All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ருத்ராவின் ‘குறிஞ்சி முதல் மருதம் வரை நீயே...!!!’ - கதை திரி

Status
Not open for further replies.

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்புகளே!

நீண்ட இடைவெளிக்கு பிறகு என் அடுத்த கதை களத்துடன் வந்து இருக்கிறேன். குறிஞ்சி முதல் மருதம் வரை நீயே…!! கி.மு வில் இருந்து ஆரம்பம் ஆகும் களம். என்னளவு இது எனக்கு மிக பெரிய சவால். முயற்சிக்கப்போகிறேன்!
மீண்டும் எனக்கு இங்கே இக்கதைக்கான திரி அமைத்துக் கொடுத்து! வாழ்த்தி! வாய்ப்புக் கொடுத்துள்ளார் ஸ்ரீ மேம்! அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.

சக தோழிகளாய் உடன் இருந்து நீங்களும் எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்…

கதை மாந்தர்களை, கதையின் களத்திலேயே நாம் சந்திப்போம். வெகு விரைவில் முதல் அத்தியாயத்துடன் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்…
ருத்ரா😊😊
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நடப்புகளே!😊

இதோ..
குறிஞ்சி முதல் மருதம் வரை நீயே..!! கதையின் முதல் அத்தியாயம். படித்து விட்டு உங்களுடைய கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்..
ருத்ரா😊😊
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குறிஞ்சி முதல் மருதம் வரை நீயே...!!


பாகம் ஒன்று: குறிஞ்சி களம்…!


களம் 1: முருகு வேலும்! கூர் வளரியும்!


கூதிர்ப்

பெருந்தண் வாடையின் முந்து வந்தனனே

(ஐங்குறு நூறு -252 : 4-5)


கூதிர்க் காலத்துப் உடல் துளைக்கும் குளிர்ந்த காற்று! இராறு ஆண்டுகள் தவத்திற்கு பிறகான நீலக்குறிஞ்சிப் பூக்களின் முதல் மூச்சுக்காற்றின் உயர் நறுமணம்! அப்பூக்களை விடவும், அப்பூக்களுக்காய் மாதவமிருந்து அப்பூக்களின் புதர்களையே சுற்றிக்கொண்டு இருந்த தேனீக் கூட்டங்களின் சிலிர்ப்பூட்டும் ரீங்காரம்! எழில் கொஞ்சிய நிலவு மகளின் முழு அரங்கேற்றம்! எனக் குறிஞ்சி நிலத்தின் மிகையில்லா மிகைப் பெட்டகங்கள். ஒப்பற்ற உயர்ந்த சிகரம்! தெற்கின் தொன்மை! தொன்மையில் மேன்மை! என இவ்வனைத்திற்கும் மேலாக பொன் மகுடத்திற்கு ஏற்ற ஆசற்ற வஜ்ஜிர முகப்பு போல்..இவ்வுலகிற்கே சங்கத்தமிழ் மொழியின் குன்றா புகழினையும், சங்கத் தமிழர்களின் ஈடு இணையற்ற வியத்தகு வாழ்வு சார் முறைகளையும், மனித இனத்திற்கான வேர்ரென, அகத்திய மாமுனிவர் அருளிய அகத்தியம்! உருவெடுத்த புனிதத்தின் உச்சம்! இன்று பொதிகை மலை என அழைக்கப்படும் அன்றைய பொதியில் மலை!அருள்மிகு அசம்பு மலை!


புடைப்பெடுத்த ஐந்து தலை நாகம் போன்று பரந்து விரிந்து வானளவு உயர்ந்து நிற்கும் ஐம்பெரும் மலை குவியல்களின் தொடர்ச்சி இந்த பொதியில் மலை. அம்மலைத் தொடர்ச்சிதனில் பெருநை ஆற்றின் சுனை மூலம் கொண்ட மலைமொட்டு!


எப்போதும் நிசப்தத்தைக் கவ்வி களிப்பில் கரையும் முன்பனியின் முனைப்பான பொழுதிற்கு நேர் எதிராக அந்த குன்றக் குறவர்களின் கூடார வட்டப்பகுதி அங்கு, ஆங்காங்கே நிறுவப்பெற்ற தீப்பந்த ஜுவாலையின் ஒளியில் மகிழ்வாய் சலசலத்துக் கொண்டும், பரபரத்துக் கொண்டும் இருந்தது.


ஓர் இடத்தில் மிகப் பிரம்மாண்டமான உயர்ரக சந்தன மரமானது செங்குத்தாக வெட்டப்பட்டு நிலத்தில் சாய்த்து வைக்கப்பட்டு இருக்க..அதைச் சுற்றிலும், பல வண்ண மலர்களால் நேர்த்தியாகக் கோர்க்கப் பெற்ற அணிகளை, உச்சி முதல் பாதம் வரைக்கும் அலங்கரிக்கப் பெற்ற இளம் பெண்கள் கூட்டம் அமர்ந்து இருந்தது. அவர்கள் அந்த மரத்திலிருந்து சந்தனம் அரைத்து, அதை அவர்களுக்கு முன்பாக நாணத்தால் முகம் சிவக்க, நிலம் நோக்கிச் சமைந்து இருந்த இளம் பெண்ணின் பூவுடலில் பூசி, அவளின் திருமணத்திற்காக மங்கள நீராட்டிக் கொண்டு இருந்தனர்.
 
Last edited:

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவர்களுக்கு எதிர்புறத்தில் முறுக்கேறிய இளந்தாரிகள்! அவர்களது வீரத்தின் வீரியத்தைக் காட்டும் வகையில், புலி நகங்களால் ஆன ஆபரணங்களை அணிந்து கொண்டு அன்றைய விழா நாயகனை அவர்களும் மங்கள நீராட்ட, சிறிது நேரத்திற்கு எல்லாம் அனைவரும் தயாராகி கூடாரப்பகுதியினை விட்டு மலையின் உச்சியை நோக்கிப் பயணப்பட்டனர் என்றால், ஒரே ஒரு கூடாரத்தில் மட்டும் இன்னும் சலசலப்பு அடங்காமலிருந்தது.


அந்த கூடாரத்தின் வெளியிலிருந்து "ஏலோ.. ஒயிலா!" என்கிற ஒயிலா குமரி, "ஏலோ..வள்ளி!" என்கிற குறவள்ளி பிடாரச்சி, இவ்விருவரையும் உரக்க அழைத்துக்கொண்டு இருந்தார் பழம் பெரும் மூத்தவர்.. உலகம்மை பிடாரச்சி. பிடாரச்சி! குலப்பெயருக்கு ஏற்ற குணம் கொண்டவர். அதிகார தோரணை கொண்டவரே என்ற போதிலும், குன்ற குறவர்களை வேட்டைக்கு முன் எடுத்து செல்லும் கடமைக் கொண்டு உள்ள மூத்த பெண் பிடாரச்சிக்கு மிகவும் ஏற்புடையது மட்டுமின்றி, அவரின் குருதியில் கலந்துவிட்ட ஆளுமை அணுத்திரள்களுக்கு, பொதியில் மலை வாசிகளின் பேதலோடு கூடிய வணக்கங்களும் போற்றுதலும் சுணக்கமில்லா முத்திரையே!


சங்க காலத்தில், ஆண்களின் வேட்டையாடும் குழுவினை, முன் எடுத்துச் செல்லும் சிறப்பும்.. தகுதியும் பெற்றவர்களாக இருந்தனர் இப்பெண் பிடாரச்சிகள். பிடாரன் பிடாரிச்சி என அறியப்படும் இவர்களின் இனத்தில், பிடாரச்சியின் கையே ஓங்கி இருக்கும். பிடாரன் எனப்பட்டவனைப் பயம் கொண்டே அணுகினார்கள் என்ற போதிலும், அப்பிடாரனின் பிடரி அவனது பிடாரச்சி இடத்திலேயே என்று இருந்த நிலை. இந்த வகையான அமைப்பினால் பிடாரச்சி என்று அழைக்கப்பட்டவள் அவளது பிடாரன் உள்பட எவருக்கும் அடங்காதவளாகவே இருந்தாள். இவர்களுள் மூத்தவரையே அவரது பெயர் விடுத்து மரியாதையின் நிமித்தம் பிடாரச்சி என்று மட்டும் அனைவராலும் அழைக்கப்படுவார். ஏனைய சக இனத்தவர்கள் அவர்களுது பெயர் கொண்டே அவர்களுள் அழைக்கப்பட்டனர்.


இத்தகைய சிறப்புக் கொண்டமையால் இக்குலத்தில் ஒவ்வொரு பெண் பிள்ளைகளின் பிறப்பும் போற்றுதலுக்கு உரியதாகவும் விழா எடுக்கச் சிறப்புடையதாகவும் கருதப்பட்டது. ஆனால் இங்குப் பிறக்கும் எல்லா பெண்களும் அத்தலைமைக்குத் தகுதி உடையவர்களாக ஆகிவிட மாட்டார்கள். இவர்களுது இக்குலத்தில் வில்லும்! வேலும்! எப்பிடாரச்சியின் கையில் சீர்க் கொண்டு உறுதி பெருகிறதோ, அவரே இப்பொரும் தலைமைக்கு தகுதியுடையவர் ஆகிறார். சிறு வயது முதலே அதற்கென தங்களைத் தயார் செய்து கொள்பவர்கள் இவர்கள்.


இதில் நாணமும், நிதானமும், நிர்மலமும், நிசப்தமும் மேலோங்கும் பெண்கள் மிகச் சிறு வயதிலேயே இப்பயிற்சிகளில் இருந்து விலக்கு எடுத்தவர்கள் ஆவர். அப்பயிற்சியில் சிறக்கும் குறப்பெண்கள் அடுத்து பிடாரச்சியாக தலைப் பிடாரச்சியால் அவரது காலத்திற்குள்ளாகவே வில்யாழும்! முருகு வேலும்! கொடுத்து அங்கீகரிக்கப் படுவாள்.
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்று அப்படியான ஓர் உயர்தகு அங்கிகாரம் பெற உள்ளவள் தான் குறவள்ளி! குறவள்ளி பிடாரச்சி! உலகம்மை பிடாரச்சியின் ஆளுமையுடன் கூடிய ஆற்றலையும் அவருக்கும் மேலாக, அவரிடம் இருந்து பெயர்க்கப் பெற்ற மகள் வயிற்று இளையப்பெயர்த்தி குறவள்ளி பிடாரச்சி!


உலகம்மை பிடாரச்சி மற்றும் திருநீலகண்டன் பிடாரனக்கு இரு வாரிசுகள். மூத்தவள் வாசமயிலை, இளையவன் இடும்பன். வாசமயிலை! மிகவும் மென்மையானவர்; இலகுவானவர்; இன்று அழகர் மலையென அழைக்கப்படும் அன்றைய இருங்குன்றத்தில் இருந்து வேட்டையாட வந்த தலைசிறந்த வேடுவனான வளைவணன், வாசமயிலையிடம் மையல் கொண்டு கற்பு நெரிக் கொண்டு துணை சேர்ந்து அவருடன் அழைத்துச் சென்றுவிட்டார்.


தன் மகள் தன்னை போல் இல்லாது போனதிலே மனம் வாட்டம் கொண்ட உலகம்மை பிடாரச்சிக்கு, அவர் வேற்று குடியேறியதில் கூடுதல் மனவாட்டம் கொண்டார். ஆனாலும் அவரது வில்லும்! வேலுமே! தனக்கு அடுத்தான பிடாரச்சியை இனம் காட்டும் என்பதில் மனம் நிறுத்திக் கொண்டார். அத்தோடு கடமை தவறாது திறன் கொண்ட இளங் குறமகள்கள் பலருக்கும் அவர் அறிந்த வேடவ கலைகளை கரம் வாரத்துக் கொண்டும் இருந்தார்.


அப்போது இருந்து சரியாக இராறு மதி கடந்த ஒரு முழுநிலவு முன்பனி பொழுதில், திருநீலகண்டன் மற்றும் உலகம்மை பிடாரச்சி அவர்களுது கூடாரத்திற்கு வந்து நின்றார் வலைவணன். செங்குருதி வழிந்தோடிய வலிய அவரது கரங்களில், பொன்னச்சு வார்த்த இருமீன்கள் கொண்ட கலைநயம் மிளிர்ந்த.. மிகப்பெரிய அரிய வகையான முத்துப் பேழை ஒன்று இருந்தது. காண்போரை வசியப் படுத்தும் அப்பேழையின் மர்மம் பொருந்திய நூதன அழகைவிடவும் மிதமிஞ்சிய பேர் அழகுக் கொண்ட இரு மலர்கள்!! குறிஞ்சி மலர்களோடு மலர்களாகப் பூத்து இருந்து பச்சிளம் தளிர்களாய், கப்பிய வெண்ப் பருத்தியில் உறங்கிக்கொண்டு இருந்தனர்.


பேழையிலிருந்த அக்குழந்தைகளை உலகம்மை பிடாரச்சியிடம் கொடுத்த வலைவணன், "அம்மையே! இவர்கள் ஒரே நேரத்தில் உதித்த இருமலர்கள். இந்த வலைவணன் மற்றும் வாசமயிலையின் கண் போன்ற மகவுகள். இதில் ஒருவள் ஒயிலா! மற்றவள் வள்ளி! இவர்கள் இரட்டைக்கிளவி போன்று.


அம்மையே!

இவர்களின் இம்மையும், பிணைப்பும்

இக்குன்றோடு சிறக்கும்!

இக்குன்றினில் சிறக்கும்!

இவர்களால் இக்குன்றும் சிறக்கும்!

அல்லால்..

கோலம் மாறும்; கோள்கள் மாறும்!

அப்பியப் பேழைச் செப்பும்!

வஞ்சினங்கள் முழங்கும்!

மறுமையின் வாயிர்த்திரக்கும்!

கர்ப்பக்கிருகம் பலசெதிலாகும்!


இவர்கள் இனி உம்முடையவர்கள். என்றும் உம்முடையவர்களாகவே இருக்கட்டும். அம்மையே! இவர்களை உம்மிடம் சேர்க்கவென கொண்டுள்ள எஞ்சிய எனது இவ்வுயிரானது, இனியேனும் காற்றோடு காற்றாகக் கலந்துவிட்ட என் வாசமயிலையோடு, காற்றாகக் கலந்து வேட்கை தனித்துக் கொள்ளட்டும்." என்று வாயுரைக்கவும்,


தன்கைகளால் கற்பாறையின் வலிமையோடு பற்றி இருந்த குழந்தைகளை தன் மாரோடு அனைத்துக் கொண்ட உலகம்மை பிடாரச்சியின் உள்ளம் இளகிக் கசிந்தது "மகளே...வாசமயிலா!!" என்று உறக்க அழைத்துக் கொண்டும், அழுத்துக் கொண்டும் குழந்தைகளோடு குன்றின் உச்சிக்குச் சென்றவர், கதிரவன் கண்கொண்டு கச்சல் கரைந்துக் குழந்தைகளோடு குடில் வந்து பார்த்தால், அங்கு திருநீலகண்ட பிடாரரும் இல்லை! வலைவணனும் இல்லை! அப்பேழையும் இல்லை!


அன்று இவர்கள் குழந்தைகளாகக் கண்ட குறிஞ்சிப்பூவோடு இன்று வரையில் இரு முறை குறிஞ்சி பூப்பைப் பார்த்தாயிற்று. வலைவணன் சனித்து இருக்க வாய்ப்பு இல்லை என்று கணித்த உலகம்மை பிடாரச்சியால் திருநீலகண்டனின் நிலையை மட்டும் கணிக்க முடியும் வில்லை, முயற்சிக்கவும் இல்லை அவர். ஏனெனில் அக்குழந்தைகளைக் கையில் ஏந்திய கணம் கொண்டே அவர் சுமக்கவிருப்பதின் கனம் உணர்ந்து கொண்டதோடு.. மருமகன் வலைவணனது இறுதிப் பிசிதனில் அவருள் கிலிப்பிடித்துக் கொண்டது.


சிப்பிக்குள் முத்துப்போல் அன்று வெண் முத்துப் பேழைக்குள் சிப்பியாய் கண்சிமிட்டிய சிட்டுகள், இன்று நான்முகன் சிற்பன்! நல் உளி முனை கொண்டுச் செதுக்கிய சிற்பமென உருவங்கொண்டு, அவனிக் காணா அழகுடையவர்களாகவும், நற்குணமுடையவர்களாகவும் ஒளிர்ந்து நின்றனர். பேர் அழகு தவழ் மங்கையர்களாக மிளிர்ந்து நின்றனர்.


முன்னவள் ஒயிலா குமரியின் கண்கள் மயிலின் நிதானத்தை ஒத்தது என்றால்; இளையவள் குறவள்ளியின் கண்கள் மானின் துள்ளலை ஒத்தது. முன்னவள் காந்தள் என்றால்; பின்னவள் தாழை! முன்னவளது அன்ன நடை என்றால்; பின்னவளது புள்ளி மான் ஓட்டம். முன்னவள் சலனமில்லா நீரோடை என்றால்; பின்னவள் ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சி! முன்னவள் தென்றல் காற்று என்றால்; பின்னவள் புயல் காற்று! முன்னவள் இலேச அணி என்றால்; பின்னவள் சிலேடை அணி!


"ஏலோ.. ஒயிலா! ஏலோ.. குறவள்ளி! மற்ற கூடாரத்தார் எல்லாம் கூடுவிழாவிற்கென கிளம்பிவிட்டனர். அனைவருக்கும் முன்பாக இருக்கவேண்டிய நாம், இங்கே இருப்பது ஏற்புடையது ஆகாது குறவள்ளி. இன்று உனக்கு முடிவிழா! மறவாதே. அணிகள் பூண்டு, செண்டு சேர்க்கும் ஒயிலா! நேரம் கழிப்பதிலேனும் ஏற்பு உள்ளது. ஆனால் குறவள்ளி! உனக்கு நேரமேடுப்பது ஏனோ? அணிகள் அற்று தழையுடுப்போடு வந்து நிற்க இத்துணை பொழுது ஆவானேன்?" என்று அவர்களுது கூடாரத்தின் முன் நின்று பெயர்த்தி மார்களை துரிதபடித்தினார் உலகம்மை பிடாரச்சி.


"பிடாரியே! என் அன்புப் பழம் பெரும் பிடாரியே! ஏன் இப்போது இப்படி உரக்க ஏவுகிறாய் எம்மை?" என்று உள்ளிருந்தே கேட்டாள் குறவள்ளி.


"ஏன்.. என்றேனே!" என்றார் உலகம்மை பிடாரச்சி.


"அதற்கு! என்னை ஏன் ஏவுகிறாய் என்று கேட்டேன்? பிடாரியே! உன் அன்பு மிகு பெயர்த்தி ஒயிலாவிடம் கேட்க வேண்டிய கேள்வி இது. பூக்களைக் கோர்த்து, பிரித்து, வளைத்து, நெளித்து அணிப்பூண்டு, முடிதனை வகிர்ந்து வாரிப் பூச் சூடி, எனக் குவளை நீரின் முன்பு பொழுதினை வீணே கழிப்பது அவள் தான்." என்றாள் குறவள்ளி.


"மூதாய் என்கிற மரியாதையும் இல்லை, பிடாரச்சி என்கிற மரியாதையும் இல்லை. இது என்ன விளிப்பு? பிடாரி! என்று. வில்லும் வேலும் கை சேரப்போகும் செருக்கோ? ம்ம்ம்ம்.. ஒயிலாவை விடு, நீ தயார் என்றால் வந்து சேரும். என் சுமைதனை விரைவாக இறக்க வேண்டும். இனி வில்லும் வேலும் உன் பாடு." என்று சலிப்பாக பதில் அளித்த உலகம்மை பிடாரச்சியின் உடல்மொழியானது, அவரது கூற்றுக்கு நேர்மாறாக நெகிழ்ந்து இருந்தது.


"ஆமாம்..ஆமாம், உமது வேலும் வில்லும் தானே! பாடு தான், பெரும் பாடு தான் அவைகள். தினவு கொண்டவைகள். மிகவும் கடினமானவைகளும் கூட. பெரும் பாடு பாட்டனே! என் கட்டுக்குள் கொண்டு வர. வெகு அடங்காது சீற்றம் கொண்டன, உம் கையாடலின் சிறப்பு போலும்! உம்மை போன்று தினவுக் கொண்டவற்றுக்கு ஏற்றது தான் எமது இந்த செருக்கு!" என்ற குறவள்ளி, உலகம்மை பிடாரச்சி நிற்கும் திசை நோக்கி ஓரப் பார்வை பார்த்தவள், கூடுதல் அழுத்தத்தோடு "தினவு கொண்டவைகள் என்று சொன்னது உமது வேலையும் வில்லினையும் மட்டும் தான் என்று நான் சொன்னால், நீங்கள் என்னைச் சந்தேகிக்காமல் நம்ப வேண்டும் மூதாய் அவர்களே! மேலும் என் உடுப்பு தழையுடுப்போ, நாருடுப்போ அதை அணியும் தனிமை கிடைக்க வேண்டிக் காத்து இருக்கிறேன் பிடாரியே! முடிந்தால் இந்த ஒய்யாரியை இங்கு இருந்து விரட்டிக் கொண்டு செல்லும். பிறகு பாரும் எமது வேகத்தினை!" என்று நகையாடியவள் நெஞ்சத்தில் நிரம்பிக் கிடைத்தது, உலகம்மை பிடாரச்சியின் மீதான பேர் அன்பே.


"வள்ளியே! குறவள்ளியே! இதோ நீ கேட்கும் உனக்கான தனிமை. பிடாரச்சிகள் இருவரும் இனியேனும் இடம்பம் விடுத்து கூடுவிழாவின் தலை மாந்தர்களாய் பொறுப்பு உணர்ந்து வாரும்." என்று அக்கூடாரத்தை விட்டு வெளியே வந்த ஒயிலா குமாரி, பேணி பாதுகாக்கப் படும் பளிங்குச் சிலை போன்றவளாக இருந்தாள். அவள் தன் அழகிற்கு அழகு சேர்க்கும் திறன் அறிந்தவளாக இருந்தாள்.
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஏலோ.. குறவள்ளிப் பெண்ணே! என் கையில் அகப்படாமல் இருக்கும் வரையில் உன் செவிமடல் சிறக்கும். இல்லையேல் நிச்சயம் சிவக்கும்.





ஒயிலா! நீ மட்டும் என் போன்று இருந்து இருந்தால்.." என்று இளையவளை எச்சரித்து, முன்னவளிடத்தில் எதையோ சொல்லத் தொடங்கிய உலகம்மை பிடாரச்சியிடத்தில்,





"நான் மட்டும் உங்களைக் கொண்டு பிறந்து இருந்தேன் எனில், நான் குறவள்ளி ஆகி இருப்பேன். அவள் ஒயிலா குமரி ஆகி இருப்பாள் மூதா. நீங்கள் வாருங்கள் நாம் செல்வோம், அவளது வருகையைப் பற்றிய கவலை வீண் என்பது உங்களுக்கும் தெரியும். அங்கு உச்சியில், முல்லை மேட்டில், நாம் உட்பட.. நம் குடியானவர்களின் முதல் கால்தடம் பதியும் முன்பாக, குறவள்ளியின் கை விரல்கள்.. யாழ்தனில் படர்ந்து இழைந்தோட, அதில் எழும் அதிர்வும்! விதிர்ப்பும்! கண்டு நம் செவி சுரக்கும்." என்ற ஒயிலாவின் கூற்றை அவர்தம் குறுநகைக் கொண்டு ஆமோதித்து மலையுச்சியை நோக்கி பயணம் கொண்டார் உலகம்மை பிடாரச்சி.





முல்லை மேடு என்று அம்மக்களால் அழைக்கப்பட்ட அம்மலையின் உச்சி! அடர்த்தியான தொடர் மரங்களுக்கு நடுவே, செங்குத்தாய் வானளவு ஓங்கி விரிந்து! திரண்டு! இருந்த கற்பாறை ஒன்றில் தத்ரூபமாகச் செதுக்கப்பட்ட மிகப் பிரம்மாண்டமான வேல்! குறவர்களின் குல வேல்! அவர்களின் குல தெய்வமான தமிழ்க் கடவுள் முருகோனின் திருவேல்! அயிலவனின் வீர வேல் அது!





வலப்புறம், சற்றே சிறிய அளவிலான கற்பாறையில், பின்னிப் பிணைக்கப்பட்ட ஒரு ஜோடி நாகப் பாம்புகள். இடப்புறம் அதனினும் சிறிய அளவிலான கற்பாறையில் செதுக்கப்பட்ட அகத்திய முனிவரின் திருவுருவம்! என மெய்சிலிர்க்கும் தெய்வீக அகண்டப் பிரவாகம்.





அக்குறமக்களின் ஆதியும் அந்தமும் சாட்சிப்படுவது அங்கே தான். கரணம் கொள்வது அங்கே தான். களவுக்கு வேண்டுதலும் அங்கே தான். இளங்க்காலையர்கள் முதற்க் காப்பணிவது அங்கே தான். பிடாரர்கள் முடிவிழா எடுப்பதும் அங்கே தான்.





அவ்வாறாக அங்கு இரு விழாக்கள் நடக்க உள்ளது. ஒன்று ஓர் இளம் மக்களின் கரணம். இங்கே கரணம் என்பது மணம் முடித்தல் ஆகும். மற்றொன்று அவர்களின் பெரு விழா என்று உரைப்பது தான் தகும். இரண்டு தலைமுறைக்குப் பின் நிகழும் பிடாரச்சி முடி விழா. எனவே மக்கள் இரட்டிப்பு ஆரவாரத்துடன், முரசுகளின் அதிர்வலைகளுடன், அவரவர் வயதுக்கு ஏற்ப சிறு சிறு குழுக்களாய் அம்மலைப் பீடத்தை நெருங்கத் தொடங்கிய போது, நுண் மயிர் சிலிர்க்கும் விதமாக வில் யாழின் தேவ கானம் காற்றோடு மருவி கவிப்புனைந்துக் கொண்டு இருந்தது.





திருவேல்ப் பாறைக்கு நேர் எதிர் புறத்தில் நின்றுக் கொண்டு இருந்த குறவள்ளியின் முன்பு அவளது இடுப்பளவிற்கு குவிந்து கிடந்த பாறையில் ஊன்றி இருந்த வில்யாழ்! அதனை அவளது வலக்கை பிடித்து இருக்க, இடக்கை விரல்கள் யாழ்தனில் விந்தை படைத்துக் கொண்டு இருந்தது. வளைக்காப்போ, மரக்காப்போ இல்லாத அவளது நீண்ட வெற்றுக் கைகள் இரண்டும் யாழ் மீட்டே செம்மைக் கொண்டு இருந்தன. அவிழ்த்தால் மயில் தோகையைப் போல விரிந்து பரந்து முழங்கால் தழுவும் கருங்குழல்தனை, அலட்சியமாக அள்ளி முடுத்து அவிழாமல் இருக்க, அவள் குறி சொல்லும் குறவஞ்சி கருங்க் கோலினை இடமிருந்து வலமாகவும், அவளது கூர் வளரியை வலமிருந்து இடமாகவும் சொருகி இருந்தாள்.





குழல் அள்ளி முடித்தமையால், உச்சி முதல் பாதம் வரையிலான எழில் மிஞ்சும் அவளது வளைவு நெளிவுகள் எல்லாம் இளமைக்கு என்று ஓர் இலக்கணம் வகுத்து இயற்கையோடு இயற்கையாக இணைந்து விருந்து படைத்துக் கொண்டு இருந்தது. அவளது இந்த வனப்பும் திறனும், அங்கு உள்ள இளங்காளையர்களுக்கு அகச்சுவைக்கு மாறாக ஏனோ அச்சச் சுவைதனையே வாரி வழங்கிற்று! கூடலுக்கும் ஊடலுக்கும் ஏனோ! அவள் விதிவிலக்காக பார்க்கப்பட்டாள். அவளது விழிவீச்சு ஆடவர்களை எட்டி நிறுத்தியது. அவள் குறவள்ளியே என்றாலும் ஏனோ அங்கு உள்ளவர்களுக்கு, அவர்களின் குல தெய்வ வள்ளியாகவே தென்பட்டாள்! ஒரே ஓர் ஆடவனைத் தவிர மற்றவர்கள் யாரும் அவளிடத்தில் வாய்ப்பேச்சு கூட மேற்கொள்வதில்லை. அந்த ஓர் ஆடவனும் அவளது தாய் மாமன் இடும்பனாகத் தான் இருந்தான். அக்காரணம் கொண்டே பெரும்பாலானோர் குறவள்ளியை நெருங்க தயக்கம் கொண்டனர் என்றும் கூறலாம்.





ஒயிலாவின் கூற்றை மெய்ப்பிக்கும் விதமாகவே குடியானவர்களின் முதல் கால் தடம் அங்குப் பதியும் முன்பாக, குறவள்ளி அங்கு வந்து சேர்ந்து இருந்தாள். அதுவரையில் ஆரவார சலசலப்புடன் வந்து கொண்டு இருந்த மக்கள் அவற்றை எல்லாம் கைவிடுத்து அவர்கள் அங்கு அனுபவிக்க இருக்கும் ஓர் உன்னத சூழலுக்காய், மெளனக் காப்பினை ஏற்றுத் திரண்டனர்.





வேல்தனையே முருகனாகக் கருதி வழிப்பாட்டு நடக்கும் அவ்விடத்தில், விழாவிற்கு ஏற்ற சிறப்பு வழிப்பாட்டு முறைக்கான சூழல் உருவெடுத்துக் கொண்டு இருந்தது. குறவஞ்சியர் கைகளால் பின்னப்பட்ட மஞ்சள் பூசிய புத்தம் புதிய ஓலக்கூடைகள் அணிவகுத்தன. நல்மணம் வீசும் பலவிதமான மலர்களும், மலர் மாலைகளும் சில கூடைகளை நிரப்பி இருக்க, மஞ்சக்கிழங்கில் ஊறி உலர்ந்த பருத்தி ஆடைகள் சில கூடைகளை நிரப்பி இருக்க, சற்றே அகலமான இரு கூடைகளில் பசு நெய்யிட்ட வளரிகள் இருந்தன. நெடுநெடுவான மூங்கில் குவலைகளில் தங்கத் தேன் சிலவற்றிலும், நெய்யால் செய்த கள் சிலவற்றிலும் இருந்தன. பரங்கிக் குவளையில் தினைமாவும், பனையோலைக் குவளையில் சுட்ட பலாவிதை மாவும் படைக்கப்பட்டன. ஒரு பக்கம் சிறு கற்பாறைகளுக்கு இடையில் விறகு வைத்து, தீமூட்டி கற்சட்டியில் புது மூங்கில் அரிசியைச் சமைத்துக் கொண்டு இருந்தனர்.





ஒருசேர மூவர் சுமக்கும் மலை வாழைத்தார்கள் ஒரு புறம். தனக்கு நிகரான இடையுள்ள கனிந்த பெரிய அளவிலான மலைப்பலாப் பழங்களை வலிமையான கரங்களால் தோளில் சுமந்து கொண்டு வந்த இளங்க் குறவர் பட்டாளம் மறு புறம் என்று களைகட்டியது.





அப்போது அங்கு வந்து சேர்ந்தனர் உலகம்மை பிடாரச்சியும், ஒயிலா குமாரியும். உலகம்மை பிடாரச்சியை பார்த்ததும் மக்கள் அனைவரும் எழுந்து நின்று வணங்கி மரியாதை அளித்தனர். அவர்களின் மரியாதையை ஏற்கும் விதமாக உலகம்மை பிடாரச்சியும் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்து குறவள்ளிக்கு அருகே இருந்த ஒரு சிறிய பாறையில் சென்று அமர்ந்து கொண்டார். ஒயிலா குமாரியோ, சகாக்களுடன் இணைந்து கொண்டு அவர்களைப்போலவே யாருடைய வருகைக்காகவோ வேண்டி அவர்கள் வந்த வழி நோக்கிக் காத்து இருக்கலானாள்.


சலங்கைக் கட்டிய மூங்கில் கோல் ஊன்றிக் கொண்டும், புலித் தோல் ஒன்று இடுப்பைச் சுற்றியும்.. மார்புக்குக் குருக்காகவும் அணிந்து கொண்டும், பழுத்துப் பெருத்து, உயர்ந்த உருவம் ஒன்று டம்.. டம்.. என உறுதியான கால்தட ஓசையுடன் அவர்கள் முன் வந்து நிற்கவே, அனைவரும் மண்டியிட்டு வணங்கி எழுந்தனர். குறவள்ளியும் யாழ் மீட்டி முடித்து அவருக்கு சிரம் தாழ்த்தி வணங்கினாளே தவிர மண்டியிடவில்லை. ஏனோ! சிறு வயதுக் கொண்டே அவளால் யாரிடமும் மண்டியிட்டு வணங்க முடிந்தது இல்லை. அவள் முற்படவும் இல்லை. அது ஏன்? என்று இன்று வரையிலும் யாரும் அவளிடம் கேட்டதும் இல்லை.






அப்படியான அந்த பெரிய உருவத்தின் சொந்தக்காரர் அனலேந்தி தலையாரி ஆவார். அவர் தான் பொதியல் மலைத்தொடரின் தலைக் காவல்காரர். உலகம்மை பிடாரச்சிக்கும் மூத்தவர். குறவர்களின் முதல் மரியாதைக்கு உரியவர். குரவள்ளியையும் எண்ணில் கொண்டால், நான்கு பிடாரச்சிகளின் முடி விழாவினை சிறப்பித்த பெருமை கொண்டவர். அவரது கட்டுப்பாட்டில் களவு அங்கு இல்லாத விடயம். உளவு என்பது அங்கு இயலாத விடயம். அவருக்கு என்று தனிக் குடும்ப அமைப்பு இல்லை. அத்தகைய துறவு நிலையே தலையாரி பதவிக்கு அவரை மிகச்சிறந்த தகுதியுடையவர் ஆக நிறுத்தியது. பய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர். அவர் சிறுவயதிலிருந்து இன்று வரையிலும் பொதியில் மலைதனை எந்த ஒரு அரசனும் சொந்தம் கொண்டதில்லை. பாண்டியநாட்டுக்கு உட்பட்டது தான் என்றாலும் அக்குற மக்களின் மன்னன், தலைவன், இறைவன் தமிழ்க் கடவுள் முருகன் மட்டுமே. அவர்களின் குல வள்ளியை மணந்து அவர்களுக்குச் சிறப்பு சேர்த்தமையால் அந்த வேலவனுக்கு மட்டுமே அவர்களின் சிரம் பணிந்து வந்தது. ஆதலால் அவர்களுள் தலைவன் என்று தனி விகுதி இல்லாமல் இருந்தது. அதனை முறியடித்து எப்படியேனும் பொதியல் மலைதனை ஆண்டுவிட நினைக்கும் வேளிர் அரசர்கள் பலர் முயன்று கொண்டு தான் உள்ளனர். அனலேந்தி தலையாரியின் பகைக்கு ஆளாக நேரிடும் என்பதால் தீவிர முயற்சிகள் ஏதும் நேர்ந்ததில்லை இதுவரையில். ஆனால் காலச்சுழற்ச்சியில் மாறாது இருப்பது மாற்றம் ஒன்று தானே!






கைகள் இரண்டையும் விரித்து, தடித்த அவரது உதடுகளைப் பிரித்து விண்ணை நோக்கி நாவைச் சுழற்றி ஒரு வித ஒலி எழுப்பியவர்.. ஒரு கூடை பூக்களை விண்ணை நோக்கி வீசி எறிந்தார். என்னே ஓர் அதிசயம்! வீசிய பூக்கள் அனைத்தும் காற்றுக்கு எதிர் திசையில் ஒன்று சேர பயணித்து வேல்ப் பாறையை அடைந்து ஆராதனை செய்தது. இதையடுத்து அனைவரும் தலைக்குமேல் கைகளை கூப்பி அனலேந்தி தலையாரியைப் போலவே ஒலி எழுப்பி வழிபாடு செய்தனர். அப்போது குறவள்ளியின் கண்கள் தானே மூடிக்கொண்டன. அவளது செவிகளில்..






வெற்றி வேல்!




வீர வேல்!




சக்தி வேல்!




சூர வேல்!




என்கிற போர் முழக்கம் ஒலிக்கத் துவங்கியது. அவளது கண்முன்னே ஆர்ப்பரிக்கும் செங்குருது பூமி கடல் போல் விரிந்து கிடந்தது. செங்குருது வடிந்த இருக்கைகள் யாசிப்பாய் நீண்டு இருந்தது. அதற்கு மேல் அவள் அந்த காட்சிகளைக் காண விருப்பம் கொள்ளவில்லை, கண்களைத் திறக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் அவளால் அது முடியாமல் போனது. மீண்டும் அந்த காட்சி அடுக்குகள் தொடர்ந்தன. "வேண்டாம் குமரி, ஒப்புக்கொள்ள வேண்டாம் கண்மணி." என்று ஓர் இறைஞ்சும் குரல் கேட்டது. குறவள்ளியின் உடல் விறைத்தது, அப்போது..






"வள்ளி! தீச்சட்டிதனை எடுக்க வா மக்களே." என்று தன் கட்டைக் குரல் கொண்டு நேசத்தோடு அழைத்தார் அனலேந்தி தலையாரி. அவரது அழைப்பு அவளை நடப்பிற்குக் கொணர உதவியது. மெல்லக் கண் இமைகளைப் பிரித்தாள். சிவப்பேறிய அவளது கண் முழிகளிலிருந்த அனலேந்தி தலையாரி, அவள் கண்ட சில இரகசிய பக்கங்களை அவரும் காண நேர்ந்தார். அப்படிக் கண்டவரின் உள்ளம் நடுங்கியது. அவரது நெஞ்சத்தில் கிலிப்பிடித்து கொண்டது! திரும்பி ஒயிலா குமரியைப் பார்த்தார் பின் குறவள்ளியையும் பார்த்தார். பின் அவரிடம் இருந்து ஒரு பெருமூச்சு வெளிவந்தது.






மஞ்சள் காப்புக் கட்டிய ஒரு பெரும் தீச்சட்டியை குறவள்ளி கைகளில் வைத்தார் அனலேந்தி தலையாரி. நீட்டிய அவள் கைகள் இரண்டிலும் அனல் படரப் படர, வேல்ப் பாறைக்கும் அடுத்து நாக தெய்வத்திற்கும் இறுதியாக அகத்திய முனிவ கல் வெட்டிற்கும் ஆரத்தி எடுத்து விழாவை முன்னெடுத்தாள்.






நாக தெய்வத்திடம் நின்று கொண்டு சங்கு ஒலி எழுப்பினார் அனலேந்தி தலையாரி. அப்போது உலகம்மை பிடாரச்சி மெல்நடையிட்டு வந்து பூத்தூவி நாக தெய்வ வழிபாடு செய்துவிட்டு, அங்கு வைக்கப்பட்டு இருந்த அவரது வில் அம்பினை எடுத்து குறவள்ளியின் கைகளில் ஒப்புவித்தார். அடுத்து வேல்ப் பாறையின் முன்பு வைக்கப்பட்டு இருந்த குறிஞ்சிப் பூ மாலையை எடுத்து குறவள்ளிக்கு அணிவித்து, சந்தனம் பூசி குங்குமப் பொட்டு இடப்பட்ட அவரது வேல்தனை பற்றி குறவள்ளியின் கைகளில் கொடுத்ததும் அவரின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் கசிந்தது. காண்போருக்கு அந்த வேல் மிக எளிதானவையாக இருந்தாலும் அதை பற்றித் தூக்கவே மிகுந்த வலிமை தேவைப்படும். அந்த வேல்க் கொண்டு அனைவராலும் சரியாக இலக்கை நோக்கிக் கூறிவைக்க இயலாது.
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழி வைக்கும் குறியும், வேல் வைக்கும் குறியும் இடறும். அப்படி இடறாமல் சீறிப்பாய வைக்க உலகம்மை அவர்களுக்கு அடுத்தடுத்ததாக குறவள்ளியால் முடிந்தது. அத்தகைய சிறப்பினை கொண்ட வேலை, குறவள்ளியின் கைகளும் மிகுந்த பக்தியுடன் மெய் சிலிர்க்க ஏந்திக் கொண்டன. கூடி இருந்த குடியானவர்கள் எல்லாம் குறவள்ளிக்கு மலர்கள் தூவி, குறவள்ளி பிடாரச்சி வாழ்க! வாழ்க! என்று குறவள்ளியை வாழ்த்தி, பெரிய பிடாரச்சி வாழ்க! வாழ்க! என்று உலகம்மை பிடாரச்சியும் போற்றி வணங்கினர்.







அப்போது வேல்ப் பாறையின் உச்சியிலிருந்து மீண்டும் ஒரு சங்கு ஒலி கேட்டது. அனைவரும் உச்சி நோக்கினர். குறவஞ்சிச் செல்வனாய்! அக்குடியானவர்களின் காவலானாய்! இறுகி வலுவேறிய தேகத்துடன், உறுதியான அகண்ட கைகளைக் கொண்டு சங்கொலி எழுப்பிக் கொண்டு நின்றான் இடும்பன். முடிசூடல் விழா நிறைவுற்றது என்பதின் ஒலி அது. அதற்காகவே காத்து இருந்தார் போல் குறவள்ளி பிடாரச்சி, உலகம்மை பிடாரச்சியுடன் சென்று பாறை ஒன்றில் அமர்ந்து கொண்டாள். அடுத்ததாக கரணம் கொள்ளும் விழா ஆரம்பம் ஆனது. அது கற்பு நெறிக் கொண்ட கரண விழா. மணமக்களின் பெற்றோர்கள், உற்றார் உறவினர்களோடு மேற்கொள்ளப் படும் திருமணம். அதனை கற்பு நெறிக் கொண்ட கரண விழாவாக கொண்டாடப் படுகிறது. அவ்வாறு அல்லாது போனால் அதனை உடன்போக்கு கடி மணம் என்று கொள்வர்.







முரசொலிகள் முழங்க ஆரம்பித்தன. முதலில் மணமக்களின் பெற்றோர்கள் வளரி கூடைகளை மாற்றிக் கொண்டனர். பின் மஞ்சள் உலர்த்திய திருநாள் உடுப்பு இருந்த கூடைகளை மாற்றிக் கொண்டனர். அப்படி மாற்றிக் கொண்ட திருநாள் உடுப்புகளை அணிந்து வந்த மணமக்கள் மிகுந்த பூரிப்புடன் மலர் மாலைகளை மாற்றிக் கொண்டனர். மணமகன் உலகை வென்ற உவகையுடன் அவன் அணிந்து இருந்த புலிப் பல் மாலையை, சந்தனம் அப்பிய கன்னங்களில் நாணத்தால் விழைந்த செம்மையை மறைத்துக் கொண்டு நிலம் நோக்கி நின்ற மணமகளுக்கு, பெருமையோடு அணிவித்து கரணம் கொண்டான். அந்த புலிப் பல் மாலையில் இருக்கும் புலிப் பற்களின் எண்ணிக்கை ஆண் அவனது வீரத்தைப் பறைசாற்றும்.







அனலேந்தி தலையாரி, உலகம்மை பிடாரச்சி, மணமக்களின் பெற்றோர்கள் மற்றும் அங்கு இருந்த மூத்த குடியானவர்கள் எல்லோரும் மணமக்களை வாழ்த்திவிட்டு தேனுடனும் மூங்கில் அரிசி சோற்றுடனும் அவ்விடம் விட்டு அகன்று கொள்ள, அங்கே இளையவர்களின் குரவைப் பாட்டு ஆரம்பம் ஆனது. மணமகனோடு மற்ற ஆண்கள்.. ஒரு வட்டம் அடிக்க, மணமகளோடு மற்ற பெண்கள்.. ஒரு வட்டம் அடித்துக் கொண்டனர். அருகில் நிற்பவரோடு கைகளை கோத்துக்கொண்டு குரவைப் பாட்டிற்கு ஏற்றவாறு, கைகளை உயர்த்துவதும் பின் தாழ்த்துவதும், பாட்டின் மெட்டோடு அனைவருடன் இசைந்து சுற்றி, நிறுத்தி, பின் திரும்பிச் சுற்றுவது தான் குரவை ஆட்டம். அப்படியான ஒரு குறவஞ்சியின் குரவை அரங்கேற்றம் அங்கே நிகழத் தொடங்கியது.




முதலில் பெண்கள் குழுவினர் மணமகளை மையப்படுத்தி குரவை பாடினர்.






தன்னன னா; தின தன்ன னா தின




தன்னன னா; தின தன் னா னா…




தன்னன னா; தின தன்ன னா தின




தன்னன னா; தின தன் னா னா…






அழகி! இவள் பேரழகி!




ஆண்யானை மதம் கொள்ளும் பேரழகி;






குழலி! இவள் பூங்குழலி!




நல் மாண்புப் பொருந்திய நெடுங்குழலி;






தன்னன னா; தின தன்ன னா தின




தன்னன னா; தின தன் னா னா…




தன்னன னா; தின தன்ன னா தின




தன்னன னா; தின தன் னா னா…






வள்ளி! இவள் குலவள்ளி!




நம் குறவயர் குலத்துக்கு விடிவெள்ளி;






கள்ளி! இவள் கள்ளியடி!




காணும் உள்ளங்க் கவர் கள்ளியடி;






தன்னன னா; தின தன்ன னா தின




தன்னன னா; தின தன் னா னா…




தன்னன னா; தின தன்ன னா தின




தன்னன னா; தின தன் னா னா…








எங்கிருக்கான்! அவன் எங்கிருக்கான்!




எம் வள்ளி மணாளன் எங்குகிருக்கான்!






வந்துநிற்பான்! அவன் வந்துநிற்பான்!




நம் வள்ளி மணங்கொள்ள வந்துநிற்பான்;






அடுத்ததாக ஆண்கள் குழுவினர் மணமகனை மையப்படுத்தி குரவை பாடினர்.






தன்னன னா; தின தன்ன னா தின




தன்னன னா; தின தன் னா னா…




தன்னன னா; தின தன்ன னா தின




தன்னன னா; தின தன் னா னா…






அழகன்! இவன் பேரழகன்!




குன்றப் பேரழகிக்கு ஏற்ற பேரழகன்;






குமரன்! இவன் இளங்குமரன்!




மேன் மாண்புகள் பொருந்திய சிவக்குமரன்;






தன்னன னா; தின தன்ன னா தின




தன்னன னா; தின தன் னா னா…




தன்னன னா; தின தன்ன னா தின




தன்னன னா; தின தன் னா னா…






வேலன்! இவன் வடிவேலன்!




குறவள்ளிக் குலம் வணங்கும் திருவேலன்;






கள்வன்! இவன் கள்வனடி!




கிழமுதியாகிக் களவுக் கொள்ளும் கள்வனடி!






தன்னன னா; தின தன்ன னா தின




தன்னன னா; தின தன் னா னா…




தன்னன னா; தின தன்ன னா தின




தன்னன னா; தின தன் னா னா…






இங்கிருக்கான்! அவன் இங்கிருக்கான்!




குற வள்ளி மணாளன் இங்கிருக்கான்;






வந்திருக்கான்! இவன் வந்திருக்கான்!




குறவள்ளி மணங்கொள்ள வந்திருக்கான்;






இப்போது இருக்குழுவினரும் சேர்ந்து மணமக்களை வாழ்த்தி பின்வருமாறு பாடினார்கள்.






தன்னன னா; தின தன்ன னா தின




தன்னன னா; தின தன் னா னா…




தன்னன னா; தின தன்ன னா தின




தன்னன னா; தின தன் னா னா…






கொட்டுங்கடி! மேளங்க் கொட்டுங்கடி!




இளம் ஜோடி மணம்முடிக்குது கொட்டுங்கடி;






தட்டுங்கடி தாளந்த் தட்டுங்கடி




மான்மகள் இங்கு மயிலேறுகிறாள் தட்டுங்கடி






தன்னன னா; தின தன்ன னா தின




தன்னன னா; தின தன் னா னா…




தன்னன னா; தின தன்ன னா தின




தன்னன னா; தின தன் னா னா…








பாடுங்கடி போற்றிப் பாடுங்கடி




நம் தலைவன் தலைவிப் புகழ்ப் பாடுங்கடி






வாழியடி! நீண்டு வாழியடி!




நம் மலைமக்கள்; இத்திருமக்கள் வாழியடி;






தன்னன னா; தின தன்ன னா தின




தன்னன னா; தின தன் னா னா…




தன்னன னா; தின தன்ன னா தின




தன்னன னா; தின தன் னா னா…






இவ்வாறாக குரவைப் பாட்டை பாடும் போது மணமக்களை தவிர்த்து, அக்குழுவினுள் இருந்த ஊடல்க் கொண்ட இளங்க் காதல் ஜோடிகள் அவர்கள் தம் ஊடலை விடுத்து, ஓரப் பார்வை பார்த்தும்.. குறுநகை புரிந்தும் சமரச தூதுவிடுத்து இயம்பிக் கொள்ளும் காட்சிகளும் நிகழ்ந்தன. அங்கு சிலரது கண்களில் துணைக்கான தேடல் இருக்கும். சிலரது கண்களில் வேட்க்கை இருக்கும். சிலரது கண்களில் கொஞ்சல் இருக்கும். சிலரது கண்களில் கெஞ்சல் இருக்கும். சிலரது கண்களில் குறும்பு கூத்தாடும். ஆனால் அங்கு குறவள்ளியின் கண்களில் இருந்தது தவிப்பு! இனம்புரியா தவிப்பாக இருந்தது. பிறருடைய கவனத்தை ஈர்க்கா வண்ணம் மெல்ல குரவை கூட்டத்தில் இருந்து விலகி அவ்விடத்தை விட்டு அவளது வேலுடன் வெளியேறினாள் குறவள்ளி பிடாரச்சி. ஆனால் அவள் அப்படி விலகியதும் ஒயிலா குமரியின் கண்களில் தவிப்பு குடிக்கொள்ள அன்னார்ந்து இடும்பனை பார்த்தாள். அவளது பார்வை பார்த்ததும் சிறு தலை அசைப்புடன் இடும்பன் மலைப் புதர்குள் நுழைந்தான். குறவள்ளி அவ்வாறு நடுவே விலகி வெளியேறுவது ஒவ்வொரு முழுநிலவு கூடுவிழாவின் போது நடக்கும் புதிரே! எங்கு செல்கிறாள்? என்பது தொடரும் மர்மமாகவே இருந்து வருகிறது.






மலையின் உச்சியில் இருந்து கீழ்நோக்கி இறங்கி தொடங்கிய குறவள்ளியின் வேகம் கூடத்துடங்கியது. நடை, ஓட்டமாக மாறியது. ஓட்டம், காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் அளவிற்கு அதிவேகம் எடுத்து இருந்தது. மலையின் மையப்புள்ளியை அடைந்ததும் அவளது வேகம் மட்டுப்பட்டது. அங்கே ஒரு கடம்ப மரம் பிரமாண்டமாய் உயர்ந்து, விரிந்து, திரண்டு இருந்தது. அதன் வேர்கள் சிலவை பூமிக்கு மேலும் புடைப்பு எடுத்து இருந்தது. அப்படியான ஒரு வேர் பகுதி பற்றி உயர்த்திய குறவள்ளி அதற்குள் இறங்கி மறந்துவிட்டாள்! அவளை பின் தொடர்ந்து வந்த இடும்பனும், அவள் மரத்திற்குளே சென்று விட்டதை உறுதி செய்து கொண்டு பொதியல் மலையின் அடிவாரத்தை நோக்கி சற்று நிதானமாகவே பயணம் கொண்டானே தவிர, மறந்தும் அவன் அந்த கடம்ப மர வேரினை தூக்க முயற்சி செய்யவில்லை. ஏனெனில் அந்த செயலானது வீண் நேரவிரயம் என்பது அவனது பல வருட அனுபவப் பாடம்.
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதிகாலைப் பொழுது! பகலவன் தன் முழுக்கடமையை செய்ய பனிசுடர் சந்திரனின் ஓய்வை வேண்டிக் காத்து இருந்தமையால், வானில் சந்திரனும் சூரியனும்..எதிர் எதிராக ஒருசேர விடைக் கொடுத்தும், விடைப் பெற்றும்.. நிற்கும் இளங்காலைப் பொழுது. பறவைகள் புத்துணர்வோடு சிறகை விரித்து இரைத்தேடி கூடுகளை விட்டுச் சிறகடித்துக் கொண்டு இருந்தன. மான்கள் கூட்டம் கூட்டமாகத் துள்ளி ஓடிக்கொண்டிருக்கும் வேளை. மயில்கள் சுதந்திரமாகத் தோகை விரித்து ஆடும் அழகிய பொழுது. மனிதனும் கொடிய விலங்குகளும் துயில் எழச் சோம்பல் முறிக்கும் இனியப் பொழுது. பொன்க் கழல் பூண்ட வீரனது உறுதியான நீண்ட கால்கள் பொதியல் மலை அடிவாரத்தில் பதிந்தது. அப்போது சந்திரன் முழுவதுமாக விடைக் கொடுத்தான். தடைகள் அகன்று பகலவன் பார் எங்கும் படர்ந்து ஒளி வீசினான்.






"மித்ரனே!" என்று உடன் வந்த தோழனை அழைத்து, நடையில் கவனம் கொண்டு அமைதியாக வருமாறு கண்களால் சமிஞ்சை செய்தவனின் சிறு வளையம் கொண்ட, அந்த கழல் வீரனது செவிமடல்கள் கூர்மை பெற்றன. பரவிக்கிடந்த இளம் தென்றலின் வீச்சைக் கிழித்துக் கொண்டு ஒரு செயற்கை எதிர் வீச்சின் ஓசையைக் கேட்டன அவனது செவிகளில். அந்த ஓசைதனை கேட்டு உணர்ந்து சுதாரிக்கும் முன்பாக, அவனது கழுத்தை நெருங்கிவிட்டது அந்த கூர் வளரி. குறவள்ளியின் கூர் வளரியது. கண்ணிமைக்கும் வேகத்தில் கிடையாகச் சுழன்று வந்த கூர் வளரியை, சற்றே தலைசாய்த்து.. காப்பு அணிந்த திரண்ட உறுதியான புஜங்களைக் கொண்ட அவனது கைகள் அதை லாவகமாகப் பற்றி நிறுத்தியது.






"ஆம்பூத்தையே! நில். யார் நீ? எமது பொதியல் மலையில் உம்மை போன்ற பெரும் பூத்தைகளுக்கு என்ன வேலை? அடுத்த காலடி வைப்பாயேயானால், எனது வேல் உனது மாரைக் கிழிப்பது உறுதி." என்று கேட்டுக் கொண்ட வந்த குறவள்ளியின் கண்கள், முதலில் அவளது கூர் வளரியைப் பற்றிக்கொண்டு.. அதனைத் திருப்பி பார்த்துக் கொண்டு இருந்த வீரனை அளவெடுத்தது.






அணல் கொண்டு இருந்தான். நீண்டு அடர்ந்து, நுனியில் முறுக்கிய நல் மிசை மயிர் கொண்டு இருந்தான். கழுகுப் பார்வைக் கொண்டு இருந்தான். தலைநிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு உயரம் கொண்டு இருந்தான். தோள் தொடும் நீண்ட முடிக் கொண்டு இருந்தான். கழுகுப் பார்வைக் கொண்டு இருந்தான்! அதில் பெரும் புதிர் கொண்டும் இருந்தான். வதனத்தில் குறுநகைக் கொண்டு இருந்தான். கற்பாறைக்கு நிகர் தோள் கொண்டு இருந்தான். திரட்சியான புஜம் கொண்டு இருந்தான். திண்மையான அகண்ட மார்க் கொண்டு இருந்தான்! அதில் ஒரு வீரத் தழும்பும் கொண்டு இருந்தான். இடைமுதல் முழங்கால் வரையில், நிலத்தவர் போல் கரையிட்ட ஆடைக் கொண்டு இருந்தான். கழல் பூண்டு இருந்தான்! அதில் மீன் முகப்பு கொண்டு இருந்தான். அனைத்திற்கும் மேலாக அவன் கற்ற கலைகளினாலும் , அவன் கொண்டு உள்ள வீரத்தினாலும் உடல்மொழியில் மதர்ப்பு கொண்டு இருந்தான்!






"ஆம்பூத்தை என்கிறாய்! பெரும் பூத்தை என்கிறாய்! இருந்தும் என்னை யார் என்று கேட்பதேனோ பொம்பூத்தையே?" என்று கேட்ட அந்த வீரனது அடர் குரல், அவளது ஆன்மாவை உலுக்கியது.






"வேலவா! இது என்ன.. வந்த இடத்தில் வம்புப் பேச்சு நமக்கு? பார்த்தாய் அல்லவா! அவள் வீசிய சூழல் வளரியை. அப்பப்பா! நீ மட்டும் சுதாரித்துப் பிடித்து இராவிட்டால், நம் இருவரது தலைகளையும் வீசித் தள்ளிவிட்டு, மீண்டும் அவள் கரத்திற்கே சுழன்றுச் சென்று செல்லம் கொஞ்சிக் கொண்டு இருந்து இருக்கும். நாம் யார் என்றும், எதற்காக வந்து இருக்கிறோம் என்றும் சொல்வது தானே? அவளும்.. அவளது பேச்சும்! அடங்காப்பிடாரி போல!" என்று அந்த கழல் வீரனது காதில் கிசுகிசுத்தான் அவனது தோழன் அம்பலவாணன்.






"அது என்ன பிடாரி போல.. பிடாரியே தான். அதிலும் பிடாரிகளுக்கு எல்லாம் பிடாரி, பிடாரச்சி பெண் இவள்!. சரி தானே பெண்ணே?" என்று உரக்கக் கேட்டான் அந்த வீரன்.






"என்னது? பிடாரச்சி பெண்ணா இவர்கள்!" ஆச்சரியம் அடைந்தான் அம்பலவாணன்.






அவர்களுது உரையாடலில் குறவள்ளியின் பார்வை மேலும் கூர்மை அடைந்தன. "என் கையில் இருக்கும் வேல், நான் யார் என்பதை நிச்சயம் சொல்லி இருக்கும். இதில் வியப்பேதும் இல்லை. நான் யார் என்பது இருக்கட்டும், நீங்கள் யார் என்று இன்னும் கூறவில்லையே?" வேல்லுன்றி வழி மறைத்து நின்றாள் குறவள்ளி.






"கூறிவிடு வேலவா. வேல் கொண்டு குத்துவேன் என்கிறார்களே!" என்று அம்பலவாணன் அலறல் எடுத்தான்.






" அடேய் அம்பலவாணா! நீ ஒரு வீரன். மறவாதே. ஏன் இந்த பெண்ணிடத்தில் அச்சம் கொள்கிறாய்? உனது சொல்லாடும் திறன் எல்லாம் எங்கே போனது?" தோழன் கொண்டுவிட்ட அச்சத்தில் வியப்புக் கொண்டான் அந்த வீரன்.






"எனக்கும் ஏன் என்று விளங்கவில்லை வேலவா! அவர்களைக் கண்ட மாத்திரத்தில் நான் அடங்கிப் போய்விடுகிறேன்." என்று முணுமுணுத்தான் அம்பலவாணன்.






"ஆனால் என் மனம் அவளிடத்தில் அடங்க மறுக்கிறதே மித்ரா!"என்று நண்பனைப் பார்த்து கண்சிமிட்டினான் அந்த வீரன்.






"வேலவா..!" வாய் பிளந்து வியப்பினை காட்டிய அம்பலவாணன், "அடேய் நண்பா! அவள்.. அவர்கள் அடங்காப்பிடாரியடா!" என்று கேட்டான்.






"என்செய்ய? என் மனம் அவளிடத்தில் அடங்கிவிட்டதே அம்பலவாணா!" என்று அம்பலவாணனின் செவியோரம் மடம் திறந்தான் அவன்.






"இது என்ன பிதற்றல் வேலவா? முதலில் மனம் அடங்கவில்லை என்றாய்! பின் மனம் அடங்கிவிட்டது என்கிறாய்!" கவலை கொண்டான் அம்பலவாணன்.






"அவளிடத்தில் பற்றுதல் கொண்டுவிட்டேன் அம்பலவாணா. அதனால் தான் பிதற்றல் கொள்கிறேன்." என்று கூறிய அந்த வீரனது கைகள் குறவள்ளியின் வளரியை வருடிக் கொண்டு இருந்தது. அப்போது அவனது மாரில் சுருக்கென்று ஒரு வலி. வலியின் காரணியை உணர்ந்தவனின் அதரங்களில் இரகசிய புன்முறுவல்.






"ம்ம்ம்.. கூறுங்கள். நீங்கள் யார்? எதற்காக இங்கே வந்து உள்ளீர்கள்? உங்களுக்குள் முணுமுணுப்பதை விடுத்து என்னிடம் இப்போது கூறவில்லை என்றால், இதோ இந்த வேலை உள்ளே இறக்கிவிடுவேன்." என்று எச்சரிக்கை விடுத்த குறவள்ளியின் இடக்கையிலிருந்த வேல், அந்த வீரனின் மாரிலிருந்தது.






"கூர் வளரியும், வேலும் எதற்குப் பெண்ணே? உனது இரு விழிகளை விட எதற்கும் என்னைத் துளையிடம் கூர்மை பெறவில்லை பெண்ணே!" என்று கூறியவாறே குறவள்ளியிடம் இருந்த வேலை, அவள் உணரும் முன்பே தன்கைக்கு மிகவும் எளிதாக மாற்றிக் கொண்டுவிட்டான் அவன்.






நண்பனது அந்த திறமையில் வியப்பு அடைந்த அம்பலவாணன், "பார்த்தாயா பெண்ணே! என் நண்பன் எப்படி உனது கரங்களிலிருந்த வேல்தனை அவன் கைக்குக் கொண்டுவந்து விட்டான்..எ.." என்று அம்பலவாணனால் வாக்கியத்தை முடிக்க இயலவில்லை. அவ்வாறு முடிக்க விடாமல் அவனது தொண்டைக்குழி அழுத்தம் கொண்டது. ஏன் என்பது போல் பார்வையைத் தாழ்த்தி பார்த்தால், அவனது கழுத்தில் வளரியின் அடிப்பகுதி அழுந்திக் கொண்டு இருந்தது. தன் வலக்கைக் கொண்டு வளரியை அழுந்த பற்றியபடி இருந்தாள் குறவள்ளி.






அந்த வீரன், அவளிடம் இருந்து வேல்தனை பற்றிய பொழுது, குறவள்ளியும் அவனிடம் இருந்த அவளது வளரியை மீண்டுவிட்டு இருந்தாள். அவளது அச்செய்கையில் அந்த கழல் வீரனிடம் இருந்து மெச்சுதல் பார்வையோடு "மெச்சுகிறேன் பெண்ணே!" என்று பாராட்டும் கிடைத்தது குறவள்ளிக்கு.






இடையில் "அம்மையே! வேண்டாம், வேண்டாம். என்னை விட்டுவிடு. நான் அம்பலவாணன். இவன்.. இவர் முருகவேல் பா.."என்று அம்பலவாணன் கூறி முடிப்பதற்குள்,






"நான்.. முருகவேல் பாணன்!" என்று தன்னை அறிமுகம் செய்துக் கொண்டான் முருகவேல் பாண்டியன்! குமரிக் கண்டத்தின் இளவரசன்.




முருகு வேல் பாயும்...
 
Status
Not open for further replies.
Top