All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் "உயிர் கொ(ல்)ள் உறவே!!!" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

தலைப்பு : "உயிர் கொ(ல்)ள் உறவே!!!"

இந்தக் கதையைப் பற்றி என்ன சொல்ல? சாதாரணக் காதல் கதை என்று சொல்ல முடியவில்லை. அரசியலை களமாகக் கொண்ட கதை... இன்றைய அரசியல், இன்றைய மனிதர்களின் சுயநல மனநிலை, அவர்களின் இரட்டை வாழ்க்கை முறை என்று இன்றைய சமுதாயத்தின் இருண்ட பக்கங்களைக் காண்பிக்கப் போகும் கதையிது... அரசியல் என்றாலே நீங்கள் எல்லோரும் எதிர்பார்ப்பது ஒன்று தான்... அது பற்றி நானே நிறையக் கதைகள் எழுதி விட்டேன், நிறையக் கதைகள் வந்திருக்கிறது. ஆனால் இந்தக் கதை களம் வேறு... இதுவரை யாரும் இந்தக் கருவை எழுதவில்லை என்றே நினைக்கின்றேன். ஒரு உண்மை மனிதனை மாதிரியாகக் கொண்டு கற்பனையில் உருவான கதையிது.

வாருங்கள் அரசியலாட்டத்தையும், காதலாட்டத்தையும் கலந்து இந்தக் கதையில் பார்க்கலாம். இந்தக் கதையில் யார் ஹீரோ, யார் வில்லன் என்று நான் சொல்ல போவது இல்லை. உங்களுக்கு யாரை பிடித்திருக்கிறதோ அவங்க தான் ஹீரோ... யாரை பிடிக்கவில்லையோ, அவங்க தான் வில்லன்... இது முற்றிலும் உங்கள் விருப்பம்... இந்தக் கதையில் ஹீரோ, வில்லனுக்கு ஆண்பால், பெண்பால் கிடையாது... இதற்கு இன்று முன்னோட்டம் கொடுக்கலாம் என்று இருந்தேன். முன்னோட்டம் கொடுத்தால் சுவாரசியம் போய்விடும். அதனால் நாளை கதையின் முதல் அத்தியாயத்துடன் வருகிறேன். எப்போதும் என்னுடன் பயணித்து எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...

9A5A7E38-CAC6-45F9-8B6F-D57A8EE46163.jpeg

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

ஶ்ரீகலா

Administrator
இந்தக் கதையில் அரசியல் அதிகம் கலந்து வருவதால் முதலிலேயே டிஸ்கலைமர் போட்டு விடுகின்றேன்... இது முழுக்க முழுக்கக் கற்பனை கதை... இறந்தவர், உயிரோடு இருப்பவர்கள் என்று யாரையும் குறிப்பிடவில்லை. ஒரே ஒருவர் மட்டுமே அரசியல் மாதிரியாக எடுத்துக் கொண்டேன். அவர் யாரென்று கதை போகப் போக உங்களுக்குப் புரியும். இந்தக் கதைக்குக் 'கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்!' இந்தப் பாடல் வெகுபொருத்தமானது. அதனால் கதையைத் தொடர்ந்து கவனமாக வாசித்து வாருங்கள்.

ஶ்ரீகலாவின் 'உயிர் கொ(ல்)ள் உறவே!!!'



உறவு : 1



நள்ளிரவு பொழுதில் மழை சோவென்று அடித்து ஊற்றிக் கொண்டு இருந்தது. சாலையின் இருமருங்கிலும் வாகனங்கள் சள்சளென்று வேகமாகச் சென்று கொண்டு இருந்தது. அந்த மழை பொழுதிலும் கடமை தவறாத காவல்துறை அதிகாரி ஒருவர் பணியில் ஈடுபட்டு இருந்தார்.



"யோவ் ஏட்டு, இந்தப் பக்கமா தானே வர்றதா சொன்னாங்க?" அவர் தனக்குக் கீழே வேலை பார்க்கும் ஏட்டுவிடம் கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தார்.



"ஆமாங்க சார், இன்ஃபார்மர் அப்படித்தான் சொன்னார்."



"இன்னமும் காணோமேய்யா?" அந்த அதிகாரி சலித்தபடி சாலையைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.



அப்போது அங்கு ஒரு கன்டெயினர் லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அதைக் கண்டதும் அவரது முகத்தில் வெளிச்சம் பரவியது.



"யோவ், அந்த லாரி தான்ய்யா... அதை நிப்பாட்டு..." அவர் ஏட்டிடம் பணிக்க...



அடுத்த நொடி ஏட்டு அங்கிருந்த இரும்பு தடுப்பை சாலையின் நடுவே மேலிருந்து கீழாக இறக்கினார். லாரி அதற்கு எல்லாம் அஞ்சாது தடுப்பை இடித்துக் கொண்டு செல்ல முற்பட்டது. அந்தோ பரிதாபம்! இரும்பு தடுப்பின் மீது வேகமாக மோதியதில் அது நிலை தடுமாறி கட்டுப்பாட்டினை இழந்து சாலையில் இருந்து விலகி பக்கவாட்டில் இருந்த குழிக்குள் இறங்கியது. லாரி நின்றதும் அதிலிருந்த ஓட்டுநர் மற்றும் துணைக்கு வந்தவன் இருவரும் தப்பித்து ஓடி விட்டனர். மழை நேரத்தில் அவர்களைத் துரத்தி பிடிக்க முடியாது என்றெண்ணி அவர்களை விட்டு விட்டு கன்டெயினரை நோக்கி காவல்துறையினர் இருவரும் வந்தனர்.



"ஏன் சார், இது நிறையப் பணமா இருக்கு சார்?"



"அப்படித்தான் இன்ஃபார்மர் சொன்னான்..." காவல்துறை அதிகாரி அந்தக் கன்டெயினரை பார்த்தபடி சொன்னார்.



"இவ்வளவு பணத்தை வச்சு என்ன பண்ணுவாங்க சார்?" ஏட்டு புரியாது தலையைச் சொறிந்தார்.



"உலகத்தையே வாங்கலாம் ஏட்டு..." அவர் சிரித்தபடி கூறினார்.



"இதைக் கொண்டு போறவங்களும் உலகத்தை வாங்கிற ஐடியால இருப்பாங்களோ!" ஏட்டுக்குச் சந்தேகம் வந்தது.



"இல்லை ஏட்டு... இன்னும் ஆறு மாசத்தில் எலெக்சன் வருதுல்ல... அதுக்குச் செலவு பண்ண கொண்டு போறாங்க..."



"அதுக்கு இவ்வளவு பணமா?"



"ஆமா, ஒரு ஓட்டுக்கு இவ்வளவு பணம், பரிசு பொருள்கள்ன்னு ஏகப்பட்ட பணம் தேவைப்படும்."



"ஆமாங்க சார், போன முறை மதியழகன் சார் தலைக்கு இரண்டாயிரம் ரூபா தந்தாரு. எங்க குடும்பமே அவருக்குத் தான் ஓட்டு போட்டோம்." ஏட்டு பல்லை கட்டினார்.



"போலீஸக்காரன் நீயே இப்படி இருந்தால்... பொதுமக்களைக் கேக்கணுமாக்கும். எல்லாம் பணத்தைப் பார்த்து ஓட்டு போட்டுட்டு இப்போ முக்குல உட்கார்ந்து மூக்கால அழுவுங்க..."



"அதே தான் சார்... விலைவாசி கூடி போச்சு... சம்பளம் பத்த மாட்டேங்குது. கடன் வாங்கியே காலம் ஓடுது. ஆனா அவங்க மட்டும் ஏசி கார், பங்களான்னு பந்தாவா வலம் வர்றாங்க..."



"பாத்ரூம்ல கூட ஏசியாம்ய்யா..."



"அத சொல்லுங்க..." ஏட்டு பெருமூச்சு விட்டார்.



"இந்தப் பணம் யாருடையது சார்? சீஃப் மினிஸ்டர் மதியழகன் சாரோடதா?" ஏட்டுக்குச் சந்தேகம் வந்தது. இவ்வளவு பணம் என்றால் அது ஆளுங்கட்சியாகத் தானே இருக்க வேண்டும் என்று...



"இல்லை ஏட்டு... இது எதிர்கட்சி தலைவர் வேணுகோபாலனோடதுன்னு சொன்னான்."



"ஆத்தி அவரா? கதர் சட்டை, வேட்டி கட்டிட்டு பார்க்க எளிமையா இருப்பாரா?" ஏட்டு அதிசயித்தார்.



"ஹா ஹா, சரியான ஏமாளிய்யா நீயி... வெளியே தான் கதர் எல்லாம்... உள்ளே கோமணம் தங்கத்துல இருக்கும். வெளிப்பார்வை வைத்து மனிதர்களை எடை போடாதே." அதிகாரி வாய்விட்டு சிரித்தார்.



அப்போது சர்சரென்று இரு வாகனங்கள் அங்கு வந்து நின்றது. ஒன்று வெளிநாட்டுக் கார், இன்னொன்று ஜீப்... ஜீப் முழுவதும் அடியாட்கள் அமர்ந்து இருந்தனர். அவர்கள் ஜீப்பில் இருந்து இறங்கி பாதுகாப்பு அரண் போல் வரிசையாக நின்றனர். அதில் ஒருவன் வெளிநாட்டு காரின் முன்பக்க கதவை பவ்யமாகத் திறந்து விட்டான். அதிலிருந்து வருண் மஹாராஜ் கீழே இறங்கினான். இவ்வளவு நேரம் அவர்கள் பேசி கொண்டிருந்த வேணுகோபாலனின் ஒரே மகன் தான் இவன்...



வருண் மஹாராஜ் வெள்ளை வேட்டி, சட்டையில் முறுக்கிவிடப்பட்ட மீசையுடன் திராவிட மாடலாக இருந்தான்.



"எவ்வளவு திமிர் இருந்தா எங்க கன்டெயினர்ன்னு தெரிஞ்சும் மடக்கி இருப்ப...?" அவன் வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு கையில் போட்டிருந்த தங்க காப்பை மேலே ஏற்றியபடி சீறினான். அது அவனது மேனரிசம்... அவன் கோபமாய்ப் பேசும் போது அவனது இடதுகை வலதுகையில் இருக்கும் காப்பை கோபமாய் ஏற்றி விடும்.



"தெரிஞ்சதால தான் பிடிச்சேன்." அதிகாரி தெனாவெட்டாகக் கூற...



"சார், நமக்கு எதுக்கு வம்பு? வாங்க சார் போகலாம்." வருண் மஹாராஜை கண்டு நடுங்கியபடி ஏட்டு கூற...



"சும்மாயிரு ஏட்டு..." அதிகாரி அவரை அடக்கினார்.



மரணப் பயத்தில் நின்றிருந்த ஏட்டின் மனக்கண்ணில் பெண்டாட்டி, பிள்ளை, குட்டிகள் எல்லாம் வலம் வந்தனர்.



"ஓ, நீ ஆளுங்கட்சியா?" வருண் மஹாராஜ் எகத்தாளத்துடன் கேட்க...



"நான் எந்தக் கட்சியிலும் இல்லை. நான் மக்கள் கட்சி..." அதிகாரி பயம் இல்லாது கூற...



"இங்கே பாரு... உனக்கு என்ன வேணும்ன்னு சொல்லு...? சிறப்பா செஞ்சிரலாம். அதை விட்டுட்டு இந்த நோண்டுற வேலை எல்லாம் எங்கிட்ட வேணாம்."



"நான் ஒரு நேர்மையான அதிகாரி... உங்க அரசியல் வண்டவாளத்தை நாளைக்கு மீடியா முன்னாடி தண்டவாளத்தில் ஏத்துறேன்." அதிகாரி கோபத்துடன் சொல்ல...



"நான் சொல்லிட்டே இருக்கேன்... நீ சும்மா பேசிட்டே இருக்கியே." என்றவன் அடுத்த நொடி தன்னுடைய முதுகில் சொருகி வைத்திருந்த வீச்சரிவாளை எடுத்து ஒரே போடாய் போட்டு அவரை வெட்டி வீழ்த்தி விட்டான்.



இவ்வளவு நேரம் தெனாவெட்டாய் பேசி கொண்டிருந்த ஒரு உயிர் இப்போது பேச கூட முடியாதபடி அநியாயமாகத் துடிதுடித்து உயிரை விட்டு இருந்தது. ஏட்டு இந்தக் காட்சியைக் கண்டு பயத்தில் உறைந்து போய் நின்றிருந்தார்.



"யோவ் ஏட்டு..." வருண் மஹாராஜ் அவரைச் சத்தம் போட்டு அழைக்க...



"சார், என்னைய விட்டுருங்க... நான் புள்ள, குட்டிக்காரன்..." அவர் பயத்தில் நடுங்கியபடி சொல்ல...



"இங்கே நடந்ததை வெளியில் சொன்னால்... அடுத்தப் பலி நீ தான்... இப்படியே ஓடி போயிரு..." என்று வருண் மஹாராஜ் அவரைப் பார்த்து சொல்ல...



அடுத்த நொடி ஏட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கு நின்றிருந்த ஜீப்பை எடுத்துக் கொண்டு பறந்து விட்டார்.



அதேநேரம் வெற்றி வேந்தன், முதலமைச்சர் மதியழகனின் மகன், அந்த விருந்தினர் மாளிகை முன் தனது காரை நிறுத்தினான். வீட்டின் முன் சற்றுத் தள்ளியிருந்த கடலின் அலையோசை சங்கீதமாய்க் காதுகளில் ஒலித்தது. கடற்காற்று இதமாய் வீசி அவனது மனதினை ரம்மியமாக்கியது. அவன் உல்லாசமாய் விசிலடித்தபடி அந்த வீட்டினுள் நுழைந்தான்.



அங்குச் சோபாவில் அமர்ந்திருந்த மேகா என்றழைக்கப்படும் பிரியதர்ஷினி அவனைக் கண்டதும் பயத்துடன் எழுந்து நின்றாள். அவளது உண்மை பெயர் பிரியதர்ஷினி. திரையுலகிற்காக அவள் தனது பெயரை மேகா என்று மாற்றி இருக்கிறாள்.



"இந்த மரியாதை, பயம் எல்லாம் என்னைக் கை நீட்டி அறையும் போது எங்கே போயிருந்தது?" என்றவன் அவளை அமர சொல்லாது தான் மட்டும் சோபாவில் அமர்ந்தான். அப்போது உடனிருந்த அவனது கையாள் மதுவினை கோப்பையில் ஊற்றி அவனிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து அகன்று விட்டான்.



வெற்றி வேந்தன் மதுவினை அருந்தியபடி பிரியதர்ஷினியை மேலிருந்து கீழாக அளவிட்டபடி பார்த்துக் கொண்டு இருந்தான். அவனது பார்வை அவளுக்கு அருவருப்பைக் கொடுத்தது. அவள் பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக நின்றாள்.



"சினி இன்டஸ்ட்ரியே என் கையில்... அப்படிப்பட்ட என்னை எதிர்த்துட்டு நீ இந்தப் பீல்டில் இருக்க முடியுமா?" என்று கோபத்துடன் கேட்டவன் மதுவினை ஒரே மூச்சில் குடித்து முடித்தான். பின்பு எழுந்து அவள் அருகே வந்தான்.



அவள் பயத்தில் விரிந்த விழிகளுடன் அவனைப் பார்த்தாள். அதைக் கண்டு அவன் ஏளனமாய்ச் சிரித்தான்.



"சாதாரணமா டிவியில் அஞ்சுக்கும், பத்துக்கும் நடிச்சிட்டு இருந்த உனக்கு எப்படிடி படத்தில் நடிக்கச் சான்ஸ் கிடைச்சது? அதுவும் ஒரே படத்தில் உலகமகா புகழ் பெறுகிற அளவுக்கு... நீ கண்டவன் கூடப் ப.....மலா இதெல்லாம் உனக்குக் கிடைச்சிருக்கும். என் கிட்ட மட்டும் எதுக்குப் பத்தினி வேசம் போடுற?"



"இல்லை... நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லை..." என்று சொல்லும் போதே அவளது விழிகளில் கண்ணீர் நிரம்பி விட்டது.



"அப்படியா? சரி நீ போ..." என்று அவன் சொல்ல... அவளோ போகாது அழுது கொண்டே இருந்தாள்.



"போன்னு சொன்னேன்ல..."



அவள் போகாது அழுத்தமாய் நின்றிருக்க... அதைக் கண்டு அவன் கோணல் சிரிப்புச் சிரித்தான்.



"இப்பவாவது புரிஞ்சதா ஐயாவோட பவர் என்னன்னு... நீ என்னைச் சந்தோசப்படுத்தாம இங்கிருந்து ஒரு அடி வச்சாலும் உன் கேரியர் கிளோஸ்..."



"ம், அம்மாவும் அதைத் தான் சொல்லி விட்டாங்க..." அவள் தேம்பியபடி சொன்னாள்.



"உங்கம்மாவே சொல்லிட்டாங்களா? பேஸ், பேஸ் ரொம்ப நன்னாயிருக்கு..." என்றவன் அடுத்த நொடி அவளை இறுக அணைத்தான்.



'அவனைப் பகைச்சிக்கிட்டா நாம இந்த இன்ட்ஸ்ட்ரில இருக்க முடியாது பேபிம்மா... அவன் கூட அட்ஜஸ்ட் பண்ணி போடா... உனக்கும், எனக்கும் இதை விட்டா வேற பொழப்புத் தெரியாது.' துணை நடிகையாகவே காலம் தள்ளி, கெட்டு சீரழிந்த தாயின் கனவினை நனவாக்க அவள் அவன் முன் வந்து நிற்கின்றாள்.



அடுத்து கழிந்த மணித்துளிகள் அவளுக்கு நரகம் தான்... அவன் அவளை வன்மையாகக் கையாளவில்லை. ஆனாலும் அவனது தொடுகை அவளுக்கு அருவருப்பைக் கொடுத்தது. வாந்தி வரவழைத்தது. அவன் எல்லாம் முடிந்து அவளை விட்டதும் அவள் குளியலறைக்குள் ஓடி போய் வாந்தி எடுத்தாள். அதைக் கண்டபடி அவன் அலட்சியமாய்ப் படுத்திருந்தான்.



பிரியதர்சினி தன்னைச் சுத்தம் படுத்திக் கொண்டு வெளியில் வந்தாள். அவள் தான் கிளம்புவதற்காகத் தனது கைப்பையை எடுத்துக் கொள்ளப் போகும் போது வெற்றி வேந்தன் எழுந்து வந்து அவளைப் பின்னிருந்து அணைத்தான்.



"பிரமாதமான ஒத்துழைப்பு... உன்னை மறக்கவே முடியாது. நான் எப்போ எல்லாம் கூப்பிடறேனோ... அப்ப எல்லாம் நீ எனக்குக் கம்பெனி கொடுக்கணும்." என்றபடி அவன் அவளை விடுவித்தான். அவள் பதில் சொல்லாது கிளம்ப...



"பதில் சொல்லாம போனால்... நீ கேட்டை தாண்ட முடியாது. காலம் முழுவதும் என் கூட இங்கே தான் இருக்கணும். வசதி எப்படி?" அவன் வில்லத்தனமாய்க் கேட்க...



"வர்றேன்..." அவள் எரிச்சலோடு மொழிய...



"சத்தம் பத்தலை..." அவன் காதருகே கை வைத்தபடி கேலியாய் சொல்ல...



"நீங்க கூப்பிடறப்போ எல்லாம் நான் வர்றேன்." அவள் அழுகையோடு சொல்ல...



"குட்..." என்றவன் காசோலையில் பணத்தை எழுதி அவளது முகத்தில் விட்டெறிந்தவன், "உங்கம்மா கிட்ட கொடு..." என்று நக்கலாய் சொல்ல...



காசோலையை எடுக்காது சென்றாலும் விட மாட்டான் என்பதை உணர்ந்தவளாய் அவள் குனிந்து அதை எடுத்தவள் அடுத்த நொடி வேகமாய் அங்கிருந்து ஓடி விட்டாள்.



வெற்றி வேந்தன் அவளைக் கண்டு உல்லாசமாய்ச் சிரித்தபடி பார்த்திருந்தான். அவள் அள்ளி அள்ளி கொடுத்த சொர்க்கம் அவன் கண்முன்னே காட்சியாய் விரிந்து அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.




*****************************
 

ஶ்ரீகலா

Administrator
மறுநாள் காலையில் நாளிதழில் காவல்துறை அதிகாரி இரயிலில் பாய்ந்து தற்கொலை என்று செய்தி வந்திருந்தது. அதற்குக் காரணம் ஓய்வில்லாத பணிச்சுமை என்று சொல்லப்பட்டு இருந்தது. அதை வாசித்துக் கொண்டிருந்த வேணுகோபாலன் வில்லன் சிரிப்பு சிரித்தார்.



"என்னப்பா, அந்த இன்ஸ்பெக்டர் செத்த செய்தி போட்டுருக்கானுங்களா?"



"ஆமாடா மகனே... நல்ல காரியம் பண்ணின... இல்லைன்னா இந்தத் தேர்தல் செலவுக்கு நாம பிச்சை தான் எடுக்கணும்."



"எதுக்கு எடுக்கணும்ங்கிறேன்? நம்மால வளர்ந்தவன்ங்க இருக்கிறானுங்கல்ல... அவங்களை மிரட்டினால் பணம் தானா வந்து கொட்ட போகுது."



"அதுவும் சரி தான்... ஆனால் இவ்வளவு பணம் சாத்தியம் இல்லை."



அப்போது வேணுகோபாலனின் மனைவி தையல்நாயகி தீபாராதனை தட்டினை எடுத்துக் கொண்டு வந்தார். அவர் முதலில் கணவனிடம் நீட்ட... வேணுகோபாலன் பயபக்தியுடன் திருநீறை எடுத்து நெற்றியில் பூசி கொண்டார். அடுத்து அவர் மகனிடம் நீட்ட...



"ம்மா, எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு தெரியும்ல..." அவன் சிடுசிடுத்தான்.



"உங்கப்பாவும் தான் மேடைல கடவுள் எதிர்ப்புன்னு பேசுவாரு. ஆனா அதை ஒருநாளும் வீட்டில் காட்டினது இல்லை. நீயும் இருக்கியே." தையல்நாயகி மகனை கடிந்தார்.



"தைலா, விடும்மா..." வேணுகோபாலன் சொல்லவும் தையல்நாயகி அமைதியாகி போனார்.



"வசு என்ன பண்ணுகிறாள் தைலா? காலேஜ் கிளம்பிட்டாளா?"



"இன்னும் இல்லை... நல்லா தூக்கம்... லெக்சரர் இவளே லேட்டா போனால்... படிக்கிற பசங்க உருப்பட்ட மாதிரி தான்." தையல்நாயகி சலித்துக் கொண்டார்.



"வசு வேலைக்குப் போக வேண்டிய அவசியமே இல்லை. இருந்தாலும் அவளுக்கு வீட்டில் இருந்தால் போர் அடிக்குமேன்னு தான் அனுப்பி வைக்கிறேன்."



"அதுக்குக் காலாகாலத்தில் கல்யாணம் பேசி முடிக்கலாம்ல..."



"இன்னும் ரெண்டு வருசம் போகட்டும் தைலா..."



"என்னமோ போங்க... நீங்களாச்சு, உங்க செல்ல பொண்ணாச்சு..." தையல்நாயகி நொடித்துக் கொண்டு போய்விட்டார்.



"அம்மா சொன்ன மாதிரி வசு கல்யாணத்தை நடத்தினால் என்ன?" வருண் மஹாராஜ் தந்தையிடம் சந்தேகமாய்க் கேட்டான்.



"பண்ணணும் வருண்... ஆனா மாப்பிள்ளை தான்..." வேணுகோபாலன் யோசனையுடன் தாடையைத் தடவினார்.



"நீங்க மட்டும் இம்ன்னு சொல்லுங்கப்பா... மாப்பிள்ளையை வரிசையில் கொண்டு வந்து நிறுத்துறேன்."



"அப்படியா?" என்று மகனை பார்த்த வேணுகோபாலன், "உன்னால் வெற்றி வேந்தனை கொண்டு வந்து நிறுத்த முடியுமா...?" என்று கேட்க...



"அவனா?" வருண் மஹாராஜ் அதிர்ச்சி அடைந்தான்.



"ஆமா, அவனுக்கு என்ன?" வேணுகோபாலன் மகனை விழிகள் சுருங்க பார்த்தார்.



"ஒண்ணும் இல்லைப்பா..." வருண் மஹாராஜ் சங்கடமாய் மறுத்தான்.



"லேடிஸ் மேட்டரா?"



"உங்களுக்கு எப்படிப்பா தெரியும்?" வருண் மஹாராஜ் ஆச்சிரியமாகத் தந்தையைப் பார்த்தான்.



"எல்லாம் எனக்குத் தெரியும். நானும் ஒரு காலத்தில் அப்படி இருந்தவன் தான்டா... குடும்பத்துக்காக உன் அம்மா, கொள்கைக்காக இன்னொருத்தின்னு வாழ்ந்தவன் தான்... வயசாக வயசாக எல்லாத்தையும் பணத்தைக் கொடுத்து ஒழிச்சிட்டு உங்கம்மா மட்டும் போதும்ன்னு ஒதுங்கிட்டேன்."



"அம்மாவுக்கு இது தெரியுமாப்பா?"



"தெரியும்... ஆனாலும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க மாட்டாள். மாசத்துல பாதி நாள் ராத்திரி வர மாட்டேன். உங்கம்மா புத்திசாலி புரிஞ்சிக்க மாட்டாளா என்ன?" என்ற தந்தையைக் கண்டு அவனுக்குத் திகைப்பாய் இருந்தது. அவன் கோபக்காரன் தான், கொலைகாரன் தான்... ஆனால் பெண்கள் விசயத்தில் அவன் சுத்தமானவன்...



"சரி, என் கதையை விடு... இந்தக் காரணத்தால் தான் வெற்றியை வேண்டாம்ன்னு சொல்லுறியா?"



"ஆமாப்பா, நம்ம வசுவுக்கு அவன் சரிப்பட்டு வர மாட்டான்."



"எதிர்கட்சின்னு ஒண்ணு இல்லாம ஆக்கணும்ன்னா இது தான் சரியான வழி வருண்... வசுவுக்கு வெற்றியும், உனக்கு நாகராஜின் பொண்ணு கார்த்திகாயினியை பேசி முடிக்கலாம்ன்னு இருக்கேன்..." வேணுகோபாலனின் வார்த்தைகளைக் கேட்டு அவன் அமைதியானான்.



"உன் மனசுல என்ன ஓடுதுன்னு எனக்குத் தெரியும்? வசுவுக்கு மட்டும் சீஃப் மினிஸ்டர் மகன். உனக்கு மினிஸ்டர் பொண்ணுன்னு தானே..."



"ப்ச், அதெல்லாம் இல்லைப்பா..."



"மதியோட பொண்ணு ஸ்கூல் தான்டா படிக்குது. இல்லைன்னா நான் அதைப் பிடிச்சு உனக்குக் கட்டி வச்சிருப்பேனே... இதுவும் ஒரு விதத்தில் நல்லது தான். நாகராஜனுக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருக்கு. நம்ம டார்கெட் ரெண்டு பக்கமும் இருக்கணும். பெர்சனல் லைஃபை அரசியலோடு போட்டு குழப்பிக்காதே. அப்புறம் நிம்மதி இருக்காது வருண்..."



"ம், சரி..." என்றவன் முகத்தில் பிடித்தமின்மையே வெளிப்பட்டது.



"உனக்கு ஏன் கார்த்திகாயினியை பிடிக்கலை...?"



"அவள் ரொம்பத் திமிர் பிடிச்சவள்ப்பா... பொண்ணா அது..." அவன் வெறுப்பை உமிழ்ந்தான்.



"சொந்தமா தொழில் பண்றாள்ல... அந்தத் திமிர் இருக்கத்தான் செய்யும். நீ அரசியலுக்காக அவளைக் கல்யாணம் பண்ணிக்கோ... பிறகு உனக்குப் பிடிச்ச மாதிரி..."



"போதும்ப்பா... ஒரு பிசாசை வச்சே எப்படிச் சமாளிக்கிறதுன்னு எனக்குத் தெரியலை." என்றவன் கையெடுத்து கும்பிட்டான்.



"பிசாசு எல்லாம் தாலி கட்டிட்டா தானா அடங்கிரும்டா வருண்..."



"என்னமோ பண்ணுங்கப்பா..." என்ற வருண் மஹாராஜ், "அந்தப் போலீஸ்க்காரன் குடும்பத்துக்கு ஏதாவது உதவி பண்ணணும்ப்பா... இதை வச்சு ஒரு போராட்டத்துக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கேன்." என்றான்...



"நான் எள்ளுங்கிற முன்னே நீ எண்ணெயா வந்து நிற்கிற... என்னோட அரசியல் வாரிசு நீ தான்டா மகனே..." வேணுகோபாலன் பெருமையுடன் மகனை தட்டி கொடுத்தார்.



"வேறு யாரையும் கொண்டு வந்து நிறுத்த நான் விட்டுருவேனாக்கும்." வருண் மஹாராஜ் மிதப்பாய் மீசையை முறுக்கினான். அதைக் கண்டு வேணுகோபாலன் வாய்விட்டு சிரித்தார்.



வருண் மஹாராஜ் சொன்ன மாதிரி காவல்துறை அதிகாரி வீட்டிற்குச் சென்று அவரின் சடலத்திற்கு மாலை அணிவித்துப் பின்பு,



"நேர்மையான அதிகாரி... நேர்மைக்குத் தான் இங்குக் காலம் இல்லை..." என்று முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு ஊடகம் முன்னே பேசினான்.



பிறகு அவரின் மனைவிக்குப் பத்து லட்சம் பணத்திற்கான காசோலையை வழங்கினான். அந்தப் பெண்மணி அவனை வாழ்த்தி கண்ணீர் வடித்தார். ஆளுங்கட்சியில் இருந்து யாரும் எந்த உதவியும் செய்யவில்லை என்று...



"உங்களுக்கான நீதியை நாங்க வாங்கித் தருவோம்மா..." என்று அவரிடம் உறுதி கூறியவன் அதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றான்.



ஊடங்களில் அன்றைய செய்தியில் வருண் மஹாராஜ் முகம் பளிச்சென வெளியானது. அதைக் கண்ட மதியழகன் தனது மகன் வெற்றிவேந்தனை பிடித்துச் சத்தம் போட்டார்.



"ப்ச், இப்போ என்ன நடந்து போச்சுன்னு குதிக்கிறீங்க?" அவன் எரிச்சலுடன் சொல்ல...



"இன்னும் என்னடா நடக்கணும்? ராத்திரி நடிகையோட கும்மாளம் போட்டல்ல... அந்தப் புத்தி இப்போ எங்கே போச்சு...? இந்த மாதிரி நியூஸ் கேள்விப்பட்டா முதல் ஆளா போய் நிற்க வேண்டாமா? எனக்கு அப்புறம் நீ எப்படி இந்தக் கட்சியைக் காப்பாத்த போற?"



"இந்தச் சின்ன விசயத்துக்குப் போய் ஏன் இந்தக் குதி குதிக்கிறீங்க? அவன் பத்து லட்சம் கொடுத்தால்... நீங்க இருபது லட்சமும், அவங்க வீட்டில் யாராவது ஒருத்தருக்கு அவரோட வேலையும் போட்டு கொடுங்க... அதுக்கு அப்புறம் காலத்துக்கும் அவங்க குடும்பத்து ஓட்டு நமக்குத் தான்." அவன் உட்கார்ந்த இடத்தில் இருந்தே வெற்றி கோட்டையைப் பிடிக்கும் வித்தையைச் சொன்னான்.



"இதெல்லாம் எனக்குத் தோணாம இல்லை வெற்றி... ஆனாலும் நாம மக்களோடு மக்களா இறங்கி சேவை பண்ணணும். அப்போ தான் நம்ம ஓட்டு வங்கியை நாம தக்க வச்சுக்க முடியும்."



"ம், சரிப்பா..."



"எல்லாம் சரி தான்... காலாகாலத்தில் கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே... எதுக்கு இப்படிக் கோவில் மாடு மாதிரி சுத்துற..." மதியழகன் மகனை கடிய...



"என் அண்ணன் பொண்ணு ரெடியா இருக்குங்க..." அவனது அன்னை இளமதி அங்கே வந்தார்.



"ஏன், என் தங்கச்சி பொண்ணும் தான் ரெடியா இருக்கு..." மதியழகன் சொல்ல...



"ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க..." என்ற வெற்றி வேந்தன் அங்கிருந்து தப்பித்து விட்டான்.



"கல்யாணமாவது, கச்சேரியாவது... இருக்கிற வரை லைஃபை என்ஜாய் பண்ணுவோம்." அவன் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.



தொழிலமைச்சர் நாகராஜனின் வீட்டில் அவரது மகள் கார்த்திகாயினி நாளிதழை முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளது முகத்தில் கோபத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.



"என்ன பாப்பா, காலங்கார்த்தால எதுக்கு இவ்வளவு கோபம்?" அவளது அன்னை தேவி காபி கோப்பையை மகளிடம் நீட்டினார்.



அதை வாங்கிய கார்த்திகாயினி அடுத்த நொடி கோப்பையை ஆத்திரத்துடன் தூக்கி எறிந்தாள். காபி கோப்பை அருகில் இருந்த சுவற்றில் பட்டு சுக்குநூறாக உடைந்து தரையில் விழுந்தது.



"பாப்பா..." தேவி அதிர்வுடன் மகளைப் பார்த்தார்.



"என்னடி மசமசன்னு நின்னுக்கிட்டு இருக்க? வேலைக்காரியை கூப்பிட்டு கிளீன் பண்ண சொல்லு..." மனைவியை அதட்டியபடி அங்கு வந்தார் நாகராஜன். தேவி அங்கிருந்து சென்றதும் மகள் புறம் திரும்பியவர்,



"என் மகளைக் கோபப்படுத்தியது யாரு? எங்கிட்ட சொல்லு பாப்பா... அவனை ஒரு கை பார்த்திர்றேன்." என்றபடி மகள் அருகே அமர்ந்தார்.



"நீங்களே படிச்சு பாருங்க..." மகள் கோபமாய் நாளிதழை தந்தையிடம் நீட்டினாள்.



நாளிதழில் வந்த செய்தியை படித்துப் பார்த்தவர் பின்பு, "இவன் அடங்கவே மாட்டானா?" என்று ஆத்திரத்துடன் நாளிதழை கசக்கி எறிந்தார்.



"எவ்வளவு கஷ்டப்பட்டு வேர்ல்ட் பேமஸ் கம்பெனியை நம்ம நாட்டில் தொழில் தொடங்க வச்சிருக்கோம். அது புரியாம... இவன்ங்க ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருக்காங்க." கார்த்திகாயினி பல்லை கடித்தாள்.



"இப்ப என்ன செய்யலாம்? சொல்லு பாப்பா... அதன்படி செஞ்சிரலாம்." நாகராஜன் மகளிடம் ஆலோசனை கேட்டார்.



அவருக்கு மகள் என்றுமே குரு தான்... படிப்பறிவு இல்லாத குடும்பத்தில் அவள் வெளிநாடு வரை சென்று பட்டப்படிப்பு படித்து முடித்து வந்தவளாயிற்றே! அதுவும் தங்க பதக்கத்துடன்... அந்த மரியாதை அவருக்கு என்றும் உண்டு...



'உங்கள் தேவை எல்லாம் ஒரே கூரையின் கீழ்' இது தான் அவர்கள் ஆரம்பித்து இருக்கும் அங்காடியின் குறிக்கோள்... காய்கறி, பலசரக்கில் இருந்து வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும். அதற்கான முயற்சியில் கார்த்திகாயினி வெளிநாட்டு நிறுவனத்துடன் கை கோர்த்து இறங்கி இருக்கின்றாள். நாகராஜன் தொழிலமைச்சர் ஆதலால் எல்லாமே எளிதாக முடிந்தது. இந்த நேரத்தில் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஒன்றுக்கும் உதவாத ஒருவன் போராட்டம் பண்ணுகின்றான். அது தான் அவளுக்குக் கோபம்...



"இதை நான் ஹேன்டில் பண்ணிக்கிறேன்ப்பா..."



"எப்படிப் பாப்பா?" அவர் யோசனையுடன் மகளைப் பார்த்தார்.



"எல்லாத்துக்கும் ஒரு விலை உண்டுப்பா..." என்று புன்னகைத்தவளின் புன்னகை அச்சு அசல் வில்லியின் புன்னகையே!



"இது ஆடு, புலி ஆட்டமுமல்ல,

சிங்கம், மான் ஆட்டமுமல்ல,

இது பருந்தும், கழுகும் ஆடுமாட்டம்,

சிங்கமும், புலியும் ஆடுமாட்டம்,

ரத்த காவுமுண்டு, உயிர் காவுமுண்டு,

அரசியலாட்டத்தில் அனைத்தும் உண்டு!!!"




உயிர் கொல்லும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
உறவு : 2



"வசும்மா, எழுந்திரு... காலேஜ்க்கு நேரமாச்சு..." தையல்நாயகி ஆயிரமாவது தடவையாக மகளை எழுப்பிக் கொண்டு இருந்தார்.



"ம், ம்..." என்ற சத்தம் மட்டுமே வந்தது வசுந்தரா தேவியிடம் இருந்து...



"எல்லாம் உங்கப்பா கொடுக்கிற செல்லம்..." தையல்நாயகி கடிந்து கொண்டு இருக்கும் போதே வேணுகோபாலன் மகளின் அறைக்குள் நுழைந்தார்.



"எதுக்கு எம் பொண்ணைத் திட்டுற? அவள் இஷ்டப்படி தான் எழும்புவாள்." வேணுகோபாலன் மகளுக்குப் பரிந்து பேச...



"அவளுக்காகக் காலேஜ் காத்துக்கிட்டு இருக்குமாங்க... இவள் போய்ப் புள்ளைங்களுக்குப் பாடம் எடுத்து... அதுங்க படிச்சு உருப்பட்ட மாதிரி தான்." தையல்நாயகி சலித்துக் கொண்டார்.



"அது யாரு காலேஜ்டி... நம்ம காலேஜ்... எம் பொண்ணுக்காக நான் வாங்கிய காலேஜ். எம் பொண்ணுக்காகக் காலேஜ் காத்துக்கிட்டு இருக்கும்." தெனாவெட்டாய் சொன்ன வேணுகோபாலன் மகள் அருகே அமர்ந்து,



"அம்மாடி வசும்மா, எழுந்திரும்மா... அப்பா சட்டசபை வரை போயிட்டு வந்திர்றேன்." என்று கனிவுடன் மகளை எழுப்ப...



"நீங்க போறதுக்கு என்னைய எதுக்கு எழுப்புறீங்கப்பா?" அவள் தந்தையின் மடியில் வாகாய் படுத்துக் கொண்டு கேள்வி கேட்டாள்.



"அதுவா வசும்மா... எப்பவும் அப்பா உன் முகத்தில் முழிச்சிட்டு தானே வெளியில் போவேன். இன்னைக்கு வேற சட்டசபை கூட்டம் இருக்குடா... வேட்டி, சட்டை கிழியாம நான் முழுசா வெளியில் வரணும். அதுக்குத் தான்..." தந்தையின் பேச்சை கேட்டு வசுந்தரா தேவி கலகலவெனச் சிரித்தபடி எழுந்து அமர்ந்தாள்.



"எல்லாம் நல்லபடியா நடக்கும் மகனே! சென்று வா, வென்று வா!" என்று அவள் அவரை ஆசிர்வாதம் செய்வது போல் கையை வைக்க...



"அடிங், கொழுப்பு எடுத்தவளே... பெத்த அப்பாவை பார்த்தா மகனேன்னு சொல்லுற..." தையல்நாயகி மகளை அடிக்க வர...



மகளோ தந்தையின் பின்னே சென்று மறைந்து கொண்டாள். வேணுகோபாலன் மகளை மறைத்தபடி மனைவியைத் தடுத்து நிறுத்தினார்.



"வசும்மா எங்கம்மாவோட மறுபிறவி தைலா... என்னை மகனேன்னு கூப்பிடற உரிமை வசும்மாவுக்கு மட்டும் தான் இருக்கு." வேணுகோபாலன் சொல்லவும்,



"அப்படிச் சொல்லுங்கப்பா..." மகள் சலுகையுடன் பின்னால் இருந்து தந்தையின் கழுத்தை கட்டி கொண்டாள்.



"துவரம் பருப்புக்கும், கடலை பருப்புக்கும் இன்னும் வித்தியாசம் தெரியலை. நீ எல்லாம் கல்யாணம் பண்ணிட்டு போய் எப்படித் தான் வாழ போறியோ? என்ன வளர்த்து வச்சிருக்கன்னு உன் மாமியார் என்னைத் தான் திட்ட போறாங்க..." தையல்நாயகி புலம்பினார்.



"பருப்புக்கும், வாழ்க்கைக்கும் என்னப்பா சம்பந்தம் இருக்கு?" மகள் அதிமுக்கிய சந்தேகத்தைக் கேட்க...



"உன் அம்மா கிடக்கிறாள் விடு வசும்மா... நீ கல்யாணமாகி புகுந்த வீடு போகும் போது எல்லா நாட்டு சமையலும் தெரிஞ்ச நல்ல செஃப்பை உன் கூடவே சீதனமா அனுப்பி வச்சிர்றேன்." வேணுகோபால் சொல்லவும் மகள் குளிர்ந்து போனாள்.



"ப்பா, அப்படியே கிச்சனுக்குச் சென்ட்ரல் ஏசி போட்டுருங்க... அப்புறம் இத்தாலியன் ஃபுட் நல்லா சமைக்கிறவரா இருக்கணும். எனக்குப் பாஸ்தா, பீட்சா, மேக்ரொனி எல்லாம் ரொம்பப் பிடிக்கும்."



"அவ்வளவு தானே வசும்மா... ஏற்பாடு பண்ணிரலாம்." வேணுகோபாலன் மகளுக்கு ஒத்து ஊத... தையல்நாயகி தலையில் அடித்துக் கொண்டார்.



"சரி சரி பேசியது போதும்... நீங்க சட்டசபைக்குக் கிளம்புங்க... நீ காலேஜ்க்கு கிளம்புடி..." தையல்நாயகி சொல்லிவிட்டு சென்று விட...



"அம்மாவுக்குப் பொறாமைப்பா... அவங்களுக்கு உங்களை மாதிரி அப்பா இல்லைன்னு..."



"அது தான்ம்மா உண்மை... உன் தாத்தா உங்கம்மாவுக்குச் சீதனமா ஓட்டை தகரப் பெட்டியை கொடுத்து விட்டாரு." வேணுகோபாலன் கேலியாய் சிரிக்க...



"என்ன அங்க சத்தம்?" தையல்நாயகி குரல் கொடுக்கவும்...



"கிளம்பிட்டேன் தைலா..." வேணுகோபாலன் அவசரமாக அறையை விட்டு வெளியேறினார்.



வசுந்தரா தேவி விரிந்த புன்னகையுடன் குளியலறைக்குள் புகுந்தாள். வசுந்தரா தேவி நல்லவளா? கெட்டவளா? என்று ஆராய்வதை விட... அதிகச் செல்லம் கொடுத்து குட்டிச்சுவரான ஒரு டேடிஸ் லிட்டில் பிரின்சஸ் அவள்... அதிகச் செல்லம், அதிகப் பணம் எல்லாம் சேர்ந்து அவளைத் தலைகீழாக மாற்றியிருந்தது.



வீட்டில் இருந்து கிளம்பிய வசுந்தரா தேவி நேரே கல்லூரி வந்தடைந்தாள். பல லட்சங்களை விழுங்கிய வெளிநாட்டுக் காரில் வந்திறங்கும் விரிவுரையாளர் அவள் மட்டுமே... அவள் அலட்சியமாகக் கல்லூரி வளாகத்தில் நடந்து செல்ல... எதிரே தென்பட்ட மாணவர்கள் அனைவரும் அவளுக்குப் பவ்யத்துடன் வணக்கம் சொன்னார்கள். அவள் பதிலுக்குச் சிறு தலையசைப்பு கூட இல்லாது அகந்தையாக நடந்து சென்றாள்.



அவள் தனது துறைக்குச் செல்ல வேண்டி வராந்தாவில் நடந்து செல்ல... எதிரே கல்லூரி முதல்வர் வந்து கொண்டு இருந்தார். அப்போதும் அவள் தனது நடை, பாவனையை மாற்றிக் கொள்ளவில்லை. கல்லூரி முதல்வர் அவள் அருகே வந்தவர்,



"குட்மார்னிங் மேம்..." என்று பணிவுடன் காலை வணக்கம் சொன்னார். அவர் அவளது தந்தையிடம் அல்லவா சம்பளம் வாங்குகின்றார்.



"ம்..." என்ற தலையசைப்பு மட்டுமே அவளிடம் இருந்து பதிலாக வந்தது. அவர் தனது நிலையை நொந்தபடி சென்று விட்டார்.



வசுந்தரா தேவி தனது துறைக்குள் நுழைந்தாள். அங்குத் துறை தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த சந்தானம் தன்னையும் அறியாது எழுந்து அமர்ந்தார்.



"குட், இந்த மரியாதை எப்பவும் இருக்கணும். என்னைய என்ன சொன்னீங்க? நான் படிக்க லாயக்கு இல்லாதவள்... எருமை மாடு மேய்க்கத்தான் போவேன்னு சொன்னீங்கல்ல... ஆனா நான் இதே காலேஜ்க்கு லெக்சரரா வந்துட்டேன் பார்த்தீங்களா?" அவள் சவடால் பேச...



'ம்க்கும், எல்லாம் என் நேரம்... இன்னும் அரியர் கூடக் கிளியர் பண்ணலை. ஆனா லெக்சரர்ன்னு பெத்த பெயரு... மகள் ஆசைப்பட்டாள்ன்னு வேற என்னத்தையாவது வாங்கிக் கொடுக்கக் கூடாதா இந்த வேணுகோபாலன்... இப்படிக் காலேஜை வாங்கிக் கொடுத்து இங்கே படிக்கிறவங்க நிலையைக் கேள்விக்குறியாக்கிட்டாரே...' சந்தானம் மனதிற்குள் புலம்பியபடி அவளைக் கண்டு ஈயென்று இளித்து வைத்தார்.



"சாரி மேடம்... இனிமேல் அப்படி எல்லாம் பேச மாட்டேன்."



"இல்லை பரவாயில்லை... நீ தான் தைரியமான ஆளாச்சே... பேசித்தான் பாரேன்." அவள் அவரிடம் சவால் விட...



"யார் சொன்னா, நான் தைரியமான ஆளுன்னு... நான் ஒரு கோழை, புள்ளக்குட்டிக்காரன் மேடம்..." சந்தானம் விட்டால் அவளது காலில் விழுந்து விடுவார் போலும்...



"அது..." என்று மிரட்டலாய் சொன்னவள் அங்கிருந்து வெளியேறி விட்டாள்.



சந்தானம் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி நாற்காலியில் அமர்ந்தார்.



வசுந்தரா தேவி நேரே தான் வகுப்பு எடுக்க இருக்கும் வகுப்பறைக்குள் நுழைந்தாள். அங்கே சாம் வகுப்பு எடுத்துக் கொண்டு இருந்தான். அவனை அவள் தான் வேலைக்கு அமர்த்தி இருந்தாள். அவள் தான் பாடங்கள் படிக்கவே இல்லையே. அதனால் அவள் சொல்லி கொடுக்கவிருக்கும் பாடங்களுக்கு அவனை விரிவுரையாளராக நியமித்து இருக்கிறாள். அதாவது அவளுக்குச் சப்சிடிட்யூட் அவன்...



"என்ன சாம், கிளாஸ் எல்லாம் நல்லா போகுதா?" என்று கேட்டபடி அவள் அங்கிருந்த மேசை மீது அமர்ந்தாள்.



"நல்லா போகுது மேம்..." அவன் பவ்யமாகக் கூறினான்.



"போர்சன்ஸ் எல்லாம் கவர் பண்ணிட்டியா?"



"எஸ் மேம்..."



"குட் சாம்..." அவள் அவனைப் பாராட்ட...



அவனோ ஒரு புன்னகையுடன் அமைதியாக நின்றிருந்தான். அவன் எப்பவும் அப்படித்தான். ரொம்ப அமைதியானவன்... அதிகம் பேச மாட்டான். நல்லவன், நல்ல மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி அடைந்து இருந்தான். அதை எல்லாம் விட வசுந்தரா தேவி போட்ட சட்டத்திட்டங்களுக்கு அவன் தான் சரிப்பட்டு வந்தான். அதனாலேயே அவனுக்கு இங்கே வேலை கிடைத்தது. அவன் இங்குப் படிக்கும் மாணவர்களுடன் விடுதியில் தங்கி இருக்கின்றான்.



"சரி சாம், நான் போகிறேன். நீ கிளாஸ் எடு..." என்றவள் அங்கிருந்து சென்று விட்டாள்.



"நல்லவேளை சார், நீங்க பாடம் எடுக்கப் போய்த் தப்பிச்சோம். மேம் பாடம் எடுத்திருந்தால் அவ்வளவு தான்..." அங்கிருந்த மாணவன் ஒருவன் விடுதலை உணர்வுடன் சொல்ல... அதைக் கேட்டு எல்லா மாணவர்களும் சிரித்தனர்.



"ஷ், மேம்மை அப்படி எல்லாம் பேச கூடாது. பேசாம பாடத்தைக் கவனிங்க..." என்ற சாம் பாடம் நடத்த ஆரம்பித்தான்.



*****************************



கார்த்திகாயினி போராட்டம் நடத்தியவனிடம் தனியே பேச எண்ணி அவனை அழைத்திருந்தாள். அவனும் வந்தான். இதற்கு முன்னே அவனை எந்தக் கட்சியிலும் பார்த்தது இல்லை. அவனைப் பற்றி விசாரித்துப் பார்த்ததில் பெரிதாகப் பின்புலம் எதுவும் இல்லை. அதனால் எளிதாக அவனை அகற்றி விடலாம் என்று அவள் நினைத்தாள்.



"உனக்கு என்ன வேணும்?" அவள் நேரிடையாகப் பேரத்தை ஆரம்பித்தாள்.



"எனக்கு என்ன வேணும்ன்னா... நியாயம் மேடம்... நீங்க ஆரம்பிக்கப் போகும் சூப்பர் மார்கெட்டால் நிறையச் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவாங்க."



"ஓஹோ... நீ என்ன அவங்களுக்கான பிரதிநிதியா?" அவளது குரலில் அத்தனை அலட்சியம்!



"அநியாயத்தை யாராவது ஒருத்தர் தட்டி கேட்டு தானே ஆகணும். அதான் நான் களத்தில் இறங்கி இருக்கேன். அதுக்காக நான் சிறு வணிகன் இல்லை. பொதுமக்களில் ஒருவன்..." என்று ஆக்ரோசமாய்ப் பேசியவனைக் கூர்ந்து பார்த்தவள் பின்பு,



"உனக்கு எவ்வளவு வேணும்?" என்று சாதாரணக் குரலில் கேட்க...



"என்ன விளையாடுறீங்களா மேடம்? என்னுடைய போராட்டத்தை, கொள்கையை உங்க பணத்தால் விலை பேசலாம்ன்னு நினைக்கிறீங்களா?" அவன் தனது குரலை தாழ்த்தாது சத்தம் போட்டான்.



"ஷ், எதுக்குக் கத்தி பேசுற? சும்மா ஆதாயம் இல்லாமல் உட்கார்ந்து கத்திக்கிட்டுப் போராட்டம் பண்ண நீ என்ன மகாத்மாவா? உன் குடும்பமே உன் வருமானத்தை நம்பித்தான் இருக்குது. ஆனா நீ இங்கே உட்கார்ந்து போராட்டம் பண்ணிட்டு இருக்க... அப்போ உன் குடும்பத்தில் அடுப்பு எப்படி எரியுது? திடீர்ன்னு உன் பிள்ளைங்களை அதிகப் பீஸ் கட்டி பிரைவேட் ஸ்கூல்ல சேர்த்து இருக்க... வீட்டை இடிச்சுக் கட்டியிருக்க... பொண்டாட்டிக்கு புதுசா நகை வாங்கிக் கொடுத்து இருக்க... இதுக்கு எல்லாம் பணம், துட்டு, மணி எப்படி வந்தது தம்பி?" அவள் அவனது ஜாதகத்தைப் பிட்டு பிட்டு வைக்க... அவனுக்கு வியர்க்க துவங்கியது.



"அது வந்து..." அவன் திக்கி திணறினான்.



"நான் சொல்லட்டா? எங்களோடு கை கோர்த்து இருக்கும் கம்பெனியோட போட்டி கம்பெனி உனக்குப் பணம் கொடுத்து இந்த மாதிரி கத்த சொல்லியிருக்கு... நீ வாங்கிய பணத்துக்கு விசுவாசம் மாறாம கத்திட்டு இருக்க... யாரோ வெளிநாட்டுக்காரன் மேலிருக்கும் விசுவாசத்தை உள்நாட்டில் இருக்கும் எங்க கிட்ட காட்ட வேண்டியது தானே... சுதேசியா இருக்கணும் தம்பி... இப்படி வெளிநாட்டுக்காரன் பணத்துக்கு அடிமையாகக் கூடாது." அவள் அவனுக்குப் பாடம் எடுக்க...



"சரிங்க மேடம்... நீங்க பணத்தைக் கொடுங்க... நான் போராட்டத்தை முடிச்சிக்கிறேன்."



"அது நான் சொல்லும் போதே நீ ஒத்துக்கிட்டு இருந்தால்... ஆனா இப்போ ரொம்ப லேட் தம்பி... என்னைய ரொம்பப் பேச வச்சிட்டே... சோ இப்பவே இந்த நொடி எல்லாத்தையும் கலைச்சிட்டு வீட்டுக்கு போற... இல்லை என்னோட ஆக்சன் வேற மாதிரி இருக்கும்."



"உங்களால என்ன பண்ண முடியும்?" அவன் சற்று குரலை உயர்த்த...



"அந்நிய செலவாணி மோசடியில் உன்னைக் கைது பண்ண முடியும். உன் அக்கவுண்ட்டில் எப்படி அவ்வளவு பணம் வந்தது, அதுவும் டாலர் எப்படி வந்ததுன்னு கேள்வி எழுப்ப முடியும். அதுக்குப் பிறகு உன் குடும்பம்? இதுக்குப் பதில் நான் சொல்ல வேண்டியது இல்லை. உனக்கே புரியும்ன்னு நினைக்கிறேன்." அவள் சொல்லி முடிக்கும் முன்,



"நான் இப்பவே எல்லாத்தையும் கலைச்சிட்டு போயிர்றேன்..." என்றவன் அங்கிருந்து ஓடி விட்டான்.



"ராஸ்கல்... யார் கிட்ட?" அவள் கோபத்தில் பல்லை கடித்தாள்.



மகளின் தந்திரத்தை அறிந்த நாகராஜன் அவளை மிகவும் பாராட்டினார். மதியழகன் கூடக் கார்த்திகாயினி புத்திசாலித்தனத்தை அறிந்து பாராட்டினார்.



"உனக்கு இல்லாத அறிவு உன் மகளுக்கு இருக்குடா..." மதியழகன் நாகராஜனை அழைத்துப் பாராட்டினார். இருவரும் பால்யகாலச் சிநேகிதர்கள். மதியழகனுக்கு நாகராஜன் வலதுகரம் என்று கூடச் சொல்லலாம்.
 

ஶ்ரீகலா

Administrator
மறுநாள் கார்த்திகாயினி நிம்மதியாய் கட்டிட வேலை நடக்கும் இடத்திற்கு வந்தாள். ஆனால் முன்பு மாதிரியே அங்குப் போராட்டம் நடந்து கொண்டு இருந்தது. அதைக் கண்டு அவள் ஆத்திரத்தில் பல்லை கடித்தாள். ஆனால் இப்போது போராட்டம் பண்ணுவது, ஏற்கெனவே போராட்டம் பண்ணியவன் அல்ல... எதிர்கட்சி தலைவரின் மகனான வருண் மஹாராஜ்.



போராட்ட கூடாரத்தில் நடுநாயகமாக அமர்ந்து கோஷம் போட்டுக் கொண்டு இருந்த வருண் மஹாராஜை கார்த்திகாயினி காரில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டு சென்றாள். அவள் கண்ட அதே நேரம் அவனும் அவளைத் தான் பார்த்திருந்தான்.



'திமிர் பிடிச்சவ, எவ்வளவு திமிரா பார்த்துட்டு போறா?' அவன் மனதிற்குள் பொறுமியபடி அமர்ந்து இருந்தான்.



கார்த்திகாயினி தந்தைக்கு அழைத்து விசயத்தைச் சொல்லி சத்தம் போட்டாள்.



"எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு... ஆள் வச்சு அவனை அடிச்சுப் போடலாம் போலிருக்குப்பா."



"ஐயோ பாப்பா, அவசரப்பட்டு எதையும் பண்ணிராதே. எதிர்கட்சின்னு இருந்தால் போராட்டம் பண்ணித்தான் ஆகணும். நான் வேணு கிட்ட பேசி பார்க்கிறேன். நீ அமைதியா இரு."



"அவர் கிட்ட நீங்க பேசுவீங்களாப்பா?" அவள் வியப்பாய் கேட்டாள்.



"அட என்னம்மா, ஒண்ணும் தெரியாத மாதிரி கேட்டுட்டு... அரசியலில் தான் நாங்க எதிரிங்க... மத்தபடி அவனுக்கும், எனக்கும் என்ன வாய்க்கா வரப்பு தகராறா? பேசி பார்த்துட்டு சொல்றேன். அதுவரைக்கும் நீ எதுவும் செய்யாம இரு." என்றவர் அழைப்பை துண்டித்தார்.



சிறிது நேரத்தில் நாகராஜன் மீண்டும் மகளுக்கு அழைத்தார்.



"என்னப்பா?"



"நான் வேணு கிட்ட பேசிட்டேன். ஆனா அவன் வேற ஒண்ணு கேட்டான். உன் விருப்பம் இல்லாம நான் பதில் சொல்ல முடியாதுன்னு ஃபோனை வச்சிட்டேன்."



"வேற ஒண்ணு இருக்கட்டும். முதல்ல போராட்டத்தைப் பத்தி அவர் என்ன சொன்னார்?"



"இது சும்மா போராட்டம் பண்றதாம். எதிர்கட்சின்னு இருந்தால் இப்படி எதிர்ப்பை காட்டிட்டு இருக்கணும்ங்கிறதுக்காக... இதனால் நமக்கு எந்தப் பாதகமும் ஏற்படாதுன்னு சொன்னான். இதுல இன்னொரு பெனிபிட் இருக்காம்."



"போராட்டத்தில் கூடவா?" அவள் கோபமாய்ச் சலித்துக் கொண்டாள்.



"வேணு கட்சி போராட்டத்தில் இருக்கும் வரை வேற யாரும் போராட்டம் பண்ண மாட்டாங்களாம்."



"அதுக்குத் தான் அவர் இருக்காரே..." அவள் கோபத்துடன் முணுமுணுத்தாள்.



"அங்க தான்ம்மா நீ தப்பு பண்ற... வேணு போராட்டம்ங்கிற பேரில் நமக்குப் பாதுகாப்பா இருக்கான். நாம வேலை முடிக்கிற வரை வேறு யாரையும் நெருங்க விட மாட்டான். நாம வேலையை முடிச்சதும் அவன் போராட்டத்தை வாபஸ் வாங்கிக்குவானாம்."



தந்தை சொன்னதைக் கேட்டு அவள் தீவிரமாய் யோசித்தாள்.



"இதனால் அவருக்கு என்ன லாபமாம்?"



"இன்னொன்னு கேட்டான்னு சொன்னேனே... அது தான் அவனுக்கு லாபமாம். அது நீ தான் பாப்பா..."



"வாட்? நானா? நான் என்ன பொருளா? பணமா?" அவள் கோபமாய்ப் படபடத்தாள்.



"நீ மகாலெட்சுமி பாப்பா... நீ அவன் வீட்டுக்கு மருமகளா வந்தால் போதுமாம்."



"வாட்?" அவள் அதிர்ச்சி அடைந்தாள்.



"அவர் மகனுக்கு உன்னைப் பெண் கேட்டார் பாப்பா..."



"அப்பா அவங்க நம்ம எதிரிங்க..."



"அது அரசியலில் பாப்பா... பெர்சனலா எந்தப் பகையும் இல்லை. வேணு போன முறை ஆட்சியில் இருந்தவன். அவனுக்கு அடுத்து வருண் தான் கட்சி தலைமைக்கு வருவான். என் மருமகன் முதலமைச்சர்ன்னா எனக்குப் பெருமை தானேம்மா..."



"மதியழகன் மாமா கேட்டால் தப்பா நினைக்க மாட்டாரா?"



"ப்ச், அவன் தப்பா எல்லாம் நினைக்க மாட்டான். கட்சி வேற, வாழ்க்கை வேறன்னு அவனுக்கு நல்லா தெரியும். வெற்றியை உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னா... அவனுக்கு ஆல்ரெடி அத்தை, மாமா பொண்ணுங்க இருக்காங்க. மதிக்கு அவன் தங்கச்சி பொண்ணை மருமகளா எடுக்கணும்ன்னு ஆசை இருக்கு."



"இது சரியா வரும்ன்னு எனக்குத் தோணலை..." என்று சொன்னவளின் மனக்கண்ணில் சற்று முன் பார்த்த வருண் மஹாராஜின் பிம்பம் வலம் வந்தது. அவனது தோற்றம் அவளுக்கு அத்தனை பிடித்தமானதாய் இல்லை.



"அரசியலில் எதுவும் நடக்கலாம் பாப்பா... நான் எப்படி வேணாலும் கூழை கும்பிடு போட்டுட்டு போயிருவேன். ஆனா நீ எனக்கு இளவரசி... போற இடத்தில் நீ மகாராணியா இருக்கணும். அது நீ வருணை கல்யாணம் பண்ணினால் மட்டுமே சாத்தியமாகும்."



"சரிப்பா, உங்க விருப்பம்..." என்றவள் அழைப்பை துண்டித்தாள்.



அரசியல் பின்புலத்தில் வளர்ந்ததால் அவள் திருமணத்தையும் அரசியல் போன்றே சாதாரணமாக எடுத்து கொண்டாள். மனம் இணையத் தேவையில்லை... பதவியும், பணமும் இணைந்தால் போதுமென்று அவள் நினைத்தாள்.



************************



"துரை என்ன காலங்கார்த்தால வெளியில் கிளம்பியாச்சு?" மதியழகன் புறப்படத் தயாராக நின்றிருந்த வெற்றி வேந்தனை கண்டு கேட்டார்.



"நீங்க தானே சொன்னீங்க, உருப்படாம சுத்திட்டு இருக்கேன்னு... அதான் உருப்படியா ஒரு காரியத்தைச் செய்யலாம்ன்னு இருக்கேன்."



"என்னடா பண்ண போற, எனக்குத் தெரியாம... எது செய்றதா இருந்தாலும் என் கிட்ட சொல்லிட்டு செய்..." அவர் எரிச்சலுடன் சொல்ல...



"எதுக்குங்க சும்மா சும்மா புள்ளைய திட்டிட்டு இருக்கீங்க?" இளமதி மகனுக்குப் பரிந்து கொண்டு வந்தார்.



"இளா, நீ ஐசு விசயத்தோட ஒதுங்கிக்கோ... வெற்றி விசயத்தில் தலையிடாதே." மதியழகன் கண்டிப்புடன் சொல்ல... இளமதி அமைதியாகி விட்டார்.



"செத்து போனானே போலீஸ்க்காரன்... அவனோட பொண்ணு படிக்கும் காலேஜ்க்கு போறேன்." என்ற மகனை அவர் சந்தேகமாய்ப் பார்த்தார்.



"இதை நான் நம்பணுமா? அந்தப் பொண்ணை ஏதாவது பண்ணின... அப்புறம் நான் மனுசனா இருக்க மாட்டேன்."



"ப்ச், அப்பா... எப்ப பாரு சந்தேகம் தானா? உண்மையில் நான் உதவி பண்ண போறேன்ப்பா... அந்தப் பெண்ணோடு சேர்த்து இன்னும் ஒன்பது பேர் படிப்புக்கான மொத்த செலவையும் நான் ஏத்துக்கப் போறேன். எல்லோருமே வசதியில்லாத பொண்ணுங்க... இதனால் நமக்குத் தான் நல்ல பெயர் கிடைக்கும். எல்லாம் உங்களுக்காகத் தான்... யோசிச்சு, யோசிச்சு பண்ணினாலும் நீங்க திட்டிட்டே இருக்கீங்க." வெற்றி வேந்தன் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டான்.



"சரிடா சரிடா... தப்பா எடுத்துக்காதே... நீ வேட்டி கட்டி அரசியல்வாதி மாதிரி இருந்தால் இன்னும் நல்லா இருக்கும். ஆனா நீ என்னமோ கம்பெனி சிஇஓ மாதிரி டிப்டாப்பா டிரெஸ் பண்ணிட்டு இருந்தால் எப்படிடா? உன்னோட டிரெஸ் அரசியலோடு ஒட்ட மாட்டேங்குதுடா..."



"எனக்கு இது தான்ப்பா பிடிச்சிருக்கு..."



"என்னமோ போ... சரி, எந்தக் காலேஜ்?"



அவன் கல்லூரி பெயரை சொன்னதும் மதியழகன் யோசனையுடன் மகனை பார்த்தார்.



"அது வேணு காலேஜ் ஆச்சே..."



"அப்படியா? இருக்கட்டுமே... பிரின்சிபால் கிட்ட கேட்டேன். அவர் ஒத்துக்கிட்டாரே."



"அப்போ சரி தான்... வேணு பொண்ணு அங்கே தான் வேலை பார்க்குது. அது கிட்ட வம்பு பண்ணாம... போனோமா, வேலையைப் பார்த்தோமோன்னு இருக்கணும்."



'அப்படியா? நம்ம வேலையைக் காட்டிர வேண்டியது தான்...' என்று மனதிற்குள் நினைத்தவன் வெளியில், "சரிப்பா..." என்றான் நல்ல பிள்ளையாக...



வெற்றி வேந்தன் கல்லூரியில் வந்து இறங்கினான். முதலமைச்சர் மகன் என்பதால் தடபுடலாக வரவேற்பு இருந்தது. 'ஃபார்மல் லுக்'கில் ஹீரோ போன்று வந்திறங்கிய அவனைக் கண்டு கல்லூரி மாணவிகள் கூட்டம் ஆவென வாயை பிளந்தது. அது தான் அவனது பிளஸ்... பாலிவுட் ஹீரோ போன்றிருக்கும் அவனது தோற்றமே பெண்களை எளிதில் அவனிடம் மயங்க வைத்து விடும். அவன் என்றுமே கோபிகையர்கள் கொஞ்சும் கோபாலனே!



"சார் ஆட்டோகிராஃப் ப்ளீஸ்...", "சார் ஃபோட்டோ ப்ளீஸ்..." என்று ஆண், பெண் பேதமின்றி அனைத்து மாணவர்களும் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.



"ஓகே, தாராளமா போட்டோ எடுத்துக்கலாம்..." என்றவன் அனைவருடனும் செல்ஃபி எடுத்துக் கொண்டான். பின்பு அனைவருக்கும் கையெழுத்து போட்டுக் கொடுத்தான். மொத்தத்தில் எல்லோரும் அவனைக் கதாநாயகன் போன்று உணர செய்தனர்.



அந்தக் கூட்டத்தில் கல்லூரி முதல்வர் கூட அவன் அருகில் செல்ல முடியவில்லை. பிறகு காவலர்களை வைத்து மாணவர்களை ஒதுக்கி வைத்து விட்டு முதல்வர் அவனுக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.



"எங்கே உங்க ஓனர்?" அவன் அதை வாங்காது கேலி குரலில் கேட்க...



"சேர்மன் இங்கே வர்றது இல்லை சார். இங்கே எல்லாமே நான் தான்." கல்லூரி முதல்வர் பெருமையுடன் சொல்ல...



"நான் வேணு அங்கிளை சொல்லலை. அவரோட பொண்ணைக் கேட்டேன்."



வசுந்தரா தேவி எப்போது சரியான நேரத்திற்குக் கல்லூரி வந்திருக்கிறாள். அதிலும் வெற்றி வேந்தன் வருகை தரும் விசயம் கேள்விப்பட்டு அவள் வேண்டுமென்றே வீட்டில் இருந்து தாமதமாகக் கிளம்பினாள்.



"மேடம் இன்னும் வரலை சார்..."



"அப்போ மேடம் வரும் வரை வெயிட் பண்றேன். அவங்க கையில் பூங்கொத்தை கொடுத்து விடுங்க." என்றவன் கல்லூரி முதல்வர் அறையில் அமர்ந்து வசுந்தரா தேவியின் வருகைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.



கல்லூரி முதல்வரும், பிற ஆசிரியர்களும் என்ன செய்வது? என்று தெரியாது கைகளைப் பிசைந்து கொண்டு இருந்தனர். அப்போது சாம் அங்கு வந்தான்.



"என்ன பிரச்சினை சார்?" அவன் நேரே முதல்வரிடம் கேட்டான்.



"மேடம் வந்து பூங்கொத்துக் கொடுத்தால் தான் ஃபங்கசனுக்கு வருவேன்னு வெற்றி சார் சொல்றாரு."



"ஓ..." என்று யோசித்தவன் பிறகு அவரிடம், "அந்தப் பூங்கொத்தை என் கிட்ட கொடுங்க..." என்க...



"நீ எப்படிச் சாம்?" முதல்வர் தயங்கினார்.



"நான் தானே மேம்க்குச் சப்சிடிட்யூட்... சோ நானே அவரை வரவேற்கிறேன்." என்றவன் பூங்கொத்தை வாங்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்தான்.



கதவு திறக்கும் ஒலியில் வசுந்தரா தேவி தான் உள்ளே வருகிறாள் என்று எண்ணிய வெற்றி வேந்தன் கெத்தாகத் திரும்பி பார்க்க... அங்கு நின்றிருந்ததோ சாம்! அவன் பின்னே கல்லூரி முதல்வர் பயத்துடன் நின்று இருந்தார்.



"ஹேய், ஹூ ஆர் யூ மேன்?" வெற்றி வேந்தன் கோபத்தில் கத்த...



"சார், மேம் வர லேட்டாகும். நான் தான் அவங்களோட சப்சிடிட்யூட்..." சாம் பவ்யமாகச் சொன்னான்.



"வாட்? சப்சிடிட்யூட்டா?" வெற்றி வேந்தன் திகைப்புடன் சாமை பார்த்தான்.



"எஸ் சார்... மேம்க்கு பதிலா நான் தான் இங்கே வொர்க் பண்றேன்."



"ஓஹோ, இது வேறயா?" என்று நக்கலாய் சொன்ன வெற்றி வேந்தன் பின்பு, "சோ?" என்று அலட்சியமாய்ச் சாமை பார்த்தான்.



"அவங்களுக்குப் பதிலா நான் உங்களை வரவேற்கிறேன் சார்." சாம் பூங்கொத்தை வெற்றி வேந்தனிடம் நீட்டினான்.



வெற்றி வேந்தனோ அதை வாங்காது கோபத்துடன் சாமை பார்த்தவன், "நீ என்ன சேலை கட்டிய பொம்பளையா? நான் சொன்னது வசுந்தராவை... நீ என்ன வசுந்தராவா?" என்று கேட்க...



"ஓ, சார் பொம்பளைன்னா தான் பேசுவீங்களோ?" என்று கேட்டபடி அவன் அருகே நெருங்கி வந்த சாம், "சார் பொம்பளைன்னா தான் தொடுவீங்களோ?" என்று கேட்டபடி வெற்றி வேந்தனின் கையைப் பிடித்தான்.



பார்ப்பதற்கு அவன் வெற்றி வேந்தன் கையைப் பிடித்துக் குலுக்குவது போல் தான் தெரியும். ஆனால் சாமின் பிடி இரும்பு பிடி என்பது அவனிடம் கையைக் கொடுத்திருந்த வெற்றி வேந்தனுக்கு மட்டும் தான் தெரியும். நேரம் செல்ல செல்ல வெற்றி வேந்தனுக்குக் கை வலிக்க ஆரம்பித்தது.



"டேய், கையை விடுடா..." வெற்றி வேந்தன் அடிக்குரலில் அலறியபடி சாமை ஏறிட்டு பார்க்க...



அப்போது சாமின் விழிகளில் தெறித்த ரௌத்திரத்தில் அவன் வாயடைத்துப் போனான்.



"பெண் என்றால் காமம் தானா!

பெண் என்றால் கலவி தானா!

பெண் என்றால் களவு தானா!

பெண் என்றால் புனிதம்!

பெண் என்றால் தாய்மை!

பெண் என்றால் சக்தீ! என்று

அறியாயோ அற்ப மூடனே!"




உயிர் கொல்லும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
உறவு : 3



வசுந்தரா தேவி கல்லூரிக்கு கிளம்பாது வீட்டில் இருந்தாள். அவளுக்கு வெற்றி வேந்தனின் வருகை பிடிக்கவில்லை. அதேசமயம் அவனது வருகையைத் தடுக்கவும் முடியாது. அவளது தந்தையின் எதிரியின் மகனை பூங்கொத்து கொடுத்து வரவேற்க அவளுக்கு விருப்பமும் இல்லை. அதனால் தான் அவள் வீட்டில் பொழுதை கழித்துக் கொண்டு இருந்தாள். வேணுகோபாலனும், வருண் மஹாராஜும் இன்று வீட்டில் இருந்தனர். அவர்களுக்குக் கட்சி அலுவலகத்தில் மட்டுமே வேலை இருந்தது.



"வசும்மா, உடம்பு சரியில்லையா? காலேஜ் போகாம இருக்க?" வேணுகோபாலன் மகளைக் கண்டு கவலையுடன் கேட்க...



"முகத்துக்கு ஐஞ்சு கோட்டிங் மேக்கப் போட்டுக்கிட்டு உட்கார்ந்து இருக்கா. இவளுக்குப் போய் உடம்பு சரியில்லையா? என்னப்பா நீங்க வேற ஜோக் அடிச்சட்டு..." வருண் மஹாராஜ் தந்தையைக் கண்டு சிரித்தான்.



"இங்கே பாருண்ணா... என்னைய கேலி பண்ற வேலையை வச்சுக்காதே." வசுந்தரா தேவி பெண் சிங்கமாய்ச் சிலிர்த்துக் கொள்ள...



"ஐயோ, இது கேலி இல்லை வசு... உண்மைம்மா, உண்மை..." அவன் சிரியாது மீண்டும் அவளைக் கேலி செய்ய...



"டேய், அண்ணா..." அவள் பத்ரகாளியாய் மாறி போனாள்.



"உன்னை விட ஐஞ்சு வயசு மூத்தவன்... கொஞ்சமாவது மரியாதை இருக்காடி..." தையல்நாயகி மகளைக் கடிந்தார்.



"ப்பா..." மகள் அழுகையில் உதட்டை பிதுக்க... அதைக் கண்டு தந்தைக்குத் தாங்க முடியவில்லை.



"தைலா சும்மா இரு..." என்று மனைவியை அதட்டிய வேணுகோபாலன் மகளிடம், "நீ சொல்லுடாம்மா... உனக்கு என்ன செய்யுது?" என்று அக்கறையோடு கேட்க...



"எனக்கென்ன நான் நல்லா தான் இருக்கேன்ப்பா..." அவள் சொல்லும் போதே வருண் மஹராஜ் குறுக்கிட்டு,



"அதான் நான் சொன்னேன்ல..." என்று சொல்ல... தங்கை அண்ணனை பாசமாய் முறைத்தாள்.



"பாருங்கப்பா அவனை..." மகள் மீண்டும் சிணுங்க... வேணுகோபாலன் பார்வையால் மகனை அடக்கியவர் மகள் புறம் திரும்பி,



"நீ சொல்லு வசும்மா..." என்க...



"இன்னைக்குக் காலேஜ்க்கு மதியழகன் மகன் வெற்றி வர்றான்ப்பா... அதான் நான் லேட்டா போகலாம்ன்னு இருக்கேன்."



"அடடே, நம்ம வெற்றி வர்றானா? இப்போ தான்ம்மா நீ முதல் ஆளா அங்கே போகணும்."



"அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு அவனை வரவேற்க நான் போகணுமா...? அட போங்கப்பா..." அவள் உதட்டை சுளித்தாள்.



"ஏன்டி அவனுக்கு என்னடி? ஆம்பள புள்ளய இப்படித்தான் மரியதை இல்லாம பேசுவியா?" தையல்நாயகி மகளைக் கண்டு சத்தம் போட்டார்.



"ஆம்பள புள்ளன்னா ரெண்டு கொம்பா முளைச்சு இருக்கு?" அவள் அலட்சியத்துடன் சொல்ல...



"வசும்மா, இப்படி எல்லாம் பேச கூடாது." வேணுகோபாலன் மகளை அதட்டினார்.



என்றும் இல்லாது இன்று தந்தை அதட்டவும் அவளுக்கு அழுகை வரும் போலிருந்தது.



"யாரோ ஒருத்தனுக்காக என்னைச் சத்தம் போடுவீங்களா?" அவள் கண்களைக் கசக்க...



"அவன் யாரோ ஒருத்தன் இல்லை... அவனை உனக்குக் கல்யாணம் பேசி முடிக்கலாம்ன்னு நினைக்கிறேன்."



"என்னது?" அவள் அதிர்ந்து தான் போனாள்.



"என்ன வசு, யாரையாவது காதலிக்கிறியா?" வருண் மஹராஜ் கோபத்துடன் மீசையை முறுக்கியபடி உறுமினான்.



"அட போண்ணா... உன்னைப் பார்த்த பிறகு எவன் என் பின்னாடி வர முடியும்?" அவள் ஆதங்கத்துடன் சொல்ல...



"அதானே பார்த்தேன்..." அவன் பெருமையுடன் மீசையை நீவி கொண்டான்.



"பின்னே என்ன வசும்மா?" தந்தை கவலையுடன் கேட்க...



"அவன் மைதா மாவு மாதிரி இருக்கான்ப்பா... அண்ணனை மாதிரி முறுக்கு மீசை இல்லை. ஆம்பளன்னா வீரமா, கெத்தா இருக்க வேண்டாமா?" அவள் பிடித்தமின்மையைச் சொல்ல...



தங்கை தன்னை வீரமான ஆண்மகன் என்று சொன்னதில் வருண் மஹாராஜ்க்கு ஒரே பெருமை...



"வசு சொல்றதும் சரி தானேப்பா..." அவன் தங்கைக்குப் பரிந்து பேச...



"மீசை தானே வளர்க்கணும். வளர்த்துக்கச் சொன்னால் போச்சு... இதுக்காக எல்லாம் வேண்டாம்ன்னு சொல்வாங்களா?" வேணுகோபாலன் சொல்லவும்,



"சரிப்பா, இப்போ நான் என்ன பண்ணணும்?" என்று மகள் கேட்டாள்.



"நீ மனசு சுணங்காம சந்தோசமா போய் அவனை வரவேற்று விழாவை சிறப்பா நடத்தி கொடு... மீதியை அப்பா பார்த்துக்கிறேன்."



அப்பா சொல்லுக்குக் கட்டுப்பட்டு வசுந்தரா தேவி உடனே கல்லூரிக்கு கிளம்பினாள். அவள் கல்லூரி வந்தடைந்ததும் வெற்றி வேந்தன் கல்லூரி முதல்வர் அறையில் இருப்பதை அறிந்து அவள் அங்கே சென்றாள். அவள் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த போது அவள் கண்டது சாமும், வெற்றி வேந்தனும் கை குலுக்கி கொண்டிருந்த காட்சியைத் தான்...



தனது கையை நொறுக்குவது போல் பிடித்திருந்த சாமை வெற்றி வேந்தன் உற்று நோக்கினான். கண்களுக்குப் பெரிய சட்டமிட்ட கண்ணாடி அணிந்து, தலைமுடியை எண்ணெய் வைத்து படிய வாரி, கழுத்தில் சிலுவை அணிந்து அப்பாவி போல் காணப்பட்டவனின் விழிகளில் தெரிந்த ரௌத்திரம் அந்நியமாய்த் தெரிந்து அவன் அந்நியனாய் ரௌத்திரனாய் பார்ப்பதற்கு இருந்தான்.



"ஹாய் வெற்றி..." வசுந்தரா தேவியின் குரலில் சாம் சட்டென்று தனது கையை விலக்கி கொண்டு அமைதியாகத் தள்ளி நின்றான்.



வெற்றி வேந்தன் விடுதலை உணர்வுடன் கையைப் பிடித்து உலுக்கி கொண்டே அவளைக் கண்டு புன்னகைத்தான்.



"சாரி வெற்றி, கொஞ்சம் லேட்டாகிருச்சு..." அவள் மன்னிப்பு கேட்க...



"மேம், உங்களுக்குப் பதிலா நான் சாரை வரவேற்று விட்டேன்." சாம் முந்தி கொண்டு பதில் சொன்னான்.



"குட் சாம்..." அவள் அவனை மெச்சினாள்.



"யார் இவன்? காமெடி பீஸ் மாதிரி... உனக்குச் சப்ஸ்ட்டியூட்ன்னு சொல்றான்." வெற்றி வேந்தன் எரிச்சலுடன் சாமை பார்த்தான்.



"அது அப்படித்தான்." என்றவள், "நாம ஃபங்கசனுக்குப் போகலாமா?" என்று கேட்க...



"ஆல்ரெடி ஒன் அவர் லேட்... இது தான் நீங்க ஒரு சீஃப் மினிஸ்டர் மகனை வரவேற்கும் லட்சணமா? நாங்க நினைச்சா உங்க காலேஜ் லைசென்சை பிடுங்கிட்டு விட்டுருவோம்." வெற்றி வேந்தன் சாமிடம் காட்ட வேண்டிய கோபத்தை அவளிடம் காட்டினான்.



"அதான் சாரி சொல்லிட்டேனே வெற்றி... வாங்க போகலாம்." அவள் தந்தைக்காகச் சற்றே தணிந்தே போனாள்.



"ம், சரி..." என்றவன் சாம் புறம் திரும்பி, "இந்தப் பொக்கேவை நீ கையில் பிடிச்சிட்டு என் கூடவே வா..." என்றவன் வசுந்தரா தேவியுடன் இணைந்து நடந்தான்.



சாம் ஒன்றும் பேசாது பூங்கொத்தை தூக்கியபடி இருவரின் பின்னே நடந்து சென்றான்.



வெற்றி வேந்தன் கொலை செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியின் மகளுடன் சேர்த்து மொத்தம் பத்து பேருக்கு படிப்பிற்கான பண உதவி செய்து எல்லோர் மனதிலும் நாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்து விட்டான். வசுந்தரா தேவி கூட அவனை நல்லவிதமாக எண்ணினாள். அரசியல் குடும்பத்தில் பிறந்துவிட்டு வெளுத்தது எல்லாம் பால் என்று அவள் நம்புகின்றாள், பாவம் அவள்!



அன்று விழா முழுவதும் சாமை பூங்கொத்துடன் நிற்க வைத்து விட்டான் வெற்றி வேந்தன். அவனது கையை முறித்ததற்கு அவன் பழிக்கு பழி வாங்கி விட்டான். வசுந்தரா தேவி இதை எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. அவள் என்றுமே வேலை செய்பவர்களின் நலனை பற்றி யோசித்தது இல்லை.



ஆனால் சாம் சிறிதும் கோபப்பட வில்லை, எரிச்சல் அடையவில்லை, வலியில் முகத்தைச் சுளிக்கவும் இல்லை. மாறாக அவன் அழுத்தமான, இறுக்கமான முகத்துடன் நின்றிருந்தான்.



கிளம்பி செல்லும் போது வெற்றி வேந்தன் சாமை அருகில் அழைத்து, "எனக்காக இவ்வளவு நேரம் பொக்கேவை சுமந்துட்டு இருந்திருக்க... அதனால் நான் இதை உனக்கே பரிசா கொடுக்கிறேன். நீயே வச்சுக்கோ..." என்று நக்கலாய் கூறிவிட்டு சென்றுவிட...



எல்லோரும் அகன்றதும் சாம் அந்தப் பூங்கொத்தை பார்த்து மர்மமாய்ப் புன்னகைத்துக் கொண்டான்.



**********************



"வாங்க, வாங்க..." என்று முகம் மலர சந்தோசத்துடன் வரவேற்றனர் நாகராஜன், தேவி தம்பதியினர்.



"வாங்க..." கார்த்திகாயினி இருகரங்களையும் குவித்து வரவேற்றாள்.



வேணுகோபாலன், தையல்நாயகி, வருண் மஹாராஜ் மூவரும் அவர்களது வரவேற்பை புன்சிரிப்புடன் ஏற்றபடி வந்தனர். வசுந்தரா தேவியை உடன் அழைத்து வரவில்லை. மகனது திருமணம் முடிவாகும் வரை மகளுக்குக் கூடத் தெரிய வேண்டாம் என்று அவர் நினைத்தார் போலும். அவள் சிறு குழந்தை போன்று யாரிடமாவது உளறிவிடக் கூடாது என்கிற பயமும் இதற்கு ஒரு காரணம்...



நட்சத்திர விடுதி ஒன்றில் இரு குடும்பத்து ஆட்கள் மட்டும் கார்த்திகாயினியின் பிறந்தநாள் விழாவினை கொண்டாடிட எண்ணி நாகராஜன் வேணுகோபாலன் குடும்பத்துக்கு மட்டும் அழைப்பு விடுத்து இருந்தார்.



கம்பீரமான தோற்றத்துடன் இருந்த வருண் மஹாராஜை நாகராஜனுக்கும், அவரது மனைவிக்கும் மிகவும் பிடித்துப் போய்விட்டது. கார்த்திகாயினி எப்போதும் போல் அவனை அளவிடுவது போல் பார்த்து வைத்தாள். அவன் ஒன்றும் பெரிதாக அவளை ஈர்க்கவில்லை.



கார்த்திகாயினி கேக் வெட்டி முடித்ததும் வேணுகோபாலன் மனைவியிடம் கண்ணைக் காட்டினார். உடனே தையல்நாயகி தன்னிடம் இருந்த நகைப்பெட்டியை எடுத்து மகனிடம் கொடுத்தார்.



"நீங்களே கொடுங்கம்மா..." அவன் அதை மறுத்து விட்டு அன்னையைக் கொடுக்கச் சொன்னான்.



வேணுகோபாலன் மகனை முறைத்து பார்த்தார். அதை அவன் கண்டு கொண்டால் தானே... தையல்நாயகி வேறுவழியின்றி நகைப்பெட்டியை திறந்து அதிலிருந்த மோதிரத்தை கார்த்திகாயினியிடம் கொடுத்தார்.



"தேங்க்ஸ் ஆன்ட்டி..." அவள் வலிய வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டாள்.



அப்போது வருண் மஹாராஜின் கார் ஓட்டுநர் பூங்கொத்தையும், பரிசு பொருளையும் கொண்டு வந்து அவனிடம் கொடுத்து விட்டுப் போனான். மகனது செயலை கண்டு தந்தையே சற்று அசந்து தான் போனார். நாகராஜன், தேவி இருவரது முகத்திலும் திருப்தி நிலவியது. கார்த்திகாயினி ஒற்றைப் புருவத்தைத் தூக்கியபடி அவனை ஆச்சிரியமாய்ப் பார்த்தாள்.



"ஹேப்பிப் பேர்த்டே..." என்றபடி வருண் மஹாராஜ் பூங்கொத்தை அவளிடம் நீட்ட...



"தேங்க்ஸ்..." என்றபடி அவள் அதைப் பெற்று கொண்டாள்.



"இதுவும் உனக்குத் தான்..." என்றவன் கையிலிருந்த பரிசு பொருளை அவளிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கிக் கொள்ள...



"பிரிச்சு பாரு..." அவன் சொன்னதும் அவள் பரிசினை பிரித்துப் பார்த்தாள்.



அதில் கண்ணைக் கவரும் வகையில் ஒளி வீசியபடி வைர நெக்லஸ் ஒன்று இருந்தது. அதைக் கண்டு இரு பெற்றோரும் திருப்தி அடைந்தனர். கார்த்திகாயினி வருண் மஹாராஜை யோசனையுடன் பார்த்தாள்.



"நானே போட்டு விட்டிருப்பேன். ஆனா இப்போ அது சரி வராது. கல்யாணத்துக்குப் பிறகு தான் உரிமையுடன் போட்டு விடணும்." என்று சொன்னவனைக் கண்டு மீண்டும் அவளது புருவம் உயர்ந்தது. ஆனால் ஒன்றும் பேசவில்லை.



பெரியவர்கள் நால்வருக்கும் வெகு திருப்தி... சின்னவர்களைத் தனித்துப் பேச விட்டு விட்டு அவர்கள் விலகி நின்றனர்.



கார்த்திகாயினி மௌனமாய் வருண் மஹாராஜே பேசட்டும் என்றெண்ணி அமைதி காத்தாள். அவள் எப்போதுமே அப்படித்தான்... எதிராளியை பேச விட்டு வேடிக்கை பார்ப்பாள். அப்போது தானே அவர்களது மனநிலை என்ன என்பது புரியும். அதன் பிறகே அவள் இறங்கி அடிப்பாள். அதைப் போன்றே இப்போதும் அவள் அமைதி காத்தாள்.



"உனக்கு இதில் சம்மதம் தானா?" என்று கேட்டு வருண் மஹாராஜ் பேச்சை ஆரம்பித்து வைத்தான்.



"என் சம்மதம் இல்லாது இதுவரை என்னை யாரும் அழைத்து வந்திருக்க முடியாது." அவள் சுற்றி வளைத்துப் பதில் சொல்ல...



'திமிரை பார்...' அவளது பேச்சு அவனுக்கு எரிச்சலை கொடுத்தது.



"இதுவரை நீ எப்படி இருந்தியோ... அது எனக்குத் தெரியாது. ஆனால் நம்ம கல்

கல்யாணத்துக்குப் பிறகு நீ ஹவுஸ் வொய்ப்பா வீட்டில் இருப்பது தான் நல்லது." அவன் தனது எண்ணத்தை அழுத்தமாய்ப் பதிவு செய்தான்.



"நான் பிசினஸ் பண்றேன். என்னால் அப்படி எல்லாம் வீட்டில் அடங்கி ஒடுங்கி இருக்க முடியாது." அவள் நிர்தாட்சண்யமாய் மறுத்தாள்.



"உங்கப்பா எதுக்கு உன்னை எங்க வீட்டில் கட்டி கொடுக்க நினைக்கிறார்? முதலமைச்சர் வீட்டு மருமகள், முதலமைச்சர் பொஞ்சாதின்னு நாளை பெயர் வரும்ன்னு தானே..." அவன் எள்ளலாய் சொன்னதைக் கேட்டு அவளது முகம் கறுத்துப் போனது.



"புகழ் வேணும்ன்னா சில விசயங்களை நீ விட்டு கொடுத்து தான் ஆகணும். தனிப்பட்ட முறையில் நீ இயங்குவதைத் தான் நான் வேண்டாம் என்கிறேன். மற்றபடி எனக்குப் பின்னாடி இருந்து நீ இயங்கலாம். அதாவது எனக்கு மூளையாக..."



'ஏன் உனக்கு மூளை இல்லையா?' நாக்கு வரை வந்த கேள்வியைச் சிரமப்பட்டு உள்ளே தள்ளியவள்,



"நான் ஏன் அடுத்தவங்களுக்கு மூளையா செயல்படணும்? நானே அரசியலுக்கு வந்தால் என்ன?" என்று அமர்த்தலான குரலில் கேட்க...



"பெண்களுக்கு அரசியல் சரிப்பட்டு வராது." என்றவனைக் கண்டு அவள் பதில் சொல்லாது அமைதியாகப் புன்னகைத்தாள்.



அவனது வார்த்தைகள் அவளது மனதில் அரசியலுக்கான விதையைத் தூவியது.
 

ஶ்ரீகலா

Administrator


பிறகு இருவரும் தங்களது பெற்றோரை தேடி வந்தனர். அப்போது இருவரின் தந்தையும் மகிழ்வோடு பேசி கொண்டு இருந்தனர். சின்னவர்களின் முகத்தைக் கண்டு பெரியவர்களுக்குத் திருப்தியாக இருந்தது. அப்போது திருமணத்தைப் பற்றிப் பேச்சு வந்தது.



"கல்யாணம் எப்போ வச்சுக்கலாம்?" நாகராஜன் கேட்டார்.



"எலெக்சன் முடியட்டும்..." வேணுகோபாலன் சொல்ல...



"எலெக்சனுக்கும், கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?" நாகராஜன் குழப்பத்துடன் கேட்டார்.



"நீங்க ஆளுங்கட்சி... நான் எதிர்கட்சி... இந்தக் கல்யாணம் நடந்தால் எனக்கு ஒண்ணும் பாதிப்பில்லை. ஆனா உங்களுக்குத் தான் உங்க கட்சியில் பாதிப்பு வரும். அதனால் எலெக்சன் முடிஞ்ச பிறகு கல்யாணத்தை வச்சுக்கலாம். அதுக்குப் பிறகு ஐஞ்சு வருசம் கழிச்சு தான் மறு எலெக்சன். அதுக்குள்ள மக்கள் நாம எதிர்கட்சிங்கிறதையே மறந்துருவாங்க. நம்மளை சம்பந்தியா ஏத்துக்குவாங்க... இப்போ கல்யாணம் பண்ணினால் பொதுமக்களும் குழம்பி போயிருவாங்க." வேணுகோபாலன் சொல்லவும் நாகராஜன் சரியென்று சம்மதித்தார்.



நாகராஜன் முட்டாளாக இருக்கலாம். ஆனால் அவரது மகள் முட்டாள் இல்லையே! அவள் அமைதியாக அனைத்தையும் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தாள்.



வீட்டிற்கு வந்ததும் தையல்நாயகி உறங்க சென்றுவிட... அப்பாவும், மகனும் தனித்து இருந்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் மர்மமாய்ப் பார்த்து கொண்டனர்... பின்பு இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.



"ஆனாலும் நீ லட்சக்கணக்கில் பணத்தைப் போட்டு வைரம் வாங்கிக் கொடுத்திருக்க வேண்டாம் மகனே..."



"இது சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கிறதுப்பா..." வருண் மஹாராஜ் அட்டகாசமாய்ச் சிரித்தான்.



"அதுவும் நல்லது தான்..." வேணுகோபாலனும் பதிலுக்குச் சிரித்தார்.



அரசியலில் அனைத்தும் சாத்தியம்! சாத்தியம் அனைத்தும் அரசியலாகும்!



நாகராஜன் வேணுகோபாலன் குடும்பத்தினரை மட்டும் பிறந்தநாள் விழாவிற்கு அழைத்து இருந்த விசயம் எப்படியோ மதியழகன் காதுகளுக்குக் கசிந்து விட்டது. எது செய்தாலும் தன்னிடம் கேட்டு செய்யும் நாகராஜன் இந்த விசயத்தை மறைத்தது அவருக்குப் பிடிக்கவில்லை. அவர் நாகராஜனை நேரே அழைத்துக் கேட்டே விட்டார்.



"என்ன நாகா, பெரிய பெரிய விசயங்களையும் தன்னிச்சையா செய்ற போலிருக்கு?" மதியழகன் கேட்டதும் நாகராஜனுக்கு ஒன்று புரியவில்லை.



"என்ன விசயம் மதி? புரியும்படி சொல்லு..."



"சரி புரியும்படி சொல்றேன்... கார்த்திகா பேர்த்டே ஃபங்கசனுக்கு எதுக்கு வேணுவை கூப்பிட்டு இருந்த?"



"உன்னையும் தானேடா கூப்பிட்டு இருந்தேன்."



"அப்போ நானும், அவனும் ஒண்ணுன்னு சொல்றியா?"



"அப்படிச் சொல்லலைடா..."



"ஒரே ஃபங்கசனுக்குக் கூப்பிட்டு இருந்தால் பிரச்சினை இல்லை நாகா... ஆனா தனியா ஃபங்கசன் வச்சு அழைக்கிற அளவுக்கு அப்படி என்ன அவசியம் வேண்டி இருக்கு?"



நாகராஜனுக்கு அப்போது தான் வேணுகோபாலன் சொன்ன விசயத்தின் முக்கியத்துவம் புரிந்தது. பிறந்தநாள் விழாவிற்கு அழைத்ததற்கே இத்தனை கேள்வி... இதில் திருமணம் என்று சொன்னால் என்னாகுமோ! அவர் அரசியல் தலைவராக யோசிக்காது, பெண்ணின் தகப்பனாகப் பெண்ணின் நலனை மட்டுமே யோசித்தார்.



"காலேஜ் ஃபங்கசன்ல உன் மகனும், வேணு மகளும் சேர்ந்து எடுத்துக்கிட்ட ஃபோட்டோஸ் பத்திரிக்கையில் வந்துச்சு... நான் ஏதாச்சும் சந்தேகப்பட்டுக் கேட்டேனா? அது மாதிரி தான் இதுவும்... அவங்களை நான் கூப்பிடலை... பாப்பா தான் ஆசைப்பட்டுக் கூப்பிட்டு இருக்கிறாள்." நாகராஜன் சமாளிக்கவும் மதியழகன் எதுவும் கேட்கவில்லை.



ஆனால் மதியழகன் மனதில் இந்த விசயம் நெருஞ்சி முள்ளாக உறுத்தி கொண்டே இருந்தது.



*************************



மேகா என்றழைக்கப்படும் பிரியதர்சினி தனது அறையில் சாய்வு இருக்கையில் அமர்ந்து இருந்தாள். அழகு நிலைய பெண்களில் ஒருத்தி அவளது முகத்தில் பேசியல் செய்து கொண்டிருக்க... மற்றொரு பெண் அவளது பாதங்களில் பெடிக்யூர் செய்து கொண்டு இருந்தாள். பிரியதர்சினி சுகமாக விழிகளை மூடி ஓய்வாகப் படுத்திருந்தாள். ஓய்வில்லாது ஓடி கொண்டு இருப்பவள் இது போன்று அரிதாய் கிடைக்கும் ஓய்வினை ரசித்து அனுபவிப்பாள்.



"பேபிம்மா..." என்றழைத்தபடி அவளது தாய் லீலா வந்து நின்றார்.



"என்னம்மா?" அவள் கண்களில் இருந்த வெள்ளரிக்காய் துண்டை எடுத்தபடி அன்னையைப் பார்த்தாள்.



"ஜூஸ் குடிம்மா... ரொம்ப நேரமா ஒண்ணுமே சாப்பிடலையே." அவர் பழச்சாறு குவளையை மகளிடம் நீட்ட... அவள் புன்னகையுடன் அதை வாங்கிப் பருகினாள்.



"அப்புறம் பேபிம்மா... அந்தப் பாலிவுட் புரொடியூசர் காலையில் இருந்து உன்னைப் பார்க்க வந்துட்டே இருக்காரு... நீ பிடி கொடுக்க மாட்டேங்கிறியே..."



"இன்னும் ஒரு வாரம் போகட்டும்மா..." அவள் அலட்சியமாகப் பதில் சொன்னாள்.



"பேபிம்மா, இது ரொம்பத் தப்பு... அவர் மும்பையில் எவ்வளவு பெரிய புரோடியூசர் தெரியுமா?"



"ம், தெரியும், தெரியும்..."



"தெரிஞ்சுமா இப்படிப் பேசுற... அவர் அப்பாயிண்ட்மென்ட் கிடைக்க அவனவன் காத்துக்கிட்டு இருக்கான். நீ என்னடான்னா சின்னப் பிள்ளை மாதிரி நடந்துக்கிற?" அவர் ஒருவித பதட்டத்துடன் கேட்டார்.



"நீங்க போங்க..." பிரியதர்சினி அழகு நிலைய பெண்களை அனுப்பி வைத்துவிட்டு அன்னையைத் தீர்க்கமாய்ப் பார்த்தாள்.



"ஒரு தடவை நாம அவன் தயாரிக்கிற தமிழ் டிவி சீரியலுக்குச் சான்ஸ் கேட்டு போனப்போ அவன் என்ன சொன்னான்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா? என் கூடப் ப.....கிறியான்னு கேட்டான்." அவள் கோபத்துடன் சொல்ல...



"பேபிம்மா, இது கோபப்பட வேண்டிய நேரம் இல்லை. எல்லோரையும் அனுசரிச்சு உன் மார்க்கெட்டை உயர்த்துர நேரம்."



"இனி என் மார்க்கெட் டகடகன்னு உயர போகப் போகுது பாருங்க..." அவள் வலக்கையை மேலே மேலே உயர்த்தியபடி பேச... லீலா மகளைப் புரியாது பார்த்தபடி நின்றிருந்தார்.



"நீ பேசுறது, செய்றது ஒண்ணும் புரிய மாட்டேங்குது."



"இப்போ வந்திருக்கிறானே... அவனோட படத்தில் நான் நடிக்கப் போறேன்... அதுவும் பேமஸ் டைரக்ட்டர் டைரக்ட் பண்ண போகும் படத்தில்..."



"என்னடி ஜோசியம் மாதிரி என்ன என்னமோ சொல்ற?" அவர் மோவாயில் கை வைத்து அதிசயித்தார்.



"எஸ், ஜோசியமே தான்... நடக்குதா இல்லையான்னு பாருங்க..." அவள் கண்ணடித்துச் சிரித்தாள்.



"என்னமோ போ... எனக்கு ஒண்ணும் புரியலை."



"வாங்க, நாம கூலா நியூ ஃபிலிம் டான் பார்க்கலாம்..." என்றவள் அங்கிருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள்.



அப்போது அதில் வெற்றி வேந்தன் கல்லூரி பெண்கள் படிப்பிற்கு உதவி செய்தது குறித்துச் செய்தி வந்தது. அதைக் கண்டவள் ஆத்திரமாய், அருவருப்பாய் காறி உமிழ்ந்தாள். அவ்வளவு கோபம் அவன் மீது...



"பேபிம்மா, கோபப்படாதே... அவனை எதிர்த்துட்டு ஒண்ணும் பண்ண முடியாது." லீலா மகளைச் சமாதானம் செய்தார்.



"அதுக்குன்னு பொம்பளையைப் படுக்கையில் அடக்குறது தான் வீரமா? கோழைப்பயல்..." அவளுக்கு அவன் மீது அத்தனை ஆத்திரம்.



"என்ன பண்ண பேபிம்மா? அழகான பெண்ணாய் பிறந்து விட்டாயே!" என்று சோகமாய்ச் சொன்ன அன்னையை உற்று பார்த்தவள் அடுத்த நொடி வாய்விட்டு இடியெனச் சிரித்தாள். லீலா புரியாது மகளைப் பார்த்தார்.



"ம்மா, உங்களுக்குப் போயஸ்கார்டனில் வீடு வேணுமா? இல்லை ஒய்எம்ஆரில் வீடு வேணுமா?" என்று அவள் கேட்க...



"உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு...? அங்கே எல்லாம் வீடு வாங்கணும்ன்னா கோடி கணக்கில் பணம் வேணும்டி."



"அது பத்தி உங்களுக்கு என்ன கவலை? கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க..."



"போயஸ்கார்டனில் வீடு வேணும்..." லீலா கண்களில் கனவு மிதக்க ஆசையுடன் கூற...



"அப்படியே ஆகட்டும் தாயே..." மகள் கையைத் தூக்கி ஆசிர்வாதம் செய்வது போல் சொல்ல...



லீலாவுக்கு இன்னமும் திகைப்பு நீங்கவில்லை.



மகளுக்கு அலாவுதீன் அற்புத விளக்கு எதுவும் கிடைத்து இருக்கிறதா! என்று அவருக்குச் சந்தேகமாக இருந்தது. சில காலமாய் மகளின் நடத்தை வித்தியாசமாய் இருக்கின்றதே!



*******************************



ஹைதராபாத்தில் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் ஜூப்லி ஹில்ஸில் இருந்த ஆடம்பர பங்களா எப்போதும் இருக்கும் ஆர்ப்பாட்டம், உற்சாகம் ஏதுமின்றி நிசப்தமாக இருந்தது. மயான அமைதி என்பார்களே அது போன்று இருந்தது. ஆம், அங்கே மயானத்திற்குச் செல்ல வேண்டி உயிரற்ற உடல்கள் அங்கிருந்த பெரிய வரேவற்பறையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. எண்பது வயது கிழவனில் இருந்து ஒரு வயது குழந்தை வரை உயிரற்ற உடலாகப் படுத்திருந்தனர்.



அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காகத் தொழிலதிபர்கள், நடிகர்கள் மற்றும் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் என அனைவரும் வருகை தந்திருந்தனர்.



"இவ்வளவு பெரிய பணக்கார குடும்பம் எதுக்குத் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க?" இறுதி பயண வேலைக்கு வந்திருந்த ஒருவர் மற்றொருவரிடம் கேட்டார்.



"கடன் தொல்லையா இருக்குமோ?" அவருக்கும் குழப்பமாக இருந்தது.



"அரண்மனை மாதிரி வீடு இருக்கு... இதை வித்தாலே ஒரு தலைமுறைக்கு உட்கார்ந்து திங்கலாமே..."



"பெரிய இடத்துச் சமாச்சாரம் நமக்கு எங்கே புரியுது?" என்றவன் பாடையைக் கட்ட ஆரம்பித்தான்.



"ஆனாலும் மனசு ஆறலை... சின்னக் குழந்தை என்னடா பாவம் பண்ணுச்சு?" இன்னொருவன் பூமாலையை எடுத்துப் பாடையில் அலங்காரம் செய்ய ஆரம்பித்தான்.



"என்ன செய்ய? எல்லாம் விதி..." என்று சொன்னவன் தனது வேலையைப் பார்க்கலானான்.



அப்போது அங்கு ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு இளம்பெண் இறங்கினாள். அங்கு நின்றிருந்தவர்களின் விழிகள் அனைத்தும் அவளைத் தான் கவனித்துப் பார்த்தது. எல்லோரும் அவளைப் பரிதாபத்துடன் பார்த்தனர். அவர்களது பரிதாப பார்வையைப் புறம் தள்ளியவள் நேரே வீட்டினுள் சென்றாள். அவள் தைரியமான பெண் தான். இருந்தாலும் அங்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த அவளது உறவுகளின் உயிரற்ற உடல்களைக் கண்ட போது அவளது தைரியம் இருந்த இடம் தெரியாது காணாமல் போனது. அவளது விழிகள் துக்கத்தில் கலங்கி சிவந்தது. ஆனால் அவள் அணிந்திருந்த குளிர்கண்ணாடி அவளது கலக்கத்தினை யாருக்கும் தெரியாது மறைத்தது.



நேற்று முன்தினம் வரை அவளது உறவாய், உயிராய் இருந்தவர்களை இழந்து இன்று அவள் உயிரிருந்தும் அநாதையாய் நின்றிருந்தாள்!



"மகிழ்ச்சியைப் பகிர்ந்த உங்களுக்குத் துக்கத்தைப் பகிர முடியாது போனதோ!

சிரிப்பை பகிர்ந்த உங்களுக்கு அழுகையைப் பகிர முடியாது போனதோ!

அன்பையும், பாசத்தையும் ஊட்டி வளர்த்த நீங்கள் காற்றோடு கலக்க,

துக்கத்திற்கும், அழுகைக்கும் தத்துப்பிள்ளையாகி நிர்கதியாய் நிற்கின்றேனே!

என்னை நரகத்தில் உழல விட்டு விட்டு அனைவரும் சொர்க்கம் சென்றதேனோ!

மாண்ட உயிர்கள் மீண்டும் மீளுமோ! எனக்கு உயிர் கொடுக்குமோ!!!"



உயிர் கொல்லும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
இந்தக் கதையில் நான் சொல்ல வரும் கதாநாயகன் கதாபாத்திரம் கற்பனையே... அவனது தொழில் (தேர்தல் வியூக வடிவமைப்பாளர்) மட்டுமே வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதால் அரசியல் களத்தில் இருந்து எடுத்து இருக்கிறேன். அவனது குணம், அவனது செயல் மற்றும் அவனது ஆட்டுவிக்கும் குணம் எல்லாமே கற்பனையே... யாரையும் குறிப்பிடுவது இல்லை. இது முழுக்க முழுக்க எனது கற்பனையே!



உறவு : 4



வருண் மஹாராஜும், வேணுகோபாலனும் மடிகணினியை உயிர்ப்பித்து விட்டு அமர்ந்து இருந்தனர். அவர்கள் முக்கியமான அழைப்பிற்காகக் காத்திருந்தனர். வேணுகோபாலனுக்குச் சற்று டென்சனாக இருந்தது.



"வருண், இதெல்லாம் சரி வருமா?"



"சரி வரும்ப்பா... ஏன் இப்படி ஒரு கேள்வி கேட்கிறீங்க?"



"இத்தனை நாள் நம்ம மக்கள் கிட்ட நமக்கு இல்லாத செல்வாக்கை யாரோ ஒருத்தன் வந்து நமக்கு வாங்கிக் கொடுக்கப் போறானா? அதுவும் அவன் உட்கார்ந்த இடத்தில் இருந்தபடி... நேர்ல போய் ஓட்டு கேட்டு, ஒரு ஓட்டுக்கு இவ்வளவுன்னு பணம் கொடுத்தும்... இந்த மக்கள் நன்றி மறந்து நாம கொடுத்த பணத்தை வாங்கிட்டு நமக்கு ஓட்டு போடாம வேற ஒருத்தனுக்கு ஓட்டு போட்டு நம்மளை சுத்த விடுவானுங்க. அவன் எங்கேயோ இருந்துட்டு நம்ம தமிழ்நாட்டு மக்களை ஆட்டுவிக்க முடியுமா? இது எல்லாம் நம்பும்படியாவா இருக்கு?" அவர் அந்தக் காலத்து ஆள்... அவருக்கு இப்போது இருக்கும் 'டிஜிட்டல்' உலகை பற்றித் தெரிந்திருக்கவில்லை.



"ப்பா, எந்தக் காலத்தில் இருக்கீங்க? இப்போ உலகம் ரொம்பவும் சுருங்கி போயிருச்சு... எல்லாம் கம்ப்யூட்டர் மயமாகி போச்சு... அது மூலம் சோசியல் மீடியாவுக்குள் நுழைஞ்சு நமக்கான பிரச்சாரத்தை நாம வீட்டில் இருந்தபடி பண்ண முடியும். நம்மளோட அன்றாட வாழ்க்கையில் சோசியல் மீடியா முக்கியப் பங்கு வகிக்குது. காலையில் எழுந்திருச்சதும் எல்லோரும் பல்லு விளக்கிறாங்களோ இல்லையோ, சோசியல் மீடியா வராம இருக்கிறது இல்லை. அவ்வளவு பவர்புல் அது..." வருண் மஹாராஜ் தந்தைக்கு விளக்கி சொல்ல...



"என்னமோ நீ சொல்ற நான் கேட்கிறேன். ஆனா இதுக்கு ஐநூறு கோடி ரூபாய்ங்கிறது ரொம்பப் பெரிய அமௌவுண்ட் மகனே..." அவருக்குக் கையில் இருந்து பணம் போவது குறித்து வருத்தம்...



"நீங்க இந்தக் கம்பெனியை பத்தி சாதாரணமா நினைச்சிட்டீங்க... பல மாநிலங்களில் இவங்க பின்னால் இருந்து இயக்கிய அரசியல்வாதிங்க தான் ஜெயிச்சு இருக்காங்க. இவ்வளவு ஏன் நம்ம பிரதமரா ஜெயிச்சவரே இந்தக் கம்பெனியால் தான் ஜெயிச்சிருக்காரு. அந்த அளவுக்கு நம்மளை, நம்ம கொள்கையை மக்கள் கிட்ட கொண்டு போய்ச் சேர்த்துருவாங்க... நாம அவங்க சொன்னதைக் கேட்டால் மட்டும் போதும்... இப்போ ரீசன்ட்டா தெலுங்கானாவில் இவங்க வொர்க் பண்ணின கட்சி தான் ஜெயிச்சு இருக்கு. அவங்க ஆட்சிக்கு வர சாத்தியமே இல்லைன்னு எல்லோரும் அடிச்சு ஆருடம் சொன்னாங்க. அப்போ அவங்க இந்தக் கம்பெனியை தான் கேட்டு இருக்காங்க. கம்பெனி உள்ளே வந்ததும் அப்படியே காட்சி மாறியே போச்சு. இப்போ அவங்க ஆட்சி பிடிச்சு அமோகமா இருக்காங்க..."



"என்னமோ பண்ணு... ஆனா நாம ஜெயிச்சா மட்டும் போதும்..." வேணுகோபாலன் சொல்ல...



"அதே தான்ப்பா... ஐநூறு கோடி போனால் என்ன... ஆட்சிக்கு வந்தால் இதைவிட அதிகம் சம்பாதித்து விடலாம்." வருண் மஹாராஜ் நம்பிக்கையுடன் கூறினான்.



அப்போது மடிகணினியில் அழைப்பு வந்தது. வருண் மஹாராஜ் அழைப்பை உயிர்ப்பித்தான். தேர்தல் வியூகம் வடிவமைக்கும் நிறுவனத்தின் மேலாளர் ஜெகன் திரையில் தோன்றினான். அவனைக் கண்டதும் வருண் மஹாராஜ்க்கு சப்பென்றாகி விட்டது.



"குட் ஈவினிங் சார்..." ஜெகன் இருவரையும் கண்டு புன்னகைக்க...



"குட் ஈவினிங்..." என்று இருவரும் பதிலுக்குப் புன்னகைத்தனர்.



"உங்க சாரை எப்போ பார்க்கலாம்? நாங்க உங்க கிட்ட மட்டும் தான் பேசிக்கிட்டு இருக்கோம்." வருண் மஹாராஜ் தன்மையுடன் கேட்டான். இங்கே அவன் தனது சவடாலை காட்டினால் வேலைக்கு ஆகாது என்பதை அவன் அறிந்தே இருந்தான்.



"எங்க சீஃப் பேச வேண்டிய நேரத்தில் உங்க கிட்ட பேசுவார். அதுவரை நான் தான் உங்களைக் கான்டாக்ட் பண்ணுவேன்."



"ஓகே ஜெகன்..." வருண் மஹாராஜ் பவ்யத்துடன் சொன்னான்.



"நீங்க பேசிய பணத்தில் பாதித் தான் வந்திருக்கு. மீதி எப்போது வரும்?" ஜெகன் கறார் குரலில் கேட்க...



"எலெக்சன் முடிஞ்சதும்..." வேணுகோபாலன் மகனை முந்தி கொண்டு சொன்னார். பணத்தை வாங்கிக் கொண்டு காரியத்தை முடிக்காது விட்டு விடுவார்களோ என்று அவருக்குப் பயம்...



"அப்புறம் நாங்க எப்படி எங்க வேலையைப் பார்ப்பது...? உங்களுக்கான வேலைகளை நாங்க பார்ப்பதற்கு எங்களுக்குப் பணம் வேண்டும் இல்லையா?"



"இன்னும் பத்து நாட்களில் ரெடி பண்ணி கொடுத்துர்றோம்." வருண் மஹாராஜ் சொல்லவும்...



"ஓகே..." என்று ஜெகன் சம்மதித்தான்.



"அடுத்து என்ன திட்டம்?" வருண் மஹாராஜ் கேட்க...



"நீங்க கொடுத்த பணத்துக்குத் திட்டம் போட்டு கொடுத்தாச்சு... இனி மீதி பணம் வந்தால் மட்டுமே காரியம் நடக்கும்." ஜெகன் திட்டவட்டமாய்ச் சொன்னான்.



"ஓகே ஜெகன்... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பணத்துக்கு ஏற்பாடு பண்றேன்."



அப்போது ஜெகனுக்கு ஏதோ ஒரு அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசியவன் பின்பு இவர்களிடம் பேசினான்.



"கன்டெயினரில் இருந்த பணம் என்னவானது?" ஜெகன் கேட்கவும்... தங்களை யாரோ கண்காணிக்கின்றார்கள் என்பது வருண் மஹாராஜ்க்குப் புரிந்தது.



"பத்திரமா இருக்கு... அதை எடுத்து எண்ணி பட்டுவாடா பண்ண கொஞ்சம் டைம் வேணும்." எதையும் மறைக்க முடியாத நிலை, மறுக்க முடியாத நிலை...



"சீக்கிரம் பணம் வந்தால் நல்லது... பிறகு ஒரு விசயம்... நாங்க சொல்லாத விசயமும் நீங்க பண்றதா கேள்விப்பட்டேனே..." ஜெகன் சொல்லவும் தந்தையும், மகனும் ஒருவரை ஒருவர் புரியாது பார்த்து கொண்டனர்.



"அப்படி எதுவும் பண்ணலையே... நீங்க சொன்ன மாதிரி நாகராஜன் பொண்ணு கார்த்திகாவை வருணுக்கு பேசி முடிச்சிருக்கு. அதே போல் அந்தப் பொண்ணு கட்டுற நிறுவனத்துக்கு எதிரா வருண் போராட்டம் பண்ணிட்டு இருக்கான். எல்லாமே நீங்க சொல்லி கொடுத்த மாதிரி தான் போகுது." வேணுகோபாலன் யோசனையுடன் சொல்லி முடிக்க...



"உங்க பொண்ணுக்கு மதியழகன் மகனை பேசி முடிக்க நினைப்பதாய் கேள்விப்பட்டேனே..." அதைக் கேட்டு இருவருமே திகைத்தனர். இவர்களுக்கு எப்படி இது தெரியும் என்று...



"இனி நீங்க என்ன பண்ணினாலும் எங்களுக்குத் தெரிய வரும். எங்காளுங்க எங்கே இருக்காங்கன்னு உங்களுக்கே தெரியாது. அவங்க எல்லோருமே உங்களோட கலந்து தான் இருப்பாங்க."



"இதில் தப்பு ஒண்ணும் இல்லையே... என் மகளுக்குப் பெரிய இடத்தில் சம்பந்தம் பண்ணணும்ன்னு நினைக்கிறது தப்பா?"



"நீங்களே பெரிய இடம் தானே சார். அதை மறந்துட்டு பேசுறீங்களே..." ஜெகன் சிரித்தான். பின்பு அவனே தொடர்ந்தான்.



"நாகராஜன் பொண்ணை உங்க மகனுக்குத் திருமணம் முடிப்பதில் பல நன்மைகள் இருக்கு. முக்கியமா அவரோட ஆதரவாளர்கள் உங்க பக்கம் வர சான்ஸ் இருக்கு. ஆனா மதியழகன் மகனுக்கு உங்க பொண்ணைப் பேசினால் உங்க ஆதரவாளர்கள் அந்தப் பக்கம் போகச் சான்ஸ் இருக்கு." ஜெகன் சொல்லவும் வேணுகோபாலன் தலையில் கை வைத்தார்.



"இதற்காகத் தானே திருமணத்தைத் தள்ளி போட சொல்லியிருக்கேன்." அவர் சொல்லவும்,



"இப்போதைக்கு இப்படியே இருக்கட்டும்... எலெக்சன் ஒட்டி உங்க மகன் திருமணத்தை அறிவிங்க... அவங்க ஓட்டு நமக்குத் தான்..." ஜெகன் சொன்னதை இருவரும் கேட்டு கொண்டனர்.



"உங்க மகளுக்கு வெற்றி வேண்டாம். மீறி செய்தால் தோல்வி உங்களுக்குத் தான். நீங்க தோல்வி அடைவது உங்களுக்கு ஓகேவாக இருக்கலாம். ஆனால் அது எங்களது கம்பெனிக்கு அழகல்ல... நாங்க எடுத்த ஒரு வேலையும் வெற்றி அடையாது இருந்தது இல்லை. இதனால் எங்க கம்பெனி பெயருக்கு அவமரியாதை ஏற்படுவதை நான் விரும்பவில்லை." ஜெகன் திட்டவட்டமாய்க் கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டு சென்று விட்டான்.



"யாருடா இவனுங்க...? இந்தப் பக்கமும் போக விட மாட்டேங்கிறானுங்க... அந்தப் பக்கமும் போக விட மாட்டேங்கிறானுங்க..." அரசியலில் எது கிடைத்தாலும் ஆதாயம் தான் என்று இருக்கும் வேணுகோபாலனுக்கு இவர்களது லாஜிக் புரியவில்லை.



"நமக்கு எலெக்சன்ல ஜெயிக்கிறது தான் முக்கியம். அதுக்கு என்ன வேணா செய்யலாம்ப்பா..." வருண் மஹாராஜ் சொன்னான். அவனுமே ஆதாயம் இருப்பதால் தானே கார்த்திகாயினியை மணக்க சம்மதித்து இருக்கிறான். அவன் ஒரு தேர்ந்த அரசியல்வாதி... ஆதாயம் இல்லாது எதையும் செய்ய மாட்டான்.



************************



கல்லூரி முதல்வர் சாமை அழைத்து வர சொன்னார். அவனும் உடனே பவ்யமாய் அவர் முன்வந்து நின்றான்.



"சாம், இந்த முறை நீங்க தான் தேர்தல் கணிப்பு குழுவை வழிநடத்தி செல்லணும். உங்க ஸ்டூடண்ட்சை நீங்க இதுக்குப் பயன்படுத்திக்கலாம். பொதுமக்களை நேரடியா சந்திச்சு கருத்து கேட்கணும். எல்லாமே ரொம்ப நேர்மையா நடக்கணும். நம்ம காலேஜ் தேர்தல் கருத்து கணிப்புக்கு நல்ல மதிப்பு இருக்குது. நாம சொன்னா தொண்ணூற்றி ஒன்பது சதவீதம் சரியாக இருக்கும்ன்னு மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையை இந்த முறையும் நாம காப்பாத்தணும்." அவர் நீளமாய் விளக்கி சொல்ல...



"சார், நானே நேரில் போய்க் களத்தில் இறங்கி ஆய்வு செஞ்சு ரிப்போர்ட் கொடுக்கிறேன் சார். படிக்கிற ஸ்டூடண்ட்ஸை நாம இதில் இழுக்க வேண்டாம். எனக்குக் கொஞ்சம் டைம் மட்டும் எக்ஸ்ட்ராவா கொடுங்க சார்." சாம் தன்மையாகச் சொல்லவும் கல்லூரி முதல்வர் சிறிது யோசித்து விட்டு சரியென்று விட்டார்.



சாம் கருத்து கணிப்பிற்காக வெளியில் செல்ல... அவன் இல்லாததால் வசுந்தரா தேவிக்குத் தான் கை உடைந்தது போல் இருந்தது. அவள் கல்லூரி முதல்வரிடம் சண்டைக்கு வந்தாள்.



"யாரை கேட்டுச் சாமை அனுப்பினீங்க? அவனுக்கு நீங்க சம்பளம் கொடுக்கிறீங்களா? இல்லை நானா?" என்று அவள் பேயாட்டம் ஆடிவிட்டாள்.



"மேடம், நான் வேணா பசங்களுக்குக் கிளாஸ் எடுக்கவா?" கல்லூரி முதல்வர் பயந்து தான் போனார்.



"பிசிக்ஸ் படிச்ச நீங்க எப்படிப் பொலிட்டிக்கல் சயின்ஸ் எடுப்பீங்க?" அதற்கும் அவள் காய்ந்தாள்.



'நல்லவேளை பிசிக்ஸ் வேற, பொலிட்டிக்கல் சயின்ஸ் வேறன்னாவது தெரிஞ்சிருக்கே.' அவர் மனதிற்குள் முனங்கி கொண்டார். வாய்விட்டு வெளியில் சொல்லவா முடியும்!



வசுந்தரா தேவி நேரே சாமிற்கு அழைத்துச் சாமியாட... அவனோ நிதானமாக, "போர்சன்ஸ் எல்லாம் கவர் பண்ணிட்டேன் மேம். நீங்க அவங்களைப் படிக்கச் சொன்னால் மட்டும் போதும்." என்று சொல்ல... அவள் அரை மனதாக ஒப்பு கொண்டாள்.



"உங்கப்பாவோட தேர்தல் நிலவரம் பத்தி நீங்க தெரிஞ்சிக்க வேண்டாங்களா மேம்? அதுக்காகவும் தான் நான் வந்தது." அவன் இப்படிச் சொல்லவும் அவள் அப்படியே குளிர்ந்து போனாள்.



"நீ நிதானமா வேலையை முடிச்சிட்டு வா... இங்கே எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்." டேடிஸ் லிட்டில் பிரின்சஸ் அவனுக்குத் தாராளமாக அனுமதி கொடுத்தாள்.
 

ஶ்ரீகலா

Administrator
சாம் அடுத்து வந்த பத்துத் தினங்கள் அலைந்து திரிந்து கருத்து கணிப்புகளைச் சேகரித்துக் கொண்டு வந்தான். எல்லாவற்றையும் ஒப்பிட்டு பார்க்கும் போது மதியழகனுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாய் இருந்தது. ஏனெனில் அவர் அதிக ஊழல் இல்லாத ஆட்சியை மக்களுக்குக் கொடுத்து இருந்தார். அதைக் கண்டு அவனுக்குத் திகைப்பு தான். அவன் உடனே ஜெகனை தொடர்பு கொண்டு,



"சீஃப் கிட்ட பேசணும்." என்று சொல்ல...



"அவர் கொஞ்சம் பிசி சக்..." என்று அவனது முழுப்பெயரை சொல்ல போனவன் பின்பு சுதாரித்துக் கொண்டு, "சாம்..." என்று புன்னகையுடன் முடித்தான்.



"என்ன விசயம் சாம்?"



"நாம எதிர்பார்த்த மாதிரி வேணுகோபாலனுக்கு மக்கள் ஆதரவு இல்லை. மதியழகனுக்குத் தான் மக்கள் ஆதரவு அதிகம் இருக்கு. இப்போ என்ன பண்ணன்னு தெரியலை?"



"உனக்கு நான் சொல்லி தெரியணுமா சாம்? உனக்கே இதுக்கான பதில் தெரிஞ்சு இருக்கும்."



"எதுக்கும் சீஃப் கிட்ட..." சாம் தயக்கத்துடன் இழுத்தான்.



"முன்பு இது மாதிரி ரிசல்ட் வந்தப்போ என்ன செஞ்சோமோ அதையே இப்பவும் செய்." ஜெகன் கூலாகச் சொன்னவன் அழைப்பை துண்டித்து விட்டான்.



எப்போதும் செய்வது போல் சாம் கருத்துக் கணிப்பு முடிவினை மாற்றி அமைத்தான். அவர்களது எண்ணம் நிறைவேற அதைச் செயல்படுத்தினால் தான் முடியும். அவர்களது நோக்கம் முடியாதது எதுவும் இல்லை என்பதே! அதன்படி சாம் தேர்தல் வரும் முன்பே தேர்தல் கருத்துக் கணிப்பினை மாற்றி வெளியிட்டான்.



அதைக் கண்டு வேணுகோபாலன், வருண் மஹாராஜ்க்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. மதியழகன் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தான் எந்த இடத்தில் சறுக்கினோம்? என்று அவர் யோசிக்க ஆரம்பித்தார்.



தேர்தல் நடக்கும் முன்பே வேணுகோபாலன் தான் வெற்றி பெற போகின்றார் என்று சொல்லி மக்கள் மனதில் அவரது பிம்பத்தினை ஆழமாய்ப் பதிய வைத்து விட்டனர். இதுவும் ஒரு உளவியல் ரீதியான தேர்தல் யுக்தி தான்.



***********************



முடிந்தது எல்லாம் முடிந்தது. உறவுகள் ஆடி, பாடி, கூடி களித்த வீடு இன்று நிசப்தமாக இருந்தது. அன்பு, அன்பு, அன்பு என்று அன்பு மட்டுமே நிறைந்த வீடு இன்று துன்பத்தோடு காட்சி அளித்தது. வரவேற்பறையில் பெரிய பூ மாலைகள் அணிவிக்கப்பட்டு இருந்த உறவுகளின் சட்டமிட்ட புகைப்படங்களைப் பத்மவிலாசினி மென்மையாய் வருடி கொடுத்தாள். அவள் முதலில் வருடி கொடுத்தது அவளது அண்ணனின் மகன் கிருஷ்ணா ஒரு வயது குழந்தையின் புகைப்படத்தை... துறுதுறுவென்று எப்போதும் புன்னகையுடனேயே இருப்பான். அவன் அழுது பார்ப்பது அரிது. அவன் பிறந்த போது பகவான் கிருஷ்ணனே வந்து பிறந்திருப்பதாய் எல்லோரும் குதூகலித்தனர். அதனால் தான் அவனுக்குக் கிருஷ்ணன் என்று பெயரிட்டனர்.



"த்தே..." அவன் அழைக்கும் குரல் அவளது காதுகளில் ஒலித்தது.



"க்ருஷ் எங்கேடா இருக்க?" அவள் விழிகள் கலங்க சுற்றும் முற்றும் தேடினாள்.



"அம்முலு..." அவளது தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி என்று அனைவரும் அவளை அழைக்கும் குரல்கள் மாறி மாறி கேட்க...



அவள் தனது காதுகளை மூடியபடி கண்களில் கண்ணீர் வழிய உடல் நடுங்க அமர்ந்து இருந்தாள். இனிமேல் அவள் அவர்களைக் காண முடியாது, அவர்களது குரல்களைக் கேட்க முடியாது. அவர்களது ஞாபகங்கள் மட்டுமே அவளது மனதில் எச்சங்களாய் மிச்சமாய்...



"ஏன் என்னை மட்டும் தனியா விட்டுட்டு போனீங்க? என்னையும் உங்க கூடவே கூட்டிட்டு போயிருக்கலாமே? ஏன் இப்படிப் பண்ணினீங்க? நீங்க எல்லோரும் இல்லாம நான் எப்படி வாழ போறேன்?" என்று அழுது அரற்றியவளின் தோளின் மீது ஒரு கரம் ஆதரவாய் விழுந்தது.



அவள் யாரென்று திரும்பி பார்க்க... அவர்களது வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்யும் தாத்தா நின்று இருந்தார்.



"தாத்தா, என்ன தான் நடந்துச்சு? ரெண்டு நாள் முன்ன கூட என் கிட்ட நல்லா தானே பேசுனாங்க... திடீர்ன்னு என்னாச்சு?" அவள் அழுகையுடன் கேட்க...



"அதை எப்படிம்மா என் வாயால் சொல்வேன்?" அந்தக் கிழவன் துண்டால் வாயை பொத்தி கொண்டு அழுதார்.



"ப்ளீஸ் சொல்லுங்க தாத்தா..." அவள் மன்றாடி கேட்க...



"நீ முதல்ல இங்கிருந்து கிளம்பி போயிரும்மா... இல்லை உன்னையும் கொன்னுருவாங்க..."



"வாட்? தாத்தா என்ன சொல்றீங்க?" அவள் திகைப்புடன் கேட்டாள்.



"ஆமாம்மா, நம்ம வீட்டாளுங்க தற்கொலை செஞ்சுக்கலை... கொலை செய்யப்பட்டு இருக்காங்க..."



அவர் சொன்னது கேட்டு அவள் அதிர்ந்து போனாள்.



"நம்ம வீட்டில் எல்லோரும் படுக்கப் போகும் முன் பால் குடிப்பது வழக்கம். அதைத் தெரிஞ்சிட்டுப் பாலில் விசத்தைக் கலக்கி கொடுத்து கொன்னுட்டு தற்கொலை மாதிரி மூடி மறைச்சிட்டாங்க... ஆனா இதைச் செஞ்சது நம்ம வேலு... அதைத் தான் என்னால் தாங்கிக்க முடியலைம்மா... எத்தனை வருசமா இங்கே சமையல் வேலை பார்த்துட்டு இருந்தான். கடைசியில் பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படிப் பண்ணிட்டானே."



அவளுக்கு எல்லாமே அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. தங்களது வீட்டில் ஒருவனாக வளைய வந்த வேலுவா இப்படி? என்று அவளால் நம்ப முடியவில்லை.



"இப்போ வேலு எங்கே?"



"இவ்வளவு செஞ்சவன் இவ்வளவு நேரம் இங்கேயா இருக்கப் போறான்? எப்பவோ ஓடி போயிட்டான்." என்றவரை கண்ணீரோடு பார்த்தவள்,



"உங்களுக்கு எப்படித் தெரியும் தாத்தா?" என்று கேட்க...



"இறந்த வீட்டில் அவங்க பேசிக்கிட்டதைக் கேட்டேன். இந்தக் கிழவனால் என்ன பண்ண முடியும்? நீ வர்ற வரைக்கும் உசிரை தாக்கு பிடிச்சுக்கணுமேன்னு எதையும் கண்டுக்காம வளைய வந்துட்டு இருந்தேன்."



"முதல்ல போலீசில் கம்ப்ளையிண்ட் கொடுக்கணும் தாத்தா..." என்று அவள் வீராவேசத்துடன் எழுந்தாள்.



"அம்மாடி, போலீசுக்கு போயும் பிரயோஜனம் இல்லைம்மா... ஏன்னா போலீசே அவங்க கைக்குள்..."



"என்ன சொல்றீங்க தாத்தா? யார் அவங்க?" அவள் திகைப்பு மாறாது கேட்டாள்.



"இப்போ எலெக்சனில் ஜெயிச்சுப் பதவியில் இருப்பவங்க... அவங்க பதவிக்கு வந்ததும் செஞ்ச முதல் வேலை நல்லா வசதியானவங்களா பார்த்து நெருக்கடி கொடுத்து அவங்க சொத்துகளை, தொழில்களை எழுதி வாங்குறது தான். அதில் நாமளும் ஒண்ணு... நம்ம தொழில், சொத்துகள் எல்லாத்தையும் எழுதி கேட்டாங்க... அப்பா முடியாதுன்னு மறுத்தார். நம்ம தம்பி போலீசில் கம்ப்ளையிண்ட் கொடுத்தாரு. அதுக்குப் பிறகு தான் அவங்க நம்மளுக்கு டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சாங்க... தண்ணி, மின்சாரம், பால் இப்படி எதுவும் கொடுக்கலை. கடைசியில் மிரட்டி பணிய வைக்க முடியாததால் விசத்தைக் கொடுத்து கொன்னுட்டாங்க..." என்று பெரியவர் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.



அவள் திக்பிரம்மை பிடித்தார் போன்று நின்றிருந்தாள். அவர்கள் மிகப் பெரிய செல்வந்தர்கள். பரம்பரை பரம்பரையாக வைர வியாபாரம் செய்து வருபவர்கள். செல்வம் கொட்டி கிடந்தது. அவர்களாலேயே எதிர்த்து நிற்க முடியவில்லை என்றால்... சாமானியர்களால் எப்படி எதிர்த்து நிற்க முடியும்?



"அம்மாடி, நீ முதல்ல இங்கிருந்து கிளம்பி போயிரும்மா... படுபாவிங்க இங்கே வந்தால் உன்னையும் ஏதாவது பண்ணிருவாங்க. இந்நேரம் நீ இங்கே வந்தது அவங்களுக்குத் தெரிஞ்சு இருக்கலாம்." அவர் அவளை அவசரப்படுத்தினார்.



பத்மவிலாசினிக்கு என்ன செய்வது? என்று புரியவில்லை. அவளுக்கு நிறைய யோசிக்க வேண்டும். அதற்கு அவள் உயிரோடு இருக்க வேண்டும். அதனால் அவள் பெரியவர் சொன்னதைக் கேட்டாள். எப்படி வந்தாளோ அப்படியே திருப்பிச் சென்றாள். கூடவே அவளது குடும்பப் புகைப்படம் ஒன்றை எடுத்து சென்றாள்.



"தாத்தா, நீங்க என்ன பண்ண போறீங்க?"



"கிராமத்துக்குப் போய்ப் பொழச்சிக்குவேன்." என்றவர் கையில் தான் கொண்டு வந்திருந்த பணத்தை அள்ளி கொடுத்துவிட்டு அவள் தான் வாழ்ந்த வீட்டை விட்டு அநாதையாய் வெளியேறினாள்.



அடுத்து யார் வீட்டிற்குச் செல்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவள் யார் வீட்டிற்குச் சென்றாலும் கண்டுபிடித்து விடுவார்கள். அதனால் தீவிரமாக யோசித்தவள் அவர்கள் உதவி செய்து வரும் ஆதரவற்றோர் இல்லத்திற்குச் செல்ல நினைத்து அங்கே சென்றாள். இல்லத்து நிர்வாகி வேங்கடநாதன் ஏற்கெனவே விசயம் கேள்விப்பட்டு இருந்தார். அதனால் அவர் அவளை அன்போடு அரவணைத்துக் கொண்டார்.



"எத்தனை நாள் வேண்டுமானாலும் இங்கே இரு பத்மா... இங்கு யாரும் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டாங்க." அவர் சொல்லவும் அவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.



"உன் குடும்பத்துக்கு நிகழ்ந்த கொடூரம் யாருக்கும் நடக்கக் கூடாது." என்று வருத்தபட்ட வேங்கடநாதன், "இந்தக் கட்சி ஜெயிச்சு இருக்காது. போன முறை ஆட்சியில் அத்தனை அராஜகம் பண்ணினாங்க. அப்படித்தான் நாங்க எல்லோரும் நினைச்சிட்டு இருந்தோம். ஆனா ஒருத்தன் வந்து ஒட்டுமொத்த தலையெழுத்தையும் மாத்தி எழுதிட்டான்."



"அப்படி எல்லாம் செய்ய முடியுமா?" அவள் திகைப்புடன் கேட்டாள்.



"அவன் ஒரு மான்ஸ்டர்... அவனால் முடியும்... அவன் நினைச்சதை அடையாமல் இருந்தது இல்லை. நிழல் மறைவில் எல்லோரையும் ஆட்டுவிக்கும் அவன் ஒரு கிங் மேக்கர்... அரசியல் சாணக்கியன்... அவனது தேர்தல் வியூகம் அவ்வளவு துல்லியமாக இருக்கும். இந்திய அரசியலில் அவன் வைத்தது தான் சட்டம். அவன் பின்னிருந்து இயக்கும் கட்சி தான் தேர்தலில் வெற்றி பெறும்... அதுக்காக அவன் எதையும் செய்வான்."



"யாரவன்?" அவள் திகைப்பு மாறாது கேட்டாள்.



வேங்கடநாதன் அவனைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.



அதேநேரம் டெல்லியில் முக்கிய இடத்தில் இருந்த பங்களா சத்தம் இல்லாது மௌனமாய் இயங்கி கொண்டு இருந்தது. வேலைக்காரர்கள் எந்தவித பேச்சுமின்றி அமைதியாய் வேலை செய்து கொண்டு இருந்தனர். அங்கிருந்த மீன் தொட்டியில் மீன்களும் அமைதியாக நீந்தி கொண்டு இருந்தது. அதன் அருகே இருந்த பறவை கூட்டில் இருந்த பறவைகள் கூடச் சத்தம் இல்லாது தங்களது வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தது. மொத்ததில் அங்கு அமைதி மட்டுமே ஆட்சி செய்தது.



அந்த வீட்டின் மாடியில் இருந்த ஒரு அறையில் அவன் அமர்ந்து இருந்தான். நெடுநெடுவென்ற உயரத்தில், மாநிறத்தில், முகத்தில் வடுக்களுடன், முகம் கொள்ளா தாடியுடன், ஆண்களுக்கே உரிய கம்பீரத்துடன் அமர்ந்து இருந்தவனின் உதடுகளில் சிகரெட் புகைந்து கொண்டு இருந்தது. அவன் வாயில் இருந்த சிகரெட்டை எடுத்து விட்டு அலட்சியமாகப் புகையை ஊதினான். அவனது விழிகள் எதிரே இருந்த 'தமிழ்நாடு பப்பட் ஷோ' என்று எழுதப்பட்டு இருந்த பொம்மலாட்ட மேடையினைப் பார்த்துக் கொண்டு இருந்தது.



அந்த மேடையில் வேணுகோபாலன், வருண் மஹாராஜ், வசுந்தரா தேவி, மதியழகன், வெற்றி வேந்தன், நாகராஜன், கார்த்திகாயினி, பிரியதர்சினி என்று அனைவரும் பொம்மைகளாக உருமாறி இருந்தனர். அவன் எழுந்து அந்தப் பொம்மைகளின் அருகே சென்றான். பொம்மைகளின் நுனியில் கட்டியிருந்த நூலினை எடுத்து அவன் தனது விருப்பத்திற்கு ஏற்றார் போன்று ஆட்டுவிக்க ஆரம்பித்தான். அடுத்தவர்களைத் தனது விருப்பத்திற்கேற்ப ஆட்டுவிப்பது அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று... அப்போது அவன் தன்னைக் கடவுளாக நினைத்து கொள்வான். அது அவனுக்கு அத்தனை போதையைத் தரும். எந்தப் போதை மருந்துகளும் கொடுக்காத போதை அது. அதை அனுபவித்தால் மட்டுமே புரியும்.



தமிழ்நாட்டின் தலையெழுத்தை சின்னப் பொம்மலாட்டத்தில் மூலம் நிர்ணயித்தவன் பின்பு வாய்விட்டுச் சிரித்தான். அவனது சிரிப்புச் சத்தம் அந்த அறையின் சுவர்களில் பயங்கரமாய் எதிரொலித்தது.



"ஐயம் கிங் மேக்கர்... மை நேம் இஸ் ஆல்சோ சக்ரவர்த்தி, சிபி சக்ரவர்த்தி..." என்று மமதையுடன் கூறியிவனின் முகத்தில் அப்படியொரு குரூர திருப்தி நிலவியது.



"உருவாக்குபவன் கடவுள் என்றால்,

ஆட்டுவிப்பவன் கடவுள் என்றால்,

ஆம், நானும் கடவுள் தான், அந்த

கடவுளுக்கும் மேலானவன் தான்!!!"




உயிர் கொல்லும்...!!!
 
Status
Not open for further replies.
Top