All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா செல்வமின் "வருடிச் செல்லும் பூங்காற்று" - கதைத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ஃபிரண்ட்ஸ்.. என் பெயர் அனிதா செல்வம். போட்டி கதை எழுத்தாளர்களில் நானும் ஒருவர்.
என்னுடைய அடுத்த கதையை இந்த தளத்தில் எழுத வாய்ப்பளித்த ஸ்ரீகலா மேமிற்கு நன்றிகள் பல🙏🙏 இந்த கதையை படிக்கப்போகும் உங்களுக்கும் என் நன்றிகள்🙏🙏

இப்பொழுது கதை பற்றி பார்க்கலாமா?

கதையின் தலைப்பு: வருடிச்செல்லும் பூங்காற்று
ஏன் இந்த பெயர்? இந்தக் கதை, மென்மையான பூங்காற்று உங்களை வருடிச் செல்லும் போது ஏற்படும் இதத்தை தரவேண்டும், தரும் என்ற நம்பிக்கையில் வைத்த பெயர்.

கதையின் நாயகன்: ஆதித்யன்

கதை நாயகி: மனோகரி

வாரம் 2 முறை திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் எபி அப்லோட் செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்.. நீங்க என்ன சொல்றீங்க?

சரி ஓகே.. இன்று ஒரு சின்ன முன்னோட்டம்; ஒரு அறிமுகம். வெள்ளிக்கிழமையில் இருந்து முதல் எபி உங்கள் பார்வைக்கு.

படிச்சிப் பாருங்க.. படிச்சிட்டு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க..நிறையோ, குறையோ எதுவாய் இருந்தாலும் கருத்து திரியில் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.. உங்களுடைய கருத்துகளை தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.



வருடிச்செல்லும் பூங்காற்று

காதலைப் பற்றி உங்கள் கருத்து என்ன சார்?

ஆதி: இயற்கை, தன் எதிர்காலம் இவற்றின் மீது தனக்கிருக்கும் பயம் தெரியாமலிருக்க மனிதன் போட்ட கண்ணாடிதான் மதம். அது போல தன் ஹார்மோன் தேவைகளை நியாயப்படுத்திக் கொள்ள அவன் போடும் முகமூடி தான் காதல்.

காதலைப் பற்றி உங்கள் கருத்து என்ன மேடம்?

மனோ: கோடை மழையின் மண்வாசம்;

மாலை வேளையின் செவ்வானம்;

பௌர்ணமி நிலவின் கீழ் பொங்கும் கடல் அலை;

பெயர் தெரியாத குழந்தையின் புன்னகை;

இதையெல்லாம் பார்க்கும்போது மனதில் வருமே ஒரு உணர்வு, ஒரு இதம், அந்த உணர்வு, அந்த இதம், அவனைப் பற்றி நினைக்கும்போதே மனதில் தோன்றும். அதுதான் காதல்.

புரிந்ததா ஃப்ரெண்ட்ஸ்? கரெக்ட்.. காதல் என்பதே கிடையாது, மனதின் கற்பனை என்று நினைக்கும் நம் நாயகனுக்கும், காதலைக் கொண்டாடும் நம் நாயகிக்கும் இடையில் காதல் படும் பாடுதான் நம் கதை. வெள்ளி கிழமை, முதல் எபியோடு வருகிறேன்.
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ஃபிரண்ட்ஸ் 🙏🙏 இதோ சொன்னபடி வெள்ளிக்கிழமை முதல் எபியோடு வந்துவிட்டேன்🙂🙂. படித்துவிட்டு உங்கள் கருத்துகளைக் கருத்துத்திரியில் சொல்லுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி🙏🙏
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி 1


தன் கைபேசி காட்டிய குறுஞ்செய்தியை படிக்கும் போதே ஆதித்யாவின் இதழ்கள் இகழ்ச்சியாக வளைந்தன. ஒரு வாரம் நன்றாக பேசினால், இந்த பெண்களுக்கு எப்படி காதல் வந்துவிடுகிறது. அதுவும் பேசியபோதெல்லாம் இருவர் மனதிலும் ஓடியது,' இவர் நம்மை ஏமாற்றி விடுவாரா? நாம் இவரை ஏமாற்ற மமுடியுமா' என்பதாகத் தான் இருந்திருக்கும். தன்னுடைய பதிலை விரல் அசைவுகளில் பதிந்தவன், செய்தியை அனுப்ப அனுமதியையும் விரலசைவில் தந்துவிட்டு கைபேசியை தன் முன் இருந்த மேஜை மீது வைத்தான்.


ஆதித்யா, எஸ்.ஏ இண்டஸ்ட்ரீசின் எம்.டி. பல கனரக தொழிலாலைகள் இயங்கிக் கொண்டிருக்கும், ஆவடியைத் தாண்டி, சில நூறு ஏக்கர் பரப்பில் விரிந்திருந்த எஸ் அன்ட் எ தொழில் வளாகத்தில் நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு தேவையான சிறு ஸ்க்ரூ முதல் பெரிய இன்ஜின் வரை பல உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு, பெரிய கம்பெனிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. சில உயர் ரக வெளிநாட்டு கார்களில் கூட இவர்களுடைய உதிரி பாகங்கள் இடம்பெறுகின்றன.


எல்லா சாம்ராஜ்யத்தையும் போல எஸ்.ஏ இண்டஸ்ட்ரீசும் ஆரம்பித்தது சிறு முயற்சியில்தான். பரஞ்சோதி தன் பிள்ளைகள் சங்கரன் மற்றும் ஆறுமுகம் பெயர்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு சிறு உலோக உதிரிபாகங்கள் தயாரிப்பாகத் தான் தன் தொழிலைத் தொடங்கினார்.


அவர் பிள்ளைகள் சங்கரனும் ஆறுமுகமும் பதினாறு அடி பாய்ந்து தொழிற்சாலையை விரிவுபடுத்தினர். பிள்ளைகளுக்கு திருமண வயது வந்த பொழுது அவர்கள் திருமணத்தையும் தங்கள் தொழிலை முன்னேற்றும் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் பரஞ்சோதி. மூத்தவர் சங்கரனுக்கு பெரிய பண பலம் வாய்ந்த தொழிற் குடும்பத்தின் மகளை மணம் செய்து வைத்தவர், சிறியவர் ஆறுமுகத்திற்கு அரசியலை கரைத்து குடித்த மந்திரியின் பெண்ணை மணமுடித்தார். அவரவர் வீடு அவரவர் குடும்பம் என்று இருந்தால் தான் பொறுப்பு வரும் என்று பிள்ளைகளுக்குத் திருமணமானதும் பக்கத்து பக்கத்து இடங்களில் ஆளுக்கு ஓர் இல்லமும் கட்டிக் கொடுத்தார்.


அண்ணனும் தம்பியும் அருகருகே வீட்டிலிருந்தாலும் அல்லது அப்படி இருந்ததால்தானோ, என்னவோ, எந்த பிணக்குமின்றி அவர்களிடையேயான உறவு, இதுவரை நல்ல படியாக நீடித்து வருகிறது‌.


அந்த தொழில் வளாகத்தின் நடுவிலிருக்கும், தாமிர நிறத்தில் எஸ்.ஏ ஆட்டோமொபைல்ஸ் என்று ஆங்கிலத்தில் எழுத்துகளைக் தாங்கிய ஆறுமாடிக் கட்டிடம் தான் அவர்கள் தலைமை அலுவலகம். ஒவ்வொரு தளத்திலும் டிசைனிங், கணக்கு வழக்குகள், சட்ட விவகாரங்கள்,தணிக்கை விவரங்கள், ஏற்றுமதி இறக்குமதி பற்றிய தகவல்கள் என்று அவர்கள் வளாகத்தின் மூளையாக செயல்படும் அந்த தலைமை அலுவலகத்தின் ஆறாவது மாடியில் ஆதித்யா எம்.டி என்ற பலகை தாங்கிய கண்ணாடிக் கதவுக்கு பின்னே தான் இளையவரான ஆறுமுகத்தின் ஒரே மகன் ஆதித்யா அமர்ந்திருக்கிறான்.

அவனைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவனுடைய நாளின் பெரும்பகுதியைக் கழிக்கும் இந்த அலுவலறையைப் பார்த்தாலே அவன் மனநிலை உங்களுக்கு ஓரளவு தெரிந்துவிடும். அறையின் உட் சுவர்கள் அப்பழுக்கல்லாத வெண்ணிறத்தில் வண்ணப் பூச்சு? செய்யப்பட்டிருக்க, அதற்கு நேரெதிராக உள்ளே நுழைந்ததும் செவ்வகமாக போடப்பட்டிருக்கும் சோபா, டீப்பாய், இருக்கைகள் அவன் அலுவல் மேஜை, அதன் முன் போடப்பட்டிருக்கும் இருக்கைகள், அவன் உட்காரும் சுழல் நாற்காலி அனைத்தும் கருப்பு நிறத்தில். அந்த வெண்ணிற சுவரில் இறைவனின் படம், அவர்கள் நிறுவனத்திற்கு கிடைக்கும் விருதுகள், அதை வாங்கும் புகைப்படங்கள், மரங்கள் சூழ்ந்த வனத்தின் வரைவுப்படம்.. ம்கூம்.. இதில் எதுவுமே இருக்காது. வேலை செய்யும் பொழுது எதுவும் தன் கவனத்தை திசை திருப்புவதை அவன் விரும்புவதில்லை. செய்யும் தொழிலே தெய்வம்; நான் வாங்கிய விருதுகளை நான் சொல்லி இவர் அறியவேண்டியதில்லை; அமைதி தரும் ஓவியங்கள்.. வேலை நேரத்தில் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்? சித்தார்த், இவனுடைய பெரியப்பா மகன் கேட்ட போது, இவன் தரும் விளக்கத்தில் ‘என்னமோ போடா' என்று போய்விட்டான். அவன் மேஜையைப் பார்த்தால் ஒரு கணிணி, ஒரு லாப்டாப், தொழில் தொடர்பான பத்திரிக்கைகள், புத்கங்கள், ஒரு பேனா இவை மட்டும்தான் இடம்பிடித்திருக்கும். இது போக இருக்கைக்கு பின்னால் இருக்கும் கண்ணாடியாலான சுவர் அந்த வளாகமே அவன் பார்வையில் இருப்பதை போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முன்னிறுத்தும் கண்ணாடி கதவு அலுவலக செயல்பாடுகளை அவன் கண்முன் காட்டும்.


தன் முன் இருந்த கணினியை உயிர்ப்பிக்க ஆணை பிறப்பித்துவிட்டு காத்திருக்கும் பொழுது, மற்றொரு குறுஞ்செய்தியை கொண்டு வந்து அவன் கைபேசி 'டொய்ங்' என்று ஒலி எழுப்ப “ம்ப்ச்’என்று சலித்துக் கொண்டான். ‘என்னைப் பற்றி என்ன தெரியும் என்று என்னிடம் மனதை பறிகொடுத்து விட்டதாகச் சொல்கிறாள் இந்த பெண். நான் குடிகாரனா என்று தெரியாது; பெண்கள் விஷயத்தில் நல்லவனா தெரியாது; என்ன காதலோ? அதுவும் இத்தனை படித்துப் பெரிய பதவியில் இருக்கும் பெண்ணும் இப்படிதான் இருக்கிறாள்!’


ஆம்.. கைபேசியில் இவனுக்கு காதலை சொல்லிக் கொண்டிருக்கும் மோனிகா சட்டத்தில் பட்டம் பெற்று, தனியார் நிறுவனங்களுக்கான சட்டங்களைக் கரைத்து குடித்தவள். இருபத்தெட்டு வயதுதான். அதற்குள் தன் துறையில் நன்கு பெயர் பெற்ற அழகி.

இவர்கள் உதிரிபாகங்கள் தயாரித்து வழங்கும் ஒரு பன்னாட்டு கம்பெனியின் சட்ட ஆலோசகராக பணி செய்கிறாள் மோனிகா. அந்த நிறுவனத்தின் பெயரை தாங்கி வரும் கார்களில் பயன்படுத்தப்படும் இவர்களது உதிரிபாகங்கள் எஸ்.ஏ மோட்டார்ஸ் என்று தங்கள் கம்பெனியின் லோகோவை தாங்கியிருக்க, விண்ணப்பம் வைத்திருக்கிறார்கள். அதாவது அந்த நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் செய்து கொடுப்பது என்று இல்லாமல் தங்கள் உதிரிபாகங்களை அந்த நிறுவனம் வாங்குவது போல் மாற வேண்டும். அது எந்த வரை சாத்தியம்; இதற்காக ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் தங்கள் ஒப்பந்தத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்யவேண்டும்; பணப் பரிமாற்றத்தில் ஏதேனும் மாற்றங்கள் வேண்டுமா என்றெல்லாம் முடிவு செய்வதற்காக கடந்த ஒருவாரமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்

தங்கள் கம்பெனியின் சட்ட வல்லுநர்களுடன் ஆதித்யாவும் அந்த சந்திப்புகளில் பங்கேற்க, அங்கே தான் அந்த வெளிநாட்டு கம்பெனியின் சார்பாக மோனிகாவும் பங்கேற்றாள். பேச்சு போக மற்ற நேரங்களில் காபி டீ குடித்து சகஜமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். அவ்வளவுதான். அதில் எப்படி இவளுக்கு காதல் மலர்ந்தது என்று ஆதிக்குப் புரியவேயில்லை.


சரி.. அப்படி காதல் வந்துவிட்டதாகவே நினைத்துக் கொள்ளட்டும். இந்த செய்தி அனுப்பும் முன் அதன் பின்விளைவுகளைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டாமா? அப்படியா காதல் கண்ணை மறைக்கும்? எனக்கு விருப்பம் இல்லாத பட்சத்தில் இந்த ஒப்பந்தம் நிறைவேறும் வரை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தான் ஆக வேண்டும்.. மறுப்பாகப் பேசிவிட்டு, மற்றபடி வேலை நேரத்தில் சாதாரணமாகப் பேச சங்கடமாய் இருக்காதா?


ஆனால் இதிலெல்லாம் தயவு தாட்சண்யமே பார்க்கக்கூடாது.. அப்படி ஒரு எண்ணம் சற்றும் இல்லை என்பதை முதலிலேயே தெளிவாகக் கூறி விட வேண்டும்.. பாவம் அந்தப் பெண்ணுக்கு கஷ்டமாக இருக்குமே என்று யோசித்து அமைதி காத்தால், பின்னொரு நாள், “அப்போது சரி என்பதால் தானே அமைதியாய் இருந்தாய்? இப்பொழுது என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா?” என்பார்கள். அவன் அனுபவத்தில் கற்ற பாடம்.


தன் இருக்கையின் பின் பகுதியில் சாய்ந்து கழுத்தை வளைத்து மேலே பார்த்து, கண்களை மூடியவன் மனம் தன் புலம்பலைத் தொடர்ந்தது.


‘இவர்களுக்கெல்லாம் ப்ரொபஷனல் பிஹேவியர் என்றால் என்ன என்று தெரியவில்லை.. வேலை செய்யும் இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.. எந்த மாதிரி மனநிலையில் இருக்க வேண்டும்… இது எதுவும் தெரிவதில்லை.. எல்லோரும் மனோவை போல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” இறுகிய முகம் சற்றே இளகிட, கண்களைத் திறந்து பக்கவாட்டில் பார்த்த பொழுது இவனதைப் போன்றே எதிரில் கண்ணாடி கதவு வைத்து, சாஃப்ட்வேர் இன்சார்ஜ் என்று ஆங்கிலத்தில் பெயர் பலகை தாங்கிய அறையில் மனோ என்ற மனோகரி தன் கணிணி முன் அமர்ந்து அதன் திரையில் தன் முழு கவனத்தையும் வைத்திருந்தாள். சற்றுமுன் இளகிய அவன் முகத்தில் சிறு மென்னகை படர்ந்தது.


புரொபசனலிசத்திற்கு முழு உருவம் ஆதித்யாவை பொறுத்தவரை மனோ தான். அவளுடைய நடை, பேச்சு, உடை, அலங்காரம் எதுவுமே தொழிலைத் தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்க யாரையும் தூண்டாது. ம்ம்ம்.. இல்லை உடை, அலங்காரம் சற்றே ஆதியை கவனிக்க வைத்திருக்கின்றன. ஏன் இவள் இப்படி உடுத்துகிறாள் என்று.. வேலைக்கு சேர்ந்த இந்த ஒரு வருடமாக அவள் அணிவது சேலைதான்.சேலை என்றால் சாதாரண சேலையில்லை. பெரிய பெரிய பூக்கள் போட்ட தேவைக்கு அதிகமாக அடர்ந்த அல்லது வெளிறிய நிறங்களில் காட்டன் சேலை.. அது எந்த மாதிரி காட்டன் என்று கூட ஆதிக்கு தெரியவில்லை… இந்த காலத்திலும் இப்படி எல்லாம் இன்னும் துணி நெய்கிறார்கள் என்று இவளைப் பார்த்து தான் தெரிந்து கொண்டான். அப்படியே அவர்கள் நெய்தாலும் இவள் ஏன் இதை அணிய வேண்டும். நேர் கொண்ட பார்வை, நிமிர்ந்த நடை , தெளிவான சிந்தனை இவையெல்லாம் பணி செய்யும் இடத்தில் வேண்டும் என்று சொன்ன யாரோ அத்தோடு சேர்த்து இப்படிதான் உடுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டார்களோ? சில நேரம் தன்னை மீறி அவள் உடை பற்றி கேட்க முனைந்து கடுமுயற்சியில் கட்டுப்படுத்தியிருக்கிறான். அது தேவையில்லாத பேச்சு இல்லையா?


சேலை மட்டுமல்ல, எண்ணை மினுமினுக்க, அழுந்த வாரிய தலைமுடி, அது பின்னலிட்டு முதுகில் விளையாட, ஏதோ ஒரு பூ, தலையில் எப்போதும் வீற்றிருக்கும். அது போக, பெரிய பொட்டு, காதில் ஜிமிக்கி என்று வேலைக்கு சேர்ந்த நாள் முதல் இப்படித்தான் மனோ.

ஆனால் இதனாலெல்லாம் பார்ப்பதற்கு நன்றாக இல்லை என்று சொல்ல முடியாது. அழகுதான். கோதுமை நிறத்தில் முகம்,. பெரிய கண்கள், அதில் தெரியும் தெளிவு,. இன்னும்.. எல்லாமே அழகுதான். இந்த ஆடை அலங்காரமும் ஆதிக்கு அவ்வளவாய் பிடிக்காததற்கு காரணம் ஏன் என்று அவனுக்கேப் புரியவில்லை. ஏதோ செயற்கையாக இருப்பதைப் போல்; குழந்தைகள் ஃபேன்சி டிரஸ் போட்டிக்கு கிளம்பி வருவது போல்; அவளுக்கு பொருந்தாமல் இருக்கும். மற்றவர்கள் அப்படி உணர்கிறார்களா தெரியவில்லை.


இருபத்தைந்து வயதில் “சாஃப்ட்வேர் இன்சார்ஜ்”என்ற பதவிக்கு, மூன்று இறுதிக்கட்ட போட்டியாளர்களில் ஒருவராக மனோவின் புகைப்படத்தை இவனுடைய மனிதவள மேலாளர் அதுதாங்க ஹெச்.ஆர் உலகநாதன் காட்டியபோது, “இவருக்கு என்ன ஆச்சு?” என்று தான் ஆதி பார்த்தான்.


அவனுடைய கம்பெனியில் மென்பொருள் கொண்டு செய்யும் வேலைகள் நிறைய இருந்தன. பைக் கார் பாகங்கள் டிசைனிங்கிலிருந்து, கம்பெனிகளுடன் ஒப்பந்தங்கள், தொழிலாளர் விவரங்கள், இவர்களது நிதிநிலை என்று ஒவ்வொரு துறையிலும் ஒரு மென்பொருள் நிபுணர் வேலை செய்ய இவர்கள் எல்லோருக்கும் தனியே ஒரு துறை ஆரம்பித்து அதன் தலைமை பொறுப்பில் ஒருவரை நியமித்தால் வேலை எளிதாகவும் இருக்கும், எல்லோருக்குள்ளும் வேலையை பகிர்ந்து செய்வது சுலபமாகவும் இருக்கும் என்று தோன்றியது. சங்கரன் உடல் நிலை குறைவு காரணமாகவும், ஆறுமுகம் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கான சங்கத்தின் தலைவராகி அதில் நாளின் பெரும்பகுதியை செலவு செய்வதாலும், சித்தார்த் சற்று விலகியிருப்பதாலும் நிறுவனத்தின் அன்றாட முடிவுகள் ஆதித்யாவின் கைகளில்.


நிறுவன நிர்வாகத்தைப் பொறுத்தவரை, ஆதித்யாவின் கொள்கை, ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்' தான்..


நிர்வாகத்தைப் பல துறைகளாகப் பிரித்து, அந்தந்த துறைகளுக்கு சரியான நிபுணர்களை நியமிக்க அவர்கள் நிறுவனம் எண்ணெய் தடவிய சக்கரம் போல தடையின்றி சுழன்று வருகின்றது. அது போல மென் பொருள் துறைக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கச் சொல்லியிருந்தான். அந்த நேர்முகத் தேர்வை பற்றி நினைக்கும் போதே ஆதியின் இதழ்களில் இருந்த மென்னகை மேலும் விரிந்தது.


“என்ன சார் இது? “ என்றுு அவள் பயோடேட்டாவைக் கையில் வைத்துக்கொண்டு உலகநாதனைப் பார்க்க, அவர் கண்களில் சிரிப்புடன், “தம்பி வயதை வைத்து குறைத்து எடை போடாதீர்கள். இந்த பதவிக்கு எல்லா வகையிலும் தகுதியான பெண்.. வரட்டும்.. பேசி பாருங்கள்…” என்றார். வந்தாள்.. பேசினாள்.. பார்த்தான்.. இல்லை.. பார்த்தார்கள்.. அன்றைய நேர்முக தேர்வில் ஆதித்யாவுடன் உலகநாதனும்,சித்தார்த்தும் இருந்தார்கள். உள்ளே வந்ததும் மூவரையும் பார்த்தவள் கண்களில் சிறு தயக்கம்.. பின் அது மாயமாய் மறைந்து கண்களுக்கு எட்டாமல் இதழ்களை மட்டும் சிறிதாய் வளைத்து, “குட் மார்னிங் சார்!” என்று மூவருக்கும் பொதுவாகச் சொன்னாள். பின் அவளிடம் பேசியதில் உலகநாதன் எச் ஆர் பதவிக்கு சரியான ஆள்தான் என்று முடிவு செய்தான் ஆதித்யா. பின்னே அவன் தந்தை காலத்திலிருந்து நிறுவனத்தில் பணிபுரிபவர், சின்னப்பெண் என்று மனோவை ஆரம்ப தேர்வுகளில் தேர்ந்தெடுக்காமல் இருந்திருந்தால், ஒரு நல்ல ஊழியரை இவர்கள் நிறுவனம் இழந்திருக்குமே.. அப்படி முதல்நாளே சிந்திக்க வைக்கக்கூடிய அளவிற்கு அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான, திடமான பதில்.


அப்போது இருந்த மனோவிடம் இருந்த ஒரே குறை அவளது அனுபவம். அதாவது அனுபவமின்மை. கல்லூரி படிப்பு முடிந்து, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மூன்று வருடங்கள் பணி செய்திருக்கிறாள். பத்து முதல் இருபது நபர்கள் கொண்ட குழுவை நிர்வகித்திருக்கிறாள். ஆனால் இப்பொழுது இங்கே இவளுக்கு கீழ் பணி செய்ய போகிறவர்களில் சிலர், மனோவை விட சற்று அதிக அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களை எப்படி சமாளிக்கிறாள் என்பதை போகப்போகத்தான் பார்க்க வேண்டும். ஆம் .. அப்பொழுதே அவளை நியமிப்பதாய் முடிவு செய்து விட்டான். அதை சொன்னபோது, அவள் கண்களில் தெரிந்த ஆச்சர்யத்தில் வேலை கிடைக்காது என்று நினைத்திருந்தாளோ என்று தோன்றியது. அதற்கும் மனதில் மெச்சவே தோன்றியது. சரியாகத்தானே கணித்திருக்கிறாள். அவள் வயதிற்கும், அனுபவத்திற்கும் இது சற்று பெரிய பொறுப்புதான். அதை அவளிடம் சொல்லி, “ஆனாலும் உன் திறமைக்காக கொடுக்கப்பட்ட வேலை இது. எங்கள் முடிவு தவறோ என்று நினைக்க வைத்துவிடாதே” எனறிவன் சொல்ல அவள் கண்களின் தயக்கம் மறைந்து உறுதியுடன், “நிச்சயமாக சார்!” என்றாள்.


அன்றிலிருந்து இன்றுவரை எந்த இடத்திலும் தேவையில்லாத ஒரு பார்வை இருந்ததில்லை.. ஒரு பேச்சு இருந்ததில்லை,. தன் பதவிக்கும் தான் சரியான ஆள் என்பதை நிரூபித்துவிட்டாள். வேலைக்கு சேர்ந்த எட்டாவது மாதம் அவர்களது கனவுத்திட்டமான ஆட்டிடுயூட்(ATTITUDE) மற்றும் ஸ்பீடு(SPEED) என்ற பெயர்களைத் தாங்கிய இவர்கள் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பாக வெளிவர திட்டமிட்டிருக்கும், இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு தொடர்பாக குழு அமைக்கப்பட்டபோது அவள் துறையிலிருந்து மற்ற அனைவரும் அவளையே சிபாரிசு செய்தார்கள்..


ஓரப் பார்வை இப்பொழுது நேர் பார்வையாய் மாறியிருக்க, அவனுடைய பார்வையை உணர்ந்தவள் போல் தன் முன் இருந்த கணினியிலிருந்து தன் பார்வையை எடுத்து, நிமிர்ந்த மனோ கண்ணாடி கதவு வழியாக ஆதித்யாவைப் பார்க்க, “ ஹாய்!” என்று உதடுகளை அசைத்து புன்னகைத்தான். பதிலாக இதழ்களை இழுத்து புன்னகைப்பதாய்க் காட்டினாள் மனோ.


அந்த புன்னகைக்கு கீழே ஓடும் சப்டைட்டில் மட்டும் நம் ஆதிக்கு தெரிந்தால் ஐயோ பாவம், அவன் இதயமே நின்றுவிடும். அதனால் அவனுக்கு தெரிய வேண்டாம். நாம் மட்டும் பார்க்கலாம்.


ஏனென்றால் தன் இதழின் புன்னகை மாறாமல் கவனமாக இருந்தவள் உள்ளத்தில் இப்படிதான் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. .. ‘அப்பா! அப்பா! என்ன சிரிப்பு! என்ன சிரிப்பு! அந்த கால கருப்பு வெள்ளை படங்களில் மகாராஜாவாக வரும் ரங்காராவ் தன் அரசவைக்கு வந்து அமர்ந்ததும் தன் அமைச்சர்களை பார்த்து சிரிப்பாரே கர்வம் கலந்த அந்த மமதை சிரிப்பு, அப்படியே அதே சிரிப்பு! அப்படியே ஜூனியர் ரங்காராவ் தான்! உயரம் கூட அவர் மாதிரிதான். கூட்டதத்தில் சுற்றியிருப்பவர் எல்லோரையும் விட அரை இஞ்ச்சேனும் அதிகமாயிருப்பான். அந்த தொப்பைதான் இல்லை.. ஆனால் ரங்காராவும் தினமும் இரண்டு மணி நேரம் ஜிம்மில் செலவழித்திருந்தால் இவனைப் போல திண்ணென்று இருந்திருப்பார்.
அடுத்ததாக ரங்காராவுக்கு தலையில் முடி குறைவு. நம்ம ஜீனியர் ரங்காராவுக்கு அது சற்று அதிகம். தலைதாண்டி நெற்றியில் புரளும் கேசத்தை அடிக்கடி விரல்களால் பின்பக்கமாக கோதிக் கொள்வான். மேனரிசமாம். ஒருவேளை ரங்காராவிற்கு கூட இருபதுகளில் இத்தனை முடி இருந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்? அப்போ நம் ஜூனியர் ரங்காராவ் கூட நாற்பதுகளில் சொட்டை தலையோடு இருப்பானோ?’ வழுக்கை தலையோடு ஆதித்யாவைக் கற்பனை செய்ய, தன்னை மீறி வந்த சிரிப்பை இதழ்களுக்கு இடையில் அடக்கிய படி, மீண்டும் தன் முன்னிருந்த கணிணியின் திரைமேல்தன் கண்களை செலுத்தியவள், தன் மனதிற்குள்ளேயே, ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணத் தொடங்கினாள். சரியாக எட்டு எண்ணும் பொழுது, இன்டர்காம் அழைத்தது.


இதோ ராஜா அழைத்துவிட்டார். இனி ஒவ்வொரு துறையின் பொறுப்பாளரும் அவனிடம் சென்று நேற்றைய வேலைகளுக்கான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பின் இன்றைய வேலைகளுக்கான செயல்திட்டம் பற்றி அவனிடம் விவாதிக்க வேண்டும். அப்படியே ராஜாதான். ராஜா வீட்டு பிள்ளை, ராஜா தானே.. ஆனால், இல்லையே.. சித்தார்த்தும் இதே வீட்டுபிள்ளைதானே! அவள் அவனை அறிந்த இத்தனை வருடங்களில் என்றுமே அவன் கண்களில் அவள் கர்வத்தைப் பார்த்ததில்லை.. கனிவு மட்டும்தான்.. மனம் தன் வேலையாய் சிந்தித்துக் கொண்டிருக்க, கைகள் கைப்பேசியையும், நோட்பாடையும் எடுத்துக் கொள்ள ஆதித்யாவின் அறையை நோக்கிச் சென்றாள் அன்றைய நாளை ஆரம்பிக்க நம் மனோ என்ற மனோகரி...
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ஃபிரண்ட்ஸ் 🙏🙏 வருடிச் செல்லும் பூங்காற்று கதையின் இரண்டாவது எபி இதோ உங்களுக்காக.. படிச்சிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.. ஆவலுடன் காத்திருக்கிறேன் 🙂🙂..
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி2


கண்ணாடி கதவு தான் என்றாலும் மரியாதை நிமித்தமாக, ‘டொக்’ என்று தட்டி விட்டு உள்ளே வந்த மனோவை பார்த்து, “ஹாய் மனோ!” என்றான் ஆதி.


“குட் மார்னிங் சார்!” என்று புன்னகைத்தவள், அவன் மேஜை முன்னிருந்த இருக்கைகள் ஒன்றில் அமர்ந்தாள். இதுவும் வழக்கம் தான். வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் ஆகியும், “ஹாய்!”” என்றும் சொல்வதில்லை; “பை!” என்றும் சொன்னதில்லை. “குட் மார்னிங் சார்!” “தேங்க்யூ சார்!” தான். மறுபடியும் அவளை மனதிற்குள்ளேயே மெச்சிக் கொண்டான். இதனால்தான் மனோவை அடிக்கடி அழைத்துப் பேசுவதில் அவனுக்கு என்றுமே தடை இருப்பதில்லை.


எந்த விதத்திலும் அவளுக்கு தன்னிடம் ஆர்வம் இல்லை என்பதில் மகிழ்ச்சியே. எப்போதாவது ஏதாவது நகைச்சுவையாகச் சொன்னாலும் புன்னகைதான் பதில். ஓரிரு சமயங்களில் கண்கள் மின்ன, உதடுகளால் சிரிப்பைக் கட்டுப்படுத்தியபடியிருக்கும், அவளைப் பார்க்கும்போது வியந்திருக்கிறான். ஏன் இத்தனை கட்டுப்பாட்டுடன் இருக்கிறாள். அவனுக்கு புரியவில்லையென்றாலும் இது வசதியாக இருக்கும்பட்சத்தில் அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே என்று ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை. சிலபல அனுபவங்களுக்குப் பின் இருபதிலிருந்து முப்பது வயதுள்ள பெண்களைப் பார்த்தாலே கொஞ்சம் கவனமாக இருப்பவனுக்கு மனோவிடம் அது போன்ற கவனம் தேவையில்லை என்பதில் நிம்மதியே!


தன் நோட்பாடைப் பார்த்து கடகடவென்று பேசிக் கொண்டிருப்பவள், என்ன சொல்கிறாள் என்பது கேட்காமலேயே அவனுக்குத் தெரியும். மென்பொருள் சம்பந்தமாக இன்று என்னென்ன வேலைகள் இருக்கின்றன, அதில் அவனது பங்கு என்ன, என்பது பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறாள். நேற்று மாலை பேசியதன் மறு ஒளிபரப்பு மற்றும் ஒலிபரப்பு.


தான் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தவன் மனம், தான் சொல்வதில் இல்லை என்பது மனோவிற்குப் புரிந்தது. என்ன யோசித்துக் கொண்டிருக்கிறான். அப்பொழுது அவன் கைப்பேசி 'டொய்ங்' என்று ஒலியெழுப்ப, அவனிதழ்களின் இகழ்ச்சி யான வளைவில் நிமிர்ந்தவள் கண்களில் மேஜையின் ஓரமாய் இருந்த அந்த சிவப்பு நிற ரோஜா பூங்கொத்து கண்ணில் பட, அவளின் பேச்சு ஒரு நொடி நின்று மீண்டும் தொடர்ந்தது. தன் முகத்தில் எந்த உணர்வும் தெரியாமலிருக்க ரொம்பவே பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.


‘ம்ஹூம்..இந்த முறை இல்லாததற்கு ஆசைப்படும் எந்த கிளி சிக்கியிருக்கிறதோ!’


இத்தனை வருடங்களில் இவனைப் பற்றி தெரியவரவில்லையா? ஒரு வருடத்திலேயே மனோவிற்குத் தெரிந்துவிட்டதே! சரியாகச் சொல்வதானால், ஒரு மாதத்திலேயே தெரிந்துவிட்டது. ஆதித்யாவைப் பொறுத்தவரை, பெண்கள் விஷயத்தில் அவனது ஒரே பதில் ‘நோ!’தான் என்று. ஆனால் அப்படி ‘நோ' சொல்பவன் முதலில் ஏன் ஆசையை வளர்க்க வேண்டும்? அவன் வேண்டுமென்று செய்கிறானா?இல்லையென்றால் சத்யா, மனோவின் தோழி, இதே நிறுவனத்தில் டிசைனிங் துறையில் சாஃப்ட்வேர் நிபுணராகப் பணிபுரிபவள் சொல்வது போல, இவன் சாதாரணமாகப் பேசுவதை அந்த பெண்கள்தான் தவறாக எடுத்துக் கொள்கிறார்களா?


இருவருக்குமே இது மறு ஒளி மற்றும் ஒலிபரப்பு என்பதால் மனோவின் மனமும் அங்கிங்கு சுற்றியது.


இங்கு சேர்ந்து சரியாக ஒரு மாதமாகி, ஆதியைப் பார்த்து சற்று பிரமிப்பில் இருந்த நேரமது. அன்று அவன் மனோவின் அறையில்தான் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தான். அப்பொழுது சட்டென்று கதவைத் திறந்து காற்றைப் போல உள்ளே வந்தாள் அனுபமா, இவர்கள் உலோக இயந்திரங்களுக்கான மூலப்பொருட்கள் கொள்முதல் செய்யும் நிறுவனத்தலைவரின் ஒரே மகள். உள்ளே நுழைந்தவளுக்கு அங்கே ஐந்தரை அடி உயரத்தில், பச்சை நிற சேலை கட்டி ஒரு ஜீவன் இருப்பது கண்களில் படவேயில்லை. அவள் கண்களில், கருத்தில் இருந்தது எல்லாம் ஆதிதான் போல. அவனுடன் பேசினாள். அப்பொழுது, அவள் பேசினாள் என்பது இடக்கரடக்கலாக நாசூக்காக சொல்வது. உள்ளதை உள்ளபடி சொல்வதானால் முதலில் ‘டார்லிங்!’, 'டியர்!’ என்று கொஞ்சினாள்; பின் கெஞ்சினாள்; எதுவும் பலிக்காத பட்சத்தில் கோபத்தில் பொங்கினாள்; சாபம் விட்டாள். இது எல்லாவற்றிற்கும் ஆதியின் அன்றைய ஒரே பதில், “ நான் சாதாரணமாகத்தான் பேசினேன் அனுபமா, புரிந்து கொள். அப்படி ஒரு எண்ணம் எனக்கு என்றுமே இருந்ததில்லை” என்பதுதான்.


இதை நான்காவது முறையாக சொல்லும்போது சற்றே முகம் கன்றியிருந்தவன் பார்வை ஒருமுறை இவள் முகம் வந்து செல்ல, அதுவரை அவர்கள் பேசியதை ‘ஆ!’ வென்று பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு சற்றே உணர்வு வந்து ஏதோ பெரிய தவறு செய்தது போல குனிந்தபடி மேஜையிலிருந்து கையில் அகப்பட்ட ஏதோ ஒன்றைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்துவிட்டாள்.


ஆனால் அன்று அந்த அறையிலிருந்து அப்போது வெளியேறியவளுக்கு, அந்த நிகழ்வின் தாக்கத்திலிருந்து வெளியேறுவதற்கு பல நாட்கள் தேவைப்படட்டன. அந்த அனுபமாவைப் பற்றி நினைக்கும் போதே மனதில் ஒரு பரிதவிப்பை உணர்ந்தாள். மனதில் எத்தனை காதல் இருந்தால், அப்படி அவன் முன் இரங்குவாள். இறுதியில் கோபத்தில் தவறாகப் பேசினாள்தான். ஆனால் அந்த கோபமும் அவள் காதலினால் அல்லவா!


ஆதியைப் பற்றி நினைக்கும் போது ஆச்சர்யமாக இருந்தது. அவள் அப்படி ‘பேசும்’ போதும் தான் பிடித்தபிடியிலேயே நிற்கிறானே.. என்ன மனிதன் இவன்.


வேலைக்கு சேர்ந்த நாள் முதல் தன் முதலாளியின் பெருமையையே பேசிக் கொண்டிருப்பவள், முதன்முறையாக கோபமாகத் திட்டியதைப் பார்த்து, முதலில் வியந்து பார்த்த அவள் தந்தை, பின் சிறிது நேரத்தில் அவரே சமாதானப்படுத்த தொடங்கினார்.


“அவருக்குப் பிடிக்கவில்லையென்றால், என்னம்மா பண்ண முடியும்?” என்றவரிடம், “அப்படி பிடிக்காதவர், ஏன் அந்த எண்ணம் வரும்படி பழக வேண்டும்..” என்று எதிர்கேள்வி கேட்டாள்.


அப்போதுதான் சத்யா சொன்னாள், “நான் இங்கே வேலைக்கு சேர்ந்து மூணு வருசமாச்சி மனோ,.. ஆதி நிர்வாக வேலைகளைச் செய்ய ஆரம்பித்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. நான் சேர்ந்த புதுசுல என்னோட சீனியர் ஒருத்தர் சொன்னாங்க. ஆதி உன் கிட்ட நலம் விசாரிக்கும் போது, உன்னைப் பாராட்டிப் பேசும் போது, உன்கிட்ட ஜோக் சொல்லும் போது, மனசுக்குள்ளே, இவனுக்கு நானும் ஒன்று தான்.. உலகநாதன் சாரும் ஒன்றுதான்னு மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டேயிருக்கனுமாம்.” பக்கென்று சிரித்தவளைப் பார்த்து மேலும் தொடர்ந்தாள், “புரிந்ததா? அவர் சாதாரணமாகச் பழகுவதை சில பெண்கள் தவறாக எடுத்து கொள்கிறார்கள்”. அதிலும் அவன் இருபத்திநான்கு வயதில் தொழிலில் ஈடுபட ஆரம்பித்த போது இந்த பெண்கள் எண்ணிக்கை அதிகமாம். இப்பொழுது அவனே பார்த்து பழகுவதில் ஓரளவுக்கு குறைந்துவிட்டார்களாம்.


பிறப்பிலேயே பணக்காரன்; பார்க்க நன்றாக இருக்கிறான்; ஒன்றைப் பத்தாக்கும் அறிவு இருக்கிறது; மனோவைப் பொறுத்தவரை அவனது ப்ளஸ் பாய்ண்ட் அவனது பேச்சு சாமர்த்தியம். தொழில்முறை மீட்டிங்குகளில் அவன் பேசுவதைப் பார்த்து வியந்திருக்கிறாள். தேவையான இடங்களில் கண்டிப்பாக, சரியான இடங்களில் நட்பாக என்று எதிரே இருப்பவரை எப்படியாவது இவனுக்கு சம்மதிக்க வைத்துவிடுவான். கம்பெனியில் பணிபுரிகின்றவர்களை ஏதோ தங்கள் வீட்டிற்காக, தங்கள் சொந்த தொழிலுக்காக வேலை செய்வதைப் போன்ற மனநிலையில் வைத்திருப்பான். இதில் ஏதோ ஒன்று அந்த பெண்களுக்குப் பிடித்து விடுகின்றது என்று தோழிகள் இருவரும் அன்று பேசி முடிவு செய்தனர்.


அன்றிலிருந்து ஆதி ஏதாவது சுவாரஸ்யமாகப் பேசினால், மூளை மணியடித்துவிடும். இப்படிதானே அவர்களிடமும் பேசியிருப்பான்? இதில் தானே அவர்கள் மனதைப் பறிகொடுத்திருக்கிறார்கள். அவள் மனம் அவளிடம் இல்லாததால் மனோவிற்கு அந்த கவலையில்லைதான் !! ஆனால் அது அந்த ஆதிக்கு தெரியாதே! அதனால் அவனோடிருக்கும்போது அவளையும் அறியாமல் அவள் நினைவில், பார்வையில், பேச்சில் ரொம்பவுமே கவனம் வந்து விடும்..


மனோவிற்கு வந்த மற்றொரு பெரிய சந்தேகம், 'இத்தனை பெண்களில் ஒருவரைக் கூடவா இவனுக்குப் பிடிக்கவில்லை!


“ம்ம்.. எனக்கு எப்படிமா தெரியும்? நான் வேண்டுமென்றால் நாளை ஆதி சாரிடம் கேட்டுச் சொல்லவா?” இது சத்யா.


“ ஒரு வேளை காதல் தோல்வியாக இருக்குமோ!”


“இவனை எந்த பெண் மறுத்திருப்பாள்?”


“ நிச்சயம் அப்படிதான் இருக்க வேண்டும் சத்யா.. இல்லையென்றால் ஏன் எல்லோருக்கும் “நோ!” சொல்கிறான்..ஒரு பூ ஒரு முறைதான் பூக்கும் கொள்கையுடையவன் போல.. “

கண்களை மேலே சுழற்றி நீண்ட மூச்சு விட்டவள், “ ஃபுல் ஃபார்முக்கு போயிட்டன்னு நினைக்கிறேன் மனோ. கற்பனை கதை சொல்லாதே! இவனை எதற்காக மறுத்திருப்பாள் அந்த பெண்?’


“ம்… “ ரொம்பவே அக்கறையாக யோசித்தவள், “ஒரு வேளை அந்த பெண் வேறு யாரையாவது காதலித்திருப்பாள்!”


“அம்மா தாயே! நல்லா கதை சொல்ற.. ஆனால் இதுக்கு மேல் கதை கேட்க எனக்கு நேரமில்லை.. நான் கிளம்புகிறேன்”


மனோ இன்றைய தன் அறிக்கையின் இறுதியை எட்டியிருந்த நிலையில். திடீரென்று அவன் மேஜை மேலிருந்த தொலைபேசி ஒலிக்க, கண்களை மட்டும் முன்னிருப்பவரின் மேல் வைத்து நினைவுகளில் ஆங்காங்கே இருந்த இருவரும் நடப்பிற்கு வந்தனர். இந்த எண்ணுக்கு யாரும் அவ்வளவாக அழைக்க மாட்டார்களே.. சிந்தனையுடன் ரிசீவரை எடுத்து தன் வலக்காதினில் வைத்து, “ஹலோ!’ என்றவன் அந்த பக்கம் பேசியவர் சொன்ன செய்தியில் விரைத்தான்.


“என்ன அம்மா சொல்றீங்க?”


“…..,.. “


“முட்டாள்!”


“………!”


“சரி‌ம்மா… நீங்க பயப்படாதீங்க.. இதோ வந்துடறேன்” என்று சொல்லியவன் ஃபோனை வைத்தபின் சில நொடிகள், மேஜை மீது கோர்த்திருந்த தன் இரு கைகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அதில் உள்ளத்தின் பதற்றம் குறையவில்லையென்றாலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்தது.


“என்னாச்சி சார்?”


தன் கணினியின் கீ போர்டில் படபடவென்று பதிவிட ஆரம்பித்தவன், மனோவை நிமிர்ந்து பாராமலேயே, “ மனோ! இன்றைய பதினோரு மணி மீட்டிங்கிற்கு நீயும் சிவாவும் போங்கள்.‌ சிவா தவிர இன்னும் யாரையேனும்கூட உன்னுடன் அழைத்துப் போ!”


என்ன பிரச்சனை.. ஏன் பதற்றமடைகிறான்.. “என்னாச்சி சார்?”,


அவன் சொன்னதும், “ஓ.கே சார்” என்று கிளம்பாமல் தன் முகத்தை ஆராய்வது போல நோக்கியபடி கேட்டபவளின் குரலில் கொஞ்சமாய் அக்கறை தெரிய, ஆதிக்கு எதையும் மறைக்கத் தோன்றவில்லை. நீண்ட மூச்சூ ஒன்றை உள்ளிழுத்து விட்டவன், “சித்தார்த் தற்கொலை முயற்சி செய்திருக்கிறான்.. முட்டாள்! ஃஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கிறார்கள். பெரியம்மா மட்டும்தான் அவனோடிருக்கிறார்கள். அதுதான் நான் உடனே போக வேண்டும். ”, என்று தன் முன்னிருந்த கணினியை செயலிழக்கச்செய்து தன் பர்ஸ், கார் சாவி, கைப்பேசியென தன் பொருட்களை அதனதன் இடத்திலிருந்து சேகரித்தபடியே , “நான் இன்று எந்த மீட்டிங்கிற்கும் இல்லையென்று அனைத்து துறை இன்சார்ஜ்களுக்கும் மெயில் அனுப்பிவிட்டேன். பார்த்துக் கொள்ளுங்கள்” என்று வேகநடையுடன் வெளியேறியவன், மட்டும் ஒரு நொடி நின்று திரும்பிப் பார்த்திருந்தால்,அவனைப் பொறுத்தவரை புரொஃபசனலிசத்திற்கு எடுத்துகாட்டான நம்ம மனோவின் பேயறைந்தது போன்ற முகத்தைப் பார்த்திருக்க முடியும். நின்று என்னவென்று விசாரித்திருந்தாலோ அவனுடைய பேயறைந்தது போன்ற முகத்தை நாம் பார்த்திருக்க முடியும்.


என் நந்தவனத்தில் பூத்த வெண்மலரே..
உன்சுகந்தமும் காற்றில் கலக்காது காவல் வைத்திருக்கிறேன்..
உன்னைக் கண்டுகொள்வானோ என்ற அச்சத்தினால் மட்டுமல்ல.
கண்டும் கொய்யாது சென்றுவிடுவானோ என்ற ஐயத்தினாலும்..
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ஃபிரண்ட்ஸ்.. அடுத்த எபி நாளைக்குதான் போடனும். ஆனா டைப் பண்ணி முடிச்சிட்டேனா.. வச்சிகிட்டு சும்மா இருக்க முடியலை. அட்டேட் போட்டுட்டா, நீங்க படிக்கலாம், கமென்ட் பண்ணலாம், அதைப் படித்து நான் சந்தோசப்படலாம். அதனால் நாளைய எபி இன்றைக்கே உங்களுக்காக... படிச்சிட்டு உங்க கருத்துகளைச் சொல்லுங்கள்..


அப்புறம் இன்னொரு விசயம்... இந்த கதைகளின் ஹீரோக்கும் ஹீரோயினுக்கும் ஃபோட்டோ போடுவதில் எனக்கு இதுவரைக்கும் அத்தனை உடன்பாடு இருந்ததில்லை. நம் கற்பனையில் வரும் உருவமே சரியாகப் பொருந்தும் என்று தோன்றும். விஜயேந்திர பூபதியையும் சதானந்தனையும் போல யாருமே இல்லையல்லவா?

ஆனால் அந்த கருத்தில் சமீப காலமாக சின்ன மாற்றம்..தற்பொழுது நான் படித்த சில கதைகளில் சில ரைட்டர்ஸ் போடும் படங்கள், அந்த கேரக்டர்களுக்கு ரொம்பவே சரியாக பொருந்துவதாக உள்ளன. சில நேரங்களில் அந்த கதாபாத்திரத்தை இன்னும் புரிந்து கொள்ள உதவுவதாகக் கூட இருக்கின்றன.

அதனால், கஷ்டப்பட்டு கடந்த பத்து நாட்களாகத் தேடி என் மனதில் இருக்கும் ஆதிக்கும், மனோவிற்கும் ஒத்துப் போகும் முகங்களைக் தேர்ந்தெடுத்திருக்கிறேன். பார்த்து உங்களுக்கு ஓகேவான்னு சொல்லுங்க.. உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும்..

அனிதா செல்வம்.
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி 3

85398540



சித்தார்த் தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்றாவது நாள் சத்யாவும் மனோவும் அலுவலக கேன்டீனில் காப்பிக் கோப்பையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். தன் முன் இருந்த கோப்பையைக் கையில் எடுத்தபடி மனோவைப் பார்த்த சத்யா, “மனோ.. யார் என்ன சொன்னாலும் நம்பிவிடுவாயா? இதெல்லாம் பொய்யாக இருக்கலாமே!”


“இப்படி பொய்க்கதை பரப்புவதில் யாருக்கு என்ன லாபம் சத்யா?”


“சரி. அதைவிடு.இன்று எங்கள் டிபார்ட்மெண்டில் இருந்து மூன்று பேர் போய் சித்தார்த் சாரைப் பார்க்கப் போகிறோம்.. நீயும் வருகிறாயா?”


மறுப்பாக தலையசைத்தவளைப் பார்த்தவள், “ ஏன் மனோ?’ என்றாள்.


“அது.. நான் அங்கே வந்து சித்தார்த் சாரைப் பார்த்தால் எப்படி ரியாக்ட் செய்வேன் என்று எனக்கே தெரியவில்லை சத்யா… அதுதான் பயமாக இருக்கின்றது” என்று பரிதாபமான பார்வையோடு சொன்னவள், ஒரு சிறு அமைதியின் பின், “இன்று முக்கியமான மீட்டிங் ஒன்று வேறு இருக்கின்றது.” என்று முடித்தாள்.


இவளை எந்த வகையில் சேர்ப்பதென்று சத்யாவுக்குத் தெரியவில்லை. காதலிக்கிறேன். என்று சொல்பவள், மருத்துவமனையில் போய் இன்னும் சித்தார்த்தைப் பார்க்கவேயில்லை. தனக்கே செய்தி தெரிந்ததும் பதறித் கொண்டுவர, எப்பொழுது பார்வையாளர்கள் அனுமதி தருவார்கள் என்று உலகநாதன் சாரிடம் விசாரித்து ஏற்கனவே ஒருமுறை போய் பார்த்து வந்து விட்டாள். இப்பொழுது தன் துறையின் சார்பாக மூன்று பேர் போவதாக முடிவு செய்ய அதற்கும் பெயர் கொடுத்திருக்கிறாள். இவளானால் மீட்டிங் இருக்கிறது என்கிறாள்.


ம்ஹூம்.. பாவம். தான் காதலிக்கும் ஒருவன் வேறு பெண்ணுக்காக உயிரையே கொடுக்க முனைந்திருக்கிறான் என்பதை யாரால் சாதரணமாக ஏற்றுக் கொள்ள முடியும். இவள் சொல்வது போல் அங்கே அழுது விட்டால் நன்றாக இருக்காதுதான். அதற்காகப் பார்க்க போகாமலே இருக்க முடியுமா?


அடுத்து வந்த இரண்டு வேலை நாட்களும் சோகமாகவே வளைய வந்த மனோ, விடுமுறை நாட்களிலும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு உட்கார அவளைப் பெற்றவர்களுக்குப் பொறுமை குறைந்தது.


கணேசன்- பூர்ணிமா மனோகரின் தந்தை தாய். இரண்டு தம்பிகள் 22 வயதில் செழியன். 19 வயதில் காவியன். பெயரை வைத்தே கண்டுபிடித்துவிட்டீர்கள்தானே!.. ஆம் கணேசன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர். மாணவ மாணவியருடன் பல வருடங்கள் கழித்தவர், குழந்தை வளர்ப்பு பற்றி கூறும் முக்கிய வழிகாட்டுதல், பிள்ளைகளுக்கு பெற்றோரிடமிருந்து தோழமையும், கண்டிப்பும் சரிசமமாய்க் கிடைக்க வேண்டும் என்பதைத்தான்.. அந்த கொள்கையை வீட்டிலும் பின்பற்றுவதாய், தோழனாய் அவர் மாற, கண்டிப்பான தாயாக பூர்ணிமா இருந்தார்.


பூர்ணிமா வீட்டின் தலைமை நிர்வாகி. அதிகமாக பேச மாட்டார். ஆனால் பேசினால் மற்றவர்கள் அவரை எதிர்த்துப் பேச மாட்டார்கள்.


கணேசன் குடும்ப வகையிலும் சரி, பூர்ணிமாவின் குடும்ப வகையிலும் சரி, ஆண் குழந்தைகளே அதிகமாக இருக்க, வீட்டின் முதல் பெண் வாரிசாக பிறந்த மனோ, எல்லோருக்குமே செல்லப் பெண்.


அதுவும் அவளுடைய குழந்தைப் பருவத்தில் கணேசன், தங்கள் சொந்த ஊரான தஞ்சாவூரில் பணிசெய்ய, தாத்தா, பாட்டி, அண்டை வீடுகளில், பெரியப்பா, சித்தப்பா, சித்திகள், மாமாக்கள்,அத்தைகள் என்று சுற்றம் ஏராளம். கால்கள் கீழே படாமல் தூக்கிக் கொண்டு நடப்பதற்கும், பத்து வயது வரை ஊட்டுவதற்கும் யாராவது ஒருவர் இருப்பர்.


அது போல அவள் கேட்க கேட்க கதை சொல்வதற்கும் ஆட்களுக்கு பஞ்சமிருந்ததில்லை‌. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று கதைகள் சொல்ல வேண்டும். அதுவும் இந்த பாட்டி வடை சு ட, அந்த வடையைக் காக்கா சுடும் கதை எல்லாம் கேட்கவே மாட்டாள். அரண்மனையில் இருக்கும் இளவரசியை இளவரசன் மீட்டெடுப்பது, சித்தியிடம் மாட்டிக்கொண்டு கஷ்டப்படும் இளவரசியை இளவரசன் கண்டடைவது, விலங்காய் மாறியிருக்கும் இளவரசனை இளவரசி தன் காதலால் காப்பாற்றுவது என்று ஃபேரி டேல்ஸ் தான். மாமா, சித்தப்பா,சித்தி, அத்தை என்று பாரபட்சமில்லாமல் எல்லோரையும் இந்த கதைகளைச் சொல்ல வைத்து, உணவு, பசி, தூக்கம் மறந்து கேட்டுக் கொண்டிருப்பாள்.என்ன ரசனையோ என்றுதான் பூர்ணிமாவிற்கே கொஞ்சம் கடுப்பாக இருக்கும். வேலை மாற்றலாகி சென்னை வந்த பொழுது கதை கேட்பது நின்றுவிட அத்தோடு பூர்ணிமாவும் அதை விட்டுவிட்டார்.


தன் பதினைந்து வயதில்,

'நிலவை விலகாது நிலத்தோடு கட்டிவைக்கும் ஆற்றலை ஈர்ப்புவிசை என்பேன்..

கடலலைகளைக் கரையோடு கை கோர்க்கச் செய்யும் ஆற்றலை காற்றழுத்தம் என்பாய்..

இதோ என்னை உன்னோடு வந்து சேர்க்கும் ஆற்றலை நாம் காதல் என்போம்',
என்று தன் அறிவியல் அறிவையும் காதலையும் கலந்து கட்டி கவிதை எழுதிய போது கணேசன், ஆகா! ஓகோ! என்று மெச்ச பூர்ணிமா தலையிலடித்துக் கொண்டார்.


பதினெட்டு வயதில் வேலை ஏதும் செய்யாமல் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டு பையனோடு ஓரிரு முறை பார்த்ததாக யாரோ சொல்ல, கணேசன் தன் மகளை கூப்பிட்டு விசாரித்தார், “என்னம்மா?” என்றுு.


“என்னப்பா? நல்லா படி என்று அட்வைஸ் பண்ணினேன்? இது எல்லாம் காதலா?’


மகளின் சிறிய கோபம் கலந்த அலட்சியமான பதில் மனதிற்கு நிம்மதியைத் தர, தன் மகளை மேலும் அறிய முற்பட்டவராய், கொஞ்சம் தோண்டினார். “அப்போ.. எதும்மா காதல்?”


“ம்ம்ம்.. ஒரு கவிதை சொல்லவா அப்பா?”


சுவாரஸ்யத்துடன், “ம்.. சொல்லேன்.. “


“கோடை மழையின் மண்வாசம்;

மாலை வேளையின் செவ்வானம்;

பௌர்ணமி நிலவின் கீழ் பொங்கும் கடல் அலை;

பெயர் தெரியாத குழந்தையின் புன்னகை;
இதையெல்லாம் பார்க்கும்போது மனதில் வருமே ஒரு உணர்வு, ஒரு இதம், அந்த உணர்வு, அந்த இதம், அவனைப் பற்றி நினைக்கும்போதே மனதில் தோன்றும். அதுதான் காதல்.”
கண்கள் மின்ன கவிதை சொன்னவளை பார்த்தவர், ‘சரி.. இப்போதைக்கு நம்ம பொண்ணு லவ் பண்ண மாட்டாள்..’ என்று நிம்மதியடைய, பூர்ணிமா அருகில் வந்தார். “கவிதை நல்லா இருக்கு மனும்மா.. ஆனால் நிஜ வாழ்க்கை எப்பொழுதும் இப்படி கவிதை போல இருக்காது..” கண்ட கனவுகள் நிஜத்தில் நடக்கவில்லையேன்றால் தன் மகள் ஏமாறக் கூடாது என்ற தவிப்பு அந்த தாய்க்கு

“என்னமா இப்படி சொல்றீங்க? அப்பாவை பார்க்கும் போது உங்களுக்கு இப்படி எல்லாம் தோன்றும் தானே.. அதைத்தான் கவிதையாகச் சொல்கிறேன்.

மகள் பேசியதைக் கேட்டு நமட்டு சிரிப்போடு கணேசன் குனிந்துகொள்ள, அவரைத் திரும்பி பார்த்தார் பூர்ணிமா. ‘அப்படி இதம் எல்லாம் தோன்றாதே.. தொப்பை போட்டிருக்கிறார்.. நான்கு வாரங்களுக்கு பொறித்தது கொடுக்கக் கூடாது.. கண்களைச் சுற்றி கருவளையமிருக்கிறது.. தூக்கம் போதவில்லையோ என்றுதானே தோன்றும். ஆனால் அப்படி தோன்றுவதுதான் உண்மை நேசம் என்று இந்தப் பெண்ணுக்கு எப்படி புரிய வைப்பது.. “சின்னப் பெண் தானே பூர்ணி.. இந்த வயதில் இப்படித்தான் தோன்றும். வயது ஏற ஏற, புரிந்து கொள்வாள்”, கணேசன் தான் பூர்ணிமாவைச் சமாதானப்படுத்தினார்..

கல்லூரி காலம் சுமூகமாகச் செல்ல வேலைக்கு சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிய நிலையில் ஒரு வாரமாக ஏதோ சிந்தனையிலேயே இருந்த மனோ, ஒரு நாள் தன் தந்தை தாயிடம் வந்து, “அப்பா! நான் ஒருவரை விரும்புகிறேன்..” என்றாள்.

சோபாவின் அருகில் அமர்ந்து பரீட்சை பேப்பர் திருத்திக் கொண்டிருந்த கணேசனும், , காய்கறி அரிந்து கொண்டிருந்த பூர்ணிமாவும், தாங்கள் செய்த வேலையை அப்படியே நிறுத்தி நிமிர்ந்து பார்த்தனர். “என்னம்மா சொல்ற?”

அவர்களுக்கு எதிரே இருந்த சோபா இருக்கையில் அமர்ந்து, அவர்கள் முகம் பார்த்து சொன்னாள், “இப்போ செய்கிற வேலையை விட்டு விட்டு அவருடைய கம்பெனியில் வேலைக்கு சேரலாம் என்று இருக்கிறேன்.”

பூர்ணிமா கணவனைப் பார்க்க, கணேசன், “என்ன மனோம்மா! தெளிவாகச் சொல்லு.. யார் பையன்? உனக்கு எப்படி தெரியும்? என்ன வேலை செய்கிறான்?”

“ பெயர் சித்தார்த்; என் காலேஜ் சீனியர்”.

“காலேஜ் சீனியரா? நீ படித்து முடித்து, மூன்று வருடங்கள் ஆகி விட்டதேடி.. இப்போதென்ன திடீரென்று?”

“நான் அவரைப் பார்த்து ஐந்து வருடங்கள் ஆச்சும்மா.. நான் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும் பொழுது அவர் ஃபைனல் இயர் படித்தார். அதற்குப்பின் யு.எஸ் போய் எம் பி ஏ படித்தவர், அங்கேயே வேலை பார்த்திருக்கிறார். சென்னை வந்து சில வாரங்கள்தான் ஆகிறதாம். இப்பொழுதுதான் கம்பெனியில் பொறுப்பெடுத்திருக்கிறார்..”

“ஆனால் இதை என்னிடம் சொல்லவே இல்லையே!” தோழியாய் நினைத்து பழகிய தன் மகள், தன்னிடம் கூட சொல்லவில்லையே என்ற ஆதங்கம் அவருக்கு.

“ என்ன சொல்லவில்லை?”, புரியாது பார்த்த மகளிடம், “நீங்கள்..” என்று ஆரம்பித்தவர், அத்தனை சகஜமாய் லவ் என்றெல்லாம் சொல்ல வராததால்,, சற்று நிறுத்தி, “நீங்க விரும்புறீங்க என்று காலேஜ் படிக்கும் போது என்னிடம் சொல்லவே இல்லையே?.

“ ‘நாங்க’ எல்லாம் விரும்பவில்லை அப்பா..”

“பின்னே?”

“நான் தான் காலேஜ் படிக்கும் போது அவரை விரும்பினேன். ஒரு க்ரஷ்!”

“ என்னது?..” இது பூர்ணிமா.

“க்ரஷ்மா.. க்ரஷ். அதாவது எனக்கு அவரைப் பிடிக்கும். ஆனால் அவருக்கு என்னைப் பிடிக்காது. சரியாகச் சொல்வதானால் எனக்கு அவரைப் பிடிக்கும் என்றே அவருக்குத் தெரியாது.”

மகளை முறைக்க ஆரம்பித்த மனைவியைப் பார்த்து பயந்து, “சரி.. இத்தனை நாள் கழித்து இப்போ என்னம்மா?” என்றார்.

“போன வாரம் ஃப்ரெண்சோடு பேசிக்கொண்டிருந்த பொழுது, சத்யா சொன்னாப்பா. சத்யா வேலை பார்க்கும் கம்பெனியே அவருடையதாம். அமெரிக்காவிலிருந்து வந்தவர் இப்போதுதான் நிர்வாகத்தில் பொறுப்பெடுத்திருக்கிறாராம். சத்யாவை அடையாளம் கண்டு விசாரித்தாராம். என்னைப் பற்றியும் விசாரித்திருக்கிறார். இதைக் கேட்டதிலிருந்து எனக்கு ஒரே யோசனை”. அப்பொழுதும் யோசிப்பது போல் மேற்கூரையைப் பார்த்தவள் சொன்னாள், “எங்களுக்குள் ஏதோ கண்ணுக்குத் தெரியாத பிணைப்பு இருக்கிறது. அதனால்தானே இத்தனை வருடங்கள் கழித்து அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.”

அப்போது மட்டும் சரியான நேரத்தில் கணேசன் பூர்ணிமாவின் கைகளைப் பிடித்திருக்காவிட்டால், மனோவின் தலையில் நச்சென்று ஒரு கொட்டு விழுந்திருக்கும்.
“மனோ.. அதற்காக செய்கின்ற வேலையை விட்டுவிட்டு போவதா?”

“ஆமாம்ப்பா.. எனக்கும் அதுதான் குழப்பமாக இருக்கிறது. அதற்காகத்தான் இப்பொழுது ஒரு முடிவு எடுத்திருக்கிறேன்.”

மனைவியின் விரல்களை கெட்டியாக பற்றியவாறு, “என்ன?” என்றவரிடம் “இன்டர்வியூ அட்டன் பண்ணுகிறேன்பா.. வேலை கிடைத்தது என்றால் நிஜமாகவே எங்களுக்கு சந்திக்கணும் என்று இருக்கிறது என்று நினைத்து வேலையில் சேர்கிறேன்.. எப்படி என் ஐடியா?”

“ எப்போ இன்டர்வியூ?” அதுவரை மகளை முறைத்துக் கொண்டிருந்த பூர்ணிமா, தற்பொழுது திரும்பி, கணவனை முறைக்க ஆரம்பிக்க, “இன்னும் 2 வாரங்கள் இருக்கிறதுப்பா..”

“சரி.. அதற்குள் பையனை பற்றி விசாரிக்கிறேன்.. நான் சரி சொன்னால்தான், நீ அடுத்து உன் விருப்பப்படி செய்யலாம். ஓகேவா? ஏதாவது கெட்ட பழக்கங்கள் இருந்தால், ‘நோ’ சொல்லி விடுவேன்.

“ஓகேப்பா.. ஆனால் அந்த மாதிரி பழக்கம் இருந்தால், நீங்க கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னால் கூட, நான் ‘நோ’ சொல்லி விடுவேன்” என்று சொல்லி, காய்ந்து கொண்டிருந்த தன் தாயின் வயிற்றில் கொஞ்சமாய் பாலை பார்த்து விட்டு அவள் எழுந்து செல்ல, கணேசன் பூர்ணிமாவை ஒப்பொழுதும்போல் சமாதானப்படுத்தினார். “அவள் குழப்பத்தோடு இருக்கிறாள் பூர்ணி.. இப்போது நீ வேண்டாம் என்று மறுத்தால், அதற்காக வாதிட்டு குழப்பம் தெளியாமலேயே, கொண்ட எண்ணம் உறுதியாகி விடும். போய் பார்க்கட்டும்.. மனோ அறிவான பொண்ணுதான்..”

ஆனால் நேர்முக தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலைக்கு சேர்ந்த பெண் ஏதோ அவள் படித்ததே இங்கு வேலை செய்வதற்குத் தான் போல ஆர்வத்துடன் வேலை செய்ய பெற்றோருக்கு அத்தனை கவலை இல்லை. அதுவும் அவளது மென்பொருள் துறை என்பதால், ஆட்டோமொபைல் பற்றி யாராவது பேசினால் சரியாகப் புரியவில்லை என்று அதற்கான புத்தகங்களை எல்லாம் வாங்கிப் படிக்கும் மகளைப் பார்க்கையில் அவள் ஏன் இந்த வேலைக்குச் சேர்ந்தாள் என்பதை மறந்தது போலவே தோன்றியது.

அப்படி வேலை செய்த பெண் திடீரென்று ஒரு நாள் வந்து சித்தார்த் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள் என்று சொல்லி ஒரு வாரமாக சோகமே உருவாக வளைய வர, கணேசனும் பூர்ணிமாவும் ஒரு சின்ன ஆலோசனைக் கூட்டம் போட்டு பேசி, அதன் முடிவாக கணேசன் மனோவின் அருகில் போய் அமர்ந்தார்.

“ மனோ.. ஏன்மா.. ஏன் இப்படி இருக்கிறாய்?”

“அப்பா!”

“சரி.. நடந்ததை விடு.. எதனால் அப்படி செய்தானோ? இப்பொழுது நன்றாகத்தானே இருக்கிறான். “

“அப்பா.. அவருக்குக் காதல் தோல்வியாம். அவர் காதலித்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகி விட்டதாம். அதில் மனமுடைந்து தான் இந்த தற்கொலை முயற்சியாம்.”

சோஃபாவில் முழங்கால் இரண்டையும் மடக்கி கைகளைக் கட்டி, குனிந்தபடி மனோ எந்த உணர்ச்சியுமற்ற குரலில் ஒரே சீராய்ச் சொல்ல கணேசனுக்கு அதிர்ச்சி. இங்கே ஒரு காதை வைத்தபடி சற்று தள்ளி நின்று துணி மடித்துக் கொண்டிருந்த தன் மனைவியிடம் ஒரு பார்வையைச் செலுத்திவிட்டு தன் மகளைப் பார்த்தவர், என்ன சொல்வதென்று தெரியாமல் அப்போதைக்கு அவளைத் தேற்றும் விதமாக, “எதனால் என்றால் என்னம்மா?இப்பொழுது சித்தார்த் நன்றாக இருக்கிறானே.. நீ கவலைப்படாமல் இரும்மா..”

“அப்பா.. உங்களுக்கு என்னை புரிகிறதா அப்பா.. என் வேலையை விட்டுவிட்டு ஒரு வருடமாக இங்கு வேலை செய்கிறேன். அவர் என்னை விரும்பவில்லை என்பதிருக்கட்டும். அவருக்கு மற்றோரு காதல் இருக்கிறது என்பது கூட எனக்குத் தெரியவில்லை யே. அப்போ இது எல்லாம் வீண்தானே?”

“மனோ உன்னிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை.. நீ ஒரு வருடம் அவனுக்காக மட்டும் தான் வேலைக்குப் போனாயா,. இல்லையே.. ஆர்வத்துடன் வேலை செய்தாய்.. மாதம் சம்பளம் பெற்றாய்.. நிச்சயம் நிறைய கற்றிருக்கிறாய். அப்புறம் எப்படி இந்த ஒரு வருடம் வீணானது ஆகும்?”


“இல்லைப்பா.. இன்னும் சில மாதங்களில் என் பழைய கம்பெனியில் என்னை ஆன்சைட் அனுப்புவதாக இருந்தார்கள். அதையெல்லாம் விட்டு வந்தேன். எல்லாமே வீண்..”

‌சோபாவின் மற்றொரு முனையில் அமர்ந்து கைப்பேசியில் நோண்டிக் கொண்டிருந்த காவ்யன் தன் தமக்கையிடம் திரும்பி, “அக்கா.. உன் பிரச்சினை என்ன? சித்தார்த் சார் தற்கொலை முயற்சி செய்தார் என்பதா? நீ ஆன்சைட் போகவில்லை என்பதா?

பக்கவாட்டில் திரும்பி தம்பியை முறைத்து, “ போடா ஸ்டுபிட்!” என்று சொல்லி மீண்டும் குனிந்த, தன் மகளைப் பார்த்தார் கணேசன். இன்னும் எத்தனை நாள் நடந்ததையே எண்ணி கவலைப்படப் போகிறாள்!

ஒரு முடிவுக்கு வந்தவராய், “நீ பேசாமல் இந்த வேலையை விட்டு விடம்மா.. தொடர்ந்து இங்கேயே வேலை பார்த்து கொண்டிருந்தால், இப்படி எதையாவது எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருப்பாய்..”

“வேலையை விடுவதா? அப்பா! நான் இருப்பது முக்கியமான ப்ராஜெக்ட்டில். இப்போது வேலையை விட்டால் ஆதி சாருக்கு கஷ்டம்பா..”

“நீ லவ் பண்ணுவது அந்த ஆதியையா? இல்லை சித்தார்த்தையா?” மறுபடியும் கைப்பேசியிலிருந்து தலையை நிமிர்த்தி இதைக் கேட்க, “.
“அப்பா.. இவனைப் பாருங்கப்பா!”

கணேசன் தன் மகனைப் பார்த்து, “நீ சும்மா இரேன்டா!” என்று சொல்ல, அவனுக்குக் கோபம் வந்துவிட்டது.

“ஏன் என்னிடம் கோபப்படுகிறீர்கள்? நீங்களும் அம்மாவும் கூட இரண்டு வாரங்களுக்கு முன்னால், இவள் அந்த ஆதி புராணம் பாடிய பொழுது பேசினீர்களே.. இவள் அந்த ஆதிக்காக வேலைக்கு சேர்ந்தாளா.. இல்லை சித்தார்த்திற்காக வேலைக்கு சேர்ந்தாளா என்று சமயத்தில் சந்தேகமாக இருக்கிறதென்று..”

மனோ நம்பமுடியாதவளாய் தன் தந்தையை நிமிர்ந்து பார்க்க, பூர்ணிமா இடையிட்டார், “டேய். நடு வீட்ல உட்கார்ந்து என்ன பேச்சுடா இது.. எல்லாம் நீங்கள் கொடுக்கும் இடம்.. ஃப்ரெண்டாகப் பழகுகிறேன், ஃப்ரெண்டாகப் பழகுகிறேன் என்று சொல்லி எப்படி பேசுகிறான் பாருங்கள்… போங்க.. போய் வேலையைப் பாருங்கள்..” ஆபத்பாந்தவனாய் தன்னை சரியான சமயத்தில் வந்து காத்த தன் மனைவிக்கு கண்களால் நன்றி சொன்னவர், மறுவார்த்தை பேசாது கிளம்பினார். எழுந்து செல்லும் தன் தந்தையையேப் பார்த்து கொண்டிருந்த மனோ அடுத்த நாள் தன் ராஜினாமா கடிதத்தோடு அலுவலகத்திற்குக் கிளம்பினாள்.
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ஃபிரண்ட்ஸ் 🙏🙏 வருடிச் செல்லும் பூங்காற்று கதையின் அடுத்த எபி உங்களுக்காக,.. படிச்சிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..
சென்ற எபியைப் படித்த , லைக் மற்றும் கமென்ட் செய்த எல்லோருக்கும் நன்றி நன்றி 🙏🙏 உங்களது லைக்கும் கமென்ட்டும்தான் என்னைப் போன்ற ஆரம்பகட்ட எழுத்தாளர்களுக்கான ஒரே உந்துசக்தி.. எனக்கு அந்த சக்தியைத் இதுவரை தந்த உங்களுக்கு நன்றி🙏🙏 😍😍இனி தரப்போகிறவர்களுக்கும் நன்றி😉😉😍😍 சரி.. வாங்க! படிக்கலாம்!
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி4

8603

8605


ஆதித்யாவின் பெற்றோர் ஆறுமுகம்- விஜயா. இவர்கள் திருமணம் நடந்ததற்கான முக்கிய காரணம், விஜயாவின் தந்தை அரசியலில் பெரும் புள்ளி என்பதை விஜயா உட்பட எல்லோருமே அறிவார்கள். பெரிய தொழிற்சாலைகளுக்கு சிலநேரம் அரசு இயந்திரங்களிலிருந்து வரும் தேவையில்லாத தொல்லைகளை சமாளிக்க அரசியல் பின்புலம் இருப்பது உத்தமம் என்று பரஞ்ஜோதி நினைக்க ஆறுமுகத்திற்கும் அது சரியெனப்பட்டது.


தன் மூத்த மகன் ஆறுமுகத்திற்கும் பணக்காரப் பெண்ணான சுமதியை மணமுடித்து வைத்ததற்கு காரணம் எப்போதானாலும் தன் பிள்ளைக்கு அவர்கள் பணபலம் உதவக்கூடும் என்பதுதான்.


ஆனால் சுமதியும் விஜயாவும் தங்கள் குணங்களில் எதிர்துருவமாயிருந்தார்கள் .
தன் கணவன் தன் பிள்ளைகள் என்றூ சுமதி பாசத்தை வாரியிறைப்பவர். கண்ணே! மணியே! என்பது அவர் சர்வசாதரணமாய் புழங்கும் வார்த்தைகள். விஜயா எதற்கும் வளைந்து கொடுக்காதவர். தன் பிள்ளையே என்றாலும் அள்ளி அணைத்தெல்லாம் பேச மாட்டார். பள்ளியில் முதல் மார்க் வாங்கி வந்தால் வெரிகுட் என்று கைகுலுக்குவார். பள்ளிக்கு ஒரு முறை மட்டம் போட்ட போதோ, நேராக முகத்தைப் பார்த்து, “ நீ நல்லபடியாய் இருந்தால் உன் எதிர்காலம் நன்றாக இருக்கும். இல்லையென்றால் வேதனைப்படப் போவது நீதான்.. எப்படி உன் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று முடிவுசெய்து அதற்கேற்றபடி நடந்துகொள் என்று கடினமான குரலில் சொல்லி வெளியேறிவிட்டார்.


அதற்காக, தன் தாயின் பாசத்திற்காக ஆதி சிறுவயதிலேயே ஏங்கினானா என்றால் நிச்சயமாக இல்லை. ஆதித்யாவிற்கு தன் தாயிடம் எப்பொழுதுமே ஒரு பிரமிப்பு உண்டு. தன் தந்எல்லோருமே அனைவருமே அவரிடம் ஆலோசனை கேட்பதைப் பார்த்து வளர்ந்தவன். எதைப் பற்றிய பிரச்சனை என்றாலும் தீர்வு சொல்லுவார்.. தனக்குத் தெரியாத துறையெனில் தீர்வு காணுவதற்கான வழியையாவது காட்டி விடுவார். தன் தாயும் தந்தையும் கொஞ்சி, பேசி எல்லாம் ஆதி பார்த்ததே இல்லை எனலாம். அதற்காக விஜயா ஆறுமுகத்தை மதிக்கவில்லை என்றால் அப்படியும் இருக்காது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர மரியாதையோடு நடந்து கொள்வது போலதான் இருக்கும்.


பக்கத்து வீட்டில் இருக்கும் பெரியப்பா பெரியம்மா வீட்டு நடப்பை ஒத்து பார்க்கும்போது ஆதிக்கு தனது வீடுதான் பிடித்தது. அங்கே சங்கரனும் சுமதியும் ஒரு நேரம் சிரித்து பேசினால் அடுத்த சில மணி நேரங்களில் சண்டை நடக்கும். சில நேரம் கண்கள் கலங்கிய படி சமைத்துக் கொண்டிருக்கும் தன் பெரியம்மாவைப் பார்க்கும்போது அவனுக்கு கோபம்தான் வரும்.. வளம் இருக்கிறது.. வேலையாட்கள் இருக்கிறார்கள்.. விரும்பியபடி வாழாமல் ஏன் அழ வேண்டும். தன் பத்து பன்னிரெண்டு வயதுகளில் தாங்காமல் கேட்டு விடுவான்.. “ஏன் சுமதிம்மா அழுறீங்க?” என்று. “ஒண்ணும் இல்லை கண்ணா!” என்று கண்களைத் துடைத்துக் கொள்வார்.


ஆதி, ஆறுமுகம் விஜயாவிற்கு ஒரே பிள்ளையாய் இருக்க, சங்கரன் சுமதிக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவள் சுமித்ரா ; அடுத்ததாக சித்தார்த். இருவருமே பயங்கர செல்லம். இப்பொழுது இருவரும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு அவர்கள் வளர்ப்புமே ஒரு காரணம் என்று ஆதிக்கு ஒரு எண்ணம் உண்டு.


சுமி அக்கா காதல் என்று சொன்னதும் கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள். இப்பொழுது எப்படி கஷ்டப்படுகிறாள்?.. இந்த சித்தார்த்தும் இத்தனை பெரிய ஆட்டோமொபைல் நிறுவனம் வைத்திருக்கும்போது அதைப் பற்றி படிக்காமல் கம்ப்யூட்டர் தான் படிக்கப் போகிறேன் என்றதும் அதில் என்ஜினியரிங் படிக்க வைத்தார்கள். அமெரிக்கா போகிறேன் என்றதும் அனுப்பி வைத்தார்கள். அங்கிருந்து காதல் தோல்வி என்று கைவீசி வந்த பொழுது தன் அம்மா சொன்ன, “உன் வாழ்க்கை, உன் கையில்!” அறிவுரை சொல்லாமல் “கண்ணப்பா! கலங்காதே!” என்று கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். ஆதி தான் ஒரு வருடம் முன்பு வம்படியாய் அவனை அலுவலகம் வர வைத்தான். இப்பொழுது அவளைப் பார்த்து பேசினானாம். அவள் மரியாதையில்லாமல் பேசியது தாங்கமுடியவில்லையாம். தற்கொலை செய்யும் எண்ணத்தில் பத்து மாத்திரையையும் சாப்பிடவில்லையாம். தூக்கம் வராமல் தான் சாப்பிட்டானாம். ஆனாலும் இப்படியா பலகீனமாய் வளர்ப்பது..


காரைப் பூட்டிவிட்டு தன் வேகநடையுடன் காவலரின் காலை வணக்கத்திற்கு தலையசைத்தபடி, ஆறாவது தளத்தில் உள்ள தன் அறைக்கு வந்தவன், தன் அலுவல் மேஜையின் மேல் இரு கைகளையும் ஊன்றி, குனிந்து தன் உள்ளங்கைகளால் நெற்றிப்பொட்டைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டான். அன்று அந்த போன் செய்தியுடன் கிளம்பியவன் ஒரு வாரம் கழித்து இன்றுதான் அலுவலகம் வந்திருக்கிறான். இந்த ஒரு வாரமும் அதீதமான மன உளைச்சல்; உடல் அலைச்சல். பெரியம்மாவிற்கு மன தைரியம் தந்து, செய்தி அதிகம் வெளியே வராமல் பாதுகாத்து, சிகிச்சை நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து என்று பம்பரமாக சுழன்றவன் நேற்று சித்தார்த்தை வீட்டிற்கு கொண்டு வந்து விட்டான். அவனிடம் எதுவுமே பேச விருப்பமின்றி கண்கள் கலங்கி நின்ற பெரியம்மாவைக் காட்டி, “உன்னைப் பெற்று, பாசமாய் வளர்ப்பதற்கு இதுதான் நீ அவர்களுக்கு தரும் பரிசு.. போடா!’ என்று சொல்லி வந்து விட்டான்.


தன்னைச் சுற்றி இருப்பவர்களை மறக்கடித்து விட்டு, தன் நலனை பின்னுக்கு தள்ளிக் கொண்டு அப்படி என்ன காதல்? இதையும் ஏதாவது மனவியாதியுடன் தான் சேர்க்க வேண்டும். இந்த இல்லூசன், ஹாலுசினேஷன் என்பார்களே, இல்லாதது இருப்பது போல் தெரிவது, இருப்பது வேறு போல் தெரிவது, அப்படித்தானே இந்த காதலும்..


கண்களை மூடி நிதானமாக மூச்சை வெளியிட்டவன், நிமிர்ந்து கண்ணாடி கதவு வழியாக எதிர் அறையில் இருந்த மனோகரியைப் பார்த்தான். இன்று வேலை சம்பந்தமான இவன் வந்தே ஆக வேண்டிய முக்கிய சந்திப்பு இருக்கிறது. இன்டர்காமில் மனோகரியை அழைக்க, எழுந்து உள்ளே வந்தாள். எப்போதும் புன்னகையுடன் வரும் ‘குட் மார்னிங் சார்!’ இன்று அவளிடம் இல்லை. அதை கவனிக்கும் மனநிலையில் அவனும் இல்லாததால், “மனோ.. அந்த மீட்டிங்கிற்கு சீக்கிரம் எல்லோரையும் வரச் சொல்ல வேண்டும்… நான் இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்புகிறேன்..”


“ அப்படியா சார்?” கொஞ்சம் ஏமாற்றத்துடன் வந்த அவள் குரலில், தன் முன் இருந்த கணினியிலிருந்து பார்வையை அவள் புறம் திருப்பி, “ ஆமாம்! ஏன் ஏதாவது பிரச்சினையா?” என்றான். “இல்லை சார்.. ஒன்றுமில்லை..” கையிலிருந்த ராஜினாமா கடிதத்தோடு திரும்பி தன் அறைக்கு வந்தவள் தொம்மென்று தன் நாற்காலியில் உட்கார, சொன்னது போல அந்த மீட்டிங்கை முடித்துவிட்டு ஆதி உடனே கிளம்பியும் விட்டான்.


மாலை சீக்கிரம் வீடு வந்த பெண் இன்னும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்க, பூர்ணிமா தொலைபேசியை எடுத்து யாரையோ அழைத்தார். அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் மனோவின் கைபேசி சிணுங்க, அதை எடுத்து, “ஹலோ!” என்றாள் மனோ.


“ஒரு சின்ன ஹெல்ப்..”


“சொல்லு சத்தி..” சுரத்தேயில்லாமல் சோக கீதமாய் வந்த தன் தோழியின் குரலில், தன் நெற்றியைத் தேய்த்துக் கொண்டு, பேச ஆரம்பித்தாள் சத்யா. “மனோ! வீட்டுல ஒரு ஃபங்ஷன்.. அண்ணன் பையனுக்கு முதல் பிறந்தநாள்.. அதற்கு எனக்கு டிரஸ் வாங்கணும். நீ சூப்பரா செலக்ட் பண்ணுவியே! நீயும் வர்றியா?”


உற்சாகம் காட்டி வந்த அந்த குரலில், தன் தாயைத் திரும்பிப் பார்த்தாள். அவள் மனதை மாற்ற முயற்சி செய்கிறாராம். சிட்டியின் பிறந்தநாள் அவளுக்குத் தெரியாதா? அடுத்த மாதம் வரும் பிறந்தநாளுக்கு இப்பொழுதே வாங்குகிறாளா? ம்ம்..போக விருப்பமில்லை.. ஆனால் அம்மாவை ஏமாற்றவும் மனம் வராமல், “ம்..வர்றேன் சத்யா..”, என்று சொல்லி அவர்களது வழக்கமான மாலில் சந்திக்க முடிவு செய்ய பூரிணிமாவின் முகத்தில் தோன்றிய நிம்மதியைக் கண்டு புன்னகைத்தவாறு, கிளம்ப ஆரம்பித்தாள். அங்கே அவர்களது மற்ற மூன்று தோழிகளும் சத்யாவோடு சேர்ந்திருக்க, மனோவிற்கு கண்களே கரித்துவிட்டன. ஆனால் இந்த செண்டிமெண்ட் எல்லாம் முதல் சில நிமிடங்கள் தான். பின் ஆடைகள் கடைக்குள் நுழைந்ததும் எல்லோருக்குமே எல்லாமே மறந்து விட, 'இந்த பிங்க்! அந்த ப்ளூ!’ என்று அந்த இடமே ஒரே களேபரமினது. சத்யாவிற்கு ஒரு அனார்கலி சுடிதார் தேர்ந்தெடுத்து, அந்த வேலையில், ஆளுக்கொன்று வாங்கிக்கொள்ள, களைப்பில் பக்கத்தில் இருந்த, ஐஸ்கிரீம் கடைக்குள் தஞ்சமடைந்தார்கள். ஒவ்வொருவரும் தங்கள் பணி மற்றும் பல இடங்களில் சந்தித்த சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, சற்று நேரத்தில் அங்கே மெல்லியதாய் சிரிப்பு சத்தம் கூட கேட்க ஆரம்பித்தது.


அதே மாலின் மற்றொரு தளத்தில் அமைந்திருந்த உயர்ரக ஹோட்டல் ஒன்றில் இருந்து வந்த ஆதியின் முகத்தில் ஒரு வாரத்திற்கு பின் இன்றுதான் கொஞ்சமாய் அமைதி இருந்தது. இன்று நடந்த மீட்டிங் மூன்று நாட்களுக்கு முன் நடந்திருக்க வேண்டியது. அப்போதிருந்த சூழ்நிலையில் ‘வர இயலாது' என்று தெரிவிக்க, அவரும் பெருந்தன்மையாக ‘இன்று இங்கே சந்திக்க முடியுமா?’ என்று கேட்டார். தொழில்முறை சந்திப்பு நல்ல விதத்தில் போனதில் மனதில் தோன்றிய நிறைவு முகத்திலும் தெரிய நடந்து வந்து கொண்டிருந்தவன் எதேச்சையாக தந்தான் மனோவைப் பார்த்தான். அவன் நின்றிருந்தது மாலின் மூன்றாவது மாடியில் கீழே இறங்கி வரும் தானியங்கி படியின் அருகில். அதன் எதிரிலிருந்த ஐஸ்கிரீம் கடையில் ஐந்து பெண்களுக்கு நடுவில் அமர்ந்திருப்பது இருப்பது மனோ தானா? கரும் நீல நிறத்தில் மெல்லிய துணியில் சுடிதார், ஒற்றை கையில் பெரிய வாட்ச், காதில் சின்னதாய் ஒரு கல் பதித்த தோடு, நெற்றியில் மினுமினுக்கும் சிறு பொட்டு, எல்லாவற்றுக்கும் மேலாக அவள் முடி… அடர்ந்த கூந்தல் அலை போல் வளைந்து நெளிந்து அவள் கன்னங்களில் இறங்கி கழுத்தில் வீழ்ந்து தோளிலும் முதுகிலும் புரண்டது. அதில் சில முடிக்கற்றைகள் அங்கேயும் இங்கேயும் நெற்றியில் துயில் கொண்டிருந்தன


அவனின் பார்வையை உணர்ந்தாளோ இல்லை அவளும் எதேச்சையாக நிமிர்ந்து பார்த்தாளோ, தோழிகளிடமிருந்து பார்வையைத் திருப்பி ஆதியைப் பார்த்தவளின் கண்கள் வியப்பில் விரிய, விரிந்து, பின் கண்களோடு இதழ்களும் சேர்ந்தே புன்னகை செய்ய, அதுவரை புத்தகங்களில் வரும் இரண்டு படங்களுக்குள்ளான ஆறு வித்தியாசங்களைக் கண்டுபிடிப்பவனைப் போல மனதில் தெரிந்த மனோகரிக்கும், கண்முன் தெரியும் மனோகரிக்கும் வித்தியாசங்கள் குறித்துக் கொண்டிருந்தவன், அந்த புன்னகையில் அதன்பின் எதுவும் யோசிக்க இயலாதவனாய் அப்படியே நின்று விட்டான்.


தான் புன்னகைத்ததற்கு பதிலுக்கும் புன்னகைக்காமல், கடந்தும் போகாமல் அங்கேயே நிற்பவனை வியப்பாய் பார்த்தவள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நொடி யோசித்தாள், பின் தன் அருகிலிருந்த பெண்ணிடம் குனிந்து ஏதோ சொல்லிவிட்டு எழுந்து இவனை நோக்கி வந்தாள்.


“ஹாய் சார்!”


‘ஹாயா? குட் ஈவினிங் தானே சொல்ல வேண்டும்?’ மனம் மற்றொரு வேறுபாட்டை குறிப்பெடுத்துக் கொள்ள, “ஹை!” என்றவனின் மூளை ‘கேட்காதே! கேட்காதே!’ என்று சொல்லியும் உதடுகள் அதன் பேச்சைக் கேட்காமல் கேட்டது, “நீங்க மனோ தானே?”


என்றுமில்லாததாய் ஆதி ஏதோ தயக்கத்தோடு பேசத் தொடங்கியது பார்த்து, என்னவென்று கவனமாக தலையை முன் சாய்த்து கேட்டவள், அவன் கேள்வியில் கண்கள் சுருக்கி இதழ்களால் சிரிப்பை அடக்கியவாறு, “ மனோ தான் சார்! டிரைவிங் லைசன்ஸ் காட்டவா?” தோழிகளிடம் இத்தனை நேரம் அடித்த அரட்டையினாலோ, இல்லை எப்படியும் வேலையை விட முடிவெடுத்திருந்ததனாலோ மனோவின் வாய்ப்பூட்டு சற்றே அகன்றது.


‘மனோ அவனிடம் சகஜமாகப் பேசுகிறாள்!’ வியப்பில் விழி விரித்தவனின் பார்வை முன் நெற்றி முடிக்கற்றையை மெதுவாய் வருடியது. கைகள் ஏனோ குறுகுறுக்க, அனிச்சை செயலாய் இரு கைகளையும் தன் பேன்ட் பாக்கெட்டுக்குள் நுழைத்தவனின் மூளை தன் ஆக்டோபஸ் கரங்களால் 'நோ!நோ!” என்று சொல்லியபடி அவன் வாயை அடக்க எத்தனிக்க, அனைத்தையும் உதறிவிட்டு வார்த்தைகள் வெளிவந்தன, “இந்த டிரஸ்ல நீ ரொம்ப அழகா இருக்கிற மனோ!” மூளை தன் தலையில் அடித்துக் கொண்டது. ‘ஆதி இது தப்பு! இப்படி எல்லாம் உன்னிடம் வேலை பார்க்கும் பெண்ணிடம் பேசக் கூடாது!’


‘இப்படி பார்த்து இதுபோல் பேசுவானாம். இதில் சலனப்பட்டால் அந்த பெண்தான் தவறாகப் புரிந்து கொண்டாள் என்பானாம்.. என்னடா நியாயம் இது'.. கைகளை பேண்ட் பாக்கெட்டுக்குள் விட்டு நிமிர்ந்து நின்றபடி, என்னவோ அவள் உடையை பற்றி தான் கருத்து சொல்வது, தினமும் நடக்கும் சாதாரண நடப்பு போன்ற பாவனையுடன் நின்றிருந்த ஆதியை விழி விரித்துப் பார்த்த மனோ, ‘என்ன சொல்வது இதற்கு?’ என்று ஒரு நொடி தயங்கி பின், சுருக்கமாக “தேங்க்ஸ் சார்!” என்றாள்.


பின் இது போல மீண்டும் ஏதாவது பேசி விடுவானோ என்ற பயத்தினால், “என்ன சார், இந்த பக்கம்?” என்று பேச்சின் போக்கு இருக்க வேண்டிய திசையை அவனுக்கு காட்டினாள். . கீழே இறங்குவதற்கான தானியங்கி படியின் அருகில் நின்றிருந்தவர்கள் கீழிருந்து மேல் வரும் இருவருக்கு வழிவிடும்படி சற்று நகர்ந்து பின்னிலிருந்த கடையின் அருகில் செல்ல, ஓரளவு மனதைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தவன் அவள் குறிப்பை உணர்ந்தவன் போல், “நமக்கு ரா மெட்டீரியல் சப்ளை செய்பவருடன் ஒரு சின்ன மீட்டிங்.. நீ என்ன இந்தப் பக்கம்?”


“ பிரண்ட்ஸோட ஷாப்பிங் வந்தேன் சார்!” அடுத்து என்ன பேசுவது என்று அவள் யோசித்தபடி நிற்க அந்த கடையின் வாசலில் இருந்த அதிவேக மின்விசிறியின் உபயத்தில் அவள் முன் நெற்றியில் இதுவரை அமைதியாக இருந்த முடிக்கற்றைகள், இப்போது பரபரவென்று விளையாட ஆரம்பிக்க, அதை அவள் விரல்கள் லாவகமாய் அடக்கி, காதின் பின்னே அழைத்துச் செல்ல அவள் விரல்களோடு இவன் விழிகளும் பயணம் செய்தன.


“மீட்டிங் எப்படி போனது சார்?” என்று மிகுந்த முயற்சிக்குப் பின் அவள் ஒரு கேள்வியை கண்டுபிடித்து கேட்க, அவன் தன் பார்வையை மீட்டு பதில் சொல்வதற்குள் “மனோ!மனோ!” என்று மது ஏலம் போட ஆரம்பித்தாள். அப்பொழுதுதான் இப்போது அவர்கள் நின்றிருக்கும் இடம் ஒரு விளம்பர அட்டைக்கு பின்னால் இருந்ததை கவனித்த மனோ, அங்கிருந்தபடியே கொஞ்சமாய் முதுகை வளைத்து எட்டிப் பார்த்து, “இதோ வருகிறேன் மது!” என்று குரல் கொடுத்து இவனைப் பார்த்து, “ஓகே சார்! நான் கிளம்புகிறேன்! பிரெண்ட்ஸ் கூப்பிடுறாங்க.. பை..” என்றாள்.


பதிலுக்கு “பை!” என்று சொன்னவன், கிளம்பும் எண்ணம் எதுவும் இல்லாமல் அங்கேயே நிற்க அவள் தயக்கமாய் புன்னகைத்து, மறுபடியும், “ஓகே சார்! வரேன்!” என்றபடி தன் தோழியை நோக்கி ஓடினாள். சின்ன ஓட்டமும் வேகநடையுமாய் திரும்பி சென்று கொண்டிருந்தவளைப் பார்த்த ஆதி மெல்லியதாய் புன்னகைத்தான். வழக்கமான உடையிலேயே மனோ அழகிதான் என்று ஆதிக்கு தெரியும். இந்த உடையிலும் அலங்காரத்திலும் இன்னும் அழகாகத் தெரிகிறாள் என்றெல்லாம் அவனுக்குத் தோன்றவில்லை. அது ஒரு அழகு என்றால் இது ஒரு அழகு. ஆனால் அவன் இத்தனை நாட்களில் இன்றுதான் ஏதோ உண்மையான மனோவைப் பார்ப்பது போல் உணர்ந்தான். அதென்ன உண்மையான மனோ.. அந்த சேலையைக் கட்டி பூ வைத்தால் பொய்யான மனோவா? என்ன முட்டாள்தனம்.’ தலையில் மானசீகமாய்த் தட்டிக் கொண்டாலும் மனதின் இறுக்கங்கள் தளர்ந்து மிகவும் லேசானது போல இருந்தது. அந்த மனநிலை அடுத்த நாள் அவள், “ராஜினாமா செய்கிறேன்!’ என்று தன் ராஜினாமா கடிதத்தை நீட்டும் வரை நீடிக்கவும் செய்தது.
 

Attachments

Status
Not open for further replies.
Top