All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Seetha's MEDICAL MIRACLES (short stories)

Status
Not open for further replies.

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
வணக்கம் மக்காஸ்............. மீண்டும் நான் உங்கள் சீதா இந்திரன். நிறைய நாட்களுக்கு பின் தளத்தில் நான். என்னை மறந்திருந்திருக்க மாட்டீங்க என்டு நினைக்குறன்... மறந்தவங்களுக்கு.... நான் தான் சீதா............. ஒரே ஒரு கதை எழுதினன் "மாயநதி" அதுவும் கட்டாங் கடைசி எபி எழுதாம குறையில நிக்குது... அது முடிக்க கொஞ்சம் டைம் வேணும் மக்காஸ். ப்ளீஸ் மன்னிச்சு..............

இனிமேல் தொடர்ந்து ஆக்டிவ்வா இருக்க முயற்சி செய்றன். இப்ப ஒரு புது முயற்சியோட வந்திருக்கன். நீங்கள் ஏற்றுக் கொண்டு ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

இதோ வெள்ளோட்டம் உங்கள் முன்,

"சீதாஸ் மெடிக்கல் மிராக்கிள்ஸ் - 01"

"வரும் ஆனா வராது"
 

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
சீதா’ஸ் மெடிக்கல் மிராக்கிள்ஸ் – 01



“ வரும் ஆனா வராது “

குடும்ப நல நீதிமன்றம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. விவாகரத்து வழக்குகளே அதிகமாய் குவிந்து கிடக்க,


“அடுத்த வழக்கு அபிஜித் – ஹேமமாலினி. “ அழைக்கப் பட, கூனிக் குறுகிய படி உள்ளே நுழைந்தாள், சாதாரண எடைக்கும் அதிகப்படியான உடலுடன் ஹேமா .


அவளுக்கு முன்னமே அபிஜித் அங்கே நின்றிருந்தான். வெகு ஸ்மார்ட்டாய், பார்த்தவுடன் புரியும் பணத்தில் புரள்பவன் என்று.


நீதிபதி வழக்கினைத் தொடர்ந்தார்.


“ இந்த் விவாகரத்து உங்க ரெண்டு பேரோட பரஸ்பர முடிவா??”


“ ஆமா மாடம்” முந்திக் கொண்டு அவன் கூற, ஏதும் பேசாமல் அவள் தலையை நிலத்திற்குள் புதைத்துக் கொண்டு நின்றாள்.


அவளது மௌனத்தில் அவன் கோபமாய் அவளை விழிக்க, நீதிபதியோ


“ சொல்லுங்க ஹேமமாலினி….. இது உங்க ரெண்டு பேரோட பரஸ்பர முடிவா?? உங்களுக்கு விருப்பம் இல்லா விட்டா நீங்க தைரியமா சொல்லலாம். “


அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனது கோபப் பார்வை அவளை மேலும் குத்திக் கிழிக்க, “ ஆமா மாடம்” என அவளும் கூறினாள்.


“உங்க முடிவுக்கு என்ன காரணம்?”


அவள் கண்கலங்க அவனை நோக்க, அவனோ,


“ எங்களுக்கு குழந்தை இல்லை மாடம். டெஸ்ட் பண்ணிப் பார்த்ததுல ப்ராப்லம் அவளுக்குத்தான். எனக்கு வாரிசு வேணும் மாடம். அதனால நாங்க பிரியுறதா முடிவு செய்துட்டோம் மாடம்”. ‘ வாரிசு’ என்பதில் அழுத்திக் கூறினான்.


“இந்த அட்வான்ஸான மருத்துவ முறைகளை எல்லாம் நீங்க முயற்சி செய்து பார்க்க இல்லையா?” நீதிபதி கேட்க,


“ அவளோட கரு முதிர்ச்சி அடையாதாம்…. அப்பறம் எப்படி அட்வான்ஸ் மருத்துவத்துக்கு போறது. “ அவனது பேச்சை அங்கிருந்த அனைவரும் கேட்டுக் கொண்டிருக்க அவமானத்தில் தோய்ந்து நின்றாள்.


“ இவரோட கருத்துக்கு நீங்க என்ன சொல்றீங்க ஹேமா? “ நீதிபதி கேள்வியை ஹேமாவை நோக்கி வீச,


கலங்கிய கண்களை மறைத்துக் கொண்டு “ அவர் சொல்றதெல்லாம் சரிதான் மாடம் “ என்றாள். அவளது குரலில் இருந்த தளுதளுப்பு அவனுக்கு கேட்டதோ என்னவோ.. அசையாமல் கல் போலவே நின்றான்.


கடைசியாய் “ இவர்ட இருந்து ஜுவனாம்சம் ஏதாவது நீங்க எதிர்பார்க்குறீங்களா?” என நீதிபதி கேட்க,


“இல்லை” எனும் பதில் மட்டும் உறுதியாய் வந்தது.


திருமணமாகி ஐந்தாண்டுகள் ஆன நிலையில் இருவரும் பரஸ்பர முடிவுடன் பிரிவிற்கு வரும் போது வேறு என்ன தான் செய்ய முடியும்? நீதிபதி இருவரது விவாகத்தையும் சட்டரீதியாய் ரத்து செய்து தீர்ப்பளித்தார்.


நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தவன் அவளைத் திரும்பியும் பாராது காரில் ஏற புழுதியைக் கிளப்பிக் கொண்டு அவனது கார் பறந்தது.


புழுதி மண்டலத்தில் அவளது வாழ்க்கையும் புதைந்து போய் இருந்தது.


ஐந்து வருடங்களின் முன்,


இதே போல் புழுதி பறக்க காரினைத் தேய்த்த படி தன் வீட்டு வாசலில் வந்திறங்கிய அபிஜித் அவள் க‌ண் முன் வந்தான்.


கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம் அது. அப்போதும் அவள் சற்று பூசினால் போலவே இருப்பாள். ஆனால் அந்த பூசிய உடம்பே அவளுக்கு பேரழகைக் கொடுத்தது. அவளுக்கு மூன்று வருடம் சீனியர் அவன். இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்தான். ராகிங் இல் கண்டவுடன் அவனுக்கு காதல் பற்றியது. ஹேமாவை சுற்றிச் சுற்றி வந்தான்.


அவனது பின்புலத்தையும் பணபலத்தையும் நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டிருந்ததால் அவள் அவன் பால் செல்லாமல் தன் மனதை கடிவாளமிட்டு வைத்திருந்தாள்.


அவனுக்கு பட்டமளிப்பு நடந்து கொண்டிருந்தது. விழா முடிந்ததும் அவள் முன் வந்து நின்றான்.


“ இப்பயாவது பதில் சொல் மாலினி…” அவன் அப்படித்தான் அழைத்தான். அவள் விழி விரித்துப் பார்க்க,


“ அப்படிப் பார்க்காத மாலினி…. உன்னை இப்பவே நான் கடத்திட்டு போயிருவன். உன் கண்ணு என்னைக் கொல்லுது….. நீ என்னோட மாலினி…. எனக்கான மாலினி….”


அவனது பேச்சும் மாலினி என்ற அவனது பிரத்தியேக அழைப்பும் அவளை மயக்க, “ எதுவானாலும் வீட்டுல வந்து பேசுங்க “ என்று விட்டு சிட்டாய் பறந்து விட்டாள்.


மறு நாளே புழுதி பறக்க அவளது வீட்டு வாயிலின் முன் நின்றான் அவனது தாயுடன். அவரது தோரணையே அவருக்கு இந்தத் திருமணத்தில் இஷ்டமில்லை என்பதைக் காட்ட, வந்தவர்களின் பணபலத்தைக் கண்டு ஹேமாவின் குடும்பமே அதிசயித்து நின்றது.


பெரும் புள்ளிகள் 'சீதனமும் வேணாம் ஆதனமும் வேணாம் பொண்ணை மட்டும் கொடு' எனக் கேட்டு வரும் போது எந்தப் பெற்றோர் தான் வேண்டாம் என்பர். வெகு விரைவிலேயே அவர்களது திருமணமும் நடந்தது.


நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் தேனைச் சுற்றும் வண்டு போல் அவளையே சுற்றி வந்தான். அவளது உடல் எடையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.


மணமாகி மூன்று மாதங்களிலேயே மாமியார் குழந்தைப் பேச்சைத் தொடங்கி விட்டார். நாள் ஆக ஆக பேச்சு அதிகரித்துக் கொண்டே சென்றது.


அவளுக்கு தொடர்ந்து மூன்று மாதங்களாய் மாதவிடாய் வரவில்லை. கர்ப்பமாய் இருப்பதாக எண்ணி தானும் மகிழ்ந்து எந்நேரமும் திட்டிக் கொண்டிருக்கும் மாமியாரிடமும் சொல்லி மகிழ்ந்தாள்.


அபிஜித் மகிழ்ச்சி வெள்ளத்தில் குளித்தவன் அவளை மாறி மாறி முத்தமித்தான். இனி யாரும் அவனிடம் குழந்தையைப் பற்றி விசாரிக்க மாட்டார்களே.


குழந்தை தான் என உறுதி செய்ய அவளை வைத்தியரிடம் அழைத்துச் சென்றான். அவள் துர்திஷ்டம் அங்கிருந்து தொடங்கியது. மருத்துவப் பரிசோதனை நெகட்டிவ் என வர, அதிர்ந்து நின்றாள். நெகடிவ் என்பதை விட மாமியாரின் வசைச் சொற்களை எண்ணித்தான் கலங்கிப் போனாள்.


மூன்று மாதமாய் மாதவிடாய் வராததால் வைத்தியர் அவளிடம் மேலும் விசாரித்தார். சடங்காகிய காலத்தில் இருந்தே அவளுக்கு மாதவிடாய் ஒழுங்கில்லை. சில மாதங்கள் ஒழுங்காய் வந்தால் சில மாதங்கள் வராது. திருமணமானதில் இருந்து உடல் எடை அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. முகத்திலும் அதிகப்படியான உரோமங்கள்.


வைத்தியர் அவளை ஒரு Trans vaginal ultra sound scan ஒன்றினை எடுக்கச் சொல்ல, அவளும் முன் வந்தாள். அதில் தான் தெரிந்தது. அவளது இரு சூலகத்தினுள்ளும் அதிகப்படியான நீர்க்கட்டிகள் காணப்பட்டன.


கணவன் மனைவி இருவரையும் அழைத்த வைத்தியர்,


“ இங்க பாருங்க உங்க மனைவிக்கு இருக்குறது சாதாரணமா இந்தக் காலத்துல எல்லாப் பெண்களுக்கும் வாறது தான். இதை Poly Cystic Ovarian Syndrom (PCOS ) எண்டு சொல்லுவாங்க. உடல்ல androgens என்ற ஆண்மைக்குக் காரணமான ஹோமான்கள் அதிகமா இருக்குறதால வரும். இதுக்கு obesity உம் ஒரு காரணம். இதனால கர்ப்பமாகிறது சிக்கலா இருக்கும்.” என அவள் தலையில் குண்டைத் தூக்கிப் போட்டார்.


இருவரும் அதிர்ந்து நிற்க, “ you don’t panic. It is reversible. நீங்க கொஞ்சம் எக்ஸர்ஸைஸ் செய்யோனும். சோறு சாப்பிடுறத குறைச்சுக்க வேணும். அத்துடன் anti- androgen தன்மை கொண்ட oral contraceptive மாத்திரைகளையும் கொடுத்தார்.


ஹேமாவின் நிலையைக் கேள்விப் பட்ட மாமியார் ஏமாற்றத்திலும் ஆத்திரத்திலும் வார்த்தைகளால் அவளைக் குத்திக் கிழித்து எடுத்தார். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு வைத்தியர் சொன்ன அவ்வளவற்றையும் செய்தாள். அவர் கொடுத்த கருத்தடை மாத்திரைகள் அவற்றின் அண்ட்றோஜன்ஸ் இற்கு எதிரான தன்மையினால் ஹோமான்கள் சமநிலை அடைய மாதவிடாய் ஒழுங்காய் வந்தது. ஆனால் கருத்தடை மாத்திரைகளின் விளைவால் பாவம் அவள் கருத்தரிக்கவில்லை.


ஆறு மாதங்களின் பின் செக் அப்பிற்குச் சென்றாள். ஆறு மாதங்களுக்கு மேல் கருத்தடை மாத்திரைகளை பாவிக்கக் கூடாது என்பதால் வைத்தியர் மருந்தை நிறுத்தி விட்டு உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியில் அதிகம் ஈடுபடச்சொன்னார்.


ஆறுமாத காலத்தில் உடல் எடையில் மாற்றம் இல்லாத காரணத்தால் சோறு உண்பதை முற்றாக நிறுத்தி உடற்பயிற்சி யிலும் ஈடுபட அவளுக்கு மறுமாதம் மாதவிடாய் வந்தது. வந்தது வந்தது வந்து கொண்டே இருந்தது. மூன்று வாரங்களைத் தாண்டியும் நின்ற பாடில்லை.


இரவில் அவளை அணைக்க வந்த கணவனிடம், அவள் மூன்று விரல்களை தூக்கிக் காட்ட, அவளது சிக்னலைப் புரிந்து கொண்டவன் முதலில் சாதாரணமாய்த் தள்ளி இருந்தான். பின் மூன்று வாரங்களுக்கு மேலாய் அவள் இதையே செய்யவும், சலிப்புடன் அவளை வைத்தியரிடம் அழைத்துச் சென்றான்.


இவளது நிலையைக் கண்ட வைத்தியர், அதிகப்படியான குருதிப்போக்கும் PCOS இன் ஒரு அறிகுறி தான். என்றவர் குருதிப் போக்கு நிற்பதற்கும் அதிகப்படியான் இரும்புச்சத்தை அவள் இழந்திருப்பாள் என்பதால் அயன் மாத்திரைகளையும் பரிந்துரை செய்தார். சோறு உண்பதை முற்ராய் தவிர்த்தும் உடல் எடை 5 கிலோ கூடி இருந்ததால், Glocose intolerance இருக்க் க் கூடும் என்பதால் anti- diabetic மாத்திரையையும் பரிந்துரைத்தார். இறுதியில் அவர் “ இந்த PCOS ஆல பாதிக்கப் பட்டவங்க கட்டாயம் உடல் எடையை சரியான BMI க்குள்ள் வைச்சிருக்கோணும், ஆனா இந்த PCOS உள்ளவங்களுக்கு உடலைக் குறைக்குறது ரொம்பக் கஷ்டம். You have to put more effort” எனக் கூறி அனுப்பினார் இருவரையும்.


என்ன செய்தும் அவளால் கருவுற முடியவில்லை. அவள் உடல் எடையும் குறையவில்லை. தொழில் முறை வட்டாரங்களில் குழந்தையின்மையாலும் மனைவியின் அதிகப்படி எடையாலும் பெரிதும் கேலிக்கு ஆளானான் அபிஜித். தாயின் வசைகளும் அவனை உருவேற்ற கொஞ்சம் கொஞ்சமாய் மனைவி மீது வெறுப்பு ஏறியது. பேசக் கூடாத வார்த்தைகளால் எல்லாம் பேசினான்.


அனைத்தையும் தாங்கிக் கொண்டு அவள் செயற்கை முறையில் குழந்தை பெறவும் துணிந்து சென்றாள். அந்தோ!! பரிதாபம். அவளது கருமுட்டைகள் போதிய முதிர்ச்சி அடையாதால் அவளால் அது முடியாமல் போனது.


ஆனால் அவள் செய்யும் உடற்பயிற்சியையோ உணவுக் கட்டுப்பாட்டையோ அவள் விடவில்லை. பெரிதும் துன்பப்பட்டாள். அவளது துன்பம் முட்டுச்சந்தில் மோதி நிற்கும் நிலையும் வந்தது.


கடைசியில் தாயின் பேச்சைக் கேட்டு அந்த முடிவிற்கு வந்திருந்தான் அபிஜித். அவளின் முன் ஒரு காகிதத்தை தூக்கிப் போட்டான் அவன். அவள் அதை எடுத்து படித்துப் பார்த்து அதிர்ந்து,


“ என்ன‌ங்க இது?? “


“ தெரியலை?.. விவாகரத்து பத்திரம்….”


நம்பமுடியாமல் எச்சிலை விழுங்கியவள், “ விளையாடாதீங்க….” அவள் குரல் நடுங்கின.


“உன்னோட விளையாடின காலம் எல்லாம் போச்சு. சீரியஸாத்தான் சொல்றன்… ஒரு மலடியோட என்னால குடும்பம் நடத்த முடியாது…. எனக்கு வாரிசு வேணும்… “ அவன் சத்தமில்லாமல் அவள் நெஞ்சில் கத்தியைச் சொருகினான்.


“என்னால உங்களுக்கு ஒரு குழந்தையை கொடுக்க முடியும்ங்க…” தன் நிலையை எண்ணி அவள் கண்கள் கண்ணீர் சொரிய,


“ கனவுல வேணும்னா முடியும் உன்னால ,,….”


கட்டியணைத்து ,கொஞ்சி, மிஞ்சி, கெஞ்சி கட்டில் மேல் அவன் பேசிய காதல் மொழிகள் எல்லாம் அவளைப் பார்த்து இளக்காரமாய்ச் சிரித்தன.


எவ்வளவோ கெஞ்சி கதறிக் குளறிப் பார்த்தாள். முடியவில்லை. மாமியாரின் காலில் விழுந்து பார்த்தாள். அவர் தான் அவனை உருவேற்றி விட்டு எட்டி நின்று இரசிக்கின்றாரே. அவர் எப்படி இந்தப் பேதைக்கு உதவுவார்.


கடைசியில் அபிஜித் வலுக்கட்டாயமாய் அவளிடம் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டு அவளை இழுத்துச் சென்று அவளது பிறந்த வீட்டின் முன் தள்ளி விட்டு வந்தான். அவள் வீட்டினுள் செல்லவும் இல்லை. தானாய் போய் பெண் கேட்க அவனை நம்பி பெண்ணை ஒப்படைத்த அவள் பெற்றோருக்கு பதில் கூறவும் இல்லை.


ஹேமாவின் பெற்றோர் கூட அவனிடமும் அவனது தாயிடமும் கெஞ்சிப் பார்த்தனர். இரக்கமற்ற கயவர்கள் அவர்களுக்கு இரங்கவே இல்லை. கடைசியில் விவாகரத்து தான் என்ற முடிவிற்கு ஹேமா தள்ளப்பட்டாள்.


இதோ அவன் கேட்ட விவாகரத்தை கொடுத்து விட்டு அவனால் ஏற்பட்ட புழுதிக் காற்றை கைகளால் கலைத்து விட்டு வானை நோக்கி நிமிர்ந்து நின்றாள். அவளது கை தானாக அவளது வயிற்றைத் தடவின. கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் உதிர்ந்தன.



பத்தாண்டுகள் கழித்து,


தில்லையம்பலப் பிள்ளையார் கோவிலில் ஒரு பத்து வயதுச் சிறுமி கணீர் குரலில் பஞ்ச புராணங்களையும் பாடிக்கொண்டிருந்தது. அச்சிறுமியின் குரலில் பக்தர்கள் அனைவரும் லயித்து நிற்க,



“ என்னாங்க….. நமக்கு இந்நேரம் குழந்தை பிறந்திருந்தா இந்தப் பொண்ணு மாதிரித்தான் இருப்பா இல்லை.” தன் கணவன் அபிஜித்திடம் கேட்டாள் அவள்.



அவன் “ ம் “ கொட்ட, அவளோ அந்தக் குழந்தையைத் நோக்கிச் சென்றாள்.

அந்தச் சிறுமியோ ஐயரிடம் காலாஞ்சி வாங்கிக் கொண்டு வர, அவளை அடைந்தவள்,

“ உன் பெயர் என்ன பாப்பா??” என வாஞ்சையாய்க் கேட்டாள்.

சிறுமியும் மழலை மாறாது “ ‘ பாரதி’ ஆண்டி. “ என்றது.

“ உன் அப்பா அம்மா வந்திருக்குறாங்களா?.”


“ அப்பா இல்லை ஆண்டி….. அம்மா மட்டும் தான்… தோ வாறாங்க…” என பாரதி கை காட்டிய திசையில் இருவரும் திரும்பிப்பார்க்க அங்கே வந்து கொண்டிருந்தாள் ஹேமமாலினி.

வந்தவள் அங்கு மகளுடன் நின்றிருந்த இருவரையும் நோக்கி ஒரு புன்னகையை வீசி விட்டு மகளுடன் நகர்ந்து சென்றுவிட்டாள்.

மெலிந்து, முகத்தில் தேஜஸ் உடன் வயது நாற்பதுகளில் இருந்தாலும் இன்னும் முப்பதுகளிலேயே எண்ணக் கூடிய தோற்றத்துடன் மகளை அணைத்துப் பிடித்துக் கொண்டு கம்பீரமாய்ச் செல்பவளையே இரு கண்கள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன.



---------சுபம்----------




குறிப்பு:

PCOS இனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளையும் முறையான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலமும் தீர்க்க முடியும். இந்நோய் இருப்பவர்களுக்கு கருவுறுவதில் தடங்கல் ஏற்படும். ஆனால் கருவுற முடியாது என்பது இல்லை. இவர்களுக்கும் ovulation நடைபெறும். ஆனால் கருவுறுவது விதியைப் பொறுத்தது. பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் முக்கியமாக தம் பிள்ளைகளின் உணவுக் கட்டுப்பாத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறுவயதில் கட்டுப்பாடின்றி அதிகப்படியாய் உண்பதும் இந்நோய்க்கு வழிவகுக்கும்.


Comments for Seetha's MEDICAL MIRACLE - short stories
 
Last edited:
Status
Not open for further replies.
Top