All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் காலம் எல்லாம் அவன் காதலில்😍 - கதை திரி

Status
Not open for further replies.

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே ❤❤

புது மாசம் பொறந்துறுச்சு😁😁 சோ ஒரு புது கதையை ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன் 😁😁.. ரஜினி எங்கன்னு கேட்காதிங்க அது அப்போ உள்ள மைன்ட்செட்ல எழுதுனது.. சோ இப்போ அது சரியா வரலை.. கொஞ்ச நாள் கழிச்சு ரஜினி வருவான்.. மன்னிச்சு... ரஜினிக்கு கொடுத்த ஆதரவை இந்த கதைக்கும் குடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறார் உங்கள் செல்லக்குட்டி❤❤

கதை பெயர் : "காலம் எல்லாம் அவன் காதலில் "

நாயகி : அதிதி

நாயகன் : நீங்களே கதையில கண்டுபிடிங்க.

கதையைப் பற்றி : சாதாரண காதல் கதை என்னோட பாணியில்.. ஒரு உண்மை சம்பவத்தை மையக் கருத்தாகக் கொண்டு என்னுடைய கற்பனையில் எழுதியிருக்கிறேன்.. எப்படி வந்திருக்குன்னு தெரியலை.. படிச்சு பார்த்துட்டு சொல்லுங்க மக்களே.

ரொம்ப மாசம் கழித்து எழுதுறேன் ஏதாவது பிழை இருந்தாலும் சொல்லுங்க திருத்திக்கிறேன்..

நன்றி மக்களே😍😍😍
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் 1


"சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ

வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ


சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்


சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்

காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று"


தன் காதலையும் காதலியையும் இதைவிட அழகாக உணர்த்திவிட முடியுமோ எனும்வகையில் தம் கவிதைகள் மூலம் நம்மைக் கட்டிப்போடும் பாரதியாரின் வரிகளில் கண் விழிப்பது சுகம் என்றால், மேலும் அந்த வரிகளை தன் மனதிற்கினியவனின் மனதை மயக்கும் குரலில் கேட்டு தன் காலையைத் தொடங்குவது சுகங்களுக்கெல்லாம் சுகமல்லவா!!!! அப்படி ஒரு சுகத்தில் தான் பல வருடங்களாகக் கண் விழித்துக் கொண்டிருக்கிறாள் அதிதி.

வெளியில் லேசாக பொழிந்து கொண்டிருந்த பனிமழையும் அவள் படுத்திருந்த கிங் சைஸ் டன்லப் மெத்தையும் அதிதியின் இமைக்காதலர்களை பிரிக்கப் பிரியப்படாமல் மேலும் ஒட்டிக்கொள்ளச் செய்ய, அவள் செவிமடல்களோ பாடல் முடிந்துவிட்டதில் தன்னவனின் குரலொலி தன் காதை வந்து நிறைக்கவில்லை என்பது உணர்ந்து கோபத்தில் இமைக்காதலர்களை பிரித்துவிட மெதுவாக தன் நயனங்களை கசக்கிக் கொண்டே விழி மலர்ந்தாள் அந்த மலர் மேனியுடையாள்.

வெண்ணையில் குழைத்து செய்யப்பட்டதோ என ஐயம் கொள்ளும் வகையில் பிரம்மனால் படைக்கப்பட்ட அவள் தேகம் வெளியே நிலவப்பட்ட 6 டிகிரி செல்சியஸ் குளிரின் உபயத்தால் சிவந்து போயிருக்க கைகளைத் சூடுபறக்கத் தேய்த்துக் கொண்டே கட்டிலில் எழுந்தமர்ந்தாள்.

வளைந்து நெழிந்து ஓடும் அருவி போல் அவள் முதுகில் கலைந்து படர்ந்திருந்த கார்குழலை தன் காதோரம் ஒதுக்கி விட்டு தன் கரத்தினை நெட்டி சோம்பல் முறித்தவள் உதட்டில் உறைந்த மென்னாம்பல் புன்னகையோடு கட்டிலிலிருந்து இறங்கி படுக்கையறையோடு ஒட்டிய அந்த குளியறைக்குள் புகுந்து கொண்டாள்.

பல் துலக்கி,காலைக்கடன்களை முடித்து விட்டு பதினைந்து நிமிடத்தில் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வெளியே வந்த அதிதி, இப்போது இடைவரை நீண்டிருந்த கருங்கூந்தலை தூக்கி கொண்டையிட்டு ஒரு கேட்ச் கிளிப்பில் அடக்கியவள், பின் தன் கைபேசியை எடுத்து அதில் தன் பார்வையை ஓடவிட்டுக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறி ஹாலுக்கு வந்து சேர்ந்தாள்.

அங்கே வந்தவளின் நயனங்கள் யாரையோ எதிர்பார்த்து அங்குமிங்கும் அலைபாய, அப்போது அவளின் தேடலின் நாயகனே அவளெதிரே தோன்றினான் அவள் முற்றிலும் எதிர்பாரா தோற்றத்தில்.

ஆறடி உயரத்தில் கட்டுமஸ்தான உடலமைப்பில் ஆளை அசரவைக்கும் புன்னகையை உதட்டில் தேக்கி வைத்து கண்கள் மின்ன பட்டுவேட்டி பட்டுசட்டை உடுத்தி மணமகன் போல் அவள் கண்முன் வந்து நின்றான் அவன் - ராகவ் கிருஷ்ணமூர்த்தி.

தான் காண்பது நிஜம்தானா என கண்களை கசக்கி விட்டுக்கொண்டு மீண்டும் அதிதி அவனை நோக்க, அங்கே அவனின் அதே அக்மார்க் புன்னகையும் கைகளில் காபி ட்ரேயுடனும் நின்றிருந்தான் ராகவ்.

"நான் கனவு எதாச்சும் காணுறேனா??? இது சியாட்டில் தான?? எனக்கு ஏதோ சிலுக்குவார்பட்டியில இருக்க மாதிரி இருக்கு.. டேய் ராகவ் என்ன டா ஆச்சு உனக்கு??? என்ன வேஷம் இது??" என அதிதி அதிர்ச்சியில் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக,

தன் கையில் வைத்திருந்த காபி ட்ரேயை அங்கிருந்த டீப்பாய் மீது வைத்தவன் அவளை அழைத்துக் கொண்டுபோய் அங்கிருந்த கதிரை மீது அமரவைத்து விட்டு கண்களில் குறும்புடன் அவளை நோக்கியவன், "ப்ரின்செஸ் ஷாக்கை குறைங்க.. முதல்ல இந்த காபியைக் குடிச்சு கொஞ்சம் தெம்பாகுங்க அப்போ தான் நான் அடுத்து சொல்லப்போற விஷயத்தைக் கேட்டு மயங்கி விழாம இருப்பீங்க" என கிண்டல் தொனியில் ராகவ் கூறினாலும் அவன் கைகளோ அவளுக்கென பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட டிகிரி காபியை அவள் கைகளில் திணித்தது.

அவன் கூற்று குழப்பமளித்தாலும், குவளையில் உள்ள குளம்பியின் வாசம் அவள் நாசியைத் துளைத்தெடுக்க, குழப்பத்தை புறந்தள்ளிவிட்டு குளம்பியை குரல்வளையில் சரித்தாள் பெண்ணவள்.

கடைசி மிடறு வரையில் ரசித்துக் குடித்து முடித்தவள் இப்போது தன்னெதிரே அமர்ந்திருந்தவனை ஓர் அளவிடும் பார்வையுடன் ஏறிட்டு, " நீ இவ்ளோ அமைதியா இருக்கதைப் பார்த்தா ஆப்பு பலமா இருக்கும் போலவே.. என்னன்னு சீக்கிரம் சொல்லு ராகவ் எனக்கு லேட் ஆச்சு.. இன்னைக்கு புது ப்ராஜெக்ட் பத்தி 10ஓவ் க்ளாக் மீட்டிங்க் இருக்கு கிளம்பனும்" என அவனிடம் பேசிக்கொண்டே தன் கைபேசியில் மணியைப் பார்த்து கிளம்புவதற்கு ஆயத்தமாக,

"பேபி நிஜமாவே இன்னைக்கு என்ன டேன்னு மறந்துட்டியா??" என்ற ராகவ்வின் குரலில் முன்பிருந்த கேலி தொலைந்து போயிருக்க,

'அப்படி என்ன முக்கியமான தினத்தை மறந்து தொலைத்தோம்' என தனக்குள் யோசித்துக்கொண்டே தனக்கு எதிரிலிருந்த சுவற்றில் நாட்காட்டியை பார்த்தவள் தன் தலையிலே மானசீகமாக கொட்டிக்கொண்டாள்.

'ச்சை இதெப்படி மறந்தேன்.. வர வர ரொம்ப மோசமாய்கிட்டே போற அதிதி' என தன்னை நினைத்தே நொந்து கொண்டவள், தவறு செய்துவிட்டு முழிக்கும் குழந்தை போல் பாவமாக ராகவ்வைப் பார்த்தாள்.

அவள் செய்கையில் அவன் மனம் பாகாய் உருக, ஆதரவாய் அவள் தோள் பற்றியவன் , "ப்ரின்செஸ் இப்படி மூஞ்சியை வச்சுக்காத..இன்னும் இந்த டே முடியலை சோ சீக்கிரம் அப்பாவுக்கு போன் பண்ணி விஷ் பண்ணு அங்க எப்படியும் நைட் 8 தான் ஆய்ருக்கும்..அவங்ககிட்ட பேசிட்டு நம்ம கோவிலுக்கு போய்ட்டு வந்திரலாம் வந்துட்டு நானே உன்னை ட்ராப் பண்றேன்" என அவள் கன்னத்தை ஆட்டி விடுவிக்க,

"சாரி ராகவ்.. எப்படி மறந்தேன்னே தெரியலை.. நேத்து தான் அந்த *** கம்பெனியோட ப்ராஜெக்ட் முடிஞ்சது... அந்த டென்ஷன்ல மாமா பெர்த் டேவை மறந்துட்டேன்.. மாமா ரொம்ப ஃபீல் பண்ணிருப்பாருல்ல..நீயாச்சும் நியாபகப்படுத்திருக்கலாம்ல.." என அவள் உண்மையான வருத்தத்துடன் கூற,

அவள் வருத்தம் அவனையும் தாக்கியதோ என்னவோ, அதைத் தாங்காதவன் அவளை சமாதானப்படுத்த,"அதிதி அப்பா ஒன்னும் நினைச்சுக்க மாட்டாங்க.. அப்பாவைப் பத்தி உனக்குத் தெரியாததா?? நானே மறந்துட்டேன்.. அம்மா காலையில கால் பண்ணவும் தான் நியாபகம் வந்து குளிச்சு பூஜை செஞ்சுட்டு உன்னை எழுப்ப வந்தேன் நீயே வந்துட்ட.. சோ ஃபீல் செய்யாம அப்பாக்கு கால் பண்ணு முதல்ல" என அவளை துரிதப்படுத்த,

தனக்காகத் தான் அவன் பொய்யுரைக்கிறான் எனப் புரிந்து கொண்டவள் முகத்தை சாதரணமாக மாற்றிக்கொண்டே தன் கைபேசியை எடுத்து அதில் "கிச்சு மாமா" என பதிந்து வைத்திருந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்து மறுமுனை எடுக்கக் காத்திருந்தாள்.



"ஹலோ கண்ணம்மா!!!!" என தன் பாசம் அனைத்தையும் ஒட்டுமொத்த குரலில் தேக்கிவைத்தது போல் வந்து விழுந்த தன் தாய்மாமனின் குரலில் கண்கலங்கிப் போனது அதிதிக்கு..

"ஹலோ என்னடாம்மா பேச மாட்டேன்ற.. கேக்குதா டா ஹலோ... ஹலோ.." என கிருஷ்ணமூர்த்தி அந்தப்பக்கம் இருந்து குரல் கொடுக்க, தன்னை சமாளித்துக்கொண்டவள் பழைய உற்சாகம் மீள, "ஹேப்பி ஹேப்பி பெர்த் டே யங்க் மேன்" என ஆரவாரமாகப் வாழ்த்து தெரிவிக்க,

அந்தப்பக்கம் மகிழ்ச்சியில் அவரின் ஆர்ப்பாட்டமான சிரிப்புச் சத்தம் அவள் காதை வந்தடைந்தது.

"இப்போதான் கண்ணம்மா இந்த நாளே முழுமையான மாதிரி இருக்கு.. தேங்க் யூ சோ மச் டா.. அப்பறம் என்ன பண்ற?? சாப்பிட்டியா அந்த தடிமாடு என்ன பண்றான் உனக்கு ஏதாச்சும் சமைச்சு குடுத்தானா இல்லையா??" என அவர் கேலியாக கேட்க இங்கு லவுட்ஸ்பீக்கரில் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ராகவுக்கு இரத்த அழுத்தம் எகிறியது.

"அப்பா நானும் இங்க தான் இருக்கேன்" என ராகவ் கடுப்புடன் மொழிய,

கிருஷ்ணமூர்த்தியோ கூலாக, "அப்போ ரொம்ப வசதியாப் போச்சு.. டேய் என் மருமகளுக்கு எதாச்சும் சாப்பிட செஞ்சு கொடுத்தியா இல்லையா டா.. போன வாரம் வீடியோ கால்ல பேசுனப்போவே பிள்ளை ரொம்ப இளைச்சுப் போய்ருந்தா" என அவர் மருமகள் மேல் பாசத்தை அள்ளித் தெளிக்க அவரின் மகனோ எரிமலை எப்படிப் பொறுக்கும் என்ற நிலைக்குச் சென்று கொண்டிருந்தான்.

அவன் முகபாவத்தைப் பார்த்து அதிதி பொங்கிச் சிரிக்க, அதில் மேலும் கடுப்பான ராகவ் "அப்பா போதும் போதும் நிறுத்துங்க.. உங்க மாமா மருமக படத்தை பார்க்க என்னால முடியலைடா சாமி.. அப்படி அவ இளைச்சுப் போய்ட்டான்னு தோணுச்சுனா நீங்களே வந்து உங்க மருமகளை மடியில தூக்கி வச்சு நிலாச்சோறு ஊட்டுங்க.. என்னை இப்போ ஆளை விடுங்க .." என அவன் பொங்கிய நேரம் அங்கே அவரின் போன் அவனின் அம்மாவின் காதுகளுக்கு இடம் மாறியிருந்தது.

"பேரப்பசங்களுக்கு சோறூட்டுற வயசுல மருமகளுக்கு ஊட்டனுமாம்ல ... எல்லாம் நேரம் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்குங்க பாரு.. என்னத்தை சொல்றது" என்ற ராகவ்வின் தாய் பர்வதத்தின் வெடுக்கென்ற பேச்சில் இங்கிருந்த இருவரின் முகமும் ஒருசேர வாடியது.

இவர்கள் பேசமாட்டார்கள் எனத்தெரிந்து அவரே மேலும் தொடர்ந்தார்,

"இதுக்கு மட்டும் வாயைத் தொறக்காதீங்க.. உங்க வயசுப் பசங்களோட பிள்ளைங்கலெல்லாம் ஸ்கூலுக்கு போய்கிட்டு இருக்காங்க.. நீங்க எப்போ மனசு வச்சு ஹம்ம் ... எம்மா மருமகளே எங்க தலைமுறையை தளைக்க வைக்கணும்னு உனக்கு எண்ணம் இருக்கா இல்லையா??" என அவர் வார்த்தைகளை அள்ளி வீச,

"அம்மாஆஆ!!!" என ராகவ்வும், "பர்வதம்!!!!" என கிருஷ்ணமூர்த்தியும் கண்டனக்குரலில் கத்த,

இது அடிக்கடி நடக்கும் கூத்து என்பதால் அதிதி முகத்தில் எந்தவொரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் , "அத்தை மாமா எனக்கு ஆபிஸ்க்கு நேரமாச்சு நைட் வந்து பேசுறேன்.. அன்ட் மாமா ஒன்ஸ் அகைன் ஹேப்பி பெர்த் டே" என வாழ்த்தியவள் ராகவ்வை பார்த்து ஓர் புன்னகையுடன்,"குளிச்சுட்டு வந்திடுறேன் ஃபிப்டீன் மினிட்ஸ்" எனக்கூறிவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டாள்.

போகும் அவள் முதுகையே வெறித்துப் பார்த்த ராகவ்விற்கு தன் அன்னையின் பேச்சை நினைத்து ஒரு பெருமூச்சொன்று கிளம்ப, அங்கிருந்த ட்ரேயை எடுத்துக்கொண்டு கிச்சனுக்குள் சென்றவன் அதை சுத்தம் செய்துவிட்டு காலை உணவை எடுத்து வைக்கலானான்.

கிருஷ்ணமூர்த்தி-பர்வதம் தம்பதியரின் ஒரேயொரு செல்ல வாரிசு தான் ராகவ், 31 வயதின் தொடக்கத்தில் கால் எடுத்து வைத்திருக்கும் வாலிபன். கிருஷ்ணமூர்த்தி சென்னையில் மூன்று கிளைகளைக் கொண்டுள்ள ஒரு சைவ உணவகத்தை நடத்திக் கொண்டிருக்க அவர் மனைவி வீட்டிலே சிறிய அளவில் ஊறுகாய்,அப்பளம் போன்ற பொருட்களை செய்து விற்றுக் கொண்டிருக்கிறார்.

தந்தையைப் போலவே சமயல்கலையில் அதிக நாட்டம்கொண்ட ராகவ்வும் அதையே கேரியராக தேர்வு செய்து கேட்டரிங்கில் மேற்படிப்பு வரை படித்து முடித்தவன் இப்போது சியாட்டிலில் உள்ள தரம் வாய்ந்த உயர்ரக ஐந்து நட்சத்திர விடுதியில் தலைமை செஃப்பாக பணிபுரிகிறான்.

அதிதியும் இங்குள்ள ** மென்பொருள் நிறுவனத்திலே 'ப்ராஜெக்ட் டெவலப்பராக' பணிபுரிய, கிருஷ்ணமூர்த்தி-பர்வதம் தம்பதியர் மட்டும் சென்னையிலிருந்து வந்து வருடம் ஒருமுறை இவர்களுடன் தங்கிவிட்டுச் செல்வர்.

கிருஷ்ணமூர்த்தியின் பாசத்திற்குரிய தங்கை சுபத்ரா. சுபத்ரா - கமலநாதன் தம்பதியின் ஒரே அன்பிற்குரிய வாரிசு தான் நம் கதையின் நாயகி அதிதி. கமலநாதன் வருவாய் துறையில் உயர் அதிகாரியாக பணிபுரிய, அவர் மனையாளே ஓர் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். தங்கையின் மீது கொண்ட அலாதி பிரியத்தாலோ என்னவோ தங்கை பெற்றெடுத்த செல்வமான அதிதி மீதும் உயிரையே வைத்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி.

ராகவ்விற்கும்ம் ராகவ்வின் தந்தைக்கும் அனைத்திலும் இருக்கும் ஒற்றுமை அதிதியின் மீது அதீத அன்பு வைப்பதிலும் தொடர்ந்தது. அவர்கள் இருவரின் உலகமே அதிதி என்றாகிப் போக, அவள் சொல்லே அந்த வீட்டில் வேதவாக்காகிப் போனது. ராகவ்வின் தாய்க்கு அதிதி மேல் என்றுமே தனிப்பாசம் தான், என்ன ஒன்று அவர்களின் வாழ்க்கையை இன்னும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி கொண்டு செல்லாமல் இருக்கிறார்களே என்ற வருத்தத்தைத் தான் அடிக்கடி இப்படி ஆதங்கமாக கொட்டித் தீர்த்து விடுவார்.




சொன்னதைப்போலவே பதினைந்து நிமிடத்தில் குளித்து முட்டியைத் தாண்டிய மஞ்சள் நிற குர்தியும் வெள்ளை நிற பாலசோவும் அணிந்து சூரியகாந்திக்கு கை கால்கள் முளைத்ததைப் போல் ஒளிவீசிக்கொண்டே டைனிங்க் டேபிளில் வந்தமர்ந்தாள் அதிதி.

அவளைப் பார்த்து விசிலடித்த ராகவ் ," வாவ் பின்றீங்களே ப்ரின்செஸ்.. நான் அப்படியே ஃப்ளாட் ஆய்ட்டேன் போங்க" என அவன் மயங்கியதைப் போல் பாவனை செய்ய, அவன் தோளிலேயே செல்லமாக அடித்தவள் "கிண்டல் பண்ணாம வா சாமி கும்பிட்டு சீக்கிரம் சாப்பிடலாம்.. நிறைய டிஷ் பண்ணிருப்ப போல வாசனை மூக்கைத் துளைக்குது" என அவனின் நளபாகங்களின் நறுமணத்தை நாசியில் நிரப்பிக் கொண்டே அங்கு சாமிபடங்களை வைத்திருக்கும் சின்ன கபோர்ட் போன்ற சாமியறை முன் இருவரும் சென்று நின்றனர்.

என்னதான் பல வருடங்களாக அயல்நாட்டில் வாழ்ந்தாலும் ராகவ்விற்கு கடவுள் பக்தி ரொம்பவே அதிகம் என்பதால் அந்த சிறிய பூஜையறை மிகவும் நேர்த்தியாக பராமரித்து வைத்திருக்க அந்த இடமே தெய்வீககரமாக தோற்றமளித்தது. அங்கே நின்ற அதிதியின் அலைபாய்ந்த மனம் சாந்தி அடைந்து நிர்ச்சலமாக அவள் பளிங்கு முகத்திற்கு இப்போது மேலும் கலை வந்தது.

ராகவ் பூஜை முடித்து தீபாரதனை காட்டிய பின் இருவரும் சேர்ந்து தங்கள் கேலி கிண்டலுடன் காலை உணவை முடித்தவுடன், ராகவ் சென்று இந்த குளிருக்கு இதமாக டெனிம் ஜீன்சும் சட்டையும் அணிந்து அதன் மேல் ஓவர்கோட்டுடன் பக்கா அயல்நாட்டவன் போல் தயாராகி வர, இப்போது மயங்கி விழுவது அதிதியின் முறையாயிற்று.

ஓர் மகிழ்ச்சியான மனநிலையோட வீட்டைப் பூட்டிவிட்டு இருவரும் ராகவ்வின் பல வருட உழைப்பால் அந்த வீட்டின் வாசலை அலங்கரித்திருந்த அவனின் பென்ஸ்ஸில் ஏறிப் பறந்தனர்.

முதலில் அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று மனமார கடவுளை வணங்கிய பின் அங்கிருந்து நேராக அதிதியின் அலுவலகத்திற்கு காரை விரட்டினான் ராகவ்.

காரிலிருந்து இறங்கிய அதிதி ஜன்னலோரம் குனிந்து, "இன்னைக்கு நைட் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு ராக்ஸ். அது என்னன்னு யோசிச்சுட்டே போய் சமையல் பண்ணி உப்புக்கு பதிலா சர்க்கரை போட வாழ்த்துக்கள் மாமா .. நான் கிளம்புறேன் டாட்டா" எனக் கண்சிமிட்டிக் கூறியவள் அவன் அடுத்த கேள்வி கேட்கும் முன் சிட்டாகப் பறந்திருந்தாள்.

அவளின் அதரங்கள் அத்திபூத்தார் போல் வெளியிடும் 'மாமா' என்ற அழைப்பு மிகவும் அரிதானது, அதிதி அதிக சந்தோஷத்திலோ, அதிக வருத்தத்திலோ இல்லை அதிக குழப்பத்தில் இருந்தால் மட்டுமே அவள் தன்னை மாமா என்றழைப்பாள் என தெரிந்து வைத்திருந்த ராகவ்வும் ஓரளவு அவள் மனநிலையை யூகித்து வைத்திருந்தான்.

அவளின் பெற்றோர்களின் பல வருடப் புலம்பல்களினாலும் காலையில் தன் அன்னை பேசியதன் உபயத்தினாலும் அவள் தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடிவெடுத்திருக்கிறாள் என்பது அவள் சொல்லாமலே அவன் மனம் கண்டுகொண்டது.

அதிதியின் இந்த முடிவை நினைத்து காதல் மனம் துள்ளிக் குதித்தாலும் அதே காதல் அவள் உண்மையான மகிழ்ச்சியுடன் இந்த முடிவை எடுத்தாளா?? என்பதில் சிந்தனையில் மூழ்கியது.

'அவள் சந்தோஷம் தான் என்றும் தனக்கு முக்கியம்' என நினைத்த ராகவ் அவளே இரவு சொல்லட்டும் பின் பேசிக்கொள்ளலாம் என ஒருமனதாக முடிவெடுத்தவன் தன்னுடைய விடுதிக்கு காரைக் கிளப்பினான்.




வாசிங்டன் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய நகரமான சியாட்டில் அமெரிக்காவின் மேற்குக் கடலோரத்தில் உள்ள ஒரு துறைமுக நகரம் ஆகும். 1980களில் இருந்து தொழில்நுட்ப நகரமாக உருமாறிய சியாட்டிலில் தான் மைக்ரோசாப்டின் நிறுவனர் பில் கேட்ஸ் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல முண்ணனி நிறுவனங்களான மைக்ரோசாப்ட் அமேசான் போன்ற நிறுவனங்கள் இங்கு நிறுவப்பட்ட பின் இங்கு மென்பொருள் நிறுவனங்களுக்கு வரவேற்பு அதிகரிக்க, இது ஒரு முக்கிய தொழில்நுட்ப நகரமாக உருவெடுத்தது.

அப்படி பல அடுக்கு மாடிகளைக் கொண்ட அந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றில் உள் நுழைந்த அதிதி அங்குள்ள மின்தூக்கியில் சென்று அதில் 12ஆம் தள பொத்தானை அமுக்கிவிட்டு நடந்து வந்ததால் மூச்சுவாங்க தண்ணீர் அருந்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் தன் தளம் வந்ததும் அதிலிருந்து வெளியேறினாள்.

தன்னுடைய அலுவலகத்திற்குள் அவள் நுழையும் போதே அவளைக் கண்டுவிட்ட அவளின் நண்பன் ஹேரி அவளின் உடையைக் கண்டு

"மன்ச் காட் மைன்னா மன்ச் காட் மைன்னா வெல்கம்" என தன் தமிழ் நண்பர்களின் உபயத்தில் தமிழை கொலைசெய்து இடை வரை குனிந்து மேல்நாட்டு பாணியில் அவளை வரவேற்றான்.

அவன் பாடலிலும் செய்கையிலும் பக்கென சிரித்துவிட்ட அதிதி , "ஹேரி ப்ளீஸ் எங்க தமிழை விட்டுடு இப்படி அதை கொலை செய்யுறதை திருவள்ளுவரும் கம்பரும் பார்த்தா அந்த எழுத்தாணியை வச்சே உன் குரல்வளையை குத்தி கொன்றுவாங்க" என அவனை கிண்டல் செய்தவள் தன் இருக்கையில் வந்து அமர,

அவனோ அவள் பேசியது புரியாமல் ," அடிதி வாட் இஸ் எழுட் ஹாணி எக்ஸ்ப்ளைன் இட்" என சந்தேகம் கேட்க,

பல்லைக் கடித்த அதிதி , "என் பேரை முதல்ல ஒழுங்கா கூப்பிடுடா ஹேரி பூரி உன் பொண்டாட்டி பிச்சைக்காரி!!! என்னை ஆளை விடு" என கையெடுத்து கும்பிட்டவள் தன் கணினியை உயிர்ப்பித்து அதில் மூழ்கிப் போக,

ஹேரியும் பூரி பிச்காரி என உளறிக்கொண்டே தன் வேலையைப் பார்க்கலானான்.

பத்தரை மணி போல் அந்த பெரிய கலந்துரையாடல் அரங்கில் அனைவரும் குழுமியிருக்க, நாற்பதின் தொடக்கத்திலிருந்த அந்த குழுவின் தலைவர் தங்களின் அடுத்த ப்ராஜெக்டைப் பற்றி அனைவரிடமும் தகவலைப் பகிர்ந்தவர் அனைவரிடம் அவர்களின் யோசனையை கலந்தாசோதித்தார்.

ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடந்த அந்த மீட்டிங்கின் முடிவில் அந்த ப்ராஜெக்ட் சம்பந்தமாக ஒரு கான்பரென்ஸ் லண்டனில் நாளை மறுநாள் நடைபெறுவதாகவும் அதற்கு தங்கள் கம்பெனியின் சார்பாக அதிதி நாளை அங்கு செல்ல வேண்டும் என தாங்கள் முடிவெடுத்திருப்பதாகக் கூறியவர், அதிதியின் விருப்பத்தைக் கேட்க, அதிதி என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பிப் போய் நின்றாள்.

ராகவ்விடம் காலையில் கூறியதைப் போல் தங்கள் பெற்றோரிற்காக அரைமனதாய் தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அவள் முடிவெடுத்திருந்த இந்த சமயத்தில் இந்த கான்பரென்ஸ் அவசியம் தானா?? என ஒரு மனம் நினைக்க, இன்னொரு மனமோ இந்த கான்பரென்ஸை அட்டென்ட் செய்து இந்த ப்ராஜெக்டை வெற்றிகரமாக முடித்தால் அவளுக்கு கிடைக்கப்போகும் உத்யோக உயர்வையும் கூடுதல் சம்பளத்தையும் நினைத்துக் குழம்பியது.

மென்பொருள் துறையின் வளர்ச்சி மிக அபரிமிதமாக வளர்ந்து கொண்டுவரும் இக்காலத்தில் இவர்கள் கம்பெனியின் திட்டமும் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கணினி அறிவியலின் முக்கிய பிரிவான செயற்கை நுண்ணறிவைப் (Artificial Intelligence) பற்றி வருடாவருடம் நடக்கும் இந்தக் கலந்துரையாடலில் உலகில் இருக்கும் அனைத்து முண்ணனி மென்பொருள் வல்லுநர்களும் கலந்து கொள்வதால் அதிதியின் கெரியரில் இந்த கலந்துரையாடல் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும்.

எனவே என்ன முடிவு எடுப்பது எனத் தெரியாமல் அதிதி ஒரு நிமிடம் குழம்பி நின்றுவிட்டாள்.

என்னதான் இவர்களிருவரின் பெற்றோர் அப்பர் மிடில் க்ளாஸ் வர்க்கத்தை சேர்ந்தவர்களானாலும் ராகவ் தன் பெற்றோரை எந்த இடத்திலும் எதிர்பார்க்காமல் தன் சொந்த உழைப்பால் தான் முன்னேறிக் கொண்டிருக்கிறான்.

அவர்கள் இப்போது இருக்கும் வீடு கூட லோன் போட்டு வாங்கியதோடல்லாமல் ராகவ்வும் அவளும் இன்னும் அதற்கு வட்டி கட்டிக்கொண்டிருப்பது அதிதியின் கண்முன் வந்து போக, தங்கள் உறவைப் பற்றிய முடிவை ஒரு வாரம் தள்ளிப்போட நினைத்தவள் முழுமனதோடு லண்டன் போக முடிவெடுத்து தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.

பயண ஏற்பாடுகளை நிறுவனமே பொறுப்பேற்றுக்கொள்ள அவளுக்கு பேக்கிங்கைத் தவிர வேறெந்த வேலையும் இல்லை.

தன் இருக்கைக்கு வந்தவள் ராகவ்வைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தாள், அவனைத் தாம் மிகவும் காக்க வைக்கின்றோமோ என்ற குற்றவுணர்வு மனதை அரிக்க தன் கவனத்தை முயன்று வேலையில் திசை திருப்பினாள்.

மதிய வேளையில் ஹேரியுடன் சென்று அந்த வரண்டு போன வரட்டி போல் உள்ள சான்ட்விச்சை உள்ளே தள்ளும் போது தாயின் கைமணத்தில் வத்தல்குழம்பின் வாசம் வந்து தொண்டையை அடைக்க, ஹேரியிடம் அவன் நாட்டைப் பற்றி குற்றப்பத்திரிக்கை வாசித்துக்கொண்டே உணவை தொண்டைக்குள் தள்ளினாள் பெண்ணவள்.

அவள் கூறிய(திட்டிய) எதுவும் புரியாமல் ஹேரியும் மண்டையை மண்டையை ஆட்ட, தன் குழப்பங்களையும் கவலைகளையும் மறந்து விட்டு தன் முத்து மூரல்கள் தெரிய நகைத்தவள் அவனோடு தன் இருக்கைக்கு வர, நாளை கிளம்புவதால் இன்று அவள் முடிக்கப்பட வேண்டிய வேலைகள் மலையாய் குவிந்திருக்க, அதற்குள் தன்னைப் புகுத்திக் கொண்டவள் அனைத்தையும் முடித்துவிட்டு 'அப்பாடா' என மூச்சுவுடவும் அங்கிருந்த கடிகாரம் 'எட்டு'முறை அடித்து முடியவும் சரியாக இருந்தது.

ஹேரி தன் கேர்ள் பிரெண்டுடன் அவுட்டிங்க் செல்வதால் ஆறு மணிக்கே கிளம்பியிருக்க, இவள் தன் கணினியை அணைத்து விட்டு ராகவ்விற்கு அழைக்க தன் கைபேசியையும் தன் கைப்பையை எடுத்துக்கொண்டே அலுவலகத்தை விட்டுக் கிளம்பினாள்.

ராகவ் அரைமணி நேரம் முன்பிருந்தே அவளுக்காக காத்திருக்க, "வெய்ட்டிங்க் அட் தி பார்க்கிங்க் ப்ரின்செஸ்" என குறுந்தகவலை அனுப்பி வைத்திருந்தான்.

அதைக்கண்டு புன்னகைத்தவள் மின்தூக்கியின் உபயத்தில் கீழ்தளம் வந்து பார்க்கிங்க் ஏரியாவில் ராகவ்வை கண்களால் துலாவினாள்.

அவளை அதிக நேரம் காக்க வைக்காமல் அவள் அருகில் காரைக் கொண்டு வந்து நிறுத்தியவன் அவளுக்காக கதவைத் திறந்துவிட, அவள் ஏறி அமர்ந்ததும் காரைக் கிளப்பினான்.

"என்ன அதிதி மேடம் இன்னைக்கு டே எப்படிப் போச்சு" என லாவகமாக காரை ஓட்டிக்கொண்டே அவளிடம் வினவ,

"ஹான் !! நல்லா போச்சு ராகவ் ... உனக்கு??" என அவள் பதில் கேள்வி கேட்க,ஒரு பெருமூச்சு விட்ட ராகவ், "எங்க காலையில ஒருத்தங்க வச்சுட்டு போன சஸ்பென்ஸ்ல சர்க்கரைக்கு பதிலா உப்பைப் போட்டு அடிவாங்கி அமர்க்களமா போச்சு" என அவன் பாவத்துடன் சொல்ல,

அதிதிக்கு குற்றவுணர்ச்சி மேலும் அதிகமாகியது..

அவள் முகத்தை வைத்தே ஏதோ சரியில்லை என உணர்ந்து கொண்ட ராகவ் , "அதி ஆர் யூ ஓகே?? எதாச்சும் பிரச்சனையா?? " என கரிசணையாக வினவ,

சட்டையை மாற்றுவதைப் போல் முகபாவத்தையும் சட்டென மாற்றிக் கொண்டவள் , "வந்து அதெல்லாம் ஒன்னும் இல்லை ராகவ் ..லண்டன்ல நாளைன்னைக்கு ஒரு கான்ஃபெரன்ஸ் இருக்கு.." எனத்தொடங்கி தன்னை தேர்வு செய்திருப்பதையும் இதனால் அவளுக்கு கிடைக்கப்போகும் பதவி உயர்வு பற்றியும் சுருக்கமாக அவள் சொல்லி முடித்துவிட்டு அவன் முகம் பார்த்தாள்.

அவனோ மிகவும் சந்தோஷத்துடன், "ஹேய் ப்ரின்செஸ் கங்ராட்ஸ் டா...பெரிய சர்ப்ரைஸா தான் கொடுத்துருக்கிங்க மேடம்... மறக்காம எனக்கு ட்ரீட் வச்சிரு இப்போவே சொல்லிட்டேன்.." என அவன் உண்மையான மகிழ்ச்சியுடன் கூற, அவள் தான் அவன் என்ன நினைக்கிறான் எனத் தெரியாமல் குழம்பிப் போனாள்.

ராகவ்விற்கு உண்மையில் மனதில் லேசான வலியும் ஏமாற்றமும் இருந்தாலும் தன் வலி அவளை பாதிக்கும் என்றுணர்ந்து அதை மறைத்து உற்சாகமாக இருப்பது போல் காட்டிக் கொண்டவன் சற்று நேரத்தில் அவளையும் தன் பேச்சால் உற்சாகமாக்கியிருந்தான்.

அதன்பின் அவளின் பயண விபரங்களையும் அவளின் பாதுகாப்பையும் கேட்டறிந்து உறுதி செய்தவன் அங்கு தனக்குள்ள நண்பனையும் அழைத்து அவளைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டிருந்தான்.

ஒரு கார் பயணத்திற்குள்ளையே அனைத்தையும் செய்து முடித்தவனின் அக்கறையில் அதிதி மனம் உருகிப்போக, ' இவன் அன்பிற்கு எதைக் கொடுத்தால் ஈடாகுமோ' என அவன் அன்பில் கரைந்து போனவளுக்கு, அவன் காதலில் என்று முழுமனதாய் கரைய நேரம் வருமோ???

வீட்டிற்கு வந்து இரவு உணவை பேசிக்கொண்டே முடித்தவர்கள், பின் அவளின் பயணத்திற்கு தேவையானதை பேக் செய்ய ஆரம்பித்தனர்.

அவளை விட அவள் தேவை அறிந்து அவனே அனைத்தையும் எடுத்து வைக்க, பின் இருவரும் படம் பார்க்க முடிவு செய்து ஹோம் தியேட்டரில் அவர்களுக்குப் பிடித்த அலைபாயுதே படத்தைப் போட்டுவிட்டு நொறுக்குத் தீனிகள் சகிதம் அதன் முன் அமர்ந்தனர்.

சற்று நேரத்திலே உடல் அசதியின் காரணமாக சோபாவிலே இருவரும் உறங்கி விட, படம் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது..

அப்போது திரையில் , மெடிக்கல் கேம்ப் வந்திருந்த சக்தியை(ஷாலினி) மூன்று வாரங்கள் கூட பிரிந்திருக்க முடியாமல் அவளைத் தேடி ஓடி வந்த கார்த்திக்கிடம்(மாதவன்),

சக்தி கண்களில் கண்ணீருடன் , "ஏன் என்னைத் தேடி வர இவ்ளோ நாள் ஆச்சு?????!!!!!!" எனக் கேட்டுக் கொண்டிருந்தாள்!!!!

-தொடரும்.
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதைக்கான உங்களின் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் பட்டூஸ்:love::love::love:


 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதைக்கான உங்களின் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் பட்டூஸ்😍😍😍


 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதைக்கான உங்களின் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் பட்டூஸ்😍😍😍





 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதைக்கான உங்களின் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் பட்டூஸ்😍😍😍











 
Status
Not open for further replies.
Top