All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சத்யா வாணியின் “என் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன்” - கதை திரி

Status
Not open for further replies.

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மித்ரமாஸ் :smiley5:




நீங்கள் அனைவரும் என் மீது கடும் கோபத்தில் இருப்பீங்க இரண்டு கதையை அம்போன்னு விட்டுட்டு இரண்டு மாதமாக நான் காணாமல் போனதுக்கு... ஏற்கனவே ஆரம்பித்த இரண்டு கதை தொடராமல் இப்போது இன்னொரு புது கதையோட நான் வரதுக்கு நீங்க என்னை பாசத்துல திட்டுறது எனக்கு புரியுது... இது குறுநாவல் தான் கண்டிப்பா சீக்கிரம் நிறைவடைந்து விடும் என்ற நம்பிக்கையில் இந்த கதையை எழுபத்தி இரண்டாவது சுதந்திர நாளில் முதல் அத்தியாயத்தை பதிவிடுகிறேன்...


மற்ற இரண்டு கதைகளையும் வரும் நாட்களில் பதிவிடுகிறேன்...



நீங்கள் படித்து விட்டு உங்களின் கருத்துகளை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நட்போடு கேட்டுக்கொள்கிறேன்...



முக்கியமான வேண்டுகோள் : ஸ்பெஷல் சிம்பல் போடுறவங்க அதற்கான காரணத்தை சொன்னால் என்னோட தவறை திருத்திக்கொள்ள உதவியாக இருக்கும்...:smiley36::smiley36:



கதையின் தலைப்பு : என் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன்..!!


நாயகிகள் : மஹாபாரதி, தேவசேனா


பெற்றோர்கள் : தீபேஷ் , சௌந்தர்யா . சுரேந்திரன் , சாக்ஷி
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வலி : 1



சென்னை உயர் நீதி மன்றம் எத்தனையோ வித்யாசமான வழக்குகளை சந்தித்து அதற்க்கு தீர்ப்பு அளித்து இருந்தாலும், இன்று அது சந்தித்த இரண்டு மாறுபட்ட வழக்குகளுக்கு அளித்த மரணதண்டனை எனும் தீர்ப்பு அங்கு இருந்த அனைவரையும் ஒரு கனத்த மனத்தோடு நடமாட செய்தது...

அனைவரையும் பாதித்த இரண்டு வழக்குகளில் ஒன்று, தனக்கு அநீதி இழைத்தவர்களுக்கு மரண தண்டனையை அளித்திவிட்டு, இப்போது தனக்கான தண்டனையை ஏற்று சற்றும் கலங்காமல் நெஞ்சை நிமிர்த்தி சென்ற 'மஹாபாரதியின்' வழக்கு...

சாட்டை அடி என பலரின் மனதில் விழுந்த வழக்கு.

மற்றொன்று ஆண்டுகள் பல கடந்து... மண்ணில் புதைந்தவள் மீண்டும் பிறந்து வந்து.. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு அதற்கான நீதியாக, அன்று தன் உயிரை கொன்று உடலை மண்ணில் புதைத்த அரக்கன், இன்று தனக்கு உயிர் கொடுத்த அப்பாவாக இருக்கும் சுரேந்திரனுக்கு.... நெஞ்சம் கலங்க, ஆழ் மனது அமைதி கொள்ள.... மகளாய் கலங்கி, மரித்தவளாய் (மரித்தவளுக்காக) கலக்கம் நீங்கி... அன்றைய அநீதிக்கு இன்றைய நீதியாக மரணதண்டனையை பெற்று தந்த 'தேவசேனாவின்' அசாதரமான வழக்கு...

சாத்தியமில்லாத ஒன்றை சாதித்து காட்டிய வழக்கு...


இரண்டு வழக்குகளின் தீர்ப்பு என்னவென்று தெரிந்துகொண்ட நாம், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பற்றி அறிந்துகொள்ளுவோம்....


''மங்கையராய் பிறப்பதற்க்கே மாதவம் செய்திடவேண்டும் என்று சொன்னார் 'கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை.' அவர் சொன்ன தவத்தின் பயன் வரமா இல்லை சாபமா...???


'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்று முண்டாசு கவி பாரதி சொன்னான். இங்கு மடமைக்கு பதிலாக மங்கையரை அல்லவா வெவ்வேறு காரணங்களுக்காக பெண்ணவள் மனதையும் உடலையும் தீய சொற்களாலும், செயலாலும், தீயிலிட்டு கொளுத்துகின்றனர்...!!!

பெண்னே ஆதி சக்தி, பிரபஞ்சத்தின் இயக்க சக்தி என்று சொல்லுவது எல்லாம் பெருமளவில் சொல்லாக மட்டுமே இருக்கின்றது...

செயல்வடிவில் பெண்ணை அடங்கி இருக்கும் சக்தியாக தானே நம்மில் பெரும்பான்மை கருதுகின்றது, அப்படியே சமூகத்தில் நடந்தும் வருகின்றது....

பெண் என்பவள் ஆத்மசக்தி அதற்க்கு கலக்கம் ஏற்படுத்த நினைப்பவரும், கலங்கம் விளைவிப்பவர்களும் ஒரு நாள் அழிவை சந்தித்து அழிந்து போவது உறுதி, இதை இறுதி காலம் வரை சிலர் உணராமல் போவது விதியா இல்லை விதியின் மீது பழியை சுமத்தி தப்பித்து கொள்ள மனிதன் செய்யும் சதியா....?

பெண்மையின் பெருமை என்று எமது பட்டிமன்ற எதிர் அணியினர் அடுக்கிய பெருமைகள் எல்லாம் சீட்டுக்கட்டு மாளிகை போல ஒரு சிறு காற்றுக்கும் கூட தாங்காது, நான் யாரையும் அவமதிக்க இதை சொல்லவில்லை உண்மையில் பெண்களின் அவல நிலையை நம்மில் பலர் உணர்ந்தும் அதை கண்டுகொள்ளாமல் ஒதுங்குவதால் சொல்லுகிறேன்...


இன்று ஒதுங்கும் நாம் நாளை மற்றவர்களால் ஒதுக்க படவேண்டிய காலம் வரலாம், நம் வீட்டிலா நடந்தது என்று ஒதுங்காமல்... நாளை நம் வீட்டிலும் நடக்கலாம் என்ற நிதர்சனத்தை உணர்ந்து ஓங்கி குரல் கொடுப்போம்...

பெண்களுக்கு இழைக்கப்படும் சிறுமையில் இருந்து அவர்களை காத்து உண்மையில் பெண்மையின் பெருமையை போற்றுவோம்...'' என்று தனது அணிக்கான பேச்சை மஹாபாரதி முடிக்கவும் அரங்கம் முழுவதும் ஒரு சிறிய அமைதிக்கு பிறகு கைத்தட்டல்களால் நிறைந்தது ...


பட்டிமன்றத்தின் நடுவர் மஹாபாரதியை பாராட்டியும் அதேசமயம் அவளின் சில கருத்துக்கு கண்டனத்தையும் சொல்லி பெண்ணின் பெருமையை பற்றி பேசிய அணியை வெற்றி பெற்ற அணியாக அறிவித்து சிறந்த பேச்சாளராக மஹாபாரதியை அறிவித்தார்...

தீபேஷ் , சௌந்தர்யா தம்பதியரின் ஒரே அன்பு மகள் மஹாபாரதி... மஹாபாரதி கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு பயின்று வருகிறாள், கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் நடந்த பட்டிமன்றத்தில் தான் அவள் இப்போது பேசியது....

பெற்றவர்களுக்கு தேவதை பெண்ணவள்... அவர்கள் வாழ்க்கையின் ஒட்டு மொத்த சந்தோசம் அவள்... பண்பில் குணவதி பொறுமையில் பூமாதேவி...மேடை பேச்சில் மட்டும் பொங்கி எழுந்து விடுவாள்...

ஒரு ஈ எறும்பை கூட கொல்ல மனம் வராத மென்மையான மனம் கொண்டவள்... இந்த மென்மையான மனம் கொண்டவள் தான் பின்னாளில் வன்மையாக மாறி ஐவரை கொல்ல போகிறாள் என்று சொன்னால் இன்றைய காலகட்டத்தில் அதை யாரும் துளி கூட நம்பமாட்டார்கள், காலத்தால் காட்சிகள் மாறும் போதும் அசாத்தியமும் சாத்தியமே...

விழா முடிந்ததும் மகிழ்ச்சியோடு வீடு திரும்பியவள் கல்லூரியில் நடந்த அனைத்தையும் தன்னுடைய அம்மா அப்பாவிடம் பகிர்ந்துகொண்டாள்...

தீபேஷ் சௌந்தர்யா இருவரின் திருமணம் அவர்களின் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடந்த திருமணம்... இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்த அவர்களின் காதல் வாழ்க்கைக்கு கிடைத்த பரிசு தான் அவர்கள் மகள் மஹாபாரதி...


திருமணம் நடந்து ஐந்தாண்டுகள் வரை அளவான வருமானத்தில் நிறைவான மகிழ்ச்சியோடு சொந்த பந்தங்களோடு தீபேஷ் சௌந்தர்யா வாழ்ந்த வாழ்க்கை ஒரே நாளில் தலைகீழாக மாறிப்போனது...

 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மஹாபாரதிக்கு மூன்று வயது இருக்கும் போது சௌந்தர்யாவுக்கு திடீர் என்று உண்டான நரம்பு கோளாறினால் (nervous disorder) அவரது ஒரு கை மற்றும் ஒரு கால் செயல் இழந்து போனது... சிகிச்சை இருந்தாலும் குணமடைய காலங்கள் ஆகும் அப்படியே குணமடைந்தாலும் ஓரளவிற்கு மட்டுமே எழுந்து நடமாடமுடியும் முழுமையாக குணமாக முடியாது என்று மருத்துவர்கள் சொல்ல..

தீபேஷ் பெற்றோர்கள் சௌந்தர்யாவை கைவிட்டுவிட்டு மறுமணம் செய்துகொள்ளும் படி சொல்ல, சௌந்தர்யாவின் பெற்றோர்கள் எங்கே மகள் தங்களுக்கு பாரமாக வந்துவிட்டால் அடுத்து இருக்கும் பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்று அஞ்சி அவளை காப்பகத்தில் சேர்க்க ஏற்பாடு செய்தனர்...


தீபேஷ் சொந்தங்களின் அறிவுரைகளை ஒதுக்கி, உறவுகளை எதிர்த்து மனைவிக்கு துணையாக நின்று மற்றவர்களிடம் இருந்து முட்டாள் என்ற பட்டத்தையும் பெற்று மனைவியின் நோயோடு போராடி தன்னவளை கொஞ்சம் கொஞ்சமாக நோயின் பாதிப்பில் இருந்து மீட்டு எடுத்து நடமாட வைத்தான் தீபேஷ்...


கணவன் படும் கஷ்ட்டத்தை பார்த்து சௌந்தர்யா வருத்தப்பட்டு தன்னை விட்டு விலகி சென்று நல்ல வாழ்க்கை அமைத்து கொள்ளும் படி சொல்ல, மனைவி சொன்னதை கேட்டு வெளியில் சென்று சற்று நேரத்தில் ஒரு விஷ பாட்டிலையும் இரண்டு குவளை பாலையும் கொண்டு வந்த தீபேஷ், சௌந்தர்யாவின் செயல்படும் கையில் விஷ பாட்டிலை திணித்து,

''எனக்கு இப்படி ஒரு நிலைமை வந்து இருந்தா... நீ என்னை செய்ய சொன்னதை தான் நீயும் செய்து இருப்பாய் என்றால் விஷத்தை பாலில் கலந்து எனக்கும் மஹாவுக்கும் உன் கையால் கொடுத்துவிட்டு நீ நிம்மதியாக ஆசிரமத்திற்கு போ...'' உணர்ச்சிகள் எதையும் முகத்தில் காட்டாமல் சொல்ல கையில் இருந்த விஷத்தை தூக்கி எறிந்ததோடு தனது மனதில் இருந்த எண்ணத்தையும் சௌந்தர்யா தூக்கி தூர எறிந்தாள் சௌந்தர்யா...

மனைவியை முழு நேரம் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதால் தனது வேலையை விட்டுவிட்ட தீபேஷ், மனைவியின் ஆலோசனையில் ஆடைகளுக்கு எம்பிராய்டரி (embroidery) எனப்படும் பூத்தையல், கற்கள் ஓட்டுதல் வேலையை ஆர்டர் எடுத்து செய்ய ஆரம்பித்தார்...


சௌந்தர்யாவுக்கு இதில் இருந்து முன்னனுபவம் அவர்களுக்கு இதில் உதிவியாக இருந்ததோடு ஒரு பத்து பெண்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தந்தது. இதில் கிடைத்த வருமானம் குடும்பச்செலவுக்கு உதவியாக இருக்க சேமிப்பில் இருந்த பணம் நகை எல்லாம் மருத்துவசெலவில் கரைந்தது...

மனைவியையும் மகளையும் தாயுமானவனாக தாங்கிய தீபேஷ்க்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட மனைவியின் மருத்துவ செலவுக்காக வேறு வழி இல்லாமல் சொத்தில் தனக்கான பங்கை கேட்க, அது அவர்களுக்கு தீபேஷ் மீதான கோபத்தை மேலும் அதிகரிக்க செய்ய, சொத்துக்கு ஈடான பணத்தை கொடுத்து சொந்தத்தை மொத்தமாக முறித்து கொண்டனர்...


எத்தனை சோதனை வந்தாலும் சற்றும் மனம் தளராமல் மனைவி மற்றும் மகள் மட்டுமே உலகம் என சுருக்கி கொண்டு அவர்களை போற்றி பாதுகாத்து தீபேஷ் வாழ, ஆண்டுகள் பல கடந்து தொடர்ந்து செய்த சிகிச்சையின் காரணமாக படுக்கையில் இருந்த சௌந்தர்யா எழுந்து நடமாட ஆரம்பித்தார்...


பாரதி என்று பெயர் வைத்து கொண்டு மேடை ஏறி பேச பயப்படலாமா என்று சொல்லி மஹாவின் ஆசிரியர் அவளை ஊக்குவிக்க எட்டாம் வகுப்பில் இருந்து பேச்சு போட்டி , கட்டுரை போட்டி , கவிதை போட்டி என்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று மகிழ்ந்தவள் தோல்விகளை கண்டு துவளவில்லை…

சௌந்தர்யாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம், தொழில் கிடைத்த நிறைவான வருமானம் என்று தொலைந்த சந்தோசம் மீண்டு அவர்கள் வாழக்கை மீண்டும் வண்ணமயமாகியது...


மஹா பள்ளி படிப்பு முடிந்து கல்லூரியில் காலெடுத்து வைத்தால். சிறு வயதில் இருந்தே தாயின் நிலையையும் தந்தையின் அன்பையும் கண்டு வளர்ந்ததாலோ என்னவோ எல்லா உயிரையும் நேசிக்கும் மிகவும் மென்மையான குணம் கொண்டவளாகும் அதே சமயம் உறுதியானவளாகவும் வளர்ந்தால்...

''மஹா படிப்பை முடித்துவிட்டு, கொஞ்ச நாள் அவள் விருப்பப்படி வேலை செய்யட்டும் அதன் பிறகு நல்ல இடமாக பார்த்து அவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்...'' தீபேஷ் சொல்ல சௌந்தர்யாவும் அதை ஆமோதித்தார்...

இனி எல்லாம் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருந்த போது, படிப்பு பரீட்சை என்று நாட்கள் கடக்க இறுதி தேர்வு எழுதிவிட்டு தோழிகளோடு சிறகு முளைத்த சிட்டு குருவியாக வெளியில் சென்ற மஹா சிறகுகள் துடிக்க துடிக்க வெட்டப்பட்ட அடிபட்ட பறவையாய் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டாள்...


தீபேஷ் சௌந்தர்யா இருவரும் எத்தனையோ சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்து இருந்தாலும் இன்று அவர்களின் பூ போன்ற மகள் புழுவாய் துடிப்பதை கண்டு பெற்றவர்களின் வயிறும் மனதும் கலங்கி தவித்து தலையில் அடித்துக்கொண்டு கண்ணீரில் கரைந்ததோடு அந்த கடவுளை சபித்துக்கொண்டு இருந்தனர்...


*******************************************************


 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆடம்பரம் அமர்க்களம் எதுவும் இன்றி மிகவும் எளிமையான முறையில் கோவிலில் பெற்றவர்கள் மட்டும் முன்னின்று ஆசிர்வதிக்க சுரேந்திரன் வெறுப்பும் கோபமுமாக தந்தையின் மிரட்டலுக்கு கட்டுப்பட்டு சாக்ஷியின் கழுத்தில் மூன்று முடிச்சிட, அவளோ இது நாள் வரை கொஞ்சம் நஞ்சம் மனதில் இருந்த பயத்தை துடைத்து தூர எறிந்துவிட்டு ''உன்னை துடிக்க துடிக்க பழி வாங்குவேன்..'' என்று மனதில் எண்ணமிட்டபடி அவன் அணிவித்த தாலியை ஊருக்காகவோ, உறவுக்காகவோ, உரிமைக்காகவோ அன்றி தனக்குள் வளரும் மகவுக்காக தலை குனிந்து ஏற்றுக்கொண்டாள், நாளை இந்த சமுதாயத்தின் தன்னுடைய மகவு தலைகுனிந்து நிற்க கூடாது என்பதற்காக...

தாலி கட்டி முடித்ததும் ''இதுக்கு மேல உங்க மிரட்டல் என் கிட்ட செல்லாது...'' முகத்தில் அறைந்தது போல சொன்ன சுரேந்திரன் கழுத்தில் இருந்த மலையை கழட்டி எறிந்துவிட்டு செல்ல, இதற்க்கு மேல் அவனை தடுத்து நிறுத்த முயற்சி செய்தால் அது சூழலை இன்னும் மோசமாக மாற்ற வழிவகுக்கும் என்பதால் சுரேந்தரின் பெற்றோர் அமைதியாக இருக்க,

சாக்ஷியின் பெற்றோர் '' நாங்க இப்படி எல்லாம் அவமானப்பட்டு நிற்க காரணம் நீ தான்..'' என்று அவள் மீது குற்றம் சுமத்தும் பார்வையை பார்த்தவர்கள், மகளிடம் ''நீ உன்னோட கணவனோட சேர்ந்து வீட்டுக்கு எப்பொவேன்னா வரலாம்...'' இனி நீ விருந்தாட மட்டுமே வீட்டுக்கு வரலாம், உறவை வெட்டிக்கொண்டு வரக்கூடாது என்ற எச்சரிக்கை அதில் ஒளிந்து இருக்க..

'' நாங்க கிளம்புறோம்...'' சம்பந்தி வீட்டினரிடம் சொன்னவர்கள் பெற்றோர் என்பதை மறந்து விருந்தினர் போல சொல்ல அவர்களை தடுக்கும் மன நிலையில் சாக்ஷியும் இல்லை,

அவர்களை தடுத்து நிறுத்தி வீட்டுக்கு அழைத்து சென்று மேலும் அவர்களை அவமானத்திற்கு உள்ளாக்கி அவர்களின் மனதை வறுத்த வேண்டாம் என்று நினைத்து '' இனி சாக்ஷி எங்க பொறுப்பு நீங்க எந்த கவலையையும் மனசுல வைத்துக்கொள்ளாமல் நிம்மதியாக இருங்க...'' இதற்க்கு மேல் சொல்லவும் கேட்கவும் எதுவும் இல்லை என்பது போல அனைவரும் கோவிலில் இருந்து அவரவர் வீட்டுக்கு திரும்பினர்…

'' நான் ஊமை சாட்சியாய் இருந்த கொடும் சம்பவத்திற்கு என் வயிற்றில் இருக்கும் மகளை உண்மையை வெளி கொண்டுவரும் உருவமாய் மாற்றிவிடு, அதை செயல்படுத்தும் திறனை எனக்கு கொடு...'' என்று இறைவனிடம் இன்று தான் வைத்த வேண்டுதலை வீட்டுக்கு செல்லும் வழியில் சாக்ஷியின் உள்ளம் எண்ணமிட்டபடி இருந்தது...


சாக்ஷி அவள் மாமனார் பரந்தாமன் மாமியார் உமா வுடன் வீட்டுக்குள் நுழையும் போது, சுரேந்திரன் பெட்டியும் கையுமாக வெளியில் வந்தான், அவனை ஏரெடுத்தும் பார்க்காமல் தலைகவிழ்ந்தபடி சாக்ஷி இருக்க,

மகன் அருகில் சென்று ''உன்னோட வேலை முடிஞ்ச ஆறாவது மாசம் நீ இங்க இருக்கணும், இல்லாட்டி நீ இருக்க வேண்டிய இடம் எதுவாக இருக்கும் என்று நான் சொல்லி தான் உனக்கு தெரியணும் என்ற அவசியம் இல்லை...'' யாருக்கும் கேட்கா வண்ணம் பரந்தாமன் மகனை எச்சரிக்கை செய்ய அதை கேட்டு தந்தையை முறைத்து கொண்டு சுரேன் நிற்க,

பெற்ற மனது தாங்காமல் ''சுரேன் பத்திரமா போயிட்டு வாப்பா..'' என்று உமா சொல்ல, தாயின் அந்த கனிவான வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவருக்கு சம்மதமாக தலையசைத்து விட்டு தனது வெளிநாட்டு பயணத்திற்கு ஏற்கனவனே அவன் அழைத்து இருந்த வாடகை காரில் ஏறி விமான நிலையம் சென்றான்...

இந்த வெளிநாட்டு பயணத்தை சுரேன் திட்டமிட்டதே சாக்ஷியை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்ற தான் ஆனால் அவனுக்கு என எழுதப்பட்ட விதி அவனை சிக்கவைத்து விட்டது...

ஒரே மகனின் திருமணத்தை எத்தனையோ ஆடம்பரமாக செய்ய கண்ட கனவுகள் எல்லாம் கானல் நீராய் போக கனத்த மனதை சமன்செய்து கொண்டு மருமகளுக்கு மட்டும் ஆரத்தி எடுத்தார் உமா அவளை அன்போடு வரவேற்க...


வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்த சாக்ஷியின் மனதோ '' நான் எடுத்து வைக்கும் இந்த அடி உங்க மகன் ஜெயில் வாசலில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்பதற்காக மட்டும் தான்...'' என்று உமாவின் கனிவான முகத்தை பார்த்து குரோதமாக எண்ணியது...

சுகந்தன் சுமாலினி தம்பதியரின் மூத்தமகள் தான் சாக்ஷி, அவளுக்கு இரண்டு தங்கைகள் ஒருத்தி கல்லூரி இறுதியாண்டிலும் இன்னொருத்தி பள்ளி இறுதி வகுப்பிலும் படிக்கின்றார்கள்...


சாக்ஷி கல்லூரி படிப்பு முடிந்து ஆறுமாதங்களுக்கு முன்பு தான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாள்...

இனி யாரை தன்னுடைய வாழ்நாளில் சந்திக்கவே கூடாது என்று அனுதினமும் இறைவனை வேண்டினாலோ அவனையே தனது உயிர் அதிகாரியாக எட்டு ஆண்டுகள் கழித்து சந்தித்தது மட்டும் இல்லாமல் அவனால் சீரழிக்கவும் பட்டாள்...

கம்பெனி சார்பில் கலந்து கொண்ட விருந்து கொண்டாட்டத்தில் விளையாட்டுக்காக அவளுடன் பணிபுரியும் பெண்கள் சாக்ஷியை குடிக்க வைத்து விட வாந்தி மற்றும் மயக்கத்தினால் வீட்டுக்கு செல்ல முடியாது என்பதால் அந்த கடற்கரை ஓரம் இருந்த விருந்தினர் மாளிகையின் ஒரு அறையில் தங்கிக்கொண்டாள், மதுவின் போதையால் அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட , அந்த அறைக்கு வந்த சுரேந்திரன் மதுவின் மயக்கத்தில் பணத்துக்காக வந்த பெண் என்று நினைத்து பெண்ணவள் வாழ்வை அழித்து விட்டான்...


நாகரீக வளர்ச்சி என்று சொல்லி பண்பை தொலைத்து சீரழியும் பலரின் பிரதிநிதிகளாக அங்கு இருந்தவர்கள் இரவின் ஆட்டம் எல்லாம் முடிந்து விடிந்ததும் அங்கு இருந்து சென்றுவிட, வெகுநேரம் கழித்து கண்விழித்து எழுந்த சாக்ஷிக்கு தலை பாரமாக இருக்க அதை கைகளால் தங்கயிபடி படுக்கையில் இருந்து எழ முயற்சிக்க அவள் முயற்சி முயற்சியாகவே முடிந்து போனது....



தான் இருக்கும் நிலையை கண்டு அதிர்ந்துபோனவளுக்கு விழி நீர் கூட துணையாக வர வில்லை, அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் சிலையென சமைந்தவள் வெறித்த பார்வையோடு இருக்க, குளியல் அறை கதவை திறந்து கொண்டு வெளியில் வந்த சுரேந்திரன் அவளை நோக்கி வந்து '' இவ்ளோ நாளா என்னை பார்த்து பயப்படுற மாதிரி நடந்துக்கிட்டது எல்லாம் நாடகம்...'' நக்கலாக மொழிந்தவன் ''எல்லாம் இதுக்காக தானே..'' என்றவன் பணத்தை அவளை நோக்கி வீசிவிட்டு அங்கிருந்து வெளியேறினான், அப்போதும் அவளால் ஆவேசப்பட்டு பட்டு கத்தவோ இல்லை தனது நிலையை நினைத்து கதறி அழவோ வாய் வரவில்லை...

 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உடலில் உள்ள செல்கள் எல்லாம் தன்னுடைய இயக்கத்தை நிறுத்தியது போன்றதொரு நிலை, அப்படி செல்கள் எல்லாம் இயக்கத்தை நிறுத்தி இருந்தால் மண்ணில் சரியாமல் இப்படி கற்சிலையாக அமர்ந்து இருக்க முடியுமா..?


மூளை மரத்த நிலையில் இருந்தவள் கதவை அறைந்து மூடும் சத்தத்தில் சுயஉணர்வு அடைந்தவளாக, தலையில் அடித்துக்கொண்டு வாய்விட்டு கதறி அழுதாள், தனது வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று கல்லும் கரையும் படி கதறியவளுக்கு, வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் எண்ணம் மட்டும் எழவில்லை...



அழுது அழுது ஓய்ந்து போனவள் மனது தனக்கு நடந்த கொடுமைக்கு இறைவனை பழிக்கவில்லை மாறாக “அன்று நான் மட்டும் அந்த பாதகத்தை வெளியில் சொல்லி இவனை தண்டித்து இருந்தால் இன்று எனக்கு இந்த கொடுமை நடந்து இருக்காது...’’ என்று கதறி அழுது பலியான தன் மீதே பழியை போட்டுகொண்டாள்


அப்பா அன்ணைக்கு ''யாருக்கோ நடந்தது தான உனக்கு என்ன அமைதியா இரு, இதை வெளியில் சொன்னால் நமக்கு தான் தேவையில்லாத பிரச்சனை எல்லாம் வரும் அதுனால. நீ பார்த்ததை ஒரு கெட்ட கனவா நினைத்து மறந்திடு, என்ன சொல்லுறது புரிந்ததானு கேட்டு, அதற்க்கு நான் அமைதியாக இருந்ததால் கோபம் கொண்டு,

''எங்க பேச்சை மீறி இதை நீ வெளியில் சொன்ன நாங்களே உன்னை பையித்தியம் என்று சொல்லிடுவோம்.... ஜாக்கிரதை..... எங்கே தங்களின் மகளுக்கும் குடும்பத்துக்கும் இதனால் ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சி சுகந்தன் மகளை அதட்டி மிரட்டி ஒடுக்கி வைச்சீங்களே அப்பா இப்போ உங்க பெண்ணுக்கே இப்படி ஒரு அநியாயம் நடந்து போச்சே இப்பவும் அமைதியாதான் இருக்க சொல்லுவீங்களா...'' குற்றஉணர்வில் ஆரம்பித்து ஆற்றாமையில் முடித்தவள் நடந்து முடிந்த கொடுமையை நினைத்து வாய்விட்டு கதற அதை கேட்கவோ அவளின் கண்ணீரை துடைக்கவோ அங்கு யாருமில்லை...

துவண்ட உடலையும் மனதையும் தனக்கு தானே தேற்றி, ஆடைகளை சீர்படுத்திக்கொண்டு, சீரழிந்துபோன துயரத்தை மனதில் புதைத்துக்கொண்டு அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பினாள், வீட்டில் அனைவரும் நெருங்கிய உறவினர் ஒருவர் வீட்டின் திருமணத்துக்கு சென்று இருந்ததால் அடுத்து வந்த இரண்டு நாட்களும் தனது அறையில் உணவு உறக்கம் என்று எதுவுமின்றி யோசனையும் கண்ணீருமாக அடைந்து கிடந்தாள்....


அன்றைய தனது பாவத்தின் (மௌனத்தின்) பலன் தான் இன்றைய தனது கதறல் என்று நினைத்தவள் இனி தனது வாழ்க்கை பயணத்தை எந்த பாதையில் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தவள் தனது தற்காலிக ஆயுதமாக மௌனத்தை கையில் எடுத்தால், வீடு வேலை என்று எப்போதும் போல அமைதியாக வலம் வந்தவள், தனது மௌனத்தை உடைக்கும் நாளும் வந்தது....


சுரேந்திரனின் பெற்றோரை சந்தித்து அவன் தன்னை காதலித்து கல்யாணம் செய்துகொள்ளுவதாக வாக்குறுதி அளித்து தன்னை கர்பமாக்கிவிட்டு இப்போது கருவை கலைக்க சொல்லி மிரட்டுவதாக சொல்ல, ஷாக்ஷியின் அப்பாவி முகமும் கலங்கிய தோற்றமும் அதிமுக்கியமான அவர்களின் மகன் குணத்தை பற்றி நன்கு அறிந்து இருந்ததால் அவளை தங்களின் மருமகளாக ஏற்றுக்கொண்டனர்..


உமா ஷாக்ஷியிடம் பேசி கொண்டு இருக்கும் போதே தனக்கு தெரிந்தவர்கள் மூலம் அவளை பற்றியும் அவளின் குடும்பத்தை பற்றியும் விசாரித்து அறிந்துகொண்ட பரந்தாமன், இனியாவது மகன் திருந்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் அவர் மனதில் போட்டிபோட திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்...


உமா மற்றும் பரந்தாமன் மூலம் உண்மை தெரிய வந்த போது ஷாக்ஷியின் பெற்றோர்களுக்கு மின்னாமல் மிழுங்காமல் தலையில் இடியை இறக்கியது போல இருந்தது, ஷாக்ஷியின் அம்மா அவளை போட்டு அடிக்க உமா தான் அவரை தடுத்து நிறுத்தினர், ஷாக்ஷியின் அப்பா சுகந்தன் அதன் பிறகு அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, கடமைக்காக திருமண ஏற்பாடுகளை செய்தார்...


விஷயம் கேள்வி பட்டு சுரேன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க, சொத்தில் பங்கு தரமாட்டோம் என்றோ இல்லை விஷம் குடித்து இறந்துவிடுவோம் என்றோ அவன் பெற்றோர்கள் அவனை மிரட்டவில்லை, மாறாக சுரேனை தனியாக அழைத்து சென்ற பரந்தாமன் மிரட்டலாக சொன்ன ஒரு விஷயம் அவனை இந்த திருமணத்திற்கு சம்மதிப்பது போல நடிக்க வைத்தது...


மகனின் குறுக்கு புத்தியை பற்றி அறிந்த பரந்தாமன் அவனை கண்காணிப்பதோடு கல்யாண வேலைகளையும் செய்தார் எதுவும் அறியாதவர் போல, அப்பாவின் மிரட்டலில் உண்மையில் பயந்து போன மாதிரி நடித்தவன் யாருக்கும் தெரியாமல் வெளிநாடு செல்ல ஏற்படடுகளை செய்தான்.

சுரேன் இன்று வெளிநாடு செல்ல சாதாரணமாக வெளியில் செல்லுவது போல கிளம்பியவனை வாசலில் நிற்க வைத்து பிடித்த பரந்தாமன் அவனை மிரட்டி அழைத்து சென்று பதிவு திருமணம் முடிந்த கையேடு கோவிலுக்கு அழைத்து சென்று ஷாக்ஷியின் கழுத்தில் தாலியையும் கட்ட வைத்தார்...


ஷாக்ஷியின் செயலால் வருத்தத்தில் இருந்த அவளின் பெற்றோர் எப்படி பட்ட ஒருவனை தங்களின் மகள் தனது வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்து இருக்கிறாள் என்ற கோபத்திலும் ஆற்றாமையிலும் தான் அவர்களால் எதிலும் ஒன்றமுடியாமல் போனது...


அக்கம் பக்கத்தினர் உறவுகள் என்று அறிந்தவர் தெரிந்தவர் அனைவருக்கும் இன்னும் இரண்டு வாரத்தில் திருமணம் என்று அழைப்பிதழை கொடுத்துவிட்டு இப்படி மாப்பிள்ளையின் செயலுக்கு அஞ்சி யாருக்கும் தெரியாமல் அதிரடியாக திருமணம் நடத்தியதில் யார் வாயில் எல்லாம் அவளாக விழுந்து அரைபட போகின்றோமோ என்ற கவலையும் இதனால் மற்ற இரண்டு பெண்களின் வாழ்க்கையும் பாதிக்க பட்டுவிட கூடாது என்ற பயமும் அவர்களை நிலையாக ஒரு முடிவை எடுக்க விடாமல் தவித்து தத்தளிக்க வைத்தது....


ஒரு நல்லகுடும்பத்தில் மகள் சேர்ந்துவிட்டால் அவள் வாழ்க்கையை இனி அவர்கள் பார்த்துக்கொள்ளுவார்கள் என்ற நம்பிக்கையில் ஷாக்ஷியின் குடும்பத்தினர் இருக்க… உமா பரந்தாமன் இருவரும் அவளை மருமகளாக அன்றி மகளாக தாங்கினார்கள்...


காலம் தனது பணியை செய்ய சுரேன் வேலை முடிந்து வெளிநாட்டில் இருந்து வந்தான். அவன் வந்த இரண்டு நாட்கள் கழித்து ஷாக்ஷியின் சீமந்தத்தை அனைவரையும் அழைத்து விமர்சையாக செய்ய, சுரேன் கட்டாயத்தின் பெயரில் தனது கடமைகளை செய்தான்..

அப்போதும் புறம் பேசுபர்கள் இருந்தாலும், அதே சமூகத்தில் தானே நமது நலன் விரும்பிகளும் இருக்கின்றனர், நமக்கு எதுக்கு என்று நாம் ஒதுங்கி வாழ்வது ஒரு மாயத்தோற்றம் ஏனெனில் நாம் சமூகத்தில் ஒரு அங்கம், நம்மை போன்றவர்களால் கட்டமைக்கப்பட்டது தான் இந்த சமூகம், என் இதில் சிலர் சுயலாபம் பெற பலர் தங்களது சுயத்தை தொலைக்கின்றனர்...


பிரசவ நாள் நெருங்க நெருங்க ஷாக்ஷி அடிக்கடி கோவிலுக்கு செல்வதும் பெரும்பாலான நேரத்தை பூஜை அறையில் செலவிடுவதுமாக இருந்தாள், தலை பிரசவம் என்பதால் பயப்படுகிறாள் என்று அனைவரும் நினைக்க அவளே ஒரே வேண்டுதலை விடாமல் இறைவனிடம் வேண்டிக்கொண்டு இருந்தாள்...


ஷாக்ஷியின் வேண்டுதலுக்கு செவிசாய்த்த இறைவன் அவள் வேண்டிய வரத்தை, பலரின் சாபத்தை போக்கும் தேவதை பெண்ணை ஷாக்ஷியின் மகளாக இந்த பூமியில் ஜனிக்க செய்தான்..

மயக்கம் தெளிந்து கண்விழித்த ஷாக்ஷியிடம் உமா குழந்தையை கொடுக்க, தான் வேண்டிய வரம் தன் கைவந்து சேர்ந்துவிட்டது என்று விழியின் கடையோராம் கண்ணீர் துளிர்க்க உதட்டில் வெற்றி புன்னகையோடு, மனதில் வஞ்சினம் ஊற்றெடுக்க தனது மகளை வாங்கி அமுதூட்டினால் ஷாக்ஷி...
குழந்தை பிறந்த செய்தி கேள்விப்பட்டு வேண்டா வெறுப்பாக மருத்துவமனைக்கு குழந்தையை பார்க்க வந்த சுரேன் தாயின் கண்ணசைவில் ஷாக்ஷியிடம் இருந்து குழந்தையை வாங்க, அவன் கையில் தவழ்ந்த மறுகணம் குழந்தை வீறிட்டு அழ, பதறிய சுரேன் குழந்தையை ஷாக்ஷியிடமே கொடுத்து விட்டான்...



சுரேனிடம் இருந்து குழந்தையை வாங்கும் போது மட்டும் இல்லை கொடுக்கும் போதும் தலை கவிழ்ந்து இருந்த ஷாக்ஷியின் முகத்தில் இருந்த அந்த குரூர புன்னகை, உன் பாவங்களுக்கான தண்டனையை நீ நெருங்கி கொண்டு இருக்கின்றாய் என்று சத்தமில்லாமல் சொன்னது...


உடலில் உண்டான வலிக்கு
கண்களின் கண்ணீர் ஆறுதலாக வடியும்
உயிரில் உண்டான வலிக்கு
உள்ளம் சிந்தும் உதிரமும் ஆறுதலாகாது...


மரித்து உயிர்க்கும்.....


உங்களின் கருத்துகளை இங்கே பதிவிடவும்

சத்யா வாணியின் “என் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன்” - கருத்து திரி

நன்றி

சத்யா
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வலி - 2


முதல் கட்ட தீவிர சிகிச்சைக்கு பிறகு ல மணி நேரங்கள் கடந்து கண் விழித்த மஹாவுக்கு தனக்கு நடந்த கொடுமைகள் எல்லாம் நினைவுக்கு வர கதறி அழுது, அனலில் இட்ட புழுவாய் துடித்தாள்...


மயக்கம் தெளிந்த பிறகு தன்னை பரிசோதிக்க வந்த மருத்துவர் செவிலியரை மட்டும் அல்ல பெற்றவர்களையும் கண்டு அஞ்சி நடுங்க, பெற்றவர்கள் கண்ணீரோ இல்லை மற்றவர்கள் ஆறுதல் மொழியோ எதுவும் அவளை எட்டவில்லை...


''கிட்ட வராதீங்க ...கிட்ட வராதீங்க...'' என்று பயம் கொண்டு கதறுபவள் , அருகில் வந்தால் மிகவும் மூர்க்கத்தனமாக தாக்க ஆரம்பித்தாள், பலமிழந்த உடல் அவளின் உணர்ச்சிகளின் ஆவேசத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தளர்ந்து சரிய, அடுத்து வந்த இரண்டு தினங்களுக்கு அவளை மயக்கத்தில் வைத்தே சிகிச்சையை தொடர்ந்தனர்...


மஹாவின் உடல் நிலை சற்று தேறினாலும் அவளின் மனநிலையில் எந்த ஒரு மாற்றமும் உண்டாக வில்லை, ஆட்கள் வரும் அரவம் (சத்தம்) கேட்டதுமே கண்களை இறுக மூடிக்கொண்டு கத்த ஆரம்பித்து விடுவாள், அதன் பிறகு மயக்க மருந்து செலுத்தி அவளை அமைதி படுத்த வேண்டும் இல்லை அவள் மயங்கும் வரை பொறுத்திருக்க வேண்டும்...


இது இரண்டுமே அவள் உடல்நிலைக்கு மட்டும் இல்லை மனநிலைக்கும் ஆபத்து...


தங்களின் உயிரான மகள் துடிப்பதை பார்த்து தீபேஷ் தான் ஒரு ஆணாக பிறந்ததை நினைத்து, வெறி கொண்ட மிருகங்களின் செயலால் வேதனையும் அவமானமும் கொள்ள...

சௌந்தர்யா ''தாயக இருந்தும் என் மகளுடைய வேதனையை என்னால் போக்க முடியவில்லையே..'' என்று கலங்கி தவிக்க நாட்கள் துயரங்களை சுமந்து கடந்தது...


மஹாவை போல பாதிக்க பட்டவர்களுக்கு மட்டும் இல்லை, அவர்களின் குடும்பத்தினருக்கும் மனநல மருத்துவரின் ஆலோசனைகள் மிகவும் அவசியம், பாதிக்கப்பட்டவர்களின் மனதை மாற்றுவதோடு உடனிருப்பவர்களுக்கு தைரியம் அளிக்க வேண்டியது மிகவும் முக்கியம்....


பாதிக்கப்பட்டவர்களை அதன் பாதிப்பில் இருந்து விடுவிக்கவும், குடும்பத்தினர் அதற்க்கு துணையாக இருக்கும் மருத்துவரின் அறிவுரைகளும், ஆலோசனைகளும் மிகவும் முக்கியமானதும் இன்றி அமையாததும் கூட...


இப்போது மஹாவை விட அவளின் அம்மா அப்பாவுக்கு தான் கவுன்சலிங் முக்கியம் என்று நினைத்த மனநல மருத்துவர் திரு பரிக்ஷித் அவர்கள், தீபேஷ் மற்றும் சௌந்தர்யாவை அழைத்து ஒரு காணொளியை போட்டு காண்பித்தார்...

அந்த காணொளியில் ஒரு பூனை தனது ஆறு குட்டிகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடி கொண்டு இருந்தது, தாய் பூனை மீது குதிப்பதும் தங்களுக்குள் வாலை பிடித்து இழுத்து விளையாடுவதும், தாயிடம் வந்து பால் குடிப்பதுமாக பார்ப்பதற்கு அத்தனை இனிமையாக இருந்த காட்சி நொடி பொழுதில் இன்னலாக மாறி போனது....


குழந்தைகளுடன் விளையாடி கொண்டு இருந்த தாய் பூனை அங்கு தீடீர் என்று ஆண் பூனை ஒன்று வரவும் பயந்து நடுங்கி தனது குழந்தைகளை பாதுக்காக்க போராட ஆரம்பித்தது, அதன் போராட்டம் எல்லாவற்றையும் முறியடித்த ஆண் பூனை ஒவ்வொரு குட்டியாக கடித்து தூக்கி எரிந்தது...

ஆண் பூனை அருகில் வரும் போது அஞ்சி நடுங்கி உச்சகட்ட பயத்தில் அலறிய குட்டிகள் எல்லாம் ஆண் பூனையின் கோர பற்களுக்கு பலியாகி உயிரற்ற உடல்களாக, அதை கண்ட மற்ற குட்டிகள் பயத்திலும், தாய் பூனை குழந்தைகளை காப்பாற்ற முடியாத நிலையிலும் கண்ணீர் நீர் வழிய கத்தி கொண்டு இருந்தது....


நான்கு குட்டிகளை கடித்து கொன்ற பூனை ஐந்தாவது குட்டியை கடிக்க போகும் போது பூனைகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கே வந்த அந்த பூனைகளை வளர்க்கும் பெண் ஆண் பூனையை அடித்து விரட்டிவிட்டு, இறந்த குட்டிகளை கண்டு கண்ணீர் வடித்தவள்,


அஞ்சி நடுங்கி கொண்டு இருந்த இரண்டு குட்டிகள் அதன் தாய் அருகில் நெருங்கும் போது இன்னும் அதிகமாக கத்த, தாய் பூனை மிகவும் பாவமாக அழுதது,


அந்த பெண் தயங்கி தயங்கி இரண்டு குட்டிகளின் அருகில் சென்று அவற்றின் தலையை வருட அமைதி அடைந்த பூனை குட்டிகள் தாய் பூனையை மட்டும் அருகில் நெருங்க விடவில்லை. தாய் பூனை விலகி நின்றே ''மியாவ்.. மியாவ்...'' என்று பாவமாக கத்தி கொண்டு இருந்தாலும் ஒரு சிறு அசைவுக்கும் அதன் கண்களும் காதுகளும் கூர்மை அடைந்து, அதன் உடல் மொழி மாறியது. மீண்டும் ஆண் பூனை வந்துவிடுமோ என்ற பயத்தில்..



அந்த பெண்ணிடத்தில் அடைக்கலமான பூனை குட்டிகள் கொஞ்ச நேரம் சென்றதும் தாயின் அருகில் வந்து பால் குடித்த குட்டிகளை தாய் நக்கி ஆறுதல் படுத்த குட்டிகள் உறங்கி விட்டது, தாய் பூனை சிறு சத்தத்தையும் கூர்மையாக கவனித்தபடி அந்த ஆண் பூனை மீண்டும் வந்துவிடுமோ என்ற பயத்தில் படுத்திருந்தது, அத்தோடு அந்த காணொளி முடிந்து இருந்தது...


தீபேஷ் சௌந்தர்யா இருவருக்கும் காணொளி ஆரம்பித்த போது இருந்த மனநிலை முடியும் போது ஓரளவிற்கு மாறி இருந்தாலும், காணொளி ஆரம்பித்த போது இதை எதற்கு போடுகிறார் என்று
தோன்றினாலும், இதற்க்கு எதாவது முக்கிய காரணம் இருக்கும் என்ற நம்பிக்கையில் பார்க்க ஆரம்பித்தவர்களின் மனதுக்கு மிகவும் கஷ்டமாக...



மனதின் துயரத்தை ஒதுக்கி இப்போது இதில் இருந்து நாங்க தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை புரிந்துகொள்ளவேண்டியது என்ன இருக்கின்றது என்ற பாவனையில் மருத்துவரை குழப்பமாக அவர்கள் பார்க்க,


மருத்துவர் பேச ஆரம்பித்தார் '' ஒரு விதத்தில் சொல்லப்போனால் அந்த காப்பாற்றப்பட்ட பூனை குட்டிகளின் மனநிலையில் தான் இப்போது உங்களின் மகள் இருக்கிறாள், தனக்கு பாதிப்பை ஏற்படுத்திய அந்த மனித இனத்தை கண்டாலே அஞ்சி நடுங்கிக்கொண்டு....

தங்களை மீண்டும் மரணம் நெருங்கிவிடுமோ என்ற பயம் மட்டுமே அவைகளை ஆட்டுவிக்க, உங்கள் மகளின் மனதை பயத்தையும் தாண்டி இன்னும் பல்வேறு உணர்ச்சிகள் ஆட்டுவிக்கின்றது, இப்போது நீங்கள் அவள் முன்னாள் கண்ணாடியை கொண்டு சென்றால் அதில் தோன்றும் அவள் பிம்பத்தை பார்த்தும் அவள் பயப்படுவாள்...

இப்போது அவள் இருக்கும் மனநிலையில் அவளால் எதையும் சிந்தித்து பார்க்க முடியாது, முதலில் அவள் மனதில் இருக்கும் அந்த பயம் நீங்க வேண்டும், அந்த பயத்தின் அடிப்படை தன்னை அருவெறுத்து ஒதுக்கிவிடுவார்களோ என்பதும், இனி வாழக்கை எப்படி இருக்குமோ என்பது தான்...


நீங்கள் அவளை நெருங்கி ஆறுதலும் சொல்ல வேண்டாம், அவளை நெருங்கமுடியவில்லையே என்று வருந்தி விலகி போகவும் வேண்டாம், தள்ளி நின்று உங்களின் தவிப்பை அவளுக்கு உணர்த்துங்கள், அவளிடம் மாற்றங்கள் உண்டாகும் அதற்க்கு பொறுமை மிகவும் அவசியம்...
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்கள் அழுவதாலோ இல்லை இப்படி உணவு உறக்கம் இல்லாமல் உங்களை நீங்கள் வருத்திக்கொள்ளுவதாலோ உங்கள் மகளின் மனநிலை மாறாது, நீங்கள் அவளை இந்த துன்பத்தில் இருந்து மீட்க நினைத்தால் சாப்பிட்டு தெம்பாக இருங்கள்..'' என்று அதிக ஆலோசனைகள் சொல்லாமல் சொல்லி அவர்களின் மனதை மாற்றி சில அறிவுரைகளை வழங்கி அவர்களை அனுப்பி வைத்தார்...


மருத்துவரின் அறிவுரைப்படி மஹா அருகில் நெருங்காமல் அவளை கண்களால் வருடியபடி இருவரும் சற்று தொலைவில் இருக்கும் நாற்காலியில் அமர, முதலில் பயந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனது இயல்புநிலைக்கு திரும்ப ஆரம்பித்து இருந்தது...


இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்கள் மனநிலை ஒன்று போல எப்போதும் இருக்காது அவர்களின் மனதைரியம் மற்றும் அவர்களை பாதித்த செயல்கள் பட்ட காயங்களின் அளவு என்று இதை பொறுத்து ஒவ்வொருவரின் மனநிலையும் வேறுபடும்...


சிலர் தன்னை தானே அழித்துக்கொள்ள துடிப்பார்கள் , சிலர் தன்னை சுற்றி இருக்கும் பொருட்களை அழிப்பார்கள் , சிலர் தனக்குள் ஒடுங்கிப்போவார்கள் , சிலர் அழிக்க துடிப்பார்கள் மொத்தத்தில் இவர்களின் வாழ்க்கை , கனவு , லட்சியம் எல்லாமே தடம் மாறிப்போகும், இவர்களை இதில் இருந்து மீட்டு எடுப்பதற்கும் அன்பும் பொறுமையும் முக்கியம்...

அத்தகைய பொறுமையோடு தான் தீபேஷ் சௌந்தர்யா இருவரும் காத்திருந்தனர்...


அவர்களின் காத்திருப்பின் பலனாக ஆறுதலுக்காக அன்னையின் மடியில் சரண்புகுந்த மஹா, தந்தையிடம் சற்று ஒதுக்கம் காண்பித்தாள், மருத்துவர் சொன்ன அறிவுரையை நினைவில் வைத்து மகளின் புறக்கணிப்பை வலியோடு ஏற்க பழகி கொண்டார்...


நாட்கள் கடக்க மஹாவின் உடல் நலம் முழவதும் தேறி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்...

இது நாள் வரை கருத்தில் பதியாத அக்கம் பக்கத்தினரின் பரிதாப பார்வையும், சிலரின் எட்டு கட்டிய பேச்சும் , வீணான பழி சுமத்துதலும் அவர்களை மேலும் பாதித்தது...


கண்ணாடி மாளிகைக்கு உள்ளே குடியிருப்பவன் அடுத்தவர் மீது கல் எரிய கூடாது என்று சொல்லுவார்கள் அது போல நம் சுற்றத்தில் ஒருவருக்கு நடந்த அநியாயம் நாளை நமக்கும் நடக்கலாம், காயத்திற்கு மருந்திட வேண்டாம் , காயத்தை மேலும் ஆழப்படுத்தாமல் இருந்தாலே போதும்...


துணை நிற்க வேண்டாம் , தூற்றி பேசாமல் இருந்தாலே போதும் ஒரு ஆண்டுக்கு பதிவிடப்படும் பலாத்காரம் தொடர்பான புகார்கள் பத்து சதவீதம் கூட இருக்காது, சுற்றி இருக்கும் சமூகத்துக்கு பயந்தே சூழ்ச்சிக்கு பலியாகி போகின்றனர்...


அக்கம் பக்கத்தினர் துணை நிற்க வேண்டாம் அவர்களை பற்றி தோண்டி துருவி விவாதிக்காமல் இருந்தாலே போதும், பாதிக்கப்பட்டவர்கள் பயத்தை துறந்து புகார் அளிப்பார்கள், இன்னும் நாம் அனைவரும் ஓங்கி குரல் கொடுத்தால் புகார்கள் அதிகரிக்காது தவறுகள் குறையும்...

''அப்பா ....'' பல நாள் கழித்து மகள் அழைத்ததில் கண்களின் ஓரம் கண்ணீர் துளிர்க்க, ''என்னமா ...'' உணர்ச்சி பெருக்கில் தீபேஷ் குரல் கலங்கி ஒலித்தது...

''நான் ஏன் அப்பா இன்னும் செத்துப்போகாம இருக்கேன்..'' இத்தனை நாள் மகளின் வலி கண்டு மனதுக்குள் வருந்தியர், இன்று மகளின் கேள்வியில் மனதளவில் மரித்து போனார்.


தந்தையின் அதிர்ச்சியை கண்டுகொள்ளாமல் அவளே கேள்விக்கான பதிலையும் சொல்ல ஆரம்பித்தார் '' எவ்ளோ போராடியும் என்னால் என்னை காத்துக்கொள்ள முடியாமல் போன போதும் சரி இப்போதும் சரி என்னால் தற்கொலை செய்துகொள்ளுவதை பற்றி நினைத்து பார்க்க முடியவில்லை..'' இதை சொல்லும் போது அருவெறுப்பிலும் உடலோடு மனசும் கூச, எத்தனை முயன்றும் கண்களில் கண்ணீர் உடைப்பெடுப்பதை தடுக்க முடியாமல்,


''அம்மாவுக்கு உடம்புமுடியாம போன போது நீங்க யார் என்ன சொல்லியும் அவங்களை விட்டுக்கொடுக்கலை அவங்களை நோயில் இருந்து மீட்டு நடமாட வைத்தீங்க, அதுமாதிரி என்னையும் நீங்க மத்தவங்க பேச்சை கேட்டு ஒதுக்கமாட்டீங்க என்ற நம்பிக்கை என்னுள் இருந்து இருக்கணும் அதனால் தான் அப்படி ஒரு முடிவெடுக்களை போல...'' அவள் பாட்டுக்கு சொல்லி போனாள்...




இதை கேட்டுக்கொண்டு இருந்த தீபேஷ் உணர்ந்த உணர்வை வார்த்தைகளால் வடிக்க முடியாது, தந்தையாக இந்த கணம் அவர் மனது கர்வம் கொண்டது ஆனால் அதை நினைத்து அவரால் சந்தோசப்படமுடியவில்லை...



''இப்போ மட்டும் இல்லை எப்பவும் நான் சாகனும் என்ற முடிவை எடுக்க மாட்டேன் அப்பா..''உறுதியாக சொன்னவள் '' ஆனா......அவனுங்க எல்லோரும் சாகனும்....'' இதை சொல்லும் அவள் முகத்தில் அப்படி ஒரு ரௌத்திரம் கண்கள் இரண்டும் பழிவெறியில் பளபளக்க சொன்னவள் முகத்தில் அதை செய்து முடிக்கும் தீவிரம் இருந்தது...


கனிவான பெண்ணவளை கடந்த சென்ற நாட்கள் காவு வாங்கும் காளியாக மாற்றி இருந்தது, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை நாடி சென்ற இடங்களில் அவளுக்கு மறுக்க பட்ட நீதியும் கிடைத்த இலவச ஆலோசனைகளும் அவளை அத்துணை கடினமாக மாற்றி இருந்தது...


நம்பர்களுடன் உணவருந்தி விட்டு வீட்டுக்கு வருவதற்காக பேருந்து நிறுத்தம் செல்லும் வழியில் தான் அவள் கடத்தப்பட்டு சில மணி நேரம் கடந்து சாலையோரத்தில் கசக்கி தூக்கி எறியப்பட்டது உயிர்ப்பை இழந்த உடல் என்று எண்ணி...


சில நல்ல உள்ளங்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள், அவள் உடைமையில் இருந்து கல்லூரி அடையாள அட்டையை வைத்து தான் அவள் குடும்பத்துக்கு தகவல் சொன்னது...


சிகிச்சையில் இருக்கும் போதே காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க, மஹா சொன்ன அடையாளங்களை வைத்து விசாரித்ததில் தவறு செய்தவர்கள் எல்லாம் பெரிய இடம் என்பதால் வழக்கையே மாற்றி முடித்து விட்டனர் ...


நீதி மன்றத்தில் முறையிடலாம் என்ற நினைத்த போது சம்பந்தப்பட்டவர்கள் பகிரங்கமாக மிரட்டல் விடுக்க, எளியோர்களை வதைக்கும் வலியவர்களை கொண்ட பணம், பதவி , அதிகாரம் எதுவும் இல்லாதவருக்கு இந்த பூமியில் நீதி நியாயம் எல்லாம் வெறும் வார்த்தை என்பதை உணர்ந்ததால் அமைதியாக அடங்கிப்போயினர்...


உண்மையை சொல்ல போனால் அடி மேல் அடி விழுந்ததில், போராடும் சக்தி இன்றி போயினர்...


கேட்ட நீதி கிடைக்காததால் அவளே நீதி தேவதையாக மாறி தனக்கான தீர்ப்பை தானே எழுதினாள்...

கயவர்கள் ஐவருக்கும் மரண தண்டனை என்று ....


************************
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் மீண்டும் வேலையின் நிமித்தமாக, வெளிநாட்டுக்கு போக போவதாக சுரேந்திரன் அறிவிப்பாக சொன்னான்..


பரந்தாமன் அவனை தடுக்க ''வேலைக்கு தான் போறேன் ஊரைவிட்டு ஓடலை, அது தான் என்னை கண்கணிக்க எல்லா இடத்திலும் ஆள் வெச்சி இருக்கீங்க இல்ல..''எரிச்சலாக மொழிந்தவன்

''என்னை மிரட்டி என் தலையில் ஒருத்தியை கட்டிவச்சீங்களே அவளுக்கும் , இப்போ வந்து இருக்கும் அந்த புது தொல்லைக்கும் சேர்ந்து இதுநாள் வரை எல்லா தண்டச்செலவையும் நான் தானே செய்தேன் , இனியும் நான்தானே செய்யணும் அதுக்கு பணம் பணம் சம்பாதிக்க தான் போறேன்...'' நக்கலும் நய்யாண்டியுமாக சொன்னவன், அவரை அலட்சியப்படுத்திவிட்டு தனது பயணத்தை மேற்கொண்டான்....


திருமணத்திற்கு பிறகாவது மகன் திருந்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவனை மிரட்டி திருமணம் செய்து வைத்தவர், அவன் மனைவிக்கும் மகவுக்கும் அவன் அணைத்து செலவையும் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்து இருந்தார், அப்படியாவது அவனுக்கு பொறுப்பு வராத என்ற நப்பாசையில்...


பணத்தை மட்டும் தவறாமல் அனுப்பி வைப்பவன் இது நாள் தன் தவறுகளை உணரவும் இல்லை அதற்காக வருந்தவும் இல்லை, எப்போதும் போல அவன் தனது உல்லாச வாழக்கையை அனுபவித்து கொண்டு தான் இருந்தான்...


மருமகளோ மனதுக்குள் மருகினாலும் குழந்தை மட்டுமே தன் உலகமாக கொண்டு ஒரு கணமும் குழந்தையை பிரியாமல் இருந்தாள்....


குழந்தை பிறந்த பிறகும் மகன் பொறுப்பு இல்லாமல் இருப்பதும், மருமகள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருப்பதும் ஏனோ அவருக்கு சரியாக படவில்லை. அதனால் தான் மகனை எப்போதும் தனது கண்காணிப்பு வளையத்துக்குளே வைத்திருந்தார் பரந்தாமன்...


பொறுப்பான மருமகளாக , கனிவான தாயாக இருக்கும் மருமகள் கண்ணில் மகள் தேவசேனாவை மடி தாங்கி இருக்கும் போது அரிதாக சில சமயங்களில் தோன்றும் ஒரு வித பளபளப்பு அது பரந்தாமனை மட்டும் இல்லை அவர் மனைவி உமாவையும் யோசனையில் ஆழ்த்தியது....


உமா இதை கணவரிடம் சொல்ல '' தன்னோட குழந்தையால் எல்லாம் மாறும் என்ற எதிர்பார்ப்பு உமா...''என்றவர் 'அப்படி தான் இருக்க வேண்டும்..' மனதில் சொல்லிக்கொண்டார்..


குழந்தை விஷயத்தில் ஷாக்ஷியின் நடவடிக்கை எல்லாம் அவர்களுக்கு புரியாத புதிராகவே இருந்தது, குழந்தைக்கு தேவசேனா என்று பிடிவாதம் பிடித்து அந்த பெயரை வைத்தால் பரந்தாமன் எவ்ளோ தடுத்தும் அதை கேளாமல்...

பரந்தாமன் உமா இருவரும் குழந்தையை தேவி என்று அழைக்க, அவள் மட்டும் சேனா என்று அழைப்பாள்...


ஷாக்ஷியின் அமைதியும் பொறுமையையும் அவர்களுக்கு ஆறுதலாக இருந்த சமயத்தில் அன்று அவள் நடந்து கொண்ட விதம் அவர்களை கலங்க செய்தது..


மகனின் புகைப்படத்தை காண்பித்து ''அப்பா....அப்பா ...சொல்லுங்க ..தேவி குட்டி....'' பேத்தியிடம் உமா சொல்லிக்கொடுக்க,

அப்போது அங்கே வந்த ஷாக்ஷி உமாவிடம் இருந்த குழந்தையை தூக்கி கொண்டு '' இன்ணைக்கு நீங்க அடையாளம் காட்டும் உறவுக்கான உரிமை நாளைக்கு சம்பந்தப்பட்டவரால் மறுக்க படும் போது என்னோட பொண்ணு மனசு தான் பாதிக்கும்...


நான் அனுபவிக்கும் வேதனையை என்னோட மகளும் அனுபவிக்க வேண்டாம்...'' தீர்க்கமாக சொன்னவள்,


''இனி நீங்க இப்படி பண்ணா நானும் என்னோட மகளும் இந்த வீட்டை விட்டு போக வேண்டி இருக்கும்...'' எச்சரிக்கையாக சொல்ல மகன் மீது தவறு இருக்க மருமகளை கண்டிக்க முடியாமல் கண் கலங்கி நின்றார் உமா...


''ஷாக்ஷி நீ சேனாவுக்கு செய்வது துரோகம்...'' என்று அவள் தாயுள்ளம் எடுத்துரைக்க


''இது ஒரு பெண்ணாக இன்னொரு பெண்ணுக்கு நான் செய்யும் நியாயம்...'' பெண்ணவளின் அடிபட்ட மனது சீற்றத்தோடு பதிலளிக்க



''யாரோ ஒரு பெண்ணுக்கு நியாயம் செய்யும் நீ.... நீ பெற்று பெற்று எடுத்த மகளுக்கு அநியாயம் செய்கிறாய்...'' தாயுள்ளம் வாதாட


'' இப்படி யாரோ யாரோ என்று சொல்லி நாம் அமைதியாக இருப்பதால் தான் நாம் பலியாகிப்போகிறோம்...


என் உடன் இருந்து மரித்தவளுக்கு, என்னுள் இருந்து ஜனித்தவளை கொண்டு நான் செய்ய போகும் தர்ம யுத்தம் இது இதில் உன்னுடைய நியாய அநியாயங்களுக்கு இடமில்லை...'' பெண்ணவளின் எதிர்வாதத்தில் தாயுள்ளம் வாயடைத்து போனது நடக்க போகும் விபரீத்தை நினைத்து...



தாயுள்ளம் தண்டிக்க முடியாமலும்
பெண்ணுள்ளம் மன்னிக்க முடியாமலும்
இருவேறு மனங்களாக பிரிந்து போராட
போராட்டத்தின் முடிவில்
தண்டனையே மன்னிப்பகுமா..?
இல்லை...!
மன்னிப்பே தண்டனையாகுமா...?



மரித்து உயிர்க்கும்...



உங்களின் கருத்துகளை இங்கே பதிவிடவும்

சத்யா வாணியின் “என் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன்” - கருத்து திரி
நன்றி

சத்யா
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வலி - 3


''அவனுங்க எல்லோரும் சாகனும்..'' கண்களில் பழி வெறி பளபளக்க சொன்னவள்,


''பிறந்தது முதல் பணத்தில் செழித்து வளர்ந்த அவங்க உடம்பிலுள்ள ஒவ்வொரு அணுவும் மரணத்தின் வேதனையை அனுபவிக்கனும், அவனுங்க அனுபவிக்கிற வேதனை அவனுங்களோட ஆத்மாவில் பயமா பதியனும், நான் கொடுக்க போகும் தண்டனை அவனுங்களோட உள்ளதை மட்டும் இல்லை உயிரையும் உறையவைக்கணும்....'' இதை சொல்லும் போது பெண்ணவள் முகத்தில் இருந்த தீவிரம் இதை செய்து முடிக்காமல் அவள் ஓயமாட்டாள் என்பதை சொல்லாமல் சொல்லியது...


''நம்மாள் முடியுமாடா....'' தன் உயிரான மகளின் வலியை கண்டு அவர் உள்ளுக்குள் மரித்த போதெல்லாம், தனது மகளை இந்த நிலைக்கு ஆளாக்கிய கயவர்களை கொன்று புதைக்கும் ஆத்திரம் எழுந்தாலும், நிஜத்தில் அவர்களை ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலை அவரை இன்னும் வைத்தது...


இன்று மகள் கேட்கும் போது அவரால் உறுதியாக பதில் சொல்லமுடியவில்லை என்றாலும், ஏனோ அவரால் மறுத்து எதுவும் சொல்லவும் முடியவில்லை, மகள் சொல்லுவது எல்லாம் செயலாக்கம் பெற வேண்டும் என்று ஒரு மனம் நினைத்தாலும் ஒரு மனம் அது மடமை என்று வாதிட்டது..


ஒரு தந்தையாக மட்டும் சிந்தித்து பார்க்கும் போது மகளின் வாழ்க்கை மட்டுமே அவருக்கு பெரிதாக தோன்றியது...

மகள் நினைப்பதை செய்வது என்பது முடியாத காரியம் அப்படியே ஆயிரத்தில் ஒரு பங்காக அது நடந்தாலும், அதன் பின் அவர்களால் வாழ முடியுமா இல்லை வாழ தான் விட்டுவிடுவார்களா... இங்கு விடை தெரியாத கேள்விகள் பல இருந்த போதிலும்...

காயம் கொண்ட பெண்ணவளுக்கு தன்னை தாண்டி எதையும் யோசிக்கமுடியவில்லை..

தந்தையானவருக்கு எல்லாவற்றையும் பற்றி சிந்திக்க வேண்டி இருந்தது, அதனால் தான் மகளின் மனதை தனது பதிலால் வருந்த செய்ய கூடாது என்று நினைத்தவர்... மக்களிடமே கேள்வியை எழுப்பினர்...


''முடியனும் அப்பா.... முடிச்சி காட்டணும்....'' உறுதியாக மொழிந்தவள்


''அவனுங்க வாழுற இந்த பூமியில் தான் நானும் வாழுறேன்ற எண்ணமே என்னை ஒவ்வொரு கணமும் கொல்லுது, அவனுங்களை தீண்டிய காற்று என்னை தீண்டிவிடுமோ என்று என் உடம்பில் இருக்கும்
ஒவ்வொரு அணுவும் அருவெறுப்பு எனும் நெருப்பில் வெந்து சாகுது...


''வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று விதி எழுதும் எழுத்துக்காக காத்திருக்காமல், வினை விதைத்தவனின் விதி முடித்து, அவனை கருவருக்கணும்....'' தேகம் முழுவதும் அனலாய் தகிக்க கண்களில் தீயின் ஜுவாலை எரிய வார்த்தைகளில் தீப்பொறி பறக்க சொன்னவள் தனது திட்டத்தை தந்தையிடம் சொன்னாள்...


மகள் சொன்னதை தீபேஷ் கவலை பாதியும் பயம் மீதியுமாக கேட்டுக்கொண்டு இருக்க, அதை பார்த்து மனதில் தீர்க்கமாக முடிவெடுத்த மஹா '' அப்பா இது மட்டும் நடந்து முடிந்ததும், அடுத்து என்னோட வாழ்க்கையை நீங்க சொல்லும் படி நான் வாழுவேன்...'' எங்கு அடித்தாள் தனக்கு சாதகமான பதில் கிடைக்கும் என்று சரியாக அடித்தாள் மஹா...


இதுவரை மனதில் மலையென உயர்ந்து நின்ற கவலை , பயம், வேதனை எல்லாம் மகளின் வாழ்வுக்கு முன்னாள் மிகவும் சிறிதாக தோன்ற சக மனிதனாக.. ஒரு ஆண் மகனாக சிந்திக்காமல், ஒரு பெண்பிள்ளையின் தந்தையாக மட்டுமே முடிவெடுத்தார்...

சரி தவறு என்று சிந்தித்து சீர்த்தூக்கி பார்க்கும் மனநிலையில் அந்த தந்தையின் உள்ளம் இல்லை, பாதிக்க பட்ட தன் மகவு அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வாழ வேண்டும் என்று சுயநலமாக யோசித்தது... மஹாவின் தந்தையாக மட்டும், அவள் நன்றாக வாழ வேண்டி...


மகளின் வலி கண்டு ஒரு ஆண்மகனாக மனதளவில் மரித்தவர், இன்று அவளின் துயர் போக்க ஒரு தந்தையாக உயிர்த்தெழுந்தார் அதுவும் ஒரு பெண் பிள்ளையின் தந்தையாக...


'' நீ சொன்னது எல்லாம் நடக்கும், உனக்கு துணையா இருந்து நடத்துவேன்... நீ சொன்னது எல்லாம் நடந்ததும், எல்லாத்தையும் மறந்துவிட்டு நீ உனக்கான வாழ்க்கையை வாழனும்.. நானும் அம்மாவும் அதை பார்த்து மகிழும் படி..'' மகளிடம் உறுதியளித்தவர், அவளிடம் உறுதி கேட்க

''என்னை நான் அழித்துக்கொள்ள நினைக்காதே போதே உங்களுக்கு புரிந்திருக்க வேண்டாமா அப்பா..'' மகள் சுற்றிவளைக்க

''உணர்வுகளை தொலைத்துவிட்டு உயிரோடு வாழ்வதும்.... தனக்கான உறவுகளோடு உயிரோட்டமாக வாழ்வதும் ஒன்றாகது மஹா... என் மகள் உயிரோட்டமான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும்...'' தனது நிலையில் அழுத்தமாக நிற்க


''நான் போராட மட்டும் இல்லை வாழவும் தயாராகிவிட்டேன்...'' கண்களை பார்த்து தீர்க்கமாக சொன்னவள் அத்தோடு எப்போதும் போல அந்த இருட்டு அறையில் தன்னை தானே சிறைப்படுத்திக்கொண்டாள்...


தந்தை மகள் இருவரும் ஐந்து உயிர்களை அழிக்க நினைப்பது சட்டப்படி தர்மப்படி என்று எல்லா நிலையிலும், பல நிலைகளில் இருந்து யோசிப்பவர்களுக்கு, இது தவறாக மட்டும் இல்லை வன்முறையான செயலாக கூட தோன்றலாம், அப்படி தோன்றுவதும் சரியே ஆனால்,


பாதிக்கப்பட்டவன் தேடும் தீர்வுக்கும்... பார்வையாளன் சொல்லும் தீர்வுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் காயம் கொண்ட உள்ளம் உணரும் வலியும் வேதனையும் மட்டுமே...


இது கல் கொண்டு எறிந்ததினால் புறத்தில் உண்டான காயம் இல்லை புரியும் என்று சொல்லி தீர்வு சொல்ல , கயவர்களால் புறம் மட்டுமில்லை அகமும் கொண்ட காயம்... இதே காயத்தை கொண்டவரும் இன்னொருவரின் வேதனை புரியும் என்று சொல்லுவது இங்கே கடினம்... ஏனென்றால் கொண்ட காயம் மட்டும் அல்ல கொண்டவரின் மனம் கொள்ளும் வேதனையின் அளவும் ஆழமும் இங்கே ஒன்றாகாது...


தீபேஷ் தனது மனைவியிடம் இதை சொல்ல முதலில் பயந்து பதறியவர் நீண்ட நேர யோசனைக்கு பிறகு தனது ஆதரவினை தெரிவிக்க அதை கேட்ட தீபேஷ் அதிர்ச்சியுடன் '' என்ன சௌந்தி சொல்லுற..'' என்று கேட்க...


''ஒரு அம்மாவா மட்டும் யோசிக்கும் போது மஹா செய்ய நினைப்பதும் அதற்கு நீங்க துணையாக இருப்பதும் தப்புனு தோணுது ஆனால் பாதிக்க பட்ட ஒரு பெண்ணோட அம்மாவா மட்டும் யோசிக்கும் போது எதுவுமே தப்பா தெரியல, இன்னைக்கு நாம படும் இந்த துன்பத்தை இன்னொருதர் அனுபவிக்க கூடாது என்று மட்டும் தான் தோணுது...


அவனுக்கு செய்தது எல்லாம் அறியாமல் செய்த தவறு இல்லை, எல்லாம் அறிந்து தெரிந்து செய்த மாபெரும் குற்றம், அந்த குற்றத்தால் பாதிக்க பட்ட நமக்கு கேட்ட நியாயம் கிடைக்கவில்லை, அது கிடைக்கபோவதும் இல்லை என்று நிச்சயமாக தெரிந்து கொண்ட பிறகு நமக்கான நியாயத்தை நாமே எடுத்து கொள்ளுவது தப்பாக இருக்கலாம், இருந்துவிட்டு போகட்டும் ஆனால் நாம இதை கண்டிப்பா செய்யணும்...'' அழுத்தம் திருத்தமாக சொன்னவர்


''இவனுங்க மாதிரி ஆளுங்க தப்பு செய்ய அடிப்படை காரணம் பணத்திமிரும் தான் என்ற ஆணவம் மட்டும் இல்லை, பாதிக்கட்டவர்களையும் சரி அவர்களுக்கான நீதியையும் சரி நம்முடைய பண பலத்தாலும் அதிகார பலத்தாலும் விலைக்கு வாங்க முடியும் என்று அவங்களுக்கு இருக்கும் நம்பிக்கை...'' வெறுப்பும் கவலையுமாக உரைத்தவர்,
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

''நாம திருப்பி அடிக்கமாட்டோம் என்ற அசாத்திய தைரியம் தான் அவனுங்க இப்படி அடங்காம திரிய காரணம், நாம அவனுங்களோட அந்த தைரியத்தில் அடிக்கணும், அப்படி அடிக்க இந்த ஐந்துபேரை அழைப்பதில் தவறேதும் இல்லை...'' உறுதியாக சொல்ல இதை கேட்டு தீபேஷ் மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச கவலையும் மன சஞ்சலமும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது...


அவர்கள் செய்ய நினைப்பது எல்லாம் நடைமுறைக்கு எந்த அளவிற்கு சாத்தியப்படும் என்று எல்லாம் அவர்களுக்கு தெரியாது அவர்களுக்கு தெரிந்த ஒன்று மகள் நினைத்தது நடந்துவிட்டால் அவள் வாழ்க்கை சீரடைந்துவிடும் என்பது மட்டும் தான்...


மனிதன் தன் மனித பண்பை தொலைத்து நாட்டை காடாக மற்றும் போதும் மனிதம் தொலைத்த மனிதர்களை வேட்டையாடி காடாக மாறும் நாட்டை மாறாமல் காப்பது தவறாகாதோ..?


மனிதன் மனிதத்தோடு வாழ உண்டாக்கிய நியமங்களை.. மனிதம் அழிவை நோக்கி பயணிக்கும் போது நியமங்களை தகர்த்து நியதியை நிலைநாட்டுவது முக்கியமாகிறது போலும்..!


தீபேஷ் தன்னால் முயன்ற வரையில் அவர்களை பற்றிய தகவல்களை எல்லாம் சேகரிக்க ஆரம்பித்தார்...


விண்ணாளும் வேந்தனானாலும், மண்ணாலும் அரசனாலும் ஒழுக்கத்தில் தவறும் போதும் எல்லாமே கைவிட்டு போகும் அப்படி இருக்கும் போது, அரக்க குணம் கொண்ட இவர்களின் கைப்பிடியில் எத்தனை காலம் எல்லாவற்றையும் வைத்திருக்க முடியும், அது முடியாத போது அவர்களின் முடிவு அவர்களை தேடி வந்து வினை முடிக்கும்...


அப்படி இந்த கயவர்களின் விதி எழுத வந்தவள் தான் மஹா பாரதி...


அந்த கயவர்களை பற்றி விசாரிக்க ஆரம்பித்த போது முதலில் அவர்களின் அதிகார பலமும் ஆள் பலமும் இதற்க்கு ஆதாரமான பணபலமும் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது, ஆனால் காலம் செல்ல செல்ல அவர்களால் பாதிக்க பட்டவர்கள், வஞ்சிக்க பட்டவர்கள் பற்றி எல்லாம் தெரியவந்தது...


அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாய் சிதறி கிடந்தவர்களை எல்லாம் ஒன்றாக இணைக்கவில்லை, மாறாக அவர்களின் மனதின் ஆழத்தில் இருந்த கோபத்தையும் வஞ்சத்தையும் ஒன்று இணைத்தால் மஹா பாரதி...



இதுவரை அந்த ஐந்து பணக்கார குடும்பத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை எல்லாம் பட்டியலிட்டு, அவர்களின் பாதிப்பின் அளவை பொறுத்து அவர்கள் நமக்கு எந்த அளவிற்கு துணையாக இருப்பார்கள் என்பதை பற்றியும் அறைந்து ஒரு பெரிய திட்டத்தை தீட்டினாள் மஹா..


வார்த்தையாக பார்க்கும் எளிதாக தோன்றும் ஆனால் இதை செய்து முடிக்க அவர்களுக்கு முழுதாக இருபத்தி இரண்டு மாதங்கள் ஆனது... இந்த காலகட்டத்தில் அவர்கள் செய்த குற்றம் எல்லாம் மஹாவின் திட்டத்தினை செயல்படுத்த மேலும் வலுசேர்த்து...


மஹா பாரதி அழிக்க நினைக்கும் ஐவரில் ஒருவனான வினீத் என்பவனுக்கு இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் என்பதால் தனது நம்பர்களுக்கு ''bachelor party..'' கொடுக்க அவன் தேர்வு செய்த நாள் சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர்கள் மஹாவின் வாழக்கையை கேள்வி குறியாக்கிய நாள்..


பார்ட்டியில் மது , மாது என்று எதற்கும் அளவில்லாமல் இருக்க, தன்னை மறந்து அனைவரும் போதையில் திளைத்தனர் அந்த கடற்கரை விருந்தினர் மாளிகையில்...


படிக்க உதவி கேட்டு வந்த காவலாளியின் பெண் சுகந்தியை அந்த ஐவர் கூட்டணியில் ஒருவனான அருண் என்பவன் படுக்கைக்கு அழைக்க, அதை கேள்வி பட்ட அவனது தந்தை அவனை கண்டித்ததோடு தன்னிடம் மகனை பற்றி சொன்ன காவலாளியையும் வேலையை விட்டு நீக்கி விட்டார், அவன் இதை மனதில் வைத்து தன்னை பழிவாங்கி விட கூடாதே என்பதற்காக...


அவர் அறியாத ஒன்று இப்போது அவரது கடற்கரை விருந்தினர் மாளிகையின் காவலாளி அந்த பெண்ணின் வருங்கால கணவன் என்பது, திருமணம் நிச்சயமானதும் சுகந்தி இதை தனது வருங்கால கணவனிடம் சொல்லி அந்த வேலையை விட்டு விடும் படி சொல்ல அவனோ தன்னால் முடிந்த அளவில் தன்னவளுக்கு நியாயம் செய்ய காத்திருந்த போது தான் மஹாவின் தந்தை அவனை சந்தித்தது...


சுகந்தியின் வருங்கால கணவன் மூலம் தான் இந்த பார்ட்டி இங்கு நடைபெற போகின்றது என்று மஹா அறிந்துகொண்டது, அதோடு வினீத் தம்பி ஏற்படுத்திய விபத்துக்காக சிறை சென்ற ஓட்டுநர் மஹாவின் சாரதியாக திட்டம் மேலும் வலுப்பெற்றது...


இப்படி அவர்கள் செய்த பல குற்றங்களின் விளைவு இன்று மஹாவுக்கு சாதகமாகவும் அவர்களுக்கு பாதகமாகவும் மாறியது...


மதுவின் போதையில் மயங்கி இருந்த ஐவரையும் அன்று அவர்கள் மஹாவை கடந்த பயன்படுத்திய அதே காரில் ஆள் அரவமற்ற இடத்திற்கு கடத்தி சென்று கை கால் வாய் என்று கட்டிப்போட்டு அவர்களின் போதை தெளிய காத்திருந்தனர்...


நள்ளிரவில் கடத்த பட்டவர்கள் விடியும் வேளையில் லேசாக போதை தெளிந்து எழ, தாங்கள் கட்டுண்டு கிடக்கும் நிலையை பார்த்து மொத்த போதையும் சுத்தமாக தெளிந்தது...


வாய் கட்டை மட்டும் தீபேஷ் அவிழ்த்து விட அவர்கள் எல்லோரும் இவர்களை மிரட்ட ஆரம்பித்தனர்
''நாங்க யார் தெரியுமா... எங்க மேல நீங்க கை வச்சதுக்கு உங்களை மட்டும் இல்லை உங்க பரம்பரையையே ஒன்னும் இல்லாம அழிச்சிடுவோம்..'' இதை சொன்ன குரல்களும் தொனியும்
வெவ்வேறாக இருந்தாலும் சொன்ன விஷயம் மட்டும் ஒன்று தான்..


''அது தெரியாமலா உங்களை இப்படி கடத்தி இருப்போம்..'' நக்கலாக சொன்ன மஹா அவர்களின் ஒட்டு மொத்த ஜாதகத்தையின் புட்டு புட்டு வைக்க இப்போது அவர்களையும் அறியாமல் ஒரு மெல்லிய நடுக்கம் உடலில் பரவியது அதை வெளியில் காட்டாமல்,



''எல்லாம் தெரிஞ்சும் உங்களுக்கு எங்களை கடத்தும் அளவுக்கு தைரியம் வந்து இருக்குன்னா...'' கேள்வியாக வினீத் நிறுத்த


''எனக்கு எதிர்காலத்தை பற்றிய எதிர்பார்ப்போ பயமோ இல்லை.... முக்கியமா உங்களுக்கு எதிர்காலம் என்ற ஒன்று இருக்க போவது இல்லை ஏன்னா நீங்க எல்லோரும் இன்னும் கொஞ்ச நேரத்தில் நெருப்பில் எரிந்து சாகப்போறீங்க...'' முதல் பாதியை அழுத்தமாகவும் இரண்டாம் பாதியை ஆக்ரோஷமாகவும் சொல்ல அதை கேட்டு அவர்கள் அதிகமாக பயப்படவில்லை என்றாலும் பயம் கொள்ள ஆரம்பித்தனர்...


அவர்களை கடத்தியதில் இருந்தே அவர்களின் தைரியம் தான் தெள்ள தெளிவாக தெரிந்துவிட்டதே... வஞ்சகர்கள் நரியின் தந்திரத்தை கையில் எடுத்து,


''இங்க பாரு எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்..''அருண் இன்னொரு நண்பனிடம் கண்ணால் கையில் இருக்கும் கட்டை அவிழ்க்கும் படி சுட்டி காட்டி விட்டு நயமாக பேச


''என்ன ஆதர்ஷ் கட்டை அவிழ்க்க முடியலையா...'' அருண் சொன்னதை காதில் வாங்காமல் மற்றவனிடன் கேட்ட மஹா ''இன்னும் ஒரு நாலு நிமிஷம் முயற்சி பண்ணா கண்டிப்பா அந்த முடிச்சை அவிழ்க்கலாம்....ஆனால், உங்களுக்கு அதற்கான நேரம் இல்லையே ...'' துல்லியமாக கணக்கிட்டு சொல்லுவது போல அவர்களை அதிரவைத்தவள் கண்ணசைக்க,



காரின் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டது, அதை கண்டு அவர்கள் அலற அதை வெறுமையாக பார்த்தவள் '' எத்தனை பேரை இப்படி அலற வைத்து கேட்டு சந்தோசப்பட்டு இருப்பீங்க இப்போ உங்க அலறல் அவங்க எல்லோருக்கும் சந்தோசத்தை கொடுக்கட்டும் சாகும் போதாவது ஒரு நல்ல காரியம் செய்யுங்க..'' என்றவள் தான் யார் எதற்காக அவர்களை இப்படி கதறடித்து கொல்ல முயல்கிறாள் என்று எதையும் சொல்லவில்லை..


இவர்களை அழிக்க அவள் நினைத்து ஆரம்பம் மட்டுமே அதை முடிக்க உதவி செய்தவர்கள் பலர் அல்லவா அதனால் இங்கு தனது வலியை அவள் சொன்னாள் அது அவர்களுக்கு இவள் செய்யும் அநியாயம் என்று தோன்ற அதை சொல்லாமல் அனைவரின் சார்பாக அந்த காரின் கதவை மூடிவிட்டு தீவைத்தவள், இப்போது நடந்தவற்றை பதிவிட்ட காணொளியை நிறுத்த சொல்லிவிட்டு, அவர்களின் சாம்பல் கூட மற்றவர்களுக்கு கிடைக்காத படி அனைத்தையும் கூவம் ஆற்றில் எறிந்தாள்...


*************************************
 
Status
Not open for further replies.
Top