நாற்பத்தி ஒன்பதாம் பகுதி...
ரஞ்சனி அலுவலகம் செல்ல ஆரம்பித்தாள். சிங்கம் திரும்பியதில், கடை சற்று பயபக்கியுடன், நடந்தது.
ராஜா முகத்தில் சோகம் தெரிய, என்ன ராஜா!! என்ன பிரச்சனை என்றாள் ரஞ்சனி??
ராஜா, ஒன்னுமில்லை மேடம், ஒன்னுமில்லையே!! என்னாச்சு மேடம்?? என திணறினான்.
ரஞ்சனி கண்கள் கூறாக அவனையே பார்க்க, யாரும் ஏதும் சொன்னாங்களா?? மேடம் என்றான் பதற்றத்தில்..
யாரு?? என்றாள் ரஞ்சனி...
யாருமில்லையே!! யாரு... யாரு என உளறினான் அவன்.
ரஞ்சனி, ராஜாவை எதிரில் உள்ள நாற்காலியில் அமரச்சொன்னாள்.
நடந்து வரும் வழியிலே அவனுக்கு கால்கள் இடறியது.
நாற்காலியில் அமர்ந்தவன், சட்டென ஞாபகம் வந்தவனாக எழுந்தான். பேமெண்ட் ரிசிப்ட் இன்னும் வரல, அத என்னனு செக் பண்ணீட்டு வரேன் என்றான்.
பரவால்லை, உட்காருங்க என்றாள் ரஞ்சனி.
வேறு வழியில்லாமல், அமர்ந்தவன், படபடப்பாகவே இருந்தான்.
எதிரில் இருந்த தண்ணீர் டம்ளரை சுட்டி, முதல்ல தண்ணி குடிங்க என்றாள்.
தண்ணீர் குடித்து சற்று அமைதியானதும், ரஞ்சனி பேசினாள். சொல்லுங்க என்றாள்.
என்னப் பத்தி நீங்க தப்பா நினைக்கக்கூடாது. நான் எந்த தவறான எண்ணத்தோடும் இல்லை என பீடிகையுடன் ஆரம்பித்தான்.
கடையில் எந்தவித குளறுபடியும் இல்லை. கணக்குகள் மிகத் தெளிவாக இருந்தது. இவன் எதைப்பற்றி கூற வருகிறான் என யோசித்தாள் ரஞ்சனி.
எம்மேல எந்த தப்பும் இல்லை ரஞ்சனி மேடம், நான் காதலைத்தான் சொல்லப்போனேன். கைகலப்பாகிவிட்டது. ஆனால், அவளது நெற்றியில் போட்ட தையலுக்கும் எனக்கும் எந்தவிதமான நேரடி சம்பந்தமும் இல்லை. அவள் முதலில் புகார் கொடுத்திருந்தாலும், நீங்கள் என பக்க ஞாயத்தையும் கேட்க வேண்டும் என்றான்.
புகார் கொடுத்தது... என ரஞ்சனி யோசிக்க, தேவி எந்த வித புகாரும் கொடுக்கவில்லையா???!!!! என்றான் முழித்தவாறு.
அடுத்த இரண்டு நிமிடத்தில் தேவி ரஞ்சனியின் அறையில் இருந்தாள். அவளது நெற்றியில் காயத்திற்கான பிளாஸ்திரி இருந்தது.
எப்படி காயமானது என ரஞ்சனி தேவியிடம் கேட்க, அவளோ வீட்டுல கதவுல இடுச்சுக்கிட்டேன் என்றாள்.
ரஞ்சனி அதே கேள்வியை, ராஜாவிடமும் கேட்க, அவன் தேவியை குழப்பமாய் பார்த்தவாறு, எனக்கும் அவளுக்கும் சின்ன வாக்குவாதம், அவள் கராத்தேயில் வேகமாக என்னை அடிக்கவர, நான் அவளது கையை பிடித்துவிட்டேன். என்னிடமிருந்து கையை உருவ அவள் முயற்சிக்கும் போது, அவள் தலை பக்கத்திலிருந்த அலுமினியப்பெட்டியில் இடித்துவிட்டது என்றான்.
ரஞ்சனி, இப்போது தேவியை கூர்ந்து பார்த்தாள். சாரி மேடம் என்றவள், வேறேதும் பேசவில்லை. கலங்கமான கண்களை பெருமுயற்சி செய்து மறைத்துக்கொண்டிருந்தாள்.
ரஞ்சனி ராஜாவிடம், பில் வரலனு சொன்னீங்களே, போய் செக் பண்ணுங்க என்றவள், வா என தேவியுடன் வெளியேறினாள்.
தேவி, ராஜாவைப் பார்த்தவாறு கடந்து சென்றாள். தேவியின் பார்வையில் இருந்தது என்ன என்பது அவனுக்கு புரியவில்லை. ஆனால் ஏனோ மனம் கலங்கினான்.
ரஞ்சனி கடையின் உணவகத்திற்குள் நுழைந்ததும், அங்கிருந்த பணியாளர்கள், ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டனர். இன்று யாருக்கு ஆப்போ என்ற ரீதியில், தான் எதிலும் மாட்டிவிடக்கூடாது, என்ற பயத்தில் இருமடங்கு கவனமாக வேலை செய்தனர்.
ரஞ்சனி எதிரில் தேவி அமர, உடனே என்ன வேண்டும் என ஒருவன் ஓடிவந்தான். இரண்டு காபி, நான் சொல்லும்போது எடுத்துவந்தால் போதும் என்றுவிட்டு, தேவியிடம் திரும்பினாள்.
ராஜாவால் உனக்கு ஏதும் தொல்லையா?? எனக்கேட்டாள் ரஞ்சனி.
தேவி, ச்சே, அப்படி எல்லாம் ஒன்றுமில்லை மேடம் என்றாள்.
தேவி இவ்வாறு அமைதியாக இருப்பதால் பிரச்சனை தீராது. உனக்கு தேவையானது என்ன என்று சொன்னால், நான் பார்த்துக் கொள்கிறேன். பிறகு உன் விருப்பம் என்றவள், காபி!! என ஒரு சத்தமிட அடுத்த நொடி டேபிளில் இரண்டு காபி இருந்தது.
ரஞ்சனி காபி அருந்த ஆரம்பித்தாள். தேவி மெதுவாக பேச ஆரம்பித்தாள். நானும் ராஜாவும் ஒருவரையொருவர் காதலிக்கிறோம். அவர் என்னிடம் தன் காதலை சொல்லிவிட்டார். ஆனால் எனக்குவிருப்பம் இருந்தும், நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாள்.
ரஞ்சனி காபி அருந்திய வண்ணம் கதைகேட்க ஆரம்பித்தாள். முதலில் எங்கள் பேச்சு சுமூகமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது என்னால், அவரை காதலிக்கவும் முடியாது, கல்யாணத்திற்கு நான் தகுதியானவளும் இல்லை.
ரஞ்சனி புருவத்தில் சற்றே முடிச்சுவிழுந்தது. என் அப்பா இறந்தபின், நான் வீட்டின் அப்பாவாகிவிட்டேன். தம்பி படித்துக்கொண்டிருக்கிறான். அம்மா இப்போதுதான் சோகத்திலிருந்து தேறி வருகிறார்கள். என் சம்பாத்தியம் என் குடும்பத்திற்கு இன்று அத்யாவசியம். நான் அவரின் காதலை ஏற்றுக் கொண்டாளோ, இந்த வேலையை விட நேரிடும், கணவன் மனைவியாக இங்கே வேலை பார்க்கக் கூடாது என்று கடையில் சட்டம் இருக்கிறது என ரஞ்சனியை ஏறிட்டுப் பார்த்தாள் தேவி.
ரஞ்சனி, தேவியின் முன்னிருந்த காபிகப்பை காட்ட, தேவி, ரஞ்சனியின் முகத்தை ஆர்வமாக பார்த்தவாறு, காபியை கையிலெடுத்தாள்.
எனக்கு தெரியாம கடையில காதல்.... என்றவள் வேறேதும் சொல்லாமல் எழுந்து சென்றுவிட்டாள்.
அவளது வேக நடையை கடையின் ஊழியர்கள் திக்கென்ற மனதில் பார்த்துக்கொண்டிருந்தனர்.
தேவி, காபியை அப்படியே வைத்துவிட்டு ரஞ்சனியின் பின் ஓடினாள்.
ராஜா ஏற்கனவே வேலை ஓடாமல், அமர்ந்திருக்க, ரஞ்சனி தனது வேக நடையில் , தனது அறைக்குள் நுழைய, அவனுக்கு பகீரென்றது.
தேவி, மேடம் வெறி சாரி என்றாள். ராஜா பதற்றமாக எழுந்து நின்றான்.
ரஞ்சனி தேவியிடம், என்னிடம் சொன்னதை ராஜாவிடம் சொல் என்றாள்.
தேவி, ரஞ்சனி மீதுள்ள பயத்தில் மடமடவென ஒப்பித்தாள்.
இப்போது ரஞ்சனி பேச ஆரம்பித்தாள். நான் கடையின் ஒழுக்கத்திற்காக போட்ட சட்டத்தை மாற்ற முடியாது. அதனால் ஒருவர் கட்டாயம் வெளியேற வேண்டும். யார் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றாள்.
ராஜா நான் வேலையை விட்டுவிடுகிறேன் என்றான். தேவிக்கு அழுகைவந்ததே தவிர, வேலையை விட முடியவில்லை.
அப்படியானால் நீங்கள் திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்துவிட்டீர்கள். அப்படித்தான!!என்றதும் தான் இருவருக்கும் உரைத்தது. ராஜாவும் தேவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, ரஞ்சனிக்கு சிரிப்புவந்துவிட்டது.
ராஜா நீங்க போக வேண்டாம். தேவி என்னோட அப்பா கடைக்கு போகட்டும் என்றாள் ரஞ்சனி. தேங்க்ஸ் மேடம் என ரஞ்சனியின் கைகளைபிடித்து கண்ணீர்விட்டாள் தேவி.
நீ மனதில் போட்டு குழப்பாமல், ராஜாவிடம் நேரடியாக பேசினால், அவரே எல்லாவற்றையும் சரி செய்திருப்பார். ராஜாமீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்ததால்தான், நா இப்படி ஒரு கேள்வி கேட்டேன்.
அழாதே!! கல்யாணம் எப்போ?? என்றாள் ரஞ்சனி.