All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஜோவின் "பனி விழும் மலர்வனம்" - கதை திரி

Status
Not open for further replies.

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு நட்புகளே!

பனி விழும் மலர்வனம்! கதையின் அத்தியாயங்கள் இங்கு பதிவிடப்படும்

அன்புடன்
ஸ்ரீஜோ
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு நட்புகளே!

பனி விழும் மலர்வனம் - முதல் மற்றும் இரண்டாம் அத்தியாயம் பதிவிட்டுள்ளேன்.

அத்தியாயம் - 1 & 2

படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு நட்புகளே!

பனி விழும் மலர்வனம் - மூன்றாம் அத்தியாயம் பதிவிட்டுள்ளேன்.

அத்தியாயம் - 3

படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பனி விழும் மலர்வனம்!




அத்தியாயம் – 3

வெள்ளி மறைந்து ஞாயிறு மெல்ல எட்டிப் பார்க்க, கதிரவனின் சூரிய ஒளிக்கற்றை மெல்ல அருளின் அறைக்குள் எட்டிப்பார்த்தது.

இரவு உறங்க தாமதம் ஏற்பட்டதால், எப்பொழுதும் எழும் அந்த அதிகாலை வேலையில் உறங்கிக்கொண்டு இருந்தான் அருளரசு.

விடிய விடிய உறங்காமல் கிடந்த அனிக்காவின் விழிகளை, அப்பொழுதுதான் தூக்கம் மெல்லத் தழுவத் தொடங்கியது.

அருளின் நெஞ்சில் சாய்ந்தவாறே, குழப்பமும், வருத்தமும் சூழ இரவெல்லாம் தவித்துக் கிடந்த அனிக்கா மெல்ல உறங்க ஆரம்பித்தாள்.

முன் தின இரவு, முன்னெச்சரிக்கையாக அருள் அலாரம் வைத்திருக்க, நேரம் தாண்டி உறங்குபவனை மெல்ல எழுப்பியது அலாரம். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்த அருள், அதன் தலையில் தட்டி அதை அடக்கிவிட்டு, தன்னில் பொதிந்து உறங்கும் மனைவியை இறுக்கிக்கொண்டு மீண்டும் உறக்கத்தைத் தொடர ஆரம்பித்தான்.

ஒன்பது மணி வரை இருவரும் வராமல் இருக்க, வேறு வழியின்றி சிங்காரம் அருளின் தொலைப்பேசியில் அழைத்தார்.

கண்கள் திறவாமலேயே அதனை அட்டென்ட் செய்து காதில் வைத்தவன், சிங்காரத்தின் குரலில் அடித்துப் பிடித்து எழுந்து உட்கார்ந்தான்.

“சாரி மாமா. அலாரம் வைச்சிருந்தேன், என்னாச்சுன்னு தெரில, அடிக்கல, ஒரு கால் மணி நேரம் மாமா, ரெடியாகி, வரோம்” என்று சொன்னவன், சற்று முன் தன் நெஞ்சில் இருந்து கீழே தள்ளிவிட்டு இருந்த அனியைப் பார்த்தான்.

மெல்ல அவளின் பக்கம் குனிந்து, அவள் இதழ்களில் இதலொற்றியவன், மெல்ல அவளை எழுப்பினான்.

“அனி... அனிக்குட்டி... ஏய் அணில் குட்டி.... எழுந்திரிடி... மணி பத்தாச்சு...”

சலனமே இல்லாமல் அவள் தூங்க, “இவளை” என்று வாய்க்குள் முனகியவன், அவளை மெல்ல உலுக்கி, எழுப்பி அமரச் செய்தான்.

“ப்ச்... என்ன?” என்று அவள் சிணுங்கலோடு கேட்டுக்கொண்டே மீண்டும் படுக்கத் தயாராக,

“ஏய் அனிக்குட்டி... மணியாச்சு... கீழே இருந்து கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க, கொஞ்சம் வா. அப்புறமா வந்து இன்னிக்கு முழுக்க தூங்கு” என்று பலவிதமாக சொல்லிப் பார்த்தவன், அவளை எழும் வழியைக் காணாததால் அவளைத் தூக்கிக்கொண்டு குளியலறைக்கு சென்றான்.

அவன் செயலில் ஒருவாறாக தூக்கம் கலைந்து, அவன் செயல் உணர்ந்து, அவன் கையில் இருந்து இறங்க முயற்சித்தவளை, “ஷ்....” என்று குரல் கொடுத்து அடக்கியவன், பாத்டப்பில் தான் இறக்கி விட்டான்.

“இன்னும் பத்து நிமிசத்துல கீழ இருக்கனும், ஒழுங்கா சீக்கிரம் குளிச்சு ரெடியாகி வா.” என்றவன் வெளியேறிய அடுத்த பத்தாவது நிமிடம், பாத்ரூமில் இருந்த டவலைச் சுற்றிக்கொண்டு அனிக்கா வெளியே வந்தாள்.

அவள் வந்த அடுத்த நொடி குளியலறைக்குள் புகுந்தவன், அடுத்த பத்தாவது நிமிடம் கீழே சென்றான். அவன் சென்ற பின்பும் மேலும் சில நிமிடங்களைக் கடத்தி, ஒரு பட்டு சேலையை அணிந்து கொண்டு கீழே சென்றாள் அனிக்கா.

அங்கு அவளுக்காக மேனகா காத்திருந்தாள்.

“யாரோ நேத்து பேய் முழி முழிச்சுக்கிட்டு போனாங்க. இப்ப எழுப்பினா கூட வர மாட்டீங்கரான்கப்பா” என்று அவள் அனியை கிண்டல் அடித்தாள்.

“அண்ணி வேண்டாம்” என்று அவளிடம் சிவந்த முகத்துடன் சிணுங்கிய அனியை,

“சரி சரி... வந்து விளக்கேத்துங்க... அப்புறம் உங்க கதையை கேட்கிறேன்.. டைம் ஆச்சு... நல்ல நேரம் போய்டும்” என்றவாறே அவளை அழைத்துச் சென்று விளக்கேற்ற வைத்தாள்.

அடுத்து சமையல் அறையில் அவள் கையால், பால் காய்ச்ச வைத்து, பாலை ஊற்றி அனைவருக்கும் கொடுக்க வைத்தாள்.

ஹாலில் உட்கார்ந்து அனைவருடனும் பேசிக்கொண்டு இருந்த அருள் வெறும் புன்னகையுடன் அவளின் கையில் இருந்த டிரேயில் இருந்து பாலை எடுத்துக்கொண்டான்.

அன்று காலை உணவும் பொதுவாக பரிமாறப்பட, கேலிப் பேச்சுக்கள் இன்றி அனிக்கா தப்பித்தாள். ஆனால் தனியாக மாட்டும் போது அவளை மேனகா கேலிகளில் ஒருவழியாக்கி இருந்தாள்.

மேனகா அந்த வீட்டின் பழக்கவழக்கங்களை அவளுக்குத் தெரிந்த மட்டிலும் சொல்ல, அவள் சொல்வதை ஒரு புன்னகையுடன் கேட்டுக்கொண்டாள், அனிக்கா.

பொதுவாக சில விஷயங்கள் பேசிக்கொண்டு இருந்த சிங்காரம், இறுதியில் “சரி தம்பி. குல தெய்வம் கோவில்ல உச்சி கால பூஜைக்கு போய்ட்டு வந்துடுங்க” என்றவாறே கிளம்பினார்.

“அனி...” என்று ஹாலில் உட்கார்ந்து கொண்டே அருள் குரல் கொடுத்தான்.

அவன் குரல் கேட்ட மேனகா, “உங்களைத்தான் அண்ணா கூப்பிடறார். போங்க” என்று சொல்ல,

அவளும் சமையல் அறையில் இருந்து வெளியே வந்தாள்.

“போயி ரெடி ஆகு. நம்ம குலதெய்வம் கோவிலுக்கு போகனும். மேனகாவை ஹெல்ப்க்கு கூப்பிட்டுக்கோ. சீக்கிரம் கிளம்பனும். டைம் ஆய்டுச்சு” என்று சொல்லிவிட்டு, “எனக்கு பின்னாடி கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சுட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு அவள் பதில் கேட்காமலேயே அவன் பின்னால் சென்றுவிட்டான்.

இருந்த ஒன்றிரண்டு உறவினர்களும், அவளிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டனர்.

கோவிலுக்கு கொண்டு செல்ல, முன்பே பொருட்கள் எடுத்து வைக்கப்பட்டு இருக்க, அனி ஒருமுறை சரி பார்த்துவிட்டு, காரில் எடுத்துவைக்கச் சொல்லி வேலையாளை அனுப்பிவிட்டு காருக்கு செல்ல, அதே நேரம் அருளும் வந்து சேர்ந்தான். மேனகா இருவரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள்.

“போலாமா?”

“ம்ம்” என்பதாய் மெல்லிய தலையசைப்புடன் நிறுத்திக்கொண்டு பின் பக்கம் காரில் ஏறப்போனவளை கரம் பற்றி நிறுத்தியவன், “நான் தான் டிரைவ் பண்ண போறேன். முன்னாடி உட்கார்” என்று சொல்லிக் கொண்டே அவளை முன் பக்கம் கதவு திறந்து உட்கார வைத்தவன், அடுத்தபக்கம் சென்று காரில் ஏறி, காரை ஸ்டார்ட் செய்து கோவிலை நோக்கி செலுத்தினான்.

கோவிலில் தம்பதி சமேதராய் சாமி கும்பிட்டு, பிரகாரம் சுற்றி, வருவோர், போவோரிடம் வாழ்த்துக்கள் வாங்கி, ஒரு வழியாக கோவிலில் இருந்து கிளம்ப மணி இரண்டாகி இருந்தது.

“இன்னிக்கு மதியம் நம்ம கல்யாணம் சார்பா, நம்ம தோட்டத்துல இன்னிக்கு விருந்து. நாமலே லேட்டா போறோம்”

“---------------------------------------“

“என்னாச்சு மேடத்துக்கு? வாயே திறக்க மாட்டிங்கறீங்க?”

“--------------------------------------“

“என்னாச்சு அனிக்குட்டி?”

“ஒன்னும் இல்ல”

“டயர்டா இருக்கா? டோன்ட் வொர்ரி. நாலு மணிக்குள்ள பங்க்சன் முடிஞ்சுடும்”

“----------------------------------------“

“நிஜமா... நீ வந்து ரெஸ்ட் எடுக்கலாம் சரியா?”

“---------------------------------------------“

பதில் சொல்லாமல் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்த அனியை பார்த்தவன், மாலை அவளிடம் பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.

விருந்து நல்லபடியாக முடிந்து, அங்கிருந்தவர்களை அனுப்பிவிட்டு, அவர்கள் வீட்டிற்குத் திரும்ப மாலை ஆறுமணி ஆகி இருந்தது.

வீட்டிற்குள் நுழைந்ததுமே, அனி செய்த முதல் வேலை, உடை மாற்றிக்கொண்டு படுத்து உறங்க ஆரம்பித்தது தான்.

இரண்டு நாட்களாக அவளின் அலைச்சலை நன்கு அறிந்தவனாகையால் அருளும் அவள் உறக்கத்தைக் கெடுக்காமல் பார்த்துக்கொண்டான்.

மறுநாள் காலை அவனுக்கு முன்பாக எழுந்தவள், குளித்து முடித்து, கீழே இறங்கி வந்தாள். தோட்டத்தில் சென்று பூக்கள் பறித்து, அதனை மாலையாகத் தொடுத்து பூஜை அறையில் இருந்த சுவாமி படங்களுக்கு சாத்தினாள்.

விளக்கேற்றி, கற்பூர தீபமேற்றி கடவுளை கண்கள் மூடி வழிபட்டுக் கொண்டு இருந்தவள், அருகே வந்து நின்ற அருளும் அவளுடன் சேர்ந்து சாமி கும்பிட ஆரம்பித்தான்.

தரையில் விழுந்து வணங்கியவள், விபூதி, குங்குமம் இட்டுக்கொண்டு அவனுக்கும் வைத்துவிட்டு, சமையலறை நோக்கி நகர்ந்தாள்.

சில நிமிடங்கள் கழித்து இருவருக்கும் சத்துமாவுக் கஞ்சி எடுத்துகொண்டு வந்தவள் ஹாலில் அருளைக் காணாது தேடினாள்.

அவள் அருளைத் தேடுவதைக் கண்ட வேலையாள், “அம்மா, தம்பி பின் பக்கம் போனாருங்க” என்று சொன்னார்.

“சரிண்ணா. நீங்க வேலையை பாருங்க” என்றவள், வீட்டின் பின் பக்கம் சென்றாள்.

“பின் பக்க வாசல் படியில் அமர்ந்து, அங்கிருந்த தோட்டத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த அருளின் அருகில் வந்து அமர்ந்தவள், அவனுக்கு கையிலிருந்தவற்றில் ஒன்றைக் கொடுத்துவிட்டு, மற்றொன்றைத் தானும் பருக ஆரம்பித்தாள்.

“என்னாச்சு என் அணில் குட்டிக்கு? நேத்து முகத்தை தூக்கி வைச்சு இருந்தீங்க?”

“-----------------------------------------------------------“

“ஹோ.. பேச மாட்டீங்களோ?”

“----------------------------------------------------------“

“ஏய்! சொல்லுடி? என்னாச்சு? என் மேல என்ன கோபம்?”

“----------------------------------------------------------“

“நான் ஏதாவது தப்பு பண்ணினேனா?”

“-----------------------------------------------------------“

“ம்ஹும்... பதில் பேச மாட்ட... அப்படித்தான! சரி விடு. உன்னை எப்படி என் பேச வைக்கிறதுன்னு எனக்கு தெரியும். இன்னிக்கு நாத்து நடவு இருக்கு. இனிமே உன் கையால தான் ஆரம்பிக்கப் போறோம்.”

“-----------------------------------------------------------“

“கிளம்பி இரு. போலாம். அப்புறம் நேத்தே ராஜம் அத்தை சொன்னாங்க. மெட்டி போடலை, வாங்கிப் போட்டு விடுன்னு. உன்னோட மெட்டியெல்லாம் பீரோல இருக்கு. புதுசு இன்னும் கொஞ்சம் இருக்கும். உனக்கு எது வேணுமோ எடுத்து வை. வந்து போட்டு விடறேன்”

“ம்ம்”

“ஹப்பா இதுக்காவது பதில் சொன்னியே. காலைல சாப்பிட்டு கிளம்பலாம். ரெடியாகு. நான் இந்த செடிகளுக்கு தண்ணி பாய்ச்சிட்டு வரேன்” என்று அவள் கையில் தம்ளரைத் திணித்தவன் வேகமாக எழுந்து சென்று தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்தான்.

அவள் பொறுமையாக குடித்து முடித்துவிட்டு, இரண்டு டம்ளரையும் கொண்டு சென்று கிட்செனில் போட்டுவிட்டு, அவர்களது அறைக்குத் திரும்பினாள்.

அவன் சொன்னது போலவே பீரோவில் இருந்த பெட்டிகளை ஆராய்ந்து அன்றைய புடைவைக்கு தோதாக மூன்று விரல்களுக்கு மெட்டிகளையும், சலங்கைகள் நிறைந்த கொலுசு ஒன்றையும் அவள் தேர்வு செய்து வைக்கவும், அருள் வரவும் சரியாக இருந்தது.

“இன்னுமா எடுத்து வைக்கற?” என்று சிரித்துக்கொண்டே வந்தவன், “எடுத்துவச்சுட்டியா?” என்று அவள் படுக்கையில் எடுத்து வைத்திருந்ததை எட்டிப் பார்த்தான். அவள் பெட்டிகளை பீரோவில் அடுக்கிவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.

“டிரெஸ்க்கு மேட்சா! எனக்குத் தெரியுமே! நீ மேட்சுக்கு மேட்சா தான் போடுவேன்னு, அதானே பார்த்து பார்த்து வாங்கி வைச்சேன்” என்று சொல்லியவன், அவள் எடுத்து வைத்ததை எடுத்து, அவனே அவளுக்கு போட்டு விட்டான்.

கீழிறங்கி இரண்டு முறை குறுக்கு நெடுக்காக நடந்து பார்த்தவள், திருப்தியாகி, “சரி நான் போயி டிபன் எடுத்து வைக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே அவன் பதிலை எதிர்பார்க்காமல் கீழே சென்றாள்.

அவள் கீழே வரவும், மேனகா வரவும் சரியாக இருந்தது. “என்னமா? புதுப்பொண்ணு? இன்னிக்கும் லேட்டா?”

“இல்லண்ணி! இன்னிக்கு நேரத்தோட எழுந்துட்டேன்”

“சரி சரி, சீக்கிரம் டிபன் சாப்பிட்டுட்டு கிளம்புங்க அண்ணி”

“எங்க?”

“மெட்டி வாங்க. நேத்து எங்கத்தை சொன்னாங்க. உங்களைக் கூட்டிக்கிட்டு போயி வாங்கிட்டு வர சொல்லி, திடீர் கல்யாணம்ல, அதான் உங்களை கூட்டிட்டு போய் வாங்கிட்டு வரலாம்ன்னு”

“ஹா... ஹா...” என்று அவள் வாய்விட்டு சிரிக்க,

“என்னண்ணி? என்னைப் பார்த்தா சிரிக்கிற மாதிரியா இருக்கு?”

“ப்ச். பின்ன. இங்க பாருங்க.” என்று கால்களைக் காட்டியவள், “இதுக்குத்தான்” சிரிச்சேன்.

“இது புதுசா இருக்கே? யார் வாங்கிட்டு வந்தாங்க?”

“புதுசுதான்” என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே,

“டிபன் ரெடியா?” என்று அருள் வந்தான். “வாம்மா?”

“வரேன்ணா”

“என்னம்மா காலைலேயே இந்தப்பக்கம்?”

“அத்தை, அண்ணிய கூட்டிட்டு போயி மெட்டி வாங்கித் தர சொன்னங்க. அதான் வந்தேன்”

“அவ தான் டஜன் கணக்குல வைச்சிருக்காளே”

“அதத்தான் அண்ணியும் சொன்னங்க”

“சரிம்மா வா சாப்பிடலாம்”

“இல்லன்னா. சாப்பிட்டுட்டு தான் வந்தேன். சரிண்ணா. நான் கிளம்பறேன்”

“இரும்மா போலாம்”

“இல்லன்னே. அத்தை நாளன்னிக்கு தாலி பிரிச்சு கோர்க்க ஏற்பாடு பண்ணி இருக்காங்க. அதுக்கு தாய் வீட்டு சார்பா வாங்கற பொருளெல்லாம் மாமாவும் அத்தையும் வாங்க போறாங்க. நாங்க கடைவீதி போய்ட்டு வந்தததுக்கு அப்புறம் போறதா இருந்தாங்க. இப்ப நான் போனா சீக்கிரமா போய்ட்டு சீக்கிரமா வருவாங்க”

“சரிம்மா”

“வரேன்ணா... வரேண்ணி...” என்றவள் புன்னகையுடன் விடைபெற்றுக் குழப்பத்துடன் வெளியேறினாள்.

அவள் செல்வதையே வேதனையுடன், பார்த்துக்கொண்டு இருந்த அனிக்காவைப் பார்த்த அருள், “என்னாச்சு அனிம்மா?”

“அம்மா நியாபகம் வந்துடுச்சு” என்று கண்கள் கலங்கியவாறே சொன்னவளை அணைத்தவன்,

“ப்ச்... இப்ப நீ என் பொண்டாட்டி, அதை மனசுல வைச்சுக்கிட்டு சந்தோசமா இரு. நீ சந்தோசமா இருக்கறது தான் எனக்கு முக்கியம் சரியா?”

“ம்ம்”

“சரி இப்ப நாம சீக்கிரம் கிளம்பனும். வா” என்று அவளை உணவருந்த அழைத்துச் சென்றான்.

மலர் வனம் பூக்கும்....











 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பனி விழும் மலர்வனம்!


அத்தியாயம் – 4



காலை வெயிலின் இதத்தில், அருளும், அனிக்காவும் அவர்களது வயலை நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தனர்.

வழியில் தென்படுவோர் சொல்லும் வணக்கத்திற்கு புன்னகையும், தலையசைப்பையும் கொடுத்தவாறே அவன் வண்டியோட்ட, எவ்வித உணர்வுகளும் இல்லாத நிர்மலமான முகத்துடன் அனி அமர்ந்து இருந்தாள்.

நாற்றுக் கட்டுக்களை வைத்து, பூஜையிட்டு முதல் நாற்றுக் கட்டினை எடுத்து அவள் கையில் கொடுத்தான் அருளரசு.

பெயருக்கு புன்னகை சிந்தியவள், மெல்ல அவன் கையில் இருந்து வாங்கிக்கொண்டு வயலின் முன் வந்து நின்றாள். புடைவையைத் தூக்கி சொருகி, வலது காலிட்டு கீழே இறங்கியவள், கிழக்கு புறமாக நின்று நாற்றுக் கட்டுடன் சூரியனை வணங்கி, நாற்று நடத்தயாரானாள்.

நெடுநாள் கைதேர்ந்த ஒரு கிராமத்து பெண்ணாக அவளைப் பார்த்து அதிசயித்து நின்ற அனைவரும் ஆச்சர்யத்தில் வாய் பிளக்க, அருள் ஒற்றைப் புன்னகையுடன் மற்ற பெண்களுக்கு நாற்றுக் கட்டு எடுத்துக் கொடுக்க ஆரம்பித்தான்.

அனைவரும் அவரவர் இடத்தில் நிற்க, சிறுசும், பொடிசுமாக இருந்த சில வாண்டுகள், நாற்று வரிசையாக நட தோதாக, இரண்டு பக்கமும் சிறு கயிறு ஒன்றை, மிகக்கச்சிதமாகப் பிடித்தபடி உட்கார்ந்து கொண்டனர்.

அவர்கள் பிடித்து இருந்ததை சரிபார்த்த அனி, மீண்டும் ஒருமுறை இயற்கையை மனதால் வணங்கி நாற்று நட ஆரம்பித்தாள்.

அவள் நட ஆரம்பித்த பின், சில நிமிடங்கள் தாமதித்து மற்ற பெண்களும் நட ஆரம்பித்தனர்.

அமைதியாக அனைவரும் இருப்பதைப் பார்த்த வாண்டுகளில் ஒன்று,

“என்ன அத்த! இன்னிக்கு பாட்டு படிக்கக் காணோம்?”

“மொதலாளியம்மா இருக்காங்களே! என்ன நினைப்பாங்கன்னு தான் படிக்கல”

அதைக் கேட்டு புன்னகைத்த அனி,

“பாட்டு படிங்க. நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்” என்று பதிலளிக்க,


சந்திரரே சூரியரே
எஞ்சாமி பகவானே!
இந்திரரே!
உன்ன நோக்கி நாங்க எடுத்த
காரியம் சிறக்கோணும்


இந்திரரே வாசுதேவா
இப்பமழை பெய்யவேணும்!
மந்தையிலே மாரியாயி
மலைமேலே மாயவரே!
இந்திரரே சூரியரே
இப்பமழை பெய்யவேணும்!

என்று அந்த பெண்மணி பாடி முடிக்க, அடுத்து ஆரம்பிக்க வேண்டிய பெண்மணி பாடாமல் அமைதியாக நாற்று நட்டுக்கொண்டு இருந்தார்.

“என்ன சித்தி! பாடாம வேலையை பார்க்கற?” என்ற அந்த வாண்டு மீண்டும் ஆரம்பித்தது.

“பாட்டு வர மாட்டிங்குது டா” என்று முனங்கிக்கொண்டே அந்த பெண் வேலையைப் பார்க்க,

“பொய் சொல்லாத சித்தி, உன்னைப்பத்தி தெரியாதா?”

“டேய், மொதலாளியம்மா இருக்காங்க. நம்ம பாட்டு அவங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ?”

“இதானா! அண்ணி நீங்களே சொல்லுங்க”

“அதென்னடா அண்ணி முறை?” என்று அனி புன்னகையுடன் கேள்வி கேட்க,

“நாங்க அருளண்ணன ஐயான்னு கூப்பிட்டோம், அவங்க தான் அப்படி கூப்பிடக் கூடாதுன்னு சொல்லி, அண்ணான்னு சொல்ல சொன்னாங்க. அப்ப நீங்க அண்ணி தானே” என்று மற்றொரு வாண்டு பதில் சொன்னது.

மெல்ல சிரித்தவள்,



வாழ்த்துறேன் வாழ்த்துறேன்!
வாரும் பெண்களுக்கு வாழ்த்துறேன்!

பொண்ண பெத்த தாயாரே
போதரமா கேட்டுறுங்க!

மாப்பிள்ளைய பெத்தவக
மனம் மங்கலமா கேட்டுறுங்க!

சாதிக் கிளி முழுங்கி
சந்திரற்கே வாழ்த்துறேன்!

அன்னக் கிளி முழுங்கி
அர்ஜுனற்கே வாழ்த்துறேன்!

என்று வாய்விட்டு பாட, அதில் அதிசயித்த அனைவரும் ஒரு நிமிடம் வேலையை விட்டுவிட்டு நிமிர்ந்து நின்று அனிக்காவையேப் பார்த்தனர்.

கையில் இருந்த நாற்றுக் கட்டு முடிந்து எழுந்து நின்ற அனி, அனைவரும் அவளையேப் பார்ப்பதைப் பார்த்து,

“என்ன என்னையே பார்த்துக்கிட்டு நிற்கறீங்க? வேலையைப் பாருங்க” என்று சொல்லிக்கொண்டே வயலை விட்டு வரப்பில் கால் வைத்து மேலேறினாள்.

“அங்க பம்பு செட்டு இருக்கு, போயி கை கால் கழுவிக்கிட்டு இரு, வரேன்” என்று சொல்லிவிட்டு அருள் நாற்றுக் கட்டுக்களைப் பிரித்து வரப்பிற்கு, வரப்பு போடுவதில் மீண்டும் கவனமானான்.

மெல்ல நடந்து பம்பு செட்டை நோக்கிப் போக,

மற்ற பெண்கள் பாடிக்கொண்டே வேலையில் கவனமாகினர்.

அவர்கள் பாடுவதைக் கேட்டுக்கொண்டே பாத்தி பாத்தியாக இருந்த சில வயல்களைக் கடந்து, நூற்றுக்கணக்கான வயல் பாத்திகளுக்கு நீர் பகிரும் மையமாக இருந்த பம்பு செட்டை வந்து அடைந்தாள்.


சந்திரர் வாழ்த்து சரி பார்த்து வாழ்த்துறேன்!
இந்திரர் வாழ்த்து இள வாங்கு வாழ்த்துறேன்!

காளியாம்மா வாழ்த்து கண வாழ்த்து வாழ்த்துறேன்!
பிள்ளையார் வாழ்த்து பேரு வாழ்த்து வாழ்த்துறேன்!

பந்த பளபளங்க பந்தக்கால் சரி மின்ன!
நவரத்தன பந்தலிலே ராசாக்கள் வந்து நிக்க!


எந்திரடி பொன்னரளி அம்மானே நிக்கிறாக!
கையெடுத்த கைகளுக்கு என்னென்ன சீதனங்க!

கைக்கே கணையாழி! காலுக்கோ வீரமெத்த!
நெத்திக்கோர் சுட்டி! நிழல் பார்க்க கண்ணாடி!

காடு நிறைஞ்சிருக்க கருந்தானி சீதனமா!
வீடு நிறைஞ்சிருக்க வெண்கலங்கள் சீதனமா!
மாடம் நிறைஞ்சிருக்க மணிவிளக்கு சீதனமா!
கூடம் நிறைஞ்சிருக்க குத்து விளக்கு சீதனமா!

இத்தனையும் குடுத்த அம்மான்!
பட்டினியா போறாரு!

மாமரதுச் சோலையிலே உங்கொழுந்தேன்
மயில் மேல்தேன் ஆடயிலே!
மாமரத்து கீழ நின்னு மயங்கினவ நீதான!

இளையாங்குடியினிலே உங்கொழுந்தேன்!
இனிசுபெக்டரு வேலையின்னு!
இளையாங்குடி போய் பார்த்தேன்
ரெண்டேருமை தான் மெய்ச்சாண்டி!

காரைக்குடியிலே உங்கொழுந்தேன்!
கருக்கத்தான் வேலையின்னான்!
அங்கப்போயி பார்த்தாக்கா!
ரெண்டு கழுதையைத்தான் மேய்ச்சாக!

பூமரத்துச் சோலையிலே எங்கொழுந்தேன் புலி வேட்டையாட!
பூமரத்து கீழ நின்னு புலம்புனவ நீதானே!

குன்னக்குடியிலே உங்கொழுந்தேன்
குமாஸ்த்தா வேலையின்னான்!
அங்கப் போயி பார்த்தாக்க
ரெண்டு குதிரையைத்தான் மேய்ச்சாக!

வெத்தலைய போல விரிச்ச மொகறைக்கு!
எங்க வெள்ளாள வம்சம்தேன் எங்கெங்கே வாச்சுச்சோ!

பாக்குவெட்டி போல பரந்த மொகறைக்கு
எங்க பாப்பாறை வம்சம்தேன் எங்கெங்கே வாச்சுச்சோ!

சுண்ணாம்பு போல சிரிச்ச மொகறைக்கு
எங்க சூரியனார் வம்சம் எங்கெங்கே வாச்சுச்சோ!

கறண்டகம் போல உருண்ட மொகறைக்கு
எங்க கள்ளாளர் வம்சம்தேன் எங்கெங்கே வாச்சுச்சோ!

ஆன திருடிப் பயல் ஆனை மேல் வாரதென்ன!
அர்ச்சுனரைப் பெத்தவக கால் நடையா வாரதென்ன!

கோழி திருடிப் பயல் குதிரை மேல் வாரதென்ன!
கோகுலரைப் பெத்தவக கால் நடையா வாரதென்ன!

மூணாம் வருசத்திலே மொத்தெருமை மேய்ச்சவனே!
எங்களோட பாஷை எதமான பாஷை!

சுண்ணாம்பு இல்லையடா சிரிச்சானே உங்கையிலே!
புகையில இல்லையடா பூசனத்தான் உங்கையிலே!

பாக்குத்தான் இல்லையடா பதங்கெட்ட உங்கையிலே!
வெத்தலை இல்லையடா வீதியத்தான் உங்கையிலே!

ஒன்னாம் பயிர் பிடுங்கி ஒரு லட்சம் கூட பின்னி!
கூட வித்த காச வாங்கும் குறவர்தான் பசங்க நீதானோ!

ரெண்டாம் பயிர் பிடுங்கி ரெண்டு லட்சம் கூட பின்னி!
கூட வித்த காச வாங்கும் குறவர்தான் நீதானோ!

மூணாம் பயிர் பிடுங்கி மூணு லட்சம் கூட பின்னி!
கூட வித்த காச வாங்கும் குறவர் பசங்க நீதானோ!

மாமரதுச் சோலையிலே உங்கொழுந்தேன்
மயில் மேல்தேன் ஆடயிலே!
மாமரத்து கீழ நின்னு மயங்கினவ நீதான!

பூமரத்துச் சோலையிலே எங்கொழுந்தேன் புலி வேட்டையாட!
பூமரத்து கீழ நின்னு புலம்புனவ நீதானே!


என்று ஆளாளுக்கு ஓரிரு வரி பாடிக்கொண்டே அவள் பக்கம் இருந்த பெண்கள் பாடி முடிக்கவும், அவள் கை கால் கழுவி முடிக்கவும் சரியாக இருந்தது.

அதே நேரம் அங்கு வந்த அருளும், கை கால் கழுவிக்கொண்டு முன்னே நடக்க, அனிக்கா அவனைப் பின் தொடர்ந்தாள்.

இருவரும் கிளம்பி நேராக சென்றது, தோப்பிற்கு. அங்கு அவன் வேலையைப் பார்க்க, அனிக்காவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

கால் போன போக்கில் அவள் நடக்க ஆரம்பித்தாள். அவர்கள் தோப்பின் கடைசியில், ஒரு சிறு மர வீடு அமைத்து, அதில் சில முயல்களை வளர்த்து வந்தனர்.

அந்த முயல்களை ரசித்துக்கொண்டு நேரம் போவது தெரியாமல் நின்றவளை திடுமென பின்னிருந்து இரு கைகள் அணைக்க, திடுக்கிட்டுத் திரும்பினாள்.

“ஏய், நம்ம தோப்புல, என்ன மீறி உன்கிட்ட இப்படி யார் நடந்துப்பாங்க” என்ற அருளரசைப் பார்த்தவள்,

மெல்ல அவன் கைகளை விலக்கி, “நான் வீட்டுக்கு போறேன்” என்று அவனை விட்டு விலக, அவன் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்தது.

அவள் கரம் பற்றித் தடுத்தவன், “போலாம். இப்ப இல்ல. இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு” என்று சொல்லிக்கொண்டே அவளை அந்த மர வீட்டினுள் இழுத்துச் சென்றான்.

“புதுசா பிறந்த ரெண்டு முயல் குட்டி” என்று அவன் காட்டிய திசையில், கருப்பும் வெள்ளையும் கலந்த, பிறந்து சில தினங்களே ஆன இரண்டு முயல் குட்டிகள் பஞ்சு பொதிகளாய் உறங்கிக்கொண்டு இருந்தன.

அதனைத் தொட வேண்டும் என்ற ஆசையில் மெல்ல அதன் பக்கம் கை கொண்டு போனவள், அங்கிருந்த தாய் முயலைப் பார்த்து பயந்து பின்னிளுத்தாள்.

பயந்து பின் வாங்கிய அவள் கைகளை சுவாதினமாகப் பற்றிய அவன், மெல்ல அந்த குட்டிகளிடம் கொண்டு சென்று, வருடிக் கொடுத்தான்.

“ரெண்டு குட்டி தானா?” என்று கேட்டவளிடம்,

“5 குட்டி போட்டு இருந்துச்சு, பசங்க மூனு குட்டிய தூக்கி கொஞ்சி விளையாடி இருந்து இருக்காங்க. அதுல இந்த அம்மா முயல் பீட் பண்ண மறுத்துடுச்சு போல. ரொம்ப வீக்கா இருந்த மாறி இருந்துச்சு, அதான் அதை தனியா நம்ம வீட்ல கொண்டு போயி வைச்சு இருக்கேன். கொஞ்சம் வளர்ந்ததும் கொண்டு வந்து இங்க விடனும்”

“ம்ம். ஸ்மெல் மாறினா முயல் தன்னோட குட்டிக்கு பீட் பண்ணாதுன்னு நானும் கேள்விப்பட்டு இருக்கேன்”

“சரி வா போலாம்” என்று எழுந்தவன், அவளைத் தன்னுடன் அணைத்தவாறு வெளியே கூட்டி வந்தான்.

அவனிடம் இருந்து விலக முற்பட்டவளை பிடித்து நிறுத்தியவன், சுற்றிலும் பார்வை பார்த்து, யாரும் இல்லாததை உறுதி செய்து கொண்டு,

“என்னாச்சு?” என்றான், கடினக் குரலில்,

“என்ன என்னாச்சு?”

“ஏன் விலகி போற?”

“பிடிக்கல”

“என்ன பிடிக்கல?” என்ற குரலில், கடினத்தன்மையுடன் கோபமும் கலந்து வந்தது.

அவன் கோபத்தில் மனதில் குளிர் பிறந்தாலும், தைரியம் வரப்பெற்றவளாக,“இது எதுவுமே பிடிக்கல” என்று அவள் கையைப் பிடித்து இருந்த அவன் கையைப் பார்த்துச் சொன்னாள்.

“இங்க பாரு அனி, மனசும் மனசும் சேரனும், ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கனும், அதுக்கப்புறம் வாழனும். இதெல்லாம் கதைக்கும், படத்துக்கும் தான் ஒத்து வரும். நிஜத்துக்கு இல்ல”

“-------------------------------------------“

“காதல் கல்யாணத்துல முடிஞ்சா அது படம், கல்யாணம் ஆகி பிரிஞ்சு இருந்து கடைசில புருஷன் பொண்டாட்டி தாம்பத்திய வாழ்க்கையை ஆரம்பிச்சா அது கதை. இதுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் ஒத்து வராது. நீயும் நானும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கனும், நம் விருப்பு வெறுப்புகள் பகிரப்படனும். ஒருத்தர் கஷ்டத்துல ஒருத்தர் பங்கெடுத்துக்கனும்.”

“----------------------------------------------“

“கல்யாணம் முடிஞ்சா பின்னாடி தான், வாழ்க்கையே தொடங்குது, அதுவரைக்கும் கால் பாகம் தான் வாழ்ந்து இருப்போம். மீதி நாள்ல தான் நமக்குன்னு ஒரு குடும்பம், அதை அழகா கொண்டு வர யோசிக்கணும். நீ என்னை புரிஞ்சி, நான் உன்னை புரிஞ்சி வாழ்கையை ஆரம்பிக்கனும்னா நாம நேரா அறுபதாம் கல்யாணம் தான் பண்ணிக்கனும்”

“---------------------------------------------------------------“

“உலகத்துல, எந்த ஒரு தம்பதியுமே, நான் உன்னை நூறு சதம் புரிஞ்சு வைச்சு இருக்கேன், நீ என்னை நூறு சதம் புரிஞ்சு வைச்சு இருக்கன்னு சொல்ல முடியாது”

“---------------------------------------------------------“

“அவசரம், பொறுமை இல்லாத குணம், ஈகோ, கர்வம், தலைக்கணம் இப்படி எல்லா வார்த்தைகளும் பொருந்தாம இருக்கற ஒருத்தனோ, அல்லது ஒருத்தியோ அவங்களால மட்டும் தான் சில விதி விலக்கு இருக்கு”

“--------------------------------------------------“

“நம்ம விசயத்துல, எனக்கும் பொறுமை அதிகம், உனக்கும் அதிகம். ரெண்டு பேருமே ஆரம்பத்துல இருந்து விட்டுக் கொடுக்கறோம். நீ இங்க வந்து இன்னும் முழுசா 3 நாள் கூட ஆகல, அதுக்குள்ள நீயும் குழம்பி, நமக்குள்ள குழப்பத்தை கொண்டு வரப் பார்க்காத”

“------------------------------------------------------“

“நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன். நான் இப்படித்தான் இருப்பேன். என்னால உன் கூட இயல்பா இருக்க முடியுது. அதுவும் உன் கழுத்துல தாலி கட்டினதுல இருந்து. நீ அப்படி இருக்க முடிலைன்னா குழப்பம் உன் கிட்ட. அதை தூக்கி போடு. இந்த நிமிஷம், என்ன நிஜமோ அதை ஏத்துகிட்டு வாழு. கஷ்டமான சூழல் வரும் போது, நீயே புரிஞ்சுப்ப”

“அப்படின்னா”

“கவனி, நெருக்கம் உண்மையிலேயே விலகலா இருக்கற ரெண்டு உள்ளத்தை நெருங்க வைக்கும். நீ நமக்குள்ள இடைவெளி இருக்குன்னு நினைக்கிற, ஆனா இந்த மூனு நாளா நீ என்கிட்டே எல்லா விதத்திலேயும் உரிமை எடுத்துக்கற! எப்படி?”

“-----------------------------------------“

“உன்னை நான் என் மனைவியா முழுசா அங்கீகரிச்சு, உனக்கான உரிமையை முழுசா குடுத்து இருக்கேன். நீயும் மனசுல தெளிஞ்சுட்ட, அதாவது, நான் உன் கணவன், இது உன் குடும்பம், உன் வீடுன்னு”

“-----------------------------------------“

“உன்னை நான் தொடும் போது, உங்கிட்ட விலகல் இருந்துச்சு, ஆனா வெறுப்போ, அருவெறுப்போ இல்ல. ஒரு வேலை அப்படி இருந்து இருந்தா, அதை உங்கிட்ட சுட்டிக்காட்டி அதை சரி செஞ்சும் இருப்பேன், அதுக்காக உன் மனசு மாற வெயிட் பண்ணவும் மாட்டேன்.”

“------------------------------------------“

“நீ விலகினாலும், என் உரிமையை நான் எடுத்துக்க ஆரம்பிச்சதும், முழு மனசா தானே எனக்கு உன்னை கொடுத்த. அந்த நிமிஷம் உன் மனசுல எந்த சஞ்சலமும் இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும்”

“----------------------------------------“

“ஏய் அணில்குட்டி! இன்னும் உன் குழப்பம் போகலியா?”

குழப்பம் மேலிட நின்று கொண்டு இருந்தவளைச் சட்டென்று இடையில் கைகொடுத்து இழுத்து தன்னோடு அணைத்தவன், அவள் சுதாகரிக்கும் முன்பே, அவள் இதழ்களைத் தன்னிதழ்களால் சிறை செய்ய ஆரம்பித்தான்.

நொடிகள் நிமிடங்களாக, மூச்சுக் காற்றுக்காய் அவளை விடுவித்தவன், மெல்ல அவள் முகம் நோக்கினான்.

சட்டென்று ஒரு இதழ் யுத்தத்தில் பங்கேற்றவளின் முகம் செம்மையுற்றுக் கிடக்க, அவன் முகம் பார்க்க முடியாமல் அவன் நெஞ்சிலேயே முகம் புதைத்துக் கொண்டாள்.

புன்னகையுடன் அவளை இன்னும் இறுக்கி அணைத்தவன், “இப்ப உன் குழப்பம் போயிடுச்சா?” என்று கேட்க, வழக்கம் போல அவள் மவுனம் சாதித்தாள்.

“என்னை நீ உன் புருஷனா ஏத்துக்கிட்டதாலதான், இப்ப நீ என் நெஞ்சுல முகத்தை மறைச்சு வைச்சு இருக்க. ஒரு பெண்ணுக்கு வெட்கம் அவள் மனம் கவர்ந்த ஆண்கிட்ட தான் வரும். பிடிக்காதவன்கிட்ட இல்ல. இன்னொன்னு நீ இப்ப என்னை விலக்கவே இல்லை. என் கூட ஒன்றிதான் நின்ன”

அவளோ அமைதியாக இருந்தாள். சில நிமிடங்கள் கடக்க, இருவரும் அவரவர் நிலையிலேயே அப்படியே நின்றிருந்தனர்.

இருவரின் அருகாமையில் பேச்சுக்குரல் கேட்க, சட்டென்று அவன் பிடியில் இருந்து விலகியவள், அவனுக்கு பின்னால் நின்று கொண்டாள்.

மெல்ல அவன் எட்டு வைக்க, அவன் பின்னால் அவன் கரம் பற்றியவாறே அவளும் நடக்க, பண்ணையாட்கள் எதிரில் வந்தனர்.

“தம்பி மன்னிச்சுக்கோங்க. நீங்க இந்த பக்கம் வந்ததை பார்க்கலைங்க”

“பரவால்ல... நாங்க கிளம்பறோம். நீங்க வேலையைப் பாருங்க” என்றவன் நடக்க அவளும் பின் தொடர்ந்தாள்.



மலர் வனம் பூக்கும்.....
 
Last edited:

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பனி விழும் மலர்வனம்!


அத்தியாயம் – 5

மனம் என்பது எங்கிருக்கிறது? இதயத்திலா? மூளையிலா? என்ற கேள்வி பெரும்பாலும் பலரது எண்ணங்களில் உழன்று கொண்டுதான் இருக்கிறது.

சிலர் இதயம் என்று கூறுவர். சிலர் மூளை என்று கூறுவர். சிலர் அது தான் உயிர் என்றும் சொல்லுவர்.

இப்படி விடை அறியா கேள்வியாக இருக்கும் மனம் எப்பொழுதும் ஒரு புரியா புதிராகவே இருக்கிறது, இருந்து வருகிறது, இனியும் இருக்கும்.

நம்முடைய மனதில் நாம் என்ன நினைக்கிறோம் என்று உணர்ந்துகொள்வதே சில நேரங்களில் கடினமாக இருக்கும் போது, பிறருடைய மனதில் நினைப்பதை நம்மால் எளிதில் உணர முடியுமோ?

இதில், புதிதாக வாழ்க்கையைத் தொடங்கிய அருளுக்கும், அனிக்கும் இடையில் இந்த புரிதல் எளிதில் ஏற்பட்டு விடுமா?

அருள் அனிக்கு சமாதானம் சொன்னானா? இல்லை அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டானா? அவனுக்கே வெளிச்சம்! ஆனால் அது அனியிடம் அவன் எதிர்பார்த்த பிரதிபலிப்பை உண்டாக்குமா?

என்னதான் ஆயிரம் சமாதானங்கள் அருள் சொல்லி இருந்தாலும், அனியின் மனது தெளிவடையவில்லை! குழப்பங்கள் அடி மனதில் தேங்கித்தான் கிடந்தது! அவளை வீட்டில் விட்டுத் திரும்பியவன், அதன் பின் இரவு தான் வீட்டிற்குத் திரும்பினான்.

இந்த இடைப்பட்ட ஒவ்வொரு நொடியும் அனியின் மனதினை குழப்பிக்கொண்டு தான் இருந்தன.

அனிக்கு இன்னும் அருளிடம் இருந்து எதுவோ ஒன்று வேண்டும் போல இருக்கிறது. அது என்னவென்று இதுவரை அவளால் கணிக்க முடியவில்லை. ஆம். அவள் மனதில் என்ன இருக்கின்றது என்று அவளுக்கேத் தெரியவில்லை.

அருள் சொன்னது போலத்தான் அனியும், தனது வாழ்வை முழுதாக அவனிடம் பிணைத்துக்கொண்டாள். மனதில் ஆயிரம் சஞ்சலங்களும், குழப்பங்களும் இருந்தாலும் வாழ்க்கை என்னும் ஓடையில் தானும் ஓடி தெளிந்து கொள்ளத் தயாராகினாள்.

ஆயினும் தெளிந்த மனது இருந்தால் தானே முகம் தெளிவாக இருக்கும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல, அனியின் முகத்திலும் அவள் அகம் தெள்ளத்தெளிவாகப் புரிந்தது.

வீட்டில் நுழைந்த அருளுக்கு, கலக்கமாக முகத்தை வைத்து இருந்த அனிதான் கண்ணுக்குத் தெரிந்தாள்.

“இவளுக்கு இன்னும் மனம் தெளியலையா? நல்லா படுத்துறாடா... சரி இப்போதைக்கு கொஞ்சம் விட்டு பிடிப்போம்” என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டே இரவுணவை முடித்து அவர்களது அறைக்குச் சென்றான்.

அவன் என்ன சாப்பிட்டான்? அவனுக்குத் தான் என்ன பரிமாறினோம், அவன் பரிமாறும் போது ஏதேனும் பேசினானா? இல்லையா? தான் என்ன சாப்பிட்டோம்? என்று எதுவுமே கவனத்தில் இல்லாமல் அவள் பணியைச் செவ்வனேச் செய்து கொண்டு இருந்தாள்.

அவன் அறைக்குள் சென்று நெடு நேரம் கழித்து உள்ளே வந்தவள், படுக்கையில் அருளைக் காணாது அறையைச் சுற்றிலும் பார்த்தாள்.

அருளோ அறையை ஒட்டி இருந்த சிறு தாழ்வாரப் பகுதியில் வானை வெறித்துக் கொண்டு நின்றிருந்தான்.

கையில் இருந்த பால் டம்ளரை எடுத்துக் கொண்டு அவனிடம் சென்றவள், “மாமா” என்று அழைத்தாள்.

அவள் அழைப்பில் அவன் பக்கம் திரும்பியவன், அவள் நீட்டிய டம்ளரை வாங்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்தான்.

“உங்கிட்ட கொஞ்சம் பேசனும் அனி”

“சொல்லுங்க மாமா”

“நாளைக்கு தாலி பிரிச்சுக் கோர்க்கப் போறாங்க”

“ம்ம்”

“நீ விடிகாலையே கிளம்பி இரு, நாம நம்ம குல தெய்வம் கோவிலுக்குப் போயிட்டு வருவோம்”

“ம்ம்”

“மறுபடியும் ஒத்தை வார்த்தைக்கு மாறிட்டையா?” அவன் குரலில் ஒருவித கோபம் படர்ந்து இருந்தது.

“-----------------------------------“

“அதானே பார்த்தேன். ஏய் அணில் குட்டி உன் முகத்துலையே எழுதி ஒட்டி இருக்கு. நீ இப்படியே விட்டா சரி பட்டு வர மாட்ட. உன்னை இனி பிசியா வைக்கனும்” என்று காலி டம்ளரை அங்கிருந்த மேஜை மேல் வைத்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு வந்தவன், அதன் பின் அவளைச் சற்றும் யோசிக்கவிடவில்லை.

மனம் ஒன்றிய கூடல் இல்லை என்றாலும், அவனுக்கு எதிர்ப்பு காட்டாமல் அவனுள் அடங்கித்தான் போனாள் அனிக்கா.

மறுநாள் விடியலில் இருவரும் கிளம்பி கோவிலுக்குச் சென்று வந்தனர்.

அதற்குள் சிங்காரமும், ராஜமும் வந்து ஏற்பாடுகள் செய்து முடித்து இருந்தனர்.

இருவரையும் பார்த்த ராஜம், “வந்துட்டீங்களா? மேனகா இங்க பாரு அனி வந்தாச்சு. சீக்கிரம் போய் அவளைத் தயார் பண்ணிக் கூட்டிவா” என்று மேனகாவிடம் ஆணைகள் பிறப்பித்தார்.

மெரூன் நிற பட்டுப்புடவையில், ஒற்றை மாங்கனி ஆரத்தில் பளிச்சென்று இருந்த மனைவியைவிட்டு அருளின் கண்கள் விலக மறுத்தது.

தாலிக்கொடி அருள் கொண்டு வந்து குடுக்க, ராஜம், தான் வாங்கிய மற்ற பொருட்களுடன் அதனை வைத்தார்.

அனியை மனையில் அமர்த்தி, சுமங்கலிப் பெண்கள் நலங்கு வைத்து முடிக்க, அருள் தாலிக்கொடியை அவள் கழுத்தில் அணிவித்தான். மேனகா அனியின் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிற்றில் வீற்றிருந்த மாங்கல்யத்தை அந்த தாலிக்கொடியில், காசு, மாங்காய், பவளம், மணியுடன் சேர்த்து கோர்த்துக்கொடுத்தாள்.

விழா சிறப்பாக நடைபெற்று முடிய, வந்திருந்த அனைவரும் விருந்து முடிந்து கிளம்பினர். அனைவரையும் இன்முகத்துடன் உபசரித்து அருள் அனுப்பிவைத்தான். இறுதியில் சிங்காரம் தனது குடும்பத்துடன் விடை பெற, வாசல் வரை வந்து அவர்களை இருவரும் வழியனுப்பி வைத்தார்கள்.

இருவரும் உள்ளே வரவும், வாயிலில் கார் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.

“அனி யாருன்னு பாரு” என்று சொன்ன அருள் ஹாலில் வந்து அமர்ந்து அங்கிருந்த பேப்பரை எடுத்துப் புரட்டிக்கொண்டு அமர்ந்தான். வெளியே சென்று எட்டிப்பார்த்த அனி அதிர்ந்து போய் நின்றாள்.

நொடிகள் நிமிடங்களாகியும் அனி வராமல் போகவே, அவளைத் திரும்பி பார்த்த அருள் அவளின் அதிர்ந்த மற்றும் வெறித்த பார்வையில் கையிலிருந்த பேப்பரைக் கீழே போட்டுவிட்டு வேகமாக அவளை நோக்கிச் சென்றான்.

அவளின் பார்வையை பின்பற்றி பார்த்தவன் விழிகள் கோபத்தில் சிவந்தது.

அங்கு அனியின் தந்தை மேகநாதன் நின்று கொண்டு இருந்தார்.

அதே நேரம், தனது காரை கடந்து போன, மேகநாதனின் காரைக் கண்து, மற்றவர்களைக் காரில் அனுப்பிவிட்டு, அருளின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்த சிங்காரம் வந்து சேர்ந்தார்.

“டேய்.... செங்கோடா....” என்ற அருளின் குரலில், வாயில் காவலாளி ஓடோடி வந்தான்.

“கண்ட கண்ட நாயெல்லாம் வீட்டுக்குள்ள வருது. கதவைச் சாத்தி வைக்காம என்னடா பண்ற அங்க?” என்ற அவனின் ஆக்ரோஷத்தில் செங்கோடன் மட்டுமில்லாது சுற்றி இருந்த அனைவருமே நடுங்கிக்கொண்டு இருந்தனர்.

அனியோ அத்தனை ஆர்பாட்டத்திலும் அமைதியாய் அவரை வெறித்துக்கொண்டு நின்றாள்.

“ஏய் அருளு... உன் வீடு தேடி வந்தேன்னு என்னை அசிங்கப்படுத்தி பார்க்கறியா? அப்புறம் நான் யாருன்னு காட்ட வேண்டி வரும்”

“என்னத்தடா காட்டுவ? காட்டு பார்ப்போம்”

“வேணாம் அருளு... மரியாதை குடுத்து மரியாதை வாங்கிப் பழகு”

“அடச்சீ.... உனக்கெல்லாம் என்னடா மரியாதை?” என்று அவன் பேசிக்கொண்டு இருக்கும் போதே,

“அருளு வேணாம் தம்பி... மரியாதை இல்லாம பேசாதப்பா” என்று சிங்காரம் இடையிட்டார்.

“மாமா, நீங்க இதுல தலையிடாதிங்க”

“தம்பி, இப்ப இவர் உனக்கு மாமனார். யாருக்காக இல்லாட்டியும் அனிக்காவது, நீ மரியாதை தரணும்”

“என்னது அனிக்காவதா?”

“ஆமா தம்பி. அப்புறம் அவ மனசு கஷ்டப்படும், அங்க பாரு பிள்ளை எப்படி நிக்குதுன்னு”

“ஒரு நிமிஷம்.” என்றவன் அனிக்காவின் அருகில் சென்று அவளது தோளைத் தொட்டு அவன் பக்கம் திருப்பினான்.

“இந்தாளை நான் மதிக்காம இருந்தா உனக்கு வருத்தமா அனி?”

அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் தந்தை பக்கம் திரும்பியவள், நேராக செங்கோடனிடம் திரும்பி, “அந்தாளை கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளு” என்று சொல்லிவிட்டு கணவனிடம் திரும்பி, “சேத்துல கல்லு விட்டு எரியாதிங்க... நம்ம மேல தான் திருப்பி அடிக்கும்” என்றவள் வீட்டிற்குள் திரும்ப,

“அனிக்கா... இது ரொம்ப தப்பு” என்று சிங்காரம் இடையிட்டார்.

“என்ன பெரியப்பா தப்பு?”

“உங்கப்பாவை அருளு அவமானப்படுத்தறதே தப்பு. இதுல நீ வேற”

“இல்லை பெரியப்பா... சில ஜென்மங்களுக்கு எந்த உறவு இருந்தாலும், அதுங்களை தூக்கி தலைல வைச்சா, நம்மளையே அசிங்கப்படுத்தும்.” என்றவள், “இதுவும் அப்படித்தான்” என்று மேகநாதனைச் சுட்டிக் காட்டிச் சொன்னாள்.

“வாடி என் குலக்கொழுந்தே! நீ பொறந்தப்ப உன்னை விட்டுவைச்சேன் பாரு. அது என் தப்பு. அன்னிக்கே பொட்டப்புள்ளன்னு உன்ன கொன்னு புதைச்சு இருக்கனும்.”

“ஏன்.. செய்ய வேண்டியதானே... உன்னை யார் தடுத்தா?”

“என் நேரம்.... அதான் நீ இன்னிக்கு இங்க நின்னு இப்படி பேசற”

“உன் நேரம் இல்ல. என் நேரம் அதான் உனக்குப் போயி பிறந்து இருக்கேன்”

“இங்க பாரு. ரெண்டு பேரும் ஒழுங்கா அமைதியா ஒரு அஞ்சு நிமிஷம் நின்னா, நான் என் வேலை முடிஞ்சு போய்க்கிட்டே இருப்பேன்”

“உன்னை இங்க யாரும் அழைக்கல... ஒழுங்கா வெளிய போ, நீ இங்க நின்னாவே எங்களுக்கும் பாவம் வந்து சேரும்”

“இத்தனை வருசமா என் பணத்துல படிச்சு, உடம்பை வளர்த்து ஆட்டம் போட்டியே அப்ப நான் பாவம்ன்னு தெரில, இப்பத் தெரியுதா?”

அவரது கேள்வியில் வீடே அதிரும்படி நகைத்தவள்,

“என்னது? நான் உன் பணத்துல வளர்ந்து, படிச்சேனா?” என்று மீண்டும் வாய்விட்டு சிரிக்க,

“ஏய்... வாயை மூடு. நான் படிக்க வைக்கமா ரோட்ல போற பிச்சைக்காரன உனக்கு எல்லாம் பண்ணான்?”

“நீ எனக்கு எதுவும் பண்ணது இல்ல.... இல்ல... இல்ல... எனக்கு பால் தந்தது என் அம்மா... எனக்கு சாப்பாடு போட்டது என் அம்மா... என்னை படிக்க வைச்சது என் அம்மா... நீயில்ல. நீ இல்லவே இல்லை” என்று உரத்துச் சொன்னவள், அம்மா என்ற வார்த்தையில் அதிக அழுத்தம் கொடுக்க மறக்கவில்லை.

“நான் தந்த காசுல தான உங்கம்மா உன்னை படிக்க வைச்சா? வேற எங்க இருந்து அவளுக்கு வந்துச்சு?”

“என்னது நீ தந்த காசா?” என்று சொல்லி மீண்டும் கேலியாக்கி நகைத்தவள், நீ எப்ப எங்களுக்கு காசு தந்த?”

“மாசாமாசம் நாள் தவறாம உங்களுக்கு காசு குடுத்து இருக்கேன்டி”

“எங்கம்மாக்கு குடுத்தேன்னு வேற யாருக்கோ குடுத்து இருக்க போல, யாரோ உன்னை நல்லா ஏமாத்தி இருக்காங்க. போயி அந்த கணக்கை முதல்ல பாரு”

“-----------------------------------“

“அப்புறம் என்ன கேட்ட? என் அம்மாக்கு காசு எங்கிருந்து வந்துச்சுன்னா? கோடீஸ்வர குடும்பத்துல பிறந்த என் அம்மா, தரைல கால் படமா வளர்ந்த என் அம்மா, அவங்க பேர்ல இருந்த நிலத்துல பண்ணையம் பார்த்து தான் என்னை படிக்க வைச்சாங்க, எனக்கு சோறு போட்டாங்க.”

“என்னடி ஆத்தாளும் மகளும், என் சொத்தெல்லாம் அமுக்கிட்டு அதை வித்து அழிச்சுட்டு கதை விடறீங்களா?”

“என்னது உன் சொத்தா? நான் பிறந்தததுல இருந்து ஒத்தை ரூபா குடுக்க வக்கில்ல, இதுல உன் சொத்தை வேற நாங்க எடுத்து அழிசுட்டோமாம்!”

“ஏய்...”

“ஷ்... இது என் வீடு... இங்க வந்து சத்தம் போடாத” என்ற அனிக்கா. “செங்கோடா.... இந்தாளைக் கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளு” என்று சொல்லிக்கொண்டே வீட்டின் வரவேற்பறையில் சென்று அமர்ந்தாள்.

“யோவ்... கேட்டில்ல... இப்பவும் சொல்றேன் என் பொண்டாட்டி ஒரு சல்லிக்காசு கூட உன் வீட்ல இருந்து கொண்டு வரல.... அப்படி அவ கொண்டு வந்து இருந்தாலும் நான் அதை தூக்கி வீசி இருப்பேன்”

“டேய்.... என்னிக்கு இருந்தாலும் அவ என்னை தேடித்தான் வரனும்”

“அவளுக்கு நீ ஒரு வேளை சோறு கூடப் போட்டதில்ல... இதுல அவ உன்னைத் தேடி வரப்போறாளா? ஒழுங்கா வெளிய போ”

“போறன்டா... அதுக்கு முன்னாடி என் அருமை பொண்டாட்டி , இந்த கேடுகெட்டவ பேர்ல எழுதி வைச்ச சொத்து எல்லாத்தையும் திருப்பி தரச் சொல்லு”

“அதானே பார்த்தேன்... பெத்த மக பாசத்துல கீது ஒருவேளை ஓடி வந்தியோன்னு? என் பொண்டாட்டியோட அம்மா எழுதி வைச்ச சொத்து அவங்க தாய் வீட்டு சீர். அதை எழுதி கேட்க உனக்கு உரிமை இல்ல”

“டேய்... நான் உன் சொத்தை கேட்கல, என் பொண்டாட்டி எழுதி வைச்ச சொத்தைக் கேட்டேன்”

“யோவ்... நீ இப்பக் கேட்டு வந்து இருக்கறது யார் சொத்துன்னு நினைச்ச, என் சொத்தைத்தான். புரில, நீ சொல்ற மாதிரி உன் பொண்டாட்டி அவங்க பேர்ல இருந்த சொத்தை இன்னொருத்தர் பேர்ல எழுதி வைச்சாங்க.. ஆனா அது ஒன்னும் நீ நினைக்கிற மாதிரி என் பொண்டாட்டி பேர்ல இல்ல. என் பேர்ல”

“என்னடா சொல்ற?” என்று ஓரடி முன்னால் வந்து நின்ற மேகநாதனை நோக்கி முன்னேறிய அருள்,

“உன் பொண்டாட்டி... அதான், என் அக்கா மலர்... மலர்விழி.... உங்க கல்யாணத்துக்கு என் அப்பா குடுத்த நிலம், வீடு எல்லாத்தையும் எனக்கே எழுதி வைச்சிட்டாங்க... என் அப்பா போட்ட நகை மிச்சம் மீதி இருந்ததையும் பொண்ணுக்கு சீரா குடுத்துடாங்க... கூடவே அவங்க பெத்த பொண்ணு, என் பொண்டாட்டியையும் என் பொறுப்புல விட்டுட்டாங்க! போதுமா? இப்ப வெளிய போ” என்று சொல்லிக்கொண்டே, செங்கோடனிடம் “இந்த நாயை விரட்டி அடிடா” என்ற அருள் வீட்டிற்குள் நுழைந்தான்.

“உன்னை கோர்ட்ல பார்த்துக்கறேன்டா” என்று கர்ஜித்த மேகநாதன் காரில் ஏறிப் புறப்பட, சிங்காரம் அருளைக் காண உள்ளேப் போனார்.

உள்ளே கொதிநிலையில் அமர்ந்து இருந்த அருளைப் பார்த்தவர் அவனிடம் பேசப்போக, அவனே முந்திக்கொண்டான். “மாமா நாம இதப்பத்தி இன்னொரு நாள் பேசலாம்” என்று சொல்லிக் கண் மூடி அமர்ந்து கொண்டான்.

அனியோ கண்களில் நீர் கசிய அமர்ந்து இருந்தாள்.

அவளது தலையை மெல்ல வருடிக்கொடுத்தவர், “நான் அப்புறம் வரேன்ம்மா” என்று சொல்ல, அவளும் தலையசைத்து விடை கொடுத்தாள்.

மலர் வனம் பூக்கும்....
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு நட்புக்களே!

வெள்ளியன்று பதிவிட முடியாத காரணத்தினால், இரண்டு அத்தியாயங்கள் பதிவிட்டுள்ளேன். படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்.
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பனி விழும் மலர்வனம்!






அத்தியாயம் – 6

பெரும் புயல் ஒன்று அலைகழித்தது போன்று வீடே காட்சி அளித்தது. வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த வேலையாட்கள் வேலையைப் பார்க்கச்செல்ல, சிறிது நேரம் சுற்றுபுறம் மறந்து அமர்ந்து இருந்த கணவன் மனைவி இருவரின் நிலையும் ஒன்று சேர நிகழ்விற்கு வந்தது.

இருவரின் பார்வையும் ஒன்றுடன் ஒன்று மோத, வலிகள் நிறைந்த பார்வையைத் தாங்க இயலாத நான்கு விழிகளும் பார்வையைப் பிரித்துக் கொண்டன.

சட்டென்று எழுந்த அனிக்கா நேராக அவர்களது அறைக்குள் நுழைந்து கட்டிலில் விழுந்துக் கதறி அழ ஆரம்பித்தாள்.

அவள் எழுந்த வேகத்தையும், அறைக்கு ஓடிய நிலையையும் கண்ட அருளும் அவர்களது அறைக்கு வேகமாக வந்து சேர்ந்தான்.

கதவடைத்துவிட்டு மெல்ல அவளருகே வந்தவன், அவளருகே படுத்து, அவளை இழுத்துத் தன் நெஞ்சின் மீது போட்டுக்கொண்டு அவள் தலையை வருடிக்கொடுத்தான்.

அவனது அருகாமையில் சற்று ஆசுவாசம் அடைந்தவள், அழுகையைக் குறைத்து, அவள் கடந்து வந்த பாதையைத் தன் நினைவடுக்கில் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தாள்.

நெஞ்சின் சுமைகளைத் தன் மூடிய கண்களின் வழியே கண்ணீரென வெளியேற்றிய அருளும், நடந்து முடிந்த நிகழ்வுகளை அசை போட ஆரம்பித்தான்.

46 வருடங்களுக்கு முன்பு,

பொள்ளாச்சியை அடுத்த கிருஷ்ண ஏரியைச் சுற்றி இருந்த கிராமங்களின் தலைவராக இருந்தவர் வீரகேசவன். அவருடைய தந்தை வீர பத்திரனின் மறைவுக்கு பின்பு அவருடைய பொறுப்புக்களைக் கையில் எடுத்துக்கொண்டு திறம்பட அனைவருக்கும் உதவிகள் செய்து விவசாயத்தை மேற்கொண்டு வந்தார்.

அந்த காலத்திலேயே அவர், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். அவருடைய பண்ணைகள், மில்கள் அனைத்திலும் பெண்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்தி, அதனுடன் அவர்களுக்கு இலவசக் கல்வியையும் ஏற்படுத்தித் தந்தவர்.

பணி முடிந்து மாலை ஒரு மணி நேரம் பெண்கள் கல்வி கற்க ஏற்பாடு செய்து, அந்த ஊரின் தரத்தினை இன்னும் மேம்படுத்தினார்.

அவருடைய மனைவி மரகதவள்ளி, குணத்தில் கணவரைக் கொண்டு வாழ்ந்தவர். இருவரையும் அந்த ஊரே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது.

அன்றைய தினம் ஊரே மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்தது. திருமணமாகி ஐந்து வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த இருவருக்கும் கடவுள் தந்த வரமாக அன்று தான் மலர்விழி பிறந்தாள்.

அதில் அனைவருக்குமே மகிழ்ச்சி. அந்த மகா லக்ஷ்மியே பெண்ணாகப் பிறந்ததென்று மகிழ்ந்து போன ஊர் மக்கள் அவளை மகா என்றும், லக்ஷ்மி என்றும் ஆளுக்கு ஒரு பேராக அழைத்தனர். பெற்றோரைப் போல அன்பும் கனிவும் கொண்ட குழந்தையாக இருந்த மலரை அனைவருக்கும் பிடித்ததில் வியப்பேதுமில்லை.

வீட்டிலேயே சுகப்பிரசவத்தில் பிறந்த மகளை வெண்ணிற வேட்டியில் சுற்றிக் கொண்டு வந்து அன்னை மரகதவள்ளியிடம் காட்ட அவரோ ஆனந்தக்கண்ணீர் வடித்து கணவனின் நெஞ்சில் சாய்ந்து அவருடைய இன்பத்தை பகிர்ந்தார். மனமோ நான்கு வருடங்களுக்கு முன்பு பயணித்தது.

நான்கு வருடங்களுக்கு முன்னர்,

திருமணமாகி ஒரு வருடமாகியும் குழந்தை இல்லாமல் இருக்க, எதற்கும் மருத்துவரைச் சந்திக்கலாம் என்ற எண்ணம் மரகதத்தின் மனதில் அடிக்கடி உதயமானது.

கணவனின் அன்பிலும், மாமனாரின் அன்பிலும் திளைத்தாலும், பெண்ணுக்கு பிறப்பின் அர்த்தம், அவள் வயிற்றில் உதிக்கும் சிசுவில் தானே தொடக்கம்!

திருமணம் ஆன புதிதில் தெரியாத ஒன்று, மற்றவர் குழந்தைகளைப் பார்க்கும் போது மனதில் அரிக்கத் தொடங்கியது. ஒவ்வொரு மாதமும் பயந்து பயந்து ‘அந்த நாட்கள்’ தள்ளிப்போகாதோ என்று ‘அந்த நாட்களை’ மரகதம் எதிர்கொண்டாள்.

“நாள் தள்ளிப் போயிருக்கா?”, “ஏதாவது விசேஷமா?” என்று கேட்க ஆள் இல்லை. அடிப்படை படிப்பறிவு கொண்ட மக்கள், அவளைச் சீண்டவும் இல்லை.

ஆயினும் வருத்தம், அவள் மனதில் வேரோடிப்போய் இருந்தது.

மனைவியின் வருத்தம் காணச்சகியாது, வீரா அவளை கோவையில் உள்ள பிரபல மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அன்றைய அளவில் அவர்கள் கோவைக்குத் தான் செல்ல வேண்டி இருந்தது.

மனைவியின் மறுப்பை ஏற்காது, தன்னையும் சோதனைக்கு உட்படுத்திக்கொண்டார்.

“நீங்க எதுக்கு இப்ப இந்த பரிசோதனை பண்ணிக்கறிங்க?”

“குறைன்னு ஒன்னு இருந்தா, அது எனக்கும் இருக்கலாம்”

“என்ன நீங்க. அப்படி எதுவும் இருக்காது”

“அதை நீ சொல்லக்கூடாது. டாக்டர் தான் சொல்லணும்”

“என்னங்க, பயப்படற மாதிரி ஒன்னும் இருக்காதில்ல”

“அதெல்லாம் ஒன்னும் இருக்காது. அப்படியே இருந்தாலும் கவலைப்படாதே. மருத்துவம் இப்ப எவ்வளவோ முன்னேறி இருக்கு. அப்படியும் முடியலையா? ஊர்ல பெத்தவங்க இல்லாம நிறையா குழந்தைங்க இருக்கு. அதுல ஒன்ன நாம எடுத்து வளர்த்துவோம்”

அவர் இந்த வரிகளைச் சொல்லி முடிக்கையில் மரகதம் என்ன மாதிரி உணர்ந்தார் என்று அவருக்கேத் தெரியவில்லை.

இருவரின் அமைதியை நர்ஸ் வந்து கலைத்தார்.

“மரகதவள்ளி”

“சொல்லுங்கம்மா”

“அம்மா உள்ள கூப்பிடறாங்க வாங்க. உங்க வீட்டுக்காரரையும் கூட்டிட்டு வாங்க”

இருவரும் உள்ளே சென்று அமர,

டாக்டர் கமலா அவர்களது ரிப்போர்ட்டைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.

“இங்க பாருங்க வீரா, ரிப்போர்ட்ஸ் வந்துடுச்சு. பயப்பட ஒன்னும் இல்லை. ”

“சொல்லுங்கம்மா”

“இப்ப பார்த்தீங்கன்னா, ஒவ்வொரு பெண்களும் பிறக்கும் போதே கருமுட்டை உற்பத்தி ஆகி அவங்க சினைப்பைல இருக்கும். இது முதிர்ச்சி ஆகி ஒவ்வொரு மாதமும் வெளிவரும். அந்த நேரத்துல உயிரணுவோட சேரும் போது தான் கரு உண்டாகும்.”

“-------------------------------------------“

“இப்ப மரகதத்துக்கு வெளிவர கரு முட்டைல ஒரு குறையும் இல்ல. இது சிலருக்கு சகஜம். ஏன்னா, சிலருக்கு எல்லாமே சரியா இருந்தாலும் சில நேரங்கள்ல கருத்தரிக்காம போக வாய்ப்பு இருக்கு. காரணம்ன்னு பொதுவா எதையும் சொல்ல முடியாது”

“மாத்திரை சாப்பிட்டா சரி பண்ணிடலாமா டாக்டர்?”

“இங்கப் பாரும்மா, மாத்திரை நான் தரேன். ஆனா அது வெறும் சத்து மாத்திரை தான். நீ முடிஞ்ச அளவு அதிக எடையை தூக்காத, குனிஞ்சு நிமிர்ந்து அதிகமா வேலை செய்யாத”

“சரிங்கம்மா”

“அப்புறம் முக்கியமான விஷயம், குழந்தை குழந்தைன்னு அதுக்காக சேராம, எப்பயும் போல இயல்பா சேருங்க. பிரச்சனை இருக்கறவங்களுக்கே இன்னிக்கு குழந்தை பிறக்கும் போது, உனக்கு என்ன கவலை? அதுவும் இப்பத்தான் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகுது. பொறுமையா இரு”

“சரிங்க டாக்டர்”

இருவரின் பொறுமையும் இரண்டாண்டுகள் கடக்க, மலர் மரகத்தின் வயிற்றில் உதித்தாள்.

இன்று, பதுமையென மரகதத்தின் கைகளில் வீற்றிருக்கிறாள். இத்தகு அரும்பாடு பட்டு தாய் என்ற பட்டத்தை சுகித்த மரகத்தின் மகிழ்வைச் சொல்லவும் வேண்டுமோ!

ஐந்து வருடங்களாகத் தனக்காகப் பார்த்துப் பார்த்து செய்தும், வலி கண்டு அலறிய நொடி முதல், பிள்ளை பிறந்த பின்பும், அருகில் கையைப் பற்றிக்கொண்டு ஆறுதலாக அமர்ந்து இருக்கும் கணவரை நன்றியுடனும், செருக்குடனும் நோக்கின மரகத்தின் கண்கள்.

நாட்கள் கடந்து பிறந்த குழந்தை என்ற பாகுபாடு மரகதத்திடம் என்றும் இல்லை. பெண் பிள்ளையின் தாய் என்ற முறையில் மலரிடம் கண்டிப்பும் அன்பும் கலந்து, மலரை நல்வழியில் வாழக் கற்றுக்கொடுத்தார். தந்தை செல்லம் தந்தால், அவரையும் அதட்டி, மகளுக்கு பணச் செருக்கு வந்துவிடாமல் வளர்த்தார்.

தாய் மகள் இருவருக்கும் பிடித்த ஒரே பொழுதுபோக்கு, பூச்செடி வளர்ப்பது. வீட்டைச் சுற்றி அவர்கள் வைத்த பூச்செடியில் உள்ள பூக்கள் தான் அந்த சுற்றுவட்டார பெண்களின் தலையை அலங்கரிக்கும்.

தன் வீட்டில் இருக்கும் செடியில் வரும் பூவைப் பறிக்க எண்ணம் இருக்கிறதோ இல்லையோ, இவர்கள் வீட்டில் பூப்பறிக்க ஓடோடி வந்து போட்டியிடுவார்கள்.

அன்னையைப் போன்று மனம் கொண்ட மலரும், அனைவருக்கும் பூக்கள் குடுத்து அனுப்புவாள். அன்னை அன்பை ஊட்டினால், தந்தை வீரத்தை ஊட்டினார். சிறு வயது முதலே, தற்காப்பு கலைகள் சொல்லிக்கொடுத்த வீரன், “என் வீட்டு இளவரசி” என்று சொல்லி மகளைத் தரையில் கால் படாமல் பார்த்துக்கொள்வார்.

தோட்டம் முழுமையும் வீட்டைச் சுற்றி இருக்கும் படி, காம்பவுண்ட் சுவர் எழுப்பியவர், மகளின் பெயரை அவர் வீட்டிற்கு ‘மலர்வனம்’ என்று சூட்டினார்.

“கல்லடி பட்டாலும் படலாம். கண்ணடி படக்கூடாது” என்ற பழமொழிக்கு ஏற்ப, ஊரின் கண் மொத்தமும் விழுந்த இந்த அழகிய குடும்பத்தில் இதமான மலைச்சாரலுடன் விழும் பேரிடியைப் போல ஒரு இடி விழுந்து, இந்த அழகிய கூட்டைச் சிதைத்தது.

மலர் வனம் பூக்கும்....
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு நட்புக்களே,

சென்ற வாரம் அத்தியாயம் எதுவும் போட முடியவியல்லை. இன்று மூன்று அத்தியாயங்களாக பதிவிட்டுள்ளேன்.

உங்களுடைய கருத்துக்களை தவறாமல் பகிர்ந்துகொள்ளவும்.
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பனி விழும் மலர்வனம்!





அத்தியாயம் – 7

மகிழ்ச்சியாகச் சென்று கொண்டு இருந்த வீரகேசவனின் குடும்பத்தில் மற்றுமொரு நற்செய்தியாக மரகதம் மீண்டும் கருத்தரித்தார், மலரின் ஒன்பதாவது வயதில்.

அன்று முதல் மலரின் ஒரே வேலை, பள்ளி முடிந்து வந்ததும் அன்னையின் வயிற்றில் இருக்கும் சிசுவுடன் பேசுவதும், விளையாடுவதும் தான்.

நாளடைவில், மலர் குரல் கேட்டால், மரகதத்தின் வயிற்றில் இருக்கும் சிசு தன் இருப்பை மரகதத்திற்கு உணர்த்தும். அதே போல மலரின் கை மரகதத்தின் வயிற்றில் பட்ட அடுத்த நொடி அன்னையின் வயிற்றில் எட்டி உதைக்கும்.

வெளியுலகைக் காணாத சிசு சகோதரியின் அன்பில் திளைத்து அன்னையின் வயிற்றில் அழகாக வளர்ந்து வந்தது.

இவ்வாறாக இருக்க, ஒரு மழை நாளில் மகளை அழைத்து வர வீரன் காரை எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றிருந்தார். வேலைக்கு இருந்த பணியாட்களை மழையின் பொருட்டு அவர்களது பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள வழக்கம் போல மரகதம் அனுப்பிவிட்டார்.

வழக்கம் போல மகளுக்கு, மாலை டிபன் செய்ய அடுக்களைக்குள் நுழைந்தார். மகள் வந்ததும் சாப்பிட சூடாக இட்லி ஊற்றி எடுத்தவர், இட்லி அடங்கிய பாத்திரத்தைக் கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்துவிட்டு, சட்னி எடுக்க மீண்டும் அடுப்படிக்குள் நுழைந்தார்.

பெரும்மழை காரணமாக பாத்திரம் கழுவும் சாளரத்தின் வழியே வேகமாக மழை நீர் கிட்செனில் நுழைய, அதைக் கவனிக்க மறந்துவிட்டார்.

இன்றைய காலகட்டம் போல அன்று இல்லை. பெரும்பாலும் வீட்டின் வெளிப்புறம் தான் பாத்திரம் கழுவும் இடம் இருக்கும். பணக்கார வீடுகளில் அடுப்படி பெரிசாக இருக்கும் காரனத்தால், அங்கு அடுப்படியும் சேர்த்து கட்டி இருப்பார்கள். பெரிதாக ஒரு இடத்தில் வெளியே நீர் செல்லும் பொருட்டு ஒரு ஓட்டை ஒன்றை சுவற்றில் பறித்து அதற்கு ஏற்ப சிறு மேடை கட்டி, சுற்றிலும் ஒரு இன்சுக்குச் சுற்றுச்சுவர் எழுப்பி இருப்பார்கள்.

மழைக்காலங்களிலும், இரவிலும் அந்த ஓட்டையை, அடைத்து வைப்பார்கள். அன்று அதனை அடைத்து வைக்க மரகதம் மறந்து விட்டார்.

சட்னியையும் கொண்டு சென்று வைத்துவிட்டு, தண்ணீர் எடுக்க அவர் வரவும், பாத்திரம் கழுவும் இடம் நிரம்பி தண்ணீர் வழிந்து கிட்செனில் பரவவும் சரியாக இருந்தது.

உள்ளேக் கால் வைத்த அடுத்த நொடி, சமையலறையின் பளிங்குத்தரை வழுக்கி விட, அடுத்தநொடி கருங்கல்லில் இருந்த நிலைப்படியில் பின்னந்தலை அடிபடக் கீழே விழுந்தார் மரகதம்.

தலையில் இருந்து ரத்தம் வெளியேற, அடிபட்ட வேகத்தில் மயக்கத்தில் ஆழ்ந்தவர், சில நிமிடங்களில் உயிர்நீத்தார்.

அன்னையின் உயிர் பிரிந்த செய்தி அறிந்தோ, கீழே அவர் விழுந்த அதிர்ச்சியின் காரணமோ தெரியாது, அன்னையின் வயிற்றில் இருந்து வெளியேற அந்த சிசு முனைப்பானது.

மழை சற்று ஓய, மகளைக் கூட்டி வந்த வீரன், வழக்கமாக வாசலில் நிற்கும் மனைவியைக் காணாது அவரைத் தேடிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தவர், சமையலறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியைப் பார்த்து அதிர்ந்து நின்றார். மனைவியின் மரணம் கண்டு அவர் அடிவயிற்றில் இருந்து “மரகதம்” என்ற கதறல் வெளிப்பட்டது. அவரது ஓலம் வீட்டின் பின் தங்கியிருந்த வேலையாட்களை உடனே அங்கு வர வைத்தது. மலரோ அதிர்ச்சியில் அன்னையின் அருகில் கதறிக்கொண்டு உட்கார்ந்து இருந்தாள்.

“அம்மா... அம்மா... எழுந்திருங்கம்மா.... அம்மா... எழுந்திருங்கம்மா...” என்று அழுது கரைந்தாள்.

வேலையாட்களில், சட்டென்று சுதாகரித்த மூதாட்டி ஒருவர்,

“ஐயா, மொதல்ல வயத்துல இருக்கற புள்ளையைப் பார்ப்போம்” என்று சொல்லி, மரகதத்தின் வயிற்றில் கை வைத்து அழுத்திப் பார்த்தார்.

பல நூறு பிரசவங்கள் பார்த்த அவரால், சூழ்நிலையை உணர முடிந்தது,

அங்கிருந்த பெண்களை அழைத்தவர்,

“புள்ள உயிரோட இருக்கு, வெளிய வர கீழ இறங்கிருச்சு. ஆத்தா இறந்ததால அதால முடில. உடனே ஓடிபோயி நீ சுடுதண்ணி வை. நீ போயி கதிரருவா கொண்டா, நீ போயி துணி எடுத்தா, நீ மகாவைக் கூட்டிப்போ” என்று ஆணையிட்டவர், அங்கிருந்த ஆண்களை வைத்து வீரனை அழைத்துப்போகக் கூறினார்.

அவரோ நகரமால் பிடிவாதம் பிடிக்க, வேறு வழி இன்றி அவரை இழுத்துக்கொண்டுச் சென்றனர்.

அடுத்த இரண்டு நிமிடத்தில், அருள் இந்த உலகை எட்டிப்பார்த்தான். ஆனால் அவன் அழவில்லை. அதில் அனைவரும் பயந்து போயி இருக்க, அவனை ஆவலுடன் அருகில் வந்து பார்த்த மலரின் கரம் பட்டதும் வீலென்று அழ ஆரம்பித்தான்.

இறந்த அன்னையின் உடலில் உயிர் தங்கிப் பிறந்த, அந்த குலத்தின் அரசனாக பாவிக்கப்பட்டவன், அருளரசு என்றானான். அன்று முதல் மரகதத்தின் மகன் மலரின் மகனாகிப் போனான்.

மலாரத மொட்டு, கனியினை தன் மடியில் போட்டு பார்த்துக்கொண்டது. அதன் பின் அருளுக்கு மலர் அருளின் உயிராகிப் போனாள்.

அனைத்தும் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது, மலருக்கு பதினெட்டு வயதாகும் வரை. மலரின் பதினெட்டாவது வயதில், ஒரு நாள் காலை நெஞ்சு வலி கண்டு வீரன் படுத்துவிட்டார். அந்நேரம் அவருக்கு உற்ற தோழனாக, உறவினர் சிங்காரம் தான் இருந்தார். தன்னை விட பதினைந்து வருட சிறியவனாக சிங்காரம் இருந்த போதும், அவரை கலந்தாலோசிக்காமல் வீரன் மரகத்தின் மறைவிற்குப் பின் எதுவும் செய்ததில்லை. ஒரு மாத காலம் படுத்த படுக்கையாக இருந்த வீரன், உடல் நலம் தேறி எழுந்த பின், செய்த முதல் வேலை, மலருக்கு மாப்பிள்ளை பார்த்ததுதான்.

சிங்காரம் எவ்வளோ எடுத்துக்கூறியும், வீரன் பிடிவாதம் பிடித்து, மேகநாதனை மாப்பிள்ளையாக முடிவு செய்தார்.

பெண் பார்க்கும் படலம் முதல் திருமணம் வரை மேகநாதனை ஒரு குறை சொல்ல முடியவில்லை. அவருடைய பெற்றோரும் அப்படியே.

திருமணம் ஆன நாள் முதல், மலரிடம் மயங்கித்தான் போயிருந்தார் மேகநாதன்.

மலரின் அன்பு, அழகு, வர கொண்டுவந்த சீர் பொருட்கள் என அனைத்தும் மேகநாதனைக் கவர்ந்தது. மேலும் மாமனார் வீட்டு விருந்தென்று வந்தவர், மெல்ல நிர்வாகத்திலும் தலையிட்டு அங்கேயேத் தங்கிக்கொண்டார்.

மகன் எப்படியும் முழு சொத்தையும் கைப்பற்றுவான் என்ற எண்ணம் கொண்ட மேகநாதனின் பெற்றோரும் அவரை அங்கேயே விட்டு வைத்தனர்.

அனிக்கா மலரின் வயிற்றில் உதிக்கும் வரைக்கும் ஆனந்தம் கரை புரண்டோடியது அந்த வீட்டில். கருவுற்ற மனைவியைத் தன் அன்பால் மேலும் சீராட்டினார் மேகநாதன்.

மூன்றாம் மாத முடிவில், திடீரென்று ஒரு நாள் வீட்டிற்கு வேகமாக வந்த மேகநாதன், மலரைக் கூட்டிக்கொண்டு சேலத்திற்குப் புறப்பட்டார்.

வீரனும் மனதார அனுப்பி வைத்தார். என்னதான் அப்பாவுடனும், தம்பியுடனும் இருந்தாலும், கணவன் வீட்டில் இருப்பது தானே பெருமை என்னும் எண்ணம் ஊன்றிப் பிறந்து வளர்ந்த மலரும் மகிழ்வுடன் புறப்பட்டார்.

மலரின் பிரிவை எதிர்பார்த்தே வளர்ந்த அருளும், மலரைப் பிரிய இசைந்தாலும், இன்னும் சில நாட்களில் மீண்டும் பிரசவத்திற்கு வருவாள் என்ற எதிர்பார்ப்பும் அவன் மனதில் இருக்கத்தான் செய்தது.

அருளும், வீரனும் இன்முகத்துடன் இருவருக்கும் விடை கொடுத்தனர். மலரும் இன்முகத்துடன் விடைபெற்றார். மேகநாதன் விடைபெறும் அவகாசம் கூட இன்றி வேகமாகச் சென்றார்.

மலர் வனம் பூக்கும்....


 
Status
Not open for further replies.
Top