அத்தியாயம் 7
அபிஜித் தவிர மற்ற அனைவரும் அங்கு அமர்ந்து உணவு உண்டு கொண்டு இருக்க அப்போது தான் அங்கு வந்தவனின் பார்வை சென்றது என்னவோ தருணின் கையில் இருந்த அம்ரிதாவின் உணவு பாத்திரத்தில் தான். அவனது பார்வை சென்ற திசையை தானும் பார்த்தவள் அதிர்ந்து தான் போனாள்.
ஏற்கனவே ஒருமுறை அவளை கூப்பிட்டு எச்சரித்து விட்டான் அவன். இதற்கிடையில் இதை வேறு கண்டால் அவளை என்ன சொல்வானோ என்பதுதான் அவளது பயத்துக்கு காரணமே. அவனைக் கண்டதும் மற்றவர்கள் புன்னகைக்க அம்ரிதா மட்டும் அவனை வெளிறிய முகத்துடன் பார்த்தபடி இருந்தாள்..
ஆனால் அபிஜித் அவளைக் கண்டு கொள்ளவே இல்லை. அண்ணன் இருப்பதால் அதற்கு மேல் தருண் எதுவும் பேசவில்லை. ஒவ்வொருவராக உண்டு முடித்தபின் அங்கிருந்து செல்ல அவர்களுடனே செல்லலாம் என்று நினைக்கையிலேயே "அம்ரிதா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றான் அவளைப் பார்க்காமலே அழுத்தமாக.
"ஆஹா வசமாய் மாட்டிகிட்டோம்" என்று நினைத்தவள் அவனை பார்த்து "ஈஈஈஈஈ.."என வலுக்கட்டாயமாக இளித்து வைத்தாள்.
"இப்போ எதுக்கு இப்படி பண்ற?" என்றான் அவன்.
" எப்படி ?" என அவளும் புரியாமல் கேட்டாள் ..
"சம்பந்தமே இல்லாம சிரிக்கிறியே அதைச் சொன்னேன்.." என்ற பதில் வந்தாலும் உண்பதில் தான் கவனமாக இருந்தான் அவன். அதற்கும் சேர்த்து சிரித்து வைத்தாள் வேறு வழி இல்லாமல்.. அவளை நிமிர்ந்து பார்த்தவன் "நான் ஒரு வாட்டி உன் கிட்ட சொல்லி இருக்க நீ ஏன் திரும்பத் திரும்ப பண்ற ..எனக்கு இது சரியா படல .."என்று அவன் கூற
"என்ன அண்ணா எது சரியா படல?" என்றபடி அவ்விடம் வந்தான் தருண்." நீ இன்னும் போக வில்லையா?" என்பது போல்தான் பார்த்தான் அபிஜித் தருணை.
அவனுடைய பார்வையை புரிந்து கொண்ட தருணும்
"இது அம்ரிதாவோட பாக்ஸ்.அதை கொடுக்கலாம்னு வந்தேன் ."என அவளிடம் கூறிவிட்டு திரும்பியவன் அவளிடம் அதைக் கொடுத்து விட்டே சென்றான்..
அவனை வைத்து இவனிடமிருந்து தப்ப வேண்டும் என முடிவு செய்தவள்
" தருண் நானும் உங்க கூட வர்றேன்.." என்றபடி வேகமாக எழுந்து அவனுடன் சென்று விட்டாள்.
போகும் அவளை பார்த்திருந்த அபிஜித்தின் கை முஷ்டிகள் இறுகியது கோபத்தின் காரணமாக. அவன் கையில் சிக்கினால் அமிர்தாவின் நிலைமை அவ்வளவு தான்.. அப்படி ஒரு கோபம் அவனிடத்தில் ..இதை அறியாத அமிர்தா இயல்பாக பேசியபடியே சென்று விட்டாள்.
இப்படியே இரண்டு மூன்று நாட்கள் கடந்து செல்ல அவன் கண்களில் படாமல் சுற்றிக் கொண்டு இருந்தாள் அவள். சக்தி இப்போதெல்லாம் யாருடனும் சரியாக பேசுவது இல்லை. அம்ரிவிடம் கூட அவள் பேசுவது குறைந்து போனது. தருண்.. விஹான் ..அம்ரிதா மூவருக்கும் காரணம் தெரிந்தாலும் அவளது வாயில் இருந்து தருணை அவள் காதலிக்கும் செய்தி வர வேண்டும் என்பதற்காக அவர்கள் நடிப்பை கைவிடவும் இல்லை..
உள்ளுக்குள் அவளுக்காக வேண்டி கவலைப் பட்டனர்.
ஆனால் இப்போது கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை அவர்கள் விட்டு விட்டால் சக்தி..தருன் மற்றும் அபிஜித் மூன்று பேரின் வாழ்க்கையும் பிற்காலத்தில் நிம்மதியாக இருக்காது.. எனவே தான் யாருக்காகவும் கவலை கொள்ளாமல் தங்கள் திட்டத்தில் உறுதியாக இருந்தனர்
அவர்கள்.
அபிஜித்தின் கண்ணில் படாமல் சுற்றியவள் அன்று தருண் கூறியதால் ஒரு கையெழுத்து வாங்க வேண்டி அவனது அறைக்கு சென்றாள்..
அவளைக் கண்டவன் எதுவும் பேசாமல் அவள் காட்டிய இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டு அவள் செல்லும் போது சொடக்கு போட்டு அவளை தடுத்து நிறுத்தினான்..
அவனது சொடக்கு சத்தத்தில் பயத்துடன் திரும்பி அவனை பார்த்தாள் அவள்..
" உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா.. இல்லை இவன் சொல்லி நான் என்ன கேட்கிறதுன்ற திமிரா?" என்றான் கோபமாக ..
"அப்படி இல்லை.." என அவன் எதை பற்றி பேசுகிறான் என்பதை உணர்ந்து தயக்கமாக பதிலளித்தாள் அவள்..
" எப்படி இல்லை ..தருணை விட்டுடு அப்படி இல்லன்னா உன் தாத்தா கிட்ட சொல்ல வேண்டி வரும்.. ஜாக்கிரதை.." என்று இப்போது அவளை தாத்தாவை காட்டி மிரட்டினான்.
அதில் சற்று பயந்துதான் போனாள் அம்ரிதா.
தாத்தாவிற்கு இந்த விடயம் போனால் அவள் எப்படி தாத்தாவை எதிர்கொள்வது... அவர்கள் ஒன்றும் காதலுக்கு எதிரிகள் இல்லைதான் ஆனாலும் தாத்தாவின் மீது அதிக மரியாதை உண்டு அவளுக்கு..
அவளது பயந்த முகத்தை பார்த்ததும் அதை வைத்தே அவளை மடக்கினான்.
"என்ன தாத்தா கிட்ட சொல்லட்டா" என்றான் மேலும் அவளிடம்.. சிறிது நேரம் யோசித்தவள் அவன் தாத்தாவிடம் எல்லாம் இதைப் பற்றி சொல்ல மாட்டான் தன்னை பயமுறுத்தவே இவ்வாறு கூறுகிறான் என உறுதியாக நம்பினாள்..
எனவே அவளும் அவனிடம் தைரியமாகப் பேச முடிவெடுத்வளாக
"ஏன் சார் நான் தெரியாமத்தான் கேட்கிறேன்.. நான் தருணை தானே லவ் பண்றேன் உங்களுக்கு என்ன பிரச்சினை .."என வரவழைத்த புன்னகையோடு கேட்டாள்.
அதில் அவனுக்கு கோபம் வர
"ஏய் என்னடி நானும் பார்த்துகிட்டே இருக்கேன் பேசிட்டே போற.. உனக்கு லவ் பண்ண வேற யாரும் கிடைக்கலையா..?" என மரியாதை இல்லாமல் பேசினான் ..அவன் டீ போட்டு பேசியது அவளுக்கும் கோபம் வர
" உங்களுக்கு பொறாமை சார்.. உங்க தம்பி உங்களுக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணி விடுவார் என்ற பயம் தானே உங்களுக்கு.. நீங்க என்ன சொன்னாலும் தருண் என்னை லவ் பண்றாரு ..யாராலும் எங்களை பிரிக்கவே முடியாது.." என என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ஏதேதோ பேசி விட்டாள்...
அவளை அழுத்தமாக பார்த்தபடி இருக்கையிலிருந்து எழுந்து வந்த அபிஜித்
" எனக்கு அந்த மாதிரி எந்த பயமும் இல்லை .. பொறாமையும் இல்லை.. ஆனா நீ அவனை லவ் பண்ணக் கூடாது அவ்வளவுதான்.." என்று கூற இப்போது கேள்வியாக அவனைப் பார்த்தாள் அம்ரிதா.
"புரியல சார் நான் உங்க தம்பியை லவ் பண்ண கூடாதா இல்லை உங்க தம்பியை யாருமே லவ் பண்ண கூடாதா?" என்று பட்டென்று கேட்க அவன் நிதானமாக
"நீ என்ன நினைக்கிறாய்?" என்று கேட்க தெரியலை எனும் விதமாக சைகை செய்தாள் அவள்.
அவளை மீண்டும் நெருங்கி வந்தவன் ".நீ ..நீ ..."என்று அவளை தனது சுட்டுவிரலால் காட்டி
"நீ அவனை லவ் பண்ண கூடாது.." என நக்கல் புன்னகையோடு.
என்னதான் அவன் சொல்ல வருகிறான் என்று அம்ரிதாவிற்கு சத்தியமாக புரியவில்லை ..அவன் தன்னை காதலிப்பதில் இவனுக்கு என்ன தான் பிரச்சினை என்பது தான் அவளது மனதில் ஓடிய கேள்வி
.
அதை அவனிடம் கேட்கவும் செய்தாள் அவள்.
" என்ன தான் உங்களுக்கு பிரச்சினை ..எனக்கு புரியல நான் தருணை லவ் பண்றதுல உங்களுக்கு என்ன வந்தது.." என்று கோபத்தில் மேலும் அவனை நெருங்கி வந்து கேட்டாள்..
கோவத்தில் இருந்தவள் அவனை
நெருங்கி நின்றதை அறியவில்லை. ஆனால் அவர்கள் நெருகத்தையும் ஒருமுறை பார்த்ததவன்
"எனக்கு எதுவுமில்லை ஆனால் நீ தருணை லவ் பண்ணி கல்யாணம் பண்றதுல எனக்கு உடன்பாடே இல்லை.. உங்க ரெண்டு பேரையும் நான் சேர விட மாட்டேன் .."என உறுதியாக சொல்ல அலுப்பாக இருந்தது
அம்ரிதாவிற்கு.
அவர்கள் சக்தி மற்றும் தருண் காதலுக்காக செய்த செயல் இப்படி ஒரு இக்கட்டான நிலையில் அவளைக் கொண்டு வந்து நிறுத்த கூடும் என அவள் எண்ணவில்லை..
" கடவுளே எதுக்காக இப்படி பண்றிங்க.. நீங்க என்ன வேணா பண்ணிக்கோங்க தருண் என்னத்தான் லவ்.." என்று அவளது வாக்கியத்தை முடிக்க விடாமல் அவளை நெருங்கி இழுத்து அணைத்தவன் அதே வேகத்தில் அவள் இதழ்களை சிறை செய்து இருந்தான் அவனது
வன்மையான இதழ்களால்.
பேச்சின் நடுவே அவன் இப்படி அடாவடியாக தன்னை முத்தமிடுவான் என அறியாத பெண்ணவள் கண்கள் இரண்டையும் முடிந்த அளவு விரித்து பார்த்தாள்..அவனோ அதை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் அவளது இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டு கொண்டே இருந்தான் .
அவனை தள்ளிவிட கூட தோன்றாமல் நின்றிருந்தாள் அம்ரிதா.. ஆனால் அதற்கு மாறாக அபிஜித் அந்த இதழ் முத்தத்தை ச ரசித்துக் கொண்டிருந்தான்.
அவள் மூச்சுக்காக ஏங்கியதும் தான் அவளை விட்டு விலகினான் அவன்.. அவளை விட்டு விலகி ஒரு புன்சிரிப்புடன் அவளை பார்க்க அவளோ சிலை போலவே எந்த அசைவும் இன்றி நின்று கொண்டு இருந்தாள்..
இது அவளது முதல் முத்தம்.. எனவேதான் அவளால் இந்தத் முத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. அவன் முன்னாலேயே இருக்க அவனை அடி என அவளது மூளை அவளுக்கு அறிவுறுத்தியது.. ஆனால் அவளால் தான் எதுவும் செய்ய முடியவில்லை.
அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ என்ன என்பது போல் கண்களால் சைகை செய்தான்.. இவன் தானா சற்று முன் தனக்கு முத்தம் கொடுத்தான் என அவளே குழம்பித்தான் போனாள்.
அப்படி இருந்தான் அவன். சட்டென்று ஏதோ தோன்ற தனது இதழை வருடிப் பார்த்தாள் ..
வருடும் போது சிறிதாக வலி ஏற்பட்டது அவளுடைய இதழில்.. "அப்போ இவன் கிஸ் பண்ணது நிஜம் தான் ..கனவு இல்லையா.. ஒன்னுமே புரியலையே.. எதுவுமே பண்ணாத மாதிரி பச்சை புள்ளை போல முகத்தை வச்சுகிட்டு இருக்கானே.. கடவுளே.."என அவள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
அச்சமயம் இருவரும் எதிர்பார்க்காமல் அங்கு தருண் விஹான் இருவரும் வந்தனர்.. அபிஜித் தனது முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டான் அவர்கள் இருவரையும் கண்டதும். ஆனால் அவளால் தான் அப்படி இருக்க முடியவில்லை ..அவளது கை இன்னும் இதழிலேயே இருந்தது.
அவர்களைக் கண்ட விஹான்
"சாரி கேட்காம வந்ததுக்கு ..ஏதாவது முக்கியமான விஷயம் பேசிட்டு இருந்தீங்களா?" என்றான் இருவரையும் மாறி மாறிப் பார்த்தபடி..
" அப்படி இல்லை என்ன விஷயமா ரெண்டு பேரும் வந்து இருக்கீங்க?" என கேட்ட படி இருக்கையில் சென்று அமர்ந்தான். இருவரின் பார்வையும் இப்போது அமிர்தாவை தொட்டு மீண்டது..
ஆனால் அவளோ இதழ்களை வருடியபடி ஏதோ யோசனையில் இருந்தாள்.
" ஏய் உனக்கு என்ன ஆச்சு ..இப்படி நிற்கிற.."என கேட்டபடியே விஹார் அவளது அருகில் சென்றான்..
அப்போது தான் அவனைப் பார்த்தவள் திரும்பி அபிஜித்தை பார்த்தாள். அவனோ அவளை பார்த்தபடியே இருந்தான். "உன்னைத் தான் கேட்கிறேன் ஏதாவது பேசு..என்ன வந்ததில் இருந்தே உதட்டுல தான் கை வச்சுட்டு இருக்க ..ஏதாவது கடிச்சிருச்சா என்ன?"
எனக் கேட்க இப்போது அபிஜித்திற்கு புரை ஏறியது.
" என்னாச்சு அண்ணா.." என்றபடி அவனிடம் சென்று அவன் முன்னால் நீரை நீட்டினான் தருண். அதை வாங்கிப் பருகியவன் பார்வை அம்ரிதாவை விட்டு அகலவில்லை.
அப்போது தான் சுய நினைவு வந்தவள் போல் மூன்று பேரையும் பார்த்து சிறு குழந்தை போல விழித்தாள் அம்ரிதா. அவள் வாயை திறந்தால் ஏதாவது உளறி விடுவாள் என்பதை உணர்ந்த அபிஜித் தம்பிகள் பக்கம் திரும்பி "நீங்க எதுக்கு வந்தீங்க?" என அவர்களிடம் பேச ஆரம்பித்தான்.
அவர்கள் பேசியதை பார்த்தபடியே அபிஜித்தை முறைத்துக் கொண்டிருந்தவளை கடைக்கண்ணால் பார்த்தவன்
" நீ போ நாம அப்புறமா பேசலாம்.." என பேச்சினிடையே அங்கிருந்து அனுப்பி வைத்தான் அவளை..
அவள் இயந்திரம் போல அங்கிருந்து நடந்து சென்றாள். வெளியே வந்தும் அவன் முத்தமிட்டது தான் நினைவுக்கு வந்தது அம்ரிதாவுக்கு ..அந்த நினைப்பிலேயே இரவு தூக்கமும் இல்லை அவளுக்கு..
தொடரும்.