All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அரக்கனே! என் அரசனே!!’ கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்தக் கதையுடன் வந்து விட்டேன். இந்தக் கதையைப் பற்றி என்ன சொல்ல? எப்போதும் போல் சாதாரணக் காதல் கதைதான். ஆனால் என்னுடைய பாணியில் சற்று வித்தியாசமாய்!! கதையின் தலைப்பே கதையைச் சொல்லாது சொல்லியிருக்கும் என்று நம்புகின்றேன். சமுதாயத்தின் இன்றைய அவலங்களைப் பூச்சு இல்லாது கொடுக்கவிருக்கின்றேன். சில விசயங்கள் உங்களை முகம் சுளிக்க வைக்கலாம். சில விசயங்கள் உங்களுக்குப் பிடிக்காது இருக்கலாம். அப்படிப்பட்ட விசயங்கள் நம்மைச் சுற்றி நடக்கத்தான் செய்கிறது. அதை எல்லாம் கடந்து வாழ வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அப்படிப்பட்டவர்கள் அதைக் கடந்து வந்து நல்வாழ்க்கை வாழவேண்டும் என்பதே என் எண்ணம்.

தவறுகள் ஒரு புள்ளியில் சரி செய்யப்பட்டுச் செம்மைப்படுத்தும் போது... அந்தத் தவறுகள் கூடப் பிரமிக்கத்தக்க ஒன்றாக, ஒரு அற்புத விசயமாகி மாறிப் போய்விடுகிறது. அந்தத் தவறு காதலில் என்றால் சொல்லவும் வேண்டுமோ??? முரணான நேசம், பொருந்தா காதல் என்று பல பெயர் கொண்டாலும்... இதில் பொதுவானது காதல். அந்தக் காதல் படுத்தும் பாட்டைத் தான் இந்தக் கதையில் நாம் பார்க்க போகின்றோம்.

ஆன்கோயிங் கதை முடிந்ததும் இந்தக் கதையுடன் வருகிறேன். நம் வழக்கமான நேரத்தில் சந்திக்கலாம் என்னுடைய கதைகளைத் தொடர்ந்து படித்து ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தும் அனைத்து தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

தலைப்பு : அரக்கனே! என் அரசனே!! 💘💘💘
(நாயகன் & நாயகிக்கு பெயர் இன்னும் வைக்கவில்லை.)

அன்புடன்,
ஶ்ரீகலா :)

கதையிலிருந்து சிறு முன்னோட்டம்...

⚠மது உடலுக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கெடுதல்...

"வாட் டூ யூ வான்ட் கிச்சுலு? விஸ்கி, ஒயின் ஆர் வோட்கா?" கனிஷ்கா மகளிடம் கேட்டார்.

"ஐ வாட் காக்டெயில் மாம்." அவள் அன்னையிடம் சிடுசிடுத்தாள்.

காலையில் இருந்து இரவு உறங்க போகும் வரை அவளது உலகம் உற்சாகமாய் இயங்கும். ஆனால் இரவு வந்துவிட்டால் மட்டும் அவளுக்கு எங்கே இருந்து தான் பேய் பிடிக்குமோ? கோபம், வெறுப்பு, வேதனை, வலி என்று அனைத்து உணர்வுகளுக்கும் ஆட்ப்பட்டு அவள் தனக்குள் தவித்துப் போய்விடுவாள். இது இன்று நேற்று நடப்பதல்ல. அவளது பதினான்கு வயதில் இருந்து இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

"மாம், இன்னுமா ரெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க?" அவள் கத்த தொடங்க...

"இதோ வந்துட்டேன் கிச்சுலு." கனிஷ்கா மகளிடம் ஒரு கோப்பையைக் கொடுத்தவர் தானும் ஒரு கோப்பையை எடுத்து மதுவை பருகலானார்.

ஒரே மூச்சில் மதுவை குடித்து முடித்துக் கோப்பையைத் தூக்கி எறிந்தாள் அவள். அதைக் கண்ட அன்னை, "இதோட ஆயிரம் கிளாசுக்கு மேல் உடைச்சிட்ட கிச்சுலு. உன் கோபத்தை அதில் காட்டி எந்தப் பிரயோஜனமும் இல்லை." என்றவர் மெதுவாக மதுவை ரசித்து ருசித்து அருந்தினார்.

"நான் கோபத்தைக் காட்டுவதாக இருந்தால் உங்க கிட்ட தான் காட்டணும்." மகள் அன்னையிடம் வளென்று எரிந்து விழுந்தாள். அவர் ஒன்றும் பேசாது அமைதியாக இருந்தார்.

அவள் வழிகளை மூடி சோபாவில் சாய்ந்து படுக்க... கனிஷ்காவின் கண்டிப்பான குரல் அவளது விழிகளைத் திறக்க செய்தது.

"வீட்டுக்கு போ." அவர் கண்டிப்பான குரலில் சொல்ல...

"இன்னைக்கு ஒருநாள் நான் இங்கே இருக்கேனே." மகள் கெஞ்சுதலாய் அன்னையைப் பார்த்தாள்.

"நோ கிச்சுலு... நீ அங்கே இருப்பது தான் நல்லது." என்றவர் மகளை மூட்டை கட்டி அனுப்பி வைத்தார்.

கனிஷ்காவிற்கு என்று சில கணக்குகள் இருக்கிறது. அதற்கு மகள் அங்கே இருந்தால் தான் சரி வரும். அவரது நோக்கம் நிறைவேறும். கனிஷ்கா இன்னொரு கோப்பையை எடுத்து மதுவை தொண்டையில் சரித்தார்.

*******************************

மும்பையில் பணக்காரர்கள் வசிக்கும் ஏரியாவில் இருந்த அந்தப் பிரமாண்ட வீட்டின் வரவேற்பறையின் நடுவே ஹோமம் நடந்து கொண்டிருந்தது. அதைச் சுற்றிலும் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து இருந்தனர். அதில் நடுநாயகமாக நம் நாயகன் அமர்ந்திருந்தான். அவனது திண்ணிய தோள்களும், புடைத்த புஜங்களும், சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டும் அவன் மேலே போர்த்தியிருந்த அங்கவஸ்திரத்தை மீறி வெளியில் தெரிந்தது. நெடுநெடுவென்ற உயரத்தில் கதாநாயகன் போன்ற தோற்றத்தில் அவன் இருந்தான். தோற்றம் மட்டுமல்ல, அவன் உண்மையில் திரையில் கதாநாயகன் தான். இளம்பெண்களின் கனவு நாயகன் வேறு. அதற்காக அவன் சாக்லேட் பாய் அல்ல. அவன் ஒரு ரக்டு பாய். ஆனால் வீட்டினருக்கு மட்டும் அவன் ஒரு நல்ல மகன். இன்று அவனுக்குப் பிறந்தநாள். அதற்காக அவனது அன்னை ஏற்பாடு செய்திருந்த ஹோமத்தில் கலந்து கொள்ளவென்று அவன் தனது படப்பிடிப்பை விட்டு விட்டு இங்கே வந்திருக்கின்றான்.

ஹோமம் முடிந்ததும் வந்திருந்த புரோகிதர்களுக்குப் பரிசுகள், வெகுமதியை கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு பின்பு அங்கே வீட்டினர் மட்டும் மீதம் இருந்தனர்.

"ம்மா, ஐயம் வெரி டயர்ட்." என்றவன் தனது அன்னையின் மடியில் படுத்துக் கொண்டான்.

"காலாகாலத்தில் கல்யாணம் பண்ணியிருந்தால்... இந்நேரம் நீ உன் மனைவி மடியில் படுத்திருக்க வேண்டும். நீ என்னடா என்றால்..." ரமணி மகனை கண்டு கேலி செய்தார்.

"இதுக்கு எல்லாமா கல்யாணம் பண்ணிக்க முடியும்? எனக்கு உங்க மடியே போதும்." என்றவன் விழிகளை மூடி கொண்டான்.

"உனக்கு வயசு என்ன குறைஞ்சிட்டே போகுதுன்னு நினைச்சியா? இன்னையோட முப்பத்திமூணு வயசாகுது." அவர் மகனை கடிந்து கொண்டார்.

"என்னைப் பார்த்தால் முப்பத்திமூணு வயசு மாதிரியா தெரியுது." அவன் குறும்பாய் கண்ணடித்துக் கேட்க...

நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இருபத்தியைந்து வயது இளைஞனுக்கு அவன் டஃப் கொடுப்பான். அத்தனை இளமையாக அவன் இருந்தான்.
 

ஶ்ரீகலா

Administrator
நாயகன் : சாணக்கியா
நாயகி : விராஜினி

சாணக்கியா & விராஜினி பெயர்களின் அர்த்தம் புத்திசாலி. சாணக்கியா புத்திசாலியான ராஜா என்றால், விராஜினி புத்திசாலியான ராணி. இரண்டு புத்திசாலிகளும் மற்றவர்களால் முட்டாளாக்கப்பட்ட கதையிது. அவர்களது வலி, வேதனையை வெளிப்படுத்தும் கதையிது. இந்தக் கதை மூன்று பாகங்களாக வரும். படிக்கப் பொறுமை இருப்போர் மட்டும் என்னுடன் தொடர்ந்து பயணியுங்கள். முதல் அத்தியாயம் இன்றிரவு நம் வழக்கமான நேரத்தில் பதிவிடப்படும். உங்களது தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி மக்களே 😍😘


904c1a8f-729b-4c89-885f-937b5d4efa2c.jpeg
 

ஶ்ரீகலா

Administrator
⚠ஆன்டி ஸ்டோரி. இது ஒரு கற்பனை கதை.


ஶ்ரீகலாவின் ‘அரக்கனே! என் அரசனே!!’


அத்தியாயம் : 1


மும்பையில் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் இருந்த அந்தப் பிரம்மாண்ட வீட்டின் வரவேற்பறையின் நடுவே ஹோமம் நடந்து கொண்டிருந்தது. அதைச் சுற்றிலும் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து இருந்தனர். அதில் நடுநாயகமாக நம் நாயகன் அமர்ந்திருந்தான். அவனது திருநாமம் சாணக்கியா. பெயருக்கு ஏற்றார் போன்று அவன் மிகவும் புத்திசாலி. காண்போரை கவர்ந்திழுக்கும் பேரழகன் அவன்... அவனது திண்ணிய தோள்களும், புடைத்த புஜங்களும், சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டும் அவன் மேலே போர்த்தியிருந்த அங்கவஸ்திரத்தை மீறி வெளியில் தெரிந்தது.


நெடுநெடுவென்ற உயரத்தில் அவன் கதாநாயகன் போன்ற தோற்றத்தில் அம்சமாக இருந்தான். தோற்றம் மட்டுமல்ல, உண்மையில் அவன் ஒரு திரைப்படக் கதாநாயகன் தான். இளம்பெண்களின் கனவு நாயகன் வேறு. அதற்காக அவன் சாக்லேட் பாய் அல்ல. அவன் ஒரு ரக்டு பாய். ஆனால் அவனது வீட்டினருக்கு மட்டும் அவன் ஒரு நல்ல மகன். இன்று அவனுக்குப் பிறந்தநாள். அதற்காக அவனது அன்னை ஏற்பாடு செய்திருந்த ஹோமத்தில் கலந்து கொள்ளவென்று அவன் தனது படப்பிடிப்பை விட்டு விட்டு இங்கே வந்திருக்கின்றான்.


ஹோமம் முடிந்ததும் வந்திருந்த புரோகிதர்களுக்குப் பரிசுகள், வெகுமதியை கொடுத்து அவர்களை அனுப்பிய பிறகு அங்கே வீட்டினர் மட்டுமே மீதம் இருந்தனர். வீட்டினர் என்றால் அவனது தந்தை ரவிசங்கர் மற்றும் அவனது அன்னை ரமணி மட்டுமே இருந்தனர். அவனுக்கு ஒரே ஒரு தம்பி மட்டுமே. அவனது பெயர் வருண். அவன் அமெரிக்காவில் இருக்கும் தொழில்களைப் பார்த்துக் கொண்டு அங்கே இருக்கின்றான்.


"ம்மா, ஐயம் வெரி டயர்ட்." என்றவன் சலுகையாய் தனது அன்னையின் மடியில் படுத்துக் கொண்டான்.


"காலாகாலத்தில் கல்யாணம் பண்ணியிருந்தால்... இந்நேரம் நீ உன் மனைவி மடியில் படுத்திருக்க வேண்டியது. நீ என்னடா என்றால்...?" ரமணி மகனை கண்டு கேலி செய்தார்.


ஒரு நொடி தந்தை மற்றும் மகன் இருவரது விழிகளும் சந்தித்து மீண்டது.


"இதுக்கு எல்லாமா கல்யாணம் பண்ணிக்க முடியும்? எனக்கு உங்க மடியே போதும்." என்றவன் விழிகளை மூடி கொண்டான்.


"உனக்கு வயசு என்ன குறைஞ்சிட்டே போகுதுன்னு நினைச்சியா? இன்னையோட முப்பத்திமூணு வயசாகுது." அவர் மகனை கடிந்து கொண்டார்.


"என்னைப் பார்த்தால் முப்பத்திமூணு வயசு மாதிரியா தெரியுது." அவன் குறும்பாய் கண்ணடித்துக் கேட்க...


நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சாணக்கியா இருபத்தியைந்து வயது இளைஞனுக்கு டஃப் கொடுப்பான் போலும். அவன் அத்தனை இளமையாக இருந்தான். அதனால் தான் என்னவோ அவன் திரைத்துறையில் இத்தனை வருடங்களாகத் தனிக்காட்டு ராஜாவாகக் கோலோச்சி வருகின்றான்.


"தெரியலை தான். அதுக்காகக் கல்யாணம் பண்ணிக்காம இப்படியே இருக்க முடியுமா கண்ணா? கல்யாணம், மனைவி, குழந்தை எல்லாம் வந்தால் தான் வாழ்க்கை முழுமையடையும். உனக்குத் தெரியாதது ஒண்ணும் இல்லை. நீ புத்திசாலி புரிந்து கொள்வாய் என்று நினைக்கின்றேன்." என்ற அன்னையைக் கண்டு முறுவலித்தவன் அவரது மனம் நோகாது,


"இரண்டு வருடம் டைம் கொடுங்கம்மா. அதுக்குப் பிறகு நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்." என்று அவன் சமாதானம் செய்தான். இதற்கு மேல் அன்னையை வருந்த செய்வதில் அவனுக்கும் விருப்பம் இல்லை.


"நீ இப்படிச் சொன்னதே ரொம்பச் சந்தோசம் கண்ணா." என்றவர் மகனை கொஞ்சி கொண்டார்.


"உங்க சந்தோசம் தான் என்னோட சந்தோசமும்." அவனும் அன்னையைக் கொஞ்சினான்.


"கண்ணா, நேத்து யூ ட்யூப்பில் உன்னைப் பத்தி ஒரு கிசுகிசு பார்த்தேன். அந்த நான்கு எழுத்து நடிகையோடு நீ லிவ்விங் டுகெதரில் இருக்கிறியாம். உனக்கு ஒரு குழந்தை கூட இருக்குன்னு சொன்னாங்க. எனக்கு வந்த கோபத்தில்..." ரமணி கோபத்தில் பல்லை கடித்தார்.


"ம்மா, அவங்களுக்கு வியூஸ் வரணும்ங்கிறதுக்காக என்ன வேணா சொல்லுவாங்க. அதற்காகத் தினமும் ஒரு பொண்ணு கூட என்னை இணைச்சு வச்சு கிசுகிசு பேசுவாங்க. ஆனா உங்க மகனுக்கு அந்தளவுக்குக் கெப்பாசிட்டி இல்லை." அவன் குறும்புடன் கேலியாய்ச் சொன்னான். அதைக் கண்டு ரமணி வாய்விட்டு சிரித்து விட்டார்.


"போக்கிரி... என்ன பேச்சுப் பேசுகிறாய்? என் பையனோட கெப்பாசிட்டி எனக்குத் தெரியும். நீ எங்க வளர்ப்புடா. தவறான வழிக்கு எல்லாம் போக மாட்ட. உன்னோட மொத்த காதலையும் உன் வருங்கால மனைவியிடம் கொட்டுவதற்காகத் தான் நீ இத்தனை வயது வரை காத்திருக்கிற. உன் மனசு போல் உனக்கு நல்ல வாழ்க்கை அமையும் கண்ணா." என்றவரது விழிகள் மகனை பெருமையாய்ப் பார்த்தது. மகனை கண்டு கர்வம் கொண்டவரின் விழிகள் லேசாகக் கசிந்தது.


"ம்மா, பசிக்குது சாப்பாடு எடுத்து வைங்க." மகன் பேச்சை மாற்ற...


"பத்து நிமிசம் இருடா. வடையும், பூரியும் சூடா போட்டுட்டு கூப்பிடறேன்." ரமணி வேகமாகச் சமையலறைக்குச் சென்றார். சமையல்க்காரர் இருந்த போதும் கணவன் மற்றும் மகன்களுக்குத் தனது கையால் சமைத்துப் பரிமாறினால் தான் ரமணிக்கு திருப்தி உண்டாகும்.


சாணக்கியா எழுந்து நேராக அமர்ந்தான். தனது எதிரில் அமர்ந்திருந்த தந்தையைக் கண்டவன் மனதில் குற்றுவுணர்வு குறுகுறுக்க அவனது தலை தானாகக் கவிழ்ந்தது. மகனது மனம் புரிந்து ரவிசங்கர் மகன் அருகில் சென்று அமர்ந்தவர் அவனை ஆறுதலாய் அணைத்துக் கொண்டார்.


"அப்பா..." என்றழைத்தவனின் விழிகள் கலங்கியது. அவனால் மேலே பேச முடியவில்லை.


"என்னதிது சின்னப் பிள்ளை மாதிரி. என் மகன் சிங்கம் மாதிரி இருக்கணும். எப்போதும் ஆக்ரோசமாய்க் கர்ஜிக்கணும்... எதிராளியை பார்வையால் மிரட்டணும். இப்படிக் கோழை மாதிரி அழ கூடாது." ரவிசங்கர் மகனது கண்ணீரை துடைத்து விட்டார்.


"ப்பா, நீங்க எனக்கு ஒரு முறை மட்டும் உயிர் கொடுக்கலை. இரண்டு முறை உயிர் கொடுத்திருக்கீங்க. நீங்க மட்டும் இல்லைன்னா நான்..." என்றவன் வேதனையில் பேச முடியாது அவரை வலியோடு பார்த்தான்.


"நீ என் மகன்டா. எந்த நிலையிலும் என்னால் உன்னைக் கைவிட முடியாது. நீ என்ன செஞ்சாலும் உன் கூட இருக்க வேண்டியது என் கடமை. நீ நல்லவன். எந்தத் தப்பும் செய்யத் தெரியாத ரொம்ப ரொம்ப நல்லவன். எனக்கு உன் மேல் நம்பிக்கை இருக்கு." என்றவர் மகனை கண்டு பெருமை கொண்டார்.


முப்பத்திமூன்று வயதாகியும் மகன் சிகரெட், மது, மாது என்று எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாத அக்மார்க் நல்ல பையன். அவர்களிடம் இருக்கும் பணம் இன்று, நேற்று வந்தது இல்லை. பரம்பரை பரம்பரையாக வந்த செல்வம். என்றும் குன்றாத செல்வம் அவர்களுடையது. அத்தகைய பணத்தில் புரள்கிறவன் தவறு செய்வதாக இருந்தால் என்றோ செய்திருக்கலாம். அல்லது இதோ இத்தனை வருடங்களாக அவன் திரைத்துறையில் கொடி கட்டி பறக்கின்றான். இந்தத் துறையில் பெண்களோடு பழக வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் அதிகம். ஆனாலும் அவன் அதை எல்லாம் புறம் தள்ளிவிட்டுப் புடம் போட்ட பொன்னாக, இல்லை இல்லை வைரமாக ஜொலிக்கின்றான் என்றால்... நிச்சயம் அவர்களது வளர்ப்பு ஒரு காரணமாக இருந்தாலும்... அவனது சுயொழுக்கம், மனக்கட்டுப்பாடு மற்றொரு காரணம். அப்படிப்பட்ட மகனை பெற்றவர்கள் பெருமை படாது இருக்க முடியுமோ!


"தேங்க்யூப்பா." அவன் தகப்பனை அணைத்துக் கொண்டான்.


"ஹேப்பிப் பேர்த்டே சார்." கையில் பூங்கொத்துடன் அங்கு வந்து சேர்ந்தான் வினீத். சாணக்கியாவின் மேலாளர், செயலாளர் எல்லாமே வினீத் தான்


"வாடா நல்லவனே... என்னடா இவ்வளவு நேரம் ஆளை காணோமேன்னு பார்த்தேன்." சாணக்கியா அவனை வரவேற்றான்.


"பூஜைக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டுக் காலையில் மூணு மணிக்கு தான் இங்கே இருந்து போனேன். இது உங்க பேமிலிக்கான நேரம். நான் எதுக்குக் குறுக்கே சார்?" வினீத் பணிவுடன் சொல்ல...


"உன்னைத் திருத்த முடியாது." சாணக்கியா சொல்லும் போதே... ரமணி எல்லோரையும் உணவு உண்ண அழைத்தார்.


சாணக்கியா, ரவிசங்கர் இருவரும் செல்ல போக... வினீத் அங்கேயே நின்றான். சாணக்கியா அவனைத் தங்களுடன் உணவு உண்ண வரும்படி அழைத்தான்.


"இல்லை சார். நீங்க போங்க. நான் பிறகு சாப்பிட்டுக்கிறேன்." வினீத் மறுத்து விட்டான்.


"நீ போ சாணக்கியா." ரவிசங்கர் மகனை அனுப்பி வைத்து விட்டு வினீத் முன் வந்து நின்றார்.


"நீயும் எனக்கு ஒரு மகன் தான்டா. ரொம்பப் பிகு பண்ணாம வா." அவர் அவனை அழைக்க...


"நான் என் தகுதியை எப்போதும் மறக்க கூடாது சார்." அவன் பணிவுடன் சொல்ல...


"என்னடா பெரிய தகுதி? நீ இல்லைன்னா இன்னைக்கு நாங்க இல்லை." என்றவரின் விழிகள் கலங்கியது.


"சார், இனி நல்லதே நடக்கும். சாணக்கியா சாரை யாரும் அசைக்க முடியாது." வினீத் அவரைத் தேற்ற...


"ம், அப்படி அசைக்க நினைத்தால் அவங்களை வேரோடு பிடுங்கி எறிந்து விடுவேன்." என்ற அந்தத் தந்தையின் விழிகளிலும், வார்த்தைகளிலும் அத்தனை ரௌத்திரம். வினீத்திற்குமே தெரியும், அவரது ருத்ர தாண்டவம் எப்படிப்பட்டது என்று... ஏனெனில் நேரில் பார்த்தவன் அவன் தானே. பிறகு ரவிசங்கர் சுதாரித்துக் கொண்டு,


"நீ தான் அவனைப் பத்திரமா பார்த்துக்கணும். அவன் கூடவே நிழல் போல் இருக்கணும்." என்று சொல்ல...


"ஷ்யூர் சார்." வினீத்திற்கு அதைவிட வேறு என்ன வேலை!


"இப்போதாவது சாப்பிட வரலாமே?" ரவிசங்கர் புன்சிரிப்புடன் கேட்க...


"நோ சார்... நான் என் தகுதியை மறக்க கூடாது." என்றவன் தான் நின்ற நிலையில் பிடிவாதமாய் இருந்தான். அவனை மாற்ற முடியாது. ரவிசங்கர் உணவு உண்ண சென்றார்.


சரியாகப் பத்து மணிக்குச் சாணக்கியா தனக்காகக் காத்திருந்த ரசிகர்களை ஏமாற்றாது அவர்களைப் பார்த்து, கைக்குலுக்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்து அவர்களை அனுப்பி வைத்தான். இதெல்லாம் முடியவே மாலை நான்கு மணியானது. அதன் பிறகே அவன் மதிய உணவு உண்டான். மாலை ஏழு மணிக்குத் திரைத்துறையில் அவனுக்கு நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் கேளிக்கை விருந்து வைத்திருந்தான். அதற்கு அவன் தன்னுடன் தனது பெற்றோரையும் அழைத்துச் சென்றான். அதனால் என்னவோ விருந்து நாகரீகமாக நடந்து முடிந்தது. மீண்டும் வீட்டிற்கு வந்தவன் பெற்றோரை உறங்க அனுப்பி விட்டு தான் மட்டும் உறங்காது வெளியில் சென்றான். நகரத்தை விட்டு சற்றுத் தொலைவு வந்தவன் அங்கிருந்த சிறு குன்றின் மீது ஏறி நின்றான். கால்களை அகட்டியபடி, இரு கரங்களையும் கட்டி கொண்டு அவன் நின்றிருந்த விதமே இரும்பு சிலையை ஒத்திருந்தது. அவனது விழிகள் தொலைதூரத்தை வெறித்துப் பார்த்திருந்தது. குன்றிலிருந்து பார்க்க அனைத்தும் தெரியும்.


தொலைவில் மின்மினி பூச்சியாய் மின்னும் நகரம், நிலவின் வெளிச்சத்தில் உருகிய வெள்ளியாய் பளபளக்கும் கடல் எல்லாமே அவனது காலடிக்கு கீழே இருப்பது போல் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கியது. மேலே நட்சத்திரங்கள் மின்ன, நிலவு பவனி வர கருமை நிற வானினை அவன் அண்ணாந்து பார்த்தான். அந்தக் கருமை நிற வானில் அவன் தனது வாழ்வின் கருப்புப் பக்கங்களைக் கண்டானோ? அவனது முகத்தில் சொல்லொண்ணா வேதனை, வலி தோன்றியது. அதற்கு நேர்மாறாக அவனது விழிகள் இரண்டிலும் கோபம், சீற்றம் ஒருங்கே தோன்றியது. அவன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதில் அவனது விழிகள் இரண்டும் கலங்கி போனது.


*******************************
 

ஶ்ரீகலா

Administrator
அதே மும்பையில் நடிகர் ராகுல் வர்மாவின் வீட்டின் முன்னே செய்தியாளர்கள் அனைவரும் குழுமியிருந்தனர். ஆனால் அவர்கள் காண வந்தது ராகுல் வர்மாவை அல்ல. அவரது மகள் விராஜினியை. அவள் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்து இருந்தாள். அவளிடம் நேர்காணல் நடத்த தான் அவர்கள் காத்திருக்கின்றனர். மாநிலத்தில் முதலாவதாக வந்த பெண்ணை யாரும் கண்டுகொள்ளவில்லை. நடிகரின் மகள் எதைச் செய்தாலும் பரபரப்பு செய்தி தானே. செலிபிரிட்டியை பற்றிச் செய்தி போட்டால் தானே அவர்களது பத்திரிக்கை கூடுதலாக விற்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும். இது தானே இப்போதைய பத்திரிக்கை தர்மம்.


அவர்களைக் காக்க வைத்த புண்ணியவதியோ தனது படுக்கையறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். நேற்று சென்றிருந்த கேளிக்கை விருந்தில் ஏற்றிய போதை இன்னமும் தெளியவில்லை போலும். பனிரெண்டு மணிக்கு அலாரம் தொடர்ந்து அடிக்க... விராஜினி சலித்தபடி எழுந்தவள் எரிச்சலுடன் அலாரத்தை அணைத்தாள். பிறகு இன்டர்காம் எடுத்து அறைக்கு எலுமிச்சை பழச்சாறை கொண்டு வர சொன்னாள். அது குடித்தால் தானே போதை இறங்கும். இந்த வயதில் இதை எல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றாளே என்று ஆச்சிரியப்படுகிறீர்களா? எல்லாம் பெற்றோர் சொல்லி கொடுத்தது. ஆகச்சிறந்த பெற்றோர் இவர்கள் தான் போலும்.


எலுமிச்சை பழச்சாறை குடித்துப் போதையை இறக்கியவள் குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தாள். மேலே கையில்லாத வெள்ளை நிற டீசர்ட், கீழே முட்டிக்கு மேலே சின்னதாய் நீல நிறத்தில் ஒரு குட்டி டிரவுசர். காலையிலேயே அவளது வாய் சுவிங்கத்தை அலட்சியமாக மென்று கொண்டிருந்தது. உணவு மேசைக்கு வந்தவளின் முன்னே வகை வகையான உணவுகள் காத்திருந்தது. பரிமாறப் பணியாளர்களும் காத்திருந்தனர். அவளோ உணவை புறக்கணித்து விட்டு ஆப்பிள் ஒன்றை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.


வெளியில் வந்தவள் வாயிற் கதவிற்கு அப்பால் கேட்ட கூச்சலை கண்டு தனக்கு என்று தனியே அமர்த்தி இருக்கும் மேலாளரை அழைத்தாள்.


"என்ன சத்தம்?" என்று அவள் அவரிடம் கேட்டாள்.


"இன்னைக்கு ப்ளஸ்டூ ரிசல்ட் வந்திருக்கு மேடம்."


"ஓ..." என்றவள் அவரை ஒரு பார்வை பார்க்க...


"நீங்க பாஸ் மேடம். மேத்ஸ் மட்டும் ஜஸ்ட் பாஸ். மத்த சப்ஜெக்ட்ஸ் எல்லாத்திலும் நைன்ட்டிக்கு மேலே. கங்கிராட்ஸ் மேடம்." அவர் படபடவென்று தகவலை சொல்லி வாழ்த்த...


"ஓ..." அதற்கும் அவள் ஓவென்றே பதிலளித்தாள்.


இன்னமும் அவளது பெற்றோர் இருவருமே அவளுக்கு அழைத்து வாழ்த்து சொல்லவில்லை. அவளுள் சிறு நப்பாசை தோன்ற அவள் தனது அலைப்பேசியை எடுத்து பார்த்தாள். இருவரிடமும் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அவளது மனதிற்குள் சிறு வலி தோன்றத்தான் செய்தது. அதைத் தனது திமிர் பாவனையில் மறைத்தவள்,


"அவங்களை வர சொல்லுங்க." என்று கட்டளையிட்டாள்.


"சார் இல்லாம..." மேலாளர் தயங்க...


"நௌ ஐயம் எய்ட்டீன். ஐயம் மேஜர். ஐ கேன் டேக்கில் திஸ். கோ மேன் அன்ட் டூ வாட் ஐ சே." அவள் அலட்சியமாகச் சொல்ல... பாவம் அவர் தெறித்து ஓடி விட்டார்.


அடுத்தச் சில நொடிகளில் அனைத்து பத்திரிக்கையாளர்களும் அவள் முன் குழுமி விட்டனர். ஆளாளுக்கு ஒரு கேள்வி கேட்டனர். எல்லோருக்கும் பொதுவாக அவளே பேசினாள்.


"நான் மேலே படிக்க விரும்பவில்லை. நான் நடிக்கப் போகின்றேன். வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றேன். இப்போதைக்கு இது தான் என்னுடைய ஒரே இலட்சியம். வேறு எதுவும் கேள்விகள் இருக்கிறதா? இல்லை தானே. பை கையிஸ்." என்றவள் தனது கையிலிருந்த குளிர்கண்ணாடியை அணிந்தபடி அவர்களிடம் இருந்து விடைபெற்று காரிலேறி சென்று விட்டாள்.


காரில் ஏறிய பிறகும் விராஜினி குளிர் கண்ணாடியை கழட்டவில்லை. அவளது கலங்கிய கண்களை ஓட்டுநருக்கு காட்டாது இருக்கவோ என்னவோ! அவளது இலட்சியம் மருத்துவப் படிப்பு. அவள் இன்னும் நன்றாகப் படித்திருந்தால் இன்னும் அதிக மதிப்பெண்கள் வாங்கி இருக்கலாம். மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கலாம். ஆனால் அவள் அதைச் செய்யவில்லை. வேண்டுமென்றே அவள் நடிப்பு துறைக்கு வர விரும்பினாள். நடிப்புத் தொழில் அவளது அன்னைக்குப் பிடித்தது. ஆனால் தந்தைக்கு அது பிடிக்காது. ஏனோ அவர் தனது மகள் நடிப்பு துறைக்கு வர கூடாது என்று நினைத்தார்.


அப்போது அவளது அலைப்பேசி அழைத்தது அவளது அன்னை கனிஷ்கா அழைத்திருந்தார். விசயம் அவரது காதிற்குச் சென்றிருக்கும் போலிருக்கிறது.


"அச்சோ கிச்சுலு. ஐயம் சோ ஹேப்பி. நீ நடிக்க வருவது குறித்து எனக்கு ரொம்பச் சந்தோசம். அம்மா தான் உன்னோட கால்ஷீட் எல்லாம் பார்ப்பேன்." அவர் மகிழ்ச்சியோடு படபடவெனச் சொல்லி கொண்டே போனார்.


"ஷ்யூர்ம்மா... நீங்க தான் என் கூட இருக்கணும்." அவள் சொல்லவும் அந்தத் தாயுள்ளம் மகிழ்ந்து போனது. அன்னை அழைப்பை துண்டித்ததும் மறுநொடி தந்தை அழைத்தார். அவரோ கோபத்தில் அவளைக் காய்ச்சி எடுத்து விட்டார்.


"நடிப்பு எல்லாம் வேண்டாம். நீ படிக்கணும். உன்னை வெளிநாட்டில் படிக்க வைக்கிறேன். கிளம்பும் வழியைப் பார்." ராகுல் வர்மா கோபத்தில் கத்த...


"நான் நடிக்கத் தான் போறேன். வேணும்ன்னா ஒரு நல்ல டைரக்டரா பார்த்து ரெக்கமெண்ட் பண்ணுங்க." என்றவள் அழைப்பை துண்டித்து விட்டாள். தந்தையின் கோபத்தினை மனக்கண்ணில் கண்டவளது இதழ்கள் இகழ்ச்சியாய் வளைந்தது.


விராஜினி நேரே சென்ற இடம் தனது தோழியின் விருந்தினர் மாளிக்கைக்கு... அங்கு ஏற்கெனவே தேஜா, ராஜ், அனில் மூவரும் இருந்தனர். இவளும் வந்து சேர்ந்து கொள்ள...


"ஆரம்பிக்கலாமா?" அனில் எல்லோரையும் கண்டு கேட்க... எல்லோரும் 'ஹோ'வென்று உற்சாகமாய்க் கத்தி தங்களது சம்மதத்தைத் தெரிவித்தனர்.


அதன் பிறகு கொண்டாத்திற்குக் கேட்கவும் வேண்டுமோ! ஆட்டம் களை கட்டியது. எல்லாமே ராஜா வீட்டு கன்னுக்குட்டிகள். அவர்களை யாரும் தட்டி கேட்க முடியாது. அதிலும் இப்போது தான் அவர்கள் எல்லோரும் பதினெட்டு வயதை கடந்து இருக்கின்றனர். அதனால் வாழ்க்கையை ரசித்து வாழ ஆர்வம் கொண்டனர். வாழ்வின் இன்பத்தினை அதன் எல்லை வரை சென்று அனுபவிக்கத் துடித்தனர். கேட்டால் சுதந்திரம் என்பார்கள் இந்த டூகே கிட்ஸ். அனைத்து மது வகைகளும் அவர்கள் முன்னே... ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று அவர்களது நேரம் உல்லாசமாய், உற்சாகமாய்க் கடந்தது.


இரவு வரை அங்கேயே இருந்த விராஜினி அதன் பிறகு தனது அன்னையைக் காண சென்றாள். அவளது அன்னை கனிஷ்கா அப்போது தான் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்திருந்தார். ஒரு காலத்தில் கனிஷ்கா புகழ் பெற்ற நடிகை. திரைத்துறையில் மட்டும் தோலில் சுருக்கம் வந்தால் மதிப்பு, மரியாதை எல்லாம் போய்விடும். அதிலும் கனிஷ்கா புகழின் உச்சியில் இருக்கும் போது ராகுல் வர்மாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு திரை சந்தையில் அவரது மதிப்பு குறைந்து போனது. விவாகரத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த போது அப்போதிருந்த திரைத்துறையினர் அவரை மறந்திருந்தனர். அது போன்றே மக்களும்... அதனால் கனிஷ்கா சின்னத்திரை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதில் அவருக்கு ஓரளவு வருமானம் வந்தது. அது போகக் கணவன் அள்ளி கொடுக்கும் ஜீவனாம்சம் வேறு... அவரது வாழ்க்கை செழிப்பாக நன்றாகச் சென்று கொண்டிருக்கின்றது.


"கிச்சுலு, கங்கிராட்ஸ்..." அவர் மகளை அணைத்து வரவேற்க...


"ப்ச்..." மகள் சலித்தபடி அமர்ந்தாள்.


"என்ன கிச்சுலு இப்படிச் சலிச்சிக்கிற? நீ நடிக்க வர்றது அம்மாவுக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா?" அவர் மனதிற்குள் மகளை வைத்து பல கனவு கோட்டைகளைக் கட்ட ஆரம்பித்தார்.


மகள் நடிக்க வருவதற்கு இது தான் சரியான வயது என்றே கனிஷ்கா நினைத்தார். அவர் நடிக்க வந்த போது அவருக்குப் பதினான்கு வயது. ஹார்மோன் ஊசி மூலம் அவரைப் பெரிய பெண்ணாக மாற்றி, பதினெட்டு வயது என்று பொய் சொல்லி நடிக்க வைத்தார் அவரது அன்னை. வீட்டின் வறுமை ஒரு பெண்ணைப் பலி கொடுக்கத் தீர்மானித்தது. கனிஷ்காவின் முதல் படமே வெற்றியடைய... அதன் பிறகு திருமணம் வரை அவருக்கு ஏறுமுகம் தான். அப்படிப்பட்ட சூழலில் வந்த கனிஷ்காவும் தனது மகளைத் தன்னைப் போல் கதாநாயகியாக்க முடிவு செய்தார். அவருக்குக் கிடைத்த லாட்டரி சீட்டாக அவர் தனது மகளை எண்ணினார்.


"பட் எனக்குச் சந்தோசம் இல்லை. அப்பாவை வெறுப்பேத்தணும். அதுக்குத் தான்..." விராஜினி கோணலாகச் சிரித்தாள்.


"அது தான் உனக்குக் கை வந்த கலையாயிற்றே." அன்னை மகளைக் கண்டிக்காது ஊக்குவித்தார். ஏனோ அன்னையின் இந்தப் பதில் அவளுக்கு இதத்தைத் தரவில்லை.


"இதை நாம செலிபிரேட் பண்ணியே ஆகணும். வாட் டூ யூ வான்ட் கிச்சுலு? விஸ்கி, ஒயின் ஆர் வோட்கா?" கனிஷ்கா மகளிடம் கேட்டார்.


"ஐ வாட் காக்டெயில் மாம்." அவள் அன்னையிடம் சிடுசிடுத்தாள். இன்னும் கொஞ்ச நேரம் தான் அவள் இங்கே இருக்க முடியும். அதன் பிறகு அவள் தந்தையின் வீட்டிற்குத் தான் செல்ல வேண்டும். அதனால் வந்த கடுப்பு அவளுக்கு...


காலையில் இருந்து இரவு உறங்க போகும் வரை அவளது உலகம் உற்சாகமாய் இயங்கும். ஆனால் இரவு வந்துவிட்டால் மட்டும் அவளுக்கு எங்கே இருந்து தான் பேய் பிடித்து ஆட்டுமோ? கோபம், வெறுப்பு, வேதனை, வலி என்று அனைத்து உணர்வுகளுக்கும் ஆட்ப்பட்டு அவள் தனக்குள் தவித்துப் போய்விடுவாள். இது இன்று நேற்று நடப்பதல்ல. அவளது பதினான்கு வயதில் இருந்து இது தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு இரவும் அவள் எப்போதுமே தந்தை வீட்டில் தான் இருக்க வேண்டும். அது அவளது அன்னை அவளுக்கு விதித்த எழுதப்படாத சட்டம்.


"மாம், இன்னுமா ரெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க?" அவள் கத்த தொடங்க...


"இதோ வந்துட்டேன் கிச்சுலு." கனிஷ்கா மகளிடம் ஒரு கோப்பையைக் கொடுத்தவர் தானும் ஒரு கோப்பையை எடுத்து மதுவை பருகலானார்.


ஒரே மூச்சில் மதுவை குடித்து முடித்துக் கோப்பையைத் தூக்கி எறிந்தாள் அவள். அதைக் கண்ட அன்னை, "இதோட ஆயிரம் கிளாசுக்கு மேல் உடைச்சிட்ட கிச்சுலு. உன் கோபத்தை அதில் காட்டி எந்தப் பிரயோஜனமும் இல்லை." என்றவர் மெதுவாக மதுவை ரசித்து ருசித்து அருந்தினார்.


"நான் கோபத்தைக் காட்டுவதாக இருந்தால் உங்க ரெண்டு பேர் கிட்ட மட்டும் தான் காட்டணும்." மகள் அன்னையிடம் வளென்று எரிந்து விழுந்தாள். அவர் ஒன்றும் பேசாது அமைதியாக இருந்தார்.


அவள் வழிகளை மூடி சோபாவில் சாய்ந்து படுக்க... கனிஷ்காவின் கண்டிப்பான குரல் அவளது விழிகளைத் திறக்க செய்தது.


"வீட்டுக்கு போ." அவர் கண்டிப்பான குரலில் சொல்ல...


"இன்னைக்கு ஒருநாள் நான் இங்கே இருக்கேனே." மகள் கெஞ்சுதலாய் அன்னையைப் பார்த்தாள்.


"நோ கிச்சுலு... நீ அங்கே இருப்பது தான் நல்லது." என்றவர் மகளை மூட்டை கட்டி அனுப்பி வைத்தார்.


கனிஷ்காவிற்கு என்று சில கணக்குகள் இருக்கின்றது. அதற்கு மகள் அங்கே இருந்தால் தான் சரி வரும். அவரது நோக்கமும் நிறைவேறும். அவர் இன்னொரு கோப்பையை எடுத்து நிதானமாக மதுவை தொண்டையில் சரித்தார்.


கணவன் தன்னை விவாகரத்துச் செய்தாலும் அவர் தன்னை மறக்க கூடாது. அப்படியொரு வன்ம எண்ணம் கனிஷ்காவினுள்... அதனால் தான் தனது ஞாபக சின்னமாய் மகளை அங்கே விட்டு வைத்திருக்கின்றார். மகளைக் காணும் போது எல்லாம் அவளது தாயான தன்னைப் பற்றிய எண்ணம் கணவனுக்கு நினைவுக்கு வரும் இல்லையா? அப்போது தானே மகளது பெயரை சொல்லி கணவரிடம் இருந்து பணத்தைக் கறக்க முடியும். இது எல்லாவற்றையும் விட ஒன்று இருக்கிறது. அது ராகுல் வர்மாவை திருமணம் செய்திருக்கும் சுசித்ராவை நிம்மதியாய் வாழ விடக் கூடாது என்பது. சுசித்ரா விராஜினியை காணும் போது எல்லாம் கோபம் கொள்ள வேண்டும். அதற்காகவே அவர் மகளை அங்கே விட்டு வைத்திருக்கின்றார். இல்லை என்றால் இந்நேரம் அவர் தனது மகளைப் பெரிய நடிகையாக்கி பணம் சம்பாதித்து இருந்திருப்பார்.


விராஜினிக்கு தந்தையும் சரியில்லை, தாயும் சரியில்லை. அவளுக்குமே இருவரும் நடந்து கொள்ளும் விதம் பிடிக்கவில்லை என்றாலும்... அவள் இருவர் மீதும் உயிரையே வைத்திருந்தாள். அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்பதே அவளது விருப்பம். பாவம் அவளுக்குத் தெரியவில்லை... உடைந்த கண்ணாடியை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது என்று...


பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்பார்கள். ஆனால் இங்கோ பிள்ளை மனம் பித்து, பெற்ற மனம் கல்லு போலும்!


தொடரும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
அத்தியாயம் : 2


விராஜினி வீட்டிற்கு வந்த போது அங்கு வரவேற்பறையில் சுசித்ரா அமர்ந்து இருந்தாள். சாட்டின் புடவையில், அதிகப்படி ஒப்பனையில் காண்போரை கவரும் வகையில் அவள் பேரழகுடன் ஜொலித்தாள். ஒரு காலத்தில் அவளும் நடிகை தான். இப்போது ராகுல் வர்மாவின் மனைவி என்கிற தகுதியுடன் தொலைக்காட்சியில் 'டேலண்ட் ஷோ' ஒன்றில் நடுவராகப் பணியாற்றி வருகிறாள். ராகுல் வர்மாவுக்கும், அவளுக்கும் இன்னமும் குழந்தைகள் இல்லை. முதலில் இருந்தே அவளுக்குக் குழந்தைகள் மீது அதிக ஆர்வம் இருந்தது இல்லை. ஆனால் இப்போது கொஞ்ச நாட்களாகக் குழந்தை வேண்டும் என்கிற எண்ணம் அவளுள் அதிகம் எழுகிறது. ஏனோ ராகுல் வர்மா அவளை விட்டு விலகி செல்வது போல் ஒரு தோற்றம் அவளுள். அவரைத் தக்க வைத்துக் கொள்ளக் குழந்தை எனும் ஆயுதத்தை அவள் கையில் எடுக்க நினைத்தாள்.


"நில்லு விராஜ்..." சுசித்ரா விராஜினியை கண்டதும் தடுத்து நிறுத்த... அதற்கு எல்லாம் அடங்குபவளா நம் நாயகி. அவள் பாட்டிற்குச் செல்ல... அவள் முன் வந்து நின்று அவளைத் தடுத்தாள் சுசித்ரா. விராஜினி விழிகளைச் சுருக்கி கொண்டு அவளைப் பார்த்தாள்.


"உன் வயசு என்ன? இந்த வயசில் ஏன் இப்படிக் குடிச்சு சீரழிஞ்சு போற? உங்கம்மா உன்னை ஒண்ணும் சொல்றது இல்லையா? இல்லை ஊத்தி கொடுக்கிறதே அவங்க தானா?" சுசித்ரா வேண்டுமென்றே அவளது அன்னையைப் பற்றிக் கூறி சீண்டினாள்.


"நீ கூடத் தான் பஃப்பில் ஆட்டம் போட்டிருக்க. அந்த நேரம் எல்லா நியூஸ் சேனல்களிலும் உன்னைக் கிழிகிழின்னு கிழிச்சாங்களே. இவ்வளவு ஏன் இப்போ கூட நெட்டில் உன்னுடைய அத்தனை ஃபோட்டோஸும் கொட்டி கிடக்கு. பார்க்கிறியா?" விராஜினி தனது அலைப்பேசியை எடுக்கப் போனாள். அவள் அப்படித்தான் எதிராளி அவளை என்ன அடி அடித்தாலும் அசராது வாங்கிக் கொண்டு... அதைவிடப் பல மடங்கு அடியை அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்து விடுவாள். அஞ்சா நெஞ்சம் கொண்ட பெண் சிங்கம் நம் விராஜினி.


"ஹேய், அதை எதுக்கு நெட்டில் இருந்து எடுக்கிற?" சுசித்ரா விராஜினியின் அலைப்பேசியைப் பிடுங்க வர... விராஜினி தனது அலைப்பேசியை விலக்கி கொண்டாள்.


"ஏன் எடுத்தால் என்ன? உன் வண்டவாளம் தண்டவாளம் ஏறிடும்ன்னு பயமா இருக்கா?" விராஜினி வார்த்தைகளில் அத்தனை நக்கல். அவளது விழிகளில் அத்தனை உஷ்ணம். அவள் பார்வையால் சுசித்ராவை எரித்தாள்.


"என்ன என் வண்டவாளம்? நான் எதுக்குப் பயப்படப் போறேன்? என்ன பேசுற நீ?" சுசித்ரா மனதிற்குள் பயந்தாலும் வெளியில் திமிராகக் காட்டி கொண்டாள்.


"ப்ச், அது எதுக்கு எனக்கு? நீ எங்களை விட்டு, இந்த வீட்டை விட்டு போ. நான் என்னோட அம்மா, அப்பா கூடச் சந்தோசமா இருக்கணும். போ நீ போ..." விராஜினி சுசித்ராவை கண்டு கத்தினாள்.


"நான் எதுக்குப் போகணும்? நான் போகணுமா? வேண்டாமா?ன்னு ராகுல் சொல்லட்டும்." சுசித்ரா பதிலுக்குக் கத்தினாள்.


"ராகுல்..." விராஜினி தனது தந்தை பெயரை ஒரு மாதிரியாகச் சொன்னவள் பிறகு, "இதே இடத்தில் சார்ன்னு கூப்பிட்டுக்கிட்டு பவ்யமா நின்னது எல்லாம் உனக்கு மறந்து போச்சா?" சுசித்ராவை கண்டு நக்கலாய் சிரித்தாள். சுசித்ரா முகம் பேயறைந்தார் போன்று மாறிவிட்டது.


"லுக் சுசித்ரா... எனக்கு அட்வைஸ் பண்ணும் வேலை எல்லாம் வச்சுக்காதே. நான் எப்படிச் சேஃபா இருக்கணும்ன்னு எனக்குத் தெரியும். இத்தனை வருசத்துல என்னோட ஃபோட்டோஸ் எதுவும் அந்த மாதிரி வந்தது இல்லை. இனியும் வர போறது இல்லை. என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்." விராஜினி சுசித்ராவை கடுமையாக எச்சரித்தாள்.


அப்போது அங்குத் தந்தையின் செயலாளர் மேரி வந்தாள். அவளை அங்குக் கண்டதும் சுசித்ரா முகம் ஒரு மாதிரியாய் மாறி விட்டது.


"நீ இங்கே என்ன பண்ணுற மேரி? நீ சார் கூடத் தானே இருக்கணும்." சுசித்ரா கேட்கவும்...


"சார் வந்து ஒரு மணி நேரமாச்சு மேடம்." மேரி அமைதியாகப் பதிலளிக்க...


"வாட்?" சுசித்ரா விழிகள் தெறித்து விடுவது போல் திகைத்து பார்த்தாள்.


"ஐயோ பாவம், பார்த்து பார்த்து மேக்கப் செய்தது எல்லாம் வேஸ்ட்டா போச்சே." விராஜினி கேலி பேச... சுசித்ராவுக்கு அசிங்கமாகி போனது.


"வாயை மூடு." சுசித்ரா அவளைக் கண்டு சத்தம் போட்டவள் மேரியிடம் திரும்பி, "நான் ராகுலை பார்க்கணும்." என்க...


"நோ மேடம். உங்களுக்கு அனுமதி இல்லை. விராஜ் மேடம்க்கு மட்டுமே அனுமதி." மேரி சுசித்ராவிடம் சொன்னவர் விராஜினியிடம் திரும்பி, "சார், உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார் மேடம்." என்று கூற...


"எனக்குப் பார்க்க விருப்பம் இல்லைன்னு போய்ச் சொல்லுங்க." விராஜினி சொல்லி கொண்டிருக்கும் போதே ராகுல் வர்மா அங்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் மேரி அங்கிருந்து சென்று விட்டாள்.


"ராகுல், நீங்க என்னைப் பார்க்க முடியாதுன்னு சொன்னீங்களாமே? மேரி சும்மா தானே சொல்கிறாள்." சுசித்ரா ராகுல் வர்மாவிடம் ஆசையுடன் கேட்க...


"எஸ், மேரி சரியாகத் தான் சொல்லியிருக்கிறாள்." என்ற கணவனைக் கண்டு சுசித்ராவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.


"ஏன்?" சுசித்ராவை குரல் தழுதழுத்ததுவோ!


"நம்ம பஞ்சாயத்தைப் பிறகு பார்க்கலாம். நான் விராஜ் கிட்ட பேசணும். நீ கொஞ்சம் அமைதியா இரு." ராகுல் வர்மா சுசித்ராவை அதட்டியவர் பிறகு மகளிடம் திரும்பினார். மகளோ நிற்க முடியாது போதையில் தள்ளாடி கொண்டு இருப்பதைக் கண்டு அவர் கோபத்தில் பல்லை கடித்தார்.


"இது என்ன பழக்கம் விராஜ்?" அவர் கோபத்தில் மகளைக் கண்டு சத்தம் போட்டார்.


"உங்களுக்குத் தெரியாத பழக்கம் எதுவும் உண்டாப்பா?" விராஜினி ஈயென்று பல்லை காட்டினாள். அதைக் கேட்டு அவரது முகம் கருத்துப் போனது.


"உனக்கு என்ன வயசு? ஏன் இப்படி இருக்கிற?" தந்தையாய் அவரது வார்த்தைகள் நைந்து போய் ஒலித்தது.


"நீங்க நினைச்சா எல்லாத்தையும் மாத்த முடியும்ப்பா?" என்றவளது பார்வை சுசித்ரா மீது அழுத்தமாய்ப் பதிந்தது. அதன் அர்த்தம் ராகுல் வர்மாவுக்குப் புரியாது இல்லை.


"நீ தேவையில்லாம என் விசயத்தில் தலையிடுற?"


"எது தேவையில்லாத விசயம்? எனக்கு இது மட்டும் தான் தேவையான விசயம். இவங்க ஹஸ்பெண்ட்டா யோசிக்காம... என்னோட அப்பாவா யோசிங்க. நான் சொல்ல வர்றது உங்களுக்குப் புரியும்."


"உனக்குப் பதினெட்டு வயசாகிருச்சு விராஜ். உனக்கு நல்லது கெட்டது தெரியற வயசு இது. மனசுக்கு ஒப்பாத வாழ்க்கையை என்னை வாழ சொல்றியா? என்னால் அது முடியாது." ராகுல் வர்மா சொன்னது கேட்டு சுசித்ரா முகம் மலர்ந்தது.


"ஏன் மனசுக்கு ஒப்பலை? ஒரு காலத்தில் எங்கம்மாவுடனான உங்க காதலும், கல்யாணமும் தான் சினி ஃபீல்டில் ஹாட் டாபிக் என்பதை மறந்துட்டீங்களா? அந்தக் காதல் இப்போ எங்கே போச்சுப்பா? நரை வந்ததும், தோல் சுருங்கியதும் காதல் மாறி போச்சில்ல. இதுக்குப் பெயர்...???" அவள் கோபத்தோடு வார்த்தைகளைச் சொல்ல வந்தவள் பின்பு கஷ்டப்பட்டு அதை விழுங்கி விட்டு தந்தையை முறைத்து பார்த்தாள்.


"ஏய், என்ன விட்டா ரொம்பப் பேசிட்டு போற... அறைஞ்சிருவேன்." ராகுல் வர்மா கையை ஓங்கி கொண்டு வர... நன்றாக அடிக்கட்டும் என்று சுசித்ரா மகிழ்ச்சியாய் வேடிக்கை பார்த்தாள். விராஜினியோ திமிராய் தந்தையைப் பார்த்தாள். அதைக் கண்ட ராகுல் வர்மா தான் கோபத்தை அடக்கி கொண்டு தனது கரத்தினைக் கீழே போட்டார்.


"இப்போ தானே என்னைப் பெரிய பொண்ணுன்னு சொன்னீங்க. இப்போ மாத்தி பேசுறீங்க." விராஜினி நக்கலாய் தந்தையைப் பார்க்க...


"உனக்கு ரொம்ப இடம் கொடுத்துட்டேன். அதான் தப்பா போச்சு. நீ காலேஜ் படிக்க யுஎஸ் கிளம்பு. நான் எல்லா ஏற்பாட்டையும் செய்துட்டேன்." ராகுல் வர்மா மகளை வெளிநாட்டிற்கு அனுப்புவதில் உறுதியாக இருந்தார்.


"முடியாது, நான் போக மாட்டேன். நான் இங்கே தான் இருப்பேன். அதுவும் நடிக்கப் போகிறேன். உங்களால் முடிஞ்சதை பார்த்துக்கோங்க." விராஜினி ஏறக்குறைய கத்த...


"விராஜ்..." ராகுல் வர்மாவும் பதிலுக்குக் கத்தினார்.


"இப்படிக் கத்துறதால எதுவும் மாறப் போறதில்லை. முதல்ல இவளை கழுத்தை பிடிச்சு வெளியில் தள்ளுங்க. அப்படி நீங்க செஞ்சீங்கன்னா... நீங்க சொல்றதை எல்லாம் நான் கேட்கிறேன்." அவள் அழுத்தம் திருத்தமாய்ச் சொல்ல...


"ராகுல், அவள் பேச்சை கேட்டு என்னைக் கை விட்டுராதீங்க." சுசித்ரா ராகுல் வர்மாவின் கரத்தினைப் பிடித்துக் கொண்டு கெஞ்ச...


"பைத்தியக்காரி..." இந்தக் காட்சியைக் கண்டு விராஜினியின் இதழ்கள் விரக்தியுடன் முணுமுணுத்தது. நல்லவேளை மற்ற இருவரும் இதைக் கேட்கவில்லை. கேட்டிருந்தால் இவளை பைத்தியக்காரி என்றிருப்பார்கள்.


"ப்ச், நீ வேற படுத்தாதே. விராஜ் தான் புரிஞ்சிக்காம பேசுகிறாள் என்றால்... நீயும் சின்னப் பிள்ளை மாதிரி புரியாம பேசாதே." ராகுல் வர்மா கோபத்தில் அங்கிருந்து செல்ல முயல... சுசித்ரா அவரைப் பின்தொடர்ந்தாள்.


"இந்தப் படம் எனக்கு ரொம்ப முக்கியமான படம். இது நல்லா வரணும்ன்னா நான் அந்தக் கரெக்டரை உள்வாங்கி நடிக்கணும். சோ நீ என்னைத் தொந்தரவு பண்ணாதே." ராகுல் வர்மா சுசித்ராவிடம் கடுமையுடன் கூறிவிட்டு சென்றுவிட... சுசித்ரா திகைத்து நின்றிருந்தாள். கடந்த ஒரு வருடமாக அவர்களது வாழ்க்கை இப்படித்தான் செல்கின்றது.


"உனக்கு இந்த அவமானம் தேவையா? பேசாம இங்கே இருந்து போய் விடேன்." விராஜினி சுசித்ராவை கண்டு கேட்க...


"முடியாது... அது மட்டும் முடியாது." என்ற சுசித்ராவின் விழிகளில் கண்ணீர் நிறைந்தது.


"அவ்வளவு காதலோ?" விராஜினி அவளது கண்ணீரை கண்டு நக்கலாய் கேட்டவள், "இருக்கும், இருக்கும்..." என்று தனக்குள் முனங்கியபடி தனது அறையை நோக்கி சென்றாள்.


மறுநாள் காலையில் விராஜினி நண்பர்கள் அனைவரும் அவளது வீட்டில் கூடினர். இன்று எங்குச் செல்வது என்று எல்லோரும் ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.


"இந்தக் கொண்டாட்டம் எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான். எங்கப்பா ஆஸ்திரேலியாவில் காலேஜ் படிக்க அப்ளிகேசன் வாங்கி வச்சிட்டார்." ராஜ் புலம்ப ஆரம்பித்தான்.


"நானும்... ஆனால் இலண்டனில்..." தேஜா சோகமாகக் கூற...


"நீ எங்கடா போற?" விராஜினி அனிலை கண்டு கேட்க...


"எங்கேயும் இல்லை. இங்கே தான்." என்றவனது முகம் சோகமாய் இருந்தது.


"அப்போ எனக்குக் கம்பெனி கொடுக்க ஆள் இருக்கு." விராஜினி சந்தோசமாய்ச் சொல்ல...


"அதான் இல்லை. காலேஜ் போயிட்டு வந்த பிறகு மீதி நேரம் பிசினசை கவனிக்கணும்ன்னு தாத்தா ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டார். இனி தூங்க கூட டைம் இருக்குமோ என்னவோ?" அனில் கவலையாய்ப் புலம்பினான்.


"பேசாம நாம எல்லோரும் வீர் மாதிரி நடிக்கிறதுக்குப் போனால் என்ன? புகழுக்குப் புகழ், பணத்துக்குப் பணம்." மூன்று கன்றுகுட்டிகளும் அழகாய் திட்டம் போட்டது.


"லூசுத்தனமா உளறாதீங்க. படிக்கிற வயசில் படிங்க. நடிப்பு எல்லாம் வேண்டாம்." விராஜினி வேகமாக மறுத்து கூற...


"உனக்கு மட்டும் வயசு ஆகிருச்சா என்ன? உனக்கும் எங்க வயசு தானே. நீ மட்டும் நடிக்கப் போகிற?" தேஜா தோழியைக் கண்டு கேட்க...


"சினி ஃபீல்டு வெளியில் இருந்து பார்த்தால் பளபளப்பாகத் தான் தெரியும். ஆனா உள்ளே இருட்டா இருக்கும். அந்த இருட்டில் பல பயங்கரம் நடக்கும்." விராஜினியின் குரல் வெறுமையுடன் ஒலித்தது. அதைக் கேட்டு மற்றவர்கள் அமைதியாகி விட்டனர்.


"இந்தப் பேச்சை விடுங்க. இன்னைக்கு நாம ஃபிலிம் போகலாமா?" அனில் கேட்கவும்...


"என் தலைவன் சாணக்கியாவோட புதுப் படம் ரிலீசாகி இருக்கு. அதுக்குப் போகலாம்." தேஜா சந்தோசத்தில் கூவியதோடு மட்டும் அல்லாது அவளது அலைப்பேசியில் இருந்த சாணக்கியா புகைப்படத்திற்கு முத்தமும் கொடுத்தாள்.


அதைக் கண்ட விராஜினிக்கு எங்கே இருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ! அவள் தேஜாவினுடைய அலைப்பேசியைத் தூக்கி எறிந்தாள். அவளது கோபம் கண்டு நண்பர்கள் மூவரும் திடுக்கிட்டு விழித்தனர்.


"வீர் பத்தி தான் தெரியுமே. அவளுக்குச் சாணக்கியா பத்தி பேசினாலே பிடிக்காதுன்னு..." ராஜ் சமாதானமாய்ச் சொல்ல...


"அதுக்குன்னு என்னோட ஃபோனை போட்டு உடைப்பாளா? என் ஃபோன் போச்சு." தேஜா கண்களைக் கசக்க...


"ஃபோன் தானே... உடைச்ச நானே வாங்கித் தர்றேன்." விராஜினி தோழியை அணைத்து தேற்றினாள்.


அதன் பிறகு நண்பர்களிடையே இருந்த மனஸ்தாபம் காணாமல் போனது. எல்லோரும் விராஜினியை வெளியில் அழைத்த போதும் ஏனோ அவள் கிளம்ப மறுத்து விட்டாள். எல்லோரும் சென்றதும் அறை கதவை பூட்டிவிட்டுக் கட்டிலில் அமர்ந்த விராஜினியின் தேகம் உணர்ச்சிவசப்பட்டதில் நடுங்க தொடங்கியது. அவளது விழிகள் கலங்கி சிவந்திருந்தது. அவள் அப்படியே படுக்கையில் மல்லாக்க படுக்க... அவளது உடல் பட்டு ரிமோட் மூலம் அங்கிருந்த தொலைக்காட்சி உயிர்பெற்றது. அவளது கெட்ட நேரமோ என்னவோ! திரையில் சாணக்கியா நாயகி ஒருத்தியுடன் பாடல் ஒன்றுக்கு நடனமாடி கொண்டிருந்தான்.


திடுமென அத்தனை பெரிய திரையில் தோன்றிய சாணக்கியாவின் பிம்பத்தைக் கண்டு அவள் அதிர்ந்து போய்ப் பார்த்திருந்தாள். எழ தோன்றவில்லை. தொலைக்காட்சி பெட்டியை அணைக்கத் தோன்றவில்லை. கண்ணிமைக்கத் தோன்றவில்லை. அடுத்தப் பாடல் ஒளிபரப்பவும் தான் அவளது சிந்தை சுயத்திற்கு வந்தது. அவள் எழுந்தமர்ந்து தனது இரு கரங்களால் தலையைப் பிடித்தபடி அமர்ந்து விட்டாள். அவனைப் பற்றிய செய்திகளைக் கேட்பதையோ, அவனது புகைப்படங்களைப் பார்ப்பதையோ அவள் முற்றிலும் தவிர்த்து விடுவாள். திடுமென ஞாபகம் வந்தவளாய் அவள் தனது அலமாரியை திறந்து அதனுள் இருந்த ஒரு அலைப்பேசியை எடுத்து ஆர்வத்துடன் உயிர்ப்பித்தாள். வாட்ஸ்அப் உள்ளே நுழைந்து அவள் சாணக்கியாவுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளைத் திறந்து பார்த்தாள்.


நேற்று கேளிக்கை விருந்து முடிந்து அவள் தாமதமாக வீடு வந்த போதும்... அவள் சாணக்கியாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க மறக்கவில்லை. ஆனால் அவன் இன்னமும் அவள் அனுப்பிய செய்தியை பார்க்கவில்லை. 'மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் தி டே புஜ்ஜிமா' என்று அவள் அனுப்பிய வாழ்த்து குறுஞ்செய்தி இன்னமும் படிக்கப்படாது அவளைக் கண்டு பல்லை இளித்தது. அது மட்டுமா? இன்னும் நிறையக் குறுஞ்செய்திகள் அதில் கொட்டி கிடந்தது. அனைத்தும் காதல் ரசத்தைப் பிழிந்து பிழிந்து எழுதப்பட்டது. அவள் மனம் கனக்க அந்த அலைப்பேசியை அணைத்து அலமாரியின் உள்ளே வைத்தாள். மீண்டும் கட்டிலில் அமர்ந்தவள் மனக்கண்ணில் அவனது முகமே மீண்டும் மீண்டும் வலம் வந்தது.


சாணக்கியா அந்த எண்ணை பிளாக் செய்து வெகுநாட்களாகி விட்டது என்பதை அவளும் அறிவாள் தான். ஆனால் என்றாவது ஒருநாள் அவன் பிளாக்கை எடுத்துவிட்டு இந்தக் குறுஞ்செய்திகளை எல்லாம் பார்க்க மாட்டானா? என்று அவள் நப்பாசை கொண்டு காத்திருந்தாள். வெகுநேரம் அப்படியே இருந்தவள் பிறகு தன்னைச் சமாளித்துக் கொண்டு எழுந்தவள் தனது கைப்பையை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தாள்.



****************************************
 

ஶ்ரீகலா

Administrator
சாணக்கியா படப்பிடிப்பிற்காகக் கிளம்பியதை கண்ட ரமணி அவனுக்காகச் செய்திருந்த உணவினை டப்பாவில் அடைத்து வினீத்திடம் கொடுத்தார்.


"இது பதினோரு மணிக்கு கொடுக்க வேண்டிய சுண்டலும், ஜூஸும். இதில் மதிய சாப்பாடு இருக்கிறது. வெயில் காலம்ங்கிறதால ஆயில் அதிகம் இல்லாம செஞ்திருக்கேன். சாணக்கியாவுக்குச் சாப்பிட நேரம் இல்லாது இருந்தாலும் நீ தான் நேரா நேரத்துக்கு அவனுக்குச் சாப்பாடு கொடுக்கணும்." எல்கேஜி படிக்கும் மகனுக்கு அவனது ஆசிரியையிடம் விளக்கி சொல்லும் அன்னையின் மனநிலையில் ரமணி வினீத்திடம் விளக்கி சொல்லி கொண்டு இருந்தார்.


"ஓகே மேடம்." வினீத் சொல்லியபடி அனைத்தையும் எடுத்துக் கொண்டான்.


"உனக்கும் சேர்த்து தான் வச்சிருக்கேன். நீயும் சாப்பிடு. ரெண்டு பேரும் ஒழுங்கா உடம்பை பார்த்துக்கணும்." அவர் மிரட்டலாய் அன்பை பொழிந்தார்.


"எனக்கு எதுக்கு மேடம்? அங்கே ஷூட்டிங் ஸ்பாட்டில் சாப்பாடு கொடுப்பாங்க."


"அது எனக்குத் தெரியாதா? போ, சொன்னதைச் செய்." ரமணி சொல்லவும்... அவன் புன்னகையுடன் சென்று விட்டான்.


"அம்மா தாயே, இப்பவாவது உன் புருசனுக்குச் சாப்பாடு போடுறியா? அந்த எண்ணம் உனக்கு இருக்கா இல்லையா?" ரவிசங்கர் பாவம் போல் கேட்க... கணவரது பாவனையில் ரமணி பக்கென்று சிரித்து விட்டார்.


"முதல்ல மகன்... அப்புறம் தான் புருசன்." ரமணி சொல்லும் போதே சாணக்கியா காலை உணவு உண்ண அங்கே வந்து விட்டான்.


"குட்மார்னிங்ப்பா, குட்மார்னிங்ம்மா." காலை வணக்கம் சொல்லியபடி அவன் அங்கு வந்தமர... ரமணி மகனுக்கும், கணவருக்கும் உணவு பரிமாறினார்.


"ம்மா, நீங்களும் உட்காருங்க. இருப்பது நாம மூணு பேர் தான்." அவன் வலுக்கட்டாயமாக அன்னையை அமர வைத்து உணவை பரிமாறினான்.


அந்த நேரம் பார்த்து அவனது தம்பி வருண் அழைப்பை எடுத்திருந்தான். அவனுக்கு அங்கே இரவு அல்லவா! ரவிசங்கர் அழைப்பை உயிர்ப்பித்துச் சின்ன மகனிடம் நலன் விசாரித்தவர் பின்பு அலைப்பேசியை மனைவியிடம் கொடுத்தார்.


"வருண், எப்படிடா இருக்க? நேரா நேரத்துக்குச் சாப்பிடுறியா?" என்று ரமணி க்கறையுடன் கேட்க...


"நான் உங்களை, உங்க சாப்பாட்டை ரொம்ப மிஸ் பண்ணுறேன்ம்மா." வருண் வார்த்தைகளில் ஏக்கம் இருந்தது. அதைக் கேட்டுச் சாணக்கியா குற்றவுணர்வுடன் தந்தையைப் பார்த்தான். ரவிசங்கர் அவனை விழிகளால் ஆறுதல் படுத்தினார்.


"பேசாம நீயும் இங்கே வந்திரு வருண்." என்று ரமணி சொல்ல...


"அப்போ அங்கே இருக்கிற பிசினசை யார் பார்த்துக்கிறது?" கணவரது குரல் இடையிட்டது. அப்பாவின் குரலில் வருண் சட்டென்று சுதாரித்துக் கொண்டான்.


"ம்மா, இப்படி எல்லாம் டயலாக் சொல்லுவேன்னு எதிர்பார்த்தீங்களா? நோ வே... நான் ரொம்பச் சந்தோசமா, லைஃபை நல்லா என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கேன்." வருண் விரிந்த புன்னகையுடன் சொல்ல...


"என்னடா பார்ட்டி, பஃப்ன்னு ஊர் சுத்துறியா? தொலைச்சு போடுவேன், தொலைச்சு." ரமணி மகனை மிரட்ட...


"ம்மா, பிசினஸ் பார்க்கவே ட்டுவன்டி ஃபோர் அவர்ஸ் பத்த மாட்டேங்குது. நீங்க வேற." வருண் சலித்துக் கொண்டான்.


"சரிடா, உடம்பை பார்த்துக்கோ." என்றவர் அலைப்பேசியைப் பெரிய மகனிடம் கொடுத்தார்.


சாணக்கியா அலைப்பேசியை வாங்கிக் கொண்டு சற்றுத் தொலைவு சென்றான். திரையில் தோன்றிய தம்பியை காண காண அவனுக்குக் குற்றவுணர்வாக இருந்தது. தம்பியுடன் பங்கு போட கூடிய பெற்றோர் பாசத்தைத் தான் மட்டும் ஒற்றை ஆளாக அனுபவிக்கின்றோமே என்று அவனுக்கு வருத்தமாக இருந்தது.


"உனக்குக் கஷ்டமா இருந்தால் அப்பா, அம்மாவை அங்கே அனுப்பி வைக்கவா வருண்? நௌ ஐயம் ஓகேடா. அப்பாவிடம் சொன்னால் அவர் என்னை நம்ப மாட்டேங்கிறார்." அவன் தம்பியிடம் சொல்ல...


"அதெல்லாம் வேண்டாம். அவங்க இந்தியாவில் செட்டிலானது அப்படியே இருக்கட்டும். அப்பத்தான் எனக்கு இந்தியன் பொண்ணு பார்க்க வசதியா இருக்கும்." வருண் கேலி பேசி அண்ணன் மனதினை மாற்றினான். அது சாணக்கியாவுக்கும் புரிந்தது.


"நல்லா பேச கத்துக்கிட்டடா." சாணக்கியா புன்னகைத்தான்.


"உன் தம்பியில்ல..." என்ற வருண் அண்ணனிடம் தொழிலை பற்றிச் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தான். அண்ணன் தொழிலை விட்டு விலகி தனக்குப் பிடித்ததைச் செய்து கொண்டிருந்தாலும் அவர்களது குழுமத்தில் அவனும் ஒரு பங்குதாரர் அல்லவா. அதனால் வருண் எல்லாவற்றையும் அண்ணனிடம் கூறினான்.


தம்பியிடம் பேசிவிட்டுச் சாணக்கியா படப்படிப்பிற்குக் கிளம்பி சென்றான். இயக்குநர் சொன்ன நேரத்திற்கு முன்பாக அவன் ஒப்பனை முடித்துவிட்டுக் காத்திருந்தான். அன்று சண்டை காட்சி எடுக்கவிருந்தனர். சண்டை காட்சிக்கு நாயகன் மட்டும் போதும். ஆனால் கவர்ச்சிக்கு நாயகியை இடைச்சொருகலாக வைத்திருந்தனர். சாணக்கியனுக்கு அதில் சிறிதும் பிடித்தம் இல்லை. ஆனால் அவன் எப்போதுமே திரைப்படத்தை இயக்குநர் வசம் ஒப்படைத்து விடுவான். அவனது பகுதியில் திருத்தம் இருந்தால் மட்டும் அவன் எடுத்துச் சொல்லுவான். மற்றபடி அவன் திரைக்கதையில் தலையிட மாட்டான். இந்த அணுசரணை காரணமாகத் தான் அவன் புகழின் உச்சியில் இருக்கின்றான்.


சண்டை பயிற்சியாளர் பயிற்றுவித்ததை விடச் சாணக்கியா அருமையாகச் சண்டை காட்சியை நடித்துக் கொடுக்க... அங்கிருந்த எல்லோரும் எழுந்து நின்று பாராட்டினார்கள். அவன் அந்தப் பாராட்டை எப்போதுமே தலைக்கு எடுத்துக் கொள்ள மாட்டான். பெரிய ஹீரோ நின்றாலும், உட்கார்ந்தாலும், நடந்தாலும் மாஸ் என்று கூறி கைத்தட்ட ஒரு கூட்டம் உண்டு என்பதை அவன் அறிவான். இந்தப் பாராட்டுச் சாதாரணச் சாணக்கியா எனும் மனிதனுக்குக் கிடையாது. சாணக்கியா எனும் நடிகனுக்குக் கிடைத்த பாராட்டு. இந்த எண்ணத்தில் அவன் உறுதியாக இருந்ததால் தான் அவனை எதுவுமே அசைக்க முடியாது இருந்தது.


உடன் நடித்த நடிகை இப்போது தான் அவனுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கின்றாள். அதனால் அவளுக்கு அவனைப் பற்றி அதிகம் தெரிந்து இருக்கவில்லை. மற்ற நடிகர்களைப் போன்று அவனை அவள் எண்ணி கொண்டாள் போலும்.


"சூப்பர்ப் சார்... ரொம்ப அருமையா பண்ணினீங்க." என்றவள் திடுமென அவனது கன்னத்தில் முத்தமிட்டு விட்டாள். நொடி நேரத்தில் நடந்து முடிந்திருந்தது. இதை அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை. சாணக்கியா உட்பட... அடுத்த நொடி சாணக்கியாவின் கரம் அவளது கன்னத்தைப் பதம் பார்த்து இருந்தது. அதைக் கண்டு எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.


"பொண்ணு வலிய வந்து முத்தம் கொடுக்கிறாள். அனுபவிக்கத் தெரியாம அடிக்கிறான். காட்டு பயலா இருப்பானோ?" ஒரு சிலர் தங்களுக்குள் முணுமுணுத்தனர்.


"சார், ப்ளீஸ் காம்டவுன். வாங்க போகலாம்." வினீத் சாணக்கியாவை அங்கிருந்து அப்புறப்படுத்த துடித்தான். சாணக்கியாவோ திமிறிக் கொண்டு நின்றான்.


"நான் உனக்கு வலிய வந்து கிஸ் கொடுத்தால் நீ ஒத்துக்குவியா? ஹராஸ்மென்ட் அது இதுன்னு குதிக்க மாட்டீங்க. அதே மாதிரி தான் இதுவும். ஆணா இருந்தாலும் அவன் விருப்பம் இல்லாம அவனைத் தொட கூடாது. டூ யூ அன்டர்ஸ்டாண்ட்?" சாணக்கியா ஆத்திரத்தில் அந்தப் பெண்ணைக் கண்டு கர்ஜிக்க... அந்தப் பெண் பயத்தில் வாயடைத்து போனவளாய் சரியென்று தலையை ஆட்டினாள்.


படப்பிடிப்பு முடிந்ததும் இரவு நேரத்தில் சாணக்கியா தனிமை வேண்டி கடற்கரை வந்திருந்தான். அந்தக் கடற்கரை தனியார் நட்சத்திர விடுதிக்கு சொந்தமானது. அதனால் அங்கு அதிகக் கூட்டம் இருக்காது. அங்குத் தங்குபவர்களும் அதிகம் பேர் வெளிநாட்டினர் மட்டுமே. உள்ளூர்வாசிகளுக்கு அங்கு இருக்கும் விலைவாசி கட்டுப்படியாகாது. வெகு சிலரே அங்கு வருவர். சில நேரங்களில் சாணக்கியா தனிமை வேண்டி இங்கு வருவது உண்டு. விடுதி நிர்வாகமும் அவன் வரவை அறிந்து அவனுக்கு ஏற்ற தனிமையை ஏற்படுத்திக் கொடுப்பார்கள்.


சாணக்கியா அலைகளில் கால்களை நனைத்தபடி அமைதியாக நின்றிருந்தான். சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்க அலைகளின் ஓசை மட்டுமே இசையாய்... அதை ரசித்து அனுபவித்தவனுக்கு மனம் லேசானது போலிருந்தது. வெகுநேரம் நின்றிருந்தவன் காதுகளில் வயலின் இசை கேட்டது. அதன் இனிமை அவனது மனதினை குளிர்விக்க... அவன் அந்த இசையைத் தேடி சென்றான். அவன் சென்று பார்த்த போது அங்கு ஒரு பெண் வயலின் இசைத்து கொண்டிருந்தாள். அவளது கைகள் லாவகமாக வயலினை இசைப்பதை கண்டு அவன் வியப்பாகப் பார்த்தபடி நின்றிருந்தான். அதைவிட இசை அவனது மனதினை மயக்கியது என்றே சொல்லலாம்.


அங்கே இசை மழை பொழிந்து கொண்டிருந்தது விராஜினி தான். சாதாரணப் பெண் போன்று சுடிதார் அணிந்து, ஷாலை இருபுறமும் போட்டு, தலையை நன்கு படிய வாரி, கண்களில் பெரிய கருப்பு கண்ணாடி அணிந்து இருந்தவளை யாராலும் அவ்வளவு எளிதில் அடையாளம் காண முடியாது. அவள் வாசித்துக் கொண்டிருந்த பாடல் முடிந்ததும் அவள் சுற்றிலும் புன்னகையுடன் பார்க்க... அப்போது தான் அவளது விழிகளில் சாணக்கியா விழுந்தான். அவனை எதிர்பாராது அங்குக் கண்டதும் அவளது மேனி நடுங்க ஆரம்பித்தது. மனதில் பதற்றம் தோன்றியது. எவனைக் காணவே கூடாது என்று எண்ணினாளோ அவனை நேரில் கண்டதும் அவளுக்கு ஒன்றுமே ஓடவில்லை. அவள் வயலினை இறுக பிடித்துத் தனது பதற்றத்தை குறைத்தவள் அவனைப் பார்த்தவாறே அந்தப் பாடலை இசைக்க ஆரம்பித்தாள்.


"Kyunki tum hi ho

(Because it is only you)

Ab tum hi ho

(Now it is only you)

Zindagi ab tum hi ho

(My life is only you)


Chain bhi mera dard bhi

(My peace and my pain)

Meri aashiqui ab tum hi ho

(My love is only you)"


அந்தப் பாடலை கேட்டு சாணக்கியாவின் உடல் ஒரு நொடி இறுகி மறுநொடி தளர்ந்தது. ஒரு இசை ரசிகனாய் அவன் அந்தப் பாடலை விரும்பி கேட்க ஆரம்பித்தான். பாடல் முடிந்ததும் அனைவரும் கைத்தட்டி அவள் வைத்திருந்த பெட்டியில் பணத்தைப் போட்டு விட்டு சென்றனர். சாணக்கியாவும் அவளை நோக்கி வந்தவன் அந்தப் பெட்டியில் எழுதியிருந்ததைக் கண்டு வியந்தவனாய் தனது பேண்ட் பையில் இருந்து பணக்கட்டு ஒன்றை எடுத்து போட்டான். அவள் விழி விரிய அவனைப் பார்த்திருந்தாள்.


"இந்த மாதிரி நேரத்தில் இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் ஒரு பெண் தனியே வருவது பாதுகாப்பு இல்லை. இனி இது போல் எல்லாம் வராதே. முதலில் நீ கிளம்பு." என்று அக்கறையுடன் சொல்லியவன் பின்பு தனது விசிட்டிங் கார்டை அவளிடம் கொடுத்து, "உனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னைக் கான்டாக்ட் பண்ணு." என்றவன் அங்கிருந்து செல்ல...


விராஜினி விழிகள் கலங்க அவனையே பார்த்திருந்தாள்!


தொடரும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
அத்தியாயம் : 3


அந்தக் கால மன்னர்களின் வாழ்வியல் இடங்கள் மற்றும் போர் களங்கள் என்று அனைத்தும் பிரம்மாண்டமாய்த் தத்ரூபமாய் வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள், நூற்றுக்கணக்கான முக்கிய நடிகர்கள் என்று அந்தப் படப்பிடிப்பு தளமே பரபரப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தங்களது வேலையைச் சிறப்பாகச் செய்து கொண்டிருந்தனர். கேமிரா சுழல ஆரம்பிக்க... இயக்குநர் 'ஸ்டார்ட் ரெடி கேமிரா ஆக்சன்' என்று குரல் கொடுக்க... ராகுல் வர்மா நடிக்கத் தொடங்கினார். நாற்பத்தி மூன்று வயதிலும் அவர் அத்தனை இளமையாக இருந்தார்.


அப்போது சோனு அங்கே வந்தான். வந்தவன் கண்ணில் ராகுல் வர்மா நாட்டுப்பற்றோடு உணர்ச்சிவசப்பட்டுப் பேசும் காட்சி தென்பட்டது. அவனது உதடுகளில் நக்கல் புன்னகை வந்தமர்ந்தது. விட்டால் இந்த ராகுல் வர்மா பணத்திற்காக நாட்டையே கூறு போட்டு விற்றுவிடுவான். அப்படிப்பட்டவனின் தேசப்பற்று பேச்சு கேட்டு அவனுக்குச் சிரிப்பு வருமா? வராதா? தங்களோடு சேர்ந்து கொண்டு ராகுல் வர்மா செய்யாத குற்றங்களா? முன்பு திரையுலகம் எப்படி இருந்தது! இப்போது எல்லாம் எங்கே போனது? முன்பு எல்லாம் திரையுலகம் அவர்களது கட்டுப்பாட்டில் அவர்களது கண்ணசைவில் இருந்தது. ஆனால் இப்போதோ அந்தக் கட்டுப்பாடு காணாமல் போய் அவரவர் விருப்பத்திற்கேற்ப வாழ்கின்றனர். மீண்டும் அந்தக் கட்டுப்பாட்டைக் கையில் எடுக்க வேண்டும். எப்படி? என்று சோனு தனக்குள் தீவிரமாய் யோசித்தான்.


ராகுல் வர்மா நடிக்கும் போதே சோனுவை பார்த்து விட்டார். அவனை இங்கே கண்டதும் அவரது மனம் சுணங்கி போனது. அவர் தனது விருப்பமின்மையை முகத்தில் காட்டாது காட்சியைத் திறம்பட நடித்துக் கொடுத்து விட்டு வந்தார். சோனுவை அப்போது தான் காண்பது போல் அவர் விரிந்த புன்னகையை உதடுகளில் ஒட்ட வைத்துக் கொண்டு அவனை நோக்கி வந்தார்.


"இங்கே எதற்கு வந்தாய் சோனு? சொல்லியிருந்தால் நானே வந்திருப்பேனே." ராகுல் வர்மா சோனுவை அணைத்து வரவேற்றார்.


"இங்கேயே பேசணுமா?" சோனு கேட்டதும் ராகுல் வர்மா அவனைத் தனது ஓய்வறைக்கு அழைத்துச் சென்றார்.


"என்ன குடிக்கிற? ஜூஸ் ஆர் காபி?" ராகுல் வர்மா கேட்கவும்...


"ஆப்பிள் ஜூஸ்... நல்லா ஐஸ் போட்டு." சோனு தனது வீடு மாதிரி அதிகாரமாய்க் கூறிவிட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.


"என்ன விசயம் சொல்லு சோனு?"


"எதுக்காக வந்திருப்பபேன்னு உனக்குத் தெரியாதா? எல்லாம் பணம் தான்." சோனு சொல்லவும் ராகுல் வர்மா தனது முகம் மாறாது இருக்க மிகவும் பிரயத்தனப்பட்டார்.


"உனக்கு என்னப்பா நல்லா ராஜா மாதிரி வாழுற? ஆனா எங்க நிலைமை?" சோனு உதட்டை பிதுக்கினான்.


"சோனு உனக்கு என்னடா குறை? இப்போ கூட நீ தொழில் பண்றதா கேள்விப்பட்டேன். ராஜா எப்பவும் ராஜா தான்டா." ராகுல் வர்மா அவனைப் புகழ்ந்து பேசினார். வேறுவழியில்லை பேசி தானாக வேண்டும்.


"நான் ராஜா இல்லை. நான் எப்பவுமே மந்திரி தான். எங்க பாய் காஞ்சன் தான் எங்கள் தலைவன். அவர் இருந்தாலும் இல்லைன்னாலும் இங்கே எப்பவும் அவர் தான் கிங்." சோனுவின் விழிகள் கலங்கி சிவந்தது.


காஞ்சன் இந்தி திரையுலகை மட்டும் அல்லாது முழு இந்தியாவையும் நடுங்க வைத்த நிழல் உலகத் தலைவன். ஒரு என்கவுண்ட்டரில் அவன் சுட்டு கொல்லப்பட்டான். தலைவன் இறந்ததும் நிழல உலகப் போதை மாஃபியா அடங்கி விடும் என்று காவல்துறை நினைத்தனர். வெளியில் அப்படித்தான் காட்டி கொண்டனர். ஆனால் உள்ளே சிறப்பாக வேலை நடந்து கொண்டு தான் இருக்கிறது. காஞ்சனின் தளபதி தான் இந்தச் சோனு. காஞ்சன் இறந்த பிறகும் அவன் தலைவர் பதவிக்கு ஆசைப்படவில்லை. இப்போதும் அவன் தளபதியாகக் காஞ்சன் விட்டு சென்ற பணியைத் திறம்படச் செய்து வருகின்றான். காஞ்சன் இருக்கும் போது நடந்த மாதிரி பெரிய அளவில் இல்லாது போனாலும் சிறிய அளவில் சோனு இயங்கி வருகின்றான். இதில் வரும் வருமானம் சோனுவுக்குப் போதவில்லை. அதனால் தான் அவன் அவ்வப்போது தனக்குத் தெரிந்த திரையுலகினரை மிரட்டி பணம் வாங்கிக் கொண்டிருக்கின்றான். தெரியாதவர்களை மிரட்டி பணம் கேட்பது இப்போதைக்கு ரிஸ்க். அதனால் அவன் சற்று அடக்கி வாசித்தான்.


"எஸ் ஐ நோ..." ராகுல் வர்மா சொல்லும் போதே பழச்சாறு வந்தது. அதைச் சோனுவிடம் கொடுத்தவர், "முதலில் இதைக் குடி." என்க...


சோனு மறுக்காது வாங்கிப் பழச்சாறை பருகினான். பின்பு அவன் பழச்சாறை குடித்து முடித்து விட்டுப் பெரிதாக ஏப்பம் விட... ராகுல் வர்மா அரும்பாடு பட்டு முகத்தைச் சுளிக்காது இருந்து தான் ஒரு மிகப் பெரிய நடிகன் என்பதை நிரூபித்தார்.


"சரி, இப்போ நான் வந்த விசயத்துக்கு வர்றேன். எனக்கு ஒரு நூறு ருபா வேணும்." சோனு கேட்கவும் ராகுல் வர்மா வாய்விட்டு சிரித்து விட்டார்.


"நூறு ரூபாய் கூட இல்லாமலா நீ இருக்கச் சோனு?"


"என்ன நக்கலா? நான் கேட்டது வெறும் நூறு ரூபா இல்லை. நூறு கோடி." சோனு சொன்னதும் ராகுல் வர்மா நெஞ்சை பிடித்துக் கொண்டார்.


"அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன்?" ராகுல் வர்மா பரிதாபமாக விழித்தார்.


"உன் கிட்ட இல்லாத பணமா?" சோனுவின் பார்வை அங்கிருந்த ஜன்னல் வழியே படிப்பிடிப்புத் தளத்தைப் பார்வையிட்டது.


"ஏற்கெனவே உனக்குத் தெரியும். இப்போ என்னோட மார்கெட் ரொம்பவே சரிஞ்சு போயிருக்குன்னு... அதைத் தூக்கி நிறுத்த தான் நான் குடியிருக்க வீட்டை கூட அடகு வச்சு மொத்த பணத்தையும் இந்தப் படத்தில் இன்வெஸ்ட் பண்ணி இருக்கேன். எனக்கே ஊரு முழுவதும் கடன். அப்படிப்பட்ட நான் எங்கே இருந்து நூறு கோடியை புரட்டுவது?" ராகுல் வர்மா கையை விரித்தார்.


"நூறு கோடி பெருசா? இல்லை இந்தப் படம் பெருசா?" சோனு நிதானமாக அவரைக் கண்டு கேட்டான்.


"சோனு, நீ என்ன சொல்ல வர்ற?" ராகுல் வர்மா பயத்துடன் அவனைப் பார்த்தார்.


"எனக்குப் பணம் கொடுத்தால் நூறு கோடியோடு முடிந்து போகும். ஆனால் இந்தப் படம் முடியாது போனால்...???" சோனு வில்லன் பார்வை பார்க்க...


"ஐயோ, அப்படி எல்லாம் எதுவும் செய்து விடாதே. இப்போதைக்கு நூறு கோடி எல்லாம் என்னால் புரட்ட முடியாது. வேணும்ன்னா அதில் பாதி ஐம்பது கோடியை யார் கிட்டேயாவது கடன் வாங்கித் தர்றேன்." ராகுல் வர்மா கெஞ்சும் குரலில் சொல்ல... சோனுவுக்கு வேண்டியது ஐம்பது கோடி தான். அவன் கைத்தேர்ந்த வியாபாரி. நூறு கோடி கேட்டால் இறுதியில் ஐம்பது கோடியாவது கையில் கிடைக்கும் என்று அவனுக்கு நன்கு தெரியும். அதனால் தான் அவன் நூறு கோடி கேட்டது.


"ரொம்ப நல்லது. வரட்டுமா ராகுல் பாய்." சோனு விரிந்த புன்னகையுடன் தனது இரு கரங்களையும் கூப்பியபடி விடைபெற்று சென்று விட்டான்.


ராகுல் வர்மா தனது தலையில் கை வைத்தபடி அமர்ந்து விட்டார். இதற்குத் தான் கெட்ட சகவாசம் கூடாது என்பது. அதன் விளைவு தான் இது.


******************************


விராஜினி நடிப்பதற்குச் சம்மதம் கூறியதும் கனிஷ்கா அவளது புகைப்படங்களை இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என்று அனைவருக்கும் அனுப்பி வைத்தார். இதற்கு என்றே செயல்படுபவர்கள் பலர் இருக்கின்றனர். பிஆர்ஓ என்று தங்களைச் சொல்லி கொள்ளும் இவர்கள் அதைத் தவிர்த்து பல அந்தரங்க வேலைகளையும் பார்ப்பார்கள். இருதரப்பிற்கும் இணைப்புப் பாலம் போன்றவர்கள் இவர்கள். கனிஷ்காவிற்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது. இப்போது வரும் லட்சகணக்கான மாத வருமானம் அவருக்குப் போதாது. மகளை வைத்துக் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற வெறி அவருள் எழுந்தது. இந்த உலகில் நியாய, அநியாயங்களுக்கு எல்லாம் மதிப்புக் கிடையாது. பணத்திற்கு மட்டுமே மதிப்பு அதிகம். அதை அவர் உணர்ந்தே இருந்தார்.


கனிஷ்கா இதை மகளிடம் கூற... விராஜினியோ இதை எல்லாம் கண்டு கொள்ளாது நண்பர்களுடன் நட்சத்திர விடுதிக்கு வந்திருந்தாள். தேஜா இன்னும் ஒரு வாரத்தில் இலண்டன் கிளம்புகிறாள். அதற்காகத் தான் இந்த ட்ரீட். விருந்து களை கட்டியது. இளம்சிட்டுகளிடையே மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. கத்தி ஆர்ப்பாட்டம் செய்து, ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டு என்று நால்வரும் உற்சாகமாய் இருந்தனர். அவர்களின் முன்னே உணவு வகைகளோடு மதுபானமும் சேர்ந்தே இருந்தது. மற்ற மூவரும் மதுபானத்தை அருந்த... விராஜினி மட்டும் மது அருந்தாது அமைதியாக இருந்தாள்.


"ஏன் குடிக்கலை வீர்? உடம்பு எதுவும் சரியில்லையா?" ராஜ் கவலையுடன் கேட்டான்.


"இல்லை சரக்கு சரியில்லையா? யாருடா அங்கே? இதை எடுத்துட்டு போயிட்டு நல்ல சரக்கா கொண்டு வா." தேஜா அலப்பறையைக் கூட்டினாள்.


"ஹேய், அதெல்லாம் இல்லை. ஆசிரமத்துக்குப் போகணும். அதான் நான் குடிக்கலை. திடீர்ன்னு தேஜூ கூப்பிட்டதால் வந்தேன்." விராஜினி சொன்னதும் நண்பர்கள் கூட்டம் அவளைக் கவலையுடன் பார்த்தது.


"உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? ராணி மாதிரி இருக்கிறதை விட்டுட்டு..." அவர்கள் மூவரும் முகத்தைச் சுளித்தனர்.


"நோ கைய்ஸ்... இதைப் பத்தி மட்டும் நாம பேச வேண்டாம்." விராஜினிக்கு நண்பர்களின் இந்த அறிவுரை மட்டும் கசக்கும்.


"ப்ச், நாங்க சொன்னா கேட்க மாட்டியே." மூவரும் சலித்துக் கொள்ள...


"இப்போ நாம என்ஜாய் பண்ணுகிற நேரம். லெட்ஸ் என்ஜாய்." விராஜினி சொல்லியவள் தன் முன்னிருந்த ஷாம்பெயின் கோப்பையைத் தூக்கி காட்டி, "ஹேய்..." என்று கத்த... மற்ற மூன்று வானரங்களும் உடன் சேர்ந்து கத்த தொடங்கினர்.


இதை எல்லாம் சாணக்கியா சற்று தள்ளி அமர்ந்தபடி பார்த்துக் கொண்டு இருந்தான். பொதுவாகக் காலை, மதிய நேரங்களில் நட்சத்திர விடுதியில் அவ்வளவாகக் கூட்டம் இருக்காது. அதனால் தான் அவன் இந்தப் பொழுதை தேர்ந்தெடுத்தது. அவன் தனது நண்பன் ஒருவனைச் சந்திக்க இங்கு வந்திருந்தான். வந்த இடத்தில் இந்த வானர கூட்டங்களின் அலப்பறையைக் கண்டான். அவர்கள் கத்தி கூச்சலிடுவது அவனுக்கு எரிச்சலை தந்தது.


"வீட்டில் தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க போல. அதான் இப்படி ஆடுதுங்க." அவனது நண்பன் கோபத்துடன் கூறினான்.


"விடு... நாம என்ன செய்ய முடியும்?" என்ற சாணக்கியா நண்பனிடம் பேச தொடங்கினான்.


சிறிது நேரத்தில் சாணக்கியா மீது ஷாம்பெயின் ஊற்றப்பட்டது. அவன் திடுக்கிட்டு திரும்பி பார்த்தான். விராஜினி கையில் மது கோப்பையுடன் திகைத்தபடி நின்றிருக்க... அவளின் பின்னே அவளைத் துரத்தி கொண்டு வந்த அனில் செய்வதறியாது விழித்தான்.


"சாரி, ஐயம் ரியலி சாரி." அவள் பதட்டத்துடன் மன்னிப்பு கேட்டுக் கொண்டே அங்கிருந்த டிஷ்யூ காகிதத்தைக் கொண்டு அவனது சட்டையைத் துடைக்க வர... அடுத்த நொடி அவன் அவளது கை படாது விலகியவன்,


"எவ்வளவு தைரியம் இருந்தால் என்னைத் தொட வருவ?" என்று கோபத்தில் கர்ஜித்தான். அவனுக்கு விராஜினியை அடையாளம் தெரியவில்லை. வயலின் வாசித்த பெண்ணும், இவளும் ஒன்று என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.


அவனது கோபத்தில் அவளது பதற்றம் சற்றுத் தணிந்தது. அவள் நிதானமாக அவனைப் பார்த்தாள்.


"ஓ, உங்களைத் தொட வந்தது தான் தவறா? அப்போ ஷாம்பெயின் கொட்டியது தப்பில்லை, அப்படிதானே?" என்றவள் தனது கையில் மீதமிருந்த ஷாம்பெயினை அவனது சட்டையில் கொட்டி கவிழ்த்தாள்.


"உன்னை?" அவளை அடிக்கக் கையை ஓங்கியவன் பிறகு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு தனது கையைக் கீழே இறக்கியவன், "உனக்கு என்ன வயசு இருக்கும்? மிஞ்சி போனா பதினெட்டு, பத்தொன்பது? இந்த வயசில் டிரிங்க்ஸ் பண்ணுறியே? இதெல்லாம் தப்புன்னு உனக்குத் தெரியாது." என்று அறிவுரை கூறினான். வயதில் சின்னவர்களான அவர்களிடம் கோபத்தைக் காட்ட அவனால் முடியவில்லை. அதனால் ஒரு நல்ல ஆண்மகனாய் அவன் தனது ஆதங்கத்தை அறிவுரையாகக் கூறினான்.


"ஹேய் வந்துட்டாருடா பூமரு அங்கிள்." என்று கூறி விராஜினி சிரிக்க... கூடவே இருந்த அவளது வானர கூட்டமும் வாய் விட்டுச் சிரித்தது. அதைக் கண்டு சாணக்கியா முகம் இறுக நின்றிருந்தான்.


"இந்த வயசில் தப்பு பண்ணாம வேற எந்த வயசில் தப்பு பண்ணுவாங்க பூமர் அங்கிள். உங்களை மாதிரி அங்கிளான பிறகா?"


"ச்சீ, நீ எல்லாம் பெண் இனத்தில் சேர்த்தி இல்லை." அவன் அவளைத் திட்டியபடி முகத்தைத் திருப்பிக் கொண்டான்.


"பொண்ணுன்னு நிரூபிக்க நான் தயார். நீங்க தயாரா?" அவள் துடுக்காய் கேட்டதும் தான் தாமதம் அடுத்த நொடி அவன் அவளது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டிருந்தான்.


விராஜினியின் நண்பர்கள் அனைவரும் அதிர்ந்து போயினர். சாணக்கியா நண்பன் கூட அதிர்வாக இருவரையும் பார்த்திருந்தான். விராஜினி மட்டும் எந்தவித அதிர்வும் இல்லாது அவனை அமைதியாகப் பார்த்திருந்தாள்.


"இதுக்கு மேல பேசின உன்னைக் கொன்னுருவேன்." அவன் அடக்கப்பட்ட கோபத்தில் தனது ஆள்காட்டி விரலை நீட்டி அவளை எச்சரித்தான். அவளோ அவனை அலட்சியமாகப் பார்த்தபடி நின்றிருந்தாள். அவளது அலட்சிய பார்வை கண்டு அவன் அவளை முறைத்திருந்தான்.


"வாடா..." சாணக்கியனின் நண்பன் அவனை இழுத்துக் கொண்டு சென்று விட்டான்.
 

ஶ்ரீகலா

Administrator
விராஜினி செல்லும் அவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள். தான் சற்று அதிகப்படியாகத் தான் நடந்து கொண்டோமோ! அப்படித்தான் அவளுக்குமே தோன்றியது.


'ஹ... எனக்கு யாருடைய இரக்கமும், அறிவுரையும் தேவையில்லை. என்னிடம் இருந்து தள்ளியே இருங்க மிஸ்டர் சாணக்கியா.' அவள் தனக்குள் கூறி கொண்டாள்.


"வீர், எவ்வளவு தைரியம் இருந்தால் அவன் உன் மேல் கையை வைப்பான். நம்மை என்ன சாதாரண ஆளுங்கன்னு நினைச்சிட்டானா? அவன் பெரிய ஸ்டார்ன்னா... அது அவனோட..." தேஜா கோபத்தில் குதித்தாள். மற்ற இருவரும் அதை ஆமோதித்தனர்.


"ஹேய் தேஜூ, அவர் உன்னோட கனவு நாயகன்டி." விராஜினி சிரித்தபடி தோழியைக் கண்டு கேட்க...


"என் தோழியை அடித்ததால் இன்று முதல் அவன் எனக்கு விரோதி மட்டுமே." தேஜா சிறுபிள்ளை போன்று முகத்தைச் சுளித்தாள்.


"தேஜூ, ஐ லவ் யூடி." விராஜினி தோழியை அணைத்து கொண்டாள்.


"அவனை ஏதாவது செய்யணும்." ராஜ் கோபத்தில் துடிக்க...


"நான் செஞ்சதும் தப்பு தான். இந்தப் பிரச்சினையை இத்தோடு விடுங்க." விராஜினி முடித்து விட்டாள்.


நால்வரும் விடுதியை விட்டு வெளியில் வர... திடுமென அனில் சந்தோசத்தில் கூவினான். மற்ற மூவரும் அவனைப் புரியாது பார்த்தனர்.


"கடவுள் நம்ம பக்கம் வீர். நீயே இதைப் பார்." என்றவன் தனது அலைப்பேசியை விராஜினியிடம் கொடுத்தான்.


அதை வாங்கிப் பார்த்த விராஜினி அதிர்ந்து போய்விட்டாள். நேற்று சாணக்கியன் அந்த நடிகையை அடித்த காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது. சிலர் அவனுக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர். சிலர் அவனுக்கு எதிராகக் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.


"இது தான் நல்ல சான்ஸ். இப்போ சாணக்கியா நம்ம வீரை அடிச்சது இங்கே இருக்கும் சிசிடிவியில் பதிவாகி இருக்கும். அதை நாமளும் வெளியிடுவோமா? சாணக்கியா நியூஸ் இன்னும் நல்லா பத்திக்கும். நிச்சயம் இது அவனோட கேரியரை பாதிக்கும்." ராஜ் தனது எண்ணத்தைக் கூற... மற்ற இருவரும் அதை ஆமோதிக்க...


"வேண்டாம்..." என்று விராஜினி தடுத்து விட்டாள்.


"ஏன்?" மற்றவர்கள் கேட்க...


அவளுக்கே ஏனென்று தெரியவில்லை. அவள் அவனை எந்த ஆபத்தும் நெருங்க விடாது காப்பாற்ற துடிக்கின்றாள். அவனுக்கு ஒன்று என்றால் அவளது மனம் வேதனையில் தவிக்கின்றது. இதோ இப்போதும் ஏதாவது செய் என்று அவளது மனம் விடாது அடித்துக் கொள்கிறது. இதை எல்லாம் நண்பர்களிடம் சொன்னால் அவர்களுக்குப் புரியாது.


"ஓகே கைய்ஸ்... எனக்கு ஆசிரமத்துக்கு நேரமாகி விட்டது. நான் கிளம்பறேன்." என்றவள் அங்கிருந்து வேகமாக வெளியேறி விட்டாள்.


அடுத்து விராஜினி நேரே சென்ற இடம் நேற்று அவள் வயலின் வாசித்த நட்சத்திர விடுதிக்கு... அங்கே உள்ளே சென்று விடுதி மேலாளரை சந்தித்துப் பேசினாள். அவருக்கு அவள் நன்கு பரிச்சயமே. அதனால் அவள் கேட்டதும் சிசிடிவி காட்சிகளை எடுத்து அவளிடம் கொடுத்து விட்டார். அதற்குச் சன்மானமாகப் பணத்தை அவரது கையில் திணித்து விட்டு அவள் கிளம்பி விட்டாள். தனது காரில் வந்து அமர்ந்தவள் சமூக ஊடகங்களில் அவள் வைத்திருக்கும் போலி கணக்கின் உள்ளே நுழைந்து இப்போது எடுத்திருந்த காணொளியை பதிவேற்றினாள். கூடவே சாணக்கியா கணக்கு, அவனது ரசிகர்களின் 'ஃபேன் பேஜ்' என்று எல்லாவற்றையும் டேக் செய்தாள். அதன் பிறகே அவளது மனம் பழைய நிலைக்குத் திரும்பியது. தனது ஓட்டுநரிடம் ஆசிரமத்திற்குப் போகச் சொன்னவள் தனது அலைப்பேசியை எடுத்து மீண்டும் அந்தக் காணொளியை பார்க்க ஆரம்பித்தாள்.


நேற்று சாணக்கியா அவளுக்கு அறிவுரை கூறி பணம் கொடுத்தது அந்தக் காணொளியில் இருந்தது. அவளது முகம் தெளிவில்லாது, அவனது முகம் தெளிவோடு... அவன் பேசுவது சற்று கரகரப்பான ஒலியில் கேட்டாலும் உற்று கேட்டால் நன்கு புரிந்தது. இது போதுமே! அவனது மதிப்பினை மீட்டெடுக்க... அவளது இதழ்களில் புன்னகை தோன்றியது. புராண கதையான இராமாயாணத்தில் ராமனுக்குப் பாலம் அமைக்கச் சிறு உதவி செய்த அணிலை போன்று அவள் அவனுக்கு இந்த உதவியைச் செய்திருக்கிறாள்.


அடுத்தச் சில நிமிடங்களில் அவளது காணொளி தீயாய் பற்றிக் கொண்டது. சாணக்கியாவின் நடத்தை நல்லவிதமாக விவாதிக்கப்பட்டது. இறுதியில் அவன் எதைச் செய்தாலும் சரியாகத் தான் இருக்கும் என்று விவாதம் முடித்து வைக்கப்பட்டது.


இவை அனைத்தும் சாணக்கியா காதிற்குச் செல்ல தான் செய்தது. முதல் காணொளியை எப்படிக் கண்டு கொள்ளாது விட்டானோ! அதைப் போன்றே இரண்டாவது காணொளி பற்றியும் அவன் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை.


******************************


'அக்கா, அக்கா' என்று தன்னைச் சூழ்ந்து கொண்ட குழந்தைகளின் கரங்களில் தான் வாங்கி வந்திருந்த பொருட்களை எல்லாம் கொடுத்தாள் விராஜினி. அவரவர் விரும்பிய பொருட்களை எல்லாம் அவள் வாங்கி வந்திருந்தாள். அது ஒரு ஆதரவற்றோர் இல்லம். இங்குப் பச்சிளம் குழந்தைகளில் இருந்து வயோதிக மக்கள் வரை அனைவரும் இருந்தனர். அன்பும், ஆதரவும் இல்லாத அவர்களைக் காணும் போது எல்லாம் அவள் தன்னைக் காண்பது போல் உணர்ந்தாள். அதனாலே அவளுக்கு அவர்கள் மீது தனிப்பிரியம் உண்டு. நாட்டில் இது போன்று நிறையப் பேர் இருக்கின்றார்கள் தான். ஆனால் எல்லோருக்கும் அவளால் உதவ முடியாது. ஏதோ அவளது கண்களுக்குப் புலப்பட்டவர்களை அவள் ஆதரிக்கின்றாள். அதுவும் அவளது கைக்காசை கொண்டு... இந்தப் புண்ணியக் காரியத்திற்கு அவள் தனது பெற்றோர் பணத்தைத் தொடுவது இல்லை.


"விராஜ், வா வா... எப்போ வந்த?" அங்குப் பணிபுரியும் மீரா புன்னகையுடன் அவளை வரவேற்றபடி வந்தாள்.


"இப்போ தான்க்கா வந்தேன்." அவளும் பதிலுக்குப் புன்னகைத்தாள்.


"நேத்து கலெக்சன் அதிகமா..." பிள்ளைகள் கைகளில் வைத்திருக்கும் பொருட்களின் மதிப்பை கண்டு மீரா கேட்டாள்.


"ஆமாம்க்கா... நேத்து ஒரு புண்ணியவான் வந்து பணத்தை அள்ளி கொடுத்தாரு." அவளது முகம் சாணக்கியா நினைவில் மலர்ந்தது.


"ஓ, அப்படியா... விராஜ் உனக்கு ஒரு வேலை. நேத்து ஒரு பெண் இங்கே வந்திருக்கிறாள். அவள் ரொம்ப மன அழுத்தத்தோடு இருக்கிறாள் போலும். நீ போய்ப் பேசி பார்." மீரா அவளிடம் சொன்னாள்.


விராஜினி அந்தப் பெண்ணைத் தேடி போனாள். அந்தப் பெண் விராஜினியை விடச் சின்னப் பெண். பதினாறு வயது இருக்கலாம். காதலனை நம்பி ஓடிவந்து ஏமாந்து போனவள். யாரோ ஒரு நல்லவர் அவளைக் கொண்டு வந்து இங்கே சேர்த்து இருக்கிறார். விராஜினி முதலில் அந்தப் பெண்ணிடம் கலகலப்பாக வேறு விசயங்களைப் பேசினாள். பிறகு மெல்ல அவள் அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்களைத் திரட்டினாள்.


"நீ உங்க வீட்டுக்கு போறியா? இந்த வயசில் அப்பா, அம்மா கூடத் தான் இருக்கணும். அதைவிடப் படிப்பு ரொம்ப முக்கியம்." என்று அவள் அந்தப் பெண்ணிற்கு அறிவுரை கூறினாள்.


"அப்பாவும், அம்மாவும் அடிப்பாங்க." அந்தப் பெண் தேம்பினாள்.


"ஆனா இது மாதிரி உன்னைக் கைவிட மாட்டாங்க." விராஜினி சொன்னதும் அந்தப் பெண் சரியென்று தலையாட்டினாள். அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு அழைத்துப் பேசிய பிறகே அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அவர்கள் இங்கே வந்து தங்கள் மகளை அழைத்துச் செல்வதாகக் கூறினர். ஏதோ சாதித்து விட்ட சந்தோசம் அவளுள் தோன்றியது.


மற்றவர்களைப் படி படியென்று அறிவுரை கூறும் அவள் ஏன் படிக்காது போனாள்? யாரை வெறுப்பேற்ற அவள் இதைச் செய்கின்றாள்? இல்லை யாருக்காக இதைச் செய்கின்றாள்? அது அவள் மட்டுமே அறிந்த இரகசியம்.


திடுமென ஆசிரமம் பரபரப்பு அடைந்தது. விராஜினி புரியாது மீராவிடம் கேட்க... மீரா சிறு வெட்கத்துடன், "சாணக்கியா சார் இங்கே வருகிறாராம்." என்று சொல்ல...


"ஆக்டர் சாணக்கியாவா?" விராஜினி புரியாது கேட்டதும்...


"ஆமாம்..." என்ற மீராவின் முகத்திலிருந்த சிவப்பு விராஜினியை கவனிக்க வைத்தது.


"என்னக்கா என்ன விசயம்?" அவள் ஒன்றும் தெரியாது போல் கேட்க...


"என்ன விசயம்?" மீரா ஒன்றும் அறியாதவள் போல் பதிலுக்குக் கேட்க...


"உங்க வெட்கம் தான்." விராஜினி நேரிடையாகக் கேட்டதும்...


"அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும்." என்ற மீராவை அவள் உணர்ச்சி இல்லாது பார்த்தாள்.


"சினிமா ஸ்டாரை யாருக்கு தான் பிடிக்காது. ஆனால் நீங்க இந்தப் பிடித்தத்தோடு நிறுத்திக்கோங்க மீராக்கா." என்றவளது குரலில் அத்தனை கடினம்.


"ஏன்? நான் அவரைக் காதலிக்கக் கூடாதா?"


"ஆம், கூடாது." என்றாள் அவள் அழுத்தமான குரலில்...


"ஏன் நீ அவரைக் காதலிக்கிறியா?" மீரா கேட்டதும்...


"அது உங்களுக்குத் தேவையில்லாத விசயம்." என்று மட்டும் கூறியவள் அங்கிருந்து சென்று விட்டாள்.


"அப்போ அது உனக்குத் தேவையான விசயமா?" மீராவின் குரல் அவளைப் பின்தொடர்ந்தது. விராஜினி அதைக் கண்டு கொள்ளவில்லை.


விராஜினி தனியே ஒரு மரத்தின் கீழே வந்து நின்றாள். அவள் ஆழ்ந்த மூச்செடுத்து தனது படபடப்பினை சமன் செய்தாள்.


"மேடம், என்னைக் காதலிக்கிறீங்களோ?" திடுமெனக் கேட்ட குரலில் அவள் தூக்கிவாரி போட திரும்பினாள்.


அங்குச் சாணக்கியா தனது இருகரங்களையும் நெஞ்சின் குறுக்கே கட்டியபடி மரத்தின் மீது ஸ்டைலாகச் சாய்ந்து நின்றிருந்தான். அவனை அங்கு எதிர்பாராது கண்டதும் அவள் திகைத்து விழித்தாள். அத்தோடு தான் மீராவிடம் பேசியது வேறு அவன் கேட்டு இருக்கின்றான் என்பதை அறிந்தவளுக்கு உள்ளுக்குள் பதற்றம் தொற்றிக் கொண்டது.


"உன் வயசுக்கு காதல் ஒரு கேடு?" அவனது அலட்சிய குரலில் அவள் வெகுண்டு எழுந்தாள்.


"ஏன் நான் காதலிக்கக் கூடாதா?" அவள் அவனிடம் எகிறிக் கொண்டு வர...


"அந்த இளிச்சவாயன் நானில்லை." அவன் நக்கலாய் சொல்ல...


"நானும் நீங்கன்னு சொல்லவே இல்லையே. உங்க வயசென்ன? என் வயசென்ன? உங்களுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட பதினைந்து வயசு வித்தியாசம். நீங்க எனக்கு அங்கிள். அதுவும் பூமர் அங்கிள். போயும் போயும் நான் உங்களைப் போய்க் காதலிப்பதாவது." அவள் நக்கலும் நையாண்டியுமாய் அவனைக் கலாய்த்தாள்.


"ஏய், ரொம்பப் பேசுறடி." மிதவாதியான அவனையும் தீவிரவாதியாய் அவள் மாற்றி விடுவாள் போலும்.


"அங்கிள், நிச்சயம் நான் காதலிப்பேன். ஆனா அது நீங்க இல்லை. இன்னும் ஐஞ்சு வருசம் கழிச்சு என் மனசுக்கு பிடிச்ச, என் வயசுக்கு ஏத்த பையனா பார்த்து நான் காதலிப்பேன். அப்போ நீங்க குடுகுடு கிழவனாகி இருப்பீங்க." என்றவள் அடுத்த நொடி அங்கே நிற்காது சிட்டாகப் பறந்து விட்டாள். அவனிடம் அவள் சிக்கினால் சின்னாபின்னமாகப் போவது உறுதி! அந்தப் பயத்தில் அவள் ஓடிவிட்டாள்.


"ஏய்..." அவன் ஆத்திரத்தில் கத்தியபடி நின்றிருந்தான்.


"சார்..." அந்நேரம் பார்த்து வினீத் அங்கே வந்து நின்றான்.


அவள் பேசியதை இவன் கேட்டு இருப்பானோ? சாணக்கியாவுக்குச் சந்தேகமாக இருந்தது. ஆனாலும் வெளியில் எதையும் காட்டி கொள்ளாது, "என்ன?" என்று கேட்க...


வினீத் எதுவும் பேசாது தனது அலைப்பேசியில் இருந்து ஒரு காணொளியை எடுத்து அவனிடம் காட்டினான். பரீட்சை முடிவு வந்த அன்று விராஜினி கொடுத்த பேட்டி தான் அந்தக் காணொளியில் இருந்தது. அதை வாங்கிப் பார்த்த சாணக்கியாவின் உதடுகளில் விசம புன்னகை பூத்தது. அடுத்த நொடி அவன் தனது இயக்குநர் நண்பன் தருணை அழைத்தான்.


"தருண், நீ ரொம்ப நாளா தேடிட்டு இருந்த பொண்ணு கிடைத்து விட்டாள். உன்னோட அடுத்தப் படத்துக்கு ஹீரோயின் அந்தப் பெண் தான். ஹீரோ வேறு யார்? சாட்சாத் நானே." என்றவனின் உதடுகளில் மர்ம புன்னகை மலர்ந்து இருந்தது.


திரையரசனின் அரக்க அவதாரம் இனிதே ஆரம்பமானது!!!


தொடரும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
அத்தியாயம் : 4


"ப்பா, எங்கே கிளம்பிட்டீங்க?" சாணக்கியா உற்சாகமாய்த் தந்தையிடம் கேட்டபடி வீட்டினுள் நுழைந்தான்.


"போகும் போது எங்கே போறீங்கன்னு கேட்க கூடாது கண்ணா?" கண்டிப்புடன் கூறியபடி ரமணி அங்கே வந்தார். மென்பட்டு உடுத்தி, வைர நகைகள் அணிந்து வந்த அன்னையைக் கண்டு சாணக்கியாவின் புருவங்கள் உயர்ந்தது.


"ரமணி பேசாம இரு." ரவிசங்கர் மனைவியை அதட்டியவர் பின்பு மகனிடம் திரும்பி, "என்னோட பிரெண்ட்டோட வெட்டிங் அனிவர்சரி. அதுக்காக அவன் சின்னதா பார்ட்டி வச்சிருக்கான். அந்தப் பார்ட்டிக்குப் போகத் தான் நானும், உங்கம்மாவும் கிளம்பிட்டு இருக்கோம்." என்று விளக்கி சொல்ல...


"நானும் வரவாப்பா? கொஞ்சம் ரிலாக்சா இருந்த மாதிரி இருக்கும்." மகன் கேட்டதும் பெற்றோர் இருவருக்கும் ஒரே ஆச்சிரியம்!


"இதுக்கு எல்லாமா பெர்மிசன் கேட்பது? போய்க் கிளம்பி வா சாணக்கியா. நாங்க வெயிட் பண்றோம்." தந்தை சொன்னதும் அவன் உற்சாகத்துடன் தனது அறையை நோக்கி சென்றான்.


"என்னங்க இது அதிசயமா இருக்கு?" ரமணிக்கு இன்னமும் ஆச்சிரியம் தீரவில்லை.


"சாணக்கியா கேட்கும் போதே நான் புரிஞ்சிக்கிட்டேன். அதான் பதில் சொன்னேன்." என்ற ரவிசங்கரும் மகனை பற்றித் தான் யோசித்தார்.


"சார்..." அப்போது அங்கு வந்து நின்ற வினீத் ஏதோ சொல்ல வந்து பின்பு தயங்கி தனது மனைவியைப் பார்ப்பதை புரிந்து கொண்ட ரவிசங்கர்,


"பார்ட்டி போயிட்டு வந்து பேசறேன் வினீத். நீ வீட்டுக்கு போறதா இருந்தால் போ. நான் வந்து உனக்கு ஃகால் பண்றேன்." என்று அவர் முடித்துக் கொள்ள...


"வீட்டுக்கு போகலை சார். எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. இங்கே தான் இருப்பேன்." என்றவன் அலுவலக அறையை நோக்கி சென்றான்.


பதினைந்து நிமிடங்களில் கிளம்பி வந்த மகனை கண்டு பெற்றோர் இமைக்க மறந்து பார்த்திருந்தனர். நீல நிற ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை நிற டீசர்ட், அதன் மீது கருப்பு நிற பிளேசர் என்று சாணக்கியா அட்டகாசமாய்த் தயாராகி வந்திருந்தான். ஏற்கெனவே அவன் அழகன் தான். ஆனால் இப்போது அவனது முகத்தில் தெரிந்த பொலிவு அவனை இன்னும் பேரழகனாய்க் காட்டியது. மகனை இப்படிக் கண்டு எத்தனை நாட்களாயிற்று! ரவிசங்கர் விழிகள் கலங்கி தான் போனது. ரமணிக்கு அப்படி ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை போலும். தன் மகன் அழகன் என்று எல்லா அன்னையும் மகிழ்ச்சி கொள்வது போல் அவரும் மகனை கண்டு மகிழ்ந்தார்.


மூவரும் இணைந்து நண்பரின் விருந்திற்குச் சென்றனர். தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து, பரிசளித்து விட்டு மூவரும் அங்கிருந்த மேசையில் வந்தமர்ந்தனர். திரைப்பட நட்சத்திரம், அதுவும் புகழின் உச்சியில் இருக்கும் நட்சத்திரம் என்றால் அங்கே ஆர்ப்பரிப்புக்கும், சந்தோசத்திற்கும் கேட்கவும் வேண்டுமா! இளம் பெண்கள் எல்லாம் சாணக்கியாவை மொய்த்துக் கொண்டது. சாணக்கியாவும் அவர்களிடம் முகம் திருப்பாது அவர்களிடம் நல்லவிதமாகப் பேசி, செல்பி எடுக்க நின்று என்று அத்தனை பொறுமையாக இருந்தான்.


ரவிசங்கர் மகனை ஆச்சிரியமாய்ப் பார்த்தபடி அமர்ந்து இருந்தார். வினீத் கூற வந்த விசயத்திற்கும், மகனது இந்த உற்சாகத்திற்கும் ஏதும் காரணம் இருக்குமோ! என்று அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. விருந்து முடிந்து போனதும் வினீத்திடம் பேச வேண்டும் என்று அவர் மனதில் குறித்துக் கொண்டார். ரமணியின் எண்ணமோ வேறாக இருந்தது. மகனை சுற்றியிருந்த பெண்களில் எந்தப் பெண் மகனுக்குப் பொருத்தமாக இருப்பாள் என்று அவரது தாயுள்ளம் மானசீகமாக மகனுக்கு ஜோடி பொருத்தம் பார்த்துக் கொண்டு இருந்தது. உயரம் குறைவு, நிறம் குறைவு என்று ஏதோ ஒரு குறை. இல்லையென்றால் உயரம் அதிகம், நிறமும் அதிகம் என்று பொருந்தா நிலை. இது எல்லாம் சரியாக இருந்தால் வயது இடித்தது. என்னடா இது, அழகு மகனுக்கு வந்த சோதனை என்று ரமணி சோகத்தில் அமர்ந்து இருந்தார்.


"ஹாய் ரவி..." என்றபடி அங்கே வந்து அமர்ந்தார் கௌதமன். உடன் அவரது மனைவி கல்பனா மற்றும் அவரது மகள் மதுமிதா இருவரும் வந்திருந்தனர்.


கௌதமனும் இவர்களைப் போன்றே பாரம்பரியமிக்க, வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். ரவிசங்கரை போன்றே தொழில் ஜாம்பவானும் கூட...


"வாங்க கௌதமன். எப்படியிருக்கீங்க?" ரவிசங்கர் புன்னகையுடன் கௌதமனை வரவேற்றார்.


"நல்லா இருக்கேன் ரவி." என்ற கௌதமன் தனது மனைவி, மகளை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அதே போன்று ரவிசங்கரும் தனது மனைவியை அறிமுகப்படுத்தி வைத்தார். மகனுக்குத் தான் அறிமுகம் தேவையில்லையே.


ரமணிக்கு முதல் பார்வையிலேயே மதுமிதாவை மிகவும் பிடித்துப் போனது. அவளது வயது, படிப்பு என்று எல்லாவற்றையும் கணக்கிட்டவருக்கு மிகுந்த திருப்தியே. மதுமிதாவுக்கு இருபத்தியேழு வயதாகிறது. படித்து முடித்துவிட்டு தந்தையுடன் இணைந்து அவர்களது நிறுவனங்களைப் பார்த்து கொள்கிறாள். புத்திசாலி, திறமைசாலி மற்றும் அழகானவள். ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது. ஆனால் மதுமிதா எல்லாவற்றையும் ஒருங்கே பெற்றிருந்தாள்.


"எங்க மது சமைச்சா பத்து தெருவுக்கு மணம் ஆளை தூக்கும்." கல்பனா மகளது புராணத்தைப் பெருமை பேச ஆரம்பித்து விட்டார். அவர்களது குடும்பத்திற்குச் சரிசமமான அந்தஸ்து உடைய குடும்பம் ரவிசங்கருடையது. அதைவிட ஒன்றுக்கு இரண்டு மகன்களை அல்லவா அவர் பெற்றிருக்கிறார். அதனால் கல்பனா குழைந்து, பணிந்து பேசினார்.


மதுமிதா எதுவும் பேசாது சாணக்கியாவை பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளது விழிகள் அவனை மேலிருந்து கீழாக அலசி ஆராய்ந்தது. மனதை கவரும்படியான அழகன் தான் அவன்... அதில் மாற்று கருத்து இல்லை. அது எல்லாம் அவளது கவனத்தில் பதியவில்லை. அழகான பெண்ணான அவளை அறிமுகப்படுத்திய போது சிநேக பாவனையுடன் புன்னகைத்த சாணக்கியா அதன் பிறகு அவளை நோக்கி சிறு ஆர்வ பார்வை கூடப் பார்க்கவில்லை. அது தான் அவளைப் பெரிதும் ஈர்த்தது. தன்னைக் கண்டதும் ஜொள்ளு வடிக்கும் ஆண்கள் மத்தியில் அவன் சற்று வித்தியாசமாக இருந்ததால் அவளது பார்வை முழுவதும் அவன் மீதே...


சாணக்கியா மதுமிதா பார்வையைச் சிறிதும் உணர்ந்தான் இல்லை. அவன் தனது ரசிகைகளுடன் செல்பி எடுத்துக் கொள்வதில் மும்முரமாக இருந்தான். அதைக் கண்ட மதுமிதா எழுந்து அவன் அருகே வந்தாள். அவன் அவளைக் கண்டு என்னவென்று பார்க்க...


"ஒன் செல்பி ப்ளீஸ்..." அவள் புன்னகையுடன் கேட்க... அவனும் மறுக்காது அவளுடன் இணைந்து நின்றான்.


மதுமிதா அவன் அருகில் நெருங்கி நின்று அவனது தோளை சுற்றி தனது இடக்கையைப் போட்டு, அவனது தலையோடு தனது தலையைச் சாய்த்து வலக்கை கொண்டு அலைப்பேசியில் புகைப்படம் எடுக்க முயல... அவனோ தீச்சுட்டார் போன்று விலகி நின்றான். சற்று முன்னர்க் கூட அவன் பெண்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டான் தான். ஆனால் இப்படி நெருங்கி இல்லை. அவன் நாகரீக இடைவெளி விட்டு அவர்களுடன் நின்றிருந்தான்.


"ஏன்?" மதுமிதா ஒற்றை வார்த்தையில் கேட்க...


"எனக்குப் பிடிக்கலை." என்றவனது முகம் இறுகியிருந்தது.


"ஹேய், நீங்க ஒரு ஆக்டர். நடிக்கும் போது இது மாதிரி, இல்லை இல்லை இதை விட நெருக்கமாய் நடிக்க வேண்டி இருக்குமே. இதுக்கு எல்லாமா கூச்சப்படுறது." அவள் ஆச்சிரியமாய்க் கேட்டாள்.


"அது நடிப்பு. என்னுடைய தொழில். ஆனா இது வேறு." என்றவனைக் கண்டு அவளுக்குச் சிரிப்பு வந்தது. இந்த நூற்றாண்டில் இப்படியொரு மனிதனா என்று...


"ஆர் யூ வெர்ஜின்?" என்று கேட்டவளின் பார்வை அவன் மீது வித்தியாசமாய்ப் படிந்தது.


"நான் வெர்ஜினா? இல்லையா?ன்னு எனக்கு வர போகும் மனைவிக்குத் தெரிந்தால் போதும்." என்று அவன் முகத்தில் அடித்தார் போன்று சொன்னான். அதைக் கேட்டு அவள் முகம் கருக்க அங்கிருந்து அகன்று விட்டாள்.


அதன் பிறகு சாணக்கியாவுக்கு விருந்து ருசிக்கவில்லை. அப்பாவுக்காக அவன் அங்கே பொறுமையுடன் இருந்தான். ரவிசங்கரும் மகனின் விருப்பமின்மையைக் கண்டு அவரும் சீக்கிரமே கிளம்பி விட்டார்.


வீட்டிற்கு வந்ததும் சாணக்கியா அவனது அறைக்குச் சென்றுவிட... ரவிசங்கர் நேரே அலுவலக அறைக்குச் சென்றார். வினீத் இன்னமும் அங்கே தான் இருந்தான். அவரைக் கண்டதும் அவன், "சார்..." என்றபடி பவ்யத்துடன் எழுந்து நின்றான்.


"உட்கார் வினீத். என்ன விசயம்?" ரவிசங்கர் நேரே விசயத்திற்கு வந்தார். மகனது மாற்றத்தை பற்றி அவனிடம் விசாரிக்காது அவனின் வாயிலிருந்து வார்த்தைகளைப் பெற நினைத்தார்.


"சார், இன்னைக்குச் சாணக்கியா சார் விராஜினி என்கிற பெண்ணோடு..." என்று ஆரம்பித்தவன் அனைத்தையும் கூறினான். நட்சத்திர விடுதியில் நடந்ததில் இருந்து ஆசிரமத்தில் நடந்தது வரை அனைத்தையும் அவன் சொல்லி முடித்தான்.


"யாரந்த பெண்?" ரவிசங்கர் கேட்கவும்... வினீத் விராஜினியை பற்றி எல்லாம் சொன்னான்.


"இதனால் எதுவும் பிரச்சினை வந்துவிடக் கூடாது சார். அதனால் தான் நான் உங்க கிட்ட சொல்லுறேன்." என்ற வினீத்தை கண்டு,


"எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். நீ வீட்டுக்கு கிளம்பு." என்றவர் நேரே மகனை காண சென்றார்.


அப்போது தான் சாணக்கியா குளித்து முடித்து உடை மாற்றி விட்டு வந்திருந்தான். அவன் தலைமுடியில் இருந்து ஈரம் சொட்டுவதைக் கண்டு, "இன்னும் சின்னப் பிள்ளையாடா நீ?" என்று ரவிசங்கர் அவனைக் கடிந்தபடி அங்கிருந்த துண்டால் அவனது தலையைத் துவட்டி விட்டார்.


"உங்களுக்கு நான் இன்னமும் சின்னப் பிள்ளை தான்ப்பா." தன்னைக் கண்டு சொன்ன மகனை பார்த்து அவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவர் வாய்விட்டு சிரித்து விட்டார்.


"என்ன விசயம்ப்பா?" மகன் தந்தையிடம் கேட்க...


"விசயம் இருந்தால் தான் நான் உன்னைப் பார்க்க வரணுமா?"


"அப்படின்னு இல்லை. ஆனா நீங்க இது மாதிரி திடுமென வந்தது இல்லையே." என்ற மகன் அருகில் அமர்ந்தவர்,


"விராஜினிங்கிற பொண்ணு கூட நீ நடிக்கப் போறதா செய்தி வந்தது. உண்மையா?" என்று கேட்க...


"அதுக்குள்ள வினீத் சொல்லிட்டானா?" சாணக்கியா புன்சிரிப்புடன் கேட்க...


"ஆமாம்... ஆனா விசயம் அதில்லை. அந்தப் பொண்ணு வயசு என்ன? உன் வயசு என்ன? இது சரிப்பட்டு வருமா?" அவர் கேட்டது நடிப்பிற்காக மட்டுமில்லை.


"நடிக்க வந்துட்டு வயசை பார்த்தால் எல்லாம் சரியா வருமா? இங்கே எழுபது வயசு ஹீரோ கூட ஜோடியா நடிக்க ஆஃபர் வந்தால்... அதுக்கும் தயாரா தான் இருக்கணும். அப்படிப் பார்த்தால் நான் இளைஞன் தான். எனக்கு ஜஸ்ட் தர்ட்டித்ரீ தான் ஆகுது."


மகன் ஏதோ முடிவு பண்ணி விட்டான் என்று அந்தத் தந்தைக்குப் புரிந்து போனது. ஆனால் இது சரி வருமா? என்று அவர் தீவிரமாய் யோசித்தார்.


"அவள் என்னைப் பார்த்து பூமர் அங்கிள்ன்னு சொல்லுகிறாள். பதினெட்டு வயசில் எவ்வளவு திமிர் பாருங்க. என்னைப் பார்த்து 'பொண்ணுன்னு நிரூபிக்க நான் ரெடி, நீங்க ரெடியா'ன்னு கேட்கிறாள். எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கணும். அவளைச் சும்மா விடச் சொல்றீங்களா?" அவன் டென்சனோடு கத்தினான்.


'என்ன இந்தப் பெண் இப்படிப் பேசி வைத்திருக்கிறாள்?' ரவிசங்கர் சற்று ஒவ்வாமையுடன் யோசித்தார்.


"என்னைப் பூமர், வயசானவன் அப்படி இப்படின்னு கேலி பேசி என்னை ஹர்ட் பண்ணி விட்டாள்ப்பா. அதுக்கு அவளுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டாம்." இன்னமும் அவனுக்குக் கோபம் போகவில்லை.


'ஐயோ, இந்தப் பெண் இப்படி வலிய வந்து மாட்டி கொண்டதே!' என்று ரவிசங்கரால் விராஜினியை நினைத்துப் பாவம் கொள்ள மட்டுமே முடிந்தது. அதேசமயம் மகனை கண்டு அவரால் கலங்க தான் முடிந்தது. அவனது நிலையில் அவன் செய்வது சரியே. அவர் ஒரு முடிவு எடுத்தவராய் மகனை பார்த்தார்.


"நீ என்ன பண்ணினாலும் நான் உனக்குத் துணை இருப்பேன் சாணக்கியா." அவர் மகனது தோளில் தட்டி கொடுத்தார். அதைக் கேட்டதும் அவனது முகத்தில் புன்னகை மீண்டது.


"தேங்க்யூ வெரி மச்ப்பா." அவன் அவரை அணைத்துக் கொண்டான்.


"ப்பா, சொன்ன சொல் மாறக் கூடாது. நான் என்ன செய்தாலும் நீங்க என் கூட இருப்பீங்களா?" அவன் கேட்கவும்,


"ஷ்யூர் சாணக்கியா." என்று அவர் புன்னகைக்க...



"அவள் பெண்ணா இல்லையான்னு நான் செக் பண்ணணும்ப்பா. பெண் அவள் சொல்லி நான் செய்யாமல் இருந்தால்... நான் எல்லாம் என்ன ஆண்மகன்?" என்றவனது முகத்தில் இருந்த புன்னகையின் பின்னாடி என்ன இருந்ததுவோ! அவன் இதைத் தந்தையிடம் சொன்னதற்காக வெட்கப்படவில்லை. ஏனெனில் அவனுக்குத் தந்தை தான் கடவுள், ஆசான், நண்பன் எல்லாமே!
 

ஶ்ரீகலா

Administrator
ரவிசங்கர் மகனை அதிர்வுடன் பார்த்தார். அவருக்கு மகனை பற்றி நன்கு தெரியும். என்ன தான் அவன் அவரிடம் 'நௌ ஐயம் ஓகேப்பா' என்றாலும் அவனது அடிமனதில் ஆறாத ரணம் இருப்பதை அவர் உணர்ந்தே இருந்தார். ஆனால் அந்த ரணம் அவனை இந்தளவிற்கு மாற்றி இருக்கும் என்று அவர் ஒருபோதும் நினைத்தது இல்லை. இவ்வளவு நாட்களும் மகன் எரிமலை போன்று உள்ளுக்குள் குமுறிக் கொண்டு இருந்திருக்கின்றான் என்பதை இன்று தான் அவர் அறிந்து கொண்டார். அவர் மகனை இரக்கத்துடன் பார்த்தார். இன்னும் அவருக்குத் தனது மகனை பற்றிச் சரியாகத் தெரியவில்லை.


எல்லோரும் பிறக்கும் போதே நல்லவர், கெட்டவர் என்று பிறப்பது இல்லை. கெட்டவர்கள் ஏதோ ஒரு சூழ்நிலையில் உருவாக்கப்படுகிறார்கள். இதோ அவரது மகனை போல்... அந்த ஒரு காரணத்திற்காகத் தான் அவரால் மகனை வெறுக்க முடியவில்லை. அவன் பட்ட வேதனையின் முன் எதுவுமே பெரிதல்ல அவருக்கு...


பெண் பாவம் பொல்லாதது... பழி பாவத்திற்கு அஞ்ச வேண்டும். இதெல்லாம் தான் பாதிக்கப்படாது இருக்கும் வரை தான் செல்லுபடியாகும். பாதிக்கப்பட்ட ஒருவனிடத்தில் இத்தகைய சட்ட திட்டங்கள் எதுவும் செல்லுபடியாகாது. பசி கொடுமையில் சாகும் நிலைக்குச் செல்லும் ஒருவன் வேறுவழியின்றி ரொட்டி துண்டை திருடினால்... அது சட்டப்படி குற்றம் தான். ஆனால் தர்மத்தின் படி அது நியாயமே. அது போல் தான் மகனின் நிலையும். மகன் செய்யப் போவது சட்டப்படி குற்றம். ஆனால் தர்மத்தின் படி அது நியாயம். நியாய, அநியாயங்கள் காதலிலும், போரிலும் பார்க்க கூடாது என்று சொல்வார்கள். அது போன்று சாணக்கியாவின் போராட்டத்திலும் நியாயம், அநியாயம் பார்க்கும் நிலையில் அவன் இல்லை. அவரது மகன் எதற்கும் துணிந்தவனாய் மாறி விட்டான். அதற்குத் துணை நிற்க வேண்டியது ஒரு தந்தையாய் அவரது கடமை.


"நிச்சயம் நீ அவளுக்குப் பாடம் புகட்டு. எது வந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன்." ரவிசங்கர் மகனுக்குத் தைரியம் அளித்தார். தந்தை சொன்னது கேட்டு அவனது முகம் மலர்ந்தது.


"இது தான் உன்னுடைய உற்சாகத்திற்குக் காரணமா?" ரவிசங்கர் அவனிடம் கேட்க...


"எஸ்ப்பா..." என்றவனது மகிழ்ச்சி அவனது குரலில் தெரிந்தது.


"இது உனக்கான நேரம். உன் மனசுக்கு பிடித்ததைச் செய். எனக்கு என் மகன் முதலில் இருந்த மாதிரி மீண்டு வரணும். அது தான் எனக்கு வேண்டும்."


"நிச்சயமாய்..." என்று தந்தைக்கு உறுதி அளித்தவன், "ஆனால் அம்மா?" என்று கேள்வியாகத் தந்தையைப் பார்த்தான்.


"உன் அம்மா காதுக்கு எதுவும் போகாது நான் பார்த்துக் கொள்கிறேன். அப்படியே அவளுக்குத் தெரிந்தாலும் அவளை என்ன சொல்லி சமாதானம் செய்யணும்ன்னு எனக்குத் தெரியும். நீ கவலைப்படாதே." ரவிசங்கர் மகனுக்கு ஆறுதல் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.


சாணக்கியா என்றும் இல்லாத திருநாளாய் படுத்தவுடன் உறங்கி விட்டான். இத்தனை நாளாய் அவனது மனதில் இருந்த தவிப்பு இன்றில்லை. அவனது மனதில் அத்தனை நிம்மதி, மகிழ்ச்சி நிறைந்திருந்தது.


ரவிசங்கர் அறைக்கு வந்ததும் ரமணி மதுமிதா பற்றி ஆசையுடன் பேச வர... "சாணக்கியா இன்னும் இரண்டு வருசம் டைம் கேட்டு இருக்கான்ல. அதுக்குப் பிறகு இந்தப் பேச்சை பேசலாம்." என்றவர் விழிகளை மூடி படுத்துக் கொண்டார்.


வேறுவழியில்லாது ரமணி மறுபுறம் படுத்து உறங்கிவிட... ரவிசங்கர் உறங்காது மகனை பற்றி நினைத்துக் கொண்டு இருந்தார். ஒருவன் கெட்டவனாக இருந்தாலும் அவன் மீது பெற்றவர்களுக்குப் பெற்ற பாசம் இருக்கத்தான் செய்யும். அவர்களுக்கே அப்படி என்றால்... நல்ல மகனை பெற்ற ரவிசங்கருக்கு சொல்லவா வேண்டும்! நல்லதோ? கெட்டதோ? மகனுக்கு உறுதுணையாய் இருக்க வேண்டும் என்ற நினைவில் மட்டும் அவர் உறுதியாய் இருந்தார்.


பாவ, புண்ணியங்கள் அவரவர் மனநிலைக்கு ஏற்ப மாறுபடும். ஒருவனுக்குத் தான் செய்பவை அனைத்தும் நல்லதாகத் தான் தெரியும். அதே இது மற்றவருக்கு அது கெடுதலாய் தெரியும். புலி மானை அடித்துப் புசித்து உண்பதை தவறு என்று சொல்ல முடியுமா? கொலை என்று புலி மீது பழி போட முடியுமா? புலி அப்படிச் செய்யவில்லை என்றால் அது பசியில் துடிதுடித்து இறந்துவிடும். இங்கு மானுக்கு இரக்கப்படுவதா? புலிக்கு இரக்கப்படுவதா? இரண்டுமே உயிர் தான். ஆனால் மானின் உயிர் தியாகத்தில் தான் புலி உயிர் வாழ வேண்டும் என்பது இயற்கையின் நியதி. இதைத் தவிர்க்க இயலாது. அதே போன்று தான் சாணக்கியாவின் கைப்பாவையாக விராஜினி மாற வேண்டும் என்பது தான் இயற்கையின் நியதியோ!


மகனை மீட்டெடுக்க விராஜினியை பலி கொடுக்க ரவிசங்கர் துணிந்தாரோ! அவருக்கு விராஜினி யாரோ! அவள் எக்கேடு கெட்டால் அவருக்கு என்ன! 'என் மகன், அவன் நலன் எனக்கு முக்கியம்!' இதுவே அவரது தாராக மந்திரமாக இருந்தது. அவர் ஒரு மிகச் சிறந்த தொழிலதிபர் அல்லவா! அதனால் தான் அவர் வாழ்க்கையையும் கொடுக்கல் வாங்கல் செய்யும் தொழிலாகவே பார்த்தார்.


*******************************


"யாரை கேட்டு முடிவு பண்ணினீங்க?" விராஜினி அன்னையிடம் கத்தி கொண்டிருந்தாள்.


"நீ தானே சொன்ன கிச்சுலு. நடிக்கப் போறேன்னு... அதான் எல்லோருக்கும் உன்னோட ஃபோட்டோசை அனுப்பி வச்சேன். தருண் திறமையான டைரக்டர். அவன் எடுத்த மூணு படமும் சூப்பர் டூப்பர் ஹிட். எல்லாமே பன் இந்தியா மூவிஸ். அதுவும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலாகி இருக்கிறது. அவன் படத்தில் நடிக்க எத்தனை பேர் ஏங்கி தவம் இருக்காங்க தெரியுமா? அப்படிப்பட்ட அவனே வலிய வந்து உன்னை நடிக்கச் சொல்லி கேட்கிறான். முடியாதுன்னு சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் நம்மைத் தான் பைத்தியக்காரின்னு நினைப்பாங்க." கனிஷ்கா மகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்துத் தருண் படத்தில் நடிப்பதற்கு அவளது சம்மதம் வேண்டி நின்றார்.


விராஜினியின் நிலையைப் பற்றிக் கனிஷ்காவிற்கு என்ன தெரியும்? அவளுக்குப் பிரச்சினை இயக்குநர் இல்லையே. அவளுக்குப் பிரச்சனை கதாநாயகன் சாணக்கியா தான். அவனைப் பார்த்தாலே அவள் உள்ளுக்குள் நடுநடுங்கி போகின்றாள். அப்படிப்பட்டவள் எப்படி அவனுடன் இணைந்து நடிப்பாள்? அதைவிட அவள் எப்படி அவனுடன் நெருக்கமாக நடிப்பாள்? கடவுளே! இதென்ன சோதனை! அவள் மனதிற்குள் கடவுளிடம் இறைஞ்சினாள்.


"கை நீட்டி அட்வான்ஸ் கூட வாங்கிட்டேன் கிச்சுலு. அம்மாவுக்காக இதை நீ ஒத்துக்கத் தான் வேணும்." கனிஷ்கா கெஞ்ச...


"ப்ச், எனக்குத் தலைவலிக்குது. கொஞ்ச நேரம் சும்மாயிருங்க." என்றவள் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.


"இதைக் குடி தலைவலி காணாது போகும்." கனிஷ்கா மகளிடம் மது கோப்பையைக் கொடுக்க...


விராஜினி அதை வாங்கியவள் அடுத்த நொடி தூக்கி எறிந்திருந்தாள். என்று சாணக்கியாவை பார்த்தாளோ அன்றிலிருந்து அவள் மதுவை தொடுவதை நிறுத்தியிருந்தாள்.


"எப்பவும் கிளாஸ் மட்டும் தான் உடையும். இன்னைக்கு வோட்காவும் சேர்ந்து வீணா போயிருச்சே." கனிஷ்கா புலம்பி கொண்டே தன்னுடையதை பருக ஆரம்பித்தார்.


விராஜினி வெகுநேரம் யோசித்தபடி அமர்ந்திருந்தாள். சாணக்கியாவை கண்ட பிறகு முன்பு போல் அவளது மனதில் அலைப்புறுதல் இல்லை, வேதனை இல்லை. ஆனால் இந்த நடுக்கம் மட்டும் இன்னமும் குறையவில்லை. ஒருவேளை அவனைக் காண காண இந்த நடுக்கமும் குறைந்து போகுமோ! இதை முன்னமே அவள் செய்திருக்க வேண்டுமோ! அவள் வெளியில் செல்லும் போது அவன் நடித்த போஸ்டர், கட்அவுட் என எதையுமே அவள் பார்க்க விரும்ப மாட்டாள். அவனைப் பற்றிய செய்திகளைக் கேட்க விரும்ப மாட்டாள். ஊரே புகழும் அவனின் படங்களைக் காண்பதற்கு அவளுக்கு மட்டும் விருப்பம் இருக்காது. அந்தளவிற்கு அவள் அவனிடம் இருந்து விலகியிருந்தாள். உண்மையைச் சொல்ல போனால்... அவள் உண்மையைச் சந்திக்கப் பயந்து நடுங்கினாள். அதன் விளைவு மது பழக்கம். எப்போதும் தன்னை மறந்த போதை என்று அவள் ஆளே மாறி போனாள். ஆனால் அதெல்லாம் ஒன்றுமே இல்லை, தேவையில்லாத ஒன்று என்று அவள் அவனைச் சந்தித்த இந்த இரண்டு நாட்களும் அவளுக்கு உணர்த்தி விட்டது.


இறுதியில் விராஜினி ஒரு முடிவு எடுத்தவளாய் அன்னையிடம், "சரி, சம்மதிக்கிறேன்." என்று சம்மதம் சொல்ல...


"ஐயம் சோ ஹேப்பி." கனிஷ்கா மகிழ்ச்சியோடு மகளை அணைத்துக் கொண்டார்.


விராஜினி தந்தையின் வீட்டிற்குக் கிளம்பி விட்டாள். என்றும் கனக்கும் மனதுடன் செல்பவள் இன்று லேசான மனதுடன் அங்கே சென்றாள். அவளுக்காகவே அவளது தந்தை ராகுல் வர்மா காத்திருந்தார். அவருக்குத் தெரியும், எந்த இரவாக இருந்தாலும் மகள் வீட்டிற்கு வந்துவிடுவாள் என்று...


"விராஜ், நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கன்னு தெரிஞ்சு தான் பண்ணுறியா?" ராகுல் வர்மா அவள் வந்ததுமே ஹை டெசிபலில் கத்த தொடங்கினார். நல்லவேளை சுசித்ரா படப்பிடிப்பிற்குச் சென்றிருந்தாள்.


"ஒரு நாளைக்கு எத்தனையோ வேலை பண்றேன். நீங்க எதைச் சொல்றீங்க?" அவள் காதை குடைந்து கொண்டே கேட்க...


"படத்தில் நடிக்கச் சம்மதித்து இருக்கியாமே." ராகுல் வர்மா கோபத்துடன் அவளைக் கண்டு கேட்க...


"ஆமாம், அதுக்கு என்ன?" அவள் அலட்சியமாகப் பதில் சொல்ல...


"அதுக்கு நான் சம்மதிக்கணும்."


"இப்போ நான் மேஜர்." அவள் திடமான குரலில் கூற...


"ஆனா ஊனான்னா இதைச் சொல்லி வாயடைச்சிரு. முடிவா சொல்கிறேன். நீ படத்தில் நடிக்கக் கூடாது." ராகுல் வர்மா உறுதியான குரலில் கூற...


விராஜினி தந்தை அருகே வந்தவள், "நான் உங்க கிட்ட கெஞ்சி கேட்கிறேன். சுசித்ராவை அனுப்பிருங்க. நீங்க, அம்மா, நான்னு நாம எல்லோரும் சந்தோசமா இருப்போம். நீங்க கணவன், மனைவியா தோல்வி அடைஞ்சு இருக்கலாம். ஆனா நீங்க ரெண்டு பேருமே எனக்கு நல்ல அப்பா, அம்மா தான். அதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்." என்று கண்ணீர் மல்க கூற...


ராகுல் வர்மா மகளை உணர்வில்லாது பார்த்திருந்தார். திரைப்படங்களில் நடித்து நடித்து அவரது உணர்வுகள் மரத்து போய்விட்டதோ! அப்படி இல்லை என்றால் அவர் அழும் மகளை அரவணைத்து ஆறுதல் கூறியிருப்பாரே! அந்தப் பிஞ்சு மனதின் வேதனையை ஒரு தந்தையாய் அவர் புரிந்து கொள்ளவில்லையே!


"என்னைப் பார்த்தால் உங்களுக்குப் பாவமா இல்லையா?" அவள் பரிதாபமாகத் தந்தையிடம் கேட்க...


"என்ன ஜோக் பண்ணுறியா? உன்னைப் பார்த்தால் பாவமா இருக்கா? அரண்மனை மாதிரி வீடு, வீடு முழுவதும் சென்ட்ரல் ஏசி, கூப்பிட்ட குரலுக்கு வேலையாட்கள், போக வர வெளிநாட்டுக் கார், தினமும் உன் கைச்செலவுக்கே ஆயிரக்கணக்கில் அள்ளி கொடுக்கின்றேன். இது எல்லாம் போக, நினைச்ச நேரம் நீ வெளிநாடுகளுக்கு ட்ரிப் போகிற. இப்படி எல்லாச் சுகத்தையும் அனுபவிக்கிற நீ பாவமா? குட் ஜோக்." ராகுல் வர்மா விழுந்து விழுந்து சிரித்தார்.


விராஜினி அடிப்பட்ட பாவனையுடன் விழிகளில் வலியை தேக்கி தந்தையைப் பார்த்தாள். சிறு குழந்தையாய் கெஞ்சும் மகளைக் கண்டு கூடவா அவருக்கு இரக்கம் வரவில்லை. அந்தப் பிஞ்சு மனம் வலியில் துடித்தது. முதல் முறை என்றால் தானே வலி உயிரோடு கொல்லும். இது பழகி போன ஒன்று... அவள் வலித்த தனது இதயத்தைக் கையைக் கொண்டு தடவி கொண்டாள். சில நொடிகளில் தனது மனதினை திடப்படுத்திக் கொண்டவள்,


"இது தான் உங்க முடிவுன்னா... என்னோட முடிவும் இதே தான். மாறாது." என்றவள் தனது அறையை நோக்கி சென்றாள்.


"விராஜ்..." ராகுல் வர்மா கோபத்தில் பல்லை கடிக்க...


"நீங்க தப்பு மேல் தப்பு பண்றீங்க. இது ரொம்பப் பாவம். ஐ ஹேட் யூ." அவள் தந்தையைத் திரும்பி பார்த்து கத்தி விட்டு சென்றாள்.


ஒரு காலத்தில் திரையுலகத்தை ஆட்டுவித்த ராகுல் வர்மா இன்று மகளை அடக்கவும் வழி தெரியாது விழித்தார்.


விராஜினி தனது அறைக்கு வந்தவள் அலமாரியில் இருந்த அலைப்பேசியை உயிர்ப்பித்து வழக்கம் போல் சாணக்கியாவுக்குத் திகட்ட திகட்ட காதலை கொட்டி குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு மீண்டும் அலைப்பேசியை அணைத்து அதன் இடத்தில் வைத்தாள். பிறகு படுக்கையில் படுத்தவளை நித்திராதேவி வந்து அரவணைத்து கொண்டாள்.


மனதில் அமைதி தோன்றுவது எப்போது? மனதில் சிறு உறுத்தல்கள் கூட இல்லாத போது தான். விராஜினி மனதில் இருந்த உறுத்தல்கள் அனைத்தும் சற்றுக் குறைந்திருந்தது. அதனால் அவள் நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்தாள்.


இருவருக்குமே இன்று தான் நிம்மதியான உறக்கம். இருவருக்குமே மற்றவரை சந்தித்ததால் வந்த மகிழ்ச்சியில் விளைந்ததே இந்த நிம்மதியான உறக்கம். ஆனால் இருவரது உணர்வுகளும் பயணிக்கும் பாதை தான் வேறு வேறு. அவன் பழிவெறியில்... அவள் அவனது நலனில்...


இங்கு இருவருக்கும் இடையில் ஆயிரம் முரண்கள். இந்த ஆயிரம் முரண்களைத் தாண்டி அவர்கள் ஒருவரை ஒருவர் ஈர்ப்பார்களா! காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


தொடரும்...!!!
 
Status
Not open for further replies.
Top