All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மிர்ஷியின் 'நிலாபெண் ஈன்ற நிலவொளியே!' - கதை திரி

Status
Not open for further replies.

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே..

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤..



இந்த புது வருடத்தில் ஏதோ ஒன்றை புதிதாய் செய்ய வேண்டும் என ஆசை.. அதன் விளைவே


“நிலாபெண் ஈன்ற நிலவொளியே !”

ஒரு நடுத்தர வீட்டு பெண் குழந்தை.. அவள் பிறந்த வீட்டுலயே ஒரு கைப்பாவையாய் ஆட்டுவிக்கப் படுகிறாள்.. புகுந்த வீட்டிலோ, ஆட்டுவிக்க ஆசைப்படுபவர்களிடம் சந்தர்ப்பத்தால் தன் குடுமியை கொடுக்கிறாள்..குடுமியை கையில் எடுத்த குடும்பத்தால் அவள் வாழ்க்கை என்னவானது?.. போராட்டம் மட்டும் தான் அவள் தலை எழுத்தா? என்பதே இந்த கதை..


பெண் என்பவள் மென்மையானவளா ? இல்லை வன்மையானவளா?

பெண் என்பவள் தைரியசாலியா? இல்லை கோழையா?

பெண் என்பவள் ஒன்றின் தொடக்கமா? இல்லை முடிவா?

மொத்தத்தில் பெண் வரமா? இல்லை சாபமா?


இதை முடிவு செய்வது யார் ?.. ஒரு பெண்ணா இல்லை அவளை சுற்றி இருக்கும் சமூகமா?🤔..


இப்படி பல பல கேள்விகள் என்னுள்.. அந்த கேள்வியை உங்களிடமும் வைக்கிறேன்.. தெரிந்தால் சொல்லுங்கள்..!


வாரத்தில் எல்லா ஞாயிறும் அத்தியாயங்கள் போஸ்ட் பண்ணுவேன் டியர்ஸ்..


மறக்காமல் இக்கதையின் குறைகளை சுட்டிக் காட்டியும் நிறைகளை தட்டிக் கொடுத்தும் என்னை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்☺


AGAIN WISHING YOU AND YOUR FAMILY A VERY VERY HAPPY NEW YEAR💐💐..LET THIS YEAR BRING A SUPER DOOPER MIRACLES IN YOUR LIFE..stay positive always❤
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 01


நள்ளிரவு நிலவின் வெளிச்சத்தில் ஊரே அமைதியாய் உறங்கி கொண்டிருந்தது அந்த ஒரு வீட்டினரைத் தவிர.. உள்ளே ஒரு பெண்ணின் அலறல் சத்தம் சுற்றி இருந்த இடத்தையே போர்க்களம் ஆக்கி, விடாது ஒலித்துக் கொண்டிருக்க.. அவர் முறை முடிந்த அடுத்த நொடி 'ங்கே ங்கே' என்னும் அழுகை சத்தம் கூடியிருந்தவர்களின் மகிழ்ச்சிக்கு போதுமானதாக இருந்தது..


“எப்பா சுந்தரம்..இந்தா..உனக்கு பொட்டப் புள்ள பொறந்துருக்கா யா!” மருத்துவச்சி கொண்டு வந்து ஒரு அழகிய பெண் சிசுவை கொடுக்க, அந்த குழந்தையை வாங்கி ஆனந்தத்தில் உச்சி முகர்ந்தார் சுந்தரம்… அவர் முகத்தில் அப்படி ஒரு நிறைவு.. இருக்காதா பின்ன?.. கல்யாணமாகி எத்தனை வருடங்களுக்கு பின் தவமாய் தவமிருந்து கிடைத்த பொக்கிஷம் இந்த பூவரசி..


அவரையும் அறியாது கண்ணின் ஓரத்தில் கண்ணீர் வடிந்தது.. இவளுக்காய் அவர்கள் போராடிய போராட்டம் தான் என்ன..! கல்யாணமாகி முதல் இரண்டு வருடங்கள் புதுமண தம்பதிகளின் பெயருக்கே உண்டான சந்தோஷத்தை திகட்ட திகட்ட அனுபவித்துக் கொண்டிருந்தார்கள் சுந்தரம்- உமையாள் தம்பதியினர்..


உமையாள் அந்த ஊரின் பணம் படைத்த செல்வந்தரின் புதல்வி.. அவளுக்கு உடன் பிறந்த ஒரே அண்ணன் பெயர் மாணிக்கம்.. தங்கையின் மேல் கொள்ளைப் பிரியம் அவருக்கு..தந்தையின் விருப்படி சுந்தரதிர்க்கு தங்கள் வீட்டு பெண்ணை கொடுக்க சம்மதித்தான் மாணிக்கம்..


உமையாளுக்கு கல்யாண சீராய் மூன்று ஏக்கர் வயலையும் , பத்து பவுன் நகையும் போட்டு சீரும் சிறப்புமாய் அந்த ஊரே வியந்துப் பார்க்கும் படி திருமணம் முடித்து வைத்தார் அவளின் தந்தை..ஆனால் சுந்தரம் குடும்பம் நடுத்தரதிற்கும் கீழ் உள்ளது..ஏழையாய் இருந்தாலும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய சுந்தரத்தை பிடித்துப் போனது உமையாளின் தந்தைக்கு.. அதன் விளைவாய் பொண்ணையும் கொடுத்து நிலத்தையும் கொடுத்து , “நல்லாப் பார்த்துகோங்க” என்றிருந்தார் அந்த செல்வந்தர்..


அப்படி செல்லமாய் வளர்ந்தவளை, தன் பங்கிற்கும் கஷ்டத்தை அனுபவிக்க விடாது பாசத்தை மட்டுமே காமித்து.. மகிழ்ச்சியான, நிறைவான ஒரு வாழ்கையை கொடுத்து அவளை திக்கு முக்காட செய்தார் சுந்தரம்.. அதனாலயே அவர் ஒரு பிரியமான மருமகனாய் அவர்கள் மனதில் இடமும் பிடித்தார்..


ஆனால் வாழ்க்கை எப்போதும் சந்தோஷத்தை மட்டும் உள்ளடக்கியது அல்லவே..! மகிழ்ச்சியாய் சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்கையில் ஊரார் கண் பட்டதோ இல்லை சொந்தங்களின் பொறாமை கண் பட்டதோ!!.. கணவனுக்கு பிடித்த மனைவியாக இருந்தவரினால் அவர் குழந்தைக்கு தாயாகும் காலம் வரவில்லை போலும்.. இரண்டு வருட தாம்பத்ய வாழ்கையின் பெரிய குறை பாடாய் மற்றவர்கள் கண்ணுக்கு அது தெரிந்தது..


முதல் முறை அவர்களிடம் வந்து கேட்டது சுந்தரத்தின் தாயார் வள்ளியம்மை தான்…


“என்ன யா! உன் பொஞ்சாதி வயித்துல ஒரு புழுவோ பூச்சியோ உருவான அறிகுறி ஒன்னையும் காணுமே?..போன கோயில் திருவிழா அப்போ பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தான் அந்த மில்லு ஓனர் சுப்ரமணி.. அவன் வீட்டுல இன்னும் ஆறு மாசத்துல குழந்தை வந்துடுமாம்..அவன் பொஞ்சாதி 'நம்ம வீட்டுல ஏதாவது விசேஷம் உண்டானு ?' என்ன பாத்து கேட்டுபுட்டு போற..ஊருல எல்லாரும் கேட்க ஆரம்பிச்சுட்டாவ … சீக்கிரம் அதுக்கான செய்திய சொல்லுப்போ.. இல்லைன்னா ஊரு சிரிச்சுபுடும்” என்றார் சிறிது ஆதங்கத்துடன்…


அந்த நாலு பேரு நாளும் விதமா பேசும் வட்டத்தின் நடு நாயகியே இந்த வள்ளியம்மை தான்..ஊரில் உள்ள எல்லாருக்கும் ஒரு பட்டப் பெயரை சொல்லி அவர்கள் குடும்பத்தின் பிரச்சினைகளை உலகத்துக்கே பரப்பி விடுவதில் அப்படி ஒரு அலாதி பொழுது போக்கு அவருக்கு.. இப்போது அவரின் குடும்ப விஷயம் சந்தி சிரித்து தன்னை பார்த்து பரிகாசம் செய்து விடுவார்களோ என அஞ்சினார் அந்த நல்ல உள்ளம்.. அவருக்கு அவர் கவலை…


“அதெல்லாம் பிறக்கும் போது பிறக்கும்..ஏன் ஆத்தா அவசரப் படனும்” என விட்டுவிட்டார் ஆரம்ப காலங்களில்..


மழலை செல்வம் வேண்டி அவர் என்றுமே பெரிதாய் கவலை கொண்டதில்லை… “எங்களுக்கு எப்போ தரது சரின்னு தோணுதோ அப்போ என் அப்பன் முருகன் நா கேட்காமலேயே எனக்கு கொடுப்பாரு ஆத்தா” என அத்தோடு முடித்தும் கொள்வார்..இப்படி தான் அந்த பிரச்சனை தொடங்கும் போதெல்லாம் பேசி ஒன்றும் இல்லாததாய் செய்து ஆரப்போடுவார்..


ஆனால் ஊர் வாய் சும்மா இருக்காதே..எந்த குடும்பத்தில் போய் குழப்பி விடலாம் என சுற்றும் அந்த ஊரின் பெருசுகளுக்கு ஊரின் வாயாடி என பெயரெடுத்த வள்ளியம்மாள் வீடே கிடைத்தால் சும்மா விடுவார்களா?.. அவரின் மருமகள் உமையாள் காட்சிப் பொருளாய் மாட்ட, அம்மிக் கல்லில் வைத்து அரைத்து எடுத்து விட்டனர் …


அது வரை சிறிதாய் தெரிந்த பிரச்சினை அதன் பின் கை கால் முளைத்து பெரிதாய் விஷவரூபம் எடுக்க அங்கே பெரும் பூகம்மாய் வெடித்தது..வள்ளியம்மாள் மருமகளை அன்று முதல் காதுப்படவே திட்ட தொடங்கி விட்டார்..


முதலில் மகன் இருக்கும் போது வெளிப்படையாய் திட்டியவர், பதிலுக்கு மகன் தன்னை திட்டுவதை பொறுக்க முடியாமல் அவன் இல்லாத நேரங்களில் உமையாளை வறுத்தெடுத்தார்..


“நீ சொல்வதை நான் கேட்கிறேன் பார்” என மகனிடம் காட்டி அதன் மூலம் நல்ல பெயர் வாங்க நினைத்தாரோ..! சுந்தரம் இருக்கும் போது அமைதியாய் இருந்து குடும்பத்தை வழி நடத்துவது போலவும்..அவன் வெளியே சென்ற நிமிடம் முதல் மாமியாரின் குணத்தை காட்டி வாழ வந்தவளை அடிமை படுத்துவதும் அங்கு வெகு ஜோராகாவே நடந்தது…


இதில் உமையாள் தான் பாவம் மனதுடைந்து போனார்..”உன்னால ஒரு குழந்தைக்கு கூட தாயாக முடியலனா என்ன பொண்ணு நீ.. ஒழுங்கா என் மவன விட்டு போயிடு.. அவனுக்கு வேற பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என கணவன் இல்லாத நேரங்களில் கடுஞ்ச் சொல்லை உதிர்க்கும் மாமியாரின் வார்த்தைகளை கேட்டாலே நடுங்க ஆரம்பித்தார்...


“கணவனுக்கு என்னால புள்ள பெத்து குடுக்க முடியாதா..? அவங்கள வேற பொண்ணுக்கு கட்டி வச்சிடுங்களா?.. அவர் இல்லாம நா எப்படி வாழ்வேன்” என ஏங்கி ஏங்கி அழுது வடிந்தார்.. எந்த பெண்ணுக்கும் ஏற்படும் பயம் அல்லவா.. கணவனை வேறு பெண்ணுடன் பங்கிடுவது!..


இதை கணவனிடம் கூறினாள் தாய்க்கும் மகனுக்கு தேவை இல்லாத சண்டை வரும் என்பதை இத்தனை நாட்களில் புரிந்துக் கொண்டமையால் சுந்தரம் இருக்கும் போது சாதாரணமாய் இருக்க முயன்றார் உமையாள்..


பகல் முழுவதும் மாமியாரிடம் வசவு சொல்லை கேட்டு பொறுத்துக் கொண்டு.. இரவு முழுவதும் கணவனுக்கு தெரியாமல் கண்ணீர் வடித்தால் பெண்ணவள்…ஆனால் எத்தனை நாள் தான் மறைக்க முடியும்.. அவளே மறைத்தாலும் அவளின் தோற்றம் அப்பட்டமாய் சுந்தரத்திர்க்கு காட்டிக் கொடுத்தது…


விடிய காலையிலே எழுந்து வயலுக்கு செல்பவர் மதிய உணவும் எடுத்துக் கொண்டே சென்று விடுவார்..மீண்டும் வீடு திரும்புகையில் எப்படியும் அந்தி சாய்ந்து விடும்..இடைப்பட்ட நேரங்களில் தான் உமையாள் வள்ளியம்மை வாய்க்கும் ஓர் வாய்க்கும் உணவாகி போனது..தன் முன் தாய் பேசாமல் இருந்ததால் அதை அவரும் மறந்து தான் போனார்…தினம் தினம் மாமியாரிடம் மருமகள் படும் பாட்டை இதனால் தான் கணவன்மார்கள் அறியாமல் போகிறார்களோ என்னவோ..!


என்ன தான் உமையாள் அமைதியாக நடமாடினாலும் சில நேரங்களில் அவர் முகம் வாடுவதை கவனித்து தான் இருந்தார் சுந்தரம்..


அதுவும் நாளுக்கு நாள் மெலிந்த உடலுடன், கண்ணுக்கு கீழ் கருவளையம் பெரிதாய் இருக்க, சோர்ந்து அமர்வதை பார்க்க பார்க்க, ”எத்தனை முறை சொன்னாலும் ஆத்தாவும் கேட்காது இவளும் விடமாட்டா !” என ஆயாசமாய் இருக்கும் அந்நேரங்களில்.. இருந்தும் மனதுக்குள் மருகியவர் வெளியில் எதையும் காட்டியதில்லை..இதுதான் ஆண்கள்.. தங்களுக்குள்ளாக பிரளயமே நடந்தாலும் அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல் கடந்து விடுவார்கள்..


இப்படியே ஐந்து ஆண்டுகள் ஓடிவிட..இப்போது நம்பிக்கை குறைய ஆரம்பித்தது சுந்தரதிற்க்கு.. அவரும் குழந்தை செல்வத்திற்கு ஏங்க ஆரம்பித்தது தான் மிச்சம்..ஒவ்வொரு நாள் வேலை முடித்து வீட்டிற்க்கு வரும் போதும் மனைவி எதாவது சந்தோஷமான செய்தியை சொல்லி விடமாட்டாலா என காத்திருந்தார்.. காத்திருந்து காத்திருந்து நம்பிக்கையை இழந்து கொண்டிருந்தது தான் இங்கே வேதனையான விஷயம்.. வள்ளியம்மை சொல்லவும் வேண்டாம்..சொல்லி சொல்லி பார்த்து “ நீ எப்படியும் போய் தொலை” என மருமகளை விட்டு வேற பெண் பார்க்கும் படலத்தையே ஆரம்பித்து விட்டார்..இவர்களே இப்படி என்றால் உமையாளின் நிலை?..முழு நேரமும் எதையோ பறிக் கொடுத்தது போல தான் இருந்தார்.. ஆரம்பத்தில் கணவனின் துணையுடன் மாமியாரின் பேச்சைக் கடந்து வந்தவர் நாட்கள் செல்ல செல்ல பயந்து ஒதுங்கி யாரிடமும் பேசுவதில்லை..நம்பிக்கையை இழந்துக் கொண்டு, சுயத்தையும் இழந்து கொண்டு இருந்த நேரத்தில் தான் அந்த அதிசயம் நடந்தது சுந்தரதிற்கு…


“நீ என்னை மறந்துட்ட இல்ல..உனக்கு வேண்டியது என்கிட்ட தான் இருக்கு.. ஆனால் நீ என்னை தேடி வரணும்.. வந்து நீ கேட்டதை வாங்கிட்டு போ..!” சிரித்த முகத்துடன் ஒரு சிறுவன் கடற்கரையோரமாய் சொல்லிவிட்டு திரும்பி செல்ல.. அவன் செல்வதை பார்த்து பதற்றத்துடன் “என்னை விட்டு தனியா போகாத பா…இரு நானும் வாரேன்” என அவன் பின்னே ஓடினார் சுந்தரம்… ஆனால் அந்த சிறுவன் காணாமல் போக, கண்ணீருடன் அங்கேயும் இங்கேயுமாக சுற்றிக் கொண்டிருந்தவர் ஏதோ கல் தடுக்கி கீழே விழுந்தார்…


“முருகா!!” என அடித்துப் பிடித்து எழுந்துப் பார்க்க அதன் பிறகே தான் கண்டது கனவு என புரிந்தது.. நிஜத்தில் அந்த சிறுவனை தேடி அழைந்தது போல உடல் முழுதும் தொப்பலாய் வேர்வை முத்துக்கள் இருக்க அது கனவா ? இல்லை உண்மையில் தான் ஓடினோமா ? என சந்தேகமே வந்துவிட்டது..அதன் பின் அவர் தூக்கமும் தூர போக அருகில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை பார்த்தார்.. கண்களின் ஓரத்தில் கண்ணீர் காய்ந்திருந்தது.. அதிலேயே புரிந்தது அவளும் இதை நினைத்து தான் படுத்திருக்க வேண்டும்.. அவளுக்கும் நிம்மதியான தூக்கம் இல்லை.. குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டவாறு, “உன் வேண்டுதலுக்கு அவர் செவி சாய்ச்சிட்டாரு உமையாள்..சீக்கிரமே எல்லாம் நல்லதா நடக்கும்” என்றார்..


மறுநாள் தன் தாயிடம் அந்த கனவை கூறிய சுந்தரம், “ஆத்தா! அவரோட இடத்துக்கு என்னை வர சொல்லி கூப்பிட்டு இருக்காரு..நானும் உமையாளும் திருச்செந்தூர் வரைக்கும் போயிட்டு வந்துடுறோம்.. அடுத்த சில பொழுதுலயே (மாதம்) உன் கையில நீ கேட்டது இருக்கும்” என அவர் சந்தோஷமாய் சொல்ல,


“கோயில் குளம்ன்னு போனா தான் வரணுமா.. யாருக்கு என்ன குறையோ..முதல்ல ஆஸ்பத்திரி போய் பாருங்க..அப்போ தெரியும் செய்தி !” என விதண்டா வாதமாய் பேசிவைக்க.. ”போதும் ஆத்தா..எங்களுக்கு என்ன பண்ணணும்னு தெரியும்…நீ வாயை மூடிக்கிட்டு இரு..சும்மா சும்மா இதையே சொல்லி குத்திக் காமிக்க வேண்டியது..இனிமே அமைதியா இருந்துடு.. இல்லைன்னா என்ன மனுஷனா பார்க்க மாட்ட.. நா இல்லாத நேரம் நீ….” என மேலும் பேசுவதற்குள் உமையாள் அவர் கைகளைப் பிடித்து வேண்டாம் என அழுதுக் கொண்டே தலையசைத்தாள்..


அவள் கண்களைத் துடைத்தவர், “கோயிலுக்கு போயிட்டு வந்து எதுவானாலும் பார்த்துக்கலாம் ஆத்தா” என முடித்துக் கொண்டார்.. அவருக்கு நம்பிக்கை இருந்தது அதற்கு அவசியம் வர போவதில்லை ..


மறுநாளே தாமதிக்காமல் மனைவியுடன் சென்றவர் தாங்கள் வந்த நோக்கத்தை கடவுளிடம் மனமுருகி கேட்க, பக்தர்களின் குறையை தீர்க்கவே எழுந்தருளியவர் அவர்களின் கவலையை மட்டும் கண்டுக் கொள்ளாமல் விட்டுவிடுவாரா..! நல்லதே நடக்கும் என அருள்பாலித்தார்..


அதன் பிறகும் ஆறு மாதங்கள் வேகமாய் ஓட, அன்று வயலில் வேலைகள் அதிகம் இல்லாததால் சீக்கிரம் வீட்டிற்க்கு வந்த சுந்தரம் பார்த்தது தொட்டி அருகில் மயங்கி கிடந்த மனையாளை தான்..பயந்து போய் தாயை அழைக்க, அவரோ நேரங்காலம் புரியாமல் வசைப் பாட ஆரம்பித்து விட்டார்..”புள்ளைய பெத்துக் கொடுக்க தான் வக்கிலைனு நினைச்சா நோவு புடிச்ச புள்ளையா இல்ல இருக்கு.. பொசுக்கு பொசுக்குனு மயக்கம் போடுது..ஒரு வேலையும் செய்யுறதும் கிடையாது.. ஊருல வேற பொண்ணே இல்லைன்னு இவளை எடுத்து ஒரு நிம்மதியும் இல்ல” என நொடித்துக் கொள்ள,


சுந்தரம் முறைத்த முறைபிலேயே அடுத்து திட்டப் போனவர் வாயை கப் சிப் என மூடிக் கொண்டார்.. பக்கத்தில் இருந்த ஒரு வயதான பாட்டியை அழைத்து வந்து பார்க்க வைக்க, கையை பிடித்து பார்த்தவர் முகம் மலர்ந்து போனது…அதில் மற்றவர்களுக்கு ஓரளவு விஷயம் புரிந்திட… சுந்தரம் மட்டும் தான் 'நினைப்பது நிஜம் தானா' என ஆசையுடன் அந்த பாட்டியையே பார்த்துக் கொண்டிருந்தார்…


“ஏய்..இந்தா வள்ளியம்மா..நீ அந்த புள்ளைய படுத்துன பாட்டுக்கு ஒரு விடிவு காலம் வந்துருச்சு..உனக்கு பேரக்குழந்தைய பெத்துக் குடுக்க போறா உன் மருமவா” என அவர் காதில் அணிந்திருந்த பாம்படம் ஆட சிரித்துக் கொண்டே சந்தோஷத்தை பகிர்ந்தார்..


அதில் மகிழ்ந்து போனர் சுந்தரமும் வள்ளியம்மையும்..அது வரை திட்டிய மருமகளை கொண்டாட ஆரம்பித்து விட்டார்..மாணிக்கம் வீட்டிலோ இரட்டிப்பு மகிழ்ச்சியாக அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருந்தது..எல்லோரின் அன்பிலும் திக்கு முக்காடி இதோ இன்று அழகிய தேவதையை பெற்றெடுத்து தாய்மை ஸ்தானத்தை சந்தோஷத்துடன் அனுபவிக்கிரார் உமையாள்…அவரை அனுபவிக்க வைத்த அந்த தேவதையோ தன் தாய்க்கு நிம்மதியை வாரி வழங்கி விட்டு ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றாள்... அவள் தான் நிலவொளி.. இக்கதையின் நாயகி...


அன்புடன்,
மிர்ஷி ❤

கருத்துக்கள் இங்கே
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -2

“நிலாமா…எங்க டா தங்கம் இருக்க? வா.. வந்து அம்மாகிட்ட ஆஆ வாங்கு”.. உமையாள் அந்த மதிய வேளையில் உணவு தட்டையும் கையில் வைத்துக் கொண்டு ஒன்பது மாத மேடிட்ட தன் வயிற்றையும் பிடித்துக் கொண்டு வீட்டைச் சுற்றி தேடிக் கொண்டிருந்தார் நிலவொளியை..


“அம்மா நா இங்க..!” என கொல்லைபுறத்தில் இருந்து சத்தம் வர, 'ஒரு வாய் சோறு கொடுக்குறதுக்குள்ள என் உசுரையே உரிஞ்சிருவா' என முணுமுணுத்துக் கொண்டே அவள் இருக்கும் இடத்திற்க்கு மெது மெதுவே நடந்தார்…


அங்கு ஒரு மாங்கன்றின் பக்கத்தில் அமர்ந்து வெகு சிரத்தையோடு ஒரு கம்புடன் மணலை தோண்டிக் கொண்டிருந்தாள் நிலவொளி..அவள் செயலை பார்த்து யோசனையுடன், “இங்க என்ன டா மா செய்யுற ?” என அவள் அருகில் போய் அவரும் அமர்ந்தார்…


“இதோ பாருங்க அம்மா” என மூடி வைத்திருந்த இடது கையை சிறிதாய் அவருக்கு தெரியும் படி சுண்டு விரலை மட்டும் எடுக்க, அப்படி இதுக்குள்ள என்ன இருக்கு என அவள் காட்டிய குட்டி ஓட்டைக்குள் உற்று பார்த்தார்.. ம்ஹும் அவருக்கு வெறும் இருட்டாய் தான் தெரிந்தது…


“விளையாட்டுக் காட்டாம ஒழுங்கா அங்க வந்து சாப்பிடு..பாப்பா வேற முழிச்சிக்குவா..அவளையும் பார்க்கணும்..சீக்கிரம் வா.. இல்லைன்னா அப்பத்தா வந்ததும் சொல்லிக் கொடுத்துருவேன்” என பயம் காட்டி கோபத்துடன் எழ முயன்றார்.. சாப்பிட வருத்தப் பட்டுக்கிட்டு கள்ளத்தனமாய் எதையாவது செய்யும் தன் மகளை அவர் அறிவாரே..! அவள் பயப்படுவது தன் மாமியாரிடம் மட்டும் தான்.. அதனாலயே 'அதோ பாரு பூச்சாண்டி' என்பது போல 'அதோ பாரு அப்பத்தா பார்க்குறாங்க' என பயம் காட்டியே பெரும்பாலும் சோறுட்டுவாள்.. இன்றும் அப்படியே சொல்ல,


“நா விளையாடல..அப்பத்தா கிட்ட மட்டும் சொல்லாத.. அப்புறம் நா சண்ட” என கண்கள் கலங்கி உதட்டை பிதுக்கியவள், ”இத வெளிய காட்டுனா வெளிச்சம் பட்டு நிலாக்கு பல்லு முளைக்காது” என தாயின் முன் மடக்கிய இடது கையை நீட்டி அழ ஆரம்பித்து விட்டாள்..


“என்ன! பல்லு முளைக்காதா?”..அவர் புரியாமல் நிலவொளியின் கைகளை விரித்து பார்க்க, அதில் அவள் உடைந்த பல் ரெத்த கரையுடன் இருந்தது… “அய்யோ! என்ன மா ஆச்சு..எந்த பல்லு விழுந்து..ரொம்ப வலிக்குதா பாப்பாக்கு?” அவள் நாடியை நிமிர்த்தி வாயை திறக்கவைத்து பார்க்க..அதில் இரண்டு அணில் பற்களில் ஒன்று உடைந்திருந்தது..அது எதோ குகை போல காட்சியளிக்க..அதை பார்க்கவே சிரிப்பு வந்தது உமையாளுக்கு.. இப்போ இவளுக்கு நாம சிரிக்கிறது மட்டும் தெரிஞ்சா சாப்பிடாம அடம்பிடிச்சு அழுவா என அடக்கி கொண்டு அவளைப் பார்க்க,


“வெளிச்சத்த பார்த்துட்டு என் பல்லு.. இனி எனக்கு வளராது.. எல்லாரும் என்ன பார்த்து சிரிக்கும்.. நா பள்ளிக்கூடம் போவ மாட்டேன்!” என ஓங்கி அழ ஆரம்பித்து விட்டாள்..


'ஆங்ங்ங்' என விழி பிதுங்கி நின்றார் உமையாள்..என்ன டா இது புது புரளியா இருக்கு? பல்லு மேல வெளிச்சம் பட்டா முளைக்காதா?.. அதுக்கும் பள்ளிக்கூடம் போறதுக்கும் என்ன சம்பந்தம்?.. ஒருவேளை அந்த வாத்திப் பொண்ணு சொல்லிக் கொடுத்துதோ? அவருக்கு நிஜமாகவே புரியவில்லை..மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர்.. இன்று மகள் பள்ளிக்கூடம் செல்வதை பார்க்கும் போதே அத்தனை பெருமை அவருக்கு..தினமும் நிலவொளி புதுசாக ஏதாவது வந்து சொல்லுவாள். அப்படி தான் இன்றுமோ? என அவளிடமே கேட்க போனார்...


ஆம்!! ஐந்து வருட ஏக்கங்களை பூர்த்தி செய்து கிடைத்த இந்த பொக்கிஷத்திர்க்கு இப்போது ஐந்து வயது..பாலர் பள்ளி செல்கிறாள்.. மதியம் வரை வகுப்புகள் இருக்கும்.. அதுவும் சக நண்பர்களுடன் கதைப் பேசி தூங்கி எழுந்து வரும் வகுப்பு…வீட்டையும் தோப்பையும் சுற்றி கொண்டிருப்பதற்கு அவள் வயது ஒத்த பிள்ளைகளுடன் விளையாடினால் மற்றவர்களுடன் பழக வாய்ப்புக் கிடைக்கும் என அனுப்பினார்கள் சுந்தரம் – உமையாள் தம்பதியினர்..


“யாரு மா சொல்லி தந்தாங்க? அந்த நீல தாவணி போட்ட டீச்சரா” அவளிடம் சிரிப்புடன் கேட்க,


“இல்ல..என் பக்கத்துல இருப்பாளே கஸ்தூரி..அவ அக்கா சொல்லிச்சாம்.. இந்த மாதிரி 'அதோட' வெளிச்சத்துல காட்டக் கூடாது” என வானத்தில் இருந்த சூரியனை பார்க்க முடியாமல் கூசிய கண்ணை மூடிக் கொண்டு கை நீட்டினாள்..


அவருக்கு புரிந்து போனது இது பிள்ளைகளின் விளையாட்டு என.. குழந்தைகள் குழந்தைப் பேச்சில் சொன்னால் தானே நம்புவார்கள்.. உமையாளும் அதை போலவே செய்தார்..


“அய்யோ நிலாமா..அது அப்படி இல்ல.. இந்த மாகன்று நீ தானே வச்ச…பாரு அந்த வெளிச்சம் பட்டு எப்படி வேகமா வளருதுனு..இது ரொம்ப பெரிசாகி உனக்கு மாம்பழம் தரும்ல..அது மாதிரி தான் இதுவும்..அம்மாவோட பல் எல்லாம் நா 'அது' பார்க்கும் படி தான் வீசுனேன் என சூரியனை கை காட்ட..இதோ பாரு இப்போ எனக்கு எவ்ளோ பெருசா வளர்ந்துருக்குனு என வாயை திறந்து காட்டினார்.. அவர் காட்டிய சூரியனை மீண்டும் கண்களைச் சுருக்கி பார்த்தவள் அவர் வாயை திறந்து காட்டியதும் நம்பாமல் எல்லா பல்லும் இருக்கிறதா என அங்கும் இங்கும் தலை சரித்து பார்த்தாள்..அவள் செய்கையில் சிரித்தவர் இப்போ நம்புறியா நிலாம்மா என கேட்க..


'ம்ம்ம்' என வேகமாய் தலையாட்டியது அந்த சில்வண்டு..


"அது மாதிரி வெளிச்சத்துல காட்டினதால உனக்கும் சீக்கிரம் வளரும் பாரு..இப்போ நாம இத புதைச்சிடலாம்.. இதுக்கெல்லாம் பள்ளிகூடம் போகாமாட்டேன்னு அழ கூடாது சரியா !” என பேசிக் கொண்டே அவளை சமாதானப் படுத்தினார்..


பின் இருவரும் சேர்ந்து அந்த பல்லை புதைத்து எழும்ப, நிலவொளி ஓடி சென்று சொம்பில் தண்ணி எடுத்து வந்து அதில் தெளித்தால்.. உமையாளைப் பார்த்து, “இனி சீக்கிரம் எனக்கு வழந்துடும் இல்ல..என் மாமரம் பெருசாகும் போது எனக்கும் பெரிய பல் வந்துடுமே” என குதித்து குதித்து சிரிக்க,


அவரும் 'ஆமா! ஆமா!' என சிரிப்புடன் தலையசைத்தவர் “நாம அப்போ வந்து பார்க்கலாம் என்ன…இப்போ போலாம்.. பாப்பா முழுச்சிடுவா” என சொல்லி அவள் கைகளைப் பிடித்து கூட்டி சென்றார்.. சந்தோஷமாய் செல்லும் அவர்களைப் பார்த்து அந்த மரங்கன்று பெருமூச்சுவிட அது காற்றாய் மாறி இருவரையும் தழுவிச் சென்றது..


----------------------


இரவு ஏழு மணிக்கு அடை மழை அடித்து பெய்ய அவசர வேலையாய் வெளியில் சென்றிருந்த சுந்தரம் வீட்டிற்க்கு வந்தார்..


அவருக்காகவே காத்திருந்த நிலவொளி, 'அப்பா' என ஓடி சென்று கட்டிக் கொண்டாள்..அவள் பின்னேயே வெண்மதி தத்தி தத்தி நடக்க இருவரையும் தூக்கி கொண்டு உள்ளே நுழைந்தார்..வந்ததும் அவர் மடியில் உட்கார்ந்து அன்றைய நிகழ்வுகளை மூத்தவள் சொல்ல, இளையவள் அவர் நெஞ்சில் சாய்ந்து படுத்திருந்தாள்..


அவர் பக்கத்தில் வந்து அமர்ந்த உமையாள், “ஏங்க ! அப்போ அப்போ அடி வயித்துல நல்லா வலி இருக்கு..ஏன்னு தெரியல.. மனசுக்குள்ள சதா ஒரு பயம் வந்து அழுத்துது..பிரசவத்துல ஏதாவது ஆகிடுமோன்னு ரொம்ப பயமா இருக்குங்க..!” அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு முகம் முழுக்க பயத்துடன் சொல்ல..


“குழந்தைகள் முன்னாடி என்ன பேசுற நீ !” என கடிந்துக் கொண்டவர் இருவரையும் வெளியே தாயிடம் அனுப்பி வைத்துவிட்டு, மனைவியிடம் திரும்பி “இது என்ன உமையாள் புதுசா ?..நமக்கு மூணாவது பிரசவம் இது..நீ என்னவோ முதல் பிரசவம் மாதிரி பயந்துகிட்டு இருக்க..அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. நம்ம பையன் உன்ன எந்த கஷ்டமும் படவிடமாட்டான்..நீ கவலைப் பட்டு உன் உடம்ப கெடுத்துக்காத என்ன” அவர் தைரியப் படுத்த முயன்றும் அவள் முகத்தில் தெளிவு இல்லை..


அதை பார்த்தவர், “இந்த முறை நாம எதுக்கும் வலி வர முன்னாடியே ஆஸ்பத்திரி போயிடலாம்.. குழந்தை பிறந்ததும் கட்டுப்பாடு வேற பண்ணணும் இல்ல” என அவர் மனைவியின் மீது கொண்ட அக்கறையில் சொல்ல, அதில் எல்லாம் அவள் மனம் ஒன்றாமல் அது பாட்டிற்கு அடித்துக் கொண்டிருந்தது..


நிலவொளி பிறந்த அடுத்து மூன்று வருட இடைவேளையில் மீண்டும் கருவுற்றார் உமையாள்..அதிலும் பெண் குழந்தைப் பிறக்க 'வெண்மதி' என்னும் பெயர் வைத்து கொஞ்சி மகிழ்ந்தார்கள்.. தாயின் ஏக்கத்தை பூர்த்தி செய்த பெண் குழந்தைகள் இப்போது தந்தையின் ஏக்கத்தை அதிகரித்தனர்..


ஒருநாள் கணவன் மனைவியின் தங்களுக்கே உண்டான நேரத்தில் “நமக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தா நல்லா இருக்கும்ல உமையாள்” என மெதுவே தன் ஆசையை சொல்ல, அவரின் ஏக்கம் புரிந்தது…குழந்தை பிறப்பதற்கு முன் அவர் நினைத்திருந்தால் வேறு ஒரு பொண்ணை தாயின் பேச்சைக் கேட்டு மனந்திருக்கலாம்..ஏன் ஒன்றிரண்டு முறை அவளே பொறுக்கமுடியாமல் அவனை வற்புறுத்தி இருக்கிறாள் தான்..அப்பொழுதெல்லாம் அவர் சொல்லுவது ஒன்றே “நம்ம ரெண்டு பேருல ஏன் எனக்கு கூட குறை இருக்கலாம்.. யாரு கண்டா!.. வாழ்க்கை மொத்தமும் உன்கூட இருப்பேன்னு சொல்லி தான் உன் கையப் பிடிச்சேன்.. பாதில விட்டுட்டு போக இல்ல..அது மாதிரி தான் நீயும் இருக்கணும்” என அவளையும் அப்படி தான் இருக்க வேண்டும் என சொல்லும் போது எந்த மனைவிக்கு தான் காதல் வராமல் இருக்கும்..”இந்த காதலை கடைசி வரை அனுபவிக்கவாவது சீக்கிரம் எனக்கு குழந்தைய கொடு முருகா” என அவள் வேண்டாத நாள் இல்லையே..அப்படி இருக்கும் மனிதர் அவளுக்கு தெரிந்து ஆசையாய் கேட்டது இதுதான்..


அவருக்காக உயிரையே கொடுக்க நினைக்கும் அந்த பேதை பெண் இதை நிறைவேற்ற முயலாமல் இருந்திடுவாளா என்ன ?..


இம்முறை பக்தனை காண இறைவன் வரவில்லை..மாறாக எதிர்பார்ப்புடன் இவர்களே போய் நின்றனர்..தனக்கு வரும் கஷ்டங்களிலோ இல்லையேல் ஏதாவது ஒன்றை வேண்டும் போது தானே நம்மில் பலருக்கு இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதே நியாபகம் வருகிறது..சுந்தரமும் நம்மில் ஒருவரின் பிரதிபலிப்பு அல்லவா! ..


"எனக்கு ஆண் குழந்தையும் வேண்டும்" என திருச்செந்தூர் முருகனிடம் வேண்டுதல் வைத்து விட்டு வர, அடுத்த எட்டு மாதத்தில் மீண்டும் கறுவுற்றார் உமையாள்.. இதோ இப்போது ஒன்பதாவது மாதம் முடியும் தருவாயில் இருக்கிறார்..


மனைவியின் முகத்தில் தெளிவில்லாததை உணர்ந்தவர், அவளை ஒருமுறை அணைத்து “வீணா எதையும் போட்டுக் குழப்பிக்காத” என்றதோடு எழுந்து சென்றுவிட்டார்.. இவ்வளவு தான் பொதுவாக ஆண்களுக்கு தெரிந்தது.. அந்நேரத்தில் பெண்கள் கொள்ளும் மன அழுத்தத்தை தொடர்ந்து வரும் பயத்தை அறியாது தான் போகிறார்கள் இவர்கள்..


முற்றத்தில் வள்ளியம்மை அமர்ந்து வெற்றிலையில் வைக்க பாக்கை இடித்துக் கொண்டிருந்தவர் அவர் போக்கில் “மார்கழி மாசம் இது என்ன புதுசா பேய் மழை பெய்யுது..பொதுவா இந்த மாசத்துல மழை வந்தாலே கருவருத்துரும்னு சொல்லுவாகளே!” என புலம்பிக் கொண்டிருந்தார்..


“யாரு யாரோட கருவருத்துட்டா நீ இங்க இருக்கும் போது?” என அங்கே வந்தார் சுந்தரம் பிள்ளைகளை பார்க்க..


“நா ஏன் யா அப்படி செய்ய போறேன்” என நொடித்துக் கொண்டவர் “அதில்ல ராசா..மார்கழி மாசம் மழை வந்தாலே அடுத்து வரபோற மழைய அது தடுத்திடும்..இது நல்லதுக்கு இல்லன்னு ஒரு பேச்சு உண்டு..எங்க என்னது நடக்க போவுதோ” என அவர் சொல்ல,


“ம்ப்ச்..நீயும் உன் பழமொழியும்” என திட்டியவர் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு சாப்பிட சென்றார்.. ஆனால் இந்த மழை நடக்க போகும் விபரீதத்தை அறிந்து முன் கூட்டியே கண்ணீர் சிந்துகிறது என அங்கிருந்த யாருக்கும் தெரிய வாய்ப்பில்லையே..!


மேலும் இரண்டு நாட்கள் விரைவாக ஓட, அன்று ஒரு வெள்ளிக்கிழமை.. அடுத்த இரண்டு நாட்கள் விடுமறை என தன் தாத்தா பாட்டி வீட்டிற்க்கு ஓடி விட்டாள் நிலவொளி..அதற்கு இன்னொரு காரணம் மறுநாள் உமையாள் மருத்துமனை செல்வதால் அவளை அங்கே அனுப்பிவிட்டனர்.. மூத்தவள் பின்னாடியே ஒடும் வெண்மதியும் அங்கே சென்றுவிட, பிள்ளைகள் இல்லாத தனிமை.. ஏற்கனவே இருந்த படப்படப்பு எல்லாம் சேர்த்து உமையாளை பயமுறுத்த கணவனுக்காக முற்றத்தில் காத்திருந்தார்..


“ஏய் உமையாளு! எத்துன நாள் சொல்லுறது..அந்தி சான்ச்சுட்டாவே கர்ப்பிணி புள்ள வெளிய நிற்க கூடாதுனு..சீக்கிரம் உள்ளார வா” என வள்ளியம்மை வீட்டிற்குள் இருந்து குரல் கொடுக்க, ஒருமுறை ஏக்கமாய் வாசலைப் பார்த்தவள் திரும்பி வீட்டிற்குள் கால் வைக்க போக, அப்போது தான் பெய்திருந்த மழையின் தண்ணீர் முற்றத்தையும் நனைத்திருந்தமையால் அதை கவனிக்காமல் உள்ளே கால் வைக்க போனவளை அது வழுக்கி விட, அதிர்ச்சியில் 'நிலாமாஆஆஆ' என கத்தியவள் தரை நோக்கி விழுந்தால்…


----------------------------------


“பாட்டி, எனக்கு தம்பி பாப்பா பொறந்ததும் என்ன பெயரு வைக்கணும் ?..அம்மா இந்த ரெண்டு நாளுல யோசிக்க சொல்லிச்சு..நீ சொல்லி குடு” என தன் தாய் வழி பாட்டியிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் நிலவொளி..


வெண்மதியை அப்போது தான் தூங்க வைத்து வந்தவரிடம் இவள் கேட்டுக் கொண்டிருக்க, “உனக்கு என்ன பெயரு தோணுதோ அதை வையி ராசாத்தி..நாம அப்படியே கூப்பிடுவோம்” என சொல்லிக் கொடுத்தார்..


“நம்ம நந்து அத்தான், மனு அத்தான் பெயரு எனக்கு புடிக்கும்..அதுல ஒன்னு வைக்கலாம்” என குதித்து சந்தோஷத்தில் கை தட்ட, அங்கே வந்த மாணிக்கம் “ நிலா பாப்பா! ரெண்டு நந்து, ரெண்டு மனு இருந்தா நீ யார கூப்பிடுவ…நம்ம எல்லாருக்கும் குழம்பி போயிடும் இல்ல.. அதுனால வேற அழகான பெயர் வைப்போம்..சரியா” என மழலை மொழியில் அவளுக்கு பதில் கொடுத்தார்...


நந்து, மனு இருவரும் மாணிக்கத்தின் இரு மாணிக்கங்கள்..நந்த குமார், மனோரஞ்சன் என்பது தான் அவளுக்கு வாயில் வரும்படி நந்து, மனு என சொல்லிக் கொடுத்துள்ளனர்..பொதுவாகவே குடும்பத்தில் பிறக்கும் அத்தனை ஆண் குழந்தைகள் மத்தியில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் அவளை தூக்கி வைத்து கொஞ்சுவது நம்மவர்களின் பழக்கம்..அதுபோல தான் நிலவொளி அங்கே..அவளுக்கு மாமன் வீட்டில் அத்தனை செல்லம்.. நந்துவும், மனுவும் இவளையே 'செல்லம்மா செல்லம்மா ' என சுற்றி சுற்றி வருவார்கள்..அதன் பின் தான் வெண்மதியும் கூட..அதனாலயே நிலாவுக்கு இவர்களை ரொம்பப் பிடிக்கும்..


“சரி மாமா..அப்போ நாளைக்கு யோசிக்கவா! இப்போ தூக்கம் வருது” என பாட்டியின் மடியில் படுத்துக் கொள்ள, அதைப் பார்த்து எல்லாரும் சிரித்து விட்டனர்..


“பாரு ஆத்தா! இவள யோசிக்க சொன்ன உடனே தூக்கம் வருதாம்.. என் தங்கச்சி புள்ள பின்ன எப்படி இருக்கும்..அவள மாதிரி தான் பெத்து விட்டுருக்கா..!”என அன்றைய காலங்களில் உமையாள் செய்யும் சேட்டைகளையும் நினைவு கூர்ந்து சிரிக்க, அங்கே சந்தோஷப் பேரலை உருவாயிற்று..


ஆனால் அதே நேரம் உமையாள் இங்கே மரண வலியில் துடித்துக் கொண்டிருந்தார்…


அன்புடன்,
மிர்ஷி ♥

கருத்துக்கள் இங்கே
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -03


அவள் விழுந்த வேகத்திற்கு வயிறு தரையில் அமுங்க, 'நிலாமாஆஆஆ' என வலியில் கத்தினார் உமையாள்.. விழுந்த வேகத்தின் அழுத்தம் பனி குடத்தை உடைக்க, அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது..


ஏதோ 'டம்' என விழுந்த சத்தம் கேட்டு எழுந்த வள்ளியம்மை உமையாளின் கத்தலில் என்னவோ எதோவென்று வந்தார்..”கால் வலி கை வலின்னு நானே முடியாம கெடப்பேன்.. என்னைய ஓட வைக்கிறாளே” என வயிதவர் வந்து பார்த்த போது, அங்கே ஒருங்களித்துப் கை கால்களை சுருக்கி படுத்துக்கொண்டு தாங்க முடியாத வலியில் கத்திக் கொண்டிருந்தாள் அவர் மருமகள்..


“எம்மாடி..என்ன ஆத்தா ஏன் இப்படி இருக்க..ஐயோ இது என்ன ரத்தமா இருக்கே”..என அவள் அருகில் அமர்ந்தவர் அவளை மிக சிரமப்பட்டு தன் மடியில் கிடத்திட..


“வ..லிக்..லிக்குது அத்த்த்த்த்…ததஆஆஆ அம்மா”…பல்லைக் கடித்துக் கொண்டு அவள் சொன்னதே அவள் எத்தனை எத்தனை வலியை அனுபவிக்கிறாள் என புரிந்தது..அவரும் கடந்து வந்த வலியல்லவா இது..”எப்படி மா விழுந்த.. இந்த ரா இருட்டுல நா யார போய் கூப்பிடுவேன்..உன் புருஷன வேற இன்னும் காணலயே..அவன் வந்து கேட்டா நா என்ன சொல்லுவேன்” என பதற்றத்தில் அவரும் அழ, “முடிய…லல அத்..த்..தா…அய்யோ அம்ம்..மமா” தலையை அங்கும் இங்கும் ஆட்டி அவர் கைகளில் அத்தனை அழுத்தத்தை கூட்டினாள்.. அவருக்கும் அதில் வலி எடுக்க தான் செய்தது..


“எப்பா யாராவது வாங்களேன்!..என் மருமவ உசிருக்கு போராடிட்டு இருக்கா.. யாராவது வந்து உதவுங்களேன்!”..என அங்கிருந்தே சத்தம் போட்டு அழைக்க, என்ன தான் அக்கம்பக்கத்தில் வீடும் ஆட்களும் இருந்தாலும் இவரின் அழுகுரல் முதலில் யாருக்கும் கேட்கவில்லை..


“ஏப்பா பொன்னுரங்கம், முத்துசாமி… கொஞ்சம் யாராவது வாங்கய்யா..என் மருமகள வந்து புடிங்க..பிரசவ வலி வந்துட்டு போல” என பெருங்குரல் எடுத்து கத்த அந்த சத்தம் தான் ஒருசிலருக்கு கேட்டு ஓடி வந்தனர்.. “என்ன ஆத்தா ? ஏன் கத்துன ? என்னாச்சு” என பெண்களும் ஆண்களுமாய் வந்து விசாரிக்க, அங்கே அப்படி ஒரு நிலையை யாரும் எதிர்பார்க்கவில்லை.. பார்த்தவர்களுக்கே நெஞ்சுக்கூடு பதறியது..


ஆம்!! உதிரப்போக்கு மட்டும் இல்லாமல் அந்த குளிரில் அவளுக்கு வலிப்பு வேறு வந்திருந்தது..முன்பு வலியினால் பல்லைக் கடித்தவள் இப்போது வெட்டு வர நாக்கை கடித்து துடிக்க அதிலும் இரத்தம் வடிந்தது.. கண் இரண்டிலும் கருவிழிகள் மேலே செல்ல, கால் கைகளை அடித்துக் கொண்டிருந்தவளின் நிலையை பார்த்தவர்கள் கண்களில் கண்ணீர் ஊற்றடுத்தது..


“என்னத்தா..என்ன இது..எப்படி ஆச்சு?” என எல்லாரும் பதற, “தெரிலயா..நா உள்ளுக்க படுத்திருந்தேன்..ஏதோ சத்தம் கேட்டு வெளிய வந்து பார்த்தா இப்படி விழுந்து கெடக்கா..இப்போ உங்கள கூப்பிடுற நேரத்துல இப்படி வலிப்பு வேற வந்துருக்கு…ரொம்ப பயமா இருக்கு முத்துசாமி..ஏதாவது பண்ணுங்கப்பா” என அழுதார்..


இதில் முதலில் சுதாரித்தது என்னவோ ஆண்கள் தான்..கதவில் இருந்து சாவியை உருவி அவள் கைகளின் திணித்தான் முத்துசாமி.. வள்ளியம்மை வீட்டில் இருந்து இரண்டு வீடு தள்ளி இவர்கள் வசிப்பது..அப்படி வலிப்பு வருபவர்களுக்கு முதலில் வேண்டியது சுவாசிக்க காற்று.. மற்றவர்கள் சிறிது ஒதுங்கி நிற்க, அவள் கையையும் காலையும் பிடித்துக் கொண்டார்கள்.. சிறிது நேரத்தில் அவள் அடங்க,


வந்த இருவரில் ஒருவன் இரண்டு கையையும் பிடித்துக் கொள்ள, முத்துசாமி கால்களை சேர்த்துப் பிடிக்க நடுவில் வந்து அவள் முதுகைத் தாங்கினாள் முத்துசாமியின் மனைவி…மூவரும் சேர்ந்து அங்கிருந்த கட்டிலில் படுக்க வைக்க, ஒட்டு மொத்த சக்தியும் போய் ஓய்ந்து மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தாள் பெண்ணவள்..


“எப்பா…யாராவது என் பையனுக்கு தகவல் சொல்லுங்கையா.. அவன இன்னும் காணல..எனக்கு ஒரே படப்படப்பா வருது!” என பெரியவர் அழுதுக் கொண்டே உட்கார…


“ஆத்தா! நா அண்ணாச்சிட்ட சொல்லிட்டு ஒரு ஆட்டோ புடிச்சிட்டு வாரேன்.. ஒன்னும் ஆகாது..நீங்க அதுவரைக்கும் புள்ளைய கொஞ்சம் பார்த்துக்கோங்க.. மயங்கிடாம” என தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாய் மிதித்து சுந்தரத்தை அழைக்க சென்றான் முத்துசாமி..


“குழந்தைக்கு இப்போ என்ன ஆச்சுன்னு தெரிலையே..ஒன்னும் ஆகாம பார்த்துக்கோ தெய்வமே.. உனக்கு கோடி புண்ணியமா போகும்.. தாயையும் புள்ளையையும் நீ தான் கப்பாத்தனும்” என உமையாள் அருகிலேயே அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தார் வள்ளியம்மை..இது எல்லாம் அவளுக்கு கேட்க தான் செய்தது..ஆனால் கண்களை தான் திறக்க முடியவில்லை..


அடுத்த பத்து நிமிடத்தில் ஆட்டோ வந்துவிட இன்னொரு பக்கத்தில் இருந்து ஓடி வந்தான் சுந்தரம்.. “உமையாளு!! எங்க அவ..என்னாச்சு அவளுக்கு” என வீட்டிற்குள் நுழைய அந்த இடத்தில் இரத்தம் இருக்க பதறிவிட்டார்.. ஓரத்தில் தன் தாய் அழுது கொண்டிருக்க, அவர் பக்கத்தில் படுக்க வைக்கப் பட்டிருந்தாள் உமையாள்… “அய்யோ! என்ன இது” என அவள் அருகே போக, “கொஞ்சம் தள்ளு சுந்தரம்..நேரம் இல்ல..ஆட்டோல புள்ளைய ஏத்தனும்” என முத்துசாமியும் மற்றவர்களும் அவளைத் தூக்கி கொண்டு ஓடினர்..கைக் கால் நடுங்க அப்படியே நின்றான் இவன்…


“ஏலேய் சுந்தரம்…அங்கேயே என்ன நின்னுக்கிட்டு இருக்க..வா வந்து பொண்டாட்டி பக்கத்துல உட்காரு.. நேரமாவுது” என முத்துசாமி குரல் குடுக்க அதன் பின் தான் சுந்தரம் என்னும் மனிதனுக்கு உயிர் வந்தது.. மீண்டும் அந்த இடத்தை பார்த்தவனுக்கு கண்கள் இரண்டுமே கலங்கியது.. பார்க்கும் அவனுக்கே இப்படி என்றால் வலியை அனுபவித்துக் கொண்டிருப்பவளுக்கு எப்படி இருக்கும்..?!


அந்த ஊரில் இதுவரை மருத்துவமனை என்ற ஒன்று கட்டப்படவில்லை…என்ன தேவை என்றாலும் இரண்டு ஊர் தள்ளி போய் தான் பார்க்க வேண்டும்.. குறைந்தது பதினைந்து நிமிடங்களாவது ஆகும்..


அவன் ஒடிசென்று அமர, ஆட்டோ கிளம்பும் நேரம் 'ஒருநிமிஷம்' என ஓடிவந்தார் வள்ளியம்மை..”என்ன ஆத்தா?” என முன்சீட்டில் டிரைவருடன் அமர்ந்திருந்த முத்துசாமி திரும்பி கேட்க, அவனிடம் பதில் சொல்லாமல் கையில் இருந்த விபூதியை எடுத்து 'நல்ல படியா திரும்பி வாத்தா!’ என உமையாளின் நெற்றியில் இட்டார்…அதுவரை கண்களைத் திறக்க போராடிக் கொண்டிருந்தவள், தன் பலத்தை மொத்தமும் திரட்டி ஒருமுறை அந்த வீட்டையே பார்க்க, வாசலில் நின்று கொண்டிருந்த வள்ளியம்மை முதற்கொண்டு பெண்கள் அனைவருக்கும் 'திக்' என்றிருந்தது.. “மறுபடியும் இந்த வீட்டுக்கு என்னால வரமுடியுமா ?” என்னும் ஏக்கப் பார்வையை அங்கிருந்த அனைவரும் உணர்ந்த நொடி, ஆட்டோ கிளம்பி வேகமெடுத்தது..


மனைவி அருகில் அமார்ந்திருந்தவன் அவள் தன் மடியில் படுக்க வைத்திருப்பதை கூட உணர முடியாமல் நடுங்கிக் கொண்டிருந்தான்.. மனதில் அத்தனை அத்தனை வேண்டுதல்கள்.. ”ரெண்டு பேருக்கும் ஒன்னும் ஆகிடகூடாது கடவுளே!!.. உனக்கு அலகு குத்தி காவடி எடுத்துட்டு வரேன்..தயவு செஞ்சி இவங்கள பத்திரமா எனக்கு திருப்பி கொடுத்துரு” என வேண்டிக் கொண்டே வர, கொஞ்ச நேரத்திற்கு முன்..


அன்று பார்த்து தோப்பில் தேங்காய் வெட்டவென ஆட்கள் வந்திருந்ததால் வேலைகள் அதிகம் இருக்க, அங்கே இருந்து கிளம்பவே நேரம் ஆனது..வந்த ஆட்களுக்கு காசு கொடுத்துவிட்டு வரும் வழியில் “இந்த இடத்த ஆளப் போறவன் இன்னும் கொஞ்ச நாள்ல வந்திடுவான்” என நினைத்து சிரித்துக் கொண்டு சுந்தரம் வர, அவரின் இடதுப் புறத்தில் இருந்து வேகமாய் தடையடிப்பது போல் பல்லி சத்தமிட்டது..அதில் சுந்தரத்தின் முகம் சுருங்கி தான் போனது..இது என்ன அபசகுணமா?? தனக்குள்ளேயே யோசித்துக் கொண்டு வரும் வேளையில் தான் முத்துசாமி வந்து அந்த விடயத்தை கூறினான்.. இருந்தும் இங்கே வந்து பார்க்கும் வரை இத்தகைய விபரீதத்தை அவர் எதிர்பார்க்கவில்லை..


இப்படி அவர் யோசித்துக் கொண்டிருக்க, மனைவியின் முனகல் சத்தம் காதில் விழ அவளைப் பார்த்தார்…


“ஆ…ஆ..ஆஆ..ஏங்…க நி..லா…ஆ…ஆ.. ம்மா..வ..பா…க்க…கணும்” அவள் அந்நேரத்திலும் மூத்தவளை பார்க்க ஆசைப்பட்ட்டாள்..தனக்கு பின் அவளை பார்க்க இந்த உலகத்தில் யாரும் இருக்கமாட்டார்கள் என்பதை முன்கூட்டியே உணர்ந்தாலோ..?


“நிலா உங்க வீட்டுல இருக்கா உமையாளு.. பாப்பா பொறந்ததும் நா போய் அவள கூட்டிட்டு வாரேன்..நீ கொஞ்சம் அமைதியா இரு மா..ஒன்னும் ஆகாது” என அவர் சமாதானப்படுத்த முயன்றார்…


“அவ...ள..நல்..லா.. ஆஆப்..பா..ர்ர்.. த்துக்.. கோங்க” என கணவனிடம் வலியில் மனதில் இருந்ததை சொல்லிட, “ஏன் மா இப்படிலா பேசுற? ஒன்னும் இல்ல.. இன்னும் கொஞ்ச நேரத்துல ஆஸ்பத்திரி போயிடலாம்..அங்க போனதும் நம்ம பையன் வந்துடுவான்..அப்புறம் நாம வீட்டுக்கு வந்துடலாம்” என அவளுக்கு சமாதானப் படுத்துவது போல் தனக்கே சொல்லிக் கொண்டார்.. ஆனால் உள்ளுக்குள் அவருக்கும் பயமாக தான் இருந்தது..


மருத்துவமனை வந்ததும் எல்லாரும் பரப்பரப்புடன் இயங்க, தன் மனைவியை கைகளில் தூக்கிச் சென்றான் சுந்தரம்.. அந்த நாட்களில் கிராமங்களில் வீல் சேர் வசதிகள் எதுவும் கிடையாதே..


சிறிது நேரத்தில் இரண்டு மருத்துவர்களும் துணையாய் மூன்று நர்சும் வர, அந்த இடமே போர்க்களத்தின் பிம்பமாய் காட்சியளித்தது..அங்கும் இங்கும் அழைந்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென ஒரு காகிதத்துடன் சுந்தரம் முன் நிற்க,”இது என்ன மா காகிதம்?” பயத்தில் அவர் குரல் உள்ளே சென்றிருந்தது..


“பயபடாதீங்க சார்..இதுல உங்க கையெழுத்து போட்டு கொடுங்க.. உங்க மனைவிக்கு ஆபரேஷன் பண்ணுறதுக்கு உங்க கையெழுத்து வேணும்.. பிரசவத்துல என்ன வேணுமானாலும் நடக்கலாம்…அதுக்கு இந்த ஆஸ்பத்திரி பொறுப்பாகாது… அதுக்கு நீங்களும் ஒத்துப் போய் இந்த கையெழுத்து போடனும்.. ஏற்கனவே உங்க மனைவி ரொம்ப சீரியசா தான் இருக்காங்க..நீங்க இன்னும் லேட் ஆக்கிடாதீங்க..சீக்கிரம் போட்டுக் கொடுங்க” என அவசரப் படுத்த.. முன்கூட்டியே தங்கள் தவறை மறைக்க அவர்கள் செய்த சதியோ??..


ஏற்கனவே பயந்துப் போய் இருந்தவர் விறுவிறுவென கையெழுத்து போட்டு கொடுத்தார்..அடுத்த சில மணி நேரத்தில் வெளியே வந்த மருத்துவர், “அந்த பொண்ணோட சொந்தம் யாரு?” எனக் கேட்க,


“இவரு தான் டாக்டரு அந்த புள்ளையோட புருஷன் சுந்தரம்” என முத்துசாமி சொன்னான்..


“சாரிங்க..ரொம்ப முயற்சி செஞ்சோம்.. ரெண்டு பேரையும் எங்களால காப்பாத்த முடியல.ரெத்தப் போக்கு அதிகமா இருந்தது..பேபி வேற ஏற்கனவே உள்ள இருந்து மூச்சு விடமுடியாமல இறந்து போயிருக்கு.. எங்களால முடிஞ்ச வரைக்கும் டிரை பண்ணினோம்.. பட் சாரிங்க என கடகடவென சொன்னவர் திரும்பி.. நர்ஸ்!! ரெண்டு பாடியையும் இவங்கக்கிட்ட பணம் வாங்கிட்டு ஹேன்ட் ஓவர் பண்ணிடுங்க” என அவ்வளவுதான் என்பது போல விறுவிறுவென அந்த இடத்தில் இருந்து நீங்கினர்..


எல்லாரும் அதை கேட்டு வாய் மூடி அழுதனர்..குழந்தைக்கு எதாவது ஆகி இருக்கும் என்று நினைத்து தான் எல்லாரும் பயந்தது..ஆனால்..?


காலை புத்தம் புது மலராய் தன்னை வழியனுப்பி வைத்தவள் இரவு பார்க்கையில் இந்த உலக வாழ்கையையே முடித்துக் கொண்டு சென்றுவிட்டாளே.. சுந்தரத்தால் இன்னும் அவர் காதில் கேட்டதை நம்ப முடியவில்லை..


இங்கு தான் இவர்கள் யோசிக்க தவறினர்..பிரசவ நேரத்தில் ரெத்த போக்கு என்பது எல்லாருக்கும் பொதுவான ஒன்று தானே! இதனால் மரணம் நிகழுமா?..குழந்தை வேண்டுமானால் இவள் விழுந்த வேகத்தில் பாதிக்கப் பட்டிருக்கலாம்.. ஆனால் உமையாளுக்கு இருந்தது வெறும் மன அழுத்தத்தால் கூடிய பயம்..அது அவளை மரணம் வரை இழுத்துச் சென்றதா..?ஆம்! நடந்த பல அனர்தங்களில் அதை யாருமே அங்கு யோசிக்கவில்லை தான்..குழந்தையை வெளியே எடுக்க செய்த நேரத்தில் தவறான நரம்பு வெட்டப்பட்டு ரெத்த போக்கு ஏற்ப்பட்டது என இவர்களுக்கு யார் புரியவைக்க?..இந்த மரணம் முழுக்க முழுக்க மருத்துவர்களின் கவனக் குறைவு என்பதை யார் சொல்வார்கள்?.. ஒரு அப்பாவி பெண்ணை கொன்ற வருத்தம் எதுவும் இன்றி அவர்கள் அடுத்த நோயாளியைப் பார்க்க சென்று விட்டனர்..இதனால் பாதிக்கப் பட்டவர்களுக்கு யார் பதில் சொல்வது..?


அடுத்த சில மணி நேரங்களில் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்திட, வந்த ஆட்டோவில் மீண்டும் வீடு திரும்பினர் கனத்த இதயத்துடன்..


அவர்கள் வீட்டிற்க்கு செல்லும் போதே ஒருவாறு காட்டுத் தீயாய் இது பரவி இருக்க, சுந்தரத்தின் வீட்டின் முன் ஆட்கள் பலர் கூடியிருந்தனர்..


வீட்டிற்கு முன் அவள் உடல் வைக்கப் பட்டிருக்க, நிலவொளி அதன் பக்கத்தில் அமர்த்தி வைக்கப்பட்டிருந்தால்..ஐந்து வயது பெண்ணுக்கு என்ன தெரியும்??.. அம்மாவின் பக்கத்தில் இருந்தவளை பாவமாய் பார்த்துவைத்ததை உணரும் வயதா அது?..அவளுக்கு இருந்ததெல்லாம் ஊர் திருவிழாவுக்கு வரும் விருந்தினர்கள் இப்போது வீட்டிற்க்கு வந்திருக்கும் சந்தோஷமே.. வெண்மதியோ முற்றத்தில் இருந்த ஒரு நீள திண்டில் தூங்கிக் கொண்டிருந்தாள்..


தங்கையின் மரணத்தை பார்த்து ஜீரணிக்க முடியாமல் மாணிக்கமும் அவன் குடும்பமும் நின்றிருந்தது.. எப்படி முடியும்? சாயங்காலம் தானே வீட்டுக்கு வந்து பிள்ளைகளை அழைத்துச் சென்றான்..அப்பொழுது சிரித்த முகத்துடன் நின்றாளே உமையாள்.. இப்போது எப்படி வைக்கப் பட்டிருக்கிறார்கள்??.. பிள்ளைகளை அனுப்பி வைக்கும் போது எத்தனை 'பத்திரம்' சொல்லி இருப்பாள்.. அதில் ஒன்றை அவளும் பின் பற்றி இருக்கலாமே.. இப்படியா கீழே விழுந்து மரணத்தை தழுவுவது?..


இதையே நினைத்து நினைத்து அவன் அழ, பெற்றவள் சும்மா இருப்பாளா?.. தன் மகள் அந்த வீட்டில் பட்ட கஷ்டங்களை சிலர் கூறி கேட்டிருந்ததை இப்போது வள்ளியம்மையிடம் நின்று சண்டை போட்டு கேட்க ஆரம்பித்தார்..” வாழ வந்த பிள்ளைய எல்லாரும் சேர்ந்து கொன்னுட்டீங்களே!..எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைப்பாளே..அவள புள்ளப் பெத்துக் கொடுக்க முடியலனு பாடாப் படுத்தி இப்போ புள்ளையோட போய் சேர்ந்துட்டாளே..இந்த பாவத்துக்கு எல்லாம் நீங்க தொலச்சுக் கொடுப்பீங்க” என தன் வேதனையை சொல்லி சாபமிட, அங்கிருந்த யாருமே அதை மறுக்கவில்லை.. மற்றவர்கள் மனதில் இருந்ததை பெற்றவள் மனம் தாளாமல் கேட்டிருக்கிறார்..இதில் யார் தலையிடுவார்கள்?..


அதில் எதையுமே வள்ளியம்மை மறுக்கவில்லை.. தான் சண்டைப் போட்டாலும் மாமியாரை இதுவரை ஒருவார்த்தை சொன்னவளும் கிடையாது விட்டுக் கொடுத்தவளும் கிடையாதே உமையாள்.. 'அத்த அத்த' என எப்படி விரட்ட நினைத்த போதும் இவரையே சுற்றி சுற்றி வருவாளே!..யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு சொக்கத் தங்கம்..இனி நா எங்க போவேன் ராசாத்தி.. வந்துருத்தா எங்ககிட்ட வந்துரு..நீ இல்லாம உன் புருஷனையும் புள்ளைங்களையும் யாரு பார்த்துப்பா.. உன்ன திட்டவே மாட்டேன் வந்துரு மா” என சொல்லி சொல்லி அவரும் தாங்கமுடியாமல் அழ, அங்கிருந்த எல்லார் கண்களிலும் அதைப் பார்த்து கண்ணீர் வடிந்தது..


“அய்யோ! யாரு கண்ணு பட்டுச்சோ தெரிலையே! நல்லா தான இருந்தா.. கடவுளே உனக்கு கண்ணு இல்லையா.. இந்த ரெண்டு புள்ளைகளுக்கும் இப்படி அம்மா இல்லாம பண்ணிட்டியே..இதுங்க முகத்தப் பார்த்தா உனக்கு இறக்கம் இல்லாம போச்சு?” என ஒப்பாரி வைத்தனர் உமையாளின் குடும்பத்தினரும் ஊர் மக்களும்..


அவர் முடிவு செய்து தானே இதெல்லாம் நடக்கிறது.. இறைவனால் பிறப்புக்கு உட்படுத்தப்படுபவன் ஒருநாள் இறப்புக்கும் ஆளாவான் என்பதை மறந்துதானே நாம் பணம், பதவி, சொத்து என அதன் பின்னே ஓடுகிறோம்..! அனுப்பும் போது நம் தாய் தந்தையின் அடையாளத்துடன் வாழ அனுப்பி வைப்பவன் எடுக்கும் போது நம் அடையாளத்தை உலகில் விட்டு இந்த உடலை மட்டுமே எடுத்துக் கொள்வான்.. அந்த அடையாளம் என்பது நாம் செய்த நல்லதும் அடங்கும் கெட்டதும் அடங்கும்..! இரண்டையும் சேர்த்து சொல்வதானால், 'நம்மால் ஒருவர் துன்புறாமல் பார்த்துக் கொண்டாலே போதும்..!' ஆனால் நாமும் வாழ்கையில் என்றாவது ஒருநாள் நம்மை சுற்றி இருப்பவர்களை வள்ளியம்மை உமையாளை வார்த்தைகளால் காயப் படுத்தியது போல செய்திருப்போம் தானே..! அதிலும் தாயை..? பாவத்திலும் பெரிய பாவம் நம்மவர்களை நாமே அறியாமல் காயப் படுத்துவதே.. இதனால் காயப்படுவது அவர்கள் மட்டும் தானா? நாமும் அல்லவா..! இருக்கும் போதே நல்லதை செய்ய முயலாமல் போன பிறகு சொல்லி மருகுவதால் யாருக்கு என்ன பயன்??.. நல்லதை செய்ய முடியாவி்டினும் நம்மவர்களுக்கு தீமை செய்திடாமல் இருப்போமே..!


இப்படியே அடுத்த நாள் காலை விடிய, உமையாள் உடல் இறுதிச் சடங்குக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவர்களின் சொந்த இடத்தில் புதைக்கப் பட்டது.. முடிந்தது!! உமையாள் என்னும் அன்பான நிலாபெண்ணின் அத்தியாயம்..


நாட்கள் விரைந்து ஓட, அடுத்த ஐந்து மாதங்களில் ஒருநாள் புதிதாய் ஒரு பொண்ணுடன் மாலையும் கழுத்துமாய் வந்து நின்றார் சுந்தரம்..


ஆறு இல்லா ஊரில் கிணறு இருக்கு..
கோவில் இல்லா ஊரில் தாய் இருக்கா..
தாய் இல்லா ஊரில் நிழல் இருக்கா..
அன்பில் நேசம் இருக்கா..

சொந்தம் நூறு சொந்தம் இருக்குது..
பெத்த தாயி போல ஒன்னு நிலைக்குதா..
சாமி நூறு சாமி இருக்குது..

அட தாயி ரெண்டு தாய் இருக்குதா..


(இருக்கமுடியுமா) ?!.................😔😔


அன்புடன்,
மிர்ஷி♥

கருத்துக்கள் இங்கே
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -04

பெண் குழந்தைகள் தினமான இன்று இதை வாசிக்கும் எல்லா பெண் குழந்தைகளுக்கும் (நம் பெற்றோருக்கு இன்னும் நாம் குழந்தை தானே ) நெஞ்சார்ந்த வணக்கங்கள்..நம்மால் முடிந்த வரை நல்ல எண்ணங்களை சுற்றி விதைப்போம்..அது விருட்சமாய் வளர்ந்து நாளை மற்றவர்களுக்கு பயன் கொடுக்கட்டும்..☺


உமையாள் இந்த உலகை விட்டு சென்று இரண்டு வாரங்கள் கழிந்திருந்த நிலையில், அன்று காலை நிலவொளியையும் வெண்மதியையும் அழைத்துக் கொண்டு தங்கை வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார் மாணிக்கம்..


வயதான மாமியார்..மனைவி இறந்த சோகத்தில் வீட்டை விட்டே வெளியே வராத சுந்தரம்..இவர்கள் இருவரில் யாரிடம் குழந்தைகளை விட்டு செல்ல? என அங்கிருந்த இரண்டு நாட்களில் எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் சுந்தரமே மாணிக்கத்தை கூப்பிட்டு, “ நிலவொளிய கூட சமாளிச்சிடலாம்.. ஆனா வெண்மதி அம்மா அம்மான்னு அழுறத பார்க்கும் போதே முடியல மச்சான்.எனக்கும் உமையாள் இல்லாம உலகமே வெறுப்பா தெரியுது..பேசாம செத்துடலாம்னு தோணுது..!” என மாணிக்கத்தை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டார்..


இதற்கு என்ன ஆறுதல் சொல்லி தேற்ற முடியும் ?..மகளாக, தங்கையாக, மருமகளாக, அத்தையாக, நாத்தனாராக, அம்மாவாக என எல்லாருக்கும் ஏதோ ஒரு முறையில் அவர்கள் வாழ்கையில் சம்மந்தப்பட்டு இருந்தவள் உமையாள்..ஆனால் சுந்தரத்திற்கு அதற்கும் மேலாக அவள் தானே வாழ்க்கை..!


ஒரு அண்ணனாக தங்கையை இழந்து சொல்லொண்ணா துயரில் இருக்கிறான் தான்.. அந்த துயரை கொட்டித் தீர்க்க அவனுக்காக வீட்டில் காத்திருக்கிறாள் அவன் மனைவி.. ஆனால் இவனை துன்ப கடலில் மூழ்க வைத்ததே இவன் மனைவியாய் இருக்க எங்கனம் போய் ஆறுதல் தேடுவான்..?


சுந்தரத்திற்க்கு முன் தன் கவலை சிறியது தான் என மனதில் எண்ணம் உதயமாக , “இப்படி எல்லாம் நீயே யோசிச்சா அப்புறம் பிள்ளைங்களுக்குனு யாரு இருக்கா மச்சான்..? அவ வாழ்க்கை இப்படி தான் பாதில முடியனும்னு இருந்துருக்கு.. இதுல நீயோ நானோ செய்றதுக்கு என்ன இருக்கு சொல்லு..?விதி நமக்கு என்ன வச்சிட்டு காத்து இருக்கும்னு யாராலேயும் சொல்ல முடியாது சுந்தரம்..நீ அம்மாவ பார்த்துக்கோ.. கொஞ்ச நாளைக்கு புள்ளைங்கள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.. அங்க என் பசங்க இருக்குறதால ஓரளவுக்கு சமாளிக்க முடியும்னு நினைக்கிறேன்..நீ என்ன சொல்ற?” என அவனைப் பார்க்க,


அவனுக்கும் இது தான் சரியென பட்டது..அதனால் வெறும் 'ம்ம்ம்’ என வார்த்தைகள் இல்லா கண் அசைவில் சரி என ஒப்புக் கொண்டார்..


அவருக்கும் வேறு வழியும் இல்லை..அவருக்கோ அவர் மனைவிக்கோ யாரின் மனதையும் புண்படுத்தி பேச தெரியாது..ஆனால் எல்லாரும் அப்படி இருக்க மாட்டார்களே..!


சொந்தங்கள் என்பது நம்மவர்கள்.. நமக்கு ஒன்று என்னும் போது அதில் பங்கெடுத்துக்க முதல் உரிமை உள்ளவர்கள்..ஆனால் எத்தனை சொந்தங்கள் அப்படி நமக்கு இருக்கிறார்கள்??.. 'உன் சொந்தங்கள் யார் என்பதை உன் கஷ்டத்தில் அறிவாய்' என சொன்னது அவருக்கு உண்மையாகி போனது..!


சொந்தங்கள் என்ற பெயரில் வந்த அரக்கர்கள் துக்கம் விசாரிப்பது போல அந்த பிஞ்சு மனங்களிலும் பதியும் படி எதையாவது பேசிவிட்டு சென்றார்கள். அதை கேட்டு மூத்தவள் இவரிடம் “அம்மா இனி திரும்ப வரமாட்டாங்களாமே பா!..புது அம்மா வந்து தான் எங்களை நல்லா பார்த்துக்குமாம்.. உங்களை புது அம்மாவ கூட்டிட்டு வர சொல்லனும்னு அந்த அத்தை சொல்லிச்சு..புது அம்மா நம்ம அம்மா மாதிரி அழகா இருக்குமா.. அப்போ நம்ம அம்மா எப்போ வரும்?” என கேட்டது மட்டுமில்லாமல்.. அப்படினா என்ன? இப்படினா என்ன?' என்று அவள் கேள்வி கேட்டு குடைய அதில் திணறி போனார்..எப்படி பட்ட வார்த்தைகளை பிள்ளைகளின் முன்பு பேசியிருக்கிறார்கள் என ஆத்திரம் தான் வந்தது..ஆனால் வருபவர்களிடமும் கோபத்தில் எதையும் சொல்ல முடியாது.. எல்லாக் குடும்பங்களிலும் வீணே பிரச்சினை பண்ணவென இருக்கும் நபர்களிடம் எதை சொல்லி தான் தடுப்பது?? சொன்னாலும் கேட்கும் ரகம் அல்லவே அவர்கள்..! இதற்கு தான் மாணிக்கத்திடம் வந்து பேசினான்.. அவன் சொன்ன முடிவு ஏற்புடையதாக இருக்க பிள்ளைகளை அங்கே அனுப்பி வைத்திருந்தார்..


இதோ இப்போது இறந்தவர்களுக்கு பதினாறாம் நாளின் போது நடக்கும் காரியத்திற்காக பிள்ளைகளை கூட்டி வருகிறார் மாணிக்கம்..மொட்டை போட்ட தலையில் சிறிதாய் முடிகள் முளைத்திருக்க, மீண்டும் தங்கள் வீட்டுக்கு வரும் மகிழ்ச்சியில் மாமனிடம் கதைப் பேசிக் கொண்டு வந்தார்கள் சிறுவர்கள்..


எப்போதும் போல பாவமாய் பார்த்து வைத்த உறவுகளை கண்டுகொள்ளாமல் உள்ளே அழைத்துச் சென்றான் குழந்தைகளை..


பிள்ளைகள் வருகைக்காக காத்திருந்த சுந்தரம் அவன் வீட்டினரும் அவர்கள் வந்ததும் சமைத்து வைத்த பதார்த்தங்களை எடுத்துக் கொண்டு உமையாளின் சமாதிக்கு சென்று படைத்து விட்டு வந்தனர்..அதன் பின் அன்றைய பகல் கழிய மீண்டும் மாணிக்கம் பிள்ளைகளை அழைத்து செல்ல வந்தான் ..அதை பார்த்த வள்ளியம்மை,


“ஏப்பா மாணிக்கோ! பிள்ளைங்கள இங்கனவே விட்டுட்டு போயா..அதுக இல்லாம வீடே வெறிச்சோடி போன மாதிரி இருக்கு..அதுங்களோட சிரிப்பு சத்ததுலயாவது நாங்களும் நடந்தத மறக்க முயற்சி பண்ணுறோம்” என தோய்ந்த முகத்துடன் வருத்தமாக சொல்ல,


“உங்கள நம்பி தான் என் தங்கச்சிய விட்டுட்டு போனேன்..எல்லாரும் சேர்ந்து கொண்ணுடீங்க.. இப்போ இந்த புள்ளைங்கள எந்த நம்பிக்கைல விட சொல்றீங்க?” என வாய் வரை வந்த கேள்வியை அடக்கியவன் அமைதியாய் சுந்தரத்தை நோக்கினார் 'எதுவா இருந்தாலும் நீயே சொல்லு' என்பது போல்..


அவனும் அதை தான் மாணிக்கத்திடம் சொல்ல நினைத்திருந்தான்..”இனிமே புள்ளைங்க இங்க இருக்கட்டும் மச்சான்..நாங்க பார்த்துக்குவோம்” என சொல்ல, ஒரு நிமிடம் என்ன சொல்லுவது என தயங்கியவன்.. “சரி.. நல்லா பார்த்துக்கோ..உன்ன நம்பி தான் விட்டுட்டு போறேன்” என வள்ளியம்மையை முறைத்துக் கொண்டு சொல்லி சென்றான்..அது அங்கிருந்த இருவருக்குமே புரிந்தது..


-----------------------------


நாட்கள் அசுர வேகமாய் ஓட நான்கு மாதங்கள் மின்னல் வேகத்தில் விரைந்தது..இந்த நான்கு மாதங்கள் அவர்களுக்கு எப்படி சென்றதென்றால் மிக கொடுமையான நாட்கள் அவை..


அவள் இழப்பை ஒவ்வொரு நொடியும் உணர்ந்தார்கள் தாயும் மகனும்.. வள்ளியம்மை தான் இப்போது சமைத்து வைப்பார்..தாய் கையால் இதற்கு முன் சாப்பிட்டு இருந்தாலும் மனைவியின் கைப் பக்குவதிர்க்கு அது கொஞ்சமும் ஈடாகவில்லை.. இதுவே அவரை பெரும் ஏக்கத்தில் தள்ளிவிட்டது..அவருக்கே கஷ்டமாக இருந்தது என்றால் பிள்ளைகளுக்கு ?!..


அவர்களுக்கு உமையாள் என்ன கொடுப்பாள்? .. என்ன சாப்பிடுவார்கள்? எதுவும் தெரியாத வள்ளியம்மை காலையிலேயே மொத்த பொழுதுக்கும் சோறு வடித்து சமைத்து விடுவார் அவருக்கு வசதியாய்…அதனால் பிள்ளைகள் காலை மட்டும் கஷ்டப்பட்டு சாப்பிட்டாலும் அடுத்த இரண்டு வேளை பட்டினியாய் இருக்க முதலில் அதட்டி உருட்டி கொஞ்சம் சாப்பிட வைத்தவர்.. அதன் பின் 'பசிச்சா தானா வந்து சாப்பிடும்' என அவர்கள் போக்கில் விட்டு முதல் தவறிழைத்தார்…


அதற்கு அழுதாலும் திட்டினாரே தவிர வேறு எதுவும் செய்து பிள்ளைகளின் வயிற்றை நிறைக்காது போனார்.. விளைவு ஒருநாள் சாயந்திரம் அக்காளுடன் பக்கத்துவீட்டு பிள்ளைகளோடு விளையாட போயிருந்த வெண்மதி மயங்கி சரிந்தாள்..


நிலவொளி அவளை விட சற்றே பெரியவர்களுடன் சேர்ந்து குளத்தில் மீன் பிடிக்க சென்றதால் இது தெரியாமல் போனது..


வெண்மதி கூட விளையாடிய குழந்தைகள் என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து அழ, அதை கேட்ட பெரியவர்களும் ஓடி வந்து பார்க்க திகைத்தனர்..


--------------------


முற்றத்தில் மயங்கிய வெண்மதியை கிடத்தி “பாட்டி.. பாட்டி..எங்க இருக்கீங்க?” என குழந்தையை தூக்கி கொண்டு வந்த ஒருவன் கத்தி அழைத்தான்..அவர் தான் வேலைகள் செய்த (?) அசதியில் நல்ல உறக்கத்தில் இருந்தாரே..எப்படி கேட்கும்..?


“என்ன சத்தம்..யாரு பா அது ரொம்ப நேரமா கூப்பிடுறது?” என அப்போது தான் வேலை முடித்து அழுப்பில் குளித்து வந்த சுந்தரம் வெளியே எட்டிப் பார்த்தார்..பார்த்தவர் தன் மகள் இருந்த நிலையில் பதறி ஓடிவர, அவரின் போதாத காலம்..அந்த நேரம் பார்த்து பிள்ளைகளைப் பார்க்க வந்த மாணிக்கமும் அவன் மனைவியும் இதை பார்த்து அலரிவிட்டனர்..


“என்ன இது…ஏன் மதி புள்ள இப்படி கெடக்குறா..என்ன ஆச்சு?”என மூவரும் ஒரே நேரத்தில் கேட்க..


'எங்களுக்கும் தெரியல அண்ணே! புள்ளைங்க ஒன்னுகொன்னு விளையாடிட்டு தான் இருந்துக.. திடீர்னு பாத்தா இந்த பாப்பா மயங்கி விழுந்திருக்கும் போல..நாங்க போனப்போ மயங்கி கிடந்து..தண்ணி தெளிச்சு பார்த்துட்டோம்..ஆனா பாப்பா எந்திரிக்கல..பயந்து போய் இங்க உடனே தூக்கி வந்துட்டேண்ணே..எதுக்கும் ஆஸ்பித்திரி கூட்டிட்டு போயி பாருங்கண்ணே” என சொல்லிவிட்டு அப்படியே நின்றான்..


அவன் சொல்லும் போதே மாணிக்கம் அவள் கன்னத்தை தட்ட எந்த முன்னேற்றமும் இல்லை..


“தூக்கு சுந்தரம்..சீக்கிரம் ஆஸ்ப்பித்திரி போனும்” என வண்டியை கிளப்ப அவனும் பிள்ளையை வைத்துக் கொண்டு அமர.. முழு வேகத்தில் வண்டி சென்றது உமையாளைக் கொண்டு போன அதே மருத்துவமனைக்கு..


அங்கே குழந்தையை பரிசோதித்த மருத்துவர்..


“அந்த பொண்ணுக்கு அப்பா நீங்க தானே..என்ன சார் சாப்பாடு கொடுக்காம குழந்தைய எத்தனை நாட்கள் பட்டினி போட்டீங்க?.. அந்த குழந்தைக்கு ஒன்றரை வயசுனு சொல்லிருகீங்க..கொஞ்ச நாளாவே சரியா சாப்பிடல போல..பசி மயக்கத்தில மயங்கி விழுந்துருக்கு.. இப்படி தான் குழந்தைகள பார்த்துக்குவீங்களா?.. இப்போ குளுகோஸ் போட்டிருக்கேன்.. குழந்தையோட அம்மாவ கூப்பிடுங்க நா பேசணும்..” என கோவத்தில் அறைக்கு கூப்பிட்டு கத்திக் கொண்டிருந்தார்.. (எங்க கூப்பிடுறது! அவ அம்மாவ கொண்ணுக்கிட்டு இப்போ கூப்பிட சொன்னா எங்க இருந்து வருவா ?.. எல்லாத்துக்கும் காரணம் நீங்க தானே டாக்டர்😡)


இது அவருக்கு பேரதிர்ச்சி .. காலையில் சீக்கிரமே வயலுக்கு சென்று விடுவார்.. மதியம் பெரும்பாலும் வீட்டிற்க்கு வருவது கிடையாது..அதனால் பிள்ளைகள் தாயின் கவனிப்பில் பத்திரமாய் இருப்பதாக நினைத்தார்.. இரவு வேலை மட்டும் உமையாள் இருந்த போது எல்லாரும் சேர்ந்து தான் சாப்பிட்டார்கள்..ஆனால் இப்போதெல்லாம் அதுவும் கிடையாதே.. மனைவியை இழந்த துக்கத்தில் தூக்கம் தூர போக மது எடுக்க ஆரம்பித்திருந்தார் இரவு வேளைகளில்..அதில் பிள்ளைகளை கவனிக்க தவறிவிட்ட தன் முட்டாள் தனத்தை நினைத்து இப்போது நொந்து போனார்..காலம் கடந்த அக்கறையோ ?..


மனைவியை பற்றி டாக்டர் கேட்டதற்கு என்ன சொல்வதென முழித்தவர், “அவங்க இப்போ உயிரோட இல்ல டாக்டர்” என தளர்ந்து போனவராய் சொல்ல..


“அதுனால குழந்தைகள கண்டுக்காம விட்டுடிவீங்களா? என்ன சார் இது” என இப்போது இன்னும் சத்தமாய் கத்த அவர் அவமானத்துடன் தலைகுனிந்து நின்றார் என்றால் வெளியே மாணிக்கமோ ஆத்திரத்தில் நின்றான்.. அவர்கள் பேசியது எல்லாமே அவனுக்கு தெளிவாக கேட்டது.."பச்ச பிள்ளைய கவனிக்காம வேற என்ன வேலை இவங்களுக்கு" என நெஞ்சம் கொதித்தது..


ஒருவழியாய் மருத்துவரிடம் மன்னிப்பு கேட்டு வெளியே வந்தவன் அவர் திட்டியதிலேயே உழன்று கொண்டிருக்க, மாணிக்கத்தின் இறுக்கத்தை உணராது போனான்..


அதன் பின் நேரம் ஆமை வேகத்தில் செல்ல..வெண்மதி ஓரளவுக்கு கண்கள் திறந்து எல்லோர் வயற்றிலும் பாலை வார்த்தாள்.. டிரிப்ஸ் ஏற்றிய கைகளை மகள் அசைத்திடாமல் இருக்க அவள் கைகளை பிடித்துக் கொண்டவர் பைக்கின் பின் அமர், வீடு வரும் வரை யாருமே பேசிக்கவில்லை..


வீட்டிற்குள் குழந்தையுடன் சென்றவன் நேரே தன் தாயை கடிந்துக் கொள்ள.. இங்கே நிலவொளியிடம் தன் விசாரணையை ஆரம்பித்தான் மாணிக்கம்..


“இந்த மாமா கேட்கிறதுக்கு சரியான பதில் சொல்லணும் நிலா மா..என்ன?” மனைவியுடன் இருந்தவளிடம் மெதுவாக ஆரம்பித்தான்..


“ம்ம்ம்” என்றாள் சோகமாய்..


இவர்கள் மருத்துவமனைக்கு சென்றதுமே மாணிக்கத்தின் மனைவி போய் நிலவொளியை அழைத்து வந்து தங்கைக்கு நடந்த விவரத்தை சொல்ல..எதுவுமே புரியவில்லை என்றாலும் “ ஆஸ்பத்திரி என்ற வார்த்தை அவளை பயமுறுத்தியது.. ஆம்! அங்கே போயிட்டு வந்த பிறகு தானே அம்மாவ காணும்..அதுபோல மதி பாப்பா காணாம போயிடுமோ” என்று அந்த பிஞ்சு மூளை பயமுறுத்தியது..


“அப்பத்தா உங்களை நல்லா பார்த்துக்குறாங்களா நிலா மா?” என்று அவர் கேட்க..


“ஆமா மாமா..அப்பத்தா கிட்ட தான் நாங்க இப்போ இருக்கோம்..நம்ம மதி பாப்பா கூட அதுகிட்ட தான் தூங்கும்” என்றாள் அப்பாவித்தனத்துடன்.


“அப்படி கேட்கல தங்கம்..அப்பத்தா உங்களுக்கு சாப்பாடு செஞ்சு கொடுக்குமா இல்லை பட்டினி போடுமா ?” என்க அதை அதிர்ச்சியாய் பார்த்தாள் அவர் மனைவி.. 'அப்படியாங்க' என்ற அவள் எதையோ புரிந்துக்கொண்டு தலையசைத்து கேட்க..'ஆம்' என்றார் கோவத்தில் கண்களை மூடி.. “இந்த சின்ன பிள்ளைங்கள போயா பட்டினி போடுறது..அப்படி என்னங்க இந்த புள்ளைங்க தப்பு பண்ணிட்டு..ச்சீ” என அவர் புலம்ப..


“இல்ல அத்த..அப்பத்தா எங்களுக்கு சோறுலாம் பொங்கி கொடுத்துடும்.. ஆனா மதிக்கும் எனக்கும் தான் அது புடிக்கல..அம்மா செஞ்ச மாதிரி இல்லாதனால நாங்க சாப்பிடமாட்டோம்..அப்பத்தாவ திட்டாதீங்க” என அவள் சொன்னதை கேட்டு இருவருமே பாவமாய் பார்த்தார்கள் ..


குழந்தைகள் எப்போதும் பொய் சொல்லாது.. அவர்களுக்கு மிகைப் படுத்தி பேசவும் வராது..பார்த்தை நடந்ததை மட்டுமே சொல்லுவார்கள்.. அதை தான் ஐந்து வயது நிலவொளியும் செய்தாள்..தங்கைக்கு நேர்ந்த கொடுமையை அவள் உணரவில்லை.. ஏன்! இவள் கூட மயங்கி இருக்க வாய்ப்புண்டு..ஆனால் பசி எடுக்கும் போது தண்ணீர் குடித்து தன்னையும் அறியாமல் பசி தீர்த்துக் கொண்டாள்.. அந்த ஒன்றரை வயது குழந்தைக்கு அதை செய்ய தெரியவில்லை.. இவ்வளவு தான் இதில் வித்தியாசம்..நடக்க இருந்த விபரீதம் அறியாமல் பேசுகிறாளே என்றே வருந்தியது அந்த இருவர் உள்ளமும்..இதற்கு ஒரு முடிவுடன்,


நேராக மச்சினனை அழைத்து “ சுத்தி வளைச்சு பேசல சுந்தரம்..பிள்ளைங்க கொஞ்சம் வளர்ந்து வரவரைக்கும் என் வீட்டுல இருக்கட்டும்னு யோசிக்கிறேன்.. நீ என்ன சொல்ற?” என்றார் அந்த பாசமுள்ள மாமன்..


“அது..அதுவந்து மச்சான்..” என்ன சொல்லி தடுக்க என அவருக்கு புரியவில்லை.. தவறு இங்கல்லவா இருக்கிறது..


“எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு..நா யாரையும் தவறு சொல்லல..பிள்ளைங்க அவங்க அம்மா இல்லாம சரியா சாப்பிடல போல.. அத்தையும் முடிஞ்சமட்டும் எல்லாம் செஞ்சு போட்ருகாங்க.. அவங்களயும் குத்தம் சொல்ல முடியாது .. வயசானவங்க.. எழுந்து அங்க இங்க நடமாடுறதே பெருசு.. இதுல குழந்தைகள பார்த்துக்கலனு நா தப்பு சொல்லமாட்டேன்..ஆனா இதுவே என் வீட்ல என் பொஞ்சாதி இருக்கா..அம்மா இருக்காங்க.. அதுனால தான் கேட்கிறேன்” என சுயவிளக்கம் வேறு கொடுத்தான்..


இதற்கு மேலும் மறுத்தால் சரி வராது.. கொஞ்ச நாள் போகட்டும் என அனுப்பி வைத்தார்..ஆனால் கண்டிப்பாக முழு மனதுடன் இல்லை..


வள்ளியம்மைக்கு இது தெரிந்த போது இன்னும் கொத்தித்து போனவராய் ஒரு முடிவெடுத்தார்..ஏற்கனவே மாணிக்கத்தின் குத்தல் பேச்சு அவருக்கு பிடிக்காது..அதனால் மெல்ல மகனை உசுப்பேத்தி விட ஆரம்பித்தார்..


“இப்படியே இருந்தா எப்படி யா? நம்ம பேத்தின்க இங்க வளருறது தான நியாயம்!..நல்ல நாள்லயே என் பேத்திங்கள அவன் புள்ளைங்க பார்க்குற பார்வையே சரி கிடையாது.. எனக்கு என்னமோ இது சாக்காக வச்சி அவங்க சொல்லுறத கேட்டு வளருற மாதிரி நம்ம புள்ளைங்கள மாத்தி விட்டுடுவானோனு பயமா இருக்கு சுந்தரம்..” என மூக்கை சீந்தி அழுவது போல நடித்தவர்..இதுக்கெல்லாம் ஒரே தீர்வு “ நீ மறுமணம் பண்ணிக்கணும்.. வர போற பொண்ணு நம்ம புள்ளைங்கள அவ குழந்தைகளா பார்க்கும் போது இது ஒண்ணுமே இல்லாம போயிடும்” என்றார் மெதுவாய்..


“ஆத்தா..! என்ன சொல்லுற நீ..? மறுமணமா? என் உமையாள் இருந்த இடத்துல இன்னொரு பொண்ணா..? “ என கோவமாய் எழுந்து விட்டான்..


“நா என்ன யா தப்பா சொல்லிப்புட்டேன்.. ஊரு உலகத்துல நடக்காததையா சொன்னேன்.. பச்ச குழந்தைய இப்படியே அவன்கிட்ட தூக்கி கொடுத்துட்டா நாளைக்கு அதுங்க வளர்ந்த பின்ன நீ யாருன்னு உன்ன பார்த்தே கேட்க்கும்.. அப்போ என்ன யா பண்ணுவ..சரியோ தப்போ பிள்ளைங்க எப்போதுமே பெத்தவங்கிட்ட தான் வளரணும்.. அதுக்கப்புறம் உன் பாடு” என சரியாய் ஊசியில் நூலை ஏற்றினர்…


அதில் பெற்றவனுக்கே உண்டான உரிமை போராட்டம் மெல்ல எட்டிப் பார்க்க..தன் பிள்ளைகளை யாருக்கும் விட்டு கொடுக்க முடியாது என மூளை எடுத்துரைத்தது..அதில் தாயை பார்த்து ”நீ சொல்லுற மாதிரியே செய்யுறேன் ஆத்தா..பொண்ணை பாரு” என்றான்.. இந்த இடத்தில் தான் வரும் பெண் தன் பிள்ளைகளுக்கு ஒரு தாயாய் இருப்பாளா இல்லை பேயாய் இருப்பாளா என யோசிக்க மறந்து போனான்..! முக்கியமான நேரங்களில் நம் மூளை மங்கி தான் போய் விடுகிறது..


------------------


கல்யாணம் இரண்டு வீட்டு ஆட்கள் மட்டும் இருக்க கோயிலில் மிக எளிமையாக நடந்தது..


இதை மாணிக்கம் வீட்டினர் அறிவர்..ஆனால் யாரும் தடுக்கவும் இல்லை தடை சொல்லவும் இல்லை..தந்தையான சுந்தரம் தன் பெண்களின் நலனுக்காக என்று சொல்லும் போது யார் என்ன சொல்ல முடியும்?..”என் பெண்களோட நலனுக்காக இதை செய்ய போறேன்..இதுல யாரும் தலையிட வேண்டாம்” என சொல்லி அவர்களின் வாயையும் அடைத்து விட்டார்களே!..


ஆனால் மாலையும் கழுத்துமாக தன் தங்கை இருந்த இடத்தில் வேறொரு பெண்ணை வைத்து பார்த்த நொடி மாணிக்கம் முடிவு செய்ததை செயல் படுத்த அதை புதுப்பெண் முதற்கொண்டு யாரும் எதிர்பார்க்கவில்லை..


தங்கம் தனி தங்கம் மாசு இல்ல..
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல..
தாய்வழி சொந்தம் போல பாசமில்ல நேசமில்ல ஒஹ் ஒஹ்..
கள்ளி காட்டில் பிறந்த தாயே
என்ன கல் ஓடச்சி வளர்த்த நீயே
முள்ளு காட்டில் முளைச்ச தாயே

என்ன முள்ளு தைக்க விடல நீயே..!


அன்புடன்,
மிர்ஷி ♥


கருத்துக்கள் இங்கே

 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -05


கல்யாணம் முடிந்த அன்று மதியம், மாலையும் கழுத்துமாய் வந்திறங்கினர் புதுமண தம்பதிகள்..


நிலவொளி புதிதாய் வந்திருக்கும் 'அம்மா' வின் கைகளை பிடித்திருக்க, வெண்மதியை தன் கைகளில் ஏந்தி இருந்தான் சுந்தரம்..


ஆரத்தி எடுத்து லட்சுமி – சுந்தரத்தை தம்பதி சகிதம் உள்ளே வரவேற்றார் வள்ளியம்மை.. அவர் முகத்தில் ஆனந்தம் அப்படியே ஆனந்ததாண்டவமாடியது..இருக்காதா பின்னே! மாணிக்கம் குடும்பத்தின் வருகையை தடுக்க எண்ணி அவர் செய்த செயல் சுபமாய் அல்லவா முடிந்துள்ளது..


உமையாளின் இறப்பு அவருக்கும் வருத்தம் தான்..யார் இல்லை என்றது?.. அதற்காக சம்பந்தி வீட்டினர் தன்னை ஓயாமல் குற்றவாளியை போல் பார்ப்பதும், பேசுவதும் அவருக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை.. இனி மாணிக்கமோ அவன் குடும்பமோ எந்த முகத்துடன் இங்கே வருவார்கள்? தன்னை எப்படி எடுத்தெறிந்து பேசுவார்கள்? என தனக்கு தானே வைத்துக் கொண்ட ஆப்பை அறியாமல் சந்தோஷத்தில் மிதந்தார்..பாவம் மாமியாரே நீங்கள்!


பால் , பழம் கொடுக்கும் சம்பிரதாயம் எல்லாம் வேண்டாம் என மறுத்து விட்டான் சுந்தரம்..ஆனால் அப்படியே விட்டுவிடுபவரா அவன் தாய்?..


எந்த குறையுமில்லாமல் வந்தவளை வரவேற்றாள் தான் தன் பேத்திகளை எந்த குறையுமில்லாமல் அவள் பார்த்துக் கொள்வாள் என பேசியே எல்லா சம்பிரதாயங்களையும் செய்து முடித்தவர் அன்று இரவே முதலிரவையும் வைத்தாரே பார்க்கணும்..உமையாளின் ஆன்மா கூட இவரை மன்னித்திருக்காது.


சிறிது நேரம் புது மருமகளை ஓய்வு எடுக்க சொன்னவர் இரவு நேரத்து நிகழ்வுக்காக பூக்களை வாங்க தன் சொந்தகார பையனை அனுப்பிவிட்டார்..அதே நேரம் மகனையும் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு வெளியே சென்றுவருமாறு பணித்தார்..எல்லாம் அவர் எண்ணியப்படி நன்றாக தான் நடந்தது மாணிக்கம் வரும் வரை..


ஆம்! அரசல் புரசலாக விஷயம் வெளியே கசிந்து விட்டது..”இவ்வளவு தானா என் தங்கையின் நினைவுகள் இவர்களுக்கு?” அந்த பாசக்கார அண்ணனின் உள்ளம் ஆதங்கத்தில் விம்மியது..இதையே என் தங்கை செய்திருந்தாள் இந்த வள்ளியம்மை சும்மா விட்டிருக்குமா? அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை..”இவங்கள எல்லாம் நல்லவங்கனு நினைச்சி வாழ்ந்தியே மா! எப்போ எப்போனு இருந்துருக்காங்க போலயே!” என கண்களில் கண்ணீர் வடிந்தது..


உண்மை தானே! கணவனை இழந்த பெண் இன்றைய காலகட்டத்தில் வீட்டினர் வர்ப்புறுதலாலேயே மறுமணத்திர்க்கு சம்மதித்திருக்கலாம்.. இல்லையா, அவளையும் விரும்பி ஒருவன் கல்யாணம் செய்து வாழ முன் வந்திருக்கலாம்..ஆனால் அதை நம் சமூகம் என்ன சொல்லும்? சுகத்துக்காக அழைபவள் என்று தானே!. ஆண் செய்தால் குழந்தைகளுக்காக பெண் செய்திருந்தால் அதற்கு பெயரே வேறு…? குறைந்தது பத்து பேராவது அவளை கேவலமாக பார்த்திருப்பார்கள் இல்லையா..!


தங்கையின் மாமியாரை ஆரம்பத்தில் இருந்தே அவனுக்கு பிடிக்காது.. இதுவரை தங்கைக்கு பக்கபலமாய் இருந்ததால் தான் சுந்தரம் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தான்..ஆனால் அவனும் யாரிடமும் கலந்தாலோசிக்காமல் மறுமணம் புரிந்து கொண்டு வர அவன் மீது இருந்த பாசமும் ஒட்டுதலும் குறைந்து போனது.. இனி இவர்கள் வேண்டாம் என்னும் நிலைக்கே வந்து விட்டான்..


ஆனால் அதற்கு முன் ஒரு மாமனாக தான் செய்து முடிக்க வேண்டிய காரியம் ஒன்று மீதம் இருந்தது..


நேராக தன் தாயிடம் சென்று தான் நினைப்பதை கூறினான்..”இத்தனை வருஷம் நல்லா ஒன்னுகொன்னா இருந்த இவங்களையே நம்ப முடியல.. புதுசா வந்திருக்கா அந்த பொண்ணு யாரு என்னானே தெரியாது…அவளை நம்பி என் தங்கச்சி பிள்ளைங்கள என்னால விடமுடியாது.. நா செய்யுறது சரிதானே ஆத்தா!” என்றான் கலக்கமாய்…


“உன்ன மாதிரி ஒரு மாமன் கிடைக்க அந்த புள்ளைங்க குடுத்து வச்சிருக்கணும் யா..என் ராசா! நீ மனசுக்கு தோனுறத செய்..யாரு வந்து என்னனு கேட்டா நானும் ஐயனும் பார்த்துக்குறோம்” என மகனை தெளிவுபடுத்தி அனுப்பினார்.. சரியென மேற்கொண்டு ஆகவேண்டியவற்றை செய்ய அப்போதே கிளம்பி விட்டான்…



-----------------


“எம்மாடி லட்சுமி..இந்த பட்டுபுடவைய மாத்திக்கிட்டு வேற புடவைய கட்டிக்க ராஜாத்தி..கச கசனு இருந்துதுனா குளிச்சிட்டு மாத்திட்டு வா” என புது மருமகளை அனுப்பினார்..அதை லட்சுமியின் தமக்கைகள் சந்தோஷமாக பார்த்திருந்தனர்..


“அத்தமா! அதெல்லாம் வேண்டாம்.. அவங்களும் புள்ளைகளும் எனக்கு போதும்.. எதுவாக இருந்தாலும் அப்புறம் பார்த்துக்கலாம்” என அவள் மறுக்க,


“என்ன மா..இப்படி பேசுற.. புள்ளைங்கள பார்த்துக்கணும் தான்..அதுக்காக தான் உன்னைய கல்யாணம் கட்டி வச்சிருக்கேன்.. இல்லைன்னு சொல்லலை..ஆனாலும் உன் புருஷனே வேண்டாம்னு சொன்னாலும் அவன உன் கைக்குள்ள வச்சிக்கனும்னா இப்படியெல்லாம் சொல்லகூடாது தா.. அவன நா பார்த்துக்கிறேன்..நீ போய் நா சொன்னத செய்” என விரட்டிவிட்டார்..


மாமியாரே வர்ப்புறுத்தவும் சிறு தயக்கத்துடன் குளிக்க சென்றாள் லட்சுமி..


நேரம் எட்டு மணி இருக்க பிள்ளைகளுடன் வீட்டிற்க்கு வந்தவனை வள்ளியம்மை தான் சாப்பிட சொன்னார்..புது மனைவியை காணவில்லை..அவனும் அதை கண்டுக்கவில்லை..புது இடம், புது ஆட்கள் பயந்து போய் அவள் குடும்ப உறுப்பினர்களுடன் இருப்பாள் என விட்டுவிட்டான்…


மூவரும் அமர்ந்து சாப்பிட்டு முடிக்க.. பிள்ளைகள் ஏற்கனவே விளையாடிய அசதியில் அவர் மடியிலேயே தூங்கிவிட்டனர்..


தன் அறையில் படுக்க வைக்க எண்ணி வெண்மதியை தூக்க குனிய.. “புள்ளைங்கள என்கிட்ட குடு சுந்தரோ! என்கூட காத்தாட படுக்கட்டும்..உன் அறை ஒரே புளுக்கமா இருக்கும்” என அக்கறையை பொழிய..


“ஒன்னும் வேண்டாம் ஆத்தா! நா அன்னைக்கே சொன்னது தான்..இனி பிள்ளைங்க என் கண் பார்வைல இருந்து சாப்பிடட்டும்..என் பக்கத்துலயே தூங்கட்டும்..” என முடித்துக் கொண்டார்.. வெண்மதியின் மருத்துவமனை வாசனைக்கு பின் இது தான் அவர்கள் வீட்டில் தொடர்கிறது..தவறியும் தாயிடம் பிள்ளைகளை விடமாட்டார்..எனவே தான் அறைக்கு இருவரையும் தூக்கி செல்ல அங்கு மலர் அலங்காரத்தின் நடுவில் இருந்த லட்சுமியை பார்த்து 'ஆத்தாஆஆஆ' என கத்தினான் சுந்தரம்…


அதே நேரம் கையில் கத்தை தாள்களுடன் சுந்தரம் வீட்டின் முன் வண்டியில் வந்து இறங்கினான் மாணிக்கம்..


“என்ன கருமம் இது ஆத்தா!..யாரைக் கேட்டு இந்த ஏற்பாடு?” கண்கள் சிவக்க தாயை கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தரம்..


“சத்தம் போடாத சுந்தரோ..எல்லாம் கல்யாணமான அன்னைக்கு ராத்திரி நடக்கிறது தானே” அவன் பின்னேயே ஓடிவந்தவர் மகனை சமாதானம் செய்ய..


“என்ன கொலைகாரனா மாத்திடாத.. தாய்னு கூட பார்க்கமாட்டேன்..யார கேட்டு இதெல்லாம் முடிவு செஞ்ச.. இப்போ இங்க ஒரு பூ கூட என் கண்ணுல படக்கூடாது.. எல்லாத்தையும் இப்போவே எடுத்து தூற போடு” என அங்கு அமர்ந்திருந்தவளை சிறிதும் கண்டுகொள்ளாமல் பிள்ளைகளை தரையில் பாய் விரித்து படுக்க வைத்தவன் தானும் அருகிலேயே படுத்துக் கொண்டான்..


பெண்ணவள் தான் இதில் பெரிதும் அடிவாங்கினாள்..


வெளியில் அவள் தமக்கையர் இதை பார்த்து அதிர, வள்ளியம்மை மட்டும் உள்ளே சென்று லட்சுமியை கடகடவென அழைத்து வந்தார்..


அவரையே பார்த்துக் கொண்டிருந்த சகோதரிகளிடம், ”இன்னைக்கு தான கல்யாணம் முடிஞ்சிருக்கு.அதான் இப்படி நடந்துட்டு..போக போக எல்லாம் சரி ஆகிடும்.என் பையன் உங்க தங்கச்சிய ஏத்துப்பான்.. எங்க போயிட போறான்..” என அங்கிருந்தவகளிடம் சமாலிப்பாக சொல்ல, லட்சுமி மனதிலோ, “நா இப்போ இத கேட்டேனா!” என்ற கேள்வி எழ, அது மாமியாரின் மேல் கோவத்தை உருவாக்கியது..


நடந்ததை எல்லாம் வாசலில் கைகளை கட்டிக்கொண்டு பார்த்து நின்றான் மாணிக்கம்..அவன் முகத்தில் தோன்றிய ஏளன சிரிப்பே தான் எடுத்த இந்த முடிவு சரி என்றுரைத்தது..அதிலும் புதுபெண்ணின் கண்களில் தோன்றிய கோவம் எதுவோ தவறு என அடித்து சொன்னது.. மனிதர்களை பார்த்ததும் எடை போட தெரிந்தவன்.. தவறாக போனது தங்கையின் வாழ்கையில் மட்டும்.. அதுவும் தந்தையின் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுத்த அமைதியின் விளைவு அது!


அவர்கள் யாரும் தன்னை கவனிக்காது போக, மெல்ல கதவை தட்டினான்..என்ன இருந்தாலும் இப்போது இது வேறொருவரின் வீடல்லவா..!


'இவனா' என வள்ளியம்மை லேசாக அதிர்ந்தாலும், ‘என்ன யா மாணிக்கம்?.. இந்நேரத்துல இந்த பக்கம்' அன்பொழுக கேட்க..அதில் மயங்க அவன் ஒன்னும் உமையாள் கிடையாதே..


“சுந்தரத்துக்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…அவன வர சொல்லுங்க” என்க..அவர் மறுத்து பேசுவதர்க்குள் சத்தம் கேட்டு சுந்தரமே வெளியே வந்தான்..


“என்ன மச்சான்..ஏன் இந்த நேரம் வந்திருக்க..?”


“பிள்ளைங்க எங்க சுந்தரம்?”


“அதுங்க இப்போதான் தூங்கினாங்க மச்சான்..அவங்களையா பார்க்க வந்த?.. இது என்ன..?” கையில் இருந்த காகிதங்களை பார்த்தவன் கேள்வியுடன் நிற்க..


வள்ளியம்மை, அவர் பக்கத்தில் விருந்தினர் பெண்கள் (லட்சுமியின் சகோதரிகள்)..கல்யாணம் செய்து வந்துள்ள புதுபெண் என எல்லோரின் பார்வையும் தன்னையே பார்த்து நிற்பதை உணர்ந்தாலும், “ இது உமையாளுக்கு நாங்க கொடுத்த பத்து பவுன் நகையை வித்து வாங்கின சொத்து பத்திரம்..ரெண்டு பொண்ணுங்களோட பெயர்லயும் வாங்கி போட்டிருக்கேன்..அதோட இது அவளுக்கு கொடுத்த மூன்று ஏக்கர் தென்னந்தோப்பு..இதுவும் ரெண்டு பேருக்கும் பாதி பாதியா மாத்தி எழுத்திருக்கோம்..என்ன தப்பா எடுத்துக்க வேண்டாம்..என் தங்கச்சி போனதுக்கு பிறகு அவளோட உடைமை எல்லாம் அவளோட பிள்ளைங்களுக்குன்னு கொடுக்கிறது தான் சரி..நகை, பத்திரம் எல்லாம் எங்ககிட்ட இருந்ததால உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லாம இத முடிவு செஞ்சதுக்கு என்னை மன்னிக்கணும்” என கைகூப்பியவனை 'இப்படி ஒரு மனிதனா' என பெருமையாக சுந்தரம் பார்த்தாரென்றால் 'இத செய்ய நீ யாரெப்போ ?' என வள்ளியம்மை கேட்டே விட்டார்..



அன்புடன்,
மிர்ஷி♥


கருத்துக்கள் இங்கே
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -06


“இந்த வீட்டு பிள்ளைங்களோட தாய் மாமன்..நா செய்யாம வேற யாரு செய்யணும்?” கோவமாய் அவன் முறைத்து நின்றான்..


அவன் கேள்வியில் வாயடைத்து போனது வள்ளியம்மையும் சுந்தரமும் மட்டும் அல்ல.. லட்சுமியின் சகோதரிகளும் கூட..எவ்வளவு பாசம் தங்கை மேலும் அவள் குழந்தைகள் மீதும் என அவர்கள் ஆச்சர்யப்பட..எந்த வித உணர்ச்சிகளையும் காட்டாமல் கைகளை கட்டி நடப்பதை வேடிக்கை பார்த்தாள் லட்சுமி..


“இன்னும் வருஷங்கள் இருக்கு..என்ன வேணுமானாலும் நடக்கலாம் என லட்சுமியை பார்த்த மாணிக்கம்..இந்த வீட்டு பிள்ளைங்களுக்கு அவங்க உரிமை கிடைக்குதோ இல்லையோ தெரியாது..ஆனால் இது அவங்களை நல்லா பார்த்துக்கும்” என “இவளுக்கு நாளு பிள்ளைங்க பிறந்து என் தங்கை குழந்தைகளின் உரிமை போனா கூட இந்த சொத்து இவர்களுக்கு நல்ல வாழ்கையை தேடிக் கொடுக்கும்” என்ற மறைப்பொருளுடன் சொல்ல.. அதை அங்கிருந்த எல்லாரும் உணர்ந்தார்கள் என்றாலும் சுந்தரம் மட்டுமே எதிர்த்து பேசினார்…


“என்ன பேசுற மச்சான்..என் பிள்ளைங்க உரிமை எப்படி போகும் ?.. அதை நா பார்த்துட்டு இருப்பேன்னு நீ எப்படி நினைக்கலாம்..அவங்க இந்த வீட்டு பிள்ளைங்க எப்போதுமே.. அவங்கள தன் பிள்ளையா பார்த்துப்பா வந்துருக்குற லட்சுமி.. தேவையில்லாது பேசி பிரச்சினை வேண்டாம்..நீ இப்போ மாத்தினது உங்க சொத்து..உன் தங்கச்சி அதாவது என் மனைவி சொத்து..அதை நீ இப்படி எழுதி கொடுக்காட்டியும் என் பிள்ளைங்களுக்கு தான்..நீ தவறு எதுவும் செய்யல.. எங்க யாருக்கும் இதுல எந்த வருத்தமும் இல்லை”என பிரச்சினைக்கு முடிவுரை எழுத நினைக்க, வள்ளியம்மை மட்டும் 'உர்ர்ர்' என்று விருப்பமின்மையை முகத்தில் அப்பட்டமாக காட்டி நின்றார்..


இதற்கு மேல் என்ன பேச என தெரியாது நின்ற மாணிக்கம், வீட்டிற்க்கு கிளம்ப எல்லோரிடமும் ‘சரி..அப்போ நா கிளம்புறேன்..நல்லா பார்த்துக்கோங்க' என கைகூப்பி திரும்ப..நொடி நேரத்தில் கவனித்தான் லட்சுமியின் அந்த ஏளனப் பார்வையை..ஆனாலும் அதை கண்டுகொள்ளாது வந்த வேலை முடிந்த திருப்தியில் வீடு திரும்பினான்..


செல்லும் அவன் மனதில் துளி சந்தோஷம்..முதலிரவு ஏற்பாட்டினால் தாயை திட்டிய சுந்தரம் தன் தங்கையை இன்னும் மறக்கவில்லை என..ஆனால் அந்த சந்தோஷத்திற்கு சொற்ப ஆயுள் தான் என இனிவரும் காலங்களில் இல்லை இல்லை நாட்களில் அறியதானே போகிறான்!


அதேநேரம் வீட்டில் சுந்தரம், வள்ளியம்மை என எல்லோரும் நடந்ததை மறந்து உறங்க சென்றுவிட, சகோதரிகள் மூவரும் தனித்து விடபட்டனர்..அதில் லட்சுமியை தவிர மற்ற இருவரும் இந்த குடும்பத்தின் செல்வ நிலையை பற்றியும் மாணிக்கம் பற்றியும் அவன் குழந்தைகள் மேல் வைத்துள்ள பாசம் பற்றியும் மீண்டும் ஒரு புகழாரம் சூட்ட ஆரம்பிக்க..அதில் சிறிதும் ஈடுபாடில்லாமல் தனக்கு நடந்த அவமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நினைவு கூர்ந்த லட்சுமி, “நீங்க எல்லாரும் யாருன்னு எனக்கு காட்டிடீங்க..இனி உங்க குடும்பத்தையே என் காலின் கீழ் விழவைத்து நா யாருன்னு உங்களுக்கு காமிக்குறேன்!” என சபதம் ஏற்க..அதன் பிறகே மற்றவர்களுடன் அவளால் சகஜமாக பேசமுடிந்தது..


அவளின் சபதத்தால் வள்ளியம்மையோ சுந்தரமோ பாதிக்கப் பட்டிருந்தால் கூட மனதை ஆறுதல் படுத்தி இருக்களாமோ என்னவோ!..ஆனால் இங்கோ பெண் மனம் கல்லாய் மாறி போக..பாதிக்கப் பட்டது அந்த பிஞ்சு குழந்தைகளாய் போய்விட்டார்களே!


லட்சுமி நம் புதுமருமகள் யாரென்று இன்னும் சொல்லவில்லையே..இதோ அவளைப் பற்றி!


குழந்தை பருவத்திலேயே தந்தை தாய் இல்லாத தமக்கையரின் வளர்ப்பில் யாரையும் மதிக்க தெரியாத எல்லோரிடமும் இருந்து சற்றே மாறுபட்ட குணநலன்களை கொண்டு வளர்ந்தவள் தான் லட்சுமி..இல்லை இல்லை 'சின்ன பிள்ள'..ஆம்! ஊராருக்கு இதுவரை அவள் வெறும் சின்ன பிள்ள தான்!.. அவளுக்கு பெயர் ஒன்று கல்யாணம் ஆகும் வரை யாரும் வைத்திடவில்லை.. இவளுடன் சேர்த்து மொத்தம் மூன்று பெண் குழந்தைகள் இவள் பெற்றோருக்கு.. கடைசி குழந்தையாய் இருந்ததாலும், பெயர் தான் ஒருவரின் அடையாளம் என தெரியாத தமக்கையர்களும் அவளை 'சின்ன பிள்ள சின்ன பிள்ள' என்று கூப்பிட அதுவே அவளின் அடையாளமாக போனது..


அழகு என பெரிதாக சொல்லமுடியாது.. மாநிறத்திற்கும் குறைவான சற்று பூசிய உடம்புக்கு சொந்தக்காரி..


கோவம் அவள் உடன் பிறந்த ஒன்று.. எதையும் பொறுத்து போகும் குணம் கிடையாது..அவளுக்கு வலித்தால் அதை கொடுத்தவர்களுக்கும் இரண்டு மடங்காக வலிக்க செய்வாள்..தவறை தவறு என மூஞ்சுக்கு நேராக சொல்லாமல் அதை மற்றவர் வலியுடன் உணர்ந்து அனுபவிக்க வைத்து திருப்தி கொள்ளும் ரகம் என வைத்துக் கொள்ளலாம்.. இதனாலேயே இவள் உடன் பிறப்புகள் கூட இவளை எந்த விஷயத்திலும் அதிகம் சேர்த்துக் கொள்ள தயங்கி பின் வாங்குவார்கள்..


மூத்தவள் பார்வதி ஒரு கொத்தனாரை கல்யாணம் செய்து கொள்ள..முதல் தங்கை தமயந்தியை வசதி வாய்ப்பு இல்லாத காரணத்தினால் இரண்டாம் தாரமாய் ஒருவனுக்கு கல்யாணம் செய்து வைத்தாள் பார்வதி..அவனோ சரியான குடிகாரன்..இருந்தும் மனைவியை ஏதோ குறை இல்லாமல் பார்த்துக் கொண்டான்..இவர்கள் இருவருக்கும் தலா இரண்டு குழந்தைகள் இருந்தனர்..


சின்ன பிள்ளயும் வாரத்திற்கு ஒரு அக்கா வீடு என இதுவரை வசித்து வந்தாள்.. அவர்களின் குழந்தைகளை கவனிப்பதும் பக்கத்தில் இருக்கும் ஏதாவது பெரிய குடும்பத்தின் வீட்டு வேலைகளுக்கு செல்வதுமென இருந்தாள்..


அப்போது தான் வள்ளியம்மையின் பெண் பார்க்கும் படலம் தரகர் மூலம் அறிந்தனர்..ஆம்! இவளுக்கும் இரண்டாம் தாரமான சம்மந்தம் இருந்தால் மட்டுமே கொண்டு வருமாறு சொல்லியிருந்தாள் பார்வதி.. அவளுக்கு தங்கைகள் மேல் பாசமில்லாமல் இல்லை..கட்டி கொடுக்க தான் கையில் பணம் இல்லை..! இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்பவன் எவனும் பொன்னையும் மண்ணையும் கேட்க மாட்டானே..!


ஆரம்பத்தில் இரண்டாம் தாரமாய் அதுவும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாய் இருக்க முடியாது என பிடிவாதம் பிடித்த லட்சுமியை, ”இது தான் எங்க தகுதி!..இந்த குடும்பம் வேண்டானாலும் இன்னொரு குடும்பத்திலேயும் இரண்டா தாரமாக தான் உன்ன கொடுக்க முடியும்..என்ன ஒன்னு இந்த குடும்பம்னா எங்கள மாதிரி உனக்கு நாத்தனார் கொடுமை இருக்காது..நீதான் அங்க ராணி..உனக்கு புடிச்ச மாதிரி..நீ ஏங்கின வாழ்கையை அங்க வாழலாம்..இதுக்கும் மேல வேண்டாம்னு சொன்ன நாங்க வேற இடத்த பார்க்கிறோம்” என அவளை பற்றி அறிந்தவர்களாய் வார்த்தைகளை விட..பெண் மனம் ஏனோ அதில் விழுந்தது..


சிறுவயதில் இருந்தே தங்கள் ஏழ்மை நிலையை அறவே வெறுப்பவள் என்பதை கூடவே இருக்கும் தமக்கையர் அறியாமல் இருப்பார்களா!


“இரண்டு குழந்தைகள் தான்..அதுவும் பால் மணம் மாறாத பச்சிளம் பெண்கள்.. தன் சொல் பேச்சு கேட்டுதான் நடக்க போகுது..அவனும் பொண்டாட்டி இறந்த கொஞ்ச நாள்லயே அடுத்து கல்யாணத்துக்கு தயாராகிட்டான்னா பெருசா அவகூட பிடிப்பு இல்லப் போல தான் தெரியுது!..எப்படியும் நம்ம கிட்ட வந்துடுவான்..இப்போ வேண்டாம் சொல்ல எந்த காரணமும் இல்லையே” என அவளும் எல்லாத்தையும் ஓரளவுக்கு கணித்து தன் நிலைபாட்டில் இருந்து இறங்கி வந்து சம்மதம் சொன்னால்..


“ஆனால் உன் மாமியார் கொஞ்சம் ஒருமாதிரி பட்டதுனு வெளிய சொல்லிக்கிட்டாங்க..இருந்தாலும் அதை எப்படி சரி கட்டனும்னு உனக்கே தெரியும்” என அடுத்து பார்வதி சொன்னதை கண்களை சுருக்கி பார்த்தால் லட்சுமி..


தனக்கு தெரிந்ததை அனைத்தையும் பார்வதி சொல்ல, “ஓஹோ! வந்தவள அவ்வளவு கொடுமை படுத்திருக்கா.. அதெல்லாம் என்கிட்ட குட்டி கரணம் போட்டாலும் நடக்காது.. சரிதான் அதை நான் பார்த்துக்கிறேன்” என சிரித்தாள்..


தங்கையையே சரி கட்டியாச்சு என சந்தோஷத்தில் பார்வதியோ அடுத்து வள்ளியம்மையை அணுகி பேச.. அவளுக்கு தாங்களே லட்சுமி என அழகான ஒரு பெயர் வைத்து இதோ இப்போது கல்யாணம் வரை எல்லாமே சுபம்..


ஆனால் இதில் தமக்கைகள் அறியாதது சுந்தரத்தின் செல்வ நிலை பற்றி..”எதோ கொஞ்ச தோப்பு துறவுகள் உண்டு..எந்த கெட்ட பழக்கமும் கிடையாது..ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கு” என்பது வரை தெரிந்து வைத்தவர்களுக்கு மூத்த தாரத்தின் சொத்து மதிப்புகள் தெரிந்திருக்கவில்லை..


தெரிந்த போது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற கோவம் மற்ற இரு பெண்களுக்கும் வந்ததென்னவோ மறுக்க முடியாத உண்மை..அவர்களே அப்படி என்றால் லட்சுமிக்கு???


அன்புடன்,
மிர்ஷி ♥

கருத்துக்கள் இங்கே
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -07

இன்றோடு லட்சுமி அந்த வீட்டிற்க்கு வந்து ஆறு மாதங்கள் முடிந்துவிட்டது..


'ஒரு அக்மார்க் மருமகள் எப்படி இருப்பாள் ?' என கேட்டாள் அவளையே கை காட்டும் விதத்திற்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே நடந்து இல்லை இல்லை நடித்து எல்லோரின் மனதையும் வென்றுவிட்டாள் என்பதே உண்மை.


கல்யாணம் முடிந்ததும் அவள் சகோதரிகள் இருவரும் இரண்டு நாட்கள் தங்கையுடன் இருந்துவிட்டு அவர்கள் வீட்டிற்க்கு சென்று விட, அங்கிருக்கும் சூழ்நிலையை ஓரளவுக்கு புரிந்து தெரிந்து நடக்க ஆரம்பித்தாள் நம் புது மருமகள்..


விடியற்காலையில் சேவல் கூவுவதர்க்கு முன் எழுந்து விடும் லட்சுமி..சுந்தரம் வேலைக்கு செல்லும் முன் சோறு வடித்து, குழம்பு வைத்து ஏதாவது ஒரு பொரியலும் செய்து விடுவாள்..அது போக நேரம் இருந்தால் அன்று தவறாது காலை உணவாக புட்டோ, புடி கொழுக்கட்டையோ அதே அரிசி மாவில் செய்துவிட்டு பிள்ளைகளுக்கும் ஊட்டி விடுவாள்.. அதில் குழந்தைகள் அவளிடம் மயங்கியே விட்டனர்…


அதன் பிறகு கழியும் மணிதுளிகளில் கணவனை வேலைக்கு அனுப்பிவிட்டு, வள்ளியம்மையின் அனுமதியுடன் குழந்தைகளை தோப்பிற்கு அழைத்து செல்வாள்..அங்கே விழுந்து கிடக்கும் தென்னை ஓலை, தேங்காய்களை பறக்கிக்கொண்டு வீடு சேர மதியம் ஆகிவிடும்..


பின்னர் மாமியாருக்கு சாப்பிட எடுத்துக்கொடுப்பவள், குழந்தைகளை தனக்கு தெரிந்த ஓரிரண்டு கதைகளையே மாற்றி மாற்றி சொல்லி சாப்பிட வைத்துவிட்டு தானும் உண்பாள்..அடுத்து உண்ட மயக்கத்தில் எல்லோருமே மதிய நேரத்தில் ஒரு நீண்ட தூக்கத்தை போடுவார்கள்..


சாயந்திரமானால் போய் பால் வாங்கி வந்து காய்ச்சி கொடுப்பவள் தானும் குடிப்பாள்..இவை அனைத்தும் முடிந்து கடைசியாக அன்றைய நாளின் முடிவில் வேலைக்கு சென்ற கணவன் வருகைக்காக குழந்தைகளுடன் காத்திருப்பாள்..


லட்சுமியின் இத்தகைய செய்கையினால் குழந்தைகளோ, அவள் நில் என்றால் நிற்பார்கள், உட்காரு என்றால் உட்காருவார்கள்.. அவள் என்ன சொன்னாலும் அதை கண்ணை மூடிக்கொண்டு செய்யும் அளவுக்கு அவள் மீது உயிராய் மாறி விட்டனர்.


அதிலும் குழந்தைகள் சுந்தரத்திடம் ஓடி சென்று சொல்லும் கதைகள் அனைத்திலும் லட்சுமியே முக்கால் வாசி இடம் பிடித்திருப்பாள்..அது எதேர்ச்சையான செயலா அல்லது அப்படி பார்த்துக்கொண்டாளா என்பது அவள் மட்டுமே அறிந்த ஒன்று.. 'அம்மா இன்னைக்கு மீன் பொறிச்சி கொடுத்தாங்க ப்பா'.. 'அம்மா நாளைக்கு எங்களை குளத்துக்கு கூட்டிட்டு போய் நீச்சல் கத்து தரேன் சொன்னாங்க ப்பா' என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக சொல்லி குதூகளிப்பாள் நிலவொளி.. எப்போதும் போல் அக்காளை பின்தொடர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவாள் இளையவள் வெண்மதி..


இதற்கு அடுத்து என்ன நடக்கும் என லட்சுமி அறிவாள்..குழந்தைகள் பேசியதை கேட்டு தன்னை ஏறிட்டு பார்ப்பான் சுந்தரம்..அவள் எண்ணத்தை பொய்யாக்காமல் அவளை நிமிர்ந்து பார்த்த சுந்தரத்தின் முகத்தில் இருந்த வியப்பை அவள் அறிந்து மனதிற்குள் சிரித்துக் கொள்வாள்..ஆனாலும் வெளியே தெரியாதது போல் குழந்தைகளிடம் பார்வையை செலுத்துவாள்..


ஏனென்றால் அவளுக்கு அதுதானே வேண்டும்.. சிறியவர்களின் மனதை வென்றால் அதன் மூலம் சுந்தரத்தை எளிதில் தன் வசப்படுத்தலாம் என நினைத்து ஒவ்வொன்றையும் செய்தாள் அவள் பிறவி குணமான கோவத்தை அடக்கிக்கொண்டு. அதற்கு பலன் தான் இந்த பார்வை என்பதை அறியாத முட்டாள் பெண் இல்லையே அவள்.. இதில் அவளே அறியாத ஒன்று தன் செயலினால், இவள் குழந்தைகளின் உலகமாய் மாறி போக..நிஜ உலகத்தின் நிழலே படாது தூர விலகி போயினர் அவ்விரு குழந்தைகளும்..!


அடுத்ததாய் அவள் குறிக்கோள் மாமியார் வள்ளியம்மை தான்..வந்த நாளே தன்னை சீண்டியவரை சும்மா விட அவள் என்ன உமையாளா?.. வெளியில் இருந்து பார்க்கையில் அன்பான மருமகள் என்னும் மாயையை தோற்று வித்திருந்தாலும் எப்போதாவது இருவருக்குள்ளும் சிறு சிறு பனிப்போர் யாருக்கும் தெரியாமல் நடக்க தான் செய்தது. இருந்தாலும் பெரிதாக மாமியார் மருமகள் சண்டையை உருவாக்கி நிம்மதியை கெடுத்துக்கொள்ளாமல் கொக்கின் பார்வையுடன் மாமியாருக்கு ஊமைக்குத்து கொடுக்க காத்திருந்தாள்..தன் காத்திருப்பை எந்த இடத்திலும் காட்டாமல் சாதாரணமாக நாட்களை அவர்களுடன் கழித்தால்..


இப்படியே நாட்கள் செல்ல, அவள் எதிர்ப்பார்த்து காத்திருந்த நாளும் அவளே அறியாமல் சுந்தரத்தின் வாயிலாக ஏற்ப்பட்டது..


அன்றுமதியம் வரை பாலர் பள்ளிக்கு சென்று திரும்பிய நிலவொளி குதூகலத்துடன் லட்சுமியின் கைகளைப் பிடித்து துள்ளி துள்ளி பேசியவாரே வர, அதை கடமைக்காக கேட்டும் கேட்காமலும் வந்தாள் லட்சுமி..திடீரென கீழே கிடந்த முள்ளை கவனிக்காமல் நிலவொளி கால் வைத்துவிட, அது நருக்கென சின்னவளை குத்தி விட்டது.. அதிலிருந்து வந்த இரண்டு சொட்டு ரத்ததிர்க்காக அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, அவளை சமாதானப்படுத்த முயன்று தோற்று போன லட்சுமியோ சுற்றி இருந்தவர்களை கருத்தில் கொண்டு பொது இடம் என்பதால் வந்த கோவத்தை அடக்கி அவளை கைகளில் ஏந்தி வீட்டிற்க்கு கூட்டி சென்றாள்..இதை அந்த வழியாய் சென்ற அவர்களின் பக்கத்து வீட்டுக்காரனான முத்துசாமி பார்க்க நேரிட்டது..


கிராமப்புற மக்களுக்கு ஒரு பழக்கம் உண்டு.. தங்கள் பொது அறிவை காட்டவும் சரி, பெறவும் சரி மக்கள் உபயோகிக்கும் இடங்கள் ஆண்களுக்கு பொறுத்தமட்டில் டீ கடையும், பெண்களுக்கு குளிக்க செல்லும் குளங்களுமே.. அங்குதான் ஒருத்தருக்கு தெரிந்ததை மற்றவருடன் பகிர்ந்து தேவையில்லாத ஒரு பஞ்சாயத்தையும் உருவாக்கி அவர்களே தீர்வு சொல்லிக் கொள்வார்கள்..


அதே போல் தான் முத்துசாமியும் அவன் பார்த்த விடயத்தை டீ கடையில் இருக்கும் போது, “ செய்தி தெரியுமாலே..இப்போ ரெண்டாவது திருமணம் செய்தாரே நம்ம சுந்தரம் அண்ணாச்சி..அவரோட பொஞ்சாதி அந்த புள்ளைங்கள என்னமா தாங்குது!..அந்த குழந்தைங்க நிலைமை என்ன ஆக போகுதோனு என் பொஞ்சாதி வருத்தப்பட்டு சொல்லும் போது எனக்கும் வருத்தமா இருந்தது..ஆனால் இன்னைக்கு பார்த்தபிறகு அந்த புள்ளைங்க வாழ்க்கையில இனிமே எந்த குறையும் இருக்காதுன்னு தோணுது..” என கிடைத்த பத்து நிமிடங்களில் பொதுவாக அருகில் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு நகர.. இச்செய்தி காட்டு தீயை காட்டிலும் வேகமாய் பரவி சுந்தரத்தின் காதிற்கு சென்றடைந்தது..


அதை கேட்டவருக்கோ மனதில் சொல்லொண்ணா மகிழ்ச்சி.!! இருக்காதா பின்ன..யாரென்றே தெரியாத பெண், குடும்பத்தின் சந்தர்பத்தால், அவளின் வறுமையால், தான் இரண்டாவதாக திருமணம் செய்ததைப் பொறுத்துக் கொண்டு சகித்து வாழ்கிறாளோ என ஆரம்பத்தில் சந்தேகமாகவே இருந்தது..


ஆனால் அதன் பின் வந்த நாட்களில் அப்படி இல்லை என தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார் .. முதல் தாரத்தின் பிள்ளையை தன் பிள்ளையென பார்த்துக் கொண்டவள், எந்த இடத்திலும் முகம் சுளிக்காமல் அன்போடு அவர்களை கவனிப்பதில் அவளுடைய தாய்மையை(?) எண்ணி ஆச்சர்யத்தில் விழுந்தார்.. அப்போதெல்லாம் இறந்த உமையாளே எதிரில் இருப்பதுபோல் உணர்வார்… அதனாலே தன்னையும் மீறி லட்சுமியை பார்ப்பது.அதன் பிறகே சுற்றுப்புறம் உரைக்கும்..உடனே தன்னை நிலைப்படுதிக் கொண்டு திரும்பிக் கொள்வார்..


இருந்தும் லட்சுமியின் பக்கம் பார்க்க சொல்லி தூண்டும் எண்ணத்தை 'குழந்தைகளை பார்த்துக் கொள்ளவே இந்த கல்யாணம்..அவள் தன் கடமையை மட்டுமே செய்கிறாள்' என மூளை எச்சரிக்கை செய்ய, அதன் பின் மறந்தும் திரும்ப மாட்டார் அடுத்த நாள் நிலவொளியின் பேச்சை கேட்கும் வரை..


ஆனால் அந்த பார்வையின் அர்த்தத்தை அவரே இப்போதுதான் உணர்கிறார்..ஆம்! அவள் தன்னவள் என்ற உரிமைக் கொடுத்த கர்வத்தின் வெளிப்பாடு..மொத்தத்தில் லட்சுமி என்னும் பெண் என்றோ அவர் மனதில் தன் தடத்தை பதித்து விட்டாள் என்பதை இன்று அறிந்துக்கொண்டவருக்கு மனதில் மகிழ்ச்சி வந்தது தப்பொன்றும் இல்லையே!


'இந்த மறுமணம் என் வாழ்க்கைக்கு கிடைத்த மறு ஜென்மம்' என்று கடவுளிடம் நன்றி சொல்லும் அளவுக்கு சுந்தரத்தின் மனம் மாறியது..


அடுத்து வந்த நாட்களில் லட்சுமியின் சகோதரிகள் இருவரும் வந்து தங்கையை பார்த்து நலம் விசாரிக்க..அப்போது அவர்கள் தன் மனைவியிடம் பேசுவதை எதேச்சையாக அந்த வழியே சென்ற சுந்தரம் கேட்க நேர்ந்தது..அதில் இருவரின் கணவன்மார்களும் பெரிதாக வேலைக்கு போகாததால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் சுற்றுவதை அறிய முடிந்தது.. அதனால் சுந்தரமே அவர்கள் செல்லும் போது வீட்டினர் முன்பாகவே கையிருப்புக்கு சிறிது காசும், வீட்டில் இருக்கும் பதார்த்தங்களும் கொடுத்து பேருந்து ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு வீடு திரும்பினார்…


இதைப் பார்த்த வள்ளியம்மை மகனிடம் சாடினார்.. “அங்கன இருந்து ஒன்னும் கொண்டு வரலைன்னாலும் இருந்துட்டு போகட்டும்…யாரும் எதிர்பார்க்கல..ஆனால் அதென்ன இங்க இருந்து கூடை கூடையா அள்ளிட்டு போறது..இது சரிவராதுப்போ..ஒருமுறை வாங்கின கையும் மனசும் அதோட அடங்கிடாது..திரும்ப திரும்ப எதிர்பார்க்கும்..!”திரும்பி வந்த மகனிடம் வாசலியேயே வைத்து எச்சரிக்கை போல் சொல்ல,


“என்ன பேசுற ஆத்தா! யாருக்கு கொடுத்துட்டேன். நம்ம லட்சுமியோட சகோதரிகளுக்கு தானே..நம்ம புள்ளைங்களுக்கு தாயாய் இருக்க சம்மதிச்சு வந்தவ..அதுவும் என்னை கல்யாணம் பண்ணி எந்த எதிர்பார்ப்பும் இல்லாம..உனக்கும் தெரியும் இன்னை வரைக்கும் அதுல ஒரு குத்தம் கூட சொல்ல முடியாத அளவுக்கு பார்த்துக்கிறா.. அந்த பிள்ளையோட குடும்பத்துக்கு நம்மளால முடிஞ்ச ஒரு கைமாறு இது..அந்த நேரம் நம்ம லட்சுமி முகத்துல தெரிந்த சந்தோஷத்த பார்த்திருந்தா நீ இப்படி பேசியிருக்கமாட்ட.. தேவையில்லாம கிருக்குதனமா எதையாவது பேசி அந்த புள்ளையோட மனச நோகடிச்சிராத..” என தாயையை அடக்கிவிட்டு வீட்டிற்குள் வந்தவன் ஏதோ அவசர வேலையென உடனே வெளியே சென்றுவிட்டான்..


“ஓஹோ ! அதுக்குள்ள வந்தவ கைகுள்ள பொதிஞ்சி வச்சிப்புட்டாளா?” என மனதில் கருவி கொண்டவர் சுந்தரம் இல்லாத இந்நேரத்திலேயே லட்சுமியை அடக்கிவிட எண்ணியவராய் திரும்ப.. “என்ன அத்த்த்த..என் புருஷன் என்ன சொல்லிட்டு போராரு ?” என நக்கல் வழிய அவர் முன் வந்து நின்றாள் லட்சுமி..


நடந்தது அனைத்தையும் அடுப்பங்கரையில் வேலையாய் இருந்தது போல் காட்டிக்கொண்ட அவளுக்கு தெளிவாக கேட்க, செல்லும் கணவனை எட்டி பார்த்தாள்.. “சும்மா சொல்லகூடாது.. கொடுக்குறதுல கொடை வள்ளல் பரம்பரை தான் இவரு” என தமக்கைகளுக்கு கொடுத்ததை நினைத்து வியந்துக் கொண்டவளுக்கு.. முதலிரவன்று அவனால் தனக்கு ஏற்பட்ட அவமானம் சட்டென நியாபகம் வர, “வந்த அன்னைக்கே மூஞ்சில அடிச்ச மாதிரி பேசி ஒதுக்கின உன்னையும் லேசுல விட்டுடமாட்டேன்.. என்னைக்கா இருந்தாலும் நீ என்கிட்ட வந்து தானே ஆகனும்.. அதுக்கு பிறகு தெரியும் செய்தி.. இன்னைக்கு என்னோட ஆட்டத்த உன் ஆத்தா கிட்ட இருந்து ஆரம்பிக்கிறேன்.. அப்போதான் என் வழியில வந்தா என்ன நடக்கும்னு அதுக்கு புரியும்” என்று சேலையின் முந்தியை உதறி இடுப்பில் சொருகிவிட்டு மாமியாரை கவனிக்க சென்றிருந்தாள்..


அன்புடன்,
மிர்ஷி ❤

கருத்துக்கள் இங்கே
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -08


“என்ன அத்த்த்த..என் புருஷன் என்ன சொல்லிட்டு போராரு ?” நக்கல் சிரிப்புடன் வந்து முன்னே நின்றவளை வள்ளியம்மை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.. அதில் சற்றே திணறி தான் போனார்..


இருந்தும் மனதிற்குள் “ஓஹோ.. இன்னும் வாழவே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள இவ புருஷனாமே! என்ன எகத்தாளத்தோட பேசுறா? அதுவும் என்கிட்டையே..” என நினைத்துக்கொண்டவர்,


“எம்மாடி! அவன் உன் புருஷன் தான்.. யாரு இல்லைனு சொன்னது? ஆனாலும் எனக்கு மவன்னு முதல் உரிமை இருக்கிறத என்னைக்கும் மறந்துடாத..” என ஆரம்பித்து,


ஆமா.. அது என்னத்தா ? உன் அக்காளுங்க ரெண்டு பேரும் என் மவனோட சம்பாத்தியத்தில காலத்த ஓட்டிபுடலாம்னு கங்கணம் கட்டிக்கிட்டு வராளுங்களோ! என்னமோ அவளுங்க இங்க கைநிறைய கொடுத்துக்கிட்டு, அதுனால கூச்சமே இல்லாமல் திரும்ப வாங்கிட்டு போறதா நினைப்பு போலவே.. அதுவும் வாங்கிட்டு போன போது அத்தனை பல்லையும் காட்டிட்டு போராளுங்க! சொல்லி வச்சுப்புடுத்தா.. இனிமே இங்க வரும் போது என் மவனே எதாவது கொடுக்குறேனு சொன்னாலோ இல்லை கொடுத்தாலோ வேண்டாம்னு சொல்லி பழகனும்.. இல்லையா என் வீட்டு நடைல கூட யாரையும் அப்புறமா ஏத்த மாட்டேன்.. என்ன! வசமா என் மவன் தலையில முளகாய அரச்சிபுடலாம்னு பார்க்கிறாளுகளோ.. அது நா இருக்குற வரைக்கும் நடக்காது புள்ள..” என எடுத்து நிதானமாக சொல்லவேண்டியதை மாமியாரின் அடக்கி ஆளும் தோரணையுடன் சொல்லி, சொந்த செலவில் ஆப்பை தனக்கு தானே வைத்துக்கொண்டார் வள்ளியம்மை..


மாமியாரின் பேச்சில் முகம் கறுத்து போனது லட்சுமிக்கு.. என்ன தான் இரண்டாந்தார வாழ்க்கைக்கு இப்போது பழகி, இது அவள் வீடாக மாறிப் போனாலும்.. அவள் வெறுங்கையுடன் தான் இந்த வீட்டிற்க்கு அனுப்பப்பட்டவள் என்பதை முதன் முறையாக தான் என்றாலும் இந்த நேரத்தில் குத்திக்காட்டி பேசியது தன் தன்மானத்தை சீண்டியதாகவே கருதினாள்..


அதிலும் தேவையே இல்லாது தமக்கையரை இழுத்தால் யார் தான் சும்மா இருப்பார்கள்.. அவர்கள் ஒன்னும் இவர்களிடம் வேண்டி வந்து கெஞ்சி எடுத்து செல்லவில்லையே..!


குட்ட குட்ட குனிந்தால் தானே மாமியார் அடிப்பார்.. இனி அத்தகைய நிலையில் அவள் இருக்கப் போவதில்லை என தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.. விளைவு அவளிடமிருந்த ஒட்டுமொத்த விஷத்தையும் எதிரில் நின்ற பல்லற்ற பாம்பிடம் (மாமியாரிடம்) கக்கினாள்..


“யாரு இல்லன்னு சொன்னது அத்த்த்த? அவரு உங்க பையன் தான்.. இந்த மாடமாளிகை உங்க வீடு தான்.. இதோ இந்த கட்டில், அதோ அந்த பாத்திரம் எல்லாம், எல்லாமே உங்களோடது தான்..” என டன் கணக்கில் நக்கல் வழிய சொன்னவளை 'புரிந்து நடந்துக்கொண்டால் சரிதான்' என்பது போல் மிதப்பாய் ஒரு பார்வையுடன் வள்ளியம்மை பார்க்க..


“ஆனால் அதெல்லாம் ஆறு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும்.. எப்போ நா இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சனோ.. த்தச்சு த்தச்சு த்தச்சு.. இல்லையில்லை எப்போ என்னை உங்க மருமகளா நீங்க முடிவு பண்ணிட்டு போனீங்களோ அப்போவே இந்த நினைப்பு உங்க மண்டையை விட்டு போயிருக்க வேண்டாமா அத்த்த்தையம்மா !! அப்புறம் எனக்கு இந்த வீட்டுல என்ன மருவாத நீங்களே சொல்லுங்க??” என அபிநயத்துடன் பேசியவள் அத்துடன் நில்லாது,


“இப்போ உங்க பையனையே எனக்கு மட்டும் தான் சொந்தம்னு கட்டி வச்சிடீங்க.. அப்போ அவரோட சொத்துலயும் எனக்கு உரிமை இருக்கு தானே! அதை அவரே அவரோட கையால என் சொந்தங்களுக்கு கொடுத்தா உங்களுக்கு எங்க குத்துது.. இங்க பாருங்க.. இளமையான மருமக வேணும்னு ஆசைப்பட தெரிஞ்சிதுல.. அப்போ இதையெல்லாம் அனுபவிச்சு தான் ஆகனும்..” என சொல்லிக்கொண்டே போக..


கோவம் விண்ணைத் தொட அவளை பாதியில் 'நிறுத்து' என்று பணித்த வள்ளியம்மை,


“ அது என்னத்தா ஆறு மாசம் முன்னாடிங்குற கணக்கு.. இந்த கட்ட வேகுறவரைக்கும் இது என்னோட வீடு மட்டும் தான்.. பல ஆயிரத்துக்கு சீர் செய்து வந்த அவளே (உமையாள்) என்னை எதிர்த்து பேச துணிவில்லாம இருந்துட்டு போனா! ஆனா நீ ஒரு வேளை சோத்துக்கே சிங்கியடிச்சிட்டு வாழ்ந்த வெறும் அன்றாடங்காய்ச்சி.. உனக்கு என்னை எதிர்த்து பேசுற துணிவு வந்துட்டா? என்ன சொன்ன.. என் பையன் சொத்து உனக்கும் உன் சொந்தத்துக்குமா? அவன் ஒன்னும் இளிச்சவாயன் இல்ல கண்டவளுக்கும் உழச்சி போட.. ஒழுங்கு மரியாதையா என் சொல் படி கேட்டு நடந்தா காலம் பூரா இந்த வீட்டுலயே வாழ்ந்து பொலச்சிக்கலாம்..” என்றார் குரலை சற்று உயர்த்தி மருமகளின் பேச்சை அடக்கும் முனைப்போடு..


அதற்கு அடங்குபவளா லட்சுமி? சும்மாவே ஆடக் காத்திருந்தவள் மாமியாரின் தூண்டுதலில் வெகுவாக துள்ளி எழுந்தாள்..


“என்னது நீங்க சொன்னதை கேட்டு பொலச்சிக்கணுமா..நல்ல வேடிக்கையான பேச்சு..!” என்றவள் ஏதோ நகைச்சுவை கேட்டது போல் சிறிது நேரம் சிரித்து வள்ளியம்மையை உசுப்பேத்தி விட்டு,


“எப்படி எப்படி..! நீ சொன்ன மாதிரி உன் குடும்பத்துக்கே சோறு வடிச்சுக் கொட்டி, பச்சபுள்ளையில இருந்து வயசான கிழம் உனக்கு வரைக்கும் ஆயா வேலைப்பார்த்து கடைசில சம்பளமே இல்லாத வேலைக்காரியா இருந்து காலத்தை கடத்திட்டு போக சொல்றியா கிழவி ?” என சற்று நேரத்திற்கு முன் சிரித்த சிரிப்பு காணாமல் போக பல்லைக் கடித்துக்கொண்டு கோவத்தில் கத்தியவளை அதிர்ச்சியாக பார்த்தார் வள்ளியம்மை..


ஆரம்பத்தில் அவளின் ஆக்ரோஷமான பேச்சில் கோவம் கொண்டு நின்றிருந்தவர், முடிவில் அவள் மரியாதையற்ற விளிப்பில் மிரண்டு போனார்.. 'என்ன நெஞ்சலுத்தம் இவளுக்கு' என அவளிடம் ஒற்றைக் கையை நீட்டி எச்சரிக்கும் தோணியில்,


“என்னட்டி.. கிழவினு சொல்ற அளவுக்கு கொழுப்பு ஏறிப்போயி கிடக்குறியா.. ஒரு வேலையும் செய்யாம நாளு முழுக்க தோப்பையும் தெருவையும் சுத்திட்டு வந்து ஒய்யாரமா தின்னுட்டு தூங்க விட்டதுக்கு என்ன பேச்சு பேசுற நீ..! என்னையே கிழவினு சொல்லுற தைரியம் அதுனால தான வந்தது.. இரு இன்னும் கொஞ்ச நேரத்துல என் மவன் வந்துரட்டும்.. அப்புறம் தெரியும் நா கிழவியா யாருன்னு..” என்றவர் விறுவிறுவென வெளியே இருந்த திண்ணையில் போய் அமர்ந்துகொண்டார்.. ஆனால் அவர் உள்ளமோ கொதித்துக் கொண்டிருந்தது..


“எம்மாடி எம்மா என்னா வாய் நீளம் அவளுக்கு! ஊரு பேரு தெரியாத கழுதைய கட்டி வச்சி நம்ம காலம் முழுக்க மாணிக்கத்திடமிருந்து எந்த குத்தல் பேச்சுக்கும் ஆளாகாம தப்பிச்சு நிம்மதியோட வாழலாம்னு ஆசைப்பட்டா கடைசியில இப்படி ஒரு அடங்காப்பிடாரிய கட்டி வச்சிட்டேனே.. கூடாது..இதை இப்படியே விடக்கூடாது.. வரட்டும்.. அவன் வந்ததும் இதையெல்லாம் சொல்லிக்கொடுத்து உன்ன ஓட ஓட விரட்டுறேனா இல்லையான்னு மட்டும் பாரு..அப்புறம் புரியும்டி என்கிட்ட பேசினது எவ்ளோ பெரிய தப்புன்னு..” என சபதம் மேற்கொண்டு காத்திருந்தார் சுந்தரத்தின் வருகைக்காக வழி மேல் விழி வைத்து..


காத்திருந்ததற்கு பலனாக வீட்டிற்குள் நுழைந்தார் சுந்தரம் வழக்கத்தை விட சிறிது தாமதமாக..


அவன் வரவை உணர்ந்த தாயாரோ, “எப்பாஆஆஆ சுந்தரோ..” என எழுந்து சென்றவர் அவனை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டார்..


அதில் திகைத்தவன் தாயின் அழுகையை குறைக்கும் பொருட்டு,


“ஆத்தா..ஆத்தா…என்ன இது?..என்ன ஆத்தா வெளிய நின்னுக்கிட்டு இப்படி அழுற.. என்னாச்சு?? புள்ளைங்க எங்க?? அவங்களுக்கு ஒன்னுமில்லையே?.. நல்லா தான இருக்காங்க? ம்ப்ச்..எதுவா இருந்தாலும் கொஞ்சம் அழாம சொல்றியா… நிலா எம்மா வெண்மதி.. எங்க இருக்கீங்க..” வாசலில் வைத்தே தன்னை கட்டிக்கொண்டு அழுததால் என்னவோ ஏதோவொன்று அந்த சிறிது நேரத்திற்குள் ஓராயிரம் விதமான எதிர்மறை எண்ணங்களுக்கு ஆட்பட்டு பயந்துப் போனான் சுந்தரம்..


தாயின் அழுகை அதிகமாகி கொண்டே செல்ல, அப்போதுதான் ஒருவேளை லட்சுமிக்கு ஏதாவது நடந்திருக்குமோ என்ற எண்ணம் உருவானது.. அதில் அதுவரை இருந்த நிதானம் இருந்த இடம் தெரியாமல் போய்விட இதயத்தின் துடிப்பு வேகமாகியது.. தன் தாய் இப்போது சொல்லும் நிலையில் இல்லை என நினைத்தவர், தாயிடம் கேட்பதற்கு பதில் தானே சென்று பார்த்து விடலாம் என விலகி செல்லும் நேரம்,


"எப்பாஆஆஆ.. சுந்தரோ.. உன்ன எப்படி எல்லாம் பாசமா வளர்த்தோம் நானும் உன் அய்யனும்..! உனக்கடுத்து ஒரு தம்பியோ தங்கச்சியோ வந்தா உனக்கு கிடைக்க வேண்டிய பாசம் கிடைக்காம நீ ஏங்கிப் போயிடுவியோனு தானே அடுத்த குழந்தையே வேண்டாம்னு உன் ஐயாக்கிட்ட சொன்னேன்.. ஆனா வந்தவ என்ன இப்படி நடுத்தெருவுக்கு விரட்டிடுவானு தெரிஞ்சிருந்தா அன்னைக்கே வேற ஒரு பொட்டப் புள்ளைய பெத்து இப்படி அனாதையா நிற்காம அவ வீட்டுக்கு போயிருப்பேனே..” என்று நீலிக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்து விட்டார்..


“என்ன ஆத்தா சொல்ற.. லட்சுமி உன்ன வீட்டை விட்டு வெளியேற சொன்னாளா..?” அதிர்ச்சியாகி விட்டான் சுந்தரம்..


வள்ளியம்மையோ ஆம் என்றும் சொல்லாமல் இல்லை என்றும் சொல்லாமல் சேலையால் வாயை பொத்தி அழுதுக் கொண்டிருந்தார்..


“லட்சுமியா அப்படி செய்தா?" என அவன் யோசிக்க " லட்சுமி அப்படி செய்திருக்க மாட்டாள்..” என அவன் மனமோ சந்தேகத்திற்கு இடமின்றி ஏனோ அடித்து சொல்லியது.. ஏனென்றால் அவள் தான் ஒரு சாதுவான பெண் ஆயிற்றே அவனைப் பொறுத்தவரை..


எனவே தாயிடம் திரும்பி, “என்ன நடந்தது தெளிவா சொல்லு ஆத்தா.. அவ அப்படிதான் சொன்னாளா இல்லைன்னா நீயா எதுவும் தவறா புரிஞ்சிட்டு இப்படி வந்து ஒப்பாரி வைக்குறியா ..” தாயின் குணத்தை நன்கு அறிந்தவனாய் ஒருவித அழுத்தத்துடன் கேட்டிருந்தான்..


“ஓஹோ.. அவ்ளோ தூரம் ஆகிப்போச்சோ.. நா சொன்னதையும் நம்பாம என்மேல தான் தப்பிருக்கும்னு நினைச்சு எப்போ நீ என்னையே எதிர்த்து கேட்டுட்டியோ அப்போவே தெரிஞ்சு போச்சுப்போ அவளோட முந்தானையில உன்னை முடிஞ்சு வச்சிப்புட்டானு.. இனி நா என்ன சொன்னாலும் நீ நம்ப போறதில்ல.. அதுனால் இனிமே நா இந்த வீட்டுல இருக்க போறதுமில்ல.. போங்க நீங்க எல்லாரும் சந்தோஷமா இருங்க..நா போறேன்.. எங்கயாவது போய் செத்து போறேன்..” என்றவர் மூக்கை சிந்திக்கொண்டு வெளியில் காலடி எடுத்துவைக்க,


“என்ன ஆத்தா இது.. ஏன் இப்படிலா பேசுற??..” என பதறி விட்டான் சுந்தரம்..


“இது உனக்காக நா கட்டின வீடு ஆத்தா.. யாராவது உன்ன போனு சொன்னா உடனே போயிடுவியா! அவங்களை எதிர்த்து என் மவன் எனக்காக கட்டிக்கொடுத்த இந்த வீட்டுல தான் இருப்பேன்னு சொல்ல தெரியாதா? அத விட்டுட்டு இப்படி வந்து அழுதுக்கிட்டு நிற்குற.. சரி இப்போ நீ உள்ள போ.. லட்சுமிய நா பார்த்துக்கிறேன்.. நீ போய் புள்ளைங்கள சாப்பிட வச்சி தூங்க வை..” என சமாதான படுத்தி அனுப்பி வைத்தான்.. அவரும் ஏத்திவிட்ட வரை லாபம் என்பது போல் தன் கண்ணீரை துடைத்து சோர்ந்த நடையுடன் செல்வது போல் காட்டிக்கொண்டு உள்ளே சென்றார்..


மகன்களை பெற்ற தாய்மார்களுக்கு மட்டும் தானே தெரியும், தங்கள் கண்ணீர் அவர்களின் உச்சக்கட்ட பலவீனம் என..! அந்த ஆயுதத்தை சரியாக பிரயோகித்தது அந்த தாயுள்ளம்..


அவர் சென்றதும் நடந்த அனைத்தையும் மனதிற்குள் ஓட்டிப் பார்த்தான்..


அப்போதே அவன் வெளியில் செல்லும் போது தாயுடன் ஏற்ப்பட்ட தகராறு நியாபகம் வர, மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான் இதை எப்படி மறந்தேனென. அதுவே சொல்லியது யார் மீது தவறு இருக்கும் என அவர் யூகித்துவிட்டார் என்பதை..


அதற்கு மேலும் தாமத்திக்காமல் உடனே லட்சுமியை பார்க்க அடுப்பங்கரை பக்கமாக செல்ல, அங்கே அவன் கண்ட காட்சியில் சர்வமும் நடுங்க அப்படியே சிலையென நின்றுவிட்டான்…



என்ன நடந்திருக்கும் என யூகித்தவர்கள் கமென்ட் டப்பாவை தாராளமாக தட்டலாம் டியர்ஸ்..


அன்புடன்,
மிர்ஷி ❤


கருத்துக்கள் இங்கே

 
Status
Not open for further replies.
Top