All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலனே... காதல் அதிகாரனே!💔 - கதை திரி(onhold)

Status
Not open for further replies.

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதலனே... காதல் அதிகாரனே!💔 - கதைக்கான அத்தியாயங்கள் இந்த திரியில் பதிவிடப்படும்.

33692
 
Last edited:

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 01


தேனீ

இரவு 11.11 மணி



தேனீயின் பிரதான சாலையில் அமைந்திருந்தது 'ஈஸ்வரன் மெஸ்' என்று பெயர் பலகை ஏந்திய உணவகம். இரவு நேரம் என்பதாலோ என்னவோ மக்கள் கூட்டம் பெரிதாக இல்லாது வெறிச்சோடி இருக்க, மெஸ்ஸின் ஓரத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் திமிராக அமர்ந்திருந்தான் அவன்.


தினவெடுத்த தோள்கள்.. உடலை இறுக்கிய சட்டை... அதனையும் மீறி புடைத்து தெரிந்த அவனின் புஜங்கள்... என ஆஜானுபாகுவான தோற்றத்தில் அமர்ந்திருந்தான் அவன் அமரேஸ்வரன்.

அணிந்திருந்த சட்டையின் முதல் இரண்டு பொத்தான்களை அவிழ்த்து விட்டிருக்க, அந்த இடைவெளியில் சூரியன் போன்று முத்திரை பொறிக்கப்பட்ட பொன் சங்கிலி அவன் மார்போடு ஊஞ்சலாடுவது நன்றாகவே தெரிந்தது. யாரையோ எதிர்பார்த்து கொண்டிருப்பதை போன்ற பாவனை அவன் முகத்தில்...

சட்டென்று அவன் விழிகள் கூர்மை பெற, தன்னை நோக்கி வேர்க்க விறுவிறுக்க நடந்து வருபவரை கண்டு அவன் முகத்தில் அலட்சியமும்... திமிரும் ஒரு சேர குடிக் கொண்டது.

"வாய்யா சங்கரு... இந்த ராத்திரில இப்படி மின்னுறயே... என்ன மேட்டரூஉஉஉ... ஓ அது உன் சொட்டை தலையோட மினுமினுப்பா..‌. அதுதான் டால் அடிக்குது... சரி ரைட்டு விடு... ஆமா புதுசா வீடு வாங்கிருக்கயாமே... பொண்டாட்டியோட ஒரே குஜாலா இருக்க போல ம்ம்..." என்று தெனவட்டாக வார்த்தை வந்து விழ, அதில் சங்கர் என்பவனின் முகம் கருத்தது.

"தம்பி பார்த்து வார்த்தையை விடு..." என்று அவர் குரலை உயர்த்த பட்டென்று மேஜையை தட்டியபடி வேகமாக எழுந்தவன்,

"அடிங்ங்.. வட்டிக்கு கொடுத்த காசை கொடுக்க துப்பு இல்ல... எங்கேயோ போய் ஓடி ஒளிஞ்சுகிட்டு... பொண்டாட்டியை தூது விட்ட நீயி எதுக்குலே குரலை உசத்துற... வட்டியும் வரல... வாங்குன முதலும் வரல... காசை வாங்கும் போது மட்டும் சரியா தந்திருவேன் தம்பினு வசனம் மட்டும் பேச தெரியுது... இப்போ எங்கலே போச்சு உன் பேச்சு..." என்ற அரட்டலில், அந்த மெஸ்ஸில் அமர்ந்திருந்த ஒன்று இரண்டு பேரின் கவனமும் இவர்கள் புறம் திரும்பியது.

"என்கிட்ட வாங்குன பணத்துல உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ண தெரியுது... புது வீடு வாங்க தெரியுது... ஆனா எனக்கிட்ட வாங்குன காசை கொடுக்க முடியலையோ..."

"இந்தாருய்யா... உன்னை கோழி அமுக்கிற மாதிரி‌ அமுக்கி பிடிச்சிருக்கேன்... இதுவரைக்கும் கொடுக்காத வட்டியோடு மொத்தமும் வந்து சேரனும்... இல்லைனு வைச்சுக்க... உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன்... நீ ஆசை ஆசையா வாங்கி இருக்கியே புது வீடு... அது இருக்காது பார்த்துக்க" என்றவன் மிரட்டலில் சர்வமும் ஒடுங்கியது சங்கருக்கு.

"ஏலே கருப்பா அந்த புது வீட்டு சாவியை அவருகிட்டயே கொடுலே... எப்படியும் மனுஷன் நாளைக்கு சரியா காசை கொண்டாந்துருவாரு.. என்ன சங்கரு சரி தானுலே..." என்று மீசையை முறுக்க அவரின் தலை தானாக ஆமென்று ஆட... வியர்த்த சொட்டை தலையை துடைத்தபடியே அங்கிருந்து நகர்ந்தார் சங்கர்.

"என்னணே சாவியை கொடுத்து போட்டிங்க... மறுபடியும் அவன் ஓடி ஒளிஞ்சானா நமக்கு தான சிரமம்" என்று தன் மொட்டை தலையை சொறிந்தான்‌ கருப்பா என அமரனால் அழைக்கப்பட்ட கருப்பசாமி.

"நீயே‌ இவ்ளோ யோசிக்க... அது எனக்கு தெரியாதாலே... அவன் வீட்டை சுத்தி நம்ம ஆளுங்களை நிப்பாட்டிருக்கேன்... மறுபடியும் பட்சி பறந்துச்சு சூப்பு வைச்சிட வேண்டியதுதான்..." என்று தன் இரண்டு கால்களையும் எதிர் இருக்கையில் பரப்பியபடி தளர்வாய் அமர்ந்தான்.

எதர்த்தமாக திரும்பியவன் அப்போது தான் தன்னை நோக்கியபடி இருக்கும் கைப்பேசியை கண்டு அவனின் கண்கள் கூர்மை பெற, பட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து, இரண்டே எட்டில் தனக்கு எதிராய் போடப்பட்டிருந்த இருக்கையை அடைந்தவன்

"ஏய் போனை கொண்டா... கொண்டானு சொல்றேன்ல" என்று வார்த்தையோடு மட்டும் நிக்காது அந்த கைப்பேசியை பறித்து படாரென்று தரையில் வீச, அதில் சில்லு சில்லாக உடைந்து நொருங்கி போனது புத்தம் புதிய சைனா செட் ஆன்ட்ராய்டு மொபைல்(China set Android Mobile).

அதில் போனை வைத்திருந்த பெண்ணவளோ, கோபம் கொண்டு

"ஹவ் டேர் யூ(How dare you)" என்று கோபமாக கத்த, அவளின் குரலை தொடர்ந்து 'அக்கா' என்று ஓர் ஆடவனின் குரல் பதட்டமாக ஒலித்தது. அப்போது தான், செல்பேசியில் தன்னை படம் பிடித்துக் கொண்டு இருந்தவள் பெண் என்பதையே அமரன் உணர்ந்தான்.

"ஏய் அப்போ நீயி ஒரு பொண்ணா..." என்ற‌ வார்த்தைகள் அவனையும் மீறி தானாக வந்து விழுந்தது. ஏனெனில் அவள் வெட்டியிருந்த கிராப் கட்டிங்கும், அணிந்திருந்த டீசர்ட்டும்... ஜீன்ஸ் பேண்ட்டும் அவளை பெண்ணாக அவனுக்கு காட்டவில்லை போலும்.

"மரியாதையா பேசுங்க..." என்று அருகில் இருந்த ஆடவன் அவளுக்கு அரணாக முன் வர, "ப்ச் விது நீ அமைதியா இரு நான் பார்த்துக்கிறேன்" என்றவளின் கரத்தை அழுத்தமாக பற்றியபடி மறுத்தான் விதுரன்.

அவள் அருகே நின்றிருந்த ஆடவனின் முகத்தை கண்ட அமரனுக்கு அவனை எங்கோ பார்த்தது போல் இருக்க, புருவத்தை நெரித்து யாரென்று யோசிக்க, ம்ஹூம் அவன் யாரென்று நினைவு அடுக்கில் தட்டுபடவில்லை.

"ஏலே விதுரா... என்னவே அண்ணனை எதிர்த்து குரலை உசத்துற... அம்புட்டு பெரிய மனுஷனாகிப்புட்டியோ" என்ற கருப்பன் அதட்ட, சட்டென்று அந்த பெயரில் அடையாளம் கண்டு கொண்டதாய் அமரனின் புருவங்கள் ஆச்சரியத்தில் மேல் எழும்பியது. அதுவரை உக்கிர மூர்த்தியாக இருந்தவன், சாந்தமூர்த்தியாக மாற, தன் எதிரில் நிற்பவர்களை பார்வையால் அளந்தபடியே,

"ஓ... அந்த குடிகாரன் ஞானவேலு மகனாலே நீயி... ஆமா உன் கூட இருக்கிறது யாருலே உன் அக்காவா" என்று கேட்ட அமரனின் குரல் சாதாரணமாக தான் ஒலித்து... ஆனால் அதனை கேட்ட இருவரின் முகமும் தான் இறுகி போனது.

"உன் பேரு என்ன புள்ள" என்று கேட்ட அமரனின் கேள்விக்கு, அவளிடம் இருந்து அலட்சியமாய் ஒரு பார்வை தான் பதிலாய் கிடைத்தது.

"ஏய் புள்ள உன்னை தான கேட்குறாரு.. பதில் சொல்லுவே" என்று கருப்பன் சொல்லியும் தன்னுடைய பார்வையை மாற்றாது அவனை முறைத்தவள், பின் தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அதில் அமரனிடம் இருந்த இலகு தன்மை நொடியில் மாற, "இந்தா பொண்ணே உன் பேரை இப்போ நீ சொல்லாமா இங்கிருந்து நகர முடியாது பார்த்துக்க"

"சொல்ல முடியாது... என்ன செய்வ" என்று திமிராக அவள் பதில் அளிக்க,

"ப்ச்... ஏய் கையை இறக்கு... கையை இறக்குன்றன்ல... பொம்பளை புள்ளைனு பார்க்குறேன்.... இல்லைனு வைச்சுக்க கை நீட்டி பேச விரலு இருக்காது பார்த்துக்க"

"அக்கா... பிளிஸ் பிரச்சினை வேணாம்... வா இங்கிருந்து போகலாம்" என்று‌ விதுரன் தன் தமக்கையின் கைப்பிடித்து இழுக்க,

"ஏலே உனக்கு காது செவுடாலே... அவ பேரை சொல்லாம இங்கிருந்து ஒத்த அடி எடுத்து வைக்க முடியாது... அம்புட்டுதான்" என்றவன் அவளை திமிராக பார்க்க, வாயை இறுக்க முடியபடி இருந்தாளே தவிர பெயரை சொல்ல முனையவில்லை. அந்த இறுக்கமான சூழ்நிலையை களைப்பது போன்று வந்தது அந்த குரல்.

"ஏத்தா கண்மணி..." என்ற அழைப்பின் ஊடே இடுப்பில் இருந்து நழுவிய லுங்கியை பிடித்தபடி அங்கு வந்து சேர்ந்தார் ஞானவேல்.

"ஊருல இருந்து வந்துட்டியா சாமி..‌ உன்னை பார்க்காம சோறு தண்ணீ இறங்கல புள்ள... உன் ஆத்தாக்கிட்ட நீ எப்போ வருவேனு கேட்டேன் சாமி... ஒத்த வார்த்தை சொல்லல அவ.. நீ எப்படி இருக்க சாமி.." என்று அவள் தலையின் மீது கரத்தை வைத்தவரின் குரலில் பாசம் எந்தளவுக்கு வழிந்ததோ அதே அளவு சாராய நெடியும் வீசியது.

"என்னய்யா ஞானவேலு உன் பொண்ணாய்யா இது... புள்ளையை பெத்தா மட்டும் போதுமா... மரியாதையை சொல்லி கொடுக்க தெரியாதா... அது சரி உமக்கு குடிச்சிட்டு திரியவே நேரம் சரியா இருக்கும்... நீ எங்கலே புள்ளைக்கு புத்திமதி சொல்ல போற... ம்ம் பொட்டை புள்ள இப்படி பேசுறது‌ நல்லதில்ல.. பார்த்து சூதானாமா இருந்துக்க சொல்லு... உனக்காக இந்த ஒருமுறை விடுறேன்" என்றவன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, தன் அழைப்பேசியில் யாருக்கோ அழைத்தபடி அங்கிருந்து நகர்ந்தான் அமரேஸ்வரன்.

"ஏன் சாமி தம்பி கோபப்படற அளவுக்கு அப்படி என்ன புள்ள பேசி தொலைஞ்ச" என்றவரை பார்வையாலே எரித்தவள் அங்கிருந்து விடுவிடுவென்று நகர்ந்தாள்.

அவள் கண்மணி ஞானவேல்…


தொடரும்…💔
 
Last edited:

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!

எல்லாரும் எப்படி இருக்கிங்க... ரொம்ப நாள் அப்புறம் கதை எழுத வந்திருக்கேன் டியர்ஸ்... பிளிஸ் கதை படிச்சு உங்க கருத்துகளை சொல்லுங்க...😘😘😘

கதை செவ்வாய், வெள்ளி என் வாரத்திற்கு இரண்டு நாட்கள் வரும் டியர்ஸ். உங்க ஆதரவை பொறுத்து தான் யூடி கொடுக்கிறது அதிகம் ஆகும்..🤗🤗🤗🤗

நன்றி!

மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க...😁😁😁

 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 02

பல ஏக்கர் பரப்பை தன்னகத்தே அடக்கியபடி கம்பீரமாக காட்சி அளித்த அந்த பங்களாவின் முன்பு தன் ராயல் என்பில்ட் பைக்கை நிறுத்தினான் அமரேஸ்வரன்.

வண்டியில் இருந்து இறங்கியவன் அந்த பங்களாவிற்கு காவலாக இருந்த காவலாளிக்கு ஒரு தலையசைப்பை கொடுத்துவிட்டு உள் நுழைவதிலே தெரிந்து போனது... அவனுக்கு இந்த இடம் மிக பரிட்சியம் என்று... உள்ளே நுழைந்தவனுக்கு அழகாக காட்சி அளித்து போர்டிக்கோவில் நின்றிருந்த சொகுசு கார்!

கண்ணை கவரும் வகையில் இருந்த கருப்பு நிற சொகுசு கார் நிச்சயம் பல லட்சங்களை விழுங்கி இருக்கும்... யாருடையதாக இருக்கும் என்று யோசனையோடே வரவேற்பு அறைக்குள் நுழைய முயன்றவனை தடுத்து நிறுத்தினான் அரசு. திடகாத்திரமான தோற்றத்துடன் பார்த்தவுடன் அடியாள் என நினைக்கும்படி இருந்தான் அரசு.

"என்ன அரசன்ணே எப்போவும் இல்லாது இன்னைக்கு என்ன கேட்டை போடுறிங்க... பளபளன்னு கார் வேற வெளியே நிற்குது... பார்ட்டி ரொம்ப பெருசோ..." என்று கேட்டவனுக்கு பதில் கூறாது...

"அதெல்லாம் உனக்கு எதுக்கு டா.‌‌.. அந்த சங்கருக்கிட்ட இருந்து வட்டி பணத்தை வாங்குனியா இல்லையா" என்று கேட்டவனின் வார்த்தையை காதில் ஏற்காது சுற்றுபுறத்தை பார்வையிட்டு கொண்டிருந்தவனை கண்டு அரசுக்கு ஆத்திரமாக வந்தது.

"கேள்வி கேட்டா பதில் சொல்லு அமரா..‌. இப்படி தெனவட்டா நிற்காதா சப்புன்னு அரைஞ்சுபுடுவேன்" என்றிட அப்போதும் அமரனிடம் அதே தெனவட்டு நிலை தான்‌.

'நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லு... அப்புறம் நான் சொல்லுறேன்' என்ற நிலை தான் அவனிடம்.

"ப்ச் இப்போ என்னடா உனக்கு தெரியனும்... நீ சொன்ன மாதிரி உள்ள இருக்கிறது பெரிய கை தான்... ஆனா ஆளு யாருன்னு எனக்கே தெரியாது..." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பார்மல் உடையில் வெளியேறினான் ஒருவன்‌‌.
அவனை எங்கோ பார்த்தது போன்றிருக்க யாரேன யோசித்த அமருக்கு சட்டென்று பிடிபடவில்லை.

"என்ன அமரா... தொழில் எல்லாம் எப்புடி போவுது... முன்ன பார்த்ததுக்கு இப்போ ஆளு நல்லா ஜம்முன்னு இருக்க போல தெரியுது" என்றபடி நாற்காலியில் வந்து அமர்ந்தார் காளிங்கராயன். தேனீயின் முக்கிய புள்ளி! கட்டப்பஞ்சாயத்து... கந்துவட்டி... என பல தொழில்களை கைக்குள் வைத்துக் கொண்டு இந்த ஊரையே ஆட்டி படைப்பவர்! அவருக்கு கீழ் தான் வேலை செய்கிறான் அமரேஸ்வரன்.

"அதெல்லாம் நல்ல போகுதுங்க ஐயா... நீங்க இருக்கிற வரைக்கும் எங்களுக்கு என்ன கவலை சொல்லுங்க..‌. ஹான் வட்டி கட்டாம ஏமாத்திட்டு இருந்தானே சங்கரு... அவன்கிட்ட இருந்து பணத்தை கரந்தாச்சுங்க... " என்றபடி மேசை மீது ஒரு மஞ்ச பையை வைக்க...

"காசு இல்லைன்னு பஞ்ச பாட்டை பாடுன பர***சி நாய்க்கு இப்போ எங்கிருந்து காசு வந்துச்சாம்... கையில காசை வாங்கிர வரைக்கும் தான் இந்த கூல கூம்பிடுலாம் போல... இன்னொரு தடவை பணத்தை கேட்டு வரட்டும்... சங்குலே நாலு மிதி மிதிக்கிறேன்" என்றவர் தன் சட்டை பையில் இருந்து சில நோட்டுகளை எடுத்து அவனிடம் நீட்ட அதை மறுக்காது வாங்கி கொண்டவன்...

"அப்போ வரேங்க ஐயா... நேரமாச்சு" என்றவன் அவர் அனுமதியை வேண்ட... தலையசைத்து விடை கொடுத்தார் காளிங்கராயன்.

செல்லும் அவனின் முதுகை பார்த்துக் கொண்டு இருந்தர் தன் மீசையை முறுக்கி கொள்ள.... கண்களிலோ அவன் மீதான தனி அபிப்பிராயம் மின்னயது. தன்னிடம் வேலை செய்தாலும் மற்றவர்களிடம் இருந்து இவன் முற்றிலும் மாறுபட்டவன் என்ற எண்ணம் எப்போதும் போல் இப்போதும் தோன்ற... தன் வலது கையான அரசிடம் அதனை பகிரவும் செய்தார்.

"நீ வேணும்னா பார்த்திட்டே இரு அரசு... ஒரு நாள் இல்ல... ஒரு நாள் இவன் உன் இடத்துக்கு வர தான் போறான்" என்றிட

"நீங்க சொன்ன சரிதாங்கய்யா..." என்றபடி மெல்லிய புன்னகையை உதிர்த்தான் அரசு.


••••••••••••••••••

மேகத்தை கிழித்துக் கொண்டு சூரியன் தன் பொன்கதிர்களை புவியின் மீது படர செய்துக் கொண்டு இருந்தான். தேனீயின் சுற்று வட்டார பகுதியில் அடங்கிய பூஞ்சோலை கிராமம் அது(கற்பனை).

பல வீடுகள் மாடி வீடுகளாக மாறி இருந்தாலும்... சில மச்சு வீடுகளும் ஆங்காங்கு இருக்க தான் செய்தது..
அப்படியொரு வீடுகளில் ஒன்று தான் கண்மணியின் வீடும். இரவு தாமதமாக உறங்கியதாலோ என்னவோ அப்போது தான் எழுந்து வீட்டின் பின்புறம் வந்தாள் கண்மணி.

நேற்று இரவு நடந்த களோபரத்திலேயே இன்னும் தலை வின் வின்னென்று வலித்து கொண்டிருக்க, அதை இன்னும் கூட்டுவது போன்று இருந்தது அவள் அன்னை தாமரையின் வசை மொழிகள்.

"சனியன்... சனியன்... என் உசுரை எடுக்கிறதுக்கே இன்னும் இது உசுரோடு திரிஞ்சிட்டு இருக்குது... எங்காச்சும் போய் செத்து ஒழிஞ்சா கூட ஒரே நாளுல அழுது தொலைச்சிட்டு அடுத்த பொழப்பை பார்ப்போன்... இப்போ தினத்துக்கும் இதோடு மாரடிக்க வேண்டியதா இருக்கு..." என்று கணவனை வசை மாரி பொழிந்தபடி மாட்டு கொட்கையின் சாணத்தை அள்ளிக் கொண்டு இருந்தார் தாமரை.

"எம்மோவ் கொஞ்சம் உன் புலம்பலை நிறுத்துறியா... ஏற்கனவே தலைவலி போட்டு படுத்தி எடுக்குது. இதுல நீ வேற ஒரு உன் பக்க ஏழரையை கூட்டாதே" என்று கோபமாக கத்தினாள் கண்மணி.

"வாடி சீமை சித்ராங்கி... உன் அப்பனை சொன்னவுடனே வரிஞ்சுகட்டிக்கிட்டு வந்திருவியே... இவன் இப்படி குடிச்சிட்டு உழுந்திட்டு இருக்கும் போதே உனக்கு இந்த ராங்குனா... உன் அப்பன் ஒழுங்கா இருந்தாக்கா உன்னை கையிலே பிடிக்க முடியாது"

"ப்ச் அம்மோவ்.. போதும் இதுக்கு மேல எதுவும் பேசாத..." என்றவள் அங்கிருந்து நகர முற்பட,

"ஏட்டி நில்லு... நான்‌ ஏன்டி பேச கூடாது... நல்லா பேசுவேன்... உன் அப்பன் ஒரு குடிக்காரன்... ஒன்னுத்துக்கும் உதவாதவன்.. அதுதென நெசம்.. அது உனக்கும் தெரியும்... போடி போய் வேலையை பாரு... வந்துட்டா பெருசா சீமையிலே இல்லாத அப்பனை சம்பாரிச்சவ" என்று நீட்டி முழக்க... ஏனோ அந்த வார்த்தைகள் அவள் மறக்க நினைக்கும் நேற்றைய நிகழ்வுகளை கிளப்பி விட

'ஓ.. அந்த குடிகாரன் ஞானவேலு மகனா நீயி' என்ற அமரின் பிம்பம் அவள்‌ மனத்திரையில் மின்ன, அதில் உண்டான ஆத்திரத்தில் பக்கத்தில் இருந்த தூக்கு வாளியை விசிறி அடித்தவள்... "ஆமா என் அப்பன் குடிகாரர் தான்... அதுக்குன்னு உன்னை தெருவுல அம்போனு விட்டுட்டாரா... இல்ல வேற எவக்கூடயோ கூத்து அடிச்சிட்டு இருக்காரா.. ம்ம்... சொல்லுமா சொல்லு... உன்னை கட்டிக்கிட்ட பொறவு தானே அவுரு குடிச்சு சீரழியுறாரு... அவரை மொத்தமா இப்படி மாத்துனுதே நீதென்... நீ மட்டும் என் அப்பாவை வார்த்தையால குத்தாம இருந்திருந்தா.. அவரு ராஜா மாதிரி வாழ்ந்திருப்பாரு" என்றவளின் பேச்சில் தாமரையின் முகம் வெளிரி போனது... உண்மை சுட்டதோ என்னவோ...

எப்போதும் அன்னை இப்படி புலம்புவது தான். ஆனால் ஏனோ இன்று இந்த வார்த்தைகளை அவளால் ஏற்று கொள்ள இயலவில்லை. நேற்று இரவு நடந்த நிகழ்வின் தாக்கமாக கூட இருக்கலாம்.

"அக்காஆஆ... என்ன பேசிட்டு இருக்க நீயி.. அது எப்பவும் இப்படி தானே பேசும் விடேன்... ப்ச் மொத இப்படி முறைச்சிட்டு இருக்காமா இங்கன வா..." என்று விதுரன் அழைத்துக் கொண்டு இருக்கும் போதே ஒப்பாரியை வைக்க தொடங்கினார் தாமரை.

"ஐய்யோ... ஆத்தே நான் என்ன பண்ணுவேன்... ஏது பண்ணுவேன்.. பொம்பளை புள்ளையா இருந்தாலும் அவ விருப்பத்துக்கு படிக்க வைச்சேனே... ஆசை ஆசையா தூக்கி வளர்த்த கன்னுக்குட்டி மாருல முட்டின மாதிரி பேசிப்புட்டாளே பாதகத்தி... இனி எனக்குனு யாரு இருக்கா.. நான் எதுக்கு வாழனும்... ஆத்துலயோ.. கிணத்துலயோ விழுந்து சாகுறேன். ஏலே விதுரா... அம்மா செத்தா அந்த பொணத்துக்கு மட்டும் கொள்ளி வைச்சிடு ராசா உனக்கு புன்னியமா போகும்.." என்று மூக்கை சிந்த... அது இன்னும் தான் அவளை சூடெற்றியது.

"இந்தா இதுக்கு மேல ஒத்தை வார்த்தை பேசுனனு வைச்சுக்கோ அப்படியே எங்கனயாச்சும் போயிடுவேன்.. அதுக்கப்புறம் இந்த ஊரு பக்கமே தலை வைச்சு படுக்க மாட்டேன் பார்த்துக்க... இந்த கண்மணி சொன்னா அதை செய்வா உனக்கு என்னை பத்தி நல்லா தெரியும்" என்ற மிரட்டலோடு அவள் அங்கிருந்து நகர, அதற்கு மேல் எதுவும் பேசாது வாயை இறுக்க மூடி கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் தாமரை.

விதுரனோ அக்காவையே யோசனையாக பார்க்க‌.. அதை புரிந்து கொண்டது போல் அவனுக்கு விளக்கம் அளித்தாள் கண்மணி.

"எனக்கே தெரியல விது... அம்மா எப்போவும் பேசுறது தான்... ஆனா என்னவோ தெரியல..‌ நேத்து நைட் நடந்தது.‌... அவன் பேசுன வார்த்தை... எப்படி சொல்றது... ப்ச்..." என்று கைகளால் தலையை தாங்கியபடி இருக்கும் அக்காவை பார்க்க விதுரனுக்கும் வேதனையாக தான் இருந்தது... அந்த வேதனையெல்லாம் கோவமாக அவன் அப்பா ஞானவேலின் மீதே திரும்பியது...

அவனை பொறுத்தவரை ஞானவேல் சரியான கணவனும் அல்ல... சரியான தந்தையும் அல்ல... இப்படி அவன் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அரை போதையுடன் உள் நுழைந்தார் அவர்.

"கண்மணி... எஞ்சாமி எப்போ புள்ள வந்த... வந்தவுடனே உங்க ஆத்தாக்காரி என்கூட பேசக்கூடாதுனு சொல்லிட்டாளோ... நீயும் என்னை தவிக்க விடப் போறியா சாமி... பேசு புள்ள... பேசு தங்கம்.‌‌.." என்று நேற்று அவளை பார்த்ததையும் மறந்து பிதற்றிக் கொண்டிருந்தார். அவர் பேச பேசவே அறைக்குள் நுழைந்தவளுக்கு,

"யோவ் எத்தனை முறை சொல்றது... குடிக்காத... குடிக்காதனு... எதுக்குய்யா தெனமும் இப்படி குடிச்சிட்டு என் தாலியை அறுக்குற..." என்று தாயின் ஏச்சுப்பேச்சுகள் விழ... அதற்கு மேலும் அதை கேட்க இயலாது கதவை அடைத்து கொண்டு அதன் மீதே சாய்ந்து கொண்டாள் கண்மணி!


•••••••••••••

"ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக: ப்ரசோதயாத்

ஓம் ஸனத்கு மாராய வித்மஹே ஷடானனாய தீமஹி
தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்

ஓம் மஹாஸேனாய வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹிதன்ன:
ஸ்கந்த ப்ரசோதயாத்


ஓம் ஷண்முகாய வித்மஹே ஸ்வாமினாதாய தீமஹிதன்ன: குருகுஹ ப்ரசோதயாத்."

என்று பூசாரி முருகனுக்குரிய மந்திரத்தை ஓதியபடி முருகனுக்கு ஆரத்தி காட்டியபடி இருக்க... கைகள் கூப்பியபடி முருகனின் முன்பு நின்றிருந்தாள் கண்மணி. ஏனோ காலையில் இருந்த நிலைக்கு இப்போது மனம் இலகுவாகுவது போன்ற உணர்வு! அந்தி சாயும் பொழுது என்பதால் கோவிலில் ஒரு சிலரை தவரி பெரிதாய் கூட்டமில்லை.

முருகனை கண்களுக்குள் நிரப்பியவள்... குளத்தடியில் அமர... சரசரவென்று யாரோ சிலர் ஓடுவது போன்ற சத்தம்!

"ஏய் நில்லுடா... நில்லுடான்னு சொல்றேன் இல்ல..." என்று கர்ஜனையோடு அமர் ஒருவனை துரத்திக் கொண்டிருந்தான். சில எட்டுக்கள் எடுத்து வைத்து கோவில் சன்னதியை அடைந்தவளுக்கு அந்த காட்சியை கண்டதும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இதில் அவளை நோக்கி ஓடிக் கொண்டிருந்தவனை ஒரே பாய்ச்சலில் அடைந்த அமர் அவள் என்ன என்று யோசிக்கும் முன்னரே ஓடுபவனின் தலையை பிடித்து சுவற்றில் அடிக்க..‌. மண்டை உடைந்து வெளியான ரத்தம் அவள் முகத்தில் பீச்சியடிக்க சிலையென சமைந்து நின்றாள் கண்மணி...

தொடரும்...💔
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே...

போன யூடிக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி டியர்ஸ்..😍😍😍

இரண்டாம் அத்தியாயம் போட்டாச்சு படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க மக்களே.. அடுத்து அத்தியாயம் சனி அல்லது ஞாயிறு போடுறேன்..😘

உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் நான்!

நன்றி!

கருத்து திரி..

 
Last edited:

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 03💔

தன் முகத்தில் சிதறியிருக்கும் குருதியினை துடைக்க கூட தேன்றாது சிலையென நின்றிருந்த கண்மணியின் தோற்றம் கலைத்தது என்னவோ அமரனின் மிரட்டல் குரலில் தான்.

"ஏன்டா டேய் கந்துவட்டிக்கு வாங்குன காசை ஒழுங்கா கொடுத்து தான் தொலைங்களேன் டா... இப்போ பாரு நான் உன்னை தேடி அலைய... நீ என்னை பார்த்திட்டு ஓட... நான் உன்னை துரத்தி இப்போ தேவையில்லாம உன் மண்டை உடைஞ்சு இப்போ இதுக்கு ஆஸ்பத்திரி செலவு வேற நாங்க தண்டம் வைக்கனும்..." என்று அரை மயக்கத்தில் இருந்தவனிடம் பேச்சு வார்த்தை நடத்தியவன் அவனை பொம்மை போன்று அலேக்காக தோளில் தூக்கி கொண்டு போக... நிச்சயம் இப்படி கூட மனிதர்கள் இருப்பார்களா என்று அருவருத்து தான் போனாள் கண்மணி. சுற்றிலும் நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தவனுக்கு அவளின் அருவருப்பான பார்வை கண்களில் பதிந்தாலும் கருத்தில் பதியவில்லை.

அதுவரை இருந்த மன அமைதி தொலைந்நவளாக விடுவிடுவென்று இல்லம் நோக்கி சென்றவளுக்கு நிச்சயம் இதனை அப்படியே விட்டுவிட எண்ணமில்லை.

"ஏண்டி சித்ராங்கி... இம்புட்டு நேரமா கோவில்ல என்னடி பண்ணிட்டு கிடந்த.. பொழுது போச்சே வூட்டுக்கு வரனும்னு எதாச்சு இருக்கா... கண்ட நேரத்துக்கு ஊரை சுத்திட்டு வரது... அதுசரி நீயும் உன் அப்பனை மாதிரி தானே இருப்ப..." என்று கோவத்தில் பொறிந்தவர் கடைசி வாக்கியத்தை மட்டும் வாய்க்குள்ளே முனுமுனுத்து கொண்டார்.

கண்மணியோ எதையும் கண்டு கொள்ளாது வீட்டில் நிறுத்தியிருந்த எக்ஸ் எல்லை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் நோக்கி புறப்பட்டு விட்டாள். அந்த ஊரிலே சில தொலைவு தூரத்திலே காவல் நிலையம் அமைந்திருக்க... சுலபமாக வந்தவளுக்கு புகார் கொடுப்பது அவ்வளவு சுலபமாக இல்லை...

காவல் நிலையம் வந்தவுடன் என்னவென்று விசாரித்த ரைட்டர் கூட அவள் கூறிய புகாரை கேட்டுவிட்டு அதனை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்.

அரை மணி நேரம் பொறுமையாக காத்திருந்தவள் அதற்கு மேலும் காத்திருக்க இயலாது... "சார் இன்னும் எவ்ளோ நேரம் காத்திருக்க வைப்பிங்க சார்... நான் உங்ககிட்ட என் கம்பளைன்ட் சொல்லியே அரைமணி நேரம் ஆகுது... நீங்க என்னடான்னா நான் சொன்னதை கேட்டும் கண்டுக்காம இருக்கிங்க..." என்று அவள் கேட்டு கொண்டு இருக்கும் போதே காவல் நிலையத்தில் நுழைந்தார்
எஸ்.ஐ. தண்டபாணி.

"என்னமா இங்க சத்தம்... இது என்ன உன் வீடுன்னு நினைச்சுட்டுயா நீ வந்ததும் அதிகாரம் செய்ய... உன்னை மட்டுமே பார்க்கிறது எங்க வேலை இல்லைம்மா" என்று அதட்டலாக சொன்னவர் அவள் முன் நிற்க... அதை எல்லாம் கண்டுக்காது மீண்டும் தன் புகாரை கூறினாள் கண்மணி.

"சார் நீங்க கண்டிப்பா அவன் மேல் ஆக்ஷன் எடுத்தே ஆகனும்... இப்போ எல்லாம் இந்த மாதிரி கந்துவட்டிக்கு பணம் விட்டு... அவங்களை மிரட்டி கொள்ளை கொள்ளை சம்பாரிக்கிறாங்க... அதுவும் அரஜகத்தின் உச்சமா ஒருத்தருடைய மண்டையை உடைச்சு காசு பறிக்கறாங்க... இது அப்படியே விட்டுட முடியாது சார்" என்று மூச்சிரைக்க பேசியவளை நெற்றி சுருங்க யோசித்தவர் ரைட்டரை பார்க்க...

"சார் காளிங்ராயன் ஐயா ஆளு அந்த அமரனை சொல்றாங்க போல..." என்றதும் கண்மூடி நிதானபடுத்தியவர்,

"ஏம்மா அடிபட்டவனுக்கு நீ எந்த வகையில சொந்தம்..." என்று விசாரித்திட அவளிடம் மௌனம்.

"என்னம்மா பதிலை சொல்லு..."

ஒரு நிமிடம் தயங்கியவள்... "அடிபட்டவர் யாருன்னு தெரியாது சார்... கோவில்ல சாமியை தரிசிட்டு இருக்கும் போது பார்த்தேன்" என்றிட,

"சரிம்மா ஒரு கம்பளைனட் எழுதி கொடுத்திட்டு போ நான் என்னனு பார்த்துக்கிறேன்..." என்றிட அவளும் புகார் கொடுத்துவிட்டு வெளியே செல்ல எஸ்.ஐயின் குரல் அவள் செவியினை அடைந்தது.

"ஏம்ப்பா இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் ஏன் இப்படி இருக்காங்க.. சிரியலை பார்த்தும் படத்தை பார்த்தும் ரொம்ப கெட்டு போயிட்டாங்க... இங்க அவன் அவனுக்கே ஆயிரம் பிரச்சனை இருக்கு இதுல இவங்க வேறை அடுத்தவன்‌ பிரச்சினையை இழுத்து போட்டுக்கிட்டு அவங்களையும் படுத்திக்கிட்டு நம்மளையும் போட்டு படுத்தறாங்க" என்று தலையில் கை வைக்க...

"அப்போ இந்த கம்பிளைன்ட்டை என்ன செய்றது சார்..."

"அதை தூக்கி போடுய்யா... பாதிக்கப்பட்டவனுக்கு சொந்தம்னு எவனாச்சு வந்தா அப்புறம் பார்த்துப்போம்... இப்போ இதை அந்த காளிங்க ஐயாவோட ரைட்டா ஒருத்தன் இருப்பானே... ஹான் அரசு... அவன்கிட்ட இந்த பிரச்சினையை காதுல ஓதி வை.. கடைசியில் நம்ம தலையை உருட்ட போறாங்க... இந்த கருமத்துல எலெக்ஷன் வேற வரப்போகுது... இன்னும் என்னலாம் ஆட போறாங்களோ" என்று தண்டபாணி புலம்ப அதை கேட்டு கொண்டு இருந்த கண்மணிக்கு தான் மனம் புகைந்தது!

வீடு வந்திருந்தவளுக்கு இன்னும் அந்த புகைச்சல் மறையவில்லை. 'எங்கே சென்றாய்' என்று கேட்ட தாமரையிடம் விடயத்தை கூறியிருக்கக அதற்கும் ஒரு பாட்டு கத்தி ஓய்ந்து விட்டார் அவர். இதில் தன் பங்கிற்கு விதுரனும் பேசியிருந்தான்.

"அக்கா நிச்சயம் நீ போலீஸ் ஸ்டேஷன் போனது அவசியம் இல்லாதது கா... நீ அங்க போய் கம்பிளைன்ட்டே கொடுத்து இருந்தாலும் எதுவும் நடக்க போகுறது இல்லை... ஏன்னா அந்த அமரன் வேலை செய்ற இடம் அப்படி... நாம நினைக்குற மாதிரி சாதாரண ஆளு இல்லைக்கா அந்த காளிங்கராயன்... அவருக்குன்னு தனியா ஒரு அடியாள் கூட்டமே வைச்சு இருக்காரு... இந்த தொகுதியில் யாரு ஜெயிக்கனும்... யாரு ஜெயிக்க கூடாதுனு முடிவு பண்றவங்க அவங்க... அப்படிப்பட்டவன் கிட்ட தான் இந்த அமரன் வேலை செய்றான்... நீ இதை கண்டுக்காம ஈசியா விடுறது தான் நல்லது"

"அப்போ நான் கண் இருந்தும் இல்லாத மாதிரி இருக்க சொல்ற... எவன் எக்கேடு கெட்டு போனா என்ன... நாம நல்லா இருந்தா சரி... அப்படி தானே" என்று காட்டமாக கேள்வி எழுப்பிட பதில் சொல்ல தெரியாது விழித்து நின்றான் விதுரன்.

ஒருவரின் நியாயங்கள் மற்றவர்களுக்கு எப்போதும் நியாயங்களாக படுவதில்லையே!

••••••••••••••

வானம் இருளை பூசிக் கொண்டு இருக்க அமைதியை தத்தெடுத்தபடி அந்த ஊரே நள்ளிரவு உறக்கத்தில் ஆழ்ந்து இருந்தது. கதவில் தொங்கி கொண்டு இருக்கும் பூட்டை திறந்தபடி உள் நுழைந்தான் அமரன். அவனை போன்றே... போட்டது போட்டபடி கேட்பார் அற்று கிடந்தது வீடு. அலைந்து கலைத்தவன் அப்படியே ‌மெத்தையில் சரிய அதை கெடுக்கவென்றே ஒலித்தது அவன் அலைப்பேசி.

திரையில் மின்னுகின்ற பெயரை கண்டு சலிப்பு அடைந்தவன், "என்ன அரசண்ணே என்ன விஷயம்... எதுக்கு இப்படி விடாம அடிச்சிட்டு இருக்க" என்று எரிச்சலோடு பேச அந்த பக்கத்தில் இருந்தவனோ இவனுக்கு மேல் எகிறினான்.

"என்ன நொண்ணனே... எங்கடா போய் தொலைஞ்ச... கொடுத்த ஒரு வேளையை உருப்படியா செய்யமாட்டியா... உன்கிட்ட ஐயா என்ன சொன்னாரு... அவனை அலேக்கா தூக்கி கொண்டுவான்னு சொன்னா... நீ அவன் மண்டையை உடைச்சு கொண்டு வந்திருக்க"

"ப்ச் இப்போ அதுல உனக்கென்ன பிரச்சினை... எப்படியும் நம்ம இடத்துக்கு கொண்டு வந்ததும்... அதுதானே செய்ய போற... அப்புறம் என்ன" என்றவன் அவன் சொல்ல வருவதை கேட்காமல் செல்பேசியை அணைத்தவிட... அரசுவிற்கு தான் கோபம் சுறுசுறுவென ஏறியது.

ஏனெனில் கடத்தியவனை வைத்து பல ஆட்டங்கள் ஆட காத்திருக்க... அவனின் உயிர் முக்கியம் அல்லவா.‌‌.. அதுவும் ரகசியமாக வைக்க வேண்டிய விடயம்... காவல் நிலையம் வரை சென்றது அத்தனை உவப்பாக தோன்றவில்லை. மயங்கி கிடப்பவனை ஒரு பார்வை பார்த்த அரசு அந்த இடத்தை விட்டு அகல... இதை எதுவும் அறியாது ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தவனுக்கு கண்மணியின் அருவெறுப்பு முகம் பளிச்சென்று விழிகளுக்குள் ஊடுருவி செல்ல பட்டென்று விழித்தவனுக்கு தூக்கம் தொலை தூரம் ஆகிப் போனது.

"ப்ச் இந்த திமிர்பிடிச்சவ முகம் ஏன் இப்படி கண்ணுக்குள்ள வந்து உசுரை வாட்டுது..." என்று புலம்பி கொண்டு இருந்தவனுக்கு அவள் பார்வையில் இருந்த அருவருப்பு அவன் மேனியை மென்று தின்ன... பட்டென்று படுக்கையில் இருந்து எழுந்தவன் அந்த வீட்டினுள்ளே நடை பயில... முதல் முறை ஏன் ஒருவளின் பார்வை தன்னை இத்தனை வாட்டுகிறது என்ற காரணம் புரியாது குழம்பி கொண்டு இருந்தான் அமரன்.

"ப்ச் இது என்ன இப்படி இம்சையை கூட்டுது..." என்றவனுக்கு அதற்கு மேலும் அவளின் பார்வை தாக்கத்தை நினைக்க விரும்பாதவனாக பரபரவென்று தன் அலமாரியை துலவியவனின் கைகளுக்குள் அகப்பட்டது மது பாட்டில்... அதன் மூடிட்டு விரைவாக திறந்தவன் அதை அப்படியே வாயில் சரித்து கொள்ள... இன்னும் இன்னும் அவளின் பார்வை இம்சை கூட்டி அவனை பாடாய் படுத்தியது!

தொடரும்💔
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே...

போன யூடிக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி டியர்ஸ்..😍😍😍

மூன்றாவது அத்தியாயம் போட்டாச்சு படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க மக்களே.. அடுத்து அத்தியாயம் ஞாயிறு போடுறேன்..😘

உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் நான்!

நன்றி!

கருத்து திரி..

 
Status
Not open for further replies.
Top