All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஜோவின் "பனி விழும் மலர்வனம்" - கதை திரி

Status
Not open for further replies.

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பனி விழும் மலர்வனம்!










அத்தியாயம் – 8


பிறந்தகம் விட்டுப் பிரிந்து போகும் வருத்தம் கொள்ளக்கூட மலருக்கு அன்று வாய்ப்புக் கிடைக்கவில்லை. சேலத்தை நோக்கி கார் வேகமாகப் பயணிக்க பயணிக்க மலரின் முகத்தில் அச்சம் அதிகரிக்கத் தொடங்கியது. அதிவேகம் உண்மையில் நல்லதன்றே!

துப்பாக்கியில் இருந்து சீறி வரும் தோட்டாவாய் கார் பறந்து கொண்டு இருந்தது. எதிரில் வந்த வண்டிகளில் மோதாமல் வீடு போய் சேர வேண்டிய கட்டாயம் மலருக்கு உறைத்தது.

வயிற்றில் இருக்கும் சிசுவின் நினைவு வந்த நொடி, அவர் வாய் தானாகத் திறந்து கொண்டது.

“என்னங்க... கொஞ்சம் மெதுவா போங்க...”

“------------------------------------“

“இப்பத்தான் மூனு மாசம் முடிஞ்சு இருக்கு”

“-----------------------------------“

“எனக்காக வேண்டாம்... உங்க பிள்ளைக்காகவாது கொஞ்சம் மெதுவா போங்களேன்”

“-----------------------------------“

மலரின் கெஞ்சல் குரல் அனைத்தும் வீணாகப் போனது தான் மிச்சம்! கொஞ்சம் கூட மேகநாதன் இளகவில்லை.

அதே வேகத்தில் தொடர்ந்த அவர் சேலம் வந்து தான் காரை நிறுத்தினார்.

அப்பொழுதுதான் மலருக்கு மூச்சே வந்தது. இருந்தும் பொள்ளாச்சியில் அடி வயிற்றில் வைத்த கரத்தினை கார் நின்றும் எடுக்க மனம் வரவில்லை.

கார் வந்த வேகத்தைக் கண்டே வீட்டுப் பணியாட்கள் காரின் அருகில் ஓடி வந்து நின்றனர்.

“இறங்கு” என்று மலரிடம் சொன்னவர் வேலையாட்களிடம் திரும்பி, காரின் டிக்கி சாவியைத் தூக்கி எறிந்தார்.

அடுத்த நிமிடம், மலரின் பொருட்கள் இறக்கப்பட்டு இருக்க, மலரும் இறங்கி இருக்க, கார் புறப்பட்டுச் சென்றது.

புயல் வேகத்தில் வந்த காரில் இருந்து இறங்கி திகிலுடன் நின்று கொண்டு இருந்த மலரைக் கண்ட மேகநாதனின் தாய் சிவகாமி, வேகமாக அவளிடம் விரைந்தார்.

மலருக்கோ தலை சுற்ற ஆரம்பித்தது. கணவனின் செயலில் மனமும் கண்களும் கலங்கி நிற்க, சிவகாமி அவளைத் தேற்ற ஆரம்பித்தார்.

“ஒன்னும் இல்ல மலரு, அவன் அக்கா சுலோச்சனா புருஷன் கடனைப் பண்ணி வைச்சிட்டு எங்கேயோ ஓடிப்போயிட்டான். அதான் அவ ஆளு அனுப்பி தம்பிய வரச் சொல்லி இருக்கா. எனக்கே இப்பத்தான் தெரியும்”

“பரவால்ல அத்தை” என்று நிலைமையின் தீவிரம் உணர்ந்த மலர் புன்னகைத்தாள்.

“அட நீ வேற... வயத்துப் பிள்ளைய பார்க்காம அங்கிருந்து அவன் ஒன்னும் பறந்து வர வேண்டாமேன்னு தான் நான் சொல்லாம விட்டேன். அவ அவசரப்பட்டு ஆள அனுப்பி வைச்சு இருக்கா”

“இருக்கட்டும் அத்தை... ஆத்திர அவசரத்திற்கு உதவாட்டி என்ன தம்பி?”

“சரி சரி... நீ வா” என்று அவளை உள்ளே அழைத்துச் சென்றவர், மலர் கொண்டுவந்த பொருட்களைப் பார்க்கவும் தவறவில்லை.

அன்று சென்ற மேகநாதன், முழுதாகப் பத்து நாட்கள் கழித்துத்தான் திரும்பி வந்தார். வந்தவர் கூடவே சுலோச்சனாவையும் அவள் மகன் ராஜாவையும் அழைத்துவந்தார்.

அதுவரை மகள் பற்றிய கவலையற்றுத் திரிந்த சிவகாமி கூட,

“சுலோ.... என்னடி இப்படி ஆகிடுச்சு...” என்று அழுது, புலம்பித் தள்ளினார். மகளைக் கட்டிக்கொண்டு அவர் அழ ஆரம்பித்ததும், சுலோவும் அழ ஆரம்பித்தாள்.

சற்று நேரம் இருவரும் அழுது ஓய்ந்ததும்,

“வாங்கண்ணி” என்று மலர் சென்று அழைத்தார்.

“என்னடி என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது?” என்று சுலோ கத்திய கத்தில் ஒரு நொடி மலர் திகைத்து நின்றுவிட்டார்.

“அண்ணி” என்று அதிர்ந்து நின்ற மலரைக் காணாது, மேகநாதன் அக்காவிடம் ஓடினார்.

“என்ன அக்கா? என்னாச்சு?”

“உன் பொண்டாட்டிக்கு திமிர் அதிகம்டா... நான் இந்த நிலைமைக்கு வந்தத எண்ணி அவளுக்கு உள்ளுக்குள்ள சந்தோசம்டா...”

“என்னக்கா சொன்னா?”

“என்னத்தை சொல்லல? என் நிலைமை இப்படி ஆகிடுச்சே....” என்று அவர் அழ, மலருகுத்தான் ஒன்றும் புரியவில்லை.

“அக்கா... நீ முதல்ல அழறத நிறுத்து”

“என்னன்னு சொல்லுவேன்... ஏதுன்னு சொல்லுவேன்....என்னதான் பிறந்த வீடா இருந்தாலும், இப்ப என் வீடு இல்லையே”

“அக்கா... இப்ப எதுக்கு அழற? இது உன் வீடு தான். என்னிக்குமே”

“இல்லடா... என் வீடு இல்ல... சாவிக்கொத்து தொங்க தொங்க வீட்டைக் கட்டி ஆண்டனே! இங்க ஒத்த ரூவா காசுக்கு கூட கையேந்தி நிற்கணுமே” என்று ஒப்பாரி ராகம் வைத்து பாடப் பாட,

சிவகாமிக்கு நெஞ்சில் பயம் உருவானது.

சுலோ அழுது பாடப் பாட, அவர் பயத்தை மெய்ப்பிப்பது போலவே அக்காவிடம் இருந்து எழுந்த மேகநாதன், அன்னையின் இடுப்பில் தொங்கிய சாவிக்கொத்தைப் பிடுங்கி வந்து அக்காவின் கைகளில் வைத்தார்,

“அக்கா... இங்க பாரு... இது உன் வீடு... நீ தான் இங்க அதிகாரம் பண்ற... உனக்குத்தான் இங்க உரிமை இருக்கு... புரியுதா... நான் உட்பட யாரா இருந்தாலும் உன்கிட்ட தான் காசு கேட்போம். சரியா... அழாத... வா” என்று அவரை அவரது அறையில் விட்டு வந்தார்.

எண்ணிய காரியம் ஈடேற, சாவிக்கொத்தை இடுப்பில் சொருகியபடி அறைக்குச் சென்றார் சுலோ.

மனதளவில் நொந்து போன மலரிடம் வந்த சிவகாமி, “அவ அப்படித்தான் மலரு. என் மாமியார்க்கு அப்புறம் அவ தான் வீட்டு நிர்வாகம் பண்ணா. அதுவும் என் மாமியார் பார்த்த வேலை. கல்யாணம் ஆகி இத்தனை வருசத்துல, இந்த ஐஞ்சு வருசமாத் தான் இந்த சாவி என் இடுப்புல தொங்குச்சு.. இப்ப அதுவும் போச்சு... உனக்கு அந்த கனவே வைச்சுக்காத... முடிஞ்சா உன் புருஷன் கூடப் போயி உன் அப்பாரு கூட இருந்துக்கோ” என்று மேலும் நோகடித்துவிட்டு அவர் அறைக்குச் சென்றார்.

மேகநாதனின் தந்தை கணேசனின் முதல் மனைவி அவரது தாயின் அண்ணன் மகள். அவர் தூக்கி வளர்த்த, மருமகள் மாதுரியையே மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார். ஆனால் இரண்டாவது முறை கருத்தரித்ததில் சிக்கல் ஏற்பட்டு ஐந்தாம் மாதத்தில் கருக்கலைப்பின் போது மாதுரி இறந்துவிட்டார்.

பிறந்தகம், புகுந்தகம் இரண்டிலும் செல்லமாக கோலோச்சிய மாதுரியின் குணங்களும், பாட்டியின் குணங்களும் சேரப் பிறந்த சுலோவைப் பார்த்துக்கொள்ள, மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்ய பெரியவர்கள் முடிவு செய்தனர்.

மேகநாதனின் தந்தை, அவருடைய தங்கை மகளைத் தான் மணமுடிப்பேன் என்று கூறி அதை செய்தும் காட்டினார். முதல் முறை அந்த பேச்சை தடுத்து மாதுரியை மணமுடித்து வைத்த சிவகாமியால், இரண்டாம் முறை வெற்றி பெற முடியவில்லை.

வழக்கம் போல, மருமகளை அடிமையாக்கி, பேத்தியை எஜமானியாக்கினார். ஆயிரம் இருந்தாலும் பேரன் என்ற வாரிசு சிவகாமியின் மூலம் வர பேரனை அக்கா பாசத்தில் மூழ்கடித்து, அன்னையைப் பின்னுக்கு நிறுத்தினார்.

மேகநாதன் உண்மையான பாசம் காட்டக் காட்ட சுலோவும் உண்மையான பாசத்தைக் கொட்டி தம்பியை வளர்த்தாள்.

வசதி குறைந்த வீட்டில் இருந்து வந்த சிவகாமிக்குப் பணம் பெரிசாகப் போக, அதற்கு மயங்கி, சுயமரியாதை இழந்து வாழத்தொடங்கிவிட்டார்.

அம்மா பிள்ளையான கணேசனும் எவற்றையும் கண்டுகொள்ளாது இருந்து கொண்டார். அதே போல மேகநாதனின் தாய், தன் மறைவின் போது, வீட்டின் கொத்து சாவியை பேத்தியிடம் தந்து, பொறுப்பை அளித்துவிட்டு இறந்தார், மறக்காமல் போதித்தும் விட்டிருந்தார்.

திருமணம் ஆகிச் சென்ற போது வேண்டா வெறுப்போடு தான் சுலோ அதைத் தியாகம் செய்தாள். ஆனாலும் வீட்டிற்கு வந்தால், அவள் அதிகாரம் தான் பெரிதாக இருக்கும்.

நிரந்தரமாகத் தங்க வந்த அன்றே செயலில் இறங்கி, காரியம் சாதித்துக் கொண்டாள் சுலோச்சனா. நடந்த அதிரடி நிகழ்வுகளில் மனம் குழம்பி, கலங்கித் தவிக்க ஆரம்பித்தாள் மலர்.

மேகநாதனோ அவள் கலக்கத்தைச் சற்றும் உணராமல், மலரின் கரம் பற்றி அவர்களது அறைக்கு அழைத்துச் சென்றார்.

மலர் வனம் பூக்கும்....


 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பனி விழும் மலர்வனம்!










அத்தியாயம் – 9


மலரின் கரம் பற்றி அறைக்கு அழைத்து வந்த மேகநாதன், மனைவியின் உடல் நிலையைச் சற்றும் பொருட்படுத்தாது, மலரைக் கட்டிலில் தள்ளினார்.

வயிற்றில் அடிபடாமல் சுதாகரித்த மலர், கீழே விழாமல் அமர்ந்து கொண்டார்.

கதவைச் சாற்றிவிட்டுத் திரும்பிய மேகநாதனோ, பத்து நாட்கள் கழித்துப் பார்க்கும் நிலையில், ஒரு அன்புள்ளக் கணவனாக அவரை விசாரரிக்கக் கூட இல்லை. மாறாக மலரிடம் முதன் முறையாகக் கோபத்தை வெளிப்படுத்தினார்.

“இங்க பாரு. இது என் அக்கா வீடு தான். அவ என்ன சொன்னாலும் சரின்னு சொல்லிட்டுப் போ. மரியாதை குடுத்துப் பழகு. அதை விட்டு என் உரிமை, என் வீடுன்னு ஆரம்பிச்ச? கொன்னு பொதைச்சுடுவேன். அக்கா இப்படி ஒரு நிலைமைல இங்க வந்து இருக்கா. அதனால இனி நைட்டுக்கு, நான் கீழ அக்கா ரூமுக்கு பக்கத்து ரூம்ல இருக்கேன். அப்புறம் அக்கா முன்னாடி பார்த்து நடந்துக்கோ. புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்” என்று கோபமாகச் சொல்லிவிட்டுக் கீழே போய்விட்டார்.

மலரோ நடந்தவற்றை உள் வாங்க இயலாது அமர்ந்து இருந்தாள்.

ஒரு விஷயத்தை மற்றவரிடம் சொல்லும் போது எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அன்பாக, வேண்டுகோளாக, கட்டளையாக, கருத்தாக என்று பலவிதங்கள் உள்ளன.

மேகநாதன் எண்ணம் அந்த நேரத்தில் சரியாக இருந்தாலும், அவர் செய்த பெரும் பிழை, அதைக் கோபத்தில் சொன்னதுதான். தாய் மறைந்த பின், கோபம் என்ற ஒன்றை அறியாது வளர்ந்த மலரிடம், மேகநாதன் காட்டிய கோபம் அவரை அவர் அறியாமலேயே மலரிடம் இருந்து விலக்கி வைத்தது. அந்த கோபம் மலரிடம் விளைந்த மற்ற பயங்களை விடப் பெரிதாக, ஆழமாக வேர் பிடித்துக் கொண்டது.

நாட்கள் நகர ஆரம்பிக்க, மலர் உணவுண்ண மட்டுமே மேலிருந்து கீழே வரத் தொடங்கினாள். பழங்கள், நீர் முதலியவற்றை அவள் அறையிலேயே வைத்துக் கொண்டாள்.

முடிந்தவரை சுலோ கண்ணில் படாதவாறு பார்த்துக்கொண்டாள். ஆனால் அதற்கும் மேல், மேகநாதன் தான் அவள் கண்ணில் படுவதேயில்லை.

போதாக்குறைக்கு ராஜா மேகநாதனுடன் உறங்கத் தொடங்க, மலரைப் பற்றி அவர் எண்ணவே இல்லை.

அன்றைய நாட்களில் மருத்துவரைப் பார்த்து பிரசவம் என்ற ஒன்று நடந்ததில்லை. கை தேர்ந்த மருத்துவச்சிகள் மூலம் தான் பெரும்பாலும் நடக்கும்.

எனவே மருத்துவமனை செல்லும் நிலை மலருக்கும் இல்லை. ஆயினும் ஒரு முறை சென்று பார்க்க விருப்பம் கொண்ட மலர், சிவகாமியை அணுக, அவர் “சுலோவைக் கேள்” என்று இரண்டு வார்த்தைகளில் முடித்துவிட்டார்.

இரண்டு நாட்கள் கணவரைக் காண முயற்சிகள் மேற்கொண்ட மலருக்கு முயற்சி பலனளிக்காமல் போக, வேறு வழியின்றி சுலோவைக் கேட்கப் போனாள்.

சுலோவின் அறைக்கு முன்பு தயங்கித் தயங்கிப் போய் நின்ற மலர், அவர் படுக்கையில் புத்தகம் படிப்பதைப் பார்த்து எப்படி அழைப்பது என்று திணறிக் கொண்டே, “அண்ணி” என்று பயந்து கொண்டே அழைத்தாள்.

மெல்ல புத்தகத்தைக் கீழே வைத்த சுலோ,

“வா” என்று மென்மையாகச் சொன்னாள்.

உள்ளே சென்ற மலரிடம், “உடம்பு எப்படி இருக்கு மலரு?”

“நல்லா இருக்கண்ணி.”

“சொல்லு, என்ன விஷயம்?”

“ஒரு தடவை பெரிய டாக்டர பார்த்துட்டு வரணும். அதான் உங்ககிட்ட கேட்கலாம்னு வந்தேன்”

“எப்ப போகணும்?”

“இங்க டாக்டர் யாரையும் எனக்கு தெரியாது. எங்க போயி பார்க்கறதுன்னும் எனக்குத் தெரில. உங்களுக்குத் தெரிஞ்சவங்க....” என்று பேசிக்கொண்டே போனவள் கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.

மலரின் மனதிலோ, “என்னையே உனக்கு வேலை செய்யச் சொல்லறியா? என்று கேட்டுவிடுவாளோ?” என்ற எண்ணம் சட்டென்று தலை தூக்கியது தான் காரணம்.

“நாளைக்கு போலாம். காலைல வெள்ளனே கிளம்பு” என்று சொல்லிவிட்டுக் கீழே கிடந்த புத்தகத்தை எடுத்து அதில் பார்வையைப் பதித்தாள்.

மலரும் வெளியே வந்து அறைக்குள் நுழைந்து நிம்மதிப் பெருமூச்சை விட்டாள்.

சொன்னபடியே மறுநாள் சுலோவே அவளைக் காரில் மருத்துவரிடம் அழைத்துச் சென்று, பரிசோதித்துவிட்டுக் கூட்டிவந்தாள்.

அதுநாள் வரை, உணவு சொல்வது சுலோவின் வேலை, சமைப்பது சிவகாமியின் வேலை, உதவிக்கு இரண்டு வேலையாட்கள் என்ற நிலை தான் இருந்தது. அன்றைய தினத்திற்குப் பின்பு, மலருக்குப் பிடித்த உணவு வகைகளைக் கேட்டு அதையும் சமைக்கச் சொன்னாள்.

மேலும் சில மாற்றங்களும் கொண்டுவந்தாள். தினமும் மலர் மாலை வேலையில் ஒரு மணி நேரம் நடக்க வேண்டும், மூன்று வேலையும் இளநீர் குடிக்க வேண்டும், தயிர் உண்ண வேண்டும், மோர் குடிக்க வேண்டும், பழங்கள் உண்ண வேண்டும் என்று பலவித கட்டளைகள் வேலையாட்களுக்கும், சிவகாமிக்கும் தரப்பட்டன.

பார்க்கும் நேரங்களில் மலரிடமும் தன்மையாகவே சுலோவும் நடந்துகொண்டாள்.

அதிகப்படியான கவனிப்பால், மூச்சு முட்டியது மலருக்கு. நாளடைவில் மோருடன் நிற்பவரைக் கண்டால் குமட்டிக் கொண்டே வந்தது. அந்தந்த நேரத்திற்கு சரியாக மலர் அவற்றைச் சாப்பிட வேண்டும், கதவடைக்கக் கூடாது, உறங்கினாலும் எழுப்பித் தரச் சொல்லி சுலோ சொல்லியதால் மலருக்கு கசப்புணர்வு தான் வந்தது.

நாட்கள் வாரங்களாக மாற, ஒரு நாள் காய்ச்சல் கண்டு சுலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். சிவகாமி துணைக்கு மருத்துவமனையில் இருக்க, மேகநாதன் வீட்டிற்கு வந்தார்.

ராஜா உறங்கிய பின்னர், அவனை விட்டுவிட்டு அர்த்த ராத்திரியில் மனைவியைத் தேடி அவர்களது அறைக்குச் சென்றார் மேகநாதன்.

சுலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரிந்தாலும், மேகநாதன் தான் உடன் இருப்பார் என்று எண்ணிக்கொண்ட மலருக்கு அவர் வீட்டில் தங்கிய விபரம் தெரியவில்லை.

மாதங்கள் கழித்துப் பார்த்த மனைவியின், தாய்மையின் பூரிப்பிலும், மேடிட்ட வயிற்றிலும், அழகு தேவதையென மின்னிய மனைவியைக் கண்ணெடுக்காமல் பார்த்தவர், கதவைத் தாளிட்டுவிட்டு மனைவியின் அருகில் சென்றார்.

அருகில் அரவம் உணர்ந்து பயந்து எழுந்தமர்ந்த மலர், கணவனைக் கண்டதும் கண்களில் நீர் வர அவரைக் கட்டிக்கொண்டார்.

மேகநாதனின் தேவையோ வேறாயிருக்க, மனைவியின் மனக்குமுறல்கள் அவரை எட்டவில்லை. தேவையை அடையும் பொருட்டு மனைவியைச் சரித்து அவரின் மீது சரிந்து, பலநாள் வேட்கையை ஒரே நாளில் தீர்த்துக்கொள்ள ஆரம்பித்தார்.

வயிற்றுப் பிள்ளையுடன், அவரது வேகத்தைத் தாங்கிக்கொண்டு இனங்குவததைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு மலர் தள்ளப்பட, மலரின் மனம் மரத்துப் போனது.

விடியும் வரை தேவையைத் தீர்த்துக்கொண்டவர், விடியும் நேரத்தில் கீழே சென்றுவிட்டார்.

கணவர் சென்ற பின்பு, கதவைத் தாளிட்டு வந்த மலர், கட்டிலில் அமர்ந்து காலில் முகம்புதைத்து அழுது தீர்த்தார்.

திருமணமான ஆரம்ப நாட்களின் நினைவில், மலரின் கண்கள் நீரைச் சொரிந்தன. அன்புடன் இருந்த கணவன், எங்கிருந்தாலும் மூன்று வேளை உணவிற்கும் வீட்டிற்கு வந்து விடுவார், அதுவும் மனைவியே சமைக்க வேண்டும்.

கருவுற்ற செய்தி கேட்ட பின்னரோ ஒவ்வொரு வாய் உணவையும் மேகநாதனே ஊட்டி விடுவார். வாந்தி எடுக்கும் போது, ஆதரவாகத் தலையைப் பிடித்துக்கொண்டு நிற்பார்.

தினமும் ஏதாவது ஒரு பரிசு வாங்கி வருவார். அந்தக் கணவன் காணமல் போன நிலையை எண்ணி அழுது தீர்த்த கண்கள், திருட்டுத்தனமாக வந்து மனைவியுடன் உறங்கிவிட்டுச் செல்லும் தன் இழி நிலையை எண்ணி மேலும் நீரைச் சொரிந்தது.

கசங்கிய மலராக இருந்தவள், எழுந்து குளித்துவிட்டு வந்து படுத்துக்கொண்டாள், உணவும் அறைக்கே வந்தது.

மேகநாதனை விட்டு மனதளவில் விலகி இருந்த மலருக்கு இந்த செய்கை அவரை இன்னும் கீழே தள்ளி இருந்தது. வேர் பிடித்த மரம், பயம் என்ற செடியாக இருந்து வெறுப்பு என்ற மரமாக வளர்ந்து நின்றது.

சுலோ மருத்துவமனையில் இருந்த ஒரு வாரமும் இது தான் நடந்தது. சுலோ வந்த பின்னர் மேகநாதன் மலரின் கண்களில் படாமல் இருக்க ஆரம்பித்தார்.

சுலோ மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த அன்று அவரை நலம் விசாரித்த மலரின் முகத்தை வைத்தே சுலோ நிகழ்ந்தவற்றை யூகித்துக் கொண்டாள். அது மட்டுமின்றி, சோகமாக மருத்துவமனையில் சேர்த்துவிட்டுச் சென்ற தம்பி, மறுநாள் மலர்ந்த முகத்துடன் வரும் போதே சுலோவுக்கு சந்தேகம் துளிர்த்தது.

அதன் பின் ஒரு வாரம் கழித்து, சுலோவின் உடல்நிலை சீரானதும், ராஜா சுலோவுடன் படுக்க, மேகநாதன் மலருடன் தங்க ஆரம்பித்தார்.

மேகநாதன் அறியாத ஒன்று, சுலோ மலரிடம் பேசியது தான். சுலோ மலரை அழைத்து, முக வாட்டத்தைக் கேட்க, மலரும் கொட்டித் தீர்த்துவிட்டாள், குறிப்பாக கணவனின் திருட்டுத்தனத்தை. தயங்கிக் கொண்டே அழ ஆரம்பித்த மலரிடம் இருந்து செய்தியைப் பெறுவதற்கு சுலோ பெரிதாக முயற்சிக்கவில்லை.

ஆறுதலாக அவள் பேசிய விதமும், அவளை அணைத்து அவள் தேற்றிய விதமுமே சுலோவுக்கு மலரிடம் விஷயத்தைக் கறக்கப் போதுமானதாக இருந்தது.

மலரின் இடத்தில் வைத்து யோசித்த சுலோ, தீர்வை உடனடியாகக் கொண்டுவந்தாள்.

மலருக்கும் ஆயிரம் கனவுகள் இருந்தது. கணவன் நடை பயிலும் போது உடன் வர வேண்டும், சாப்பிட ருசியாக வாங்கி வர வேண்டும், குழந்தையின் அசைவை உணர வேண்டும், குழந்தையுடன் பேச வேண்டும், குழந்தை வளரப்பைப் பற்றி பேச வேண்டும் என்று பல கனவுகள் இருந்தது.

மேகநாதனோ மனைவியின் தேவையை உணராது, தன் தேவையை மட்டுமேத் தீர்த்துக்கொண்டார். ஏழாம் மாதம் வளைகாப்பு செய்ய விரும்பி வீர கேசவன் சிங்காரத்தை அனுப்ப, சுலோ ஒன்பதாம் மாதம் செய்யலாம் என்று முடித்துவிட்டாள்.

ஏழாம் மாதம் முதல் மலருக்கு கவனிப்பு அதிகமாகியது. மருத்துவமனைக்கும் சுலோவே கூட்டிச் சென்றாள். தினமும் காலை, மாலை இரண்டு நேரமும் கிணற்றிலிருந்து 20 குடம் நீர் இறைக்க வேண்டும். வீட்டின் ஹாலை தினமும் கூட்ட வேண்டும், துடைக்க வேண்டும் என்று பல வேலைகள் தரப்பட்டன.

இன்று போல அன்று இல்லை, துணியைக் கொண்டு கீழே குனிந்து, செய்ய வேண்டும். அது போக தோட்டவேலையில் களையெடுக்க வேண்டும், கரும்புக் காட்டில் வேலை செய்ய வேண்டும், கரும்புகளை வெட்டிக், கட்டு கட்டி தலையில் வைத்து கொண்டு சென்று வண்டிக்காரரிடம் தர வேண்டும் எனப் புதிய வேலைகள் அவள் பிரசவத்தை எளிதாக்கும் பொருட்டு தரப்பட்டன.

இவற்றைக் கூட மலரால் தாங்கிக்கொள்ள முடிந்தது. தினமும் இரண்டு வேலை, சாதம் வடித்த கஞ்சியில், வெண்ணையைப் போட்டுக் குடிக்கச் சொன்னதைத்தான் அவளால் முடியவில்லை.

உப்பிலாத கஞ்சியில், வெண்ணை சேர்த்துக் குடிப்பது அவளுக்கு குடலையேப் பிரட்டியது. வேறு வழி இல்லையே! சுகப்பிரசவம் ஆக இதைக் குடிக்கும் பழக்கம் கொங்கு நாட்டில் அன்றைய காலத்தில் இருந்தது.

ஒன்பதாம் மாதம் வளைகாப்பை நோக்கி மலர் ஏங்கத் தொடங்கினாள். அன்னை இல்லாவிடிலும் அன்னை வீடு சொர்கமன்றோ! வளைகாப்பு நாளும் வந்து சேர்ந்தது. வீரகேசவனின் உடல் நிலை காரணமாக அவர் வராமல் அருளையும், சிங்காரத்தின் குடும்பத்தையும், சில பங்காளிகளையும் அனுப்பி இருந்தார்.

வளைகாப்பு நாளும் நன்றாகவே விடிந்தது.



மலர் வனம் பூக்கும்....
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பனி விழும் மலர்வனம்!






அத்தியாயம் – 10


அந்த அழகிய அதிகாலைப் பொழுதில், தூக்கம் கலைந்து எழுந்த மலர், தலைக்கு நீராடி, சுலோ வாங்கித்தந்த பட்டுச் சேலையை உடுத்தி, கடவுளை வணங்கப் பூஜையறைக்குச் சென்றாள்.

மனமெல்லாம் வளைபூட்டை எண்ணிக் களிக்கவில்லை. மாறாகத் தாய் வீட்டிற்குச் செல்லும் ஆவல் மனதை நிரப்பி இருந்தது. அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் பிரதிபலிக்க, தாய்மையுடன் பேரழகாத் திகழ்ந்த மலரைக் கண்ட வேலையாட்கள் கூட மிகவும் மகிழ்ந்தனர்.

கடவுளை மனமார வணங்கிவிட்டு, ஈரக்கூந்தலைக் காயவைத்துக் கொண்டே, அவர்கள் அறைக்கு முன்பு இருந்த சிறு வராண்டாவில் நடை பயின்றுகொண்டு இருந்தார்.

முன்தினம் முழுக்க வளைபூட்டு விழாவின் வேலைகளைக் கவனித்துக்கொண்டு வந்த மேகநாதனை, சுலோ கீழேயேத் தூங்கச் சொல்ல, அவரும் கீழ் அறையில் தங்கிக்கொண்டார். மறுநாள் காலை எழுந்து குளித்துக் கிளம்ப அவர் அறைக்குச் செல்ல வந்தவர், மனைவியின் எழில்மிகு அழகில் மயங்கிச் சிலையெனச் சமைந்தார்.

கணவரின் வருகையை அறியாத மலரோ, மகிழ்ச்சியின் வெளிப்பாடாக,

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
[செந்தாழம்பூவில்...]

பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்!

வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
[செந்தாழம்பூவில்...]

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
[செந்தாழம்பூவில்...]

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி
[செந்தாழம்பூவில்...]



என்ற பாடலை மெல்லிய குரலில் தனக்குள்ளாகவேப் பாடிக்கொண்டு இருந்தார். விடிந்த பின்பாக இருந்தால், அவர் பாடியது யாருக்கும் கேட்டு இருக்காது. விடியலின் தொடக்கமாதலால் மேகநாதனுக்குத் தெளிவாகக் கேட்டது.

புருவங்கள் ஏற, மனைவியை அதிசயமாகப் பார்த்துக்கொண்டு இருந்தார், திருமணமான இத்தனை நாட்களில் ஒரு நாள் கூட மனைவி பாட்டுப் பாடி அவர்க் கேட்டதில்லை. இங்கு வரும்வரைக் கூட, மனைவியுடன் செலவிட அதிக நேரம் இருந்தது, இங்கு வந்த பின்பு அதுவும் இருப்பதில்லை. தனக்குள் யோசனையுடன் உழன்றவர், அன்றைய நாளின் மகிழ்ச்சியை, மலரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அவர் மறந்து போய் இருந்த காதல் மெல்ல அவருள் ஊற்றெடுத்தது.

மலர்ந்த முகத்துடன் மனைவியை நோக்கிச் சென்றார், அதற்கு ஏற்றவாறு மனைவியும் அரவம் உணர்ந்து திரும்பிப் பார்த்தார்.

அவரை நெருங்க நெருங்க மேகநாதனின் பார்வை மனைவியின் அழகைப் பருகத் தொடங்கியது. அவரது பார்வையின் செய்தியும், கணவரின் முகத்தில் பல மாதங்களுக்குப் பின்பு உதித்த காதலையும் உணர்ந்த மலர், வராண்டாவில் இருந்து அவரது அறைக்குள் நுழைந்துகொண்டார்.

மனைவியின் செயலில் ஏமாற்றம் கொண்ட மேகநாதனுக்குள் சிறு கோபம் எட்டிப்பார்த்தது. அதே கோபத்தில் அவர் அறைக்குள் நுழைய, மலரோ புதுப்பெண்ணின் படப்படப்புடன் ஈரத்துண்டினைக் கசக்கிக்கொண்டு கட்டிலில் உட்கார்ந்து இருந்தார்.

கோபத்துடன் கதவைச் சாற்றிவிட்டுத் திரும்பிய, மேகநாதனின் கண்களில் மனைவியின் வெட்கம் பட்ட நொடி, அவரது கோபம் பறந்து போய், அவரைத் தாபம் வந்து ஆட்கொண்டது.

அதே தாபத்துடன், மெல்ல மனைவியை நெருங்கியவர், அவளருகில் அமர்ந்து, அவள் கரங்களை எடுத்துத் தன் கன்னத்தில் வைத்துக்கொண்டார்.

முதல் நாள் இரவு, அவர் செய்த அதே செயல், இன்றைய நாள் மலரின் மனதிற்கு மருந்தாக அமைந்தது.

மெல்ல மனைவியைத் தன் பக்கம் திருப்பி, மனைவியின் நெற்றியில் முத்தமிட்டவர், கண்கள், கன்னம் எனப் பயணிக்க ஆரம்பித்தார். காமமின்றி அதில் காதலே இருந்ததில், மலரிடத்தில் இருந்து நெடு நாட்களுக்குப் பின்னர், கணவனின் தீண்டலில் காதல் வெளிவந்ததது.

சில நிமிடங்களுக்குப் பின்பு நெஞ்சில் சாய்ந்திருந்த மனைவியை நிமிர்த்தி,

“எனக்கு கீழ வேலை நிறையா இருக்கு, நான் சீக்கிரம் போகனும். சரியா?” என்று மிகக் கரிசனையாகக் கேட்டார்.

“ம்ம்” என்றுத் தலையசைத்த மலர், மெல்ல எழுந்து சென்று, சுலோ மேகநாதனுக்குத் தந்த உடையை எடுத்து வந்து கட்டிலில் வைத்தாள்.

அப்பொழுதுதான், மேகநாதன் மனைவியின் உடையைக் கவனித்தார். சரிவர மடிப்பு எடுக்காமல் புடைவை கட்டி இருந்தாலும், ஓரளவிற்கு நேர்த்தியாக கட்டி இருந்தாள் மலர்.

“என்னாச்சு? ஏன் இப்படி மடிப்பு எடுத்து இருக்க?”

“இல்லைங்க... முன்ன மாதிரி இப்ப பட்டுப் புடைவைக்கு குனிஞ்சு எடுக்க கஷ்டமா இருந்தது. அதான்...”

“சரி இரு. இன்னிக்கு விசேஷம் வேற. இப்படியே போனா நல்லா இருக்காது.” என்றவர், மனைவியை முன் நிறுத்தி, அவர் காலடியில் அமர்ந்து, ஏற்கனவே எடுத்துச் சொருகி இருந்த கொசுவத்தை எடுத்துவிட்டவர், “நீ மேல எடு, நான் சரி பண்ணி விடறேன்” என்று சொல்ல,

மலரும் மீண்டும் எடுக்க ஆரம்பித்தாள். அவரும் சரி பண்ணி, அதனைச் சொருக உதவி செய்தார். முந்தானை மடிப்புக்கும் உதவியவர், மனைவியை அழைத்துச் சென்று ஆளுயர பீரோவில் பதித்து இருந்த கண்ணாடியில் காட்டினார்.

“இப்ப பாரு நிஜமாவே தேவதை மாறி இருக்க” என்று சொன்னவர், மனைவியைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டார். மலரின் வயிற்றில் இருந்த குழந்தையின் அசைவை உணர்ந்தவர், முதன் முதலாக, அவரது சிசுவுக்கென்று, மனைவியின் முன் முழந்தாளிட்டு அமர்ந்து,அவரது வயிற்றில் முத்தமிட்டார்.

அதில் மலரின் நீண்ட நாள் ஏக்கம் ஒன்று நிறைவேற, அவர் கண்கள் நீரைச் சொரிய ஆரம்பித்தன.

தன் மீது விழுந்த மனைவியின் கண்ணீரில் நிமிர்ந்தவர், சட்டென்று எழுந்து அவரை அணைத்துக் கொண்டு தேற்ற ஆரம்பித்தார்.

அதே நேரம் வெளியில் கதவைத் தட்டிய பணியாள், “ஐயா, உங்களை சின்னம்மா வரச் சொன்னாங்க” என்று சொல்லிவிட்டு விரைந்தாள்.

“சரி.. சரி... நாம அப்புறம் பேசுவோம்” என்று சொன்னவர் வேகமாகக் கிளம்பத் தயாரானார். கிளைவிட்ட மரத்தில், விழுது முளைக்க ஆரம்பித்தது.

மலரின் மனம் பாலையாகிப் பல நாட்கள் ஆகி இருந்தது, இன்று அதில் ஒரு சிறு நீரோடைத் தெரிந்ததில் மலர் உறுதியாக ஒன்றை நம்பினார். கணவருக்குத் தன் மீது காதல் உள்ளது என்ற ஒன்றை! எப்படியும் அதைக் கொண்டு, நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று அவருள் மரணித்துக் கிடந்த நம்பிக்கை மீண்டும் உயிர்த்தெழுந்தது.

பாவம் பாலையில் தெரியும் நீர் கானல் நீராகவும் இருக்கும் என்பதை அந்த நொடி அந்தப் பாவை மறந்து போனாள்.

தந்தை அளித்த நகைகளில் அவர் வீட்டிலேயே இருந்தது. விருந்துக்கு அனைத்தையும் அணிந்து செல்லச் சொல்லி சிவகாமி உத்தரவு. இங்கு எதுவுமே இல்லை. போட்டுவந்த நகைகளோடு சரி. அதன் பின் கணவர் வாங்கித்தரவும் இல்லை.

போட்டுவந்த நகைகளையே அணிந்து கொண்டு, தலையைப் பின்னிக் கொண்டு கீழே சென்ற மலர், சுலோவைப் பார்க்கப்போனாள். “புடைவையைக் கட்டிக் காட்டவில்லை என்று குறை சொல்வாளோ?” என்ற ஐயமே அவளை அழைத்துச் சென்றது.

அவளது அறை வாசலில் நின்றவள், “அண்ணி” என்று அழைத்தாள்.

உள்ளே அவளுடைய பீரோவைக் குடைந்து கொண்டு இருந்த சுலோ மெல்லத் திரும்பிப் பார்த்தாள், “என்ன மலரு?”

“புடைவையை உங்ககிட்ட காட்டலாம்னு வந்தேன்ண்ணி”

“உள்ள வா” என்றவள், மலரை மேலும் கீழும் பார்த்தாள்.

“நகைங்க எதுவும் போடலியா?”

“எல்லாமே அங்க இருக்கண்ணி! அன்னிக்கு அவசரத்துல துணிய மட்டும் அள்ளி போட்டுக்கிட்டு வந்துட்டோம்”

“சரி சரி இரு வரேன்” என்றவள், அறையில் இருந்து வெளியேறி சிவகாமியின் அறைக்குள் நுழைந்தாள்.

அடுத்த ஐந்தாவது நிமிடம், உள்ளிருந்து சில பெட்டிகள் அவளறைக்குக் கொண்டு வந்து பாதியை பீரோவில் வைத்தவள், மீதியில் ஒன்றில் இருந்து காசு மாலையும், மற்றொன்றில் இருந்து ஒரு பெரிய அட்டிகையும், இன்னொன்றில் இருந்து ஒரு கவர்னர் மாலையும் எடுத்துத் தந்தாள்.

“இந்தா இது சித்திக்கு, தாத்தா போட்டது. இந்த மூனையும் நீயே வைச்சுக்கோ. இன்னிக்குப் போட்டுக்கோ. இந்த பெட்டிங்களை எடுத்துக்கோ. அப்புறம் இதுல, தோடு, மாட்டல், நெத்திச்சுட்டி, நிலாப்பிறை இருக்கு, இதையும் போட்டுக்கோ, தலைக்கு கொண்டை, ஜடைக்கு குஞ்சம் வைச்சு பின்னிக்கோ. குஞ்சம் வேணும்னா எங்கிட்ட கேளு” என்றவள் பெட்டிகளை அவள் கைகளில் திணித்துவிட்டு, மீண்டுமாய் பீரோவிற்குள் நுழைந்தாள்.

“ரெண்டுமே இருக்கண்ணி, ஆனா எனக்கு கொண்டை வைச்சு பின்னிக்கத் தெரியாது”

“நீ போ. நான் பட்டம்மாவ அனுப்பறேன்”

“சரிங்கண்ணி” என்றவள் வெளியேறினாள்.

அதன் பின், உறவுகள் வர, வளைபூட்டு சிறப்பாக முடிந்தது. மதியம் கிளம்ப நேரம் இருந்ததால், சற்று நேரம் ஓய்வெடுக்க மலரை சுலோ அனுப்பி வைத்தாள். உடன் ராஜமும் சென்றார்.

இருவரும் உறங்கி எழுந்து கீழே வரும் போது, வீடு அமைதியாக இருந்தது. இருவரும் வீட்டின் பின் பக்கம் செல்ல, அங்கு சுலோவின் குரல் தெளிவாகக் கேட்டது.

“இப்ப என்ன வேணும்?”

“அவ உன்கிட்ட நகை கேட்டா, நீ உன்னுடையத தரனும், நீ எதுக்கு என் நகைங்கள எடுத்துக் குடுத்த?”

“இங்க பாருங்க, நீங்க கொண்டு வந்த நகைய நான் எடுக்கல, என் தாத்தா போட்ட நகைங்கள நான் எடுத்துகிட்டேன்”

“அப்புறம் எதுக்கு மலருக்கு கொடுத்த?”

“நான் மலருக்கு கொடுக்கல”

“அப்புறம். அவ கழுத்துல கிடக்கறது யாருது?”

“இங்க பாருங்க. அது நான் என் மருமகளுக்குத் தந்தது. புரில மலர் வயித்துல இருக்கற என் மருமகளுக்குத் தந்தது”

“ஒரு வேளை அது பையனா இருந்தா?”

“அது பொண்ணுதான். டாக்டரே சொல்லிட்டாங்க.”

“அப்ப நீ அவளை கவனிக்கறது வயித்துல இருக்கற புள்ளைக்கா?”

“சரியா சொன்னிங்க”

“அடப்பாவமே”

“இது என் சொத்து. என்னடா தம்பி கல்யாணம் பண்ணிக்கப் போறானேன்னு பார்த்தேன். என்ன இருந்தாலும் அவன் மேல கொஞ்சம் எனக்கு பாசம் இருக்கு, கொஞ்சம் இல்லை நிறையாவே. அதான் நான் சொன்ன மலரைக் கட்டிக்கிட்டான். அவ எதிர்த்து பேசாம இருக்க நானும் மேகனைத் தூண்டி விட்டேன். அவனும் அவளை அடக்கி வைச்சு இருக்கான்”

“-----------------------------------------------------“

“மலர் மேகனைக் கைக்குள்ள போட்டுக்காம இருக்க யோசிச்சேன், அதான் ராஜாவை மேகன் கூட தூங்க சொன்னேன்”

“-----------------------------------------------------“

“என் மேல இருக்கற பாசத்துல அவன் பொண்டாட்டியக் கூட திருட்டுத்தனமாப் போய் பார்த்தான். அதும் நான் இல்லைன்னதும்!”

“-------------------------------------------------------“

“என்ன இருந்தாலும் நானும் ஒரு பொண்ணு தானே, அதான் மலர் நிலைமைய நினைச்சு எனக்கே மேகன் மேல கோபம் வந்துச்சு. அப்புறம் ராஜாவை என் கூடவே வைச்சுக்கிட்டேன்”

“-----------------------------------------------------“

“அதும் இல்லாம மலர் வயித்துல இருக்கற என் மருமகளை, மலர் மனசு கஷ்டப்படறது பாதிக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணேன்”

“---------------------------------------------------“

“இப்ப மலர் இந்த வீட்ல காலணா வேணும்னாக் கூட என்கிட்டத் தான் கேட்கணும். அதே மாதிரி ஒரு புடைவை வேணும்னாக் கூட என்னைத் தான் கேட்கணும். இந்த வீட்டுக்கு நான் தான் ராணி”

“--------------------------------------------------“

“எனக்கு அப்புறம் இந்த வீடு என் மருமக மூலமா என் மகனுக்கு வந்துடும்! என் மகன் தான் இனி ராஜா! உண்மையான ராஜா!”

“---------------------------------------------------“

“அப்புறம் ஏதோ துளியூண்டு தான் உன் நகைங்களத் தந்து இருக்கேன். மீதி எங்கிட்ட இருக்கு. அது அத்தனையும், ஏன்? என்னோடது அத்தனையும் இனி என் மருமகளுக்குத்தான்”

“கனவு காணாத! இது பையானா இருந்தாலும், அடுத்த குழந்தை பையனா இருந்தாலும், நீ நினைக்கறது நடக்காது”

“இது பொண்ணுதான். ஆனா அடுத்த குழந்தை மேகனுக்கு இருக்காது. இருக்கவும் நான் விட மாட்டேன்”

“ஒருவேளை இது பையானா இருந்தா?”

“இந்த வீட்ல ராஜாக்கு வரப்போற புதிய அடிமை. நான் என்ன சொன்னாலும் என் தம்பி கேட்பான்.”

“பார்க்கறேன்டி! உன் பாட்டி என் வாழ்க்கையை அழிச்சாங்க! ஆனா என் பையன் வம்சம் சீரழிய நான் விடவே மாட்டேன்”

“பார்ப்போம் அதையும்”

இருவரின் பேச்சுக்களையும் கேட்டுச் சரியா இருந்த மலரைக் கைத்தாங்கலாக கூட்டிவந்து ஹாலில் கிடந்த சோபாவில் உட்கார வைத்தார் ராஜம்.

அதன் பின் ராஜம் இயந்திர கதியில் வேலையைத் துரிதப்படுத்தி, மேகநாதனையும், மலரையும் பொள்ளாச்சிக்கு கிளம்ப காரில் ஏற்றும் வரை சற்றும் ஓயவில்லை!

மலரின் பொள்ளாச்சிப் பயணம் இனிதே தொடங்கியது. மலரின் மடியில் தலை வைத்து அருள் உறங்க, அக்காவைப் பிரிந்த ஏக்கத்தில் மேகநாதன் மடியில் ராஜாவை வைத்துக்கொண்டு வர, இருவருக்கும் பேச நேரமில்லை.

ராஜா அன்னையில்லாமல் இருக்கமாட்டான் என்று நன்கறிந்த சுலோ, ராஜாவை மேகநாதனுடன் அனுப்பி வைத்த வெற்றியில் புன்னகையுடன் நின்று கொண்டு இருந்தார்.

வீட்டின் பின் இருந்து வந்த சுலோ, ஹாலில் இருந்த மலர் மற்றும் ராஜத்தின் முகத்தை வைத்தே “ஏதோ சரி இல்லை” என்று உணர்ந்து காய் நகர்த்திவிட்டதை பாவம் இருவரும் அறியவில்லை!

மலர் வனம் பூக்கும்....
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் – 11

இன்றையக் காலம் போல அன்றைய காலம் இல்லை, குறிப்பாகப் பெண்களின் நிலை. கட்டுப்பாடுகள் அதிகம் இருந்த காலம். இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகின்றனர், அதில் முன்னேறியும் வருகின்றனர். ஆனால் அன்று?..........

நமது பாட்டிகள் பள்ளிக்குச் சென்று படித்தததைப் பற்றியக் கதைகளைக் கேட்டிருந்தாலே நமக்கு பல உண்மைகள் புரிந்திருக்கும்.

ஒற்றைப் பெண்ணாக வகுப்பறையில் படிக்க முடியாமல் நின்றவர்கள், வீட்டில் முக்கிய நிகழ்ச்சியால், பரீட்சை எழுத முடியாமல் போனவர்கள், பக்கத்து ஊருக்குச் சென்று படிக்க நேர்ந்தவர்கள், வளர ஆரம்பித்ததும் அந்த கல்வியும் மறுக்கப்பட்டவர்கள், அறுவடை நேரங்களில் வயலைக் கவனிக்கச் சென்றவர்கள், அன்னையின் பிரசவத்திற்காக பள்ளியில் இருந்து நின்றவர்கள் என பல பாட்டிகள் இருப்பார்கள். எனது பாட்டிகள் இந்த வரிசையில் உண்டு.

அம்மாக்கள் கூட படிப்பை தியாகித்து வந்திருப்பார்கள், தம்பி படிக்க வேண்டும், அண்ணன் படிக்க வேண்டும், குடும்ப சூழல், திருமணமாகி வேலை செய்ய, வேலை பழக வேண்டும் என்று ஆயிரம் காரணங்கள் அவர்களுக்கும் இருந்து இருக்கும். எனது அம்மா, சித்திகள் மற்றும் மாமியார் கூட இதில் உண்டு.

ஒற்றைப் பெண்ணாக படித்த என் மாமியாரால், அடுத்த ஊரில் உள்ள அரசுப்பள்ளியில் சென்று பரீட்சை எழுத அனுமதி இல்லாமல் பள்ளிப்படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று.

இன்று அப்படியா? இன்றைய இளம் பெண்களில் முக்கால் விழுக்காட்டினர் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். அன்று திருமணம் என்று எடுத்துக்கொண்டால், பதினான்கு வயதில் நடக்கும். இன்று திருமணம் என்றால், குறைந்த பட்சம் இருபத்தைந்தைத் தாண்டி விடுகிறோம். காதல் திருமணங்கள் சில மட்டும் இதில் விதிவிலக்கு.

இன்று கூட நமது தேவைகள், விருப்பங்கள் என்று பலவற்றைப் போராடித் தான் பெற்றுக்கொண்டு இருக்கின்றோம், அதுவும் சுயமாக ஒரு பெண் சம்பாதித்து, குடும்பத்தைக் காப்பாற்றினாலும் கூட. எனில் அன்றைய கால கட்டம்?

மன முதிர்ச்சி என்ற வார்த்தையினையாவது அன்றைய காலகட்டப் பெண்கள் அறிந்து இருப்பார்களா? ஆச்சர்யமே!

அன்றைய நாளில் வாழ்ந்த சுலோவும், மலரும் இரு வேறு குணாதிசயங்கள் கொண்டவர்கள், வயது வித்தியாசம் உள்ளவர்கள், ஆளுமைத்திறனில் மாறுபட்டவர்கள், அறிவில் வித்தியாசப்பட்டவர்கள், அனுபவத்தில் வேறுபட்டவர்கள்.

இவர்களை இணைக்கும் ஒரே புள்ளி மேகநாதன். ஒரு பதின்பருவத்தின் இறுதியில் நிற்கும் சிறுமியை ஒத்த ஒரு பெண், மனதளவில் குடும்பம், கணவன், தாம்பத்தியம் என்ற சுமைகளைத் தூக்கிச் சுமக்கும் போது, அதை அவள் முழுமையாக கிரகித்துக்கொள்ளச் சற்று அவகாசம் வேண்டுமல்லவா! அதற்குள் தாய்மை என்ற வரம் கிட்டினால், அவளது மன நிலை? அவளைவிட இரு மடங்கு வயதில் மூத்த சுலோவும் சரி, அவளை விட சில வருடங்கள் வயதில் குறைந்த, மலரை விடப் பல வருடங்கள் பெரியவனான மேகநாதனும் சரி இதைப் புரிந்துகொள்ள மறந்து போனது யார் குற்றம்?

ஒவ்வொரு பெண்ணும் புகுந்த வீட்டில் நுழையும் போது, அந்நியனே ஆனாலும் தாலி கட்டிக் கணவனாக மாறிய ஆண்மகனை மட்டுமே பற்றுக்கோலாகப் பற்றிக்கொள்கின்றாள்.

இன்று செல்போன் வழியாக மணமக்கள் குடும்ப வரலாற்றையே பரிமாறி முடித்துவிடுகின்றனர். ஆனால் அன்று? எனது பாட்டிக்கு பதினாறு வயதில் திருமணம், பதினேழு வயதில் முதல் குழந்தை. அவர் என் தாத்தாவை மணமேடையில் தான் முதன் முதலில் பார்த்தாராம். அதுவும் பெண்ணழைத்து வரும் போது.

ஆக அன்றைய நாளில் பெண்களுக்கு கணவன் யாரென்று தெரியவே திருமணமாகி நாள் கடத்த வேண்டும். அத்தகு சூழலில் பிறந்து வளர்ந்த, வீரகேசவன் தாமாகவே மாப்பிளையை முடிவு செய்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை!

இன்று போல் அன்று பேருந்து வசதியோ, சாலை வசதியோ இல்லை. மாட்டு வண்டியில் பயணம் செய்த காலத்தில், ஊர் விட்டு ஊர் சென்று விசாரித்து பெண்ணெடுக்க மாட்டார்கள்.

உறவுப்பாலத்தில், தெரிந்தவர் வீட்டுப் பெண்களை பெண்ணெடுபார்கள் அல்லது பெண் கொடுத்து பெண்ணெடுப்பார்கள்.

அப்படித் தேர்வு செய்த மாப்பிள்ளை மேகநாதனின் குணங்கள் வீரகேசவன் அறிந்தால் தாங்க முடியுமா?

அதே சமூகத்தில், கணவன் வீட்டில் இருந்து நிரந்தரமாகப் பிறந்தகம் வந்த பெண்கள் ஒன்றும் போற்றிப் பாராட்டப்படவில்லை. புகுந்த வீட்டின் நிரந்தர வேலைக்காரியாக இருந்தனர்.

குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து இறந்த அபலைகளும் உள்ளனர். இதில் தனது மகனையும் தன்னையும் தற்காத்துக் கொள்ள சுலோ எடுத்த முடிவு நூற்றில் ஒன்றிரண்டு பேர் எடுக்கும் முடிவு. பெரும்பாலும் மரணத்தையே தேர்வு செய்த காலம் அது.

மனைவிக்காக, பெற்றோரை முதியோர் இல்லம் சேர்க்கும் நிலை இன்று, அன்றோ, வீட்டின் பின்பக்கத்தில் ஜாகை அமைத்துக் கொடுத்துப் பார்த்துக்கொண்டனர். தமக்கைகளுக்கும் இது பொருந்தும். சம்பளமில்லா வேலைக்காரியாக வாழ்ந்து மடிந்த பெண்கள் ஏராளம்.

அதே நேரம் மனைவியை ஒரு பொருளாக மட்டுமே பார்த்த கணவன்களும் அன்று உண்டு. தன் சுகம் மட்டுமே இவர்களுக்குப் பெரியது. வியாபாரம் செய்தவர்களாகட்டும், விவசாயம் செய்தவர்களாகட்டும் யாராக இருந்தாலும் மனைவியிடம் பணப் பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்கள் சொன்னவர்கள் நூற்றில் ஒரு சதவீதம் கூட அன்று இல்லை.

மிகச்சிறந்த ஆளுமைத் திறன் கொண்ட சுலோச்சனா, தந்தை பார்த்த மணமகனை ஏற்றுக்கொண்டதில் சுலோ போன்ற பெண்களுக்கும் அன்றைய நிலை அப்படித்தான் சமூகத்தில் இருந்து இருக்கிறது என்பதும் புலனாகிறது.

அதே போல, இத்தகு ஆளுமை நிறைந்தப் பெண்ணால் கூட அன்று கணவனைக் கடன் வாங்காமல் கட்டிவைக்க முடியவில்லை என்பதும் புலனாகிறது.

இத்தகு சமூகத்தில், பிறப்பிலிருந்தே அதிகாரச் செருக்கு ஊட்டி வளர்க்கப்பட்ட சுலோ, தம்பி மனைவியின் கீழ் படிந்து வாழ விரும்பவில்லை. இழிநிலை என்று சுலோக்கு வந்தால் அது ராஜாவுக்கும் சேர்த்து என்பதும் மறைந்திருக்கும் உண்மை.

கணவன் வீட்டில் மகாராணியாக வாழ்ந்தவர், கணவன் செய்த செயலைத் தாங்க முடியாமல் கதறி அழுததை விட, பிறந்தகத்தில் எவ்வாறு நாட்களைக் கடத்தப் போகிறோம் என்று அழுததே அதிகம்.

ஆயிரம் தான் கணவன் தொழில் நஷ்டம் அடைந்து தலைமறைவானாலும், கணவன் மீது கொண்ட அன்பின், நேசத்தின் வெளிப்பாடாக, அந்த தொழில்களைத் தம்பியை வைத்து மீட்டாள். இந்த அன்பில் அன்றைய பெண்களை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது.

‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்ற பழமொழியை உருவாக்கியவர்கள் இவர்களைப் போன்றவர்கள் தான். சில நேரங்களில் கணவனின் துரோகத்தைக் கூடத் தாங்கிக்கொண்டனர். இந்த கண்மூடித்தனமான அன்பினாலும், காதலினாலும் குருடாக இருந்தவர்களும் சிலர் உள்ளனர்.

சுலோ இப்படி இருக்க, மேகநாதனோ தொழில்களைத் தன் பெயரில் பதிந்து கொண்டார். நிலங்கள், வீடு என அனைத்தும் மேகநாதனுக்குச் சொந்தமானது. சுலோ அலைந்து திரிந்து பார்க்க முடியாது என்ற காரணத்துடன் மேகநாதன் செயல்பட சுலோவால் மறுக்க முடியவில்லை. சிவகாமியின் போதனைகள் இதற்கு ஒரு காரணமாக அமைந்ததும் நல்லதே.

பத்து நாட்கள் மேகநாதனை பலவாறாகப் பேசி மூளைச் சலவை செய்தவர், மலரின் மேல் ஒரு சந்தேகத்தை விதைத்தே பிறந்தகம் அழைத்து வந்தாள்.

வந்ததும் மலர் சொன்ன ஒற்றை வார்த்தையை ஊதி பெரிதாக்கி விதையை வளரச் செய்தார்.

மனைவி மேல் அளவு கடந்த காதல் கொண்டிருந்த மேகநாதனுக்கும் மனைவியின் செயல் தமக்கையை பாதிக்கக்கூடாது என்ற எண்ணம் மனதில் வேரோடிப் போக, தமக்கைகாகத் தன் காதலை மறந்தார்.

பதின்வயதின் இறுதியில் நிற்கும் பெண்ணிற்கு அதை புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை என்பதையும், அதை தெளிவு படுத்த
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேண்டிய தேவை இருப்பதையும் மறந்த மேகநாதன் சகோதரிக்காக சகலத்தையும் துறந்தார்.

ஒரு தாயாக சிவகாமி என்றுமே சுலோவைப் பார்த்தது இல்லை, சுலோவிடம் காட்டும் அன்பில் நூறு சதவீதம் நடிப்பே பிரதானமாக இருந்தது, அதை சுலோவும் நன்கறிவாள். ஆனால் மகன் அப்படி இல்லையே.

மகனது வாழ்கையை எண்ணி அந்த தாயுள்ளமும் உருகத்தான் செய்தது. சுலோவின் எண்ணத்தை முழுவதும் அறிந்தப் பின், மலரிடம் பேசத் தக்க நேரத்தை எதிர்பார்த்து இருந்தது.

அரும்பாடு பட்டு இந்த அதிகாரங்களைக் கைப்பற்றி இருப்பவள், அதைத் தக்க வைக்கவும் முயற்ச்சிகள் மேற்கொள்ளத் தவறவில்லை.

அதைத் தடுக்க மலரும் முயற்சிக்கவில்லை. தன்னை விட இரு மடங்கு வயதில் பெரியவளை எதிர்க்கத் துணிவின்றி தன்னறையில் முடங்கிக்கொண்டாள் மலர். அவளது துணிச்சல் மேகநாதனால் அழிக்கப்பட்டு இருந்தது என்பதும் அதற்கு அடித்தளம் எனக் கொள்ளலாம்.

அதே நேரம், சுலோவுக்கு சுயநலத்தின் காரணமாக, மலரின் வயிற்றில் வரும் குழந்தையின் மீது கணக்கில்லாப் பாசம் பெருகி வழிந்தது. மருமகளுக்காக அவள் சேர்த்து வைத்த நகைகளும், பட்டாடைகளும் ஏராளம். சுயநலமில்லா அன்பு தான் நிரந்தரம் என்பதை அவளுக்கு யார் சொல்வார்கள்? பணம், நகை, பட்டாடை போன்றவை அஸ்திவாரமாகக் கொண்டுக் கட்டப்படும் உறவு என்றுமே நிலைக்காது என்பதை சுலோவைப் போன்றவர்கள் எப்படிப் புரிந்துகொள்வார்கள்?

“பரம சிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டதாம்
கருடா, சௌக்கியமா?”
அதற்கு கருடன் சொன்னதாம்,
“யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்
எல்லாம் சௌக்கியமே!” என்ற பார் போற்றும் கவிஞரின் வரிகள் இவர்களைப் போன்றவர்களுக்கும் பொருந்தும்.

வளைபூட்டன்று இரவு, பொள்ளாச்சி போனக் கையோடு மகனுடன் மேகநாதன் புறப்பட்டு வருவார் என்ற எண்ணத்துடன் சுலோ உறங்கச் சென்றாள்.

“பாட்டி செய்த செயலை பேத்தி செய்வதில் ஆச்சர்யம் இல்லை” என்பதை நன்குணர்ந்த சிவகாமி, தனக்கு ஏற்பட்ட இழிவாழ்க்கை, இனித் தன் மருமகளுக்கும் வராமல் இருக்க வேண்டும் என்று மனதார எண்ணியவர், அதைப் பற்றிய யோசனையில் லயிக்க ஆரம்பித்தார்.

மனைவியுடனான இனிய இரவினை எதிர்நோக்கி மேகநாதன் மனமகிழ்வுடன் வீட்டை அடையக் காத்திருந்தார்.

“எப்பொழுதடா ஓடிச் சென்று தந்தை மடியில் படுத்துக் கதறி அழுவோம்?” என்று மலர் காத்திருந்தாள்.

“அக்கா வயிற்றில் இருக்கும் பாப்பா எப்பொழுது வரும்?” என்ற ஆவலில் அருள் காத்திருக்க, “எப்போதடா அம்மாக்கிட்ட போவோம்?” என்று ராஜா காத்திருந்தான்.

அனைவரும் காத்திருக்க, அனைத்தும் சுபமாக முடியுமா?



மலர் வனம் பூக்கும்....
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் – 12

பல்வேறு சிந்தனைகள் மத்தியில் பயணம் இனிதாக நிறைவுற, மலர்வனம் வீட்டின் முன் கார் வந்து நின்றது. அதுவரை ஒரு இறுக்கமான சூழலில் இருந்த அருள் அதில் இருந்து இறங்கி வேகமாகத் தந்தையை நோக்கி ஓடினான். ராஜம் பின்னால் இருந்த காரில் இருந்து இறங்கி, அவர்களது மகனைக் கணவன் கையில் தந்துவிட்டு, மலருக்கு கார் கதவைத் திறந்துவிட வந்தார், அவர் உதவி செய்ய மெல்ல மலர் இறங்கினாள்.

மேகநாதனோ, கரம்பிடித்த மனைவியைப் பற்றி அக்கறையின்றி, ராஜாவைத் தூக்கிக்கொண்டு கீழே இறங்கிப்போய் வாசலில் நின்றார்.

“தூங்கற பையனுக்கு ஆலம் சுத்தக்கூடாது.” என்ற சிங்காரம் “டேய் முத்து, புள்ளைய வாங்கு” என்று உறவினர் ஒருவரிடம் சொன்னார்.

ராஜாவை முத்து வாங்கிக்கொள்ள, மாப்பிள்ளை கெத்தைக் காட்டிக்கொண்டு மேகநாதன் நிற்க, தாய்ப் பறவையின் சிறகில் அடைக்கலாமாகும் சேய்ப் பறவையைப் போன்று, தந்தையின் கரங்களில் அடைக்கலமாகத் துடித்தவாறு, கண்களை மறைத்த நீருடன் மலர் நின்று கொண்டு இருந்தாள்.

இருவருக்கும் உறவினர் ஒருவர் ஆலம் சுற்ற, அடுத்த நொடி வேகமாகத் தந்தையை நோக்கி ஓடினாள் மலர்.

“பார்த்தும்மா” என்ற பரிதவிப்புடன் மகளை அந்த தந்தை அரவணைத்துக் கொண்டார்.

“அப்பா” என்ற கதறலுடன், அவர் நெஞ்சில் சாய்ந்து அழுத மகளை, தேற்றும் விதமாக தலையை நீவி ஆறுதல் சொன்னாலும், அவரும் அழத்தான் செய்தார்.

“சின்னம்மாக்கு அப்பான்னா உசுராச்சே! இவ்ளோ நாளா பார்க்காம இருந்ததால அழுகை வந்துடுச்சு” என்று ஒரு பணிப்பெண் சொல்ல,

“நீ வேறக்கா, எனக்கே கண்ணு கலங்குது. இந்த ஊருக்கேச் செல்லப் புள்ளைல, ஆளே இல்லாம இந்த வீடே வெறிச்சோடிக் கிடக்கு” என்று மத்தவள் பதிலளித்தாள்.

மேகநாதனுக்கோ மலரின் செயல் பிடிக்கவில்லை என்பதை அவரது முகமே காட்டிக்கொடுத்தது.

அவரைப் பொருத்த வரை, இத்தனை உறவு முன்னிலையில் இவள் இப்படிச் செய்ததால், மாமியார் வீட்டில் கொடுமை என்று நினைக்க மாட்டார்கள்? என்ற எண்ணமே பெரிதாக இருந்தது.

தன்மானமும், கௌவுரவமும் பெரிதாகத் தோன்றிய மேகநாதனுக்கு மனைவியின் அழுகைக்குத் தான் தான் முக்கிய காரணம் என்பது என்று புரியும்?

அனைவரும் இரவு உணவு முடிந்து விடை பெற, ராஜம் மலரின் அலங்காரங்களைக் கலைத்தார்.

“மலரு, நடந்ததைப் பத்தி இப்பப் பேச முடியாது, உனக்கு இப்ப ஓய்வு தேவை, இப்போதைக்கு எதைப்பத்தியும் நினைக்காத. சரியா?”

“என்னத்தைக்கா நினைக்காம இருக்க! இன்னிக்கு காலைல எல்லாம் சரியாகும்னு அவ்ளோ நம்பிக்கை இருந்துச்சு. அவர் ரொம்ப மாசம் கழிச்சு எங்கிட்ட அவ்ளோ பிரியமா இருந்தார். ஆனா இப்ப?” என்று மலர் அழ,

“இப்ப என்ன ஆச்சுன்னு நீ இப்படி அழற?”

“அவர் அன்பை வைச்சு எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்னு நினைச்சேன், ஆனா என் விதி என்னையும் வாழ விடாது, என் குழந்தையையும் வாழ விடாது போலயே”

“இங்க பாரு மலரு, நான் காலைல வரேன், ரெண்டு பெரும் பேசுவோம், அது வரைக்கும் நீ எதுவும் யோசிக்காத, இப்ப படுத்து தூங்கு” என்று சொல்லிப் புறப்படத் தயாரானார்.

ஹாலில் பேசிக்கொண்டு இருந்த வீரனிடமும், மேகநாதனிடமும் சென்றவர், “ஒவ்வொரு பொண்ணும் மாசமா இருக்கும் போது, அம்மா நியாபகமா இருப்பாங்க. ஆயிரம் பேர் இருந்தாலும், அம்மா மாதிரி வருமா, அவளுக்கு கொஞ்சம் பிரசவம் பத்தி பயம், கூடவே அம்மா இல்லைன்னு ஏக்கம். அதான் அழுதுட்டா. நல்லா தூங்கி எழுந்தா சரி ஆகிடுவா. பார்த்துக்கோங்க” என்று இருவருக்கும் பொதுவாக உரைத்துவிட்டு சிங்காரத்துடன் கிளம்பினார்.

“நான் கூட என்னவோன்னு நினைச்சேன் மாப்பிள்ளை, இதுதான்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் நிம்மதியா இருக்கு” என்று அவர் அகம் மகிழ்ந்து சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அங்கு மலர் வந்தாள்.

“சரி மாப்பிள்ளை, ராஜாவை அருளு கூடத் தூங்கச் சொல்லுங்க, நீங்க உங்க ரூம்ல போயி படுங்க, மணியாச்சு, எவ்ளோ தூரம் பயணம் செஞ்சு வந்து இருக்கீங்க” என்றவாறே அவர் அருள் அறைக்குச் சென்றார்.

அருள் அவனது அறையில் உறங்கி இருந்தான். அருள் தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டது முதல் தனியறையில் தூங்கிப் பழகிக்கொண்டான். ஆனாலும் வீரன் மகனை பார்த்துவிட்டுத்தான் உறங்கச் செல்வார், மலரும் அதே போலத்தான், திருமணம் ஆகும் வரை தம்பி உறங்கிய பின், அவனுடன் சென்று படுத்துக்கொள்வாள். மலரும் தந்தையைப் பின் தொடர்ந்து அருளைக் காணச்சென்றாள், அதே போல ராஜாவை படுக்க வைக்க மேகநாதனும் அங்கே சென்றார்.

ஆனால் ராஜா அருளுடன் உறங்க மறுத்து அழுது அடம்பிடிக்க ஆரம்பித்தான். மேகநாதனுக்கோ மனைவியுடன் தனித்திருக்க வேண்டிய ஆசை இருந்தது. ராஜா மறுக்கவும் செய்வதறியாது திகைத்தார்.

வீரனும் மாப்பிள்ளையின் மனம் உணர்ந்து, ராஜாவை சமாதானப் படுத்த ஆரம்பித்தார். வளைபூட்டன்றைய இரவில், ஒவ்வொரு தம்பதிக்கும் பகிர்ந்து கொள்ள ஆயிரம் செய்திகள் இருக்கும், அது இச்சைகளையும் தாண்டிய ஒரு உணர்வாகவும், செயலாகவும் இருக்கும். அதை வீரனும் கடந்து வந்த்திருந்ததால் எளிதாக யோசிக்க முடிந்தது.

ராஜா இவ்வளவு அடம்பிடித்தும், யோசிக்கும் கணவனின் எண்ணம் உணர்ந்த மலர், அதைத் தவிர்க்கும் பொருட்டு,

“நீங்க ரெண்டு பேரும் நம்ம ரூம்ல தூங்குங்க.” என்று கணவரிடம் சொன்னவள்,

“அப்பா, எனக்கு அம்மா நியாபகமா இருக்குப்பா, நான் உங்க மடில கொஞ்ச நேரம் படுத்துக்கவா?” என்று கேட்க, வீரனும் சரி என்றார்.

இதை எதிர்பார்க்காத மேகநாதனோ, மாமனார் முன்னிலையில் பேச முடியாமல், ராஜாவுடன் கோபமாக அவர்களது அறைக்குச் சென்றார். மலரோ தந்தையின் அறையில், அவரது மடியில் தலை வைத்து அழ ஆரம்பித்தாள்.

“மலரு. ஏம்மா அழற?”

“ஒன்னும் இல்லைப்பா. அம்மா நியாபகம்”

“அம்மா நம்ம கூடவே இருப்பா, நீ தைரியமா இரும்மா”

“சரிப்பா” என்றவள் அப்படியே அழுதவாறு ஒரு வழியாக உறங்கிப்போக, அங்கேயே தரையில் போர்வையை விரித்து வீரனும் உறங்க ஆரம்பித்தார்.

ராஜாவை உறங்க வைத்துவிட்டு, நெடு நேரமாக மலருக்காக காத்திருந்து, இன்னும் மலரைக் காணவில்லை என்று மனைவியைத் தேடி வந்த மேகநாதன், மலர் உறங்குவதில் கோபம் கொண்டு மீண்டும் அறைக்குத் திரும்பினார்.
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மறுநாள் காலை மலர் நெடு நேரம் உறங்க, மேகநாதனுக்கு காலை உணவு வரை பணியாள் தான் பரிமாறினார். ராஜா சுலோவைக் காண வேண்டும் என்று அடம் பிடிக்கவும், மேகநாதன் உடனே புறப்பட்டார்.

அவர் கிளம்பும் நேரம் அறையில் இருந்து வெளியே வந்த மலரிடம் வெறுமனே, “கிளம்பறோம்” என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பினார். மலரோ அவர் கிளம்புவதை எவ்வித சலனமும் இன்றி பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“மறுபடியும் எப்ப வருவீங்க?, ஏன் கிளம்பரிங்க?, இன்னும் ஒரு நாள் இருக்கலாமே?” என்ற எந்த கேள்வியும் இல்லை, கவலை இல்லை, வருத்தம் இல்லை, இது போல எவ்வித தாக்கமும் இல்லை மலரிடம்.

மாறாக ஒரு சிறு நிம்மதி தோன்றியது மலரின் உள்ளத்தில், வழியனுப்ப வாயில் வரை வரவில்லை, வரவும் அவள் விரும்பவில்லை! தானாக அவள் கால்கள் அவளது அறையை நோக்கிச் சென்றது.

மகளின் செயலில் வீரனின் மகிழ்ச்சி ஆட்டம் கண்டது. மகளின் முக மாற்றம், மாப்பிள்ளையின் நடத்தை, காலை முதல் மகளைப் பார்க்கக் கூடச் செய்யாமல் இருந்த மாப்பிள்ளையின் செயல் என அவர் தனக்குள் குழம்பிக்கொண்டு இருந்தார்.

நிமிடங்களில் அவர் மனம் ஆதி முதல் அந்தம் வரை அலசி ஆராய ஆரம்பித்தது. எதுவும் தவறாக இருக்கக்கூடாது என்ற எண்ணம் அவர் மனதில் துளிர்விட ஆரம்பித்தது.

மலரோ எவ்வித சலனமும் இன்றி, அருளுடன் பேசினாள், விளையாடினாள், பணியாட்களுடன் சலசலத்தாள், பூ பறித்தாள், சுதந்திரமாக இருந்தாள்.

ஆம், அவள் மனம் மிகவும் சுதந்திரமாக உணர்ந்தது. நேற்று வரை அறையில் முடங்கிக்கிடந்தவள், இன்று ஆனந்தமாக வீட்டை உலா வந்தாள்.

முன் தினம் வீட்டுக்குச் சென்ற சிங்கராம் ராஜத்திடம் கேட்ட முதல் கேள்வி, “மலர் வீட்ல என்ன நடந்தது?” என்பதுதான்.

அடுத்த நொடி, சுலோவின் செயலை அப்படியே ஆத்திரத்தில் கொட்டித்தீர்த்து விட்டார்.

விஷயம் அறிந்த சிங்காரமோ, அதிர்ந்து உட்கார்ந்து இருந்தது சில நிமிடங்கள் தான், ஆனால் திடமாக ஒரு முடிவு எடுத்துவிட்டு இருந்தார்.

“நாளைக்கே இதைப்பத்தி மலர் அப்பாக்கிட்ட பேசணும்”

“என்ன சொல்றிங்க? அவருக்கே உடம்பு சரி இல்லை. இதை எப்படித்தாங்குவார்?”

“வேற வழி இல்ல ராஜி. இப்ப சொல்லித்தான் ஆகனும், இதுக்கு மேலயாவது மலர் நிம்மதியா வாழனும் இல்லையா?”

“நீங்க சொல்றதும் சரிதான்”

“தூங்கு, காலைல நேரமா போகலாம்”

“சரிங்க”

மலரிடம் சொன்னது போன்று, காலையிலேயே ராஜம் வந்தாள், சிங்காரத்துடன். அவர் முகத்தை வைத்தே மலர் புரிந்து கொண்டாள், ராஜம் அவரிடம் நடந்ததை உறுதியாகச் சொல்லியிருப்பாள் என்று.

பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று யாருக்கும் தெரியவில்லை. தகுந்த நேரம் எதிர்பார்த்துக்கொண்டு காத்திருந்தனர்.

மலருமே முடிவுக்கு வந்திருந்தாள், இனி தந்தையை வைத்துத் தான் இதில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று.



மலர் வனம் பூக்கும்....
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்புள்ள நட்புக்களே!

அத்தியாயம் 11 மற்றும் 12 பதிவிட்டுள்ளேன்.

படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்!
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்புள்ள நட்புக்களே!

அத்தியாயம் 13 பதிவிட்டுள்ளேன்.

Episode - 13

படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்!
 
Status
Not open for further replies.
Top