வெறுப்பு....5
மூன்று மணி நேரத்திற்கு முன்....
“ நந்தினி...! ஏய் நந்தினி...! மணி ஒன்பது ஆகுது... எந்திரிடி.... ஒரு வயசுப்புள்ள இவ்வளவு நேரமாவா தூங்குவ..” என மழைக் காலத்திலும் கூட ஏசியை அதிகபட்ச குளிரில் வைத்துவிட்டு, குளிருக்கு இதமாக இரண்டு கம்பளிகளை போர்த்தி உறங்கிக் கொண்டிருந்த தன் செல்ல மகளை கடிந்தவாறே எழுப்பிக் கொண்டிருந்தார் சாந்தி...
சாந்தி சிவக்குமார் தம்பதியரின் ஒரே மகள் நந்தினி... கோவையிலுள்ள புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியில் நான்காமாண்டு மருத்துவம் பயின்று கொண்டிருக்கிறாள்... சாந்தி வங்கி ஒன்றில் மேலாளராக பணி புரிகிறார்... சிவக்குமார் குற்றத்தடுப்பு பிரிவில் அசிஸ்டெண்ட் கமிஷனராக பணிபுரிகிறார்...
நந்தினியை எழுப்பிவிட்டு வந்த சாந்தி தன் மகளுக்காக காப்பி கலந்துவைத்துக் கொண்டு காத்திருக்க, நந்தினி கிழே இறங்கி வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படாமல் போகவே சலித்துக் கொண்டு மீண்டும் மாடியிலுள்ள அவளது அறைக்கு சென்று தன் மகளை எழுப்பும் வேலையை ஆரம்பித்தார்... விடுமுறை நாட்களில் நந்தினியை எழுப்புவதே சந்திக்கு வழக்கமான வேலையாகிப் போனது.... இம்முறை குரலில் சற்று கடினத்தை கூட்டிக் கொண்டு சற்று சத்தமாகவே
“ நந்தினி...! இப்ப நீ எழுந்திரிக்கல மம்மி உன்மேல தண்ணிய உத்திடுவேன்..” என்று அருகிலிருந்த தண்ணீர் கோப்பையை எடுத்துக்கொண்டு அவள் மீது ஊற்றுவதைப் போல பாவனை செய்தவாறே மிரட்ட, அப்பொழுதும் கூட நந்தினி அசையவில்லை... அதற்குமேல் பொறுக்க முடியாமல் தண்ணீரை உற்றச் சென்றவர், ஒருநொடி நிதானித்து நந்தினி போர்த்தியிருந்த கம்பளியை விலக்கிப் பார்க்க, உறங்குவதைபோல தலையணையில் செய்து வைத்துவிட்டு, தன் தாயின் கொடுமைகளை அருகிலிருந்த அலமாரியின் பின்புறமாக ஒளிந்து கொண்டு, கைபேசியில் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தாள் நந்தினி....
சாந்தி முதல் முறை எழுப்பியதுமே எழுந்து கொண்ட நந்தினி... விடுமுறை நாட்களில் தன் அம்மா தன்னை தூங்கவிடாமல் தொந்தரவு செய்வதாக தந்தையிடம் தொடர்ந்து புகார் வாசிக்க, வாய்மொழியாக புகார் தெரிவித்தால் பயனில்லை. ஏதாவது வலுவான ஆதாரம் இருந்தால் சாந்தியின் மீது நடவடிக்கை எடுப்பதாக சிவக்குமார் கூறியதை ஏற்று, இரவுமுழுவதும் திட்டம் போட்டு சாந்திக்கு எதிரான ஆதராத்தை தயார் செய்து கொண்டிருந்தாள் நந்தினி...
நந்தினியை காணாது சுற்றும் முற்றும் தேடியவர் அலமாரியின் பின்புறமாக கைபேசியுடன் நின்றிருந்த நந்தினியை கண்டதும், அவளின் எண்ணத்தை புரிந்தவராக...
“ அடிக் கழுதை.... உன்னை....” என்று நந்தினியை பிடிக்க முன்னேற, சாந்தியிடம் சிக்காமல் அங்குமிங்குமாக ஓடி போக்கு காட்டியவள், பின் ஒரேதாவாக கட்டிலின் மீது ஏறி அறையை விட்டு வெளியேறி வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்த சிவக்குமாரை கண்டதும் “ டாடீஈஈஈ...” என கத்திக் கொண்டே அவரிடம் சரணடைய, பின்னாலே துரத்தி கொண்டே சாந்தியும் ஓடிவர
“ டாடி... உங்க பொண்டாட்டிய அங்கயே நிக்க சொல்லுங்க.... உங்க பொண்டாட்டி என்ன கொடுமை படுத்துனதுக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு...” என்று மகள் கூறியதை ஏற்று தன் மனைவியை தடுத்தவர், நந்தினியின் கையிலிருந்த மொபைலை வாங்கி அதில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்க்க ஆரம்பித்தார்...
அதில் சாந்தி கோபமாக எழுப்புவது, தண்ணீர் ஜக்கை எடுத்து தண்ணீரை ஊற்றப் போவது, பின் தன மகளை காணாது சுற்றும் முற்றும் தேடுவது, நந்தினியை துரத்துவது போன்ற காட்சிகள் பதிவாகியிருக்க புன்னகையுடனே பார்த்துக் கொண்டிருந்தார்,
“ டாடி... இது போதும்ல மம்மி மேல ஆக்ஷன் எடுக்க... மம்மிய பிடிச்சு இ.பி.கோ, கி.பி.கோ, கிமு, கிபி-னு ஏதாவது ஒரு செக்சன்ல கேஸ் போட்டு... ஒரு ஆறுமாசம் உள்ள தூக்கி போட்டுருங்க டாடி” என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கூற, இப்பொழுது மகளை விடுவித்து தன மனைவியை அனைத்துக் கொண்டு...
“ இல்லடா... மம்மி உன்மேல தண்ணிய ஊத்திருந்தாதான் குற்றம் செஞ்சதா அர்த்தம்... மம்மிதான் உன்மேல தண்ணிய ஊத்தலைல. அதனால மம்மிய அரெஸ்ட் பண்ணினாலும் கேஸ் நிக்காது” என்று கூற
“ மம்மி என்மேல தண்ணிய ஊத்த வந்தாங்கதான டாடி... அதையே அடிப்படை ஆதாரமா வச்சுக்கிட்டு மம்மி மேல ஆக்ஷன் எடுங்க டாடி” என்று விடாபிடியாக கூற
“ நந்தினி..! இப்ப மம்மி குற்றம் செய்ய வந்திருந்தாலும், அதுக்கு காரணம் யாரு ..? நீதான... குற்றம் செஞ்சவங்களை விட குற்றம் செய்ய தூண்டினவங்களுக்குதான் தண்டனை அதிகம்... அதனால டாடி தண்டனை குடுக்கனும்னா உனக்குத்தான் குடுக்கணும்..” என்று கூற, தன் திட்டம் தோல்வியடைந்ததில் சோர்ந்து போனவள்
“ மம்மி... அதான் தண்ணிய ஊத்த வந்திங்கிள்ள.... ஒழுங்க ஊத்த வேண்டியதுதான.. உங்களை யாரு ஊத்த வேண்டாமுன்னு சொன்னது” என்று சாந்தியிடம் எகிறினாள்
“ நீ போலிஸ்காரனுக்கு பொண்ணுனா... நான் அதே போலிஸ்காரனுக்கு பொண்டாட்டி... என்கிட்டயேவா போடி..” என்று சாந்தி விரலை வளைத்து பழிப்பு காண்பிக்க... நந்தினி அழுவதை போன்று முகத்தை வைத்துக் கொண்டு சோபாவில் சென்று அமர்ந்து கொள்ள, அவளை சமாதானம் செய்யும் விதமாக
“ சரிடா... உன் இஷ்டப்படி நீ தூங்கு. மம்மி ஒன்னும் சொல்ல மாட்டாங்க” என்று சிவக்குமார் கூறியதில் முகம் மலர்ந்தவள்... சாந்தியை ஏறிட்டு
“ மம்மி... கேட்டுக்கோங்க டாடி எனக்கு பர்மிசன் குடுத்தாச்சு... இனிமேல் லீவ் டேஸ்ல நான் தூங்கினா என்ன தொல்லை பண்ணக்கூடாது...” என்று உத்தரவு போட
“ நீ மறுபடியும் இதேமாதிரி தூங்கு. மம்மி சுடுதண்ணிய ஊத்தறேன்...” என்று கூற
“ வெவ் வெவ் வெவ் வே” என்று அழகு காண்பித்தவள்
“ அப்ப அருண் தூங்கினா மட்டும் ஒன்னும் சொல்லறதில்ல... நந்தினி சத்தம் போடாத அருண் தூங்கறான்... நந்தினி டீவி வால்யும கமி பண்ணு... நந்தினி அத பண்ணாத... நந்தினி இத பண்ணாதனு வார்த்தைக்கு வார்த்தை என் பேர ஏலம் விடறீங்க தான... ஒரே வீட்டுல அவனுக்கு ஒரு ரூல்ஸ் எனக்கொரு ரூல்ஸா..? இது என்ன நியாயம்..?” என்று கேள்வியெழுப்ப
“ ஏண்டி... நீயும் அவனும் ஒண்ணா..? அவன் ஆம்பளை பையண்டி.... அவனே என்னைக்காவது ஒருநாள்தான் வரான்.. எப்ப பார்த்தாலும் அவன்கிட்டயே ஏண்டி நீ போட்டி போடற..” என்று அருணுக்கு சாதகமாக பதில் கூற
“ பசங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம்னா, என்னையும் பையனா பெத்திருக்க வேண்டியதுதான... உங்களை யாரு புள்ளையா பெத்துக்க சொன்னது... என்று விட்டு குடுக்க மனமில்லாமல் எதிர்வாதம் செய்துவிட்டு... தந்தையிடமிருந்து மொபைலை வாங்கி அருணுக்கு அழைக்க... அருனின் எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக தகவல் வர சலித்துக் கொண்டே மொபைலை சோபாவின் மீது எறிந்தவள் சாந்தியை நோக்கி...
“ மம்மி... இன்னைக்கு அருண் வந்ததும் நான் சண்டை போடுவேன்... நீங்க குறுக்க வரக் கூடாது... நான் எந்திரிக்கறதுக்கு முன்னாடியே நீ இங்க இருக்கணும்ன்னு அந்த பக்கி கிட்ட நேத்தே சொல்லிட்டேன்... இவ்வளவு நேரமாயும் அந்த பக்கி வரல... அவன் தொலைஞ்சான்..” என்று கூற
“ நந்தினி அவனுக்கு என்ன வேலையோ...? ஒருநாள் லீவ் கிடைச்சாலும் அருண் உன்கூடதான இருக்கான்... சும்மா எதுக்கெடுத்தாலும் அருண் கூட சண்டை போடாதடா...” என்று சிவக்குமார் கூற
“ ஐயோ டாடி... நான் அவன்கிட்ட கோவ பட்டா சண்டை போடறேன்... எனக்கு உரிமை இருக்கு நான் சண்டை போடறேன்... அருண் கூட எது பேசினாலும் மம்மி குறுக்க குறுக்க வராங்க... எனக்கும் அருணுக்கும் இடைல யாருமே வரக்கூடாது... என்று தெரிவிக்க
“ அருணுக்கு நம்மள விட்டா யாருடா இருக்கா..? நீ எதாவது அவன் மனசு கஷ்டப்படற மாதிரி பேசிடுவையோனு எங்களுக்கு பயம்... அதான் மம்மி குறுக்க வராங்க” என்று கூற
“ஹா ஹா ஹா ஹா... டாடி நான் எது பேசினாலும் அருண் ஒன்னும் சொல்ல மாட்டான்... ஏன்னா அவன் என்னோட அருண்” என்று பெருமிதமாக கூற... நந்தினி கூறியதை கேட்டு இருவரும் தங்களுக்குள்ளாகவே அர்த்தமாக புன்னகைத்துக் கொண்டு...
“ சரிடா அவன் உன் அருணாவே இருக்கட்டும்... இப்ப போய் ரெடியாகிவா சாப்பிடலாம்” என்று சிவக்குமார் கூறியதும் அருணை பற்றி சிந்தித்துக் கொண்டே தனதறைக்கு சென்றாள் நந்தினி....
தற்பொழுது...
போனில் பேசிய குரல் தனக்கு பரிச்சியமானதைப் போல் தோன்ற அதை பற்றியே சிந்தித்துக் கொண்டு, நந்தினியை பற்றிய சிந்தனைகளை கைவிட்டவனாக ஒருவித அழுத்தமான மனநிலையிலேயே கெங்கரையை நோக்கி காரை செலுத்தினான் அருண்...
சத்தியமூர்த்தியின் எஸ்டேட்டுக்கு செல்லும் வழியில், சத்தியமூர்த்தியின் காரை... பழுதடைந்த வாகனத்தை சுமந்து செல்லும் வாகனத்தில் சிலர் ஏற்றிக் கொண்டிருக்க, காரிலிருந்து இறங்காமலே சிறிது நேரம் நின்று பார்த்தவன், சண்முகம் ஏற்பாடு செய்திருப்பார் என்று தனக்குள் எண்ணியவனாக அங்கிருந்த பெரியவரிடம்... சத்திய
மூர்த்தியின் எஸ்டேட்டுக்கு செல்லும் வழியை விசாரித்துவிட்டு, எஸ்டேட்டை நோக்கி காரை செலுத்தினான்...
எஸ்டேட்டில் நுழைந்ததும் அங்கிருந்த போர்ட்டிகோவின் முன்பாக காரை நிறுத்திவிட்டு காரிலிருந்து இறங்காமலே " பாம்ம்மம்ம்ம்ம் " என ஹாரன் ஒலியை எழுப்ப, தங்களது காரை கண்டதும் ஐஸ்வர்யாவும், ஹரிப்பிரியாவும் காரை நோக்கி வர, ஹரிப்பிரியாவை கண்டதும், அருணின் முகமோ மலர்ந்து சுருங்கியது.... அருணின் முக மாறுதல்களை கவனித்தவாறே வந்த ஹரிப்பிரியா அருணை முறைத்தவாரே
" ஹலோ மிஸ்டர் மகாராஜா! உங்க பொன்னான பாதம் பூமில பட்டா ஒன்னும் குறைஞ்சு போயிடாது... கிழ இறங்கு மேன்... எங்க லக்கேஜ் எல்லாம் எடுத்து டிக்கில வை..." என திமிராக கூற, இருவரையும் மாறி மாறி பார்த்தவன், பதில் கூற உதடுகள் துடித்தாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, செயற்கை புன்னகையை உதடுகளில் தவழவிட்டவாறு...
" மாகாராணி..! நீங்க சொல்லி செய்யாம இருக்க முடியுமா..? ஆனா பாருங்க மாகாராணி; ஒரு சின்ன விண்ணப்பம்... அந்த லக்கேஜோட சேர்த்து இந்த லக்கேஜையும் டிக்கில தூக்கி போட்டுட்டா மேட்டுப்பாளையம் போற வரைக்கும் யாருக்கும் தொல்லை இருக்காது.." என்று ஹரிப்பிரியாவை கை காண்பித்துக் கூற...
" ஹேய்..! யூ.. யூ... ராஸ்கல்.. யார பார்த்துடா லக்கேஜுனு சொல்லற " என்று ஹரிப்பிரியா எகிறினாள்...
" ஏன்...? உனக்கு கண்ணு தெரியாதா..? உன்னை பார்த்துதான் சொல்லறேன்" என நக்கலாக கூற, கோபத்தில் முகம் சிவக்க அருணை பார்த்து பேச வாயெடுக்கும் முன், ஒரு முறைப்பிலேயே ஹரிப்பிரியாவை அடக்கிய அருண் ஐஸ்வர்யாவை ஏறிட்டு...
" கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்கிட்ட போன்ல பேசினது யாரு " என்று கேள்வி எழுப்ப, ஐஸ்வர்யா பதிலேதும் கூறாமல் சங்கடமாக தன் தங்கையை பார்க்க, அதில் புரிந்து கொண்டவன்
" உங்க டிரைவர் வரல நான்தான் வறேன்னு தெரிஞ்சுதான் என்கிட்ட அப்படி பேசினீங்களா..? " என்று ஹரிப்பிரியாவை முறைத்துக் கொண்டே கேட்க...
" எங்க டிரைவர் வரல... சித்தப்பாவோட ஃபிரெண்ட் வாரார்னு மட்டும்தான் தெரியும்... ஆனா அது யார்னு..? தெரியாது " என்று தயங்கியவாறே பதில் கூறிய ஐஸ்வர்யாவை ஏறிட்டு
" இங்க பாருங்க... உங்களுக்கு என்ன தேவையோ அதை எடுத்துட்டு பேசாம கார்ல ஏறுங்க... என்கிட்ட இப்படி திமிராவே பேசிட்டு இருந்தா.... ####### இது போச்சுன்னு கார எடுத்துட்டு நான் கிளம்பி போயிட்டே இருப்பேன்... அப்பறம் நீங்க ரெண்டுபேரும் அங்கப்பிரதட்சணம் பண்ணிட்டுதான் மேட்டுப்பாளையாம் போகணும் எப்படி வசதி..." என்று வினவ
" ஹேய்ய்ய்...! " என்று மீண்டும் ஆரம்பித்த ஹரிப்பிரியாவை அடக்கிவிட்டு, அவளது கையை பற்றி அருணை விட்டு சற்று தூரம் இழுத்துச் சென்ற ஐஸ்வர்யா...
" ஹரி... ஏண்டி இப்படி பண்ணற... முதல்ல நான் சொல்லறத கேளு ஹரி.. இவர்.. என் ஜூனியர் நந்தினிக்கு தெரிஞ்சவரா இருக்கணும்... பலதடவை நந்தினிய காலேஜ்ல டிராப் பண்ண வரும்போது பார்த்திருக்கேன்... நந்தினியோட அப்பா அசிஸ்டென்ட் கமிஷனரா இருக்கார்... சித்தப்பாவுக்கும் நந்தினியோட அப்பாவுக்கும் நல்ல பழக்கம் இருக்கும்னு நினைக்கிறேன்... இவர்கிட்ட நீ ஏதாவது பேசினா, அது தேவை இல்லாத பிரச்சனைய உருவாக்கிடும்..." என ஹரிபிரியாவை சமாதானம் செய்யும் விதமாக கூற...
"அவனுக்கு போலீஸ்ல தெரிஞ்சவங்க இருந்தா... அவன் என்ன பெரிய இவனா..? எனக்கு அவன பார்த்தாலே கோவம்தான் வருது... நான் இப்படிதான் பேசுவேன்..." என்று மீண்டும் திமிராகவே கூறினாள்
" ஐயோ...! ஏண்டி இப்படி அடம்பிடிக்கற... இன்னும் கொஞ்ச நேரத்துல நாம மேட்டுப்பாளையம் போய்டுவோம்.. அப்பறம் அவர் யாரோ நாம யாரோ... அதுவரைக்கும் கொஞ்சம் பெருமையா இரு " என்று கூறிய ஐஸ்வர்யாவை சிலநொடிகள் ஏறிட்டு பார்த்தவள்...
'உனக்கு வேணும்னா அவன் யாரோவா இருக்கலாம் ஐஸு... ஆனா எனக்கு அப்படியில்ல... அருண் இனிமேல் தான் இந்த ஹரிபிரியா யாருன்னு நீ தெரிஞ்சுக்கப போற... என்ன விட்டு உன்னால இனி ஓடி ஒழிய முடியாது' என்று மனதில் நினைத்துக் கொண்டு எதுவும் பேசாமல்
காரை நோக்கி செல்ல.. அவள் பின்னாலே சென்ற ஐஸ்வர்யா அருணிடம்...
" நாங்க எதும் பேசல... நீங்க வண்டிய எடுங்க" என்று கூறி காரின் இடது புறமாக ஏறிக்கொள்ள, அருணுக்கு பின்புறமாக ஹரிபிரியா அமர்ந்து கொண்டாள்...
இருவரும் காரிலேறி அமர்ந்ததும் ரியர் வியூ மிரர் வழியாக ஹரிப்பிரியாவை முறைத்தவாரே அருண் அமர்ந்திருக்க, அருணின் பார்வையை தவிர்க்க முயன்று, கடைசியில் ஹரிப்பிரியாவும் தனது பார்வையை ரியர்வியூ மிரர் வழியாக அருணின் பார்வையோடு கலக்கவிட... இருவரது பார்வை பரிமாற்றத்தை கண்டதும் இது எங்க போய் முடியுமோ..? என்ற எண்ணத்தில் இருவரையும் மாறி மாறி பார்த்தவாறே ஐஸ்வர்யாவும் வேறு வழியின்றி அமைதியாகவே அமர்ந்திருந்தாள்...
ஒரு நிலைக்குமேல் ஹரிப்பிரியாவால் தன் கோபத்தை பிடித்து வைத்திருக்க முடியாமல் உதடுகளில் புன்னகைய தவழ விட....
' உன்னோட இந்த சிரிப்புகெல்லாம் மறுபடியும் நான் உன்கிட்ட சிக்க மாட்டேண்டி ' என மனதில் நினைத்துக் கொண்டு மேட்டுப்பாளையத்தை நோக்கி காரை கிளப்பினான்....
இருவரது பார்வை பரிமாற்றத்தையும் கவனித்த ஐஸ்வர்யாவுக்கு, இருவரும் முன்பே அறிமுகம் ஆனவர்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது... ஆனால் எங்கு..? எப்பொழுது..? அறிமுகம் ஆகியிருப்பார்கள் என்ற கேள்வி எழ அதற்கு அவளிடம் பதில் இல்லை... அதோடில்லாமல் ஹரிப்பிரியா முன்பின் தெரியாவர்களிடம் அநாகரீகமாக பேச கூடியவள் இல்லை... இவரிடம் அப்படி பேசி இருக்கிறாள் என்றால், வருவது யார் என்று முன்பே தெரிந்திருக்க வேண்டும்... ஆனால் அது எப்படி சாத்தியம்..? ஒருவேளை சித்தப்பா மொபைல் நெம்பரை அனுப்பும் பொழுது இவரின் போட்டோவையும் அனுப்பியிருக்க வேண்டும்... ஆனால் இருவருக்குள்ளும் அப்படி என்ன பிரச்சனை என்று குழம்ப, சரி வீட்டிற்கு போய் பேசிக் கொள்ளலாம் என்று அமைதியா அமர்ந்திருக்க...
" ஐஸு... இப்படி கார மெதுவா ஓட்டினா...? கட்ட வண்டி ஓட்டரவன்னு சொல்லாம வேற எப்படி சொல்லறது... கொஞ்சம் வேகமா போக சொல்லு ஐஸு... வேகமா கார் ஓட்ட தெரியலனா தள்ளி உக்கார சொல்லு. எப்படி ஓட்டராதுன்னு நான் சொல்லி தரேன் " என்று தனது அக்காவிடம் சொல்வது போல அருணின் காதுகளில் படுமாறு சத்தமாக கத்தி சொல்ல... காரை ஓரமாக நிறுத்திய அருண் திரும்பி ஐஸ்வர்யாவை பார்த்து சீட் பெல்ட்டை மாட்டிக் கொள்ளுமாறு சைகை காண்பிக்க ஐஸ்வர்யா அவசர அவசரமாக சீட் பெல்ட்டை மாட்டிக் கொண்டு அருணை ஏறிட, கண்ணாடி வழியாக ஹரிப்பிரியாவை முறைத்தவாரே,' கட்டவண்டி ஓட்டரவன்னா... இன்னைக்கு உன்ன ஒருவழி பண்ணல நான் அருண் இல்லடி என மனதில் நினைக்க, அவனது மனதினை படித்தவள் போல ' அதையும் பார்க்கலாம் போடா'
என கண்களாலே பதில் கூரினாள்... ஹரிப்பிரியாவின் கண்களை பார்த்தவாறே காரின் கியரை மாற்றி ஆக்சிலேட்டரை முழுவதுமாக மித்தித்து, இன்ஜினை முழு குதிரை திறனில் சுழல விட்டு, சடாரென காரை விடுவிக்க... அதிகபட்ச உந்துதல் திறனால் உந்தப்பட்ட வாகனம் தனது முன்புற சக்கரங்கள் இரண்டையும் அந்தரத்தில் மிதக்கவிட்டவாறு விருட்டென கிளம்பி சிறிது தூரம் சென்று தரையை தொட... தனது இஷ்டதெய்வங்களை மனதிற்குள் வேண்டியவாறே பீதியில் உறைந்து போய் அமர்ந்திருந்தாள் ஐஸ்வர்யா...