அத்தியாயம் 5:
இளவரசியிடம் அத்தனை பேசி, அழைப்பதாக கூறிய பிரணவ், அடுத்த ஒரு வாரமும் அவளுக்கு அழைக்கவே இல்லை..
முதலில் அவன் அழைத்தால் என்ன பேச வேண்டும்? எப்படி பேசுவான்? என்று யோசித்து கொண்டே சுற்றிய இளவரசிக்கு, ஒரு கட்டத்திற்கு மேல் சுத்தமாக பொறுமை இல்லாமல் போய் விட்டது..
அன்று இரவு உணவை முடித்துக்கொண்டு ராதிகாவுடன் படுக்க வந்தவள், மனம் கேட்காமல் புலம்பி விட்டாள்..
"என்ன டி இவர், அன்று அந்த அளவு பேசிவிட்டு, ஒரு வாரமாக ஒரு போன் கூட போடவில்லையே..! என்ன தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்..!"
"எனக்கும் ஒன்றும் புரியவில்லை அரசி மா.. அவர் தான் பேச வேண்டுமா? நீ தான் பேசி பாரேன்.." என ராதிகா கூற,
"சங்கடமா இருக்கு டி.." என்றாள் இளவரசி..
"அதெல்லாம் பார்த்தால் சரி வராது அரசி.. இன்னும் கொஞ்ச நாளில் கல்யாணம்.. அதற்கு முன் மனதில் எந்த கசடும் இருக்க கூடாது.. பேசிவிடு அரசி.. அது தான் நல்லது.." என்றாள் ராதிகா
"ம்ம்.. சரி ராதா.. நாளை பேசுகிறேன்.." என முடித்துவிட்ட இளவரசி, யோசனையுடன் தூங்கி போனாள்..
மறுநாள் காலை ராதிகா வேலைக்கு சென்று விட, தன் அறையில் கையில் இருந்த போனை சுற்றி கொண்டே அமர்ந்திருந்தாள்..
இளவரசி, அவள் திருமணம் என்று லீவு சொல்லி இருந்தாள்..
மொத்தமாக திருமணம் முடிந்த பின்னே இங்கிருந்த பிராஞ்சில் வேலைக்கு வருவதாக சொல்லி இருந்தாள்..
இப்போதைக்கு ராதிகா மட்டுமே வேலைக்கு போக தொடங்கி இருந்தாள்..
தனியாக அமர்ந்திருந்தவளுக்கு, அவனுக்கு அழைப்பதா? வேண்டாமா? என்ற பெரும் குழப்பம்..
ஒருவாறு ராதிகா சொன்னது தான் சரி என்று தோன்றி விட, ஒரு முறை ஆழ்ந்த மூச்செடுத்து மனதை சமன் செய்து கொண்டு பிரணவ்விற்கு அழைத்தாள் இளவரசி..
கிடத்தட்ட ரிங் முடியும் நேரத்தில் தான் பிரணவ் போனை எடுத்தான்..
"ஹேய் வசி! நீதானா? எப்படி இருக்கிறாய்?" என சாதாரணமாக அவன் கேட்க,
"பெரும் குழப்பத்திலும் கடுப்பிலும் இருக்கேன்" என பட்டென கூறிவிட்டாள் இளவரசி..
அவனும் ஏன் என்றெல்லாம் கேட்டு குடையவில்லை..
அவனுக்கு அவள் கோபத்திற்கான காரணம் நன்றாகவே புரிந்தது..
"உன் அன்னையும் தந்தையும் உன் மேல் வைத்திருக்கும் அன்பு என்றேனும் மாறுமென்று நினைக்கிறாயா வசி?"
சம்மந்தமே இல்லாமல் அவன் கேள்வி கேட்டதில், "என்ன..?" என்றாள் தன் காதில் ஏதேனும் கோளாறோ என்ற சந்தேகத்துடன்..
"உனக்கு சரியாக தான் கேட்டது வசி.. பதில் சொல்.." என பிரணவ் கூற,
"நிச்சயம் மாறாது" என்றாள் இளவரசி உறுதியாக
என்ன கேட்கிறான் என்று இன்னும் அவளுக்கு புரியாவிட்டாலும், தன் அன்னை தந்தையை விட்டு கொடுக்காமல் பதில் கூறினாள் அவள்..
"அவர்கள் அன்பை போலவே என் நேசத்தையும் நீ நம்பலாம் வசி.. அது என்றுமே மாறாது.." நிதானமாக அவன் கூறியதில், அவள் முகத்தில் அவள் அனுமதி பெறாமலே ஒரு மெல்லிய புன்னகை தோன்றியது..
"ஒருவாரம் ஓடிவிட்டது பிரணவ்.. என் நினைவே இல்லாமல் இருப்பவர் இப்படி சொன்னால் நம்பும்படியாகவா இருக்கும்..?"
மனதின் இலக்கத்தை மறைத்து வேண்டுமென்றே அவள் கேட்க, அதை உணர்ந்து அவனும் சிரித்துக்கொண்டான்.
"ரியலி சாரி வசி.. ஒருவாரமாக நிற்க கூட நேரமில்லாமல் வேலை.. பாரினில் ஒரு பிரான்ச் ஓபன் பண்ண போகிறோம்.. அதன் டிஸ்கஷன், முதற்கட்ட வேலைகள் எல்லாம் போய் கொண்டிருக்கிறது.. நம் திருமணத்திற்கு முன் முடித்தாக வேண்டிய கட்டாயம்.. அதான் ஓடி கொண்டிருக்கிறேன்.."
"உன்னிடம் தனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை வசி.. பொதுவாக நான் பிசியாக இருந்தால் , வேலையாக இருக்கிறேன் என்று வீட்டில் எல்லாரும் புரிந்துகொள்வார்கள்.. உன்னையும் அவர்களுடன் சேர்த்தே பார்க்க தொடங்கிவிட்டேன்.. அதான் மா.. சொல்லி இருக்கனும்.. சாரி வசி.."
நீளமாக அவன் பேசி முடிக்கும் வரை இளவரசியும் அமைதியாக கேட்டுக்கொண்டு தான் இருந்தாள்..
"நல்லா பேசுறீங்க.. ஆனால் நான் பழக வேண்டும் என்று சொன்னதற்கும் ஏதாவது பதில் வச்சிருக்கீங்களா..?"
இன்னமும் முழுதாக அவள் மனம் ஏனோ ஆறவில்லை..
"ம்ம்... கோபம் குறையவில்லை போலையே..!" என சட்டென கேட்டுவிட்டவனுக்கு, அவள் மனம் புரிய தான் செய்தது..
"இப்போது வெளியில் சுற்றும் நிலையில் நான் இல்லை வசி.. ஒன்று செய்கிறாயா? என் ஆபிஸிற்கு வருகிறாயா? இங்கேயே பேசலாம்.. வீட்டிற்கு நான் கார் அனுப்புகிறேன்.." என பிரணவ் கூற,
"நீங்க மனித பிறவி தானா?" என யோசிக்காமல் கேட்டுவிட்டாள் இளவரசி.
குழப்பமான அவள் குரலில் பிரணவ்வும் சத்தமாகவே சிரித்து விட்டான்..
"ப்ச், சிரிக்காதீங்க பிரணவ்.. உலகத்திலேயே காதலிக்கும் பெண்ணை ஆபீஸிற்கு டேட்டிங் கூப்பிட்ட ஒரே ஆள் நீங்களாக தான் இருப்பீங்க.." என அவள் சலித்துக்கொள்ள,
"என்ன மா செய்வது? என் நிலை அப்படி.. மற்றதெல்லாம் எங்கே போக போகிறது? நம் திருமணம் முடிந்து ஒரு மாதம் நான் லீவ் தான்.. உனக்கு எங்கெல்லாம் வேண்டுமோ அங்கெல்லாம் கண்டிப்பாக போகலாம்.. நீ யோசிக்காத இடமெல்லாம் கூட அழைத்து போகிறேன்.. சரி தானா..?" என்றான் பிரணவ் மென்மையாக
"ஒரு மாதம் லீவா? ஏதோ முக்கிய வேலை என்றீர்களே! அதற்க்குள் முடிந்துவிடுமா? கஷ்டம் என்றால் வேலையை முடித்துக்கொண்டு லீவ் எடுத்துக்கொள்ளலாம் தானே? ஏன் இத்தனை அவசரம்?"
"நோ வசி.. நம் வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது எந்த டென்ஷனும் இருப்பதை நான் விரும்பவில்லை.. கொஞ்ச நாட்களாவது நான் முழுதாக உனக்கே உனக்கென்று இருக்க வேண்டும்.. இப்போது மட்டுமில்லை.. நிச்சயம் வேலைக்கு இடையில் இது போல் அடிக்கடி லீவ் எடுத்துவிடுவேன்.. அது நமக்கான நேரம்.. நமக்கு மட்டுமேயான நேரம்.. அந்த நேரத்தில் என்ன நடக்கும் என்றும் கூற வேண்டுமா..?"
அவன் ஆழமான குரலில் பேசியதை நெகிழ்வுடன் கேட்டுக்கொண்டிருந்த இளவரசி, கடைசியாக வந்த அவன் குறும்பு கேள்வியில், "ச்சை.. என்ன பேசறீங்க.." என்று சிணுங்கி விட்டாள்
அவள் முகம் முழுவதும் அந்த நொடி எப்படி சிவந்து இருக்கும் என தன் கற்பனையிலேயே கண்டு சிரித்து கொண்டவன், "வேறு யாரிடமாவது பேசினால் தான் தவறு வசி.. உன்னிடம் பேசினால் தவறில்லை.." என்றான் அப்போதும் விடாமல்
"இப்போது உங்களுக்கு வேலை இல்லையாக்கும்..?" வெட்கம் தாங்காமல் அவள் அவனை விரட்ட முயற்சிக்க,
அவனோ, "இருக்கு தான் மா.. மீட்டிங் ஹோல்டில் தான் வைத்துவிட்டு வந்தேன்.. நான் போகவா? உனக்கு நாளை காலை கார் அனுப்பவா?" என நேரடியாக கேட்டுவிட்டான்
உண்மையாகவே வேலையாக தான் இருக்கிறான் என்று அவளுக்கும் புரிந்து விட, அதற்கு மேல் அவனை தொந்தரவு செய்ய மனம் இல்லாமல், "சரி பிரணவ்" என்றுவிட்டு அவளும் வைத்துவிட்டாள்..
மறுநாள் ராதிகாவையும் விடுமுறை எடுத்துக்கொண்டு தன்னுடன் வர சொல்லி இருந்தாள் இளவரசி..
"என்னை கரடி என்று திட்ட போகிறார் டி" என ராதிகா தயங்க
"ஆமாம் பெருசா ரொமான்ஸ் பண்ண போறார் பாரு..! அவரே ஆபிசுக்கு கூப்பிடுகிறார்.. இதில் நீ வேறு கடுப்பை கிளப்பாமல் கிளம்பு டி.." என்றாள் இளவரசி
என்ன தான் பிரணவ்வை பார்க்க போகும் மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், 'யாராவது ஆபிஸிற்கு போய் கூப்பிடுவாங்களா!' என அவள் மனம் முனகி கொண்டே இருந்ததன் விளைவை தான், தோழியிடம் காட்டிவிட்டாள்..
சரியாக காலை பதினோரு மணி அளவில் அவளுக்கு அழைத்த பிரணவ், "கார் வாசலில் வைட்டிங் மேடம்" என்று கூற,
"நாங்களும் கிளம்பிட்டோம் பிரணவ்.. வந்துவிடுகிறேன்.." என்று விட்டு போனை வைத்தவள், அன்னை தந்தையிடம் கூறிவிட்டு கிளம்பினாள்..
இருவரும் முதல் தளத்தில் இருந்து கீழே வந்த போது அவர்கள் போர்ஷன் வாசலிலேயே கார் நின்றது...
ஆச்சர்யம் என்னவென்றால் அவர்களுக்காக பிரணவ் தான் காத்திருந்தான்..
"பிரணவ் நீங்க..! வீட்டிற்கே வந்திருக்கலாமே..! முதலில் உள்ளே வாங்க.." என இளவரசி சிறு பதட்டத்துடன் அழைக்க
"ஹேய், நோ.. நோ வசி.. பாதி வேலையில் வந்திருக்கிறேன்.. உள்ளே வந்தால் டீ, காபி என நேரம் ஆகும்.. மறுத்தாலும் நன்றாக இருக்காது.. இன்னொரு நாள் பொறுமையா வரேன்.. இப்போது ஏறுங்க.." என்றவன் பின் கதவை திறந்து விட, அவனிடம் மறுப்பு கூற முடியாமல் இரு பெண்களும் ஏறி அமர்ந்தனர்..
ராதிகாவுக்கு தான் சற்றே சங்கடமாக போய் விட்டது..
அவன் காரை எடுக்கும் வரை காத்திருந்தவள், அதற்கு பின் தான் பேசினாள்..
"சாரி ண்ணா.. நீங்க வருவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.. தெரிந்திருந்தால் நான் வந்திருக்க மாட்டேன்.." என ராதிகா மெதுவாக கூற
"வசி தனியாக வந்திருந்தால் தான் நான் ஆச்சர்யப்பட்டிருப்பேன் ராதிகா.. நீயும் எனக்கு தங்கை போல் தான்.. இனி மன்னிப்பெல்லாம் கேட்காதே.. மேடம் ரொம்ப கோபமோ..?"
ராதிகாவிடம் ஆரம்பித்து தன்னவளிடம் முடித்தான் பிரணவ்..
"ச்ச.. ச்ச.." என இளவரசி வேகமாக தலையாட்ட
"பொய்" என்றான் பிரணவ் கண்ணாடி மூலம் அவளை பார்த்து.
"காரணம் சொன்னேனே! சமாதானம் ஆகவில்லையா? ஒரு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்தால் சமாதானம் ஆகி விடுவாயா?" அடக்கப்பட்ட சிரிப்புடன் அவன் கேட்க
"கசாட்டா" என்றாள் இளவரசி உடனடியாக
"உங்களை பார்க்க வந்ததற்கு ஏதாவது எனக்கும் கிடைக்க வேண்டும் இல்லையா?" என தொடர்ந்து அவள் வாயாட தொடங்க,
"சரி தான் மேடம்" என்று கூறிக்கொண்டே ஒரு ஐஸ் க்ரீம் பார்லர் வாசலில் காரை நிறுத்தினான் பிரணவ்.
ராதிகாவிடமும் என்ன வேண்டுமென்று கேட்டுக்கொண்டு தான் ப்ரணவ் சென்றான்..
ஐஸ் கிரீம்மை ரசித்து சாப்பிட்ட இளவரசிக்கு, உண்மையாகவே கோபம் குறைந்தது போல் தான் இருந்தது..
"நானும் நீங்க வருவீங்க என்று நினைக்கவே இல்லை பிரணவ்"
சாப்பிட்டுக்கொண்டே அவள் கூற, அவள் கோபத்தின் லட்சணத்தை நினைத்து உள்ளுக்குள்ளேயே சிரித்து கொண்டான் பிரணவ்.
"நீ கொஞ்சம் மன கஷ்டத்தில் இருக்கிறாயோ என்று தோன்றியது வசி.. அதான் நானே வந்துவிட்டேன்.. மேலும் உன்னை முதல் முறை வெளியில் அழைத்திருக்கிறேன்.. டிரைவரை அனுப்பினால் நன்றாக இருக்காதே.." தெளிவாக அவன் கூறியதில்
'சார் கொஞ்சம் ஓவர் ஸ்பீட் தான் போல்.. அதற்குள் நம் மனதை எல்லாம் புரிந்துகொள்ள தொடங்கிவிட்டாரே..!' என நினைத்துக்கொண்டாள் இளவரசி.
பிரணவ் ராதிகாவிடமும் பேச்சு கொடுத்துக்கொண்டே தான் வந்தான்..
மூவரும் அலுவலகத்தை அடைய, அவர்களுடன் இறங்கியவன், "இது மேனுபாக்ச்சரிங் யூனிட்.. நான் பொதுவா இங்கே தான் இருப்பேன்.. ஷோ ரூமெல்லாம் பிரபா பார்த்துப்பான்.." என்று கூறிக்கொண்டே நடந்தான்
தனது அறைக்கு பக்கத்தில் இருந்த ஓய்வறைக்கு அவர்களை அழைத்து சென்றவன், "இரண்டு பேரும் கொஞ்ச நேரம் இங்கே இருங்க.. ஒரே ஒரு மீட்டிங் மட்டும் இருக்கு.. முடித்துவிட்டு வந்துவிடுகிறேன்.. வந்து உங்களுக்கு ஆபிஸை சுற்றி காட்டுகிறேன்.." என பிரணவ் கூற,
"இத்தனை பெரிய ஆபிஸை சுற்றி பார்ப்பதற்குள் நம் கல்யாண நாளே வந்துவிடும்" என்றாள் இளவரசி சலிப்பாக
பின்னே ஐந்து தளங்களை என்று சுற்றி முடிக்க..!
அவள் கூற்றில் எப்போதும் போல் சிரித்து கொண்டவன், "முக்கியமான இடம் மட்டும் காண்பிக்கிறேன் வசி.. மற்றபடி உன் நிறுவனம் தானே.. பொறுமையாக பார்த்துக்கொள்ளலாம்.. இப்போ போகணும்.." என்றவன் அதற்கு மேல் நிற்காமல் ஒரு தலையசைப்புடன் நகர்ந்துவிட்டான்.
அவன் சென்றதும் இளவரசி அந்த அறையை சுற்றி பார்க்க, "உனக்காக தான் வந்தார் போல் டி" என்றாள் ராதிகா
"ம்ம் பெரிய காதல் மன்னன் தான்.." என இளவரசி கிண்டல் செய்யும் போதே, அவர்கள் அறை கதவு தட்டப்பட்டது..
யாரோ ஒருவர் வந்து 'சாப்பிட எதவாது வேண்டுமா?' என்று கேட்க, அப்போதும் விடாமல், "ஜூஸ்" என்று கூறிவைத்தாள் இளவரசி..
அவர் போனதும், "இப்போ தானே ஐஸ் கிரீம் சாப்பிட்டோம்.." என ராதிகா முகம் சுருங்க கேட்க
"இவரை பார்க்க வந்ததற்கு இது தான் டி நமக்கு லாபம்.. பேசாமல் என்ஜாய் பண்ணு.." என்று கூறி கண்ணடித்தாள் இளவரசி.
இருவரும் ஒரு மணி நேரம் கதையடித்துக்கொண்டே கடத்த, அதற்கு மேல் பிரணவ் வந்துவிட்டான்..
"சுற்றி பார்க்க வருகிறாயா வசி?" என கேட்டுக்கொண்டே அவன் வர
"போகலாம் பிரணவ்.. ஒரே போர்.." என்று கூறிக்கொண்டே எழுந்து விட்டாள் இளவரசி.
அதே நேரம் ராதிகா போன் அடிக்க, "கம்பெனி கால் அண்ணா.. நான் பேசிட்டு வரேன்.. நீங்க போங்க.." என்றுவிட்டாள் ராதிகா
தேவையில்லாத கால் தான்.. அவர்களுக்கு கொஞ்சம் தனிமை கொடுக்க விரும்பியே அவள் ஒதுங்கி கொண்டாள்..
இளவரசியை அழைத்துக்கொண்டு பிரணவ் சில முக்கியமான ப்ராசஸ் மட்டுமே காண்பித்தான்..
அனைத்தையும் சுற்றி காண்பித்தால் , தான் உதை வாங்குவது உறுதி என அவனுக்கே தெரிந்திருந்தது..
முதலில் வெறுமென பார்த்துக்கொண்டு வந்த இளவரசியும், போக போக சுவாரஸ்யமாக பார்க்க தொடங்கி விட்டாள்..
ஒரு இடத்தில் வாட்ச் ஸ்ட்ராப் செய்யும் மெஷின் இருக்க, அதில் இருந்த கருப்பு நிற ஸ்ட்ராப் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது..
"இது ரொம்ப அழகா இருக்கு பிரணவ்" என கூறிக்கொண்டே அவள் அதை தொட போக, அவள் கைகளை சட்டென பிடித்து இழுத்துவிட்டான் பிரணவ்.
"லூசா டி நீ.. ஓடி கொண்டிருக்கும் மெஷினில் போய் கை வைக்கிறாயே! கொஞ்சமும் மூளை இல்லையா? படித்த பெண் தானே! கொஞ்சம் அசந்தால் கை நசுங்கி விடும்.. முட்டாள்..! நீ பார்த்து கிழித்தவரை போதும்.. வா.."
இடம் பொருள் எதுவும் பார்க்காமல் கோபத்துடன் கத்தியவன், அவள் அதிர்ந்து நிற்பதை பொருட்படுத்தாமல், அவளை இழுத்து கொண்டு மீண்டும் ராதிகா இருந்த அறைக்கே வந்து விட்டான்..
"லன்ச் அனுப்ப சொல்கிறேன்.. சாப்பிட்டு விட்டு ரெண்டு பேரும் கிளம்புங்க.. அண்ட், இனி நீ இங்கே வரவேண்டாம்.. நான் வெளியிலேயே வரேன்.." என எந்த உணர்வுமற்று கூறியவன், கோபம் குறையாமல் கதவை அறைந்து சாற்றி விட்டு சென்று விட்டான்..
இத்தனை நேரம் மென்மையாக மட்டுமே பேசி கொண்டிருந்தவன், திடீரென கத்திவிட்டு செல்லவும், ராதிகாவுக்கு ஒன்றும் புரியவில்லை..
"என்ன டி ஆச்சு?" என அவள் மெதுவாக கேட்க
"ஆ..." என அப்போது தான் இளவரசியும் ஏதோ கனவில் இருந்து மீள்வது போல் சுயநினைவிற்கே மீண்டாள்..
"மெஷினில் கவனிக்காமல் கை வைக்க போய்விட்டேன் டி.. நானே கவனித்திருப்பேன்.. அதற்கு போய் இப்படி திட்டிவிட்டு போகிறார்.. அப்படி என்ன கோபம்..!" பேசி கொண்டே வந்தவளுக்கு லேசாக கண்கள் வேறு கலங்கி விட்டது.
தோழி உண்மையாகவே கலங்கி நிற்பதை உணர்ந்த ராதிகா, அவளை ஆறுதலாக அணைத்து கொண்டாள்..
"இதுக்கெல்லாம் அழுவாயா அரசி மா? உன் மேல் உள்ள அக்கரையில் வந்த கோபம் தானே! நீ தானே சொன்னாய், உன்னிடம் மட்டும் தான் அவர் இலக்கமாகவே பேசுகிறார் என்று.. இயல்பு மாறாதில்லையா..? போய் நீயே சமாதானப்படுத்து அரசி.. பாவம்.. பதறி இருப்பார்.." மெதுவாக ராதிகா எடுத்து கூறியது அவளுக்கும் புரிந்தது.
அதே நேரம் அவர்களுக்கான உணவும் வர, உணவு எடுத்து வந்தவனிடமே பிரணவ்வின் அறையை கேட்டுக்கொண்டு அங்கே சென்றாள் இளவரசி.
மூடி இருந்த கதவை மெதுவாக அவள் தட்ட, "கம் இன்" என்ற அவனது இறுக்கமான குரல் தான் அவளை வரவேற்றது.
தன் சீட்டில் உட்காராமல் ஜன்னல் ஸ்க்ரீனை திறந்து கொண்டு, அதன் அருகில் நின்றிருந்த அவனை நோக்கி மெதுவாக வந்தவள், "சாரி" என குரலே எழும்பாமல் கூற
"நீ சாப்பிடவில்லையா?" என்றான் அவன் அவள் புறம் திரும்பாமலே.
"ப்ளீஸ் பிரணவ்.. சாரி.. கோபப்படாதீங்க.. எனக்கு என்னவோ போல் இருக்கிறது.." என மென்மையாக இளவரசி கூற, சட்டென அவள் புறம் திரும்பியவன்,
"எனக்கு இன்னமும் படபடப்பு குறையவில்லை டி.. எதில் அவசரம் காட்டுவது என்றே இல்லையா?" என சீறலாக கேட்டவன், பதில் சொல்ல தெரியாமல் விழித்தவளை ஒரு கையால் பிடித்து தன்னுடன் இழுத்து, கொஞ்சமும் யோசிக்காமல் அவள் இதழ்களை வேகமாக சிறை செய்து விட்டான்..
அவன் செயலில் அதிர்ந்தாலும், அவள் விலக முயற்சிக்கவில்லை..
அவன் முத்தத்தில் காதலோ, காமமோ இருக்கவில்லையே..! அவனிடம் இருந்ததெல்லாம் மனதின் பரிதவிப்பை ஆற்றி கொள்ளும் வேகம் மட்டுமே..
சிறிது நேரத்தில் தானே விலகிவிட்டவன், "உனக்கு ஒன்றென்றால் என்னால் தாங்கவே முடியாது வசி.. நன்றாக நினைவில் வைத்துக்கொண்டு, கவனமா இரு.. என் உயிருடன் விளையாடாதே.. புரிந்ததா..?"
அவளை குனிய விடாமல் அழுத்தமாக பிடித்துக்கொண்டு அவன் கேட்க, அவளும் எதுவும் மறுப்பு கூறாமல் சம்மதமாக தலையாட்டி வைத்தாள்..
“உன் சிறு வலியும்
என் உயிர் வரை வலிக்கிறதடி
முழுதாய் என் உயிர் உன்னுள்
கூடு பாய்ந்து விட்டதோ..!”
மலரும்..