All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சொக்கியின் 'என் கருப்பழகி' - கதை திரி

Status
Not open for further replies.

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அறைக் கதவுத் திறக்கப்பட்டது, டாக்டர் புவனேஸ்வரியும், டாக்டர் குணாவும் உள்ளே நுழைந்தனர். புவனேஸ்வரியின் கையில் ஒரு ப்லாஸ்டிக் கவர் தன்னுள்ளே ஏதோப் பொருளைத் தாங்கியவாறு இருந்தது. குணாவின் கையில் சில ஃபைல்கள் இருந்தன. அதனை மேசையில் வைத்துவிட்டுத் திரும்பி சங்கருடன் நின்று கொண்டனர். சங்கர் ஒருக் காலைக் கீழே ஊன்றி சற்று சாய்வாக மேசையின் மேல் அமர்ந்தார். புவனேஸ்வரியும் மேசையின் மேல் சற்று சாய்ந்து நின்று கொண்டார். சங்கரின் வலது பக்கம் புவனேஸ்வரியும் இடது பக்கம் குணாவும் நின்று கொண்டனர்.



அறையின் அமைதியை புவனேஸ்வரிக் கலைத்தார், சற்குணபாண்டியன் குடும்பத்தினரைப் “ம்ம்ம்ம் இப்ப சொல்லுங்க என்னப் பேசனும்? எல்லாத்தையும் இங்கயே இப்பவேப் பேசி முடிச்சிடலாம்.” என்றார்.



“என்னப் பேசனுமா? ஏம்மா நடந்த அம்புட்டெயும் நீ பாத்த தான? இந்தப் பொசக்கெட்டப் பய எங்கூட்டுப் பொம்பளகளப் பார்த்து விரல நீட்டிப் பேசுறேய்ன், இதப் பாத்துப்புட்டு இவனச் சும்மா விட்டுப்புட்டுப் போவ நாங்கன்ன பொண்டுகப் பயலுகளா? எனத் தனது நாற்காலியில் இருந்து எகிறிக் கொண்டு வினவினார் சிங்கவேலு.



“ம்ம்ம்ம் குணா பேசினதுத் தப்புன்னா, அதுக்கு முன்னாடி உங்க வீட்டுப் பொண்கள்ப் பேசினதும் தப்பு தான் இல்லையா?” என வினவினார் புவனேஸ்வரி.



“இந்த வியாக்கியானாம் எல்லாம் எங்கக்கிட்டப் பேச வேண்டாய்ம் டாக்டுரம்மா! எங்க வீட்டுப் பொண்டுங்கச் சரியாத்தேன் கேள்விக் கேட்டாய்ங்க! எங்கக் குடும்ப சாடைக் கொஞ்சம் கூடயில்லாதப் புள்ளய எங்கூட்டுப் புள்ளன்னு சொல்றத நம்ப நாங்க என்னக் கூறில்லாதப் பயலுகளா?” என வினவினான் செந்தூரபாண்டியன்.



“எங்க பொண்டுங்கள இவய்ன் எப்புடி மருவாதக் கொறவாப் பேசலாம்? இவன வெட்டுனாத்தேன் எங்க மனசு ஆறும்” எனச் சீறினான் ராசவேலு.



“கண்டிப்பா குணாவ வெட்டனும் தான், உங்க வீட்டுப் பொண்டுங்களப் பார்த்து விரல் உயர்த்திப் பேசினத சும்மா விட முடியுமா? கூடாது இல்லையா சித்தப்பா?” என சங்கரிடம் வினயமாக வினவினார் புவனேஸ்வரி.



சங்கர் குணாவைப் பார்த்துக் கண்ணடித்து “நீ சொல்லித் தப்பாகுமா புவனாம்மா? குணாவ வெட்டுறது தான் சரி. என்ன குணா உங்கள வெட்டிடலாமா?” என நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு வினயமாக வினவினார்.



குணா “வெட்டுறதுன்னு முடிவாயிடுச்சி பொசுக்குன்னு போயி சேருர மாதிரி ஒரேப் போடாப் போடச் சொல்லுங்க சார். போகும்போது வலியில்லாமப் போயி சேந்துக்குறேன்.”



“ஹா ஹா ஹா ஹா ஹா” என அந்த ஹால் அதிர சிரித்திவிட்டு “சரி, உங்க கடைசி ஆசைய சொல்லுங்க நிறவேத்திடுவோம்?” என்றார் சங்கர் கண்களில் விஷமச் சிரிப்புடன்.



“சார் கண்டிப்பா நிறவேத்துவிங்களா? உங்கள நம்புறேன் சார்! இந்தப் பாண்டியன் குடும்பம் மொத்தமும் மதுரை செண்டரல் ஜெயில்லக் கல்லு ஒடைக்கிறதையும், வரிசையில நின்னு சோறு வாங்கிறதையும், நைட்டுக் கொசுக் கடிலத் தூங்காமா விழிச்சி இருக்கிறதையும், நான் சொர்கத்தில இருந்து ரம்ப, ஊர்வசி, மேனக இவங்கள எல்லாம் கட்டிப்புடிச்சிட்டு கண் குளிரப் பாக்கனும் சார்! வேறப் பெரிய ஆசையெல்லாம் எனக்கு இல்லை சார்!” என்றான் குணா குறும்பாக.



“குணாஅஅஅ” என அடக்க மாட்டாமல் கண்களில் நீர் வரச் சிரித்தார் சங்கர். புவனேஸ்வரி பொங்கிய வெடிச் சிரிப்பை மென்று அடக்க முடியாமல் உதட்டைக் கடித்து அடக்கினார். பாதுகாப்பு படையினர் கூடக் கொஞ்சம் இலகுவாகப் புன்னகைத்தனர். குணா லேசாக முகம் சிவந்து வெட்கம் மேலிடத் தனது பார்வையைத் திருப்பிக் கொண்டு “ஐயோ மேடம் என்ன பத்தி என்ன நினப்பாங்க?” என அசடு வழிய நினைத்தான்.



“குணா உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?” என கணக்காரியமாக வினவினார் சங்கர்.



“இல்லையெ சார்! அந்தக் கொடுப்பனை எல்லாம் இந்த ஜென்மத்தில எனக்கு இல்லை போல சார்” என்றான் குணா பாவமாக.



“சுசுசுசுச்ச்ச்சூசுசுசு” எனச் சூள் கொட்டினார் சங்கர் போலியாக.



“என்னங்கடா? எங்களப் பாத்தாக் கேனப் பயலுக மாதிரித் தெரியுதா” எனக் கர்ஜித்தான் சுந்தரபாண்டியன்.



“என்ன குணா இவங்களப் பாத்தா கேனப் பயலுக மாதிரியாத் தெரியுது?” என அப்பாவியாக வினவினார் சங்கர்.



“சிரிப்பு மூட்டாதிங்க சார், இவங்க கேனப் பயலுகளா? மத்தவங்களத் தான் இவங்க கேனயனா ஆக்குவாங்க! இவங்க கொலகாரப் பயலுங்க சார்!!” என அழுத்திச் சொன்னான் குணா.



“யாரப் பாத்துடாக் கொலகாரப் பயலுங்கன்னுச் சொன்ன?” என ஒருமித்தக் குரலில் கத்தினர் சற்குணபாண்டியன் குடும்பத்து ஆண்மக்கள், சற்குணபாண்டியனைத் தவிர. அவர் தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தார்.. பெண்களும் தங்கள் இருக்கையை விட்டு ஆவேசமாக எழுந்தனர்.



“உங்களப் பாத்து தாண்டா சொன்னேன்! உங்க வீட்டுப் பொம்பளங்களப் பாத்து நான் விரல் ஒசத்தினதுக்கு, என்ன வெட்டியத் தீருவேன்னு சொன்ன நீங்க, கொலகாரப் பயலுங்க தானே? அது மட்டுமா எங்க மேடம இந்தம்மா ‘அவ நாக்க இழுத்து வச்சி அறுத்துப்புடுவேனு’ சொல்லிச்சி. இந்தப் பெரிய மனுசி ‘அவ தலை மயித்துப் படிச்சித் தர தரனு இழுத்துட்டு வாங்கடானு’ சொன்னுது. இந்த மாதர் குலத் திலகம் ‘அவளைக் கருவருக்கனும் ஆத்தானு’ சவுண்டு விட்டிச்சி. எல்லாத்துக்கும் மேலே இதோ இருக்கானே இவன், நல்லா பாத்துக்குங்க சங்கர் சார்! இவன் இங்கயே மேடமக் கண்டந்துண்டம்மா வெட்டி வீசிடுவானாம்!!! வண்டிக்குள்ள, முதுகுக்குப் பின்னே எப்போதும் கர்சீஃப சொறுவி வச்சிருக்க மாதிரி அறுவாவ சொறுவி வச்சிருக்க நீங்க கொலகாரப் பயலுங்க இல்லாம, அமைதிக்கு நோபில் பரிசு வாங்கின நெல்சன் மண்டேலாவாடா? ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு ஞாபக மறதி ஆகாதுடா!!!“ எனப் பரிகாசித்தான் குணா.



சற்குணபாண்டியன் குடும்பத்தினர் அதிர்ந்து நின்றனர், அவர்கள் மனதில் ஓடியது ஒரே வாக்கியம் தான் “எப்புடித் தெரிஞ்சுது? நாமப் பேசினெது அம்புட்டும் ஒத்தெ வார்த்தெ மாறாமாச் சொல்லுறானே? எப்புடித் தெரிஞ்சுது இந்தப் பொசக்கெட்டப் பயலுக்கு?” அவர்களுக்கு வேர்த்துவிட்டது, புவனேஸ்வரியின் உயரம் அவர்களை அச்சுறுத்தியது. சற்குணபாண்டியன் புரிந்து கொண்டார் தங்களைச் சுற்றி சதி வலைப் பின்னப்பட்டு அதில் தங்களை விழுவிக்கவும் செய்தாயிற்று.



“ஓ” என வெகு அமைதியாகச் சொன்னார் சங்கர். மேசையை விட்டு மெதுவாக இறங்கி பெண்கள் இருக்கும் இடத்திற்கு சென்றார். “வாராய்ன் வாராய்ன் பனை மரத்துலெப் பாதி ஒசரம் இருக்கவன் வாராய்ன்” என மனதிற்குள் பயந்து நடுங்கினார் சுந்தரவல்லி.



சங்கர் சுந்தரவல்லியையும், வடிவாம்பாளையும் தாண்டி அங்கயற்கண்ணியிடம் சென்று நின்றார். அங்கயற்கண்ணிக்கு ஈரக்குலை நடுங்கியது. சங்கர் அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு குணாவிடம் திரும்பி “குணா இவதான என் மகள கருவறுக்கனும்னு சொன்னவ?” என வினவினார். குணா ‘ஆமாம்’ எனத் தலையாட்டினான்.



சங்கரின் நோக்கம் புரிந்து, டாக்டர் புவனேஸ்வரி வேகமாக சங்கர் அருகில் சென்று “சித்தப்பா, இவங்களப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சிடுச்சில்ல.. அவங்களுக்கும் என்னப் பத்தி, உங்களப் பத்தி நல்லாத் தெரிஞ்சிருக்கும். இவங்க இப்ப பல்லுப் புடுங்கினப் பாம்புங்க. ஒன்னும் செய்ய முடியாது, இவங்கள விட்றுங்க. இப்ப நமக்கு முக்கியம் அந்தக் குழந்த தான் சித்தப்பா.” என்றார். சங்கரும் மையமாகத் தலையாட்டி விட்டு அவளுடன் மேசைக்கு நகர்ந்தார். அந்தப் பெண்களை முறைக்கவும் தவறவில்லை.



“போயிட்டேய்ன் அப்பாடா” என நிம்மதி பெருமூச்சி விட்டார் அங்கயற்கண்ணி. “அந்த சிறுக்கி வரலன்னா அடிச்சிருப்பானோ? ஆத்தி அப்புடி அடிச்சிருந்தேய்ன் நாளக்கி எங்க வீட்டுலெ எனக்குப் பால் ஊத்திருப்பாய்ங்க! ச்ச்ச்” என மனதிற்குள் புலம்பினாள் அங்கயற்கண்ணி.



சங்கர் நேராக சற்குணபாண்டியனிடம் வரவும் தன் இருக்கையில் இருந்து எழுந்துக் கொண்டார். “சோ!! எங்க வீட்டுப் பொண்ணக் கண்டந் துண்டம்மா வெட்டிப் போட்டுட்டுப் நீங்க எல்லாம் கை வீசிட்டுப் போவிங்க? என்னோட இடத்தில நீங்க இருந்தா என்னப் பண்ணுவிங்க சற்குணபாண்டியன்?? நீங்க என்ன செய்விங்களோ அதை நானும் செய்றேன், சரியா? இல்லை இவங்க அந்த மாதிரிப் பேசலைன்னுச் சொல்லப் போறிங்களா? அந்த அளவுக்கு நீங்க முட்டாள் இல்லைன்னு நான் நினைக்கிறேன்? நீங்க என்ன நினைக்கிறிங்க? பதில் சொல்லுங்க சற்குணபாண்டியன்.” என அழுத்தமாக வினவினார் சங்கர்.



சற்குணபாண்டியன் ஆழ மூச்சிழுத்துக் கொண்டு தொண்டையை செறுமியவர். “இங்கெ இப்ப நடந்ததப் பத்தி நான் பேசல.. என் வீட்டு மக்கப் பேசினெதெல்லாம் தப்புத்தென். எதோக் கோவத்திலப் பேசுப்புட்ட வார்த்தையக் கட்டிக்கிட்டுத் தொங்கிட்டு இருந்தா எப்புடி? அவய்ங்க அப்புடிச் சொன்னாங்ய்கதேன்.. ஆனா செஞ்சாய்ங்களா? நாந்தேன் அவய்ங்கள செய்ய விட்டெனா? எங்களுக்கும் சட்டம் தெரியும்க! இப்ப பிரச்சனை அது இல்லை! பொறந்தப் புள்ள மேல இன்னும் சந்தேகம் தீரலியே? அத தீக்க வேண்டியது டாக்டுரம்மா கடமதேன். என் பொஞ்சாதி சொன்ன வெதம் வேணா தப்பா இருக்கலாய்ம், ஆனா அவக் கேட்டக் கேள்வி சரிதேன்.. இல்லன்னு சொல்லிப்புடுங்கங்கப் பாப்போய்ம்? வீட்டுலப் பிரசவம் பாத்தா வீட்டுப் பொம்பளய்ங்க இருப்பாய்ங்க. இங்கெ அப்புரசன் ரூமுக்குள்ள நாங்க யாரும் இல்லயே! பொறவு எப்புடி நம்ப முடியும்? அந்தப் புள்ளயும் எங்கக் குடும்பெ சாடையில்லியெ?” என வரிசையாகக் கேள்விகளைக் அடுக்கி, தான் ஒருத் தேர்ந்த தொழிலதிபர் என்பதை நிருபித்தார் சற்குணபாண்டியன்.



சங்கர் ‘நீ தான் இவர்களின் புத்தியைத் தெளிய வைக்க வேண்டும்’ என்பது போல் திரும்பி டாக்டர் புவனேஸ்வரியைப் பார்த்தார். புவனேஸ்வரி குணாவிடம் “குணா கேரி ஆன்” என்றார். தொலைக்காட்சியும் வி.சிஆரும் உயிர்ப்பிக்கப் பட்டது. அந்தக் கவரைப் பிரித்து ஒரு காணொளி கேசெட்டை வெளியே எடுத்து, வி.சிஆருக்குள் செலுத்தப் பட்டது.



“படம் காட்டவா இம்புட்டு அலப்பறை?” என அனைவரும் மனதிற்குள் எண்ணினர். சற்குணபாண்டியனின் மனதிற்குள் அபாய மணி ஒலித்தது! எதோ தங்களுக்குப் பாதகமானது நடக்கப் போகிறது என அவரது உள்மனது அவருக்கு அறிவுறுத்தியது. அவர் பயந்தது போல் தான் அங்கு நடந்து கொண்டிருந்தது.



தொலைக்காட்சியில் படம் ஓட ஆரம்பித்தது. முதலில் சற்று மசமசப்பாகத் தெரிந்தது. பின்னர் ஒரு பெண் படுத்திருப்பதும் அவரின் மேலே பச்சை நிறப் போர்வைப் போர்த்தப் பட்டிருப்பது, அவரின் முகத்துக்கு மேலே வெகு அருகில் விளக்குகள் எரிவதும் தெரிந்தன. தொலைக்காட்சியில் வெகு அருகில் அந்தப் பெண்ணின் முகம் தெரிந்தது. அனைவருக்கும் புரிந்தது அந்தப் படம் யாரைப் பற்றியது என்று. தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டப் பெண் “நிலவழகி” தான்.



“ஆத்தா அழகி” எனக் கதறிவிட்டார் வடிவாம்பாள்.



“ஷ்ஷ்ஷ்ஷ், இந்தப் படம் முடியிற வர சத்தம் கேக்க கூடாது, மீறிக் கேட்டுச்சி” என அதட்டினார் சங்கர். வடிவாம்பாள் தனது அழுகையை மென்று விழுங்கினார் “கட்டயிலப் போறவய்ன்” எனத் தனது மனதிற்குள் சங்கரை அர்ச்சித்தார்.



“குணா டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம், ஸ்பெசிஃபிக் சீன்க்குப் ஃபொர்வட் பண்ணுங்க” என்றார் டாக்டர் புவனேஸ்வரி. குணாவும் அவ்வாறேச் செய்தார். படம் மறுபடியும் ஓடியது. நிலவழகி தலையில் கட்டுடன் மயக்க நிலையில் இருப்பது நன்றாகத் தெரிந்தது. உடல் முழுக்க அங்கிகளை அணிந்து கொண்டு நிலவழகியை சூழ்ந்திருந்தனர் டாக்டர்களும், நர்சுகளும்.



சட்டென்று நிலவழகியின் அடிவயிறுக் கிழிக்கப்பட்டுக் குருதி வெளியேறுவதுத் தெரிந்தது. வடிவாம்பாளுக்கு மயக்கமே வந்துவிட்டது. பின்னே தன் அருமை மகள் வயிறுக் கிழிந்துக் குருதிப் பெருகியிருக்கும் கோலம் காண எந்தத் தாய்க்குத் தான் காணச் சகிக்கும்?

 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“ஆத்தா ஆஆஅத்தா என்னாச்சி” எனப் பதறினாள் அங்கயற்கண்ணி தன் அன்னையின் நிலையைக் கண்டு. “ஹாஆஆம் எனக்கு ஒண்ணும் இல்லத்தா ஒண்ணுமில்லெ” என்றார்.



நிலவழகியின் கிழிக்கப்பட்ட வயிற்றில் இருந்து வெளியே இழுக்கப்பட்டது, கருப்பாக இருந்தது. குழந்தை!!! உடல் முழுக்க தன் தாயின் ரத்தம் தோய்ந்தக் குழந்தை!! தன் தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்தவுடன், அழவில்லை!!! டாக்டர் அதனைத் தனது இருக் கரங்களாலும் தலைகீழாகப் பிடித்தார். அம்மழலையின் உடல் ஊனம் மிகத் தெளிவாகத் தெரிந்தது. இடது கால் குட்டையாக, சூம்பி இருந்தது. இன்னொரு மருத்துவர் அதன் பின்னே லேசாகத் தட்டினார். குழந்தையிடம் சிறு அசைவுத் தெரிந்தது. குழந்தையை ஒரு வெள்ளைப் பூந்துவளையில் சுற்றிக் கைகளில் ஏந்திக் கொண்டார் ஒரு நர்ஸ். குழந்தையின் பிஞ்சுப் பாதம் லேசாக சுண்டப் பட்டது. எந்த பிரதிபலிப்பும் இல்லை! எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இப்போது சற்று பலமாகச் சுண்டப்பட்டது, குழந்தை வீரிட்டு அழுதது. அங்கிருந்தவர்கள் எல்லோர் முகத்திலும் நிம்மதிப் பரவியது. படத்தில் அழும் குழந்தை வெகு அருகில் காண்பிக்கப்பட்டது.



“ஃப்ரிசிட் குணா” என்றார் டாக்டர் புவனேஸ்வரி. தொலைக்காட்சி திரையில் அந்தக் காட்சி அப்படியே அசைவின்றி நின்றது. அனைவரையும் தனது தீட்சண்மையானப் பார்வையால் அளந்தவர், சற்குணபாண்டியனிடம் திரும்பி “என் கடமையை நான் செஞ்சிட்டேன் மிஸ்டர் சற்குணபாண்டியன், இப்பத் தெளிவாயிடுச்சா? அது உங்க வீட்டு வாரிசு தான்னு நிருபினம் ஆகிடுச்சி. இப்போ என்ன சொல்றிங்க?” என்று வினவினார்.





டாக்டர் குணா “என்னங்கம்மா நாங்க எல்லாம் நல்லாப் படிச்சி, நாங்களே பரிட்சை எழுதி டாக்டர் பட்டம் வாங்கினோம்னு இப்போயாவது நம்புறிங்களா? தொலைக்காட்சியிலப் பாத்து இருப்பிங்களே இப்படி தான்மா நாங்க எல்லாருக்கும் பேறு கால மருத்துவம் பார்த்து, எங்கள நம்பி வர எல்லா உயிரையும் காப்பாத்துறோம். சொன்னாப் புரிஞ்சிக்கிற புத்திப் இல்லைன்னு தான் படமாக் காட்டிட்டோம். படம் எப்புடி? இப்ப நல்லா விளங்குதா? அப்புறம் வார்த்தைக்கு வார்த்தை மூதேவின்னுக் குழந்தையச் சொன்னிங்களே! அப்ப அந்த மூதேவியப் பெத்த உங்க வீட்டுப் பொண்ணு யாருங்க? ஸ்ரீதேவியா?” எனப் பெண்களை நோக்கி இளக்காரமாய் வினவினான்.



டாக்டர் புவனேஸ்வரி குணாவைக் கண்டனப் பார்வைப் பார்த்தார். அது சொல்லிய செய்தி “நீயா இப்படிப் பேசியது??? உன்னிடம் இதை நான் எதிர் பார்க்கவில்லை!!” என்பது தான். டாக்டர் குணா அதைக் கண்டு கொண்டு “சாரி மேடம்” எனக் கூறிவிட்டுத் தலை குனிந்தார்.



“குணா இன்னைக்கு ஃபுல் ஃபொர்ம்ல இருக்கிங்கப் போல? கபில் தேவ் மாதிரி சந்தடியிலும் சிக்ஸ் அடிக்கிறிங்களேய்யா?“ எனக் கேலியுடன் வினவினார் சங்கர்.



டாக்டர் குணா புவனேஸ்வரியைக் கலவரமாகப் பார்த்துவிட்டு, சங்கரிடம் திரும்பி “ப்ளீஸ் சார்” எனக் கண்களால் கெஞ்சினான்.



”ஹா ஹா ஹா” எனச் சங்கர் சிரித்துவிட்டு குணாவின் அருகில் சென்று சன்னமானக் குரலில் “கமான் குணா, சியர் அப் யெங் மேன், நீங்க பேசினதுல எந்தத் தப்புமில்லை. இதுவே நானா இருந்தேன், தூக்கிப் போட்டு மிதிச்சிருப்பேன். புவனாவுக்கு உன் மேல ரொம்ப மதிப்பும், பாசமும் இருக்கு. அதான் அப்படி பிஹேவ் பண்றா. இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணா எப்படி குணா? இன்னும் எத்தன அறுவா மீசைக் காரனுங்க உங்கள அறுவாளோடுத் துரத்து வேண்டி இருக்கு! அதுக்குள்ள இப்படி அப்செட் ஆனா எப்படி?” என கேலியாகப் பேசினார். குணாவும் சற்று சத்தமாகச் சிரித்துவிட்டான். “தட்ஸ் மை பாய்” என்று குணாவின் தோள்களில் தட்டிக் கொடுத்தார் சங்கர்.



சற்குணபாண்டியன் குடும்பத்தினரின் பார்வை யாவும் அந்தத் தொலைக்காட்சித் திரையிலே நிலைக்குத்தீ நின்றன. இது எப்படி சாத்தியம்??? அழகு மயிலுக்கு அண்டங்காக்கைக் குஞ்சுப் பிறந்துவிட்டத்தே!!! அதிலும் நொண்டிக் குஞ்சுல்லவாப் பிறந்து விட்டது!!! எப்படி? எப்படி?? எப்படி????? எதன் வினைப் பயன் இந்தப் பிள்ளை? யாருடையக் கொள்ளிக் கண் பட்டது??? யாரிட்ட சாபம்??? அல்லது தெய்வத்தின் கோபமா???



ஒரு நிமிடத்திற்குள், உலகையேத் தங்களது எண்ணங்களால் வலம் வந்துவிட்டனர் சற்குணபாண்டியன் குடும்பத்தினர். ஆனால் அவர்கள் நினைத்துக் காரணங்கள் எதுவும் உண்மையுமல்ல! நடைமுறைக்குச் சாத்தியமும் அல்ல என்பதனை அவர்களுக்குப் புரிய வைப்பது யார்??? பத்தாம் பசிலித்தனமான எண்ணங்களில் காலம் காலமாக ஊறியக் கூட்டம், விஞ்ஞான அறிவியலின் உண்மைக் கூற்றை நம்புவார்களா?



டாக்டர் புவனேஸ்வரி அவர்களின் நிலையை நன்கு உணர்ந்து இருந்தமையால், அவர்களே அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரக் காத்திருந்தார். சங்கரும் குணாவும் சன்னமானக் குரலில் எதோத் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருப்பது போல் இருக்க அவர்கள் அருகில் சென்றார்.



“என்ன குணா இப்படிப் புள்ளப் பூச்சியா இருக்கிங்களே? ஹாஸ்பிட்டல்லையே யாராவது நல்ல அழகான டாக்டர் பொண்ணாப் பாத்துக் கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே? காலாக் காலத்துலக் கல்யாணம் பண்ணனும் மேன்! லைஃப வைஃபோட என்ஜாய் பண்ணுற வயசுல இவனுங்கக் கூடலெல்லாம் மல்லுக் கட்டுறியே?” எனச் சரசமாக வினவினார் சங்கர்.



“ஏன் சார், இவனுங்கிட்ட இங்க அடிவாங்குறதுப் பத்தாதுனு? பொண்டாட்டின்னு ஒருத்திக் கிட்டேயும் தனியா வீட்டுல வேற அடி வாங்குனுமா? நல்லெண்ணம் சார் உங்களுக்கு!! நான் சாம்பார் சாதம் சாப்பிடறவன், இங்க இருக்கப் பொண்ணுங்க எல்லாம் நீந்துவன, நடப்பன, பறப்பனன்னு ஒன்னு விடாம முழுங்குதுங்க! விட்டா ஆளே முழுசாமுழுங்கிடுங்க! இதுங்கெல்லாம் நமக்கு சரிவராது சார்.. நமக்கு ரசம் சாதமும், மோர் சாதமும் தான் சார் பொருந்தி வரும்” எனப் பரிதாபமாகச் சொன்னான் குணா. குணாவின் பதிலைக் கேட்டு சங்கர் சீழ்க்கையடித்து ஆர்ப்பாட்டமாகச் சிரித்தார்.



டாக்டர் புவனேஸ்வரி அவர்களை நெருங்குகையில். இவர்களின் பேச்சு வார்த்தையைச் செவி மடுத்துக் கொண்டு தான் வந்தார். “என்ன சித்திப்பா, அங்க ஒரு குடும்பமே ஆடிப் போய் உக்காந்திருக்கு, அந்தப் பச்சைக் குழந்தயோட நிலைமை என்னன்னுத் தெரியல. நீங்க ரெண்டு பேரும் ஜாலியாச் சிரிச்சிப் பேசிட்டு இருக்கிங்க?” எனப் போலிக் கடுப்புடன் வினவினார். அதனை சங்கர் புரிந்து கொண்டார். ஆனால் பச்சை மண் குணா புவனேஸ்வரியின் கோபம் நிசமென நினைத்துப் பதறிவிட்டான்.



“இது என்னடாக் கூத்தா இருக்கு? ஏன் குணா நாமெல்லாம் ஜாலியாச் சிரிச்சிப் பேசக் கூடாதா? நமக்கு அதுக்கு உரிமையில்லையா? உங்க தலைமை மருத்துவரப் பத்தி மேலிடத்தில கம்ப்ளைண்ட் பண்ணிடலாமா? சங்கர் வினயமாக வினவினார்.



குணா அழுது விடுபவனைப் போல் சங்கரையும் புவனேஸ்வரியையும் மாறி மாறிப் பார்த்தான். சங்கரும், புவனேஸ்வரியும் பக்கென்று சிரித்து விட்டனர். “ஐய்ய்யோ போதும் சித்தப்பா, குணா பாவம் உங்க கோக்கு மாக்கு வேலையெல்லாம் அவருக்குப் புரியாது” எனச் சிரித்தபடி சொன்னார் புவனேஸ்வரி. குணா “ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா” எனப் பெரு மூச்சுவிட்டான்.



“ஹா ஹா ஹா, புவனா குணா ரொம்ப நல்லப் பையன், பேசாம நம்பச் சொந்தக்காரப் பொண்ணு ஒன்ன குணாவுக்குக் கட்டி வச்சிடலாம், என்ன நான் சொல்றது?” என ஆவலுடன் வினவினார் சங்கர். சங்கர் குணத்தைப் பார்க்கும் குணவான், அதனால் தான் குணாவை போன்ற அக்மார்க் நல்லவனை அவர் இழக்க விரும்பவில்லை. தங்கள் நெருங்கிய சொந்த வட்டத்திற்குள் அவனை இழுக்க முயன்றார்.



புவனேஸ்வரிக்கு சங்கரின் ஆர்வமும் ஆவலும் புரிந்தது. ஆனால் இது அதனைப் பற்றி பேசும் இடமோ, தருணமோக் கிடையாதே என மனதிற்குள் நினைத்து “கண்டிப்பா சித்தப்பா, குணாவுக்கும் அவரோடப் பெத்தவங்களுக்கும் விருப்பம் இருந்தா இன்னொரு நாள் நாமா சாவகாசமாப் பேசலாம்.” என்று சங்கரின் ஆவலைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தினார். சங்கர் “ம்ம்ம்ம் நீ சொல்றது சரிதான் மா” என்றார் குணாவைப் பார்த்துக் கண்ணடித்து.



குணாவுக்கு சற்றுக் கூச்சமாக இருந்தது. அவர்களைத் திசை திருப்பும் பொருட்டு “சார், மேடம் அவங்க நம்பளையேப் பாக்குறாங்க, அதிர்ச்சி விலகிடுச்சின்னு நினைக்கிறேன்” என்றார். அதைக் கேட்டு சங்கரும், புவனேஸ்வரியும் சற்குணபாண்டியன் குடும்பத்தினரை நோக்கித் திரும்பினர்.



சற்குணபாண்டியன் குடும்பத்தினர் சங்கரும், புவனேஸ்வரியும் சிரித்து குணாவைப் பரிகாசம் செய்யும் போதே, அதிர்ச்சியில் இருத்து மீண்டு விட்டனர். அவர்களுக்குள் பேசிச் சிரித்துக் கொண்டதைப் பார்த்து இவர்களைக் கேலிப் பேசுவதாக எண்ணிக் கொண்டனர். அவர்கள் மனது பற்றி எரிந்தது, அவர்களுக்கு காட்டப்பட்ட அதிர்ச்சியினால்! இவர்களின் பேச்சும் சிரிப்பும் எரிகிற நெருப்பில் எண்ணெயெய் ஊற்றியது. மூவரையும் வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். குணா அவர்களைக் கவனித்துவிட்ட பிறகும் கூட அந்தப் பார்வை மாறவில்லை.



சங்கர், புவனேஸ்வரி மற்றும் குணா மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களின் குண இயல்பை சில மணி நேரங்களிலேப் புரிந்து கொண்டவர்கள் ஆயிற்றே அவர்கள் மூவரும்!!!



தாங்கள் கவனிக்கப் பட்டதைப் புரிந்து கொண்ட சற்குணபாண்டியன், லேசாகத் தொண்டையைச் செறுமிக் கொண்டு “இந்தப் புள்ளெ பாக்கா இம்புட்டூண்டு இருக்கு, தெம்புச் சொரன இல்லாமெ நோஞ்சானெ வேறெ இருக்கு, ஒழுங்காப் பொழச்சிக்கும்மா???” என ஆவலை அடக்கியக் குரலில் வினவினார். அந்தக் கேள்வியில் மறந்திருக்கும் அர்த்தம் ஒன்று தான்! அக்குழந்தைக் கண்டிப்பாகப் பிழைக்காது என்பதைனை உறுதிப் படுத்துவதாகும்.



அந்தக் குழந்தையைத் தனதுப் பேத்தி என்று சொல்லிக் கொள்ள அவருக்குக் கடுகளவும் விருப்பமில்லை. தன் மருமகளுக்குப் பிறந்த மகவுதான் என்பதை உணரவே அவருக்கு வெகு நேரம் பிடித்தது. “சீதேவி தேன் லட்சணமா பொறக்கும்! மூதேவி அசிங்கமாத்தேன் பொறக்கும்!” எனத் தனது மனதில் சொல்லிக் கொண்டார் சற்குணபாண்டியன்.



சற்குணபாண்டியனின் கேள்வியில் டாக்டர் புவனேஸ்வரி பல்லைக் கடித்தார். இருப்பினும் முக மாறுதலின்றி அமைதியாகக் காட்சி அளித்தார்.



“இந்தாளப் பாருங்க சார்! குழந்தப் பிழைக்காதில்லைன்னு சுத்தி வளைச்சிக் கேக்குறாரு. அரக்கன் சார்!!” என சங்கரின் காதைக் கடித்தான் குணா. சங்கருக்காப் புரியாது? ஒப்புதலாகத் தலை அசைத்து குணாவின் கூற்றை ஆமோத்திவரின் கண்கள் சினந்து சிவந்திருந்தன!



“உங்கக் குலக் கொழுந்த நீங்க காப்பாத்தாம விட்ருவிங்களா சற்குணபாண்டியன் சார்? உங்களுக்கு இருக்கிற சொத்துக்கும், செல்வாக்குக்கும் வெளி நாட்டுக்கேப் போய், உங்க பேத்திக்கு வைத்தியம் பாப்பிங்க! குழந்தை கொஞ்சம் நோஞ்சான் தான்.. ஆனா உங்க வீட்டு ஆளுங்க கவனிப்புல சும்மா கொழுக்கு மொழுக்குன்னு ஆகிடுவா இன்னும் ஒரு வருசத்தில.. இல்லயா சார்!” என வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல், நீ உன் பேத்தியை இப்படித் தான் கவனிக்க வேண்டும் என்ற மறைமுகமாகக் கட்டளையிட்டார் சங்கர். சற்குணபாண்டியனின் முகமும் அவரது குடும்பத்தினர் முகங்களும் கருத்து இறுகின.



“புவனாம்மா இவங்க எல்லாருக்கும் இந்தக் குழந்தை ஏன் இப்படி பிறந்திச்சுன்னு இன்னும் சந்தேகம் தீரலப் போல. என்ன ரீசன்னு டீடெய்லா சொல்லிடும்மா” என்றார் சங்கர்.



“ம்ம்ம் கண்டிப்பா சித்தப்பா, இப்போச் சொல்லிடுறேன்” என்றபடி சற்குணபாண்டியன் குடும்பத்தினரை நோக்கி “எனக்கு உங்கக் கிட்ட சில விஷயங்கள் தெரிஞ்சுக்கனும்” என்றார் சிறுப் பீடிகையுடன். சற்குணபாண்டியனைத் தவிர எவரும் அங்கு பதிலளிக்கும் நிலையில் இல்லை என்பது அவருக்கு நன்றாக விளங்கிற்று.



“உங்க குடும்பத்திலையோ இல்லை நெருங்கிய உறவுக்காரங்களையோ யாருக்காவது இது மாதிரி பாதிப்பு இருக்குதா?” என வினவினார். “இல்லை” என மெதுவாகத் தலையாட்டினார் சற்குணபாண்டியன்.



“நல்லா யோசிச்சு சொல்லுங்க சார்.. உங்க மூதாதையர்கள், ஒன்னுவிட்ட இரண்டுவிட்டச் சொந்தங்கள் இவங்கள்ள யாருக்காவது இப்படிப் பட்ட பாதிப்பு இருந்திருக்கலாம். அது உங்களுக்குத் தெரியாமக் கூட இருக்கலாம்.” எனத் தன்மையாக வினவினார்.
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


“எங்கக் கொலத்தில இப்புடி ஒரு புள்ளய இப்பத்தேன் நாங்கப் பாக்குறோம்” என்றார் சற்குணபாண்டியன் அழுத்தமாக.



“ஓ! ஒகெ, இதுக்கு முன்னே உங்க மருமகளுக்கு எத்தனைப் பிரசவம் ஆகியிருக்கு?” கண்களில் கூர்மையுடன் வினவினார்.



“ஏங்க இந்த டாக்டுரம்மா, பொறந்துருக்கே ஒன்னு அதப் பத்திப் பேசுறேன்னு சொல்லுப்புட்டு ஏதேதோக் கேக்குறாய்ங்க! நீங்களும் சலுக்காம பதில் சொல்லுரிய! நமக்கு இருக்கு ஆயிரம் சோலி.. சட்டுபுட்டுன்னு பேசி முடிச்சிப்புட்டு வாங்க, மருமவளப் போயிப் பாப்போம். மயக்கம் தெளிஞ்சி புள்ள நம்மளத்தேன் தேடும். பாவம் பச்சை உடம்புக்காரி அவளுக்கு அசதியா இருக்கும். நாம பக்கத்திலெ இருந்தா தனித் தெம்புதேன் புள்ளைக்கி” என்றார் சுந்தரவல்லி. அவருக்குப் பேச்சு எந்த திசையில் செல்கிறது என்பது புரிந்து போயிற்று, அதனைக் கத்திரிக்க சாதுரியமாக முயற்சி செய்தார்.



“நாங்களும் வேலை வெட்டி இல்லாத ஆளுங்க இல்லைம்மா! காரணமாத்தான் கேக்குறேன். அதோட நான் ஒண்ணும் கஷ்டமானக் கேள்வியாக் கேக்கலியே? என்ன மிஸ்டர் சற்குணபாண்டியன் உங்களுக்கு இப்போ பதில் சொல்ல முடியாதுன்னா சொல்லிடுங்க, நாங்க எங்க வழியப் பாத்துட்டுப் போயிடுறோம்.” என்றார் புவனேஸ்வரி அழுத்தமாக.



“வல்லி” என அதட்டினார் சற்குணபாண்டியன் . “நமக்கு இப்போத் தெளிவு வேணும் ஆத்தா. டாக்டுரம்மா என்னதேன் சொல்றாய்ங்கனு கேப்போம்! ஆரும் இங்க குண்டக்க மண்டக்கப் பேசப்புடாது சொல்லிப்புட்டேன். உங்களுக்கு எம்மருமவளுக்கு எம்புட்டு பிரசவம் ஆயிருக்குன்னு தானே தெரியுயனும்? நான் சொல்ரேய்ன் மூனு பிரசவம் ஆயிருக்கும்மா” எனத் தன் மனைவிக்கும் தன்னுடைக் குடும்பத்தினருக்கும் சேர்த்து பதில் கொடுத்துவிட்டு, புவனேஸ்வரியின் கேள்விக்கு விடையளித்தார்.



“தெரியும் மிஸ்டர் சற்குணபாண்டியன், நிலவழகியோட மத்த மூனுக் குழந்தைங்களைப் பத்தின்ன அத்தனை டீட்டெய்ல்ஸும் இந்த ஃபைலில் இருக்கு. இந்தக் குழந்தை ஒரு கிலோவுக்கும் கம்மியான எடையில தான் பிறந்து இருக்கு. என்ன தான் நாற்பது நாளைக்கு முன்னாடி பிரசவிச்சக் குழந்தையா இருந்தாலும் இவ்வளவு எடைக் கம்மியா இருக்குதுன்னா??? நான் சொல்ல வேண்டியதில்லை உங்க எல்லாருக்குமே அதோடக் காரணம் புரிஞ்சும் இருக்கும், தெரிஞ்சும் இருக்கும் இல்லயா???” எனக் கத்தியின் கூர்மையோடு கேள்வியை அவர்களை நோக்கி வீசினார் புவனேஸ்வரி.



சற்குணபாண்டியன் கல் போன்ற முகமும், இறுக மூடிய உதடுகளுமாக அமர்ந்திருந்தார். மற்ற அனைவரும் முகத்தில் கடுகைப் போட்டால் வெடிக்கும் முகத்துடன் இருந்தனர்.



“பதில் சொல்ல மாட்டிங்க! சரி. உங்களால பதில் சொல்ல முடியாதுன்னு எனக்கும் தெரியும். இப்போ கடைசியா ஒரே ஒரு கேள்வி! உங்க குடும்பத்தில எல்லாம் சொந்ததுல தான் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா? அதுவும் நெருங்கின சொந்தம்?” எனக் காரியமாக வினவினார் புவனேஸ்வரி.



சற்குணபாண்டியன் சற்று யோசனையுடன் பார்த்துவிட்டு “நீங்க சொல்லுறது சரித்தேன் டாக்டுரம்மா. தலைமுறை தலைமுறையா எங்க ரெண்டுக் குடும்பத்துக் குள்ளத்தேன் பொண்ணுக் குடுத்து பொண்ணு எடுக்கிறது. இது வழமைதேன். அப்புடி இங்கெ சோடி ஆளு இல்லென்னா, அடுத்த நெருங்கின சொந்தத்துலதேன் சம்பந்தம் பண்ணுவோம். இதேன் எங்கக் கொல வழக்கம்” என்றார்.



டாக்டர் புவனேஸ்வரி மெல்ல பின்னால் நகர்ந்து மேசையில் சாய்ந்தவர் தன்னுடையக் கண்களை மூடினார். மூடிய கண்கள் வழியே நீர் முத்துக்கள் உருண்டுக் கீழே இறங்கின. “இது தானோ பெற்றவர்களின் பாவங்களைப் பிள்ளைகள் சுமப்பார்கள் என்பது இது தானோ? இவர்களின் வழமைக்கு இளம் பிஞ்சு பலியாகிவிட்டதே!!! கடவுளே! உனக்குக் கண் இல்லையா? அய்யோப் பாவம்!!! பாவப் படுவதனால் ஒரு பிரயோசனமும் இல்லை புவனா. இளம் பிஞ்சின் வாழ்க்கைக்கு வழிவகை செய். அவர்களை இந்தக் குழந்தையை தங்களின் உள்ளங்கைகளில் வைத்து தாங்க வை!!!



இவ்வளவு பின்புலமும் உனக்கு இருந்து என்ன பயன்??? பயன்படுத்திக் கொள்.. உன் பின்புலத்தைப் பயன்படுத்திக் கொள்.. உனது பின்புலத்தைக் கொண்டு இவர்களை அடித்துத் தான் அடக்க வேண்டும் என்றால் அடக்கிவிடு. ஒடித்துத் தான் நொறுக்க வேண்டும் என்றால் நொறுக்கிவிடு. அந்தக் குழந்தையின் நலன் தான் உனக்கு முக்கியம். அதனால் ஆயுதம் ஏந்த வேண்டும் என்றாலும் தயங்காமல் ஏந்திவிடு. அப்படியாவது அந்தக் குழந்தைக்கு நல்ல காலம் பிறக்கட்டும்! ஆம், அவளுக்கு நல்ல காலம் பிறக்கும், கண்டிப்பாகப் பிறக்கும்! அதை நான் மனம் குளிரக் காண்பேன்!” என மனதிற்குள் புலம்பிவிட்டு ஒருவாறுத் தெளிவுப் பெற்று தனக்குள் சூளுரைத்துக் கொண்டு, கண்களைத் திறந்தவர், கண்ணீரைத் துடைத்தார். மேசையில் இருந்தத் தண்ணீர் குடுவையை எடுத்துக் குளிர்ந்த நீரைப் பருகினார்.



“மிஸ்டர் சற்குணபாண்டியன் நான் சொல்லப் போறதை நீங்க அமைதியாவும் நிதானத்தோடும் கேட்கனும், சரியா?” என வினவினார் டாக்டர் புவனேஸ்வரி. சற்குணபாண்டியன் சரி என்பது போலத் தலை அசைத்தார்.



“நீங்க மரபணுக் குறைபாடுகளைப் பத்திக் கேள்விப் பட்டு இருக்கிங்களா?” என அனைவரையும் பார்வையிட்டுக் கொண்டே வினவினார் புவனேஸ்வரி. இல்லை எனத் தலை அசைத்தார் சற்குணபாண்டியன்.



“ஒரு கரு எப்படி உருவாகுதுன்னு உங்களுக்கு தெரியுமில்ல? ஆணோட உயிர் அணுவும், பெண்ணோடு கருமுட்டையும் சேர்ந்து தான் ஒரு கரு உருவாகி, பத்து மாசமோ இல்லை அதுக்கு சில நாட்கள் குறைவாகவோத் தாயோட வயிற்றில் வளர்ந்து, குழந்தையா இந்த உலகத்திக்கு வருது. அப்படி பிறக்கிறக் குழந்தைங்க எல்லாம் முழு ஆரோக்கியத்தோடப் பிறக்கிறதில்லை. சிலக் குழந்தங்க ஊனமாப் பிறக்கும். அதுக்கு நிறைக் காரணங்கள் உண்டு. அதுல ஒன்று “ஜெனிட்டிக் டிஸார்ட்ர்”. உங்களோட உடம்பல இருக்கிற வியாதிகள், குறைபாடுகள் எல்லாம் உங்களோடக் குழந்தங்களுக்கு வரதுக்கான சாத்தியக் கூறுகள் கிட்டத்தட்ட 99%. ஆனா உங்க விஷயத்திலப் பிரச்சன அது இல்லை, பல தலைமுறை உறவுகள். வெளிநாடுகளில் ரீசண்டா நடத்தின ஆய்வுகள் மூலம் கண்டு பிடிச்சிருக்காங்க. ரத்த சொந்தத்தில் திருமணம் செஞ்சிக்கிட்டத் தம்பதிகளோடுக் குழந்தைகள் மன வளர்ச்சியிலோ உடல் வளர்ச்சியிலோ பாதிப்பு அடையாராங்க. உங்க பேத்திக்கும் இப்ப அது தான் நடந்து இருக்கு. தலைமுறை தலைமுறையா ரத்த சொந்தத்தில உங்க வீட்ல எல்லாரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கிங்க. அதோடப் பலனத்தான் உங்க பேத்தி அனுபவிக்கப் போறா..



மத்தப் புள்ளங்க நல்லாதானே இருக்குன்னு நீங்கக் கேக்கலாம். எல்லாக் குழந்தைங்களுக்கும் இப்படி இருக்கும்னு சொல்ல முடியாது. ஆனா இருக்கிறதுக்கான சாத்தியக் கூறுகள் ரொம்ப ஜாஸ்தினு தான் சொல்றோம்.



புரியலியா? உங்க எல்லாருக்கும் புரியுற மாதிரியே சொல்றேன். உங்க கைகள் இருக்கு, அதுல கைக்கு 5 விரல்கள் இருக்கும், சில பேருக்கு 6 விரல்கள் கூட உண்டு. நடுவிரல் ஏன் பெருசா இருக்கு? சுண்டு விரல் ஏன் சிறுசா இருக்கு? ரெண்டு விரலும் ஒரு கைல தானே இருக்கு? அப்படின்னு நான் உங்களப் பாத்து கேள்விக் கேட்டா, நீங்க என்ன பதில் சொல்விங்க? சில விஷயங்கள் நமக்கு அப்பார்பட்டது, தடுக்க முடியாது. ஆனா நம்மளப் பாதுகாத்துக்குலாம்.



இதுக்கானத் தீர்வு ரத்த சொந்தத்திலும், நெருங்கின சொந்தத்திலும் திருமணம் செஞ்சிக்காம இருக்குறது தான். இந்த மாதிரி திருமணங்கள், இரு மணமும் இணைஞ்சு செஞ்சிக்கிறதில்லை! அப்படி செய்ய சொல்லப்படுறக் காரணம் ‘சொந்தம் விட்டுப் போகக் கூடாதுனு சொல்றது’ அது சுத்தப் பொய். உண்மையானக் காரணம் சொத்து கைவிட்டுப் போகக் கூடாதுனு தான் இப்படிப் பட்ட உறவுமுறைத் திருமணங்கள் நடந்தது. ஏன் இன்றளவும் நடந்துட்டு தான் இருக்கு. இதனால் பாதிப்பு அடையறது நம்ம வருங்காலச் சந்ததிகள் தான்.



நான் கதை அளக்கல, இது தான் நிதர்சனம். உயிரில்லாச் சொத்துக்களுக்குக் குடுக்குற மரியாதையை, உயிருள்ள நம்ம வருங்காலச் சந்ததிகளுக்குக் குடுங்க.

ஒரு குழந்தைக்கு அதோடப் பெத்தவங்கத் தர சொத்து என்ன தெரியுமா!? ஆரோக்கியமான உடலும், தெளிவான் அறிவும் தான். இதுல நீங்க எத உங்கப் பேத்திக்குக் குடுத்திருக்கிங்க? யோசிங்க சார்.



நான் வியாக்கியானம் பேசல! நான் சொல்றதில உங்களுக்கு நம்பிக்கை இல்லன்னா, வேற யாராவது பெரிய டாக்டரைக் கேட்டுப் பாருங்க. அவங்களும் இதை தான் சொல்வாங்க.” என நீளமாகப் பேசி முடித்தார் புவனேஸ்வரி.



அங்குக் குண்டூசி விழுந்தால் கூடக் கேட்கும் அளவிற்கு அந்த அறையில் அமைதி நிலவியது. எவரும் கேள்விகளைக் கேட்க முடியாத படி பதில் சொல்லியாயிற்று. இனி என்ன?



சங்கர் அந்த அமைதியைக் கலைத்தார். “சற்குணபாண்டியன், இப்ப உங்களுக்குத் தெளிவாப் புரிஞ்சிருக்கும். முடிஞ்சிப் போனதப் பத்தி இனி யோசிச்சிப் பிரயோஜனம் இல்ல. ஆக வேண்டியதப் பாக்கலாம். ஏம்மா புவனா, இந்தக் குழந்தையோடக் கால சரி பண்ண முடியுமா?” என சற்குணபாண்டியன் தன்மையாகப் போசிவிட்டு, புவனேஸ்வரியிடம் வினவினார்.



“முடியும் சித்தப்பா வெளிநாடுகளுல அதுக்கான ஆராய்ச்சில தீவிரமா ஈடுப்பட்டிட்டு இருக்காங்க. அதோட இப்ப சிகிச்சையத் தாங்குற வயசோ, தெம்போ குழந்தைக்கு இல்ல. ஆனாக் கண்டிப்பா குணப்படுத்த முடியும்” என்றார் புவனேஸ்வரி ஆணித்தரமாக.



“அப்பறமென்ன சற்குணபாண்டியன்? உங்க பேத்தியக் கண்டிப்பா குணப் படுத்திடலாம். கவலைப்படாதிங்க… நாங்க எல்லாரும் இருக்கோம். அடிக்கடி உங்க வீட்டுக்கு வந்துக் குழந்தையப் பாத்துட்டுப் போறோம். புவனாவும், குணாவும் ரெகுலரா வந்துக் குழந்தையச் செக்கப் பண்ணுவாங்க. நீங்க குழந்தைய நல்லபடியாப் பாத்துக்குங்க. பாத்துப்பிங்க? உங்களுக்கு சொல்லனும்மா என்ன?” எனப் புன்னகையுடன் சற்குணபாண்டியனை சமாதானப் படுத்தினார்.



ஆனால் அவரது கண்கள் வேறு செய்தி சொன்னது. “குழந்தைக்கு எதாவது ஆச்சு நீயும், உன் குடும்பமும் தொலைஞ்சிங்கடா!!!” என்பது தான் அந்த செய்தி. அதனை மிகச் சரியாகப் படித்தார் சற்குணபாண்டியன்.



“எங்கப் புள்ளய எப்புடி நாங்க விட்டுக் குடுப்போம்? என்னத்தேன் கோவமும், ஏமாத்தமும் இருந்தாலும் அது எங்க ரத்தமில்லெ! நாங்க சூதானமாப் பாத்துக்குவோம். நீங்களும் அப்ப அப்ப வந்துப் பாத்துப்புட்டு போங்க.. எங்கெளுக்கும் கொஞ்செம் ஆறுதலா இருக்கும்.” எனப் பதில் சொல்லியவாறுத் தனதுக் குடும்பத்தினரை நோக்கி நடந்தார்.



“அழகியப் பாக்கலாமா?” என வினவினான் சுந்தரபாண்டியன்.



“கண்டிப்பா சார். வாங்கப் போகலாம், இன்னும் கண் முழுச்சிருக்க மாட்டாங்க!” என பதிலளித்தவாரே வெளியே நடந்தார் டாக்டர் புவனேஸ்வரி. அனைவரும் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.



“சார், ரொம்ப அமைதியாப் போராங்களே? இது இவங்க நேச்சர் இல்லயே சார்? குழந்தைய ஏதாவதுப் பண்ணிடப் போறாங்க சார்? இவனுங்க கோவமா இருக்குறப்ப விட, அமைதியா அதுவும் ரொம்ப அமைதியா இருக்கிறதப் பாத்தா தான் எனக்கு அடிவயிறு கலங்குது..” எனப் பயந்தபடிக் கூறினான் டாக்டர் குண.



“பயப்பட வேணாம் குணா, இவனுங்களோட குடுமி இப்ப நம்ம கையில இருக்கு. அது அவனுங்களுக்கும் நல்லாத் தெரியும். ஆனாலும் அவனுங்க மேலயும் குழந்தை மேலயும் எப்பவும் ஒரு கண்ணு இருக்கனும், அதான் சேஃப்” என்றார் சங்கர்.



தனக்கு வெகு அருகில் விசும்பல் சத்தம் கேட்டகவும், தன் நடையை லேசாக நிறுத்தித் திரும்பிப் பார்த்தார் டாக்டர் புவனேஸ்வரி. வடிவாம்பாள் தான் விசும்பிக் கொண்டும், அழுகையை தனது முந்தானையில் துடைப்பதுமாக இருந்தார். அவரின் அருகில் சென்ற புவனேஸ்வரி,



“என்னாச்சும்மா? ஏன் அழறிங்க?” என அன்பாக வடிவாம்பாளின் தோள் தொட்டு வினவினார். இது தான் புவனேஸ்வரி, எதிரிக்கும் அடைக்களம் கொடுத்து அரவணைக்கும் சுபாவம்!



“இந்தப் புள்ளய எப்புடி எம்மவ எடுத்து ஆளாக்குவா? இத எப்புடி கரச் சேக்குறது? வயசு வாரப்ப கூனோக் குருடோ நொண்டியோ மொடமொத்தென் இவளப் பொண்ணுக் கேட்டு வருவாய்ன்! என்னெப் பண்ண எல்லெம் எம்மவ விதி” எனச் சலித்தபடி மூக்குறிஞ்சினார் வடிவாம்பாள்.



புவனேஸ்வரிக்கு சிரிப்பு வந்துவிட்டது. பின்னே சில மணிநேரம் முன்புப் பிறந்தக் குழந்தையின், திருமணம் வரை இப்படித் தான் என்று நிச்சயத்துப் பேசிவிட்டனரே! அறியாமை எனும் கொடும் பேய் அவர்களை ஆட்டுவிக்கிறது. ம்ம்ம்ம்ம் !!



“அப்படி சொல்லாதிங்கம்மா.. அவ ரொம்பத் திறமையானக் குழந்தையா இருப்பா.. அவளுக்கு நல்ல மண வாழ்க்கை அமையும். நல்லா இருக்கிறப் பையன் வந்துப் பொண்ணுக் கேப்பான் பாருங்க?” என்றார் புவனேஸ்வரி புன்னகையுடன்.



“ம்க்கும் வியாக்கியானம் பேச நல்லாத்தேன் இருக்கும். நான் பாக்குறேன் எந்த சீமையிலப் பொறந்த ராசக்குமாரன் வந்து இவளக் கொத்திக்கிட்டுப் போறான்னு” வடிவாம்பாள் நீட்டி முழக்கினார்.



“நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும், அவளுக்கான ராஜக்குமாரன் ஆல்ரெடி பிறந்திருப்பான். அந்த அழகு ராஜக்குமாரன் இந்த சின்னக் குட்டியப் பொண்ணுக்கேட்டு வருவான். உங்களவிட அந்தஸ்துலப் பல மடங்கு உயர்ந்து நிப்பான். அவ மேல உயிரே வச்சிருப்பான் பாருங்க. உங்க பேத்தி ராஜகுமாரியா வலம் வருவா. நம்பெல்லாம் பாக்கதானேப் போரோம். நாம அந்த ராஜக்குமாரனப் பத்தி இப்ப பேசுரோமில்லையா?? அவன் எங்க இருந்தாலும் இப்ப அவனுக்குப் புரையேறும் பாருங்க” எனச் சிரித்தபடி சொன்னார் புவனேஸ்வரி.



“க்க்க்க்கும்ம்ம் க்க்க்க்கூம்ம்ம் க்க்க்க்கு க்க்க்க்க்கூஊ” புரையேறியது அந்த ஒன்பது வயது சிறுவனுக்கு!!!







கருப்பு அழகி வருவாள்…







































 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் கருப்பழகி

அத்தியாயம்
– 4

“க்க்க்க்குக்க்கூக்க்க் க்க்க்க்கூம்ம்ம் க்க்க்க்கு க்க்க்க்க்கூஊ” புரையேறியது அந்த ஒன்பது வயது சிறுவனுக்கு.. கையில் இருந்த பாத்திரத்தைக் டைனிங் டேபளில் அவசரமாக வைத்துவிட்டு, தன் மகனிடம் விரைந்து வந்து தலையில் லேசாகத் தட்டிய சுகுணா “என்ன கண்ணா மெதுவாச் சாப்பிடக் கூடாதா, புரையேறிடுச்சுப் பாரு? இந்தாடாம்மா கொஞ்சம் தண்ணிக் குடி” என்றார் அன்புடன்.



தன் தலையில் இருந்து தாயின் கரத்தைப் பற்றி விலக்கி விட்டு, தனது இருக்கையில் இருந்து எழுந்து கண்ணாடி டம்பளரில் தண்ணீரை நிரப்பி, தாயை ஓரக் கண்ணால் பார்த்துவிட்டுப் பருகினான். தண்ணீர் குவளையை ஏந்தியிருந்த சுகுணாவின் கைகள் அந்திரத்திலேயே நின்றன. சில வினாடிகள் மகனை வெறித்தவர் டைனிங் டேபளில் குவளையை வைத்துவிட்டு, ஓசைபடாமல் நகர்ந்து மேல் தளத்திற்கு சென்று விட்டார். தன் புகுந்த வீட்டுச் சொந்தங்களின் கேலி சிரிப்பு அவரைத் துரத்துகிறது என்பதை அவர் அறிவார்.



“ஹா ஹா ஹா மாம் செம நோஸ்கட் மாம், ஷிவ் அப்படியே டேட் மாதிரி!!!” என்றாள் வசுந்தராதேவி, சுகுணாவின் நாத்தனார்.



“பின்ன ஷிவ் நம்ப ரத்தமாச்சே!! அவன் அம்மா லோ கிலாஸா இருக்கலாம், பட் ஷிவ் நம்பலோட ப்ரஸ்டீஜ் ஐகான். அவன் நம்ம சொசைட்டிக்கு பழகிட்டான். ஹீ காண்ட் அஃபொர்ட் டு டாக் டு லோக் க்லாஸ் பீப்பில்” என முகம் சுழித்துச் சொன்னார்.



ஷிவ்!! தன் தாய் வைத்துவிட்டுச் சென்ற கண்ணாடி குவளையை பார்த்தபடிச் சாப்பிட்டு விட்டு எழுந்தவன், டைனிங் டேபிளில் நடுநாயகமாக அமர்ந்து இருந்த தன் தாத்தாவை, ஒரு பார்வைப் பார்த்துவிட்டு நடக்கலானான்.



“வாட்ஸ் திஸ் ஷிவ்? டோண்ட் யு ஹேவ் டேபிள் மேன்ர்ஸ்? இப்படி தான் யார் கிட்டயும் சொல்லாமப் போவியா? உன் மாம்மோட லோ கிலாஸ் பிஹேவியர் உனக்கும் வந்துடுச்சா? இதத் தான் உன் லோ கிலாஸ் மாம் உனக்கு சொல்லிக் குடுத்தாளா?!” என இளக்காரமாக வினவினாள் வசுந்தரா.



தன் நடையை நிறுத்தி அவர்களை நோக்கித் திரும்பியவன், தன் இருக் கைகளையும் தனது பேண்ட் பாக்கெட்டுகளில் விட்டுக் கொண்டு, ஸ்டைலாக நின்றவன் “ஆண்டி! என்னோட பாடியில் உங்க ஹை கிலாஸ் சொசைட்டி ப்ளட் தான் ஓடது. சோஓஓஓ….உங்களுக்கு இருக்கிற அதேத் திமிர் தான் எனக்கும் இருக்கு!!! அஃப்கோர்ஸ், உங்களவிடை எனக்குக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கு பிகாஸ், நான் உங்க டாட், அதாவது என்னோட தாத்தா மாதிரி இல்லையா??? அண்ட், ஐ டோண்ட் லைக் பீப்பிள் குயஷினிங் மீ!! காட் இட்!!” என அலட்சியமாகக் கூறிவிட்டு திரும்பி வேகமாக நடந்தான்..



சற்று தூரம் நடந்தவன் நின்று லேசாகத் திரும்பி “என்னோட மாம்ம டீஸ் பண்றது இதுவே ஃபர்ஸ்ட் & லாஸ்ட் டைமா இருக்கனும். புரியுதா?” என அழுத்தமானக் குரலில் எச்சரித்துவிட்டு 2 அடி எடுத்து வைத்தான். அது தனக்கும் சேர்ந்து தான் எனப் புரிந்து கொண்ட ஷிவ்வின் பாட்டியான மேகவதி பல்லைக் கடித்தார்.



வசுந்தரவாவிற்கு கொதித்துக் கொண்டு வந்தது “பொடி பைய்யன் என்ன பேச்சி பேசறான்! யாரும் எதுவும் கேள்விக் கேக்க மாட்டேங்கிறாங்க? மாம் டேட் ரெண்டு பேரும் கண்டுக்கல???” என மனதிற்குள் கடுத்துவிட்டு. “உன் அம்மா பெரிய இவளா? அஃப்ட்ரால் ஒரு பேங்க் மேனஜரோட பொண்ணு அவ!! அவளுக்கு மரியாதை ஒருக் கேடா?? நான் யார் தெரியுமா? இண்டிஸ்ரியலிஸ்ட் தர்மேந்திரனோட டாட்டர். திரன் குரூப் ஆஃப் கம்பெனிஸோட ஒன் ஆஃப் தி ஹயர்.” என்றார் கர்வத்துடன்.



வசுந்தராவை இளக்காரமாக நோக்கிய ஷிவ் நிதானமாக “திரன் குரூப் ஆஃப் கம்பெனிஸோட ஒன் ஆஃப் தி ஹயெர்!! ம்ம்ம்ம்? ஆண்டி நீங்க ஹயரா?? உங்க மேரஜ் அப்ப உங்களுக்கு சேர வேண்டிய ஷேர்ஸ் மொத்தமும் உங்களுக்கு ப்ராப்பர்டீஸாவும், ஸ்விஸ் பேங்க்ல கரண்சியாவும் டிபாசிட் பண்ணியாச்சின்னு தாத்தா சொன்னார்.



மிஸஸ். வசுந்தராதேவி ரகுவரன், அஃப்ட்ரால் ஒன் அமாங் தி 12 பாட்னர்ஸ் ஆஃப் ராம் இண்டஸ்ட்ரீஸ். பட் நான், திரன் குரூப் ஆஃப் கம்பெனிஸோட ஃபுயுட்சர் சேர்மன் & எம்.டி, ஷிவ்! ஷிவேந்திரன்!!! கிரேட் கிராண்ட் சன் ஆஃப் பிஸ்ணஸ் சாம்ராட் கஜேந்திரன், கிரேண்ட் சன் ஆஃப் தி க்ரேட் இண்டிஸ்ரியலிஸ்ட் தர்மேந்திரன அண்ட் சன் ஆஃப் பிஸ்ணஸ் டைகூன் ராஜேந்திரன். அண்ட் நோ டௌட்ஸ், ஐ வில் பி தி ஃபுயுட்சர் பிஸ்ண்ஸ் சாம்ராட்!!!



மிஸஸ்.சுகுணா ராஜேந்திரன், இந்த சாம்ராட் ஷிவேந்திரனோட மாம்.. இப்ப சொல்லுங்க என் மாமோட ஸ்டேடஸ் கிட்ட உங்களால நெருங்க முடியுமா?? முடியாது இல்லையா!! சோ யு பெட்டர் பிஹேவ் ப்ராப்பர்லி டு மை மாம்!! அதர்வைஸ்… நான் சொன்னது எல்லாத்தையும், உங்க மைண்டுல ரெஜிஸ்ட்டர் பண்ணிக்கோங்க ஆண்டி, பிகாஸ் நான் எதையும் ஒரு தடவ தான் சொல்லுவேன், தாத்தா மாதிரி. தேர் வில் பி நோ செகண்ட் சான்ஸ் ஆஃபர்ட் அட் எனி காஸ்ட் ஃபொர் எனிதிங்!!!” என ஆளுமையுடன் மிரட்டிவிட்டு நிமிர்வுடனும், வேக நடையுடனும் சென்றான் 9 வயது சிறுவனான ஷிவ் என்கிற ஷிவேந்திரன்!!!



சென்னை அடையாரில் 10 ஏக்கர் நிலப் பரப்பில், புராதனமும் நவீனமும் ஒன்றுக்கு ஒன்று போட்டிப் போட, இயற்கையும் செயற்கையும் சேர்ந்து எழில் கொஞ்ச, இரும்புக் கோட்டையென 12 அடி மதில் சுவர்களைக் கொண்டும் தன்னுடைய அழகை மறைக்க இயலாது பட்டத்து யானை போல் கம்பீரமாக நின்றது சுபிக்ஷ்ம் எனும் 3 அடுக்கு மாளிகை. இத்தனைக் களேபேரங்களும் அங்கு தான் நடந்தேறின.



கஜேந்திரன் சிவகாமி தம்பதியர், குல தொழிலான விவசாயம் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை எனத் தன் சொந்த ஊரிலிருந்து தன்னுடைய பங்கு சொத்துக்களை விற்று புலம் பெயர்ந்து மதராசபட்டிணத்தில் தொழில் தொடங்கினார். “இடமாற்றம் நல்ல உருமாற்றம்” ஆனது. கஜேந்திரன் மோட்டார் உதிரிப் பாகங்கள் செய்யும் பட்டறை ஒன்றைத் தொடங்கினார். அவருடைய அயராத உழைப்பும், தொழில் நேர்த்தியும், வாழ்கையில் முன்னேறிக் காட்ட வேண்டும் என்ற வெறியும் அவரை அசுர வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கச் செய்தது. பட்டறை தொழிற்சாலையானது, உற்பத்தி பெருகியது! லாபம் கூடியது!! வி.ஐ.பி அந்தஸ்து கிட்டியது. அவர் நினைத்ததைச் சாதித்துவிட்டார். அவர் நினைக்காதவற்றையும் சாதித்தார். பாரத துணை கண்டம் தாண்டி, கடல் கடந்து வாணிபம் செய்தார்!!! அவர் தொட்டது எல்லாம் பொன் ஆனது.



அவ்வாறாக கஜேந்திரன் “திரன் குரூப் ஆஃப் கம்பெனிஸிற்கு” வித்திட்டார். உதிரி பாகத் தொழிலை விஸ்தரிப்பு செய்ததோடு, பல புதிய தொழில்களையும் தொடங்கி அதிலும் வெற்றிக் கொடி நாட்டி, தொழில் சாம்ராஜ்யத்தின் ராஜா என்ற அடையாளத்தை தனக்கு ஏற்படுத்துக் கொண்டார். திரன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் பெரிய ஆலமரமாக வளர்ந்து நின்றது. அந்த ஆல மரத்தின் விழுதுகள் மேன்மேலும் விரிந்து படர்ந்தன! அதன் வேர்கள் அகலமாகவும், ஆழமாகவும் புதைந்து பூமியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, தனக்கு அருகில் இருக்கும் சிறு புல் பூண்டைக் கூட முளைக்கவிடாதும் பார்த்துக் கொண்டன.



கஜேந்திரன் சிவகாமி தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் சுரேந்திரன், சுமித்ரை மற்றும் தர்மேந்திரன். சிவகாமி அம்மையார் மிகவும் அன்பானவர், அமைதியானவர், அழகானவர், ஏழ்மையானக் குடும்பத்தில் பிறந்தவர், புதிதாக வசதிகள் வந்த போதிலும் பழையன யாவையும் அழியாமலும், மறவாமலும் பார்த்துக் கொண்டார். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே அவருடைய அவா. அவருடையக் கணவர் கஜேந்திரன் அவருக்கு நேர்மாறான குணாதிசயங்களைக் கொண்டவர். அதிகாரத்துடனும், ஆளுமையுடனும் வலம் வரவே அவர் விரும்பினார். பழைய வாழ்க்கையை எள்ளளவும் எண்ணிப் பார்க்கவும் அவர் விழைந்ததில்லை!



“பழையனக் கழித்தல்

புதியன புகுத்தல்” தொழிலிலும், வாழ்கையிலும், இது தான் அவருடைய கோட்பாடாக இருந்தது. கணவனின் நடவடிக்கைப் பிடிக்காத போதிலும் அவரை தடுக்குவோ, கண்டிக்கவோ முற்படாமல் ஒதுங்கி நின்றார். அதற்கானக் காரணங்களை அவர் அறிவாரே!!!



கஜேந்திரன் மிகவும் வசதியான குடும்பத்தில் நான்கு அண்ணன்மார்களுடனும், மூன்று தமக்கைகளுடனும் பிறந்தவர். வீட்டின் கடைக்குட்டி என்பதால் செல்லம் அதிகம். இதுவே அவருடைய பிடிவாத குணத்துக்கு வித்திட்டது. எதனையும் தன்னுடைய தாயின் வாயிலாகத் தந்தையிடம் காரியம் சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியம் அவருக்கு இருந்தது. விவசாயத்தில் நாட்டமில்லை, மனித வாழ்வின் அடுத்தக் கட்ட வாழ்க்கைக்கு உகந்த தொழிலை செய்யவே விரும்பினார்.



கஜேந்திரனின் தந்தைக்கு மகனின் அறிவுக் கூர்மையையும், வேகத்தையும், விவேகத்தையும் கண்டு மனதினில் நிலை கொள்ளாப் பெருமை. தன்னுடைய மகனுக்கு விரைவில் திருமணம் செய்து, அவனுக்குப் பிடித்தத் தொழிலை ஏற்படித்திக் கொடுக்க வேண்டும் என்று சந்தோசமாக மனக் கணக்கு போட்டார்.



“இன்னார்க்கு இன்னார் என்று

எழுதி வைத்தானே தேவன் அன்று”



இறைவனின் கணக்கு வேறாகிப் போனதோ! அந்தோ விதியே!!



கஜேந்திரனின் ஊருக்குள் மைனர் போல் கைகளில் தங்க காப்பு, கழுத்தில் வைர லாக்கெட்டுடன் கூடிய செயின் சகிதாம் மிடுக்குடனும் ராஜ தோரணையுடனும் ரேக்ளா வண்டியில் வளம் வருவார். கன்னிப் பெண்களின் மனதை சலனப்படுத்தும் அழகுடனும், ஆண்மையுடனும், அந்தஸ்துடனும் உலவினார். அதில் அவருக்கு அவ்வளவு கர்வம். அழகு, அந்தஸ்து, சொத்து, சுகம், சொந்தம், பந்தமென அனைத்தையும் அவர் முழுமையாகப் பெற்றிருப்பதாகவும், அவருக்கு நிகர் எவரும் இல்லை என்ற ஆணவமும், தலைக்கனமும் அவரது தலையில் ஏறி, தரையில் கால் பதியாமல் நடக்கச் செய்தது. அனைவரும் தன்னை எப்போதும் அண்ணாந்து தான் பார்க்க வேண்டும் என்ற ஆணவம் அவருக்கு உண்டு. ஆண்டவன் உன்னுடைய ஆணவத்தை அடக்கி, தலைக்கனத்தை இறக்கி, உன்னிடம் இருப்பவற்றை எல்லாம் பிடுங்கிக் கொள்கிறேன் பார் என்று எண்ணமிட்டாரோ!!



கஜேந்திரனின் வாழ்வில் சருக்கலை சந்தித்தார். அந்த சருக்கலால் தன் வாழ்வின் பாதை முற்றிலுமாக மாறப் போவது தெரியாமல் விருப்பத்துடன் அதனில் சிக்கிக் கொண்டார்.



அவரது விருப்பமான சருக்கல் தான் சிவகாமியின் மேல் கொண்ட காதல்!!! பக்கத்து ஊர் கோயில் திருவிழாவில் பார்த்துவிட்டு தலை சுற்றிப் போனார் சிவகாமியின் அழகிலும் வனப்பிலும். இயற்கையிலேயே தனக்கு தான் எல்லாம் முதன்மையாகக் கிடைக்க வேண்டும் என்ற குணம் இருப்பதனால் சிவகாமியை அவர் தான் மணக்க வேண்டும் என்று மனதினில் உறுதி பூண்டார். பின்னே சுற்றுவட்டாரத்தில் அப்படி ஒரு அழகியை எவரும் கண்டிலரே!!! அந்த 20 வயது இளங்காளை 16 வயது பருவமங்கையை தன் உடைமையாக்கிக் கொள்ள அதன் மனமும் உடலும் பரபரத்தது.



“எண்ணிரண்டு பதினாறு வயது

அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா

காதல் கொண்ட மனது”



அவரது காதல் மனம் சிவகாமியை நோக்கி சுகந்தமாக ஆடியது. தன்னவளைப் பற்றிய விவரங்கள் யாவையும் மறநாள் காலையிலேயே திரட்டிவிட்டார். அவ்வளவு வேகம்!!!! அது காதல் தந்த மோகம்!!! பின்னே அவர் கள்ளுண்ட நரி போல் அல்லவா காதல் போதையில் சுற்றி வந்தார். விஷயத்தை ஆறப் போடாது உடனடியாகத் தனது தாயிடம் கூறினார். அவருக்கு எங்கும் வேகம் எதிலும் வேகம்.



கஜேந்திரனின் காதல் விவகாரம் அந்த வீட்டில் புயலைக் கிளப்பியது. கஜேந்திரனின் தந்தை, நம் அந்தஸ்துக்குச் சரிவராது! முடியவே முடியாது என கர்ஜித்தார். கஜேந்திரனின் தாயோ மகன் பக்கம் நிற்பதா அல்லது கணவன் சொல் கேட்பதா என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார். உடன் பிறப்புக்களும் கடினமாக எதிர்த்துச் சண்டையிட்டனர். இவை யாவும் கஜேந்திரனின் முன்பு பயனுற்று போனது தான் நிதர்சனம்.
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“ஒடித்து வளர்க்காத முருங்கையும்

அடித்து வளர்க்காத பிள்ளையும் உருப்படாது”



என்பது எவ்வளவு உண்மையான வாக்கு என மனதிற்குள் மகனின் பிடிவாதத்தை நினைத்து வெதும்பினார் கஜேந்திரனின் தந்தை.



திருமணம் என முடிவான பின் தாமதிப்பானேன் எனக் காலில் ரெக்கை கட்டாத குறையாகப் பறந்தனர் கஜேந்திரனின் குடும்பத்தினர். பெண் பார்த்து, பொட்டிட்டு, பூவைத்து, பரிசம் போட்டு இன்று திருமணமும் முடித்தாயிற்று.



கஜேந்திரன் முகத்தில் கர்வத்துடனும் மனதினில் பெருமையுடனும் தன் வீட்டின் வாயிலில் தங்களுக்கு ஆரத்தி சுற்றுப் படுவதற்காக காத்து இருந்தார் தன் இணையாளுடன். ஊர் யாவும் அவர்களின் பொருத்தத்தை விழியகல வியப்புடனும் பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தது.



“அழகனுக்கு ஏற்றப் பேரழகி தான்”



“த்த்த்த்த தத த தட்ட்ட்ட்ட்ட்ட் த தத த தட்ட்ட் த தத த தட்ட்ட்” எனச் சத்தத்தை எழுப்பிக் கொண்டு ஒரு பெரிய மரப் பெட்டி கஜேந்திரனின் கால்களுக்கு அருகில் வந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து “சப்ச்ச்ச்ச் ப்ச்ச்ச்ச்ப்ப்ப்ப்ச்ச்ச்ச்ப்ச்ச்ச்ச் ப்ச்ச்ச்ச்ச்ச்” ஒரு காகிதக் கத்தையும் பெட்டியின் மேல் விழுந்தது.



கஜேந்திரனின் தந்தை, அவரும் சிவகாமியும் பூட்டியிருக்கும் நகைகளைக் கழட்ட சொன்னார். மறுபேச்சின்றி இருவரும் கழட்டினர். நகைகளை வீட்டு வேலையாளைக் கொண்டு வாங்கச் சொன்னார். கஜேந்திரனுக்கு புரிந்துவிட்டது! இருந்தும் தந்தையின் வாயிலாக வரட்டும் என்று காத்திருந்தார்.



“இந்த மரப் பெட்டியும், அந்தப் பத்திரத்தில் இருக்கும் அரைக் காணி நிலமும், ஒரு குடிசையும் தான் என் சொல் பேச்சுக் கேட்காத மகனான உனக்குத் தந்தையாக நான் கொடுக்கும் சொத்து, எடுத்துக் கொள். திறமை இருந்தால் பிழைத்துக் கொள் பார்க்கலாம்!!! இனி இந்த வீட்டு வாசல் படி மிதிக்கும் அருகதையும், உரிமையும் உனக்கும் உன் பக்கத்தில் இருப்பவுளுக்கும் இல்லை. வெளியே போ!” என்று வாசலை நோக்கி கை காட்டிவிட்டு தன் குடும்பத்தினரை வீட்டிற்குள் கூட்டி சென்று விட்டார் கஜேந்திரன் தந்தை.



அவமானத்தில் முகம் சிவந்து சுருங்கிப் போனது கஜேந்திரனுக்கு. மரப் பெட்டியையும், பத்திரத்தையும் எடுத்துக் கொள்ள அவருக்கு விருப்பமில்லை. ஆனால் வாழ்வாதாரமே இல்லை என்றானப் பிறகு மான அவமானம் யாவையும் காற்றில் பறக்கத் தான் விட வேண்டும். தன் கண்களை இறுக மூடிக் கொண்டவர், தன்னை நிலைப் படித்துக் கொண்டு வாழ்க்கையில் முதன் முறையாகத் தலை குனிய முற்பட்டார்..



சிவகாமி கணவனை முந்திக் கொண்டார். தன்னால் தான் இந்த அவமானமும், அவல நிலையும் தன் கணவனுக்கு என்றுப் புரிந்து கொண்டார். தன்னால் முடிந்த மட்டும் அவரை மேலும் காயப்படாமல் பார்த்துக் கொண்டு அவரின் காயத்துக்கு மருந்தாக, தான் இருக்க வேண்டும் என மனதினில் எண்ணிக் கொண்டே பெட்டியையும், பத்திரத்தையும் குனிந்து எடுத்துக் கொண்டார்.



புது மனைவி, பத்திரம், பெட்டி சகிதாம் ஊரார் கேலிப் பேச்சுக்களையும், பார்வைகளையும் சகித்துக் கொண்டே அந்த ஒட்டு குடிசைக்கு வந்தார் கஜேந்திரன். தன் காதல் மனைவியைத் திரும்பி பார்க்கவுமில்லை, ஒரு வார்த்தைப் பேசவுமில்லை. அன்று இருவரும் உணவின்றி உறக்கமின்றி, குடிசையின் கூறைகளை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.



மறுநாள் காலையில் கஜேந்திரனின் உற்ற நண்பன் அவர்களைத் தேடி வந்தார். நடந்தது யாவும் தனக்கு தெரியும் என்றும், இங்கிருந்தால் உங்களுக்கு வளர்ச்சி இருக்காது. பிடிக்காத தொழிலை செய்து என்ன சாதிக்க முடியும்? இந்த நிலத்தை விற்றுவிட்டு பட்டினத்தில் போய் விருப்பமானத் தொழில் செய்யுமாறு அறிவுரைக் கூறினார்.



நண்பனின் கூற்று சரியே என்று தன் நண்பனிடமே தன் நிலத்தை விற்றுவிட்டு மதராசப்பட்டிணத்திற்கு பயணப்பட்டனர் கஜேந்திரன் சிவகாமி தம்பதியர். ஒற்றை அறைக் கொண்ட வீட்டில் குடியேறினர். சிவகாமி குடிசையில் வாழ்ந்தவர், அவருக்கு ஓட்டு வீடு பெரிய விஷயமாகவேப் பட்டது. ஆனால் கஜேந்திரன் உள்ளே கொதித்த மனதை மறைத்துக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கினார்.



வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சி!!! கஜேந்திரன் எண்ணம் யாவும் அவருடைய தொழில் வளர்ச்சியிலேயேப் பதிந்திருந்தது. மறந்தும் அவர் காதல்(?) மனைவி பக்கம் திரும்பவில்லை. தொழில் தொடர்புகள் கிடைக்கப் பெற்ற பிறகு மற்றவர்களின் வாழ்க்கையின் மூலம் பாடம் கற்றார்.



பெண்ணின் அழகு, கண்ணீர், சிரிப்பு இவையாவும் ஆண்களைப் பலவீனப்டுத்தி வீழ்த்திவிடும் கூர்மையான ஆயுதங்கள். எவருக்கும் இரக்கம் காட்டக் கூடாது. எவரையும் நம்பாதே. தன் கையே தனக்கு உதவி. உனக்கு வேண்டியதை அடைய நீ என்ன யுக்தியை வேண்டுமானாலும் கையாளலாம். தொழிலில் ஜெழிப்பவன் தான் முதலாளி, தோற்பவன் கோமாளி. அவர் முதலாளியாகத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டார். இவை யாவும் அவரைச் சிவகாமியிடமிருந்து தள்ளி நிறுத்தியது.



உண்ணவதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே வீடு வந்தார். இது சிவகாமியை பாதிக்கவில்லை, சின்னஞ்சிறு வயதினிலே பெற்றோரை இழந்து வறுமையின் பிடியில் வாடி வதங்கிய இளங்கொடியாகத் தாய் வழி பாட்டியின் தயவில் வாழ்ந்த அவருக்கு, எதையும் எளிதில் ஜீரணிக்கும் மனப்பக்குவம் இருந்தது. இருப்பதைக் கொண்டு அமைதியடையும் குணமும் இருந்தது. ஆகையால் கஜேந்திரனின் போக்கு அவரை எள்ளளவும் பாதிக்கவில்லை. அதற்கு நேர் மாறாக, இவ்வளவிற்குப் பிறகும் கணவன் தன்னைக் கைவிடாமல் பாதுகாத்து, உணவும், உடையும், இருப்பிடமும் கொடுத்து தன்னை இரட்சிப்பதாகவே எண்ணி மகிழ்ந்தார்.



பாவம் அவருக்குத் தெரியவில்லை, தொழில் சம்ராஜ்யங்களில் குடும்ப அமைப்பின் மதிப்பும் மிகவும் முக்கியம் என்று. எத்துணைப் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டாலும் மனைவி என்பவள் ஒருத்தி மட்டுமே என்பது தொழில் சம்ராஜ்யத்தின் குடும்ப அமைப்புகளில் எழுதப்படா நியதி. எதிலும் எப்போதும் சில விதி விலக்குகளில் உண்டு, அதில் ஒருவராக இருக்க கஜேந்திரன் விரும்பவில்லை. கஜேந்திரனுக்கு மனைவி சிவகாமியின் மீது இப்போது விருப்புமில்லை வெறுப்புமில்லை. இன்னும் தான் ஏற வேண்டியப் படிகள் பல இருக்கின்றன, எனவேத் தன்னுடைய வாழ்க்கையைக் கேலிக் கூத்தாகிக் கொள்ளக் கூடாது என்பதில் அவர் மிகத் தெளிவாக இருந்தார்.

.

கஜேந்திரனுக்கு தன்னை நிலைப்படுத்துக் கொள்ள 5 வருடங்கள் தேவைப்பட்டன. ஆனால் சற்றும் தேங்கி நிற்கவில்லை, தான் உருவாக்கப் போகும் பெரும் சாம்ராஜியத்துக்கு பலமான அடித்தளத்தை உருவாக்கினார். அந்நிலையில் தான் தனது வருங்கால சாம்ராஜியத்துக்கு தன்னைத் தொடர்ந்து ஆளவும், தனக்குத் தோள் கொடுக்கவும் தனக்கு ஒரு ஆண் வாரிசு இல்லை என்பதை உணர்ந்தார். குடும்ப வாழ்விலிருந்து ஒதுங்கி இருந்ததும் நினைவிற்கு வந்தது. அப்போதும் அவர் சிவகாமிக்காக வருந்தவில்லை. தனது சாம்ராஜியத்துக்கு முடிஇளவரசனை உருவாக்கும் பொருட்டு குடும்ப வாழ்வில் ஈடுபட்டார் கஜேந்திரன்.



சிவகாமி கருவுற்றார். அப்பொழுது அவர்கள் சற்றுப் இரண்டு படுக்கைக் கொண்டப் பெரிய வீட்டில் குடியேறிருந்தனர். ஊரிலிருக்கும் தன் நண்பனிடம் மனைவியின் நிலையை எடுத்துச் சொல்லி ஒத்தாசைக்கு ஒரு நடுத்தர வயதுப் பெண்ணை அனுப்பும்படி வேண்டினார். கஜேந்திரனின் நண்பரும் அவரின் கோரிக்கையை நிறைவேற்றினார். முத்துபேச்சி சிவகாமிக்கு ஒத்தாசையாக இருக்கப் பட்டினம் வந்துவிட்டார்.



முத்துபேச்சி இளம் வயதில் கணவனை இழந்தவர், தன்னுடைய ஒரே பெண்ணை பக்கத்து ஊரில் பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒருவனுக்குக் கட்டிக் கொடுத்திருந்தார். கஜேந்திரனின் நண்பரின் பண்ணைத் தோட்டத்தில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக வேலைப் பார்த்து வந்தார். அமைதியும், பண்பும், அனுசரணையும் நிறைந்தவர். யாருடைய வம்பு தும்புக்கும் போகாதவர், இதுவே அவரைப் பட்டினத்துக்கு அனுப்ப போதுமானதாக இருந்தது.



முத்துபேச்சி வாழ்க்கையின் சூழ்ச்சம்ங்களை நன்கு அறிந்தவர், அனுபவசாலி. வீட்டின் நிலைமையை சில நாழிகைக்குள் புரிந்து கொண்டார். ஊரில் எசமானர்களின் விஷயம் அரசல் புரசலாக அவரின் காதுக்கு எட்டியது. சிவகாமியின் மேல் அவருக்கு இரக்கம் சுரந்தது. அவரை தாயைப் போல பார்த்துக் கொண்டார். சிவகாமியும் முதலாளியம்மா என்ற எண்ணம் சற்றும் இல்லாமல் “முத்தம்மா” என்று ஆசையுடன் அழைத்து, அவருடன் எல்லா வேலைகளிலும் ஒண்டிக் கொண்டார். கஜேந்திரன் தான் எசமானன் என்பதை நொடிக்கு ஒரு தடவை நிருபித்தார்.



இப்படியாகச் சிவகாமிக்கு ஆண் மகவுப் பிறந்தது, தன் தாயை உரித்தார் போன்ற ஜாடையில். கஜேந்திரனின் சந்தோசம் தாளவில்லை! பின்னே ஆண் வாரிசல்லவா!!! பிறந்துவிட்டான் என் சாம்ராஜியத்துக்கு முடிஇளவரசன் பிறந்துவிட்டான்” என மனது சந்தோச மிகுதியில் கொக்கரித்தது. ஆனால் தன்னுடைய குழந்தையைக் கண்டவுடன் மனதில் சிறு சுணக்கம் வந்து போனது. தன்னைப் போல் கம்பீரமாக மகன் இருக்கவே அவர் வெகுவாகப் பிரியப்பட்டார்.



தொழில் விஸ்தரிப்பு கஜேந்திரனின் நேரத்தை முழுமையாக விழுங்கிக் கொண்டது. குழந்தைக்குச் சுரேந்திரன் எனப் பெயரிட்டனர். அவரின் உள்ளணர்வு கூறியது சுரேந்திரன் தன்னுடைய சாம்ராஜியத்தை ஆளும் சாமார்த்தியம் கொண்டவனல்ல என்று. அதுவே உண்மையும் ஆனது!!! தாயின் தோற்றத்தை மட்டுமல்ல அவருடைய குணங்களையும் முழுமையாகக் கொண்டிருந்தான் சுரேந்திரன்.



கஜேந்திரனின் தேவை தன் சாம்ராஜியத்துக்கு முடிஇளவரசன் அதனை எப்படியும் நிறைவேற்றிவிடுவதில் அவர் தீவிரம் காட்டினார். சுமித்திரைப் பிறந்தார். பெண் மகவு!!!! வேறு குடும்பத்தின் பட்டப் பெயரை அல்லவா இவள் சுமப்பாள்!! அவள் இளவரசி தான், ஆனால் இளவரசன் அல்லவே!!



கஜேந்திரனின் எண்ணம் ஈடேறட்டும் என இறைவன் ஆசிர்வதித்தார். மூன்றாவது முறையாக கருவுற்ற சிவகாமிக்கு ஆண் மகவுப் பிறந்தது. கஜேந்திரன் ஒருவித கலவையான உணர்வினில் ஆட்பட்டிருந்தார். குழந்தையின் முகத்தைப் பார்த்தும் அவர் முகம் சூரியகாந்தியாய் மலர்ந்து, கண்கள் பள பளத்து மின்னின. அவரையே அச்சு வார்த்தார் போன்றல்லவா இருந்தான் அவருடைய இளைய மகன். அசையுடன் மனைவியின் அருகில் தூங்கிக் கொண்டிருந்தக் குழந்தையைத் தூக்கி கொஞ்சினார். தர்மேந்திரன் எனப் பெயரிட்டனர்.



கால சக்கரம் வேகமாகச் சுழன்றது. பிள்ளைகள் வாலிப பருவத்தில் அடியெடுத்து வைத்தனர். கஜேந்திரன் எனும் தேர்ந்த சிற்பி தனது தொழில் திறமை எனும் உளியைக் கொண்டு தர்மேந்திரன் எனும் இறை சிற்பத்தை சிரத்தையுடன் சிறப்புடனும் செதுக்கினார். திரன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் உருவானது. கஜேந்திரன் சமுதாயத்தில் தவிர்க்க முடியாத அங்கமானார், விழாக்களில் தலைமைத் தாங்குபவராக உயர்ந்து நின்றார்.



கஜேந்திரன் தனது தொழில் வாரிசாக தர்மேந்திரனை முன் நிறுத்தினார். சுரேந்திரனுக்கும், சுமித்திரைக்கும் தந்தையின் முடிவில் கொதித்து எழுந்தனர். கஜேந்திரன் சற்றும் அலட்டிக் கொள்ளாது, “உங்கள் மூவருக்கும் ஆறு மாதம் கால அவகாசம் தருகிறேன், நொடித்துப் போன ஒரு நிறுவனத்தை ஸ்திரப்படுத்திக் காட்டினால் தொழிலில் பங்கு உண்டு. இல்லையென்றால் என் பிள்ளைகள் என்பதால் அதற்கு கொஞ்சம் பணமும் சொத்துக்களும் தான் கிடைக்கும், தொழிலில் பங்கு கிடையாது.” என்று ஆணித்தரமாகக் கூறிவிட்டார்.



திரன் குரூப் ஆஃப் கம்பெனிஸின் வாரிசுகள் என்பது தானே அவர்களின் அடையாளமும், அந்தஸ்தும் அதனைப் பிடுங்கிக் கொள்வதா?? கஜேந்திரனின் பிள்ளைகளுக்கு உரிமை மறுக்கப் படுவதா?? அதுவும் கஜேந்திரனே அவர்களின் உரிமையை மறுப்பதா?? எவ்வளவு அநியாயம்??



சுரேந்திரனும், சுமித்திரையும் தாயிடம் சென்று முறையிட்டனர். எதற்கும் வாய் திறவாத சிவகாமி தனது பிள்ளைகளுக்கு ஒன்று என்றதும் பொங்கிவிட்டார். “உங்கள் தந்தை உங்களுக்கு இழைத்தது அநீதி என்றால், நீங்கள் இவர்களுக்கு இழைப்பதும் அநீதி தான்” என ஓங்கிக் குரல் கொடுத்தார்.



“ஒரு கண்ணில் சுண்ணாம்பையும், ஒரு கண்ணில் வெண்ணெய்யையும் தடுவுவதா? ஏன் இந்தப் பாகுபாடு? மற்ற பிள்ளைகள் என்னைப் போல் இருப்பதினாலா? பின் ஏன் என்னை விரட்டி திருமணம் புரிந்தீர்கள்……ஆஆஆ அம்ம்மாஅ?”
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுருண்டு விழுந்திருந்தார் சிவகாமி. முத்துபேச்சி அந்த வயதான காலத்திலும் தன் எசமானியை ஓடி வந்து அணைத்துத் தூக்கினார். கஜேந்திரனின் தனது ஒற்றை விரலைக் காட்டி எச்சரித்துவிட்டு, சுரேந்திரனயும், சுமித்திரையையும் முறைத்து விட்டு இளைய மகனுடன் அவ்விடத்தை விட்டு வெளியேறினார். தர்மேந்திரன் உணர்ச்சித் துடைத்த முகத்துடன் காணப்பட்டார். “பின் ஏன் என்னை விரட்டி திருமணம் புரிந்தீர்கள்” “விரட்டி விரட்டி விரட்டி” தாயின் வார்த்தைகள் அவர் காதுகளில் ரீங்காரமிட்டது.



குடும்ப விழாக்களில் மனைவியுடன் செல்ல கஜேந்திரன் விரும்ப மாட்டார். ஆனால் தவிர்க்கமுடியாத சமயங்களில் பிள்ளைகளுடன் மனைவி சிவகாமியை உடன் அழைத்துச் செல்வார். தன்னுடைய மனைவிக்கு நாகரிகமாகவும், நாசுக்காகவும் நடக்கத் தெரியவில்லை என்பது அவருக்குப் பெருத்த அவமானமாக எண்ணினார். பின்னே அவர் வி.ஐ.பி ஆயிற்றே, அவரைப் பார்த்து அடுத்தவர்கள் கேலியாகச் சிரித்துப் பரிகாசம் செய்வதா!



இன்னாரின் குடும்பத்து மாப்பிள்ளை நான் எனப் பெருமைப் பட்டுக்கொள்ள முடியவில்லையே என அவர் உள்ளம் காந்தினார். அவரது தொழில் வட்டாரத்தில் அவருடைய நண்பர்கள் பாரம்பரியமானக் குடும்பங்களின் மாப்பிளைகள் ஆவர். அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதையும், விருந்துகளும், சீர்வரிசைகளும், உறவுகள் புடைசூழ பெருமையுடன் வலம் வருவதும் அவரை பலமாகத் தாக்கியது. தானும் அந்தஸ்துள்ளக் குடும்பத்தில் பிறந்தவன் தான், ஆனால் அழகி என்றொரு அனாதையானப் பஞ்சப் பரதேசியை மணந்துக் கொண்டுதால் இவையாவும் எனக்கு மறுக்கப் பட்டுவிட்டனவே!



வீட்டில் பார்த்தப் பெண்ணாக இருந்தால் தனது இளமைக் காலம் எவ்வளவு இனிமையாகக் கழிந்திருக்கும்!!! எவ்வளவு கஷ்டங்கள் இந்நிலைக்கு வருவதற்கு!! உறவுகளுடன் உறவாடி இருக்கலாம். இன்னும் தான் பல மடங்கு வளர்ச்சி அடைந்திருக்கலாம். இவை யாவையும் முடக்கியது மனைவியே என மனதிற்குள் பொசுங்கினார் கஜேந்திரன்.



என்ன தான் தொழிலில் சாதித்தாலும், குடும்பம் என்கிற அம்சத்தில் தான் அனைவரின் காலுக்கு அடியில் இருப்பதாகவே அவர் எண்ணினார். முதல் முறையாகத் தன்னை எதிர்ந்து பேசியதும் அல்லாமல் தன்னுடையத் தந்தையுடன் தன்னை ஒத்துப் பேசியது, அவரை விரட்டி திருமணம் செய்ததை சுட்டிக் காட்டியது, அவரைப் பார்த்து “நான் உன்னை ஆசைப்பட்டு திருமணம் செய்யவில்லை, நீ தான் என் பின்னே நாய் மாதிரி அலைந்தாய்” எனக் கூறவது போல் இருந்தது. எல்லாமும் சேர்ந்து மனைவியைக் கை நீட்ட வைத்தது.



“மனம் ஒரு குரங்கு” என்பது எவ்வளவு உண்மை. வயதின் வேகத்தில் பெருமையாக எண்ணப் பட்டது, அந்தஸ்து வந்த பின் இழுக்காகக் கருதப்பட்டு விட்டது. இந்த மனம் தான் எப்படியெல்லாம் மாறுகிறது!!!



சுரேந்திரனயும், சுமித்திரையையும் தாயைக் கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தனர். எதற்கும் கலங்காத சிவகாமி அன்றுக் கலங்கினார் தன்னுடைய பிள்ளைகளை எண்ணி. தர்மேந்திரன் என்றுமே சிவகாமியிடம் ஒன்றியதில்லை. அதற்குக் காரணம் கஜேந்திரன் தான்.



“தர்மா உன் அன்னையைப் பார்த்தாயா??? அவளுக்கு தொழிலைப் பற்றி என்ன தெரியும்? அந்தத் தொழிலில் மூலம் வரும் வருமானத்தில் தங்கமும் வைரமுமாகப் பூட்டிக் கொள்ளத் தெரியும், பட்டும் பகட்டுமாக வெளியேச் சுற்றத் தெரியும்! சுரேந்திரனுக்கு தொழிலில் என்றும் ஈடுபாடு இருந்ததில்லை? அவனுக்குத் திறமையும் கிடையாது!! என்றாவது உன்னைப் போல் கம்பெனிப் பக்கம் வந்து இருக்கிறானா??? அவனுக்கு ஊர் சுற்ற பணம் வேண்டும். பெண்கள் சகவாசம் இருக்கு என்று கூடக் கேள்விப் பட்டேன்!!



சுமித்திரை அடுத்த வீட்டுக்குப் போகிறவள்?? இன்னொரு குடும்பத்தின் வாரிசைச் சுமந்து, அக்குடும்பத்தின் பெயரை நிலைக்கச் செய்பவள். அவளுக்கும் நமது நிறுவனங்களுக்கும் என்ன தொடர்பு?? இருவரும் என் பிள்ளைகள் என்பதினால் அவர்களுக்குத் தொழிலுக்கு ஈடான சொத்துக்களைத் தருகிறேன் என்று நான் சொல்லிவிட்டேன். பிறகென்ன?



அவர்கள் என் தொழிலை அழிக்கப் பார்க்கிறார்கள் தர்மா! என் இத்தனை வருட உழைப்பு திரன் குரூப் ஆஃப் கம்பெனிஸ். நீயும் கடந்த 3 வருடமாக அல்லும் பகலும் அயராமல் உழைக்கிறாய். உனக்கு அதன் உண்மையான மதிப்புத் தெரியும். என் தொழில் எனது நான்காவது பிள்ளை!!! இருப் பிள்ளைகளைக் காக்க என்னால் என் மற்றோர் பிள்ளையைப் பலி கொடுக்க முடியாது தர்மா..



உனது அன்னை இருக்கிறாளே யாருக்கும் மடங்காத என்னை அவளது அழகை நான் போகும் இடமெல்லாம் காட்டி என்னை மயக்கிவிட்டாளடா!! சொல்ல வெட்கமாக இருக்கிறது. என்னை அடைய அவள் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தாள். நான் அவளின் பின்னே சுற்றியது போன்ற மாயையை உருவாக்கினாள். இதனை கேள்விப் பட்ட என் தந்தை எங்களுக்குத் திருமணம் ஏற்பாடு செய்தார், அவர் மானஸ்தன். நான் என் தந்தையிடம் மன்றாடினேன்(!) அவர் அசரவில்லை. இவள் எனக்கும் முன்பாக அவரிடம் போய் கண்ணீர் விட்டு நாடகம் ஆடியிருக்கிறாள்.



திருமணத்திற்குப் பின் இவள் நகைக்கும் பணத்துக்கும், பட்டுடைக்கும், வெகுவாக ஆசைப்பட்டாள். என் அம்மா நம் மருமகள் தானே என்று அவருடைய நகைகளைப் பட்டுடைகளைப் பூட்டி அழகு பார்த்தார். அது போதவில்லை என்று எனது அண்ணியின் நகைகளையும் திருடிவிட்டாள். இதனை என்னிடம் என் அண்ணன் தயங்கி தயங்கிச் சொன்னார். எனக்கு உயிரேப் போய்விட்டது. நம்மைப் போல் அந்தஸ்துள்ள வீட்டுப் பெண்ணாக இருந்தால் இப்படியெல்லாம் அசிங்கப் பட்டிருப்பேனா? உடனே அவளை அழைத்துக் கொண்டு இங்கே வந்துவிட்டேன். இங்கே வந்தும் அதே போல் செய்யக் கூடாதென்று நகைகளையும் பட்டுடைகளையும் வாங்கிக் குவித்தேன்.



எனக்கு நிறையப் பிள்ளைகள் வேண்டுமென்று ஆசை, அதிலும் என்னைப் போன்றொரு பிள்ளை வேண்டும் என்று மிகவும் ஆசை. ஆனால் அவள் முதல் இரு குழந்தைகள் அழகாக இருக்கின்றனவே அதுவும் அவளைப் போல! பின் ஏன் நமக்கு இன்னொரு பிள்ளை. ஆஸ்திக்கும், ஆசைக்கும் ஒரு பிள்ளை பெற்றாயிற்று. இனி என்ன என்றாளடா!! எனக்கு மனம் நைந்துவிட்ட்து. இருப்பினும் அவளிடம் மன்றாடி உன்னைப் பெற்றுக் கொள்ளச் சொன்னேன். நீயும் பிறந்தாய் என்னைப் போலவே!! கடவுள் கடைசியில் எனக்கு உன்னை வரமாக அளித்துவிட்டார்.



தர்மா, நீ என்னை, உன் தந்தையை நம்புகிறாய் அல்லவா? உன் நன்மைக்குப் புறம்பாக நான் ஒன்றும் செய்யமாட்டேன். அதனை நீ மனதில் வைத்துக்கொள். என்னைப் போல் பெண்ணின் அழகுக்கு மயங்கி வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளாதே. நாம் நம் சொந்தங்களை எல்லாம் விட்டு விட்டு அனாதையைப் போல் நிற்கிறோமே அதற்குக் காரணம் உன் அன்னை எனும் பெண் தான். பெண் என்பவள் ஒரு போகப் பொருள் நீ சரியான அளவில் பயன்படுத்தினால் அவள் உனக்கு அடங்கியிருப்பாள், இல்லையேல் உன்னை அடிமையாக்கி விடுவாள்.



யாரையும் நம்பாதே, உன் உடன் பிறந்தவன் என்றாலும் உன் அந்தஸ்தை விட்டு இறங்கி வராதே. உன் குறிக்கோள் சமுதாயத்தில் பெரிய தொழிலதிபனாக நிலைத்து நிற்பது தான். உன் சமமான அந்தஸ்தினரோடுப் பழகு அதுவே உனக்கு மதிப்பையும் பாதுகாப்பையும் அளிக்கும்.



“திரன் குரூப் ஆஃப் கம்பெனிஸின்” அதிபதி நீதான். அந்தப் போட்டியில் நீ செழிப்பாய் என்பதில் எள் அளவும் எனக்கு ஐயமில்லை. இந்தப் போட்டியைச் சாக்கிட்டு என் பிள்ளைகளுக்கு சொத்தை பிரித்துக் கொடுப்பதோடு அல்லாமல் என் தொழிலைப் பாதுகாப்பானக் கரங்களில் சேர்பித்து இருக்கிறேன் என்ற சந்தோசத்துடன் நான் என்னுடைய கடைசிக் காலத்தைக் கழித்து விடுவேன்” என வராதக் கண்ணீரைத் தனது கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார் கஜேந்திரன்.



தன்னுடைய இளைய மகனுக்குத் தான் எப்போதும் கதாநாயகனாக இருக்க வேண்டும், தான் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் என்றுக் காரணங்களுக்காக தன்னுடைய மூத்த மகனை ஊதாரி, பெண் பித்தன் எனப் பட்டம் கட்டிவிட்டார். அவர் உண்மையை அறிவார், அவர் மட்டுமே அறிவார்! சுரேந்திரனை அவர் தான் நிறுவனத்துக்குள் வர வேண்டாம் என மறைமுகமாக உத்தரவிட்டு இருந்தார். குடும்ப செலவுகளுக்கு அதுவும் அத்தியாவசியத் தேவைக்காக மட்டுமே பணம் கேட்பான் என்றும் தெரியும்.



அது மட்டுமில்லாமல் தனது காதல்(?) மனைவியை குணக் குறைவானப் பெண்ணாகச் சித்தரித்துவிட்டார். அவர் மனைவி ஒரு எளிமை விரும்பி, ஆனால் கணவனின் கட்டளைக்கு இணங்க அலங்கார ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிந்து கொண்டார்.



அவர்களின் காதல்(?) எப்படி திருமணத்தில் முடிந்தது என்று இங்குள்ள எவருக்கும் தெரியாது. கணவனின் மனம் அந்த நாட்களை எண்ணிச் சங்கடப்படும் என்று சிவகாமியும் தன் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொண்டதில்லை. இவை யாவும் கஜேந்திரனுக்கு சாதகமாக அமைந்தது.



“தர்மத்தின் வாழ்வுதனை சூதுக் கவ்வும்

மறுபடியும் தர்மம் வெல்லும்”



இந்த வாக்கியம் சிவகாமிக்கும், அவரது முதல் இரண்டுப் பிள்ளைகளுக்கும் பொய்யாய் போனதேனோ??



கஜேந்திரன் தான் சாணக்கியன் என்பதை நிரூபித்தார். தர்மேந்திரனின் ஆளுமையை அவர் அறிவார். எவரையும் பயமின்றி அதிகாரத்துடனும், சாதுரியத்துடனும் அடித்து வீழ்த்தும் ஆளுமை அது!!! அதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். தர்மேந்திரன் கடிவாளமிட்டக் குதிரை ஆனார்.



“தந்தை சொல் மிக்க மந்திரமில்லை”



தந்தை கஜேந்திரன் சொல்லும் ஒவ்வொரு வாக்கியத்தையும் அவர் வேத மந்திரங்கள் என ஆழ்ந்து கூர்ந்து கிரகித்துக் கொண்டார். கஜேந்திரன் கண்ணனாய் விஷம் தோய்ந்த அறிவுரைகளைக் கூறினார். தர்மேந்திரனும் அர்ஜுனன்னாக அவரின் முன் மண்டியிட்டுத் தலை வணங்கிக் கேட்டுக் கொண்டான்.



“தாயிற் சிறந்தக் கோயிலும் இல்லை”



என்ற வாக்கியத்தை தர்மேந்திரன் மறந்தது ஏன்?? தந்தை கஜேந்திரனின் வாழ்க்கை அறிவு(?) போதனைகளா?? சுயம் என்று இல்லாதவன் பட்ட மரம் ஆவான். அவ்வகையில் பெரும் தொழிலதிபனாக இருந்தாலும் தர்மேந்திரன் பட்ட மரமே!!!



ஒரே ஆண்டில் தர்மேந்திரன் குடும்பத்தையும், தொழிலையும் தனது ஆளுகைக்குள் கொண்டு வந்து விட்டார். “திரன் குரூப் ஆஃப் கம்பெனிஸின்” எம்.டி ஆனார். சுரேந்திரனுக்கும், சுமித்திரைக்கும் திருமணம் செய்து வைத்து, சொத்துக்கள் என சிலவற்றைக் கொடுத்து எளிதாக ஓரங்கட்டிவிட்டனர். தர்மேந்திரனை எதிர்த்து அவர்களால் ஒரு விரலையும் அசைக்க முடியவில்லை. அவர்கள் பணிந்து போக வேண்டியக் கட்டாயம்.



சிவகாமி மனம் தாளாமல் கணவரை எதிர்த்துக் கேள்வி கேட்டார். பதிலுக்கு இவ்விரண்டும் எனக்குப் பிறந்தவைகளா? எனப் பதில் கேள்வி கேட்டு அவரது நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டிய கஜேந்திரன் மறுநாளே அவரது சிதைக்கு தீமூட்டினார். ஆம், கணவனின் கொடூரமானக் கேள்வியில் தன்னைச் சுருட்டிக் கொண்டுவிட்டார் சிவகாமி எனும் அபலை. எசமானி இல்லாத இடத்தில் இனி இருந்து என்ன? என்று தன் மகள் தன்னை அழைக்கிறாள் எனக் காரணம் சொல்லி விட்டுப் ஊரைப் பார்க்கப் போய்விட்டார் முத்துபேச்சி அழுதுகொண்டே.



தர்மேந்திரன் தர்மேந்திரன் சர்வமும் தர்மேந்திரன் ஆனது. கஜேந்திரன் தனக்கு மனைவியின் மூலமாக மறுக்கப்பட்ட(?) நல்ல பாரம்பரியமான பின்புலத்தை மலையைப் புரட்டியேனும் மகனுக்குக் கொடுத்துவிட வேண்டும் என மனதிற்குள் திண்ணமாக எண்ணினார்.



பிரபல நகை கடை அதிபதியின் ஒரே மகளான மேகவதியை தர்மேந்திரனுக்கு மணமுடித்து வைத்தார். கஜேந்திரன் தனது பிறவிப் பலனை அடைந்து விட்டதாகவே எண்ணி எண்ணி அகம் மகிழ்ந்தார்.
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மேகவதி சிவகாமிக்கு நேர் எதிர் குணம் கொண்டவர். எஜமானத்தனம் மிகுந்திருக்கும். கணவன் தொழிற்சாலைக்கு செல்லும் நேரம் தானும் தன்னை வித விதமாக அலங்கரித்துக் கொண்டு ஊர் சுற்ற கிளம்பிவிடுவார். சமையற்கட்டின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்காதவர். ஒரு வித அலட்சிய பாவனையோடு வளம் வருவார். இதனைப் பற்றி தர்மேந்திரனோ கஜேந்திரனோக் கண்டு கொண்டதில்லை. அவர்களின் தேவை அவளுடைய வசதியான பின்புலம், மற்றவையெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டன.



யாருக்காகவும் காலம் தன்னை நிறுத்திக் கொள்வதில்லை. தர்மேந்திரன் மேகவதி தம்பதியருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். ராஜேந்திரன் மற்றும் வசுந்தராதேவி. தர்மேந்திரனுக்கும் கஜேந்திரனுக்கும் சற்று அதிர்ச்சி தான். காரணம், ராஜேந்திரன் அச்சு அசலாய் தனது பாட்டி சிவகாமியைப் போல இருந்தான். சுரேந்திரன் சுமித்திரையின் பிள்ளைகள் யாவும் தங்கள் தாய் மற்றும் தந்தை வழியைக் கொண்டு பிறந்தனர். ஆனால் தர்மேந்திரனின் ஆண் மகவு சிவகாமியைப் போல் இருந்து வைத்ததில் சற்று அயர்ந்துவிட்டனர். மேகவதிக்கு இரட்டைக் குழந்தைகள் என்பதால் பிரசவத்தில் சற்று சிக்கல் ஏற்பட்டது. அதனால் அடுத்துப் பிள்ளை பேறு அவரது உயிருக்கு ஆபத்து என்ற உடன் கஜேந்திரனுக்கு மனதினில் கிலிப் பிடித்துக் கொண்டது. சிவகாமி தங்களைப் பழி வாங்குகிறாளோ என அற்பத்தனமாக எண்ணினார்.



பிள்ளைகள் வளர்ந்தனர். வசுந்தராதேவி குணத்திலும் உருவத்திலும் தன் அன்னை மேகவதியைக் கொண்டு பிறந்திருந்தாள். அழகி தான், ஆனால் அண்ணன் ராஜேந்திரனைப் போன்று அசரடிக்கும் அழகல்ல. ஆம், மேகவதி சிவகாமியின் அழகின் பக்கத்தில் நிற்க முடியாது. இரட்டைப் பிறவிகளாக இருந்தும் தன் அண்ணன், அதுவும் ஒரு ஆண் தன்னை விடப் பளிச்சென்று பேரழகுடன் பார்ப்பவர் கண்களைக் கிரங்கடித்துக் கொண்டு வலம் வந்தால் அவளால் எப்படி பொருத்துக் கொள்ள முடியும்! ஆகையால் தன் தமயனை தன்னால் முடிந்த அளவு மட்டம் தட்டுவாள்.



ராஜேந்திரன் தந்தை தர்மேந்திரனைப் போலவே திறமைசாலிதான், ஆனால் அமைதியான இரக்க குணம் கொண்டவர். எப்போதும் புன்சிரிப்புடனும் மலர்ச்சியுடனும் இருக்கும் அவரது முகம். தனது பாட்டி சிவகாமியை நொடிக்கொரு தடவை நினைவுப் படுத்தியது அவரது தந்தைக்கும், தாத்தாவுக்கும். இருவரும் அவரை அரவணைக்க முடியாமலும், ஒதுக்கவும் முடியாமல் திண்டாடினர். பின்னே ஒரே ஆண் வாரிசு ஆயிற்றே!!!



ராஜேந்திரனுக்கும் வசுந்தராதேவிக்கும் இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர் குடும்பத்திலிருந்து சம்பந்தம் வந்தது. பெண் கொடுத்து பெண் எடுப்பதே அந்த சம்பந்தத்தின் முக்கிய சாராம்சம். கஜேந்திரன் சந்தோசத்தில் பத்து வயது குறைந்தார் போல் உணர்ந்தார். அவர்கள் தமிழ்நாட்டுக் கோடீஸ்வரர்கள் ஆனால் வாய்த்திருக்கும் சம்பந்தம் இந்தியாவிலேயேப் பெரியக் கோடீஸ்வரக் குடும்பம்!! அதிலும் அரசக் குடும்பம்!!!



கஜேந்திரனுக்கும் தர்மேந்திரனுக்கும் இந்தச் சம்பந்தம் ஏன் பேசப் படுகிறது என்றக் காரணத்தைக் கேட்டவுடன் முகம் சுருங்கிவிட்டது. ஆம், அந்த அரசக் குடும்பத்து இளவரசி ராஜேந்திரனின் அமைதியான குணத்திலும், சேவை செய்யும் மனத்திலும், கிரங்கடிக்கும் அழகிலும் மயங்கி விட்டதாகப் பட்டவர்த்தனமாகச் சொல்லப்பட்டது. தங்களுக்கு வசதியும், பாரம்பரியமும் முக்கியமல்ல மகளின் ஆசையே முக்கியம். அத்தோடு பெண் கொடுத்து பெண் எடுப்பது அவர்கள் வழக்கம் என்றும், உங்கள் குடும்பத்தில் பெண் இருப்பதனால், அந்த வழக்கத்தை தாங்கள் மாற்ற விரும்பவில்லை என்றும், அதனால் உங்கள் பெண்ணையும் கேட்கிறோம் என்று முழுக் காரணத்தைப் போட்டு உடைத்தவுடன் எல்லோரின் முகங்கள் விழுந்துவிட்டன, ராஜேந்திரனைத் தவிர.



ராஜேந்திரன் எப்பொழுதும் போல் அமைதியான முகத்துடன் காணப்பட்டார். வசுந்தராதேவிக்கு அவமானத்தில் சிவந்து முகம் சிறுத்துக் கருத்துவிட்டது. உனக்காகவோ, உன் அந்தஸ்துக்காகவோ, உன் அழகிற்காகவோப் பெண் கேட்டு வரவில்லை. என் பெண் உன் அண்ணனை விரும்புகிறாள் அதனால் எங்கள் குடும்ப வழக்கப்படி ராஜேந்திரனின் தங்கை என்பதினால் உனக்கு இந்த வாய்ப்பு அளிக்கப் படுகிறது என மறைமுகமாகச் சொல்லிவிட்டனர்.



எந்தச் சிவகாமியின் அழகும், அமைதியும், எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல் மற்றவர்களுக்கு உதவும் குணமும் வெறுக்கப்பட்டு கேலிக் கூத்தானதோ! எது கணவரின் கொடூரமான வார்த்தைகளினால் அவரின் உயிரைக் குடிக்கதோ!!! இன்று அதே பண்புகளினால் தான் இவ்வளவுப் பெரிய சம்பந்தம் தழைந்து வந்திருக்கிறது!!! அவர்களின் தொழில் திறமையினால் அல்ல!! எவ்வளவுப் பெரிய அவமானம்!! இதனை யாவரும் மெல்ல முடியாமல் மென்று விழுங்கினர்.



திருமணப் பேச்சு வார்த்தையை அன்றேத் தொடங்கிவிட்டனர். அடுத்த ஆறு மாதத்தில் சென்னையில் இவர்கள் வீட்டில் நிச்சயம் என்றும், ஒரு வருடத்தில் பெண் வீட்டாரின் அரண்மையில் திருமணம் எனப் பேசி முடித்தனர். வசுந்திராவின் அளவு கடந்த விருப்பம் அவள் கண்களில் வழிந்தது.இந்த சம்பந்தத்தில் ராஜேந்திரனுக்கு விருப்பமா எனக் கேட்பதற்கு அங்கு எவருமில்லை.. கேட்க விரும்பவில்லையோ!



என்ன தான் மனதிற்குள் அவமானமாக உணர்ந்தாலும், எவ்வளவுப் பெரிய சம்பந்தம்! ராஜ வம்சம்!! எப்படிப்பட்ட பாரம்பரியம்! ஆம் பாரம்பரியம் அவர்கள் விரும்பித் துரத்திய பாரம்பரியம் அவர்களை நோக்கி வந்துவிட்டதே!!! சாதாரணப் பாரம்பரியமா!! ராஜ பாரம்பரியம்!!! இனி அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் ராஜ வம்சத்தினர் ஆவர். அவர்களின் சந்ததிகள் ராஜ வம்சத்தினராகப் பிறந்து, வளர்ந்து இவ்வுலகத்தை ஆளப் போகிறார்கள் என்று மனதினில் பொன்னால் ஆனக் கோட்டையையேக் கட்டிவிட்டனர்.



பொன் கோட்டை இரும்பென நிலைத்து நிற்குமா??? அல்லது மணலெனச் சரிந்து வீழுமா???



கருப்பு அழகி வருவாள்





































 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நட்புகளே :smiley6:

'என் கருப்பழகி-5' அத்தியாயம் பதிந்துவிட்டேன் :)
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் கருப்பழகி

அத்தியாயம் – 5

ராஜேந்திரன் அமைதியான, நிதானமான குணம் உடையவரே, ஆனால் கோழை அல்ல. அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் நேர்மையாக எதனையும் சாதுரியத்துடன் சாதிக்கும் வல்லவர். அகம் ஒன்றும் புறம் ஒன்றும் காட்டும் மனிதர்கள் சூழ் உலகு என்கிற தாத்பரியத்தை உணர்ந்தவர். மாலையிடப் பட்டு தங்க முலாம் பூசப்பட்ட சட்டத்தினுள் ஓவியமாக இருப்பது ஒரு அபலையின் முகம் என்று சற்று விவரம் தெரிந்தவன் கூடச் சொல்லி விடுவான் தனது பாட்டி சிவகாமியின் முகத்தைப் பார்த்து. ஆனால் தந்தை, தொழில் உலகத்தின் சக்ரவர்த்திக்கு புரியாமல் போகுமா! ஏன் இந்த வெறுப்பு பெற்ற தாயின் மேல்? தானாக உருவானதா? அல்லது உருவாக்கப் பட்டதா?



கஜேந்திரனின் மேல் ராஜேந்திரனுக்கு என்றும் பிடிப்பு இருந்ததில்லை. சுரேந்திரன் பெரியப்பா கண்ணீர் மல்கத் தாத்தாவின் அட்டூழியங்களைச் சொல்ல சொல்ல, ராஜேந்திரனுக்குள் நெருப்பு இறங்கிற்று. ஆனால் அதனை என்றைக்குமே வெளிக் காட்டிக் கொண்டதில்லை. தாயும் தங்கையும் கஜேந்திரனைப் போல் இருந்து வைத்ததில் அவர் மனம் வெறுத்து விட்டார். அன்புடனும் ஆசையுடனும் அனுசரித்து வாழும் குடும்ப வாழ்வை எண்ணி நித்தமும் ஏங்கினார். தனது தாத்தா கஜேந்திரனுக்கு வாய்த்தது போல் தனக்கு ஒரு சிவகாமி வாய்க்க மாட்டாளா என மனதினுள் மருகினார். அவருக்கான பதில் அடுத்த நாளேக் கிடைத்தது.



ராஜேந்திரன் சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபலமான வங்கியின் வாயிலின் அருகில் சென்று தனது காண்டஸாக் காரை நிறுத்தினார். “இந்தாங்க தாத்தா எடுத்துக்குங்க, நான் செஞ்சக் குழிப் பனியாரம், பயப்படாம சாப்பிடுங்க. சாப்பிட்ட பிறகு எனக்கு தங்க காப்பு எல்லாம் பண்ணிப் போட வேண்டாம். யாருக்கும் தெரியாம எலந்த வடை வாங்கி தாங்க தாத்தா. முக்கியமா அப்பாக்கு தெரியக் கூடாது.” எனக் கடைசி வாக்கியத்தை ரகசியம் போல் கூறிவிட்டு கள்ளம் கபடமில்லாமல் சிரித்துவிட்டு அந்த வயோதிகரிடம் விடைபெற்றுச் சென்றாள்.



இவள்! இவள், இவள் தான் என் சிவகாமி!!! என அகமும் முகமும் மலர மனம் பூரித்தார். இயல்பாக அவரைக் கடந்து சைக்கிளை மிதித்துக் கொண்டுச் செல்லும் காரிகையின் பின்னே செல்ல அவரின் மனமும் விழைந்தது.



“பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை

என்னென்று நான் சொல்லலாகுமா

பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை

ஏனென்று நான் சொல்ல வேண்டுமா



நடமாடும் மேகம் நவநாகரீகம்

அலங்கார கிண்ணம் அலை போல மின்னும்

நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்

பழங்கால சின்னம் உயிராக மின்னும்

துள்ளி வரும் வெள்ளி நிலா

துவண்டு விழும் கொடி இடையாள்

விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண் அல்லவோ

சென்றேன் ம்ம்ம்ஹ்ம்ம்ம்

கண்டேன் ம்ம்ம்ஹ்ம்ம்ம்

வந்தேன்”



தனது வாழ்க்கையின் வரமாக அவளை அருள வேண்டும் எனக் கடவுளிடமும் தனது பாட்டி சிவகாமியிடமும் மனப் பூர்வமாக வேண்டினார்.



ராஜேந்திரன் தாமதிக்காமல் தனது விருப்பத்தை அவளது தந்தையிடம் சென்று மரியாதையாகக் கூறினார். பெண்ணைப் பெற்றவருக்கு வந்திருப்பவனின் உயரம் தெரியும், அவரின் நற்குணங்களையும் அவர் கேள்விப்பட்டு இருக்கிறார். ஆனால் ஒரு தகப்பனாக அதுவும் பெண்ணின் தகப்பனாக இருப்பவனுக்கு மாப்பிள்ளையின் குடும்ப அமைப்பு மிகவும் முக்கியம் அல்லவா! பேங்க் மேனஜராக இருப்பதினால் திரன் குரூப் ஆஃப் கம்பெனிஸின் கணக்குகளும், அவர்களின் தொழில் வட்டாரத் தொடர்புகள், குடும்ப அமைப்பு யாவும் இவருக்கு நன்கு பரிச்சியம். குடும்ப அமைப்பின் காரணமே அவரை வேண்டாம் எனச் சொல்ல வைத்தது.



காரணத்தை அறிந்து கொண்ட ராஜேந்திரனுக்கு முகம் விழுந்து விட்டது. வினாடியில் தன்னை சமனப்படுத்திக் கொண்டு எப்பொழுதும் போல் புன்சிரிப்புடன் நன்றியையும் மன்னிப்பையும் உதிர்த்து விட்டு வெளியேறி விட்டார். “அருமையானப் பிள்ளை, தவம் இருந்தாலும் கிடைக்காத தங்கம் யாருக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ??” எனப் பெருமூச்சிட்டார் பெண்ணைப் பெற்றவர்.



வாசலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். இந்த உத்தமனுடன் வாழ எனக்குக் கொடுப்பனை இல்லையா இறைவா? வசதியற்றவராக இருந்தால் எங்கள் திருமணம் நடந்திருக்குமோ??? ஆனால் அவரை மனதினில் வரித்துக் கொண்டுவிட்டேன் கணவனாக!!! அவருடைய மீராவாக நான் வாழ்ந்து விட்டுப் போகிறேன்” என மனம் நொந்து வாய்விட்டுச் சொல்லிவிட்டாள் அவள்! அவள் சுகுணா!



சுகுணாவை பெற்றவர்கள் ஸ்தம்பித்துப் போய் நின்றனர். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள், ஒரே பெண் பிள்ளை சுகுணா. ஆசையுடனும் பாசத்துடனும் வளர்த்தப் பெண் துறவுக் கோலத்தில் நிற்பதைக் காணவா அவர்கள் உயிர் வாழ்கின்றனர்?? அவர்களின் வீடு உயிர்ப்பை இழந்தது. கலங்கியக் கண்களுடன் காட்சியளிக்கும் மகளைக் காணக் காண உடலும் மனமும் ஓய்ந்து போய்விட்டது. மூன்று மாதங்கள் கடந்து விட்டது! இதற்கு விடிவு தான் என்ன?



ராஜ வம்சத்து சம்பந்தத்தைத் தக்கவைத்துக் கொண்டு நிச்சய தேதி, திருமண தேதி யாவும் குறித்துவிட்டனர் தர்மேந்திரன் குடும்பத்தினர். இரு வீட்டாரும் ராஜேந்திரனின் சம்மதத்தைக் கேட்கும் எண்ணமின்றி பெருமையுடனும் பூரிப்புடனும் சிறப்பு விருந்து உண்ணச் சென்று விட்டனர். கம்பெனியில் அவசர வேலை எனத் தொலைப்பேசி வரவும் ராஜேந்திரன் அலட்டாமல் அந்த இடத்தில் இருந்து தப்பித்துக் கொண்டார்.



சுகுணாவின் நினைவு அவர் மனதை வெகுவாக அலைக்கழித்தது. சுகுணாவை தவிர எந்தப் பெண்ணையும் தனது மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியாது என உறுதியாக எண்ணினார். கடைசி வாய்ப்பாக சுகுணாவின் வீட்டில் பேசிப் பார்க்கலாம், இல்லையேல் எங்காவதுக் கண்காணத இடத்திற்குச் சென்று விடவேண்டும். சுபிக்ஷத்தில் எனக்கு சந்தோசமும் நிம்மதியும் ஒரு பொழுதும் கிட்டாது. வெறும் பணம் தான் கிட்டும். யாருக்கு வேண்டும் பணம்?? எனக்கு நிம்மதி தான் வேண்டும் என்று மனதினில் திடமாக எண்ணினார்.



சுகுணாவின் வீட்டின் முன் தன் காரை நிறுத்தினார். கதவைத் தட்டினார், திறந்தது அவருடைய ஆருயிர் காதலி சுகுணா. சுகுணாவா இது??? அய்யோ!! இது என்னக் கோலம்??? ஏன் இப்படி முகம் கருத்து, உடல் இளைத்து, கண்களில் கருவளையங்களுடன்??? ஏன் என்ன ஆயிற்று வீட்டில் யாருக்கு ஏதேனும் ஆகிவிட்டதா?? அல்லது தன்னவளுக்குத் தான் உடல் நோவா??? இப்படி இருக்கிறாளே!! அல்லது நான் வந்து விருப்பத்தைச் சொன்னதால் அவளின் வீட்டினருக்கும் இவளுக்கும் பிடிக்கவில்லையா?? விசயம் வெளியேக் கசிந்து அவளுக்கு மணாளன் கிட்டவில்லையா?? இதைக் காணவா நான் ஓடோடி வந்தேன்??” ஆசை கொண்ட மனம் மருகி உருக்கிற்று தன் காதலிக்காக.



முதல் நாள் பார்த்து, மறுநாள் விருப்பத்தைப் பகிர்ந்து, புறக்கணிக்கப் பட்டு, மூன்று மாதம் காலம் கடந்தும் சுகுணாவின் மேல் உள்ள காதல் எள் அளவும் குறையவில்லை. கடிதங்கள் எழுதவில்லை, கண்ணோடு கண் நோக்கவில்லை, புன்சிரிப்பு சிரிக்கவில்லை. ஆனால் அவர்களின் மத்தியில் மெல்லிய நதியென அமைதியாக ஓடியது காதல்!



வார்த்தைகளால் பரிமாறிக் கொண்டால் தான் காதலா???



ராஜேந்திரன் எந்தப் பொய் பூச்சும் இன்றி, தனது உண்மை நிலவரத்தை சுகுணாவின் வீட்டினரிடம் விவரித்தார். பெரியவர்கள் கலவரத்தோடு பார்த்தனர். “இளங்கன்று பயம் அறியாது” என்பது போலச் சிறியவர்கள் எதுவாயினும் மோதிப் பார்த்து விடலாம் என விடைத்துக் கொண்டு நின்றனர்.



திருமணத் தேதி முடிவு செய்து ஒரு வாரம் ஓடிவிட்டது. கஜேந்திரன் தனது கம்பெனி கணக்காளரிடம் சில விபரங்களைக் கேட்டு அறிந்து கொண்டிருந்தார். அவர் ஹாலின் நடுவே உள்ள விலை உயர்ந்த சோபாவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார். கணக்காளருக்கு ஐம்பது வயது இருக்கும்! இருப்பினும் அவர் உடலைச் சற்று வளைத்து கைகளில் சில கோப்புக்களுடன் நின்று கொண்டிருந்தார், மனதினில் “இதுவே ராஜா ஐயவா இருந்திருந்தா உட்காரச் சொல்லி டீ கொடுத்து உபசரிச்சி கம்பெனி விஷயம் பேசி இருப்பார்…ஹ்ம்ம்ம்ம்ம்” எனப் பெருமூச்சு விட்டார்.



“ஐயா ஐயா அய்ய்யாஆஆ” எனத் தோட்டக்காரன் அலறிக் கொண்டு நடு ஹாலில் வந்து நின்றான் பரபரப்போடு. கஜேந்திரன் தன் தலையை உயர்த்திப் பார்த்தார். நடு நடுங்கி விட்டான் தோட்டக்காரன். முயன்று தன் நடுக்கத்தைக் குறைத்துக் கொண்டு, “ஐயா சின்ன ஐயா வந்திருக்காருங்க!! அத்து அ …. அதூ..” என மென்று விழுங்கினான்.



கஜேந்திரன் கையில் இருந்தக் கோப்பை விசிறியடித்துவிட்டு, தோட்டக்காரன் அருகில் சென்று செவிப்பறைக் கிழிய ஒரு அறை விட்டார், பிறகு “ஒன் இடம் எதுவோ அங்க தான் நீ இருக்கனும், அதத் தாண்டி வந்தா” என கர்ஜித்தார். “மன்னிச்சிடுங்க அய்யா” என உள்ளேப் போய்விட்டக் குரலில் கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான். தன் தங்க ரிம் பொருத்தப் பட்ட கண்ணாடியைச் சரி செய்து கொண்டு வாயிலை நோக்கி நடந்தார், கணக்காளர் அவரைப் பின் தொடர்ந்தார்.



“ராஜேந்திராஆஆஆஆஆஆஆஆ” அந்த மாளிகையே அதிரக் கர்ஜித்தார் கஜேந்திரன்.



மேகவதி தொலைப்பேசியில் தன் தோழியிடம் அவர்களுக்குக் கிட்டிய ராஜபரம்பரையின் சம்பந்தத்தைப் பற்றி பெருமைப் பீற்றிக் கொண்டிருந்தார். மாமானரின் கோப அலறலில் திடுக்கிட்டு, தோழியிடம் ஒரு அவசர வேலை இருப்பதாகவும், பின் தான் தொடர்பு கொள்வதாகவும் அவசரமாகக் கூறிவிட்டு தொலைப்பேசியை அதன் தாங்கியில் வைத்தார். பின்பு “உஊஊஃப் கண்டரி புரூட், இந்த மனிஷனுக்கு எப்பவும் யாரையாவது சத்தம் போட்டுடே இருக்கனும். மேனர்லஸ் இடியட். என்ன தான் பிஸ்னஸ் பண்ணி பிக் ஷாட் ஆனாலும் நாட்டுப்புறத்தான் புத்தி போகுதா பார்!!!” தன்னுடன் சேர்ந்து கொண்ட மகளிடம் மெல்லியக் குரலில் மாமனாரை திட்டிக் கொண்டே வந்தார், கையில் பழச்சாறு அடங்கியக் கோப்பையுடன்.



அவரது மகள் வசுந்தராவோ “எஸ் மாம், யு ஆர் ரைட் கிராமத்துல மாடுங்கள அதட்டி மேய்கிறது மாதிரி இங்க எல்லாரையும் அதட்டி மேய்கிறாரு. ஐ ஆம் சிக் ஆஃப் ஹிம். மாம் பெருசுக்கு பாம்பு காது, எமன். காதுல விழுந்துச்சு நாம அவ்ளோ தான். அப்பாகிட்ட போட்டுக் குடுத்துடும் இப்ப பேச வேண்டாம். ஒகே” எனத் தாயை எச்சரித்தவாறே இருவரும் வாயிலை சமிபித்து விட்டனர். வசுந்தரா முகம், கை, கால்களில் கடலை மாவை ரோஜா இதழ்கள் சேர்ந்த பாலில் குழைத்துப் பூசி இருந்தாள். ராஜ வம்சத்தின் வருங்கால மருமகள் அதீத தேஜசுடன் இருக்க வேண்டாமா!



“க்க்க்க்ன்ன்ன்ன் க்ங்ங்ங்க்க்க்ங்ங்ங்ஙக்க்க்க்ன்ன்ன்ன்ன் க்க்ன்ன்ன்ன் க்ங்ங்ங்க்க்க்” கண்ணாடிச் சில்கள் தெரித்து விழுந்து சப்தம் எழுப்பின.



மேகவதியின் கையிலிருந்த கண்ணாடிக் குவளை தான் அவர் கையில் இருந்து நழுவி தரையில் விழுந்து கண்ணாடிச் சில்கள் ஆயின!!!



“ராஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்” என அகங்காரமானக் குரலில் உறுமினார் மேகவதி.



வேலையாட்கள் யாவரும் வாயிலுக்கு வந்து பம்பியபடி அங்கு அரேங்கேறப் போகும் நாடகத்தைக் காணும் ஆவலைக் கண்களில் பிரதிபலிக்காமல் காத்திருந்தினர்.

 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“அன்னம்மா, என்னப் பாக்குறிங்க? பெரியவங்க நீங்க உங்களுக்குத் தெரியாதா? சீக்கிரம் போய் ஆரத்திக் கரைச்சிட்டு வாங்க,,, ம்ம்ம் போங்க.. ஏன் பயப்படுறிங்க? பயப்பாடமாப் போங்க.. என்ன மீறி உங்களை யாரு என்ன செய்யுராங்கன்னு பாக்குறேன்.” என வீட்டின் சமையல்காரியை உள்ளே அனுப்பிவிட்டு “என்னடா சுகுமா இப்படி வேக்குது??? இன்னும் 2 நிமிஷம் தான் நாம நேரா நம்ம ரூமுக்கு உள்ளப் போயிடலாம்டா.. ஏ.சி இருக்கு, நிமிஷத்தில உன் வேர்வை அடங்கிடும்” என மனையாளின் முகத்தில் ஒட்டி இருந்த வியர்வைத் துளிகளை தன் வலது கையால் கைக்குட்டையில் ஒற்றி எடுத்து மறுகையால் தோளை அணைத்தவாறு அக்கரையுடன் கூறினார் ராஜேந்திரன்.



சுகுணாவோ பயத்தில் முகம் வெளிறி இருந்தாள். கணவனின் வீட்டினரின் தோற்றம் கண்டு உள்ளுக்குள் நடு நடுங்கி, உடல் எல்லாம் வியர்த்து அவளுக்கு. அந்த வியர்வையைக் கணவன் ஒற்று எடுத்தது அவளுக்கு ஆறுதலாக இருப்பினும், கணவனின் வீட்டினரினை எண்ணி சங்கடம் கொண்டு “ச்ச்சூ என்னங்க இது?? பெரியவங்க இருக்காங்க, எவ்வளவுப் பேரு நம்மளைப் பாக்குறாங்க! இப்படியா அவங்க முன்னாடி நடந்துக்கிறது.” எனச் சங்கடத்துடன் நெளிந்தவாறு சற்றுப் பதட்டத்துடன் கூறினாரள்.



கஜேந்திரனுக்கு அந்தக் கோலத்தைக் காணச் சகிக்கவில்லை, வீட்டின் வாயில் நின்றுத் தனது பேரனுடன் சல்லாபிக்கும் பெண்ணை அவருக்குப் பிடிக்கவில்லை. சுகுணாவின் பதட்டம் அவருக்குச் செல்லச் சிணுங்களாவும், பேச்சு சல்லாபமாகவும் தெரிந்தது.



“காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்”

.

கஜேந்திரனின் பார்வையில் பெண்கள் மோகம் தரும் அலங்காரப் பொம்மைகள்!!! தந்தை, கணவன், உடன் பிறந்தவன் என வீட்டின் ஆண் மக்கள் சம்பாத்தியத்தில் தனக்கு வேண்டியதை உழைப்பே இல்லாமல் கண்ணீர் விட்டு, சல்லாபித்து பிடுங்கிக் கொண்டு உண்டு கொழுத்து வாழ்கிறவர்கள். பிள்ளைப் பேறு இல்லையென்றால் இவர்களால் என்ன பயன்? என மனம் காய்ந்தார். அவர் தனது மருமகளையும், பேத்தியையும் எண்ணித் தான் அவ்வாறு நினைத்தார். அவர் மனைவி சிவகாமியை அவர் நினைக்கவில்லை. வசதியாக மறந்துவிட்டாரா!! அல்லது பெண்கள் வெறும் பிள்ளைப் பெற்றுக் கொடுத்து, ஆண்களுக்குச் சுகம் கொடுக்கும் போகப் பொருள் என்ற அவரது பெண்களைப் பற்றிய அடிப்படை எண்ணத்தை மாற்றிக் கொள்ள விருப்பம் இல்லையா!



பல்லைக் கடித்தவாறு “ராஜா என்ன பண்ணிட்டு வந்து இருக்கிற நீ” என மிக அழுத்தமானக் குரலில் வினவினார் கஜேந்திரன்.



வசுந்தராவிற்கு தன் கண் முன்னே நடப்பவற்றை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்க முடியவில்லை. தன் உடன் பிறப்பு செய்திருக்கும் காரியத்தைக் கண்டு, உடல் தள்ளாடி பிடிமானமில்லாமல் கீழே விழ இருந்தவள், சட்டென சுதாரித்துப் போர்டிகோ தூணில் சாய்ந்து நின்று கொண்டாள்.



“ஏங்க அவங்க மயக்காம ஆகுறாங்க!!! அய்யோ வாங்க, வந்து பிடிங்க!!” எனப் பதட்டத்துடன் தன் கணவனின் கைபற்றி அழைத்தாள் சுகுணா.



“சுகு இதெல்லாம் டிராமா, எதையும் கண்டுக்காத. நான் சொல்லாம எங்கேயும் போகாத எதையும் செய்யாத பேசாம என் பக்கத்துல நில்லு, புரியுதா..” எனச் சற்று அதட்டிலாகக் கூறினார் ராஜேந்திரன்.



சுகுணா அந்த சிறு அதட்டலுக்குப் பயந்துவிட்டாள். ராஜேந்திரன் மனைவியை கெஞ்சிக் கொஞ்சி சமாதானப் படுத்தினார். கொடிய மிருகங்கள் வாழும் இந்தக் கானகத்தில் என் புள்ளிமானை சேர்ப்பித்து விட்டேனே! இது சரியா??? புள்ளிமானை வேட்டையாடும் கொடூரம் அவர்கள் கண்களில் தெரிகிறதே!!! நான் அமைதியானவன் தான்! ஆனால் கோழை அல்ல! என்னவளின் மேல் ஒரு சிறு துரும்பு பட்டாலும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். இவர்களுக்கு அதை நான் புரிய வைத்தே ஆக வேண்டும். ஆம்! அவர்களுக்கு என் அமைதியான முகம் மட்டுமேத் தெரியும்! என்னுடைய இன்னொரு முகத்தை அவர்கள் இன்று அறிந்து கொண்டே ஆக வேண்டும்! என மனதிற்குள் உறுதியுடன் நினைத்து நிமிர்ந்து நின்றார்.



“வசு, வசு மை பேபி என்னாச்சு உனக்கு” எனப் பேய் அறைந்தார் போல் நின்ற மகளின் தோள்களைப் பற்றி உலுக்கினார் மேகவதி.



வசுந்தரா அன்னையின் உலுக்கலில் திடுக்கிட்டு நிதானத்திற்கு வந்தாள். அகலக் கரையிட்ட சிவப்பு வண்ண தங்க சரிகையிட்டக் காஞ்சிப் பட்டு புடவையில், கால்களில் பளபளத்த வெள்ளி மெட்டியும், கழுத்தில் ரோஜா பூ மாலையும், தங்க ஆபரணங்களுடன் மஞ்சள் நூலில் கோர்க்கப் பட்ட தங்க தாலி மின்ன, தலை நிறைய மல்லிகைப் பூவுடன், நெத்தியில் வட்டக் குங்கும பொட்டுடன், நெற்றி வகிட்டில் கணவன் இட்ட குங்கமம் துலங்கத் தங்கச் சிலையன அழகுடன் மிளிர்ந்தாள் சுகுணா.



தன் அண்ணனின் அருகில் அழகு மயிலென தங்க நிற மேனியில் சிவப்புப் பட்டு உடுத்தி பேரழிகியாக திருமணக் கோலத்தில் நின்றவளைக் கண்டு வயிறு காந்தியது வசுந்தராவிற்கு. இவளின் அழகின் அருகில் என்னால் நிற்க முடியாது போலவே! எவ்வளவு அழகு அப்ஸரசே தான்! அதனால் தான் என் அண்ணன் மயங்கிவிட்டானா! ஏன் மயங்க மாட்டான்! இப்பேர் பட்ட அழகியைக் கண்டால் தேவ ரிஷிகளே மயங்குவார்கள். என் அண்ணன் சாதாரண மனிதன் தானே! அட, என்ன பொருத்தம் இவளுக்கும் என் அண்ணனுக்கும்! என ஒரு நொடி மனதிற்குள் தனது அண்ணி சுகுணாவின் அழகை தன்னிலை மறந்து வியந்து மெச்சினாள்.



மறுநொடி இந்த அழகை காட்டித் தானே என் அண்ணனை மயக்கி விட்டாள் வித்தாரக் கள்ளி. இவளுக்காக ராஜ வம்சத்து வரனைத் தூக்கி எரிந்து விட்டானே அண்ணன்! எவ்வளவுப் பெரிய இடம்! ராஜ பரம்பரை! தேடினாலும் கிட்டுமா இப்படி ஒரு இடம்? என்னை, தன் சொந்த தங்கையை ஒரு நிமிடமேனும் எண்ணினானா?? இந்த கைக்காரி என் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டாளே. உன்னை சும்மா விடமாட்டேண்டி என மனதிற்குள் கருவிக் கொண்டு தன் அண்ணனையும் அவனது மனையாளையும் நோக்கி வேகமாக நடந்தாள்.



ராஜேந்திரன், தனது தாத்தா கஜேந்திரனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்ததால் தங்கை வசுந்தராவைக் கவனிக்கவில்லை. சுகுணா கணவனுடன் சேர்ந்து நின்று கொண்டு தன் கணவனின் தாத்தாவான கஜேந்திரனை நோக்கி கை கூப்பி கலங்கியக் கண்களுடன் நின்று கொண்டிருந்தாள். மேகவதிக்கும் மகள் எதற்காக இவ்வளவு வேகமாகச் செல்கிறாள் என்று புரியவில்லை. வேலையாட்களுக்கு வசுந்தராவைப் பற்றி நன்றாகத் தெரியும், அதனால் என்ன விபரீதம் நடக்கப் போகின்றதோ என மனம் பதை பதைக்க வேடிக்கை பார்த்தனர்.



வசுந்தரா நேராக சுகுணாவின் அருகில் சென்று அவளின் தலை முடியைப் பற்றி உலுக்கியவாறே “வித்தாரக் கள்ளி உடம்பக் காட்டி என் அண்ணன மயக்கிட்டியா??? பணக்கார ஆம்பளக் கேக்குதா உனக்கு??? எவ்வளவு தைரியம் இருந்தா கழுத்துல தாலியோடு எங்க வீட்டு வாசப் படி மிதிப்ப தரங்கெட்ட நாயே… உன்ன,,,,” என சுகுணாவை அறையக் கையை ஒங்கியது தான் தாமதம் “ஆஆஆஆஆஆஆஆஆஆஅ” என்ற அலறலுடன் செவிப்பறைக் கிழியும் சப்தமும் சேர்ந்து கேட்டது. அவள் ஒரு சுற்று சுற்றித் தரையில் அலங்கோலமாய் விழுந்தாள். ராஜேந்திரன் தங்கை வசுந்தராவை அறைந்திருந்தார்.



கீழே விழுந்து கிடந்த தங்கை வசுந்தராவின் அருகில் சென்ற ராஜேந்திரன் “என்ன சொன்ன? என்னடி சொன்ன? என் பொண்டாட்டியைப் பார்த்து என்னடி சொன்ன?” எனக் கர்ஜித்துக் கொண்டேக் கீழே வரண்டாவைக் சுத்தம் செய்வதற்காக வைக்கப் பட்டிருந்த விளக்கமாற்றை கையில் எடுத்துக் கொண்டு விளாசத் துவங்கினார் ராஜேந்திரன் தங்கை வசுந்தராவை.



மேகவதி தான் முதலில் சுதாரித்து “டேய் எவ்ளோ தைரியம் உனக்கு! விடுடா அவள.. நிறுத்துடா, நிறுத்து, ராஜ் நிறுத்துடா” என மகனின் கையைப் பிடித்து தடுக்க எண்ணினார். ஆனால் அவரது மகன் ஒரே உதறலில் அவரை தள்ளிவிட்டான்.



மேகவதி தன் மகன் ராஜேந்திரனிடம் இப்படி ஒரு ஆவேசத்தை இதுவரைக் கண்டதில்லை. “எப்போதும் அமைதியான முகத்துடன் மாறாத புன்சிரிப்புடன் வலம் வரும் மகனா இவன்??? வசுந்தரா அவனைச் சீண்டி கேலிப் பேசினாலும் கண்டு கொள்ளாமல் சிரித்து விட்டுச் செல்லும் மகன்! தாத்தா கஜேந்திரன் முன்பு உட்காரக் கூட சங்கடப்படும் மகன்! தந்தையிடம் மரியாதையுடன் விலகி நிற்கும் மகன்! தாயான என் பேச்சைத் தட்டாத மகன்! என் மகனா இப்படி???” என மனதிற்குள் மகனின் மாறுதல்களை எண்ணியவாறு சற்றுத் திரும்பி பார்த்தார்.



சுகுணா நின்று கொண்டிருந்தாள். “இவ தான்!! இந்த ஆள் மயக்கி தான் காரணம். அமைதியா இருந்த என் மகனுக்கு வெறிப் பிடிக்க வச்சிட்டாளே! இருடி இப்பவே உன்ன இங்க இருந்து துரத்தி அடிக்கிறேன்!! நான் மேகவதிடி தர்மேந்திரனோட பொண்டாட்டி!” என மனதிற்குள் சூளுரைத்துவிட்டு மகனிடம் திரும்பினார்.



“நிறுத்துடா, நிறுத்து ராஜ்! கண்ட கண்ட தெருவுல பொறுக்குற நாய்காக என் பொண்ணு அதான் உன் தங்கையை அடிக்கிறியா??? உனக்கு வெக்காமா இல்ல??? நம்ம அந்தஸ்து என்ன? கௌரவம் என்ன?” என அகங்காரமாய் கத்தினார் மேகவதி.



தங்கையை வெறி கொண்டு அடித்துக் கொண்டிருந்த ராஜேந்திரன், தாயின் வார்த்தைகளைக் கேட்டு பட்டெனத் தாயின் பக்கம் திரும்பி வேக நடையிட்டு வந்தார். மகனின் வேகம் கண்டு நான்கு அடிகள் அவசரமாகப் பின்னே எடுத்து வைத்தார் மேகவதி, மனதிற்குள் “அடிச்சிடுவானோ???” எனப் பயந்து நடுங்கினார்.



“என்ன சொன்ன?” எனத் தன் தாயை ஒருமையில் விளித்தார் ராஜேந்திரன். அந்த ஒருமை விளிப்பைச் சத்தியமாக அங்கிருந்த எவரும் எதிர்பார்க்கவில்லை. ராஜேந்திரனைப் பற்றி அனைவரும் நன்கு அறிவர். பணிவுடனும், மரியாதையுடனும் நடந்து கொள்பவர். வீட்டின் வேலையாட்களைக் கூட மரியாதைப் பன்மையில் விளிப்பவர். முதலாளிக் குடும்பத்தில் அவ்வாறு விளிப்பவரும் அவர் ஒருவரே! எல்லோருக்கும் அதிர்ச்சியே. மேகவதி சிலையாகச் சமைந்து விட்டார்.



“கண்ட கண்ட தெருவுல பொறுக்குற நாயா! யாரு என் பொண்டாட்டியா??? பொழுதுக்கும் அந்தச் சங்கம் இந்தச் சங்கம் அப்பிடின்னு இப்பிடின்னு அலட்டிக்கிட்டு அலைஞ்சாளா?? இல்ல நூத்துக் கணக்குள புயூட்டி பார்லருக்கு மொய் எழுதினாளா??? போன்ல வம்பு பேசி அடுத்தவங்கக் குடியக் கெடுத்தாளா??? வீட்டு ஆம்புளைங்க உழைச்சி சம்பாதிக்கிறதக் காசைச் சீட்டுக் கட்டு, குதிரை ரேசு, சினிமா சோக்குனு விட்டாளா?? பொழுதுக்கும் இதை எல்லாம் செஞ்சிட்டு திங்கிறதுக்கும், தூங்கறதுக்கு மட்டும் வீட்டுக்கு வராளுங்க பாரு பொம்பளைங்க! அவளுங்க தான் தெருவுல பொறுக்குற நாய்ங்க! இதுக்கு மேலயும் இருக்கு, கேக்குறத்துக்கு இங்க எல்லாருக்கும் காது கூசாதுன்னு எனக்கு நல்லாவேத் தெரியும்! ஆனா பாரு எனக்கு சொல்லறதுக்கு வாய் கூசுது. இப்ப சொல்லு யாரு தெருவுல பொறுக்குற நாய்.” என வார்த்தைகளைச் சாட்டையனச் சுழட்டி தாய் மற்றும் தங்கை மீது மறைமுகமாக வீசினார். இத்தனை வருடம் அவர்களின் மேல் இருந்தக் கோபம், வெறுப்பு இன்று வெடித்து வார்த்தைகளாகச் சிதறி விட்டன.



ராஜேந்திரன் தனது தாய் மேகவதியையும், தங்கை வசுந்தராவையும் மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறார் என அனைவருக்கும் புரிந்தது. வசுந்தராவை வேலையாட்கள் உட்கார வைத்துக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தனர். அவளும் எந்த நினைப்புமின்றி அவர்கள் இழுத்த இழுப்புக்குச் சென்றாள். தன் சக்தி முழுவதையும் இழந்திருந்தாள். தன் அண்ணன் தங்களை மறைமுகமாக சுட்டிக் காட்டிப் பேசியதை உணரும் நிலையில் அவள் இல்லை. ஏன்? எதையுமே உணரும் நிலையில் அவள் இல்லை. அவள் அண்ணன் ராஜேந்திரன் அவளை விளைக்கமாற்றால் விளாசித் தள்ளிவிட்டானே!!! உடம்பெல்லாம் தடி தடிப்பாக இரத்தம் கன்றி சிவந்த மேனி மேலும் சிவந்து இருந்தது.



“எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.”



ராஜேந்திரன் வசுந்தராவை அடித்த அடி யாரையும் அவரிடம் நெருங்கவிடாமல் செய்தது. மேகவதியின் விசுவாசி ஒருத்தி உள்ளே ஒடிச் சென்று தர்மேந்திரனுக்கு தொலைப்பேசியின் மூலம் தகவலைச் சொல்லிவிட்டாள்.



கஜேந்திரன் தனது பேரன் ராஜேந்திரனின் ருத்ர தாண்டவத்தில் அரண்டு தான் போயிருந்தார். ராஜேந்திரனுக்கு இவ்வளவு கோபம் வரும், அடுத்தவர் மனம் நோகப் பேச வரும் என்று யாரேனும் ஐந்து நிமிடத்துக்கு முன்பு கூறி இருந்தால் கேலி சிரிப்பு சிரித்துவிட்டுப் போயிருப்பார். இப்பொழுது! அவரே நேரில் கண்டு விட்டாரே! பேத்திக்கு விழுந்த அடிகள், ராஜேந்திரனின் மனைவியை நெருங்க நினைக்கும் அனைவருக்கும் விழும் என்று சொல்லாமல் சொல்வது போல் இருந்தது.

 
Status
Not open for further replies.
Top