All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கண்ணில் கனவாக நீ!!!’ கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

‘அரக்கனே! என் அரசனே!!’ கதையை தொடர்ந்து கொடுக்க முடியாதபடி விடுமுறை எடுக்க வேண்டியுள்ளது. அதனால் இந்த கதையை மே மாதத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன். இப்போது வேறு ஒரு கதையுடன் வந்துவிட்டேன். இந்தக் கதையைப் பற்றி என்ன சொல்ல? எப்போதும் போல் சாதாரணக் காதல் கதைதான். ஆனால் என்னுடைய பாணியில் சற்று வித்தியாசமாய்!! நாளை முதல் நம் வழக்கமான நேரத்தில் சந்திக்கலாம். என்னுடைய கதைகளைத் தொடர்ந்து படித்து ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தும் அனைத்து தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

அன்புடன்,
ஶ்ரீகலா :)

ஶ்ரீகலாவின் ‘கண்ணில் கனவாக நீ!!!’

அத்தியாயம் : 1 (a)

"கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்"

பூஜையறையில் அமர்ந்திருந்த உதயரேகா தனது இனிய குரலால் பெருமாளுக்குப் பள்ளியெழுச்சி பாடி கொண்டிருந்தாள். கண்ணாடியாலும், வண்ண வண்ண மின்விளக்குகளாலும் சொர்க்கலோகம் போல் ஒளிர்ந்த அந்தப் பணக்கார வீட்டுப் பூஜையறையில் கடவுளும் அநாதையாக மாறிப் போனார். வீட்டு உறுப்பினர்களால் கேட்பாரற்று கிடந்த கடவுளுக்கு மறுவாழ்வு இந்த உதயரேகா மூலம் கிடைத்து இருக்கிறது. அவள் இந்த வீட்டிற்கு வேலைக்கு வந்து பத்து வருடங்களாகிறது. இந்தப் பத்து வருடங்களாகத் தான் கடவுளுக்குக் கூடச் சிறிது அன்பு கிடைக்கிறது அவள் மூலமாக...

'கிணிங் கிணிங்' மணியோசையுடன் கடவுளுக்குத் தீபாராதனையைக் காட்டிய உதயரேகா பூஜையை முடித்து விட்டு நெற்றியில் குங்குமம், திருநீறு இட்டபடி வெளியில் வந்தாள்.

"காலையிலேயே ஆரம்பித்து விட்டாயா? எனக்கு ஒரே தலைவலியா இருக்கு. போய் எலுமிச்சை பழ ஜூஸ் எடுத்துட்டு வா." அந்த வீட்டின் எஜமானி மந்தாகினி அவளிடம் கூறிவிட்டு தனது தலையைப் பிடித்துக் கொண்டார். நேற்று அவர் கலந்து கொண்ட கேளிக்கை விருந்தில் அருந்திய மது அதன் வேலையைக் காட்டியிருந்தது.

உதயரேகா அவர் சொன்னது போல் எலுமிச்சை பழச்சாறை கொடுத்துவிட்டு நேரே சமையலறைக்குச் சென்றாள். அங்கு அவளது பாட்டி பட்டம்மாள் காலை உணவுக்குத் தேவையானதை தயார் செய்து கொண்டிருந்தார்.

"பாட்டி, நான் தான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்னு சொன்னேன்ல. நீங்க எதுக்குக் கஷ்டப்பட்டு வேலை பார்த்துக்கிட்டு இருக்கீங்க. நீங்க உட்காருங்க." என்றவள் அவரை வலுக்கட்டாயமாக அமர வைத்து விட்டு தனது வேலையைப் பார்க்கலானாள்.

பட்டம்மாள் தனது பேத்தியை பார்த்தபடி அமர்ந்திருந்தவரின் விழிகள் இரண்டும் பனித்தது. உதயரேகாவுக்கு இருபத்தியேழு வயதாகி விட்டது. இன்னமும் திருமணம் நடைபெறவில்லை. காலாகாலத்தில் பேத்தியை ஒருவன் கரங்களில் பிடித்துக் கொடுத்து விட்டால் அவர் நிம்மதியாக மரணத்தை ஏற்றுக் கொள்வார். ஆனால் பேத்திக்கு ஒரு வரனும் தகையாது தள்ளி கொண்டே போகிறது.

ஒவ்வொரு வரனும் ஏதாவது ஒரு குறையைக் கூறி அவளைத் தட்டி கழிக்கின்றனர். வரதட்சணை போதாது, பெண் மாநிறமாக இருக்கிறாள், பெண் படிக்கவில்லை, வயது அதிகம்... இப்படி ஏதாவது ஒரு குறையைக் கூறி அவளை நிராகரித்து விடுகின்றனர். உதயரேகா அதை எல்லாம் கண்டு கொள்வது இல்லை. ஆனால் பட்டமாளுக்குத் தான் மனம் பொறுக்கவில்லை. தனது இறுதி மூச்சு முடிவதற்குள் பேத்திக்கு ஒரு நல்லது செய்ய வேண்டும் என்று துடியாய்த் துடிக்கின்றார்.

பட்டம்மாள் தனக்குள் உழன்று கொண்டிருக்கும் போதே உதயரேகா காலை உணவுகளைச் சமைத்து உணவு மேசையில் தயாராக எடுத்து வைத்து விட்டாள். பெரியவர்களுக்கு இட்லி, தோசை... இளம் வயதினருக்கு பூரி, சப்பாத்தி... குட்டீஸ்களுக்கு நூடில்ஸ்... எல்லா உணவு வகைகளும் அதற்குரிய வெஞ்சனங்களுடன் அமர்க்களமாகத் தயாராகி உணவு மேசையை அலங்கரித்தது. உதயரேகா உணவை எடுத்து வைத்த ஐந்தாவது நிமிடங்களில் அனைத்து உறுப்பினர்களும் அங்கே கூடி விட்டனர்.

வீட்டின் தலைவர் தாமோதரன், அவரது மனைவி மந்தாகினி இருவரும் உணவு மேசையில் நடுநாயகமாக அமர்ந்திருக்க... அவர்களது வலப்பக்கம் அவர்களது மூத்த மகள் மஞ்சரி, அவளது கணவன் செல்வம், மகன் கரண் அமர்ந்து இருந்தனர். இடப்பக்கம் மூன்றாவது மகள் அமலா, அவளது கணவன் சந்துரு, மகள் ரக்சி அமர்ந்து இருந்தனர். இவர்களுக்கு எதிரே இவர்களுக்கு இடையில் இரண்டாவதாகப் பிறந்த மகன் ஆகாஷும், அவனது மனைவி வித்யாவும் அமர்ந்து இருந்தனர். இவர்களுக்கு இன்னமும் குழந்தை இல்லை. வித்யாவும் இவர்களைப் போன்றே வசதியான வீட்டுப் பெண். இவர்களைப் போன்றே மேல்தட்டுக் கலாச்சாரத்தை அப்படியே பின்பற்றுபவள் பிரதிபலிப்பவள்.

எல்லோரும் உணவினை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்க... வித்யா மட்டும் நாசுக்காக ரொட்டி துண்டை எடுத்து அதில் ஜாமை தடவி கொண்டிருந்தாள். கேட்டால், டயட் என்பாள்.

"சர்வா எப்போ வருகிறான்?" மஞ்சரி அன்னையிடம் ஆர்வமாகக் கேட்டாள்.

"வர்றதா சொன்னான். ஆனால் எப்போன்னு தெரியலை." மந்தாகினி சொல்லி கொண்டே உதயரேகாவை கண்டு, "மசமசன்னு பராக்கு பார்த்துட்டு நிற்காதே. யார் தட்டில் என்ன குறையுதுன்னு பார்த்து பரிமாறு. அப்படியே எனக்குச் சாம்பாரை ஊத்து." என்று அதிகாரம் பண்ண... உதயரேகா சாம்பாரை கரண்டியில் எடுத்து அவரது தட்டில் ஊற்ற போக... அதைத் தடுத்தவர், "ஹேய், உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா? வெறும் தட்டில் யாராவது சாம்பாரை ஊத்துவாங்களா? ஒரு தோசையை எடுத்து வையி." என்று சொல்ல... உதயரேகா அவர் சொன்னதைச் செய்தாள்.

"என்ன விசயம் மஞ்சரி?" என்று அவர் மகளிடம் கேட்க...

"என் நாத்தனார் நிலாவுக்குப் சர்வாவை கேட்கலாம்ன்னு என் மாமியார் பிரியப்படுறாங்க." மஞ்சரி தனது எண்ணத்தை மாமியாரின் எண்ணமாகக் கூற...

"ஆமா அத்தை... சர்வாவுக்கு நிலா தான் பொருத்தமாக இருப்பாள்." செல்வம் முந்தி கொண்டு சொன்னான்.

"ம்மா, சர்வாவுக்கு என்னோட நாத்தனார் கவிதாவை தான் முடிக்கணும். அப்போ தான் என் மாமியார் வீட்டில் எனக்கு மரியாதை இருக்கும்." அமலா அக்காவை போன்று சுற்றி வளைத்து கூறாது நேரிடையாகத் தனது எண்ணத்தை அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னாள்.

"அத்தை, என்னோட தங்கை ரஞ்சனி இப்போ தான் ஃபாரின்ல போய்ப் படிப்பு முடிச்சிட்டு வந்திருக்கிறாள். சர்வாவுக்கு ரஞ்சனி தான் பொருத்தமான ஜோடி." வித்யா தனது பங்கிற்குப் பேசினாள். ஒரே வீட்டில் அக்கா, தங்கை இருந்தால் சாம்ராஜ்ஜியம் மொத்தமும் அவர்களது கைகளுக்கு வந்துவிடும் அல்லவா! அந்த யோசனை அவளுக்கு...

"சர்வா கிட்ட பேசுவோம். அவனுக்கு யாரை பிடிக்கிறதுன்னு பார்க்கலாம். ஒருவேளை அவனுக்கு யாரையும் பிடிக்கவில்லை என்றால்... மற்றவர்கள் அமைதியாக ஒதுங்கி கொள்ள வேண்டும். என்ன ஓகேவா?" தாமோதரன் தனது மனதில் உள்ளதை சொன்னார். ஏனெனில் அவருக்குத் தனது மகனை பற்றி நன்கு தெரியும். அவன் காட்டாறு போன்றவன்... அவனைக் கட்டுப்படுத்த யாராலும் முடியாது.

"ஓகேப்பா... நீங்க சொன்னதை ஏத்துக்கிறோம். எதுவாக இருந்தாலும் சர்வா முடிவுக்குக் கட்டுப்படுகிறோம்." என்றனர் எல்லோரும் ஒருமித்த குரலில்...


***************************
IMG_9397.jpeg
IMG_9396.jpeg
 

ஶ்ரீகலா

Administrator
அமேசான் கேடிபியில் ‘ராதைக்கேற்ற ராவணன்’ கதை நாளை மதியம் 1.30 முதல் ஞாயிறு மதியம் 1.29 வரை இலசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள் பிரெண்ட்ஸ். நன்றி 🙏

ராதைக்கேற்ற ராவணன் :
India Link :

US Link :

My Author Page in Amazon Kindle :

 
Status
Not open for further replies.
Top