All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிதன் தயாவின் ‘கொலையும் கற்று மற’ - கதை திரி

Status
Not open for further replies.

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
படித்துவிட்டு உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள். உங்கள் அனுமானங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 6 – மோட்டிவ்

சிறிது நேர அமைதிக்கு பின் பிரியா பேசத்தொடங்கினாள்.
"இன்னும் கொஞ்சம் கூட ட்ரை பண்ணியிருந்திருக்கலாம் ஹரி. சின்ன வயசிலேருந்து டாக்டராகணும்னுதான் இலட்சியத்தோட இருந்தன். இப்ப எல்லாமே பாழாகிடுச்சு"
"பிரியா நீங்க இப்ப எடுத்திருக்கிற மதிப்பெண்ணுக்கு நிச்சயமா டாக்டராகலாம். டோன்ட் வொரி"
"பிரைவேட் மெடிக்கல் காலேஜ்லதான் சீட் குடுப்பாங்க. அதுக்கெல்லாம் நிறைய பீஸ் கட்டணும். என்ன மாதிரி பொண்ணு அதுக்கெல்லாம் ஆசை படலாமா?" அலுத்துக்கொண்டாள் பிரியா.
"அத நான் பார்த்துக்கிறேன்மா, என்னோட அப்பாட ப்ரெண்ட் ஒருத்தருக்கு சொந்தமான மெடிக்கல் காலேஜ் ஒண்ணு இருக்கு. நான் அப்பாகிட்ட பேசிப்பார்க்கிறன்."
"ஹரி ப்ளீஸ் எனக்கு நம்பிக்கைய குடுக்க வேணாம். இப்பதான் நமக்கு டாக்டராகிற குடுப்பினை இல்லன்னு மனச தேற்றிட்டு வாறன். திரும்ப ஆசைய காட்ட வேணாம். ஆசைப்பட்டிட்டு திரும்பவும் இல்லன்னா அப்புறம் நான் செத்துடுவன்" அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு பேசினாள் பிரியா.
"ஓகே ஓகே நீங்க எதையும் யோசிக்க வேணாம், நான் சொன்னத மறந்துடுங்க. பட் உங்க ஆசைய நிறைவேத்துறது என்னோட கடமை....... என்ன நம்புவீங்கதானே மேடம்?" பிரியாவை நன்கு புரிந்தவனான ஹரி அவள் முகத்தில் நம்பிக்கையையும் புன்னகையையும் வரவழைத்தான்.
"இந்த உலகத்துல உங்கள நம்பாம யார நம்புவன்?" என்று சொல்லியபடியே ஹரியை அணைத்துக்கொண்டாள் அந்தப்பேதை.

நான்கு நாட்களின் சரஸ்வதி இல்லத்தின் லாண்ட் லைனிற்கு அழைப்பெடுத்த ஹரி, பிரியாவை உடனடியாக சந்திக்க வேண்டுமெனக்கூறினான். அவனது குரலில் பதற்றத்தை உணர்ந்த பிரியாவும் அவசர அவசரமாக ஹரி கூறிய இடத்திற்கு விரைந்தாள். அங்கே ஹரி ஹாயாக பைக் மீது காத்திருப்பதைக்கண்டதும் நிம்மதியும் கோபமும் அடைந்த பிரியா நேரே ஹரியிடம் சென்று "விளையாடுறதுக்கு ஒரு அளவில்லையா? நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்." செல்லமாக முறைத்துக்கொண்டாள்.
"ம்.... நீங்க எதுக்குத்தான் பயப்பட மாட்டிங்க. பைக்ல ரௌண்ட்ஸ் போவம்னா யாரவது பார்த்தா பிழையா நினைப்பாங்கன்னுவீங்க. சினிமா போலாம்னா அவங்க பார்த்திடுவாங்கன்னுவீங்க பீச்சுக்கு போலாம்னா இவங்க பார்த்திடுவாங்கன்னுவீங்க..... ஷ்ஷப்பா ஏன்தான் இப்பிடி பயந்துகிட்டே இருக்கீங்களோ?"
"ஹரி எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்பிடி பேசுறது கஷ்டமா இருக்கு. எனக்கு மட்டும் ஆசையில்லையா என்ன? உங்களோட பைக்ல சுத்தணும், சினிமா போகணும் பீச் போகணும்னு.... இப்ப நான் ஹோம்லதான் தங்கியிருக்கிறேன். ஹோம்க்கு கிடைக்கிற டொனேஷன்லதான் நான் போட்டிருக்கிற ட்ரெஸ் கூட வாங்கிக்குறன். நான் இப்ப உங்ககூட சுத்துனா ஊர்ல என்ன பேசுவாங்க?"
"உங்கள பற்றி தப்பா பேசுவாங்கங்கிறீங்களா? சொசைட்டில ஆயிரம் கதைப்பாங்க, அத யோசிச்சிட்டிருந்தம்னா நாம வாழ முடியாது"
"இல்ல ஹரி, நாம எல்லாரும் சேர்ந்ததுதான் சொசைட்டி. ஸோ சொசைட்டி பேசுறதையும் கொஞ்சம் திங்க் பண்ணத்தான் வேணும். அதோட இந்த சொசைட்டி என்ன பற்றி பேசுங்கிறத விட எங்க ஹோம் பற்றித்தான் பிழையா கதைக்கும். ஹோமோட பேர் கெட்டுபோய்ட்டா அவங்களுக்கு டொனேஷன் கிடைக்காது. என்னோட சின்ன சின்ன ஆசைகளுக்காக ஒண்ணும் தெரியாத பிஞ்சு குழந்தைகள பட்டினி போடணுமா? அது நான் உயிரோட இருக்கிற வரைக்கும் நடக்க விடமாட்டேன். அதனாலதான் நான் வெளில போய் சுயமா சம்பாதிச்சு என்னோட சொந்தக்கால்ல நின்னப்புறம்தான் என்னோட ஆசைகள நிறைவேத்துவன்"
"ஐ லவ் யூ பிரியா.... உங்ககிட்ட எனக்கு பிடிச்சதே இந்த மனசுதான்." என்று உருகினான் ஹரி. சட்டென ஏதோ ஞாபகம் வந்தவனாய் " பிரியா காதல் மயக்கத்துல சொல்ல வந்த விஷயத்தையே மறந்துட்டனே" என்று சிரித்துக்கொண்டே சொன்னான் ஹரி
"என்ன விஷயம் சார் அது?


"சார் எனக்கு ரேஷ்மா, திலக், யாழினி, பாலா இப்படி சந்தேகம் இருக்கு"
"அனுராதா, ராபர்ட், சஞ்சய், வினோத், ரிஷி, ஹுசைன், இஷா, லேகா இவங்கள்லாம் என்ன பாவம் பண்ணினாங்க. ஏன் இந்த பாராபட்சம் சத்யா?" என்று நகைத்தான் துகிரன்.
"சார் ஓட்டாதீங்க, என்னோட அறிவுக்கு எதுவும் விளங்குதில்ல"
"அப்பிடியில்ல சத்யா, இதுவரைக்கும் கிடைச்ச எவிடென்ஸ வச்சு நிச்சயமா எதுவும் சொல்ல முடியாதுதான். இப்பவரைக்கும் கிடைச்ச டீடெயில்ஸ வச்சு பார்க்கிறப்ப நீங்க சொன்ன ஆளுங்க மேலதான் கூட டவுட் வருது. பட் அதுக்காக அனுராதா,ராம்குமார்,ரிஷி இவங்களையும் குறைச்சு எடை போட கூடாது"
"அனுராதா சரி, ராம்குமார் அண்ட் ரிஷிய எப்பிடி சொல்றீங்க சார்?"
"ஒரு டவுட்தான், ரிஷிட அப்பா மகாலிங்கத்துக்கும் ராம்குமாருக்கும் உள்ள ப்ரெண்ட்ஷிப் பற்றி இன்போர்மேசன் கலெக்ட் பண்ணுங்க. அதோட ராம்குமார் டெல்லில இருந்ததுக்கான எவிடென்ட்ஸ் அண்ட் அவரோட செல்போன்ல இருந்து போன அவுட்கோயிங் அண்ட் இன்கமிங் கால் லிஸ்ட் எடுங்க. ஏதாவது லீட் கிடைக்கலாம்."
"ஓகே சார்"
"சத்யா உங்கள நீங்களே குறைச்சு மதிப்பிட வேணாம், ஒரு டென் அவர்ஸ் உங்க கூட இருந்திருக்கன். யூ ஹாவ் பொட்டென்ஷியல். ஸோ உங்களுக்கு யார்ல டவுட் இருக்கோ அவங்கள கிளோஸா வாட்ச் பண்ணி ரிப்போர்ட் பண்ணுங்க."
துகிரன் தன்னைப்பற்றி அவ்வாறு கூறியதும் சத்யாவிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. "ஓகே சார் டேபினெட்லி" என்று உற்சாக குரல் கொடுத்தான்.
சிறிது நேரத்தில் சத்யாவினை ஸ்டேஷனில் இறக்கிவிட்டு " சத்யா நான் சொன்ன டீடெயில்ஸ கலெக்ட் பண்ணுங்க, ரெஸ்டும் எடுத்துக்கோங்க. ஈவினிங் போஸ்ட்மோட்டம் ரிப்போர்ட் ரெடி ஆனதும் எனக்கு மெசேஜ் பண்ணுங்க" என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் மாட்னி ஷோவிற்கு பறந்தான் துகிரன். ஆதியின் கொலைவழக்கில் கொலைகாரனை கண்டுபிடிக்கப்போய் புராதனியை கொலைகாரியாய் மாற்றிவிடக்கூடாதென முடிவெடுத்திருந்தான் துகிரன்.
மின்னலென விரைந்த துகிரன் அடுத்த பதினைந்து நிமிடங்களில் வீட்டினை வந்தடைந்தான். உள்ளே மெதுவாக சென்றவன் ஹாலினுள் ஸோபா மீது புராதனி படுத்திருந்ததைக்கண்டு “என்ன புராதனி இன்னும் ரெடி ஆகலையா? மூவி போறத மறந்தாச்சா? என்று புராதனி மீது பழியைப்போட முயன்றான்.
துகிரனின் குரலைக்கேட்டு மலர்ந்த அவள் முகத்தில் புன்னகை படர்ந்தது. "என்னம்மா இவ்வளவு நேரம்? ஏதாவது சாப்பிடீங்களா?" என்று கவலை நிறைந்த கொஞ்சல்களுடன் கேட்டாள்.
புராதனியின் இந்நிலைமாற்றம் துகிரன் அறிந்ததுதான். ஏனெனில் துகிரன் வேலை என்று சென்றால் அவ்வேலையை முடிக்குமட்டும் வேறெந்த விடயத்திலும் கவனம் செலுத்த மாட்டான் புராதனியை தவிர. ஆதலால் இவ்வளவு நேரமும் வெறுவயிற்றில் பசியுடனும் சோர்வுடனும் இருந்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் தான் கேட்ட ஒரே காரணுத்துக்காக எல்லாவற்றையும் மறைத்துவிட்டு படம் பார்க்க போக ரெடி ஆகலையா என்று கேட்கும் காதலனை யாருக்குத்தான் பிடிக்காது.
"ஓ நான் சாப்பிட்டேனே" என்று துகிரன் மழுப்ப "நீங்க ஒண்ணும் சொல்லதேவல, சாப்பாடு எடுத்து வைக்கிறன் குளிச்சிட்டு சாப்பிட வாங்க"என்று கூறிக்கொண்டே சமையலறையை நோக்கி சென்றாள்.
குளித்துவிட்டு வந்த துகிரனுக்கோ கொலைவழக்கை சுற்றியே மனசு அலைந்துகொண்டிருந்தது. புராதனி காதல் வார்த்தைகள் பேசிக்கொண்டிருந்தாள் ஆனால் அவை எதுவும் அவன் மூளைக்கு ஏறவில்லை. மாட்னி ஷோ போக தேவையில்லை என்பது மாத்திரமே அவனுக்கு விளங்கியது. சாப்பிட்டுவிட்டு திரும்பவும் தான் தவறவிட்ட தடயங்களை மீட்டுப்பார்த்துக்கொண்டிருந்தவன் அப்படியே கண்ணயர்ந்து போனான்.
கைபேசியின் அலறல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தவன் கைபேசியில் நேரம் ஆறு மணியாகியிருப்பதை பார்த்ததும் "ஐயோ என்ன வேலை பார்த்துட்டேன்" என்று நொந்துகொண்டே சத்யாவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு காதில் கைபேசியை வைத்தான்.
"சார் போஸ்ட்மோட்டம் ரிப்போர்ட் சிக்ஸ் தேர்ட்டிக்கு தாறதா டாக்டர் சொல்லியிருக்கார். இப்ப கிளம்பினா சரியா இருக்கும்."
"குட், நீங்களே வந்து என்ன பிக் அப் பண்ணிக்கோங்க, நான் டென் மினிட்ஸ்ல ரெடி ஆகிடுறன்"
"ஓகே சார்"
அரக்க பறக்க உடை மாற்றி தயாரானான் துகிரன். புராதனி அவளது தங்கையுடன் ஷாப்பிங் போயிருக்கிறாள் என்பதை கைபேசிக்கு அவள் அனுப்பிய குறுஞ்செய்தி மூலம் அறிந்து கொண்டான்.
சரியாக பத்து நிமிடத்தில் போலீஸ் ஜீப் அவன் வீட்டிற்கு வர அதிலேறி இருவரும் ஹாஸ்பிட்டல் நோக்கி விரைந்தனர்.
"சார் ராம்குமாரோட டெல்லி ப்ரோக்ராம் பற்றி விசாரிச்சிட்டேன், அங்க அவர் அட்டெண்ட் பண்ணின மீட்டிங் எல்லாம் கன்போர்ம். கால் ஹிஸ்ட்ரிலயும் சந்தேகப்படுற மாதிரி எதுவுமில்ல. அண்ட் மகாலிங்கத்த பற்றி விசாரிச்சப்போ நெகட்டிவா எதுவும் கிடைக்கல. பட் ஆரம்பத்துல ராம்குமார்க்கிட்ட வேலை பார்த்தவர்தான் இந்த மகாலிங்கம். அப்புறமா சொந்தமா தொழில் செய்து முன்னேறியிருக்கார். அதில ராம்குமாருக்கு வயித்தெரிச்சல்னு அவங்களோட கிளோஸா இருக்கிறவங்க சொல்றாங்க."
"ஓ, அப்பிடி ஒரு கதை வேற இருக்கா?"
"ஆனா அப்பிடின்னாலும் மகாலிங்கம் ரொம்ப நல்ல மனுஷன்னுதான் எல்லாரும் சொல்றாங்க, அவர கூப்பிட்டு விசாரிப்பமா சார்?"
"இல்ல சத்யா இப்போதைக்கு அவசியமில்ல, பர்ஸ்ட் டாக்டர்கிட்ட பேசினா எங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்னு தோணுது. அதுக்கப்புறமா மற்றத யோசிக்கலாம்"
"ஓகே சார்"
"யூ டிட் எ கிரேட் ஜாப் சத்யா" என சத்யாவை தட்டி கொடுத்தான் துகிரன்.
ஹாஸ்ப்பிட்டலை ஜீப் அடைய சரியாக ஆறு முப்பத்தைந்தாகியது. வேகவேகமாக சென்ற துகிரனின் பின்னால் ஒருவித ஆர்வத்துடன் சென்றான் சத்யா. நேராக டாக்டர் வேணு கோபாலின் அறைக்கு சென்றவர்களை எதிர்பார்த்து காத்திருந்தார் டாக்டர்.
"குட் ஈவினிங் டாக்டர்"
"குட் ஈவினிங் துகி, என்ன லேட் ஆகிட்டீங்க?"
"அசதில தூங்கிட்டன், புராதனியும் வீட்டில இல்ல, அதான் லேட்"
"இன்னைக்கு மழைதான், டிடெக்ட்டிவ் துகிரன் ரிப்போர்ட் எடுக்க வராம அஞ்சு நிமிஷம் தூங்கிட்டாரா? அன்பிலீவபில்"
"புராதனிகிட்ட இருந்து நீங்களும் பழகிட்டீங்களா? ஓட்டாதீங்க டாக்டர். பை தி வெ ஹீ இஸ் மிஸ்டர் சத்யா, இந்த கேஸ்ல என்கூட ஒர்க் பண்றார்" என்று சத்யாவை அறிமுகப்படுத்தும் சாக்கில் டாக்டரை கேஸிற்குள் கொண்டுவந்தான் துகிரன்.
"வெல்கம் சத்யா, பார்த்துப்பா இவன் சோறு தண்ணி இல்லாம வேலை செய்வான். நீ கவனமா இருந்துக்கோ."என்று கூறிய டாக்டர் வேணுகோபாலின் கீழ் தான் இரண்டு வருடங்கள் புராதனி டாக்டராக பணி புரிந்தாள். அங்கு கேஸ் விஷயமாக அடிக்கடி டாக்டர் வேணுகோபாலை சந்திக்க வந்த துகிரன் புராதனியிடம் காதலில் வீழ்ந்தது தனிக்கதை.
"சரி துகி, இதான் போஸ்டமோட்டம் ரிப்போர்ட், பார்த்திட்டு ஏதாவது டவுட்ன்னா கேளு" என்று ஒரு பைலை நீட்டினார்.
இப்படியான பல ரிப்போர்ட்களை பார்த்து பழகியவனான துகிரனுக்கு எங்கே தேவையான விடயங்கள் இருக்கும் என்பதும் தெரிந்திருந்தது.
"நான் சந்தேகப்பட்டது போல கொலைய ரெண்டு பேர்தான் செய்திருக்காங்க சத்யா" என துகிரன் சொல்ல,
"யெஸ், அதோட அதில ஒண்ணு பையன் மற்றது பொண்ணு." என்று விளக்கினார் டாக்டர்
"டாக்டர் ஆர் யு ஸுவர்?
"ஹண்ட்ரட் பெர்ஸன்ட். ஆதிய மாடில இருந்து தள்ளிவிடுறதுக்கு முன்னாடி ஒரு சின்ன கைகலப்பு நடந்திருக்கு. பட் ஆதிய அடிச்சவன் கைக்கு கிளவுஸ் மாட்டி இருந்திருக்கான். நோ பிங்கர் பிரின்ட். ஆதிட நெஞ்சுப்பகுதில கை முஷ்டியால குத்தியிருக்கான். அது நிச்சயமா ஒரு ஆணாலதான் அவ்வளவு போர்ஸா குத்தமுடியும். அண்ட் ஆதிட கன்னத்திலயும் யாரோ அறைஞ்சிருக்காங்க, வித் கிளவுஸ். அது ஒரு பொண்ணுதான். ஸோ ரெண்டு பேர் சம்பந்தப்பட்டிருக்காங்க"
"வெல் ப்லான்ட் மர்டர்" என்று சத்யா குறுக்கிட்டான்.
அதை ஆமோதிப்பது போல் டாக்டரும் தலையசைத்து "ஆமா கொலை பண்ணினவன் தெளிவா பிளான் பண்ணி பண்ணியிருக்கான்."
துகிரன் குறுக்கிட்டு "அப்போ அந்த பொண்ணு யாரு? கில்லர் ஏன் பொண்ண கூட்டிவர்றான். ஏன் அவ ஆதிய அறையணும்?" என்று தன்னை தானே மனசிற்குள் கேட்பதென நினைத்து சத்தமாக கேட்டான் துகிரன்.
"நோ ஐடியா, அத நீங்கதான் சொல்லணும்" என்று டாக்டர் கூற சுயநினைவுக்கு வந்த துகிரன் டாக்டருக்கு நன்றி சொல்லி விடைபெற்றான்.
ஹாஸ்பிட்டலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது வெகு நேரமாக அமைதியாயிருந்தான் துகிரன். அந்த அமைதி சத்யாவிற்கு மேலும் குழப்பங்களை உண்டாக்கியது. பொறுமை தாளாமல் அவனும் "எக்ஸ்கியூஸ்மி சார், டாக்டர்கிட்ட போனா ஒரு தெளிவு கிடைக்கும்னு சொன்னீங்க. இப்பிடி ஒண்ணுமே பேசாம வரீங்க....." என்று இழுத்தான் சத்யா.
"பார்ட்டில அஞ்சு பொண்ணுங்க இருந்திருக்காங்க. டாக்டர் சொல்றத வச்சு பார்க்கிறப்ப ரேஷ்மாக்கும் யாழினிக்கும் கூடுதலான சான்ஸஸ் இருக்கிற போல தெரியுது. பட் எதையோ நம்ம மிஸ் பண்றமாதிரி ஒரு பீலிங்"
"நம்ம கரெக்டான ரூட்லதானே போய்கிட்டிருக்கம் சார். எத மிஸ் பண்ணிருப்பம்னு சொல்றீங்க?"
"மோட்டிவ்" என்று வாயினுள் முணுமுணுத்தான் துகிரன்.
"பட் மோட்டிவ்தான் அவங்ககிட்ட இருக்கே" என்று சத்யா யோசித்துக்கொண்டிருக்கும் போதே துகிரனும் "சத்யா இமீடியட்டா ஆதிட பாஸ்ட் லைஃப் பற்றின டீடெயில்ஸ் கலக்ட் பண்ணுங்க. ஏதாவது போலீஸ் கேஸ் இருக்குதான்னு செக் பண்ணுங்க. அவங்க அப்பாட ஹிஸ்டரியையும் செக் பண்ணுங்க."
"ஏன் சார் திடீர்ன்னு பாஸ்ட் லைஃப் பற்றி கேட்குறீங்க?"
"இல்ல சத்யா, இது ஏதோ கோபத்திலயோ அவசரத்திலேயோ நடந்த கொலை இல்ல, அண்ட் நிறைய நாளா பிளான் பண்ணி இந்த கொலைய பண்ணியிருக்காங்க. அண்ட் வன் மோர் திங்.... என்னோட கெஸ்சிங் சரியாயிருக்கும்னா இவ்வளவு பிளான் பண்ணினவங்க நிச்சயமா ஒண்ணாத்தான் அந்த பார்ட்டிக்கு வந்திருப்பாங்கன்னு சொல்ல முடியாது." இறுதியில் ஒரு குண்டைத்தூக்கி போட்டான் துகிரன்.
"அப்பிடீன்னா என்ன சொல்ல வறீங்க சார்?"
"ஒருவேளை யாழினிதான் கொலைகாரின்னா அதுக்கு உடந்தையா இருந்தவன் பாலா இல்லன்னு சொல்றன். இது ஒரு உதாரணம் தான்"
அதிர்ச்சியில் வெலவெலத்துப்போயிருந்த சத்யா சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.
"சத்யா நான் ஏற்கனவே சொன்ன டீடெயில்ஸ் அண்ட் நம்ம பெருசா கான்சிடெர் பண்ணாம விட்ட இஷா, லேகா பற்றியும் டீடெயில்ஸ் கலக்ட் பண்ணி மோர்னிங் சப்மிட் பண்ணுங்க."
அதிர்ச்சியிலிருந்து மீண்ட சத்யா "ஓகே சார்." என்று கூறிக்கொண்டிருக்கும் போதே துகிரனின் வீட்டை வண்டி அடைந்திருந்தது.
அன்றிரவு தூக்கமும் இன்றி அன்றைய நாள் நடந்த சம்பவங்களைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தான் துகிரன். தனது கணவனைப்பற்றி நன்கு அறிந்திருந்த புராதனியும் அவனுக்கு தொல்லை கொடுக்காமல் உறங்கிவிட்டாள். இந்தகேஸ் முடியும் மட்டும் துகிரன் வேறெதனைப்பற்றியும் யோசிக்கமாட்டான் என்று அவளுக்கு தெரியாமலிருக்காதுதானே.
நடுச்சாமத்தில் திடுக்கிட்டு எழுந்தவள் தன்னவன் வேறு யாரோ பெண்களின் பெயரை முனகிக்கொண்டிருப்பதை கேட்டு வாய்விட்டு சிரித்தே விட்டாள். அரைத்தூக்கத்திலிருந்த துகிரனும் சிரிப்பு சத்தம் கேட்டு எழுந்து "என்ன நடந்திச்சு?" என்று திடுக்கிட்டான்.
"உங்களுக்கு ஒருநாள் இப்பிடி பைத்தியம் பிடிக்கும்னு தெரியும். ஆனா அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நினைக்கல. அத நினைச்சுதான் சிரிச்சேன்"
தான் அரை தூக்கத்தில் உளறியதை விளங்கிக்கொண்ட துகிரனும் "அது வந்து.... இன்னைக்கு கேஸ் ரொம்ப காம்ப்ளிகேட்டடா இருக்கு. அதனாலதான்....." என்று அலுத்துக்கொண்டான்.
"அப்பிடி என்ன கேஸ். நித்திரை வேற குழம்பிட்டு. உங்க கதையை சொல்லுங்க தூக்கம் வருதான்னு பார்க்கிறான்"
துகிரனும் மீண்டும் அன்றைய நிகழ்வை மீட்டி பார்க்கும் ஆர்வத்தில் சம்பவங்கள் அனைத்தையும் புராதனிக்கு சொன்னான். கதை சொல்வதிலும் துகிரன் கெட்டிக்காரன்தான். முழுவதையும் சொல்லி முடித்த துகிரனிடம் " இன்ட்ரஸ்டிங் துகி. உங்களுக்கு ஏன் ஒரு பொண்ணு மேல மாத்திரம் சாஃப்ட் கோனர்?"
"அப்பிடில்லாம் இல்லையே. யாரு சொன்னா?"
நீங்க தூக்கத்தில நாலு பொண்ணுங்களோட பேரத்தான் சொன்னீங்க. அதான் கேட்டன்."
"நாலு பேரா?"
"ஆமா, எனக்கு அப்பிடித்தான் விளங்கிச்சு. பட் பேரு என்னன்னு விளங்கல்ல. எனக்கு தூக்கம் வருது, நான் தூங்கப்போறன். குட் நைட்" புதிர் போட்டு விட்டு தூங்கிவிட்டாள் புராதனி.
புராதனி இவ்வாறு துகிரனை கேலி செய்வதும் விளையாடுவதும் வாடிக்கைதான், துகிரனும் சிறிது நேரத்தில் தூங்கிவிட்டான்.
"துகி துகி எழுந்திரிங்க, ஏழு மணியாச்சு. என்ன ஹாஸ்பிட்டல்ல டிராப் பண்ணிட்டு நீங்க வண்டியெடுத்திட்டு போங்க. இப்பவே லேட் ஆயிட்டுது." புராதனி தோளைப்பிடித்து உலுப்பியபோதுதான் சயனநிலை கலைந்தான் துகிரன்.
"ச்சா லேட் ஆகிட்டுதே..... நைட் சும்மா என்னோட தூக்கத்த குழப்பினதாலதான் எல்லாமே" என்று புராதனி மீது சிரித்துக்கொண்டே பழியைப்போட்டான்.
"ஓ..... நீங்க நைட்ல கண்ட கண்ட பொண்ணுங்க பேர சொல்லுவீங்க, நான் அத கேட்டுட்டு சும்மா இருக்கணுமா?" செல்ல சண்டையை ஆரம்பித்தாள் புராதனி.
"ஹேய் அது உன்னோட பேராத்தான் இருக்கும், உனக்கு சரியா விளங்கியிருக்காது"
"நிச்சயமா அது என் பேரு இல்ல. ஏதோ நாலு பொண்ணுங்க பேரு சொன்னீங்க, என்னைக்கு நான் உங்க கனவுல வந்திருக்கன்?"என்றாள் கொஞ்சம் எரிச்சலாகவே.
"புராதனி நிஜமாத்தான் சொல்றியா? நான் நீ எதோ விளையாட்டுக்கு சொல்றான்னு நினைச்சன்."
"உங்க கூட விளையாடிட்டாலும்..... பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்ல, சீக்கிரம் ரெடி ஆகுங்க" என்றபடி நகர்ந்தாள் புராதனி.
சில வினாடிகள் அந்த ஐந்து பெண்களைப்பற்றியும் யோசித்தவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. "ஐயோ இத மறந்துட்டமே" என்று மனதிற்குள் கூறிக்கொண்டு சத்யாவின் கைபேசி இலக்கத்தை அங்கிருந்த லாண்ட் போனில் தட்டினான்.
"ஹலோ, சப் இன்ஸ்பெக்டர் சத்யா ஸ்பீக்கிங், ஹூ ஐஸ் திஸ்?"
"சத்யா நான் துகிரன் பேசுறேன். நான் சொன்ன டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிடீங்களா?"
"பண்ணிக்கிட்டிருக்கேன் சார், சீக்கிரம் ரெடி ஆயிடும்"
"தட்ஸ் பைன், அதுகூட முக்கியமா அனுராதா பற்றியும் கலெக்ட் பண்ணுங்க. வெரி இம்போர்ட்டன்ட்."
"ஓகே சார். என்ன திடீர்னு?"
"ஜோடியா வந்த நாலு பொண்ணுங்க மேலயும்தான் சந்தேகபட்டிட்டிருக்கம். அதேபோல ஒன்னுக்கொன்னு தெரியாதவங்க போல வந்தவங்களுக்கும் கொலை செய்ய சான்ஸ் இருக்குனு முடிவெடுத்ததுக்கப்புறம் கூட இஷா அண்ட் லேகால தான் டவுட் வந்திச்சு. மே பி அனுராதாட கண்ணீர்ல மிஸ் பண்ணிருக்கலாம்."
"ம்.... இருக்கலாம் சார், நான் கலெக்ட் பண்ணிடுறன்"
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
படித்துவிட்டு உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள். நன்றி.
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 7 - ஆதியும் ஹரியும்

"என்ன விஷயம் சார் அது?
"ரெண்டு குட் நியூஸ் அண்ட் ஒரு பேட் நியூஸ் இருக்கு. முதல்ல எத சொல்ல?"
"பேட் நியூஸ் இருக்கா? அப்பா அதையே முதல்ல சொல்லுங்க"
"ஓகே. பேட் நியூஸ் என்னன்னா நீங்க சரஸ்வதி இல்லத்த விட்டு வெளிய போக வேண்டிய நேரம் வந்திட்டு"
"ஏன்? நான் போகமாட்டன்"

"முழுசா கேளுங்க..... குட் நியூஸ் என்னன்னா உங்களுக்கு கோயம்புத்தூர் சஞ்சீவி மெடிக்கல் காலேஜ்ல சீட் கிடைச்சிருக்கு, வித் புல் ஸ்காலர்ஷிப்." என்று கூற பிரியாவின் முகம் ஆச்சர்யத்தில் விரிந்தது.
"என்ன சொல்றீங்க? விளையாடாதீங்க? உண்மைய சொல்லுங்க?"
"உண்மைதான் டாக்டர் பிரியா. அந்த காலேஜ் ஓனர் அப்பாவோட ப்ரெண்ட் ஜெயப்ரகாஷ்தான். நானே நேர அங்கிள்கிட்ட பேசினன். உங்க ரிசல்ட்ஸ், கட்ஆஃப் எல்லாம் சொன்னன். ஹெல்ப் பண்றதா ப்ரோமிஸ் பண்ணியிருந்தார். இன்னைக்கு காலைல தான் கான்போர்ம் பண்ணாரு. நெக்ஸ்ட் வீக் கிளாஸஸ் ஸ்டார்ட் ஆகுறதா சொன்னாரு. சீக்கிரம் கிளம்பணும்." ஹரி சொல்ல சொல்ல நடப்பது நிஜமா கனவா என புரியாமல் சந்தோஷக்கடலில் மிதந்தாள் பிரியா.
"தாங்க் யூ ஹரி........................" என்று ஹரியின் கைகள் இரண்டையும் பற்றிய படி ஆனந்த கண்ணீரில் மூழ்கிப்போனாள் ப்ரியா.
ஆனந்தக்கூத்தில் திளைத்தவள் மறுபடியும் சுயநினைவிற்கு வந்தவளாய் "இன்னொரு குட் நியூஸ்னு சொன்னீங்களே ஹரி, அது என்ன?"
"இன்னொரு குட் நியூஸ்னு சொன்னீங்களே ஹரி, அது என்ன?"
"அதுவா? அது உங்களுக்கு குட் நியூசோ தெரியல. எனக்குத்தான் குட் நியூஸ்?"
"சொல்லுங்க நான் யாருக்கு குட் நியூஸ்ன்னு டிசைட் பண்றன்"
"இன்னும் ரெண்டு மாசத்துல நானும் கோயம்புத்தூர்ல செட்டில் ஆகிடுவன்" என்ற படி கன்னத்தில் குழி விழ சிரித்தான் ஹரி.
"என்ன ஹரி சொல்றீங்க?" ஆச்சர்யம் தாளாமல் கேட்டாள் பிரியா.
"அப்பா அவரோட கம்பெனி பிரான்ச் ஒண்ண கோயம்புத்தூர்ல ஓப்பன் பண்றாரு. அப்பாட ப்ரெண்ட் ஒருத்தர் தான் அங்க பொறுப்பா இருப்பாரு. ஸோ அவர்கிட்ட என்னையும் ட்ரைனிங் எடுக்க சொல்லிட்டாரு. அங்கேயே ஒரு காலேஜ்ல பி காம் படிச்சுக்கிட்டு கம்பெனில ஒர்க்கும் பழகிறதுதான் பிளான்."
பிரியாவிற்கு மகிழ்ச்சியில் என்ன சொல்வதென்றே விளங்கவில்லை, "நிஜமாவா ஹரி. அப்ப நீங்க என் கூடவே இருப்பீங்கல்ல. இத விட எனக்கு வேறென்ன வேணும். ரொம்ப சந்தோசமா இருக்கு ஹரி. எங்க உங்கள பார்க்கமுடியாம போய்டுமோன்னு பயந்துட்டேன்."
"உண்மைய சொல்லணுமுன்னா உங்கள பார்க்காம என்னால இருக்கமுடியாது பிரியா. அதான் நானும் அங்கேயே ஒரு காலேஜ்ல சீட் எடுத்துட்டேன்"
கண்கள் கலங்கியவள் "நிஜமாத்தான் சொல்றீங்களா? உங்கள மாதிரி ஒருத்தர் என் லைஃப்ல வந்ததுக்கு நான் போன ஜென்மத்தில ஏதோ புண்ணியம் செஞ்சிருக்கோணும்" என கண்ணீரை துடைத்து கொண்டாள்.
"சரி பிரியா, நீங்க கோயம்புத்தூருக்கு கிளம்ப வேண்டிய ஏற்பாடுகள செய்யுங்க. ரயில் டிக்கெட் நான் புக் பண்ணிவிடுறன். மிச்சத்தை கோயம்புத்தூர்ல கண்டினியூ பண்ணலாம்..... லவ்வயும் சேர்த்துதான்...."
"சரிங்க, நம்ம விசயத்த உங்க வீட்ட சொல்லிடீங்களா?"
"முதல்ல நல்ல பையனா காலேஜ்ல ஜாயின் பண்ணுறன், அப்புறமா நம்ம விஷயத்த அம்மாகிட்ட சொல்லி ஓகே பண்றன்."
"ம்.... சீக்கிரமா சொல்லிடுங்க. உங்க வீட்ட வந்து எல்லார்கிட்டயும் பழகணும்போல இருக்குங்க. ப்ளீஸ்"
"எல்லாமே சீக்கிரமா சரியாகும். இப்போதைக்கு என் செல்ல பிரியாவுக்கு நான் இருக்கிறன், இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு குடும்பமும் இருக்கும்"
ஹரியின் இந்த வார்த்தைகள்தான் அவனை தனக்கானவன் என்று பிரியாவிற்கு நம்பிக்கையூட்டிக்கொண்டிருந்தன.
சிறிது நேரத்தில் அவனிடமிருந்து விடை பெற்றுச்சென்றவள் நேராக பூங்குழலியிடமும் வைஷ்ணவியிடமும் லட்சுமி அம்மாவிடமும் தனக்கு மெடிக்கல் சீட் கிடைத்த விடயத்தை சொன்னாள். மூவரும் சந்தோஷப்பட்டாலும் புது இடத்தில் எவ்வாறு பிரியா சமாளிப்பாள் என்று சிறிது கலக்கமும் கொண்டிருந்தனர். அந்தக்கலக்கம் சிறிதும் பிரியாவினிடத்தில் இல்லை. அவள்தான் ஹரியின் துணையுடன்தான் இருக்கப்போகிறாளே. ஹரியும் அங்கே மேற்படிப்பிற்கு செல்கிறான் என்பதை தோழிகளுக்கு மாத்திரம் சொல்லியிருந்தாள் பிரியா.
அன்றிலிருந்து இரண்டாவது நாள் சரஸ்வதி இல்லத்திலிருந்த மழலைகளிடமிருந்தும் லட்சுமி அம்மாவிடமிருந்து ப்ரியாவிடையையும் ஆசிகளையும் பெற்றுக்கொண்டு தோழிகளின் அறிவுரைகளையும் எடுத்துக்கொண்டு தனது வாழ்க்கைக்கான கனவினை சுமந்து கொண்டு கோயம்புத்தூர் நகர் நோக்கி ரயிலில் புறப்பட்டது அந்தக்கள்ளம் கபடமில்லா வெள்ளைப்புறா.

"அதோட அந்த அஞ்சு பொண்ணுங்களும் நம்மகிட்ட குடுத்த ஸ்டேட்மென்ட் எல்லாமே சரிதானான்னு கிராஸ் செக் பண்ணிடுங்க. ஸ்டேஷன்ல யாரவது கான்ஸ்டபிள உங்களுக்கு ஹெல்ப்புக்கு எடுத்துக்குங்க. நான் இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லிடுறேன்"
"ஓகே சார்" என்று சொல்ல, துகிரனும் அழைப்பை துண்டித்தான்.
துகிரனும் புராதனியை ஹாஸ்பிட்டலில் டிராப் பண்ணிவிட்டு கமிஷ்னர் அலுவலகத்தில் உள்ள கிரைம் ப்ராஞ்சிற்கு சென்று கொண்டிருந்தான். அப்போது கைபேசி அலறுவதை அவதானித்தவன் அதை எடுத்து காதருகில் வைத்தான்.
"ஹலோ சொல்லுங்க கணேசன், என்ன விஷயம்?"
"சார் உங்கள பார்க்கிறதுக்காக ஒரு பொண்ணு நம்ம ஆபீஸுக்கு வந்திருக்கிது. பெரு இஷா. உங்ககிட்டத்தான் பேசணுமாம். ஏதோ முக்கியமான விஷயம்ன்னு சொல்லுது."
"சார் உங்கள பார்க்கிறதுக்காக ஒரு பொண்ணு நம்ம ஆபீஸுக்கு வந்திருக்கிது. பெரு இஷா. உங்ககிட்டத்தான் பேசணுமாம். ஏதோ முக்கியமான விஷயம்ன்னு சொல்லுது."
"ஓகே, நான் இப்ப அங்கதான் வந்துகிட்டு இருக்கன். டுவன்டி மினிட்ஸ்ல ரீச் ஆகிடுவன். வெயிட் பண்ண சொல்லுங்க." என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணினான். அடுத்த இருபது நிமிடமும் இஷா என்ன முக்கியமான விடயம் சொல்லப்போகிறாள் என்பதற்கான ஊகங்களிலேயே கழிந்தது.
துகிரன் கிரைம் ப்ராஞ்சை அடைய மணி எட்டு முப்பதாகியிருந்தது. அவசர அவசரமாக காரை பார்க் செய்துவிட்டு இரண்டாவது மாடியிலுள்ள தனது அலுவலகத்திற்கு ஓடினான்.
தனது கேபினினுள் செல்லும்போதே இஷா வெளியிலிருப்பதை அவதானித்திருந்தான். உடனே அவளை உள்ளே அழைத்தவன் இருக்கையில் அமரவைத்துவிட்டு வந்த விடயத்தை கேட்டான்.
"சொல்லுங்க மிஸ் இஷா, என்ன விஷயமா வந்தீங்க?"
"சார் அதுவந்து நேற்று ஒரு விஷயத்த சொல்ல மறந்துட்டன், அது முக்கியமான விசயமான்னு தெரியல. பட் சொல்லியிருக்கணுமோன்னு உள்ள உறுத்திட்டே இருந்திச்சு, அதான் காலைலேயே உங்கள மீட் பண்ணலாம்னு வந்துட்டேன்." என்று இஷா கூறவும் துகிரனுக்கு சஸ்பென்ஸ் தாங்கமுடியவில்லை.
"ம்... சொல்லுங்க" தனது ஆர்வத்தை வெளிக்காட்டாமல் கேட்டான் துகிரன்.
"நேற்று பார்ட்டில நான் ஸ்மோக் பண்றதுக்காக வெளிய இருக்கிற பல்கனிக்கு வந்தப்போ யாரோ ஒருத்தர் மாடிப்படில மேல போறத பார்த்தன் சார்"
"யாரு அந்த டைம்ல மேல போனது?."
"அது நிச்சயமா ஒரு ஆம்பிள தான். எனக்கு நிழல் மாத்திரம்தான் தெரிஞ்சுது. நான் அது பாலாவா இருக்கும்னு தான் தொடக்கத்துல நினைச்சன். ஏன்னா அந்த டைம் யாழினி அபார்ட்மென்ட்லதான் இருந்தாள். அதோட பாலா மேல ஆதி கூட பேசிகிட்டு இருக்கிறதாவும் யாழினி சொன்னத கேட்டன். நான் ஸ்மோக் பண்ண ஸ்டார்ட் ஆகி ஒரு பைவ் மினிட்ஸ்ல பாலாவும் கீழ அபார்ட்மென்டுக்கு வந்திட்டான். நான் ஒரு டென் மினிட்ஸ்ல ஸ்மோக் பண்ணிட்டு திரும்பவும் அபார்ட்மென்டுக்குள்ள என்டர் ஆகிறப்ப திரும்பவும் மாடிப்படில யாரோ ஏறுற சத்தம் கேட்டுச்சு."
"அந்த டைம்ல திலக்,ரிஷி,ராபர்ட்,வினோத்,சஞ்சய்,ஹுசைன் இவங்கெல்லாம் அபார்ட்மென்ட்லதானா இருந்தாங்க?"
"ரிஷி அங்கதான் இருந்தான். மற்ற பிரெண்ட்ஸும் அங்கதான் இருந்திருக்கணும். எல்லாரும் அந்த டைம் மட்டையாகிட்டாங்க. திலக் எங்கன்னு நான் நோட் பண்ணல. அப்போ நான் இத பெருசா எடுக்கல சார், அதனாடி நோட் பண்ணல."
"புல்லா போதைல இருந்த நீங்க ஒரு ஆள் மாடிப்படில ஏறிப்போனத எப்பிடி இவ்வளவு தெளிவா சொல்றீங்க?"
இதைக்கேட்டதும் கோபமடைந்த இஷா "சார் நான் அந்த டைம் ட்ரிங்க் சாப்பிடல்ல, நானும் அனுவும்தான் நைட் டின்னரும் பைட்ஸும் ப்ரிப்பேர் பண்ணினோம். ஸோ அப்புறமாதான் ஸ்மோக் பண்ணிட்டு ட்ரிங்க் பண்ணினன். வேணுமுன்னா அனுகிட்ட விசாரிச்சு பாருங்க"
"கோபப்படாதீங்க மிஸ், கேள்வி கேட்கவேண்டியது என்னோட கடமை. அதோட குற்றவாளி பிடிபடும் வரைக்கும் யாரையும் நம்பமாட்டன்."
"இது தேவைதான் எனக்கு, உங்களுக்கு ஹெல்ப்பா இருக்கும்னு சொன்னது என்னோட முட்டாள்தனம்தான்........ சொல் பேச்சு கேட்கிற பழக்கம் இருந்திருக்கோணும்...." என்று தன்னை தானே திட்டிக்கொண்டாள் இஷா.
"கூல் டவுன் மிஸ். உங்க இன்போர்மசனுக்கு ரொம்ப நன்றி. வேற ஏதாவது சொல்லணுமா?"
"ஒண்ணுமே இல்ல. நான் கிளம்புறன் சார்" என்று சொல்லிவிட்டு விறுவிறு என்று அவ்விடம்விட்டு அகன்றாள் இஷா.
அந்த மாடிப்படியில் ஏறிப்போன நபர் யாராக இருக்குமென துகிரனும் மூளையை போட்டு குழப்பிக்கொண்டிருந்தான்.
"இஷா சொல்வதுபோல திலக்காக இருக்குமோ இல்லை யாரையோ காப்பாற்றுவதற்காக இவ்வாறு சொல்லி என்னை திசை திருப்புகிறாளா? இரண்டு தடவையும் அவள் கண்டது ஒருத்தனைத்தானா?" இவ்வாறு பல கேள்விகளை தனக்குள்ளே கேட்டுக்கொண்டான் துகிரன்.
அவனது கவனத்தை கலைக்கும்விதமாக சத்யாவின் தொலைபேசி அழைப்பு இருந்தது.
"ஹலோ சார், ஒரு முக்கியமான லீட் கிடைச்சிருக்கு. எங்க வந்து உங்கள சந்திக்கலாம் சார்?"
"நான் என்னோட ஆபிஸ்லதான் இருக்கிறன். சீக்கிரமா வாங்க"
சத்யா வருவதற்கு எடுத்துக்கொண்ட பத்து நிமிடத்தில் துகிரனுக்கு தலையே வெடித்துவிடும்போல இருந்தது. வாசல் வரை சென்று சத்யாவிற்காக காத்திருந்தவனுக்கு தான் ஏன் இவ்வாறு படபடக்கின்றோம் என்ற கேள்வியெழுந்தது. தான் குற்றவாளியை கண்டுபிடிக்க அவசரப்படுகின்றேன் என்பது விளங்கியது. இந்த அவசரத்தினால் உண்மையை கண்டறியமுடியாது என தனக்குள் சொல்லிக்கொண்ட துகிரன் சாந்தமாகினான். சத்யா வரும்போது கண்ணைமூடி மனதை ஒருநிலைப்படுத்திக்கொண்டிருந்தவன் "எக்ஸ்கியூஸ்மி சார்" எனும் குரல் கேட்டு கண்விழித்தான்.
"சொல்லுங்க சத்யா என்ன யூஸ்புல் இன்போர்மேசன் கிடைச்சுது?"
"அஞ்சு பொண்ணுங்களும் குடுத்த ஸ்டேட்மென்ட்ஸ் எல்லாமே கரெக்ட்டா இருக்கு. ராம்குமாரோடதும் ஆதியோடதும் கால் டீடெயில்ஸும் கிளீனா இருக்கு. ராம்குமாரோட பாஸ்ட் லைஃப்ல எந்த பிளாக் மார்க்கும் இல்ல. ஆனா....."
"ஆனா என்ன?"
"ஆதிட ஹிஸ்டரி நல்லா இல்ல. நிறைய பொண்ணுங்களோட லவ் அப்பிடி இப்பிடின்னு. பட் அதில ஒரு பொண்ணு தற்கொலை பண்ணியிருக்கு சார்."
"என்ன தற்கொலையா? எப்ப? எங்க?" இது துகிரன் எதிர்பார்காதவொன்றுதான்.
"இப்ப இல்ல சார், பதினோரு வருசத்துக்கு முன்னாடி கோயம்புத்தூர்ல ஆதி படிச்சுக்கிட்டு இருந்தப்போ ஒரு பொண்ண லவ் பண்ணி ஏமாத்தியிருக்கான். அதனால அந்தப்பொண்ணு தற்கொலை பண்ணிகிட்டாதா அவ பிரெண்டு ஒருத்தி போலீஸ்ல காம்ப்ளயின் குடுத்திருக்கா. அப்புறமா அவ ராக்கிங் பிரச்சனையாலதான் தற்கொலை பண்ணிருக்கான்னு கேஸ முடிச்சுருக்காங்க."
"இறந்த பொண்ணு யாருன்னு தெரிஞ்சுதா?"
"பேரு பிரியா. சாகும் போது வயசு பத்தொன்பது. அநாதை பொண்ணு. திருச்சில சரஸ்வதி இல்லத்தில தான் வளர்ந்திருக்கா. கோயம்புத்தூர்ல சஞ்சீவி மெடிக்கல் காலேஜ்ல பர்ஸ்ட் இயர் படிச்சிக்கிட்டிருக்கும்போது ஹாஸ்டல்ல தூக்கு போட்டு இறந்து போயிருக்கா. ஹரியும் பிரியாவும் ஒன்னரை வருசமா லவ் பண்ணிட்டிருந்தாங்கன்னு பிரியாவோட பிரெண்டு பூங்குழலின்கிறவ ஸ்ட்ராங்கா போலிஸ்க்கிட்ட சொல்லியிருக்கா."
"ஹரியா??????....... ஓகே ஓகே. அவன ரெண்டு நாளா ஆதி ஆதின்னு சொல்லி உண்மையான பேரே மறந்திடுச்சு"
"ஆமா சார் பர்ஸ்ட் எனக்கும் குழம்பிடுச்சு, அப்புறம் டெத் செர்டிபிகேட்ல "ஆதித்ய கரிகாலன்"னு பெயர பார்த்தப்புறம்தான் விளங்கிச்சு. ஆதி சென்னைக்கு வந்தப்புறம்தான் அவன எல்லாரும் ஆதின்னு கூப்புடுறாங்க. சின்ன வயசிலருந்து அவன ஹரின்னுதான் கூப்பிட்டுட்டு இருந்திருக்காங்க."
"அந்த கம்ப்ளைன் குடுத்த பொண்ணு யாருன்னு தெரிஞ்சுதா?"
"சார் இது பதினோரு வருசத்துக்கு முன்னாடி நடந்த விஷயம், இதுக்கும் ஆதிட கொலைக்கும் சம்பந்தம் இருக்கும்னு நினைக்கிறீங்களா?"
"கொலைக்கான காரணம் பழிவாங்கல் தான், ஸோ இதுவா இருக்கலாம் சத்யா"
"ஓகே சார், கம்ப்ளைன் குடுத்தவ பேரு பூங்குழலி. வேறெந்த டீடெயில்ஸும் கிடைக்கல"
"சரி அவங்க இப்ப எங்க இருக்காங்க? என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க? கான்டக்ட் பண்ணுற வழிய கண்டுபிடிங்க."
"ஓகே சார்"
"அந்த அநாதை இல்லத்தோட கான்டக்ட் நம்பர் இருக்குதா?"
சத்யாவும் ஏற்கனவே தேடிப்பெற்றிருந்த சரஸ்வதி இல்லத்தின் தொலைபேசி இலக்கத்தை துகிரனிடம் கொடுத்துவிட்டு சென்றான்.
உடனடியாக சரஸ்வதி இல்லத்துக்கு தொடர்பு கொண்ட துகிரனும் லட்சுமி அம்மாவை தொடர்பிலினைத்தான்.
"ஹலோ அம்மா, நான் சென்னையிலருந்து துகிரன் பேசுறேன். போலீஸ்மா. உங்ககிட்ட ஒருத்தங்கள பற்றி தகவல் கேட்கணும்"
"சொல்லுங்க தம்பி. எனக்கு சென்னையில யாரையும் தெரியாதே" போலீஸ் என்றதும் லட்சுமி அம்மா சிறிது பயந்துதான் போனார்.
"பயப்படாதீங்க அம்மா, நான் உங்க ஹோம்ல இருந்த ஒருத்தர பற்றித்தான் தெரிஞ்சுக்கணும்"
"யார பத்தி தம்பி?"
"பதினோரு வருசத்துக்கு முன்னாடி தற்கொலை பண்ணி இறந்து போன பிரியாங்கிற பொண்ண பத்தி"
பிரியாவின் பெயரைக்கேட்டதும் லட்சுமி அம்மாவிற்கு கண்கள் கலங்கி குரல் அடைத்தது. இதை புரிந்துகொண்ட துகிரனும் "எனக்கு உங்க வேதனை புரியுதும்மா. நீங்க கொஞ்சம் ஒத்துழைச்சீங்கன்னா டிபார்ட்மென்டுக்கு ரொம்ப உதவியா இருக்கும்" என்று தாழ்மையுடன் கேட்டான்.
"பிரியா தன்னோட பதினோரு வயசுல இந்த ஹோமுக்கு வந்தா. அப்போ இந்த ஹோம்ல அவளுக்குத்தான் வயசு அதிகம். இங்க இருந்த எல்லா பிள்ளைகளையும் அவ தன்னோட சொந்த தம்பி தங்கச்சி போல பார்த்துக்குவா. பிரியான்னா எல்லாருக்கும் ரொம்ப இஷ்டம். படிப்பிலயும் நல்ல கெட்டிகாரி. பிளஸ் 2லயும் நல்ல மார்க்ஸ் எடுத்து மெடிக்கல் காலேஜ்ல சீட் கிடைச்சிச்சு. இந்தப்பாழாப்போன காதலால அவளோட வாழ்க்கையே சீரழிஞ்சு இப்ப அவளும் நம்மள விட்டு போய்ட்டா" என்று சொல்லியவாறே விக்கி விக்கி அழத்தொடங்கினார் லட்சுமி அம்மா.
துகிரனும் அவரது உணர்விற்கு மதிப்பளித்து சிறிது நேரம் பொறுமை காத்துக்கொண்டிருந்தான்
சிறிய இடைவெளியின் பின் உரையாடலை தொடங்கியவன் "பிரியா யார லவ் பண்ணினாங்க?"
அழுகையை ஒருவாறு அடக்கிக்கொண்டு மீண்டும் அம்மாவும் "ஹரின்னு பேரு மட்டுந்தான் எனக்கு தெரியும். பணக்காரவீட்டு பையன் போல. அவளை ஏமாத் திட்டான்"
"கொஞ்சம் உங்களுக்கு பிரியா பற்றி தெரிஞ்ச விசயத்த சொல்றீங்களாம்மா?"
"எனக்கு தெரிஞ்சத சொல்றன் தம்பி" என பிரியாவை பற்றி தான் அறிந்த முழுவதையும் சொன்னார்.
"கோயம்புத்தூருக்கு போனதுக்கப்புறம் என்னாச்சும்மா?"
"காலேஜ்ல சேர்ந்ததுக்கப்புறம் ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ இங்க வருவாள். ஆனா பழைய சந்தோஷ களை முகத்தில இருக்கல. வெளியூருக்கு போனதாலதான் அப்பிடி இருக்கிறாள்னு நினைச்சன். கொஞ்ச நாளைக்கப்புறமா அவ தற்கொலை பண்ணிகிட்டான்னு நியூஸ் மட்டும்தான் வந்திச்சு"
"பிரியாக்கு சொந்த தம்பி, தங்கச்சி அல்லது கிளோஸ் பிரெண்ட்ஸ் யாராச்சும் இருக்காங்களா?"
"அவளுக்கு சொந்தம்னு யாரும் கிடையாது. பூங்குழலியும் வைஷ்ணவியும்தான் கிளோஸ் பிரெண்ட்ஸ். பூங்குழலி பிரியாட நினைவுதினத்துக்கு வருஷாவருசம் இங்க வந்திடுவாள்."
"வேற யாரு பிரியாட நினைவுதினத்துக்கு அங்க வருவாங்க?"
"அவ கூட இங்கயிருந்த புள்ளைங்க சில பேரு வருவாங்க. பூங்குழலி கட்டாயம் வருவாள்."
"பூங்குழலி இப்ப எங்க இருக்காங்கம்மா?
"பூங்குழலி பாண்டிச்சேரில கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டாள். ரொம்ப தங்கமான பொண்ணு. ஏதோ சாப்ட்வேர் கம்பெனில வேலை செய்றா ள்னு தெரியும். மத்தபடி எதுவும் தெரியாது தம்பி"
"அவங்க போன் நம்பர் குடுப்பீங்களா? என்று கேட்க லட்சுமி அம்மா ஒரு லேண்ட் லைன் இலக்கத்தை கொடுத்தார். பரந்த மனப்பான்மையும் வெகுளியாகவும் இருந்த லட்சுமி அம்மா தனக்கு தெரிந்தவற்றை சொன்னாரே தவிர ஏன் இதையெல்லாம் கேட்க்கின்றீர்களென திரும்ப கேட்கவில்லை.
அழைப்பைத்துண்டித்தவன் முன்னே நின்றான் சத்யா.
"சார் பூங்குழலிட வீட்டு லேண்ட் லைன் நம்பர் கிடைச்சிருக்கு....."
"அத நானும் எடுத்திட்டன் சத்யா. நீங்க உடனே திருச்சில சரஸ்வதி இல்லம் இருக்கிற ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டர கான்டக்ட் பண்ணி அந்த இல்லத்துல 2008ல இருந்த பசங்கட டீடெயில்ஸ் அண்ட் அவங்க இப்ப எங்க இருக்காங்கங்கிறதையும் கலெக்ட் பண்ணிடுங்க. மேக் இட் பாஸ்ட்.... நம்ம குற்றவாளிய நெருங்கிட்டிருக்கிறோம்" என்று சொன்ன துகிரனின் மனதில் தான் சரியான பாதையில் போகிறேன் என்ற எண்ணம் வலுப்பெற்றிருந்தது.
"ஓகே சார், சீக்கிரம் எடுத்திடுறன்" சத்யாவும் துகிரனின் வேகத்திற்கு ஈடு கொடுத்தான்.
அடுத்து உடனடியாக பூங்குழலியின் வீட்டிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட துகிரனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அங்கு அவளது கணவன் மகேஷ் மாத்திரமே இருந்தார். பூங்குழலி வேலை நிமித்தம் பெங்களூர் சென்றிருந்தவர் அடுத்த நாள் காலைதான் பாண்டிச்சேரி வந்தடைவார் என்பதே அந்த ஏமாற்றத்திற்கு காரணம். நிச்சயம் பூங்குழலி மூலம் இந்த வழக்கிற்கு தேவையான ஏதோ ஒரு விடயம் தெரியவரும் என்பதை அவனது உள்ளுணர்வு அவனுக்கு கூறிக்கொண்டே இருந்தது. நாளை பூங்குழலி வந்தவுடன் முதல் வேலையாக தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்துவருமாறு மகேஷிற்கு கூறிவிட்டு ஏமாற்றத்துடன் தொலைபேசியை வைத்தான் துகிரன்.
"எக்ஸ்கியூஸ் மி சார், திருச்சில நீங்க கேட்ட டீடெயில்ஸ கலெக்ட் பண்ண சொல்லிட்டன் சார். ஈவினிங் உங்க டேபிள்ல எல்லாமே இருக்கும்......." என்ற படி இழுத்தான் சத்யா.
"என்ன சொல்லுங்க சத்யா. ஏதோ சொல்ல வரீங்க?"
"அது சார், நேற்று வரைக்கும் என்ன நடந்திச்சுன்னு எனக்கு தெரியும். பட் இன்னைக்கு நடக்கிறது ஒண்ணுமே புரியல.... அதான்......"
இன்று தான் தனியே நடாத்திய விசாரணைகள் சத்யாவிற்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த துகிரனும் அனைத்து விடயங்களையும் சத்யாவிற்கு சொன்னான்.
"சார் அப்போ கொலைகாரன் அல்லது கொலைகாரி ஒரு அனாதைன்னு சொல்லவாறீங்களா?"
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
படித்துவிட்டு உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள். நன்றி.
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 8 - பூங்குழலியின் ரகசியம்

சட்டென முகம் மாறிய துகிரனும் "சத்யா, ரேஷ்மா தான் ஒரு அநாதைன்னு ஸ்டேட்மென்ட் குடுத்திருக்கிறாள், இல்லையா?"
"ஆமா சார், நானும் அதைத்தான் யோசிச்சன்."
"ரேஷ்மா தன்னோட மாமா மாமி பற்றி சொன்னது உண்மையான்னு தெரியணும். அப்பிடியே பாலாட பேமிலி பற்றியும் விசாரியுங்க. ஈவினிங் சிக்ஸ்க்கு உங்கள மீட் பண்றன்."
ஆம் என வேகமாக தலையாட்டிவிட்டு விரைந்தவனைத்தொடர்ந்து துகிரனும் காரில் வீட்டை நோக்கி புறப்பட்டான்..... இல்லை வழமை போல தனது மூளைக்கு ஓய்வு வேண்டுமென உணர்ந்திருந்தான்.... எங்கு போகிறோம் என இலக்கில்லாமல் அவனது இன்னோவாவும் கிழக்கு கடற்கரைச்சாலையில் ஊர்ந்தது. திடீரென ஏதோ ஒன்றைப்பார்த்தவன் காரினை வலது பக்கம் திருப்பினான்.

வாரத்தின் முதல் நாள் ஆதவன் கூட கொஞ்சம் சீக்கிரமாகவே மேற்கு நோக்கிய பயணத்தை தொடங்கியிருந்தான். துகிரன் தன் கைக்கடிகாரத்தில் முட்கம்பிகள் இரண்டும் ஒரே நேர்கோட்டில் இருப்பதை பார்த்தபடி காற்றைக்கிழித்துக்கொண்டு தான் ஏற்கனவே சத்யாவினை வரச்சொல்லியிருந்த இடத்திற்கு செல்ல அங்கு சத்யாவும் துகிரனின் வருகைக்காக காத்திருந்தான். சத்யாவைக்கண்டதும் அவனை காரின் அருகே அழைத்த துகிரன் "வண்டில ஏறுங்க சத்யா, இப்பதான் மிஸ்டர் மகேஷ் கால் பண்ணினார். பூங்குழலி இன்னைக்கு பாண்டிச்சேரிக்கு வந்து கொண்டிருக்காங்க, நாளைக்கு இங்க வாறதா சொல்லியிருக்காங்க. பட் இன்னைக்கே போய் அவங்கள மீட் பண்ணினா நல்லதுன்னு தோணுது."
"யெஸ் சார், அதுவும் நல்ல ஐடியாதான்" என்று கூறிய சத்யா காரினுள் ஏறிக்கொள்ள காரை பாண்டிச்சேரியை நோக்கி செலுத்தினான் துகிரன்.
"சார் நீங்க சொன்னமாதிரி 2008ல சரஸ்வதி இல்லத்துல இருந்த பிள்ளைங்க லிஸ்ட் அனுப்பியிருக்காங்க. அதுல நம்ம சந்தேகப்படுறவங்க பேரு ஒண்ணுமில்ல"
"எதிர்பார்த்ததுதான் சத்யா"
"புரியல சார்"
"தன்னோட பெயர மாத்திக்குறது ஒண்ணும் பெரிய வேலை இல்லையே"
"ம்ம்ம்ம்......" என்று ஆமோதித்தான் சத்யா.
"சரி அவங்களோட போட்டோ கிடைச்சுதா?"
"அத பற்றித்தான் சொல்லலாம்னு வந்தன் சார். ஹோம்ல அனுவல் டேன்னு ஒண்ணு கொண்டாடுறாங்க. அன்னைக்கு மட்டும்தான் போட்டோ எடுத்து அத பிரேம் பண்ணி வச்சிருக்காங்க. ஆனா அதுல சில போட்டோஸ் ஆறு மாசத்துக்கு முன்னாடி காணாம போயிருக்குது"
"இன்டெரெஸ்ட்டிங்.... எந்த இயர்ல இருந்து போட்டோஸ் இல்ல?"
"2002ல இருந்து 2009 வரைக்குமான போட்டோஸ்"
"அப்பிடின்னா பிரியா ஹோம்ல இருக்கும்போது எடுத்த போட்டோஸ்?"
"ஆமா சார்"
"அப்போ கொலைகாரன் ஆறு மாசம் முன்னாடி கூட சரஸ்வதி இல்லத்துக்கு போயிருக்கான்னுதானே அர்த்தம்"
"ஆமா சார், ஆனா ஹோம்ல விசாரிச்சப்ப கடைசியா தைப்பொங்கலுக்குத்தான் முன்னாடி அங்க இருந்தவங்க சிலபேர் வந்ததா சொல்றாங்க. போட்டோஸ் தொலைஞ்சது பிப்ரவரி மாசமாம்."
"அப்புடின்னா யாரோ பழக்கப்பட்ட, அந்த ஹோம் பற்றி தெரிஞ்ச ஒருத்தர்தான் போட்டோஸ யாருக்கும் தெரியாம எடுத்திருக்கோணும். இல்ல அங்கயே யாரோ சப்போர்ட் பண்ணியிருக்கோணும்"
"ஆமா சார்."
"ரேஷ்மா அண்ட் பாலாட பாக்ரௌண்ட் பற்றி என்ன தெரிஞ்சிது சத்யா?"
"அவங்க குடுத்த ஸ்டேட்மென்ட் கரெக்ட்தான். பாலவைப்பற்றி எந்த பிளாக் மார்க்கும் இல்ல."
"அப்பிடின்னா ரேஷ்மா?"
"ரேஷ்மாட கேரக்டர் பற்றி நல்லவிதமா யாரும் சொல்லல. நிறைய பசங்க கூட பழகியிருக்கா. பசங்ககிட்ட எவ்வளவு காசு கறக்க முடியுமோ கறந்திட்டு கழட்டி விட்டுடுவாள். அப்பிடி பணத்திற்காகத்தான் ஆதி கூடவும் பழகியிருக்காள். ஆதியும் ஒரு பொம்பள பொறுக்கிக்கிறதால ரெண்டு பேருக்கும் நல்லா ஒத்துப்போயிருக்கு. ஆதி அனு கூட பழகினதுக்கப்புறம் திருந்தி வாழ ஆரம்பிச்சிருக்கான். ரேஷ்மா பற்றியும் புரிய ஆரம்பிச்சிருக்கு. அப்புறம்தான் ரேஷ்மா பிளாக்மெயில் பண்ண ஆரம்பிச்சிருக்கிறாள்."
"இது எல்லாத்துக்கும் அவளோட கள்ளக்காதலன் திலக்கும் உடந்தை. அப்பிடித்தானே?"
"அது எப்பிடி சார் உங்களுக்கு தெரியும்?" என்று ஆச்சர்யத்தில் புருவத்தை உயர்த்தினான் சத்யா.
"ஜஸ்ட் ஒரு அஸ்ஸும்ப்சன் தான் சத்யா, ரேஷ்மாட ட்ரெஸ் அவளோட பேச்சு எல்லாத்தயும் வச்சு பார்க்கிறப்ப அவ பயத்தில அண்ணன கூட்டிவார பொண்ணு மாதிரி தெரியல."
"கிரேட் சார்"
"இது கிரேட் கிடையாது. போலீஸ்னா ஆட்டோமெட்டிக்கா இதெல்லாம் வரணும். சீக்கிரம் உங்களுக்கும் வந்திடும்"
"ஓகே சார், இன்னும் திலக் பற்றி ஒரு டீடெயில்ஸும் கிடைக்கல, மதுரைல அரியூர்ங்கிற கிராமம்தான் தன்னோட சொந்த இடமுன்னு சொல்லியிருக்கான். அந்த ஊர்ல போலீஸ் ஸ்டேஷன் கிடையாது. பக்கத்து ஊர் ஸ்டேஷன்ல இன்போர்ம் பண்ணியிருக்கன் சார். நாளைக்கு மோர்னிங் டீடெயில்ஸ் கிடைச்சுடும்."
"குட் ஒர்க் சத்யா. கீப் இட் அப்"
துகிரன் பாராட்டியது மகிழ்ச்சியாகவிருந்தாலும் கொலையாளி யாரென்று தெரியாமல் சத்யாவிற்கு தலையே வெடித்துவிடும் போல இருந்தது. ஆனால் அருகில் எந்தவித சலனமும் இல்லாமல் காரை ஓட்டி கொண்டிருந்தான் துகிரன். அதைப்பார்த்த சத்யா தான் தெரிந்து கொண்ட விடயங்களைவிட வேறு ஏதோ துகிரனுக்கு தெரிந்துள்ளது என அனுமானித்துக்கொண்டான்.
எட்டு முப்பது மணியளவில் இருவரும் பாண்டிச்சேரியில் உள்ள வக்கீல் மகேஷின் வீட்டினை வந்தடைந்திருந்தனர். துகிரனும் ஏற்கனவே அறிவித்திருந்தபடியால் மகேஷும் பூங்குழலியும் இவர்களுக்காக காத்திருந்தனர். உள்ளே வரவேற்றுச்சென்ற பூங்குழலிக்கும் மகேஷிற்கும் போலீஸ் எதற்காக தங்களைத்தேடி வந்திருக்கின்றது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவித குழப்பத்துடன் நின்றிருந்த பூங்குழலியினை புரிந்து கொண்ட துகிரன் அவர்களது சந்தேகங்களை போக்கும்படியாக உரையாடலை ஆரம்பித்தான்.
"மிஸ்டர் அண்ட் மிஸிஸ் மகேஷ், நான் சென்னை போலீஸ் கிரைம் பிரான்ச் டிடெக்ட்டிவ் துகிரன், இவர் சப் இன்ஸ்பெக்டர் சத்யா. நாங்க உங்களோட பிரெண்ட பத்தி தெரிஞ்சுக்கிறதுக்காக வந்திருக்கிறம். கொஞ்சம் அர்ஜென்ட் என்றதால இந்த டைம்ல டிஸ்டர்ப் பண்ண வேண்டியதா போச்சு. சாரி போர் தி டிராபிள்" என்று கூற பூங்குழலிக்கும் மகேஷிற்கும் யாருடைய பிரெண்டை பற்றி என்பது விளங்காமல் முழித்தனர்.
"பூங்குழலி, உங்க பிரெண்ட் பிரியாவ பற்றித்தான் தெரிஞ்சு கொள்ளணும்" என்று மேலும் தெளிவுபடுத்தினான் துகிரன்.
"பிரியாவை பற்றியா? எதுக்கு? உங்களுக்கு எப்பிடி பிரியா பற்றி தெரியும்?" என்று ஷாக்காகினாள் குழலி எனும் பூங்குழலி.
"ஓகே. இன்னைக்கு டிவி நியூஸ் பார்த்தீங்களா?"
"இல்லையே. எதுக்கு?"
"அப்பிடின்னா உங்களுக்கு எதுவும் தெரிஞ்சிருக்காதுதான். நான் எல்லா விஷயமும் சொல்றன்." என்றபடி ஆதியின் கொலை வழக்கைப்பற்றி தேவையான விடயங்களைக்கூறினான் துகிரன்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த குழலிக்கு ஆதியின் கொலை மகிழ்ச்சியை கொடுத்திருந்தது என்பது துகிரனுக்கும் சத்யாவிற்கும் விளங்கியது.
"பிரியாவுக்கு ஆக்சுவலி என்ன நடந்திச்சு? ஐ மீன் கோயம்புத்தூர்ல மெடிக்கல் காலேஜ்ல ஜாயின் பண்ணினதுக்கப்புறம்..." என்று சந்தேகத்தைக்கேட்டான் சத்யா.
சரியென தலையசைத்த குழலியும் அங்கிருந்த கதிரையில் அமர்ந்து கூறத்தொடங்கினாள்.
"பிரியா ரொம்ப ஹாப்பியாத்தான் கோயம்புத்தூருக்கு கிளம்பி போனாள். டாக்டராக போறேன், ஹரி கூட இருக்க போறேன்னு அவ பட்ட சந்தோசத்திற்கு அளவே இல்ல. யாரு கண்ணு பட்டதோ தெரியல, அந்த சந்தோசம் ரொம்ப நாளைக்கு நீடிக்கல. அவ போய் ஒரு மாசத்துல ஹரியும் பி.காம் படிக்கிறதுக்காக கோயம்புத்தூர் போனான்.... தொடக்கத்துல நல்லாத்தான் எல்லாம் போய்கிட்டிருந்திச்சு. முதல் முறையா தன்னோட பேரன்ட்ஸ விட்டு தனியா வந்த ஹரிக்கு அவனுக்குள்ள இருந்த கெட்ட குணமெல்லாம் வெளிய வந்திச்சு. நிறையப்பணம் கையில இருந்துச்சு, பணம் இருந்ததால கூடாத நட்பும் கிடைச்சிச்சு. பொண்ணுங்க சகவாசம், குடி கும்மாளம்னு இருக்க தொடங்கினான். இதயெல்லாம் நம்புறதுக்கு கூட பிரியாவால முடியல. ஹரிதான் தன்னோட உலகம்னு நினைச்சவளுக்கு இத தாங்கிக்க முடியல. ஹரிக்கும் பிரியா ஒருநாளும் தன்னோட ஆசைக்கு இணங்கமாட்டாள் என்றது விளங்கிடுச்சு. ஒருநாள் ஹரிய பார்க்க அவன் வீட்டுக்கு பிரியா போக அங்க இன்னொரு பொண்ணு கூட கூத்தடிச்சிட்டு இருந்த ஹரி கூட சண்டை போட்டிருக்காள். ஹரியும் பிரியாவை "நீயும் யாரு காலேஜ்ல சீட் வாங்கி குடுத்திருந்தாலும் அவன் கூட போயிடுவதானேடி" ன்னு திட்ட மனசுடைஞ்சு போயிருக்காள். அன்னைக்குத்தான் என்கூட கடைசியா போன்ல பேசினாள். அவ்வளவு அழுதாள். நான் இனி உயிரோட இருக்கிறதுல அர்த்தம் இல்லைன்னு சொல்லிட்டு போன கட் பண்ணிட்டாள். அடுத்த நாள் அவ சூசைட் பண்ணி இறந்துட்டதா நியூஸ் வந்துச்சு." கண்களின் ஓரம் வந்த கண்ணீர்துளிகளை துடைத்துக்கொண்டு சொல்லி முடித்தாள் குழலி.
"அந்த தற்கொலைக்கு எதிரா எந்த ஆக்சனும் எடுக்கலையா?"
"எடுத்தன், நானும் என்னோட பிரெண்ட் வைஷ்ணவியும் கோயம்புத்தூருக்கு போய் போலிஸ்ல கம்ப்ளயின் குடுத்தோம். பட் போலீஸ பணம் குடுத்து விலைக்கு வாங்கிட்டான் அந்தப்பொறுக்கி. அவனுக்கெல்லாம் இப்பிடித்தான் சாவு வரும்" என்று சாபமிட்டாள் குழலி.
பூங்குழலியைப்பற்றி ஏற்கனவே சிறிது அறிந்துவைத்துக்கொண்டுதான் அவ்விடம் வந்திருந்தான் துகிரன், அதில் முக்கியமானவொன்றுதான் அவளின் இளகிய மனம். என்னதான் ஹரி மீது கோபம் கொண்டாலும் சக மனிதனை இன்னொரு மனிதன் கொலை செய்வதை சரியென்பவள் அல்ல அவள் என்பது துகிரனது அனுமானம். அதன் படியே காயை நகர்த்தினான் துகிரன்.
"பூங்குழலி உங்களோட உணர்வுகள புரிஞ்சுக்க கூடியதா இருக்கு, பட் அதேசமயம் கொலை எதுக்குமே தீர்வாகாது அண்ட் நேர்மையான வக்கீல் என்று உங்க ஹஸ்பன்டுக்கு இருக்கிற பெயர காப்பாத்தவேண்டிய பொறுப்பும் உங்ககிட்ட இருக்கு."
"யெஸ் நீங்க சொல்றதும் கரெக்ட்தான்"
"இந்தக்கொலைய செய்தவங்க நிச்சயமா பிரியாக்கு ரொம்ப கிளோஸ் ஆனவங்களாத்தான் இருக்கணும். நீங்கதான் பிரியாகூட ரொம்ப கிளோஸா இருந்திருக்கீங்க. உங்களைத்தவிர வேற யாராவது பிரியா கூட நெருக்கமா இருந்தாங்களா? இல்லைன்னா ஏதாவது வன் சைட் லவ்? வேற ஏதாவது ரகசியம் பிரியாட லைஃப்ல இருந்துச்சா? நீங்க குடுக்கிற இன்போர்மேசன் இந்த கேஸுக்கு ரொம்ப ஹெல்ப் புல்லா இருக்கும். நல்லா யோசிச்சு சொல்லுங்க. ப்ளீஸ்"
சிறிது நேரம் எதையோ யோசித்து மனதைப்போட்டு குழப்பிக்கொண்டிருந்தாள் குழலி. அவள் நிச்சயமாக துகிரன் கேட்ட கேள்விக்கான பதிலை யோசிக்கவில்லை அவளுக்கு ஏற்கனவே தெரிந்திருந்த பதிலை சொல்லலாமா வேண்டாமா என்பதைப்பற்றித்தான் யோசித்துக்கொண்டிருக்கிறாள் என்பது துகிரனுக்கு விளங்கியது.
"நான் எனக்கு தெரிஞ்ச விசயத்த உங்ககிட்ட சொல்றேன். பட் எனக்கு ஒரு ப்ரோமிஸ் பண்ணி தரணும். முடியுமா?"
"என்ன ப்ரோமிஸ்?" ஆவலுடன் இருவரும் குழலி சொல்லப்போவதை கேட்க தயாரானார்கள்.
"பிரியாவோட தற்கொலைக்கு அந்த ராஸ்கல்தான் காரணம்னு இந்த உலகத்துக்கு தெரியப்படுத்தனும்."
இதைதான் எதிர்பார்த்த துகிரனும் "நிச்சயமா, ஆதிட கொலை வழக்குல பிரியாவும் சம்பத்தப்பட்டிருக்கிறதால அந்த கேஸையும் ரீ ஓபன் பண்ணிடுவாங்க. நோ ப்ராப்ளம்"
"சரி எனக்கு மட்டும் தெரிஞ்ச ஒரு விசயத்த சொல்லுறன். பிரியாக்கு ஒரு தங்கச்சி இருந்தாள்."
"என்ன தங்கச்சியா? ஹோம்ல விசாரிச்சப்போ அப்பிடி யாரும் இல்லன்னு சொன்னாங்க...." துகிரனுக்கும் சத்யாவிற்கும் இதயமே ஒரு கணம் நின்று போனது போல இருந்தது.
"ஆமா அவளுக்கு தங்கச்சி இருந்த விஷயம் என்னைத்தவிர யாருக்கும் தெரியாது. ஏன் லட்சுமி அம்மாக்கு கூட தெரியாதுதான். அவ பேரு பூஜா. பிரியாட அப்பாவோட ரெண்டாவது மனைவிக்கு பொறந்த பொண்ணு. பிரியாவ விட எட்டு வயசு சின்னவ. அவ பொறந்ததுல இருந்து தாய்க்கு தாயா இருந்து பிரியாதான் பூஜாவ வளர்த்து வந்திருந்தாள்."
"அதெப்பிடி ஹோம்ல இது தெரியாம இருந்திச்சு?"
"சொல்றன், பிரியாட சொந்த ஊரு சேலம். உண்மையாவே பிரியாட அப்பா மாத்திரம்தான் ஆக்சிடெண்ட்ல இறந்தார். அப்பா இறந்ததும் அவளோட சித்தி பிரியாவ வீட்ட விட்டு துரத்திட்டா. எங்க போகணும்ன்னு தெரியாம பஸ் ஸ்டான்ட்ல முழிச்சுக்கிட்டிருந்தவ திருச்சிக்கு பஸ் ஏறிட்டாள். எப்பிடியோ கஷ்டப்பட்டு சரஸ்வதி இல்லத்துக்கு வந்தவளுக்கு பூஜா நினைப்பாவே இருந்திருக்கிறாள். மூணு மாசம் ஹோம்ல இருந்ததுக்கப்புறம் ஒருநாள் திரும்ப யாருக்கும் தெரியாம சேலத்துக்கு போனவள் பூஜாவையும் தூக்கிட்டு ஹோம்க்கு வந்திருக்காள். அதுக்கு அவளோட அப்பாட பிரெண்ட் ஒருத்தர் ஹெல்ப் பண்ணியிருக்கார். ஹோம்லயும் அவரே கொண்டுவந்து யாரோ அனாதைப்பிள்ளை மாதிரி சேர்த்து விட்டிருக்கார். அந்த நேரம் பூஜாக்கு ரெண்டரை வயசு."
"ஏன் அது தன்னோட தங்கச்சின்னு ஹோம்ல பிரியா சொல்லல?" இது சத்யா
"அப்பிடி சொன்னா பூஜாக்கு அம்மா இருக்கிறது தெரிஞ்சிருக்கும். திரும்ப பூஜாவ சித்திகிட்ட குடுத்துடுவாங்கன்னுதான். ஹோம்ல இருக்கிற எல்லா குழந்தைகளோடயும் சேர்த்து பூஜாவையும் நல்லபடியா யாருக்கும் சந்தேகம் வராதபடி வளர்த்து வாறதா என்கிட்ட ஒருமுறை சொல்லியிருக்காள். இத வேற யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு என்கிட்ட அப்புறமா சத்தியம் வாங்கிக்கிட்டாள்"
"உங்களால பூஜாவ அடையாளம் காட்ட முடியுமா?" சத்யா ஆர்வ மிகுதியில் கேட்டான்.
"சாரி நான் பூஜாவ இதுவரைக்கும் பார்த்ததில்ல"
"என்ன சொல்றீங்க?"
"இந்த விஷயம் கூட பிரியா கோயம்புத்தூருக்கு போனதுக்கப்புறம்தான் ஒருநாள் என்கூட மனசு சரியில்லைன்னு போன்ல பேசிக்கிட்டிருக்கும்போது சொன்னாள். பூஜா யாருன்னு நான் தெரிஞ்சிக்கிறதையும் அவள் விரும்பல. நானும் அவள கேட்டு போர்ஸ் பண்ணல."
மனதின் எண்ண ஓட்டங்களை வெளியில் காட்டிக்கொள்ளாமல் துகிரனும் குழலியை நோக்கி "தாங் யூ போர் யுவர் இன்போர்மசன். நாளைக்கு மோர்னிங் என்னோட ஆபிசுக்கு நீங்க வரவேண்டியதா இருக்கும். இப்போ சொன்ன அவ்வளவு விஷயத்தையும் எழுத்துமூலம் எடுக்கணும். கட்டாயம் வந்துடுங்க" என்று கூற மகேஷும் ஆம் என்பதுபோல தலையசைத்தார்.
"சார் ஒரு விஷயம்" என கிளம்பிய துகிரனையும் சத்யாவையும் இடைமறித்தாள் குழலி.
"சொல்லுங்க"
"ஒருவேளை இந்தக்கொலையை பூஜா பண்ணியிருந்தா, செத்தவன் ஒரு பொறுக்கி, கொலை பண்ணினது எந்த உயிருக்கும் கெடுதல் நினைக்காத ஒரு அப்பாவிப்பொண்ணுட தங்கச்சின்னு மறந்துடாதீங்க"
பூங்குழலி அவ்வாறு கூறியது சத்யாவிற்கு ஏதோ போல இருந்தது. துகிரனும் அவள் சொன்னதற்கு எவ்வித பதிலும் கூறாமல் அங்கிருந்து கிளம்பினான்.
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
படித்துவிட்டு உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள். நன்றி.
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இறுதி அத்தியாயம்
அத்தியாயம் 9 – யார் கொலையாளி?

சென்னை நோக்கி கிளம்பிய இருவர் மனதிலும் ஏதோ ஒரு பாரமிருந்தது. நேரமும் இரவு பத்து மணியினைத்தாண்டியிருந்தது. அவர்கள் இருவருக்கும் பூங்குழலி கடைசியாக சொன்ன வார்த்தைகளே காதில் ஒலித்துக்கொண்டிருந்தது. சிறிது நேர மயான அமைதியின் பின் துகிரன் மீண்டும் டிடெக்ட்டிவ் வேடத்திற்குள் வந்தான். சரஸ்வதி இல்லத்துக்கு தொலைபேசி அழைப்பெடுத்தவன் மறு முனையில் லட்சுமி அம்மாவை பேசச்சொல்லி அழைத்தான்.
"லட்சுமி அம்மா, இந்த நேரம் உங்கள தொந்தரவு பண்ணறதுக்கு மன்னிச்சுக்குங்க."
"பரவால்ல தம்பி, சொல்லுங்க"
"உங்களுக்கு 2008ல இருந்த பூஜாங்கிற பொண்ண ஞாபகம் இருக்குங்களா?"
சிறிது நேரம் யோசித்தவர் "பூஜாங்கிற பேர்ல ஒரு பொண்ணு இருந்துச்சு, ஆனா அந்தப்பொண்ணு பத்து வயசிலேயே இங்க இருந்து காணாம போய்ட்டுதுங்களே"
"என்ன சொல்றீங்கம்மா? இது நடந்தது பிரியா இறந்ததுக்கு அப்புறமா? மொதல்லேயேவா?"
"பிரியா இறந்து சரியா ஒரு மாசம் திதி குடுக்கிற நாள்ல ஓடி போய்ட்டாள். அதனாலதான் எனக்கு இன்னமும் ஞாபகமிருக்கு தம்பி."
"மொதல்ல காணாமப்போய்ட்டான்னு சொன்னீங்க, இப்ப ஓடி போய்ட்டான்னு சொல்றீங்க. புரியலையே"
"அதுவா தம்பி, அந்தப்பொண்ணோட சேர்த்து கபிலன்கிற பையனும் காணாமப்போயிட்டான், அதனால இங்க எல்லாரும் ரெண்டுபேருமே சேர்ந்துதான் ஓடி போய்ட்டாங்கன்னு கதையை கட்டிட்டாங்க."
"அந்தப்பையனுக்கு என்ன வயசிருக்கும்?"
"அப்போ ஒரு பதினஞ்சு பதினாறு இருந்திருக்கும்."
"பூஜாவையும் கபிலனையும் இப்போ பார்த்தா அடையாளம் காட்டுவீங்களாம்மா?"
"இல்ல தம்பி, எனக்கு அவங்களோட முகமே மறந்து போச்சு, நான் கடைசியா பார்க்கிறப்போ சின்ன பசங்களா இருந்தாங்க. இப்ப ஆளே மாறியிருப்பாங்க."
பூஜாவையும் கபிலனையும் பற்றி வேறு தகவல்களையும் பெற முற்பட்ட துகிரனுக்கு உபயோகமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
"சத்யா அந்த போட்டோஸ் எல்லாம் பிரியா பற்றி மறைக்கிறதுக்காக இல்ல. கொலையாளிங்க தங்களோட போட்டோஸ மறைச்சிருக்காங்க. நான் இதுவரைக்கும் எங்கேயுமே ஒரு கொலை பண்றதுக்காக பதினோரு வருஷம் தவமிருந்ததா கேள்விப்பட்டதில்ல."
"சார் பதினோரு வருஷம் பொறுத்து கொலை பண்ணியிருக்காங்கன்னா பிரியா மேல அந்த ரெண்டு பசங்களும் எவ்வளவு பாசம் வச்சிருப்பாங்க?"
"ம்ம்ம்..... பட் ஒரு போலீஸா நாம குற்றவாளிங்கள சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தித்தான் ஆகணும்."
ஆமென்று சலித்துக்கொண்டே தலையாட்டினான் சத்யா.
"சரி சார் யாரு பூஜா யாரு கபிலன்னு எப்பிடி கண்டு பிடிக்கப்போறீங்க? ரேஷ்மா, அனுராதா இவங்கள்ல யாரு பூஜா? திலக், பாலா இதுல யாரு கபிலன்?"
"அதுக்கொரு ஐடியா பண்ணுவம்." என்று கூறிய படியே இன்ஸ்பெக்டர் ரமேஷிற்கு கால் பண்ணிய துகிரன் அடுத்த நாள் காலையில் ஆதியின் பார்ட்டியில் இருந்த அனைவரையும் தன்னுடைய அலுவலகத்திற்கு வருமாறு உத்தரவிடச்சொன்னான்.
"ஏன் சார் எல்லாரையும் வர சொல்றீங்க?"
"எனக்கும் தெரியாது. கொலையாளிய ரொம்ப கிட்ட நெருங்கிட்டம். நாளைக்கு பூங்குழலி வர்றது தெரிஞ்சா நிச்சயமா குற்றவாளிக்கு பயம் வரும். ட்ரை பண்ணி பார்ப்பம் சத்யா. இதுதான் குற்றவாளிய சீக்கிரமா கண்டுபிடிக்க ஒரே வழி. இல்லன்னா சந்தேகப்படுறவங்கட ஹிஸ்டரி ஜியோக்ராபின்னு எல்லாத்தையும் அலசோனும்"
"அவங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் சார்?"
"மரண தண்டனை கிடைக்கிறது உறுதி"
இதைக்கேட்டதும் சத்யாவிற்கு முகமே இருண்டு போனது. ஏன் தான் இந்த வேலைக்கு வந்தோம் என அவனது மனம் பதை பதைக்க தொடங்கியது. இவற்றையெல்லாம் துகிரனும் கவனிக்கத்தவறவில்லை.
புதன்கிழமை காலை பத்து மணி, துகிரனுடைய அலுவலகத்தில் சப் இன்ஸ்பெக்டர் சத்யா ஆதியுடைய பார்ட்டிக்கு வந்தவர்களை கான்ப்ரன்ஸ் ஹாலில் அமரவைத்துவிட்டு துகிரனுக்காகவும் பூங்குழலிக்காகவும் காத்துக்கொண்டிருந்தான். அப்போது சட்டென வந்து நின்ற இன்னோவாவினூடு வெளிப்பட்ட துகிரன் நேரே தன்னுடைய கேபினுக்கு சென்றான்.
"குட் மோர்னிங் சார், மற்றவங்கள்லாம் வந்து முப்பது நிமிசத்துக்கு மேலாச்சு. அவனவன் ஏன் கூப்பிட்டிங்க? எதுக்கு கூப்பிட்டிங்க? வாரண்ட் இருக்கா? அது இதுன்னு கேட்டிட்டு இருக்கான். சமாளிக்க முடியல."
பொறுமையாக எல்லாவற்றையும் கேட்ட துகிரன் "அவனுங்க அப்பிடி கத்திக்கிட்டு இருக்கிறதுதான் தேவையே" என்று கூறிவிட்டு மானிட்டரில் உள்ளே கான்ப்ரன்ஸ் ஹாலில் நடப்பவற்றை அவதானித்தான்.
"புரியலையே சார்"
"யாரு கொலை பண்ணினன்னு தெரியமுதல் இப்பிடி எல்லாரையும் ஒண்ணா ஒரே இடத்துல வச்சிருக்கும் போது எல்லாருக்கும் பயம் புடிக்க ஆரம்பிச்சுரும். அதுல உண்மையாவே குற்றம் செய்தவண்ட நிலைமை திருடனுக்கு தேள் கொட்டினது போலத்தான். அதிகமா போலிஸ்கிட்ட முறைச்சுக்கவும் முடியாது, சாந்தமா இருக்கவும் முடியாது. எப்பிடி நடிக்குறதுன்னு தெரியாம முழிப்பான்"
புதிதாக ஒன்றை அறிந்து கொண்டவன் போல தலையாட்டினான் சத்யா.
உள்ளே நடப்பவற்றை சிறிது நேரம் உன்னிப்பாக கவனித்தவன் ஏதோ ஒன்றை புரிந்தவன் போல வேறு ஒரு கமெரா கோணத்தைப்பார்த்தவன் "அது யாரு சத்யா வெளிய நிக்கிறது?"
"சார் அது செக்யூரிட்டி மணிமாறன், இன்ஸ்பெக்டர் சார் எல்லாரையும் வரணும்னு சொல்ல இவனையும் கூப்பிட்டுட்டாங்க. வந்து பயந்துகிட்டே நின்னான். நான்தான் வெளிய நிக்க சொன்னன்."
"ம் சரி சரி அவனை அனுப்பிடுங்க"
சத்யாவும் வெளியே சென்று அவனைப்போகச்சொல்ல அவனும் தப்பினோம் பிழைத்தோமென வெளியேறினான்.
"சார் ஏதோ நம்ம அவனைத்தான் கொலைகாரன்னு சொல்ல போறோம்னு பயந்துட்டே இருந்திருக்கான். அவனைப்பார்த்தாலே பரிதாபமா இருக்கு" என்று சொல்லி சிரிக்க துகிரனது முகமும் ஏதோ பிழையென உணர்த்த உள்ளே வந்தாள் பூங்குழலி.
"சாரி மிஸ்டர் துகிரன் கொஞ்சம் லேட் ஆகிட்டுது. வர்ற வழில டிராபிக்ல மாட்டிகிட்டேன்"
"உங்களுக்காகத்தான் வெயிட்டிங். ஸ்டேட்மென்ட் அப்புறமா குடுக்கலாம். இந்த ரூம்ல இருக்கிறவங்கள்ல யாரையாச்சும் நீங்க திருச்சில அல்லது ஹோம்ல மீட் பண்ணியிருக்கீங்களான்னு பார்த்து சொல்லுங்க."
திடீரென ஆச்சர்யத்தை வெளிக்காட்டிய பூங்குழலி "அப்போ அந்த ஹோம்ல இருந்த பையன்கிட்ட இத கேட்கலையோ நீங்க? அதுக்குத்தான் அவன் வந்திருந்தான்னு நினைச்சன்."
"யாரு பையன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?
"இதோ இப்ப வெளில போனானே அந்தப்பையன் தான். அவன்தான் பிரியா கூட ஸ்கூலுக்கு துணைக்கு வருவான். எனக்கு ஞாபகமிருக்கு..................."
"சத்யா................ விட்றாதீங்க......" என்று துகிரன் கத்துவதற்குள் சுழல்காற்றாய் வேகமெடுத்தான் சத்யா.
இரவு மணி ஏழினை தொட்டிருந்தவேளை புராதனியின் புலம்பல்களை பொறுத்துக்கொண்டு காரை புராதனியின் அப்பா வீட்டிற்கு ஓட்டிக்கொண்டிருந்தான் துகிரன்.
"ஆறு மணிக்கு ரெடி ஆகிட்டன், இப்ப ஏழு மணியாகிட்டு. அங்க கேக் வெட்டியிருப்பாங்க. ஒரு நாளாவது சொன்ன நேரத்துக்கு வாறீங்களா" என்று புராதனி சொன்ன வார்த்தைகளை பலமுறை கேட்டிருக்கிறான், அதே போல புராதனி இல்லாமல் அவளது அம்மா பிறந்தநாள் கேக் வெட்டியிருக்க மாட்டார் என்பதும் துகிரனுக்கு தெரியும். பெற்ற மகளைப்பற்றி தெரியாமலா இருப்பார்கள் என்பதை நினைத்து சிரித்துக்கொண்டான்.
பதினைந்து நிமிட போராட்டத்துக்கு பின் புராதனியின் புலம்பல்களிலிருந்து விடுதலை கிடைத்தது. பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குடும்பத்தாருடன் சிறப்பாக அரங்கேறிய பின்னர் புராதனியின் தகப்பனார் தேவராஜ் துகிரனை நெருங்கினார்.
"துகிரன் கேஸ் ரிப்போர்ட் படிச்சன்."
"அத பத்தி பேசணும்னுதான் இருந்தன் மாமா."
"ஆக்சுவலா என்ன நடந்திச்சு?"
குடும்பத்தார் அருகில் இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திய பின்னர் துகிரன் நடந்தவற்றை கூறத்தொடங்கினான். அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த தேவராஜும் ஆர்வமிகுதியால் "ஸோ அந்த பூஜா அண்ட் கபிலனை கண்டுபிடிசீங்களா இல்லையா? என்றார்.
"யெஸ் மாமா, நேற்று மதியம் ஈசிஆர் ல கேஸ் பற்றி யோசிச்சிட்டே ஒரு ரைட் போனன். அப்போதான் கேளம்பாக்கம்னு ஒரு போட பார்த்ததும், ஆதிட லவ்வர் அனுராதா தான் கேளம்பாக்கத்திலதான் பாட்டி கூட இருந்ததா சொன்னது ஞாபகத்துக்கு வந்துச்சு. அங்க போய் விசாரிச்சு பார்ப்போம்னு அவ இருந்த ஏரியால விசாரிச்சேன். நான் எதிர்பார்க்காத விஷயம் ஒண்ணு அங்க கிடைச்சுது. என்னன்னா அனுராதாவ பார்க்க இன்னொரு பையன் அங்க அடிக்கடி வந்திருக்கான். அதுவும் வன் இயருக்கு முன்னாடி வரைக்கும் தான். அப்புறமா அனு படிச்ச காலேஜ்ல அவ எப்பிடி பீஸ் கட்டினான்னு டீடெயில்ஸ் எடுத்தன். அனுட பாங்க் அக்கௌன்ட்டுக்கு மாசா மாசம் பணம் வந்திருக்கு, எல்லாம் லாஸ்ட் வன் இயருக்கு முன்னாடி வரைக்கும் தான். அதாவது ஆதிய அனு லவ் பண்ண தொடங்கும் வரைக்கும். ஸோ அனுவோட ரியாக்க்ஷன ஆப்செர்வ் பண்றதுக்காகத்தான் அன்னைக்கு எல்லாரையும் கான்ப்ரென்ஸ் ஹால்ல அஸெம்பிள் பண்ணியிருந்தான். நான் நினைச்சது போலவே அனு ரொம்ப நெர்வஸா இருந்தா. அதுக்கு முன்னாடியே இஷாவ மாடிப்படில கண்ட உருவத்த பத்தி போலீஸ்கிட்ட சொல்ல வேணாமுன்னு அனு இஷாகிட்ட சொன்னதுலேயே டவுட் வந்திருந்திச்சு. பட் பூங்குழலி அங்க வந்தப்புறமாத்தான் செக்யூரிட்டி மணிமாறன் தான் கபிலன்னு தெரிஞ்சிது. இந்த ட்விஸ்ட் எனக்கே சர்ப்ரைஸ்தான்."
"வாட்? செக்யூரிட்டியா?"
"ஆமா, பிரியா தன்னோட தங்கச்சி பூஜாவையும் தன்னைப்போலவே சித்தியோட கொடுமையால அனாதையான கபிலனையும் ரொம்ப பாசமா பார்த்துக்கிட்டிருக்கா. பிரியாவ அம்மா மாதிரி நினைச்சுக்கிட்டிருந்த ரெண்டு பேருக்கும் அவளோட சாவ ஏத்துக்கொள்ள முடியல. பிரியா இல்லாம ஹோம்ல பூஜா கஷ்டப்படுறத பார்க்க முடியாம விட்டுட்டு போக மனசுமில்லாம பூஜாவ கூட்டிகிட்டு சென்னை வந்திருக்கான் பதினைஞ்சு வயசான கபிலன். அப்போ பூஜாவுக்கு வயசு பத்துதான். அப்போதான் ரெண்டு பசங்களுக்கும் செல்லம்மாள்ங்கிற பாட்டி அடைக்கலம் கொடுத்திருக்கா. பாட்டிகிட்ட அவ்வளவு வசதியில்லாததால தானும் வேலைக்கு போய் பூஜாவ படிக்கவச்சிருக்கான். பயனியர் செக்யூரிட்டி சர்வீஸ்ல ஜாயின் பண்ணினதுக்கப்புறம் மூணு வருசத்துக்கு முன்னாடி ஆதிய பார்த்திருக்கான். கொலைவெறில இருந்த கபிலனை பூஜாதான் பொறுமையா இருக்க சொல்லியிருக்காள். அப்புறமா பூஜாட பிளான் படி ரெண்டு பேரும் அனுராதாவாவும் மணிமாறனாவும் இந்த உலகத்துக்கு மாறியிருக்காங்க. பொறுமையா சந்தர்ப்பம் வரும்போது தன்னோட காதல் வலைல ஆதிய சிக்க வச்சு கொலை செய்ய நாள் பார்த்திருக்கிறாள் பூஜா. சாகும்போது தான் எதுக்காக சாகுறேன்னு ஆதிக்கு தெரியணும்னு தான் யாருன்னு சொல்லிட்டுத்தான் ரெண்டு பேருமா ஆதிய மாடிலருந்து தள்ளிவிட்டிருக்காங்க. ஆதியைப்போலவே கேரக்டர்ல இருந்த ரேஷ்மா மேல கொலை பழியை போட்டிடலாம்னு பிளான் பண்ணி கபிலன் மூலமா பார்ட்டி நடக்குற விசயத்த ரேஷ்மாக்கு சொல்லி வரவச்சிருக்கா. ஆனா யாழினிய அன்னைக்கு ஆதி இன்வைட் பண்ணினது பூஜாவும் கபிலனும் எதிர்பாராத ஒண்ணு. ஏன்னா யாழினி மேல நல்ல அபிப்பிராயம் பூஜாக்கு இருந்திச்சு. ஆனாலும் பிளான் பண்ணினது போலவே ஆதிட கதையை முடிச்சிருக்காங்க."
"ம்ம்ம்.... விளங்குது துகிரன், நீங்க எதுக்காக அப்பிடி ரிப்போர்ட் தந்திருக்கீங்கன்னு. இதுல வேற ப்ராபளம் வந்துடாதே?"
"இல்ல மாமா, இந்தக்கொலைக்கு எந்த சாட்சியங்களும் இல்ல. எதுவும் வராது. பிலீவ் மி."
"மோர்னிங் ப்ரெஸ்க்கு நியூஸ் குடுத்துடுவன். அதுக்குள்ளே மைன்ட் மாறிச்சுன்னா சொல்லுங்க."
"முடிவெடுத்தா மாத்த மாட்டேன்னு உங்களுக்கே தெரியுமே"
"போலீஸா இப்ப உங்கள நினைச்சு பெருமைப்பட முடியாது. பட் மருமகனா நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு."
மெல்லிய சிரிப்பை பதிலாக்கிய துகிரன் இரவுணவில் ஐக்கியமாகிவிட்டான்.
புதன்கிழமை அதிகாலையிலேயே துகிரன் காஞ்சிபுரம் நோக்கி கிளம்பியிருந்தான். காரில் உள்ள வானொலியில் "ஆதியின் கொலைவழக்கு முடிவுக்கு வந்தது. போதையில் தடுமாறி மொட்டைமாடியிலிருந்து ஆதி கீழே விழுந்திருக்கிறார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆதி இறப்பதற்கு முன்னர் சிறிய கைகலப்பொன்று அங்கு நிகழ்ந்ததாகத்தெரிகின்றது. ஆனால் அதற்கும் ஆதியின் மரணத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என இன்ஸ்பெக்டர் ரமேஷ் கூறியுள்ளார்" என்று அந்தச்செய்தி முடியவும் துகிரன் காரை ஓரமாக நிறுத்தவும் சரியாகவிருந்தது. கீழே இறங்கிய துகிரனை வரவேற்ற சத்யாவிற்கு பின்னால் நின்றனர் கபிலனும் பூஜாவும்.
"ரொம்ப நன்றிங்க சார்"
"நன்றி சொல்றதுக்கெல்லாம் டைம் இல்ல. இனி உங்கள நான் சிட்டில பார்க்க கூடாது. பூங்குழலி உங்களுக்கு ஜாப் அரேஞ் பண்ணிகுடுப்பா. பெங்களூர்லயே இருந்துக்குங்க. நீங்க தப்பிச்சிட்டதா நினைச்சிடாதீங்க. இஷா கபிலனை அன்னைக்கு பார்த்திருக்கா. அது இன்னும் வெளில வரல. வராது. எல்லாருமே பெரிய இடம்கிறதால இந்த கேஸ தோண்ட மாட்டாங்க. என்னையும் சத்யாவையும் கூட மறந்துடுங்க. உங்களுக்கு கிடைச்ச இந்த லைஃப நல்ல படியா வாழ்ந்துக்குங்க. குட் லக்" என்று கூறிவிட்டு சத்யாவுடன் காரில் ஏறினான் துகிரன். கண்களில் கண்ணீர் மல்க கையிரண்டும் அவர்களையறியாமல் வணங்க விடை கொடுத்தனர் பூஜாவும் கபிலனும்.
"சார் நீங்க கிரேட் சார். உங்கள உணர்ச்சியில்லாத மனிசன்னு நினைச்சிட்டன் சார். மன்னிச்சிடுங்க."
"என்ன சத்யா நிறைய படங்கள் பார்ப்பீங்களோ. நானும் சாதாரண மனுஷன்தான். இன்னொரு முக்கியமான விஷயம் சத்யா, நம்ம இப்போ பண்ணின இந்த விஷயம் ஒருநாள் வெளில தெரிய வந்திடும். அப்போ அத ஹாண்டில் பண்ண ரெடியா இருங்க"
"என்ன சார் குண்ட தூக்கி போடுறீங்க?"
"அத விடுங்க, யாரோ நாலைஞ்சு டீனேஜ் பசங்கள காணோமாம். உடனே அந்த கேஸ ஹாண்டில் பண்ண சொல்லி மெசேஜ் வந்திருக்கு. என்ன ரெடிதானே?" என்று உற்சாக குரலில் டிடெக்ட்டிவ் துகிரன் சொல்ல களைத்துப்போயிருந்த சத்யாவோ " என்ன சார், மூணு நாளா தூக்கமில்லை.ஒரு ரெஸ்ட் இல்லையா?" என்று கூறிவிட்டு சிரித்துக்கொண்டே அடுத்த ஆட்டத்துக்கு தயாரானார்கள் அந்த இளம் சிங்கங்கள்.

-முற்றும்-
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
படித்துவிட்டு உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள்.நன்றி.
 
Status
Not open for further replies.
Top