All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா செல்வமின் "வருடிச் செல்லும் பூங்காற்று" - கதைத் திரி

Status
Not open for further replies.

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ஃபிரண்ட்ஸ்.. தாமதத்திற்கு மன்னிக்கவும்.. இதோ அடுத்த எபி உங்கள் பார்வைக்காக.. படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்..

சென்ற எபியைப் படித்த, லைக் செய்த, கமென்ட் செய்த எல்லோருக்கும் நன்றி நன்றி 🙏 🙏
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி 5


8698


8699


அடுத்தநாள் எப்பொழுதும் போல் தன்னிடத்தில் வந்து தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கிய ஆதி, என்றும் போல் சேலைகட்டி, தலையைப் படிய வாரி வந்திருந்த மனோவைக் கண்டதும் லேசாகத் தோன்றிய ஏமாற்றத்தை தலையில் தட்டி உட்கார வைத்தான்.

இன்டர்காமில் அழைக்க, உள்ளே வந்த மனோ "குட் மார்னிங் சார்!" என்றாள்.


"ஹை மனோ! இந்த வாரம் முழுவதும் நிறைய வேலை இருக்கும்.. கடைசி இரண்டு வாரங்களாக செய்ய முடியாமல் நின்று போனவை.."


" ஆமாம் சார்" என்றபடி, அன்றைய அவளது வேலைத்திட்டங்களை வரிசையாக அவன் முன் அடுக்கி, அவன் வாய்மொழி ஒப்புதல் பெற்று, அவன் சொல்லும் வேலைகளைக் குறித்துக் கொண்டாள்.


அவளிடம் பேசியபடி கீபோர்டில் பதிவிட்டுக் கொண்டிருந்தவன் " நான் இல்லாத போது நமது ப்ராஜெக்ட் வேலைகளில் மிகவும் தேக்கமில்லாமல் கொண்டு சென்றதற்காக அனைத்து துறை டிபார்ட்மெண்ட்க்கும் நன்றி கூறி மெயில் அனுப்புகிறேன்" என்று என்டர் பட்டனைத் தட்டினான்.

"தேங்க்யூ சார்!" இன்னும் கணினியின் திரையிலிருந்து கண்கள் விலக்காமல் இருந்தவன், ஓரிரு நொடிகளின் பின்னேயே, மனோ இன்னும் அங்கேயே இருப்பதை உணர்ந்தான். நிமிர்ந்து, தயக்கமாய் தன்னைப் பார்த்தபடி நின்றிருந்த மனோவை பார்த்ததும், "என்ன ஆச்சு மனோ? ஏதாவது பிரச்சினையா?"


" இல்லை சார்..ஒரு முக்கியமான விஷயம்.."


"என்ன?"


"சார்.. நான் வேலையிலிருந்து ரிசைன் பண்ணலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.இது அதற்கான லெட்டர்.."


ஒரு வாக்கியத்தின் சில சொற்கள் மந்திரமிட்டது போல் ஒருவனைக் கல்லாக இறுகச் செய்ய முடியுமா? ஆதி அவள் சொற்களில் இறுகினான். அவளை ஆராயும் கண்களோடு பார்த்தவன் கேட்டது, "இது ஏதாவது ஜோக்கா மனோ?"


"ம்கூம்.."


அவள் முகத்தில் இருந்து பார்வையை திருப்பி கணினியின் திரையில் பதித்தவன், ஒன்று முதல் எண்ண ஆரம்பித்தவனுக்கு. ஒன்பது வரும்போது நூறு எண்ணினாலும் இப்போதைக்கு சமனப்படாது என்று தோன்ற, மீண்டும் அவள் முகத்தை பார்த்து " அப்படி எல்லாம் சட்டென்று விட முடியாது மனோ.. கான்ட்ராக்ட் என்று ஒன்று இருக்கின்றது.." என்றான்.


" வேலைக்கு சேரும்போது, ஒரு வருடத்திற்கான கான்ட்ராக்ட்தான் சார் கையெழுத்திட்டேன். அது முடிந்து மூன்று வாரங்கள் ஆகின்றன..."


கண்களால் முறைத்தபடி உதடுகளை மட்டும் கேலியாக வளைத்து " கம்பெனியின் இத்தனை பெரிய ப்ராஜெக்டில் முக்கியமான பதவி தருவதற்கு முன் உன் ஒப்பந்தத்தைப் புதுப்பித்திருக்க வேண்டும். உன்னை நம்பி செய்யாமல் விட்டது என் தப்பு தான்.."


" ஏன் சார் இப்படி சொல்றீங்க?"


" பின் வேறு எப்படி சொல்வது மனோ? என்று கதை கேட்பவன் போன்ற தொணியில் கேட்க மனோ கண்களைச் சுருக்கி அவனைப் பார்த்தாள்.

ஏன் என்று கேட்பான் என்று எதிர்பார்த்திருந்தாள். அந்த கேள்விக்கே என்ன சொல்வது என்று இன்னும் முடிவு பண்ணவில்லை. இவனானால், என்னவென்றே கேட்காமல் எண்ணையில் போட்ட அப்பளத்தை போல பொறிந்து கொண்டிருக்கிறான்.


" வேலையை விடுகிறேன் என்றால் இப்பொழுதேவா சார் போகப் போகிறேன். இப்பொழுது ரிசைனிங் லெட்டர் தான் தருகிறேன். மூன்று மாதம் நோட்டீஸ் பீரியட் இருக்கிறதல்லவா? நீங்கள் என் பதவிக்கு யாரையாவது தேர்ந்தெடுத்தால், மூன்று மாதத்தில் அவர்களைத் தயார்படுத்திவிடுவேன்.."


" ஏன்?"


அப்பாடி!! இப்பொழுதுதான் அவள் எதிர்பார்த்த கேள்வியைக் கேட்கிறான்.. ஆனால் இதற்கான பதில்? தலையைக் குனிந்தபடி நின்றவளிடம், "மனோ உன்னை நம்பி இத்தனை பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறேன்..உன்னுடைய இந்த முடிவுக்கான காரணத்தை அறிவதற்கான உரிமை எனக்கு இருப்பதாகத்தான் எனக்கு தோன்றுகிறது.."


எதுவும் பேசாமல் இருப்பவளைப் பார்த்தவன், "ஏதாவது பிரச்சினையா மனோ? அந்த சிவா ஏதாவது தொல்லை செய்தானா?"


"அதெல்லாம் இல்லை சார்.."


சொல்ல முடியாது என்று போக முடியும். ஒரு வருடமாக அவனுடைய மெச்சுதலான பார்வையையே எதிர்கொண்டவளுக்கு, எதிர்மறை எண்ணங்களோடு பிரிய கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. உண்மைக்காரணத்தைச் சொன்னால் ஒருவேளை புரிந்து கொள்வானா? புரிந்து, 'ஆமாம் மனோ.. உனக்கு கஷ்டமாகத்தான் இருக்கும்.. நல்லபடியாகப் போய் வா..' என்று சொல்லி அனுப்பிவைப்பானா? அப்படி அனுப்பினால் எவ்வளவு நன்றாக இருக்கும்…


எதுவும் சொல்லாமல் அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தவனைப் பார்த்தவள், ஒரு முடிவுடன், மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள்.. "சார்! நான் சித்தார்த் சாரை லவ் பண்ணுகிறேன்.


" என்ன?" நிச்சயமாக தன் காதுகளில் தவறாகத்தான் விழுந்திருக்கும்.. அவனை நிமிர்ந்து பார்த்து தெளிவாகச் சொன்னாள், "நான் சித்தார்த் சாரை லவ் பண்ணுகிறேன்..அதற்காகத்தான் இந்த வேலையில் சேர்ந்தேன்.. இப்பொழுது இப்படி என்று தெரிந்த பின் தொடர்ந்து இங்கே வேலை செய்ய என்னால் முடியவில்லை.." நேருக்கு நேராக, கண்களைப் பார்த்தபடி பேசியவளை பார்த்த ஆதிக்கு முதலில் மனதில் தோன்றியது, இது கனவாகத்தான் இருக்கும் என்பதுதான்.. கனவில் தானே யானை பறக்கும்.. குதிரைகள் பேசும்.. மனோ, தான் சித்தார்த்தைக் காதலிப்பதாகச் சொல்வாள்.. இந்த கனவிலிருந்து எப்படி வெளிவருவது..எங்கெங்கோ படித்தது நினைவு வர, அவளுக்குத் தெரியாமல் விரல்களால் தன் கைகளில் மெல்லியதாகக் கில்லினான். வலித்தது. கனவில்லையே! அவன் எதுவும் பேசாமல் அவளையே பார்த்தபடியிருக்க, தன் ராஜினாமா கடிதத்தை மீண்டும் அவன் முன் நீட்டினாள்.

சரி.. யோசிப்பதற்கு இப்போதைக்கு நேரமில்லை.. தற்போது உடனடியாக முடிவு செய்ய வேண்டியது மனோவின் ராஜினாமா கடிதத்தை ஏற்கலாமா.. வேண்டாமா.. மனம் தன் முடிவை கணப்பொழுதில் சொல்ல, ஆதி மானசீகமாய் தன் முதுகிலேயே தட்டி தன்னைத் தயார்படுத்த முனைந்தான் 'ஆதி..எவ்வளவு பெரிய புலிகளை எல்லாம் பிசினஸ் மீட்டிங்கில் நீ சொல்வதற்கு ஒத்துக்கொள்ள வைத்திருக்கிறாய்.. அந்த திறமையை எல்லாம் இப்பொழுது காட்டு..' தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவன் தன்னை தயார்படுத்த சில நொடிகள் தேவைப்பட்டன..


தன் இருக்கையிலிருந்து எழுந்து இருக்கையின் பின்னால் இருந்த கண்ணாடி சுவர் வரை சென்று, அதன் மேல் சாய்ந்து மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு மனோவைப்பார்த்தான். எதிராளியை நாம் சொல்வதற்கு ஒத்துக்கொள்ள வைக்க சில சூட்சுமங்கள் இருக்கின்றன. அதில் முதலாவது, 'எதிராளியைப் பேச விடுவது!' அவர் பேசுவதிலேயே நமக்கு ஏதாவது வழி கிடைத்துவிடும்.. "சித்தார்த்தை எப்படி தெரியும்?"


"அவர் என் காலேஜ் சீனியர்.."


" கல்லூரியில் காதல் பறவைகளாகப் பறந்து கொண்டிருந்தீர்களாக்கும்?"


அவன் குரலில் இருந்த கேலி அவள் கருத்தில் பதியவில்லை. " அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை சார்.."


" பின்னே?"


" அது பெரிய கதை! உங்களுக்கு நேரம் வேஸ்ட்டாகும்"


"உனக்கு பதில் இன்னொருவரை தேர்ந்தெடுத்து இந்த வேலைக்குப் பழக்குவதைவிட அதிகமாகாது"


அவனை முறைத்துக் பார்த்தவள், அவன் எந்த எதிர்வினையும் காட்டாமல் அவளைப் பார்த்தபடி நிற்க, தன் தோள்களை குலுக்கிக் கொண்டு பேச ஆரம்பித்தாள், "என்னுடையது ஒன் சைட் லவ் தான் சார்.. நான் கல்லூரியில் முதல் வருடம் சேர்ந்தபோது சித்தார்த் சார் சீனியர்.. ஃபைனல் இயர். எங்களுடைய முதல் சந்திப்பே கவிதை போலத்தான். அன்று கைகள் நிறைய புத்தகங்களோடு லிப்டுக்காக நடந்து கொண்டிருந்தேன். லிப்ட் கதவு மூடப்போனது. திரும்பிவர பத்து நிமிடங்களாவது ஆகும். அதுவரை புத்தகங்களைக் கையில் பிடித்தபடி நிற்க வேண்டும்...எப்படியாவது லிஃப்ட்டைப் பிடித்துவிட்டேன் மும் என்று புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு என்னால் முடிந்த வேகத்தில் நடந்தேன். அப்போது இரண்டு நெடிய கால்கள் என்னைத் தாண்டி ஓடிப் போய் , அதில் ஒரு கால், லிப்ட் கதவை மூடாமல் நடுவில் தன்னைக் கொடுத்தது. நிமிர்ந்து பார்த்தால் நம் சித்தார்த் சார்.. என்னை பார்த்ததும் சிரித்தபடி உள்ளே வருமாறு சைகை செய்தார். அந்த நொடியிலிருந்து எனக்கு அவரைப் பிடித்துவிட்டது. ஃபிரண்ட்ஸ் எல்லாரும், 'என்னுடைய ஆள்' என்று பயங்கரமாக ஓட்டுவாங்க. அந்த ஒரு வருடத்தில் எப்படியாவது அவருக்கு என்னைப் பிடித்து விடும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் சாருக்கு நான் ஜஸ்ட் ஜூனியர் தான் போல. ஃபேர்வெல் அன்றைக்கு கஷ்டமாக இருந்தது. அதற்கப்புறம் படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்தேன். ஆனால் மனதின் ஓரத்தில் சின்ன உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. ஒரு வருடத்திற்கு முன்னாடி என் பிரண்ட் சத்யா, இங்கே டிசைனிங்கில் சாப்ட்வேர் இன் சார்ஜ் ஆக இருக்கிறாளே, அவள் தான் சொன்னாள், சார் அவளை ஜூனியர் என்று கண்டுபிடித்து அவளிடம் பேசினாராம். என்னைப் பற்றி கூட விசாரித்தாராம், உன்னோடே இருப்பாளே, அந்த பொண்ணு எங்கே? என்று.. அன்றிலிருந்து எனக்கு ஒரே யோசனை... என்னுடைய முதல் காதல்.. ஏன் முயற்சி செய்யாமலேயே தோல்வி அடைந்தது என்று விட வேண்டும்.. முயற்சி செய்து பார்க்கலாமே.. அதற்கு பிறகுதான் இங்கே ஜாயின் பண்ணினேன்." மூச்சு விடாமல் மனோ சொல்லி முடித்ததை கிரகிக்க ஆதிக்கு சில நொடிகள் தேவைப்பட்டன.


"இங்கே வேலைக்கு வந்த ஒவ்வொரு நாளும் அதற்காகத்தான் வந்தாயா மனோ?"
அந்த சில நொடிகளுக்குப்பின் கேட்டவனின் குரலில் அவனையும் அறியாமல் சிறு ஆற்றாமை கலந்திருந்தது.


மனோவிற்கு கோபம் வந்தது, எப்படி இவனால் இப்படி குற்றம்சாட்ட முடிகிறது.. "அப்படி இல்லை என்று உங்களுக்கே தெரியும் சார்.. எத்தனையோ நாள் அவர் வந்தாரா என்று கவனிப்பதற்குக் கூட நேரம் இல்லாமல் என்னுடைய வேலையில் மூழ்கி இருக்கிறேன்.."


" சரி..அப்போ இப்போது ஏன் வேலையை விடுகிறாய்?"



அவன் நின்றிருக்க தான் இருக்கையில் அமர்ந்து, அண்ணாந்து பார்த்தபடி பேசுவது, ஏதோ பள்ளிக் குழந்தை, ஆசிரியருக்கு விளக்கம் சொல்வது போல் இருக்க மனோ எழுந்து நின்றாள்.


" அது.. உங்களுக்கு புரியுமா என்று தெரியவில்லை சார்.. என்னுடைய பழைய வேலையும் எனக்கு மிகவும் பிடித்தமானது.." ஆன்சைட் பற்றி சொல்லி அன்று கவியிடம் வாங்கியது போல் இவனிடமும் வாங்காமலிருக்க தனது அடுத்த வாக்கியத்தை விட்டவள், தொடர்ந்தாள், "ரொம்பவே பிடித்தமானது.. அந்த வேலையை விட்டுவிட்டு இங்கே வந்தேன்.. ஒரு வருடம் இங்கே இருந்திருக்கிறேன்.. இந்த ஒரு வருடத்தில் அவர் இன்னொரு பெண்ணை காதலித்திருக்கிறார், என்பது கூட எனக்கு தெரியவில்லை.. அந்த வகையில் இந்த ஒரு வருடத்தில் நான் எதுவுமே செய்யாதது போலத்தானே ஆகிறது.. எனக்கு என்னை நினைத்தே ரொம்பவும் ஏமாற்றமாக இருக்கிறது.."


" என்ன முயற்சி செய்தாய் ?"


"எதற்கு?"


" சித்தார்த் உன்னை லவ் பண்ண என்ன முயற்சி செய்தாய்?"


" இங்கு வந்ததுதான் சார் என் முயற்சி.. அதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்? ஒருவருக்கு நம்மை லவ் பண்ண முயற்சியெல்லாம் செய்யக்கூடாது.. நான் நானாக இருப்பது அவருக்குப் பிடிக்க வேண்டும்..அப்படி வருவதுதான் உண்மையான லவ்.." என்று சிறுபிள்ளைக்குப் பாடம் எடுப்பதைப் போல கூறியவள் நிறுத்தி பெரிய மூச்சு ஒன்றை உள்ளிழுத்துவிட்டு, " ஆனால், சார்.. நான் நானாக இருக்கிறேனா, இல்லை நீங்களாக இருக்கிறேனா என்று கவனிப்பதற்கு அவர் முதலில் அலுவலகம் வரவேண்டுமில்லையா? வருவது வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு.. வந்தாலும் அரைமனதாக மீட்டிங்கில் இருப்பார்..அரை நாளில் கிளம்பிவிடுகிறார்.. இதில் வேலை அதிகமாக இருந்தால் என்னால் அவரைப் பார்க்கக்கூட முடியாது.. அந்த சில மணி நேரங்களில் அவர் என்னைக் கவனிக்க, ஏதோ என்னால் முடிந்த வரை ஒன்றே ஒன்றைச் செய்கிறேன்.. மற்றபடி லவ்வெல்லாம் தானாகத்தான் வரவேண்டும்"


."என்ன அந்த ஒன்று?"


மறுபடியும் அவள் தன் மெல்லிய கீழிதழ்களில் பற்கள் பதிய, குனிந்ததைப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள்ளே அபாய மணி அடித்தது.. இதே போன்ற ரியாக்ஷன் கொடுத்துவிட்டுதான் லவ் பண்ணுகிறேன் என்றாள். இப்போது என்ன சொல்லப் போகிறாள்? இதற்கு மேல் எந்த அதிர்ச்சியையும் இன்று அவனால் தாங்க முடியாது என்று தோன்றியது.


அதற்கு மேல் அந்த பேச்சை விடுத்து ,"நீ அறிவான பெண்.. ரொம்ப பிராக்டிக்கலாக யோசிப்பாய்..என்று நினைத்தேன்.. ஆனால் நீ காதல் அது இது என்று கற்பனையில் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு தெரியாது.."


"ஏன் சார் அப்படி சொல்றீங்க? இப்பவும் நான் அறிவான பெண் தான்.. ஏன் அறிவான பெண்கள் காதலிக்கக் மாட்டார்களா?"


தலையை இடமும் வலமுமாக ஆட்டி "மாட்டார்கள்" என்றான்.


"நீங்கள் பெரிய அறிவாளி தானே..நீங்கள் காதலிக்க மாட்டீர்களா?"

"மாட்டேன்!" .


"அப்போ கல்யாணமே செய்து கொள்ள மாட்டீர்களா?"

" ஏன்? அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?"


மாட்டினாயா? மனதிற்குளே குதூகலித்தவளாய், "பெற்றோர் பார்த்து திருமணம் செய்தாலும், , திருமணத்திற்கு பின் உங்கள் மனைவியை நேசிப்பதும் காதல்தான் சார்!"


" நான் ஏன் என் மனைவியை நேசிக்க வேண்டும்?"


இது என்ன கேள்வி? " அது..அது.. குடும்ப வாழ்க்கை என்றால் அப்படித்தானே சார்!" கொஞ்சம் திணறலாய் சொல்பவளைப் பார்த்தவன்,


"மனோ! இந்த காதல், நேசம் எல்லாம் பொய் மனோ! அந்த காலத்தில் மனிதன் தன்னை சுற்றிய பஞ்சபூதங்களுக்கும் பயந்து, அவற்றை பயமின்றி பார்க்க 'கடவுள்' என்ற கண்ணாடியைப் போட்டுக் கொண்டான். அதுபோல, தன் ஜீன்சை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல இந்த சமூகம் கொடுக்கும் லைசன்சிற்கு 'கல்யாணம்' என்று பெயர் வைத்தான்.. கல்யாணத்திற்கு முன்னோ, பின்னோ தன் ஹார்மோன் தேவைகளை நியாயப்படுத்திக் கொள்ள, 'காதல்' என்ற முகமூடியைப் போட்டுக் கொண்டான். இதில் என்னுடைய முடிவு, எனக்கு காதல் என்ற முகமூடி தேவையில்லை என்பது.. கல்யாணம் என்ற லைசென்ஸ் மட்டும் போதும்."


'இப்படிகூட யோசிப்பார்களா?' மனோ அயர்ந்து போய் அவனையே வைத்த விழிப்பார்வை தட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க, மேலும் தொடர்ந்தான், " இதோ இப்போது உன் காதல் என்று சொல்கிறாயே அதையே எடுத்துக் கொள்.. சித்தார்த்திற்கு பிரச்சினை என்றதும் அதை தீர்ப்பதற்கான வழி பற்றி யோசிக்காமல், போகிறேன் என்றுதானே சொல்கிறாய்.."


அவளது ஏமாற்றம் புரியாவிட்டால் பார்ப்பவர்களுக்கு இப்படிதான் தெரியும் ஆனால் அதற்கு பயந்து வேலை செய்ய வேண்டுமா என்ன? " இருந்தும் ஒன்றும் நடக்கவில்லையே சார்!"


சில நொடிகள் அவளையே பார்த்தவனுக்கு வழி தெரிந்தது போல் இருந்தது. "சரி.. இப்போது ஒரு டீல் போடலாம்.. சித்தார்த்திற்கு உன் மேல் கவனம் வர நான் உதவி செய்கிறேன்.."


புருவங்கள் வில்லாய் வளைந்து நெற்றி மேலேற, அவனைப் பார்த்தவள், "நீங்க ஏன் சார் எனக்கு ஹெல்ப் பண்ணனும்?" என்றாள்.


"ம்ம்.. எனக்கு இதில் இரண்டு பெனிஃபிட் இருக்கிறது. ஒன்று, உன் இடத்துக்கு வேறு ஆள் தேடும் வேலை கிடையாது. இரண்டாவது ஒருவேளை சித்தார்த் மனம் மாறினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்கள் வீட்டில் இருக்கும் பெரிய பிரச்சனை ஒன்று தீர்ந்தபடி இருக்கும்." அவளை மேலே யோசிக்க விடாமல் அவனது குரல் தொடர்ந்தது, "ஆனால் ஒரு விஷயம்.. என்னால் அவனைக் கவனிக்க வைக்க மட்டும்தான் முடியும். அதன் பின்னும் காதல் வரவில்லை என்றால் அதற்கு நான் பொறுப்பில்லை."


" அவர் என்னைக் கவனித்தால், கண்டிப்பாக லவ் வரும்" அவள் ரோசமாக சொல்ல, " "சரி..அப்போ எனக்கு இந்த டீல் ஓகே.." என்றான்..


என்னவோ அவள் தான் இந்த திட்டத்தை முன்மொழிந்தது போலவும், அவன் தன் நிபந்தனைகளுடன் அதற்கு சம்மதிப்பது போலவும் கூறியவனை ஆச்சர்யமாய் பார்த்தவள், " உங்க பிசினஸ் மீட்டிங் எல்லாம் எப்படி உங்கள் விருப்பப்படி முடிகிறது என்று இப்போ புரியுது சார்!" என்றாள்.


எதுவும் பேசாதவனாய், மெல்லியதாகப் புன்னகைத்து தன் மார்பின் குறுக்கே இருந்த கைகளைப் பிரித்து வலக்கையை அவள் முன்னே நீட்டி "டீல்?" என்று வினவினான். 'இது சரிதானா? குழப்பமாக இருந்தது. ஆனால் ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது ஏன் ட்ரை பண்ணி பார்க்கக் கூடாது...' தன் முன் நீண்டிருந்த விரல்களைப் பாரத்தவள், அதைப் பற்றாமல் நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்து," டீல்" என்றாள்.
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம்.. வணக்கம்🙏🙏 சொன்னபடி கதையின் அடுத்த எபியோடு வந்து விட்டேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..

சென்ற எபியைப் படித்த, லைக் செய்த, கமென்ட் செய்த எல்லோருக்கும் நன்றி நன்றி 🙏🙏
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி 6

8716
8717





தன்னுடைய அறைக்கு வந்து தன் நோட்பாடையும் கைப்பேசியையும் மேஜைமேல் வைத்து தன் இருக்கையில் தொப்பென்று அமர்ந்த மனோவிற்கு தலைக்குமேல் வேலைகள் இருந்தன. இன்று மட்டுமல்ல.. அவளும் ஆதியும் டீல் போட்ட நாளிலிருந்து , அதாவது கடந்த இரண்டு வாரங்களாக அளவுக்கு அதிகமான வேலைகள் தான்.



காலையில் எப்பொழுதும் போல் இன்டர்காமில் அழைப்பவன், கடகடவென்று செய்ய வேண்டிய வேலைகளை அடுக்குவான். ஒரு நாள் அப்படி அடுக்கிய வேலைகளில் ஒன்றாக அவளுக்கு கீழ் இருந்த சுதாகரனை அவள் வேலைகளுக்குப் பழக்கப்படுத்தச் சொன்னபோது மனோவிற்கு சன்னமான அதிர்ச்சி. அவள் அதிர்ச்சியை கண்டும் காணாதவனாய் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தவனைப் பார்த்து மனோவும் வீம்பாக எதுவும் கேட்காமல் கிளம்பி விட்டாள்.



ஒருவேளை, முடிந்த அளவு வேலை வாங்கி விட்டு, டீலாவது ஒன்றாவது என்று சொல்லி அவளை ராஜினாமா செய்யச் சொல்லி அனுப்பிவிடுவானோ? ஏனென்றால் அன்றைய நாளுக்குப்பிறகு அவர்கள் சித்தார்த்தை பற்றியும் தங்கள் டீலைப் பற்றியும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவனாக அதைப் பற்றி எதுவும் பேசாத போது, அவனுக்கு ஞாபகப்படுத்தவும் மனோவிற்கு தயக்கமாக இருந்தது.



வழக்கத்திற்கு அதீதமான வேலையினாலோ, என்னவோ, முகம் சற்றே சோர்வாய்த் தெரிய தன் பணியில் ஈடுபட்டிருந்தவளைப் பார்க்க ஆதிக்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஏன் இந்த அதிகப்படி வேலை, ஏன் சுதாகருக்கு அவள் வேலைகளை டிரான்ஸ்ஃபர் செய்கிறோம் என்று முன்பே சொல்லியிருக்கலாம். ஒருவேளை அது தெரிந்திருந்தால் இந்த அதிகப்படி வேலைகள் அவளுக்கு உற்சாகமாய் இருந்திருக்கும்.. ஆனால்அதைச் சொல்ல அன்று அவன் மனம் உடன்படவில்லை. இத்தனை நாட்களில் ஒருமுறை கூட அவளுடைய விசயத்தை அவனிடம் சொன்னாளா? தான் மட்டும் ஏன் எல்லாவற்றையும் அவளிடம் சொல்லவேண்டும்? எப்பொழுது சொல்லியே ஆக வேண்டுமோ, அப்போது சொல்லிக் கொள்ளலாம்.



தன் கணினியின் திரையில் மூழ்கியிருந்தவளை, கைப்பேசி, 'லெட் இட் கோ.. லெட் ட் கோ..' என்று பாடி அழைக்க, அதை எடுத்து காதில் வைத்தவள், " சொல்லு சத்யா.." என்றாள்.



" கேன்டீன் போலாமா? நான் சாப்பாடு கொண்டு வரவில்லை என்று சொன்னேனே.."



"ம்ம்.. நிறைய வேலைகள் சத்யா.. வரமுடியுமா தெரியவில்லை.."



"ஓ. அப்படியா.." என்று யோசித்தவள், பின், "அப்போ ஒன்று பண்ணவா? நான் ஏதாவது வாங்கிட்டு உன் ரூமிற்கு வருகிறேன்.‌. ரெண்டு பேரும் ஷேர் பண்ணி சாப்பிடலாம்.."



தோழியென்றால் சும்மாவா? "ம்.. ஓகே.." சத்யாவோடு மதிய சாப்பாட்டை முடித்து மீண்டும் வேலையில் மூழ்கியவளை, மாலை ஐந்து மணிக்கு ஆதியின் இன்டர்காம் அழைப்பு வெளியே இழுத்து வந்தது. அவன் அறைக் கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தவள் , "குட் ஈவினிங் சார்!" என்றாள்.



" குட் ஈவினிங் மனோ!"



அவன் முன்னிருந்த இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்து அவனைப் பார்க்க, தன் முன்னிருந்த கீபோர்டில் பதிவு செய்து கொண்டிருந்தவன், பட்டென்று என்டர் பட்டனை தட்டியபடி அவளிடம் திரும்பினான். " உனக்கு ஒரு மெயில் வந்திருக்கும். ஓப்பன் பண்ணி பார்.."



திறந்து பார்த்தவள், நாளை ஒரு முக்கியமான மீட்டிங் இருப்பதாகவும், தவறாமல் கலந்து கொள்ளுமாறும் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த பத்து பேருக்கு செய்தி அனுப்பப்பட்டிருப்பதைப் பார்த்தாள். மனோ உட்பட.. அடிக்கடி நடப்பதுதான். "காலை பத்து மணிக்கு மீட்டிங்கா சார்.. நான் வந்துவிடுகிறேன்.."



"நாளை அந்த மீட்டிங்கில் சித்தார்த் வருகிறான்.. சித்தார்த்தின் கீழ் பத்து பேரை நியமித்து, ப்ராஜெக்டின் முழுப்பொறுப்பையும் சித்தார்த்திடம் ஒப்படைக்க முடிவு செய்திருக்கிறேன். அதில் சாஃப்ட் வேர் துறையின் இன்சார்ஜ் நீ..".



மனோவிற்கு ஒன்றும் புரியவில்லை.. ' இது என்ன முட்டாள்தனம்! ஆட்டிடியூட் அன்ட் ஸ்பீட் பைக்குகள் ஆதியின் கனவுத்திட்டம். அதை ஏன் இன்னொருவரிடம் ஒப்படைக்கிறான்..



" என்ன சார் சொல்றீங்க?", சொல்லிக் கொண்டிருக்கும் போதே காரணம் புரிந்துவிட, "நானும் அவரும் மீட் பண்ணுவதற்காக இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா?"



அவனையும் மீறி அவன் உதடுகளில் சிறு புன்னகை பூத்தது. இந்த கேள்வியை எதிர்பார்த்திருப்பான் போல.. தெளிவாக பதில் வந்தது. " இந்த நிறுவனத்தில் எங்கள் இருவருக்கும் சரிபாதி உரிமை உண்டு மனோ.. அதனால் இந்த ப்ராஜெக்டில் அவன் தலைமை பொறுப்பில் பங்கேற்பதில் தவறில்லை. பொறுப்பு எதுவும் அவனுக்கு கொடுக்காமல் விட்டதுதான் தவறு என்று இப்போது தோன்றுகிறது. அன்றன்றைக்கு செய்ய தலைக்கு மேல் வேலை இருந்தால் இந்த முட்டாள் தனம் தோன்றியிருக்காதல்லவா? அதனால் நமக்கு இடையில் டீல் எதுவும் இல்லை என்றாலும் அவனுக்கு முக்கியமான பொறுப்பு ஏதேனும் கொடுத்திருப்பேன். இருப்பதால் இந்த பொறுப்பு.."



இதுநாள்வரை இரண்டு பொறுப்புகளையுமே அவள் தானே பார்த்தாள். அதே போல் தொடரலாமே? அவனிடம் கேட்டாள். கணினியின் திரைக்கு கண்களை கொண்டு சென்றவன், " ‌‌அப்பொழுது பொதுப்பணிகளுக்கும், ப்ராஜெக்ட்டுக்கும் நான் மட்டும்தான் பொறுப்பு.. இனி அப்படியில்லையே.. ஒருவரின் கீழ் வேலை செய்வதுதான் சரியாக இருக்கும்.."




என்ன சொல்வது என்று தெரியாமல் அவள் அவனையே பார்த்திருக்க, " ஓகே மேடம்.. நாளை மீட்டிங்கில் பார்க்கலாம்.. அதற்குப்பிறகு உன் வேலைகள் எல்லாம் அந்த ப்ராஜெக்ட் தொடர்பாகத்தான் இருக்கும். பொது வேலையில் உன் உதவி தேவைப்பட்டால், சுதாகருக்கு கொஞ்சம் கைட் பண்ணு.."



அதாவது கம்பெனியின் பொதுவான சாஃப்ட் வேர் இன்சார்ஜ் என்று இல்லாமல், புது ப்ராஜெக்டை மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்.. இவர்களுடைய டீல் மற்றவர்களுக்குத் தெரியுமா? வெளிப்பார்வையில் கிட்டத்தட்ட பதவியிறக்கம் போலதான் தெரியும்... அதைப் பற்றியெல்லாம் இவன் யோசிக்கவேயில்லையே..



அவ்வளவுதானா? அவ்வளவேதானா? இன்னும் ஏதாவது சொல்லுவானோ என்பது போல் அவனையே பார்த்திருந்தவள், அவன் பார்வை கணினியிலிருந்து திரும்பாதிருக்க,, எதுவும் சொல்லத் தோன்றாமல் மெதுவாக எழுந்தாள். சரியாகத்தானே சொல்கிறார்கள், 'யூ ஆர் ஆல்வேஸ் ரிப்ளேசபிள் இன் யுவர் ஜாப் ஹவ்வவெவர் யு ஆர் குட் அட் இட்' என்று. ஆனால் எப்படியும் அவள் விலக நினைத்த வேலைதானே.. என்ன.. ராஜினாமா கடிதம் கொடுத்து, இந்த வேலையிலிருந்து பிரிவதற்கு மனதைக் தயார்படுத்திக் கொள்ள மூன்று மாதங்கள் இருந்திருக்கும்.. இப்போது அது இல்லை.. இப்படி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், சொல்வதால் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது..





ஏதேதோ நினைத்து தன்னை சமாதானப்படுத்தியபடி, அவள் தன் இருக்கையிலிருந்து எழ, கண்களை மட்டும் கணினியின் திரையில் பதித்திருந்தவனின் வலப்பக்க மூளையும் இடப்பக்க மூளையும் சண்டை போட்டுக் கொண்டிருந்தது. இடப்பக்க மூளை, 'வெரி குட் ஆதி.. அப்படியே மெயின்டெயின் பண்ணு.. தேவையில்லாமல் எதுவும் பேசி விடாதே..' என்று அறிவுரை சொல்ல வலப்பக்க மூளை அடம்பிடித்தது. 'இன்று மனோ என்னிடம் வேலைபார்க்கும் கடைசி நாள். இத்தனை நாட்களில் எனக்கிருந்த ஒரே உறுத்தலை சொல்லி விடுகிறேன்.. ப்ளீஸ்.."




" இடப்பக்க மூளை அதன் கோரிக்கையைப் பரிசீலித்து 'முடிந்த அளவு ப்ரொஃபசனலாகக் கேட்கலாம்' என்ற முடிவெடுக்க, ஆதி பேச ஆரம்பித்தான்.. " நம்ம ஆபீஸில் டிரஸ் கோட் ஏதாவது இருக்கு என்று உன்னிடம் யாராவது சொன்னார்களா மனோ?"



'என்ன சம்பந்தமில்லாத பேச்சு?' என்பதைப் போல் பார்த்தவள் , "இல்லையே.." என்றாள்.



" பின் ஏன் எப்போதும் சாரி? அதுவும் மாடர்ன் டிரஸ் எல்லாம் போட்டு பழக்கம் இருக்கும் போது?"



இவன் எப்பொழுது மாடர்ன் டிரஸ் போட்டு பார்த்தான். அவள் எண்ணம் அவள் முகத்திலேயே தெரிய, "அன்று மாலில் உன் ஃபிரண்ட்ஷோடு பார்த்தேன்.." என்றவன் தொடர்ந்து, "வீட்டில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா ?" என்று அவனே ஒரு காரணத்தையும் தேடிக் கண்டுபிடித்தான்.



வீட்டில் சொல்லி சேலை கட்டுகிறாளா? இதற்கு மட்டும் ஆமாம் என்று சொன்னால் அவளுக்கு மூன்று பிறவிகளுக்குப் போஜனமே கிடைக்காது.. இந்த சேலையைத் துவைக்கும் போது ஒரு முறை, காயப் போடும்போது ஒரு முறை, தேய்த்து மடிக்கும்போது ஒரு முறை என்று ஒரு நாளைக்கு மூன்று முறைகளாவது பூர்ணிமா புலம்பிவிடுவார், "என்ன சேலையோ இது.. பேசாமல் சுடிதார் போடுவதற்கில்லாமல்.. துணியாவது நல்ல துணியில் வாங்கினால், மெசினிலாவது போடலாம்.. இது ஒரு முறை மெசினில் போட்டால் அத்தோடு அவ்வளவுதான்" என்று..



குனிந்தபடி பற்களால் தன்னிதழ்களில் தடம்பதிக்க, " ஓ மை காட்!" என்று ஆதி அதிர்ந்தே போய்விட்டான்... 'இது அந்த ரியாக்ஷன் ஆயிற்றே..! அப்போ அதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா?"



அவன் எண்ணப்போக்கை உறுதிப்படுத்தி மனோ சொன்னாள், " நான் சொன்னேனே சார்.. சித்தார்த் சார் என்னைக் கவனிக்க என்னாலான ஒன்று செய்கிறேன் என்று.. அது இதுதான்.."



" எது?"



"இதுதான் சார்.. சாரி.."



" புரியவில்லை!."



"சித்தார்த் சாருக்கு பொண்ணுங்க சாரி கட்டினால் பிடிக்குமாம்.."



" யார் சொன்னாங்க..?"



"அவரேதான் சொன்னார்.."



" எப்போது?"



" மூன்று வருடங்கள் முன்.."



" அப்போ நீங்க காண்டாக்ட்லயே இல்லை என்று சொன்னாயே.." ப்ரொஃபசனலாகக் கேட்பது என்ற முடிவெல்லாம் தூரத்தே ஓடிப் போயிருந்தது.



" காண்டாக்ட் இல்லைதான் சார். ஆனால் ஒரு வருடம் முன் இங்கு வேலைக்கு சேர முடிவு எடுத்த போது, சித்தார்த் சாரோட ஃபேஸ்புக் பேஜைப் பார்த்தேன்.. அதில் ஒரு கவிதை போட்டிருந்தார்.."


"கவிதையா?"



"ம்.. பூக்கள் வாரியிறைத்த பருத்தி சேலை..


அழுந்த வாரிய தலை..


சேலைக்கு போட்டியாய், அவள் கேசத்தில் உயிர் பூக்கள் ..


நெற்றியில் திங்களே திலகமாய்..


‌என் நெஞ்சிற்கினியவளே நீ எங்கே .. என்று ஒரு போஸ்ட் போட்டிருந்தார். சரி காலேஜில் நம்மைப் பார்க்கவேயில்லை.. இப்படி போனால் பார்ப்பாரோ என்று அவருக்குப் பிடித்தபடி வரலாம் என்று முடிவு செய்தேன்.."


இதுதான் காரணமா? கண்களை விரித்து, நம்பமுடியாமல் பார்த்தவனின், இதழ்களில் ரொம்பவும் சீரியசாக இருந்த அவள் முகபாவத்தில் அவனையும் மீறி சிரிப்பு வந்தது.



"ஏன் சிரிக்கிறீங்க?"



வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்க முயற்சித்தவன், அதில் தோற்றவனாய் எள்ளல் கலந்த சிரிப்பினூடே சொன்னான், "நியாயமாக இதற்கு நான் கோபப்பட வேண்டும் மனோ.. இந்த மொக்கை கவிதைக்காகவா ஒருவருடம் என் கண்ணைக் கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தாய்..?"



"ஏன் சார் அப்படி சொல்றீங்க? இந்த சாரி நன்றாகதானே இருக்கிறது?"



" நன்றாகத்தான் இருக்கிறது..ஆனால் உனக்கு பொருந்தவில்லை.."



"சித்தார்த் சாருக்குப் பிடிக்குமே என்று.."



அவளை இடைமறித்தவன், "ஒரு பெண்ணுக்காக பத்து மாத்திரைகள் விழுங்கினானே, அவள் தன் வாழ்நாட்களில் இது வரை சேலை கட்டிய தருணங்ளை, (தன் வலக்கையை அவள் முன் விரித்துக்காட்டி) இத்தனை விரல்களுக்குள் எண்ணி விடலாம்.. அவன் நேரம் போகாமல் எதையோ கவிதையென்று உளறினால், அதற்காக.." பேசிக் கொண்டே போனவன், அவள் மீண்டும் இருக்கையில் தொய்ந்துபோய் அமர, "என்ன மனோ?" என்று முடித்துக் கொண்டான்..



"அப்போ இதுவும் வேஸ்ட்டா? அதுதான் சொல்கிறேனே சார்.. இந்த ஒரு வருடம் நான் எதுவுமே செய்யவில்லையென்று.."



அவளையே சில நொடிகள் பார்த்திருந்தவன், "ஏன் அப்படி மனோ? இந்த ஒரு வருடம் என்னைப் பொறுத்தவரை நீ சின்சியராக, வேலை செய்ததால்தான் நீ தொடர்ந்து வேலையில் இருக்க வேண்டும் என்று நான் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன் .. சோ.. நீ இந்த ஒரு வருடம் வேலை செய்தது, தற்போது உன்னோட லவ்வுக்கு இன்டைரக்டாக ஹெல்ப் பண்ணுகிறது என்று எடுத்துக் கொள்.."



சிறு பிள்ளையை சமாதானம் செய்வது போல் இதமாய் வந்த அவன் குரலில் நிமிர்ந்து, அவனை வியப்பாய் பார்த்தவள், "சார்.. உங்களுக்கு ஃப்ரீ டைம் இருந்தால், சைக்காலஜி படித்து கிளினிக் போடுங்க.. நல்லா கவுன்சிலிங் பண்றீங்க.." என்றாள் மெல்லியதாகப் புன்னகைத்தபடி..



அவள் புன்னகை முகத்தில் பார்வையைப் பதித்தபடி , " ம்.. ஓகே மனோ... நாளை மீட்டிங்கில் பார்க்கலாம்.."



மீட்டிங்கா? என்ன மீட்டிங்? ஓ.. அந்த மீட்டிங்.. அதற்குள் மறந்தாளே.. மீண்டும் அதுபற்றி விவாதிக்க, மனம் வராமல், "ம்.. ஓகே சார்.. நாளை மீட்டிங்கில் பார்க்கலாம்.." என்று முடிந்த வரை சாதாரணமான குரலில் சொல்லி வெளியேறினாள்..
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ஃபிரண்ட்ஸ்... சில எதிர்பார்க்காத, தவிர்க்க முடியாத காரணங்களால் இன்னும் சில நாட்களுக்கு அப்டேட்ஸ் கொடுக்க முடியாத சூழ்நிலை😔😔😔😔😔
சீக்கிரமா திரும்பி வந்து, தொடர்ந்து அப்டேட்ஸ் கொடுக்கிறேன்... ரொம்ப சாரி😰😰

இதுவரை கதையைப் படித்த, லைக் செய்த, கமென்ட் செய்த நல்ல உள்ளங்களுக்கு ரொம்ப நன்றி.. இந்த அனௌன்ஸ்மென்ட் போடவே ரொம்ப யோசித்தேன். ஆனா, கடந்த சில நாட்களாக சுத்தமா டைப் பண்ணவே முடியலை.. புரிஞ்சுக்கிவீங்கன்னு நம்புறேன்.. மறுபடியும் கதையோடு உங்களை சந்திக்கும் ஆர்வத்தோடு காத்திருப்பேன்... நன்றி🙏🙏🙏
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ஃப்ரண்ட்ஸ்.. நீண்ட நாள்களுக்குப்பின் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி‌. இதுநாள்‌வரை அடுத்த எபி பற்றி கேட்ட சகோதரிகளுக்கு மிக்க நன்றி🙏

இதோ அடுத்த எபியோடு வந்துவிட்டேன். இனி வாரம் திங்கள் மற்றும் வெள்ளி கிழமை எபிஷோடு சந்திப்போம்..
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
11106


11107

பகுதி7

அடுத்த நாள் இன்டர்காம் அழைப்பு வந்தவுடன் தன் நோட்பேட், அலைபேசியோடு வந்த மனோ, தனக்கு அத்தனை விருப்பமில்லாத ஒன்றை இன்னொருவருக்குப் பிடித்திருக்கிறதே என்று தினமும் செய்வது எத்தனை கடினமான காரியம் என்று அன்றைய காலையிலிருந்து பதினொன்றாவது தடவையாக நினைத்துப் பார்த்துக் கொண்டாள்...


இளந்தளிர் நிறத்தில் சுடிதார், சிஃபான் துணியில் துப்பட்டா போட்டு,முடியை ஒற்றைக் கிளிப்பில் அடக்கி, காதில் சின்னதாய் மினுக்கும் தோடு கழுத்தில் அதற்கு இணையான பென்டன்ட், இடது கையில் பெரிய டயல் கொண்ட வாட்ச் என்று தான் தானாகவே இருப்பதில் முழு திருப்தியோடு ஆதியின் அறைக்குள் சென்றாள்..


அவளை நிமிர்ந்தும் பாராமல் வேலைகளை அடுக்கியவனைப் பார்த்து வியப்பாய் கண்களை விரித்தவள், ஒரு நொடியில் தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டாள்.. பாவம்.. ஆதிக்கும்தான் எப்படி இருக்கும்? தன்னுடைய கனவு ப்ராஜெக்ட் ஐ இன்னொருவரிடம் ஒப்படைக்கிறான். அந்த மனநிலையில் அன்று மாலில்போல அவள் ஆடை வித்தியாசமெல்லாம் அவன் கவனத்தில் படுமா?


அனைத்து பேசி முடித்ததும்“ஓகே மனோ.. பத்து மணிக்கு மீட்டிங்கில் பார்க்கலாம்”, என்று முடித்தும் கொண்டான்.


தன் சிந்தனையிலிருந்து வெளிவந்தவளாய், “ம்.. ஓகே சார்..”


அவள் மெதுவே திரும்பி கதவு நோக்கிச் செல்ல ஆதி தன் முதுகிலேயே தட்டிக் கொடுத்துக் கொண்டான். வெரிகுட் ஆதி.. சரியாக நடந்து கொண்டாய்.. சரியாகப் பேசினாய்.. ‘பீ ப்ரொஃபசனல்' என்று மந்திரம் போல் காலையிலிருந்து சொல்லிக் கொண்டிருப்பதை இன்னுமொரு முறை மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.


பத்து மணிக்கு கண்ணாடி சுவர்களால் சூழப்பட்ட அந்த கலந்தாலோசனை அறையில் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் கூடியிருந்தார்கள். நடுவில் நீள்வட்ட மர மேஜையிருக்க அதைச் சுற்றி குஷன் வைத்த நாற்காலிகள்.. ஒரு முனையில் மட்டும் இரண்டு சற்றே பெரியதான நாற்காலிகள்.. அதில் ஒன்றில் அமர்ந்திருந்த ஆதி, தன் பக்கத்தில் சற்றே படபடப்புடன் சட்டையின் மணிக்கட்டில் இருக்கும் பட்டனைத் திருகியபடி ஆனால் நேரே பார்த்தபடி அமர்ந்திருந்த சித்தார்த்தைப் பார்த்தான். எல்லோரும் என்ன நினைப்பார்கள் என்று சிறு சஞ்சலம். ஆனால் இது எப்பொழுது என்றாலும் எதிர்கொள்ள வேண்டியதுதானே..


இந்த ப்ராஜெக்ட் அவர்கள் கம்பெனிக்கு மிகவும் முக்கியமானது. அதனால் எல்லாத்துறையிலிருந்துமே திறமை மிக்கவர்களையே இதற்கென்று தேர்ந்தெடுத்திருந்தான். கூட்டத்திற்கு வரவேண்டிய அனைவரும் வந்து விட்டதை உறுதி செய்தவன் எழுந்து தன் பேச்சைத் தொடங்கினான். “எல்லோருக்கும் வணக்கம். நம்ம கம்பெனியோட ட்ரீம்‌ ப்ராஜெக்ட் உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆட்டிடியூட் அன்ட் ஸ்பிட் பைக்ஸ். இது தயாரிப்பு சம்பந்தமான வேலைகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் எல்லாம் கடுமையாக உழைத்துக் கொண்டும் இருக்கிறீங்க.. நம்ம கம்பெனியின் பொது நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டு நம் ப்ராஜெக்டையும் நிர்வகிப்பதில் எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்பதற்காக இதோ ஏ&எஸ் ப்ராஜெக்டின் நிர்வாகப் பொறுப்பை சித்தார்த் பார்க்கட்டும் என்று‌ முடிவு செய்திருக்கிறோம். இது வரை நீங்கள் தந்த ஒத்துழைப்பை இனிமேலும் தொடர்ந்து தர வேண்டும்”. சொல்லிப் புன்னகைத்தபடி சித்தார்த்தைத் திரும்பிப் பார்க்க, சித்தார்த் சின்ன தயக்கமான புன்னகையோடு எழுந்தான்.


“இத்தனை பெரிய ப்ராஜெக்டிற்கு என்னை நிர்வாகத் தலைவராக நியமிச்சிருக்காங்க.. என்னால் முடிந்த அளவு இந்த பதவிக்கு என்னை தகுதியாக்கிக் கொள்ள முயற்சி செய்வேன். அதற்கு உங்கள் ஒத்துழைப்பு எனக்கு மிகவும் தேவை” என்று சொல்லி சிநேககமாய் புன்னகைக்க அங்கிருந்த எல்லோருக்குமே சித்தார்த்தைக் கொஞ்சம் பிடித்து விட்டது. காதல் தோல்வி, தூக்க மாத்திரை எல்லாம் ஓரளவிற்கு அங்கே எல்லோருக்கும் ஓரளவு தெரிந்துதான் இருக்கும்.


அறிவிப்பிற்கு பின், சில மூத்த பணியாளர்கள் சித்தார்த்தை வரவேற்று வாழ்த்திப் பேச கூட்டம் நல்லபடியாகவே முடிந்தது. அங்கேயே கொறிப்பதற்கும் குடிக்க காபியும் வருவிக்கப்பட, ஆங்காங்கே நின்றபடி எல்லோரும் சகஜமாக பேசிக் கொண்டிருக்க ஆரம்பித்தனர், ஒரு வருடமாகவே வந்து போய்க் கொண்டிருந்தாலும் எதிலும் அத்தனை ஈடுபாடு காட்டாமல் இருந்ததால் அங்கிருந்த‌அனைவருமே சித்தார்த்திற்கு அத்தனைப் பழக்கமில்லாதவர்கள், தன் கல்லூரி ஜீனியர்களான மனோ, சத்யாவவைத் தவிர.


கைகளில் காபிக் கோப்பையோடு பேசிக் கொண்டிருந்த இருவரையும் நோக்கி சென்றான். “ஹாய் மனோ!.. ஹாய் சத்யா!”.


“ஹாய் சார்!” இருவரும் கோரசாகச் சொன்னார்கள். “என்னை மருத்துவமனையில் வந்து பார்த்து பேசியதற்கு நன்றி சத்யா!”.


மனோவிற்கு குற்றவுணர்வாய் இருந்தது. “சாரி சார்.. நான்.. நான்.. வரமுடியவில்லை..”


“சீச்சீ.. இதற்கேன் சாரி மனோ?. ஆதி சொன்னான். யாரையும் பார்க்க வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக.. என்னுடைய டிசைனிங் டிபார்ட்மெண்ட் சார்பாக சத்யா வரமுடிந்தது..”. என்று சொல்லிக் கொண்டு வந்தவன், அவள் இன்னும் தெளிவாகததைக் கவனித்து, நிறுத்தி வேறு பேசுபவனாய், “ஆமாம் மனோ.. இன்னைக்கு என்ன சுடிதார்? எப்பவும் சாரி தானே கட்டுவாய்?” அவள் விழி விரித்து அவனை நோக்க, சித்தார்த் தொடர்ந்தான், “பட் இது உனக்கு ரொம்ப அழகாயிருக்கு!!”


மின்னலாய் முகத்தில் புன்னகை மலர, சித்தார்த் திடம் இருந்து கண்களைப் பிரித்தவள் நொடியில் அறையைக் கண்களால் சல்லடை செய்து ஆதியைக் கண்டுபிடித்தாள்.. அவர்களுக்கு சற்றே தள்ளி மேஜையில் சாய்ந்து தன் இரு கரங்களையும் மார்பின் குறுக்கே கட்டியபடி நின்றிருந்தவன் காதுகளில் விழுந்திருக்குமா? மனோ பார்த்ததும் லேசாகக் புன்னகைத்தபடி அவன் தோள்களைக் குலுக்க, மனோவின் புன்னகை இன்னும் விரிந்தது. திரும்பி சித்தார்த் தைப் பார்க்க, சித்தார்த் சத்யாவோடு ஏதோ பேசத் தொடங்கியிருந்தான்.


அப்பொழுது அவர்கள் டிசைனிங் துறையிலிருந்து இன்னொருவரும் வந்து சேர அவரும் சித்தார்த், சத்யாவோடு சேர்ந்து கொள்ள சுற்றிலும் பார்த்தபடி மெதுவாக தன் காபியைக் குடிக்க ஆரம்பித்த மனோவின் அருகில் சிவாவின் குரல் கேட்டது. “ஹாய் மனோ.. இந்த டிரஸ்ல நீ சூப்பரா இருக்க”...சிவா உலகநாதன் சாருடைய மகன்.


ஒருவேளை அவனுடைய பித்தலாட்டங்கள் அவளுக்கு தெரியும், அவளுக்குத் தெரியும் என்பது அவனுக்குத் தெரியாது என்பதாலா.. இல்லை, அவன் பேச்சே தவறானதா.... ஏன் என்று தெரியவில்லை. இந்த சிவா அருகில் வந்தாலே, பேசினாலே மனோவிற்குப் பிடிக்காது. ஏதோ தவறென்றே உள்ளுணர்வு சொல்லும். அவனுடைய பேச்சிற்கு பதிலேதும் சொல்லாமல் பொதுவாய் சின்னதாய் புன்னகைத்து மீண்டும் தன் காபியில் அவள் அக்கறையாய் குனிய, அடுத்து அவன் என்ன சொல்லியிருப்பானோ, அதற்குள் சிலர் ஆதியுடன் அவர்கள் அருகில் வந்து சிவாவிடம் பேச ஆரம்பிக்க, மனோ மெதுவே அங்கிருந்து விலகிச் சென்றாள்.


அன்றைய மீட்டிங் வெற்றிகரமாய் முடிய, அடுத்த சிலவாரங்கள் சென்றன. அன்று மாலை சூரியனின் மஞ்சள் ஒளி எங்கும் சிதறியிக்க, என்றும் வழக்கமாய் மனோவும் சத்யாவும் தங்கள் டூவீலரில் இரயில் நிலையம் வந்து வண்டியை நிறுத்தி தாம்பரம் செல்லும் இரயிலில் ஏறி அமர்ந்தனர். . சத்யா தன் மொபைலில் ஆழ்ந்து விட மனோ ஜன்னல் வழி கடந்து செல்லும் கட்டிடங்களில் கண்களைப் பதித்தாள்.


அவர்கள் இருந்தது பெண்களுக்கான பெட்டி. அடுத்த சில நிலையங்களில் இவர்கள் பெட்டி நிறைந்திட புதிதாய் வந்தவர்கள் தொங்கிக் கொண்டிருந்த கைப்பிடிகளைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தனர். அப்பொழுதுதான் மனோ தன் முன்னே இருக்கும் பெண்ணைக் கவனித்தாள். மூன்று பேர் அமரக்கூடிய இருக்கையில் கொஞ்சம் ஒடுக்கி அமர்ந்தால் நால்வர் அமரலாம். அப்படி யாரும் கேட்டுவிட்டு கூடாது என்று எண்ணியே தேவைக்கு மேலும் கால்களை நன்கு விரித்து அமர்ந்திருந்த அந்த பெண்ணைப் பார்த்து, அவர் அருகில் நின்று கொண்டிருந்த பெண்ணை நிமிர்ந்து பார்க்க, இது தனக்கும் புரிகிறது என்பதாய் மனோவைப் பார்த்து சின்னதாய் புன்னகைத்தாள் அவள்..


ம்ம்ம்.. என்ன சிறுபிள்ளைத்தனமான சுயநலம். ஆனால் உலகில் இப்பொழுது சுயநலக்காரர்களுக்குதானே வாழ்வு. ஆதியைப் போல. ஆம் சுயநலம்தான். காரியக்காரன். இத்தனை மாதங்கள் கடந்து, இப்பொழுதுதான் மனோவிற்கே அது தெரிந்திருக்கிறது.


தினமும் காலையில் ஆதியிடம் தன் நாள் பற்றி விவரிப்பது எப்பொழுதுமே அவன் கையில்தான் இருந்தது என்பதை மனோ இப்பொழுதுதான் உணர்ந்திருக்கிறாள். அவன் அழைக்காமல் இவள் போவதற்கில்லை. அவனும் இப்போது காலை வந்ததும் மனோவை அழைப்பதில்லை. வந்த பத்து நிமிடங்களில் அழைக்கின்றான், சுதாகரனை. சுதாகரன் பேசிச் சென்றபின் அடுத்தடுத்த துறைத் தலைவர்கள். அதன்பின் அவன் காரியதரிசி.


அவள் தன் வேலையைப் பற்றி விவரிக்க வேண்டியது , கலந்தாலோசிக்க வேண்டியது என்னவோ சித்தார்த் திடம் தான். சொல்லப் போனால் சித்தார்த்துடன் விவாதிப்பது அவளுக்கு ஏதோ வகையில் கவனசிதறல்கள் ஏதும் இல்லாமல் சுலபமாகவும் இருக்கின்றது. .


ஆனாலும் ஆதி ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும்? இத்தனை மாதங்கள் தன்னுடன் வேலை பார்த்திருக்கும் ஒருவர் வேலை மாற்றலாகிப் போனால் நேரில் பார்த்து விசாரிக்க மாட்டோமா? ‘என்னம்மா.. வேலை எப்படி இருக்கின்றது' என்று கேட்க வேண்டாமா? அவளை நேரில் அழைத்துப் பேசவுமில்லை.. அலுவல் கூட்டங்களிலும் ஏதோ முடிந்தவரை சுருக்கமாகப் பேசுவது போலத் தோன்றும். வழியில், காண்டினில் பார்த்தாலும், பார்க்காதது போல் போய் விடுகின்றான்.. ஒருவேளை நிஜமாகவே பார்க்கவில்லையோ?


சித்தார்த் தைப் போல் பணிவாக இல்லாவிட்டாலும், அவனுடன் வேலை பார்க்கும் பொழுது இதுவரை ஆதி கர்வமானவன் என்று தோன்றியதில்லை. ஒருவேளை தனக்குத்தான் கணிக்கத் தெரியவில்லையோ.. ஆனாலும் தனக்கு ஆகுமட்டும் நன்றாகப் பேசிவிட்டு, தேவையில்லாத போது முகத்தைத் திருப்பிக் கொள்வது எத்தனை சுயநலம்?...


சுயநலக்காரன், கர்வமானவன் என்று மனோவின் இத்தனை அடைமொழிகளையும் சம்பாதித்துக் கொண்டிருந்த ஆதி தன் பெரியம்மா வீட்டில் தன் அன்றாட வழக்கமாக செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்தான்‌. இல்லை வழக்கத்துக்கு மாறாக பார்த்துக் கொண்டிருந்தான். மனதில், இன்றைய மதிய உணவு இடைவேளையில் கான்டினில் கண்களில் சிறு எதிர்பார்ப்போடு இவனைப் பார்த்து கொண்டிருந்த மனோவின் முகம்தான் மனதில் இருந்தது. நின்று ஒரு வார்த்தை பேசியிருக்கலாமோ.. ஆனால் முடிவு செய்திருக்கிறானே..


ஆம் அப்படித்தான் முடிவு. இன்றல்ல... முதல் நாள் மனோ சித்தார்த்தின் கீழ் வேலை செய்யத் தொடங்கிய அன்று. அன்று காலை எப்பொழுதும் போல்தான் தொடங்கியது. மனோவைப் போல இன்னும் சில துறைத் தலைவர்களையும் புது ப்ராஜெக்டிற்கு என்று கொடுத்துவிட்டதால் ஆதிக்கு கொஞ்சம் அதிகவேலை இருந்தது. புதிதாக துறைக்கு பொறுப்பெடுத்திருப்பவர்களுக்கு சிறிது வழிகாட்டுதல் தேவை. சுதாகரனிடமிருந்துதான் தன் நாளைத் தொடங்கினான். அன்றைய வேலைகள் அனைத்தும் முடிந்து தன்னுடைய மேஜையை ஒதுங்கவைத்துக் கொண்டிருந்தவனுக்கு ஏதோ ஒரு முக்கியமான வேலையை செய்யாமல் விட்டுப் போனது போன்ற உணர்வு. என்னவாக இருக்கும்? மூளை யோசித்துக் கொண்டிருக்க கைகள் தன்பாட்டிற்கு வேலை செய்து கொண்டிருந்தன. அப்பொழுதுதான் மனதின் ஓரத்திலிருந்து மெல்லியதாக ஒரு பதில் வந்தது. மனோவைப் பார்க்கவேயில்லை என்று. ஒரு நொடி கைகள் நின்றுவிட்டன. ‘நான் ஏன் மனோவைப் பார்க்க வேண்டும். மனோவைப் பார்ப்பது எப்படி நாளை முழுமை பெறச் செய்யும்..என்னோடு பணிபுரிந்தவள்.. வேற்று வேலைக்குப் போய்விட்டாள்.. ரொம்பவும் மகிழ்ச்சியாகவே.. காலை தன்னுடைய அறையிலிருந்து சென்றவள் உணவு வேளை வரை வரவில்லை. நோ..நான் பேசமாட்டேன்.. அலுவலகத் தேவையின்றி மனோவிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது..’ என்று வம்படியாய் தன் பொருட்களை எடுத்துக் கொண்டு கண்களை எதிர்ப் பக்கம் போகாமல் காத்தபடி கிளம்பினான். ஒவ்வொரு நாளும் இப்படிதான் போய்க் கொண்டிருக்கின்றது.


சிறு வித்தியாசம்.. முதலில் மனதில் மெல்ல கேட்ட ஒலி இப்பொழுது இன்னும் அழுத்தமாக கேட்கிறது. இன்று மனோவைப் பார்க்கவேயில்லை.. பேசவேயில்லையென்று. மனதின் குரல் அழுத்தமாக, அழுத்தமாக அவன் முடிவும் உறுதியாகிக் கொண்டிருந்தது‌


ஆனால் இப்பொழுதுதான் ஆதி மனோவைக் கவனிக்கின்றான். ஆம். மனோ யாரிடமோ பேசும்பொழுதெலாலாம் தள்ளி நின்று இதுவரை கவனிக்க வேண்டியிருந்ததில்லை. இப்பொழுது பார்த்தால் யாரிடமுமே மனோ அத்தனை கவனத்தோடெல்லாம் பேசுவது போல் தெரியவில்லை. எல்லோரிடமுமே நட்பாகத்தான். அதில் அவனுக்கு இன்னும் கோபம். கோபம்தான் வந்தது. நான் மட்டும் என்ன பூதமா.. என்னிடம் மட்டும் ஏன் அத்தனை கவனமாகப் பேச வேண்டும்.. ஆனால் அப்பொழுது அவள் அப்படியிருந்ததுதானே அவனுக்கு வசதியாக இருந்தது.


ஒரு பெரிய மூச்சை உள்ளே இழுத்துவிட்டவன் தன் எண்ண ஓட்டத்தை நிறுத்தினான். நோ.. ஆதி.. இது தேவையில்லாத குழப்பம். பிரச்சனை எத்தனை பெரியதாக சுழன்றாலும் தெளிவாக ஆராய்ந்தால் அதன் மையக்கரு சிறுபுள்ளியாகத்தான் இருக்கும். அது என்ன என்று தெரிந்து, அதை அகற்றினால் எத்தனை பெரிய பிரச்சனையும் காற்றுபோன பலூன் போல போய்விடும். இப்பொழுது இந்த மனகுழப்பத்தின் அந்த மையக்கரு என்ன? ம்ம்ம்.. அழகான அறிவான் பெண் அவனோடு வேலை பார்த்தாள்.. இப்பொழுது இல்லை.. அவ்வளவுதான்.. சரி.. இதற்கென்ன தீர்வு?


ஆதி கண்ணா?


செய்தித்தாளிலிருந்து நிமிர்ந்தான், "ஹாய் சுமதிம்மா? கோவிலுக்கு கிளம்பியாச்சா?"


"ம்.. கிளம்பிட்டேன்" சிறிது தயங்கி, "ஒரு முக்கிய விசயம்.."


"சொல்லுங்க அம்மா?"


"உனக்கு பெரியம்மா ஒரு பொண்ணு பார்த்திருக்கிறேன்.. ஓகேவா?"


சட்டென்று மனதின் சுமை இறங்கியது போல் இருந்தது ஆதிக்கு.. அழகான அறிவான பெண்..


"ஓகே பெரியம்மா.."
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி 8


ஆதியிடமிருந்து சட்டென்று பதில் வந்ததில் சுமதிக்கு சந்தோசம் பொங்கியிருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தீர்களா.. அதுதான் இல்லை. எப்பொழுதும் போல் கொஞ்சமும் யோசிக்காமல், ஒரு சின்ன, “அப்படியா?” கூட இல்லாமல் யாருக்கோ போல் சட்டென்று வந்த அவன் ஓகேயில் அவருக்கு சொத்தென்று தான் இருந்தது.. பின்னே இருக்காதா? இப்பொழுது மட்டுமல்ல.. கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு ஆதிக்கு திருமணத்திற்கு பார்க்கலாமா என்று எண்ணம் வந்த போதிலிருந்து இப்படியான அசட்டையாக பதில்தான்..


ஆதியைவிட பெரியவனான சித்தார்த் இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று சொன்னபோது வருத்தமாயிருந்தாலும் தன் மனநிலையிலிருந்து அவன் மீண்டு வந்தால் போதுமென்றிருக்க அவனை யாரும் வற்புறுத்தவில்லை.


ஆதி சிறியவன் தான் என்றாலும் அவனுக்கும் திருமணவயதுதானே.. அவனுக்காக இவன் காத்திருக்க வேண்டுமா?. இவன் பெற்றோருக்கும் இவன் ஒற்றைப் பிள்ளை. அவர்களுக்கே ஆசையிராதா.. அதனால் சுமதிதான் ஆதியின் திருமணப் பேச்சை எடுத்தார். யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை இந்த ஆதி உட்பட.


இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. இதே போல் ஒரு மாலை வேளையில் இங்கமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்கும் போதுதான் அவன் அருகில் அமர்ந்து, “திருமணத்திற்கு பார்க்கலாமா?” என்று கேட்டார்.. அவன் வேண்டாம் என்ற பதிலை உடனடியாக சொல்லிவிடக் கூடாது, சொன்னால் அவனிடம் பேசி அவன் முடிவை மாற்ற முடியாது என்று ஏற்கனவே முடிவெடுத்திருந்தவர் அவனை பேச விடாது "நான் சொல்வதைத் கேட்டு யோசித்துவிட்டு அதன்பின் உன் முடிவைச் சொல்லுப்பா.." என்று கூறிவிட்டு, அவனுக்குத் திருமண வயதாகி விட்டது, நம் குடும்பத்திற்கு வாரிசு வேண்டும், சித்தார்த்திற்கும் கொஞ்சம் மனமாறுதலாய் இருக்கும் என்று தனக்குத் தெரிந்த காரணங்களையெல்லாம் வரிசையாக அடுக்கிக் கொண்டே வந்தார்.


அவர் முடிக்கும்வரை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தவன், அவர் பேசி முடித்ததும் கையிலிருந்த காபிக் கோப்பையிலிருந்து ஒரு மிடறுவிழுங்கி, அவரைப் பார்த்து, “ஓகே பெரியம்மா!” என்றான்.


இப்பொழுது, “வேண்டாம்!” என்று சொல்லி, ஏதாவது காரணம் சொல்லுவான்.. அதற்கு என்ன சொல்வது என்று வேகமாக யோசித்துக் கொண்டிருந்த சுமதி அவன் பதிலில் ஒரு நொடி திணறித்தான் போனார். "ஓ,. ஓகேவா?"


அவரைப் புரிந்தவனாய்ப் புன்னகைத்து , "சுமதிம்மா.. நீங்கள் சொன்னது எல்லாமே சரியான ரீசன்ஸ்.. அதுதான் ஓகே சொன்னேன். ஓகே வா?"


அதற்குள் தன்னைச் சமாளித்துக் கொண்டவர், "ரொம்ப சந்தோசம் கண்ணா.. சொல்லு.. எந்த மாதிரிப் பெண்ணைப் பார்க்கலாம்?"


"உங்களுக்குப் பிடிக்கிறதா பாருங்கள் பெரியம்மா.. அதுபோதும்.."


சந்தோசம்தான் பட வேண்டும், 'என் மேல் என் பிள்ளைக்கு எத்தனை நம்பிக்கை என்று'. ஆனால் சுமதி கொஞ்சம் நியாயவாதி ஆயிற்றே..


"எனக்குப் பிடித்தாலும் உனக்கென்று சில எதிர்பார்ப்புகள் இருக்குமே.. நீ சொன்னால் அதற்கேற்ற பெண்ணாய் பார்ப்பேன்.."


"எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை பெரியம்மா. எனக்கு நேரமும் இல்லை. உங்களுக்கே தெரியும், எத்தனை பெரிய ப்ராஜெக்டிற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று.. அதனால், நீங்களே எல்லாம் பார்த்து முடிவு செய்யுங்கள். திருமணம் எப்போது என்று சொன்னீங்கன்னா, அதற்கேற்ற மாதிரி என் வேலைகளைக் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்வேன்." அத்துடன் முடிந்தது போல் அவன் செய்தித்தாளில் குனிந்தான்.


அதெப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கலாம்.. அவனிடமே கேட்டார். " அதெப்படி கண்ணா.. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பாய். பெண்ணை நீ பார்த்து முடிவெடுக்க வேண்டாமா"


“சுமதிம்மா.. ஒரு நாள் பத்து நிமிடத்தில் ஒரு பெண்ணை எப்படி பிடிக்கும். பார்க்க அழகாக இருந்தால் பிடிப்பது என்றால், நாளை அந்த பெண்ணை விட இன்னொரு பெண் அழகாக இருந்தால் அவளைப் பிடிக்குமா?”


“பின்னே பத்து நாட்கள் பழக முடியுமா?”


“அப்படி பழகினாலுமே என்ன பயன் சுமதிம்மா?.. காலையில் எழுந்து, அழகாக கிளம்பி வரும் பெண் சில மணி நேரங்கள் நடந்து கொள்வதை வைத்து எப்படி கணிக்க முடியும்?”


“பின் என்னதான் செய்ய முடியும் என்கிறாய்?”


“அதனால்தான் முதலிலே சொன்னேன். எதுவும் தேவையில்லையென்று. உங்களுக்கு சில எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கு ஏற்றமாதிரி பெண்ணாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.”


பார்த்துக் கொள்வதா? நானா திருமணம் செய்யப் போகிறேன்? “பின் உனக்கு பெண் பிடிக்கிறதா பிடிக்கவில்லையா என்று தெரியாமலேயே மணந்து கொள்வாயா?”


"சுமதிம்மா.. இப்போ என் அம்மா அப்பாவிடம் எனக்கு பிடிக்காத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஏன்.. உங்களிடமே கூட எத்தனையோ விஷயங்கள் எனக்குப் பிடிப்பதில்லை. அதற்காக நான் உங்கள் பிள்ளையில்லையா? அதுபோல இந்த பெண்தான் மனைவி என்று ஆகி விட்டால் வாழ்க்கை அதன்படி போகும்..”


தாய் தந்தை உறவும் மனைவி உறவும் எப்படி ஒன்றாகும்? மனதில் நினைத்தவர், அதைச் சொல்லாமல், “நீ இப்படி நினைக்கிறாய் ஆதி.. உனக்கு வரும் பெண்ணுக்கென்று சில ஆசைகள் எதிர்பார்ப்புகள் இருக்கும் இல்லையா?”


அதற்குள் அவன் பொறுமை மறைந்திருந்தது. “சரி பெரியம்மா.. அப்படியென்றால் இந்த கல்யாணத்திற்கான என்னுடைய ஒரே கோரிக்கை,
இந்த மாதிரியான எதிர்பார்ப்புகள் எல்லாம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும்.”


சுமதி அயர்ந்து போய் அமர்ந்துவிட்டார்.. மனதிற்கு அத்தனை சரியென்று படாமல் தான் தொடர்ந்து அந்த திருமணபேச்சைத் தொடர்ந்தார். கடவுள் சித்தமோ, அந்த முறை பார்த்திருந்த பெண் வேறொருவரை விரும்புகிறேன் என்று சொல்லி திருமணத்தை மறுத்துவிட, அதைவந்து ஆதியிடம் சொல்ல, “நல்ல வேளை இப்போதேனும் சொல்லத் தோன்றியதே!” என்று தோள்களைக் குலுக்கிய படி சென்றுவிட்டான்.


அடுத்து இருமுறை பார்த்த நேரங்களிலும், பெண்ணைப் பற்றி சொன்ன போதும், ஏதோ காரணங்களால் அது தவறிப் போன போதும், இப்போது போல என்ன ஏது என்று கேளாமல் “ஓகே” தான். இதே போன்ற அலட்சியம்தான்..


இதற்காக்தான் இந்த முறை சுமதி தன் தேடுதல் வேட்டையின் முறைகளை மாற்றியிருந்தார். வரும் பெண் இவனது பாராமுகத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டுமானால் அத்தனை விவரமான பெண்ணாக இருக்கக் கூடாது.. சொன்னதைக் செய்யும் கிளிப்பிள்ளை போல, ரொம்பவும் யோசிக்காமல்,.. இப்படி ஒரு பெண்ணைத் தன் மகனுக்குப் பார்க்க வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் இவன் மனநிலைக்கு அப்படி பெண் இருந்தால்தானே ஒத்து வரும்.. குடும்பச் சக்கரம் சுலபமாகச் சுழலும்.. இப்படியெல்லாம் யோசித்து அவர் பார்த்திருக்கும் பெண்தான் மீனலோசனி. மீனலோசனி அமைதியான பெண்ணே தவிர முட்டாள் இல்லை. சொல்லப்போனால் நல்ல அறிவான் பெண். ஆனால் குடும்பத்தில் மற்றவரைப் கேள்வி கேட்காமல் தனக்காக வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் கேள்வி கேளாமல் சுழன்று வருபவள்.


பழைய நினைவுகளோடு பூஜையறைக்குள் சென்று பூக்கூடையை எடுத்து வந்தவர், செய்தித்தாளை படித்து டீபாயில் வைத்துவிட்டு அதையே பார்த்துக் கொண்டிருந்த தன் மகனிடம் ஒரு பார்வையைச் செலுத்திவிட்டு வாசல் பக்கம் திரும்பிய பொழுது ஆதியின் குரல் நிறுத்தியது


“பொண்ணு யாரு பெரியம்மா? என்ன படித்திருக்கிறாள்?”


‘ஃப்ரீஸ்!’ என்று சொன்னதும் குழந்தைகள் விளையாட்டில் சிலை போல் நிற்பார்களே அதுபோல் ஒரு நொடி உறைந்து நின்றவர், திரும்பி அவனை அதிசயமாகப் பார்த்தார்..
“என்னடா கேட்டாய்?”

இப்பொழுதுதான் மகனை உற்றுப் பார்த்தார். அவனும் ஏதோ யோசனையில் இருக்கிறான் போல். அவருடைய ஆச்சர்யம் அவன் கவனத்தில் படவில்லை. “நீங்கள் பார்த்திருக்கும் பெண் பெரியம்மமா.. பெயர் என்ன.. என்ன படித்திருக்கிறாள் என்று கேட்டேன்..”


கண்களில் ஆர்வத்துடனும் குரலில் சின்ன பரபரப்பபுமாக அவரது பதில் வந்தது " பெயர் மீனலோசனி" ஒரு பிரபலமான நகைக்கடையின் பெயரைச் சொல்லி, “அவர்கள் வீட்டுப் பெண். பி.இ படித்திருக்கிறாள்.”


“பி.இ என்றால் என்ன பிரிவு?”


இவன் என்ன வேலைக்கா ஆள் எடுக்கிறான்..
" தெரியலையேடா.. ஜாதகத்திற்கு பின்பக்கம் இவ்வளவு தான் போட்டிருந்தது.”


“ஓ!”. சிறிய மௌனத்திற்குப் பின், “ஃபோட்டோ இருக்கிறதா அம்மா?”


‘அப்பா.. பிள்ளையாரப்பா!.. ஏன் என்னை இப்படி சோதிக்கிறாய்?’ எப்படியும் இவன் ஃபோட்டோ கேட்கப் போவதில்லை. . இவர் ஏற்கனவே கோவிலில் பார்த்திருக்கிறார். ஆறுமுகமும் விஜயாவும் ஆதி சரி யென்று சொன்னால் அடுத்த வாரத்தில் ஒருநாள் போய்பார்ப்பதாகச் சொன்னார்கள். அப்புறம் எதற்கு ஃபோட்டோ என்று சுமதி ஃபோட்டோவைப் பற்றி கேட்கவில்லை.


“ஃபோட்டோ இப்போ இல்லையே கண்ணா.. நான் வேண்டுமென்றால் உடனே ஒரு ஃபோட்டோ அனுப்ப சொல்லவா?”


“ம்ம்.. வேண்டாம்மா.. நீங்கள் அந்த பெண்ணைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள். பெண் பார்ப்பது அப்படி எல்லாம் வேண்டாம். சும்மா ஒரு பொது இடத்தில்.. இல்லையென்றால் அவள் ஃபோன் நம்பர் வாங்கிக் கொடுங்கள். நான் பேசிக் கொள்கிறேன்…” சொல்லிவிட்டு செய்தித்தாளோடு வெளியேறியவனை நம்ம முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார் அந்த தாய்.


“.. என்ன மனோ வேலையெல்லாம் எப்படி போகிறது? பயங்கர பிஸி போல..”


அடுத்த நாள்‌ மதிய வேளையில் படியிறங்கிக் கொண்டிருந்தபோது தன்னருகில் கேட்ட சிவாவின் குரலில் திரும்பியவள், பொதுவாய்ப் புன்னகைத்து, “ம்.. ஆமாம்…” என்றபடி நிற்காமல் படியிறங்கினாள்‌.


அதற்குப்பின் அவன் எதுவும் பேசாமல் இருக்க தன் மொபைலை எடுத்து , யாருக்கோ அழைப்பது போல் காதிலே வைத்துக் கொண்டபடி சற்று வேகமாகவே இறங்கினாள்.


தப்பு செய்தவன் சிவா. ஆனால் தான்தான் ஏதோ தப்பு செய்தது போல அவனைக் கண்டாலேயே ஓடுவது என்ன முட்டாள்தனம்‌.. ம்ம்.. சத்யா சொன்ன ஹோட்டல் இங்கிருந்து பதினைந்து நிமிடங்கள் ஆகும். வண்டியை எடுத்துக் கிளம்பியவளின் மனம் பின்னோக்கிப் பாய்ந்தது.


அது மனோ அலுவலகத்தில் சேர்ந்து இரண்டு மாதங்களாகியிருந்த நேரம்.
சிவா, உலகநாதனின் மகன். உலகநாதன் ஆதியின் அப்பா, பெரியப்பாவிற்கு வலது கையாக இருந்தவர். ஆதிக்கு ஆரம்பத்தில் உறுதுணையாக இருந்தவர். அப்பொழுது சிவா, கம்பெனியின் கொள்முதல் பிரிவின் முக்கியப் பொறுப்பில் இருந்தான்.


மனிதர்கள் கணக்கை மறைக்கலாம். கம்ப்யூட்டரால் முடியாதில்லையா. கணக்கு வழக்குகளில் சில தவறான எண்களால் நிறைய பணம் தவறாகக் கைமாறியிருப்பது தெரிந்தது. மனோ முதலில் தங்கள் பக்கம் தவறான ஆட்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அந்த ரா மெட்டீரியல் தரும் கம்பெனிதான் கணக்கைத் தவறாகக் காட்டுகிறது என்று நினைத்து கணக்கு வழக்கோடு ஆதியின் முன் நின்றாள். எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டவன், “ம்.. சரி மனோ.. நீ போ..” என்று சொல்லி விட்டான். அதைப் பற்றி அடுத்த ஒரு வாரத்திற்கு அவன் பேசவுமில்லை.


இதெல்லாம் இந்த மாதிரி பெரிய கம்பெனியில் சாதரணமோ.. நாம்தான் அனுபவமின்மை காரணமாக பெரிதுபடுத்தி விட்டோமோ என்றுதான் நினைத்தாள். ஒரு வாரம் கழித்து மனோவை அழைத்து அவள் சொன்னபடி தவறு நடந்திருக்கிறது என்றும் நம் நம் கம்பெனியிலும் ஒருவருக்கு இதில் பங்கு இருக்கிறது என்றும் அன்று நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறினான். சில மணிநேரங்களில் சிவாவோடு பேசினான்.. என்னவென்று தெரியாமல் அழைத்ததில் கொஞ்சம் யோசனையுடன் வந்திருந்த சிவா சிறு தயக்கத்துடனே தன் காலை வணக்கத்தைத் தெரிவித்தான். ஆதி ஒரு பெரிய பேப்பர் கத்தையை அவன் முன்னே போட்டு, “கடந்த இரண்டு வருடங்களாக நீ என்னென்ன கையாடல் செய்திருக்கிறாய் என்பதற்கான ஆதாரம். உனக்கு இரண்டு ஆப்சன்ஸ். ஒன்று கையாடல் செய்த பணத்தின் இரு மடங்கைக் கட்டிவிட்டு வேலையை விடு. இல்லையென்றால் நாளையே நான் இந்த ஆதாரங்களோடு போலிசில் கம்ப்ளெய்ன்ட் செய்வேன்.” தான் எந்த கையாடலும் செய்யவில்லை என்று அவன் சாதித்ததை எல்லாம் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.


“நீ போகலாம் சிவா.. இரண்டில் ஒரு முடிவோடு வந்து நாளை பார்..” என்பதோடு முடித்துக் கொண்டான்.


அவனைக் கையாளாகாத கோபத்துடன் பார்த்து வெளியேறியவன் அடுத்து பார்த்தது சங்கரனை. அன்று மாலை சங்கரனும் ஆதியோடு பேசினார்.. ம்ம். பேசவில்லை. மறுபடியும் சிவாவை வேலையில் வைக்கும்படி சிபாரிசு.
“ என்ன பெரியப்பா.. நாளை நம் கம்பெனியில் தப்பு செய்ய வேண்டும் என்று நினைப்பவனுக்கு என்ன பயம் இருக்கும்? நிச்சயம் இதற்கு நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். உலகநாதன்‌சார் நல்லவர். நிச்சயம் அவரே இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்..”


“ஒத்துக் கொள்வார். அவரிடமும் பேசிவிட்டேன். உன்னை மாதிரிதான் போலிசிற்கு போகப் போகிறேன் என்று குதித்தார்.அப்புறம் எடுத்துச் சொன்னதும் புரிந்து கொண்டார். பெற்றவர்கள் தன்‌பிள்ளை எப்படிபட்ட தவறு செய்தாலும் அதிலிருந்து மீண்டுவர முயற்சிப்பார்களே தவிர அவர்கள் அழிய வேண்டும் என்று நினைக்கமாட்டார்கள்.” என்றவர் மேலும் தொடர்ந்தார்,
“ஏன் உன் அண்ணனையே எடுத்துக் கொள். எப்படியாவது அவன் மீண்டு வரவேண்டுமென்று விருப்பமில்லாதவனுத்கு வேலை கொடுத்து வைத்திருக்கிறோம். எப்படியோ போகட்டும்‌என்று விட்டோமா?”


“அப்பா.. அதுவும் இதுவும் எப்படி ஒன்றாகும்.இது திருட்டு. சித்தார்த்திற்கு இருப்பது வெறும் ஆர்வமின்மை. “


“தலைமைப் பதவியிலிருப்பவன் ஆர்வமில்லாமல் இருப்பது திருட்டிற்கு சமம்தான்.”


“அவன் அப்படியிருப்பது வேலையைப் பாதிக்காமலிருக்க நான் இருக்கிறேன்”


“இவன் கையாடல் செய்யாமலும் பார்த்துக் கொள்”


ஆதி கோபமாய் ஏதோ பேச வர, “நான் பார்த்து வளர்ந்த பிள்ளை ஆதி. ஏதோ சகவாசம் சரியில்லாமல் தவறு வழிக்குப் போயிருக்கிறான். தப்பு என்று சொல்லி சரியான வழி காட்டுவோம்.”


அடுத்த நாள் சிவாவை அழைத்து, “கையாடல் பணத்தை ஒரு பைசா விடாமல் கட்ட வேண்டும். தண்டனையாக பதவியிறக்கம்” என்று ஒரு அக்கௌன்ட்ஸ் பொறுப்பை அவனுக்குக் கொடுத்தான் ஆதி கொஞ்சமும் மனமில்லாமல்தான்.


நடந்த அனைத்தையுமே ஆதி மனோவிடம் தெளிவாகக் கூறினான் .தவறு என்று தெரிந்தும் நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விட்டதே எனறு ஆற்றாமை. மனோ தான் சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று. ‘விடுங்கள் சார்.. இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.”


“இனியொருமுறை இப்படி நடந்தால், நேரே போலிசில் கம்ப்ளெயின்ட் கொடுத்துவிட்டு தான் அவனிடமே பேசுவேன். இதைச் சொல்லி அவனை எச்சரிக்கவும் செய்திருக்கிறேன்‌.”


அடுத்த இரண்டாம் நாள் உலகநாதன் சார் வந்தார். “மனோ என் பையன் தவறு பற்றி நீதான் கண்டுபிடித்தாயாம்மா? சங்கரன் சார் சொன்னார்”


“என்ன தவறு?” என்று எதுவும் தெரியாதது போல் கேட்டிருக்க வேண்டும். அவரும் அதன்பின் விசாரிக்க மாட்டார். ஆனால் அப்படி செய்ய பிடிக்காமல் , “சார்.. “ என்று தயஙக, “ரொம்ப நன்றி மா.. நான் என் இரண்டு தங்கைக்கும் கல்யாணம் செய்தது, வீடு கட்டியது, இவனைப் படிக்க வைத்தது எல்லாமே சங்கரன் அய்யா மனது வைத்ததில்தான். அவர் பணத்தை அடிக்கப் பார்த்தானே.. இப்போதுகூட இன்னொரு வாய்ப்பு தரலாம் என்று அவர்தான் முடிவு செய்தார். அவரைப் போய் ஏய்க்கப் பார்த்தானே.”.


தன்னிடம் கோபம் கொள்வாரோ, வருத்தம் காட்டுவாரோ என்று பயந்தவர் இப்படி புலம்ப அவரையும் மனோ தான் பேசி சமாளித்தாள்.”விடுங்கள் சார். இனி இப்படி ஆகாமல் பார்த்துக் கொள்ளலாம்..”


ம்ம்.. ஹோட்டல் வந்துவிட்டது. ‘தி லைட்' என ஆங்கிலத்தில் மின்விளக்கு ஒளியில் பெயர்ப்பலகை தாங்கிய ஹோட்டல்முன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றவள், அங்கிருப்பவரிடம் விசாரித்து தங்களுக்காக ரிசர்வ் செய்யப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தாள். பெயருக்கும் ஹோட்டலின் உள்ளமைப்புக்கும் சம்பந்தமேயில்லை. இல்லை.. முரணை வெளிப்படுத்தத்தான் இந்த பெயரா தெரியவில்லை. ஹோட்டல் முழுவதும் செயற்கை இருட்டில் மூழ்கியிருந்தது. அந்தந்த மேஜையில் மட்டும் சிறியதாய் விளக்கு. அந்தந்த மேஜையில் அமர்ந்திருந்திருப்பவரின் முகம் மட்டும் தெரியும். உங்களுக்குப் பிடித்தவர் முன்னே இருந்தால் வேறு எதிலும் கவனம் செலுத்த தேவையில்லை. அங்கே ஆங்காங்கே அமர்ந்திருப்பவர்களும் அப்படிதான் சுற்றம் மறந்து பேசிக் கொண்டிருந்தனர்.


மனோ தன் காத்திருப்பைத் தொடங்கிய இரண்டாவது நிமிடத்தில் கதவைத் திறந்து அந்த பெண் உள்ளே வந்தாள். பொம்மை போன்ற அழகு என்பார்களே அதன் அர்த்தத்தை அன்றுதான் நேரில் பார்க்கிறாள். அப்படியே செய்துவைத்தது போன்று அத்தனை நேர்ச்சியான அழகு. அழகு நிலையத்திலிருந்து நேரே வந்ததற்கு ஆதாரமாய் கூந்தலமைப்பு..


சிப்பந்தி வந்து அந்த பெண்ணிடம் கேட்டான், "மேடம் ரிசர்வ் செய்திருக்கிறீர்களா? உங்கள் பெயர்?"


ம். எஸ் ரிசர்வ் செய்திருக்கிறோம்.. டேபிள் நம்பர் 2.. என் பெயர் மீனலோசனி.
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி 9


1120111202


அந்த பெரிய ஹோட்டலின் கண்ணாடிக் கதவைத் திறந்து, உள்ளே நுழைந்ததும் ஆதியின் கண்களில் முதலில் பட்டது மனோதான். வாசலுக்கு வலப்பக்கமாக சற்று உள்ளடங்கிய இடத்தில் ஒரு தூணுக்கு மறைவாக இருந்த மேஜையில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு எதிரிருந்த இருக்கை காலியாக இருந்தது. ஆனால் மனோதானா? அவளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்ததில் அவள் போல் தெரிகிறதா? இருளில் இன்னும் உற்றுப் பார்த்தான். இந்த நேரம் ஏன் இங்கு வந்திருக்கிறாள்.. எப்போதும் கேன்டினில்தான் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறான்.. வேலை அதிகமிருந்தால் எப்போதேனும் தன்னறையிலேயே சாப்பிட்டிருக்கிறாள்.. போய் பேசலாமா?ஆனால் பேசக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறானே?


அவன் எண்ண ஓட்டத்தைத் கலைப்பதாய், "ஹாய் ஆதி!" என்று ஒரு மெல்லிய குரல் தயக்கமாய் வந்தது. உள்ளே வந்ததும் இடதுப்பக்கமாய் இருந்த மேஜைகளில் ஒன்றின் அருகில் நின்றபடி ஒரு பெண் தயக்கமாய் இவனைப் பார்த்து புன்னகைத்தாள். மீனலோசனி..


ஆதி இயல்பாய் சிரித்தபடி அவளை நோக்கிப் போனான், "ஹாய் மீனலோசனி!"


இப்போது மனோவிடம் பேசினால் இங்கே வந்திருக்கும் இந்த பெண்ணிற்கு என்ன மரியாதை? "சாரி.. உங்களை இத்தனை தூரம் வரவைத்தததற்கு.. வேலை கொஞ்சம் அதிகமாய் இருக்கிறது. அதுதான் டிராவல் டைமைக் கொஞ்சம் குறைக்கலாமே என்று இங்கு வரமுடியுமா என்று கேட்டேன்." இலகுவாய்ப் பேசியபடி அவளை நோக்கி நடந்தவன் அவளை உட்காருமாறு சைகை செய்து விட்டு தானும் அமர்ந்தான்.


மீனலோசனியும் புன்னகைத்து, "எனக்கு இங்கு வருவதில் எந்த பிரச்சனையும் இல்லை. காரில் ஏறி அமர்ந்தால் ஐந்து நிமிடங்களும் அரை மணி நேரமும் ஒன்றுதானே.."


அவளைக் கண்களால் ஆராய்ந்தான். அழகான பெண். அந்த அழகை அழகாக எடுத்துக் காட்டத் தெரிந்த பெண்ணும் கூட.. சும்மாவேனும் வாய்பேச்சிற்காகவும் சொல்லவில்லை. நிஜமாகவே இத்தனை தூரம் பயணம் செய்து பார்க்க வந்ததில் வருத்தம் எதுவும் இல்லை‌. ரொம்பவும் பொறுமையான பெண்தான். ஆனாலும் முரண்டியது. அதெப்படி ஐந்து நிமிடமும் அரை மணி நேரமும் ஒன்றாகும். மீதியுள்ள இருபத்தைந்து நிமிடங்களில் எத்தனை வேலைகள் செய்யலாம்..


“ஓகே.. ஆர்டர் பண்ணலாமா? நீங்க என்ன சாப்பிடுறீங்க?”


மீனலோசனிக்கு சின்ன சந்தோசம். அவர்கள் வீட்டில் ஹோட்டலில் ஆர்டர் சொல்வது அவளுடைய அப்பா அல்லது அண்ணனது வேலை. அவர்கள் மூடுக்கு ஏற்ப, தாம் தூம் என்றோ, பசிக்கு மட்டுமோ ஆர்டர் பண்ணுவார்கள். ஆதி அப்படி இல்லை. “நீங்க என்ன சாப்பிடுறீங்க? நான் , ரொட்டி இந்த மாதிரியா இல்லை ரைஸ் ஐட்டம்ஸா?”


“ம்.. எனக்கு இப்போதைக்கு ரொட்டி போதாது.. ரைஸ்தான்.. என்று தன்னுடைய உணவை ஆர்டர் செய்துவிட்டு அவள் சொல்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன்,
சட்டென்று விறைத்தான்.. கதவு வழியாக இப்பொழுது உள்ளே வந்தது சித்தார்த். “நோ..நோ..” ஆதியின் மனம் தனக்குள்ளே கத்திக் கொண்டிருக்க, காதில் ஃபோனை வைத்தபடி வந்தவன், அங்குமிங்கும் திரும்ப மனோ தன் இடத்திலிருந்து எழுந்து கை காட்டினாள். சிரித்தபடி சித்தார்த் சென்று அவளிருந்த மேஜையில் அவள் முன்னமர்ந்தான்.


சித்தார்த் எதையோ சொல்ல முன்னே சாய்ந்து கவனமாகக் கேட்டு பதிலுக்கு மனோ ஏதோ சொல்ல சித்தார்த் சத்தமாய் சிரித்தான்.. ஆதிக்கு கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.
ஓ.. வெளியே வந்து சாப்பிடும் அளவிற்கு பழக்கமாகி விட்டார்களா.. இந்த ஒரு வருடத்தில் மனோ எப்போதுமே ஒரு கவனத்துடன் தான் ஆதியிடம் பழகியிருக்கிறாள். எப்போதாவது கான்டீனில் இவனே அருகே போய் அமர்ந்தாலும் கண்களில் ஒரு கவனம் வந்துவிடும். இப்போது மட்டும் எந்த கவனமும் இல்லாமல் எத்தனை இயல்பாக இருக்கிறாள்..


“உங்களுக்குத் தெரிந்தவர்களா?”


திரும்பி மீனலோசனியைப் பார்த்தவன் தலையில் மானசீகமாய் தட்டிக் கொண்டான். 'ஆதி.. சொதப்பாதே..',. " ம்.. ஆமாம்.. ஆர்டர் பண்ணிட்டீங்களா?"


"ம்.."


அதற்குப்பின் ஆதியால் எத்தனை முயன்றும் அத்தனை இயல்பாய் பேச முடியவில்லை. முயன்று வருவித்த அமைதியுடன் என்ன பேசுவது என்று யோசித்தான். கல்யாணத்திற்கு என்று பார்த்திருக்கும் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா என்பதை எந்த கேள்விகளை வைத்து கண்டுபிடிக்க முடியும்..சரி.. தெரிந்தவரை ஆரம்பிப்போம்.. எப்படி போகிறதோ அதே போக்கில் போக வேண்டியதுதான்.


“நான் ஆதித்யன்.. ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் , எம்.பி.எ முடித்து, எங்கள் தாத்தா ஆரம்பித்த கம்பெனியை என் அப்பா, பெரியப்பாவோடு சேர்ந்து நடத்துகிறேன். நீங்கள்?


"நான் மீனலோசனி. கம்ப்யூட்டர் சயின்சில் இன்ஜினியரிங் முடித்திருக்கிறேன். "


அவள் இன்னும் ஏதோ சொல்வாள் என்பது போல் அவன் அவளையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க மீனலோசனியின் முகம் சிவந்தது.. "நான்.. நான் வேலைக்கு போகலை"


"ஏன்?" பெர்சனல் கேள்விதான். இருவரும் ஒருவரை மற்றொருவர் இன்டர்வியு செய்வது போலத் தான் இந்த சந்திப்பு.. இதில் இந்த கேள்விகள்தானே கேட்க முடியும்.


"வேலைக்குப் போய்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று அப்பா சொல்லிட்டாங்க.."


சம்பாதிப்பதற்கு தான் வேலைக்குப் போக வேண்டுமா? "ஓ.." புரிந்தது போல் தலையை ஆட்டினான்.


அவள் சொன்ன காரணத்தை அவன் ஒப்புக் கொள்ளவில்லை என்பது நன்றாகப் புரிந்தது. அவளுக்கே ஒப்பாகாத ஒன்றை அவன் புரிந்துகொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்..


"உங்களுக்கு என்ன பிடிக்கும்?"


“என்ன?”


“வேலை. ஜாப்.. என்ன பிடிக்கும் என்று கேட்டேன்..”


ம்ம்ம்.. சொல்லலாமா.. இதுவரை இதைக் கேட்ட யாருமே கேலி செய்யாமல் இருந்ததில்லை. இத்தனை பெரிய பிஸினஸ் மேன் பெண்ணுக்கு இது என்ன ஆசை என்று.. தன் தந்தையின் மதிப்பிற்கு குறைவான ஆசையோ என்று பல நேரம் இந்த கேள்விக்கு சரியான பதில் சொல்லாமலே தவிர்த்து விடுவாள். இவனிடம் சொல்வதா? இவனும் ஹாஹா என்று சிரித்துவிட்டால்? அதற்காக வேறு சொல்ல முடியுமா? கொஞ்சம் தயங்கியபடியே தான் சொன்னாள், “ம்.. எனக்கு நர்சரி ஸ்கூல் டீச்சராக ஆசை”


புருவங்கள் இரண்டையும் உயர்த்தியவன், “வெரி குட்.. ட்ரை பண்ணலாமே” என்றான்.


"அப்பா வேண்டாம்னு சொல்லிட்டாங்க.." தன் தந்தையைக் குறைவாக பேசிவிடுவானோ என்ற பயம் வர, “ குழந்தைகளையெல்லாம் வைத்து சமாளிப்பது எனக்கு கஷ்டமாக இருக்கும் என்றுதான்” என்று விரைவாக விளக்கமும் கொடுத்தாள்.


அவளும் சும்மா இல்லையே.. "ஆனால்.. குக்கிங், ஹோம் மேனேஜ்மென்ட், தையல் வகுப்புகளுக்கு எல்லாம் போகிறேன்"


இவற்றில் தான் விருப்பம் என்றால் தவறில்லை. சம்பாதிக்க அவசியம் இல்லாத பட்சத்தில் விரும்பிய வேலைகளில் நேரத்தைச் செலவிடலாம். ஆனால் வசதியான குடும்பத்துப் பெண்.. திருமணமும் வசதியான இடத்தில்தான் முடிப்பார்கள். இதையெல்லாம் செய்வதற்கு ஆட்கள் இருப்பார்களே.. அதையே அவளிடமும் கேட்டான்.


"அது.. அப்பாவிற்கு பிடிக்குமென்று…"அவளுக்கு முடிக்கவே பிடிக்கவில்லை. தன்னைக் கைகளில் பொத்திக் தாங்கும் அப்பாவையும் அண்ணனையும் அறிந்தவர்கள் முன் அவர்களுக்காக இதைச் செய்கிறேன், அதைச் செய்கிறேன் என்பது தப்பாகத் தெரிந்ததில்லை. ஆனால் யாரென்று தெரியாத ஒருவனிடம் அவர்களுக்காகத்தான் எனக்கு பிடிக்காத வேலைகளில் தினமும் நேரத்தைப் போக்குகிறேன் என்று சொல்வது மீனலோசனிக்கு அத்தனை சுலபமாக இல்லை.


பெண் பார்ப்பது எல்லாம் ஆதிக்கு மறந்து விட்டது. படித்து முடித்து விட்டு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறும் ஒரு சின்ன பெண்தான் அவன் முன் தெரிந்தாள். அவன் தாழ்ந்த குரலில் ஒரு நல்ல நண்பனின் பாவனையில் அவளிடம் பேசினான், "அடுத்தவர்களுக்கு பிடிக்க வேண்டுமென்று உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள் மீனலோசனி. அப்படி மாறி உங்களை அவர்களுக்குப் பிடித்தால், அவர்களுக்குப் பிடித்திருப்பது நீங்கள் இல்லையே.. நீங்கள் நீங்களாகவே இருக்கும்போது உங்களைப் பிடிக்க வேண்டும். அதனால் உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள்.." சொல்லி முடிக்கும் போது அவனையும் மீறி கண்கள் வலப்பக்கம் திரும்பி மனோவிடம் சென்றன..


மீனலோசனி கண்களில் மரியாதையோடு ஆதியைப் பார்க்க‌ ஆரம்பித்தாள்.


சித்தார்த் ஏதோ பேசிக் கொண்டே இருந்தான். நிச்சயமாக என்ன பேசுகின்றான் என்பதை அறியும் அளவிற்கு இல்லாமல் எதைப் பற்றி பேசுகிறான் என்கிற அளவில் மட்டும் அவன் பேச்சில் கவனம் வைத்து தேவையான இடத்தில், ம்.. ஓ.. போட்டுக் கொண்டிருந்தாள் மனோ. இந்த சத்யா எப்போது வருவாள்.. இன்று சீக்கிரம் வீட்டுக்குப் போக முடிந்தால் நன்றாக இருக்கும். சத்யாவிற்கும் சேர்த்து மனோ ஆர்டர் செய்ய, சித்தார்த் அவனுக்கு சொல்ல மறுபடியும் காத்திருப்பு தொடங்கியிருந்தது..


திடீரென்று சித்தார்த்தின் குரல் நின்று விட அவனைக் பார்த்தால் இடப்புறமாக திரும்பி யாரையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். “யார் சித்தார்த் சார்?” சித்தார்த் சொன்னான், "ஆதி தானே அது?"


மனோவும் திரும்பி அந்த இருளில்‌தேடி, ஆதியை அங்கு காண முகம் மலர்ந்தது, "ம்.. ஆதி சார் தான்.." தனியே அமர்ந்திருந்தான். அவன் முன் சர்வர் வரிசையாக உணவு வகைகளை அடுக்கிக் கொண்டிருந்தார்.


"நான் ஒரு ஹாய் சொல்லிட்டு வந்துடறேன்"


தான் என்ன பண்ணுவது என்று மனோவுக்குத் தெரியவில்லை. அவன் அவளிடம் பேசுவதில்லைதான். ஆனால் அங்கே சித்தார்த் மட்டும் போய் மனோ மட்டும் இங்கே நின்று கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா? கொஞ்சம் தயக்கத்துடன் தன் கைப்பையை இறுகப் பற்றியபடி சித்தார்த்தின் பின்னே சென்றாள்.


கொஞ்சம் தூரத்திலேயே"ஹாய் ஆதி!" என்று சொன்னபடி சித்தார்த் வரவும் கைகளை டிஷ்யு பேப்பரில் துடைத்தபடி ஒரு பெண் அவர்கள் மேஜைக்கு வரவும் சரியாக இருந்தது. மனோ உள்ளே காத்திருந்த முதல் சில நிமிடங்களில் வந்த அதே பொம்மை பெண்.


மேஜைக்கு அருகில் வந்து அமராமல் ஆதியைக் கேள்வியாய் நோக்கிய அந்த பொம்மை பெண்ணைப் பார்த்ததும் ஆதி ‌எழுந்தான். அறிமுகம் செய்ய வேண்டும். “இது சித்தார்த். என் அண்ணன். இது மனோ.. எங்கள் கம்பெனியின் கம்ப்யூட்டர் ஹெட். “


“ஹாய்!” என்று அந்த பெண் இருவரையும் பார்த்து அழகாய் புன்னகைக்க "ஹாய்" என்ற சித்தார்த் ஆதியைக் கேள்வியாய் பார்த்தான்.. ஒரு பெரிய மூச்சை உள்ளே இழுத்த ஆதி, "இது மீனலோசனி.. என் ஃப்ரெண்ட்.." என்றபடி கைகளை தன் பான்ட் பாக்கெட்டிற்குள் நுழைத்து ‌நிமிர்ந்து நின்றான்.


பெயரைக் கேட்டதும் சித்தார்த்தின் முகத்தில் இப்போது பல்ப் எரிந்தது. "ஓ.. மீனலோசனியா? அம்மா சொன்னார்கள்.. ஏன்டா.. ஃபர்ஸ்ட் டைம் பார்ப்பதற்கு ஏதாவது பெரிய ரெஸ்டாரண்டுக்கு அழைத்துப் போயிருக்கலாமே?"


அம்மா சொல்லி முதலில் பார்க்கும் பெண்ணாம்; யாராயிருக்கும் என்று மனோவிற்கு தெரியாதா? ஃபர்ஸ்ட் டைம் பார்க்கும் பெண் ஃப்ரெண்டாம். இவள் கம்பெனியின் கம்ப்யூட்டர் ஹெட்டாம். பொங்கிய கோபத்தை மனோ அடக்கினாள்.. 'மனோ.. ரிலாக்ஸ்.. ஆதி யாரோடு எப்போது சுற்றினால் எனக்கென்ன? ' " ஹாய் மீனலோசனி.." என்று பதவிசாய் சொன்னவள், ஆதியின் பக்கமும் திரும்பாமல் கவனமாய், "உங்க ஹேய் ஸ்டைல் ரொம்ப அழகாயிருக்கு.." என்றாள்.

"தேங்க்ஸ்" மீனலோசனி நட்பாய் சிர்த்தாள். பாவம் நல்ல பெண்ணாய் இருக்கிறாள். அம்மாவின் அனுமதியோடு நடப்பதால் அந்த அனுபமா வின் நிலை வராது. ஆனால் நேசமில்லாத திருமண வாழ்க்கை.. ஆதியோடு மீனலோசனியை மனதில் ஒன்றாக நிறுத்திப் பார்த்தவளுக்கு சுறுசுறுவென்று ஏறியது. அந்த பெண்ணுக்கான பரிதாபமாகத்தான் இருக்கும்..

கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி நின்ற மனோவைப் பார்த்த ஆதியின் கண்கள் சுருங்கின. எப்படி எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்க முடிகிறது? அப்படியே இருக்கட்டும். அவளுக்கு ஒன்றுமேயில்லை என்றால் அவனுக்கும் ‌ஒன்றுமில்லைதான்.


சித்தார்த்திடம் திரும்பியவன், “ நீ இங்கே இருக்கியா சித்தார்த்? இரண்டு மணிக்கு அந்த மார்க்கெட்டிங் கம்பெனியின் ரெப்டசன்டேட்டிவோட மீட்டிங் இருக்கிறதே”


“ காலையிலேயே அந்த மீட்டிங்கை தள்ளி வைச்சாச்சி. நான்கு மணிக்கு வர்றதா அவங்க மெயில் அனுப்பி இருக்காங்க.. காலையிலிருந்து கொஞ்சம் வேலையும் செய்திருந்தால் தெரிந்திருக்கும்.” மூன்று பேருமே சட்டென்று திரும்பி மனோவைப் பார்க்க, சொன்ன சொற்களின் காட்டத்திற்கும் முகபாவனைக்கும் சம்பந்தமே இல்லாமல் சாந்தமாய் இருந்த முகத்தில் கண்கள் மட்டும் ஆதியை சவால் விடுவது போல் பார்த்தன.


ஆதி முறைத்தான். “நான் வேலை செய்யவில்லையா? வேலை நேரத்தில் ஊர் சுற்றிகிட்டு இருக்கிறவங்க அதைப் பற்றி சொல்லக் கூடாது.”


ஊர் சுற்றுகிறாளாமா? யாரைச் சொல்கிறான்? அதுவும் யார் முன்னே சொல்கிறான். காப்பாற்றி வைத்த கவனமெல்லாம் காற்றோடு போய்க் கொண்டிருந்தது.. “நான் ஒன்றும் ஊர் சுற்றவில்லை. இது சாப்பாட்டு நேரம்.."


“மதிய இடைவேளை நம் கம்பெனியில் ஒரு மணி நேரம். இங்கு வர இருபது நிமிடம், போக இருபது நிமிடம், ஆர்டர் சொல்லி அது வர அரை மணி நேரம், அது போக சாப்பிட என்று எப்படியும் மொத்தம் இரண்டு மணி நேரம் ஆகி விடும்.”


சித்தார்த்தும் மீனலோசனியும் திரும்பி அவனை வித்தியாசமாய்ப் பார்க்க, ஆதியின் முகம் கன்றியது.. ஆனாலும் கண்களைத் தளர்த்தாமல் மனோவைப் பார்த்தான்.


அவனால் வேறு எங்கேயும் பார்க்கவும் முடியாது.. ஏனெனில் கனத்திற்கு ஒன்றாய் மனோவின் முகம் மாறிக் கொண்டிருந்தது.. கண்களில் சீற்றத்தோடு, அவனை முறைத்தபடி, “ரொம்ப நல்லா கணக்கு போடுறீங்க ஆதி சார்.. இரண்டு மணி நேரமா?? சரி ஓகே.. அப்படியே இருக்கட்டும்.. இன்று அரைநாள் விடுப்பு எடுப்பதாய் வைத்துக் கொள்ளுங்கள்.”
சொல்லி நிறுத்தியவள் பின் “சாரி.. உங்களிடம் ஏன் நான் சொல்ல வேண்டும்?” என்று சித்தார்த் திடம் திரும்பி “சித்தார்த் சார்.. எனக்கு இன்று ஹாஃப் டே பெர்மிஷன் வேண்டும்” என்று செயற்கை புன்னகையுடன் கேட்டவள், ஆதியிடம் திரும்பி, மறுபடியும் முறைத்து “சம்பளத்தில் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று முடித்தாள்.


அடுத்து ஆதி என்ன சொல்லியிருப்பானோ, என்ன சொன்னாலும் அதற்கு மேல் தாங்க முடியாது என்ற நிலையில் பக்கத்திலிருந்த மேஜையின் மீதிருந்த கண்ணாடி டம்ளரைக் கைகளில் இறுகப் பற்றியிருந்த மனோவின் கைகளை இருகரங்கள் வந்து பற்றின, *ஹாய் மனோ.. சாரிடி லேட்டாயிடுச்சி..”.. சத்யா..


இதுவரை மனோவும் ஆதியும், 'தாம் தூம்' என்று குதித்ததை இந்த பக்கம் அந்த பக்கம் என்று மாறி மாறி‌ பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்தும் மீனலோசனியும் சத்யாவை ஆபத்பாந்தவனாய் பார்க்க மனோ அவளை முறைத்தாள். "உன் பர்த்டே ட்ரீட்க்கு நீயே லேட்டாக வருவாயா சத்யா?"


"சாரி மனோ.. வரும் வழியில் தைக்க குடுத்த டிரஸ் ரெடியாகிடுச்சானு பார்த்துட்டு வரலாம்னு போனேன். லேட்டாயிடுச்சி” என்றவள் ஆதியைப் பார்த்து, "ஹாய் ஆதி சார்!" என்றாள்.


"போதும் சத்யா.. நீ தேவையில்லாமல் பேசி யார் நேரத்தையும் வீணடிக்காதே.. வா.. சாப்பிடலாம்" சத்யாவின் கரங்களைப் பிடித்து இழுத்தபடி செல்ல சித்தார்த் அவர்கள் பக்கமும் ஆதி பக்கமும் மாறி மாறி ப் பார்த்து, “என்னடா?” என்றவன் பின் மீனலோசனியைப் பார்த்து, "சாரி சிஸ்டர்.. நான் வர்றேன்.. மீண்டும் பார்க்கலாம்" என்று கூறிவிட்டு ஆதியின் தோளில் தட்டிவிட்டு அவர்கள் பின்னே போனான்..


அங்கே இருந்தவர்களில் அப்போதைக்கு உற்சாக மனநிலையில் இருந்தது ஆதி மட்டும்தான். சத்யாவின் பர்த்டே. அதற்காகத்தான் வந்திருக்கிறார்கள். அதுவும் சேர்ந்து வரவில்லை. தனிதனியாகத்தான் வந்திருக்கிறார்கள்.. ச்சே.. அது தெரியாமல் என்னவெல்லாம் நினைத்து விட்டார். எப்படியெல்லாம் பேசிவிட்டார்... ஆனால் அதுகூட நல்லதிற்குதான். ஆதியின் முகத்தில் புன்னகை படர்ந்தது. எப்போதுமே ஒரு அரைப்புன்னகையோடு சற்று தன்னை தூரத்தே நிறுத்தி பேசும் மனோ இதுபோல் காற்றில் முன் நெற்றி முடி பறக்க, கோபத்தைக் கட்டுப்படுத்த‌ எந்த முயற்சியும் இன்றி இன்றுதான் அவனிடம் பேசியிருக்கிறாள். ஏனோ மனதில் ஒரு இதம், அவனுக்கே தெரியாமல் அவன் மனம் இந்த நொடிக்காகக் காத்திருந்தது போன்று ஒரு நிறைவு..


எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த மீனலோசனிக்கு இன்று நடந்தவற்றில் பல வாழ்வில் முதல்முறை எதிர்கொள்பவை. திருமணத்திற்கு என்று அவள் முதலில் சந்திக்கும் நபர் ஆதி தான். உனக்கும் பிடித்ததைச் செய்.. யாருக்காகவும் மாறாதே என்ற அறிவுரையும் இதுவரை யாரும் செய்ததில்லை. ஒரு வேலை செய்யும் ஊழியர் தன் முதலாளியிடம் கோபமாய் வார்த்தைக்கு வார்த்தை பேசுவதையும், தண்ணீரை எடுத்து முகத்தில் ஊற்ற தயாராய் இருப்பதையும் இன்றுதான் பார்த்திருக்கிறாள். எல்லாவற்றையும்விட அப்படி பேசிய ஊழியரை ஏதோ பெரிதாகச் சாதித்து விட்ட நிறைவோடு, மெச்சும் பார்வையோடு, முகத்தில் புன்னகை தவழ பார்த்துக் கொண்டிருக்கும் முதலாளியையும் இன்றுதான் பார்க்கிறாள். உலகத்தில் அவளுக்குத் தெரியாதது இன்னும் நிறைய இருக்கிறது போல..


அன்று இரவு தன் தாய், தந்தை, தமையனுடன் இரவு உணவுக்கு மேஜை முன் அமர்ந்திருந்த போது மீனலோசனியின் தந்தை ஆரம்பித்தார், "மீனு ஆதியைப் போய் பார்த்தாகிவிட்டதா?"


"ம்.. இன்று மதியம் போனாள்." இது அவளது அத்தை.


"ஓகே.. இனி அவர்கள்தான் அடுத்து பேச வேண்டும்.."


"நம்ம மீனுவை யாருக்காவது பிடிக்காமல் போகுமா அப்பா?" பெருமை கலந்து பேசியது அவள் அண்ணன்.


இந்த நொடிக்காக மாலையிலிருந்து தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தவள், மெதுவே பேசினாள், "எனக்கு பிடிச்சிருக்கானு தெரியலைப்பா.. கொஞ்சம் டைம் வேணும்"


அவள் அப்பா எழுந்தே விட்டார், "பிடிக்கவில்லையா? ஏன் பிடிக்கவில்லை? ஏதாவது தப்பாகப் பேசினானா? சொல்லும்மா?"


“அச்சோ அப்பா.. அப்படியெல்லாம் இல்லை. பிடிக்கலைன்னு சொல்லவில்லை.. பிடிச்சிருக்கானு தெரியலைனு தான் சொன்னேன். அதுதான் கொஞ்சம் டைம் வேணும்.”


எல்லோரும் அவளை வித்தியாசமாய்ப் பார்க்க அவள் அண்ணன்தான் சுதாரித்தான், "ஓகே மீனு.. டேக் யுவர் டைம்.. நல்லா யோசிச்சு சொல்லு"


"தேங்க் யு அண்ணா!" பூவாய் சிரித்தாள்.
 
Status
Not open for further replies.
Top