All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இனிதா மோகனின் "உயிர் துடிப்பாய் நீ! "-கதை திரி

Status
Not open for further replies.

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 15
இரவும், பகலும் மாறி மாறி வரும் இயற்கையின் நீதியைப் போல் ,வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறித் தான் வரும்.

அது போல் திகழொளிக்கு இப்போது இன்பமான காலம். கடந்த காலத்தில் அவள் பட்ட கஷ்டம் எல்லாம் கற்பூரமாய் கரைந்து காணாமல் போனது.

இரு வீட்டு பெரியவர்களும் மணமக்களின் சம்மதம் கிடைத்தவுடன் , திருமண வேலைகளை தீவிரமாக பார்க்க ஆரம்பித்தார்கள்.

உலகமாறனோ, மகனின் மனம் மாறுவதற்குள் திருமணத்தை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ? அவ்வளவு விரைவாக முடிக்க வேண்டுமென்று அடுத்து வந்த முதல் நல்ல முகூர்த்ததில் திருமண தேதியை குறித்தார்.

மணமக்கள் இருவருமே திருமணத்தை எளிமையாக நடத்தவேண்டுமென்று வற்புறுத்தியதால் ,வேறு வழி இன்றி பெற்றவர்கள் தம் மக்ககளின் விருப்பத்திற்கு இசைந்தனர்.

அது மட்டுமின்றி திருமணத்தை விமர்ச்சியாக நடத்தினால் மகிழினியைப் பற்றி எல்லாரிடமும் விளக்கம் சொல்ல வேண்டும் என்ற நிதர்சனம் அவர்களை தங்கள் மக்களின் முடிவுக்கு தலை ஆட்ட வைத்தது.

நாம் நினைத்தது எல்லாம் நடக்கும் போது வாழ்க்கையே வண்ணமயமாக தோன்றும்.அது போல் திகழொளிக்கும் அவளுள் வசந்த காலம் பூத்து குலுங்கியது.வாழ்க்கையின் மீது பிடிப்பும், ஆசையும் தோன்றியது.

மிகன் மீது அவள் வைத்திருந்த அன்பே அவளை அவனுடன் சேர்த்து வைக்கப்போகிறது.

இத்தனை நாள்கள் அவளிருந்த தவத்தின் வரமாக ! அவளின் மனம் கவர்ந்தனை வாழ்க்கை துணையாக அடையப் போகிறோம் என்ற எண்ணமே அவளுள் மகிழ்ச்சியை மழைச்சாரலாக தூவியது.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப.. அவளின் உள்ளத்து மகிழ்ச்சி அவளின் வதனத்தில் மின்னியது.

பெற்றவர்களுக்கும் ,உடன்பிறந்தவனுக்கும் மிகனை அவள் எந்தளவு நேசித்திருக்கிறாள் என்று அவளின் முகமே உணர்த்தியது.


அவளின் மகிழ்ச்சி அவர்களுள் பெரும் நிம்மதியை கொடுத்தது. அதே நிம்மதியுடனும் ,மகிழ்ச்சியுடனும் திருமண வேலைகளை துரிதப்படுத்தினார்கள்.


திருமண வேலைகள் மிகனுக்குள்ளும் இரு வேறு மனநிலையை உண்டாக்கியது.

அவனின் உயிர் அவன் கை சேரப்போகிறது என்ற ஆனந்தம் ஒரு புறம் என்றாலும், அவளால் ஏற்பட்ட இழப்புகளின் குற்றவுணர்வு ஒரு புறம் அவனை வதைத்தது.

இரு வேறுபட்ட மனநிலையில் தவித்துக் கொண்டிருந்தான். திருமண நாள் நெருங்க நெருங்க அவனுள் சிறு பயம் அவனை குடைந்தது.

மணமக்கள் இருவரும் பணி இடத்தில் சந்தித்தாலும், வேலையைத் தவிர வேறு எதுவும் பேசிக் கொள்வது இல்லை.

திகழொளியின் முகத்தில் மின்னும் மகிழ்ச்சியை கண்டு மிகன்னுக்குள்ளும் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது .

அவள் அறியாமல் அவளை அணு, அணுவாக ரசித்தான் .

திகழொளிக்கும் மிகன் வேலையைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேசாமல் இருப்பது மிகுந்த நிம்மதியைக் கொடுத்தது.

இருவரும் இப்போதாவது மனம் விட்டு பேசி இருந்தால்? திருமணத்திற்கு பின் வரும் கசப்புக்களை தவிர்த்து இருக்கலாம்.

ஆனால் ,இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த அளவு கடந்த நேசமும், அன்புமே அவர்களை பேச விடாமல் செய்தது.

அந்த வார இறுதியில் திருமணத்திற்கு பட்டுபுடவை எடுக்க இரு குடும்பமும் பிரபலமான துணிக் கடைக்குச் சென்றனர்.

திகழொளி எளிமையாக பச்சை வண்ண கைத்தறி சேலையில் வந்து இருந்தாள்.அவளின் நிறத்திற்கு அது எடுப்பாக இருந்தது.

மிகனும் சொல்லி வைத்ததைப் போல் ஆலிவ் பச்சையில் சட்டையும் ,ஆஃப் வெண்மை நிறத்தில் கால்சட்டையும் டக் இன் செய்து வந்திருந்தான். அது அவனுக்கு மேலும் கம்பீரத்தையும், வசீகரத்தையும் கூட்டியது.

இருவர் முகத்தில் தெரிந்த கல்யாணக் கலை அவர்கள் தான் மணமக்கள் என்று அனைவருக்கும் சொல்லாமல் சொல்லியது.

கடைக்கு வந்ததிலிருந்து மகிழினி திகழொளியிடம் "அம்மா ,அம்மா.." என்று அட்டையாக ஓட்டிக் கொண்டாள்.

திகழொளியைக் கண்டவுடன் மணியரசி ஆசையாக அவளின் கைகளைப் பற்றி "எனக்கு ரொம்ப சந்தோஷம் திகழிம்மா.. நான் கும்பிட்ட தெய்வம் என்னை கைவிடலே..இடையில் என்ன என்னவோ நடந்து விட்டது. இனியாவது நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழனும்.." என்று மனதார வாழ்த்தினார்.

மிகனின் மாமா காஞ்சித்துரையும் திகழொளியிடம் "நல்லா இருக்கீயாம்மா.." என்று வாஞ்சையுடன் கேட்டார்.

மணியரசியும், காஞ்சித்துரையும் திகழொளியின் பெற்றவர்களிடம் சட்டென்று பேச முடியாமல் முதலில் தயங்கினார்கள்.

நடந்த நிகழ்வுகள் அவர்களிடம் பெரும் தயக்கத்தை உருவாக்கி இருந்தது. ஆனாலும், அவர்கள் கடந்து வந்த கஷ்டமான நிகழ்வுகளின் பக்குவமும் , முதிர்ச்சியும் திகழொளியின் பெற்றவர்களிடம் தயக்கத்தை மீறி பேச வைத்தது.

பொன்னியும் ,அறவாணனும் முதலில் கொஞ்சம் தயக்கம் காட்டினாலும் பின்பு அவர்களும் இயல்பாக பேசினார்கள்.

உலகமாறனோ, மனதிற்குள் அளவிட முடியாத நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்தார்.

கடையில் பட்டுப்புடவையை தேர்வு செய்ய
எல்லாரும் பட்டு சேலைப் பிரிவிற்கு சென்றனர்.
அங்கிருந்த இருக்கையில் திகழொளியின் ஒரு புறம் அமுதனும் ,மறுபுறம் மணியரசியும் அமர்ந்து கொண்டனர் . திகழொளியோ, மகிழினியை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

மிகனோ, திகழொளியின் கண்களில் படும்படி ஓர் ஓரமாக சென்று நின்று கொண்டான்.

கடை சிப்பந்தி பட்டுப்புடவையை எடுத்துக் காட்டும் பொழுது அமுதனும், மணியரசியும் தங்கள் பங்குக்கு, அவர்களுக்கு பிடித்த புடவையை திகழொளியிடம் காட்டி.. காட்டி, எடுக்கச் சொன்னார்கள்.

திகழொளியோ இருவரையும் சமாளிக்க முடியாமல், பேந்த.. பேந்த, விழித்த படி அமர்ந்திருந்தாள்.

மகளின் மனதை உணர்ந்து பெற்றவள் தான் "அம்மு நீ எழுந்து இங்கே வா ! மாமாவும், அக்காவும் செலக்ட் பண்ணட்டும்.." என்று மணமக்கள் இருவரின் மனதிலும் பாலை வார்த்தார்.


மிகனோ, 'ஹப்பா இப்பவாவது என்னைக் கூப்பிடனும்னு தோணுச்சே..' என்று நினைத்தபடி, அமுதன் அமர்ந்திருந்த இருக்கையில் அவன் எழுந்ததும் மிகன் அமர்ந்து கொண்டான்.

மணியரசியும், திகழொளியிடம் இருந்த மகிழினியை தூக்கிக் கொண்டு அவர்களுக்கு தனிமை கொடுத்து நகர்ந்தார்.

திகழொளியிடமிருந்து வர மறுத்த மகிழியை கட்டாயப் படுத்தி தூக்கிச் சென்றார்.

"மகிழி எங்கிட்டேயே இருக்கட்டும் அத்தை.." என்ற திகழொளியிடம் "இல்லை மா நீ ப்ரீயா பாரு ! அப்புறம் நான் உனக்கு அத்தை இல்லை. இனிமேல் அம்மான்னு கூப்பிடு.." என்று கூறிவிட்டு மகிழியை தூக்கிச் சென்றார்.

திகழொளிக்கோ, மிக அருகில் மிகனுடன் அமர்ந்து இருப்பது மனதிற்குள் இனம் புரியாத படபடப்பைக் கொடுத்தது.

மிகனோ, தனிமை கிடைத்தவுடன் "ஏண்டி கல்யாணம் நமக்குத் தானே ! கல்யாணப் புடவை நமக்கு பிடிச்ச மாதிரி எடுக்கனும்ன்னு இல்லாம உன் அருமை தம்பி கூட உட்கார்ந்து செலக்ட் பண்றே.. என்னே கூப்பிடனும்ன்னு உனக்கு தோணவே இல்லே..நல்ல வேளை என் மாமியார் தான் என் மனம் அறிந்து நடந்து கொண்டாங்க .."என்றான்‌ அடக்கிய கோவத்துடன்.

"ஏன் நான் தான் கூப்பிடனுமா? உங்க கல்யாணம் தானே ! நீங்களே வர வேண்டியது தானே..?"

"இந்த வக்கனையான பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே.."

"பின்ன வேறு எதுக்கு குறைச்சலாமா? என்றாள் அவளும் கோபத்துடன்..

"ம்! அதை கல்யாணத்திற்கு அப்புறம் சொல்றேன்..இப்ப எங்கூட பதிலுக்கு பதில் வாயாடாம புடவையைப் பாரு .."என்றவன் கடை அலமாரியில் அடுக்கி வைத்திருந்த சில புடவைகளை எடுக்கச் சொல்லி கடை சிப்பந்தியிடம் சொன்னான்.

திகழொளியோ, அவனே தேர்வு செய்யட்டும் என்று அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

அவனே, ஒவ்வொரு புடவையை அலசி ஆராய்ந்து தக்காளி சிவப்பில் புடவை முழுதும் தங்க நிறச் ஜரிகையில் மின்னிய காஞ்சிப் பட்டை தேர்வு செய்தான்.

கடைப் பெண் அந்த புடவையை அவள் மேல் வைத்துக் காட்டவும் அது அவளுக்கு அத்தனை பாந்தமாக பொருந்தியது.


மிகனோ, தனது அலைபேசியில் அதை பொக்கிஷமாக சேமித்துக் கொண்டான்.

அமுதனோ, தள்ளி நின்று அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தான். பிறந்ததிலிருந்து அவன் அக்காவை அவன் பிரிந்ததே இல்லை.

இப்போது, முதல் முறையாக பிரியப் போகிறோம் என்று நினைக்கையில் அவனால் ,அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவன் முகத்தில் அப்பட்டமாக சோகம் பொங்கி வழிந்தது.

திகழொளியோ, தன் மீது வைத்துக் காட்டிய பட்டுப் புடவையை பிடித்த படியே தம்பியை தேடினாள்.அவனும் பார்த்துட்டு சொல்லட்டும் மென்று.

ஓர் ஓரமாக நின்று தன்னையே பாவமாக பார்த்ததுக் கொண்டிருந்தவனின் முகத்தில் தெரிந்த சோகம் அவளை புரட்டிப் போட்டது.


தம்பி சொல்லாமலே அவனின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டவள், தன் மீது கிடந்த புடவையை எடுத்து கடைப் பெண்ணிடம் கொடுத்து விட்டு தம்பியை நோக்கி ஓடினாள்.

"அம்மு, இங்கே ஏன் தனியா வந்து நிற்கிறே? உனக்கு அந்த புடவை பிடிச்சு இருக்கா ..?" என்ற கன்னம் தொட்டு கேட்ட தமக்கையிடம்.

"அக்கா உனக்கு பிடிச்சு இருந்தா போதும்.." என்று சுரத்தே இல்லாமல் சொன்னவனிடம்.

"அம்மு என் மீது ஏதாவது கோவமா டா.."

"ச்சே அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைக்கா.." என்றான்.

மிகனுக்கோ, திகழொளி தன்னிடம் புடவை பற்றி எதுவும் சொல்லாமல் , தம்பியிடம் சென்று குலாவிக் கொண்டு இருப்பதைக் கண்டு எரிச்சல் வந்தது.

அதே எரிச்சலுடன் அவர்களின் அருகில் சென்று "புடவை பிடிச்சு இருக்கா? இல்லையான்னு சொல்லாமல் இங்கே என்ன செய்யறே ?" என்று கோவமாக கேட்டான்.

திகழொளியோ, பதில் சொல்லாமல் மெளனம் காத்தாள்.

மிகனோ, "வா..!" என்று அவளின் கைகளை உரிமையாக பிடித்து இழுத்துச் சென்றான்.

அமுதனோ, ஒன்றும் செய்ய முடியாமல் அவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

மிகனோ, "ஏண்டி இருபத்தி நாலு மணி நேரமும் அவன் கூடத்தானே பேசிட்டு இருக்கே ? இன்னைக்கு கூட எங்கூட இருக்காமல் அவன் பின்னாடி போறே.. ?"என்று கடிந்து கொண்டான்.அவனையும் மீறி அமுதன் மீது அவனுக்கு பொறாமை பொங்கியது.

திகழொளியோ, பதில் சொல்லாவும் முடியாமல் தம்பியையும் தவிர்க்க முடியாமலும் தவித்தாள்.

அவளோ, 'இது என்ன புது பிரச்சினை ..?'என்று மனம் கலங்கினாள். இதுவரை அமுதனை பிரிவோம் என்ற நிலையில் அவள் யோசிக்கவே இல்லே..

முதன் முதலாக இப்பொழுது தான் அதை உணர்ந்தாள்.

அவளை அதிகம் யோசிக்க விடாமல் அதன் பிறகு அவளின் நேரத்தை மிகனே எடுத்துக் கொண்டான்.

அவனுக்கு திருமணத்திற்கு உடை எடுக்க ..அவனுக்கும் அவளுக்கும் திருமணத்திற்கு தேவையானது வாங்க என அவளை தன் அருகிலேயே வைத்துக் கொண்டான்.

திகழொளியோ, எதிலும் முழுமனதுடன் ஈடுபட முடியாமல் மிகன் இழுத்த இழுப்புக்குச் சென்றாள்.

பெரியவர்களோ, சிறியவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு, தங்களுக்கு தேவையானதையும் சீர்வரிசைகள் வாங்குவதிலும் நேரத்தை செலவிட்டனர்.

அமுதனோ, மகிழினியை தூக்கி வைத்துக் கொண்டு ஓர் ஓரமாக அமர்ந்து கொண்டான்.

திகழொளிக்கு தம்பியின் அமைதியை பார்க்க பார்க்க மனம் தாளவில்லை.. ஓடிப்போய் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டு, அழ வேண்டும் போல் மனம் துடித்தது.

ஒரு வழியாக தேவையானதை வாங்கி முடித்த பின் உணவு உண்ண கடைக்குச் சென்றனர்.

திகழொளியோ, மிகன் அருகில் அமராமல் தம்பியின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

அவர்களின் எதிரில் அமர்ந்த மிகனோ, அவளை கண்களாலேயே முறைத்துக் கொண்டிருந்தான்.

அங்கே ஒரு உரிமை போராட்டம் தொடங்கியது. திகழொளிக்கு திருமணத்திற்கு பிறகு எப்படி மிகனை இந்த விசயத்தில் சமாளிப்போம் என்ற புதுப் பயம் துளிர் விட்டது.


தொடரும்..



உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் துடிப்பாய் நீ!

அத்தியாயம் 16

வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்கள் வந்தாலும், அவற்றை எல்லாம் கடந்து வருவதற்கு யாரோ ஒருவரின் அன்பும், அரவணைப்பும் மிக முக்கிய காரணம்.

அப்படி திகழின் கஷ்ட காலங்களில் பெரும் அரணாக இருந்தது அவளின் ஆரூயிர் தம்பி அமுதன் தான்.

திகழொளிக்கு தான் விரும்பியவனை மணக்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், தன் தம்பியைப் பிரியப் போகிறோம் என்ற பெருங்கவளை அவளைப் புழுவாக அரித்தது.

அமுதனோ, முகத்தில் சிறு மலர்ச்சி கூட இல்லாமல் திருமண வேலையில் பங்கெடுத்தான்.

வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்ததிலிருந்து திகழொளி தம்பியுடன் தனிமையில் பேசிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள்.
ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லாமல் அமுதனுக்கு திருமணவேலைகளை கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது. திகழொளிக்கு அவனுடன் தனியாக பேச வாய்ப்பே இல்லாமல் போனது.

அன்று இரவு உணவை முடித்துக் கொண்டு, திகழொளி தன் படுக்கையில் படுத்த படியே தன் தம்பியைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்தாள்.

அப்போது, அவளின் அருகில் இருந்த அலைபேசியின் அழைப்பு சத்தம் அவளின் சிந்தனையை தடை செய்தது.

இந்த நேரத்தில் யார் அழைக்கிறார்கள்? என்ற யோசனையுடனே அலைபேசியை எடுத்து பார்த்தவளுக்கு ,இன்ப அதிர்ச்சியாக அவளின் தோழி கமலி அழைத்தாள்.

முகத்தில் சிறுமுறுவலுடன் அழைப்பை ஏற்று "ஹலோ .."என்றவளிடம் அந்தப்பக்கம் கமலியோ பொரிந்து தள்ளினாள்.

"ஏண்டி நான் ஒருத்தி இருக்கேன்னு உனக்கு நினைப்பு இருக்கா ?இல்லையா? எத்தனை நாளாச்சு ஒரு போன் செய்தீயா .."?என்று கடிந்து கொண்டவளிடம்..

"நீ ஊருக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போனவ ஆளையே காணோம்..சரி நீ வந்துட்டு கூப்பிடுவேன்னு இருந்தேன்.."

" ஏண்டி நான் ஊருக்கு தானே போய் இருந்தேன். செவ்வாய் கிரகத்துக்கா போனேன்..?"

"சாரி டீ, கொஞ்சம் வேலை டென்ஷன்.அதுவே சரியா இருந்துச்சு.."

"வேலை டென்ஷனா? இல்லை மிகன் நினைப்பா..?"

"ஏய் ஏண்டி இப்படி எல்லாம் பேசறே..?"

"வேறே எப்படி பேசச் சொல்றே? ஒரு வார்த்தை எங்கிட்ட சொன்னீயா டீ.. கல்யாணம் முடிஞ்ச பின் சொல்லனும்ன்னு இருந்தீயா? இல்லே பிள்ளையும் பெத்துட்டு சொல்லலாம்ன்னு நினைச்சீயா?"

"ஏய் அப்படி எல்லாம் இல்லை டீ. உங்கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்லே டீ.. அந்த நேரத்தில் நான் ரொம்ப குழம்பி இருந்தேன். அதுமட்டுமில்லை இடையில் நீ வேறு அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு மெசேஜ் போட்டு இருந்தீயா? உன்னே தொல்லை செய்ய வேண்டாம்ன்னு பேசலை டீ.."
.
"சரி போன் தான் பேசலே.. டெய்லியும் மெசேஜ்லே நலம் விசாரிப்பீயே? அப்பவாவது இதை பற்றி ஒரு வார்த்தை மெசேஜ் செய்தீயா?"

"கமலி ரியாலி சாரி டீ..நிறைய டென்ஷன், குழப்பம் அதை உங்கிட்ட சொல்லி உன்னையும் கஷ்டபடுத்த வேண்டாம்ன்னு தான் பேசாம இருந்தேன்.."

"அமுதன் மட்டும் இப்ப சொல்லலேனா, இன்னும் எனக்கு தெரியாது.சாயங்காலம் எதேச்சையாக அமுதனை பார்த்த பொழுது, அவன் தான் இத்தனை விஷயமும் சொன்னான்.." என்றவளிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக அலைபேசியை காதில் வைத்திருந்தாள்.

திகழொளிக்கு குற்றயுணர்வாக இருந்தது. நாம் கஷ்டப்பட்ட பொழுதெல்லாம் ஆறுதலாக கூட இருந்தவளிடம் , எதையும் சொல்லாமல் விட்டது எவ்வளவு பெரிய தவறு என்று அவள் மனச்சாட்சியே அவளை வதைத்தது.

எதைப்பற்றியும் சிந்திக்கவும், யோசிக்கவும் முடியாத அளவு மிகன் தான் அவளை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தானே.

இப்போது தன் தோழியை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் அவள் தவித்துப் போனாள்.

கமலியோ, "எப்படியோ எங்கிட்ட சொல்லாட்டீயும், உன் மனம் விரும்புனவனையே நீ கைபிடிப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம் தான் டீ..இனியாவது நீ சந்தோஷமா வாழனும் .."என்று கமலி சொல்லவும்..அதைக் கேட்ட திகழொளிக்கு தோழியின் வாழ்த்து அவள் தவறை இன்னும் அதிகமாக உணர்த்தியது . கமலியின் தன்னலமற்ற அன்பைத் தாங்க முடியாமல்" கமலி! சாரி டீ .."என்று கதறி அழுதுவிட்டாள்.

அந்தப் பக்கம் கமலியோ, "ஏய் திகழி, எதுக்குடி இப்ப அழறே? இனி உனக்கு எல்லாமே நல்லது தான் நடக்கும் .அழாதே டீ.." என்று தோழியின் கண்ணீரை தாங்க முடியாமல் ஆறுதல் சொன்னாள்.

அது தான் கமலி! தன்னிடம் சொல்லவில்லை என்ற கோவம் இருந்தாலும், தன் தோழி எப்படியோ அவள் ஆசைப்பட்ட வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்தாலே போதும் என்ற நல்ல உள்ளம் கொண்ட பெண்.

ஒருவழியாக திகழி அழுது முடித்து, தோழியை சாமாதானம் செய்துவிட்டு , இத்தனை நாள் பேசாததற்கும் சேர்த்து பேசிவிட்டு படுக்க இரவு நேரமாகிவிட்டது.

உறக்கம் வராமல் வாட்ஸ் ஆப்பை நோண்டிக் கொண்டிருந்தவளுக்கு, மிகனிடம் அந்த நேரத்தில் குறுஞ்செய்தி வந்தது.

"என்ன டீ இன்னும் தூங்காம என்ன செய்துட்டு இருக்கே..?"என்று கேட்டு இருந்தான். அவள் ஆன்லைனில் இருப்பதை பார்த்து விட்டு.

அவளோ, 'இவர் ஏன் இன்னும் தூங்காம இருக்கார்?' என்று நினைத்துக் கொண்டு, " நீங்க ஏன் இன்னும் தூங்கலே.." என்று பதில் அனுப்பினாள்.

மிகன் ,உடனே அவளின் செய்தியை படித்தற்கு அடையாளமாக இரண்டு நீளக் கலர் டிக் காட்டியது.ஆனால் , அவன் திருப்பி எந்த பதிலும் சொல்லவில்லை.

திகழொளி சில வினாடிகள் அவனின் பதிலுக்காக காத்திருந்து பார்த்தாள். அவனிடமிருந்து பதில் வராமல் போகவே, இணைய தொடர்பை துண்டித்து விட்டு, அலைபேசியை அருகில் இருந்த மேஜை மீது வைத்து விட்டு, படுத்துக் கொண்டே மனதிற்குள் மிகையாக வறுத்து கொண்டிருந்தாள்.

'இவன் கேட்டா நான் மட்டும் பதில் சொல்லனும்.ஆனால் ,நான் கேட்டா சார் பதில் சொல்ல மாட்டாராம்.சரியான திமிர் பிடிச்சவன்..' என்று மனதில் திட்டிக் கொண்டிருந்தவளை, அலைபேசியின் அழைப்பு சத்தம் அவளின் கவனத்தை ஈர்த்தது.

மறுபடியும் யாருடா இந்த நேரத்தில் என்று அலைபேசியை எக்கி எடுத்து, ஒளித்திரையைப் பார்த்தவளுக்கு அதில் மிக முக்கியமான பெயர் கண்டதும் மனதிற்குள் ஒரு நொடி இனம் புரியாத பரவசம் ஏற்பட்டது.


மெல்ல அலைபேசியை உயிர்ப்பித்து காதில் வைத்தவள், குரலுக்கு வலிக்காமல் மிக மென்மையாக "ஹலோ.." என்றாள்.

அந்தப்பக்கம் அவனோ, "மேடம் இன்னும் தூங்காம ஆன்லைன்லே இன்னேரத்துக்கு என்ன செய்யறீங்க.." என்றவனிடம்..

"தூக்கம் வரலே அது தான் சும்மா பார்த்துட்டு இருந்தேன்..?"

"ஏன் தூக்கம் வரலே..?"

"நீங்க ஏன் இன்னும் தூங்காம இருக்கீங்க..?"

"கொஞ்சம் ஆபீஸ் வேலை இருந்துச்சு அதை செய்துட்டு இருந்தேன்."

"ம்! .."என்றவளிடம்..

"கல்யாண வேலை எல்லாம் எப்படி போகுது.." என்று திருமணம் உறுதியான பிறகு முதல் முறையாக அவளிடம் திருமணத்தை பற்றி கேட்டான்.

"ம் ! அப்படியே போய்ட்டு இருக்கு.."

"என்ன டீ சுரத்தே இல்லாம சொல்றே.."

"இங்க பாருங்க டீ போட்டு பேசாதீங்கன்னு நான் பல வாட்டி சொல்லிட்டேன்.இனி டீ போட்டீங்க எனக்கு கெட்ட கோவம் வரும்.."

"அப்படி தான் டீ போடுவேன், என்ன டீ செய்வே.."

"நான் போனே வைக்கிறேன்.."

"எங்கே வச்சுத் தான் பாரேன்..அடுத்த நிமிஷம் உங்க வீட்லே இருப்பேன்..?"

"சும்மா மிரட்டாதீங்க..வீட்லே அம்மா, அப்பா இருக்காங்க.. ஞாபகம் வச்சுக்கோங்க..?"

"இருந்தா எனக்கு என்ன?"

"இன்னேரத்துக்கு வந்தீங்கன்னா, என்ன விஷயம்ன்னு கேட்பாங்க..?"

"கேட்டா, நீ தான் வரச்சொன்னேன்னு சொல்லுவேன்.." என்று அசால்ட்டாக சொன்னவனிடம்.

"ஆ!" என்று தன் அதிர்ச்சியை வெளிக்காட்டினாள்.


"என்ன வரமாட்டேன்னு நினைச்சீயா..?"

"நான் எதுவும் நினைக்கலே சாமி..எனக்கு தூக்கம் வருது நான் தூங்கப் போறேன்.." என்றவளிடம்.

"ஓ! எங்க பேசுனா உனக்கு தூக்கம் வருதா? வரும்..வரும்..இன்னும் பத்து நாள் தான் டீ, அப்புறம் இங்க வந்த பின் எங்கிட்ட பேசித்தானே ஆகனும்.." என்றான் நக்கலாக..

"நான் ஒண்ணு சொன்னா.. நீங்க ஒண்ணு புரிஞ்சுக்கிறதே உங்க வேலை .."என்றவளிடம்.

"ஆமாம். நான் உன்னளவு அறிவாளி இல்லையே.." என்றான்.

'என்னத்த பேசுனாலும் குதர்க்காமாகவே பேசறவங்க கிட்ட நாம என்னத்த பேசு..' என்று மனதிற்குள் பேசியவள்,சில வினாடிகள் அமைதியாக இருந்தாள்.

அவனோ, "என்ன பேசா மடந்தை ஆயிட்டே .."என்றவனிடம்..

" நான் எது சொன்னாலும் தப்பாவே எடுத்துக்குவீங்க, அது தான் நீங்களே பேசட்டும்ன்னு அமைதியாக இருந்தேன்.."

"ஓ!"என்றவன் அதற்கு மேல் அவளை வதைக்காமல் , "சரி போனை நோண்டாம ஒழுங்கா போய் தூங்கு.."என்றான்.

"ம் ! "என்றவள், விட்டால் போதுமடா சாமி என்று அழைப்பை துண்டித்தாள்.

அந்த பக்கம் மிகனும் மென்புன்னகையுடன் அழைப்பைத் துண்டித்தான்.அவனுள்ளும் இனம் புரியாத மகிழ்ச்சி ஒட்டிக் கொண்டது.

திருமணத்திற்கு இன்னும் பத்து நாள் இருக்கே என்று சலித்துக் கொண்டே படுத்தேன்.

அதன் பின்பு வந்த நாட்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் நன்றாகவே சென்றது.

ஒரு வழியாக அமுதனுடன் பேசவும் திகழும் நேரம் கிடைத்தது.

தம்பியுடன் தனிமை கிடைத்ததும் தன் மனதில் இருந்ததை எல்லாம் கொட்டித் தீர்த்தாள்.

"அம்மு என் மேல் கோவமா?"

"ச்சே! அப்படி எல்லாம் இல்லை..ஏன் இப்படி கேட்கிறே..உன் மேல் என்னால் கோவப்பட முடியுமா கா.."

"அம்மு உன்னை பிரிந்து போவது எனக்கும் ரொம்ப கஷ்டமாக இருக்கு டா.. கல்யாண நாள் நெருங்க நெருங்க எதையோ இழப்பதைப் போல் இருக்குது .."என்ற தமக்கையின் கைகளை அழுந்த பிடித்துக் கொண்டு அமுதன், தமக்கையே பேசட்டும் என்று அமைதியாக இருந்தான்.


"ஏண்டா பெண் பிள்ளைகளுக்கு மட்டும் இப்படி ஒரு நிலை. நாங்கள் மட்டும் கல்யாணம் ஆனா? பிறந்த வீட்டை விட்டு போகனும். ஆனால், ஆண்களுக்கு எந்த வித மாற்றத்தையும் இந்த கல்யாணம் தருவதில்லை.." என்று சலித்துக் கொண்டாள்.

" என்ன செய்வதுக்கா அது தானே காலம் காலமாக நடக்கிறது.நீ வேணா மாமாவே கூட்டிட்டு இங்கே வந்துரு..நாம் பிரிய வேண்டாம்.."

"அது நடக்கிற காரியமா? வேணா ஒண்ணு செய்யலாம் நீ எங்ககூடயே வந்துரு..?"

"எதுக்கு என்னை போட்டுத் தள்ளவா..?"

"என்னடா இப்படி பேசறே..உன்னே யாருடா அப்படி எல்லாம் செய்வாங்க..?"

"ம்! உன் வருங்கால புருசன் செய்வாரு..இப்பவே நான் உன் கூட பேசினால் கண்களாலேயே எரித்து சாம்பல் ஆக்குகிறாள். கூட வேறு வந்துட்டேன்னு வச்சுக்கோ அப்புறம் அவ்வளவு தான்.."

"போட அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லே ..நீ எதையோ நினைச்சு சும்மா குழப்பிக்காதே.. என்னவோ போட ஒன்னு கிடைச்சா? ஒன்னு இழக்கனும் போல.. அம்மு நான் போய்ட்டா நீ என்ன மறந்துருவீயா?"

"லூசாக்கா நீ !ஏன் இப்படி உளறறே.. உன்னை எப்படி நான் மறப்பேன்.. நீ எனக்கு இன்னொரு அம்மா .."என்றவனின் தோள்களுக்கு ஆதரவாக சாய்ந்தபடி..

"அம்மு எனக்கு நீ எப்பவுமே வேணும் டா..எனக்கு எல்லாரையும் விட நீ தான் முக்கியம்.என் உயிர் டா நீ.." என்ற தமக்கையிடம்.

"சரி நாளைக்கு உனக்கு குழந்தை பிறந்தவுடன் இதையே சொல்றீயான்னு பார்ப்போம்.." என்றான் கேலியாக.. தமக்கையின் மனநிலையை மாற்றும் பொருட்டு..

"அதில் என்னடா உனக்கு சந்தேகம்? எனக்கு எப்பவுமே என் அம்மு தான் பர்ஸ்ட். அப்புறம் தான் மத்தது எல்லாம்.."

"ம்! அப்படியா ..பார்ப்போம் பார்ப்போம்..?"

"ஏண்டா நான் உன்னை பிரியப் போறேன்னு பீல் பண்ணிட்டு இருந்தா, நீ கிண்டலா பண்றே.. உனக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா..?"என்று கோவமாக தம்பியின் காதுகளை பிடித்து திருகினாள்.

"அச்சோ! அக்கா வலிக்குது விடு..கவலை இல்லாமல் இருக்குமா? பிறந்ததிலிருந்து ஒரு நாள் கூட உன்னை பிரிந்ததும் இல்லே.. பார்க்காமல் இருந்ததும் இல்லே ..ஆனால் இனி அதை எல்லாம் ஏற்று தானே ஆகவேண்டும்.." என்று சொன்னவனின் குரலில் இருந்த வேதனை அவளையும் தொற்றிக் கொண்டது.

இருவரும் எதுவும் பேசாமல் சிறிது நேரம் அப்படியே சிலையாக நின்றனர்.வாய் பேசாட்டியும் அவர்கள் மனது ஆயிரம் கதை பேசியது.

மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சில வலிகளுக்கு மருந்தே இல்லையே..காலம் மட்டுமே எல்லாவற்றுக்கும் மருந்து.

எத்தனை சோதனைகள் வந்தாலும் அன்பு கொண்ட பாசப்பறவைகளுக்கு இடைவெளி இருக்கும். ஆனால், பிரிவு வராது. என்று இருவரும் தங்கள் மனதை தேற்றிக் கொண்டார்கள்.

கால தேவனை யாராலும் தடுக்க முடியாதே. அவனின் ஓட்டத்திற்கு நாம் ஈடு கொடுத்துத் தானே ஆக வேண்டும். பத்து நாளும் பத்து நிமிஷம் போல் விரைவாக கரைந்தது. இரு குடும்பமும் அவளுடன் எதிர்பார்த்த திருமண நாளும் அழகாக விடிந்தது.


தொடரும்.



உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

https://www.srikalatamilnovel.com/c...7%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE% AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF %E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA% E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%95% E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0 %AE%B0%E0%AE%BF.3145/
 
Status
Not open for further replies.
Top