All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலா ஶ்ரீதரின் "என் காதல் பொய்யும் இல்லை" - கதை திரி

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 8

சந்தியா இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. விக்ரம் அவளை பலமுறை அழைத்தான். அது அவளது செவிகளை எட்டவில்லை. கடைசியாக அவளை வேகமாக உலுக்கினான்.

“என்னடி ப்ரீஸ் ஆயிட்ட. அதுக்குள்ள எந்த உலகத்துக்கு போயிட்ட” அவன் நக்கலாக கேட்க, அவள் முகத்திலோ சிரிப்பை காண முடியவில்லை.

“எதுக்காக டிசிப்ளனரி ஆக்‌ஷன் எடுத்தாங்கனு உனக்கு தெரியுமா விக்ரம்”

“ஹ்ம்ம்.. தெரியும்” என்றதும் எதற்கு என்ற கேள்வியை கொண்டு அவனை பார்த்தாள்.

“லெவன் – ‘சி’ பையன் அரவிந்த். அவன் ஒரு பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருந்திருக்கான். அந்த பொண்ணும் இவனை பிடிச்சிருக்குங்கற மாதிரி தான் இருந்திருக்கா. இப்ப திடீர்னு கௌதமை தான் பிடிச்சிருக்குனு சொல்லிட்டாளாம். அதுக்கு கௌதி என்ன பண்ணுவான். கௌதிய ரிவென்ஜ் எடுக்கறதா நினைச்சி அவன் தான் அந்த டேரை தந்திருக்கான். சரியான லூசு பையன். இவனும் என்ன சொல்லப் போறான்னே தெரியாம என்ன சொன்னாலும் செய்வேன், இல்ல ஸ்கூலை விட்டு போய்டுறேன்னு சொல்லிருக்கான்”

“டேய் இதெல்லாம் எனக்கு தெரியும்டா. அதான், இவன் வின் பண்ணிட்டான்ல. அப்புறம் எதுக்கு போனான். இப்ப எதுக்கு ஆக்‌ஷன் எடுத்திருக்காங்க” அவன் சொல்வதை முழுவதாக கேட்கும் பொறுமை கூட அவளிடத்தில் அப்போதில்லை.

“ஒண்ணு இவன் டேர் பண்ணாம ஸ்கூலை விட்டு போயிடுவான். இல்ல எதாவது பொண்ணுகிட்ட ஐ லவ் யு சொல்லி அவ இவன் பேருல கம்ப்லைன் பண்ணி அதுக்கு ஸ்கூல் சைட்ல இருந்து டிசிப்ளனரி ஆக்‌ஷன் எடுத்து சஸ்பெண்ட் பண்ணனும்ங்கறது தான் அவன் பிளானே” விக்ரம் சொல்ல

“ஆனா நான் தான் கம்ப்லைன் பண்ணலையே விக்ரம்” அப்பாவி தனமாக கேட்டாள்.

“ஹேய் முதல்ல கேளுடி. கௌதமுக்கு வேற ஆளெல்லாம் சூனியம் வைக்க தேவையில்ல. அவனே வச்சிப்பான். அரவிந்த் பிளான் ஒண்ணும் சக்ஸஸ் ஆகல. நீயா போயிட்டனால பெருசுப்படுத்தாம விட்டுட்ட. இப்ப கௌதம் வின் பண்ணிட்டான், அதனால ஸ்கூலை விட்டும் போகமாட்டான்னு அடுத்த நாளே எங்கிட்ட வந்து போட்டு கொடுத்துட்டான்”

“என்னடா சொல்ற. அவனா உங்கிட்ட சொன்னான்” கண்களை விரித்து கேட்டாள்.

“ஆமா, கௌதம் ப்ரொபோஸ் பண்ணினான் சந்தியா சைலண்டா அழுதிட்டே போயிட்டானு அவன் தான் எங்கிட்ட சொன்னான். இத நான் கௌதம்கிட்ட சொன்னேன். சொன்னவுடனே அவனை அப்படியே விட்டுடுன்னும் சொன்னேன். கேட்கற ஆளா அவன். சாயந்திரமே கிரவுண்ட்ல வச்சி அவனை அடி அடின்னு அடிச்சிருக்கான். என்னமோ அவன் அடிக்கலனு அன்னைக்கு கவலைப்பட்டீயே. நாளைக்கு போய் அரவிந்த பாரு எப்படி அடிச்சிருக்கான்னு தெரியும். கண்ணுக்கு கீழ இன்னமும் வீக்கம் குறையல. அதப் பார்த்துட்டு ஸ்டாஃப், பிரின்சிபெல்கிட்ட கூட்டிட்டு போயிட்டாங்க. ப்ரின்ஸி உடனே ஒன் வீக் சஸ்பெண்ட் பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க” விக்ரம் நடந்ததை சொல்ல சந்தியாவிற்கு அதிர்ச்சியில் கண்களே வெளியே வந்துவிட்டது.

“ஏன் விக்ரம் இப்படி பண்ணான். அவன் தான் பைத்தியம், ஒரு பொண்ணுக்காக இவ்ளோ கேவலமா நடந்துக்கிட்டான்னா. இவன் எதுக்கு அவனை அடிக்கணும்”

“என்னை கேட்டா”

“நீ பேசினியா”

“நான் அவன்கிட்ட பேசல. பிரச்சனை வேண்டாம்னு குழந்தைக்கு சொல்றமாதிரி சொன்னேன். எல்லாத்தையும் கேட்டுட்டு போய் அடிச்சி வச்சிருக்கான். பிரின்சிபெல் ரூம்ல இருக்குற நம்ப சுரேந்திரன் சார் சொல்றாரு, பிரின்சிபெல் ரெண்டுபேரயும் நிக்க வச்சி இப்படி அடிச்சிக்கிற அளவுக்கு என்ன பிரச்சனைனு கேட்டாங்களாம். அவன் கௌதிக்கு டேர் சொன்னேன்னு சொன்னா வீட்டுக்கு தெரிஞ்சி திட்டப் போறாங்கனு எதுவும் சொல்லலையாம். இவன்கிட்ட ஏன் அடிச்சனு கேட்டதுக்கு வாயயே திறக்கலயாம். அதான் ஒன் வீக் சஸ்பெண்ட் பண்ணிருக்காங்க” விக்ரமுக்கு கௌதம் மீது கோபம் அதனால் இவன் அவனுக்கு அழைக்கவே இல்லை. கௌதமும் ஒன்றிரண்டு முறை அழைத்துப் பார்த்துவிட்டு விட்டு விட்டான்.

“அவனை அசிஸ்டன்ட் ப்யூப்பெல் லீடர் போஸ்ட்க்கு எலேக்‌ஷன்ல நிக்க வைக்கலாம்னு பிளான் பண்ணி வச்சிருந்தோம். அவ்ளோ தான் எல்லாம் போச்சு. இந்த வருஷம் எதுவுமே பண்ணமுடியாது. பெரிய பிளாக் மார்க்” விக்ரம் ஆதங்கத்தில் புலம்ப

“இவன் ஏன் இப்படி பண்றான். அவனுக்கு கால் பண்ணு” சந்தியா வருத்தத்தில் சொன்னாள்.

அவள் சொன்னதை கேட்டு விக்ரமும் கௌதமுக்கு அழைத்து கைபேசியை ஸ்பீக்கரிலும் போட்டான்.

“சொல்லு விக்கி” குரலில் எந்த ஒரு வருத்தமுமின்றி சொன்னவன் மீது இருவருக்கும் கோபம் தான் வந்தது.

இருந்தும் அதை அடக்கிக்கொண்டு “எங்க இருக்க கௌதி” என்று விக்ரம் கேட்டான்.

“வீட்ல தான். இப்ப தான் எங்க அம்மாவ கொஞ்சி நைஸ் பிடிச்சி கேசரி செஞ்சித் தர சொன்னேன். அவங்க அத செஞ்சிக்கிட்டு இருக்காங்க நான் பக்கத்துமேடைல உட்கார்ந்து எப்போ கேசரி ரெடி ஆகும்னு பார்த்துட்டு இருக்கேன்” அவன் சொன்னதை கேட்டு விக்ரமுக்கு சிரிப்பு வந்தது. சத்தமாக சிரிக்கவும் செய்தான்.

சந்தியாவிற்கோ எரிச்சலாக இருந்தது ‘என்னமோ பெரிய சாதனை பண்ணி அவார்ட் வாங்கின மாதிரி எவ்ளோ சந்தோசமா கேசரி கேட்டிருக்கான். ஸ்கூல்ல சஸ்பெண்ட் பண்ணிருக்காங்கனு கொஞ்சமாவது கவலை இருக்கா’ மனதிற்குள் அவனுக்கு அர்ச்சனை செய்துக் கொண்டிருந்தாள்.

“என்னடா, விஷயம் வீட்டுல தெரியுமா” விக்ரம் கேட்க சமையலறையில் இருந்து மெல்ல நகர்ந்தவன்

“அத சொன்னா எங்க அம்மா கேசரி செஞ்சிட்டு இருப்பாங்களா. உடம்பு சரியில்லாம லீவ் போட்ட மாதிரி செட் பண்ணிருக்கேன்” சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தான். சந்தியாவிற்கு வெறுத்தேவிட்டது. நீ பேசுகிறாயா என்று விக்ரம் கண்ஜாடை காட்ட அவள் மாட்டேன் என்று தலையை ஆட்டினாள்.

“ஏன்” என்று சத்தம்வராமல் வாயசைத்து கேட்க

“நான் அவன்கிட்ட பேசமாட்டேன்” என்று அவள் கையசைவாலே பதிலளித்தாள்.

“டேய் லைன்ல இருக்கியா” அதற்குள் கௌதமின் குரல் ஒலிக்க “இருக்கேன்டா. ஏன்டா வீட்டுல இருந்து வர சொல்லிருப்பாங்களே. அப்புறம் எப்படி வீட்டுக்கு தெரியாம” புரியாமல் விக்ரம் கேட்க

“ஆமா சொன்னாங்க. அதுக்கு தான கார்த்தி அக்கா இருக்கா. கூட்டிக்கிட்டு வந்து நிறுத்தினேன்ல. அக்காவ தவிர வீட்டுல வேற யாருக்கும் தெரியாதுடா” என்ற கௌதமின் மீது சந்தியாவிற்கு கோபம் எல்லையை கடந்திருந்தது.

“அவனை இங்க வரச் சொல்லு” அவள் சத்தம் வராமல் வாயசைத்து சொன்னாள்.

“கௌதி. எங்க வீட்டுக்கு இப்ப வர்றீயா” இவர்களுக்கு நடுவில் நான் என்ன தூதா என்றெண்ணி கொண்டே சொன்னான்.

“டேய் அதெல்லாம் முடியாது. இந்த நேரத்துல அவ்ளோ தூரமெல்லாம் கஷ்டம்”

“ரொம்ப பண்றடா நீ. என்னமோ நைட்ல ஊரே சுத்தாத மாதிரி. உனக்கு போட்கிளப்ல இருந்து மயிலாப்பூர் வர கசக்குதா. ஒழுங்கு மரியாதையா கிளம்பி வா”

“அது இல்லடா எனக்காக கேசரி வேற ரெடியாகிட்டு இருக்கு” என்று குறும்பு சிரிப்பு சிரித்தவன் “சரி அவ இருக்காளா. அவ இருந்தா நான் வரல. தேவையில்லாம அவளை வேற பார்க்கறா மாதிரி இருக்கும்” அவன் சொல்ல இங்கே விக்ரமை முறைத்துக் கொண்டிருந்தவள் “நான் இங்க இல்லனு சொல்லு” என்று வாயசைத்தாள்.

“அவ இங்க இல்லடா” அவனும் அதையே சொன்னான்.

“அதெப்படி. பூஸ்ட்டும் ஈவ்னிங் ஸ்னாக்ஸும் வந்திருக்குமே” அவன் கேட்க, இங்கே எரிச்சலோடு சந்தியா விக்ரமை முறைக்க, அவன் தான் இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு விழித்தான்.

“அதெல்லாம் கொடுத்துட்டு போயிட்டா. அவ வீட்ல இல்ல. வெளில போயிருக்கா”

“ஓ அப்போ சரி. நான் வரேன்” என்றவன் அழைப்பைக் கூட துண்டிக்காமல் “அம்மா கேசரி கேன்சல். நான் ப்ரண்ட் வீடு வரைக்கும் போயிட்டு வரேன்ம்மா” என்று சொன்னது இங்கே சந்தியாவிற்கும் விக்ரமிற்கும் கேட்க தவறவில்லை.

“அவனுக்கு திமிற பார்த்தியா விக்ரம். என்ன வேற பார்க்கறா மாதிரி இருக்குமாம். எப்படி விக்ரம் உனக்கு இப்படி ஒரு ப்ரண்ட். சஸ்பெண்ட் ஆன கவலை கொஞ்சமாச்சும் இருக்கா. கேசரி செய்ய சொன்னானாம்” அவனிடம் காட்ட வேண்டியதையும் சேர்த்து இவனை அர்ச்சனை செய்துக் கொண்டிருந்தவளை பார்த்த விக்ரம், தான் வாய் திறக்காமல் இருப்பதே சிறந்தது என்ற முடிவெடுத்தான்.

சந்தியாவிற்கு இப்படி சட்டென கோபம் வராது. அவளது கோபத்தை அவன் தூண்டிக் கொண்டு தான் இருந்தான். அது விக்ரமுக்கும் புரிந்து தான் இருந்தது. அதே கோபத்தோடு அங்கிருந்து கிளம்பினாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் கௌதம் விக்ரம் வீட்டிற்கு வந்து அழைப்பு மணியை அடிக்க, கதவை அவர்கள் வீட்டில் வேலைசெய்யும் மாரியப்பன் திறந்துவிட நேராக படியேறி விக்ரம் அறைக்கு சென்றான்.

வந்தவன் வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இல்லாமல் “மச்சான் ரொம்ப தேங்க்ஸ். நல்லவேளை, நிஜமாவே அவ இல்ல. சஸ்பெண்ட் வேற ஆயிட்டேனா, அவ முகத்துல முழிக்கவே ஒருமாதிரி இருக்கு. எங்கிட்ட பேசமாட்டா. ஒருவேளை அட்வைஸ் எதாவது பண்ணானா. நமக்கு இந்த அட்வைஸ்யெல்லாம் செட்டே ஆகாது” கௌதம் பேசிக் கொண்டிருக்க சந்தியா கதவிற்கு அருகில் தான் நின்றுக் கொண்டிருந்தாள். கௌதம் விக்ரமை நேர்கொண்டு அமர்ந்திருந்ததால் அவனுக்கு தெரியவில்லை. கீழே மாரியப்பனை கதவை திறக்கச் சொன்னதே அவள் தான். அதுமட்டுமா அவனுக்கு பின்னால் அவளும் படியேறி வந்தாள். அதையும் அவன் கவனிக்கவில்லை. இப்போதும் அவன் பின்னால் இருக்கிறாள் என்று விக்ரம் பலமுறை ஜாடை செய்தான். இவனோ கவனிக்காமல் பேசினான்.

பின் விக்ரமே “கௌதி கொஞ்சம் திரும்பி பாரேன்” என்று சொல்ல, திரும்பியவன் அதிர்ந்துப் போனான். சந்தியா அவனை கண்களாலே எரித்துவிடும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கையில் ஒரு தட்டில் மூன்று கிண்ணத்தில் கேசரி இருந்தது. அவன் வருகிறான் என்று தான் செய்து எடுத்து வந்திருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது.

எதுவும் பேசாமல் உள்ளே வந்தவள் “விக்ரம் எடுத்துக்கோ” என்றாள். விக்ரம் எடுத்ததும் “அவனையும் எடுத்துக்க சொல்லுடா” கௌதமிடம் தட்டை நீட்டி சொன்னாள்.

“எனக்கு வேண்டாம்டா” அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் சொன்னான்.

“எடுத்துக்கோ கௌதி. சாரிடா, நீ பேசிக்கிட்டு இருந்தப்போ அவளும் இங்க தான் இருந்தா. வீட்ல சாப்பிடாம வந்துட்டேனு உனக்காக தான் செஞ்சிருக்கா” தட்டை நீட்டியவள் இன்னும் அவனிடமிருந்து அதை நகர்த்தவில்லை.

“இவ யாரு எனக்கு கேசரி செஞ்சி தர. எங்க அம்மா இருக்காங்க எனக்கு செஞ்சிக் கொடுக்க” அன்று ஆட்டோவிற்கு கொடுத்த எண்பது ரூபாயை அவள் நீ யார் எனக்கு கொடுக்க என்று சொல்லித் தானே திருப்பித் தந்தாள் அதையே அவனும் இன்று சொன்னான்.

சந்தியாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வர “விடு விக்ரம் எடுத்தா எடுக்கறான் இல்லாட்டி விடு நாம சாப்பிடலாம்” என்று தன் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு தட்டை அவன் அருகிலேயே வைத்துவிட்டாள். அவளுக்கு கௌதமை பற்றி இன்னும் சரியாக தெரியவில்லை. அவனுக்கு வேண்டாம் என்றால் வேண்டாம் தான். அவன் தான் பிடிவாதத்திற்கு மூத்த பிள்ளையாயிற்றே.

இருவரும் சாப்பிட கௌதம் அதை கண்டுக்கொள்ள கூட இல்லை. அறையே அமைதியாக இருந்தது. விக்ரம் தான் அந்த அமைதியை கலைக்கும் பொருட்டு பேச ஆரம்பித்தான்.

“ஏன்டா அதான் பிரின்ஸி எதுக்கு இப்படி பண்ணனு கேட்டாங்கல. அப்பவாவது சொல்லிருக்கலாம்ல அவன் செஞ்ச வேலைய. சஸ்பென்ஷன் அளவுக்கு போயிருக்காது ஜஸ்ட் ரெண்டுபேரையும் வார்ன் பண்ணி விட்டிருப்பாங்க”

“சொல்லிருக்கலாம். அவன் ஏற்கனவே அடிபட்டவன். நான் டேரை பத்தி சொல்ல அவன் கௌதம் டேரை பண்ணான் அதுவும் மேடமுக்கு தான் ப்ரொபோஸ் பண்ணான்னு சொல்லிட்டான்னா. தேவையில்லாம அவளை வேற இந்த பிரச்சனைல இழுத்துவிட்டா மாதிரி ஆகிடும். அதான் பர்சனல் ப்ராப்ளம்னு மட்டும் சொன்னேன். என்னனு சொல்லலைனா நீதான் அவனை அடிச்சிருக்க, உன்மேல தான் தப்புனு சஸ்பென்ட் பண்ணுவோம்னு சொன்னாங்க. சரி சஸ்பென்ட்டே பண்ணிகட்டும்னு விட்டுட்டேன்” சந்தியாவை பற்றி யோசித்து தான் அமைதியாக இருந்திருக்கிறான். அது அவளுக்கு அவன்மீது நல்ல அபிப்ராயத்தையே கொடுத்தது.

“அதுவும் கரெக்ட் தான். ஆனா எனக்கு இன்னும் கோவம் குறையல. நான் தான் பிரச்சனைய அத்தோட விடுன்னு சொன்னேன்ல அத அப்படியே விடாம அவனை அடிச்சி கேஸாகி சஸ்பெண்ட் ஆகியிருக்க. தேவையா இதெல்லாம்” விக்ரம் கேட்க, சந்தியாவின் கண்களும் அதையே தான் கேட்டுக் கொண்டிருந்தது. அதை கௌதம் தான் கவனிக்கவில்லை.

“அப்படி விட்டுட்டு போனா அவன் கௌதமே இல்லயே” என்றுவிட்டு சிரிக்க சந்தியாவிற்கு கோபத்தில் கிண்ணத்திலிருக்கும் கேசரியை அவன் தலையில் கொட்டலாம் என்றிருந்தது.

“பெரிய கௌதம்” என்று தனக்குள்ளேயே சொன்னாலும் அது அவனுக்கும் கேட்டது, விக்ரமும் கேட்டிருந்தான்.

“விக்ரம் எரிச்சலா இருக்கு” என்று எரிச்சலை காட்டியும் விட்டாள்.

“எரிச்சலா இருந்தா, தண்ணிக் குடிக்க சொல்லுடா. இவ செஞ்ச கேசரில காரம் அதிகமோ எரிச்சலெல்லாம் வருது” அவனை தான் சொல்கிறாள் என்பதை புரிந்து பதிலளித்தான் கௌதம்.

“கேசரி எங்கயாவது காரமா இருக்குமா விக்ரம்”

“கேசரி ஸ்வீட்டா தான் இருக்கும் விக்கி. சிலர் முகத்தை காரமா வச்சிக்கிட்டு சமைச்சா அவுட்கம் அப்படி தான் இருக்கும். நீ கூட இனிமே பூஸ்ட் குடிக்கறப்போ பார்த்து குடிடா” என்றான்.

அதற்குள் விக்ரம் இவர்கள் இருவருக்கும் இடையில் நேரடியான பேச்சுக்கள் இல்லை என்பதை உணர்ந்தான். அதற்கு அவர்கள் தனக்கு கொடுத்த வாக்குறுதி காரணமாக இருக்குமோ என்றெண்ணியவன், அதை உடனே சரி செய்ய முடிவெடுத்தான்.

“ஆமா நீங்க ரெண்டுபேரும் என்ன என்னை மத்தளமா யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. எதுவா இருந்தாலும் நேருக்கு நேர் பேசுங்க” அவன் சொன்ன அடுத்த நொடி

“நான் அவகிட்ட பேசமாட்டேன்”

“நான் அவன்கிட்ட பேசமாட்டேன்” இருவரும் ஒரேநேரத்தில் ஒன்றாக சொன்னார்கள்.

“எதுக்காக” விக்ரம் புரிந்தும் புரியாதது போல் கேட்டான்.

“உனக்கு தெரியாதா விக்ரம்” அதைமட்டுமே சந்தியா சொன்னாள். அவளுக்கு தெரிந்ததெல்லாம் அவள் சொன்னதால் தான் கௌதம் அவளிடம் பேசாமல் இருக்கிறான் என்று. ஆனால், அவள் சொல்வதற்கு முன்பே கௌதம் விக்ரமிடம் பேசியது அவளுக்கு தெரியாது.

சந்தியா அவளைப் பற்றி மட்டும் கூறுகிறாள் என்பதை புரிந்த விக்ரம் “உனக்கு தெரியாதுல, நீ அன்னைக்கு ஈவ்னிங் இனி நான் கௌதம்கிட்ட பேசமாட்டேன்னு சொன்னியா. அடுத்தநாள் காலைல கௌதியும் உங்கிட்ட பேசமாட்டேன்னு சொல்லிட்டான்” என்று விளக்கினான். இது அவளுக்கு புதுத்தகவல். அந்த தகவல் அவளுக்கு வருத்தத்தை தந்தது. அவள் சொன்னபோது ஏற்படாத வலி அவனும் சொல்லியிருக்கிறான் என்பதை கேட்டபோது வந்தது. திரும்பி அவனை பார்த்தாள் அவன் இவளை பார்க்கவில்லை. வேறெங்கோ பார்த்திருந்தான்.

“ஏன் ரெண்டுபேரும் இப்படி பண்றீங்க. எனக்காக தான அப்படி ஒரு முடிவை எடுத்தீங்க. அதான் ப்ராப்ளம் இப்ப சால்வ் ஆகிடுச்சுல. ரெண்டுபேரும் கைகொடுத்து பேசிக்கறீங்க” என்றான் விக்ரம்.

“எனக்கு அவன்கிட்ட பேசறதுல எந்த ப்ராப்ளமும் இல்லடா” சந்தியா சொல்ல

“எனக்கு இருக்குடா. நான் அவகிட்ட பேசறதா இல்ல” கௌதம் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு சொல்ல அவளுக்கு முகமே வாடியது.

“டேய் ஏன்டா” விக்ரம் அதிர்ந்துக் கேட்க

“பிடிக்கல. நான் முடிவு பண்ணா பண்ணது தான். நான் இவகிட்ட எப்பவும் பேசப் போறதில்ல” இவ்வளவு தீர்க்கமாக சொல்லும் அளவிற்கு தான் என்ன செய்தோமென்று சந்தியாவே குழம்பிப் போனாள்.

“என்னடா எனக்கு தெரியாம எதாவது ஓடிக்கிட்டு இருக்கா. சண்டை எதாவது போட்டுக்கிட்டீங்களா” விக்ரம் புரியாமல் கேட்க

“நீ உடனே ஆரம்பிக்காத. ஓடுற அளவுக்கோ, சண்டைபோடுற அளவுக்கோ இங்க ஒண்ணுமில்ல” கௌதமின் பேச்சு சந்தியாவிற்கு கோபத்தைத் தூண்டியது. தான் பேச தயாராக இருக்கும்போது அவன் இப்படி சொல்வது அவளை அலைக்கழிப்பது போல் தோன்ற

“போதும் விக்ரம். யாரும் பேசணும்னு நான் காத்துக்கிட்டு இல்ல” சந்தியாவும் சொல்ல, விக்ரம் அவளை அடக்கப் பார்த்தான்.

அதற்குள் கௌதம் “கேட்டுக்கிட்டியா” என்றான்.

“பின்ன பேசமாட்டேன் பேசமாட்டேன்னு சீன் போடறவன்கிட்ட கெஞ்ச சொல்றியா விக்ரம்” அவளும் அமைதியாவதாக தெரியவில்லை.

கௌதமிற்கும் இப்போது கோபம் வர “நீயும் நானும் இதுவரைக்கும் பேசிக்கிட்டதே இல்ல. அப்படி இருக்கப்பவே உன்னால என் லைஃப்ல இவ்ளோ பிரச்சனை வந்திடுச்சு. இன்னும் நீயும் நானும் பேசிக்கிட்டோம்னா என்னென்ன நடக்கும்னு நினைச்சாலே பயமா இருக்குனு சொல்றவகிட்ட கெஞ்ச சொல்றியா விக்ரம்” அவனும் பதிலுக்கு சொல்ல, அப்போது தான் சந்தியாவிற்கு தான் செய்த தவறே புரிந்தது.

“என்னடா சொல்ற. சந்தியாவா அப்படி சொன்னா” விக்ரம் கேட்க கௌதம் அவளை பதிலாக பார்த்தான்.

“சொன்னியாடி” விக்ரம் இம்முறை நேரடியாக அவளிடமே கேட்க

“அது அன்னைக்கு இருந்த கோவத்துல சொல்லிட்டேன். அத இவன் பெரிய இஸ்யூ ஆக்குவானாம். இவன் ஒண்ணும் எங்கிட்ட பேச தேவையில்ல. யாரும் பேசணும்னு நான் ஒண்ணும் ஏங்கிட்டு இல்ல” அவள் மறுபடியும் வார்த்தையை விடுகிறாள் என்பதை உணராமலே சொன்னாள்.

“அவ்ளோ தான் மச்சான். மேட்டர் சால்வ்ட். ரெண்டுபேருமே பேசணும்னு ஏங்கல” கௌதம் திடமாக சொல்ல அவளுக்கு கோபம் தான் வந்ததே தவிர தான் மறுபடியும் தவறாகப் பேசினோம் என்பதே புரியவில்லை.

“போதும் ரெண்டுபேரும் நிறுத்துறீங்களா. நான் ஒருநாள் லூசுதனம் பண்ணா, நீங்க டெய்லி பண்றீங்க. பெரியவன் சொல்றத ரெண்டுபேரும் கேட்கற வழிய பாருங்க. ஒழுங்கா பேசிக்கோங்க” விக்ரம் இடைமறிக்க

“யாரு விக்கி பெரியவன்” கௌதம் சிரிப்பை அடக்கமுடியாமல் கேட்க

“நான் தான்டா. உன்னோட ஒரு மாசம் பெரியவன். இவளோட எட்டு மாசம் பெரியவன். அதனால நான் சொன்னா கரெக்டா தான் இருக்கும். ரெண்டுபேரும் பேசிக்கோங்க”

“போ மச்சான் சும்மா காமெடி பண்ணாத. பெரியவனாம் பெரியவன்” கௌதம் மறுபடியும் சிரிக்க இம்முறை எரிச்சலானது சந்தியாவே.

“நான் கிளம்பறேன் விக்ரம். அம்மா தேடுவாங்க” என்று எழுந்தவளை “இரு சந்து” என்று நிறுத்தினான் விக்ரம். முதல்முறையாக அவன் சந்தியாவை சந்துவென்று அழைப்பதை அப்போது தான் கவனித்தான் கௌதம். அவர்களுக்குள் அப்படி கூப்பிட்டு கொள்ளும் வழக்கம் இருக்கிறது போல் என்றெண்ணிக் கொண்டவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“நான் உங்க ரெண்டுபேரையும் கம்பெல் பண்ணல. ஆனா, சீக்கிரம் உங்க பிரச்சனைய சால்வ் பண்ணிக்கோங்க. கௌதி, அவ எதோ கோவத்துல வார்த்தைய விட்டுட்டா. யோசிச்சுப்பாரு நீ அவகிட்ட ஐ லவ் யு சொன்னதுக்கே அவ உன்னை ஒண்ணும் சொல்லல. அத பெருசும் பண்ணல. அவகிட்ட போய் இப்படி நடந்துக்கலாமா அண்ட் சந்தியா, நீ அவன்கிட்ட அன்னைக்கு பேசினது, இன்னைக்கு பேசினது எல்லாம் தப்பு. அதனால மேல மேல பேசி பெருசாக்காத” இருவருக்கும் சரியானதை சொல்ல அவர்களுக்கும் அது சரி என்றே பட்டது. இருந்தும் வாயைத் திறந்து பேசிக்கொள்ள தான் இல்லை.

இருவரும் பேசிக் கொள்வார்கள் என்று காத்திருந்து ஓய்ந்துப்போன விக்ரம், ஓர் ஆழ பெருமூச்சை வெளியே விட்டு “சரி பேசிக்க வேண்டாம். ஆனா, இனி நாம மூணு பேரும் ப்ரண்ட்ஸ். எங்க போனாலும் ஒண்ணா தான் போறோம் வரோம். வந்து பேசாம இருப்பீங்களோ இல்ல பேசி சண்டைப் போடுவீங்களோ அது உங்க பிரச்சனை. பட் டோன்’ட் ஃபர்கெட், மூணு பேரும் ஒண்ணாதான் இருக்கோம். காட் இட்” இருவருக்கும் பொதுவாக சொன்னவன் கௌதம் பக்கம் திரும்பி “கௌதி நாளைக்கு கடைல இருப்பீயா” என்றான். சந்தியாவிற்கு எந்தக் கடை எதை பற்றிப் பேசுகிறான் என்று புரியவில்லை.

“இல்லடா. நித்தி என்னை வெளில கூட்டிக்கிட்டு போக சொல்லிருக்கா. எதோ வாங்கனுமாம். கார்த்தி அக்கா தான் இருப்பா. தி.நகர்ல தான சொல்ற” என்றான் பதிலுக்கு. சந்தியாவிற்கு ஒன்றும் புரியாமல் ‘இவனுங்க ரெண்டுபேரும் எதப்பத்திடா பேசிக்கிறாங்க’ என்று இருவர் வாயையே பார்த்திருந்தாள். அத்தோடு யாரந்த நித்தி என்ற சந்தேகம் வேறு.

“ஆமா எதுக்கு கேட்கற. நீ வர போறியா” அடுத்த கேள்வியையும் கௌதம் கேட்க

“ஆமான்டா. அம்மாக்கு பர்த்டே வருது, சாரீ எடுக்கணும். நீ கூட இருந்தா நல்லா செலக்ட் பண்ணி தருவ. குட்டி பொண்ண தான வெளில கூட்டிட்டு போற பேசாம அவளையும் கூட கூட்டிட்டு வந்திடு. நாம பர்ச்சேஸ் பண்ண வேண்டியதை பண்ணிட்டு, அவ கேட்டத வாங்கிட்டு வீட்டுக்கு போய்டலாம். உனக்கு ஞாபகம் இருக்கா நம்ப ஹர்ஷினி பர்த்டேக்கு போனப்போ உன் தங்கச்சிய கூட்டிட்டு வந்தீயே. அவளோட செம்ம ஃபன். சரியான வாயாடி” விக்ரம் சொன்னத்தை கேட்ட பிறகே தங்கையா என்று நிம்மதியானாள்.

“அதுவும் சரிதான். அப்படியே பண்ணிடலாம். நீ சொல்ற டைம்ல நான் அங்க இருப்பேன்டா” விக்ரம் சொன்னதை கௌதமும் ஆமோதித்து சொன்னான்.

“சந்து, நீயும் வர தான” சந்தியாவையும் விக்ரம் சேர்த்துக் கொள்ள

“எங்க” என்றாள்.

“செல்வராணி சில்க்ஸ்” என்றவன் கௌதமை பார்த்து “சாயந்திரம் ஸ்கூல் விட்டதும் வீட்டுக்கு போய் டிரஸ் சேன்ஞ் பண்ணிட்டு ஒரு அஞ்சரை மணிக்கு அங்க வந்திடறோம்டா. உனக்கு ஓகேவா” என்று கேட்கவும்

“ஓ.. உங்களுக்கெல்லாம் ஸ்கூல் இருக்குல. எனக்கு எந்த ப்ராப்..” என்று நக்கலாக சிரித்துக் கொண்டே சொல்லவந்தவன் அவள் முறைப்பதை பார்த்ததும் சட்டென்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு “ப்ச் நீங்கயெல்லாம் ஸ்கூலுக்கு போறீங்க. நான் மட்டும் பாரு” என்றான் பரிதாபமாக.

‘அப்படியே வருத்தப்படற மாதிரி தான்’ சந்தியா முணுமுணுத்தாள்.

“நாம ஒரு அஞ்சு மணிக்கு கிளம்பிடலாம்டி. அப்போ தான் கௌதி அங்க இருப்பான். அப்புறம் கிளம்பிடுவான்” என்று சந்தியாவிடம் சொல்ல

“இவன் அந்த டைம்ல செல்வராணி சில்க்ஸ்ல என்ன பண்றான்” என்றவளை இதுவரை கோபத்தில் இருந்த கௌதம் இப்போது தன்னை மீறி ரசித்தான். என்னவொரு உரிமையான பேச்சு. அவளுக்கு அது அவர்களுடைய கடை என்று தெரியாது. விக்ரம் நாளை அவன் கடையில் இருப்பானா என்று விசாரித்தது. அதுவும் இவன் போகும் நேரம் அவன் இருக்க வேண்டும் என்று சொன்னது, இதையெல்லாம் வைத்து அரைகுறையாகவே புரிய அதை வைத்து அப்படி ஒரு அதிகார கேள்வியை கேட்டாள்.

“என்னடீ உனக்கு தெரியாதா. அவங்களுது தான் செல்வராணி சில்க்ஸ்” அவளை ஆச்சர்யமாக பார்த்து விக்ரம் சொல்ல சந்தியாவிற்கு ஐயோவென்று ஆனது. இது தெரியாமல் இவனுக்கு அங்கே என்ன வேலை என்று கேட்டுவிட்டோமே என்ற உணர்வில் கண்களை அழுந்த மூட அதில் அவள் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டது. கையை வைத்து ஒருபக்க முகத்தையும் மறைத்துக் கொண்டாள். பின் அசட்டுசிரிப்பு சிரித்துக் கொண்டே கையை விலக்கி கண்களை திறந்தாள். அவளை பார்த்தவனுக்கு பிடித்திருந்தது. ரசித்தும் கொண்டிருந்தான்.

“சரி நாளைக்கு போகலாமா” விக்ரம் அவளிடம் மறுபடியும் உறுதிச் செய்ய கேட்க “ஹ்ம்ம்” என்றாள்.

“சரிடா நாளைக்கு பார்க்கலாம்” கௌதம் கிளம்பும் நேரத்தில் அவளுக்கு ஒன்று நினைவிற்கு வர

“ஒரு நிமிஷம்” என்று அவள் சொல்ல அந்த வார்த்தைகள் தனக்கானது, தன்னிடம் தான் பேசுகிறாள் என்ற ஆவலில் அவனும் திரும்ப அதற்குள் கிண்ணத்தில் ஆறிக் கிடந்த கேசரியை பார்த்தவளுக்கு மறுபடியும் கோபம் வந்து ஒட்டிக்கொள்ள “ஒரு நிமிஷம் நிக்க சொல்லு விக்ரம்” என்றாள்.

இவனும் பதிலுக்கு “ஹ்ம்ம். சொல்ல சொல்லுடா” என்றான். மறுபடியும் இரண்டு வேதாளமும் முருங்கை மரம் ஏறி இருந்தது.

‘இவங்க ரெண்டுபேருக்கும் இருக்க திமிறும் கொழுப்பும் இருக்கே’ மனதிற்குள் நினைத்து நொந்துக் கொண்டான் விக்ரம்.

“செல்வராணி சில்க்ஸ் இவங்க கடை தான” விக்ரமிடம் அவள் கேட்க

“ஆமா டி” என்றான் அவனும் பதிலுக்கு.

“டி.நகர்ல இருக்கே அதுவா” என்றாள். அதற்கும் ஆமாமென்று தலையை ஆட்டினான் விக்ரம். கௌதம் வேடிக்கை மட்டுமே பார்த்தான்.

“நான் இவங்க கடைக்கு போயிருக்கேன். சாரீ எடுக்க” என்றாள். அவ்வளவு தான் இப்போது கௌதமிற்கு கிலி பற்றிக் கொண்டது. கண்டுப்பிடித்து விட்டாளோ என்ற எண்ணத்தில் அவன் இதயத்தின் தாளங்கள் அவனுக்கே குத்துப்பாட்டாக கேட்டது. அத்தோடு அன்று ஆட்டோவிற்கு கொடுத்தப் பணத்தை திருப்பி தந்ததும் நினைவிற்கு வர வியர்க்கவே தொடங்கிற்று.

“சரி அதுக்கு என்ன” என்றான் இது எதுவும் அறியாத விக்ரம்.

அவள் “நான் அங்க ஒரு பையனை பார்த்தேன்” என்றது தான் மிச்சம் ‘செத்தான்டா சேகரு’ என்று ஓட்டம் பிடிக்கும் நோக்கத்தில் “நான் கிளம்பறேன்டா விக்கி. இவ சொல்ற கதையே கேட்க எனக்கு டைம் இல்ல” என்று ஓடப் பார்த்தான்.

“இப்ப அவன் நிப்பானா மாட்டானா விக்ரம்” ஓடுப்பவனை கையால் மட்டும் தானா பிடிக்கமுடியும். அவளது வார்த்தையாலே பிடித்து நிறுத்தினாள்.

“சரி சொல்ல வேண்டியதை சீக்கிரம் சொல்ல சொல்லுடா. வீட்ல அம்மா தேடுவாங்க” என்றான். அம்மா தேடுவதற்கெல்லாம் பயப்படுப்பவனா அவன். அவன் சொன்னதை பின் நினைத்து பார்த்தால் அவனுக்கே சிரிப்பு வரும்.

“சொல்லத்தான் போறாங்க. இவனை பிடிச்சி வச்சிக்கணும்னு எனக்கு என்ன ஆசையா” உரத்த குரலிலேயே சொன்னவள் “அன்னைக்கு நாங்க சாரீ எடுக்க போனப்போ அந்த பையன் தான் எனக்கும் அம்மாக்கும் சாரீ காட்டினான் விக்ரம். ரொம்ப வயசு இருக்காது. மேபி நம்ப வயசு தான் இருக்கும். ஆனா வேலை செய்யறான். இப்ப எனக்கு அவன் முகம் கூட ஞாபகமில்ல” இப்போது தான் கௌதமுக்கு போன உயிரே திரும்ப வந்தது.

நிம்மதி பெருமூச்சை விட்டவன் “சரி மேல சொல்ல சொல்லு விக்கி” அவன் சொல்ல, அவனை முறைத்துவிட்டு

“படிக்க வைக்க வீட்டுல வசதி இல்லாம தான வேலைக்கு வந்திருக்கான். அவனை இவங்களால படிக்க வைக்க முடியுமா” என்றாள். கௌதமுக்கு இப்போது புறக்கை ஏறியது. மாலை செல்வராணி ஊட்டிவிட்டு அனுப்பியதெல்லாம் தலைக்கு ஏறி கண்களில் தண்ணீர் நின்றது.

“டேய் என்னடா நீ. இந்தா தண்ணி குடி” தலையில் தட்டி தண்ணீர் பார்ட்டிலை விக்ரம் அவனிடம் நீட்டினான். அதை வாங்கிக் குடித்தவன் தன்னை ஆசுவாசப்படுத்தினான்.

“இவன் என்ன வேணும்னு பண்றானா” அதற்கும் அவள் அவனை விடவில்லை.

“எங்களுக்கு வசதி இல்ல. அப்பா உங்ககிட்ட டிரைவரா இருக்காரு. எனக்கும் சக்திக்கும் பீஸ் கட்டுற அளவுக்கு அப்பாகிட்ட காசு இல்ல. அப்ப நீ சொல்லி லாயர் அய்யாதான், நீ படிக்கற ஸ்கூல்லயே என்னையும் சேர்த்து படிக்க வச்சு பீஸூம் கட்டிக்கிட்டு இருக்காரு. சக்தி படிப்புக்கும் மெய்ன் டர்ம் பீஸ் அவர் தான் கட்டுறாரு. அதேமாதிரி பாவம் அந்த பையனுக்கு என்ன குடும்பக் கஷ்டமோ, இந்த வயசுல வேலைக்கு வந்துட்டான். அவனை இவங்க பேமிலி படிக்க வைக்கலாம்ல. இருக்குறவங்க தான எங்கள மாதிரி இல்லாதவங்களுக்கு உதவி பண்ணனும். படிப்பு கொடுக்கறது ரொம்ப பெரிய புண்ணியம் விக்ரம். முதல்ல இந்தமாதிரி சின்ன பசங்களுக்கு வேலை தரவேணாம்னு அவங்க அப்பாகிட்ட சொல்ல சொல்லு விக்ரம்” விக்ரமிடம் சொல்வதாக அனைத்தையும் அவனிடம் சொன்னாள்.

முதல்முறையாக சந்தியா தன் வீட்டை பற்றியும் தங்களது நிதி நிலையை பற்றியும் சொன்னாள். அத்தோடு யாரோ முன் பின் தெரியாத ஒருவன் தானே என்று நினைக்காமல் அவனுக்கு படிப்பு கொடுக்கக் கேட்பது அவளது உயர்ந்த உள்ளத்தை காட்டியது. அதையெப்படி அவனால் ரசிக்காமல் இருக்கமுடியும்.

‘இந்த வியாக்கானம் எல்லாம் நல்லா பேசுவா. அந்த பையனை படிக்க வைக்கணுமாம். இல்லாதவங்களுக்கு படிப்பு தர்றது பெரிய புண்ணியமாம். ஆனா அந்த பையன் முகத்தை மட்டும் மறந்திடுவா. இவ மறந்ததும் ஒரு விதத்துல நல்லது தான். இதுல சின்னப் பசங்கள வேலைக்கு வைக்ககூடாதுன்னு நான் அப்பாகிட்ட சொல்லணுமாம். எங்க கடைல வேலை பார்த்த ஒரே சின்னபையன் நான் தான். அதுவும் பதினாலு வயசுக்கு அப்புறம் தான். எது எப்படியோ யாரோ ஒருத்தனுக்காக இவ்ளோ அக்கறைப்படறாளே இதுதான் இவளை எனக்கு தனியா காட்டுது. ஐ லைக் ஹர்’ கடந்த சில நாட்களாக எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக எண்ணினான். இன்றோ அனைத்தும் திரும்ப பெற்றுவிட்டதாக தோன்ற, சந்தோசத்தில் சிரிக்க உதடுகள் பிரிய ‘ஐயோ வேண்டாம் கௌதம். இப்ப மட்டும் சிரிச்ச அந்த பையன் கஷ்டம் உனக்கு சந்தோசமா இருக்கானு கேட்பா. கன்ட்ரோல் யுவர்செல்ஃப்’ தனக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தவனை பதிலுக்காக பார்த்திருந்தாள். அவன் தனக்குள் பேசிக் கொண்டிருந்ததால் அவளை கவனிக்கவில்லை.

“என்ன விக்ரம் நான் சொன்னதுக்கு பதிலை காணோம்” கிட்டத்தட்ட மிரட்டினாள்.

‘பதிலா.. நான் என்னனு சொல்லுவேன். என்னை நானே எப்படி படிக்க வச்சிக்க முடியும். இவளுக்கு இத நான் எப்படி புரிய வைப்பேன். சரி படிக்க வைக்கறேன்னு சொல்றது கூட பரவாயில்ல. அப்புறம் அவனை காட்டுன்னு சொன்னா’ என்று யோசிக்க ‘டேய் கௌதம் நீதான் அவகிட்ட பேசலயே. அப்படியே யெஸ் ஆகிடு. அதான் பெஸ்ட்’ திட்டத்தை உருவாக்கியவன்

“நான் கிளம்பறேன்டா விக்கி. வீட்டுல தேடுவாங்க. நாளைக்கு கிளம்பறப்போ மெசேஜ் பண்ணு. நான் அங்க இருப்பேன். கிளம்பறேன்னு சொல்லிடுடா” என்றுவிட்டு அவளை திரும்பிக் கூட பார்க்காமல் சென்றான். அவனுக்கு புரியவில்லை அவனது இச்செயல் அவளுக்கு கோபத்தை தான் தூண்டுமென்று.

“திமிருப்பிடிச்சவன். நான் என்ன எனக்காகவா கேட்டேன். அந்த தம்பிக்காக தான கேட்டேன்” வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டாள். நல்லவேளை ‘தம்பி’ என்ற சொல்லை கௌதமிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் துடித்துப் போயிருப்பான்.

“நானும் கிளம்பறேன் விக்ரம்” என்றுவிட்டு அவளும் கிளம்பினாள்.


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
 
Top