All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ராஜேஸ்வரி கருப்பையாவின் ‘மழைச்சாரலடி மனதில்!’ - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Rajeshwari Karuppaiya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்.

நான் ராஜேஸ்வரி.

இந்த கதையின் மூலமா உங்களை சந்திப்பதில் ரொம்ப மகிழ்ச்சி.

SMS தளத்தில் இது என்னோட இரண்டாவது கதை. முதல் கதை தித்திக்கும் தேனமுதே. உங்களோட சப்போர்ட் அம்மு விஷ்வாவை தொடர்ந்து அம்சா விவேக்குக்கும் வேணும். இந்த கதை என்னோட புது முயற்சி. ஒரு அத்தியாயம் ஹீரோயின் அம்சா பார்வையிலும் அடுத்த அத்தியாயம் ஹீரோ விவேக் பார்வையிலும் இருக்கும். ஒரே நிகழ்ச்சி ரெண்டுபேரோட கோணத்தில் எப்படி இருக்கு. இந்த திருமணத்தில் அவங்களுடைய எண்ணங்களை அவரவர் பக்கமிருந்து தெரிஞ்சுக்கலாம்.

இந்த மழைச்சாரல் நிச்சயம் உங்களை நனைத்துச் செல்லும்.

நன்றி டியர்ஸ் ❤
 

Rajeshwari Karuppaiya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
1



காட்சிபிழையாய் வரும் கனவுகள் துர் சொப்பனங்களில் சேராமல் போகும் நேரம் மிக நுண்ணிய நூலிழையில் வந்து போகும் ஆசையே வாழ்க்கையின் ஆதாரமாவும் அடித்தளமாவும் மாறிப் போவதுண்டு.

எனக்கும் ரொம்பவே சின்னதாய் ஒரு ஆசை முளைத்திருக்கிறது. மலர்விழியின் தந்தையின் மனதில் என் மீதான கடுகளவு நேசமாவது இந்த திருமணத்தின் ஆதாரமாய் அமைந்துவிட்டிருக்கும் என்று.

என் ஆசைக்கும் நிதர்சனத்திற்கும் இடையில் நான் ஊசலடிக்கொண்டே நடக்கும் நிகழ்வுகளை பார்த்திருந்தேன்.

"இந்தப் புள்ளைக்கு என்ன குறைச்சல்ன்னு இப்படி ரெண்டாந்தாரமா கட்டி குடுக்க முடிவு பண்ணிருக்கீங்க ண்ணா.. புள்ள பவுனு கணக்கா மின்னுது. காலேசும் முடிச்சருக்கு. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்தா நல்ல வரணு அமையாமையா போயிரும் "என்று அங்கலாய்த்த என் அத்தையை 'ச்சு போ 'என்று லூசில் விட்டார் என் அப்பா தருமன்.

'நல்லாத்தான் வச்சாங்க பேரு தருமன். என்னை வாசமாய் அடகு வைக்க எந்த இடம் தோதுப்படும்னு மனுஷன் அலைஞ்ச அலைச்சல்ல ஒரு சுத்து எளச்சு போய்ட்டாரு பாவம் 'என் மண்டைக்குள் இப்படியான பரிதாபம் வேறு.

"என்ன மச்சான் உங்க தங்கச்சி கேக்குறதுலயும் நாயம் இருக்குல்ல. இப்பென்னா அம்சுக்கு இருவத்தஞ்சு தான ஆச்சுது. இன்னும் ஒரு வருஷம் பொறுத்து தான் பாப்போமே."என்ற என் மாமாவின் பேச்சை ஊதி தள்ள முடியாமல் என் அப்பா கொஞ்சம் தொண்டையை செருமிக் கொண்டே பேச ஆரம்பித்தார்.

"எனக்குமட்டும் எம்புள்ளய இப்படி கட்டி குடுக்க தேனாட்டம் இனிக்கவா செய்யுது மச்சா. அம்சா கண்ணாலத்துக்கு அஞ்சு வருஷம் முன்ன சோசியம் பாக்கும் போதே அந்தாளு சொன்னான். உன்ற மவளுக்கு ரெண்டாந்தாராம்னு. நீயும் வேணாம் உன் கிரகமும் வேணாம்னு அவனை மிதிச்சுட்டு வந்தவன் தான் நானு. இப்போ இத்தன வருசத்துல ஒரு மாப்பிளை முடிஞ்சுதா மச்சா.

சாதகத்துல ரகு கேதுன்னு இல்லாத பரிகாரம் பண்ணியாச்சு. கடைசியா இந்த மாப்பிளை ஜாதகம் தான் பொருந்தி போயிருக்கு. இதையும் தட்டி கழிச்சு வுட்டுட்டு என்ன பண்றது மச்சான். நாளைக்கு இதுக்கு புறவு இருக்குற புள்ளைய நான் பாக்கணுமில்ல."

"புரியுது மச்சான். ஆனாலும் என்னவோ புள்ளைய பாக்க பாக்க மனசு ஒப்ப மாட்டிங்குது."என்றார் எனைப் பார்த்து பாவமாய்.

"நீங்க வேசனப்படாதீங்க மச்சா. பையன் படிச்சு நல்ல வேலைல இருக்காப்புடி. நம்ம சனத்துல கொஞ்சம் வசதியானவங்க தான். அவிங்க ஆத்தா அப்பன்னு எல்லாம் நல்ல மனுசங்க தான். மொத பொண்டாட்டி பிரசவத்தப்ப சன்னி வந்து செத்து போச்சாம். பச்ச புள்ளைய வச்சுட்டு அல்லாடிருக்காங்க. இந்த பையனும் மறு கண்ணாலம் பண்ண மாட்டேன்னு ஒரே புடிவாதமா இருந்துருக்கு. இப்ப தான் பேசி கீசி சம்மதிக்க வச்சுருக்காங்க.பையனும் வெளிய பழக்க வழக்கம்லாம் சுத்தமாதேன் இருக்கு"

"புறவு நம்ம அம்சாளுக்கு அந்த பையன்தான்னு எழுதியிருந்தா நாம மாத்தவா முடியும். ஏதோ நம்ம அண்ணி உசுரோட இருந்திருந்தா இன்னும் இந்த புள்ளைக ரெண்டும் நல்லா இருந்துருக்கும் "என்று சொல்லி மூக்கை உறுஞ்சிக் கொண்டார் என் அத்தை.

எனக்குமே சட்டென கண்ணீர் வர பார்த்தது தான். சட்டென தலையை குனிந்து கொண்டேன்.

"நம்ம கண்ணீரெல்லாம் நம்ம கண்ணு மட்டும் தான் பாக்கோணும். வேறவங்க கண்ணில்ல "இப்படி சில பல கோட்பாடுகள் மனதுக்குள் மணியடிக்கவும் தான் கண்ணை சிமிட்டி சமாளித்துக் கொண்டேன்.

குனிந்து கொண்டிருந்த என்னை பக்கத்தில் ஒரு சுண்டெலி சுரண்டியது.

"அக்கா அழறையா..?" என் பாசக்கார தங்கை தான்.'பயபுள்ள எப்படித்தான் கண்டு பிடிக்குதோ? சமாளி அம்சு.'

"நானெங்கடி அழுவுறேன். நீ வேற புரளிய கெளப்பாத. அப்புறம் ஒட்டு மொத்த கூட்டமும் கட்டிக்கிட்டு ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சுடும்."

"ச்ச உனக்கு கல் மனசுக்கா. அம்மா இல்லாம எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா."என்று சின்னவள் அழ தயாரானாள்.

"நீலும்மா நான் உனக்கு அம்மா மாறி தானே டா.."

"நீதானே.. ஒரு நாளாச்சும் என்ற தீனிய புடுங்கி திங்காம இரு ஒத்துக்கறேன்.."என்றாள் முறைத்துக் கொண்டே.

'பாவி புள்ள அடி மடில கை வைக்குறாளே. ஏதாச்சும் சொல்லி சமாளிக்கணுமே. ஹான் கெடச்சுப் போச்சு '

"அடியே நீலு இப்படி சொல்லிட்டல்ல டி. பாத்துக்கலாம் டி.நைட்டு பாத்ரூமுக்கு துணைக்கு வா! பல்லு விளக்க துணைக்கு வான்னு கூப்புடுவல்ல. அப்ப இருக்குடி உனக்கு.."

நான் நம்பியார் ரெஞ்சில் கையை பிசைய,

"க்கும்! இனி கூப்பிட மாட்டேன். அப்பா எனக்கொசரம் நம்ம பெட்ரும்குள்ளயே பாத்ரூம் கட்டி தரேன்னு சொல்லிருக்காரே "என்று முகத்தை வெட்டிக்கொள்ள,

'இந்த தருமருக்கு எப்பவும் சின்ன புள்ள தான் ஒசத்தி 'என்று நானும் என் மனதுக்குள் முறுக்கி கொண்டேன்.

****

நிக்க நேரம் இல்லாமல் ரெக்கை கட்டிக்கொண்டு ஓடியது நாளும் கிழமையும். என் வீடு முழுதும் சந்தை சாவடியெல்லாம் புற முதுகிடும் அளவிற்கு இரைச்சல் நிறைந்து காதை அடைத்தது.

நானோ பொம்மைக் கட்டை போல முகத்தை ஒப்பனைக்கு குடுத்துவிட்டு அமர்ந்திருந்தேன். 'பவுடரும் பொட்டும் வைத்திருந்தாலே போதுமட்டும் அழகாய் இருந்துருப்பேன். எதுக்கு இந்த கிரீமும் லிப்ஸ்டிக்கும் ' மனம் ஒரு புறம் சலசலத்தது.

"அக்கா அழகா இருக்க.."என் கன்னத்தை பிடித்துக் கொஞ்சினாள் நீலு.

"அதான்டி அம்சவேணி ன்னு பேர் வச்சுருக்காங்க "என்றேன் குறும்பாய்.

"பிறகு எனக்கு மட்டும் எதுக்கு நீல வேணின்னு வச்சுருக்காங்க. நான் என்ன நீலமாவா இருக்கேன்."உச்ச பச்ச பேர் ஆராய்ச்சியில் இருந்தவளை தலையை தட்டி வெளியே விரட்டி விட்டேன்.

என்னை விட ஐந்து வயது தான் சின்னவள் மனம் மட்டும் குழந்தையை போல. தொட்டது தொண்ணூறுக்கும் நான் வேண்டும் இவளுக்கு. நான் போன பிறகு இவள் தனியாக சமாளித்தாக வேண்டும் மெல்லமாய் பேருமூச்சு கிளம்பியது. விழியோரம் கண்ணீர் துளி முனுக்கென எட்டிப் பார்த்தது.

கைபேசி ஓரமாய் கிர் கிர்ரென ஒலி எழுப்பவும் எடுத்துப் பார்த்தேன். விவேகானந்தன் என்ற பெயர் திரையில் ஒளிரவும் முகம் பளிச்சென விளக்கு போட்டது. சிரிப்புடனே அழைப்பை ஏற்றேன்.

"என் செல்லத்துக்கு இப்போ தான் என் நியாபகம் வந்துச்சா?"போலி கோபத்துடன் நான்.

"......."

"நோ நோ... நான் உன் மேல கோவமா இருக்கேன்."

"........"

"அச்சோ இப்படி முத்தம் குடுத்தே கவுத்துடுறடா நீ. "

"......."

"சாரி சாரி...இந்தா உம்ம்மா....உம்ம்மா "போனில் முத்தமழை பொழிந்து விட்டு ஏதேச்சையாய் நிமிர, என்னை சுற்றியிருந்த அனைவரும் வாயை இறுக மூடி சிரிப்பை அடக்கி கொண்டிருந்தனர்.

"எதுக்கு இப்ப அல்லாரும் சிரிக்குறீக."என் மூக்கு விடைத்துக் கொண்டு நின்றது.

"ஏன்டி அம்சு கொஞ்சங்கூட கூச்சம் இல்லாம எங்க முன்னாடியே இப்படி கொஞ்சிட்டு கிடந்தா சிரிக்காம வேற என்ன பண்ணுவாங்க "என்று சொல்லி எங்க அத்தை என் கன்னத்தில் இடித்தார்.

வலித்த கன்னத்தை தேய்த்துக் கொண்டே "ஏன் கொஞ்சுனா என்ன தப்பாம்.. கொஞ்சுறது என்ன தூக்கி இடுப்புல கூட வச்சுக்குவேன். இதுல எதுக்கு கூச்சம் வேண்டி கிடக்கு " எனக்கு சத்தியமாய் புரியவே இல்லை.

"நாளைக்கு உன்ற புருஷன இடுப்புல தூக்கி வச்சுக்கோ, மடில போட்டு தாலாட்டிக்கோ யாரு வேண்டாங்குறா."என்று இன்னொருத்தர் விஷமமாய் சொல்ல, நான் அதிர்ச்சியில் எழுந்தே விட்டேன்.

"அய்யயோ சித்தி நான் இப்ப பேசுனது மலரு கிட்ட. அவிங்க கிட்ட இல்ல.."என்றேன் வேகமாய்.

'அய்யோடா இவங்க சொன்னதை நினைச்சி பார்த்தா கூட கை முடியெல்லாம் கூசி போகுதே'

சுற்றிலும் கொல்லென்ற சத்தத்துடன் அறையே சிரிப்பில் நிறைந்து போனது.
நானோ வெட்கத்தில் உதட்டை கடித்து நின்றிருந்தேன். என் அருகில் வந்த அத்தை "கண்ணு மாப்பிள்ளை தம்பிய உனக்கு புடிச்சு தான கல்யாணம் பண்ணிக்குற.."என்றார் மெதுவாய்.

எனக்குள்ளும் அந்த கேள்வி இருக்கே. எனக்கு அவரை பிடித்திருக்கா, திருமணத்திற்கு பின் வரும் நெருக்கத்தை மனமுவந்து ஏற்பேனா. இரண்டாம் இடத்தில் இருக்கும் என் நிலையை எந்த அளவுக்கு மனசு சமாளிக்கும் . அதி முக்கியமாய் அவருக்கு அந்த விவேகானந்தனுக்கு என்னை பிடிச்சிருக்கா????.

கேள்விக்குறியாய் மண்டை குடைச்சல் எடுக்க என் அத்தையை பார்த்து கோட்டு புன்னகை மட்டுமே குடுத்தேன் அவருக்கு பதிலாய்.

என்ன புரிந்ததோ. என்னவாக எடுத்துக்கொண்டரோ "நீ சந்தோசமா இருக்கனும் கண்ணு "என்றவர் அறையை விட்டு வெளியே அழைத்துச் சென்றார்.

இது மாப்பிள்ளை வீட்டு முறையில் இரண்டாம் மணம் இல்லையா. பெரிதாய் கும்பல் கூட்டம் ஆடம்பரம் என்று கொண்டாடாமல் எளிமையாய் எங்கள் ஊரில் இருந்த கோவிலில் திருமணமும் சமுதாயக் கூடத்தில் சாப்பாடும், வீட்டிற்கு வெளியே சின்னதாய் மேடை வைத்து வரவேற்பும் வைத்துக் கொள்வதாய் ஏற்பாடு செய்திருந்தனர்.

நாங்கள் கோவிலின் உள்ளே நுழையும் போதே பார்த்திருந்த மலர் என்னை நோக்கி ஓடி வந்தாள். மணி வைத்த கொலுசின் சத்தம் என்னை சமீபத்திருந்த நேரம் அவளை தூக்கி கொண்டேன்.

ஒல்லியாய் வெள்ளையாய் இருந்த மலருக்கு என்னை பார்த்ததும் சின்னதாய் வெட்கம் வேறு வந்து விட்டது. அவளின் தலையை பற்றி கன்னத்தில் முத்தமிட்டேன். அவளும் பதிலாய் தந்தாள் என் கன்னத்தில். இது எங்கள் ஜென்டில் அம்மா பொண்ணு அக்ரீமெண்ட்.

தூரத்தில் இருந்து எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார் மலரின் தந்தை விவேகானந்தன். நானும் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.பட்டு வேஷ்டி சட்டையில் பனைமர உயரத்தில் இருந்தார்.நெற்றியில் சந்தனம் திருநீருடன் கொஞ்சமே கொஞ்சம் அழகாகத் தான் இருந்தார்.

'ஓரு பொண்ணுக்கு அப்பா மாதிரியா இருக்கார்'என் மனம் வேறு ரன்னிங் கமெண்டரி அடித்தது.

என் குறு குறு பார்வை அவர் கண்ணை கூச வைத்திருக்க வேண்டும். என்னிடம் இருந்து சற்று நேரத்திலேயே பார்வையை விலக்கிக் கொண்டார்.

எனக்கு வேறு அசந்தர்ப்பமாய் ஒரு எண்ணம் வேறு வந்து தொலைத்தது 'இந்த நேரத்தில் அவருடைய முதல் திருமணத்தையும் முதல் மனைவியையும் நினைத்துக்கொண்டிருப்பாரோ என்று'

மானசீகமாய் தலையில் தட்டிக் கொண்டேன். 'உன்னை வருத்தப்படுத்தும் எதையும் சிந்திக்காதே மனமே 'என்று.

என்னிடம் வந்த என்னுடைய வருங்கால மாமியார் மலரை என்னிடம் இருந்து வாங்கிக் கொண்டார்.என்னையும் கை பிடித்து அழைத்துச் சென்றார் அவர் மகனிருக்கும் இடத்திற்கு.

சற்று நேரத்தில் ஆரம்பமான மந்திர ஓதல்களின் முடிவில் செல்வி அம்சவேணியாகிய நான் திருமதி அம்சவேணி விவேகானந்தன் ஆகியிருந்தேன்.
 

Rajeshwari Karuppaiya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
MM-2


மடி மீது நீயிருந்தால்
சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ ?
நொடி நேரம் பிரிந்தாலும்
காலங்களும் நின்று போகாதோ ?
ஒரு மூச்சு இரு தேகம்
வாழ்வது நாமன்றி வேராரோ ?
நம் காதல் வெள்ளத்தில்
நடுவே நாம் இருந்தாலும்
என் நெஞ்சம் தாகம் கொல்லுதே ஒ ...



அலைபேசியில் இசையாய் உருகி கரைந்து கொண்டிருந்தார் இளையராஜா. எத்தனையோ முறை கேட்டிருப்பேன். என்னை கேட்கவும் வைத்திருப்பாள் தேவி.

இமைகள் மூடி இறுக்கங்கள் தளர்ந்து நெகிழ்வாய் என் நெஞ்சினோரம் அவள் சாய்ந்திருக்கும் தருணங்களிள் நிச்சயமாய் இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

அளவில்லாத மையலோடு இமைக்குடை திறந்து கருவிழி பாவைகளுக்குள் என் முகம் படும் வேலையில் மெலிதாய் முனுமுனுத்திடும் வரிகள் காதுக்குமன்றி கண்ணுக்கும் இனிமை குடுக்கும் வித்தையை கொண்டவள் என் தேவி மட்டுமே.

சிப்பி இதழில் சிறு கவிதை நான் வரைய நுட்பமாய் அவள் நூதானமாய் திருடிக் கொள்வாள் என் அதரங்களை.

இன்றோ சீண்டுபவள் அவளின்றி பாலைவனம் போல வறண்டு கிடக்கிறது. இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் அவள் மீதான ஏக்கம் விட்டொழிவேனா என்று அடம் செய்கையில் இந்த இரண்டாம் திருமணம் எனக்கு எந்த விதத்திலும் நல்லது செய்யுமென்று தோன்றவில்லை.

என் சிந்தனை சிங்காரங்கள் வான வீதி கடந்து வாசப்படி மறந்து அவள் அம்சவேணியிடம் அழகாய் மண்டியிட்டது. அந்தப் பெண் அழகி தான். இல்லையென சொல்லுவதற்கில்லை. ஆனாலும் தேவியை தாண்டி என் மனதில் அவள் நுழையவே இல்லையே.

'பின்ன எதுக்கு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட 'மனசாட்சி என்ற பெயரில் மூளை அறிவாய் கேள்வி எழுப்பி வைத்தது.

மெல்ல தலை சாய்த்து வெளியே பார்த்தேன். வாசலில் மலர் போனில் பேசிகொண்டிருந்தாள். சிறு புன்னகை என்னையறியாமல் என்னுதட்டில் வந்து சேர்ந்தது. எப்படித் தான் முதல் பார்வையிலேயே அந்த பெண்ணுடன் அத்தனையாய் ஒட்டிகொண்டதோ இந்தக் குழந்தை.

பிறந்ததில் இருந்தே தாய் முகம் பார்க்காத மலர் அந்த பெண்ணிடம் பேசிய முதல் நாளிலேயே அம்மாவென அழைத்துவிட்டுருந்தாளே. மலரைப் போலவே என் மனதும் இருந்திருக்கலாம் என்று நினைக்க தோணியது.

எனக்குள்ளேயே நான் திடுக்கிட்டேன். நேசம் எனக்குள்ளும் வேர் பிடித்து விட்டதா?

வாயிற்படியில் இருந்து எழுந்த நான் வாசல் கேட் பக்கம் நடந்தேன். இடையில் நின்றிருந்த மலர்விழியின் சிகையை செல்லமாய் கலைத்து விட்டேன். அதில் குஷியாய் குதித்த மலர் அலைபேசி வழியாக அவள் வருங்கால அம்மாவிற்கு முத்தங்களை இட்டு நிரப்பும் சத்தம் கேட்டு நடையை நிறுத்தினேன்.

திரும்பி மலரிடம் வந்து அவள் அருகில் மண்டியிட்டு அமர்ந்தேன்.

"பட்டுமா அப்பாவுக்கு?"என்று கன்னத்தை காட்ட என் இரு கன்னத்திலும் பட்டிதழ் பட்டும் படாமல் பதித்து வைத்து 'அப்பா தாடி குத்துது 'என்று முகம் சுழித்த மலரின் இரு கன்னத்தை பற்றி முத்தமிட்டுவிட்டே எழுந்தேன்.என்னவோ ஒரு நிறைவு மனதில்.

எப்பவாவது எங்களுக்குள் நிகழும் இந்த பாசம் காட்டும் நிகழ்வை என் அம்மாவும் அப்பாவும் ரசித்து நின்றது தெரிந்தது. இவ்வளவு நாள் அவர்கள் முகத்தில் இருந்த வாடல் குறைந்து இப்பொழுதெல்லாம் மகிழ்ச்சி நிறைந்த முகமே தென்பட்டது.

'அம்சவேணிக்கு நன்றிகள் 'மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.

"கொஞ்சம் வெளிய நடந்துட்டு வரேன்மா "என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு கேட்டை தாண்டி வந்தேன். எதிரில் இருந்த மண் சாலையை தாண்டி இருந்த மஞ்சள் காட்டில் இருந்து வந்த மனம் அந்த இரவு நேரத்தை மேலும் ரம்மியம் ஆக்கியது.

அந்த மண் ரோட்டிலேயே நடக்க துவங்கினேன்.

******

கோவில் மணியை ஓரடி அடித்து விட்டு சாமி கும்பிட சென்றோம் அனைவரும். திருமணத்திற்கு தேவையான எல்லா ஏற்படும் தயாராக இருந்தது. அம்சவேணி மட்டும் இன்னும் வந்திருக்கவில்லை.

"அப்பா போன் குடுங்க. அம்மா கிட்ட பேசணும்."ரொம்ப நேரமாக இப்படித் தான் அடம் பிடித்துக்கொண்டிருந்தாள் மலர்.

"அவங்க ரெடி ஆகிட்டு இருப்பாங்க பட்டுமா. இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துருவாங்க."என்றேன் நான்.

"அப்பா ப்ளீஸ் ப்பா.."என்றும் இப்படித் தான். இந்த ப்ளீசில் எதை வேண்டுமென்றாலும் செய்து விடுவேன் நான்.

அரிதாய் வரும் ப்ளீஸ்களை கூட ஏற்றுகொள்ளாத நான் என்ன அப்பன்! இந்த ப்ளீசில் தானே அம்சவேணியை திருமணமே செய்துகொள்ள போகிறேன். ஒரு போனை குடுக்க மாட்டேனா.

அம்சவேணியின் நம்பருக்கு அழைத்தேன். மலரிடம் குடுக்கும் முன் அவள் அழைப்பை எடுக்கும் வரையிலும் காதில் வைத்திருந்தேன்.

அவள் அழைப்பை ஏற்றதும் சட்டென போனை மலரிடம் குடுத்து விட்டேன். என்னவோ இன்று வரை ஓர் வார்த்தை பேசியதில்லை. அவளுமே என்னிடம் பேச முயன்றதுமில்லை. இப்படி இருக்கும் எங்களுக்கு நடுவில் மலர் மட்டுமே பிரதானமாக ஆகிப் போனாள்.

நேரம் செல்லவும் வந்தாள் அவள். சோம்பலாய் விழுந்த சூரிய வெளிச்சத்தில் சூரியகாந்திப் பூவாய் மலர்ந்திருந்தாள் அவள்.

"ரொம்ப சரியாத் தான் பேர் வச்சுருக்காங்க ப்பா இவளுக்கு."என்னையும் மீறி மனம் கட்டவிழ்ந்து கொண்டிருந்தது.

என்னிடம் இருந்து கைகளை விடுவித்த மலர் ஓடிச் சென்றாள் அவளன்னை நோக்கி.

தன்னை நோக்கி வந்த குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு முத்தம் ஈன்றதில் என் ஐம்புலன்களும் அணிவகுத்து நின்றது அந்த அம்சமானவளை நோக்கி.

குழந்தையை கொஞ்சி முடித்தவள் நேராய் என்னைப் பார்த்தாள். விழியீர்ப்பு விசையில் நான் வில்லம்பின் வேகத்தில் வீழ்ந்து கொண்டிருந்தேன்.

சட்டென ஒரு குரல் என் அருகில் "தேவிய விட இந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்குல்ல" சுரீரென நெஞ்சம் துளைத்த அந்த வார்த்தையில் குற்றவுணர்ச்சி பொங்கியது எனதுள்.

மாயத்திரை மெல்ல எனை நழுவி போனதை உணர்ந்தேன். மெல்ல இறுக்கம் கொண்டது என் உடல். இனிமையின் இலவச இணைப்பாய் வரும் புன்னகையும் நஷ்டம் கொண்டது.

செயற்கை செய்கை என்னை ஆட்கொண்டதை உணர முடிந்தது . மாலையிட்டு தாலி கட்டும் நொடி வரையிலுமே கொண்ட இறுக்கம் மூன்று முடிச்சிட்டு நெற்றிப் பொட்டு வைக்கும் போது கொஞ்சமே கொஞ்சம் தளர்ந்து கொண்டிருந்தது.

சப்த அடிகளுக்காக அவள் சுண்டுவிரலை பற்றும் போது மின்சார கடத்தியாய் அவள் நேசத்தை எனக்கு கடத்திக் கொண்டிருப்பாள் போல.

சின்னஞ்சிரு பூக்கள் எனக்குள்ளே பூத்ததை உணர முடிந்தது.

ஜில்லென இருந்த அவள் விரல் கொஞ்சம் இருக்கமாகவே என் கையை பற்றியிருப்பது போல் எனக்கு தோணுவது ஒரு வேளை பிரம்மையோ.

அவள் முகம் பார்த்தேன். என் நெஞ்சிற்கு இணையாய் இருந்தாள்.

'நா இவ்ளோ வளர்த்தியா, இல்ல இவ ரொம்ப குட்டையா ' வலம் வரும் நேரம் முழுதாய் அவளே நிறைந்திருந்தாள்.
 

Rajeshwari Karuppaiya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
MM-3


சங்கீத சாமரம் ஓயாமல் நெஞ்சுக்குள் அடித்திடுமா. எனக்குள் அடிக்கிறதே. இதோ மாலையும் கழுத்துமாய் அந்த சின்ன அறையில் விவேகானந்தனுடன் அமரவைக்கப் பட்டுள்ளேன் நான். விட்டால் அவரின் மடிமேல் அமர வைத்துவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பேனாக்கும் என்று கங்கணங் கட்டிக்கொண்டு திரிந்தது உறவுக் கூட்டம்.

பக்கத்தில் அமர்ந்திருந்த என் கணவராக்கப் பட்டவரைப் பார்த்தேன். இதென்ன இவரின் பக்கத்தில் நான் கோழிக்குஞ்சு போல் தெரிவேன் போலயே. இயற்கையாகவே உயரம் குறைவு. அளவுக்கு அதிகமாகவே கொட்டிக் கொண்ட பொழுதிலும் உடல் மட்டும் பஞ்சத்தில் அடிபட்டவள் போல ஒரு தோற்றம்.

அவரோ பனைமர உயரம். உயரத்திற்கு ஏற்ற உடல். 'கடவுளே இவரை தூக்கி என் இடுப்பில் வைத்தால் என் இடுப்பு என்னாவது. கொஞ்சம் கூட கூறு இல்லாத சித்தி' பொல்லாத என் மனம் அத்தனை சிந்தனையையும் என் மனதில் ஓட்டிப் பார்த்தது.

ஓரக்கண்ணால் அவர் முகத்தைப் பார்த்தேன்.'ம்ஹும் மனுஷன் ஒரு பாவத்தையும் காட்டக் காணோம்.என்ன நினைக்கறாங்கன்னு கூட பிடிபட மாட்டிங்குதே.'

உறவுசனம் பார்வை அத்தனையும் எங்கள் மேல். என் ஓரப் பார்வை கொஞ்சமாய் அவர் மேல். அவர் பார்வை மட்டும் கையில் இருந்த செண்டுப் பூவில். "ஒரு வேலை எத்தனை பூ இருக்குன்னு எண்ணிட்டே இருப்பாரோ."

நான் அந்த செண்டையும் அவர் முகத்தையும் மாறி மாறி பார்த்து வைத்தேன். சட்டென அவர் நிலையில் ஒரு மாற்றம்.

'ஆத்தே! என்ன தலை லேசா என் பக்கம் சாயுது. '

என்னவோ சொல்ல வந்திருப்பார் போல. நல்ல வேளை அதற்குள் என் அத்தை என்னிடம் பால் டம்ளரை நீட்டி விட்டார்.

"இந்தா அம்சா! தம்பிக்கு குடு "என்று சொல்லவும் நான் வாங்கிக் கொண்டேன்.

பாலும் பழமும் இடம் மாறி எங்கள் வயிற்றிக்குள்ளும் போய் விட்டது. அவர்க்கு இது ஏற்கனவே நடந்து விட்ட ஒன்னு தானே. பெரிதாய் எதும் விளைவுகள் இல்லை போல. இருந்தாலும் என்னால் கண்டுபிடிக்க முடியாது என்று தான் தோன்றியது.

ஆனால் எனக்கு!

"கடவுளே வாயிக்கும் வயிருக்கும் பட்டாம்பூச்சி பறக்கிறதே "

அன்றைய நாள் முழுதும் இந்த பட்டாம்பூச்சி தொல்லை தாங்கவே முடியவில்லை.

மலர் அருகில் இருந்தாலாவது சமாளித்து இருப்பேன். இந்த நீலா வேறு அவளை தூக்கி கொண்டே திரிந்ததில் அவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து கொண்டு என்னை கழட்டி விட்டனர்.

எனக்குத் தான் என்னை நினைத்து பாவமாக இருந்தது. ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும் நான் பேச ஆளின்றி மவுன விரதம் கொண்டது போல் உள்ளேன்.

இவர் தான் ஒரு வார்த்தை பேசினால் என்ன முத்தா உதிர்ந்து விடும். சரியான மௌன சாமியாராக இருக்காரே.'அடி அம்சு நம்ம வாழ்க்கை ஒரு ஊமைப் படம் போல ஆகிடும் போலயே ' மனதிற்குள் புலம்பித் தவித்து, வெளியே சிரித்து தொலைத்து, வந்தவர்களிடம் கிட்ட தட்ட நடித்துக் கொண்டிருந்தேன்.

'நீயா பேசாம நான் பேசினா என்னை என்னனு கேளு விவேக்.'பன்மை மாறி ஒருமை குடிகொண்டது என்னிடம். கோவமா இருக்கேனாக்கும்.ஆடி அசைந்து அந்த நாளும் மெல்ல நழுவியது.

கருமை நிற மேகம் ஒளித்து வைத்த மழைநீர் எந்நேரமும் கொட்டி தீர்த்துவிடும் அபாயம் இருக்க என் புகுந்த வீட்டிற்கு பயணப்பட்டுக் கொண்டிருந்தேன் நான்.

என் மனம் முழுதும் நீலாவின் கண்ணீரில் தங்கி கன்னத்தில் உறைந்து விட்டுருந்தது. உள்ளுக்குள் பிறவாகமெடுக்கும் விழியூற்றை இமைக் கதவில் ஒளித்து வைத்து, இதழின் ஓரம் ஆதரங்களுக்கு அடியில் புதைந்து கொண்டு வரமாட்டேன் என்ற சிரிப்புக் குழந்தையை வம்படியாய் வெளியில் அழைத்து உதட்டில் ஓட்டவைத்துக் கொண்டேன்.

சின்னவளின் கன்னம் பிடித்து நெற்றியில் முத்தமிட்டு "நீலா குட்டி எதுக்கு அழுது கரையனும். அக்கா இல்லாம ஜாலியா இருக்கலாமே. உன்னோட வீடு, உன்னோட ரூமு,உன்னோட தீனி எல்லாமே இனி உனக்கு மட்டுன்தான். அக்காக்கு பங்கு வேண்டாம். அப்பாகிட்ட மல்லு கட்ட வேண்டாம். என்ன சரிதான.."என்று அவளின் நெற்றியில் முட்டினேன்.

"போக்கா "என்றவள் இன்னமும் அதிகமாய் அழுதவாறே என்னைக் கட்டிக்கொண்டாள்.

"அடாத மனமே! சற்று நேரம் அடை மழையை பெய்யாதிரு "மனதுக்கும் கண்ணுக்கும் கட்டளையிட்டவாறே சின்னவள் தலையை வருடிக் கொடுத்தேன்.

என்னை பின்னிருந்து பூப்பந்தாய் இரு கரம் அணைத்துக் கொண்டது. இந்த சூழ்நிலையின் கணம் தாங்காமல் குழந்தை தான் என்னை அணைத்துக் கொண்டது. நீலாவை விடுத்து மலரை தூக்கி வைத்துக் கொண்டேன்.

"இந்த அழுகாட்சி சித்திய நம்மோடு கூட்டிட்டு போய்ட்டு தீனியே குடுக்காம நாம புடிங்கி வச்சுக்கலாமா குட்டிமா."என்று மலரிடம் கேட்டேன். மலரென சிரித்த குழந்தை "சித்தி பாவம் "என்று மொழியவும், "அப்போ அம்மா "என்றேன் நான் பாவமாய்.

"இத்தூண்டு மட்டும் குடுக்கலாம். நாம நிறைய வச்சுக்கலாம்.."என்று சொல்லி என்னை சமாதானம் செய்தது குழந்தை.

"என்னடி நீலு போலாமா "என்றேன் கண்ணடித்து.

"எனக்கொன்னும் வேண்டாம் போ. எனக்கு எங்கப்பா வாங்கி தருவாரு. அங்க போய் எல்லாத்தையும் நீயும் உன் பொண்ணும் வச்சுக்குங்க."என்று என்னிடம் சிலுப்பியவள் அப்பாவை கட்டிக்கொண்டாள்.அழுகை வெகுவாய் குறைந்து விட்டிருந்தது.

"வேண்டாமாம் குட்டிமா. வா நாம போய் நம்ம அப்பா கிட்ட கேப்போம் "என்று சொல்லிவிட்டு அந்த அவரை என் சுவரை, பனைமர டவரைப் பார்த்தேன்.

அதென்னவோ கண்களில் அத்தனை லாவகத்தை கொட்டி மனுஷன் என் முகத்தை பார்க்காமலேயே தவிர்த்து வீடிருந்தார்.

'இந்த பாரா முகத்தையும் பேசா மொழியையும் வைத்துக்கொண்டு எப்படி வாழ்ந்து போவேனோ எல்லாம் முருகனுக்கு தான் வெளிச்சம்.'

அப்படியே மற்றவர்களுடமும் என்னை பெத்தவரிடமும் என் சின்னவளிடமும் மெல்ல விடை பெற்று காருக்குள் அமர்ந்து விட்டுருந்தோம்.

மலர் எனக்கும் விவேக்கிற்கும் நடுவில் அமர்ந்திருந்தாள். கார் கிளப்பிக் கொண்டு முன்னே செல்ல நான் பின்னே திரும்பி நீலாவையும் அப்பாவையும் பார்த்தேன். கண்டிப்பான என் அப்பாவின் கண்களில் கூட கண்ணீர் தடமிருந்தது. சின்னவள் அவரின் தோள் சாய்ந்து அழுத வண்ணமிருந்தாள்.

அவளுக்கு தோள் சாயா அப்பா இருந்தார். எனக்கு?. விவேக்கை திரும்பி பார்த்தேன். அவரோ வெளியே பார்த்திருந்தார். அவர் மடியில் இருந்த கைகளை பார்த்தேன். கொஞ்சம் அனுசரணையாய் பிடித்துக் கொண்டிருந்தாலாவது நன்றாக இருக்குமே "

அந்த இறுகி கிடந்த கைகளுக்குள் காற்றுக்கே இடமில்லை எனம் போது என் கைகளுக்கு மட்டும் கிடைத்திடுமா.

அன்பாய் என்னை அரவணைத்துக் கொள்ள ஒரு தோள் கூட இனிமேல் கிடைக்காதா.

ஏக்கம் ஒரு மாயநிலை. என்னை அதன் சுழலுக்குள் இழுத்துக் கொள்வதை நிறைய நேரம் உணர்ந்தும் அமிழ்ந்தும் போயிருக்கிறேன்.அப்போதெல்லாம் ஒரே ஒரே நம்பிக்கை இருந்தது. எப்படியும் கணவன் என்ற ஒன்றை கயிறு கட்டியேனும் என்னோடு கட்டி வைத்துவிடும் விதி. அவன் பாசம் நேசம் பொழிந்திடுவான்.

கண்ணீரை இமைகளுக்குள் நிறுத்திடுவான். புன்னகையில் பூக்கள் பூக்கச் செய்திடுவான். அவன் கை வளைவில் என்னை அவன் கூட்டுக்குள் பொத்தி வைத்திடுவான் என்று.

கனவு கலைந்து கலைந்து கலைத்தே போய்விடும் நிலையில் சிறை மீண்ட சிறு கண்ணீர் துளி என் கன்னத்தை கைப்பற்றியிருந்தது.

சட்டென எழுந்த அவசரத்தில் பாய்ந்து துடைத்துக் கொண்டேன்.

"ச்சே! இதென்ன துடைக்க துடைக்க துளிர்க்கும் ரத்தம் போல் வந்துகொண்டே இருக்கிறது. கண்ணுக்குள்ளேயே உறைந்து தொலையேன். அவன் பார்த்துவிடப் போகிறான்."

துடைத்து சலித்து இறுதியில் கண்ணை இறுக மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டேன். சிறிது நேரத்திலேயே மலர் என் மடிமீதே படுத்து உறங்கியிருந்தாள். அவள் தலையை கோதி என் மனதில் அமைதி கொண்டுவிட்டேன்.

இவளுக்காய் தானே இந்த திருமணத்தை மனதோடு ஏற்றது. பிறகெதற்கு இந்த கண்ணீரும் கம்பலையும்.

மனதை தேற்றி முடித்திருந்த நேரம் என் வலது காலை வைக்க வேண்டிய வீடும் வந்திருந்தது.

வயல் பரப்பின் நடுவில் வண்டிப் பாதையில் நின்றுந்த காரின் மறு பக்கத்தில் இருந்தது வீடு.என் மடியில் இருந்து குழந்தையை அவன்(அவர்!) தூக்கிக் கொண்டான். 'மரியாதையாவது மண்ணாவது'

என் மடியை தொட்டு உரசி சென்ற கைகளினால் அவன் முகத்தில் யாதொரு சலனமும் இல்லை. எனக்கும் தான். அப்பிடி தான் நானும் சொல்லிக் கொண்டேன்.

மூவரும் இறங்கி நின்றோம். ஆலம் சுற்றி ஆரத்தி கரைத்து உள்ளே அழைத்துச் சென்றனர். வலது காலில் நெற்படி எட்டித் தள்ளி அவனின் வீட்டிற்குள் நுழைந்தேன் இரண்டாம் மனைவியாய் நான்.

உள்ளே சென்றதும் அவன் மலரை தூக்கிக் கொண்டு உள் அறைக்குள் நுழைந்து விட என்னையும் அழைத்து சென்று மாலைகளை கழட்டி அலங்காரத்தை பிரித்தனர். அவனும் மாலையை கழட்டி ஒரு ஆணியில் மாட்டியிருக்க அதனோடே என்னுடையதையும் மாட்டி விட்டனர்.

குழந்தை கட்டிலில் உறங்கியிருந்தாள். விவேக் அவன் துணிகளை எடுத்துக்கொண்டு நான் உள்ளே வரும்போதே வெளியே சென்றிருந்தான். நான் அறைக்குள்ளேயே இருந்த குளியலறைக்குள் நுழைந்தேன்.

மாலை மயங்கி மஞ்சள் அழகன் மறைந்திடும் வேளையில் மெல்லமாய் ஆரம்பித்தது மழை. உறவு மக்கள் எல்லாம் ஓரளவு விடை பெற்றிருக்க, மலரின் அம்மாச்சி அப்புச்சியும் அதாவது தேவியின் அம்மா அப்பாவும் மட்டுமே மேலதிகமாய் இருந்தனர்.

எங்கள் அறையில் நான் ஜன்னலோரத்தில் மழையை வேடிக்கை பார்த்திருக்க மலர் இன்னமும் தூங்கிக் கொண்டு தான் இருந்தாள்.

மின் விசிறியின் சத்தமும் மழையின் சத்தமும் ஹோவென நெஞ்சை ஒரு சேர நனைத்தது. ஜன்னல் கம்பிகளை தொட்டு பார்த்தேன் ஜில்லேன இருந்தது. கண்ணாடி ஜன்னல் கதவில் படிந்திருந்த பனிமூட்டத்தில் ஆட்காட்டி விரல் கொண்டு கிறுக்கினேன்.

விவேக் வேணி என்று தன்னைப்போல் கிறுக்கியிருந்தது விரல். யாரோ வரும் அரவம் கேட்கவும் திரும்பி பார்த்தேன்.

தேவியின் அம்மா தான் வந்தார். "ஏன்டாமா தனியா உக்காந்துருக்க. வெளிய வரலாம்ல."என்றவரே விரிந்திருந்த என் முடியில் விரல் கோர்த்து உலர வைக்க ஆரம்பித்தார்.

"வரேன் பெரியம்மா.."என்றேன் அவரை பார்த்து.

"அம்மா சொல்லுடா கண்ணு. என் பேத்தியோட அம்மா எனக்கு பொண்ணு தானே "என்றாரே அதில் இவர் மேல் நான் கொண்ட பிம்பம் உடைந்து போனது.

தன் மகளின் இடத்தில் என்னை வைக்கும் உள்ளம் அழகானது, தன்னலமற்ற தாய்ப்பாசம் கொண்டது என்றே தோன்றியது.நான் கொடுத்து வைத்தவள் என்று நினைத்துக் கொண்டேன்.

"சரிங்கம்மா "என்று புன்னகைத்தேன்.

"உன் முடி ரொம்ப நைசா இருக்கு அம்சா. நான் பின்னி விடட்டுமா "

தொண்டையில் சின்னதாய் ஒரு வலி. உள்ளிருந்து வந்த கேவலை அடக்கியதால் இருக்கலாம்.சற்று தெளிந்து 'எனக்கு கூட தலை பின்னிவிட ஒரு உறவு 'என்ற மகிழ்ச்சியில் மனது பூ போல மென்மையாய் மலர்ந்து போனது. சரியென தலையாட்டி அவருக்கு வாகாய் அமர்ந்து கொள்ளவும் வாரி விட ஆரம்பித்தார்.

சிலர் தலை வாரி விடும் போது தான் நமக்கு வலிக்கவே செய்யாதாம். மென்மையாய் ஒரு இறகினை வருடும் லாவகத்தில் சிக்கெடுத்து பின்னலிட்டு கொத்து ஜாதி மல்லி சரத்தையும் வைத்து விட்டார்.கம்மென்ற மணம் என்னைச் சுற்றிலும்.

"எழுந்து சாப்பிட போ அம்சா. நான் பாப்பாவ எழுப்பிட்டு வரேன்."என்றவர் என்னை வெளியே அனுப்ப தயக்கமாய் வெளியே வந்தேன்.

ஹாலில் டிவியில் செய்தி ஓடிக்கொண்டிருந்தது. மாமாவும் தேவியின் அப்பாவும் இருந்தனர். அத்தை சமையல் அறையில் இருந்தார். நான் அவரிடம் சென்றேன். என்னைப் பார்த்தவர் "வெளிய காத்தாட உக்காரும்மா. எல்லா வேலையும் முடிஞ்சுது."என்று என்னிடம் சொன்னவர், "ஏங்க அந்த பந்திப் பாய எடுத்து விரிங்க " என்று என் மாமனாரிடம் வேலை வாங்கியிருந்தார்.

அவர் அதை எடுத்து விரிக்கவும் எனக்கு சும்மா இருக்க பொறுக்காமல் அவருக்கு உதவி செய்ய சென்றேன்.அவர் விரித்த பாயை நான் நேர் செய்ய முயல,

"அட பாப்பா இரு நா விரிச்சுக்கறேன். நீ மாடிக்கு போய் விவேக்க கூட்டிட்டு வா. குடை வெளிய வாசல்ல இருக்கு எடுத்துக்கோ."என்று சொல்லவும் நான் வெளியே சென்றேன்.

மழை இன்னும் பெய்து கொண்டு தான் இருந்தது. வெளியே வாசல் படியின் அருகில் இருந்த குடையை எடுத்துக்கொண்டு மேலே ஏறினேன். கைப்பிடி சுவற்றில் விழுந்த மழை நீர் கொஞ்சம் என் மேலும் பட்டது.

மாடியில் ஒரு அறையும் முன்புறம் கொஞ்சம் கலர் கூலிங் ஓடும் போட்டு இருந்தது. மாடியின் இன்னொரு மூலையில் கீழிருந்து வளர்ந்த ராம கோணம் பூச்செடி மாடி வரைக்கும் கிளை விரித்து பூத்திருந்தது.

தழைய கட்டியிருந்த புடவை நனைந்து விடாமல் இருக்க சற்று தூக்கி இருந்தேன். அப்படியே வீட்டை சுற்றி பார்க்க, மின்னல் வெளிச்சத்தில் சுற்றிலும் மஞ்சள் வயல்கள் விரிந்து கிடந்தததை பார்க்க முடிந்தது . ஆங்காங்கு சில வீடுகளில் வெளிச்சம் தெரிந்தது. மழையின் சாரல் அறையின் முன் வரை அடிக்கவும் நான் கதவிடம் சென்ற பின்னரே குடையை மடக்கினேன்.

வெளிச்சம் கசிந்த அறையை எட்டிப் பார்த்தேன் . வெறும் கயிற்றுக் கட்டிலில் தூங்கிப் போயிருந்தான் விவேக். முன்பிருந்த மர ஸ்டூலில் லேப்டாப் மூடிக் கிடந்தது. குடையை வெளியே ஓரமாய் வைத்து விட்டு கதவை தட்டினேன்.

நல்ல தூக்கம் போல். எழவே இல்லை. வேறு வழியின்று உள்ளே சென்றேன்.

"இப்போ என்ன செய்யறது. கூப்பிட்டு பார்க்கணுமா. என்னனு கூப்பிட. அச்சோ இவன் பேசாம நாம பேச கூடாதுங்கற என்னோட கொள்கை என்னாகறது.எப்பயும் போல படத்தில் வர மாதிரி இருமி வைப்போம் "

"ம்க்கும் ம்க்கும் "கொஞ்சம் சத்தமாகவே இருமினேன்.

திகைத்து விழித்தவன் என்னை பார்த்ததும் சட்டென எழுந்து கொண்டான். அவன் எழுந்த வேகத்தில் நான் சற்று பின்னடைந்து போனேன்.

"ஒருவேளை மேக்கப் அதிகமா இருக்கோ. பேய்னு நினைச்சுட்டானோ?"என் மனம் எனக்கே கவுண்டர் குடுத்தது.

"என்ன வேணும்?"நேராய் கேட்டான் எனைப் பார்த்து.

"அத்தை சாப்பிட வர சொன்னாங்க."என்றேன் அவன் சட்டையின் இரண்டாவது பட்டனை பார்த்து. என் வளர்த்திக்கு அது தான் தெரிந்தது. அதோடு அவன் கண்ணை பார்த்துலாம் பேச முடியாது. முறைக்குறான். ப்லெடி ஃபெல்லோ. மனதுக்குள் நினைத்தப்படியே உதட்டை சுழித்துக் கொண்டேன்.

"நீ போ வரேன் "என்றவன் மேலறையில் இருந்த அட்டாச்சுடு பாத்ரூமில் நுழைந்து கொண்டான்.

நான் அந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தேன். வேறு குடை இல்லை. வெளியே இன்னும் மழை பெய்து கொண்டு தான் இருந்தது.நான் முன்னே சென்றுவிட்டால் இவன் நனைய வேண்டி வருமே என்று நினைத்து இவனுக்காய் காத்திருந்தேன் வெளியில் வேடிக்கை பார்த்தவாறே. கையில் குடையை விரித்து ஆட்டிக்கொண்டு நின்றேன்.

"நீ இன்னும் போகலையா "என்ற அவனின் கேள்வியில் திரும்பி விவேக்கை பார்த்தேன்.

"இன்னொரு குடை இல்ல. அதான் வெயிட் பண்ணேன். வாங்க போலாம் "என்று அழைக்கவும்,

"இல்ல பரவாயில்ல போ. நான் வேகமா இறங்கி வந்துருவேன்."

"இல்ல வாங்க இதுலயே போலாம் "நான் ஒற்றைக் காலில் நிற்பது போல எனக்கு தோன்றியது.அவன் இன்னும் தயங்கியே நிற்க,

அவனை முறைத்து 'ரொம்பத் தான் பண்றான்'என்று எனக்குள் நொடித்து நான் திரும்பி நடக்க ஆரம்பிக்கவும் என்ன நினைத்தனோ "இரு நானும் வரேன் "என்று வந்து என்னுடன் இணைந்து கொண்டான்.

அவன் உயரத்திற்கு நான் குடை பிடிக்க தடுமாறவும் என் கையில் இருந்த குடையை வாங்கிக் கொண்டான். அப்படி அவன் செய்யும் போது திரும்பி அவன் முகத்தை ஏதேச்சயாய் பார்த்தேன்.

இருட்டில் விரிந்திருந்த கருவிழிகளுள் விழுந்த அவன் பிம்பம் ஏனோ என்னை ஈர்த்தது. பளிச்சிடும் மின்னல்களில் அவன் கண்கள் மின்னியது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட இந்த நெருக்கம் ஏகாந்த இரவின் இருதயத்தின் லயத்தை கூட்டியது.

அவன் செல்லவும் அவனோடு உரசிக் கொண்டு நடக்க உள் எழுந்த விதிர்ப்பில் நான் இருக்கைகளையும் இறுக்கிக் கொண்டேன்.

படிகளில் அவனை இன்னுமாய் நெருங்கி நடக்கவும் தவித்துப் போனேன் நான்.

'அவன் சொல்லும் போதே போயிருக்க வேண்டும். இதற்குமேல் முடியாது 'என்று நினைத்து அவனை விட்டு விலகி வேகமாய் கீழிறங்கி வந்துவிட்டேன்.பெரிதாய் தப்பித்து விட்ட எண்ணம்.

விவேக் கீழே வந்ததும் அனைவரும் சாப்பிட்டு முடித்து படுக்க தயாராகினர். மலரும் அவள் அம்மாச்சியும் ஒரு அறைக்குள் சென்றுவிட, என் அத்தை அவருக்கும் மாமாவிற்கும் வாசலில் கட்டில் விரித்து விட்டு என்னிடம் வந்தார்.

"சாமி கும்புட்டு தின்னூறு வஞ்சுட்டு போ ம்மா.அப்பிடியே வெளிய லைட்டு எல்லாத்தையும் அணைச்சுடு "என்று விட்டு படுக்க சென்று விட்டார்.

நான் எல்லா விளக்கையும் அணைத்து விட்டு அப்பிடியே ஹாலில் நின்றிருந்தேன்.

மூச்சு தடுமாறும் வேளைகளில் எண்ணங்களும் தடுமாறுமோ!

இணக்கங்கள் ஏதுமின்றி இணைவுகள் சாத்தியமா? மனம் ஏற்குமா? கூசிப்போகுமே மனமும் உடலும்.

செல்ஃபில் இருந்த கடவுளை கும்பிட்டு அத்தை சொன்னது போலேயே திருநீறு பூசிக்கொண்டு எங்கள் அறைக்குச் சென்றேன்.

கட்டிலில் அவனைக் காணவில்லை. எட்டிப் பார்த்தேன். மறுபுறம் வெறும் தரையில் தலையணை மட்டும் வைத்து படுத்திருந்தான்.

நெஞ்சுக்குள் சட்டென ஒரு ஆசுவாசம். ஆனாலும்!!! ம்ம்ம் எங்கோ மூலையில் கொஞ்சமாய் வலிக்கிறதே. கொஞ்சமாய் தானா????

கூடல் தான் அதிகப்படி. சிறு எண்ணப் பகிர்தல் அத்தியாவசியம் ஆயிர்றே.

கதவை தாழிட்டு விளக்கை அமர்த்திவிட்டு ஜன்னல் ஓர சாய்வு நாற்காலியில் என்னை சுருட்டி அமர்ந்து கொண்டேன்.

ஜன்னலின் நீர் திவலைகள் சொட்டு சொட்டாய் கீழிறங்க நான் எழுதி வைத்திருந்த பெயர்கள் மறைந்து போயிருந்தது.

பெயரளவு கல்யாணத்தின்
மிச்ச மீதி
தோற்றுப் போன என் ஆசைகள்.






 

Rajeshwari Karuppaiya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
MM-4


பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ!
சிவந்த கன்னங்கள் ரோஜாப்பூ!
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ!
சிரிப்பு மல்லிகைப்பூ!


பாடலும் இசையும் மனதை வருடும் பொழுதெல்லாம் நம்மையும் அறியாமல் இனிய உணர்வொன்று நம் மனதில் ராஜாங்கம் கொண்டுவிடும்.

வெளியே ஒலிப்பெருக்கியில் ஊரையே ஆண்டு கொண்டிருந்த இசையோ பாடலோ என் மனதில் நுழைய வேண்டி பேராசை கொண்டிருந்தது போல் ஒவ்வொரு எழுத்தாக வார்த்தையாக வரியாக இதயங்களில் செருக ஆரம்பித்தது.

நிச்சயமாய் இவள் பெண்ணல்ல.மௌனமாய் மனதுக்குள் புகுந்து விளையாட துடிக்கும் மாய மோகினி. அடி முதல் நுனி வரை அப்படி என்ன தான் அளக்கிறாளோ தெரியவில்லை.

இவள் பக்கவாட்டு பார்வைக் கோணம் முழுதிலும் என் பிம்பத்தை மட்டுமே வாரிக் கொண்டிருக்கிறாள். இது எனக்கு பெரும் தவிப்பை தரும் என்பது கொஞ்சமாவது புரிகிறதா இவளுக்கு.

'இந்த நிலை உனக்கு பிடித்திருந்தால் ரசித்து தொலையேன். ஏன் புலம்பி தவிக்கிறாய் 'என்று என் மனம் மூலையில் முசுமுசுக்கிறது.

உண்மை தான்.ரசிக்கலாம் தான். இப்படியாகப்பட்ட நிலையில் முதல் முறை இருந்த போது ரசித்த என்னால் இப்பொழுது ரசிப்பதும் தவிப்பதும் பெரும் தவறென்றே தோணுகிறதே.

அம்சவேணி என்னை பார்ப்பது தெரிந்தும் நான் அவள் புறம் திரும்பாமல் கையில் இருந்த செண்டையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஓரளவுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் அவள் புறம் தலை சாய்த்தேன்.

"ஏன் இப்படி பார்த்து வைக்கிறாய்? என்ன வேண்டும் உனக்கு?"என்று கேட்க நினைத்தேன். கேள்வி என் வாயை அடையும் முன் பாலை குடுத்து விட்டார்கள் அவள் கையில்.மனம் திக்கென்றது.

'இப்படியாகப்பட்ட சம்பிரதாயத்தை எல்லாம் எவன் கண்டு பிடித்தது. அவனுக்கு கொண்டு போய் ஊட்டுங்கள் இந்தப் பாலையும் பழத்தையும் '

பிடிக்கவே செய்யாத ஒரு பொருளை பிடிக்கவும் நினைக்காத சூழலில் எப்படி சாப்பிட முடியும். நான் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே என் வாயில் வைத்து விட்டாள் டம்ளரை.

மூக்கை பிடித்து டாணிக்கை குடிக்கும் மன நிலையில் குடித்து விட்டேன். இந்த மிச்சத்தை அவள் வேறு குடித்தாக வேண்டும். அதை நான் ஊட்ட வேறு செய்யணும்.

ஆயிற்று ஊட்டி முடித்தாயிற்று. அந்த சடங்கையும் செய்தாயிற்று. ஆனால் அதை செய்யும் போது மிக நெருக்கமாக அவள் முகத்தை பார்க்க நேரிட்டதில் இதயத்தில் 'திம் திம் ' மத்தள சத்தம்.வெளியில் சலனமற்ற பாவம்.

அப்படியான ஒரு பாவத்தை நாள் முழுதும் முகத்தில் வைத்திருக்க நான் பட்ட பாடு எனக்கு மட்டுமே தெரியும். உணர்வுகளை வெளிக்காட்டா தோற்றத்திற்கு நிறைய மெனக்கெட்டேன்.

வரவேற்பில் புன்னகை முகமாய் அருகில் நின்றவளை ஸ்பரிசிக்கும் பொழுதுகளில் ஒற்றை வார்த்தையாவது பேசிவிடு என்று துடிக்கும் மனதினை அடக்கும் போதெல்லாம் 'நிச்சயமாய் இந்த பெண்ணுக்கு அநீதி செய்கிறாய் ஆனந்த் நீ 'என்று மனசாட்சி குத்தியெடுக்கிறது.

என் எண்ணங்களுக்கும் மனசாட்சிக்கும் நடுவில் போராடியே கலைத்து போனேன்.

வரவேற்பும் மற்ற வேலைகளும் முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அம்சவேணியைப் பார்த்தேன். அவள் முகம், அவள் கண்கள், அவள் உடல் மொழி ஏன் இத்தனையாய் கசங்கி போகிறது?

ஆனால் அதை துளியும் வெளிக் காட்டாமல் வம்பிலுக்கும் தோரணையில் நீலாவிடம் விடை பெரும் போது 'அழுகை வந்தால் அழுது தொலையேன். ஏன் இப்படி உள்ளுக்குள் அடைத்து வைக்கிறாய்?' என்று எனக்கு கோவம் வந்தது.

இதோ இப்பொழுது கூட விழியில் மின்னும் பளபளப்பை மறைத்து கண்ணை சுழற்றி என்னை பார்த்தாளே ஒரு பார்வை. அதை எப்படி எதிர்கொள்வேன்.

'அம்சா!' என்று ஆழ்ந்து அழைத்து அவளையும் மலரையும் என் கை வளைவிற்குள் கொண்டு வராமல் வெறும் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு ஒரு குற்றவாளி போல் நிற்கும் நான் எப்படி அவளை பார்ப்பேன்.

அம்சா விடைபெற்ற பின் காரில் ஏறி அமர்ந்தோம். ஜன்னலில் பற்றியிருந்த அவள் கையை பார்த்தேன். பற்றிக்கொள்ள வேண்டும் போல் தோணியது. அவளைப் பார்த்தேன். பின்னால் அவள் வீட்டை பார்ப்பாள் என்று தோன்றியது.

பாதியளவு நீண்ட என் கையை பார்த்தேன் . 'அவள் எதாவது தவறாக நினைத்து விட்டால்?' என்று மனதில் தோன்றியதும் நீண்ட கைகள் நடுங்கியது.சட்டென இறக்கி கொண்டேன் கையை. இரு கையையும் இறுக பிடித்து மடியில் வைத்துக் கொண்டேன். என்னையும் மீறி நீண்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயம்.

அம்சா காருக்குள் பார்வையை திருப்பிய நொடி வெளியில் பார்த்திருந்தேன். வீடு வரும் வரையிலுமே அவள் புறம் திரும்பவில்லை.ஆரத்தி முடிந்து மலரை படுக்க வைத்து நானும் குளிக்கவென குளியல் அறைக்குள் நுழைந்தவன் ஆசுவாசமாய் மூச்சை இழுத்து விட்டேன்.

கண்களை மூடி ஷவரின் அடியில் நின்ற பொழுது மனம் மெல்ல கரையும் உணர்வை கொண்டேன். திண்டாட்டம் கொண்டிருக்கும் மனம் கொண்டாட்டம் கொள்ளும் வரையிலும் இந்த விலகல் எனக்கு அவசியம் என்று தான் தோன்றியது.

குளித்து முடித்து அம்மாவிடம் சொல்லிவிட்டு மொட்டை மாடியில் இருந்த அறைக்குள் லேப்டாப்பும் கையுமாய் அமர்ந்து விட்டேன். என்னுடைய படிப்பு சம்பந்தமான ஆய்வுக் கட்டூரையில் நான் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருந்தது.

வெளியே மேகம் தூரல் போட, அந்த குழுமையும், மழையின் சத்தமும் என்னை தட்டி தூங்க வைக்க போதுமானதாக அமையவே சற்றே கண்ணயர்ந்து விட்டேன்.

கருமை நிற அடர்ந்த வானவில்லின் கீழே துள்ளும் மீனாய் இரு கண்கள் காந்தமென என்னையே ஈர்க்கிறது. எச்சில் விழுங்கி அவஸ்தையாய் தவிர்க்கப் பார்க்கிறேன். அங்கும் இங்கும் அலை பாய்ந்து மீண்டும் அந்த மீன்களிடமே சரணடைந்தேன் நான்.

அந்த கருப்பு வானவில்லின் மீது என் கட்டைவிரல் மென்மையாய் பயணிக்கிறது. முடிவில் மீனின் அடர்ந்த வாலாய் இமை முடிகள் ஈரத்தில் ஒட்டி பட படக்கிறது. அந்த ஈரத்தை என் கன்னம் கொண்டு துடைக்க எண்ணி முகத்தை அருகில் கொண்டு செல்ல கண்களை என் கன்னம் தீண்டும் முன்னே முந்திரிக் கொட்டையாய் முன்னேறியிருந்தது என் அதரங்கள்.

சிலிர்த்து விழித்தேன் நான். 'நல்ல வேளை கனவு' என்று நினைத்துக்கொண்டே திரும்ப எதிரில் அம்சா நின்றிருந்தாள். அந்த நேரத்தில் அவளைக் கண்டதும் எழுந்து நின்றுவிட்டேன்.அவள் கண்களை பார்த்தேன் ஈரமில்லாமல் படபடத்தது. எனக்கோ உள்ளுக்குள் குழைந்தது. 'அடேய் மடையா எதாவது பேசித் தொலை'.

"என்ன வேணும்"சாதாரண கேள்வி தான். ஆனால் இதை என் வாயில் இருந்து தள்ளி விடுவதற்குள் பத்து விக்ஸ் மிட்டாயாவது சாப்பிட்டுருக்க வேண்டும். தொண்டையில் அப்படி ஒரு கிச் கிச். பின்னே கண்ட கனவு அப்படி.

அம்மா என்னை சாப்பிட வரச்சொன்னதாக அவள் இயல்பாய் பதில் அளித்து விட்டாள். நான் தான் அவள் கண்ணையே அதன் இமைகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். மேலன்னம் வேறு வேர்க்கிறது.அவள் என் முகத்தையே பார்க்கவில்லை.

நல்லவேளை பார்க்கவில்லை. பார்த்திருந்தால் என் விழுங்கும் பார்வைக்கு நிச்சயம் ஒரு முறைப்பு கிடைத்திருக்கும்.

"நீ போ வரேன் "என்றுவிட்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டேன். குளிர்ந்த நீரை முகத்தில் சுள்ளென அடித்துக் கொண்டே 'நிதானமா இரு ஆனந்த்' எனக்கே நான் சொல்லிக்கொண்டேன்.

முகத்தை துடைத்து விட்டு வெளியே வரும்பொழுது அம்சவேணி அங்கு இல்லை. போ என்றதும் உடனே போய் விடறதா? எனக்குள் சின்னதாய் ஒரு ஏமாற்றம் குமிழ் விட்டது.

'அவளுக்கு ஏற்றதாய் ஒரு துரும்பைக் கூட நீ அசைக்காத பட்சத்தில் உன்னுடைய எதிர்பார்ப்பில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை ஆனந்த்'

என் மனமே இத்தனை நியாயமாய் கேட்கும் பொழுது நானும் ஏற்கத்தானே வேண்டும். ஒரு பெருமூச்சுடன் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தேன்.

சுவரில் சாய்ந்து நீல மயிலென நின்றிருந்தவளை இமை கொட்டாமல் பார்த்தேன். வெளியே பெய்து கொண்டிருந்த மழையைவிட இந்த பெண்ணின் செயல் அத்தனை இதமாய் என்னை நனைத்துப் போயிருந்தது.

புடவை முந்தியையும் கொசுவத்தையும் ஒரு சேர தூக்கிப் பிடித்தபடி குடையை ஆட்டி ஆட்டி விளையாடுகையில் கையிலிருக்கும் குடையாய் மாறிப்போனது என் இதயம்.

ப்பா! மழையும் இவளும் நம்மை நொடியில் மலர வைப்பதில் கில்லாடிகள் என்று நினைத்துக்கொண்டேன்.

" நீ இன்னும் போகலையா?" என்று நான் கேட்டதும் என்னை திரும்பிப்பார்த்தாள்.

"இன்னொரு குடை இல்ல. அதான் வெயிட் பண்ணேன். வாங்க போலாம்" என்று அவள் சொல்லவும்,

"இல்ல பரவாயில்ல போ. நான் வேகமா இறங்கி வந்துருவேன்." என்று சட்டென சொல்லியிருந்தேன்.

"இல்ல வாங்க இதுலயே போலாம்'' என்ற அவள் பதிலில் இந்தப் பெண்ணுக்கு சற்று பிடிவாதம் அதிகம் என்றே தோன்றியது. ஒரே குடையில் ஒன்றாக செல்ல இன்னமும் என் மனம் தயங்கிக்கொண்டிருந்த வேளையில் அவள் என்னை முறைத்து விட்டு நடக்க ஆரம்பித்தாள்.

அவளின் பொறுமையை நிறைய சோதிக்கிறோமோ என்று தோன்றவும்' நானும் வருகிறேன்' என்றவாரு அவளுடன் இணைந்து கொண்டேன்.என் தோளுக்கும் கீழான உயரத்தில் இருந்தவள் எனக்கும் சேர்த்து குடை பிடிக்க சற்று சிரமப்படுவதை கண்டதும் அவள் கையிலிருந்த குடையை நான் வாங்கிக்கொண்டேன்.

'தேவியை விட இவள் குட்டை' சட்டென மனதில் தோன்றிய ஒப்பீட்டில் என் கைகள் இறுகியது. இந்த எண்ணம் எப்பொழுது விட்டொழியுமோ அப்போதுதான் அம்சவேணியை முழுமனதோடு ஏற்க முடியும் என்றே தோன்றியது.

தெரிந்தோ தெரியாமலோ கூட அம்சவேணியை காயப்படுத்தி விடக் கூடாது என்று முடிவெடுத்தேன். ஆனால் எனக்கே தெரியாமல் என்னால் காயப்பட்டுப் போவாள் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

என் மனதுடன் நான் போராடிக்கொண்டிருக்கும் போதே அம்சவேணி என்னை விட்டு வேகமாய் இறங்கிப் போயிருந்தாள். குடையை வெளியே வைத்து உள்ளே வந்தேன். மலருக்கு ஊட்டிவிட்டுக்கொண்டிருந்த என் அத்தை சீதாவைப் பார்த்தேன்.

மனதிற்குள் ஒரு சங்கட உணர்வு எழுவதை தடுக்க முடியவில்லை. அமைதியாக சாப்பிட்டு முடித்துவிட்டு எங்கள் அறைக்குள் நுழைந்தேன். மேஜையின் ஓரத்தில் இருந்த பழத்தட்டு என்னைப் பார்த்து சிரித்தது.

திருமணத்திற்கு தேதி குறிக்கும்போதே இதற்கும் சேர்த்து குறித்து தந்துவிடுகின்றனர். என் மனநிலை பற்றி அவனுக்கென்ன கவலை என்று எண்ணிக் கொண்டே தரையில் தலையணையை போட்டு படுத்து விட்டேன்.

வெளியே மழை கொட்டித் தீர்த்து அமைதியாகியிருந்தது. என் மனதிற்க்குள்ளோ இடியும் மின்னலும் ஆரம்பம் ஆனது. சற்று.நேரத்தில் அம்சவேணியின் வரவை உணர்த்தும் விழி திறக்கவில்லை. எனக்குள் நான் போட்டுக்கொண்ட பூட்டுகளுடனே உறங்கியும் போனேன்.

மிகவும் இறுக்கத்துடன் தூங்கியதாலேயே ஒரே நிலையிலேயே இருந்திருப்பேன் போல. இரவின் இடையில் எழும்போது கை விருத்துப் போயிருந்தது. எழுந்து அமர்ந்து கையை உதரும் போதுதான் அம்சவேணியைப் பார்த்தேன். சேரில் அமர்ந்த வாக்கிலேயே உறங்கிப் போயிருந்தாள்.

மணியைப் பார்த்தேன் இரண்டாகியிருந்தது. 'இவ்வளவு நேரம் இதிலேயே தூங்கிவிட்டாளா?' எழுந்து அவளிடம் சென்றேன். எழுப்ப நினைத்தால் நன்றாக தூங்கிக்கொண்டிருப்பவளை எழுப்பி விட மனது வரவில்லை. அப்படியே விடவும் மனதில்லை.

அவள் எழுந்துவிடாதவாறு மெல்ல தூக்கி படுக்கையில் படுக்க வைத்துவிட்டு நான் கீழே வந்து படுத்துக்கொண்டேன். மழைத்தூறல் இங்கொன்றும் அங்கொன்றுமாய் இதயத்தில் இடறிவிழ ஆரம்பித்தது.


 

Rajeshwari Karuppaiya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
MM-5

இடைவிடாத 'கீச்.. கீச்' என்ற பறவைகளின் சத்தத்தில் கண்விழித்தேன் நான். கையை காலை நீட்டி நெளித்து புரண்டு படுக்கும்போது தான் புத்தியில் உறைக்க திடுக்கிட்டு எழுந்தேன். கண்களை கசக்கி சுற்றும் முற்றும் பார்க்க, நான் முன்னிரவு தூங்கிப் போயிருந்த நாற்காலி ஓரமாய் ஆநாதையாய் கிடந்தது.

''அய்யோடா ! நான் எப்படி பெட்டுல வந்து படுத்தேன். ஒருவேளை தூக்கத்துல நடந்து வந்திருப்பேனோ? ஆனா இதுவரைக்கும் இப்படி நடந்தது இல்லையே."என் மனதில் குழப்பங்கள் இழையோட சட்டென மூண்ட சந்தேகத்தில் கொஞ்சம் எட்டி கீழே பார்த்தேன்.

நீண்ட காலை கொஞ்சம் அகல விரித்து அமைதியாய் தூங்கிக்கொண்டிருந்த விவேக்கின் மீது என்பார்வை சந்தேகமாய் பதிந்தது.

'ஒருவேளை கதைகள்ல வர மாதிரி தூக்கத்திலேயே என்னை தூக்கிட்டு வந்திருப்பாரோ.' என்று யோசித்தவாரே விடிவிளக்கின் வெளிச்சத்தில் அவர் முகம் பார்த்தேன்.

'ச்ச எப்படிப் பார்த்தாலும் கதைகள்ல வர ரொமான்ஸ் ஹீரோவுக்கு உரிய பத்து பொருத்தங்கள்ல பத்தும் மிஸ்ஸாகுதே! இவர் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார். நான் தான் தூக்கக் கலக்கத்துல இங்க வந்து படுத்துருப்பேன் போல.' என்று யோசித்துக்கொண்டே மணியைப் பார்க்க அது அதிகாலை ஐந்து மணியைக் காட்டியது.

'இனி தூங்க முடியாது. எழுந்து வெளியவாவது போவோம்' என்று எழுந்து குளியல் அறைக்குள் நுழைந்து ஐந்து நிமிடத்தில் வெளியே வந்து விட்டு கதவைத் திறந்து வெளியே சென்றேன்.

வரவேற்பரைக்கு செல்லும் முன்னே என் மூக்கைத் துளைத்த ப்ரூ கஃபியின் மணத்தில் ஆழ்ந்து மூச்செடுத்து 'இந்த வாசனைக்கு என் உயிரையே தரலாமே' என்று முனுமுனுத்துக் கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தேன்.

அத்தை வசந்தி தான் நின்றிருந்தார். என்னைப் பார்த்து புன்னகைத்தவர் "வா அம்சா நேரமேவே எழுந்திட்டயா? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமில்லையா"

"சட்டுனு முழிப்பு வந்திடுச்சு அத்தை. இனி தூக்கம் வராது. அதான் எழுந்து வந்துட்டேன்."

"உங்க வீட்டுல நேரமே எழுந்து வேலை செஞ்ச பழக்கம். அதான் அந்த நேரம் வரவும் முழிப்பு வந்துடுச்சு போல." என்று சொல்லவும் சின்னதாய் சிரித்து வைத்தேன்.

நான் தூக்கத்தில் கோல்டு மெடல் என்று இவருக்கு தெரியாதில்லையா !

"சரி இந்தா அம்சா ! இந்த காபியை குடிச்சுட்டு போய் குளிச்சுட்டு வந்து விளக்கேத்தி வைம்மா"

"சரிங்கத்தை" என்று பதிலளித்துவிட்டு காபி டம்ளருடன் வெளிவாசல் வந்தேன். மழையினால் மண்கள் ஈரத்துடன் உறவாடி ஒட்டிக்கிடக்க வெறும் காலில் அந்த ஈர மணலில் காபியை குடித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன். வெளிவராண்டா சுவரோரம் இருந்த முல்லைப் பந்தலில் மலர்ந்திருந்த பூக்கள் காபியின் மணத்தை கிழித்துக்கொண்டு என் நாசியை தழுவியது.

வீட்டை ஒரு சுற்று சுற்றி முடிக்கையில் டம்ளர் காலியாகியிருந்தது. பதிலாக புத்துணர்வு என்னுள் நிரம்பி விட்டிருந்தது.

மனம்தனை மந்திர வசப்படுத்தி பரவசம் கொள்ள வைப்பதில் இந்த காலை நேரத்திற்கு பெரும் பங்குண்டு இல்லையா..

டம்ளரை கழுவி வைத்து விட்டு எங்கள் அறைக்குள் நுழைந்தேன்.உள்ளே அறை காலியாக இருந்தது. தலையணை கட்டிலின் மீது வைக்கப்பட்டிருந்தது.

'ஒ! எழுந்துட்டார் போல' என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே குளியலறை கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார் விவேகானந்தன்.

ஒரு கணம் அவர் முகத்தில் என் பார்வை படிந்தது. அவரும் என்னைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார். மறுகணமே அவர் மீதிருந்த பார்வையைத் திருப்பியவள் என் துணிகளை எடுக்க ஆரம்பித்தேன்.

விவேக் அறையைவிட்டு சென்றிருந்தார். செல்ஃபில் இருந்த என் துணிகளை எடுத்துக் கொண்டிருந்த நான் அப்படியே தரையில் சம்மணமிட்டு அமர்ந்துவிட்டேன்.

ஒரளவு தெரிந்தவர்களை கூட எங்கேனும் முகத்திற்கு நேராய் பார்க்க நேர்ந்தால் குறைந்தபட்சம் சிறு புன்னகையாவது அளித்து விட்டுதான் நகருவோம். அப்படியிருக்க கணவன் மனைவி என்ற பந்தத்தில் இருக்கும் எங்களுக்குள் அந்தக் குறைந்தபட்ச எதிர்வினைகள் கூட இல்லாமல் போய் விட்டதே!

'அவருக்குத்தான் ஆயிரம் சங்கடங்கள். உனக்கென்ன வந்தது, எதையும் முதலில் அவர்களிடமிருந்து எதிர்பார்க்காமல் நாமே ஒரெட்டு முன்னாடி வைத்துத்தான் பார்ப்போமே! அப்பொழுதும் முகத்தை திருப்பிக்கொண்டு போக முடியுதா என்று பார்க்க வேண்டும். '

அதற்கென்று பார்க்கும் இடமெல்லாம் பல்லைக்காட்டித் தொலையாதே அம்சா. பிறகு பைத்தியம் என்று நினைத்துக் கொள்வார். ' என்று என்னை நானே எச்சரிக்கை செய்து கொண்டே குளிக்கச் சென்றேன்.

குளித்து முடித்து விளக்கேற்றி விட்டு அத்தைக்கு உதவி செய்யவென சமயலறைக்குள் நுழைய சீதாம்மாவும் அத்தையும் தாங்களே பார்த்துக்கொள்வதாக சொல்லி என்னை வெளியே அனுப்பி விட்டனர்.

மலரின் அறைக்குள் எட்டிப் பார்த்தேன். நல்ல தூக்கத்தில் இருந்தாள் குழந்தை. சத்தமின்றி கதவை சாத்திவிட்டு வெளியில் வந்தேன்.

''அத்தை சும்மா எவ்ளோ நேரம் இருக்குறது. எதாச்சும் வேலை சொல்லுங்களேன் செய்யுறேன்." என்றேன் சமயலறை வாயிலில் நின்றுகொண்டே.

" அதான் நாங்க ரெண்டு பேரும் இருக்கமேடாமா. வேலையொன்னும் பெரிசா இல்லடா. விவேக் தம்பி பக்கத்துல மஞ்சக்காட்டுல தான் இருக்கும். நீயும் ஓரெட்டு போய்ட்டு வாமா." என்று சீதாம்மா சொல்லவும் , சரி போய்த்தான் பார்ப்போமே என்று கிளம்பி விட்டேன்.

வாசலில் இறங்கி வெளி கேட்டை திறந்து வெளியில் வந்து பார்த்தால் வீட்டை சுற்றிலும் மஞ்சள் காடுகள் தாம். இதில் எங்களுடையது எது என்று கண்டுபிடித்து எப்படி நான் போவது? என்று நான் யோசித்துக்கொண்டிருக்க என் மாமா குருசாமியும் தேவியின் அப்பா சேகரும் வந்தனர். என்னைப் பார்த்த மாமா,

"என்னடா பாப்பா நம்ம தோட்டத்துக்கா புறப்பட்டு நிக்கிற?"

"ஆமாங் மாமா"

"தோ இப்படிக்கா போனா மூனாவது வரப்புல இருந்து உள்ள போனா பம்புசெட்டு வரும். அத சுத்தி பூரா நம்ம வயக்காடு தாண்டா. நேத்து மழ பேஞ்சதுல வரப்புல்லாம் ஈரமா இருக்கு. வழுக்கி விட்டுரும். பார்த்து சூதானமா போய்ட்டுவா பாப்பு"

"சரிங் மாமா"

"காபி தண்ணி குடிச்சியாகண்ணு " என்ற தேவியின் அப்பாவிடம்,

"குடிச்சுட்டேங்ப்பா. நீங்கப்பா?"

"ஆச்சு கண்ணு" என்று சொல்லும் போதே குரல் கரகரத்தது.

என்னுடைய அப்பா என்ற அழைப்பில் மனிதர் சற்றே உணர்ச்சிவசப்பட்டுவிட்டார் என்றே தோன்றியது.

"சரிங்ப்பா. நான் வயக்காட்டுக்கு போய்ட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு திரும்பி நடக்க துவங்கினேன்.

ஒற்றைப் பிள்ளையை பறிகொடுத்தவர்கள் வேதனை அவர்கள் ஆயிசு மட்டும் தொடரும். நான் நிச்சயம் தேவியின் இடத்தை நிரப்ப முடியாது. ஆனால் இன்னொரு மகளாக இருக்க முடியும் என்றே தோன்றியது.

இப்படி நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே இடைச்சொருகலாய் விவேக்கின் நியாபகம் வந்தது. அவருக்குமே நான் தேவியின் இடத்தை நிரப்ப வேண்டும் என்று நினைக்கவில்லை. அம்சவேணியாய் என்னை முழுதாய் அவர் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால் மட்டும் போதும்.

முதல் காதலே வாழ்நாள் முழுதும் நியாபகம் இருக்கும்பொழுது முதல் காதலியை மனைவியை மனம் எப்படி மறக்க முடியும். சாத்தியமில்லாத ஒன்றை என்னால் எதிர்பார்க்கவும் முடியாதே. ஆனாலும் எனக்கே எனக்கான அந்த நேசம் பங்கிடப்பட்டுக் கிடப்பதை மனம் இப்பொழுதும் கூட ஏற்க முடியாமல் தவிக்கிறது.

இந்த புத்தி இருக்கிறதே எப்பவும் அறிவுக் குழந்தையாய் இருக்கும். மனம் இருக்கே அது சரியான மட சாம்பிராணி போல் ஆயிரம் க் வைத்து அதனுள்ளே உழன்று கொண்டிருக்கும்.

இப்படி ஏதேதோ நினைத்துக்கொண்டு வரப்பில் நடந்த நான் கால் கொஞ்சம் வழுக்கியதில் தடுமாறி விழவும்,

'ஏ வேணி பார்த்து பார்த்து ' என்றவாறே விவேக் ஒடிவரவும் சரியாக இருந்தது.

"என்ன வேணி பார்த்து வரக்கூடாதா?" என்றவாரே என் கைபற்றி எழுப்பி நிறுத்தினார்.

உடையில் படிந்த சேரில் என்னை நானே குனிந்து பாவமாய் பார்த்துக் கொண்டேன்.

'இவ்ளோ நேரமே குளித்து கிளம்பி இங்க வந்தது இவர் பார்க்க விழுந்து வாரத்தானா?' மனம் சிணுங்கிக் கொண்டது.

"இப்படி உத்து பார்த்துட்டே இருந்தா சேறு போயிடுமா? வா வந்து அந்த தொட்டி தண்ணில சேரை துடைச்சுக்கோ" என்றழைக்கவும் அவர் பின்னே சென்றேன்.

'ஒரு வழியாய் மௌன விரதம் முடிவுக்கு வந்திருச்சு போல'

தலைகுனிந்து கொண்டே அவர் பின்சென்றவள் அவர் சட்டென நின்று என்புறம் திரும்பவும் அவர் மார்பில் மோதி நின்றேன். சட்டென இருவருமே ஒரடி பின்னடைந்து நின்றோம்.

'என்னவாம்! எதுக்கு இப்படி திடுதிப்புனு நின்னாரு?' என்று கேள்வியாய் நான் அவரை நோக்க,

"அடி ஏதும் பட்டுருக்கா?" என்றவர் பார்வை கணப் பொழுதில் ஆராய்ந்தது.இல்லையென நான் தலையாட்டிய பொழுதும் ஸ்கேனிங் பார்வையை என் மீது செலுத்திவிட்டே முன்னேறி நடக்க ஆரம்பித்தார்.

தண்ணீர்தொட்டி அருகில் வந்ததும் வயலை வேடிக்கை பார்க்கும் சாக்கில் அவர் திரும்பி நின்று கொள்ள நான் உடையை சுத்தம் செய்து கை கால் முகம் கழுவிக் கொண்டேன்.

நனைந்திருந்த துப்பட்டாவை பிழிந்து உதறவும், விவேக்கிடமிருந்து 'ப்ச்ச்' என்ற சத்தம். உதறிய நீர் அவர்மேல் பட்டிருக்க வேண்டும்.

"சாரி" என்றேன் மெதுவாக.

'ம்' என்றதோடு நின்றுவிட்டது அவரின் பேச்சு.

அவ்வளவு தான்! மீண்டும் எங்களிடம் இடைவெளியற்ற மெளனம். அவரை விடுத்து சுற்றிலும் என் பார்வையைத் திருப்பினேன். விளைந்து கிடந்த மஞ்சள் செடிகள் பசுமையை பாய் விரித்திருந்தது.

சால்வையை ஒற்றையாய் விட்டவாறு உள் நோக்கி வரப்புகளில் நடக்க ஆரம்பித்தேன்.

''பார்த்துப் போ" என்ற குரலில் திரும்பி விவேக்கைப் பார்த்தேன்.

என்னையும் அறியாமல் 'ம்க்கும்' என்ற ரேஞ்சில் வாயை சுழித்துக் கொண்டு திரும்பி நடந்தேன்.

"யாருக்கு வேணும் இவன் அக்கறை" மீண்டும் என்னிடம் மரியாதை மண்ணைக் கவ்வியிருந்தது.

சிறிது தூரம் நடந்ததும் வீட்டின் ஞாபகம் வந்தது. நீலு இன்னேரம் என்ன செய்து கொண்டிருப்பாள். வேலம்மா சமைத்து வைத்திருப்பார் தான். ஆனால் நீலு சாப்பிட நான் அருகில் இருக்க வேண்டுமே!

சின்னவளுக்கு எப்போதும் ஒரு பழக்கம்.அவளுக்கான சாப்பாட்டை தனி தட்டில் சாப்பிட மாட்டாள்.நான் சாப்பிடும் போது என் தட்டில்தான் அம்மணி சாப்பிடுவது. மற்றவர்களுக்கு அது சோம்பேறித்தனம் போல் தான் தெரியும் என்றாலும் என்னாலும் அவளாலும் மட்டுமே உணரமுடியும் அதில் பொதிந்த பாசத்தை.

அப்பா அதிகம் எங்களுடன் ஒட்டுவதே இல்லை. அதிலும் என்னிடம் கொஞ்சம் கம்மிதான். வளர்ந்த பிள்ளையென்ற எண்ணமாக இருக்கலாம்.

நானோ என் விருப்பு வெறுப்புகளை என்னோடு புதைத்துக் கொள்ளும் ரகம். ஆதரவுக்கு கூட யாரையும் நாடி விடாத குணம். நட்புக்களிடையே கூட மறைமுக எல்லையை கொண்ட பிறவி. என் அழுகை முகத்தை என் அம்மாவை தவிர யாரும் பார்க்க இயலா அரிதாரப் பிள்ளை.

என்னை தெரிந்தோ தெரியாமலோ அவளின் கூட்டுக்குள் வைத்திருந்தாள் நீலு. வம்புச் சண்டையிட்டே உயிர்ப்பித்த அன்னையவள். அவளுக்கு நான் அன்னையாய் எனக்கு அவள் அன்னையாய் இருந்து வந்தோம் என்று தான் சொல்ல வேண்டும்.

நேற்றை விட இன்று இந்த நொடி பிரிவின் வேதனை அதிகமாய் வலித்தது எனக்கு. வீட்டிற்கு போனதும் போன் செய்து பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

"வாணி" என்ற விவேக்கின் அழைப்பில் திரும்பிப் பார்த்தேன். சற்று தூரத்தில் நின்றிருந்தான் அவன். திரும்பி வந்த வழியே நடக்க ஆரம்பித்தேன் அவனை நோக்கி.

"எதுக்கு கூப்பிட்டீங்க?"

"வீட்டுக்கு போகலாம்"

"நீங்க முன்னாடி போங்க. நான் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன்."

"இல்ல! அப்பா போன் பண்ணாங்க. மலர் எழுந்ததும் உன்ன கேட்டு அழறாளாம்."

"உங்க போன்தாங்க"

"வீட்டுக்கு தான போகப்போறோம்."

"ப்ச்! அது வரைக்கும் குழந்தைய அழ விடறதா. குடுங்க போனை "

விவேக் அவன் அப்பாவிற்கு அழைத்து" அப்பா வாணி மலருகிட்ட பேசணும்னு சொன்னாங்க. "

"ங்க....வா! ரொம்பத் தான் மரியாதை" எனக்குள் முனுமுனுத்தேன்.

அவன் அலைபேசியை என்னிடம் நீட்ட வாங்கிக் கொண்டு முன்னால் நடந்தேன்.

"அம்முக்குட்டி எழுந்தாச்சா? மம் குடிச்சீங்களா? பிரஸ் பண்ணிங்களா?" பேசிக்கொண்டே வீடு நோக்கி நடந்தேன்.

போனில் கவனம் வைத்து நடந்ததில் இரண்டாம் முறையாய் வாரி விழும் சம்பவத்தில் இருந்து கைபற்றி காப்பாற்றினான் விவேக்.

என் மணிக்கட்டை அவன் கை இறுக்கமாய் பற்றியிருக்க அவன் முகமோ முறைப்பாய் என்னை நோக்கியே இருந்தது. அந்த அடர்ந்த புருவங்களுக்கு கீழே இருந்த கண்கள் தீனமாய் என்னை முறைத்ததில் லேசாய் சில்லிட்டது எனக்கு.

என் காதில இருந்த போனை வெடுக்கென பிடுங்கியவன் "குட்டிமா அம்மா வீட்டுக்கு வந்ததும் பேசுவீங்களாம்" என்று சொல்லிவிட்டு போனை கட் செய்திருந்தான்.

"என்ன கவனம் உனக்கு. பாதைல பார்வை வச்சு நடக்க மாட்டியா? எதிலும் அசால்ட்டு. இப்பயாச்சும் பார்த்துப்போ முன்னாடி" என்று சுள்ளென விழ அவன் கையை உதறிக் கொண்டு அப்படியே வரப்பில் அமர்ந்து விட்டேன்.

"நானொன்னும் வரல. நீங்க போங்க."என்றேன் கோவமாய்.

"ப்ச்..இதுக்குத் தான் வாயே தொறக்கறது இல்ல." அவன் முனகியது நன்றாக எனக்குக் கேட்டது.

"தொறக்க வேண்டாமே. எலக்ட்ரானிக் பூட்டு வாங்கி பூட்டி கூட வச்சுக்குங்க. யார் வேண்டாம்னா. இவ்ளோ நாள் ஒத்த வார்த்த கூட பேசாதவங்க இனியும் ஏன் பேசனுங்கறேன்." கொஞ்சம் சத்தமாகவே முனுமுனுத்தேன்.அவன் காதில் நன்றாய் விழுந்திருக்கும்.

சிறிது நேரம் அவனிடம் பேச்சே இல்லை. பிறகு" மலர் வெய்ட் பண்ணுவா. சீக்கிரம் வா" என்று சொல்லிவிட்டு அவன் செல்ல சிறிது இடைவெளி விட்டு நானும் அவன் பின்னே செல்ல ஆரம்பித்தேன்.

"மலருக்காகவே வாழ்க்கை முழுதும் இவன் பின்னயே செல்லும் நிலைதான் போல எனக்கு"

மெளனமாய் இடைவெளிகள்
மனதுக்கு பாரமாய் மௌனங்கள்
நிராசையாய் மனது
முடிவிலியாய் நிராசைகள்
அன்பு வேண்டும் முடிவிலியாய்
அவனின் அன்பே நிரந்தரமாய்!!

 
Status
Not open for further replies.
Top