All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "தழலாய் நின் நேசம்..!!" - கதை திரி

Status
Not open for further replies.

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ அடுத்த கதைக்கான அறிவிப்போடு வந்துவிட்டேன்..

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக செய்ய நினைத்து தள்ளிப் போய் கொண்டே இருந்த ஒரு சிறு முயற்சி இது. இந்த முறை செய்தே தீருவது என்ற முடிவோடு வந்து விட்டேன்..

அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா.. அது வந்து.. அது வந்து நான் ஒரு சீரிஸ் எழுத போறேன்.. ஹிஹிஹி.. யாரும் அடிக்க வராதீங்க, அதற்கும் வழக்கம் போல் உங்களில் அன்பும் ஆதரவும் கிடைக்குமென நினைத்தே இந்த முயற்சியில் இறங்கி இருக்கேன்..

இதில் மொத்தம் ஆறு கதைகள் வரும்.. ஆறு கதைகளின் கதாபாத்திரங்களும் ஒருவரோடு ஒருவர் எப்படி தொடர்பு உடையவர்கள் என்பதை எல்லாம் கதையின் போக்கில் தெரிந்துக் கொள்ளுங்கள்..

இந்த கதைகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று இழைந்து வருவதால் இழை என்ற பெயரிலேயே இவை வெளி வரும்..

இனி கதையை பற்றி பார்ப்போமா..?

முதல் கதை அதாவது இழை 1..

இதன் நாயகன் இதுவரை நான் என் கதைகளில் தொடாத ஒரு பின்னணியை கொண்டவன்.. யாரென ஏதாவது உங்களால் கணிக்க முடிகிறதா..?

1.. 2.. 3..

ஒகே நானே சொல்லி விடுகிறேன்.. இந்த கதையின் நாயகன் அரசியல் பின்னணியைக் கொண்டவன், கதையும் அரசியல் பின்புலத்தை கொண்டே நகரும்..

கதையின் தலைப்பு : தழலாய் நின் நேசம்..!!

34888

நாயகன் : நிமலன் நெடுஞ்செழியன்

நாயகி : தமயந்தி ஜெயதேவன்


ஏப்ரல் 12 முதல் நம் வழக்கமான நாட்களான வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கதை தொடர்ந்து வரும்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34889
தழல் – 1

கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தைக் கலிதோஷம் நீங்கிடவே

திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்

என்று எங்கோ ஒலித்துக் கொண்டிருக்க.. அந்த அதிகாலை அமைதியில் மெலிதாக அந்தப் பாடல் காற்றைக் கிழித்துக் கொண்டு காரில் பறந்து கொண்டிருந்த நிமலனின் செவியை வந்து தீண்டியது.

அதில் இனிமையான அந்த இசையை விழிமூடி ஒரு நொடி உள்வாங்கியவனுக்கு மனம் ஒருவித அமைதியை கொடுக்க.. இதே மனநிலையை நீடிக்க விரும்பி, காரில் இருந்த இசை தட்டில் பாடலை ஒலிக்க விட்டான் நிமலன் நெடுஞ்செழியன்.

அனைவரையும் போலவே நிமலனுக்கும் கார் பயணத்தின் போது இளையராஜாவையே கேட்க பிடிக்கும். மெல்லிய குரலில் அங்கு இசை வழிந்தோட.. அதை ரசித்தவாறே பயணித்துக் கொண்டிருந்தவனின் மனம் சற்று அமைதியானது.

கடந்த சில நாட்களாகவே அவன் மனம் ஒருவித அழுத்தத்தையும் வலியையும் உணர்ந்து கொண்டே இருந்தது. அதிலிருந்து வெளி வரும் வழியும் தெரியாமல், வெளி வரவும் முடியாமல் தவித்திருந்தவனுக்குத் தன் மனநிலையை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியா ஒரு நிலை தான்.

அதனாலேயே ஒரு மாற்றத்திற்காக பெங்களூர் சென்று விட்டவனுக்கு இப்போதைக்கு இங்குத் திரும்பி வரும் எண்ணமே இல்லை. ஆனால் கட்சி மேலிடத்தில் இருந்து அவனுக்கு இன்று இங்கு வந்தேயாக வேண்டுமென்ற கட்டளை வந்திருக்க.. அதை மீற முடியாமல் கிளம்பி வந்து கொண்டிருந்தான் நிமலன்.

மனம் முழுக்க அவ்வளவு கோபமும் வெறுப்பும் இருந்தது. அதை மறைத்துக் கொண்டு ஊர் உலகத்திற்காக அங்குச் சென்று எதுவுமே நடக்காதது போல் புன்னகை முகமாக ஊடகங்கள் முன்பு நிற்க வேண்டிய சூழல்.

ஆனால் இதைத் தவிர்க்கவும் முடியாது என்று புரிந்தே நேற்றில் இருந்து எது நடந்தாலும் எத்ர்வினையாற்றவே கூடாது என்று தன் மனதை பெருமளவில் தயார் செய்து கொண்டே கிளம்பி வந்து கொண்டிருந்தான் நிமலன்.

நேற்று இரவு கிளம்பும் போதே தன் பாட்டி சூர்யகலாவுக்கு அழைத்து விவரம் சொல்லி இருந்தான் நிமலன். இல்லையெனில் அவர் அங்குச் செல்ல வேண்டாமெனப் பெரும் பிரச்சனை செய்ய வாய்ப்பிருப்பது அறிந்தே முதலில் இதைச் செய்திருந்தான் நிமலன்.

அப்போதும் அவன் எதிர்பார்த்தது போலவே, “அதெல்லாம் நீ அங்கே போகணும்னு அவசியமில்லை நிமலா.. அப்பறம் ஏதாவது காரணம் சொல்லிக்கலாம், நீயும் இப்போ ஊரில் இல்லை.. அதனால் இதையே கூட நீ காரணமா சொல்லிக்கலாம்..” என்று அவனை வர விடாமல் தடுக்கவே முயன்றார் சூர்யகலா.

அவனே விருப்பமில்லாமல் கிளம்பி வந்து கொண்டிருக்கும் நிலையில் இது வேறு அவனுக்கு எரிச்சலை தர.. அவரை எதிர்த்து பேச விரும்பாமல் “தலைவர் உத்தரவு பாட்டி..” என்று ஒருவித அழுத்தத்தோடு சொல்லி முடித்திருந்தான் நிமலன்.

இதுவே நிமலன் இனி இதைத் தட்ட மாட்டான் என்பதை அவருக்குப் புரிய வைக்கப் போதுமானதாக இருக்க.. அதோடு அமைதியாகிப் போனார் சூர்யகலா.

இதையெல்லாம் யோசித்தவாறே பயணித்துக் கொண்டிருந்தவனின் கவனத்தை கமலின் குரலில் வழிந்த பாடல் கலைக்க.. தன் கவனத்தை அந்தப் பக்கம் திருப்பினான் நிமலன்.

எந்தன் காதல் என்னவென்று…

சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது…
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்…
என்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது…
மனிதர் உணர்ந்து கொள்ள…
இது மனிதக் காதலல்ல…

அதையும் தாண்டிப் புனிதமானது…

என கமல் காதலில் உருகி பாடிக் கொண்டிருக்க.. தன் மனநிலையை மாற்ற வேண்டி, அதனோடு சேர்ந்து மெல்ல முணுமுணுத்தவாறே ஸ்டேரிங்கில் தன் விரல்களால் லேசாக தாளமிட்டப்படியே மிதமான வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தான் நிமலன்.

அந்த அதிகாலை மூன்று மணியளவில் ஊர் உலகமே அமைதியாக இருக்க.. அந்தத் தனிமையும் குளுமையும் மனதிற்குப் பிடித்த இசையுமாக ஆள் அரவமற்ற சாலையில் பயணித்துக் கொண்டிருந்தவனின் மனம் பல மாதங்களுக்குப் பின் எந்த ஒரு யோசனையோ இறுக்கமோ இல்லாமல் கொஞ்சமே கொஞ்சம் நிர்மலமாக இருந்தது.

பெங்களூர் நெடுஞ்சாலையின் வழியே சென்னையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தவன், இன்னும் ஒரு மணி நேரத்தில் சென்னையைச் சமீபிக்க இருந்த போது திடீரென அதீத வேகத்தில் வந்த கார் ஒரு திருப்பத்தில் நிமலனின் கார் மேல் மோதுவது போல் வந்து கடைசி நொடியில் சுதாரித்து விலகி ஒடித்துத் திரும்பியது.

அதே நேரம் தன் மேல் மோத வந்த காரில் இருந்து தப்பிப்பது போல் நிமலனும் காரை சடன் பிரேக்கிட்டு அந்தக் காருக்கு எதிர் பக்கமாகத் திருப்பி இருந்ததில் பெரும் விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது.

அதில் உண்டான படபடப்போடு நிமிர்ந்து அந்தக் காரை பார்த்தவன், “ஏய் அறிவில்லை உனக்கு..? பார்த்து வர மாட்டே..? என்ன ரேஸிலேயா ஓட்டறே..?” என்றான் எரிச்சலோடு நிமலன்.

அதில் அந்தக் காரின் ஓட்டுனர் இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்தவன், “சாரி சார்.. டிரைவர் திடீர்னு கண் அசந்துட்டான்.. நான் தான் காரை ஒடிச்சு திருப்பினேன்.. ரொம்பச் சாரி..” என்று மிகப் பணிவாகப் பேசவும், இரவு நேர பயணங்களில் சில சமயம் இதையெல்லாம் தவிர்க்க முடியாது என்று புரிந்து அப்படியே அமைதியானான் நிமலன்.

அதே நேரம் எதிரில் வந்த கார் ஒடித்துத் திருப்பி இருந்ததில் அங்கிருந்த சாலை தடுப்பில் மோதி முன் பக்கம் லேசாக இடித்து அதிலிருந்து புகை வர துவங்கி இருக்க.. அதை கண்டு நிமலன் தயங்கும் போதே, “நீங்க கிளம்புங்க சார்.. நாங்க பார்த்துக்கறோம்..” என்றான் அந்தக் காரில் வந்தவன்.

அதில் நிமலன் தன் காரை நகர்த்த முயல.. அதற்கு வாய்ப்பே இல்லாமல் நிமலனின் வழியைப் பாதிக்கு மேல் மறைத்துக் கொண்டிருந்தது அந்தக் கார்.

பின்னுக்கு நகர்த்தி எடுக்கவும் முடியாதவாறு அங்கு ஒரு பள்ளம் இருந்தது.
அவர்கள் நகர்ந்தால் மட்டுமே நிமலனால் காரை எடுக்க முடியும். இதில் உண்டான சலிப்போடு “எங்கே போறது..? நீங்க நகர்ந்தா தான் நான் போக முடியும்..” என்றான் நிமலன்.

அதற்கும் மிகப் பணிவாகவே “இதோ சார், நகர்த்திடறோம்..” என்றவன் டிரைவர் இருக்கையில் இருந்தவனைப் பார்த்து, “இறங்கி காரை தள்ளு பாபு.. அப்பறம் இதெல்லாம் பார்த்துக்கலாம்..” என்றான் சிறு கட்டளை குரலில்.

அதில் அவர்கள் இருவரும் இறங்கி காரை நகர்த்த முயல.. பின்னால் நிமலனின் கார் இருந்ததோடு முன் பக்கம் சாலை தடுப்பில் எக்குதப்பாக அந்தக் கார் மோதியும் இருந்ததால் காரை அத்தனை எளிதாக அவர்களால் நகர்த்தவே முடியவில்லை.

இதைக் கண்டு பொறுமை காணாமல் போக.. ஒரு உஷ்ண பெருமூச்சோடு அவர்களையே வெறித்திருந்தான் நிமலன்.

ஏற்கனவே பல நாட்களுக்குப் பின் கிடைத்த இந்த அதிகாலை நேரத்து அமைதியையும் நிம்மதியையும் கலைத்திருந்தவர்களின் மேல் உண்டான கோபத்தோடு காரையே எரிச்சலோடு பார்த்திருந்தவனுக்கு அப்போதே பின் இருக்கையில் ஒரு பெண்ணும் இரு ஆண்களும் அமர்ந்திருப்பது தெரிந்தது.

‘அவர்கள் உள்ளே அமர்ந்திருக்கும் போது காரை எப்படி எளிதாக நகர்த்த முடியும்..? அவர்களும் இறங்கி தள்ளினால் இன்னும் வேகமாக வேலை நடக்குமே..!’ என்று தோன்றவும், அவர்களையே பார்த்தவாறு, “இப்படியே இன்னும் எவ்வளவு நேரம் நான் காத்திருக்கிறது..? எனக்கு நேரமாகுது..” என்றான் நிமலன்.

சரியாக அதைக் கவனித்து விட்ட அந்தக் காருக்கு உரியவனும், “அது எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க சார்.. அதான் இறங்கி வரலை, இதோ எழுப்பிடறேன்..” என்று அவசரமாகப் பின் பக்க கதவை திறந்து அங்கு அமர்ந்திருந்தவனிடம் எதுவோ சொல்ல.. அதற்கு அங்கிருந்தவன் ஏதோ பதிலளித்தான்.

இப்போது வார்த்தைகளால் இல்லாமல் விழியால் நிமலனை சுட்டி காண்பித்து வெளியே நின்றிருந்தவன் எதையோ புரிய வைக்க முயல.. அதில் உள்ளே இருந்தவனும் உடனே இறங்கி வந்தான்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த நிமலனுக்கு இவர்களிடம் எதுவோ சரியில்லை என மனம் அடித்துக் கூறியது. பின்னால் இருக்கும் அவர்கள் இருவரையும் பார்த்தால் தூங்குவது போலும் தெரியவில்லை.

அங்கிருந்தவாறே அவர்கள் தன்னை இருமுறை திரும்பி பார்த்ததை நிமலனும் கவனித்து இருந்தான்.
அவர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்த பெண் மட்டும் தலை சாய்ந்து இருப்பதில் உறங்கிக் கொண்டிருப்பது புரிய.. ஆரம்பத்தில் இருந்தே அந்தக் காரில் இருந்தவன் காண்பித்த அதீத பணிவும், எந்தப் பிரச்சனையும் வேண்டாம் என்பது போல உடனே தணிந்து வருவதுமாக அவன் பேசியதிலேயே முரணை உணர்ந்திருந்தவன், இப்போதே அவர்களின் தோற்றத்தை நன்கு கவனிக்கத் தொடங்கினான்.

கடோத்கஜன் போல் இருந்த நால்வரும் அவர்களுக்குக் கொஞ்சமும் சம்பந்தமே இல்லா வகையில் பட்டு வேட்டி சட்டை அணிந்திருப்பதும், இத்தனை குளுமையிலும் வேர்த்து வடிய அவர்கள் நிற்பதோடு அவ்வபோதான அவர்களின் கள்ள பார்வை தன் மேல் படித்து விலகுவதும் என எல்லாம் சேர்ந்து நிமலனின் சந்தேகத்தை அதிகமாக்கியது.

அதற்கேற்றார் போல் இப்போதும் அவர்களில் ஒருவன் காரிலிருந்து இறங்காமலே இருக்க.. அவனுக்கு அருகில் அந்தப் பெண் இத்தனை நடந்தும் கொஞ்சமும் அசைவில்லாமல் உறங்கிக் கொண்டிருந்தது வேறு எதுவோ இங்குத் தவறாக இருப்பதை மீண்டும் உறுதியாக்க.. “என்ன நடக்குது இங்கே..?” என்றவாறே காரிலிருந்து கீழிறங்கி வந்தான் நிமலன்.

அதில் நிமலனை காருக்கு அருகில் வர விடாமல் செய்ய முயன்றவாறே முதலில் பேசியவன், “ஒண்ணுமில்லை சார்.. இப்போ காரை நகர்த்திடுவோம்.. நீங்க உள்ளே உட்காருங்க..” என்று நிமலனின் வழியை மறித்தது போல் வந்து நின்றான்.

இதில் கூர்மையாக நிமலன் அவனையே பார்த்துக் கொண்டிருக்க.. அதேநேரம் தன் வழியை மறித்தது போல் நின்றிருந்தவனின் அலைபேசி சிணுங்கியது..
அதை ஒரு பதட்டத்தோடே பார்த்தவன், அழைப்பை எடுக்காமல் தவிர்க்க.. அதே நேரம் அந்தக் காரை நோக்கி செல்ல இருந்த நிமலனை கண்டவனுக்கு ஆத்திரம் தலைக்கேற “ஏய் சொல்லிட்டே இருக்கேன்.. எங்கே போறே..?” என்று தன் பணிவு, மரியாதையை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு லேசான மிரட்டல் குரலில் கேட்டவாறே நிமலனின் தோளை பிடித்து நிறுத்தினான் அவன்.

அதில் தன் மேல் கை வைத்தவனை விழியை மட்டும் திருப்பி ஒரு பார்வை பார்த்தவன், அடுத்த நொடி ஒரே சுழற்றில் அவனைத் தூக்கி கீழே வீசி அவன் மார்பில் ஒற்றைக் காலை வைத்து நின்றிருந்தான் நிமலன்.

இதைக் கண்டு திகைத்த மற்றவர்களும் வேகமாக நிமலனை தாக்க வர.. மொத்தமாக ஒரு ஐந்து நிமிடத்திற்குள் மற்ற மூவரையும் கூடச் சுருண்டு கீழே விழ செய்திருந்தான் நிமலன்.

காரை சுற்றி விழுந்திருந்தவர்களைப் பார்த்தவாறே சென்று காரின் பின் பக்க கதவை நிமலன் திறக்கவும், நிமலன் தன்னைச் சேர்ந்தவர்களை அடிப்பதை கண்ட பதட்டத்தில் வேகமாக இறுதியாக இறங்கியவனின் செயலில், கிட்டத்தட்ட இருக்கையில் சரிந்த நிலையில் இருந்த அந்தப் பெண், இப்போது மொத்தமாகக் கதவை நோக்கி சரிய.. வெளியே வந்து விழ இருந்த அவளின் முகத்தைத் தன் வலது உள்ளங்கையில் தாங்கி பிடித்து நிறுத்தியிருந்தான் நிமலன்.

மணப்பெண் அலங்காரத்தில் அழகோவியமாகத் தேவதை போல் தன் கையில் சரிந்திருந்தவளையே சில நொடிகள் இமைக்காமல் பார்த்தவன், அவள் மயக்கத்தில் இருப்பதைப் பார்த்தவுடனே புரிந்து கொண்டிருந்தான்.

பின் என்ன செய்வது என்பது போல் ஒரு நொடி தயக்கத்தோடு அவளின் முகத்தையே பார்த்தப்படி யோசித்தவன், பின் சட்டென அவளைத் தன் கைகளில் ஏந்திக் கொள்ள.. அதற்காகவே காத்திருந்தது போல் நிமலனின் மார்பில் சாய்ந்தது தமயந்தியின் முகம்.

இதில் லேசாக அதிர்ந்து அவளைப் பார்த்தவனின் நடை ஒரு நொடி தடைப்பட, பின் வேகமாகத் தன் காரை நோக்கி நகர்ந்தான் நிமலன்.

அதில் பலமாக அடிபட்டு விழுந்திருந்ததில் எழுத்துக் கொள்ள முடியாமல் இருந்த அவர்களில் தலைவன் போல் இருந்தவன், சட்டென இந்தக் காட்சியைப் படமெடுத்து தனக்கு இந்த வேலையைக் கொடுத்திருந்தவனுக்கு அனுப்பி வைத்தான்.

அதற்குள் தன் காரின் பின் இருக்கையில் அவளைக் கிடத்தி இருந்த நிமலன் சட்டென நிமிர.. அதற்கு வாய்ப்பளிக்காமல் அவளின் கழுத்தாரம் நிமலனின் சட்டை பட்டனில் சிக்கி இருந்தது.

இதை எதிர்பார்க்காமல் வேகமாக நிமிர்ந்தவன், இந்தச் சிக்கலில் தடுமாறி அவள் மேல் சாய இருந்த இறுதி நொடியில் சட்டெனத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு நின்றான் நிமலன்.

அந்தத் தடுமாற்றத்தில் அவள் மேல் சரிய இருந்தவனின் முகம் தமயந்தியின் முகத்துக்கு வெகு அருகில் நெருங்கி இருக்க.. தன்னை மறந்து ஒரு நொடி அந்த அழகிய முகத்தைக் கண்டவன், பின் சட்டென அவளிடமிருந்து வேகமாக விலகி, முன் பக்கம் சென்று முகம் இறுக அமர்ந்தான்

நிமலன்.

******************

அதே நேரம் இங்குத் திருமண மண்டபமே அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது. “என்ன நடக்குது இங்கே..? செக்யூரிட்டின்னு இத்தனை பேர் இங்கே எதுக்கு இருக்கீங்க..? நம்ம இடத்துக்குள்ளேயே நுழைஞ்சு நம்ம பொண்ணையே தூக்கிட்டு போயிருக்காங்கனா என்ன அர்த்தம்..? ஒரு முன்னாள் முதல்வர் பொண்ணுக்கே இந்த நிலைமைனா அப்போ மத்தவங்க நிலை எல்லாம் என்னவாகும்..?” என்று ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருந்தான் கிருபாகரன்.

“இல்லை சார், செக்யூரிட்டி எல்லாம் ரொம்பவே டைட்டா தான் இருந்தது.. அப்பறமும் இது எப்படின்னு தான் தெரியலை..” என்றார் அந்தச் செக்யூரிட்டி ஏஜென்சியின் தலைமை அதிகாரி ஜோஷ்வா.

“இப்படிச் சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லை.. உங்க மேலே இருக்க நம்பிக்கையில் தானே இவ்வளவு பெரிய வேலையையும் பொறுப்பையும் உங்ககிட்ட ஒப்படைச்சேன்..” எனச் சிடுசிடுத்தான் கிருபா.

அதில் சட்டென ஜோஷ்வா தலைக்குனிய.. “நான் கமிஷனர்கிட்ட பேசறேன் ப்பா.. அன்அபிஷியலா தேட சொல்றேன்..” என்று ஒரு வார்த்தை தன் தந்தையிடம் அனுமதிக்கு சொல்லி விட்டு வேகமாகக் கமிஷனர் புகழேந்திக்கு அழைத்தான் கிருபா.

அதற்கு ஒரு தலையசைப்பையே பதிலாகக் கொடுத்த ஜெயதேவின் மனம் முழுக்க வேதனை நிரம்பி இருக்க.. இருக்கையில் சாய்ந்திருந்தவரின் மனம் முழுக்க மகளையே சுற்றி வந்து கொண்டிருந்தது.

‘இப்போது எங்கு எப்படி இருக்கிறாளோ..?’ என்று எண்ணி தவித்தவருக்கு, “நீ நினைச்சதை எல்லாம் நடத்தின காலம் எப்போவோ மலையேறி போச்சு மிஸ்டர் ஜெயதேவ்.. இப்போ இது நிமலனோட காலம்.. நான் நினைச்சது மட்டும் தான் இனி இங்கே நடக்கும், நடத்தியும் காட்டுவேன், பார்க்கறியா..?” என்று சொடக்கிட்டு சவால் விட்ட நிமலனின் முகம் ஏனோ இப்போது அவரின் மன கண்ணில் வந்து நின்றது.

இதற்குப் பின் நிச்சயம் நிமலன் இருக்க வாய்ப்பில்லை என அவருக்குமே நன்றாகவே தெரியும். நிமலனுக்கு எதையுமே நேரடியாகச் செய்து தான் பழக்கம். அதிலும் வீட்டு பெண்கள் விஷயத்தில் அவன் தலையிடவே மாட்டான்.

தங்கள் எந்த ஒரு பிரச்சனையும் வீட்டில் உள்ள பெண்களைப் பாதிக்கக் கூடாது என்பதில் நிமலன் எப்போதும் தெளிவாக இருப்பான் என்று அறிந்திருந்தவர், கவலை, அசிங்கம், பயம், அவமானம், பதட்டம் என்று கலவையான மனநிலையில் அமர்ந்திருந்தார்.

வெளி தோற்றத்துக்குக் காண்பித்துக் கொள்ளவில்லை என்றாலும் ஜெயதேவனுக்கு மகளை எண்ணி மனம் பதைக்கத் தான் செய்தது. ஆனால் அப்படி அமைதியாக இருக்க முடியாமல் தமயந்தியின் அன்னை வளர்மதி அழுது கதறிக் கொண்டிருந்தார்.

‘இத்தனை அவசரமாக இந்தத் திருமண ஏற்பாட்டைச் செய்திருக்கக் கூடாதோ..?’ என்று யோசித்தவருக்கு துருவ்வின் நினைவு வரவும், “கிருபா..” என்று மகனை அவசரமாக அழைத்தார் ஜெயதேவன்.

அதில் யார் யாருக்கோ அழைத்துக் கட்டளைகளிட்டுக் கொண்டிருந்தவன், வேகமாக “சொல்லுங்க ப்பா..” என்று ஜெயதேவனை நெருங்கவும், “துருவ்..” என்று யோசனையாக நிறுத்தி மகனின் முகம் பார்த்தார் ஜெயதேவன்.

“அவனை தவிர வேற யாரு..? அவனா தான் இருக்கும், ஆளுங்களை விட்டு விசாரிக்கச் சொல்லி இருக்கேன்..” என்றான் கிருபா. அதற்குள் மணமகன் கார்த்திக்கின் தந்தை ராகவன் முகமெங்கும் கலவரத்தோடு இவர்களை நெருங்கினார்.

சற்று முன்பே தமயந்தி காணவில்லை எனத் தெரிய வந்ததும் அவர்களிடம் ஜெயதேவன் விவரம் சொல்லி மன்னிப்பும் அவகாசமும் கேட்டிருக்க.. முதலில் இதைக் கேட்டு கொந்தளித்த சில உறவினர்களையும் ராகவன் தான் அமைதிப்படுத்தினார்.

“பிரபலமா இருக்கறதே பிராப்ளம் தான் சம்பந்தி.. இதையெல்லாம் கண்டுக்காதீங்க.. நீங்க முதலில் பொண்ணுக்கு என்னாச்சு எங்கே இருக்கான்னு பாருங்க..” என்று ஆதரவாகப் பேசி இருந்தார் ராகவன்.

அதிலேயே கொஞ்சம் தைரியமாக இருந்த ஜெயதேவன், இப்போது ராகவன் பதட்டமாக வருவதைக் கண்டு அவரைப் பார்க்க.. “இதைப் படிச்சு பாருங்க..” என்று தன் கையில் இருந்த காகிதத்தை ஜெயதேவனிடம் நீட்டினார் ராகவன்.

அதை கிருபா வேகமாக வாங்கிப் படிக்க..

சாரி டேட்..

இந்தக் கல்யாணம் நடந்தா குடும்பத்தோட நம்மை வெச்சு கொளுத்திடுவேன்னு எனக்கு மிரட்டல் தொடர்ந்து வந்துட்டே இருக்கு.. மிரட்டினது வேற யாராவதா இருந்தா கூட நான் அதைப் பெருசா எடுத்துட்டு இருக்க மாட்டேன்.. ஆனா பணமும் பதவியும் கையில் இருக்க ஆள் சொல்லும் போது என்னால் அதை அப்படியே விட முடியலை டேட்..

கல்யாணம் நிச்சயமானதில் இருந்து போனில் நேரில்னு தினமும் அத்தனை மிரட்டல் வருது.. இதை உங்ககிட்ட நான் இத்தனை நாள் சொல்லாம மறைச்சுட்டேன் டேட், இப்போ என் வேலைக்கும் ஆபத்து வரும் போல் இருக்கு..

நான் லஞ்சம் வாங்கிட்டு ஒரு காப்ரேட் கம்பெனி ஆதரவா மக்களுக்கு எதிரா வேலை செய்யறதா என் மேலே போலியா ஒரு குற்றசாட்டை உருவாக்கி இருக்காங்க.. அதுக்குப் போலி ஆதரங்களையும் சாட்சிகளையும் கூடத் தயார் செஞ்சு இருக்காங்க..

இதையெல்லாம் மீடியா முன்னே கொண்டு வந்து என் பெயர் பதவின்னு எல்லாத்தையும் அழிச்சுடுவேன்னு மிரட்டறாங்க.. உங்களுக்கே தெரியும் எனக்கு இந்தப் படிப்பும் வேலையும் எவ்வளவு பெரிய கனவுன்னு, அப்படி இருக்கும் போது இதையெல்லாம் இழந்து இப்படி ஒரு கல்யாணம் எனக்கு வேண்டவே வேண்டாம் டேட்.. ஒருமுறை பெயர் கெட்டுப் போனா போனது தான், அதை சரி செய்யவே முடியாது..

இந்தக் கல்யாணம் என்னால் நிற்பதன் மூலமா என்ன பிரச்சனைகள் வரும்னு தெரிஞ்சே இப்படி ஒரு முடிவுக்கு வரேனா ஏன்னு உங்களுக்கு புரியும்னு நினைக்கறேன்..
இதனால் என்ன பிரச்சனை வந்தாலும் நான் சமாளிச்சுக்கறேன்.. ஆனா வீம்பா இந்தக் கல்யாணத்தைச் செஞ்சுட்டு உங்களையும், வேலையையும், மரியாதையையும், கௌரவத்தையும் இழந்து என்னால் வாழ முடியாது டேட்..

ஜெயதேவ் அங்கிள்கிட்டேயும் தமயாகிட்டேயும் என் மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக்கறேன்.. இப்படி ஒரு லெட்டர் எழுதி வெச்சுட்டு ஒடறதால் என்னை எல்லாம் கோழைன்னு நினைச்சாலும் பரவாயில்லை..

நானும் எல்லாரையும் போல எந்தப் பிரச்சனையிலும் சிக்காம சாதாரண ஒரு வாழ்க்கை வாழ நினைக்கற கோழையாவே இருந்துட்டு போறேன்.. ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட் இட்..

யூவர்ஸ்
கார்த்திக்

என்று எழுதியிருந்த கடிதத்தை வாய் விட்டே படித்து முடித்தான் கிருபா.

“இதைப் பார்த்தா கார்த்திக் நைட்டே இங்கே இருந்து கிளம்பி இருக்கணும்னு தோணுது.. இப்படி ஒரு முடிவுக்கு வந்தவன், முன்னேயே இதை பற்றி என்கிட்டே பேசி இருக்கலாம்.. ஆனா ஏனோ..” என்றவர், “சரி விடுங்க.. இப்போ உங்க பொண்ணு கடத்தலுக்குப் பின்னாலும் இதே ஆட்கள் இருக்க வாய்ப்பு அதிகம்னு நினைக்கறேன் சம்பந்தி..” என்றவர், “சாரி.. இனி அப்படிச் சொல்ல முடியாது இல்லையா..” என்றார் கவலை குரலில் ராகவன்.

அதே நேரம் அங்கு வந்த ஜோஷ்வா, “சார்.. இது ஒரு வெல் பிளான்ட் கிட்நாப் போலத் தெரியுது.. நம்ம இத்தனை செக்யூரிட்டியையும் மீறி, எந்தச் சிசிடிவியும் வொர்க் செய்யாம செஞ்சு கல்யாண பொண்ணை உள்ளே வந்தே தூக்கிட்டு போகணும்னா நிச்சயம் அதுக்கு இங்கே உள்ளே இருந்து யாரோ உதவி செஞ்சு இருக்கணும் சார்.. இல்லைனா இப்படி ஒரு விஷயம் நடக்க வாய்ப்பே இல்லை..” என்றார்.

இவ்வளவு நேரம் ஒருவேளை இதில் துருவ் ஏதாவது செய்திருக்கலாமோ என்ற சந்தேகத்தோடே இருந்த கிருபா மற்றும் ஜெயதேவனுக்கு இப்போது அது முழுக்க முழுக்க அவனின் வேலைதான் என்று உறுதியாகி இருந்தது.

“அவனை..” என்று ஆத்திரத்தோடு கிருபா அங்கிருந்து கிளம்பவும், “கிருபா.. இரு அவசரப்படாதே..!” என்றிருந்தார் ஜெயதேவன்.

“இதுக்கு மேலேயும் என்னை அமைதியா இருக்கச் சொல்றீங்களா ப்பா.. அப்போவே அவன் மிரட்டும் போதே இதை நான் என் வழியில் சரி செய்யறேன்னு சொன்னேன்.. அப்போவே நீங்க விட்டிருந்தா இது இன்னைக்கு இவ்வளவு தூரம் வந்து இருக்காது.. ஆனா அப்போவும் விடலை, இப்போவும் என்னை அமைதியா இருக்கத் தான் சொல்றீங்க இல்லையா.. சரி இன்னும் எவ்வளவு நாள் அமைதியா இருக்கணும் ப்பா..? அவனால் நம்ம தமயா வாழ்க்கை அழியற வரைக்குமா இல்லை அவளே இல்லாம போகற வரைக்குமா..?” என்றான் ஆத்திரத்தோடு கிருபா.

அதில் வேதனையோடு மகனை பார்த்தவர், “அவ எனக்கும் பொண்ணு தான் கிருபா, உனக்கும் மேலே எனக்குத் துடிக்குது.. ஆனா இது நம்ம பொண்ணு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமில்லை, இது இரண்டு கட்சி சம்பந்தப்பட்ட விஷயம் கிருபா.. எடுத்தோம் கவிழ்த்தோம்னு எதுவும் செஞ்சுட கூடாதுன்னு தான் இத்தனை நாளா அமைதியா இருந்தேன்.. இந்த அவசர கல்யாணமே அதுக்காகத் தான்னு உனக்கே தெரியும்.. ஆனா இத்தனைக்குப் பிறகும் நான் அப்படி இருப்பேன்னு உனக்குத் தோணுதா..? இதை எப்படி முடிக்கணும்னு எனக்குத் தெரியும்..” என்றார் ஜெயதேவன்.

அதற்குள் அவரின் அலைபேசிக்கு ஏதோ மெசேஜ் வந்த ஒலி கேட்க.. தன் அலைபேசியை எடுத்து பார்த்த ஜெயதேவன் அப்படியே திகைத்து நின்றார்.

**************

அதேநேரம் காரிலிருந்து இறங்கி தமயந்தியை தன் கைகளில் ஏந்திக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் நிமலன். அவனின் வருகைக்காகவே தன் அறையில் காத்திருந்த சூர்யகலா கார் வந்த சத்தம் கேட்டு வேகமாக எழுந்து வெளியில் வருவதற்குள், அங்கிருந்த விருந்தினர் அறைக்குள் அவளைத் தூக்கி சென்றிருந்தவன், தமயந்தியை படுக்கையில் கிடத்தி விட்டு நிமிர முயல.. அவளின் நெற்றி முடி கலைந்து தமயந்தியின் முகத்தில் வந்து விழுந்தது.
அதைத் தன் ஒற்றை விரல் கொண்டு ஒதுக்கி விட நிமலன் முயலவும், “யாரு நிமலா இது..?” என்று கேட்டப்படியே அங்கு வந்து நின்றார் சூர்யகலா.

அதில் சட்டெனத் தன் கையை மடக்கிக் கொண்டு நிமிர்ந்தவன், சுருக்கமாக நடந்ததை அவரிடம் சொன்னான். அதில் திரும்பி படுக்கையில் மயங்கிக் கிடந்தவளை கவலையோடு பார்த்த சூர்யகலா “என்ன நிமலா இது..? மணக் கோலத்தில் இருக்கப் பொண்ணை இப்படித் தூக்கிட்டு வந்து இருக்கே..?” என்றார்.

“என்னை என்ன செய்யச் சொல்றீங்க பாட்டி..? ஏதோ தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சும் அப்படியே விட்டுட்டு வர சொல்றீங்களா..?” என்றான் உணர்வற்ற குரலில் நிமலன்.

“அதுக்கில்லை ராஜா.. மணக்கோலத்தில் இருக்கப் பொண்ணு வேற.. நாளைக்கு நமக்கு ஏதாவது இதனால் பிரச்சனை வர கூடாது பாரு.. இவ யாரு..? என்னன்னு கூடத் தெரியலை..? மயக்கத்தில் வேற இருக்கா.. அதோட..” என்று மேலும் எதுவோ சொல்ல முயன்றவரின் பேச்சு அதே நேரம் அங்கு வந்த நிகிலனை கண்டு அப்படியே நின்றது.

அதற்குள் இந்த நேரத்தில் நிகிலனை இங்குக் கண்டதில் விழிகளைச் சுருக்கிய நிமலன், “நீ எப்போ வந்தே..?” என்றான்.

“கொஞ்சம் நேரம் ஆச்சு ண்ணா..” என்றான் நிகிலன்.
“அவனும் இப்போ தான் வந்தான் நிமலா.. நீயும் வந்துட்டு இருக்கேன்னு போன் செஞ்சியா.. அதான் உன்னைப் பார்த்துட்டு தூங்க போகலாம்னு காத்திருந்தான்..” என்றார் சூர்யகலா.

அதற்கு ஒரு தலையசைப்பையே பதிலாகக் கொடுத்தவன், “ஆல் ஒகே தானே..! எதுவும் பிராப்ளம் இல்லையே..?” என அக்கறையோடு தம்பியை பார்த்து ‘கேட்கவும், “நத்திங் ண்ணா.. ஒன் வீக் இங்கே ஒரு செமினார் இருக்கு.. அதுக்காகத் தான் வந்தேன்..” என்றதும் அதற்கும் ஒரு தலையசைப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்தான் நிமலன்.

அப்போதே மற்ற இருவரின் முகத்தில் இருந்த பதட்டத்தைக் கவனித்த நிகிலன், “என்னாச்சு..?” எனும் போதே உள்ளே படுத்திருந்தவளின் மேல் நிகிலனின் பார்வை பதிய.. விழிகளைச் சுருக்கி அவளைப் பார்த்தவன், “தமயா..?” என்றான் நம்ப முடியா திகைப்போடான குரலில் நிகிலன்.

அதில் திகைப்போடு அவனைத் திரும்பி பார்த்து “யாரு..?” என்றார் அதிர்வும் ஆத்திரமுமான குரலில் பாட்டி. “தமயா பாட்டி.. தமயந்தி ஜெயதேவ..” என்றவனின் வார்த்தையைக் கூட முடிக்க விடாமல் “போதும்..” என்றிருந்தார் அந்தப் பெயரைக் கூடத் கேட்க விரும்பாத வெறுப்பான குரலில் பாட்டி.


நேச அலை வீசும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ கதையின் முதல் அத்தியாயத்தை பதித்து விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

TNN - 1

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Status
Not open for further replies.
Top