All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா செல்வமின் "வருடிச் செல்லும் பூங்காற்று" - கதைத் திரி

Status
Not open for further replies.

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி 18


11908



அந்த பெரிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பகுதியில் திரைகளால் பிரிக்கப்பட்டிருந்த பகுதிகளுக்குள் ஒரு பகுதியின் படுக்கையில் அமர்ந்திருந்த மனோ, பக்கத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த செழியனியனிடம் திரும்பி, "பொண்ணுக்கு கழுத்தில் கத்தி வெட்டு பட்டிருக்கிறது என்று சொல்லி‌அரைமணி நேரமாச்சி. இந்த அம்மாவும் அப்பாவும் என்ன பண்றாங்கனு தெரியலையே" என்று குறைபட்டாள்.



கையிலிருந்த கைப்பேசியை நோண்டிக்கொண்டிருந்தவன் நிமிர்ந்து, "மேகமூட்டமாக இருக்குதில்லையா.. காயப்போட்டிருக்கிற துணியை எடுத்துட்டு வருவாங்க."



"செழி!!"



"பின்னே என்ன மனோ? நாம் போகலாமே. நீதான் அம்மா வந்ததும் போகலாம், அந்த பொண்ணு வந்ததும் போகலாம்னு உட்கார வைச்சிருக்க"



கண்களை சுருக்கி அவனை முறைத்தவள், அருகில் வந்த, நர்ஸைப் பார்த்து, "சிஸ்டர்.. ஏன் இன்னும் மீனலோசனியைக் கூப்பிட்டு வரவில்லை?" என்று அருகிலிருந்த பகுதியைக் காட்டி, மூன்றாவது முறையாகக் கேட்க இதுவரை," இதோ வந்திடுவாங்க.." என்று பொறுமையாகச் சொன்னவர், தற்போது சலிப்பாய், "அதை ஏன் மேடம் கேட்குறீங்க.. தோள்பட்டை லேசாக வீங்கியிருக்கு.. எதற்கும் ஒரு எக்ஸ் ரே எடுக்கலாம் என்றுதான் டாக்டர் சொன்னார். அங்கே அந்த பொண்ணோட அப்பாவும் அண்ணாவும் தலை முதல் கால்வரை எல்லா இடத்திற்கும் எக்ஸ்ரே , சிடி எல்லாம் எடுக்க சொல்லி வம்பு பண்ணிகிட்டு இருக்காங்க"



லேசாய்ப் புன்னகைத்து அவர் கொடுத்த வலி மாத்திரையை வாங்கி வாயில் போட்டு, அவர் இன்னொரு கையில் நீட்டிய தண்ணீரை வாங்கிப் பருகினாள். இவர்தான் மனோ வந்ததும் மருத்துவர் கழுத்திலிருந்த காயத்தை சுத்தம் செய்து, ஆயின்மென்ட் ஒன்று தடவி பேன்டேஜ் போடும் போது உடனிருந்தவர்.



அவர் போனதும் செழியன், "ஓவரா பண்றாங்களே!! அந்த பொண்ணு என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா மனோ?"



"நிஜமாகவே பெரிய அப்பாடக்கர் தான்டா! நகைக் கடை ஓனர் பொண்ணு. பார்க்க அப்படியே டால் மாதிரி இருப்பா"



"நீ கொடுக்கிற பில்ட் அப்ல எனக்கே பார்க்கனும் போல இருக்கே.. நான் போய் பார்த்திட்டு வரவா?" என்றபடி, அவன் எழ, அதற்குள் தடதடவென்று செருப்பொலிகள் முன்னே வர, பின்னே, இவர்கள் திரையைக் திறந்து, சத்யாவும் சித்தார்த்தும் வந்தார்கள். "மனோ.. என்னடி ஆச்சி.. எப்படி இருக்க?" பதறியபடி வந்தவளை ஆச்சர்யமாகப் பார்த்த மனோ, "ஒன்னும் இல்லை சத்யா.. நல்லா இருக்கேன். இதோ பாரு சின்ன காயம்தான். ஆமாம், எனக்கு அடிபட்டதுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?"



"திடீரென்று ஆதி சார் ஃபோன் செய்து மனோ எங்கேனு கேட்டார். கிளம்பிட்டேன்னு சொன்னதும் என்னவென்றே கேட்காமல் கட் செய்துவிட்டார். வாட்ச்மேனிடம் உன் ஃபோட்டோ காட்டி இந்த பொண்ணு எப்போ கிளம்பினாங்க.. யாராவது வம்பு பண்ணினாங்களான்னு விசாரிச்சதா செய்தி வந்தது.. அடுத்த கொஞ்ச நேரத்தில் போலிஸ் வந்து சிவாவைக் கூட்டிட்டுப் போயிட்டாங்க.. என்னென்னவோ புரளி.. உனக்கு ஃபோன் பண்ணினா நீ எடுக்கலை. ஆதியும் அதற்குப்பின் கால் அட்டென்ட் பண்ணலை. அப்புறம் சித்தார்த் உலகநாதன் சார்கிட்ட கேட்டதற்கு அவர் எல்லாம் சொன்னார்..அதான் உடனே கிளம்பி வந்தோம்.‌ நீ சொல்லு.‌ என்ன ஆச்சி?"



மனோ நடந்தது அனைத்தையும்‌, அதாவது சங்கரன் சார் கொடுத்த வேலையிலிருந்து விலாவாரியாக சொல்லி முடித்து, "எனக்கு பெரிய டவுட் கரெக்டா ஆதி சார், போலிஸ் எல்லாம் எப்படி அந்த டைம்ல அங்கே வந்தாங்க?" என்று அதுவரை தன் தலையைக் குடைந்து கொண்டிருந்த கேள்வியை முன்வைத்தாள்.,



தான் கேள்விப்பட்டது வரை சித்தார்த் சொன்னான். துப்பறியும் நிபுணர் சிவாவின் நடமாட்டத்தில் சந்தேகம் உள்ளதாக சங்கரன் சாரிடம் சொல்ல, சங்கரன் சார் பிரச்சனை பெரிதாக மாறுவதால் ஆதிக்கும் தெரிய வேண்டும் என்று அவனைக் கூப்பிட்டு சொல்லிவிட, ஆதி அவளைக் காப்பாற்ற போலிசையும் அலெர்ட செய்து, அவனும் அங்கே வந்து விட்டான். அங்கே நடந்ததும் அறிந்திருந்ததால், "சூப்பர் மனோ.. பயங்கர ஹீரோயிக் வேலையெல்லாம் செஞ்சிருக்க" என்று சித்தார்த் சிலாகித்தான்.



"என்ன ஹீரோயிக் வேலை சித்தார்த் சார். சும்மா இருந்திருந்தா, இவளை மாதிரி சின்ன பேன்டேஜோட தப்பிச்சிருக்கலாம். காப்பாற்றுகிறேன்னு அந்த பொண்ணைத் தள்ளிவிட்டு அந்த பொண்ணு இப்போ உயிருக்கு போராடிகிட்டு இருக்காம்"



"நீ ஒருத்தன் போதும்டா"



"மீனாவைப் பற்றிய அப்டேட் ஐந்து நிமிடங்களுக்கு முன்னாடி தான் டாக்டர் எனக்குக் கொடுத்தார்."என்று செழியனிடம் சிரித்தபடி‌ சொன்ன சித்தார்த் "நீ செஞ்சது சரிதான் மனோ.. அந்த குரூப் என்ன ப்ளான்ல இருந்தாங்க தெரியலை. ஆனா அந்த இடத்தில் கொஞ்சம் களேபரம் ஆனதில் தான் உங்க ஆட்டோவைக் கண்டுபிடிச்சி போலிஸ் வரமுடிந்தது. ஆனா நீங்க ஆட்டோ ஏறியதை எப்படி மிஸ் பண்ணினாங்க தெரியலை"



"அது.. போலிஸ் எங்களுக்காகப் பார்த்துகிட்டு இருக்காங்கன்னு தெரியாதில்லையா, பின்னே வர்றவங்களை மிஸ் பண்றதுக்காக, தலையை துப்பட்டாவால் சுத்திகிட்டேன். மீனலோசனிகிட்டேயும் வெயிலுக்கு போட்டுக்கோங்கன்னு சொல்ல அவங்களும் போட்டுக்கிட்டாங்க.."



"ஓ.. ஓகே.. "



சிறு அமைதி நிலவ, மனோ பேச ஆரம்பித்தாள், "சிவா இவ்வளோ எக்ஸ்ட்ரீமா போவார்னு நினைக்கலை."



"ம்.. அதை மறந்திடு மனோ. ஆதி பயங்கர கோபத்தில் இருக்கிறானாம். இனி அவனால் உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது"




இப்போ வலி இருக்கா?" அக்கறையாய் சத்யா கேட்க, "ம்ஹீம்.. சுத்தமா இல்லை. கிளம்பலாம்னு சொல்லிட்டாங்க.. நான்தான் மீனலோசனி மேடமை ஒருமுறை பார்த்திட்டு போகலாம்னு வெயிட் பண்றேன்."



"என்னென்னவோ ரீசன் சொல்லி உட்கார்ந்துகிட்டு இருக்கா சத்யா அக்கா..இன்னும் கொஞ்ச நேரத்தில் செக்யூரிட்டி வந்து நம்மை வெளியே அனுப்பிடுவார்.."



"ரொம்ப டயர்டா தெரியுற மனோ.. காபி குடிக்கிறியா?"



இதில் கொஞ்சம் நேரத்தைத் தள்ளலாம், "ம்.. ஓகே.." மனோ சம்மதமாய் தலையை ஆட்ட, சித்தார்த் எழுந்தான், "நீங்க பேசிக்கிட்டு இருங்க.. நானும் உன் தம்பியும் காபி வாங்கிட்டு வர்றோம்" என்று சித்தார்த் முன்வர, செழியன் அவனோடு நடக்க ஆரம்பித்தான். கண்களாலேயே ஏதோ சைகை செய்தபடி கிளம்பிய சித்தார்த்தைப் பார்த்த மனோ ஆயாசமாய் கண்களைச் சுழற்றி, பெருமூச்சு ஒன்றை வெளியிட்டாள். "என்னாச்சி மனோ?"



"ஒரு பொண்ணு காயம்பட்டு படுத்திருக்கிறேன். இப்போ போய் காதலுக்கு தூது பேசச் சொல்லி ஒருத்தர் சிக்னல் காட்டிட்டுப் போறார்"



"காதலுக்கு தூ.. "கேள்வியாய் ஆரம்பித்த சத்யா சட்டென்று நிறுத்தினாள். முகம் கன்ற, "மனோ.. ப்ளீஸ்.. இதிலே எதுவும் சொல்லாதே?"



"ஏன் சொல்லக் கூடாது?" கால்களை கட்டிலிலிருந்து தொங்கப் போட்டு சத்யாவை நேர்ப்பார்வை பார்த்தவள், தொடர்ந்தாள், "ஏன் இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்லு. அதற்கப்புறம், நான் இதைப் பற்றி பேசலாமா வேண்டாமான்னு சொல்றேன்."



"மனோ.. ப்ளீஸ்.."



"சத்யா.. எதுவும் இல்லைனா எத்தனை வருஷம் னாலும் சித்தார்த் காத்திருக்கத் தயார். ஆனால் இப்போது, வீட்டில் ஹைதராபாத் போக சொல்லி கேட்கிறாங்க. விட்டுட்டுப் போக முடியாது. கல்யாணம் ஆனால் உரிமையாய் கூப்பிட்டுப் போகலாமேன்னு கேட்கிறார். அவர் கேட்பதில் என்ன தப்பு?"



"எனக்கு கில்டியா இருக்குமே மனோ.."



" எனக்காகத்தான் பிரிஞ்சிருக்கீங்கன்னு நினைக்கும்போது, எனக்கு கில்டியா இருக்குமே சத்யா.."



"அதெல்லாம் முடியாது..உன் கல்யாணத்தின் போதுதான் எனக்கும் கல்யாணம்.."



"சினிமாவில்தான் நடக்கும்.."



"இதுவரை நடந்ததில் நிறைய அப்படிதானே இருக்கு.. அதுமட்டுமில்லாம, எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.. அது மட்டும் உண்மைன்னா, ஒரே நாள் மட்டுமில்லை, ஒரே மேடையிலேயே நடக்க வாய்ப்பிருக்கு.. " தானும் மனோவின் கண்களை நேராகப் பார்த்து கேட்டாள், "என்ன மனோ.. சான்ஸ் இருக்கா?"



"என்ன சான்ஸ்.. எனக்குப் புரியலையே?" முடிந்தவரை முகத்தை நேராக வைத்தபடி பதில் சொன்னவளைச் சந்தேகமாகப் பார்த்தபடி, "நிஜமாகவா? எனக்கென்னவோ சிலநேரம் ஆதி சாருக்கும் உனக்கும் இடையில் ஒரு வேவ் ஓடுற மாதிரி இருக்கு" சந்தேகமாய் கேட்டவளின் கைகளைப் பற்றி தன் இருகரங்களுக்கு நடுவில் வைத்து, "சத்யா.ப்ளீஸ்.. ஓகே சொல்லு.. எனக்காகக் தான் பிரிஞ்சிருக்கீங்கன்னா, அதைவிட எனக்குக் கஷ்டம் வேற இருக்கும்னு நினைக்கிறியா? நீ சந்தோசமாய் இருக்கிறதைப் பார்க்கும்போது எனக்கு எவ்ளோ சந்தோசமாய் இருக்கும் தெரியுமா? நான் சித்தார்த் சாரை லவ் பண்ணியிருந்தா கூட நீ ஃபீல் பண்ணலாம். சத்தியமாக லவ் பண்ணலை"



"நீ என்ன சொன்னாலும், உன்கிட்டேயிருந்து பறிச்சிகிட்டமாதிரி ஒரு ஃபீல் மனோ..என் சைட்ல இருந்தும் கொஞ்சம் யோசியேன்."




உதடுகளை ஒன்றோடொன்று அழுந்தப் பதித்தவள், அவன் அணைப்பு தந்த தைரியம் மனதின் ஓரத்தில் எட்டிப் பார்க்க, "ம்.. ஒரு டீல் போடலாம்.. நீ கல்யாணத்திற்கு ஓகே சொல்லு. இன்னும் உங்க வீட்ல சொல்லி, அவங்க வீட்ல சொல்லி, கல்யாணம் முடிவாகி எவ்ளோ நாள் இருக்கு. அதுக்குள்ளே, நான் எப்படியாவது கஷ்டப்பட்டு, உன் கல்யாணத்திற்கு ஜோடியாக நிற்கிறேன். ஓகே வா?"



"நீ சும்மா சொல்ற?.."



"நான் என்றைக்காவது உன்கிட்ட பொய் சொல்லியிருக்கிறேனா சத்தி? ம்.. சொல்லு.. சித்தார்த்தும் பாவமில்லையா.. எந்த தடையும் இல்லாதபோது உன்னோடு ஹைதராபாத் போகனும்னுதானே அவர் ஆசைப்படுவார். அதுமட்டுமில்லாமல், ‌என்னையும் டார்ச்சர் பண்றார்..மதியானத்திலிருந்து ஒரே புலம்பல். அப்போவே என் ரூமுக்கு வந்து ஒரு மணி நேரம் பேசினார்‌. இப்போ பிரிஞ்சா, அதுவே நிரந்தரமாகிடுமோன்னு பயப்படறார்மா "



எதுவும் சொல்லாமல் சத்யா, குனிந்தபடி விரல்நகங்களையே ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, கதவைத் திறந்து சித்தார்த் மட்டும் உள்ளே வந்தான். "செழியன் மீனலோசனியைப் பார்க்கப் போயிருக்கிறான்" என்றபடி காபிக் கோப்பையை இருவரிடமும் கொடுத்துவிட்டு நின்றவன், மனோவிடம் புருவம் உயர்த்தி கண்களால், "எப்படி போனது பேச்சுவார்த்தை" என்பது போல் கேள்வி கேட்க, மனோ சிரித்தபடி கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள். அவ்வளவுதான். சித்தார்த்தின் முகத்தில் அத்தனை சந்தோசம். "வாட்.. நிஜமாகவா? உண்மையாகவா சொல்ற மனோ?"



"ஒரே கேள்வியை எப்படி கேட்டாலும் அதே பதில்தான் சித்தார்த் சார்.. மேடம் ஓகே சொல்லிட்டாங்க.."



"நான் சொல்லவேயில்லையே"



"என்கிட்ட ஏன் சொல்லனும். சார்கிட்ட சொல்லிடு.. நான் போய் மீனலோசனியை பார்த்து விட்டு வந்திடுறேன்.‌" என்றபடி மனோ எழுந்து சித்தார்த்தின் முன் தன் வலக்கையை நீட்டி, "கங்கிராட்ஸ் சார்.. பெரிய ட்ரீட்டாகக் கொடுக்கனும்" என்றாள்.



வலக்கையால் அவள் கையைப் பற்றிய சித்தார்த், "ஒரு வாரமாய் இதுக்குதான் மனோ போராடிக்கிட்டு இருக்கேன். புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாளேன்னு கோபம் கூட வந்தது." சொன்னவன் இடக்கையை அவள் தோளோடு சேர்த்து அணைத்து, "தேங்க்யூ சோ மச்" என்க, அந்த நேரத்தில்தான் நம்ம ஆதி என்ட்ரி கொடுத்தது.



காலையிலிருந்து அவன் மனம் முழுக்க மனோவே நிறைந்திருக்க, வெவ்வேறு நிகழ்வுகளில், நினைவுகளில் அவன் சித்தார்த்தை கிட்டத்தட்ட அல்ல, முழுதாகவே மறந்தே போயிருந்தான். இப்பொழுது, இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த குறளில் வள்ளுவன் சொன்ன, 'தன் நோய்க்குக் தானே மருந்து' என்பதற்கு சரியாய், மதியம், சித்தார்த்திடம் தான் விரும்புவதாகச் சொல்லிவிட்டாளா என்ற பயம், அதன்பின் மனோவிற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று இதுவரை அறிந்திராத நடுக்கம், அடுத்து தன் முதல் தீண்டலில் உயிர்வரை ஊடுருவியவளுக்கான ஏக்கம் என்று அவன் அனைத்து தடுமாற்றங்களுக்கும் அவள் முகமும், பார்வையும், அருகாமையுமே மருந்தாக அவனுக்குத் தேவைப்பட்டன. அந்த சிறு அணைப்பில் மனதில் தோன்றிய தீப்பொறி இன்னும் இன்னும் என்று கேட்டுக் கொண்டேயிருந்தது.




அடி ஆழமில்லை என்று மருத்துவமனையில் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். ஆனாலும் அவனுக்கு தன் கண்ணால் பார்க்க வேணடும். எதையுமே யோசிக்காமல் மனோவைப் பார்ப்பதே குறிக்கோளாக வந்தவனுக்கு, அவன் கண்ட காட்சியில், ஹைவேயில் நூறு கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கும் ஒருவன், முன்னே சட்டென்று ஒரு வண்டி வந்தால், கால்கள் ப்ரேக்கை அழுத்தி, , உடலும் உள்ளமும் குலுங்கியபடி அதிர்ச்சி மாறாமல் உறைந்திருப்பானே, அப்படிதான் உறைந்துநின்றான். தன்னைப் பார்த்ததும் இயல்பாக இருவரும் பிரிவது மனதில் பதிந்தது.



அவள்‌ இயல்பாகத்தானே இருப்பாள்?அவள் ஏன் பயப்பட வேண்டும். அவளுக்கு என்றுமே அவன் ஆதி சார்தானே. எம்.டி. அதை மீறி அவள் என்றுமே அவனிடம் பழகியதில்லையே. காரில் அன்று பேசியது, அவளோடு யாராயிருந்தாலும் அப்படி சுவாரசியமாகத்தான் பேசியிருப்பாள். அவள் அப்படி பேசும் போது , யாராயிருந்தாலும் அவள், வீடு வந்து விடுமோ என்று இருக்கின்ற எல்லா தெருக்குள்ளும் புகுந்துதான் செல்வான்..



ஆனால் எனக்கு அவள் யாரோயில்லையே?.. இப்படி வலிக்குமா? அலைகள் அப்படியே நின்றன.. காற்று நிற்க, அசையும் மரக்கிளைகள் அப்படியே நின்றன. இதயம் உடைந்தது, என்றெல்லாம் அதிர்ச்சி தரும் நிகழ்வுகளை வர்ணிப்பதைப் படித்திருக்கிறான். இதில் எந்த உவமையுமே அவன் அனுபவிக்கும் வலியை, முழுதாகச் சொல்லவில்லையே.

..



இருள் சூழ்ந்த அறைக்குள் இருப்பவன் உள்ளேயே சுற்றி சுற்றி வருவது போல், தன் எண்ண அலைகளுக்குள் சிக்கிக் கொண்டதைப் போல் உணர்ந்த, ஆதி நிமிர்ந்தான், 'நோ.. ஆதி.. நோ எமோசன்ஸ்.. ஒன்லி லாஜிக். எஸ். நான் மனோவை லவ் பண்ணுறேன். அவள் என்னை லவ் பண்ணலை. இப்போது என்ன செய்ய வேண்டும். இனி இன்னொருவனோடு, இன்னொருவனுடையவளாக, அவளைப் பார்க்க முடியாது. ஒரே தீர்வு, க்ளீன் கட்.. அதுதான் சரி..அதை எப்படி செய்வது?"



ஆதி நிச்சயம் வருவான் என்று எதிர்பார்த்திருந்த மனோவிற்கு அவனைப் பார்த்ததும் மனமும் முகமும் பூவாய் மலர்ந்தது. "வாங்க.. வாங்க ஆதி சார்"



"ஏன் மனோ என்கிட்ட சொல்லவில்லை?"



ஆர்வமாய் வரவேற்றவளிடம் இறுகிய குரலில், அவன் கேட்க மனோவிற்கு ஒன்றும் புரியவில்லை. எதைச் சொல்லவில்லை? எதைப் பற்றி கேட்கிறான்? ஏன் இப்படி கோபமாகக் கேட்கிறான்? "எதை சார்?"



"ஒன்னும் தெரியாத குழந்தை மாதிரி பேசாதே மனோ"



அவனது கோபமான குரலில் மனோ சற்று அதிர்ந்தாள். இந்த குரல், இந்த தொனி இதுவரை மனோ ஆதியிடம் அறிந்திராதது. ஆதி யாரிடமாவது கோபப்பட்டாலும், அது அடக்கப்பட்டு வெளிப்படுத்துவதாயிருக்கும். தாம் தூம் என்று யாரிடமுமே குதிக்க மாட்டான். இப்போது இப்படி கத்தும் அளவிற்கு என்ன நடந்தது?



"ஆதி.. என்ன ஆச்சி? ஏன் இப்படி பேசுற?"



"நீ இதில் தலையிடாதே சித்தார்த்.. ஸ்டுபிடிட்டிக்கும் ஒரு அளவு இருக்கு.. நானும் பார்த்துகிட்டே இருக்கேன்.."



யாரைப் பார்த்து ஸ்டுப்பிட் என்கிறான்? எதற்கும் ஒரு எல்லை உண்டு. மனதிலிருப்பவனே என்றாலும் மரியாதை இல்லாமல் பேசினால் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா? மனோ தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்தாள், "யார் சார் அப்படி அளவில்லாத ஸ்டுபிடிட்டியோடு இருப்பது?"



"அது யாருன்னு தெரியாததுதான் ஸ்டுபிடிட்டி!"



"ஆதி.."



"விடுங்க சித்தார்த் சார்.. அவர் என்ன சொல்றாரோ சொல்லட்டும். நான் என்ன செய்தேன்?"



தன் பான்ட் பாக்கெட்டிற்குமள், கைகளை நுழைத்து, கால்களை சற்றே விரித்து மனோவைத் தீர்க்கமாகப் பார்த்தவன், "ஏன் சிவாவைப் பற்றி என்கிட்ட சொல்லலை. அதனால் தானே இப்போ இவ்வளவு பிரச்சனையும்?"



"அதுதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே.? இதில் என்ன பிரச்சனை?"



என்ன பிரச்சனையா? உலகமே இடிந்தது போல இருக்கிறது, என்ன பிரச்சனையா? ஆனால் எந்த பிரச்சனையை இவளிடம் சொல்வது? யோசித்தவனுக்கு இதுதான் வந்தது, "மீனலோசனிக்கு அடிபட்டிருக்கிறது. அவள் யார்னு தெரியுமா?"



அவ்வளவுதான்.. எல்லாமே முடியப்போகிறது, மனம் கேட்காதே கேட்காதே என்று பதற கேட்டாள், "யார் சார் மீனலோசனி?"



"எங்க வீட்டில் எனக்காகப் பார்த்திருக்கும் பெண்.."மனோ பயந்த பதில்தான். ஆனால் அவன் வாய் வார்த்தையாகவே கேட்டதும், உள்ளத்தின் பதற்றம், பயம் எல்லாம் ஆழ்ந்து கோபம் மட்டுமே கொதித்து மேலே வந்தது, "நான் என்ன செய்திருக்கனும்?"



"என்கிட்டே சொல்லியிருக்கனும்..இப்போ அவளுக்கு அடிபட்டிருப்பதற்கு நான் எத்தனை பேருக்கு பதில் சொல்லனும் தெரியுமா?" "



"சேர்மேன்தான் சொல்ல வேண்டாம்னு சொன்னார்.."



"அவரா உன்னை அப்பாயின்ட் செய்தார்?"



"இப்போ என்ன செய்யனும்னு சொல்றீங்க?"



"இனி எதுவும் சொல்ல இல்லை மனோ.. யூ ஆர் ஃபயர்டு.. நீ நாளையிலிருந்து வேலைக்கு வரவேண்டாம். உன்னுடைய இந்த மாதத்துக்கான பத்துநாள் சம்பளம் வீடு தேடி வரும்.."



உதடுகளை கேலியாக வளைத்து, "நீங்க யார் சார் என்னை வரவேண்டாம்னு சொல்றதுக்கு.. நானே சொல்றேன். இன்றைக்கோடு நான் என் வேலையை ரிசைன் பண்றேன். குட்பை!" அப்போதுதான் உள்ளேவந்த செழியனின் கரங்களைக் பற்றியபடி, "வா.. செழி.. போகலாம்" என்றபடி வெளியேறினாள்.
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி 19


12010



பூர்ணிமா டீவியில் ஓடிக்கொண்டிருக்கும் அவதார் படத்தையும் அதைக் கண்கள் தட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் தன் மகளையும் பார்த்தார்.



மனோ ரொம்பவுமே துடிப்பான பெண். சிறுவயதிலிருந்தே அவள் இருக்கும் இடத்தில் சிரிப்பு சத்தமோ, வாக்குவாதமோ இதில் இரண்டில் ஒன்று கேட்டுக் கொண்டேயிருக்கும். இன்னும் ஏதாவது, இன்னும் ஏதாவது என்று துறுதுறுத்துக் கொண்டேயிருப்பாள். கண்களில் எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றிய ஒரு கனவு, எதிர்பார்ப்பு இருக்கும்.



இப்போது.. இப்போதும் எப்போதும் போல் மனோ பேசுகிறாள். எல்லோரிடமுமே கலகலப்பாகவே பேசுகிறாள். ஆனால் கண்களில் அந்த உயிர்ப்பு இல்லை. நீங்கள் யாருமே இப்போது இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு பரிதவிப்பு இருப்பது போலவே ஒரு தோற்றம்.‌. சகஜமாகப் பேசிக் கொண்டிருக்கும்போதே ஏதோ ஒரு தொடரில் திணறி, அதற்குப்பின் சொல்வதை சட்டென சொல்லி ஒதுங்கி விடுகிறாள். சற்றே கவலையுடன் தன்னைத் தொடரும் தாயின் பார்வை கருத்தில் பட்டால், உட்கார்ந்து ஒரு இன்னும் ஒரு கால்மணிநேரம் உட்கார்ந்திருந்தது விட்டு விலகிச் சொன்னாள்.




இப்போது இந்த படமேயாகட்டும்.., இந்த படம் பார்த்தால் எப்படியும் அன்னை திட்டுவாள் என்று தெரியும்‌, ஆனாலும் , கொஞ்சம் நேரத்தில் பூர்ணிமாவைக் கூப்பிட ஆரம்பித்து விடுவாள், "பாருங்கம்மா.. இந்த மனுசங்களை..எவ்ளோ செல்ஃபிஷா இருக்காங்க இல்லை! என்பாள். கண்கள் கலங்க சிறிது நேரம் அமர்ந்திருப்பாள்.. 'இப்படிதாம்மா, பூமியிலும் நிறைய அந்தந்த நிலத்துக்கு உரிமையானவங்களிடமிருந்து நிலத்தைப் பறிச்சாங்க' என்பாள். இப்படி ஏதாவது ஒரு கமென்ட் ஆங்காங்கே வந்துகொண்டே இருக்கும். ஒரு படத்தை நூறாவது முறையாக பார்க்கும்போதுகூட எப்படி இப்படி சுவாரசியமாய்ப் பார்க்க முடியும் என்று பூர்ணிமாவிற்கு ஆச்சர்யம்தான். இன்று? இன்று படம் ஆரம்பித்ததிலிருந்து சத்தமே இல்லை. கண்கள் திரையை விட்டு அகலவுமில்லை.. சும்மா என்றால் இப்படி பார்த்துக் கொண்டிருப்பதற்கு இந்த நேரம் ஒரு திட்டு திட்டியிருப்பார், இத்தனை பெரிய பெண் கார்ட்டூன் படம் பார்ப்பார்களா என்று பொதுவாக ஆரம்பித்து, இதெல்லாம் என்ன மூஞ்சிங்கன்னு இதைப் பார்க்கிறியே என்று முடிப்பார். இன்று எதுவுமே சொல்லவில்லை. ஏனென்றால் அவள் இந்த படத்தையே பார்க்கவில்லை என்பது அவருக்கு தெரியும். இப்படி அமர்ந்திருப்பதே, தனக்காகத்தான் என்பதும் பூர்ணிமாவிற்குத் தெரியும்.





அவள் மனதிற்குள் என்ன குழப்பம். என்று இதுநாள்வரை அவள் சொல்லவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னால், பூர்ணிமாவும் கணேசனும் என்றுமில்லாத அதிசயமாய் கோயிலுக்குப் போயிருந்தார்கள். கடவுளைத் தரிசனம் செய்து வெளியே வந்த போது, 'மனோவிற்கு அடிபட்டு விட்டது, சின்ன காயம்தான். பயப்பட வேண்டாம். ." என்று செழியன் ஃபோனில் சொன்னபோது, உயிரைக் கையில் பிடித்தபடிதான் ஒரு மணிநேரம் பயணம் செய்தார்கள். அன்று மாலை, அவர்களுக்கு முன் வீட்டுக்கு வந்திருந்தவளைப் பார்த்து பதறி, நடந்த கதையெல்லாம்‌கேட்டு அந்த அதிர்ச்சியிலிருந்து இவர்கள் மீண்டு வரவே அவர்களுக்கு அவகாசம் தேவைப்பட்டது. அன்று இரவே,"வேலையை விட்டுவிட்டேன்மா.. வேறு வேலை தேடிக் கொள்கிறேன்" என்று மனோவே ,சொன்ன போது, இருவருமே, 'நல்லதா போச்சு'என்றுதான் நினைத்தார்கள். இப்படி கரம் வைத்து பிடிக்கும் ஒருவன் இருக்கும் இடத்திற்கு அனுப்ப பூர்ணிமாவிற்கே விருப்பமில்லைதான். அவனில்லையென்றால் அவன் கூட்டாளி இருப்பானே. "சரிம்மா.." என்று சொல்லிவிட்டார்.



ஆனால் அடுத்து வந்த நாட்கள்தான் பூர்ணிமா செய்வதறியாமல் மலைத்த நாட்கள். பொதுவாக, மனோ எப்போதாவது டல்லாக இருந்தால் காவ்யனும் செழியனுமே அவளை சகஜ நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள். அவர்களால் முடியாத பட்சத்தில் கணேசன் சரி செய்து விடுவார்‌. அதுவும் முடியாத பட்சத்தில் அவள் தோழிகளுக்கு சொன்னால், அவளை வெளியே கூட்டிப் போய் சிரித்தபடி அனுப்பி வைத்து விடுவார்கள். இந்த முறையும் ஒவ்வொரு படியாக முயற்சி செய்தார். முதல் இரண்டு படிகளும் தோல்வியடைய, மூன்றாவது படியாக, சத்யாவிடம் சொல்ல, சத்யா கூப்பிட்ட போது, அன்னையின் முகத்திற்க்காகத்தான் கிளம்பிச் சென்றாள். ஆனால் போய் வந்தவள் முன்னே விட சோர்ந்து படுத்துவிட பூர்ணிமாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. "சித்தார்த் காரணமா?"என்று கணேசன் கேட்டதற்கு, "அப்பா.. சித்தார்த் எனக்கு நல்ல ஃப்ரெண்ட்.. இனி இப்படி பேசாதீங்கப்பா" என்க அத்தோடு அந்த பேச்சு நின்றது.




போனவாரம் சத்யா அந்த சித்தார்த் தோடு வந்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய போது, பூர்ணிமாவிற்கும் மகிழ்ச்சிதான். கண்களுக்கும், கருத்திற்கும் அந்த இருவரும் ஒருவருக்கேற்ற ஒருவராய் தெரிய மனதார வாழ்த்தினார்.



வேலையை விட்டு கிட்டத்தட்ட

இரண்டு மாதங்கள் ஆகப்போகின்றன. ஆனாலும் இன்னும் சகஜ நிலைக்குத் திரும்பாமல் இருக்கும் மனோவை கண்களில் கவலையுடன் பூர்ணிமா கவனிக்க ஆரம்பித்தார். . இன்டர்வியூவிற்கெல்லாம் போகிறாள். வருகிறாள். "என்ன ஆச்சும்மா?" என்றால், ஏதாவது ஒரு காரணம், சம்பளம் கம்மி, வேலை நேரம் அதிகம், சேலஞ்சிங்காக‌இருக்காது என்று‌ ஒவ்வொரு முறையும் ஒரு காரணம்.‌போனமுறை,' தூரமாக இருக்கிறது‌' என்று சொல்லும்போது பூர்ணிமா புருவங்கள் உயர்த்த, எதுவும் சொல்லாமல் குனிந்தபடி போனாள். பின்னே, இரண்டு‌மாதங்களுக்கு முன்பு வரை ஒரு மணி நேரம் ட்ரெயினில் போய் வந்தாயே என்று அன்னை கேட்டால் என்ன சொல்வாள்.



முதலில் அந்த கடத்தல் முயற்சியிலிருந்து வெளிவர கஷ்டப்படுகிறாளோ என்று அதன்பின் நடந்ததை அவளிடம் சொன்னார்கள். தட்டிக் கேட்ட தாயையே சதீஸ் தாக்க, உலகநாதன்‌. சாரே போலிஸில் கேஸ் போட, அவன் சிறையில் இருப்பதை மனோவிடம்‌ சொன்ன போது, "ஓ.. அப்படியா"என்றதோடு கடந்து விட்டாள்.




என்னதான் பிரச்சனை இந்த பெண்ணுக்கு. கேட்டால் சொல்லிவிடுவாள். பெரும்பாலும் கேட்காமலேயே சொல்லிவிடுபவாள். எதை மனதிற்குள்ளேயே வைத்துக் குடைந்து கொண்டிருக்கிறாள். முந்தைய வேலையைப் பற்றி பேசினால் ரொம்பவே சோர்ந்து விடுகிறாள்‌ என்று தெரிந்ததால் அதைப் பற்றி பேசுவதில்லை. வேலையை ஏன் விட்டாள், என்று சத்யாவைப் பிடித்துக் கேட்டதில் அந்த‌ ஆதிப்பையனுக்கும் அவன் தாத்தாவிற்கும் நடக்கும் பிரச்சனையில் தேவையில்லாமல் மனோ மாட்டிக் கொண்டாள் என்றாள். மனோ சொல்வது போல் ரொம்பவும் கர்வமானவனாகவெல்லாம் இல்லை‌‌ அந்த ஆதி, நல்ல பையனாகத்தான் தெரிகிறான் என்றுதான் பூர்ணிமா அன்று பார்த்து பொழுது நினைத்திருந்தார். அப்படி இல்லை போல‌.. பின்னே சேர்மேன் சொல்லாதே என்றால் இவளால் எப்படி சொல்லமுடியும்‌. அதனால் கோபமாகப் பேசினான், மனோவிற்கும் கோபம்வர வேலையை விட்டு வந்துவிட்டாள் என்று சொன்ன போது, சபாஷ்! என்று தான் மனதிற்குள் மகளைப் பாராட்டினார்.




கணேசன், "அவள் எப்போதும் போலத்தான் இருக்கிறாள் பூர்ணிமா.. நீதான் ஏதோ கற்பனை செய்து கொண்டிருக்கிறாய்.." என்ற போது பூர்ணிமாவிற்கே அப்படிதானோ என்று சந்தேகம் வந்துவிட்டது. ஆனால் அந்த சந்தேகம் எல்லாம் சில மணி நேரங்களுக்கு முன்னால் போய்விட்டது.



மதிய நேரம் ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்த போது, மனோ வந்து மடியில் படுத்தாள். முன்பு எப்போதாவதாகவும், இப்போதெல்லாம் அடிக்கடி நடப்பதாகவும் ஆகிவிட்ட இந்த செயலில், எப்போதும் போல் தாய்மனம்இளக, அவள் படுக்க வாகாய் கால்களை வைத்துக் கொண்டு தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார். சில கணங்களில் மனோவின் சத்தம் மெல்லியதாகக் கேட்டது, " "அம்மா.. நான் பெங்களூர் வேலை ஒன்றுக்கு இன்டர்வியு அட்டென்ட் பண்ண போகிறேன்.."



"இங்கே இன்னும் கொஞ்சம் நாள் ட்ரை பண்ணும்மா" என்று யோசனையாய் கூறினார்.



"இங்கே இருக்கவே முடியலைம்மா.. முடிஞ்ச அளவிற்கு தூரமாய்ப் போகனும்னு தோனுது"



யாரிடமிருந்து தூரமாகப் போக வேண்டும்? கவனமாக தன் கையிலிருந்த புத்தகத்தைக் கீழே வைத்தவர், தன் கரத்தால் மெல்ல அவள்‌தலையை வருடியபடி, " ஆதி வீட்டில் அப்பாவைப் பேச சொல்லவா மனோ?" என்றார். "ம்கூம்" என்று இடம்‌வலமாய் தலை அசைத்தவள்,



சில நிமிடங்களில் தலை. நிமிர்ந்த போது, அவள்‌ கண்கள் கலங்கியிருக்க. தாய் மனம் சுருக்கென்றது., எதுவும் சொல்லாமல், போய் முகம் கழுவி வந்தவள்தான், "இந்த படத்தைப் போட்டுக் கொண்டு கொட்ட கொட்ட விழித்தபடி இமைகள் தட்டாமல் டீவியின் திரையையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். யார் பிரச்சனை என்று தெரிந்து விட்டது. என்ன பிரச்சனை? அதன் தீர்வு என்ன?







"ம்.. ஓகே சார்" என்றபடி எழுந்து கதவைத் திறந்து தன்னறையை விட்டு வெளியே வந்தாள். அன்று கம்பெனிக்குள் நுழையும்போதே எல்லோர் முகத்திலும் பளிச்சென்று சந்தோசம் இருந்தது. இவர்கள் கட்டிடத்தின் ஹாலில் மாட்டியிருந்த பெரிய டீவியில் ஏ&எஸ் பைக்கிற்கான பல டீவி சேனல்களின்‌ ரிவீயுக்கள் 'ஆஹா ஓஹோ' என்று சொல்லிக் கொண்டிருந்தன. அந்த மாடல் வெளிவந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகி விட்டது. இன்னும் , ஹாட் சேல்ஸ்தான். தங்கள் வெற்றிக்கு ஊழியர்களை கௌரப்படுத்தும் விதமாக, நேற்று சின்னதாய் ஒரு விழா எடுத்திருந்தார்கள் . அதில் பேசிய ஆதியின் பேச்சுதான் இன்று எல்லோருடைய முகத்திலிருக்கும் சந்தோசத்திற்கும் காரணம்.



விழா மேடையில் ஏறி மைக்கைத் தனக்கேற்ற மாதிரி திருப்பிக் கொண்டவன், "எல்லோருக்கும் வணக்கம். நம்ம ப்ராஜெக்ட் நம்ம எல்லாரோட முயற்சிக்கும் சரியான பரிசாக அமைஞ்சிருக்கு. இந்த வெற்றிக்கு, இங்குள்ள ஒவ்வொருவரும் காரணம். இதை கம்பெனியின் பங்குதாரர்கள் மட்டுமில்லாமல் இந்த ப்ராஜெக்ட்டில் வேலை பார்த்த, ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில நடந்த ஒரு நல்ல நிகழ்வாக, நினைச்சு சந்தோசப்படனும்னு நினைக்கிறேன். சோ, இந்த மாதம் நம் கம்பெனியில் வேலை பார்க்கும் எல்லோருக்கும் ஒரு மாத சம்பளம் போனஸ் தரலாம் என மேனேஜ்மென்ட் முடிவு செய்திருக்கிறது" என்க கரவொலி காதைப் பிளந்தது.




ஆதியின் இந்த அறிவிப்பிற்க்குப் பின் ஏற்கனவே நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்த அந்த விழாவில் புது உற்சாகம்‌சேர்ந்து கொண்டது. நிறைய பேர் மேடை ஏறிச் பேசினார்கள். இரவு உணவு விநியோகம் ஒரு பக்கம் ஆரம்பிக்க, பாட்டு, நடனம் என்று மறுபக்கம் களைகட்டியது. கிட்டத்தட்ட முன்னே நடந்த கம்பெனி ஆண்டு விழா போலத்தான். அப்போதைக்கும் இப்போதைக்கும் ஆனால் மலையைப் போல் வித்தியாசம். அன்று சத்யாவோடு மனோ இருந்தாள். இப்போது இல்லை. ம்கூம்.. பெருமூச்சு ஒன்றை விட்ட சத்யாவிற்கு நேற்று மேடையில் எல்லோரும் ஆஹா ஓஹோ வென்று பாராட்டிய ஆதியைப் பார்க்கும் பொழுது கோபம் கோபமாய் வந்தது.




எப்போதும் மனோ ஆதியைப் பற்றி ஏதாவது குறையாகச் சொன்னால் சத்யா அவனுக்கு ஆதரவாகத்தான் பேசியிருக்கிறாள். அவனோடு பேசிப் பழகிய விதத்தில் அவனிடம் எப்போதும் ஒரு நியாயம் இருக்கும் என்று ரொம்பவே நம்பியிருந்தாள். ஆனால் அனைத்தையும் அன்று மருத்துவமனையில் கழுவிக் கொட்டி விட்டானே.. அவனுக்கும் அவன் தாத்தாவிற்குமான பிரச்சனையில் மனோவை ஏன் இழுக்க வேண்டும். மனோ சுயமதிப்புடையவள், "ஐ க்விட்!" என்று அங்கேயே சொல்லிக் கிளம்பி விட்டாள். இப்போது வேலை தேடிக் கொண்டிருக்கிறாள்.




அப்போதைக்கும் இப்போதைக்கும் நடுவில் உள்ள மற்றொரு வேறுபாடு, சித்தார்த். அன்றைய விழா, சித்தார்த்தோடான தன் காதலை சத்யா உணர்ந்திருந்த நேரம். குற்றக் குறுகுறுப்பால் எதிலுமே முழுமனதாகப் பங்குபெற முடியவில்லை. இப்போதானால், சித்தார்த்தோடு சேர்ந்து வாங்கிய சேலையைக் கட்டிக் கொண்டு, அவன் கண்களில் தெரிந்த காதலில் உள்ளம் மகிழ சுற்றி வந்தாள்.




வானத்தில் நைன்த் க்ளவுடில் மிதப்பது என்பார்களே அப்படிப்பட்ட இனிமையான மனநிலையில்தான் சத்யாவும் அன்றைய நாளைத் தொடங்கினாள். காலையில் சித்தார்த்தோடு நாளை தொடங்கி அவனோடு முடிப்பது எத்தனை சுகம். இன்னும் திருமணத்திற்குப் பின் அவனோடான நேரம் மாலையோடு முடியாமல் சுழன்று கொண்டே இருக்கும். அறையின்‌குளிரில், கைகளைப் பரபரவென தேய்த்து கன்னத்தில் வைத்துக் கொண்டவள் மெயிலை ஓப்பன் செய்தாள். . சித்தார்த்திற்கும் இன்று நிறைய மீட்டிங்குகள் இருக்கின்றன. . ஹைதராபாத் ஆலை ஆரம்பிப்பதற்கான வேலைகளைத் தொடங்கலாம் என்று சித்தார்த் பச்சைக் கொடி போன வாரம்தான் காட்டினான். சத்யா அன்று மருத்துவவமனையில் திருமணத்திற்கு ஓகே சொன்னதும், சில நாட்களில் சத்யாவின் வீட்டில் வந்து பேசினான். சத்யாவின் வீட்டினருக்கு சற்று தயக்கம்தான். ரொம்பவே பெரிய இடமாக இருக்கிறார்களே என்ன மலைப்பு இருந்தது. ஆனால் சித்தாரத்திடம் பேசி, அவனைப்பற்றி விசாரித்து என்று பல படிநிலைகளைக் கடந்து போனவாரரம்தான்‌ அவர்கள்‌ ஒத்துக் கொண்டனர். மனோ சிபாரிசு வேறு இருந்தது.



அன்று ஓகே சொன்னாலும் சத்யாவிற்கு மனதிற்குள் உறுத்தல் தான். மனோவின் வாழ்வைத் தட்டிப் பறித்து விட்டோமோ என்று. சில மாதங்களாவது போகட்டுமே என்று கேட்டாள். ஆனால் இந்த ஆதி, கிட்டத்தட்ட முடிவாகியிருந்த திருமணத்ததையே, வேலைக்கு இடைஞ்சலாயிருக்கும். இப்போதைக்கு வேண்டாம் என்று நிறுத்திவிட்டானாம். வீட்டில் எல்லோருமே ரொம்பவும் அப்செட். தன்னுடைய திருமணம், அதற்கான வேலைகள் என்று வந்தால் கொஞ்சம் சகஜ நிலைக்குத் திரும்புவார்கள் என்று சித்தார்த் புது காரணம் சொன்னான்.‌.




வீட்டிலிருப்பவர்கள் கவலைப்படக் கூடாது என்று ஆதியும் நினைக்க வேண்டும்தானே.. இத்தனைக்கும் அவனிடம் கேட்டு விட்டுதான் பெண் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். மனோ முன்னேயே சொன்னது போல் இந்த ஆதி கொஞ்சம் தலைக்கனம்‌பிடித்தவன்தான்‌போல. பாவம். அன்று அடிபட்டு ஹாஸ்பிட்டலில் இருக்கும் பெண்ணிடம்‌ எப்படி கக்தினான். ஆசை கொண்ட மனதின் பலனாக, மனோ ஆதி ஒருவரை ஒருவர் விரும்புகிறார்களோ என்றுகூட நினைத்திருந்த சத்யா தன் முட்டாள்தன்த்தை எண்ணி தன் தலையில் தானே குட்டிக் கொண்டாள். .




இன்று எல்லோரும் "ஆஹா! ஓஹோ!" என்றாலும் இப்போதெல்லாம்‌ ஆதி ரொம்பவும்‌மாறி விட்டான்‌ என்பதை எல்லோரும் ஒத்துக் கொண்டனர். . முகத்தை நேராகப் பாரத்தாலும் சிரிப்பதில்லை. வழியில் விஸ் பண்ணினால் பதிலுக்கு விஸ் பண்ணாமல் எங்கோ பார்த்தபடி போய் விடுகிறான். இந்த காலத்தில் அது போன்ற பழக்கங்களெல்லாம் அரிய வகைகளில் ஒன்றாகி விட்ட‌நிலையில், எப்போதும் அப்படிதான் இருப்பான் என்றால் யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை. திடீரென்று அவன் இப்படி ஆனதுதான் எல்லோர் கவனத்தையும் ஈர்த்திருந்தது. அவனுடைய டூ வீலர் ப்ராஜெக்ட் வெற்றிகரமாகப் போனதில் தலைக்கனம் ஏறி விட்டது போல.. ச்சீ ச்சீ.. . ஆதி அப்படியெல்லாம் கிடையாது. என்று சித்தார்த் சப்போர்ட்டுக்கு வந்து சத்யாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டான்.,.





"டொயிங்" என்று கைப்பேசி சத்தமிட எடுத்து பார்த்தவளின் முகம்‌ மலர்ந்தது. சத்யாவின் வீட்டில் ஓகே சொன்னதைக் கொண்டாட ஒரு சின்ன ட்ரீட்.. ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்வது... ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சித்தார்த் ஒரு சிறு ஹாலையே புக் செய்திருக்கிறான். .அதற்கான உறுதிப்படுத்துதலைத் தாங்கி வந்த குறுஞ்செய்தியைப் பார்த்து, மலர்ந்த முகத்தோடு, சித்தார்த்தை அழைக்க நினைக்க, புது அழைப்பு வந்தது, 'ஆதி காலிங்' என்று. இவன் ரொம்பவே இடைஞ்சல் செய்கிறான்..கண்கள் சுருக்கி கைப்பேசியின் திரை காட்டியை முறைத்தவள், எடுத்து அழைப்பை உயிர்ப்பித்தாள்,"ஹலோ!"




சத்யா.. நான் ஆதி பேசுகிறேன்.. கொஞ்சம் என்ரூமிற்கு வரமுடியுமா?"





ஏதோ சொல்லி பார்த்து வைத்து சொன்னவனைப்போல, அழுத்தம் திருத்தமாக அடுத்தடுத்த வார்த்தைகளைப் சொன்னவன், ஃபோனை வைத்து விட்டான்.. தன் கையில் இருந்த பேசியை சந்தேகத்தோடு பார்த்த சத்யா தோள்களைக் குலுக்கிக் கொண்டு தன் கைப்பேசி, இத்யாதிகளோடு அவன் அறையை நோக்கிப் போனாள்.






அவன் அறையின் கண்ணாடிக்கதவை மரியாதை நிமித்தமாக தட்டி உள்ளே செல்ல, ஆதியின் கண்கள் கணினியின் திரையில் இருந்தன.



"குட்மார்னிங் சார்"



"ம்..‌" என்று அவள்‌முகத்தைப் பார்த்து சொன்னவன் கண்கள் மீண்டும்‌ கணினித் திரைக்குப்‌போயின. அதிலேயே எதையோ தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். எதற்காகக் கூடப்பிட்டிருக்கிறான். அவன் முகத்தைத் கூர்ந்து பார்த்த சத்யாவின் கண்கள் விரிந்தன. அவன் அந்த கம்ப்யூட்டரைப் பார்க்கவில்லை. அதாவது கம்ப்யூட்டர் காட்டும் செய்தியைப் பார்க்கவில்லை. தான் கேட்க வருவதை எப்படி கேட்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் தோற்றம்.. கண்களில் சின்னதாய் ஒரு பதற்றம்.


திரையிலிருந்து கண்களை நிமிர்த்தி சத்யாவைப் பார்த்தவன், கண்களில் கவனத்துடன் தன்னை உறுத்துப்‌ பார்த்துக் கொண்டிருந்த சத்யாவைப் பார்த்ததும் முகம் கன்றினான். அதைப் பார்த்த சத்யாவிற்கு இன்னமும் ஆச்சர்யமாகப் போயிற்று. அவள்‌இந்த கம்பெனியில் வேலை‌செய்யும் மூன்று வருடங்களில் இது போல் முடிவெடுக்க முடியாமலோ, என்ன சொல்வது, எப்படி சொல்வது என்று திணறுவது போலவோ ஒரு சூழ்நிலையில் ஆதியைப் பார்த்ததேயில்லை எனலாம். தலைக்கனம் என்றில்லாமல், எல்லாமே எனக்குத் தெரியும், அப்படி தெரியாமல் ஏதாவது இருந்தால் சொல்.. இப்போது தெரிந்து கொள்கிறேன்‌.. என்று சொல்வதைப் போன்ற உடல் மொழியோடு, ஒரு தன்னம்பிக்கை அவனைச் சுற்றி உருவமின்றி அவனோடிருப்பது, எப்போதுமே அவனோடு பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு தெரியும். . அப்படிப்பட்டவன் ஏன் இன்று தயங்குகிறான்?



சத்யா தன்னை ஆச்சர்யமாகப் பார்ப்பதை பார்ததவன், "நம்ம ஹைதராபாத் ப்ராஜெக்ட் ஸ்டேட்டஸ் கேட்கத்தான் கூப்பிட்டேன். " என்றான். ஊரிலிருக்கும் பத்ரகாளியம்மன் சத்தியமாக அவன் இதற்காகக் கூப்பிடவில்லை. ஆனாலும் அக்கறையாக தன் பதிலைச் சொன்னாள், "லேண்ட்‌ டீல் முடிஞ்சிடுச்சி சார். இதற்கு மேல் சில அப்ரூவல்கள்‌ மட்டும் பாக்கியிருக்கு"




""ம்ம்.." என்று‌தலையை மேலும் கீழும் ஆட்டியவன், மீண்டும் கணினிக்கு தன் பார்வையைத் கொண்டுபோனான். இதற்கு மேல் பொறுமையில்லை எழுந்து விடலாம் என்று சத்யா யோசித்த நொடியில் , "மனோ எப்படி இருக்கிறா? வேறு வேலையில் ஜாயின் பண்ணிட்டாளா?" என்ற குரல் கேட்டது. அவன் பார்வை இன்னும் கம்ப்யூட்டரில் தான் இருந்தது.




ஓ.. இதுதானா விஷயம். குற்றவுணர்வு. செய்யாத தவறிற்கு அவளைப் பழி சுமத்தி வேலையிலிருந்து நீக்கி விட்டான். இப்போது வருத்தப்படுகிறான்.

நல்லவன் தான் போல.. சமாதானமாகவே பேசலாம்.. "மனோ ரொம்ப நல்லா இருக்கிறாள் சார்." அவன் முகம்‌போன விதத்தில் ஏதோ ஒரு வகையில் தனது பதில் சரியான பதில் இல்லை என்று‌தோன்ற, மேலே பேச வந்ததை நிறுத்திய சத்யாவிற்கு ஏற்கனவே மனதில் தோன்றி இவர்கள்‌ போட்ட சண்டையில் "சீச்சீ!இருக்காது!" என்று மூடிப் போட்ட சந்தேகம் மெல்ல தலை தூக்கியது. அவன் முகத்தையே ஆழப்‌பார்த்தபடி, "ஜாப்தான் இன்னும் எதிலும் ஜாயின் பண்ணவில்லை" என்றாள். அவன் முகத்தில் சின்னதாய் தோன்றிய வெளிச்சம், மனதிற்கு நம்பிக்கை தர அடுத்த வாக்கியத்தை இன்னும் சரியாக அமைத்தாள் "எப்படியும் வேலைக்கு சேர்ந்து பின் கல்யாணத்திற்காக உடனே விடனும், அதுதான் ஜாயின் பண்ண யோசிக்கிறான்னு நினைக்கிறேன்"



ஆதியின் முகம்‌ முழுக்க இறுக, அவன் கைகள் சிறிது நடுங்கியது போலத் தோன்றியது.. 'ஹுரே.." என்று கத்த வேண்டும் போல் தோன்றிய‌ மனதை சத்யா கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டிருக்க, ஆதியின் இலை மறை காய் மறைவாகக் கேட்க வேண்டுமென்று எடுத்திருந்த முடிவெல்லாம் வெள்ள நீரில் அடித்துப் போயிருக்க, சத்யாவை நேருக்கு நேராய் பார்த்து கேட்டான், "கல்யாணமா? சித்தார்த் ஓகே சொல்லிட்டானா?"



சித்தார்த்தா? அவன் எங்கே இங்கே வந்தான். ஓ.. சாருக்கு இன்னும் விஷயமே தெரியாதா?

"ம்? ம்.. ஆமாம்‌ சார்… இன்று சாயங்காலம் தான் சித்தார்த் ப்ரபோஸ் பண்ணப் போகிறார்..".

சும்மா என்றால் சத்யா தடுமாறி பதில் சொல்வதை ஆதி சந்தேகப்பட்டிருக்கலாம். ஆனால் அது அவன் கண்ணிலும் கருத்திலும் பட வேண்டுமே...



"ப்ரபோஸா?" கண்களில் அடிபட்ட வேதனையுடன் கேட்டவனைப் பார்க்க சத்யாவிற்கு பாவமாகத்தான்‌இருந்தது. ஆனால், ட்ரீட்மென்ட் என்றால் கொஞ்சம் வலிக்கத் தானே செய்யும்.. "ஆமாம்‌சார்.." அந்த நட்சத்திர ஹோட்டலின் பெயரைச் சொல்லி, "அங்கேதான் ஒரு ஹாலையே புக் செய்திருக்கிறார்."




"ஓ.." என்று‌ மீண்டும்‌ கண்னியின் திரையைப் பார்த்தவன், சில நொடிகளின் பின் அவளைப் பாராமலேயே, ஓகே.‌ சத்யா. தேங்க் யூ.. யூ கேன் கேரி ஆன்.." என்க, சத்யா அப்பாவியாய் முகத்தை வைத்தபடி, "தேங்க் யூ சார்" என்று கிளம்பினாள்.




"நான் ஆதி கிட்ட அவனை லவ் பண்றேன்னு சொல்லப் போறேன்" தடாலென்று தன் அறையின் கதவைத் திறந்து வாசலில்‌நின்றபடி அறிவித்த மனோவின் குரலில் ஹாலில் அவரவர் வேலையில் ஈடுபட்டிருந்த கணேசன், பூர்ணிமா, செழியன், காவ்யன் நான்கு பேரும் சட்டென்று நிமிர்ந்து பார்த்தனர். "எனக்கு வேறு எங்கேயும் போக பிடிக்கலை. அவனுக்குக் கல்யாணம் ஆகி, அவனை நினைச்சுகிட்டே அந்த ஆஃபிசித் வேலை செய்யவும் முடியாது." யாரேனும் மறுத்து பேசிப் பாருங்களேன்‌ என்பது போன்ற சவால் விடும் பார்வையில் நின்றிருந்தவளிடம் அடுத்து என்ன பேசுவது, யார் பேசுவது என்று யாருக்கும் புரியவில்லை.



நான்கு பேரும் ஒருவரை ஒருவர் பார்க்க, கணேசன்தான் "எப்போம்மா சொல்லப்போற?" என்று திருவாய் திறந்தார். இதுவா கேட்க வேண்டிய கேள்வி? பூர்ணிமா முறைக்க, செழியனும் காவ்யனும் தலையில் அடித்துக் கொண்டனர், அவர் என்ன செய்வார் பாவம், அவருக்கு கேட்கத் தோன்றியதைக் கேட்டார். மனோவின் பதிலில் மீண்டும் ஒருமுறை தங்களுக்குள் பார்த்துக் கொண்டார்கள், "இப்போவே!"



"இப்போதா? இப்போ எங்கேம்மா இருப்பான்?"



"சத்யா மேரேஜ்க்கு வீட்டிலே ஓகே சொன்னதற்கு ட்ரீட் கொடுக்கிறார்களாம்.. காலையில் ஃபோன் பண்ணினாள். ஆபிசில் கொஞ்சம் நெருக்கமானவர்களையும் அழைத்திருக்கிறாளாம். மோஸ்ட்லி ஆதியும் வருவான் என்றாள்.. நான் போய் பார்க்க போகிறேன்"



சும்மாவேனும் எல்லாமே பறிகொடுத்தது போல சுற்றவதில் என்ன லாபம். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கேட்டுவிடுவதில் கணேசனுக்கும் சம்மதம் தான். ஆனால் இன்று சரிப்பட்டு வருமா? "ட்ரீட்னா கூட்டமாக இருக்குமே மனோ?"



"எப்படியாவது தனியாகப் பார்த்து சொல்லிவிடுகிறேன் பா"



ஆத்திரத்தில், அவள் தவறான விளைவுகளை யோசிக்காவிட்டாலும், அவளுக்கு அவற்றை நினைவுபடுத்துவது இவர்கள் கடமைதானே.. ஆனால் எப்படி சொல்வது.. செழியன் பேச ஆரம்பித்தான், "ஒரு வேளை நான் உன்னிடம் அந்த மாதிரி எண்ணத்தில் பழகவில்லை என்று சொன்னால்? என்று கேட்டான்.




"அவனை உறுத்து விழித்தவள், "இனி அந்த மாதிரி எண்ணத்தில் பழகிக் கொள்ளுங்கள" என்று சொல்லிவிடுவேன்." என்று விரைப்பாய் சொல்லி தன் கைப்பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பிவிட்டாள்..



அதே வீராப்போடு அந்த நட்சத்திர ஹோட்டலின் பின்புறமிருந்த பைக் பார்க்கிங்கில் தன் வண்டியை நிறுத்திவிட்டு சாவியோடு கிளம்பியவளுக்கு மெதுவாக பயம் எட்டிப் பார்த்தது.




இன்னும் கொஞ்சம் நல்லதாய் டிரஸ் பண்ணியிருக்கலாம். இளஞ்சிவப்பு நிறத்தில் பாட்டியாலா போட்டு மேலே, பச்சை வண்ண குர்தி போட்டிருந்தாள். தலையில் ஒரு ஹேர்பேண்டு.. அவ்வளவுதான். ஆனால் கிளம்பிய மனநிலையில் இதையெல்வாம் கவனிக்கவில்லை. இன்னும் எவ்வளவு தூரம் நடப்பது? காரில் வந்தால் மட்டும் வாசலில் இறங்கி வேலட் பார்க் செய்யலாம். டூ வீலரில் வந்தால் இவ்வளவு நடக்க வேண்டுமா? என்ன ஓரவஞ்சனை.. ஒரு முடிவோடு வந்திருப்பவர்கள், இத்தனை தூரம் நடக்கும்போது ஏதாவது யோசனையில் பயம்வந்து பின்வாங்கிவிட மாட்டார்களா?..




உள்ளே வந்து சத்யா சொன்ன ஹால் பெயரைச் சொல்லி கேட்க, அந்த மைக்ரோ ஹாலுக்கு வழி காட்டினார்கள். கதவைத் திறந்து பார்த்த மனோவின் கண்கள் யோசனையில் சுருங்கின. பெயர்தான் ஹால். ஆனால் ஒரு பெரிய அறையை ப் போலிருந்தது. இதில் எத்தனை பேர் அமர முடியும்? கொஞ்சம் பேரைதான் கூப்பிட்டிருக்கிறாளா? ஆதியைக் கட்டாயம் வர வேண்டும் என்று அழைத்திருந்ததாகச் சொன்னாள்.. ஆதி வருவானா? வந்தால் அவனிடம் என்ன சொல்வது? லவ் பண்ணுகிறேன் என்றா? ப்ளீஸ் ஆதி என்னை கல்யாணம் பண்ணிக் கொள் என்றா? நீ லவ் பண்ணவில்லை என்றாலும் பரவாயில்லை.. மீனலோசனியையும் லவ் பண்ணவில்லை தானே. இப்படி சொன்னால் என்ன சொல்லுவான்? எப்படி எதிர்வினையாற்றுவான்.. மனோவிற்கு பதற்றமாக வந்தது. இல்லை.‌ இப்போது இங்கே வந்ததே தவறா?. ஆதியைப் பார்ததால் என்ன சொல்வது என்று நன்கு பழகி, அமைதியான சூழ்நிலையில் அவனிடம் தன் மனதைச் சொல்ல வேண்டுமோ? இல்லை. இப்போதே.. இந்த நொடியே சொல்ல வேண்டும்..



பட்டென்று அந்த ஹாலின் பெரிய மனக்கதவு திறக்க, உள்ளே வந்தது ஆதி.. வெள்ளை சட்டையுடன் கருப்பு பேண்ட் அணிந்து, உள்ளே வந்தவன் அறையைச் சுற்றி ஒருமுறை பார்வையைச் சுழற்றினான். . ஓடி வந்தானா என்ன? மூச்சு வாங்க அவன் நெஞ்சம் மேலும் கீழும் இறங்க கண்ணிமைகள் தட்டாமல் அவளையே பார்த்தான்..



அதுவரை இருந்த தைரியமெல்லாம் ஆங்காங்கே ஒளிந்து கொள்ள, எப்படி சொல்வது.. நோ.‌ இது பயப்படும் நேரமல்ல.. நெஞ்சின் உரத்தையெல்லாம் சேர்த்து, மெல்ல தன் குரலை எழுப்பினாள், "ஆதி..நான்..ஐ மிஸ்டு யூ ஆதி"



கையை நீட்டி அவளைத் தன்னோடு‌ இறுக அணைத்தவன் , "அப்போ அவனுக்கு நோ சொல்லிடு மனோ.. ப்ளீஸ்.. நீ அவனை லவ் பண்ணலை.. புரிஞ்சிக்கோ மனோ.. என்னை லவ் பண்ணு.". சற்றே விலகி, அவள் கன்னங்கள் இரண்டிலும் கைகளை வைத்து முகத்தை ஏந்தியவன், "நாம லவ் பண்ணலாம். நீ இல்லாம என்னால இருக்க முடியாது மனோ.. ப்ளீஸ்.." என்று கண்களாலும் வார்த்தைகளாலும் யாசித்தான்.



மனோவின் நிலை என்னவென்று உங்களுக்கே தெரியும்.. கண்கள் முழுதும் காதலால் நிறைத்து, முகம் விகசிக்க, சிந்தனை எல்லாம் உறைந்துவிட இமைகள் தட்டாமல் அவனையே பார்த்தவளைக் கண்டவனின் இதயம் இறக்கை கட்டிப் பறப்பது போல இருந்தது. மனோ என்னைக் காதலிக்கிறாள். அவளையுமறியாமல் அவள் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் மட்டும் கன்னங்களில் இறங்க, அனிச்சை செயலாய் அந்த துளியை, அவள்‌ முகத்தை தாங்கிய தன் வலது கையின் பெருவிரலால் துடைத்தவன், அதே இடத்தில் தன் இதழ்களை அழுந்தப் பதித்தான். கண்களை இறுக மூடி, கால்கள் துவள, பற்றாய் அவனையே இறுகப்‌பற்றினாள்..



"டேய்.. இப்போதானேடா லவ்வை சொல்லியிருக்க.. உங்களைவிட‌ மூனு மாதம் நாங்க சீனியர். அதற்குள்ளே எங்களை முந்திடாதீங்க" கதவைத் திறந்து உள்ளே வந்த‌ சித்தார்த்தின்‌ குரலில் இருவரும் பூமிக்கு வந்து விலகினர். தன்னுடைய பொம்மையை பறிக்கப் வருபவனிடம் அதைக் காப்பாற்றும் குழந்தையைப் போல சித்தார்த்தைப் பார்த்ததும் விலகி நின்ற மனோவின் தோளோடு கைபோட்டு தன் பக்கமாக அணைத்தவன், அவன்‌ என்ன சொன்னான்‌ என்பதையெல்லாம் கவனிக்கவில்லை. அவனைப் பார்த்தது என்ன சொல்ல வேண்டும் என்று உருவேற்றி வைத்திருந்தானோ.. அதைச் சொன்னான்.."சித்தார்த்.. நான் மனோவை‌ லவ் பண்றேன்."



"பண்ணிக்கோ" சித்தார்த்தின் கேலியான பதிலில் புருவங்கள் முடிச்சிட அவனை சந்தேகமாக பர்த்தவனின் விழிகளில், பின்னே வந்த சத்யாவைப் பார்த்ததும் குழப்பம். ஆதியைப் போலவே சத்யாவின் தோளோடு அணைத்து தன்னருகில் கொண்டுவந்த சித்தார்த் சொன்னான், "நானும் சத்யாவை லவ் பண்றேன்"



முதலில் நம்பாமல் பார்த்தவனின் மூளை இதற்கு முன் நடந்த பல நிகழ்வுகளில் சித்தார்த் சத்யாவின் முகங்களைக் காட்ட, "எப்போதிருந்து?"என்றான்.



"ம்.. நாலு மாதமாக"



"உனக்குக் தெரியுமா?" பக்கவாட்டில் திரும்பி மனோவைக் கேள்வியாய் பார்க்க, "ம்.." என்று மேலும் கீழும் தலையாட்டினாள்.



இப்போது திரும்பி அவளை நேராகப் பார்த்தவன், "உனக்கு ஓகேவா? ஃபீல் பண்றியா?"



"ம்கூம்.. கொஞ்சம்‌கூட இல்லை. நான்தான் சத்யா வீட்டில் பேசி கல்யாணத்திற்கு ஓகே சொல்ல வைத்தேன்" கண்களை நேராக நோக்கி சொன்னாள்.



"எஸ்.. எங்க வீட்ல ஓகே சொன்னதைக் கொண்டாடுவதற்கு தான் இந்த ட்ரீட்"



சத்யாவின் பேச்சில் அவளிடம் திரும்பியவன், உதடுகள் அழுந்த மனோவிடம் திரும்பி, "இதை முன்னேயே என்னிடம் சொல்லியிருக்கலாமே.. மூனு மாதமா எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?"



அவன் அத்தனை பாவமாகக் கேட்கும் போது சொல்லியிருக்க வேண்டும்தானே? என்று‌ மனோவிற்கே தோன்றியது..ஏன் சொல்லவில்லை.. மீனலோசனி.. அவளை எப்படி மறந்தாள்?. மானசீகமாய் தலையில் தட்டிக் கொண்டவள், அவனைப் பார்த்து, "யாரையும் லவ் பண்ண மாட்டேன்.. என்று சொல்லி வீட்டில் பார்த்து வைத்த பெண்ணோடு திருமணத்திற்கு ஓகே சொல்லலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க, அவளோடு சுற்றிக் கொண்டிருப்பவரிடம்‌ வந்து நான் எப்படி‌ என்னோட லவ்வைச் சொல்ல முடியும்?



"இந்த கல்யாணம்‌ நடக்காது என்று நான் எப்போதோ மீனலோசனியிடம் சொல்லிவிட்டேன்.. அவள்‌ அவளுக்கு பிடித்த வேலை தேடி, கிடைக்கும்வரை வீட்டில் சொல்ல வேண்டாம்னு கேட்டததால்தான்‌ முடிவை உடனே சொல்லவில்லை"



எப்போதோ முடிவெடுத்துவிட்டார்களா? "நீங்க‌ இதை முன்னமே சொல்லியிருக்கலாமே? நான் எப்படி கஷ்டப்பட்டேன் தெரியுமா?"




"இன்னொருவனுக்காகக் காத்திருப்பதாகச்சொல்லும் போது நான்‌ மட்டும்‌ வந்து எப்படி‌ சொல்ல முடியும?"



"இரண்டு பேருக்கும் முடியாதில்லையா? அதனால் இந்த சின்ன ஷாக் ட்ரீட்மென்ட்.."



இப்போது இருவரும் திரும்பி சத்யாவை முறைக்க, சிரித்த சித்தார்த், "மனோவை மட்டும் விட்டுவிட்டு போவது கஷ்டமாக இருக்குன்னு சத்யாவிற்கு சின்ன மனத்தாங்கல் இருந்தது. இப்போ இனி அது கிடையாது." அவள்‌ பக்கமாய்‌ தலையை மட்டும் திருப்பி, "என்ன சத்யா.. இனி எங்க வீட்டில் சம்மதம் வாங்கி கல்யாண வேலையை ஆரம்பித்து விடலாமில்லையா?" என்க, நிமிர்ந்து அவன் முகத்தைப்‌ பார்த்தவள், பூரிப்புடன் திரும்பி மனோவைப் பார்த்தாள்.. விளையாட்டாய் மனோ திரும்பி ஆதியைப் பார்க்க, கண்களில் சிரிப்புடன், "தாராளமாய் அண்ணா.. கல்யாணத்தில் நீங்களே எங்க சீனியரா இருந்துக்கோங்க.. நாங்க இன்னும் திகட்ட திகட்ட லவ் பண்ணிட்டு, அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறோம்.. என்ன கண்ணம்மா"?



அவனது அழைப்பில் கண்கள் விரிய அவனைப் பார்த்தவள், அவனிடமிருந்து பிரிந்து வந்து, சத்யாவை கண்கள் கலக்கப் பார்த்து "தேங்க்யூ சத்யா!" என்றாள்.



"சரி.. நீங்க டின்னர் என்ஜாய் பண்ணுங்க.. நாங்க வீட்டுக்கு போய் எங்க லவ் மேட்டரை ஓப்பன் பண்ணுகிறோம்.. பை" என்ற அறிவிப்போடு சித்தார்த் சத்யா கிளம்ப, அடுத்த நொடி மனோ மீண்டும் ஆதியின் அணைப்பில் இருந்தாள். ஒரு கையால் அவள் இடையோடு அணைத்தவன், மறு கையால் அவள் கண்கள், இதழ்கள், கன்னங்கள் என்று எங்கும் தன் விரல்களால் மெல்ல‌வருடியபடி "லவ் யூ மனோ.. லவ் யூ சோ மச்.." என்க சொல்பவனுக்கே அத்தனை ஆனந்தம்‌தரும் வார்த்தைகள் கேட்பவளுக்கு எப்படிபட்ட நிறைவைத் தரும். மீண்டும் அவனையே பற்றி அவன் நெஞ்சோடு தஞ்சம் புகுந்தாள் அவன் மனோ..
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இத்துடன் வருடிச்‌ செல்லும் பூங்காற்று கதை முடிவடைகிறது ஃப்ரெண்ட்ஸ்.‌ கதையின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை என்னோடிருந்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி💖நன்றி💖
 
Status
Not open for further replies.
Top