All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நரகத்தில் ஒரு நாள் - சிறுகதை

Numa

Active member
காலைக் கதிரவன் அந்த அறையை அழகாக அலங்கரித்திருந்த திரைச்சீலையையும் மீறி அங்கிருந்த இலவம் பஞ்சு மெத்தையில் தன்னை புதைத்துக் கொண்டு ஆழ்ந்த நித்திரையில் வீழ்ந்திருந்த அவனின் முகத்தில் பட்டுத் தெரித்தது.

அதில் துயில் கலைந்த அவன் கண்ணைக் கசக்கிக் கொண்டே காலையில் எழுந்ததும் அனைவரும் பண்ண வேண்டிய அந்த அதி முக்கியமான வேலையை முதலில் செய்தான்.

இந்தக் காலத்தில் காலையில் எழுந்ததும் பல் துலக்கி ,காலைக் கடன் முடித்து,முகம் கழுவி சூரிய நமஸ்காரம் செய்வதை விட மிகவும் முக்கியம் மற்றும் அவசியமான வேலை, எழுந்ததும் கைபேசியில் முகத்தை முழிப்பது என்றாகிப் போனது.

அதற்கு அவனும் விதிவிலக்கல்ல.கண்ணை மூடிக் கொண்டே தன் கைபேசியை துலவியவன் அது சிக்கியதும் என்றைக்கும் போல் வால்பேப்பரில் உள்ள தன் செல்ல மகளின் போட்டோவை கண்டு அந்த நாளை தொடங்க விரும்பி ஆசையாக திரையை பார்க்க,அங்கே மகளின் புகைப்படத்தைக் காணாமல் வெறும் கருப்பு திரையை கண்டு அதிர்ச்சி அடைந்தான். கண்ணை கசக்கி கொண்டு எழுந்தமர்ந்தவன் மீண்டும் நன்றாக உற்று பார்த்தான்.

அப்போதும் அதுவே தெரிய 'என்னாச்சு போனுக்கு இந்த பாப்பு குட்டி போனை போட்டு உடைச்சிருச்சோ..இருக்கும் இருக்கும் அவளுக்கு இதே வேலையா போச்சு எப்ப பாரு என்னை கடுப்பேத்துறதே வேலையா வச்சிருக்கா..பின்ன அம்மா மாதிரி தான மகளும் இருப்பா' என நினைத்தவன் போனுக்கு ஏதாவது ஆகியிருக்கிறதா என சரி பார்த்தான்.

போன் நன்றாக தான் வேலை செய்தது..ஆனால் அதில் இருந்த தன் அம்மா,மனைவி,மகள்,தோழி ,சகோதரிகளின் புகைப்படங்கள் மட்டும் காணாமல் போயிருந்ததைக் கண்டு குழம்பியவன்,

'என்னடா இது புது சாஃப்ட்வேர் கண்டுபிடிச்சுடானுங்களோ பொண்ணுங்க போட்டோ மட்டும் அதுவே டெலிட் ஆகுற மாதிரி..போனுக்கு கூட தெரிஞ்சிருக்கு பொண்ணுங்க இல்லைன்னா உலகம் நல்லா இருக்கும்னு ஆனா இந்த கடவுளுக்கு மட்டும் தெரியலை..' என புலம்பிக் கொண்டு கட்டிலை விட்டு எழப்போக,திடீரென்று அந்த அறையெங்கும் கண்ணைக் கூச வைக்கும் அளவு ஒளி பரவியது.

"கல்பாக்கத்துல இருந்து வர மொத்த கரெண்டையும் எவன் டா என் ரூம் ட்யூப் லைட்க்கு கனெக்ஷ்ன் கொடுத்தது..இப்படி கண்ணு கூசுது" என புலம்பியவன் தன் கண்ணாடியை தேடி எடுத்து அணிந்தான்.

அப்போது அந்த ஒளியில் இருந்து நான்கு முகம் கொண்ட பிரம்மன் தேஜஸ் நிறந்த முகமும்,இதழில் நிறைந்த சிரிப்போடும் தோன்றினார்.

அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தவன் ,'யாருடா இது கோவில்ல வேசம் போட போய்ட்டு மேக்கப் கூட கலைக்காம என் பெட்ரூம்க்குள்ள வந்து நிக்கிறாரு..என் அருமை பொண்டாட்டி இவரை உள்ள விட்டுட்டு அவ என்ன பண்ணிகிட்டு இருக்கா' என சிந்தித்தவன்,

"யாரு நீங்க??? என் ரூம்ல என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க?" என்று வினவினான்.

"குழந்தாய் நானே உன்னை படைத்தவன் ஆவேன்" என்று பதிலளித்தவரை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தவன்,

ஒரு வழியாக சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு "யோவ் தகப்பா இதென்ன வேஷம் !! என்ன விழா நடக்குதுனு இப்படி மாறுவேடப் போட்டிக்கு ரெடி ஆய்ருக்க?? உன்ன பார்க்க சிப்பு சிப்பா வருது..முதல்ல போய் இந்த மேக்கப் அஹ் கலைச்சிட்டு வா" என சிரித்தவனை முறைத்த பிரம்மர்,"நான் இவ்வுலகில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளையும் படைக்கும் பிரம்மன் ஆவேன். உன்னை பெற்ற தகப்பன் அல்ல .. முதலில் நகைப்பதை நிறுத்து முட்டாள் மானிடா!!" என்று கூறினார்.

அவரை நம்பாமல் அவரை சுற்றி சுற்றி வந்தவன் ஒவ்வொரு தலையாக தொட்டு பார்த்து இது அனைத்தும் மேக்கப் அல்ல நிஜம் என்றுணர்ந்தவன் அதிர்ச்சியில் தலைகால் புரியாமல் ,"பிரம்மாஆஆஆ!!! நீங்க என்ன தேடி வந்துருக்கீங்களா ..அய்யோ நம்பவே முடியலையே .." என்று துள்ளி குதித்தவனை அடக்கியவர் ,"இந்தாப்பா கம்முனு கெட..எனக்கு இன்னும் ஆயிரம் ஜோலி கிடக்கு..வந்த மேட்டர சொல்லிட்டு கிளம்பணும்" என்று மெட்ராஸ் பாஷையில் பேசிய பிரம்மனை கண்டு திகைத்தவன்,"என்ன கடவுளே இப்படி கலீஜ் அஹ் பேசுறீங்க? அப்போ நீங்களும் எங்களை மாதிரி தான் பேசுவீங்களா ??தமிழ் படத்தை பார்த்து நான் கூட நீங்க தூய தமிழ்ல பேசுவீங்க அதை Translate பண்ண U-dictionary app டவுன்லோட் பண்ணனுமோன்னு நினைச்சேன்" என்று நிம்மதி பெருமூச்சு விட்டான்.

"அய்யோ சாரி பா உன் கிட்ட வரதுக்கு முன்னாடி சைதாப்பேட்டை கூவத்துக்கு போய்ருந்தேன்.அப்படியே ஒட்டிக்கிச்சு..சரி அத விடு நான் வந்த மேட்டர் என்னனா..இந்த உலகத்துல இருக்க ஆம்பளைங்கெல்லாம் பொண்ணுங்களே இல்லாத உலகத்துல என்னை படைச்சிருக்க வேண்டி தானன்னு எப்ப பாரு என்னை கூப்பிட்டு நை நைன்னு டிஸ்டர்ப் பண்ணி கிட்டே இருந்ததுனால..உங்களுக்கெல்லாம் இன்னைக்கு ஒரு நாள் பொண்ணுங்களே இல்லாத உலகத்தை காட்டலாம்னு ப்ளான் பண்ணிருக்கேன்..இன்னைக்கு ஒரு நாள் பொண்ணுங்கன்னு எழுத்து கூட உங்க கண்ணுல படாது..சோ இனிமேல் யாரும் என்ன தொல்லை பண்ண கூடாது..சரியா!!..இதை போய் நான் எல்லார்கிட்டயும் சொல்லனும்..i'm so busy you know ..so ..டாட்டா சி யூ லேட்டர்" என்று கூறியவர் அப்படியே அந்த அறையில் இருந்து மின்னல் போல் மறைந்தார்.

ஒரு நிமிடம் என்ன நடந்ததென்றே புரியாமல் முழித்தவன் பின் அவர் கூறி சென்றது புரிய ,மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போய் "ஐய்யா ஜாலி இன்னைக்கு ஃபுல்லா நிம்மதியா இருக்க போறேன்..எந்த தொல்லையும் இருக்காது ..அய்யோ நினைக்கும் போதே குஜாலா இருக்கே...இன்னைக்கு எனக்கு நிம்மதி !!! நிம்மதியோ நிம்மதி!!! நிம்மதிக்கெல்லாம் நிம்மதி!!" என்று சின்சான் போல் குத்தாட்டம் போட்டான்.

பின் பல் துலக்கி ,காலைக் கடன்களை முடித்துவிட்டு வந்தவன் ,மனைவியின் தயவால் தினமும் காலையில் ஃபில்டர் காப்பிக்கு பழகிய நாவை அடக்க வழி தெரியாமல் தானே களத்தில் குதித்து விடுவது என முடிவெடுத்து அடுப்பறைக்குள் நுழைந்தான்.

உள்ளே நுழைந்தவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை..ஃப்ரிட்ஜை திறந்தவன் பாக்கெட் பால் என்பதால் எந்த சிரமமும் இன்றி அதை எடுத்து விட்டு,காபி தூளை தேட அலமாரியை திறந்தான்.திறந்தவன் அங்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஓரே மாதிரியான டப்பாக்களை கண்டு திகைத்து,'அய்யய்யோ என்னது இது எல்லாமே எந்திரன் ரோபோ ரஜினி போல ஒரே மாதிரி இருக்கு இதுல அந்த கருப்பு ஆடை(காபித்தூள்) எப்படி கண்டுபிடிக்க..இது கண்டுபிடிச்சு காபி போடுறதுக்குள்ள என் டங்குவாரு அந்துரும்..என்ன பண்ணலாம் இப்போ!!!!.." என்று சிந்தித்தவன் அங்கிருந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை கண்டு," ஐய் பாப்புகுட்டியோட ஹார்லிக்ஸ் டப்பா இருக்கே..சோ இன்னைக்கு அதேயே மூக்கை மூடிகிட்டு குடிச்சிருவோம்..மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சு " என பாடிக் கொண்டே பாலை அடுப்பில் வைத்து ஹார்லிக்ஸ் டப்பாவை தலை குப்பற கவுத்தினான்.

'சுகர்லாம் போடுவாங்களா ஹார்லிக்ஸ்ல??? அதுலயே இருக்கும்ல இந்த கூட்டத்துல அத எங்க போய் தேட இப்படியே உள்ள தள்ளுவோம்' என நினைத்துக் கொண்டிருக்கும் போதே பால் பொங்கி வெள்ளம் ஓடியது..

"சோனமுத்தா போச்சா" என வடிவேல் ஸ்டைலில் புலம்பியவன் ,"இத க்ளீன் பண்ணுறதுக்குள்ள நாக்கு தள்ளிரும் சோ நாம மிச்சம் இருக்க பாலை குடிச்சிட்டு கிளம்பிர வேண்டியதான்" என்று கூறிக்கொண்டே பால் கிண்ணத்தை துணியில்லாமல் தொட்டுவிட ,சூட்டில் கை சிவந்து போய் விட்டது.."அய்யோ அம்மா...எரியுது மா இங்க வாங்க ஷ் ஷ்" என கையை ஊதிக் கொண்டே கத்தினான்.

அப்போது தான் பிரம்மன் சொன்னது நினைவில் வர ,"அவங்க இல்லைனா என்ன ப்பூனு ஊதுனா சரியா போய்ரும் .." என்று கெத்தாக கூறிக் கொண்டே டேப்பை திருகி விட்டு குளிர்ந்த நீரில் கையை சில நிமிடம் வைத்தான்.இப்போது சற்று தேவலாம் என்று தோன்ற இந்த முறை ஜாக்கிரதையாக துணியை வைத்து பால் கிண்ணத்தை இறக்கி பாலை டம்ளரில் ஊற்றினான்.

தானே போட்ட ஹார்லிக்சை ஆசையாக பார்த்துக் கொண்டே முதல் வாயை குடித்தவன் ,குமட்டிக் கொண்டு வர அப்படியே வாஷ் பேஷினில் போய் அனைத்தையும் துப்பி விட்டு முகத்தை கழுவியவன்,

"சை ஹார்லிக்ஸ் என்ன கவர்மென்ட் கக்கூஸ் மாதிரி இவ்ளோ கன்றாவியா இருக்கு" என நினைத்தவனின் மனக்கண்ணில் திருமணம் முடிந்து வந்த புதிதில் தன் மனைவி போட்டு வந்த காபியில் சர்க்கரை சிறிது கம்மியாக இருந்ததால் அவளை "ஒரு காபி கூட போட தெரியாதா " என்று கிண்டல் செய்து சிரித்தது தோன்றி மறைந்தது.

"நான் இன்னைக்கு தான முதல் தடவை பண்றேன் அதான் சொதப்பிருச்சு இல்லைனா செமயா பண்ணிருப்பேன்" என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான்.

அப்போது உள்ளே இருந்து எட்டிப் பார்த்த மனசாட்சி ,"அவ கூட தான் பிறந்ததுல இருந்து அவங்க வீட்டுல மகாராணியா வாழ்ந்துட்டு இங்க வந்து உனக்காக முதன் முதலா சமைக்க கத்துகிட்டா " என்று நியாயம் கேட்க ,"ச்சு போ எனக்கு டைம் ஆச்சு ஆபிஸுக்கு நான் கிளம்பனும்" என தன் பெட்ரூமை நோக்கி ஓடினான்.

குளித்து முடித்து வந்தவன் எப்போதும் தன் மனைவி பெட்டில் தனக்காக எடுத்து வைக்கும் உடையை இன்று காணாது முகம் வாடியவன் பின் ,"அவ எடுத்துக் குடுக்கலைனா எனக்கு ட்ரெஸ் செலக்ட் பண்ண தெரியாதா அவ செலக்ஷன்ன விட என்னது தான் சூப்பரா இருக்கும் இன்னைக்கு நான் போட்டுட்டு போறதுல பொண்ணுங்க எல்லாம் வாயை பொலந்துட்டு என்னை சைட் அடிக்க போறாங்க ..அய்யய்யோ அதான் பொண்ணுங்களே இருக்க மாட்டாங்கள ...அடச்சீ இது வேற கஜினி சூர்யா மாதிரி அடிக்கடி மறந்து போய்ருது " என தனக்குத்தானே பேசிக் கொண்டு வார்ட்ரோபை திறந்து என்ன அணிவது என அரைமணி நேரமாக யோசித்தான்.

"ச்சை அனுஷ்கா ஷர்மா கூட அவங்க கல்யாண லெஹங்கா எடுக்க இவ்ளோ நேரம் யோசிச்சிருக்க மாட்டாங்க என்ன பொழப்பு டா இது" என நொந்து கொண்டு ஏதோ ஒரு சட்டை பேண்ட்டை எடுத்து அணிய ஆரம்பித்தான்.

"என் பாசமலர் இருந்துச்சுனா இந்நேரம் நல்லா இஸ்திரி போட்டு கொடுத்துருக்கும் திட்டிகிட்டேவாச்சும்..அதுவும் போச்சா" என நொந்து கொண்டே ஒரு வழியாக கிளம்பி கீழே வந்தவனுக்கு பசி வயிற்றை கிள்ளியது.

பசிக்கும் முன்பே பாசத்தோடு உணவுத்தட்டை கைகளில் ஏந்திக் கொண்டு "சாப்பிட்டு வேலை பாரு கண்ணா உடம்பை கெடுத்துக்காத" என்று அன்பொழுக கூறும் அன்னையின் பிம்பம் கண்முன் தோன்றி மறைந்து மனதை பாரமாக்கியது.

முயன்று தன்னை சமாளித்துக் கொண்டவன் கார் சாவியை எங்கு வைத்தோம் என தேடுகிறேன் என்று வீட்டை நாசமாக்கினான்.

"ஷிட்!!" என்று சுவற்றில் ஓங்கி குத்தியவன் ,"எப்படிடி பொண்டாட்டி நீ மட்டும் என் ஷாக்ஸ் ,ஷூ ,சாவி எல்லாம் நான் எங்க தூக்கி போட்டாலும் ரெண்டு நிமிஷத்துல கண்டுபிடிச்சு கொண்டு வந்த..அந்த ரெண்டு நிமிஷம் கூட காத்திருக்க பொறுமை இல்லாம உன்னை எவ்ளோ நாள் திட்டிருக்கேன்..சாரி டி" என மானசீகமாய் தன் மனைவியிடம் மன்னிப்பு கோரியவன் பின் பொறுமையாக சாவியை தேடினான்..பின்பு ஒரு வழியாக கண்டுபிடித்து கதவை பூட்டிவிட்டு வாசலுக்கு விரைந்தான்.

வாசலை பூட்டி விட்டு நிமிர்ந்தவன் தினமும் தன் கன்னத்தில் முத்தம் கொடுத்து வழியனுப்பும் தன் மகளையும் ,மகளுக்கு திருப்பி கொடுக்கும் சாக்கில் மகளை வைத்திருக்கும் அவள் அன்னைக்கும் முத்தம் கொடுக்கும் தன்னை செல்ல கோபத்தோடு வழியனுப்பும் தன் மனையாளும் இல்லாமல் முகம் வாட, கடுப்போடு காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.

காரில் இருந்த அமைதி அவனை கொல்லாமல் கொல்ல, என்றும் தன்னுடன் தொனதொனத்துக் கொண்டு கல்லூரிக்கு செல்லும் தன் தங்கை இல்லாததால் அந்த பயணத்தை அரவே வெறுத்தான்.

"இதென்ன வாயா இல்ல கார்ப்பரேஷன் வாட்டர் லாரியா திறந்தா மூடவே மாட்டேங்குற..கொஞ்ச நேரம் வாய மூடிட்டு வந்து தொலை ..காதெல்லாம் வலிக்கிது" என்று தங்கையிடம் எரிந்து விழுந்தது நினைவில் வந்து அவனை இம்சிக்க , Music playerஐ ஆன் செய்து பாடலை ஒலிக்க விட்டான்..

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல அதில் மேயாத மான் படத்திலிருந்து 'தங்கச்சி' பாடல் ஒலிக்க,நொந்து போனவன் அதை அணைத்து விட்டு வேகமாக காரை அலுவலகம் நோக்கி செலுத்தினான்.

40 நிமிடத்தில் வரவேண்டிய தூரத்தை 25 நிமிடங்களிலே அடைந்தவன் பார்க்கிங்கில் வந்து காரை நிறுத்திவிட்டு , வேக எட்டுக்களுடன் தன் கேபினை நோக்கி சென்றான்.

என்றும் தான் வந்ததும் தன்னை வந்து கலாய்த்து கடுப்பேத்தி விட்டே அடுத்த வேலையை பார்க்க செல்லும் தோழியை காணாமல் கடுப்பாகியவன் ,"அட பிரம்மா அவளாம் பொண்ணே இல்லை அவளையும் ஏன் இப்படி ஒளிச்சு வச்சிருக்க..??" என்று மேலே பார்த்து கேக்க,

உள்ளிருந்து எட்டிப்பார்த்த மனசாட்சி ,"பாஸ் for your kind information உனக்கு மட்டும் தான் அவ பொண்ணா தெரியலை மத்த படி அவ பொண்ணு தான்" என்று அவனுக்கு நினைவு படுத்த ,

"உன்ன இப்போ எவனாச்சும் கூப்பிட்டாங்களா ஒழுங்க என் கிட்ட அடி வாங்கி சாகாம ஓடி போய்ரு" என அதை அடக்கியவன் தன் கேபினுள் சென்று அமர்ந்து,

வேறெதையும் பற்றி சிந்திக்காமல் தன் கவனத்தை வேலையில் திருப்ப முயன்றவன் ஒரு வழியாக அதில் வெற்றியும் கண்டான்.

தன் மனதை திசை திருப்ப முடிந்த அவனால் பாவம் வயிரை கட்டுப்படுத்த முடியவில்லை.

உள்ளே பாத்திரம் உருளும் சப்தமெல்லாம் கேக்க ,"என்ன டா வயித்துக்குள்ள என்னைய கேக்காமயே எவனோ கச்சேரி நடத்திட்டு இருக்கான்.பெரிய ட்ரம்ஸ் ப்ளேயரா இருப்பானோ இந்த தட்டு தட்டுறான்..இப்ப சோத்த போட்டு அவன ஆஃப் பண்ணலைனா சப்தம் போட்டு ஊரையே கூட்டிருவான்" என நினைத்தவன் சாப்பாடு பையை தேட ,"கடவுளே என் பொண்டாட்டி கிட்ட இருந்து சோறு மட்டுமாச்சும் பார்சல் பண்ணி அனுப்ப சொல்லுங்க ப்ளீஸ்..என்னால அந்த கேன்டீன்ல காஞ்சு போன ரொட்டியலாம் திங்க முடியாது " என வேண்டுகோள் விடுத்தான்.

அந்தோ பரிதாபம் அவன் வேண்டுகோளை வேஸ்ட் பேப்பர் போல் கடவுள் அவனிடமே தூக்கி எரிந்து விட, அன்று தன் அன்னையிடம் நக்கலாக,"இந்த காலத்துல எவனாச்சும் போய் சாப்பாடு எடுத்துட்டு போவானா மாம் என் கவுரவம் என்னாகுறது.." என்று பேசியது நினைவில் வந்து போனது.

தான் என்னதான் கிண்டல் செய்தாலும் அதெல்லாம் சட்டை செய்யாமல் தனக்கு பிடித்த பதார்த்தங்களை பார்த்து பார்த்து சமைத்து தனக்கு வைத்துவிடும் அன்னையின் அன்புக்கு மனம் ஏங்கியது.

"இன்னைக்கு காஞ்சு போன ரொட்டி தான்னு என் தலைல எழுதிருக்கப்போ அத எவனால மாத்த முடியும்" என தன் விதியை நொந்து கொண்டே கேன்டீனுக்கு சென்று அந்த தீஞ்சு போன பன்னை கொறித்தவன்,பாதி மட்டும் உண்டு விட்டு மிச்ச வயிற்றுக்கு தண்ணீரை நிரப்பிக் கொண்டு தன் கேபினுக்கு வந்தமர்ந்தான்.

தனக்கு அழைப்பு ஏதும் வந்திருக்கிறதா என கைபேசியை எடுத்தவன் அதில் "no new notification" என்று கொட்டை எழுத்தில் அது காண்பிக்க கடுப்பாகி செல்போனை டேபிலில் தூக்கி எறிந்தான்.

தினமும் சரியாக 1.30க்கு கால் செய்து தான் உண்டு விட்டேனா இல்லையா என உறுதி படுத்திக் கொள்ளும் மனைவியின் செய்கையில் முன்பு எரிச்சல் அடைந்தவன் , இன்று அதற்காக ஏங்கினான்.

"இது சரிப்பட்டு வராது முதல்ல வேலைய பாரு " என மீண்டும் தன் மனதை வேலையில் செலுத்தியவன் மாலை மேனேஜர் அழைப்பதாக ப்யூன் வந்து கூறியதும் தான் நிமிர்ந்தான்.

பின் அவர் கேட்ட பைல்களை எடுத்துக் கொண்டு அவர் அறைக்கு செல்ல, அங்கே அவரும் அவர் மனைவி,குழந்தைகள் இல்லாமல் கடுப்பில் இருந்தவர் இவன் என்றோ செய்த சின்ன தவறுக்கு இன்று காய்ச்சி எடுத்து விட்டார்.

உள்ளே கோபம் கனன்றாலும் எதுவும் காட்டிக் கொள்ளாமல் வெளியேறியவன் ,"இனிமேல் ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க முடியாது கிளப்பு டா வண்டியை" என்று கூறிக் கொண்டே தன் பையை எடுத்துக் கொண்டு காருக்கு சென்றவன் ,வேகமாக காரை வீடு நோக்கி விரட்டினான்.


வீட்டிற்கு வந்தவனுக்கு வீட்டின் வெறுமை முகத்தில் அரைய அப்படியே அயர்ந்து போய் சோபாவில் அமர்ந்து விட்டான்.

வீடு காலையில் எந்த நிலையில் விட்டு சென்றானோ அதே போல் அலங்கோலமாக இருந்தது.

வீட்டில் தான் வந்ததும் முகத்தில் வந்து நுழையும் காபி,பலகார வாசனை நாசியை வந்து தீண்டவில்லை.

தன் கார் அந்த வீதிக்குள் நுழைந்தாலே வாசலில் வந்து தன்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வரவேற்கும் மகளின் கொஞ்சல் மொழிகள் கேட்கவில்லை.

உள்ளே நுழைந்ததும் தன்னை சுத்தப்படுத்த அனுப்பி விட்டு வாயிலிலே முகத்தில் புன்னகையும் கைகளில் காபியோடும் நிற்கும் தன் மனைவியை காணவில்லை.

தன் முகத்தை வைத்தே தன் சோர்வை கண்டுபிடித்து தன் தலையை மடியில் வைத்து ஆதரவாக தடவி கொடுக்கும் அன்னையின் விரல்களைக் காணவில்லை.

அவளுக்கென்று தனியாக பலகாரம் கொடுத்தாலும் தன்னுடன் பங்கு போட்டு வம்பிழுத்து சண்டை போடும் தங்கையின் சிணுங்கல் ஒலி கேட்கவில்லை.

துக்கம் தொண்டையை அடைத்தது..ஓவென்று கதற வேண்டும் போல் தோன்றியது..




அந்த இடத்தில் இருப்பதே மூச்சு முட்ட வேகமாக எழுந்து மொட்டை மாடிக்கு ஓடியவன்,

"யோவ் பிரம்மா எங்கயா இருக்க??? " என்று பைத்தியம் பிடித்தவனை போல் கத்தினான்.

அப்போது அதே புன்சிரிப்போடு அவன் முன் தோன்றியவர் ,"என்ன குழந்தாய்,பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருந்தது??" என வினவினார்.

"நரகத்தை விட கொடூரமா இருந்துச்சு..உன்ன யாருயா இப்படி விபரீதமா முடிவெடுக்க சொன்னா ஒழுங்கா பழைய உலகமா மாத்துயா..இன்னும் ஒரு நிமிஷம் இங்க இருந்தா கூட பைத்தியம் பிடிச்சு செத்திருவேன்" என்று கத்தினான்.

இன்னும் புன்னகை குறையாமல் அவனை நோக்கியவர்,"இந்த மானிடர்கள் தான் பெண்கள் இல்லாத உலகத்தில் என்னை படைத்திருக்க கூடாதா என என்னை தினமும் கடிந்து கொண்டனர்..அதற்காகவே உங்களுக்கு பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும் என காட்டினேன்..இனிமேல் என்னை தொந்தரவு செய்ய மாட்டீர்கள் தானே" என வினவினார்.

"அய்யோ சத்தியமா அப்படி நினைக்க கூட மாட்டோம்..இப்ப தான் எனக்கு புரியுது..அவங்க கூடவே இருக்கப்போ அவங்க அருமை எனக்கு புரியலை..அவங்க இல்லாம நாங்க இல்லைன்னு நல்லா புரிய வச்சுட்ட ரொம்ப தேங்க்ஸ் பிரம்மா" என்று நெகிழ்ச்சியான குரலில் கூறியவனை பார்த்து அதே புன்னகையோடு அவ்விடத்தை விட்டு மறைந்தார்.


"பிரம்மா எங்க போன யோவ் வாய்யா எங்கயா போன" என கத்திக் கொண்டிருந்தவன் மூக்கை ஒரு பிஞ்சு விரல் பிடித்து ஆட்டியது.


அடித்துப் பிடித்து எழுந்தவன்,தன் மகள் தன் நெஞ்சத்தில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதை கண்டவன் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போய் அவளை அணைத்து முத்த மழையை பொழிந்து கொண்டே ,"பாப்பு அப்பா கிட்ட வந்துட்டீங்களா என்ன விட்டு எங்கேயும் போய்ராத டா,இனிமேல் டெய்லி நான் வேலை பார்க்குறப்போ என் கிட்ட விளையாண்டா அப்பா அதை தொந்தரவா எடுத்து உங்களை திட்ட மாட்டேன்..அப்பாக்கு தலைவலினா ஓடி வந்து தலைல முத்தா வைச்சு சரி பண்ணுவீங்கள அதே மாதிரி பண்றீங்களா அப்பாக்கு தலையெல்லாம் வலிக்கிது டா பாப்பு "என ஏதேதோ பிதற்றிக் கொண்டிருந்தான்.

அவன் செய்கையை குழப்பத்தோடு பார்த்த அவன் மனையாள்,அவன் அருகில் வந்து அவனை உலுக்கினாள்,"என்னங்க என்னாச்சு உங்களுக்கு பாப்புவ விடுங்க மூச்சு முட்டப் போகுது அவளுக்கு" என இருவரையும் பிரித்தாள்.

தன் மனைவியை பார்த்தவன் அவளையும் கட்டிக் கொண்டு ,"சாரி டா செல்லம் உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்..எனக்காக உங்க வீட்ட விட்டு வந்து,எனக்காக சமைக்க கத்துகிட்டு,வேலைக்கும் போய் என்னையும் பாப்பாவையும் பார்த்துகிட்டு வீட்டையும் பார்த்துகிட்டு எவ்ளோ கஷ்டப்பட்டாலும் சிரிச்சுகிட்டே இருக்கியே பட்டு..உன்ன நான் புரிஞ்சுக்கவே இல்லை..சாரி டி ..இனிமேல் உன்னோட எல்லா வேலைலையும் நான் ஹெல்ப் பண்ணுவேன் கண்டிப்பா ..உன் கிட்ட கோப படவே மாட்டேன் ..ஐ லவ் யூ சோ மச் பொண்டாட்டி" என இறுக்கி கட்டி கொண்டான்.

'அய்யோ என்னாச்சு இவருக்கு தூங்கிட்டு தான இருந்தாரு இப்படி திடீர்னு ஏதேதோ புலம்புறாரு' என நினைத்தவள் என்னவென்று தெரியாத போதும் அவன் முதுகை வருடி கொடுத்து சமாதானப் படுத்தினாள்.

அதற்குள் இவனின் பிதற்றல் கேட்டு பக்கத்து அறையில் இருந்து வந்த தன் அன்னையை கண்டவன் நேராக சென்று அவர் காலில் விழுந்து,"என்னை மன்னிச்சிரு மா ..நான் உனக்கு ஒரு நல்ல புள்ளையாவே இல்லை..உன்னோட பாசத்தை புரிஞ்சுக்கவே இல்லை மா..உன்ன எப்பபாரு வெட்டியாவே இருக்கன்னு கிண்டல் பண்ணிருக்கேன்..ஆனா இப்போ தான் புரியுது..நீ உண்மையாவே வெட்டியா இருந்தா இந்த வீடு வீடா இருக்காது...இந்த செங்கல் மண்ணை வீடா மாத்தியது நீ தான் அம்மா...என்ன மன்னிச்சிரு மா ..என்ன விட்டு போய்றாதமா " என்று புலம்பியவனை தூக்கி நிறுத்தியவர் ," என் செல்லக் கண்ணனுக்கு என்னாச்சு..கெட்ட கனவு எதும் கண்டியா இருடா கண்ணா அம்மா உனக்கு சூடா காபி போட்டு எடுத்துட்டு வரேன்..இப்படி பொலம்பாத..அம்மா போய் என்னைக்காச்சும் பிள்ளை மேல கோச்சுப்பாங்களா..எதும் குழம்பாம போய் முகம் கழுவிட்டு வா" என பாசமாக கூறினார்.

"அம்மானா அம்மா தான்" என அவர் கன்னத்தில் இதழ் பதித்தவன்..அப்போது தான் தன்னை பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்த தங்கையையும், விடுமுறை தினமாதலால் பாப்பு குட்டியை பார்க்க வந்திருந்த தோழியையும் கண்டவன் முதலில் தங்கையிடம் சென்று அவள் காதைப் பிடித்து திருகியவன்,"ஹேய் வாலு இனிமேல் என் கிட்ட பேசாம எங்கயாச்சும் போன உன்ன கொன்றுவேன்" என மிரட்டினான்.

பின் தோழியிடம் சென்று ,"நீயும் என்னை கலாய்க்காம எங்க போன..ஆமா நீ கூட எப்போ பொண்ணா மாறுனா??" என்று கேட்டானே ஒரு கேள்வி,அவன் மண்டையிலே நங்கென்று அவள் கொட்டி ,"எருமை என்னை பார்த்தா உனக்கு பொண்ணா தெரியலையா??..நான் எங்க போனேன் என்ன உளர்ற??" என குழப்பத்தோடு வினவினாள்.

அவன் தங்கையோ 'இவன் என்ன லூசா ' எனபது போல் ஒரு பார்வை பார்த்தவள் " உனக்கு என்ன தூக்கத்துல பைத்தியம் பிடிச்சிருச்சா எதுக்கு இப்படி ஃபிலிம் காட்டிட்டு இருக்க " என கிண்டல் செய்தாள்.

அப்போது ஓரளவிற்கு தெளிந்திருந்தவன் ,'ஓ அப்போ அதெல்லாம் கனவா ..அப்பாடி என்ன ஒரு டெர்ரரான கனவு..அப்படி மட்டும் உண்மையிலே நடந்துச்சுனா நம்ம பொலப்பு நாறி போய்ருக்கும் நாறி!! நல்ல வேளை தப்பிச்சோம்..அய்யோ இந்த குட்டி பிசாசு வேற இப்படி பார்க்குதே ஏதாச்சும் சொல்லி சமாளி டா' என மூளை அறிவுருத்த,

"இன்னைக்கு மகளிர் தினம் இல்ல" என்று கேட்டவனை முறைத்தவள் ,"இல்லையே" என புருவத்தை ஏற்றி இறக்கினாள்.

"அதைத்தான் நானும் சொல்றேன்..இன்னைக்கு மகளிர் தினம் இல்லை..மகளிர் தினத்தன்னைக்கு தான் மகளிரை பாராட்டனும்னு இல்லை டெய்லி பாராட்டலாம்..அதைத்தான் நான் பண்னேன் எதுவும் லூசு மாதிரி உளராம போ போய் படிக்கிற வழியை பாரு " என அவள் மண்டையில் கொட்டினான்.

அவனை திட்டிக் கொண்டே நகரப்போனவளை தடுத்தவன் ,"நாமெல்லாம் சேர்ந்து ஒரு செல்பி எடுத்துக்கலாமா" என்று கேட்டான்.

"அப்போ எனக்கு நைட் ரெண்டு குல்பி வாங்கி தர்றியா??" என ஆவலோடு தங்கை வினவ, தோழியும் ,"ஆமா ஆமா எனக்கும்..குரங்கு கூட லாம் செல்பி எடுக்க எங்களுக்கு கமிஷென் வேண்டும்" எனக்கூறி இருவரும் ஹைபை அடித்துக் கொள்ள,

அவனின் குட்டி மகளுக்கு என்ன புரிந்ததோ,"நானு நானு எனக்கு வேணு" என மூக்கை சுருக்கி வினவிய அழகில் மயங்கியவன் அவளை தூக்கி முத்தம் வைத்து ,"எல்லாருக்குமே என்னோட கார்ட்ல இருக்க காசை காலி பண்ணியாச்சும் வாங்கி தந்து தொலைக்கிறேன் வந்து நில்லுங்க" என சிரிப்போடு அவன் கூறினான்.

அனைவரும் புன்னகையோடு சம்மதிக்க ,அழகாக ஒரு செல்பி எடுத்தவன் அதை முகநூலில் பதிவிட்டான் "என் வாழ்வை முழுமை படுத்திய என் மனிதிகள் " என்கிற தலைப்போடு.


உன் கள்ளமில்லா சிரிப்பில் கல்லைக் கூட கரைத்து விடுகிறாய்

உன் பிஞ்சு விரல் தீண்டலிலே மனமெல்லாம் பஞ்சு போல் லேசாகிறது

உன் 'அப்பா' என்கிற வார்த்தை சிறகில்லாமல் என்னை விண்ணில் பறக்க செய்கிறது

உன் வரவால் என் வாழ்க்கையை வசந்தமாக்கிய தென்றலே

மகளாகிய என் சின்னத்தாயே



எங்கிருந்தோ எனக்கென வந்த தேவதையே

வெள்ளை காகிதமாய் இருந்த வாழ்க்கையை அழகிய ஓவியமாக்கினாய்

கோபம் கொண்டு நான் உன் மீது முட்களை வீசினேன்

காதல் கொண்டு முட்களை மலராக்கி என் மேல் தூவினாய்

உன் காதலுக்கு முன்னால் ஏழையாகிவிட்டேன் கண்மணியே

வாழ்க்கைத்துணையாய் வந்த தளிரே இன்றிலிருந்து இந்த அடியேன் உன் காதலுக்கு அடிமை



நான் இந்த பூவுலகில் ஜனிப்பதற்கு முன்பே என் மீது உன் ஒட்டு மொத்த பாசத்தையும் கொட்டினாய்

உன் உதிரத்தை பாலாக்கி என் பசி போக்கினாய்

துன்பம் என்று கலங்கிய போது நான் துவண்டு போய் விடாமல் மடி தாங்கினாய்

கருவறையில் பத்து மாதமும் மன அறையில் ஆயுள் காலமும் என்னை சுமக்கின்றாயே

உன் அன்பிற்கு ஈடாக நீ தந்த உயிரைக் கொடுத்தாலும் நிகராகாது தாயே



கருவறை முதல் கணிணி வரை அனைத்திலும் என்னுடன் பங்கு போடும் குட்டி இராட்சஷியே

என் கருப்பு தினங்களைக்கூட உன் பேச்சால் வர்ணஜாலமாக்கும் வண்ணத்துப்பூச்சியே

அருகில் இருந்தால் தொல்லை செய்கிறாய் ,விலகி சென்றால் கவலை கொள்கிறாய்

முரண்பாட்டின் முடிசூடா ராணியே நீயில்லாது எனக்கில்லை திராணியே




இன்பத்தில் மகிழ்ந்து துன்பத்தில் தோள் குடுத்து

தோல்வி அடையும் போது தட்டிக் கொடுத்து

வெற்றி அடையும் போது மட்டும் வந்து ஒட்டிக் கொள்ளும்

சொந்தங்கள் போலில்லாமல் உன் நட்பால் நாள்தோறும் என்னை மலரச் செய்யும் பனிமலரே

நட்பின் இலக்கணத்தை உன்னிடத்தில் கற்று கொண்டேன்.





மகளாய்,அன்னையாய்,மனைவியாய்,தோழியாய்,சகோதரியாய்,இப்படி யாதுமாக மாறி வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டிருக்கும் அனைத்து இறைவிகளுக்கும் இந்தக் கதை சமர்ப்பணம்.
Wowww super d mithu pinnitta poo
Ponnunga illena ivangallam onnume illa
Aprom perusa solrathu ponnunga illatha ulagam nalla irukkumnu
Nejamaave ipdi ellam nadantha than ivangalukku puriyum di
And nalla unnoda repair aana moolaya kasakki puzhinju yosichu irukka😍😍
Love u chlm superb😍
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wowww super d mithu pinnitta poo
Ponnunga illena ivangallam onnume illa
Aprom perusa solrathu ponnunga illatha ulagam nalla irukkumnu
Nejamaave ipdi ellam nadantha than ivangalukku puriyum di
And nalla unnoda repair aana moolaya kasakki puzhinju yosichu irukka😍😍
Love u chlm superb😍
Babyyyy:love::love::love: ama ama summa vai pechu than namma ilana onnum aagathu:LOL::LOL:

ennadhu en moola repair aana moolaiyaa unnaaa:mad::mad::LOL::LOL:

lubbbb u toooo babymaa:love::love:
 

goofy

Active member
:awesome:wow super story.......imagine panni pakurapo semaiya irukku.....ipdi unmaiyave nadandha dhan ponnunga power ennanu theriyum
 
Top