All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிஶ்ரீயின் ‘வெண்ணிலவு துணையிருக்க...’ - கதை திரி

Status
Not open for further replies.

Kavisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
WhatsApp Image 2020-11-20 at 11.40.45 PM.jpg

வெண்ணிலவு துணையிருக்க...

எபி -20

அவளின் நாடியைப் பிடித்து தன்னை நோக்கி நிமிர்த்தியவன் அவள் கண்களைப் பார்த்து பேசினான் “அப்போதுதான் எனக்கு புரிஞ்சது நான் கவலைப் பட்டதெல்லாம் வேஸ்ட், என்னை மாதிரியே நீயும் என்னை எனக்காக நேசிச்சிருக்கன்னு. நம்ம அதற்கான முயற்சி எடுக்கலைனாலும் விதி நம்மளை ஒன்று சேர்த்து விட்டது. நீ உன் அம்மாவிற்கு கட்டுபட்டதும் நான் என் அம்மாவிற்கு கட்டுபட்டதும் ஒரு விதத்தில் நல்லதாப் போச்சு, இப்போ நீ என் பக்கத்தில் என் மனைவியாய் நம்ம பேபியோடு.. ஹவ் நைஸ், யு நோ?”

”-”

“உன் அம்மா என்னமோ ஏதோன்னு பயந்துதான் அந்த விஷயத்தைச் சொன்னாங்க, உனக்கு கெடுதல் பண்ணீட்டாங்களோன்னு குற்ற உணர்வோடுதான் சொன்னாங்க. எனக்கு அவங்க மனநிலை புரிந்தது. உனக்கும் அவங்க மனசு புரிந்திருக்கும்னு நினைக்கிறேன். நீ ஒருநாள் அவங்களை புரிஞ்சுப்பன்னு அவங்களுக்கு சமாதானம் சொல்லிட்டு வந்தப்பத்தான் ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சு, இட் வாஸ் எ ப்ளாண்ட் ஆக்ஸிடெண்ட். உன் கோபத்தை நினைச்சு வருத்தப்பட்டுகிட்டிருந்ததால நான் கொஞ்சம் கவனக்குறைவா இருந்திட்டேன், இல்லைன்னா இதில் இருந்து தப்பிச்சிருப்பேன். என் மனசெல்லாம் உன் நினைவா இருந்தது யு நோ’”

”__”

“ஏன் எதுவும் பேச மாட்டேங்கிற நிலா?”

“ஆகாஷ், என்னை மன்னிச்சிடுங்க. நீங்க நினைக்கிற மாதிரி இல்லை நான் அம்மாகிட்ட சொன்ன விஷயம். உங்களை எனக்கு பிடித்திருந்தது, நம்ம சந்திப்புகள் பலமுறை தவறான சூழலை ஏற்படுத்திச்சு ஆனாலும் உங்க மேல எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது, அது காதலான்னு எனக்குத் தெரியாது. கல்யாணத்தைப் பத்தி கொஞ்சம் கூட நான் யோசிக்காத நிலையில் திடீர்னு ஒரு நாள் அம்மா எனக்கு கல்யாணம் பண்ணனும்னு தீவிரமா சொன்னப்ப, என் புத்தியில் உதித்ததுதான் உங்களை நான் காதலிப்பதாய் அம்மாகிட்ட சொன்னது. அட்லீஸ்ட் அம்மா கன்சிடர் பண்ணி கல்யாணப் பேச்சை நிறுத்துவாங்க, அதற்குபிறகு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி இல்லை உங்க உதவியோடு கல்யாணத்தை எப்படியாவது இழுத்தடிக்கலாம்னு நினைத்தேன். ஆனால் அது இப்படியெல்லாம் போய் முடியும்னு நினைக்கலை. அன்னைக்கு அம்மா என் விருப்பத்தை மதிக்காமல் என்னைக் கட்டாயப் படுத்தியதுனாலத்தான் அவங்க மேல எனக்கு வெறுப்பு வந்திருச்சு. ஆனால் அவங்க மனசை நான் புரிஞ்சிக்க முயற்சி பண்ணலை.” என்று ஆகாஷைப் பார்த்தாள்

“சரி, உன் கிட்டயே நேரடியா கேட்கிறேன். இப்போ சொல்லு என்னை உனக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு” என்று அவள் பதிலுக்காக அவள் முகத்தைப் பார்த்தான்.

”சொல்றேன், கல்யாணத்திற்கு முன் ஒரு வாரம் உங்களை ஆபிஸில் பார்க்க முடியாமல் நான் தவித்தேன் அப்போதான் எனக்கு புரிந்தது என் மனசில் நீங்க இருக்கீங்கன்னு, ஒருவேளை அந்த ஒரு வாரத்தில் என்றாவது ஒரே ஒரு நாள் உங்களைப் பார்த்திருந்தாள், நான் என் அம்மாவையே எதிர்த்து நின்றிருப்பேன். இந்த கல்யாணத்திற்கு சம்மதிச்சு இருக்க மாட்டேன், குறைந்தது கல்யாணத்தன்றாவது கல்யாணம் செய்து கொள்ளப்போகும் பையனிடம் தெரிவித்திருப்பேன். தாலி கட்டும்முன் என் மனதை புரிய வைக்கனும்னு நான் நினைத்தேன் ஆனால் நீங்களே வந்து ஒரு பெண்ணை காதலிப்பதாகக் கூறியதும் எனக்கு சிறிது நிம்மதியைத் தந்தது. ஆனால் தாலி கட்டியதும் அது நீங்கன்னு தெரிஞ்சப்புறம் என் மனசு பட்ட பாடு உங்களுக்குத் தெரியாது. சந்தோஷப் படுவதா, இல்லை உங்க மனசில் வேறொரு பெண் இருப்பதை நினைத்து துக்கப் படுவதான்னு தெரியலை அதற்கிடையில் உங்க வசனம் வேற” என்று நிறுத்தினாள்.



“ஹேய் சாரி நிலா, நான் ஏதோ கோபத்தில்…… அன்று உன்னை மணப்பெண்ணா பார்த்ததும் ஒரு புறம் சந்தோஷமா இருந்தாலும் மறுபுறம் நீ என் உண்மையான நிலை தெரிந்து பணத்திற்காக சம்மதிச்சிருக்கன்னு நினைச்சேன். நான் மணப்பையன்னு தெரிஞ்சும் ஏன் கடற்கரைக்கு என்கூட வந்தப்போ கல்யாணத்தைப் பத்தி நீ எதையும் சொல்லலை. அது இதுன்னு என்னென்னமோ கேள்விகள் மனசில் ஓடிட்டிருந்தது. என் நிலைமை வேறையா இருந்தது, அந்த ஒரு வாரம் வேறு வேலை விஷயமா பிஸியா இருந்தேன், அம்மா சொல்லிகிட்டே இருப்பாங்க ஆனால் இவ்வளவு சீக்கிரம் கல்யாணத்தை வைப்பாங்கன்னு நான் நினைக்கலை. அவங்களை எதிர்க்கவும் முடியாம இந்த கல்யாணத்தை ஏற்கவும் முடியாம நான் அங்கு நின்றிருந்தேன். ஆனால் எல்லாமே அதற்குப்பிறகு என் அம்மாகிட்ட பேசினப்பத்தான் புரிந்தது. உன்னிடம் எந்த விவரத்தையும் சொல்லாமத்தான் கல்யாணத்தைச் செய்தாங்கன்னு.”

“_”

“ஒவ்வொரு முறை உன்கூட பேசும்போது எல்லாத்தையும் சொல்லிடனும்னு நினைப்பேன், ஆனால் அபத்தமா யார்கிட்டயாவது நீ சொல்லிவிட்டால் உன்னைச் சுற்றியும் எங்கள் எதிரிகளின் பார்வை திரும்பும்னு நான் பயந்தேன். கடற்கரைக்கு கூட்டிப்போனப்போ ஒரு சந்தேகத்தில் தான் நம்மளை மோத வந்தாங்க, ஒருவேளை கன்பார்மா நான் தான் ஜேகே பையன்னு தெரிந்திருந்தா அப்பவே தூக்கி இருப்பாங்க, அன்னைக்குத்தான் எனக்கு சீரியஸ்னஸ் புரிந்தது”

“-”

“என்னை மன்னிச்சிரு நிலா, எதையும் தெளிவா பேசாததினாலத்தான் இதெல்லாம்”

“_”

சூழலை மாற்ற நினைத்தவன்.

“என் மனசில் இருந்த பெண் யாருன்னு தெரிஞ்சுகிட்டியா?”

அவள் எதுவும் பேசாமல் அவன் தோளில் சாய்ந்தாள். “போன வாரம் இளங்கோ சொன்னப்பத்தான் நீங்க கல்யாணத்திற்கு முன்னாடி புலம்பினது எனக்குத் தெரிந்தது. ஆனால் நீங்க தான் ஜேகே சாரோட பையன்னு என்னால் ஜீரணிக்க முடியாமல் இருந்த நிலையில் நான் அதையெல்லாம் வசதியா மறந்து கோபத்தில் ஏதேதோ செய்ய நினைச்சேன்”

“மன்னிப்புன்னு தொடங்கினா, மாத்தி மாத்தி மன்னிப்பு கேட்கத்தான் நமக்கு நேரம் இருக்கும். பழையதை எல்லாம் மறந்திடுவோம், நான் வீட்டுக்கு வரும் போது நீ வீட்டில் இருக்கனும், இருப்பியா?”

“ம்”

”அப்புறம் நிலா, கலை நிகழ்ச்சி முடிந்ததும் நீ எங்கே போயிருந்த?”

“அம்மாவை ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணியிருக்காங்கன்னு போன் வந்துச்சு அது தான். ஏன் கேட்கறீங்க?”

“சும்மா தான்”

”அவன் எதற்கு கேட்கிறான் என்றெல்லாம் துருவித் துருவிக் கேட்கும் மனநிலையில் அவள் இல்லை. காலையில் இருந்து நடந்தவையெல்லாம் சினிமா கதை போல இருந்தது. மனதும் உடலும் சோர்வாக உணர்ந்தாள்”

அவள் நிலையை உணர்ந்தவன் அவர்களுக்கு அனுப்பப்பட்ட உணவை உண்டுவிட்டு அவளை படுக்கச் சொன்னான். இருவரும் உணவு உண்டுவிட்டு நோயாளியை கவனிப்பதற்கானவர்களுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கையில் நிலா படுத்துக் கொண்டாள் ஆகாஷும் நோயாளியின் படுக்கையில் படுத்துக்கொண்டான்.

நடு இரவில் ஏதோ பாரமாக உணர்ந்தவன் கண் விழித்து பார்க்கையில் நிலா அவன் அருகில் படுத்திருந்தாள். அவள் தலையைக் கோதி அவளை இருக்கமாக அணைத்துக் கொண்டு படுத்துக் கொண்டான்.

காலையில் எழுந்து செல்வதற்கு தயாரானவள் போவதற்கு மனமே இல்லாமல் இளங்கோவுடன் சென்றாள். அடுத்த நாளே மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தவன் சிரித்த முகமாக தன்னை வரவேற்ற நிலாவை ஆசையாகப் பார்த்தான். வீட்டில் தாயும் தந்தையும் கர்ணனும் ரதியும் நிலாவும் என்று அவனுக்கு வீடு நிறைந்திருந்தது போலத் தோன்றியது. அன்றிரவு படுக்கும் முன் நிலா புலம்பினாள் “நீங்க கொஞ்ச நாள் இந்தியா விட்டு போலாமில்லை”

“ஓடி ஒளியிறது கோழைங்களோட செயல் உன் ஹஸ்பெண்ட் ஒரு கோழையா இருக்கனும்னு நினைக்கிறியா நிலா?”

‘-”

”அப்பா கூட இதைத்தான் சொன்னார், நான் என்ன சொன்னேன் தெரியுமா?”

“என்ன சொன்னீங்க?”

“இந்த வெண்ணிலா எனக்குத் துணையிருக்கும் போது எனக்கு எதுவும் ஆகாதுன்னு சொன்னேன்?”

“-”

“என்ன சரிதானே?”

அவள் அவனை அணைத்துக் கொண்டு எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டாள். அவன் சொன்னது போல் அவனுக்கு உறுதுணையாக இருந்து அவனை பாதுகாப்பதும் தன் கடமைதான் என்று உணர்ந்தாள். குறைந்தது அவன் மனதை அமைதிப்படுத்தவாவது தான் முயற்சிக்க வேண்டும். ஓடி ஒளிவது சரியல்ல என்று நினைத்துக் கொண்டாள்.

அவனது உடல்நிலை சரியானதும் திருமணம் நடந்து கோவிலுக்குச் சென்று அன்று பாதியில் நின்று போன மூன்று சுற்றை முடிக்குமாறு மீனாட்சி கூற இருவரும் மறுக்காமல் சென்றனர். இவர்கள் சென்றது தங்களை ஒன்று சேர்த்த இறைவனுக்கு நன்றி கூறத்தான்.

கோவிலுக்குச் சென்று வழிபட்டவர்களுக்கு மன நிறைவாக இருந்தது. அர்ச்சனைத் தட்டை கொடுத்த பூசாரி, “என்ன நிலா, சொளக்கியமா? உண்டாகியிருக்கன்னு அம்மா சொன்னாங்க”

நிலா சிறு புன்னகையோடு தட்டை வாங்கிக் கொண்டாள்.

“தம்பிக்கு அடி பட்டுச்சுன்னு கேள்வி பட்டேன், இப்போ எப்படி இருக்கு தம்பி”

“நல்லாயிருக்கேன்”

“எல்லாம் அந்த குழந்தை…” என்று அவர் முடிப்பதற்கு முன்னர் கையை நீட்டி தடுத்தவன்.

“நீங்க எதையும் சொல்ல வேண்டாம் சாமி, நல்லதோ கெட்டதோ எதுவும் தெரியாத அந்த குழந்தையை இதில் இழுக்க வேண்டாம்”

“தம்பி நான் என்ன சொல்ல வரேன்னா?”

“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நீங்க நல்லதே சொல்ல இருந்தாலும் எங்களுக்கு அதை கேட்க வேண்டாம்.” என்று விரைவாக அந்த கோவிலை விட்டு வெளியேறினான். மாறுதலுக்காக அவர்கள் வழக்கமாகச் செல்லும் கடற்கரைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார்கள்.

வீட்டிற்குள் நுழைந்ததும் அங்கு ஜோஸியரை அமர்த்தி மீனாட்சி எதுவோ பேசிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது.

“என்னம்மா இது?”

“அகி அது வந்து…” என்று தயங்கினார்.

“எது வந்து?”

“உனக்கு..”

“எனக்கு ஒன்னுமில்லை. எனக்கு ஏதாவது ஆகிறதுக்கு முன்னாடி இவரை இங்கிருந்து போகச் சொல்லுங்க”

“அகி”

சூழ்நிலையை புரிந்து கொண்ட ஜோஸியர் மற்றொரு நாள் வருகிறேன் என்று விடை பெற்றார்.

அவன் ஏதும் பேசாமல் மொட்டை மாடிக்குச் சென்றான். அவன் பின்னே சென்ற நிலா “ஏங்க அத்தைக் கிட்ட அப்படி நடந்து கிட்டீங்க?”

“பின்ன என்ன நிலா? ஒரு அளவிற்கு ஜாதகத்தை பார்க்கலாம். தொட்டதுக்கெல்லாம் எடுத்துகிட்டு சுத்தினா? உனக்குத் தெரியாது ஜாதகம்கிற பேரில் என்னவெல்லாம் நடக்குதுன்னு. நமக்கு நன்மையா முடிந்தது அதே போல எல்லாருக்கும் இருக்கும்னு சொல்ல முடியாது. சும்மா அதில் தோஷம் இதில் தோஷம் இந்த பரிகாரம் அந்த பரிகாரம்னு எத்தனை பேர் வாழ்க்கை வீணாகியிருக்கு தெரியுமா? எத்தனைப் பெண்கள் எத்தனை ஆண்கள் இதனால் பாதிக்கப் பட்டிருக்காங்க, எத்தனை குழந்தைகள் பலியாகியிருக்குன்னு தெரியுமா? சிலர் அதை ஒரு அளவிற்கு கண்டுப்பாங்க ஆனால் பலர் அதையே கையில் … இதோ அம்மா மாதிரி.. வாழ்க்கையில் அது இதுன்னு நடந்துகிட்டேதான் இருக்கும் அதற்கெல்லாம் இதை தூக்கிட்டு நடந்தா…இப்ப பரிகாரம் செய்தா எல்லாம் சரியாயிடும்னா ஏன் எல்லாரும் இங்க நிம்மதியா இல்லை, நோயில்லாமல் இல்லை, எத்தனை பிரச்சினையை இந்த பரிகாரங்கள் நிவர்த்தி செய்திருக்கனும். நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு அது பல உருவில் இருக்கு நம்ம மன அமைதிக்காக அதை வணங்கிறோம் அவ்வளவுதான் அதற்கு மேல் இதெல்லாம் புல்ஷிட்”

“ஓகே, கூல்.. நான் அவங்களைச் சொல்லி புரியவைக்கிறேன். இனிமேல் இப்படி ஹார்ஷா நடந்துக்காதீங்க”

“ஏன் உனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கா?”

“ச்ச ச்ச, அதெல்லாம் இல்லை. உங்க கருத்துதான் எனக்கும். ஆனால் வயசானவங்க கொஞ்சம் எடுத்துச் சொல்லிதான் புரியவைக்கனும். தன் மகன்னு வரும்போது எல்லாரும் ஆறுதலை தேடுவதுதான்..”

அவன் முறைத்தான்.

“’சரி சரி கோபப்படாதீங்க”

கோவிலில் பூசாரி தன் குழந்தையைக் குறித்து ஏதோ சொல்ல வந்தது ஆகாஷிற்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. நிலா சொன்னது போல் தனக்கு தோஷம் அதற்கு ஒரு திருமணம் என்று சொன்ன போது வராத கோபம் தன் குழந்தை என்று குறிப்பிட்டதும் வந்துவிட்டது. அதுபோல் தான் அம்மாவிற்கும் இருக்கும் போல … சரி எடுத்துச்சொல்லி மாற்றக்கூடியதுதான் என்று முடிவெடுத்தான்.

”ஓகே” என்று அவன் பரிசாகக் கொடுத்த மூக்குத்தியை அணிந்திருந்த மூக்கின் மீது இதழ் பதித்தான்.

என்றும் பிரியாத அந்த ஆகாயமும் வெண்ணிலவையும் சாட்சியாக அவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கினார்கள்.



-முற்றும்-
 

Kavisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
WhatsApp Image 2020-11-20 at 11.40.45 PM.jpg

வெண்ணிலவு துணையிருக்க...

எபிலாக்

“நிலா, லேட் ஆகுது சீக்கிரம் வா”

”இதோ வந்திட்டேன்” என்று கையில் இருந்த மகளை கொஞ்சிக் கொண்டே மாடியில் தாவித் தாவி இறங்கினாள்.

நிலாவையே ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் அருகில் வந்ததும் “நீ என்ன மானா? இப்படி தாவித் தாவி படியிறங்கிற”

“ஆமாம், இப்போ என்ன?”

“இப்போ ஒன்னுமில்லை” என்று பெரு மூச்சுவிட்டான்.

“ப்பா அனல் அடிக்குது, வாங்க லேட் ஆகுதுன்னு குதிச்சீங்க”

“யா, கம் கம் லெட்ஸ் கோ” என்று மனைவியையும் குழந்தையையும் எப்போதும் போல் கார் கதவைத் திறந்து ஏற வைத்துவிட்டு காரை எடுத்தான்.

கார் சென்று நின்ற கட்டிடத்தைப் பார்த்து நிலா வாயைப் பிளந்தாள்.

”ஏன் நிலா வாசலிலே நின்னுட்ட? கோ இன்ஸைட்”

பிரம்மாண்டமாக இருந்த அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தவள் எதிரே வந்த விக்கியைப் பார்த்து “விக்கி சார்” என்று நின்றுவிட்டாள்.

“ஹாய் நிலா” என்று அவளை புன்னகையோடு வரவேற்றான்.

விக்கி அங்கு இருப்பான் என்றும் அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நிலாவிற்கு காத்திருக்காமல் ஆகாஷ் குழந்தையுடன் அவளைக் கடந்து உள்ளே சென்றான். எதுவும் சொல்லாமல் தன்னைக் கடந்து போன ஆகாஷைப் பார்த்துக் கொண்டிருந்தவள் விக்கியிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் விழித்தாள்.

“நிலா” என்று ஓடிவந்து அவளை பின்னிலிருந்து ஒரு கை கட்டிக் கொண்டது. அதில் நெளிந்தவள், பிடியை தளர்த்தி திரும்பிப் பார்க்கையில் அங்கு வாய் நிறைய பல்லோடு ஷீலா நின்று கொண்டிருந்தாள்.

“ஷீலா, நீ எங்க இங்க” என்று கேள்வி கேட்டவள், சங்கடமாக விக்கியைப் பார்த்தாள்.

நிலாவை நோக்கி வந்த விக்கி “ஐ ஆம் சாரி நிலா, உண்மை என்னன்னு தெரியாம உங்களை நோகடிச்சதுக்கு, ரியலி சாரி, ஹோப் யு கேன் அண்டர்ஸ்டாண்ட் மை சிட்டுவேஷன்” என்று மனதார மன்னிப்பு கேட்டான்.

மெலிதாகப் புன்னகையோடு ஷீலாவை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

“மேனேஜிங் டைரக்டர் வெண்ணிலா” என்று பலகை இருந்த அறைக்குள் நுழைந்தவளை நோக்கி புருவம் உயர்த்திய ஆகாஷ் “’என்ன ஸிஸ் உங்க ப்ரெண்ட் என்ன சொல்றாங்க” என்று ஷீலாவிடம் கேட்டுக்கொண்டே நிலாவைப் பார்த்தான்.

“இங்க என்ன நடக்குதுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று கோபப்பட்டாள் நிலா.

ஆகாஷின் கையில் இருந்த குழந்தையை வாங்கிக்கொண்டு மெதுவாக ஷீலா வெளியே சென்றாள்.

அவள் சென்றதும் கோபமாக இருந்த மனைவியின் முன் வந்து நின்றவன் அவளை தன்னோடு சேர்த்து அணைத்தான். ”கலை நிகழ்ச்சி நடந்த அன்னைக்கு நீ நேரமே கிளம்பி போன அதே சமயம் விக்கி கூட இருந்த ஷீலாவும் ஏதோ அவசரம்னு ஹாஸ்டலுக்கு கிளம்பி போயிருக்கா. அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு நீ நேரமே அரங்கத்தை விட்டு போனதையும் ஷீலாவுக்கு கல்யாணம் நடந்ததையும் ஒன்னுசேர்த்து தப்பா நினைச்சிட்டோம் உனக்குத் தெரிஞ்சுதான் ஷீலா கல்யாணம் நடந்திருக்கு, ஆனால் அதைப்பத்தி நீ எங்ககிட்ட எதுவுமே சொல்லலியேன்னு வருத்தப்பட்டோம். அதுதான் உன்கிட்ட பேசப் பிடிக்காம நானும் விக்கியும் விலகினோம். ஆனால் கொஞ்ச நாள் கழிந்து ஷீலா ஆபிஸிற்கு வந்துட்டுப் போனப்போ என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்க நினைச்சேன். உன்கிட்ட கேட்டா நீ சரியா பதில் சொல்லுவியான்னு தெரியலை, விக்கி வேற வேதனையோட உச்சத்தில் இருந்தார். அப்பாகிட்ட பெர்மிஷன் வாங்கி ஷீலா அட்ரஸை எடுத்து தேடிப் போனேன். பட் என்னால் அவளை நெருங்க முடியலை, நான் ஆபிஸிற்கு வராம போன அந்த ஒரு வாரத்தில் ஷீலாவைத் தேடித்தான் போயிருந்தேன். நீ நினைக்கிற மாதிரி இல்லை நிலா அவங்க பேமிலி கொஞ்சம் டெரர் தான். ரொம்ப முயற்சி செய்து எதுவும் முடியாம போனப்போ அவ வாழ்க்கையை அவ தேர்ந்தெடுத்திட்டான்னு நானே என்னை கன்வைன்ஸ் பண்ணி விட்டுவிட்டு வந்தேன் அதுக்குள்ள நம்ம வாழ்க்கையே மாறிப் போயிடுச்சு, அப்பாகூட நான் ஒரு வாரம் வெளியூருக்கு டிரைவரா போயிருந்தேனே அப்ப மறுபடியும் ஷீலாவைப் பார்த்தேன். அவ அத்தைப் பையனை கல்யாணம் பண்ணிக்கலைன்னா விக்கியை கொன்னுடுவாங்கன்னு மிரட்டியதும் விக்கியை காப்பாற்ற இந்தம்மா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க. ஆனால் அவ அத்தை பையனுக்கு ஷீலா விஷயம் ஏற்கனவே தெரியும். கல்யாணம் முடிந்ததும் இரண்டு பேரும் ப்ளான் பண்ணி அவங்க பேமலியை ஏமாற்றிவிட்டு அமெரிக்கா போவதாய் சொல்லி பெங்களூரு வந்திருந்தாங்க. அங்கதான் எதேச்சையா நான் ஷீலாவைப் பார்த்தேன் எல்லாத்தையும் சொல்லி அழுதா, அத்தை பையனும் அவளோட காதலுக்கு ஹெல்ப் பண்ணுவதாய் சொல்லி சமாதானம் செய்திருக்கிறான். எங்க தேடியும் விக்கியை கண்டு பிடிக்கமுடியலை. அய்யாதான் தேவதாஸா யார் கிட்டயும் சொல்லிக்காம காணாம போயிட்டாரே. என்னைப் பார்த்ததும் விக்கி இருக்கிற அட்ரஸைக் கேட்டாங்க. நானும் என்னோட கனெக்‌ஷன்ஸை வைத்து எப்படியோ விக்கியை கண்டுபிடிச்சிட்டேன். சென்னை வந்தா பேமிலிக்கு தகவல் போயிடும்னு விக்கியை பெங்களூருக்கு வரச்சொன்னாங்க, அப்புறம் என்ன அத்தை பையனுக்கு டாட்டா காட்டிவிட்டு, விக்கி கூட வாழ்ந்திட்டிருக்கா”

“இவ்வளவு நடந்திருக்கு நீங்க எதையும் என்கிட்ட சொல்லவேயில்லை”

“உன் சின்ன மூளையில் எல்லாத்தையும் நீ போட்டு குழப்ப வேண்டாம்னுதான் எதையும் சொல்லலை, அதற்கான சந்தர்ப்பமும் அமையலை”

அவன் பிடியை தளர்த்தியவள் கோபமாக வெளியேறினாள். வேகமாக அவள் பின்னே சென்றவன் அவள் எதிரே சென்று வழியை மறித்தான்.

“தொட்டதுக்கெல்லாம் இப்படி கோபப்பட்டால் எப்படி”

“என்னது இது சாதாரண விஷயமா உங்களுக்கு, ஷீலா எப்படி இருக்காளோ அவ லைப் என்னாச்சோன்னு எத்தனை நாள் வருத்தப் பட்டேன் தெரியுமா?”



“சரி, சாரி. என்னை மன்னிச்சிடு. நான் அந்த கோணத்தில் யோசிக்கலை”

“_”

“நிலா, ப்ளீஸ் இந்த கம்பெனியோட எம்டி இப்படி உர்ருன்னு இருந்தா எப்படி பிஸினெஸ் பேச வருவாங்க? உனக்காகா இரவு பகலா யோசிச்சு நீ சொன்ன ஐடியாவையே வெச்சு ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியை தொடங்கியிருக்கேன். உன் புருஷன் லட்சக்கணக்கில் இதில் இன்வெஸ்ட் பண்ணியிருக்கேன், தயவுசெய்து என் பணத்தையும் மானத்தையும் காப்பாத்து மா” என்று கெஞ்சுவது போல நடித்தான்.

“இதுக்கொன்னும் குரைச்சல் இல்லை” என்று சிலிர்த்துக் கொண்டாள்.

“அவ வாய் நிறைய ப்ரோ ப்ரோன்னு கூப்பிடுவா, அவளை எப்படி அப்படியே விடுவேன் நிலா. அவங்க காதல் எப்படிப் பட்டதுன்னு நானே பார்த்திருக்கேன், என்னால ஏதாவது செய்ய முடியுமான்னு முயற்சி செய்தேன் அப்போ முடியாதது நம்ம கல்யாணத்திற்கு பிறகுதான் நடந்தது. நான் இருந்த குழப்பத்திலும் பிரச்சினையிலும் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லி உன்னை நோகடிக்க வேண்டாம்னு நினைச்சேன். இப்பத்தான் கொஞ்ச நாளா சென்னை வந்து போறாங்க. அரசல் புரசலா அவ வீட்டுக்கு செய்தி போயிட்டிருக்கு ஆனால் அவங்களால கண்டு பிடிக்க முடியலை. இன்னும் கொஞ்ச நாளில் எல்லாம் சரியானதும் அவங்களும் நம்மகூட இங்கேயே சென்னையில் செட்டிலாயிடுவாங்க. உனக்கு உன் தோழி திரும்பி கிடச்சிடுவா. ஏதாவது புரியுதா?” என்று கேள்வியாக அவளைப் பார்த்தான்.

உதட்டைப் பிதுக்கி தலையை இடம் வலமாக ஆட்டினாள்.

“இதுக்குத்தான் உன்கிட்ட எதையும் சொல்லலை, அதுக்கான மூளை உன்கிட்ட இல்லை. என் கம்பெனி என்னவாகப் போகுதோ, கடவுளே” என்று மேலே பார்த்து கையை விரித்தான்.

“உங்களை” என்று வழக்கம்போல் அடித்தவள், மீனாட்சியும் ரதியும் வருவதைப் பார்த்து அவர்களை நோக்கி நடந்தாள். அவர்கள் பின்னே சரஸ்வதியும் வந்து கொண்டிருந்தார். நிலா தனது தோழியை மீனாட்சிக்கும் ரதிக்கும் அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தாள்.

மருமகனை நோக்கி வந்த சரஸ்வதி அவனை கையெடுத்து தொழுது மனமாற நன்றியைத் தெரிவித்தார். “ரொம்ப சந்தோஷமா இருக்கு தம்பி, நீங்க என் மருமகனா கிடைச்சது என் மகளோட பாக்கியம். நிலா கூட என்னை சரியா புரிஞ்சுகிக்களை ஆனால் நீங்க என்னை புரிஞ்சுகிட்டதுக்கு நான் என்னைக்கும் கடமை பட்டிருக்கேன். அவளுக்கு அவ அப்பா ஞாபகம் வராம நீங்க தான் பார்த்துக்கனும். எக்காரணம் கொண்டும் அவ அப்பா பத்தின விஷயங்களை நீங்க அவளுக்கு சொல்லிடாதீங்க. கடந்தது கடந்ததாகவே இருக்கட்டும்” என்று கெஞ்சும் தோரணையில் கேட்டார்.

“அத்தை, நான் அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும் சொல்றேன். நிலாவை பத்தின கவலையை விடுங்க, அவ என் பொறுப்பு” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே நிலா அங்கு வந்துவிட, சரஸ்வதி மெதுவாக மீனாட்சியை நோக்கி விளகினார்.

“என்ன மருமகனும் மாமியாரும் பேசிக்கிட்டிருந்தீங்க?”

“எல்லாம் நம்மைப் பற்றித்தான்”

“என்னவாம்?”

“எப்ப மருமகனே என் பெண்ணை தேனிலவுக்கு கூட்டிகிட்டுப் போறீங்கன்னு கேட்டுகிட்டிருந்தாங்க”

அவன் பதிலை கேட்டு நிலா முறைத்தாள்.

“நான் எப்பவோ ரெடி உங்க பொண்ணுதான் கொஞ்சம் மக்கர் பண்ணுதுன்னு பேசி முடிக்கிறதுக்கு முன்னாடி நீ வந்திட்ட”

“-”

“என்ன பதிலை காணோம்”

“-”

“பார்த்து கண்ணு வெளியில் வந்திடப்போகுது” என்று அவள் முறைப்பதை கிண்டல் செய்தான்.

“பதில் எல்லாம் அப்புறமா சொல்றேன், மாமா இளங்கோ எல்லாரும் வந்தாச்சு விளக்கேத்துவோம்” என்று வெளியில் சிரிப்பது போன்று முகத்தை வைத்துக் கொண்டு இழுக்காத குறையாக அவனை இழுத்துச் சென்றாள்.

நிலவின் ஒளியை வாங்கிக்கொண்டு அதற்குத் துணையாக இருக்கும் ஆகாயத்தைப் போல இந்த வெண்ணிலாவிற்கும் என்றும் துணையாக இருப்பான் நம் கதாநாயகன் ஆகாஷ்.



-நன்றிகளுடன்

கவிஸ்ரீ
 

Kavisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெண்ணிலவு துணையிருக்க கதை இனிதே முடிவடைந்துவிட்டது. என் கதையை பொறுமையுடன் வாசித்து கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த அரிய பெரிய வாய்ப்பினை எந்த வித கண்டிஷனும் இல்லாமல் இத்தளத்தில் எழுத திரியை அமைத்துத் தந்த ஸ்ரீகலா மேம்மிற்கு கோடானுகோடி நன்றிகள். தொழில் நுட்ப ரீதியாக பெரிய அனுபவம் இல்லாத காரணத்தினால், பலவற்றையும் செயல் படுத்தவோ, முயற்சி செய்யவோ முடியவில்லை. பல எழுத்தாளர்களின் படைப்பினை பார்க்கும் போதும் வாசிக்கும் போதும் நான் எவ்வளவு பின் தங்கியுள்ளேன் என்பதை புரிந்து கொண்டேன், இனியும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்று உணர்ந்து கொண்டேன். கட்டுரை போட்டிகளில் கல்லூரி படிக்கும் காலங்களில் பங்கேற்று பரிசுகளை வாங்கியுள்ளேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது தொடங்கிய வாசிக்கும் பழக்கம் இடையில் தடைபட்டாலும் மீண்டும் தொடர முயன்றது. கதை எழுத வேண்டும் என்ற எண்ணம் பல நாட்களாக இருந்தது அந்த ஆசையை நிறைவேற்றித் தந்த ஸ்ரீ மேம்மிற்கு எத்தனை நன்றிகள் கூறினாலும் தீராது. இத்தளத்தில் எழுதும் அனைத்து எழுத்தாளர்களுக்கும், பரிசுகள் பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நன்றியுடன்

கவிஸ்ரீ
 
Status
Not open for further replies.
Top