All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஷாவின் “ நின் காதல் காணக் காத்திருக்கிறேன்" - கதைத் திரி

Status
Not open for further replies.

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ் ,

எல்லாரும் எப்படி இருக்கீங்க..கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமாச்சு கதை எழுதி.!
மறுபடியும் கதை எழுதலாம்னு எண்ணம்.அதான் ஓடி வந்தாச்சு .

என்னோட ஆறாவது கதை,
"நின் காதல் காணக் காத்திருக்கிறேன்"
ரொம்ப சாதாரண காதல் கதை,எனக்கு தெரிந்த வகையில்.

வாங்க ...!
படிச்சு பாருங்க .. ! உங்க கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி
ஶ்ரீஷா 😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 1 :



“Liquor drinking is injurious to health
மது அருந்துதல் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும்”



என்ற வித்யாவின் குரலுக்குச் சிரித்த யுவன்,


“ சில்லுன்னு ஒரு காதல் படம் பார்த்ததில்லை,அதுல சூர்யா எவ்ளோ சந்தோஷமா ,
‘ I m the happiest man in the world ’– னு கத்துவார்.காரணம் இந்தப் பச்சை பாட்டிலும் தான் .சூர்யா ஃபேனா இருந்தா மட்டும் பத்தாது, இதையும் பார்த்து
தெரிஞ்சுக்கணும் “


என்றவன் குரல் முற்றுப் பெறுவதற்கும், வித்யா ஏதோ முணுமுணுத்து முடிப்பதற்கும் சரியாக இருந்தது.அதில் அவளது கரங்களைப் பற்றிக் கொண்டவன் தன்னருகே அமர்த்திக் கொள்ளப் பார்க்க,அவனது கரங்களைத் தட்டி ,பின் சற்று விலகி கொண்டாள்.


“ பேபி , இட்ஸ் ஜஸ்ட் ஏ பீர். நாட் ஹாட் .நான் எப்பையும் ஹாட் அடிக்க மாட்டேன்.ஐ பிராமிஸ்.”


“ பீர் இஸ் ஆல்சோ ஏ டிரக் யுவன்.அதுவும் போதை தான்.மூளையும் மனசையும் பாதிக்கிற எந்தப் போதையும் தப்பு தான் ”


“ ஹா ஹா... நீ வேணும்னா கூகிள் பண்ணி பாரேன். பீர் ஒண்ணும் அந்தளவு கெட்டது இல்லை.அதுவும் வீக்லி ஒன்ஸ் ஆர் டூ வீக் ஒன்ஸ் தப்பே இல்லை “


என்றவன் குரல் முடியும் முன் ,
“ டாம்ன் கூகிள் “ என்ற குரலோடு தன்னறையின் கதவினை அடித்துப் பூட்டிக் கொண்டாள் வித்யா.


இது அவர்களுள் வழக்கமான ஒன்று தான்.அவன் என்று குடித்து வருகிறானோ அன்று இதே உதாரணப் படமும், கூகுள் விவரவும் பகிரப்படும்.பின் கோபத்தில் கதவினை அறைந்து சாற்றிய வித்யா தனியறை புகுந்து கொள்வாள்.அவன் மேல் வரும் கோபத்தினைக் கடக்கவும் முடியாது அவனது செயலை சகிக்கவும் முடியாது ஏற்படும் உணர்வுகளின் வெளிப்பாடே இது.அதற்கென அவன் குடிகாரன் என்றெல்லாம் இல்லை.மாதம் ஒரு முறை அல்லது இருமுறை தான். இருந்தும் துளி கலந்தாலும் / குடித்தாலும் போதை.., போதை தானே ..!


சில நேரம் மாயம் செய்தாய் ,சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க செய்தாய் மறுநாளில் ஏங்க செய்தாய்
வெயிலோ மழையோ எது நீ ?
நீதானே எந்தன் பொன்வந்தம்...!



என்ற பாடல் இடைவிடாது ஒலிக்க,அவளது தூக்கமோ தடைபட்டுத் தடைப்பட்டுத் தொடர்ந்தது.ஒரு கட்டத்தில் விரல்கள் பாடலைத் துண்டித்துத் தூக்கத்தைத் தொடர பார்க்க,கதவோ படபடவெனத் தட்டப்பட்டது. ஓரளவு நிதானப்பட்ட விழிகள் பிரிந்து கொள்ள,யார் தட்டுகிறார்கள் என்று தெரிந்ததில் மனமோ குறைந்திருந்த கோபத்தை இழுத்துப் பிடித்து,அதே வேகத்தில் கதவினைத் திறந்து நின்றவள்,அவனது முன்னர்ச் செயலுக்குக் கடியும் முன், யுவன்


“கடைக்கு லேட் ஆகுது.மணி இப்போவே மூனறை. சீக்கிரம் குவிக்.. குவிக்..
உன்னை ட்ராப் பண்ணிட்டு தான் நான் தூங்கனும்”


என்ற கூற்றில் அமைதியாகி அவனை வெற்று பார்வைப் பார்த்து நின்றாள்.பின் சுதாரித்துக் கொண்டவள் வேகவேமாகத் தயாராகச் சென்றாள்.
சரியாக மாலை நான்கு மணிக்கு வித்யா கிளம்பி நிற்க,4.10 க்கு அவளது கடையில் யுவனால் இறக்கி விடப்பட்டிருந்தாள்.அக்கடை அவளது கடை,அவளுடன் இணைந்து நான்கு பெண்கள் நடத்தும் தின்பண்ட கடை.


“ நொறுக்குத் தீனி “ என்ற பெயரில் இயங்கும் அவர்களது கடை முன்பக்கம் பேக்கரி போல் காட்சியளித்தாலும் ,உள்ளே தாராளமாக ஐந்து முதல் பத்துக் குடும்பம் அமர்ந்து சாப்பிடும் அளவு அடக்கம் கொண்டது.
அதிலும் முன்பக்கம் பேக்கரி பண்டங்கள் என்றால்,உள்ளே ஒரு பக்கம் துரித உணவான பானிப் பூரி,மசால் பூரி, பாவ் பாஜ்ஜி, நூடுல்ஸ் போன்றவையும் மற்றொரு புறம் வேகவைத்த சுண்டல், பாசிப்பயறு, பனங்கிழங்கு , அவித்த கடலை என்று நலம் தரும் பண்டங்கள் சேர்ந்து காணப்படும்.துவங்கி ஆறுமாதம் என்றாலும் சுவை மற்றும் தரத்திற்குத் தகுந்த கூட்டம் எப்பொழுதும் உண்டு.


வித்யாவைக் கடையினில் இறக்கும் முன் யுவன் என்னன்னவோ செய்து அவளிடம் பேச பார்க்க, பலனோ பூஜ்ஜியம். வேறு வழியின்றி அவனும் வீட்டிற்குக் கிளம்பளானான்.அவனுக்கும் தூக்கம் கண்களைக் கட்டியது.
அவனொரு மென்பொருள் பொறியாளர். தற்சமயம் இரவு நேர பணியில் நியமிக்கப்பட்டுள்ளான்.முற்பொழுது நன்றாக அசந்து உறங்கியவன் வித்யாவிற்காக அலாரம் வைத்து எழுந்திருக்கிறான்.
வித்யா, யுவன் இருவருக்கும் உறக்கமென்றால் கொள்ளை பிரியம்.எப்படியும் அவள் நேரத்திற்கு எழுந்து கொள்ள மாட்டாள்.அவளின் கடையின் பொருட்டு எப்பொழுதும் அவன் தான் எழுப்பி விடுவது,அதுவே இன்றும் தொடர தன் பணியைச் செவ்வெனச் செய்து முடித்து இறங்க போனவனின் இருசக்கர வாகனத்தில் முன்பக்கத்தில் ஒரு டப்பர்வேர் ஸ்நாக்ஸ் பாக்ஸ் இடம்பெற்றிருந்தது.ஆசையாக வித்யா தான் தனக்காகப் பண்டம் நிறைத்திருக்கிறாள் என்றெண்ணி வீட்டிற்குக் கூடச் செல்லாது வாகனம் நிறுத்துமிடத்தில் நின்று பிரித்தவன் முன் வெள்ளை காகிதம்,தமிழ் எழுத்துக்களுடன் ஊசலாடியது.


“குடிக்கிற உனக்கு ஸ்நாக்ஸ் வேற வேணுமா ! நைட் டின்னர் இன்னைக்கு நீதான் செய்யணும் “

என்றிருக்கப் படித்தவனுக்குச் சிரிப்பே வந்தது.அந்த தாளை மடித்துப் பையினுள் வைத்தவன் வேகமாக விட்ட தூக்கத்தைத் தொடர சென்றான்.


“ ஒன் மோர் சிக்கன் பப்ஸ்”
“ரெண்டு கப் அவிச்ச கடலை”
“மிளகாய் பஜ்ஜி இன்னைக்குப்
போடலையா ?”

என்ற குரல்களுக்குத் தனித்தனியாகப் பதிலளித்து வந்தவள்,இன்றைய கடையின் நேரம் முடிவதையொட்டி ,முன்பக்க டிஜிட்டல் பலகையில் என்னன்ன பண்டங்கள் இருக்கிறது என்பதனைப் பதிவேற்றம் செய்து முடித்தாள். இவளுடன் இணைந்த மூவர் மற்றும் கடையினில் பணிபுரியும் நால்வர் என்று அவரவருக்குப் பணி ஒதுக்கப்பட்டிருக்க ,வித்யாவோ அனைத்திற்கும் மேற்பார்வை என்றானது.இதை தாண்டி சில நேரங்களில் தேவைப்படும் அனைத்து வேலைகளிலும் தன்னைச் சிரத்தையுடன் எடுபடுத்திக் கொள்வாள்.


உணவு முடிந்த பாத்திரம் போல் பின்னிரவை முன்னிரவு விட்டு செல்ல, உண்ட மனிதர்கள் போல் நேர முள் நகர்ந்து செல்ல,பண்டம் உண்டவர்களில் வயிரினை போல் அக்கடையின் கல்லாவும் நிரம்பியிருக்க ,இறுதிக்கட்ட வேலையை முடித்த தோழிகள் கடையைப் பூட்டி அவரவர் இல்லம் கிளம்பினர்.



மறுபடியும் இழுத்து பிடித்த அதே கோபம், அவனின் சிறுசிறு கவனிப்புகளுக்கு மயங்க கூடாதெனக் கடிவாளமிட்ட இதழ்களெனத் தன் மனதிற்குப் பொய் பூட்டுப் போட்டுக் கொண்டவள் ,தன்னிடமிருந்த சாவி கொண்டு வீட்டினுள் நுழைந்திருந்தாள்.



காலியான வயிற்றில் அடிப்பகுதியில் நுழைந்த உணவின் மென்மணம், மெல்ல மெல்ல மேலெழும்பி மேல்வயிரு தாண்டி,தொண்டையினில் பயணித்து இதழுக்கும் நாசிக்கும் இடைப்பட்டுத் தூரத்தில் புதினா மற்றும் கோழி கறியின் சுவையோடு மணமும் இளைப்பறியது. இதழில் உமிழ்ந்த நீரோடு என்ன உணவெனக் கண்டுபிடித்தவள் ,வேகவேகமாகக் குளித்து முடித்து உண்ண அமர,அவளின் நேரெதிரே வந்து அமர்ந்து கொண்டான் யுவன்.
தற்பொழுது உணவா , கோபமா என்று யோசிக்கக் கூட வழியின்றித் தூண்டப்பட்ட உணவின் மணத்தோடு ,குளித்து வந்ததில் கலைந்த அசதியும் சேர்ந்து கொள்ள ,வீராப்பையும் மீறி ,
“ சிக்கன் பிரியாணி “ என்று முணுமுணுத்திருந்தாள்.அதில் அவன் உணவிட்டுத் தட்டை அவள் பக்கம் நகர்த்த,அவளோ கரத்தில் அவனுக்குப் பிடித்த சிக்கன் பப்ஸை அவனிடம் நீட்டியிருந்தாள்.
அதில் இருவரும் சிரித்துவிட, பேச்சை விடுத்து இருவரும் உணவில் கவனமாயினர்.



சிக்கன் பிரியாணி யுவனின் ஸ்பெஷல் எனலாம்.காரசாரமாகச் சமைக்கும் உணவு வித்யா எனும் பொழுது காதலும் சேர்ந்து கொள்வதால் உணவு அபார சுவைதான்.உண்டு முடித்தவள் இறுதி விரல் வரை சப்புக்கொட்டி உண்டு முடிக்க, இறங்கிய குரலில் யுவன் ,” சாரி “ என்றிருந்தான்.


அதில் வித்யா மறுத்து ஏதோ சொல்ல வர,
“ சாரி காலையில பீர் அடிச்சத்துக்கு மட்டுமில்லை இன்னும் ரெண்டு நாளைக்குச் சேர்த்து”
என்றதில் வித்யா திகைக்க,அவளை கூர்ந்து பார்த்தவன்,

“நாளைக்குக் கும்பகோணம் போறோம்.ராதா பிள்ளைக்கு மொட்டை போட போறாங்க.அது போக இன்னும் ரெண்டு கோயிலுக்குக் குடும்பத்தோட போகனுமாம்.”


“ ஹ்ம்ம்.அப்படியே சொல்லி முடிங்களேன்.உங்க அம்மா என்ன பேசினாலும் மறுத்துப் பேச கூடாது.உங்க தங்கச்சி கிட்ட கோபப்படக்கூடாது.அப்படியே பொம்மை மாதிரி போயிட்டுப் பொம்மை மாதிரி வரணும்னு “
என்றவள் குரல் அழுக தயாராக, பதறி அவளது புறகணிப்பையும் மீறி கரம் பற்றிக் கொண்டவன்.
“ நிஜமா அம்மா உன்கிட்ட ஏன் கோபமா நடந்துகிறாங்கனு புரியலை .உண்மையிலேயே அவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க. நான்னா அவங்களுக்கு நிறையப் பிடிக்கும்.அதே போலத் தான் ராதா எப்போவாது பார்க்கிறேன், அப்போனு பார்த்து அவள் அழுது பார்க்க முடியாது “

என்ற வார்த்தையில் அவனை முறைத்தவள்,

“ உங்களுக்கு நான்லாம் ஒரு பொருட்டே இல்லைல.அவங்க தான் முக்கியம்.அவங்க உணர்வு தான் புரியுது.என்னை கஷ்டப்படுத்துனாலும் அவங்க மட்டும் கஷ்டப்படக் கூடாது,அதான ! “


“ சத்தியமா இல்லை .நம்ம அந்த வீட்டை விட்டு வந்ததிலே உனக்குப் புரியனும் எனக்கு என்ன முக்கியம்னு.
எனக்குச் சில விஷயத்தை ஹாண்டில் பண்ண தெரியலை வித்யூ.அம்மாவோட கோபம், ராதாவோட வீம்பு அழுகை.அந்த சமயத்தில் நான் பேசுனா என்னைக்கும் அவங்க முகத்தில் முழிக்க முடியாதபடி பேசிடுவேன்.அதான் தள்ளியே இருக்கேன்.
அதோட என்னைய எப்பவும் நீதான் தாங்குற. உன்கிட்ட என்னை மட்டுமில்லை என்னோட பாரத்தையும் தாரேன் .என்னைத் தாங்கி பிடிச்சுக்கோ இல்லை எப்படி இதைத் தாங்கனும்னு சொல்லி தா..தள்ளி நின்னோ இல்லை தாங்காம விட்டோ என்னை தவிக்க விட்டுடாத ! உன்னை விட்டால் என்னை உலகமா நினைக்க யாருமில்லை வித்யூ...! “


என்றவன் குரலுக்கும் அதிலிருந்த காதலுக்கும் கட்டுப்பட்டவள் அதே அமைதியுடன் அடுத்த நாள் அவனுடன் கும்பகோணம் சென்று இறங்கியிருந்தாள்.


கனவோடு காலங்களும்
நினைவோடு நிஜங்களுமென
நின் காதல் காணக் காத்திருக்கிறேன்.




வித்(யூ) யுவன்


-காத்திருப்போம் .​
 
Last edited:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2 :



வருடம் 2005 ,மதுரை :



“அண்ணா ரெண்டு மேகி பாக்கெட் அப்புறம் சிவசக்தி கறிமசால் பொடி பாக்கெட்டும் கொடுங்க ”


என்று வித்யா பொருட்களை வாங்கித் திரும்ப,பின்னே அவளது தந்தை சுப்ரமணியம் நின்றிருந்தார் .அதில் அவரிடம் முகம் மலர்ந்து சிரித்தவள் வேகவேகமாக அவரது டி.வி.எஸ்- 50யில் முன்பக்க குட்டி இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
சிரிப்புடன் வண்டியை இயக்கிய சுப்ரமணியம்,


“ அப்பாகிட்ட சொன்னா நான் வாங்கிட்டு வந்திருப்பேன்ல தங்கம். நீயேன் வெயிலில் அலையுற.அம்மா எங்க ? “

“நல்ல தண்ணீர் வருது பா. அம்மா தண்ணீர் பிடிக்கிறாங்க.எனக்கு பதினொரு மணிக்கு டியூஷன் போகனும்.அம்மா என்னைய மேகி கிண்டிக்கச் சொன்னாங்க “


என்றவள் வீடு வந்ததும் இறங்கி தானே நூடுல்ஸ் கிண்ட துவங்கினாள்.அவளை பின்தொடர்ந்து வந்த சுப்ரமணியம்,


“நீ ஏன் பாப்பா கஷ்டபடுற.இங்க வா..அப்பா செஞ்சு தாரேன் “


என்றபடி அவர் நூடுல்ஸ் தயார் செய்ய,குடங்களில் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்த வித்யாவின் அன்னை தேவகி அவர்களைச் சிரிப்புடன் கடந்து சென்றார்.பின் இருவரும் உண்டபடியே பேசத் துவங்கினர்.


“ அப்பா என்னோட பிராக்ரெஸ் கார்ட் வந்திருக்கு ! “

“ எத்தனாவது ரேங்க் பாப்பா ? ”

“அதுவந்து பா..பன்னிரண்டாவது ரேங்க் “
“ போன தடவை ? “

“ ஒன்பதாவது ரேங்க் பா ”

ஒரு நிமிடம் சுப்ரமணியம் அமைதிக் காக்க,

“ அடுத்தத் தடவை இன்னும் நல்லா படிப்பேன் பா.இந்த ஒரு தடவை மன்னிச்சுகோங்க”


என்ற வித்யாவின் குரல் நடுங்க,அவளின் தோள்களைத் தட்டித் தந்த சுப்ரமனியம்,


“அறிவை வளர்த்துக்கத் தான் படிப்பு.. படிப்பறிவு வெறும் மதிபெண்களில் மட்டுமில்லை..அதோட படிப்பு மட்டுமே வாழ்க்கையும் இல்லை.உன்னால முடியும், முடிஞ்ச வரை படி.எப்பவும் அப்பா உன்கூட இருப்பேன் ”


என்றவர் அவள் தட்டி கொடுத்து ஊக்குவித்தார்.


தேவகி – சுப்ரமணியத்தின் ஒற்றை வாரிசு வித்யா.அவர்களுக்கு பிறந்த முதல் குழந்தை,ரம்யா பள்ளி பருவத்திலே உடல் சுகவீனம் காரணமாகத் தவறியிருந்தாள். வித்யாவின் ஐந்து வயதில் ரம்யா இறந்திருக்க ,பெற்றோரின் உலகம் வித்யா என்றாகி போனது.கட்டிட காண்டிராக்டரான சுப்ரமணியத்திற்கு அப்பொழுது பெரிய வசதி இல்லையென்றாலும் ,உழைப்பால் உயர முடியுமென நம்புபவர்.அதே போல் பத்து வயது வித்யாவிடமும் உழைத்து வாழவேண்டும்.பிறரை தாழ்த்திப் பேச கூடாது என்பது போன்ற நல்லறங்களைக் கற்று தந்தே வளர்த்தனர்.வித்யாவும் அதே போல் நற்பண்புகளுடனே வளர்ந்தாள்.




வருடம் 2005, கும்பகோணம் :


“ அப்பா..அப்பா ...வலிக்குது பா ..அடிக்காதீங்க பா .அடுத்தத் தடவை நல்ல மார்க் வாங்கிடுவேன் பா ”


என்ற பதினைந்து வயது யுவனின் சத்தம் அந்த வீட்டை அதிர செய்தது.சத்தம் அதிகரிக்க அதிகரிக்க ,அவனுக்கு விழும் அடியும் கூடியது .இறுதியில் பிரம்பை தூக்கி எறிந்த விஸ்வநாதன்,தன் மனைவி பார்வதியிடம் கத்த துவங்கினார்.


“என்ன பிள்ளை வளர்திருக்க, பப்ளிக் எக்ஸாம் ரெண்டு மாசத்தில் வருது. இப்போவும் ரிவிசன் டெஸ்டில் பெயில் ஆகியிருக்கான்.இவன் எல்லாம் படிக்க லாயக்கே இல்லை. என்கூடக் கடைக்கு அனுப்புனா கேட்கிறியா ? ஸ்கூல் ஃபீஸ், வேன் ஃபீஸ் , டியூஷன் ஃபீஸ்னு ஆயிரக்கணக்கில் தண்டம் அழுகிறது தான் மிச்சம். சை..! இப்படி ஒரு பையனை என் வாழ்க்கையில் பார்த்ததில்லை.எங்க அப்பா எல்லாம் என்னைத் தரதரனு கடைக்கு இழுத்திட்டு போய் வியாபாரம் பார்க்க விட்டார். அப்போ நான் உழைச்சதால தான் இப்போ எல்லாரும் சொகுசா உட்கார்ந்து சாப்பிடுறீங்க. ”



என்றவரின் வழக்கமான அர்ச்சனை தொடர,அடிபட்ட மகனை சமன்படுத்தியபடி பார்வதி உணவூட்ட போக, ஆத்திர மிகுதியில் பார்வதி கையிலிருந்த உணவை தட்டிவிட்ட விஸ்வநாதன்,


“ இவளோ சொல்றேன் .இன்னும் நீ துரைக்கு ஊட்டி விடப் போறியா ? இந்தத் தண்டச்சோறு ஒரு நேரம் சாப்பிடலைனா இளைச்சிடாது.அப்படி பசிச்சா.அந்த பசிலாயாது படிப்பு வருதானு பார்ப்போம் “


என்றவர் தொடர்ந்து கடிய,யுவனின் கண்களிலிருந்து கண்ணீர் கோடுகள் தொடர்ந்து வடிய துவங்கியது .
தற்பொழுது மூடியிருந்த கண்களும் அந்நிகழ்வின் நினைவில் கலங்க,பேருந்து நடத்துனரின் அறிவிப்பில் கண் திறந்திருந்தான்.
யுவன் .


யுவன்,பார்வதி – விஸ்வநாதனின் மூத்த மகன்.
இளையவள் ராதா.தந்தைக்கு மிகுந்த செல்லம்.அவள் , ‘காக்கா வெள்ளையா இருக்குபா ’
என்றால் அதையும் துளி மறுப்பின்றி நம்பும் அளவு பாசம்.அந்த அளவுக்கு அதிகப் பாசமே ,அவளது அனைத்து வீம்புகளுக்கும் காரணமானது.
இதோ அடுத்த மாதம் நடைபெற இருந்த மொட்டை போடும் நிகழ்வை,ஏதோ ஜோசியர் சொன்னதெனக் கூறி தடாலடியாக இன்று மாற்றியிருக்கிறாள்.தங்கை மீது எத்தனை வருத்தமிருந்தாலும் அவளை எந்த இடத்திலும் யுவன் விட்டு தந்ததில்லை.இனியும் விட்டு தரபோவதுமில்லை..

****
யுவனின் சொந்த வீடு கும்பகோணத்தில் இருந்தாலும் கடந்த மூன்று வருடமாக அவர்கள் அங்கே செல்வதில்லை.இதோ இப்பொழுதும் கூட
வெளியே அறை எடுத்தே கிளம்பினர்.அவர்கள் கிளம்பிமுடிப்பதற்கும்,யுவனின் அலைபேசி அலறுவதற்கும் சரியாக இருந்தது. அவனது அன்னை பார்வதி தான் அழைத்திருந்தார்.


“ என்ன ராசா இன்னும் வரலையா. பாப்பாவோட அத்தை எல்லாம் காத்திருக்காங்க யா “


என்றவர் தொடரும் முன்,விஸ்வநாதன் குரல் ஓங்கி ஒலித்தது.


“ வேகமா வர சொல்லு. நேரத்துக்கு நல்ல காரியத்தைச் செய்ய வேண்டாமா.ஏற்கனவே பாப்பா வீட்டுல்ல கோபிக்கிறாங்க “

என்றவர் தொடரும் முன் அழைப்புத் துண்டிக்கப்பட்டது.அன்னை தான் வீண் உரசல்களைத் தவிர்க்க துண்டித்திருக்க வேண்டுமெனப் புரிந்து கொண்டான் . நீண்ட மூச்சோடு தன்னைச் சீர்ப்படுத்திக் கொண்டவன் ,ராதாவின் பிள்ளைக்கு வாங்கி வைத்த தங்கத் தோடு மற்றும் புதுத் துணியை எடுத்துக் கொண்டான்.
தற்பொழுது வித்யாவின் முகம் பார்த்துக் கிளம்பச் சொல்லும் தைரியமின்றி முன் நடந்தான்.அவனைப் புரிந்தார் போல் அவளும் பின்தொடர்ந்தாள்.
கோயில் வாசலிலே நின்றிருந்த பார்வதி மகனை வாஞ்சையாகத் தடவி வரவேற்க, வித்யாவோ கேட்பாரின்றி அவனைப் பின் தொடர்ந்தாள்.அதுவரை வீம்புக்கு அண்ணன் காலதாமதம் செய்கிறான் என்று கண்ணைக் கசக்கிய ராதா,அண்ணனின் வரவில் கப்சிப்பென வாயை மூடிக் கொண்டாள்.
மொட்டை போடும் நிகழ்வு தாய் மாமன் யுவன் மடியில் அமர்த்தி நடைபெற, பின் காதுகுத்தும் நிகழ்வும் முறையே அரங்கேறியது. ராதா மகள் யாழுக்குரிய தங்கத் தோடு பார்வதியால் யுவனிடம் நீட்டப்பட, மறுத்துத் தலையசைத்தவன்,கரம் நீட்டி வித்யாவிடம் அவன் வாங்கிய குட்டி தங்கச் சிமிக்கியைப் பெற்று கொண்டான்.சுற்றி இருந்த இருவீட்டார் அவனைச் சற்று அசந்து பார்க்க,சூழ்நிலையை இயல்பாகும் பொருட்டு ராதாவின் கணவர் அசோக்,


“ ஐ யாழ் பாப்பக்கு ரெண்டு தோடா ? “
அவனது கேள்வியில் என்ன புரிந்ததோ குழந்தையும் அவனிடம் கொஞ்சி சிரிக்க, அனைவரது கவனமும் அவர்கள் பக்கம் திரும்பியது. மலமலவென்று நிகழ்வுகள் நடந்தேற,இறுதியில் பந்தியும் பரிமாறப்பட்டது.யாரும் தன்னிடம் பேசிடாததில் பரிமாறவும் செல்லாது,உணவு உண்பதில் பங்கேற்கவும் செய்யாது தள்ளி நின்று கொண்டாள் வித்யா.சிறிது நேரத்திற்கு யாரும் அவளைக் கவனிக்கவில்லை.யுவன் கூடப் பயணக் களைப்பு,அதோடு நிகழ்வின் கொண்டாட்டம், அன்னையின் கவனிப்பு என உணவு உண்டு முடித்திருந்தான்.



ஓரளவு அனைவரும் சாப்பிட்டு முடிந்திருக்க, வித்யாவைக் கவனித்த அசோக் தான்,
“ வாம்மா தங்கச்சி .ஏன் தள்ளி நிற்கிற.அண்ணனுக்கு உரிமையா நீ பரிமாற வேண்டாமா ? சரி போகட்டும் ...வா அண்ணன் உனக்குப் பரிமாறுறேன்”
என்றதில் அனைவரும் இவர்கள் பக்கம் திரும்ப,ஒரு நொடி யுவன் அன்னையைக் கேள்வி பார்வை பார்த்தான்.

‘ வரவேற்க தான் இல்லை ,சாப்பிட கூட அழைக்கவில்லையா நீ ? ‘ என்பது போல் பார்க்க,
அவரோ ‘ அவளுக்கும் எனக்கும் பேச்சில்லை ‘ என்பது போல் குனிந்து கொண்டார்.


மற்றவரை கேள்வி கேட்டு என்ன பயன்,தான் ஏன் மறந்தோம் எனத் தன்னையே கடிந்து கொண்டவன்,அவளை வருத்த பார்வை பார்த்தான். நேற்றிரவு உண்டது.தன்னை போல் தானே அவளுக்கும் பசிக்கும். இதனை எப்படி மறந்தோம் என வெட்கியவன் அவள் முகம் காணத் தவித்தான்.


வித்யாவிற்கோ மற்றவர்களை விட, யுவன் அவனது குடும்பத்துடன் இணைந்து கொண்டு தன்னைத் தள்ளி வைத்து விட்டான் என்பதே பெரிதாக வலித்தது.அதில் மேலெழும்பிய உணர்வு குவியல்களை மறைத்திட முயன்றவள் , அசோகிடம் சிரிப்புடன் உணவையும் மறுத்திருந்தாள்.அவனோ விடாபடியாக அழைக்க,அதற்குள் கைகழுவி வந்திருந்த யுவன்,

“ வித்யா இன்னைக்கு விரதம் மச்சான்” என்று அசோக்கின் தோள்களை அழுத்திப் பிடித்துக் குறிப்பு சொன்னவன்,
“ ட்ரெஸ் மாத்திட்டு வரேன் மா. வேஷ்டி எல்லாம் சகதி ஆகிடுச்சு “
என்று முடித்தவன் அன்னையின் பதிலை எதிர்பாராது வித்யாவை இழுத்துக் கொண்டு கோயிலுக்குச் சற்று தள்ளியுள்ள உணவகத்திற்குச் சென்றான்.
யுவனுக்குச் சற்றுப் பயம் தான்.அவளுக்குப் பசிக்கும் என்று தெரியும்.
ஆனால் அவளிடம் எப்படி,
‘ உன்னை மறந்து விட்டேன் ' என்று சொல்வது ,இதைவிட அவள் கோபத்தில் உண்ண மாட்டேன் என்றால் என்ன செய்வது என்றெல்லாம் பயந்தவன் அவள் முகம் காண அதுவோ எந்தச் சலனமின்றி இருந்தது.அதில் எதுவும் கண்டுபிடிக்க முடியாது போனவன் ,அவள் உண்டால் போதுமென எண்ணி ,அவளுக்குப் பிடித்த ரவா தோசையை ஆர்டர் கொடுத்தான்.எந்த கரச்சலும் செய்யாது உண்டு முடித்த
வித்யா ,‘ போகலாம் ‘ என்பது போல் கிளம்பி நின்றாள்.


யுவனுக்கு அவளது செய்கை அதிர்ச்சி தான். அழுவாள் ,சண்டை போடுவான் என்று எதிர்பார்த்திருக்க அவளது செயல் அதிர்ச்சியைத் தந்தது.அதிலும் அவள் கோபப்பட்டால் கூடப் பராயில்லை ,அவள் காக்கும் அமைதி தனக்கு எத்தனை ஆபத்து என்பதை உணர்ந்த யுவன் மனதோடு தன்னையே தேற்றிக் கொண்டான்.ஏனென்றால் திருமணமான புதிதில் அவள் காட்டிய அமைதியும் அதன் பின் வெடித்துச் சிதறிய உணர்வுகளுமெனத் தற்பொழுது வரை அவனால் அதனைச் சரி செய்திட முடியவில்லை.
உறவுகளைக் கையாள தெரியாதவன் ,அவர்களின் உணர்வு பக்கத்தில் சிக்கி தவிப்பது எத்தனை கஷ்டம்.அதை விட அவனை உயிரெனக் கொண்ட உறவை,உறவின் உணர்வை தெரிந்தே கஷ்டப்படுத்துவது எத்தனை பெரிய வலி.



உறவுகள் சுகம் தான்
அதனைக் கையாள தெரிந்தவர்களுக்கு
உறவின் உணர்வுகள் சுமை தான்
அதைக் கையாள தெரியாதவர்களுக்கும்
உன் சுமைகள் சுகமாய் மாறி
நின் காதல் காணக் காத்திருக்கிறேன்.
வித் ( யூ) யுவன்




கதையின் கருத்துத் திரி 👇


 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப பெரிய இடைவேளை.சாரி..!
நியூ மாம் ஆ நிறைய பொறுப்புகள் பயங்கள்.
இப்போ அதைவிட சேட்டை கூடி தான் இருக்கு.பட் பயம் தாண்டி தெளிவு வந்திடுச்சு.

So back into the field.
இனி தொடர்ந்து அத்தியாயம் தர முயற்சி செய்றேன்.

கதை மறந்து போயிருந்தா ஒன்ஸ் போய் வாசிச்சிட்டு வந்துடுங்க.
மறுபடியும் sorry and thanks for all your patience 😊🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3 :

வருடம் 2015 மதுரை :


“அம்மா நான் கேம்பஸ் இண்டர்வியூல செலக்ட் ஆகிட்டேன்.ஜாப் பெங்களூர்ல “

என்ற வித்யாவின் குரலுக்கு தேவகி மகிழ்ந்தாலும் ,வெளிமாநிலம் செல்ல வேண்டும் என்பதில் தயங்கி,

“ ஏன் பாப்பா நீ மேல படிக்கலாம்ல.நீ வேலைக்கு தான் போகணுமா ? மேற்கொண்டு படிச்சா இங்கேயே இன்னும் நல்ல வேலை கிடைக்கும்ல”

என்ற தேவகியின் குரலுக்கு, சுப்ரமணியம்,

“ தேவா ! என்ன பேசுற நீ ?
பிள்ளை திறமையா வேலை வாங்கிட்டு வந்து சொல்லுது.சந்தோசமா அனுப்பாமல்,
இது என்ன பேச்சு !”

“அப்பா ! நானும் ஒரு நிமிஷம் யோசிக்க தான் செஞ்சேன்.இது என் திறமைக்கான வேலையே இல்லை,அதோட சம்பளமும் கம்மி.ஒருவேளை இன்னும் படிப்பு எதிர்பார்க்கிறாங்க போல?”

என்ற மகளின் வார்த்தையில்,சுப்ரமணியம்

“அதுக்கில்லைமா..இந்த காலத்தில் படிச்ச படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்கிறதே குதிரை கொம்பா இருக்கு! இதுல நம்மளே கைமேல் கிடைச்ச வேலையை கழிக்கலமா ?”

“ என்னப்பா பேசுறீங்க ! என் திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.எனக்கு தெளிவா புரியுது இந்த வேலை எனக்கான இடமில்லைனு.வேலை கிடைச்ச சந்தோசத்தில் தான் அம்மக்கிட்ட சொன்னேன்பா.மத்தபடி அம்மா சொன்னபடி நான் இன்னும் படிக்கணும்பா.படிச்சு கண்டிப்பா இதை விட பெரிய வேலைக்கு போவேன் “

இதுவரை உறுதியாக பேசியவள் இறுதியில்,

“இதுல உங்களுக்கு ஒன்னும் வருத்தமில்லைலபா.அப்படி இந்த வேலைக்கு நான் போகனும்னு நீங்க ஆசைப்பட்டா கண்டிப்பா போறேன்பா”

என்றவள் அவரது கண்களை பார்க்க,சற்று இதழ் வளைந்து சிரித்த
சுப்ரமணியம்,

“ என் பொண்ணு வளர்ந்திட்டா ..!
அவளுக்கு என்ன வேணும்னு அவளுக்கு தெரியுது .ரொம்ப சந்தோசமா இருக்குடா .உனக்கு என்ன படிக்கணுமோ படி.அப்பா எப்பவும் உனக்காக இருப்பேன் “

என்றவர் பெருமிதத்துடன் தலைகோதி,சிரிப்புடன் அவள் தோள் சாய்ந்து கொள்ள,அந்த நிமிடம் பெற்றோருக்கு உவகையுடன் கழிந்தது.


இந்த பத்து வருடத்தில் வித்யாவின் குடும்பத்தினருக்கு நல்ல வளர்ச்சி. செட்டில்ட் வாழ்க்கை என்பார்களே அத்தகைய செழிப்பான வாழ்க்கை.
வீடு காண்ட்ராக்ட்,தொழில் ஸ்தாபன காண்ட்ராக்ட் என சிறிது சிறிதாக துவங்கி இன்று பல அரசு ஒப்பந்தங்கள் அவரது கையில்!

‘காற்றுள்ள போதே தூற்றி கொள்ள வேண்டும்’ என்பது போல் கையில் பணம் சேர சேர பெரிய வீடு,கார், மனைவி மகளுக்கு நகை என்று அனைத்தையும் திருப்திபடுமளவு சேர்த்து விட்டார்.இதோடு
மகளது தெளிவிலும் நிறைவு ஏற்பட்டிருக்க,சுப்ரமணியம் அடுத்தகட்டமாக ஜோதிடரை காண சென்றிருந்தார்.அவர் சொன்ன தகவலோ அத்தனை இனிப்பானதாக இல்லை.

“ பொண்ணுக்கு கல்யாணம் இருபத்தி ஒன்னுல முடியலைனா அடுத்து இருபத்தி ஏழுதா அண்ணாச்சி.ஜாதகப்படி அடுத்த வருஷம் முடிச்சா தான் பொண்ணு நல்லா வாழும்” என்று விட்டார்.இதில்
சுப்ரமணியத்திற்கு சற்று கவலையாகிப் போனது.

மகள் அடுத்து படிக்க வேண்டும் என்றாலே ! அதற்கு இன்னும் ரெண்டு ஆண்டுகள் எடுத்துக் கொள்ளுமே.! ஜோதிடர் அடுத்த வருடம் திருமணம் முடிக்க வேண்டும் என்கிறார்.பின் மகள் மேற்கொண்டு கல்லூரி படிப்பை எப்படி வெற்றிகரமாக முடிப்பாள்?அவளுக்கென எதிர்கால கனவுகள் வேறு இருக்குமே!
என்ன செய்வது ?அடுத்த வருடத்திற்குள் முடிக்கவேண்டும் என்றால் தற்பொழுதே பார்க்க துவங்க வேண்டுமே ! அதற்குள்ளா ? இதைப் பற்றி யாரிடம் பேசுவது.மகள் புரிந்து கொள்வாளா ? ‘

என அத்தனையும் யோசித்த சுப்பிரமணியத்திற்கு முதலில் சற்று படபடத்தே வந்தது.பின் சற்று நிதானித்து
மனைவியிடம் மட்டும் முதலில் பகிர்ந்தார்.அனைத்தையும் கேட்டுக் கொண்ட தேவகி ,

“ அதுனால என்னங்க !ஜோசியர் அய்யா சொன்ன மாதிரி அடுத்த வருஷமே முடிச்சிடலாம்.நமக்கும் நல்லது
தானே ! “ என அத்தனை சுலபமாக பேசியதில் சற்று தெளிந்த சுப்பிரமணியம்,

“ என்ன பேசுற தேவா ? வித்யாகிட்ட கேட்காமல் எப்படி பார்க்கிறது.அவள் எப்படி சம்மதிப்பா ? நல்ல வேலைக்கு போகனும்னு நினைச்சிட்டு இருக்க பொண்ணை கல்யாணத்துக்கு வற்புறுத்துவது தப்பில்லையா ? “

“ இதை ஏங்க இவளோ பெருசா நினைக்கிறீங்க.வித்யா நம்ம பொண்ணு.நம்ம பேச்சை மதிச்சு நடக்கிறவ ! அப்புறம் வேலை,கல்யாணத்துக்கு பின் பையன் வீட்டில் சம்மதிச்சா போகட்டும்.
கடைசி வருஷம் பையன் வீட்டிலிருந்து படிக்கட்டும்.இதை மட்டும் சொல்லியே வரன் தேடுவோம் “

“ எதுக்கும் வித்யாகிட்ட ஒருவார்த்தை சொல்லிடலாம் தேவா “

“ அட என்னங்க நீங்க? உடனேவா வரன் வர போகுது.இனிதான் ஜாதகம் எழுதணும்.அப்புறம் அந்தா இந்தானு மாப்பிள்ளை பார்த்து முடிக்க,ஒரு வருஷம் ஆகிடும்.அதுவரை வித்யா மனசுல எந்த தடையுமில்லாமல் படிக்கட்டும்.நல்ல வரன் அமைந்து அவங்க பார்க்க வரேன் சொல்லும் போது பாப்பாக்கிட்ட சொல்லிடலாம் “

“ இது சரிவருமா தேவா ?”

“ அதெல்லாம் வரும்..வித்யா நம்ம பொண்ணு.கல்யாணம் விஷயத்தில் நடப்பை சொன்னால் ஏத்துக்கப் போகிறாள் “

என்ற தேவகி ,அதே சூட்டோடு சுப்ரமணியத்தை மகளின் திருமண ஜாதக குறிப்பு எழுதிவர அனுப்பியிருந்தார்.

வருடம் 2015, கும்பகோணம் :

“அம்மா ஃபிரண்ட்ஸ்க்கு என் பெர்த்டே ட்ரீட் வைக்கணும் ஆயிரம் ரூபாய் வேணும்மா”
என்ற யுவனின் குரல் பார்வதியை அடையும் முன் வீட்டினுள் நுழைந்த விஸ்வநாதனை அடைந்திருந்தது.அதில் திருதிருத்த
பார்வதி மருண்டு விழிக்க,யுவனோ யாரையும் கண்டுக் கொள்ளாது அடுத்த பணியாக உணவுன்ன துவங்கியிருந்தான்.

“படிச்சு முடிச்சு நாலு வருஷமாகுது ஒரு நிலையான வேலையில்லை.கடைக்கு வந்தாலும் உருப்படியா வியாபாரம் பார்க்கிறதில்லை. இதுல சார் ஃபிரண்ட்ஸ்க்கு
ட்ரீட் வைக்கணுமாக்கோம்.அப்படி என்ன சார் சாதிச்சிட்டாராம் பிறந்தநாள் கொண்டாடுறதுக்கு”

என்ற விஸ்வநாதனின் கேள்விக்கு ,
“இவர் கூட நான் இத்தனை வருஷம் வாழ்ந்ததே சாதனை தான்னு எடுத்துச் சொல்லுமா “ என்ற யுவன் அன்னையிடம் ஜாடை காட்டி சிரிக்க,அவரோ மகனுக்கும் கணவருக்கும் இடையே அல்லாடிக்
கொண்டிருந்தார்.கூடவே மகனை கண் ஜாடையில் மிரட்டியவர்,கணவருக்கு தண்ணீர் நிறைந்த சொம்பை நீட்டியபடி பேச்சைத் துவங்கினார்.

“ நம்ம யுவனுக்கும் வயசு ஏறிட்டே போகுது.கல்யாண வயசு வந்திடுச்சுனு சொல்லாத ஜோசியர் இல்லை.ஆனா,நம்ம தான் இன்னும் ஜாதக குறிப்பு கூட எழுதாமல் இருக்கோம் “

“ உம்ம்..ஜாதக குறிப்பு .அதுல உங்க மகனுக்கு என்ன உத்தியோகம்னு போடுவ ? தண்டச்சோறுனா ?”

என்ற விஷ்வனாதனின் குரலுக்கு ராதா குலுங்கி சிரிக்க,பார்வதியோ விடாது தொடர்ந்தார்.

“இது என்ன பேச்சு.அவனுக்கு படிப்பில்லையா? தொழிலில்லையா ? தட்டுத்தடுமாறி கரையேறியிருந்தாலும் அவன் பி.ஈ பாஸ் அப்புறம் தொழில் உங்களுக்கு அப்புறம் அவனுக்கு தான்.இப்படி எல்லாமிருக்க என் பையன் எந்த வகையில் குறைஞ்சு போயிட்டான்.

பேசாமல் ஜோசியர் சொல்படி அவனுக்கு கல்யாணத்தை முடிங்க.என் பையன் நல்லா பொறுப்பா வருவான் “

என்ற பார்வதியின் சற்று அதிர்ந்த பேச்சில் அவரது வார்த்தைகளை மௌனமாக ஏற்றுக் கொண்ட விஸ்வநாதன்,அனைத்து ஜோசியர்கள் சொன்னதை அசைபோட்டபடி நகர்ந்தார் .

ஒன்றல்ல ரெண்டல்ல கிட்டத்தட்ட ஐந்து ஜோதிடர்களும் சொல்லி வைத்தாற்போல் ,
‘ அடுத்த வருஷத்துக்குள்ள தம்பிக்கு கல்யாணத்தை முடிங்க நாதன்.பையனுக்கு இது தான் கல்யாண நேரம். திருமணத்திற்கு பிறகு நீங்க நினைக்கிற மாதிரி நல்ல பொறுப்புடன் இருப்பான்.தாமதிக்காமல் இப்போவே பார்க்க ஆரம்பிங்க,அப்போதான் விரைவில் திருமணம் முடியும் ‘

இந்த பேச்சு விஸ்வநாதன் மனதில் மட்டுமல்ல யுவனின் மனதிலும் ஓடிக் கொண்டுதானிருக்கறது.வீடு துவங்கி கடை வரை விஸ்வநாதன் யாரிடம் குறைபாட்டாலும் அவர்கள் சொல்லும் ஒரே வரி,
“அவனுக்கு கல்யாணம் பண்ணி வைபா!அதெல்லாம் அவன் நல்ல படியா வாழ்ந்திடுவான். “

காதில் விழுந்த வரியை மனதோடு பதிந்து போக,திருமணம் செய்து கொண்டால் வீடு, சமூகத்தில் மரியாதை மற்றும் பெரு வாழ்வு கிடைக்குமென நம்பிக் கொண்டான்
யுவன்.




*******






சூரியனுக்கு இந்தியாவில் ரெண்டே ரெண்டு இடத்தில் தான் கோயில் உள்ளது.அதிலும் உருவ வழிபாடு திருவிடைமருதூர் சூரியனார் கோயிலில் மட்டுமே உண்டு.நவகிரகங்களை ஒரே இடத்தில் பார்க்க கூடியதும் நவக்கிரகமே மூலதனமாக கொண்ட கோயில் இது மட்டுமே.அத்தகைய கோயிலுக்கு தான் தற்பொழுது யுவன் குடும்பத்தினர் வந்திருந்தனர்.பார்வதி,விரைவில் இரு மக்கட்செல்வத்தின் திருமணம் முடிந்தால் இக்கோவிலுக்கு அவர்களுடன் வருவதாக வேண்டியிருந்தார்.அதற்கான காலம் இத்தனை வருடத்தில் கிடைக்காது போக, தற்பொழுது அனைவரிடமும் சொல்லி அவர்களை அழைத்துக் கொண்டு வந்திருந்தார் .

வித்யாவிற்கு மனதோடு ஆயிரம் காயங்கள் இருந்தாலும் யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை .
மனதோடு , ‘ யுவனுக்காக’ என்று சொல்லிக் கொண்டவள்.தற்பொழுதும் அமைதியாக யுவனை பின்தொடர்ந்தாள்.வருகின்ற வழியில் யாழை மையப்படுத்தி இவளிடம் பலமுறை ராதா பேச முயற்சிக்க, சிரிப்புடனே அவள் முயற்சியை எட்டி நிறுத்தியிருந்தாள் .

மூச்சினை இழுத்து விட்டவன்,வித்யா பக்கம் திரும்பி

“ உனக்கு இங்க இருக்க பிடிக்கலைனா சொல்லு இப்போவே கிளம்பிடலாம்”

என்றதில் , ‘ அதை இப்போ கேட்கிற ? ’ என்ற அர்த்தத்தில் அவனை முறைத்தவள் அவனிடமிருந்து விலகி நடக்கலானாள்.பின் பார்வதியின் ஆசையின் பேரில் அனைவரும் சூரியனார் கோயிலுக்கு சென்றனர்.



அதுவரை வித்யாவிடம் பேசாத பார்வதி,திடீரென அனைவர் முன்னிலையிலும்,

“ இந்த கோவிலில் நேந்திகிட்டா வேண்டின வரம் உடனே கிடைக்குமாம்.நான் எனக்கு பேரப்பிள்ளை வேணும்னு நேந்திகிட்டேன்.அதுக்கு மடிக்கிட்டு பிள்ளை சுமக்க போறவ தான் கோவிலை வலம் வரணும்.அதனால
வா! வந்து மடி கட்டிகிட்டு அடிப்ரத்தச்சனம் பண்ணிட்டு வந்திடு!”


என்று அதிகார குரலில் கூறியிருந்தார். அதில்,’யாரை சொல்கிறார் ’ என அனைவரும் குழம்ப,பின் அவர் பார்வையும் பேச்சும் வித்யாவிடம் இருப்பதை கண்டுக்கொண்டு, அவளை நோக்கி அனைவரும் துளைக்கும் பார்வை பார்க்க,ஒரு நொடி வித்யா வெலவெலத்துப் போனாள்.

உறவுகளின் துளைக்கும் பார்வை, அதன் பின் மறைந்திருக்கும் ‘ உனக்குத் தான குழந்தை இல்லை !’ என்ற பொருள் அவளை நடுங்க வைத்தது.நடுக்கத்துக்கு பிடிமானம் தேடி அவள் யுவனை பார்க்க,அவனோ மடி நிரப்பும் பொருட்களோடு அன்னையின் பின் நின்றிருந்தான்.பார்த்தவள் கண்களில் நொடியில் கண்ணீர் கூடிக் கொண்டது.

அன்பாக,’ உனக்கான வேண்டுதல்! ‘ என்றிருந்தால் கூட பரவாயில்லை.
யாரோ போன்ற பார்வை,நீ எனக்கு அந்நியமே என்று எட்டி நிறுத்தும் விதம்,அதனுடன் உணவு உண்ண கூட அழைக்காத அவரது கவனிப்பு மற்றும் ராதா குடும்பம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பார்வையில் ,’உனக்கு தான குழந்தை இல்லை!நீயே கோவிலை சுற்றி வா’ என்று கோடிட்டு காட்டிய இடம் பெரிதாக வலிக்கச் செய்தது என்றால் யுவன் நின்ற இடம் இதயத்தை பெரும் பாரமாக அழுத்தியது.அதில் உண்டான கோபம்,ஆத்திரம்,வெறுப்பு அனைவரது பார்வையும் தன்னிலிருந்து மாற்ற வேண்டும் என்ற வேகத்தில்,

“குழந்தை வரம் எனக்கு மட்டுமா வேணும்.உங்க பையனுக்கும் தான!அவரையும் என்கூட மடிக்கட்டிகிட்டு சுத்தி வரச் சொல்லுங்க “

என்று வித்யா கூறியிருக்க,இப்பொழுது அரண்டு விழிப்பது பார்வதியின் முறையானது.



நீரும் நீ
நெருப்பும் நீ !
பெருங்காதலால் தள்ளி நிற்கிறேன்
தணிந்து எழுவேனா !
தகித்து மடிவேனா !

- வித்(யா) யுவன்



-தொடரும்


கதையின் கருத்துத் திரி 👇


 
Last edited:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நின் காதல் காணக் காத்திருக்கிறேன்
 

Attachments

Last edited:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 4 :


“குழந்தை வரம் எனக்கு மட்டுமா வேணும்.உங்க பையனுக்கும்
தான ! அவரையும் என்கூட
மடிக்கட்டிகிட்டு சுத்தி வரச்சொல்லுங்க “



என்னும் வித்யாவின் வார்த்தைகளை யாரும் எதிர்பார்க்கவில்லை,யுவன் உட்பட.! வித்யாவின் பேச்சுத் தவறு என்றில்லை.அது செல்லப்பட்ட விதமும் இடமும் அவனை அவனது சுயமரியாதையைச் சற்று இறக்கி காட்டியது.அதாவது பார்வதி அம்மா வித்யாவுக்குச் செய்ததை,வித்யா யுவனுக்குச் செய்திருந்தாள்.


அன்னையினை அதிகச் சுமை தூக்க விடக்கூடாது என்று எதார்த்தமாக அவரது கைகளிலிருந்து வாங்கிய பை. அதனுள் மடி பொருட்கள் இருக்குமென அவன் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை.அன்னை மடிப் பொருட்களைச் சுட்டிக் காட்டிய நொடி,‘உனக்கும் தெரிந்து,நீயும் உடன்பட்டு என்னை அனைவர் முன்பு மடி சுமக்க சம்மதத்தியா?’ என்பது போல் வித்யா பார்த்த நொடி தான் அறிவான், தன் கையில் உள்ளது தான் மடிப்பொருட்கள் என்று !



அதற்கு மறுத்து தலையசைத்துப் பதில் பேசும் முன்,வித்யாவின் வார்த்தைகள் ஈட்டியாய் தாக்கி நின்றது.


'இத்தனை பேர் முன்னிலையில் தன்னை எப்படி எடுத்துக் காட்டப் பார்க்கிறாள் ? தன்னால் தான் குழந்தை இல்லையென்றா ? '
என்ற வினாவையே தன்னில் விடையாகப் பதித்துக் கொண்டவன் அசையாது பார்த்திருக்க,அதற்குள் பார்வதி வித்யாவைக் கடிய போக, கை நீட்டி தடுத்தவன் ,மடிப்பொருட்களைத் தன்னுடைய வேஷ்டி துண்டில் மடித்து இடையோடு கட்டிக்கொண்டான். மீதி பாதியை வித்யாவின் சேலை தலைப்பில் மடித்து அவளது இடையினில் அழுத்தி கட்டியவனின் அழுத்தம் சொல்லியது அவனது கோபத்தின் அளவை.



யாருமே எதிர்பார்க்காத நொடி.வித்யாவை ஆட்டிப்படைக்கும் அவனது கோபத்தின் நொடி.
இனி அங்கு அனைவரும் பார்வையாளர்கள் மட்டுமே.வெறுமனே “ வா “ என்று அழைத்த யுவன் அடிபிரதட்சணம்
செய்யத் துவங்க,வித்யாவும் நொடிகளின் அனலில் அவனைப் பின் தொடர்ந்தாள்.முழுதாகச் சுற்றி வந்தவர்கள் கடவுளை வணங்கிய நொடி, யுவன் “ கிளம்பலாம் “ என்றிருந்தான்.


அதில் பார்வதி,” தம்பி !” என்று துவங்கி,
“நீ வர்றியா இல்லையா?”
என்று வித்யாவிடம் கத்தியவன் ,அன்னையின் முகம் பார்க்க மறுத்து அங்கிருந்து நகர்ந்திருக்க,
‘ சென்று வருகிறேன் ‘ என்று சொல்லுமளவு கூடத் தனக்கென யாருமில்லை என்ற கசப்பான உண்மையை ஒரு மிடறு தன்னிலே முழுங்கியவள் ,சலனமில்லாமல் அவனைப் பின் தொடர்ந்தாள்.




**


2016 மதுரை :

வித்யா சென்னையில் முதுகலை பட்டப்படிப்புப் படிக்கச் சென்று ஒருவருடம் முடிந்திருந்தது.
இன்னும் ஒரு வருடத்தில் படிப்பு முடியயிருக்க,வாழ்க்கையைப் பற்றிய பற்பல கனவு அவளுள்.
மாதம் ஒருமுறை விடுமுறையில் வீட்டிற்கு வருபவளுக்கு இராஜ உபசரிப்பு தான். வாழ்க்கையில் கவலைகளை அறியாத காலம் அக்காலம்.நொடி நொடியும் அனுபவித்து வாழ கற்றுத் தந்திருந்தது அந்த வயதும்,அவளது படிப்பும் !


இங்கு மதுரையிலோ தேவகி -சுப்பிரமணியம் தம்பதியினர் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர் .ஜோசிய‌ர் சொன்னது போல் ஜாதகக்குறிப்பு வெளியிட்டு ஒரு மாதத்திலேயே நிறைய ஜாதகங்கள் வந்து குவிந்து நிற்க,அதனை நிதானமாய் அலசி ஆராய்ந்து தேர்வு செய்வதில் சற்று திணறி தான் போயிருந்தனர்.ஒரே பெண்ணின் வாழ்க்கை என்பதால் சற்று நிதானமே காத்தனர்.முதல் ஆறுமாதம் இவர்கள் போட்ட சல்லடையால் பல ஜாதகங்கள் கழிந்திருக்க,அடுத்த ஆறு மாதத்தில் படித்துக் கொண்டிருக்கும் பெண் என்ற காரணம் காட்டி இவளது ஜாதகம் மாப்பிள்ளை வீட்டினரால்
கழிக்கப்பட்டது.அதில் பெரியவர்கள் சற்று துவள துவங்கும் நேரம் விடிவெள்ளியாய் அமைந்தது யுவனின் ஜாதகம்.பெயர் பொருத்தம் துவங்கி முக்கியப் பொருத்தம் வரை அத்தனை பொருத்தமும் அருமையாய் பொருந்தி இருந்ததது.மிக முக்கியமாக வித்யாவின் படிப்பை தொடர அவர்கள் வீட்டில் சம்மதி‌த்து இருந்தனர்.
ஓரளவு அனைத்து கட்ட பேச்சு வார்த்தையும் தரகர் மூலம் முடிவுற்று இருக்க, மாப்பிள்ளை வீட்டில் ‘ பெண் பார்க்கும் வைபவம் ‘ எப்போது எனக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
மகிழ்ச்சிக்குப் பதில் பயந்தும் குழம்பியுமே இருந்தனர் வித்யாவின் பெற்றோர் .
மகளிடம் எப்படிக் கூற போகிறோம் என்ற பயம்,இந்த சம்பந்தம் சரிவருமா என்ற குழப்பம் என்று ஆழ்ந்திருக்க, அந்நேரம் சரியாக அலைபேசியில் அழைத்திருந்தாள் வித்யா.எப்பொழுதும் போல் இலகுவாகப் பேச முயன்று பேசிய சுப்பிரமணியம் பாதியிலேயே மனைவியிடம் அலைபேசியை நீட்டியிருந்தார்.


வழக்கமான நல விசாரிப்புகள் முடிய,தேவகி பேச்சைத் துவங்கினார்.

“ஏன் பாப்பா உன்னோட ஃபிரண்ட்ஸ்க்கு எல்லாம் கல்யாணம் முடிஞ்சிருச்சுல.நீயும் ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது!”

“அதுக்கென்ன மா பண்ணிட்டா
போச்சு!”

“ ஹே பாப்பா! நிஜமா தான் சொல்லுறியா ?”

“ அம்மா! என்ன இவ்ளோ சீரியஸ் ஆகிட்டீங்க. நான் சும்மா பதிலுக்குத் தான் சொன்னேன். நீங்களும் சும்மா தான சொன்னீங்க? “

“ இல்லை பாப்பா. அம்மா நிஜமா தான் சொல்லுறேன்.உனக்கு நல்ல வரன் வந்திருக்கு.எப்போ பார்க்க வரன்னு கேட்கிறாங்க..!”

“என்னம்மா திடீர்னு.நான் இன்னும் படிச்சே முடிக்கலை! அதற்குள்..!”

“ இரு பாப்பா! உனக்குப் படிச்சு முடிக்கணும் அதுதானே! அதெல்லாம் சொல்லி தான் வரன் பார்த்தோம்”

“ பார்த்தீங்களா? எவ்வளவு நாளா?”

“என்னது நாளா? உலகம் தெரியாத பொண்ணா இருக்கப் போ! ஒரு வருஷம் தேடி, நீ படிக்கணும்னு சொன்னதுக்குச் சம்மதிச்ச ஒரே வரன்”

“ என்னம்மா? நிஜமா எனக்குப் புரியலை.முதல்ல சும்மா கேட்கறீங்கன்னு நினைச்சேன்.அப்புறம் சரி கொஞ்சம் டைம் கிடைக்கும் பார்த்தால் இப்படிச் சொல்றீங்க ! அதுலயும் நான் படிக்க வேற யாரோ அனுமதி தரணுமா?இப்போ என்னோட கல்யாணத்துக்கு என்ன அவசரம்? கொஞ்சம்
பொறுங்க ;நான் படிச்சு வேலைக்குப் போயிடுறேன்,அப்புறம் பார்ப்போம் ”

“ வித்யா! நல்ல வரன், இந்த வருசத்துக்குள்ள முடிக்கணும்னு ஜோசிய‌ர் சொல்லிட்டாரு.கண்டிப்பா நீ கல்யாணத்துக்கு அப்புறமும் படிக்கலாம். இரு அப்பாகிட்ட ஃபோன் தரேன்”


வித்யாவுக்கு அழுகை வரும் போல் இருந்ததது.என்றுமே தேவகி அவளை இத்தனை வற்புறுத்தியது இல்லை.முயன்று கட்டுப்படுத்திக் கொண்டவள் தந்தையின் வார்த்தைக்குச் செவி கொடுத்தாள்.


“ பாப்பா “

“அப்பா”

“நாங்க உன்னை ரொம்பக் கஷ்ட படுத்துறோமாடா ?”

“அப்படி இல்லைப்பா! ஆனா, அதுக்குள்ள என்ன அவசரம் ?”

“எல்லாம் உன்னோடு நல்லதுக்குத் தான் பாப்பா. உன்னோட படிப்பு எப்பவும் தொடரும்.நல்ல இடம்.விசாரிச்ச வகையில் நல்ல குடும்பம், நல்ல பையன்.நீ சரின்னு சொன்னா நாங்களும் பையன் வீட்டில் பேசிடுவோம். என்னடா சொல்ல?”

‘இத்தனை வருடத்தில் தன்னிடம் எதுவும் கேட்காத,எதற்கும் கட்டுபாடு விதிக்காத தாய் தந்தை;நல்லதை மட்டுமே பார்த்து பார்த்து செய்த தாய் தந்தை; அவர்களுக்கென எதையும் யோசிக்காது தன்னை மட்டுமே முன்னிறுத்தி அத்தனையும் செய்த தாய் தந்தை;எல்லாவற்றிற்கும் மேல் வாழ்க்கையைக் கற்று தந்த இரு உயிர்கள், வாழ வைக்காமலா போய் விடும் ! ’

என்று யோசித்து, இல்லையில்லை அவர்களுக்காக மட்டுமே
யோசித்துச் சம்மதம் தெரிவித்திருந்தாள்.

அலைபேசியை வைத்து பின்னும் சுப்பிரமணியத்திற்குத் தான் மனம் தாங்கவில்லை.அவரது மன வருத்தத்தை உணர்ந்த தேவகி தான் சூழ்நிலையைக் கையிலெடுத்துக் கொண்டார்.

“இப்போ எதுக்கு அப்பாவும் பொண்ணும் முகத்தைத் தூக்குறீங்க?”

“இல்லை தேவா! பொண்ணு ரொம்ப வருத்தப்பட்டுப் பேசுறா! ”

“அட நீங்களும் ஏங்க புரியாம பேசுறீங்க! கல்யாணம் தான பண்ணி வைக்கப் போறோம்.நல்ல விஷயம் தான! நல்லது நடக்கும் போது முகத்தைத் தூக்காதீங்க! நம்ம பொண்ணு கல்யாணம்ங்க,கொண்டாட்டமா செய்ய வேண்டாம்!சிரிச்ச முகமா இருங்க.
அதோட நம்ம எவ்வளவு தெளிவா முடிவெடுத்துக் கல்யாணம் பண்ணி வைக்கப் போறாமோ அதைப் பொருத்து தான் அவள் வாழ்க்கை அமையும்.அதனால குழப்பம் வேண்டாம்.எடுத்த முடிவுல தெளிவா இருங்க ”

என்று அவர் தந்த தைரியத்தில் தான் சற்றுத் தெளிந்தார் சுப்பிரமணியம்.
‘கல்யாணம் தானே!நல்லது தானே செய்யப் போகிறேன் ! அவள் வாழ்வின் முக்கியக் கட்டம் இது; அதனை அத்தனை பிரமாண்டமாகச் செய்ய வேண்டும்’ என்று எண்ணி கொண்டவர் மெல்ல மெல்ல தான் கலக்கத்திலிருந்து மீண்டார்.


**
2016 கும்பகோணம் :

நகரும் நொடியில் அவனது நினைவின் மொத்த துளிகளும் ஒரே இடத்தில் குவிந்திருந்தது.
யுவன்,பெண்களைத் திரும்பி பார்த்திடவன் இல்லை;
பெண் வாசனை அறிந்திடாதவன்.
அன்னையின் சேலை வாசனை தவிர அவன் சுவாத்திற்குள் எந்தப் பெண் வாசமும் நுழைந்ததில்லை.
தங்கையைத் தவிர எந்தப் பெண்ணையும் தன்னுடைய வண்டியில் ஏற்றியது இல்லை.எல்லாம் தாண்டி அன்னை,தங்கையிடம் கூடப் பகிர முடியாத அவனது தனிபட்ட பக்கங்கள் இன்னும் பத்திரமாய்ப் புத்தம் புதுப் புத்தகம் போல் அவனுடன் மட்டுமே பயணிக்கிறது.இவை அனைத்திற்கும் பதிலாய் அவனது வாழ்விற்குத் துணையாய் ஒரு பெண்.
பெண் என்னும் போதை அவனுக்குப் பிடித்திருந்தது. அவனையும் பிடித்திருந்தது.


ஒருநாள் விஸ்வநாதன்,
“நல்ல வரன்.பொருத்தமும் நல்லா இருக்கு.இன்னும் பொண்ணு வீட்ல மட்டும் பேசணும்.அதுவரை அவனை ஒழுங்கா கடைக்கு வந்து வியாபாரம் பார்க்க சொல்லு! பொண்ணைப் பெத்தவங்க விசாரிக்க வருவாங்க தான ! நானும் பக்கத்துக் கடையில் எல்லாம் சொல்லி வச்சிருக்கேன்.
இந்த ஒரு
விஷயத்திலாவது சரியா நடந்துக்கச் சொல்லு “

என்றவர் பார்வதியிடம் எச்சரித்திருந்தார்.இந்த தகவல் யுவனிற்குச் சென்றடைய, அதன்பின் ஆளே மாறிப் போயிருந்தான்.அதிலும் கடைக்கு
வருவோர் போவோர் வர போகும் பெண்ணுடன் இணைத்து கேலி செய்ததில் ,’ எப்போதடா அவளைப் பார்ப்போம்? தவிக்கும் மனதை அவளது விழி அசைவில் தணிய செய்வோம் ‘ என்று ஏங்க ஆரம்பித்திருந்தான்.

**
இன்று


கும்பகோணத்தில் பேரு‌ந்து ஏறியவர்கள் தற்போது வரை பேசிக் கொள்ளவில்லை.அதிலும் யுவன் மட்டுமாவது உணவு உண்டான்,வித்யா அதுவுமில்லை. ஒருமுறை மட்டுமே அவளை உண்ண அழைக்க,அவள் மறுத்ததில் கட்டாயப்படுத்தவில்லை.
அவன் இருந்த கோபத்தில் அவளிடம் அவன் பேசியதே பெரிய விஷயம்.

‘தன்னை ஏன் அப்படி ஒரு பார்வை பார்த்தாள்! தான் அவளை எப்படிப் பரிகாரம் செய்ய அனுமதித்து இருப்பேன்! ஒரு நொடி, ஒரே ஒரு நொடி தன்னை நம்பி, வார்த்தைகளை விடாது இருந்தால் தான் சூழ்நிலையைக் கையிலெடுத்து அன்னையைச் சமன் செய்து பரிகாரம் செய்வதை மாற்றி இருப்பேனே! ஏன் தன்னை அவள் நம்பவில்லை! அன்னை தந்த பையைக் கையில் வைத்திருந்ததால் தானும் அன்னையின் வேண்டுதலிற்குத் துணை என்றாகி விடுமா? இவளுக்கு ஏன் தன்னைப் புரியவில்லை! ஏன் நம்பவில்லை?’


இதே விஷயத்தை இந்த ஒரு விஷயத்தை மட்டுமே ஐந்து மணி நேர பயணம் முழுவதிலும் யோசித்து வந்திருக்கிறான்.இதை புரியாத வித்யாவோ கும்பகோணம் சென்றது துவங்கி அவள் நடத்தப்பட்ட விதம்,யுவன் தன்னை உணவுண்ண அழைக்கக் கூட மறந்து அன்னையின் உபசரிப்பில் லயித்தது,அங்கு யாரும் தன்னை ஒரு பொருட்டெனக் கூட மதியாதது இறுதியில் அத்தையின் பிள்ளை வரம் வேண்டுதல்,அதனை சொல்லிய விதம்,அதற்கு யுவனின் ஒத்துழைப்பு, தான் பதில் பேசியதில் உண்டான கோபம்,இத்தனை நேரம் தான் சாப்பிடாததையும் மறந்து அவன் இருக்கும் போக்கு !’


என அத்தனையும் அவளது இடத்திலிருந்து யோசித்தவள் கொண்ட வேதனை யாவையும் தன்னில் அடக்கி தன்னுள்ளே ஒடுங்கி கொண்டிருந்தாள்.


சரியாக வீடு திறந்து ஒரு மணி நேர முடிவில்,யுவன் மனம் கேட்காது,

“ சாப்பிடலையா?”

என்றிருக்க,அதுவரை அடங்கியிருந்த உணர்வுகளை வெடித்துச் சிதறியவள் விழியின் ஓரத்தில் தொடர்ந்து வழியும் கண்ணீர் தடத்தோடு,

“உனக்கு என்னைய பிடிக்கவே இல்லையா யுவன் ? “

என்றிருந்தாள்.

உன்
விழியின் ஓரத்திலும்
இதழின் வளைவிலும்
ஒளித்து வைத்திருக்கிறேன்
என் மொத்த சந்தோஷத்தை!

- வித்(யா)யுவன்


- தொடரும்
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5 :

“உனக்கு என்னைய பிடிக்கவே இல்லையா யுவன் ?”

என்ற வித்யாவின் வார்த்தைகளில் தான் எத்தனை ஏக்கம்! இவ்வார்த்தைகளைக் கேட்ட யுவனிற்கு ஓரிரு நொடிக்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.விலகி நின்றவன் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள,அவனது அணைப்பில் எத்தனை ஆறுதல்.மறுபடியும் வித்யா ஏதோ பேச வர,அவளது இதழில் விரல் வைத்து தடுத்தவன்,
இருக்கரங்களால் அவளது முகத்தை ஏந்தி,தன் முகத்தை அவளில் புதைந்து ஆழ்ந்த மூச்சுக்களால் தன்னையே சமன் செய்யப் பார்த்தான். அவளுடன் மட்டுமே அவனது உணர்வுகள் என்றும் கட்டுக்குள் இருப்பதில்லை. அது கோபம் என்றாலும் சரி! தாபம் என்றாலும் சரி ! அதீத உணர்வின் வெளிபாடாக அவளது நெற்றியில் ஆழ்ந்து முத்தமிட்டவன் மறு நொடி தன்னைச் சமன் செய்து அவளிடம் பேசத் துவங்கினான்.

“ உன்னை மாதிரி எனக்கு நிறைய யோசிக்கத் தெரியாது.இந்த வார்த்தை உன்னை எவ்ளோ காயப்படுத்தும்னு தெரியாது! ஆனா, இந்த விஷயத்தை இப்போ பேசிடலாம்.

ஆமா,எங்க அம்மா கையால சாப்பிடும் போது உன்னை மறந்துட்டேன் தான்.நிஜமா சாரி! அதைத் தவிர வேற என்ன சொல்ல
நீ இப்போ என்னை எப்படித் தாங்குறியோ அதே மாதிரி எங்க அம்மா என்னை இருபத்தி அஞ்சு வருஷம் தாங்குனாங்க ! மீதி அவங்க வாழ்ற நாள் வரை என்னை இதே மாதிரி
தாங்குவாங்க ! சோ அவங்களைப் பார்த்ததும் ஒரு எக்சைட்மென்ட்ல அப்படி ஆகிருச்சு!
இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கிறேன் ”

என்று முடித்தவன் கோயிலில் அவள் பேசியது பற்றிக் கேட்காமல் விலக, ஏதேதோ பேச காத்திருந்தவள் அவனது விளக்கத்தில் அவள் பக்க பேச்சை வேகமாக அடுக்கினாள்.

“ஆமா உங்க அம்மா என்ன செஞ்சாலும் சரி! நீ உங்க அம்மாக்காக என்ன செஞ்சாலும் சரி! அப்படினா நடுல நான் யாரு? என்னைக் காயப்படுத்துற உரிமையை யார் உங்களுக்கு எல்லாம் தந்தது! என்னை ஒரு வாய் சாப்பிட சொல்ல அவங்களுக்கு மனசில்லை.ஆனா,அத்தனை பேர் முன்னாடி எனக்குக் குழந்தை இல்லைனு மட்டும் சொல்லி காட்டுவாங்களா !இது என்ன நியாயம்?”

“ போதும் வித்யா! அவங்க செஞ்சதை தப்புன்னு சொல்ற
நீயும் அதே தப்பை தான் செஞ்சுருக்க. எங்க அம்மா உனக்குச் சொன்னதை நீ எனக்குச் சொன்ன..! உனக்குத் தெரிய வேண்டாமா வித்யா, நான் இந்தப் பரிகாரம் எல்லாம் உன்னைச் செய்ய விடுவேன்னானு! கையில அந்தப் பை இருந்தால் நானும் சம்மதித்தேன் என்று ஆயிடுமா?
நீ என்னை ஒரு பார்வை பார்த்த தெரியுமா! அப்பதான் எனக்கே புரிஞ்சது என் கையில் உள்ளதுதான் அந்தப் பை-னு !

எனக்கு உன்னைப் பிடிக்குமானு கேட்கிற? என்னை நம்பக் கூட யோசிக்கிற?இந்த ரெண்டு நாள் தவிர,நான் பார்க்கிற விதத்தில் கூடவா என்னைப் புரியலை! என்னோட உரிமை தெரியலை! இதெல்லாம் உணரனும் வித்யா!”

என்று முடித்தவன் வேக எட்டுகளில் நகரத் துவங்கி,பின் ஒரு நொடி நின்று அவளைத் திரும்பி பார்த்தவன்,

“ என்னை மாதிரி பசங்களுக்கு,அம்மான்ற கேரக்டர் மட்டும் லைஃபில் இல்லைனா மெண்டல் பிரஷர் வந்து எப்பவோ காலி ஆகியிருப்போம் !
யூ நோ வித்யா,ஐ ம் நாட் பெர்பெக்ட்.
எஸ், யூ மேட் மீ கம்பிளீட்.பட் க்ஷு மேட் மீ அலைவ்”

என்றவன் நகர்ந்து சென்றிருக்க,வித்யா நகராது அவனையே பார்த்திருந்தாள்.

2016 மதுரை:

“பெண்ணை அழைச்சுட்டு வாங்க “

என்ற உறவினரின் குரலுக்கு,வித்யாவின் சொந்தங்கள் உள்ளே சென்று அவளை அழைத்து வந்திருந்தனர்.

மேக நீலத்தில் தங்க ஜரிகை வைத்த பட்டுப்புடவை அதற்குப் பெரிதும் அலட்டல் காட்டாத நகைகள், காதோடு இசைந்தாடும் சிறு வைரஜிமிக்கி அதற்குப் பொருத்தமாய் ப்‌ரேஸ்லட் மற்றும் மோதிரம் என அத்தனை அழகாக மிளிர்ந்தாள் வித்யா.முதலில் வணக்கம் வைத்து சிற்றுண்டி வழங்கபட்டு முடிந்திருக்க,வித்யாவிடம் யுவனையும்,யுவனிடம் வித்யாவையும் முறையே அறிமுகப்படுத்தி வைத்திருந்தனர்.

படிப்பு,வேலை எனக் கனவில் இருந்தவளுக்குத் திடீர் திருமணம் தகவல் குழப்பத்தைத் தந்திருக்க,பெரிதாக யுவனை ஆழந்து பார்த்திருக்கவில்லை வித்யா! ஆனால், யுவன் கவனித்து இருந்தான்.அவளது உச்சி முதல் பாதம் வரையிலான ஆராய்ச்சியில்,
தனக்கு இவள் சற்று அதிகமெனவே எண்ணிக் கொண்டான்.ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

அறிமுகப்படலம் முடிய,வயதில் மூத்த உறவினர் ஒருவர்,

“ பொண்ணு மாப்பிள்ளையும் பேசிக்கப் போறீங்களாபா ?’ என்று கேலி தோணியில் கேட்டு முடிக்க,அதற்கு விஸ்வநாதன் மறுத்து சொல்லு முன்,எழுந்து நின்றிருந்தான் யுவன்.அந்நொடி கலகலவெனச் சிரிப்பலை அவனைச் சுற்றி! யுவன் அதனைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.

வீட்டிலே விஸ்வநாதன் சொல்லி தான் அழைத்து வந்திருந்தார்,
“இங்க பாருங்க. பொண்ணு மாப்பிள்ளையும் தனியா பேசட்டும்னு ஏதாவது ஒரு கெழடு சொல்லும்.அதுக்காக சார் பேச போயிட கூடாது.
நான் காரணமா தான் சொல்லுறேன்.பொண்ணு ஏதாவது கேட்டு இவன் தத்தி மாதிரி முழிக்கக் கூடாது. ஏற்கனவே அதை இதைனு சொல்லி தான் கல்யாண ஏற்பாடு பண்ணியிருக்கேன்.அதனால நான் சொல்றபடி அவனை நடந்துக்கச் சொல்லு!” என்று ஒன்றுக்கு மூன்று முறை சொல்லியே அழைத்து வந்திருந்தார்.அதைக் கொண்டு பார்வதி அவனை அடக்கப் போராட எதையும் கண்டு கொள்ளாது வித்யாவுடன் பேச எழுந்து நின்றிருந்தான் யுவன்.

கலகலவென எழுந்த சிரிப்பலையுடன் வித்யாவின் அக்கா முறை உறவினர் இருவரையும் அறைக்குள் அழைத்துச் சென்றிருந்தார்.அவர் சென்ற ஓரிரு நிமிடங்களில் யுவன்,

“ ஹாய் வித்யா.நான் யுவன். நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.டூ யூ?”

என்று நிறுத்தியவன் அவளை ஆராய்ந்து பார்க்க,முதல் முறையாக அவனது கண் பார்த்தவள்,

“ எனக்குப் படிக்கணும் “

“ படிங்க”

“அதுல உங்களுக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லைல! “

“எனக்கு என்ன கஷ்டம்.பாவம் நீங்க தான் கஷ்டபட்டுப் படிக்கப் போறீங்க “

“ அப்போ உங்களுக்கு ஓகே தான “

“ அட! அப்பா சொன்னாங்க உங்க ஜாதகம் வந்த போதே! நீங்க தாராளமா படிக்கலாம். பட் ஒன் கண்டிசன்..”

“என்ன” என்றவள் ஒருவித பயத்துடன் அவனைப் பார்க்க,

“ நீங்க படிங்க. என்னைய படிக்கக் கூப்பிட கூடாது.முக்கியமா உங்களுக்கு எக்ஸாம் டைம்ல நான் முழிச்சிருக்கணும், டீ போட்டு தரணும்னு எதிர்பார்க்க கூடாது.”

என்றவன் விடாது கேலி பேசி சிரிக்க, வித்யாவுக்கு மனதே அத்தனை இலேசாக இருந்ததது. யுவனும் நண்பர்கள் தாண்டி, முதல் முறையாக இத்தனை தொடர்ச்சியாக இப்பொழுது தான் பேசி சிரித்திருக்கிறான்.இப்படியே தொடர்ந்து யுவன் ஏதேதோ பேசி முடித்தவன் இறுதியில்,

“ நல்லா பார்த்துக்கோங்க உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?ஒன்ஸ் புக் பண்ணிட்டா ரிட்டன் பண்ண முடியாது!”

என்று விளையாட்டாகச் சொன்னாலும், அவளுக்கும் தன்னைப் பிடித்திருக்கிறாதா என்று அவன் கண்களில் ஆராய, வித்யாவோ நேர் கொண்ட பார்வையில்,

“இப்போ தான பார்த்திருக்கோம் அதற்குள் எப்படிச் சொல்ல முடியும்.கொஞ்சம் டைம் எடுத்துக்கலாம் தான?”

என்று கேட்டிருக்க,யுவன் சரி என்றாலும் உள்ளுக்குள் எழுந்த ஏமாற்றத்தைத் தடுக்க முடியவில்லை.பார்த்தவுடன் அவளுக்குப் பிடிக்க வேண்டுமென யுவன் எண்ணவில்லை .ஆனால்,குறைந்தபட்சம் அவளது கண்களில் ஒரு சலன பார்வையாவது எதிர்பார்த்தான்.அதுவும் இல்லாது போனதில் சற்று வாடிதான் போனான்.

நிமிடங்கள் நகர்ந்ததில்,உறவினர்கள் வந்து இருவரையும் அழைத்துச் சென்றிருந்தனர்.இருபக்க பெற்றோர் சம்மதம் பெற்றுக் கொண்டவர்கள்,முறையே சம்பந்த தாம்பூலம் மாற்றிக் கொண்டிருந்தனர்.யுவன் நிகழ்வுகள் அத்தனையிலும் வித்யாவின் கண் பார்த்து காத்து நின்றான்.அவன் கிளம்பும் நேரம் வரையிலும் அப்பார்வை கிடைக்கவே இல்லை.அதே உறவினர்கள் மூலம் வித்யா யுவன் அலைபேசி எண் மாற்றிக் கொண்டிருக்க,சிறு நிறைவுடன் யுவன் அவர்களிடம் இருந்து விடைபெற்றான்.


காத்திருக்கிறேன்
உன் காதல் காண மட்டுமல்ல!
உன் ஒற்றைப் பார்வையில்
என் மொத்த உலகம் சுழல்வதற்கும் !



- வித்(யா) யுவன்

- தொடரும்


கதையின் கருத்துத் திரி 👇

 
Status
Not open for further replies.
Top