பார்ட் 03
ADHD அறிகுறி 2
அதீத இயக்க/உணர்ச்சி வேக அறிகுறிகள்
கை மற்றும் கால்களை பொறுமையின்றி அசைப்பது.
அதிகமான பேச்சு
பேசும்போதோ/விளையாட்டின்போதோ நாகரிகமின்றி குறுக்கிடுதல்
பொறுமையின்மை
அடுத்த நாள் அதிகாலை கெளதம் விழித்து கொள்ள தாயும் தங்கையும் நன்கு உறங்க தன் தொலைபேசியுடன் அறையை விட்டு வெளியில் வந்தான்.
வீடு இப்பொழுதும் அமைதியாய் இருக்க, அந்த அமைதியை கெடுக்க விரும்பாமல் மெதுவாக வெளியில் வந்தான். வீட்டை சுற்றி பெரிய தோட்டம் நேற்று அவர்கள் வரும் நேரம் இருட்டி விட்டதால் சுற்றுபுறத்தை கவனிக்கவில்லை தற்பொழுது பார்த்தால் எவ்வளவு பெரிய இடம். ரசித்தபடியே வீட்டின் வெளிப்புரத்தை சுற்றி வந்தான். “வாவ் அஹ்சம்” மனதிற்குள் ரசித்தவன், ஒரு சுற்று முடித்து மீண்டும் வாயிலுக்கு வர காலையில் குளித்து முடித்து அழகாய் பாவாடை தாவணி உடுத்திய ஒருத்தி கோலமிட்டு கொண்டிருந்தாள்.
அவளின் பின்புறம் இருந்து பார்த்தவன், இவள் யாராக இருக்கும், இது புது விதமான உடையாக இருக்கிறதே என்று யோசித்தபடியே அருகில் வர மெல்லிய பாடலுடன் கோலம் போட்டு கொண்டிருந்தாள். என்ன பாடல் அது என்று கேட்பதற்காக அவன் இன்னும் நெருங்கி வரவும் அவள் கோலம் முடித்து எழவும் அந்நேரம் சரியாக அவனின் தொலைபேசி ஒலிக்கவும் சரியாக இருக்க, திடுமென்று தூக்கி வாரி போட்டது போன்று நின்றவள் திரும்பி இவனை பார்த்து பயந்தவள் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் கோலமாவை தவற விட்டு அப்படியே மடிந்து அமர்ந்து அழ தொடங்கினாள்.
பார்த்த அந்த நானோ செகண்டில் அச்சில் வார்த்தது போல இருந்த அந்த முகம் அவன் உள்ளத்தில் பதிய கெளதம் குணா கமல் எபெக்ட் கொடுக்க அவனுக்கு மட்டும் பேக்கிரௌண்டில் இந்த பாடல் ஒலித்தது.
“பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊன் உருக, உயிர் உருக, தேன் தரும் தடாகமே
மதி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே”
யார் இவள்?? ஏன் இப்படி இருக்கிறாள்?? யாரிடம் கேட்பது?? டாலிம்மா யாருடா நீ?? ஏன்டா என்னை பார்த்து பயப்படுறா??
டேய் நீ அவளை பார்த்து ரெண்டு நிமிஷம் கூட ஆகல, அதுக்குள்ள செல்ல பேர் எல்லாம் வச்சுட்ட...மனசாட்சி குரல் கொடுக்க
“ஏய் அவ தான் இனிமே எனக்கு எல்லாம்.”
எல்லாமா?? என்னடா சொல்ற....இன்னும் ஒரு வாரத்தில் ஊருக்கு நீ கிளம்பனும். எந்த தேவையில்லாத உறவையும் இங்க இருந்து சேர்த்துக்காத மனசாட்சி பொறுமையாய் எடுத்துரைக்க.
“வினும்மா” மகள் வெளியில் கோலமிட்டாலும் அவளின் மீது ஒரு கண் வைத்திருந்த ஷக்தி குரல் கேட்டு ஓடி வந்தார்.
“நா….ன் ஒன்னும் செய்யல வாக்கிங் போயிட்டு இங்க வரும்போது போன் அடிச்சது அவ்ளோதான்” என்றான் குழப்பத்துடன்.
“எனக்கு தெரியும் பா. சரி நான் பார்த்துக்குறேன் நீ வாக்கிங் போப்பா, வினும்மா ஒன்னுமில்லடா அது யாரு தெரியுமா நம்ம சத்யா அத்தை இருக்கா இல்லை அவங்க பையன் ஊர்ல இருந்து வந்திருக்காங்க.” நேற்று இறுகிய முகத்துடன் இருந்தவரா இவர் மொத்த அன்பையும் குரலில் தேக்கி மகளை சமாதான படுத்துபவரை பார்த்து எது இவரது நிஜ முகம் என்று வியந்தான்.
“அம்மா ரொம்ப பயமா இருக்கு” மெல்லிய குரலில் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ல
“சரிடா பயம் வேண்டாம் அம்மா கூடவே இருக்கேன், கோலம் போடுறியா??”
“இல்லை வேண்டாம் ரூமுக்கு போகணும். பயமா இருக்கு” அதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருக்க, ஷக்தி பொறுமையாக அனைத்தையும் மீண்டும் விளக்கி அவளை அறைக்குள் அழைத்து சென்றார்.
அழகாய் அவள் போட்டிருந்த கோலம் அவன் கண்ணை பறிக்க, அவளை எப்படி அடுத்து சந்திப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
வீட்டு வாசலில் யோசித்தபடி நின்று கொண்டிருந்த கௌதமை பார்த்தபடி வந்தான் ஆதி. “ஹாய் குட் மார்னிங்”
“குட் மார்னிங்”
“என்ன காலைல வெளியில தூங்கலையா??”
“தூக்கம் வரல்ல, நீங்க எங்க போறீங்க?”
“ஏன் மரியாதை எல்லாம் சும்மா பேர் சொல்லியே கூப்பிடு கெளதம் நானும் உன்னை அப்படி கூப்பிடலாம் இல்லையா??”
“ம்ம்ம் கண்டிப்பா எனக்கு எந்த பிரச்னையும் இல்லை ஆதி.” இந்த வீட்டில் தன்னுடன் பேசும் ஒரே ஆளை பகைத்து கொள்ள அவன் தயாராக இல்லை. அதுவும் வினும்மா அவனது டாலிம்மாவை பற்றி வேறு தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது.
“இப்போ எங்க போற??”
“நம்ம விவசாய நிலத்தை எல்லாம் காலைல ஒரு பார்வை பார்த்துட்டு வருவேன். வர்றியா?”
“ஷ்யூர் வரேன் வா” அவனுடன் காரில் ஏறி கிளம்பினான்.
அவர்களது பண்ணை மிகவும் வித்தியாசமாக இருந்தது. என்ன பயிர் போட்டு இருக்கீங்க?
இது மொத்தம் அஞ்சு ஏக்கர் நிலம் கெளதம், இது முழக்க நான் தனியா விரும்பி செய்யுறது. நம்மாழ்வார் அய்யாவோட தற்சார்பு வேளாண் கொள்கைகள் இதுல அப்பிளை செய்து இருக்கேன், இந்த இடம் சுத்தி உயிர் வேலி போட்டு இருக்கோம். தென்னை மரங்கள், சிறுதானிய பயிர்கள், எண்ணை விதைகள், மூலிகை செடிகள் எல்லாம் இருக்கு.
“அதென்ன உயிர்வேலி?”
“பண்ணையின் வேலியோரமா நாம வைக்குற மரங்க காத்தோட வேகத்தை தடுத்து நிலத்தில் இருக்கும் நீரை தக்க வைக்கும், இவைகளை மழைகாலத்தில் வச்சால் நல்லா வேர் பிடிச்சுக்கும்”.
“அது மாதிரி வைக்க தனியா மரங்கள் இருக்கா??”
“நொச்சி மரம், பனை மரம், வாத நாராயணா, கிளரிசிடியா, அகத்தி போன்ற பயிர்களை வச்சு உயிர்வேலி அமைச்சுகிட்டா நம்மால் இந்த சுற்று சூழலுக்கு எந்த பாதிப்பும் வராது. பயிர்களும் பாதுகாப்பா இருக்கும்.”
“க்வைட் இன்டரஸ்டிங்”
“கெளதம் உனக்கு நம்ம ஊரோட வரலாறு தெரியுமா??”
வரும்போது விக்கிபீடியால பார்த்துகிட்டு வந்தேன். நிறைய விஷயம் போட்டு இருந்தது. இந்த உலகத்தை பிரம்மா படைப்பு தொழிலை இங்கதான் தொடங்கினாராம் அப்படியா??”