All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுடாத நெருப்பு - கதைத் திரி

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்🙏🙏 நான் அனிதா செல்வம். சங்கமம் போட்டியில் சுடாத நெருப்பு என்ற கதை எழுதியது நான்தான். என்னுடைய முதல் கதை.. என் கனவுகளின் முதல் உருவம்.. உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். சிலர் படிச்சிருப்பீங்க.. நிறைய பேர் படிச்சிருக்க மாட்டீங்க.. படிக்காதவங்க படிச்சிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.. டெயிலி ஒரு எபி.. தினமும் மாலை ஏழு மணிக்கு‌‌
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி 1




12028



வணக்கம். என்னுடைய பெயர் காலம். காலம் என்றால் என்ன? என்று யோசிக்கிறீர்களா… அதுதாங்க, நல்லது ஒன்று உங்களுக்கு நடந்தால் புண்ணியம், இன்னொருவருக்கு நடந்தால் அதிர்ஷ்டம்; கெட்டது ஒன்று உங்களுக்கு நடந்தால் விதி, இன்னொருவருக்கு நடந்தால் வினை என்று சொல்வீர்களே, அது எல்லாமே நான்தான். இந்த பிரபஞ்சம் உருவான நொடியில் நானும் உருவானேன். காற்று நெருப்பாகி, நெருப்பு தணிந்து நீராகி, நீர் காய்ந்து நிலமாகி எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன்.


அப்போ.. நீ தான் கடவுளா.. என்று கேட்கிறீர்களா?.


ச்சச்ச.. இல்லைப்பா.. நான் கடவுள் எல்லாம் இல்லை. அந்தப் பொறுப்பு மிகப் பெரியது. ம்ம்.. உங்களுக்கு எப்படி சுருக்கமாகக் கூறுவது.


உங்கள் கரங்கள் தான் நீங்கள். உங்கள் கரங்களில் இருக்கும் வண்ண தூரிகைகள் தான் இறைசக்தி. காட்சிப் பொருள்தான் உங்கள் சூழ்நிலை. அதைக் கொண்டு நீங்கள் வரையும் ஓவியம் தான் உங்கள் வாழ்க்கை. பூந்தோட்டத்தை பார்த்து ஒருவன் வண்ண வண்ண பூக்கள் வரையலாம், இலை மரம் செடிகள் வரையலாம், அங்கே புற்று கட்டியிருக்கும் பாம்பை வரையலாம். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.. சரிதானே..


இதிலும் நீ எங்கே இருக்கிறாய் என்கிறீர்களா?. நான்தான் அந்த ஓவியம் வரையப் பயன்படும் காகிதம்.


‘அவ்வளவுதானா?'


அவ்வளவேதான்! ஆனால் அந்தக் காகிதமாய் இருப்பது எவ்வளவு கடினம் தெரியுமா?


சில ஓவியங்களைப் பார்த்து கை தட்ட தோன்றும், முடியாது. கண்ணீர் விடத் தோன்றும், முடியாது. கைகளைப் பிடித்து தடுக்க தோன்றும், எதுவுமே முடியாது. உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தாங்கி நிற்பது என் வேலை.


கஷ்டம்தானே.. அந்தக் கஷ்டத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்வது எப்படி என்று பலவாறு சிந்தித்து இந்த முயற்சி எடுக்க முடிவு செய்துள்ளேன்.


என்ன முயற்சி என்கிறீர்களா..



மனிதர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க ரொம்பவே உதவும் என்று சொல்கிறார்களே, தன் சுமைகளைப் பகிர்ந்து கொள்தல், அதைத்தான் இப்போது செய்யப் போகிறேன். என்னை மிகவும் பாதித்த வாழ்க்கையை, இல்லை, ஓவியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.


அப்படியே காலசக்கரத்தைச் சுற்றி ஒரு பதினைந்து வருடங்கள் பின்னே போகலாம். கைப்பேசி, கம்ப்யூட்டர் எல்லாம் வாழ்வின் ஓர் அங்கமாகாத காலம்.


பனையூர், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம். வானம் பார்த்த பூமி. வருடத்தின் ஆறு மாதங்கள் வயலில் விவசாயம் பார்த்தால், ஆறு மாதங்கள் உப்பளத்தில் உப்பு விளையும். என்றும் போல் அன்றும், சூரியன் தன் பணியை செவ்வனே செய்து, 4 மணி நெருங்கியும், பூமியை சுட்டெரித்துக் கொண்டிருந்தான். காலை வயலுக்குப் போய் திரும்பி வந்து கொண்டிருந்தார் செல்லம்மா. 55 வயது பெண்மணி. பிறந்தது முதல் சுட்டெரிக்கும் சூரியன் கீழ் வாழ்க்கை. கருத்த மேனி. தலையில் மரக்குச்சி கட்டை வைத்து தசைகள் விறைத்த இடக்கையால் அதைத் தாங்கியிருந்தார். வலக்கை, கால் நடைக்கேற்க முன்னும் பின்னும் போக, காலை எட்டிப்போட்டு நடையை வேகப்படுத்தினார். அவர் நடந்து கொண்டிருந்தது ஒரு தார் சாலை. சாலைக்கு இந்த பக்கமும் அந்த பக்கமும் பள்ளமாய் இறங்கும். இருபுறமுமே கருவேலஞ்செடிகளும், வேலிகாத்தானும் தான், கண்ணுக்கெட்டும் வரை. நஞ்சை, புஞ்சை நிலமெல்லாம் அரைமணிநேரம் நடை தூரத்தில்தான்.


‘ஸ்கூல் விடும் நேரமாகி விட்டது. இந்த மாரியம்மா ரெண்டு நாள் முடியலைன்னு படுக்க, ஊர் நாட்டாமைக்காரர் சந்தானம் வீட்டில் கொஞ்சம் கூடமாட ஒத்தாசையாய் இருந்துவிட்டு வர நேரமாயிற்று. ஆனால் பாவம், சந்தானம் பொஞ்சாதி பஞ்சவர்ணம் தனியாய் எத்தனை செய்ய முடியும்? மனம் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பள்ளியின் மணியோசை கேட்க, இன்னும் வேகத்தைக் கூட்டினார். மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. இப்போதெல்லாம் இப்படித்தான். கொஞ்சம் விரைவாய் நடந்தால் மூச்சு வாங்கி விடுகிறது.


ஏதோ அரவம் கேட்க, நடந்து கொண்டிருந்த மேட்டில் இருந்து கீழே பார்த்தார்.


மேட்டுக்கு இந்தப்பக்கம் அடர்ந்த செடிகளுக்கு நடுவில் ஒற்றைவழிப்பாதை ஒன்று உண்டு. அதன் அருகே இருந்த மரத்தடியில், இரண்டு பேர் கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு, ஒரு வெள்ளை வேஷ்டி சட்டை போட்ட மனிதரிடம் பேசிக்கொண்டிருந்தனர்.


இல்லை இல்லை.. பேசவில்லை.. மிரட்டிக் கொண்டிருந்தனர். கையில் சின்ன கத்தி. அந்த மனிதரோ ஒரு மஞ்சள் பையை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டிருந்தார்.


தன் தலைச்சுமையை இறக்கிக் கீழே வைத்த செல்லம்மா, கையில் கிடைத்த கற்களைப் பொறுக்கிக் கொண்டே மெதுவாகக் கீழே இறங்கினார். இப்பொழுது அவர்கள் பேசுவது லேசாய் கேட்டது.


“ஒழுங்கா பையை கொடுத்துடு. உயிரோடு விடுவோம். இல்ல அவ்ளோதான்!!”


“என் உயிரே போனாலும் பையைக் கொடுக்க மாட்டேன்.”


இது என்ன பைத்தியக்காரத்தனம்.. உயிரை விட முக்கியமாய் பையில் என்ன இருக்கிறது. ஆனால் பேசிக் கொண்டிருப்பவனின் குரல் அவருக்கு ரொம்ப பழக்கமானது.


“டேய் முருகா. காளியம்மா மகன்தானே நீ. இங்க என்னடா பண்ற. ஏண்டா மூஞ்சியில கர்ச்சிப் கட்டியிருக்க.”


சட்டென்று கேட்ட குரலில் தடுமாறியவன், வந்த கிழவி அடையாளம் தெரிந்து பேர் சொல்லியே அழைத்த பதற்றத்தில் , “ஏ பாட்டி! அங்கேயே இரு, பக்கத்துல வந்த சீவிடுவேன்.”


இந்த பூவரசன் எங்கே போனான். ரோட்டில் யாராவது வந்தால் சிக்னல் கொடுக்க சொல்லி தானே அவனை அங்கே நிறுத்தியிருந்தார்கள்.

“சீவிட்டு எங்கடா போவ. வீட்டுக்கு தானே. கொன்னே போட்டுடுவோம். ஓடுடா அந்தப் பக்கம்.“


இனி பையனைப் பறிப்பது கஷ்டம் என்று புரிந்தாலும், சும்மா போகவும் மனசு இல்லாமல், முருகன் உடன் வந்தவன், பாய்ந்து அவர் மஞ்சள்பையை இழுக்க, அவர் விடாமல் பற்ற,


செல்லம்மா, “ஏ தங்கம், ராசாத்தி, லட்சுமி, மாரி இங்கே வாங்க, மேற்கே வாங்க, நான் கிழக்கே நிற்கிறேன். திருட்டுப் பசங்களா!!” என்று கூவினார். இதற்கு மேல் ஆள் சேர்ந்தால் அவ்வளவுதான்.. வளைத்துவிடுவார்கள்..பையைப் பற்றியிருந்த மனிதரைப் பையோடு தள்ளிவிட்டு இருவரும் ஓடலாயினர்.


அவர் கூப்பிட்ட சத்தம் கேட்டு சிறு கூட்டம் சேர்ந்தது. அதில் ஒருவர், “அச்சோ இது நம்ம பரந்தாமன் அய்யா ஆச்சே. அய்யா. என்னாச்சுங்க. அடிச்சிட்டாங்களா செல்லம்மா?”


“இல்லப்பா. அதுக்குள்ள பார்த்துட்டேன்.”


எங்கிருந்தோ நீர் வர குடித்து கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் அந்த பெரிய மனிதர்.


செல்லம்மாவிற்கு தான் இன்னும் ஆற்றாமை தீரவில்லை. “ஏன்யா. அவன் கத்திய காட்டி மிரட்டுறானே. அப்போ கூட பையை இறுக்கிக்கிற. நான் ஒரு நிமிஷம் தாமதமாக வந்திருந்தா சீவியிருப்பாங்க. பையில் இருக்கிற பொருள் போனா திரும்ப வரும். உயிர் போனால் வருமா?”


தன்னைச் சுற்றியிருந்த கூட்டத்தை கண்களால் சுற்றி வந்தவர் தன்னைக் காப்பாற்றிய செல்லம்மாவைப் பார்த்தார். “இந்த பையில் இருக்கிறதும் என் உயிர் போலதாம்மா. போனால் வராது!”


“அதெப்படி? உயிரை விட பெரிசாய் அப்படி என்ன பையில் வைச்சிருக்கீங்க?”


“நம்ம காமாட்சியம்மன் நகை. பரம்பரை பரம்பரையாய் வச்சிருக்கோம். அதைத் தொலைக்க முடியுமா? அதுவுமில்லாமல், உயிரே போனாலும் கொடுக்க மாட்டேன்னு என் கடமையை நான் சரியாகச் செய்ததும் , அந்த அம்மனே உங்க உருவத்தில் வந்து நகையைக் காக்கலையா?”


“நகையா. நம்ம கும்பாபிஷேகத்துக்கு சாமிக்கு போட கொண்டு வந்தீர்களே அதுவா..”


“எவனோ நோட்டம் போட்டு பின்னாடியே வந்திருக்கான்.”


இப்படி ஆளாளுக்கு ஒவ்வொன்று பேச செல்லம்மாவிற்கு அவர் காரணம் அவ்வளவாய் பிடிக்கவில்லைதான். எதை விடவும் மனித உயிர் பெரிதில்லையா. ஆனால் அதற்கு மேல் அவரிடம் என்ன வாதம் செய்ய முடியும்? நேரம் வேறு கடந்து விட்டது.


“சரிங்க அய்யா. நான் கிளம்புகிறேன்.”


“எங்க குடும்பம் அம்மனுக்கு செஞ்ச நகை. பரம்பரை பரம்பரையா வச்சிருக்கோம். ஒவ்வொரு தலைமுறைக்கும் புதுநகை சேருமே தவிர குறைந்ததில்லை. என் கையிலிருந்து இந்த நகை இப்போது போயிருந்தால் என்னால தாங்கியிருக்கவே முடியாது. எங்க குலத்தையே காப்பாற்றி இருக்கீங்க. உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க அம்மா.


“எனக்கு ஒண்ணும் வேணாம்பா. நகையோடு பத்திரமாய் ஊர் போய் சேரு.”


புன்னகைத்து, “ரொம்ப நன்றி அம்மா. உங்களுக்கு ஏதாவது எப்போதாவது தேவைப்பட்டால் சொல்லுங்க. கண்டிப்பா செய்வேன்”.


அந்த உதவியை கேட்கும் நிலைக்கு தான் வருவோம்; அப்பொழுது தன் உலகமே அவர் வாக்கில் இருக்கும் என்று தெரியாமல், “சரிங்க.” என்று சொல்லி மீண்டும் கட்டைத் தூக்கி தலையில் வைத்து தன் நடையைத் துவக்கினார் செல்லம்மா.
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி 2

12037



அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பெண்களுக்கான வெளி நோயாளிகள் பிரிவில் இருந்த செல்லம்மாவை சுற்றி ஒரு மருத்துவர் கூட்டமே இருந்தது.


“This is a case of bilateral ovarian mass with ascites madam..” என்று ஒரு சிறு வயது மருத்துவ மாணவி கூற, தலைமை மருத்துவர் ஏதோ கேள்வி கேட்க, அதற்கு அவர்கள் பதில் கூற எல்லாவற்றிற்கும் நடுநாயகமாக செல்லம்மா அமர்ந்திருந்தார்.


அவர்கள் பேசியதில் எதுவுமே புரியவில்லை. ஆனால் அந்த மாணவ மருத்துவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் தன் பேத்தியை வைத்து கற்பனை செய்து கொண்டிருப்பது சுகமாய் இருந்தது. கூட்டத்தில் ஒரு பெண் என்ன கேள்வி கேட்டாலும் ‘டாண்டாண்’ என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். பாரதியும் இப்படித்தான் பதில் சொல்வாள்.


சற்றுத் தள்ளி நோயாளிகளை பார்த்துக் கொண்டிருந்த நடுத்தர வயது மருத்துவரைப் பார்த்து இப்படிதான் என் பேத்தியும் நோயாளிகளைப் பார்ப்பாள்.


அடுத்து இதோ இந்த தலைமை மருத்துவரை போல் என் பேத்தியும் பெரிய இடத்திற்கு வருவாள். இதோ இவர் ஒவ்வொரு வாய் வார்த்தையையும் மந்திரம் போல் இவர்கள் கேட்கிறார்கள். அதுபோல் என் பேத்தி பேசுவதையும் எல்லோரும் கேட்பார்கள்.


கற்பனையில் கோட்டை கட்டி கொண்டிருந்தவளின் கவனத்தை கலையும் கூட்டம் ஈர்த்தது. அந்த துடுக்கு பெண் வந்து, ”பாட்டி நீங்கள் அட்மிட் ஆகணும், சரியா?” என்றாள்.


“அட்மிஷனா? எதுக்கும்மா?”


“அதான் பாட்டி, உங்க வயித்துல கர்ப்பப்பை பக்கத்துல கட்டி இருக்குது. வயித்துல தண்ணி வேற சேர்ந்திருக்கு. நாளைக்கு ஸ்கேன் பண்ணி என்ன கட்டினு பாக்கணும். ரத்த டெஸ்ட் எடுக்கணும்.”


“கட்டியா? அதான் வயிறு வீங்கி இருக்கா?”


“ஆமா”


“மாத்திரைல கரைச்சிரலாம், இல்லையாம்மா?”


“இந்தக் கட்டி மாத்திரையில் கரையாது பாட்டி. ஆனால் பயப்படாதீங்க.. முதல்ல என்ன மாதிரி கட்டினு பாக்கணும். அதுக்குதான் நாளைக்கு ஸ்கேன் பண்ணனும்.”


இரண்டு வாரங்களாக வயிறு உப்புசமாக இருந்தது. அத்தோடு மூச்சு வாங்குவதும் அதிகமாவது போல் தெரிந்தது. முதலில் தன் கிராமத்து மருத்துவரிடம் காட்டினார். அவர்தான்,' நீங்க தூத்துக்குடி பெரிய ஆஸ்பத்திரிக்கு போங்கம்மா' என்று அனுப்பி வைத்தார்.


இன்று காலை பாரதி பள்ளிக்கு கிளம்பி போனவுடன் பஸ் பிடித்து கிளம்பி விட்டார். எப்படியும் பாரதி வருவதற்கு முன் வந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் சமைத்து வைக்கவில்லை. எதிர் வீட்டில் தான் சித்தி இருக்கிறாள். ஆனால் இவளாக அங்கே போய் எதுவும் கேட்டு சாப்பிட மாட்டாள். அவளும், ‘பாட்டி இல்லையே, இவள் என்ன சாப்பிட்டாள்? என்று வந்து பார்க்க மாட்டாள்.’


இந்தப் பெண் 4 மணிக்கு நல்ல பசியுடன் வருவாள். பால் ஊற்றி தர வேண்டும். தான் இல்லை என்றால் சாப்பாட்டை போட்டு சாப்பிடுவாள். ஆனால் சாப்பாடு கூட ஆக்கி வைக்கவில்லையே.


தன் கடமையாய் கூறிவிட்டு காகிதத்தில் எதையோ வேகமாக எழுதிக் கொண்டிருந்த அந்த சின்ன டாக்டரை பார்த்தார்.


“இல்லம்மா. என் பேத்தி தனியா இருப்பா. இன்னைக்கு போயிட்டு நாளைக்கு வரேன் மா..”


நிமிராமல் எழுதியவாறே, “அப்படியா பாட்டி. சரி நாளைக்கு கண்டிப்பா வந்துருங்க. அட்மிஷனுக்கு ரெடியா வாங்க சரியா?”


“சரிமா”


'அப்போ நாளைக்கு பாரதியையும் கூட்டிட்டு வந்து விடனும். ரெண்டு நாள் லீவு போட்டா பரவாயில்லை. அங்கே விட்டுவிட்டு சாப்பிட்டாளோ இல்லையோ என்று இருப்பதை விட இங்கே இருந்தால் எதையாவது கொடுத்துக் கொள்ளலாம். பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து திட்டமிட்டவாறு தன் ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தார் செல்லம்மா, கண் முன் உள்ள காட்சிகள் மாறினால் ஓவியமும் மாறும் என்று அறியாமல்.



ஒரு மாதம் கழித்து மருத்துவமனையில் இருந்து கிளம்பி பேருந்தில் ஏறி, ஜன்னல் ஓரம் அமர்ந்த செல்லம்மா, தடதடவென்று முகத்தில் வீசிய காற்றில் கண்களை மூடினார். இன்னும் நான்கு நாட்கள் தங்க வேண்டும். ரத்தம் ஏற்ற வேண்டும் என்ற மருத்துவர்களிடம் கெஞ்சி அனுமதி பெற்று வீடு வருகிறார்.



உடலின் ஒவ்வொரு அணுவும் வலித்தது. இந்த வலி தாங்கினால் இன்னும் 6 மாதம் இருக்கலாம். இல்லையென்றால்... “ஏன் பாட்டி இப்படியெல்லாம் பேசுறீங்க? சரியா ட்ரீட்மென்ட் எடுங்க. அப்புறம் நடப்பதை அப்புறம் பார்க்கலாம்” என்றாள் அந்த குட்டி மருத்துவர். ஒரு மாதம் முன்பு பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்ந்ததிலிருந்து செல்லம்மாவிற்கும் ஒரு நீண்ட கொடிய கனவில் இருப்பது போல்தான் இருக்கிறது. வயிற்றிலிருப்பது புற்றுநோய் கட்டியாம். வயிற்றில் எல்லா இடத்திலும் பரவி நுரையீரலுக்கும் பரவி விட்டது என்றார்கள். ஆபரேஷன் செய்ய வேண்டும். அப்படி செய்தாலும் முழுதாக எடுக்க முடியாது. அதனால் ஆப்பரேஷனுக்கு முன்னால் புற்றுநோயை கரைக்கும் மருந்து தர வேண்டும் என்றார்கள்.



அந்த வீரியமிக்க மருந்துகளை தாங்க முடியாமல் செல்லம்மாவின் உடல் திணறியது. முதல் சுற்று மருந்தை கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்கள். தலை சுற்றல், வாந்தி, வயிற்றுப்போக்கு என அதிலிருந்து மீளவே இரண்டு வாரங்கள் ஆயின.



இதோ போனவாரம் இரண்டாவது சுற்று மருந்து போட்டார்கள். அதன் பக்கவிளைவுகள் இந்த முறை அதிகமாக இருந்தன. இருமல், ஜுரம் வந்தது. ரத்தம் குறைந்து விட்டது என்றார்கள். மஞ்சள் காமாலை வந்தது. எத்தனையோ மருந்துகள், டெஸ்டுகள். சென்ற முறை பாரதியோடு மரேத்துவமனையில் தங்கியிருந்தவர், இந்த முறை பாரதியைக் கூட்டி வரவில்லை. ‘எத்தனை நாள் பள்ளிக்கூடத்திற்கு லீவ் போடுவது?' பாரதி சித்தியிடம் சொல்லிவிட்டு வந்திருந்தார்.



தான்தான் அவளுக்கு துணை என்று எண்ணிய போது தாய் கோழி போல் பாரதியைப் பொத்திப் பொத்தி பார்த்தார். ராணி, பாரதியின் சித்தியிடம் அவ்வளவாக விட்டதில்லை. ஆனால் இன்று, அவர் துணை எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லையே? தனக்கு பின் பாரதி என்ன செய்வாள்? எத்தனை நாள் தன்னோடே வைத்திருக்க முடியும்? ஆனால் சித்தி வீட்டிலும் பாரதி எத்தனை நாள் இருக்க முடியும்? அவள் வாய்ச்சொற்கள் ரொம்ப வலிக்கும். பாரதி தாங்க மாட்டாள்.



ஆனால் இப்பொழுதே முடியாது என்றால் ஆறு மாதங்களுக்கு பின்னால் பாரதி எங்கு தங்குவாள்? கண்களில் சேர்ந்த நீர் கண்களை நிறைத்து வழிதேடி கன்னங்கள் வழி இறங்கின.



செல்லம்மா எதற்கும் கலங்கி நின்றதில்லை. இருபத்தைந்தாவது வயதில் தன் கணவனை பாம்பு கடித்து பலி கொடுத்த பொழுது, கவலையை விட வைராக்கியம்தான் அதிகமாக இருந்தது. அதுவரை கடின வேலைகள் செய்ததில்லை. ஆனால் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது. சின்னையன் மனைவி இரங்கி வாழ்ந்தாள், என்று இருக்கக் கூடாது என்று எண்ணினார். வயலும், உப்பளமும் கை கொடுத்தன. இரண்டு பிள்ளைகள், மூத்தவன் பூவரசன், இளையவன் கதிரேசன். பூவரசன் பதிமூன்று வயதிலேயே புகைக்க, குடிக்க என்று எல்லா பழக்கங்களையும் பழகியபோது பேசிப்பார்த்தார்; சொல்லிப்பார்த்தார்; திட்டிப்பார்த்தார்; அடித்தும் பார்த்தார். அதன்பின் தலைமுழுகி விட்டார். தெரியாமல் தவறு செய்பவரைத் திருத்த முடியும். ஆனால் தன் சுகமே முக்கியம் என்று தெரிந்தே தவறு செய்பவரை எப்படி திருத்த முடியும்?.



ஆனால் பூவரசனை செல்வலட்சுமி, அதுதான் அவரின் முதல் மருமகள் காதலிக்கிறேன், என்று வந்து நின்றபோது செல்வலட்சுமியின் தாய் தந்தையரை விட செல்லம்மா தான் மன்றாடினார். “விட்டுவிடுமா. அவனால் கஷ்டம்தான் படுவாய். விட்டுவிடு.” என்று கெஞ்சினார்.



“என்னை கல்யாணம் செய்தால், என்னோடு இருந்தால், அவர் எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டுவிடுவார்” என்று அவள் இறுமாப்போடு கூற தலையில் அடித்துக் கொண்டார்.



செல்வலட்சுமியும் ஒருநாள் உணர்ந்தாள், இவனை திருத்த முடியாது என்று. ஆனால் அது புரியும் போது பாரதி கை குழந்தையாய் இருந்தாள். அப்பொழுதும் அவளுக்கு ஆதரவு தர செல்லம்மா இருக்கத்தான் செய்தார்..



“விரட்டி விடும்மா அவன. நாம் வளர்க்கலாம் இந்த பச்சை மண்ணை!” என்று வீராவேசமாகப் பேசினார். ஆனால் அந்த சுயநலக்காரனைப் பிடித்திருக்கிறது என்று வந்தவளுக்கு அவன் வழியும் பிடித்திருக்கும் தானே. எப்படித்தான் இந்த பச்சைமண்ணை விட்டுப் போனாளோ என்று என்றுமே செல்லம்மாவுக்குப் புரிந்ததில்லை. அதுவும் அந்த ஒரு வயதிலேயே, குட்டியாயிருந்த பாரதியை விட்டுவிட்டு போக எப்படி மனம் வரும்?



தன் கணவரைப் போன்ற திருத்தமான கண், மூக்கு என்று இருந்த பேத்தி, அன்று முதல் அவர் பெறாத பெண். கண்டக்டரின் விசில் சத்தம் பனையூர் வந்ததைத் தெரிவிக்க கண்களை மெதுவாகத் திறந்தார். ஒரு வயது குழந்தையை கையில் தாங்கியபோது அன்று நாற்பத்தைந்து வயதாயிருந்த செல்லம்மாவிற்கு பாரதி சுமையாகத் தெரியவில்லை. பெறாமல் பெற்ற பெண் என்றுதான் எண்ணினார். இன்றுவரை அப்படிதான் எண்ணுகிறார். எளிய உணவாலோ, கடின உழைப்பலோ, எண்பது வயதிற்கு மேல் சாதாரணமாக வாழும் மக்கள் நிறைந்த அந்த ஊரில் தன் பேத்தியின் எதிர்காலத்தைப் பற்றி பயந்ததுமில்லை, இந்த நோய் காணும் வரை.
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி 3




அவர்கள் கிராமம் ஒரு வானம் பார்த்த பூமி. மழை பெய்தால் பயிர்கள் தழைத்து வளரும். மழை இல்லை என்றால் உப்பு விளையும். இந்த வருடம் கடவுள் கண் திறந்து, அதில் கொஞ்சம் எல்லாமே பசுமையாக தெரிந்தன.

ஊருக்கு மத்தியில் இருந்தது இந்த கோயில். காமாட்சியம்மன் நடுவில் வீற்றிருக்க, இரண்டு பக்கமும் மாடசாமியும் கருப்பசாமியும் காவல் வீற்றிருந்தார்கள். இன்னும் சில நாட்களில் கும்பாபிஷேகம். அதற்கான வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன.

சந்தானம் அந்த ஊர் பெரிய மனிதர். பண்ணைக்காரர். எல்லோரையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தார். இந்தக் கோவில் திருவிழா எப்பொழுதுமே களை கட்டும். இந்த ஊரில் பூர்வீகம் கொண்டிருந்த பல குடும்பங்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பிழைப்பு தேடி சென்று, அங்கு செழிக்க, அதற்கு இந்த கிராம தேவதையின் அருள்தான் காரணம் என்று ஒரு நம்பிக்கை. வருடம் ஒருமுறை வந்து திருவிழாவை நல்லபடியாக நடத்துவார்கள். சென்னை, மதுரை, கோவை, இன்னும் வெளி மாநிலங்களில் கூட சில குடும்பங்கள் இருந்தன. அந்தத் தலை கட்டுகளில் எல்லாம் பெரிய தலை பரந்தாமன் குடும்பத்தினர். சில தலைமுறைகளுக்கு முன் சென்னை சென்று தொழில் தொடங்கி, அது செழித்தோங்க, அவர்கள் குடும்பத்தினர் வழிவழியாக இந்த கோவில் நடப்பு மற்றும் விழாக்களுக்கு முக்கிய கொடைக்காரர்கள். இந்த கும்பாபிஷேகத்திற்கும் கிட்டத்தட்ட முழுமையாக பணப் பொறுப்பை ஏற்றிருந்தார். ஊர் பெரியவர்களிடம் நல்ல மரியாதை.

“பரந்தாமன் சார் மட்டும் தான் வந்திருக்கிறார் போல?”

“பரந்தாமனின் மனைவி தேவகி அம்மாவுக்கு, பத்து நாட்களுக்கு முன்னால் இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. பயணம் நல்லதல்ல என்று மருத்துவர் சொல்லிவிட்டாராம். அவருக்குத் துணையாக சுந்தரி அம்மாவும் இருப்பதால் சார் மட்டும் வந்திருக்கிறார். பயணத்தினால் அசந்து தெரிந்தார். நான் தான் கொஞ்சம் ஓய்வு எடுத்து விட்டு வரச் சொல்லியிருக்கிறேன்”

“பாத்துப்பா. வீட்டில் இருந்து வரும்போது துணைக்கு நம்ம பையன் யாரையாவது அனுப்பு. போன முறை வந்தப்போ தானே அவரை வழிமறிச்சாங்க?”

“ஆமாண்ணே. நினைச்சாலே ஆத்திரமாக வருது. பயபுள்ளைக, குடிக்க காசில்லைன்னா அம்மா நகையிலேயே கை வைக்கப் பாத்திருக்காங்களே!”

“நல்ல வேளை! அந்த நேரம் செல்லம்மா அந்த பக்கம் வந்தாங்க.”

“ம்ம். ஆமாம். ஆனால் அவருக்கும் உடம்பு சரியில்லை போல. போன வாரம் ஒரு கம்மலைக் கொடுத்துட்டு காசு வாங்கி போச்சி”

மரத்தடியில்உருண்டு கொண்டிருந்த இருவரில் ஒருவரை பார்த்து, “எப்படித்தான் இவன் செல்லம்மாவிற்கு மகனாக பிறந்தானோ? அங்க இவன் பிள்ளைக்காகத்தான் அது தன்னால் மருவுது” என்று வாய்விட்டு கூறினார்.

“எப்போ ரெண்டு வயசு பிள்ளையை தூக்கிட்டு காசைக் கொடு, இல்லை கழுத்தை நெறிச்சிருவேன்னு மிரட்டினானோ, அன்னைக்கே அந்த அம்மா இவனை தண்ணி தெளிச்சி விட்டுருச்சிப்பா”. வீட்டுலயே சேர்க்கிறது இல்ல. அப்பவும் போன வாரம் அந்த ராணியிடம் போய் காசு கேட்டு ஒரே சண்டை.”

கோயிலைச் சுற்றி விழாவிற்கு வருபவர் உட்கார ஓலை வேய்ந்து கொண்டிருந்தார்கள். ஓலை போடுபவர்களுக்கு நடுவில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஓலையை ஒவ்வொருவராக போட்டி போட்டு எடுத்து வர, “மணி இதை ரகு அண்ணனிடம் கொடு! ஜோதி இதோ இதை, செந்தில் அண்ணாவிடம் கொடு!” என்று மத்தியஸ்தம் பண்ணிக் கொண்டிருந்தாள் பாரதி, நம் கதையின் நாயகி.

“என்னம்மா பாரதி, பாட்டி எப்படி இருக்காங்க?”

“இரண்டாவது தடவை மருந்து போட போயிருக்காங்க அண்ணா.”

“இன்னும் வரலையா?”

“போனமுறை பத்து நாளில் அனுப்பிட்டாங்க. இந்த முறை இன்னைக்கோட பதினைந்து நாளாச்சி.”

“அப்போ இன்னும் ரெண்டு நாளைக்கு எங்க வீட்டுக்கு வர முடியாதா?”

செல்லம்மா அவர்கள் வீட்டில் கூடமாட ஒத்தாசையாக இருப்பார்.

“வீட்டுக்கு வந்ததும் வருவாங்க அண்ணா.”

“ம்ம்ம்…”

மீண்டும் விளையாட்டை ஆரம்பித்தார்கள்.

பாரதி 10 வயது பெண். செல்லம்மாவின் பேத்தி. வேப்பங்குச்சியில் பச்சை மாறி காப்பி நிறம் கலக்கும் இடத்தில் ஒரு நிறம் வருமே அந்த நிறம். பெரிய கண்கள். சிரித்தால் என்னோடு சிரியேன் என்று அழைக்கும் தெளிவான கண்கள், லட்சணமான முகம்.

விளையாடி களைத்து, வீடு வரும்போது வீட்டு வாசலில் படுத்திருந்த பாட்டியை பார்த்ததும், “பாட்டி!” என்று ஓடி கட்டிக்கொண்டாள்.

இரண்டு வாரங்களாக செல்லம்மா இல்லாத நேரத்தில் நடந்ததையெல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தாள்.

இரவு, “சித்தி வீட்டுக்கு போய் சாப்பிட்டு வருகிறாயா?” என்று பாட்டி கேட்ட போது, “வேண்டாம்!” என்று சொல்லதான் வாயெடுத்தாள். ஆனால் களைத்திருந்த பாட்டியின் முகத்தைப் பார்த்ததும் குனிந்து, “சரி பாட்டி” என்று பாட்டிக்கு சாப்பாடு எடுத்து வர பாத்திரம் எடுத்து சென்றாள். இவர்கள் எதிர்வீடு தான் சித்தி வீடு.

ஆனால் இந்த முறை மருத்துவமனையிலிருந்து வந்து மூன்று நாட்களாகியும் இதே நிலைதான் தொடர்ந்தது. பாட்டியால் எழுந்து வேலை செய்ய முடியவில்லை. போன முறை வீடு வந்த போது எப்போதும் போல செய்தார். இந்த முறை இருமலும் அதிகம்.

“பாட்டி! மறுபடியும் ஆஸ்பத்திரிக்கு போலாமா?.. ரொம்ப இருமல் இருக்கே?”

“அது, இன்னும் ஒரு வாரத்தில் உனக்கு பரிட்சை முடியுதுல்ல. முடிந்ததும் உன்னையும் கூட்டிட்டு போறேன்.”

முகம் மலர, “சரி பாட்டி! நான் போய் கொஞ்ச நேரம் விளையாடிட்டு வர்றேன்” என்று ஓடினாள்.

எப்போதையும் விட அரைமணிநேரம் முன்னேயே இன்று பாரதி திரும்பி வந்தாள்,

“பாட்டி இன்னைக்கு நான் சோறாக்கவா?” என்றாள் தரையைப் பார்த்தபடி.

கண்கள் கூர்மையாக, “ஏன் அந்த சிறுக்கி ஏதாவது சொன்னாளா?..”

“இல்லை பாட்டி. சித்தி ஒண்ணும் சொல்லலை. நான்தான். எனக்கும் சமைக்கணும்னு ஆசையா இருக்கு.”

“இந்த வயசுல எப்படிம்மா நெருப்புல வேலை செய்வ?”

“பாத்து பத்திரமா செய்றேன்.”

“அனல் அடிக்குமே! சூடு தாங்க மாட்டியே!”

“அதெல்லாம் செய்ய செய்ய சரியாயிடும் பாட்டி.”

“அப்படின்னு அவள் சொன்னாளா?”

“அச்சச்சோ. அவங்க சொல்லலை.” முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு, “போ பாட்டி!” என்று கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த யூனிபார்மை மடிக்கலானாள்..

“சரி இரு. ஒரு ஆழாக்கு அரிசி தானே. பாட்டி கழுவி வைக்கிறேன்.” என்று கூறியவாரே எழுந்தவர், கால்கள் தடுமாற பக்கத்திலிருந்த தூணை பிடித்து மூச்சை உள்ளே இழுத்து விட்டார்.

பாரதிக்கு கோபம் வந்தது. “பாட்டி! ஏன் இப்படி பண்றீங்க? வேண்டாம். நீங்க சமைக்க வேண்டாம். நானும் சமைக்கலை. சித்தி வீட்டில் போய் சாப்பிட்டுட்டு உங்களுக்கும் எடுத்துட்டு வரேன். சரியா?”

முகம் இன்னும் நீளமாக, தூக்குச் சட்டியை எடுத்து அதன் மூடியைத் தேட ஆரம்பித்தாள். அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த செல்லம்மா, பெரிய மூச்சு ஒன்றை வெளியிட்டு மெதுவாகப் பேசினார்.

“பாரதி! உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம். பாட்டி அஞ்சு ரூபா தாரேன். நம்ம ரெண்டு பேருக்கும் இட்லி வாங்கிட்டு வர்றியா?”

சட்டென்று முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிய, “என் செல்ல பாட்டி!” என்று ஓடி வந்து அவரை அணைத்தவள், கன்னத்திலும் முத்தமிட்டாள்.

சிரித்துக்கொண்டே, “சீச்சி கழுதை! என்னடி பண்ற! விடு!” “அதெல்லாம் முடியாது! என் செல்ல பாட்டியை நான் என்ன வேணும்னாலும் செய்வேன்,” என்று மீண்டும் ஒருமுறை அவரை அணைத்து விட்டு அவர் தந்த ஐந்து ரூபாயை தூக்கிக்கொண்டு கடைக்கு சிட்டாகப் பறந்தாள்.

 
Top