All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)" - கதைத் திரி

Status
Not open for further replies.

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காட்சி-10
தன்னை நட்புணர்வுடன் ஏற்றுக் கொண்டிருந்த சம்யுக்தாவிடம் அர்ஜுன் தயக்கத்தை விடுத்து இயல்பாக உரையாடலானான்... சம்யுக்தா எளிதில் பழகும் ரகம் இல்லை தான் என்றாலும், அவனின் நட்புணர்வில் ஏதோ ஒன்று அவன்பால் ஈர்க்கபட்டிருக்கவே அவனுடன் சகஜமாக உரையாடினாள்.

“சரி அப்போ நெக்ஸ்ட் பிளான் என்னன்னு நீங்க டிசைட் பண்ணிட்டு சொல்லுங்க சம்யுக்தா?” என்று கூறிவிட்டு மரியாதை நிமித்தம் கைகுலுக்கிவிட்டு நகர எத்தனித்த சமயம் சம்யுக்தாவின் குரல் தடுத்தது.

“ஒரு நிமிஷம்” என்றதும் நடையை நிறுத்தி சிரத்தை மட்டும் திருப்பி பார்த்தவனிடம்...

“என்னை நீங்க இனி என் பெயர் சொல்லியே கூப்பிடலாம்” என்று புன்முறுவலுடன் கூறியதும், கூர்மையாக துளைத்தவனின் பார்வையில் ஏதோ ஒன்று தென்பட்டிருக்க அது என்னவென்று புரியாது யோசனையில் புருவம் இடுக்கினாள்... அதை பற்றி அவள் வினவும் முன் சுதாரித்தவன்...

“கண்டிப்பா சம்மு” என்று இயல்பாக கண்சிமிட்டி தன் கருநிற குளிர் கண்ணாடியை அணிந்துக் கொண்டு வேகமாக நகர்ந்துவிட்டிருந்தான். அவன் அழைப்பில் இருந்த பிரத்யேக உணர்வின் தாக்கம் அப்போதும் அவளுக்குள் ஏதோ செய்தது.

அவன் கூறியவற்றை எல்லாம் யோசித்தபடி அடுத்தகட்ட முடிவை எண்ணி கொண்டிருந்தவளின் சிந்தனையை சந்தோஷின் அழைப்பு கலைத்திருக்கவே, தன் யோசனையை ஒத்தி வைத்தவள் சிரத்தையுடன் பதிலளிக்க ஆயத்தமானாள்.

அன்பழகன் சம்யுக்தாவின் தீர்மானத்தில் பலமான எதிர்ப்பு கருத்து இருந்தபோதும் அவள் கூறியதை முற்றிலும் முடக்கிவிட மனம் வரவில்லை... ஆகையால் சில பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சிலரிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டவர் அதனை ஏற்றுக் கொண்டு அதன்படி செய்யலானார்.

முதல் முக்கியமாக அங்கே நீதிமன்றதில் மிகவும் பிரபலமான பெண் வழக்குரைஞர் சகுந்தலாதேவியை அணுக திட்டமிட்டார்... அவர் எடுத்த எந்த ஒரு வழக்கும் இதுவரை தோல்வியை சந்தித்ததில்லை என்ற சுற்றும் உலவளாவிய கருத்துக்களே அவரை எந்தவித தயக்கமும் இன்றி அணுக வசதியாகிப் போனது.

“எக்ஸ்கியூஸ் மீ மேடம் அம் அன்பழகன்” என்று அறைக்குள் நுழைந்தவரை கண்ட சகுந்தலாதேவி...

“வாங்க அன்பழகன்... உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்”

“ரொம்ப தேங்க்ஸ் மேடம்...”

“அதிருக்கட்டும் திடிர்ன்னு என்னை பார்க்கணும்னு சொன்ன காரணம் என்ன?” என்று விசாரித்தார்.

“ஒரு கேஸ் விஷயமா உதவி வேணும் மேடம்” என்றதும் அவருக்கு வியப்பாகிப் போனது...

“என்ன என் உதவியா?”

“ஆமாம் மேடம்” என்றவர் சம்யுக்தாவை பற்றி கூறி அவளுடைய தொழிலையும், திருமண வாழ்வையும் பற்றி எடுத்துரைத்தவர் அதற்கான சில சாதகபாதகங்களையும் கூறியிருந்தார்.

“சோ, நீங்க சொல்றதை பார்த்தா இது கொஞ்சம் சென்சிடிவா ஹேண்டில் பண்ணுற மாதிரி இருக்கும் போலவே” என்று தன் யூகத்தை கூறிவிட்டிருந்தார்.

“உண்மை தான் மேடம்... இதில் சில சிக்கல்களும் இருக்கு... சம்யுக்தா சில விஷயங்களில் அடமெண்ட்டான பொண்ணு, அவள் கணவர் கவின்கலாதரன் அதை விட அழுத்தமானவன் இவங்களுடைய முடிவு நாளைக்கு அந்த குழந்தையை பாதிக்கலாம் இல்லையா?”

“பாதிக்கலாம் என்கிற பிராபபிலிட்டி எல்லாம் இல்லை அன்பழகன், நிச்சயம் பாதிக்கும்... இந்த கேஸ் முடியற வரைக்கும் நானே முழு பொறுப்பை எடுத்துக்கிறேன்” என்றவரின் பதிலில் மிகுந்த திருப்தியுற்றவராக அடுத்தகட்ட பணிகளை பார்க்கச் சென்றிருந்தார்.

அன்பழகன் சென்றதும் சகுந்தலாதேவி உடனடியாக அந்த வழக்குக்கு சம்மந்தமான முக்கிய தகவல் படிகளை தெரிந்துக் கொள்ள ஆயத்தமானார்.

அன்றைய தினம் இனிதாகவே புலர்ந்திருக்க சம்யுக்தா, கலாதரன் இருவருக்கும் அன்று முதல் வழக்கு விசாரணையொட்டி கலந்தாய்வு ஆலோசனைக்கு வழக்குரைஞர் பக்கம் அழைப்பு விடுத்திருந்தார்கள்.

அர்ஜுன் வாயிலாக அறிய வந்த வாணி, அரசி இருவரும் அவர்களின் நல்வாழ்க்கைக்கு சாதகமாக முடிய வேண்டி, குழந்தையை அர்ஜுன் பொறுப்பில் விட்டுவிட்டு இருவரும் அதிகாலையிலேயே கிளம்பி புலியகுளம் விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபட புறப்பட்டனர்.

இருவரும் விநாயகரை வழிபட்டு விட்டு பிரகாரத்தில் சற்று நேரம் ஆசுவாசமாக அமர்ந்து அன்று அவர்கள் தமையனின் வாழ்க்கை சீர்பட நேர்மறையான பதிலே கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலை மனதில் நினைத்து பிரார்த்தித்து கொண்டனர்.

தரிசனத்தை முடித்துவிட்டு இருவரும் கிளம்ப ஆயத்தமான சமயம்... “அக்கா அண்ணனும், அண்ணியும் பிரிஞ்சிடமாட்டாங்களே?” என்று பதைப்புடன் வினவினாள் வாணி.

“அதெல்லாம் பிரியமாட்டாங்க வாணி நீ கவலைப்படாதே... நமக்காக தானே அர்ஜுன் சார் ரிஸ்க் எடுக்கிறாரு... எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்றவள் தன் கரத்தை அவள் கரத்தில் வைத்து ஆறுதலளித்திருந்தாள்.

அங்கிருந்து புறப்பட்டு அவர்கள் பதிவு செய்திருந்த ஆட்டோவின் வருகைக்காக காத்து கொண்டு நின்றிருந்த சமயம், அவர்களுக்கு வெகு அருகில் அவர்களை உரசுவது போன்று கிறீச்சிட்ட சப்தத்துடன் வந்து நின்ற வாகனத்தை கண்டு திகிலடைந்து போனவர்கள், அதிலிருந்து சீற்றத்துடன் இறங்கிய ரஞ்சனை கண்டு மேலும் இருமடங்கு திகைத்தவர்களாக ஒருவர் முகத்தை ஒருவர் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டனர். அவர்களின் அச்சம் மிகுந்த பார்வையை பற்றி சிறிதும் லட்சியம் செய்யாமல்...

“உங்ககிட்டே பேசணும்” என்று அதிகாரமாக கூறியவனை கண்டு இருவரும் கிலி மறந்து சினம் அதிகரித்திருக்க வாணி தீயென முறைத்தபடி...

“உங்ககிட்டே பேச எங்களுக்கு விருப்பம் இல்லை” என்று கடுத்த குரலில் சுள்ளென்று எரிந்து விழுந்தவள் அவனை அலட்சியப்படுத்தும் விதமாக...

“வாக்கா போகலாம்” என்று அரசியின் கரத்தை பிடித்துக் கொண்டு வெடுக்கென்று நகர்ந்தவளின் செயலில் கடுப்புற்றவன்...

“எனக்கும் உங்க கூட பேச இஷ்டம் இல்லை தான், என்ன செய்யுறது எல்லாம் என் தலையெழுத்து” என்று வெகுவாக சலித்துக் கொண்டவனை கண்டு இருவரும் உஷ்ண நிலையை அடைந்தனர்...

“இது இனி தொடரக் கூடாதுன்னு தான் என் விருப்பமும்... உங்களுக்கு எப்படி வசதி” என்றவனின் வார்த்தையில் அரசிக்கு சினம் மேலோங்கினாலும் அதை கட்டுபடுத்திக் கொண்டு மிகவும் நிதானமாக அவனை பார்த்தவள், அருகில் கொதிநிலையின் உச்சத்தில் இருந்த வாணியின் கரத்தை அழுத்திக் கொடுத்து சைகையால் அமைதியாக இருக்கும்படி உணர்த்தியவளின் சூட்சுமத்தை புரிந்துக் கொண்டு தானும் பொறுமையை கடைபிடிக்கலானாள்.

“சொல்லுங்க” என்று அவள் பேச அனுமதித்ததும்...

“எனக்கு தெரியும் உங்க அண்ணனுடைய விவாகரத்து முடிவை நிராகரிக்கிறது நீங்கதான்னு... இனி நீங்க உங்க அண்ணன் வாழ்க்கையில் தலையிடாதீங்க... அப்படி செய்தா சனியனை உங்க முந்தானையில் முடிஞ்சுக்கிற கதை தான்... உங்களையும் உங்க குடும்பத்தையும் சும்மா விடமாட்டேன்” என்று துவேசத்துடன் கூறி மிரட்டல் விடுத்திருந்தான்.

அதுவரை மெளனமாக இருந்த அரசி தன் பொறுமையை இழந்தவளாக வெடித்தாள்... “ஒஹோ... அப்படியா? எங்கே அப்படி என்ன செய்திருவீங்கன்னு ஒரு சாம்பிள் காட்டுங்களேன் பார்ப்போம்” என்று சிறிதும் அச்சமில்லாமல் நிமிர்வுடன் மிடுக்காக வினவினாள்.

“நான் எதையும் சொல்லமாட்டேன் செய்து தான் காட்டுவேன்... அதுக்கு சாம்பிள் நான் காட்ட வேண்டிய அவசியம் இல்லை... அதுதான் ஆல்ரெடி ஆதாரமே இருக்கு” என்று கூறியவனின் பார்வை ஏளனமாக வாணியின் மேல் படிந்தது... அவன் பார்வையின் பொருள் அறிந்த இருவருக்கும் ஆக்ரோஷம் போங்க, இருவரின் கண்களிலும் அழல் எரிந்தது.

“என்ன எகத்தாளமா?” என்ற அரசியின் குரலில் அனல் பறக்க...

“எப்போவும் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது மிஸ்டர்.ரஞ்சன், பார்த்து நடந்துக்கிறது தான் உங்களுக்கு நல்லது... முதலில் நீங்க செஞ்ச தப்பை சரி செய்யப் பாருங்க” என்று எச்சரித்த வார்த்தையில் எஃகின் கடினத்தை தாங்கி இருந்த கடுமையை உணர்ந்தவன்...

“ஏய் என்ன திமிரா? நான் நினைச்சேனா உங்க ஒட்டு மொத்த குடும்பத்தையும் இப்போவே கம்பி எண்ண வைப்பேன், என்ன செய்து காட்டடுமா?” என்று சீறினான்.

“முடிஞ்சா செய்து பார்... இந்த பூச்சாண்டி காட்டுற வேலை எல்லாம் எங்ககிட்ட வேண்டாம்” அவனை அலட்சியபடுத்தி விட்டு செல்லும் நோக்கில் முனைந்தவளை ஆத்திரத்துடன் மறித்து நின்றவன்...

“என்னையே அலட்சியம் செய்யுறீங்களா? ஏன் இவ்வளவு பேசுறியே உன் தங்கைக்கு ஊரில் வேற ஆம்பளையா இல்லை” என்றதும் அரசி இருக்கும் இடம், பொருள், ஏவல் அனைத்தையும் ஒதுக்கி வைத்தவள் அவன் கன்னத்தில் “பளார்” என்று அறைந்திருந்தாள். அவளின் அறையில் ரஞ்சன் அதிர்ந்து போனான்!

வாணியின் குழந்தை தாயை தேடி அழுகையில் தவித்ததை கட்டுபடுத்த இயலாது, அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்த அர்ஜுனும் அரசியின் தாக்குதலை கண்டு அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன தைரியம் இருந்தா உங்க அக்கா என்னை அடிப்பா?” என்று அவமானத்தில் வாணியிடம் சீறினான்.

அவர்களுக்குள் ஏதோ பலமான தர்க்கம் நடப்பதை அறிந்த அர்ஜுன் அவர்களை நெருங்க எண்ணுகையில் ஏதோ ஒன்று தடுக்க வாகனத்திலேயே அமர்ந்துவிட்டான்... அதுவரை அழுகையில் கரைந்து கொண்டிருந்த குழந்தையும் தன் அழுகையை நிறுத்தி தன் பொக்கை வாயை திறந்து கைதட்டி சிரித்துக் கொண்டிருந்தது. குழந்தையின் செயலை கண்டு அவனுக்கே பெரும் மறுட்கை சூழ்ந்தது.

“ஒஹ்! அங்கே உன் அப்பா அடி வாங்கியதும் உனக்கு இங்கே இவ்ளோ சந்தோசமா” என்று கூறி கன்னத்தில் அச்சாரம் பதித்தவன், இந்த சூழ்நிலையில் தானும் இடையிட்டால் வேறேதும் விபரீதம் நேர்ந்தாலும் ஆச்சர்யம் இல்லை என்பதை உணர்ந்து அவர்களே கையாளட்டும் என்ற எண்ணம் கொண்டு வாகனத்திலேயே அமர்ந்துவிட்டான்.

ரஞ்சனின் கேள்விக்கு... “ஆமாம் தப்புதான்” என்று தாளம் அடித்ததில் அரசியை பார்வையால் எரித்து கொண்டிருக்கும் போதே அடுத்த சவுக்கடி வார்த்தைகளை தெளித்தாள் வாணி.

“நியாயமா பார்த்தா செருப்பால் அடிச்சிருக்கணும் கையால் அடிச்சது தப்புதான்... அந்த தப்பை இப்போ நான் சரி பண்றேன்” என்றவள் தன் பாதணியை எடுக்க முயல்வதை சட்டென்று தடுத்து நிறுத்திய அரசி...

“வாணி அவசரப்படாதே முதலில் நிதானத்துக்கு வா” என்று அதட்டியபடி அவளின் கரத்தை இறுக்க பிடித்துக் கொண்டவள் பார்வையாலும் எச்சரிக்கை விடுத்திருந்தாள்.

“இனி இது போல எங்களை மிரட்டுற வேலை எல்லாம் வேண்டாம்... அப்புறம் கொஞ்சமும் தயங்காம உங்களை உள்ளே தள்ளிருவோம்” என்றவளின் வார்த்தைக்கு அப்போதே தேவதைகள் ததஸ்து சொல்லியதோ என்னவோ... அவளின் பேச்சை கேட்டு ரஞ்சன் கையை ஓங்கிய சமயம், அர்ஜுன் அதற்கு மேல் பொறுக்காமல் வேகமாக இறங்க முற்படவும், காவல்துறை வாகனம் ஒன்று அங்கே நிற்கவும் சரியாக இருந்தது.

“என்னம்மா பிரச்சனை...?” என்று வாணி, அரசியிடம் வினவியபடி காவல்துறையின் அடையாளமான காக்கி ஆடையை அணிந்த காவலர் இறங்கினார்.

வாணி, அரசி இருவரும் முதலில் புரியாமல் பார்த்தாலும் ரஞ்சன் பார்வையில் இருந்த மிரட்சியை கண்டு... ‘மாட்டினியாடா மகனே...’ என்று மானசீகமாக கேலி செய்தனர்.

இரண்டு பெண்கள் மத்தியில் ஆணவன் மிகுந்த ஆவேசத்துடன் பேசியதை கண்டு ஏதோ தகராறு என்று மட்டும் அறிந்தவராக...

“என்னடா பொண்ணுங்ககிட்டே பிரச்சனை பண்ணிட்டு இருக்கிற?” என்று அதிகாரத்துடன் ரஞ்சனை அதட்டினார்.
அதில் ரஞ்சன் மிரண்டு போக உள்ளக்குள் உதறிக் கொண்டிருந்தது... அரசி சுதாரித்துக் கொண்டவளாக அவனிடம் கண்களால் ‘என்ன சொல்லிவிடவா?’ என்று வினவ... அதில் அவனுக்கு அச்சத்தில் முகம் ரத்த பசையின்றி வெளுத்துப் போக, முதுகுதண்டு சில்லிட்டு குளிர்ஜுரம் வருவது போன்று ஆகிப் போனது.

“கேட்கிறேனில்லை சொல்லுங்கம்மா என்ன பிரச்சனை?” என்று இப்போது காவலர் பெண்கள் புறம் திரும்பி வினவியதும்...

“இவர் இவளுடைய கணவன் சார்... ரெண்டு பேருக்கும் சின்ன சண்டை அதில் கோவிச்சுகிட்டு எங்க வீட்டுக்கு வரேன்னு சொன்னதும் நான் கூட்டிட்டு போக வந்தேன் உடனே இவர் கோபப்பட்டு இவளை கூட்டிட்டு போகக் கூடாதுன்னு எங்கிட்டே சண்டைக்கு வராரு” என்றதும் காவல் அதிகாரியின் மூளைக்கு அவள் திரித்து கூறுவது முற்றிலும் பொய் என்பதை மட்டும் கண்டு கொண்டாலும் அவர்களாக சட்டத்தை நாடாமல் தான் கையில் எடுக்க முடியாது என்பதை உணர்ந்தவர்...

“ஏன்யா உன் குடும்ப பிரச்சனை எல்லாம் வீட்டில் வச்சுக்கக்கூடாதா? இப்படி ரோட்டில் வச்சு பிரச்சனை பண்ணிட்டு இருக்கிறது எல்லாம் நல்லாவா இருக்கு? இதெல்லாம் சரியில்லை பார்த்துக்கோ, ஒழுங்கா அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போ” அவனின் செயலுக்கு கடிந்தபடியே அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்திருக்க, ரஞ்சனுக்கு போன உயிர் மீண்டது போன்று ஆகிப் போனது.

“பார்த்தீங்களா இப்போ மட்டும் நாங்க நினைத்திருந்தா நீங்க கம்பி எண்ண வேண்டியதா இருந்திருக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க” என்றதும் அவளின் பேச்சில் பல்லை கடித்தவன்...

“என் நேரம் உங்களுக்கெல்லாம் அடங்கணும்னு, உங்களையும் ஒருநாள் அடக்கறேன்... அன்னைக்கு தெரியும் நான் யாருன்னு” என்று குரோதத்துடன் சீறிவிட்டு சென்றவன் இதயதுடிப்பு அப்போதும் எகிறி குதித்து கொண்டு தான் இருந்தது. அவனை பெரிதும் சட்டை செய்யாத அரசி, வாணி இருவரும் பதிவு செய்திருந்த வாகனம் ரத்து செய்யப்பட்டிருக்க...

“ச்சேய்... இது வேற இப்படி பண்ணுது” என்று கடுப்புடன் அலைபேசியை கையாண்டவளை நெருங்கிய அர்ஜுன்...

“அரசி” என்றழைக்க, அவனை கண்ட இருவரும் சற்று நிம்மதியடைந்தனர்.

“அண்ணா நல்ல நேரத்துல நீங்க வந்தீங்க” என்று நடந்ததை அவனிடம் கூற வாய்திறந்த சமயம், அரசி அவள் கரங்களில் அழுத்தம் கொடுத்து தடுக்கவே சொல்ல வந்த வார்த்தைகளை அப்படியே உள்ளிழுத்துக் கொண்டாள்.

ஆனால் இவர்களின் செயலை கவனித்துவிட்டவன்... “நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் நடந்தது எல்லாத்தையுமே நான் பார்த்துட்டு தான் இருந்தேன்... நீங்க புறப்பட்ட சரியா பத்தாவது நிமிஷம் பாப்பா அழுக ஆரம்பிச்சுட்டா... என்னால ஒரு கட்டத்துக்கு மேல சமாளிக்க முடியலை உங்க அண்ணன் கவனிச்சு கேட்டுட்டா உங்களை கடிச்சு துப்பிருவான், அது தான் சீக்கிரமே குழந்தையை தூக்கிட்டு உங்களை தேடி வந்தேன்”

“ரஞ்சன் பேசியதை பார்த்தேன்... அதுக்குள்ள போலீஸ் ஆபிசர் ஒருத்தர் இடையிடவும், நீங்க மட்டும் பேசுறது தான் சரின்னு ஒதுங்கி நின்னேன்” என்று கூறி முடிக்க...

“நாங்களே அண்ணனுக்கு மனசு மாறனும்னு தவிச்சுக்கிட்டு இருக்கிறோம் இதில் இவரு வேற எங்களை எரிச்சல் பண்ணிட்டு இருக்கிறாரு” என்று எரிச்சலுடன் கூறினாள் வாணி.

“பார்த்தேனே, அவர் உங்களை பேசியதையும் அதுக்கு அரசி மேடம் பதிலடி கொடுத்ததையும்” என்றவனின் முகம் சாதாரணமாக இருந்த போதிலும், அவன் கண்களில் இருந்த சிரிப்பையும், பாராட்டையும் அவள் மட்டுமாக கண்டுக் கொண்டு வெட்கத்தில் முகம் சிவக்க சிரம் தாழ்த்தினாள்... அவளின் அந்த நாணத்தை ரசித்தவனுக்குள் ஏற்பட்ட புதுவித நாளங்களின் உணர்வில் உள்ளம் கிளர்ச்சியடைவதை உணர்ந்தான்.

“சரி.. சரி.. சீக்கிரம் வீட்டுக்கு போகணும் வாங்க” என்றவன் அவர்கள் வாகனத்தில் ஏறியதும் ரஞ்சன் அடி வாங்கியதை ரசித்து சிரித்த வாணியின் குழந்தையை பற்றி கூறினான்.

“நிஜமாவா அண்ணா சொல்றீங்க...?”

“ஆமாம் வாணி... உனக்கு குழந்தை இருக்கிறதும் ஒருவகையில் நல்லது தான்... ஒரு நாள் இல்லை ஒரு நாள் நிச்சயம் உன் பொண்ணு அவங்க அப்பாவை கேள்வி கேட்கத்தான் போகிறாள்... அன்னைக்கு இருக்கு அவனுக்கு” மனதில் எதையோ நினைத்தபடி கூறியிருந்தான்.

“ஆனால் இதெல்லாம் நடக்குமா அண்ணா?” என்று துயரம் தோய்ந்த குரலில் ஏக்கத்துடன் கேட்டவளை கண்டு மனம் கசிந்து விட அதில் மனமுருகியவன்..

“நடக்கும் நிச்சயம் நடக்கும்... உன் ரஞ்சன் வீம்புக்காக வேஷம் போடுகிற மனித ஜந்தும்மா அவனை மாற்ற உன் பெண்ணால் தான் முடியும்” என்று ஆணித்தரமாக கூறினான்.

“எப்படி இவ்ளோ உறுதியான சொல்றீங்க?” என்று வினவியவள் அரசி.

“தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்”

“சரி தான் ஆனால் அது மனுஷனா இருக்கிறவனுக்கு... உயிர் மேல பாசமும், அன்பும், இரக்கமும் இருக்கிறவனுக்கு”

“ரஞ்சனுக்கு இப்போ இல்லாம இருக்கலாம், ஆனால் அவனுக்குள் அதை நுழைய வைக்கிறது சுலபம்” என்றவன் பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்திருந்தனர்.

கலாதரன் சரியாக ஒன்பது மணி அளவில் நீதிமன்றம் செல்ல கிளம்பி தயாராகி வந்தவனை அர்ஜுன், அரசி, வாணி மூவரும் ஒன்றாக திரண்டு சூழ்ந்தனர்.

“அண்ணா தயவு செய்து என் வாழ்க்கையை காப்பாற்றணும்னு உன் வாழ்க்கைக்கு சூனியம் வச்சுக்காதேன்னா... நீ அண்ணி, குழந்தையோட தான் ஊர் திரும்பனும்... அவங்க கூட நீ சந்தோசமா வாழணும்” மனவலியுடன் மன்றடினாள் வாணி.
அவளின் வார்த்தைக்கு எந்த எதிரொலியும் இல்லாமல் மெளனமாக நின்றிருந்தவனை கண்ட அரசிக்கு, அவள் பேச வேண்டிய வார்த்தை தர்ணாவில் ஈடுபட்டுவிட தயவுடன் அர்ஜுனை நோக்கினாள், அவனோ நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல் இமைமூடி திறந்து ஆறுதல் அளித்தான்.

“நீ என்னடா இன்னும் அசமஞ்சமா நின்னுட்டு இருக்கிற போய் காரை ரெடி பண்ணு நான் ஒரு கால் பேசிட்டு வரேன்” என்று அதிகாரமாக கூறிவிட்டு நகர்ந்திருந்தான் தரன்.

கலாதரன் நகர்ந்ததும் அரசி அவனை வியப்புடன் நோக்க அதை புரிந்தவன்... “என்னடா முந்தின நாள் தான் சட்டையை பிடிச்சு நீ யாருன்னு கேட்டான், இப்போ என்னமோ அதிகாரம் பண்ணுறானேன்னு பார்க்கறியா?” அவள் மனதை படிப்பிதவானாக கேட்டவனை ஆம் என்பதாக தலையசைத்தாள்.

“நான் தான் அப்போவே சொன்னேனே, உன் அண்ணன் கோபத்தில் பேசுறேன்னு... குடிகாரன் பேச்சும், கோபக்காரன் பேச்சும் தெளிஞ்சா போச்சு அவ்ளோ தான்” என்று கூறி இமை சிமிட்டினான்.

“எல்லாம் சரி தான் இன்னைக்கு நாள் நமக்கு சாதகமா அமஞ்சிருமா... எனக்கு ரொம்ப பயமா இருக்கு... நீங்க சொன்ன மாதிரி எல்லாம் நல்லபடியா நடந்திருமா?”

“நடக்கும் அரசி... நம்பு... நம்பிக்கை தான் வாழ்க்கை... அப்படி இல்லைன்னா என் கன்னம் சிவந்திருமே” என்று சூழ்நிலையை சகஜமாக்க கூறியவனின் சொல்லில் மறைந்திருந்த அர்த்தத்தை புரிந்து நாவை கடித்துக் கொண்டாள்.

“ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்க”

“இல்லை நாங்களும் கோர்டுக்கு வரோம்”

“எப்படியும் இன்னும் ரெண்டு நாளையில் கிளம்ப வேண்டிய சூழ்நிலை இருக்கும்... இன்னும் நீங்க வீட்டுக்கு போனா அங்கே வேற சூழ்நிலை சமாளிக்கனும்” என்று கூறியவனின் வார்த்தையில் அடுத்தகட்ட பிரச்சனையை நினைத்து சித்தம் திகிலடைந்தது.

“பரவாயில்லை நாங்களும் வரோம் இங்கிருந்து பதட்டத்திலேயே பயந்து இருக்கிறதுக்கு கூட வந்து என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிறோம்” என்று பிடிவாதமாக நின்றவர்களின் நிலையையும் புரிந்துக் கொண்டவன்...

“சரி வாங்க... ஆனால் நாங்க முன்னாடி போயிடுறோம் நீயும், வாணியும் கேப்ல வந்திருங்க, அப்போ தான் உங்க அண்ணன் தடுக்க வழி இருக்காது” அவனின் வார்த்தையை ஏற்றுக் கொண்டு அப்படியே செயல்படுத்தினர்.

அர்ஜுன், கலாதரன் இருவரும் புறப்பட்டு நீதிமன்ற வளாகத்தை அடைந்திருந்தனர். கலாதரன் இறங்கும் முன் அவன் கைபிடித்து தடுத்திருந்த அர்ஜுன்...

“டேய் நடந்ததெல்லாம் நடந்து முடிஞ்சது, இனி நடக்கப் போகிறதை யோசி... உன் வாழ்க்கை, உன் தங்கை வாழ்க்கை, ரெண்டு பேரும் வாழ்க்கையும் உன் கையில் இருக்கு... நீங்க நல்லா வாழணும், நீ தான் அதுக்கு அடித்தளம், அதை யோசிச்சு நல்ல முடிவா எடு” என்றவனின் சொல்லிற்கு எந்த பிரதிபலிப்பும் இல்லாது சென்றவனை ஆயாசத்துடன் பார்த்திருந்தான்.

கலாதரன் வழக்குரைஞர் அலுவலகம் சென்று சம்யுக்தாவுக்காக காத்திருக்கலானான். அரைமணி நேரம் கடந்த பின்பே சம்யுக்தா அன்பழகனுடன் பேசியபடி வருவதை கண்டவன், அவள் கையில் கோப்பு மட்டும் இருக்கவே குழந்தை இல்லாதது அவன் மனதை நெருடியது... அவளுக்கு பின்னால் யாரேனும் சுமந்து வருகிறார்களா என்று அவனையும் அறியாது அவன் விழிகளால் அலசினான்.

இருவரும் அவனை சமீபத்திருக்க, அப்போதும் தன் தேடுதலை தொடர்ந்தவனுக்கு குழந்தையை யார் கையாளுகிறார்களோ என்று பெருத்த விசனம் ஏற்பட்டது... அதை அனுபவம் வாய்ந்த அன்பழகன் பார்வைக்கு தட்டுப்பட்டிருக்க, அதை கவனமாக குறிப்பிடுத்துக் கொண்டவருக்கு தன் செயல் நிச்சயம் வெற்றி என்று மனதிற்குள் ஊர்ஜிதம் செய்து கொண்டார்.

அவனையே வைத்த கண் வாங்காமல் குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்த அன்பழகன்... “என்ன மிஸ்டர்.கவின்கலாதரன் வந்து ரொம்ப நேரம் ஆச்சா?” என்று இயல்பாக விசாரித்தார்.

“இல்லை சார் வந்து கொஞ்சம் நேரம் தான் ஆச்சு” என்றவன் அப்போதும் அவன் தேடுதலை நிறுத்தாது தொடர்ந்து கொண்டிருந்தான்.

“என்ன மிஸ்டர்.கவின் எதையோ தேடுவது போல இருக்கீங்க? உங்க சார்பாக யாரும் வர வேண்டுமா” அவரின் கேள்வியில் சுதாரித்தவன் சாதாரணமாக இருக்க மனதை இறுக்கிக் கொண்டவன்...

“அதெல்லாம் இல்லை... மேடம் டைம் ஆகிருச்சுன்னு அவசரமா வந்துட்டாங்க போல... அவங்களுக்கு ஏதாவது வேலை இருந்தா முடிச்சுட்டே வரலாம்... குழந்தையை கவனிக்கணும் என்றாலும் பரவாயில்லை நான் அதுவரைக்கும் வெயிட் பண்றேன்” என்று இறுதியில் அழுத்தம் கூறி முடித்தவனின் பேச்சில் இருந்த கரிசனத்தின் பின்புலத்தில் அவனுடைய உரிமை தென்பட்டத்தை இருவருமே கண்டு கொண்டனர்.

அவன் பேச்சில் இருந்த அக்கறை தொனியை புரிந்த சம்யுக்தாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது... ‘பேசுறதையெல்லாம் பேசிட்டு இப்போ பெத்த பிள்ளையை நினைச்சு ரத்தம், ஆவி எல்லாம் துடிக்குதோ?’ என்று நிந்தித்து சிறிதும் வெளிகாட்டிக் கொள்ளாமல் பிரயாசைப்பட்டு அடக்கிக் கொண்டவள், அவனையே அமர்த்தலாக பார்த்துக் கொண்டிருந்தாள்... அந்நேரம் அன்பழகனுக்கு முக்கிய அழைப்பு வரவே...

“சம்மும்மா இன்னைக்கு இன்னொரு கிளைண்ட்டோட கேஸ்க்கு தீர்ப்பு வருது நான் அதை முடிச்சுட்டு தான் இனி பார்க்க முடியும் நீங்க ரெண்டு பேரும் மிசஸ்.சகுந்தலாதேவியை பாருங்க” என்று நகரவும் அவளுக்கு கிடைத்தது வாய்ப்பு என்று அவனை தீர்க்கமாக நோக்க, தானும் சளைக்காது அவளை எதிர்கொண்டவனிடம்...

“ரொம்ப தேங்க்ஸ்” என்று குதர்க்கமாக மொழிந்தாள்... அவளின் நன்றியில் ஏதோ குதர்க்கம் இருப்பதை அறிந்து கண்கள் இடுக்கி பார்த்தவன்...

“எதுக்கோ?” என்க...

“அப்பா யாருன்னே தெரியாத குழந்தையை பற்றிய உங்க அக்கறையும், கரிசனமும் என்னை மெய்சிலிர்க்க வைக்குது” சற்றும் அலட்டிக் கொள்ளாது குத்தீட்டி வார்த்தையை இயம்பியவளின் இலக்கு சிறிதும் தவறாமல் அவன் நெஞ்சை குறிபார்த்து தாக்கி சுருக்கென்று தைத்ததில் துடித்துப் போனான்.

அவன் விழிகளில் ஓடிய செவ்வரியை கண்டவள் சிறிதும் அசையாமல் கல்லை போன்ற கடினத்துடன் நின்று விட்டிருந்தாள்.
இருவரும் பார்வையால் கத்திச் சண்டை யுத்தத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைத்தது ஒரு குரல்... “எக்ஸ்க்யூஸ் மீ சார்... சகுந்தலாதேவி மேடமுடைய கிளைண்ட் நீங்க தானே?”

“ம்ம்ம்... ஆமாம்”

“மேடம் உங்களுக்காக தான் வெயிட் பன்றாங்க” என்றதும் இருவரும் சுதாரித்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.
சகுந்தலாதேவி இருவரிடமும் மனுவை பெற்று சற்று நேரம் அதை கருத்தாக பார்த்தவர் தன் கேள்விக்கணைகளை தொடுக்க ஆரம்பித்தார்.

“ரெண்டு பேரும் லவ் மேரேஜா, அரேஞ் மேரேஜா?”
அவரின் கேள்விக்கு இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் இறுக்கத்துடன் பார்த்து விட்டு... “லவ் மேரேஜ்” என்று இறுகிய குரலில் ஒரு சேர பதிலளித்தனர்.

“ம்ம்ம்... லவ் மேரேஜ் பண்ணி எவ்ளோ நாள் ஆச்சு?”

“பத்து மாசம்”

“உங்கள் குழந்தைக்கு எத்தனை மாசம் ஆகுது?”

“மூணுமாசம்” அனைத்துக்குமே இருவரும் ஒரு சேர தான் பதிலளித்தனர்... அதை எல்லாம் குறிப்பாக கவனித்துக் கொண்டவருக்கு எங்கோ இடித்தது.

“சரி ரெண்டு பேரும் விவாகரத்து செய்வதில் உறுதியா இருக்கீங்களா?”

“ம்ம்ம்...” என்ற பரிபாஷை கலாதரனின் பக்கம் மட்டுமே எதிரொலிக்க சுதாரித்த வழக்குரைஞர்...

“என்ன மிசஸ்.சம்யுக்தா நீங்க எதுவும் சொல்லலை” என்றதும்...

“எனக்கு விவாகரத்துக்கு சம்மதமில்லை” என்று குண்டை தூக்கி வீச கலாதரன் மனைவியை திகைத்து பார்த்திருந்தான்.

“வாட் சம்மதமில்லையா?”

“எஸ் மேடம்! எனக்கு விவாகரத்துக்கு சம்மதமில்லை... எனக்கு அவர் கூட வாழணும்” என்று தீர்மானமாக கூறியவளின் வார்த்தையில் உறுதி தெரிந்தது. அதுவரை ஒற்றுமையாக பதிலளித்தவர்கள் திடிரென்று வேறுபாடாக கூறியதை கவனமாக சேகரித்து வைத்துக் கொண்டவர் மேலும் இருவரிடமும் அவரவர்களின் பின்னணியை பற்றி விசாரித்தார்.

“மிஸ்டர்.கவின்கலாதரன் உங்க மனைவி நீங்க கோரிய விவாகரத்தை அளிக்க எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க நீங்க என்ன சொல்றீங்க”

“நோ... என் முடிவில் எந்தவொரு மாற்றமும் இல்லை எனக்கு விவாகரத்து வேணும்” என்று அவனும் தீர்மானமாக கூறினான். இருவரின் எதிர்மறை பதிலை கண்டு யோசித்தவர்...

“உங்க ரெண்டு பேருக்கும் நான் ஒரு மணி நேரம் டைம் தரேன் ரெண்டு பேரும் ஒரு மனதாக பேசி முடிவெடுங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தவர்... இருவரும் அருந்த பலச்சாரையும் அனுப்பி வைத்திருந்தார்.

சம்யுக்தா விவாகரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மறுத்ததையொட்டி அவளை கடுமையாக முறைத்தபடி... “ஏன் விவாகரத்து தர மறுக்கிற?” என்றவனை பார்வையால் வெட்டினாள்.

“வாழ்க்கை ஒன்றும் நீங்க செய்கிற பொம்மலாட்டம் கலை தொழிலை போல, உங்க கையால் ஆட்டி வைக்கும் கைப்பாவை இல்லை”

“..........” அவளின் வார்த்தையை கேட்டு அனல் வீசும் விழிகளால் துளைத்துக் கொண்டிருந்தவனை கண்டு சிறிதும் சட்டை செய்யாதவளாக அடுத்த அஸ்திரத்தை வீசினாள்...

“குழந்தைக்கு அப்பா யாரு என்கிறதுக்கு தானே சாட்சி கிடையாது? ஆனால் எனக்கு புருஷன் நீங்க தான் என்கிறதுக்கு சாட்சி இருக்கே” என்று மிடுக்காக தோரணையுடன் கூறியவளின் வார்த்தை சுருக்கென்று உரைத்த கணமே ஆவேசத்தில் அவளை அடிக்க கரத்தை ஓங்கியவன் சூழ்நிலை உணர்ந்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.

அவனின் செயலை கண்ட சம்யுக்தாவிடம் அதிர்ச்சியோ, கோபமோ தென்படாமல் தீட்சண்யம் மிதந்ததை கண்டறிந்தான்.

“அது மாதிரி இனி பேசாதே” என்றவனின் குரல் கதனத்தில் நடுங்கியது.

“ஏன் அந்த ஏக போக உரிமை உங்களுக்கு மட்டும் தான் இருக்கிறதா?” என்று அமர்த்தலாக வினவியவளை கண்டு சீற்றத்தில் பற்களை நெறித்தப்படி...

“வேண்டாம் இப்படி வார்த்தைகளால் வாள் வீச்சு நடத்தி என் கோபத்தை கிளப்பாதே... நான் தானே மகாபாதகன், ஏமாற்றுக்காரன் அப்படியே இருக்கட்டும், ஒழுங்கா எனக்கு டிவோர்ஸ் கொடுத்துடு... தேவையில்லாத பேச்சுகளையும் தவிர்த்துவிடு”

“முடியாது! நான் டிவோர்ஸ் கொடுக்க முடியாது... நிச்சயம் நான் கொடுக்கவும் மாட்டேன்” என்று நிர்தாட்சண்யமாக மறுத்தாள்.
அவளை அழுத்தமாக பார்த்தவன்... “சோ என்னுடன் வாழணும் அதில் நீ உறுதியா இருக்கிற?” என்று வினவியவனின் பேச்சில் சூசகம் மறைந்திருப்பதை உணர்ந்தாலும் அதை பெரிதும் லட்சியம் செய்யாமல்...

“நீங்க தான் என் புருஷன்” என்று வார்த்தையை விட்டிருக்க, அவன் எதிர்பார்த்த நூல்முனை கிட்டிய இறுமாப்புடன் பார்த்தவன்...

“அப்போ பொண்டாட்டிக்கான கடமைகளை நிறைவேற்றனும் பரவாயில்லையா?” என்றதும் தானே அவனுக்கு நூல்பிடித்து கொடுத்திருப்பதை உணர்ந்தவள் வெறுப்புடன் நோக்கி...

“அதானே பார்த்தேன்” என்று ஒரு மார்க்கமாக பார்த்து இகழ்ச்சியில் முகத்தை சுளித்தவள்...

“இந்த ஆண்களுக்கு முக்கிய தேவையான விஷயம் இது ஒண்ணு தானே... எனக்கு என்னன்னா நான் யார் பிள்ளையையோ பெற்றவள் ஆச்சே இருந்தும் உங்களுக்கு ஆட்சேபம் இல்லைன்னா, எனக்கும் ஆட்சேபம் இல்லை” அவனுக்கு சளைக்காத வகையில் பதிலாளித்ததில் கண் சிவந்தான்.

“இதுக்கு நான் பதில் சொல்லிருவேன்... ஆனால் கொஞ்சம் கொச்சையா, அசிங்கமா இருக்கும் பரவாயில்லையா?” கடிந்த பற்களுகிடையே வார்த்தைகளை துப்ப, அதில் உட்பொருள் பொதிந்திருப்பதை புரிந்து சித்தம் தூக்கி வாரிப்போட இதழ்கள் பசையில்லாமல் மூடிக் கொள்ள மௌனியானாள்.

அவர்களின் மௌனம் சில நிமிடங்கள் நிலவ அதை கலைத்தது கலாதரனின் குரல்... “என்னை விவாகரத்து செய்துட்டு உன் வீட்டில் சொன்னது போல் அந்தஸ்தில் உயர்ந்த மாப்பிள்ளையாய் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ... நானும் எனக்கு தகுந்த வாழ்க்கையை அமைச்சுக்கிறேன்” தீர்மானமாக கூறியதில் அவளின் விவாகரத்து எதிர்ப்புக்கான மனவுறுதிபாடு மேலும் வலுவுற்றது.

“கண்டிப்பா நான் விவாகரத்து தர முடியாது பார்க்கலாம் நீங்களா நானான்னு?” அவளின் வார்த்தைக்கு தானும் எதிர்ப்பு தெரிவிக்க முனைந்த சமயம்...

“என்ன ரெண்டு பேரும் பேசி முடிவெடுத்துட்டீங்களா?” என்றபடி நுழைந்தார் சகுந்தலாதேவி... கலாதரன் மனைவியிடம் கூற வந்த வார்த்தைகள் அவரின் இடையீட்டில் தடைபட்டு விடவே, அவருக்கு பதில் சொல்ல வேண்டிய கடமைக்கு ஆட்பட்டவன் அவன் வாய்திறக்க செல்ல...

“எனக்கு விவகாரத்தில் ஈடுபாடில்லை, என் வாழ்க்கை அவருடன் தான்” அவனை அமர்த்தலாக பார்த்தபடியே உறுதியாக கூறியிருந்தாள். அவளின் பதிலில் அவளை முறைத்தபடி கடுப்பில் பற்கள் தான் நெரித்து நொறுங்கியது.

“எனக்கு விவாகரத்து தான் வேண்டும் அவளுடன் சேர்ந்து வாழ்வதில் உடன்பாடில்லை” தானும் எதிர்ப்பு தெரிவிப்பதில் உறுதியாக இருந்தான். இவர்களின் வார்த்தை போரில் வேறு யாரேனும் என்றால் நிச்சயம் தலையால் தண்ணி குடித்திருப்பார்கள் தான், ஆனால் சகுந்தலாதேவி இது போன்ற பல விவகாரங்களில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு இது புதிதாக அல்லாமல் பழக்கப்பட்ட ஒன்றாக இருக்கவே அவர்களை சாதுர்யமாக கையாண்டார்.

“சரி இன்னும் ஒரு வாரம் டைம் தரேன்... ரெண்டு பேரும் மனசு ஒத்து ஒருமுடிவா எடுக்கணும்... ஒரு வாரத்திற்கு பிறகு நீங்க என்ன முடிவெடுத்திருந்தாலும் சரி நான் கோர்ட்ல ஜட்ஜ்மென்ட்க்கு ப்ரோசீட் பண்ணிருவேன்” என்று கூறியவர் இருவரையும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுக்கும் படி பல அறிவுரைகளுடன் வலியுறுத்தி அனுப்பி வைத்திருந்தார்.

இவர்களின் சம்பாஷணைகளை அர்ஜுன் ஏற்பாடு செய்திருந்த தூதனால் அறிய வந்த மூவருக்கும் ஆகாயத்தை சூழ்ந்த முகிலினம் போன்று வியாகூலம் வியாபித்திருந்தது.

ஒரு வாரம் கடந்த நிலையில் சம்யுக்தா, கலாதரனின் விவாகரத்து வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருக்க நீதிபதியின் இறுதி தீர்ப்பு வெளியானது.

சுவடுகள் தொடரும்....


**************************************
வணக்கம் நட்பூக்களே...
“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-10 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பதிவுகள் பதிவிடப்படும்.
டாக் செய்யவேண்டும் என்றால் கீழே கமெண்ட் செய்யவும் மக்களே.
தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels✍📝
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels📖🖋📚
நட்புடன்

காருராம்

 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காட்சி-11
சம்யுக்தா, கலாதரன் இருவருக்கும் ஒருவார கால அவகாசம் முடிவடைந்த நிலையில், வழக்குரைஞர் சகுந்தலாதேவி வழக்கிற்கு விரைவாக தீர்ப்பு வழங்க கோரி நீதிபதியின் முன் வழக்கை சமர்பித்திருந்தார்.

அன்றைய தினம் வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியாவதையோட்டி இருவரும் நீதிமன்றம் செல்ல ஆயத்தமானார்கள்... வாணி, அரசி இருவருக்கும் தீர்ப்பின் முடிவு சாதகமாக அமைய வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தவர்களுக்கு நெஞ்சம் பதைபதைத்து கொண்டிருந்தது.

கலாதரன் விரைவாகவே கிளம்பிச் சென்றுவிட்டிருந்தான்... அர்ஜுன் மட்டிலும் வாணி, அரசிக்காக காத்திருந்து இருவரையும் அழைத்துச் செல்ல புறப்பட்டு வந்தவன்... “அரசி, வாணி கிளம்பியாச்சா போகலாமா?” என்றவனை பேயறைந்தார் போன்று முகத்துடன் ஏறிட்டவர்களை கண்டு திகைத்தவன்.

“என்னாச்சு ரெண்டு பேருக்கும்? ஏன் இப்படி பீதியில் இருக்கீங்க?”

“எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு அண்ணா” என்ற வாணியின் குரல் நடுங்கியது.

“எதுக்கு பயம் எல்லாம் நல்ல படியா நமக்கு சாதகமா தான் முடியும் பாசிட்டிவா நினைங்க”

“அரசி நீயே இப்படி பயப்படலாமா? உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலை” என்றதும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென்று வழிய ஆரம்பித்திருந்தது... அவளின் அழுகையை கண்டே திகைத்தவன், அடுத்து இதோ என் கண்ணிலும் அடுத்து பொழிய போகிறது என்று கண்கள் கரிக்க ஆரம்பித்திருந்த வாணியையும் குழந்தையும் கண்டு சுதாரித்தவன்...

“வாணி இங்கே பாரு, இப்போ நீ அழுதா உன் குழந்தையும் அழுவா கோர்டுக்கு போற நேரத்துல இப்படி இருந்தா எப்படி? அடுத்து நடக்க வேண்டியதை எப்படி பார்ப்பது... குழந்தையுடன் வெயிட் பண்ணு நான் அரசியுடன் வரேன்” என்று ஆறுதலாக பேசி அனுப்பி வைத்தவன்...

“அரசி இப்போ எதுக்கு இப்படி அழுகுற? அதுவும் தீர்ப்பு வருகிற நேரத்தில்” என்று உரிமையுடன் கடிந்து கொண்டிருந்தான்... அவனின் பேச்சில் பொதிந்திருந்த தோழமையின் கரிசனத்தில் தன் மனக்கிலேசத்தை இறக்கி வைக்கலானாள்.

“கலாதரன் அண்ணா எனக்கு மச்சான் முறையாகனும்... ஆனால் அம்மா அப்பா இல்லாத என்னை சீராட்டி வளர்த்த பாசம் தான் கூடப் பிறக்காத சகோதர பாசத்தை காட்ட வைக்குது... சின்ன வயசுல இருந்து வாணி, மலர் ரெண்டு பேரையும் பார்த்துகிறது போலத் தான் என்னையும் அன்பா, பாசமா பார்த்துகிட்டாரு... அதனால தான் வாணி, மலர் போல அண்ணன் உறவை வைத்தே கூப்பிட்டேன்... இதுவரைக்கும் எனக்கும் அவங்களுக்கும் வேறுபாடே காட்டியதில்லை... அப்படி இருக்கிறவர் வாழ்க்கையில் இப்படி ஒரு சிக்கல் ஏற்பட நானும் ஒரு காரணமா ஆகிட்டேன்னு மனசு வலிக்குது” என்று மனமுடைந்து கரகரத்த குரலில் கூறியவளின் மனவலி அவனுக்கு புரிய, தரனின் மேல் உள்ள வாத்சல்யம் கண்டு நெகிழ்ந்து போனான்.

“சப்போஸ், அண்ணி மட்டும் அண்ணன் கூட வாழ ஒத்துக்காம விவாகரத்துக்கு உடன்பட்டு போயிட்டாங்கன்னா, நான் உயிரோட இருக்கிறதுக்கே அர்த்தம் இல்லை” என்றவளின் சொல்லில் தூக்கிவாரி போட திகைப்பில் அவன் விழிகள் தெறித்து விடுவது போல் அகன்றிருந்தது.

“பைத்தியம் மாதிரி உளறாதே அரசி” என்று கண்டிப்பின் தொனியில் விளம்பியவன் குரல் நடுங்கியது.

“உன் அண்ணன் அவசரத்தில் ஆத்திரத்தில் முடிவெடுக்கிறவன் தான், இல்லைன்னு சொல்லலை... ஆனால், உன் அண்ணி சம்யுக்தா நிதானமானவள், அவ மேல எனக்கு நம்பிக்கை இருக்கு... அதுவுமில்லாம விவாகரத்துக்கு ரெண்டு பேரும் ஒதுக்கணும், அப்படி ஒருத்தர் எதிர்ப்பு தெரிவிச்சாலும் நிராகரிச்சிருவாங்க... இங்கே உன் அண்ணி பலமா எதிரிப்பு தெரிவிச்சிட்டு தான் இருக்கா, அதனால் எதிர்மறையா யோசிச்சு குழப்பிக்காம வா, உன்னை பார்த்து அங்கே வாணி கலங்கிட்டு இருக்கிறா” என்று அவளுக்கும் உறைக்கும் படி எடுத்துரைத்திருந்தான்.

அவனின் பேச்சில் அவள் தன்னை தேற்றிக் கொள்ள ஆன முயற்சிகளை எடுத்த போதும் அவள் உடல் நடுக்கத்தை கட்டுப்படுத்த இயலாமல் போனது. அவளுக்கு தண்ணீர் கொடுத்து பருக வைத்தும் நடையில் ஒருவித தள்ளாட்டம் தெரியவே அவளை பிடித்து நிறுத்தி தாடையை பற்றியவன்...

“அரசி ஆர் யூ ஓகே?” என்று பரிகாசத்துடன் வினவினான்.

“இல்லை ஏதோ ஒரு மாதிரி இருக்கு” நெற்றியை தேய்த்தபடி கூறினாள்.

“நான் இதுக்கு ஒண்ணு செய்றேன், நீ தப்பா எடுக்காதே” என்றவனை என்னவென்று கேள்வியாக நோக்கும் போதே சடாரென்று அவளை இழுத்து அணைத்திருந்தான்... அவனின் அணைப்பில் முதலில் திகைத்தாலும், அவள் சித்தத்தின் குழப்பங்கள் சூரியனை கண்ட முகிலினம் போல் மறைந்து இனம்புரியா இதம் ஒன்று பரவி தன் உடல் நடுக்கும் சற்றே தளர்வதை உணர்ந்தவளின் மென் கரங்களும் அவனை சுற்றிக் கொள்ள அவளின் இசைவில் கட்டுப்பாடுகள் தகர்ந்தவனாக ஆறுதலாக ஆரத்தழுவிக் கொண்டான். அவளின் நடுக்கம் குறைந்ததும் விடுவித்தவன்...

“வா போகலாம்” என்று அழைத்துக் கொண்டு சென்றிருந்தான்.
சம்யுக்தா, காலதரன் இருவரும் நீதிமன்றத்தில் எதிரும் புதிருமாக பார்த்தபடி ஆஜராகினர். அவர்களின் வழக்கு மனுவை ஆராய்ந்த நீதிபதி அவர்கள் கலாதரனின் விவாகரத்து வழக்குக்கு எதிர்ப்பு தெரிவித்த சம்யுக்தாவின் காரணத்தை விசாரித்து அவளிடம் மேலும் சில விசாரணைகளை செய்திருந்தார்... கலாதரனும் தன் முடிவில் உறுதியாக இருந்தான்... ஆகையால் நீதிபதி வழக்கின் தீர்ப்பை மதியத்திற்கு மேல் ஒத்தி வைத்திருந்தார்.

மதிய உணவை கூட உட்கொள்ளமாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்த அரசி, வாணி இருவரையும் அதட்டி, உருட்டி, மிரட்டி உண்ண வைத்தவன் நண்பனுக்கு பழச்சாரை கொடுத்திருந்தான் அர்ஜுன்.

சம்யுக்தாவின் விவாகரத்துக்கு எதிரான எதிர்ப்பை கண்டு தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று யூகித்தவன், அடுத்தகட்ட சிக்கல்களை சமாளிக்க வழி முறைகளை யோசிக்கலானான்.

ஆனால் அதுவும் சம்யுக்தா குடும்பத்தின் திடீர் வரவால் முற்றிலும் அவன் சிந்தனையில் மண் விழுந்து ஆக்ரோஷமே சூழ்ந்தது.

அன்று தான் தீர்ப்பு வெளியாகிறது என்று முன்பே அறியாது போனவர்கள் சரியாக இருவரின் விசாரணைக்கு பிறகு தெரிய வந்ததுமே யமுனா, யசோதா, பாஸ்கரன், மனோரஞ்சன் அனைவரும் சிறிதும் தாமதியாமல் அங்கே ஆஜராகினர்.

அன்பழகன் அவர்களின் செவிக்கு எட்ட இடமளிக்காமல் பார்த்துக் கொள்ள தான் திட்டமிட்டிருந்தார்.... ஆனால் எப்படியோ அவர்கள் விஷயத்தை கேள்விப்பட்டு அங்கே வந்தவர்கள் குழந்தையுடன் அமர்ந்து கொண்டிருந்தவளின் முன் பார்வையில் வெறுப்பை உமிழ்ந்தப்படி நின்றனர்.

அவர்கள் வளாகத்தில் நுழையும் போதே கலதரனை கண்டு கொண்டதால் மறவாமல் அவன் மேல் பார்வையால் எரிதழலை வீசிய பின்பே சம்யுக்தாவை அணுகியிருக்க, அவர்களை கண்கணித்தபடியே நின்றுவிட்டான்.

“சம்யுக்தா...” நீதிமன்ற வளாகம் என்றும் பாராது உறுமிய யசோதாவின் குரலை அடையாளம் கண்டு கொண்டவள் மெல்ல விழியுயர்த்தி அசட்டையாக பார்த்திருந்தாள்.

“ஏய் என்ன தொழில் பண்ணுகிற திமிரா... எங்களை எதிர்த்து வெளியப் போனதும் இல்லாம இப்படி கோர்ட் வரைக்கும் வந்திருக்க? எங்களுக்கு எவ்ளோ அவமானமா இருக்கு தெரியுமா” என்று முகத்தை சுளித்திருந்தார்.

“இங்கே பாரு சம்மு, இது தான் அருமையான வாய்ப்பு அவனை டிவோர்ஸ் பண்ணிட்டு வா... உனக்கு வேற ஒரு நல்லா வாழ்க்கையா நாங்க அமைச்சு கொடுக்குறோம்” என்று கூறிய யமுனாவின் பார்வை கலாதரனின் மேல் படிந்து வெறுப்பை கக்கியது. அதில் அவன் உடல் ஆற்றாமையில் இறுக பல்லை கடித்தபடி சகித்து கொண்டு நின்றிருந்தான்.

“இங்கே பாரு சம்மு அந்த குழந்தையை ஆஸ்ரமத்தில் விட உன்னால முடியாதுன்னு தெரியும், அதுக்கு நான் வழி சொல்றேன், அதை என்கிட்டே கொடு நாங்க அதை ஆசிரமத்தில் சேர்த்துவிடுறோம்” என்று இரக்கமின்றி கூறினார் பாஸ்கரன்...
அதில் கலாதரனுக்கு தசை நரம்புகள் புடைத்து தெறிக்க, ரத்த நாளங்கள் கொதித்து கொண்டிருந்தது. சம்யுக்தாவோ அவர்களின் பேச்சிற்கு சிறிதும் எதிரொலி இல்லாது சற்றும் அசையாமல் திண்ணக்கமாக அமர்ந்திருந்தாள்.

“சம்மு நாங்க எல்லாரும் சொல்றதை கொஞ்சம் நிதானமா யோசிச்சு முடிவெடு” என்று மட்டும் கூறிய மனோரஞ்சன் அனைவரையும் சற்று பொறுமையாக இருக்கும்படி சைகையால் கூறிவிட்டிருந்தான்.

“கோர்ட் தீர்ப்புக்கு நான் உள்ளே போயாகணும் கொஞ்சம் நகருங்க” என்று எதுவுமே நடவாதது போல் கூறியவளை அனைவராலும் முறைக்க மட்டுமே முடிந்தது.

“அம்மா, சித்தி, ரெண்டு பேரும் கொஞ்சம் பொறுமையா இருங்க... அவ பிடிவாதக்காரி எதையும் சாதிக்காம விடமாட்டா அவளை அவ போக்கிலேயே போய்தான் பிடிக்கணும்” என்று ரஞ்சன் கூற, அவர்களும் அவன் கூற்றை ஏற்று அமைதி காத்தனார்.

வாணி, அரசி இருவரும் பதை பதைக்கும் மனதுடன் நீதிமன்றம் உள்ளே சென்றனர்.... அரசிக்கு பதட்டத்தில் நடுங்கிய கரங்களை வெளியே காட்டாது மறைக்க முடியாமல் போகவே அருகிலிருந்த அர்ஜுனின் கரத்தில் தண்ணிச்சையாக தன் விரல்களை அவன் விரல்களுடன் கோர்த்து பிணைத்துக் கொண்டாள்.... அவள் கரத்தின் அழுத்தத்தில் ஆறுதல் தேடுவதை உணர்ந்தவன் சிந்தையில் மின்சாரம் ஊடுருவுவது போல் வினோதமாக உணர்ந்திருந்தான்.

அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடனும், படப்படப்புடனும் அமர்ந்திருக்க நீண்ட நெடிய நொடிகள் கடந்த நிசப்தத்தை கலைத்தது நீதிபதியின் குரல்.

“‘இந்து திருமணச் சட்டம் 1955’ மற்றும் ‘சிறப்பு திருமணச் சட்டம் 1954’ இன் 22வது பிரிவின்படி ஆகியவற்றின் கீழ் சம்யுக்தா, கவின்கலாதரன் தம்பதியர் தொடுத்த விவாகரத்துக்கு வழக்கில் கவின்கலாதரன் தரப்பு வாதி விவாகரத்துக்கு உடன்பட்டாலும், அவர் மனைவியான சம்யுக்தா நிர்தட்சணையமாக மறுப்பை தெரிவித்த காரணத்தால் கவின்கலாதரன் விவாகரத்து கோரிய நிபந்தனை நிராகரிக்கப்படுகிறது... ஆகவே இருவரும் தம்பதியர்களாக சேர்ந்து வாழவும் பரிசீலனை மேற்கொள்ள உத்தரவிடுகிறது... அப்படி மறுக்கும் பட்சத்தில் மனுதாரர் புகார் அளிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் கோர்ட் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என்று முடித்தவர் வழக்கு பதிபேடுகளில் தன் கையெழுத்தை இட்டு வழக்கிற்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டிருந்தார்.

நீதிபதியின் தீர்ப்பில் சம்யுக்தாவின் முகம் ஆயிரம் விளக்கு ஜோடனை போல் பிரகாசிக்க கணவனை ஏறெடுத்து பார்த்தவளின் முகத்தில் வெற்றிக் குறி மிதந்தது... அதை கண்ட கலாதரனின் முகம் கருத்து இறுகிப் போனது.

அவளை நோக்கி கோபக்கனல் வீசியபடியே விசுக்கென்று எழும்பி நீதிமன்றத்தில் இருந்து வெளியேறியவனை கண்டு சற்றும் அசராமல் கர்வ புன்னகை சிந்தினாள்.

வாணி, அரசி இருவருக்கும் அதுவரை இருட்டிக் கொண்டிருந்த கண்களில், வெளிச்சம் வந்திருக்க மனச் சலனம் முற்றிலும் விலகி ஆத்மதிருப்தி அடைந்திருந்தனர்.

“ரொம்ப தேங்க்ஸ் சார்” என்று மனமுருக அர்ஜுனுக்கு நன்றி நவிழ்ந்தாள்.

“எனக்கு எதுக்கு நன்றி? அவன் என் நண்பன்... சம்யுக்தாவும் எனக்கு இனி ஒருவகையில் உறவு தானே” என்றவனின் பார்வையில் ஏதோ ஒளிந்திருக்க, சம்யுக்தா குடும்பத்தினர் அதிருப்தியில் அவளை பார்வையால் சுட்டப்படி நின்றதை கவனித்தான்.

“சம்மு... நீ வழக்கை உயர்நீதிமன்றத்தில் போடு எப்படியாவது அவன்கிட்டே இருந்து டிவோர்ஸ் வாங்கிரலாம்” என்று கூறினார் யசோதா, யமுனா இருவரும்.

“எதுக்கு?” என்று அலட்சியமாக வினவியவளை கண்டு பார்வையை கூர்மையாக்கி ஆட்சேபத்துடன் பார்த்தனர்.

“சம்மு உன்னால் எலிப் பொறி மாதிரி இருக்கிற அந்த சின்ன வீட்டில் எல்லாம் வாழ முடியாது... நீ பொன் முட்டை இடுற வாத்துன்னு நினைச்சுட்டான்... புரிஞ்சுக்கோ, உன்னை வாழ கூப்பிட்டுட்டா கொஞ்சம் கொஞ்சமா நம்ம சொத்தை சுரண்டி சாப்பிடறலாம்னு பார்க்கிறான் போல... நீ வழக்கை மேல் முறையீடு செய் எப்படியாச்சும் டிவோர்ஸ் வாங்கிரலாம்” வார்த்தைகளை விஷமாய் கக்கிய மனோரஞ்சனை புழுவை போல் பார்த்திருந்தாள்.

“நீங்க எல்லாம் ஒரு விஷயம் தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க... டிவோர்ஸை மறுத்தது அவரில்லை நான்தான்” என்றதும் அதிர்ந்த விழிகளால் அவளை நோக்கினார்கள்.

“என்ன சொல்ற சம்மு?” என்று யசோதா அதிர...

“அவன் தான் குழந்தைக்கு தகப்பன் நானில்லைன்னு சொன்ன அப்புறமும் அவனுடன் வாழ நினைக்கிறியா?” என்று வினவிய யமுனாவின் இதழ்கள் இகழ்ச்சியில் வளைந்திருந்தது.
அவர்களின் பேச்சை துட்சமென கருதி புறக்கணித்தவள்...

“அதுதான் இனி உங்களுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லைன்ன்னு சொல்லிட்டீங்கள்ள அப்புறம் என் வாழ்க்கையும் என் உரிமை தான், இதில் நீங்க தலையிட முடியாது” என்றவள் மனோரஞ்சன் புறம் திரும்பி...

“ஒழுங்கா செய்த தவறை திருத்திக்க பாரு” என்று கூர்வாள் பார்வையால் துளைத்தப்படி கூறியவளை எதிர்த்து...

“இல்லைன்னா என்ன செய்வ?” என்ற குரல் யமுனாவாக இருக்க அவரை கடுமையாக பார்த்தவள்...

“திருத்திக்க வைப்பேன்” என்று தீர்மானமாக கூறிவிட்டு வேக நடையிட்டு சென்றிருந்தாள்.

இவர்களின் வாக்குவாதத்தை சற்று தொலைவில் இருந்து கவனித்த அர்ஜுன் பெருமூச்சுடன் அங்கிருந்து வெளியேறினான்.

சம்யுக்தா குழந்தையுடன் வெளியேறியவள் கணவனை தான் தேடினாள்... அவனோ வாகனத்தை கரத்தால் குத்திக் கொண்டு உச்சகட்ட கொதி நிலையில் நின்றிருக்க, அவனருகில் சென்றவள்... “ம்கும்” என்று தொண்டையை கனைத்து தன் வரவை உணர்த்தினாள்.

அவளை எரிச்சலுடன் பார்த்தவன்... “என்ன...?” என்று வெடுக்கென்று வினவினான்.

“வழி விடுங்க” என்றவள் வாகனத்தில் ஏறி அமர, அதை கண்டவனுக்கு சுர்ரென்று எழுந்த கோபத்தில்...

“ஏய் இறங்குடி முதலில்?” என்றவனை சாவதானமாக நோக்கியவள்...

“ஏன்?” மிடுக்காக வினவினாள்.

“என் வீடு தான் எலி பொந்தாச்சே அங்கே எதுக்கு வர? போ... போய் உன் அண்ணன்கிட்டே சொல்லு அரண்மனையிலேயே வாழ வைப்பான்” எண்ணெயில் இட்ட கடுகாய் பொரிந்தான்.

“நல்ல ஐடியா தான் தேவைப்படும் போது உபயோகப்படுத்திக்கிறேன் இப்போ கார் எடுங்க டிரைவர்” என்று நமட்டுச் சிரிப்புடன் கூறியவளை ஆத்திரத்துடன் பார்த்தவன்...

“கொழுப்பாடி” என்று சீறினான்.

“அப்படித் தான் வச்சுக்கோங்க” அவன் பேச்சுக்கு சிறிதும் தயக்கமின்றி எதிர்த்து கொண்டிருந்தவளை கண்டு பொறுமையிழந்தவன்...

“இப்போ இறங்கி போக முடியுமா முடியாதா?” அதட்டலாக வினவினான்.

“அதான் கோர்டே உத்தரவு போட்டுருச்சே புருஷன் பொண்டாட்டியா வாழணும்னு... இல்லைன்னா; நான் மேல்முறையீடு செய்வேன், அப்புறம் அதுக்கான தண்டனையை அனுபவிக்க வேண்டியதா இருக்கும் துரைக்கு வசதி எப்படி?” என்றவள் மிதப்பாக பார்த்தவளை கண்டு கடுப்பில் பற்களை நெரித்தான்.

“என்ன டி மிரட்டுறியா?”

“சாத்திய கூற்றை சொன்னேன்” என்றவளை உறுத்து விழித்த வேளை அர்ஜுன் அவர்களை நெருங்க, கலாதரன் விருட்டென்று நகர்ந்துவிட்டிருந்தான்.

தன் நண்பனை ஆராயும் பார்வை பார்த்தவன் சம்யுக்தாவிடம் திரும்பி... “சம்மு நீ வாணி, அரசி கூட போய் சாப்பிட்டுட்டு வெயிட் பண்ணுமா... நான் சில வேலைகள் முடிச்சுட்டு நாம எல்லாரும் சேர்ந்து கிளம்பலாம்”

“இல்லை அர்ஜுன் எனக்கு பசிக்கலை... நீங்க சாப்பிட்டுட்டு வாங்க, நான் வெயிட் பண்றேன்” என்றவளின் குரலில் உயிர்பின்றி இருந்ததை உணர்ந்து மனதை பிசைந்தது.

“சம்மு ப்ளீஸ்மா எனக்காக போ... உன் குழந்தைக்கு நீ ஃபீட் பண்ணனும் வெறும் வயிரா இருக்காதே உன் உடல் நிலைக்கு அது சரியில்லை” என்று வாஞ்சையுடன் கூறிய வார்த்தைகளின் தாக்கத்தில் அவளுக்கு சித்தம் உணர்ச்சிப் பிரவாகத்தை பெருக்கியது.

“ரொம்ப தேங்க்ஸ் அர்ஜுன் எனக்காக அக்கறைப்பட நீங்களாச்சும் இருக்கீங்களே” என்றவளின் குரல் கரகரக்க கண்கள் லேசாக கலங்கியது. அதை காண பொறுக்காதவன் நெஞ்சில் சுருக்கென்று வலி தைக்க, அவளை காரிலிருந்து இழுத்தவன் தன் தோளில் சாய்த்து கொண்டு சிகையை பரிகாசத்துடன் தடவி கொடுக்கலானான்...

“உனக்காக நான் இருப்பேன் சம்முமா... நான்னா நான் மட்டும் இல்லை என் குடும்பம்... சாரி நம்ம குடும்பம்... இனி நீயும் என் குடும்பத்தில் ஒருத்தி, உனக்கு ஒண்ணுன்னா நாங்க எல்லாரும் கேட்போம் இதை நீ ஒரு நாளும் மறந்துவிடாதே” என்றவனின் குரலில் ஊர்ஜிதம் நிறைந்திருந்தது. அதில் மனம் நெகிழ்த்தவள்...

“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா” என்று கூற...

“நீ உண்மையான பாசம் காட்டுற தங்கச்சின்னா அண்ணன்னு கூப்பிடுறதை விட்டுட்டு, முன்னாடி அர்ஜுன்னு கூப்பிட்டியே அப்படியே கூப்பிடுமா நமக்குள்ள ஃபார்மாலிட்டி வேண்டாம்” என்றவன் அவள் சிகையை கோதிக் கொடுத்து கொண்டிருக்க, இவர்களின் சம்பாஷனையை கேட்ட அரசிக்கு மனதில் துணுக்கென்று இருந்தது.

‘ஒரு வேளை தன்னையும் தங்கை என்ற எண்ணத்தில் தான் அரவணைத்தானோ’ என்ற நினைவே சகிக்க முடியாததாக இருக்க சிந்தையில் வெற்றிடம் உருவாவதை உணர்ந்தவளுக்கு இனம்புரியாத ஏக்கம் வாட்டியது, மேலும்... ‘தானும் அண்ணன் என்று அழைக்காமல் அர்ஜுன் என்று தானே அழைக்கின்றோம்...’ என்ற எதிர்மறை எண்ணமும் தாக்க, அதை தொடர்ந்து ‘சேச்சே அவன் எனக்கு அண்ணனா' என்று இப்போது தெளிவாக எண்ணியதும் தான் சித்தம் குளிர்ந்திருக்க, அவளின் இந்த மாறுபட்ட நினைவை எண்ணி திகைத்து விட்டிருந்தாள்.

தன் நினைவில் உள்ளம் ஊஞ்சலாடுவதை உணர்ந்தவள் அதை கடிவாளம் இட்டு அடக்கிக் கொண்டு... ‘இங்கே பாரு அரசி இப்போதும், அப்போதும், எப்போதும் அர்ஜுன் நல்ல நலம்விரும்பி அந்த உறவை நீ தவறாக எடுத்துக் கொண்டு குழப்பிக் கொள்ளாதே’ என்று தனக்குள் பேசி உறுப்பேற்று கொண்டவளின் எண்ணமும், செயலும் அவளின் சொல்படியே இயங்கியது. அவளின் இந்த முதல் சந்தேகவித்தை அப்போதே சற்று ஆராய்ந்து தெளிவு படுத்திக் கொண்டிருந்தால் பின்னாளில் ஏற்படும் விபரீதத்தை தடுத்திருக்கலாம்.

“அண்ணி வாங்க சாப்பிட போகலாம்” என்று அழைத்த அரசியை சிறிதும் கண்டுக் கொள்ளாமல் குழந்தையை அர்ஜுனிடம் ஒப்படைத்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டு தன் போக்கில் சென்றுவிட்டிருந்தாள். அவளின் இந்த உதாசினம் கண்டு அரசிக்கு மனத்தாங்கல் ஏற்பட்டது.

“அண்ணி என்கிட்டே கோவிச்சிட்டு போறாங்களே?” என்று அர்ஜுனிடம் தன் விசாரத்தை பகிர்ந்தாள்.

“ம்ச்... அதெல்லாம் கண்டுக்காதே... உன் அண்ணி யாரு அண்ணன் மனைவி, உன் அண்ணனில் சரி பாதி, உங்க மூணு பேருக்கும் தாய் ஸ்தானம், அவங்களுடைய இந்த முகத் திருப்பலுக்கு எல்லாம் நீ சோர்ந்து போகலாமா?”

“இல்லை... நிஜமாவே அவங்க என்கிட்ட இப்படி முகம் திருப்புறதை பற்றி கூட கவலை இல்லை... ஆனால், என் அண்ணன்கிட்டயும் இப்படி இருந்தா எப்படின்னு கஷ்டமான இருக்கு, அவரும் அழுத்தமான விடாப்பிடியான ஆளு, அதுதான் ரொம்ப பயமா இருக்கு... இவங்க சேருறதுக்கு முன்னாடி ஒரு கவலைன்னா, இப்போ ஒரு கவலை வாட்டுது”

“இங்கே பாரு அரசி உன் அண்ணன், அண்ணின்னு பார்த்தால் தானே உனக்கு மனக்கவலை... இது அவங்க புருஷன், பொண்டாட்டி விவகாரம், அதை அவங்க பார்த்துக்கட்டும் நீ நிம்மதியா இரு”

“நீங்க சொல்றதெல்லாம் சரி தான்... ஆனால், எனக்கு இது பாதியில் பிரச்சனை ஆகிருமோன்னு பயமா இருக்கு”
“இங்கே பாரு அரசி, நீ சொல்ற மாதிரி எல்லாம் பார்த்தா இங்கே பெத்தவங்க பார்த்து கல்யாணம் செய்து வைக்கிற தம்பதிகள் ஒருத்தரை ஒருத்தர் கல்யாணத்திற்கு அப்புறம் புரிஞ்சுகிட்டு மனசு ஒத்து இப்போ வரைக்கும் காதலோட வாழுறதில்லையா...
இவங்க விஷயம் அப்படி கூட இல்ல வாணியை மனோரஞ்சன் ஏமாத்தினதுக்கு காரணம் பணத்திமிரு... ஆனால், உன் அண்ணன் சம்யுக்தாவை காதலிச்சிருக்கான், இல்லாமலா அவன் அவளை கல்யாணம் செய்திருக்க வாய்ப்பில்லை... இது உனக்கும் நல்லா தெரிஞ்ச விஷயம் தானே, இனி தினமும் ரெண்டு பேரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் ஃபேஸ் பண்ணியே ஆகணும், அதுவே அவங்களை வெளிக்கொண்டு வரதுக்கு பெரிய ஆயுதம் தான்” என்று உறுதியுடன் கூறி முடிக்க, அப்போதும் அவள் முகம் தெளிவுராததை கண்டு புருவம் சுருக்கியவன்...

“இன்னும் உன் மூளையை என்ன விஷயம் குடையுது அரசி?”

“எனக்காக நீங்க இன்னும் ஒரேயொரு உதவி செய்வீங்களா?”

“உதவின்னு பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாம், சும்மா சாதாரணமாவே கேட்கலாம், உனக்கு அதுக்கான உரிமை இருக்கு”

“எங்ககூடவே வீட்டுக்கும் வருவீங்களா? அங்கே அத்தை, மாமா எல்லாரையும் சமாளிக்கணும்... நீங்க இருந்தா அவங்க கொஞ்சம் பொறுமையா பேசுவாங்கன்னு தோணுது” என்றவளின் முகத்தை ஆராய்ச்சி பார்வை பார்க்க அவளால் ஏதும் கண்டறிய முடியாமல் போகவே...

“எல்லாத்தையும் நீ ரொம்ப காம்ப்ளிகேட்டடா யோசிக்கிற அரசி... உன் வீட்டுக்கு தலைமகன் உன் அண்ணன் அவனுக்கும் பிரச்சனையை கொஞ்சம் விட்டு வை” என்று கூறியவனின் வார்த்தையில் குறும்பு ஒளிந்திருக்க, உதட்டில் நமட்டுச் சிரிப்பு தவழ்ந்தது.

“அப்போ நீங்க வர முடியாதா?” என்றவளின் முகம் சடுதியில் கூம்பிப் போனது.

‘உனக்காக நான் வராமல் இருப்பேனா?’ என்று உரிமையுடன் அதட்டி அவளை இழுத்து அணைத்து அச்சாரம் பதிக்க விந்திய மனதை கட்டுபடுத்த பிரயத்தனம் பட வேண்டியதாக இருக்க, அவன் எண்ணம் போகும் போக்கின் விபரீதம் புரிந்து திடுக்கிட்டு தன்னை சமாளித்துக் கொண்டவன்...

“சம்யுக்தா இனி என் பொறுப்பு, அவளை வாழ வைக்க நான் நிச்சயம் அங்கே இருப்பேன்” என்றவனின் பதிலில் திருப்தியுடன் பார்த்தவள்...

“தேங்க்ஸ்” என்று விட்டு நகர்ந்திருக்க, அவளை குறுகுறுவென்று பார்த்தவன் விழிகளில் மின்னல் வந்து போனது.

“என் துணை உனக்கு அவ்ளோ பக்கபலமா இருக்கா?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவனுக்குள் மழை சாரலை போன்ற சில்லென்று இதம் பரவி மெய்சிலிர்க்க வைத்தது. அதுவரை எல்லையை கடந்திராத புதிரான ஓர் உறவுக்குள் சிக்காமல் இருந்த அர்ஜுனின் இதயத்தில் சிம்ம சொப்பனம் இட்டு அமர்ந்திருந்தாள் அரசி.


**********************

கலாதரன் மரத்தின் நிழலில் மார்பின் குறுக்கே கரங்களை கட்டிக் கொண்டு நின்றிருக்க, அவனையே உறுத்து விழித்துக் கொண்டே நெருங்கியவனை ஆராய்ச்சியாக பார்த்திருந்தான்.

“இந்த குழந்தையோட கண்ணை பாரேன் அப்படியே உன்னை உரித்து வைத்திருக்கில்ல” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அவனை முறைத்தவன் விழிகள் மறுகணமே குழந்தை மேல் ஏக்கத்துடன் படிந்தது.

‘கிடைத்தும் அனுபவிக்க முடியாத துருதிஷ்டம் என்பது தன் நிலைமை தானே’ என்று எண்ணியவனின் சித்தம் ஆற்றாமையில் கலங்கியது. தன் நண்பனின் உணர்சிகளை அவதானித்துக் கொண்டிருந்த அர்ஜுனுக்கு தார்மீகக் கோபம் எழுந்தது.

“ஏன் டா கலங்கணும்? அதுக்கான அவசியம் தான் என்ன?” அவன் மனதை படித்தவனாக கூற, அதற்கு உணர்ச்சியற்ற பார்வையை பதிலாக கொடுத்திருந்தான்.

“தூங்குறவங்களை எழுப்பிரலாம்டா ஆனா தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது” அவனின் பதிலாற்ற மௌனத்தில் எரிச்சலுற்றவனாக...

“ம்ச்., இப்போ என்னடா வேணும் உனக்கு? அது தான் தங்கச்சி, நட்புன்னு உறவு கொண்டாடி சொன்னதை சாதிச்சாச்சே, இன்னும் என்ன இருக்கு? இனி நீங்க எல்லாம் நிம்மதியா மூச்சு விடுங்க, இனி நான் தானே அல்லாடனும்” கடிந்த பற்களுக்கிடையே வார்த்தையை துப்பினான்.

“...........” அவன் பேச்சிற்கு எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“இனி கலைவாணி நிலைமை என்ன அதைப் பற்றி நான் யோசிக்க வேண்டாமா? அவளை சித்தி அவ்ளோ சுலபமா ஏத்துக்குவாங்களா?”

“...........”

“உன்னை அவ அண்ணன்னு சொன்னதும் அவளுக்காக என் தங்கச்சியை விட்டு கொடுத்துட்ட இப்போ உனக்கு வாணி மூணாவது ஆள் தான், ஆனால் எனக்கு அப்படியா? நான் அப்படி அவளை விட்டு ஒதுங்க முடியுமா?” அவனை ஆழ்ந்து பார்த்தபடி வினவியவனின் வார்த்தை நெஞ்சை சுட...

“பைத்தியம் மாதிரி உளறாதே டா?” உணர்ச்சி வசத்தில் என்றவனின் குரல் கரகரத்து ஒலித்தது.

“நான் உளறலை உண்மையை தான் சொன்னேன்!” அவன் வார்த்தையில் குற்றவுணர்ச்சியில் மூழ்கிய மனதை சரி செய்துக் கொண்டவன்...

“ஆமாம் பெரிய உண்மை விளம்பி இவரு... சரி நீ சொல்றது உண்மையாவே இருக்கட்டும், இப்போ நான் கேட்கிற ஒரு கேள்விக்கு நீ உண்மையை சொல்லு” என்று மிதப்பாக வினவியவனின் கேள்வியில் பொதிந்திருந்த மறைபொருளை அறியாது யோசனையில் புருவத்தை உயர்த்தியபடி...

“என்ன டா உண்மை தெரியனும்?” என்றான்.

“மற்ற எல்லாத்தையும் இப்போ தற்காலிகமா ஒதுக்கி விடு ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லு... நீ சம்யுக்தாவை உண்மையா காதலிக்கலையா?” என்றவனின் கேள்விக்கு பதில் கூற இயலாமல் பேதலித்து நின்றான்... அவன் சித்தத்தின் தடுமாற்றத்தின் பிரதிபலிப்பாக அவன் உடல் ஒரு நொடி குலுங்கி அடங்கியதை அவன் விழிகளில் பிசகாது தட்டுப்பட்டு விட்டது.

‘மகனே மாட்டினியா?’ என்று மனதின் கூக்குரல் கூப்பாடு போட்டது.

“சம்யுக்தா கூட குடும்பம் நடத்திய போது உனக்கு உன் தங்கச்சி நியாபகம் வந்தாளா? இல்லை; உன் குடும்பம் தான் நியாபகம் வந்ததா?” அம்பு போன்ற கேள்விகள் அவன் மனதை பதம் பார்த்துக் கொண்டிருக்க தன் முகத்தின் தசைகளை அணிச்சையாக அசைத்து உணர்ச்சிகளை மறைக்க போராடி கொண்டிருந்தான்.

“இல்லை; உன் மச்சான் மாதிரி உன் இளமைத் தேவையை தீர்த்துக்க பார்த்தியா?” என்றதும்...

“ஏய்...!” என்று ஆவேசத்தில் அவன் சட்டையை கொத்தாக பற்றிக் கொண்டிருந்தான். அவன் கண்கள் ரத்தமென சிவந்திருக்க, கரங்கள் சினத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது...

“என்னை பார்த்தா உனக்கு பொம்பளை பொறுக்கி மாதிரி தெரியுதா டா? நீயெல்லாம் என் நண்பனா?”

“நண்பனா இருக்கப் போகத் தான் உன்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டியதா போச்சு” என்றதும் அவனை ஆத்திரத்துடன் முறைக்க அதை சிறிதும் சட்டை செய்யாமல்...

“பின்னே உன்னுடைய தங்கச்சிக்காக மட்டும் இல்லாம உன்னுடைய வீண் வறட்டு வீம்புக்காக வாழ்க்கையை அழிச்சுகிட்டு மனசுக்குள்ள அழுதுக்கிட்டு இருக்கிறதை வேடிக்கை பார்க்கவா? அதான் வரம்பு மீறின கேள்வியா இருந்தாலும் பரவாயில்லைன்னு கேட்க வேண்டியதா போச்சு” என்றவனை பச்சாதாபத்துடன் நோக்கியவனின் விழிகளில் மனதில் அடிபட்ட வலி அப்பட்டமாக தெரிந்தது.

“தரன் காதலோ வாழ்க்கையோ விளையாட்டில்லைடா எனக்கு உன்னை பற்றி நல்லா தெரியும்... உன் தங்கச்சி வாழ்க்கைக்காக உன் வாழ்க்கையை பணையம் வைக்கிற அளவுக்கு நீ முட்டாள் இல்லைன்னு தெரியும்”

“தெரிஞ்சும் ஏன் டா என் மனசை பிச்சு திங்குற போல கேள்வி கேட்குற? இங்கே வலிக்குது” என்று நெஞ்சை தொட்டு காட்டியவனை கண்டு பரிதாபமாக இருந்தது.

“யாரு நான் தானே உன்னை கேள்விக் கேட்டேன்... அடுத்து உன் பொண்டாட்டி கேட்பா, அதுக்கு இது ஒத்திகைன்னு நினைச்சுக்கோ” என்று நமட்டுச் சிரிப்புடன் கூறியவனை கண்டு அவனால் புன்னகைக்க முடியவில்லை, மாறாக அவன் விழிகள் பாசத்தாபத்துடன் மகள் மேல் படிந்தது. அவனின் உள்ளார்ந்த வலியையும் அதில் மறைந்திருந்த தவிப்பையும் அறிந்தவனாக பேசலானான்.

“இந்தா உன் மகளை பிடி... இனி உன் பொண்ணாச்சு, பொண்டாட்டியாச்சு... இனி சம்யுக்தாவுக்கு தேவையானதை செய்வேன், அவள் உதவி கேட்டா மறுக்கமாட்டேன்... அதே சமயம் உங்க ரெண்டு பேருக்கு இடையிலேயும் வர மாட்டேன்” என்று ஸ்பஷ்டமாக பிரஸ்தாபித்தவன் மகளை அவனிடம் ஒப்படைத்துவிட்டு நகர்ந்திருந்தான்.

சம்யுக்தா கணவனின் கைகளில் தன் குழந்தை இருப்பதை கண்டவள் வேகமாக அவனை நெருங்கி... “அடடே குட்டிமா! என்னடா அங்கிள்கிட்டே இருக்கீங்க... அங்கிள்கிட்டே இருந்து அம்மாகிட்டே வாங்க” கடைக்கண்ணால் நோக்கியபடி கூறியவளின் வார்த்தை கொதிநிலையில் இருந்த சுடுநீரை வாரி இறைத்தது போல் துடித்துப் போனான்.

அவளின் அழுத்தமான அங்கிள் என்ற அழைப்பில் இருக்கும் இடம், பொருள், ஏவல் அனைத்தும் மறந்து அந்த காரியத்தை செய்துவிட்டிருந்தான்.

சுவடுகள் தொடரும்....


**************************************
வணக்கம் நட்பூக்களே...
“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-11 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பதிவுகள் பதிவிடப்படும்.
டாக் செய்யவேண்டும் என்றால் கீழே கமெண்ட் செய்யவும் மக்களே.
தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels📖🖋📚
நட்புடன்
காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காட்சி-12
அவளின் அங்கிள் என்ற வார்த்தையை ஜீரணித்து கொள்ள முடியாத கலாதரனுக்கு கொலைவெறி எழுந்தது... “ஏய் இது தான் கடைசி இதுக்கு மேல இதை பற்றி பேசின நான் மனுஷனா இருக்கமாட்டேன்” ஆவேசத்துடன் சினந்தான்.

அதற்கெல்லாம் பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் உதட்டை சுளித்து ஏளனமாக பார்த்தவள்... “இதையே நீங்க என்னை பார்த்து வேற மாதிரி கேட்ட போது சுகமா இருந்துச்சோ?” என்றவளின் விழிகளில் அவள் தன்மானத்திற்கு பங்கம் ஏற்பட்டு விட்ட தீஜுவாலை மின்னியது.

அவனோ அவளுக்கு பதில் கூற முடியாத தன் செயலில் வாயடைத்து போனவனாக நெக்குருக, உடல் விரைத்துக் கொண்டு இறுகியது. ‘பேசாத வார்த்தைக்கு நாம் எஜமானன், பேசிய வார்த்தைக்கு அந்த வார்த்தை எஜமானன்’ என்பதை காலம் கடந்தே உணர்ந்திருந்தான்.

அவன் பார்வை அவள் மேல் நிலைக் குத்தியப்படி இருக்க கால்கள் ஆணியடித்தார் போன்று வேரூன்றி நின்றுவிட்டான்... சம்யுக்தா தானும் அவனை சில கணங்கள் இமைக்காது நோக்கிவிட்டு குழந்தையை பிடுங்கிக் கொண்டு நகர்ந்திருந்தாள்.

அவளின் சாட்டை வீசும் வார்த்தைகள் இனி விடாது தொடர்வது நிச்சயம் என்பதை ஊர்ஜிதமாக நம்பினான்.

“அரசி க்கா நான் முன்னை போலவே இங்கேயே ஒரு விடுதியில் தங்கிக்கிறேன்” என்றவளை ஆட்சேபத்தில் உதட்டை சுளித்து, கடுமையாக முறைத்தாள் அரசி.

“ம்ம்ம்.. ரொம்ப நல்ல முடிவு தான் எடுத்திருக்க... இப்போ யோசிக்கிற இந்த புத்தி அப்போ எங்க போயிருந்துச்சோ” அவளின் தவறை சுட்டிக்காட்டி சாடியவளை கண்டு அவமானத்தில் சிரம் தாழ்த்தினாள்.

அவளின் தாடையை பற்றி தலையை நிமிர்த்தி நேரடியாக அவள் விழிகளை சந்தித்தவள்... “இப்படி முட்டாள்தனமா இனி மேல் யோசிக்காதே வாணி... முதலில் அண்ணன் வாழ்க்கையை சரி செய்ய நாம போராடினது வீட்டுக்கு தலைமகன் என்கிற காரணத்துக்காக, அதுவுமில்லாம அவர் பக்கம் சரி செய்ய பலமான அஸ்திவாரம் நம்மகிட்டே இருக்கு, இனி உன் வாழ்க்கையை தான் சரி செய்யணும்”

“உன் வாழ்க்கை சீராக்காம நானும், அண்ணனும் விடப் போறதில்லை... அண்ணிக்கு நம்ம மேல் கோபம் இருக்கலாம்... அதே சமயம், வெறுப்பு இருக்கிறது போல் தெரியலை... நிச்சயம் உன்னை அந்த மனோரஞ்சனுடன் சேர்த்து வைக்கும் காரணத்துக்காவாச்சும் ரெண்டு பேரும் ஒத்து போவாங்க”

“எனக்கு ரஞ்சன் கூட வாழணும்னு பெருசா விருப்பம் எல்லாம் இல்ல க்கா... எப்போ அவன் என் உடம்புகாக தான் சுத்தினான்னு தெரிஞ்சுதோ அப்போவே என் காதல் செத்துப் போச்சு... இப்போ இருக்கிற இந்த கலைவாணி அவளுடைய மகளுக்காக தான்”

“இதுக்கு நான் கருத்து சொல்லவோ, என் அபிப்ராயத்தை வெளிப்படுத்தவோ உரிமை இல்லை வாணி... இது கொஞ்சம் சென்சிடிவான விஷயம்... உனக்கும், ரஞ்சனுக்கும் உள்ள தனிப்பட்ட அந்தரங்கம் அதில் எதுவா இருந்தாலும் முடிவு உங்களுடையதா இருக்கணும்”

“...........”

“ஆனால் அதே சமயம் நீங்க சேர்ந்து வாழ்வதும் ரொம்ப முக்கியம்”

“ஊர் உலகத்துக்காக என் தன்மானத்தை விட்டு அவன் கூட வாழ சொல்றியா க்கா?”

“ம்ச்...” அவளின் தவறான புரிதலை எண்ணி சலிப்புடன் சூழ் கொட்டியவள்...

“நீ தப்பா புரிஞ்சுக்கிற வாணி... நான் தான் தெளிவா ஒரு விஷயம் சொன்னேனே உன்னுடைய அந்தரங்கத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை... அதே போல் ஊர் உலகத்துக்காகன்னு நான் சொல்லவே இல்லை... அந்த ரஞ்சனுக்கு தான் காதல்ங்கிறது பொழுதுபோக்கு... ஆனால் உனக்கு அப்படியா? நீ ரஞ்சனை உண்மையா காதலிச்சிருக்க?” என்றவளின் வார்த்தையில் இருந்த நிதர்சன மெய்யில் அவள் கண்கள் கலங்கிச் சிவக்க...

“உண்மையா காதலிக்கப் போய் தானே என்னுடைய கற்பை இழந்தேன்” என்றவளுக்கு ஏமாற்றத்தின் கணம் தாங்காது நெஞ்சம் விம்மியது.

“அப்போ அந்த காதலுக்கான அங்கீகாரம் வேண்டாமா வாணி? அவனுக்கு உன் மேல் விருப்பம் இருக்கோ இல்லையோ... அவனுக்கு முதல் பொண்டாட்டி, சட்டப்படி நீயாதான் இருக்கணும்... அவன் கல்யாணம் பண்ணி குழந்தையே பெத்துகிட்டாலும் அவனுடைய முதல் குழந்தை உன் பொண்ணாத்தான் இருக்கணும்... அதுக்காக நீ அவன் காலில் எல்லாம் விழ வேண்டிய அவசியம் இல்லை... தான் ஆம்பளை என்கிற திமிர் அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் இருக்கு... அதை நீ அவன் கையால் தாலி வாங்குவது மூலமா தான் அழிக்க முடியும்”

“எந்த வீட்டில் உன்னை மருமகளா ஏற்றுக்க முடியாதுன்னு அவனும், அவன் குடும்பமும் சொன்னாங்களோ, அங்க நீ தான் மூத்த மருமகள்ன்னு சொல்லணும்... அதுக்கப்புறம் உன் முடிவு எதுனாலும் அது உங்களுக்குள்ளானது, இது நம்ம குடும்பத்துக்கும் பொருந்தும்”

அரசியின் தெளிவான தீர்க்கமான வார்த்தையில் மனதிற்கு புது உத்வேகம் கிடைத்திருக்க, இனி எதுவாகினும் பார்த்துக் கொள்வோம் என்ற துணிச்சல் மேலோங்கியது.


**********************

தரன், அர்ஜுன் இருவரும் ஒன்றாக கலந்தாலோசித்துவிட்டு மதுரை செல்ல ஆயத்தமானார்கள். மதுரை ஹோட்டலில் தங்கி இளைப்பாறிக் கொண்டவர்கள் மீனாட்சி அம்மனை தரிசிக்க திட்டமிட்டனர்.

தரன், சம்யுக்தா, வாணி, அரசி நால்வரும் குழந்தையுடன் உள்ளே சென்றிருக்க, அர்ஜுன் அவர்களுடன் இணைந்து செல்லாமல் தேங்கி நின்றான்... அவன் வெளியே நின்றுவிட்டதை பார்த்துக் கொண்டே இருந்த அரசிக்கு ஏதோ உறுத்த, தமையனிடம் ஏதோ காரணத்தை கூறிவிட்டு அர்ஜுனிடம் சென்றாள்.

“நீங்க வரலையா?” அலைபேசியில் மும்முரமாக இருந்த அர்ஜுனுக்கு திடுமென கேட்ட அரசியின் குரலில் அவள் புறம் திரும்பியவன்...

“அவங்க கூட போகாம நீ ஏன் வந்த அரசி?” அவள் கேட்டதற்கு பதில் கூறாமல், தான் ஒரு கேள்வியை முன் வைத்தவனை கண்கள் இடுங்க யோசனையுடன் பார்த்தபடியே...

“சரி வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து போவோம்” என்றவளின் பிடிவாதத்தில் அவன் தேங்கி நின்ற காரணத்தை கூறும் நிர்பந்தம் இருக்கவே அதை கூறலானான்.

“அரசி நான் எங்க வீட்டுக்கும், உங்க வீட்ல ரெண்டு மாமாவுக்கும் தகவல் சொல்லிருக்கேன்... அவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல இங்கே வந்திருவாங்க” என்றதும் அவன் தனித்து நின்ற காரணத்தின் பின்னணி புரிந்து பக்கென்று ஆகிப் போக கலவரமானாள்.

“அச்சோ! இங்கேயேவா? நாம நேரடியா வீட்டுக்கே போயிருக்கலாமே?” பொது வெளியில் வைத்து அவர்கள் கண்டித்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் கூறியிருக்க, அர்ஜுன் அதை புரிந்தவனாக...

“நேரடியா வீட்டுக்கு போய் அவங்க உள்ளே விடலைன்னா எங்க போறதா உத்தேசம்?”

“இல்லை இது வெளியிடம் அது தான்....” என்று தயங்கி நிறுத்தியவளை தொடர்ந்து...

“பொது இடம் தான் முதலில் நல்லதுன்னு எனக்கு தோணுது அரசி... உங்க வீட்டு முன்னாடி எடுத்ததும் போய் கையில் குழந்தையோட ரெண்டு பேரும் நின்னா, அவங்களுக்கு பெரிய அதிர்ச்சியா இருக்காதா? அப்புறம் நீ சொல்ற மாதிரி அங்கே மட்டும் அக்கம் பக்கத்தில் ஆட்கள் இல்லையா?”

“அதுவும் அங்கே எல்லாமே தெரிஞ்சவங்களா இருப்பாங்க அவங்களுடைய கேள்விகளுக்கும், விமர்சனத்துக்கும் ஆளாக வேண்டியதா இருக்கும்... நான் தெளிவா யோசிச்சு தான் முடிவெடுத்திருக்கேன்... உன்னுடைய மாமாவுக்கு முதலில் பேசி புரிய வைப்போம்... நிச்சயம் அவங்க கோபப்படாமலா இருக்கமாட்டாங்க தான், அதுக்காக அவங்களை விட்டுட்டு இப்படியே இருந்துவிட முடியுமா?”

“உங்க சின்ன அத்தை கொஞ்சம் சென்சிட்டிவானவங்க, கலைமலரும் சின்ன பொண்ணு அவங்களை பக்கத்துல வச்சுக்கிட்டு உங்க அண்ணணையும், வாணியையும் அவங்க அவ்ளோ சுலபமா ஏத்துக்க நினைக்கமாட்டாங்க... அவங்க கூட வாக்குவாதம் பண்ணி சேர்க்கிறதுக்கு முன்னாடி ஊரெல்லாம் பரவிரும்”

“உன் மாமாகிட்டே எடுத்து சொல்லிட்டு அவங்க மூலமா விஷயத்தை உன் சின்னத்தை காதிற்கு போகணும்... அப்போ தான் தரனும், வாணியும் மத்தவங்க வாய்க்கு அவலாகாம இருப்பாங்க... இந்த முடிவை நானும், தரனும் சேர்ந்து தான் எடுத்தோம்?”

“எல்லாம் சரி தான்... ஆனால், எங்கே தொடங்கி எப்படி சொல்றது... எனக்கு ரொம்ப பயமா இருக்கு அர்ஜுன் சார்” என்று கூறி அணங்கினாள்.

“பயப்படாதே அரசி! அதுக்கும் ஒரு ஏற்பாடு செய்துட்டேன்” என்றதும்...

“என்னது?” என்று கண்கள் அகல ஆர்வமாக வினவினாள்.

“என் அம்மா, அப்பா ரெண்டு பேரும் பேசி தான் உங்க மாமாவை கூட்டிட்டு வரப் போறாங்க” என்றதும் ஆயிரம் சிப்பாய்கள் ஒன்றிணைந்தது போன்று பலமாக உணர்ந்திருந்தாள். அதை கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டவன் மனம் என்னும் பெட்டகத்தில் பத்திரமாக சேமித்து வைத்துக் கொண்டான்.


**********************

தரன், தன் மனைவி மற்றும் கலைவாணி சகிதம் அம்மன் தரிசனத்தை முடித்துவிட்டு வெளியேறவும், அர்ஜுன் பெற்றவர்களுடன் தரன் குடும்பத்தினர் அங்கே பிரசன்னமாகவும் மிகச்சரியாக இருந்தது.

மல்லிகா, நடராஜன் தம்பதியர் கேசவதரன், குருதரன் இருவரிடமும் மேலோட்டமாக விஷயத்தை கூறியிருக்க, அவர்களுக்கு அதிர்ச்சி நேர்ந்தாலும்... ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்’ என்ற எண்ணத்தை கருத்தாக கொண்டவர்கள் முழுவதுமாக நம்பாமல் தான் அவர்களுடன் பயணித்து வந்திருந்தார்கள்... நேரிலேயே தன் மகன் மற்றும் மகள் கைகளில் குழந்தையை ஏந்திக் கொண்டிருப்பதை கண்டு உச்சக்கட்ட அதிர்ச்சியில் உறைந்தவர்கள் மறுகணமே, கண்களில் கோபம் கொப்பளிக்க பார்த்தனர்.

இருவரில் கேசவன் தான் முந்திக் கொண்டு தரனிடம் சென்றவர் அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்திருந்தார். அர்ஜுன் அவரை கண்டித்து தடுக்க முனைய மல்லிகா மகனை பார்வையால் கண்டித்து அடக்கிவிட்டிருந்தார். அரசி ஓரளவு இது போன்ற செயலை எதிர்பார்த்திருந்தவள் பயத்தில் உதட்டை கடித்தப்படி துப்பட்டாவின் நுனியை சுருட்டிக் கொண்டு இதயத் துடிப்பின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.

வாணிக்கு தன் பெரிய தந்தையின் செயலிலேயே அச்சத்தில் உடல் வியர்க்க நின்றிருந்தவள், அவள் தந்தையின் வெறுப்பான பார்வையில் தலைச்சுற்றி கிறுகிறுக்க தள்ளாட்டதுடன் நின்றிருந்தாள். சம்யுக்தா யாருக்கு நேர்ந்த சிக்கலோ என்பது போன்று அங்கே நடப்பதை கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“வீட்டுக்கு தலைமகன்னு நீ செய்யுறதை நாங்க கேள்விக் கேட்காம விட்டது உனக்கு சாதகமா போயிருச்சுல்ல?”

“இதுக்கு முதலில் என்ன காரணம்னு கேளுங்க அண்ணா” என்ற குருதரன் மகளை பார்வையால் எரித்துக் கொண்டிருந்தார்... வாணிக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க நாவு உலர்ந்து போனது, இமைகளை சிமிட்டிக் கொண்டு அரை மயக்கத்தில் தள்ளாடியவளை கண்டு சுதாரித்த கலாதரன்...

“அரசி வாணியை பார்த்துக்கோ” என்று கூறிவிட்டு அவன் விஷயத்தில் அவன் ஏற்படுத்திய சில குளறுபடிகளை வடிகட்டி விட்டு தன் தந்தையிடமும், சித்தப்பாவிடமும் நடந்ததை மேலோட்டமாக கூறிவிட்டிருந்தான்.

“ஆக அண்ணனும் தங்கச்சியும் உங்க இஷ்டத்துக்கு வாழ்க்கை தேடிகிட்டீங்க?” என்று கேசவதரன் வினவ, மகள் மயக்கத்தில் தள்ளாடுவதையும் பொருட்படுத்தாது வாணியை நெருங்கியவர்...
“பெத்தவங்களை நீ ஏமாத்த நினைச்ச, ஆனால் கடவுள் அதுக்கு தண்டனையா உன்னை ஏமாத்திட்டாரு பார்த்தியா?” அவளின் துரோகத்தினால் ஏற்பட்ட ரணத்தை பொறுக்க இயலாது வார்த்தையை கடித்து துப்பினார்.

தந்தையின் வார்த்தையில் மனம் அடிபட்டு போக... “என்னை மன்னிச்சிருங்க அப்பா” என்று அழுகையில் விம்மியபடி கூறியவள், அவர் காலில் பட்டென்று விழுந்திருந்தாள்.

அதிலெல்லாம் அவர் சமாதானம் அடைந்து விட முடியுமா? நேற்று வரை என் குழந்தை என்று எண்ணிக் கொண்டிருந்தவரின் எண்ணத்தில் மண் அள்ளி போட்டது போல், குழந்தையை சுமந்து வந்து அவரின் எண்ணத்தை பொய்யாக்கி, அவரின் பகைமைக்கும் ஆளாகியிருப்பதை உணர்ந்து அவரும் மனதால் உடைந்தார்.

“என் காலில் விழுந்து என்ன புரியோஜனம்? பாவி மகளே! இனி நான் எல்லார் முகத்திலேயும் எப்படி விழிப்பேன்?” கோபாவேசத்துடன் நெற்றியில் அறைந்து கொண்டு அழுதவரை தடுத்தார் நடராஜன்.

“குரு கொஞ்சம் பொறுமையா இருங்க?” என்றவரை ஆவேசத்துடன் பார்த்தவர்...

“எப்படிங்க பொறுமையா இருக்கிறது? எங்களுக்கு இவ தானே மூத்த பொண்ணு, இவளுக்கு அப்புறம் ஒருத்தி இருக்காளே, அவளை பற்றி நினைச்சு பார்த்தாளா?” நீண்ட காலமாக நடராஜன் அவர்கள் குடும்பத்துக்கு நட்புடன் பல உதவிகளை செய்திருந்ததையும் இப்போது வரை அதுக்கு தொடர்ந்தும் கொண்டு இருக்கவே, அவர் மேல் மிகப்பெரிய பற்றுடன் மரியாதை வைத்திருக்கும் அவர்கள் அதுவரை அவரை எதிர்த்து பேச முடிய நினைத்ததில்லை என்றாலும், அப்போதைய சூழலில் அவரின் ஆதங்கம் வெளிப்படத்தான் செய்தது. அதை புரிந்துக்கொண்ட நடராஜனும்...

“புரியுது குரு... பெண்ணை பெற்ற தகப்பனா உங்களால் இதை ஏற்றுக்கிறது ரொம்ப கஷ்டம் தான், இல்லைன்னு நான் மறுக்கமாட்டேன்... அதே சமயம் அவங்க ஆயிரம் தவறு செய்திருந்தாலும் பெற்ற பிள்ளைகள் ஆயிற்றே? அவங்க உங்களை விட்டு எங்கே போவாங்க? இல்லை, நாம தான் எக்கேடோ கெட்டு ஒழின்னு விட்டு விட முடியுமா?”

“அதுக்காக இவங்களை ஏற்றுக்கவும் முடியாது நடராஜன் சார்” என்று உறுதியாக மறுத்தார் கேசவன்.

“எங்களை மீறி வாழ்க்கையை தேடிக்கிட்டு வாரிசையும் பெற்றுக்க தெரிஞ்சுதில்ல, அதே போல வாழ்க்கையையும் போராடி வாழ்ந்து பார்க்கட்டும், அப்போ தான் எங்க வலி என்னன்னு அவங்களுக்கு தெரியும்” இவர்களின் பேச்சை கேட்டு கலாதரன், கலைவாணி மட்டுமல்லாது மற்ற அனைவருமே மௌனமாக இருந்தனர்.

“நீங்க சொல்றது சரி தான்... உங்க மகன் வெளியே போனானா ஏதோவொரு வேலை பார்த்தாவது அவன் பொண்டாட்டியை காப்பாற்றிவிடுவான்... ஆனால் கலைவாணி நிலைமை என்ன, அதை யோசிக்கணும் கேசவன்”

“அதை பற்றி அவ யோசித்தாளா?” வெடுக்கென்று வினவினார் குருதரன்.

“அவள் யோசிச்சாளா, நினைச்சாளா என்கிற கடந்த கால பேச்சே வேண்டாம்ன்னு சொல்றேன்... உங்க ரெண்டு பேருக்குமே சேர்த்துதான் சொல்றேன், அவங்க தப்பு பண்ணிட்டாங்க தான்... அதுக்காக அப்படியே விட்டு விட முடியாது... கொஞ்சம் பெரிய மனசு பண்ணி அவங்களை வீட்டுக்கு கூப்பிட்டு போங்க” என்று நடராஜன் நடுத்தர நிலையில் நின்று கூறி முடித்ததும் கலாதரன் பேசலானான்.

“அப்பா நான் பண்ணினது ரொம்ப பெரிய தப்புதான்... இதுக்காக நீங்க எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்குறேன்... ஆனால் அது என் மனைவி, குழந்தையை பாதிக்க வேண்டாம்” என்றவனின் வார்த்தையில் மல்லிகா, நடராஜன் இருவரும் அர்ஜுனிடம் அர்த்தத்துடன் பார்வை பரிமாற்றம் செய்துக் கொண்டனர்... இதை அங்கே யாரின் கவனித்திலும் படாது போயிருக்க, சரியாக அரசியின் கண்களில் மட்டும் சிக்கிவிட்டிருந்தது... இதை பார்வை பரிமாற்றம் செய்தவர்களும் அறியவில்லை, அதை கவனித்தவளுக்கு அதன் சாராம்சம் என்னவென்று விளங்கவில்லை.

‘சிறுதுளி பெரு வெள்ளம் போல சேமிப்பு தான் கூட வேண்டுமே தவிர, சிறுதுளியாக சந்தேகம் உதிர்ந்தலும் அதை அப்போதே தீயிலிட்டு பொசிக்கி விடவேண்டும்’ அப்படி இல்லாவிட்டால் அது பெரும் சேதாரத்தை விளைவிப்பது மட்டுமல்லாமல் வாழ்வையே குலைத்துவிடும் என்பதை காலம் தாழ்த்தி தான் உணருவாளோ அப்பெண்ணரசி?!

“சித்தப்பா நீங்க கலைவாணியை உடனே மன்னிக்கணும்னு சொல்லமாட்டேன்... அது உங்களால் முடியாது தான் என்றாலும் மன்னிக்க முயற்சி செய்யப் பார்க்கணும் இது என் கோரிக்கை... அதே போல அவளை நான் தனிச்சும் விடமாட்டேன்... இனி அவளுக்கான முழு பொறுப்பும் என்னுடையது... அவளை அவள் கணவனுடன் நான் வாழ வைக்க வேண்டிய கடமை எனக்கும், என் பொண்டாட்டிக்கும் உரியது” என்றவனின் பார்வை மனைவியை வருட உனக்கும் பொறுப்பிருக்கிறது என்ற கட்டளை தொக்கி நின்றது... சம்யுக்தா அதற்கு எந்த பிரதிபலிப்பும் காட்டாது நின்றிருந்தாள்.

“நீங்க பெரிய மனசு பண்ணி எங்களை மன்னித்து வீட்டில் மட்டும் சேர்த்துக்க அனுமதி கொடுங்க” என்று கைகூப்பி மன்றாடி முடித்திருந்தான் கலாதரன்.

என்ன சொல்லியும் அவர்களால் அத்தனை சுலபமாக மன்னிக்க முடியாமல் போகவே மற்றவர்களை ஹோட்டல் அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு நடராஜன் இருவரையும் பலவகையில் பேசி மனதை கரைக்க பார்த்தார்... ‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரைந்துவிடுமே’ அங்கே இருந்த இருவரும் ரத்தமும், தசையும் கொண்ட மனிதர்கள் தானே, நடராஜன் அவர்களை நன்கு அறிந்து வைத்திருந்ததன் பலனாக அவர்களிடம் எப்படிக் பேசினால் செல்லுபடியாகும் என்று கணித்தவர் அது போலவே பேசி அவர்களை ஓரளவு வழிக்கு கொண்டு வந்திருந்தார்.

இங்கே போஜனத்தின் அறையில் அர்ஜுன், தரன் இருவரும் சகிதமாக இருக்க... வாணி, அரசி, சம்யுக்தா மூவரும் மல்லிகாவுடன் இருந்தனர். அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சம்யுக்தா பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை... தன் போக்கில் எப்போதும் போன்று இருந்தவளை குறுகுறுவென்று ஆராய்ச்சி பார்வையால் வருடிக் கொண்டிருந்தார் மல்லிகா.

இரவு உணவு நேரம் நெருங்கவே அர்ஜுன் தரனை சமாதானம் செய்து அவர்கள் தங்கியிருந்த இடத்தின் உணவகத்திற்கே உணவருந்த அழைத்து வந்தவன் மற்றவர்களையும் அழைத்திருந்தான்.

அரசி, வாணியுடன் மல்லிகா மட்டுமே எழும்பி வர, சம்யுக்தா அங்கேயே தேங்கிவிட்டிருக்க, மல்லிகா அவளை நெருங்கி...

“சம்மு நீயும் சாப்பிட வாடா” என்றழைத்தார்... அதற்கு அவள் பதில் பேசாமல் ஓர் மாதிரியாக பார்த்து விட்டு கைபேசியைக் அளந்தபடி அலட்சியத்துடன் அமர்ந்துவிட்டிருந்தாள்.

தன் அன்னையின் கூற்றுக்கு செவி சாய்க்காது தன் போக்கில் அமர்ந்திருந்தவளை இப்போது அர்ஜுனே அணுகியவன்...

“சம்மு அதான் அம்மா கூப்பிடுறாங்கள்ளா சாப்பிட வா” என்றவனை விழியுயர்த்தி பார்த்தவள்...

“நான் இங்கே யார் பின்னால் வந்திருக்கிறேனோ அவர் வந்து கூப்பிடட்டும்” என்று விட்டு பேச்சு முடிந்ததன் எதிரொலியாக அலைபேசி திரையில் மூழ்கிவிட்டிருக்க, அர்ஜுன் அன்னையை கேள்வியாக பார்த்தான்...

“நீ போய் நம்ம தரனையே அனுப்பி விடு புருசனாச்சு, பொண்டாட்டியாச்சு” என்று அவனுக்கும் மட்டும் கேட்கும் படி மெல்லிய குரலில் முணுமுணுத்தார்.

அர்ஜுன் கூறியதை கேட்ட கலாதரனுக்கு சினம் துளிர்க்க கடுப்பில் ஆவேசத்துடன் அவளை நெருங்கியவன்...

“ஏய் என்ன திமிராடி? சாப்பிட அழைக்க நானே தான் வரணுமா? இங்கே என்ன பிரச்சனை போய்கிட்டு இருக்கு, இந்த சூழ்நிலையில் உனக்கு சம்பிரதாயம் கேக்குதா?”

“நான் உங்க பின்னாடி தான் வந்திருக்கேன்... அப்போ எனக்கான தேவைகள் எதுனாலும் நீங்க தான் பார்த்துக்கணும்” அழுத்தம் திருத்தமாக மிதப்பாக கூறியவளை கண்டு பற்கள் நெரிப்பட தாறுமாறாக எகிறிய கோபத்தை கட்டுப்படுத்த வேண்டி கைமுஷ்டியை இறுக்கி தன்னை கட்டுபடுத்திக் கொண்டவன்...

“இங்கே பாரு நானே சித்தியை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம அல்லாடிட்டு இருக்கேன்... எனக்கு உதவாட்டியும் பரவாயில்லை, ஆனால் உபத்திரவம் செய்யாதே”

“அது உங்க பிரச்சனை மிஸ்டர்.கவின்கலாதரன்... அதை எல்லாம் யோசிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்று பிடிவாதமாக சற்றே கர்வம் பொங்க கூறினாள்.

“ஆடுடி... ஆடு! குடுமி உன்கையில் இருக்கிற திமிரு... இருக்கிற சூழ்நிலையை கொஞ்சம் சரி செய்ற வரைக்கும் தான் இதெல்லாம்... அதுக்கப்புறம் நான் யாருன்னு காட்டுறேன்” என்று சவாலாக கூறியவனை நோக்கி...

“பார்ப்போம் யார் யாரை ஆட்டி வைக்கறாங்கன்னு... இல்லை, ஆட்டம் காண்பிக்க போறாங்கன்னு... எனிவே ஆல் த பெஸ்ட் புருஷா” என்றவள் நாக்கை கடைவாயில் அடக்கி கொண்டு கூறியவளின் கண்கள் சிரித்துக் கொண்டிருந்தது.

அவளின் குறும்பு மின்னிய பார்வையும், பேச்சும் அவனை கடந்த காலத்திற்கு இழுத்துச் செல்ல மீன் நழுவது போன்று மனமும் நழுவிக் கொண்டிருந்ததை கடிவாளமிட்டு அடக்கியவன்...

“ஒழுங்கா இப்போ சாப்பிட வா” என்றவனின் தன்மையான குரலில் எழுந்து செல்ல முனைந்தவளை தடுத்தவன்...

“அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்” என்றவனை என்ன என்பதாக பார்த்தவளிடம்...

“என்னை பழிவாங்குறேன், பாடுபடுத்துறேன்னு கிளம்பி என் தங்கச்சிங்க முன்னாடியோ, குடும்பத்துல இருக்க மத்தவங்க முன்னாடியோ ஊட்டிவிடு, கொடைக்கானல் விடுன்னு, ஏதாவது கோக்குமாக்கு செய்யலாம்னு நினைச்ச, நான் மனுஷனா இருக்கமாட்டேன்” சற்று கடுமையாகவே எச்சரித்தான்.

“அட இது கூட நல்லா இருக்கே... இப்போ வரைக்கும் எனக்கு இதை பத்தின யோசனையே இல்லை, எடுத்து கொடுத்ததுக்கு மிக்க நன்றி புருஷா!” என்றவள் அங்கிருந்து நகர, கலாதரன் தானே மாட்டிக் கொண்ட முட்டாள்தனத்தை எண்ணி புறந்தலையில் அடித்துக் கொண்டு தன்னை சமன்படுத்திக் கொண்டு சென்றிருந்தான்.


**********************

நடராஜன், மல்லிகா இருவரும் கேசவதரன், குருதரனை சமாதானம் செய்து அவர்கள் மூலமாகவே பூங்குழலிக்கு விஷயத்தை தெரிவிக்க வைத்து வீட்டிற்கும் அழைத்து வந்திருந்தனர்.

வாசலில் அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்த பூங்குழலியும் முதலில் தரன், வாணி குழந்தையுடன் இருப்பதாக கூறியதை நம்பவில்லை... நேரில் அவர்களை குழந்தையுடன் கண்டதுமே மனதில் கோபவேசமும், ஆதங்கமும் பொங்க பார்த்திருந்தார்.

கலைமலர் தான் அவர்களை கண்டதும்.... “ஹை அண்ணா குட்டி பாப்பா அழகா இருக்கு” என்று தாவி குதித்து ஆர்ப்பரிப்புடன் அவனை அணுக முற்பட்டவளை குழலியின் கடுமையான பார்வை, அடுத்த காலடியை எடுத்து வைக்காமல் தடுத்து விட பேந்த பேந்த விழித்தப்படி பின்னோக்கி நகர்ந்து அமைதியாக நின்றுவிட்டாள்.

சம்யுக்தா வெளியே நின்று தர்க்கம் செய்வதை முற்றிலும் விரும்பாதவள் யாருடைய அனுமதியும் எனக்கு தேவையில்லை என்பதை போல்... “கொஞ்சம் தள்ளுங்க நான் உள்ளே போகணும்” என்று அதிகாரமாக கூறிவிட்டு, இருக்கும் சிறு இடைவெளியில் புகுந்து வீட்டிற்குள் நுழைந்துவிட்டிருந்தாள்.

அவளின் செயலை கண்ட கலாதரன் சுதாரித்தவனாக... “அம்மா முதலில் உள்ளே போய் பேசிக்குவோம்” என்றவன் அனைவரையும் உள்ளே அழைத்துக் கொண்டு கதவை தாழிட்டுக் கொண்டான்.

“என்னடா இதெல்லாம்? வீட்டுக்கு மூத்த மகன் உன் தங்கசிங்களுக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்து இப்படியா நீ செய்வ?” என்று குரலில் கடுமை விரவ வினவியிருந்தார்.

“அம்மா சில சூழ்நிலைகள் அப்படி ஆகிப் போச்சு இதை பற்றி மெதுவா பேசிக்குவோம்... தயவு செய்து மன்னிச்சிருங்க”

“ஆமாம் அம்மா தப்பு எல்லாம் என் மேல் தான் ப்ளீஸ் என்னையும் மன்னிச்சிருங்க” என்று அவர் காலை பிடிக்க சென்ற வாணியை...

“ச்சீ...” என்ற உதாசினத்துடன் அவளை விலக்கி நிறுத்தியிருந்தார்.

அவரின் வெறுப்பில் முற்றிலும் உடைந்த வாணி அழுகையில் கரைய ஆரம்பிக்க, அர்ஜுன் இடைபுகுந்து அவரை சமாதானம் செய்ய முயன்றான். அவனின் பேச்சிற்கும் அவர்களை மன்னிக்க முடியாது என்ற தீர்மானத்தில் உறுதியாக நிற்க, மல்லிகா, நடராஜன் இருவருமாக பேசிப் பார்த்தனர். இதற்கிடையில் கலாதரனும் பல சமாதானங்கள் கூறியும் ஏற்காதவரை கண்ட அரசி இடையிட்டு...

“அத்தை தப்பு அவங்க மேல மட்டும் இல்லை என் மேலேயும் இருக்கு” என்றவளை தரன்...

“அரசி” என்று உயர்ந்த குரலில் அதட்டினான். அவன் பார்வை வேண்டாம் பேசாதே என்ற எச்சரிக்கை தொனித்திருந்ததை, பெரிதும் லட்சியம் செய்யாமல்...

“வாணி காதலிக்கிற விஷயம் தெரிஞ்சு நான் ஆரம்பத்திலேயே அண்ணன்கிட்ட சொல்லாமல் மறைச்சுட்டேன்... அதுவும் இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட காரணம்” என்று செய்யாத தவறுக்கு தண்டனை ஏற்றுக் கொள்ள தயாரானவளை கண்டு உயர்ந்து தெரியாமல் தன் மகள்களுக்கு அவள் இழைத்த பாதகம் என்றெண்ணிய பூங்குழலி...

“நீயா இப்படி செய்த...? பெத்தவங்களை சின்ன வயசுலயே முழுங்கிட்டு அனாதையா நின்னவளை ஆதரிச்சதுக்கு நல்ல முறையில் நன்றிக் கடனை செலுத்தியிருக்க? இதே உன் கூட பிறந்த ரத்தமா இருந்திருந்தா இப்படி செய்திருப்பியா?” அவரின் கேள்வி சுரீர் என்று அடிமனதை வெட்டி இழுக்க விக்கித்து நின்றாள்.

அவரின் பேச்சில் அர்ஜுனும் அதிர்ந்தவன், அரசியின் முகத்தை சூழ்ந்த மந்தார வேதனையை கண்டு சகிக்காது, அதை தடுக்கவும் முடியாத இயலாமையில் கனன்ற கோபத்தில் கைமுஷ்டி இறுக உடல் விரைத்துக் கொண்டது. மல்லிகா, நடராஜன் அவளை கழிவிறக்கத்துடன் நோக்கிய பார்வையில் நெக்குருகி போனவள் அனலில் இட்ட புழுவாய் துடித்துப் போனாள்.

“அம்மாஆஆ...!” என்று உறுமிய தரனின் முகத்தில் கோபம் கொப்பளித்தது.

“அரசி யாரோ இல்லை... என்னை பெற்ற அம்மாவோட சொந்த அண்ணன் மகள்... அவளுக்கு எல்லாமுமா நான் இருக்கேன், இனியும் இருப்பேன்... இனி ஒரு முறை இப்படி பேசாதீங்க... அப்புறம் நான் வேற மாதிரி யோசிக்க வேண்டியதா இருக்கும்”
அவரின் பேச்சிற்கு மிக அழுத்தமாக கண்டனம் தெரிவித்து கண்டிப்புடன் கூறியிருந்தவன் பார்வை அரசியிடம் பாய்ந்திருக்க... ‘பேசாதே சொன்னேன் கேட்டியா?’ என்பது போல் விழிகளால் குற்றம் சாட்டிய மறுகணமே அவள் கைப்பற்றி தன் புறம் இழுத்துக் கொண்டவன்...

“அரசி, வாணி, மலர் மூணு பேரும் என் தங்கச்சிங்க தான்... எங்களுக்குள்ள இருக்கிற இந்த உறவு யார் சொன்னாலும் எப்போவும் மாறப் போறதில்லை... அவங்களை சொல்ற எந்த வார்த்தையும் நீங்க என்னையும் சேர்த்து சொல்வதற்கு சமம்... உங்க கோபம் நியாயமானது தான், உங்களுக்கா எப்போ எங்களை மன்னிகணும்னு தோணுதோ அப்போ மன்னியுங்க... அதுவரை நாங்க உங்களை தொந்தரவு செய்யமாட்டோம்... அதே சமயம் இந்த வீட்டை விட்டும் போகமாட்டோம்” என்றவனின் வார்த்தைக்கு கேசவன், குரு இருவரும் இசைவது போல் வேறேதும் மறுப்பு கூறாது அவர்கள் சோலியை பார்க்க சென்றுவிட்டனர்.

நடராஜனும் அங்கிருந்து கிளம்ப வேண்டிய நேரம் வரவே... “தரன் பத்திரமா பார்த்துக்கோ எதுவும் உதவின்னா தயங்காம கேளு நாங்க கிளம்பறோம்” என்றுவிட்டு கிளம்ப அர்ஜுன் அரசியை பார்த்தபடி நின்றுவிட்டான்.

“அர்ஜுன் வா கிளம்பலாம் இனி தரன் பார்த்துக்குவான்” என்று அவன் அன்னை கூறிய வார்த்தையில், அர்ஜுன் நேரடியாக பார்த்த அரசியின் விழிகளில் சூழ்ந்திருந்த வலியை கண்டு நெஞ்சம் கனத்து போனது.

தன் மகனின் பார்வை சென்ற இடத்தை அறிந்த மல்லிகாவிற்கு அவள் மேல் கொண்டுள்ள இரக்க மனப்பான்மை என்று எண்ணிக் கொண்டவர்... “அர்ஜுன் அரசியை தரன் பார்த்துப்பான்... நீ வாப்பா போகலாம்” என்று மறுமுறை அழுத்தி அழைக்கவும், இப்போது வேறு வழியில்லாதவனாக விழிகளால் விடை கொடுத்து விட்டு அரைமனதுடன் அன்னையுடன் புறப்பட்டு சென்றான்.

சம்யுக்தா அங்கே மற்றவர்களின் நிலையை பற்றி கருத்தில் கொள்ளாமல் வெகு இயல்பாக வளைய வந்தாள்... தனக்கு தேவையானதை தானே எடுத்துக் கொண்டு, அவளே அனைத்தையும் சமாளித்தது குறித்து கலாதரனுக்கு ஒரு வகையில் பெருத்த நிம்மதியாக தான் இருந்தது. இனி இது அவளது இல்லம் இதில் அவள் யாரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற எண்ணமே அவனுக்குள் புத்துணர்ச்சியும், அவள் அவனின் மனைவி என்ற உரிமையுணர்வின் கிளர்ச்சியும் உண்டாக்கியிருக்க மற்ற வேலைகளில் கவனம் செலுத்துவதில் மிகவும் வசதியாகிப் போனது.

பூங்குழலிக்கு வாணி செய்த செயலை விட அதற்கு உடந்தை எனக் கூறிய அரசியின் மேல் தான் கோபம் கனன்று கொண்டிருந்தது... அத்தனை நாட்களாக காட்டாத வெறுப்பிற்கும் சேர்த்து வைத்து செய்வது போல் அவளை முற்றிலும் புறக்கணித்தார்.

“அத்தை” என்று பாசத்துடன் அழைப்பவளை சிறிதும் சட்டை செய்யாமல் மிக எளிதாக முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிடுவார்... இதே பாடத்தை தான் வாணியிடமும் படிக்க அதில் வாணி மனம் நொடிந்தாலும் அன்னையின் கோபத்தில் நியாயம் இருப்பதாக கருதி அதை இயல்பாக எதிர்கொள்ளலானாள்.

கலைமலருக்கு வாணியின் குழந்தையும் சரி, அவள் தமையனின் குழந்தையும் சரி இருவரின் வரவும் அவளுக்கு மிகுந்த உற்சாகம் அளித்தது... ஆனால் அதை அவள் அன்னை பூங்குழலி இருக்கும் சமயத்தில் வெளிப்படையாக செய்து விட முடியாது... அப்படி அவள் செய்துவிட்டாளானால் அவளை அன்று முழுக்க காய்ச்சி எடுத்துவிடுகிறார் என்பதால் அவள் அன்னை அசந்து நகரும் நேரத்தில் குழந்தையை கொஞ்சுவதையும் அதனுடன் விளையாடுவதிலும் அதிக நாட்டம் காட்டினாள்...

பட்டாம்பூச்சியாய் துள்ளித் துள்ளி பறந்து திரியும் அவளின் ஆர்வத்தில் முகம் திருப்பி செல்ல எண்ணிய சம்யுக்தாவினால் கூட அவளிடம் முகம் காட்ட முடிந்ததில்லை... அவளின் கள்ளம் கபடமற்ற சிரிப்பில் மகளை பெற்றிருக்கும் அவளுக்கு அவள் நெஞ்சிலும் ஈரம் சுரக்க புன்னகையை மட்டும் பதிலாக கொடுப்பாள்.

“அண்ணி குழந்தை உங்களை மாதிரியே கொள்ளை அழகு, வாணி அக்கா குழந்தை தான் அவ ஜாடை இல்லை, ஆனால் பாப்பா அப்படியே உங்க ஜாடை” என்று பூரிப்பில் ஆர்பரித்து சிரிப்பவளை மனம் நோக பேச முடியாமல் அவளிடம் மட்டும் தன்னியல்பை நிலைநாட்டினாள்.

அனைத்தும் ஓரளவு சமன் செய்துவிட்டதில் கலாதரன் ஓய்வின்றி தன் பணியை தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தான், அரசிக்கு தான் மட்டுமே தனித்து விடப்பட்டது போன்று பிரமை எழுந்ததில் நத்தை தன் கூட்டில் சுருங்கிக் கொள்வது போல் தனிமையின் இருளில் தன்னை சசுருக்கிக் கொண்டாள்.

பூங்குழலியின் வார்த்தைகள் அவள் மனதை சுக்கு நூறாக உடைத்திருக்க, தனக்கு என்று யாருமில்லையே என்றெண்ணி எண்ணி மனம் கலங்க வேதனையில் உழன்றாள்.

ஒரு வார காலம் எந்தவித மாற்றமுமின்றி சென்றிருந்தது... அரசி தன் அத்தையை சமாதானம் செய்ய எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்திருக்க, காலதரன் “அவரை நீ அணுகாதே விட்டு விடு... அவராக எப்போ மனசு மாறுகிறாறோ அப்போ மாறட்டும்” என்று தான் கூறியிருந்தான்... ஆனால் தன்மானத்துடன் திகழும் அரசிக்கு அங்கிருக்கவே மூச்சுமுட்ட ஒரு கட்டத்தில் விரக்தி முற்றி அந்த தவறான முடிவை எடுத்திருந்தாள்.


சுவடுகள் தொடரும்....

********************************
வணக்கம் நட்பூக்களே...
“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-12 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பதிவுகள் பதிவிடப்படும்.
டாக் செய்யவேண்டும் என்றால் கீழே கமெண்ட் செய்யவும் மக்களே.
தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels📖🖋📚
நட்புடன்
காருராம்

 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காட்சி-13
அரசி பிறந்த மூன்றாம் வருடம் அவளின் தாயும், தந்தையும் கூத்து அரங்கேற்றும் இடத்தை நோக்கி பயணப்பட்ட நேரத்தில் எதிர்பாராது நேர்ந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலி ஆகிப் போனார்கள்... விவரம் அறிந்த கலாதரனுக்கு தன் அன்னையும் இல்லாததால் தன் தாய்மாமன் மேல் அதிக பாசமும், பற்றும் கொண்டவனுக்கு அவர்கள் இறந்தது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது... அதிலும் இரண்டு வயது அரசிக்கு தன் அன்னை, தந்தை இறப்பை பற்றி கூட அறியாது இருந்தவளின் மீது பாசம் வளர தன் தந்தை கேசவதரனிடம் கூறி அரசியை தன்னுடனே அழைத்துக் கொண்டான்.

குருதரனுக்கு அடுத்த ஆறு மாதத்தில் திருமணம் முடிந்து பூங்குழலிக்கும் மகள் பிறக்க, அவளின் அண்ணன் என்ற அழைப்பில் அரசியும் மாமா என்ற அழைப்பை மாற்றி அண்ணன் என்றே அழைக்கலானாள்.

பூங்குழலி, குருதரன், கேசவதரன் யாரும் அதுவரை கலையரசியை வளர்ப்பது பாரமாக இருப்பதாகவோ, இல்லை; அவள் வேறு என்று குறிப்பிடும் வகையிலோ நடந்துக் கொண்டதில்லை... ஆனால் இத்தனை வருடங்களாக குடும்பத்தில் ஒருத்தியாக ஒன்றிப் போனவளுக்கு இப்படி ஒரே நாளில் அவளை தள்ளி நிறுத்தி வேறுபடுத்திய பூங்குழலி வார்த்தையில் முற்றிலும் மனமுடைந்தாள்.

பூங்குழலி கூறிய வார்த்தைக்கு கண்டனம் தெரிவித்து கலாதரன் எதிர்த்து நின்ற போதிலும், அவளால் அதை அவ்வளவு சுலபமாக விட்டுத் தள்ளி விட முடிந்திர முடியாமல் போகவே, இனி தான் இங்கே இருக்கக்கூடாது என்ற முடிவுடன் அங்கிருந்து வெளியேற ஆயத்தமானாள்.

கலாதரன் தன் தொழில்நுட்ப துறையின் பணி நிமித்தமாக சில வேலைகளும், விவசாயம் சார்ந்த சில பணிகளும் அத்தனை நாட்கள் கிடப்பில் போட்டு நிலுவையில் இருந்தவற்றை முடிக்கும் நிர்பந்தம் ஏற்பட்டிருக்கவே பெரும்பான்மையாக அவன் வேலையிலேயே நேரம் செலவிட வேண்டியதாகிவிட்டது.

அவனின் ஓய்வற்ற பணியே கலையரசியின் முடிவுக்கு இடையூறு விளைவிக்காமல் சாதாகமாக போகவே, தன்னை யாரும் கவனிப்பதில்லை, நாம் இல்லை என்றாலும் பெரிதும் வருந்தப் போவதில்லை என்ற எண்ணத்தில் தனக்கு மிக மிக அவசியமானது என்பதை மட்டும் ஒரு சின்ன பெட்டியில் அடக்கிக் கொண்டாள்.

அன்று அனைவருடன் ஒட்டி உறவாடி பழகியவள், இரவு வாணியின் அருகில் தூங்குவது போல் பாவலா செய்தாள்... தூக்கம் தழுவாமல் விட்டத்தை வெறித்தப்படி படுத்திருந்தவளுக்கு அங்கிருந்து செல்லும் துக்கம் தொண்டையடைக்கவே கண்களை கரித்துக் கொண்டு வந்தது... நெஞ்சை அடைத்த துக்கத்தின் விளைவாக வெளிப்பட இருந்த கேவலை தன் உள்ளங்கையால் வாயடைத்து கட்டுப்படுத்திக் கொண்டவள், நடுஜாமத்தில் சத்தமின்றி எழுந்து அனைவரையும் ஒரு முறை ஏக்கத்துடன் பார்த்து தன் கண்களில் நிறைத்துக் கொண்டவள், கலாதரன் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற எத்தனித்து கையில் பெட்டியை சுமந்தப்படி அவர்கள் வீட்டின் வாசலை அடைந்ததும் தான் தெரு விளக்கு கூட அல்லாத கும்மிருட்டு அவளை சூழ்ந்திருந்தது கண்டு மிகுந்த அச்சமுற்றாள்.

அதிபயங்கர பீதி அவளுள் ஆட்கொண்டு விட உடல் வெடவெடத்தது... அங்கிருந்து அந்த இருட்டை கடக்க வேண்டிய துணிச்சலை திரட்ட விழிகளை மூடியபடி கந்தசஷ்டி கவசத்தை சில கணங்கள் உச்சரித்தவள் மனதில் ஒருவாறு துணிச்சல் பிறந்ததும் மெல்ல இமைகளை திறக்க, தாழ்வாரத்தில் இருந்த மின்சார விளக்கு பளிச்சென்று ஒளிர்ந்தது.

“மேடம் எங்க கிளம்பிட்டீங்க?” என்று அவளையே உறுத்து விழித்தப்படி நிதானமாக வினவிய கலாதரனை கண்டு தூக்கிவாரிப் போட, விதிர்விதிர்த்து போனவள் அச்சத்தில் வீறிட இருந்தவளின் வாயை தன் கரம் கொண்டு பொத்தியிருந்தான்.

“நான் தான் கத்தாதே எல்லாரும் எழுந்து விடப் போறாங்க” என்று எச்சரிக்கை விடுத்தவன் அவள் ஆசுவாசம் அடைந்துவிட்டதை அறிந்த பிறகே கரத்தை விடுவித்திருந்தான்.

“கேட்டேனே பதில் சொல்” என்று அதட்டியவனின் அரட்டலில் சித்தம் உலுக்கியது.

“ண்ணா... நா...ன்... வ..ந்..து..” என்று தொடங்கியவளால் தொடர்ந்து பேச முடியாமல் வார்த்தைகள் பிசிறடிக்க, தொண்டை கமறியது.

“நான் வேலையா சுத்திட்டு இருந்தா வீட்டில் இருக்கிற உங்களை பற்றி எல்லாம் கவனிக்கமாட்டேனா?”

“...........” அவனின் வார்த்தைக்கு பதில் கூற முடியாது உதட்டை கடித்தபடி மௌனமாக நின்றாள்.

“என் கண் எதிரில் வளர்ந்து வந்தவ நீ... கொஞ்ச நாளா உன்னை கவனிச்சுட்டு தான் இருந்தேன்... இத்தனை வருஷமா இல்லாத ஏதோ ஒரு வித்தியாசம் தெரிஞ்சுதுமே உன்னை விசாரிக்கலாம்னு பார்த்து தான் இன்னைக்கு மதியம் உன்னை தேடி வந்தேன்... அங்கே நீ பெட்டியில் பொருளை அடுக்கும் போதே ஏதோ தப்பான முடிவை எடுக்கிறன்னு தெரிஞ்சிருச்சு... சரி எவ்ளோ தூரம் தான் முயற்சி எடுக்கிறேன்னு விட்டுப் பிடிக்கத்தான் பொறுமையாக இருந்தேன்”

அவன் பேசப் பேச அவளை எவ்வளவு தூரம் கண்ணும் கருத்துமாக கண்காணித்திருக்கிறான் என்ற அக்கறை தென்பாட்டிருக்கவே தான் செய்த காரியத்தை எண்ணி நெக்குருகி நின்றாள்.

“கிளம்பனும்னு முடிவு பண்ணின சரி, எங்களை பத்தி என்ன கவலை? எதுக்காக கடைசியா எல்லாரையும் ஒருதடவை பார்த்துட்டு போகணும்னு தவிச்சு நிற்கிற?” என்றதும் அதுவரை அடக்கிக் கொண்டிருந்தவளின் கண்கள் பளபளக்க, முட்டிக் கொண்டிருந்த அழுகையை கட்டுப்படுத்த இயலாமல் பொலபொலவென்று கண்ணீர் உகுத்தாள்.

“என்னை மன்னிச்சிருங்க ண்ணா என்ன இருந்தாலும் நான் அநாதை தானே?” என்றவளை கோபம் கொப்பளிக்க பார்த்தவனின் விழிகள் சிவக்க...

“அடிச்சேனா பல்லு எல்லாம் கொட்டிரும் ஜாக்கிரதை? படிச்ச பைத்தியகாரின்னு நிரூபிக்கிற”

“.......”

“அப்போ இத்தனை வருஷம் யாருமில்லாமல் தான் இருந்தியா?”

“இல்லை தான்! ஆனால், அதே சமயம் உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ணின மாதிரியான காரியம் செய்திருக்கிறேனே?”

“திரும்பத் திரும்ப உளறாதே... நீ என்ன தவறு செய்த?”

“வாணி விஷயத்தை ஆரம்பித்திலேயே கவனித்து கண்டிக்காமல் அவளுக்கு ஆதரவா இருந்துட்டேனே?” என்றவளை தொடர்ந்து...

“நான் செய்த தவறுக்கு நீ என்னக்கா செய்வ?” என்றபடி அங்கே சமீபித்திருந்தாள் வாணி... குழந்தை அழும் சத்தத்தில் விழித்த வாணிக்கு வெளியே அர்த்த ஜாமத்தில் விளக்கெரிவதை கண்டு ஜன்னலில் எட்டி பார்த்திருந்தாள்... அங்கே அரசி பெட்டியுடன் நிற்பதும், தரனின் பேச்சும் முரண்பாடாக இருப்பதை உணர்ந்து மறைவாகவே கண்காணித்தவளுக்கு விஷயம் என்னவென்று தெளிவாக புரிந்தது. அந்நேரம் வாணியின் வரவை ஒரு விதத்தில் நியாயமாக உணர்ந்தவன்...

“கேள்விக் கேட்கிறாளில்லை பதில் சொல்லு” என்று அரசியை கேள்வியால் தாக்கினான்.

“அம்மா பேசினது ரொம்ப அதிகம் தான்... எனக்கே ரொம்ப கஷ்டமா போச்சு... அதுக்காக இப்படி வீட்டை விட்டு கிளம்பிருவியா?”

“அவங்க பேசினது தப்பு சரிங்கிறதை விட அது உண்மை தானே? நான் இனி இங்கிருந்தா அவங்க உங்களையும் ஏத்துக்கமாட்டங்க... அதனால் தான் நான் ஏதாவது ஹாஸ்டல் பார்த்து தங்கிக்கிறேன் அண்ணா” என்றதும் வேகமாக அவள் கரம் பிடித்துக் கொண்ட வாணி...

“அப்போ... இந்த வீட்டை விட்டு போக வேண்டியது நீ மட்டும் இல்லை நானும்தான்... வா, நானும் வரேன் சேர்ந்தே போகலாம்” என்று இழுத்தவளை கண்டு கலாதரன் கண்டனம் தெரிவித்து பார்வையால் வெட்டியவன்...

“என்ன ரெண்டு பேருக்கும் திமிரா...? இங்கே நான் இருக்கிறதை மதிக்காம ஆளாளுக்கு வீட்டை விட்டு போறேன் சொன்னா என்ன அர்த்தம்... நீங்க ரெண்டு பேரும் அவ்ளோ பெரியாள் ஆகிடீங்களா?” என்று உறுமினான்... அந்த அர்த்த ஜாமத்தில் அவன் குரலில் வீடே எழும்பினாலும் ஆச்சர்யம் இல்லை தான் என்ற போது வாணி, அரசி இருவருக்கும் உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

“ஒழுங்கா பெட்டியை எடுத்த இடத்திலேயே வச்சு பூட்டிட்டு போய் தூங்குற வழியை பாருங்க... எதுனாலும் காலையில் பேசிக்கலாம்” என்றவனின் சொல்லை ஏற்றாலும் அரசி நகராமல் நிற்க கண்டவன்...

“என்ன, நீயா போறியா இல்லை கன்னத்தில் ரெண்டு அடி கொடுக்கணுமா?” என்று மிரட்டி அதட்டியதும் தான் நகர்ந்திருக்க, உள்ளே சென்றுக் கொண்டிருந்த அரசியை நோக்கி...

“இந்த முடிவை இத்தோட குழி தோண்டி புதைச்சிரு... என்னை மதிக்காம வீட்டை விட்டு போனா அது தான் நீ எனக்கு தேடித் தருகிற மிகப்பெரிய அவப்பெயர்” என்றவனின் வார்த்தைக்கு கட்டுண்டு தலையாட்டியபடி சென்றாள்.


**********************

கோவையில் மனோரஞ்சன் இல்லத்தில் இருந்த அன்பழகன் மேல் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தனர்.

“உங்ககிட்டே தானே சம்யுக்தா கேஸை டீல் பண்ண சொன்னா, ஆனால் நீங்க ஏன் அதை எங்ககிட்டே சொல்லாம மறைச்சீங்க?” என்று கொந்தளித்தார் யசோதா.

“சரி அதைக் கூட விடுங்க அவ விவாகரத்து கேட்காம அவ புருஷன் கூட வாழணும்னு கேட்டதும் ஏன் வக்கீலையும் மாத்துனீங்க?” என்றவர் யமுனா.

“நான் இதை கையிலெடுத்தா சம்யுக்தாவை வாழ வைக்க முடியாதுன்னு தான் இப்படி செய்தேன்” என்று மிக தன்மையாக, நிதானமாக, தெளிவாக கூறியவரின் பதிலில் அனைவருக்கும் நாசியில் புகை மூட்டம் சூழ பார்வையால் எரித்தனர்.

“என்ன மிஸ்டர்.அன்பழகன் என்ன தைரியம் இருந்தா எங்க வீட்டு பெண் வழக்கை நீங்க கையிலெடுத்ததும் இல்லாம, அதுக்கு தெனாவெட்டா பதிலும் சொல்லுவீங்க”

“இதுக்கு எதுக்கு சார் தைரியம் வேணும்... சட்டத்தில் பிரிக்கிற உரிமை இருக்கிற மாதிரி சேர்த்து வைக்க வேண்டிய உரிமையும் இருக்கு”

“அங்கிள் நீங்க பேசுறது சுத்தமா சரியில்லை... அவன் சரியான பிராட் அங்கிள்... கூத்து கட்டுறவனுக்கு வருங்கால தொழிலதிபர் பொண்ணு பொண்டாட்டியா கேட்குதா?”

“ஒரு விஷயத்தை நீங்க வசதியா மறந்துட்டீங்க மனோரஞ்சன்... உன் தங்கையை கலாதரன் காதலித்து திருமணம் செய்து குழந்தை பெற்றிருக்கான்... அதற்கு தகுந்த ஆதாரம் பலமா இருக்கு... அதனால் தான் உன் தங்கை விவாகரத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் போது அவரால் எதிர்க்க முடியலை... அப்படியே எதிர்ப்பு தெரிவிச்சாலும் வாய்தா கொடுத்து கேஸை இழுத்தடிக்கலாமே தவிர சீக்கிரம் தண்டனை கிடைக்காது”

“ஆனால் நீ செய்த காரியத்துக்கு கலைவாணி கேஸ் போட்டிருந்தா இந்நேரம் கம்பி எண்ணிட்டு இருந்திருக்கணும்” என்றதும் ரஞ்சனுக்கு சுரீர் என்றிருக்க, மகனின் கௌரவத்தை தாக்கி விட்ட கோபத்தில் சுனாமியாய் கொந்தளித்தார் யமுனா.

“என்ன மிஸ்டர்.அன்பழகன் எங்களையே மிரட்டி பார்க்கறீங்களா? போயும் போயும் கூத்துக்காரி தான் என் மருமகளா ஒரு நாளும் இதை நான் ஏற்றுக்கமாட்டேன்” தானும் பெண் இனம் தான் என்பதை மறந்து கூறினார்.

“ஆனால் உங்க மகனுக்கு அவளுடைய பின்னணி தெரியுமாமே தெரிஞ்சு தான் அவளுடன் பழகினதா சொல்றாங்க”

“அவன் ஆண் பிள்ளை வயசு கோளாறில் அவன் அப்படி இப்படி இருப்பது சகஜம் தான் பெண் பிள்ளை அவளுக்கு எங்கே போச்சு புத்தி... இவன் வசதியை கண்டு மயங்கிட்டா, காலம் முழுக்க கால் மேல் கால் போட்டுகிட்டு சாப்பிடலாம் பாருங்க அந்த பேராசை... அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணாமா?”

“தகுதி... காதலுக்கு ஏது தகுதி, அது மனசு சம்மந்தப்பட்ட விஷயம்... அது மனோரஞ்சனுக்கு இருக்கிற மாதிரி தெரியலையே”

“மிஸ்டர்.அன்பழகன் இவ்ளோ தான் உங்களுக்கு மரியாதை... நீங்க செய்த காரியத்திற்கு நாங்க உங்க மேலேயே புகார் கொடுக்க முடியும் ஏன் கொடுக்கத் தான் போகிறோம்”

“தராளமா கொடுங்க மிஸ்டர்.பாஸ்கரன்” என்று கூறிக் கொண்டே எழுந்தவர்...

“அப்படி கொடுத்தா இன்னும் வசதியா இருக்கும் கலைவாணி பிரச்சனை இன்னும் முற்றுப்புள்ளி வைக்காம கமா போட்டு தான் இருக்கு” என்று கடைசி அஸ்திரத்தை வீசிவிட்டு சென்றவர் அலைபேசியில் மும்முரமாக ஆழ்ந்திருந்தார்.

மனோரஞ்சன் உட்பட மற்ற அனைவருக்குமே அடுத்து என்னவென்பதை அறியாது திகைத்து தடுமாறி நின்றனர்.


**********************

“அண்ணா நேத்து நான் எடுத்த முடிவுக்கு என்னை மன்னிச்சிருங்க” என்று தன் செயலுக்கு தரனிடம் மன்னிப்பு கோரி கொண்டிருந்தாள் அரசி.

“மன்னிப்பு கேட்டுட்டா போதுமா... எனக்கு தேவை அதெல்லாம் இல்லை இனி மேல் இது போல் பைத்தியகாரத்தனமா யோசிக்காம இருந்தால் சரி”

“இல்லை ண்ணா அப்படி எல்லாம் பண்ணமாட்டேன்... ஆனால் எனக்கு ஒரே ஒரு கோரிக்கை மட்டும் வைப்பேன் அதை நீங்க நிறைவேத்தணும்”

“சொல்லுமா”

“நான் வேலைக்கு போகணும்” என்றதும் ஆட்சேபத்தில் புருவம் சுருக்கி அடிக்கண்ணால் பார்த்திருந்தான்...

“இத்தனை நாள் இல்லாம இப்போ வேலைக்கு என்ன அவசியம் வந்தது?” என்று வினவியவனுக்கு பதிலளிக்காமல் துப்பட்டாவின் தலைப்பை விரல்களால் சுருட்டிக் கொண்டு இருந்தாள்.

“அதாவது இனி மேல் நீ சம்பாரிச்சு தான் உன் தேவைகளை பூர்த்தி செய்துக்கணும் அப்படி தானே?” என்றவன் குரலில் அடக்கப்பட்ட சினம் வெளிப்பட்டது. அவனின் சினத்தில் அவளுக்குள் அச்சம் பிறந்தாலும் அவள் நினைப்பதை சாதித்துக் கொள்ளும் நோக்கத்துடன் அமைதியாக நின்றிருந்தாள்.

“நீ வேலைக்கு போறேன்னு சொல்வ, அப்புறம் இதை சாக்கா வைத்து வெளியே தங்கணும் சொல்லுவ” அவள் மனதின் எண்ணத்தை படித்தவனாக கூறியதும் மறுட்கையும், திகைப்பும் ஒரு சேர்ந்து விழிகள் அகல விரிய பார்த்தாள்.

“அண்ணா அது...”

“போதும் நிறுத்து... முதலில் இந்த மாதிரி நினைப்பே உனக்கு வரக்கூடாது அரசி... நியாயப்படி பார்த்தா உனக்கு இந்நேரம் நான் திருமணம் செய்து வைத்திருக்கணும்... ஆனால் வாணி பிரச்சனையில் எல்லாமே தலைகீழா மாறிருச்சு”

தரன் திருமணம் என்றதும் மின்னல் போல் அர்ஜுனின் பிம்பம் தோன்றி மறைந்ததை எண்ணி திடுக்கிட்டு போனாள். ‘இல்லை இது தவறு அவருடைய தகுதிக்கு நாம் ஒத்து போக முடியாது இப்படியான நினைவுகளை தயவு செய்து ஒதுக்கிவிடு அரசி’ என்று தனக்கு தானே அறிவுரையும் கூறிக் கொண்டாள்.

“வேண்டும்னா இப்படி வேணா செய்யலாம், இப்போதைக்கு நீ இப்படி கண்டதை நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காம இருக்கிறதுக்குகாக வேணா வேலைக்கு அனுப்புறேன்... அதுவும் நான் பார்த்து அனுப்புற இடம் தான்” ஏதோ இந்த வரையில் ஒத்துக் கொண்டானே என்று எண்ணியவள்...

“ம்ம்ம்... சரிங்க அண்ணா” என்று விட்டு நகர்ந்திருந்தாள்.
அர்ஜுன், தரனின் சிக்கலில் உதவி விட்டு வந்தவன் தன் பணிகளில் சிரத்தையாக மூழ்கிவிட்டிருந்தான். என்ன தான் அவன் தன்னை முழு மனதாக பணியில் ஆழ்த்திக் கொண்டாலும், அவ்வபோது எழும் அரசியின் நினைவுகளை சிதறடிக்க முடியாமல் அவன் மனதில் அவள் பின்பம் நிதமும் தோன்றி இதமான இம்சையில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. அவளை பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று எழும்பும் உணர்ச்சி பிரவாகத்தை அடக்குவதே பிரம்ம பிரயத்தனமாக இருந்தது.

கலாதரன் அரசிக்கான பணியை தேடும் முயற்சியில் இறங்கியவனுக்கு, அர்ஜுன் மட்டுமே இதற்கு உதவும் வகையில் பிரதானமாக தெரிய அவனிடம் கோரிக்கை வைத்திருந்தான். பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக நிதமும் அரசியை பார்க்க வேண்டும் எண்ணத்திற்கு வழிவகை கிடைத்துவிட்ட உற்சாகத்தில் பொங்கியவன் அவனிடம் அதை சாதுர்யமாக மறைத்து வைத்துக் கொண்டு...

“அதுக்கென்ன டா இருக்கு அவளுக்கான வேலையை நான் உருவாக்கிக் தரேன்” என்று மிகவும் எதார்த்தமாக கூறியிருந்தான்.

“சரி டா நான் அரசியை நாளைக்கு அனுப்பி வைக்கிறேன்” என்றவன் சகஜமாக இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு வைத்த தரனுக்கு மனம் சாந்தமடைந்திருந்தது... அவனும் அரசியை கவனித்துக் கொண்டு தானே இருக்கிறான், அவளுள் ஏற்பட்ட மனக்காயத்தை போக்கும் நோக்கத்துடன் இருந்தவனுக்கு அவளே அதற்கு வித்திட்டு கொடுத்திருந்தது சாதகமாக அமைய, அவளை பணிக்கு அனுப்புவதன் மூலம் அவளுக்கும் ஒரு மாறுபட்ட சூழல் ஏற்படும் போது அவளின் மனத் துயரம் விலகிச் செல்லும் எனவும் அதே சமயம் அவளை தன் கண் பார்வையிலும் வைத்துக் கொள்ள கருத்தில் கொண்டு தான் அர்ஜுனின் நிறுவனத்தையே தேர்ந்தெடுத்திருந்தான்.

“அரசி நாளைக்கு அர்ஜுன் கம்பெனிக்கு போய் அவனை பாரு அவன் உனக்கு வேலை ஏற்பாடு செய்து தரேன் சொல்லியிருக்கிறான்” அர்ஜுன் என்ற பெயரில் அவளுக்கு உடலில் புதுவித செல்கள் உருவாகியது போன்று கிளர்ந்தது.
தரன் முன் அவள் மனவோட்டத்தை அடக்கி கடிவளாமிட்டு கொண்டவள் மிக எளிதாக “சரி ண்ணா” என்று விட்டு நகர்ந்திருந்தாள்.


**********************

கலாதரன் கிடப்பில் கிடந்த பணிகளை சீர்படுத்தி முடித்ததில் இடைப்பட்ட ஓய்வு நேரம் கிட்டியதும் ஓய்வெடுக்க அவர்கள் அறைக்கு சென்று கதவை தாளிட்டவன் ஓய்வாக கட்டிலில் வீழ்ந்தான். அந்நேரம் தொட்டிலில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த அவனின் மகள் வீறிட்டு அழுகையில் கரைய தன் மனைவியை காணாது அறை முழுவதும் கண்களால் அலசியவன் குளியறையில் தண்ணீர் கொட்டும் சப்தத்தில் அவள் குளிப்பதை அறிந்து தானே குழந்தையை ஏந்தி சமாதானம் செய்துக் கொண்டிருந்தான்.

சம்யுக்தா குளியறையிலிருந்து வேகமாக வெளியேறியவள், கணவனின் கரங்களில் குழந்தை இருப்பதும், அவன் அறைக்குள் நுழைந்ததையும் எண்ணி கடுப்புற்றவள்...

“நீங்க எங்கே இங்க என் ரூம்ல இருக்கீங்க? யாரை கேட்டு உள்ளே வந்தீங்க, முதல்ல வெளியே போங்க” என்று மூக்கு விடைக்க சினந்தாள்.

அவளின் ஆவேசமான பேச்சில் இருந்த அபதத்தை உணர்ந்து முகம் சுளித்தவன்... “என்ன டி சட்டம் பேசுற? இந்த வீடு நமக்கு சொந்தமானது அதில் நுழைய நான் யார்கிட்ட அனுமதி கேட்கணும்?” சற்று நக்கலாகவே கேட்டதற்கு...

“என்கிட்டே கேட்கணும்... நான் உங்க கூட வந்துட்டேன்னு ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்காதீங்க... போய் வேற ரூம் இருந்தா அங்கே தங்குங்க, இல்லைன்னா பின்னாடி கிணறு இருக்கே அதுக்கு பக்கத்தில் கயித்து கட்டில் போட்டு படுத்துக்கோங்க” உதட்டை ஏளனமாக வளைத்தபடி சட்டமாக கூறியவளை ஊசி துளைக்கும் பார்வையால் உறுத்து விழித்தவன்...

“ம்ஹும்... வாரேஹ்வா! அதிகாரமெல்லாம் பலமா இருக்கு... மேடமுடைய சட்ட திட்டம் அவ்ளோ தானா இல்லை; இன்னும் ஏதாவது பட்டியல் இருக்கா?” என்றவனை இறுமாப்புடன் முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“...........” அவன் கேட்டதற்கு பதிலளிக்காது தானும் சளைக்காது கடுமையாக முறைத்துக் கொண்டிருந்தாள்.

“இங்கே பாரு இது நம்ம வீடு, இங்கிருக்கிறவங்க நம்ம குடும்பம்... எனக்கு அப்புறம் வயசுக்கு வந்த மூணு பொண்ணுங்க இருக்காங்க அதனால ஆன வரைக்கும் கவனமா பேசப் பாரு... உன் அதிகாரத்தனம், திமிருதனத்தை எல்லாம் கோயம்புத்தூரோட மூட்டை கட்டி வீசிவிடு... இங்கே நான் சொல்றதை நீ கேட்டு தான் ஆகணும்”

“நான் ஏன் நீங்க சொல்றதை கேட்கணும்” அவளின் கேள்விக்கு பாதாதிகேசம் முழுவதும் அளப்பது போல் கூர்மையாக நோக்கியவனின் பார்வையில் உடல் கூச அவனை பார்வையால் பொசுக்கினாள்.

“ஏன்னா இங்கே நான் புருஷன், நீ பொண்டாட்டி!”

“ஒஹ்! பட் என் குழந்தைக்கு அப்பா நீங்க இல்லையே” அவனை குத்திக்கிழிக்கும் வார்த்தைகளை சிறிதும் சங்கோஜமில்லாது வீசியிருக்க, எப்போதும் போல் அப்போதும் சுரீர் என்றதில் முகம் கருத்து விழுந்து விட, அதை துவேசத்துடன் ரசித்துக் கொண்டிருந்தாள்.

இதற்கு மேல் பொறுக்க முடியாது என்ற கட்டத்தை உணர்ந்தவன் முகம் மிளாகாயை அரைத்து பூசியது போன்று ஜிவுஜிவுத்தது.

“இது தான் உனக்கு முதலும் கடைசியும்... நான் பேசினதோ, நீ பேசியதோ அதெல்லாம் அத்தனையும் கோர்டோட முடிஞ்சது... இது குடும்பம் நடத்துற இடம் இங்கே தகாத வார்த்தைக்கெல்லாம் இடமில்லை... அப்படி சொல்றது நீயா இருந்தாலும், நானா இருந்தாலும் குடும்பத்தில் இருக்க தகுதி இல்லைன்னு அர்த்தம்... கொஞ்சம் பார்த்து நடந்துக்கோ” என்று மிகுந்த கண்டிப்புடன் சீறியவனை கண்டு வெகுண்டவள்...

“ஏன் இந்த புத்தி அன்னைக்கு எங்க போச்சாம்? என் அண்ணன் பண்ணின தப்புக்கு என்னை பலியாடா ஆக்கிய போது இந்த குடும்ப வியக்கானத்தை காக்காவா தூக்கிட்டு போயிருந்துச்சு” குரலை உயர்த்தி கத்தியவளிடம்...

“ஏய் மெதுவா பேசு டி... நீ பேசுறது எனக்கு மட்டும் தான் கேட்கணும், உனக்கும் எனக்கும் இடையில் இருக்கிற சின்ன குண்டூசி விவகாரம் கூட வெளியில் தெரியக்கூடாது” என்று கடுமையாக கடிந்துக் கொண்டிருந்தான்.

“விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு வந்தவர் இதை சொல்றது, வேதாளம் வேதம் பேசுறது கதையா இருக்கு” வார்த்தைகளால் அவனை எள்ளாடினாள்.

“ஆமாம்! நான் அப்படி செய்தேன் தான்... ஆனால், அது உன் ஊர் எல்லையோட முடிஞ்சது... இது என் இடம் இப்போ உனக்கும் சேர்த்து நம்ம இடம்... இங்கெல்லாம் புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் மனஸ்தாபம் இருந்தாலும் அது ரூமை தாண்டி போகாது, போகவும் கூடாது இதை மனசில் வச்சுகிறது தான் நல்லது”

“அதே போல உன் வீடு போல இங்கே ஆளாளுக்கு தனித் தனி ரூமெல்லாம் கிடையாது... இருக்கிறது ரெண்டு ரூம் அதில் நாம ஒண்ணா தான் தங்கியாகணும் இது கோரிக்கை இல்லை நிர்பந்தம்” என்றவன் தன் தோளிலேயே உறங்கிய மகளுடன் தானும் கட்டிலில் சரிந்து உறங்கிவிட்டிருந்தான்.

இமைசிமிட்டாது கணவனையே பார்வையால் பருகிக் கொண்டிருந்தவளுக்கு அவனுடைய காதலன் கவினாக மட்டுமே இருந்திருந்தால், இந்நேரம் அவர்களின் வாழ்க்கை இப்படியா இருந்திருக்கும் என்று எண்ணம் வியாபிக்க அல்லல் நெஞ்சை கவ்விக் கொண்டது.

‘ஏன்டா கவின் என்னை பார்த்து அப்படி கேட்ட’ என்ற மனதின் கூக்குரல் ஒலிக்க வானத்தை சுழ்ந்த மந்தார மேகமாய் அவள் முகம் கருமையை பூசிக் கொண்டது.


**********************

‘அர்ஜுன் ஸ்பைசஸ் எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனத்திற்குள் காலடி வைத்த அரசிக்கு நெஞ்சில் பட்டாம்பூச்சி கூட்டம் பறப்பது போல் நூதன உணர்வு ஆட்கொண்டு விட்டிருந்தது... சில நாட்கள் முன்பு வரை அவனை சுற்றி அவனின் அருகாமையில் பல கதைகள் பேசி இயல்பாக வளைய வந்தவளுக்கு ஏனோ அன்று அவனை பார்க்கவே புதிதாக தோன்றியிருந்தது.

பந்தைய குதிரையின் வேகத்தில் ஓடிய மனதின் எண்ணத்தையும், துடிதுடிப்பையும் கட்டுப்படுத்த மிகுந்த சிரமத்திற்குள்ளானாள்.
‘அரசி பீ ஸ்டெடி... அவர் ஒன்னும் உனக்கு புதுசில்லை... அதே சமயம் நீ என்ன நினைச்சாலும் அதெல்லாம் அத்தனை சுலபமா நடக்காது... அவரை மனதில் நினைக்கிறது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுறதை போல... ஒழுங்கா எப்போதும் போல இயல்பா இரு அவர் உனக்கு பிரெண்ட், வெல்விஷேர் எல்லாமுமா இருப்பாரு, அதை தாண்டி எதையும் யோசிக்காதே’ என்று மனதிற்குள் ஆணித்தரமாக உருப்பேற்றுக் கொண்டு மனதை திடப்படுத்த விழிகளை மூடித் திறந்தவள் முன்...

“வெல்கம் அவர் கன்சர்ன்” என்று தன் காந்த குரலில், அசத்தும் அழகில், அரக்கு நிற கோட்சூட் ஆடையில் மதி மயக்கும் அழகுடன் நின்றிருந்தவனை கண்டவளின் மனதிடம் கடல் மணலில் கட்டிய மணல் வீடாய் சரசரவென்று சரிந்துவிட்டிருந்தது. அவள் விழிப் பார்வை அவன் மேல் நிலைகுத்தியபடி இருக்க ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.

அவளின் அதிர்ச்சியை கண்டு குழம்பியவன்... “அரசி... அரசி... என்னாச்சு” என்று உலுக்கியதும் தான் தன்னிலை பெற்றவள்...

“ச... ச.. சாரி...” என்று தடுமாறியவளின் குரலில் இருந்த கரகரப்பை உணர்ந்து அவளின் பதட்டத்தை புரிந்துக் கொண்டவன்...

“என்னுடன் வா” அவள் கை பிடித்து அழைத்துச் சென்று தன் அறையில் அமர்த்திவிட்டு அவளுக்கு பழச்சாரை வரவழைத்து கொடுக்கவும் தான், சற்று நிதானத்திற்கு வந்தவள் அவனை எந்த வித சலனமும் இன்றி உதட்டில் மலர்ந்த முறுவலுடன் பார்த்து...

“தேங்க்ஸ்” என்று நன்றி நவிழ்ந்தாள்.

“அதிருக்கட்டும் என்னை தானே தேடி வந்த, அதுக்கு எதுக்கு இவ்ளோ நெர்வஸ் ஆகுற?” என்றவனின் கேள்விக்கு அவனை பார்க்க முடியாமல் தடுமாறிய சித்தத்தின் அடாவடியில் சிரம் தாழ்த்திக் கொண்டாள்.

‘உன்னை பார்த்ததால் வந்த வினை தானேடா இது’ என்று மானசீகமாக பேசிக் கொண்டு அவள் பதில் கூற வேண்டிய நிர்பந்தத்தை உணர்ந்து தன்னைத் தானே தேற்றிக் கொண்டு நிமிர்ந்தவள்...

“அதெல்லாம் இல்லை... ஜாபுக்குன்னு பர்ஸ்ட் டைம் வரேன்ல அதான் கொஞ்சம் நெர்வஸ் ஆகிட்டேன்”

“ம்ஹும்...” என்று முனகியவன் பார்வையே அவள் கூறியதை நம்பவில்லை என்பதை பறைசற்றியது, இருந்த போதும் அதை பற்றிய ஆராய்ச்சியை தள்ளி வைத்தவன் அவளிடம் சகஜமாக உரையாடலானான்.

சிறிது நேரம் உரையாடி அவளை முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியதை உறுதி செய்துக் கொண்ட பிறகே அவளுக்கு அங்கே ஒதுக்கப்பட்டிருக்கும் பணியை பற்றி விவரித்தான்.

“அப்போ எனக்கு என்ன போஸ்டிங்?”

“இனி மேல் எனக்கு எல்லாமே நீதான்” என்றவனின் வார்த்தையில் திடுக்கிட்டு...

“என்னது” என்று உச்சக்கட்ட அதிர்வில் வினவினாள். அவளின் அதிர்ச்சியில் சுதாரித்துக் கொண்டவன்...

“ம்ம்ம்... அப்படின்னா நீ தான் என் பர்சனல் செக்ரெட்ரின்னு சொன்னேன்... ஒரு எம்டிக்கு பிஏ தானே எல்லாமே... இங்கே அப்பாயின்மெண்ட் பிக்ஸ் பண்றதுல இருந்து தினமும் செடுயல் என்னன்னு சொல்ற வரைக்கும் நீ தாங்கிற அர்த்தத்தில் தான் சொன்னேன்... ஆமாம் நீ என்ன யோசிச்ச?” அவன் சமாளித்துக் கொண்ட திருப்தியில் அவளிடம் பார்வையில் குறும்பு மின்ன வினவினான்.

“நான்... நான் ஒன்னும் நினைக்கலையே” என்று திக்கித் திணறியவளை கண்டு நாவை கடைவாயில் அடக்கி விஷமமாக புன்னகைத்தான்.

“என்ன செக்ரெட்டரி மேடம் ஓகே தானே” அடிக்கண்ணால் அவளை கூர்ந்து பார்த்தபடி வினவியவனின் விழிகளில் புன்னகை தொக்கி நிற்க...

“ஒகே எம்டி சார்” அவனின் உற்சாகம் அவளையும் தொற்றியிருக்க, மலர்ந்த புன்னகையுடன் கூறியிருந்தாள். அவளின் முத்துப்பற்கள் மின்னிய சிரிப்பில் அவனுள்ளம் அவளிடத்தில் விரும்பியே தொலைந்தது.

அவளுக்கான நியமன கடிதத்தை அதிகார பூர்வமாக கொடுத்தவன் பணி சம்மதமான விவரங்களை தானே முன்னின்று கற்று கொடுக்கலானான்.

தர்சன் தொழிற்சாலை பிரிவின் மேற் பார்வையை முடித்து விட்டு தமையனை தேடி வந்தவன் அங்கே அரசியை கண்டு மிகுந்த வியப்பில் ஆழ்ந்தான்.

“வாவ் அரசி க்கா! நீங்க எங்க இங்கே திடிர்னு வந்திருக்கீங்க?” என்றவனை கண்டு அரசி இயல்பாக புன்னகைத்தாள்.

“இன்னையிலிருந்து அரசி நம்ம கம்பெனியில் தான் வேலை பார்க்கப் போகிறா தர்சன்” என்ற அர்ஜுனின் பதிலில் அவனை யோசனையாக வருடியவன்...

“இதைப் பற்றி நீங்க வீட்டில் யாரிடமும் சொல்லவே இல்லையே அண்ணா” என்றதும் தான் அர்ஜுனுக்கு தர்சனிடம் விஷயத்தை கூறாதது நினைவில் வந்து அவனை சங்கடத்திற்குள்ளக்கியது.

‘ச்சே... அரசியை பார்க்கிற சந்தோஷத்துல இப்படி மறந்து தொலைச்சிட்டியேடா அர்ஜுன், தர்சன் என்ன நினைப்பான்’ என்று மானசீகமாக தன்னை குட்டிக் கொண்டவன், அவனுக்கு பதில் கூற சென்ற அரசியை கண்சமிக்ஞை காட்டி தடுத்திருந்தான். அதை கவனிந்துவிட்ட தர்சனின் கற்பூர கந்தழிக்கு அர்த்தம் புரிந்ததன் எதிரொலியாக மூலையில் மின்னல் வெட்டியது.

‘ஓஹோ... கதை அப்படி போகுதா சரிதான் அம்மாவுடைய எண்ணம் சீக்கிரம் நிறைவேறப் போகுது’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்.

“நான் சொல்லணும்னு தான் இருந்தேன் தர்சன் அதுக்குள்ள அப்பா தோப்பில் பிரச்சனைன்னு சொன்னாருல அதுல மறந்துட்டேன்” சமயோஜிதமாக சிந்தித்து கூறுவதாக நினைத்து மழுப்பியிருக்க, அவனோ ஒரு மாதத்திற்கு முன்பு நடந்ததற்கும் இப்போதைய அரசியின் வரவிற்கும் முரண்பாடு இருப்பதை உணர்ந்தவன் அப்போதைக்கு அதை விட்டுவிட்டு...

“ஓஹோ...! நீங்க சொன்னா சரி தான் அண்ணா” நமட்டுச் சிரிப்புடன் கூறியவனின் வார்த்தையே அவன் நம்பவில்லை என்பதை காட்டிக் கொடுக்க அர்ஜுனுக்கு கூச்சமாக போனது, ஆனாலும் அரசி முன்பு இருவருமே சகஜ நிலையை மேற்கொண்டனர்.

“சரி அரசி நான் சொன்னது போல் நீ செய்ய ஆரம்பிச்சிரு, ஏதாவது சந்தேகம்ன்னா என்னிடம் கேளு” என்று கூறியதும் அவனுக்கு வித்தியாசமாகப்பட்டிருக்க அர்ஜுனை கூர்ந்து நோக்கியவன் அரசி நகர்ந்ததும்...

“அர்ஜுன் அண்ணா அரசி அக்காவுக்கு கைடு பண்ண செக்ரெட்டரி திலீப் கிட்ட சொல்லியிருக்கலாமே?”

“திலீப் இனி மேல் ஸ்டோர்ஸ்க்கு தான் ஹெட்... அரசி தான் எனக்கு செக்ரெட்டரி” என்றதும் தர்சன் உச்சகட்ட வியப்பிலும், திகைப்பிலும் ஆழ்ந்தான்.

“ஏன் அண்ணா திலீபை மாற்றின? அரசி அக்காவை ஸ்டோர்ஸ்க்கு போட்டிருக்கலாமே” சற்றும் தயங்காது தன் கருத்தை பிரஸ்தாபித்தான்.

“இல்லை தர்சன் அது சரி வராது” என்றவனை கூர்மையாக பார்த்திருந்தான். அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாது கணினியில் ஏதோ முக்கியமாக பார்ப்பதை போன்று பார்வையை திருப்பிக் கொண்டிருக்க..

‘ம்ஹும்... நீ நடுத்துடா அண்ணா’ என்று மானசீகமாக உரையாடியதில் வெளி வர இருந்த புன்னகையை இதழ்களுக்குள் மறைத்துக் கொண்டவன்...

“நீங்க முடிவெடுத்தா சரி தான் அண்ணா” என்று விட்டு பணி தொடர்பான பேச்சிற்கு தாவியிருந்தான்.

அரசி, அர்ஜுன் இருவருக்குமே அன்றைய தினம் முழுமையடைந்து நிறைவாக இருந்தது... அவள் கிளம்பும் முன்
“அரசி” என்றவனின் குரலில் நின்று அவன் மேல் பார்வையை செலுத்தியவளை நோக்கி...

“உனக்கு இங்கே எப்போ என்ன தேவைன்னாலும் தயங்காம கேட்கலாம்... நாளையிலிருந்து உன் சீட் என் கேபின் பக்கத்துலேயே இருக்கும்”

“தேங்க்ஸ்” என்று மட்டும் கூறியவள்... ஏதோ கேட்க எண்ணி தயங்குவதை அவள் முகம் காட்டிக் கொடுக்க அதை கவனித்தவன்...

“நீ கேட்க வேண்டியதை கேளு அரசி”

“இல்... இல்லை... ஒண்ணுமில்லை அப்புறம் பார்த்துக்கலாம்... நான் கிளம்பறேன் பை” என்றவளுக்கு மெல்லிய புன்னகையால் விடை கொடுத்திருந்தான்.

தர்சன் ஏற்றுமதி பகுதியில் இருந்த தன் பணிகளை முடித்துவிட்டு காரில் சென்று அமர்ந்தவன் அலைபேசியில் காணொளியில் ஆழ்ந்தபடி அர்ஜுனுக்காக காத்திருக்கலானான்.
எய்ச்சர் வாகனம் ஒன்று அங்கே வந்திருக்க அதிலிருந்து இறங்கிய ஆட்கள் பெரிய ரக மேஜையும், சுழற்நாற்காலியும் வண்டியிலிருந்து இறக்குவதை கண்டு யோசனையுடன் பார்த்தப்படி இறங்கியவன், பொருட்களை இறக்கி கொண்டிருந்த ஆட்களிடம் சென்று விசாரிக்கலானான்.

“மெடிரியல் ஆர்டர் போட்டிருந்தாங்க சார்... நேற்றே டெலிவரி பண்ண வேண்டியது... ஆர்டர் மாறியதால ஒரு நாள் டிலே ஆகிருச்சு” என்றான்.

“இங்கிருந்து யாரும் மெடிரியல் ஆர்டர் பண்ணின மாதிரி தெரியலையே? நீங்க அட்ரஸ் மாறி வந்துட்டீங்க போல? எதுக்கும் ஒரு முறை சரி பார்த்துக்கோங்க” என்றவனை குழப்பத்துடன் பார்த்தவர் மேலே இருந்த நிறுவனத்தின் பெயர் பலகையையும், பணம் கொடுத்த ரசீதையும் அதிலிருந்த சேவை வரி எண்ணையும் சரியா என்று ஒரு முறை உறுதி செய்ய அதில் சிறு தவறும் இல்லாமல் மிகச் சரியாக இருக்கவே...

“நீங்க தான் தப்பா சொல்றீங்களோன்னு நினைக்கிறேன் சார்” என்றதும் அவன் கடுப்படைந்தவன்...

“இந்த கம்பனியோட உரிமையாளன் நானும் ஒருவன் தான்” என்றதும்...

“சாரி சார்! அப்போ நீங்களே பாருங்க உங்க கம்பெனி பெயரும், உங்க கம்பனியோட சேவை வரி எண்ணும் தான் இதிலிருக்கு” என்றவன் ரசீதை அவனிடம் காண்பிக்க.. அவர் கூறியது போல் இருக்கவே குழப்பமுற்று நின்றவனின் அலைபேசியில் அர்ஜுனின் அழைப்பை கண்டு காதில் கொடுத்தான்...

“சொல்லு அண்ணா”

“...........”

“ம்ம்ம்... ஆமாம் இதோ வந்து நிற்கிறாங்க நான் தான் என்னன்னு தெரியாம விசாரிச்சுட்டு இருந்தேன்”

“...........”

“இல்லை எனக்கு தெரியலையே... இருக்கட்டும் விடு நான் அனுப்பி வைக்கிறேன்”

“நீங்க சொன்னது சரி தான் இதை ஆர்டர் பண்ணினது என் அண்ணன் தான்... மேலே ரைட் சைட் கொண்டு போங்க” என்றவன் முகத்தில் சிந்தனை ரேகைகள் படிந்தது.

‘எதுக்காக புது டேபிள், அதுவும் அர்ஜுன் அண்ணாவுக்கு இருப்பதை போலவே யாருக்கா இருக்கும்? அதுவும் அண்ணன் ரூமுக்கு பக்கத்தில்?’ என்று சிந்தித்து மூளையை கசக்கி கொண்டவனுக்கு பளிச்சென்று மின்னல் வெட்டியது அரசியின் வரவு.

‘ஹாஹாங்... டேய் அண்ணா இவ்ளோ தூரம் வந்துட்டியா நீ கலக்கு ராசா’ என்று புன்னகைத்துக் கொண்டவனுக்கு, அர்ஜுன் மனதில் அரசியின் மேல் நோக்கம் இருப்பதை அவனின் இந்த செயல்கள் ஸ்பஷ்டமாய் உணர்த்தியது.


**********************
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்றிரவு அர்ஜுனின் இல்லத்தில் அனைவரும் உண்டு கொண்டிருந்த சமயம் தர்சன் அர்ஜுனையே குறுகுறுவென்று பார்த்தபடி அதை கூறினான்...

“அண்ணா நாம எல்லாரும் சேர்ந்து ஒரு வாரத்திற்கு மூணார் ட்ரிப் போயிட்டு வரலாமா?” என்றதும் தர்சனின் வார்த்தையை அர்ஜுன் கிரகித்து பதில் கூறுவதற்குள்...

“அட நல்ல யோசனை சொன்னடா கண்ணா, உன் அண்ணனும் இப்போல்லாம் வீடே தங்கமாட்டேங்குறான் ஒரு மாற்றத்துக்கு போயிட்டு வரலாம்” என்று மல்லிகா கூறியதை ஆமோதிக்காமல்...

“அதெல்லாம் முடியாது ம்மா வேலை தலைக்கு மேல இருக்கு... இப்போ புதுசா செக்ரெட்டரி வேற அப்பாயிண்ட் பண்ணிருக்கேன் சோ, நான் போயே ஆகணும்” தர்சன் எதற்கு தூண்டில் போட்டானோ அதில் அர்ஜுன் வசமாக சிக்கிவிட...
‘வாடா அண்ணா வசமா சிக்கிட்டியே ராஜா’ என்று முணுமுணுத்தவன்...

“அர்ஜுன் அண்ணா நீ வித்தியாசமான எம்டியா இருக்கியே? இப்போ தான் இப்படியா? இல்லை; எப்பவும் இப்படிதானா?” அடக்கப்பட்ட புன்னகையுடன் குறும்பாக வினவினான்... அவனின் கேள்வி புரியாமல் புருவம் சுருக்கியவன்...

“ஏன் டா அப்படி சொல்ற?” என்று விசாரித்தான்.

“இல்லை எல்லா கம்பனியிலும் புதுசா வேலைக்கு சேர்ந்த செக்ரெட்டரி தான் சின்சியரா லீவ் போடாம வேலைக்கு போகணும்னு நினைப்பாங்க... ஆனால் புதுசா ஜாயின் பண்ணிண செக்ரெட்டரிக்காக நீ சின்சியாரா இருக்கியே?” என்றதும் சடாரென்று புரையேறிக் கொள்ள, அவன் வாயிலிருந்த உணவு அருகில் இருந்தவர்கள் மேல் தெறித்தது.

“அர்ஜுன் பார்த்து... தண்ணி குடிப்பா?” என்று பாசமாக தலையை தட்டிவிட்ட நடராஜனை தொடர்ந்து மல்லிகா தண்ணீரை அருந்த கொடுத்தவர்...

“இந்த நேரத்தில் யாருடா உன்னை நினைக்கிறா?”

“யாரா இருப்பா புதுசா சேர்ந்த செக்ரெட்ரியா இருக்கும்” என்று அர்ஜுன் காதுக்கு மட்டும் கேட்கும்படி நமட்டுச் சிரிப்புடன் முனகியவனை கண்டு அர்ஜுன் பல்லை கடித்தான்.

“டேய் கொஞ்சம் அமைதியா இருக்கியா?” என்று அர்ஜுன் கண்டிக்க, அவர்களின் சம்பாஷணையை கவனித்துவிட்ட மல்லிகா...

“என்ன டா சொல்றா தெளிவா சொல்லு” என்றதும், அர்ஜுன் அவனை எரிப்பது போல் நோக்கியபடி...

“அது ஒண்ணுமில்லைம்மா காலையில் அவன்கிட்டே ஒண்ணு கொடுக்கிறேன்னு சொன்னேன், அதை தான் எப்போ கொடுக்க போகிறேன்னு நியாபகப்படுத்துறான்” என்று அர்ஜுன் அவனை முறைத்தபடி கூற... அவனோ பொங்கி வரும் சிரிப்பை கட்டுபடுத்த முடியாமல் உணவோடு உணவாக சிரிப்பையும் மென்று விழுங்கியபடி திணறிக் கொண்டிருந்தான்.

அனைவரும் சாப்பிட்டு முடித்திருக்க அர்ஜுன், தர்சனை தொடர்ந்து கொண்டு சென்றவன் கையலம்பியபடியே...

“எதுக்குடா இப்போ புதுசா என்னை வம்பிழுக்குற?”

“நானும் உங்ககிட்ட இப்போல்லாம் புதுப் புது ஃபீலிங் எல்லாம் பார்க்கிறேனே அதனால தான்” என்று இமைசிமிட்டியவனை சரேலென்று நிமிர்ந்தவனின் விழிகள் மின்னியது.

அவனின் உணர்ச்சிகளை அவதானித்து கண்களில் குறும்பு மின்ன பார்த்தவனை கண்டு தன்னை சமாளித்துக் கொண்டவன்... “போடா பைத்தியக்காரா எதையாவது உளறாதே” என்று செல்லமாக வயிற்றில் குத்திவிட்டு மேலும் அவன் உணர்ச்சிகளை அவதானிப்பதற்குள் அங்கிருந்து நகர்ந்துவிட்டிருந்தான்.

ஒரு மாத காலம் அனைவருக்கும் எந்தவித மாற்றமுமின்றி நகர்ந்திருந்தது... ஆனால் அரசிக்கு தான் பூங்குழலியின் உதாசீனம் நெருஞ்சி முள்ளாய் உறுத்திக் கொண்டிருந்தது. என்ன தான் தரன் அவரிடம் மிகக்கடுமையாக கண்டிப்பினை தெரிவித்த போதும் அவனில்லாத நேரங்களில் அவர் கூறும் வார்த்தைகள் குறி தவறாமல் பதம் பார்த்து விடுகிறது. அதில் அவளுக்குள் தனிமை எண்ணம் சூழ்ந்து விட அதற்கான தீர்வை பற்றி யாரிடம் உதவி கேட்பது அதுவும் தரன் அறியாமல் செய்ய யார் ஒப்புக் கொள்வார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு அவள் சிந்தைப் பெட்டகத்தில் அர்ஜுனின் பிம்பமே தோன்றியது. அவளுக்கும் அவன் தான் சரியான நபராக தோன்றியிருக்க அவனிடமே கோரிக்கை கேட்க சித்தாந்தம் மேற்கொண்டு விட்டிருந்தாள்.

அரசி அன்று காலையில் அழுவலகம் சென்றதும் அனைவரும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்ததை கண்டு குழப்பமுற்று விசாரித்தாள்...

“என்னாச்சு இன்னைக்கு எல்லாரும் இவ்ளோ பரபரப்பா இருக்காங்க?”

“இன்னைக்கு ஆடிட்டிங் மேடம் அர்ஜுன் சார், தர்சன் சார், ரெண்டு பேரும் காலையில் ஏழு மணிக்கே வந்துட்டாங்க” என்றதும் அனைவரும் பரபரப்பாக இயங்க காரணம் புரிபட அவளும் தனதிடத்தில் சென்றமர்ந்து அனைத்தையும் சரி பார்க்கலானாள்.

அவள் அன்று தான் அர்ஜுனிடம் தவறாமல் பேசி விட வேண்டும் என்ற தீர்மானம் மேற்கொண்டிருந்த சமயம் இப்படி அவன் மிகுந்த நெருக்கடியில் மாட்டிக் கொண்டது குறித்து வருந்தினாள்.

‘ச்சே நம்ம பேச வேண்டிய நாள் பார்த்தா இப்படி ஆகணும்?’ என்று புலம்பிக் கொண்டே பணியை செய்துக் கொண்டிருந்தாள்.

அரசிக்கு அன்று முழுக்க அர்ஜுனிடம் பேசும் சந்தர்ப்பம் கிட்டாமல் போகவே அன்றைய தினம் முழுமையடையாதது போன்று மனதை வெகுவாக நெருடியது... அவனிடம் பேசாமல் அவள் கால்கள் இரும்பு குண்டை வைத்தது போல் நகர முடியாமல் போகவே என்ன செய்வது என்று யோசித்தவளுக்கு சட்டென்று அந்த யோசனை தட்டுப்பட்டது... அவளுக்கு உதித்த யோசனையின் படி உடனடியாக அலைபேசியின் குறுஞ்செய்தி வாயிலாக அவள் அவனிடம் பேச வேண்டும் என்பதை குறிப்பிட்டு அனுப்பிவிட்டே அழுவலகத்திலிருந்து சென்றிருந்தாள்.

அன்று முழுவதும் அவனை பார்க்க முடியாமல் போனதில் எதையோ தவறவிட்டது போல் வெறுமையாக இருக்க மிகவும் சோர்வாக உணர்ந்தாள். இரவு படுக்கையிலும் நித்திரா தேவி அவளை தழுவிக் கொள்ள மறுக்க கண் மூடியும் உறக்கம் வாராமல் தவித்துப் போனாள்... திக்கற்று அறையில் சுழன்று கொண்டிருந்த காற்றாடியை வெறித்துக் கொண்டிருந்த சமயம் அவள் அலைபேசி குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி இசைத்ததில் படாரென்று எழுந்தவள், மிகுந்த பரபரப்புடன் படபடத்த இமைகளை கட்டுப்படுத்தி பேசியின் திரையை திறந்தாள்.

அவள் யாரின் குறுஞ்செய்திக்காக எதிர்பார்த்து காத்திருந்தாளோ அவனே அவளுக்கு அந்நேரம் செய்தியை அனுப்பியிருந்தான்.

“நாளைக்கு எட்டு மணிக்கே அழுவலகம் வந்துவிடு” என்றவனின் குறுஞ்செய்தியில் அவள் மனம் துள்ளி குதித்து ஓடும் புள்ளிமானை போன்று ஆர்பரிப்பில் துள்ளியது... நள்ளிரவு ஒரு மணி என்றும் பாராமல் தன் செய்திக்கு தகவல் அனுப்ப தவறவில்லையே என்று உணர்ந்தவளுக்கு இன்பப் பரவசம் பல்கி பெருகியது.

அவன் கூறியதை போன்று காலை எட்டு மணிக்கே அலுவலகம் நுழைந்தவளை... “குட்மார்னிங் அரசி மேடம்” என்று புன்னகையுடன் வரவேற்றவனை புன்முறுவலுடன் நோக்கியவள்...

“தேங்க்ஸ்”

“எதுக்கு?”

“நேத்து ஆடிட்டிங் முடிய ரொம்ப டைம் ஆகிருச்சு தானே... இருந்தாலும் என் மெசேஜ் பார்த்து ரிப்ளை போட்டு அதே மாதிரி இன்னைக்கு சீக்கிரமாவும் வந்திருக்கீங்களே”

‘இன்னைக்கு நான் ஒரு முடிவு பண்ணனும்னு தானே வந்திருக்கேன்’

“அதிருக்கட்டும், என்ன விஷயமா பேசணும்?”

“இது கொஞ்சம் பர்சனல்... சோ, இன்னைக்கு ஈவினிங் மேல ஆபீஸ் ஹவர்ஸ் முடிஞ்சதும் பேசலாமா” என்று இழுத்தவளை அடிக்கண்ணால் நோக்கினான்.

“அதுவரைக்கும் எல்லாம் காத்திருக்க வேண்டாம் இப்போவே வா பேசுவோம்”

“சரி” என்று அங்கிருந்த நாற்காலியில் அமரப் போனவளை...

“இரு.. இரு..” என்று தடுத்தவன்...

“இப்போவே பேசலாம்னு தான் சொன்னேன் ஆனால் இங்கே இல்லை...” என்றதும் திடுக்கிடலுடன் பார்த்து...

“இங்கே இல்லையா அப்புறம் எங்கே?” என்றாள்.

“சில விஷயங்களை சில இடத்தில் பேசக்கூடாது... இது ஆபீஸ் யாரு வேணாலும் வருவாங்க போவாங்க... நீ பேச போகிற விஷயம் பர்சனல்ன்னு சொல்ற சோ, அது எனக்கு மட்டும் தெரிஞ்சா போதும்” என்று கூறியும் அவள் தயக்கத்துடனே மெல்ல எழுந்தவளின் மனதை புரிந்தவனாக...

“என்னை நம்பி தாராளமா வரலாம்... சப்போஸ் அப்படி உனக்கு பாதுகாப்பு வேணுமா இருந்தா இந்த ஆயுதத்தை யூஸ் பண்ணிக்கோ” என்றவன் பேனா போன்று இருந்த அந்த சிறு கத்தியை அவளிடம் கொடுக்க...

அவளோ “ம்ச்...” என்று சலித்தபடி அதை அறையிலேயே தூக்கி எரிந்துவிட்டு... “வாங்க போகலாம்” என்று முன்னே சென்றிருந்தாள்.

அவள் செயலை கண்ட அர்ஜுனுக்கு உள்ளம் பனிச்சாரலை பொழிந்தது போன்று சிலுசிலுத்து, அவன் இதழ்களில் மந்தகாசம் மலர்ந்தது. அர்ஜுன், அரசியை அழைத்துக் கொண்டு அவர்களுக்கு சொந்தமான தென்னந்தோப்பிற்கு சென்றிருந்தான்.

“ஏன் இங்கே கூட்டிட்டு வந்திருக்கீங்க?”

“இங்கே தான் நாம பேச தோதாக இருக்கும்... நீ என் செக்ரெட்டரி சோ, வேறு யாரும் பார்த்தால் கூட தப்பா தோணாது” அவனின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவளுக்கானதாக இருந்ததில் அவனை எண்ணி பெருமையில் அக மகிழ்ந்தாள்.

அர்ஜுன் முதலில் அரசிக்கு தோப்பை சுற்றி காட்டியவன்... அவளுக்கு இளநீர் கொடுத்து உபசரித்துவிட்டு தனிமையில் பேச ஆரம்பித்தான்.

“என்கிட்டே என்ன பேசணுமோ, அதை இப்போ சொல்லு?”

“எனக்கு ஒரு உதவி வேணும்... எனக்கு இங்க பக்கத்தில் இல்லாம தூரமா ஒரு வேலை தேவைப்படுது... அதுவும் என் தரன் அண்ணா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காம சம்மதிக்கிற மாதிரி இருக்கணும், அதை செயல்படுத்த உங்க ஒருத்தரால் தான் முடியும்... ப்ளீஸ் எனக்காக இதை மட்டும் செய்வீங்களா?” என்று வினவி அவன் முகம் நோக்கியவளை கூர்மையாக அளவெடுத்தவன்.

“ம்ஹும்... ஏன் திடிர்னு இப்படி ஒரு முடிவு?”

“அது உங்களுக்கே தெரியுமே” என்றவள் அவள் அத்தை பூங்குழலி கூறியதையும், அதை தொடர்ந்து அவர் அன்றாடம் முகம் திருப்பிக் கொள்வதையும் குறிப்பிட்டவள்... அவள் வீட்டை விட்டு வெளியேறியதும், அதை தரன் தடுத்து நிறுத்தியதும் கூறியவளை தீர்க்கமாக நோக்கியவன்...

“சபாஷ் நல்ல முடிவு தான் எடுத்திருக்க, உன் தன்மானத்தை நான் பாராட்டுறேன்... ஆனா, அதே சமயம் இத்தனை வருஷம் உன்னை பாதுகாத்து, படிக்க வைத்து உன்னை கூடப் பிறக்காத உடன்பிறப்பு போல் நினைத்து ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்தவங்களை, அவங்க சொன்ன வார்த்தைக்காக தூக்கி எறிஞ்சுட்டு போக முடிவு செய்த உன்னை நினைச்சு எனக்கு பெருமையா இருக்கு” சட்டையடியாக வீசியவனின் கேள்வியில் வலியுடன் நோக்கினாள்.

“அதிலும் இப்போ வரைக்கும் உனக்கான உரிமையில் தலையிடாமல், உனக்கு பக்கபலமா நிற்கிற உன் மாமா பையனுக்கு எவ்ளோ பெரிய கைமாறு செய்ய பார்க்கிற...?”

“நீ வீட்டை விட்டு வெளியேறினதும், மற்றவங்க காதுக்கு விஷயம் பரவும், அவளுக்கு நீ கொடுத்த இடம் தானே அவளை இப்படி எல்லாம் முடிவெடுக்க வைத்திருக்குன்னு உன் வீட்டில் உள்ளவங்க கேள்வி கேட்க தரன் தலை குனிந்து நிற்பான்”

“பார்க்கவே அற்புதமான காட்சியா இருந்திருக்கும்... எப்படி அந்த சம்பவமெல்லாம் நான் வீடியோவா ரெகார்ட் பண்ணி அனுப்பவா? இல்லை, நேரடியா லைவ் டெலீகாஸ்ட்டா பார்க்கணுமா?” கன்னத்தில் “பளார்” என்று அறைந்திருந்தால் கூட இத்தனை வலித்திருக்காதோ, அவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வில்லிலிருந்து எய்த அம்பு போன்று மனதை குறிபார்த்து தாக்கி சுருக்கென்று தைத்திருந்தது.

அவள் முகம் கருத்து விழுந்ததை பெரிதும் பொருட்படுத்தாது... “எல்லாத்தையும் விட என்கிட்டே கூட கேட்காம வீட்டைவிட்டு வெளியேற துணிஞ்சவளுக்கு இப்போ மட்டும் எதுக்கு என் உதவி?” என்று சினந்தான்.

“என்னை மன்னிச்சிருங்க நான் செய்தது தப்பு தான்... என்னால ஒரு எல்லைக்கு மேல் பொறுத்து போக முடியலை... மூச்சு முட்டி செத்துருவேன் போல இருக்கு” என்று ஈனஸ்வரத்தில் கூறியவளின் குரல் கரகரத்து ஒலிக்க தூக்கம் தொண்டையை அடைத்ததில் விசும்பினாள்.

அவளின் செயலில் கோபமுற்றாலும் அவளின் துயரம் மனதை கொய்தது... இனி அவன் மனதை மறைப்பது அவனுக்கு அத்தனை நன்மை அல்ல என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டவன், தன் நேசத்தை அவளுக்கு எப்படி விளக்குவது என்று சிந்தித்தவனுக்கு தன் மனதை திறக்க இது தான் சரியான தருணம் என்பதை கருத்தில் கொண்டு தன் பேச்சை தொடர்ந்தான்.

“அரசி ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்செல்ப்... ஏதோ கோபத்தில் திட்டிட்டேன்... இப்போ என்ன உனக்கு அந்த வீட்டில் இருக்கத் தானே முடியலை உன்னால?” என்றதற்கு... “ம்ம்ம்...” என்று முணுமுணுத்து ஆம் என்பது போல் மேலும் கீழும் தலையாசைக்க....

“அப்போ நீ என் வீட்டுக்கு வந்து விடு” என்றவனின் வார்த்தையில் குழப்பமாக அவனை நோக்கினாள்...

“இல்லை அது எப்படி சரி வரும்? நான் வேலைக்காக சொல்லலை, இப்போ இருக்கிற நிலைமையில் வீட்டு வேலை செய்யக் கூட எனக்கு சம்மதம் தான்... ஆனால் தரன் அண்ணா அங்கே வருவார் தானே, என்னை அவருடன் அழைச்சுட்டு போக தானே பார்ப்பார்” என்றவளின் பேச்சை சகிக்காதவன்...


“உன்னை வேலைக்காரியா வரச் சொல்லலை எனக்கு மட்டுமே உரிமையான வீட்டுக்காரியா வர சொல்றேன்... என் பொண்டாட்டியை உன் அண்ணன் என் அனுமதி இல்லாமல் கூப்பிட முடியாதே?” என்றதும் சரேலென்று நிமிர்ந்தவளின் விழிகளில் அதிர்வு அப்பட்டமாய் தெரிந்தது!!
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காட்சி-14
அரசிக்கு அதிர்ச்சியில் அவள் விழிகள் தெறித்து விழுவது போல் சாசர் போல் அகண்டு விரிந்திருந்த அழகில் தொலைந்தான்... அவனின் அந்த உணர்ச்சிகள் கூட அரசியின் அதிர்ந்த நிலை உணர முடியாமல் செய்திருக்க,

“என்... என்ன... சொல்..றீங்க?” என்று வார்த்தைகள் பிசிறடிக்க வினவியவளுக்கு...

“ஏன் தமிழில் தானே சொன்னேன் புரியலையா?” என்றவன் கண்கள் சிரிக்க...

“நாம கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொல்றேன்” என்று நிதானமாக கூறியதும், அதிர்ச்சியில் இருந்து வெளிவந்தவளாக தன்னை சமாளித்துக் கொண்டு பேசலானாள்.

“சாரி அர்ஜுன் சார், நீங்க......” என்றவளின் பேச்சில் தடாலடியாக இடையிட்டவன்...

“இந்த தப்பா புரிஞ்சுக்கிட்டேன், என் மனசுல நீங்க இல்லை, நான் உங்களை அப்படி நினைக்கலை, முக்கியமா என் மேல உனக்கு விருப்பம் இல்லைன்னு, பச்சையா பொய் சொன்னேன்னு வச்சுக்கோயேன் மகளே இன்னைக்கு நீன்னு கைமா தான்” என்று மிரட்டியவனின் உரிமையில் தேன்ரசத்தை உன்னது போல் சித்தம் தித்தித்தது... அவன் மேல் அவளுக்கு எல்லையற்ற நேசம் பொங்கிய போதும், அவனுக்கும் அவளுக்கும் உண்டான பல தகுதி வேறுபாடுகளை எண்ணி தன் காதலை மறைக்க எண்ணினாள்.

“சார் ப்ளீஸ்...” ஆரம்பித்தவளை பார்வையால் அதட்டியவன்...

“முதலில் இந்த சார் மோரை விடு... நான் உன்னை இப்போ வரைக்கும் உயர்வா நினைக்கிறேன், அதனால் தான் உனக்கான மரியாதையை கொடுத்து பேசிட்டு இருக்கேன்... இனி அதை காப்பாத்துறது உன் கையில் தான் இருக்கு” கண்டிப்புடன் கூறினான்.

அவளும் தன் பிடியில் உறுதியாக நின்றவளாக... “நானும் உங்க மேல மரியாதை வச்சிருக்க போய் தான் இவ்ளோ பொறுமையா இருக்கேன்” வெடுக்கென்று கூறினாள்.

“வெறும் மரியாதை மட்டும் தானா?” என்றவன் விழிகள் அவளை கூர்வாளாய் துளைக்க, மிதப்பாக பார்த்திருந்தான்... அவன் பார்வையின் தீட்சண்யம் தாங்காது தரையில் புதையலெடுத்துக் கொண்டபடியே...

“ஆமாம்... மரியாதை தான்! என் அண்ணன் லைஃப்காக நீங்க செய்த உதவி என்னால் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது, அதே சமயம் நான் தனியா நின்று போராடணுமோன்னு நினைச்சு பயந்தப் போது நீங்க உறுதுணையா இருந்தீங்க... இது எல்லாத்துக்குமே உங்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கேன்...” என்று கூறிவிட்டு அவன் முகம் பார்க்க, அவனோ நீ முதலில் சொல்லி முடி என்ற கருத்தில் அழுத்தமாக நின்றிருந்தவனை கண்டு உதறிய மனதை வரவழைத்துக் கொண்ட துணிச்சலுடன் தொடர்ந்தாள்...

“உங்களுக்கு என் மேல விருப்பம் வந்திருக்கலாம் ஆனால், அது நிஜ வாழ்க்கைக்கு ஒத்து வராது... உங்க தகுதிக்கும் தராதரத்துக்கும் நான் எந்த வகையிலும் ஈடாகமாட்டேன்”

“அதனால...” என்றவளுக்கு தொடர்ந்து கூற முடியாமல் தொண்டையில் உருண்டையாக கவ்விக் கொண்டது போல் இருக்க “ம்க்கும்” என்று தொண்டையை சரி செய்துக்கொண்டு...

“நீங்க உங்க தகுதிக்கு ஏற்றார் போல் பொண்ணு பார்த்து திருமணம் செய்துக்கோங்க” என்று முடித்தவளின் விழிகள் அவளையும் அறியாமல் கலங்கிவிட்டிருந்ததை இமைசிமிட்டி மறைத்துக் கொண்டாள்.

அவன் கண்ணெதிரில் அவளின் உணர்ச்சிகளை அவதானித்து கொண்டிருந்தவனுக்கு தன் மனதை சிரமத்துடன் மறைத்து கூறுவதை கண்கூடாக கண்டவனுக்கு ஆத்திரம் எழுந்தது... தன் பொறுமை அனைத்தும் வடிந்து போயிருக்க உன்மத்தம் பிடித்தவன் போன்று அவள் தாடையை நிமிர்த்தி விழிகளை உற்று நோக்க செய்தவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் விதிர்த்து நின்றதை லட்சியம் செய்யாமல்...

“உனக்கு என் மேல விருப்பம் இல்லைன்னும், நான் இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்ணுறதை நீ சந்தோசமா ஏத்துக்குவேன்னும்... என் கண்ணை பார்த்து சொல்லு” என்றதும் தன் சித்தத்தின் தடுமாற்றத்தை மறைக்க முடியாமல் விக்கித்து நின்றவளுக்கு கண்களில் பொல பொல என கண்ணீரை வடிந்தது.

அவளின் அந்த கண்ணீரே அவள் வார்த்தைகளால் உரைக்காத நேசத்தை பட்டவர்த்தனமாக உணர்த்தியிருக்க, அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டு விசும்பலானாள். அவளின் அந்த செயல் அவனுக்கான தேடுதலை தெரிவிக்க, இனி பேச்சு வார்த்தைக்கு இடமில்லை என்பதை உணர்ந்து அவள் சிகையை கோதியபடி மௌனமாகவே ஆறுதல் அளித்தான்.

அரசிக்கு அவனிடம் பேச எண்ணம் எழுந்த போதும் அவன் வசம் சிக்கிக் கொண்டிருந்த இதயத்தில் வார்த்தைகள் மறந்தவளாய் தவித்து நின்றாள்.

அர்ஜுன் ஏதோ நினைத்தவனாக அவளை விட்டு விலகி நின்று கூர்ந்து நோக்க, அவனின் விலகளில் முகம் சுணங்க பார்த்திருந்தாள்.

“ஏன் என்கிட்டே இருந்து மனதை மறைச்சு பதில் சொல்ற அரசி? நானும் அந்த மனோரஞ்சன் போல ஏமாத்திருவேன்னு பயமா?”

“ச்சீ.. ச்சீ... என்ன பேசுறீங்க அர்ஜுன்... ஒரு பேச்சுக்காக கூட அப்படி சொல்லாதீங்க... அவனுடன் போய் உங்களை ஒப்பிட்டு பார்க்கிறதா? அதுவும் நானா? அப்படி நான் நினைச்சாலும் உங்க பக்கத்துல நிற்க கூட தகுதி இல்லாதவளா மாறிருவேன்”

“அப்போ உனக்கு என்னை ஏற்றுக்க சம்மதம் தானே?”

“ம்ம்ம்” என்று முணகி மேலும் கீழும் தலையசைத்தவளை நோக்கி தன் கரத்தை நீட்டியவன்...

“அப்போ என்னை நம்பி வா, உன் பிரச்சனைகள் எல்லாம் தீர்க்க வேண்டியது இனி என் பொறுப்பு” என்றதும் பல வித யோசனைகளுடன் தன் கரத்தை மிக மெதுவாக உயர்த்தி அவன் கரத்தில் வைத்து அழுத்த, அவன் விரல்களை அவள் விரல்களுடன் பிணைத்து கோர்த்து கொண்டவனுக்கு நெஞ்சம் நிறைந்துவிட்டிருந்தது.

“லவ் யூ அரசி மா... லவ் யூ சோ மச்!” என்றவன் அவள் நெற்றியில் மெலிதாக இதழ் ஒற்றி எடுத்துவிட்டு...

“வா போகலாம்” என்று அவள் கரம் கோர்த்துக் கொண்டே நகர்ந்திருந்தனர்... அந்தோ பரிதாபம்! அவள் கொடுத்த நம்பிக்கை வாக்குறுதியை ஓர் நாள் தானே குழைத்துவிட நேரும் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை!!

**********************

சம்யுக்தா தன் தொழிலை தொடர்ந்து நிர்வாகம் செய்ய வேண்டியனவற்றை செய்து கொண்டிருந்தாள்... சந்தோஷ், ரோஷினி இருவரும் நம்பிக்கைக்கு தகுந்த ஊழியர்கள் என்பதால் அவர்களின் மேற்பொறுப்பில் நேரடியாக விட்டு விட்டு இணையதளம் மூலம் நிர்வாகம் செய்வதை மேற்கொள்ளும் முயற்சிகளில் ஆயத்தமானாள்.

அவளின் நடவடிக்கைகள் அனைத்தும் தரனின் குடும்ப உறுப்பினர்களுடன் பொருந்தாமல் தனிப்பட்ட முறையில் இருக்கவே... பூங்குழலி, கேசவன், குரு மூவருக்கும் அதில் பெருத்த மனவருத்தம் ஏற்பட்டது.

பூங்குழலிக்கு மருமகளின் ஒதுக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதை குறித்து குற்றமாக கருதியவர், அவளிடம் அதை பற்றி விசாரித்துவிட எண்ணி நோக்கம் கொண்டவருக்கு அன்று நேரிடையாகவே சம்யுக்தாவிடம் மோதும் சூழ்நிலையும் ஏற்பட்டுவிட்டிருந்தது.

சம்யுக்தாவிற்கு அவள் நிர்வாகத்தை இணையம் மூலமாக இயக்குவதில் சில மாற்றங்கள் செய்ய உதவி தேவைப்பட, அதற்கு ஆலோசனை கேட்க வேண்டி அர்ஜுனை காண புறப்பட்டு வெளியேறும் முன் படித்துக் கொண்டிருந்த கலைமலரை அணுகி...

“மலர் நான் வெளியே போகணும், நான் வர வரைக்கும் பாப்பாவை பார்த்துக்கிறியா?” என்றதும் வீட்டில் யாரையும் அணுகாது தனித்து இருப்பவள், மற்றவர்களை ஒரு பொருட்டாக என்ணாதவள், மலரிடம் மட்டும் மிகவும் சுமுகமாக பேசுவதும், பழகுவதும் போக ஓர் உதவி என்றதும் அவளை நாடியது வேறு அவளை பெருமிதப்படுத்துவது போன்று மிதப்பாக உணர்ந்தவளுக்கு முகம் விகசித்தது.

“ஹை நான் மட்டும் தானே பார்த்துகணும்... அதெல்லாம் ஜாலியா பார்த்துக்குவேன் நீங்க போயிட்டு மெதுவா வாங்கண்ணி, நான் எவ்ளோ நேரம் ஆனாலும் பாப்பாவை பார்த்துக்கிறேன்” என்று கூறியவளின் முகம் ரோஜாவாய் மலர்ந்து ஆர்பரித்தவளின் பூரிப்பில் தானும் பங்கு கொள்ள மெலிதாக முறுவலித்துவிட்டு வாசலை நோக்கி நகர்ந்திருந்தாள்.

தண்ணீர் குடத்தை சுமந்து வந்த பூங்குழலி மருமகள் வெளியேறுவதை கண்டு... “ஒரு நிமிஷம் இரும்மா” என்று அவளை நிறுத்திவிட்டு தண்ணீர் குடத்தை வைத்துவிட்டு வருபவரை யோசனையுடன் பார்த்தவள்...

“எதுனாலும் சீக்கிரம் சொல்லுங்க எனக்கு நேரமாகுது?” என்றபடி கைகடிகாரத்தை பார்த்தவளை கண்டு... ‘இங்கே நான் மாமியாரா இல்லை அவ மாமியாரா?’ என்று குமைந்தவர்...

“நீ இந்த வீட்டு மகனுக்கு முறையா கல்யாணம் பண்ணிக்கிட்டு வராம இருந்திருக்கலாம் ஆனால், அதுக்காக இந்த வீட்டுக்கு நீ மருமகள் இல்லைன்னு ஆகிறாது... இனி நீயும் இந்த வீட்டு வேலைகளில் பங்கு போட்டுக்கணும்” என்றதும் ஆட்சேபத்தில் கண்களை சுருக்கியவள்...

“வாட்! வீட்டு வேலைகளா? நான் உங்க மகனுக்கு பொண்டாட்டி தான், அதுக்காக வீட்டில் வேலை செய்ய வரலை... எனக்கு என் குழந்தையை பார்த்துகிட்டு என் தொழிலை கவனிக்கவே நேரம் போதாது... இந்த வீட்டு வேலை, காட்டு வேலை எல்லாம் நீங்க பார்த்துக்கோங்க” எடுத்தெறிந்து பேசிவிட்டு நகர எத்தனித்தவளை தடுத்து நிறுத்தி பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டார்.

பூங்குழலியின் பேச்சில் தான் அவளுக்கு மாமியார் என்பதை வெளிப்படுத்த, சம்யுக்தா அவரை எதிர்த்து நின்று வார்த்தைக்கு வார்த்தை வாதாட ஆரம்பித்தாள்... சிறுப்பொறியாக ஆரம்பித்த வாக்குவாதம் முற்றி இருவருக்குமான சச்சரவை உண்டு செய்திருக்க, அவர்களை தடுக்க முடியாமல் வாணி கலாதரனுக்கு தகவலை கூற, அவனோ பதறியடித்துக் கொண்டு வந்திருந்தான்.

“என்னாச்சு? என்ன பிரச்சனை ரெண்டு பேருக்கும்?” என்று உச்சஸ்தாயில் ஒலித்த அவன் குரலில் பொத்தானை அழுத்தியது போன்று பூங்குழலி பேச்சை நிறுத்தியிருக்க, சம்யுக்தா தான் ஆரம்பித்ததை முடிக்காமல் நிறுத்தமாட்டேன் என்பது போல்...

“இங்கே நான் என் வேலையும், என் குழந்தையும் மட்டும் தான் பார்த்துப்பேன் மத்தவங்களை கவனிச்சுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை” என்றவளின் தர்க்கம் முடிவுறும் போது, அவள் விழிகளில் தீப்பொறி பறக்க கணவனை எரித்தது.

“சம்யுக்தா இதெல்லாம் சரியில்லை... இவங்க என் சித்தியா இருந்தாலும் அம்மா ஸ்தானத்தில் இருக்கிறவங்க, என் அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை நீ இவங்களுக்கு கொடுத்தாகணும்... நீ என்னடான்னா யாரோ மூணாவது ஆளை பேசுவது போல் பேசிட்டு இருக்கிற?” என்று கடுமையாக கண்டித்தான்.

“நான் மரியாதை கொடுக்க போய் தான் பதில் சொல்லிட்டு இருக்கேன்... இல்லன்னா; என்னுடைய நடவடிக்கையே வேறு மாதிரி இருந்திருக்கும்” என்று இறுமாப்புடன் கூறியவளின் வார்த்தையை கேட்ட பூங்குழலி தரனை பார்வையால் கண்டித்தார்.

“இப்போ என்ன தான் உனக்கு பிரச்சனை?” என்று அவளை பார்த்து வினவியவனின் கேள்வியில் முகம் ஜிவுஜிவுவென்று சிவக்க ஆவேசத்துடன் முறைத்துக் கொண்டிருந்தவளை கண்ட பூங்குழலி தானே முன் வந்து பேசலானார்.

“எப்பா உன் பொண்டாட்டி வந்ததிலிருந்து இன்னும் சமையல்கட்டு பக்கமே எட்டி பார்க்கலை... அதைக் கூட விட்டுறேன் மற்ற யாரையும் மதிக்கிறது இல்லை, ஏன் இந்த வீட்டில் இருக்கிறோமேன்னு சம்பிரதாயத்துக்குக்காக கூட பேசுறதில்லை... எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க முடியும்? எனக்கப்புறம் அவள் தானே இந்த வீட்டுக்கு உரிமைக்காரி” அவரின் ஆதங்கம் புரிபட்டாலும் மனைவியின் நிலையில் அது எடுபடாதே என்று சிந்திக்கும் போதே சம்யுக்தா அவன் சிந்தனையில் இடைபுகுந்தவள்...

“நான் உங்க பின்னாடி வந்தது என்னுடைய உரிமையை விட்டுக் கொடுக்க முடியாததனால் தான்... அதுக்காக என் பிசினஸை தூக்கி எறிஞ்சுட்டு சராசரி பெண்களை போல என்னால் அடுப்பங்கரையில் முடங்க முடியாது”

அவளின் உரிமை பேச்சில் காதல் கிளர்ந்து எழ, இவள் என் மனைவி என்ற அகந்தை அவனுக்குள் தோன்ற அப்போதைக்கு அதை ஓரம் கட்டியவன் அப்போதைய பிரச்சனைக்கு தாவினான்... “நீ தொழில் செய்தா வீட்டை பார்த்துக்க மாட்டியா?” என்று குழலி எதிர்வாதம் வைத்ததும் நாசி விடைக்க மேலும் அவரிடம் தர்க்கம் செய்ய கிளம்பியவளை கண்டு சச்சரவு தொடர்வதை உணர்ந்தவன்...

“சம்யுக்தா முதலில் நீ உள்ளே போ” என்று மனைவிக்கு ஆக்கினையிட்டான்.

“முடியாது நான் ஏன் போகணும்? இது என் தனிப்பட்ட பிரச்சனை நீங்க தலையிட வேண்டாம்” கணவன் என்றும் பாராமல் உதாசினம் செய்ததும் அவளால் உண்டான காதலின் கிளர்ச்சி சடுதியில் மறைந்திருக்க, திண்ணக்கத்துடன் நின்றிருந்தவளை கண்டு ஆத்திரத்தில் அழுத்தமாக அவள் கைபிடித்து கொண்டவன், ஆவேசத்துடன் தரதரவென்று இழுத்து சென்று வழுக்கட்டாயமாக அறையில் தள்ளி கதவை அடைத்து விட்டு வெளியேற இருந்தவனை கோபத்துடன் தடுத்திருந்தாள்.

“இந்த மாதிரி அராஜகம் பண்ணினா எனக்கு கெட்ட கோபம் வந்திரும் பார்த்துக்கோங்க”

“ஏய் அடங்கு டி!” என்று விரல் நீட்டி எச்சரித்தவன் விழிகளில் செவ்வரி ஓடியிருந்தது... அதில் சற்றே நிதானத்தை கடைபிடித்து நின்றதும்.

“நான் இத்தனை தூரம் பொறுமையா அடங்கிப் போகிறேனா, அது உன் ஒருத்திகிட்ட மட்டும் தான்... தேவையில்லாம என் பொறுமையை சோதிக்காதே அப்புறம் என்னுடைய கோப முகத்தை பார்க்க வேண்டியதாகி வரும்” என்றவன் படாரென்று கதவை அடித்து சாத்தி வெளியே தாழிட்டுவிட்டு சிற்றன்னையை அணுகியவன்.

“அம்மா இனி மேல் அவளிடம் நீங்க நேரடியா எதுவும் கேட்க வேண்டாம். எதுனாலும் என்னிடம் கேளுங்க” என்றதும்...

“அப்புறம் பெரியவங்கன்னு நாங்க வீட்டில் எதுக்குடா இருக்கிறோம்?” என்று உறுமியபடி வந்தார் கேசவதரன்.

“அப்பா ப்ளீஸ்! நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க... நானும், சம்யுக்தாவும் காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிகிட்டோம்... ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலையில் எங்களுக்குள்ள சில கசப்பான சம்பவம் நடந்திருச்சு... அது எதுனாலும் எங்களுடைய அந்தரங்கம் அதை வெளியே சொல்லி எங்க உறவை கலங்கப்படுத்திக்க விரும்பலை”

“அப்போ நாங்க என்ன உங்களை வளர்க்கிற ஆயம்மாவா?”

“நான் அப்படி சொல்லலை ம்மா... என்னை நீங்க என்ன வேணா கேள்வி கேட்கலாம், என்ன வேணா செய்ய சொல்லலாம், அதுக்கு எல்லா உரிமையும் இருக்கு... ஆனால் சம்யுக்தா என்னை நம்பி வந்திருக்கா, அவ என் பொறுப்பில் இருக்கிறதால நீங்க எதுனாலும் என்னிடம் நேரடியா சொல்லுங்கன்னு தான் சொல்றேன்” அவனும் அவர்கள் மனம் காயப்படாத வகையில் தன்மையாகவே எடுத்துரைத்தான்.

“அப்படி என்ன தான்டா நடந்துச்சு? நீ உங்க சித்தியை கேள்வி கேட்கிற மாதிரி?” கேசவதரன் வினவியதும், பூங்குழலி அங்கே நடந்த சம்பவத்தை விளக்கியிருந்தார்.

“ஏன் தரா... உங்க சித்தி சொல்றதில் என்னடா தப்பிருக்கு? என்ன இருந்தாலும் உன் பொண்டாட்டி தானே இந்த வீட்டு மருமக அவ ஏன் நம்ம குடும்பத்தோட ஒத்து போறதில்லை?” என்று கேள்வியால் தாக்கிக் கொண்டிருக்கும் போதே குருதரனும் அதை ஆமோதித்து இணைந்திருந்தார்.

“அது தான் சொன்னனே ப்பா... எனக்கும் அவளுக்கும் சில மனஸ்தாபங்கள் இருக்கு... அதை சரி செய்ய எனக்கு அவகாசம் வேணும்... அதுவுமில்லாம சம்யுக்தாவுக்கு கோயம்புத்தூர்ல எக்ஸ்போர்ட் கம்பெனி இருக்கு... அவளுக்கு கீழே நூறு பேர் வேலை பார்க்கிறாங்க... அவ தொழிலை அவ நிர்வாகம் பண்ணியாகணும்... அவளுக்கும் டைம் கொடுங்க நம்ம வீட்டுக்கு அவ செட் ஆகட்டும் அப்புறமா அவளுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இருக்காது” மகனின் கூற்றை கேட்டவர்களுக்கு மருமகளின் ஆதிக்கத்தின் ஆணிவேரை கண்டு வியப்பாக இருந்தது... ஆனால் கேசவனுக்கு குருதரன், பூங்குழிலியின் எண்ணம் எதுவென்று விளங்காமல் அவராக ஒரு முடிவை வெளிபடுத்த இயலாமல் குடும்ப ஒற்றுமை தடுத்திருக்க, வியப்பை ஒதுக்கி வைத்துவிட்டு மகனிடம் மேலும் வினவலானார்.

“அப்போ அவ எங்களை மதிக்காம மிதிச்சுட்டு போனாலும் நாங்க பொறுத்துக்கணுமா?” என்று பதார்த்தமாக வினவிய கேசவனை கண்டு குருதரனுக்கு ஆட்சேபம் எழுந்தது.

“அப்பா... இது போல் பேச வேண்டாம் அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்லை... அப்படி ஒன்னும் உங்களுக்கு தலைகுனிவு ஏற்படுகிற மாதிரி நானும் வைத்துக்கமாட்டேன்”

“அண்ணா நம்ம தரன் தான் சொல்றான்ல... அந்த பொண்ணை பார்த்தா அப்படி எல்லாம் தெரியலை... தரன் சொல்றதை பார்த்தா ஒரு தொழிலையே கட்டி ஆள்கிற பொண்ணுக்கு நிச்சயம் குடும்ப நிர்வாகமும் அத்துபடியா தான் இருக்கும்... அதனால் தரன் சொன்ன மாதிரி கொஞ்சம் பொறுமையா இருப்போம்”

கேசவனுக்கு தன் மகனின் மனதும், அவன் குணமும் அறிந்தவர் தான் என்றாலும்... கூட்டு குடும்பத்தில் சில இடங்களில் இது போன்ற அதட்டல்களை பிள்ளைகள் மீது காட்டுவது மூலம் தான் மற்றவர்களின் கோபத்தை கட்டுபடுத்தி குடும்பத்தின் ஒற்றுமையை மேலோங்க வைக்க முடியும் என்ற தாத்பர்யம் புரிந்தவர் தான் அவருக்கு ஒவ்வாது என்று தெரிந்தும் மகனை அனாசய கேள்விகளால் தாக்கினார்... அவர் நினைத்தது போலவே குருதரன் சமாதானமாக கூறியதும் நிம்மதி அடைந்திருந்தார்... பூங்குழலிக்கு தான் ஒரு மாதிரியாகிப் போக அவரை குருதரன் பொறுப்பேற்று சமாளித்திருந்தார்.

“இதுவரைக்கும் எப்படியோ இனியாச்சும் கொஞ்சம் அவசரப்பட்டு முடிவெடுக்காம நிதானமா முடிவெடுக்க பாரு தரா” என்று மட்டும் கேசவன் தன்மையாக எடுத்துரைத்தார்.

ஒரு வழியாக தன் மனைவியை நூலிழையும் விட்டு கொடுக்காமல், அதே சமயம் தன் குடும்பத்தாரின் மனதையும் புண்படுத்தாமல் ஒரு பிரச்சனையை சரி செய்தவன் மனைவியை அடைத்திருந்த அறைக் கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றான்.

நடந்த சம்பவத்தில் தன்னை இப்படி ஓரம் கட்டிவிட்டு அவன் அன்னைக்கு ஆதரவாக தன்னிடம் சண்டையிடுகிறானே என்ற வயிற்றெரிச்சலில் அமர்ந்திருந்தவளை நெருங்கியவன்...

“இங்கே பாரு இனி வீட்டில் உன்னை கேள்வி கேட்கமாட்டாங்க... ஆனால் அதே சமயம் அவங்க கேள்வி கேட்டாங்கன்னா கொஞ்சம் மதிச்சு பதில் சொல்லி பழகு, அதே போல நீ தினம் எங்கே போற வரேங்கிறதை என்னிடம் சொல்லியாகணும்” என்று கட்டளையை பிறப்பித்தவனின் கூற்றில் எரிச்சல் அதிகரித்திருந்தது.

“அப்படி முடியாதுன்னா?”

“ம்ம்ம்... அப்போ எங்கேயும் போகாதே வீட்டுகுள்ளையே அடைஞ்சு கிட”

“என்ன அதிகாரம் கொடிகட்டி பறக்குது” என்று அடக்கபட்டிருந்த சினத்தின் விளைவாக ஒயிலாக புருவம் உயர்த்தியவளின் அழகு, அப்போதும் அவன் கோபத்தை மறைத்து மனதை மயக்கியது... அவளின் அழகில் லயித்து இருந்தவனை குழந்தையின் வீறிட்ட அழுகை துடைத்தெறிய மலர் கதவை தட்டி கொண்டு அறை வாசலில் நின்றிருந்தாள்.

சம்யுக்தா எழும் முன் தானே வேகமாக எழும்பி சென்று கதவை திறக்க மலர் குழந்தையை சம்யுக்தாவிடம் கொடுத்தாள். மனைவியுடன் பேச தனிமை வேண்டி தங்கையை அப்புறபடுத்தும் பொருட்டு...

“நீ போய் படி மலர்” என்று கூறியதும்.

“மலர் நீ இரும்மா...” என்று வீம்புக்கு கூறியவளை எண்ணி முகம் இறுக மனைவியை கடுமையாக முறைக்கலானான், மலர் செல்லும் போதே கவனித்துவிட்டிருந்த வாணி தமையனின் உதவிக்கு வந்தாள்.

“மலர் உன்னை அம்மா கூப்பிடுறாங்க” என்று வாணி அறை வாசலில் நின்று கூறியதும்...

“இதோ வரேன் க்கா” என்று கூவியவள் அன்னையை தேடி ஓடியதும், வாணி தமையனை லேசாக பார்த்து விட்டு கதவை அடைத்துக் கொண்டு சென்றிருந்தாள்.

“உனக்குன்னு சில கடமைகள் இருக்கு சம்யுக்தா... நீ உன்னுடைய தொழிலில் கவனம் செலுத்த நான் நிச்சயம் தடையா இருக்கமாட்டேன்... அதுக்காக நீ எங்கேயோ எப்படியோ போன்னு கேள்வி கேட்காம என்னால் விட்டு விட முடியாது...”

“நீ என் மனைவி, இந்த வீட்டுக்கு மருமகள், அதனால் சில நேரங்களில் அவங்க உன்னை கேள்வி கேட்க நேரலாம் அப்போ எல்லாம் இப்படி மல்லு கட்டுறதில் குறியாவே நிற்காதே”

‘ஆமாம்டா நான் தான் இப்போ சேலையை தூக்கி சொருகிட்டு மல்லுக்கு நிற்கிறேன்’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவளுக்கு கடுப்பாக இருந்த போதும், அந்நேரம் அவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட அவள் மகளின் பசி தடுத்திருக்க குழந்தையை சீரட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தினாள்.

சம்யுக்தா கணவனின் கட்டளைகளை சரி தான் போடா என்று தூக்கி எறியும் கேள்விக் கணைகளை வீசியவள் தான் என்றாலும் ஏனோ அதை செயலாலும் எதிர்த்து செயல்படுத்த முடியாமல் அவளுள் ஏதோ ஓர் உணர்வு தடுத்திருக்க, குழந்தை உறங்கியதும் வெளியே செல்ல தயாரானவள் கணவனிடம் சொல்லிக் கொள்ள வேண்டி...

“நான் வேலை விஷயமா பேச வெளியே போகணும்” என்று சுவற்றை பார்த்தபடி உரைத்திருந்தாள்.

அவளின் முகத்திருப்பலை பெரும் குற்றமாக கருதாமல் இயல்பாக எடுத்துக் கொண்டவன்... “வெயிட் பண்ணு! நீ போக வேண்டிய இடத்துக்கு உன்னை நானே கூட்டிட்டு போகிறேன்” என்றவன் ஆடை மாற்றிக் கொண்டு தயாராகி வந்து நின்றான்.

“நான் எங்க போகணும்னு உங்களுக்கு என்ன தெரியும்?”

“ஆமாம் இது பெரிய கம்ப சூத்திரம் பாரு... இந்த ஊரில் நீ அர்ஜுனை தவிர வேற யாரை தேடி பார்க்கப் போகிற?”

“என் பிள்ளைக்கு அப்பா யாருன்னு கூட தேடி பார்க்க போகலாம் தானே?” என்றவளின் வார்த்தைக்கு எப்போதும் போல் பாதிப்படையாமல், ஓர் கணம் உணர்ச்சியற்ற பார்வையை செலுத்திவிட்டு திரும்பியவனின் மேல் வன்மம் சூழ்ந்தது.

‘கேட்டுகேட்டு புளிச்சு போச்சா அப்படி எல்லாம் உன்னை சும்மா விடமாட்டேன்’ என்று வஞ்சத்துடன் கருவிக் கொண்டாள். அவளின் அந்த குத்தல் பேச்சிற்கு எதிரொலிக்காது இருந்ததன் காரணம் குழந்தையுடன் மூவரும் குடும்பம் சகிதமாக அர்ஜுன் இல்லத்தை அடைந்த போது வெளிப்பட்டது.

முதன்முதலில் குடும்பம் சகிதமாக செல்வது அவர்கள் இருவருக்குமே புது வித உணர்வை ஏற்படுத்தி இருந்தது... அவர்களின் வீட்டின் முன் வாகனத்தில் இருந்து இறங்கியதும், சம்யுக்தா கணவனை பொருட்படுத்தாது முன்னே நடந்து சென்றவளை...

“ஒரு நிமிஷம்” என்றவனின் குரலில் தேங்கி நின்று, நிதானமாக திரும்பியவளின் பார்வையில் கேள்வியிருந்தது... கலாதரன் அவளை அறிந்தவனாக குழந்தையையும், அவளையும் ஒரு முறை மாறி மாறி பார்த்தவன்...

“அர்ஜுன் வீட்டில் குழந்தைக்கு அப்பா யாருன்னு கேட்டா செத்துட்டான்னு சொல்லிரு” என்றதும் இடி தாங்கியது போல் நிலைகுலைந்து நின்றுவிட்டாள். அவள் உணர்ச்சியலைகளை கடுகளவும் பொருட்படுத்தாது...

“அதுக்காக குழந்தையோட அப்பாவை தேடி சுடுகாட்டுக்கு போயிறாதே” சிறிதும் இலக்கமில்லாமல் இத்தனை நாட்கள் சேமித்து வைத்திருந்த கடனை செலுத்துவது போன்று வார்த்தையை விட்டதில் சிந்தையில் கோடாலியை கொண்டு சொருகியது போன்ற உணர்வில் ஆடிப் போனாள்.

அவன் கூறியதை அவள் குத்திக்காட்டி பேசினாள் என்பதற்காக, இப்படி ஒரே வார்த்தையில் அவள் சித்தத்தை சிதைத்து சிதிலமடைய செய்தவனை எதிர்க்க முடியாமல் நின்றவளின் அதிர்ச்சியை சிறிதும் பொருட்படுத்தாது புறக்கணித்தவன் அடுத்த தாக்குதலையும் தொடுத்திருந்தான்.

“கொஞ்சம் முன்னாடி வீட்டில் நீ சொன்னப்போ நான் ஏன் அமைதியா இருக்கேன்னு தெரியாம இருந்த தானே, அதுக்கு காரணம்... செத்த பிணத்துக்கு சிரிக்கிறாங்கன்னு தெரியுமா, அழறாங்கன்னு தெரியுமா” என்றதும்...

“நோஓஓ...!” என்று உச்சஸ்தாயில் அலறியவளின் இதயம் தன் செயலாக்கத்தை நிறுத்தியது போல் உணர்ந்திருந்தாள்... என்ன தான் அவளுக்கு அவன் மேல் கோபமும், மனஸ்தாபமும் இருந்தாலும் அவனின் அந்த வார்த்தைகள் அவள் உயிரை வேரோடு வெட்டி சாய்த்தது... கணவனின் பேச்சில் தாக்குண்டு செதுக்கி வைத்த சிலை போல் நின்றவளை மல்லிகா ஆரத்தி தட்டுடன் வெளியேறி நிகழ்வுக்கு இழுத்து வந்திருந்தார்.

“வா சம்யுக்தா, வா தரன், உங்களுக்காக தான் காத்திருந்தேன்... ரெண்டு பேரையும் பார்த்தா என் கண்ணே பட்டுடும் போல இருக்கு” என்றவரின் மொழியில் தன் நிலைக்கு உணர்ந்து கணவனை பச்சாதாபத்துடன் நோக்கியவள் விழிகள் கலங்கி சிவந்திருந்தது.

“ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் காலடி வைத்து இதை தாண்டி உள்ளே வாங்க” என்று விட்டு இருவருக்கும் உபசரணை செய்யும் வேகத்தில் உள்ளே சென்றிருந்தார்.

“உன் பொண்ணோட அப்பா செத்த துக்கத்தை அப்புறமா கொண்டாடிக்கலாம் இப்போ கண்ணை துடைச்சுட்டு வா” என்று அவன் கையிலிருந்த கடைசி அம்பையும் அவள் மேல் சிறிதும் இளக்கமின்றி அவள் நெஞ்சில் ஏவிவிட்டவன் வெகு இயல்பாக அவள் கைபிடித்து கொண்டு உள்ளே சென்றான்.

அவளை குத்துயிரும், குலையுயிருமாய் துடிப்பது போல் வார்த்தைகளை கூறிவிட்டு எதுவுமே நடவாதது போல் இயல்பாக அவளுடன் கைகோர்த்து நடப்பவனை கண்டு கொலைவெறி எழுந்த போதும் அதை வெளிப்படுத்த முடியாமல் தடைப் போட்டிருந்த சூழ்நிலையை எண்ணி நொந்துக் கொண்டாள்.

ஆனால் அது கணவனின் திட்டம் என்று தெளிவாக விளங்கியதும் எதுவாகினும் இனி வீட்டிற்கு சென்று வைத்துக் கொள்ளலாம் என்றெண்ணி அப்போதைக்கு தன்னை சமன் செய்துக் கொண்டாள்.

**********************
 
  • Like
Reactions: Ums

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அர்ஜுன், அரசியிடம் மனதை தெரிவித்து அவள் மனதிலும் அவன் மேல் விருப்பம் இருப்பதை அறிந்தவன் புளங்காகிதம் அடைந்திருந்தான். அரசிக்கும் அதே உணர்வு தான் என்றாலும் அவ்வப்போது அவள் அத்தையின் சுடு வார்த்தைகளும், முகத்திருப்பலையும் நினைத்து அச்சத்தில் மனதை உலுக்கிக் கொண்டு தான் இருந்தது.

மாலை வீடு திரும்பும் வேளை அவனிடம் சொல்லிக் கொள்ள சென்ற அரசிக்கு அவன் அலைபேசியில் தொழில் சம்மந்தமாக மும்முரமாக பேச்சில் ஆழ்ந்திருந்ததை கவனித்து சரி நாளை பேசிக் கொள்வோம் என்று தீர்மானித்து அவன் அறையில் இருந்து திரும்ப முற்பட்டவளை...

“உட்காரு நான் பேசிவிட்டு வருகிறேன்” என்று கூறியவன், அவளை அங்கிருந்த சோபாவில் அமர செய்துவிட்டு அலைபேசி உரையாடலை தொடர்ந்து கொண்டிருந்தான்.

அரசிக்கு அவன் வரும் வரை காத்திருக்கும் சமயம் சலிப்பாக இருக்கவே, அங்கிருந்த டீப்பாயில் தின நாளிதழை உருவி அது கண்ணுற்றாள்... அதுவும் ஒரு கட்டத்தில் சலிப்புத்தட்டவே மேஜையில் இருந்த மற்றொரு சிறிய ரக பௌச் ஒன்றில் கடவுசீட்டு அளவு புகைப்பட கட்டு இருந்ததை எடுத்து பார்த்தவளுக்கு, அதில் இருந்த அர்ஜுனின் புகைப்படத்தை கண்டு தன்னவன் என்ற உரிமையுணர்வில் அதிலிருந்து மூன்று புகைப்படம் உருவி தன் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்.

அதே போல் டீப்பாய் மேல் சட்டமிட்டிருந்த மற்றொரு புகைப்படமும் இருக்க, அதை கையிலெடுத்து ரசித்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு இவன் இனி எனக்கு மட்டுமே சொந்தமானவன் என்ற எண்ணத்தில் உடலில் மின்சாரம் பாய ஜிவ்வென்று இருந்தது... அர்ஜுன் பேசியில் மும்முரமாக இருப்பதை உறுதி செய்துக் கொண்டு அவன் புகைப்படத்தை தடவி கொடுத்தவள் சுற்றும் முற்றும் விழிகளால் ஒரு முறை அளவளாவிவிட்டு அவன் முகத்திற்கு மத்தியில் முத்தம் பதித்தாள்.

அர்ஜுன் பேசி உரையாடலை முடித்து விட்டு திரும்பிய சமயம் வேக வேகமாக புகைப்படத்தை இருந்த இடத்திலேயே சரியாக வைத்தவள் நாளிதழை தான் அத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள் போல உருட்டி பிரட்டி கொண்டிருந்தாள்.

“ஒரு முக்கியமான பிசினஸ் கால் அதான் கட் பண்ண முடியலை” என்று விளக்கம் கூறியவனிடம்...

“இருக்கட்டும் பரவாயில்லை... சரி நான் கிளம்பவா?”

“இவ்ளோ நேரம் வெயிட் பண்ண சொன்னது உன்னை கிளப்பிவிடவா?” என்று நயந்த குரலில் வினவி அவளை ஒரு மாதிரியாக பார்த்ததும்...

“ஸ்ஸ்ஸ்... சாரி” என்று நாக்கை கடித்துக் கொண்டவள், இதழ்களில் அவன் விழிகள் படிய வெட்கத்தில் பார்வையை தழைத்துக் கொண்டாள்.

தன்னவளின் சிவந்த முகத்தை உள்ளத்தில் பொங்கிய காதலின் கைங்கர்யத்தில் கிறக்கத்துடன் பார்க்கலானான்... அவனின் பார்வை அவளை ஆகர்ஷித்து உயிரை ஊடுருவியதில் முகம் மேலும் செவ்வானமாய் சிவந்தது.

நீண்ட சோபா இருக்கையில் அவள் பக்கத்தில் சென்று அமர இருந்தவனை மிகக் கவனமாக அவனுக்கும் தனக்கும் இடைவெளி இருக்கிறதா என்று சரிபார்த்து கொண்டு நகர்ந்து அமர்ந்தவளின் நோக்கம் புரிந்தவனுக்கு சுர்ரென்று சினம் ஏறியது.

“என் மேல் அவ்ளோ நம்பிக்கை இல்லைன்னா நீ கிளம்பலாம்” என்று எரிச்சலுடன் சிடுசிடுத்தான். அவனின் அந்த சினம் அவளை வெகுவாக பாதிக்க...

“ஏன் இப்படி சொல்றீங்க? நான் ஒன்னும் தப்பான எண்ணத்தில் நகரலை... இது ஆபிஸ் யார் வேணாலும் வரலாம் இல்லையா?”

“சும்மா சமாளிக்காதே” என்றவன் சுணங்கிய முகத்தை திருப்பிக் கொண்டு அவளிடம் சரசம் புரிந்தான். அவனின் கோபத்தை உணர்ந்துக் கொண்டவள்...

“ம்ச்... இதுக்கெல்லாமா கோவிப்பாங்க” என்று அவனை ஒட்டி அமர்ந்து கொண்டு அவன் கரத்தை பற்றி கொண்டாள். அவளின் செயலில் மனச்சுணக்கம் சூரியனை கண்ட பணியாய் விலகியிருக்க இதழ்களில் மந்தகாச முறுவல் தவழ அவளை ஏறிட்டான்.

“அப்பாடா சிரிச்சுட்டீங்களா நான் பயந்தே போய்ட்டேன்”

“ச்சீ... பைத்தியம் எதுக்கு பயம்? என் கோபம் உன்னை அவ்வளவு பாதிக்குதா?”

“பின்னே இருக்காதா... நீங்க எனக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை கடைசி வரைக்கும் உங்களை நினைக்க மட்டுமே முடியும்னு நினைச்சிருந்தேன்... ஆனால் எனக்கு நீங்க மனசை திறந்து சொன்னதும் பயங்கர சந்தோசமா இருந்துச்சு அதே சமயம் பயமும் இருந்துச்சு... அந்த பயம் இப்போவும் இருக்கு”

“அப்படி என்ன பயம் உனக்கு?”

“உங்க வீட்டில் என்னை ஏத்துக்குவாங்களா?”

“இவ்ளோ தானா... ஏற்கனவே அம்மாவுக்கு நான் கல்யாணத்துக்கு பச்சைக்கொடி காட்ட மாட்டேங்குறேன்னு வருந்திட்டு இருக்காங்க... இதில் சரி சொல்லி உன்னை கை காண்பிச்சா அவ்ளோ தான் அவங்களை கையிலேயே பிடிக்க முடியாது”

“நிஜமாவா?”

“பின்னே பொய்யா? அவங்களுக்கு உங்க மூணு பேரையும் பிடிக்கும்... அதிலும் நீ குடும்பத்துக்கு காட்டுற அக்கறைக்கு எல்லாம் அவங்க உன் ரசிகை” என்று கூறி இமைசிமிட்டியவனை கண்டு அவளுக்கு அளவில்லாத ஆனந்தம் பொங்கியது.

“அப்புறம் இனி மேல் தள்ளித் தள்ளிப் போற வேலை எல்லாம் வேண்டாம்” என்றவனிடம் ஏதோ கூற வந்தவளை...

“இரு நான் சொல்லி முடிச்சுடுறேன்” என்று தடுத்து நிறுத்தியவன் தானே பேசலானான்.

“எனக்கு தெரியும் நீ எப்படி உன் சூழ்நிலைகள் எப்படின்னு... அதனால் நான் அதை புரிஞ்சு நடந்துக்குவேன்... நீ ஊரறிய என் மனைவி ஆகிற வரைக்கும் எந்த விதத்திலும் உன் மனசு தடுமாறுகிற மாதிரி நான் நடந்துக்கமாட்டேன்... என் செயல்கள் உன்னை கௌரவப்படுத்துற விதத்தில் இருக்குமே தவிர, பங்கம் விளைவிப்பது போல் இருக்காது” என்று விளம்பியவனின் கூற்றில் அவன் காதலின் உண்மை பரிணாமம் வெளிப்பட்டிருக்க அபிலாஷை மின்னியது.

“ஐ லவ் யூ அர்ஜுன்” என்று மனப்பூர்வமாக காதலை உரைத்தவளின் முகம் ஆயிரம் விளக்கு ஜோடனை போல் பிரகாசித்தது.

“பட் இன்னொன்னும் நீ புரிஞ்சுக்கணும்” என்று பூடகமாக வினவியவனின் வார்த்தையை யோசித்தப்படி நெற்றியை சுருக்கினாள்...

“நான் சொன்ன மாதிரி நடந்துகிறது உன் விஷயத்தில் உனக்கு மட்டுமே பொருந்தும்... நான் தான் உன்கிட்ட எல்லை மீறி நடந்துக்கமாட்டேன் ஆனால், நீ என்னை என்ன வேணா பண்ணலாம், ஏன் கிஸ் கூட பண்ணலாம் நான் ஒன்னும் சொல்லமாட்டேன்” என்றவனின் பேச்சில் குதர்க்கமான குறும்பு ஒளிந்திருந்ததை புரிந்ததும் நாணத்தில் தடுமாறியபடி...

“ம்ம்ம்... ஆசை தோசை அப்பளம் வடை மச்சானுக்கு ரொம்பத் தான் ஆசை” உதட்டை ஆட்டி பிலுக்கிக் கொண்டாள்.

“ம்ச்... அந்த யோகமெல்லாம் என் போட்டோக்கு தான் கிடைக்கும் போலயே” என்றவன் மேஜைமேல் சட்டமிட்டிருந்த அவனின் புகைப்படத்தை கையிலெடுத்தவனின் பார்வையில், அவள் செய்த செயலை அவன் கண்டு கொண்டுவிட்டான் என்று உணர்ந்தவளுக்கு முகம் ரத்தமாய் சிவந்து போனது.

“அச்சோ பார்த்துட்டீங்களா?” என்று வெட்கத்துடன் கூறியவள் தன் கரங்களால் முகத்தை மூடிக் கொண்டு முதுகை வளைத்து அவள் மடியிலேயே முகம் புதைத்துக் கொண்டாள்... உரிமையுடன் மடி சாய்ந்த அவளின் செயலில் தேவலோகத்தில் மிதந்தான்.

அவளாகவே வெட்கத்தில் இருந்து வெளியேறியவளை குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாது இன்ப அவஸ்தையில் சிக்கித் தவித்தவள் அங்கிருந்து தப்பிக்கும் மார்க்கமாக...

“நேரமாகுது நான் கிளம்பறேன்” என்று அவன் முகத்தை பாராமல் கூறிவிட்டு அங்கிருந்து செல்ல எத்தனித்தவளை கைபிடித்து தடுத்திருக்க, அவளுக்கு அவனை பார்க்கவே வெட்கம் பிடுங்கி தின்ன...

“நீங்க என்கிட்ட தப்பா நடந்துக்கமாட்டேன்னு இப்போ தானே வாக்கு கொடுத்தீங்க” என்று அவனை பாராமல் நிலத்தை பார்த்தபடி அவன் விட்ட நூல்முனை பிடித்தே அவனை கிடுக்குபிடி போட்டாள்.

“கையை பிடிச்சா நான் தப்பா நடந்துகிட்டதா அர்த்தமா... அடிப்பாவி... அடிமடியிலேயே கைவைக்கிற பார்த்தியா... நான் உனக்கு பங்கம் வர விஷயத்தை தான் செய்யமாட்டேன்னு சொன்னேன்... கைபிடிக்கிறதெல்லாம் என்னுரிமை... எங்கே அந்த உரிமை உங்களுக்கு இல்லைன்னு சொல்லு நான் உன் கையை விட்டுறேன்” என்றதும் சரேலென்று அவனை திரும்பி பார்த்தவளின் விழிகளில் அபிலாஷை நயாகரா அருவியாய் வழிந்தது... அவனிடம் அப்போதே தஞ்சமடைந்துவிட்டால் தான் என்ன என்று கூறிய உள் மனதின் போராட்டத்தை சூழ்நிலைக்கு கட்டுபட்டு அடக்கிக் கொண்டவள்...

“ம்ச்... விளையாடாதீங்க எனக்கு நேரமாகுது நான் கிளம்பணும்” என்று வெட்கத்தில் கிண்கிணி மணியாய் சிணுங்கினாள்... அவளின் இந்த செயலில் சீண்டி பார்க்க எண்ணியவனுக்கும் அவள் வீடு செல்ல வேண்டும் என்ற நிர்பந்தம் தடுத்திருக்க விளையாட்டு பேச்சுகளை ஒத்தி வைத்தவன் தீவிரமாக பேசலானான்.

“நீ கிளம்புறதுக்கு முன்னாடி ஒரே ஒரு கேள்வி, என்னை நீ முழுசா நம்புற தானே?”

“ஏன் இப்படி எல்லாம் கேட்கறீங்க?”

“ம்ச்... கேட்டதுக்கு பதில் சொல்லு”

“உங்களை நம்பாமல் போவேனா”

“இந்த எண்ணம் இப்படியே இருக்கட்டும்... திடிர்னு நட், போல்ட் எல்லாம் கழண்டுச்சு மகளே அப்புறம் நீ வேறொரு அர்ஜுனை தான் பார்ப்ப”

அவன் பேச்சில் மனதில் மலைசாரல் அடித்ததை போல் சில்லென்று இருக்க... “ஒஹ்!!” என்று உதட்டை குவித்து வேடிக்கையாக பார்த்தவளின் அழகு அவனை வா என்று அழைப்பு விடுக்க, அவனின் கட்டுபாடுகளை கட்டவிழ்க்கப் போகிறேன் என்று தடுமாறியவனின் உள்ளத்தை பிரம்மபிரயத்தனப்பட்டு தன் வசம் படுத்துக் கொண்டிருந்தான்.

“இப்போ கிளம்பு... இனி உனக்கு என்னுடைய கம்பெனி காரே பிக்கப் டிராப்க்கு வரும்” என்றதும்...

“ஒஹ்! கம்பெனி கார் மட்டும் தான் வருமா... கம்பெனி எம்டி டிரைவரா வர மாட்டாரா?” என்றவளின் நேச குறும்பு பேச்சில் கண்கள் ஒளிர பார்த்திருந்தான்.

“பார்ரா... நான் உனக்கு டிரைவரா? கொழுப்பு டி உனக்கு! என்னைக்குன்னாலும் நான் அந்த வேலையை பார்த்து தான் ஆகணும் ஆனால், அதை கல்யாணத்துக்கு அப்புறமே பார்த்துக்கிறேன்” அவனின் கூற்றில் பொதிந்திருந்த அர்த்தம் விளங்க பெருமிதத்துடன் நோக்கியபடி சென்றிருந்தாள்.


சுவடுகள் தொடரும்....

**************************************
வணக்கம் நட்பூக்களே...
“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-13&14 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பதிவுகள் பதிவிடப்படும்.

தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்


காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காட்சி-15
சம்யுக்தா, கலாதரன் குழந்தையுடனான அவர்களின் வரவில் மல்லிகா நடராஜன் களிப்புடன் வரவேற்று உபசரித்திருந்தனர். சம்யுக்தா முகம் கூம்பி வாடியிருந்ததை கவனித்த மல்லிகாவிற்கு அவள் குடும்பத்தின் பிரிவை எண்ணி வாடுகிறாளோ என்று கருதியவர், அவள் அருகில் நெருங்கி அமர்ந்து அவள் சிகையை பாசத்துடன் தடவிக் கொடுத்தபடி பேசலானார்.

“சம்முமா அர்ஜுன் எப்படியோ அப்படித்தான் எங்களுக்கு தரனும்... எங்களை நீ அந்நியமா நினைக்க வேண்டாம் சம்முமா... இங்கே நீ கால் பதிச்சிருக்கிறது உன் பிறந்த வீட்டுக்கு சமமான வீடு... தரன் வீட்டில் எப்படியோ ஆனால், இங்கே நீ உன் வீட்டில் எப்படி இருப்பியோ அப்படி இயல்பா இருக்கலாம்”

“தரன் எங்களுக்கு அர்ஜுன் போல ஒரு மகன் தான்... இனி நீ எங்களை அத்தை மாமான்னு தான் கூப்பிடணும்... அதே சமயம் உனக்கு தரன் வீட்டில் ஏதும் பிரச்சனைனா நீ அதுக்கு தயங்காமல் எங்களை அணுகலாம்” என்று நடராஜனும் கூறியவர் மனைவியிடம் அர்த்தம் பொதிந்த பார்வையை பரிமாறிக் கொண்டார்.

“ஆமாம் அவன் ஏதாச்சும் உன்கிட்ட வாலாட்டினா சொல்லு சம்யுக்தா அவன் வாலை ஓட்ட நறுக்கிறலாம்” என்று கூறியபடி அங்கே ஆஜராகினர் அர்ஜுன், தர்சன் இருவரும்.

“வெல்கம் ஹோம் மிஸ்டர். அண்ட் மிசஸ்.தரன் பேமிலி” என்று புன்னகையுடன் வரவேற்றபடி இருவரிடமும் கைக் குலுக்கினான் தர்சன்.

அவர்களின் வரவில் தன் மனத்துயரத்தை ஒதுக்கி வைத்தவள் இயல்பாக புன்னகைத்தாள்.

“என்னடா என் பொண்டாட்டியை என்கிட்டே இருந்து பிரிக்க அதுக்குள்ள கூட்டணியை உருவாக்குறியா?” என்று ஹாஸ்யத்துடன் வினவினான் தரன்.

“ஆமாம் டா இப்போ அதுக்கு என்னாங்குற... ஆமாம் முகம் ஏன் இவ்ளோ வட்டாம்மா இருக்கு... என்னடா வீட்டுக்கு வரும் போதே மிரட்டி தான் கூப்பிட்டுக்கிட்டு வந்தியா?” என்று அர்ஜுன் சண்டைக்கு தயாராவது போல் கை சட்டையை மடக்கிவிட்டு கேட்க, தர்சன் விரல்களால் உதடுகளை பொத்தியப்படி அடக்க முடியாத சிரிப்பை அடக்கிக் கொண்டு பார்த்திருந்தான்.

“ஏது நான் இவளை மிரட்டினேன்... நீ பார்த்த?” என்று வேடிக்கையாக வினவி புருவம் உயர்த்தியவனை கண்டு கடகடவென்று சிரித்திருந்தார்கள்.

“ஐயோ பாவம் அண்ணா நீங்க... எங்க அக்காவுக்கு தான் இங்கே கூட்டணி பலமா இருக்கு... உங்களுக்கு முன்னே இருந்த டெபொசிட் கூட காலி தான் போலவே?” என்று தர்சனும் தன் பங்குக்கு அவனை வாரினான்.

“தர்சன் சம்மு உனக்கு அண்ணி முறை ஆகணும்” என்று மகனிடம் எடுத்துரைத்த அன்னையின் குறிப்பை உணர்ந்து கண்சிமிட்டியவன்...

“ம்ஹும்... இவங்களை நான் அக்கான்னு தான் கூப்பிடுவேன்... அண்ணியை அக்கான்னு கூப்பிட கூடாதுன்னு சட்டம் இருக்கா என்ன? நீங்க சொல்லுங்க சம்மு அக்கா” என்று அவளை பரிந்துரைக்கு அழைக்க...

“நீ எனக்கு தம்பி மாதிரி தான், அதனால் தாராளமா கூப்பிடு தர்சன்” என்று அவனுக்கு பச்சை கொடி காட்டி ஒப்புதல் அளித்திருந்தாள். அதில் மற்றவர்கள் ஏதோ பார்வையால் பேசிக் கொள்ள அதை இருவருமே அக்கணம் கவனித்திருக்கவில்லை.

“குட்டி பாப்பா இங்கே வாங்க... சித்தப்பாகிட்டே வாங்க” என்று கொஞ்சியபடி அர்ஜுனும், தர்சனும் குழந்தையுடன் ஐக்கியமாகிக் கொண்டனர். அனைவரும் ஒன்றாக கலகலத்து பேசியபடியே இருவருக்கான மதிய விருந்தை கொடுத்து உபசரிதிருந்தார் மல்லிகா.

சம்யுக்தாவிற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு உள்ளம் நிறைந்திருக்க, அர்ஜுன் குடும்பத்தினர் காட்டிய அன்பில் கரைந்தபடி உணவை உட்கொண்டவளுக்கு என்றுமில்லாத அளவில் உணவு அபார ருசியாக இருந்தது.

அவளின் மகளும் அங்கே அழுகையில் கரையாமல் அனைவரிடமும் மாற்றி மாற்றி செல்லம் கொஞ்சி கொண்டிருந்ததை கண்டு வியப்பாக பார்த்திருந்தாள்.

“என்ன சம்மு உன் மகளை அப்படி பார்க்கிற?” என்று வினவிய மல்லிகாவிடம்...

“இல்லை அத்தை எப்பவும் புதுசா ஒருத்தர்கிட்டே பழக ரொம்ப டைம் எடுத்துப்பா, அப்படியே அவங்ககூட விளையாண்டாலும் கொஞ்ச நேரத்தில் அழுக ஆரம்பிச்சிருவா... ஆனால் இங்கே ரொம்ப நேரமா என்னைத் தேடாம இருக்காளேன்னு தான் ஆச்சர்யமா பார்த்தேன்”

“அவளுக்கு இந்த சூழ்நிலை ரொம்ப பிடிச்சிருச்சு போல அதுவும் நல்லது தான்... உனக்கு வேலை அதிகாமா இருக்கிறப்போ தோதுபட்டா அவளை நீ இங்கே விட்டுட்டு போனா நாங்க பார்த்துப்போம் சம்யுக்தா... உனக்கும் நிம்மதியா இருக்கும்”

அவர் கூறியது மனதிற்கு மிகவும் இதம் அளித்திருந்தது... “கண்டிப்பா அத்தை” என்று முறுவலித்திருந்தாள்.

மாலை சிற்றுண்டியும் அவர்களுக்கு ஏற்பாடு செய்திருக்க அதில் கலந்து கொள்ள முடியாமல் தரனுக்கு முக்கிய அழைப்பு ஒன்று வந்திருந்தது, அதை தவிர்க்க முடியாது என்றுணர்ந்தவன்... “நாங்க கிளம்பறோம் ம்மா... எனக்கு ஒரு முக்கியமான வேலை வந்திருச்சு” என்றதும்...

“என்ன பாதியிலேயே கிளம்புறீங்களா?” என்று அவர்கள் செல்கிறார்களே என்று வியாகூலம் அடைந்தார்.

“டேய் அப்படி என்னடா வேலை?” என்று அர்ஜுன் தான் விடாமல் பிடித்தான்.

“இந்த மாசம் கூத்து எங்க குடும்பத்து முறை... அதுக்கான ஏற்பாடு எதுவுமே இன்னும் பண்ணலைடா... இதை பத்தி வீட்டில் கலந்து பேசி முடிவு பண்ணனும்” என்றதும் அர்ஜுனுக்கு அவன் கூற்று புரிய வர அவனும் மெளனமாக யோசிக்கலானான்.

“இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிட்டு போகலாமே தரன்” என்று நடராஜனும் வலியுறுத்த சங்கடத்தில் என்ன செய்வது என்று அறியாது சிந்தித்தவனுக்கு சட்டென்று மனைவியை ஆழ்ந்த பார்வையால் வருடியவன் அதை கூறினான்.

“நான் மத்தவங்களோட தானே கூத்தை பத்தி கலந்தாலோசிக்கணும் அதனால சம்யுக்தாவும், குழந்தையும் இங்கே இருக்கட்டும்... நைட் நானே வந்து கூட்டிட்டு போய்கிறேன்” என்றவனின் யோசனை அனைவருக்கும் உசிதமாகப்பட்டது... அதிலும் மல்லிகாவிற்கு தான் சம்யுக்தாவுடன் உறவு கொண்டாடுவதில் மிகுந்த உற்சாக குதூகளிப்பில் இருந்தார்.

சம்யுக்தாவுக்கு தன் கணவனின் பேச்சில் பெரிதும் மனதாங்கல் ஏற்பட்டிருந்தது... ‘அவன் குடும்பத்துடன் கலந்தாலோசனை செய்ய வேண்டுமாமே அப்போ நாம யாராம்?’ என்று மனதிற்குள் அவனை வைதபடி கலங்கலானாள்.

அவன் அங்கிருந்து செல்லும் போது சம்பிரதாயமாக கூட கூறாதது மேலும் அவளை விசனம் கொள்ள வைத்தது... தன் தன்மானத்தை விடுத்து அவன் பின்னே செல்ல முடியாமல் மனப்பாரத்தின் அழுத்தம் தாங்காது பீறிட்டு வந்த துக்கத்தை உதட்டை கடித்து கட்டுப்படுத்திக் கொண்டவள்...

‘இருக்கட்டும் இன்னைக்கு ராத்திரி ரெண்டுல ஒண்ணு பார்க்காம விடப் போறதில்லை மிஸ்டர்.கவின்கலாதரன்’ என்று தனக்குள் சபதம் எடுத்துக் கொண்டாள்.

அர்ஜுன், தர்சன், நடராஜன் மூவரும் குழந்தையுடன் ஐக்கியமாகிப் போக, மல்லிகா, சம்யுக்தாவை அழைத்துக் கொண்டு பின்பக்க தோட்டத்தின் கல் பெஞ்சில் அமர்ந்தார்.

தோட்டத்தின் குழுமையும், மல்லிகை பந்தலில் பூத்திருந்த மல்லிகையின் மனமும் அவள் நாசியை வருடி புத்துணர்ச்சி அளிக்க, கவலைகள் மறந்தவளாக சில கணங்கள் அந்த வாசத்தை நன்றாக இழுத்து தன் நுரையீரலை நிரப்பிக் கொண்டு தன்னை திடசித்தம் செய்து கொண்டாள்.

அவளின் முகம் மாற்றத்தில் தான் பேச நினைத்ததை பேச தடையில்லை என்று கருதியவர்... “அப்புறம் சம்மு ம்மா உனக்கு இந்த ஊர் செட் ஆகிருச்சா? தரன் குடும்பத்தில் எல்லாரும் நல்லா பார்த்துக்கிறாங்க தானே? உனக்கு அங்க சங்கடம் தரக் கூடிய விஷயங்கள் ஒன்றும் இல்லையே?” என்று சகஜமாக விசாரித்தார்.

அதற்கு மெல்லிய புன்னகையை பதிலாக கொடுத்தவள்... “யாருக்குமே புது இடம்னா சில அசௌகிரயங்கள் இருக்கிறது சகஜம் தானே அத்தை... அது மாதிரி சில விஷயங்கள் தான் இருக்கு... மத்தபடி ஒன்னும் இல்லை” அவளின் பேச்சில் சமாளிப்பு தென்பட்டதை குறித்துக் கொண்டார்.

“கலாதரன் ரொம்ப நல்ல பையன் தான் சம்முமா... அவனை சின்ன வயசுலிருந்து நாங்க பார்க்கிறோம் என் கண் பார்வையில் வளர்ந்தவன், அவனிடம் குறைன்னு கண்டுக்க முடியாட்டியும் அவன் குடும்ப சூழ்நிலைகளை சுமக்கிறவன் என்றதால அவன் ஏதாவது சொன்னா பொறுத்து போ... இல்லன்னா, அவனை நிற்க வச்சு நறுக்குன்னு நாலு கேள்வி கேட்டு விடு” என்றவரை கண்கள் கலங்க நோக்கினாள்.

“சம்மு ஏன் டா கண் கலங்குற?”

“அவரை கேள்வி கேட்டு ஆகப்போவதென்ன அத்தை... தன் பிடியில் இருந்து கொஞ்சமும் இறங்கதாவர், சரியான அழுத்தக்காரர்... கொஞ்சம் கூட பாசம்ன்னா என்னன்னே தெரியாதவர்” அவன் அன்றைய தினம் நடந்து கொண்ட விதத்தை மட்டும் கருத்தில் கொண்டு கூறியிருக்க, நெற்றி ரேகைகள் ஆட்சேபத்தில் சுருங்க பார்த்திருந்தார்.

“யாரு தரணையா சொல்கிற? பாசம் இல்லாதவன்னு”

“அவரை தான் சொல்லுறேன் அத்தை... ஏன் உங்களுக்கு சந்தேகம்... என்ன தான் இருந்தாலும் நான் மருமகள் தானே, உங்க மகனை விட்டு கொடுக்கமாட்டீங்க தானே” என்று சலித்துக் கொண்டாள்.

அவளின் பேச்சில் தாடையை பற்றி முகத்தை நிமிர்த்தியவர் அவள் கண்களை உற்று நோக்கி... “இந்த மாதிரி பேச்சு இனி வேண்டாம் சம்மு... எங்களுக்கு நீ வேற, தரன் வேற இல்லை... இன்னும் சொல்ல போனா தரனை விட எங்களுக்கு நீ ரொம்ப முக்கியம்?”

“ஏன் அப்படி?”

“எங்களுக்கு மகன் தானே இருக்கிறான்... மகள் கிடையாது... அதனால எங்களுக்கு பெண் பிள்ளைன்னா அது நீ தான்... இதை உன் புருஷனே ஆட்சேபிக்கமாட்டான்”

“நான் உனக்கு அத்தைன்னு சொல்லிட்டேன்னு என்னை நிமிஷத்துல விலக்கி வச்சுட்டியே? வேணும்னா இனிமே எங்களை நீ அம்மா, அப்பான்னு கூட கூப்பிடு அது உன் விருப்பம்”

“ச்சே... ச்சே... அதெல்லாம் இல்லை அத்தை... இங்கே எனக்குன்னு இருக்கிற ஒரேயொரு உறவுன்னா அது நீங்க தான் நான் எதுனாலும் உங்ககிட்ட தானே கேட்கப் போறேன்”

“இனி உங்களை கஷ்டப்படுத்துற மாதிரி பேசமாட்டேன் சாரி” என்று காதை பிடித்தாள்.

“இது போதும்மா... அப்போ நான் கேட்பதற்கு பதில் சொல்லு, வீட்டுக்கு வந்ததும் உன் முகம் கூம்பி வாடிப் போய் இருந்ததே உங்களுக்குள்ள என்ன பிரச்சனை?”

அவரின் கேள்விக்கு என்ன சொல்லி சமாளிப்பது என்று அறியாமல் விழித்தவளுக்கு சரியாக அவள் புறப்படும் முன் நடந்த சம்பவத்தை விலாவாரியாக கூறியவள் முடிவில்...

“அவர் அவங்க அம்மாவை கேள்விக் கேட்காம என்னை ரூமில் விட்டு கதவை அடைச்சுட்டு அப்புறம் வந்து எனக்கு அட்வைஸ் பண்ணுகிறார் அத்தை” என்று கணவனை நிந்தித்தப்படி குற்றம் சாட்டினாள். அவள் பேச்சை அமைதியாக கேட்டவர் மெலிதான முறுவலுடன் தன் கருத்தை கூறலானார்.

“இந்த ஆம்பளைங்க குணமே இப்படித்தான்மா... அவங்களுக்கு அம்மாவும் முக்கியம், பொண்டாட்டியும் முக்கியம்... அம்மா கூட இருந்தா அம்மாவை பெருமையா பேசுவாங்க, பொண்டாட்டி கூட இருந்தா பொண்டாட்டியை பெருமையா பேசுவாங்க”

“பொண்டாட்டிக்கிட்டே அம்மாவை விட்டு கொடுக்கமாட்டாங்க, அதே போல அம்மாகிட்டேயும் பொண்டாட்டியை விட்டு கொடுக்கமாட்டாங்க... நான் சொல்றது குடும்பத்தில் அம்மாவையும், தனக்கு வாய்ச்சு வந்த பொண்டாட்டியையும் சரிசமமா பார்க்கிறவங்களுக்கு மட்டும் பொருந்தும்”

“தரன் உன்னை ரூம்குள்ள விட்டு போனானே உடனே திரும்ப உள்ள வந்தானா?”

“ம்ஹும்... இல்லை அத்தை வெளியே அவங்க சத்தமா பேசிகிட்டாங்கன்னு தெரிஞ்சுது, ஆனா என்ன பேசிகிட்டாங்கன்னு தெரியலை”

“அதான் உன் முன்னாடி அவங்க அம்மாவை அதட்ட கூடாதுல்ல அதுக்காக உன்னை போக சொல்லிட்டான்... ஆனா நிச்சயம் அவங்ககிட்ட உன்னை விட்டு கொடுத்திருக்கமாட்டான்... அவன் உன்கிட்டே வந்து என்ன சொன்னான் அதை சொல்லு” என்றதும் அவன் கூறியதை அவள் கூறியிருக்க....

“இதிலிருந்தே தெரியலையா உன்னை அவன் அவங்ககிட்ட விட்டு கொடுக்கலைன்னு”

“எப்படி இவ்ளோ உறுதியா சொல்றீங்க?”

“அவன் உனக்கு பாதகமா சொல்லிருந்தா அவங்க சொல்ற மாதிரி செய் வேறேதும் எதிர்த்து பேசாதே, அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கோன்னு சொல்லியிருப்பானே... ஆனால் உன் புருஷன் நீ என்கிட்ட சொல்லணும்னு பொண்டாட்டியான உங்கிட்ட தானே சொல்லியிருக்கான், இது அவனுக்கான உரிமைன்னு இன்னுமா புரியலை” என்றது அப்போதும் தான் விளங்க அவள் கண்கள் ஒளிர்ந்தது.

“நீ ஒரு தொழிலையே நிர்வாகம் பண்ணுற... ஆனால் உனக்கு புரியாம போனது தான் எனக்கு ஆச்சர்யம்”

“அதுக்கு காரணம் அவன் உன் புருஷன்! உன் உரிமை! அவன் உனக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கணும்ங்கிற ஒரு பொஸ்ஸசிவ்” என்றுரைக்க அவர் கூற்றில் இருந்த உண்மையில் உடல் கூசி சிலிர்த்தது.

‘என்னதான் எனக்கும் அவருக்கும் இடையில் கசப்பு நேர்ந்திருந்தாலும், அவன் என்னுடையவன் தானே எனக்கே எனக்கு மட்டும் உரியவன் தானே’ என்று அவள் சித்தம் அவளுள் உருப்பேற்ற பெட்டர்மாக்ஸ் விளக்கை போல் அவள் முகத்தில் வெளிச்சம் வந்தது.

“உனக்குள்ள ஒரு சின்ன உறுத்தல் நாளும் அதை அன்னைக்கே அவன்கிட்ட கேட்டு சரி பண்ணிக்கோ சம்முமா... எந்த காரணத்திற்காகவும் உங்க உறவு பாலத்துக்கு இடையில விரிசல் வர விட்டுவிடாதே” என்று அறிவுரைகளால் பிரஸ்தாபித்தார்.

இருவரும் நேரம் சென்றதே அறியாமல் உரையாடியிருக்க அவர்களின் பேச்சை அங்கே குழந்தையை தூக்கி வந்த அர்ஜுனும் கேட்டிருந்தான்.

“ஏம்மா பிற்காலத்தில் நான் கல்யாணம் பண்ணினாலும் இதே போல மாமியாருக்கும், மருமகள்களுக்கும் இடையே வர சண்டையில் தினமும் என் தலை உருளும் போலவே” என்று போலியாக நடுங்கினான். அவனின் குறும்பில் நகைத்தவர்...

“போடா போக்கிரி... நானெல்லாம் என் மருமகள் கூட மல்லு கட்டமாட்டேன் எனக்கெதுக்கு வம்பு... நீயாச்சும் உன் பொண்டாட்டியாச்சுன்னு நான் அக்கடான்னு நகர்ந்திருவேன்... அதுக்கு முதலில் நீ கல்யாணம் பண்ணனும் ராசா” என்றவர் அவன் முகம் மாறுதலை கவனியாது...

“சம்மு நீயாச்சு இனி இவனை கல்யாணம் பண்ண சொல்லி கொஞ்சம் மூளைச் சலவை பண்ணுமா” என்று அவளிடம் பரிந்துரைத்ததில் புன்னகைத்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.

“என்னம்மா அர்ஜுன் கல்யாணத்துக்கு செக்ரெட்டரி வைக்கறீங்க போல” என்று ‘செக்ரெட்டரி’ என்ற சொல்லில் அவன் அழுத்தம் கொடுத்து அர்ஜுனை சீண்டும் உத்தேசத்துடன் வந்தான் தர்சன்... அவன் சீண்டலில் அவனுடைய ரகசியம் ஒளிந்திருப்பதை கண்டு கைமுஷ்டி இறுக்கி அவனை குத்துவது போல் ஊமை ஜாடை காட்டியவனை கண்டு “ஹஹஹஹ” என்று வாய் விட்டு சிரித்திருந்தான்... அவர்களின் இந்த விளையாட்டை கவனியாது தர்சனின் சிரிப்பில் அவனை நோக்க...

“டேய் மெதுவா சிரிடா... பேய் எல்லாம் வாக்கிங் போகிற நேரம்” என்று பேச்சின் திசையை முற்றிலும் மாற்றியிருந்தான் அர்ஜுன்.

“என்ன இந்த நேரத்தில் பேயா? மணி என்னாகுது” என்று வினவிய சம்யுக்தாவை வியப்பாக பார்த்தபடி...

“பதினோரு மணி” என்றதும் சம்யுக்தா, மல்லிகா இருவருமே திடுக்கிட்டு தூக்கிவாரிப் போட்டவர்களாக எழும்பினார்.

“ச்சே., பேசிக்கிட்டே நேரம் போனதே தெரியலை?” என்று புலம்பிய சம்யுக்தா...

“நான் கிளம்பறேன் அத்தை” என்று கூறினாள்.

“என்ன இந்த நேரத்திலா? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் இரு காலையில் தரன் வந்து கூட்டிட்டு போவான்” என்றார் மல்லிகா. அதற்கு மறுப்பு தெரிவிக்க தலையை இடமும் வலமும் ஆட்டியவள்...

“இல்லை த்தை வேண்டாம் நான் இப்போவே கிளம்பறேன்” என்று பிடிவாதமாக நின்றாள்.

“அம்மா தரன் கூப்பிட்டு எந்நேரம் ஆனாலும் என்னை கூட்டிட்டு வந்து விட சொன்னான் நான் சம்முவை ட்ராப் பண்ணிடுறேன்” என்று அர்ஜுன் கூறியதும், அதற்கு மேல் அவளை வலியுறுத்துவது சரியில்லை என்பதை உணர்ந்தவர்...

“சரி அப்போ இரு வந்துடுறேன்” என்றவர் அவளை பூஜை அறைக்கு அழைத்து அவள் கைகளில் புடவை நகை தரனுக்கு ஒரு ஆடை என கொடுத்தவர்....

“நூறு வருஷம் நீ நல்லா இருக்கணும்மா” என்று மனதார வாழ்த்தியவரின் கால்களில் விழுந்து வணங்கி எழுந்தாள்.

அவள் முகத்தை தன் கரங்களால் தடவி திருஷ்டி கழித்தவருக்கோ கண்கள் கலங்கியிருந்தது... அதை கண்டு கொண்ட அர்ஜுன்... “அம்மா” என்று அதட்டியதும் இமைசிமிட்டி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டார்.

“உங்களுக்கு இத்தனை நாள் பெண் இல்லாத ஏக்கத்தை தீர்க்க வந்த சம்யுக்தா எதிரில் கண் கலங்கலாமா?” என்றவனின் வார்த்தையில் சம்யுக்தாவிற்கு அன்னையாக அவரின் ஏக்கம் புரிய...

“அத்தை இனி மேல் நான் உங்க பொண்ணு... என்னை நீங்க என்ன வேணா கேட்கலாம் கண்டிக்கலாம்... எனக்கு ஒரு உதவின்னா கண்டிப்பா நான் உங்ககிட்ட தான் கேட்பேன் சரியா” என்றவளின் வார்த்தையில் அத்தனை வருடங்கள் இருந்த ஏக்கம் முற்றிலும் துடைத்தெறிந்திருக்க...

“என் செல்லமே” என்று அவள் நெற்றியில் இதழ்கள் ஒற்றி குழந்தை சகிதமாக அவளை பத்திரமாக அர்ஜுனுடன் அனுப்பி வைத்திருந்தார்.

அர்ஜுன் தாயிடம் கண்சமிக்ஞையால் விடைபெற்றுவிட்டு நகர்ந்திருந்தான்.

“அர்ஜுன் நான் இன்னைக்கு முக்கியமா உங்ககிட்ட தான் ஒரு ஹெல்ப் கேட்க வந்தேன்... ஆனால் பிளான் எல்லாம் சுத்தமா மாறிருச்சு” என்றவள் அவள் தேவையை கூறியிருக்க...

“சரிடா நான் சீக்கிரமே உனக்கு ஆலோசனை சொல்றேன்” என்றவன்...

“அம்மாவும், நீயும் பேசினதெல்லாம் நான் ஓரளவு கேட்டேன் சம்மு... நான் இதில் தலையிடுறேன்னு தப்பா நினைக்க வேண்டாம் என்னுடைய ஒரு கருத்தை மட்டும் சொல்லிடுறேன்” என்றவனை...

“என்ன நீங்க இப்படி எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க? அர்ஜுன் நீங்க எனக்கு நல்ல பிரெண்ட், எனக்கு அறிவுரை சொல்லுற அத்தனை ரைட்ஸும் உங்களுக்கு இருக்கு”

“ரொம்ப தேங்க்ஸ் சம்முமா” என்று கூறியவன், அவள் சிகையை பரிகாசத்துடன் தடவிக் கொடுத்தான்.

“தரன் என்ன செய்திருந்தாலும் அதை சக்கா வைத்து நீ அவனை விட்டு விலகிரக் கூடாது... நீயும், அவனும் கடைசி வரைக்கும் இணை பிரியாம சேர்ந்து சந்தோசமா வாழணும்... அதுக்காக நான் உன்னை அடங்கி போக சொல்றேன்னு தப்பா எடுக்க வேண்டாம்”

“அவன் செய்யுறது பிடிக்காட்டி அவனை நிற்க வச்சு கேள்வி கேளு... அது மட்டுமில்லாம அவனை என்ன செய்யவும் உனக்கு உரிமை இருக்கு” என்றவன் அவள் விழிகளை ஓர்முறை கூர்ந்து வெறித்துவிட்டு...

“உனக்கு மட்டுமே உரிமை இருக்கு!” என்று ஆழ்ந்த குரலில் கூறியிருந்தான். அவன் வார்த்தையிலும், குரலிலும் அவளுக்குள் இருந்த உரிமையுணர்வு தலைதூக்க அவர்களுக்குள் நடந்த கசப்பான சம்பவங்கள் மறைந்து தான் விட்டிருந்தது.

“நிச்சயமா அர்ஜுன்... எனக்கில்லாத உரிமை என்ன” என்றவளின் விழிகள் அன்றைய சம்பவத்திற்கு அன்றே கேள்வி கேட்டு விடும் உறுதியில் பளபளத்தது. அவள் வாழ்க்கை விரைவில் சீரடைய மானசீகமாக கடவுளை பிரார்த்தித்து கொண்டான்.

நள்ளிரவுக்கு சில மணி நேரங்கள் இருக்கும் பொழுது தான் அவர்கள் வீட்டை அடைந்திருக்க, அந்நேரம் இல்லத்தில் இருந்த மற்ற அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டிருந்தனர்.

“சரி நான் போய்கிறேன் நீங்க கிளம்புங்க” என்றவளின் கூற்றை ஏற்க மறுத்திருந்தான்.

“முதலில் நீ உள்ளே போ... அப்புறம் நான் கிளம்பிக்கிறேன்” என்றவனை சலனத்துடன் பார்த்தவாறே தயங்கித் தயங்கி சென்றவளின் நிலைமை புரிந்தவனாக, தன் கையில் இருந்த அலைபேசியில் தரனுக்கு அழைத்து சம்யுக்தா வந்துவிட்டதை கூறியிருந்தான்.

சம்யுக்தா யாரை அழைப்பது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தவளுக்கு பெரும் ரோதனையாகிப் போனது... ஏனோ அப்போதும் அவளால் தன் கணவனை அழைக்க முடியாமல் ஏதோ ஒன்று தடுத்துவிட்டிருந்தது. சரி கதவை மட்டுமேனும் தட்டி பார்ப்போம் என்று எண்ணி கரம் உயர்த்தி தட்ட செல்லும் சமயம் கதவு படாரென்று திறக்கப்பட்டது.

அங்கே கணவனை கண்டதும் எப்படி சரியாக வந்தான் என்ற யோசனையில் பேந்த பேந்த விழித்து கொண்டு நின்றிருந்தாள்.

“சீக்கிரம் உள்ளே வா, அப்போதான் அர்ஜுன் கிளம்புவான்” என்றதும் கணவனின் செயல் புரிந்திருக்க வேகமாக உள்ளே சென்றுவிட்டிருந்தாள். தரன் அர்ஜுனுக்கு மின்விளக்கு ஒளியில் அவள் உள்ளே வந்துவிட்டதை அறிவிப்பது போல் கரங்களால் சைகை காண்பித்து இருக்கவும் அர்ஜுன் புறப்பட்டு விட்டிருந்தான்.

சம்யுக்தா அறைக்குள் நுழைந்தவள் கணவன் வருவதர்கள் இரவு உடைக்கு மாறி குழந்தைக்கும் ஆனதை செய்து முடித்துவிட்டிருந்தாள்.

கலாதரன் மனைவியை சிறிதும் பொருட்படுத்தாமல், அவளிடம் பெயருக்காக கூட சாப்பிட்டாயா என்று வினவாததும், குத்தமாக பட அன்று முழுவதும் அவன் மேல் கொண்டிருந்த வன்மம் தலை தூக்கியதில் உஷ்ணத்துடன் நோக்கியபடி அவன் முன்பு நின்றாள்.

“உங்க கிட்ட பேசணும் எழுந்திருங்க” என்று அதிகாரத் தொனியில் இயம்பியதும், அவளின் பேச்சிற்கு லேசாக அசைந்தவன் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்துவிட்டு மௌனமாக படுத்திருந்தான்... அவன் செயலில் சீற்றமெழ...

“என்னை பார்த்தா பைத்தியக்காரியா தெரியுதா?” என்று சிடுசிடுத்ததும்...

“உன் அத்தை, மாமா வீட்டோட உறவாடி களைத்து போயிருப்ப, பேசாம போய் தூங்கு... நாளைக்கு உனக்கும் வேலை இருக்கு, எனக்கும் பல சோலி இருக்கு” என்று நிதானமாக கூறிவிட்டு இமை மூடியதும் அவளுக்குள் இருந்த பிடிவாதத்தனம் தலைதூக்கியது...

“இப்போ மட்டும் எழுந்து எனக்கு பதில் சொல்லலை குழந்தையோட வெளியே போயிருவேன்” என்றதும் படுக்கையிலிருந்து விசுக்கென்று எழும்பி அமர்ந்தவன் சினம் துளிர்த்த அறிகுறியாக நாசி விடைக்க அமர்ந்து பார்வையால் வெட்டிக் கொண்டிருந்தான்... அவனின் அழுத்தம் மேலும் அவளுக்கு எரிச்சலை மூட்ட கதவை திறக்க சென்றவளை சடாரென்று எழுந்து தடுத்திருந்தவன் கண்கள் மிளகாயை அரைத்து பூசியது போல் சிவந்திருந்தது.

“ஏய் அடங்குடி வர கோபத்துல ஓங்கி அறைஞ்சரப் போறேன்... இங்கே நீயும் நானும் மட்டுமில்லை... வயசுக்கு வந்த தங்கச்சிங்க ரெண்டு பேரு, புருஷன் இல்லாம கையில் குழந்தையோட தவிச்சுட்டு நிற்கிற பொண்ணு, என் அப்பா, சித்தி, சித்தப்பா எல்லாம் இருக்காங்க... அவங்க முன்னாடி ஏதாவது நம்ம விஷயத்தை கடைபரப்பி அசிங்கமா நடந்துகிட்ட நான் மனுஷனா இருக்கமாட்டேன்” சற்றே காரமான குரலில் கறாராக உரைத்திருந்தான்.

“நான் அசிங்கமா நடந்துக்கிறேனா... அப்படி என்ன அசிங்கம் பண்ணிட்டேன்... நீங்க வார்த்தையால் என்னை அசிங்கப்படுத்தியதை விடவா” உள்ளம் குமுற கொதித்தாள்.

“ஆமாம் நீதான் அசிங்கம் பண்ணுற... புருஷன் எனக்கு மட்டும் கேட்கிற கேள்விகளை ஊருக்கே கேட்கிற மாதிரி சொன்னா அசிங்கம் இல்லாம என்னவாம்?”

“.........”

“உன்னை ஒரு வார்த்தை சொல்லி அசிங்கப்படுத்திட்டேன் தான்... நான் அதை இல்லைன்னு சொல்லலை... ஆனால் அதை என்ன ஊர் உலகம் முன்னாடி தம்பட்டம் அடிச்சு சொன்னேனா? உன் வீட்டு ஆளுங்க முன்னாடி தானே சொன்னேன், அதுவும் உன் அண்ணன் செய்த காரியத்தால தான் அப்படி ஒரு வார்த்தையை விட வேண்டியதா போச்சு”

“...........”

“ஆனால் நீ தினம் தினம் அதை சொல்லி என்னை உயிரோட சாகடிக்கிற?” என்று மூச்சுவிடாமல் பொரிந்தான்.

“செஞ்ச தப்புக்கு நியாயம் வேற சொல்றீங்களா? ரஞ்சன் பண்ணின தப்புக்கு என்னை பலிகடா ஆக்கிட்டு இப்போ அதையே நியாயமும் படுத்தறீங்களா?” அவர்களுக்குள் இருந்த காதல் என்ற உணர்வையே மறந்து அவனை காயப்படுத்தும் நோக்கத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட வேகத்தில் வார்த்தையை விட்டிருந்தாள்.

“பலிகாடா ஆக்கிட்டேனா? என்ன டி சொல்ற?” என்றவன் முகம் மாறிவிட்டிருந்தது... அப்போதும் தான் அவள் வார்த்தை தவறவிட்டதை உணர்ந்து நாக்கை கடித்துக் கொண்டாள்.

“அதாவது நான் உன்னை காதலிக்காம... உன் அண்ணன் பண்ணின மாதிரி உன் உடம்புக்கு ஆசைப்பட்டு உன்னை மயக்கி கையில் குழந்தையை கொடுத்துட்டு, இனி உனக்கு என்ன நடந்தா எனகென்னன்னு தூக்கி எறிஞ்சுட்டு வந்துட்டேன்னா?”

“இல்லை தப்புக்கு தப்பு சரியாகிருச்சு, இனி நீங்க யாரோ நான் யாரோன்னு சொல்லி நான் வேறொருத்தியை கட்டிக்க பார்த்தேனா சொல்லு டி”

“உன்னை கேட்ட கேள்வி உனக்கும் உன் குடும்பத்துக்கு மட்டும் தானே டி தெரியும்... ஆனால் என் தங்கச்சிக்கு நடந்த அவமானத்தில் ஊர் வாய்க்கு அவலாகிட்டோமேன்னு வெளிய தலைகாட்டவே முடியாம நிற்கிறாளே... அது மாதிரி உனக்கு நான் தலை குனிவு ஏற்படுதிட்டேனா அதை சொல்லு டி”

“...........”

“சொல்லு டி சொல்லு... ஏன் வாயடைச்சு ஊமையா இருக்கிற?” ஆவேசத்துடன் அவள் விலாவை உலுக்கியப்படி வினவினான்.

“ஏன் அதையும்....” என்று குரலுயர்த்தி கூற வந்தவளை தடுத்தவன்...

“இவ்ளோ நேரம் நான் பேசினது உனக்கு மட்டும் தானே கேட்டுச்சு... அதே மாதிரி நீ பேசுறதும் எனக்கு மட்டும் தான் கேட்கணும்” என்று கறாராக கூறினான்... அவன் வார்த்தைக்கு எதிர்த்து பேச எண்ணியவளால் அவனின் கண்டிப்பை மீற முடியாது போனது.

“நீங்க அதையும் தான் செஞ்சு பாருங்களேன்” அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் நிதானமாகவே கூறியிருந்தாள்.

“நான் ஏன் அதை செய்யணும்? நான் முறையா வளர்ந்த ஆண்பிள்ளை... என் குடும்பத்தில் இப்படி ஒரு பெண்ணை ஏமாத்திட்டு வான்னு சொல்லி கொடுத்து வளர்க்கலை”

“பிடிக்காதா பொண்ணா இருந்தா கூட பிடிச்ச மாதிரி அனுசரிச்சு வாழணும்ன்னு தான் சொல்லி கொடுத்திருக்காங்க”

“அப்போ என் கூட வாழ பிடிக்காம ஏதோ இவ பொண்டாட்டி ஆகிட்டாளேன்னு வாழுறீங்களா?” அந்த நட்ட நடு ஜாமத்தில் எப்போதடா நித்திரை கொள்வோம் என்று ஏங்கி கிடக்கும் நேரத்தில், அவனுடன் மல்லுகட்டிக் கொண்டு இருப்பது போதாதென்று விதண்டாவாதம் செய்யவென கேள்விகளை தொடுத்து கொண்டிருப்பவளை கண்டு தலைவேதனையாக இருந்தது.

“உன்னை மாதிரி ஏசி ரூம்ல மட்டும் உட்கார்ந்து வேலை பார்க்கிறவன் நான் இல்லை... வயல், கூத்து அப்புறம் பார்ட் டைம் சாப்ட்வேர் வேலைன்னு மழை வெயில் பார்க்காம ஓடுறவன்... தயவுசெய்து எனக்கு கருணை காட்டு... நாளைக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு அதுக்கு நான் நைட் தூங்கியாகனும்... ஏற்கனவே பாதி ராத்திரி போயிருச்சு” என்று மன்றாடுதல் போல கூறியவனை கண்டு அவள் மனமும் சற்றே இளகி அசைந்தது தான் என்றாலும், இன்று அவன் கூறிய வர்த்தைக்கு பதில் தெரியாமல் விட முடியாது என்று கொள்கையுடன் இருப்பவளால் அவன் உறக்கத்தை பற்றி கவலை கொள்ள இயலாமல் பேசலானாள்...

“அப்போ இன்னைக்கு ஏன் அப்படி ஒரு வார்த்தையை சொன்னீங்க? என் பொண்ணுக்கு அப்பா யாரோன்னு சொன்னது நீங்க... என்னை பொறுத்த வரைக்கும் என் பிள்ளைக்கு அப்பா நீங்க தான்... அப்படி இருக்ககுள்ள நீங்க எப்படி என் புருஷனை செத்துட்டான்னு சொல்லலாம்” என்று நியாயம் கோரினாள். அவளின் கேள்விக்கு அவளையே அழுத்தமாக பார்த்திருந்தவன்...

“நீ வார்த்தையை குத்திக்காட்டி பேசும் போதெல்லாம் செத்து செத்து பிழைக்கிறதுக்கு ஒரேடியா சாகுறது நல்லதுன்னு தான் சொன்னேன் போதுமா?” சுள்ளென்று கூறிவிட்டு அங்கே நில்லாமல் கட்டிலில் படுத்து இமை மூடிவிட்டிருந்தான்.

அவளுக்கு வந்த ஆத்திரத்தில் அவன் மேல் தலையனையை வைத்து அழுத்தினால் என்ன என்பது போல் ஆவேசத்தில் தூக்கத்தை மறந்தவளாக அவனை பார்வையால் எரித்தப் படி குமுறிக் கொண்டிருந்தாள்.

சுவடுகள் தொடரும்....

**************************************

வணக்கம் நட்பூக்களே...

“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-15 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பதிவுகள் பதிவிடப்படும்.


தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு-16

அர்ஜுன், அரசியின் காதல் வளர்பிறை போன்று வளர்ந்து கொண்டிருந்தது... அர்ஜுன், அரசியிடம் மிகவும் கண்ணியமாக நடந்துக் கொண்ட விதத்தில் அவன் மேல் கொண்ட மதிப்பு நாளுக்கு நாள் பல்கி பெருகிக் கொண்டே சென்றது.

அன்று முக்கிய வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்களை சரி பார்த்து அனுப்பிக் கொண்டிருந்தாள் அரசி... ஏற்றுமதி பிரிவில் மேற்பர்வையை முடித்து விட்டு தன்னிடத்திற்கு வந்தவனின் விழிகளில் அரசி வெகு சிரத்தையாக கணினியில் ஆழ்ந்திருப்பதை கவனித்தவன் அவளுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

“மேடம் செம பிஸி போல?” அவளை பார்வையால் அள்ளிப் பருகியபடி வினவினான். அவளோ அவனை சிறிதும் சட்டை செய்யாமல்...

“எம்டி சார் ரொம்ப ஃபிரீயா இருக்காரு போலவே? எக்ஸ்ப்போர்ட் சம்மதமா நியூ கிளைண்ட் ஓட வீடியோ கால் மீட்டிங் இருக்கே அதுக்கு பிரிப்பேர் பண்ணலையா?” கணினியில் தட்டச்சு செய்தப்படியே அவனிடம் வினவிக் கொண்டிருந்தாள்.

“இப்போ நான் எம்டி அர்ஜுனா இல்லை... அரசியுடைய அர்ஜுனா இருக்கேன்... மேடம் என்னையும் சிறிது கவனிக்கலாமே”

“பட் நான் செக்ரெட்டரி கலையரசியா இருக்கேனே”

“இருந்தாலும் உனக்கு இத்தனை சின்சியர் கூடாதும்மா... ஒருத்தன் ஆசையா பேச வந்தா இப்படியா ஏமாத்துறது?”

“இப்போ எல்லாம் எம்டி சார் ஒரு விஷயத்தை வசதியா மறந்துவிடுறார்” என்றவள் கண்கள் மின்னஞ்சல் திரையில் இருந்து அவன் பக்கம் சிறிதும் திரும்பாமல் அவள் இரண்டையும் கையாளும் அழகில் லயித்திருந்தான்... அவளின் கேள்வியில் என்ன என்பதை புரியாது போகவே தான்...

“அப்படி என்ன மறந்துட்டேன் மை குயீன்” அரசியை ஆங்கிலத்தில் அழைத்திருந்தான். அதில் அவள் மனம் அவளையுமாறியாமல் அவனிடம் பறந்து செல்ல துடித்தாலும் பணியை தொடர எண்ணி தன்னை சமாளித்துக் கொண்டவள்...

“இது உங்க கம்பெனி... உங்களுக்கு கீழே இங்க முந்நூறு பேர் வேலை செய்யுறாங்க என்னையும் சேர்த்து... ஆனால் அடிக்கடி உங்களுக்கு இது பார்க், பீச் போல தோணிருது” என்றவள் நாவை கடைவாயில் அடக்கி குறும்பு கூத்தாட உரைத்திருக்க... அவனோ அந்த இடத்திலேயே அவளுள் தொலைந்துவிட்டால் என்ன என்பது போல் எண்ணியவனின் உள்ளத்தின் உணர்ச்சி கொன்றை மலர் தோட்டம் பூத்து குலுங்கியது போல் உணர்ந்தான்.

அரசி அனைத்து முக்கிய பணிகளையும் முடித்து விட்டு திரும்பிய போது தான் அவன் பார்வையிலேயே அவளை கபளீகரம் செய்து கொண்டிருந்ததை கவனித்தவளுக்கு உடல் கூசி சிலிர்த்துக் கொண்டது.

“அர்ஜுன் இது ஆபிஸ் ப்ளீஸ் இப்படி எல்லாம் பார்க்காதீங்க” என்றவளை நமட்டுச் சிரிப்புடன் நோக்கியவனுக்கு அவளை சீண்டி பார்க்கும் ஆவல் உந்த...

“ஏன் பார்க்கக்கூடாதா?”

“ஆமாம் பார்க்கக்கூடாது” என்றதும்... அவளை இந்த பதிலுக்காகவே காத்திருந்தவன் போல்...

“சரி அப்போ இந்த பொண்ணை பார்க்கவா?” என்று அப்போது தான் அவள் தோழியின் காணொளி அழைப்பு ஒன்றை காண்பித்து கேட்க அவளுக்கோ மனதில் துணுக்கென்றது.

அதுவரை அவள் முகத்தில் இருந்த புன்னகையும், ஒளிர்வும் மறைந்தது மட்டுமின்றி, அவர்கள் பேசிக் கொண்டிருந்த சாராம்சம் கூற மறந்து முகத்தில் உக்கிரம் பூசிக் கொண்டிருக்க... “யார் அவள்” என்று கேட்டவளின் நாசி வியர்த்து விடைத்துக் கொண்டிருந்தது கண்டு சுதாரித்து கொண்டவன்.

“ஏய் இவ என் பிரெண்ட் எதுக்கு இப்படி உன் முகம் மாறுது அரசி?”

“நான் என்னை பார்க்கக் கூடாதுன்னு சொன்ன உடனே வேற ஆளை பார்த்துவிடுறதா? போங்க போய் அவளையே பார்த்துக்கோங்க” என்று சீறியவளின் சினத்தில் அவளுக்கான உரிமை கோரல் மிகுதியாக இருக்க அதை புரிந்தவன்... ‘அர்ஜுன் வசமா சிக்கிட்டடா அவ உன் மேல செம பொஸசிவ்வா இருக்கா ஒழுங்கா சமாளிடா இல்லனா ஒத்த வார்த்தையில் வாழ்க்கை தொலைச்ச மாதிரி ஆகிரும்’

“ஹேய் லூசு அவ என் பிரெண்ட் மட்டும் தான்”

“நான் நம்பமாட்டேன் என்னை பார்க்க வேண்டாம்னு சொன்னதும், அவளை பார்க்கவான்னு டக்குனு கேட்கறீங்க? என்னை பார்த்துப் பார்த்து உங்களுக்கு சலித்துப் போச்சா” என்று கூறி கண்கள் கலங்கியவளை கண்டு திகைத்துப் போனான். அவன் விளையாட்டாக பேசியது வினயமாக முடிந்துவிட்டதே என்று எண்ணி வியாக்கூலம் அடைந்தவன்...

“அரசிம்மா இப்போ எதுக்கு கண் கலங்குற? என்னை புரிஞ்சுக்கிட்டது அவ்வளவுதானா?” என்றதும் தான் அவள் சமாதானத்திற்கு உடன்பட்டாள்.

“ம்ச்... இனிமே விளையாட்டுக்கு கூட இப்படி சொன்னீங்க அப்புறம் அவ்ளோ தான்” என்றவளின் பேச்சை கேட்டு அதில் பொதிந்திருந்த காதலின் உரிமையுணர்வில் திக்குமுக்காடிய அதே சமயம் அடிமனதில் கலக்கமும் சூழ்ந்தது... இப்படி இவள் அதீத உரிமையுணர்வில் உணர்ச்சி மிகுதியாக இருக்கையில் கண்ணாடி பத்திரம் போல் கையாள்வது அவசியம் என்பதை அச்சமயம் நன்கு உணர்ந்து கொண்டான்... ஆனால் அவனையனைத்தும் அன்று மாலையே தவிடுப்பொடி ஆக அரசியின் கோபத்திற்கு ஆளாக நேர்ந்தான்.


**********************

சம்யுக்தா தேனியில் இருந்தபடியே தன் தொழிலை நிர்வாகம் செய்ய அர்ஜுனின் உதவியை நாடியவளுக்கு அப்படியும் சில வேலைகளுக்கு நாட்கள் இழுத்தடிக்கவே அதை அர்ஜுன் பார்த்துக் கொள்வதாக அவளிடம் வாக்குறுதி கொடுத்துவிட சம்யுக்தா தொழிலின் மற்ற பணிகளில் மட்டும் சிரத்தையாக ஆழ்ந்தாள்.

இணையத்தின் மூலம் அவளின் நிர்வாகத்தை கண்காணித்து கொள்வது போல் நிதமும் இரண்டு மூன்று முறை சந்தோஷ், ரோஷிணியிடம் காணொளி நேர்காணலில் ஈடுபட்டு அவள் நேரில் இருந்திருந்தாள் எப்படி நிர்வாகத்தை நடத்தியிருந்திருப்பாளோ, அதே போல் நடத்திக் கொண்டிருந்தாள்... சமயத்தில் சில சிக்கல்கள் நேரந்தாலும் அதை சரி செய்ய ஏற்பாடுகள் செய்துக் கொண்டிருக்க சற்று சிரமத்துடன் சமாளித்தே தன் பணியை செவ்வனே செய்துக் கொண்டிருந்தாள்.

சம்யுக்தா இதை பற்றி கணவனிடம் நேரடியாக தெரிவிக்காமல் வெகு எதார்த்தமாக இருப்பது போல் அர்ஜுன் வாயிலாகவே தெரிய வைத்திருந்தாள்... கலாதரன் மனைவியின் சாமர்த்தியத்தை புரிந்துக் கொண்டவனுக்கு லேசாக வருத்தம் ஏற்பட்டாலும் மனைவியின் திறமையை எண்ணி பெருமையாக தான் எண்ணினான். ஆனாலும் அத்துடன் அவனால் விட்டுவிட மனம் வராமல் அவளாக பேசாவிட்டால் என்ன நாம் பேசுவோம் என்று சிறிதும் அகந்தை இல்லாமல் அவளிடம் பேசினான்.

“பிசினஸ் பார்க்க தேவையான ஏற்பாட்டை செய்துட்டியாமா அர்ஜுன் சொன்னான்... உனக்கு இங்கே வேறேதும் சிரமம் இல்லையே? இருந்தால் சொல்லிரு நான் அதை சரி செய்து தரேன்” என்று தன்மையாக கூறியிருந்தான்.

“அப்படி எதுவும் எனக்கில்லை” பட்டுகத்தரித்தார் போன்று பேச்சை முடித்தவளை வெறுமையான பார்வையால் வெறிக்கத்தான் முடிந்தது. இருந்த போதும் மனைவி அதுவும் அவள் மேல் காதல் கொண்டு மணந்து வந்தவனுக்கு சரிதான் எக்கேடோ கெட்டு ஒழி என்று நினைக்க முடியாமல்...

“நான் உனக்கு எதிரி இல்லை யுகிமா... உனக்கு உதவி செய்யத்தான் நினைக்கிறேன் அதை கொஞ்சமாச்சும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு... சில இடங்களில் வீண் வீம்பு முரட்டு பிடிவாதம் எல்லாம் விட்டுறது நல்லது”

“ஆமாம் இதிலெல்லாம் வியாக்கானமா பேசுறது கட்டின பொண்டாட்டி சாப்பிட்டாளா இல்லையான்னு எல்லாம் கேட்கிறது இல்லை” என்று உதட்டை மட்டும் அசைத்து முணங்கினாள். அவள் முணுமுணுத்த வார்த்தைகள் அவன் செவியில் உரைத்திருக்க நின்று நிதானமாக ஏறிட்டவன்...

“ஏன் அதை நானும் உன்கிட்ட கேட்கலாமே?” என்றிருந்தான்.

அவளோ ‘என்ன!’ என்பது போல் அவனை திடுக்கிட்டு பார்த்தாள்... “நீயும் என்கிட்டே இதுவரைக்கும் சாப்பிட்டீங்களான்னு கேட்டு இருக்கியா?” என்றதும் அவனுக்கும் இந்த எதிர்பார்ப்புகள் இருக்கிறதா என்று தனக்குள் ஆச்சர்யமாக கேட்டாள். அவளின் பார்வையிலேயே மனதை படிப்பித்தவன் போன்று...

“ஏன் இருக்காது? நானும் சாதாரண மனுஷன் தானே உனக்கும் எனக்கும் எத்தனை மனக்கசப்புகள் இருந்தாலும் நீ தானே என் பொண்டாட்டி, நான் தானே உன் புருஷன் சாகிற வரைக்கும் இது மாறாப் போவதில்லையே” என்று ஆழ்ந்த குரலில் அபிலாஷையுடன் கூறியிருந்தான்.

கணவனின் வார்த்தையை கேட்டவளுக்கு அதுவரை அவனுடன் பேசிக் கொண்டே கைபேசியில் அறிக்கை ஒன்றில் கண்ணுற்று கவனித்து வந்தவளுக்கு சுத்தமாக கவனம் சிதறிப் போனது... அவள் மனம் முழுக்க அவன் கூறிய வார்த்தைகளே ரீங்காரமிட்டு குடைய ஆரம்பிக்க, அவளின் அந்த சலனம் தீரும் முன்பே தொடர்ந்து...

“இனி நீ பரிமாறினாத் தான் நான் வீட்டில் சாப்பிடுவேன்” என்க...

“வீட்டில் இல்லைன்னா ஹோட்டலில் சாப்பிடுவீங்க அவ்ளோ தானே?” அவன் மேம்போக்காக கூறுவதாக நினைத்து கேட்டவளை சலனமின்றி நோக்கியவன்...

“என்னுடைய நிலைமைக்கு தினமும் கடையில் சாப்பிட்டா வயிறும் ஏற்காது, பட்ஜெட்டும் தாங்காது” சாதாரணமாக கூறிவிட்டு நகர்ந்துவிட்டிருந்தான். செல்லும் கணவனின் முதுகையே வெறித்தவளுக்கு சித்தம் இனம்புரியா உணர்வில் சிக்கிக் கொள்ள சஞ்சலம் நிலவியது.


**********************

அர்ஜுன் கணினியில் ஆழ்ந்திருந்த சமயம்... “மே ஐ கம் இன் மிஸ்டர்.அர்ஜுன் சார்” என்று இன்னிசை இசைத்தது போல் ஒலித்த குரல் வந்த திசை நோக்கி திரும்பியவன் அங்கே நின்றிருந்த அவன் தோழி சுஜிதாவை கண்டு...

“வெல்கம் சுஜிதா மேடம்” என்று புன்னகையுடன் வரவேற்றிருந்தான்.

“என்னடா நானெல்லாம் உன் நியாபகத்தில் இருக்கிறேனா? திடிர்னு உதவின்னு சொல்லி கேட்டு கூப்பிட்டிருக்க என்ன எதுவும் லவ் மேட்டரா?” என்று இதழ் விரிந்த புன்னகையுடன் வினவி குறும்புடன் கண் இமைத்தாள்.

“சேச்சே... என்னை போய் இப்படி தப்பா நினைக்கிறயே... உன்னை லவ் பண்ணாதேன்னு தலையால் தண்ணி குடிச்சவன் நான் போய் காதலில் விழுவேனா” என்று உண்மையை மறைத்து பொய்யை கூறினான்.

“அதானே பார்த்தேன்... சரி அப்புறம் எதுக்கு என்னை அவசரமா பார்க்கணும்னு சொன்ன?”

“அது சம்யுக்தாக்காக”

“யாருடா அது?”

“நம்ம கவின்கலாதரன் வைஃப்”

“வாட் தரன்க்கு மேரேஜ் ஆகிருச்சா?” என்று ஆச்சர்யத்தில் கண்களை அகல விரித்தாள்.

சுஜிதா, அர்ஜுன், கலாதரன் இருவருக்கும் நெருங்கிய தோழி... சுஜிதா வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் கல்லூரியில் சேர்ந்த நாளில் இருந்து ஏதேனும் அவசர தேவை என்றால் அர்ஜுனையும், அவ்வப்போது தரணையும் கூட்டிக் கொள்ள அவளின் குடும்பத்திற்கும் அர்ஜுன் குடும்பம் நண்பர்களாகி இருந்தனர். தரன் சுஜிதாவிடம் சகஜமாக பேசுவான் தான் என்றாலும் அர்ஜுனை போன்று ஒரு எல்லைக்கு மேல் செல்லமாட்டான் என்பதால் பறந்த மனப்பான்மையுடன் பழகும் சுஜிதாவும் அவனை வற்புறுத்தமாட்டாள்... ஆனால் திருமணம் முடிந்தது என்றதும் தான் அவளுக்கு வெகு ஆச்சர்யமாக இருந்தது.

“என்ன திடீர் கல்யாணமா?” என்றவளிடம் அர்ஜுன் அவனுக்கு நடந்த சில கசப்பான சம்பவங்களை மறைத்து மேலோட்டமாக கூறியவன், தற்போது சம்யுக்தாவின் தேவைக்கு என்ன உதவி வேண்டும் என்பதையும் கூறியிருந்தான்.

“என்ன... தங்கச்சிக்கு நடந்த அநியாயத்துக்கு பழிவாங்க சார் சம்யுக்தாவை லவ் பண்ணினாரா?” அவன் கூறாததை அவள் புத்தி கூர்மையால் கண்டுபிடித்து சதுர்யமாக கூறியதில் உடல் அதிர்ந்தான்.

‘ஆத்தி... பார்த்துப் பார்த்து மறைச்சு சொன்னப்போவே நச்சுன்னு பாயிண்டை பிடிச்சுட்டாளே... இன்னும் முழுசா சொல்லியிருந்தா பெண்ணியம் பேசி சம்யுக்தாவுக்கு தரன்கிட்ட இருந்து ஃபிரீயாவே டிவோர்ஸ் வாங்கி கொடுத்திருவா போல’ மானசீகமாக புலம்பிக் கொண்டான்.

சுஜிதாவின் அன்னையும், தந்தையும் பெண்ணுக்கு அதிக சுதந்திரம் வளர்த்து இருந்ததால்... சுஜிதா குடும்ப கட்டுப்பாட்டுக்குள் பெரிதும் ஒத்துப் போகாமல் அவளுக்கென ஒரு தனித்துவ கொள்கைகளை வைத்து அதன்படி சென்றுக் கொண்டிருந்தாள். திருமண வாழ்க்கைக்கு கூட பெரிதும் நாட்டம் இல்லாதவள் அவளுக்கு பிடித்த நண்பனுடன் மேலை நாட்டு கலாச்சாரமான லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கும் வீட்டில் அடைந்து கிடக்காமல் மிக பிரபலமான தொழில் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி (பிஆர்ஒ)வாக பணியாற்றுவதால் காடாரு மாதம் வீடாரு மாதம் போல் வெளிநாடும், தாய்நாடும் என மாறி மாறி இருப்பதால் அவளின் விருப்பதிற்கு எதிர்ப்பு ஏற்படவில்லை. அப்படியே எதிர்த்தாலும் சுஜிதா அதை எல்லாம் கண்டு கொள்ளும் ரகமும் அல்ல.

“என்ன அதான் உண்மை போல வாயடைச்சு நிற்கிறேய?”

“நீ வேற ஏன்மா?”

“சரி சரி நீ பயப்படுற மாதிரி நான் அவங்களை பிரிக்க மாட்டேன்” அவன் மனதை விளங்கியது போல் சிரித்துக்கொண்டே வாக்குறுதி கொடுத்தாள்... அவளின் அந்த பேச்சில் தானும் சிரித்தவன் இயல்பாக மற்ற விஷயங்களை பேசலானான்.

“சரி நான் சம்யுக்தாவுக்கு ஹெல்ப் பண்றேன் பட் அதுக்கு முன்னாடி அவங்களை பார்க்கணுமே”

“கண்டிப்பா பார்க்கலாம்... நான் நீ நேரடியா வந்ததும் பேசிட்டு மீட் பண்ணலாம்னு தான் சொல்லலை... உனக்கு எப்போ வசதின்னு சொல்லு நாம மீட் பண்ணலாம்”

“எனக்கு பிராப்ளம் இல்லை, எப்போனாலும் பார்க்கலாம், நான் இன்னும் சிக்ஸ் மந்த்ஸ்க்கு இந்தியாவில் தான் இருப்பேன்”

“பட் தரன், சம்யுக்தா ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் மீட் பண்ணுவாங்களான்னு தான் தெரியலை?”

“ஏன் அப்படி?”

“அவங்களுக்குள்ள சின்ன ஊடல் அதான்”

“நான் சொல்ற மாதிரி செய், ரெண்டு பேரையும் அட் அ டைம்ல மீட் பண்ண வைக்கலாம்” என்று அந்த யோசனையை கூறியிருந்தாள்.

“உன்னை நம்பி கூப்பிடலாம் தானே ஆல்ரெடி விரிசல் இருக்கு”

“ஹேய் லூசாடா நீ... என்னை பற்றி புரிஞ்சுக்கிட்டது அவ்ளோ தானா... நான் ஏன் அவங்க லைஃப்ல தலையிட போறேன்... வேணா நீ ஆசைப்படுறதை போல் அவங்க விரிசல் சரியாக்க ட்ரை பண்ணுவோம்”

“சாரி சுஜி... புரியாம பேசலை இருக்கிற சூழலை சொன்னேன்”

“விடு பார்த்துக்கலாம்... தரன் ஜென்டில்மேன் அப்படி எல்லாம் அவனை விட்டு ஒரு பொண்ணு போகமாட்டா... அப்படி போனா அந்த பொண்ணு அன்லக்கின்னு தான் சொல்வேன்” என்று தரனுக்கு நற்சான்றிதழ் அளித்தாள்.

மாலை வரை அரசிக்கு வேலை பளு நீடித்துவிடவே சரியாக நான்கு மணியளவில் தான் அவளுக்கு ஓய்வு கிடைத்தது... அதுவரை அர்ஜுன் பக்கமே ஏறெடுத்து பார்க்காமல் இருந்தவள் அவனை காண வேண்டி அறைக்கு சென்றாள்.

அங்கே அர்ஜுன் ஒரு பெண்ணுடன் சிரித்து பேசிக் கொண்டிருப்பதை கண்டு நெற்றியில் சிந்தனை ரேகை படிய பார்த்தபடி வந்தவள்...

“அர்ஜுன் சார் இதெல்லாம் கஷ்டமற்கு மெயில் பண்ணின கிளாரிஃபிகேசன் ரிப்போர்ட்ஸ்” அவனுடன் பேச வேண்டும் என்று பேராவலுடன் வந்தவளுக்கு ஏமாற்றம் நிலவியதை மறைத்து தான் அவனின் காரியதரிசி என்பதை மட்டும் மனதில் இருத்திக் கொண்டு பணிவும், பவ்யமும் நிறைய கூறினாள். தன் தோழியிடம் கூட காதலை தெரிவிக்கக்கூடாது என்ற கொள்கையில் இருந்தவனுக்கு அரசியின் பேச்சு மிகுந்த ஆறுதலாக இருந்தது.

“ஒகே கலையரசி நான் செக் பண்ணிட்டு சைன் பண்ணி வைக்கிறேன், நீங்க நாளைக்கு எல்லாத்தையும் பைல் பண்ணிருங்க... இனி நீங்க வீட்டுக்கு கிளம்பலாம்” அவன் உத்தரவில் எதுவாகினும் இனி நாளை பேசி கொள்ளலாம் என்ற பூடகம் ஒட்டியிருக்க, தன் சஞ்சலத்தை முகத்தில் காட்டாமல் மறைத்து வைப்பதே மிகக் கடினமாக இருந்தது.

தன் மனதை மறைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டு எழுந்தவளுக்கு அர்ஜுனுடன் அன்று மனம் திறந்து பேசாததோ என்னவோ நெருஞ்சிமுள் போல் நெருடிக் கொண்டே இருந்தது. அவளின் தவிப்பை அறியாது அர்ஜுன் சுஜிதாவிடம் சகஜமாக பேசிக் கொண்டிருந்தான்.

அரசிக்கு அர்ஜுனிடம் பேசியிலாவது சில கணங்கள் பேசவிட்டு சென்றுவிடலாம் என்று பரபரத்த மனதை அடக்க முடியாமல் அவனுக்கு அலைபேசியில் தொடர்புக் கொண்டாள்.

தோழியுடன் மும்முரமாக கதைத்து கொண்டிருந்தவன் அவளின் அழைப்பை ஏற்காது போனதில் மனஉளைச்சலுடனே அலுவலகத்திலிருந்து கிளம்பினாள். அன்று அலுவலக வாகனமும் அந்நேரம் வெளியே சென்று வந்திராது போயிருக்க அதை பற்றிய குறுஞ்செய்தி அனுப்பி காத்திருந்தாள்... அதற்கும் எந்தவொரு பதிலும் இல்லாது போகவே விடாப்பிடியாக அவனுக்கு திரும்பத் திரும்ப அழைப்பை மேற்கொண்டாள்... அர்ஜுன் அரசியின் முதல் அழைப்புக்கே அவன் அலைபேசியை சைலன்ட் மோடில் வைத்துவிட்டிருக்க, அவளின் ஓர் அழைப்பை கண்ணால் பார்த்து தெரிந்துக் கொண்டவன் தோழியிடம் பேசியபடியே நிராகரித்துவிட்டிருந்தான்.

அரசிக்கு அத்தனை நேரம் உழட்டி கொண்டிருந்த சஞ்சலங்கள் அனைத்தும் கூட்டணியில் ஐக்கியமானது போன்று திரளாக சேர்ந்துக் கொள்ள அவளை உள் நோக்கத்துடனே தவிர்ப்பதாக எண்ணிக் கொண்டவளுக்கு, அவன் மேல் கோபம் கனன்று எழ, அவன் மேல் பெருத்த மனத்தாங்கல் கொண்டாள்.

வாடிய முகத்துடன் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க, அங்கே அவளுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களும் இருக்கவே அவளுக்கு சங்கடம் உண்டானது... அர்ஜுனுடைய அந்தரங்க செயலாளர் என்பதால் அவளிடம் நேரடியாக பெரும்பாலும் பேச்சு வைத்துக் கொள்ளாததால் அவளிடம் அதை பற்றி கேள்வி ஏதும் எழுப்பவில்லை என்பதை அவளுக்கு பெருத்த நிம்மதியாக இருந்தது. ஆனாலும் அவர்கள் அவளையே அவ்வபோது குறுகுறுப்பாக நோட்டமிட்டபடி காரில் செல்லாமல் பேருந்துக்காக நின்றதை எண்ணி தனக்குள் கிசுகிசுத்து கொண்டார்கள்.

அவள் செல்லும் பேருந்தில் ஏறிய இருவர் அவளுக்கு முன் முந்தியடித்துக் கொண்டு அங்கே இருந்த இரண்டு சீட்டில் அமர்ந்துக் கொள்ள அரசி நின்றுக் கொண்டே பயணித்தாள்... அதை பற்றி எல்லாம் அவள் அச்சமயம் எண்ணி கவலை கொள்ளும் நிலையில் இல்லாது இருந்தவளையும் அவர்களின் பேச்சு தாக்கியது...

“என்ன சித்ரா எம்டியோட செக்ரெட்டரிக்கே இந்த நிலைமையா?”

“இதுக்கு தான் சொல்றது ரேவதி யாரா இருந்தாலும் அவங்கவங்க தராதரம் தெரிஞ்சு இருந்துக்கிறது நல்லது... சும்மாவே அவருடைய ஃபிரெண்டுன்னு சொல்லிட்டு வர அந்த பொண்ணு வந்தாலே எதையும் கண்டுக்கமாட்டாரு, இதில் ரொம்ப நாள் கழிச்சு வேற பார்க்கிறாங்க கேட்கவா வேணும்” என்று தங்களுக்குள் பேசுவதாக எண்ணி அரசியின் காதுபட பேசியது அவள் மனம் குழம்பிய குட்டையாக ஆகிப்போக, அவளின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்திருந்தது.

அந்நேரம் ஏற்பட்ட தன்மான பங்கத்தின் உச்சகட்டத்தில்... ‘இனி என்ன ஆனாலும் சரி அவன் பக்கம் திரும்பியும் பார்க்கக்கூடாது’ என்று உறுதி எடுத்துக் கொண்டாள்.


**********************

கலாதரன் இல்லத்தில் இரவு உணவுக்காக ஒரு மித்தமாக அனைவரும் அமர்ந்த வேளையில் தன் மனைவி அங்கே இல்லாததை கண்டு... “மலர் அண்ணி எங்கே வரலை?” என்று வினவினான்.

“அண்ணிக்கு பசி இல்லையாமா ண்ணா அதனால், வேண்டாம்னு சொல்லிட்டாங்க” என்று கூறியபடியே மலர் அவனுக்கான உணவை தட்டில் இட முனைந்தவளை தடுத்திருந்தான்.

“அரசி நீங்க சாப்பிடுங்க நான் இதோ வரேன்” என்றுவிட்டு மனைவியை தேடி அறைக்குள் சென்றான்.

வாணியின் பெண்ணும், அவளுடைய பெண்ணும் மெத்தையில் தவழ்ந்தப்படி விளையாடிக் கொண்டிருக்க... அவர்களை கண்காணித்தபடியே ஏதோ ஓர் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தவளை நெருங்கியவன்...

“ஏன் சாப்பிட வரலை?” என்று மொட்டையாக ஆரம்பித்தவனை தன் விழியை லேசாக உயர்த்திவிட்டு தாழ்த்திக் கொண்டவள்...

“பசியில்லை” என்று விச்ராந்தியாக விடையளித்துவிட்டு புத்தகத்தில் ஆழ்ந்துவிட்டவளை நெருங்கி நின்றவன், அவள் எதிர்பாராமல் தாடையை பிடித்து நிமிர்த்தி முகம் பார்க்க வைத்திருந்தான்.

“எப்படி பசியில்லாமல் போகும்? குழந்தைக்கு பால் கொடுக்கணும் நடுராத்திரி பசிக்கும் எழுந்து வா யுகி” என்றவனின் தன்மையான பேச்சில் மறைந்திருந்த நேசம் தட்டி எழுப்பப்பட அதில் மனம் அசைந்தவளாக அவனை ஓர் கணம் கேள்வியாக நோக்கிவிட்டு...

“திடிர்னு என்மேல காதல் பொங்கி வழியுது, ஏன் என்னிடம் ராத்திரிக்கு தேவை இருக்கிறதா?” என்று இகழ்ச்சியாக உதட்டை வளைத்தபடி கூறியவளை கண்டு அவன் முகம் சடுதியில் மாறிப் போனது.

“ம்ம்ம்... இதுக்கு பதில் சொல்லிருவேன் அசிங்கமா இருக்கும் பரவாயில்லையா?” என்றவன் அவள் பேச இடம் கொடாமல்...

“அப்படி தான் அந்த தேவைன்னாலும் பொண்டாட்டி உன்கிட்ட தானே அதை எடுத்துக்க முடியும், வெளியே தேடிப் போக முடியாது?” அவளுக்கு மட்டும் கேட்கும்படியான மிக மெல்லிய குரலில் காதை கடித்தான். அவன் வார்த்தையில் புத்தகத்தை கட்டிலில் விசிறியடித்துவிட்டு கடுமையாக முறைத்தவள்...

“அதானே பார்த்தேன் ஆம்பளை புத்தி ஆம்பளை புத்தி தான்” என்று வித்தாரம் பேசியவளை கண்டு அசராதவன்...

“ஆமாம் டி ஆம்பளை புத்தி தான், அதனால் இப்போ ஒரு குறையும் இல்லை... இப்போ எழுந்து வரியா இல்லையா?”

“வர முடியாது நீங்க போகலாம்”

“நீ பரிமாறினாதான் நான் சாப்பிடுவேன்னு சொன்னது மறந்திருச்சா?” என்றவனை வெட்டும் விழி பார்வையால் உரசியவளை...

“போதும் பார்த்தது எழுந்து வா சாப்பிடலாம்... என் மேல் உள்ள கோபத்தை என் மேல் மட்டும் காட்டு உன் வயிறுகிட்ட காட்டாத அப்புறம் அல்சர் வந்திரும்” என்றவன் அவளை தன் கைகொடுத்து தூக்கி எழ செய்தவன் குழந்தைகளை சாப்பிட்டு முடித்திருந்த தன் சிற்றன்னையின் பொறுப்பில் விட்டுவிட்டு அவளுக்கும் தனக்குமான உணவை அவனே பரிமாறலானான்.

“இந்தா சாப்பிடு” என்று அவளுக்கான உணவை தள்ளி வைத்தவனை கலவையான உணர்ச்சிகளுடன் பார்த்தபடி உணவு கவளத்தை மிக மெதுவாக உண்ணலானாள்.

அவரவர்கள் உண்டு விட்டு எழுந்துவிட்டிருக்க, சம்யுக்தா தட்டை அளந்தபடியே பருக்கையை எண்ணிக் கொண்டிருந்தாள். அவள் மனமோ நேசத்துடன் அவளுக்காக ஊட்டிவிடும் கவினை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தது.

தரன் உண்டு முடிக்கும் தருவாயில் தான் மனைவியை கண்டவன் அவளின் செயல்பாடு அவளுக்குள் இருந்த ஏக்கத்தை காட்டிக் கொடுத்தது. அதை உடனே துடைக்க முடியாமல் அதற்கு தடைகல்லாக அரசியும், மலரும் இருக்க தானும் அவளை போலவே தட்டில் இருந்த உணவு பருக்கையை எண்ணிக் கொண்டிருந்தான்.

அரசி, மலர் உண்டு விட்டு ஏதோ பேசி சிரித்துக் கொண்டே எழுந்து நகர்ந்து விட, சரி தான் என்று அவன் கையில் உணவை எடுத்த நேரம் வாணி அங்கே சமீபித்து அமர்ந்திருக்க, சட்டென்று அவளை நோக்கி...

“வாணி மோட்டார் சுவிட்ச் ஆன் பண்ணிட்டு வந்தேன் போய் ஆப் பண்ணிட்டு வாமா” என்றதும்...

“சரி அண்ணா” என்று கூறிவிட்டு நகர்ந்ததும் சடுதியில் மனைவியின் முகத்தை பற்றி அவன் கையிலிருந்த உணவை அவள் வாயில் அடைத்து புகட்டியிருந்தான். கணவனின் செயலில் அதிர்ந்து விழிகள் அகல பார்த்தவளை...

“சீக்கிரம் சாப்பிடு எல்லாரும் வந்திருவாங்க” என்று கூறியபடியே மீதி உணவையும் ஊட்டி முடித்தவன் வேகமாக எழுந்து சென்று கையலம்பலானான்.

ஆயிரம் தான் கணவனை வார்த்தையால் வதைத்தாலும் தன் மனதறிந்து ஏக்கத்தை தீர்த்த கணவனை எண்ணி சித்தம் ஆனந்தத்தில் விம்மியது!

சுவடுகள் தொடரும்....


**************************************

வணக்கம் நட்பூக்களே...

“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-16 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பதிவுகள் பதிவிடப்படும்.


தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு-17

கலாதரன் நிச்சலனமின்றி உறங்கிக் கொண்டிருக்க அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த சம்யுக்தாவின் விழிகளில் காதல் பிரவாகம் வானில் ஒளிரும் பஞ்சிதம் என மின்னியது.

“ஐ லவ் யூ கவின்... லவ் யூ சோ மச்” மெல்லிய குரலில் உரைத்தவள், அவன் நன்கு உறங்கிக் கொண்டிருப்பதை உறுதியாக அறிந்து அவன் நெற்றியில் கலைந்து கிடந்த முடியை ஒதுக்கி நெற்றிப் பொட்டில் அச்சாரம் பதித்திருந்தாள்.

அவன் நெற்றியில் பதிந்திருந்த தன் இதழ்களை பிரிக்க முடியாமல் மெல்ல இதழ்களை உயர்த்திக் கொண்டிருந்த சமயம் படாரென்று தரனின் இமைகள் பிரிய திடுக்கென்று நிமிர்ந்தவள், அவன் முகம் காண இயலாது தவிப்புடன் பார்வையை திருப்பிக் கொண்டவளை, இமைக்காமல் பார்த்தவன் உள்ளத்தில் விரகதாபத்தின் கிளர்ச்சி உண்டாக அதை பார்வையில் பிரதிபலித்தபடி பார்த்திருந்தான்.

அவள் கரத்தை இழுத்து வலது உள்ளங்கையை திருப்பி இதழ் பதித்தவன் தன் தோளில் சாய்த்து அணைத்து கொண்டான்... அவன் கண்களில் தெரிந்த தாபத்தை எண்ணி ஏதோ முதலிரவு அறையில் கணவனை அணுகிய புது பெண் போல் சிந்தை ரயில் தாண்டவாளம் போல் தடத்தடக்க உதட்டை கடித்தாள்... மனைவியின் உணர்ச்சி பிரவாகங்களை புன்சிரிப்புடன் அவதானித்து கொண்டவன் தானும் அவள் நெற்றியில் இதழ்கள் பதித்துவிட்டு அவளை தன் மார்பில் சாய்த்துக் கொண்டவன்...

“தூங்கு” என்று பரிகாசத்துடன் அவளை தட்டிக் கொடுத்தப்படி உறங்கிப் போனான். அந்நேரம் அவன் அவளை தாபத்தின் வேட்கையில் பெண்டாண்டிருந்தால் கூட மறுப்பு தெரிவிக்காமல் அவனுக்கு இசைந்திருப்பாள் தான்... ஆனால், அவனால் அப்படி அவளை ஆட்கொள்ள முடியாது அந்தராத்மா தடுத்துவிட்டிருந்தது... அவனின் செயலில் அனைத்து சஞ்சலமும் துணிக் கொண்டு துடைத்தார் போன்று மறைந்திருக்க ஆழ்ந்த மனத்திருப்தியில் கண் அயர்ந்திருந்தாள்.

இப்பூமியில் மனிதன் வாழ அதி முக்கியமான தேவைகளான ஐம்பூதங்களை போல் கணவன், மனைவி பந்தத்தில் ஊடல்களும், கூடல்களும், சமரசங்களும் இன்றியமையாதது என்பதை தரன், யுக்தா வாழ்க்கை அவர்களுக்கு படிப்பித்து கற்று கொடுத்து கொண்டிருந்தது.

அதிகாலையில் எழுந்த கலாதரன் தோப்பை சுற்றி பார்க்க கிளம்பிக் கொண்டிருக்க, சம்யுக்தா தானும் வருவதாக கூறியதும் அவளையும் அழைத்துக் கொண்டே செல்லலானான்.

தென்னை மரங்களால் சூழ்ந்திருந்த இடத்தை காண்பதற்கு கண்களுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியான இதம் பரவி குளிர்வித்தது...

“இதெல்லாம் நீங்க மட்டுமே பார்த்துக்கிறீங்களா?” என்று கணவனை பார்த்து வினவினாள்...

“மேற்பார்வை எல்லாம் நான் தான்... தேங்காய் வெட்டுறது, தென்னங்கீற்று பின்னுறது இதெல்லாம் சித்தி, சித்தப்பா, அப்பா பார்த்துக்குவாங்க... அதுவும் எனக்கு பிராஜெக்ட் எண்டிங்னால் வேலை அதிகமா இருந்தா தான் இல்லைன்னா, அதையும் நானே பார்த்துக்குவேன்” என்றவனை வியந்து நோக்கிக் கொண்டிருக்கும் போதே சடாரென்று இழுக்க தடுமாறி அவன் மேலேயே விழ இருந்தவளை தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

“என்ன ஆச்சு, ஏன் இப்படி இழுக்கறீங்க?”

“அங்கே பாரு” என்று விரல் நீட்டி காட்டிய திசையில் மஞ்சள் நிற சாரைப் பாம்பு ஒன்று சரசரவென்று நெளிந்து போவதை கண்டவள்...

“ஐயோ பாம்பு!” என்று அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்... அவளின் அணைப்பிற்கு கட்டுண்டவன் மனதில் சாரல் அடித்தது.

சில வினாடிகள் அச்சத்தில் உறைந்து நின்றவளை அசைக்காது பார்த்துக் கொண்டான்... அவள் மூடிய விழிகளை மெல்ல மெல்ல மலர்த்தி பார்த்து சுதாரித்து விலகி நின்றாள்.

“ஆக பாம்பை பார்த்தா தான் என் பொண்டாட்டிக்கு என் மேல காதல் பிச்சுக்கிட்டு வரும் போலவே, அப்போ தினமும் தோப்புக்கு கூட்டிட்டு வந்திர வேண்டியதுதான்” கண்சிமிட்டி வேடிக்கையாக கூறியவனை கண்டு...

“ஆமாம் நான் வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறேன் பாருங்க” என்று நமட்டுச் சிரிப்புடன் உதட்டை சுளித்தவளிடம்...

“அப்படின்னு காக்கா குருவி கூட சொல்லாது... மேடம் யாரு வருங்கால தொழிலதிபர் ஆச்சே” என்றவனின் பேச்சில் சிறிதும் பொறாமை, கர்வம், இல்லாமல் மிதமிஞ்சிய பெருமை மட்டுமே மின்னியதை கவனித்தவளுக்கு உள்ளுர ஆச்சர்யம் எழும்பியது.

“அப்போ உங்களை விட நான் தான் உயரமான இடத்தில் இருப்பேன் அதை நினைச்சு உங்களுக்கு பொறாமை, கெளரவம் இல்லையா?”

“நீ என்னை புரிஞ்சிக்கிட்டது அவ்வளவு தானா?” என்றவனின் வார்த்தையில் ஏக்கமும், வருத்தமும் வழிந்தோட, அவள் அதற்கு பதில் சொல்ல முனைவதை தடுத்து தானே பேசலானான்.

“நான் ஆணாதிக்கவாதியில்லை என்னை விட என் பொண்டாட்டி வளர்ந்திர கூடாதுன்னு நினைக்க, நீ எத்தனை உயரத்துக்கு போனாலும் அதில் எனக்கு பெருமையும் சந்தோசமும் தான் அதிகம் வரும்... இனி இது போல் பைத்தியகாரத்தனமா உளறாதே” என்று கூறிவிட்டு தோப்பில் வேலையில் ஆழ்ந்துவிட்டான்.

தன் கணவனை எண்ணி பூரித்தவளுக்கு அன்றைய தினம் மலரும் நினைவுகளாக நெஞ்சில் தடம் பதித்துவிட்டிருந்தது.

தரன், சம்யுக்தா இருவரும் தோப்பிலிருந்து ஒன்றாக திரும்பியிருந்ததை கண்ட அரசி, வாணி இருவரும் அக மகிழ்ந்து போனார்கள்.

“அரசி க்கா அண்ணனும், அண்ணியும் சேர்ந்துட்டாங்க போல இப்போ தான் நிம்மதியா இருக்கு க்கா”

“ஆமாம் வாணி... நான் தான் சொன்னேனே அண்ணனுக்கு அண்ணி மேல பாசம் அதிகம், அண்ணியும் அதுக்கு சளைச்சவங்க இல்லை... இவங்க இப்படியே கடைசி வரைக்கும் இருப்பாங்க வாணி நீ கவலைப்படாதே” என்றவளின் வார்த்தை ரஞ்சன் வரும் வரை தான் நிலைக்கும் என்பதை அவர்கள் அறியவில்லை!

**********************

அரசிக்கு, அர்ஜுனின் செயல் பெரும் கதனம் கொடுத்ததில் அவளுக்கென கொடுத்திருந்த காரை தவிர்த்து விட்டு பேருந்திலேயே அலுவலகம் பயணித்திருந்தாள். அதிலும் சக ஊழியர்களுடன் செல்ல நேர்ந்தால் அவர்கள் வாய்க்கு அவளாக நேரும் என்றதில் வெகு நேரமாகவே புறப்பட்டு அலுவலகம் அடைந்துவிட்டாள்.

தன் அறைக்கு வந்து அமர்ந்தவளின் விழிகள் தன்னவனின் அறையில் தான் நிலைத்தது... ‘வேண்டாம் அரசி போதும் இப்படி தான் ஆசைகாட்டி மோசம் செய்வான்... இனி அவன் பக்கமே திரும்பாதே’ என்று தனக்குள் கூறிக் கொண்டு எப்போதும் போல் வேலையில் ஆழ்ந்து கவனம் செலுத்தியவள் அதில் வெற்றியும் பெற்றாள். ஆனால் அவள் எண்ணியது போல் அன்று அவனை பார்க்கவும் நேரவில்லை, முகத்தை திருப்பவும் நேரவில்லை... அலுவலகதிற்கே வராமல் அன்றைய பணிகளுக்கான மின்னஞ்சலை மட்டும் அனுப்பி வைத்திருந்தான், அதில் மேலும் அவள் கடுப்புற்றவளாக அவன் மேல் மிதமிஞ்சிய சினம் கொண்டாள்.

அன்றைய பணிகளில் நேர்ந்த குழப்பத்தை தீர்க்க முன்னால் செயலாளராக இருந்த திலிப்பை அணுகினாள். அவனோ அவளை ஆராய்ச்சியாக பார்த்தாலும் அவள் கேட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தவறவில்லை.

அர்ஜுன், சுஜிதாவிடம் பேசியவன் சம்யுக்தாவிற்கு உதவும் வகையில் அவர்களை சந்திக்க வைக்கும் ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருந்தான். அவன் சிரத்தையாக வேலையில் ஆழ்ந்துவிட்டதில் அலுவல் சம்மந்தமாக அரசிக்கு மின்னஞ்சல் மட்டும் அனுப்பி வைத்துவிட்டு, அவள் அங்கு இவன் மேல் காண்டில் இருப்பதை அறியாது தன் காரியத்தில் முனைப்பாக இருந்தான்.

திலீப், அரசி தன்னிடம் வந்து அவள் சந்தேகத்தை நிவர்த்தி செய்துக் கொண்டு சென்ற செயலை எதார்த்தமாக அர்ஜுனிடம் தெரிவித்துவிட்டிருந்தான். திலீப் கூறியதை கேட்ட அர்ஜுனுக்கு நெற்றி ரேகைகள் சுருங்க யோசனையில் ஆழ்ந்தவன் அரசிக்கு அழைத்திருந்தான்.

வாடிக்கையாளர்களின் விவரப் பட்டியல் சேகரித்த கோப்புகளை சரி பார்த்துக் கொண்டிருந்தவள் அலைபேசியில் அர்ஜுன் அழைப்பதை கண்டவளுக்கு அவன் அழைப்பை எடு என்று ஓர் மனமும், எடுக்காதே அவன் உன்னை தான் மதிக்கவே இல்லையே என்று மற்றொரு மனமும் காதலின் ஊடலும், ஆர்வமும் மாறி மாறி தோன்ற பரிதவித்தாள்.

ஓர் முழு அழைப்பு அடித்து முடித்து நின்றிருக்க, தப்பித்தோம் என்று எண்ணத் தோன்றாமல் ஏதோ தவறு செய்தது போல் மனம் குறுகுறுக்க அமர்ந்துவிட்டாள். அர்ஜுன், அரசி அழைப்பை எடுக்காது போனதில் அப்படியே விட்டுவிடாமல் திரும்பவும் அழைக்க எறிவளைதடு போல் உணர்ச்சிகளில் தாக்குண்டாள்.

‘இனி தாமதிக்கக்கூடாது நான் அவனின் காரியதரிசி தானே பணி நிமித்தமாக அழைப்பை ஏற்று தானே ஆக வேண்டும் என்று தனக்குள் உருவேற்றுக் கொண்டு பேசலானாள்.

“சொல்லுங்க எம்டி சார்!” பிசிர்தட்டாது கூறிய அவள் குரலில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்துக் கொண்ட அர்ஜுனின் முகம் ஆட்சேபத்தில் சுருங்கியது.

“ஏதோ டவுட்ன்னு கேள்விப்பட்டேன், என்ன சந்தேகம்?” அவனிடம் பேச ஆரம்பித்த கணமே தன் மனதை திடபடுத்திக் கொண்டவளுக்கு இப்போது எந்த சலனமுமின்றி இயல்பாக பேச முடிந்ததை தொடர்ந்து...

“அதை நான் மிஸ்டர்.திலீப் கிட்டேயே கேட்டுட்டேன் சார்” அவள் பேச்சின் ஒதுக்கத்தில் ஏதோ ஒளிந்திருப்பதை உணர்ந்துக் கொண்டான்.

“அதான் ஏன்னு கேட்கிறேன்? உனக்கு சந்தேகம்ன்னா என்னிடம் கேட்க வேண்டியதுதானே?” என்றவனின் கேள்விக்கு பதிலளிக்காமல் மெளனமாக இருந்தாள்...

“...........”

“என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி புதுசா சார் போட்டு பேசுற? நான் என்ன செய்தேன்?” என்று அறியாதவனை போல் வினவியவனை கண்டு சுறுசுறுவென்று ஏறியது... ‘பண்றதெல்லாம் பண்ணிட்டு என்ன செய்தேன்னு கேள்வி வேற’ மானசீகமாக பொரிந்தவள்...

“நீங்க என் எம்டி தானே அப்போ நான் சார்ன்னு கூப்பிடுறது தானே சரியான முறை”

“நான் எம்டியா இதை உன்கிட்ட கேட்கலை, அர்ஜுனா தான் கேட்கிறேன்... சொல்லு என்னாச்சு என் மேல் என்ன கோபம்?”

“உங்க மேல கோபப்பட நான் யாரு சார்... முக்கியமான விஷயம் எதுவும் இல்லைன்னா, சரி தான் நான் இப்போ போனை வைக்கிறேன் சார்” என்று வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டவள், அவனின் அனுமதிக்கு கூட காத்திருக்காது பட்டென்று இணைப்பை துண்டித்திருக்க, அர்ஜுனுக்கு முகத்தில் அறைந்தது போல் ஆகிப் போனது.

“அவ்ளோ ஆகிப் போச்சா நேரில் இருக்கு டி உனக்கு” என்று கருவிக் கொண்டான்.

அரசிக்கு சிறிதும் தடுமாறாது அவனிடம் பதிலுக்கு பதில் பேசியதில் ஏதோ சாதித்துவிட்டது போன்று உணர்ந்தாள். ஆனால் மனதில் குடி கொண்ட வெறுமை மட்டும் அகலாமல் அவ்வபோது அவளுக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தது.

**********************

தேனியிலிருந்து சற்று தள்ளியிருந்த ஓர் ஊரின் பசுமையை ரசிக்கும் படி அமைந்திருந்த அந்த வெட்டவெளி உணவகத்தில் அமர்ந்தபடி அர்ஜுன், சுஜிதா, சம்யுக்தா பேசிக் கொண்டிருந்தனர்.

“தேங்க்ஸ் ஃபார் யுவர் டைம்லி ஹெல்ப் சுஜிதா” என்று சம்யுக்தா புன்னகையுடன் நன்றி நவிழ்ந்தாள்.

“வெல்கம் மிசஸ்.சம்யுக்தா... நீங்க எப்போ என்ன தேவைப்பட்டாலும் என்னிடம் தயங்காம ஹெல்ப் கேட்கலாம்”

“கண்டிப்பா என்னுடைய பிஸ்னஸ் சக்சஸ் ஆகுதுன்னா அதுக்கு நீங்களும் ஒரு காரணமா இருப்பீங்க?” என்றதற்கு சுஜிதா அலட்டிக் கொள்ளாது புன்னகைத்தாள். சம்யுக்தாவுக்கு மலை போல் தெரிந்த விஷயம் மடு போல் சுலபமாக முடிந்ததன் மகிழ்ச்சியை தான் நன்றி நவிழ்தல் மூலமாக வெளிபடுத்திக் கொண்டிருந்தாள்.

“நானுமே கொஞ்சம் ரிஸ்க்ன்னு நினைச்சு தயங்கின விஷயத்தை நீ சுலபமா முடிச்சுட்ட சுஜிதா” என்று அர்ஜுனும் தன் பங்கிற்கு கூறினான்.

“ஹேய் லுக்... ரெண்டு பேரும் இப்படி பேசுறது போதும்... கொஞ்சம் நிதானமா யோசிச்சா நீங்களே பண்ணக் கூடிய விஷயம் தான்... நாம வேற பேசலாம் சம்யுக்தா உங்க பர்சனல் லைஃப் எப்படி போகுது அதை பற்றி சொல்லுங்க” என்று பேச்சின் திசையை மாற்றினாள்.

“ம்ம்ம்... போகுது ஆமாம் உங்க பர்சனல் பத்தி சொல்லலையே”

“எனக்கு இந்த கல்யாணம், சடங்கு, சாம்பிராதாயம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை சம்யுக்தா... சோ, நான் கிஷோர்ன்னு ஒருத்தர் கூட லிவிங் டுகெதர் லைஃப் லீட் பண்றேன்” என்றவள் அவளின் குடும்ப பின்னணியை விளக்கலானாள்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் தரனும் வந்துவிட்டிருக்க... “ஹலோ தரன் வெல்கம்... நைஸ் டு மீட் யூ” என்று கை குலுக்கி கொண்டாள்.

“சாரி! எனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்றீங்களா?”

“அதெல்லாம் இல்லை தரன்... உன் வைப் தான் பாவம் உன்னை காணாமல் வழி மேல் விழி வைத்து தேடிகிட்டு இருந்தாங்க” வேண்டுமென்றே கூறி கண்சிமிட்ட...

“அப்படியெல்லாம் செய்தேனா?” என்று சம்யுக்தாவும்...

“வாய்ப்பேயில்லையே” என்று தரனும் ஒரு சேர கூறியதை குறிப்பெடுத்து கொண்ட சுஜிதாவுக்கு, அங்கிருந்து அவர்களை பிரிந்து செல்வதற்குள் சம்யுக்தாவிற்கு பொறாமை உணர்வை ஏற்படுத்தி விட வேண்டும் என்று தனக்குள் சபதம் எடுத்துக் கொண்டாள்.

“தரன் உன் மேல நான் பயங்கர கோபமா இருக்கேன்” என்றதும்...

“என் மேல என்ன கோபம்?” யோசனையுடன் கேட்டிருந்தான்.

“பின்னே என்ன தரன் நீ காலேஜ் படிக்கிறப்போவும் சரி, வேலைக்கு போனப்பவும் சரி, பொண்ணுங்க பக்கமே திரும்பி பார்த்ததில்லை... பட், இப்போ தானே தெரியுது நீ பெரிய தில்லாலங்கடின்னு”

“அப்படி நான் என்ன செய்தேன்?”

“நீ லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்கியாமே, முதல்ல அர்ஜுன் சொன்னதும் நான் நம்பவே இல்லை... ஆனால் உன்னை நேரில் பார்த்ததும் தான் உண்மைன்னு புரியுது”

“ஏன் நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணக்கூடாதா... இப்போ இதில் என்ன இருக்கு?”

“என்ன இப்படி கேட்டுட்டே தரன்... நீ லவர் பாய்ன்னு தெரிஞ்சிருந்தா நானே உன்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருப்பேனே? இப்படி லிவிங் டுகெதர் லைஃப் எல்லாம் சூஸ் பண்ணியிருக்கவே மாட்டேன் தெரியுமா?” என்று குண்டை தூக்கி வீச அர்ஜுன் விழிகள் தெறித்து விடுவது போல் அவளை பார்த்திருந்தான்.

“இது என்ன புது கதை?” அடிக்கண்ணால் மனைவியை அவதானித்தப்படி என்று உணர்ச்சி துடைத்த முகத்துடன் தரன் வினவ, சம்யுக்தா உக்கிரமானாள்... அதை ஓரக்கண்ணால் கண்டுவிட்டிருந்த சுஜிதாவுக்கு மனம் குத்தாட்டம் போட்டது.

அர்ஜுன் சுஜிதாவிடம் பார்வையால் என்னவென்று விசாரிக்க அவளோ சும்மா வெறுப்பேற்றுகிறேன் என்று உதட்டை அசைத்து காண்பித்தாள்.

“நீ நடத்து ஆனா சம்யுக்தாகிட்ட அடி வாங்காம போகாம இருந்தா சரி” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி மிக மெல்லிய குரலில் கூறியிருந்தான்.

சம்யுக்தாவுக்கு உரிமையும், கோபமும் தலைதூக்க அங்கே தன் ஆதிகத்தை செயலாற்ற எண்ணியவள்... “ஏன் சுஜிதா! உங்களுக்கு இவ்ளோ மட்டமான ரசனையா? நீங்க இவரை போய் மிஸ் பண்ணிட்டேன்னு பீல் பண்றீங்களே, அந்தளவுக்கெல்லாம் இவர் ஒர்த் இல்லை... அவர் லவர் பாயா இல்லை, கடுவன் பூனையான்னு எனக்கு மட்டும் தான் தெரியும்” என்றவள் கணவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

“நோ சம்யுக்தா! நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க தரன் எப்படிப்பட்ட ஆளு தெரியுமா... அவன் முன்னாடி பேரழகியா இருந்தாலும் திரும்பியே பார்க்காத ஆளு... பட் உங்களை லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்கானா ஆச்சர்யப்பட வேண்டாமா... தரன் பியூச்சர்ல உனக்கு மனசு மாறினா என்னை கொஞ்சம் கண்சிடரேஷன் லிஸ்ட்ல வைப்பா சரியா” அவளுக்கு பீறிட்டு கொண்டு வந்த சிரிப்பை சிரமத்துடன் அடக்கியப்படி கூறியவளின் பேச்சில், அர்ஜுனுக்கும் அதே உணர்வு எழும்ப அவனும் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொள்ள வாயில் உள்ளங்கையை வைத்து அடைத்தபடி அமர்ந்திருந்தான்.

சுஜிதாவின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த சம்யுக்தாவின் விழிகள் கணவனை பஸ்பமாக்கிக் கொண்டிருந்தது.

“ஆமாம் எனக்கொரு டவுட்டு” என்று தரன் வெகு தீவிரமாக வினவுவது போல் பாசாங்கை உணராது...

“என்ன டவுட்?” ஆர்வமாக சுஜிதா கேட்டதும்...

“நீ என் பொண்டாட்டிக்கு உதவி செய்ய வந்தியா? இல்லை; என் வாழ்க்கையில மண்ணள்ளி போட வந்தியா? சும்மாவே சாமியாடுவா... இதுல நீ அவ கால்ல சலங்கையை கட்டி, வேப்பிலையை கொடுத்து உடுக்கை அடிச்சு வச்சா என் பொழப்பு என்ன ஆகுறது” என்றவனின் கூற்றில் அர்ஜுனுக்கு சிரிப்பை அடக்க முடியாது போக...

“நீங்க பேசிட்டு இருங்க, நான் ஒரு கால் பேசிட்டு வரேன்” என்று விட்டு அர்ஜுன் விட்டால் போதுமடா சாமி என்பது போல் நகர்ந்திருந்தான்.

சுஜிதா சிரமத்துடன் புன்னகையை அடக்கிக் கொண்டவள்... “சேச்சே... நான் போய் உன் வாழ்க்கையில் மண்ணள்ளி போடுவேனா தரன்... நான் வாழ்க்கை தான் கொடுப்பேன்” என்று இரட்டை அர்த்தத்தில் கூற...

“அம்மா தாயே போதும் இத்தோட நிறுத்திக்கோ” அம்பேல் என்பது போல் இருகரத்தை கூப்பி தலைக்கு மேல் உயர்த்தியவன்...

“ஏன் இந்த கொலைவெறி... அங்க பக்கத்துல இருக்கிறவ மூஞ்ச பாரு ஒரு கிலோ காஞ்ச மிளகாயை அரைச்சு பூசின மாதிரி இருக்கா? இதுக்கு மேல ஏதாவது உருட்டின நான் தாங்க மாட்டேன் கொஞ்சம் கருணை காட்டு தாயே” என்று பாசாங்குடன் மன்றாட...

“களுக்கென்று” சிரித்து விட்டிருந்தாள்.

அவள் சிரிப்பு தொடர்ந்தொலிக்க, அர்ஜுனும் அவளுடன் இணைந்துக் கொள்ள சம்யுக்தா அர்ஜுனையும் பார்வையால் அரட்டிக் கொண்டிருந்தாள்.

“அய்யயோ சம்முமா! எனக்கும் இதுக்கும் எந்த சம்மதமும் இல்லை நான் ரொம்ப பாவம்... அங்கே உன் புருஷன் தான் காரணம் அமுக்கமுக்குன்னு இருந்துட்டு எத்தனை பேர் மனசை சாய்ச்சிருக்கான்... செம டேலண்ட்டுடா உனக்கு” என்று அவனை மெச்சுவது போல் அவன் பங்கக்கு சில வெடிகளை போட உண்மையாகவே முறைக்கலானான்.

“டேய் இதெல்லாம் உன் வேலை தானா”

“சேச்சே... நான் சும்மா தான் சொன்னேன்... சம்யுக்தா பீ கூல்... இங்கு நான் கூறிய அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல” சுஜிதா கூறிய விதத்தில் அவளும் மனம் திறந்து சிரித்துவிட்டிருக்க அவளுடன் மற்ற இருவரும் கலந்து கொண்டனர்.

தரன் அவர்களுடன் இயல்பாக இணைந்து கொண்ட மனைவியை ஆராய்ச்சியாக பார்த்திருந்தான். அனைவரும் கலகலத்தப்படியே ஒன்றாக உணவையும் உட்கொண்டனர்... கிளம்பும் முன் சுஜிதா புகைப்படம் எடுக்க விரும்பி அனைவருடனும் எடுத்துக் கொண்டாள்.

“நீங்க மூணு பேர் நில்லுங்க நான் எடுக்குறேன்” என்று சம்யுக்தா கூற, அவளும் சரி என்பதாக மூவரையும் புகைப்படம் பிடித்திருந்தாள். அர்ஜுன், அரசியின் ஊடலை மறந்தவனாக அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் வைத்தான்.

அன்று இரவு தூக்கம் வாராமல் அலைபேசியை உருட்டி கொண்டிருந்த அரசி வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் அர்ஜுன், சுஜிதா படத்தை பார்த்து ஏகத்திற்கும் கடுப்பானாள்... ‘ஏன்டா இங்க ஒருத்தி உன்கிட்டே பேசணும்னு தவிக்கிறேன், அதை என் கோபத்தில வெளிப்படுத்தவும் செய்றேன்... ஆனால், உனக்கு கொஞ்சம் கூடவா பீலிங் இல்லை இருக்கட்டும் உனக்கு இருக்குடா’ என்று மனதிற்குள் கருவிக் கொண்டே உறங்கிப் போனாள்.

சம்யுக்தா, அர்ஜுன், சுஜிதாவிடம் இயல்பாக பேசி சிரித்தவள் கணவனிடம் மட்டும் முறைத்துக் கொண்டு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள். தரன் அதை கண்டு சுதாரித்தவனாக அவளிடம் பேசுவதை தவிர்த்தான்.

அவன் பேசாமல் அமைதி காத்ததும் சம்யுக்தாவிற்கு எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல் ஆகிப் போனது. வீட்டிற்கு சென்றதும் சம்யுக்தா வாணியின் பொறுப்பில் இருந்த தன் மகளை பெற்றுக் கொண்டு அவளுக்கு தேவையான பணிவிடைகளை செய்து முடித்து படுக்கைக்கு திரும்பும் முன் மனைவியிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க அவசர அவசரமாக தரன் படுக்கையில் சயனித்திருந்தான்... அப்படி அக்கடா என்று உறங்கி விட விட்டுவிடுவாளா அவன் தர்ம பத்தினி, குழந்தையை தூங்க வைத்த சம்யுக்தா கணவன் முன் சினத்தில் மூச்சிரைக்க நின்றவள்...

“அவ கூட அப்படி இளிச்சு பேசிட்டு என்னவோ நான் வேண்டாதவ மாதிரி ஒதுங்கி போறீங்க?” எண்ணெயில் இட்ட கடுகாய் படபடவென பொரிந்தவளின் வார்த்தையை கேட்டு அசையாமல் படுத்திருந்தான்.

“நான் பேசிட்டு இருக்கேன் உங்களுக்கு தூக்கம் வருதா?” என்றவள் அவன் மென்னியை அழுந்த பிடிக்க படக்கென்று விழிகளை திறந்திருந்தான்.

“சொல்லுங்க” என்றவளின் கரத்தை தட்டிவிடாது கூர்ந்து நோக்கியபடி...

“இன்னும் கொஞ்சம் அழுத்தி பிடிச்சா உனக்கு என்கிட்டே இருந்து நிரந்தரமா விடுதலையே கிடைச்சிரும்” வேகமாக கூறியவனின் வார்த்தையில் திடுக்கிட்டு சரேலென்று தன் கரத்தை உருவிக் கொண்டாள்.

“இன்னும் எத்தனை பேர் இப்படி சுத்தியிருக்காங்க...?” மனைவியின் கேள்வியே இன்று அவனுக்கு செமத்தியான மண்டகப்படி உண்டு என்பதை உணர்த்தியது.

“ஒரு ரெண்டு நாள் டைம் கொடு கணக்கெடுத்து சொல்றேன்” முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு சிரியாமல் கூறியவனை கண்டு ஆத்திரம் மேலோங்க...

“என்ன தைரியம் இருந்தா என்கிட்டேயே கணக்கெடுத்து சொல்றேன்னு சொல்வீங்க?” என்றபடி வசவசவென்று வசைமாரி பொழியலானாள்... நடுஜாமமென்றும் பார்க்கவில்லை, அவளுக்கும் தனது ஆற்றல் பலவீனம் அடையும் என்றெல்லாம் எண்ணவில்லை... அவளின் உடையவன் அதில் அவளுக்கு மட்டுமே ஏக போக உரிமைகள் இருக்க, இதில் எப்படி நீ என்னிடம் கூறலாம் என்று பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டாள்.

மனைவியின் ஆவேச பேச்சிற்கு எதிரொலிக்காது அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் பிரமையில் அவள் கையில் வேப்பிலையும் காலில் சலங்கை இல்லாததும் தான் குறையாக தெரிந்தது... இரவு தூக்கத்திற்கு அரோகரா போட்டபடி மனைவியின் ஆட்டத்திற்கு கணவன் என்னும் பக்தனாக அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்... அவனின் மௌனமும் அவளுக்கு அச்சமயம் குத்தமாக தெரிய...

“என்ன என்னை பார்த்தா பைத்தியக்காரி மாதிரி தெரியுதா?”

“இல்லை நான் எந்த சாமிக்கோ நேந்திகிட்ட வேண்டுதலையை மறந்துட்டேனோன்னு யோசிக்கிறேன்” சிறிதும் தயங்காமல் இயல்பாக அகடவிகடம் மொழிந்ததில்...

“என்ன நக்கலா?” என்றிருந்தாள்.

“இல்லை விக்கல்... சாமி ஆடினது போதும் நேரமாகுது போய் தூங்கு, என்னையும் தூங்க விடு” நிதானமாக கூறினான்.

“ஒஹ்! நான் சாமி ஆடுறேன்னா? அதான் பொன்மேனி உருகுதே ஆடுகிறவளா பார்த்து பிடிக்கப் போறீங்களா?” அந்த அர்த்த ஜாமத்தில் விதண்டாவாதம் பேசிக் கொண்டு நின்றவளை கண்டு ஆயாசமாக போக...

“இப்போ நீ பேசாம தூங்கலை, அப்புறம் என் பாணியில் உன்னை அடக்க வேண்டியதா வரும் வசதி எப்படின்னு நீயே முடிவு செய்துக்கோ”

“அப்படி என்ன செய்து என்னை அடக்குவீங்க? பெரிய இவனா நீங்க?” கடிந்த பற்களுகிடையே வார்த்தையை சிதறடித்து சீறிக் கொண்டு நின்றவளை, இதற்கு மேல் பொறுத்தால் வேலைக்காகாது என்றுணர்ந்து தடாலடியாக எழுந்தவன், அவள் என்னவென்று கிரகிக்கும் முன் அவள் இதழ்களை முற்றுகையிட்டு அவளின் ஆவேசத்தை தணிக்க முயற்சி மேற்கொண்டான்... முதலில் அவனிடம் திமிறி விலக முற்பட்ட சம்யுக்தா ஓரிரு நொடிகளில் அவன் ஆலிங்கனத்தில் கட்டுண்டு போனாள்.

சில கணங்கள் நீடித்த இதழ் யுத்தத்தில் அவள் அமைதியடைந்து விட்டதை உறுதி செய்த பிறகே அவளை விடுவித்தவன்... “குட்நைட்” என்று மந்தகாசம் சிந்திவிட்டு உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டான்.

**********************

அரசி அன்றும் அர்ஜுன் அமர்த்திய காரை நிராகரித்தவள் எப்போதும் போல் பேருந்திலேயே பயணித்தாள்... அர்ஜுன் அன்று வழக்கமான நேரத்திற்கும் வெகு முன்னதாகவே புறப்பட்டவன் அவள் பேருந்திலிருந்து வரும் வழியில் வழி மேல் விழி வைத்து காத்திருக்கலானான்.

அரசி அன்று வெகு விரைவாகவே வந்திருக்க ஒன்றிரண்டு ஆட்கள் தவிர அதிக நடமாட்டம் இல்லாததால் நிதானமாக நடந்தாள்... சில தூரம் கடந்ததும் நீலநிற டாட்டா அல்ட்ராஸ் வாகனத்தை அடையாளம் கண்டு விழியுயர்த்த, அங்கே அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனை கண்டு மனம் துணுக்குற திகைத்துவிட்டாள்.

மார்பின் குறுக்கே கரங்களை கட்டிக் கொண்டு காரின் பக்கவாட்டில் ஒற்றை காலை தூக்கி வைத்தபடி ஒயிலாக நின்றவனின் வனப்பில் கவரபட்டவள் தடுமாறி நின்றாள்... தன் புடவை முந்தானையில் முடிச்சிட்டு கொண்டு தன் தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டவள், தன்னை சமாளித்துக் கொண்டு நிமிர்ந்து அவனை புறக்கணித்துவிட்டு கடந்து சென்றவளின் முந்தானை தலைப்பை கைகளில் பற்றி அவளை நிறுத்தினான்.

அவன் செயலில் திகிலடைந்தவள் சாலையில் யாரேனும் பார்க்கிறார்களா என்று பதட்டத்துடன் பார்வையை உலாத்திவிட்டு யாரும் இல்லை என்ற நிம்மதியில் அவனை தீயாக முறைக்கலானாள்.

“இதெல்லாம் நல்லாயில்லை முதல்ல முந்தானையை விடுங்க” என்று வார்த்தையை கடித்து துப்பினாள்.

“ஏன் அந்த உரிமை வேறு யாருக்கும் தரத் தயார் ஆகிட்டியா?” என்றவனை சீறும் நாகம் போன்று பார்த்தவள்...

“அதை பற்றி உங்களுக்கென்ன? அது தான் உங்களுக்கு கிருஷ்ணரை போல் பாங்கியர் கூட்டம் இருக்கே அங்கே போங்க, இப்போ என்னை விடுங்க” என்று சிடுசிடுத்தாள்.

அவளின் வார்த்தையை கேட்டதில் அவள் கோபத்திற்கான காரணம் நன்றாக விளங்கியிருக்க... “முடிஞ்சா என் கையை தட்டி விட்டுட்டு போ” என்று கூறியிருந்தான். அவன் வார்த்தை அவளை அசைத்து பார்த்துவிட்டிருக்க கண்கள் அவன் மேல் நிலைக்குத்தியது போல் ஸ்தம்பித்து விட்டாள்!

சுவடுகள் தொடரும்....


**************************************
வணக்கம் நட்பூக்களே...
“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-17 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பதிவுகள் பதிவிடப்படும்.
தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்
 
Status
Not open for further replies.
Top