All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்" - கதைத் திரி

Status
Not open for further replies.

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்பூக்களே...

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி... இதோ நான் அடுத்த கதையுடன் வந்துவிட்டேன் "என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்" விக்ரம் நந்தினி கதாபாத்திரங்களுடன் நம் பயணத்தை தொடங்குவோம். வாரந்தோறும் சனிக்கிழமையில் பதிவுகள் பதியப்படும்.

நட்புடன்

காருராம்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-1

“கடவுளே! எப்படியாவது என்னை விக்ரமுடன் சேர்த்து வைத்துவிடு... எந்த காரணத்துக்காகவும் நான் விக்ரமை விட்டு கொடுக்கமாட்டேன்... என்னால் அவரை விட்டு விலக முடியாது, ஒருவேளை அப்படி ஒரு சூழ்நிலை உருவாகிருச்சுன்னா என் உயிர் உன்னிடம் சரணடைஞ்சிரும்” தஞ்சை பெருவுடையார் சன்னதியில் சிவனை நிலைகுத்திய பார்வையால் ஊடுருவியபடி தன் கரங்களை கூப்பி மானசீகமாக பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள் நந்தினி.

“விபூதி வாங்கிக்கோங்கோ” என்ற ஐயரின் வார்த்தையில் தான் தன்னினைவு கலைந்தவள் விழி கலங்கிச் சிவந்திருந்தது.

“எல்லாமே நல்லதா நடக்கும் கவலைப்படாமல் போங்க எல்லாம் இந்த ஈசன் பார்த்துக்குவான்” என்று அவள் கலங்கிய விழிகளை கவனித்த ஐயர் அவளுக்கு நல்வாக்கு கூற, இறுகிய புன்னகையை சிந்திவிட்டு பிரகாரத்தை சுற்றி வலம் வந்தவளின் மனம் விக்ரமை பற்றின நினைவுகளிலேயே சுற்றிக் கொண்டிருந்தது.
கோவிலில் காலடி வைத்த விக்ரமின் மனம் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது... நந்தினியிடம் எப்படி பேச வேண்டும் என்ன கூறினால் அவளை அவனிடமிருந்து விலக வைக்க முடியும் என்பதை வீட்டிலேயே ஒரு முறை ஒத்திகை பார்த்துவிட்டு சற்று திடத்துடன் தான் வந்திருந்தான்... ஆனால், அவளை பார்க்கப் போகும் தூரம் அருகில் நெருங்க நெருங்க அவனுக்குள் பதைபதைப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது.

“தெய்வமே! என் நந்தினியிடம் சூழ்நிலையை புரிய வைக்கும் துணிச்சலை கொடு, அவள் வாழ்க்கை நல்லா இருக்கணும்” என்று வெளியில் வீற்றிருந்த நந்தி பகவானிடமே பிரார்த்தித்துக் கொண்டவன், சுற்றுப் பிரகாரத்தை வலம் வந்துக் கொண்டிருந்த நந்தினியை கண்டதும் அவளை பார்க்க வந்த குறிக்கோளையும் மறந்தவனாக, அவன் விழிகளில் மின்னல் வெட்டியது.

அவள் மேல் பொங்கி எழுந்த நேசப் பிரவாகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பலவீனம் அடைந்துக் கொண்டிருந்தான்... அவளின் சோபை இழந்த வதனம் தன்னால் தான் என்று எண்ணும் போதே அனலில் இட்ட மெழுகாய் கரைந்துக் கொண்டிருந்தான்... அவன் சித்தம் அவளிடம் சரணடைய சொல்லி அறிவுறுத்திக் கொண்டிருக்க, கடந்து போன பேச்சு வார்த்தைகள் அவன் மூலையில் ரீங்காரமிட்டதில், முயன்று வரவழைத்துக் கொண்ட பலத்துடன் அவற்றை விரட்டி அடித்தவன், அவளிடம் பேச வேண்டியதை மட்டும் மனோதிடத்துடன் உருப்பேற்றுக் கொண்டு, அவர்கள் வழக்கமாக சந்தித்துக் கொள்ளும் பிரகார மண்டபத்தில் அமர்ந்துக் கொண்டான்.

பிரகாரத்தை சுற்றி வந்துக் கொண்டிருந்த நந்தினியின் விழிகளில் விக்ரம் புலப்பட்டு விட, அதுவரை இருந்த கவலைகளும், சஞ்சலங்களும் மறைந்தவளாக துள்ளி திரியும் பட்டாம்பூச்சியை போன்று விழிகளில் பிரகாசத்துடன்... “விக்ரம்!” என்று ஆர்பரிப்புடன் கூவியபடி அவனை நெருங்கினாள்.
அவளின் அழைப்பு அவன் செவியில் தேனாய் பாய, இவளின் அன்பையா நான் இழக்க நேரிடும் சூழ்நிலை உருவாக வேண்டும் என்ற வியாகூலம் நெஞ்சை இரண்டாக பிளந்தது.

“விக்ரம்! விக்ரம்! வந்து ரொம்ப நேரம் ஆச்சா... ஹப்பா பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு? நான் எப்படி தெரியுமா தவிச்சு போனேன்? ஒரு போன் இல்லை, ஒரு மெசேஜ் இல்லை... யார் என்ன சொன்னாங்கன்னு தெரியலை? என்ன நடந்துகிட்டு இருக்குன்னு தெரியலை... சொல்லுங்க விக்ரம், என்ன தான் ஆச்சு? ஆமாம் ஆதன் எங்கே, நீங்க மட்டும் வந்திருக்கீங்க?” அவன் பேசவே இடம் கொடுக்காமல் அணையுடைத்த வெள்ளம் போல் சீறிப்பாய்ந்த அவள் வார்த்தைகள், அவன் மன உறுதியை அசைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது... ஆனால் அவன் சூளுரையை கருத்தில் கொண்டு தன்னை இறுக்கிக் கொண்டவன்.

“சாரி உன்னை தொந்தரவு பண்ணுறதுக்கு... ஒரு முக்கியமான விஷயம் பேசனும், அதனால் தான் உடனே வர சொன்னேன்” ஏதோ மூன்றாமவரிடம் பேசுவது போல் அவளை தூர விலக்கி நிறுத்திய அவனின் வார்த்தைகள் சுள்ளென்று நெஞ்சை தாக்கியதில் வலி உண்டாக, அவன் பேச்சின் தோரணையில் இருந்த மாற்றம் ஏதோ விபரீதம் என்றுணர்த்தி அவள் மூலையில் அபாய மணி அடித்தது.

“விக்ரம், என்ன பேசுறீங்க? உங்களை பார்க்காமல் என்னால் இருக்கவே முடியலை... ஆனால் நீங்க என்னடான்னா ஏதோ கடன் கொடுத்த மூணாவது ஆள் மாதிரி விலக்கி வச்சு பேசுறீங்க? முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க, என் பையன் ஆதன் எங்கே” அவளும் விடாபிடியாக அவனிடம் அதட்டலாக வினவினாள்.

“என் பையனை பற்றி உனக்கென்ன கவலை நந்தினி, ஏதோ நீயே பத்து மாசம் சுமந்தவள் மாதிரி பேசுற?” என்று ஏளனமாக உதட்டை வளைத்தப்படி வார்த்தையால் காயப்படுத்தினான். அவன் சொற்கள் ஆயிரம் ஈட்டிகள் ஒன்றாக பாய்ந்தது போல் தாக்கி உயிர் வலியை தருவிக்க விக்கித்துப் போனாள்!

“வி..க்..ர..ம்.. நீ..ங்..க.. நீங்..களா.. இப்..படி.. பேசு..றீங்க..?” திக்கித் திணறியவளின் பிசிறடித்த வார்த்தைகளை மொழிந்தவளின் அடிபட்ட பார்வை, அவனை ஆயுதமில்லாமல் தாக்கியதில், அவன் நெஞ்சமும் அடிபட்டு சுருண்டு போக, தன் உணர்ச்சிகளை மறைக்க போராடி தோற்றவன் பார்வையை திருப்பிக் கொண்டான்.

அவனின் அந்த முகத்திருப்பல் மேலும் அவளை அவஸ்தைக்குள்ளாக்க... “என் மேல எதுவும் கோபம்னா திட்டுங்க, அடிங்க... ஆனால் இப்படி முகத்தை திருப்பாதீங்க, என்னால் தாங்க முடியலை” உடைந்த குரலில் வெளி வந்த வார்த்தைகள் அவன் உயிரை வேரோடு வெட்டி சாய்த்துக் கொண்டிருக்க, தன் கையாலாகத்தனத்தை எண்ணி தன்னையே நொந்துக் கொண்டு மௌனத்தின் திரையில் ஒளிந்துக் கொண்டிருந்தான்.

“................”

“நீங்க என்னை விலக்கி வச்சு பேசி என் மனசை காயப்படுத்துறதுக்கு பதிலா, என்னை உங்க கையலையே கொன்னுருங்க சந்தோசமா செத்துப் போறேன்” என்றவளின் வார்த்தை சுரீர் என ஆழ்மனதை ஊடுருவி உயிரை உலுக்கியது.

அவனின் உணர்ச்சிகளை வெளிப்படையாக காட்டிக் கொள்ள முடியாமல் இரும்பு விலங்கால் தளையிட்ட தன் சூழ்நிலையை எண்ணி மறுகித் தவித்தான். இதற்கு மேல் மௌனம் செல்லாது என்பதை கருத்தில் கொண்டு, முகத்தை கடினமாக்கிக் கொண்டவன் அவள் பேச்சை எதிர்த்து கண்டிப்புடன் பார்த்தான்.

“முட்டாள்த்தனமா பேசாதே நந்தினி... வாழ வேண்டிய வயசில், வாழவே ஆரம்பிக்காமல் சாவை பற்றி பேசுறதா? அதுக்காக தான் உன்னை பெற்றவங்க இத்தனை வருஷமா சீராட்டி வளர்த்தாங்க” என்றதும், அவள் முகம் வாடி வதங்க பார்வை தரையை பார்த்தப்படி தழைத்துக் கொண்டவள்...

“நான் உயிரோட வாழனும்னா அது உங்கக்கூட வாழுற அந்த வாழ்க்கையில் தான் இருக்கு” என்று கூறியவளின் வார்த்தையின் அழுத்தம் அவன் சிந்தையை ஆட்டி வைத்தது.

“ஏன் நான் இல்லாமல் இத்தனை வருஷமா வாழலையா... ஒரு ரெண்டு வருஷமா தானே உனக்கும், எனக்கும் பழக்கம் அதுக்கு முன்னால் நீ யாரோ நான் யாரோ அதை நினைவில் வச்சுகிட்டு பேசு” என்றவன் பேச்சில் கடினத்தன்மை வெளிப்பட்டது.

“ஆமாம் யார் இல்லைன்னு சொன்னா? ஒரு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் எப்படி வாழ்ந்தனோ, அது கடந்தகாலம். ஆனால், இனி வரும் காலத்தில் நீங்க இல்லாமல் ஒரு வாழ்க்கையை........” என்று சற்றே உயர்ந்த குரலில் ஆவேசமாக வெடித்துக் கொண்டிருந்தவளுக்கு, இறுதியில் அதை வார்த்தையால் கூட இயம்ப முடியாமல் தூக்கம் தொண்டையை அடைத்துக் கொள்ள ஆற்றாமையில் இமைமூடிக் கொண்டவள்...

“முடியலை விக்ரம்...! என்னால் சுத்தமா தாங்க முடியலை... நீங்க இல்லாத ஒரு இடத்தில் நான் வாழணும்மான்னு நினைக்கும் போதே உயிரை வேரோடு பிடுங்குற மாதிரி வலிக்குது” என்று தன் நெஞ்சை சுட்டியவளின் குரல் ஈனஸ்வரத்தில் ஒலித்தது. அவளின் பேச்சிலும், செயலிலும் அவன் இதயம் இடறி கொண்டிருந்தது.

“வேணாம் நந்தினிமா... நான் சொல்றதை கேளு, என்னுடனான உன் வாழ்க்கை கானல் நீர்... அதை நிஜம்ன்னு நினைச்சு ஏமாந்து போகாதே... உங்க வீட்டில் உனக்குன்னு யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்ல படியா வாழ்க்கையை ஆரம்பி” தன்மையாக கூறியவனின் வார்த்தையில் அவளுக்கு அரோசிகம் உண்டானது.

“ச்சீ... போதும் நிறுத்துங்க! உங்க வாயால் இப்படி எல்லாம் சொல்லாதீங்க அருவெறுப்பா இருக்கு... முதல்ல ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க எங்க வீட்டிலும் சரி, நீங்களும் சரி எனக்கெதிரா எதுவும் சதி செய்தீங்கன்னா வருத்தம் உங்களுக்கு தான்” அவளின் வார்த்தையில் அவனுக்கு இயலாமையின் சினம் பொங்க....

“இங்கே பாரு நந்தினி வாய் இருக்குன்னு கண்டதையும் பேசிட்டு இருக்காதே... நீயும் ஒண்ணை தெரிஞ்சுக்கோ, இனிமே நீ இது செய்தாலும் அது பற்றிய கவலை எனக்கில்லை? ஏன்னா, எனக்கும் இன்னொரு பெண்ணுக்கு கல்யாணம் முடிவு ஆகிருச்சு” என்றவனை மின்சாரம் தாக்கியது போல் அதிர்ந்து பார்த்திருந்தாள்.

“என்ன சொல்றீங்க?” என்றவளின் குரல் சீற்றத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது... அவளின் வேதனையை காட்டிலும் இந்த கோப முகத்தை சற்று எளிதாகவே அவனால் எதிர்கொள்ள முடிந்தது.
“நீ நம்பலைன்னா இதோ பார் பத்திரிக்கை” என்று நீட்டியவனிடம் கரம் நடுங்க பெற்றுக் கொண்டவளுக்கு நெஞ்சில் பூகம்பமே எழுந்தது.

விக்ரமின் பெயர் பக்கத்தில் மலர்விழி என்ற பெயரை கண்ட நந்தினிக்கு உலகமே தட்டாமாலை சுற்றுவது போல் ஆகிப்போனது.

“விக்ரம் இதுக்கு.. இதுக்கு.. எப்படி நீங்க சம்மதிச்சீங்க?”

“என் தனிப்பட்ட விஷயத்தில் முடிவெடுக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு” அவனின் மாறுபட்டு ஒலித்த குரலில் தழைந்திருந்த பார்வையை மெல்ல உயர்த்தி ஏறிட்டவளை இப்போது சலனமில்லாது எதிர்கொண்டான்.

“உங்ககிட்டே இருந்து இப்படி ஒரு பொய்மையை எதிர்பார்க்கலை விக்ரம்... நீங்களும் சராசரி ஆண்களை போல எந்த காரணத்துக்காகவோ உங்களை நீங்களே ஏமாற்றிகிட்டு என்னை கழட்டிவிட துணிஞ்சுட்டீங்களேன்னு நினைக்கும் போது தான் எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு?”

“ம்ச்... போதும் நந்தினி உளறாதே நான் எதுக்காக என்னை ஏமாற்றிக்கணும்? நீயே கொஞ்சம் நிதானமா சிந்தித்து பார், எனக்கான பொருத்தமான இணை நீ இல்லைன்னு புரிஞ்சுகுவ” என்றவனின் வார்த்தையை கேட்டு இமைக்காமல் பார்த்திருந்தாள்... அவளின் உணர்ச்சிக்கு மதிப்பளிக்காமல் தன் பேச்சிலேயே சித்தமாக இருந்தவன்...

“எனக்கு ஏற்ற ஜோடி மலர்விழி தான், அவளுக்கும் கணவன் இல்லை... ஒரு விபத்தில் கணவனை பறி கொடுத்தவள், இந்தப் பொண்ணு தான் எனக்கேற்ற ஜோடி”

“அப்போ என் மேல நீங்க காட்டின காதல் எல்லாம் பொய்யா விக்ரம்?” அவள் குரல் துயரத்தில் கம்மி இருந்தது. அவனோ அவள் ஏதோ ஹாஸ்யத்தை கூறியது போன்று “ஹஹஹா” என்று வாய்விட்டு சிரித்தவன்...

“நான் உன் மேல காட்டினதுக்கு பெயர் காதல் இல்லை நந்தினி... என் மகனை உண்மையான அக்கறையோட நீ பார்த்துக்கிட்ட உன்னை சந்தோசப்படுத்த நான் சொன்ன சில பொய்களில் ஒண்ணு தான் அது... என் மகனுக்காக என் சுயநலத்துக்காக உன்னை பயன்படுத்திகிட்டேன் அவ்வளவுதான்”

“பயன்..படுத்தி..கிட்..டீங்..களா?”

“நான் சொன்னது அந்த பயன்படுத்தி இல்லை, உன்னை என் பையனை பார்த்துக்கிற சிட்டரா தான் பார்த்தேன்... நீ தான் அதுக்கு பேர் காதல் அது இதுன்னு வச்சுகிட்ட... எனக்கே இப்போ நினைச்சா சிரிப்பா தான் இருக்கு” என்று அவளின் நடுமண்டையில் நச்சென்று பாராங்கல்லை தூக்கி போட்டுவிட்டு...

“நீயே சொல்லு நந்தினி உன் வயசுக்கு தான் காதல் சகஜம்... ஆனால், எனக்கு அப்படி இல்லை... நான் உனக்கு அப்போவே அதை புரிய வச்சிருக்கணும், நீயா ஒருநாள் புரிஞ்சுக்குவேன்னு சொல்லிவிட்டது தப்பா போயிடுச்சு... அதான் தப்பை திருத்திக்க பார்க்கிறேன்” அவன் வார்த்தைகள் சிறிது சிறிதாக அவள் உயிரை வேரோடு அறுத்து கொண்டிருப்பதை அறியாது தன் போக்கில் பேசி கொண்டிருந்தான்.

“இந்த வாரக் கடைசியில் எனக்கும், மலர்விழிக்கும் கல்யாணம் முடிஞ்சிரும்... இனி என் மகனை என் மனைவி ஆகப் போகிற அவ பார்த்துக்குவா இனி உன் தயவு எனக்கெதற்கு நான் சொல்லுறது சரிதானே” கழுத்தில் கத்தியை வைத்து அறுத்துக் கொண்டே நான் உன்னை கொலை செய்வது நியாயம் தானே என்று கேட்பது போல் அவள் மனப்பிரமையில் துடிக்கும் உயிரை கட்டுப்படுத்தி கொண்டு கசப்புடன் புன்னகைத்தவள்...

“நீங்க எது செய்தாலும் சரிதான்... உங்களுக்கு தெரியாதா உலக நடப்பா, உங்களுக்கு தெரியாதா நியாயமா? தர்மமா!” உடனடியாக அவனுக்கு சார்ந்து பேசியதில் மனதின் ஓரம் ஏமாற்றத்தின் சாயல் படிந்தது.

“பராவாயில்லையே சீக்கிரம் புரிஞ்சுகிட்டே இதுதான் நந்தினி... சீக்கிரமே நீயும் கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகப்பாருங்க நந்தினி, அப்போ தான் சில விஷயத்தை மறக்க முடியும். தெரிஞ்சோ தெரியாமலோ என் மகன் மேல கொல்லை பிரியம் வச்சுட்டீங்க” என்றதும் ‘உன்மேலையும் தானே டா அதே பிரியத்தை வச்சேன்’ என்று அவள் சித்தம் ஓலமிட்டு கொண்டிருந்ததை அறியாமல்...

“அவனை நான் சமாளிச்சுகிறேன், உங்களுக்கு நீங்க தான் சுய ஆலோசனை பண்ணி அடுத்து நடக்க வேண்டியதை பார்த்துக்கணும்” அவனின் மரியாதையான விளிப்பில், அவள் இதயம் கண்ணாடி துண்டுகளாய் உடைந்து சிதறியது.

இருவருக்கும் இடையில் சில கணங்கள் பலத்த அமைதி நிலவியது... அதுவரை மனமுடைந்து அமர்ந்திருந்த நந்தினிக்கு அவனிடம் அந்த கேள்வியை கேட்டே தீர வேண்டும் என்ற உத்வேகம் பிறக்க, அவனே எதிர்பாராத விதமாக அவனெதிரில் ஆவேசத்துடன் நின்றவளை ஏறிட்டவனின் விழிகளில் விளைந்த தடுமாற்றத்தை மிகக் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டாள்.

“நான் கேட்கிற ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் நீங்க பதில் சொல்லணும் முடியுமா விக்ரம்?” அவள் என்னவோ நிதானமாக தான் வினவினாள்... ஆனால், அவள் வார்த்தையில் இருந்த அழுத்தம் அவனின் குறிக்கோளை அசைத்து பார்த்தது... இருந்தும் இழுத்து பிடித்துக் கொண்ட வைராக்கியத்துடன்...

“நீங்க கேட்காமலே எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டததான் எனக்கு நியாபகம்... இருந்தும் ஏதோ கேட்கணும்னு நினைக்கறீங்க தாராளமா கேளுங்க” அவளை விலக்கி நிறுத்தும் பேச்சின் மூலம் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.

“உங்க மகனை சமாளிக்கிறதுக்கு முன்னாடி உங்களை நீங்களே சமாளிக்க முடியுமா?”

“ஏன் முடியாது அது முடிஞ்சதால் தானே உன்னிடம் தெளிவா பேச முடியுது?” என்றதும் அவள் எதிர்பார்த்திருந்த பதிலில் மூலையில் மின்னல் வெட்ட ஒரு மாதிரியாக சிரித்தவள்...

“சோ, என்னை விரும்பினதை உங்க மனசாட்சிக்கு விரோதமா மறைச்சுக்கிட்டு பேசுறீங்க?” என்றவளின் கூற்றில் தன்னையும் மறந்து உளறிவிட்டதை எண்ணி திகைத்துப் போனான்.

“என்ன வாயடைச்சு போயிட்டிங்க?” நக்கலாக வினவியவளின் கேள்வியில், தன் மனதை கல்லாக்கிக் கொண்டவனின் நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையில், அவன் அடுத்து என்ன கூறுவான் என்பதை அவனை நேசித்த உள்ளுணர்வு அவனுக்கு முன்பாக அவளிடம் உணர்த்தியது.

“இப்போ உனக்கென்ன என் கூட வாழ்ந்தாகனும் அவ்வளவுதானே, வா ஒரு வாரத்திற்கு என் பொண்டாட்டியா இருந்துட்டு போயிரு” வாய் கூசாமல் கூறியவனின் பேச்சு, அவள் உள்ளுணர்வை மெய்பித்ததில் உயிர்பற்ற விரக்தி புன்னகையை உதிர்த்தவள்...

“எனக்கு தெரியும் விக்ரம் நீங்க இதை தான் சொல்லுவீங்கன்னு... நீங்க சொன்னதுக்கு எனக்கு சம்மதம் தான்” என்றவளை திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, தன் நாவை கடைவாயில் அடக்கி விஷமமாக புன்னகைத்தவள்...

“ஆனால் நீங்க என்கூட அப்படி எல்லாம் வாழ துணியமாட்டீங்க... அப்படி என்னுடன் வாழணும்னு நினைச்சிருந்தா அப்படி அமைஞ்ச எத்தனையோ சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்தியிருக்கலாம், நானும் உங்க விருப்பத்தை மறுத்திருக்க மாட்டேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்... எப்படியும் என்னை நீங்க கழட்டி விடணும்னு முடிவு பண்ணிட்டு பேசுறீங்க, உங்ககிட்டே இனிமேல் என்ன பேசினாலும் என் பேச்சு எடுபடப் போறதில்லை... உங்க இஷ்டம் போலவே நான் உங்ககிட்ட இருந்துக்கு விலகிக்கிறேன் நீங்க சந்தோஷமா இருங்க” என்று வறண்ட குரலில் கூறியவளின் விழிகள் ஜீவனை தொலைத்துவிட்டிருந்ததை உணர்ந்தான்.

அவளின் ஜீவனற்ற முகம் அவனை வாள் கொண்டு அறுக்க, அதற்குமேல் அங்கு இருப்பது அவனின் குறிக்கோளுக்கு தான் பங்கம் என்பதை உணர்ந்து எழுந்தவன்...

“சரி அப்போ நான் கிளம்புறேன்... இனிமேல் உங்களை பார்க்கணும்னு சொல்லி தொந்தரவு செய்யமாட்டேன், என்னை மதிச்சு என்னை பார்க்க வந்ததுக்கு மிக்க நன்றி” என்று கரம் கூப்பியவனை அதே உணர்ச்சிதுடைத்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அவள் அங்கிருந்து செல்ல வேண்டுமே என்பதற்காக...

“சீக்கிரமா கிளம்புங்க நந்தினி இருட்டப் போகுது நேரத்தோட வீடு போய் சேர்ந்துக்கோங்க, அதுதான் உங்களுக்கு பாதுகாப்பு” என்றவனை பார்வையால் வெட்டியவள்...

“என் பாதுகாப்பை பற்றி இனி நீங்களும் கவலைப்படத் தேவையில்லை மிஸ்டர்.விக்ரம்... நான் கிளம்பிக்கிறேன் நீங்க கிளம்புங்க” என்றதும் அதற்கு மேல் உன் விருப்பம் என்பது போல் அசட்டையாக தோள்களை குலுக்கியவன் விருட்டென்று நகர்ந்திருந்தான்.

அவளே உயிரென்று கூறியவன், அவளில் தான் அவன் வாழ்வு மலர்ந்தது என்று கூறியவன், இன்று நீ யாரோ எவரோ என்பது போல் உயிருடன் கொன்று புதைத்து அதற்கு ஈம காரியத்தையும் முடித்துவிட்டு, அவளின் உணர்வுகளை மருந்துக்கும் பொருட்படுத்தாமல் செல்லும் அவனை அனுதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, தன் உடலில் உள்ள பலமனைத்தும் வடிய மடிந்து சரிந்தவள் கண்கள் தாரை தாரையாக கண்ணீரை பொழிந்து கொண்டிருந்தது.

ஆற்றுவார் தேற்றுவாரின்றி அழுகையில் கரைந்தவளை அவளின் அலைபேசி ஒலி நிகழ்வுக்கு இழுத்து வர, அவள் வீட்டிலிருந்து வந்த அழைப்பு என்றறிந்து அதை நிராகரித்துவிட்டு, ‘விரைவில் வீட்டுக்கு வந்து சேர்வதாக’ குறுஞ்செய்தி ஒன்றை சேர்ப்பித்துவிட்டு உடலில் உள்ள சக்தியெல்லாம் வடிந்தது போன்று தளர்ந்த நடையுடன் அங்கிருந்து நகர முற்பட, அது முடியாமல் அவள் கால்கள் இரும்பு குண்டை வைத்து காட்டியது போல் கனத்தது.

அப்போது தான் நடை பழகிக் கொண்டிருக்கும் மழலை போல் தளிர் நடையிட்டு சென்றுக் கொண்டிருந்தவளின் செவிகளில்... “நந்தினி ம்மா” என்ற அழைப்பு தேனாக பாய்ந்து மின்னல் வேகத்தில் அவளை உயிர்பிக்கச் செய்ய...


“ஆதன்” என்று கூவியவளின் விழிகள் வேகமாக சுற்று பிரகாரத்தை தேடுதலுடன் அலசி அலைபாய்ந்தது... கண்களுக்கு எட்டிய தூரம் வரை கோவிலுக்கு வந்திருந்த உள்ளூர், வெளியூர் வாசிகளை தவிர அவளுக்கு அறிமுகமான யாரும் தென்படாமல் போகவே அவள் மனப்பிரமை என்றுணர்ந்து ஏமாற்றத்தில் முகம் வாடிப் போக துயரந்தோய்ந்த முகத்துடன் அங்கிருந்து வெளியேறினாள்.

ஜீவன் உருகும்...


***********************

வணக்கம் நட்பூக்களே....

"என்னுள்ளே எங்கோ எங்கும் ஜீவன்" கதையின் முதல் அத்தியாயத்தை பதிந்துவிட்டேன் படித்துவிட்டு தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே.


நட்புடன்

காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-2
எங்கு செல்கிறோம், எப்படி செல்கிறோம் என்று எதையும் உணராது சென்று கொண்டிருந்தவளிடம்... “அம்மா எங்கே போகணும் ஆட்டோவில் ஏறிக்கோங்க” என்ற கூறிய ஆட்டோ ஓட்டுனரை புரியாத பார்வையால் வெறித்துக் கொண்டிருந்தாள்.
அவளின் பார்வையும், முகமும் எதுவோ சரியில்லை என்பதை புலப்படுத்தியது... என்ன நினைத்தாளோ அமைதியாக ஆட்டோவில் ஏறி அமர்ந்திருக்க, ஓட்டுனர் அவளை வியந்து பார்த்தப்படியே வாகனத்தை இயக்கினார். எங்கே செல்ல வேண்டும் என்று அவளும் கூறவில்லை, ஓட்டுனரும் கேட்கவில்லை. அவள் விழிகள் திக்கற்று வெறுமையாக வெறித்து கொண்டிருந்ததை கண்ட ஆட்டோ ஓட்டுனருக்கு அவள் மேல் பரிதாபம் சுரந்தது.

“அம்மா உங்க வீடு வந்தாச்சு இறங்கிக்கோங்க” என்ற ஓட்டுனரின் குரல் கேளாமல், தன் போக்கில் ஒருபக்கமாக தலைசாய்த்து அமர்ந்திருந்தவளை வெகுநேரம் அழைத்தும் பலனில்லாமல் போகவே...

“யம்மா ஆட்டோ விட்டு இறங்குறதா உத்தேசம் இல்லையா?” என்று ஓங்கி உயர்ந்த குரலில், உடல் வெட்டி இழுத்தது போல் திடுக்கிட்டு எழுந்தவள் அவரை கண்டு மலங்க மலங்க விழித்தாள்.

“உன் வீடு வந்திருச்சு மா இறங்கிக்கோ, வயசு பொண்ணு நீ இன்னைக்கு இருக்கிற காலக்கட்டத்தில இப்படி பேதலிச்ச மாதிரி இருந்து ஏதாவது அசம்பாவீதமா நடந்தா யார் பொறுப்பாவா? சீக்கிரமா வீட்டுக்கு போம்மா” என்றவரின் போதனையில் தன்னினைவுக்கு வந்திருந்தாள்... அப்போதும் அவள் எதுவும் கூறாமலே எப்படி சரியாக இல்லம் அடைந்தாள் என்பதை சிறிதும் கவனத்தில் கொள்ளாது இருநூறு ருபாய் தாளை நீட்டிவிட்டு இயந்திரம் போல் சென்றிருந்தாள்.

“யம்மா உன் சாவாரிக்கு காசு கொடுத்தாச்சு இதை வாங்கிட்டு போமா” என்ற ஓட்டுனரின் குரல் யாருக்கோ என்பது போல் கண்டு கொள்ளாது சென்றவளை குழப்பத்துடன் பார்த்தபடி ஓட்டுனர் யோசனையில் ஆழ்ந்தார்.

நந்தினியின் இயந்திரத்தனமான செயல்பாட்டை தன் விழிகளால் தொடர்ந்து கொண்டிருந்த விக்ரமுக்கு இதயத்தை சம்மட்டியால் அடித்து பிளப்பது போல் வலியை தோற்றுவித்தது.

அவளிடம் பாராமுகத்துடன் விடைபெற்ற விக்ரமுக்கு அவ்வளவு சுலபமாக எக்கேடோ கேட்டு செல் என்று அவளை தனந்தனியே விட்டு செல்ல மனம் ஒப்பவில்லை, அவளிடமிருந்து விலகி வந்தவன் கோவிலின் சுற்றுப்புற பிரகாரத்தில் அவளை தன் பார்வையால் தொடரும் படி மறைவாக நின்று கண்காணித்தான்... அவள் நெடுநேரம் துயரத்தில் கரைந்து கொண்டிருந்ததை வலியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் மகன் ஆதனை அங்கு தெரிந்தவரின் பொறுப்பில் விளையாடவிட்ட பிறகே நந்தினியை காண வந்திருந்தான்... ஆதனை நந்தினி முன்பு நிறுத்தினால், நிச்சயம் அவளுடன் உறுதியாக பேச முடியாது என்று அறிந்ததாலே ஆதனை தவிர்த்துவிட்டிருந்தான்.

நந்தினி அங்கிருந்து புறப்பட்டதும் தான் விக்ரம் மகனை தேடி வந்திருக்க, தளர்ந்த நடையுடன் செல்லும் நந்தினியை அடையாளம் கண்டுவிட்டு...

“ஹய் அப்பா! நந்தினி ம்மா” என்றுவிட்டு அவன் சுதாரித்து அவனை கட்டுபடுத்துவதற்குள்...

“நந்தினி ம்மா” என்று கூவிவிட்டிருந்தான். விக்ரம் சடுதியில் மகனின் வாயை தன் கரங்களால் பொத்திவிட்டு, அவனை பார்வையால் கண்டித்து அடக்கிக் கொண்டிருந்த போது தான், ஆதனின் குரல் நந்தினியின் செவியை தீண்டி சுற்றும் முற்றும் பார்வையால் தேடியதை கண்டு ஆதனை பிடித்தபடி விக்ரம் இருளில் மறைந்துக் கொண்டான்.

நந்தினியின் பேதலித்த நிலையை கண்டு பதறியவன், அவனாகவே ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் பேசி அவள் இல்லத்தின் முகவரியை கூறி, அவளை அழைத்துக் கொண்டு வீட்டில் விட்டுவிடுமாறு கேட்டுக் கொண்டவன் கையில் ஓட்டுனருக்கான தொகையையும் கொடுத்து விட்டிருந்தான்.

நந்தினி ஓட்டுனரிடம் திணித்து விட்டு சென்ற இருநூறு ருபாய் தொகையை, அவளிடம் கூறி ஒப்படைப்பதற்குள் பித்து பிடித்தவள் போல் தன் போக்கில் சென்றது ஓட்டுனரை சிந்திக்க வைத்தது.

“இந்த சவாரிக்கு தானே சார் காசு கொடுத்துட்டாரு” இதை என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டே திரும்பியவரின் பார்வை விக்ரமின் வாகனத்தில் படிந்தது... அப்போது தான் அவன் அவரை பின் தொடர்ந்து வந்ததை அறிந்து கொண்டவர், அந்த தொகையை அவனிடமே சேர்பித்துவிட எண்ணி அவனை நெருங்கினார்... அவன் பார்வையோ நந்தினியின் இல்லத்திலேயே நிலைகுத்தி பதிந்திருந்தது.

“என்ன சார் அந்த பிள்ளையை வீட்டுல சேர்க்காம போயிருவேன்னு ஃபாலோ பண்ணிட்டு வந்தீங்களா?” என்றவரின் குரலில் திடுக்கிட்டு திரும்பியவன்...

“ஹாங்!” என்றவனுக்கு தன்னிலை விளங்க சிரத்தை உலுக்கி தன்னை நிலைபடுத்திக் கொண்டவன்...

“அதெல்லாம் இல்லை அவங்க ரொம்ப ஒரு மாதிரியா இருந்தாங்க அதான்... அதனால் தான்...” என்று திணறிக் கொண்டிருந்தவனின் தவிப்பை புரிந்துக் கொண்டவர்...

“கவலைப்படாதீங்க தம்பி! நானும் ரெண்டு பெண் பிள்ளையை பெற்ற அப்பா தான் அந்த பிள்ளையை ஏற்றும் போதே ஏதோ சரியில்லைன்னு கவனிச்சுட்டேன்... அதனால் தான் இறங்கும் போது அதட்டினேன்... ஆனா அப்போவும் அது தெளிஞ்சா போல தெரியலை பாவம்! அதுக்கு என்ன கஷ்டமோ” என்றவர்...

“சரி தம்பி அந்த பிள்ளை சவாரிக்கு நீங்க தான் காசு கொடுத்துட்டீங்களே, அந்த பிள்ளைகிட்ட திருப்பி தரப் பார்த்தா கண்டுக்காமல் வேகமா போயிருச்சு இந்தாங்க ரூபாய்”

“இல்லை அண்ணா, இருக்கட்டும்... நீங்களே வச்சுக்கோங்க” என்றவனை மறுத்தவர்...

“இல்லை தம்பி எனக்கு சவாரிக்கு ஆனது மட்டும் போதும்... நீங்க தரலைன்னாலும் நான் அந்த பெண்ணை எப்படியாச்சும் விசாரிச்சு கூட்டிட்டு வந்து விட்டிருப்பேன் அதுவும் என் பொண்ணு மாதிரி தான் பிடிங்க” என்றவரின் நற்குணம் கண்டு மாட்சிமை உருவானது.

“உங்க பொண்ணுகளுக்கு அண்ணன் கொடுத்ததா வச்சுக்கோங்க... கிளம்புங்க, உங்களுக்கு அடுத்த சவாரிக்கு நேரம் ஆகிரும்” என்று அவர் மறுக்க வழியில்லாமல் கூறியிருக்க...

“உங்களுக்கும், அந்த பிள்ளைக்கும் என்ன கவலையோ தெரியலை! ஆனா சீக்கிரமே அந்த கவலை எல்லாம் சரியாகி ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கணும் தம்பி” அவர்களின் பிரச்சனை என்னவென்றும் அறியவில்லை, அவர்கள் யார் என்றும் கேட்டுக் கொள்ளவில்லை, ஆனால் மிகவும் நாகரீகமாக நல்லெண்ணத்துடன் வாழ்த்திவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தார்.

அவரின் வாழ்த்து மட்டும் நிஜமானால் எப்படியிருக்கும் என்று எண்ணியவனுக்கு அது கனவில் கூட நடவாத ஒன்று என்ற உண்மை நெஞ்சை பிளப்பது போல் வலித்தது.

“அப்பா நந்தினி ம்மா” என்று உதடு பிதுக்கி அழுக காத்திருந்த மகனை தேற்ற வழியில்லாமல் அவனை பச்சாதாபம் பொங்க பார்த்தவனுக்கு நெஞ்சில் குருதி வழிந்தது.

“என் உயிரில் ஜனித்த உனக்கு என் பாவம் உன்னையும் வாட்டுதே, இதுதான் விதி போல!” என்று வேதனையுடன் உடைந்த குரலில் கூற, அவனுக்கு புரிந்ததோ இல்லையோ தந்தையின் சொல் மிகவும் வருந்தக் கூடியது போல என்பது போல் அவன் அழலானான்... மகனை தேற்றியபடியே வாகனத்தை ஓட்டியவனுக்கு நந்தினியுடனான கடந்தகாலம் நினைவுகளை திரட்டி கொடுக்க அவற்றை எண்ணியே இனி வாழ்ந்துவிடலாம் தன்னை தேற்றிக் கொள்ள முயற்சித்தான்.


****************
தஞ்சாவூர் ஒரத்தநாடு சுற்றிலும் நிறைந்த வயல் வெளிகளுக்கிடையே ஆங்காங்கே இருப்பிடம் சூழ்ந்திருக்க, பச்சைப்பசேல் என வளர்ந்திருந்த நாத்துகள் கண்ணுக்கு குளிர்ச்சியை தந்துக் கொண்டிருந்தது... இயற்கை காற்றை சுவாசித்தபடி எந்த வித கவலையுமின்றி ஆசுவாசமாக தன் தோழியை காண தன் வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தாள் நந்தினி.

ரேவதி, துரைசாமியின் இளைய மகளான நந்தினி வீட்டிற்கு செல்லப் பெண்... தந்தை விவசாயத்துடன் தேங்காய் வியாபாரியாக இருந்தார்... அவளின் மூத்த சகோதரி அகிலாவை திருவையாறில் சதீஷ் என்பவருக்கு திருமணம் செய்து அவர்களுக்கு தாரணா என்ற மகள் இருந்தாள்... தமக்கையின் திருமணத்திற்கு பிறகு வீடே அவள் ராஜ்ஜியத்தில் தான் இயங்குவது போல் சுதந்திரமாக சுற்றி வந்து கொண்டிருந்தாள்.

அவளின் சுதந்திரமான வாழ்வை கண்டு அகிலா சில நேரம் பொறமை கூட கொள்வது உண்டு அப்போது ஆற்றமாட்டாது தங்கையிடம் அங்கலாய்க்கும் போது...

“உனக்கென்ன டி என்னை கல்யாணம் பண்ணி கொடுத்ததும் சுதந்திரமா சுத்திட்டு இருக்கிற, எனக்கு போட்ட பலான பல கட்டுப்பாடுகளை உனக்கு போடுறதில்லை, இதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும் போல” என்று கூறி ஆற்றாமையை தீர்க்க எண்ணும் போது...

“ஏன் அகி நீயும் கல்யாணம் பண்ணும் போதே இந்த படத்தில் வர மாதிரி லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடியிருந்தேனா சுதந்திரம் கிடைசிருக்கும்ல” என்று குறும்பாக கூறி கண்சிமிட்டுவதை காண அகிலாவுக்கு திக்கென்று ஆகிப்போகும்.

“அடிப்பாவி! அப்போ உன் கல்யாணத்துக்கு அப்படி தான் பண்ண பிளான் பண்ணியிருக்கியா?”

“ச்சே... ச்சே... என் பிளான் எல்லாம் வேற, நான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லையாக்கும் கடைசி வரைக்கும் இந்த வீட்டுக்கு நானே ராணியாக்கும்” என்று கூறி மேலும் வயிற்றில் புளியை கரைப்பாள்.

“பார்த்து எதுக்கும் அம்மா காதில் இதை விழாமல் பார்த்துக்கோ, அப்புறம் வார தையிலேயே பரிசம் போட்டிறலாம்ன்னு மாப்பிள்ளையை நிறுத்திர போறாங்க” என்று தங்கையிடம் வம்பிழுத்து பேசுபவளுக்கு உண்மையிலேயே தனக்கு கிடைக்காதது தங்கைக்காவது கிடைக்கட்டுமே என்ற எண்ணம் கொண்ட பாசக்கார தமக்கை அவள்.

தன் தோழியின் வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தியதும்... “ஹேய் நந்து வா! வா! உனக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” என்று ஆரவாரத்துடன் தோழியை வரவேற்றாள் ரம்யா.

“என்னடி சொன்னதை விடவும் சீக்கிரமாவே வந்துட்ட?”

“அதான் காலேஜ் முடிஞ்சிருச்சே இனி அடுத்து எம்.காம் அப்பளை பண்ணுற வரைக்கும் செம போர் அடிக்கும், அதுதான் எங்காச்சு அப்பாயிண்ட்மென்ட் பிக்ஸ் பண்ணி கிளம்பிடுறது டி” என்று கூறி களுக்கென்று சிரித்தவளை கண்டு லேசாக பொறாமை எழும்பியது...

“ம்ஹும்... நீ கொடுத்து வச்சவ டி. உன் பேரண்ட்ஸ் உன்னை வெளியே போக அலோவ் பண்றாங்க, எங்க வீட்டில் வாசல் படியை தாண்டினா தொடப்பக் கட்டையை தான் தூக்குறாங்க” பெருமூச்சு விடுத்தபடி சலித்துக் கொண்டவளின் பேச்சு வேடிக்கையாக இருக்க இளமுறுவல் பூத்தாள்.

“வீடு தேடி வந்த என்னை இப்படியே வாசலோட பேசி அனுப்பி வைக்கிறதா பிளான் போட்டுட்டியா” நந்தினி இயம்பியதும் தான் தன் தவறை உணர்ந்து உதட்டை கடித்துக் கொண்டவள்...

“சாரி.. சாரி டி.. உன்னை பார்த்த குஷியில் அதை மறந்தே போயிட்டேன். நீ உள்ளே வா இதை அம்மா பார்த்துச்சு அப்புறம் பொறுப்பில்லை, கடுகில்லை, சீரகமில்லைன்னு கரிச்சு கொட்டுவாங்க” என்று வேடிக்கையாக கூறி சிரித்தபடி தோழியுடன் வீட்டுக்குளே நுழைய...

“வாம்மா நந்தினி என்ன சௌக்கியமா? ரொம்ப நாளா இந்த பக்கமே காணோம்” என்று விசாரித்தார் ரம்யாவின் அன்னை கோகிலா.

“காலேஜ் போனா தான் நேரமே போதறது இல்லையே ஆண்டி... ரம்யாவும் அடிக்கடி பிராஜக்ட்ன்னு வெளியில் தானே போயிட்டு இருந்தா அதான் வர முடியலை”

“ஆமாம்மா அதை ஏன் கேட்கிறா? பிராஜக்ட் அது இதுன்னு சொல்லிட்டு டவுனுக்கு போயிட்டு வரதுக்குள்ள எனக்கு உயிர் போய் உயிர் வந்திரும்... அதனால் தான் அவளை மேலே படிக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டோம்... பொண்ணுங்க உங்களை எல்லாம் கால காலத்துல கல்யாணம் பண்ணி கொடுத்துட்டா தானே பெற்றவங்க எங்களால் அக்கடான்னு இருக்க முடியும்”

“ஆமாம் ஆனா ஊன்னா இதையே சொல்லுங்க, நந்தினி பாருங்க அடுத்து பிஜி அப்ளை பண்ணப் போறா, அவளுக்கு மட்டும் என்ன காலேஜும் பிராஜக்ட் சென்டரும் அவங்க வீட்டு மொட்ட மாடியிலேயா இருக்கு? என்னை விட அவளுக்கு தான் அதிக சிரமம் அவளே போயிட்டு வர போறா, நீங்க தான் கல்யாணம் அது இதுன்னு சொல்லி எனக்கு முட்டுக்கட்டை போட்டுட்டு இருக்கீங்க”

“நீங்க சுலபமா சொல்லிருவீங்க பெத்தவங்க எங்களுக்கள்ள அந்த வேதனையும், கஷ்டமும் தெரியும்...” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே...

“கோகிலா க்கா.. கோகிலா க்கா” என்று விழித்தப்படி பக்கத்து வீட்டு பெண்மணி அழைக்க...

“வந்துட்டாளா சில்வண்டை கூப்பிட்டுகிட்டு” என்று முகம் சுளித்து சலித்துக் கொண்டவர்...

“ஏய் ரம்யா நந்தினிக்கு ஏதாவது குடிக்க கொடு நான் போய் பார்த்துட்டு வரேன்” என்று விட்டு நகர்ந்திருந்தார்.

“யாரு டி அது ஆண்டி சொல்லுற ரோதனை கேஸ்?”

“வந்ததும் விசாரணை கமிஷனா? ஈவ்னிங் வரைக்கும் இங்கே தானே இருக்கப் போகிற பொறுத்திருந்து பாரு நீயே தெரிஞ்சுக்குவ” என்று விட்டு கல்லூரி கால பேச்சிற்கு தாவியிருந்தனர். அவர்களின் கல்லூரி ரகசிய பேச்சுகள் நந்தினி கேட்ட கேள்வியை மறக்கடித்தே விட்டிருந்தது.

கோகிலா உள்ளே வரும் போது அவருடன் அந்த சிறுவன் இருக்க அவனை ஹாலின் ஓரமாக விட்டவர்... “இங்கே பாரு ஆதன் இது தான் உன் இடம் இங்கிருந்து ஒரு அடிக்கூட நகரக்கூடாது, உட்கார்ந்த இடத்தில் குப்பை போடக்கூடாது அப்புறம் இத்யாதி.. இத்யாதி..” என ஏகத்திற்கும் அவர் கட்டளைகள் பிறப்பித்து கொண்டிருக்க, அந்நேரம் ரம்யாவுடன் பேசிக் கொண்டே அங்கே சமீபித்த நந்தினியின் செவிகளில் அவரின் கட்டளைகள் விழவே அவளே சற்று அயர்ந்து தான் போனாள்.

அவள் எண்ணமோ ‘அவனே சின்ன பையன் இப்போதுதான் எல்கேஜி செல்வது போல் இருப்பவன், அவனுக்கு இத்தனை கட்டளைகளா?’ என்றெண்ணி பாச்சாதாபம் கொண்டவள் அதை மறையாது தன் தோழியிடமும் பகிர்ந்தாள்.

“ஏன் ரம்யா அவனே ஓடியாடி விளையாடுற சின்ன பையன் அவன்கிட்டே போய் இத்தனை ரூல்ஸ் போடுறாங்க உங்க அம்மா” என்று தோழியின் காதை கடித்தாள்.

“அதுவா காலையில் கேட்டியே தொல்லை அது இதுதான்” என்றதும் ஷாக் அடித்தது போல் அவளை அதிர்ந்து பார்த்தாள்!

“அவன் குழந்தை ரம்யா அவனை போய் அது இதுன்னு சொல்லுறதும் இல்லாமல் தொல்லைன்னும் வேற சொல்றீங்க?”

“ம்ச்., நீ வேற ரொம்ப உருகாத டி... அவனுக்கு கொஞ்சம் இடம் கொடுத்தா ரொம்ப செல்லம் கொண்டாடிருவான், அதனால் தான் இப்படி... ஆமாம் நீ வா நாம பேசிட்டு இருந்த டாப்பிக் பேசி முடிச்சுட்டு அப்புறம் எதுனாலும் பேசுவோம்” என்று திசை திருப்பியிருக்க நந்தினியும் அதை அப்போது பெரியதாக எண்ணாமல் தோழி கூறியது போல் இருவரும் உரையாடலில் ஆழ்ந்துவிட்டனர்.

அவர்கள் பேச ஆரம்பித்ததும் உலகமே மறந்திருக்க மதிய நேரம் உணவிற்காக கோகிலா அழைத்த போதுதான் இவ்வுலகத்திற்கே வந்தார்கள்...

“ஏய் ரம்யா! ரெண்டு பேரும் காலையில் இருந்து பேசியே சலிக்கறீங்க, மணி ரெண்டாகுது வாங்க வந்து சாப்பிடுங்க” என்று அழைத்ததும் தான்...

“ஓ மை காட் மணி ரெண்டா” என்று நந்தினி வாய் பிளக்க...
“அடியேய் நமக்கு இதென்ன புதுசா? வா இன்னும் கால்வாசி கூட பேசி முடிக்கலை, போய் சாப்பிடுட்டு வந்து மீதியை தொடருவோம் வா” என்றழைத்ததும் நந்தினியும் அவளுடன் சென்று உணவருந்த அமர, அதே வேளை ஆதனும் தன் குட்டி டிபன் பாக்ஸை திறந்து உணவருந்திக் கொண்டிருந்தான்... அவன் சாப்பிடும் வேகம் குறைவு என்றாலும் ஒவ்வொரு கவளத்திற்கு அவன் தேடல் பனிப்புடன் நிலத்தை சுற்றி ஓடிக் கொண்டிருப்பதை கண்டவளுக்கு மனதை பிராண்டியது.

“என்ன டா பூமியில் புதையல் இருக்கான்னு தேடிட்டே சாப்பிடுறான்னு பார்க்கறியா? அது வேற ஒன்னும் இல்லை ஒரு பருக்கை கீழ இருந்தாலும் அம்மா முட்டிக்கு முட்டி தட்டிரும் அதனால் தான் அவன் அப்படி பம்பி பம்பி சாப்பிடுறான்” என்று கூறிய தோழியின் பேச்சு அத்தனை உவப்பாக இல்லை நந்தினிக்கு!

அவன் யார் மகனாக இருந்தாலும் குழந்தை தானே அவர்களுடன் உட்கார வைக்காமல் தனியே உட்கார்த்தி இருப்பதே தவறென்றால், அவனை ஓரம் கட்டி உட்கார வைத்ததும் அல்லாமல் அவன் பயந்து பம்பி உணவருந்தும் படி வைப்பது நந்தினிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இதே அவள் அன்னையாக இருந்திருந்தால் எதிரியின் குழந்தையாக இருந்தாலும் அவரை ஆதரித்து இருப்பாரே என்று நினையாமல் இருக்க முடியவில்லை.

ஆனாலும், அது என்ன அவள் வீடா அவள் தோழியின் வீடாயிற்றே, அங்கே அவர்களின் சட்ட திட்டத்தில் அவள் தலையிட்டால் அது நன்றாக இருக்குமா என்றெண்ணி வாய் மூடிக் கொண்டாள்.
அனைவரும் உணவருந்திவிட்டு எழுந்துக் கொள்ள ரம்யா தன் அன்னைக்கு உதவ வேண்டி சமயலறைக்கு சென்ற வேளை, அவளுக்கும் சிறுவனுக்குமான தனிமையில் அவனை வாத்சல்யத்துடன் பார்த்திருந்தாள்... அதற்கு எதிரொலியாக அபிலாஷையுடன் பார்த்த ஆதனின் கண்கள் அதுவரை இல்லாத அளவிற்கு ஒளிர்ந்தது நந்தினிக்கு புலப்பட்டுவிட்டது, அதற்குமேல் தாமதியாமல் தயக்கத்தை விடுத்து...

“இங்கே வா” என்று கரத்தை நீட்டி அழைக்கவும் ஆதன் வேகமாக எழுந்து சில எட்டுக்கள் வைத்தவன், சமையலறையிலிருந்து வந்த கொலுசொலியில் நந்தினியை மிரண்டு பார்த்தபடி அவன் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று அமர்ந்துவிட்டிருந்தான்.

அவனின் பயம் எதனால் என்று சட்டென்று புரிந்துக் கொண்ட நந்தினிக்கு சிறுவனின் நிலையை எண்ணி அனுதாபம் பொங்கியது. அவளாக போய் பேசலாம் என்று எழுந்தவளுக்கு கோகிலாவின் எச்சரிக்கை பார்வையும், ரம்யாவின் அதட்டலும் எதையோ உணர்த்த தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்... ஆனால் சிறுவனை அப்படியே விட்டுவிட முடியாமல் அடிமனம் அவனையே சுற்றிக் கொண்டிருக்க, அவளின் எண்ணத்தை நிறைவேற்றும் படி அன்றே அவனிடம் பேசும் சந்தர்ப்பமும் வாய்த்தது.

ஒருவரின் சந்திப்பை ஏற்படுத்துவது விதியின் சதி திட்டம் என்று அப்போது நந்தினிக்கு சுத்தமாக புரிந்திருக்கவில்லை!


*************************************

வணக்கம் நட்பூக்களே...
தாமதத்திற்கு மன்னிக்கவும் மக்களே... இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்துவிட்டேன்... “என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதையின் அத்தியாயம்-2 பதிந்துள்ளேன்... வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் பதிவிடப்படும்... படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் மக்களே!

கருத்துத் திரி:
https://www.srikalatamilnovel.com/community/threads/காருராமின்-என்னுள்ளே-எங்கோ-ஏங்கும்-ஜீவன்-கருத்துத்-திரி.3160/

நட்புடன்

காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-3
நந்தினி, ரம்யாவிடம் சகஜமாக பேசிக் கொண்டிருந்தாலும் காலையிலிருந்து ஒரே இடத்திலேயே அமர்ந்து காணொளி விளையாட்டிலேயே மூழ்கியபடி அமர்ந்தவன் மேலேயே அவள் கருத்து நிலை கொண்டிருந்தது... அவன் கண்கள் தூக்கத்திற்கு கெஞ்சி கொண்டிருப்பதும், தூக்கத்தில் சொக்கி விருட்டென்று கண் விழிப்பதுமாக இருப்பதை கண்ட நந்தினியை அவஸ்தைக்குள்ளாக்க தாங்க முடியாமல் ரம்யாவிடம் கூறிவிட்டிருந்தாள்.

“ஏய் ரம்யா அவனுக்கு தூக்கம் வருது போல அவனை தூங்க சொல்லலாம்ல”

“இல்லை டி அது சரிவராது யாரவது வந்துட்டா அவனை உள்ளே அனுப்ப முடியாது”

“சரி அப்போ உள்ளயாச்சும் தூங்க வைக்கலாம்ல”

“அதுக்கு நாங்க யாராவது அவன் கூட இருக்கணுமே... இவனை தூங்க வச்சு பார்த்துகிட்டு இருந்தா வீட்டில் இருக்கிற மற்ற வேலைகளை எப்படி செய்யுறதாம்?” என்று கூறியவளின் அலட்சிய தொனி மேலும் அவளிடம் அதை பற்றி பேசவிடாமல் தடையிட்டிருந்தது.

“என்னமா கோகிலா சௌக்கியமா?” என்ற குரலை கேட்டு ரம்யாவும், அவள் அன்னையும் எழுந்தோடிச் சென்றதிலேயே அவர்களுக்கு மிக நெருக்கமான உறவு இனி தான் இங்கே அதிகப்படி, அதற்கு முன் நாம் கிளம்புவது உசிதம் என்றெண்ணி புறப்பட எத்தனித்த சமயம்...

“அவரு வேலைக்கு போயிட்டாரு மாமா நைட் தான் வருவாரு” என்று பேசிக் கொண்டே வந்த கோகிலா...

“ஏய் ரம்யா போய் பெரியப்பாவுக்கு தண்ணி கொண்டு வா” என்று வேலை ஏவிவிட்டு, நந்தினியை நெருங்கியவர்...


“நந்தினி கொஞ்ச நேரம் அந்த பையனை கூட்டிட்டு போய் பக்கத்து ரூமில் வெயிட் பண்ணுமா, இவர் அவருடைய அண்ணன் முறை ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்காரு, ரம்யாவும் கூட இருக்கணும், எனக்காக அவனை பார்த்துகிட்டு பக்கத்து ரூமில் இருக்கியா?” என்றதும் இதே வேறு ஏதேனும் சூழ்நிலை என்றால் எப்படியோ, ஆதனிடம் அன்று பேச சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த நந்தினிக்கு அதற்கான சமயம் அதுதான் என்பது புரிந்து விட, உள்ளார்ந்த உற்சாகத்துடன் தலையாட்டியவள் முகத்தை வெகு சாதாரணமாக வைத்துக் கொண்டு...


“சரி ஆண்டி நீங்க பேசுங்க நான் பார்த்துக்கிறேன்” என்று கூறி ஆதனை அழைத்துக் கொண்டு பக்கத்து அறைக்கு சென்றுவிட்டிருந்தாள்.

ஆதனுக்கும் அவளுடனான தனிமை மிகுந்த ஆறுதலாக இருக்க அவளையே ஏக்கத்துடன் பார்த்திருந்தான். அவனின் அபிலாஷை கண்டு நெகிழ்ந்தவள்... “இங்கே வா” என்று அழைத்ததும்...

“வேண்டாம் நீங்க இங்கே வரீங்களா?” என்று அவன் தரையில் அமர்ந்திருந்தபடி பக்கத்தில் கைகாட்ட, அவன் பயம் அப்பட்டமாக வெளிப்பட்டதை கருத்தில் கொண்டு தானே எழுந்து அவனருகில் அமர்ந்துவிட்டாள்.

“உங்க பேர் என்ன?”

“ஆதன்” என்று கூறி முறுவலித்தான்.

“ஆமாம் காலையில் இருந்து வீடியோ கேம்லையே விளையாண்டிட்டு இருக்கீங்களே உங்களுக்கு கேம்ஸ் தான் ரொம்ப பிடிக்குமா கண்ணு வலிக்காதா?”

“வலிக்கும்” என்று மட்டும் கூறியவனை ஆராய்ச்சியாக பார்த்தாள்.


“அப்புறம் ஏன் அதையே பார்த்து விளையாடனும், வேறெதுவும் பண்ணலாமே, உங்களுக்கு வேறென்ன பிடிக்கும்?”


“எனக்கு டிராயிங் வரைய ரொம்ப பிடிக்கும், அப்புறம் டான்ஸ் ஆட ரொம்ப பிடிக்கும், அப்புறம் சீசா விளையாட பிடிக்கும்” என்று அடுக்கிக் கொண்டே போனவனை...


“போதும்! போதும்! சரி டிராயிங் தான் வரைய இண்டரஸ்ட் இருக்குள்ள, அப்புறம் அதை வரையலாம் தானே கண்ணுக்கும் ரெஸ்ட் கிடைக்கும்”


“அதுவா...” என்றவன் விழிகள் அறையின் வாசலில் பதிய அவளையே தயக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவன்...


“நான் சொன்னா நீங்க கோகி ஆண்டிகிட்ட சொல்லிருவீங்களா?” என்று மிரட்சியுடன் கேட்க, அவன் அதில் முன்பே பாதிக்கப்பட்டிருப்பது புரிந்துக் கொண்டவள்...


“ம்ஹும்... நான் சொல்லவேமாட்டேன்”


“ம்ம்ம்... நான் வரைஞ்சா ரப்பர்ல அழிப்பேனா அதனால் குப்பையான ஆண்டி திட்டுவாங்க, அப்புறம் அப்பாகிட்டேயும் சொல்லுவாங்க, அவரும் என்னை திட்டுவாரு... அதனால அப்பா தான் வீடியோ கேம் விளையாடு அவங்களை தொந்தரவு பண்ணாதேன்னு சொல்லி வாங்கிக் கொடுத்தாரு”


“சரி இதெல்லாம் இருக்கட்டும் உன் அம்மா எங்கே, வேலைக்கு போறாங்களா?”


“எனக்கு அம்மாவே இல்லையாமே, அப்பா மட்டும் தானாம் நான் அம்மாவை பார்த்ததே இல்லை” என்றவன் முகம் அறியாமையில் உணர்ச்சித் துடைக்கப்பட்டிருக்க அதை கேட்டுக் கொண்டிருந்த நந்தினிக்கு அவளையுமறியாமல் விழிகள் பளபளக்க மனதில் பாரம் ஏறி அமர்ந்துக் கொண்டது.


“ஒஹ்! உன் அம்மா சாமிகிட்டே போயிட்டாங்களா?”


“தெரியலையே?” என்று கரங்களை விரித்து காண்பித்து உதட்டை பிதுக்கியவனின் முகம் காட்டிய அறியாமை கண்டு உருகிப் போனவள், அவனை ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டதும் கண்களில் கண்ணீர் திரண்டு வெளியேறியிருந்தது... அதை அவன் அறியாமல் மறைத்துக் கொண்டவள், தன்னை சமன் செய்துக் கொண்ட பிறகே அவன் தாடையை பற்றி முகம் பார்த்தப் படி பேசலானாள்...


“சரி இப்போ வேணா நீ டிராயிங் பண்றியா, ஆண்டி நான் பார்த்துக்கிறேன்”


“ம்ம்ம்... நிஜமாவா!”


“நிஜமா தான்!”


“சரி” என்றவன் அவன் பையில் இருந்த நோட்டை எடுத்துக் கொண்டவன் அவனுக்கு தெரிந்த வரையில் சில படங்களை அவன் வயதிற்கேற்ப நன்றாகவே வரைந்திருக்க, நந்தினிக்கு அவன் திறமை புரிந்தது.


“வாவ்! சூப்பரா டிராயிங் பண்ணுற” என்று பாராட்டிய நந்தினியின் வார்த்தையில் களிப்படைந்தவன்...


“டிராயிங்ல நான் தான் பர்ஸ்ட்” என்றவனின் முகம் அத்தனை நேரம் இருந்த வாட்டம் மறைந்து தண்ணீர் தெளித்த ரோஜா போல் மலர்ந்து விகசித்தது.


மேலும் அவனிடம் பேச்சு கொடுத்து கொண்டே அவனுடன் நேரத்தை செலவிட அவளுடனான துணை ஆதனுக்கு மிகவும் பிடித்துப் போனது.


“ஆண்டி இதுல உங்க நேம் போன் நம்பர் எழுதி தாங்க” என்று சிறிய கைப்புத்தகத்தை நீட்டியவனை புருவம் சுருக்க யோசனையுடன் பார்த்தவள்...


“எதுக்கு?” என்று விசாரித்தாள்.


“நான் யார் கூட எல்லாம் கிளோசா பேசுறானோ, அவங்ககிட்டே போன் நம்பர், நேம் வாங்கிட்டு தான் பேசணும்னு அப்பா சொல்லியிருக்காரு” என்றதும் அவன் தந்தை கூறிய காரணம் ஸ்பஷ்டமாக விளங்கியது.


‘இதை எல்லாம் சரியா செய்ய தெரிஞ்ச உங்க அப்பாவுக்கு, ஏன் தன் பையனோட சுதந்திரம் பறிபோகாத வகையில் ஒரு இடத்தில் தங்க வைக்கனும்னு தெரியலை’ என்று மானசீகமாக ஆதனின் தந்தையை கருவிக் கொண்டாள்.


“ஆண்டி எழுதித் தர மாட்டீங்களா?” என்றவனின் குரலில் இருந்த தயவு அவளை ஏதோ செய்ய, அவன் புத்தகத்தை பெற்று அதில் அவள் பெயர், அலைபேசி எண் மற்றும் முகவரியையும் சேர்த்தே எழுதி கொடுத்தவள்...


“இதில் என் வீட்டு அட்ரஸ் கூட எழுதிட்டேன், உனக்கு எதாவது ஒண்ணுன்னா நேரா என் வீட்டுக்கே வந்து கேட்கலாம் சரியா” என்று வேடிக்கையாக கூறி சிரிக்க, ஆதனுக்கு அவள் துணையும், ஆதரவும் தினமும் வேண்டும் என மனம் ஏங்கியது... அதை அவன் வெளிப்படையாக பேச எத்தனிக்கும் போது கோகிலா, ரம்யா அறைக்குள் நுழைய, அவர்களுக்கு பயந்து அவசர அவசரமாக தன் புத்தகத்தை ஒன்று விடாமல் பையில் அடுக்கி வைத்துவிட்டு நந்தினியை வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.


அவனின் பாசப் பார்வையை கண்ட கோகிலாவுக்கு அபாய மணி அடிக்க, சிறிதும் தயங்காமல், தள்ளிப் போடாமல்... “இங்கே பாரு நந்தினி குழந்தையாவே இருந்தாலும் ஒரு சிலர்கிட்டே ஒதுங்கி தான் இருக்கணும், அந்த ரகம் தான் இந்த பையனும்... இவங்க அப்பாவும்! நீ அறியா பிள்ளை அவன்கிட்டே பாசப்பறவையை வளர்க்கவிடாதே அது உன் வாழ்க்கைக்கு ஆபத்தை விளைவிக்கும்” என்று அடிக்குரலில் எச்சரித்து வைக்க நந்தினிக்கு பகீர் என்றது.


ஆதனின் முகத்தில் இருந்த ஏதோ ஒன்று அவன்பால் அவளை ஈர்த்துக் கொண்டே இருந்தது அதில் துணிச்சல் வரப் பெற்றவள்... “ஏன் ஆண்டி இப்படி சொல்றீங்க?” என்று அவளும் தயங்காமல் கேட்டே விட்டிருந்தாள்.


“என்னன்னு சொல்றது நந்தினி நீயும், என் பொண்ணு ரம்யாவும் எனக்கு ஒண்ணுதான்... அதனால் சொல்றேன் கேட்டுக்கோ”


“அந்த பையனுக்கு அம்மா இல்லை”


“ஆமாம் அவன் சொன்னான்” என்று கூறிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டிருக்க, அவரோ அதற்கு எந்த எதிரொலியும் காட்டாமல் தன் பேச்சை தொடர்ந்தார்...


“நீ என்ன நினைச்சிருப்ப அவங்க அம்மா இந்த உலகத்திலேயே இல்லைன்னு நினைச்சிருப்ப சரிதானே”


“ஆமாம்” என்றாள்.


“ஆனா அதுதான் உண்மை இல்லை, அந்த பையனோட அம்மா ஓடிப்போயிட்டா... அதுவும் சும்மா ஓடிப் போகலை, போறப்போ இந்த பையனுக்கு அந்த விக்ரமை அப்பாவே இல்லைன்னு சொல்லிட்டுத்தான் போனா” என்க நந்தினிக்கு மனதில் திகில் பிடித்துக் கொண்டது.


“என்னடி விக்ரம் யாருன்னு யோசிக்கிறயா? அந்த விக்ரம் தான் அந்த பையனோட அப்பா” என்று ரம்யா கூற, நந்தினிக்கு ஒன்றுமே புரியாத நிலை...


“பையனே இல்லைன்னு சொல்லிட்டு அவ போயிட்டா, ஆனா அந்த பையன் கோர்ட்ல கேஸ் போட்டு நிரூபிச்சுட்டதா சொல்றாங்க... அதெல்லாம் எந்தளவுக்கு உண்மைன்னு தெரியலை” என்றதும் நந்தினிக்கு ஏதோ ஒன்று முரண்பாடாக பட, அவர் கூறிய விஷயத்திலும் ஏதோ தவறிருப்பதாகப்பட்டது.


“நீ யோசிக்கலாம் என்னடா ஆண்டி தெரியாமலே அபாண்டமா பேசுறாங்களேன்னு... ஆனால் நல்லா யோசிச்சு பாரு, வெளியிடத்துப் பொண்ணுன்னா அந்த பையன் மேல தப்பில்லாம இருக்கலாம்ன்னு நம்பலாம்... ஆனால் அவன் கட்டிகிட்டவ அவனோட சொந்த அத்தை பொண்ணு, சின்ன வயசில் இருந்து நல்லா தெரிஞ்சவங்க, அப்படிப்பட்ட அவன் ஆம்பளை இல்லைன்னு அபாண்டமா பழி போடுவாளா? அதுவுமில்லாம அவன் யார் எது சொன்னாலும் சரி சரின்னு போற ஆளு, தன்னால எதுவும் முடியாதுன்னு கோழைத்தனம், இதுவே எங்கேயோ தப்பிருக்கிறதா காட்டிக் கொடுக்குது தானே அதனால் தான் சொன்னேன் பார்த்து இருந்துக்கோ”


“ஆமாம் டி அம்மா சொல்றது சரிதான், ஆள் தான் பார்க்க நல்லா இருப்பான் ஆனால் சரியான தயிர் சாதம்” என்ற இருவரின் கூற்றும் நந்தினிக்கு அத்தனை ஒப்புதலாக தோன்றவில்லை... அவர்களின் கருத்தில் ஏதோ ஓட்டை இருப்பதாகவே தட்டுபட்டது... ஒருவன் தோற்றத்தில் நன்றாக இருந்தால் பேடியாக இருக்க வேண்டும் என்றோ, அமைதியாக சென்றால் கோழை என்றோ அர்த்தம் எண்ணிக் கொள்ள முடியாதே, அததற்கு சூழ்நிலை என்ற ஒன்று உண்டல்லவா? அவர்கள் கூற்றுப்படியே பார்த்தால் கூட தன் மனைவி கூறியதற்கு தனக்கு உரிமை இல்லாத மகனை தன்னுடன் வைத்து கொள்ள எந்த ஆணும் ஒப்புக் கொள்ளமாட்டானே என்று அவள் சிந்தனை குதிரை தறிகெட்டு பாய்ந்து ஓடியதை தலையை உலுக்கி சரி செய்துக் கொண்டாள்.


கோகிலா அவ்விடம் விட்டு நகர்ந்திருக்க தோழிகள் பேசிக் கொண்டிருக்கும் சமயம் ரம்யாவிற்கு முக்கிய அழைப்பு ஒன்று வரவே... “இரு டி ஊரில் இருந்து சித்தப்பா கூப்பிடுறாரு, நான் பேசிட்டு அம்மாகிட்டே கொடுத்துட்டு வரேன்” என்று கூறி நகர்ந்ததும் ஆதன் நந்தினியிடம் நெருங்கியவன்...


“நீங்க ஒரு பைவ் டேஸ் இங்கே வருவீங்களா, ப்ளீஸ்!” என்று கெஞ்சல் மொழியில் வினவ நந்தினிக்கு குழப்பத்தில் தலையை வலிப்பது போல் இருந்தது.


“இல்லைடா கண்ணா ஆண்டிக்கு நிறைய வேலை இருக்கும் அதனால் கஷ்டம் தான்... ஆமா அது என்ன பைவ் டேஸ் மட்டும்?”


“கண்ணம்மா ம்மா ஊருக்கு போயிருக்காங்க, அவங்க ஊரில் இருந்து வந்ததும் நான் எங்க வீட்டிலேயே இருந்துப்பேன்... அங்க கண்ணம்மா ம்மா என்னை பார்த்துப்பாங்க, நானும் நல்லா ஜாலியா விளையாடுவேன், அது வரைக்கும் இங்கே நான் வீடியோ கேம்ஸ் தான் விளையாட முடியும்” என்றவனின் முகம் கூம்பிப் போக, குரல் கவலையில் கம்மி இருக்க நந்தினிக்கு ஒரு மாதிரி ஆகிப் போனது.


“சரி நான் வரேன் ஒகேயா” என்றதும் அவன் முகம் பொத்தானை அழுத்தியது போல் படாரென்று ஒளிர்ந்ததும் தான் நந்தினிக்கு பாரம் அகன்றது போல் இருந்தது.


“ஆதன்” என்ற கனத்த ஆண் குரல் வெளியிலிருந்து ஒலித்ததில்...


“டேடி வந்துட்டாரு நான் போறேன்” என்று ஓடியவனின் பின்னால் நந்தினியும் செல்லப் பார்க்க...


“ஏய் போகாதடி கொஞ்ச நேரம் இங்கேயே இரு அவங்க போயிரட்டும்” என்று ரம்யா தடுத்திருக்க, நந்தினி கண்கள் இடுங்க கேள்வியுடன் பார்த்திருந்தாள்.


“ஏன் டி திடிர்.. திடிர்னு.. ஏதவாது திகிலாவே சொல்லுற?”


“நான் சொல்லலைப்பா அம்மா தான் அவன் வந்தா வெளிய வரக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க... ஆனால் நாம என்ன பண்ணலாம் இந்த ஜன்னலை திறந்தா வாசல் பக்கம் நல்லா தெரியும் அந்த விக்ரமை சைட் அடிக்கலாம்” என்று கூட்டிச் சென்றவள் சாளரத்தின் வழியே அந்த விக்ரமை காட்டினாள்.


“ஆள் செம ஸ்மார்ட் தானே” என்று கூறி கண் சிமிட்ட குழப்பத்தில் இருந்த நந்தினிக்கு அவன் குணத்தை ஆராய்வதே முக்கிய ஒன்றாக இருந்தது.


“இவரை நான் சைட் அடிச்சுட்டே இருப்பேன் மனுஷன் சீக்கிரமே கல்யாணம் பண்ணிகிட்டான் இல்லைன்னா நானே ரூட் விட்டிருப்பேன்” என்று லஜ்ஜையில்லாமல் வேடிக்கை பேச சிந்தனையில் இருந்த நந்தினிக்கு...


“ஏன் இப்போ தான் என்ன கேட்டு போச்சு இப்போ சொல்லிப் பாரேன்”


“ச்சே... ச்சே... என்னடி பேசுறா? போயும் போயும் செகண்ட் ஹாண்டா? நெவெர்! நெவெர்! ஜஸ்ட் சைட் தான்... மத்தபடி எல்லாமே பர்ஸ்ட் தான் நமக்கு பிடிச்சது” என்றவளின் பேச்சு நந்தினியை கூர்மையாக பார்க்க வைத்தது.


“என்னடி ஒரு மாதிரியா பார்க்கிற?”


“இல்லை அவரை பற்றி உங்க அம்மா சொன்னதெல்லாம் உண்மைன்னு நீ நம்புறியா?”


“இங்கே பாருடி சொல்றதை எல்லாம் ஆமாம்ன்னு நம்பிக்கமட்டேன் தான்... ஆனால் எது உண்மை, எது பொய்யின்னு சரியா தெரியலையே? அதனால் நான் கருத்தெல்லாம் சொல்லமாட்டேன். ஆனால் ஒரே ஒரு விஷயம் தான் சொல்லுவேன்... கடவுள் ஒன்னை கொடுத்தா ஒன்னை பிடுங்கிருவாரு அதுதான் விக்ரம் வாழ்க்கையில் நடக்குது... கடல் மாதிரி வீடு, கோடி கணக்கில் சொத்து ரைஸ் மில் ஓனர் ஒரே பையன், ஆனால் அவர் வாழ்க்கை ஜீரோ”


“நாம ஒரு பொருளை தொலைச்சுட்டா எப்படியாவது வெளிச்சத்தை வச்சு தேடி கண்டுபிடிச்சிருவோம்ன்னு நம்புவோம், ஆனால் அவரை சுத்தி ஒரே இருட்டு தான்... அவ்ளோ பெரிய வீட்டில் இவரும், இவர் மகனும் மட்டும் தான் வாழுறாங்க?”


“அப்புறம் ஏன் டி அந்த சின்ன பையனை ஒதுக்கி வச்சு இப்படி நோகடிக்கறீங்க?” அதுவரை தன் மனதிற்குள் மட்டுமே குமைந்துக் கொண்டிருந்த நந்தினியால் அதற்குமேல் பொத்தி வைக்க முடியாமல் வெடித்து விட்டிருந்தாள். அவளின் கோபம் புரிந்த ரம்யாவிற்கு யோசனை எழும்பியது.


“நீ ஏன் டி இப்படி கோபப்படுற?”


“சாரி டி அந்த பையனை பார்த்தா பாவமா இருக்குள்ள, அவன் பின்னணி எதுவா வேணா இருக்கட்டும், ஆனால் இந்த சின்ன வயசில் அவன் என்ன தப்பு பண்ணினான், அதான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன் சாரி”


“விடு எனக்கும் சில சமயம் தோணும் தான்... ஆனால் அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட் அந்த விக்ரம் வந்தா என்னை எதிரில் வரவே கூடாதுன்னு சொல்லியிருக்காங்க, ஆனால் விக்ரம் யாரையும் ஏறெடுத்து பார்த்ததில்லை... எங்கே மகனை காட்டி வசியம் பண்ணிருவாறோன்னு அம்மாவுக்கு பயம்”


“ஆனால், அவரை பார்த்தா அப்படி தெரியலையே”


“ஆமாம் டி கொஞ்சம் மௌனராகம் கேஸ் நமக்கெல்லாம் கெத்தா மீசையை முறுக்கிட்டு இருக்கனும்”


“இல்லை டி எனக்கு என்னமோ உன் கெஸ்ஸிங் தப்புன்னு தோணுது... நானும் தானே அவரை பார்த்தேன் அவர் ஏதோ சூழ்நிலை கைதி போல தெரியுது... அதே சமயம் அவர் அமைதியான ஆளுன்னு எல்லாம் சொல்ல முடியாது... ஏன் சொல்றன்னா அவர்கிட்டே ஏதோ ஓர் இறுக்கம் தான் தெரியுது”


“ஒஹ்!” என்று உதட்டை குவித்து யோசித்த ரம்யா...


“இருக்கலாம் டி நந்து... இவரு இப்போதான் ரொம்ப சகிச்சுட்டு போறாரு முன்னாடி எல்லாம் கறாரா பேசி கூட பார்த்திருக்கிறேன்”


“அப்போ அவங்களுக்குள் என்ன நடந்துச்சோ”


“அதே தான்... ஆமா என்ன நாம பாட்டுக்கு தேவையே இல்லாம ஏதேதோ பேசுறோம் என்ன இருந்தாலும் இது நமக்கு தேவையில்லாத டாபிக் நந்து, விடு... நீ அப்போவே கிளம்பறேன்னு சொன்ன போயிட்டு நாளைக்கும் கண்டிப்பா வரப் பாரு டி பேசுறசுதுக்கு வண்டி வண்டியா கதை இருக்கு” அவளின் பேச்சில் ஆதனின் கோரிக்கையும் நினைவுக்கு வர அடுத்ததினமும் ரம்யாவின் வீட்டுக்கு கிளம்பியவளை தடுத்திருந்தார் ரேவதி...


“ஏய் நில்லுடி எங்க டி கிளம்பிட்ட? நேத்தே போய்ட்டு இருட்டின அப்புறம் வந்தவ தினமும் இதே பிழைப்பா போச்சு”


“நான் என்ன தினமும் ஊர் சுத்த போறேனா? ரம்யா என் ஸ்கூல் பிரெண்ட் அவகூட பேசி ரொம்ப நாள் ஆச்சு அடுத்து பிஜி படிக்க போயிட்டனா அதுக்கே நேரம் சரியா போயிரும்”


“ரேவதி விடு அவ ஒரு வாரம் தானே போயிட்டு வந்துக்கிறேன் சொல்லுறா... அவ போயிட்டு வரட்டும் நாளைக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டா அவளால் அதுவும் முடியாது” என்று பரிந்துரை செய்துக் கொண்டு வந்த தந்தையை நன்றியுடன் நோக்கிவிட்டு...


“என் செல்ல அப்பா அப்போ நான் போயிட்டு வரேன் பை ம்மா” என்று உற்சாகத்துடன் கூவிவிட்டு செல்ல, ரேவதியின் புலம்பல் பின் தொடர்ந்ததை சிரிப்புடன் உதறிவிட்டு சென்றாள்.


வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது தான் தந்தையின் திருமணம் என்ற பேச்சு ரீங்காரமிட மின்னல் வேகத்தில் விக்ரமின் முகம் அவளுக்குள் வந்து சென்றதை எண்ணி அதிர்ந்தவள் வாகனத்தை நிறுத்தியே விட்டிருந்தாள்.

“ச்சே., ஏன் இப்படி நினைக்கிறோம்” என்றெண்ணி தன்னை உலுக்கி சரி செய்துக் கொண்ட பிறகே மற்ற சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு ரம்யாவின் இல்லம் அடைந்திருந்தாள்.


அவளின் இந்த சந்திப்பு அவள் வாழ்க்கையில் பலதரப்பட்ட திருப்பாங்களையும், துன்பங்களையும், துயரங்களையும் தருவித்து விதியின் சதிரூபத்தை காட்டப்போவது அறியாமல் போனாள் பேதை!!


************************************

வணக்கம் நட்பூக்களே...

“என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதையின் அத்தியாயம்-3 பதிந்துவிட்டேன்... வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் பதிவிடப்படும், படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் மக்களே!


Whatsapp group link:
KaruRam Stories ✍📝

நட்புடன்
காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-4

அன்று வெகு விரைவாகவே ரம்யாவின் இல்லத்தை அடைந்த நந்தினியின் விழிகள் ஆதனை தான் தேடின...

“என்ன டி நந்து இன்னைக்கு இவ்ளோ சீக்கிரமாவே வந்துட்ட?” என்ற தோழியின் விசாரணையில் தான் தன்னிலை அடைந்தவள் அவளின் பேச்சுக்கு பதிலளித்தாள்.

“அதான் நேத்தே சொன்னேனே டி ஏதோ உங்க வீட்டுக்கு வரவும் தான் ரிலாக்ஸா இருக்கு... அதான் புறப்பட்டு வந்துட்டேன்”

“நேத்து ரொம்பவே லேட் ஆகிருச்சே டி உங்க வீட்டில் எதுவுமே சொல்லலையா?”

“அது எப்படி சொல்லாம இருப்பாங்க? அதெல்லாம் அம்மாகிட்டே அர்ச்சனை வாங்கிட்டு தான் வந்திருக்கேன்... அம்மா புறப்படும் போது தடுத்தாங்க, ஆனா அப்பாகிட்டே தான் ஒரு வாரத்திற்கு தான் ப்பா நான் போவேன்னு சொன்னதும் அவர் தான் எனக்கு சப்போர்ட் பண்ணி அனுப்பி வச்சாரு”

“அது என்ன டி ஒரு வாரம் கணக்கு?” தோழியின் கேள்வியில் மாட்டிக் கொண்டவள் கணமே சுதாரித்து கொண்டு...

“ஏன் டி இதுகெல்லாமா ரீசன் கேட்ப ஏதோ ஒரு ஃப்ளோல சொல்றது தான்”

“சரி சரி உள்ளே வாடி” என்று அழைத்துச் சென்றவள் நேற்றைய கதையையே தொடர்ந்தாள். அவளுடன் பேசிக் கொண்டிருந்தாலும் அவளின் சித்தமோ ஆதனையோ சுற்றிக் கொண்டிருந்தது... சரியாக பதினோரு மணியளவில் விக்ரம் இல்லத்தில் வேலை செய்யும் பக்கத்து வீட்டு பெண்மணி ஒருவர் ஆதனை விட்டுவிட்டு சென்றிருந்தார்.

நந்தினியை அங்கே கண்ட ஆதனின் முகத்தில் பிரகாசம் தெரிந்தது... நேற்று அவன் வரும் போது கூம்பிய முகத்துடன், வேறு வழியில்லையே என்ற கவலை தொக்கி நின்றபடி இருந்தவனுக்கு, இன்றைய இந்த ஒளிர்வு தன்னால் என்று எண்ணும் போதே நந்தினுக்கும் எதையோ சாதித்த உணர்வு எழுந்தது. அவனின் மகிழ்ச்சியை தன் மகிழ்ச்சியாக எண்ணி கொண்டாடினாள்.

ஆனால் நேற்றைய பொழுதை போல் அவனுடன் பேசி நேரத்தை செலவிட நேரமே கிட்டவில்லை... சரியாக மூன்று மணி அளவில் ரம்யாவின் பெற்றோர்கள் அவசரமாக தூரத்து உறவினரின் இறுதி சடங்கிற்கு புதுக்கோட்டை செல்வதாக கூறிவிட்டு, ரம்யாவை பக்கத்து இல்லத்து வாசிகளின் பொறுப்பில் விட்டுச் செல்ல திட்டமிட்டு புறப்பட ஆயத்தமானார்கள்.

“இங்கே பாரு ரம்யா உன்னை தனியா விட்டுட்டு போறோம்ன்னு ரொம்ப நேரம் தூங்கிட்டு, நேரத்துக்கு சாப்பிடாம இருக்காதே பக்கத்து வீட்டு ரோஜாமணி கிட்டே சொல்லிட்டு போறேன், அவ நைட் உன் கூட வந்து தங்கிக்குவா”

“நந்தினி, ரம்யாவை அடிக்கடி வந்து பார்த்துட்டு போற மாதிரி பார்த்துக்கோமா” என்ற தந்தையின் பேச்சில் மனம் குத்தாட்டம் போட அதை சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டவள்...

“இதெல்லாம் நீங்க சொல்லணுமா ப்பா, ரம்யாவை நான் பார்த்துக்கிறேன்... நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க” என்றதும் இருவரிடமும் இருந்து விடைபெற்று சென்றார்கள் ரம்யாவின் பெற்றோர்கள்.

“ஹேய் நந்து பேசாமல் நீ இங்கேயே தங்கிக்கிறயா ஜாலியா இருக்கும்”

“இல்லை டி உனக்கு தெரியாதா? அம்மா எங்கேயும் வெளியே தங்க விடமாட்டாங்க... வேணா ஒண்ணு பண்றேன் நான் நைட் தூங்கி எழுந்ததும் சீக்கிரம் கிளம்பி வந்துடறேன் சரியா”

“சரி டி அப்படியாச்சும் செய்” என்றாள்.

“ஹேய் ஆதன் இங்கே வா” என்று இயல்பாக அழைத்த நந்தினியின் சொல்லுக்கு மானை போல் துள்ளி குதித்து வந்தவனை ரம்யாவின் விழிகள் வியந்து பார்த்தது.

“ஏய் என்னடி நேத்து தானே அவனை பார்த்த அதுக்குள்ள பிரெண்ட்ஸ் ஆகிடியா?”

“ஆமாம் டி நாங்க ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ் ஆகிட்டோம்” என்று ரம்யாவிடம் இயம்பியவள்...

“என்ன ஆதன் நாம பிரெண்ட்ஸ் தானே” என்றதற்கு முகத்தில் உற்சாகம் கொப்பளிக்க தலையை மேலும் கீழும் ஆட்டினான்.

“ஏன் டி நான் கூப்பிட்டா வரதுக்கே யோசிக்கிறவன், உன்கிட்ட எப்படி இப்படி இவ்ளோ பாண்டிங் ஆனான்?”

“நல்லா யோசிச்சு பாரு அவன் பாண்டிங் ஆகலையா? இல்லை; நீ அதுக்கான இடம் கொடுக்கலையான்னு” என்று தோழியின் மேல் பழி சுமத்தியவளை கண்டு ரம்யாவுக்கு வருத்தமாகிப் போனது.

“நான் என்னடி பண்ணுறது அம்மாக்கிட்டே இதை பற்றி சொன்னா உனக்கு சில விஷயங்கள் புரியாது ரம்யான்னு சொல்றாங்க”

“சரி விடு எனக்கு உன் நிலைமை புரியது, அதான் இப்போ அம்மா இல்லையில அவன் இங்கிருக்கிற ஒரு வாரம் நம்மகூட ஜாலியா ஸ்பெண்ட் பண்ணட்டும் சரிதானே” என்றதும் அவளின் அந்த 'ஒருவாரம்' இதற்காக தானோ என்று சிந்தனைக்குள் ஆட்படுத்தினாலும், சக தோழியின் மேல் இருந்த சந்தேகத்தை விரட்டி அடித்துவிட்டு தானும் அவளுடன் இணைந்து ஆதனுடன் நேரம் செலவிடலானாள். ஆனால் அவளின் அந்த சந்தேகமும் நான்காவது நாளில் மிகவும் பலப்பட்டு வலுத்தது ஆதனின் ‘நந்தினி ம்மா’ என்ற அழைப்பில்.

நந்தினி, ஆதனுடன் மிகவும் நெருக்கமாக பழகலானாள். அவனை விட்டு செல்வதும், அழைத்துச் செல்வதும் அவன் வீட்டில் வேலை செய்யும் ராஜாத்தி என்கிற நடுத்தர வயது பெண்மணி என்பதால் விக்ரமை காண நேரவில்லை. நந்தினிக்கு அவனை காணும் நோக்கமும், ஆர்வமும் இல்லை என்றாலும் இயல்பாக தோன்றும் வினா அவளுக்கும் தோன்றியதில் ரம்யாவிடம் அதை பற்றி விசாரிக்கலானாள்.

“ஏன் ரம்யா இவங்க அப்பா தானே இவனை அழைச்சுட்டு போக வருவாரு, இப்போ எல்லாம் அவங்க வீட்டு வேலைக்காரங்க தான் வராங்க”

“எங்க அம்மா ஊருக்கு கிளம்பும் முன்னாடி விக்ரம் கிட்டே சொல்லியிருப்பாங்க, நாங்க ஊருக்கு போறோம் ரம்யா மட்டும் தான் இருக்கிறான்னு தகவல் கொடுத்திருப்பாங்க, மறைமுகமா நீங்க வீட்டுக்கு வர வேண்டாம்னு அவரே புரிஞ்சுக்கிட்டு வேலையாளை அனுப்பி வைக்கிறாரு”

“ஏன் டி இப்படி?”

“என்ன இப்படி? நாம ரெண்டு பேரும் வயசு பொண்ணுங்க இல்லையா அதான் சேஃப்டிக்கு” ஏனோ நந்தினிக்கு ஆதனை நெருக்கமாக நினைக்க வைத்தது விக்ரமையும் அப்படி எண்ண முடியவில்லை போல.

“சரி சரி விடு” என்றவர்கள் ஆதனுடன் விளையாடிக் கொண்டே அவர்களும் உரையாடிக் கொண்டனர்.

ரம்யா வேலை பார்க்க செல்லும் சில மணி நேரங்கள் நந்தினிக்கும், ஆதனுக்கும் பல ரகசிய பேச்சுக்கள் நிகழ்ந்தன... அவன் அன்னை இருந்திருந்தால் எப்படி அவனுடன் நேரம் செலவிட்டு உரையாடி விளையாடி மகிழ்ந்திருந்திருப்பானோ, அதை விட இருமடங்கு உற்சாகத்துடன் வைத்துக் கொண்ட நந்தினியின் மேல் ஆதனுக்கு பாசமும், நெருக்கமும் பொங்கி பெருகியது.

அன்று மாலை ரம்யா இல்லாத சமயம் தான் ஆதன் நந்தினியிடம் அதை கேட்டான்.

“ஆண்டி எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்கு, என் பிரெண்ட் சுரேன் அவங்க அம்மாவை காயத்ரி ம்மான்னு கூப்பிடுவான்... எனக்கும் அப்படி உங்களை கூப்பிடணும்ன்னு ஆசையா இருக்கு... உங்களை நான் நந்தினி ம்மான்னு கூப்பிட்டுக்கவா ப்ளீஸ்!” என்றவனின் பேச்சை கேட்டு நந்தினிக்கு திகைப்பாக இருந்த போதும், அவன் கண்களில் இருந்த ஏக்கமும், ஆசையும் அவளின் தயக்கத்தையும், பயத்தையும் உடைத்து தூக்கி எறிந்து நிராகரித்திருக்க தானும்...

“அவ்ளோதானே இனிமே நான் உனக்கு நந்தினி ம்மா தான் சரியா” என்றதும் அவன் கண்கள் மின்ன அன்று மாலை என்றுமல்லாத உற்சாகத்துடன் சென்றிருந்தான்.

ரம்யாவிற்கு இவர்களின் உரையாடலும் சரி ஆதன் நந்தினியை அம்மா என்றழைக்க ஆரம்பித்ததும் சரி எதுவும் அறிந்திருக்கவில்லை.

அன்று ஆதன் கிளம்ப முற்படுகையில்... “லவ் யூ நந்தினி ம்மா... நாளைக்கு நான் உங்களுக்கு கிஃப்ட் வாங்கிட்டு வரேன்”

“அப்படியா என்ன கிஃப்ட் வாங்கிட்டு வருவீங்க?”

“தெரியலையே நான் நைட் தான் டேடிகிட்டே கேட்பேன், நாளைக்கு சர்ப்ரைஸா தரேன் என் ஃபிரெண்ட் சுரேன் அவங்க அம்மாவுக்கு அப்படி தான் ஒரு லேடில் வாங்கி தந்தானாம்” என்றதும் நந்தினிக்கு சிரிப்பு பொங்கியது.

“ஹாஹாஹா... அவனை மாதிரி லேடில் வாங்கிறாதே, அது எனக்கு யூஸ் ஆகாது” என்று சிரிப்புடன் கூறிவிட்டு அவனை வழியனுப்பி வைத்துவிட்டு திரும்பிய சமயம், அவளையே கூர்மையான பார்வையால் வெட்டிக் கொண்டிருந்த ரம்யாவை கண்டு அணங்கினாள்.

தோழியின் பார்வை அவளை துளைத்ததில் தடுமாறி நெளிந்தவள்... “என்ன டி என்னமோ மாதிரி பார்க்கிற” என்றவளை பார்வை மாறாமல்...

“நீ அந்த பையன் கூட பழக ஆரம்பிச்சதும், என்னை போலவே உனக்கும் அவன் மேல ஏற்பட்ட பரிதாபம்ன்னு நினைச்சேன் நந்து... ஆனால் இப்போ உன்னை அவன் அம்மான்னு கூப்பிடவான்னு கேட்டதும் அதுக்கு மறுப்பு சொல்லாமல் சரின்னு சொல்லுறியே உனக்கென்ன பைத்தியமா நந்தினி”

“நீ தான் டி இப்போ பைத்தியம் மாதிரி பேசுற, அவன் குழந்தை அவன்கிட்டே போய் நீ கூப்பிடாதேன்னு சொன்னா அவன் கஷ்டப்படமாட்டானா”

“நந்து நீயா இப்படி பேசுற? என்னை விட எதையும் தெளிவா யோசித்து செய்கிறவ நீ... அவன்கிட்டே நீ உன்னை அம்மான்னு கூப்பிட்டுன்னு ரொம்ப தாராள மனப்பான்மையா சொல்லியிருக்கியே இது தொடருறது எல்லாம் சாத்தியமா? உனக்கு மேரேஜ் ஆகிப் போயிருவ அப்போவும் அந்த பையனை இதே மாதிரி நீ ஆதரிக்க முடியுமா? அவன் மனசை தான் மாத்திக்க முடியுமா? இதோட பின்விளைவுகளையும், சிரமத்தையும் அந்த விக்ரம் தான் பேஸ் பண்ணனும் அதை யோசிச்சியா நீ?” என்ற தோழியின் பேச்சு உரைத்ததில் விதிர்த்து போனாள்.

‘ஆமாம் நான் ஏன் இதை பற்றி யோசியாமல் போனேன்?’ என்றவளுக்கு திகில் பிடித்துக் கொண்டது.

“என்ன டி இப்போ தான் உன் ஞானோதாயம் கண் திறக்குதா?” என்றவளின் புருவம் ஆட்சேபத்தில் வளைந்தது.

நந்தினிக்கு ஒன்றும் புரியாத நிலையில் தவித்துக் கொண்டிருந்தாள்... என்ன தான் அவள் மேல் கோபம் கொண்டு கடிந்தாலும் தோழி ஆயிற்றே, அவளின் நிலையை உணர்ந்தவள் அவளை அமர வைத்து தண்ணீரை அருந்த கொடுத்து ஆசுவாசப்படுத்தியவள் மெல்ல அவளுக்கு நிலையை புரிய வைக்கலானாள்.

“இங்கே பாரு நந்தினி நீ ஆதன் மேல இரக்கப்படுறதும், பாசம் காட்டுறதும் தப்பில்லை தான்... ஆனால் அதே சமயம் அது நிரந்தரமும் இல்லை. அந்த பையனோட அம்மாவான விக்ரமின் மனைவி ஓடிப் போனவள். அதுவும் புருஷன் சரியில்லாமல் ஓடிப்போனவன்னு பெயர் இருக்கு... அதெல்லாம் உண்மையோ? பொய்யோ! அது அவங்களுக்குள் உள்ளது... இப்போ விஷயம் என்னனா விக்ரம் மேல தான் கருப்புப்புள்ளி இருக்கு... அந்த இடத்தில் இருக்கிற ஒரு பையனை நாம ஆதரிக்கும் போது அந்த பழி நம்மளையும் பாதிக்க வாய்ப்பிருக்கு”

“ஏன்னா நாம இனிமே தான் லைஃப்குள்ள என்டர் ஆகப்போறோம் இந்த மாதிரி விஷயத்தினால நம்ம வாழ்க்கை பாதிக்கப்படும்... இதை நானா கூட சொல்லலை அம்மாவுடைய கண்டிப்புக்கும் இது தான் காரணம்” என்றவளின் பேச்சை கேட்டு கொண்டிருந்தவளுக்கு அவள் கூறியதன் சாராம்சம், அவள் மேல் கொண்ட மித மிஞ்சிய அக்கறையே காரணம் என்று புரிந்துக் கொண்டவளுக்கு திடசித்தத்துடன் அவனை நோக்கினாள்.

“புரியுது டி நீ சொல்றது வாஸ்தவம் தான். உன் வீட்டை போல தானே என் வீட்டிலும் நினைப்பாங்க, அதை தப்பு சொல்ல முடியாதே இனி மேல் நான் பேசும் போது இதையெல்லாம் கவனத்தில் வச்சுக்கிறேன் நம்ம லிமிட் தெரிஞ்சு இருந்துக்கிறது தானே நமக்கு சேஃப்”

“அப்பாடா இது போதும் டி” என்றவள் வேறு பேச்சிற்கு தாவி அதில் மூழ்கி ஆதனை பற்றியும் ஆதனின் பேச்சை பற்றியும் கூட மறந்துவிட்டனர்.

அன்று மாலை அங்கிருந்து அவள் தன் இல்லம் செல்லும் போது ஆதனின் வீட்டை பார்த்தவாறே... “சாரி டா ஆதன் குட்டி உனக்கு என்னால் தற்காலிகமான ஆதரவையும், அன்பையும் தான் தர முடியும், நிரந்தரமாக தர முடியாது” என்று கூறியவள் அறிவாளா... அவனுக்கு நிரந்தர அன்பை தரக் கூடியவள் அவள் மட்டுமாக தான் இருக்கப் போகிறாள் என்று! ரம்யாவுடன் உண்டான தோழமையில் தான் அவளின் எதிர்கால வாழ்க்கையும் அமையும் என்றும் இந்த சந்திப்பே அதற்காக தான் என்றும் அறிந்திருக்கவில்லை பேதை!

****************
அதன்பிறகு வந்த நாட்களில் ரம்யா இல்லம் சென்றபோது அங்கே ஆதனின் வரவுக்கான எந்தவொரு தடயமும் இல்லை, அதை பற்றி அவளும் பெரிதாக லட்சியம் கொள்ளவில்லை... ரம்யாவின் போதனையில் ஆதனை பற்றிய எண்ணத்தை சற்றே விலக்கி வைத்திருந்தாலும் ஓர் நாள் தாங்க முடியாமல் அதை பற்றி விசாரிக்க...

“என்ன ஆச்சுன்னு தெரியலை டி, நான் உனக்கு அட்வைஸ் பண்ணினேனே அந்தனைக்கு போனவன் தான் திரும்ப வரவேயில்லை மூணு நாள் ஆச்சு, ஒருவேளை ஊரிலிருந்து கண்ணம்மம்மா வந்திருக்கலாம் நினைக்கிறேன் எனக்கு சரியா தெரியலை டி”

“ஒஹ்!” என்றவளுக்கு எதுவோ சரியில்லை என்று மட்டும் மனதை உறுத்தினாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அதை ஒதுக்கிவிட்டாள்.

“ஆண்டி எப்போ டி வருவாங்க?”

“இன்னைக்கு நைட் வந்துடுறதா சொல்லியிருக்காங்க டி... ஆமாம் திரும்ப நீ எப்போ வீட்டுக்கு வருவ?”

“அது தெரியலை டி... ஏன்னா ஒரு வாரத்திற்கு மேலேயே இங்கே வந்திட்டேன், இதுக்கு மேல வெளியே போகணும்ன்னு ஆரம்பிச்சேன் எங்கம்மா துடைப்ப கட்டையை தூக்கிரும், அடுத்து நான் எம்காம் அப்பளை பண்ணியிருக்கேன்ல அதுக்கு ஜாயின் பண்ணும் போது வேணா பார்க்கிறேன்”

“ஆமாம் எந்த காலேஜ் டி ப்ரிஃபர் பண்ணியிருக்க, குந்தவை நாச்சியார் தான் சூஸ் பண்ணியிருக்கேன்... பார்ப்போம் அதில் கிடைக்கலைன்னா ராஜா சரபேஜி தான் முயற்சி பண்ணனும்”

“அதெல்லாம் உனக்கு கிடைக்கும் டி” என்றவள் அவளிடம் கல்லூரியை பற்றி சிறிதுநேரம் விவாதித்துவிட்டு புறப்பட்டு விட்டிருந்தாள்... விக்ரம் வீடான ஆதன் இருக்கும் இல்லத்தை கடக்கும் போது அவளுள் கலவையான உணர்வலைகள் தோன்றியது... தன் சிரத்தை உலுக்கி சரி செய்துக் கொண்டவள் திடத்துடன் சென்றிருந்தாள்.

நந்தினி அதன் பிறகு ஆதனை பற்றி மறந்தவளாக கல்லூரியில் சேருவதற்கு சிரத்தையாக ஆழ்ந்து கல்லூரிக்கும் செல்ல ஆரம்பித்திருந்தாள்... அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருப்பதாக எண்ணிய போது தான் அன்றிரவு உறக்கத்தில் ஆழ்ந்திருந்த நந்தினியின் கனவில் நடுகாட்டில் ஆதன் நின்று கொண்டு “நந்தினி ம்மா... நந்தினி ம்மா” என்று அழைப்பது போலவும், நந்தினி காப்பாற்ற முடியாமல் தவித்து துடிப்பது போலவும் வந்த சொப்பனம் அவளை திகிலுற வைக்க, விருக்கென்று கண் விழித்து எழுந்தவளுக்கு கனவு என்றறிந்தும் நிலை கொள்ள முடியாமல் உடல் வியர்த்து அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.

“ஆ..த..ன்..” என்று பிசிறிடத்து உச்சரிக்க உடல் வியர்த்து விறுவிறுத்துப் போனது.

அவளால் அதற்கு மேல் சுத்தமாக முடியாது போக தன்னை தேற்றி கொள்ள எண்ணி தண்ணீரை அருந்த சமயலறைக்கு பிரவேசித்தவளின் சலசலத்த சத்தத்தில் அவள் அன்னை ரேவதி சமீபித்திருக்க...

“நந்தினி என்னம்மா ஆச்சு இப்படி நடுங்குற?” என்று மகளின் நடுக்கத்தை எண்ணி பதறினார்.

“ஒண்ணுமில்லை ம்மா பயபடாதீங்க, ஏதோ ஒரு கெட்ட கனவு அதான் எழும்பிட்டேன்”

“சரி வாம்மா திருநீறு வச்சு விடுறேன் சாமி கும்பிட்டுட்டு போய் படு, நாளைக்கு அக்கா பெரிய கோயிலுக்கு போகலாம்னு சொன்னா காலேஜ் லீவ் போட்டுட்டு போயிட்டு வா”

“சரிம்மா” என்றவள் அச்சமயமே பூஜை அறையிலிருந்த தெய்வ புகைப்படத்திற்கு முன் கைகூப்பி... “கடவுளே அந்த குழந்தைக்கு எதுவும் ஆகக்கூடாது... அவனுக்கு சீக்கிரமே ஒரு அம்மாவை கொண்டு வந்திரு” என்று மனமார பிரார்தித்துக் கொண்டாள்.

நந்தினியின் தமக்கை அகிலா, கணவன் சதிஷ், மகள் தாரணாவுடன் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றிருந்தாள். அன்றைய கனவின் பிரதிபலனாக அவள் அடிமனதின் ஓர் ஓரத்தில் ஆதனை பற்றிய சிந்தனைகள் சிந்தையை குடைந்துக் கொண்டே இருந்தன... கோவிலிலும் அவனுக்காகவே பிரார்த்தத்துக் கொண்டவளின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது போல அங்கேயே வைத்து ஆதனையும் காண நேர்ந்தது.

“அம்மா கடைக்கு போகலாம், அப்பா கூத்தித்து போ” என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த மகளின் வேண்டுகோளை பெற்றவர்கள் இருவரும் நிராகரித்தனர்.

“ஏய் என்ன டி புதுசா இங்கே வரியா, அடிதான் வாங்குவ ஏற்கனவே வீடெல்லாம் பொம்மைங்களா கிடக்கு சும்மா இரு”

“தாரணா அம்மா சொல்றதை கேளு” என்று சதீஷும் மிரட்ட தாரணா அழுகையில் உதட்டை பிதுக்கினாள்.

நந்தினி அவர்களின் உதவிக்கு வந்தவள்... “அக்கா, மாமா அவளை நான் கூட்டிட்டு போய்ட்டு வரேன்” என்றவள் தாரணாவை கூட்டிச் சென்றிருந்தாள்.

இருவரும் சேர்ந்து கடையை சுற்றியவர்கள் மரப் பொம்மைகள் சிலவற்றை வாங்கிவிட்டு அதற்கு பணம் தரும் நேரம்...

“நந்தினி ம்மா அங்க பாங்களேன் டெட்டி பீர் அழ்கா இருக்கு” என்று மழலையில் மிழற்றினாள்... அவளும் நந்தினிம்மா என்று அழைப்பத்தாலேயோ என்னவோ ஆதனும் அவ்வாறு கேட்ட போது மறுக்கத் தோன்றவில்லை போல? ஏனோ அந்நேரம் ஆதன் நினைவுக்கு வர...

“நந்தினி ம்மா” என்று அவனே அழைப்பது போல் குரல் கேட்டதில் பிரமை என நினைத்துக் கொண்டு திரும்பிய சமயம், அங்கே ஆதனே நின்றுக் கொண்டிருந்ததை ஆனந்த அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

“நந்தினி ம்மா” என்றவன் குரலில் சுரத்தே இல்லாமல் இருக்க, முகமோ நீர் இல்லாத ரோஜா செடி வாடி களைத்து, முன்னிலும் இருமடங்கு மெலிந்து காண இருப்பது அவள் கருத்தை கவர்ந்து உறுத்தியது.

“நந்தினி ம்மா... தூக்கு! தூக்கு!” என்று அவனை விட ஒரு வயதே இளையவளான தாரணா கெஞ்சிக் கொண்டிருந்ததை கண்டு...

“தாரு குட்டி இதோ இந்த பொம்மை அழகா இருக்கு பாருங்களேன், இங்கேயே இருங்க நந்தினிம்மா இதோ வந்துடுறேன்” என்றவள் வேகமாக அவனை நெருங்கி...

“ஆதன் எப்படி இருக்க? என்ன கண்ணா ஆச்சு, ஏன் இப்படி சோர்ந்துப் போய் இருக்கீங்க?” என்று பரிகாசத்துடன் கேசத்தை கோதியப்படி விசாரிக்க...

“நான் பேட் பாயா அதனால் தான் என்னை நீங்க பார்க்க வரலையா? நான் குட் பாயா ஆக என்ன பண்ணனும் நந்தினி ம்மா” என்று கேட்டு அழுகையில் உதடு பிதுக்கியவனை கண்டு உள்ளம் உருகியது.

“அச்சோ நீ பேட் பாயா? அப்படின்னு யார் சொன்னா? நீ குட்....” என்று முடிப்பதற்குள்...

“டாடி தான் சொன்னாரு நந்தினி ம்மா... நான் பேட் பாய் ஆகிட்டேன்னு தான் நீங்க பார்க்க வரலைன்னு சொன்னாரு” என்றவனை கண்கள் இடுங்க யோசனையாக பார்த்துக் கொண்டிருந்த வேளை...

“ஏய் நந்து இன்னும் அங்கே என்ன பண்ணுற சீக்கிரம் வா” என்று தமக்கை அழைக்க அதே சமயம்...

“நீ தான் எங்க ஆதன் தேடுற நந்தினியாமா? பையன் உன்னை நினைச்சு ஏங்கி ஏங்கி அழறான்” என்றவரின் கூற்றில் அவள் யார் என்பது போல் ஏறிட அவளின் பார்வையை புரிந்து கொண்டவர்...

“நான் தான் கண்ணம்மா இந்த பையன் வீட்டில் ரொம்ப வருஷமா வேலை பார்க்கிறேன்” என்றதும் அவளுக்கு சட்டென்று விளங்கியது.

ஆனால் அங்கே அவளருகே நெருங்கிக் கொண்டிருந்த தமக்கையை கண்டு சுதாரித்துக் கொண்டவள்... ‘போச்சு அக்கா வரா... வந்தான்னா யார் என்னன்னு கேட்டு துளைச்சு எடுத்திருவா சீக்கிரமா எஸ்கெப் ஆகு நந்தினி’ என்று கூறி அவசரமாக யோசித்தவள் கண்ணம்மாவிடம் திரும்பி...

“கண்ணம்மா நாளைக்கு இதே நேரம், இதே இடத்துக்கு ஆதனை கூட்டிட்டு வாங்க, நான் இப்போ போயே ஆகணும் அக்கா வரதுக்குள்ள நீங்க ஆதனை கூப்பிட்டுட்டு கிளம்பிருங்க” என்று அவசரம் அவசரமாக கூறியதில் அவளின் தடுமாற்றத்தை புரிந்தவர், ஆதனிடம் ஏதோ கூறியபடி அங்கிருந்துக்கு வேகமாக அழைத்துச் சென்றார். அவர்கள் சென்றதும் தான் நந்தினிக்கு மூச்சே வர பெருமூச்சை இழுத்துவிட்டவளிடம்...

“ஏய் என்ன டி ஆச்சு இங்கேயே நின்னுட்டு இருக்கிற? யாருடி அது ஏதோ பேசிட்டு இருந்த?”

“இந்த பொம்மை எல்லாம் பார்த்து அந்த பையன் எனக்கும் வேணும்னு கேட்டுட்டு இருந்தான், அதுக்குள்ள அந்த பாட்டி வந்ததும் நான் விலையை சொல்லி வாங்கிக் கொடுக்க சொல்லிட்டு இருந்தேன்” என்று தங்கை அழகாக திரித்த பொய்யை உண்மை என்று நம்பி அகிலாவும் அதற்கு மேல் தூண்டி துருவாமல் விட்டுவிட்டாள்... கோவிலை கடந்து செல்லும் போது தூரத்தில் தெரிந்த ஆதனின் ஏக்கமான பார்வையை காண நேர்ந்த நந்தினிக்கு உள்ளம் ஊசலாட சிந்தையில் நூதன உணர்வு எழும்பியது.

****************************
வணக்கம் நட்பூக்களே...
“என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதையின் அத்தியாயம்-4 பதிந்துவிட்டேன்... வாரந்தோறும் செவ்வாய்கிழம, புதன்கிழமை பதிவிடப்படும், படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் மக்களே!

கருத்துத் திரி:

Whatsapp Channel Link:
KaruRam Stories ✍📝

Telegram Channel Link:
KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்
காருராம்

 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-5
நந்தினி கல்லூரிக்கு சென்று இரு வகுப்புகள் மட்டிலும் பங்கேற்றவள், வேகமாக புறப்பட்டு தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றிருந்தாள். அவளுக்காக அங்கே காத்திருந்த கண்ணம்மாவும், அவருடன் இருந்த ஆதனையும் கண்ணுற்றப்படியே நெருங்கியவளை கண்ட கண்ணம்மா.

“வாம்மா நந்தினி... உனக்காக தான் காத்திட்டு இருந்தோம்” என்றவரின் கண்கள் கலங்க தன் புடவை முந்தானையால் நாசியை துடைத்துக் கொண்டவரின் செயலும், ஆதனின் சோகம் அப்பிய முகமும் ஏதோ தவறு நேர்ந்திருப்பதை உணர்த்தியது. அதே நேரம் ஆதன் தன் சின்ன கையை தூக்கி நந்தினிம்மா இங்க பாருங்க அப்பா என்னை அடிச்சுட்டாரு” என்று காட்டிய இடத்தில் அரைத்த சிவப்பு மிளகாயின் நிறத்தில் ரத்தம் உறைந்திருக்க, கால்களிலும் ஒன்றிரண்டு இடங்களில் இருக்கவே நந்தினிக்கு பதை பதைத்தது.

“அச்சோ கண்ணா! உங்க அப்பா எதுக்காக அடிச்சாரு” என்றவள் கேள்வியை கண்ணம்மா புறம் திருப்பி...

“என்ன ஆச்சும்மா ஏன் இப்படி கலாங்குறீங்க? எதுக்காக இவனை அவங்க அப்பா அடிச்சாரு” என்று ஆவேசத்துடன் வினவியதும்...

“அந்த கொடுமையை நான் என்னன்னு சொல்ல?” மடை திறந்த வெள்ளமாய் பொங்கினார்.

“அன்னைக்கு அந்த ரம்யா பொண்ணு வீட்டில் இருந்து வந்ததும் ஆதன் உனக்கேதோ வாங்கணும்னு அவங்க அப்பாகிட்டே கேட்டிருக்கான்... அவரும் யாரு என்னன்னு விசாரிக்கப் போக நீ ரம்யாவுடைய பிரெண்டுன்னு தெரிஞ்சது”

****************
நந்தினியை பற்றி அறிய வந்த விக்ரமுக்கு ஆதன் அவளை அம்மா என்றழைப்பதும் அவளுடன் பழகுவதும் எதுவோ சரியில்லாததாக தோன்ற அவளுடனா பழக்கத்தை தவிர்க்க வேண்டி மகனிடம் எடுத்து கூறினான்.

“இங்கே பாரு ஆதன் நீ அவங்களுக்கு கிஃப்ட் எல்லாம் வாங்கிக் கொடுக்கக்கூடாது... முதலில் அவங்களை நந்தினி ம்மான்னு கூப்பிடக்கூடாது ஆண்டின்னு தான் கூப்பிடணும் சரியா”

“நோ ப்பா! நான் அவங்களை நந்தினி ம்மான்னு தான் கூப்பிடுவேன், அவங்க ரொம்ப நல்ல அம்மா... என் கூட நல்லா விளையாண்டாங்க என்னை கண்ணம்மா ம்மா மாதிரியே பார்த்துக்கிட்டாங்க” என்றதும் விக்ரம் எவ்வளவோ நேரம் எடுத்துக் கூற முயன்று தோற்றவன் தன் பிடியில் பிடிவாதமாக நின்றவனை கண்டு தீயாக முறைத்தான்.

அவன் கையில் தன் கைப்பட எழுதியிருந்த முகவரியையும், அலைபேசி எண்ணையும் கோபமாக பார்த்திருந்தான். அவன் மகன் ஆதன் பழகும் நபர்களிடம் அவர்களின் அலைபேசி எண் வாங்குவது என்பது அவனின் தற்காப்புக்காக தானே தவிர, வயது பெண் என்று தெரிந்ததும் அவன் மகனின் காரணமாக கண்டிக்க கூட இயலாமல் போனது.

“இங்கே பாருடா நான் சொல்லி கேட்க மாட்டேன்னா, நானும் நீ சொல்லுறது போல செய்ய அனுமதிக்கமாட்டேன்... நான் உன்னை அங்கே அனுப்பினால் தானே நீ அடம் பிடிப்ப, நாளைக்கு என் கூடவே ஆபிஸ் வந்து அங்கே ஒரே ரூமில் தனியா அடைஞ்சு கிட” என்று உறுமியவன் சொன்னது போலவே மகனை தன்னுடன் இழுத்து பிடித்து நிறுத்திக் கொண்டவன், அடுத்த இரண்டொரு நாட்களில் கண்ணம்மாவிற்கும் தகவல் அளித்து வர செய்துவிட்டான்.

தன் தந்தையால் நிராகரிக்கப்பட்ட ஆதனின் வேண்டுகோளை கண்ணம்மாவிடம் கூற, அவரோ யோசனையுடன் விக்ரமை அணுகி விசாரிக்க...

“அவன் கிடக்கிறான் கண்ணம்மா ம்மா அவன் சொல்லுறதை எல்லாம் செய்திர முடியுமா? அவன் சொல்கிறது ரம்யாவுடைய தோழியை... சும்மாவே என் மேல் அபிப்ராயம் இல்லாதவங்க இவனை அங்கே பார்த்துக்கிறதே பெரிய விஷயமா நினைக்கிறவங்க, அந்த வீட்டில் வந்த பொண்ணுக்கு பரிசு வாங்கி கொடுத்தா அவன் வாங்கி கொடுத்ததாவா சொல்வாங்க? நான் தான் வாங்கிக் கொடுத்து வயசு பொண்ணை மடக்க பார்க்கிறேன்னு சொல்வாங்க”

“நீங்க சொல்றது நெசம் தான் தம்பி... ஆனால் நந்தினி ம்மா... நந்தினி ம்மான்னு அரட்டிக்கிட்டு இருக்கான், சரியா சாப்பிடவே மாட்டேங்குறான்”

“விடுங்க கண்ணம்மா நீங்க சிரமப்படாதீங்க பசிச்சா தன்னால் சாப்பிட போறான்” என்றதும் கண்ணம்மா ஆதனிடம் கெஞ்சி கூத்தாடி உணவை ஊட்டி விட்டிருந்தார்.

நாட்கள் செல்ல செல்ல ஆதனின் பிடிவாதம் முற்றியது... “நான் நந்தினிம்மாவை பார்த்தால் தான் சாப்பிடுவேன்” என்று மல்லுக்கட்டியவனை கண்டு ஆத்திரம் வர பெற்ற விக்ரம் சப்பென்று அடி வைத்து...

“ராஸ்கல் தொலைச்சிருவேன் உன்னையை... நான் சொன்னா கேட்க மாட்ட, உன்னை இங்கேயே விட்டு வச்சா தானே அடம் பிடிப்பா இரு உன்னை ஹாஸ்டல் சேர்க்கிறேன்” என்று கூறியவன் அவனை விடுதியில் சேர்க்கவும் ஏற்பாடுகளை செய்யலானான். ஆதனோ இமை வீங்க கதறி கதறி அழுது சோர்ந்து போனான்.

இதை எல்லாம் காண கண்ணம்மாவிற்கு பொறுக்கவில்லை... “தம்பி அவன் குழந்தை, தாயில்லாத பையன் வேற... இப்படி நீங்களே அடிக்கலாமா? அவன் அந்த பிள்ளையை பார்க்கணும்னு தானே சொல்லுறான், நீங்க பேச வேண்டாம் அந்த பிள்ளையோட போன் நம்பர் கொடுங்க நான் பேசி அவனை பார்க்க வைக்கிறேன், அதுக்கப்புறமா அவனை நானே ஏதாவது சொல்லி சமாளிச்சுக்குறேன்” என்றதற்கு வேகமாக தலையசைத்து வேண்டாம் என்றவன்...

“இல்லை கண்ணம்மா அவனின் பிடிவாதம் வீண் பிடிவாதம் இதில் ஏதோ சரியில்லை, அவன் கேட்கிறது ஒரு நாள் ரெண்டு நாளோட முடியாது... எனக்கு தெரியாதா அவன் பிடிவாதத்தை பத்தி... இதை வளர விடுவது அந்த பெண்ணுக்கு நல்ல தல்ல வேண்டாம் விட்டுவிடுங்க... கொஞ்ச நாளைக்கு ஹாஸ்டலில் இருந்துட்டு வந்தானா என் பேச்சை கேட்டு நடந்துக்குவான்”

“ஐயோ தம்பி! அவனே அறியா பையன் அவனை போய் இதுக்காக ஹாஸ்டலில் சேர்த்தா, அவனுக்கு என்ன தெரியும் அதையாவது கை விடுங்களேன்”

“இல்லை கண்ணம்மா, அவனை நிரந்தரமா நான் விடுதியில் விட அனுமதிக்க போறதில்லை, கொஞ்ச நாளைக்கு தான்... அவன் இதை பற்றி மறக்கும் மட்டும் தான் அதுக்கப்புறம் கூட்டிட்டு வந்துருவேன்” என்றவனின் சொல்லை மீற முடியாமல் அவரின் தராதரம் தளையிட மௌனமானார்.

ஆதனை விக்ரம் விடுதியில் விட்டதும் ஆதன் கதறி துடித்து துள்ளி குதித்து ஆர்ப்பாட்டம் செய்து அன்று இரவே ஜன்னி கண்டு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட அதற்கு மேல் தாங்க முடியாத கண்ணம்மா...

“தம்பி இதுக்கு மேல நீங்க அவனை ஹாஸ்டல் அனுப்பினா பையன் இருக்கவே மாட்டேன், அப்புறம் நானும் இருக்கமாட்டேன் சொல்லிட்டேன்” என்றவருக்கு துக்கத்தில் தொண்டையடைக்க...

“நான் உங்க வீட்டுக்கு விசுவாசமா வேலை செஞ்சவ தான் தம்பி... ஆனா அதுக்கு ஏத்த மாதிரி தான் உங்க அம்மாவும் என்னையும், என் குடும்பத்தையும் பார்த்துக்கிட்டாங்க... அந்த பாசத்துல சொல்றேன் இந்த பிஞ்சு மனசை இதுக்கு மேல நோகாடிக்க வேண்டாம், அவனை தவிக்க விட்டுட்டு நீங்க மட்டும் என்ன சந்தோசமாவா இருக்கீங்க” என்றதும் அவனுக்கும் மகனின் நிலை கண்டு மனமுடைய தானும் கண் கலங்கியவன், அவரின் கூற்றுப்படியே ஆதனை அவர்களின் பொறுப்பில் விட்டுவிட்டான்.

ஆதனை தேற்றுவது பெரும்பாடாக இருந்தாலும் முன்னை போல் அல்லாமல் இப்போது சொன்னதை ஏற்று நடந்து கொண்டவனுக்கு முகத்தில் எப்போதும் ஒரு சோகம் இழையோடிக் கொண்டே இருந்தது... அவனின் நலம் கருதியே ஆலயம் ஆலயமாக சென்று வேண்டிக் கொண்டிருந்த போது தான் பெரிய கோவிலில் நந்தினியை கண்டிருந்தார் கண்ணம்மா.

****************
கண்ணம்மா கூறியதை கேட்ட நந்தினிக்கு அன்று இரவு கண்ட சொப்பனம் அவளை ஆட்டுவித்தது... ‘ஒரு வேளை இதுதான் அன்றைய கனவின் அர்த்தமோ’ என்று எண்ணியவளுக்கு மனதை கனக்க வைத்தது.

“நேத்து தான் அவங்க அப்பா இவனுக்கு பிடிச்ச மாதிரி ஏதேதோ வாங்கிக் கொடுத்தாரு, இவன் அதை எல்லாம் தீண்டியும் பார்க்கலை... சரி கொடுங்க கண்ணம்மா நானே சாப்பாடு ஊட்டிவிடுறேன் சொல்லித்தான் அந்த புள்ள பையனை நெருங்குச்சு... இந்த பிஞ்சு மனசுல உள்ள ஏக்கமோ? என்னமோ! நான் சாப்பிடமாட்டேன் சொல்லி சாப்பாடு தட்டை தட்டி விட்டிருச்சு... அவ்வளவு தான் பழியா கோபம் வந்து அவங்க அப்பா பெல்ட்டாலையே வெளு வெளுன்னு வெளுந்திருச்சு” என்றவர் அழுகையை அடக்கும் விதமாக கேவலானார்.

ஆதனும் அழுகையில் உதட்டை பிதுக்கி “வலிக்கு... வலிக்கு..” என்று விம்மியவனை கண்டவளுக்கு ஆத்திரமும், ஆவேசமும் எழுந்தது... அன்றைய கனவின் தாக்கத்தோடு நந்தினி ஆதன் மேல் கொண்ட அன்பும், ஆதனின் தந்தையான விக்ரம் செய்த செயலை சிறிதும் ஏற்காது வெகுண்டாள்.

“இப்போ இவங்கப்பா எங்கே இருப்பாரு கண்ணம்மா ம்மா?” என்று விசாரித்தவளின் குரலில் சூறாவளியின் சீற்றம் நிரம்பியிருந்தது.

“அவங்கப்பா ரைஸ் மில்லில் தான் இருப்பாரும்மா”

“அது எங்கிருக்குன்னு உங்களுக்கு தெரியும் தானே?”

“தெரியும்மா” என்றதும்...

“அப்போ என் கூட வாங்க” என்றவள், ஆதனை தன் கையோடு தூக்கிக் கொண்டு ஆட்டோ பிடித்ததும் அதில் ஏறி அமர்ந்தவள்...

“இவங்க அப்பா ரைஸ் மில் பேர் சொல்லி அது எங்கிருக்குனு ஆட்டோகாரர் கிட்டே சொல்லுங்க கண்ணம்மா” என்றதும் கண்ணம்மாவிற்கு அவள் எதற்காக அங்கே செல்ல நினைக்கிறாள் என்று அறியாமலே....

“துறையூர் விகேஎஸ் ரைஸ் மில் போங்க” என்றவர் நந்தினி புறம் திரும்பி...

“அம்மாடி எதுக்காக அங்க போகலாம் சொல்றன்னு தெரியலை... ஆனால் ஒண்ணு, விக்ரம் தம்பிக்கு வேலை பார்க்கிற இடத்துக்கு சொல்லாமல் கொள்ளாமல் போனா கோபப்படும்”

“எனக்கு அதை பற்றி கவலையில்லை கண்ணம்மா, நீங்க வாங்க நான் பார்த்துக்கிறேன்” என்ற நந்தினிக்கு விக்ரம் என்பவன் ஆதனின் தந்தை என்பதும், அவனுக்கும் அவளுக்கும் அதற்கு முன் அறிமுகமே இல்லை என்பதும் நினைவிலேயே இல்லை.


‘விகேஎஸ் ரைஸ் மில்’ என்று மஞ்சள் நிற பலகையில் உள்ள பெயரை சரி தானா என்று உறுதிப்படுத்திக் கொண்ட நந்தினி ஆதனின் கரத்தை இறுக பற்றிக்கொண்டு கண்ணம்மாவின் வருகையை கூட எதிர்பார்த்து நில்லாமல் உள்ளே சென்றவளை வேக எட்டுக்கள் வைத்து நெருங்கிய கண்ணம்மா...

“நந்தினி இரும்மா தம்பி உள்ளே முக்கியமான தொழில் பேச்சு வார்த்தையில் இருக்காரு... கொஞ்சம் பொறும்மா பைய்ய பேசிக்குவோம்” என்றதும் அவருக்காக பொறுத்து கொண்டவள் இறுக்கமான மனநிலையில் திரும்பிக் கொண்டிருக்க... அங்கு விக்ரமின் தந்தை கேசவனுக்கு உதவியாக வேலை செய்தவர் தற்போது அவர் மகனுக்கும் உதவியாக இருக்கும் செந்திலை அணுகி விக்ரமை பார்க்க வேண்டும் என்ற வேண்டுகோலை வைத்திருந்தார்.

“சித்த இரு கண்ணம்மா தம்பி திருச்சி விஜய் எக்ஸ்போர்ட் ஓனர்கிட்டே பேசிகிட்டு இருக்கிறாரு அவர் போனதும் பேசிக்குவோம்” என்றவர் அக்கம் பக்கம் யாரேனும் வருகிறார்களா என்று பார்த்துவிட்டு...

“ஆமாம் அந்த புள்ள யாரு கண்ணம்மா? நம்ம ஐயா பேரனோட இவ்ளோ உரிமையா நிக்குது” என்றவருக்கு மனதின் ஆவல் கண்களில் மின்னல் என மின்னியதை கண்ட கண்ணம்மாவிற்கு...

“எனக்கும் அதே ஆசை தான் செந்தில் அண்ணா... ஆனா நாம நினைச்சதெல்லாம் நடந்திருமா என்ன? பார்ப்போம் என்ன நடக்குதுன்னு”

“இல்லை கண்ணம்மா நிச்சயம் நம்ம விக்ரம் தம்பி வாழ்க்கையில் இந்த பிள்ளையால் மாற்றம் வரப் போகுதுன்னு என் உள் மனசு ஆருடம் சொல்லுது” என்றவரின் சொல்லில் கண்ணம்மாவிற்கும் அதே ஆசை உந்தியது.

விக்ரம் அவர்களின் குடும்ப நண்பரான வளையாபதி மற்றும் அவர் மகன் விஜயுடன் ஏற்றுமதி தொழில் சம்மந்தமாக உரையாடிக் கொண்டிருந்தான்.

வெளியே தன் மகனுடன் நின்றிருந்த இளம்பெண்ணை சிசிடிவி காணொலியில் கண்டவனுக்கு சிந்தனை உதயமானது.

“ஒகே அங்கிள் நான் சீக்கிரமே நீங்க சொன்னதை பற்றி முடிவு பண்ணிட்டு சொல்றேன்” என்று விரைவாக அவர்களுடன் பேச்சை முடித்துக் கொள்ள ஆயத்தமானான்.

“விஜய் நான் இங்கிருக்கிற சின்ன சின்ன வேலை எல்லாம் முடிச்சுட்டு, ஆதனை சேஃப் பண்ணிட்டு சொல்றேன் நாம ரெண்டு பேரும் பிசினஸ் விசிட் அடிப்போம்”

“சரி டா சீக்கிரமே சொல்லு எக்ஸ்போர்ட் ஆர்டர் எல்லாம் அந்தந்த டைமுக்குள்ள முடிச்சிறனும்... இல்லைன்னா, நம்ம பெயர் கெட்டிரும்”

“அது எனக்கு தெரிஞ்சதால தானே இன்னும் அதில் கை வைக்காம இருக்கிறேன்... இல்லைன்னா, நான் படிச்சுட்டு இருக்கும் போது அப்பா ஒரு சர்வே எடுத்து பார்க்கத்தான் சொன்னாரு... நான் தான் அதுக்கான பேஸ்மென்ட் எல்லாம் முதலில் ஸ்ட்ராங் பண்ணிட்டு அப்புறமா பண்ணிக்கலாம் ப்பான்னு சொல்லி நிறுத்தி வச்சிட்டேன், கடைசில எதுவுமே நடக்கலை”

“கவலைப்படாதே விக்ரம் உன் நல்லா மனசுக்கு சீக்கிரமே நல்லதா நடக்கும்” என்றவரை வலுக்கட்டாயமாக புன்னகைத்தவன் மனம்... ‘என்னை பற்றி நலனை எண்ணி விசாரிப்பவர்கள் இதை தான் சொல்கிறார்கள் ஆனால் இனி எங்கே அதற்கான வாய்ப்பு?’ என்ற போது அவன் பார்வை சிசிடிவி ஒளிபரப்பில் இருந்த நந்தினியின் மேல் பதிந்தது.

இருவரும் விடைப்பெற்று சென்றிருக்க அதற்காகவே காத்திருந்த நந்தினி யாரின் அனுமதியும் எதிர்பாராமல் ஆவேசத்துடன் உள்ளே நுழைய, அவளின் வேகத்தை கண்டு பயந்தப்படி கண்ணம்மாவும் அவளை தொடர்ந்து உள்ளே சென்றிருந்தார்.

******************************
வணக்கம் நட்பூக்களே...
“என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதையின் அத்தியாயம்-5 பதிந்துவிட்டேன்... சனிக்கிழமை தோறும் பதிவுகள் பதிவிடப்படும், படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் மக்களே!

தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels✍📝
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்
காருராம்

 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-6
ஆதனுடன் நுழைந்த நந்தினி சொகுசு நாற்காலியில் அமர்ந்திருந்த விக்ரமை தீப்பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் சமயம் செந்திலும், கண்ணம்மாவும் உள்ளே நுழைந்திருக்க, அதை பற்றி எல்லாம் சிறிதும் சட்டை செய்யாமல்...

“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல?” என்று எடுத்த எடுப்பில் துடுக்காக வினவியவளை கண்டு உணர்ச்சித் துடைத்த முகத்துடன் பார்த்தபடி அமர்ந்திருக்க... அவளின் பேச்சை கேட்ட கண்ணம்மா, செந்திலுக்கு தான் ‘ஹாங்!’ என்று வியப்பில் வாய் பிளந்து நின்றனர்.

“..................”

“நீங்க மனுஷனா மிருகமா? ஒரு குழந்தைன்னு பார்க்காமல் இப்படி அடிச்சிருக்கீங்களே, உங்களுக்கு கொஞ்சமாச்சும் மனசாட்சின்னு ஒண்ணு இருக்கா?”

“..................”

“இவனை பார்க்கும் போது எனக்கே கண்ணெல்லாம் கலங்கி நெஞ்சு துடிக்குதே, பெற்றவர் உங்களுக்கு துடிச்சிருந்தா இப்படி மிருகத்தனமா அடிச்சிருபீங்களா?” அவள் பேச்சில் பாதிக்கப்பட்டதற்கான எந்த வித உணர்ச்சி பிரதிபலிப்பும் எதிரொலிக்காமல் அவளையே உறுத்துப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான்.

அவனை பற்றி லட்சியம் செய்யாமல் உன்னை இன்று உண்டு இல்லை என்று செய்யாமல் விடமாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டது போல் சரவெடியை போல் வெடித்துக் கொண்டிருந்தாள்.

“அதுவும் எதுக்காக அடிச்சிருக்கீங்க? இவன் என்னை பார்க்கணும்ன்னு சொல்லி கேட்டதால் அடிச்சிருக்கீங்க? அது தான் உங்க மகன் கூட பேசுறவங்க போன் நம்பர் எல்லாம் வாங்கிட்டு வான்னு சொல்லி அனுப்பியிருக்கீங்களே, அதை வீட்டு ஷோகேஸ்ல வச்சு அழகு பார்த்துக்கவா? அதில் இருந்த என் நம்பருக்கு ஒரு போன் பண்ணியிருந்தா நான் வந்து பார்த்திருப்பேன்”

“........................” இப்போதைய பேச்சிக்கு அவனுக்கு பேச நாவு துடித்தாலும், வயது பெண் கல்லூரி செல்லும் பெண் அதிலும் வயதில் சற்று பெரியவர்களான இருவர் அங்கே நிற்கின்றனர் என்பதை கருத்தில் கொண்டு பல்லை கடித்து சகித்து கொண்டு அமர்ந்திருந்தான்... ஆனால் நந்தினிக்கோ அவனின் மௌனம் கூட திமிராகப்படவே...

“உங்களுக்கெல்லாம் குழந்தையை பெற்று வளர்க்க கஷ்டமா இருந்தா ஏன் பெற்றுக்கணும்? யாரை கேட்டு பெற்றுகிட்டீங்க?” தான் என்ன பேசுகிறோம் என்று அறியாமலே ஆவேசத்தில் வார்த்தையை சிதறடிதிருக்க அதுவரை கட்டிக்காத்த பொறுமையை காற்றில் பறக்கவிட்டவன்...

“தப்புதான் உன்கிட்டே கேட்டுட்டு அல்ல பெற்றிருக்கணும்?” என்றவனின் அழுத்தமான வார்த்தையில் தான் அதிகப்படியாக பேசிவிட்டது புரிந்து நாக்கை கடித்துக் கொண்டவள், அருகில் நின்றிருந்த செந்தில், கண்ணம்மாவை அப்போது தான் கருத்தில் கொண்டவளாக வெட்கம் பிடுங்கி தின்றதில் முகம் சிவந்து, தன் தவறை உணர்ந்து மானசீகமாக கொட்டிக் கொண்டாள்.

“சரி தப்பை சரி செய்யுறேன்... ஏதோ நான் செய்த தப்பை பெரிய மனசு பண்ணி மன்னிச்சு இனி என் பையனை என்கிட்டேயே விடப் போறீங்களா? இல்லை; மேடம் நீங்களே கூட்டிட்டு போய் வளர்த்துக்குறீங்களா? சொன்னா, அதுக்கு தகுந்த மாதிரி சுதாரிச்சு இருந்துகுவேன் பாருங்க அதுக்குதான் கேட்கிறேன்” என்றவன் உதட்டை வளைத்து அவளை ஒரு மார்க்கமாக பார்த்திருந்தான்... அவன் பார்வையில் அவளுக்குள் ஏதோ செய்ய சங்கடத்தில் உதட்டை கடித்து கைமுஷ்டியை மடக்கிக் கொண்டாள்.

இருவருக்கும் உண்டான பேச்சில் ராசாபாசம் நிகழ்ந்திருந்தால் எப்படியோ... ஆனால், நந்தினியின் சுருக் சுருக்கென்ற மனதை தைக்கின்ற கேள்வியும், சிறிதும் லஜ்ஜை இல்லாமல் விக்ரமின் லேசுபாசாக விரசம் கலந்த பதிலிலும், பெரியவர்கள் இருவரும் என்ன கருத்து சொல்லி இருவரையும் சமாளிப்பது என்றறியாமல் திணறிப் போயினர்.

கண்ணம்மா, செந்திலை பற்றியும், தான் இருக்கும் இடம் மற்றும் சூழ்நிலையையும் கருத்தில் கொண்ட விக்ரம் தான் சங்கடத்தை முறிக்கும் வழிகளை நிதானமாக கையாண்டான்.

“கண்ணம்மா ம்மா, செந்தில் அண்ணா நீங்க ரெண்டு பேரும் ஆதனை கூட்டிட்டு போய் வெளியில் இருங்க, மேடம் கேட்கிற கேள்விக்கு பதிலை சொல்லிட்டு உங்களுக்கு சொல்லியனுப்புறேன் அப்புறம் உள்ளே வாங்க” என்று நக்கல் தொனிக்க கூறியதில், நந்தினி வசமாக மாட்டிக் கொண்டதை அறிந்தவளுக்கு அந்த குளிரூட்டப்பட்ட அறையிலும் அவளுக்கு உடல் வியர்த்து விறுவிறுத்துப் போனது.

நந்தினியின் விழிகள் கண்ணம்மாவிடம் போகாதீர்கள் என்று பார்வையால் கெஞ்சியதை, அவர் அறியாமல் விக்ரமுக்கு பிடிபட்டுப் போக அவள் மேல் முதலில் தோன்றிய கோபம் மறைய வாஞ்சை உண்டானது. ஆனாலும் அவள் பேச்சினால் விளைந்த ஆத்திரத்தை முன்னுறுத்தி தன்னை கடினமாக்கிக் கொண்டிருந்தான்.

ஆதன் நந்தினியை இறுக பற்றிக் கொண்டு விடமாட்டேன் என்று தர்க்கம் செய்தவனை... “உங்க நந்தினி ம்மாவை எதுவும் செய்யாமல் பத்திரமா திருப்பி கொடுக்குறேன், நீ கொஞ்ச நேரம் கண்ணம்மா ம்மா கூட விளையாடு போ” என்று ஒரு மாதிரியான கூறி கண்களால் கட்டளை பிறப்பிக்கவும், அதில் என்ன கண்டானோ தன் தந்தையின் பேச்சை நிராகரிக்காமல் கண்ணம்மாவுடன் சென்றிருந்தான் ஆதன்.

மற்றவர்கள் அங்கிருந்து நகர்ந்திருக்க, அங்கே இருவருக்குமான தனிமையில் நந்தினி பேச மடந்தையாகிப் போனாள். சில கணங்கள் குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவிற்கு நிசப்தம் நிலவ அதை கலைத்தது விக்ரமின் குரல்...

“ம்ம்ம்... சொல்லுங்க மிஸ்.நந்தினி அடுத்து என்ன கொஸ்டீன் கேட்க காத்திருக்கீங்க? கேளுங்க, நானும் ரொம்ப ஆவலா இருக்கேன் பதில் சொல்ல” என்றவனின் எள்ளாடாளில் தான் பேசியாக வேண்டிய நிலையை புரிந்துக் கொண்டவள், தொண்டையில் எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டு திடத்துடன் அவன் பார்வையை எதிர்கொண்டிருந்தாள்.

“இங்கே பாருங்க விக்ரம் சார் முதலில் நான் வந்ததும் ஆதனை அடிச்சுட்டீங்களே, அதுவும் என்னை பார்க்க சொல்லி கேட்டதுக்காக ஏதேதோ செய்து அவனை துன்புறுத்தி காயப்படுதிட்டீங்களேன்னு தாங்க முடியாத ஆவேசத்தில் கொஞ்சம் அதிகப்படியாவே பேசிட்டேன் தான்... ஆனால் அதுக்காக நான் மன்னிபெல்லாம் கேட்கமாட்டேன்” என்றவளின் தில்லான பதிலில் ஏனோ சினம் துளிர்க்காமல் இப்போதைய அவளின் பேச்சில் சுவாரஸ்யம் தோன்றியது.

“அப்போ நான் மன்னிப்பு கேட்கணும் சொல்றீங்களா மிஸ்.நந்தினி?” என்றதும்...

“ஆமாம்! நீங்க தான் என்னிடம் மன்னிப்பு கேட்கணும்” வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் வேகமாக வந்த பதிலில் திகைத்து தான் போனான்.

“ம்ம்ம்... அப்புறம் மன்னிப்பை எப்படி கேட்கணும்ன்னு சொல்லிருங்க, அப்புறம் அதுக்கு ஒரு தடவை கையில் சூலாயுதத்தை தூக்கிட்டு வர வேண்டிய அவசியம் இருக்காது... சொல்லுங்க சாஷ்டாங்கமா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கணுமா? இல்லை; கைகூப்பி என்னை மன்னித்துவிடுங்கள் மகாராணி நந்தினியார் அவர்களேன்னு கேட்கணுமா? இல்லை; நீங்க சொல்கிற எண்ணிக்கையில் தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்கணுமா?” மன்னிப்பு எப்படி எல்லாம் கேட்கலாம் என்ற வகையில் அவன் பட்டியலிட்டு கொண்டே செல்ல, நந்தினி அவன் கூறியபடி எல்லாம் மனதிற்குள் வரித்துக் கொண்டு நினைத்து பார்த்தவளுக்கு அவளையுமறியாமல் முறுவல் மலர்ந்தது... ஆனால் சூழ்நிலையை உணர்ந்து புன்னகையை உதட்டுக்குள் மென்று விழுங்கி அமர்ந்திருந்தாள்.

“என்ன நான் சொன்ன மாதிரி எல்லாம் மன்னிப்பு கேட்டா நான் எப்படி இருப்பேன்னு உங்க யூகத்தில் வரிச்சு டிரேயில் பார்த்துட்டு இருந்தீங்களா?” என்று அவள் மனதை படித்தவனாக கூறியிருக்க, அவளுக்கோ அவனின் கேள்விகளும், மனதை படிக்கும் யுக்தியையும் கண்டு மனதிற்குள் மெச்சிக் கொள்ள நூதன உணர்வலைகள் எழும்பியது. ஆதனை பற்றியும் அவனுக்காக என்று மட்டும் பதறினோமே சிறிதேனும் நம்மை பற்றியும் யோசித்திருக்க வேண்டுமோ என்ற காலம் கடந்த ஞானோதயம் பிறந்தது.

நந்தினியின் உணர்ச்சிகளை அவதானித்தவனுக்கு அவளை மேலும் சங்கடத்திற்குள் உட்படுத்துவது அவளை நையாண்டி செய்வது போல் ஆகிவிடும் என்றெண்ணியவன்...

“இங்கே பாருங்க மிஸ்.நந்தினி ஆதன் என்னுடைய மகன். அவனை அடிக்கவோ, கண்டிக்கவோ யாருடனும் பேசுவதை தடுக்கவோ எனக்கு முழு உரிமையும் இருக்கு... அது எனக்கு மட்டுமே இருக்கு... அதனால் அவனை பற்றிய கவலையை விட்டுட்டு நீங்க உங்க எதிர்காலத்தை மட்டும் பாருங்க... ஆதனை கண்டிக்க திருத்த மட்டும் இல்லை அவனை கொல்லவும் எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு” அவன் பேச்சில் நான் ஆதனின் தந்தை அதனால் நீ உன் வேலையை மட்டும் பார் என்ற ஆங்காரத் தொனியில் பேசியதே அவளை அவ்விடம் விட்டு நகர வைக்கத்தான்... ஆனால், நந்தினியோ அதுவரை அவனிடம் பேசி மாட்டிக் கொண்டு விழித்ததை எல்லாம் முந்தினக் காட்சி போல பிரயாகப்படுத்திக் கொண்டவள், அவனை எரிக்கும் பார்வையால் சுட்டெரித்தாள்.

“கொல்லுவீங்களா... யாரை கொல்லுவீங்க ஆதனையா?” அவள் வார்த்தை நிதானமாக இருந்தாலும் குரலில் இருந்த அழுத்தம் அவனை உசுப்பேற்றி விடவே...

“ஆமாம்! அவனை பற்றி தானே பேசிட்டு இருக்கோம்... நான் ஆதனுக்கு தான் தந்தை உறவு, உங்களுக்கு இல்லை அதனால் அவனை தான் நான் எதுவும் செய்வேன் உங்க வழியில் நீங்க போங்க” சற்று கண்டிப்புடன் கடுமையாகவே கூறினான். அவளோ திமிறிக் கொண்டு எழுந்தவள் போல்...

“ஒஹ்! ஒரு பச்சை மண் குழந்தைன்னும் பார்க்காமல் அவனுக்கு ரத்தம் கட்டி சிவக்குற அளவுக்கு அடிச்சதே என்னால் பார்த்து தாங்க முடியலை இதில் அவனை.. அவனை....” என்றவளுக்கு வார்த்தைக்கு கூட அதை சொல்ல முடியாமல் மூச்சடைத்தது... நொடியில் தன்னை சமன் செய்துக் கொண்டவள்...

“எழுதி வச்சுகோங்க மிஸ்டர்.விக்ரம் கேசவன்” என்று மேஜையில் இருந்த அவன் பெயர் பலகையை பார்த்தபடி சீற்றத்துடன் ஆரம்பித்தவள்...

‘ஆதன் மேல சிறு கீறல் விழுந்தாலும் உங்க மேல நான் போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டியது வரும்” அத்தனை நேரம் அவளின் கேள்விக்கு பொறுமையாகவே பதிலுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தவனுக்கு, அவளின் அந்த பேச்சு இவள் என்ன நினைத்து இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறாள் என்ற தொனியில் எரிச்சல் மேலோங்கியது.

“உங்களுக்கு கொஞ்சமாச்சும் மூளை இருந்தா... நல்லா கேட்டுக்கோங்க அப்படி ஒன்னு இருந்தா... அவன் மேல எந்த உறவை வச்சு கேஸ் பைல் பண்ண சொல்வீங்க? கட்டின புருஷன் பொண்டாட்டி மேல இருக்கிற கோபத்தை பையன் மேல காட்டிட்டான்னு கொடுப்பீங்களா? இல்லை; நான் கடத்தல்காரன் என் மகனை கடத்திட்டு போயிட்டான்னு என் மேல கம்ப்ளைன்ட் கொடுப்பீங்களா?” என்றவனின் கேள்வியில் தொனித்த எரிச்சலும், கண்கள் சிவந்திருந்ததும் அவன் கோபத்தின் அளவை காட்டி அவள் முதுகுத்தண்டை சில்லிட வைத்தன. இருந்தும் அவனின் எகத்தாளமான கேள்விக்கு பதிலளிக்காமல் பின் வாங்கினாள் அவள் நந்தினி அல்லவே சீறும் வேங்கையாய் சிலிர்த்துக் கொண்டவள்...

“இதெல்லாம் எதுவும் இல்லாமலே அப்பவாவே இருந்தாலும் மகனை கொன்றா கொலை கேஸில் ஈசியா உள்ளே தள்ள முடியும் மிஸ்டர்.விக்ரம்... சும்மா நான் கேள்வி கேட்டுட்டேன்னு என்கிட்டே பந்தை திருப்பிவிட்டு நீங்க சாதிச்சுட்டீங்கன்னு மீசையை முறுக்கிக்க வேண்டாம்... நான் அதுக்கெல்லாம் அசருகிற ஆள் இல்லை ஏன்னா, உங்க மகன் ஆதனை ஒரு தடவை பார்த்தாலும் அவன் கூட காலம் காலமா பழகின மாதிரி அளவுகடந்த அன்பு தான் இருக்கு... எனக்கே அப்படி இருக்கும் போது பெற்ற உங்களுக்கு பாசம் இல்லைன்னு எல்லாம் சொல்லமாட்டேன்... அவனை அடிக்கும் போது அவனை விட நீங்களும் ரெண்டு மடங்கு துடிச்சு தான் போயிருப்பீங்க... ஆனால் பாருங்க நான் யாரு உங்களை கேள்விக்கேட்கன்னு நீங்க சொன்ன சில பதில் தான் என்னை யோசிக்க வைக்குது” என்றவளை குறுக்கிட்டு ஏதோ பேச வந்தவனை கரம் நீட்டி தடுத்தவள்...

“இருங்க நான் பேசி முடிச்சுடுறேன்... நான் உங்களுக்கு யாரா வேண்டுமானாலும் இருந்துட்டு போறேன்... அதை பற்றிய கவலை உங்களுக்கும் இல்லை, எனக்கும் இல்லை. ஆனால் ஆதன் அறியாப் பையன் அவன் தனியாவே இருந்து பழகினதில் என்னுடனான துணையை அவன் ரொம்ப விரும்புறான்... அதில் யாரும் தப்பு சொல்ல எதுவும் இல்லை, இது எல்லா பொண்ணுகளுக்கும் இருக்கிற இயல்பான தாய்மை பாசம் தான் அதை தவறா நினைக்க வேண்டாம்”

“...............”

“வாத்து இடுற முட்டையை கோழி அடை காத்து உயிர்பிச்சு கொடுக்கிறதில்லையா? அதில் எந்த வித பாகுபாடும் இல்லை, எந்த வித தவறான செயலும் இல்லை... மனிதர்கள் நாம இல்லாத ஆதரவற்ற ஒருவருக்கு ஆதரவை கொடுப்பதில் தப்பே இல்லை... ஆதனுக்கு அப்படிதான் ஒரு ஆதரவை கொடுத்தேன், நீங்க ஆதனுடைய தந்தை அவனுக்கான முடிவுகளை நீங்க எடுப்பதில் தப்பிலைன்னு எனக்கு தெரிஞ்சதால இதை சொல்லுறேன் கேட்டுக்கோங்க, அவன் என்னை பார்க்கிறதும் பேசுறதும் பிடிக்கலைன்னா நான் தராளமா விலகிக்கிறேன்... ஆனால் என் காரணமா அவனை அடிச்சு அந்த பிஞ்சு உடம்பை காயப்படுத்தாதீங்க என்னால் தாங்க முடியலை” என்றவளுக்கு அதுவரை அவனுடன் துணிச்சலாக பேசிக் கொண்டிருந்த சுரம் மறைந்து குரல இடறி தொண்டைக்குழியை அடைத்துக் கொள்ள, அதற்கு மேல் அங்கே நிற்கும் சக்தியை இழந்தவள் போல், அவன் முகத்தின் உணர்ச்சிகளை கூட ஏறிடாமல் விருட்டென்று சென்றிருந்தாள்.

அவளின் பேச்சில் பேஸ்தடித்தது போல் பார்வையால் நிலைகுத்தி இருந்தவனுக்கு, அவளின் கண்ணீர் முகம் அவனின் தற்போதைய இரும்பு போன்ற இதயத்தையும் அசைத்து பார்த்திருந்தது.


****************

விக்ரமிடம் பேசிவிட்டு வந்த நந்தினிக்கு மனம் நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது... பாவம்! அவன் ஒருவனாக இருந்து மகனை சமாளிக்க என்ன பாடுபட்டானோ, நாம் வேறு நம் பங்கிற்கு அவனை சேர்த்து செய்துவிட்டோம் பேசாமல் அவனிடம் மன்னிப்பு கேட்டு விடலாமா? என்று ஒரு பக்க சிந்தனையோட்டம் இவ்வாறு எண்ண வைக்க... வேண்டாம் நாம் என்ன குழாயடி சண்டையை போல் வேண்டுமென்றா வம்பிழுத்தோம், ஆதனை காயம்படும் படி அடித்திருக்கிறான் அவன் வலியால் எப்படியெல்லாம் துடித்தானோ அதை கேட்காமல் விடுவதா விடு நந்தினி, அவனை இதற்கு மேலும் நறுக்கென்று நான்கு கேள்வி கேட்டாலும் சிறிதும் தவறில்லை என்று மற்றொரு மனம் வாதிட்டது.

இங்கே விக்ரமின் நிலையோ அவளை காட்டிலும் இருமடங்கு பரிதாபமாக இருந்தது... ஒரு கத்தியில் இரு முனைகள் போல ஒரு பக்கம் மகனின் ஆதரவு, மறுபக்கம் நந்தினி என்கிற வயது பெண்ணின் வாழ்வு, இரண்டுமே அவனுக்கு சேதாரம் இல்லாமல் முள்ளின் மேல் பட்ட சேலையை போன்று எதற்கும் பங்கம் ஏற்பட்டு விடாமல் அவரவர்கள் வாழ்வில் வெற்றி அடைய வேண்டுமே என்று அல்லாடிக் கொண்டிருந்தான். உறங்கும் அவன் மகனை பார்த்தப் போது தான் அவன் அடித்ததால் உண்டான காயம் அவன் கண்ணில் பட்டு நெஞ்சை அறுத்தது.

அவன் மகனின் பால் முகத்தில் எப்போதும் இருக்கும் ஒரு வாட்டம் இன்று நந்தினியுடன் வரும் போது இல்லையே என்று சிந்தித்தவனுக்கு விசனமாக இருந்தது. நந்தினியின் அன்பு நீடிக்கும் ஒன்றுதான் அதனால் அனுபவி ராஜா என்று அனுப்பி வைக்க முடியுமானால் அவன் செய்து விடுவானே... ஆனால், அதன்பிறகு அவன் நிலைமை நினைக்கவே உயிர் ஊசலாட திடுக்கிட்டு எழுந்தவனுக்கு தூக்கம் முகவரி இன்றி சென்றுவிட்டிருந்தது.

கண்ணம்மா அவனை பள்ளிக்கு தயாராக்கிக் கொண்டிருக்க அவனிடம் கதை சொல்லியபடியே உணவை ஊட்டிக் கொண்டிருந்தவரிடம், அவனும் சுவாரஸ்யமாக கேட்டபடி பல சந்தேகங்களை கேட்டு உற்சாகமாக சாப்பிட்டு முடித்து புறப்பட்டவன்... “ஸ்ஸ்ஹ்ஹஹா.... ம்மா வலிக்கு” என்று பையை மாட்டும் போது விலாவில் தந்தை அடித்த இடத்தினால் உண்டான வலியில் முனகிக் கொண்டே சென்றவனுக்கு விக்ரமுக்கு சொரெர் என்று உரைத்து வேதனையை கொடுத்தது.

வேகமாக அவனை நெருங்கியவன்... “ஆதன் சாரிடா கண்ணா! ஈவ்னிங் அப்பா உனக்கு மருந்து போட்டுவிடுறேன்”

“ம்ம்ம்... ஒகே ப்பா... தாடா... உம்மா... அப்பா தாடா” என்று விட்டு உற்சாகமாக பள்ளிக்கு ஓடியவனை கண்டு விழிகள் நனைந்தது.

“தம்பி நீங்களும் சாப்பிட்டுட்டு கிளம்புங்க” என்றதும் கண்களை துடைத்து சுதாரித்துக் கொண்டவன்...

மகனை நினைத்து வருந்திக் கொண்டிருந்தவனுக்கு உணவு உண்ண சுத்தமாக விருப்பமில்லை... “இல்லை கண்ணம்மா ம்மா எனக்கு வேண்டாம் பசியில்லை” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று நகர்ந்து சென்றிருந்தான். அவன் மனதை புரிந்து கொண்டவருக்கு அவனுக்கு எப்போது விடிவு கிடைக்குமோ என்று ஏக்கம் சூழ்ந்தது.

நந்தினி எப்போதும் போல் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தாள்... விக்ரம், நந்தினியிடம் தொடர்பு கொண்டு மகனுக்காக மன்னிப்பு கேட்டுவிடலாமா என்ற எண்ணவோட்டத்தை கண்டு திடுக்கிட்டான்... அவன் கேட்ட கேள்விகள் அனைத்தும் எறிவளைதடு போல் பாய்ந்ததில் தனக்குத்தானே குட்டு வைத்துக் கொண்டவன்.

‘அதுதான் அவள் வேண்டாமென்றால் விலகி செல்கிறேன் என்று கூறிவிட்டாளே, இனி அவளை தொந்தரவு செய்து அவள் வாழ்வில் சிக்கலை ஏற்படுத்த வேண்டாம்’ என்று எண்ணிக் கொண்டவன் அதே திடசித்தத்துடன் தன் மகனை சமாதானம் செய்யும் வழிமுறைகளையும் யோசித்து வைத்துக் கொண்டான்.

அவர்களின் சந்திப்பை முறித்துக் கொள்ள எண்ணிய இருவருக்குமே தங்களின் சந்திப்பு சாசுவதமின்றி தொடருவது என்று அறிந்து கொள்ளும் நாளும் வந்தது.

******************************

வணக்கம் நட்பூக்களே...
“என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதையின் அத்தியாயம்-6 பதிந்துவிட்டேன்... வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பதிவிடப்படும், படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் மக்களே!

தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels✍📝
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-7
திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம் இருபத்தி ஒரு கோபுரங்கள் முப்பத்தி ஒன்பது கூடார அமைப்புகள் கொண்டு பிரசித்தி பெற்ற ஆலயம்.

விக்ரம் செந்தில், கண்ணம்மாவுடன் தன் மகனை அழைத்து வந்திருந்தான்... ஆதன் மிகுந்த உற்சாகத்துடன் கோவிலில் அமைந்துள்ள பூங்காவை ரசித்து வலம் வந்து ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தான்.

“ப்பா பத்தாம்பூச்சி... பூ மேல பத்தாம்பூச்சி” என்று தந்தையிடம் கூறி குதூகலித்து கொண்டிருந்தவனின் கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டவன்...

“பத்தாம்பூச்சி இல்லை... பட்டாம்பூச்சி சொல்லு” என்று புன்னகையுடன் கூறி, மகனுக்கு சொல்லிக் கொடுக்க... அவனும் தந்தையின் சொல்லை சமத்தாக கேட்டுக் கொண்டு...
“பட்..டாம்..பூச்சி..” என்று நிறுத்தி நிதானமாக உச்சரித்துவிட்டு அதன் பின்னே ஓடிக் கொண்டிருந்தான்.

அவனை தன் கண் பார்வையில் வைத்துக் கொண்டு விக்ரம் ஒரு முக்கியமான அழைப்பை நிராகரிக்க முடியாமல் மும்முரமாக அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தான். கண்ணம்மா, செந்தில் இருவரும் கோவிலை ஆசுவாசமாக சுற்றி வந்து கொண்டிருந்தனர்.

நந்தினி தன் தோழியர் கூட்டத்துடன் இணைந்து பொழுதுபோக்கிற்காக வந்தவள் அனைவரும் ஒன்றாக கலகலத்து சிரித்தப்படி உலா வந்துக் கொண்டிருந்தனர்... அவர்களும் அங்கே அமைந்திருந்த பூங்காவில் உள்ள பூக்களை ரசித்த வண்ணம் தங்களின் அலைபேசியில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர்.

ஆதன் நந்தினியின் குரலில் அவளை அடையாளம் கண்டு கொண்டு சுற்று புறம் முழுக்க பார்வையால் அலசியவன், பூக்களின் ஓரத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தவளை கண்டுக் கொண்டு தந்தையை பற்றியே மறந்தவனாக... “நந்தினி ம்மா” என்று அவளை களிப்புடன் நெருங்கியவன் முகத்தில் ஆயிரம் விளக்கொளி பிரகாசித்தது போல் ஜொலித்துக் கொண்டிருந்தது.

வாரங்கள் கடந்து கண்ட ஆதனை கண்டு உணர்ச்சிப்பிரவாகம் பொங்கியது... “ஆது குட்டி நீங்களா?” என்றவள் அவனை அள்ளி அணைத்து கன்னத்தில் அச்சாரம் பதித்தவளை நெருங்கிய தோழி ஒருத்தி...

“ஹேய் நந்து இது யாரு தெரிஞ்சவங்க பையனா?”

“ஆமாம் டி நீங்கெல்லாம் கடையை சுற்றி பார்த்துட்டு இருங்க, நான் இவன் கூட பேசிட்டு வந்துடுறேன்” என்றதும் அவர்கள் அங்கிருந்து நகர்ந்திருக்க...

“ஆது குட்டி நீங்க யார் கூட வந்தீங்க?” என்றதற்கு அவன் பதில் கூறிக் கொண்டிருந்த சமயம், விக்ரம் மகனை காணாமல் திகைத்துப் போனான்.

என்னதான் அவன் மேல் பார்வை பதித்திருந்த போதும் சற்று அசந்த நேரத்தில் ஓடிவிட்டதை எண்ணி கிலியில் அவன் உடல் வியர்த்து விறுவிறுத்துப் போனது... அங்கும் இங்கும் பரபரப்பாக விழிகளால் அலசிக் கொண்டே “ஆதன்... ஆதன்...” என்று குரல் கொடுத்தபடி அவன் நந்தினியுடன் இருந்த எதிர்திசையில் தேடிச் சென்றிருக்க, கண்ணம்மா, செந்திலிடமும் விவரத்தை கூறி அவர்களையும் தேடிப் பார்க்க ஏவினான்.

அவர்களும் வெகு சிரத்தையாக மனதில் ஆதன் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டே தேட கண்ணம்மா, செந்தில் சரியாக நந்தினியிடம் இருந்த ஆதனை கண்டு கொண்டிருந்தனர்.

“இதோ பையன் அங்கிருக்கான்” என்று செந்தில் கூறியதும்...

“அப்பாடா நன்றி பெருமாளே” என்று கண்ணம்மா கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

“நீ போய் அவங்ககிட்டே பேசிட்டு இரு கண்ணம்மா, நான் போய் தம்பியை கூப்பிட்டிட்டு வரேன்... மனுஷன் தவிச்சு போய் இருப்பாரு” என்று கூறிவிட்டு செந்தில் சென்று விட கண்ணம்மா நந்தினியை நோக்கி சென்றார்.

“அடடே கண்ணம்மா ம்மா எப்படி இருக்கீங்க? நீங்க தான் ஆது குட்டியை கூட்டிட்டு வந்தீங்களா?”

“நான் நல்லா இருக்கேன் நந்தினிமா, நான் மட்டும் வரலை விக்ரம் தம்பியும், செந்தில் அண்ணனும் கூட வந்திருக்காங்க... ஆதனை காணோம்னு அவங்க அப்பா அங்கே மண்டைக்காஞ்சு போயிட்டாரு” என்றதும் நந்தினிக்கு ஆதன் தன்னிடம் வந்ததை அவன் கவனிக்கவில்லை என்பது புரிபட்டது... அவள் ஏதும் பேசும் முன்னரே தூரத்தில் அரக்க பறக்க வந்த விக்ரமின் முகத்தில் பதற்றம் ஏற்பட்டதின் எதிரொலியாக வேர்வை துளிகள் படிந்திருக்க, ஆதனை கடுமையாக முறைத்துப் பார்த்தவன்...

“என்ன கண்ணமா ம்மா இவன் இங்கிருக்கிறானா? இவனை தேடி எங்கெங்கேயோ அலைஞ்சுட்டு இருக்கோமே, இவன் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்துட்டா பெற்றவனுக்கு கோபம் வராதா? அடிச்சா சிபாரிசுக்கு வரவங்களுக்கு இதெல்லாம் சரியானதா தெரியுதாமா?” என்று ஆதனின் செயலை கண்டிப்பது போல் மறைமுகமாக நந்தினியிடம் நியாயம் கேட்டுக் கொண்டிருந்த விக்ரமின் மனம் மகனை கண்ட நிம்மதியில் ஆசுவசமாகி இருந்தது.

“ஏன் கண்ணமா ம்மா, அது என்ன எதுக்கெடுத்தாலும் இந்த அறியா பச்சை பிள்ளை மேலேயே குறை சொல்லுறது... இவன் என்கிட்டே வந்த போது உங்க தம்பி தான் மும்முரமா போனில் ஐக்கியமாகி இருந்தாரு... நான் அதை பார்த்தேன். பையனை வெளியில் கூட்டிட்டு வந்துட்டா போதுமா, பத்திரமா பார்த்துக்க வேண்டாமா... அங்கே அசால்டா இருந்துட்டு இந்த சின்ன பையன் மேல பலியை சொல்லுறது” என்று உதட்டை ஓரமாக வளைத்து சலித்துக் கொண்டவளின் பேச்சில் பற்களை நெறித்தான்.

‘அவ என் பையன் கொஞ்சமாச்சும் அதை மனதில் வைக்கிறாளான்னு பாரு’ என்று மனதிற்குள் கருவிக் கொண்டவனுக்கு, அவளின் அந்த எதிர்வாதத்தை அவன் சித்தம் ரசிக்கவும் செய்ததை கண்டு திடுக்கிட்டது. அவன் எண்ணம் புரியாதவளுக்கு அவனை சீண்டிக் பார்க்கும் ஆவல் உந்த...

“ஏன் கண்ணம்மா ம்மா ஆதன் என்னை தேடி என்கிட்டே வந்தான் பரவாயில்லை... இதே அவன் வேறெங்கும் காணாமல் போயிருந்தா என்ன ஆகும்? என்ன மாதிரி முக்கியமான வேலையா வேணா இருக்கட்டும் முதலில் மகனை கண்ணும், கருத்துமா பார்த்துக்க சொல்லுங்க” என்று சிறிதும் தாட்சண்யம் இன்றி அவனை குத்தி பேசியதில் அவனுக்கு ஆத்திரமாக வந்தது.

“என்ன கண்ணம்மா ம்மா பண்ணுறது? இவங்க இத்தனை நாளா சொல்லாமல் எனக்கு தான் விவரம் தெரியாமல் போச்சு... இனிமே தினம் அரைமணி நேரம் அம்மையாரை டியுசன் எடுக்க சொல்லுங்க கற்றுக்கிறேன்” என்று கண்ணம்மாவிடம் கூறியவனின் பார்வை நந்தினி மேல் அழுத்தமாக பதிந்தது.

இவர்களின் வார்த்தை போரை எதிர்கொள்ள முடியாமல் மற்ற இருவருக்கும் விழி பிதுங்கியது.

“அப்போ சரி கண்ணம்மா இதுக்காகவே தினம் ஒரு மணி நேரம் நான் டியுசன் எடுக்க வரேன் உங்க தம்பியை தயாரா இருக்கச் சொல்லுங்க” என்று அடிக்கண்ணால் பார்த்தவாறு கூறியவளின் குறும்புப் பேச்சை அவன் கடுப்பையும் மீறி ரசிக்க தான் வைத்தது.

“அம்மையார் இலவசமா எனக்கு டியுசன் எடுக்கப் போறாங்களா? இல்லை, அதுக்கு ஏதாவது சார்ஜ் உண்டா?” சிரிப்பதற்காக துடித்து கொண்டிருந்த நாவை கட்டுப்படுத்துவதற்கு அறிகுறியாக கடைவாயில் அடக்கிக் கொண்டிருந்தவனை நோக்கி...

“ஃப்ரீ தான்! ஆனால் சரியா கத்துகலைன்னா பனிஷ்மென்ட் உண்டு” என்றவளின் உதடுகள் இதோ சிரித்து விடப்போகிறேன் என்பது போல் துடித்துக் கொண்டிருந்தது.

அவள் பேச்சை விடவும் அவளின் குறும்புகூத்தாடும் லேசர் விழிப் பார்வை வினோத அலைகளை உருவாக்கி அவனுள் தூங்கிக் கொண்டிருந்த நாளங்களை தட்டி எழுப்பி அவள்பால் ஈர்த்து கொண்டிருந்தது... அது அத்தனை நல்லதல்ல என்பதையும் அக்கணமே உணர்ந்துக் கொண்டவன் தன்னை கடினமாக்கிக் கொண்டான்.

“ஆதன் போகலாம் வா” என்று அவளை பார்வையால் அளந்துக் கொண்டே மகனை அழைத்துக் கொண்டவனை தொடர்ந்து இந்த புரியாத புதிருக்கான விடை என்னவோ என்று ஆழந்த குழப்பத்தில் வியாபித்தப்படி மற்ற இருவரும் சென்றனர்.

நந்தினி நண்பர் குழாமுடன் இருந்தாலும் அவள் நினைவுகள் முழுக்க விக்ரமையே சுற்றி வட்டமிட்டு கொண்டதில் புன்னகை அரும்பிக் கொண்டே இருந்தது...

“இருங்க! இருங்க! உங்களுக்கு டியுசன் எடுக்க ஆரம்பிக்கிறேன்” என்று மனதுக்குள் கூறிக் கொள்வதாக எண்ணி வாய் விட்டே உளறியிருக்க...

“ஏய் நந்து என்னடி ஆச்சு, யாருக்கு டியுசன் எடுக்கப் போகிற?” என்றதும் தான் அவள் வெளிப்படியாக உளறியிருப்பதை புரிந்துக் கொண்டவள் நாக்கை கடித்துக் கொண்டவள்...

“அது வேற ஒன்னும் இல்லைடி என் கூட இருந்தான்ல குட்டி பையன் ஆதன், அவனுக்கு தான் டியுசன் டீச்சர் சரியில்லைன்னு சொன்னான் நானே உனக்கு டியுசன் எடுக்கிறேன்னு சொன்னேன்” என்று கூறி சமாளித்திருக்க அவர்களும் அமைதியாக விட்டுவிட்டனர்.

நந்தினி வீடு வரையிலும் விக்ரமின் நினைவுகளை ஓரம் கட்டியிருந்தவள் தன்னறைக்குள் புகுந்ததும் அவனின் முகமே அவளுக்குள் நிழலாடிக் கொண்டிருந்ததை விசித்திரமாக இருந்தாலும் அது உவப்பை அளிக்கவே அந்த தருணங்களை மிகவும் ரசித்துக் கொண்டிருந்தாள்... இதற்கு முன்பு எப்படியோ ஆனால் எப்போது ஆதனுக்காக அவன் முகத்தை பார்த்து பேச ஆரம்பித்தாளோ, அக்கணமே அவளுக்கு அவன் மேல் அபிப்ராயம் ஏற்பட்டுவிட்டது தான் உண்மை!

அவளை கண்டாலே மலர்ந்து விகசிக்கும் ஆதனின் முகமும், அவன் தந்தையான விக்ரமுடன் வழக்கு வைத்து குறும்புத்தனமாக பேச்சுக்கு பேச்சு வார்த்தையாடுவதையும், அவள் சித்தம் விரும்பியது. அப்போது தான் ஆதன் இல்லாமல் விக்ரம் மேலும் தனிப்பட்ட ஈர்ப்பு இருப்பதை அவள் அன்றைய இரவே புரிந்துக் கொண்டுவிட்டிருந்தாள்.


****************

அன்றைய தினத்திலிருந்து அவள் கல்லூரிக்கு தன் வாகனத்தில் செல்லுவதையே வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள்... அவள் கல்லூரிக்கு விக்ரமின் மில்லை கடந்து தான் செல்ல வேண்டும் என்பதால், சமயம் வாய்த்தால் சற்று வாயாடி வம்பிழுத்துவிட்டு செல்வது என்ற குறிக்கோளுடன் சென்றவளுக்கு அவள் எண்ணமும் பலிதமானது.

அப்போது தான் விக்ரமின் நான்கு சக்கர வாகனம் அவன் மில்லுக்குள் நுழைய காரை வளைத்த நேரம், அதை கண்டு கொண்ட நந்தினிக்கு அவனுடன் வம்பு வளர்க்க காரணம் எம்புட்டுவிட்டதில் கண்கள் மின்ன வேகத்துடன் வாகனத்தை முறுக்கியவள் நேரே அவன் காரை மோதுவது போல் கிரீச் என்ற சப்தத்துடன் நிறுத்தினாள்.

விக்ரமுக்கு யாரோ எவரோ இப்படி காரை வளைத்துக் கொண்டிருப்பதை கூட அறியாமல் என்ன வாகனம் ஓட்டுகிறார்களோ என்று கரித்து கொட்டியபடி கோபாவேசத்துடன் இறங்கியவன்... அங்கே நின்ற நந்தினியை கண்டு முதலில் வியப்பில் விழிகளை அகல விரித்தவன், மறுகணமே அவளின் செயலை கண்டிப்பது போல் கண்கள் இடுக்கி பார்த்து முறைத்து வைத்தான்.

உன் முறைப்புகெல்லாம் நான் அசரமாட்டேன் என்பது போல் தானும் அவனை போலவே முறுக்கிக் கொண்டு பார்த்தவள்...

“பையனை மட்டும் தான் வளர்க்க தெரியலைன்னு நினைச்சேன் கடைசியில் காரை ஓட்டவும் தெரியலையா?” என்று கூறி நகைத்தவளிடம்...

“ஏன் அதுக்கும் நீயே டியுசன் சொல்லிக் கொடேன்” என்று உதட்டை வளைத்து கேலியாக கூறியவனின் கண்கள் சிரித்துக் கொண்டிருந்தது... அவள் நினைத்து போல் வார்த்தை வளர்க்க அவனே வித்திட்டதில் மனம் குத்தாட்டம் போட...

“ம்ஹும்... இது என்ன உனக்கு வந்த சோதனை நந்தினி? ஆனானப்பட்ட விகேஎஸ் ரைஸ் மில் ஒனருக்கே நீ தான் கார் ஓட்ட கத்து கொடுக்கணுமா... பேசாம பேரண்டிங் கிளாஸ் டியுசன், கார் டிரைவிங் ஸ்கூல்ன்னு, இப்படி ஏராளமான பயிற்சி கூடம் திறந்து வச்சு வித்தையை கத்து கொடுக்க ஆரம்பிக்கலாம் போலவே” என்று வேடிக்கை பேச, விக்ரமுக்கு அவளின் அந்த பேச்சு ஈர்த்தது... அது அவனின் சொந்தமான தொழிற்கூடம் அங்கே அவனுக்கே கீழே வேலை செய்பவர்கள் பலர் இருக்கின்றனர் என்பதை மறந்தவனாக வார்த்தையாட ஆவலுடன் முனைந்த நேரம்...

“விக்ரம் தம்பி நேத்து அறைச்ச நெல்லு மூட்டையை கணக்கு போட்டு குடோன்ல வைக்கணும் உங்களுக்காக தான் அங்கே எல்லாரும் காத்திருக்காங்க” என்று செந்தில் கூறிவிட்டு சென்றுவிட, அதையும் பிடித்துக் கொண்ட நந்தினி...

“என்ன மில் ஓனர் சார் கவுண்டிங் ஆச்சும் தெரியுமா? இல்லை, அதுக்கும் நான் தான் கிளாஸ் எடுக்கணுமா?” என்று கண்களில் குறும்பு மின்ன வினவியவளை கண்டு இதழ்கள் சிரிப்பதற்கு தயாராக முற்பட இருக்கும் இடத்தை உணர்ந்து தன்னை சமாளித்துக் கொண்டவன்...

“எல்லாம் என் கிரகம் நீ வந்து எனக்கு சொல்லிக் கொடுக்கிறதா சொல்லுறதை கேட்டுட்டு நிற்க்கனும்னு என் தலையில் எழுதியிருக்கு... ஒழுங்கா ரோட்டை பார்த்து வண்டி ஓட்டிட்டு போய் காலேஜ் சேருற வழியை பாரு... இப்படி வாண்டேட்டா என் மில்லுக்குள்ள விபத்தை உண்டாக்க நினைச்ச மாதிரி வேறெங்கேயும் செய்தா உன்கிட்டே இருக்கிற லைசென்ஸை பிடுங்கிருவாங்க” என்று எள்ளாட அதற்கும் அசராது பார்த்தவள்...

“இந்த அட்வைஸ்க்கு சார்ஜ் இருக்கா மில் ஓனர் சார்?” என்று தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு வினவியதும், சிரிப்பை மென்று விழுங்கிக் கொண்டவன்...

“இல்லை ஃப்ரீ தான்” என்று கூறிவிட்டு விருட்டென்று திரும்பிக் கொண்டவன் முகத்தில் மந்தகாச முறுவல் படர்ந்து முகம் புது சோபையை பிரதிபலித்தது.

விக்ரமுக்கும், நந்தினியின் இந்த குறும்பு பேச்சுகள் தனிவித மாற்றத்தை ஏற்படுத்தியதில், அவனுக்கும் அவள் மேல் ஒரு தனிப்பட்ட நோக்கத்தை உண்டாக செய்தது.

நந்தினி அன்று மாலை ஆதனுடன் நேரம் செலவழித்துவிட்டு, விக்ரமையும் வம்பிழுத்து விட்டு அவளாகவே போதும் விட்டுவிடு பிழைத்து போகட்டும் என்று திருப்தியான பிறகே அங்கிருந்து சென்றிருந்தாள்... அது அன்றைய தினம் மட்டுமில்லாமல் அதுவே தொடர்கதை ஆனது... நந்தினியின் வரவு ஆதனை உயிர்ப்புள்ள சிறுவனாக துள்ளி திரிய வைத்தது, அவனின் அந்த உயிர்ப்பை கண்ட கண்ணம்மாவிற்கு மனம் நிறைந்துவிட்டது.

“தம்பி அந்த நந்தினி பொண்ணு வந்துட்டு போறதில் இருந்து தான் ஆதன் பையன் இப்படி பட்டாம்பூச்சி மாதிரி சந்தோசமா சுத்தி திரியுறான்... அந்த பிள்ளை நூறு வருஷம் மகராசியா இருக்கனும்” என்று மனமார வாழ்த்தினார்... விக்ரமுக்கும் அதே எண்ணம் தான் வியாபித்த போதிலும் ஏனோ நந்தினியுடனான உறவு தற்காலிகமாக இல்லாமல் இறுதி வரை இருக்குமானால் அவனுக்கு வாழ்வில் வேறேதும் தேவையில்லையே என்ற எண்ணம் கொண்ட கணமே அவன் எண்ணம் செல்லும் போக்கை எண்ணி திடுக்கிட்டு போனவன், அவனின் இந்த விபரீதமான நினைவுகளை விரட்டியும் அடித்திருந்தவன்...

“ஆமாம் கண்ணம்மா அந்த பொண்ணுக்கு நிச்சயம் நல்ல வாழ்க்கை தான் அமையும் அப்படிதான் அமையனும்” என்று கூறும் போது அவனுள் ஏதோ ஒன்று உடைவது போன்று எழும்பும் பிரமையை உணர்ந்தான்.


****************

“அடடே ஆதன் தங்கம் நீங்க எங்கே இங்கிருக்கீங்க? அப்பா கூட வந்தீங்களா?” என்று பொருட்காட்சியில் கண்ட ஆதனிடம் விசாரிக்க, அவளின் கேள்வியில் அவன் முகம் சுருங்கி போனது.

“இல்லை நந்தினிமா அவங்க அப்பா வீட்டில் இருக்காரு நானும், செந்தில் அண்ணனும் தான் இவனை இங்கே அழைச்சுட்டு வந்தோம்”

“ஏன் கண்ணம்மா ம்மா அவர் வரலை?” ஏனோ நந்தினியின் அந்த உரிமையான விசாரிப்பில் அவருக்கு திருப்தி உண்டாக...

“அதுவா அவங்க ப்பா ஊரில் இருந்து வந்திருக்கிற உறவுக்காரங்க கிட்டே பேசிட்டு இருக்காருமா, அவங்க கிளம்பிட்டாங்கன்னு விக்ரம் தம்பி சொன்னதுக்கு அப்புறம் தான் நாங்க வீட்டுக்கு போகணும்... அதுவரைக்கும் வெளியில் தான் சுத்தணும் அவனுக்கு இன்னைக்கு அவங்க அப்பா புது பேக் வாங்கித் தர கடைக்கு கூட்டிட்டு போறேன் சொல்லிருந்தாரா, அது இன்னைக்கு போக முடியாதே அதனால் முகத்தை தூக்கி வச்சுகிட்டு உட்கார்ந்திருக்கிறான்” என்றதும் நந்தினிக்கு ஏகத்துக்கும் குழப்பம் ஏற்பட்டது... உறவினர்கள் வந்தால் என்ன அவன் மகன் தானே, இவனை ஏன் அதுவரை வெளியில் காக்க வைக்க வேண்டும்? என்று நினைத்தது மட்டுமல்லாமல் அதை அவரிடம் கேள்வியாவும் வினவிவிட்டிருக்க...

“அதை என்னன்னு நந்தினிமா சொல்ல சொல்லுற? இவங்க உறவுக்காரங்களுக்கு எல்லாம் விக்ரம் தம்பியோட பணமும், சீர் வரிசையும் வேணும்... ஆனால் அந்த தம்பியோட வாழ்க்கை எப்படி போனா எங்களுக்கென்னன்னு நினைக்கிற ஆளுங்க” என்றவரை அவசரமாக இடையிட்டவள்...

“எதுவா வேணும் இருக்கட்டும் ம்மா, அதுக்காக ஆதனை ஏன் வீட்டில் இருக்கக்கூடாதுன்னு சொல்லணும்? அவனை தனியா அனுப்பணும்... நான் தனியான்னு சொன்னது என்ன தான் நீங்க கூட இருந்தாலும் அவங்க அப்பா போல வருமா அந்த அர்த்தத்தில் சொன்னேன்” என்று கேள்வியும் கேட்டவள் எங்கே அதனால் அவர்கள் மனம் கயமடைந்துவிடுமோ என்றெண்ணி விளக்கமும் அளித்தாள்.

“நீ என்ன கேட்டாலும் நான் தப்பா நினைக்கமாட்டேன் நந்தினிமா... ஏன்னா குணக்கேடான ஒரு பெண்ணை கல்யாணம் செய்து அதனால தன் கௌரவத்தையும், மான மரியாதையும் மட்டுமில்லாமல் தன் குடும்பத்தையும் இழந்து கையில் குழந்தையோட நிராதரவா நிற்கிற அந்த விக்ரம் தம்பிக்கும், அவன் உதிரத்தில் உருவானதாலேயே இந்த பிஞ்சு மனசை நோகடிக்கிற பலருக்கும் மத்தியில், எங்களை போலவே நீயும் பாசம் காட்டி நல்லது நினைக்கிற பாரு அது ஒண்ணு போதும் நீ எது கேட்டாலும் அதில் நியாயம் இருக்கும்ன்னு சொல்றதுக்கு” என்றவர் தன் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு தொடர்ந்து...

“உறவுகாரங்க நம்ம விக்ரம் தம்பிக்கு மாமா முறையுள்ள குடும்பம், அவங்களுக்கு ஒண்ணுக்கு ரெண்டு பொண்ணுங்க அந்த பொண்ணுகளை கூட்டிட்டு வந்தா எங்கே விக்ரம் தம்பிக்கு கட்டி வைக்க சொல்லிருவாங்களோன்னு அவங்களை விட்டுட்டு இவங்க மட்டும் வந்திருக்காங்க... இவங்க மட்டும் இல்லை இவங்களை போல இருக்கிற எல்லா முறைகாரர்களும் அதை தான் பண்ணுறாங்க... ஆனா தம்பிக்கு அதெல்லாம் கூட பெருசா பாதிப்பை கொடுக்கிறதில்லை... வரவங்க வந்தோமா போனோமான்னு இருந்தாலாவது பரவாயில்லை, ஓடிப்போன அம்மாவுக்கு பிறந்தவள் என்கிறதாலேயே இந்த பையனை உதாசீனப்படுத்தி பேசுறதும், குழந்தைன்னும் பார்க்காமல் தொட்டதுக்கெல்லாம் அடிக்கிறதும், இதெல்லாம் பார்த்த விக்ரம் தம்பிக்கு தாங்க முடியாம கேள்விக்கேட்டா... நாங்க வரும்போது கண்டிக்கலைன்னா இவனும் அவங்க அம்மா மாதிரியே தப்பு செய்வான்னு சொல்லி நோகடிக்கறாங்கமா” அவரின் பேச்சை கேட்ட நந்தினிக்கு மனம் கொந்தளித்தது.

“அது மட்டுமில்லை நந்தினிம்மா... போறப்போ இந்த பையன் இருக்கான்னு பார்க்காமல் சீக்கிரமா இவனை ஏதாவது ஆஸ்ரமத்தில் விட்டுரு விக்ரம், நாங்க உனக்கு அழகு போல பெண் பார்த்து ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்றதை கேட்டுட்டு”

“அப்பா கோமதி ம்மா சொன்னாங்க நான் உங்ககூட இருக்கக்கூடாதாம்... எங்காச்சும் தொலைஞ்சு போன்னு சொன்னாங்க... ஏன் ப்பா அப்படி சொன்னங்க?” என்று மழலையில் அறியாமல் வினவியவனை கண்டு விக்ரமுக்கு ரத்தம் கொதித்தது.

“உன்னை அப்படி எல்லாம் அப்பா விட்டுவிட மாட்டேன்டா கண்ணா... யார் என்ன சொன்னாலும் கடைசி வரைக்கும் நீ என் கூட தான் இருப்ப” என்றவனின் கூற்றை புரிந்தானோ என்னவோ ஆனால் தலையை மட்டும் நன்றாக ஆட்டி வைத்தான்.

“பாருங்க கண்ணம்மா குழந்தைன்னு பார்க்காமல் என்னெல்லாம் சொல்றாங்கன்னு... இனிமேல் அவங்க யாரும் இங்கே வரக்கூடாது, அப்படி வருகிற சூழ்நிலை ஏற்பட்டாலும் நீங்க பார்த்துக்கோங்க அவங்க இங்கிருந்து போனதும் தான் ஆதன் வரணும்” என்று அனைத்தையும் கண்ணம்மா விளக்கமாக கூறி முடித்திருக்க நந்தினிக்கு கோபம் கனன்றது.

“நீங்க சொல்றதெல்லாம் கேட்கும் போது எனக்கே ஆத்திரமா வருது ஆனா அதை கேட்டுட்டு அவங்க அப்பா என்ன செய்திருக்கணும் வந்தவங்களை விரட்டி அடிச்சிருக்க வேணாமா? ச்சே... இப்படியுமா மனுஷங்க இருப்பாங்க ஒருத்தர் தலையெழுத்து பிசகிருச்சுன்னா சரிபடுத்த வேண்டாம், உதவ வேண்டாம் அட்லீஸ்ட் அவங்களை வார்த்தையால் காயபடுத்தாமல் ஆச்சு இருக்கலாம்ல... இப்படிப்பட்ட வக்கிர குணம் கொண்டவங்களை தான் வரவேற்று உபசரிச்சு விருந்து போட்டு அனுப்ப இந்த குழந்தை பையன் ரோட்டில் அல்லாடிகிட்டு இருப்பானா?” என்றவளுக்கு ஆதனின் வாடிய முகம் அவளை வாட்டியது. வேகமாக யோசித்தவளுக்கு அந்த யோசனை சரியாகப்படவே ஆதனை நெருங்கியவள்...

“ஆது குட்டி நந்தினிம்மா கூட வரீங்களா?” என்றவளை எப்போது உவகையுடன் எதிர்கொள்பவன் அன்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே...

“வாணா... எங்க அப்பா வேணும், எனக்கு பேக் வேணும்” என்று கம்மிய குரலில் சோகமாக கூறிவிட்டிருக்க அவன் மனதை புரிந்துக் கொண்டவள்...

“அவ்ளோ தானே நந்தினிம்மா வாங்கித் தரேன்... அப்புறம் வாங்கிட்டு அப்படியே நந்தினிம்மா வீட்டுக்கு போகலாம் என்ன சரியா?” என்றதும் அவன் முகம் ஒளிர...

“ஒகே நந்தினி ம்மா” என்றவன் கண்ணம்மா புறம் திரும்பி...

“கண்ணம்மா ம்மா! கண்ணம்மா ம்மா! நந்தினி ம்மா எனக்கு பேக் வாங்கி தருவாங்க, அப்புறம் நந்தினி ம்மா ஊத்துக்கு போறேன்” என்று உற்சாகத்தில் ரப்பர் பந்தாய் துள்ளி குதித்து கூறியவனை கண்டு அவருக்கு அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டது.

“ஆனால் நந்தினி ம்மா, விக்ரம் தம்பி கேட்டா என்ன பதில் சொல்றதுன்னு தெரியலியே, தம்பி ஏன் அனுப்பினீங்கன்னு கேள்வி கேட்டுச்சுன்னா என்ன பண்ண?”

“அதெல்லாம் அவங்க பேசிக்குவாங்க கண்ணம்மா” என்று கூறியபடி வந்தார் செந்தில்.

“குழந்தையை நந்தினிம்மா தானே கூட்டிட்டு போறாங்க விடு கண்ணம்மா பார்த்துக்கலாம்” என்று கண்களால் பேசியவரின் மொழியில் ஏதோ செய்தியிருக்க அவரும் அதை புரிந்தவர் போல் சரி என்று தலையாட்டி இருந்தார்.

நந்தினி ஆதனை அழைத்துக் கொண்டு அவனுக்கு பிடித்ததை வாங்கிக் கொடுத்துவிட்டு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்... ஆதனுடன் வீட்டிற்குள் நுழையும் முன்...

“இங்கே பாரு ஆதன் வீட்டில் தாத்தா பாட்டி யார் என்ன கேட்டாலும் உன் அம்மா, அப்பா ரெண்டு பேரும் ஊருக்கு போயிருக்காங்க, நீ உன் சித்திக்கூட இருந்த நான் கூட்டிட்டு வந்தேன் இப்படி தான் சொல்லணும் சரியா” என்றதும் நந்தினி சொல் வேதம் என்பது போல்...

“ஒகே நந்தினி ம்மா” ரம்யாவின் பெற்றவர்கள் மனநிலை தான் தன் பெற்றவர்களுக்கும் இருக்கும் என்று எண்ணிய நந்தினி, முன்னெச்சரிகையாக வீட்டை சமாளிக்க திட்டம் தீட்டி வைத்துக் கொண்ட பிறகே ஆதனை அழைத்துச் சென்றாள்.

அவள் நினைத்தது போலவே ரேவதி, துரைசாமி இருவரும் கேட்ட கேள்விக்கு யோசித்து வைத்ததை மாற்றமில்லாமல் பிசிர்தட்டது பேசியவளின் பேச்சிற்கு எதிர்வாதம் எதுவும் கூறாது அவளை பற்றி அறிந்தவர்களாக விட்டுவிட்டனர்.

இரவு முழுக்க ஆதனுடன் நேரம் செலவிட்ட நந்தினிக்கு எத்தனை நாட்கள் இது போல் துணையில்லாமல் தவித்திருப்பானோ என்றெண்ணி உயிரை உலுக்கியது.

அவனுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்து அவனுடன் விளையாண்டு அவனுக்கு சீராட்டி பார்த்துக் கொண்டவளுக்கு, அவன் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தபடி வலம் வந்தவன் உறக்கத்திலும் புன்னகை முகம் மாறாமல் உறங்கியதை கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தது.

நந்தினி அவ்வப்போது அலைபேசியை எடுத்து பார்த்தவள் விக்ரமிடமிருந்து ஏதேனும் குறுந்தகவளோ இல்லை, அழைப்போ வருகிறதா என்று பார்த்துப் பார்த்து கண்கள் பூத்து ஏமாற்றம் அடைந்தது தான் மிச்சமாக இருந்தது.

‘அடப்பாவி நீ பெற்ற பையனை நான் கூட்டிட்டு வந்திருக்கேன், அவன் என்ன ஆனான் ஏது ஆனான்னு கொஞ்சம் கூடவா கவலையில்லை? இருக்கட்டும் டா நாளைக்கு உன்னை வெளுத்து வாங்கிடுறேன் பாரு அப்படி பண்ணலைன்னா நான் நந்தினி இல்லை’ என்று கருவிக் கொண்டாள்... என்றுமல்லாமல் அன்று விக்ரமும், கண்ணம்மா ம்மா மற்றும் செந்திலை கடுமையாக கடிந்துக் கொண்டதும் அல்லாமல் நந்தினியின் மேலும் அபரீதமான சினத்தில் இருப்பதும் அறியாள் பெண்ணவள்.


**************************
வணக்கம் நட்பூக்களே...
“என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதையின் அத்தியாயம்-7 பதிந்துவிட்டேன்... வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமையில் பதிவிடப்படும், படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் மக்களே!


தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels✍📝
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels📖🖋📚
நட்புடன்
காருராம்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-8
விக்ரம் தன் அன்னையின் ஒன்றுவிட்ட மாமன் சொந்தத்தை வரவேற்று உபசரித்து பேசிக் கொண்டிருந்தான்.

“இங்கே பாரு விக்ரம் உன்னுடைய நலனுக்காக தான் இதை சொல்றேன்... சீக்கிரமே அந்த ஓடுகாலிக்கு பிறந்த உன் மகனை போய் ஏதாவது ஆஸ்ரமத்தில் சேர்த்து விடு, நம்ம அந்தஸ்தில் இருக்கிற வேறொரு நல்ல பெண்ணாய் பார்த்து உனக்கு நாங்களே கல்யாணம் பண்ணி வைக்கிறோம்... என்னங்க நான் சொல்றது சரிதானே” என்று அவனின் அத்தை முறையான தெய்வநாயகி விக்ரமிடம் கூறியதற்கு கணவர் மணிவாசகத்திடம் அபிப்ராயம் கேட்க மனைவியின் பேச்சுக்கு மறு பேச்சு பேசாதவர்...

“ஆமாம் விக்ரம் உன் அத்தை சொல்றதை கேளு... எங்க திவ்யாவுக்கு கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடியே நாங்க உன்கிட்டே இந்த ஆலோசனையை தான் சொன்னோம்... ஆனால் அப்போவே நீ கேட்டிருந்தா இந்நேரம் எங்களுக்கு மருமகன் ஆகியிருந்திருப்ப என்ன செய்ய உனக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்” என்று அவனுக்காக பரிதாபப்படுவது போன்று சலித்துக் கொண்டவரை கண்டு எரிச்சலாக இருந்தது.

“இங்கே பாரு விக்ரம் இப்போவே வயசு முப்பத்திமூணு ஆகிருச்சு இன்னும் தள்ளி போட்ட, அப்புறம் நீ நூத்து கிழவன் ஆனதுக்கு அப்புறம் கூட உனக்கு கல்யாணம் ஆகாது என்ன யோசிப்பதானே?” என்றவரை அமர்த்தலாக நோக்கியவன் பார்வை...

‘என் தலையெழுத்து நீ சொல்லி நான் கேட்க வேண்டியதாக இருக்குது’ என்று எரிச்சலில் கடுத்து இருந்தது.

“அப்புறம் பார்க்கலாம் அத்தை நீங்க போய் திவ்யாவை பாருங்க” என்று சுருக்கமாக கூறி முடித்தவனை எப்போதும் போல் விட்டுவிடாமல் இன்று பிடித்துக் கொண்டவர்...

“எப்போ பாரு நீ இதே பதிலை சொன்னா எப்படி விக்ரம்? உனக்கு குடும்பஸ்தனா வாழுற ஆசை இருக்கா இல்லையா?” என்ற மணிவாசகத்தின் பேச்சிற்கு தெய்வநாயகி இடையிட்டு பதில் கூறியவர்...

“அது வேற ஒன்னும் இல்லைங்க, இவனுடைய மகன் அம்மா இல்லாமல் இருக்கிறானில்லையா அதுக்காக இரக்கப்பட்டு யாரும் கல்யாணம் பண்ணிக்க கிடைப்பான்னு எதிர்பார்க்கிறான் போல”

“இங்கே பாரு விக்ரம் மகனை வச்சு கல்யாணம் பண்ணிக்கிறவங்களுக்கு உன் மேல மரியாதையோ, பாசமோ இருக்காது, அதனால் நான் சொன்னதை கொஞ்சம் யோசிச்சு நல்ல முடிவா எடு” என்றவரின் கூற்றில் ஏன் தனக்கென நந்தினி இல்லையா என்ற கேள்வியெழுப்பி அவள் முகமே நிழலாடி சடுதியில் மறைந்திருந்ததை எண்ணி அதிர்ந்தவன், சிரத்தை உலுக்கி அந்த நினைவை புறந்தள்ளிவிட்டு சரி செய்துக் கொண்டான்.

“ஊரில் ரெண்டு மூணு பொண்ணுங்களுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ண பேசிக்கிறாங்க, நீ சரின்னு சொல்லு அடுத்த நிமிஷமே பெண்ணை பார்த்து பேசி கல்யாணத்துக்கு நாள் குறிச்சிடுறோம்” என்று ஆலோசனைகளும், அறிவுரைகளும் இங்கே இலவசம் என்று விளம்பர பலகை மாட்டாத குறையாக அவனுக்கு ஆயிரம் அறிவுரைகளை அள்ளி தெளித்துவிட்டு சென்றவர்களை எண்ணி விக்ரமுக்கு ஆத்திரமாக வந்தது.

மாடியில் அமைந்திருந்த பால்கனி ஊஞ்சலில் அமர்ந்திருந்தவன் மனம் வெறிச்சோடி இருந்தது... இது போன்ற அறிவுரைகள் புதிதல்ல என்றாலும் இன்றைய சூழ்நிலையோ அவனுக்கு வேறாக இருந்தது... அதிலும் அவர்கள் பேச பேச நொடிக்கு நொடி நந்தினியின் வாத்சல்யம் நிரம்பிய முகம் மனதில் வட்டமிட்டு சென்றதில், அவனுக்குள் நூதனமாக ஏதோ ஓர் உணர்வு கிளர்ந்து அவனை ஆட்டிப்படைத்தது.

விக்ரமுக்கு நந்தினியை பற்றிய சிந்தனை ஒதுக்கி வைப்பதில் விருப்பமில்லை என்றாலும் கூட சுற்றியுள்ளவர்கள் அவன் மேல் திணித்திருக்கும் பழி சொல் ‘நந்தினியை பற்றி சிந்திப்பதை ஓரம் கட்டிவிடு அதுதான் உனக்கும் நல்லது அவளுக்கும் நல்லது’ என்ற சித்தத்தின் எச்சரிக்கையில் அவளின் நினைவுகளை வலுக்கட்டயமாக ஒதுக்கி வைத்தவன், இனி எக்காரணம் கொண்டும் தன் மனம் அவளை பற்றி எண்ணாதப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் உறுதியெடுத்துக் கொண்டான்... அந்தோ பரிதாபம், அவனின் அந்த உறுதியை அவளே சீர்க்குழைத்து அவனின் கோபத்திற்கு ஆளாகப் போகிறாள் என்பதை அவனே அறிந்திருக்கவில்லை.

வெகுநேரம் கடந்தே தன் மகனை வெளியே அனுப்பியிருப்பதை நினைவு கூர்ந்தவன்... அவசரமாக செந்திலுக்கு அழைத்து ஆதனை அழைத்து வர ஏவியிருந்தான்.

அப்போதும் அவன் மனதில்... ‘இன்னும் எத்தனை நாட்களுக்கு இது போன்று ஆதனை வெளியே அனுப்பி வைக்க முடியும்? இப்போதோ அவன் அறியா பருவம் அவன் இப்படியே இருந்து விட முடியுமா, விவரம் தெரியும் வயதில் அவனுக்கும் அனைத்தும் புரிய ஆரம்பிக்கும் அப்போது அவன் கேட்கும் கேள்விகளுக்கு தந்தையாக நான் பதில் கூறியாக வேண்டுமே’ என்று மனதை அடித்துக் கொண்டிருந்தது.

செந்தில், கண்ணம்மா இருவரும் வீட்டிற்குள் நுழைந்து ஆதன் நந்தினியுடன் சென்ற விஷயத்தை கூறியதும்... “ஒருத்தரை நம்பி என் மகனை அனுப்பக்குள்ள என்னிடம் கேட்டிருக்கணும், இல்லையா; தகவலாவது சொல்லியிருக்கணும்... இதில் எதையும் செய்யாமல் இப்படி வீட்டுக்கு வந்து சொல்றீங்களே கண்ணம்மா ம்மா இதெல்லாம் சரியா?” என்ற கேள்வியின் நியாயம் புரிந்து தலை தாழ்த்திக் கொண்டார்.

“இல்லை விக்ரம் தம்பி தப்பா நினைக்காதீங்க... நீங்க வெளியே அனுப்பினதும் ஆதன் பையன் முகம் அப்படி வாடிப் போச்சு, அந்த பிள்ளை வந்ததுக்கப்புறம் நல்லா சிரிச்சுகிட்டு விளையாடுச்சு, நானும் பிள்ளைகளை பெற்று கல்யாணம் பண்ணி கொடுத்து பேர பிள்ளைகளை பார்த்தவங்க தம்பி, எனக்கு என் பேரன் வேற, ஆதன் வேற இல்லை என் பேரனோட ஏக்கத்தை தீர்க்கத்தான் அந்த பிள்ளையோட அனுப்பினேன்” என்றவரின் கூற்றில் இருந்த உண்மை விளங்கினாலும், அவர்களின் செயலையும் சரி, நந்தினியின் செயலையும் சரி இருவரின் செயலையுமே ஆதனின் தந்தையாக ஆதரிக்க முடியவில்லை.

“நீங்க சொல்றது வாஸ்தவம் தான் செந்தில் அண்ணா... ஆனால் இதையும் யோசித்து பாருங்க, நீங்களும் ஒரு பெண்ணுக்கு அப்பா என் சொந்தத்திலேயே வயது பெண்களை என் மகனுடன் பழக வைக்க யோசிக்கிறாங்க, அப்படி இருக்கும் போது நந்தினி செய்கிற இந்த விஷயம் ஆதனுக்கு நன்மையா இருக்கலாம், ஆனால் அந்த பெண்ணுக்கு நன்மையா?” என்ற கேள்விக்கு பதில் கூற முடியாமல் மௌனம் சாதித்தார்.

அவரின் உணர்ச்சியை அவதானித்தவனுக்கு கசந்த புன்னகையை தான் வெளிபடுத்த முடிந்தது... “பாருங்க உங்களாலேயே என் கேள்விக்கு பதில் சொல்ல முடியலை”

“பதில் சொல்லாததுக்கு காரணம் மற்றவங்க சொல்லுற மாதிரி தப்பான எண்ணம் இல்லை தம்பி, அந்த நந்தினி பொண்ணு ரொம்ப எதார்த்தமா கள்ளம் கபடம் இல்லாமல் இருக்கிறா, நீங்க அழுத்தமானவரா இருந்தாலும் தப்பான எண்ணம் கொண்டவர் இல்லையே”

“அட அதை கூட விடுங்க தம்பி ஊர்ல உலகத்துல எத்தனயோ ஆம்பளைங்க பொண்டாட்டி தளதளன்னு இருக்கிறப்போவே கூத்தியாவ தேடி கூத்தடிக்கிறதும், பொண்டாட்டி செத்தாலும் இதே மாதிரி உலாத்துறதுமா இருக்கிறவங்க சில பேருக்கு மத்தியில் செய்யாத தப்புக்கு தண்டனையை எற்றுகிட்டு, இப்படி தனிமரமா நிற்கக்குள்ள கூட நீங்க தடம் மாறாமல் இருக்கிற குணமே புடம் போட்ட தங்கம் தம்பி நீங்க நீங்க நல்லா இருக்கணும்னு தானே நாங்க நினைப்போம்” என்றவரின் கூற்றை கேட்டு அவனுக்கு பெரிதாக தற்பெருமையில் கர்வம் ஏற்படாமல் சலிப்பு தான் தோன்றியது.

“நீங்க சொல்லுறது உங்க கருத்து கண்ணம்மா... ஆனால் வெளியுலகத்தை பொறுத்த வரைக்கும் நான் தான் சரியில்லாத பொறுப்பில்லாத ஒரு ஆம்பளை... என்னையோ, என் மகனையோ ஆதரிக்கிறவங்களும் அதே கண்ணோட்டத்தில் தான் பார்ப்பாங்க, நந்தினி வாழ வேண்டிய பெண், அவளுக்காக நீங்க கண்டிச்சிருக்க வேண்டாமா? என்கிட்டே சொன்ன மாதிரி அவங்க பேரண்ட்ஸ் கிட்டே சொன்னா அவங்க அதை ஏற்றுக்குவாங்களா?”

“வாய்ப்பு கம்மிதான் தம்பி ஆனாலும் அந்த பொண்ணு ரொம்ப பிடிவாதக்காரி மாதிரி தெரியுறா?”

‘பிடிவாதக்காரி மாதிரி எல்லாம் இல்லை பிடிவாதமேதான்’ என்று எண்ணிக் கொண்டவன் அதை வாய்விட்டு கூறியிருக்கவில்லை.

“சரி கண்ணம்மா அவங்க ஆதனை எங்கே கொண்டு வந்து விடுறேன்னு சொன்னாங்க?” என்றதும் கண்ணம்மாவிற்கு மனதில் திகில் பிடித்துக் கொண்டது. ஐயையோ அந்த புள்ளை பையனை வீட்டுக்கு கூட்டிட்டு போறதா சொன்னாங்களே, அதை கேட்டா தம்பி கோபப்படுமே என்று எண்ணியவர் உதவிக்கு செந்திலின் முகத்தை பார்க்க...

“தம்பி அந்த பொண்ணு பையனை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறதா சொன்னங்க தம்பி” சும்மாவே அவளின் நினைவுகளை விரட்டி அடிக்க நினைத்துக் கொண்டிருப்பவனிடம் என்னை நீ கேள்வி கேட்பாயா நான் யார் தெரியுமா என்று ஆதனுக்கு அன்னை போலவும், அவனுக்கு மனைவி போலவும் கிரகித்து காட்டும் அவளை செயல்கள் கண்டு விக்ரமுக்கு திகைப்பு, கோபம், எரிச்சல் என கலவையான உணர்ச்சிகள் போட்டி போட்டு கொண்டு பொங்கி எழுந்தது.

“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?” என்று குரலை உயர்த்தி உத்தஸ்தாயில் கத்தியவனை கண்டு பயந்து போய் பார்த்தார் கண்ணம்மா.

“அவன் தான் அறியா பையன் அடம் பிடிக்கிறான்னா பெரியவங்க உங்களுக்கு தெரிய வேண்டாமா?”

“அதில்லை தம்பி.....” என்று ஏதோ கூற வந்த கண்ணம்மாவை...

“போதும் எதுவும் பேசாதீங்க” என்று அதட்டி அடக்கிய விக்ரமின் சொல்லில் கப்பென்று வாய் மூடிக் கொண்டார்.

“சரி தம்பி அந்த பிள்ளை போன் நம்பர் இருக்கு தானே கூப்பிட்டு கூட்டிட்டு வர சொல்லுங்களேன்” என்ற செந்திலை கடினமாக முகத்தை வைத்துக் கொண்டு பார்த்திருந்தான்.

“போதும் எதுவும் பேசாதீங்க உங்ககிட்டே நான் என்ன செய்றதுன்னு அபிப்ராயம் கேட்கலை, ரெண்டு பேரும் முதலில் கிளம்புங்க” வெடுக்கென்று கோபத்தில் கூறியவன் தன்னறைக்குள் புகுந்து கதவை அறைந்து சாத்திக் கொண்டான்.
செந்தில், கண்ணம்மா இருவருக்கும் என்ன செய்வதென்று அறியாத சூழ்நிலையில் பீதியில் உழன்றனர்...

“என்னங்க ண்ணா இப்படி ஆகிப் போச்சு இப்போ என்ன பண்ணுறது?”

“தெரியலை கண்ணம்மா பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்குதுன்னு”

“வேணும்னா நாம நந்தினிகிட்டே சொல்லி வைப்போமா?”
“வேண்டாம் கண்ணம்மா அது சரி இருக்காது... அது வயசு பிள்ளை கண்ட நேரத்தில் கண்டவங்களும் கூப்பிட்டு பேசுறது அந்த பிள்ளைக்கு அவ்வளவு நல்லதில்லை தம்பியும் அதனால தான் ரொம்ப கோபப்படுது” என்றவர்கள் இனி என்ன நடக்குமோ என்ற பீதியுடனே சென்றிருந்தனர்.

தன் கட்டுப்பாட்டை மீறி ஒவ்வொன்றும் நடந்துக் கொண்டிருப்பதை கண்டு நந்தினியின் மேல் கடுப்பில் இருந்த விக்ரமுக்கு மேலும் அவனுக்கு நெருங்கிய தந்தையின் நண்பர் ஒருவரின் அழைப்பு நந்தினி மேல் ஆத்திரத்தை வலுப்படுத்தி இனி அவள் உறவையே துண்டிக்க வேண்டும் என்ற சங்கல்பம் மேற்கொள்ள வைத்தது.

வெகு நாட்கள் கழித்து தன் தந்தையின் நெருங்கிய நண்பர் என்பதால் அவரின் அழைப்பை உயிர்பித்து தன் கோப தாபங்களை ஒதுக்கி வைத்துவிட்டு பேச ஆரம்பித்தான் விக்ரம்.

“ஹலோ ராஜ் அங்கிள் எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லா இருக்கேன் விக்ரம்... நான் உன்கிட்டே முக்கியமான விஷயம் பேசத்தான் கூப்பிட்டேன்”

“என்ன அங்கிள்?”

“நீ செகண்ட் மேரேஜ் பண்ணியிருக்கேன்னு அங்கிள் என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லலையே விக்ரம்? எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு தெரியுமா” என்றவரின் வார்த்தை புரியாமல் கண்கள் இடுக்கி யோசித்தவன்...

“அங்கிள் ப்ளீஸ் தெளிவா சொல்லுங்க... எனக்கு ஒண்ணுமே புரியலை! நானா... செகண்ட் மேரேஜா? அதுக்கு வாய்ப்பே இல்லைன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்”

விக்ரமின் பேச்சில் யோசிக்க ஆரம்பித்தவர் எதனால் அவனிடம் அப்படி வினவினார் என்பதை பற்றி கூறலானார்... “நான் என்னுடைய கலீக் கூட ஒரு ஷாப்புக்கு போனேன் விக்ரம் அங்கே உன் பையன் ஆதனை பார்த்தேன்... அவன் ஒரு பொண்ணுகூட நின்னுட்டு இருந்ததும், உன் மகனிடம் பேசினேன் அவன் தான் இவங்க என் நந்தினி ம்மான்னு சொன்னதும் அப்புறம் நைட் அந்த பொண்ணு வீட்டிலேயே தங்குறதா சொன்னதும் என்னடா இது விக்ரம் சிம்ப்ளா மேரேஜ் பண்ணிகிட்டான் போல சொல்லவே இல்லையேன்னு யோசிச்சேன்” என்றவரின் கூற்றை கேட்டு அவனுக்கு நந்தினியை எண்ணி தலையால் அடித்துக் கொள்ள தோன்றியது.

“அங்கிள் ப்ளீஸ் என்னிடம் கேட்ட மாதிரி வெளியில் சொல்லிற வேண்டாம் பிகாஸ் அப்படியெல்லாம் எங்களுக்குள்ள எதுவும் இல்லை அங்கிள்... இங்கே நம்ம வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் இருக்கிறாங்களே கண்ணன் அங்கிள் பொண்ணு ரம்யா அவங்களுடைய பிரெண்ட் தான் அவங்க, ஆதன் தான் அவங்களிடம் பேசுவான்” என்று விளக்கவுரை அளித்தவனை தொடர்ந்து...

“சரி சரி விக்ரம்... ஆனால் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே நீ இப்படி எல்லாம் செய்கிறவன் இல்லைதான்... இருந்தாலும் இது ஏதோ புதுசா இருக்கு ஆதன் கூட பழக்கமெல்லாம் சரிதான், அதுக்காக அவங்க வீட்டுக்கே அனுப்புறதெல்லாம் வேண்டாம் விக்ரம், நீ அடிபட்டவன் நான் சொன்னதை நீ புரிஞ்சுக்குவேன்னு நம்புறேன்” என்று சுருக்கமாக கூறிவிட்டு வைத்திருக்க நந்தினியின் செயலை எண்ணி ஆத்திரத்தில் கண் சிவந்தான்.

அவள் மேல் கொண்ட அபிப்ராயமும், ஈர்ப்புமே தவறு என்றெண்ணி போராடிக் கொண்டிருப்பவனிடம், நந்தினி தன் செயல்களால் சோதனையை ஏற்படுத்தி உன் மனதிடம் சண்டை போட்டது போதும், இனி நேரடியாக என்னை எதிர்கொள் என்பது போல் அவள் செயலாற்றும் விதங்கள் அனைத்தும் விக்ரமை சித்திரவதைக்குள்ளாக்க பெரும் மனவுளைச்சளுக்கு ஆளானான்.
அவளை பார்த்த முதல் நாளே அவளிடம் இருந்த ஏதோ ஒன்று ஈர்க்கப்பட்டு தவ்வி தாவி செல்லும் மனதை முயன்று அடக்கி தன் கட்டுபாட்டில் வைத்திருப்பவன்... இதில் இவள் வேறு நாளுக்கு நாள் உரிமையையும், அதிகாரத்தையும் நிலைநாட்டி அதிகரித்துக் கொண்டே போனாலானாள், அவனும் அவன் மகனும் என்ன நிலைமைக்கு ஆளாவார்களோ... ஏற்கனவே இருக்கும் அவப்பெயர் போதாதா? இதில் இன்னொன்றையும் இழுத்துக் கொண்டு அல்லாட வேண்டுமா என்றவனுக்கு நந்தினியின் மேல் இனம் விளங்காத கோபம் கனன்று எழுந்தது.

“எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சேனோ அதுவே நடக்குது, இதெல்லாம் யாராலே அவளாலே, இருக்கட்டும் நாளையில் இருந்து ஆதனுடனான பழக்கத்தையும் ஒரேடியாக வெட்டி விட வேண்டும் இதற்கு மேலும் பொறுமை காத்தால் வேலைக்காகாது என்று உறுதியாக ஒரு முடிவை மேற்கொண்ட பிறகே துயிலில் ஆழ்ந்துவிட்டிருந்தான்.


****************

விக்ரம் அதிகாலையிலேயே புறப்பட்டு சென்றிருக்க, கண்ணம்மாவிற்கு அன்றைய நாள் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற பதட்டத்தில் வேகமாக காலை வேலைகளை முடித்துவிட்டு விக்ரமுக்கான காலை உணவையும் கட்டி எடுத்துக் கொண்டு சென்றிருந்தார்.

அவர் நடந்து செல்கையில் எதிர்பட்ட செந்தில்... “என்ன கண்ணம்மா நடந்து போறீங்க மில்லுக்கா?”

“ஆமாம் ண்ணா காலையில் நேரமே தம்பி போனதுதான் பச்சை தண்ணிகூட குடிக்கலை”

“அப்படியா அப்போ தம்பி வீட்டில் இல்லையா?”

“இல்லையே, அப்போ மில்லுக்கும் வரலையா?”

“ஆமாம் கண்ணம்மா மில்லுக்கும் வரலை, வீட்டிலேயும் இல்லை என்னாச்சு எங்க போயிருக்கும்ன்னு தெரியலை?”

“அந்த பிள்ளை வீட்டுக்கு போயிருப்பாரோ?”

“ம்ஹும்... வாய்ப்பே இல்லை கண்ணம்மா, போன் கூட பண்ணமாட்டேன்னு சொன்னவரு வீட்டு முன்னாடி போய் நிற்பாரா?”

“இப்போ என்ன பண்றது? நந்தினி ம்மா வேற ஆதனை கூப்பிட்டிட்டு வந்திருவாங்களே”

“தெரியலை நாம முதல்ல மில்லுக்கு போயிறலாம், அப்புறமா என்னன்னு யோசிக்கலாம் சீக்கிரம் வா கண்ணம்மா” என்றவர் அவரின் வாகனத்திலேயே அமர வைத்து அழைத்து சென்றிருந்தார்.

நந்தினி ஆதனை அழைத்துக் கொண்டு நேரே மில்லுக்கு வந்திருக்க, அவளை கண்டு எதிர்பட்ட செந்தில் விக்ரம் அங்கே இல்லை என்றும் எங்கு சென்றான் என்றும் தெரியவில்லை என்றும் விவரம் தெரிவித்திருந்தார். நந்தினிக்கு அவன் செயலில் குழப்பமாக இருந்தாலும் எதுவானலும் மாலை வந்து பேசிக் கொள்ளலாம் என்றெண்ணி...

“சரி அப்போ ஆதனை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டிருங்க நான் ஈவ்னிங் வரேன்” என்றவள் ஆதனை அவர் வசம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டாள்.

மாலையில் கல்லூரி முடிந்த நந்தினி நேரே விக்ரமின் மில்லுக்கு சென்றிருக்க, அங்கே கண்ணம்மா ஒருபக்கம் அழுகையில் கரைந்து கொண்டிருக்க, செந்தில் முகம் கருத்து அடுத்து என்ன செய்வது என்ற இயலாமையுடன் இருப்பதை கண்டு நெருங்கியவள்...

“கண்ணம்மா ம்மா, செந்தில் ப்பா என்னாச்சு ரெண்டு பேரும் ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?” என்று வினவியவளுக்கு பதில் கூறாமல் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் புரியாது பார்த்துக் கொண்டனர்.

“என்னாச்சு ரெண்டு பேரும் பேசாமல் அமைதியாவே இருக்கீங்க”

“என்னன்னு சொல்றதுன்னு தெரியாமல் தான் ம்மா முழிக்கிறோம்” என்றவர் நடந்ததை விளக்க ஆரம்பித்தார்.

********************************
வணக்கம் நட்பூக்களே...
“என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதையின் அத்தியாயம்-8 பதிந்துவிட்டேன்... வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமையில் பதிவிடப்படும், படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் மக்களே!
தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels✍📝
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels📖🖋📚
நட்புடன்

காருராம்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-9
விக்ரம் மதியம் ஒரு மணியளவில் மில்லுக்கு ஆதனுடன் வந்தவன் அவனை விட்டுட்டு தான் மட்டுமாக அலுவலகத்திற்குள் புகுந்து கொண்டான்.

ஆதன் கண்ணம்மாவிடம் சென்றவன் தானும் தந்தையும் சீக்கிரமே சென்னை செல்ல இருப்பதாக கூறியதை கேட்டு மனம் துணுக்குற்ற கண்ணம்மா...

“ஏன்டா கண்ணா சென்னையில் யாரு இருக்காங்கன்னு அப்பா சொன்னாரா”

“ம்ஹும்... இல்ல, எனக்கு பெரிய ஸ்கூல் தான் வேணுமா அதான் அங்க கூட்டிட்டு போறாராம்” அறியாமல் அவன் கூறியதை கேட்ட கண்ணம்மாவிற்கு, ஏதோ தவறாகப்படவே செந்திலை துணைக்கு அழைத்துக் கொண்டு விக்ரமிடம் வினவ அவனோ அவர்களை அமர்த்தலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு பேசலானான்.

“இங்கிருந்தா தானே அவன் அவங்களை பார்க்கணும், இவங்களை பார்க்கணும்ன்னு அடம் பிடிப்பான்... அதான் சென்னையில் ஹாஸ்டலில் சேர்க்கப் போறேன் அவன்கிட்ட நான் ஹாஸ்டலில் விடப் போறதை பற்றி சொல்லலை தெரிஞ்சா இப்போவே குட்டியகரணம் போட்டு அழ ஆரம்பிப்பான்... அதனால் சொல்லாதீங்க, மீறி சொன்னா இன்னும் ரெண்டு மாசம் தள்ளி போட்ட பயணத்தை உடனே தொடங்க வேண்டியதாக வரும்” என்று மிரட்டலாக கூறியவன் பேச்சில் இருவருமே ஸ்தம்பிதனர். அதற்குமேல் அங்கே நின்று பேச முடியாமல் வேலை தடுத்தத்தில் இருவருமே துக்கத்தை விழுங்கிக் கொண்டு வெளியே சென்றனர்.

அவர்களை அனுப்பி வைத்துவிட்டு தனிமையில் சிந்தித்தவனுக்கு இதை செய்யாவிட்டால் ஆதனுடனான நந்தினியின் தொடர்பை விலக்கி நிறுத்த முடியாதே என்று தனக்கு தானே காரணம் கற்பித்து கொண்ட அதே மனம் தான், ஏன் ஆதன் மட்டுமா நந்தினியின் துணையை நாடுகிறான், நீயும் தானே நாளுக்கு நாள் நந்தினியின் நினைவுகளை பெருக்கிக் கொண்டே போகிறாய்... அதை தவிர்க்கவும் தானே இப்படி தீரா துன்பத்திற்கு வித்திடுவது!

உன் மகனை பிரிந்து நீயும் நாடோடி போல் அலைய எண்ணுகிறாய் என்று மனம் குத்த அவன் பித்துக்குள்ளனான்.

“நான் வேற என்ன பண்ணுவேன்? நந்தினியிடம் உரிமையுடன் பேசுவதற்கே பாக்கியம் செய்திருக்க வேண்டும், ஆனால் எனக்கு தான் அந்த பாக்கியத்தை கொண்டாட கொடுப்பினையும், தலைவிதியும் தனக்கு அமையவில்லையே... ஏற்கனவே என் வாழ்க்கை உடைஞ்ச கண்ணாடி தான் இனியும் ஒருமுறை உடைஞ்சு போறதால ஒன்னும் ஆகிறாது... ஆனால் நந்தினி வாழ்க்கை அழகான சட்டத்தில் மாட்டப்பட்ட புதிய கண்ணாடி அதை எடுத்து உடைத்து பாழ் படுத்திவிட்டால் என்னை விட ஒரு சுயநலவாதி இந்த உலகத்தில் இருக்கமாட்டான். வேண்டாம்! என் நந்தினி நல்லா இருக்க வேண்டும்” என்று தனக்குத் தானே பேசிக்கொண்டவனுக்கு அவனின் ‘என் நந்தினி’ என்ற சொல் அவனின் மரித்தப் போன மனதை உயிர்ப்பித்துக் கொடுக்க உணர்ச்சிப் பெருக்கில் விழிகள் நீர் நிரம்பிய குளமாகியது.

“தம்பி நெல்லை வேவிக்கனும் மழை வர மாதிரி இருக்கு என்ன பண்ணலாம்?” என்ற பேச்சில் படக்கென்று தலையசைத்து இவ்வுலகிற்கு வந்தவன், இமைசிமிட்டி தன்னை சரி செய்து கொண்டு திரும்பினான்.

“ம்ம்ம்... பார்க்கலாம் வெயிட் பண்ணுங்க... சாரி, ஒரு மணி நேரம் தொந்தரவு பண்ணாதீங்க...” என்று தெளிவுல்லாமல் கூறியவன் பதிலும் சரி, முகமும் சரி உச்சபட்ச குழப்பதிலும், கலக்கத்திலும் இருப்பதை கண்டறிந்தவருக்கு ஏதோ ஒன்று தவறாகப்பட்டது.

என்னவாக இருக்கும் என்று சிந்தித்தவருக்கு சற்று முந்தைய அவன் பேச்சும் அதற்கு காரணகர்த்தாவாக இருக்கும் நந்தினியும் அவர் மூலையில் மின்னல் வெட்டிச் செல்ல ஆருடம் தோன்றியது... ஆனாலும் அந்த ஆருடம் சொன்ன விஷயம் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாமல் சில தடைகற்கள் முட்டுக் கட்டையிட தனக்குள் புதைத்து கொண்டவர்...

“ம்ஹும் எதுவானாலும் பொறுத்து தான் பார்க்கணும்... அப்பா ஸ்ரீரங்கநாதா உன் சந்நிதானத்தில் வச்சு தான் எனக்கு அந்த உறுத்தல் ஆரம்பிச்சது அது நன்மைக்கு தான்னு மனசு சொல்லுது அதை நீ தான் பார்த்துக்கணும் விக்ரம் தம்பிக்கு இனியாச்சும் வாழ்க்கை நல்லா இருக்கணும்” என்று மனமார பெருமாளின் புகைப்படத்தை பார்த்து வேண்டிக் கொண்டார்.

கண்ணம்மா செந்தில் இருவரும் மாறி மாறி நடந்ததை விளக்கி இருக்க... “எங்களால் தம்பிகிட்ட ஒரு அளவுக்கு மேல தலையிட முடியலை ம்மா... ஆனா தம்பி சொன்ன விஷயத்தை நினைக்க நினைக்க என் மனசு பதறுது ம்மா... ஆதன் பையன் பிறந்ததில் இருந்து விக்ரம் தம்பி அத்தனை கஷ்டம் அனுபவிச்சது, அப்போ எல்லாம் ஒருநாள் கூட தன் பையனை விட்டு பிரியணும்னு நினைக்காத பிள்ளை, இன்னைக்கு தானே கொண்டு போய் மகனை ஹாஸ்டலில் விட நினைக்கிறான்னா எனக்கு அடிவயிற்றில் நெருப்பா பற்றிக்கிட்டு எரியுது” அவரின் பேச்சை கேட்ட நந்தினிக்கு விக்ரம் மேல் கோபமும், அனுதாபமும் மாறி மாறி எழுந்தது.

“கேட்கிறேன்னு தப்பா எடுக்க வேண்டாம் கண்ணம்மா ம்மா, அவரை நீங்க இத்தனை வருஷமா பார்க்குறீங்க சுக துக்கங்களில் கூடவே இருக்கீங்க, நீங்க ஏன் இதை பத்தி அழுத்தமா பேசக்கூடாது? ஆதன் அறியா பையன் அவன் மட்டுமென்ன குழந்தையை விட்டுட்டு இவர் மட்டும் நிம்மதியா இருந்துருவாராமா?”

“நீ சொல்றது உண்மைதான் ம்மா, விக்ரம் தம்பிக்கு இருக்கிற ஒரே ஒரு ரத்த சொந்தம் பையன் தான் அவனையும் ஹாஸ்டலில் விட்டுட்டா நிச்சயம் தம்பி நடைபிணம் மாதிரி தான் ஆகியிருவாரு, இதை பார்க்கவா நான் அந்த தம்பிகூட இருக்கிறேன்” என்று அடித்துக் கொண்டவரின் கண்கள் வெள்ளம் பெருக்கேடுக்க அவரின் துயரந்தோய்ந்த முகம் நந்தினியையும் தாக்கியது... அவரையே தேற்ற வேண்டும் என்று எண்ணி இருந்தவளுக்கு தன் துக்கம் அதற்கு தடையிட்டு விடுமோ என்ற விசாரத்தில் சமாளித்துக் கொண்டவள்...

“இங்கே பாருங்க ம்மா அழாதீங்க, இந்த விஷயம் ஆதனுக்கு இன்னும் தெரியலை தானே... கவலைப்படாதீங்க! நான் பேசுறேன் எப்படி பேசணுமோ பேசி அவரை தடுக்குறேன்... விக்ரம், ஆதன் ரெண்டு பேரும் இந்த தஞ்சாவூர் தாண்டி போக விடமாட்டேன், இந்த நந்தினி அதற்கு விடமாட்டா” என்று சூளுரைத்தவள் வேகமாக தன் இல்லத்திற்கு புறப்பட்டுவிட்டிருந்தாள்.

இவளின் இந்த சுளுரையை கேட்ட செந்தில், கண்ணம்மா இருவருக்கும் நேர்மறை சிந்தனை தோன்றியது. அதே சமயம் அப்போதே உள்ளே நுழைந்த விக்ரம் நந்தினியை கண்ட பரவசத்தில் உள்ளம் துள்ளினாலும், அவள் பேசிக் கொண்டிருப்பது நிச்சயம் தன் விஷயமாக தான் இருக்கும் என்று கருதி அவள் பேச்சு செவிமாடுக்கும் தூரத்தில் மறைவாக நின்று கேட்டவனுக்கு, அவளின் சூளுரையை கேட்டு வானிலை மாற்றம் போல் மழையும் வெயிலும் ஒன்றாக தாக்குவது போல் இன்பமும், துன்பமும் ஒரு சேர தாக்கியது.

ஆதன் சுற்றித் திரிந்த களைப்பில் வாகனத்திலேயே உறங்கிவிட, அவனும் நந்தினியை பார்க்காமல் இருந்தது அவனுக்கு அந்நேரம் வசதியாக போனது... சில கணங்கள் பிரமை பிடித்தது போல் அசைவற்று நின்றவன், சூழ்நிலை கருதி சுதாரித்து கொண்டு அவளை விடவும் இருமடங்கு கருத்தில் இருந்து மாறாமல் அவளை விலகியே ஆக வேண்டும் என்ற உறுதிப்பூண்டை மேற்கொண்டு விட்டிருந்தான்.

****************

தன்னறையில் மஞ்சத்தில் கால்களை குறுக்கி அமர்ந்து கொண்டிருந்த நந்தினிக்கு பல்வேறு சிந்தனைகளும், குழப்பங்களும் ஆட்பட சித்தம் தடுமாறிக் கொண்டிருந்தது. அவள் மனதின் வேகத்திற்கு அப்போதே அங்கேயே எத்தனை நேரம் ஆனாலும் காத்திருந்து விக்ரமை வெளாசிவிட்டு வர துடித்த மனதை அவள் கட்டுப்படுத்துவதே பிரம்ம பிரயத்தனமாக இருந்தது.

அவள் அன்னை மட்டும் அப்போது வீட்டிற்கு சீக்கிரம் வந்து சேர் என்று கூறாமல் இருந்திருந்தால், என்ன ஆனாலும் சரி என்று மெத்தனத்தில் அன்றே அதற்கொரு தீர்வையும் தேடி வந்திருப்பாள்.

ஏதேதோ சிந்தித்துக் கொண்டு தனக்குள் உழன்று கொண்டிருந்தவளுக்கு அலைபேசியின் வாயிலாக அழைத்து அவனிடம் பேசினால் என்ன என்று தோன்றி விட, அலைபேசியை வேகமாக எடுத்து அவன் எண்ணை திரையின் பதிவில் வைத்தவளுக்கு ஏனோ அதற்கு மேல் அவனிடம் பேச முடியாமலே ஏதோ ஒன்று தடுக்க சித்தம் அலைபாய தடுமாறிக் கொண்டிருந்தாள்.

“பேசு நந்தினி... அவனிடம் பேச என்ன தயக்கம்? இதற்கு முன் நீ பேசியப் போது நீ யார் என்னை கேள்விக் கேட்க என்று தடுக்காமல் அவன் பேச விட்டானே, அதுவே அவனுக்கு உன்மேல் ஓர் வித நல்ல அபிப்ராயம் இருப்பதை காட்டிக் கொடுக்கிறதே இதற்கு மேல் என்ன வேண்டும்” என்று கேட்க அவன் முதன் முதலில் பேசிய பேச்சுக்கள் நினைவில் ஓடி அவளை லஜ்ஜைக்குள்ளாக்கியது.

அவனிடம் பேசுவது பெரிதல்ல, அவன் மேல் கொண்ட விருப்பத்தை தெரிவித்தாளோ... இல்லை, புரிந்துக் கொண்டாளோ அவன் ஏற்றுக்கொள்வானா என்று பீதி ஆட்கொண்டு விட்டிருந்தது.

நந்தினிக்கு அவனை பிரிய வேண்டும் என்ற நினைவே தன் உடல் அங்கத்தில் ஏதோ ஒன்றை இழப்பது போல் வெறுமையின் வலியை உணர முடிந்தது.

இனி விக்ரம் இல்லாமல் தன் வாழ்க்கை நிறைவு பெறாது என்று உணர்ந்தவளுக்கு, இனி அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று திடசித்தம் கொண்டவள் அப்போதே அவனிடம் அதை பற்றி பேசி விடலாம் என்று அலைபேசியை எடுத்தவளுக்கு ‘ம்ஹும் அலைபேசியில் சொன்னால், அவன் கூறுவது உண்மையா பொய்யா என்றும், உடன் எழும் உணர்ச்சிகளையும் அவதானிக்க முடியாது’ என்று எண்ணம் சூழ எதுவாகினும் அவனை நேரடியா சந்தித்து பேச வேண்டும் என்று விட்டு படுக்கையில் சயனித்துவிட்டாள்.


**************

நந்தினி அன்று தன்னை பார்த்துப் பார்த்து அலங்கரித்துக் கொண்டாள்... தன் மனதை விக்ரமிடம் வெளிபடுத்தும் போது எந்த வித இடையூறும் நேர்ந்துவிடக் கூடாது அவன் கண்களை கவர்வது என்பதைவிட அவன் மனதை கவர வேண்டும் என்பதே பெரியதாக கவலையாக இருந்தது.

அவனின் பேச்சில் அவள் மேல் அபிப்ராயம் இருப்பது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டாலும் அதை தன் வாய் மொழியாக ஒத்துக் கொள்ள வேண்டுமே... ஏனெனில், அவன் அடிப்பட்ட கடந்த கால கசப்பான வாழ்க்கை சிறிதளவும் தன் விருப்பத்தை நிராகரிக்கக்கூடாது என்று பல்வேறு சிந்தனைகளினூடே புறப்பட்டு வாகனத்தில் ஏறி அமர்ந்தவளுக்கு அவள் தோழியின் வனிதாவின் அழைப்பு வரவே அதை உயிர்பித்து செவிமடுத்தாள்...

“ஏய் நந்து இன்னும் நீ காலேஜ் கிளம்பலை தானே?”

“இல்லை டி சொல்லு”

“அப்போ இரு அப்பா கூட நான் உன் வீட்டுக்கு வந்துடறேன் ரெண்டு பெரும் சேர்ந்தே போயிருவோம் என் வண்டி பிரேக்டவுன் ஆகிருச்சு” என்றவள் அவளின் பதிலை கூட எதிர்பாராமல் வைத்திருக்க நந்தினிக்கு பெரும் சோதனையாகிப் போனது.

“ச்சே., அப்போ காலையில் விக்ரமை பார்க்கவும் முடியாது, பேசவும் முடியாதா?” என்று சலிப்பு தட்ட தலையை பிடித்துக் கொண்டு வண்டியின் கைபிடியில் தலை கவிழ்ந்தவளை நெருங்கிய அவள் அன்னை ரேவதி...

“ஏன் டி காலேஜுக்கு நேரமாச்சுன்னு கிளம்பிட்டு வண்டியில் படுத்துகிட்டு கனா கண்டுகிட்டு இருக்கிறியா?”

“ம்ச்., அதெல்லாம் ஒண்ணுமில்லை ம்மா வனிதா போன் பண்ணினா அவ வண்டி பிரேக்டவுன் ஆகிருச்சாம், அதனால் என்னை வெயிட் பண்ணச் சொன்னா” என்று கூறி கொண்டிருக்கும் போதே வனிதா வந்துவிட்டிருக்க...

“வாம்மா வனிதா நல்லா இருக்கியா?”

“நல்லா இருக்கேன் ம்மா, என்ன நீங்க இளைச்சுடீங்க போல” என்று அன்னையை பாசமாக சீண்டியவளை கண்டு சிரித்தவர்..

“யாரு நான் இளைச்சுட்டேனா? வயசு பிள்ளைங்க நீங்க தானே படிப்புக்காக அங்கே இங்கேன்னு சுத்தி துரும்பா இளைச்சுப் போயிருக்கீங்க... அதுவும் இப்போ கொஞ்ச நாளா ஸ்பெஷல் கிளாஸ் போகணும்னு அரைகுறையா தூங்கிட்டு சோற்றை தின்னும் திங்காம இப்படி ஓடுறீங்க?”

“என்ன ஸ்பெஷல் கிளாசா?” தனக்குள் நினைப்பதாக எண்ணிய வனிதா வாய்விட்டே உளறியிருக்க, தோழியின் பேச்சில் திகைத்துப் போன நந்தினி கண்களால் அவளுக்கு எச்சரிக்கை காட்டினாள்... அதை புரிந்துக் கொண்ட வனிதாவுக்கு நந்தினி ஏதோ கோல்மால் செய்திருப்பது புரிய வரவே...

“ம்ம்ம்... ஆமாம் ம்மா அது மட்டும் எனக்கும், நந்தினிக்கும் மாறி மாறி வருதா அதான் சுத்தமா புரியலை” என்று கூறி அவள் அன்னையிடமிருந்து காப்பாற்றிவிட்டவள், தோழியை கூர்மையான பார்வையால் துளைத்தாள்... அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியாத நந்தினி விழிகளை தாழ்த்திக் கொண்டவள்...

“சரி சரி உங்க அரட்டை கச்சேரியை ஈவ்னிங் வச்சுக்கோங்க... இப்போ கிளாசுக்கு நேரமாச்சு வாடி போகலாம்” என்று கூறி தோழியை அங்கிருந்து விரட்டியிருந்தாள்.

“ஆமாம் மேடமுக்கு மட்டும் தனியா எந்த பிரெண்ட் வீட்டில் ஸ்பெஷல் கிளாஸ் எடுக்குறாங்க?” நந்தினி காதல் விவகராத்தில் தள்ளி இருப்பவள் நிச்சயம் ஏதேனும் தோழி வீட்டுக்கு தான் பொய் காரணம் கூறி சென்றிருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் கேட்டவளின் கூற்றுக்கு. நந்தினிக்கு தோழியை ஏமாற்ற பொய் கூற வேண்டுமே என்ற உள்ளூர உறுத்தல் இருந்த போதும் அதை தவிர இப்போது வேறு வழியில்லை என்றுணர்ந்தவள்...

“அதுவா நம்ம ரம்யா வீட்டுக்கு தாண்டி போனேன்” என்றவளை மேலும் கேள்விகள் எழுப்பாமல் வேறு பேச்சிற்கு தாவினாள்.
வனிதாவின் பேச்சை சிறிதும் சட்டை செய்யாமல் விக்ரமின் நினைவுகளிலேயே உழன்று கொண்டிருந்தாள் நந்தினி.

‘பெருமாளே! போகும் போது விக்ரமை ஒருமுறை பார்த்து விட வேண்டும்... அப்போது தான் இன்று மாலை நான் பேசுவதற்கு எந்த தடையும் இருக்காது என்று அர்த்தம்’ என்று தனக்குத் தானே மானசீகமாக பிரார்த்தித்துக் கொண்டு ஆருடம் வகித்துக் கொண்டவளின் வேண்டுகோளை கடவுள் ஏற்றுக் கொண்டார் போல... விகேஎஸ் மில்லை நெருங்கும் நேரம் விக்ரமின் காரும் நுழைவு வாயிலில் திரும்ப வனிதா எதார்த்தமாக கார் செல்வதற்கு வழிவிட்டு நின்ற சமயம் நந்தினிக்கு சாதகமாக போகவே...

“விக்ரம் ஒரே ஒரு முறை பார்த்திருங்க பார்த்திருங்க பார்த்திருங்க” என்று சுலோகம் போல் முனகிக் கொண்டிருக்க, விக்ரமும் இடது பக்க கண்ணாடியை இறக்கி வண்டி ஏதேனும் வருகிறதா என்று பார்த்த நேரம் நந்தினியை கண்டுவிட, அவள் கண்களில் மின்னல் வந்து போனது.

விக்ரம் அவளை மட்டுமல்லாது அவள் விழிகளில் தோன்றிய பிரகாசத்தையும் கண்டறிந்தவனுக்கு சிந்தைக்குள் பனிக்கட்டியை வைத்து கரைத்து போல் சில்லென்ற உணர்வு பரவி பரவசத்தில் ஆட்படுத்தியது. கணமே என்றாலும் இருவரின் பார்வையும் காந்தமென ஈர்த்து மோதிக் கொண்டது.

அதை எல்லாம் அறியாத வனிதா கார் வழிவிட்டதும் வாகனத்தை வேகமாக ஓட்டிச் செல்ல நந்தினிக்கு ஏமாற்றமாகிப் போனது.
வனிதா கல்லூரி வளாகத்தில் வண்டியை நிறுத்திக் கொண்டே...

“அப்புறம் தான் தெரிஞ்சது அவங்களுக்கு அடிபட்டது கையில் இல்லை காலில்ன்னு” என்றதும்...

“வாவ்... சூப்பர்டி!” அவள் என்ன கூறினாள் என்றே கவனியாது தன் போக்கில் கூறியவளை கண்டு வனிதா திகைப்பு, குழப்பம் ஒரு சேர பார்த்திருந்தாள்.

“ஏய் பைத்தியக்காரி உனக்கென்னடி ஆச்சு? ராஜி அக்காவுக்கு ஆக்சிடென்ட் ஆகி அடிபட்டுருச்சுன்னு சொல்றேன், சூப்பருன்னு சொல்லுற நந்து நீ சரி இல்லைடி” என்று கண்டிப்புடன் மொழிய, அப்போது தான் தன் தவறு புரிந்து மண்டையில் குட்டிக் கொண்டவள்...

“சாரி டி நான் வேறேதோ யோசனையில் இருந்துட்டேன் நீ வா போகலாம்” என்று அவளை பாராமல் கூறியவளின் பேச்சில் ஏதோ ஒளிந்திருப்பதை புரிந்துக் கொண்ட வனிதாவும் இருக்கட்டும் சமயம் வாய்க்கும் போது கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.

கல்லூரியில் இருந்த நந்தினியின் சித்தமோ விக்ரமை சுற்றியே வலம் வந்துக் கொண்டிருந்தது... அவளின் உடல் தான் அங்கிருந்ததே தவிர நினைவுகள் எங்கோ சுற்றி பறந்து திரிந்துக் கொண்டிருந்ததை கண்ட வனிதா ஆசிரியர் பாட சம்மந்தமாக கூறிக் கொண்டிருந்ததை எழுதுகிறாளா என்று பார்த்தவள் அதிர்ந்துப் போனாள்!

அதில் நந்தினி நாள்தோறும் மனதில் விக்ரம்! விக்ரம்! என்று தாரக மந்திரம் போல் ஜெபம் செய்துக் கொண்டிருந்ததை அவள் கரமும் எழுதியிருந்தது. வனிதா பல்லைக் கடித்து பொறுத்துக் கொண்டிருந்தவள் ஆசிரியர் நகர்ந்ததும் நந்தினியின் நோட்டை பிடுங்கி பார்க்க அது பொருளாதார பாடமாக அல்லாமல் புள்ளியியல் பாட நோட்டாக இருந்ததையும் கண்டுவிட்டாள்.

நந்தினியோ அவளின் செயலையும் அறியாமல், அவள் செய்த தவறையும் தெரிந்துக் கொள்ளாமல் தன் போக்கில் இருந்தவளை...

“யார் அந்த விக்ரம்?” என்ற வனிதாவின் கேள்வியில் தூக்கி வாரிப்போட திகைத்துப் பார்த்தவள்...

“யார்... யார்... விக்ரமா? அது யாரு?” என்று தட்டு தடுமாறியவளின் கேள்வியே அவளிடம் ஏதோ கல்மிஷம் ஒளிந்திருப்பதை உணர்த்த...

“யாரா இவ்ளோ நேரமா நமக்கு கிளாஸ் எடுத்தது எகோனோமிக்ஸ் மேம்... ஆனால் நீ எழுதியிருக்கிறதோ ஸ்டேட் நோட், அதுவும் என்ன எழுதியிருக்கேன்னு நீயே பாரு” என்றவள் அவள் எழுதிய பக்கத்தை விரித்து காண்பிக்கவும் மாட்டிக் கொண்ட ரீதியில் கைகளை பிசைந்தாள்.

“சொல்லு நந்து... என்கிட்டே நீ இதுவரையும் எதுவுமே மறைச்சதில்லை... ஆனால், புதுசா ஸ்பெஷல் கிளாஸ்ன்னு சொல்லிட்டு சுத்தியிருக்க, அதுவும் ரம்யா வீட்டிலேன்னு சொன்னப்பவே நீ எதையோ பொய் சொல்லி மூடி மறைக்கிறேன்னு தெரிஞ்சுகிட்டேன்”

“..................” அவள் கூறுவதை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தவளின் விழிகளில் மாட்டிக் கொண்டுவிட்ட பீதி தெரிந்தது.

“எப்படின்னு கேட்கறியா? நேத்து தான் ரம்யா கிட்டே பேசினேன் அவ உன்னை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு சொன்னா” என்றதும் தோழியிடம் வசமாக சிக்கிக் கொண்டத்தை புரிந்தவள் உதட்டை கடித்துக் கொண்டு மௌனம் சாதித்தாள்.

“இதுக்கு மேல நீ என்கிட்டே எதுவும் மறைக்க முயற்சிக்காதே நந்து... காதல் கத்திரிக்காய்ன்னு பொழுது போக்கா சுத்துற பொண்ணு நீ இல்லை, ஏன் நம்ம செட்டே அதில் பெரிசா ஈடுபாடில்லாதவங்கன்னு உனக்கே தெரியும்... அப்படி இருக்கிறவள் எசக்கு பிசகா எதார்த்தமா பிரெண்டுக்கு உதவி செய்யப் போய் மாட்டிக்கிறவளும் இல்லை, நிச்சயம் இது வேறேதோ சொல்லு” என்று உந்தியதும் இனி அவளிடம் மறைக்க முடியாது, மறைக்கவும் இயலாது என்று புரிந்துக் கொண்டவள், ரம்யா வீட்டிற்கு சென்று அங்கே ஆதனை கண்டதும் அதன் பிறகு விக்ரமுடன் ஏற்பட்ட பழக்கமும் என ஆதி முதல் அந்தம் வரை கூறியவளை அதிர்ந்து பார்த்திருந்தாள்!


*******************************
வணக்கம் நட்பூக்களே...
“என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதையின் அத்தியாயம்-9 பதிந்துவிட்டேன்... வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பதிவிடப்படும், படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் மக்களே!
தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels✍📝
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels📖🖋📚
நட்புடன்
காருராம்

 
Status
Not open for further replies.
Top