All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

“ஆதியின் நிலா” பாகம் 2 கதை திரி

Status
Not open for further replies.

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியின் நிலா part 2 இந்த திரியில் பதிவிடப்படும்....

Part 1 link 👇👇👇

 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீசர் :


“அத்தான் ஒரு குறும்படம் அனுப்புறேன் பார்த்து என்ஜாய் பண்ணுங்க..”

“என்ன நித்து... இப்போ என்னத்த பண்ணி வெச்சிருக்க..”

“ஒன்னுமே பண்ணல... நான் சின்னதா தான் கொளுத்தி போட்டேன்... இங்க பெரிசா பத்திக்கிச்சி.. நீங்க முதல்ல பாருங்க அத்தான்..”

சௌர்யா அவள் அனுப்பிய வீடியோவை பார்க்க... அதில் மித்ரா ஆதியை கன்னம் கன்னமாக அறைந்து கொண்டிருந்தாள்.

மீண்டும் நித்திலாவுக்கு அழைத்தவன் “என்ன நித்து அவனுக்கு இந்த அடி அடிக்கிறா...” என்றான்.

“அதான் சொன்னனே அத்தான்... அது வெறும் குறும்படம் தான்.. இங்க பெரிய GOT சீரிஸே ஓடிக்கிட்டு இருக்கு... உங்க ஆளு அடி பின்னிக்கிட்டு இருக்காங்க...” என்று சிரித்தாள்.


################


“நித்து இவன நம்பாதே... இவன் ஒரு சைக்கோ, பிராடு, வாய திறந்தாலே பொய், பொய், பொய்தான்... க்ரூக்” என்று கத்தினாள் மித்ரா.

‘அதான் தெரியுமே..’ என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவள் வெளியில் அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள் நித்திலா.

நித்திலா முன்னால் மித்ரா தன்னை இப்படி பேசுவாள் என்று எதிர்பார்க்காதவன் முகம் அவமானத்தில் சிவந்தது “மித்ரா... திஸ் இஸ் த லிமிட்... இன்னொரு வார்த்த பேசின... கொன்னுடுவேன்...” என்று உறுமினான் ஆதி..


####################


“உங்கள பார்த்தா எனக்கு பாவமா இருக்கு அத்தான்.. மித்ரா அக்கா போனா என்ன.. அதான் நான் இருக்கேன்ல.. நம்ம சாப்பிடலாம் வாங்க..” என்றாள்.

திரும்பி அவளை முறைத்தவன் “நீ இருக்கிறது தான்டீ எனக்கு பயமா இருக்கு..” என்றான் கோபமாக.

“அத்தான்... எனக்கு இந்த பொய், பித்தலாட்டம், ஏமாத்துறது அப்புறம் கூடவே இருந்து குழிப் பறிக்கிறது இதெல்லாம் கத்துக் கொடுத்த குரு ஒருத்தர் இருக்காரு.. நீங்க எது சொல்றதா இருந்தாலும் அவரதான் சொல்லனும்..”

“உன்னால என் நிம்மதியே போச்சுடீ.. சை..” என்று சாப்பிடாமலே எழுந்து சென்று விட்டான்.

“சரிதான் போடா..” என்று அவன் காதில் கேட்கும்படி முணுமுணுத்தவள் கால் மேல் கால் போட்டுக் கொண்டு ஒரு மகாராணி போல உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீசர் 2:


“நித்து உன்ன கட்டிக்க போறவன் உன் பக்கத்துல தான் இருக்கான்... நீ யார தேடுற..??” அவள் யாரை தேடிக் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்திருந்தும் வேண்டுமென்றே கேட்டான் சௌர்யா.

பேத்தியின் கையில் ஆர்யா அணிவித்த மோதிரத்தை பார்த்தவர் பூரிப்புடன் நித்திலாவை அணைத்து அவளது கன்னத்தில் முத்தமிட்டார்.

“இத்தன வருஷத்துக்கு அப்புறமா இன்னைக்குத்தான் நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்...” விழிகளில் நீர் திரையிட சிரித்துக் கொண்டே கூறிவிட்டு திரும்பிய நிர்மலா எதிரில் வந்து கொண்டிருந்தவனை கண்டதும் அவரது முகத்திலிருந்த சிரிப்பு அப்படியே உறைந்து போனது.


###################


“ஏன் தாத்தா... உங்களுக்கு மித்ரா மட்டும்தான் பேத்தியா என்ன..” என்றான்.

“ஆதி...”

“அவ போனா போகட்டும் விடுங்க... அதான் நித்திலா நாலு வருஷமா என்னையே லவ் பண்ணிட்டு இருக்காளே... உங்களுக்கு தெரியாதா என்ன..??”

“ஆதி... நித்துவ ஆர்யாக்கு கட்டி வைக்கிறதா எல்லாம் பேசி முடிவு பண்ணியாச்சுப்பா...” விஸ்வநாதன் தயங்கி தயங்கி கூறினார்..
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 22:


“பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ...” என்று ஐயர் கூறவும் குடும்பப் பெண்கள் புடைசூழ அரக்கு வண்ண பட்டுப்புடவையில் அழகின் மொத்த உருவமாய் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டாள் நித்திலா...

அங்கு மணமேடையில் பட்டு வேட்டி சட்டை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் கம்பீரமான ஆணழகனாக அமர்ந்திருந்தான் ஆதி.. நித்திலா அவன் அருகில் வந்து உட்கார வைக்கப்பட்டதும் ஐயர் திருமாங்கல்யத்தை எடுத்து ஆதியிடம் கொடுக்க,

“கெட்டிமேளம்... கெட்டிமேளம்...” என்ற குரலில் தாலியை கையில் ஏந்தியபடி நித்திலாவை நோக்கி திரும்பியவன் ஒரு நிமிடம் அதை கட்டாமல் அப்படியே பிடித்திருக்க என்னவென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள். அதற்காகவே காத்திருந்தாற் போன்று அவளை பார்த்து நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்தவன் அப்படியே எழுந்து சென்று மணமேடையின் ஓரமாக கலங்கிய விழிகளுடன் நின்றிருந்த மித்ராவின் கழுத்தில் அந்த தாலியை கட்டினான்.

என்ன நடக்கிறது என்றே புரியாமல் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ந்துபோய் நின்றிருக்க திரும்பி அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன் மித்ராவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

தன் கண்முன்னால் நிகழ்ந்த இந்த சம்பவத்தை நம்ப முடியாமல் பார்த்தவள் நித்திலா அப்படியே மயங்கி சரிய அங்கிருந்தவர்களுள் முதலில் சுதாரித்த சௌர்யா அவள் மயங்கியதை கண்டதும் வேகமாக நித்திலாவை நோக்கி ஓடிச் சென்றவன், “நித்து... நித்து...” என்று அவள் கன்னத்தை தட்ட அவளிடமிருந்து எந்த அசைவும் இல்லாமல் போனதால் பயந்தவன் மீண்டும் பலமாக தட்டினான்.

அப்போதும் அவள் கண் விழிக்காமல் போனதால் “நித்திலா..” என்று அவளை பிடித்து உலுக்க ஆரம்பிக்க அதில் மெல்ல இமைகளை பிரித்தவள் ஒன்றும் புரியாமல் அவனை பார்த்தாள்..

அவள் கண் விழித்ததை உணர்ந்ததும் “ஹப்பாடா.. ஒரு வழியா கண்ண திறந்திட்டா... எழுந்திரும்மா தாயே.. உன்னய எல்லாரும் தேடுறாங்க..” என்று கூறவும் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு லேசாக சிரித்தவள்,

“அட!! கனவு...” என்றாள்.

“கனவா..? என்ன கனவு..?” சௌர்யா புரியாமல் கேட்க,

“ம்ம்ம்....” என்று இழுத்தவள் “அது சும்மா.. பேய் கனவு அத்தான் பேய்ய்ய் கனவு” என்றபடி அவள் எழுந்து உட்கார, “ஓஹ் பேய் கனவா... ராப்பகலா பேயவே நினைச்சிக்கிட்டு இருந்தா இப்படித்தான் பேய்ய்ய் கனவா வரும் நித்தும்மா..”

அவனை முறைத்தவள் “ஆமாமா அந்த பேய் கூடவே ஒரு பிசாசும் வந்துச்சு அத்தான்.. பொம்பள பிசாசு..” என்றதும் இப்போது சௌர்யா அவளை முறைக்க ஆரம்பித்தான்.

அப்போது பரபரப்புடன் அறைக்குள் வந்த விஜயா “சௌர்யா... உன்கிட்ட நான் என்ன சொன்னேன்.. நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க.. நித்துவ எழுப்பி கூட்டிட்டு வரத்தானே சொன்னேன் உன்கிட்ட... நீங்க ரெண்டு பேரும் ஜாலியா பேசிக்கிட்டு இருக்கீங்க... மாமா உன்ன தேடிக்கிட்டு இருக்காங்க.. நீ கிளம்பு முதல்ல..” என்று அவசரமாக அவனை வெளியே அனுப்பிவிட்டு நித்திலாவிடம் “நித்து சீக்கிரம் ரெடியாகி கீழே வா... தூங்கினது போதும்...” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த அறைக்குள் பிரவேசித்தார் நிர்மலா.

“விஜயா... எதுக்கு நித்துவ எழுப்பிவிட்ட... அவ காலையிலதானே வந்தா.. டயர்டா இருக்கும்ல.. தூங்கட்டும் விடு...” என்று கூற

“ஐயோ அத்தை... வர்ரவங்க எல்லாம் நித்துவ தான் கேட்டுக்கிட்டு இருக்காங்க... நானும் இத்தன நேரமா அதை இதை சொல்லி சமாளிச்சிக்கிட்டு இருந்தேன்.. இதுக்கு மேலயும் நித்து வரலைனா நல்லா இருக்காது... அதோட சஞ்சனா வேற நித்துவ தேடிக்கிட்டு இருக்கா..” என்று மாமியாரிடம் கூறிவிட்டு நித்திலாவிடம் திரும்பி “நித்து கண்ணா சீக்கிரம் வந்திடுடா..” என்றவள் நிர்மலாவையும் கையோடு அழைத்துச் சென்றாள்.

நீண்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அன்று அதிகாலைதான் நித்திலா சென்னையில் காலடி வைத்திருந்தாள். அதுவும் அவளது அத்தை மகளான சஞ்சனாவின் நிச்சயதார்த்தத்திற்காக.

இத்தனை நாட்களாக சென்னைக்கு வர மறுத்தவள் இந்த தடவைதான் வந்திருக்கிறாள். அவள் வந்திருப்பதை இன்னமும் அந்த வீட்டினரால் முழுதாக நம்ப முடியவில்லை. அவர்களுக்கு சஞ்சனாவின் நிச்சயதார்த்தம் என்பதைவிட நித்திலாவின் வருகைதான் பெரும் கொண்டாட்டமாக இருந்தது.



#############################




விழாக்கோலம் பூண்டிருந்த வீடு முழுக்க சிறியவர்கள் பெரியவர்கள் என உறவினர்கள் கூட்டம் குவிந்திருந்தது. விஸ்வநாதனின் குடும்பத்தினர் ஆண்களும் பெண்களும் காலில் சக்கரம் கட்டாத குறையாக வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.


மெரூன் வண்ணத்தில் தங்க நிற வேலைப்பாடுகள் செய்யப்பட்ட லெஹெங்கா மற்றும் அதற்கு பொருத்தமான அணிகலன்கள் அணிந்து அழகாக தயாராகி வெளியே வந்த நித்திலாவை ஒரு சில நெருங்கிய உறவினர்கள் பிடித்துக் கொண்டனர்.. அனைவருடமும் பேசிவிட்டு சஞ்சனாவின் அறைக்குள் வந்து சேருவதற்குள் அவளுக்கு போதும் போதுமென்று ஆகிவிட்டது.


அவளைக் கண்டதும் “ஹேய் நித்து.. சீக்கிரம் வா.. எனக்கு ஐ மேக்கப் நீதான் பண்ணி விடனும்னு சொன்னேன்ல...மறந்துட்டியா” என்றாள் சஞ்சனா.

அவளைத் தொடர்ந்து “என்ன கொடுமை சஞ்சனா இது.. நித்து எல்லாம் உனக்கு மேக்கப் பண்ணி விடுற அளவுக்கு காலம் மாறிடுச்சு பார்த்தியா..” என்ற குரலில் சஞ்சனாவைக்கு எதிரில் வைக்கப்பட்டிருந்த ஃபோனை நோக்கியவள் திரையில் தெரிந்தவனை பார்த்து “நீயெல்லாம் சிக்ஸ் பேக் வெச்சிருக்கிறப்ப நான் மேக்கப் பண்ணக் கூடாதா....” என்றாள் நித்திலா பதிலுக்கு.

“பண்ணலாம் பண்ணலாம்... சஞ்சனாவ பார்த்துட்டு எங்க அத்தான் ப்பாஆஆ யார்ரா இந்த பொண்ணுனு கேட்காம விட்டா சரிதான்..”


அதில் கடுப்பான சஞ்சனா “டேய் சஞ்சய் வாய மூடிட்டு இரு.. இல்லைனா கால் கட் பண்ணிடுவேன்..” என்றாள்.

“அடிப்பாவி... உன் எங்கேஜ்மென்டுக்கு என்னால ஊருக்கு வரத்தான் முடியல.. அட்லீஸ்ட் வீடியோ கால் பண்ணியாச்சும் ஜாயின் பண்ணிக்கலாம்னு பார்த்தா,, அதையும் கெடுத்து விட்டுடுவ போலயே..”

“அப்போ நித்து மேக்கப் பண்ணி முடிக்கிற வரைக்கும் வாய மூடிக்கிட்டு பேசாம இரு..” என்ற சகோதரியின் கட்டளையில் அப்போதைக்கு வாயை மூடிக் கொண்டாலும் இடையிடையே ஏதாவது பேசி அவர்களை கலாய்த்துக் கொண்டிருந்தான் சஞ்சய்.

அழகு நிலையப் பெண்களுடன் சேர்ந்து சஞ்சனாவின் ஒப்பனைகளை முடித்துவிட்டு அங்கிருந்து வந்தவள் பாட்டியை தேடிச் செல்ல... நிர்மலா, சாரதா, விஜயா என அனைவரும் விருந்தினர்களை உபசரிப்பதில் மும்முரமாக இருக்க அவர்களுடன் கலந்து கொண்டாள் நித்திலா.

பேத்தியை கண்டதும் மற்றதை மறந்து அவளது அழகில் மெய்மறந்து நின்றார் நிர்மலா. ஒரு காலத்தில் குழந்தையாக தெரிந்தவள் இப்போது அந்த குழந்தைத் தனம் மறைந்து முழுதாக ஒரு பருவப் பெண்ணாக அவளைப் பார்க்கும் போது அவரது உள்ளம் நெகிழ்ந்து போனது. சாரதா, விஜயாவுக்கும் அப்படித்தான் தோன்றியது. அதுவும் சாரதாவுக்கு தம்பியின் மகளை விட்டு கண்ணை பிரிக்கவே முடியவில்லை.

அவள் வயது பெண்கள் சிலர் நித்திலாவை அழைக்க பாட்டியிடம் கூறிவிட்டு சென்றவள் தோட்டத்தில் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள். ஆளாளுக்கு ஏதேதோ பேசி சிரித்துக் கொண்டிருக்கும்போது ஒருத்தி,

“நித்து... அந்த அண்ணா உன்னையே பார்த்துட்டு இருக்காங்க..” என்று கூற “யார்..?” என்று கேட்டபடி அவள் சொன்ன திசையில் நோக்கியவள் அங்கு நின்றிருந்தவனைக் கண்டதும் முகம் மலர “அர்ஜுன்..” என்றாள்.

அவள் தன்னை கண்டுவிட்டதை உணர்ந்தவன் மென்னகையுடன் அவளை நோக்கி வர இவளும் அவனை நோக்கி சென்றவள்,, “ஹேய்... வாட் எ சர்ப்ரைஸ்… உன்ன இங்க பார்ப்பேன்னு நினைக்கவே இல்ல அர்ஜுன்..” என்று கூற, “விக்ரம் இன்வைட் பண்ணிருந்தான்.. உங்க வீட்டு விஷேசம்னா வராம இருக்க முடியுமா.. பட் நீ வருவேன்னு நான் கூட எதிர்பார்க்கல.. நீதான் ஏதோ வேண்டுதல் மாதிரி சென்னை பக்கமே வர்ரதில்லையே...” என்றான்.

அவளது முகம் ஒரு நொடி கருத்து பின் இயல்புக்கு வந்தது. அதை அவன் கண்கள் குறித்துக்கொள்ள தவறவுமில்லை. சென்னை என்று சொன்னாலே அவள் முகம் இப்படித்தான் மாறி விடுகிறது.

“நீ சென்னை வர போறேன்னு என்கிட்ட சொல்லவே இல்ல பார்த்தியா..” என்றான் சோகம் போல.

“ஹையோ.. எனக்கு நிஜமாவே மறந்து போச்சி அர்ஜுன்.. இல்லேன்னா உன்கிட்ட சொல்லாம இருப்பேனா.. ஐம் ரியலி சாரி..” என்று அவள் வருத்தப்பட,

“ஹேய் இட்ஸ் ஓகே நித்திலா.. நான் சும்மாதான் சொன்னேன்.. அப்புறம் எங்கேஜ்மென்ட் முடிஞ்சதும் கிளம்பிடுவியா இல்ல இங்கேயே இருக்கிற ப்ளானா...??”

“ரெண்டுமே இல்ல... இப்போத்தானே வந்திருக்கேன்... கொஞ்ச நாளைக்கு இங்க இருந்துட்டு அப்புறம் போயிடுவேன்..”

“அப்போ சரி... நீ பெங்களூர் போறதுக்குள்ள கண்டிப்பா நம்ம வீட்டுக்கு வர்ர..”

“உங்க வீட்டுக்கா...??” அவள் தயக்கத்துடன் கேட்க.

“நீ சென்னைக்கு வந்தா உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு வந்தே ஆகனும்னு அம்மா சொல்லிருக்காங்க... இப்போ நீ வந்திருக்கிறது தெரிஞ்சா எவ்வளவு சந்தோச படுவாங்க தெரியுமா...”

“அப்படியா சொல்ற..” என்று அவள் இழுக்க,

“அப்படியேதான்... மாட்டேன்னு மட்டும் சொல்லிடாத ப்ளீஸ்.. அம்மா உன்ன பார்க்கனும் ரொம்ப ஆசையா இருக்காங்க..”


“ம்ம்ம்... சரிதான் விடு... ஆன்ட்டி ஆசைப்பட்டா வராம இருக்க முடியுமா.. கண்டிப்பா வரேன்னு சொல்லு..” அவனுடன் பேசிக் கொண்டிருந்தவள் வேறு சில நண்பர்கள் அவளை அழைக்கவும் விடைபெற்று சென்றுவிட அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தவன் எதிரில் விக்ரம் வருவதை கண்டு வேறு பக்கம் செல்லப் பார்க்க அதற்குள் அவனை கண்டுவிட்டவன் “அர்ஜுன்!! இங்க என்னடா பண்ற..??” புரியாமல் கேட்டான் விக்ரம்.

“அஜய் கூப்பிட்டிருந்தான்டா...” என்று இழுக்க “ஓஹ்.. அஜய் இன்வைட் பண்ணானா,, ஓகே ஓகேடா அப்புறம் பார்க்கலாம் மச்சி..” என்றுவிட்டு விக்ரம் நகர்ந்துவிட அர்ஜுனை நோக்கி வந்த அவனது நண்பர்கள் சிவா மற்றும் ப்ரசாத் இருவரும் “அடப்பாவி.. அஜய் கிட்ட விக்ரம் கூப்டான்னு சொன்ன,, விக்ரம் கிட்ட அஜய் கூப்டான்னு சொல்ற.. எப்படியோ உன்கூட வந்த பாவத்துக்கு எங்கள மாட்டி விடாம இருந்தேன்னா சரிதான்..” என்று கூற,

“என் லவ்க்காக இது கூட பண்ண மாட்டீங்களாடா..”

“நாங்களும் நாலு வருஷமா உன் லவ்க்காக என்னெல்லாமோ பண்ணிக்கிட்டு தான்டா இருக்கோம்.. நீ அந்த பொண்ணுகிட்ட லவ்வ சொல்லவும் மாட்டேங்கிற.. இப்படியே மனசுக்குள்ளயே வெச்சிருந்து கடைசில இதயம், முரளினு ஆகாம இருந்தா சரிதான்”.

“அவ பக்கத்துல போனாலே பயமா இருக்குடா..”

இப்படி சொன்னவனை வழக்கம் போல மற்ற இருவரும் காரி உமிழாத குறையாக பார்த்து வைத்தனர்.

“ஹி..ஹி... சரிடா சரிடா.. இந்த தடவ கண்டிப்பா சொல்லிர்ரேன்.. வீட்டுக்கு வர்ரதா சொல்லிருக்கா, கூட்டிட்டு போய் அப்படியே என் லவ்வையும் சொல்லிடலாம்னு பார்க்கிறேன்..” என்றான் ஒரு வழியாக.

“வாவ்!! சூப்பர் மாம்ஸ்.. கன்க்ராட்ஸ் டா...” என்று ப்ரசாத்தும் “வாழ்த்துக்கள் மச்சி...” என்று சிவாவும் அங்கேயே வாழ்த்துக் கூறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் இந்தக்காதலால் அவன் தன் வாழ்வையே தொலைத்து விடப் போகிறான் என்பதை அறியாமல்..



######################



சஞ்சனாவின் நிச்சயதார்த்தத்தை மிகச் சிறப்பாகவே நடந்தி முடித்து விட்டனர் விஸ்வநாதன் குடும்பத்தினர். சஞ்சய் இல்லாத குறையைத் தவிர மற்றபடி அனைத்துமே திருப்திகரமாகவே நடந்தேறியது. இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருக்கும் சஞ்சய்க்கு அடுத்த மாதம் தேர்வு இருப்பதால் அவனது தந்தை வாசுதேவன் அவனை நிச்சயதார்த்தத்திற்கு வரத் தேவையில்லை என்று கறாராக கூறிவிட்டார்.

இன்னும் மூன்று மாதங்களில் தான் திருமணத்திற்கு நாள் குறிக்கப் பட்டிருப்பதால் தேர்வுகளை முடித்து விட்டு சஞ்சனாவின் திருமணத்திற்கு அவன் வருவதாக முடிவெடுக்கப்பட்டிருந்தது.

அன்றிரவு மற்றைய விருந்தினர்கள் அனைவரும் சென்றுவிட ஒரு சில நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே வீட்டில் இருந்த நேரம் திடீரென யாரோ வருவது போல தடபுடலாக இருப்பதை உணர்ந்து வீட்டின் முன் பகுதிக்கு சென்று பார்த்த விஜயா வரிசையாக பத்து, பனிரெண்டு கார்கள் வந்து நிறுத்தப்படுவதை கண்டு புரியாமல் குழம்பி நின்றவள் முதலாவதாக நின்றிருந்த காரிலிருந்து இறங்கியவரை கண்டதும் ஒரு நிமிடம் தன் கண்ணையே நம்ப முடியாமல் பார்த்தவள் “அத்தை, அண்ணி இங்க வாங்க...” என்று அங்கிருந்தே குரல் கொடுத்தாள்.

மருமகளின் குரலில் பதட்டமாக “என்னாச்சு விஜயா..” என்றபடி வாசலுக்கு வந்த நிர்மலா அங்கே நின்றிருந்தவர்களை கண்டதும் அதே நம்ப முடியாத பார்வை பார்த்தவர் பின்பு “அக்கா...” என்றபடி கிட்டத்தட்ட ஓடாத குறையாக அவர்களை நோக்கி சென்றார்.

ஆம் வந்திருந்தது நிர்மலாதேவியின் மூத்த சகோதரியான சகுந்தலா தேவி. கூடவே அவரது மகள் ரேணுகா, மகன் சந்திர ப்ரகாஷ் இன்னும் அவர்கள் சார்ந்த மற்ற சில உறவினர்களும் வந்திருந்தனர். கூடவே சேதுபதியும் வந்திருந்தார்.

இருபத்தியிரண்டு வருடங்களாக அந்த வீட்டுப் பக்கமே வந்திராத தன்னுடைய சகோதரி இப்போது வந்திருப்பதை கண்டு நிர்மலாவுக்கு பேச்சே வரவில்லை. கண்கள் கலங்கி அவருக்கு தொண்டையை அடைத்தது. ஒரு வழியாக தன்னை நிலைப்படுத்துக் கொண்டு “அக்கா.. உள்ள வாங்கக்கா..” என்று அழைக்க மறுக்காமல் பின்னாலிருந்த மற்றவர்களையும் உள்ளே வருமாறு தலையசைத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார் சகுந்தலாதேவி.

தன்னுடைய நண்பர் ஒருவருடன் பேசி சிரித்துக் கொண்டிருந்த விஸ்வநாதன் அவருக்கு அருகில் உட்கார்ந்திருந்த கருணாகரன் “தனா!! பெரியம்மாடா..” என்று தனஞ்செயனிடம் கூறியது அவரது காதுகளிலும் விழுந்துவிட குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்தவர் அந்த வயதிலும் தளராத கம்பீர நடையும் துளைக்கும் கூர்பார்வையுடன் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த சகுந்தலா தேவியை கண்டு ஒரு கணம் அசந்துதான் போனார்.

“எப்படியிருக்கீங்க விஸ்வநாதன்..?” என்ற சகுந்தலாவின் கேள்விக்கு “ம்ம்ம்.. ரொம்ப நல்லாவே இருக்கேன்..” என்று இவரும் சற்று மிடுக்காகவே பதிலளித்தார்.

கிட்டத்தட்ட இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் நேருக்கு நேராக சந்தித்துக் கொள்கின்றனர். அரவிந்தனின் திருமணத்துக்கு முன்னால் அவரிடம் வந்து பயங்கரமாக சண்டை போட்டுவிட்டு இனிமேல் தங்கள் குடும்பத்துக்கும் விஸ்வநாதனுக்கும் எந்தவித தொடர்பும் இருக்காது என்று கூறிவிட்டு சென்றவர்தான். இப்போது மீண்டும் வந்திருக்கிறார்.

எதற்காக வந்திருக்கிறார்கள் என்று புரியாமல் விஸ்வநாதன் மனைவியை பார்க்க நிர்மலாவோ கடவுளை நேரில் கண்ட பக்தை போல பயபக்தியுடன் தன் சகோதரியை பார்த்திருந்தார்.


விஸ்வநாதனுக்கு எரிச்சலாக இருந்தது. அவரது வீட்டின் ராணியாக வலம் வரும் நிர்மலா... சகுந்தலாவின் அருகில் நிற்கும்போது மனைவியின் கம்பீரம் குறைந்து தெரிவதைப்போல் உணர்ந்தார்.

என்னதான் அக்காவின் மீது அதீத பாசம் என்றாலும் நிர்மலா செய்வதெல்லாம் சற்று அதிகப்படி என்றுதான் அவருக்கு தோன்றியது. விட்டால் சகுந்தலாவின் காலை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டாலும் ஒற்றிக் கொள்வாள் என்று மனதில் நினைத்தவர் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படையாக காட்டிக் கொள்ள முடியாமல் விறைப்புடன் நின்றிருக்க உடனே கருணாகரன் “உட்காருங்க பெரியம்மா.. நின்னுக்கிட்டே இருக்கீங்க.. வா ப்ரகாஷ், வாங்க அக்கா எல்லாரும் உட்காருங்க.. மாமா நீங்களும் உட்காருங்க..” என்று வீட்டுக்கு வந்தவர்களை முறையாக உபசரிக்க ஆரம்பிக்க சாரதா, விஜயா, கல்பனா அனைவரும் இணைந்து கொண்டனர்.

சந்திரலேகா மட்டும் சகுந்தலாதேவியை கண்ட மாத்திரத்தில் பின்னங்கால் பிடரியில் அடிபட ஒரே ஓட்டமாக ஓடி ஒளிந்து கொண்டாள். அவர்கள் இருவருக்கும் ஏழாம் பொருத்தம். சொந்த மாமியாருக்கு கூட பயப்படாத சந்திரலேகாவுக்கு சகுந்தலாவை கண்டாலே வயிற்றில் புளியை கரைக்கும்.

பொதுவான ஒருசில நல விசாரிப்புகளுக்கு பிறகு வீட்டிலுள்ள முக்கியமானவர்கள் அனைவரும் அங்கு ஆஜராகிவிட்டதை உறுதிப் படுத்திக்கொண்டு நிர்மலாவை நோக்கியவர் “அப்புறம்.. எங்கே நிர்மலா எங்க வீட்டு மருமக பொண்ணு..?? நித்திலா வந்துட்டானு கேள்விப்பட்டேனே..” அவர்கள் வந்திருக்கும் நோக்கத்தை சகுந்தலாதேவி மறைமுகமாக தெரியப்படுத்த இருவரைத் தவிர அங்கிருந்த மற்ற அனைவரின் முகங்களும் மகிழ்ச்சியில் மலர்ந்தது.


“நித்து சஞ்சனா கூட ரூம்ல இருக்காக்கா...” என்று தமக்கையிடம் கூறியவர் “கல்பனா.. நித்துவ கூட்டிட்டு வா..” என்று மகளுக்கு கட்டளையிட்டார் நிர்மலா.

அனைவரையும் பொதுவாக ஒரு பார்வை பார்த்துவிட்டு “புதுசா சொல்றதுக்கு ஒன்னுமில்ல.. நம்ம ஏற்கனவே பேசினதுதான் நிர்மலா.. நித்துவும் படிப்ப முடிச்சிட்டா.. ஆர்யாவும் நல்லபடியா பிசினெஸ் பண்ணிக்கிட்டு இருக்கான்.. இதுக்கு மேலயும் எதுக்கு காத்திருக்கனும்.. அதனாலதான் இன்னைக்கே பேசி ஒரு முடிவெடுக்கலாம்னு வந்திருக்கேன்...” என்றார் சகுந்தலா.


“ரொம்ப சந்தோசம்க்கா...” என்று சகுந்தலாவின் கையை பற்றிக் கொண்டார் நிர்மலா.

‘என்னடா நடக்குது இங்கே...’ என்பது போல் மனைவியை பார்த்தார் விஸ்வநாதன். அவரால் இதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. ஏற்றுக் கொள்ளாமல் இருக்கவும் முடியவில்லை. தன்னை கேட்காமல் இவ்வளவு பெரிய முடிவை மனைவி எடுத்திருப்பது அவருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனாலும் நித்திலாவின் விடயம் என்பதால் வாயை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.


“என்னாச்சு ரேணுகா.. ஆர்யா வருவானா இல்லையா..??” சகுந்தலா அவரது மகளிடம் கேட்க, “டிராபிக்ல மாட்டிக்கிட்டானாம்மா இன்னும் டென் மினிட்ஸ்ல வந்திர்ரதா சொன்னான்..” என்று பதிலளித்தாள் ரேணுகா.

கல்பனா சென்று அழைத்ததும் அவளுடன் வந்த நித்திலா சகுந்தலாவும் அவரது குடும்பத்தினரும் வந்திருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் அவர்களை பார்த்தாள். அவளுக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து அவர்கள் யாரும் அந்த வீட்டுப்பக்கமே வந்ததில்லை. நிர்மலாவும் அவரது பிள்ளைகளும்தான் அவ்வப்போது சகுந்தலாவின் வீட்டுக்குச் சென்று வருவார்கள்.

ஒருவேளை சஞ்சனாவின் நிச்சயத்திற்காக வந்திருக்கிறார்களோ என்று நினைத்தவள் அதற்கு எதற்கு எல்லாம் முடிந்த பிறகு இவ்வளவு தாமதமாக வரவேண்டும் என்று யோசனையுடன் பார்க்க அவளைக் கண்டதும் “வாம்மா நித்திலா... இப்படி வந்து உட்காரு..” என்ற சகுந்தலாதேவி தனக்கும் மகளுக்கும் இடையில் அவளை அமரச் செய்தவர், “பார்த்துக்கோ ரேணுகா உன் வருங்கால மருமகள்... அப்படியே தேவதை மாதிரி இருக்கா...” என்று கூற நித்திலாவுக்கு திக்கென்றது.

‘இது என்ன புது பூதம்... நம்ம லிஸ்ட்லயே இல்லையே..’ என்று நினைத்தவள் கண்களை சுழற்றி சௌர்யாவை தேட அவனும் ஒரு ஓரமாக நின்று அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.. மற்றவர்களின் கவனத்தை கவராத வகையில் அவனிடம் “என்ன இதெல்லாம்...?” என்பது போல் கண்களால் கேட்க அவன் குறும்புத்தனமான ஒரு சிரிப்புடன் அவளைப் பார்த்து கண்ணடித்தான்.

நித்திலா பல்லைக்கடித்தாள்.

கொஞ்ச நேரத்திலேயே சகுந்தலாதேவியின் பேரனாகப்பட்டவன் அவர்கள் வீட்டு டிரைவருடன் அங்கு வந்து சேர்ந்தான் ஆர்யா என்று அனைவராலும் அழைக்கப்படும் ஆத்ரேயா..

ஹாலிவூட் பாலிவூட் அனைத்தையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு கவர்ச்சிகரமான தோற்றத்துடன் இருந்தவனை நித்திலாவை தவிர அங்கிருந்த வயதுப் பெண்கள் அனைவரும் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

தன் பேரனை பெருமையுடன் நோக்கிய சகுந்தலா அவன் வந்து உட்கார்ந்ததும் நித்திலாவிடம் “போம்மா... ஆர்யா பக்கத்துல போய் உட்காரு...” என்று கூற அவள் அசைந்தால்தானே...

தமக்கை கூறியும் பேத்தி அப்படியே அமர்ந்திருப்பதை கண்டு அவள் வெட்கப்படுவதாக நினைத்துக் கொண்டு “போடா கண்ணா.. அக்கா சொல்றாங்க இல்ல..” என்று நிர்மலாவும் சேர்ந்து கூற வேறு வழியில்லாமல் ஆர்யாவின் அருகில் சென்று உட்கார்ந்தாள் நித்திலா.

அனைவரும் அவர்களது ஜோடிப் பொருத்தம் பிரமாதமாக இருப்பதாக கூற விஸ்வநாதனுக்கும் அப்படித்தான் தோன்றியது. அவர் அறிந்த வரையில் ஆர்யாவை பற்றி தவறாக சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.. தொழில் ரீதியாகவும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி அவன் சொக்கத்தங்கம் என்றுதான் இதுவரை கேள்விப் பட்டிருக்கிறார்.

அவனைப் பார்க்கும் வரையில் விருப்பமின்மையுடன்
உட்கார்ந்திருந்தவர் அவனை பார்த்ததும் அவருக்கு இருந்த கொஞ்சநஞ்ச மனத்தாங்கலும் மறைந்துபோக நித்திலாவுக்கு ஆர்யா மிகப் பொருத்தமானவன் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.

ஆனால் சாரதாவுக்குத்தான் மனதின் ஓரத்தில் லேசான ஏக்கம் எழுவதை தடுக்க முடியவில்லை. அவள் மனதில் நித்திலாவை தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் ஆசை பல காலமாக இருந்து கொண்டுதான் இருந்தது. ஆசை இருந்து என்ன பிரயோசனம்.. அவளது மகன் திருமணம் என்று ஒன்று நடந்தால் அது மித்ராவுடன் தான் என்று முடிவாகக் கூறிவிட்டான்.

மகன் மனதில் வேறு ஒருத்தி இருக்கும்போது அதுவும் குடும்பத்தினர் அனைவரும் கூடிப்பேசி ஆதி, மித்ரா திருமணத்தை ஒரு வருடத்திற்கு முன்பே உறுதிப்படுத்திவிட்ட இந்த நிலையில் தனக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றுவது அபத்தமாக பட்டாலும் சாரதாவால் அந்த ஆசையை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

அவர்கள் கொண்டு வந்த வைர மோதிரத்தை நித்திலாவின் கையில் போட்டுவிடுமாறு சகுந்தலாதேவி பேரனிடம் கூற அவன் வெகு இயல்பாக அவளது கரத்தை பற்றி அந்த மோதிரத்தை போட்டுவிட்டான். அதைக் கண்டு அங்கிருந்த இளைஞர் பட்டாளம் ஆர்ப்பரிக்க அந்தக் காட்சி பலரது அலைப்பேசிகளிலும் அழகாக படமாக்கப்பட்டது.

அதன்பிறகு அந்த இடமே களைகட்டத் தொடங்க அனைவரும் தங்களுக்குள் பேசி கலகலத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். பல வருடங்களுக்கு பிறகான சகோதரியின் வரவு, அதுவும் தனது அக்காவின் பேரனுக்கே தன் உயிரான பேத்தியை திருமணம் செய்து கொடுக்கப் போகும் மகிழ்ச்சி என நிர்மலாவின் கால்கள் தரையில் பாவாமல் ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருந்தார். ஆனால் அந்தப் பேத்திக்கு இந்த திருமணத்தில் இஷ்டமா என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை.. தான் எது செய்தாலும் அவள் ஏற்றுக் கொள்வாள் என்ற அபரிமிதமான நம்பிக்கையில் இருந்தார் அவர்.


நித்திலா அடிக்கடி வாசல் கதவை பார்ப்பதும் தன் கைவிரல்களை பரிசோதிப்பதுமாக எதிலும் ஒட்டாமல் உட்கார்ந்திருந்தாள். சௌர்யா அவள் அருகில் வந்தவன் லேசாக குனிந்து “நித்து உன்ன கட்டிக்க போறவன் உன் பக்கத்துல தான் இருக்கான்... நீ யார தேடுற..??” அவள் யாரை தேடிக் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்திருந்தும் வேண்டுமென்றே கேட்டான்.

அவள் பதில் சொல்லாமல் திரும்பி அவனை முறைத்தாள். லேசாக சிரித்தவன் “ஓகே ஓகே கூல்... நீ யாரையும் தேடல.. போதுமா..” என்று கிண்டலாக கூறிவிட்டு ஆர்யாவிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்.

அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிந்து சகுந்தலாவின் குடும்பத்தினர் கிளம்பியதும் வாசல் வரை சென்று அவர்களை வழியனுப்பிவிட்டு திருப்திகரமான மனநிலையுடன் நித்திலாவை நோக்கி வந்த நிர்மலாதேவி அவளது கையை பற்றியபடி ஆர்யா அணிவித்த மோதிரத்தை பார்த்தவர் பூரிப்புடன் பேத்தியை அணைத்து அவளது கன்னத்தில் முத்தமிட்டார்.

“இத்தன வருஷத்துக்கு அப்புறமா இன்னைக்குத்தான் நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்...” விழிகளில் நீர் திரையிட சிரித்துக் கொண்டே கூறிவிட்டு திரும்பியவர் எதிரில் வந்து கொண்டிருந்தவனை கண்டதும் அவரது முகத்திலிருந்த சிரிப்பு அப்படியே உறைந்து போனது.

தீட்சண்யமான பார்வையுடன் அவரையும் நித்திலாவையும் பார்த்தபடி நெற்றியிலிருந்து இரத்தம் சொட்டச்சொட்ட வாசல் கதவை தாண்டி உள்ளே வந்து கொண்டிருந்தான் அவரது அருமைப் பேரன் ஆதிதேவ்..



தொடரும்.......
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 23:



சஞ்சனாவின் நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வாரமே ஆகியிருந்த நிலையில் விஸ்வநாதன் வீடு மீண்டும் கல்யாணக் களை கட்ட ஆரம்பித்தது.

அன்றிரவு யாரும் எதிர்பாராத நேரத்தில் நெற்றியில் ரத்தம் வழிய வந்து நின்றவனைக் கண்டு அனைவரும் பதறிப்போய் என்னவென்று கேட்க.. “ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்..” என்று கூறியவன் யாரையும் கண்டுகொள்ளாது தனது அன்னையை மட்டும் அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டான்.

மறுநாள் காலையில் பேரனுக்கு அடிபட்டிருக்கிறதே என்று பார்க்கப்போன விஸ்வநாதனிடம் இன்னும் இரண்டு வாரத்தில் தனக்கும் மித்ராவுக்கும் திருமணம் நடைபெற வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்குமாறும் கூற பேரனை குழப்பத்துடன் பார்த்தவர், “என்னப்பா இது... இப்படி திடீர்னு சொல்ற... ரெண்டு வாரத்துல எப்படி கல்யாண ஏற்பாடு பண்ண முடியும்...” என்று கேட்க முடிய வேண்டும் என்றான் பேரன்.

பல வருடங்களுக்கு பிறகு குடும்பத்தில் நடக்கும் முதல் திருமணம் அதனை இப்படி அவசர அவசரமாக செய்துவிடமுடியாது. அனைத்து சம்பிரதாயங்களையும் சிறப்பாக செய்து நல்லபடியாக திருமணத்தை நடத்தி முடிப்பதற்கு இரண்டு வாரங்கள் போதாதென்று அவர் எவ்வளவோ கூறியும் அவன் அதனை காதிலே வாங்கிக் கொள்ளவில்லை.

இரண்டு வாரங்களில் திருமணம் நடந்தே ஆக வேண்டும் அதுவும் மிகவும் சிம்பிளாக இருக்க வேண்டும் என்று அவன் முடிவாக கூறிவிட இதற்குமேல் இவனிடம் பேசி வேலைக்காகாது என்பதை உணர்ந்தவர் மற்றவர்களிடமும் விடயத்தை கூற யாருக்குமே இந்த அவசர ஏற்பாட்டில் உடன்பாடில்லா விட்டாலும் ஆதி முடிவெடுத்து விட்டால் யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டான் என்பது தெரிந்திருந்ததால் மேற்கொண்டு ஆக வேண்டிய வேலைகளை பார்க்கத் தொடங்கினர்.

அதன்படி அனைத்து ஏற்பாடுகளும் அவசரகதியில் செய்யப்பட்டு திருமணத்திற்கு ஐந்தே நாட்கள் மீதமிருக்கும் நிலையில் மணப்பெண்ணான மித்ராவும் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்தாள்.

வந்தவள் யாருடனும் பேசாமல் ஒருவித இறுக்கமான மனநிலையில் வலம்வர அவனும் அப்படித்தான் இருந்தான். அவர்கள் இருவரையும் பார்க்க பார்க்க நிர்மலா தேவிக்கு தாளவில்லை. தன் குடும்பத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு நடக்கவிருக்கும் திருமணம் அதை எப்படியெல்லாமோ செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தார் “இதுங்க ரெண்டுபேர் மனசுலயும் என்ன இருக்குதுனே புரிய மாட்டேங்குது..” என்று நாள் முழுக்க விஜயாவிடம் புலம்பிக் கொண்டே உட்கார்ந்திருந்தார்.

மித்ராவுக்கான ஆடைகளை வீட்டிற்கே வரைவழைத்து தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தனர். சந்திரலேகாதான் ஒவ்வொரு புடவையாக எடுத்து மகள் மீது வைத்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். மித்ரா ஒன்றை கூட தொட்டு பார்க்காமல் ஏதோ யோசனையில் உட்கார்ந்திருக்க அவளை கோபமாக பார்த்த நிர்மலா “டேய் தனா... உன் பொண்ணுக்கு நிஜமாவே இந்த கல்யாணத்துல இஷ்டம்தானா..??” என்று தன் மகனிடம் கேட்டார்.
“எதுலயும் ஒட்டாமலே உட்கார்ந்திருக்கா பாரு... முகத்துல கல்யாண களையே இல்ல...”

அவரது இந்தப் பேச்சு சந்திரலேகாவின் காதுகளில் விழுந்துவிட “என்னங்க என் பொண்ணு நேத்து தான அமெரிக்கால இருந்து வந்தா.. வந்ததும் வராததுமா அவளுக்கு கொஞ்சம் கூட ரெஸ்ட் கொடுக்காம ஆளாளுக்கு ஏதேதோ பண்ண சொன்னா அவ வேற எப்படி இருப்பா...” என்று அவளும் பதிலுக்கு எகிற அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையில் தனஞ்செயன்தான் மாட்டிக் கொண்டு விழித்தார்.

தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல மித்ரா கண்டு கொள்ளாமல் எழுந்து சென்று விட. இறுதியில் விஸ்வநாதன் வந்து சத்தம் போட்டுத்தான் இருவரையும் அடக்க வேண்டியதாகிப் போனது.

இப்படியே கல்யாண வேலைகளில் நிர்மலாவுக்கும் சந்திராவுக்கும் அடிக்கடி பிரச்சினைகள் வந்து கொண்டே இருந்தன. மற்றவர்களும் பலமுறை தடுத்துப் பார்த்தும் முடியாமல் போக எப்படியோ போகட்டும் என்று விட்டு விட்டனர்.


##############################


தன்னுடைய ஃபோனில் சஞ்சயின் அழைப்பை பார்த்ததும் அவன் எதற்காக அழைக்கிறான் என்பதை புரிந்து கொண்டவள் பதிலளிக்காமல் அப்படியே விட்டுவிட அவனும் விடாமல் திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டிருந்ததால் வேறு வழியில்லாமல் எடுத்துப் பேசினாள் நித்திலா.

“நீ இன்னும் கிளம்பலயா நித்து..??” அவள் அழைப்பை ஏற்றதும் முதலாவதாக அவன் கேட்டது இதைத்தான்.

“எங்க கிளம்ப சொல்ற சஞ்சய்..??”

“நான் சொல்றது எதையும் கேட்க கூடாதுனு முடிவோட இருக்கியா நீ... நான் உன்ன அப்பவே பெங்களூர் போக சொல்லிட்டேன்.. நீ எதுக்கு இன்னும் சென்னைலயே உட்கார்ந்திருக்க...”

“சஞ்சய் நான் வந்து டூ வீக்ஸ் கூட ஆகல.. நீ சொல்ற மாதிரியெல்லாம் அப்படி அவசரமா கிளம்பிட முடியாது...”

“நீ ஏன் நான் சொல்றத புரிஞ்சிக்க மாட்டேங்குறே நித்து... நீ வந்த அதே நாள்ள அவரும் வந்திருக்காரு... வந்ததும் வராததுமா தாத்தா கிட்ட கல்யாண ஏற்பாடு வேற பண்ண சொல்லியாச்சு.. எனக்கு எதுவுமே சரியா படல.. நீ முதல்ல கிளம்பு...”

“உளறாத சஞ்சய்.. நாலு வருஷம் கழிச்சி இப்போத்தான் வந்திருக்கேன்... இப்போ இவ்வளவு அவசரமா கல்யாணத்துக்கு கூட இருக்காம கிளம்பினா எல்லாரும் என்ன நினைப்பாங்க...”

“மத்தவங்க எதையாவது நினைச்சி தொலைக்கட்டும்.. நீ அங்க இருக்க வேணாம் அவ்வளவுதான்... வேணும்னா இந்த கல்யாணம் நடந்து முடிஞ்சதுக்கு அப்புறமா திரும்பி வா... இப்ப போ ப்ளீஸ்...” அவளிடம் கெஞ்சினான் சஞ்சய். “உனக்கு அவர பத்தி தெரியும்ல,,, அவர் நினைக்கிறது நடக்கனும்னா அதுக்காக என்ன வேணா பண்ணுவாரு...”

‘தெரியும் சஞ்சய்... அதுக்காகத்தான் நான் இங்கேயே இருக்கேன்...’ என்று மனதில் நினைத்தவள் “இதோ பார் சஞ்சய்... அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க போறாங்க... இதுல என்னை என்ன பண்ணிடுவார்னு நீ சொல்ல வர்ர... இன்னும் அவருக்கு பயந்து ஓடி ஒளிஞ்சிக்க சொல்றியா... பழைய குப்பையைல்லாம் நான் எப்பவோ தூக்கி தூர போட்டுட்டாச்சு... நீ இப்போ வந்து ஒன்னு ஒன்னா கிளரிக்கிட்டு இருக்காதே..”

கோபமாக கூறியவள் அவன் மேலும் ஏதோ சொல்ல வர இணைப்பை துண்டித்து அவனது நம்பரையும் பிளாக் செய்துவிட்டாள்.

அவளுக்கு அறைக்குள் இருப்பதே மூச்சு முட்டுவதுபோல் இருக்க பால்கனியில் சென்று சற்று நேரம் நின்றிருந்தாள்.. இரவு நேர குளிர் காற்று ஊசியாய் உடலை துளைப்பதை கூட உணர முடியாமல் அவளது மனம் எதையோ நினைத்து கொதித்துக் கொண்டிருந்தது.

வெகு நேரத்திற்கு பிறகு அறைக்குள் செல்ல நினைத்து திரும்பிய போது தோட்டத்தில் மித்ரா நடந்து செல்வது தெரிந்தது. இந்த நேரத்தில் எங்கு செல்கிறாள் என்று யோசனையுடன் பார்க்க சாரதாவின் வீட்டுப் பக்கம்தான் சென்று கொண்டிருந்தாள்.

அந்தப் பக்கத்திலிருந்து ஆதி நடந்து வருவதும். ஒருவரையொருவர் நெருங்கியதும் மித்ராவின் கையை பிடித்து தன் நெஞ்சோடு சேர்த்து கோர்த்துக் கொண்டு அவளிடம் ஏதோ பேசிக்கொண்டிருப்பதும் தெரிய. இருவரையும் வெறித்துப் பார்த்தபடி பால்கனியில் நின்றிருந்தாள் நித்திலா. பின்பு என்ன நினைத்தாளோ அறைக்குள் சென்று சடாரென கதவை அறைந்து சாத்தினாள்.

“தேவ்...” அவன் தோளில் சாய்ந்து கொண்டு அழைத்தாள் மித்ரா.

“சொல்லு பேபி...”

“எல்லாம் சரியா வரும்ல... எனக்கு என்னமோ மனசே சரியில்ல..”

“நீ எதுக்கு கண்டதெல்லாம் நினைச்சு குழப்பிக்கிற... அதான் நான் இருக்கேன்ல..”

“அதில்ல தேவ்.. அந்த சௌர்யா வேற வந்திரு...” அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே “ஷட் அப் மித்ரா..” என்று சீறினான் அவன் “இப்போ எதுக்கு அவன பத்தி பேசுற...”

“தப்பா எதுவும் நடந்துடாதேடா...” கலக்கத்துடன் கேட்டாள்.

“ஐ ப்ராமிஸ் யூ மித்ரா... தப்பா எதுவும் நடக்காம நான் பார்த்துக்கிறேன்...” என்று கூறி தன் தோளில் சாய்ந்திருந்த அவள் உச்சந்தலையில் முத்தமிட்டவன் மனதுக்குள் “சாரி பேபி..” என்று சொல்லிக் கொண்டான்.



########################


“எனக்குனு எங்கே இருந்துடா வர்ரானுங்க...” கையிலிருந்த ஃபோனை நிலத்தில் அடித்து உடைத்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.. “அப்போ ஆதின்னு ஒருத்தன் வந்தான்... இப்போ ஆர்யான்னு இன்னொருத்தன்...”

“டேய் மாம்ஸ் ஆதிக்கும் இதுக்கும் என்னடா சம்மந்தம்... அவனுக்கு நெக்ஸ்ட் வீக் அந்த மித்ரா பொண்ணு கூட மேரேஜ்.. அதுவும் அவங்க ரெண்டு பேரும் ரொம்ப வருஷமா லவ் பண்ணி இப்போ கல்யாணம் பண்ணிக்க போறாங்க... இப்ப எதுக்கு நடுல அவன இழுக்குற..”

“இப்ப அதுவாடா முக்கியம்... எவன் எவள கட்டிக்கிட்டா எனக்கென்ன.... என் நிலாக்கு ஒருத்தன் ரிங் போட்டுட்டு போயிருக்கானே... அவன் யாருடா அவன்...” பல்லைக் கடித்தான் அர்ஜுன்.

“ரிங் தானே மச்சி போட்டிருக்கான்... என்னமோ கல்யாணமே பண்ணிட்டா மாதிரி நீ எதுக்கு டென்ஷன் ஆ.. ஆ...” க்ரிஷ் சொல்லி முடிப்பதற்குள் அவனது கழுத்தை பிடித்திருந்தான் அர்ஜுன்..

“அவளுக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது என்கூட தான்டா நடக்கும்.. பேச்சுக்கு கூட அவள இன்னொருத்தனோட சேர்த்து பேசாதே...” வார்த்தைகளை கடித்து துப்பினான்.. “அவ என்னோட நிலாடா... எனக்கு மட்டும்தான் சொந்தம்..” அவனது கைகளின் அழுத்தம் கூடிக்கொண்டே செல்ல க்ரிஷுக்கு மூச்சுத்திணற ஆரம்பித்து விட்டது..

சிவாவும் ப்ரசாத்தும் அர்ஜுனிடம் இருந்து க்ரிஷை பிரித்து விட்டவர்கள் அவனை சமாதானப்படுத்த ஆரம்பித்தனர்.. அர்ஜுன் எதையும் காதில் வாங்கிக் கொள்ளும் நிலையில் இல்லை.. வெறி பிடித்தவனைப் போல் உட்கார்ந்திருந்தான்.

இந்த நான்கு ஆண்டுகளில் வேராகி, விழுதாகி, விருட்சமாகி வளர்ந்து நின்றது அவனது காதல். நித்திலாவின் இந்த சதாரண பெண் பார்க்கும் படலத்தை கூட அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவனுடைய நிலாவை இன்னொருவன் தன் வருங்கால மனைவியாக மனதில் நினைத்துக் கொண்டிருப்பான் என்று எண்ணும்போதே அவனுக்கு உடம்பெல்லாம் தீப்பற்றி எரிவது போல் இருந்தது.

அவனது நண்பர்கள் குடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த பாட்டில்கள் கண்ணில் பட அதில் ஒன்றை எடுத்தவன் மடமடவென தொண்டையில் சரித்துக் கொண்டான். அதைக் கண்டு பதறிப்போன சிவாவும் ப்ரசாத்தும் அவனை தடுக்க முயல அவர்களை பிடித்து தள்ளி விட்டவன் ஒவ்வொரு பாட்டிலாக காலி செய்ய ஆரம்பிக்க அவனை நெருங்க முடியாது என்பதை உணர்ந்த சிவா எஞ்சியிருந்த மற்ற பாட்டில்களை எடுத்து உடைத்துவிட அதற்குள் இருந்த திரவம் அனைத்தும் தரையில் சிந்திச் சிதறியது.

“எதுக்குடா உடைக்கிற... கொடுடா..” என்று அவனை நோக்கி அடிக்க வர மற்ற நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மடக்கிப் பிடித்தனர். போதையில் இருந்தவனால் அவர்களை எதிர்க்க முடியாமல் போக அனைவரையும் கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தான்.

ஒருவழியாக அவனை சமாளித்து வீட்டுக்கு கொண்டு வந்து சேர்ப்பிக்க மகனது கோலத்தை கண்ட வரதராஜன் அதிர்ந்து போய்விட்டார்.

“என்னடா இது...??” என்று அவர் பதறிப்போய் கேட்க, “ஒன்னுமில்லப்பா நீங்க டென்ஷன் ஆகாதீங்க..” என்று அவரை சமாதானப்படுத்திய சிவா “நீங்க அவன ரூம்க்கு கூட்டிட்டு போங்க..” என்று மற்ற நண்பர்களிடம் கூறிவிட்டு வரதராஜனை அழைத்துச் சென்று அவரிடம் விடயத்தை கூறினான்.

“என்னடா இது... அந்தப் பொண்ணு இப்பத்தானே படிப்ப முடிச்சிட்டு திரும்பி வந்திருக்கு... அதுக்குள்ள யாருடா வந்து பேசி முடிச்சிட்டு போனது..”

“அவங்க சொந்தக்கார பையனாம்ப்பா... யார் என்னன்னு ப்ரசாத் தான் எல்லாம் விசாரிச்சு வெச்சிருக்கான்.”

“நித்திலா ஊருக்கு கிளம்புறதுக்குள்ள விஸ்வநாதன் வீட்டுக்கு போய் பொண்ணு கேட்கலாம்னு இருந்தேன்டா..” வரதராஜனின் குரலில் ஏமாற்றம் தெரிந்தது.

“நீங்க ஒன்னும் வருத்தப் படாதீங்கப்பா... எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்... அவங்க பொண்ணு பார்த்துட்டு தானே போயிருக்காங்க... வேற எதுவும் இன்னும் முடிவாகல..”

“ம்ப்ச்.. அவங்க சொந்தக்கார பையன்னு சொல்ற.. அவன வேணாம்னு சொல்லிட்டு இவனுக்கு கட்டி வைப்பாங்கனு நினைக்குறியா... அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்ல...” என்று தாடையை தடவியவர் “இதுக்கு வேற ஏற்பாடுதான் பண்ணனும்..”

“அப்பா அவசரப்பட்டு நம்ம எதுவும் பண்ண வேணாம்... அடுத்த வாரம் அவங்க வீட்டுல கல்யாணம் இருக்கு... எல்லாம் முடிஞ்சதும் போய் பேசி பார்க்கலாம்... அப்பவும் அவங்க ஒத்துக்கலைனா அதுக்கப்புறம் மத்தத யோசிக்கலாம்...”

“இவன் இன்னும் அந்த பொண்ணுகிட்ட லவ்வ சொல்லாம இருக்கானேடா...”

அந்தக் கவலை சிவாவுக்கும் இருக்கத்தான் செய்தது. ஒருவேளை நித்திலா அர்ஜுனின் காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால்... அதற்குமேல் நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது அவனுக்கு.

“எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்ப்பா...” என்று அவரை சமாதானப் படுத்தியவன் நண்பர்கள் வருவதைக் கண்டு வரதராஜனிடம் விடைபெற்று கிளம்பினான்.

அவர்கள் சென்றதும் மகனது அறைக்குச் சென்று பார்த்த வரதராஜனுக்கு கண்கள் கலங்கியது. எதையோ சொல்லி புலம்பியபடி கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக குடியை மறந்து சொக்கத்தங்கமாக இருந்த அவரது மகன் இப்போது இந்த கோலத்தில் கிடப்பதை கண்டு அவர் மனம் வலித்தது.

அவனது சட்டையின் மேல் பட்டன்கள் போடப்படாமல் லேசாக விலகி இருக்க அவனது மார்புப் பகுதியில் நிலா என்று டாட்டூ போடப்பட்டிருந்தது. அதை கண்டவருக்கு என்ன செய்தாவது தன் மகனுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தே தீர வேண்டும் என்ற எண்ணம்தான் தோன்றியது..

நான்கு ஆண்டுகளாக அவன் பெங்களூருக்கும் சென்னைக்கும் அலையாய் அலைந்ததும், அருணாவும் சங்கரும் சமூக சேவையில் ஆர்வமுள்ளவர்கள் என்பதால் அவர்கள் செல்லுமிடமெல்லாம் தேடிச் சென்று டொனேஷன் என்ற பெயரில் பணத்தை வாரியிறைத்ததும் ரத்த தானம், இலவச மருத்துவ முகாம் என்று எத்தனையோ நல்ல காரியங்கள் செய்து அவர்கள் மனதில் இடம்பிடிக்கவே அவன் படாத பாடு பட வேண்டியிருந்தது.

அவர்களுடன் பழகி கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பிறகுதான் அவனால் நித்திலாவை கண்ணால் காண முடிந்தது. அதுவும் அவள் தன்னை அடையாளம் கண்டுவிடுவாளோ என்று பயந்து பயந்து அவர்கள் வீட்டுக்கு சென்றதும் நல்ல வேளையாக அவளுக்கு அவனை நினைவில் இல்லை.

அதன் பிறகு அவளை பல இடங்களில் பின் தொடர்ந்து எதேர்ச்சையாக சந்திப்பது போல் பார்த்து, பேசி சாதாரண நண்பன் என்ன நிலையை அடைவதற்கு அவனுக்கு மேலும் ஒரு வருடம் எடுத்தது.

இப்படி நான்கு ஆண்டுகளாக அவன் கொஞ்சம் கொஞ்சமாக நித்திலாவை நெருங்கி மிக நெருக்கமான என்றில்லாவிட்டாலும் ஓரளவுக்கு நெருங்கிய நண்பன் என்ற வட்டத்துக்குள் இப்போதுதான் வந்துவிட்டிருக்கிறான். இந்த நேரத்தில் இப்படியாகி விட்டதே என்று மனம் மருகினார் வரதராஜன்.

நித்திலாவை பற்றிய எந்தவொரு விடயத்தையும் அவன் தந்தையிடம் சொல்லாமல் விட்டதில்லை. அவரே இரண்டு முறை பெங்களூரில் அவர்கள் வீட்டுக்குச் சென்று சந்தித்துவிட்டு வந்திருக்கிறார். இந்த நிலைக்கு வருவதற்கே மகன் எவ்வளவு பாடுபட்டான் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.

அப்பேர்ப்பட்ட அவனது காதலை நிறைவேற்ற முடியாமல் போனால் அவர் என்ன தந்தை.. “என்ன நடந்தாலும் சரி... நீ ஆசைப்பட்ட பொண்ணு உனக்கு கட்டி வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு அர்ஜுன்..” என்று உறங்கிக் கொண்டிருந்த மகனை பார்த்து கூறினார். ஆனால் தன் மகனுக்கு பிடிக்காத ஒரு திருமணத்தை தானே வற்புறுத்தி செய்து வைக்கப்போகிறோம் என்பது அப்போது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.



#######################



ஆதி, மித்ரா திருமணத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே மீதமிருந்த நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு உறவினர்கள் பலரது வருகையால் வீடே நிறைந்து காணப்பட்டது.

சௌர்யாவின் அன்னையும் விஸ்வநாதன் நிர்மலா தம்பதியரின் நான்காவது மகளுமான சாறுலதா அவளது கணவர் மற்றும் இளைய மகன் சூரஜுடன் அன்றுதான் வந்து சேர்ந்தாள்.



அருணாவும் சங்கரும் கூட திருமணத்திற்கு வருவதாக நித்திலாவிடம் கூறியிருந்தனர். நிர்மலா அழைத்த போது ஏதேதோ காரணம் கூறி மறுத்துவிட்டு வராமல் இருந்தவர்கள் இப்போது ஆதியே அவர்களை அழைக்கவும் அவர்களால் மறுக்க முடியவில்லை (அவன் எதுக்கு இவங்கள கூப்பிடுறான் 😳) அதனால் நிச்சயம் திருமணத்தி வந்து விடுவதாக வாக்களித்தனர்.


எல்லாமே சிறப்பகத்தான் சென்று கொண்டிருந்தது. தோழி ஒருத்தியை சந்தித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்ற மித்ரா வீட்டுக்கு திரும்பாமல் போகும் வரை....

அன்று மாலை நான்கு மணியளவில் சந்திரா சொல்ல சொல்ல கேட்காமல் இப்போது வந்துவிடுவதாக கூறிவிட்டு சென்றவள் ஏழு மணியாகியும் திரும்பி வராததால் சந்திராவுக்கு பதற்றம் பிடித்துக் கொண்டது. அவளுக்கு எத்தனை முறை அழைத்துப் பார்த்தும் அழைப்பை ஏற்காததால் பயத்தில் கணவரிடம் கூற அவளை திட்டிய தனஞ்செயன் அஜய்யிடம் கூறி மித்ராவுக்கு அழைத்துப் பார்க்க சொல்ல அவனுடைய அழைப்பும் ஏற்கப்படவில்லை.

மெல்ல மெல்ல இந்த விடயம் வீட்டினர் அனைவருக்கும் பரவிவிட அனைவரும் ஆளாளுக்கு சந்திராவை கேள்வகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கும் நேரம் ஏழரை மணியளவில் குடும்பத்தினர் அனைவரின் வாட்ஸ்அப்பிற்கும் ஒரே நேரத்தில் மித்ராவிடமிருந்து காணொளி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் கொஞ்ச நாட்களாகவே தனக்கும் ஆதிக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் இந்த திருமணத்தில் துளிக்கூட இஷ்டமில்லாததால் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் கூறியிருந்தாள். அவளே பேசி அனுப்பியிருந்த வீடியோவை பார்த்து அனைவரும் நம்பமுடியாமல் அதிர்ந்து போய் நின்றிருந்தனர்.



தொடரும்.......




‘ஆதியின் நிலா’ அத்தியாயம் 23 போட்டாச்சு... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்...


 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியின் நிலா 24 (1):

“அப்புறம் எதுக்குடி உன் பொண்ணு கல்யாணம்னதும் அமெரிக்காவுல இருந்து ஓடி வந்தா.. இப்படி எங்க மானத்த வாங்கிறதுக்கா...” சந்திரலேகாவை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார் நிர்மலா..

தன் மகள் இப்படி ஒரு காரியத்தை செய்து வைப்பாள் என்று சந்திரா கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை... ஆதி, மித்ரா திருமணத்தை வைத்து அவள் ஏதேதோ கனவு கண்டு கொண்டிருக்க மகள் தன்னையே ஏமாற்றி சென்று விட்டதில் நொந்து போய் உட்கார்ந்திருந்தாள். நிர்மலாவை எதிர்த்து ஒற்றை வார்த்தை கூட பேச முடியாத நிலமை..

சந்திராவுக்கே இந்த நிலமை என்றால் மற்றவர்களை சொல்லவே வேண்டாம்.. என்ன செய்வதென்றே தெரியாமல் நிலை குலைந்து போய் இருந்தனர்..

“எல்லாரும் இப்படியே தலையில கைய வெச்சிட்டு இருந்தா எல்லாம் சரியாகிடுமா... நடந்தது நடந்து போச்சு அடுத்து ஆக வேண்டியத பார்க்கலாம்..” என்று கருணாகரன் கூற...

“இன்னும் என்னடா ஆகனும்... அதான் நம்ம எல்லார் முகத்துலயும் கரிய பூசிட்டு போயிட்டாளே... கல்யாணத்துக்கு வந்திருக்கிற சொந்தக்காரங்க கிட்ட நான் என்னன்னு போய் சொல்லுவேன்...” என்று ஆரம்பித்து விட்டார்.

தனஞ்செயனால் யார் முகத்தையும் நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை... அத்தனை அவமானமாக இருந்தது அவருக்கு.

ஆளாளுக்கு தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்க அந்நேரம் விஸ்வநாதனின் அலைப்பேசி அழைக்கவும் அதனை எடுத்து பேசியவர் “சொல்லு விக்ரம்..” என்றார்.

அதில் அனைவரும் அவர் முகத்தையே பார்த்திருக்க அந்தப் பக்கம் இருந்து என்ன சொல்லப் பட்டதோ “ம்ம்ம்...” என்றபடி பெருமூச்சுடன் இணைப்பை துண்டித்தவர் மற்றவர்கள் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு ஒன்றும் பலனில்லை என்பது போல் மறுப்பாக தலையசைக்க அங்கிருந்தவர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் காற்றோடு கரைந்து போனது.

அஜய், விக்ரம், சௌர்யா என அனைவரும் ஆளுக்கொரு பக்கமாக சென்று மித்ராவை தேட ஆரம்பித்திருந்தனர். போதாதைக்கு கமிஷனரிடமும் விடயத்தை கூறி ரகசியாக தேடச்சொல்லியிருந்தார் விஸ்வநாதன். அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தபோதும் பலன் என்னவோ பூஜ்ஜியம்தான். அவளை எங்கேயும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“அவ போனா போய் தொலையட்டும் விடுங்க... வேணாம்னு சொல்லிட்டு போனவள இழுத்துக்கிட்டு வந்து என் பேரனுக்கு கட்டி வைக்கப் போறீங்களா.. அவனுக்கு என்ன ஊர்ல உலகத்துல பொண்ணா கிடைக்காது...” என்று கூறிய நிர்மலாதேவி அங்கு அழுது கொண்டு உட்கார்ந்திருந்த சாரதாவை நோக்கிச் சென்றார்.

தனக்கு அவ்வளவாக விருப்பமில்லா விட்டாலும் மகனது ஆசைக்காக மித்ராவை மருமகளாக ஏற்றுக் கொள்ள தயராக இருந்த சாரதாவுக்கு மித்ராவின் இந்த செயலை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அவளுக்கு பிடிக்காவிட்டால் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கலாமே.. இப்படி இறுதி நேரத்தில் அவமானப் படுத்திவிட்டாளே...

மகளை நோக்கி வந்த நிர்மலா அவளது கையை பிடித்துக் கொண்டு, “இப்பவும் ஒன்னும் கெட்டு போயிடல சாரதா.. நம்ம தேவராஜ் பொண்ணு இருக்கால்ல... ரொம்ப தங்கமான பொண்ணு.. அவளுக்கு கூட வரன் பார்த்துட்டு இருக்காங்க.. பேசாம ஆதிக்கு அவள கட்டி வெச்சிடலாம்.. நீ என்ன சொல்ற..??” என்று தன் உறவுக்காரப் பெண் ஒருத்தியை ஆதிக்கு மணமுடிப்பதற்காக கேட்க சாரதாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“ஆதி வந்துடட்டும்மா.. எதுவா இருந்தாலும் அவன்தான் முடிவெடுக்கனும்...” என்றாள்.

“அவன் எடுத்த முடிவத்தான் எல்லாரும் பார்த்தோமே... அவன் ஆசப்பட்டவ அவன வேணாம்னு சொல்லிட்டு போயிட்டா.. இன்னும் அவன் இஷ்டத்துக்கே விட்டுட்டு பார்த்துக்கிட்டு இருக்கப் போறியா..அவன் அம்மாதானே நீ.. நீ சொன்னா மாட்டேன்னு சொல்லிடுவானா..” என்று மகளிடம் குரலை உயர்த்தினார்.

நிர்மலாவுக்கு ஆரம்பத்திலிருந்தே இந்த திருமணத்தில் அவ்வளவாக உடன்பாடு கிடையாது. அவரைப் பொறுத்தவரை சாரதா ஒரு அப்பாவி.. சந்திராவின் மகளான மித்ரா அவளுக்கு மருமகளாகிவிட்டால் அம்மாவும் மகளும் சேர்ந்து சாரதாவை நசுக்கி மூலையில் போட்டு விடுவார்கள் என்ற பயம் அவர் மனதில் இருந்து கொண்டே இருந்தது.

இப்போது மித்ராவே சென்று விட்டது சாதகமாய் போய்விட எப்படியாவது குறித்த முகூர்த்தத்தில் வேறு ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து ஆதிக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று நினைத்தார். இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட அவர் தயாராக இல்லை.

வாசலில் கார் வரும் சத்தம் கேட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.. மித்ரா சென்று விட்டதை ஆதிக்கு தெரியப்படுத்த சாரதா அழைத்தபோது அந்த காணொளியை அவள் தனக்கும் அனுப்பியிருப்பதாக கூறியவன் வீட்டுக்கு வந்து மற்றதை பேசிக் கொள்வதாக கூறி வைத்து விட்டான்.

சாரதா பேசி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து இப்போதுதான் வருகிறான். அனைவரும் ஒருவித பரபரப்புடன் பார்த்திருக்க உள்ளே வந்தவன் “தாத்தா..” என்று விஸ்வநாதனை மட்டும் அழைத்துக் கொண்டு அவரது அலுவலக அறைக்குள் சென்றான்.

விஸ்வநாதனுக்கு அவன் முகத்தை பார்க்கவே சங்கடமாக இருந்தது.

“ஆதி அவளுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்ப்பா..” என்று மன்னிப்பு வேண்ட, “அதெல்லாம் வேண்டாம் தாத்தா.. இப்ப என்ன முடிவெடுத்திருக்கீங்க..??” என்று உடனடியாக அடுத்த விடயத்தை ஆரம்பித்தான்.

“என்ன பண்றதுன்னு ஒன்னுமே புரியலையேப்பா.. அவ மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இப்படி ஒரு காரியத்த பண்ணிருக்கான்னு தெரியல... நல்லவேளை கல்யாணத்துக்கு எல்லாரையும் கூப்பிடாம முக்கியமான நெருங்கின சொந்தக்காரங்கள மட்டும்தான் கூப்பிட்டிருக்கோம்... இல்லைன்னா ரொம்ப அவமானமா போயிக்கும்”

அதில் கடுப்பானவன் “இப்போ என்ன சொல்ல வரீங்க தாத்தா.. அந்த முக்கியமான நெருங்கின சொந்தக்காரங்க முன்னாடி நான் அவமானப்பட்டா பரவாயில்லன்னு சொல்ல வரீங்களா...??”

அவனது கேள்வியில் பதறிப்போன விஸ்வநாதன் “ஐயோ!!! நான் அப்படி சொல்லலப்பா... அவ ஏதோ முட்டாள் தனமா முடிவெடுத்து வீட்ட விட்டு போயிருக்கா... புத்தி வந்தா தானா திரும்பி வந்துடுவா... நம்மளும் இப்படியே விட்டுட போறதில்லையே.. பசங்க ஆளுக்கொரு பக்கம் தேடிக்கிட்டு தான் இருக்காங்க... கமிஷனர் கிட்டயும் சொல்லியிருக்கேன்... எப்படியும் அவள கண்டு பிடிச்சிடலாம் ஆதி..”

“ஓஹ்... வீட்ட விட்டு போனவ மனசு மாறி தானா திரும்பி வர்ர வரைக்கும் நான் காத்திருந்து அவள கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்றீங்க அப்படித்தானே...” என்று அவன் நேரடியாக கேட்க விஸ்வநாதனால் பதில் பேச முடியவில்லை.

அவர் அப்படித்தான் சொல்ல வந்தார். அவருக்கு நிர்மலா சொல்வது போல் ஆதிக்கு வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைப்பதில் இஷ்டமில்லை. எப்படியாவது பேரனை தன்னுடைய குடும்பத்துக்குள்ளே வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தார்.. ஆனால் அவர் சொன்னதை அவன் சரியாக புரிந்து கொண்டு திருப்பிக் கேட்ட போது அவருக்கே தான் பேசியது மிகவும் அபத்தமாகப் பட்டது.. தன்னை வேண்டாம் என்று மறுத்து விட்டு போனவளை எந்த ஆண்மகன்தான் திருமணம் செய்து கொள்ள நினைப்பான்.

“நான் உனக்கு நம்ம வீட்டு பொண்ண கட்டி வைக்கனும் நினைச்சி பேசிட்டேன்ப்பா...” என்று உண்மையான வருத்தத்துடன் கூறியவர், “அப்போ உன் பாட்டி சொல்ற மாதிரி நம்ம சொந்தக்கார பொண்ணுங்கள்ள யாரையாவது பேசி குறிச்ச முகூர்த்தத்துலயே கல்யாணத்த முடிச்சிடலாம்..” என்றார்.

“குறிச்ச முகூர்த்தத்துல கல்யாணம் நடந்து தான் ஆகனும்...” என்று கட்டளை போல் சொன்னவன் “ஆனா சொந்தக்கார பொண்ணெல்லாம் எதுக்கு...??” என்றான்.

விஸ்வநாதனுக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியவில்லை.. “என்னப்பா சொல்ற.. சொந்தக்காரப் பொண்ணு எதுக்குனா... அப்போ வேற யாரை பேசுறது...” பேரன் வேறு யாராவது பெண்ணை சொல்கிறானோ என்று நினைத்துக் கேட்க,

“ஏன் தாத்தா... உங்களுக்கு மித்ரா மட்டும்தான் பேத்தியா என்ன..” என்றான் அவன்.

“ஆதி...”

“அதான் நித்திலா நாலு வருஷமா என்னையே லவ் பண்ணிட்டு இருக்காளே... உங்களுக்கு தெரியாதா...??
அவ சின்னப் பொண்ணுனு நினைச்சி தான் அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்காம மித்ராவத்தான் கட்டிக்குவேன்னு பிடிவாதமா இருந்துட்டேன்... அது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்போ புரியுது....”

“ஆதி... நித்துவ ஆர்யாக்கு கட்டி வைக்கிறதா எல்லாம் பேசி முடிவு பண்ணியாச்சுப்பா...” விஸ்வநாதன் தயங்கி தயங்கி கூறினார்.. “அதோட உங்க பெரிய பாட்டி ரொம்ப வருஷம் கழிச்சி இப்போத்தான் அதுவும் நித்திலாவ பொண்ணு கேக்கிறதுக்காகத்தான் நம்ம வீட்டுக்கே வந்தாங்க... அவங்களுக்கு என்னப்பா பதில் சொல்றது..” சங்கடத்துடன் அவர் கூற,

“ஆமால்ல... அவங்களுக்கு பதில் சொல்லனும்ல...” என்று யோசிப்பது போல் தாடையை தடவியவன் “அப்போ ரெண்டு நாள்ள கல்யாணத்த வெச்சிட்டு உங்க பேத்தி ஓடிப் போனதுக்கு எனக்கு என்ன பதில் சொல்ல போறீங்க...” என்றான்.



விஸ்வநாதன் வாயடைத்துப் போய் நின்றுவிட்டார்.

நித்திலா ஆதியை காதலிப்பது தெரிந்தது முதலே அவருக்கும் உள்ளுக்குள் அப்படி ஒரு எண்ணம் இருக்கத்தான் செய்தது. ஆனால் சாரதா ஆதியிடம் நித்திலாவை பற்றி கூறிய போது அவன் மறுத்துவிட்டு மித்ராவை விரும்புவதாக கூறியதை அறிந்ததும் அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டார்.

அதுவும் இப்போது அக்காவின் பேரனுக்கு நித்திலாவை திருமணம் செய்து வைத்து இரண்டு குடும்பத்தையும் ஒன்று சேர்ப்பதற்காக நிர்மலா ஆசையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த விடயத்தை கூறினால் மனைவி என்ன சொல்வாளோ என்று அதுவேறு யோசனையாக இருந்தது அவருக்கு.

“அது வந்துப்பா...” என்று அவர் எதையோ சொல்ல வர அவரை இடை மறித்தவன் “நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன் தாத்தா... எல்லார்கிட்டயும் பேசி நாளைக்குள்ள ஒரு முடிவு சொல்லுங்க... அப்படி ஃபிக்ஸ் பண்ண மாதிரி இந்த கல்யாணம் நடக்காம போனா அதோட என்னையும் என் அம்மாவையும் நீங்க மறந்திட வேண்டியதுதான்... நான் வரேன்...” அவர் தலையில் பெரிய பாறாங்கல்லை தூக்கி போட்டுவிட்டு அவன் சென்று விட்டான்.

ஆதி சென்று சற்று நேரம் கழித்து வெளியே வந்த விஸ்வநாதன் அங்கு நின்றிருந்த விஜயாவிடம் “விஜயா... நித்திலா எங்கே?? நான் நித்து கிட்ட பேசனும் வர சொல்லும்மா...” என்றார்.

ஆதியுடன் பேசிவிட்டு வந்து நித்திலாவை தேடுகிறார் என்றால்.... கணவரை பார்த்துக் கொண்டிருந்த நிர்மலாவின் மனதுக்குள் அபாய மணி அடிக்க ஆரம்பித்தது.



தொடரும்.....



‘ஆதியின் நிலா’ அத்தியாயம் 24 (1) பதிந்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்..


 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியின் நிலா 24 (2):



“ஹூ தி ஹெல் ஆர் யு..?? என்ன எதுக்குடா கிட்னாப் பண்ணிட்டு வந்திருக்க... என் ஆதிக்கு மட்டும் இதெல்லாம் தெரிஞ்சது உன்ன இருக்கிற இடம் தெரியாம பண்ணிடுவான்..” எதிரில் நின்று கொண்டிருந்தவனை பார்த்து கத்திக் கொண்டிருந்தாள் மித்ரா.

அதற்கு லேசாக சிரித்தவன் “கூல் பேபி... முதல்ல இதை சாப்பிடுங்க..” என்று அவள் முன்னால் ஒரு உணவுத் தட்டை நீட்டியவன் “அப்புறமா போய் உங்க ஆதி மாமாகிட்ட என்ன பத்தி சொல்லி இருக்கிற இடம் தெரியாம பண்ணலாம் என்ன..” நக்கலாக கூறியபடி உணவை அவளது வாய்க்குள் திணித்துவிட இரண்டு கைகளும் நாற்காலியுடன் சேர்த்து கட்டப் பட்டிருந்ததால் வேறு வழியில்லாமல் உணவை வாய்க்குள் வாங்கிக் கொண்டவள் மீண்டும் அவன் முகத்திலேயே துப்பினாள்.

அதற்கும் மெலிதாக சிரித்தவன் ஒன்றும் பேசாமல் சென்று முகத்தை கழுவிக் கொண்டுவர இவனிடம் எப்படி எதைக் கூறி தப்பிப்பது என்று அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளும் மிரட்டிப் பார்த்தாள், கெஞ்சிப் பார்த்தாள், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகக் கூட சொல்லிப் பார்த்து விட்டாள்.

புத்தரைப் போன்று முகத்தை வைத்துக் கொண்டு “அப்படியா..” என்று ஒற்றை வார்த்தையை மட்டும் உதிர்த்துவிட்டு சென்றுவிடுகிறான். இதில் அவளை மிரட்டி திருமணத்தில் இஷ்டமில்லை என்று வீடியோ வேறு எடுத்து வைத்திருக்கிறான்.

“அந்த முகேஷ் ஆளுதான நீ.. எங்க கல்யாணத்த நிறுத்த அவன்தான் உன்ன இதெல்லாம் செய்ய சொன்னானா...” என்று சீறினாள்.

அதற்கும் ஒற்றை புன்னகை.

மித்ராவுக்கு கொலைவெறியே வந்துவிட்டது.. அவனை பயங்கரமாக திட்ட ஆரம்பித்து விட்டாள். ஒற்றை கண்ணை மூடிக்கொண்டு தலையை லேசாக திருப்பி சுண்டுவிரலால் காதை குடைந்து விட்டவன் எதிரில் நின்று கொண்டிருந்த அடியாள் போல இருந்த ஒருவனை பார்க்க அவன் உடனே சென்று மித்ராவின் வாயை துணி வைத்துக் கட்டிவிட்டான்.

அதற்குமேல் கத்த முடியாமல் கைகளையும் கால்களையும் அசைத்து கட்டை பிரிக்க முயற்சித்துக் கொண்டிருந்தவளை திருப்தியுடன் பார்த்துவிட்டு வெளியே வந்தவன் அலைப்பேசியை எடுத்து எண்களை அழுத்திவிட்டு காதில் வைக்க அந்தப் பக்கமிருந்து ஒலித்தது கம்பீரமான குரல்..

“சொல்லு ஜோ..”

“தேவ் பாய்.. உங்க மாமா பொண்ணு சாப்பிடவே மாட்டேங்கிறாங்க.. என்ன பண்ண...”

“ம்ப்ச்.. இதே சொல்றதுக்கா கால் பண்ணிருக்க.. இன்னைக்கு ஒருநாள் சாப்பிடலைன்னா அவ ஒன்னும் செத்து போயிடமாட்டா.. அவள ரொம்ப கம்பல் பண்ணாம அவ இஷ்டத்துக்கு விட்டுடு... வேற ஒன்னும் ப்ராப்ளம் இல்லைல...”

“நோ நோ... எவ்ரிதிங் இஸ் ஓகே ஹியர்...”

“தட்ஸ் குட்.. மித்ரா மேல ஒரு சின்ன கீறல் கூட விழக் கூடாது... புரியுதா..”

“நான் பார்த்துக்கிறேன் பாய்... நீங்க கூலா கல்யாண வேலைய பாருங்க..” என்று சிரிக்க பதிலுக்கு தானும் சிரித்துவிட்டு இணைப்பை துண்டித்தான் ஆதி.



#########################



“மித்ரா அக்கா போயிட்டதால அவங்களுக்கு பதிலா நான் அத்தான கட்டிக்கனும்னு சொல்றீங்க... அப்படித்தானே தாத்தா..” முகத்திலோ குரலிலோ எந்தவித உணர்ச்சிகளையும் காட்டிக் கொள்ளாமல் கேட்டவளை பார்த்தவர்,

“நான் அப்படி சொல்லலடா.. உனக்கு ஆதிய கட்டிக்க இஷ்டமான்னுதான் கேட்டேன்... உன் பாட்டி ஆதிக்கு வேற பொண்ண பார்த்து கட்டி வைக்கலாம்னு சொல்றாங்க.. நம்ம வீட்டுல நீ இருக்கப்ப எதுக்கு வேற பொண்ணு பார்க்கனும்னு நினைச்சித்தான்...” பேரன் மிரட்டியதையெல்லாம் அவர் சொல்லவே இல்லை “பழசெல்லாம் ஒதுக்கி வெச்சிட்டு இப்போ உன் மனசுல என்ன இருக்கோ அதை மட்டும் சொல்லுடா... நீ அவன மறந்திருப்பேன்னு தெரியும்.. இருந்தாலும் கடைசியா உன்கிட்ட ஒரு வார்த்தை கேட்கலாம்னுதான் வந்தேன்...”

“மறக்கிறதா.. அத்தான எப்படி தாத்தா என்னால மறக்க முடியும்..”

அவள் அவனை மறக்க முடியாது என்று சொன்னதை சரியாக தவறாக புரிந்து கொண்டவர் முகம் மலர நித்திலாவை பார்த்து, “அப்போ உனக்கு ஆதிய கட்டிக்க சம்மதமாடா...” என்றார் ஆர்வமாக.

அவரை நோக்கி அர்த்தம் புரிந்து கொள்ள முடியாத விசித்திரமான பார்வையை வீசியவள் அடுத்த நொடியே ஆம் என்பது போல் தலையாட்ட அத்தனை நேரம் இருந்த அழுத்தம் மறைந்து அவரது மனம் இலகுவானது.

இந்த நான்காண்டு கால இடைவெளியில் நித்திலாவின் மனதிலிருந்து ஆதியை தூக்கியெறிந்திருப்பாள் என்றுதான் அவர் நினைத்திருந்தார். அதுவும் அவன் அவளை அவ்வளவு காயப்படுத்தியிருந்தும் அவள் இன்னமும் அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்றால் எந்த அளவுக்கு அவனை விரும்பியிருப்பாள் என்று நினைத்தவர் எப்படியாவது இந்த திருமணத்தை நடத்தி முடித்துவிட வேண்டுமென்று அப்போதே முடிவெடுத்துவிட்டார்.

“ரொம்ப சந்தோசம்டா... நான் இப்பவே போய் எல்லாருக்கும் சொல்லிர்ரேன்..” என்று உற்சாகமாக கூறிவிட்டு சென்றவரை பரிதாபமாக பார்த்தாள் நித்திலா. வயதான காலத்தில் இந்த மனிதரை எப்படியெல்லாம் அவன் இஷ்டத்துக்கு ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறான்.

நித்திலாவிடம் பேசிவிட்டு வந்தவர் மனைவி மக்களிடம் விடயத்தை கூற முதல் எதிர்ப்பே அவர் மனைவியிடமிருந்து தான் வந்தது.

“என்ன உளர்ரீங்க... நித்திலாவ ஆர்யாவுக்கு கட்டிக் கொடுக்கிறதா நான் என் அக்காவுக்கு வாக்கு கொடுத்திருக்கேன்.. அதுவும் இல்லாம ஆதிக்கு போய் நித்துவ கட்டி வைக்கப்போறேன்னு சொல்றீங்க.. இதுக்கு நான் ஒரு காலத்துலயும் சம்மதிக்க மாட்டேன்..” நிர்மலா தாம்தூம் என்று குதிக்க ஆரம்பித்துவிட,

“ஏன்மா என் பையனுக்கு நித்துவ கட்டி வைக்க மாட்டீங்களா..?” என்று சாரதா கேட்ட பிறகுதான் மகள் அங்கிருப்பதை உணர்ந்தவர் “அப்படி இல்ல சாரதா.. ஆதி வயசு என்ன.. நித்து வயசு என்ன... அவ.. அவ ரொம்ப சின்ன பொண்ணு... நம்ம ஆதிக்கு வேற நல்ல பொண்ணா பார்க்கலாம்..” என்று மகளை சமாதானப் படுத்தினார்.

அவர் என்னவோ சாரதாவுக்காக பார்த்துத்தான் குறித்த தேதியில் வேறு நல்ல பெண்ணை ஆதிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அடிப்போட கடைசியில் அவரது தலையிலேயே இடியாக வந்து விழுந்துவிடும் போல இருந்ததில் இதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று முனைப்பாக இருந்தார் நிரமலாதேவி.

கூடவே விஜயாவும், என்றும் இல்லாத திருநாளாக சந்திராவும் சேர்ந்து கொண்டு நிர்மலாவுக்கு ஒத்து ஊதினர். விஜயாவுக்கு ஆதியின் மேல் நல்ல அபிப்பிராயம் கிடையாது. சந்திராவுக்கு தன் மகளை கண்டுபிடித்து கையை காலை கட்டியாவது ஆதிக்கு திருமணம் செய்து வைத்துவிடும் எண்ணம்.

இவர்கள் மூவரும்தான் ஆதி, நித்திலா திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் என்னவோ விஸ்வநாதன் கூறியதை கேட்டு மகிழ்ச்சிதான் அடைந்தனர் தனஞ்செயன் உட்பட.. அவருக்கு தன் மகளால் நின்றுபோன இந்த திருமணம் எப்படியாவது நடந்தால் போதுமென்று இருந்தது.

நிர்மலாவும் விஜயாவும் ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்க அதில் கடுப்பான விஸ்வநாதன் “ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா..” என்றவர் “ஆதி தான் நித்திலாகிட்ட கேட்க சொன்னான்.. நித்துவுக்கும் ஆதிய பிடிச்சிருக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம்னு சொல்லிட்டா... அவங்க ரெண்டு பேருக்குமே இஷ்டம்னு சொன்னதுக்கப்புறம் நம்ம பேச என்ன இருக்கு...”

“என்னது நித்து ஆதிய பிடிச்சிருக்குனு சொன்னாளா...” நிர்மலாவுக்கு மயக்கமே வந்துவிட்டது.

அடுத்த நொடியே பேத்தியை தேடி சென்றுவிட்டார் அவர்..


“ஆதி நித்திலாகிட்ட கேட்க சொன்னானா...” சந்திரா நெஞ்சை பிடித்துக் கொண்டாள். “இத்தன வருஷமா என் பொண்ணு கூட பழகிட்டு.. இப்போ அவ எதுக்கு போனா,, ஏன் போனான்னு கூட தேடி கண்டுபிடிக்காம இவன் பாட்டுக்கு நித்திலாவ கட்டிக்க ரெடியாகிட்டான். இவன் நிஜமாவே மித்ரா மேல ஆசைப்பட்டானா..” அவளுக்கு பெருத்த சந்தேகமாக இருந்தது.


“என்னாச்சு பாட்டி...” ஆக்ரோஷமாக தன்னுடைய அறைக்குள் வந்து நின்ற பாட்டியை புரியாமல் பார்த்து கேட்டாள் நித்திலா.

“இன்னும் என்ன ஆகனும்.. என்ன பண்ணி வெச்சிருக்க நீ...” என்றார் கோபமாக.

“நான் என்ன பண்ணேன்..” அவள் ஒன்றும் தெரியாதது போல் கேட்க, “ஆதிய கட்டிக்கிறேன்னு எதுக்கு உங்க தாத்தாகிட்ட சொன்ன.. உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு..” சீறினார்.

“ஓஹ் அதுவா...” என்றவள் “பைத்தியம்லாம் பிடிக்கல பாட்டி.. அத்தான பிடிச்சிருக்கு அதனால சொன்னேன்..” என்று அமர்த்தலாக சொன்னவளை நம்பமுடியாமல் பார்த்தார் நிர்மலா.

“என்ன உளர்ர...”

“நான் ஒன்னும் உளரல... உண்மையதான் சொல்றேன்.... எனக்கு அத்தான ரொம்ப பிடிச்சிருக்கு பாட்டி.. நான் நாலு வருஷமா லவ் பண்ணிட்டு இருக்கேன்..” என்றவள் நிர்மலாவுக்கு பின்னால் நின்றிருந்த விஜயாவை பார்த்துவிட்டு “பெரிம்மாக்கு கூட தெரியுமே...” என்றாள்.

அதிர்ச்சியுடன் விஜயாவை திரும்பி பார்த்தவர் “என்னடி சொல்றா இவ... உனக்கு தெரியுமா..?” என்று விஜயாவிடம் கேட்க அவள் அவருக்கு பதில் சொல்லாமல் நித்திலாவை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் விஜயா.

“நித்து அவன் மித்ராவ கட்டிக்கிறதுக்கு தயாரா இருந்தவன்.. அவங்களுக்குள்ள என்ன பிரச்சனையோ, அவ ஓடி போயிட்டா.. அதனாலதான் உங்க தாத்தாகிட்ட உன்ன கட்டி வைக்க சொல்லிருக்கான்... அவன நீ கட்டிக்கபோறியா... அறிவில்ல உனக்கு...” அவளுக்கு புரிய வைத்துவிடும் நோக்கத்தில் அவர் சொல்ல அவள்தான் ஏற்கனவே தெளிவாக இருப்பவளாயிற்றே,

“அதுல என்ன தப்பிருக்கு பாட்டி... நானும் அத்தானுக்கு மித்ரா அக்காவ பிடிச்சிருக்குன்னு நினைச்சித்தான் இத்தன நாள் ஒதுங்கி இருந்தேன்... இப்போதான் மித்ரா அக்கா அவங்களே கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு போயிட்டாங்களே.. அப்புறம் என்ன.. அதான் தாத்தா கேட்டதும் உடனே ஓகே சொல்லிட்டேன்..”

அவள் சொன்னதுதான் தாமதம் அவருக்கு எங்கிருந்துதான் அவ்வளவு ஆத்திரம் வந்ததோ.. நித்திலாவின் தாடையை பற்றி பின்னால் தள்ளி சுவற்றில் சாய்த்தவர், “அப்போ என் அக்காவும் அவங்க குடும்பமும் இத்தன வருஷம் கழிச்சி இந்த வீட்டு படியேறி வந்து உன்ன பொண்ணு கேட்டுட்டு போனாங்களே அவங்களுக்கு என்ன பதில் சொல்ல சொல்ற.. சொல்லுடி..” ஆத்திரத்துடன் கேட்டார் நிர்மலா..

தன்னுடைய தாடையை பற்றியிருந்த அவரது கையை அசாலட்டாக பிரித்து விட்டவள், “யார கேட்டு உங்க அக்காவோட பேரனுக்கு என்ன கட்டி வைக்கிறதா சொன்னீங்க... அவங்க இஷ்டத்துக்கு அவங்க வந்து கேட்டாங்க.. உங்க இஷ்டத்துக்கு நீங்க சம்மதம் சொல்லி அனுப்புனீங்க.. என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டீங்களா.. நானும் நீங்க என்கிட்ட இப்போ கேட்பீங்க அப்போ கேட்பீங்கன்னு பார்த்துட்டே இருந்தா, என்ன கண்டுக்காம நீங்க பாட்டுக்கு பேசி முடிச்சிட்டீங்க... அவங்க என்னதானே பொண்ணு பார்க்க வந்தாங்க.. நீங்க என்னோட முடிவ கேட்டுட்டு இல்ல அவங்களுக்கு சம்மதம் சொல்லிருக்கனும்..” அழுத்தம் திருத்தமாக கூறியவளை இமைக்காமல் பார்த்திருந்தார் நிர்மலா.. அவருக்குத்தான் ஒரே நாளில் எத்தனை விதமான அதிர்ச்சி.

அவர் இன்னமும் அவளை ஒரு குழந்தையாகத்தான் பார்த்தார். அவள் தன்னையே எதிர்த்து பேசுவதை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை “எங்கே இருந்துடீ இப்படியெல்லாம் பேச கத்துக்கிட்ட..”

“எனக்கு பிடிச்சத பிடிச்சிருக்குனு சொல்றதுக்கும், பிடிக்காதத பிடிக்கலைனு சொல்றதுக்கும் எங்கே போய் கத்துக்கிட்டு வரனும்னு சொல்றீங்க..”

அத்தனை நேரம் நிர்மலாவை பேசவிட்டு ஏதோ யோசனையுடன் நின்றிருந்த விஜயாவுக்கு நித்திலா மீண்டும் மீண்டும் மாமியாரை எதிர்த்துப் பேசிக் கொண்டிருப்பது கோபத்தை கிளப்ப, “அத்தை.. அவள விட்டுடுங்க.. இவ நம்ம நித்து கிடையாது.. நம்ம நித்து நம்ம எது சொன்னாலும் கேட்டுக்குவா இப்படியெல்லாம் எதிர்த்து பேசமாட்டா.. இவ வேற... ஆளே மாறிட்டா.. பெரிய பொண்ணா வளர்ந்திட்டா இல்ல.. இனிமே நம்ம யாரும் தேவையில்லைனு நினைச்சிட்டா போல.. நீங்க வாங்க அத்தை..” என்றாள்.

“பாருடி.. என்ன பேச்சு பேசுறா..” நிர்மலாவுக்கு அழுகையே வந்துவிட்டது.

“பார்த்துட்டுதான் அத்தை இருக்கேன்... இவ எதுவரைக்கும் போறான்னு நம்மளும் பார்க்கலாம்..” நித்திலாவை முறைத்துக் கொண்டே கூறியவள் “அன்னைக்கு நீ அவன தாங்கி பேசினப்பவே நான் யோசிச்சிருக்கனும்... அழுது என்னையே ஏமாத்தியிருக்க இல்ல.. உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு நான்தான் தப்பா நினைச்சிட்டேன்..” என்றுவிட்டு மாமியாரை அழைத்துச் சென்றாள்.



#########################


நித்திலாவிடம் பேசிவிட்டு வந்தவர் “என்னங்க கொஞ்சம் உள்ள வாங்க...” என்று அவர்களுடைய அறைக்குள் செல்ல, மகன்களை திரும்பி பார்த்த விஸ்வநாதன் ஒரு பெருமூச்சுடன் அறைக்குள் சென்றார்.

“எந்த காரணத்துக்காகவும் ஆதிக்கு நித்திலாவ கல்யாணம் பண்ணி வைக்க நான் சம்மதிக்க மாட்டேன்... இந்த பேச்சை இதோட நிறுத்திடுங்க.. இப்போ என்ன ஆதிக்கு ஒரு பொண்ணு வேணும் அவ்வளவுதானே... அவனுக்கு ஏற்ற மாதிரி நல்ல பொண்ணு நாளைக்குள்ள நான் பார்த்து தரேன்.. நித்து வேண்டாம்..” நிர்மலா.

“நீ எதுக்காக இந்த கல்யாணம் நடக்கூடாதுனு நினைக்கிறேன்னு எனக்கு நல்லாவே தெரியும் நிர்மலா. உனக்கு எப்படியாவது உன் அக்கா பேரனுக்கு நித்திலாவ கட்டி வைக்கனும் அதானே... அதுக்குத்தானே இந்தப் பாடு படுற நீ..” விஸ்வநாதனும் பதிலுக்கு கோபமாக கேட்க,

“அதுல என்னங்க தப்பிருக்கு.. அவளுக்கு ஆதிய விட ஆர்யாதான் பொருத்தமா இருப்பான்.. அதோட ஆதிக்கு சின்ன வயசுல இருந்தே நித்துவ பிடிக்காது.. அவனுக்கு போய் எப்படி நித்துவ கட்டி வைக்கிறது..”

“என்னது... சின்ன வயசுல இருந்தே நித்திலாவ பிடிக்காதா... என்ன உளர்ர... ஆதிக்கு நித்திலான்னா உயிர்.. அவங்க பாட்டிகிட்ட பேசி அவள இங்க கூட்டிக்கிட்டு வந்ததே ஆதிதான்..”

“நான் அவங்க கால்ல விழுந்து கெஞ்சி கேட்டதாலதான் அவங்க நித்திலாவ கொடுத்தாங்க... இந்த கல்யாணத்த எப்படியாவது நடத்தனும்கிறதுக்காக சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் பேசாதீங்க..”

“முட்டாள்... நான் வாய்க்கு வந்ததெல்லாம் பேசல்ல... நீதான் அந்த ஆர்யாவுக்கு நம்ம பேத்திய கட்டி வைக்கனும்கிறதுக்காக வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக்கிட்டு இருக்க... உங்க அக்கா பேரன் மேல இருக்கிற அக்கறைய கொஞ்சம் நம்ம பேரன் மேலயும் காட்டு... ஆ.. ஊன்னா அக்காவும் அக்கா குடும்பமும்..” விஸ்வநாதன் சொல்ல கொதித்துப் போய்விட்டார் நிர்மலா.

“எங்க அக்காவ பத்தியும் அவங்க குடும்பத்த பத்தியும் பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு.. நித்திலாவோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கல்யாணம் பண்ணி வெச்சதே எங்க அக்காதான்.. அவங்க வீட்டுக்கு நான் நித்துவ மருமகளா அனுப்பனும்னு ஆசைபடுறேன்... இதுல நீங்க என்ன தப்ப கண்டீங்க... என்ன மறந்து போச்சா??? என் பையன் அந்த பொண்ண காதலிக்கிறேன்னு வந்து சொன்னப்ப என்ன ஆட்டம் போட்டீங்க...”

“நிர்மலா...”

“கத்தாதீங்க... நான் என்ன நடக்காததையா சொல்றேன்.. அவன் உங்க கால்ல விழுந்து கெஞ்சி, கதறி கேட்டப்க கூட ஏத்துக்காம வீட்ட விட்டு துரத்தி விட்டீங்களே... என் பையன் அழுதுக்கிட்டே போனானே.. அப்பக்கூட ஈவு, இரக்கம் இல்லாம கல்லு மாதிரி நின்னீங்களே... அதெல்லாம் நான் மறந்துட்டேன்னா நினைக்கிறீங்க... நித்திலா பொறந்தப்ப கூட நீங்க என்ன பார்க்க விடலயே... கடைசில என் பையன் சாவுக்குதானே என்ன கூட்டிட்டு போனீங்க... இப்ப ஏதோ பெரிய யோக்கியம் மாதிரி என் பேத்திக்கு கல்யாணம் பண்ணி வைக்க வந்துட்டீங்க... இதுக்கு நான் சம்மதிப்பேன்னு கனவுல கூட நினைக்காதீ... என்... என்னங்க......” இத்தனை வருடமாக மனதில் அடக்கி வைத்திருந்ததெல்லாம் சேர்த்து வைத்து பேசிக் கொண்டிருந்தவர் திடீரென்று விஸ்வநாதன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தரையில் சரிவதைக் கண்டதும் ஆடிப்போய்விட்டார் நிர்மலாதேவி.


தொடரும்.....




ஆதியின் நிலா அத்தியாயம் 24 (2) பதிந்துவிட்டேன்... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்..

 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 25:


“நாளைக்கு ஆதிக்கும் நித்திலாக்கும் கண்டிப்பா கல்யாணம் நடக்கும்.. இதுக்கு மேல இந்த கல்யாணம் நடக்க கூடாதுனு யாராவது சொல்லிக்கிட்டு வந்தா.. நடக்கிறதே வேற..” மறுநாள் காலை ஹாலில் நின்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தார் கருணாகரன்.

யாரும் ஒற்றை வார்த்தை பேசவில்லை. மாமனாருக்கு நெஞ்சுவலி வந்ததிலிருந்து விஜயா வாயே திறக்கவில்லை. இந்த சமயத்தில் தான் ஏதாவது பேசப் போனால் தனஞ்செயன் அடித்தே கொன்று விடுவார் என்பதால் சந்திராவின் வாய் தானாகவே மூடிக் கொண்டது.

நிர்மலாதான் இடிந்து போய்விட்டார்... இத்தனை வருடமாக கணவரின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக எதையுமே பேசாமல் இருந்தவர் இப்போது இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக பேசப்போய் கணவரை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டோமே என்று நொந்து போய் உட்கார்ந்திருந்தார்..

விஸ்வநாதன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்ததை நினைத்தால் இப்போதும் அவரது உடலும் உள்ளம் ஒருசேர நடுங்கியது.

உயர் இரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு நெஞ்சு வலி வந்திருந்தது. பெரிதாக பயப்பட ஒன்றுமில்லை என்று அவர்களது குடும்ப வைத்தியர் சொல்லிவிட்டு சென்றிருந்தாலும் யாருக்குமே மனது சமாதானமடையவில்லை. ஆளாளுக்கு சோகத்தில் மூழ்கியிருந்தனர்.






ஒருவழியாக விஸ்வநாதன் கண்விழித்ததும் ஆதி அவரைப் பார்க்க வந்தவன் அவரது கையை பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தான்..

“நீங்க தேவையில்லாம மனசுல எதையும் போட்டு குழப்பிக்காதீங்க தாத்தா... கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்கும்.. யாரும் எதுவும் பண்ண முடியாது..” பாட்டியை பார்த்துக் கொண்டே தாத்தாவிடம் கூறினான்.

நிர்மலா வேறு ஏதோ யோசனையில் மூழ்கியிருந்தவர் அவன் பேசியதை சரியாக கவனிக்கவில்லை.. இறுதி வார்த்தை மட்டும் அவரது காதில் விழுந்து புத்தியில் உறைக்க பேரனை நிமிர்ந்து பார்த்தார். அவன் தாத்தாவின் புறம் பார்வையை மாற்றிக் கொண்டான்.

“நானும் உனக்கும் நித்துவுக்கும் கல்யாணம் நடக்கனும்தான் ஆசைப்படுறேன் ஆதி..” பெருமூச்சுடன் கூறினார் விஸ்வநாதன்.

“நம்ம நினைக்கிற மாதிரியே எல்லாரும் நினைக்க மாட்டாங்க இல்ல தாத்தா... யார் மனசுல என்ன இருக்குனே புரியமாட்டேங்குது..” ஒன்றும் தெரியாத அப்பாவி போல கூறியவனை முறைத்துப் பார்த்தார் நிர்மலா.

அவன் வேண்டுமென்றே தன்னை சீண்டுகிறான் என்பது அவருக்கு நன்றாக புரிந்தது. விஸ்வநாதனின் நிலையை மனதிற்கொண்டு ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்தார்.. கணவரை சங்கடப்படுத்தும் விதத்தில் எதையும் செய்ய அவர் விரும்பவில்லை.

இப்படியே பாட்டியை கடுப்பேற்றும் விதமாக சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவன் கிளம்பி விட, ஆதி சென்றதும் மனைவியை நோக்கிய விஸ்வநாதன், “இன்னுமா உன் அக்கா பேரனுக்கு நித்திலாவ கல்யாணம் பண்ணி வைக்கனும் நினைக்கிற..” என்று கேட்டார்.

நிர்மலாவால் ஆம் என்றா சொல்ல முடியும்.. “உங்க விருப்பப்படி செய்ங்க.. நான் எதுவும் சொல்லவும் மாட்டேன்... தடுக்கவும் மாட்டேன்.. அக்காகிட்ட எப்படி, என்ன சொல்றதுன்னு தான் எனக்கு தெரியலைங்க..” என்றார் சோகமாக.


“உங்க அக்கா கிட்ட நான் பேசிப் பார்க்கிறேன் நிர்மலா..”

“இல்லைங்க வேணாம்.. அக்கா ரொம்ப கோபப்படுவாங்க.. அப்புறம் உங்கள ஏதாவது பேசிடுவாங்க.. நானே அவங்களுக்கு புரியிற மாதிரி சொல்றேன்..”

விஸ்வநாதனுக்கு மனைவியை பார்க்க பாவமாக இருந்தது. நிர்மலா, சகுந்தலா இருவரது பாசப்பிணைப்பும் அவருக்கு நன்றாக தெரியும். இந்த விடயம் சகுந்தலாவுக்கு தெரிந்தால் விஸ்வநாதனையும் நிர்மலாவையும் பேசியே உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவார்.

நிர்மலா அலைப்பேசியில் சகுந்தலாவுக்கு அழைப்பு விடுக்கப்போக விஸ்வநாதன் என்ன நினைத்தாரோ, “வேண்டாம் நிர்மலா.. உங்க அக்காவுக்கு இப்போ சொல்ல வேண்டாம்..” என்றார்.

“இப்போ சொல்லாம வேற எப்போங்க சொல்றது.. கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் சொல்ல சொல்றீங்களா.. நான் ஆதிக்கும் மித்ராக்கும் கல்யாணம்னு கூப்பிட்டப்பவே அவங்க வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க... இப்போ இந்த விஷயத்தையும் அவங்ககிட்ட மறைச்சு உங்க பேரனுக்கு நித்திலாவ கட்டி வைக்கப் போறீங்களா.. பாவங்க எங்க அக்கா.. அவளோட அஞ்சு வயசுல இருந்து சொல்லிட்டு இருக்காங்க.. நித்திலாவ ஆர்யாவுக்கு தான் கட்டி வைக்கனும்னு..” நிர்மலாவின் குரலில் லேசான கோபம் எட்டிப்பார்த்தது

‘இவள் திருந்தவே மாட்டாள்..’ என்று மனதுக்குள் மனைவியை வைதவர் “சரி.. ஃபோனை என்கிட்ட கொடு.. சேதுபதிகிட்ட பேசுறேன்.. அவன் சொல்லட்டும் உங்க அக்காகிட்ட..” என்றபடி சேதுபதிக்கு அழைத்து விடயத்தை கூறியவர் “இனி எல்லாத்தையும் சேது பார்த்துக்குவான்..” என்று மனைவியிடம் சொல்லிவிட்டு அத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல் கண்களை மூடிக் கொண்டார்.

அன்று மதியமே அருணாவும் சங்கரும் பெங்களூரில் இருந்து வந்து சேர்ந்தனர். நடந்த விடயங்கள் அனைத்தையும் கருணாகரன் அவர்களிடம் தெரிவிக்க அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.. “நித்திலாவுக்கு சம்மதம்னா.. எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல..” என்று கூறிவிட்டனர்.

பின்பு அருணா நித்திலாவை தனியாக சந்தித்து “கல்யாணம்கிறது விளையாட்டு இல்ல நித்தும்மா.. வாழ்க்கை பூரா ஒன்னா சேர்ந்து வாழனும்.. எதுவா இருந்தாலும் தெளிவா யோசிச்சு முடிவெடு..” என்றார்.

“நான் நல்லா யோசிச்சுதான் பாட்டி முடிவெடுத்திருக்கேன்..” என்றாள் அவள்.


அதன் பிறகு திருமண வேலைகள் அனைத்தும் தங்குதடையின்றி இடம்பெற சேதுபதி அங்கு வருகை தந்தவர் நிர்மலாவையும் விஸ்வநாதனையும் சந்தித்து “அக்காகிட்ட எல்லாம் பேசிட்டேன் மாமா.. கொஞ்சம் கோபமாத்தான் இருக்காங்க... ஆனாலும் நிலமைய புரிஞ்சிக்கிட்டு அமைதியா இருக்காங்க.. நீங்க அவங்கள பத்தி யோசிக்காம கல்யாணத்த நல்லபடியா நடத்தி முடிங்க... மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்..” என்றார்.


அன்று மாலை குடும்பத்தினர் அனைவரும் மண்டபத்துக்கு கிளம்பிய பிறகு தானும் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தான் ஆதி.. வெகு நாட்களுக்கு பிறகு அன்று மிகுந்த உல்லாச மனநிலையில் இருந்தான்.. எதையோ சாதித்துவிட்ட உணர்வு அவன் விழிகளில் அப்பட்டமாக தெரிய.. இதழோரம் குறுநகையுடன் தயாராகி வந்தவன் விஸ்வநாதன் வீட்டை நோக்கி சென்றான்.

அனைவரும் மண்டபத்துக்கு கிளம்பிவிட்டதால் வீட்டில் யாருமே இல்லை.. தன்னிடமிருந்த சாவியை கொண்டு கதவைத் திறந்து உட்புகுந்தவன் நேராக மித்ராவின் அறையை நோக்கி சென்றான்.. கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு மேலாக எதையோ தேடிக் கொண்டிருந்தவன் இறுதியில் தான் தேடிய பொருளை கண்டு கொண்டதும் அதனை கைகளில் எடுத்துப் பார்த்தவன் பின்பு மெல்லிய புன்னகையுடன் அந்த தாலியை தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வந்த வழியே திரும்பிச் சென்றான்.

சரியாக காரில் ஏறி கிளம்பும் நேரத்தில் அழைப்பு வர அலைப்பேசியில் தெரிந்த எண்ணை பார்த்து எரிச்சலடைந்தவன் ‘இந்த நேரத்துல எதுக்கு கால் பண்றான்..’ என்று நினைத்தவாறு ஃபோனை காதில் வைத்தான்,

“ஜோ.. நான் இப்ப மண்டபத்துக்கு கிளம்பிட்டு இருக்கேன்... எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்..”

“....................................................”

“வாட்!!!!!! என்னடா உளர்ர இடியட்... எங்கேடா மித்ரா...???”

“...................................................”

“நோ.... நோ..... நான் இப்பவே வரேன்...” என்றபடி வேகமாக வண்டியை கிளப்பிக்கொண்டு மண்டபம் இருக்கும் திசைக்கு எதிர்த்திசை நோக்கி பயணமானான்..



########################




“மச்சி மார்னிங் கல்யாணத்துக்கு போறதா வேணாமா..??” சிவா கேட்டுக் கொண்டிருந்தான்..

“நம்ம போறது ரிஸ்க் மாம்ஸ்.. அவங்க க்ளோஸ் ரிலேடிவ்ஸ் தான் கூப்பிட்டிருக்காங்கன்னு நினைக்கிறேன்.. நம்ம போனா யார் என்னன்னு கேள்வி வரும்...” என்றான் ப்ரசாத்..

“ம்ம்ம்... அதுவும் சரிதான்.. அன்னைக்கு போனதுக்கே அந்த அஜயும் விக்ரமும் நம்மள நோண்டி நோண்டி கேள்வி கேட்டானுங்க.. அர்ஜுன் நீ என்ன சொல்ற..”

ஏதோ யோசனையில் மூழ்கியிருந்த அர்ஜுன் சிவாவின் கேள்வியில், “ம்ப்ச்.. கல்யாணத்துக்கு அந்த ஆத்ரேயாவும் வருவான்ல... அவன் என் நிலாவ மறுபடியும் பார்க்கப்போறான்னு நினைச்சாலே உடம்பெல்லாம் எரியுதுடா...” கண்கள் சிவக்க கூறினான்.

“டேய்.. அவனால பார்க்க மட்டும்தான்டா முடியும்.. வேற ஒன்னும் பண்ண முடியாது...” என்று அருகில் இருந்த மற்றொரு நன்பன் கூற பாய்ந்து அவனது சட்டையை பிடித்தவன் அதுவும் கூடாது என்றான் அர்ஜுன்.

“அவன் கட்டிக்கப்போற பொண்ணுனு நினைச்சித்தானே அவள பார்ப்பான்... அதான்டா... அதான்டா எனக்கு எரியுது...” என்று கோபமாக கூறினான்.

“டேய் க்ரிஷ்... ஏன்டா... எப்ப பாரு எதையாவது சொல்லி அவன கடுப்பாக்கி அடி வாங்குறதே உனக்கு வேலையா போச்சு..” என்றான் சிவா “அர்ஜுன்.. அவன் இப்படித்தான் கிறுக்குத்தனமா உளரிக்கிட்டு இருப்பான்.. நீ கண்டுக்காத மச்சி..”

அர்ஜுன் ப்ரசாத்தை நோக்கியவன் “மச்சி.. நாளைக்கு நான் கண்டிப்பா நித்திலாவ பார்த்தாகனும்... ஏதாவது பண்ணு ப்ளீஸ்.....” என்றான்.

“உனக்கு சிஸ்டர பார்க்கனும் அவ்வளவுதான.. நாளைக்கு கண்டிப்பா பார்க்கலாம் மாம்ஸ்...” என்றான் ப்ரசாத்.

“என்னன்னே தெரியல மச்சி... மனசே சரியில்ல.. ஏதோ தப்பா நடக்கிற மாதிரி தோணிக்கிட்டே இருக்கு..” அர்ஜுன் சோர்வுடன் கூறியதை கேட்ட சிவா, “மச்சான் முதல்ல அந்த ஆர்யாவ பத்தி யோசிக்கிறத நிறுத்துடா.. அவன நினைச்சி நினைச்சித்தான் நீ ஒரு மாதிரி ஆகிட்ட..” என்றான்.

“அவன் ஒரு ஆளே இல்ல மாம்ஸ்... அதான் அப்பா சொல்லிட்டாருல்ல... பொண்ணு கேட்டு போறோம்... கொடுத்தாங்கன்னா கல்யாணம்.. கொடுக்கலைனா பொண்ண தூக்கிட்டு வந்து கட்டிக்கோ... மேட்டர் ஓவர்.. அதுக்கு முதல்ல நீ தைரியமா சிஸ்டர்கிட்ட லவ்வ சொல்ற வழிய பாரு... நீ லவ் சொல்லாத வரைக்கும் உனக்கு இப்படித்தான் தப்பு தப்பா ஏதாவது தோணிக்கிட்டே இருக்கும்...” ப்ரசாத் சொல்ல சிவாவும் அதை ஆமோதித்தான்.

அவர்கள் எவ்வளவுதான் எடுத்துக் கூறினாலும் அவன் மனது சமாதானமடையவில்லை.. மனதில் தோன்றிய ஒருவித இனம்புரியாத உணர்வின் தாக்கத்தினால் விழிகளில் நீர் கோர்க்க தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான் அர்ஜுன்.. ஏனென்றே தெரியாமல் அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது..



#############################




அரை மணி நேரத்தில் மண்டபத்திற்கு கிளம்பி விடுவதாக கூறி சாரதாவை அனுப்பி வைத்த ஆதி மூன்று மணி நேரமாகியும் இன்னும் வந்து சேரவில்லை. அவனுடைய அலைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது வேறு குடும்பத்தினர் அனைவருக்கும் உள்ளுக்குள் கிலியைப் பரப்பியது..

“நேத்து அவ ஓடிப்போனா.. இன்னைக்கு இவன் காணாம போயிட்டான்.. அதுங்க ரெண்டும் எப்படியாவது தொலைஞ்சு போகட்டும்... ஆனா என் பேத்திய இல்ல மணமேடை வரைக்கும் கொண்டு வந்து நிறுத்திட்டு போயிட்டாங்க...” நிர்மலா வெளிப்படையாகவே புலம்ப ஆரம்பித்து விட்டார்..

விஸ்வநாதனுக்கு மனைவியின் பேச்சில் கோபம் வந்தாலும் ஆதியிடமிருந்து எந்தத் தகவலும் இல்லாததால் அவரும் கலங்கிப்போய்த்தான் நின்றிருந்தார்..

ஏற்கனவே மணப்பெண் மாறிவிட்டதை பற்றி விசாரித்த ஒருசில உறவினர்களுக்கு ஆளாளுக்கு ஏதேதோ காரணம் கூறி சமாளித்தவர்கள் இப்போது கல்யாண மாப்பிள்ளை எங்கே என்று கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தனர்.

பெரும்பாலானவர்கள் நாகரீகம் கருதி ஒன்றும் கேட்காவிட்டாலும் ஒருசிலர் வேண்டுமென்றோ அல்லது அறிந்து கொள்ளும் ஆவலிலோ திரும்ப திரும்ப கேள்விகளால் குடைந்தெடுக்க ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் போன நிர்மலா, “இவன் வந்து சேருவான்ங்கிற நம்பிக்கையே எனக்கு இல்லாம போயிடுச்சு... பேசாம அக்காவுக்கு சொல்லிடு சேது... ஆர்யாவ வரவழைச்சு ஆர்யாவுக்கும் நித்துவுக்கும் கல்யாணத்த பண்ணி வெச்சிடலாம்..” என்று கூற விஸ்வநாதன் நிர்மலாவை முறைத்தார் என்றால் சேதுபதி திட்டவே ஆரம்பித்துவிட்டார்..

“அறிவிருக்கா உனக்கு.. முட்டாள் மாதிரி பேசுற.. ஆதி என்ன சின்ன பையனா... காணாம போறதுக்கு... அவனுக்கு ஏதாவது வேலை வந்திருக்கும்.. போயிருப்பான்.. நீ கொஞ்சம் வாய மூடிக்கிட்டு இரு.. தாலி கட்டுறதுக்க வந்து சேர்ந்திடுவான்..” என்றார் சேதுபதி..

குடும்பத்தினர் ஒரு பக்கம் ஆளாளுக்கு ஆதியை காணாமல் தவித்துக் கொண்டிருக்க நித்திலா எந்த கலவரமும் இல்லாமல் அழகு நிலையப் பெண் மருதாணி இடுவதற்கு வாகாக தனது கையை காண்பித்துக் கொண்டிருந்தாள்..

அவளுடன் அருணா, சஞ்சனா ஆகியோர் உட்கார்ந்து பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். கூடவே சௌர்யாவும் அவர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்தான்..

சாரதாவுக்கு நித்திலா தனக்கு மருமகளாக வரப் போகிறாள் என்பதை நினைத்து இத்தனை நேரம் இருந்த பரவசம் மறைந்து இப்போது மகனைக் காணவில்லை என்றதும் பதற்றம் பிடித்துக் கொண்டது..

அவனைக் காணவில்லை என்பதைவிட எங்கே மித்ராவை தேடிக் கண்டுபிடித்து அழைத்து வந்து விடுவானோ என்பதுதான் அவளுக்கு பெரும் பயமாக இருந்தது.

சந்திரலேகாவோ ஆதி திரும்பி வந்துவிடக் கூடாது, எப்படியாவது இந்த திருமணம் நடக்காமல் போய்விட வேண்டும் என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டிருந்தாள்..

இப்படி ஆளாளுக்கு ஒவ்வொன்றாக எண்ணி திகிலுடன் காத்திருக்க அனைவரையும் கலங்கடித்துவிட்டு இரவு பத்து மணியளவில் வந்து சேர்ந்தான் ஆதி..

கலைந்த தலைமுடியும் சிவந்த விழிகளும் களையிழந்து போன முகமுமாக சோர்ந்து போய் வந்து நின்றவனை கண்ட சாரதா “ஆதி.. என்னப்பா ஒரு மாதிரி இருக்க.. எங்கே போயிருந்த இவ்வளவு நேரமா.. நாங்க எல்லாம் உன்ன காணோம்னு எவ்வளவு பயந்து போயிட்டோம் தெரியுமா...” என்க, “ஒரு ஃபிரெண்ட்ட பார்க்க போயிருந்தேன்மா..” என்று மட்டும் கூறியவன் வேறு எதுவும் பேசாமல், மற்றவர்களையும் கண்டு கொள்ளாமல் தனக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டான்..

அவனது செய்கையில் கோபமடைந்த நிர்மலா ‘இவனுக்கு இதுவே பொழப்பா போச்சு... எப்படித்தான் என் பொண்ணு வயித்துல வந்து பொறந்தானோ தெரியல..’ என்று நினைத்தவருக்கு நித்திலாவின் எதிர்காலத்தை நினைத்து கவலையாக இருந்தது.. “ஆண்டவா நீதான் என் பேத்தி வாழ்க்கைய நல்லபடியா அமைச்சு கொடுக்கனும்ப்பா...” என்று மானசீகமாக கடவுளிடம் வேண்டிக் கொண்டார்.

நிர்மலாவின் முகத்தை பார்த்தே அவர் மனதிலிருப்பதை ஊகித்த சேதுபதிக்கு சிரிப்பு வந்தது..

“அவன் உன் பேரன் நிர்மலா.. நீ எதுக்கு இப்படி பயப்படுறேன்னு தான் எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது... நீ கவலையே படாதே.. உன் பேரனும் பேத்தியும் நூறு வருஷத்துக்கு சந்தோ...ஷமா வாழுவாங்க...” என்றார் தமக்கையிடம் புன்னகையுடன்.

ஆதி வந்து சேர்ந்த பிறகுதான் அனைவருக்கும் இறுக்கம் தளர்ந்து மனதில் நிம்மதி குடிகொண்டது.. நிர்மலாதேவி பேத்தியை தேடிச் சென்றவர் அழகிய முத்துப்பல் வரிசை தெரிய சிரித்து பேசிக் கொண்டிருந்தவளின் அழகில் கண்கள் கலங்க அவளை அனைத்து முத்தமிட்டவர் “எப்பவும் இப்படியே சிரிச்சு சந்தோசமா இருக்கனும் என் தங்கம்..” என்றார்.

அவளும் பதிலுக்கு பாட்டியை முத்தமிட்டவள் “நீங்க எல்லாரும் என்கூடவே இருக்கப்ப எனக்கு என்ன பாட்டி கவலை... நான் எப்பவும் சந்தோசமாத்தான் இருப்பேன்..” என்றாள்..



பின்பு அனைவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு தூங்க சென்று விட்டனர்.

நள்ளிரவில் தூக்கம் கலைந்து வெளியே வந்த சௌர்யா, அங்கிருந்த பால்கனியில் நித்திலா நின்றிருப்பதை கண்டவன் அவள் அருகே வந்து “நித்து.. தூங்காம இந்த நேரத்துல இங்க என்ன பண்ணிட்டு இருக்க..” என்று கேட்டான்.

அவனது குரலில் திரும்பியவள் “அத்தான்... திருடனுக்கு தேள் கொட்டுனா எப்படி இருக்கும் தெரியுமா...??” நிதானமாக கேட்டாள் அவனிடம்..

“தெரியலையே நித்துமா.. எப்படி இருக்கும்??” என்று அவன் பதிலுக்கு கேட்க, “தோ.. அப்படித்தான் இருக்கும்..” என்று கண்களால் சாலையை காட்ட அவள் காட்டிய திசையில் திரும்பி பார்த்தவன் பக்கென்று சிரித்து விட்டான்..

சாலையில் குறுக்கும் நெடுக்குமாக நடத்தபடி வெகு தீவிரமாக யாருடனோ அலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தான் ஆதி..

“ஹா.. ஹா.. நீ சொன்னத கேட்டு நானும் ஏதோ திருடன் வந்துட்டானோன்னு நினைச்சிட்டேன்டா...” என்றவன் பரிதாபமாக ஆதியை பார்வையிட்டபடி “ச்சூ.. ச்சூ.. பாவம் எங்கண்ணன்... விடிஞ்சா கல்யாணம்... இப்படி அவன அர்த்த ராத்திரியில பிச்சைக்காரன மாதிரி நடுத்தெருவுல அலைய விட்டியே நித்துமா..” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கூறிக்கொண்டே நித்திலாவின் புறம் திரும்ப இருவரும் அர்த்தத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்..



தொடரும்.........


‘ஆதியின் நிலா’ அத்தியாயம் 25 பதிந்துவிட்டேன்... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்...

 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நெக்ஸட் எபில இருந்து ஒரு குட்டி டீசர் பேபிஸ்....


சற்று தள்ளி சாரதாவுடன் நின்றிருந்த நித்திலாவின் பக்கம் பார்வையை திருப்பியவன் “நித்தும்மா... அண்ணன் தேடுறாரு பாரு.. இங்க வாடா செல்லம்..” என்று அழைக்க “என்ன அத்தான்..” என்று கேட்டுக்கொண்டு வந்தவளை பிடித்து ஆதியின் அருகில் நிறுத்தியவன் “தேகோ நித்தும்மா.. உன்ன நம்பித்தான் எங்க அண்ணன ஒப்படைச்சிருக்கேன்... இனிமேல் எங்கண்ணன் உன் பொறுப்புடா.. அவர நீதான் நல்லபடியா கவனிச்சுக்கனும் என்ன..” என்றான்.

“அதுக்கென்ன அத்தான்... தரமா கவனிச்சிடலாம்… அதுக்குத்தானே உங்க அண்ணன கல்யாணம் பண்ணியிருக்கேன்... நான் எப்படி கவனிக்கறேன்னு மட்டும் பாருங்க...” என்று சொன்னவளை கண்டு ஆதியின் இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது..
 
Status
Not open for further replies.
Top