்ல முயன்றவரை அதே நேரம் இடையிட்டு இரு வேறு இடங்களில் இருந்து அதற்கு வேகமாக மறுப்பு வந்தது.


“இல்லை.. வேண்டாம்..” என்று தன்னையும் மீறி உண்டான படபடப்போடு ஜெயதேவ் சொல்லி இருக்க.. “நோ.. இது சரி வராது..” என்று அவசரமாகக் மருத்திருந்தான் கிருபா.


இதில் அப்போதே மறுப்பான தலையசைப்போடு எதுவோ சொல்ல முயன்ற நிமலன், அவர்களின் இந்த வேகமான மறுப்பில் புருவத்தைச் சுருக்கி, பார்வையை மட்டும் திருப்பி அவர்களைப் பார்க்க.. “இல்லை தலைவரே.. இது சரி வராது வேண்டாம்..” என்றிருந்தார் பதட்டமான குரலில் மீண்டும் ஜெயதேவ்.


“ஏன் ஜெயதேவ் வேண்டாம்னு சொல்றே..? இதைத் தவிர இப்போ வேற ஏதாவது பிளான் வெச்சு இருக்கியா நீ..?” என்றார் கோமகன். “இல்லை தலைவரே.. ஆனாலும் இது வேண்டாம்..” என்றார் பதட்டத்தோடே ஜெயதேவ்.


“சும்மா வேண்டாம், வேண்டாம்னா.. அது தான் ஏன்னு கேட்கறேன்..” என்று லேசான கோபத்தோடு கோமகன் கேட்கவும், “அது.. எங்களுக்குள்ள இருக்க எல்லாம் உங்களுக்கே தெரியும், அந்தக் கோபத்தை என் பொண்ணு மேலே காட்டினா..! அதுக்குத் தான் சொல்றேன் இது வேண்டாம்..” என்றார் ஜெயதேவ்.


அதில் உண்டான இகழ்ச்சியான இதழ் வளைவோடு, “நீங்க இவ்வளவு சொல்றீங்கனா அது சரியா தான் இருக்கும் தலைவரே.. உங்க விருப்பம் போலச் செய்ங்க..” என்றிருந்தான் நிமலன். இதைக் கேட்டு கோமகன், நிம்மதியடைய.. மற்ற இருவரும் திகைப்பும் குழப்பமுமாக நிமலனை பார்த்தனர்.


அதே நேரம் கோமகனுக்கு முரளிதரனிடம் இருந்து அழைப்பு வந்தது. அதை அவர் சட்டென எடுக்க.. “என்ன தலைவரே.. ஆலோசனை கூட்டம் எல்லாம் பலமா நடக்குது போலேயே.. சரி இப்போ என்ன முடிவுக்கு வந்து இருக்கீங்க..? பொண்ணு கொடுக்க ஏன் இவ்வளவு யோசனை..? என் பையன் என்ன வசதியில் குறைஞ்சு போயிட்டானா..? இல்லை ஆள் அழகா தான் இல்லையா..? சட்டு புட்டுன்னு முடிவெடுத்து கல்யாண தேதியை சொல்லி விடுங்க.. என் பையன் அவ்வளவு உயிரா இருக்கான் அந்தப் பொண்ணு மேலே..” என்றார் நீ இதை மறுத்து தான் பாரேன் என்பது போலான நக்கல் வழியும் குரலில் முரளிதரன்.


அதை அங்கிருந்தவர்களும் கேட்டுக் கொண்டு தான் இருந்தனர். “உன் பையன் ஆசைப்பட்டது இந்த ஒரு பொண்ணுனா நாங்களும் மறுக்காம சரின்னு சொல்லி இருப்போம் முரளிதரா.. ஆனா அவன் அப்படி இல்லையே..” என்றார் கோமகன்.


“அட, இந்த வயசில் அப்படி எல்லாம இல்லைனா தான் தப்பு தலைவரே.. அதெல்லாம் சைடு.. இந்தப் பொண்ணைத் தான் கல்யாணம் செஞ்சுக்கணும்னு நினைக்கறான்.. இந்தக் கல்யாணம் மட்டும் நடந்தா இரண்டு கட்சியும் ஒண்ணாகிடும், எல்லாருக்கும் அது நல்லது தானே..” என்றார் முரளிதரன்.


“நல்லதா..? யாருக்கு நல்லது..?” என்று இப்போது கேலியாகக் கோமகன் கேட்கவும், “அடடா.. சுமுகமா பேசி வேலையை முடிச்சுக்கலாம்னா விட மாட்டீங்க போலேயே.. சரி உங்களுக்கு ஒரு போட்டோ அனுப்பறேன் பாருங்க..” என்றவர் எதையோ அனுப்பி வைக்க.. அனைவரின் கவனமும் கோமகனின் முன் இருந்த மடிகணினியின் மீது திரும்பியது.


அதில் தமயா மணப்பெண் அலங்காரத்தில் சுவர் ஏறிக் குதிக்கும் காட்சி இருக்க.. நெற்றியை லேசாகத் தேய்த்து விட்டுக் கொண்டார் கோமகன். “நான் மட்டும் சரியான நேரத்தில் பார்க்கலைனா உங்க வீட்டு பொண்ணு மானம் இந்த நேரத்துக்கு வலைத்தளம் முழுக்கப் பரவி கெட்ட வாசம் வீச ஆரம்பிச்சு இருக்கும்.. நான் தான் பேசி முடிக்கறேன்.. அவசரப்படாதேன்னு சொல்லி துருவ்வை தடுத்து இருக்கேன்.. இங்கே பாருங்க.. இந்தப் படத்தை வெச்சே அந்தப் பொண்ணுக்கு ஏற்பாடு செஞ்ச கல்யாணத்தில் விருப்பமில்ல, அது துருவ்வை தான் காதலிச்சுது, அதுக்காகத் தான் வீட்டை விட்டு ஓடி வந்து இருக்குன்னு பரப்பி விட்டேன்னு வெச்சுக்கோங்க.. சும்மா ஊரே பத்திகிட்டு எரியும், அதோட நிமலன் வேற அந்தப் பொண்ணைத் தூக்கிட்டு போயிருக்கான்.. இதை வெச்சு என்னால் என்னவெல்லாம் செய்ய முடியும்னு நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியது இல்லை..” என்று விஷமமாகக் கூறி நிறுத்தினார் முரளிதரன்.


“ஏன் முரளிதரா உனக்கு அனுப்ப ஒரு போட்டோ இருந்தா எனக்கு அனுப்ப ஒண்ணு இல்லாமலா போகும்..?” என்று சற்று அழுத்தமான குரலில் கேட்ட கோமகன், எதையோ அனுப்பி விட.. அதை அந்தப் பக்கம் இருந்தவரை விட, இங்கிருந்தவர்கள் ஆர்வமாகப் பார்த்தனர்.


அதில் நிமலன் தமயாவை தூக்குவதற்கு முன் அந்த இடத்தில் நடந்த காட்சிகள் அனைத்தும் தெளிவான காணொளியாக இருந்தது. அடுத்து அங்கிருந்து நிமலன் கிளம்பிய பின் அடி வாங்கிச் சுருண்டு கிட்டந்தவர்களின் தலைவன் டேனியல் காணொளி அழைப்பில் துருவை தொடர்பு கொண்டு இங்கு நடந்த அனைத்தையும் பகிர..


அவன் அதற்குக் காது கூசும் வார்த்தைகளில் வசைப்பாடுவது வரை அதில் இருக்க.. “என்ன முரளிதரா தெளிவா பார்த்தியா..? இப்படி ஒண்ணு நடந்து இருக்குன்னு தெரிஞ்சதுமே அங்கே ஏதாவது சிசிடிவி கிடைக்குமான்னு தான் பார்க்க சொல்லி இருந்தேன்..


நானே எதிர்பாராம அங்கே இருந்த ஷோ ரூமில் நடு ராத்திரியில் அடிக்கடி எவனோ வந்து எல்லாப் பொருளையும் உடைச்சுட்டு போறான்னு டூ வே கேமரா பிக்ஸ் செஞ்சு இருக்காங்க.. கிளாரிட்டி எப்படி இருக்கு முரளிதரா..? நல்லா இல்லைனா சொல்லு, நம்ம செலவில் வேற கேமரா வாங்கிக் கொடுத்துடலாம்..” என்றிருந்தார் கேலியான குரலில் கோமகன்.


அதில் அந்தப் பக்கம் சட்டென வார்த்தை வராமல் முரளிதரன் தடுமாறுவது இங்கிருந்த அனைவருக்கும் புரிய.. “அவன் தான் சின்னப் பையன் விஷயம் புரியாம எல்லாத்தையும் விளையாட்டா பார்க்கறானா.. நீயும் அப்படியே இருந்தா எப்படி முரளிதரா..


என்னை என்ன உன்னை மாதிரி குறுக்கு வழியில் அரசியலுக்கு வந்தவன்னு நினைச்சியா..? அடிமட்ட தொண்டனா இருந்து அரசியலோட ஒவ்வொரு நுணுக்கத்தையும் கத்துக்கிட்டு அரசியலுக்கு வந்தவன்.. என் அனுபவம் உன் வயசு..


யார்கிட்டே பேசறோம்.. எப்படிப் பேசறோம்னு பார்த்து பேசு.. இல்லை, உன் கையை எடுத்தே உன் கண்ணைக் குத்தி பார்வை இல்லாதவனா உன்னை அலைய விட்டுடுவேன்.. இன்னைக்கு அமைதியா பொறுமையா இருக்கக் கோமகனை தானே உனக்குத் தெரியும்..?


போ, போய் உன் மாமனாருக்குகிட்டே கேட்டு என்னைப் பற்றிச் சரியா தெரிஞ்சுட்டு விளையாட வா.. இதுக்கு மேலே எங்க பொண்ணு விஷயத்தில் உன் பையன் எதுவும் செய்ய நினைச்சா கூட அவன் மிகப் பெரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்னு சொல்லு..


அப்பறம் நாங்க எல்லாம் இங்கே கூடி உன் பையனுக்குப் பயந்து என்ன செய்யறதுன்னு தெரியாம பேசிட்டு இல்லை.. உன் பையனை என்ன செய்யலாம்னு தான் பேசிட்டு இருந்தோம்னு உனக்குத் தப்பான இன்பர்மேஷன் கொடுத்த அந்த ஸ்பைகிட்டே சொல்லிடு..” என்று விட்டு அழைப்பை துண்டித்து இருந்தார் கோமகன்.


அதுவரை ஒரு பதட்டத்தோடே இருந்தவர்கள், கோமகனின் பேச்சிலும் ஆதாரத்திலும் நிம்மதியாக, ஆனால் அதற்கு நேர்மாறாகக் கவலையான முகத்தோடு தன் முன் இருந்தவர்களைப் பார்த்த கோமகன், “நமக்கு நேரமில்லை, நான் நினைச்சது போலவே முரளிதரன் பிரேமுக்குள்ளே வந்துட்டான்.. இனி நேரத்தை கடத்தாம நாம சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்தாகணும்.. நீ என்ன சொல்றே ஜெயதேவ்..?” என்றிருந்தார்.


“எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை தலைவரே..” என்ற ஜெயதேவை புரிதலோடு பார்த்தவர், “உன் நிலை எனக்குப் புரியுது.. ஆனா நமக்கு வேற வழியில்லை.. இதில் நம்ம இரண்டு பிள்ளைங்க வாழ்க்கை, மரியாதை, கௌரவம்னு எல்லாமே இருக்கு.. அதில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் வராம இதை முடிக்க ஒரே வழி தான் இருக்கு..” என்றார் கோமகன்.


அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் ஜெயதேவ் தலையசைக்க.. அடுத்து நிமலனின் பக்கம் பார்வையைத் திருப்பியவர், “நீ என்ன சொல்றே நிமலா..?” என்றார்.


‘அது தான் முரளிதரனின் வாயை அடைச்சாச்சே..! இனியும் ஏன் இந்தத் திருமணம்..?’ என்று கேட்க தோன்றினாலும் இந்தத் திருமணத்தில் மற்ற இருவருக்கும் விருப்பமில்லை என்ற ஒன்றே நிமலனை மறுப்பேதும் சொல்லாமல் சம்மதமெனச் சொல்ல வைத்தது.


ஆனால் நிமலன் போல் அமைதியாக இருக்க முடியாமல் கிருபா “அவனைத் தான் ஆப் செஞ்சாச்சே.. அப்பறமும் எதுக்குத் தலைவரே இந்தக் கல்யாணம்..?” என்றிருந்தான்.


“விஷயம் புரியாம பேசாதே கிருபா.. நம்மகிட்டே இப்படி ஒரு ஆதாரம் இருக்கும்னு நினைக்காத முரளிதரன் இப்போதைக்கு அமைதியாகி இருக்கலாம்.. ஆனா கூடிய சீக்கிரம் இதை விட மோசமான ஒரு பிளானோட நம்மை அட்டாக் செய்ய வருவான்.. ஏன்னா துருவ் அளவுக்கு இவன் முட்டாளோ அவசரக்காரனோ இல்லை.. குள்ளநரி, ரொம்ப மோசமான ஒரு குள்ளநரி.. கர்வேந்தனுக்கு என்னாச்சுன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும்.. அதோட என்கிட்டே நேரிடையா மோதி மொக்கை வாங்கி இருக்கான்.. என்னைத் தோக்கடிக்கற வரைக்கும் அவனுக்குத் தூக்கம் வராது, அடுத்து அவன் எடுத்து வைக்கப் போற அடி ரொம்ப மோசமா இருக்கும் வாய்ப்பு தான் அதிகம், அவன் எதையாவது யோசிச்சு முடிவெடுக்கறதுக்குள்ளே, நாம யோசிச்சதை செஞ்சு முடிச்சுடலாம்..” என்றார் கோமகன்.


அதில் கிருபா யோசனையோடு நிற்க.. “என்ன ஜெயதேவ் எல்லா ஏற்பாடும் செஞ்சுடலாமா..?” என்றார் கோமகன்.


‘திருமணமே வேண்டாம் என்று இருந்தவன், ஏதோ ஒரு கோபத்திலும் அவசரத்திலும் திருமணத்திற்குச் சம்மதித்து இருந்தாலும், இந்தப் பேச்சுகளை எல்லாம் கேட்க விரும்பாமல், “நீங்க பேசி முடிவு செஞ்சு என்னைக்கு என்னன்னு சொல்லுங்க தலைவரே.. நான் கிளம்பறேன்..” என்று கிளம்பத் தயாரானான் நிமலன்.


“என்னைக்கு இல்லை நிமலா.. இன்னைக்குத் தான்.. இன்னும் ஒருமணி நேரத்தில் உங்க கல்யாணம் ஜெயதேவ் ஏற்பாடு செஞ்சு இருந்த அதே மண்டபத்தில் அதே முகூர்த்தத்தில் நடந்து முடியணும்..” என்றார் கோமகன்.


****************


தன் முன் நின்றிருந்தவன் சொல்லியது சரியாகத் தான் தன் காதில் விழுந்ததா..? என்பது போலான திகைப்போடு நிமலனையே தமயா பார்த்துக் கொண்டிருக்க.. “நமக்கு டைம் இல்லை.. நீ இப்படிச் சிலை மாதிரி நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம்..?” என்று சிடுசிடுத்தான் நிமலன்.


அதிலேயே ஸ்மரணை வர பெற்றவள், “ஹாங்.. என்ன சொன்னீங்க..? கல்யாணமா..? உங்களுக்கும் எனக்குமா..?” என்று புரியாமல் விழிக்க.. “இன்னும் எத்தனை முறை சொல்றது, “ஆமா.. உடனே கிளம்பு..” என்றிருந்தான் உணர்வற்ற குரலில் நிமலன்.


“வாட்.. உங்களுக்கு என்ன பைத்தியமா..? என்ன உளறீங்க..?” என்று எரிச்சலோடு கேட்டாள் தமயா. “பைத்தியம் தான்.. ஆனா இப்போ இல்லை, உனக்கு நல்லது செய்யறதா நினைச்சு காப்பாத்தினேனே அப்போ பிடிச்சு இருந்தது.. அதுக்கான தண்டனையா தான் எனக்கு இந்தக் கல்யாணம்..” என்றான் நிமலன்.


“தண்.. தண்டனையா எல்லாம் யாரும் யாரையும் கல்யாணாம் செஞ்சுக்க வேண்டாம்.. எனக்கு இதில் விருப்பம் இல்லை..” என்று கோபத்தில் மூச்சு வாங்க கத்தினாள் தமயா.


“இந்தச் சத்தம் போடற வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம்.. இங்கே உன் விருப்பத்தை யாரும் கேட்கலை.. இங்கே என் விருப்பப்படி தான் எல்லாம் நடக்கும்.. இதுவும் நடக்கணும்.. வாயை மூடிட்டு கிளம்பு..” என்றான் நிமலன்.


“அப்படியெல்லாம் நீங்க சொன்னதும் உடனே தலையாட்டிட முடியாது.. என் கல்யாண விஷயத்தை முடிவு செய்ய நீங்க யாருங்க..? நீங்க காப்பாத்திட்டா உடனே உங்க பேச்சை கேட்டு நான் நடக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை.. எனக்குன்னு குடும்பம் இருக்கு.. அவங்க என் கல்யாண விஷயத்தை முடிவு செஞ்சுக்குவாங்க..” என்று படபடத்தாள் தமயா.


“ஆமாமா.. அவங்க முடிவு செஞ்சதை தான் மேடம் அப்படியே செஞ்சுட்டீங்களே..!” என்றான் நக்கலாக நிமலன். அதில் அடுத்த வார்த்தை வராமல் தமயா திகைத்து நிற்க.. இனியும் பேசி பலனில்லை என்பது போல் அவளின் கையைப் பிடித்துத் தரதரவென இழுத்துச் சென்றான் நிமலன்.


தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தை பதித்து விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

TNN - 4

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Status
Not open for further replies.
Top