All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழரவனின் ‘நிலவழகி’ கதை திரி

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,

ஶ்ரீகலா :)
 

நிழரவன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் வணக்கம்,

வாய்பளித்தமைக்கு நன்றி. நான் நிழரவன் என்ற பெயரில் "நிலவழகி" என்ற கதையிலிருந்து எழுத்தாளனாக எனது முதல் அத்தியாயத்தை தொடங்குகிறேன். இந்த கதை 2014ல் எழுதப்பட்டது. பொது வெளியில் இது எனது முதல் முயற்சி.விமர்சனங்களை எதிர் நோக்கி நான்! வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் இரவு 11.30 மணியளவில் உங்களை சந்திக்கிறேன்...
 

நிழரவன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலவழகி- அத்தியாயம்-1

பிரபஞ்சத்திற்கு வெளியே பல்லண்டத்தின் (MULTIVERSE) என்பது நம் அண்டத்தைப் போல் மேலும் சில அண்டங்களை கொண்ட ஒரு பேரண்டமாகும். ஒரு ஓரத்தில் கருந்துளையின் (BLACKHOLE) விடுபடு திசை வேகத்தில் இருந்து விலகி அண்டத்தின் ஈர்ப்பு விசைக்குள் அக்வா 373 எனும் பெயர் பெற்ற விண்கலம் ஒன்று தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருந்தது.


விண்கலத்தினுள் சுமார் 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி தன்னுடன் வந்த உதவி விஞ்ஞானிக்கு அவன் செய்ய வேண்டிய வேலைகளை விளக்கி, அதனை சரியாக 482 நிமிடம் 46 நொடிகளில் செய்து முடிக்குமாறு கட்டளையிட்டாள். அவன் அந்த வேலைகளுக்கான திட்டப் படத்தை எடுத்துக்கொண்டு விண்கலத்தின் ஒரு பகுதிக்குச் சென்று தொடுதிரையில் கட்டளையிட்டு இயக்க அந்தப் பகுதி மட்டும் பிரிந்து அவன் பயணப்பட வேண்டிய இடத்திற்கு விரைந்தது.

அவன் சென்ற பிறகு அந்தப் பெண் அவள் செய்ய வேண்டிய வேலைகளை வரிசைப்படுத்தினாள். வேலையை ஆரம்பிக்கும் முன் ஒரு முறை திட்டப்படத்தை பார்த்து விட எத்தனித்து பிரதான அறைக்குச் சென்றாள். அங்கு கண்ணாடி மேஜையின் மீது இருந்த திட்டப் படங்கள், ஆவணங்கள் அடங்கிய கோப்புகளை எடுக்கும்போது அதன் அடியில் "என்னை உபயோகப்படுத்தவும்" என்று குறிப்பு எழுதி அதன் அடியில் இடது புறமாக ஒரு அம்புக்குறி இடப்பட்டிருந்தது.
அந்த அம்புக்குறி காட்டப்பட்ட இடத்தை நோக்கிய போது அங்கு ஒரு சிறு கண்ணாடி பெட்டி இருப்பதைக் கண்டாள். அதனை பார்க்க மனதிற்குள் ஆர்வம் இருந்தாலும் அடுத்த 16 மணி நேரத்திற்குள் இந்த திட்டத்தை நிறைவேற்றிவிட்டு அடுத்த 8 மணி நேரத்திற்குள் அந்த இடத்தை விட்டு போகாவிடில் உயிர் மட்டுமில்லாது பிறந்து வளர்ந்ததற்கான அர்த்தமே போய்விடும் என்று நினைப்பால் அவள் அந்த பெட்டியை விடுத்து வேலையில் லயித்தாள்.

விண்கலத்தின் வாயிலுக்கு வந்து பல்லண்டத்தை நன்றாக பார்த்த பொழுது அவளுக்கு மகிழ்ச்சியும் வருத்தமும் ஒரு சேர வந்தது. பல்லண்டத்தை நம் முன்னோர்கள் எவ்வளவு சரியாக கணித்திருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சியும் பெருவெடிப்புக் கோட்பாட்டால் நம் அண்டம் விரிந்து நாமெல்லாம் தோன்றியது போல், நம் சக அண்டத்தை பெருவெடிப்பு கோட்பாட்டிற்கு செயற்கையாக உட்படுத்த வந்திருக்கும் முயற்சி பயனளிக்காமல் போய்விடுமோ என்ற வருத்தமும் அவளுக்கு தோன்றியது. ஏனென்றால் இவர்கள் செய்முறைக்கு உட்படுத்தப் போகும் அண்டம் இவர்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் அடர்த்தியாக இருந்தது.

எனினும் அவளுக்கு இந்த நினைப்புகள் எல்லாம் அரை வினாடிக்கும் குறைவான நேரத்தில் தோன்றி மறைந்தது. நேரத்தின் அவசியத்தை உணர்ந்திருந்ததால் சிறிதும் தாமதியாமல் தனது பணியை துவங்கினாள்.

தான் பிறந்ததிலிருந்து இந்த காரியத்திற்காகவே வளர்க்கப்பட்டிருந்த போதிலும் திட்டத்தின் முக்கியத்துவத்தை கருதி வேலையை ஆரம்பிக்கும் முன் திட்டத்தின் முழு மாதிரியை ஒரு கணம் தன் மனக்கண்ணில் ஓட விட்டாள்.

அந்தத் திட்டமானது, இவள் இருக்கும் இடத்திலிருந்து சுமார் 120° கோணத்தில் ஒளி சிதறலின் கதிர்வீச்சை அண்டத்தை நோக்கி செலுத்த வேண்டும். இவளிடமிருந்து பிரிந்து சென்று 900 மைல் தொலைவில் (நீள் வட்டமாக) இருக்கும் சக விஞ்ஞானி அங்கிருந்து சுமார் 60° கோணத்தில் போஸான், நியூட்ரான், எலக்ட்ரான், புரோட்டான் ஆகிய அணுக்கள் நிறைந்த தொகுப்பை ஒளிச்சிதறலின் கதிர்வீச்சை நோக்கி செலுத்த வேண்டும்.

அதாவது அந்த ஒளிச்சிதரர்களின் கதிர்வீச்சு அண்டத்தை அடைவதற்கு ஒரு (MICROSECOND) நுண்ணொடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு ஆகிய நேரத்திற்கு முன் அணுக்களின் தொகுப்பு மோத வேண்டும். இதன் விளைவுகளால் நாம் அனுப்பிய கதிர்வீச்சு மற்றும் அணுக்களின் தொகுப்புகளிலிருந்து புதுப்புது அணுக்கள் அங்குள்ள அணுக்கருக்களுடன் இணைந்து தன்னைத்தானே விரிவுபடுத்திக் கொண்டு பிரபஞ்ச ஆரம்பத்திற்கு வித்திடும்.

இவை அனைத்தையும் மனதில் நிறுத்திக் கொண்டு மிகவும் எச்சரிக்கையுடன் தன் வேலையை தொடங்கினாள், அந்த அரிவை.

அவளது முதல் பணி அந்த விண்கலத்தில் ஒரு ஏவுதளத்தை உருவாக்க வேண்டும். அந்த வேலைக்கு உண்டான அனைத்தையும் செய்வது தானியங்கி எந்திரங்கள் தான், தொடுதிரையில் கட்டளைகள் மட்டும் கொடுத்தால் போதும்.

கடைசி நேரத்தில் அவளது உள் மனது ஏதோ சொல்ல திட்டத்தில் ஏவுதளத்தை மட்டும் சிறிது மாற்றியமைத்து தொடுதிரையில் கட்டளையும் கொடுத்து முடித்த பின்னர், வேலையை செய்து முடிக்க ஆகும் நேரம் 97 நிமிடம் 34 வினாடிகள் என்று காட்டியது.

வேலை நடப்பதை கவனித்து விட்டு மறுபடியும் திட்டத்தில் ஆழ்ந்திருக்கையில் அவளது கை கடிகாரத்தில் எச்சரிக்கை மணி ஒலித்தது. அதை என்னவென்று பார்க்கையில் ஆக்ஸிஜன் கேப்சூல் விழுங்கி 6 மணி நேரம் முடியப்போவதை நினைவூட்டியது. நம் மனித குலத்திற்கு துணையின்றி எதுவுமே சாத்தியம் இல்லை போலும், என்று லேசாக புன்னகைத்து கேப்சூலை தேடிச் சென்றாள். ஏனென்றால் அந்த கடிகாரம் அவளுக்கு வந்திருக்க வேண்டிய பல இன்னல்களை தவிர்த்து இருக்கிறது. பிரதான அறையின் கண்ணாடி அலமாரியிலுள்ள கேப்சூலில் ஒன்றை மென்று விட்டு மீதமிருந்த மூன்றை பத்திரமாக எடுத்து வைத்தாள்.

அந்த கேப்ஸ்யூல் அட்டைகளுக்கு அடியில் "என்னை கண்டிப்பாக உபயோகப்படுத்தவும்" என்ற குறிப்பெழுதி அதன் அடியில் தென்மேற்கு அம்புக்குறி இடப்பட்டு இருந்தது. அவள் கண்கள் அந்த அம்புக்குறி காட்டிய இடத்திற்குச் சென்றது. அங்கு முன்பு பார்த்த அதே "கண்ணாடி பெட்டி"!
 

நிழரவன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலவழகி- அத்தியாயம் - 2



அக்வா 373 பல்லண்டத்தினுள் நுழைந்த அதே நொடி விண்வெளியிலுள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பெரும் குழப்பம் நிலவியது. தண்ணீரை வேறு எளிய முறையில் தயாரிக்க ஏதேனும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்பதை ஆராய விண்மீன் பேரடைகளுக்கு (NEBULA) அனுப்பப்பட்ட அக்வா - 373 மாயமானதே அத்தகைய குழப்பத்திற்குக் காரணமாகும்.
இந்த நிகழ்வினால் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர்கள் அனைவரும் மிகுந்த கலக்கத்தில் இருந்தார்கள். இவர்கள் அனுப்பிய விண்கலம் தோல்வி அடைவது இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அவையெல்லாம் வெடித்து சிதறிவிடும் அல்லது போன காரியம் வெற்றியடையாமல் திரும்பி வந்துவிடும்; மாயமாய் மறைவது இதுதான் முதல் தடவை.

பிரபஞ்சத்தை பற்றி அனைத்தையும் அறிந்ததாக மார்தட்டிக் கொண்டிருந்த மனிதனுக்கு இது ஒரு பேரிடியாக விழுந்தது. முற்றிலும் எந்திரமயமாக மாறி கடவுளை (அறியப்படாத சக்தி) மறந்திருந்த 24 ஆம் நூற்றாண்டில் இந்த நிகழ்வு மறுபடியும் கடவுளை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட ஆராய்ச்சி நிலையத்திலுள்ள அனைவரும் குழப்பத்தில் சோர்ந்து போயிருக்க, ராஜ் சிங் பகத் என்ற இளைஞன் மட்டும் மிகவும் தெளிவோடு இந்த புதிரை விடுவிக்க முற்பட்டிருந்தான்.


அக்வா - 373 அடியில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான காட்சிகள் பார்ப்பதற்கு பெரும் வியப்பாக இருந்தது. ஏனென்றால் அந்த விண்கலத்தின் வேகத்தை கணக்கிட்டால் கேமராவில் பதிவாகும் வீடியோ காட்சி ஒரு வினாடிக்கு ஒரு இடம் விகிதம் இருக்க வேண்டும். ஆனால் பதிவான வீடியோவை பார்க்கையில் 4 வினாடிக்கு ஒரு இடம் வீதம் இருந்தது.

யாராலும் ஹேக் (HACK) செய்ய முடியாத மிகவும் பாதுகாப்பான ப்ரோகிராமிங்கால் செய்யப்பட்ட கணினி அமைப்பில் இது எப்படி சாத்தியமாயிற்று. ஒரு வேலை உண்மையில் விண்மீன் பேரடைகளில் சிறிது சிறிது தூரம் ஒரே மாதிரியாக இருக்குமோ என்று அவன் மனம் பலவாறாக எண்ணியது. பகத்திற்கு புதிரில் ஆர்வம் அதிகரித்தது.
பொதுவாக பகத் ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டால் அவனுடைய தோழி லீயோன் உறீயுடன் சதுரங்கம் விளையாடுவது வழக்கம். அவளும் அந்த ஆராய்ச்சி கூடத்தில் உள்ள சிறந்த இளம் விஞ்ஞானிகளுள் ஒருவர். இதுவரை பலமுறை இருவரும் சதுரங்கம் விளையாடியிருந்தாலும் ஒருமுறை கூட முடிவு கிடைத்ததில்லை. இருவர் மனதில் எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் இருவரும் சதுரங்கம் விளையாடினால் அவர்கள் மனது தெளிவு பெற்று சிந்திக்க தொடங்கிவிடும். சுமார் 1800 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட சதுரங்கம் எத்தனை புதிய கண்டுபிடிப்புகள் வந்தாலும் மனிதனின் கண்டுபிடிப்புகளில் முதன்மையானதாக திகழும்.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் ஒரே நாளில் இளம் விஞ்ஞானிகளாக பணியில் சேர்ந்த இருவரும் வேறு வேறு நாடு என்றாலும் (பகத் - இந்தியா, லீ - கொரியா) இருவருக்குள்ளும் ஒரு நல்ல புரிந்துணர்வு இருந்தது. பணியில் சேர்ந்த நான்கு வருடத்தில் ஆராய்ச்சியை பற்றி தெரிந்து கொண்டதை விட ஒருவரை ஒருவர் நன்றாக தெரிந்து கொண்டார்கள். இருவருக்கும் இடையே ஊடல் சற்று தேவைக்கு அதிகமாகவே இருந்தது.

லீ நன்றாகப் பழகினாலும் அவசியமில்லாமல் சந்தித்து பேசுவதை ஒருபோதும் விரும்ப மாட்டாள். அக்வா - 373 ஒரு முக்கியமான திட்டம் என்பதாலும்

அது விண்ணில் ஏவப்படும் வரை வேலைப்பளு சற்று அதிகமாக இருந்ததாலும் ஏழு நாட்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. பகத் அவனுடைய புதிருக்கு விடை கிடைக்கத்தான் சந்திக்கச் செல்கிறான் என்றாலும் அவளுடன் நேரத்தை கழிக்கப் போகும் அந்த நினைப்பே அவனுக்கு சுகத்தை தந்தது. அந்த புதிரில் இருக்கும் முக்கியமான கேள்விகளை குறித்துக்கொண்டு அவள் அறையை நோக்கி அவன் நடந்தான்.

லீ தனது மானிட்டரில் உள்ள சமிஞ்கை (SIGNAL) பற்றிய அனைத்து மின்னூல்களையும் பார்த்துக் கொண்டிருந்தாள். கடைசியாக இணையத்திலும், பார்த்துவிட்டாள். அவள் குறித்து வைத்திருந்த மாதிரி சமிஞ்கை எதிலும் இல்லை. அவளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அக்வா - 373 இல் இருந்து மூன்று முறை இந்த சமிஞ்கையில் தகவல் பரிமாற்றப்பட்டிருக்கின்றது. ஆனால் இப்படி ஒரு சமிஞ்கை பற்றி எதிலும் தகவல் இல்லை.

அவள் கணினியில் தரவு தளத்திற்கு (DATABASE) சென்று எங்கிருந்து தகவல் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது என்று பார்த்தாள். ஆனால் உலகத்தில் உள்ள அனைத்து தகவல் பரிமாற்றும் மையத்தையும் உள்ளடக்கிய தரவுதளத்தில் அப்படி எதுவும் பரிமாறப்படவில்லை.

ஆறு முறை பதிவாகி இருக்கும் இந்த சமிஞ்கை அக்வா - 373 காணாமல் போனதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து வந்துள்ளது. ஒருவேளை இது சமிஞ்கையாகவே இல்லாமல் இருக்குமோ, நம் செயற்கைக்கோள்களிலிருந்து வரும் அதிர்வுகளின் தாக்கமாக பதிவாயிருக்குமோ என்று நினைத்தாலும் லீக்கு உள்ளுக்குள் சற்று உறுத்தலாகவே இருந்தது.

இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது பகத் உள்ளே வந்தான். திடீரென அவனை அங்கு எதிர்பாராத லீ சுதாரித்து கொண்டு அவனைப் பார்த்த "என்ன வேண்டும்?" என்றாள்.

அதற்குப் பகத் "உன்னை பார்த்து ஏழு நாட்கள் ஆச்சு அதான் என்ன பாக்காம இளைச்சிட்டியோனு பார்க்க வந்தேன்" என்றான்.

லீ, "நானே ஒரு விஷயம் புரியாமல் தவிச்சிட்டு இருக்கேன், மறுபடியும் உன் புராணத்தை ஆரம்பிக்காம...வந்து அடிக்கிறதுக்கு முன்னாடி ஓடிரு".

பகத், "பெண்ணே அப்படியாவது உன் ஸ்பரிசம் என் மீது படட்டும் வந்து அடி".

லீ, "டேய், உன் காலில் வேணும்னாலும் விழுகிறேன் தயவு செய்து இந்த மாதிரி பேசி கொல்லாதே".

பகத், "இது 18ஆம் நூற்றாண்டு தமிழ் இதன் அருமை உனக்கு எங்கே புரியப் போகிறது".

லீ, "ஒரு மண்ணாங்கட்டியும் புரிய வேண்டாம். இப்போ உனக்கு என்ன வேணும்".

பகத், "செஸ் விளையாடணும்".

லீ க்கும் குழப்பம் தெளிய விளையாடினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

லீ, "சரி விளையாடலாம், ஆனால் ஒரு நிபந்தனை".

பகத்," நான் விளையாட்டைப் பற்றி மட்டும் தான் பேச வேண்டும் அதானே".

லீ, "ஆம் அதேதான். சரி விளையாடலாம் திட்ட இயக்குனரிடம் அனுமதி பெற்று வந்தாயா".

பகத், "இல்லை அக்வா - 373 காணாமல் போனதிலிருந்து உயர் அதிகாரிகள் யாரையுமே காணவில்லை. அநேகமாக ஐரோப்பாவில் நடக்கும் அனைத்து நாடுகள் கூட்டத்திற்கு போய் விட்டார்கள் என்று நினைக்கிறேன்".

இருவரும் அக்வா - 373 பற்றிய தங்கள் கேள்விகளை குறிப்பெழுதி வைத்துக்கொண்டு விளையாட உட்கார்ந்தார்கள்.

"ஆட்டம் தொடங்கியது."
 

நிழரவன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலவழகி-அத்தியாயம் - 3

இப்பொழுது நம் கதையின் நாயகன், அக்வா - 373 கருந்துளையில் நுழைந்த தருணம் என்ன செய்து கொண்டு இருந்தான் என்பதையும் பார்த்து விடுவோம்.

பூமியில் ஒரு ஓரத்தில் தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் திருநெல்வேலியை அடுத்து ஒரு அழகான வனப்பகுதி அமைந்திருந்தது. அந்த வனப்பகுதியில் உள்ள அருவியில் வசந்த் என்ற சுமார் இருபத்தாறு வயதினை உடைய இளைஞன் நீந்தி குளித்துக் கொண்டிருந்தான்.

அந்த காட்டிற்கு வனத்துறை அதிகாரியாக பொறுப்பேற்று ஆறு வருடங்கள் ஆகிவிட்ட காரணத்தால் அந்த இடத்திற்கு நன்கு பழக்கமாகி விட்டிருந்தான். இந்த 24 ஆம்
நூற்றாண்டில் அவன் வயதினை உடைய மற்ற இளைஞர்கள் எல்லாம் கிரகம் கிரகமாக பறந்து கொண்டிருக்க, இந்த காலகட்டத்தில் வயதானவர்களே சேர தயங்கும் இந்த வேலைக்கு அவன் வந்த காரணம் இயற்கையின் பால் கொண்ட மோகம்.

மனித நடமாட்டமில்லாத மலை உச்சியில் விலங்குகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தான் அவன். நான்கு தலைமுறையினருக்கு முன்னமே தொலைபேசிக்கும் தொலைக்காட்சிக்கும் சரடை (WIRE) மறந்து விட்டிருந்த போதிலும் சமிஞ்கையால் பறவைகளுக்கு தீங்கு ஏற்படாதிருக்க கட்டுப்பாடு அறையிலிருந்து குடிசைக்கு சரடை பதித்து அதன் மூலமாகவே
அவ்விரண்டையும் பயன்படுத்தி வந்தான்.
ஒரு சிறிய காற்றாலையை உருவாக்கி அதிலிருந்து குடிசைக்குத் தேவையான மின்சாரத்தை எடுத்துக்கொண்டு ஒரு வினோதமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தான்.

அவனுடைய அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளாவன :: நீந்துவது, உணவுக்கு தேவையான பொருட்களை சேகரிப்பது, நானூறு ஆண்டுகள் கடந்த பின்பும் காலத்தை வென்று நிற்கும் எம். எஸ். வி, ராஜா, ரஹ்மான் பாடல்கள் கேட்பது, வரலாற்றுப் புதினங்கள் படிப்பது, படித்த கதைகளில் சிறந்த கதாபாத்திரம், சிறந்த ஒரு பகுதியை குறிப்பெழுதிக் கொள்வது, காடுகளைப் பற்றிய தெரியாத தகவல்களை தினம் ஒவ்வொன்றாக
தெரிந்து கொள்வது, அன்றாட செய்திகளை கேட்பது இவைகளே.
வசந்த் இதுவரை பல கதைகளைப் படித்து அதில் உள்ள சிறப்பம்சங்களை தொகுத்து எழுதியிருந்தாலும், அவனுக்கு இரு கதைகளில் மட்டும் சிறப்பானவற்றை பிரிப்பதில் மிகுந்த குழப்பம் இருந்து வந்தது. அவை கல்கியின் "பொன்னியின் செல்வன்" மற்றும் லியோ டால்ஸ்டாயின் "போரும் அமைதியும்" (WAR AND PEACE).
அவன் அந்த கதைகளை படித்ததிலிருந்து அதைப்பற்றி அவனுள் பலவாறாக விவாதித்து கொண்டாலும், முடிவு மட்டும் கிடைத்த பாடில்லை. அன்றும், நீந்திவிட்டு இந்த கதைகளை பற்றி
எண்ணிக்கொண்டே வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

பொன்னியின் செல்வனில், எல்லா ஆபத்துகளையும் வேறு நபர் உதவியுடனேயே சமாளித்த வந்தியத்தேவன் கதாபாத்திரம் சிறந்ததா? இல்லை தனி ஆளாக நின்று எல்லா ஆபத்துகளையும் சமாளித்து தனது குறிக்கோளை அடைந்த நந்தினி கதாபாத்திரம் சிறந்ததா?... லியோ டால்ஸ்டாயின் "போரும் அமைதியும்" கதையில் டால்ஸ்டாய் போரைப் பற்றி எழுதியது சிறந்ததா? இல்லை வாழ்க்கையைப் பற்றி விவரித்திருப்பது சிறந்ததா?
வாழ்க்கையைப் பற்றி எழுதியதில் பியரி(Pierre) நடாஷா(Natasha) கதாபாத்திரம் சிறந்து விளங்கினாலும், போரைப் பற்றி மிகத் தெளிவாக எழுதி இருப்பதையும் அவ்வளவு எளிதாக கடந்து விட முடியாது. இவ்வாறான எண்ணங்களில் அவன் மனம் மூழ்கியிருக்க, அப்பொழுதுதான் அவனுக்கு ஒரு உண்மை புலப்பட்டது… எத்தனை நாட்கள் ஆனாலும் வேறு ஒரு நபருடன் வாதிடாமல் மேல் குறித்தனவற்றிற்கு விடை கிடைக்காதென்பதே அது.
வேறு நபர் - யார் அந்த வேறு நபர்? என்று மூளை கேள்வி எழுப்பிய போது சற்றும் தாமதிக்காமல் அவன் மனம் கூறியது "நிலவழகி" என்று.

நிலவழகி!............ ஆம். யாரவள்? அவளின் உண்மையான பெயர் தெரியாது. ஏன்? அவள் உருவம் தவிர எதுவுமே தெரியாது. அவளுடன் நடந்ததெல்லாம் ஒரு உரையாடல் இல்லாத சந்திப்பு மற்றும் ஒரு சந்திப்பில்லாத உரையாடல் (கடிதம்) மட்டுமே.

இருந்தும் இது என்ன? மனதில், "சந்திப்பு நிகழ்ந்த போதும், கடிதம் கிடைத்த போதும்" வந்த பெயர் தெரியாத ஒன்று சரியாக நெஞ்சாங்குழியின் மத்தியில் மையம் கொண்டு விட்டதே; ஒருவேளை இதைத்தான் ஆண்டாண்டு காலங்களாக மொழி பேதமின்றி ஒருசேர கவிஞர்கள் அனைவரும் "பட்டாம்பூச்சி படபடப்பு, பருவக்குயில் பரிதவிப்பு" என வர்ணித்திருக்கின்றார்களோ!

அப்படியென்றால், இதற்கு பெயரே இல்லையா அல்லது எனக்கு தெரியவில்லையா...........
அது எவ்வாறு தோன்றுகிறது?
அதற்கு ஏதேனும் விளக்கம் இருக்கின்றதா?

இருக்கின்றதோ இல்லையோ அவனுடைய பார்வையில் அதன் சாராம்சத்தை விரிவாக விவரிக்க முயல்கிறேன்.
 

நிழரவன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலவழகி - அத்தியாயம் - 4


பல்லண்டத்தில் அக்வா - 373 ல் அந்த கண்ணாடிப் பெட்டியை பார்த்துக்கொண்டு அந்தப் பெண் பல்வேறு சிந்தனைகளுடன் நின்று கொண்டிருந்தாள். வந்த காரியத்தில் சிறிது பிசகு ஏற்பட்டாலும் புதிய அண்டம் படைக்கும் கனவு கனவாகவே போய்விடும். நேரம் குறைவாகவே இருக்கின்றது. இந்த நிலையில் அவசியமில்லாத எந்த காரியத்தையும் செய்வது உசிதமாகாது என்று அவளின் மூளை கண்ணாடிப் பெட்டியைத் தவிர்க்கச் சொன்னது.

ஏவுதளம் அமைக்க இன்னும் 94 நிமிடங்கள் இருக்கின்றது. அதை அமைத்துக் கொண்டிருக்கும் தானியங்கி எந்திரங்களுக்கு இட்ட கட்டளைகளை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்தாகிவிட்டது. ஒரு இரண்டு நிமிடம் அந்த கண்ணாடி பெட்டியை திறந்து பார்ப்பதால் ஒன்றும் ஆகிவிடாது என அவளது உள் மனம் சலனபட்டது. பொதுவாக மனிதனுக்கு மூளை எச்சரிக்கையையும், மனது ஆசையையும் எழுப்பும். எச்சரிக்கையை ஏற்று ஆசையைத் துறந்து செல்பவனின் வாழ்க்கை அமைதியாக, பத்தோடு பதினொன்றாகச் செல்லும். ஆனால் எச்சரிக்கையைப் புறம் தள்ளி ஆசைக்கு உயிர் கொடுப்பவனின் வாழ்க்கை பல இன்னல்களோடும் கூடவே மிகுந்த சுவாரசியத்தோடும் செல்லும். வந்த வேலையை முடிக்க இந்த ஒரு வாய்ப்பை விட்டால் வேறு வாய்ப்புக் கிட்டாது என்று உதடு முணுமுணுத்தாலும் கால்கள் சென்றன சுவாரசியத்தைத் தேடி.

தயக்கத்தோடு சென்று பெட்டியை எடுத்துப் பார்த்த அவளுக்கு ஆர்வம் மேலும் அதிகரித்தது. ஏனென்றால் அந்த பெட்டி அவளுக்கும், அவள் தாத்தாவுக்கும் மட்டுமே தெரிந்த முறையில் பூட்டப்பட்டிருந்தது.

அதாவது அந்த பெட்டியை சுற்றி அதைத் திறப்பதற்கான ஆதாரங்கள் எதுவுமே இருக்காது. பின் அதை எப்படி திறப்பது என்றால், பெட்டியின் ஏதாவது ஒரு ஓரத்தில் சிறு நட்சத்திரக் குறி இருக்கும். அந்த இடத்தை மெதுவாகவும் அல்லாமல், வேகமாகவும் அல்லாமல்,நிதானமாகத் தட்ட வேண்டும். அப்படித் தட்டினால் மிக நுண்ணிய துளை ஒன்று பெட்டியின் மறு முனையின் ஓரம் வரை செல்லும். மெலிதான கம்பி ஒன்றை எடுத்து பெட்டியினுள் வேறு எந்த பகுதியிலும் படாதவாறு அந்த முனை தொடும் வரை செலுத்த வேண்டும். அங்கிருக்கும் சிறு கொண்டியை, உள்ளே செலுத்தும் கம்பியை வைத்து எளிதாக திறந்து விடலாம். இதில் சிறிது பிசகு ஏற்பட்டாலும் அந்த பெட்டியை மறுபடியும் திறக்க முடியாது.

இந்தப் பெட்டியை தாத்தா வைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. நானும் இல்லை என்றால் வேறு ஒரு நபருக்கும் இந்த இரகசியம் தெரிந்திருக்குமோ என்று எண்ணிக் கொண்டே கண்ணாடி பெட்டியை மிகவும் லாவகமாக திறந்தால் ஜெஸி, அதில் ஒரு மரப்பெட்டி இருந்தது.

அதன் மேல் உள்ள குறிப்பில்,

"உள்ளே உன் நினைவுகள்

உள் செல்வதற்கு முன் உனக்குத் தெரிந்த உன் நினைவுகளை புதுப்பித்துக் கொள்"
என்று எழுதியிருந்தது.

மரப்பெட்டியில் எழுதி இருந்த வாசகத்தை நினைத்துக் குழம்பியபடியே ஏவுதள கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டால், வேலையெல்லாம் சீராக சென்று கொண்டிருந்தது. தொடுதுறையில் 60 நிமிடங்கள் பாக்கி இருந்தது.

ஒரு மனிதனின் மனம் தான் எவ்வளவு சுயநலமுடையது. அதற்கு ஒன்றில் ஈடுபாடு வந்து விட்டால் அதில் எத்தனை பெரிய அபாயம் இருந்தாலும் துணிந்து, அந்த செயலில் ஈடுபட அது (மனம்) குடி
கொண்டிருக்கும் உடலை தூண்டிவிட்டு அதில் வெற்றியும் அடைகிறது.

ஏவுதள அமைப்பில் கவனம் செலுத்துவதா? இல்லை அந்தப் பெட்டியில் கவனம் செலுத்துவதா என்ற குழப்பத்தில் நின்றிருந்தவளின் மனது பெட்டியின் மர்மத்தை அறிவதில் உறுதியாக இருந்த காரணத்தால், அவள் பெட்டிக்கே முன்னுரிமை அளித்தாள். தன் கைக்கடிகாரத்தில் சரியாக 55 நிமிடங்கள் கழித்து எச்சரிக்கை மணி எழுப்பக் கட்டளையிட்டு விட்டு, அவள் தன் நினைவுகளில் மூழ்கினாள்.

அவள் மூளையில் உயிர் பெற்று, மனதில் உருவம் பெற்று, அவள் கண்ணில் படர்ந்து நினைவுகள்!

ஜெஸி, ஏன் அழுகின்றாய்? அழாதே கண்ணே! நீ அழப்பிறந்தவள் அல்ல ஆளப்பிறந்தவள். ஆம் அதிலும் இந்த அற்ப ஜீவிகள் ஜீவித்திற்கும் இவ்வுலகை அல்ல, நீயே ஒரு புது உலகு படைத்து அதை ஆளப்போகிறாய். என்னுடைய வழிகாட்டுதல்களில் என் கனவை எல்லாம் உயிர்பிக்கப் பிறந்தவளே; அழாதே..!

என் சிறு வயதில், இவ்வளவு சீக்கிரம் தாய், தந்தையை இழந்து விட்டோமே என்று வருந்தி அழுது கொண்டிருந்த நேரத்தில் என் தாத்தாவிடம் இருந்து உறுதியான குரலில் வந்தன மேற்கூறிய வார்த்தைகள்.

என் தாத்தா ஆகாஷ் ஷர்மா வயது 72, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (ISRO) மேல்மட்ட குழு உறுப்பினர்களில் ஒருவராக பணியாற்றியவர். தன் 51 வயதில் சுமார் ஆறு வருட காலம் கருமமே கண்ணாகக் கொண்டு கருந்துளை பற்றிய ஆய்வறிக்கை ஒன்றை ISRO வில் தாக்கல் செய்தார். ஆனால் அதிலுள்ள கூற்றுகள் சக விஞ்ஞானிகளின் கூற்றுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்ததால், ISRO அந்த அறிக்கையை நிராகரித்து விட்டது.

தன் கூற்றை மெய்ப்பிக்க ஒரு வாய்ப்புத் தருமாறு கேட்டு எவ்வளவோ போராடிப் பார்த்தார், இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. அதனால் ஏற்பட்ட விரக்தியில் தான் வகித்து வந்த வேலையை துறந்து,
அவரின் கூற்றை மெய்ப்பிக்கும் வைராக்கியத்தில் தன் எஞ்சிய காலத்தைச் செலவழித்து வந்தார் அவர்.

தனது கூற்றை மெய்ப்பிக்கும் முன் தனக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் தன்னுடன் தன் கூற்றும் புதைந்து விடுமே என்று வருந்திய அவருக்கு, "கணிதத்திற்கு கிடைத்த சைபர்" போல தாய், தந்தையை இழந்து வாடியிருந்த நான் கிடைத்தேன்.
 

நிழரவன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலவழகி- அத்தியாயம் - 5

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பகத்தும், லீயும் செஸ் விளையாட துவங்கினார்கள். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பகத் த குயின்ஸ் கேம்பெட் (THE QUEENS GAMBIT) முறையில் ஆட்டத்தை துவக்கினான். அதாவது ராணிக்கு முன் இருக்கும் சிப்பாயை இரண்டு கட்டம் (d4) நகர்த்தினான்.

வேறு ஒரு தருணமாக இருந்தால் லீ நிச்சயமாக இந்த முறையை ஏற்றுக் கொண்டு விளையாடி இருப்பாள். ஆட்டம் விறுவிறுப்பாக சென்றிருக்கும். ஆனால் விடுவிக்க வேண்டிய புதிர் மிகவும் சிக்கலாக இருப்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு மட்டும் போதாது, சாமர்த்தியமும் இருக்க வேண்டும் என கருதி அவள் த கிங் இந்தியன் டிபன்ஸ் (THE KING INDIAN DEFENCE) முறையில் தனது குதிரையை (NF6) நகர்த்தினாள்.

ஆட்டம் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில் கூடவே பகத் தன்னுடைய நுண்ணறி பேசியில் (SMART PHONE) அக்வா - 373 கணினி பகுதியில் செய்யப்பட்ட புரோகிராம் பற்றிய முழு விவரத்தையும், லீ உலகில் உள்ள மொத்த குறியீடுகளின் தொகுப்பு பற்றியும் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.

முற்றிலும் எந்திரத்தால் வடிவமைக்கப்பட்ட புரோகிராமை ஹேக் (HACK) செய்தாலும், அந்த எந்திரம் அரை மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து எச்சரிக்கை மணி எழுப்பி விடும். அப்படியென்றால் நடந்தது எப்படி சாத்தியமாயிற்று என்று பகத் மிகவும் குழம்பினான்.

பொதுவாக இவர்களுக்குள் செஸ் விளையாட்டு நடக்கும் போது வெள்ளை நிற காய்களுடன் ஆடுபவரே முதலில் தாக்குதலை தொடங்குவார். புரோகிராம் பற்றிய குழப்பத்தில் இருந்த பகத் நிதானமாக தாக்குதலை தொடங்கலாம் என்று எண்ணி ராஜாவுக்கு அறன் அமைப்பதிலேயே முழுவதுமாய் ஈடுபட்டிருந்தான்.

ஆனால் பகத் முற்றிலும் எதிர்பார்க்காத நேரத்தில் அவன் சற்றும் எதிர்பார்க்காத விதமாக லீ தாக்குதலை ஆரம்பித்தாள். அதுவும் ராணியை பரிமாற்றிக் கொண்டாள். இதனால் முதலில் சிறிது அதிர்ச்சிக்குள்ளான பகத்தின் முகத்தில் பின்பு புன்னகை அரும்பியது.

நான் எப்படி இவ்வளவு பெரிய முட்டாளாக இருந்துவிட்டேன். நான் நினைத்தது முற்றிலும் தவறு. லீ யின் ஆட்டம் முறையிலும் சரி.........புரோகிராம் பற்றிய சிந்தனையிலும் சரி. முதலில் அக்வா - 373 விண்கலம் இங்கிருந்து கிளம்பும் முன் இருந்த நிலையை அல்லவா தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அதை விட்டு இவ்வளவு நேரம் தேவையில்லாததை சிந்தித்து குழம்பி விட்டேன்.

லீ எவ்வளவு அழகாக ஒரே நகர்தலில் என்னை தெளிவு படுத்தி விட்டாள்". அவளுக்கு பரிசளித்தே ஆக வேண்டும் என்று எண்ணி அவளை அழைத்தான். "லீ, விண்கலம் தயாரிப்பு தொழிற்சாலையில் எனக்கு ஒரு சிறு அலுவல் இருக்கின்றது. நீயும் வா போய்விட்டு வந்து விடுவோம்" என்று பகத் லீயிடம் கூறினான்.

லீ தனக்கு தெரிந்த எல்லா விதமான
இரகசிய எழுத்து மறைவு (CRYPTOGRAPHY) வகைகளையும், பயன்படுத்தி அந்த சமிஞ்கைக்கு விடை தேட முற்பட்டால். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியாக இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படாத, கண்டுபிடிப்பு நடந்து கொண்டிருக்கும், குறியீடுகள் மற்றும் புள்ளி எழுத்துக்கள் (SYMBOL AND DOTTED LETTERS - SDL) முறையில் அந்த சமிஞ்கையை மறை விளக்கம் (DECRYPTION) செய்ய முயன்று கொண்டிருந்தாள்.

ரொம்ப சிக்கலான முறையில் உருவாகி வரும் இந்த SDL முறையை பாதுகாப்பு கருதி சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மைய அதிகாரிகள் (தலைவர்கள்) யாரிடமும் சொல்லாமல் இரகசியமாய் கண்டுபிடித்து வந்தனர். அங்கு வேலை பார்க்கும் மற்ற விஞ்ஞானிகளுக்கு கூட தெரியாமல் இந்த செய்தி பாதுகாக்கப்பட்டது.

ஒரு நாள் லீ மாத அறிக்கை சமர்ப்பிக்க தலைவர் அறையில் காத்திருந்தபொழுது எதேச்சையாக இந்த SDL முறையையும் இதுவரை கண்டுபிடித்திருந்த வழிமுறையையும் (ALGORITHM) பார்க்க நேர்ந்தது. அன்றிலிருந்து அவளும் அந்த முறையை கண்டுபிடிப்பதில் தனியாக தானாகவே முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

கிட்டத்தட்ட கண்டுபிடிப்பு முடியும் தருவாயில் இருக்கும் இந்த SDL முறையில் எழுத்துக்கள் நிறுத்த குறியீடுகளால் (PUNCTUATIONS) குறிக்கப்பட்டிருக்கும். பின்பு அந்த நிறுத்தக்குறியீடுகளை மொத்தமாக
இணைத்து ஒரு பெரிய குறியீடாக (நிறுத்தக்குறியீடுகளில் மாற்றம் ஏற்படாமல்) மாற்ற வேண்டும். பின்பு அந்த குறியீடு பல பகுதிகளாக வெட்டப்பட்டு அந்த பகுதிகள் சமிஞ்கையாகச் செலுத்தப்படும்.

இந்த முறையில் வரும் குறியீடு செய்தி பரிமாற்றிக் கொள்ளும் இரு தரப்பினருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். ஆதலால் அந்த சமிஞ்கையின் செய்தியை அவ்வளவு எளிதாக யாராலும் திருட முடியாது.

லீ அக்வா - 373 லிருந்து பரிமாற்றப்பட்ட சமிஞ்கையை இந்த SDL முறையுடன் ஒப்பிட்டு மறைவிலக்கம் செய்ய முற்பட்டாள். மிகவும் பிரயத்தனப்பட்டு முயன்று கொண்டிருந்த லீ க்கு இந்த முறையின் மூலம் எழுத்துக்கள் கிடைத்தன. அந்த எழுத்துக்கள் முற்றிலும் வினோதமாகவும், எப்படி சேர்த்தாலும் பொருள் தரும் சொல்லாக இல்லாமலும் இருந்தது. அந்த எழுத்துக்களானது,

W S L O P S I M O L S L O J I

SDL முறைப்படி சிறு சிறு பகுதிகளாக தனித்தனியாக இணைத்திருக்கும் நிறுத்தக் குறியீடுகளை இணைத்து ஒரு பெரிய குறியீடாக மாற்றும் முயற்சியில் லீ தீவிரமாக ஈடுபட்டாள். எவ்வளவு முயன்றும், அவளால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. எதேச்சையாக அக்வா - 373 ன் மாதிரி வரைபடத்தை ஒரு முறை வரைந்து பார்த்தாள். அது அந்த சிறு சிறு பகுதிகளுடன் ஓரளவு ஒத்துப்போனது. லீ
கண்டுபிடித்திருக்கும் அந்த குறியீடானது,




இந்தக் குறியீட்டினை அந்த எழுத்துக்களுடன் ஒப்பிடும் பொழுது கிடைத்த அமைப்பானது,





இவ்வாறு கிடைத்தது.

இந்த அமைப்பின் சிக்கலான வடிவத்தை பார்த்து லீ மிகவும் குழம்பி விட்டாள். இவ்வளவு நேரம் கடினமாக உழைத்துப் பயனற்று போய்விட்டதே என்று சோர்ந்து போய் செஸ் விளையாட்டில் கவனம் செலுத்தி அடுத்த நகர்த்தலுக்காக காத்திருந்தபோதுதான் பகத் அவளை விண்கலம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அழைத்தான்..!
 

நிழரவன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலவழகி - அத்தியாயம் - 6

திருநெல்வேலியை அடுத்த வனப்பகுதியில் குளித்துவிட்டு தன் இருப்பிடத்திற்கு நடந்து கொண்டிருந்த வசந்த் நிலவழகியை நினைத்ததனால் நெஞ்சில் குடி கொண்ட பெயர் தெரியாத ஒன்றுக்கு பெயரிட முயன்று கொண்டிருந்தான். அவனுக்கு விடை கிடைத்ததா இல்லையா...........! அதை அவன் மன ஓட்டத்தை பின்பற்றி சென்று தெரிந்து கொள்வோம்.

அது எவ்வாறு தோன்றி எவ்வாறு மறைகின்றது என்று தெரியவில்லை. ஆதலால் அது மேற்கூறிய கூற்றுடன் ஒற்றுப் போகும் உயிருடன் தொடர்புடையதாக இருக்குமோ....! ஆம் உயிர் எப்படி தோன்றுகிறது...? ஆஹா!! ஆணும் பெண்ணும் மோகத்தின் பிடியில் சிக்கி புணர்ந்து கொள்ளும் நேரத்தில் காமத்தின் உச்சகட்ட பரவச நிலை உயிராக உருப்பெறுகின்றது.

அப்படியென்றால் காதலால் என் மனதில் உருவான "அது" உயிரின் கிளையாக இருக்குமோ!! என்ற சிந்தனையில் மூழ்கியிருந்த வசந்த்திற்கு திடீரென்று ஒரு உண்மை புலப்பட்டது. அந்த உண்மை தெரிந்த கனத்தில் அவன் உடம்பெல்லாம் சிலிர்த்தது. உலகம் ஒரு நொடி வைரமாக ஜொலித்தது. அந்த காட்டில் எதேச்சையாக நடந்த அனைத்தும் அவன் அந்த உண்மையைக் கண்டுபிடித்ததன்
விளைவாகவே அவனுக்குத் தோன்றியது. அப்படி வசந்தை திக்பிரமை அடையச் செய்த அந்த உண்மை வேறொன்றுமில்லை இதுதான்.

"உயிரின் கிளை" அவன் நெஞ்சில் தோன்றிய "அதுவல்ல". "அது" வின் கிளை தான் "உயிர்" என்று. அந்த "அது" அல்லது "அதுவின்" பெயராக வசந்த் கருதுவது கடவுள்..!
ஆம். என் நெஞ்சில் இதுவரை எப்படி தோன்றியது என்று தெரியாமல் எத்தனையோ தோன்றியிருக்கிறது. அது வலி, துன்பம், மகிழ்ச்சி போன்றவை ஆகும். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு. வலி அழுதால் போய்விடும்; துன்பம் எதனால் ஏற்பட்டது என்று தெரிந்து சரி செய்தால் போய்விடும்; மகிழ்ச்சி ஒரு துன்பமான நிகழ்வு நடந்தால் முடிந்து விடும். இவைகள் வந்து போவதற்கான சுவடுகள் இருக்காது.

ஆனால் காதலால் வந்த "அது" (கடவுள்) காமம் கடந்தும் நிலைத்து நிற்கும். அது வந்ததன் உண்மையான அன்பின் வெளிப்பாடாக உயிரைக் கொடுப்பதால் அதை கடவுள் என்று பெயரிடுகிறேன்.
ஒருவன் எதன் மீது உண்மையான காதல் கொள்கிறானோ அது கடவுளாக உருமாறி அதில் அவனை மேன்மையடையச் செய்கின்றது. உலக படைப்புகளில் எதிர்மறைகள் மிகவும் முக்கியமானதாகும். இரவு - பகல் , இன்பம் - துன்பம் , நல்லது - கெட்டது , நட்பு - பகை , முதலிய எதிர்மறைகள் நமக்கு உணர்த்துவது நல்லது ஒன்று இருந்தால் கெட்டதும் கண்டிப்பாக இருக்கும் என்பதே ஆகும்.

இதைப் போலவே நான் முன்பு கருதிய காதலில் காமத்திற்கு எதிர்மறை, காமத்தில் காதல், காதலில் காமத்தை பார்ப்பவன் உலகத்தை அமுதமாக ரசித்து வாழ்கிறான் காமத்தில் காதலைப் பார்ப்பவன் வெறிகொண்ட நாயாக திரிகிறான்.

சே! ஆறு , அருவி , மரம் , செடி, விலங்கு இவற்றின் இயற்கை அமைப்பிலேயே கட்டுண்டு கிடந்த நான்; மூன்றில் ஒரு பங்கு இவைகளாலேயே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட என் சிந்தனை, இவை அனைத்தையும் ஒரு நொடியில் ஒரு பார்வையில் புறம் தள்ளி என்னை, எனது சிந்தனையை முழுவதுமாக
ஆட்கொண்டு விட்டாளே..!

நாவல், கதை, கவிதை, இவைகளைப் படித்து மட்டுமே ரசித்து வந்த என்னை கவித்துவமாக சிந்திக்கவும், வைத்து விட்டாளே.

கடிதம் கிடைத்ததிலிருந்து அவள் வரும் வரை என்னை காத்திருக்கச் சொல்லி முடிவெடுத்த என் மனம் அதை நிறைவேற்ற இயலாமல் அவள் வருகைக்காக என்னை ஏக்கப்பட வைக்கின்றதே...!

மேற்குறிப்பிட்ட ஆச்சரியக் குறிகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து அவள் வருவாளா? இல்லை அவைகளை கேள்வி குறிகளாக்கி என்னை தவிக்க விடுவாளா? என்று நிலவழகி பற்றி
சிந்தித்துக்கொண்டே வீடு வந்த வசந்த் அன்றைய செய்திகளை தெரிந்து கொள்ள தொடுதிரையை இயக்கினான்.

ஒவ்வொரு செய்தியாக பார்த்துக் கொண்டிருந்த வசந்துக்கு ஒரு செய்தி பேரதிர்ச்சியாக இருந்தது. அவன் அந்த செய்தியை கேட்டு அப்படியே உறைந்து போனான். அந்த செய்தி நிலவழகி புகைப்படம் போட்டு இவர்கள் சென்ற அக்வா - 373 விண்கலம் விண்ணில் தொடர்புகளை இழந்து மறைந்து விட்டது.
உண்மையில் இந்த செய்தி வசந்தை மிகவும் பாதித்தது. சற்று நேரம் முன்பு வரை இறகாக மிதந்த அவன் இதயத்தில் தற்போது ஒரு யானை ஏறி நிற்பது போல் வலித்தது.

இத்தனை பெரிய துன்பம் தரும் செய்தியை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருந்தும் அவன் நெஞ்சில் ஏதோ ஒன்று அவனை முழுவதும் கலங்க விடாமல் செய்தது.
"நிலவழகி மறைந்து விட்டாளே தவிர இறந்துவிடவில்லை" என்பது தான் அது. செய்தியின் மூலம் நிலவழகியின் தாத்தா ஆகாஷ் சர்மா என்று தெரிந்து கொண்டு, காட்டில் மனம் நிலை கொள்ளாது அவரைப் பார்க்கச் சென்றான்.

ஆறுகளின் நீர்களாகவும், மரங்களின் காற்றுகளாகவும், பறவைகளின் கீதங்களாகவும்... அவனை அரவணைத்த காட்டிடம் திரும்பி வந்து விடுவோம் என்று விடை பெறாமல் சென்றான் வசந்த். பாவம் அவனுக்கும், அந்த
காட்டிற்கும் உள்ள பந்தம் அன்றுடன் முடிவடைந்தது என்பது தெரியாமல்.........

ஆம்.......... வசந்த் காட்டிற்கு திரும்பப்போவதில்லை.......
 

நிழரவன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலவழகி-அத்தியாயம் - 7

அக்வா - 373 இல் தன் நினைவுகளை புதுப்பித்துக் கொண்டிருந்த ஜெஸ்ஸியின் சிந்தனையில்.........

" சிறு வயதிலேயே தாய் தந்தையின் அரவணைப்பை இழந்த என்னை என் தாத்தா அரவணைத்து அவர் ஆராய்ச்சிக்கு உதவியாளராக்கிக் கொண்டார். அவர் அவரது வாழ்நாள் அறிவு முழுவதையும் எனக்குப் படிப்படியாக மிகவும்
பொறுமையோடு அதே நேரத்தில் நேர்த்தியாகவும், சொல்லி வளர்த்தார்".

கணிதத்திலிருந்து மருத்துவம் முதற்கொண்டு அறிவியல் வரை எல்லாமே எனக்குக் கற்றுத் தந்தார். சொல்லப்போனால், நான் அவரை விட ஒரு படி மேலாகவே கற்றுத் தேர்ந்து விட்டேன். நான் படித்ததிலேயே என்னை மிகவும் கவர்ந்தது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்றுகளில் ஒன்றான,

" One of the strongest motives that lead men to art and science is escape from everyday life with its painful cruelity and hopeless dreariness"

ஆனால் என்னை முழுமையாக அடிமையாக்கியது ஐன்ஸ்டீனின்
மற்றொரு கூற்றான,

"The most beautiful thing we can experience is mysterious. It is the source of all true art and all science".

என் தாத்தாவிற்கு கருந்துளையின் மேல் இருந்த அதீத ஆசையினாலும் அந்த ஆசை தந்த விடா முயற்சியினாலும், அவரின் 27 வருட கடின கழைப்பினாலும், அசாத்தியத்தை சாத்தியமாக்கி நான் இப்பொழுது கருந்துளையைக் கடந்து வந்திருக்கின்றேன்".

இவ்வாறாகத் தன் கடந்த கால வாழ்க்கையை நினைவுகூர்ந்த ஜெஸி ஏவுதளம் அமைக்கும் பணியை வந்து பார்வையிட்டாள். பணி முடிய மூன்று நிமிடங்களே இருந்தன. தன் சக விஞ்ஞானியின் பணி முடிய இன்னும் 390 நிமிடங்கள் உள்ளதாக உறுதிப்படுத்திக் கொண்டு ஜெஸி தன் அடுத்த கட்டப் பணிகளைத் துவக்கினாள்.

அவர்களது திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணியானது அணுக்களின் தொகுப்பை உள்ளடக்கி ஒரு ஏவுகணை மற்றும் ஒளிச்சிதறல்களின் கதிர்வீச்சினால் ஆன ஒரு ஏவுகணை தயாரிப்பது.

ஜெஸி ஏவுகணையில் பொருத்தப்படும் முக்கியப் பகுதிகளான அணுக்களின் தொகுப்பு மற்றும் ஒளிச்சிதறலின் கதிர்வீச்சை மட்டும் பத்திரப்படுத்திக்கொண்டு வெற்று ஏவுகணை அமைக்கும் பொறுப்பையும், எந்திரங்களிடமே விடுத்தாள். எல்லா வேலைக்கும் தெளிவாக ஜெஸி தொடுதிரையில் எந்திரங்களுக்குக் கட்டளையிட்டாள். வேலைகளைச் செய்து முடிக்க ஆகும் நேரம் 343 நிமிடங்கள் என்று தொடுதிரை காட்டியது.

முதல் கட்டப் பணிகளை எந்திரங்கள் பிழையில்லாமல் செய்து விட்டதால் ஜெஸி தயக்கம் எதுவுமின்றி பெட்டியிடம் சென்றாள். பெட்டியில் எழுதப்பட்டிருந்த வாசகத்திற்குத் தான் உயிர் கொடுத்து விட்டதை உறுதிப்படுத்திக் கொண்ட ஜெஸி பெட்டியைத் திறந்தால்.

உள்ளே "உயர் அதிர்வெண் நுண்ணலை கதிர்வீச்சு (HIGH FREQUENCY MICROWAVE RADIATION) கவனமாக கையாளவும்" என்று எழுதியிருந்தது. அதற்கு அடியில் சிறிய வட்டமான கண்ணாடியிழை (NYLON) வெள்ளி முலாம் பூசப்பட்டு அதில் ஒரு ரிசீவர் (RECEIVER) ஒட்டப்பட்டிருந்தது. இதே மாதிரி மேலும் இரண்டு இருந்தன. ஒவ்வொன்றிலும் முறையே O P L என்று எழுதியிருந்தது.

அதற்குப் பக்கத்தில் ஒரு நுண் சில்லுவும் (MICROCHIP OR INTEGRATED CHIP) கண்ணாடி பாட்டிலில் சேகரிக்கப்பட்ட நுண்ணலை கதிர்வீச்சின் அளவை குறிக்க இ-அலர்ட் மீட்டரும் (E - ALERT METER) பொருத்தப்பட்டிருந்தது.
ஜெஸி ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு அந்த தொடுதிரையை இயக்கினாள். அதில் நுண்ணலை கதிர்வீச்சு சேகரிக்கப்பட்ட விதமும் அதன் ஆபத்தும் முதலில் கொடுக்கப்பட்டிருந்தது.

அதில் "நுண்ணலை கதிர்வீச்சு ஒரு வித மின்காந்த அலையாகும். அது சிறிய அதிர்வெண் கொண்ட வெற்றிடக் குழாயில் (VACCUM TUBE) பெரும் தொலைவிற்குப் பாயும். ஏவுகணைக்குத் தேவைப்படும் (BALLISTIC) அழுத்தத்தில் எலக்ட்ரான், மாக்னட்ரான், கிளைஸ்ட்ரான், கைரடான் ஆகியவற்றின் உதவி கொண்டு இயக்கி மின்சாரம் (ELECTRIC) அல்லது காந்தத் (MAGNETC) துறைகளை கட்டுப்படுத்துவதனால் தயாரிக்கப்பட்டது. அதை முறைப்படி பயன்படுத்தாவிடில் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்" என்று எழுதப்பட்டிருந்தது. இதனை படித்த ஜெஸி அடுத்து அந்த கருவியை இயக்கும் முறையைப் படித்தாள்.

அதில் கண்ணாடியிழையில் எழுதப்பட்டிருந்த O, P, L என்பது முறையே மூளையில் உள்ள OCCIPITAL LOBE, PARIETAL மற்றும் LIMBIC SYSTEM - ஐ குறிக்கும். இந்த கண்ணாடியிழையை "O" எழுதப்பட்டிருப்பதை பின் தலையில் சரியாக OCCIPITAL LOBE ன் பகுதி எண். 18 ,19 க்கு நேராகப் பொருத்த வேண்டும். அதேபோல் "P" எழுதப்பட்டிருப்பதை உச்சந்தலையில் பொருத்த வேண்டும். மூன்றாவது ரிசீவரைப் பொருத்துவது மிகவும் கடினமானது.
ஏனென்றால் LIMBIC SYSTEM என்பது FRONTAL LOBE க்கும் TEMPORAL LOBE க்கும் நடுவில் மிகவும் மெலிதாக இருக்கும். இதை சரியாகப் பொருந்தாவிட்டால் நினைவுகள்
குழம்பி பைத்தியமாகி விடுவோம். இந்த மூன்று ரிசீவர்களையும் எப்படிப் பொருத்த வேண்டும் என்று 3D வரைபடம் கொடுக்கப்பட்டிருந்தது.

"இந்த மூன்றையும் பொருத்தித் தொடுதிரையில் கொடுத்திருக்கும் புரோகிராமை இயக்கினால் நுண் சில்லுவில் உள்ள உன் அழிந்த நினைவுகள் மூளையில் புத்துணர்வு பெற்று மீண்டும் வந்து விடும். இயக்குவதற்கு முன் E - ALERT METER - ல் நுண்ணலை கதிர்வீச்சின் அளவினை 10 Hz என்று வைக்கவும். நுண்சில்லில் இருக்கும் செய்திகளைப் பதிவிறக்கம் செய்தும் நினைவுகளைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் நம்பகத்தன்மை இருக்காது. ஆதலால் கவனமாக மற்றும் கண்டிப்பாக இதை உபயோகிக்கவும்" என்று எழுதி கீழே ஜெஸி என்று கையெழுத்திட்டிருந்தது.

தன் கையெழுத்தைப் பார்த்து தான் தான் இந்தப் பெட்டியை இங்கு வைத்தோம் என்று நினைக்கும் பொழுது ஜெஸிக்கு உண்மையில் மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

இந்த நினைவுகள் மறு ஏற்றும் (MEMORY RELOAD) முறையை ஜெஸி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாள். கூடவே இது மிகவும் அபாயகரமான முறையாததலால் யாரும் முயன்று பார்க்கவில்லை என்பதனையும் தெரிந்து வைத்திருந்தாள்.

இருந்தும் அவளின் மனதின் ஆழத்தில் ஒரு ஓரத்தில் இருக்கும் ஆசையின் தூண்டுதலில் ஜெஸி பரிசோதனைக்குத் தயாரானாள்.
 

நிழரவன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலவழகி- அத்தியாயம் - 8

பூமிக்கு சரியாக 418 கிலோ மீட்டர் மேலே அமைந்துள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பகத்தும், லீயும் விண்கலம் தயாரிக்கும் தொழிற்சாலையை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.

பகத், லீயை "ஒரு சிறு குழந்தை பட்டாம்பூச்சியைப் பார்ப்பது போன்று" பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தான்.

அந்தப் பார்வையைக் கண்டு
கொள்ளாமல் நடந்து கொண்டிருந்த லீ சிறிது நேரம் கழித்து தாங்க முடியாமல் கேட்டு விட்டாள்,"என்னை இப்பொழுது தான் முதல் தடவை பார்க்கிறாயா? ஏன் இப்படி பார்க்கிறாய்?"

பகத் "அதொன்றுமில்லை, என் குழப்பத்தை மிக நேர்த்தியாக தெளிவாக்கிய உன்னைப் பாராட்ட இலக்கியங்களில் இருந்து வரிகளை எடுப்பதா, இல்லை என் இதயத்தில் இருந்து வார்த்தைகளைத் தொடுப்பதா என்ற என் கேள்விக்கு உன் விழிகளில் விடை தேடிக் கொண்டிருக்கின்றேன்" என்றான்.

லீ, "ஐயா, தமிழ்ப்புலவரே எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம்!"

"என்ன சந்தேகம் லீ? எதுவாக இருந்தாலும் கேள்" என்றான் பகத்.

லீ, "இல்லை.. நீ ஒரு பஞ்சாபிக்காரன். உன் நாட்டில் 20 க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளது. அப்படி இருக்கையில் உனக்கு தமிழ் மொழியில் மட்டும் எப்படி இவ்வளவு பற்று ஏற்பட்டது..!"

"என்னுடன் பழகியவர்களுள் நீ மட்டும் தான் இந்த கேள்வியை கேட்க இத்தனை காலம் எடுத்துக் கொண்டாய்" என்றான் பகத்.

லீ, "அதுதான் கேட்டேனே.. பதில் சொல்லு!"

"சிறு வயதிலிருந்தே எனக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நான் பஞ்சாபியில் தான் பாடம் பயின்றேன். அப்பொழுது இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஹிந்தியும், ஆங்கிலமும் இருந்தது. ஆனால் இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறள் இருந்தது. அப்படி அதில் என்னதான் இருக்கின்றது என்பதை அறிவதற்காகத் தமிழைப் பயின்றேன். திருக்குறளை படித்தேன். தமிழுக்கு அடிமையானேன்.

நான் என்னுடைய எதிர்காலமாக விண்வெளி ஆராய்ச்சித் துறையைத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணம் 20 ம் நூற்றாண்டின் தலைச்சிறந்த விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஒரு தமிழன். என்னுடைய விண்வெளி ஆராய்ச்சி துறை வாழ்வின் முதல் அத்தியாயம் ஸ்ரீஹரி கோட்டாவில் (தமிழ்நாடு)தான் தொடங்கியது.

இவ்வளவு ஏன்... உன் ஊர் கொரியா, நீ தமிழைத் தெரிந்து வைத்திருக்கும் போது எனக்கு தமிழ் பற்று வரக்கூடாதா என்ன?" என்றான் பகத்.

லீ, "அது நான் சிங்கப்பூரில் படித்த போது அங்கு தமிழ் தான் இரண்டாம் மொழி. ஆதலால் அது பேச மட்டும் தெரியும் எழுதத் தெரியாது" என்றாள்.

பகத், "இப்படி உன்னையும், என்னையும் இணைத்ததன் பேரில் தமிழ் மொழியின் மீது பற்று மேலும் அதிகரித்துள்ளது."

அதற்கு லீ சற்று குரலைக் கடுமையாக்கிக் கொண்டு "நீயும் நானும் எப்போதும் இணைந்தோம்" என்றாள் பொய் கோபத்தோடு.

"நான் உரையாடல் ரீதியான அர்த்தத்தில் அப்படி சொன்னேன். அதோடு நீ கோபப்படும் போது இன்னும் அழகாகத் தெரிகின்றாய். தமிழ் மொழியில் உள்ள "ழ" போல" என்றான்.

ஐயோ மீண்டும் உன் தமிழ்ப் புராணத்தை... என்று ஆரம்பித்த லீக்கு உள்ளுக்குள் சட்டென்று ஒன்று உறுத்தியது. "பகத், நீ என்ன சொன்னாய்... மறுபடியும் சொல்லு" என்றாள்.

அய்யோ சற்று அதிகமாக விளையாடி விட்டோமோ... மறுபடியும் அதைக் கேட்டு அடிக்கப் போகிறாள் என்று பயந்தவாரே கன்னத்தில் கை வைத்துக்கொண்டு பகத் மறுபடியும் சொன்னான், "தமிழ் மொழியில் உள்ள "ழ" போல" என்று.

லீ முகம் சற்று பிரகாசமானது "பகத், நீ வாழ்க... உன் தமிழ் வாழ்க... நீ தொழிற்சாலைக்குப் போ, எனக்கு வேலை இருக்கின்றது" என்று கூறிக் கொண்டே செஸ் விளையாடிய இடத்தை நோக்கி ஓடினாள்.
 
Top