All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பூபதி கோவையின் "கடைசி வரை கடமை" கதை திரி

Status
Not open for further replies.

BoopathyCovai

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடைசி வரை கடமை ( இறுதி அத்தியாயம் ):-

கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவித்தவுடன் இணைப்பைத் துண்டித்த ஜாஃபர்,

வேக வேகமாக மதில் சுவரைத்தாண்டி, அந்த சுரங்கப் படிக்கட்டுகளை நோக்கி விரைந்தான்.

பதற்றத்துடன் அதில் இறங்க ஆரம்பித்திருந்த அவன் மனதில், பய உணர்வுகள் மேலோங்கியிருந்தது.

“எப்படியும் ஆர்யா வந்துவிடுவானே... அவனுக்கு என்ன ஆயிற்று...???” என்ற எண்ணங்கள் அவனுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

ஒரு வழியாக படிக்கட்டுகள் தன் எல்லையை முடித்து, அவனை ஒரு இருட்டறையின் உள்ளே புகுத்தியிருந்தது.

உள்ளே ஒரு வித மயான அமைதி.

அதில் அவனின் காலடிச் சத்தம் மட்டும் தெளிவாகத் தெரிந்திருந்தது.

மனதில் பலவித சிந்தனைகளோடு, தன் கைகளை முன்னே நீட்டியவாறே முன்னேறிக் கொண்டே சென்றிருந்தான் ஜாஃபர்.

ஒரு பத்து அடி எடுத்து வைத்திருப்பான்.

தன் பின்னே யாரோ இருப்பதைப் போல் உணர்ந்த அவன்,

சுதாரித்துக் கொண்டு திரும்ப முயன்ற கணம்,

திடீரென்று அவன் முகத்தின் மேல் ஒரு துணி போர்த்தப்பட்டு,

அவன் கை கால்களை பின்னால் வைத்து ஒரு உருவம் கட்ட ஆரம்பித்தது.

அதற்கு பிடி கொடுக்காமல் திமிறிய ஜாஃபர்,

வேறு வழியின்றி,

வலுக்கட்டாயமாக கட்டித் தர தரவென்று இழுத்துச் செல்லப் பட்டான்.

போகும் இடம் அவனுக்கு புரியாத புதிராய் இருந்தது.

ஒரு இரண்டு நிமிட நேரத்தில்,

ஒரு இடத்தில் ஜாஃபரின் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மண்டியிட வைக்கப் பட்டிருந்தான்.

அவன் கண்களில் கட்டப் பட்டிருந்த துணி இன்னும் அவிழ்க்கப் படாமல் இருக்க,

வெளிய கேட்ட அந்தக் குரல் இந்த முறை அவன் பக்கத்தில் இருந்து கேட்டது.

“யார் இவன்...???”

ஒரு வினாடி மௌனத்திற்குப் பிறகு,

“இவனும் அவனைப் போல இந்திய இராணுவத்தைச் சேர்ந்தவன் போலத் தெரிகிறது. படிக்கட்டுகள் வழியா இறங்க ஆரம்பிச்சு, உள்ள வர முயற்சி செய்து கொண்டிருந்தான். அதான் கட்டி இழுத்து வந்து விட்டோம்...” என்றது அந்த பின்னாலிருந்த குரல்.”

“ஹ்ம்ம்...”

இவர்களின் பேச்சு வார்த்தைகளை ஜாஃபர் உன்னிப்பாக கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தான்.

அவன் உடல் சற்றே நடுக்கத்திற்குள்ளாயிருந்தது.

“சரி... அவன் கண்களில் கட்டியிருக்கிற துணியை கழற்றிவிடு...” என்றது அந்த அதிகார தோரணை கொண்ட குரல்.

“இதோ உடனே...” என்ற சப்தம் பின்னாலிருந்து வந்தவுடன்,

அவன் கண்களைக் கட்டியிருந்த துணி அவிழ்க்கப் பட்டது.

துணி இறுக்கமாகக் கட்டப் பட்டிருந்ததால் ஜாஃபர் தன் கண்களைத் திறக்க கடினப்பட்டு, மெல்ல திறந்து பார்த்தான்.

அவனுக்கு எதிரே, கருப்பு நிற துணியால் முகத்தையும், உடலையும் மறைத்த நான்கைந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று, கைகளில் துப்பாக்கியேந்தி நின்று கொண்டிருந்தது..

அந்த சுரங்கத்தின் சுவர்களில், கருப்பு நிற பின்னணியில் வெள்ளை நிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஐ.எஸ் . ஐ.எஸ் . (ISIS) தீவிரவாத இயக்கத்தின் கொடிகள் தொங்கவிடப் பட்டிருந்தது.

கீழே அவனுக்குப் பக்கத்தில், அவன் நண்பன் ஆர்யாவும், காவல்துறையைச் சேர்ந்த ஒரு கான்ஸ்டபிளும், உடம்பு முழுவதும் ரத்த காயங்களோடு கீழே படுக்க வைக்கப் பட்டிருந்தார்கள்.

அதைப் பார்த்ததும் அதிர்ந்து போயிருந்தான் ஜாஃபர்.

“இவனுங்கள என்ன பண்ணலாம்...??” என்றான் ஜாஃபரைக் கட்டி இழுத்து வந்தவன்.

“சந்தேகமே வேண்டாம்... நேரா மேல அனுப்பி விட வேண்டியதுதான்... இவனுங்களோட கடைசி நிமிடங்களை, கேமராவில் பதிவு செஞ்சு, அதை இணையத்தளத்தில் வெளியிட வேண்டும்... ” என்றான் அந்த கும்பலின் தலைவன்.

அடுத்த சில நிமிடங்களில், ஒரு பத்து அடி இடைவெளியில், ஒரு கேமரா பொருத்தி வைக்கப்பட்டு அதன் லைவ் ரெக்கார்டிங் ஓடிக் கொண்டிருந்தது.

கீழே படுக்க வைக்கப் பட்டிருந்த ஆர்யாவையும், அந்த காவல்துறையைச் சேர்ந்தவரையும் எழுப்பி, ஜாஃபரோடு சேர்ந்து மண்டியிட வைத்தார்கள்.

இந்த மூவரின் கழுத்திலும் கத்தி வைக்கப் பட்டு,
முகமூடி அணிந்த மூன்று பேர், இவர்களுக்குப் பின்னால் தயார் நிலையில் நின்றார்கள்.

இவர்களுக்குப் பக்கத்தில் வந்த அந்த தீவிரவாத கும்பலின் தலைவன்,

“இன்றைக்கு உங்கள் மூணு பேரோட கடைசி நாள்... அதாவது நீங்கள் கடவுளை அடையப் போகின்ற நாள்… அதேபோல் நாளை மறுநாள், உங்கள் பாரதப் பிரதமருக்கான கடைசி நாள்... இந்த உலகமே எங்களைத் திரும்பிப் பார்க்க போகின்ற நாள்... இந்தியாவிலும் எங்களின் கிளைகள் (ஐ.எஸ் . ஐ.எஸ் . (ISIS)) தொடங்கப்பட்டு விட்டதை, இந்த உலகம் அறியப் போகின்ற நாள்...” என்று கூறிச் சிரித்த அவன்,

இந்த மூவரையும் ஒருமுறை அருகில் வந்து பார்த்துவிட்டு,

அவர்கள் சட்டையில் அச்சிடப் பட்டிருந்த பெயர்களைப் படித்துக் கொண்டே வந்தான்.

“ஸ்வதீப் ராஜ்… போலீஸ் கான்ஸ்டபிள்... ஹ்ம்ம்...”

“வீர் பிரதாப் சிங் ஆர்யா... BSF ARMY…”

ஜாஃபரின் சட்டையில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்களைப் பார்த்ததும்,

“ஜா.... ஃபர்” என்று பேச்சை நிறுத்தியிருந்த அவனின் கண்கள், ஆச்சர்யத்தோடு ஜாஃபரைப் பார்த்து,

“ஜாஃபர் காதிம்... சலாம் அலே கும் ஜாஃபர்…!” என்றான்.

ஜாஃபர் தன் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் மௌனம் காத்தான்.

“நீ என் இனத்தைச் சேர்ந்தவன் என்பதற்காகத் தான், உன்னிடம் இவ்வளவு மரியாதையாக பேசிட்டு இருக்கிறேன். உனக்கு ஒரு கடைசி வாய்ப்பு தருகிறேன்… உன் உயிர் மேல் ஆசை இருந்தால் சொல்... நீயும் எங்களோடு சேர்ந்து விடுகிறாயா...? இல்லை இவர்களைப் போல் சாகப்போகின்றாயா...? ” என்றான்.

இந்த முறையும் ஜாஃபரிடம் இருந்து மௌனமே பதிலாக வந்திருந்தது.

அதைப் பார்த்த அந்த கும்பலின் தலைவன்,

“நமது இனத்துக்கான இந்த போராட்டம், சிரியா தொடங்கி, உலகின் பல நாடுகள் வரை பரவி, இன்றைக்கு இந்தியாவிலும் கோலோச்சியிருக்கின்றது... பல இடங்களில் நமது கொடி பட்டொளி வீசிப் பறக்கின்றது. ஒரு நாள்... இந்த உலகமே நமதாகும்... இதை எதிர்ப்பவர்கள் கண்டிப்பாக கடவுளை சென்றடைவார்கள்.” என்று உரக்கக் கத்திய அவன்,

“தைரியமாகச் சொல்... இறைவனின் திருப்பெயரால் உனக்கு மன்னிப்பு அளிக்கப்படும்...” என்றான் மறுபடியும்.

இதைக் கேட்டவுடன் ஜாஃபரின் முகத்தில் உக்கிரம் தெரிந்தது.

ஒரு நொடியில் முகம் சிவந்த ஜாஃபர்,

“என்ன...? இறைவனின் திருப்பெயராலா...? அந்தப் பெயரை உச்சரிக்கும் அருகதை கூட உனக்குக் கிடையாது. மதத்தின் பெயரால் மனிதர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் காட்டுமிராண்டிகளான உங்களோடு, அந்த புனிதமே உருவான கடவுளை தொடர்பு படுத்தாதே... உங்களுக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது...! இதற்கான விளைவுகளை மிக விரைவில் அனுபவிக்கத்தான் போறீங்க...!” என்றான் முகம் முழுக்க ஆவேசத்தோடு.

“ஏய்... நீ எங்களை எச்சரிக்கிறாயா...? உன்னோட உயிர்க்கே இன்று உத்தரவாதம் இல்லை... கொஞ்சம் கொஞ்சமாக இந்த நாட்டில் சகிப்புத்தன்மை என்பதே அழிஞ்சுகிட்டு வருது... குறிப்பா நமது மதத்திற்கு எதிரான அடக்குமுறைகள் இங்க ரொம்ப அதிகம்... அது உனக்குத் தெரியாதா...? ” என்றான் அந்த கும்பலின் தலைவன்.

இதைக் கேட்டதும், ஆவேசம் கொஞ்சமும் குறையாமல் பேச்சைத் தொடர்ந்தான் ஜாஃபர்.

“எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும், நாடுன்னு வரும்போது, அது எல்லாத்தையும் மறந்து, ஒரு இந்தியானாகத்தான் இன்னிக்கு வரைக்கும் நாங்க இருந்திட்டு இருக்கோம்... நாங்க இனிமேலும் அப்படித்தான்... ஆனா உன்ன மாதிரி, சில தேசவிரோதிகள் இதைப் பயன்படுத்தி, எங்களுக்குள்ள மதத்துவேசத்த உண்டு பண்றீங்க... அது இனிமேல் பலிக்காது... நாங்க முழிச்சுகிட்டோம்...” என்று உணர்ச்சிமிகப் பேசினான் ஜாஃபர்.

இதைக் கேட்ட அந்த கும்பலின் தலைவன் அகோரமாய் கத்தினான்.

“அப்படியானால், சாகத் தயாராக இரு...”

அவனைப் பார்த்து பரிகாசமாய்ச் சிரித்த ஜாஃபர்,

“இந்த உயிர் என்றைக்காவது ஒருநாள், இந்த உடலை விட்டு பிரியத் தான் போகின்றது... சாகப் போறதைப் பத்தி நான் கவலைப் பட வில்லை. நான் இராணுவத்தில் சேர்ந்த முதல் நொடியே, என் உயிரை என்றைக்கோ இந்தியாவுக்கு அர்ப்பணித்து விட்டேன்.
வெறும் இருபத்தி மூன்று வயதில், இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டு, தூக்குக் கையிற்றை ஏற்ற பகத்சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்ட இந்த மண்ணில், சாவதை நினைத்து நான் பெருமைப் படுகிறேன்.
ஆனால்….” என்று பேச்சை நிறுத்திய ஜாஃபர் மீண்டும் தொடர்ந்தான்.

“தேசத்தின் இறையாண்மைக்கு எதிராக முளைத்திருக்கின்ற, உன் போன்ற புல்லுருவிகள் என் கண் முன் நின்றிருக்க, என் உயிர் என்னைவிட்டுப் பிரிவதை நான் ஒருகாலும் விரும்பவில்லை. உன்னைப் போன்ற தேசத் துரோகிகள் வேரறுக்கப்பட வேண்டும். எங்கள் கைகள் கட்டுண்டிருக்கின்றது... ஆனால் உனக்கான நேரம் வெகுசீக்கிரத்தில்... ” என்று நரம்புகள் முறுக்கேற திமிறினான்...

"இதோ... நானே உன்னை அனுப்பி வைக்கிறேன்..." என்ற அந்த கும்பலின் தலைவன்,

கத்தியை வாங்கி ஜாஃபரின் மார்பில் இரண்டு முறை பலமாக இறக்கியிருந்தான்.

ஜாஃபரின் மார்பில் இருந்து இரத்தம் பீறிட்டு கிளம்பியிருந்தது.

அடுத்த கணம்,

யாரும் எதிர்பாராத சமயம், கண்ணிமைக்கும் நேரத்தில் வீறிட்டு எழுந்த ஆர்யா,

தன் வலது கையால் பின்னால் நின்றிருந்தவனின் கழுத்தில் ஓங்கி அடித்தான்.

ஒரு வினாடி திக்கு முக்காடிப் போன அவன் மூர்ச்சையற்றுக் கீழே விழுந்தான்.

கட்கா கலையில் கை தேர்ந்த ஒருவன் அடித்த அடி போல் இருந்தது அந்த அடி.

கத்தியோடு அவனை நோக்கி வந்த மற்ற இருவரையும்,

தன் முஷ்டியால் அவர்களின் அடி வயிற்றில் பலமாக குத்தினான்.

அது அவர்களின் உயிர்நாடியையே அசைத்து விடும் போல் இருந்தது.

ஆர்யாவின் வேகத்தைப் பார்த்து வியந்த அந்த போலீஸ் கான்ஸ்டபிள் தன் பங்கிற்கு, கீழே விழுந்தவர்களை முன்னேறவிடாமல் பார்த்துக் கொண்டார்.

சற்றே சுதாரித்துக் கொண்டு ,

கொஞ்ச தூரம் பின் வாங்கிய அந்த கும்பலின் தலைவன் துப்பாக்கியை எடுக்க முன்னேறினான்.

அடுத்தடுத்த விநாடிகளில் மின்னலைப் போல கிளம்பியிருந்த ஆர்யா,

கீழே கிடந்த கத்தியை எடுத்து அனாசயமாக சுழற்றி வீசினான்.

வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாகப் பாய்ந்த அந்த கத்தி,

அந்த கும்பலின் தலைவனின் காலைப் பதம் பார்த்தது.

அவன் நிலை தடுமாறி கீழே விழுந்தான்.

சற்றும் தாமதிக்காமல் விரைந்த ஆர்யா,

அந்த கும்பலின் தலைவனை சராமரியாகத் தாக்கி அவனை வலுவிழக்கச் செய்தான்.

அடுத்த வினாடி,

இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மாவின் தலைமையில் ஆன போலிஸ் படை,

அந்த சுரங்கத்தின் உள்ளே நுழைந்திருந்தது.


தீவிரவாத கும்பலை சுற்றி வளைத்திருந்த அவர்கள்,

அந்த இடம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

பேச்சு மூச்சில்லாமல் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜாஃபர்,

ஆர்யாவுடன் அவசர அவசரமாக மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு,

உடன் அவனுக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தீவிரவாதிகள் கூண்டோடு கைது செய்யப்பட்டதுடன்,
அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், செல்போன்கள் மற்றும் கேமராக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு,
அடுத்த கட்ட விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருந்தது.

தீவரவாதிகளிடம் பிடிபட்டிருந்த இருந்த போலிஸ் கான்ஸ்டபிள் ஸ்வதீப் ராஜ் நடந்த விவரங்களை, இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மாவிடம் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தார்.

அடுத்த கட்ட விசாரணையில், இந்த தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடைய பலர் கைது செய்யப் பட்டனர்.

அடுத்த நாள், இந்த செய்தி நாடு முழுவதும் உள்ள செய்திச் சேனல்களில் நேரலையாக ஓடிக் கொண்டிருந்தது.

தீவிரவாதிகளின் பிடியில், அந்த சுரங்கத்தில் ரெக்கார்ட் செய்யப்பட்ட கடைசி நேர வீடியோக் காட்சிகள் இந்தியாவின் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி,

நாடு முழுவதிலும் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியிருந்தது.

பகத்சிங் பிறந்தநாள் விழாவில் பேசிய இந்தியப் பிரதமர் பிரதீப் சவான், சகிப்புத்தன்மைக்கு உதாரணமாக திகழ்ந்த ஜாஃபரையும் ஆர்யாவையும் பார்த்து தலைவணங்குவதாக புகழாரம் சூட்டியிருந்தார்.

ஜாஃபருக்கும் ஆர்யாவுக்கும் சமூக வலைதளங்களில் பெரும் ஆதரவு கூடியிருந்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்த ஜாஃபர் கண்களை விழித்திருந்தான்.

எதிரே அவன் நண்பன் ஆர்யாவும், சீனியர் கமாண்டன்ட் சஞ்சய் மிஸ்ராவும் நின்று கொண்டிருந்தார்கள்.

இருவரையும் அணைத்துக் கொண்ட சஞ்சய் மிஸ்ரா,
“இந்திய ராணுவத்திற்கே பெருமை சேர்த்துவிட்டீர்கள்...” என்று அவர்களை கட்டியனைத்துக் கொண்டார்.

அவர்கள் இருவரின் கண்களிலும் கண்ணீர் கோர்த்திருந்தது.



இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லை. இரண்டடுக்கு இரும்பு முள்வேலி, உலக வரைபடத்திலிருந்து இந்தியாவையும் பாகிஸ்தானையும் தனியாக பிரிக்கிறது. இந்த எல்லைக்கோட்டை ஒட்டியே, தனக்கென ஒரு எல்லையை வகுத்து வாழ்ந்து, ஆயுதத்தோடு புறப்பட்ட பலரது வாழ்க்கைப் பயணங்கள், வெறும் சொற்ப வருடங்களில் முடிவுக்கு வந்திருக்கின்றது. இது எதைப்பற்றியும் ஒரு துளிகூட சட்டை செய்யாத ஒரு கேடுகெட்ட கூட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற, நமது வாழக்கை ஒரு முடிவுறாத் தொடர்.

உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் . உங்களுடைய ஆலோசனைகளை வரவேற்கிறேன் .

இப்படிக்கு
பூபதி கோவை .
boopathycovai@gmail.com
+91-7299543057

1526614659214_கடைசி வரை கடமை_1 (1).jpg

(முற்றும்.)
 
Status
Not open for further replies.
Top