All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ சிறுகதைத் தொகுப்பு” - கதைத் திரி

Status
Not open for further replies.

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம்.
இத்திரியில் எனது சிறுகதைகள் பதியப்படும்.படித்துப் பார்த்து உங்களது கருத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி
ஸ்ரீஷா 😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை எண் :2


மனமே மருந்து


18145


மனதிலிருந்த பாரம் தலைக்கேறியதில் வலி பின்னியெடுக்க,தலையைத் தாங்கியபடியே வந்தவள்,கையிலிருந்த தலைகவசத்தை வீட்டின் வரவேற்பறையில் வைத்து விட்டு சோர்ந்த நடையுடனே வீட்டிற்குள் வந்து சேர்ந்தாள்.



மகளின் வரவில் இயல்பு பேச்சில் அவளது அன்னை உஷா,
“இன்னைக்கு வேலை எப்படி டி போச்சு?”



என்றவர் மகளின் சோர்வையும்,குழப்பமான மனநிலையும் கண்டுக்கொண்டதில்,சற்று நேரம் விடாது பேச்சுக் கொடுத்தார்.வெகு நேரம் தலைவலியோடு இயல்பாகப் பேசமுடியாது தவித்த அபி,
“அம்மா பிளீஸ் என்னைக் கொஞ்சம் தனியா விடு!”என்ற பதிலில், அவள் சமீபகாலத்தில் பள்ளியின் மேல் சொல்லும் குற்றம் உணர்ந்து ,
“ இப்போ என்னாச்சு அபி ! பேசாம வேற ஸ்கூல்ல வேலைக்குப் போறியா ?”

என்ற வார்த்தையில் முகத்தைக் கோபத்திலிருந்து அழுவது போல் வைத்தவள், உதடு பிதுக்கி சிறுபிள்ளை தோரணையில்,



“அம்மா !ஸ்கூல் பிடிக்கலைனு மாற நான் என்ன ஸ்டூடண்டா. டீச்சர் மா, நானே நினைச்சாலும் இன்னும் ஒரு வருஷத்துக்கு எங்கேயும் போக முடியாது.பாண்ட் போற்றுக்காங்க, மறந்துட்டியா ?”

என்றவள் உள்ளத்து சுமையைச் சுயமாய் இறக்கத் தெரியாது திணற,சிறு விஷயத்துக்குக் கூட இத்தனை காயப்படும் மகளை எண்ணி வருந்தினார் உஷா.
கூடவே, அவ்விஷயத்திலிருந்து அவளைத் திசைதிருப்ப எண்ணியவர்,மற்றவர் மீதிருக்கும் கோபத்தைத் தன் மீது திருப்பினால்,தன்னைத் திட்டியாது மற்ற சிந்தனைகளிலிருந்து விடைபெறுவாள் என்று சிந்தித்து,தானும் உரத்த குரலில் பேசியிருந்தார்.

“சும்மா வீச்சு வீச்சுனு பேசாத அபி !யார் பேசலைனா என்ன?வேலைக்குத் தான போற,போன இடத்தில வேலையை மட்டும் பார்த்திட்டு வர வேண்டியது தான.‘என்னைய யாரும் சேர்த்துகல ,நான் தனியா இருக்கேன்’-னு அழுதா என்ன அர்த்தம்.இப்படியே கத்திகிட்டு அழுது புலம்பிட்டே இருந்தா,நாளைக்கு இன்னொரு வீட்டுல போய் எப்படி வாழ போற .இதுக்குத் தான் இந்த வேலையெல்லாம் வேண்டாம் கட்டிக் கொடுத்து அனுப்புங்கனு சொன்னா உங்க அப்பா கேட்டாரா !”

என்று துவங்கியவர் புகுந்த வீட்டில் வாழ்வது பற்றி விடாது பேச,அபியோ அவளிருந்த உள்ளத்துக் குமுறலில், அன்னையிடமும் போராடி தன்னை விளக்க முடியாது அவரது பேச்சை இடைநிறுத்தியவள்,


“தலைவலிக்குது மா.நான் கொஞ்ச நேரம் தூங்குறேன் ”

என்றபடி அவளது அறை நோக்கி நடக்க,மகளது பின்னே சென்ற உஷா,அவளது கரத்தில் பாலும்,தலைவலி மாத்திரையும் திணித்து,அவள் மறுத்து சொல்லும் முன் அங்கிருந்து நகர்ந்திருந்தார்.



மகள் தூங்கி எழுந்தால் சரியாகி விடுவாள் என்ற எண்ணத்தில் உஷா இயல்பாக இருக்க,அவளோ வேறு விதமாகச் செயல்பட்டிருந்தாள்.

கடிகார முற்களின் தொடர் ஓட்டத்தில் மணி ஐந்து,ஆறு என ஏழை தொட்டும் அபி எழுந்து வரவேயில்லை.மகளின் தலைவலி பொருட்டு,வெகு நேரம் அவளை எழுப்பாத உஷா, இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாதென்பது போல் வேக மூச்சுகள் வாங்கியபடியே மகளின் திறந்திருந்த அறைக்குள் சென்றவர்,அங்கு கண்ட காட்சியில் பதறி அலறியே விட்டார்.

சரியாக அந்நேரம் அவரது கணவர் சேகரும் இல்லம் திரும்பியிருக்க,மகளின் நிலைக்கண்டு பரிதவித்தவர்,கொண்ட பதட்டத்தில் யாருக்கு அழைத்து என்ன சொல்வதெனத் தெரியாது தவித்து,முதலில் தங்களது குடும்ப மருத்துவருக்கு அழைத்துத் தகவல் தந்திருந்தார்.அவரோ தனது வீடு பக்கமென்பதால் ,தான் நேரடியாக வீட்டிற்கே வந்து முதலுதவி செய்தபின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்று விட்டார்.

உஷாவின் கண்களிலோ விடாது நீர் வழிந்தது.மூன்றுமணி நேரத்திற்கு முன் தன்னிடம் பேசி சென்ற மகள்,கையை வெட்டிக் கொள்வாளென அவர் என்ன கனவா கண்டார்.அதுவும் மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில்,இரத்தம் வடிந்த காட்சியைக் காண காண எந்தத் தாயால் தான் நிதானமாக இருக்க முடியும்.

நிமிட நேரத்தில் மருத்துவர் வந்திட,அபியின் கையினை ஆராய்ந்தவர் முதலில் கத்தியால் கீறப்பட்ட இடத்தைச் சுத்தம் செய்ததில்,காயம் ஆழமில்லை மேம்போக்காக வெட்டப்பட்டது என்பதைக் கண்டுகொண்டார். மேலும்,மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தேவையில்லை என்றவர் அபியின் நிலைமையை விளக்கினார்.



“அபி சாகனும்னு நினைச்சு வெட்டுன மாதிரி தெரியலை.அவளுக்கு வலி வேணும்னு செஞ்ச மாதிரி இருக்கு.இப்போதைக்கு அவங்க உடலை விட மனசு ரொம்ப முக்கியம்.சோ,அவங்களைக் கேள்வி ஏதும் கேட்டுத் தொந்திரவு பண்ணாதீங்க. முடிஞ்சுவரை நிறைய அன்பு காட்டுங்க”

என்ற மருத்துவர்,அவளது காயத்திற்கு மருந்து வைத்துக் கட்டுப்போட்டதோடு சில வலிநிவாரண மருந்து எழுதி தந்து விடைபெற்றிருந்தார்.

மகளுக்கு ஒன்றுமில்லை என்பது ஒரு பக்கம் நிம்மதியென்றாலும்,மற்றொரு பக்கம் உஷாவால் தான் யூகித்த காரணத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.மருத்துவரின் அறிவரையின் பெயரில் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதி காத்தார்.



மெதுமெதுவாகத் தெளிவு பெற்ற அபி,மருத்தின் வீரியம் குறைந்து அடுத்த நாள் காலையே கண் விழிக்க,இயல்பாக இருக்கப் பாடுபட்ட உஷா,மகளுக்குப் பணிவிடை செய்து தன்னையே நிதானித்துக் கொண்டிருந்தார்.அபிக்கு இப்பொழுதும் கஷ்டமாகத் தானிருந்தது,தன்னால் தன் அன்னை - தந்தை இத்தனை கஷ்டப்படுகிறார்கள் என்று வருந்தியவள் முகத்தைத் தூக்கியபடி அமர்ந்திருக்க, அப்பொழுது அவளறைக்கு வந்த அவளது தந்தை சேகர்,'அப்படி உனக்கு என்ன நாங்க குறை வச்சிட்டோம் 'என்ற ஆதங்கத்தை வாயோடு அடக்கி, இறுகிய குரலிலே,“நாளைக்குச் சாயுங்காலம் மனநல மருத்துவரைப் பார்க்க போறோம் அபி.யாரோனு நினைச்சு வருத்தப்பட வேணாம்,உங்க அம்மாவோட ப்ரெண்ட் ஆண்டிக்கிட்ட தான் போறோம்.இது ஒன்னுலையாது எங்களைக் கஷ்டப்படுத்தாம
சொல்றதை கேளு !”

என்றவர் விலகி சென்றிட,அடுத்த நாள் மாலை வரை உஷா தான் மகளைக் கண்ணில் வைத்து தாங்கினார்.

வெறுப்போ,கோபமோ,பரிதவிப்போ என எதையும் வகைப்படுத்திச் சொல்ல முடியாத உணர்வில்,அதை வெளிப்படுத்த முடியா சூழலில் அமைதியாகி போன அபி,அடுத்தநாள் அமைதியாக அந்த மனநல மருத்துவர் முன் அமர்ந்திருந்தாள்.
தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி அபியின் அன்னை-தந்தையை வெளியே அனுப்பிய மருத்துவர்,அவளது மனதை படிக்க முயன்று கொண்டிருந்தார்.

முதல் அரைமணி நேரத்தில் அவளிடம் பேச்சுக் கொடுத்தே அபியின் மனதை ஓரளவு கணித்தவர்,இது உடனடியாகச் சரிப்பண்ண கூடிய விஷயமென முடிவெடுத்து,சற்று இலகு குரலிலே பேச்சைத் தொடர்ந்தார்.

“சொல்லுங்க அபி.எனக்கு தெரிஞ்சு இப்போவரை அபி பெர்பெக்ட்லி ஃபைன் தான்.ஆனா,ஏன் இப்படி ! உங்களுக்கு உயிர் வாழ ஆசையிருக்கும் போது,ஏன் உங்களுக்கு நீங்களே வலி தந்துகிறீங்க?”

என்று சாந்தமாக அவர் கேட்டிட,ஆசிரியரான அபியோ அவரது கேள்வியின் ஆழத்தைப் புரிந்து கொண்டு உடனடியாகப் பதிலளித்திருந்தாள்.

“ நான் *** ஸ்கூல்ல டீச்சரா இருக்கேன்.எனக்கு இந்த வேலை ரொம்பப் பிடிச்சுதான் சேர்ந்தேன்.
ஆனா,அங்க..அங்க..,யாரும் என்கூடப் பேசுறதில்லை.என்னைய யாரும் கூடச் சேர்த்திக்க மாட்டிகாங்க.இன்னும் சொல்ல போனா ஒருநாளைக்கு ஐஞ்சு தடவையாது என்னைக் குத்திக் காட்டி பேசிடுவாங்க.என்னால தாங்கிக்கவே முடியலை.அதான் இப்படி..,இப்படி கையைக் கீறிகிட்டேன்”


என்ற பதிலில் அந்த மருத்துவரே சற்று ஆடித்தான் போனார்.
முதலில், 'இதெல்லாம் ஒரு காரணமா! ' என்று எண்ணியவர்,' இந்த அளவு பாதித்தது என்றால் எத்தனை மன அழுத்தம் வந்திருக்கும் 'என்று தெரிவாக அவளில் கூர்ந்தவர்,அதைப் பற்றித் தன்மையாகவே விசாரிக்க,முதலில் சற்றுத் தயங்கியவள்,பின் ஒரே மூச்சில் மனதை அடைத்த விஷயத்தைச் சொல்ல துவங்கியிருந்தாள்.

“எனக்கே புரியுது.அதுவும் இவளோ வளர்ந்த பின்னாடி என்கூட யாரும் பேசல,நான் தனியா இருக்கேன்னு காரணம் சொல்றது சின்னபிள்ளைத்தனமா தான் இருக்கு.
ஆனா,என்னோட சூழ்நிலை அப்படிதான்.
ஒரே இடத்தில் வேலை பார்க்கிறோம்,அதுலையும் என்னைத் தவிர மத்த எல்லாரும் சேர்ந்து போறதையும் வர்றதையும் எப்படி நான் இயல்பா ஏத்துக்க முடியும்.ஒரு மாதிரி மைண்ட் அடச்ச மாதிரி ஆகிடும்ல.!
சில நேரத்துல ஜாடை வேற பேசுவாங்க,தனிச்சுத் தெரியிறது வேற ! தனிமைப்படுத்திறது வேற தான ! இதனாலே என்னால வகுப்பில சரியா செயல்பட முடியலை,அதுவும் ஒரு குற்றவுணர்வு.எனக்கு இந்த வேலை அவளோ பிடிக்கும்.இருந்தும் என்னைத் தொடருற இந்த வெறுமை,என்னை ரொம்ப அழுத்துது.
இப்போ நான் சொல்றதை கேட்க வேணும்னா உங்களுக்குச் சுலபமா இருக்கும்.ஆனா,இது..இது..எப்படி சொல்ல..,
அந்தச் சூழலில் இருக்கும் போது அப்படியே மூச்சு முட்டுது.அதான் வழி தெரியாத காட்டுல இருந்து தப்பிக்க, எனக்கு நானே தண்டனை தந்துகிட்டேன்.இப்போ காட்டிலிருந்து தப்பிக்க வழி
தெரியலைனாலும் ,இந்த வலிக்கு அந்த வலி பரவாயில்லனு இருந்திடுவேன் தான !'

என்றவள் நிதானிக்க,மருத்துவருக்குத் தான் மூச்சு வாங்கியது.

சமூகத்தில் ஒருவர் மட்டும் ஒதுக்கபடுவதோ,குத்திகாட்டி பேசுவதோ மிக இயல்பாக அனைத்து துறையிலும் நடந்து வருவது தான்.ஆனால்,இதற்காகக் கையை அறுத்துக் கொள்ள வேண்டுமா ? அதன்பின் இப்படியொரு காரணம் வேறா.இந்த காரணத்திற்காகத் தன்னையே துன்புறுத்தி கொள்கிறார்களா ?
மிக விரைவில்,இந்தகாலக் குழந்தைகள் தாண்டி அனைத்து வயதினருக்கும் மனநலம் பேணுதல் எத்தனை முக்கியமாகப் போகிறது என்ற சிந்தனையை மனதோடு கொண்டவர்,வெளியே இயல்பாக அவளிடம் பேசியிருந்தார்.

“அபி..உங்களுக்கே தெரியும்னு சொல்றீங்க.அப்புறம் ஏன் இப்படி ! என்ன காரணத்திற்காக அவங்க உங்களை ஒதுக்குறாங்க ,எதும் சண்டையா ?”

என்ற கேள்வியில் பளிச்செனச் சிரித்த அபி,
“சண்டையா ?அவங்கயெல்லாம் வெளியிருந்து பார்க்க பக்கா டிசென்ட் ஆளுங்க.அங்க ஒரு மிஸ் இருக்காங்க.அவங்க ஒரு டியூஷன் சென்டர் வச்சிருக்காங்க.அதுல மத்த ஸ்டாஃப்ஸ் எல்லாம் வேலை பார்க்கிறாங்க.என்னையும் வேலைக்குக் கூப்பிட்டாங்க நான் வரலைன்னு சொல்லிட்டேன்.பிடிச்சு பண்ற விஷயமென்பதால எனக்கு டீச்சிங் நல்லாவே வரும்.அதனால என்னை விடாம கூப்பிட்டாங்க,நான் மறுத்தேன்.
அப்புறம்,ஒருநாள் என்னோட ஸ்டூடன்ட்ஸ் வேல்யூ எஜுகேஷன் (Value education) வகுப்புல,
‘டியூஷன் போனா தான் எங்களால நல்லா படிக்க முடியுமா மிஸ் ?'-னு கேட்டாங்க.
நான் அப்படியெதும் இல்லைனு சொல்லி, படிப்பதற்கான எளிய வழிமுறைகள் ,மனசை நிலைப்படுத்துறதுனு நிறையச் சொல்லி கொடுத்தேன்.இதெல்லாம் அவங்களுக்குத் தெரிஞ்சு,அவங்களுக்கு என்னைய பிடிக்காம போயிடுச்சு ”

என்றவள் வார்த்தைகளில்,அவளது குணத்தில் பிரமித்துத் தான் போனார் அந்த மருத்துவர்,இருந்தும் ஆவலை அடக்க முடியாது,

“இவளோ தெளிவா பேசுறீங்க.அவங்க பண்றது வியாபாரம்.அதுக்குத் துணை போகாம தனியொரு ஆளா இருக்க அபிக்கு ஏன் அவங்களோட நட்பு தேவைப்படுது.உங்க கவனத்தை உங்க வேலைமேல மட்டும் வைக்கலாம்ல”

என்ற கேள்விக்கு விரக்தியாகச் சிரித்தவள்,

“நானும் சாதாரண மனுஷி தான.சுத்தி இருக்கவங்க என்னைக் கொண்டாடனும்,புகழ்ந்து பேசணும்னு என்னைக்கும் நான் நினைச்சதில்லை.ஆனா, கல்லையும் மண்ணையும் பார்ப்பது போலக் கடந்து போறதும்,தேவைக்குப் பேச ஆளில்லாதபடி என்னைத் தனிமைப்படுத்திறதும்,சமயம் கிடைக்கும் போதெல்லாம் குத்திக் காட்டுறதும் மனசை ரொம்ப அழுத்தது. மூச்சைடைக்கும் வேளை யாராவது அன்பு தாங்கனு சொல்ல வைக்குது ”

என்றவள் பேச்சில் முழுதாய் அவளைப் படித்த மருத்துவர்,'அவளுக்குத் தேவை பணியிடத்தில் இனிமையான சூழல் மற்றும் உண்மையான அன்பு'என்பதை உணர்ந்து ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தி பேசியிருந்தார்.

“அபி.ஒரு பத்து நிமிஷம் கண்ணை மூடிக்கோங்க”என்றதில் அபி தட்டாது விழிகளை மூடி சாய்ந்தமர்ந்து கொள்ள,

“குட் அபி.இப்போ நான் உங்களுக்கு மனநல ஆலோசகர் இல்லை,என்னை உங்க அம்மாவாவோ இல்லை பிரெண்டாவோ நினைச்சுக்கோங்க”
என்ற வார்த்தையில் அபியின் இதழ்கள் விரிய,அந்த மருத்துவர் பேசத் துவங்கியிருந்தார்.

“ அபி உங்களுக்குக் கிரேக்க தத்துவர் எபிடேடிஸ் (Epictetus) தெரியுமா ?அவர் பிறக்கும் போதே அடிமையாம்.ஆனா,அவரோட தத்துவங்கள் தான் இப்போ பலர் வாழ்க்கையை மாற்றுது,அதைத் தான் உங்களுக்குச் சொல்ல போறேன்.கவனமாகக் கேளுங்க”
என்றவர் தொடர்ந்து பேசியிருந்தார்.

“அபி, இந்த உலகத்துல உங்களுக்குச் சொந்தமானது எதுன்னு தெரியுமா?
உங்க உடல்,உங்க எண்ணங்கள்,உங்க தனிப்பட்ட குணங்கள் இதெல்லாம் தான் உங்களுக்குச் சொந்தம்.மீதி, அதாவது உங்க கட்டுப்பாட்டில் வராத பிறரால் கட்டுபடுத்த கூடிய அன்பு,புகழ், காசு,பணம் எல்லாமே உங்களுக்குச் சொந்தமில்லாதது .

நீங்க என்ன பண்றீங்க தெரியுமா,உங்க கையிலிருக்கும் உடல் மற்றும் எண்ணத்தை,மத்தவங்க கட்டுபாட்டிலிருக்கும் அன்பு வேண்டி காயப்படுத்துறீங்க.

இப்படி நினைச்சு பாருங்க அபி.உங்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியுற உங்க மனசை நீங்களே ஏன் காயப்படுத்துறீங்க.உங்க எண்ணங்கள் எல்லாம் அவ்வளவு உயர்வா இருக்கும் போது,அது மத்தவங்க கட்டுப்பாட்டில் இருக்கணும்னு ஏன் நினைக்கிறீங்க?

உங்க வாழ்க்கை,உங்க உடல்,உங்க எண்ணங்கள் இதைப் பத்தி மட்டுமே யோசிச்சு ஒருநாள் முழுசும் இருந்து பாருங்க.அப்புறம் உங்களுக்கே தெரியும் இந்த நிஜம் தேடும் உலகத்துல உங்களோட சுயத்தை எவளோ நீங்க இழக்கிறீங்கனு.
உங்களை யாரும் தனிமைப்
படுத்தலைனாலும் நீங்க தனியா தான் அபி தெரிவீங்க.காரணம் உங்களோட எண்ணங்கள் தனித்துவமானது.இப்போ சொல்லுங்க அபி ,உங்களோட வாழ்க்கையை..,உங்களால நூறு சதவீதம் நல்லா வாழ முடியுற வாழ்க்கையை, பிறர் கட்டுப்பாட்டில் இயங்கும் இச்சைகளுக்காக அடகு வைக்கப் போறீங்களா ?”

என்று கேட்டு முடித்தவர், அபியின் கண்ணோரம் வழிந்த நீரை துடைக்க,அபியின் இருண்ட(மூடிய) விழியில்,அவளிடம் பயிலும் மாணவர்களின் கனவை எப்படி வண்ணமயமாக்குவது என்பது மட்டும் உயிர்ப்பாய் விரிந்திருந்தது.

தன் மனவலிகளுக்குத் தனக்கே தண்டனை தந்தவள் தான்,அதே மனவலிகளுக்குத் தானே மருந்தாகிப் போனாள்.ஆக, மனமே மருந்து.



முற்றும்.


ஹாய் பிரெண்ட்ஸ்,



மற்றுமொரு குட்டிக் கதை பதிந்து உள்ளேன்.சிலர் முன்பே
படித்திருக்கலாம்.தற்போது படிப்பவர்கள் உங்களது கருத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி

ஸ்ரீஷா 😍

கதையின் கருத்துத் திரி👇

 
Status
Not open for further replies.
Top