உ
சூழ்வதெல்லாம் மாயைதானோ
அத்தியாயம் 7
என்ன என்று உணரும் முன்னமே பாம்பின் தலையும் உடலும் பருந்தின் கால்களின் நடுவே அடங்கின. கூரிய நகங்களை தாண்டி பாம்பால் அசைய முடியா நிலையை கண்டு எகத்தாளமாக பார்த்து சிரித்தது பருந்து… ‘நீ ராஜாவா அப்படீதானே பாடினே!! ஹ… நான் இந்த பரந்து விரிந்திருகும் வானத்துக்கே ராஜா… எங்கள் இனத்தை பார்த்துதான் விமானமே தயாரித்தார்கள் இந்த மனிதர்கள்… இது உனக்கு தெரியுமா?’ என்று இறுமாப்புடன் தன் இறையை உண்ண உயரே பறந்துக்கொண்டே பாடியது ‘நேற்று இல்லே நாளை இல்லே… எப்பவும் நான் ராஜா… கோட்டை இல்லே கொடியும் இல்லே அப்பவும் நான் ராஜா'
தன் கையில் இருக்கும் எல்லா மருத்துவ சான்றிதழ்களை தன் முதலாளியுடன் காட்டி கொண்டிருந்தான் இந்திரஜீத். ஓய்வில்லாமல்.வேலை செய்பவர்களுக்கு அவசர விடுப்பு என்பது கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும் என்ற சலுகை உள்ளதென்பதால் தலையை சொரிந்தார் அவனின் முதலாளி.
நேற்றிரவு ஓய்வில்லாமல் அங்கும் இங்கும் அலைந்ததில் அவன் முகமும் அசதியை அப்பட்டமாக காட்ட… அதை சோகம் என்று நம்பிய அந்த மனிதாபிமான முதலாளி அவனுக்கு பெரிய மனதுடன் மூன்று நாட்கள் விடுப்பு கொடுக்க…
‘டேய்!! உன் அப்பன் வீட்டு சொத்தா குறையுது கடன்காரா!!! அள்ளி கொடுக்காம கிள்ளி கொடுக்குறான் பாரு…’ மனதில் முதலாளியை தாளித்தாலும் திரும்பி இங்கே வரப்போவதில்லை என்ற முடிவுடன் கிளம்புவதால் கண்ணியமான வார்த்தைகளால் தாளித்தவன்
“ஃப்ளைட் ஐந்து மணிக்கு… நான் இப்பொழுது கிளம்பினாதான் KLIA ஏர்போட்ல போய் சேர முடியும். எனக்கொரு உதவி துவான்… நான் வர வரைக்கும் என் காரை உங்க வீட்டுல வச்சிக்க முடியுமா?” என்றவனின் சொல்லில் மகிழ்ந்து போனார் அந்த மூதலாளி.
நேற்றுவரை அவன் மேல் சந்தேகக்கண்ணோடு பார்த்ததெல்லாம் ஒரு நொடியில் மறந்து போக புளகாங்கிதம் கொண்டார். அவனின் BMW ஸ்போர்ட் காரை தன்னிடம் ஒப்படைக்கிறான் என்றால் தன் மீது எத்தனை நம்பிக்கை என்ற நினைவில் கண்கள் மின்ன தலையசைத்தார்.
அதைக்கண்டவனின் முகத்தில் திருப்தியான புன்னகை.. அது ஏனென்று அவனுக்கு மட்டுமே தெரியும்…
அலுவலகத்தில் அனைவரும் அவனை கட்டி அணைத்து சீக்கிரம் வரும்படி சொல்ல… சில்வியா.. அந்த சீனத்துப்பெண் அவனை இறுக அணைத்து சீக்கிரம் வந்துவிடும்படி கண்ணடித்து சொல்ல… சட்டென அந்த அழகிய ரோஜா ‘நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க’ என்று கண்ணடித்து சொன்னது ஞாபகத்தில் வர ஒரு பெருமூச்சு விட்டான். அவளை முழுதாக தன்வசப்படுத்த முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் கிளம்பிவிட்டான்.
வரும் வழியெல்லாம் மணி எப்படி இருப்பான்… அவனை இன்று கண்டுவிடும் ஆவலில் திருச்சி விமான நிலையம் வந்து சேர்ந்ததும் கண்களால் துழாவ… அவன் கைத்தொலைப்பேசிக்கு ஏதோ ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வர, யோசனையுடன் அழைப்பை எடுக்க
“ஹலோ ஸார்… வாசலில் இன்னோவா கார் ப்ளூ சட்டை ஜீன்ஸ் போட்டிருகேன் வந்திடுங்க..” ஒரு கட்டைக்குரல்காரன் விளக்கம் கொடுத்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட
என்னடா இது… ஆரம்பமே பெரும் ரம்பமா அறுக்குது… என்று எண்ணிக்கொண்டே வாசலுக்கு செல்ல… அங்கே ஒரு இன்னோவா காரின் முன் முரட்டுமீசைக்காரன் நின்றிருந்தான்… இவன் தான் மணியோ என்றெண்ணியவன் புன்னகையுடன்
“மாட்.. அப்ப காபார் (நலமா)?” என்று தழுவியனை வேற்று கிரகவாசி போல பார்த்தவன்
“வாட்?? கம் அகெய்ன்..” என்று அதே கட்டைக்குரலில் மீசைக்காரன் பேச
“ஊப்ஸ்!! ஸாரி நண்பா… நான் மணி என்று நினைச்சுட்டேன்” அசடு வழிந்தான்
“தல நேர்ல எல்லாம் வர மாட்டார் மேன்… ஒன்லி இன்ஸ்ட்ரக்ஷன் தான்… ஒகே லெட்ஸ் கோ மேன்…” என்று கார் கதவை திறக்க
“என் பெயர் இந்திரஜீத்..” குழப்பத்துடன் கையை நீட்ட… அதைப்பற்றி குலுக்கியவன் “மீ ஜெய்… இப்பொழுதிலிருந்து யூ ஆர் தீரா… மத்த நேம் எல்லாத்தையும் மறந்திடு மேன்” என்றுவிட்டு அங்கிருந்து புறப்பட முயல….
ஏர்போர்ட் வாசலில் சலசலப்பு உருவானது… கொஞ்ச நேரத்தில் அந்த இடமே பரப்பானது…
தன் பெயர் மாற்றப்பட்ட அதிர்ச்சியில் இந்திரஜீத் அசையாமரமாய் நிற்க…
திடுமென சுழ்நிலை மாறியதை கண்டு ஜெய்யின் மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது.
*********************************
வெகு நேரம் சோகத்தில் அமர்ந்தவளின் வயிறு உள்ளேன் ஐயா என்று கிள்ளி கிள்ளி சொல்ல சமையறைக்கு சென்றவள், அங்கே பாத்திரம் கழுவும் பேசினில் முகம் கழுவி விட்டு, சாப்பிடுவதற்கு தேட… கிடைத்தது என்னவோ ரொட்டியும் பாலும்தான்.. அவற்றை வயிற்றுக்குள் நிரப்பியவள், கவனமாக இடத்தை சுத்தம் செய்தாள் ஆனால் குறைந்து போன ரொட்டியையும் பாலையும் பார்த்தால் அவன் என்ன செய்வான் என்பதை மறந்து போனவள், ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்தவள் மறுபடியும் தூங்கி போனாள்.
திடுமென உடல் எல்லாம் எரிவதுபோல் உணர்ந்தவள் அதன் வெப்பம் தாங்காமல் பட்டென கண் விழிக்க… மேனி வேர்வையில் குளித்திருந்தது. ‘ஏதாவது கெட்ட சொப்பனம் கண்டுக்கிடேனா?’ என்று அவள் யோசிக்கையில் ஏதோ துர்வாடை ஒன்று நாசியை தீண்ட… முகம் சுழித்தவளுக்கு இப்பொழுது கண்கள் இருட்டுக்கு பழகி விட்டிருக்க… ஏதோ இடிமுழக்கம்போல் ஒரு சத்தம் கேட்க உடல் தூக்கி வாரிப்போட்டது.
என்ன ஏது என்று அவள் உணரும் முன்னமே, உடல் முழுவதும் சூடு வைத்ததுபோல் கொப்பளித்துக்கொண்டு வந்தது. “ஸ்ஸ்ஸ்….. ஆ..ஆ…ஆ..” என்று சோஃபாவிலிருந்து துடித்து எழுந்தாள். துள்ளி குதித்தவள்,
இது வரை வலிகள் ஏதும் உணராதவள் இப்பொழுது கொப்பளங்கள் மேல் கை வைக்க முடியாத ரணத்தை அனுபவ்பித்தாள். புதிது புதிதாக மேலும் மேலும் கொப்பளங்கள் உருவாகி கொண்டிருப்பதை தடுக்க முடியாமல் கதறி அழுதாள்.
“ஐயோ அம்மா வலிக்குதே!!! எனக்கு என்ன ஆச்சு?? நான் ஏன் இப்படி இருக்கேன்?? எவேன் கண்ணுக்கும் நான் அம்புட மாட்டிக்கினேன்... இதுல உசுரும் இருக்கானு தெரில… தாயே ஜகதாம்பா!!” என்று அலறினாள்.
கொப்பளங்கள் வெடிக்க ஆரம்பிக்க சொல்லொண்ணா வலியில் கதறினாள். அந்தோ பரிதாபம் அவளின் அலறல் கேட்கத்தான்ப்யாருமில்லையே. கொஞ்ச நேரத்தில் வெடித்த கொப்பளங்களிருந்து புகை வெளியாகின அவை அவள் தலைக்கு மேல் கரு மேக கூட்டம் போல் வட்டமிட்டன…
அவள் கண்களுக்கு அது புகைபடிந்த வௌவால்களாக தோன்ற ப்யந்து நடுங்கினாள். வலி ஒரு பக்கம் பயம் ஒரு பக்கம் தன் நிலை என்னவென்று தெரியாத குழப்பம் ஒரு பக்கமென திரிசங்கு நிலை கொண்டாள்.
திடுமென அந்த வௌவால் போன்ற புகை வட்டத்துக்கு நடுவிலிருந்து ஒளிக்கதிர் ஒன்றும் வந்ததும்… ஏற்கனவே பயத்தில் நடுங்கி கொண்டிருந்தவள் இப்பொழுது அந்த ஒளியை பார்த்ததும் மயங்கி சோஃபாவில் விழுந்தாள்.
அவள் மயங்கியதும் அந்த ஒளியும் காணாமல் போனது.
**********************
மனித ஆணைய அலுவலகத்திலிருந்து வெளிவந்தவனுக்காக காரில் காத்திருந்தார் ஆதிகேஷ்வர்.
“காரில் ஏறு முகில்!!” பரிவாக கூப்பிட்டார்
“ஸாரி ஸார்… எனக்கு என் ஜீப் இருக்கு!!” திமிராக வந்தது பதில்
“லிசன் முகில்..” பேச வந்தவரை பாதியில் நிறுத்தினான்
“ஸார்!! நான் இன்னும் டியூட்டிலதான் இருக்கேன்… விசாரணை மட்டும்தான் போயிட்டு இருக்கு… என்னவோ எனக்கு வேலை போனது போல கரிசனை வேண்டாம்… அண்ட் என்னை பரிதாபமா பார்க்கிறதெல்லாம் எனக்கு பிடிக்காது!!” முகத்தில் அடித்தாற்போன்ற அவனின் வார்த்தையில் தர்மசங்கடமானவர்
“முகி..” தடுமாறி அழைக்க
“இது கூட நீங்க நோன் அஃபிஷியலா பேசுனதாலத்தான் ஸார்.. ஐ அம் லீவீங் நாவ் ஸார்” என்று சல்யூட் செய்தவன் தனது ஜீப்பை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
“பிளடி க்ரிமினல்ஸ் மாதிரி விசாரிச்சிட்டு அப்புறம் கண்துடைப்புக்காக சமாளிப்பானுங்களாம்… ச்சே!! மனுசனை காண்டாக்குறானுங்க!!” மனதின் வெம்மையை தனிக்க முடியாமல் காரின் மேல் காட்டினான். அது அவன் சென்ற பாதையில் வந்த வாகனமோட்டிகளுக்கு மரண பயத்தை காட்டியது.
இன்னும் பல சிந்தனைகள் மனதை அறுக்க, அவற்றை எல்லாம் ஓரம் கட்ட வந்தது ரூபனின் அழைப்பு
“சொல்லு…” சீற்றம் குறையாமல் கேட்க
“ஸார்… இன்னும் ரெண்டு நாளில் உங்க வீட்டில் தங்கனும் என்று டி ஐ ஜி சொல்லிட்டார்… அதான் என்னோட திங்க்ஸ் வைக்குறதுக்காக உங்க வீட்டின் முன் வந்து காத்திருகேன் அண்ட் அதோட ஒரு முக்…” பேச்சை முடிக்க விடாமல் அவசரக்காரனாக முந்தினான் முகிலன்
“ஏண்டா உன் டி ஐ ஜிக்குதான் மூளை இல்லைனா உனக்கும் இல்லாமல் போச்சா… நான் என்ன அந்த ஆளோட கீப்பாடா?? சும்மா சும்மா என்னையே சுத்தி வந்துக்கிட்டு இருக்கு அந்த ஆளு!!” பேசியவனின் குரலில் காரம் அதிகம் இருந்தது… கேட்டவனும் அதன் சாரம் சிரிப்பை தந்தது… அவன் சொன்ன விஷயத்தை கற்பனை செய்து பார்த்தவனுக்கு சிரிப்பு வர
‘ஆமாமாம் அந்த சொட்டையால் சுத்த முடியல… வழுக்கிட்டு போகுதாம்… அதான் என்னை சுத்தி சுத்தி வந்தீக பாட்டை பாட வச்சிக்கிட்டிருக்கு…’ வழக்கம் போல அவன் மனசாட்சி பதிலளித்தது.
“ஏண்டா வாயில உன் ஆத்தா என்ன துணியை வச்சி அடைச்சிட்டாங்களா… கேட்டா பதில் சொல்ல மாட்டீயா??” இதை கேட்டதும் சற்றுமுன் இருந்த மனநிலை மாறி கோபம் கொண்டான். இதற்குமேல் ரூபனால் அமைதியாக இருக்க முடியவில்லை
“ஸார்… நானும் உங்களைப்போல ஒரு போலீஸ்தான்… உங்களுக்கும் டி ஐ ஜிக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை ஸார்… அவர் உங்களை ட்ரில் வாங்குறார். நீங்க என்னை ட்ரில் வாங்குறீங்க!! இதுல நீங்க அவரை குறை சொல்லுறீங்களா!!”
“ஏய்!!!”
“என்ன ஸார் ஏய்!! நான் சொன்னதுல என்ன தப்பிருக்கு ஸார்!! பூச்சியை தவளை சாப்பிட்டா… தவளையை சாப்பிட பாம்பு வரும்… அந்த பாம்பை சாப்பிட பருந்து வரும்… இப்படியே சங்கிலித்தொடர் போலத்தானே ஸார் இங்கேயும் நடக்குது… டி. ஐ. ஜிக்கு நீங்கள், உங்களுக்கு நான், எனக்கு கான்ஸ்டபிள், அவருக்கு அதுக்கும் கீழ் வேலை செய்பவர்… ஒவ்வொருத்தருக்கும் அவங்க கோபத்தை காட்ட ஒரு ஆள் தேவைப்படுது… அதற்காக எந்த வார்த்தைகளையும் உபயோகிக்கலாம் என்று அர்த்தமில்லை!!. மேலதிகாரிக்கு பனிந்து போகலாம் ஆனால் முதுகெலும்பு இல்லாதது போல் இருக்க கூடாது!!“ கோபத்தில் மூச்சு வாங்கியது ரூபனுக்கு. அது எப்படி முகிலன் தன் தாயை பற்றி சொல்ல முடியும் என்ற கோபம் கனன்று கொண்டிருந்தது அவனுள்.
தான் பேசியது தவறென உணர்ந்தும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற உணர்வே இல்லாமல் “வெல்… நைஸ் டு ஹியர் திஸ்” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டான்.
“ச்சே என்ன மனுசன் இவன்!!” என்று ரூபன் புலம்பிக்கொண்டே தன் இருசக்கர வண்டியை உதைக்க… பளீச்சென ஒரு வெளிச்சம் இருண்டிருந்த முகிலனின் வீட்டிலிருந்து வந்தது… சட்டென மாயையோ என மறைந்தும் போனது. சற்று நேரம் அசையாது நின்ற ரூபனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
‘ஏதோ ஒரு மின்னல் போல வெளிச்சம் வந்ததே… மின்சாரத்தில் ஏதேனும் பழுது ஆகியிருக்குமோ?. அச்சச்சோ வீடு தீப்பிடித்து விடுமோ?’ என்று அவன் பதறுகையில் இரவை வெளிச்சமாக்கி ‘கிரீச்!!!’ என்ற சதத்துடன் வந்து நின்றது முகிலனின் ஜீப்.
கூர்பார்வை ஒன்றை ரூபனின் மேல் வீசிவிட்டு ரீமோட்டால் கேட்டை திறந்தவன் காரை உள்ளே செலுத்த…
‘இவன் வேற… சோத்துக்கு பதிலா இரும்பை சாப்பிடுவான் போலிருக்கு… எப்போ பாரு விரைப்பா சுத்துறது… பெரிய தங்கபதக்கம் சிவாஜி என்ற நினைப்பு!!’ மின்சாரம் ஏதும் பழுதாயிருக்கும் என்று எச்சரிக்க நினைக்க… முகிலனின் பார்வையை கண்டதும் மனதுக்குள் பொறும ஆரம்பித்தான் ரூபன் தன் இருசக்கர வாகனத்தை அவனுடைய வீட்டு வராண்டாவுக்குள் நுழைத்தவன்
“ஸார்…” என்று அழைத்தான்
“இதைப்பற்றி மேலும் பேச வேண்டாம் ரூபன்”
“நான் என்ன சொல்ல வரேன்னா..”
“உன் அபாலஜீஸ் எனக்கு தேவையில்லை ரூபன்!!”
‘ஏதே!! மன்னிப்பா!! அடேய் அவசரத்துக்கு பொறந்தவனே!! என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சிக்காம மன்னிப்பாம்ல மன்னிப்பு…’ மனதில் உள்ள வெறுப்பை அப்படியே முகத்திலும் காட்டினான் ரூபன். அதைக்கண்ட முகிலன்
“எதையோ என்னைப்பற்றி பெறுமையா யோசிக்கிற போலிருக்கு… அப்படியா??” வெறுப்பேற்றினான்
“இல்ல ஒரு விஷயம் சொல்ல வந்தேன். அது..”
“வெய்ட்… இதுதான் என் வீட்டு கடவு எண் 1357. இந்த எண்களை தட்டினால்தான் உள்ளே செல்ல முடியும்..” விளக்கம் கொடுத்தவனை நம்ப முடியாமல் பார்த்தான் ரூபன். ‘என்ன பம்முறான்?’ நினைத்துக்கொண்டிருக்க
கதவை திறந்து உள்ளே சென்றவர்களுக்கு ஏதோ துர்நாற்றம் மூக்கில் நுழைய சட்டென மூக்கை பொத்திக் கொண்டனர் இருவரும். விறுவிறுவென விளக்குகளை ஒளிர விட்டான் முகிலன்… ஹாலில் ஏதோ புகை பொதிகள் மிதப்பது போல் தோன்ற அதிர்ச்சியுற்றவன் சற்று நிதானித்தான்.
யாரோ வந்ததற்கான அறிகுறி தெளிவாகவே தெரிந்தது… சோஃபாவில் இருந்த குட்டி குஷன்கள் ஆங்காங்கே விழுந்து கிடந்தன… இருவரும் கையில் துப்பாக்கியை ஏந்திக்கொண்டு வீடு முழுக்க அலசினர். ஒன்றும் தென்படாததால் ஒற்றை சோஃபாவில் அமர்ந்து கொண்டனர்.
“ஸார்… நீங்க வரதுக்கு முன்ன… வீட்டிலிருந்து ஒரு வெளிச்சம் வந்துட்டு போனது ஸார்… பவர் ஷாட் என்று நினைச்சு அதைத்தான் சொல்ல வந்தேன்”
“என்னோட ரூம் டெபிள் லேம்ப் உடைஞ்சி கிடக்குது… யாரோ அதை பொட்டலமா கட்டி கிட்சன்கிட்ட வச்சிருக்காங்க… அதுவும் வந்தவனுகளுக்கு பசிச்சிருக்கும் போல பாலும் ரொட்டியும் சாப்பிட்டிருக்கானுங்க…”
“அப்படினா முந்தைய இரவு அந்த வாழைப்பழம்…”
“யெஸ்!! நான் சொன்ன போது நீ நம்பல.. என்னயே குழப்பி விட்டுட்ட… “
“எப்படி ஸார் உங்க வீட்டுக்குள் நுழைய முடியும்? வீட்டுல கேமரா??”
“அவசியமும் ஏற்படல… அதனால் இல்லை..”
“ஆனா… ஸாரி டு சே திஸ் ஸார்… ஏதோ ஒரு ஃபீலிங் தட் யாரோ நம்மை கண்காணிக்கிறது போல… கொஞ்சம் கிரீப்பியா இருக்கு அதே நேரம் உங்களை குழப்ப கிரிமினல்ஸோட வேலையா கூட இருக்கலாம்னு தோனுது..”
“ரெண்டாவது சொன்னது மேபி இருக்கலாம், பட்… கிரீப்பி… வாட் நான்சென்ஸ் ரூபன்… எந்த காலத்துல நீ இருக்க?”
“எப்படி வேண்டுமானாலும் நினைச்சுக்கோங்க ஸார்… நான் கடவுளையும் நம்புறவன் அதேபோல அமானுஷ்யங்களும் கிடையாது என்று சொல்பவனும் இல்லை”
“லீவ் தட் டாபிக் ரூபன்… என்னை யாரோ கொஞ்ச நாட்களா கவனிக்கிறது போல தோனுது… ஒகே நானா அவனான்னு ஒரு கை பார்த்துடுறேன்…” என்றவன் இரு கரங்களை முதுகுக்கு கொண்டு வந்து தலையை இடமும் வலமுமாக அசைத்து நெட்டு முறித்தவன் “ஒகே உன்னோட திங்ஸை அந்த லெஃப்ட் ரூமில் வச்சிடு” என்றுவிட்டு எழ..
அவனுடன் எழுந்த ரூபன் “நான் இன்று தங்க வரல ஸார்… திங்ஸ் கொஞ்சம் வைக்க வந்தேன்… இரண்டு நாட்களுக்கு அப்புரம்தான்…” தன் பைகளை அங்கிருக்கும் நீட்டு சோஃபாவில் வைத்துக்கொண்டே பேசியவனின் பேச்சு தடுமாறியது
அவனின் பைகள் எதன் மேலேயோ பட்டு மிதப்பது போல தோன்ற, கூர்ந்து சோஃபாவை பார்த்தவனின் நாசியில் அந்த துர்நாற்றம் கடுமையாய் தாக்க… நிலைகுலைந்து போனான் ரூபன்.
“ஹேய்… ரூபன்!!” என்று முகிலன் அவனை தாங்க
“ஸார் அந்த பேட் ஸ்மெல் ரொம்ப ஸ்டாராங்கா இருக்கு” என்றவனின் கூற்றை முகிலனும் ஆமோதித்தான். அவனுக்குமே குமட்டிக்கொண்டு வந்தது. சட்டென தன் வாசனை திரவியத்தை எடுத்து ஹால் முழுக்க அடிக்க… நாற்றம் மட்டுப்பட்டது.
ரூபனின் மனம் இது கண்டிப்பாக கிரிமினல்கள் வேலை இல்லை என்று அடித்து சொன்னது… சட்டென தன் பையில் இருந்து தன் காவல் தெய்வமான மதுரை வீரன் படத்தை எடுத்து கையில் வைத்துக்கொள்ள.. அதைக்கண்டு இதழ் வளைத்தான் முகிலன்.
“நான் சாமி படத்தை அந்த ரூமில் வச்சிட்டு வரேன்..” என்று ரூபன் சொல்லிவிட்டு செல்ல… அதே நேரம் இருவரையும் கான்ஃபிரன்ஸ் காலில் அழைத்தார் ஆதிகேஷ்வர்.
“இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு கான்ஸ்டபிள் வருவான்… ஆஃபிஸுக்கு… இல்ல… இல்ல... வீட்டுக்கு வந்துடுங்க… அடுத்து உங்களுக்கு கொடுக்கப்போற கேஸுக்கு சின்ன எவிடன்ஸ் கிடைச்சிருக்கு… நாளைக்கே திருச்சி போக வேண்டியது இருக்கும்… உங்க உடமைகளையும் கொஞ்சம் எடுத்துக்குங்க…” ஆதிகேஷ்வர் சொன்னதும் “ஒகே ஸார்” என்று ரூபன் ஒத்துழைக்க… சற்று தயங்கினான் முகலன்
“முகிலன்??’ ஆதிகேஷ்வர் அழைக்க
“ஓகே ஸார்… ஆனா பதிலுக்கு உங்களிடமிருந்து எனக்கு ஒரு வேலை நடக்கனும்”
“வாட்!! நீ என்னை வேலை வாங்குகிறாயா?”
“வாய் நாட்?? அவசரமா கிளம்ப சொல்லுறீங்க… நாளைக்குள்ள என்னோட வேலை ஷெடூல் எல்லாம் நான் இப்பொழுது போஸ்ட்போன் பண்ணனும்… கிட்னாப் கேஸ் பாதியில் ஊசலாடுது… அதை பிறகு வந்து பார்க்கனும் வேற… உங்க ஆர்டரை நான் ஒபே பண்றேன் தானே…. இவ்வளவு செஞ்சும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கா ரூபனை என்னோடு கோர்த்து விட்டதுக்கு நான் ஒன்றும் சொல்லாத மாதிரி, நீங்களும் பதிலுக்கு ஏதும் சொல்லாமல் உதவலாம்தானே??”
“வாட் டு யூ வாண்ட் முகிலன்?”
“நாளைக்கு முதல் வேலையா என் வீட்டை.சுற்றி கேமரா ஃபிக்ஸ் பண்ணனும்… ஒன்லி அவுட் சைட்!!”
“எனி பிராப்ளம் முகிலன்?”
“அது மட்டும் போதும்… அந்த கான்ஸ்டபிளை சீக்கிரம் வரச்சொல்லுங்க…” அவரின் கேள்வியை புறக்கணித்து அழைப்பை துண்டித்தான்.
இவன் ஏன் இப்படி இருக்கான் என்று ரூபன் யோசிக்கையில்… யாருக்கோ அழைப்பு விடுத்து அவன் செய்த செயல் ரூபனை யோசிக்க வைத்தது. ‘இவன் நல்லவனா கெட்டவனா டொண்ட டொண்ட டொய்ங் டொய்ங்’ பிஜிஎம் இவனே போட்டுக்கொண்டான்
சொன்னதுபோல அலுவலக வண்டி வந்துவிட தங்கள் உடைமைகளை கொஞ்சம் எடுத்துக்கொண்டு கிளம்பும்போது துர்வாடைக்கு பதிலாக மென்மையான சந்தனமும் மல்லிகையும் கலந்த மணம் தங்கள் நாசிக்கு அருகே உரசி சென்றதை இருவரும் உணர்ந்தனர். முகிலனுக்குள் குழப்பம்… ரூபனுக்குள் சந்தேகம்…
ஆனால் ஒரு விஷயத்தை இருவருமே மறந்து போயினர். அது ரூபன் சொல்ல வந்த முக்கியமான விஷயம்….. அந்த விஷயம்???