All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜீவனின் ஜீவனவள்!

Status
Not open for further replies.

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
10

"நீயாடி இது? ஆஃபீஸ்னு அடக்கி வாசிக்கிறேன்" என்று கூறியவனைப் பார்த்து சிரித்தாள் அவள்.

"உங்க கிட்ட கொடுத்த என் செல்போன் சேகரின் டேபிள் டிராயரில் எப்படி
இருந்தது?"

"எல்லாம் கௌதமின் உபயம்" என்று ஜீவா சொல்ல, பவித்ராவின் கண்கள் கலங்கியது.

"ஷ்ஷ்.. என்ன பவி . . அதுதான் எல்லாம் முடிஞ்சுட்டதே.. இன்னுமென்ன அழுகை ?"

"தேங்க்ஸ் ஜீவா "

"எதுக்கு இத்தனை தேங்க்ஸ்? அதற்கு பதிலா ஒரு சின்ன ஹெல்ப்
பண்ணுறியா?"

என்ன உதவி என்பது போல் பார்த்தவளிடம் "லன்ச் டைம்
ஆகிடுச்சு.. நாலு மணிக்கு ஒரு பிஸினெஸ் மீட்டிங்
இருக்கு.. உத்தரவு கொடுத்தால்
கிளம்பிடுவேன்" என்று ஜீவா சொல்ல அவள் போலியாக முறைத்தாள்.

"இந்த அளவுக்கு ஐஸ் வைக்க வேணாமே.. நானென்ன உங்களைக்
கட்டியா போட்டிருக்கேன்? என்கிட்ட அனுமதி கேட்குறீங்க?" என்று
சிணுங்கியபடி கேட்டவளைப் புதிராக பார்த்தான் அவன்.

அவனிடம் பதில் வராமல் போகவே, விழியுயர்த்தி அவனைப் பார்த்தவள் அவன் முகத்தில் தெரிந்த பாவத்தில் தலைகுனிந்தாள்.

"லட்டு.."

அவனது பிரத்யேக அழைப்பில் குற்றவுணர்வு மேலிட உதட்டைக் கடித்தவளின் விழிகள் கலங்கிச் சிவந்திருந்தது. அடுத்ததாக அவன் கேட்கவிருக்கும் கேள்வியை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கலக்கத்துடன் அவனைப் பார்த்தாள் அவள்.

அவளுக்கு அந்தக் கஷ்டத்தைத் தரக் கூட மனமில்லாமல் வாய் வயை வந்த கேள்வியைத் தடுத்து நிறுத்தி, "கிளம்பட்டுமா?" என்று மட்டும் கேட்க பவித்ரா தலையசைத்தாள்.

"நீயும் போய் சாப்பிடு.. இல்லன்னா உன்னைத் தேடி என் ரூமிற்க வந்துடுவான் கௌதம்" என்று ஜீவா சிரித்தவாறே சொல்ல பவித்ரா நிம்மதியுடன் வெளியே சென்றாள்.

அலுவலகமே காலியாக
இருக்க கெளதம் மட்டும் பவித்ராவின் கேபினில் அமர்ந்திருந்தான்.
பவித்ரா வரவும் எதுவும் பேசாமல் அவன் எழுந்து 'போகலாமா?' என்று கேட்டான்.

'இப்போ இவன்கிட்ட என்ன சொல்றது? '

"சாரி கௌதம் .. நான் ஜீவா பத்தி உன்கிட்ட மறைச்சதுக்கு" பவித்ரா
மெதுவான குரலில் சொல்ல, கௌதம் அவளைப் பார்த்து புன்னகையோடு பேசினான்.

"இது கொஞ்சம் நான் எதிர்பார்த்த விஷயம் தான்" என்று சொன்னவனை பவித்ரா நம்பாத பார்வை பார்த்தாள். அவள் ஜீவாவைத் தெரியும் என்பது போல் ஒரு நாளும் நடந்து கொண்டதில்லை. அப்படியிருக்க
கௌதம் இதை எதிர்பார்த்தேன் என்று சொன்னால் அவள் எப்படி நம்புவாள்?

"உண்மை தான் பவி. . " என்றவன் அன்று பவித்ரா அவனை சாப்பிட அழைக்க வந்த போது நடந்ததைச் சொன்னான்.

"பேயைத் தான் பார்த்திருக்கான்னு ஜீவா சார் சொல்லும்போதே எனக்கு ஷாக் தான்.. நான் திரும்பக் கேட்டதும் பேச்சை மாத்திட்டாரு.. நீயும் ஜீவா சாரைத் தெரிந்த மாதிரி காட்டிக்கல.. சரி ஏதோ
நமக்குத் தான் பிரம்மைனு நினைச்சேன்.. பார்த்தால் மனுஷன்
எக்ஸ்பீரியன்ஸில் தான் சொல்லியிருக்காரு போல!?" என்று கௌதம் சிரிக்க பவித்ரா அவனை முறைத்தாள்.

"ஓகே ஓகே..ஜஸ்ட் ஃபார் ஃபன். . பட் யூ ஆர் சோ லக்கி பவி"

"ஏன்?"

"ஏன்னு உனக்குத் தெரியாதா?"

அவளுக்குத் தெரியும் தான் . . ஜீவா எப்போதுமே கௌதமிற்கு ஹீரோ
மாதிரி.. அவனிடம் வேலை பார்ப்பதையே பெருமையாகச் சொல்லிக்
கொள்பவன் கௌதம்.. அப்படிப்பட்டவன் அவளை வேறு எதற்காக லக்கி
என்று சொல்லப் போகிறான்?

அறிந்திருந்தும் பவித்ரா சிரித்தவாறே
தெரியாது என்று தலையசைத்தாள்.
"ஜீவா சார் உன்னைக் காதலிக்கிறாரே.. அதுக்குத்தான்" என்று பொறாமையின் சாயலோடு கௌதம் சொல்ல பவித்ராவிற்கு சிரிப்பு வந்துவிட்டது .

"கௌதம் நீ ஒரு பையன்.. அதையே மறந்துட்ட போல? என்னவோ ஜீவா என்னைக் காதலிக்காமல் இருந்திருந்தா உன்னைக் காதலிச்சிருப்பார் என்பதைப் போலப் பேசுறியே" என்று அவள் சிரிக்க
கௌதம் எட்டிக்காயைத் தின்றது போல முகத்தைச் சுளித்தான். அதைப்
பார்த்த பவித்ரா இன்னும் அதிகமாகச் சிரிக்க அதை ரசனையுடன்
பார்த்தவாறே ஜீவா அவர்களைக் கடந்து சென்றான்.

பவித்ராவும் கௌதமும் வழக்கம் போல அவர்களது இடத்தில் அமர்ந்து உணவுண்ண ஆரம்பிக்க ஸ்வீட்டி அவர்களின் அருகில் வந்து நின்றாள். பவித்ராவும் கௌதமும் அவளைத் திரும்பிப் பார்க்க அவள் தயக்கத்தோடு மன்னிப்பு கேட்டாள்.

"நான் எதுவும் தப்பா நினைக்கல ஸ்வீட்டி.. பரவாயில்லை" என்று
பவித்ரா மெல்லிய குரலில் சொன்னாள்.

ஸ்வீட்டி கிளம்ப அடுத்து
சுலோச்சனா வந்து மன்னிப்பு கேட்க அவளுக்கு என்னவோ போலிருந்தது.
அவள் அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு அந்த இடத்தைக் காலி செய்துவிட்டு அவளது கேபினிற்குச் செல்ல அங்கே ராஜேஷும் நித்தினும் அவளிடம் வந்து பேசினார்கள்.

அவர்களிடமும் பேசி அனுப்பிவிட்டு கௌதமைக் காணச் சென்றவள் அவனின் அருகே ஒரு இருக்கையை இழுத்துப் போட்டவாறு தலையைப் பிடித்தவாறு அமர்ந்துவிட்டாள்.

கௌதமிடம் பேசிக் கொண்டிருந்தவளை அருகிலிருந்த சிலர் புதிய மரியாதையோடு பார்த்து சிரிக்க
அவளும் வேறு வழியின்றி சிரித்து வைத்தாள்.

"என்ன பவி இங்கே வந்துட்ட? என்ன விஷயம்?" என்று கௌதம் கேட்க
பவி தலையைப் பிடித்தாள்.

"தலைவலி"

"என்னாச்சு? நல்லா தானே இருந்த?"

"எல்லோரும் ஒரு மாதிரி புதிசா பார்க்கிறாங்க கௌதம்.. மரியாதை
கொடுத்துப் பேசுறாங்க... தலைவலியாக இருக்கு" என்று பவித்ரா சொல்ல
கௌதம் சிரித்தான்.

"ஜாலியாக அதை என்ஜாய் பண்ணு பவி.. ஏன் டென்ஷன் ஆகுற?"

"ஒரு மாதிரியாக இருக்கே கௌதம்"

"இதையும் உன் ஆளிடம் சொல்லு அப்போ . . இதுக்கும் எதாவது வழி சொல்லுவார்"

"என்ன‌ வழி?"

"அதை ஜீவா சார் கிட்ட தான் கேட்கணும்" என்று பூடகமாகச் சொல்ல
பவித்ரா புரியாமல் பார்த்தாள்.

"ஈஸி பவி.. ரெண்டு நாள்ல நார்மலாக ஆகிடும்..எல்லோரும் இதை மறந்துவிட்டு வேறொன்றைப் பேசப்
போறாங்க.." என்று அவன் சொல்ல பவித்ரா தலையாட்டினாள்.

ஜீவாவால் அவ்வளவு எளிதாக சேகரை விட்டுவிட மனமில்லை. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் தேவையின்றி பவியையும் உள்ளிழுக்க வேண்டிவரும் என்பதால் அன்அஃபீஷியலாய் அவனைக் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கச் சொன்னான். சைபர் க்ரைமில் வேலை செய்யும் நண்பரிடம் சுருக்கமாக விஷயத்தைக் கூறியவன் மேற்கொண்டு அந்தப் புகைப்படம் பகிர்தலைத் தடை செய்திருந்தான்.

அன்றைய தினம் பவித்ரா ரொம்பவே சந்தோஷமாக இருந்தாள். அதே மனநிலையில் வீட்டிற்குச் சென்றவளை முகம் முழுவதும் சிரிப்போடு பத்மா வரவேற்க அவள் பத்மாவை இறுக அணைத்துக் கொண்டாள்.

"என்னடி பவி ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுதே? என்ன
விஷயம்?"

"நீங்க கூட ரொம்பவே சந்தோஷமாக இருக்கிற மாதிரி தான் இருக்குது.. என்ன விஷயம்? அக்கா வர்றேன்னு
சொல்லுச்சா?"

"இல்லைடி நாம தான் அங்கே போகப் போறோம்" என்று பத்மா சொல்ல
பவித்ரா ஏனென்று கேட்டாள்.

"சந்தியாவிற்கு நாள் தள்ளிப் போயிருக்காம்டி.. அதான் பூ,
பலகாரம் எல்லாம் வாங்கிப் போய் பார்த்துட்டு வரலாம்னு அப்பாகிட்ட
சொல்லியிருக்கேன்.. அவர் வரவும் கிளம்பலாம்" என்று பத்மா பதிலளிக்க
பவித்ரா சந்தோஷத்தில் குதித்தாள்.

"என்கிட்ட சொல்லலையேம்மா அக்கா" என்று முகத்தைத் தூக்கியவளை "உன்கிட்ட சொல்லச் சொல்லி ஆயிரம் முறை என்கிட்ட போனில் சொல்லிவிட்டா தாயே .. அவளே ஈவ்னிங்
உன்னிடம் பேசுறேனு சொன்னாள்" என்று பத்மா சொல்லவும் பவித்ரா சிரித்தாள்.

"அட.. எனக்கு அக்காவைப் பற்றித் தெரியாதாம்மா? சும்மா கேட்டேன். . சரி நான் ஃப்ரெஷ் ஆகிட்டுக் கிளம்பி வரேன்.. அப்பா வரவும் கிளம்பலாம்" என்றவள் அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.


அவள் சொன்னது போலவே சிவகுரு வரவும் மூவரும் கிளம்பி சந்தியாவின் வீட்டிற்குச் சென்றனர். ராமநாதன் கேஸ்
விஷயமாக வெளியே சென்றிருக்க சாவித்திரி அவர்களை முகம் மலர
வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். சந்தியா ஓடிவந்து தங்கையைக் கட்டிக்கொள்ள, பவித்ரா அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மனோஜைப் பார்த்துச் சிரித்தாள்.

"அத்தான் உங்கள் நிலைமை எனக்குப் புரியுது.. நாங்கள் பாசமழையைப்
பொழிறதெல்லாம் சாதாரணமான ஒண்ணு. இதுக்கெல்லாம் என்னோடு போட்டி போடக் கூடாது"

"எனக்குக் கிடைக்காதது உனக்குக் கிடைச்சா தானே உன்னோடு
போட்டி போடணும்? அதுக்கு அவசியமே இல்லை. . என்ன சந்தியா?" என்று கேட்டு மனோஜ் கண் சிமிட்ட, சந்தியா முகம் சிவந்தாள்.

"அது என்னவோ உண்மை தான் அத்தான். . எனக்கு இவ்வளவு
சீக்கிரம் சித்தியாக புரமோஷன் கொடுத்துட்டீங்க.. அதுலேயே தெரியுது" என்று பவித்ரா சொல்ல மனோஜ்
சிரித்தான்.

"உன் அக்காவின் பேச்சையே என்னால் தாங்க முடியல. அத்தையும் மாமாவும்
பாவம்.. எப்படித்தான் ரெண்டு பேரையும் சமாளிச்சாங்களோ" என்று
சாவித்ரியுடன் பேசிக் கொண்டிருந்த சிவகுருவையும் பத்மாவையும்
பார்க்க அவர்கள் என்னவென்று தெரியாமலேயே மரியாதையோடு சிரித்து வைத்தார்கள்.

"காவ்யா எங்கே அத்தான்? காணோமே?" என்று பவித்ரா கேட்க, அவள் மாடியில் அவள் அறையில் இருப்பதாகச் சொன்னான்.

"அக்கா உன் நாத்தனாருக்கு எங்களை வரவேற்காமல் ரூமில் என்ன
வேலை? அதெப்படி அப்படி இருக்கலாம்? எங்களுக்கு என்ன மரியாதை?"

"சேச்சே .. அவளுக்கு நீங்க வந்தது தெரிஞ்சிருக்காது பவி.. அதனால் தான் மேலே இருக்கா போல.. நான் போய்க் கூப்ட்டு வர்றேன்" என்று மனோஜ்
கிளம்ப அவனைக் கைப்பிடித்துத் தடுத்தாள் சந்தியா.

"அவ சும்மா விளையாடுறா.. நீங்க ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்குறீங்க? நீ காவ்யாவைப் பார்க்கணும்னா நேரடியாகச் சொல்ல வேண்டியது தானே? அதை விட்டுட்டு அவரை ஏன் கலங்கடிக்கிற?"

மனோஜிடம் சொல்லிவிட்டு பவித்ராவை அவள் முறைக்க, பவித்ரா
சிரித்தாள்.

"ரொம்ப பார்மாலிட்டீஸ் வேண்டாம் அத்தான்.. நான் விளையாட்டா தான் கேட்டேன். நாமே மேலே போகலாம்" என்று பவித்ரா சொல்ல மூவரும் காவ்யாவின் அறைக்குச் சென்றார்கள்.

காவ்யா ஹெட்செட்டை காதுகளில் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்டபடி கட்டிலில் சாய்வாக அமர்ந்திருந்தாள். மூவரும் உள்ளே வந்ததைக் கூட உணராமல் அவள் அதே நிலையில் இருக்க மனோஜ் அவளருகில் வந்து போனில் மாட்டியிருந்த ஹெட்செட்டைக் கழட்ட அவள் போனிலிருந்து கசிந்த
இசை அறை முழுவதும் கேட்டது.

அறை முழுதும் கேட்ட சத்தத்தில் காவ்யா அவசரமாக கண் திறந்து
பார்த்தாள். அவள் முன் புன்னகையோடு நின்று கொண்டிருந்த
பவித்ராவை பார்த்ததும் அவள் கண்கள் விரிந்தன.

"பவி அண்ணி . . எப்போது வந்தீங்க? எப்படி இருக்கீங்க?" என்று காவ்யா
நலம் விசாரித்தாள்.

"இப்படி ஹெட்செட்டை காதுல மாட்டிக்கிட்டு கண்ணை மூடி
பாட்டுக் கேட்டால் பவி வந்தது மட்டுமல்ல அத்தை மாமா வந்தது கூடத்
தெரியாது" என்று மனோஜ் குற்றம் சாட்டும் குரலில் சொல்ல காவ்யா தலைகுனிந்தாள்.

"சாரிண்ணா.. நான் போய் அவங்க கிட்ட பேசிவிட்டு வரேன்" என்று கூறி வருத்தத்துடன் சென்றவளைத் தடுத்தாள் பவித்ரா.

"அட நீ உட்காரு காவ்யா.. உன் கூடப் பேசத்தான் நாங்க மேலே வந்தோம் . . நீ
கீழே போய்ட்டா நாங்க யார்கிட்ட பேசுறது?" என்று பவித்ரா சொல்ல
காவ்யா மனோஜைப் பார்த்தாள். அதைக் கவனித்த பவித்ரா 'முடியல' என்றாள்.

"அத்தான் திஸ் இஸ் டூ மச். ஒரு
ஹெட்செட் போட்டு பாட்டுக் கேட்டதுக்கே அவளைக் குற்றவாளிக்
கூண்டில் ஏத்திட்டீங்களே?" என்று பவித்ரா குறைபட சந்தியா 'ஆமாம்'
என்றாள்.

" நீ வேற பவி .. இவர் மட்டும் என்னவாம்? தூங்குறதுக்கு முன்னாடி ரூம்ல
பாட்டைப் போட்டு அலற விடுவாரு. . உனக்கே தெரியும் நான்
தூங்கிட்டா அவ்வளவு சீக்கிரம் எழுந்துக்க மாட்டேன் . . ஆனால்,
தூங்குறதுக்கு முன்னாடி சின்ன சத்தம் கேட்டாலும் எனக்குத் தூக்கம் வராது . . என் தூக்கமே போச்சு இங்கே வந்ததில் இருந்து..'' என்று சந்தியா
அலுத்துக் கொண்டாள்.

மனோஜ் "பாட்டால் மட்டும் தான் தூக்கம் கெட்டுச்சா?" என்று சந்தியாவின்
காதருகே குனிந்து கேட்க, சந்தியா தங்கையும் நாத்தனாரும் அறியாமல் அவன் கைகளில் கிள்ளினாள்.

"ஷ்.. எந்த நேரத்துல என்ன பேச்சு" என்று கண்களில் ஜாடைக் காட்ட மனோஜ் சிரிப்பை பதுக்கிக் கொண்டான்.

"இல்ல அண்ணி.. அண்ணன் சொல்றது சரிதான்.. நான் போய் பேசாமல் இருந்தால் மரியாதை குறைவாக
இருக்கும்.. நான் பேசிட்டு
வந்துடுறேன். அதுவரை நீங்க பேசிட்டு இருங்க" என்று
கூறிவிட்டு கீழே சென்றுவிட்டாள் அவள்.

திரும்பி மேலே வந்தவள்
நால்வருக்கும் சேர்த்து பழச்சாறு கொண்டு வர, அதைப் பருகிய படியே
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். காவ்யாவின் கேள்விகள் எல்லாமே பவித்ராவின் அலுவலகம் சார்ந்ததாகவே இருக்க பவித்ரா சிரித்துக்கொண்டே பதில் சொன்னாள்.

"நீ பவியை விசாரிக்கிறயா இல்லை அவளோட வேலையைப் பத்தி விசாரிக்கிறயா காவ்யா?" என்று
சந்தியாவே கிண்டலாகக் கேட்கும் வரை அவளது விசாரிப்பு இருந்தது.

"நான் அவளோட காலேஜ் பத்தி விசாரிச்சது மாதிரி அவள் என்
வேலை பத்தி விசாரிக்கிறா" என்று அவளுக்கு ஆதாரவாக பவித்ரா பேச
காவ்யா அடுத்து வாயைத் திறக்கவேயில்லை.

காவ்யாவின் விசாரிப்புகள் எதற்காக என்பதை பவித்ரா ஊகித்திருந்தாள். அதை ஊர்ஜிதப் படுத்த, பேசிக் கொண்டிருக்கும் போதே பவித்ரா கௌதமிற்கு கால் செய்து கட் செய்துவிட மிஸ்டு கால் பார்த்து அவனே திரும்ப அழைத்தான்.

"சொல்லு கௌதம்" என்று பவித்ரா காவ்யாவின் முகத்தை
ஆராய்ச்சியாகப் பார்த்தவாறே பேச அவள் எதிர்பார்த்தது போலவே
காவ்யாவின் கண்கள் மின்னின.

"என்ன சொல்ல? நீதான் கால்
பண்ணியிருக்க.. சொல்லு என்ன விஷயம்?"

"நான் அக்காவோட வீட்டுக்கு வந்திருக்கேன் கௌதம்"

"அதுக்கு ஏன் எனக்கு கால் பண்ணுன?"

"ம்ம்.. இங்கே எல்லோரும் ஃபைன்.. சரி நாளைக்கு ஆபீஸ்ல மீட் பண்ணலாம்.. எதுவும் முக்கியமான விஷயம் இல்லையே?"

"என்ன லூசு மாதிரி சம்பந்தம் இல்லாமல் பேசிட்டு இருக்க? நீதானே கால்
பண்ணுன? இன்ட்ரஸ்ட்டா கேம் விளையாடிட்டு இருந்தேன். . அதை பாஸ்
பண்ணி வைச்சிட்டு உனக்கு ரெஸ்பான்ஸ் பண்ணிட்டு இருக்கேன்"

''ஓ.. அப்படியா கௌதம் . . சரி நாளைக்குப் பேசுகிறேன்" என்று போனை வைத்துவிட்டாள் அவள்.

காவ்யாவின் கண்கள் நொடிக்கொரு முறை பவித்ராவின் செல்போனில் பதிந்து மீள்வதைப் பார்த்த பவித்ராவிற்குப் பாவமாக இருந்தது. ஆனால், அவளால் என்ன செய்ய முடியும்? இது அவள் அக்காவின் புகுந்த வீடு . . இங்கே அவள் நாத்தனார் காதல் கீதம் பாட அவள் உதவியது தெரிந்தால் அவளின் அக்கா அல்லவா பின் நாளில்
கஷ்டப்படுவாள்? காவ்யாவிற்கு இன்னும் வயதிருக்கிறது.. இந்த முடிவில்
இவள் உறுதியாய் இருந்தால் முடிந்த உதவியைச் செய்து கொள்ளலாம்
என்று நினைத்துக் கொண்டாள்.

அவர்கள் பேசிவிட்டு கீழே வரவும் பத்மா பவித்ராவைப் பார்த்து 'போகலாமா? ' என்று கேட்டாள். பவித்ரா தலையசைக்க பத்மா சந்தியாவிடம் இந்த மாதிரி நேரத்தில் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லிவிட்டு சாவித்ரியிடம் திரும்பினாள்.

"பார்த்துக்கோங்க அண்ணி" என்று பத்மா குரல் கமறச் சொல்ல,
சாவித்ரி ஆறுதலாக பத்மாவின் கையைப் பிடித்து அழுத்தினாள்.

"இது என் வீட்டு வாரிசு சம்பந்தி.. உள்ளங்கைல வைச்சு தாங்குவேன்.. கவலையே படாதீங்க" என்று கூறி அவர்
விடை கொடுக்க மூவரும் கிளம்பிச் சென்றனர்.



 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
11

அலுவலகத்தில் நுழைந்து அவளது சீட்டில் அமர்ந்தவளிடம் எம்.டி
அழைப்பதாக வாசு வந்து கூற இதழ்களில் அவளறியாமல் புன்னகை
ஒட்டிக்கொண்டது . குனிந்து தன்னைப் பார்த்தவளுக்கு அந்தப் புன்னகை
இன்னும் அதிகமாக விரிந்தது. முதல் நாள் அவள் வேண்டாமென்று
ஒதுக்கிய நீல நிறச் சுடிதாரை அன்று தேடி எடுத்து அணிந்திருந்தாள்.
ஜீவாவை அவள் முதன் முதலாகப் பார்த்த போது நீல நிறத்தில் தான்
உடை அணிந்திருந்தாள். அந்த நினைவில் அதேப் புன்னகையோடு உள்ளே வந்தவளைப் பார்த்த ஜீவாவின் இதழ்கள் 'வாவ் . . ' என்றது.

"வாவ்... " என்றபடி ஜீவா எழுந்து வர பவித்ரா பின்னே நகர்ந்தாள்.

"இது ஆபீஸ் சார்.. ஞாபகம் இருக்கட்டும்" என்று அவள் மிரட்டலாகக் கூற, அவன் கண்கள் சிரித்தது.

"என்ன செய்றது? என் முன்னாடி இப்படி ஆளை மயக்கும் சிரிப்போடு நீ வந்து
நின்னா மைண்ட் பிளான்க்கா ஆகிவிடுதே"

அவனது வெளிப்படையான பேச்சில் முகம் சிவந்தவள் அதை மறைக்க வேண்டி பேச்சை மாற்றினாள்.

"இதைச் சொல்லத்தான் கூப்பிட்டீங்களா?" என்று கேட்டவளிடம் அவன் ஒரு இன்விடேஷனை எடுத்துக் கொடுத்தான்.

"என்ன இன்விடேஷன் இது?"

"ஹோட்டல் ஓப்பனிங் இன்விடேஷன்.. இன்னும் டூ டேஸில் ஓப்பனிங் ஃபங்க்ஷன்" என்று கூற பவித்ராவின் முகம் மாறியது.

"ஓஹோ.."

"நீயும் என்னோடு வரணும்"

"நான் எதுக்கு ஜீவா ?"

"அது உன் ப்ளான் தானே.. நீவராமல் எப்படி?"

"எனக்கு அங்கே வரப்
பிடிக்கல ஜீவா.." என்று மறுத்தவளிடம் "எனக்காக ப்ளீஸ் " என்று ஜீவா கேட்க அவளுக்கு சம்மதிப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

"நான் மட்டும் வருவது நல்லா
இருக்காதே" என்று அப்போதும் அவள் தயங்கினாள்.

"உன் டீம்ல எல்லாருக்கும் ஈமெயில் போட்டாச்சு. . நீதான் இது
மாதிரி ஏதாவது சொல்லி சொதப்புவனு உனக்கு மட்டும் தனி அழைப்பு. அப்படியே தேவியின் தரிசனம் எனக்கும் கிடைக்கும் இல்லையா?"

"தரிசனம் கிடைச்சதா? நான் போகலாமா?" என்று சிரித்தபடி கேட்டவளின் அருகில் வந்து நின்றவன் அவளது முகத்தை இரு கைகளாலும் ஏந்தி, அடுத்து அவன் என்ன செய்வான் என்பது தெரிந்தது போல் இமை மூடினாள் பவி.

அவளின் நெற்றி மீதிருந்த வெட்டுத் தழும்பில் முத்தமிட்டவன், "உனக்கு அழகே இந்தத் தழும்பு தான்டி" என்று
ஆசையோடு சொல்ல பவித்ரா மையலோடு அவன் மார்பில் சாய்ந்தாள்.

"பவி .. நான் உங்க வீட்ல வந்து பேசட்டுமா?" என்று கேட்கவும் மையல் நீங்க, அவள் திகைத்துப் போய் நிமிர்ந்தாள்.

"என்ன ஜீவா அவசரம்? கொஞ்சநாள் போகட்டுமே" என்று பவித்ரா சொல்ல
ஜீவாவிற்கு அலுப்பாக இருந்தது.

"இதையே தான் ஒரு மாசமா சொல்ற"

"அக்காவுக்கு இப்போ தான் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க.. உடனே எனக்கு பண்ண முடியாது ஜீவா"

"உன்னை வைரத்தால் இழைச்சு கல்யாணம் பண்ணிக்க நான்
ரெ டியாக இருக்கேன்.. நீ ஏன்டி பணத்தைப் பத்தி யோசிக்கிற?"

"உங்கள் வைரங்களை விட என் அம்மா அப்பா செய்ற தங்கங்கள் தான் ஜீவா என்னை சந்தோஷப்படுத்தும்" என்று பவித்ரா சட்டென்று சொல்லிவிட ஜீவாவின் முகம் விழுந்துவிட்டது. அவளது முகவாயைப் பற்றியிருந்தவன் தன் கைகளை எடுத்துவிட்டு அவளைக் கூர்மையாகப் பார்த்தான். அதைப் பார்த்தும் பவித்ரா இளகாமல்
நின்றிருந்தாள்.

"ஏன்?"

ஜீவாவின் கேள்விக்கு பவித்ராவிடம் இருந்து உடனே பதில் வந்தது.

"அவங்க என்மேல் வைச்சிருக்க அன்பு அந்த மாதிரி ஜீவா "

பவித்ராவின் பதிலைக் கேட்டவனின் முகம் இறுகியது.

"நான் வைச்சிருக்கும் அன்புக்கு அப்போ மதிப்பில்லையா!?"

'இந்த விதண்டாவாதத்திற்கு என்ன பதில் பேச?' என எண்ணியவாறு பவித்ரா பதில் பேசாமல் நின்றாள்.

அவளால் எப்படிச் சொல்ல முடியும்
ஜீவாவின் அன்பு அவர்களின் அன்பை விட உயர்ந்தது என்று? பதில்
பேசாமல் நின்றவளை ஒரு நிமிடம் வெறித்து பார்த்துவிட்டு விருட்டென்று வெளியே சென்றுவிட்டான் அவன்.

வெளியே அழகான வானவில்லை சட்டென்று மேகங்கள் நகர்ந்து
மறைத்த மாதிரி அவர்கள் காதலை ஊடல் இடையில் வந்து மறைத்து
விட்டதைப் போல உணர்ந்தாள் அவள். அன்றைய நாளின் சந்தோஷமே
கையை விட்டுப் போனதாக அவளுக்குத் தோன்றியது.

மதிய உணவு இடைவேளையின் போது கூட ஜீவா அலுவலகம் வராமல்
இருக்கவும் அவனுக்கு போன் செய்தாள் அவள். அவன் அழைப்பை
எடுக்காமல் நிராகரிக்கவும் அடுத்து அவளும் அழைக்கவில்லை.
கௌதம் உணவுண்ணும் போது அவனிடம் கொடுக்கப்பட்டிருந்த ப்ராஜெக்ட் பற்றி அவளிடம் சில
கருத்துக்கள் கேட்க ஜீவாவை மறந்துவிட்டு அவளும்
வேலையைப் பற்றி அவனோடு பேசியவாறே சாப்பிட
ஆரம்பித்தாள்.

அலுவலகம் முடிந்து அவள் கிளம்பும் வரை கூட ஜீவா வராமல் இருக்கவும் அவளுக்கு என்னவோ
போலிருந்தது. வீட்டிற்குச் சென்றதும் முதல் வேலையாக
அவனிடம் பேசி நிலைமையைப் புரியவைக்க வேண்டும்
என்று நினைத்துக் கொண்டாள். ஆனால், அவள் வீட்டில் நிலைமை தலைகீழாக இருந்தது.

வீட்டிற்குள் நுழையும்போதே சந்தியாவின் உற்சாகக்குரல் கேட்க பவித்ரா ஆவலோடு உள்ளே சென்றாள்.

"அக்கா வரப் போறதா சொல்லவே இல்லையே? நீயாகவா வந்த?
அத்தானின் கார் வெளியே இல்லையே !?"

"அவர் காலையில் என்னை இங்கே விட்டுட்டுப் போய்ட்டாரு .. எனக்கு இங்கே உங்களைப் பார்க்கணும் போல இருந்துச்சு.. அதான் உங்களைத்
தொல்லை பண்ண வந்துட்டேன்"

வீட்டிற்குச் சென்றதும் ஜீவாவிடம் பேச வேண்டும் என்று நினைத்தவள் சந்தியா வரவும் அந்த விஷயத்தையே மறந்துவிட்டு அவளோடு பேச
ஆரம்பித்துவிட்டாள். சிவகுருவும் வந்தவுடன் மகள்களின் கச்சேரியில்
சேர்ந்து கொள்ள பத்மா இரவு உணவைத் தயாரித்துவிட்டு அவர்களைச்
சாப்பிட அழைத்தாள். ரொம்ப நாட்களுக்குப் பிறகு பத்மா பரிமாற மூவரும் சேர்ந்து உணவுண்ணப் போவதை நினைத்து பவித்ரா சந்தோஷப்பட்டாள் .

மூவருக்கும் பரிமாறிக்கொண்டே சந்தியாவை பத்மா ஜாடையாகப் பார்க்க சந்தியா அந்தப் பார்வையைப்
புரிந்துகொண்டு சிவகுருவை அழைத்தாள்.

"அப்பா.. அது. .. அங்கே எங்கள் வீட்ல அத்தைக்கு ஒரு எண்ணம்" என்று
சந்தியா தயங்கியபடி சொல்ல சிவகுரு சாப்பிடுவதை நிறுத்திவிட்டு
அவளைப் பார்த்தார்.

"என்ன எண்ணம்மா? வளைகாப்பு சீர் பத்தி எதாவது சொன்னாங்களா? தயங்காம சொல்லும்மா.. அதிலெல்லாம் அப்பா ஒரு குறையும் வைக்க
மாட்டேன்" என்று சிவகுரு சொல்ல, பத்மா அவரை முறைத்தாள்.

"சந்தியாவின் வளைகாப்பு பத்தி யோசிக்கிறீங்க.. பவி பத்தி நினைவு
இருக்குதா இல்லையா?"

"யாருடா இவ? பவிக்கு கல்யாணம் பண்ணி மாசமா இருந்தாதானே
அவளோட வளைகாப்பு பத்தி யோசிக்க முடியும்?"

பவித்ரா பத்மாவை பார்த்து பல்லைக் கடித்தாள்.

"ஏன்மா என் இமேஜை இப்படி ஸ்பாயில் பண்ணுறீங்க?"

"நானாடி பண்ணுறேன் உன் அப்பாவைக் கேளு" என்று பத்மா தலையில்
அடிக்க,

"அக்கா வளைகாப்பு பத்தி பேசுறப்ப நீங்க என்னை ஊடே இழுத்தா அப்பா இப்படித்தானே கேட்பாரு?" என்று பவித்ரா நியாயம்
கேட்க, சிவகுருவும் 'அதானே" என்று ஒத்து ஊதினார்.

"நீயும் கூறுகெட்டுப் போய் பேசாதே.. அடியே சந்தியா நீதான் சொல்ல வந்ததை முழுதாக சொல்லி முடியேன்"

இன்னும் விட்டால் சிவகுரு வேறு ஏதாவது சொல்லி சந்தியாவைப்
பேசவே விடாமல் செய்து விடுவார் என்று நினைத்து சந்தியாவை
பேசுமாறு சைகை செய்தார் பத்மா.

"அப்பா எனக்கு என்ன நாளைக்கே சீமந்தம் செய்யப் போறீங்களா? இன்னும்
அதுக்கெல்லாம் மாசக் கணக்கில் டைம் இருக்கிறதுப்பா.. நான் பவியைப்
பத்தி பேசுகிறேன்" என்று சந்தியா படபடவென்று சொல்ல, சிவகுரு
தண்ணீர் டம்ளரை அவள் பக்கமாக நகர்த்தி வைத்தார்.

"குடிச்சுட்டு பேசுமா. . ஏன் இவ்வளவு படபடப்பு? பவியைப் பத்தி உன்
அத்தை நினைக்க என்ன இருக்கு?"

"என் அத்தையின் தங்கை மகன் பிரதீப்புக்கு நம்ம பவியைக்
கேட்குறாங்கப்பா.. என் கல்யாணம் அப்போவே கேட்டாங்களாம்.. அத்தை தான் கொஞ்சநாள் போகட்டும்னு
சொல்லிட்டாங்களாம்.. என்னப்பா சொல்றீங்க?" என்று சந்தியா
சொல்ல சிவகுரு யோசித்தார்.

பவித்ரா தொண்டையில் உணவு
இறங்காமல் சிரமப்பட்டாள். மனதின் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு அவ்வளவு சுலபமாய் இருக்கவில்லை.

"இதில் யோசிக்க என்னங்க இருக்கு? சம்பந்தியம்மா சொல்ற இடம். .
சொந்தம் வேற.. எனக்கு என்னமோ கொடுக்கலாம்னு தோனுது" என்று பத்மா சொல்ல பவித்ராவிற்கு கண்களில் கண்ணீர் இதோ அதோ என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தது.

"இல்ல பத்மா . . இப்போதான் சந்தியாக்கு முடிச்சோம்.. பணம் புரட்ட வேணாமா?"

"சந்தியாவுக்கு முடிச்சு நாலு மாசம் ஆகப்போகுது.. அவளுக்கு கயிருப்பை த் தானேங்க செலவு பண்ணோம்? பவிக்கு லோன் எடுத்துடலாம்.. மேற்கொண்டு மதுரை வீட்டை அடமானம் வைச்சுக்கூட செஞ்சுடலாம்.. பணம் பத்தி யோசிக்காதீங்க.. நல்ல இடம் கிடைக்கிறது இப்போல்லாம் குதிரைக் கொம்பா இருக்கு" என்று பத்மா சொல்ல சிவகுரு தாடையைத் தடவினார்.

அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல் மனம் ஜீவாவிடம் பேசச் சொல்லி உத்தரவு போட அவள் கை கழுவி விட்டு அவளது அறைக்குச்
சென்றாள்.

ஜீவாவின் எண்ணிற்கு அவசரமாக அழைக்க, அவன் அப்போதும்
அவளது அழைப்பை நிராகரித்தான். அவள் மீண்டும் மீண்டும் முயல,
அவன் கட் செய்து கொண்டே இருக்கவும் சந்தியாவின் போனிலிருந்து
அவனுக்கு அழைத்தாள். முதல் ரிங்கிலேயே போன் எடுக்கப்பட்டு அவன்
பேசினான்.

"ஹலோ.. ஜீவா ஹியர்"
அவனது குரலைக் கேட்கவும் தாய்மடி கிடைத்த மழலையாய் அவள் மனம் அமைதியானது.

"ஹலோ..ஹு இஸ் திஸ்?" என்று ஜீவா பொறுமையிழந்து கேட்க, அவள் மொட்டையாக "பவி" என்றாள். சட்டென்று
மறுமுனை அமைதியானது.

"ஜீவா ப்ளீஸ்.. என் நம்பர்ல இருந்து கூப்பிடுறேன்.. அட்டெண்ட்
பண்ணுங்க ப்ளீஸ் " என்று அவள் கேட்க, உடனே அந்த லைனை கட்
செய்துவிட்டு பவித்ராவின் எண்ணிற்கு அழைத்தான் அவன்.

அவனின் அழைப்பை எடுத்தவுடன் அவள் "ஜீவா.." என்று அழைக்க அந்த அழைப்பில் எதை உணர்ந்தானோ? சட்டென்று கோபத்தை விட்டுவிட்டு என்னவென்று கேட்டான்.

"என்னாச்சு? வாய்ஸ் ஏன் ஒரு மாதிரி இருக்கு?" என்று அவன் கேட்க,
அவள் வீட்டில் நடந்ததைச் சொல்லப் போகும் நொடியில் சந்தியா
கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். சந்தியாவைக் கண்டதும் ஃபோனைக் காதிலிருந்து
எடுத்து விட்டாள் பொதுவாக சிரித்தாள் பவி.

"என்னடி உள்ளே வந்துட்ட? கல்யாணக் கனவா?" என்று சந்தியா
கிண்டலாக வினவ, அதை மறுமுனையில் கேட்ட ஜீவா
அதிர்ந்தான்.

"அக்கா.. இப்போ என் கல்யாணத்துக்கு என்னக்கா அவசரம்? எனக்கு இதில்
சுத்தமா விருப்பமில்ல" என்ற பவித்ராவின் பதிலில் ஜீவா கொஞ்சம்
ஆசுவாசமடைந்தான்.

"இதெல்லாம் நானும் சொன்னவள் தான் பவி.. நான் நல்லா தானே இருக்கேன்? நீ பிரதீப்பை ஒரு தடவை பாரு .. அதுக்குப்
பிறகும் இதையே சொல்றயானு பார்ப்போம்"

"அவன் உலக அழகனாகவே இருந்தாலும் எனக்குப் பிடிக்காது" என்று அவள் கூற மறுமுனையில் ஜீவாவின் இதழ்களில் புன்னகை அரும்பியது.
அமைதியடைந்த அவன் மனம் அவளது அடுத்த பதிலில் ஆட்டம் கண்டது.

பிடிவாதமாகப் பிடிக்கவில்லை என்று சொன்னவளை சந்தியா உறுத்துப்
பார்த்தாள்.

"என்னைப் பாரு பவி. . உனக்கு நானும் அம்மாவும் நல்லது மட்டும் தான்
நினைப்போம்னு நம்புகிற தானே?" என்று சந்தியா கேட்க, பவித்ரா கலங்கிப் போய் நிமிர்ந்தாள்.

"என்னக்கா நீ.. நீங்க எனக்கு எது செஞ்சாலும் அது கண்டிப்பாக என் நல்லதுக்காகத் தான் இருக்கும்"

"அந்த நம்பிக்கையில் கல்யாணத்துக்கு ஓகே சொல்லு பவி.. சும்மா தேவையில்லாததைப் பத்தி நினைச்சு உன் லைஃபை ஸ்பாயில் பண்ணிக்காதே.. சரியா?" என்று
கூறிவிட்டு சந்தியா வெளியே செல்ல கையில் வைத்திருந்த போனை காதுக்குக் கொடுத்தாள் அவள்.

"ஹலோ... "

மறுமுனையில் ஜீவா அமைதியாக இருக்கவும் பவித்ரா போனை
காதிலிருந்து எடுத்து அவன் லைனில் இருக்கிறானா என்று பார்த்தாள்.

'"ஜீவா.."

"'சொல்லு.. லைன்ல தான் இருக்கேன்.. லெட்ஸ் பிரேக்கப்? அதுதானே நீ சொல்ல வந்தது?" என்று ஜீவா கடினமான குரலில் கேட்க பவித்ராவின் முகம் இறுகியது.

"இவ்வளவு ஈஸியாகக் கேட்குறீங்க? ஏன் நீங்க அந்த ஐடியால இருக்கீங்களா?"

"லவ் பண்ணவங்கள விட்டுட்டு ஓடுற பழக்கம் எனக்கு இல்ல"

ஊசியாய் குத்தும் வார்த்தைகளால் உதடுகளைக் கடித்துக் கொண்டாள் பவி.

அவளது அமைதி எதுவோ செய்ய, "ப்ச்.. சொல்ல வந்தத சொல்லி முடி" என்று எரிச்சலாய் சொல்வதைப் போல சொன்னாலும் அவன் இதயம் தாளமடித்து அவன் பதட்டத்தை வெளிப்படுத்தியது.

"வீட்ல வந்து பேசுங்க"

நீ நினைப்பது போல் நானில்லை என்பதை கண்டேன் சீதையை அனுமனின் வழியைப் பின்பற்றி சொன்னவள் அதற்கு மேல் அவனுடன் வாதிட பிடிக்காமல் அழைப்பைத் துண்டித்தாள்.

அதில் அவளது கோபத்தை உணர்ந்தவன் அவளை சமாதானம் செய்யும் முயற்சியை எடுக்காது நேராக தன் பாட்டியைக் காணச் சென்றான்.

மறுநாள் ஜீவா அவளை அழைத்து எதுவும் பேசவில்லை.. அவன்
அழைப்பான் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றத்தோடு
அமர்ந்திருந்தாள் பவி. அவளின் ஒரு மனம் ஏதாவது முக்கியமான
வேலையாக இருக்கும் என்று சொன்னாலும் மற்றொரு மனம் 'நிச்சயம் கல்யாணத்தை விட இல்லை' என்று வாக்குவாதம் செய்தது.

அவளது எண்ண நாயகன் அங்கே அவர்களது காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான வேலையைத் தான் செய்து கெண்டிருந்தான்.

தெரியாத எண்ணின் அழைப்பை யோசனையுடன் எடுத்த சந்தியா, "ஹலோ.." என்றாள்.

"ஹலோ.. சந்தியா தானே?"

"யெஸ்.. நீங்க?"

"ஐ ஆம் ஜீவன் .. நான் உங்க கிட்ட கொஞ்சம் பெர்சனலாகப் பேசணும்.. பேசலாமா?" என்று ஜீவா கேட்க சந்தியா
முகம் சுளித்தாள்.

"மிஸ்டர்.. யார் நீ? என்னிடம் ஏன் நீ பேசணும்?" என்று சந்தியா அதட்டலாகக் கேட்க ஜீவா சிரித்தான்.

"கூல் மிஸஸ் மனோஜ்.. திருமணமாகி ஒரு குழந்தைக்கு அம்மாவா ஆகப் போற உங்க கிட்ட காதல் வசனங்கள் பேசுற அளவிற்கு நான் அயோக்கியன் இல்ல"

'என்னைப் பத்தி இவனுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கே!?'

திகைப்பை சமாளித்துக் கொண்டு, "நீங்க நல்லவனாகவே இருந்துட்டு போங்க சார் . . எதுக்காக என்கிட்ட பேசணும் நீங்க?" என்று கேட்டவள் ஒருமையில் இருந்து பன்மைக்குத்
தாவினாள்.

"பரவாயில்லையே.. மரியாதை திரும்ப வந்துருச்சு!? இதைப் போனில் என்னால் பேச முடியாது. . உங்களை நேர்ல சந்திக்க முடியுமா? விஷயம் உங்கள் தங்கையைப் பத்தி" என்று அவன்
சுருக்கமாகச் சொல்ல சந்தியா பதறினாள்.

' பவிக்கு என்ன? இல்லையில்லை அவளுக்கு எதுவும்
ஆகியிருக்காது.. அந்த மாதிரி விஷயமென்றால் இப்படிக்
கிண்டலா யாரும் பேசமாட்டாங்க.. அதற்கும் மேலாக இவனுக்கு நம்மைப் பத்தி எல்லாம் தெரிஞ்சிருக்கு.. இது வேறு ஏதோ விஷயம்'

ஒன்றும் ஒன்றும் இரண்டு என கணக்குப் போட சந்தியாவிற்கு வெகுநேரம் தேவையிருக்கவில்லை.
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
12

"அவளைப் பத்தி நீங்க என்கிட்ட பேச என்ன இருக்கு?" என்று
சந்தியா மிடுக்காகக் கேட்க ஜீவா அலட்டிக்கொள்ளாமல் பதில்
சொன்னான்.

"என்ன இருக்க முடியும்னு நினைச்சு நீங்க இந்தக் கேள்வியைக் கேட்டீங்களோ அதேதான்"

அவனது பதிலில் யோசனையாய் முகத்தைக் கொண்டு சென்றவள், "எங்கே வரணும்?" என்றாள்.

"நான் கார் அனுப்புறேன்.. உங்க வீட்டுக்கே அனுப்பட்டுமா?"

"தேவையில்லை. . நீங்க அட்ரெஸ்
சொல்லுங்க நான் வந்துவிடுறேன்"

"இந்த மாதிரி சமயத்தில் உங்களுக்கு அலைச்சலாக இருக்கக் கூடாது இல்லையா? கார் அனுப்புறதில் என்ன பிரச்சினை?

"என் உடல் நலத்தைப் பத்தி நீங்களே இவ்வளவு யோசிக்கும் போது நான்
யோசிக்க மாட்டேனா சார்? நான் ஏதாவது கேப் புக் பண்ணிக்கிறேன். . நீங்க அட்ரெஸ் சொல்லுங்க" என்று சந்தியா பட்டுக் கத்திரிக்க,

"தி பெஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்" என்ற ஜீவாவின் பதிலை அவள் ஓரளவு எதிர்பார்த்திருந்தாள். அவனிடம் வருவதாகச் சொல்லிவிட்டு போனை வைத்தவள் பத்மாவிடம் வெளியே செல்வதாக மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்தக் கம்பெனியின் முன் நின்றிருந்தவளுக்கு அதன் பிரமாண்டம் குறித்து பவித்ரா சொன்னது மிகையல்ல என்றே தோன்றியது. இந்தக் கம்பெனியில் தான் தன் தங்கை வேலை செய்கிறாள் என்று மனதில் தங்கையைக் குறித்த பெருமிதம் தோன்ற அவள் ரிசப்ஷனை நோக்கி நடந்தாள்.

"வாட் கேன் ஐ டூ ஃபார் யூ மேம்?" என்று ஸ்வீட்டி அழகான ஆங்கிலத்தில்
கேட்க, சந்தியா சொன்ன பதிலில் அவள் முகத்தில் 'அவள் யார்?' என்ற
ஆராய்ச்சி தெரிந்தது.

"மிஸ்டர் ஜீவனைப் பார்க்க வேண்டும்" என்று சந்தியா சொல்ல, ஸ்வீட்டி
பார்த்த பார்வையில் 'எதுவும் தவறாகச் சொல்லி விட்டோமா?' என்று
நினைத்தாள் அவள்.

சந்தியாவின் பெயரைக் கேட்டுவிட்டு ஜவாவிற்கு போன் செய்து அவள் அனுமதி கேட்க அவனே வருவதாகச் சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டு அங்கே வந்தான் அவன்.

"ஹாய் சந்தியா.. ஐ ஆம் ஜீவன் .. உள்ளே போய் பேசலாம் வாங்க" என்று
அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, முன்னால் போக அவனைக் குழப்பத்துடன் பார்த்தாள் அவள்.

' ஆஃபீஸில் வைச்சு பேசவா?'

அங்கேயே நின்று கொண்டிருந்தவளை அவன் கேள்வியாகப் பார்க்க அவள்
மனதில் நினைத்ததைக் கேட்டாள்.

"உங்க எம். டி எதுவும் சொல்ல மாட்டாரா?" என்று அவள் கேட்க ஜீவாவின் இதழ்கள் விரிந்தது.

"உள்ளே வாங்க சந்தியா. . உங்களை யாரும் எதுவும் சொல்லாமல் நான்
பார்த்துக்கிறேன்" என்று அவன் முன்னே நடக்க அவள் தயக்கத்தோடு அவனைப் பின்தொடர்ந்தாள்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் மட்டுமே வேலை செய்து கொண்டிருக்க அவள் மணி பார்த்தாள். மணி ஒன்று நாற்பது என்று காட்டியது. லன்ச் டைம் போல என்று மனதில் நினைத்தவள் அவன் ஒரு அறைக்குள்
செல்லவும் அவளும் உள்ளே சென்றாள்.

உள்ளே நுழைந்தவளின்
கண்களில் ஜீவனின் பெயர் தாங்கிய பலகையில் அவன் பெயரின் கீழ் மேனேஜிங் டைரக்டர் என்றிருக்க அவளுக்குத் தலைசுற்றியது. அவன் எம் .டி சீட்டில் தோரணையாக அமர்ந்து அவளை அமரச் சொல்ல சந்தியா தலையைப் பிடித்தவாறே அமர்ந்தாள்.

"என்னாச்சு? ஆர் யூ ஓகே?" என்று அவளிடம் கேட்டவாறே வாசுவிடம் சொல்லி ஜூஸ் வரவழைத்தான் அவன்.
சந்தியாவிற்கும் அது தேவையாக இருக்க ஜீவா சொல்லாமலே தன் முன்
வைக்கப்பட்ட ஜூஸை எடுத்துக் குடித்தாள்.

"இப்போ ஓகே தானே
சந்தியா? திடீர்னு என்னாச்சு?" என்று ஜீவா கேட்க சந்தியா முணுமுணுத்தாள்.

' ஒரு மனுஷிக்கு தொடர்ந்து ஷாக் கொடுத்துட்டே இருந்தால் தலை
சுத்தாமல் வேறு என்ன செய்யும்? '

"என்ன சொல்றீங்க? புரியல?"

"நத்திங் . . இந்த மாதிரி டைம்ல இது நார்மல் தான் .. நீங்க தான் எம்.டி-னு சொல்லவில்லையே போனில்?" என்று
அவள் கே ட்க ஜீவா சிரித்தான்.

"நாம பிஸினெஸ் விஷயமாகப் பேசியிருந்தா அப்படி அறிமுகம்
ஆகலாம் . நாம பேசப்போறது பிஸினெஸ் டீலிங் இல்லைங்க..
என்னுடைய வாழ்க்கை.. சோ, நான் பவியைக் காதலிப்பவனாக அறிமுகம்
ஆவது தானே சரியாக இருக்கும்?"

'இவன் கெட்டிக்காரன்.. யாரிடம் எப்படிப்
பேசுவது என்று அறிந்து பேசுகிறான். . ' என்று நினைத்தாள் அவள்.

ஆனால், சந்தியா அவற்றிற்கெல்லாம் அசையும் ரகமல்லவே?

ஒருபுறம் இவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருப்பவன் பவித்ராவைக்
காதலிப்பதை நினைத்து அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. மறுபுறம் தங்கையின் வாழ்க்கை குறித்த எச்சரிக்கை உணர்வு தலை தூக்கியது.

'ஆனால், பவி எப்படி சம்மதித்தாள்? ஒருவேளை இவன் தான் அவனாக
இருக்குமோ? அவனாகவே இருந்தாலும் கூட எப்படி? இவன் சொல்வதை
பொய்யென்றும் சொல்லிட முடியாது. இங்கே தான் பவியும் வேலை
பார்க்கிறாள்.. அப்படியிருக்க அவன் இவ்வளவு தைரியமாகப் பொய்
சொல்ல வாய்ப்பில்லை'

சந்தியா தனக்குள்ளே எதையோ யோசிப்பதைப் போல அமைதியாக
அமர்ந்திருக்க ஜீவா அவள் முன் விரலை சொடுக்கினான்.

"என்னங்க எதையோ யோசிப்பது போல இருக்கே?"

"இல்ல.. பவியை வரச் சொல்லுங்க.."
சந்தியாவின் கேள்வியில் ஜீவா நிமிர்ந்து அமர்ந்தான்.

"ஏன் என்மேல நம்பிக்கை இல்லையா என்ன?"

"அப்படினு கூட சொல்லலாம்"

"அவள் சொல்லிட்டா என்னங்க செய்வீங்க?" என்று கேட்டவனை
ஆராய்ச்சியோடு பார்த்தாள் அவள்.

"என்ன எக்ஸ்பெக்ட் பண்றீங்க?"
வேறென்னங்க கேட்பேன்? உங்கள் வீட்ல நான் பேசுறப்போ எனக்கு
ஆதரவாகப் பேசுங்க"

"உங்களைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது .. எப்படி நான் ஆதரவாகப்
பேசுவேன்னு எதிர்பார்க்குறீங்க?"

"ஜீவா.. தி பெஸ்ட்டின் எம். டி. சொந்த ஊர் மதுரை .. ஐந்து வருஷம் ஆச்சு சென்னை வந்து.. இங்கே ஓ.எம் .ஆர் ரோட்டில் வீடு ..
பாட்டி கூட இருக்காங்க. கூடவே , உங்க தங்கச்சிய நீங்க கற்பனை பண்ண முடியாத அளவுக்கு காதலிப்பவன். . இவ்வளவு தாங்க நான். . இதுக்கு மேல எதாவது தெரியணுமா?" என்று ஜீவா சொல்ல சந்தியாவிற்கு புதிரெல்லாம் விடுபட்டுப் போனது.

சொந்த ஊர் மதுரை என்று ஜீவா சொல்லும்போதே அவளுக்கு ஓரளவு
உண்மை விளங்கிவிட்டது. ஆனால், எப்படி என்று தான் புரியவில்லை.
அதைப் பவித்ராவிடம் தான் கேட்க வேண்டும் என்று நினைத்துக்
கொண்டாள்.

"நான் எந்த அளவுக்கு கற்பனை செய்வேனு உங்களுக்கு எப்படித் தெரியும் சார்?" என்று கிண்டலாக கேட்டாள் சந்தியா.

"சாரா? ஏங்க உங்களுடைய குடும்பத்துல என்னை நுழையாதேனு டீசன்டாக சொல்றீங்களா?"

"அப்படியில்ல.. புதுசா அறிமுகம் இல்லையா அதான்" என்று
சந்தியா இழுத்தாள்.

"அதெல்லாம் தேவையில்ல.. கால் மீ ஜீவா"

"அது சரியாக இருக்காது..
மரியாதை குறைவாக இருக்கும்" என்று சந்தியா மறுத்தாள்.

சந்தியா அவளையும் அறியாமல் அவர்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியிருப்பதை உணர்ந்தவனின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.

"நீங்க எந்த அளவுக்கு கற்பனை செஞ்சாலும் அதைவிட ஒருபடி மேலே
என்பதை தான் அப்படிச் சொன்னேன்" என்று ஜீவா புன்னகையோடு சொல்ல சந்தியாவும் புன்னகைத்தாள்.

"உங்களுக்கு சம்மதம் தானே சந்தியா?" என்று அவன் உறுதிப்படுத்த வேண்டிய கேட்க,

சந்தியா, "பவியிடம் பேசணும்" என்றாள்.

பவித்ராவிற்கு கால் செய்தான் அவனீ . அவள் போனை எடுக்காமல் கட் செய்ய
ஜீவா பெருமூச்சு விட்டான். இரண்டு முறை மீண்டும் மீண்டும் முயல
அவள் கட் செய்து கொண்டே இருக்கவும் ஜீவா ஒரு 'உச்' கொட்டலுடன் போனை
காதிலிருந்து எடுத்தான். சந்தியா அவனைக் கேள்வியாகப் பார்க்க, ஜீவா
"எப்படிங்க சமாளிக்குறீங்க?" என்று கேட்டு வைத்தான்.

அவன் கேட்ட தொனியில் சந்தியாவிற்கு சிரிப்பு வர அதை அடக்கிக்கொண்டு ஏனென்று கேட்டாள் அவள்.

"மனுஷன் கோபத்தில் ஏதாவது செஞ்சா அதையே பிடிச்சுத் தொங்கிட்டு
இருக்கா.. நேத்து மேடம் கால் பண்ணி நான் எடுக்கல அதுக்கு இப்போ
பழி வாங்குறா" என்று அவளிடம் சொல்லிவிட்டு வாசுவை அழைத்து
அவன் பவித்ராவை அழைப்பதாகச் சொல்லச் சொன்னான்.

வாசு சென்ற மறுநிமிடமே அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த பவித்ரா அங்கே சந்தியா அமர்ந்திருக்கவும் திகைத்தாள்.

"அக்கா.. நீஎப்படி இங்கே?"

"அது இருக்கட்டும்.. இது உன் எம்.டியின் ரூம் தானே? என்னவோ உன் புருஷன் ரூம்குள்ள நுழையுறதைப் போல வர்றியே? கர்ட்டஸிக்காக கூட பெர்மிஷன் கேட்கலயே.. என்ன நடக்குது இங்கே?" என்று சந்தியா கேட்க பவித்ரா உதட்டைக் கடித்தவாறு கீழே குனிந்தாள்.

' ஆமான்னு சொன்னா வாயிலிருந்து முத்து உதிர்ந்துடுமா? மரம் மாதிரி நிற்கிறாள்' என்று ஜீவா எரிச்சல்
பட்டான்.

"இவர் சொல்றதெல்லாம் உண்மையா பவி?"

பவித்ரா கலங்கிய முகத்துடன் சந்தியாவைப் பார்க்க, ஜீவா அவளை எரித்து விடுவதைப் போல் பார்த்தான்.

"உன்னைத்தான்டி உன் அக்கா கேட்குறாங்க.. பதில் சொல்ல அவ்வளவு கஷ்டமான கேள்வியையா கேட்ருக்காங்க?"

அவனது கேள்வி சூடாக வர, பவித்ரா சந்தியாவைப் பார்த்தாள்.

"உண்மை தான்.. நானே உன்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்"

"எப்போ? கல்யாணம் பண்ணிட்டு அப்றம் சொல்லிக்கலாம்னு நினைச்சியா? என்கிட்ட எப்படிடி உன்னால மறைக்க முடிஞ்சது?"

சந்தியா ஆற்றாமையுடன் கேட்க, பவித்ரா குற்றவுணர்வுடன் தலைகுனிந்தாள்.

"சாரிக்கா.. மறைக்கணும்னு நினைக்கல.. என்ன சமாதானம் பண்ணாலும் தப்பு தான்.. மன்னிச்சுடு"

அதற்கு மேல் அவளால் கோபத்தை இழுத்து வைக்க முடியவில்லை.

"நீ இதுல ஸ்ட்ராங்கா தானே இருக்க?" என்று சந்தியா கேட்க, கலக்கத்துடன் நிமிர்ந்தவள் ஆம் எனும் விதத்தில் தலையசைத்தாள்.

அவள் முகத்தில் இருந்த கலக்கம் எதனால் என்பதை உணர்ந்தவளின் முகமும் கலக்கத்தை பிரதிபலித்தது.

அதை மறைத்தவாறே, "நான் வீட்ல பேசுறேன்" என்று சந்தியா சொல்ல,

"இல்ல சந்தியா.. நான் இன்னைக்கு ஈவ்னிங் உங்க வீட்ல வந்து பேசுறேன்" என்றான் ஜீவா.

ஜீவாவின் முடிவில் அக்காவும் தங்கையும் கலக்கத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாலும் என்றைக்கு இருந்தாலும் சமாளிக்க வேண்டியது தானே என்ற ரீதியில் சரி என்றனர்.


 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
13

ஜீவா சொன்ன மாதிரியே அன்று மாலை அவர்களது வீட்டிற்குச் சென்றான். சந்தியா அவனை வரவேற்று உள்ளே அழைத்துக்கொண்டு போக, கலக்கத்துடன் ஹாலில் நின்றிருந்த பவியைப் பார்த்தபடியே உள்ளே வந்தான் ஜீவா.

அவன் மனம் முழுவதும் அடுத்தடுத்து நடக்க வேண்டிய வேலைகளின் பட்டியல் நீண்டிருந்தது. ஒருமுறை அவளைப் பிரிந்து அவன் பட்ட கஷ்டங்கள் இந்தமுறை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளச் சொன்னது. எந்த காரணத்திற்காகவும் அவளை விட்டுவிட அவன் தயாராய் இல்லை. பவி வீட்டில் எதிர்ப்பு இருக்கும் என்று மனதின் ஓரத்தில் ஒரு சின்ன சந்தேகம் கூட அவனுக்கு இல்லை. பவியின் கலக்கம் கூட அவனுக்கு வேடிக்கையான ஒன்றாகவே இருந்தது. நிராகரிக்கும் அளவிற்கு அவனிடம் எந்தக் குறையும் இல்லையே! இது ஒன்று தான் அவனது எண்ணம்.

ஆனால், பவியின் நினைவோ முற்றிலும் வேறாக இருந்தது. அவ்வளவு எளிதாக பத்மாவும் சிவகுருவும் அவளது காதல் விஷயத்தை ஏற்க மாட்டார்கள். அவர்களை மீறி அவளாலும் அவனைத் திருமணம் செய்து கொள்ள முடியாது. இந்தக் காதல் ஏன் தான் தனக்கு வந்து தொலைத்ததோ என்ற எண்ணம் தோன்ற பவியின் மனம் அதிர்ந்தது.

ஜீவாவைப் பார்த்தாள். அவன் கண்களில் அவளுக்கான காதல் கொட்டிக் கிடக்க, தன் எண்ணத்தைக் கண்டு தன்னைத் தானே வெட்கிக் கொண்டவள் வருவதை சமாளித்துக் கொள்ளலாம் என்றபடி நடக்கவிருக்கும் நிகழ்வுகளுக்குத் தன்னைத் தயார்படுத்தினாள்.

ஹாலில் அமர்ந்து செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருந்த சிவகுரு, சந்தியா அந்நிய ஆடவன் ஒருவனை அழைத்து வரவும் யோசனையுடன் எழுந்தார்.

"வணக்கம் சார்" என்ற ஜீவாவிற்கு பதில் வணக்கம் சொல்லியவர், சந்தியாவிடம், "தம்பி யாரும்மா?" என்று விசாரித்தார்.

"இவர் ஜீவன்.. நம்ம பவியின் எம்.டி"

அவளது பதிலில் குழப்பம் மேலிட பவியைத் திரும்பிப் பார்த்தவர் அவளது கலங்கிய முகத்தில் எதைக் கிரகித்துக் கொண்டாரோ? அவனை அமரச் சொல்லிவிட்டுத் தன் மனையாளை அழைத்தார்.

'டீ தான் போட்டுட்டு இருக்கேனே.. அதுக்குள்ள இத்தனை தடவை என்னை ஏலம் விடணுமா?'

மனதுக்குள் கணவனைத் திட்டியவாறே சமையலறையில் இருந்து வெளிவந்தவர், அங்கே அந்நிய ஆடவனைக் கண்டதும் வினா எழுப்பும் விழிகளோடு கணவனை ஏறிட்டார்.

"இது நம்ம பவி வேலை பார்க்குற கம்பெனியின் எம்.டி. சந்தியா கூட்டிட்டு வந்திருக்கா"

குறிப்பாக மனைவியைப் பார்த்தவாறு அவர் சொல்ல, கணவரின் குறிப்பில் நெஞ்சம் தடதடக்க பவியைப் பார்த்தார் பத்மா. பவித்ரா தரையில் இருந்து
பார்வையை எடுத்தால் தானே பத்மாவின் கண்களைச் சந்திக்க முடியும்?
அவள் குனிந்த தலை நிமிராமல் நிற்க பத்மாவின் வயிற்றில் பயப்பந்து
சுழன்றது.

சிவகுரு தொண்டையைச் செறுமிக் கொண்டு ஜீவாவிடம், "சொல்லுங்க
தம்பி . . என்ன விஷயமாக எங்களைப் பார்த்துப் பேச வந்தீங்க?" என்றார்.

"உங்க பொண்ணை எனக்குப் பிடிச்சிருக்கு சார். நாங்க
ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம்.. உங்களுக்குச்
சம்மதம்னா நாளைக்கே என் பாட்டி இங்கே வந்து முறைப்படி பேசுவாங்க" என்று ஜீவாவும் நேரடியாக
விஷயத்திற்கு வர பத்மா அதிர்ந்தார்.

'ஒரு காதலால் பட்ட துன்பம்
போதாதா? இப்போ இவளும் காதல்னு வந்து நிற்கிறாளே ..
அதுவும் பணக்காரப் பையனை '

பத்மாவின் நினைவுக்குவியல் பவித்ராவின் காதலால் தூசு தட்டப்பட
அவருக்கு வந்த ஆத்திரத்தில் சற்றும் யோசிக்காமல் பவித்ராவை ஓங்கி அறைந்தார். அடுத்த அடி வைப்பதற்குள் சந்தியா பத்மாவின் கைகளைப் பிடித்துக் கொள்ள, இதை சற்றும் எதிர்பார்த்திராத ஜீவா இருக்கையில் இருந்து எழுந்துவிட்டான். சிவகுருவிற்கு
மனைவியின் மனநிலை புரிந்தாலும் அடித்தது அவருக்குமே
அதிர்ச்சி தான்.

"என்ன காரியம் செய்துட்ட பத்மா? வளர்ந்த பிள்ளை மேல் கை
வைக்கலாமா?"

"வேற என்ன செய்ய சொல்றீங்க? என்ன காரியம் செஞ்சுட்டு வந்திருக்கா? மடியில் வைச்சு கொஞ்சட்டுமா?" என்று பத்மா
ஆத்திரமாகக் கேட்க, அழுது கொண்டிருந்த பவித்ராவின் அருகில் வந்து அவள் கன்னத்தைத் திருப்பிப் பார்த்தான் ஜீவா.

பத்மாவின் ஐந்து விரல்களும்
பதிந்த தடத்தைப் பார்த்தவனுக்கு கோபம் சுருசுருவென்று ஏற அதே
கோபத்தோடு திரும்பியவனைப் பவித்ராவின் கரங்கள் தடுத்தது.
பவித்ராவின் கண்களில் தெரிந்த மன்றாடலில் ஜீவா நிதானித்தான்.

"உள்ளே போடி நீ. . நான் பேசிக்கிறேன்" என்று ஜீவா சொல்ல, பவித்ரா அசையாமல் அங்கேயே நின்றாள்.

"சந்தியா இவளைக் கொஞ்சம் உள்ளே கூட்டிட்டு போறீங்களா.. இந்த
முகத்தோடு இவ இங்கே நின்னுட்டு இருந்தா நான் கன்ட்ரோல் இல்லாம ஏதாவது பேசிடுவேன்.. " என்று அவன் சொல்ல, சந்தியா பத்மாவின்
கண்ணசைவையும் மீறி பவித்ராவை உள்ளே இழுத்துச் சென்றாள். அவளை உள்ளே அழைத்துச் சென்றதும் சிவகுருவிடம் திரும்பினான் அவன்.

"இதோ பாருங்க சார் . . நான் ஒன்னும் தெருவில் சுத்திட்டு இருக்கும்
ஊர் பொறுக்கி கிடையாது. என்னவோ உங்க பொண்ணு அந்த மாதிரி
ஒருத்தனைக் கூட்டிட்டு வந்து காதலிக்கிறேன்னு சொன்ன மாதிரி அவளை என் முன்னாலேயே அடிக்கிறது கொஞ்சம் கூட நல்லாயில்ல"

அவன் வார்த்தைகளில் இருந்த நியாயமான கோபத்தை
உணர்ந்தவராய் சிவகுரு மௌனமாக இருந்தார். ஆனால், பத்மாவால்
அப்படி இருக்க முடியவில்லை.

"அதென்ன உங்க முன்னாலேயே அடித்ததாகச் சொல்றீங்க? அவ என்னோட பொண்ணுனு ஞாபகம் இருக்கட்டும்"

"ஏன் ஞாபகம் இல்லாம? அதெல்லாம் நல்லாவே ஞாபகம் இருக்கு. அதனால் தான் இவ்வளவு தூரம் பொறுமையா பேசிட்டு இருக்கேன். எனக்கு என்ன குறைனு நீங்க உங்க பெண்ணை எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க
யோசிக்குறீங்க?"

ஜீவாவின் கேள்வியில் பத்மா அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஆறடியை ஒட்டிய உயரத்தில் மாநிறத்தில் கூரிய கண்களோடு செதுக்கிய சிற்பமாய் வசதியிலும் குறைவில்லாமல் தன் முன் நின்று எனக்கு என்ன குறையென்றுக்
கேட்பவனிடம் அவள் என்ன குறையைச் சொல்லுவாள்? பத்மா
அமைதியாக நின்றிருந்தாள்.

"இதோ பாருங்க மேடம் .. பவித்ரா மேஜர்.. அதை ஞாபகம் வைச்சுட்டு எந்த முடிவானாலும் எடுங்க" என்று அவன் சொல்ல பத்மா அலட்சியமாக அவனைப் பார்த்தாள்.

"என்ன மிரட்டிப் பார்க்குறீங்களா? என் பெண் என்னை மீறி ஒருநாளும்
உங்களுக்குக் கழுத்தை நீட்ட மாட்டாள்" என்று பத்மா சொல்ல அவளை
விட அலட்சியமாக ஜீவா பதில் சொன்னான்.

"இன்னொருத்தனுக்கும் கழுத்தை நீட்டிட மாட்டாள்" என்று ஜீவா
சொல்ல, அதற்கு பதில் பேச வாயெடுத்த பத்மாவை சிவகுரு அடக்கினார்.

"பத்மா கொஞ்சநேரம் பேசாம இருக்கியா? நாங்க யோசிச்சு
சொல்றோம் சார்.. ரெண்டு நாள்ல எங்க முடிவைச் சொல்றோம்.. சரிதானா?" என்று சிவகுரு கேட்க ஜீவாவிற்கு அந்த ஏற்பாடும் சுத்தமாகப்
பிடிக்கவில்லை.

' எனக்குக் கட்டிக் கொடுக்க ரெண்டு நாள் யோசிக்கணுமா? '

இந்த அளவிற்கு வந்ததே பெரிதென்று நினைத்து சரி என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான். ஜீவா கிளம்பியதும் சிவகுரு சோஃபாவில் அமர பத்மா
அவரருகில் அமர்ந்தாள்.

"எதுக்குங்க ரெண்டு நாள்ல சொல்றோம்னு சொன்னிங்க? இதில் யோசிக்க என்ன இருக்கு?"

"நிறைய இருக்கு பத்மா.. பவிக்கு அவரைப் பிடிச்சிருக்குன்றத நீ மறந்துட்டியா? அவரே சொல்கிற மாதிரி அவர்கிட்ட என்ன குறை இருக்கு? நம்ம பொண்ணு ஒன்னும் ரோட்டில் போகிறவனைக் காட்டி
கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லலையே?"

"அவர் பணக்காரருங்க. . இது ஒன்னு போதாதா?"

"அதுக்காக மட்டும் நாம் வேணாம்னு சொல்றது முட்டாள்தனம் பத்மா"

"நான் முட்டாளாகவே இருந்துட்டுப் போறேங்க.. என் பொண்ணை பலி கொடுக்க என்னால் முடியாது" என்று தீர்மானமாகச் சொன்னவளை என்ன
சொல்லி வழிக்குக் கொண்டு வருவது என்று தெரியாமல் திகைத்தார் அவர்.

இனி என்ன செய்வது என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கையில் கார்
வரும் சத்தம் கேட்க பத்மா வாயிலைப் பார்த்தாள். மனோஜ் தான்
கைகளில் நாலைந்து பாலீதீன் கவர்களோடு வந்தான். அவசரமாய்
முகபாவத்தை மாற்றிக் கொண்டு சிவகுருவும் பத்மாவும் அவனை
வரவேற்றனர்.

அவன் கண்கள் சந்தியாவைத் தேடுவதை உணர்ந்து பத்மா,
"சந்தியா ரூம்ல இருக்கா மாப்பிள்ளை.. நான் போய் வரச் சொல்றேன்" எனக் கூறிவிட்டு உள்ளே செல்ல, அவரைத் தடுத்தான் அவன்.

"நான் போய் பார்க்கிறேன் அத்தை.. நீங்க எல்லோருக்கும் சாப்பாடு
எடுத்து வைய்ங்க" என்று அவன் கைகளில் இருந்த சாப்பாடு பார்சலை
அவரிடம் கொடுக்க, பத்மா சங்கடத்துடன் அவனைப் பார்த்தார். இது
சந்தியாவின் வேலையாகத் தான் இருக்கும் என்று பத்மாவிற்குப் புரிந்தது.
இதற்கு மேல் சமைத்துச் சாப்பிடுவதெல்லாம் முடியாது என்று
அவருக்கும் தோன்ற சங்கடத்துடனே அதை வாங்கிக் கொண்டார்.

மனோஜ் பவித்ராவையும் சந்தியாவையும் அழைத்து வெளியே வரவும் பத்மா எல்லோருக்கும் பரிமாறினார். சாப்பாட்டை முடித்துவிட்டு
சிவகுருவை மனோஜ் தனியாக அழைத்துச் செல்ல பத்மாவும்
சாப்பிட்டுவிட்டு எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு வந்தார். ஹாலில் அமர்ந்து சந்தியாவும் பவித்ராவும் முணுமுணுவென்று பேசிக்
கொண்டிருக்க அவர்களைக் கண்டுகொள்ளாமல் அறைக்குள் செல்லப் போனவரை சந்தியா தடுத்தாள்.

"நில்லுங்கம்மா.. பவி உங்க கிட்ட பேசணுமாம்"

"நீ எப்போ இருந்து இந்த இடைத்தரகர் வேலையெல்லாம் பார்க்க
ஆரம்பிச்ச சந்தியா?"

பத்மாவின் கேள்வியில் முகம் சுளித்தாள் சந்தியா.

"கோபமாக இருந்தா உங்களுக்கு என்ன வார்த்தை பேசுறோம்னு புரியாதாம்மா? உங்க புத்தி எப்படி யோசிக்கும்னு எனக்குத் தெரியும். நீங்க நினைக்கிற மாதிரி எனக்கு பவியின் காதல் விஷயம் முன்னவே தெரிஞ்சு அதை உங்க கிட்ட நான் மறைக்கல.. இன்னைக்கு காலைல
தான் அவர் என்னைக் கூப்பிட்டுச் சொன்னார். நானும் இந்த வீட்ல ஒருத்தி
தானே? ஒத்த வயதுனு என்கிட்ட தனியாகச் சொல்லி சம்மதம்
கேட்டார் . உங்களுக்கு ஈவ்னிங் தெரிஞ்ச விஷயம் எனக்கு மதியம் தெரியும்.. அவ்வளவுதான்" என்று சந்தியா முகச் சுளிப்போடு சொல்ல பத்மா பதில்
சொல்ல முடியாமல் அவர்கள் அருகில் வந்து அமர்ந்தார்.

"என்ன பேசப் போற?" என்று நிதானத்தை வரவழைத்துக் கொண்ட குரலில் பத்மா கேட்க பவித்ரா நிமிர்ந்து
பத்மாவைப் பார்த்தாள். பத்மாவின் பார்வை விரல் தடங்கள் மறைந்து
சிவந்து போயிருந்த பவித்ராவின் கன்னங்களை வேதனையோடு பார்த்தது. அவரது மனக்கண்ணில் இதே வேதனையை முகத்தில் தேக்கி பவித்ராவின் முகத்தைத் திருப்பிப் பார்த்த ஜீவாவின் உருவம் வந்து போனது.

"ம்மா.. உங்களுக்கு ஜீவாவைப் பிடிக்கலையா?"

"......."

"உங்களுக்குப் பிடிக்கலைனா எனக்கு ஜீவா வேண்டாம்மா.. நான் உங்க பொண்ணும்மா.. உங்களை மீறி எதையும் செஞ்சுட மாட்டேன்"
என்று உறுதி சொன்னவளை கண்களைச் சுருக்கி பார்த்தார் பத்மா.

'இன்னொருத்தனுக்கும் கழுத்தை நீட்டிட மாட்டாள்'

ஜீவாவின் பேச்சு அவரது காதுகளில் ஒலித்தது.

"அப்போ சந்தியாவின் மாமியார் சொன்ன சம்பந்தத்தை பேசி முடிச்சிடலாமா பவி?" என்று அழுத்தமாக அவர் கேட்க, பவித்ராவின் உடல்
தூக்கிவாரிப்போட்டது.

"நான் உங்க கூடவே இருந்துடுறேனேம்மா.. ப்ளீஸ் மா" என்றவள் பத்மாவின் மடியில் முகம் புதைத்துக் கண்ணீர் விட, பத்மாவின் கண்கள் கலங்கியது.

வாக்கிங் போல அழைத்துச் சென்று மனோஜ் சிவகுருவிடமும் பேசியதும்
இதைப் பற்றித்தான். .

"காதல்னு வந்துட்டதாலே மறுக்குறது எந்த விதத்திலயும் சரியில்ல மாமா. அவரைப் பத்தி விசாரிங்க.. மறுக்கக்கூடிய காரணம் இருந்தா தயங்காம பவி கிட்ட சொல்லுங்க.. அவ ஏத்துப்பா.. ஆனா காரணமே இல்லாம வேணாம்னு சொல்றது அவளுக்கு உங்க மேல வெறுப்பை ஏற்படுத்தும் இல்லையா?"

மனோஜின் வார்த்தைகளிலிருந்து சந்தியா அவர்கள் மறந்திருந்த விஷயங்களை மனோஜிடம் கூறவில்லை என்பது அவருக்குப் புரிந்தது. அவர் தன் பெரிய மகளை எண்ணி பெருமைப்பட்டார்.

"பெண்ணோட வாழ்க்கைனு யோசிக்கிறப்போ நிறைய யோசிக்க வேண்டியிருக்கு மாப்பிள்ளை"

அவர் பொதுவாகச் சொல்ல, "நல்லா யோசிங்க மாமா.. நல்ல முடிவா எடுங்க" என்றான் அவன்.

அவனுடைய தம்பிக்குப் பெண் கேட்டிருந்தாலும், பவித்ரா இன்னொருவனைக் காதலிக்கிறாள் என்ற விஷயம் அறிந்து மனோஜ் பெருந்தன்மையாக நடந்துகொண்டது சிவகுருவிற்கு நிம்மதியாக இருந்தது.


 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 14


"எடுத்தவுடனே வேணாம்னு சொல்ல வேணாமே மாமா"

"நானும் அப்படித்தான் நினைக்கிறேன் மாப்பிள்ளை.. பத்மா தான் பெரிய
இடம்னு பயப்படுறா"

"நான் பேசிப் பார்க்கட்டுமா மாமா?" என்று மனோஜ் கேட்க சிவகுரு
வேகமாக மறுத்தார்.

அவருக்கு பத்மா மனோஜிடமும் பிடிவாதமாக முடியாது என்று சொன்னால் அது நன்றாக இருக்காது என்று தோன்றியது. அதனால், தானே பேசுவதாகச் சொன்னார். வீட்டிற்கு வந்து
எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு மனோஜ் சென்றதும் மனைவியைத் தேடி வந்தார் அவர். ஆனால், சிவகுரு பேசுவதற்கு முன்பே பத்மா அவரிடம் சம்மதம் சொல்ல அவர் ஆச்சரியமாக மனைவியைப் பார்த்தார்.

"உண்மையாவே உனக்குச் சம்மதமா பத்மா?"

"வேற என்ன செய்ய சொல்றீங்க? இங்கேயே இருந்துடுறேன்னு சொல்றா உங்க பொண்ணு.. அதைப் பார்த்துட்டு தினமும் வருத்தப்பட்டு செத்துப் பிழைக்கிறதுக்கு அந்தப் பையனுக்கே கல்யாணம் செஞ்சு கொடுத்துடலாம்" என்று பத்மா விரக்தியாய் சொல்ல, சிவகுரு எப்படியோ சம்மதித்தாளே அதுவே போதும் என்று நினைத்தார்.

மறுநாள் பவித்ராவிடம் விஷயம் போன போது அவளால் நம்ப முடியவில்லை.
அவள் சந்தியாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு குதிக்க சந்தியாவும் அவள்
மகிழ்ச்சியில் சந்தோஷமாகக் கலந்து கொண்டாள். ஜீவாவிடம் அந்தச்
செய்தியை சொன்ன போது அவனும் சந்தோஷமாக அவனுடைய
பாட்டியை அழைத்து வந்து பேசுவதாகச் சொன்னான். வேதவள்ளியிடம் ஜீவா விஷயத்தைச் சொல்ல, அவர் உடனே பெண் கேட்க கிளம்பி விட்டார் .

பவித்ராவை அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. அருகில் அமர்ந்திருந்த பேரனிடம் "தங்கச் சிலை மாதிரி
இருக்கிறாளேடா" என்று பெரியவர் முணுமுணுக்க, ஜீவா பவித்ராவை
ரசித்துப் பார்த்தான்.

பச்சை நிறப் பட்டுப் புடவையில் கழுத்தை ஒட்டி பச்சைக் கல் பதித்த நெக்லஸ் அணிந்து காதுகளில் ஜிமிக்கி ஆட வந்து நின்றவளைப் பார்த்தவன் ரசனையோடு
தலையசைத்தான்.

பவித்ராவை அருகில் அமர்த்திக் கொண்ட வேதவள்ளி, "ரொம்ப அழகா இருக்கிறம்மா.. நீ எப்படிம்மா என் பேரனைக் காதலிச்ச?" என்று கேட்டு வைக்க, அங்கே இருந்த அனைவரின் இதழ்களிலும் புன்னகை அரும்பியது.

ஒரு வேடிக்கை பேச்சாக அல்லாமல்
உண்மை போலவே அவர் அதைக் கேட்டு வைக்க ஜீவா அவன் பாட்டியை முறைத்துப் பார்த்தான். பவித்ரா சிரித்தபடியே ஜீவாவை விழி உயர்த்திப்
பார்த்தாள்.

வெண்மை நிற காட்டன் சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டு நீல நிற ஜீன்ஸ் அணிந்து ராஜ தோரணையில்
அமர்ந்திருந்தவன் எப்போதும் போல் அவளை மயக்க மையலோடு
அவனைப் பார்த்தாள் அவள். அவள் பார்வையை உணர்ந்தவனின்
கண்களில் மின்னல் வந்தது. அவளது ரசிப்பைக் கண்டுகொண்டவனாய் அவன் கண் சிமிட்ட, பவித்ரா வேகமாகத் தலைகுனிந்தாள்.


அவர்கள் இருவரும் கண்களால் காதல் பேசிக்கொள்ள, பெரியவர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் கல்யாணத்தைப் பற்றி பேசினார்கள்.

"ஜீவா என் மகள் வயிற்றுப் பேரன் தான் பத்மா. அவளுக்கு அல்ப ஆய்சு.. சீக்கிரம் போய்ட்டா.. அவர் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.. அதிலிருந்து அவ்வளவாக எங்களுக்குள்
போக்குவரத்து இல்லை. தொழிலை விட்டுட்டு வர முடியாதுனு நீங்களே நடத்துங்கனு சொல்லிட்டாரு.. உங்களுக்குத் தோதான தேதியிலேயே கல்யாணத்தை வச்சுக்கலாம்.. நீங்களே நல்ல தேதியாய் பார்த்துட்டு சொல்லுங்க" என்ற வேதவள்ளி இனிப்புத் தடவி சொன்னாலும் சொல்லப்பட்ட விஷயம் ஜீவாவின் திருமணத்திற்கு அவனது அப்பா வரமாட்டார் என்பதே!

வேதவள்ளியின் பேச்சில், பவித்ராவின் மனதில் என்ன என்னவோ நினைவலைகள் வந்து ஆக்ரமிக்க
அவளின் முகம் சுருங்கியதை ஜீவா கவனிக்கவில்லை. இன்னும் இரண்டு
மாதங்களில் முகூர்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்று பத்மா சொல்ல
அதுவே முடிவானது. இருபது நாட்களில் நிச்சயம் செய்து கொள்ளலாம்
என்ற வேதவள்ளியின் பேச்சையும் யாரும் மறுத்துப் பேசவில்லை.

பவித்ராவை பத்மா வேலைக்குச் செல்ல வேண்டாமென்று கூற அதன்படி
அவள் வேலையை விட்டுவிட்டாள்.

ஜீவா,"உன் அம்மாவுக்கு என்கிட்ட
இருந்து உன்னைப் பிரிக்கிறதுல அப்படி என்ன சந்தோஷம் தான்
கிடைக்குமோ" என்று போனில் அங்கலாய்த்த போது அதை விளையாட்டுப் பேச்சாய் எடுத்துக் கொண்டு சிரித்தாள் அவள். தன்னைப் பார்க்க முடியாததால் கோபம் என அதைப் புறந்தள்ளியவள், "இதெல்லாம் ஒரு ஃபார்மாலிட்டீஸ் ஜீவா.. அக்காவுக்கும் இப்படி தான் செஞ்சாங்க" என்று சமாதானம் செய்தாள். கௌதமிடம் விஷயத்தைச் சொன்ன போது அவனும் சந்தோஷமாக அவளுக்கு வாழ்த்து தெரிவித்தான்.

அன்று பவித்ராவிற்கு நகைகள் எடுக்க மூவரும் நகைக்கடைக்குச்
செல்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஜீவாவிடம் அதை அவள்
சொன்ன போது அவன் "எந்தக் கடை? எப்போ போறீங்க?" என்று
விசாரித்தான். அவள் கடைப் பெயரைச் சொல்லவும் சரியாக அதே
நேரத்திற்கு அவனும் அந்தக் கடைக்கு வந்துவிட்டான்.

பவித்ராவின் முகத்தில் சட்டென்று வெளிச்சம் பரவியது. சிவகுரு எதார்த்தமாக அவனை வரவேற்க அவனும் எதார்த்தமாக அவரோடு பேசினான். பத்மா வரவேற்பாய் தலையசைக்க அவன் அதைக் கவனிக்காமல் சிவகுருவுடன்
பேசிக் கொண்டிருந்தான். பத்மா 'சரி கவனித்திருக்க மாட்டா மாட்டான்' என்று
அதைப் பெரிதுபடுத்தவில்லை.

நால்வரும் சேர்ந்து நகைகள் தேர்வு செய்ய, பவித்ரா ஒவ்வொன்றாக அவள் மேல் வைத்துப் பார்த்து நன்றாக
இருக்கிறதா? என்று மூவரிடமும் மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டிருந்தாள். அதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஜீவாவை சிவகுரு பத்மாவிடம் கண்களால் சுட்டிக்காட்ட பத்மாவிற்கும் திருப்தியாக இருந்தது.

அவர்கள் நகைகள் எடுத்து முடித்த பிறகு ஜீவா பவித்ராவை வைர நகைகள் பக்கம் அழைக்க பத்மாவின் முகத்தில் கலக்கம் வந்தது.

அதைப் பார்த்த பவித்ரா ஜீவாவிடம் "எதுக்கு ஜீவா ?" என்று கேட்டாள்.

"சும்மா சுத்திப் பார்க்கவா கூப்டுவாங்க.. உனக்குப் பிடிச்ச மாதிரி ஏதாவது வாங்கிக் கொடுக்கணும்னு நினைச்சேன். எனக்கு நகைகள் பத்தியெல்லாம் எதுவும் தெரியாது. நீயே செலக்ட் பண்ணு" என்று அவன்
சொல்ல பவித்ரா மறுத்தாள்.

"இப்போது வேணாமே ஜீவா.. இன்னொரு நாள் பார்த்துக்கலாம்"
பவித்ராவின் பதிலில் அவன் முகம் சிவந்தது. அவன் கோபமாக ஏதோ
பேசப் போக, சிவகுரு "மாப்பிள்ளை ஆசைப்படுறாரு. . ஏம்மா
வேணாம்னு சொல்ற? வாங்கிக்கோ" என்றார்.

பவித்ரா பத்மாவின் முகத்தைப் பார்க்க அவர் சம்மதமாகத் தலையசைக்கவும் பவித்ராவும் சரியென்றாள். அதைப் பார்த்த ஜீவாவின் முகம் கடுத்தது. அந்தக் கடுப்புடனேயே அவளை விட்டுவிட்டு அவன் உள்ளே செல்ல பவித்ரா அவனைப் பின்தொடர்ந்தாள்.

முதல் அடுக்கில் நெருக்கமாய் ஒட்டிய
வைரக் கற்கள் அமைந்திருக்க அடுத்த அடுக்கில் நெருக்கமாய் பூ
மாதிரியான வேலைப்பாடு அமைந்து அதன் கீழே ஒவ்வொரு ட்ராப்
மாதிரியாக கற்கள் தொங்கிய ஒரு நெக்லஸ் ஜீவாவின் கருத்தைக்
கவர்ந்தது. விற்பனையாளரிடம் அதை எடுக்கச் சொல்லி பவித்ராவின்
கழுத்தில் வைத்துப் பார்த்த ஜீவாவிற்கு கொஞ்சநேரம் முன் அவள் மேலிருந்த கோபம் சுத்தமாக மறைந்துவிட்டது.

"இது உனக்கு ரொம்ப அழகா இருக்குடி"
ஜீவாவின் குரலில் வழிந்த மயக்கத்தில் அவள் தன் முன் இருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். அது காட்டிய தன் பிம்பத்தை தன்னை மறந்து ரசித்தவள் ஏதோ தோன்றவும் அவசரமாக அதைக்
கழட்டினாள்.

"ஜீவா சிம்பிளா ரிங் மாதிரி எடுத்துக்கட்டுமா?" என்று பவித்ரா
கேட்டதற்கு "எடுத்துக்கோ.. இதோடு சேர்த்து அதையும் பில் போடச்
சொல்லிடலாம்" என்று பதில் கூற, பவித்ரா மிரண்டு விட்டாள்.

அவனைக் கொஞ்சம் தள்ளி அழைத்துச் சென்றவள், "ஜீவா ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்குறீங்க? இப்போ இவ்வளவு
காஸ்ட்லியா வாங்கணுமா? அம்மா முகமே சரியில்லை" என்று அவனுக்கு மட்டும் கேட்கும் வாதம் செய்ய, அதே குரலில் அவனும் அவளுக்கு பதில் சொன்னான்.

"ஏன்டி என் பொண்டாட்டிக்குத் தான் நான் வாங்கிக் கொடுக்க முடியும். மாமியாருக்கும் சேர்த்தா வாங்கிக் கொடுக்க முடியும்?"

அவனின் கிண்டலாக பதிலில் அவள் அவனை முறைத்தாள்.

"ப்ளீஸ் ஜீவா ரிங் மட்டும் எடுத்துக்கிறேனே" என்று அவள் கெஞ்ச,
அவன் "ம்ஹூம்" என்றான்.

"உனக்கு நான் வாங்கித் தர்ற வைர நகைகள் எப்படியும் சந்தோஷத்தைத்
தரப் போறதில்லை. அட்லீஸ்ட் எனக்காவது சந்தோஷத்தைத் தரட்டுமே
பவி" என்று அவன் முடித்துவிட அவள் வேறு வழியின்றி அதையே பில்
போடச் சொன்னாள்.

முகூர்த்தப்ப்பட்டு எடுக்கச் சென்றபோது
வேதவள்ளியும் உடன் வந்ததால் பெரிதாக பவித்ராவும் எதையும்
மறுக்கவில்லை. ஆனால், ஜீவா யாரையும் அருகில் விடாமல் அவனே
ஒவ்வொரு புடவையாக அவளுக்கு வைத்துப் பார்க்க வேதவள்ளி அவனை
அதிசயமாகப் பார்த்தார். அவருக்கு ஜீவா கல்யாணம் வேண்டாம் என்று
மறுத்துப் பேசிய பேச்சுக்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது. அவர் சிவகுருவையும் பத்மாவையும் பார்க்க, அவர்களுக்கு ஏற்கனவே
நகைக்கடையில் ஏற்பட்ட அனுபவத்தால் அவர்களைக் கண்டுகொள்ளாமல் நின்றிருந்தனர். வேதவள்ளியும் அவர்கள் பாணியில் கண்டுகொள்ளாமல் சிரிப்போடு புடவைகளை பார்க்க ஆரம்பித்தார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகியும் கூட ஜீவா எதையும் தேர்வு
செய்யாமல் இருக்கவும் பத்மாவும் வேதவள்ளியும் அவர்கள் அருகில்
வந்தனர் .

"என்னடா பவிக்கு இங்கே எதுவும் பிடிக்கலையா? வேற கடைல பார்ப்போமா?" என்று வேதவள்ளி கே ட்க பத்மா பவித்ராவை பார்த்தாள்.

"என்னம்மா எதுவும் சரியா இல்லையா? பாட்டி சொல்றது மாதிரி வேற கடைக்குப் போவோமா?"

"ம்மா.. அதெல்லாம் இல்ல .. எனக்கு இந்த நாலு சேலைல எதுனாலும் ஓகே தான்" என்று பவித்ரா சொல்ல வேதவள்ளி பேரனை ப் பார்த்தாள்.

"அப்போ உனக்குத்தான் பிடிக்கலையா?"

"இல்லை பாட்டி.. எல்லாமே பவிக்கு ரொம்பவே அழகாக இருக்கு. அதான் குழப்பமா இருக்கு" என்று ஜீவா
சொல்ல அவர் சிரித்தார்.

"பேசாமல் நான்கையும் பில் போடச் சொல்லு" என்று அவர் சொல்ல ஜீவா, 'பார்த்தியா' என்பது போல் பவித்ராவைப் பார்த்தான்.

"அவ ஒன்னு தான் எடுக்கணும்னு சொல்றா பாட்டி" என்று அவன் சொல்ல வேதவள்ளியும் நான்கு சேலைகளையும்
பார்வையிட்டார். அவருக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் மிதமான ஜரிகை வைத்த சேலை பிடித்திருக்க அதை பத்மாவிடம் காட்டினார். பத்மாவிற்கும் அந்த சேலை பிடித்துப் போக அதையே பில் போடச்
சொல்லிவிடலாமா என்று பவித்ராவிடம் கேட்டார் பெரியவர் . பவித்ரா ஜீவாவைக் கேள்வியாகப் பார்க்க அவன் தலையசைக்கவும் அவளும்
சரியென்றாள்.

முகூர்த்தப் பட்டு எடுக்கும் போது ஜீவாவை அருகிலேயே விடாமல் பவித்ராவே நாவல் பழ நிறத்தில் வெள்ளி ஜரிகை வைத்த
சேலையைத் தேர்வு செய்து ஜீவாவை அழைத்துக் காட்டினாள். அவனுக்கும் அது பிடித்திருக்க இரண்டு சேலைகளையும் பில் போடச் சொன்னான்.

நேரம் மதிய உணவுவேளையைத் தாண்டி விட்டதால் ஹோட்டலில் சாப்பாட்டை முடித்துவிட்டு வீடு திரும்பினார்கள். ஹோட்டலிலும் அவள் அருகே அமர்ந்து அவன் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்ட விதம் பத்மாவிற்கு நம்பிக்கையைக் கொடுத்தது.

அதற்கடுத்த பத்து நாட்களில் இரு குடும்பத்து அளவில் மட்டும் ஜீவாவின் வீட்டிலேயே

நிச்சயம் செய்து தாம்பூலம் மாற்றிக் கொண்டார்கள் பெரியவர்கள்.
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 15

15


ஜீவா நிற்க நேரமில்லாமல் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தான். தொழில்
முறையில் அறிந்தவர் தெரிந்தவர்களை எல்லாம் வரவேற்று அவர்களுக்கு
வேண்டியவற்றை பார்த்துப் பார்த்துச் செய்து கொண்டிருந்தான். அவன்
அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவரையும் கவனிக்கும் பொறுப்பை கௌதமிடம் கொடுத்திருந்தான்.


கௌதமிடம் வந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கேட்க வந்தவனின் அலைபேசி ஒலியெலுப்ப அதை எடுத்துப் பார்த்தவன் புன்னகையோடு
தனிமையைத் தேடிச் சென்றான்.


"சொல்லுடி. . எல்லாம் அங்கே ஓகே தானே? உன் வீட்ல எல்லோரும்
டின்னர் சாப்பிட்டாச்சா? எதாவது தேவைப்படுதா?" என அக்கறையுடன் விசாரிக்க,


"இங்கே எல்லோரும் சாப்பிட்டாச்சு.. நீங்க தான் சாப்பிட மறந்து வேலை செஞ்சுட்டு இருக்கீங்க.. நாளைக்கு காலைல கல்யாணத்தை வச்சுட்டு இப்போ இந்த பார்ட்டி தேவை தானா ஜீவா ?" என்று அவள் குறையுடன் கேட்டாள்.


ஆம் .. நாளை அவர்களது திருமணம். அதற்கான பேச்சிலர்ஸ் பார்ட்டியை அந்த திருமண மண்டபத்தின் முதல் மாடியில்
வைத்திருந்தான் ஜீவா . கீழே உள்ளேஹாலில் சொந்த பந்தங்கள்
குழுமியிருந்ததார்கள். பெண் அழைத்து வரும்போதே மேலே பார்ட்டி
தொடங்கியிருக்க ஜீவா அவளிடம் போனில் பேசியதோடு சரி. அவன்
பார்ட்டியில் இருப்பான் என்று அறிந்திருந்தாலும் அவனைப் பார்க்காமல் இருந்தது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. அந்தக் குறையோடு அவள் கேட்க ஜீவா சிரித்தான்.


"பேச்சிலர்ஸ் பார்ட்டி கல்யாணம் முடிஞ்சதுமா வைக்க முடியும்?
இதெல்லாம் ஒருவித ஃபார்மாலிட்டீஸ் அவாய்ட் பண்ண முடியாதுடி"


"உங்களை யார் அவாய்ட் பண்ணச் சொன்னது? ரெண்டு நாளுக்கு முன்னாடி
வச்சிருக்க வேண்டிதானே? உங்களுக்கு ஒரு கிராமமே சொந்தமாக
இருக்கு.. யார் யாரோ வந்து பேசுறாங்க.
பாட்டி கெஸ்ட்ட கவனிக்குறதுல
ரொம்பவே பிஸியாக இருக்காங்க. நீங்க பக்கத்திலிருந்து சொன்னால் தானே எனக்கு யார் என்ன அப்படினு தெரியும்?"


"சரி சரி .. நாளைக்கு உன் பக்கத்திலேயே தானே இருப்பேன். அப்போ சொல்றேன் போதுமா?"


"இருந்தாலும் நீங்க இன்னைக்கு என் பக்கத்துல இல்லைன்றது எனக்கு ஒரு குறை தான்.. நீங்க ஏற்கனவே சொல்லியிருந்தாலும் கூட என் கண்ணு
மண்டபத்தில் நுழைஞ்சதுமே உங்களைத்தான் தேடுச்சு தெரியுமா?"


"சரி என்ன பண்ணலாம் சொல்லு?"


"ஒன்னும் செய்ய வேணாம் . . நீங்க சாப்பிட்டாச்சா? அதைக்
கேட்கத்தான் போன் பண்ணுனேன்"


"இல்லடி.. சாப்பிடனும்" என்று அவன் சொல்லும் போதே பவித்ராவின் அறைக்கதவு தட்டப்பட சந்தியா எழ முயற்சி செய்தாள்.


"நீ இருக்கா.. நான் பார்க்குறேன்" என சந்தியாவிடமும்,


"யாரோ வந்திருக்காங்க ஜீவா . . ஒரு நிமிஷம்" என்று ஜீவாவிடமும்
கூறிவிட்டு கதவைத் திறந்தவள் திகைத்தாள்.


"யாரு பவி?" என்று சந்தியா உள்ளிருந்தபடியே குரல் கொடுக்க அவசரமாக சுற்றும் முற்றும் பார்த்தாள் அவள்.


"ஜீவா இங்கே என்ன பண்றீங்க?" என்று பவித்ரா பதட்டத்துடன் கேட்டவளிடம், "மாடிக்குப் போகலாமா?" என்று அவன் கேட்க அவள் முறைத்தாள்.


"மாடிக்குப் போய்?" என்று அவள் இழுக்க,


"ரொம்ப கெட்டுப் போய்ட்ட.. சும்மா பேசத்தான்டி கூப்பிடுறேன்" என்றான் அவன் அவளை பதிலுக்கு முறைத்தபடி.


"சும்மா பேசுறதுக்கு கூப்பிட உங்களுக்கு வேறு நேரமே கிடைக்கலையா? போங்க ஜீவா .. நாளைக்கு பேசிக்கலாம்"


'யாரோடு இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருக்கிறாள்?' என்று
நினைத்தவாறு எழுந்து வந்து பார்த்த சந்தியா வாசலில் ஜீவா நின்றிருக்கவும் புன்னகையோடு அவர்கள் அருகில் சென்றாள்.


"என்ன அத்தான்? இந்த நேரத்தில் நீங்க பார்ட்டிஹாலில் தானே இருக்கணும்? இங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்று அவள் கிண்டலாகக் கேட்க,


"உங்க தங்கச்சி நினைப்பு அங்கே இருக்க விடல. அதான் வந்து பார்த்தால் ஓவரா சீன் போடுறா" என்று சலித்தான் அவன் .


"யார் சீன் போடுறது?" என்று பவித்ரா முறைத்தபடி கேட்க,


"நீதான்டி வேற யாரு? இப்போ மாடிக்கு வரப் போறியா இல்லையா?" என்று
அவனும் முறைத்தபடி கேட்டான்.


சந்தியாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இந்த நேரத்தில்
கல்யாணப் பெண் மாடிக்குச் செல்வது யார் கண்ணிலாவது பட்டால்
தேவையில்லாத பேச்சுக்கு தெரிந்தே இடம் கொடுத்த மாதிரி ஆகிவிடும்.
பத்மாவிற்குத் தெரிந்தால் சந்தியாவை உண்டு இல்லையென்று ஆக்கி விடுவார். அதனால் அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
அவள் நினைத்ததை பவித்ராவே ஜீவாவிடம் சொன்னாள்.


"நான் வர்றதை யாராவது பார்த்துட்டா ஒரு மாதிரியா பேசிடுவாங்க ஜீவா.. யாரும் பார்க்குறதுக்கு முன்னாடி ப்ளீஸ் நீங்க போங்க"


"எனக்குத் தெரியாது . . நீ இன்னும் பத்து நிமிஷத்தில் மாடிக்கு வர்ற" என அதிகாரமாகச் சொன்னவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.


பவித்ரா வேறு வழியில்லாமல் சந்தியாவைக் கெஞ்சுதலாகப் பார்க்க
இருவரும் மண்டபத்தின் வெளியே தோட்டத்தில் காற்றாட நடக்கச்
செல்வதாக பத்மாவிடம் சொல்லிவிட்டு சென்றார்கள். சந்தியா தோட்டதிலேயே தங்கிவிட பவித்ரா தனித்து மாடிக்குச் சென்றாள்.


கொலுசுச் சத்தம் கேட்டு ஜீவா திரும்பிப் பார்த்து புன்னகைக்க, அதன்
எதிரொலி இல்லாமல் உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டு அவன்
அருகில் சென்றாள் அவள்.


"ஏன்டி முகத்தை இப்படி வச்சிருக்க?"


அவனது கேள்வியில் கண்டிப்புடன் அவனைப் பார்த்தவள், "செய்றதெல்லாம் செஞ்சுட்டு கேள்வி வேற" என்று சுள்ளென்று விழ, அவன் முகம் சுருங்கியது.


"நான் என்னடி செஞ்சேன்?"


"வர முடியாதுனு சொன்னவளை கம்பெல் பண்ணி வரச்
சொல்லலையா? பாவம் நமக்காக அக்காவும் இந்த நேரத்தில் தோட்டத்தில் நின்னுட்டு இருக்கா.. ஆல்ரெடி கன்சீவாக இருக்குறதால அவளுக்கு ரொம்பவே டயர்டாக இருக்குனு சொல்லுவா" என்று
பவித்ரா குற்றவுணர்வுடன் சொல்ல, ஜீவாவிற்கும் என்னவோ போலிருந்தது.


"சரி நீ கிளம்பு"


அவனது குரலில் இருந்த வருத்தம் அவளை நிதானத்திற்கு அழைத்து வர,
அவன் அருகில் வந்தவள் அவன் தோளில் சாய்ந்தபடி அமைதியாக இருந்தாள்.


"நீ தானேடி என்னைப் பார்க்காமல் இருந்தது குறையா இருந்ததுனு
சொன்ன? நம்ம கல்யாணத்தில் யாருக்குமே எந்தக் குறையும் இருக்கக் கூடாதுனு பார்த்து பார்த்து எல்லாம் செஞ்சுருக்கேன். அப்படியிருக்கும் போது நீயே குறையா இருக்குனு சொன்னது கஷ்டமா இருந்தது. அதான் கௌதம் கிட்ட ஒரு மணி நேரம் மட்டும் பார்த்துக்க சொல்லிட்டு வந்தேன்" என்று அவன் சொல்ல, பவித்ரா நெகிழ்ந்து போய் அவனைப் பார்த்தாள்.


"என்னடி இப்படி பார்க்கிற? இப்படிப் பார்த்தால் பேசுறதுக்கு தான் உன்னை வரச் சொன்னேனு மறந்து வேறு ஏதாவது செஞ்சுடுவேன்" என்றவன் சிரிக்க பவித்ரா அவன் தோள்களில் மீண்டும் சாய்ந்தாள்.


"சாரி"


"நீ இப்படி என் தோள்ல சாய்ஞ்சுட்டு சாரி கேட்டால் என்னால் மன்னிக்கவெல்லாம் முடியாது" என்று அவள் காதுகளில் அவன் கிசுகிசுக்க பவித்ரா முகம் சிவக்க அவன் கைகளில் கிள்ளினாள். அவன்
ஆசையோடு அவளது நெற்றித் தழும்பில் முத்தமிட்டான்.


மறுநாள் விடியல் அவர்கள் இருவருக்குமே அழகான ஒன்றாக விடிந்தது. அந்த இனிய நாளில் பெரியோர்களின் ஆசியோடும் வாழ்த்துக்களோடும் பவித்ராவை தன் மனைவியாக்கினான் ஜீவா. பவித்ராவிற்கும் நாத்தனார் முடிச்சை
காவ்யா தான் போட்டாள். காவ்யாவின் கண்ணிமைகள் அன்றும் கௌதமிற்கு தூண்டில் போட அதில் சிக்காமல் நழுவிக் கொண்டிருந்தான்
அவன். அவனின் யுக்தி புரிந்தாலும் அவள் 'உன்னைப் பார்வையிடுவது
தான் என் வேலை. . உன்னைப் பார்க்க வைப்பது அல்ல' என்று நினைத்து
அவனை விடாமல் பார்வையிட்டாள்.


மனோஜ் வீட்டில் அனைவருக்கும்
ஜீவா எந்தவித பகட்டுமின்றி சாதாரணமாகப் பேசியது பிடித்திருந்தது.
திருமணம் முடிந்து மணமக்களுக்குப் பாலும் பழமும் கொடுக்கும் சம்பிரதாயமாக அனைவரும் ஜீவாவின் வீட்டிற்குச் சென்றனர். பத்மா இனம் புரியாத கலக்கத்தோடு சிவகுருவின் முகம் பார்க்க அவர் கண்களாலேயே மனைவிக்கு ஆறுதல் கூறினார். சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்த பிறகு சந்தியா வீட்டினர் ஒவ்வொருத்தராகக் கிளம்ப ஆரம்பிக்க சந்தியாவும் மனோஜும் மட்டும் தங்கினர்.


சந்தியா அன்றைய இரவுக்காகத் தங்கையை அலங்கரிக்க, பத்மா மகளுக்கு புகுந்த வீட்டில் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று உபதேசித்தார்.


"பவி . . நம் வீட்ல வாய் பேசுவது மாதிரியே இங்கேயும் இருந்துடக் கூடாது"


"சரிம்மா.."


"அங்கே நாம மட்டும் தான்.. இங்கே அப்படி இல்ல.. வேலையாட்கள்
காதுக்கு வீட்டு விஷயம் போறதைப் போல வச்சுக்கக் கூடாது"


"சரிம்மா.."


"உன் புருஷன் மனசில் ஏற்கனவே இடம் பிடிச்சிட்ட.. அதைத் தக்க
வைச்சுக்கிற மாதிரி நடந்துக்கணும் சரியா?"


"சரிம்மா.."


"பாட்டி நல்ல மாதிரியாகத் தான் தெரியுறாங்க. கோபத்தில் ஏதாவது
பேசிட்டாலும் மனசுல வச்சுக்கக் கூடாது"


"சரிம்மா.."


"மாப்பிள்ளை அம்மா இல்லாமல் வளர்ந்த பிள்ளை பவி . . முன்னே
பின்னே இருந்தாலும் அனுசரிச்சு போகணும் சரியா?"


பத்மாவின் அனைத்து உபதேசங்களுக்கும் பதிலளித்தவள் பத்மாவின் கடைசி உபதேசத்திற்கு அமைதியாக இருந்தாள்.


புருவச் சுளிப்புடன் அமர்ந்திருந்தவள் மனதில் முதலில் ஜீவாவிடம் இதைப்பற்றி பேசித் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 16

16

தன் அருகில் அமர்ந்தவளைக் கண்
கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா. மணப்பெண்ணுக்கான
அலங்காரத்தை களைத்து விட்டிருந்தாலும் அந்த சோபை மாறாமல்
இருந்தவளை அவன் ரசித்துக் கொண்டிருக்க பவித்ரா அவனை
யோசனையுடன் பார்த்தாள்.

"என்னடி யோசனையெல்லாம் தீவிரமா இருக்கே?" என்று அவள் அருகில் நகர்ந்தபடி கேட்டான் அவன்.

"ஜீவா உங்க சித்தி கல்யாணத்துக்கு வந்தாங்களா?"

பவித்ராவின் கேள்வியில் அவளை முறைந்தான் அவன்.

"ஏன்டி இது என்ன மாதிரியான நேரம்? இப்போ போய் அவங்களைப் பத்தி பேசிட்டு இருக்க"

"சொல்லுங்க ஜீவா .. வந்தாங்களா இல்லையா? உங்க அப்பாவை பாட்டி அறிமுகம் செஞ்சு வச்சாங்க.. ஆனால் உங்க சித்தியை நான் பார்க்கலயே"

"வந்தாங்க வந்தாங்க.. கூட்டத்தோடு கூட்டமாக நின்னுட்டு
போயிருப்பாங்க"

"என்ன ஜீவா சொல்றீங்க? நான் எதுவும் பேசலயே? என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பாங்க? நீங்க ஏன் எனக்கு அறிமுகம் கூட செஞ்சு வைக்கல ?"

"எனக்கு அவங்க தேவையில்ல. உனக்கும் அதே தான். என் அப்பா கல்யாணத்துக்கு வந்தாலும் முறையெல்லாம் அவர் செஞ்சாரா? இல்லைல்ல.. பாட்டி தான் எனக்கு எல்லாம்.. அவங்க ரெண்டு பேரும் என்ன நினைச்சா நமக்கென்ன?" என்று
அவன் விட்டேற்றியாக பதில் சொல்லிவிட்டு ஜன்னல் அருகில் சென்று
நிற்க பவித்ரா அவனருகில் சென்று அவன் கைகளைக் கோர்த்துக்
கொண்டாள்.

"என் அம்மா நல்லா வாழ்ந்திருக்க வேண்டியவங்க பவி. என் அப்பாவுக்கு இவங்க மேல கல்யாணத்திற்கு முன்னவே காதலாம். தாத்தா கிட்ட சொல்ல பயந்து அம்மாவின் கழுத்தில் தாலி கட்டிட்டாரு. காதல் கைகூடாத விரக்தியில் அம்மாவ இல்ட்ரீட் பண்ணுவாரு. அம்மா ஒரு வாயில்லா பூச்சி. உள்ளுக்குள்ள வச்சு மறுகி மறுகி உயிரைக் குறைச்சிக்கிட்டாங்க. எனக்கு அப்போ விவரம் தெரியும் வயசு தான் ஆனால் இதுதான் விஷயம்னு எனக்குத்
தெரியாது. ஆனால், அம்மா சிரிச்சே நான் பார்த்ததில்லை பவி.. அம்மா
இறந்த கொஞ்ச நாட்களிலேயே அவர் அவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.. அவங்க வீட்டுக்கு வந்த அப்புறம் தான் அம்மா எதையெல்லாம் இழந்துருக்காங்கன்னு எனக்குப் புரிஞ்சது. எனக்கு அங்கே இருக்கவே பிடிக்கல பாட்டி வீட்ல தான் வளர்ந்தேன். நம்ம காலேஜ் கூட
அவருடையது தான். எனக்கு அங்கே படிக்க சுத்தமாக விருப்பமில்லை.
யு. ஜி இங்கே சென்னையில் தான் படிச்சேன். பி.ஜி பாட்டி தான் என்னைப்
பிரிஞ்சிருக்க முடியாதுனு சொல்லி கம்பெல் பண்ணி அங்கே படிக்கச்
சொன்னாங்க. அதான் நான் அவருடைய மகன்னு எங்கையும் என்னை
அடையாளப் படுத்திக்கிட்டது இல்ல. எனக்கு அது பிடிக்கவும் செய்யாது. அவருக்கும் அது தெரியும் அதனால் அவரும் ஒதுங்கிக்கிட்டார். நம் கல்யாணத்திற்குக் கூட பாட்டி தான் என் பேச்சைக் கேட்காமல் அவரை இன்வைட் பண்ணிருக்காங்க"


ஜீவாவிற்கு அவனுடைய தாய் பூங்குழலி சங்கரின் அன்பிற்காக ஏங்கிய
தருணங்கள் நினைவிற்கு வந்தது. ஜீவாவின் குரலில் தன் தாயை இழந்த
துக்கம் தெரிய பவித்ரா அவனை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள்.

"ஒன்னு அவர் காதலில் உறுதியாக இருந்துருக்கணும்.. இல்லையா கல்யாணத்துல உறுதியா இருந்திருக்கணும்.. எதுவும் இல்லாம.. கல்யாணம் முடிந்து ஒரு வருஷத்துலயே நான் பிறந்துட்டேன்.. உனக்கு.. உனக்கு நான் சொல்ல வர்றது புரியுதா பவி?"

பெரும் அலைப்புறுதலுடன் அவனது வார்த்தைகள் வெளிவர, அவனது அம்மாவிற்காக ஒரு பெண்ணாய் வருத்தப்பட்டவள் ஜீவாவை ஆறுதலாய் அணைத்துக் கொண்டாள்.

"வேணாம் ஜீவா.. விட்ருங்க.. உங்களுக்கு அவங்க தேவையில்லைனா எனக்கும் வேணாம். நீங்க கஷ்டப்பட்டுக்காதீங்க"

அவளது அணைப்பில் மனம் லேசாக, ஆறுதல் படிப்படியாக ஆசையாக மாற, உள்ளத்தால் இணைந்த இருவரும்
உடலாலும் இணைந்தார்கள். காதலை சாட்சியாக வைத்து அவர்கள்
இருவரும் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். ஆறுதல் தேடும் மழலையாய் அவள் மடி சாய்ந்தவன் ஆசை கொண்ட ஆண்மகனாய் அவளை
ஆக்ரமித்தான்.

மறுநாள் காலையில் தூக்கம் கலைந்து எழப் போனவளை ஜீவாவின் வலிய கரங்கள் தடுக்க, அவள் புன்னகையோடு அவன்புறம் திரும்பிப் படுத்தாள். தூக்கத்தில் கூட விடாமல் அவளை அணைத்திருந்தவனின் தலைமுடியைக் கோதி நெற்றியில் முத்தமிட்டவள் அவன் கைகளை விலக்கிவிட்டு எழுந்தாள்.

குளித்து முடித்து மஞ்சள் நிற காட்டன் சேலையை உடுத்தி தலைமுடியை உலர்த்தியவாறு அவள் வெளியே வரும்போது ஜீவாவும் படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்தான். அவளைப் பார்த்ததும் அமர்ந்த நிலையிலேயே அவன் கை நீட்டி அவளை அழைக்க அவள் விரல் உயர்த்தி மிரட்டினாள்.

"இதெல்லாம் ஓவர்டி மார்னிங்ஹக்ஸ் இல்லாமல் எல்லாம் என்னால் எழுந்திருக்க முடியாது"

"மடிப்பெல்லாம் கசங்கிடும்.. கஷ்டப்பட்டு சேலை கட்டியிருக்கேன் ஜீவா"

"அடிப்பாவி நீயெல்லாம்
ஒரு மனுஷியா? புருஷன் ஆசையா பக்கத்துல வந்தால் சேலை கசங்கிடும்னு சொல்ற? உன்னை வைச்சுட்டு எப்படித்தான் குடும்பம்
நடத்தப் போறேனோ?" என்று அவன் பெருமூச்சு விட பவித்ரா சிரித்தாள்.

"ஹலோ என்ன ஒரே நாளில் பெருமூச்செல்லாம் பலமாக இருக்கு.
அதுக்குள்ளே அலுத்துட்டேனோ?"

"அலுக்கலனு சொன்னால் நம்ப மாட்ட.. அதனால் ப்ரூஃப் பண்ணிடுறேன்" என்று கூறிக்கொண்டே அவன் கிட்டே வர, அவள் அவனைக் கெஞ்சிக் கொஞ்சி குளியலறைக்குள் அனுப்பி வைத்தாள்.

மலையைப் புரட்டிப் போட்ட மாதிரி ஒரு உணர்வு அவளை ஆக்ரமிக்க அவளுக்கு சிரிப்பாக இருந்தது. அவன் குளித்து முடிக்கும் முன்பே தலைவாரி லூசாக
பின்னலிட்டு நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்தவளின் மனம்
நிறைந்திருந்தது. அவனுக்கான உடையைத் தேர்வு செய்துவிட்டு அதே
நிறைவுடன் கீழே வந்தவளைப் பார்த்த பெரியவர்கள் மூவரின் மனமும்
நிறைந்தது.

வேதவள்ளி பவித்ராவை பூஜையறையில் விளக்கேற்றச்
சொல்ல, அவள் விளக்கேற்றி மூவரின் கால்களிலும் விழுந்து
வணங்கினாள். வீட்டுத் தோட்டத்தில் பறித்த மல்லிகையை நெருக்கமாகத்
தொடுத்து வந்து சரோஜா வேதவள்ளியிடம் தர அவர் அதை பவித்ராவின் தலையில் வைத்துவிட்டு திருஷ்டி கழித்தார்.

"அழகாய் இருக்கிறம்மா.. சீக்கிரமா ஒரு கொள்ளுப்பேரனை எனக்குத் தந்துடு" என்ற வேதவள்ளியின் பேச்சில்
பவித்ரா முகம் சிவந்தாள். அதைப் பார்த்தவாறே கீழே இறங்கி வந்த ஜீவா
அவளிடம் என்னவென்று விசாரித்தான்.

"என்னடி சொல்றாங்க பாட்டி?" என்று அவன் கேட்க, அவள் இன்னும் அதிகமாக முகம் சிவந்தாள்.

"வேற என்னடா கேட்கப் போறோம்? சீக்கிரம் ஒரு பேரனைப் பெத்துக்
கொடுனு தான் கேட்கிறோம்" என்று வேதவள்ளி சிரிக்க ஜீவா உல்லாசமாகச் சிரித்தான்.

"அதெல்லாம் கடவுள் கொடுக்கும் போது
கொடுக்கட்டும்" என்று முடித்துவிட்டாலும்
அந்த கற்பனையே அவனுக்கு இனித்தது.

பவித்ரா சமையலறைக்குச் சென்று சரோஜா கலந்து வைத்திருந்த காபியை கப்பில் ஊற்றி ஜீவாவிடம் நீட்ட, அவன் அதை வாங்கிப் பருகியவாறே அன்றே
அலுவலகம் செல்லப் போவதாகச் சொன்னான். பத்மாவும் சிவகுருவும்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேதவள்ளி அதைப் பார்த்துவிட்டு
ஜீவாவைக் கண்டித்தார்.

"நேத்து தானே ஜீவா கல்யாணம் ஆகியிருக்கு? ஒருவாரம் கழிச்சு போனால் என்ன? நீயென்ன மாசச்
சம்பளக்காரனா? போகலைனா இந்த மாசம் திண்டாட்டம்னு சொல்றதுக்கு?"

"பாட்டி இன்னும் ஒரு மூனு மாசத்துக்கு வேலை டைட்டாக இருக்கு.. போகாமல் இருக்க முடியாது.. கல்யாணம் தான் முடிஞ்சிருச்சே.. இன்னும் என்ன?"

"கல்யாணம் முடிஞ்சா போதுமாடா? மறுவீட்டுக்குப் போக வேணாமா?
உங்களை மறுவீட்டுக்குக் கையோடு அழைச்சிட்டுப் போகத்தான் இவங்க ரெண்டு பேரும் இங்கே தங்கினாங்க"

அது ஜீவாவிற்கும் தெரியும் தான். ஆனால், அவனுக்குத் தான் அங்கே
போகப் பிடிக்கவில்லையே!

பத்மாவும், "ஆமாம் மாப்பிள்ளை.. மறுவீட்டு சம்பிரதாயம் இப்போது
விட்டால் தள்ளிப் போய்டும்.. அப்புறம் செய்ய முடியாது" என்று கூற ஜீவா
பவித்ராவின் முகத்தைப் பார்த்தான். அவள் ஜீவாவின் பதிலுக்காக
ஆவலோடு அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க,

சிவகுருவிடம், "நாங்கள் நாளை கிளம்பி வர்றோம் மாமா" என்று சொன்னான். சிவகுரு சந்தோஷமாக மனைவியைப் பார்க்க பத்மா இதமாகச் சிரித்தார்.

அவர் மனதில் ஜீவா அவரிடம் ஒட்டாமல் பேசுவது மாதிரி தோன்றியது. அதை
வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்து வைத்தார். பத்மாவும் சிவகுருவும்
சென்ற பின் தனிமையில் பவித்ரா ஜீவாவிடம் நன்றி சொன்னாள்.

"எதுக்கு?"

"வேலை ஜாஸ்தியா இருந்தாலும் எனக்காக எங்க வீட்டுக்குப் போக ஒத்துக்கிட்டீங்களே அதுக்கு" என்றவளை ஒரு மாதிரியாக பார்த்தான் அவன்.

"அது உன் வீடா ? அப்போது இது யார் வீடுடி? என் வீடா ?" என்று அவன்
நக்கலாகக் கேட்க பவித்ரா சிரித்தாள்.

"இது என்ன கேள்வி? அதுவும் என் வீடு இதுவும் என் வீடு . எனக்கு ரெண்டு
வீடு போதுமா?" என்று சொல்லிக்கொண்டே எழுந்தவளை ஜீவா தடுத்தான்.

"பவி உனக்கு ஒரு வீடு தான் இருக்க முடியும் . ஒரு வீடு தான் இருக்கணும்.. எது உன் வீடு ?" என்று அவன் கேட்க அவள் சிரித்தாள்.

"என்ன உரிமைப் போராட்டமா? அது என் அம்மாவின் வீடு தான். இது தான் என் வீடு போதுமா?" என்று அவள் சிரித்தபடி பதில் சொல்ல ஜீவா அவளை இறுக
அணைத்து முத்தமிட்டான்.

சிறுது நேரம் முன்புவரை குழப்பத்தில் இருந்த அவனது முகம் அப்போது தெளிந்திருந்தது. பவி தன்னையறியாமல் ஜீவாவின் மனதில் உரிமைப் போராட்டத்தை விதைத்திருந்தாள். அதன் நீட்சி மாமியாருக்கும் மருமகனுக்கும் மிகப்பெரிய சுவராக எழுந்து நின்றிருந்தது.

மறுநாள் காலை நேர உணவை முடித்துக் கொண்டு அவர்கள் மறுவீடு
சம்பிரதாயத்திற்காக சிவகுருவின் வீட்டிற்குச் சென்றனர். சிவகுருவும்
பத்மாவும் வாசலில் வந்து வரவேற்க ஜீவா சிவகுருவிடம் மட்டும் பேசியவாறு
உள்ளே சென்றான். பவித்ரா பத்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு
கதை பேசியவாறே உள்ளே சென்றாள்.

"அங்கே எல்லோரும் நல்லா தானே நடந்துக்கிறாங்க பவி ? எதுவும் பிரச்சனை இல்லையே?"

"ம்ம் நல்லாதான் நடந்துக்கிறாங்கம்மா.. ஜீவா இருக்கும் போது எனக்கு என்ன கவலைம்மா" என்று பவித்ரா கேட்க பத்மா அவளை முறைந்தார்.

"என்னடி இது பழக்கம்? மாப்பிள்ளையை பெயர் சொல்லித்தான் கூப்பிடுறியா? பாட்டி கேட்டால் என்ன நினைப்பாங்க?
சந்தியா இப்படித்தான் இருக்கிறாளா?" என்று பத்மா கேட்க பவித்ரா
நாக்கைக் கடித்தாள்.

"அப்படியே பழகிடுச்சுமா"

"வாயில் சூடு போட்டால் பழக்கம் மறைஞ்சுடும்" என்று பத்மா சொல்ல,
வாயை இறுக மூடிக் கொண்டாள் அவள். பத்மாவும் பேச்சை மாற்றி மகளை உள்ளே அழைத்துச் சென்றார்.

அன்று முழுவதும் பவித்ரா
ஜீவாவின் அருகிலேயே வராமல் பத்மாவை சுற்றி சுற்றி வந்தாள். ஜீவா
அதைக் கண்டும் காணாமல் விட்டுவிட்டு இரவின் தனிமையில் அவளிடம்
சண்டையிட்டான்.

"ஏன்டி இருக்கிற ஆயிரத்தெட்டு வேலைல உனக்காக நான் இங்கே வந்து
உட்கார்ந்திருக்கேன்.. ஆனால் நீ உன் அம்மாவோட முந்தானையைப் பிடிச்சிட்டே அலையுற .. அப்போ நீமட்டும்
இங்கே வந்திருக்க வேண்டிதானே? ஈவ்னிங் காபி கூட மேடமை பத்து தடவை கூப்பிட்டு நான் கேட்க வேண்டியிருக்கிறது"

ஜீவா சுள்ளென்று கேட்க பவித்ரா திகைத்தாள். அவன் சொல்லவும் தான்
அது அவளுக்கே புரிந்தது . அவள் உண்மையான வருத்தத்துடன் மன்னிப்பு
கேட்க, ஜீவா பதில் பேசாமல் அவளுக்கு முதுகைக் காட்டி படுத்துவிட்டான்.

திருமணத்திற்குப் பிறகான முதல் பனிப்போர்.. இதை எப்படிக் கையாள்வது என்று யோசித்தபடியே ஜீவாவை அழைத்தாள் அவள். அவனிடம் சிறு அசைவு கூட இல்லை. அவன் தூங்கியிருக்கவும் இல்லை. இரு நாட்களாய் இனித்த இரவு இருவருக்கும் கசக்க, ஜீவாவின் விலகலில் தூக்கம் வராமல் புரண்டு‌ புரண்டு படுத்தாள். அவள் அலைப்புறுவது தெரிந்தாலும் கொஞ்சமும் மனம் இறங்காமல் முரண்டு பிடித்தபடி படுத்திருந்தான் அவன்.

மறுநாள் காலை ஜீவா எழுந்தவுடனே கையில் காபியோடும் அன்றைய
பேப்பரோடும் பவித்ரா அவன் முன் நின்றாள். அதிலிருந்து அவன்
குளிக்கும் போது டவல் எடுத்துக் கொடுப்பது, உடை எடுத்து வைப்பது
என்று அனைத்தையும் அவன் கேட்கும் முன்னராக செய்தவளைப் பார்க்கும் போது அவனுக்கு சிரிப்பாக இருந்தது

"உன்கிட்ட என்னைப் பேச விடக்கூடாதுன்னு முடிவெடுத்து வைச்சிருக்கியா? கேட்குறதுக்கு முன்னவே விழுந்தடிச்சுட்டு
எல்லாத்தையும் செய்றயே?" என்று கிண்டலாகக் கேட்க, அவள்
உம்மென்று பதில் சொன்னாள்.

"செஞ்சாலும் தப்பு செய்யலனாலும் தப்பா? நேத்து இதே வாய் தான் காபி கூட நானாக கேட்க வேண்டியிருக்குனு திட்டினது" என்று அவள் பதில் சொல்ல, ஜீவா மன்னிப்புக் கேட்டான். அவள் எந்த பதிலும் சொல்லாமல் இருக்க அவளை இழுத்து வைத்து அவன் மடியில் அமர்த்திக் கொண்டவன்,

"சாரிடி.. ஏதோ கோபத்தில் பேசின பேச்சு.. அதையெல்லாமா
பெரிசு பண்ணுவ?" என்று அவன் கொஞ்ச பவித்ரா அதற்கு

மேல் உருகாமல் இருந்தால் தான் ஆச்சரியம் . . !
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 17

17

காலை உணவிற்காக இருவரும் வெளியே வந்த போது வாசலில் கார்
சத்தம் கேட்க பவித்ரா ஆவலாக எட்டிப் பார்த்தாள். அவள் நினைத்த
மாதிரியே சந்தியா தான் வந்து கொண்டிருந்தாள். பவித்ரா வந்திருப்பதால் மனோஜ் வேலைக்குச் செல்லும் வழியில் சந்தியாவையும் விட்டுச் செல்வதற்காக வந்தவன் மரியாதைக்காக உள்ளே வந்து அனைவரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு கிளம்பிவிட்டான்.

காலை உணவை முடித்துவிட்டு பெண்கள் கூட்டணி தனியாக ஒதுங்க சிவகுருவிடம் சிறிதுநேரம் பேசிவிட்டு ஜீவா அவர்கள் அறைக்குச் சென்றுவிட்டான். பத்மா இருவரிடமும் பேசிக்கொண்டே மதிய உணவை செய்து முடிக்க மூவரும் ஹாலில் வந்து அமர்ந்து அவர்கள் பேச்சைத் தொடர்ந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக சிவகுருவும் அதில் ஐக்கியமாகி விட நேரம் போனதே
தெரியவில்லை. சிவகுரு நேரத்தைப் பார்த்துச் சொல்லவும் ஹாலில்
மாநாடு கலைக்கப்பட்டு உணவு மேஜையில் கூடியது. பவித்ராவும்
ஜீவாவை அழைத்து வர அவர்கள் பேசிக்கொண்டே சாப்பிட்டு
முடித்தார்கள். உண்ட மயக்கத்தில் அனைவருக்கும் கண்கள் சொருக
சந்தியா பத்மாவின் அறையில் சென்று படுத்துவிட்டாள். பவித்ராவும் ஜீவாவும் அவர்கள் அறைக்குச் சென்று படுக்க சிவகுருவும் பத்மாவும் ஹாலிலேயே படுத்து விட்டார்கள்.

மாலையில் தூக்கம் கலைந்து விழித்தவள் ஜீவாவை எழுப்பாமல் முகம்
கழுவி தலை சீவி வெளியே வந்தாள் .ஹாலில் யாரும் இல்லாமல்
இருக்கவும் சமையலறையை நோக்கிச் சென்றாள். அவள் வந்தது
தெரியாமல் பத்மாவும் சந்தியாவும் பேசிக் கொண்டிருக்க, பேச்சு ஜீவாவைப் பற்றியது என்பதால் பவித்ரா
சமையலறையின் வாசலிலேயே நின்றுவிட்டாள்.

"என்னம்மா என்ன சொல்றாரு உங்க சின்ன மருமகன்?" என்று சந்தியா
கேட்க பத்மா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

"உங்க கிட்ட தான் கேட்கிறேன் காதில் விழலையா?"

"எல்லாம் விழுந்துச்சு. ஏதாவது சொன்னால்தானே சொல்ல
முடியும். அவர் பேசுறதுக்கு காசு கேட்கும் ரகமாக இருக்காரு" என்று பத்மா காபி கலந்து கொண்டே சொல்ல சந்தியா ஜீவாவிற்கு ஆதரவாகப் பேசினாள்.

"சேச்சே .. அத்தான் அப்படியெல்லாம் இல்லம்மா. என் மாமியார் கூட பந்தா இல்லாமல் பேசுறாருனு பெருமையா சொன்னாங்க"

"என்கிட்ட எப்படி இருக்கிறாரோ அதைத் தான்டி நான் சொல்ல முடியும்.. நேத்து சாயந்திரம் காபி கலந்து அப்பாவுக்கு கொடுக்கும்போது இவருக்கும் சேர்த்து தான் எடுத்துட்டு போனேன்.. என்கிட்ட வேணாம்னு சொல்லிட்டு அடுத்த பத்து நிமிஷத்தில் பவி கிட்ட கேட்டிருக்காரு.
சாப்பாடு கூட அவள் பரிமாறினால் தான் சரியாக சாப்பிடுறாரு.. அவர் தட்டைப் பார்த்து இதை எடுத்து வைனு நான் சொன்னால் கூட அதை வேணாம்னு சொல்லிடுவாரு .. வீட்டுக்கு வந்தவரை
வாங்கனு கூப்பிட்டால் அப்பாகிட்ட பேசுற மாதிரி கண்டுக்காம போய்ட்டாரு.. அன்னைக்கு நகைக்கடையில் கூட இப்படித்தான் செஞ்சாரு.. மறுவீட்டுக்கு
வரச்சொல்லி நான் தான் அவர் கிட்ட சொன்னேன். ஆனால், பதில் உன் அப்பாவுக்குக் கிடைச்சது.. அவர் ஒதுங்குறது தெளிவாகத் தெரியுது. நான் இதெல்லாம் உன் அப்பா கிட்ட கூட சொல்லல. அவருக்குத் தெரிஞ்சா அவரும் சங்கடப்படுவாரு.. பவியை
நல்லா வச்சிருக்காரே அதுவே போதும்"

என்னதான் வேலை பார்ப்பது மாதிரியான பாவனையில் பத்மா
சொன்னாலும் அதிலிருந்த வலியை சந்தியா உணர்ந்தாள்.

"சரியாகிடும்மா . . நீங்க இந்த அளவுக்கு வருத்தப்பட அவசியமில்ல. பவியை பெண் கேட்க வந்த போது நடந்த சில
விஷயங்களை அவர் இன்னும் மறக்கல போல" என்று அவள் ஆறுதலாகச் சொல்ல பத்மா புன்னகையோடு அதை ஆமோதித்தாள்.

"ஆமா சந்தியா. . அன்னைக்கே அவருக்கு எப்படி கோபம் வந்துச்சு? என்
முன்னாலேயே அவளை அடிக்குறீங்கனு கோபப்பட்டாரு.. நான் அதை அப்போ பெரிய விஷயமாக நினைக்கல. ஆனால்,
அதுக்காக இப்படி இருக்காருனா பவி மேல எவ்வளவு ஆசையிருக்கணும்? அந்த அளவில் நாம் சந்தோஷப்படணும்"
என்று பத்மா குரலில் பெருமை வழியச் சொல்ல பவித்ரா வந்த சுவடு
தெரியாமல் அவள் அறைக்குத் திரும்பச் சென்றாள்.

ஜீவா அப்போது தான் எழுந்து முகம் கழுவ குளியலறை நோக்கிச் சென்றான். பவித்ரா எதுவும் பேசாமல் கட்டிலில் சாய்வாக அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு ஜீவாவின் வருகைக்காகக் காத்திருந்தாள். முகம் கழுவி வெளியே வந்தவன் முகத்தை அழுந்தத் துடைத்தவாறு அவளிடம் காபி கொண்டு வரச் சொன்னான்.

"வெளியே ஹாலில் உட்காருங்க அம்மா கொண்டு வந்து தருவாங்க"
என்று கண் திறக்காமல் அவள் பதில் சொல்ல ஜீவாவின் புருவங்கள்
உயர்ந்தது.

"நான் உன்கிட்ட கேட்டேன்" என்று ஜீவா சொல்ல அவளும், "நானும் உங்களிடம் தான் சொல்கிறேன்" என்று அழுத்தமாகச் சொன்னாள்.

"நீ கொடுத்தா கொடு.. இல்ல எனக்குக் காபியே வேணாம்"

ஜீவாவின் பதிலில் அவள் கண் திறந்து அவனைப் பார்த்தாள். அவள் கண்கள் கலங்கியிருக்கவும் ஜீவா குழப்பத்துடன் அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

"என்னடி கண்ணெல்லாம் கலங்கியிருக்கு? என்னாச்சு?"

"ஏன்‌ என் அம்மா குடுத்தா காபி கசக்குதா?" என்று பவித்ரா கேட்க ஜீவா திகைத்தான்.

"என் அம்மாவை காயப்படுத்த தான் இப்படிலாம் நடந்துக்குறீங்களா?"

"யார் சொன்னது உன் அம்மாவா? ஏன்டி அவங்களுக்கு வேற வேலை இல்லையா? நாம ஒன்னா
இருக்கதே அவங்ளுக்குப் பிடிக்காது போல.. எந்த அம்மாவாச்சும் இந்த வேலை பண்ணுவாங்களா?" என்று
சொன்னவனை மேலும் பேச விடாமல் கை உயர்த்தி தடுத்து நிறுத்தினாள் பவி. அவள் விழிகள் சிவந்து அவளது கோபத்தை ஜீவாவிடம் தெரியப்படுத்தின.

"யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்றீங்க? என் அம்மாவை நீங்க வேணாம்னு ஒதுக்கினால் கூட என்னை நீங்க நல்லபடியா வைச்சிருக்கதை அக்கா கிட்ட சொல்லி அவங்க சந்தோஷப்படுறாங்க.. இப்போ கூட நான் வந்தது தெரியாம அவங்க பேசியதை வைச்சு தான் நீங்க நடந்துக்கிட்டதெல்லாம் எனக்குத் தெரியும்.. அந்த அளவுக்கு என் மூளை
காதலால் மழுங்கிப் போய் இருந்திருக்கு" என்றவளது குரலில் குற்றவுணர்வு மட்டுமே நிறைந்திருந்தது.

"ஏன் ஜீவா? ஏன் உங்களுக்கு அம்மாவைப் பிடிக்கல?" என்று அழுகையும் கோபமுமாகக் கேட்டவள் முரணாய் அவனது தோள்களில் சாய்ந்திருந்தாள்.

அவளை விலக்கி அவளது கண்ணீரைத் துடைத்தவன் அந்த நெற்றித் தழும்பின் மீது இதழ் பதிக்க, அவள் உடல் மேலும் அழுகையில் குலுங்கியது.

"பிடிக்காமல் போறதுக்கு அவங்கள எனக்கு முன்ன பின்ன தெரியுமா? உன் அம்மாவைப் பார்த்தாலே கண்ணீரோட கன்னத்தில் விரல் தடம் பதிய நீ என்னைப் பார்த்த பார்த்தியா.. அந்தப் பார்வை தான்டி ஞாபகம் வருது.. என்ன தான் அடுத்த நாளே அவங்க சம்மதம் சொல்லியிருந்தாலும் அந்தக் கோபம் அப்படியே இருக்கு .. கோபத்தில் ஏதாவது பேசிவிடுவேன்னு தான் ஒதுங்கி
போறேன்" என்று ஜீவா சொல்ல, பவித்ரா
வேதனையோடு அவனைப் பார்த்தாள்.

'இவனுக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பது? ' பவித்ராவிற்கு இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷயம் என்று புரிந்தது. இதை அப்படியே விட்டுவிட்டால் ...?
'ம்ஹும் சொல்லிவிட வேண்டும்' என்று முடிவு செய்தவள் கண்ணீரைத்
துடைத்துவிட்டு ஜீவாவைப் பார்த்தாள்.

"என்னுடைய இந்தத் தழும்பு உங்களுக்கு
ரொம்பவே பிடிக்கும் இல்லையா?" என்று பவித்ரா கேட்க ஜீவா குழப்பத்துடன் தலையசைத்தான்.

"இது எப்படி வந்துச்சு தெரியுமா? சின்ன வயசுல என் அம்மா அப்பா கூட ஆட்டோவில் போய்ட்டு இருக்கப்போ எதிரே வந்த லாரியில் மோதி பெரிய
ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு. கை கால்கள்ல சிராய்ப்பும் அங்கங்கே அடியோடும் நான் தப்பிச்சுட்டேன். என் அம்மாவும் அப்பாவும்
ஸ்பாட் அவுட்" என்று பவித்ரா அவள்
கைகளைப் பார்த்தவாறு தன் உணர்வுகளை வெகுவாகக் கட்டுப்படுத்தியவாறு சொல்ல ஜீவா அதிர்ந்தான்.

"வ்வ்வாட்ட்? அப்ப இவங்க?"
ஜீவாவின் கேள்விக்கு மனம் வலிக்க மறுப்பாகத் தலையசைத்தாள் அவள்.

"சந்தியா அக்காவோட அம்மா அப்பா.. "

பவித்ராவின் அப்பா ராஜதுரைக்கும் அம்மா மகாலட்சுமிக்கும் சொந்த ஊர்
திருநெல்வேலி பக்கத்தில் ஒரு கிராமம் . ராஜதுரை அந்த ஊரே பெயர்
சொல்லும் பணக்காரர்.. மகாலட்சுமி பெயருக்கேற்ற மாதிரியே அந்த
மகாலட்சுமி போல இருப்பாள். ராஜதுரை அவளைக் காதலித்து கல்யாணம்
பண்ணிக் கொண்டார். மகாலட்சுமி அந்த அளவிற்கு பணம் புழங்கும் வீட்டின் வாரிசு அல்ல . விஷயம் அறிந்து ராஜதுரையின் அப்பா தங்கதுரை அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து நிச்சயம் செய்ய, இருவரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். தங்கதுரையை எதிர்த்து மகாலட்சுமியின் வீட்டிலும் அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றுஸசொல்லிவிட, அங்கிருந்து அவர்கள் இருவரும் மதுரைக்கு பஞ்சம்
பிழைக்க வந்து விட்டனர். . அங்கே பழக்கமானவர்கள் தான் பத்மாவும்
சிவகுருவும். பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்கள்.. மகாவிற்கும்
பத்மாவிற்கும் இடையில் நல்ல நட்பு உருவாகியது.

சிவகுரு ஆசிரமத்தில் வளர்ந்தவர்.. பத்மாவிற்கும் சொந்தம் என்று சொல்ல அவளுடைய தாத்தா மட்டும் தான் இருந்தார். பத்மாவின் திருமணம் முடிந்து ஒரு மாதத்திலேயே அவரும் இறந்துவிட சொந்த பந்தங்கள் யாருமில்லாமல் இருந்தவர்கள் அவர்களின் கதையைக் கேட்டு அவர்களை அரவணைத்துக் கொண்டார்கள். பவித்ரா பிறக்கும் வரையில் கூட அவர்கள் வாழ்க்கை சந்தோஷமாகத் தான் சென்றது. அதற்கு பிறகு தான் பிரச்சனை மெல்ல மெல்ல ஆரம்பித்தது. வேலை வாங்கியே
பழக்கப்பட்ட ராஜதுரைக்கு இன்னொருவரிடம் கைகட்டி நின்று வேலை பார்ப்பதில் நிறைய பிரச்சினைகள் வந்தன. வேலை கிடைப்பதும் போவதுமாக அவர்கள் பொழுது ஓடிக்கொண்டிருக்க பவித்ரா பிறந்தாள்.

பத்மா சந்தியாவிற்கு வாங்கும் அனைத்தையும் பவித்ராவிற்கும் சேர்த்தே வாங்க சிவகுருவும் அதை ஆட்சேபிக்கவில்லை. பவித்ராவை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று மகாலட்சுமி ஆரம்பித்த போது தான் அவர்கள் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட ஆரம்பித்தது. சந்தியாவை சேர்த்த
பள்ளியிலே பவித்ராவையும் சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் மகாலட்சுமி தன் கணவனை தினமும் ஒழுங்காக ஒரு வேலைக்குச் செல்லும்படி அறிவுரை கூற ஆரம்பித்தாள். அதை ஓரளவிற்கு மேல்
கேட்க முடியாமல் ராஜதுரை தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வர
மகாலட்சுமி பத்மாவிடம் தினமும் வந்து புலம்ப ஆரம்பித்தாள்.

மகாலட்சுமியின் சாதாரண ஆசைக்குக் கூட ராஜதுரை, "இதுக்கெல்லாம்
ஆசைப்பட்டுத்தான் பணக்காரனாக இருந்த என்னைக் காதலிச்சியா?"
என்று குத்திப் பேச ஆரம்பிக்க, அவள் கண்ணீர்க் கடலில் மூழ்கும் போதெல்லாம் பத்மா தான் ஆறுதல் சொல்லுவாள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு மகாலட்சுமியே ஒரு கடையில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். அதுவும் கொஞ்ச நாள் தான். . என்ன பேசினாலும் "சம்பாதிக்கும் திமிராடி? உன்னை மாதிரி ஆயிரம் பேருக்கு நான் சம்பளம் கொடுத்தவன்னு மறந்துடாத.. உன்னால் தான் இந்த நிலைமையில் இருக்கேன்" என்று பேச ஆரம்பிக்க அவள் வெறுத்துப் போய் வேலையை விட்டுவிட்டாள்.

பவித்ராவிற்கு ஏனென்று புரியாவிட்டாலும் அம்மாவும்
அப்பாவும் அடிக்கடி சண்டையிடுவது பிடிக்காமல் எப்போதும் பத்மாவின்
வீட்டிலேயே சந்தியாவுடன் பொழுதைக் கழித்தாள். பவித்ரா அரசுப்
பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள். ராஜதுரை மகாலட்சுமி ஏதாவது
பேசினாலே எரிந்து விழ கண்ணீரோடு நிற்கும் அம்மாவைப் பார்க்கும்
போது பவித்ராவின் கண்களிலும் கண்ணீர் பெருகும். இதற்கிடையில் பத்மா சொல்லி சிவகுரு செய்யும் சிறுசிறு உதவிகளுக்கு சந்தேகச் சாயம் அடித்து ராஜதுரை பேச ஆரம்பிக்க, மகாலட்சுமி விக்கித்துப் போய்விட்டாள்.

நாசுக்காக பத்மா சிவகுரு தம்பதியிடமிருந்து ஒதுங்க ஆரம்பித்தவள் தனக்கென ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டாள். பவித்ராவையும் படிப்பைக் காரணம் காட்டி அதிகம் அங்கே செல்ல விடாமல் தடுத்தவள் ராஜதுரையிடம் பேசக்கூட பயந்துதான் வாழ ஆரம்பித்தாள்.

அவளது மாற்றம் தெளிவாகப் புரிய, பத்மா நேரடியாக மகாலட்சுமியிடம் பேசினாள். மன அழுத்தத்தில் செத்துக் கொண்டிருந்தவள் ஆறுதலாய் வந்த நட்பை விட மனமில்லாமல் அனைத்தையும் சொல்லி அழுதவள், "காதல்னு இந்தாளை நம்பி வராமல் இருந்திருந்தா கூலிக்காரனைக் கட்டியாவது நிம்மதியா குடித்தனம் பண்ணியிருப்பேன் பத்மா.. இந்தாளை நம்பி வயித்தை நிரப்பி புள்ளையை பெத்து வேற வச்சிருக்கேன்" என்று ஆதங்கப்பட, தோழியின் வார்த்தைகள் பத்மாவின் மனதில் ஆழப்பதிந்தது.

அன்று பவித்ராவிற்கு விடுமுறை. கோவிலுக்குச் செல்லலாம் என முடிவெடுத்து இருவரும் கிளம்பிய போது, என்றும் இல்லாத அதிசயமாக ராஜதுரையும் அதில் கலந்துகொண்டான். அவனது இணக்கமான நடவடிக்கையைக் கண்டு சந்தோஷப்படும்படியான நிலையில் அவள் இல்லை.

'வேலை எதுவும் போய்டுச்சோ? வேலைக்குப் போகாம கோவிலுக்கு வரேனு சொல்றாரே'

திகிலுடம் அவள் மனதில் எண்ணங்கள் ஓடினாலும் அவனிடம் கேட்க வாய் வரவில்லை. அதற்கும் பயந்துபோய் அவள் அவனுடன் கிளம்ப மூவரும் ஆட்டோவில் சென்றனர். போகும் வழியில் தான் அந்தக் கோர விபத்து நடந்தது.

அவர்கள் சென்ற ஆட்டோ விபத்துக்குள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். நிலைமையை உணர்ந்த மகாலட்சுமி
ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த
பவித்ராவை தூக்கி வெளியே வீச முயன்றாள். அது முடியாமல் போய் பவித்ரா மாட்டிக்கொண்டாலும் அதிர்ஷ்டவசமாக அவள் உயிர் தப்பிவிட்டாள். மகா மேற்கொண்ட முயற்சியே அவளைக் காப்பாற்றியது என்றால் மிகையல்ல. இரண்டு நாட்கள் கழித்து கண் விழித்தவளுக்கு யாரும் சொல்லாமலே என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடிந்தது. அனாதையாக நின்றவளை பத்மாவும் சிவகுருவும்
அரவணைத்துக் கொண்டார்கள்.


கண்ணீர் துளியும் இல்லாமல் இயந்திரத்தனமாக எல்லாவற்றையும்
அவள் சொல்லி முடிக்க ஜீவா அதிர்ச்சியில் வாய் திறவாமல்
அமர்ந்திருந்தான்.


"அவங்க ஏன் நம்ம காதலை ஏத்துக்கலனு புரிஞ்சதா? காதலால் தான் அவங்க ரெண்டு பேருடைய வாழ்க்கையும் அப்படி ஆகிடுச்சு . . . என் அப்பாவோட அப்பா மட்டும் பெரிய மனது பண்ணி அவங்க காதலுக்கும் சம்மதம் சொல்லிருந்தா ரெண்டு பேரும் இன்னைக்கு உயிரோடு
இருந்திருப்பாங்க.. ஏன் என் அப்பா தான் ஒரு பணக்காரன் அப்படின்ற பிம்பத்துல இருந்து வெளியே வந்து ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்த முயற்சி செய்திருந்தால் வாழ்ந்த கொஞ்ச
காலமாவது நிம்மதியாக வாழ்ந்திருப்பாங்க.. இரண்டும் இல்லாமல் போகக் காரணம் எது ஜீவா? பணம் படைத்தவர்களின் வரட்டுப் பிடிவாதம். இவங்க மட்டும் இல்லைன்னா என் கதி என்னவாகியிருக்கும்? எங்காவது பிச்சை எடுத்துட்டு..." என்று சொன்னவளின் வாயில் கை வைத்து அவளைப் பேசவிடாமல் தடுத்தான் அவன்.

"சொல்லாதே பவி" என்று அவளை இறுக அணைக்க அவளும் அவனோடு
இன்னும் அதிகமாக ஒன்றினாள். அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

"நீங்க சாதாரண குடும்பத்திலிருந்து வந்து நம்ம காதலை
சொல்லியிருந்தாலே மறுக்க தான் செஞ்சிருப்பாங்க. இதில் நீங்க
நான் வேலை பார்க்குற கம்பெனியின் எம். டி. . என்னை அடிச்சதோடு விட்டாங்களே என்று சந்தோஷப்படுங்க"
என்று அவள் கேலி போலச் சொல்ல, ஜீவா அவளை விலக்கினான்.

"சாரி டி.. நான் தெரியாம செஞ்சுட்டேன்"

அவனது மன்னிப்பை அவளது அன்னை அல்லவா அங்கீகரிக்க வேண்டும்? இதை அவள் நினைக்கும் போதே, "நான் அத்தை கிட்ட மன்னிப்பு கேட்கிறேன் பவி.. அவங்கள ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்" என்று
ஜீவா சொல்ல பவித்ரா ஆமோதிப்பாக தலையசைத்தாள்.

 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 18

18

ஜீவாவும் பவித்ராவும் அறையை விட்டு வெளிவந்து ஹாலில் அமர, சிவகுரு
மனைவியை அழைத்து காபி கொண்டு வரச் சொன்னார்.

"பவி வந்து காபி வாங்கிட்டு போ" என்று பத்மா அங்கிருந்தவாறே சொல்ல அவள்
அசையாமல் அங்கேயே உட்கார்ந்திருந்தாள்.

"நீங்களே கொண்டு வாங்கம்மா" என்று மும்மரமாக டிவி பார்த்துக்
கொண்டே அவள் சொல்ல, பத்மா சந்தியாவிடம் கொடுத்து அனுப்பினாள்.

"நீ ஏன் கொண்டு வந்த? அம்மா என்ன செய்றாங்க?" என்று கேட்டவளிடம்,

"அம்மா வேலையா இருக்காங்க பவி.. அதான் நான் எடுத்துட்டு வந்தேன்" என்று பதில் சொன்னவாறு சந்தியா ஜீவாவிடம் காபியை நீட்ட பவித்ரா எழுந்து விடுவிடென்று சமையலறைக்குள் சென்றாள்.

அவள் சென்ற விதத்தில் ஜீவாவும் எழுந்து அவளைப் பின்தொடர சந்தியாவும் சிவகுருவும் ஒருவரையொருவர் புரியாமல் பார்த்துக் கொண்டு அவர்களும் சமையலறை நோக்கிச் சென்றார்கள். ஒருவர் பின் ஒருவராக குடும்பமே சமையலறைக்குள் வந்து நின்றதைப் பார்த்து பத்மா
விழித்தார்.

"என்ன பவி இப்படி எல்லோரும் வந்து நிற்குறீங்க?" என்று பத்மா கேட்கவும்

"ஏன்மா என் புருஷனுக்கு காபி கொடுக்கிறத விட இன்னும் ரெண்டு மணி நேரம் கழிச்சு செய்யும் சமையல் வேலையை இப்பவே செய்றது தான் உங்களுக்கு முக்கியமாகிடுச்சா?"
என்று பவித்ரா கேட்க அவர் அரண்டு போய் ஜீவாவைப் பார்த்தார்.

'ஏற்கெனவே என்னை வில்லியாக பார்த்துட்டு இருக்கவர் முன்னாடி இவள் வேறு இப்படிக் கேட்கிறாளே' என்ற எண்ணம் மனதில் ஓட பத்மா
அவளைக் கண்டித்தார்.

"என்ன பேசுறோம்னு புரிஞ்சு பேசு பவி"

"எல்லாம் புரிஞ்சு தான் பேசுறேன்மா.. ஜீவாதான் ஏதோ புரியாமல் அந்த
மாதிரி நடந்து கொண்டார் என்றால் நீங்களும் சேர்ந்து அவரை ஒதுக்குறது
எந்த விதத்தில் நியாயம் அம்மா?"

பவித்ராவின் கேள்வியில் பத்மாவும் சந்தியாவும் திகைத்துப்போய் ஒருவரையொருவர் பார்த்தனர்.

இருவர் கண்களிலும் 'இவளுக்கு எப்படித்தெரியும்?' என்ற கே ள்வி இருந்தது.

"என்ன பேசுற பவி? எனக்கு எதுவும் புரியல.. மாப்பிள்ளை என்ன புரியாம நடந்துக்கிட்டாரு" என்று பத்மா
யோசனையோடு கேட்க, அவள் கண்கள் ஜீவாவைப் பார்த்தது.

பவி உணர்த்திய குறிப்பில் ஜீவா அவளிடம் கண்களாலேயே‌ மன்னிப்பு வேண்டினான்.

"எனக்கு எல்லாம் தெரியும்மா. . நீங்களும் அக்காவும் பேசினத கேட்டேன். ஆனால், இதை நீங்க என்கிட்ட ஆரம்பத்திலேயே
சொல்லியிருக்கலாம். நான் ஜீவாவிற்கு புரிய வச்சிருப்பேன்.. நீங்கள்
தானேம்மா சொல்வீங்க.. மகன் இல்லாத குறையைத் தீர்க்கிற மாதிரி மருமகன்கள் வேணும்னு.. இப்போ மனோஜ் மாமா அந்தக் குறையை உங்களுக்குத் தீர்த்திட்டதால ஜீவா வேணாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?" என்று அவள் கேட்க பதில் சொல்ல முடியாமல் பத்மா திணறினார்.

"பவி பெரிய பெரிய வார்த்தைலாம் பேசாத.. நான் அப்படி நினைப்பேனா.. ரெண்டு மருமகனுமே எனக்கு மகன் மாதிரி தான்" என்ற பத்மாவின் பதிலில் ஜீவாவும் மௌனத்தைக் கலைத்தார்.

"அத்தை என்னை மன்னிச்சுடுங்க.. நான் ஏதோ கோபத்துல.. என்னோட உணர்வுகளை எப்படி சொல்றதுனு தெரில.. ஆனால், கண்டிப்பா இனிமேல் இது மாதிரி நடக்காது" என்று ஜீவாவும் மன்னிப்பு கேட்டான்.

"சேச்சே நான் தப்பா நினைக்கல
மாப்பிள்ளை.. உங்க கோபத்தின் காரணமே நீங்க பவியின் மேல்
வைச்சிருக்கும் ஆசை தானே.. எனக்கு அதை நினைச்சு சந்தோஷம் தான்"
என்று அவரும் சொல்ல, பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும் சிறிய மனஸ்தாபம் அகன்று அங்கே இனிதான சங்கமம் நிகழ்ந்தது . இதில் என்ன விஷயம் என்றே புரியாமல் விழித்த சிவகுருவிற்கு அவருக்கு
மட்டும் கேட்கும்படி சந்தியா விஷயத்தைச் சொல்ல அவரும் பிரச்சினை ஒருவழியாக முடிந்தது என்று மகிழ்ந்தார்.

அவர்கள் வாழ்க்கை கலங்கல் இல்லாத நீரைப் போல எந்தவித குழப்பங்களும் இல்லாமல் அழகாக நகர்ந்து கொண்டிருந்தது. வேலைகள் அதிகமாக இருப்பதால் மூன்று மாதங்கள் கழித்து தேனிலவிற்குச் செல்லலாம் என்று ஜீவா சொல்ல பவித்ரா சந்தோஷமாகத்
தலையசைத்தாள். அந்த மூன்று மாதங்கள் கழித்தும் கூட ஜீவாவிற்கு
வேலை சரியாக இருக்க அவன் அதை சுத்தமாக மறந்துவிட்டான். பவித்ராவும் அந்த எண்ணமில்லாமல் தினம் தினம் ஜீவா காட்டிய காதலில் தன்னை சந்தோஷமாகத் தொலைத்துக் கொண்டிருந்தாள்.

தினமும் காலை எழுந்தவுடன் குளித்து முடித்து கீழே வருவாள். சரோஜாவிடம்
அன்றைய மெனுவை சொல்லிவிட்டு தோட்டத்தில் சிறிது நேரம் நடப்பாள். அதை முடித்துவிட்டு வேதவள்ளியைப் பார்த்து சிறிது நேரம் பேசிவிட்டு மேலே அவளது அறைக்கு வந்தால் ஜீவா அப்போது தான் கண் விழித்திருப்பான். அவன் குளிப்பதற்கு டவலில் இருந்து அவன் உடுத்த வேண்டிய உடை வரை பார்த்து பார்த்து செய்பவள் அவன் ரெடியாகி கீழே வரும்போது அவனுக்கான காலை உணவை ரெடியாக மேஜை மீது வைத்திருப்பாள். அலுவலகம் சென்றதும் இடையில் ஒருமுறை பவித்ராவின் செல்போனிற்கு அழைத்துப் பேசுபவன் மதிய உணவிற்கு எப்போதும் போல் வீட்டிற்கு வந்துவிடுவான். அவனுக்கு பரிமாறிய படியே பவித்ராவும் அவனோடு சேர்ந்து பேசிக்கொண்டே காலையும் மதியமும் தன் முடித்துவிடுவாள். அவன் சென்றதும் சின்னதாக ஒரு தூக்கம் போட்டுவிட்டு வேதவள்ளியின் அறைக்குச் செல்பவள் மாலை ஜீவா வரும்வரை அங்கே தான் இருப்பாள்.

ஜீவாவின் குழந்தைப் பருவங்களை, அவன் செய்த சேட்டைகளை வேதவள்ளி
சுவைபடக் கூறுவதைக் கேட்க அவளுக்கு ரொம்ப பிடிக்கும். மாலையில் அவன் வந்ததும் அவனுக்கு காபி டிபன்
கொடுத்துவிட்டு அவனை அதைச் சொல்லி சீண்டுவதற்காகவே தினமும்
கதை கேட்பாள். இரவு உணவை மூவரும் சேர்ந்து உண்பார்கள்.

ஜீவாவும் பவித்ராவும் இரவு உணவிற்கு பிறகு சிறிது நேரம் தோட்டத்தில்
பேசிக்கொண்டே நடந்து கொடுப்பார்கள். அந்த நேரம் அவர்களுக்கு மட்டுமானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்வான் அவன். என்ன வேலையாக இருந்தாலும் அது மட்டும் மாறாமல் சென்று கொண்டிருந்தது.

சந்தியாவிற்கு வளைகாப்பு செய்து பத்மா அவர்கள் வீட்டிற்கு கூட்டி வர
பவித்ரா அவ்வப்போது அங்கே சென்று சந்தியாவையும் பத்மாவையும்
பார்த்துவிட்டு வந்தாள்.

வேதவள்ளி அவ்வப்போது அவளிடம்
மேம்போக்காக நாள் தள்ளிப் போயிருக்கிறதா என்று விசாரிக்க முதலில் சங்கடமாக உணர்ந்தவளுக்கு நாளாக நாளாக பயம் பிடித்துக் கொண்டது.

எப்போதும் அவள் முகத்தில் ஏதோ ஒரு கலக்கம் தென்பட ஜீவா அவளிடம் தனிமையில் என்னவென்று விசாரித்தான்.

"என்னடி ஆச்சு எதோ மாதிரி இருக்கியே? என்ன விஷயம்" என்று அவள் மடியின் மீது படுத்துக்கொண்டு கேட்டவனின் தலைமுடியை விரல்களால் கோதியவாறு 'ஒன்றுமில்லை' என்று தலையசைத்தாள் அவள்.

"இல்லையே.. கண்டிப்பா எதோ ஒரு விஷயம் இருக்கு"

சொல்லாமல் விடமாட்டான் என்று தோன்றவே, "இல்ல ஜீவா.. நான் வேலைக்கு வரலாமானு யோசிக்கிறேன்" என்று பொதுவாகச் சொல்லி வைத்தாள்.

ஆனால் அவனோ, "வேலைக்கு இல்ல.. கம்பெனியில் பொறுப்பெடுத்துக்க" என்று அவளைத் திருத்த, பவித்ராவின் இதழ்கள் புன்னகையில் விரிந்தன.

உண்மையில் அவளுக்கு அந்த எண்ணம் இல்லை. இப்போதைய மனநிலையில் அவளால் வேலைக்கும் செல்ல முடியாது என்றே தோன்றியது. ஆனால், எல்லோரும் சொல்கிறதைப் போல் வேலை நம் மனதை மாற்றும் ஒரு வடிகாலாக இருக்கலாமோ என்றெண்ணியே அவள் அவ்விதம் சொல்லி சமாளித்தாள். அதில் அவன் திருத்தியது கண்டு சிரித்தவள், அவனை மேலும் சீண்டினாள்.

"ம்ஹூம் வேலைக்கு தான்.. பொறுப்பைக் கொடுத்து சம்பளம் தராம ஏமாத்தப் பார்க்குறீங்களா?"

"அம்மா தாயே.. வேணும்னா பாக்கெட் மணியா நானே உன்கிட்ட இருந்து வாங்கிக்கிறேன்.. போதுமா?"

அவனும் அடிபணிவதைப் போல பதில் சொல்ல இருவரும் தங்களை மீறி சிரித்துக் கொண்டனர்.

"சொல்லுடி.. வர்றியா? அதுக்கான ஏற்பாட்டை பண்ணட்டுமா? உன் படிப்பும் திறமையும் ஏன் வேஸ்ட் ஆகணும்?"

அவன் மும்மரமாகக் கேட்க, பவித்ரா தயங்கினாள்.

"நான் யோசிச்சு சொல்றேனே ஜீவா.. இன்னும் எனக்குள்ளவே தெளிவில்ல" என்று அவள் தயங்க, அவனும் சரியென்று விட்டான்.

அவள் நிலையில்லாது தவிக்கும் போது, அவளை மேலும் கலக்கப்படுத்தவே இறைவன் அனுப்பி வைத்த மாதிரி அவர்கள் வீட்டிற்கு இருவர் வந்து சேர்ந்தனர்.

அன்று காலையில் பவித்ரா பரிமாறிக் கொண்டிருக்க அவளிடம்
பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜீவா பரிச்சயமான குரல்
அவன் பெயரைச் சொல்லி அழைக்கவும் திரும்பி வாயிலைப் பார்த்தவன்
சந்தோஷத்துடன் அவர்களை வரவேற்றான்.

"வாங்க ஆன்ட்டி.. வா வா சுவாதி.. நீ வர்றதா சொல்லவே இல்லையே" என்று ஜீவா கேட்க சுவாதி அவனை முறைத்துப்
பார்த்துவிட்டு புவனாவின் பக்கம் திரும்பினாள்.

"கேட்டீங்களா மம்மி . . நான் தான் உங்க கிட்ட அப்போவே சொன்னேனே. . ஜீவா சார் கிட்ட அப்பாயின்ட்மென்ட்
வாங்கிட்டுப் போகலாம்னு .. நீங்க தான்
கேட்கல" என்று அவள் குத்தலாகச் சொல்ல ஜீவா சிரித்தான்.

"அம்மாடி.. தெரியாம கேட்டுட்டேன்.. விட்டுடு" என்று அவன்
கும்பிடு போட சுவாதி அவனைக் கண்டுகொள்ளாமல் பவித்ராவிடம் வந்து பேசினாள்.

"ஹாய்.. ஐ ஆம் சுவாதி" என்று அறிமுகப்படுத்திக் கொண்டவள் கல்யாணத்திற்கு வர முடியாததற்காக வருத்தம் தெரிவிக்க,

பவித்ரா, "அதனாலென்ன? இப்போ வந்ததே சந்தோஷம்"' என்று சிரித்தாள்.

ஜீவா புவனாவிற்கும் பவித்ராவிற்கும்
அறிமுகம் செய்து வைக்க புவனா அலட்சியமாக அவளை தலை முதல்
கால் வரை பார்வையிட்டார்.

"ஏன் ஜீவா..இந்த ரதியைத் தான் நாங்க கண் வைச்சிடுவோம்னு எங்க கிட்ட இருந்து மறைச்சியா?" என்று அதே
அலட்சியத்தோடு அவர் கேட்க பவித்ரா துணுக்குற்றாள்.

ஆனால், ஜீவாவிற்கு அதெல்லாம் தோன்றவில்லை போல.. அவன் சாதாரணமாக பதில் சொன்னான்.

"மறைக்க நினைச்சா ஏன் கல்யாணத்திற்கு உங்களை கூப்பிட போறேன் ஆன்ட்டி? நீங்க தான் வரவில்லை.. முதல் நாள் கூட
சுவாதிக்கு கால் பண்ணுவேன் அவள் எடுக்கல"

"எப்படி எடுப்பாள்? அவ்வளவு நெருக்கமாகப் பழகிட்டு திடீர்னு
கல்யாணம் வந்துடுனு ரெண்டு நாள் முன்னாடி சொன்னால் அவள்
எவ்வளவு கஷ்டப்படுவாள்னு நினைச்சுப் பார்த்தியா?" என்று புவனா
ஏற்ற இறக்கத்தோடு கேட்க பவித்ரா முகம் சுளித்தாள்.

'என்ன பேச்சு இது ..? அதுவும் என்னைப் பார்த்துட்டே 'நெருக்கமாக'னு அழுத்திச் சொல்லுதே இந்த அம்மா'

பவித்ராவின் முகச்சுளிப்பைப் பார்த்த புவனா, அவளது எண்ண ஓட்டத்தில்
தான் வெற்றிகரமாக கல்லெறிந்து விட்டதாக நினைத்து மனதிற்குள்
பெருமைப் பட்டுக்கொண்டார்.

புவனாவின் கேள்விக்கு பதில் சொல்ல ஜீவா வாயெடுக்க அவனைப்
பே சவிடாமல் சுவாதி பேசினாள்.

"மம்மி தேவையில்லாத பேச்சு எதுக்கு? விட்டுடுங்க.. அதுக்கு அவன்
விளக்கம் சொன்னா மட்டும் எல்லாம் சரியாகிடுமா?"

சுவாதியின் பேச்சில் தொனித்த உரிமையில் உண்மையில் பவித்ராவின் வயிற்றில் பயப்பந்து சுழன்றது.
 
Status
Not open for further replies.
Top