All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மலர்ந்த காதல் கொடியிலா! கையிலா!

Status
Not open for further replies.

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 8

வேகமாக கதவை அடைந்த சுபாஷினியை.. கோர்ட் சூட் அணிந்த இரண்டு பேர் தடுத்து அவள் யார் விசாரித்தார்கள். திடுமென அவளை விசாரிக்கவும், திகைத்து நின்றாள். அப்பொழுது மாரிமுத்து தான் வந்து “ஸார்! இவங்க இளைய ராஜாவை பார்த்துக்கிறதுக்கு வந்திருக்கிற நர்ஸ்..” என்றுக் கூறினான்.

அதற்கு அவளை மேலும் கீழும் பார்த்தவாறு உள்ளே செல்ல அனுமதித்தார்கள். தன்னுடன் அழைத்து சென்ற மாரிமுத்து அந்த ஹாலில் ஓரமாக நின்றிருந்த தங்கத்திடம் நிற்க வைத்து.. அவனும் பவ்யத்துடன் அங்கே நின்றுக் கொண்டான். அந்த ஹாலை ஒட்டியிருந்த கண்ணாடி அறையினோடு இருந்த அறையில் ரோஹீத்தை படுக்க வைத்திருந்தார்கள். தோட்டம் தெரியும்படி கட்டப்பட்டிருந்த வட்ட வடிவமான கண்ணாடி அறையில் மேலும் இரு பாதுகாவலர்கள் நின்றிருந்தார்கள். ரோஹீத் இருந்த அறையில் சமஸ்தானத்தை சேர்ந்தவர்கள் ரோஹீத்தை பார்க்க வந்திருப்பது அங்கு நின்ற இரு பாதுகாவலர்களை வைத்து அறிந்துக் கொள்ளலாம். அவர்கள் பேசுவது இவர்களுக்கு கேட்க கூடாது என்று.. அந்த கண்ணாடி அறைக்கு நேர் எதிர் இவர்கள் நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சுபாஷினிக்கு புரிந்தது.

ஆனால் வந்திருப்பது யார் என்றுத் தெரியவில்லை. உடல்நிலை சரியில்லாது இருக்கும் பெரிய இராஜாவா அல்லது தற்பொழுது பொறுப்புகளை எடுத்திருக்கும்.. இளைய ராணியின் கணவரா என்று ஆர்வத்துடன் மெல்ல விழிகளை சுழற்றிப் பார்த்தாள்.

அவளது ஆர்வம் புரிந்த மாரிமுத்து மெல்ல “இளைய ராணியும், அவங்க கணவரும்..” என்று மட்டும் முணுமுணுத்தான்.

சுபாஷினி “ஓ!” என்றுக் கிரகித்துக் கொண்டாள்.

அப்பொழுது ரோஹீத்தின் கத்தல் கேட்டது.

“நோ மீன்ஸ் நோ..”

மாரிமுத்துவிற்கும் சுபாஷினிக்கும்.. அவர்கள் என்ன கேட்டிருப்பார்கள்.. ரோஹீத் எதற்கு மறுப்பு தெரிவித்திருப்பான் என்றுப் புரிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பின் மெல்ல தலையை நிமிர்த்தி பார்த்தார்கள். அங்கு நின்றிருந்த பாதுகாவலர்கள் இருவர் கல் சிலை போல் முகத்தில் எவ்வித உணர்ச்சியுமின்றி நின்றிருந்தார்கள். அதைப் பார்த்த இருவரும்.. அவர்களும் எதையும் காதில் வாங்கவில்லை.. என்ற பாவனையில்.. அவர்களைப் போல்.. உணர்ச்சிகளற்று நிற்க முயன்றார்கள்.

அறையினுள் ரோஹீத் “வாட் இஸ் திஸ்! ட்ரீட்மென்ட் எங்கே எடுத்துட்டா என்ன! பாஸ்சன் குடித்து சாவதாய் இருந்தால் கூட.. அரளிவிதை அரைச்சு குடிக்காம.. காஸ்ட்லியான விஷ பாட்டில் வாங்கி குடிக்கணுமா..” என்று இரைந்தான்.

உடனே ரேஷ்மா “ஷ்ஷ் அண்ணா! என்ன பேசறே..” என்று சங்கடத்துடன் கேட்டாள்.

ரோஹீத் “பின்னே என்ன! நான்தான் வரலை. இங்கேயே இருந்திருக்கிறேன்.. என்றுச் சொல்லிட்டேன். ஆனா நீங்க நேரில் வந்து கூப்பிடறீங்க! ஐயம் பைன் இயர்..” என்றான்.

அதற்கு ரேஷ்மாவின் பார்வை கூர்பெற்றது. அவளது அண்ணனனை போலவே!

ரேஷ்மா கூர்ப்பார்வையுடன் “ஒய் இயர்?” என்றுக் கேட்டாள்.

ரோஹீத் அதை விட கூர்மையான பார்வையுடன் “ஒய் நாட் இயர்!” என்றுக் கேட்டான்.

அதற்கு ரேஷ்மா “காரணம் இருக்கு தானே..” என்றாள்.

அதைக் கேட்ட ரோஹீத்தின் முகத்தில் கசந்த சிரிப்பு வழிந்தது. பின் விரக்தியுடன் “ஆனா இன்னும் அந்த காரணம் இல்லையே..” என்றான்.

அதற்கு ரேஷ்மாவினால் உடனே பதிலளிக்க முடியவில்லை. சிறு குன்றலுடன் தலை குனிந்தவள், பின் நிமிர்ந்து “உனக்கு மேரேஜ் ஆகப் போகுது அண்ணா! விரைவில் இந்த சமஸ்தானத்தின் இராஜாவாக பட்டம் கட்டப் போறாங்க..” என்றாள்.

ரோஹீத் விழிகளில் பளபளப்புடன் “அதை ஏன் இப்போ சொல்கிறே?” என்றுக் கேட்டான்.

உடனே பதில் கூற முடியாமல் ரேஷ்மா திணறினாள்.

இந்த மாளிகையை விட்டு அவர்கள் செல்வற்கு ரோஹீத்தின் பழைய காதல் தான் காரணம்! அதனால் அந்த நினைவு வேண்டாம்.. என்று இங்கே இருக்க கூடாது என்று எப்படிக் கூறுவது என்றுத் திணறினாள். ஏனெனில் அக்காரணத்தைக் கூறினால்.. அது எரிகிற தீயில் தணலை அள்ளிப் போட்டது போன்று ஆகிவிடும். ஏற்கனவே இந்த குடும்பத்தின் மேல் கோபத்தில் இருந்த ரோஹீத்திற்கு இன்னும் கோபத்தை ஏற்படுத்தி விட்டது போன்று ஆகிவிடும். எனவே சற்று திணறியவள், பின் தன்னைச் சமாளித்துக் கொண்டு “அவ்வளவு பெரிய சமஸ்தானத்தின் இராஜாவாக போகிற நீ.. இப்படி இந்த சின்ன மாளிகையில் யாருமில்லா தனிமையில் இருந்தாகணுமா..” என்றுக் கேட்டாள்.

அதற்கு ரோஹீத் “ஓ கமான்! அதுதான்.. என்னையும் உங்களோட சிறைக்குள் இழுக்க போறீங்களில்ல! ஒரு டென் டேஸ்.. எனக்காக மட்டும் என்று நான் இருக்கணும்! அப்பறம் உங்க சிறைக்கு வரேன். துரத்த வேண்டியவங்களைத் துரத்திட்டு.. கடைசியில அந்த சிறையையே தகர்க்கிறேன். இப்போ என்னை விடுங்க..” என்றுக் கத்தினான்.

அதுவரை அண்ணன் தங்கை உரையாடலை அமைதியாக கேட்டு்க் கொண்டிருந்த ஆதர்ஷ், ரேஷ்மாவிடம் “நான் காரில் இருக்கேன்.” என்றுச் செல்ல திரும்பினான்.

ரேஷ்மா “ஆதர்ஷ்..” என்றுக் கரத்தைப் பிடிக்கவும், உதறி தனது கையை விடுவித்துக் கொண்டவன் “உன் அண்ணன் கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையா பேசறான். அதைக் கேட்டுட்டு நிற்கணுமா! உனக்கு ரோஷம் இல்லாமல் நிற்கலாம். ஆனால் என்னால் நிற்க முடியாது. ரோஹீத்தை இங்கிருந்து அழைச்சுட்டு.. சில பிஸினஸ் டிடெய்ல்ஸ் பேசலாம் என்று வந்தேன். ஆனால் எனக்கு மரியாதை இல்லாத இடத்தில் என்னால் நிற்க முடியாது.” என்றுவிட்டு விருவிருவென்று வெளியேறினான்.

ஆதர்ஷ் செல்வதைப் பார்த்து ரோஹீத் சத்தமாக சிரித்தான்.

“விடு ரேஷ்மா! அவன் மானஸ்தன்! அவரைத் துரத்தியடிப்பேன்.. என்றுச் சொன்னதைப் புரிஞ்சுக்கிட்டு கோபத்தோட போறார். என்ன சொன்னார் பிஸினஸ் டிடெய்ல்ஸ் பேச வந்தாரா.. அவர் செய்த சுரட்டலை சமாளிக்க வந்தார்.” என்றுவிட்டு மீண்டும் சிரித்தான்.

அதற்கு ரேஷ்மா “அவர் உன்னோட தங்கை கணவர் அண்ணா! இன்னும் உன்னோட தங்கை அவர் மேலே பைத்தியமா தான் இருக்கா..” என்றாள்.

ரோஹீத் “அதை என்கிட்ட பொறுப்பை ஒப்படைக்கும் முன் யோசித்திருக்க வேண்டும் ரேஷ்மா! நான் பாட்டிற்கு அமைதியாக உலகத்தை சுற்றிட்டு இருந்தேன். நீதான் இதுக்குள்ள இழுத்துவிட்டே! என்னோட அமைதியை கலைச்சு.. கோபத்தைக் கிளறிவிட்டுட்டே! அதோட பலனை அனுபவிச்சு தான் ஆகணும்.” என்றான்.

ரேஷ்மாவிற்கு முதன் முறையாக தனது அண்ணனை வரவழைத்தது தவறோ என்றுப் பட்டது.

மெல்ல ரேஷ்மா “நீ இங்கே இருந்தா.. இந்த மாதிரி நினைச்சு இன்னும் மனம் வேதனைப்படுவே என்றுத் தான்.. இங்கிருக்க வேண்டாம் என்றுச் சொல்கிறேன்.” என்றாள்.

அதற்கு ரோஹீத் “என்னைப் பற்றி என்னை விட உனக்கு நல்லா தெரியுமோ!” என்றுச் சிரித்துவிட்டு.. “உங்களை எல்லாம் பார்க்க பார்க்க தான்.. எனக்கு வெறியேறுது ரேஷ்மா! என்னை இங்கே தனியா விடு.. மனம் ஆறினதும் வருகிறேன்.” என்றான்.

அதைக் கேட்ட ரேஷ்மா முகம் சுருங்க அமைதியாக நின்றாள். ரோஹீத் சிறு முறுவலுடன் தன் கையை நீட்டவும், ரேஷ்மா அருகில் வந்தாள். அவளது தலையை வருடியவன், அமைதியான குரலில் “நீ சொன்ன மாதிரி.. நம்ம சமஸ்தானத்தின் சொத்துக்களை மீட்டு தந்துட்டு நான் இங்கிருந்து போயிருவேன் ரேஷ்மா! ஆதர்ஷிற்கு அவன் தப்பை புரிய வச்சா போதும். அவனும் உன்னை வெறுத்தர மாட்டான். அதனால அவன் ஒண்ணும் உன்னை விட்டுப் போக மாட்டான். என்னோட வேலை முடிந்ததும்.. ஒருவேளை எனக்கு மனைவியாக வரப் போகிறவள், என் மனதுடன் ஒத்துயிருந்தால்.. அவளையும் அழைச்சுட்டு போவேன். இல்லைன்னா.. பட்டம் கட்ட என்று கல்யாணம் கட்டியவளை.. இராஜா வேஷத்தை கலைத்ததும் விட்டுட்டு போயிருவேன். அதனால்.. என்னைப் பற்றி ரொம்ப கவலைப்படாதே! நான் ஒகே! என்னை மேலும் வெறி ஏற்றாதீங்க என்றுத் தான் சொல்கிறேன். நீ போ..! நான் என் கால் சரியானதும் வரேன்.” என்றான்.

ரோஹீத் கூறியதைக் கேட்டு ரேஷ்மாவிற்கு சந்தோஷப்படுவதா.. அழுவதா என்றுத் தெரியவில்லை. தனது தலையை வருடிய அண்ணனின் கரத்தைப் பற்றி முத்தமிட்டுவிட்டு.. “நான் நாளைக்கு வருவேன். நீ வர வேண்டானு சொன்னாலும் வருவேன்.” என்றுவிட்டு வெளியேறினாள்.

வெளியே வந்த ரேஷ்மா சுற்றிலும் பார்த்தாள். அங்கு மாரிமுத்து.. அவனின் மனைவியுடனும்.. இன்னொரு பெண்ணுடனும் நிற்பதைப் பார்த்தாள். அவர்களைப் பார்த்து கையசைக்கவும், மாரிமுத்துவும், தங்கமும் விரைந்தார்கள். சுபாஷினி தானும் அவர்களுடன் செல்ல வேண்டுமா.. இல்லை என்னை அழைக்கவில்லையா என்ற யோசனையுடன் அங்கேயே நின்றுவிட்டாள்.

மாரிமுத்துவும், தங்கமும் ரேஷ்மாவை நெருங்கி வராமல் நான்கடி இடைவௌியில் நின்று வணங்கினர்.

ரேஷ்மா தலையசைத்து அதை ஏற்றுக் கொண்டு “என் அண்ணன் யார் என்றுத் தெரியும் தானே! அந்த சமஸ்தானத்தின் இராஜாவாக பொறுப்பேற்க போகிறவர், உங்களுக்கு படியளக்க போகிறவர்.. அவரை எப்படிப் பார்த்துக்கணும் என்றுத் தெரியும் தானே..” என்று அதிகாரத்துடன் கேட்டாள்.

அவர்கள் குனிந்த தலை நிமிராது “நல்லா தெரியுங்க! கடவுளுக்கு செய்கிற பணிவிடை செய்கிற மாதிரி பார்த்துப்போங்க..” என்றனர்.

அதைக் கண்டு ரேஷ்மாவின் முகத்தில் மதர்ப்புடன் கூடிய புன்னகை மலர்ந்தது. அடுத்து அவளின் பார்வை தனியாக நின்றுக் கொண்டிருந்த சுபாஷினியிடம் சென்றது.

“அந்த பொண்ணு உங்க மகளா!” என்றுக் கேட்டாள்.

மாரிமுத்து “என் பொண்ணு சேலம் ஹாஸ்ட்டல தங்கி படிக்கிறாங்க! இது நம்ம மாளிகைக்கு வர வழியில் இருக்கிற கதிரேஷன் சுசீலா பொண்ணுங்க! இந்த பொண்ணு நர்ஸ்க்கு படிச்சிருக்குங்களாம். இந்த பொண்ணு தான் நம்ம இராஜா விபத்துல மாட்டின போது.. முதல்ல பார்த்ததுங்க.. அப்பறம் என்னைக் கூட்டிட்டு போய்.. இரண்டு பேரும் சேர்ந்து தாங்க.. இங்கே கூட்டிட்டு வந்தோம். இராஜா இந்த பொண்ணையே நர்ஸா அவரைப் பார்த்துக்க சொல்லியிருக்காருங்க..” என்றான்.

மாரிமுத்து கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ரேஷ்மாவின் விழிகள்.. கடைசியாக அவன் கூறியதைக் கேட்டு இடுக்கியது.

சுபாஷினியின் கையை இளைய இராஜா பற்றிக் கொண்டு இருந்ததை கூறி விடலாமா என்று எண்ணம் தோன்றி.. இளைய இராஜாவிற்கு தெரியாமல் அவரைப் பற்றிக் கூறியது தெரிந்தால்.. அவன் கதி அதோ கதி தான் என்று அமைதியாக நின்றான்.

பின் ரேஷ்மா அவர்களிடம் “நீங்க இங்கேயே நில்லுங்க..” என்றுக் கட்டளையிட்டு விட்டு.. சுபாஷினியை நோக்கி சென்றாள்.

இளைய ராணி தன்னை நோக்கி வருவதை அறிந்த.. சுபாஷினி உள்ளம் வெடவெடக்க.. மேலும் தலைகுனிந்தாள்.

ஏனெனில் சிறு வயதில்.. ரேஷ்மா சுபாஷினி மற்றும் அவள் வயது பெண்களை ஏளனமாக பார்த்து கேலி பேசி சிரித்திருக்கிறாள். தலை முடியை பிடித்து இழுத்து விளையாடுவாள். மேலும் மண்ணை அள்ளி அவர்களின் தலையில் போட்டுவிட்டு கைக்கொட்டி சிரிப்பாள். அதனால் அன்றைய தினத்தில் இருந்து இளைய ராணி என்றாலே சுபாஷினி கடைசி கோடிக்கு ஓடிவிடுவாள். எட்டு வருடங்களில் கோவில் விஷேஷத்திற்கு வந்து கும்ப மரியாதையை ஏற்றுக் கொண்ட போதும்.. ரேஷ்மாவிற்கு திருமணம் ஆகிய புதிதில்.. கணவருடன் பெரிய காரில் வீதி உலா போல்.. வந்தாள். அப்பொழுது ஊர்மக்களோடு மக்களாக நின்ற சுபாஷினி மலர்களை தூவி வரவேற்ற பொழுது பார்த்திருக்கிறாள். அப்பொழுது சுபாஷினிக்கு ‘என்னா கலர்! என்ன அழகு!’ என்றுத் தான் தோன்றியிருக்கு.. மற்றபடி.. அவளிடம் கொண்ட பயம் இன்னும் தெளியவில்லை.

அவ்வாறு இருக்கும் பொழுது.. தற்பொழுது தனிமையில் நேருக்கு நேர் ரேஷ்மா வரவும், சிறு பதட்டத்துடன் நின்றிருந்தாள்.

அவளுக்கு அருகில் வந்த ரேஷ்மா “இளைய இராஜா விபத்துல மாட்டிய போது.. நீதான் அழைச்சுட்டு வந்தியாம். அவருக்கு நீதான் நர்ஸா இருக்க போறீயாம். ம்ம்! பெரிய பாக்கியம் செய்தவ தான் நீ! ஆனா அந்த இடத்திற்கு அர்த்தமும் எல்லையும் தெரியும் தானே..” என்றவளின் குரல் இரும்பென இறுகியது.

சற்றுமுன் சிறு தெளிவு பெற்றிருந்த சுபாஷினிக்கு தற்போது ரேஷ்மாவிற்கு பதில் அளிப்பதில் எவ்வித தயக்கமும் இருக்கவில்லை. எனவே குனிந்த தலை நிமிராது “நான் விருப்பப்பட்டால் என் நிலை என்னவாகும் என்றுத் தெரியுங்க.. அந்த பக்கம் இருந்து விருப்பம் வந்தால்.. அதற்கு அர்த்தமும் எனக்கு தெரியுங்க..” என்றவள், கூடவே “எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிருக்குங்க..” என்றாள்.

அதற்கு மதர்ப்புடன் பார்த்த ரேஷ்மா “உன் கல்யாணத்துக்கு.. சமஸ்தானத்தின் சார்பா சீர்வரிசை அனுப்பி வைக்க சொல்றேன்.” என்றாள்.

அதற்கு சுபாஷினி இன்னும் சிரத்தை தாழ்த்தி “நன்றிங்க இளைய இராணி..” என்றாள்.

பின் சுபாஷினியிடம் “இங்கேயே நில்..” என்றுவிட்டு வாசலை நோக்கி சென்றவாறு மாரிமுத்து மற்றும் தங்கத்தை தலையசைத்து அழைத்தாள். உடனே அவர்கள் விரைந்தார்கள்.

அவர்களிடம் ரேஷ்மா நடந்தவாறு “நீங்க சமைக்கிற உணவெல்லாம் என் அண்ணன் சாப்பிட மாட்டார். அதையெல்லாம் அவருக்கு தராதீங்க. அவருக்கு என்று ஸ்பெஷலா சமைக்கிறது ஆள் அனுப்பரேன். அவன் தங்கறதுக்கு வேண்டிய ஏற்பாட்டை செய்துக் கொடுங்க! சமையல் நேரம் போக.. அவன் இளைய இராஜாவையும் பார்த்துப்பான்.” என்றுவிட்டு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறினாள்.

அவளுடன் வந்து.. கார் கதவை திறந்துவிட்ட பாதுகாவலன் அந்த காரின் முன்னிருக்கையில் ஏறிக் கொண்டான். மற்ற பாதுகாவலர்கள். அந்த காருக்கு முன்னால் நின்றிருந்த காரில் அவசரமாக ஏறினார்கள். பின் இரு கார்களும் அரண்மனையை விட்டு வெளியேறியது.

அந்த இரு கார்களும்.. கண்ணில் இருந்து மறைந்த பின்பே அதுவரை மூச்சை இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூவரும் வெளியே விட்டார்கள். பின் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். அப்பொழுது “சுபா..” என்ற அழைப்பில் மீண்டும் மூவரும் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு ரோஹீத் படுக்க வைக்கப்பட்டிருந்த அறைக்கு விரைந்தார்கள்.

ரோஹீத் “எனக்கு பசிக்குது.” என்றான்.

சுபாஷினி தங்கத்தை பார்க்கவும், அவள் “நான் செய்துட்டேன். ஆனா..” என்று இழுத்தாள்.

ரோஹீத் “என்ன ஆனா..” என்றுக் கேட்கவும், மாரிமுத்து பதிலளித்தான்.

“நாங்க சமைக்கிறது உங்க உடம்புக்கு ஒத்துக்காதுனு இளைய இராணி சொன்னாங்க! அதுனால உங்களுக்கு சமைக்கிறதுக்கு ஆள் அனுப்பறேன்னு சொன்னாங்க..” என்றான்.

ரோஹீத் “அந்த குக் வர வரைக்கு நான் பட்டினி கிடக்கிறதா..” என்கவும், மாாிமுத்து “ஹோட்டலில் இருந்து வாங்கிட்டு வரட்டுங்களா..” என்றுக் கேட்டான்.

உடனே ரோஹீத் “அதை விட டிரெகுலாவா மாறி.. மனுஷன் இரத்தம் குடிக்கலானு இருக்கேன்.” என்றான்.

அதைக் கேட்டு மாரிமுத்து திருதிருவென்று விழிக்கவும், சுபாஷினி சிரிப்பை அடக்கிக் கொண்டு தங்கத்திடம் சரிந்து “சீக்கிரம் நீங்க செய்த டிபனே கொண்டு வாங்க! நாம் இளைய இராணி சொல்ற பேச்சையும் கேட்கணும். இளைய இராஜா சொல்ற பேச்சையும் கேட்கணும்.” என்கவும், தங்கம் விரைந்து சென்று இட்லி மற்றும் சம்பார் சட்டினிகளை எடுத்து வந்தாள். அதன் மணத்திலேயே அதன் சுவையும் தெரிந்தது.

ரோஹீத் கட்டிலில் சாய்ந்து அமர்வதற்காக முதுகிற்கு பின்னால் தலையாணிகளை வைத்திருந்தவர்கள், தற்பொழுது நன்றாக நேராக அமர்வதற்கு ஏதுவாக வைத்தார்கள். அதற்குள் பழைய சமான்கள் போட்டிருந்த அறைக்கு சென்ற மாரிமுத்து.. அங்கு கால் நீளம் குறைவாக கொண்ட சிறு மேசையை சுத்தம் செய்து எடுத்து வந்தான். அதை ரோஹீத் சாப்பிடுவதற்கு எதுவாக கட்டிலின் மேல் வைத்தான். அந்த சிறு மேசையின் இரு கால்களும்.. அவனின் காலிற்கு இருபுறமும் இருக்க.. ரோஹீத் எடுத்து சாப்பிட வசதியாக இருந்தது. தங்கம் அந்த மேசையில் சாப்பிட வேண்டியதை வைத்து.. சிறு ஸ்புனையும் வைத்தாள். அது கொண்டு ரோஹீத் ட்ரீப்ஸ் ஏற்றப்படாத இடது கையால் வேகமாக சாப்பிட ஆரம்பித்தான்.

நாலு இட்லியையும் முழுமையாக காலி செய்த பின்பே ரோஹீத் நிமிர்ந்தான். தங்கம் சாப்பிட்டதை அப்புறப்படுத்தினாள். சுபாஷினி அவனுக்கு தண்ணீர் பருக கொடுத்து வாங்கி வைத்த பின்.. அவனுக்கு கொடுக்க மாத்திரையை எடுத்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது ரோஹீத் “ரேஷ்மா! எனக்கு என்று சமைக்கிறதுக்கு ஆள் அனுப்பிகிறேன் என்றுச் சொன்னாளா?” என்றுக் கேட்டான்.

அதற்கு மாரிமுத்து “ஆமாங்க” என்றான்.


ரோஹீத் “அவன் வந்தா.. சமைக்கிற நேரம் போக மீதி நேரம் என்னைப் பார்த்துப்பான் என்றுச் சொன்னாளா..” என்றுக் கேட்டான்.

மாரிமுத்து அதற்கும் “ஆமாங்க” என்றான்.

அதைக் கேட்ட ரோஹீத் கடகடவென சிரிக்க ஆரம்பித்தான்.

பின் “என்னை வேவு பார்க்க ஆள் வைக்கறாளா..” என்றுச் சிரித்தவன், பின் குரல் இறுக “அவனை உள்ளே வர விடாதே! அப்படியே அனுப்பிரு! இது என் ஆர்டர்..” என்றான்.

மாரிமுத்து திகைப்புடன் புரியாது பார்த்தான்.. என்றால் சுபாஷினியோ அதற்கு அர்த்தம் புரிந்து எடுத்து விட்ட அந்த நாலு மாத்திரையை மேலும் மும்மரமாக எடுப்பது போன்று பாவனை செய்தாள். சுபாஷினியை பார்த்த ரோஹீத்திற்கு மேலும் சிரிப்பு வந்தது.

திகைத்து நின்ற மாரிமுத்துவிடம் ரோஹீத் “நான் சொன்னதைச் செய்! நான் கூப்பிடும் போது வா போதும். இப்போ நீ போகலாம்.” என்றதும்.. சரியென்று தலையாட்டிவிட்டு மாரிமுத்து சென்றான்.

அவன் செல்வதைப் பார்த்த ரோஹீத் “இவன் நான் சொன்ன வேலையைச் செய்திருவான். என் தங்கை ஏற்பாடு செய்யும் ஆளை நிச்சயம் உள்ளே விட மாட்டான். ஆனால் இவனே வேவு பார்க்கிற ஆளா மாறுவான் பாரேன். ரேஷ்மாவை பற்றி எனக்கு நல்லா தெரியும்.” என்றுச் சிரித்தான்.

மாத்திரைகளை அவனது கையில் பவ்யமாக வைத்த சுபாஷினி அதற்கு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அவளது நிலை பற்றி அவள் தெளிவாக இருந்தாள். அதை மட்டும் செய்துவிட்டு சென்றாள். முன்பை போல் மனம் குழம்பாது என்பதில் தீர்மானமாக இருந்தாள்.

அவளது முகத்தைப் பார்த்த ரோஹீத் “நான் எதாவது பேசினாலோ.. கேட்டலோ சரியான ரெஸ்பான்ஸ் இல்லை என்றாலும் எனக்கு கோபம் வரும்..” என்றான்.

உடனே நிமிர்ந்த சுபாஷினி “எனக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியலைங்க ஸார்! அதுதான் அமைதியா இருந்துட்டேன்.” என்றாள்.

ரோஹீத் “அப்போ.. எதை வேவு பார்க்க நினைக்கிறாங்க என்று உனக்கு தெரியும்.” என்கவும், சுபாஷினி பதில் கூற முடியாமல் திணறினாள்.

அதைப் பார்த்து சிரித்த ரோஹீத் “இடியட்ஸ்! என்னால் எப்படி இன்னொரு காதலை செய்ய முடியும் என்று யோசிக்க மாட்டாங்களா..” என்றவாறு தலையாணியில் சாயவும், சுபாஷினி படுப்பதற்கு ஏதுவாக தலையாணிகளை வைத்துக் கொடுத்தாள்.

ரோஹீத்தின் பார்வை எங்கோ இருக்க.. சுபாஷினி அமைத்துக் கொடுத்த தலையாணியில் தலையை வைத்து நன்றாக படுத்தான்.

அவனின் தற்பொழுது விட்டத்தை வெறித்திருக்க.. “இன்னொரு மலர் உருவாக நான் விட மாட்டேன்.” என்றுத் தீர்மானமாக கூறினான்.

சுபாஷினி என்ன மாதிரி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. அவளால் நிம்மதியும் கொள்ள முடியவில்லை. அதே சமயம்.. காதல் இல்லை என்றால்.. வேறு என்ன எண்ணத்தில் அவனுடன் வைத்திருக்கிறான் என்ற பழைய பயம் மெல்ல எட்டிப் பார்த்தது.

பின் சுபாஷினியிடம் திரும்பிய ரோஹீத் “நீ மலர் கிட்ட டியுசன் படிச்சியா..” என்றுக் கேட்டான்.

அதைக் கேட்டதும்.. சுபாஷினிக்கு உதறல் எடுத்தது. அவளைக் கண்டுப்பிடித்து விடுவானோ என்ற பயம் தொற்றிக் கொள்ள.. ஆம் என்று தலையை மட்டும் ஆட்டினாள்.

ரோஹீத் திடுமென “அப்போ உனக்கு எத்தனை வயசு?” என்றுக் கேட்டான்.

சுபாஷினி “சிக்ஸ்டின்..” என்கவும், “ஓ..” என்றுச் சிரித்த ரோஹீத் “நானும் ரொம்ப சின்ன வயசு பொண்ணு பார்க்கிற மாதிரி.. மலர் கிட்ட பழகியிருக்கிறேனோ என்று நினைச்சேன். எல்லாம் புரிந்த வயசு தான்! ஆனாலும் வெரி டேன்ஞ்சரஸ் ஏஜ் தான்!” என்றான்.

பின் மீண்டும் விட்டத்தை பார்த்து படுத்தவனின் நினைவடுக்கில் மலருடன் பழகிய நாட்கள் வந்து சென்றன. வலிக்கு கொடுத்த மருந்தின் உபயத்தால்.. கண்கள் சொருக விரைவிலேயே உறங்கி விட்டான்.

ரோஹீத் உறங்கியதும்.. ட்ரீப்ஸை பார்த்தாள். அது மிக மெதுவாக இறங்கும்படி.. பிரதாப் வைத்திருப்பது தெரிந்தது. எப்படியும் மதியத்திற்கு மேல் ஆகும். அதனால் ட்ரீப்ஸை பற்றித் தற்பொழுது கவலையில்லை. இப்படி போரடித்துப் போய் அமர்வதற்கு வெளியே சென்றுப் பார்த்தால் என்ன என்று மெல்ல வெளியே எட்டிப் பார்த்தாள். அங்கு மாரிமுத்துவும்.. தங்கமும் அந்த அறையின் கதவை பார்த்தவாறு அமர்ந்துக் கொண்டிருந்தார்கள்.

ரோஹீத் கூறியது சரியாக போனதை சுபாஷினி கண்டாள். இளைய இராணி கூறமாலேயே வேவு வேலையைத் தொடங்கி விட்டானோ என்றுத் தோன்றியது. ஆனால் பாவம் ஒன்றும் தேறாது என்று நினைத்து விட்டு புன்னகைத்தவாறு அவர்களை நோக்கி சென்றாள்.

அப்பொழுது வாயிலில் ஏதோ சத்தம் கேட்கவும், மூவரும் சென்றுப் பார்த்தார்கள். அங்கு நல்ல உடற்கட்டுடன் ஆறடி உயரத்தில் ஒருவன் பைக்கில் வந்து இறங்கினான். மாரிமுத்து சென்று விசாரிக்கவும், அவன் கன்னடத்தில் அவன் இளைய இராணியால் அனுப்பட்ட ஆள் என்றும்.. ரோஹீத்தை பார்த்துக் கொள்ளவும், சமைத்து கொடுக்கவும் வந்திருப்பதாக கூறினான்.

மாரிமுத்து இளைய இராஜா அவனைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்றுக் கட்டளையிட்டு இருப்பதாக கூறினான். அதற்கு அவன் நம்பாமல் இருக்கவும், ரோஹீத் எழுந்ததும் அவனையே கேட்க கூறினார்கள். அதற்குள் சுபாஷினி தங்கத்தை மதிய உணவை தயார் செய்ய கூறினாள்.

தங்கம் எனக்கு ஸ்பெஷலா செய்ய தெரியாதே என்றுத் திணறவும், சுபாஷினி “இளைய இராஜா.. ஒரு வாரத்திற்கு படுக்கை விட்டு எழுந்து நின்று நடக்க கூடாது என்பதால்.. எளிதாக செரிமானம் ஆகிய மாதிரி.. பருப்பு கடைஞ்சு கொடுத்த போதும்.. கூடவே கீரை இல்லைன்னா எதாவது காய்கறியால் பொரியல் செய்துக் கொடுத்திருங்க அக்கா!” என்றாள்.

ஹாலில் ஓரமாக இருந்த நாற்காலியில் ரேஷ்மா அனுப்பிய ஆள் அமர்ந்தவாறு சுற்றிலும் நோட்டம் விட்டுக் கொண்டிருக்க.. மாரிமுத்து அவனை முறைத்தவாறு நேர் எதிரே அமர்ந்திருந்தான். சுபாஷினி அவன் நோட்டம் விட்டுக் கொண்டிருக்க.. ரோஹீத்தின் அறையில் தனித்து இருப்பதை தவிர்க்க எண்ணி.. தங்கத்துடன் பேசியவாறு சமையலறையில் நின்றுக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் மதிய வேளை நெருங்கையில் “சுபா..” என்று வீடே அதிரும்படி.. ரோஹீத் அழைக்கவும், சுபாஷினி பதட்டத்துடன் அவனது அறைக்கு விரைந்தாள்.

அங்கு ருத்ராமூர்த்தியாக இருந்த ரோஹீத் “இங்கே நீ நர்ஸ் வேலை பார்ப்பதற்காக வந்திருக்கே..! ஜாலியா இந்த மாளிகையை சுற்றிப் பார்க்க வரலை.” என்கவும், சுபாஷினி “மன்னிச்சுக்கோங்க ஸார்! இனி இந்த அறையை விட்டுப் போக மாட்டேன்.” என்றாள்.

பெருமூச்சுகளுடன் கோபம் வடிந்தவனாய் “ஐ வான்ட் வாட்டர்..” என்கவும், சுபாஷினி நடுங்கும் கரத்தால் ஊற்றிக் கொடுத்தாள். லேசாக நடுங்கும் அவளது கரத்தைப் பார்த்தான். ஒரு கையால் கரத்தோடு பற்றியவன்.. ட்ரீப்ஸ் இறங்கிக் கொண்டிருந்த மற்றொரு கரத்தால்.. நீருடன் கூடிய டம்ளரை வாங்கினான்.

ரோஹீத் கரத்தைப் பிடித்ததில் சுபாஷினியின் கரம் மேலும் நடுங்கியது.

உடனே அவளது கரத்தை விட்டவன், அவளை சிறுப் புன்னகையுடன் பார்த்தான், “நான் திட்டியதில் பயத்திட்டியோனு பிடிச்சேன். ஆனா நீ இன்னும் நடுங்கிறே..” என்றுவிட்டு நீரை பருகினான்.

சுபாஷினி “இன்னும் வாட்டர் வேணுங்களா ஸார்..” என்றுக் கேட்டாள்.

அதற்கு ரோஹீத் “என் கூட ஏன் பேசுவதைத் தவிர்க்கிறே! காலையில் நன்றா பேசிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு! ரேஷ்மா எதாவது சொன்னாளா..” என்றுக் கேட்டான்.

உடனே சுபாஷினி “அவங்க உங்களை நல்லபடியா பார்த்துக்க மட்டும் தான் சொன்னாங்க! நீங்க திட்டியதை விட.. நீங்க தொட்டது தான் பயமா இருந்தது ஸார்! எங்களைப் பற்றிப் பேச்சு உங்களுக்கு தேவையில்லாதது என்று நெனைச்சேன் ஸார்!” என்றாள்.

அதைக் கேட்டவனின் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

ரோஹீத் ஒருதரம் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது.. அதிகமாக வளர்ந்த மரக்கிளைகளை ஒருவன் வெட்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது கால் இடறி விழுந்தான். விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு விடவும் வலியில் துடித்தான். அதைப் பார்த்த பன்னிரெண்டு வயது நிரம்பிய ரோஹீத் அதிர்ந்து நின்றுவிட்டான். அங்கு உடன் வேலை செய்துக் கொண்டிருந்த மற்றவர்கள் விரைந்து வந்து அவனை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்.

விழுந்தவனின் மருத்துவ செலவிற்கு.. தொகை சமஸ்தானத்தில் இருந்து உடனே தரவில்லை. விழுந்தவனின் மனைவியை வரவழைத்து அனைவருக்கும் முன்.. அவனது மனைவிக்கு கேட்ட தொகைக்கு மேலேயே கொடுக்கப்பட்டது. உடனே இராஜேந்திர பூபதியை வாழ்த்தி கோஷம் எழுப்பினர்.

பின்னர் உள்ளே வந்த தந்தையிடன் ரோஹீத்.. விழுந்தவன் எப்படியிருக்கிறான் என்றுக் கேட்டான். அதற்கு அவர் அதெல்லாம் நமக்கு தேவையில்லாத விசயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.. என்றுவிட்டு சென்றுவிட ரோஹீத்தினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தனது பாட்டி ஏன் என்றுத் தனிமையை நாடி.. தாத்தாவிடம் திட்டு வாங்குகிறார்.. என்று அந்த வயதில் புரிந்தது.

அவனும் வேலையாட்களுடன் அவனது குடும்பத்தினர் இருக்கும் போது.. இருப்பதைத் தவிர்த்தான். அவர்களை விட தாழ்ந்தவர்களிடம் தங்களது அதிகாரத்தையும்.. அவர்களுக்கு தாங்கள் தான் கடவுள் போன்ற பிரம்மையை தோற்றுவிக்க அவன் விரும்பவில்லை. பிடிக்கவும் இல்லை.

ஆனால் தொடர்ந்து அந்த மாயையை மதின்பூர் மக்களிடையே பதிந்து இருப்பது.. சுபாஷினியின் பேச்சில் நன்றாகவே தெரிந்தது.

எனவே ரோஹீத் "இந்த மாதிரி பேசினா.. கேட்கிறதுக்கு டிஸ்கர்ஸடிங்கா சுபா.." என்று முகத்தை சுளித்தான்.

சுபாஷினி "மன்னிச்சுருங்க ஸார்!" என்றுக் கூறுவதைத் தவிர வேறு தெரியவில்லை.

ரோஹீத் ஆழ்ந்த பெருமூச்சு இழுத்துவிட்டு பின் "உன்னை எதுக்கு பிடிச்சிருந்துச்சுனு தெரியுமா! நான் யார் என்றுத் தெரியாம.. ஆர்வத்தோட வந்தே.." என்று மீண்டும் அவர்கள் இருவரைப் பற்றிய பேச்சை ஆரம்பித்தான்.

இருவரும் பேசி முடித்த விசயத்தை மீண்டும் கூறி.. அதை அவனது மனதில் உருவேற்ற விரும்பாததால்.. என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. ஆம் என்றுக் கூறினால்.. அந்த பேச்சை அவள் ஊக்குவிப்பது போன்று ஆகிவிடும். இல்லை என்று மறுத்தால்.. அவனது பேச்சை தட்டிப் பேசுவதாக அவனது கோபத்திற்கு ஆளாக நேரிடும். அல்லது எவ்வித பதிலும் அளிக்காது அமைதியாக நின்றுவிட்டால்.. அவனது பேச்சிற்கு மதிப்பு அளிக்கவில்லை என்று சற்றுமுன் குற்றம் சாட்டியது போன்று ஆகிவிடும். எனவே என்ன கூறுவது என்று அவள் திணறுகையில்.. இளைய ராணி ரேஷ்மா அனுப்பிய ஆள் வந்திருப்பது நினைவிற்கு வந்தது.

எனவே "ஸார்! இளைய ராணி உங்களுக்கு சமைத்து கொடுப்பதற்காக அனுப்பிய ஆள் வெளியே வெயிட் செய்துட்டு இருக்காங்க.." என்றாள்.

அதைக் கேட்டவனின் புருவம் கோபத்தில் சுருங்கியது.

ரோஹீத் "அவன் வந்தா திருப்பி அனுப்ப சொன்னேன் தானே! ஆனா நீங்க உட்கார வச்சுட்டு இருக்கீங்களா.." என்றவன், தொடர்ந்து "மாரிமுத்து" என்று கத்தவும், அவன் பதறியடித்து கொண்டு அறைக்கு ஓடி வந்தான்.

ரோஹீத் "அவனை திருப்பி அனுப்ப சொன்னேன் தானே.." என்கவும், மாரிமுத்து அவன் போக மறுத்தத்தைக் கூறினான். உடனே அவனை உள்ளே அழைத்த ரோஹீத் "என் ஆர்டரை மீற அவ்வளவு தைரியமா.." என்று கர்ஜீக்கவும், பல முறை மன்னிப்பு கேட்டுவிட்டு திரும்பியும் கூடப் பார்க்காமல் சென்றான்.

பின் மாரிமுத்துவிடம் தன்னை ரெஸ்ட் ரூமிற்கு அழைத்து செல்லக் கூறியவன், சுபாஷினியிடம் "சுபா! மேலே என்னோட பழைய ரூம் தெரியுமா?" என்றுக் கேட்டான். சுபாஷினி மறுப்பாக தலையசைக்கவும், மாரிமுத்து அந்த அறை இருக்கும் இடத்தின் விபரத்தைக் கூறினான்.

பின் ரோஹீத் "அங்கே என் ரூமில் கதவை திறந்து.. ரைட் சைட் இருக்கிற கப்போர்ட்டை திறந்தால்.. அதுல ஒரு சின்ன பாக்ஸ் இருக்கும் எடுத்துட்டு வா..! எட்டு வருஷத்துக்கு முன்னாடி வச்சது அப்படியே இருக்கு! இதுநாள் வரை இங்கே வந்த போது.. சும்மா பார்த்துட்டு வந்திருவேன். இன்னைக்கு அதைத் திறந்து பார்க்கணும் என்று ஆசையா இருக்கு.." என்கவும், தலையசைத்து விட்டு வெளியே வந்த சுபாஷினி மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளை பார்த்து பயத்தில் எச்சிலை விழுங்கினாள்.

அந்த பரந்த விரிந்த மாளிகை அவளுக்கு தற்பொழுது பயத்தை ஏற்படுத்தியது. இந்த மாளிகை பற்றி பரவிய வதந்திகள் அனைத்தும் நினைவிற்கு வந்தது.

பயத்துடன் இரண்டாக பிரிந்த மாடிக்கட்டில் மெல்ல ஏறியவளுக்கு படிக்கட்டுகள் முடியும் இடத்தில் யாரோ நிற்பது போன்ற பிரம்மை தோன்றியது. கண்களை நன்றாக விரித்து வைத்துப் பார்த்தாள். அங்கு யாரும் இல்லை. ஆனால் யாரோ நின்றிருப்பது போன்ற பிரம்மை நீங்காமல்.. கால்கள் நடுங்க படியேறியவள்.. அங்கு காற்றில் பறந்த திரைசீலையை பார்த்ததும் ஏனோ.. அன்று எரிந்த திரைசீலை நினைவிற்கு வரவும், தற்பொழுது.. அந்த திரைசீலை எரிந்தது போன்று தோன்றியது. தொடர்ந்து மலர்விழியின் குரலும் கேட்டது.

‘ஏன் சுபா! அன்னைக்கு அவர் வந்து என்னைக் கூப்பிட்டதை என்கிட்ட சொல்லுலை.’

உடனே சுபாஷினி “ஆ..” என்று வீரிட்டு அலறியபடி.. யாரோ துரத்துவது போல்.. பதறியடித்துக் கொண்டு படியிறங்கினாள். வேகமாக படியிறங்கியதில் கால் இடறி விட.. கிட்டத்தட்ட கடைசி படி வரை வந்திருந்த சுபாஷினி.. அப்படியே விழப் போனாள். அப்பொழுது.. தனக்கு உடலில் அடி நிச்சயம்! நானும் படுத்த படுக்கையாக வேண்டியது தான் என்று எண்ணியவாறு விழுவதை தடுக்க இயலாது விழுந்தாள்.

ஆனால் அவளை சட்டென்று ஒரு கரம் தாங்க.. அந்த கரத்தோடு கீழே விழுந்தாள்.

என்ன ஒரு அதிசயம் அவளுக்கு எந்த அடியும் படவில்லை. வலியும் இல்லை. இது எப்படி என்று எண்ணுகையிலேயே.. “ஏய் சுபா எழுந்திரி..” என்ற குரல்கள் கேட்க.. அதை மீறி “ம்மா..” என்று வலியுடன் முணுங்கல் குரலும் கேட்டது. அந்த முணங்கல் குரல் முதலில் ஈர்க்கவும்.. குரல் வந்த திசையைப் பார்த்தவள் அதிர்ந்தாள். ஏனெனில் அவள்.. இந்த சமஸ்தானத்தின் இளைய இராஜா.. மற்றும் இனி இந்த சமஸ்தானத்தின் இராஜாவாக போகிற ரோஹீத்தின் மேல் படுத்திருந்தாள்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 9


மாரிமுத்துவின் உதவியுடன் ரெஸ்ட் ரூமிற்கு சென்று வந்த ரோஹீத்திற்கு சுபாஷினியின் அலறல் சத்தம் கேட்டது. உடனே திகைத்து நின்ற மாரிமுத்துவை விலக்கிவிட்டு.. ஒரு காலால் விந்தி நொண்டியவாறு வெளியே வந்தவன், மாடிப்படியின் வளைவில் சுபாஷினி கத்தியவாறு படியிறங்குவதைப் பார்த்தான். உடனே திகைத்தவனாய்.. படியிடம் சென்றான். ஆனால் அதற்குள் இறங்கி வந்திருந்த சுபாஷினி கடைசி படிகளில் வருகையில் கால் இடறி தடுமாறி விழப் போனாள்.

அப்பொழுது எதைப் பற்றியும் யோசிக்காது, தனது கரத்தை நீட்டி விழுந்தவளை இழுத்து தன்மீது போட்டுக் கொண்ட ரோஹீத்திற்கு காலின் வலி அதிகரிக்கவும், தடுமாறி.. அவளோடு விழுந்தான்.

தான் ரோஹீத்தின் மேல் விழுந்திருப்பதை உணர்ந்த பின்பே மாரிமுத்து மற்றும் தங்கத்தின் "எழுந்திரி சுபா.." என்ற பதட்டமான கண்டனக்குரல்கள் கேட்டன. உடனே அடித்து பிடித்துக் கொண்டு எழுந்தாள்.

"ஸாரி ஸார்! ஸாரி ஸார்!" என்று சுபாஷினி பலமுறை கேட்டாள்.

மாரிமுத்து "இராஜா!" என்று பதட்டத்துடன் அவனருகே செல்லவும், முகத்தை சுளித்தவாறு எழுந்த ரோஹீத் "ஐயம் ஒகே!" என்றான்.

மாரிமுத்துவும் சுபாஷினியும் ஆளுக்கு ஒரு தோளைப் பற்றி தூக்கவும், ரோஹீத் மெல்ல எழுந்து ஒரு காலை ஊன்றியவாறு நின்றான். மெதுவாக ஒரு காலை ஊன்றி அவர்களுடன் நடந்து வந்தான். சுபாஷினிக்கு அழுகையே வந்துவிட்டது.

ரோஹீத்தை மெல்ல படுக்கையில் கிடத்தியதும் வாய்விட்டு அழுதே விட்டாள்.

"மன்னிச்சுங்க இளைய இராஜா! நான் விழுந்தா விழுந்துட்டு போறேன். நீங்க ஏன் வந்து பிடிச்சீங்க! அதுவும் உங்களாலேயே முடியலை தானே! இப்போ இன்னும் உங்களுக்கு எதாவது ஆகிட்டா.. அந்த பழியையும் என் மேலே விழுவதற்கா.. ஏற்கனவே உங்களுக்கு செய்த பாவத்திற்கு.. எப்படி பிராய்சித்தம் செய்றதுனு தெரியாம இருக்கேன். இப்போ இந்த பாவத்தையும் சுமக்க சொல்றீங்களா.." என்று மூக்கை உறிஞ்சியபடி கண்களில் கண்ணீர் வழிந்தவாறு ரோஹீத்தின் கால்கட்டை ஆராய்ந்தாள்.

சுபாஷினி கூறியதைக் கேட்ட.. ரோஹீத் வாய்விட்டு சிரித்தான். ஏற்கனவே செய்த பாவம் என்று அவள் குறிப்பிட்டதை அவன் கவனித்திருந்தாலும்.. அதை விட அவனுக்கு கேட்க வேண்டிய விசயம் நிறையாக இருப்பதால் அதைக் கேட்டான்.

"அப்படியென்ன நான் ஸ்பெஷல்! இந்த சமஸ்தானத்தில் பிறந்துட்டேன் என்கிறதாலேயே! புல்ஷீட்!" என்றவன் தொடர்ந்து "நீ அப்படி கத்தினா.. என்ன எது என்றுப் பார்க்க வருவது தான் மனித இயல்பு! ஆமா ஏன் அப்படி கத்திட்டு ஓடி வந்தே?" என்றுக் கேட்டான்.

சுபாஷினி என்னவென்று கூறுவாள்.. எனவே சிறு சங்கடத்துடன் தங்கத்தை பார்த்தாள். தங்கம் புரிந்தாற் போன்று தலையை ஆட்டினாள்.

இருவரையும் பார்த்த ரோஹீத் "வாட்ஸ் த மேட்டர்?" என்றுக் கேட்டான்.

சுபாஷினி இன்னும் தயங்கவும், தங்கம் "நீங்க இங்கே தங்கியிருக்கீங்க இல்ல! அதனால அந்த ஆத்மாவுக்கு சந்தோஷமா இருந்திருக்குங்க! அதுதான் சுபா கிட்ட வேலையைக் காட்டிருக்காங்க! அவங்க இன்னும் இங்கே தான் சுத்திட்டு இருக்காங்க!" என்றுப் பவ்யமாக கூறினாள்.

ரோஹீத் புருவத்தை சுருக்கிக் கொண்டு "யார்?" என்றான்.

சுபாஷினி சொல்லாதே என்பது போல் மறுப்பாக தலையசைத்தாள். ஆனால் அதை தங்கம் கவனிக்கவில்லை.

இன்னுமும் பவ்யமான குரலில் "அவங்க தான்ங்க! மலருங்க! நீங்க வருவீங்கனு.. உங்களுக்காக இங்கே தான் காத்துட்டு இருக்காங்க! அவங்க கிட்ட மாட்டிக்க கூடாதுனு தான்.. உங்களை இங்கே இருக்க வேண்டான்னு சொன்னேன் இராஜா..!" என்றாள்.

அதைக் கேட்ட ரோஹீத் சத்தமாக சிரித்தான். ஆனால் சிரிப்பு அவனது கண்களை அடையவில்லை. ஏனெனில் கண்களை துயரம் குடிக் கொண்டது.

சத்தமாக சிரித்தவனின் சிரிப்பு சத்தம் மெல்ல மெல்ல தோய்ந்தது. பின் எங்கோ வெறித்தபடி "இறந்தவங்க எல்லாம் ஆத்மாவா.. மனுஷங்க கூட தொடர்பு வைச்சுக்கிற சக்தி கிடைச்சா எப்படி இருக்கும்! புரியாத பல விசயங்களைக் கேட்டு தெரிஞ்சுக்கலாம். நம்மை விட்டுப் போயிட்டாங்க என்ற இழப்பு துயரம் இருக்காது." என்றவன், சிறு பெருமூச்சை இழுத்துவிட்டான்.

பின் மாரிமுத்துவை பார்த்தவன், “ஊர் முழுக்க இந்த கதையைக் கட்டிவிட்டிருக்கியா..” என்றுச் சிறு கண்டனத்துடன் கேட்டான். அதற்கு மாரிமுத்து மறுப்பாக தலையசைத்து “கதையில்லை இராஜா! உண்மைத்தான்! இந்த மாளிகையில் தீயைப் பற்ற வைத்து.. உங்களை எல்லாம் இங்கே இருந்து.. துரத்திவிட்டதும் மலர் அவங்களோட ஆவி தான்!” என்று முடிப்பதற்குள்.. ரோஹீத் நன்றாக வாய் விட்டு சிரித்தான்.

பின் “அன்னைக்கு மாளிகையில் ஆங்காங்கே தீயை வச்சது நான்!” என்று என்றான்.

அதைக் கேட்ட மூன்று பேரும் திகைத்தவாறு அவனைப் பார்த்தார்கள்.

ரோஹீத்தின் கண்கள் கோபத்தில் சிவந்தன.

மாறாத கோபத்துடன் “இந்த சமஸ்தானம், பேர், கௌரவம், அந்தஸ்து தானே.. மலரோட சேர விடாம செய்ததுனு நான்தான் தீயை வச்சேன். இப்போ என்ன சொல்வீங்க.. என்னை பேய் பிடிச்சிருச்சு என்றா! ஹவ் பூலீஷ்.." என்று உதட்டை வளைத்து சிரித்தான்.

பின் சுபாஷினி பார்த்து "நீயும் இதை நம்பறீயா‌!" என்றுக் கேட்டான்.

அதற்கு சுபாஷினி "நம்பற மாதிரி தான் ஸார்.. நடக்கிற விசயம் இருக்கு.." என்றாள்.

ரோஹீத் "அதற்கு பேர் இல்லூஷியன்! இல்லைன்னா.. பீட்பேக் என்றுக் கூடச் சொல்லலாம். உன்னோட உள்ளுணர்வு என்ன நினைக்குதோ அது நடக்குது. நீ பார்த்து பார்த்து என்னை மயக்கினது மாதிரி.." என்றுச் சிரித்தான்.

அதுவரை ரோஹீத் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மூவரும்.. கடைசியில் கூறியதைக் கேட்டு.. திகைத்தார்கள். மாரிமுத்துவும், தங்கமும் சுபாஷினியை ஒரு மாதிரி பார்க்கவும், சுபாஷினி மறுப்பாக தலையசைத்தாள்.

அதைப் பார்த்த ரோஹீத் மாரிமுத்து மற்றும் தங்கத்திடம் “நீங்க இரண்டு பேரும் வெளியே இருங்க..” என்றான். அவனின் பேச்சை மீற முடியாத இருவரும் திரும்பி திரும்பி சுபாஷினியை பார்த்தவாறு வெளியேறினார்கள்.

அவர்கள் சென்றதும்.. ரோஹீத் “எதுக்கு இப்படிப் பயப்படற! நான் சொன்னதில் என்ன தப்பு! உண்மைத் தானே சொன்னேன். எனக்கு அது பிடிச்சுருந்துச்சு! நீ ஆர்வமா ஓடி வந்து பார்த்து பார்த்து.. நீ பார்ப்பதற்காகவே நான் வெயிட் செய்து போக செய்துட்டே தானே..” என்றுச் சிரித்தான்.

சுபாஷினியின் மூளைக்குள் வெளியே நிற்கும் மாரிமுத்துவும் தங்கமும்.. இதை எவ்வாறு எடுத்துக் கொள்வார்களோ என்று பதட்டத்துடன் இருந்ததால்.. ரோஹீத்திற்கு பதிலளிக்காமல் அமைதியாக நின்றாள்.

அவளைக் கூர்மையான பார்வையால் அளந்த ரோஹீத் “பட் நவ் ஐயம் டொட்டலி டிஸ்அப்பாயின்ட்டர்டு! நீயும் மற்றவங்களை மாதிரி.. என்னைப் பார்க்க ஆரம்பிச்சுட்டே! நான் உன்கிட்ட என்னவோ எக்ஸ்பெக்ட் செய்கிறேன். அது என்னவென்று எனக்கு புரியலை. அதனால் உனக்கும் புரிய வைக்க முடியலை.” என்றுப் பெருமூச்சை இழுத்துவிட்டான்.

பின் தொடர்ந்து “நான் இதுவரை யாரிடமும்.. இப்படிப் பேசியதில்லை. உணர்ந்ததும் இல்லை.” என்றான்.

சுபாஷினியின் இதயம் மீண்டும் பலமாக துடிக்க ஆரம்பித்தது.

எனவே சுபாஷினி மெல்லிய குரலில் “நீங்க என்கிட்ட இப்படியெல்லாம் பேசக் கூடாதுங்க! இது உங்களுக்கே தெரியும். பிறகு ஏன் இப்படிப் பேசறீங்க என்றுத் தெரியலை. அதுதான் பயமா இருக்கு..” என்றாள்.

அதைக் கேட்டவனின் கண்கள் கூர்ப்பெற்றது.

“டொன்ட் வெர்ரி சுபா! நான் உன்னை லவ் செய்யலை. அதனால் உனக்கும் உன் குடும்பத்திற்கும் ஒன்றும் ஆகாது.” என்று சர்வசாதரணமாக கூறினான்.

ஆனால் சுபாஷினிக்கு தற்பொழுது தான் முன்பை விட.. இடியே தலையில் வந்து விழுந்தது போன்று இருந்தது.

அவ்வாறு என்றால்.. அவன் பேசியதிற்கு பொருள் என்ன.. என்று அவளது மனம் தடக் தடக் என்றுத் துடித்தது.

அவளது முகத்தைப் பார்த்த ரோஹீத் துளையிடும் பார்வையுடன் “ஒருவேளை நான்.. இப்படிப் பேசுவது பழகுவது.. உனக்கு வேற மாதிரி தோன்றுகிறதா..” என்றுக் கேட்டான்.

பதிலளிக்க வேண்டிய நேரத்தில்.. சுபாஷினிக்கு தொண்டையில் இருந்து வார்த்தைகள் வராமல் தகராறு செய்தன.

அப்பொழுது மாரிமுத்துவின் குரல் கேட்டது.

“இராஜா! உள்ளே வரலாங்களா?”

ரோஹீத் “என்ன விசயம் மாரிமுத்து?” என்றுக் கேட்கவும், மாரிமுத்து உள்ளே வந்து “நீங்க அடிப்பட்டு இங்கிருக்கிறது ஊர் முழுக்க பரவியிருச்சுங்க! உங்களோட நலன் தெரிஞ்சுக்கிறதுக்கு.. ஊர் சனங்க.. வாசலில் நிற்கிறாங்க..” என்றுப் பவ்யத்துடன் கூறினான்.

அதற்கு ரோஹீத் தலையில் அடித்துக் கொண்டு “இதுக்கு என் மேலே எவ்வளவு அக்கறையா இருக்கிறாங்க என்று சந்தோஷப்பட என்னால் முடியலை. அப்படி நான் என்ன ஸ்பெஷல் என்றுத் தான் கேட்க தோணுது. என்னைப் பார்க்க நிற்கிறாங்க என்று நான் வெளியே வந்தால்.. எல்லாரும் இராஜா என்று தலைக்கு மேலே கையை உயர்த்திட்டு பயபக்தியோட நிற்பாங்க! கன்னத்தில் ஒன்றும் தான் போட்டுக் கொள்ளவில்லை. மற்றபடி ஏதோ கடவுளை பார்க்கிற மாதிரி பார்ப்பாங்க! மற்றவங்க என்னை அப்படிப் பார்க்கிறது எனக்கு பிடிக்கலை. ஐ ஹெட் இட்! நீயே நான் நல்லா தான் இருக்கேன் என்றுச் சொல்லி அவங்களை இங்கிருந்து போகச் சொல்லு! அவங்க வேலையைப் பார்க்க சொல்லு..” என்று எரிச்சலுடன் கூறினான்.

அதற்கு சரியென்று தலையை ஆட்டிய மாரிமுத்து சுபாஷினியை பார்த்து “உன் பெற்றவங்களும் வந்திருக்காங்க..” என்றதும்.. சுபாஷினி ரோஹீத்தை பார்க்கவும், அவன் போகலாம் என்பது போல் தலையசைத்தான். உடனே சுபாஷினி அவனை வணங்கி நன்றி கூறிவிட்டு செல்லவும், ரோஹீத் “ஓ காட்..” என்றவாறு விட்டத்தைப் பார்த்தவாறு படுத்துவிட்டான்.

மாரிமுத்து அவளை அங்கிருந்து கிளப்புவதற்காக பொய்யுரைத்தானோ என்றுக் கூட அவனுக்கு சந்தேகம் தோன்றியது.

வெளியே சென்ற மாரிமுத்து தங்கத்திடம் “தங்கம்! நாங்க வர வரை.. நீ இளையராஜாவிடம் இரு!” என்றுவிட்டு வாசலுக்கு விரைந்தான். தங்கமும் உடனே உள்ளே சென்றாள்.

ரோஹீத் கணித்தது மிக்க சரி.. அவர்கள் இருவரையும் வெளியே அனுப்பி விட்டு.. சுபாஷினியிடம் தனித்து பேசவும், வெளியே அனுப்பப்பட்ட மாரிமுத்து பதற்றமடைந்தான். எனவே அறையின் சாத்தியிருந்த கதவைப் பார்த்தவாறு “அட கடவுளே! என்ன செய்யப் போறேன்னு தெரியலை. இப்படி நடக்க கூடாதே..” என்றுப் புலம்பினான்.

அதற்கு தங்கம் “அட! எதுக்கு இப்படிப் புலம்பறீங்க!” என்றாள்.

மாரிமுத்து “எதுக்கா!” என்றுவிட்டு சற்று குரலைத் தணித்து “இராஜா அந்த பொண்ணை பற்றிப் பேசினதைக் கேட்டே தானே! அந்த பொண்ணு நம்ம இராஜாவை எப்படியோ மயக்கிட்டா! அதுனால தான்.. இராஜா இளையராணி வந்து கூப்பிட்ட போதும் போகலைனு சொல்லிட்டார். இந்த சுபாவையும் இங்கேயே இருக்க சொல்கிறார். இது உனக்கு தப்பா தெரியலையா..” என்றுக் கேட்டான்.

அதற்கு தங்கம் “அந்த பொண்ணு மயக்கினது மாதிரியும் தெரியலை. நம்ம இராஜா மயங்கினது மாதிரியும் தெரியலை. எப்பவும் நம்ம கூட இயல்பாக பேசுவார் தானே அந்த மாதிரி தான் பேசிட்டு இருக்கிற மாதிரி இருக்கு..” என்றுக் கூறினாள். அதைக் கேட்ட மாரிமுத்து எரிச்சலுடன் “அப்போ அவர் உள்ளே சொன்னதையும்.. நம்மை வெளியே அனுப்பியதையும் பற்றி என்ன சொல்லுகிறே..” என்றுக் கேட்டான்.

ஆனால் தங்கம் அடுத்து மாரிமுத்து பேசியதை காதில் வாங்காதவளாய் “அப்படி ஒருவேளை அவர் சொன்னது நிஜம் என்றால்.. இராஜாவோட பார்வை பட்ட அந்த பொண்ணு கொடுத்து வச்சவ என்றுத் தான் சொல்வேன்.” என்றாள்.

அதைக் கேட்டு திடுக்கிட்ட மாரிமுத்து “என்ன சொல்றே! இராஜாக்கு கல்யாணம் ஆகப் போகுது தெரியும் தானே..” என்றான்.

அதற்கு தங்கம் “தெரியும்! தெரியும்! இராஜா உங்களை எல்லாம் பார்த்து கத்தறதில் தப்பே இல்லை! அவருக்குனு ஒரு மனசு இருக்கு.. என்கிறதை ஏன் யாரும் புரிஞ்சுக்க மாட்டேன்கிறீங்க! நீங்க இப்படி பயந்தே.. இராஜாவை அந்த பொண்ணு பக்கம் தள்ளி விடப் போறீங்க என்றுத் தான் எனக்கு தோன்றுகிறது. அந்த தப்பைச் செய்திராதீங்க! இந்த முறை இராஜா விழ மாட்டார். எல்லாரையும் வீழ்த்திருவார். இந்த மாளிகைக்கு நான்தான் தீயிட்டேனு சொன்ன போது.. அவரோட கண்கள் அப்படி கோபத்துல ஜோலித்தது.” என்றாள்.

தன் மனைவியை மாரிமுத்து விசித்திரமாக பார்த்தான். அவள் கூற வருவது அவனுக்கு புரியாதது.. அவனது துரதிஷ்டமே! ஆனால் தங்கம் ரோஹீத்தின் மனநிலையை சரியாக கணித்துவிட்டாள்.

மாரிமுத்துவிற்கு இன்னும் சுபாஷினியுடன் ரோஹீத் தனியாக பேசுவதே பிரதானமாக பட.. அதைத் தடுக்க என்ன செய்வது என்று எண்ணுகையில் வாயில் சத்தம் கேட்கவும், சென்று எட்டிப் பார்த்தான். அங்கு அந்த ஊர் மக்கள்.. ரோஹீத்திற்கு அடிப்பட்ட செய்தி கேட்டு பார்க்க வந்திருப்பது தெரிந்தது. அதையே சாதகமாக எடுத்துக் கொண்டு.. ரோஹீத்திடம் அனுமதி கேட்டு உள்ளே சென்று.. மக்கள் பார்க்க வந்திருக்கும் உண்மையைக் கூறி.. சுபாஷினியின் பெற்றோர் பார்க்க வந்திருப்பதாக பொய்யுரைத்து.. சுபாஷினியை அங்கிருந்து அழைத்து வந்தான்.

அழைத்து வந்தவன்.. அவளுடன் வெளியே சென்று.. அங்கு நின்றுக் கொண்டிருந்த மக்களிடம் இளையராஜா நலமாக இருப்பதாகவும், தற்பொழுது ஓய்வில் இருக்கிறார் என்றும் சிறிது உடல்நலம் தேறியதும்.. அவர்களை வந்துப் பார்ப்பார் என்றுத் தெரிவித்தான்.

அந்த மக்கள் கூட்டத்தில் தனது பெற்றோரை தேடிக் கொண்டிருந்த சுபாஷினியும்.. அவர் தற்பொழுது காலை அசைக்க கூடாது என்றும்.. ஆனால் இரு நாட்களில் நலம் பெற்றுவிடுவார். பிறகு அவரே உங்களைப் பார்க்க வருவார் என்றுத் தெரிவித்தாள்.

அவர்கள் கூறியதைக் கேட்டு திருப்தியுற்ற.. மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்பு போல்.. அந்த சமஸ்தானத்தின் குடும்பத்தினரிடம் பயமும் மரியாதையும் கொண்டிருக்கவில்லை.. என்று நினைத்திருந்த அந்த ஊர் மக்களின் உடலில் ஊறிப் போயிருந்த பயமும் மரியாதையும் தானே வந்து இங்கு ஓடி வந்ததையும் வியப்புடன் உணர்ந்தார்கள்.

அவர்கள் கலைந்து சென்றதும்.. சுபாஷினி மாரிமுத்துவை கேள்வியாக பார்த்தாள்.

உடனே மாரிமுத்து சுபாஷினியை சற்று ஓரமாக அழைத்துச் சென்று பொரிந்து தள்ளிவிட்டான்.

“இராஜா என்கிற மரியாதை எல்லாம் மனசுல இல்லையா! அவரை என்ன நினைச்சுட்டே.. கடையில வச்சுருக்கிற பொம்மை என்று நினைச்சுட்டியா! அழகை காட்டி.. ஆளை மயக்க பார்க்கறீயா! வேண்டாம்.. போயிரு.. அவர் குலம் சூரியன் மாதிரி.. கையெடுத்து கும்பிடலாம். நமக்கு எல்லாம் நல்லதும் செய்வாங்க.. ஆனா தொடணுனு ஆசைப்பட்டா உன்னைச் சுட்டுவிடும்.” என்று எச்சரித்தான்.

மாரிமுத்துவின் வெளிப்படையான எச்சரிப்பில் அதிர்ந்த சுபாஷினி “அண்ணா! நீங்க ரொம்ப தப்பா நினைச்சுட்டிங்க! நீங்க நினைக்கிறது மாதிரி எண்ணம் எனக்கு சத்தியமா இல்லை. எனக்கும் திருமணம் நிச்சயமாகிருக்கு! இராஜா மேலே ஆசைப்பட்டா என்ன நடக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும். அப்படியிருக்கும் போது.. நானே போய் தீயில் வீழுவேனா! அதனால்.. என் மேல் வீணா பழியைப் போடாதீங்க..” என்றுக் கோபத்துடன் கூறியவளுக்கு கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது.

அவளது கண்களிலும்.. கோபத்திலும் இருந்த உண்மையைக் கண்டு.. மாரிமுத்து.. சற்றுமுன் சுபாஷினியிடம் பேசியதிற்கு வெட்கி தலைகுனிந்தான். பின் மாரிமுத்து “ஆனா இளையராஜா சொல்வது?” என்று இழுத்தான்.

அதற்கு சுபாஷினி “எனக்கும் அவர் என்கிட்ட பேசற விதத்தைப் பார்த்து பயமா தான் இருக்கு! ஆனா அவர் கண்டிப்பா என்னைத் தப்பா பார்க்கலை. என்னை விரும்பலை. ஆனாலும்.. ரொம்ப பயமா இருக்கு..” என்றாள்.

உடனே மாரிமுத்து “என்னால இங்கே இருக்க முடியாதுனு கிளம்பிருங்களேன்.” என்று ஆலோசனை கூறினான்.

அதைக் கேட்டு அவனை முறைத்த சுபாஷினி “இளையராஜா உத்தரவை மீற சொல்கிறீங்களா! அவரோட பேச்சை மீறினேனு நீங்களே என்னைத் திட்ட வச்சுருவாரு அண்ணா!” என்றாள்.

அதற்கு மாரிமுத்து “நீங்க சொல்றது உண்மைத்தான்! அவர் இங்கே இருக்க போவது.. அந்த காயம் ஆறுகிற வரைக்கும் தான்! அதுவரைக்கும் நீங்க அவர் கூடத் தனியா இல்லாம பார்த்துக்கோங்க! இன்னும் ஒரு நாலு நாள் தாக்கு பிடிச்சுட்டா! அவர் மைசூர் மாளிகைக்கு கிளம்பிருவார். அப்பறம் நாம் அவருக்கு நடக்க போகிற கல்யாணக் கொண்டாட்டத்தில் குஷியாக கலந்துக்குவோம் பாரேன்.” என்றுச் சிரித்தான்.

ஏனோ சுபாஷினியால் உடன் சேர்ந்து சிரிக்க முடியவில்லை.

அங்கு ரோஹீத் விட்டத்தைப் பார்த்தவாறு படுத்திருப்பதைப் பார்த்ததும்.. அறைக்குள் சென்ற தங்கம் சுவற்றோராமாக ஒதுங்கி நின்றாள். ஆள் ஆராவராம் கேட்டு ரோஹீத் தலை நிமிர்த்தி பார்க்கவும், தங்கம் இடுப்பை வளைத்து குனிந்து வணங்கினாள்.

அதைப் பார்த்த ரோஹீத் எரிச்சலுற்றவனாய் “ஓ ஸ்டாப் இட்! இந்த மாதிரி பிஹேவ் செய்வதாக இருந்தால் யாரும் என் முன் வராதீங்க!” என்றான்.

அதற்கு தங்கம் “என்னை மன்னிச்சுருங்க! நாங்க இப்படியிருக்கிறதுக்கு பயமும் மரியாதையும் மட்டும் காரணமில்லைங்க! உங்க மேலே அன்பும் தான்ங்க! அதுவும் நான் உங்க மேலே ஏகத்துக்கும் அன்பை வச்சுருக்கேன்ங்க! என் பொண்ணையும் அம்மாவையும் காப்பாத்தி கொடுத்த சாமி நீங்க! என் பொண்ணு மேலே வச்சுருக்கிற அன்பை விட உங்க மேலே அதிக அன்பு வச்சுருக்கேன்ங்க..” என்று தங்கம் மடைத் திறந்த வெள்ளம் போல்.. தனது மனதில் ரோஹீத்தின் மேல் வைத்திருக்கும் அன்பு கலந்த மரியாதையைப் பற்றிக் கூறினாள்.

ரோஹீத் குழப்பத்துடன் அவளைப் பார்க்கவும், தங்கம் “உங்களுக்கு நினைவிருக்காதுங்க! நீங்க செய்த ஆயிரம் நல்லதுகளில் எனக்கு செய்ததும் ஒன்று. ஆனா நீங்க செய்த உதவி என் மனசுல பசுமரத்தாணி போல.. நல்லா பதிஞ்சுருச்சுங்க..” என்றாள்.

ரோஹீத் என்ன என்பது போல் பார்க்கவும், தங்கம் “பத்து வருஷத்துக்கு முன்னாடி.. என் பொண்ணையும்.. அம்மாவையும்.. இங்கே வேலை செய்ய ஆள் எடுத்தாங்க! என் அம்மாவிற்கு ஆஸ்துமா இருக்குங்க! என் பொண்ணை என் அண்ணன் இருக்கிற ஊருக்கு அனுப்பி பெரிய படிப்பு வைக்க ஆசைங்க! ஆனா பெரிய இராஜா இட்ட கட்டளையை மீற முடியாம தவிச்ச போது தான்! நீங்க.. இராஜா கிட்ட சண்டை போட்டு விருப்பப்பட்டவங்க.. வந்து வேலை செய்யட்டும். நீங்களா கூலிக்கு ஆள் எடுக்கிற மாதிரி ஆட்களை தேர்ந்தெடுக்காதீங்க.. என்றுச் சொன்னீங்க! அதைச் செய்தும் காட்டனீங்க! அந்த நன்றி.. என் காலம் முழுமைக்கும் இருக்குங்க..” என்றுக் கரத்தைக் குவித்தாள்.

அதைக் கேட்டு புருவத்தைச் சுருக்கி யோசித்த ரோஹீத் “ஓ! அதுக்கு எதுக்கு.. ஏதோ சாமியை பார்த்த எபெஃக்ட் கொடுக்கறீங்க என்றுத் தான் தெரியலை. தப்பா நடக்கிறதை தடுக்கிறது என் கடமையாக கூட இருக்கலாம். இப்படித்தான்.. உங்களுக்கு வேண்டியதை செய்யற அரசியல்வாதிகளை.. என்னமோ.. அவங்களோட வீட்டில் இருந்து பணம் எடுத்து உங்களுக்கு வேண்டியதைச் செய்துத் தர மாதிரி நினைச்சு கையெடுத்து கும்பிட்டு கும்பிட்டு.. அரசியல் என்பதே பெரிய கடவுளுக்கு அடுத்தபடியான போஸ்ட் போல.. நினைத்து அதுக்கு அடிதடி வேற நடக்குது.” என்றுப் பெரிய விசயத்தை சர்வ சாதாரணமாக கூறினான்.

ஆனால் தங்கம் “எனக்கு உங்க மேலே இருப்பது அலாதி அன்புங்க! நீங்க எப்பொழுதும் சந்தோஷமா இருக்கணும். அதுதான் என்னோட தினசரி வேண்டுதலுங்க..” என்றாள்.

அதற்கு விரக்தியுடன் சிரித்த ரோஹீத் “என்னோட சந்தோஷத்தை நானே விட்டுக் கொடுக்க போகிறேன்.” என்றான்.

உடனே தங்கம் “உங்களுக்கு எது சந்தோஷத்தைக் கொடுக்குதோ அதைச் செய்திருங்க ராஜா! யாரைப் பற்றியும் கவலைப்படாதீங்க..” என்றாள்.

ரோஹீத் “எனக்கு என்ன பிடிக்குதோ அதைச் செய்திராவா! அப்போ இந்த சமஸ்தானம்.. குடும்ப கௌரவம்.. இந்த மரியாதை என்று எதுவும் வேண்டாம் என்னை விட்டுருங்க..” என்றுச் சோர்வுடன் தலையாணியில் தலையைச் சாய்த்தான். இராஜா என்று அவனைத் தலையில் வைத்துக் கொண்டாடுபவர்கள்.. இதை மட்டும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று அவனுக்கு தெரியும்.

ஆனால் தங்கம் “உங்களுக்கு அதுதான் விருப்பம் என்றால்.. நீங்க பழைய மாதிரி.. வேற நாட்டிற்கே போயிருங்க ராஜா! நீங்க எங்கிருந்தாலும் சந்தோஷமா இருக்கீங்க என்கிறதே எங்களுக்கு போதும்..” என்றாள்.

அதைக் கேட்டு படுத்தபடியே சிரித்த ரோஹீத் “இப்போ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி.. உங்களோட குடும்பத்தைச் சேர்ந்தவங்களுக்கு.. நடக்க இருந்த அநியாயத்தை தடுத்தேன் என்கிறதுக்காக என் மேலே மரியாதை வச்சுருக்கீங்க என்றுச் சொன்னீங்க! அதுல நீங்க உங்க குடும்பத்தை எந்தளவிற்கு நேசிக்கறீங்க என்றுத் தான் தெரிந்தது. உங்க அளவிற்கு இல்லை என்றாலும்.. என் குடும்பத்தின் மேலே எனக்கு சின்ன அக்கறையாவது இருக்கணுமே! என் குடும்பத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமை என்று ஒன்று இருக்கே..” என்றுச் சிரித்தான்.

தங்கம் “அதுவும் சரிதான்ங்க!” என்றவள், தொடர்ந்து “இங்கே யாரையும் பிடிக்கலையா..” என்றுத் தன்போக்கில்.. தனக்குள் முணுமுணுத்தவளுக்கு.. ரோஹீத் சுபாஷினியிடம் சிறு இணக்கமாக பேசுவது புரிந்தது. அவளுடன் பழக ஆசைப்படுவதும் புரிந்தது. தனக்கு புரிந்த வகையில் உடனே ரோஹீத்திடம் தனது மனதில் பட்டதைக் கேட்டாள்.

“உங்களுக்கு சுபாஷினியை பிடிச்சுருக்குங்களா ராஜா..” என்றுக் கேட்டாள்.

தங்கம் அவ்வாறு கேட்டதும் தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தவன், “இதை எதுக்கு கேட்கறீங்க?” என்றுக் கேட்டான்.

தங்கம் “அச்சோ! ராஜா நானாவது உங்க கிட்ட கேள்வி கேட்பதாவது.. நீங்க உத்தரவிடுங்க.. அதைச் செய்கிறேன். சுபாஷினியை உங்க பக்கத்துலேயே இருக்க வைக்கிறேன்.” என்றுவிட்டு எழுந்து சென்றார்.

அங்கு மாரிமுத்துவிடம் பேசிவிட்டு வந்துக் கொண்டிருந்த சுபாஷினி “அண்ணி! ஏன் வந்துட்டிங்க? இளையராஜா கூப்பிட்டாரா..” என்றுக் கேட்டாள்.

தங்கம் “ஆமா! அவருக்கு வலிக்குதாம்.. வலிக்கு மாத்திரை சாப்பிடலாமானு கேட்டார்.” என்றாள்.

உடனே சுபாஷினி “அச்சோ உடனே சாப்பிடக் கூடாது.” என்றாள்.

தங்கம் “அதை நீயே போய் சொல்லிரு..” என்று அவளை அனுப்பி வைத்தார்.

சுபாஷினி உள்ளே சென்றதும்.. அவளைப் பார்த்து சிரித்த ரோஹீத் “தங்கம் அனுப்பினாங்களா?” என்றுக் கேட்டான்.

அதற்கு சுபாஷினி “ஆமாங்க ஸார்! நீங்க பெயின் டெபளேட் கேட்டிங்களாம். சும்மா நினைச்ச நேரம் அதைச் சாப்பிட கூடாது ஸார்” என்றாள்.

அதைக் கேட்டு மேலும் சிரித்த ரோஹீத் “உன் கூடப் பேசுவது பிடிச்சுருக்குனு சொன்னேன். உடனே அவங்க.. உன்னைக் கூட்டிட்டு வந்து என் பக்கத்தில் இருக்க வைக்கிறேனு சொன்னாங்க! சொன்னதைச் செய்துட்டாங்க..” என்றான்.

சுபாஷினி “பொய் சொன்னாங்களா..” என்றுக் கேட்டாள்.

அதற்கு ரோஹீத் ஆம் என்றுத் தலையை ஆட்டிச் சிரித்தான்.

சுபாஷினி கோபத்துடன் கதவைப் பார்த்து முறைக்கவும், ரோஹீத் “மாரிமுத்துவும் நீயும் என்ன பிளன் போட்டிங்க?" என்றுக் கேட்டு அவளை அயர வைத்தான்.

சுபாஷினி சிறு குன்றலுடன் “அப்படியெல்லாம் இல்லைங்க!” என்றாள். அதற்கு அவளை அழுத்தமாக பார்த்த ரோஹீத் அதற்கு பின்.. அவளிடம் எதுவும் பேசவில்லை. மாலையில் தங்கம் டீ போட்டு கொடுத்ததும்.. அமைதியாக வாங்கிக் கொண்டவன், அந்த அறையை விட்டு மட்டுமில்லை.. அவனின் மீதும் சிறிதும் எடுக்காது அமர்ந்திருந்த மாரிமுத்துவை அழைத்து.. இந்த ஊரில் ஏற்பட்ட மாற்றங்களை பற்றிக் கேட்டான்.

அவனும் ஆர்வத்துடன் நான்கடி தொலைவில் நின்று மரியாதையுடன் ஊரில் நிகழ்ந்த மாற்றங்களைப் பற்றிக் கூறினான். சிறிது நேரத்தில் தங்கமும் மாரிமுத்துவுடன் சேர்ந்துக் கொண்டு.. ஊரில் நடந்த சிறு சண்டைகள், விபத்து வரை என்று அவர்களுக்கு தெரிந்தவற்றைக் கூறினார்கள்.

பின்னர் ஏழு மணி நெருங்கையில்.. டாக்டர் பிரதாப் வந்தவர், ரோஹீத்தை பரிசோதித்தார். பின்னர் பணிவுடன் “இளைய ராஜா! காலையில் இருந்ததை விட கண்டிஷன் கொஞ்சம் மோசமாகிருக்கு! மூட்டை அசைத்திருக்கீங்க போல! அப்பறம் ஆபரேஷன் செய்ய வேண்டியது வரும்.. அதனால் நீங்க ஹாஸ்பெட்டல் அன்டர்கேரில் இருப்பது நல்லது.” என்றார்.

அவரது பேச்சில் சிறு குழப்பத்துடன் சுபாஷினி குறுக்கிடுவதை ஓரக்கண்ணில் பார்த்த ரோஹீத்திற்கு விசயம் புரிந்துவிட்டது. எனவே முகத்தில் சிறுப் புன்னகையுடன் “இன்னைக்கு காலையில் என் சிஸ்டர் உங்க ஹாஸ்பெட்டலுக்கு வந்திருந்தாங்களா..” என்றுக் கேட்டான்.

அதைக் கேட்ட பிரதாப் “அ.. ஆமா இளையராஜா! உங்க உடம்பு கண்டிஷனை பற்றி மட்டும் தான் கேட்டுட்டு போனங்க! உங்களை நல்லபடியா..” என்றுக் கூறுகையிலேயே ரோஹீத்தின் புன்னகை விரிந்ததைக் கண்டு.. தான் உளறுவது புரிந்து பேச்சை நிறுத்தினார்.

ரோஹீத் “சாதாரண மூட்டு விலகலுக்கு.. ஒருத்தர் சொன்னங்க என்பதற்காக இப்படிச் சொல்வது டாக்டர் ஆன உங்களுக்கு நல்லவா இருக்கு..” என்றுக் கேட்டான்.

அதற்கு பிரதாப் சிறு குன்றலும் அசட்டுச் சிரிப்புமாக “என்ன ராஜா செய்வது! அந்த ஒருத்தர் இளைய ராணியாச்சே..” என்கவும், ரோஹீத் சிரித்தான். டாக்டர் பிராதப்பும் வேறு ஒன்றும் கூறாமல்.. ரோஹீத்தின் காலை பரிசோதித்தார். அவர் கிளம்பும் முன்.. ரோஹீத்தை சங்கடத்துடன் பார்க்கவும், ரோஹீத் சிறு முறுவலுடன் “நான் மறுத்துட்டேன் என்றுச் சொல்லுங்க போதும்..” என்று அனுப்பி வைத்தான்.

பின் இரவு உணவு சாப்பிட்டதும்.. சுபாஷினி மாத்திரைகள் எடுத்துக் கொடுத்தாள். போன முறைகள் போல் அல்லாது.. எதுவும் பேசாமல் அமைதியாக ரோஹீத் வாங்கிக் கொண்டான். அதுவும் சுபாஷினிக்கு சங்கடத்தை கொடுத்தது.

இரவு நெருங்கும் வேளையில்.. சுபாஷினி மற்றும் மாரிமுத்துவிடம் ஒருவித பரபரப்பு காணப்பட்டது. சுபாஷினி மாரிமுத்துவிடம்.. மூட்டு விலகிய கால் உறக்கத்தின் போது.. அசையாமல் இருக்க.. இருபக்கமும்.. அணை கொடுத்தாற் போன்று தலையாணியை வைக்க கூறினாள். மாரிமுத்துவிடம் தங்கத்திடம் மாடியில் உள்ள ஒரு அறையில் வைத்திருக்கும் புது தலையாணிகளை எடுத்து வரக் கூறினான். தங்கம் தயங்கவும், மாரிமுத்துவே சிறு பெருமூச்சுடன் சென்றான். செல்லும் முன்.. மாரிமுத்து சுபாஷினியை பார்க்கவும், சுபாஷினி புரிந்தது என்பது போல் தலையை ஆட்டினாள். ரோஹீத்தும்.. சுபாஷினியும் மட்டும் அங்கு இருக்கவும்.. தங்கம் தான் கணவருக்கு உதவ செல்வதாக கூறி அங்கிருந்து அகன்றாள்.

மெல்ல சுபாஷினி ரோஹீத்தை பார்த்தாள். அவனோ.. கையில் இருந்த செல்பேசியில் கவனத்தை வைத்திருந்தான். எனவே சுபாஷினி மெல்லிய குரலில் “டைம் ஆச்சு ஸார்! நான் கிளம்புகிறேன்.” என்றாள்.

உடனே ரோஹீத் “ஒகே சுபா! அப்படியே அந்த டேபளேட்ஸ் டைம் லிஸ்ட் போட்டு தனித்தனி கவர்ல போட்டிரு! நான் எடுத்து சாப்பிட்டுக்கிறேன். இனி நீ வர வேண்டாம்.” என்றான்.

அதைக் கேட்டு சுபாஷினி திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். அதைப் பார்த்து சிரித்த ரோஹீத் “வாட்! எதுக்கு இப்படியொரு ரியாக்ஷன்! இதைத் தானே காலையில் இருந்து சொல்லிட்டு இருந்தே! உனக்கு தான் இங்கே இருக்க பிடிக்கலை. பயமா இருக்கே! நாம் பேசியிட்டு இருக்கலாம் ஒரு காம்பேனியன் மாதிரி இரு என்றுச் சொல்லும் போதெல்லாம் முகத்தில் அத்தனை ரியாக்ஷன் காட்டினே! அவ்வளவு கஷ்டப்பட்டு நீ இங்கே வர வேண்டாம். பை த வே தேங்க்ஸ் ஃபார் எவிரிதிங்..” என்றான்.

சுபாஷினி பேச்சிழந்து நின்றாள்.

அவள் விரும்பியது தான் இது! ஆனால் ஏனோ சந்தோஷமாக அவளால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
 
Status
Not open for further replies.
Top