All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா செல்வமின் "வருடிச் செல்லும் பூங்காற்று" - கதைத் திரி

Status
Not open for further replies.

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி 9


11260



11261

மனோவிடம் சாரி சொல்ல வேண்டும். அதற்கான வாய்ப்பை தான் காலையிலிருந்து ஆதி தேடிக் கொண்டிருக்கிறான். ம்ஹூம்.. ஆளைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை. ப்ராஜெக்டின் முக்கியமான நேரம். வேலை அதிகம்தான். எப்பொழுதும் அவளுடன் நான்கு பேர் இருந்தார்கள். அத்தனை பேர் முன்னிலையிலும் மன்னிப்பு கோர முடியாதே..

நேற்றைய இரவெல்லாம் சிந்தித்துப் பார்த்ததில் நடந்ததில் தன் தவறு பெரும்பங்கு இருக்கிறது என்றே ஆதிக்குத் தோன்றியது.
எத்தனை நாட்கள் அதிகப்படியான நேரங்கள் மனோ வேலை செய்திருக்கிறாள். ஒரு நாள், ஒரு மணி நேரம் அதிகமாக உணவு இடைவேளை எடுத்துக் கொள்வதில் என்ன‌ தவறு.

இனி இருப்பது, ஒரே வாய்ப்புதான். மனோ கிளம்பும் நேரம்‌. கம்பெனியிலிருந்து ரயில் நிலையம் செல்ல அவர்கள் பயன்படுத்துவது சத்யாவின் வண்டி. பார்க்கிங்கில் வண்டியை விட்டுவிட்டு டிரெயினில் போய் அங்கே பார்க்கிங்கில் இருக்கும் மனோ வண்டியில் வீட்டுக்கு போவார்கள். இருவர் வீடும் அருகருகில் இருப்பதால் மனோ மாலையில் சத்யாவை வீட்டில் விட்டு விட்டு போவாள். காலை வரும்போது அழைத்துக் கொள்வாள். இதுதான் மனோ இந்த கம்பெனியில் சேர்ந்ததில் இருந்து அவர்களுடைய வழக்கம். இது ஆதிக்கும் தெரியும். அதனால் கிளம்பும் அந்த சமயத்திலும் மனோவுடன் சத்யா இருப்பாள். சாரி சொல்வதென்றால் சத்யா முன்னிலையில்தான் சொல்ல வேண்டும். ம்ம்.. கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனால் வேறு வழியில்லை. எப்படியும் அவன் அன்று பேசியது சத்யாவிற்கும் தெரியும். அதனால் அவள்‌முன் கேட்பதில் தவறிருக்காது.



மணி ஆறை எட்டியிருந்தது. அவர்கள் வேலை நேரம் ஐந்து மணிவரை. ' ம்ம்ம்..

.
அவனுக்கு எதிரறை மனோவினது‌ என்றால் பக்கவாட்டு அறை சித்தார்த்தினுடையது. அங்குதான் இப்பொழுது மனோவோடு இன்னும் சிலரும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தன் முன்னிருந்த கணினியில் ஒரு கண்ணும் வாசலில் ஒரு கண்ணுமாய் இருந்தவன் சளசளவென்ற சத்தத்தில் நிமிர்ந்தான். அனைவருமே விடைபெற்று முன்னே செல்ல சத்யாவும் சித்தார்த்தும் மனோவின் அறையின் வாசலில் இருக்க, மனோ உள்ளே போய் கைப்பையோடு வெளியே வந்தாள். கவனமாக இவன் அறைப்பக்கம் பார்க்காமல் தவிர்க்கிறாளோ? இதில் சந்தேகம் என்ன? நிஜமாகவே தவிர்க்கத் தான் செய்கிறாள். காலையிலிருந்து இதே நேர் கொண்ட பார்வை; நிமிர்ந்த நன்னடைதான். நியாயமான கோபம்.. ஆதியின் முகம் இளகியது. கடந்த சில வாரங்களாக ஆதி அவளிடம் காட்டிய பாராமுகம் அவளுக்கும் அவனுக்கு இப்போதிருப்பது போல் தானே உறுத்தியிருக்கும்... உறுத்தியிருக்கும்தானே??

தன் பொருட்களோடு கிளம்பியவன் அவர்களை முன்னே போக விட்டு சில அடி தூர இடைவெளியில், பின்னே நடந்து வந்தான்.. கட்டிடத்தின் கீழ் தளத்தில் பிரதான வாசலின் கண்ணாடி கதவு வழியாக அவர்கள் வெளியே செல்ல தன் எட்டு களை கொஞ்சம் வேகமாகப் போட்டுக் கொண்டிருந்தவனை, "வணக்கம் சார்!" என்ற குரல் நிறுத்தியது.

வாசல் கதவைத் திறந்து பிடித்திருந்த வாயிற்காவலர். "வணக்கம் முருகேசன் சார்".

உயரமாக, , சட்டையை இன் செய்து, ஒரு கையைப் பாக்கெட்டிற்குள் விட்டபடி கம்பீரமாக வரும் தன் இளைய முதலாளியை ரசித்துப் பார்த்தார், முருகேசன். அவருக்கு இத்தனை அழகாக தன் முதலாளி போவது மன்னிப்பு கேட்க என்று தெரியாதில்லையா? அவன் தகப்பனார் காலத்திலிருந்து இங்கு வேலை செய்பவர்.

அவர் ஏதோ சொல்ல வருவது போல் தோன்ற, ஆதிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு கணம் யோசித்தான்‌. நின்று பேசினால், அவர்கள் கிளம்பியிருப்பார்கள். தனக்குக் கிடைத்த வாய்ப்பை இழந்து விடுவான். ஆனால் இவரிடம் என்னவென்று கேளாமல் எப்படி போவது. கேள்வியாய் பார்த்து நின்றான், "சொல்லுங்க முருகேசன்"

"தம்பி.. என் பையன் ஃபர்ஸ்ட் இயர்ல முதல் வகுப்புல பாஸ் ஆயிட்டானாம். காலேஜ்லயே அவன்தான் ஃபர்ஸ்ட் ஆம்."

"ஓ.. சூப்பர்.. ரொம்ப சந்தோசம்"

"ரொம்ப நன்றி தம்பி.. நீங்க மட்டும் படிக்க உதவி செய்யலைனா, இப்போ ஏதாவது கடையில பொட்டலம் போட்டுகிட்டு இருப்பான்."

"நன்றி எல்லாம் என்ன சார்..உங்க பையன் எடுத்த மார்க்குக்கு அவன் மேல படிக்கலைனா, அது பெரிய தப்பு.. நீங்களே வந்து கேட்டிருக்கனும். நல்லவேளை உலகநாதன் சார் சொன்னார்"

"அது தம்பி. நான் சும்மா உலகநாதன் அய்யாகிட்ட புலம்பிகிட்டு இருந்தேன். என்னமோ.. கடவுள் அருள்.. அப்புறம் தம்பி..*

"சொல்லுங்க.."

"எனக்கு ஒரு சின்ன ஆசை.. என் பையன் படிச்சு முடிச்சதும் நம்ம கம்பெனியிலயே வேலை போட்டுக் கொடுங்க தம்பி.. இந்த கையால எத்தனையோ பேருக்கு கேட் திறந்து விட்டிருக்கேன். என் பையனுக்கும் அதே மாதிரி திறக்கனும்"

"கண்டிப்பா.. இதே மாதிரி தொடர்ந்து நல்லா படிச்சு, திறமையோட வெளியே வரட்டும். வேலை அவனுக்காக காத்திருக்கும்"

"ரொம்ப சந்தோசம் தம்பி.. ரொம்ப சந்தோசம்" சிரித்தபடி அவர் விலகி நிற்க, ஆதிக்கு தன் முகத்தை மாற்றாமல் காப்பது கொஞ்சம் கடினமாக இருந்தது. ஒரு பெரிய மூச்சை வெளியிட்டவன், கார் பார்க்கிங்கில் தன் கார் நிறுத்தியிருக்கும் இடம் நோக்கி மெதுவாகச் சென்றான். நிச்சயம் சத்யாவும் மனோவும் போயிருப்பார்கள். இன்று வெள்ளி கிழமை. இனி சனி ஞாயிறு போய் திங்களன்றுதான் பார்க்க முடியும். முகம் ரொம்பவும் வாடி, காரைக் கிட்டத்தட்ட உருட்டிக் கொண்டிருந்த பொழுது, சட்டென்று கால்கள் அனிச்சை செயலாய் பிரேக்கை அழுத்தின. நிஜம் தானா.. நிஜமேதானா? கடவுள் இருக்கிறார்தான் போல.. இல்லையென்றால் இப்படியெல்லாம் நடக்குமா?

நம் ஆதி இப்படி திடீர் பக்தனாய் மாறியதற்குக் காரணம், மனோ இன்னும் போகவில்லை. டூவீலர் பார்க்கிங்கில்தான் நின்று கொண்டிருந்தாள். அதுவும் ச்தயா இல்லாமல் தனியாக.. அதுவும் வண்டியை ஸ்டார்ட் செய்ய முயற்சித்துக் கொண்டு..

ஆதி.. இதற்கு மேல் உன் திறமையைக் காட்டு..

காரை மனோவின் வண்டியின் அருகில்
செலுத்தியவன், பக்கத்தில் வந்ததும் ஹார்ன் அடித்தான். சத்தத்தில் திரும்பிய மனோவின் முகத்தில் ஆர்வமான புன்னகை ஒரு நொடி தோன்றி பின் மறைந்தது. 'நோ.. நான் இவனிடம் பேசக் கூடாது. நேற்று எப்படி எல்லாம் பேசினான்‌?'

"ஹாய் மனோ!"

"ஹாய்!" அவன் புறம் திரும்பாமலேயே பதில் வந்தது.

"என்னாச்சி? வண்டி ஸ்டார்ட் ஆகவில்லையா?

"ம்.. ஆமாம்..ஒரு வாரமாகவே பட்டன் ஸ்டார்ட் வேலை செய்யவில்லை. கிக் ஸ்டார்ட் தான். இன்று அதுவும் வேலை செய்யவில்லை.."

இறங்கி உதைத்துக் பார்க்க வேண்டுமா? ஆனால் தப்பித் தவறி ஸ்டார்ட் ஆகி விட்டால்.. நோ.. சத்தமாய் யோசித்தான்," ம்.. ஸ்டார்ட் ஆகலைனா, என்ஜின் ப்ராப்ளமாகத்தான் இருக்கும். என்ன பிரச்சனைன்னு பார்க்க மெக்கானிக் போய் கூப்பிட்டு வர வேண்டும்..பக்கத்தில் மெக்கானிக் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை."


ஆதி இது உனக்கே ஓவராகத் தெரியவில்லையா? இந்த வண்டியை அக்குவேறு ஆணி வேறாகக் கழற்ற உனக்கு அரை மணி நேரமாகுமா? ஆனால் அது மனோவிற்குத் தெரியாதே...

இன்னும் ஒரு சில நொடிகள் யோசிப்பது போல கைகளை ஸ்டியரிங் லீவில் தட்டியவன், "சரி.. வா மனோ.. நான் உன்னை டிராப் செய்கிறேன்.."

"ம்கூம்.. இருக்கட்டும்.. நான் ஆட்டோவில் போய் கொள்கிறேன்""

"ஆட்டோ பிடிக்க, ஸ்டாண்டிற்கு நடப்பதற்கே, இருபது நிமிடத்திற்கும் மேலாகவும். ஏறு‌ மனோ "

மறுப்பது கொஞ்சம் அதிகப்படியாகத்தான் இருக்கும்.. அதற்காக இவன் காரில் ஏறுவதா?

"கமான் மனோ"

ஒரு மூச்சை உள்ளே இழுத்து விட்டவள், பின் வண்டியின் சாவியை எடுத்துக் கொண்டு எதுவும் பேசாமல் கைப்பையை இறுகப் பற்றியபடி சுற்றி வந்து முன்கதவைத் திறந்து அமர, ஆதிக்கு இப்போது தன் மகிழ்ச்சி முகத்தில் தெரியாமல் காப்பது ரொம்பவே கடினமாக இருந்தது.

ஆனால் முக்கியமானது முதலில், "வண்டி ஒரு வாரமாக வேலை செய்யவில்லை என்றால் அதை முன்னமே சரி செய்திருக்க‌வேண்டாமா?" ஏதோ நிகழ்தகவில், இவன் சரியாக அந்த நேரத்தில் அங்கிருந்தான். இல்லாமலிருந்திருந்தால் எத்தனை கஷ்டமாக இருத்திருக்கும்..

"அது டெய்லி, வண்டியை சர்வீஷ் கொடுப்பது பற்றி யோசிக்கிறோம்.. ஆனால் நேரமில்லை"

"ம்ம்.... சத்யா எங்கே?"

".. சத்யாவின் பெரியப்பா பெண்ணிற்கு திருமணம்.. மண்டபம் உங்கள் வீட்டுக்குப் போகிற வழியில்தான். அதுதான் சித்தார்த் சார் டிராப் பண்ணுவதாய் கூப்பிட்டு போயிருக்காங்க.."

"ம்ம்"

மனோவின் கைப்பேசி மெல்லியதாய் இசைக்க, யாரென்று பார்த்தவள், சட்டென்று அதை உயிர்ப்பித்தாள், "ஹே.. நிலா.. எப்படி இருக்க? "

"........"

"ம்.. கொஞ்சம் பிஸி தான்"

"......."

"அடுத்த வாரமா? ம்.. ஞாயிற்றுகிழமை ஒரு பங்சன் இருக்கிறது. சனிக்கிழமை ஃப்ரிதான்.."

"......"

"ஓ.. மது வருகிறாளா"? சூப்பர்.. "

"ம்..ஓகே.. நீ சனிக்கிழமை மதுவிற்கு ஓகே வா என்று கேள்.."

"....."

"பை!"

"மது என்றால் அன்று மாலில் பார்த்தோமே அந்த பெண்ணா?"

"பரவாயில்லையே.. நல்லா நியாபகம் வைச்சிருக்கீங்களே! அவளேதான்.."

"காலேஜ் ஃப்ரெண்டா?"

"ம்ஹூம்.. ஸ்கூல் ஃப்ரெண்ட்.."

வியப்பாய்‌ பார்த்தவன், "ஸ்கூல் ஃப்ரெண்ட்சிப் இன்னும் மெயின்டெயின் பண்றீங்களா? சூப்பர்.."

"நாங்க இப்போவும் பயங்கர க்ளோஸ்.. எங்க ஸ்கூல்ல எங்களை எப்படி கூப்பிடுவாங்க தெரியுமா?" அவன் தலையை இடமும் வலமுமாக ஆட்ட , தானே சொன்னாள் "பாண்டவிஸ்.."

சொல்லிவிட்டு கொஞ்சமாய் திரும்பி கண்களில் ஆர்வத்துடன் அவனைப் பார்க்க, சாலையில் கண்களைப் பதித்திருந்தவனின் முகத்தில் புரிந்ததற்கான மென்னகை பரவியது, "ஓ.. ஐந்து பேரா?"

"ம்.. ஆமாம்.. இப்போ ஒவ்வொருவரும் ஒரு இடத்தில். ஆனாலும் எப்போ ஃப்ரியா இருக்கோமோ, அப்போலாம் ஒரு மீட்.. சார்.. நிறுத்துங்க.. நிறுத்துங்க..ஸ்டேசனுக்கு லெஃப்ட்ல போகனும்"

"நம்ம ஸ்டேசனுக்குப் போகலையே.. வீட்டுக்கு தானே போகிறோம்.."

"வீட்டுக்கா? இங்கிருந்து எங்கள் வீட்டுக்குப் போக ஒரு மணி நேரமாவது ஆகும் சார்.."

"எனக்கு அந்த பக்கம் ஒரு முக்கியமான வேலை இருக்கு.."

கொஞ்சம் சந்தேகத்துடன் மனோ கண்கள் சுருக்கி அவனைத் திருப்பி பார்க்க, ஆதி சாலையை விட்டு கண்களை விலக்கவே இல்லையே.. தோள்களைக் குலுக்கிக் கொண்டாள்.

எதுவும் பேசாமல் ஜன்னல் வழியே வெறித்துக் கொண்டிருந்தவளிடம்,"அப்புறம் வேலையெல்லாம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது?"

"ஏதோ போய்க் கொண்டிருக்கிறது.."

"உன் சுப்பீரியர்கிட்ட இப்படிதான் சொல்லுவியா மனோ?"

"நீங்கள் மேனேஜிங் டைரக்டராகவா கேட்டீங்க?"

"சரி.. ப்ரெண்டா கேட்கிறேன். சித்தார்த் உன்னிடம் இப்பொழுது நன்றாக பேசுகிறானா?

இந்த கேள்வியை மனோ எதிர்பார்க்கவில்லைதான். சித்தார்த் எப்படி பேசுகிறான்? உண்மையைச் சொல்வதென்றால் மனோ அதைக் கவனிப்பதேயில்லை. சத்யா தான் அவ்வப்போது நியாபகப்படுத்திக் கொண்டேயிருப்பாள்.. "மனோ.. நீ போ இந்த டிஷ்கஷனுக்கு.. இன்னும் சில நாட்களில் இந்த ப்ராஜெக்ட் முடிந்துவிடும்." என்று அவளே மனோவும் சித்தார்த்தும் தனியாக இருப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறாள், அன்று ஹோட்டலுக்கு தாமதமாக வந்தாலே அது போல.

மனோவிற்கு சத்யா செய்வது ரொம்பவே பெரிய உதவியாக தெரிந்திருக்க வேண்டும். ஆனால் பிரச்சனை என்னவென்றால் அது அப்படி தெரியவில்லை. சித்தார்த்தும் ஒரு நல்ல நண்பனாக அவளிடம் பேசுகிறான். அவ்வளவுதான். . அவன் தன் பதவிக்கு புதியவன் என்பதால் நிஜமாகவே அவன் கற்றுக் கொள்ள நிறைய இருந்தது. " அவனோடு இருப்பதற்கான, பேசுவதற்கான வாய்ப்புகளுக்கு ஆசைப்பட வேண்டும், அது வாய்க்காமல் போனால் வருந்த வேண்டும்.. எதுவுமே இல்லையே.. இந்த வாய்ப்பு அவன் அவளைக் புரிந்து கொள்வதற்கா.. இல்லை அவள் தன்னைப் புரிந்து கொள்வதற்கா என்று இப்போதெல்லாம் மனோவிற்கு குழப்பம்தான்.


முன்னிருந்த கூகுள் மேப் போகும் வழியை சிகப்பில் காட்டி போக்குவரத்து நெரிசலைப் பற்றி எச்சரிக்க, "இந்த ரூட்ல ட்ராஃபிக் இருக்கும் போல.. இப்படி போகலாம்" என்றபடி காரை இடப்பக்கமாக வளைத்தான். கூகுள் பெண்ணும் ,'ரீகேல்குலேடிங்' என்று புதுவழியை ஆராயத் தொடங்கியது.

இன்னும் தன் கேள்விக்கு பதில் வராததில் மனோதிடம் ஒரு பார்வையை செலுத்தியவன், "என்ன.. பயங்கர யோசனையாக இருக்கிறது?" என்றான்.

"ம்.. என்ன??

"சித்தார்த் இப்போது உன்னைக் கவனிக்கிறானா என்று கேட்டேன்?"

"தெரியவில்லை.." உண்மையான பதில்தானே..

எதுவும் சொல்லாமல் முகத்தை ரொம்பவே கடினமாக வைத்துக் கொண்டு காரை ஓட்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்தவள், தன் நெடுநாள் சந்தேகத்தைக் கேட்டாள், "உங்களுக்கு லவ் ,பெயிலியரா சார்?"

"ஏன்?"

"இல்லை.. லவ் இதைப் பற்றி யோசிச்சாலே, இவ்வளோ கோபமா மாறிடறீங்களே? அதான் கேட்டேன்.."

கண்களில் மென்னகையுடன்,, "ஒரு ரூம் இருட்டாய் இருக்குனு சொல்ல உள்ளே போய் பார்க்கனும்னு அவசியமில்லை. வெளியே இருந்து பார்த்தாலே தெரியும்"

"அந்த ரூம் இருட்டாயில்லை.. கலர் கலராய் பளிச்சென்று இருக்கின்றது என்று சொல்கிறேன்.*

"கண்களை மூடிக் கொண்டு கனவு கண்டால் அப்படிதான் தெரியும்."

"நான் ஒன்றும் கனவு காணவில்லை. நீங்கள் தான் கண்களை மூடிக் கொண்டு எல்லாமே இருட்டாக இருக்கிறதுனு சொல்றீங்க"

"கண்களை நன்றாக திறந்து பார்ப்பதால்தான் சொல்கிறேன். ஒன்று காதல் ங்கிற பேரில் ஒருத்தர் மற்றவரை ஏமாற்றிராங்க.. ஏமாந்தவங்க வாழ்க்கையையே இழந்ததா நினைச்சி அழுறாங்க; நம்ம சித்தார்த் மாதிரி.. இல்லைனா ரெண்டு பேருமே உண்மையா காதலிக்கிறதா தங்களையே ஏமாத்தி கிட்டு ரெண்டு பேரும் சேர்ந்து கஷ்டபடுறாங்க சுமி அக்கா மாதிரி"

"சுமி அக்காவா?"

" ம்.. சித்தார்த்தின் அக்கா.. இருபத்திரண்டு வயதிலேயே காதல் என்று வந்த பெண்ணிற்கு எங்கள் பெரியப்பாவும் பெரியம்மாவும் புத்தி சொல்லி, புரிய வைக்காமல், நீ சந்தோசமாய் இருந்தால் போதும் அம்மா னு டயலாக் பேசி கல்யாணம் பண்ணி வைத்து விட்டார்கள். இப்போ எப்படி கஷ்டபடுறாங்க தெரியுமா?"

நிஜமாகவே மனோவிற்கு வருத்தமாக இருந்தது. கடவுள் ஏன் இவனுக்கு இப்படி தவறான உதாரணங்களாய் காட்ட வேண்டும்? " கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் எல்லோருமே இந்த இரண்டு வகைகளில் ஒன்றாக இருப்பதில்லை தெரியுமா? நீங்கள் பார்த்தீர்களே மது, என் ஃப்ரெண்ட்.. உண்மையான காதலுக்கு அவளும் அவள் கணவர் அரஜுன் சாரும்தான் உதாரணம். பார்த்த ஒரு மாதத்திலேயே திருமணம் செய்து கொண்டார்கள்.. ஒரு நாள் கூட பிரிந்து இருக்க மாட்டார்கள். அவர் பெரிய பணக்காரர். வெளிநாடுகளிலெல்லாம் ஹோட்டல்கள் வைச்சிருக்கார். எங்கே போனாலும் மதுவோடுதான் போவார்.."

எதுவும் சொல்லாமல் தோள்களைக் குலுக்கிக் கொண்டவனைப் பார்த்து, முறைத்தவள், பின் மாறி உற்சாகமான குரலோடே தொடர்ந்தாள் , "நாங்கள் அவளை ப்ரைம் மினிஸ்டர்' என்றுதான் கூப்பிடுவோம் தெரியுமா சார்? '"

அவன் கேள்வியாய் புருவங்களை மேலுயர்த்த, "ஏன் தெரிகிறதா?" என்றாள்.

"ம்கூம்"

"ஏனென்றால் அர்ஜுன் சாரோடு அவள் போகாத நாடே கிடையாது. காலையில் லண்டனில் இருப்பாள். லஞ்ச் மீட்டிங் ஃபிரான்ஸ் என்பாள். இரவு அமெரிக்காவிற்கான ஃப்ளைட்டில் இருப்பாள்.." ஆதியின் முகத்தில் படர்ந்த சிரிப்பைப் பார்த்தவளின் கண்கள் இளகின, "மது கொடுத்து வைத்த பெண்".


ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தவன், ஒரு சிறு இடைவெளி விட்டு "தாம்பரத்தில் இருக்கும் வண்டியாவது நல்ல கண்டீசனில் இருக்கிறதா? இல்லை அதையும் சர்வீஸ் விடுவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?"

பேச்சை மாற்றுகிறானாம். அவளுக்குமே சண்டை போடாமல் சாதாரணமாகச் பேசினால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. , "அதெல்லாம் சூப்பர் கண்டீசனில் இருக்கிறது.. என்னுடைய முதல் மாத சம்பளத்தில் வாங்கிய ஸ்கூட்டர்" பெருமையோடு அறிவித்தாள்.

என்ன மாடல் என்று கேட்டான். பின் அவனுடைய முதல் பைக் பற்றி பேசினார்கள். பைக்கில் சென்ற இடங்கள் பற்றிப் பேசினார்கள். பின் தங்கள் பயண அனுபவங்கள் பற்றிப் பேசினார்கள். இதற்கு நடுவில் வண்டியை இருக்கிற எல்லா கிளைச் சாலைகளிலும் வளைத்தவனைப் பார்த்து, கூகுள் பெண் பல முறை 'ரீ கேல்குலேடிங்' 'ரீ கேல்குலேடிங்' என்று பாடி, கடைசியில் இனியொரு முறை வண்டியை வளைத்தால் அவ்வளவுதான். இதற்கு அந்த ரெட் லைனில் வந்திருந்தாலேயே அரை மணி நேரத்திற்கு முன்னாக வந்திருப்பாய்' என்று அது திட்டலாம் என்று முடிவு செய்த நேரத்தில் மனோவின் வீடு வந்துவிட, ரீச்ட் யுவர் டெஷ்டினேசன்' என்று அது முடித்துக் கொண்டது.

மணியைப் பார்த்த மனோ தான், "அச்சோ.. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆயிடுச்சு.. உங்களுக்கு பரவாயில்லையா?" என்று கேள்வியாய் பார்க்க, "அதான் சொன்னேனே.. முக்கியமான வேலை இருக்கிறதென்று" என்று சொன்னபடி காரை அவள் வீட்டு வாசலில் நிறுத்தினான்.

காரிலிருந்து இறங்கி சுற்றி வந்து ஸ்டியரிங் வீல் முன்னிருந்தவன் அருகில் வந்தவள், "தாங்க்யூ சார்" என்ற போது, வீட்டுக் கதவு திறந்து, வெளியே வந்த பூர்ணிமா, "என்ன மனோ.. இவ்வளவு நேரமா? லேட் ஆனால் ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா?"

மனோ, " அம்மா.. வண்டி ரிப்பேராயிடுச்சி" என்றபடி ஆதியைப் பார்க்க, அப்போதுதான் பூர்ணிமா காரையும் காருக்குள் இருப்பவனையும் பார்த்தார். இது ஓலா காராக இருக்காது. தன் மகளைப் பார்க்க, மனோ அறிமுகம் செய்தாள், 'இது ஆதி சார் மா.. எங்கள் கம்பெனியின் எம்.டி."

"ஓ.. வணக்கம் தம்பி"

இதற்கு மேல் காருக்குள்ளேயே இருந்தால் நன்றாக இருக்காது.. காரிலிருந்து இறங்கியவன், "வணக்கம் ஆன்ட்டி" என்று முடிப்பதற்குள், கணேசன் வந்தார், "ஏன் மனோ லேட்டு? " என்றபடி. அவரிடமும் வண்டி ரிப்பேரானதைக் கூறி ஆதியை அறிமுகப்படுத்த, பூர்ணிமா தன் விருந்தோம்பலைக் காட்டினார், "உள்ளே வாங்க தம்பி.. சாப்பிட்டுட்டு போலாம்"

"அச்சோ.. இல்லை ஆன்ட்டி.. நான் கிளம்புகிறேன். அம்மா வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க"

மனோ பூர்ணிமாவின் முகத்தில் பளிச் பளிச் என்று பல்ப் எரிவதைக் கண்முன்னே பார்த்தாள். அம்மாவிற்கு மரியாதை தரும் பையனாம். அரை நொடியில் மனோவையும் குற்றம் சாட்டும் பார்வையையும் செலுத்தி விட்டார். இவள் அப்படி கவலைப்படவில்லையாம்.

கணேசன் ஆரம்பித்தார், "திருப்பி போக நேரமாகுமே தம்பி.. வாங்க.. வந்து ஏதாவது குடிச்சிட்டாவது போங்க"

ஆதி திரும்பி மனோவைக் கேள்வியாய் பார்க்க, பூர்ணிமாவிற்கு கோபம் வந்தது,, கண்களால் முறைத்து"வரச் சொல்லு மனோம்மா.." என்று குரலில் மட்டும் தன்மையாகச் சொன்னார்.

இதென்னடா வம்பாய் போய்விட்டது. இவளென்ன வரவேண்டாம் என்றா சொல்லப் போகிறாள்..இவளை ஏன் கேள்வியாய் பார்க்கிறான். இவனுக்கு சங்கடமாக இருக்குமோ என்றுதான் அமைதியாக இருந்தாள், "உள்ளே வாங்க சார்.."

உள்ளே வந்ததும் சோஃபாவில் அமர்ந்திருந்த செழியனிடம் மறுபடியும் அறிமுகப்படுத்திவிட்டு, தாயோடு சமையலறைக்குள் நுழைந்தாள்.

"ஏய் மனோ.. உன் எம்.டி யைக் கூப்பிட்டு வர்றேன்னு முன்னாடியே சொல்ல மாட்டியா? வீட்டிலே எதுவுமே இல்லை"

"எனக்கென்ன வண்டி வேலை செய்யாமல் போகுமென்று தெரியுமா?"

"அது தெரியாதுதான். ஆனால் காரில் வரும்போதாவது ஒரு கால் பண்ணியிருக்கலாமே?" பழங்களை வெட்டி மிக்ஸியில் போட்டபடி, "ஐஸ்கட்டி களை ஃப்ரிட்ஜிலிருந்து எடு.."

"அது.. அது தோணவே இல்லைம்மா.. ஆனால் உங்களோட இந்த மிக்ஸட் ஜீஸ் சூப்பரா இருக்கும்.. அவர் வீடு போய் சேரும் வரைக்கும் பசிக்கவும் செய்யாது.. அதனால், நோ கவலை" தாயோடு சேர்ந்து பழக்கலவை செய்து தம்பி, தந்தைக்கும் சேர்த்து எடுத்துக் கொண்டு ஹாலிற்கு வந்தால், அங்கே ஆதி தனி இருக்கையில் ரொம்பவும் வசதியாக அமர்ந்திருந்தான். சொந்தமாய் கார் வாங்கும் ஆசையில் இருந்த செழியனும் ஆதியும் எல்லா வகைக் கார்களைப் பற்றியும் விலாவாரியாக அலசிக் கொண்டிருக்க, ஆன்மிக சொற்பொழிவு கேட்கும் பக்தன் போல, அப்போதுதான் வந்திருந்த காவியன் கால் சாக்ஸைக் கூட கழற்றாமல் அமர்ந்து அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். கணேசனோ, மூவர் பேசுவதையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பூர்ணிமா, மனோ வந்ததும் எழுந்து டம்ளரை எடுத்துக் கொண்டவன், ஒரு மிடறு விழுங்கி, "ரொம்பவும் நல்லா இருக்கு ஆன்ட்டி" என்று ஒரு ஷொட்டு வைத்துவிட்டு, மீதியிருப்பதைக் கடகடவென்று குடித்தான். அதற்குப் பின் அமரவுமில்லை. "நேரமாயிடுச்சி. கிளம்புகிறேன் ஆன்ட்டி.. வர்றேன் அங்கிள்.. பை!"என்று செழியன் காவியனிடம் சொல்லி, மனோவின் பக்கமும் திரும்பி,"பை" என்று சொல்லிக் கிளம்பினான்.

வழியனுப்ப அவனோடு வெளியே வந்தவள், "நீங்கள் முக்கியமான வேலையிருக்கிறது என்றீர்களே? நிஜமாகவே உங்களுக்கு இங்கே முக்கியமான வேலையிருக்கிறதா? ரொம்பவும் லேட்டாயிடுச்சே?"

"நிஜமாகவே இருக்கு"

"என்ன வேலை?"

திரும்பி அவளை நேருக்கு நேராகப் பார்க்கும்படி நின்றவன், ஒரு நொடி தயங்கி பின் சொன்னான், "உன்னிடம் மன்னிப்பு கேட்கும் வேலை.."

"மன்னிப்பா? எதற்கு? ?"

"நேற்று பேசியதற்கு..". நேற்று என்ன பேசினான் என்று நினைக்க ஆரம்பித்தவளுக்கு, சட்டென்று ஹோட்டல் பேச்சு நினைவு வந்தது. அவள் முகத்தையே பார்த்திருந்தவன், "சாரி மனோ.. நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. நீ என்றுமே நேரக்கணக்கு பார்த்து நம் கம்பெனியில் வேலை செய்யவில்லை என்று எனக்கு தெரியும்.. அப்படி இருக்கும்போது நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது."

இருந்த கோபமெல்லாம் அவனோடு பேசியபடி வந்ததில், வீட்டில் எல்லோரிடமும் அவன் சாதாரணமாய் பழகியதில் , மறைந்திருக்க, ரொம்பவே சாதாரணமாய், "இதுதான் இங்கே ஆக வேண்டிய முக்கியமான வேலையா சார். இதை அங்கேயே கேட்டிருக்கலாமே?" என்று புன்னகையுடனே கேட்டாள்.

கார் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்தவன் அவளைப் பார்த்து, "அங்கே சாரி சொல்லியிருந்தால், எதற்கு சாரி என்பதே உனக்கு மறந்திருக்குமா? இல்லை, இத்தனை சுலபமாக என் மன்னிப்பை ஏற்றுக் கொண்டிருப்பாயா?" அவன் புருவம் உயர்த்திக் கேட்க, மனோ கண்கள் விரிய அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள். சரியாகத்தான் சொல்கிறான்.

அவள் முகத்தைப் பார்த்தபடி சாவியை அதனிடத்தில் பொருத்தி, காரை உயிர்ப்பித்தவன், தொடர்ந்தான், "ஒரு நல்ல பிஸினெஸ்மேன் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் என்ன தெரியுமா மனோ.. 'கிராப் த ஆப்பர்ச்சுனிட்டிஸ்'.. அதாவது 'வாய்ப்புகளை பிடித்துக் கொள்ள வேண்டும். அதான் கெட்டியாய் பிடிச்சுகிட்டேன்.. பை" என்று புன்னகைத்தபடி காரைக் கிளப்பினான்.

அன்றிரவு முழுக்க நம் மனோவின் கனவில் அந்த அனுபமாதான் வந்தாள்.
 
Last edited:

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி 10

11292


தன் அறையின் கட்டில் மீதிருந்த அந்த இரண்டு சேலைகளையும் நெடு நேரமாக கண் தட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த மனோவை, இத்தோடு நான்காவது முறையாக வந்து எட்டிப் பார்க்கும் பூர்ணிமாவிற்கு பொறுமை மறைந்தது. "மனோ.. அப்புறமாய் வந்து முடிவு பண்ணு.. முதலில் சாப்பிட வா .. "


"ம்.. இதோ.. வர்றேன் மா.."


அடுத்த சில நிமிடங்களுக்குப் பின்னும், 'இப்போ வர்றியா, இல்லையா என்ற பூர்ணிமாவின் மிரட்டலுக்குப் பின் வெளியே வந்த மனோ, அப்போதுதான் உள்ளே வந்த கணேசனைப் பார்த்ததும், "அப்பா.. இந்த இரண்டில் ஒன்றைத் தொடுங்களேன்.." என்றபடி ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் அவரிடம் நீட்டினாள்.


"வேண்டாம்பா.. மாட்டிக் கொள்ளாதீங்க." என்று சோஃபாவில் அமர்ந்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்த செழியன் எச்சரித்தான்..


"செழி.... நீ சும்மாயிரு..அப்பா..ப்ளீஸ்பா.."


"ஏன்டா! ஏன் அப்படி சொல்ற?" கணேசன் தன் மகனிடம் கேட்டார்


"இதோடு நான் நடு விரலை மூன்று முறையும், பக்கத்து விரலை இரண்டு முறையும் தொட்டு விட்டேன்.." கணேசன் தன் மகளைக் கேள்வியாய் பார்க்க,


"இல்லைப்பா.. இதுதான் லாஸ்ட்.. இனிமேல் கேட்க மாட்டேன்"


"விடு மனோ.. நாம் ஏன் இப்படி சூஸ் பண்ணனும். நீ இரண்டுடைய ப்ளஸ் மைனஸ் சொல்லு.. யோசித்தே முடிவு பண்ணலாம்.."


"அதைத் தாங்க அவள் காலையிலிருந்து செஞ்சிகிட்டு இருக்கா.." என்று சமையலறையிலிருந்து பூர்ணிமாவின் குரல் வர, "எந்த இரண்டில் ஒன்று ?" என்று கணேசன் ஓசையில்லாமல் உதடுகளை மட்டும் அசைக்க, இருவரும் மனோவின் அறைக்குள் போனார்கள்.



."இதோ இந்த இரண்டில் ஒன்றைத்தான்.." என்று கட்டிலைக் காட்ட, அவள் காட்டிய இடத்தில் இரண்டு சேலைகள் அழகாக விரிக்கப்பட்டிருந்தன. ஒன்று மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில், இளஞ்சிவப்பு பார்டர் வைத்த பட்டுப்புடவை. மற்றது, மேகமில்லா, வானின் வண்ணத்தில், இறைந்து கிடக்கும் வெண்கற்களால் பளிச்சென ஜொலிக்கும் டிசைனர் சேலை.."இதில் எதை எங்கள் கம்பெனி ஆண்டு விழாவிற்குப் போடுவது என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.


"ம்.ம்.. அவ்வளவுதானே.. இதோ இந்த சேலையின் ப்ளஸ் மற்றும் மைனஸ் சொல்லு என்று நீல வண்ணப் புடவையைக் காட்டினார்.


"ம்.. இது எனக்கு பிடிச்சிருக்குபா.. விழாவின் போது கம்பர்ட்டபிளா இருக்கும்.."


"ம்..இதோட மைனஸ் பாயிண்ட்?"


"ம்கூம்" என்று தலையை மட்டும் இடமும் வலமுமாய் ஆட்டினாள்.


"சரி.. ஓகே.. இதை ஏன் ஆப்சனில் வச்சிருக்க?" என்று அந்த பச்சை வண்ண பட்டுப் புடவையைக் காட்டி கேட்க, " இந்த ஆண்டு விழாவிற்குப் கட்டுவதற்காக, ஐந்து மாதங்களுக்கு முன்பாக, இதை வாங்கினேன்."


"ஓ.. இதனுடைய நெகட்டிவ் பாய்ண்ட்?"


"இது கசகசன்னு இருக்கும். டின்னர் அவுட்டோரில்தான்.. வேர்க்கும். "


"ஐந்து மாதங்களுக்கு முன்பு இதைப் பிடித்து தான் வாங்கினாயா?"


" அது.."


எப்பொழுதும் சித்தார்த்திற்காக என்று ரைட்ராயலாகப் பேசும் மகள், சேலையையே பாரத்துக் கொண்டிருக்க, கணேசன் மெதுவாகக்‌ கேட்டார், "சித்தார்த்துக்குப் பிடிக்கும் என்று இதைக் கண்ட நினைத்தாயா அம்மா?"


இன்னும் திரும்பி முகத்தைப் பார்க்கவில்லை, தலையை மட்டும் மேலும் கீழுமாய் ஆட்டி, "ம்.." என்றாள்.


"இப்போ ஏன் அது வேண்டாம் னு தோணுது"


"அப்பா.. ரொம்ப குழப்பமாய் இருக்கு.." தன் மகள் நிச்சயமாய் அந்த புடவையைக் பற்றி பேசவில்லை என்று அவருக்குத் தெரிந்தது. "


"இப்போது சித்தார்த்தைப் பிடிக்கவில்லையா?"


"ம்ம்.. பிடிக்குது, பிடிக்கலை இந்த மாதிரி எதுவுமே தோன்றவில்லைபா.. ஜஸ்ட் ஒரு கொலீக்னுதான் தோணுது"


மனோ.. அப்பா உனக்கு ஒரு கதை சொல்லவா?"


"ம்.."


"ஒரு கிராமத்தில் ஒரு ஆடு மேய்ப்பவன் இருந்தானாம். வேதங்கள்ல, கடவுள் புராணங்கள்ல எல்லாம் சொர்க்கத்தைப் பற்றி கேள்விப்பட்டு அவனுக்கு சொர்க்கத்துக்குப் போகனும்னு ஆசை வந்திடுச்சாம். எல்லா பெரியவங்க கிட்டேயும் போய் "சொர்க்கம் எப்படி இருக்கும்னு கேட்டானாம். ஒருத்தர் சொன்னாராம் சொர்க்கம் னா அங்கே சுவையான சாப்பாடு எப்பவுமே இருக்கும் அப்படினு. இன்னொருத்தர் சொன்னாராம், அங்கே பூக்கள் , செடி கொடினு ரொம்ப அழகாக, வாசமாக இருக்கும் னு. இன்னொருத்தர் சொன்னாராம், அங்கே அழகான பெண்கள் இருப்பாங்கன்னு."


இதையெல்லாம்‌ கேட்டு சொர்க்கத்தை தேடி போக ஆரம்பிச்சிட்டானாம் அந்த ஆடு மேய்ப்பவன். வழியில் ஒரு தோட்டம் பார்த்தானாம். அங்கே அழகான பெண்கள்‌ இருந்தாங்க, சாப்பாடு இருந்தது, பூக்கள் இருந்தது. ஆகா.. இதுதான் சொர்க்கம்னு அங்கேயே உட்கார்ந்திட்டானாம். ஆனா போக போக அந்த இடம் அவனுக்குப் பிடிக்கவில்லை... அந்த ஊரில் ஆடுகளே கிடையாது.. ஆடு இல்லாத இந்த இடம் எப்படி சொர்க்கம் ஆகூம்னு கிளம்பி தன்ஊருக்கே வந்துட்டானாம்"


நமக்கு எது ரொம்ப பிடிக்குமோ, அது இருக்கும் இடம்தான் சொர்க்கம்.. அதுபோல காதல், நேசம் எல்லாம் நீ ஒருவனிடம் தேவையான குணங்கள்னு நினைக்கிறாயோ , அவை இருப்பவனிடம்தான் வரும். அந்த ஆடு மேய்ப்பவனைப் போலதாம்மா, , நீ காதல்னா இப்படின்னு யார் யாரோ எழுதி வைத்தது மாதிரி இருக்கும்னு நினைக்கிற.. வெறும் மணியடிப்பதும் லைட் எரிவதும் எப்படி காதலாகும்... சித்தார்த்தை நீ விரும்புவதாய் யோசித்த போது அவரைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?"


" ராமாயணத்திலேயே சொல்லியிருக்காங்களே, "அணண்லும் நோக்கினான், அவளும் நோக்கினாள் என்று"


"இதைத்தான் அப்பா சொன்னேன். ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையும் ஒவ்வொரு மாதிரி.. சீதைக்கு ராமனைப் பார்த்ததும் பிடிக்கலாம். ஆனால் மனோவிற்கு ஒரு பையனைப் பிடிக்கனும்னா அவனைப் பற்றி அவளுக்கு தெரிந்திருக்கனும்.‌அவன் தன்னை விட எளியவங்ககிட்ட எப்படி பழகுகிறான், தன்னை விட பெரியவங்க கிட்ட எப்படி நடந்து கொள்கிறான், வெற்றியை எப்படி எதிர்கொள்கிறான், தோல்வியை எப்படி கையாள்கிறான் இதெல்லாம் தெரிந்தால்தானே உனக்கு அவனைப் பிடிக்குமா , பிடிக்காதானு தெரியும்.


"அப்போ அது லவ்வே இல்லைனு சொல்றீங்களாப்பா.?"


"ம்.." என்று அவர் உறுதியாக தலையாட்ட



"இதையெல்லாம் நான் லவ் பண்றேன்னு சொன்னேனே அப்போவே சொல்லியிருக்கலாமே?"


"அப்போ இதுதான் சொர்க்கம்னு சொன்ன.. இல்லை னு சொல்லியிருந்தா, அது ஏன் சொர்க்கம்னு எங்கிட்ட பேசி அதுவே உன் மனசிலேயும் பதிஞ்சிருக்கும். ஆனால் இப்போ உனக்கு இது சொர்க்கம் இல்லையே, உண்மையான நேசம் இல்லையேன்னு குழப்பம் வந்திருக்கு‌. அதுதான் அப்பா வந்து ஜஸ்ட் கதவைத் திறந்து விடுகிறேன், 'வெளியே வந்து விடும்மா 'என்று.."


அப்பாவையும் கூப்பிட்டு உள்ளே போயிட்டியா? இப்போ ரெண்டு பேரும் வெளியே வர்றீங்களா? இல்லையா?


இதோ வர்றோம்மா என்று இருவரும் ஒன்றாய் குரல் கொடுத்தனர்.


அன்று இரவு சத்யாவிடமிருந்து மனோவிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது, 'நான் நாளை வேலைக்கு வரவில்லை.. கூப்பிட வர வேண்டாம் ' என்று.


மனோவிற்கு அந்த செய்தியை அனுப்பிவிட்டு தன் கைப்பேசியையே பார்த்துக் கொண்டிருந்தாள் சத்யா.. அவள் எதிர்பார்த்தபடியே, சில நொடிகளில் தோழியிடமிருந்து அழைப்பு வந்தது. எடுக்காமல்தான் விட வேண்டும். எப்படி மனோவிடம் பொய் சொல்ல முடியும். அதற்காக உண்மையான காரணத்தை நிச்சயமாக சொல்லவே முடியாது.



மனோ சித்தார்த்தை விரும்புகிறாள். அதற்காகத்தான் இந்த வேலையில் சேர்ந்தாள். ஆதியின் உதவியுடன் இந்த பொறுப்புக்கு மாற்றலாகி அதற்காகத்தான் சித்தார்த்தின் கீழ் பணிபுரிகிறாள். இதெல்லாம் தெரிந்த நான் எப்படி மனோவிடம் சித்தார்த் சொன்னதை சொல்ல முடியும்" பழைய காலத்து தமிழ் படங்களில் நடப்பதெல்லாம் நிஜத்தில் நடக்குமா? வேறு யாருக்காவது நடப்பதாய் கேள்விபட்டிருந்தால் மனோவிடமே சொல்லி இரண்டு பேரும், "ஆஹா.. சூப்பர் லவ் ட்ரையாங்கிள்!" என்று சொல்லி சிரித்திருப்பார்கள். ஆனால் நடப்பது அவர்களுக்கே அல்லவா?



எங்கே தவறு நடந்தது? யாரிடம் தவறு? சித்தார்த் முன்பிருந்தே சத்யாவைப் பொறுத்தவரை ரொம்ப நல்ல பையன். முன்பு வந்து போயிருந்த போது கூட எல்லோரிடமுமே நன்றாகப் பழகுவான். அவன் மருத்துவமனையில் இருக்கிறான் என்று கேள்விப்பட்டதும் நிஜமாகவே சத்யாவிற்கு தாங்க முடியவில்லை. இரண்டு முறை போய்பார்த்தாள்.. இரண்டாவது முறை அவன் கண் திறந்திருந்த போது, சத்யாவின் கண்கள் கலங்கினதான். ஆனால் அப்பொழுதும் வேறு எந்த எண்ணமும் தோன்றவில்லை. அவன் மறுபடியும் வேலைக்கு வந்த போது ரொம்பவே மகிழ்ச்சிதான். ஆனால் அவன் வந்த சில நாட்களிலேயே சத்யாவிற்கு சிறு வித்தியாசம் தெரிந்தது. அது தன்னைக் காணும்போது சித்தார்த்தின் கண்களில் தெரியும் ஆர்வம்.


அந்த ஆர்வத்திற்கு சத்யாவின் எதிர்வினை பதற்றம்தான்.. அந்த பதற்றம் அவனின் ஆர்வத்திற்கா இல்லை அதன் பதிலாக அவள் மனதில் தோன்றிய சிறு பரபரப்பிற்கா என்று தெரியவில்லை. இரணடிற்குமாகத்தான் இருக்க வேண்டும். முடிந்த வரை விலகிப் போனாள். சித்தார்த்தும் மனோவும் தனித்து இருப்பதற்கு பல சந்தர்ப்பங்களை உருவாக்கித் தந்தாள். ஆனால் அவள் சில நாட்களாக அஞ்சியது நடந்தேவிட்டது. சித்தார்த் அவளைக் காரில் திருமண வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது அவன் மனதிலிருப்பதை அழகாகக் கூறிவிட்டான். "சத்யா.. உனக்கு என்னைப் பற்றி முழுதாகக் தெரியும். அப்படியிருக்கும்போது நீ இதை எப்படி எடுத்துக் கொள்வாய்னு தெரியலை. ஆனால் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கும்போது எதுவேமே இல்லாதது போல பேசுவது கஷ்டமாக இருக்கு. உன்னோடு இருப்பது, பேசுவது மனதுக்கு இதமாக இருக்கு சத்யா..யோசித்து சொல் " காரை மண்டபத்தில் நிறுத்தி அவள் இறங்கப்போகுமுன் அவன் சொன்ன வார்த்தைகள்.


அந்த கணங்களைப் பற்றி யோசிக்கும்போது சத்யாவை மிகவுமே பயமுறுத்துவது அவளுடைய அப்போதைய மௌனம்தான். "சீச்சீ.. எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை சார்" என்று சொல்லியிருக்க வேண்டும்.. ஆனால் அப்பொழுது அவளால் அதைச் சொல்லமுடியவில்லை. மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் நாளையும் அப்படி அவளால் சொல்ல முடியும் என்று தோன்றவில்லை..
 
Last edited:

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்.. சத்யா சித்தார்த் பற்றி அங்கங்கே சின்ன குறிப்புகள் கொடுத்திருந்தேன். கவனிச்சீங்களானு தெரியலை.. சரியாக சொல்லியிருக்கிறேனா? உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.. அனிதா செல்வம் 🙂 கருத்து திரிக்கான லிங்க் 👇👇

 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி 11



11386


இன்று‌ காலையிலிருந்தே மனோவிற்கு கொஞ்சம் அலுப்பாக இருந்தது. இன்று அலுவலகம் வரவில்லை என்ற ச்தயாவின் செய்தியைப் படித்து, எதனால் என்று கேட்க அழைத்த போது சத்யா எடுத்கவில்லை. ஒரு முப்பது நிமிடங்கள் கழித்து அவளிடமிருந்து அடுத்த செய்தி. உடல் நலம் சரியில்லையென்றும், தலை வலிப்பதாகவும். "ஆனால் அலுவலகத்தில் வேலை நிறைய இருக்கிறது", என்று பதிவு செய்ய தொடங்கிய மனோ நிறுத்தினாள்.. அவளுக்கும் ப்ராஜெக்டின் இறுதி நாட்களான தற்போதைய சூழலில் இன்னும் எந்த அளவில் வேலைகள் இருக்கின்றன என்ற தெரியும். இருந்தும் இன்று விடுப்பு எடுக்கிறாளென்றால் நிஜமாகவே ரொம்பவே முடியவில்லையாகத்தானிருக்கும். "ஓகே.." என்று மட்டும் அப்போதைக்கு பேச்சை முடித்தாள்.



அடுத்த நாள் காலை இரயிலில் தனியான பயணம். ஜன்னல் வெளியே கட்டிடங்கள் பின்னோக்கிப் பயணிக்க , அவள் மனதின் எண்ணங்கள் அதே வேகத்தில் முன்னோக்கிப் பயணித்தன. இப்பொழுது என்ன செய்வது..சித்தார்த்தை தான் விரும்பவில்லை என்பதை ஆதியிடம் சொல்ல வேண்டுமா? சொன்னால்தானே சித்தார்த்தும் தன்னைக் கவனிக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகள் இனி தேவையில்லை என்று சொல்லமுடியும்... அப்படி சொன்னால் ஆதி என்ன எதிர்வினையாற்றுவான். "ரொம்ப நல்லது.. இப்பொழுதாவது காதல் எல்லாம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டாயே", என்று வழக்கம் போல் தன் சித்தாந்தத்தை விளக்க ஆரம்பித்துவிடுவானா?? அப்படி ஏதாவது பேசினால், தெளிவாக அவனிடம் விளக்கிவிட வேண்டும், "என்னுடையது காதல் இல்லை என்றேனே தவிர காதலே இல்லை என்று சொல்லவில்லை சார்" என்று.



அலுவலகத்திற்கு வந்து வேலையைத் தொடங்கினால் எதிரறை வெகுநேரமாக ஆளில்லாமல் இருந்தது. உலகநாதன் சாரிடம் ஏதோ வேலையின் போது விசாரித்ததில் ஆதி ஊரிலேயே இல்லையாம். ஒரு முக்கியமான வேலை தொடர்பாக டெல்லி போயிருக்கிறான் என்றார்..



'சொல்லவேயில்லையே!' என்று கேட்ட மனதை 'ஏன் சொல்ல வேண்டும்?' என்று அடக்கிவிட்டு 'சரி வரட்டும்.. அப்போது சொல்லிக் கொள்ளலாம்'.. என்று தன் வேலையைத் தொடர்ந்தவளை, இன்று சித்தார்த்தும் சோதித்தான்.. சித்தார்த் பழகுவதற்கு எளிதானவன்.. மனோவிடம் தன் கீழ் வேலை பார்ப்பவர் என்றில்லாமல் நட்புடனேயே பழகுவான். ஆனால் இன்று என்னவோ நிமிர்ந்து கண்களைப் பாராமல் எங்கோ பார்த்தபடி பேசினான்.. அலுவல் மேஜை மேல் எதையோ தேடுவதைப் போல் பேசினான்.. தோள்களைக் குலுக்கி விட்டு தன் வேலையில் ஆழ்ந்தவளை, அதன்பின் அரைமணி நேரத்திற்கொருமுறை அழைக்க ஆரம்பித்தான். அழைத்து வேலை ஏதும் சொன்னானா என்றால் அதுவும் இல்லை.. ஏற்கனவே அவள்‌ செய்து வந்த வேலைகளைப் பற்றிய தற்போதைய நிலை பற்றிக் கேட்டான்.



காலையிலிருந்த இரண்டு தொழில் சம்பந்தமான மீட்டிங்குகளையும் ரத்து செய்துவிட்டான். மதிய உணவு இடைவேளைக்கு வெளியே போனவன், மூன்று மணிக்கு மேல்தான் வந்தான். வந்து மதியத்தில் இருந்த மற்றொரு மிக முக்கியமான மீட்டிங் கையும் ரத்து செய்வதாக மெயில் அனுப்ப, மனோவிற்கு பொறுமை பறந்தது. என்ன பிரச்சனையாக இருந்தால் என்ன? அதைத் தொழிலை பாதிக்க விடலாமா? ப்ராஜெக்ட், எத்தனை முக்கிய கட்டத்தில் இருக்கிறது? இதில் எத்தனை பேரின் கனவும், உழைப்பும் இருக்கிறது? இவனை நம்பித்தானே ஆதி இந்த வேலையை இவனிடத்தில் விட்டிருக்கிறான். அவனைச் சொல்ல வேண்டும்..



நேரே சித்தார்த்தின் அறைக்குள் சென்ற போது, தன் நாற்காலியில் அமர்ந்தபடி, அலுவலக மேஜைமீது, தன் கைகளையே தலையணையாக்கி முன்னே சாய்ந்தபடி படுத்திருந்தவனைப் பார்த்தவளுக்கு. 'ஒருவேளை உடல்நலம் சரியில்லையோ?' என்று தோன்றியது.



"சார்.."



கண்களைத் திறந்து நிமிர்ந்தவன், மனோவைப் பார்த்து சற்றே முகம் கன்ற, "உடம்புக்கு சரியில்லையா சார்.." என்றாள்.



"ம்கூம்" என்று அவள் முகத்திலிருந்து பார்வையைத் திருப்பி, பேனாவைப் பார்க்க ஆரம்பிக்க, மனோவே தொடர்ந்து, "காலையிலிருந்து கொஞ்சம் டல்லாக இருக்கிறீங்களே.. அதுதான்.." என்று முடிக்காமல் நிறுத்தினாள்.



பேனாவிலிருந்து பார்வையைத் திருப்பி அவள் முகத்தைப் பார்த்தவன், "ஒரு முக்கியமான விஷயம் மனோ.. அதை உன்கிட்ட எப்படி சொல்வது என்று தெரியவில்லை.." என்று மறுபடியும் பேனாவைப் பார்க்க ஆரம்பிக்க, தானே இருக்கேயை இழுத்துப் போட்டு அமர்ந்தவள், அவன் பேசுவதற்காகக் காத்திருந்தாள். கொஞ்சம் பயத்துடன் தான். என்ன சொல்லப்போகிறானோ? வேலையில் ஏதாவது பிரச்சனையா? இப்படி இடிந்துபோய் அமரும்படி என்னவாக இருக்கும்..



மெதுவாக நிமிர்ந்தவன், கவலை தோய்ந்த முகத்தோடு தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்ததும் தன்னை மீறி புன்னகைத்தான்.. "பயப்படாதே மனோ.. ஒரு சின்ன குழப்பம்.. அவ்வளவுதான்."




மனோ எதுவும் சொல்லவில்லை. ஒரு பெரிய மூச்சை உள்ளிழுத்தவன், "மனோ.. நான் சத்யாவை விரும்புகிறேன்.." என்றான்.



"வாட்.."



"ஏன் மனோ.. ஏன் இத்தனை ஷாக்?"



"இல்லை சார்.. அது.. அது வந்து.. நான் எதிர்பார்க்கவில்லை சார்.. அதனால்தான்.."



" ம்..", ஒப்புக் கொள்வதைப் போல் தலையை ஆட்டியவன், "சில மாதங்களுக்கு முன்பு ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தவன் இப்போது இப்படி சொல்வதை எதிர்பார்ப்பது கஷ்டம்தான்.. நானுமே எதிர்பார்க்கவில்லை மனோ.. அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை.. ஹாஸ்பிடல்ல கண் முழிச்சி பார்த்தப்போ, கண்களைத் துடைத்தபடி சத்யா என் எதிரில் இருந்தாள்.. அவள் அப்படி அமர்ந்திருந்த காட்சி அப்படியே மனசில் பதிஞ்சிடுச்சி.. அதற்கப்புறம் எல்லாமே பொய் தானே அப்படினு நினைக்கும் போதெல்லாம் அந்த காட்சி கண்முன் வரும். உடனே ஏனென்றே தெரியாமல் மனதில் ஒரு திடமும் வரும்.. வேலையில் சேர்ந்தபின் சத்யாவோடு இருக்கும்போது, பேசும்போது, ஏன் அவளை நினைக்கும் போதே மனதுக்குள் ஒரு இதம்.. நீரோடைனு நினைத்து போய்க் கொண்டிருந்தவன் அது கானல்நீர்னு கண்டுபிடித்து சோர்ந்து போய் அமரும்போது, கையில் அமுதபாத்திரம் கிடைச்ச மாதிரி ஒரு உணர்வு.. உனக்கு புரிகிறதா?


புரிகிறதா வா? "சார்.. ரொம்ப அழகாக உங்கள் காதலைச் சொல்றீங்க.."


கசப்பாய் ஒரு புன்னகை சிந்தி, " நான் இதைச் சொன்னதும் சத்யாவின் முகத்தைப் பார்த்திருக்க வேண்டுமே.. பேயைப் பார்த்த மாதிரினு சொல்வாங்களே.. அப்படி பார்த்தாள்.. இரண்டு நாட்களாக ஃபோனை எடுக்கவில்லை.. இதோ இன்று ஆஃபிசுக்கே வரவில்லை..அதுதான் உன்னிடம் அவள் வேறு யாரையாவது விரும்புகிறாளா என்று கேட்க நினைத்தேன். இதெல்லாம் தெரியாமல் பேசியிருக்கக்கூடாதுதான்.. அட்லீஸ்ட், இனிமேலாவது தொந்திரவு செய்யாமல் இருப்பேனில்லையா?"



தோழியின் நேற்றைய வரமாட்டேன் என்ற குறுஞ்செய்தி, 'ஙஞனநமண' போட்ட குரல், இது போக இன்னும் யோசித்தால் சில நாட்களாகவே சித்தார்த்தை தவிர்ப்பது.. அப்போது தனக்காகத்தான் தனித்துப் போகிறாள் என்று நினைத்தாள். இப்பொழுதோ அவளுக்காகவும் போல் தோன்றுகிறது.. "சார்.. சத்யா உங்களை விரும்பினால் அதை அவள் உங்களிடம் சொல்லாமல் இருக்க காரணமாக இருக்கக்கூடிய ஓரிரண்டு விஷயங்கள் எனக்கு தெரியும். அதை நீக்குவதற்கு முயற்சிக்கிறேன். ஆனால் சத்யா விருப்பமில்லையென்று தெரிந்தால் அதன்பின் அவளைத் தொல்லை செய்யக் கூடாது..


"நிச்சயமாக மனோ.."


அலுவலகத்திலிருந்து கிளம்பி, ரயிலேறி அதன்பின் மனோவின் வண்டி நின்றது சத்யாவின் வீட்டின் முன்தான்..


"அவளுக்கு தலை வலிக்குதாமாமா.. காலையிலிருந்து பெட்ஐ விட்டு எழுந்திருக்கவேயில்லை.."


"இதோ பார்க்கிறேன் ஆன்ட்டி.."


கிரைன்டரிலிருந்து மாவை எடுத்தபடியே பேசிய சத்யாவின் அன்னையிடம் பதில் சொன்னவள், சத்யாவின் அறைக்குள் போனாள். போர்வையைப் தலை வரை மூடியபடி படுத்திருந்த தன் தோழியைப் பார்த்தவள், போய் அருகே உட்கார்ந்து, "சத்யா.." என்க, "தலை ரொம்ப வலிக்குது மனோ.. கண்ணையே திறக்க முடியவில்லை.."



"சித்தார்த் சொல்லிவிட்டார்" எனவும் போர்வையிலிருந்து வெளிவந்து மனோவின் மடியில் தலை கவிழ்ந்து படுத்துக் கொண்டாள். "மனோ.. சாரிடி.. நான் ஒன்னுமே பண்ணலை.. ஏன் அவர் அப்படி சொன்னார்னு தெரியலை.."



"இது தெரியலையா.. அவர் உன்னை லவ் பண்றார்.. அதுதான் அப்படி சொல்றார்.."



"மனோ விளையாடாதே... நான் இனி அங்கே வர மாட்டேன். ஆதி சார்கிட்ட மட்டும் சொல்லி, எனக்கு ரிலீவிங் ஆர்டர் வாங்கிக் கொடு.."



"உனக்கு சித்தார்த் சாரைப் பிடிக்கலையா?"



"ம்கூம்.." இன்னும் தலையை நிமிராமல் மடியிலேயே தலையை இடமும் வலமுமாக அசைத்தவளைக் கண்களில் கனிவுடன் பார்த்து, "அப்போ பிடிக்கலைன்னு அவரிடம் சொல்ல வேண்டியதுதானே.." மறுபடியும் முன்போலவே தலையை அசைத்தவளைப் பார்த்து, "என்ன" என்க,. "எதற்கு தேவையில்லாத பிரச்சனை.."



மனோவின் புன்னகை விரிந்தது, "சத்தி.. அப்படியே சினிமாவில் நடக்கிற மாதிரியே இருக்கு இல்லையா? நீதான் ஹீரோயினாம். நான் ஹீரோயின் ஃப்ரெண்டாம். தன் ஃப்ரெண்ட் லவ்வுக்கு ஹெல்ப் பண்ண வந்தா, ஹீரோவிற்கு ஹீரோயின் மேல் லவ் வந்திடுச்சாம்... ஹீரோயினுக்கும் ஹீரோ மேல் இஷ்டம்.. ஆனா தன் ஃப்ரெண்டா, ஹீரோவானு ஒரே டென்சன்..நல்லா இருக்கு இல்லையா கதை.."



"நான் கூட இதையேதான் நினைத்தேன்.."மெல்லியதாய் குரல் வந்தது.



"நாம்தான் பெஸ்ட் ஃப்ரெண்ட் ஆச்சே.. ஆனால் சத்யா,இதை சினிமாவாவே முடிச்சிடலாம். சீரியலாக மாற்ற வேண்டாம்.. நான் ஹீரோயின் ஃப்ரெண்டாவே இருக்கிறேன். வில்லியாக வேண்டாம்.."



"மனோ!" என்று தோழியை நிமிர்ந்து பார்த்தவளிடம், " சித்தார்த் சாருக்கு ஓகே சொல்லு" என்று மனோ உறுதியான குரலில் கூற, மறுபடியும் தலையை ஆட்டியபடி கவிழ்ந்தவளிடம், மனோ ரகசியக் குரலில் தொடர்ந்தாள், "சத்யா.. உன்னிடம் முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும். நான் நிஜமாக சித்தார்த் சாரை லவ் எல்லாம் பண்ணவேயில்லை.. அப்படி நினைத்தேன்.. அவ்வளவுதான்.."



" தெரியும்.."



"தெரியுமா? எப்படி?"



"லவ் பண்ற பையன் தற்கொலை முயற்சி பண்ணி, ஹாஸ்பிடல்ல இருக்கும் பொழுது, ஆன்சைட் போச்சேன்னு வருத்தப்பட்டால், அது எப்படி லவ் ஆகும்..?



ச்சே.. இதையே வைத்து எல்லோரும் ஓட்டுகிறார்களே, "தெரிந்தால் அப்போவே சொல்ல வேண்டியதுதானே?"



"நான் என்ன நூறு தடவை லவ் பண்ணியிருக்கிறேனா? கண்டுபிடிப்பதற்கு? என்க்கிருப்பது லவ்னு புரிந்த போதுதான் உன்னது லவ் இல்லைனு புரிஞ்சது.."



"காரணம் மட்டும் எல்லோரும் நல்லா சொல்றீங்க.. சரி.. விடு.. அதுதான் தெரிஞ்சிடுச்சி இல்லையா?.. பின் என்ன பிரச்சனை?"



"இல்லை மனோ.. இந்த மாதிரி நான் நடுவில் வராமல் இருந்திருந்தால், காலப்போக்கில் அவர் உன்னையே லவ் பண்ண ஆரம்பிச்சிருப்பாரோன்னுதான்.."



" சத்யா.. இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும், என்னைத் தவிர வேறு எந்த பெண்ணுமே அவர் கண்ணிலே படாமல் இருந்திருந்தாலும் அப்படி நடக்காது. அதேபோல் எத்தனை பெண்களுக்கு நடுவில் இருந்திருந்தாலும் அவருக்கு உன்னைப் பிடித்திருக்கும். ஜாடிக்கேற்ற மூடிதான் பொருந்தும் என்பார்களே.. அது மாதிரி யூ ஆர் ஹிஸ் காம்ப்ளிமென்டிங் பார்ட்.."



"என்னை மூடி என்கிறாயா.."



"ம்.. ஆமாம்.. சித்தார்த் சார்கூட உன்னை அமுதபாத்திரம் என்கிறார்.."



"அச்சோ மனோ.. உன்னை மாதிரியே நிறைய மொக்கை கவிதை சொல்றார்.. எப்படி தாங்கப் போறேனோ..?"



"என் கவிதை மொக்கையா? உன்னை அப்புறம் கவனித்துக் கொள்கிறேன். இப்போ முதலில் சித்தார்த் சாருக்கு ஓகே சொல்லு… அவர் பாவம் காலையிலிருந்து பயங்கர டென்சனில் இருந்தார்"



"எப்படி சொல்வது?" எழுந்து அமர்ந்து, தன்னைப் பார்த்தவளிடம், தோள்களைக் குலுக்கி, "ஐ லவ் யூ டூ' னு அனுப்பு"



"ச்சீ.."



பின்னே?" சில நொடிகள் யோசித்தவள், தன் கைப்பேசியை எடுத்து, "குட் நைட்" என்று ஆங்கிலத்தில் பதிவு செய்து பக்கத்தில் இரண்டு முற்றுப்புள்ளிகளை அருகருகில் வைத்து, அவற்றை தொடர் புள்ளிகளாக்கி சித்தார்த்திற்கு அனுப்பி வைத்தாள்..



"அவ்ளோ தானா?"



அடுத்த நொடி, சித்தார்த்திடமிருந்து அழைப்பு வர, சத்யாவின் முகம் அழகாய் சிவந்தது.. தன் தோழியை ஆசையுடன் பார்த்த மனோ எழுந்து, "ஓகே.. என்ஜாய் த மொமென்ட்.. நான் கிளம்புகிறேன்.." என்று வெளியேறிய மனோவின் முகத்தில் புன்னகை மலர்ந்திருந்தது. காதல் கதைகளைப் பற்றி கேட்பதில், படிப்பதிலேயே அத்தனை விருப்பம் கொண்டவளுக்கு கண்முன்னே விரிந்த இந்த காதலில் அத்தனை மகிழ்ச்சி.. அதுவும் மறுநாள் காலை இவர்களுடைய இரயில் நிலையத்தில் சித்தார்த் காரோடு காத்திருப்பதைப் பார்த்து நம் மனோவிற்கு மெய்சிலிர்த்து விட்டது.

"மனோ.. விளையாடாதே.. காரில் ஏறு.." என்ற சத்யாவிடம்," காரிலா..டிராஃபிக் கில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகுமே?"



ஆச்சர்யமாய் பார்த்து, "இரண்டு மணி நேரமா? எவ்வளவு டிராஃபிக் என்றாலும் அவ்வளவு ஆகாது மனோ.." என்ற சித்தார்த்திடம், "அது அப்படிதான் ஆனது சார். எனக்கு காலையிலேயே கம்பெனி சேர்மேனோடு மீட்டிங் இருக்கிறது.‌ நான் லேட்டாகப் போக முடியாது.. பை" என்று ரயிலில் ஏறினாள்.


அன்று நிஜமாகவே முதல் மீட்டிங் சங்கரன் சார், சித்தார்த்தினுடைய அப்பாவோடு தான். ஆதி வராத சமயங்களில் அவர் அலுவலகம் வருவது பல நாட்கள் நடப்பதுதான். கண்ணாடி கதவு வழியாக, காலியான எதிரறையைப் பார்த்தவளுக்கு, ஆச்சர்யமாக இருந்தது. ஆதி இல்லாதது இரண்டு நாட்கள்தான்.‌ அதற்குள் எத்தனை நடந்துவிட்டன. அவனிடம் சொல்வதற்கு செய்திகள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன.



புன்னகையுடன், அலுவலக சந்திப்புகளுக்கான, கான்ஃபரென்ஸ் ஹாலுக்குள் செல்ல, அங்கே யாருமே இல்லை.. மிகவும் சீக்கிரமாக வந்து விட்டேனா? இல்லையே.‌ 9.30 ஆகிவிட்டதே.. ஒரு வேளை மீட்டிங்கை தள்ளிவைத்து மெயில் போட்டிருக்கிறார்களோ.. தான்தான் பார்க்கவில்லையோ.. தன் கைப்பேசியை எடுத்து மெயில் பார்க்க குனிந்தவள், கதவு திறக்கும் சத்தத்தில் நிமிர்ந்தாள். உள்ளே வந்தது, சங்கரன் சாரும், உலகநாதன் சாரும்..



வந்தவர்கள் தங்கள் இருக்கையில் அமர, மனோவை உட்காருமாறு உலகநாதன் சைகை செய்தார். வேறு யாரும் அழைக்கப்படவில்லையா.. யோசனையோடு அமர்ந்தவளைப் பார்த்த சங்கரன், "இதுதான் நீ சொன்ன மனோகரியா?" என்று உலகநாதனைப் பார்த்து கேட்டார்.. மனோவின் மனதில் ஏனோ பயம் உருண்டையாய் பிசைந்தது.
 
Last edited:

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி 12



11412



மனதில் தோன்றிய பதற்றத்தை தன்னால் முடிந்தவரை கட்டுப்படுத்திக் கொண்டு, நேர்பார்வையோடு இருந்த மனோவைப் பார்த்து சங்கரன் சிரித்தார், "பயப்படாதேம்மா.. உன்னால் நம் கம்பெனிக்கு ஒரு காரியம் ஆக வேண்டும். அதைத்தான் உனக்கு விளக்கமாக சொல்ல வந்தோம்"



"என்னாலா?"



"ம்.. வாழ்க்கை நமக்கு எல்லா வயதிலும் சொல்லிக்கொடுக்க ஒரு பாடம் வைத்திருக்கும். இதோ இந்த வயதில் இவர் பையன் மூலம் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன், 'சிறுத்தை ஒரு போதும் தன் புள்ளிகளை மாற்றிக் கொள்வதில்லை, என்று" கசந்த புன்னகையுடன் கூறினார்.



இவர் என்று காட்டிய இடத்தில் இருந்த உலகநாதனை பார்த்தவள், பார்த்து, "சிவாவா?" என்றாள்.




உலகநாதன் பேச ஆரம்பித்தார், "ஆமாம்மா.. நான் பெற்ற தறுதலைதாம்மா.. மூன்று மாசமா கையில் ரொம்பவே பணப்புழக்கம்.. ஏதடா? என்றால், பின்னே உன்னை மாதிரி கடைசி வரை கைத்தடியாகவே இருப்பேனா என்கிறான். நேர்மையாய் உழைப்பது அவமானமாய் பார்க்கப்படும் இந்த காலத்தில் தப்பான சகவாசம் வேறு.. என்னமோ தப்பு வேலை பண்றான்.. என்னனு தெரியலைம்மா. அது என்ன என்று எப்படி கண்டுபிடிப்பது என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறோம்."



"சும்மா ஃப்ரெண்ட் பணமாக இருக்கலாமே சார்.."



"ம்கூம்.. நேற்று நானே என் காதால் கேட்டேன்.. மொட்டைமாடியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான். 'முட்டாள்.. இப்போ ரிலீஸ் பண்ணினா இன்னும்‌ பத்து நாளில் இது பழைய செய்தியாகிவிடும். மாடல் வெளிவரும்போது எல்லோரும் மறந்திருப்பார்கள். அந்த கம்பெனிகாரனும் ஒரு பைசா கூட கொடுக்க மாட்டான். ப்ராஜெக்ட் ரிலீஸ் ஆகட்டும். இந்த மாடல் நல்லாயிருக்கேனு நான்கு பேர் பேசட்டும். அப்பொழுது இந்த மாதிரி என்று நம் வீடியோ வெளியிட்டால், அப்போதான் அடி பயங்கரமாய் இருக்கும்' என்றான்.."



ப்ராஜெக்ட், டிசைன்.. ஏ&எஸ் ப்ராஜெக்ட்! அதில் என்ன பிரச்சனை பண்ண முடியும்! பதட்டமான முகத்தோடு, "அச்சோ!! இது பெரிய விசயமாச்சே சார்.. உடனே ஆதி சார்கிட்ட சொல்லலாம்.."



"பெரிய பிரச்சனையில்லையம்மா.. பெரிய பிரச்சனை ஆகக்கூடிய வாய்ப்பு உள்ள ஒரு தடங்கல்" என்று அவளைத் திருத்திய சங்கரனை, "குடும்பமே இப்படிதான் பேசுவார்களா என்பது போல் பார்த்தவள், "எப்படியாயிருந்தாலும் ஆதிசார்கிட்டே சொன்னால் தானே நீங்கள் சொன்னபடி பெரிய பிரச்சனை ஆகாமல் அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும்"



"பொறுப்புள்ள பொண்ணு என்று உலகநாதன் சொன்னான். பொறுப்பாய், அக்கறையாய்தான் யோசிக்கிறாய்.. ஆனால் எண்ணெயில் போட்டட அப்பளம் போல் குதிக்கிறாயே!"



"அது.. இல்லை சார்.. இது பல பேருடைய உழைப்பு; கனவு.. இதில் கடைசி நேரத்தில் பிரச்சனை என்றால் ஃபினான்சியலாகவும் பெரிய அடியாக இருக்கும்.. மனதிற்கும் தாங்காது.."



"சரிதாம்மா.. ஆனால் நான் ஆதியுடைய பெரியப்பன். இந்த கம்பெனியை அவனுக்கு முன் இந்த அளவுக்கு உயர்த்தியவன்.. என்னாலும் இந்த பிரச்சனையை சமாளிக்க முடியும்"



இப்பொழுது பிரச்சனை என்ற வார்த்தை உபயோகம் அவருடையதே.. சும்மா வேனும் விதண்டாவாதம் பண்ணுகிறார்.. "ஆனால் ஏன் சார் ஆதி சாரிடம் சொல்லக் கூடாது?"



அது நான் சொல்கிறேன்மா.. போன முறை அவன் கையாடல் செய்த போதே, ஆதி தம்பி அவனை வேலையிலிருந்து தூக்கிவிட வேண்டும் என்றார். அய்யாதான் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று தொடரச் செய்தார். இப்போது அவரிடம் போய், இந்த மாதிரி நிலைமை.. நீ பார்த்துக் கொள் என்றுவிட அய்யாவுக்கு விருப்பம் இல்லை."



"என்னுடைய தவறான கணிப்பு.. அதை நானே சரி செய்வதுதானே சரி.."



பெரியவர்.. நான் சொன்னது நீ சொன்னது போலவே தப்பாகி விட்டது. இனி நீ பார்த்துக் கொள் என்று விட மனமில்லை.. ஈகோதான்.."இதில் நான் என்ன சார் பண்ணுவது?"



"ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்திடம் எல்லா தகவல்களையும் கொடுத்துவிட்டோம். அவனை எந்நேரமும் கவனிப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். நிஜ உலகில் அவன் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.. இப்போதுதான் அதற்கு நிகராக உங்கள் சைபர் உலகத்திலும் அவன் நடமாட்டம் கண்காணிக்கப்பட வேண்டுமே. அதற்கும் ஒரு சாஃப்ட்வேர் அந்த துப்பறியும் கம்பெனியே கொடுத்துவிட்டது. அதை அவனுடைய கம்ப்யூட்டர், லேப்டாப், கைப்பேசி எல்லாவற்றிலும் வேலை செய்யும்படி செய்ய வேண்டும். அதற்குதான் உலகநாதன் உன் பெயரைச் சிபாரிசு செய்தார்."



"ஆஃபிஸ் சிஸ்டம்ல இன்ஸ்டால் பண்ணுவது ஈசி.. சிஸ்டம் அப்டேட் என்று சொல்லி செய்துவிடலாம்.. லேப்டாப்பும் , செல்ஃபோனும் கொஞ்சம் கஷ்டம்.. "



"ம்.. நமக்கு இன்னும் சில வாரங்கள் தான் நேரம் இருக்கிறது.. உன்னால் முடிந்தவரை விரைவாகச் செய்.. நாங்களும் எங்களால் ஆன வகையில் முயற்சிக்கிறோம்.. "




அவள் சரி என்று சொல்லாமலே, தன்னோடு கூட்டு சேர்ந்தவர், "அப்புறம், அவன் கையில் இருப்பது என்ன என்று தெரியாமல், இது நிறைய பேருக்குத் தெரிவது எனக்கு சரியாகப் படவில்லையம்மா.. அதனால் வேறு யாருக்கும் தெரிய வேண்டாம்.." என்று மேலும் விளக்கினார்.



மனோவிற்கு இன்னும் இதை ஆதிக்குத் தெரியாமல் செய்வதில் அத்தனை உடன்பாடில்லைதான். அவனுக்குத் தெரிந்தால் அவனும் ஏதாவது ஐடியா சொல்வானே..



அவள் முகத்தையே பார்த்தவருக்கு அவள் எண்ணம் புரிய, " அவன் வருவதற்கு முன்னால் இதுபோல் எத்தனை பிரச்சனைகளை சமாளித்திருக்கிறேன். இதற்கு அவனை ஏன் டென்சனாக்க வேண்டும். என் தவறை நான் திருத்துவதுதானே நியாயம்.."



ஏதோ.. அவர் சம்மதம் இல்லாமல் ஆதியிடம் சொல்ல முடியாது. ஆனால், அவருக்கு தன்னால் ஆன மட்டும் உதவ முடியும். இப்படி எண்ணித்தான் மனோ இதில் இறங்கினாள். அதன்‌ முதற்கட்டம் அவள் நினைத்தபடி எளியதாகத்தான் இருந்தது. கடந்த மூன்று மாதங்களாக சிவா வேலை சம்பந்தமாக சந்தித்த அனைத்து நபர்களைப் பற்றியும், அந்த சந்திப்புகளின் சாரம்சத்தைப் பற்றியதுமான பட்டியல் தயாரித்து, அந்த துப்பறியும் கம்பெனியிடம் கொடுத்தாள். வேலை முடிந்து அனைவரும் கிளம்பியபின் உலகநாதன் சார் துணையோடு அக்கௌன்ட் டிபார்ட்மென்ட்க்குள் நுழைந்து, அவர்கள் தந்த சாஃப்ட்வேரை சிவாவின் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்தாள். இனி அவன் கைப்பேசி.. உலகநாதன் கையை விரித்து விட்டார். "அவன் தூங்கும் போது தலையணைக்கடியில் வைத்திருக்கிறான் மா.. பாத்ரூம் போகும் போது கூட, ஃபோனுடன் தான் போகிறான். " என்றார். அதன் அருகில் எப்படி செல்வது.



சிவா தன்னெதிரில் அமர்ந்தபடி காபிக்கோப்பையை இங்கும் அங்கும் நகர்த்திச் கொண்டிருந்த மனோவைப் பார்த்தான். அவள் இங்கு வேலைக்கு சேர்ந்த நாள் முதல் அவளிடம் பேச்சு கொடுத்திருக்கின்றான். சில நாட்களிலேயே தெரிந்துவிட்டது இவள், அவன் ஆசை வார்த்தைகளுக்கு ஏமாறும் ஊரறியாத பெண் இல்லை என்று. ஆனாலும் அவளை வாய்ப்பு கிடைத்த நேரங்களில் எல்லாம் ஏதாவது சொல்லி சீண்டுவான். அவள் அவனை மனிதனாகக் கூட மதிக்காமல் விலகிச் செல்வாள். அப்படி பட்டவள் திடீரென்று படியில் அவனைப் பார்த்து இன்று புன்னகைத்ததும் சிவா திரும்பிதான் பார்த்தான். வேறு யாரைப் பார்த்தும் சிரிக்கிறாளா என்று.. அவன் சந்தேகத்தை தீர்க்கும் விதமாக, "ஹாய் சிவா சார்" என்ற அவள் குரலில் திரும்பியவன், ஒப்பாய் "ஹாய்" என்க அவள் புன்னகைத்தபடி எதுவும் பேசாமல் சென்றுவிட்டாள். ஏதாவது நல்ல மூடில் இருக்கிறாளா.. ஆனால் எப்படியிருந்தாலும் அவனிடம் சிரித்ததில்லையே.



அன்று மாலை கேன்டீனில் தனியே அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தவளிடம், " என்ன மனோ.. டீயா?" என்க, முகமலர்ந்து, "ஆமாம் சார்.. நீங்க குடிச்சிட்டீங்களா? " என்றாள். அதற்குமுன் நூறு டீ குடித்திருந்தாலும் அப்போது இல்லையென்று தான் சொல்லியிருப்பான். "ம்கூம். இதோ இப்போதான் குடிக்கனும்" என்றவன், தானியங்கி இயந்திரத்திலிருந்து , தனக்கு ஒரு கப்பில் டீயை எடுத்துக் கொண்டு அவள் முன்னமர்ந்தான்.



எழுந்து போகவுமில்லை. என்ன திடீர் மாற்றம். இதற்கும் அவன் திட்டத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா.. 'ச்சட்.. அதெப்படி இருக்கும். அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய் என்பது சரிதான் போல. இவர்கள் திட்டம் இவளுக்கு எப்படி தெரியும்". தன் மனதிற்குள்ளேயே அவன் பேசிக் கொண்டிருக்க, அவன் கைகளில் இருந்த கைப்பேசியை ஏக்கத்துடன் பார்த்தபடியே, தன் டீயைக் குடிக்க ஆரம்பித்தாள் மனோ..




அது ஞாயிற்றுகிழமை.. இந்த வாரம் முழுவதும் ஆதி வரவில்லை. ஒரு வாரம்.. ஏழு நாட்கள்.. நூற்றருபத்தெட்டு நிமிடங்கள்.. இதற்குள் எத்தனை நடந்து விட்டன. அதுவும் கடந்த இரண்டு நாட்களாக சிவாவுடன் நேரம் செலவிடுவது, காலத்தே இன்னும் நுண்டதாகக் காட்டியது. எப்போதும் முள்ளின் மேல் இருப்பது போன்ற உணர்வு. அவனை ஏமாற்றுகிறோம் என்பதாலா? இல்லை. அவன் தான் ஏமாற்றுக்காரன். அவள் ஏமாற்றவில்லை. அவள் செய்வதன் பெயர் ஒற்றறிவது.. ஆதி நேற்று வந்துவிடுவான் என்று உலகநாதன் சார் சொன்னார்.. வந்துதானே ஆக வேண்டும். இன்று கம்பெனியின் ஆண்டுவிழா.. கண்ணாடி முன் நின்றவளுக்கு, ஏனோ தன்னையறியாமல் சிறு படபடப்பு.. நன்றாகத்தானே இருக்கிறேன் என்று இன்னொரு முறையாக பார்த்தவள், கைப்பையோடு எடுக்க. வரவேற்பறையில் அமர்ந்திருந்த சத்யாவின் குரல் கேட்டது, "மனோ.. கேப் இன்னும் இரண்டு நிமிடத்தில் வந்து விடும்.."



"இதோ வந்தாச்சி!" என்று வெளியே வந்த தன் தோழியைப் பார்த்து, "வாவ்.. " என்று சத்யா விளையாட்டாய் சீட்டி அடிக்க, "ஏது.. சித்தார்த் சார் இப்படிதான் உன்னை தினமும் வரவேற்கிறாரா?" என்று தோழியாய் அவளை வாரினாள்.



"ஏய் மனோ! சத்தமாய் பேசாதே.."



அதற்குள் வெளியே காரின் ஹார்ன் அடிக்க, அவர்கள் பயணம் தொடங்கியது.



அது பகலும் இல்லாமல், இரவும் ஆகாமல் மஞ்சளும் சிவப்பும் கலந்து தன் பொற்கதிர்களால் சூரியன், இந்த பூமியில் உள்ள அனைத்தையும் பத்து சதவீதம் இன்னும் அழகாய்க் காட்ட முயற்சித்துக் கொண்டிருந்த நேரம். ஏ&எஸ் தொழில் வளாகம் வாசலில் பூக்களால் பெரிய வளையம் வைக்கப்பட்டிருந்தது. பூக்கள் மற்றும் பச்சிலைகளால் உள்ளே வரும் வழியின் இருபக்கங்களிலும் தோரணங்கள் ரம்மியமாய் இருந்தன.. ஆங்காங்கே மெல்லிய மின் விளக்குகள் அலங்காரங்களை இன்னும் எடுப்பாய் காட்டின. அவர்கள் கம்பெனியின் ஆண்டுவிழா எப்பொழுதமே கோலாகலமாக நடக்கும். கம்பெனியின் எம் டி யிலிருந்து கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் சரி சமமாய் அனைத்து போட்டிகளிலும், கேளிக்கைகளிலும் சரிசமமாய் பங்கேற்பார்கள்.

ஆடிட்டோரியத்தினுள்ளும் வெளியிலும் நடந்த பல போட்டிகளில் ஊழியர்கள் தங்கள் திறமைகளைக்க் காட்டிக் கொண்டிருந்தார்கள்.. மேடை மீது, பாட்டு, நடனம் என்று எல்லோரும் இறங்க விசில் சத்தமும், ஓவென்ற இரைச்சலும் காதுகளைக் கிழித்தன.



ஆடிட்டோரியத்தின் வெளியே உணவு.. அவரவர் தனக்கு வேண்டியது எடுத்துக்கொள்ளும் படி வரிசையாக‌ அமைக்கப்பட்டிருந்த பஃபே முறை. மூன்று மணியிலிருந்தே அங்கே காபியும், இனிப்பும் காரமும் விநியோகம் தொடங்கியிருந்தது. எல்லாமே சரியாக நடப்பதைப் கண்காணித்தபடியிருந்த ஆதி நேற்றுதான் டெல்லியிலிருந்து வந்திருந்தான். கருப்பு பேண்ட், இன் செய்த வெள்ளை சட்டை அணிந்து, மணிக்கட்டு வரை நீண்டிருந்த சட்டையின் கையை ஒதுக்கி நான்காவது முறையாக மணியைப் பார்த்தவன்,

"யாருக்காக வெயிட்டிங்?" என்ற குரலில் திரும்பினான். அருகில் இருந்தது, அழகான மெஜந்தா வண்ண, மெல்லிய ஜரிகை வைத்த சேலையில் நின்ற, சுமித்ரா, சித்தார்த்தின் உடன்பிறந்த சகோதரி, ஆதியின் உடன்பிறவா சகோதரி.



"வெயிட்டிங்கா? அதெல்லாம் இல்லையே" பதில் வந்த வேகத்திலும், குரலின் தொனியிலும் சற்றே தன் தம்பியின் மேல் வியந்த பார்வையொன்றை செலுத்தியவளிடம், "மாமா இன்றும் லேட்டா?" என்றான்.



"சாரிடா.. ஒரு எமர்ஜென்ஸி பேசன்ட். இன்னும் பத்து நிமிடத்தில் வந்துவிடுவார்."




அதற்குள் அவள் அன்னை அழைக்க , "இதோ வர்றேன்மா" என்று அப்போதைக்கு அங்கிருந்து அகன்றவள், ஆங்காங்கே நின்று பார்த்ததில், ஆதியின் பார்வை அடிக்கடி வாசல் பக்கம் போய் வருவதில் அவளுமே கொஞ்சம் ஆர்வமாய் வாசலில் கண் வைத்திருந்தாள். நம் தம்பியை இப்படி தேட வைத்திருப்பது யார்? ஒரு வேளை அவனுக்காக என்று பார்த்துக் கொண்டிருக்கும் பெண்ணா?


அவள் சற்று நேரத்தில் பார்த்தது சுமித்ராவை ஆச்சர்யத்தில் உச்சிக்கு அழைத்துச் சென்றது. தன் தந்தையுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்த ஆதி திடீரென்று எதுவும் சொல்லாமல் வாசலை நோக்கி நடக்க இரம்பித்தான். வாசலை என்றால், வாசலை அல்ல. வாசலின்வழி அப்போதுதான் உள்ளே நுழைந்த ஒரு பெண்ணை நோக்கி.




அந்த பெண், மேகம் ஏதும் இல்லாத, சூரிய ஒளியையே தன்னாடையாய் போர்த்தியிருக்கும் நீல வானில் நட்சத்திரங்களை வாரியிறைத்தது போன்று கற்கள் பதித்த நீல வண்ண சேலையில் அணிந்திருந்தாள். அவள் கழுத்தில், காதில், கரங்களில் மெல்லிய தங்கத்தில் சிறு கற்கள் மின்னின. வைரங்களாகவும் இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் விட சுமித்ராவின் கண்ணைப் பறித்தது, உள்ளே வந்ததும், இந்த புறமும், அந்த புறமும் பார்வையால் துழாவிய அவள் கண்கள், ஆதியைக் கண்டதும், அதில் தெரிந்த ஒரு மின்னல்தான்.




ஆதிக்கு இந்த ஒரு வாரமும் எப்படி போனதென்றே தெரியவில்லை. அன்றைய கார் பயணத்திலிருந்து வெளிவருவதற்கே அவனுக்கு ஒரு நாள் ஆனது. டெல்லி போன பின்னும், யாரிடம் பேசிக் கொண்டிருந்தாலும், எப்படிபட்ட முக்கிய மீட்டிங்கில் கலந்திருந்தாலும், எப்பொழுதுமே தன்னோடு யாரோ இருப்பது போன்ற உணர்வு. எதையும் உணர்வுபூர்வமாய்ப் பார்க்காமல் எதார்த்தமாய் பார்க்க வேண்டும் என்பதுதானே அவன் கொள்கை. இந்த உணர்வப் பற்றியும் யோசிக்க வேண்டும். பிரச்சனை என்னவென்றால் அதற்கு அங்கே நேரமே இல்லை. டெல்லி போனதிலிருந்து மூச்சு விட கூட நேரமில்லை. சாப்பிடும் பொழுதும் அன்றைய மீட்டிங்கிற்கான தகவல்களை சேகரிக்கச் செய்வது, ஒழுங்குபடுத்துவது என்று எல்லா நேரமும் வேலைகள் . சாப்பாடு நேரங்களும் பெரும்பாலும் பிஸினெஸ் லஞ்ச் மற்றும் பிஸினஸ் டின்னர்களாகவே கழிந்தன.




இன்று காலை வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்து, விழாவிற்கு கிளம்ப ஆரம்பிக்க அவன் மனமெங்கும் வியாபித்திருந்த எண்ணம் இன்று மனோவைப் பார்க்க போகிறான் என்பதுதான்‌.

அப்படி அவன் அறிந்தும்‌அறியாமலும்‌ ஆவலாய் எதிர்பார்த்திருந்த அவள் வருகையின்போது, அவன் யாரிடம் என்ன பேசிக் கொண்டிருந்தான் எல்லாமே மறந்திருந்தது. ஏதோ கொஞ்சம் சுய உணர்விருந்திருந்தாலும் அவனைக் கண்டதும் அவள் கண்களில் தெரிந்த மலர்ச்சி அவனை எல்லாவற்றையும் மறக்கச் செய்திருந்தது.





நேரே மனோவை நோக்கி நடந்தான். அவன் போன வேகத்திற்கு பக்கத்தில் போய் என்ன செய்திருப்பான் என்று அவனுக்கே தெரியாது, அவளருகில் செல்வதற்கு சில அடிகள் இருந்த‌ நேரத்தில் வேக நடையோடு அவனை முந்தி சித்தார்த் அவர்களை அடைந்திருந்தான். "ஹாய் மனோ! வா சத்யா.. ஏன் இவ்வளவு லேட்.. சீக்கிரம் வாங்க.. நான் அம்மாகிட்ட அறிமுகம் செய்து வைக்கிறேன்.. வாங்க!" என்றழைக்க ஆதிக்கு ஒரு வாரமாக கனவில் மிதந்து கொண்டிருந்தவன்‌ முகத்தில் குளிர்ந்த நீரை அடித்தது போல் இருந்தது. தன்னை நோக்கி வந்து கொண்டிருந்தவன், திடீரென்று அந்த இடத்திலேயே இறுகி நிற்க, ஒரு நொடி‌புரியாமல் பார்த்த மனோ, சித்தார்த்தின் பின் சத்யா செல்வதைத் திரும்பி பார்த்துவிட்டு, அந்த சில அடிகளை அவனை நோக்கி அவளே எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி 13



11497


மனோவைப் பார்த்ததும் சுற்றம்‌ மறந்து அவளை நோக்கிப் போன ஆதிக்கு, தற்போது மனோ தன்னை நோக்கி வருவதைக் காணவும், இறுகிய மனம் சற்று லேசானது போல் இருந்தது. தன்னவளைப் பார்த்ததும் மனதில் ஏற்பட்ட பரவசம், சித்தார்த் அவளை நெருங்குவதைக் கண்டு இதுவரை அறியாத செய்வதறியாக் கோபம், சித்தார்த்தை விட்டு தன்னை நோக்கி வருபவளைக் கண்டதும் தோன்றும் அமைதி என்று ரொம்பவுமே கனமான உணர்வுகளை அடுத்தடுத்த கணங்களில் கடந்து கொண்டிருந்தவன், சிறிது தயக்கத்துடனும், ஆர்வத்துடனும் மனோவின் முகத்தில் ஒரு சிறு மென்னகை தோன்ற, அவன் மனதில் சட்டென்று உதித்த எண்ணம், 'ஐ லவ் ஹர்' என்பது. வாட்.. லவ்வா? என்று அடுத்த நொடியே மனம் எதிர்கேள்வி கேட்டாலும் மூளையின் எல்லா பக்கத்திலிருந்தும், 'ஆமாம்! ஆமாம்!"என்று பதில்கள்தான் வந்தன. இன்றல்ல.. பல நாட்களாகவே மனோவைக் நேசிக்கிறான். எப்போதிலிருந்து? மாலில் அன்று பார்த்தானே! அன்றிலிருந்தா? இல்லை.. அவன் இரண்டொரு முறை ஆட்டோமொபைல் பற்றிப் பேசிய போது புரியாத பார்வை பதிலாய் வர பேச்சை மாற்றியவன், இரண்டு வாரங்களில் அவளும் தன் கருத்துகளைச் சொன்ன போது, விழி விரித்து பார்த்தவனிடம், முகம் சற்றே கன்ற, "புக்ல படித்தேன் சார்" என்ற போதா? அதுவும் இல்லை.. அந்த நேர்முகத் தேர்விலிருந்தேவா? ம்கூம்.. தெரியவில்லை. யோசித்தால் அதற்கு முன்னரே கூட.. அது எப்படி சாத்தியம்.‌ ஆதி.. என்னடா ஆச்சி? முட்டாள் போல் யோசிக்கிறாய்? பார்க்காத ஒரு பெண்ணை எப்படி நேசிக்க முடியும்? தெரியவில்லை. ஆனால் காலகாலமாக, எப்பொழுதுமே அவளை நேசித்துக் கொண்டிருந்தது போலொரு உணர்வு.


கார்மேகங்கள் தஙகள் உருவமில்லா கரங்களால் மூடியிருந்த, கதிரவனின் பொற்கரங்கள், மேகம் விலகியதும் வெளிவந்து எங்கும் ஒளிபரப்பு போல் மனதின் குழப்பங்கள் எல்லாம் கலைந்து ஒரு தெளிவு.



இப்பொழுதும் காதல் இல்லை என்பதற்கு அவனிடம் ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவன் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு ஒரு பெயர் வேண்டுமென்றால் அவனறிந்தது காதல் என்ற ஒரு வார்த்தைதான். மனோ எனக்கு வேண்டும். வாழ்வின் ஒவ்வொரு நொடியும் என்னோடு வேண்டும். எனக்கு மட்டுமேயாக வேண்டும்.



தன்னை நோக்கி வந்த ஆதி திடீரென்று வழியிலேயே நின்றுவிட, அவனை நோக்கி நடந்த மனோவிற்கு ஆதியிடம்‌ சொல்ல வேண்டியது நிறைய இருந்தது. எல்லாவற்றையும் சொல்ல வேண்டும்.. இன்னும்‌நிறைய சொல்ல வேண்டும். தன்னை மீறிய புன்னகையில் , கண்களும் முகமும் மலர ஆதியின் அருகில் வந்ததும்,"ஹாய் ஆதி சார்.. எப்படி இருக்கீங்க.. பிஸினெஸ் ட்ரிப் எல்லாம் எப்படி போனது?" என்றாள்.



என்ன ட்ரிப்? என் வாழ்வின் எத்தனை முக்கியமான நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. இன்னொரு நாள் மனோவிடம் சொல்ல வேண்டும். என்னுடைய காதலை நான் உணர்ந்த தருணத்தில் நீ என்னிடம் பிஸினெஸ் ட்ரிப்பைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தாய் என்று. கற்பனையில் உருவான காட்சிகளில் முகத்தில் புன்னகை ஒன்று படர, அவனை புரியாமல், ஏதோ எதிர்பார்த்தபடி மனோ பார்த்திருந்தாள்.. என்ன? ஓ.. அவள் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும்.. என்ன பதில்.. ட்ரிப்.. ஆதி.. சொதப்பாதே.. ஆனால் மூளையின் எல்லா பகுதியும் ஒருங்கிணைந்து வேலை செய்தால் தானே வார்த்தைகள்‌வரும். ஒவ்வொன்றும் தங்களுக்குள் கூட்டம் போட்டுக் கொண்டிருக்க, "ம்.. " என்று சொல்லி பேசத் தொடங்கியவனை, "ஹலோ ஆதி!" என்ற குரல் நிறுத்தியது.


கழுத்தை சற்றே வளைத்து மனோவின் பின்னே பார்த்தான். ஒரு நொடி யாரென்று யோசித்தவனுக்கு சட்டென்று உதித்தது, மீனலோசனி.. உயிரைக் கொடுத்து வேலை செய்த டெல்லி பயணத்தையே மனதில் நிறுத்துவது கடினமாய் இருக்கும் நேரத்தில் மீனலோசனி ஒரு நொடிக்குப் பின் நினைவுக்கு வந்ததில் தவறில்லைதானே? "ஹாய் லோசனி!" என்றவனுக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை.



மனோகரி தன் கண்முன் நடப்பதை கண்கள் விரியப் பார்த்தாள். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பின் இன்றுதான் பார்க்கிறார்கள். இவனுடன் பேசுவதற்கு எத்தனை எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள். தானாக வந்து பேசவில்லை. தானே வந்து பேசும்போதும் ஒரு வார்த்தை பதில் சொல்லவில்லை. இப்பொழுது, ஹாய் லோசனியாம்.. அதுவும் லோசனி! அந்த அளவிற்கு ஆகி விட்டதா?



"ஹாய்..எப்படியிருக்கீங்க? டெல்லி போயிருப்பதாகச் சொன்னார்கள்.. வேலையெல்லாம் நல்லபடியாக நடந்ததா?"



இன்னமுமே ஆதியால் இலகுவாகப் பேச முடியவில்லை.. ரொம்பவுமே கஷ்டப்பட்டு அந்த கேள்விக்கான பதிலை அவன் கண்டுபிடித்துச் கொண்டிருக்கையில்," ஏய் ஆதி !"என்ற குரல் வந்தது. சுமித்ராதான். ஈர்ப்பு விசை இழுத்தது போல் அந்த வான்வண்ண சேலை கட்டிய பெண்ணை நோக்கி போன தம்பி, நடுவிலே நின்றதையும், அந்த‌ பெண்ணே அருகே வந்ததையும், அப்போதும் இவன் பேசத் திணறுவதையும், இன்னொரு பெண் வர, அந்த பெண் இறுகுவதையும் சற்றே தள்ளி நின்று பார்த்தவள், இதற்கு மேல் தம்பிக்கு கை கொடுக்க வேண்டும் என்று முன்னே வந்தாள்.



ஆபத்பாந்தவனாய் வந்த அக்காவைப் பார்த்தவன், "அக்கா.. இது மீனலோசனி.. இது மனோகரி.. இது என் அக்கா சுமித்ரா.. "என்று எல்லோரையும் அறிமுகம் செய்து வைக்க, சுமித்ரா, "வணக்கம்!" என்று கைகள் கூப்பி, "வாங்க! உள்ளே வாங்க!" என்று இரு பெண்களையும் அழைத்துவிட்டு, ஆதியிடம், "மாமா உன்னை எதற்கோ கேட்டாரடா!" என்க ஆதி 'அப்பாடி' என்று மூச்சு விட்டவனாய், 'ம்.. இதோ போறேன்கா!" என்று அங்கிருந்து கிளம்பினான். கிளம்பியவன் நேரே வந்து நின்றது, அவனது அறையில். அவனுக்கு தனிமை தேவைப்பட்டது.


காதலே இல்லை என்று சொன்னவன் காதலிக்கிறான். காதல் தானா? மனோ வேண்டும்.. ஒவ்வொரு நொடியும் என்னவளாக வேண்டும். எல்லோர் முன்னும் இவள் என்னுடையவள் என்று சொல்ல வேண்டும். இந்த உணர்விற்கு பெயர்தான் காதலென்றால் ஆம் அவன் காதலிக்கிறான்.


எப்படி சாத்தியமோ.. ஆனால் அதுதான் உண்மை. ஸோ.. காதலிக்கிறான்.. அடுத்து என்ன? மனோவிடம் அவன் மனதைச் சொல்ல வேண்டும். எப்படி? எப்படி சொல்வது என்பதை விட முக்கியமான கேள்வி, எப்பொழுது சொல்வது. காற்றில் வரிசையாய்க் கேள்விக்குறிகள் நிற்க, பதில் தெரியவில்லை.



மனோ சித்தார்த்தை காதலிக்கிறாள். காதலிக்கிறாளா? உண்மையைச் சொல்வதென்றால் அப்போதைக்கு அவள் வேலையை விடாதிருக்க, காதலுக்கு உதவுவதாகச் சொன்னானே தவிர, ஆதிக்கு எப்போதுமே அது ஆழமான காதல் என்று தோன்றியதில்லை. இப்பொழுது ரொம்பவுமே, பப்பி லவ் என்பார்களே அதுபோல மனதால் முதிர்ச்சியடையாத நேரத்தில் வந்த சிறு ஈர்ப்பு என்றுதான் தோன்றுகிறது. ஆதி தன் எண்ண ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்தான். இது ஆசை கொண்ட மனம் தனக்கேற்றபடி வண்ணம் பூசும் முயற்சியா?


நான் மனோவை விரும்புகிறேன்‌. ஆனால் மனோவும் அதே எண்ணத்தைப் பிரதிபலிக்காத பொழுது தன் எண்ணத்தைச் சொல்வது அத்தனை சரியாக அவனுக்குத் தோன்றவில்லை. அவனே அது போல் எதிர்பாலரின் விருப்பம் அறியாமல் மனதை வெளிப்படுத்துவதை வெறுத்தவன்தானே. தன்னை அறியாமல் பெருமூச்சு ஒன்று விட்டான். தானும் அந்த நிலையில்தான் இருக்கிறோமா? இல்லை. அவன் ஒன்றும் பார்த்த ஒரு வாரத்தில் காதல் என்று சொல்லவில்லை. பார்த்த முதல்நாள் அழகாக இருக்கிறாள் எனாறு நினைத்தான்தான். அது அழகான பெண்கள் யாரைப் பார்த்தாலும் மனதில் எழும் பொதுவான எண்ணமாகவும் இருக்கலாம். இப்பொழுதும் வாழ்க்கை முழுமைக்கும் மனோ வேண்டும் என்று நினைப்பதற்கு காரணம், அவளிடம் இருக்கும் ஒரு குழந்தைத்தனமான நேர்மை, எந்த இடத்திலும் தன்னை தானாக வெளிப்படுத்தும் நேர்த்தி, இதோ இன்று போல் அவனைப் பார்த்ததும் அவள் கண்களில் தெரிந்த வெளிச்சம், பின் அதை மறைத்து சிறு கவனம்.. மனம் ஏதோ நினைவுகளில் பின்னுக்கு இழுக்க தலையை உலுக்கிக் கொண்டான்.. ஆதி.. நன்கு யோசி.. இப்பொழுது என் மனதை மனோதிடம் சொல்வது தவறு. அதுவும் மேலதிகாரியாக இருந்து கொண்டு.. மனோவும் என்னை விரும்பும்போது தான் என் மனதைச் சொல்ல வேண்டும். அது எப்படி நடக்கும்? எப்போது நடக்கும்?



ஆதி இப்படியெல்லாம் தலையை உடைத்துக் கொண்டிருந்த போது, மனோவும் இங்கே நிறைய புதுத் தகவல்களை அறிந்து கொண்டிருந்தாள்.. ஒன்று மீனலோசனி ஆதிக்கு திருமணத்திற்கு பார்த்திருக்கும் பெண்தான். சம்மதம் சொல்வதற்கு முன் யோசிப்பதற்கு நேரம் கேட்டிருக்கிறார்களாம். சுமித்ரா பொதுவாக சொன்னாள். ஆனால் நிச்சயம் மீனலோசனிதான் கேட்டிருப்பாள். திருமணமே குழந்தை பெற்றுக் கொள்வதற்கு லைசென்ஸ் என்று சொன்னவன், சம்மதம் சொல்ல யோசிப்பதற்கு என்ன இருக்கிறது.



இரண்டாவது, அவள் மனதிலிருப்பதைப் போல் ஆதி ஒன்றும் எல்லாம் அறிந்தவனில்லை போல.. பின்னே.. மகிழ்ச்சி என்ற உணர்விற்கு உருவம் தாருங்கள் என்றால் இந்த சுமித்ராவை வரையலாம் போல, அத்தனை சந்தோசமாக இருக்கும் தன் சகோதரியைக் காதல் கல்யாணம் பண்ணி கஷ்டப்படுகிறாள் என்று காரில் சொன்னானே? முதலாவதை சுமித்ராவிடம் சொல்லாவிட்டாலும், இரண்டாவதைச் சொன்னாள். சொல்லி, "உங்க தம்பிகிட்ட சொல்லுங்க அக்கா.. நீங்க ரொம்ப சந்தோசமா இருக்கீங்க என்று.." என்று கோரிக்கையும் வைத்தாள்.



முகம் கனிய, "இன்று நேற்றல்ல மனோ.. எங்க கல்யாணம் ஆனநாள் முதல் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் சந்தோசம் என்பதற்கான வரைமுறைகள் அவனுக்கு வேறாய் இருக்கிறது. மல்ட்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல் கட்டிக் கொடுத்திருப்பானாம். தினம் ஒரு காரில் போலாமாம். உனக்குத் தெரியுமா? பேருந்தில் போனால் இவன் வருத்தப்படுகிறானே என்றுதான் பணநிலை ரொம்பவும் இறுக்கமான நேரத்தில் கூட இவர் கார் வாங்கினார். அதிலும் ஈ.எம்.ஐ என்ற வார்த்தையைக் கேட்டாலே, சாரின் முகம் சுருங்கிவிடும். பாசமானவன்தான். ஆனால் அவனுக்குத் தெரியவில்லை, எத்தனை பெரிய பங்களா இருந்தாலும், மருத்துவமனையின் தலைவியாக இருந்தாலும், அவரின் மனைவியாக நானில்லையென்றால் எனக்கு சந்தோசம் இல்லை என்று."


சுற்றிலும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த சித்தார்த், சத்யா, மீனலோசனி இன்னும் சிலர் 'சட்சட் 'டென்று கைகள் தட்டி, "வாவ்! சூப்பரா சொன்னீங்க!" என்று கோரஸ் பாட சுமித்ரா சிரித்தாள்.


"ஆஹா.. எத்தனை வருசம் ஆகிவிட்டது, என் சுமித்ரா இப்படி வெட்கப்பட்டு.. என்ன நடந்தது?" என்று சிரித்தபடி கூட்டத்தில் சேர்ந்தார் ஜெயராமன், சுமித்ராவின் கணவர்.


"உங்கள் காதல்கதையைப் பற்றிதான் பேசுறாங்க"


"அடடா.. மிஸ் பண்ணிட்டேனே.. சுமி முதலில் இருந்து ஆரம்பிக்கிறாயா?"


எல்லோரும் , ஓ என்று குரல் கொடுக்க, "ரொம்ப முக்கியம்" என்று விளையாட்டாய் அலுத்துக் கொண்டாள் அவன் மனைவி. அப்போது, மீனலோசனி கேட்டாள், "அக்கா.. நீங்க இருவரும் மனமொத்த காதல் தம்பதிகள் என்பதால் நீங்கதான் என்னோட சந்தேகத்தைத் தீர்த்து வைக்க சரியான ஆள்.. நமக்கு ஒருவர் மேல் ஒருவிதமான பிரமிப்பு இருக்கிறது. அது காதல் தானா இல்லையா என்று எப்படி தெரிவது?"


"கரெக்ட் மா.. காதலிக்கிற எல்லோருக்குமே இது காதல்தானான்னு ஒரு சந்தேகம் வரும்.."


"ஆமாம். ஆமாம்" என்று ஆங்காங்கிருந்துசில குரல்கள் வர மனோ கவனமாய் கேட்க ஆரம்பித்தாள், " காதல்னா முதலில் அவனுக்கு என்னைப் பிடிக்கனுமேன்னு பயம் வரும். அவனோடிருக்கும் நேரம் ரொம்பவே அழகாக இருப்பது போலிருக்கும் .உன்னையும் அறியாமலேயே அந்த நேரத்திற்காக காத்திருக்க ஆரம்பிப்பாய்.. அவனுக்கு ஒரு பிரச்சனை என்றால், அதைத் தீர்க்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றும். மிக முக்கியமாக, அவன் எனக்குதான், நான் அவனுக்குதான்னு மனம் முரண்டு பிடிக்கும். "



குழந்தைகள் படங்களை வெட்டி பாகங்களாக வைத்து புதிர் விளையாட்டொன்று விளையாடுவார்களே, அது போல, சுமித்ரா ஒவ்வொரு வாக்கியமாகச் சொல்ல, சொல்ல மனதில் ஒரு நிழல் உருவம் வடிவம் பெற்று, இறுதியில் அந்த நிழலின் உரிமையாளனே முன்னே வந்து, "எல்லோரும் சாப்பிட்டாச்சா? " என்றபடி அவளருகில் இருந்த இருக்கையில் வந்தமர, ' காதலா? ஆதியையா?' திகைப்புடன் திரும்பி அவனைப்‌ பார்த்தாள். இந்த இரண்டு வார்த்தையையும் ஒன்றாக நினைப்பதே ஏதோ தப்பான வாக்கியம் போலிருக்கிறதே…இது எப்படி சாத்தியம்? மனமே அதற்கு மேல் யோசிக்காமல் ஒத்துழையாமை செய்ய, மனோ கண்சிமிட்டாமல் அவனையே பார்த்தபடி இருந்தாள்.
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
11570பகுதி 14

பகுதி 14




அன்று இரவு நெடுநேரம் மனோவிற்கு தூக்கம் வரவில்லை. ஏனென்று தெரியவில்லை. உண்மையைச் சொல்வதென்றால் ஏனென்று சிந்திப்பதற்கு துணிவில்லை. நாளை அணிய வேண்டியதை எடுத்து வைத்தாள். தன் புத்தக அலமாரியை கலைத்து அடுக்கி வைத்தாள். ம்கூம்.. மனம் அமைதி பெறவில்லை.



தன்னறையை விட்டு வெளிவந்தவள் சோஃபாவில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த தாயைப் பார்த்ததும்‌, அருகில் சென்று அவர்‌ மடியில் தலை வைத்து படுத்தாள். அனிச்சையாய் தன்மகள்‌ வசதியாய் படுக்க காலை நீட்டியவர் முகத்தில் யோசனை.. இப்படி வந்து படுக்க மாட்டாளே.. "என்ன மனோம்மா? என்ன ஆச்சி?"



"பயமாயிருக்குமா!"



"ஏன் மா?"



"ம்கூம்.. தெரியலை.. கொஞ்ச நேரம் நான் இப்படியே படுத்துக் கொள்ளவா?"



எதுவும் சொல்லாமல், பூர்ணிமா சோபாவின் கைப்பிடியில் சாய்ந்து, தலையை மென்மையாக வருட ஆரம்பிக்க, தாய்மடி தந்த தைரியத்தில் பயத்தை கொஞ்சம் ஒதுக்கிவிட்டு யோசித்தாள்.. ஆதியை விரும்புகிறேனா? இது எப்படி சாத்தியம்? ஆதியை அறிந்ததிலிருந்து அவன் தன்னை தவறாகவோ குறைவாகவோ நினைக்காதவாறு நடப்பதில் மனோ எப்போதுமே கவனம் செலுத்தியிருக்கிறாள்.. அவனோடு செலவழிக்கும் நேரங்கள் எப்பொழுதுமே மனோவிற்குள் சிறு தாக்கத்தை ஏற்படுத்தும். அவனோடு என்ன பேசினாள், அவன் என்ன பேசினான், மற்றவர்களோடு எப்படி நடந்து கொள்கிறான் என அனைத்தையுமே மீண்டும் அசை போடுவது வழக்கமும் கூட. அச்சமயத்தில் அதை அப்போது யார் கூட இருக்கிறார்களோ அவர்களோடு பகிர்ந்து கொள்வதும்‌ வழக்கம். ஏன் எப்போதும் ஆதி சாரைப் பற்றியே பேசுகிறாய் என்று காவ்யன் கேலியே செய்திருக்கிறான்தான்.



அவளுடனான நேரங்கள் ஆதிக்கும் இதே போல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன வா? இதுவரை நிழலிலும் மறைவிலும் நின்று பயம்காட்டிய பூதம் இப்போது முன்னே வந்து நின்றது. ஆம்.. இதுதான் இன்றைய பயத்திற்கு காரணம். என்றுமே ஆதி அவளை நேசிக்கப் போவதில்லை‌. ஆனால் இந்த பயம் உணர்வு புதியதல்ல.. கொஞ்சமாய் அவள் சில காலங்களாக ஆதியோடு பேசும்போது அவ்வப்போது அனுபவிப்பதுதான்‌.. இப்பொழுதுதானே ஆதியை விரும்புவதாக எண்ணுகிறாள். இதற்கு முன் ஏன் இது போன்ற பயம்? சிலநேரங்களில் ஆதியோடு இருக்கும் போது அவன் சில வார்த்தைகளில், பார்வையில் நெஞ்சம் இனிதாய் படபடக்கும். அடுத்த நொடி அதில் இனிமை மறைந்து பயம் கவ்வி விடும். ஏன் பயம்? தனையறிந்த மனம், இவனிடம் இந்த நேசத்தை எதிர்பார்க்க முடியாதே என்ற பயத்தினால் வந்த படபடப்பா?




ஆதியிடம் எதிர்பார்க்கவே முடியாதா? அவன்தான் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பதாய் பிடிவாதமாக இருக்கிறானே? என்ன செய்வது?. 'சரி.‌ காதல் இல்லைதான்‌. எப்படியும்‌ திருமணம் செய்வீர்கள்தானே சார்.‌. நாமே திருமணம் செய்து கொண்டால் என்ன?" என்று கேட்கலாமா? தன் எண்ணம் போன போக்கில் சோஃபாவிலேயே தலையை முட்டிக்கொள்ள பூர்ணிமா பயந்தே விட்டார். " மனோம்மா..?"



"ஒன்றுமில்லைமா. இப்போ பரவாயில்லை.. நான் போய் படுக்கிறேன்.." என்று தன்னறைக்கு வந்து படுக்கையில் படுத்தவள், கண்களை இறுக மூட, கருமை பின்வெளியில்‌ அவன் முகம் வரிவடிவமாய் தோன்றியது.. ஏதோ அறிந்த ரகசியப்புன்னகையில் உதடுகள் வளைய, வலக்கண்புருவத்தை மேலுயர்த்தி என்னவென்று கேட்பதுபோல் இருக்க, மனோ கண்களை அழுந்த தேய்த்துக் கொண்டாள்.‌ நிஜமாகவே, ஆதி சொல்வது போல‌ இது இல்லூசன், ஹாலுசினேசன் போல் ஒரு மனவியாதிதானோ? இதுதான்‌ மனோ தூங்கும் முன் இறுதியாய்‌ சிந்தித்தது.



படியிலிறங்கி கேன்டீனை நோக்கி நடந்து வந்தான் சிவா. இரண்டு, மூன்று நாட்கள் பார்த்தால் சிரித்த மனோ மறுபடியும் மீண்டும் முன்போல்.. ம்கூம்.‌ முன்பு நேர் கொண்ட பார்வை.. இப்பொழுது நிமிர்ந்தும் இவனைப் பார்ப்பதில்லை. 'பார்க்கா விட்டால் போ.. எனக்கென்ன.. இந்த ப்ளான் மட்டும் சக்சஸ் ஆனால் ஆயிரம் பேர் என்னைத் தேடி வருவார்கள். ' கைப்பேசியழைக்க, எடுத்து திரையைப் பார்த்தவன், அழைப்பை ஏற்று காதில் வைத்தான், "சொல்லுடா? புக் பண்ணிட்டியா?"



"பண்ணிட்டேன் மாப்ளை.. ஆனால் இன்னும் ரெண்டு வாரம் வெயிட் பண்ணனும்னு நினைச்சா தான் கஷ்டமா இருக்கு! நாம் ஏன் பேசாம வீடியோவை இப்போவே நெட்ல ஏத்த கூடாது?"



"முட்டாள்.‌ இப்போ ஏத்துனா, நாலு பேர்தான் பாப்பாங்க.. நம்ம மாடல் ரிலீஸ் ஆகும்போது அந்த நாலு பேரும் அதை மறந்திடுவாங்க.. நம்ம மாடல் ரிலீஸ் ஆகி நல்லா இருக்குனு எல்லாம் சொல்லும் போது ரிலீஸ் பண்ணினா நிறைய பேர் பார்ப்பாங்க.. சேல்ஸ்ம் அடி வாங்கும்..அதுக்குதான் அந்த கம்பெனிகாரனும் நமக்கு காசு தர்றான்"



"ம்.. எப்போ கைக்கு காசு வரும்னு அதே நினைப்புதான். சரி.. புக் பண்ணிட்டேன்னு சொல்லத்தான் கால் பண்ணினேன். நாளைக்குப் பார்க்கலாம்" என்று தொடர்பைக் துண்டித்தான் நண்பன்.



கைப்பேசியை அணைத்து சட்டைப் பையில் போட்டவன், சுற்றிலும் பார்த்தான். யாரும் இல்லை.. ம்ப்ச்.. இன்னும் கொஞ்சம்‌ கவனமாக இருக்கனும்‌. இப்படி நின்று பேசியிருக்கக் கூடாது.. எத்தனை நாள் திட்டம்‌ வீணாக விடலாமா? தூரத்தில் பேண்ட்டில் பைக்குள் வலக்கையை விட்டபடி நடந்து கேண்டினுக்குள் நுழைந்த ஆதியைக் கண்ட சிவாவின் கண்களில் வன்மம் பரவியது. இவனுக்கும் அவனுக்கும் சில வருடங்கள் வயது வேறுபாடுதான்‌. ஆனால் இவன் முதலாளியாம்.. தான் அவனுக்கு சேவகம் செய்ய வேண்டுமாம்‌.




நானும் முதலாளியாவேன். படிப்பு ஒத்துழைக்கவில்லை. முதலாளியாவதற்கு படிக்க வேண்டுமா என்ன? முதல்தான் வேண்டும். கையில் உள்ள முதலில் சிறிய அளவில் தொழிலை ஆரம்பித்து, பெரிதாக்க வேண்டுமானால் இந்த ஆதி குடும்பம் போல் இவன் பேரன் தான் பணக்காரனாக வாழ்வான். ம்ம்.. என்னுடைய தாத்தாவும் கைக்காசை போட்டு தொழில் ஆரம்பித்திருந்தால் நானும்தான் இப்போது பரம்பரைப் பணக்காரனாயிருந்திருப்பேன். இந்த அப்பாவாவது ஆரம்பித்திருந்தால் புதுப்பணக்கார வாழ்க்கையாவது கிடைத்திருக்கும். அவரானால் இவர்களுக்கு சேவை செய்வதில்தான் மோட்சமுண்டு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.



இனி இவனே தொழிலைத் தொடங்கி நடத்தினால் எத்தனை கஷ்டப்பட வேண்டும். யாரோ ஒருத்தன் அது பேரனாகவே இருக்கட்டும், பணக்காரனாய் இருப்பதற்கு நான் ஏன் உழைக்க வேண்டும். நானே கணக்கு வழக்கில்லாமல் பணத்தில் விளையாட‌வேண்டும்.



அலுவலகத்தில் அங்கும் இங்கும் கொஞ்சம்‌ எடுத்தால் அதையும் கண்டுபிடித்து, காசு கைகளுக்கு வராத துறைக்கு மாற்றி விட்டான் இந்த ஆதி.. என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்த போதுதான் இவனோடு கல்லூரியில் படித்த கோகுல் அழைத்தான். அந்த பன்னாட்டு கம்பெனியின் ஏதோ பிரிவில் வேலை செய்கிறானாம். புதிதாக ஆரம்பித்து, குறைந்த விலையில் வண்டிகள் வியாபாரத்திற்கு வந்தால் அவர்கள் தொழில் பாதிக்கப்படும் என்பதற்காக ஒரு வேலை செய்யச் சொன்னார்கள். ரொம்பவே சுலபம்தான்.



இவர்கள் ப்ராஜெக்டோடு தொடர்புடைய ஒரு அரசாங்க அதிகாரியிடம் கம்பெனியின் அடையாள அட்டையைப் போட்டுக் கொண்டு லஞ்சம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சம்மதிக்க வைக்க முயற்சி செய்வது போல் பேசி வீடியோ ஒன்று எடுக்க வேண்டும். அதை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்‌. இதில் சிவாவின் மூளை வீடியோ வெளியிடும் வரை வீடியோவை நானே வைத்திருப்பேன் என்று தன் பக்கமாய் திட்டவட்டமாய் தெரிவித்து அவ்வப்போது ஏதாவது வாங்கிக்கொள்வது. பொன்முட்டையிடும் வாத்தாயிற்றே. மாடல் வந்த பிறகுதானே வீடியோவின்‌ இறுதிவிலையை நிர்ணயிக்க வேண்டும். அடுத்ததாக, இனி இங்கே இருக்க முடியாதல்லவா?. ஒரு வருடத்திற்கு வெளிநாடுகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யச் சொன்னான். அவனுக்கும் அவன் நண்பர்களுக்கும்... இவனோடு வீடியோவில் பேசிய அந்த ஆபிசருக்கும் வேண்டியது கேட்டு ஏற்பாடு செய்துவிட்டார்கள். இத்தனை இலட்சங்கள் கொட்டுகிறார்களே என்று வியப்புதான். ஆனால் எத்தனை செலவழித்தாலும் புது போட்டியை உருவாகுவதற்கு முன்னே அழிப்பதுதான் உத்தமம் என்று இவர்கள் படித்த பாடங்கள் சொல்லிக் கொடுக்கின்றன போல.





சித்தார்த்தை மீட்டிங்கிற்கு அழைத்து விட்டு காத்திருந்தவனுக்கு, கொஞ்சம் குற்றவுணர்வுதான். இன்று காலை இவன் அப்பா கூட அவனை சந்தேகமாய்‌ பார்த்தார். அவன் சொன்ன காரியம் அப்படி. அப்படியொன்றும் அது புது யோசனையல்ல. இதே போல ஒரு தயாரிப்பு ஆலையை ஆந்திராவில் நிறுவ வேண்டும். அதை ஒருவரும் இதை ஒருவரும் பார்க்க வேண்டும் என்பது அவர்களது நீண்டநாள் திட்டம்தான்.‌ அதாவது நீநீநீண்ண்ட நாள் திட்டம். திடீரென்று தூங்கி எழுந்தததும்‌ பையன் அந்த தொழிற்சாலையை இப்போதே தொடங்கலாம்‌ என்றால் என்னவானது என்றுதானே யோசிப்பார். "ஏம்ப்பா.. திடீரென்று என்ன அவசரம்?.. இப்போதுதானே இந்த ப்ராஜெக்ட் முடிகிறது. கொஞ்சம் அவகாசம்‌எடுத்துக்‌கொள். அதுவுமில்லாமல் இன்னும் ஒரு யூனிட் முழுதையும் பார்க்கும் அளவிற்கு சித்தார்த்திற்கு அனுபவம்‌ வந்து விட்டதாக எனக்கு தோன்றவில்லை"




"ம்.. பெரிய அளவில் இயங்கிக் கொண்டிருக்கும் கம்பெனி கஷ்டமாயிருக்கலாம் அப்பா.. ஆனால் புதியதில் முதல் படியிலிருந்து கூடவே இருந்தால், அனுபவமும் வந்து விடும். அவனுக்கு ஒரு ஈடுபாடும் இருக்கும்.."



"இப்போது முன்பு போல் இல்லையே ஆதி.. ஓரளவிற்கு ஆர்வமாகக் தான் வேலைக்குப் போகிறான்"



அதுதானே பிரச்சனையே.‌. அதை அப்பாவிடம் சொல்ல முடியாதே.. "ம்.. முன்னுக்கு இப்போது பரவாயில்லைதாம்பா.. இந்த மனநிலையை அப்படியே மாறாமல் பார்த்துக்கலாமே.‌"


பையன்‌சொல்வது சரிதான். "சரி ஆதி.. அண்ணன்‌ கிட்ட நான் பேசேறேன்…"



காற்றில் கைகளை மடக்கி நீட்டி தன் வெற்றியைக் கொண்டாடியதை இப்பொழுது நினைக்கும் போது கொஞ்சமாய் மனசாட்சி எட்டிப்பார்த்தது. ஆனால் பழமொழியே இருக்கிறதே.. காதலிலும் போரிலும் வெற்றிதான் இலக்கு என்று, அதைச் சொல்லி மனசாட்சியை சமாதானம்‌செய்து வைத்தான்.




சித்தார்த்தின் மேல் இருப்பது காதல் இல்லை என்று மனோவிற்கு உணர்த்த வேண்டும்‌. அதற்கு சித்தார்த் பக்கத்தில் இல்லாமல் இருப்பது வேலையைக் கொஞ்சம்‌ எளிதாக்கும். ஒரு வேளை உண்மைக் காதலாய் இருந்தால்? மனம் இறுகுவதைப் போல் உணர்ந்தவன், அதை ஒதுக்கிவிட்டு தன்னை சமாதானம் செய்தான். அப்படி உண்மைக் காதல் என்றால் இந்த பிரிவெல்லாம் ஒரு பொருட்டாகுமா? அவள் காதலிக்கிறாள் என்று அறியும் வரை தன் காதலை சொல்லக்கூடாது என்று முடிவெடுத்தான்தான். ஆனால் அதற்காக எதுவும் செய்யாமல் இருக்க முடியாதே.. மயிலே மயிலே என்றால் இறகு போடுமா?? ஹாஹா. ஆதி எல்லோரும் காதல் வந்ததால் கவிஞர் ஆவார்கள். நீ வில்லனாகிவாடுவாய் போலவே..



புது ஆலை அமைப்பதைப் பற்றி சித்தார்த்திடம் சொல்ல வேண்டும். அப்பாவிடமோ பெரியப்பாவிடமோ சித்தார்த் மறுப்பாய் பேசி விட்டால் எல்லாம் வீண். செலுத்திய அம்பு திசை மாறி இவனிடமே கூட பாயலாம். அதனால் அவனைப் பேசி கொஞ்சம் தயார் பண்ண வேண்டும்.



கேன்டீனில் தனியே அமர்ந்திருந்த மீனலோசனியைப் பார்த்த மனோவிற்கு விழிகள் விரிந்தன.. அலுவலகம் வந்து காத்திருக்கிறாள்.. ஆனால் ஆதி இப்பொழுதுதானே சித்தார்த் தோடு மீட்டிங் ஆரம்பித்திருக்கிறான்.. போய் பேசிப் பார்க்கலாமா?தானே வந்த வாய்ப்பை ஏன் விட வேண்டும்.... . அத்தோடு இல்லாமல் அலுவலக விழாவில் மீனலோசனியோடு பேசியிருக்கிறாள்.. எல்லோரிடமும் நட்பாக அன்று பழகினாள். இவள் கொஞ்சம் கெட்ட பெண்ணாக, வில்லி மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும்.. ஆனால் நல்ல அமைதியான பெண். அமைதி என்றால் அதிர்ந்து பேசினால்கூட அழுது விடுவாள் போல. யோசித்துப் பார்த்தால் ஆதியிடமிருந்து இவளை விலக்குவது, இந்த பெண்ணுடைய வாழ்க்கைக்கும் நல்லதுதான். வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, அவள் அருகே போனாள், "ஹாய் மீனலோசனி!"


"ஹாய்!".. "மனோ தானே?"



"ம்.. ஆமாம், நீங்க ஆதி சார் பார்க்க வந்திருக்கீங்களா?"



"ம்.. ஆமாம்"



"சார் இப்போ ஒரு மீட்டிங்கில் இருக்கிறார். "



"ம்.. தெரியும். ஃபோனில் பேசினேன். நீங்க உட்காருங்க"



"ஓ.. ஓகே.. " அவள் முன்னமர்ந்தாள்.‌



மெனுகார்டை பார்த்து இருவரும் தங்களுக்கு வேண்டியதை சொல்லிவிட்டு காத்திருந்தனர். "நீங்க எத்தனை வருசமா இங்க வொர்க் பண்றீங்க?"



"ஒரு வருசமா..உங்களுடைய இந்த டாப் ரொம்ப அழகாயிருக்கு.. உங்களுக்கு கரெக்டா சூட் ஆகுது?"



"தேங்க் யூ.. உங்க டிரெசும் ரொம்ப நல்லாயிருக்கு..



"தேங்க் யூ!" உணவு வந்து விட இருவரும் எடுத்து தங்களுக்கு வேண்டியதை தங்கள் தட்டுகளில் வைத்தபடி பேச ஆரம்பித்தனர்‌. அங்கே சிறிது நேரம் அமைதி நிலவியது. மனோவிற்கு ஆதியைப் பற்றி என்ன முடிவெடுத்திருக்கிறாள் என்று கேட்க வேண்டும். ஆனால் எப்படி கேட்பது..



"எனக்கு உங்ககிட்ட ஒன்று கேட்கனும் மனோ.."



அது என் டயலாக் ஆச்சே.. "சொல்லுங்க லோசனி"



"ஒருத்தரை பிடிச்சிருக்கா, பிடிக்கலையானு எப்படி தெரிஞ்சிக்கிறது?"



"அது.. அது.. எனக்குத் தெரியலையே!"



புன்னகைத்தவள், சிரித்தபடி, " இதற்குதான் அந்த காலத்தில் எதுவுமே கேட்காம அம்மா, அப்பா கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க போல.. எவ்ளோ டென்ஷன்" மனோ எதுவும் பேசாமல் ஒரு வாய் உணவை எடுத்து வாயில் வைத்தாள். "உங்களுக்கு தெரியுமா மனோ? நீங்கள்தான் என்ரோல்மாடல்"



"ரோல்மாடலா?"



"ம்.. எங்க வீட்ல சொல்ற எதையுமே நான் எதிர்த்ததில்லை. அன்னைக்கு நீங்க ஹோட்டல்ல ஆதிகிட்ட தைரியமா, பேசினதைப் பார்த்துதான் எங்க வீட்ல ஆதிக்கு ஓகே சொல்ல டைம் கேட்டேன்"


"அச்சோ.. வெளியில் சொல்லிட்டாதீங்க.. உங்க வீட்ல என்னைத் தூக்கிட போறாங்க"



புன்னகைத்து "நீங்களே சொல்லுங்க மனோ.. ஆதி மாதிரி ஒரு பையனை ஓகே சொல்றதா நோ சொலாறதான்னு எதை வைச்சு முடிவு பண்ணுவீங்க?



"எனக்கு பிடிச்சிருக்கா, இல்லையாங்கிறதை வைச்சிதான்.."



"அதை எப்படி தெரிஞ்சிக்கிறது?"



"ஆதி சார் உங்களை பாராட்டனும்னு தோன்றுதா?"



"ம்கூம்"



"ஆதி சாரைப் பார்க்கலைனா, அன்றைய நாளே ரொம்ப நீண்டநாளான மாதிரி தோன்றுதா?"



"ம்கூம்"



"அவருக்கு வேற யாராவது பெண்ணைப் பிடிச்சிருமோன்னு பயமாயிருக்கா?"



"இல்லையே"



"ஆதி என்னை லவ் பண்ணலைன்னாலும் பரவாயில்லை, கூட இருந்தா போதும்னு தோன்றுதா?"



"ம்கூம்"



"நான் லவ் பண்ற மாதிரி ஆதியும் என்னை லவ் பண்ணனும்னு ஆசையா இருக்கா?"



"நான்தான் ஆதியை லவ் பண்ணவே இல்லையே?"



"அ..அது.. ஒரு. ஃப்ளோல.." என்று தடுமாறியவள், சட்டென்று மீனலோசனி கைகளைப் பற்ற, நிறுத்தி அவள் முகத்தைப் பார்த்தாள்.. "எனக்கு புரிஞ்சிடுச்சி மனோ.. தேங்க்ஸ்.. ரொம்ப தேங்க்ஸ்.." அது வரை மேஜை மேலிருந்த அவள் கைப்பேசி, 'ஆதி காலிங்' என்று திரையில் காட்டியபடி வீணை வாசிக்க, " ஆதி கூப்பிடுறார்.. நான் வர்றேன் மனோ.. பை.. தேங்க்யூ" என்று தோள்பை ஆட எழுந்து போனவளை பின்னிருந்து பார்த்திருந்த மனோவின் கண்களும் உள்ளமும் கலங்கியிருந்தன.
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி 15

11629




ஆதி தலைக்குப் பின்னே இரு கரங்களையும்‌கட்டி , அண்ணாந்து அறையின்‌கூரையைப்‌பார்த்தபடி இருந்தான்.‌ லேசாகத் தலை வலிப்பது போல இருந்தது.



சித்தார்த்தினுடன்‌ நடந்த மீட்டிங் எதிர்பார்த்தபடி செல்லவில்லை. ஆந்திராவில் அலுவலகத்துடன் கூடிய தொழிலாலை என்றதும் சித்தார்த் முடியாது என்று சொல்லியிருந்தால், இது தொழிலுக்கு எந்த அளவில் உதவும் என்று பேசியிருக்கலாம்.. தயங்கியிருந்தால் என்ன, ஏன் என்று சமாளித்திருக்கலாம். ஆனால் ஆலை மற்றும் அதன் திட்டத்தை ஆதி சொல்லி கவனமாகக் கேட்டவன், எதுவுமே சொல்லாமல் ஆழ யோசிக்கும் பாவனையில் சில நொடிகள் அமர்ந்திருந்தான். "என்ன சித்தார்த்?" என்று கேட்க நிமிர்ந்து ஆதியைப் பார்த்தவன், ரொம்பவே தெளிவாக, "இன்னும் ஒரு வருடம் ஆதி.. ஒரு வருடம் டைம் கொடு.. அதற்குப் பிறகு நான் அந்த ப்ராஜெக்டைப் பார்த்துக் கொள்கிறேன்" என்றவனை பார்த்த ஆதிக்கு அடுத்து என்ன சொல்வது என்பது பிடிபடவில்லை. எதற்காக ஒரு வருடம் என்று கேட்கலாம். ஆனால் சித்தார்த் பேசிய பாவனையில் ஏதோ ஒன்று அதற்கு மேல் ஆதியை அதைப் பற்றி கேள்வி கேட்க விடவில்லை.



முதல் முறையாக லேசாக பயம் எட்டிப் பார்த்தது. நிஜமாகவே சித்தார்த்தோ மனோவோ, இருவரில் ஒருவர் மற்றவரை விரும்பினால்? அதற்கு மேல் எதையும் சிந்திக்கவும் அப்போது அவனால் முடியவில்லை. "சரி.. யோசித்து சொல்கிறேன்" என்று அவனை அனுப்பிவிட்டு, அடுத்த வேலையாக மீனலோசனியோடு மதிய உணவு என்று நாட்குறிப்பு சொல்ல, யாரோடும் உரையாடும் மனநிலையில் இல்லாதிருந்தவன், வேலை இருக்கிறது, வர இயலாது என்று சொல்லத்தான் மீனலோசனிக்கு அழைத்தான்..



"அலுவலகத்தில்தான் இருக்கிறேன்" என்றவள், "இதோ மேலே உங்கள் அறைக்கு வந்து விடுகிறேன்" என்று சொல்ல, தொடர்பைத் துண்டித்து, கூரையைப் பார்த்து, தலைமுடியில் இரு கை விரல்களையும் விட்டு பின்னே கோதிஃ கூரையைப் பார்க்க ஆரம்பித்தவன் இன்னும் அதே நிலையில்தான் இருந்தான். மனம் மட்டும் அங்கும் இங்குமாய் தாவிக் கொண்டிருந்தது.



"ஹாய் ஆதி"



"லோசனி.. ஐயம் சாரி.." ஏன் என்பது போல் பார்தவளிடம், உதடுகள் இரண்டையும் ஒன்றாய் அழுத்தி, காற்றையிழுத்தவன், "அது.. உங்ககிட்ட முக்கியமாக ஒன்று சொல்லனும். ஆனால் இப்போ பேச முடியுமா தெரியவில்லை. .. நாம் டின்னருக்கு மீட் பண்ணலாமா? "



மெல்லிய குரலில் ஆனால் அழுத்தமாக அவள் குரல் வந்தது" நானும் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்.. டின்னர் வரை வெயிட் பண்ண முடியுமா தெரியலை.. ஐந்து நிமிடம் தந்தீங்க என்றால் அதற்குள் சொல்லிடுவேன்"



இரு மனதாய் அவளைப் பார்த்தவன், சரி இருக்கிற பிரச்சனையில் இந்த ஒன்றாவது உடனே முடியட்டும் என்று நினைத்தவனாய், "உட்காருங்க" என்றான்.



உறுதி கொஞ்சம் தடுமாற தயக்கமாய் அவனைப் பார்த்தவள், பேச ஆரம்பித்தாள், "இந்த திருமணப் பேச்சை நிறுத்த சொல்லி வீட்டில் சொல்லலாம்னு முடிவு பண்ணியிருக்கிறேன்."



வியப்பாய் புருவங்களை உயர்த்தியவனைப் பார்த்தவள், "சாரி ஆதி.. உங்களுக்கு வருத்தம் எதுவும் இல்லையே. ஏன் வேண்டாம்னு உங்களுக்கு விளக்கம் கொடுத்திடுறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க சொல்லுங்க. " அவனை எதுவும் சொல்ல விடாமல் மூச்சு விடாமல் பேசியவள், பேசி முடித்தும் அவன் அவளையே பார்த்தபடி இருக்க சிறிதாய் சிவந்து, மூச்செடுத்து மெதுவாகப் பேச ஆரம்பித்தாள், "உண்மையைச் சொல்லனும்னா, நீங்க எனக்குப் பெரிய உதவி பண்ணியிருக்கீங்க.. உங்களைப் பார்த்த சில நாட்கள்ல நான் நிறைய கத்துகிட்டேன். நீங்கதான் எனக்குத் திருமணத்திற்கென்று பார்க்கும் முதல் ஆள். அன்று நான் வந்தது நாம் பார்ப்பதற்காக இல்லை. உங்களிடம் என்னைக் காட்டுவதற்காக. உங்களுக்கு இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் நடுவில் இருக்கும் வேறுபாடு புரிகிறதா?"



கண்களில் புரிதலுடன் பார்த்தவனைக் கண்டு, "கரெக்ட். எனக்கு அன்று ஆப்சனே கிடையாது. வேண்டும் என்று நான் நினைக்கவுமில்லை. ஆனால் அன்று தைரியமாய் பேசும் ஒரு பெண்ணைப் பார்த்து உங்கள் கண்களில் ஒரு மெச்சுதல் தெரிந்ததில்லையா, அது என்னைக் கொஞ்சம் பாதிச்சிடுச்சி. ஒரு சின்ன ரிபெல்லாதான் ஓகே சொல்ல வீட்டில் டைம் கேட்டேன். இப்போதும் உங்களைப் பிடிக்கறதான்னு தெரியவில்லைதான்.. பட்.. ம்.. அன்று கோயில்ல உங்க‌ பெரியம்மா சொன்னாங்க, உங்களுக்கு வேலைக்கு தான் எப்போவுமே முதலிடம் அப்படினு. அப்போ‌அது பெரிய விஷயமாகவும் தெரியலை. ஆனால் இப்போ அது போதாதுன்னு தோனுது. எனக்குன்னு வர்றவர், என்னை அதே மெச்சுதலோட பார்க்கனும், என்னை லவ் பண்ணனும், என்னை மிஸ் பண்ணனும், என்கூட இருந்தா போதும்னு நினைக்கனும், எல்லோரையும் விட, எல்லாவற்றையும் விட நான்தான் அவருக்கு முதலாவதாக இருக்கனும்." கண்களில் கனவுகளோடு சொல்லிக் கொண்டு போனவள், நிறுத்தி ஆதியின் முகம் பார்த்து, இன்னும் முகம் சிவந்தாள், "ரொம்பவே வசனம் மாதிரி பேசுறேனோ?"




"ம்ப்ச்..‌மப்ச்.. ரொம்ப அழகாய் பேசுறீங்க.. உங்க அளவுக்கு சொல்ல முடியாததினால்தான் என்னோட மறுப்பை எப்படி சொல்றது என்று யோசிச்சிகிட்டு இருந்தேன். "




" என்ன? நீங்களும்‌ ரிஜெக்ட் பண்றதா இருந்தீங்களா?" கண்கள் விரித்து கேட்டவள் முகம் மலர, "நல்ல வேளை.. நான் முந்திட்டேன்" என்று புன்சிரிப்புடன் முடித்தாள்.



ஆதியும் பதிலுக்கு புன்னகைக்க, , "ஆதி இதுக்கு மேலும் உங்ககிட்ட இப்படி கேட்பது சரியா தெரியலை.. எனக்கு நீங்கள் ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?" என்று சிறு பிள்ளை போன்ற ஆர்வத்துடன் கேட்டவளிடம்‌ "என்ன ஹெல்ப்?" என்றான்.



ஆதியின் அழைப்பு வந்ததும் உணவறையிலிருந்து துள்ளி ஓடிய மீனலோசனி நினைவிலேயே நிற்க, கொஞ்சமாய் அங்கேயே கைப்பேசியில் நேரம் கழித்துவிட்டு வந்த மனோ, இன்னும் மீனலோசனி ஆதியுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். இருவர் முகத்திலும் இருந்த மலர்ச்சி கண்களிலும் கருத்திலும் பட மனோவின் மனம் சுருங்கியது.



அன்று மட்டுமல்ல, அடுத்த ஒரு வாரமும் சுற்றி நடப்பதில் மனோ கொஞ்சம் திணறிவிட்டாள். கிட்டத்தட்ட ப்ராஜெக்ட் முடிவு பெறும் நிலையில் அதாவது அவர்களின் இருசக்கர வண்டி மார்க்கெட்டிற்கு வர இருக்கும் நிலையில் ஆதி மனோவை காலையில் அழைத்து நேற்றைய மற்றும் அன்றைய வேலைகள் பற்றி விவாதிக்க ஆரம்பித்தான். முன்பு போல்.. சில மாதங்களுக்கு முன்புதான். ஆனால் அப்போதிற்கும் இப்போதிற்கும் எத்தனை மாற்றம். அன்றும் இன்று போல் இந்த சந்திப்புகள் மனதில் பாதிக்கும். ஆனால் இவனை விரும்புகிறேன் என்று எண்ணாததால், கண்கள் பார்த்து பேசுவது எளிதாக இருந்தது. இப்போதோ, தன் பார்வையில் தன் மனம் தெரிந்து விடுமோ என்பது போல் பயந்து கண்கள் பலமுறை அவனை விட்டு விலகி விடுகின்றன. ஆதிக்கு ஒன்றும் வேறுபாடாகத் தெரியவில்லை போல், எதுவும் கேட்கவில்லை. வேறுபாடாக தன் தெரியவில்லையா.. இல்லை தெரிந்து கொள்ளும் அளவிற்கு அவன் கவனம் தன்னில் இல்லையா? இது முதல் கேள்வி என்றால் அடுத்த கேள்வி மீனலோசனி. தினமும் வந்தாள். மதியம் வந்தால், மாலை வரை அலுவலகத்தில் தான். தனியாகவோ, ஆதியோடோ.. ஆனால் இங்கேதான். ஏன்? திருமணத்திற்கு ஓகே சொல்லியாகி விட்டதா? இன்னும் இல்லை என்பது போல்தான் உலகநாதன் சார் சொன்னார்.



ஒரே நல்ல காரியமாக, சஙகரன்சார் சொன்ன வேலை நல்லபடியாக முடிந்திருந்தது. ஏதோ துப்பறியும் நிபுணர் போல் கடந்த வாரங்களில் அவள் செய்த வேலைகளை இப்போது நினைக்கும் போது அவளுக்கே வியப்புதான்.. ம்.. இதை ஆதியோடு பகிர முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும். எல்லாம் முடிந்ததும் ஆதியிடம் சொல்லிவிடலாம் என்று சங்கரன் சார் சொன்னார். சொல்லியிருப்பாரா? ஆதி வந்து பாராட்டுவானா?



வீட்டுக்கு வந்த சிவா அடிபட்ட புலி போல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். இப்பொழுதுதான் அந்த அரசாங்க அதிகாரி அழைத்துப் பேசியிருந்தார். யாருக்கும் கேட்டுவிடக்கூடாது என்று குரலைத் தாழ்த்தி பேசும் குரல். " என்ன தம்பி.. நான் பிள்ளை குட்டிகாரன்‌. என்னை மாட்டிவிடப் பார்த்தீங்களே?"



"என்னாச்சி சார்?"



"என்ன ஆச்சா? யாரோ ரெண்டு பேர் வந்தாங்க.. மிரட்டி, அந்த வீடியோ என்னை மிரட்டி ஒரு ஃபாரின் கார் கம்பெனி எடுத்திட்டாங்க. எனக்கு யாரும் லஞ்சம் கொடுக்கலை. நான் வாங்கவும் இல்லைன்னு என்னை பேச வைச்சி வீடியோ எடுத்திட்டாங்க.."



"யோவ்.. என்னையா சொல்ற.. பேசிட்டியா நீ? அவன் பேச சொன்னா நீ பேசிருவியா?"



"யோவ்வா? நல்ல‌மரியாதைதான். நல்ல வேளை.. நீங்க போட்ட பணத்துல இன்னும் ஒரு பைசா எடுக்கலை. நீங்களே எடுத்துக்கோங்க.. என்னை விட்டுருங்க" என்று சொல்லி தொடர்பைத் துண்டித்திருந்தார். அடுத்து முயற்சித்தால் கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக சொன்னது.



'இவர்கள் வீடியோ பற்றி யாருக்குத் தெரிந்தது? எப்படி தெரிந்தது? அந்தக் கார் கம்பெனிக்காரனுக்கு தெரிந்தால் என்ன நடக்கும். முதல் இரண்டு கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றாலும் கடைசி கேள்விக்கு அடுத்து வந்த கைப்பேசி அழைப்பில் உடனே பதில் கிடைத்தது.



"டேய்.. சிவா.. என்ன டபுள் கேம் விளையாடலாம்னு பாக்குறியா?"



"அய்யோ.. நான் அப்படி எல்லாம் செய்வேனா கோகுல்? எனக்கே என்ன நடக்குதுன்னு புரியலைடா."



"புரியலையா? அந்த சேகரன் ஃபாரின் கார் கம்பெனி சொல்லிதான் பேசினேன் அப்படினு பேசி ஒரு வீடியோ எங்க டீம்ல ஒருத்தருக்கு வந்திருக்கு.. உனக்குத் தெரியாதா?"



"இப்போ அவர் ஃபோன்ல சொல்லிதான் தெரியும். எனக்கும் இதுக்கும் சம்பந்தமேயில்லை"



"உன்னை நான் ஏன்டா நம்பனும்? உன்னை நம்பி உன்கிட்ட இந்த ப்ராஜெக்ட் குடுத்தேன் பாரு.. நீ மட்டும் டபுள் கிராஸ் பண்ணியிருக்கன்னு தெரிஞ்சது, அந்த கம்பெனி காரன் மாதிரி வீடியோ எல்லாம் எடுத்துகிட்டிருக்க மாட்டாங்க.. கொன்று புதைச்சிட்டு போய்கிட்டே இருப்பாங்க.." தாம் தூம் என்று குதித்தவன், தொடர்பைத் துண்டித்து விட்டான்.



எப்படி நடந்தது? யார் துரோகி? அவன் நண்பர்களா? அவர்களுக்கு இந்த இரண்டு பக்கமும் எந்த தொடர்பும் கிடையாதே.. அந்த கார்கம்பெனிக்காரனிடம் ஆள் இல்லாமல் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக ஒரு பாதுகாப்பிற்காகத்தான் இரண்டு பேரை சேர்த்துக் கொண்டான். ஏது பணம் என்றாலும் மூவருமே மற்றவரைப் காட்டிக் கொள்ளலாம் என்பதும் ஐடியா..



இரண்டு பேரும் சத்தியமாக தாங்கள் எதுவும் செய்யவில்லை என்றார்கள். அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்கே வந்தும் விட்டார்கள். அடுத்து என்ன செய்வது என்று. எதுவுமே செய்ய முடியாது. இவர்கள் எடுத்த வீடியோவைப் போட்டால், அவர்கள் அடுத்த நொடி அவர்கள் வைத்திருக்கும் வீடியோவைப் போடுவார்கள். கெட்ட பெயர் வருவதை விட, வெளிநாட்டுக்கம்பெனியோடு போராடும் நம்ம நாட்டுக் கம்பெனி என்று நல்ல பெயரே எடுக்கக் கூடும்.



அடுத்தநாள் அலுவலகம் வந்த சிவாவிற்கு வயிறு எரிந்தது. அவன் கற்பனையில் கட்டிய உலகமே உடைந்துவிட்டது. அது தெரியாமல் இங்கே எல்லோரும் எப்போதும் போல பேசிக் கொண்டும் சிரித்துக்‌கொண்டும் இருக்கிறார்கள். நான்கு பேரோடு பேசியபடி வந்த மனோ இவனைப் படிகளில் கண்டதும் , குனிந்தபடி செல்ல சட்டென்று நின்றான். ஏன் நான்கு நாட்களாக அவனோடு பேசினாள்? சிவா.. இப்படி ஒரு விஷயத்தில் ஏமாறுவாயா? இல்லையே.. அவன் ஏமாறவில்லை. சந்தேகப்பட்டான்.. வந்து வழிந்து பேசியிருந்தால் சந்தேகம் வலுத்திருக்கும். ஆனால் மற்றவர்களோடு எப்படி பேசுவாளோ அதே போல் நான்கு பேரோடு ஒருவனாக அவனிடம் பேசினாள். ஆனால் அப்படி கூட முன்பு பேசியதில்லையே.. நடிப்பா உண்மையா என்று இவன் முடிவு செய்வதற்குள் மறுபடியும் பேச்சை விட்டுவிட்டாள். எனக்கென்ன என்று விட்டது தவறோ? அப்போதே தோண்டியிருக்க வேண்டும். ஆனால் அந்த நான்கு நாட்களில் என்ன செய்திருக்க முடியும்?



தன் அக்கௌன்ட்ஸ் அறைக்குப் போனவன், அங்கே எடுபிடியான முரளியிடம் விசாரித்ததில் இரண்டு வாரங்களாக, மனோவும் உலகநாதனும் மாலையில் அடிக்கடி அவன் கணினியை நோண்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. சிவாவிற்கு ஆத்திரத்தில் கண்கள் சிவந்தன. பொட்டைச் சிறுக்கி.. எத்தனை தைரியம் இருந்தால் அவனிடம் நடித்திருப்பாள். இந்த கணினியில் ஒன்றும் இல்லைதான். ஆனால் இதில் மனோவின் பங்கு இருக்கிறது. இவனைப் பெற்ற தகப்பனின் பங்கும் இருக்கிறது.



அரை நாள் விடுப்புடன் வெளியேறியவன் முன் அடுத்த அரை மணி நேரத்தில் அவன் நண்பன் வந்தான், "நீ எங்கே போற.. எங்கே நிக்கிற.. எல்லாமே லைவ்வா யாரோ பார்த்துகிட்டு இருக்கான். போடா.. போ‌‌.. கையிலேயே எட்டப்பனை வைச்சி கிட்டுதான் நீயா.. நீயான்னு குதிச்சியா?" என்று சிவாவின் கைப்பேசியை அவன்முன் போட்டான்.



அந்த நான்கு நாட்களில் ஒரு நாளில் மனோவின் கைகள் தட்டி, இவன் காபி மேலே சிந்த, கைப்பேசியை அங்கேயே வைத்துவிட்டு ஓய்வறைக்குப் போனது அப்படியே கண்முன் வந்தது. யோசித்துப் பார்த்தால் அதுதான் அந்த நான்காவது நாளோ?.. " அவளை ஏதாவது பண்ணனும் வேணு.. நம்ம ப்ளான் எல்லாத்தையும் தவிடு பொடியாக்கிட்டு அவள் மட்டும் எப்போதும் போல இருக்கக் கூடாது.." வார்த்தைகளை நிதானமாக, அழுத்தமாக சொல்லி முடித்தான்.
 
Last edited:

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி 16




11778





மே மாத மாலை வேளையில், வியர்வையில் நனைந்த உடலை, அவ்வப்போது வரும்சிறியதாய் ஈரம் கலந்த காற்று மெல்லத் தீண்டும் போது ஒரு உணர்வு வருமே அப்படிதான் மனோவின் மனநிலையும் இருந்தது. மீனலோசனியோடு ஆதியுடனான நேரங்கள் நெஞ்சில் தகித்தன. அவன் முன்போல், அல்லது அதைவிட இயல்பாகவா? அப்படி தன்னோடு பேசும் கணங்கள் காற்றாய் மனதை வருடின.



இப்படி எத்தனை நாட்கள் குழப்பத்தில் தவிக்க வேண்டும்..இதற்கு என்ன முடிவு? மனோவிற்கு இதில் யோசிப்பதற்கு எதுவுமே இல்லை என்றுதான் தோன்றியது. ஆண்கள்தான் காதலை முதலில் சொல்ல வேண்டுமா என்ன.. ஆதி சொன்னால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் தன்னை காதலிப்பது தெரிந்தால் எப்போது காதலைச் சொல்வான் என்று எதிர்பார்த்து காத்திருக்கலாம். கடவுள் மறுப்பு கொள்கையைப் போல் காதல் மறுப்பு கொள்கை உடையவன் எப்போது தன்னைக் காதலிப்பது? எப்போது அதைச் சொல்வது? அதற்குள் மீனலோசனி ஓகே சொல்லிவிட்டால் இருப்பது இன்னும் சிக்கலாகி விடும். இவன் காதல் மறுப்பால் ஒரு நல்ல விசயம் இவன் மீனலோசனியை விரும்பத் தொடங்கிவிடுவானோ என்று பயப்படத் தேவையில்லை.



ஆனால் பயப்படத் தேவையில்லைதானா? இப்போதெல்லாம் தினமுமே மீனலோசனி வருகிறாள். மதியம் இருவரும் வெளியே போய் விடுகிறார்கள். இவள்தான் மனைவி என்று முடிவானால், கொள்கை நீர்த்துப் போய் அவளை விரும்பத் தொடங்கிவிடுவானா? விரும்பத் தொடங்கி விட்டானா?



சத்யாவிடம் உள்ள குழப்பத்தைச் சொல்லி விளக்கம் கேட்கலாம். அவளிற்கும் சித்தார்த்திற்கும் பேசுவதற்கு ஆயிரமாயிரம் கதைகள் இருந்தன. கிடைத்த சிறு இடைவெளிகளில் தன் மனதைச் சட்டெனறு சொல்ல மனோவிற்கு முடியவில்லை. எதிர்மறையாக ஏதாவது சொல்லிவிட்டால்..




ம்ம்.. தானே காதலைச் சொன்னால் என்ன செய்வான். அவனை விரும்புவதாகச்‌ சொன்ன மற்ற பெண்களிடம் சாதித்தது போல் நான் அந்த மாதிரி எண்ணத்தில் உன்னிடம் பழகவேயில்லை என்று சாதிப்பான். அதற்குப் பின் இங்கே வேலை செய்வதும் சரிவராது. காதலைச் சொல்லிவிட்டு வேலையை ராஜினாமா செய்வதாக? இல்லை.. அந்த மீனலோசனி ஓகே சொல்லி அவர்கள் திருமணம் வரை இங்கே வேலை செய்வதா? அவனை நினைத்துக் கொண்டு, பார்த்தால் போதுமென்று, திருமணமாகும்வரை இங்கே வேலை செய்யவெல்லாம் மனோவிற்கு உடன்பாடில்லை. ஆதி அவளுடையவனல்லவா?. அவன் மேல் முழு உரிமையுடன் மற்றொரு பெண்ணா?



அங்கும் இங்கும் அலைபாய்ந்து தவித்த மனதோடு, தலைக்கு தாங்கலாய் இரு கைகளையும் கொடுத்து முன்னே குனிந்து கண்களை‌ இறுக மூடிய மனோ. பெரிய மூச்சுகள் எடுத்து தன்னை‌சமன்படுத்த‌ முயன்று கொண்டிருக்க, "ஹாய் மனோ!" என்று உற்சாகமாய் குரல் கேட்டது.



அழகிய மாம்பழ மஞ்சள் காட்டன்‌ சுடிதாரில் முன்னே நின்றது மீனலோசனி. கடந்த ஒரு வாரத்தில் மனோவும் மீனலோசனியும் ஓரளவிற்கு நன்றாகவே பழகியிருந்தார்கள்.. தினமும் மாலை காபி மீனலோசனியோடுதான்.. பன்னிரண்டு மணி போல் அலுவலகம் வருபவளுக்கு, மதிய உணவு பெரும்பாலும் ஆதியோடு. அதற்குப் பிறகும் அங்கேயே இருப்பாள். ஆதி அறையினுள்ளே தனி இருக்கையிலோ, இல்லை கான்டீனிலோ அமர்ந்திருப்பாள். நேரம் போகாமல் போரடித்துக் கொண்டிருந்தவளுக்கு, தனியே இருந்த மனோ நல்ல துணை. சத்யா, சித்தார்த் உறவில் புதியதாகத் தனியாளாகிய மனோவிற்கு மீனலோசனி துணை. ஆனால் நல்ல துணை? பல நேரம் தன்னுடைய ஏதோ சில பேச்சால் ரொம்பவே குழப்பிவிடுவாள்.



தலையைக் குலுக்கிக் கொண்டு, "ஹாய் மீனலோசனி" என்று கைகளைத் தூக்கி ஆட்டினாள். இன்று மீனலோசனி வந்ததே மூன்று மணிக்குப் பிறகுதான். ஆதி ஒரு முக்கிய மீட்டிங் போயிருக்க, நேரே கேன்டீன் வந்திருந்தாள். இருவரும் காபிக்கோப்பையோடு ஒரு உணவு மேஜை முன் அமர்ந்தனர்.



மீனலோசனியின் முகத்தில் எப்போதுமே கவலைகளை என்றும் கண்டறிந்திராத ஒரு குழந்தைத்தனம் இருக்கும். அதுபோக இன்று அந்த முகம் மகிழ்ச்சியில் இன்னும் பூவாய் மலர்ந்திருந்தது. ஏன் இத்தனை மகிழ்ச்சி.. மனோவிற்கு அந்த கேள்வியைத் கேட்பதற்கு பயமாக இருக்க, தயக்கமாய் அவளைப் பார்த்த படி தன் காபியை சூடு குறைய ஊதிக் கொண்டிருந்தாள்.



ஆனால் சந்தோச மிகுதியில் அதை யாரிடம் பகிர்ந்து கொள்வது என்று துடித்துக் கொண்டிருந்த மீனலோசனிக்கு மனோ தன்னை விசாரிக்காமல் இருந்தது அத்தனை பெரிய தடையாக இல்லை போல. அவளே ஆரம்பித்தாள், "மனோ.. ஒரு குட் நியூஸ். நான் ரொம்ப சந்தோசமாயிருக்கிறேன் "



"ஏன்?" கேட்கும் போதே நடுங்கிய கைவிரல்கள் காபிக் கோப்பையை அழுத்தமாகப் பற்ற விரல் முட்டிகள் வெளிறின.



" மேங்கோஸ் கிட்ஸ் ஸ்கூலில் இன்று வேலைக்கு ஆர்டர் வாங்கிட்டேன்." கண்கள் மின்ன, ஆர்ப்பாட்டமாக மீனலோசனி சொல்ல மனோவிற்கு ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை.



"கிட்ஸ் ஸ்கூலா?" முன்னே சாய்ந்து புரியாது‌ கேட்டவளிடம், "ஆமாம் மனோ.. என்னுடைய ட்ரீம்.. ஸ்கூல்ல டீச்சரா‌ வேலை பார்க்கனும் என்பது. எங்க அப்பாக்கு நான் இந்த வேலை செய்வது பிடிக்காது. போனா டாக்டர், இன்ஜினியர்னு போகனுமாம். அதுக்கு சுமித்ரா அக்கா மாதிரி உன்னை மாதிரி நிறைய படிக்கனும். எனக்கு அதில் இஷ்டமில்லை. ஜாலியா வாண்டுங்க கூட லூட்டி அடிக்கனும்.."



இதுதான் சந்தோசமான விஷயமா? ஒரு நொடிக்குள் எப்படி பதறிவிட்டாள். ஆனால் இப்படி பதறும் அளவிற்கா, ஆதி மீனலோசனியை விரும்பிவிடுவானோ என்று அவள் உள்ளம் பதறுகிறது. சற்றே ஆழமான மூச்சுகளை எடுத்து அவள் தன்னை சமாதானப்படுத்த முயற்சிக்க, மீனலோசனி தொடர்ந்து பேசினாள், "இதற்கெல்லாம் நான் ஆதிக்கு தான் தேங்க்ஸ் சொல்லனும். ஆதி சப்போர்ட் இல்லாம என்னால நிச்சயமா இந்த வேலையை வாங்கியிருக்க முடியாது. அப்புறம் உனக்கும் தேங்க்ஸ் சொல்லனும் மனோ.. உன்னை அன்று பார்த்தபின்தான், உன்னை மாதிரி தைரியமா பேசனும்னு நினைச்சேன் தெரியுமா?"



இப்படிதான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பேசி அவளைக் குழப்பிவிடுவாள்.‌கண்முன் இருந்த காபி பார்க்கவே கசப்பாய் இருக்க, அதை மெல்ல மேஜையில் வைத்துவிட்டு, "ம்ம்" என்று காற்றாகிப் போன குரலில் சொன்னவளிடம், "மனோ.. இன்று எங்காவது வெளியே போகலாமா? என்னோட ட்ரீட்.. ஆதியும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ம்.. பரவாயில்லை. இன்னொருநாள் ஆதிக்குக் கொடுத்துக் கொள்கிறேன். நாம்‌ இன்று போலாமா?"



"அது.. இன்று வீட்டுக்கு சீக்கிரம் போகனுமே லோசனி.. அம்மா வெளியே போறாங்க.. அவங்ககிட்டே போய் சாவி வாங்கனும்... இன்னொரு நாள் போகலாமா?"



"ஓ.. அப்படியா.. ஓகே..எனக்குத இப்போ வீட்டுக்குப் போகவே மனசில்லை. என்ன பண்ணலாம்?"



சத்தமாய் யோசித்தவளை மனோ ஏக்கத்தோடு பார்க்க, "லோசனியின் கண்கள் மீண்டும் மின்னின. "ஐடியா.. மனோ.. நானும் உன்கூட ட்ரெயின்ல உன் வீட்டுக்கு வரவா? நான் இதுவரை ட்ரெயின்ல போனதே இல்லை தெரியுமா?முதல் அனுபவமாகவும் இருக்கும். நேரமும் போகும்.‌"




"நல்ல ஐடியா தான்.. ஆனால் இப்போதே ஈவ்னிங் ஆயிடுச்சி.‌இனி எங்கள் வீட்டுக்கு போய் நீ திரும்ப லேட் லேட்டாயிடும லோசனி. அந்த டைம்ல தனியா ட்ரெயின்ல வர்றது சேஃப் இல்லை. அப்புறம் உங்க அண்ணா எங்களை ஆள் வைச்சி அடிச்சிடப்போறார்.."



மீண்டும், "ம்" என்று யோசித்தவள்,"அது ஒன்னும் பிரச்சனையில்லைப்பா.. நான் இங்கே காரில் தான் வந்திருக்கேன். டிரைவரைக் காரை எடுத்திட்டு உன் வீட்டுக்கு வர சொல்லிடுறேன். கிளம்பும் போது என் காரிலேயே கிளம்பி விடுகிறேன்.. ஓகே?"



லோசனி வருவதில் பிரச்சனையில்லை. ஆனால் மனோவிற்கு அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இரண்டாம் அர்த்தம், மூன்றாம் அர்த்தம் இருப்பது போல் தெரிய ஒவ்வொரு வாக்கியத்திற்கும் பீபி எகிறுவதும் இறங்குவதுமாய் இருப்பது அவஸ்தையாக இருந்தது. "ம்.. அப்போ ஓகே.. கிளம்பலாம்"



தன் அறைக்குப் போய் மனோ, சத்யா விடம் சொல்லி விட்டு தன் கைப்பையுடன் சத்யாவின் ஆக்டிவா வில் லோசனியோடு கிளம்பினாள். கம்பெனி வளாகத்திலிருந்து வெளியே வந்த சில நிமிடங்களில் மனோ முதலில் அவர்களைக் கவனித்தாள். ஒரு பைக்கில் இருவர் இவர்களுக்கு சற்று இடைவெளி விட்டு கிட்டத்தட்ட இவர்கள் போகும் வேகத்திலேயே பின்னே வருவது கண்ணிலும் கருத்திலும் பட்டது. சும்மா என்றால் அதில் ஒன்றுமில்லைதான். ஆனால், இவர்கள் போகும் சாலையில் இந்த நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அவ்வளவாக இல்லை. இவள் வண்டியில் ஃப்ரன்ட் பிரேக் சரியாக வேலை செய்யவில்லை. அதனால் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தாள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் அதுதான் அந்த பச்சை சட்டையும், ஊதா சட்டையும், வந்து கொண்டிருப்பது சாலையில் பறப்பதற்கு என்றே தயாரிக்கப்பட்ட மாடல். அதை வைத்துக் கொண்டு இந்த சாலையில் ஏன் மெதுவாகப் போக வேண்டும். மூன்றாவது முறையாக இவள் பின் பார்க்கும் கண்ணாடியில் பார்க்க, சட்டென்று வேகமெடுத்து சரென்று முன்னே பாய்ந்தது அந்த கார்..



ரயில்நிலைய பார்க்கிங்கில் வண்டியை விட்டுவிட்டு படிக்கட்டில் மேலே ஏற, அந்த இருவர், அதுதான் வண்டியில் வந்த அந்த ஊதா சட்டையும் பச்சை சட்டையும் அவர்கள் முன்னே நடந்து கொண்டிருந்தனர்.



மனோவின் புருவங்கள் சுருங்கின. எதேச்சையாக நடப்பதைப் பார்த்து தேவையில்லாமல் பயப்படுகிறாளா? ஆனால் அவர்கள் உடல் மொழியோ அல்லது ஏதோ, ஒன்று தவறாக இருக்கிறது என்று உள்ளுணர்வு சொல்லியது. மாத பாஸ் கையில் இருந்தாலும் மீனலோசனி முதன்முதலாக வருகிறாளே என்று தனக்கும் அவளுக்குமாக சேர்த்து முதல் வகுப்பில் கைப்பேசியிலேயே டிக்கெட் எடுத்திருந்தாள். இப்பொழுது முதல் வகுப்பில் ஏறினால் அவர்களும் அந்த பெட்டியில் ஏறக்கூடும். .



டிக்கெட் க்யூவில் நின்று சாதாரண பெட்டியில் செல்ல மீனலோசனிக்கு மட்டும் டிக்கெட் வாங்கினர். "உனக்கு மனோ?"



"என்கிட்ட பாஸ் இருக்கிறது"



"ஓ.."



படியில் இறங்கும் போதே ரயில் வர, பேச்சும் சிரிப்புமாய் ஓடி பெண்களுக்கான பெட்டியில் ஏறினார்கள். ரயிலில் அன்று விற்கவந்த எல்லாவற்றையும் வாங்கிக் கொறித்தனர். லோசனியோடு பெரும்பாலும் அவளுடைய கல்லூரிக்கதை பற்றிப் பேச அவளோடான உரையாடலும் கொஞ்சம் இலகுவாய் இருந்தது. ஆனாலும், இந்த மீனலோசனியோடு எப்போது பேசினாலும் வாய் ஒன்று பேச, மனம் வேறு யோசிப்பது போல்தான் அமைந்து விடுகிறது. மீனலோசனியை அந்த இருவர் பற்றி எச்சரித்து வைக்கலாமா? யாராயிருக்கும்? யாரிடமாவது சொல்ல வேண்டுமா? ஆனால் என்ன வென்று சொல்வது? இன்று ஒருநாள்தான் பார்த்திருக்கிறாள். அதை வைத்து ஃபாலோ பண்ணுகிறார்கள் என்று சொன்னால் நம்புவார்களா? நம்பினாலும் ஒன்றுமில்லாததற்கு பயமுறுத்தியது போலாகிவிடாதா?



அப்படியே பின் தொடர்வதாய் இருந்தால் எதற்காக? கண்களை விரித்து உற்சாகமாக எதையோ சொல்லி வந்த லோசனியைப் பார்த்தவள், இப்படி ஒரு அழகு பொம்மையைப் பார்ப்பதற்குக் கூட பின்தொடரலாம். வேறு எதற்காக இருக்கக் கூடும். சிவா.. மின்னலாய் வார்த்தை மனதில் தோன்ற, "ச்ச ச்ச. தான் மாட்டிக் கொண்டதில் மனோவின் பங்கு பற்றி அவன் அறிவதற்கு வாய்ப்புகள் குறைவு. அப்படியே சந்தேகம் வந்தாலும் நேரில் வந்து சண்டை போடலாம். ஆள் வைத்து மிரட்டும் அளவிற்கா போய்விடுவான்?



தங்கள் நிறுத்தம் வர, மனோ எல்லோரையும் முன்னே போக விட்டு கிட்டத்தட்ட கடைசி ஆளாக லோசனியோடு இறங்கினாள். அங்கே ப்ளாட்ஃபாரத்தில் அந்த இருவர் இறங்கி அங்குமிங்கும் கண்கள் சுழற்றி, பின் இவர்களைக் கண்டதும் சட்டென்று வேறுபக்கம் திரும்ப மனோவின் இதயத்துடிப்பு எகிறியது. நோ.. இது சரியில்லை.‌ அடுத்து‌ என்ன செய்வது? இங்கிருந்து டூவீலரில்தான் வீட்டுக்குக் போக வேண்டும். ஓரளவு வரை முக்கியசாலைதான். ஆனால் கடைசி ஐந்து நிமிடங்கள் போக வேண்டியது சற்றே ஆளரவமற்ற சாலையில். யாராவது மறித்தாலோ, உதவி கேட்டு கத்தினாலோ கேட்பதற்கு யாரும் இல்லாத இடம்.



"லோசனி.. நாம் வீட்டிற்கு ஷேர் ஆட்டோவில் போகலாமா?" தனி ஆட்டோக்கள் என்றால்கூட கொஞ்சம் பயம்தான். ஷேர் ஆட்டோ முக்கிய சாலை வரை வரும். அதற்குப் பின் அப்பாவை வரச்சொல்லி அவரோடு போய்விடலாம்.



"ம்.. ஓகே.."



படியிறங்கி வந்து, வண்டி பார்க்கிங்கை இவர்கள் தாண்டிச் செல்ல, பச்சை சட்டையும் ஊதா சட்டையும் கொஞ்சம் தடுமாறியது போல இருந்தது. நல்ல வேளை, இன்று தப்பித்தாகிவிட்டது.. ஆனால் நாளை இதை சங்கரன் சாரிடம் சொல்ல வேண்டும். யார் என்னவென்று விசாரித்துவிடுவார்கள். தினமும் இவர்கள் வந்தால் என்ன செய்வது?



யோசித்தபடியே போய் வாசலில் இருந்த ஷேர் ஆட்டோவில் ஏற,, உள்ளே மேலிருந்த வரிசையில் ஒரு ஒல்லியான நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவரும் இரண்டு முப்பது வயது போலிருந்த இரண்டு பெண்களும் அமர்ந்திருந்தனர். இவர்கள் சோதனை நேரம், வண்டியில், மனோவும் லோசனியும் ஏறியும் இன்னும் ஒரு இடம் காலியாக இருந்தது. டிரைவர் எடுக்காமல் இன்னும் ஆள் சேர்வதற்காகக் காத்திருக்க. அவர்கள் இருவரும் படியில் இறங்கி வருவதைப் பார்த்த மனோ,"அண்ணா.. கொஞ்சம் சீக்கிரம் போகனும்.. எடுக்கிறீங்களா? காலி சீட்டுக்கும் நானே பே பண்ணிடுறேன்.."



"இதோ.. எடுக்கிறேன்மா" என்று அப்போதுதான் கியரைத்தேடுவது போல் தடவ ஆரம்பித்தார். அதற்குள் இவர்களைப் பார்த்துவிட்ட அவ்விருவரும் வேகமாக வந்து இவர்கள் ஏறிய ஆட்டோவிலேயே, முன்னே டிரைவருக்கு இரு பக்கமாக ஏறி அமர்ந்தனர்.



கைகள் நடுங்க, கைப்பையினுள் இருந்து கைப்பேசியை எடுத்து, செழியனை அழைத்தாள். மூன்றாவது அழைப்பிலேயே எடுத்த தம்பிக்கு மனதிற்குள்ளே நன்றி சொல்லி, "ஹலோ செழி"



"சொல்லுக்கா"



"என்னைக் கூப்பிட பஸ் ஸ்டாப் வந்திடறியா?"



"அக்கா.. அப்பாவைக் கூப்பிடறியா? நான் கிரிக்கெட் விளையாட வந்திருக்கேன்"



"ஓ.. பஸ் ஸ்டாப்லதான் இருக்கிறியா? சரி.. அப்போ அங்கேயே இரு. நான் இன்னும் அஞ்சி நிமிசத்தில வந்திடுவேன்"



"ஹலோ..அக்கா.. என்னாச்சி? ஏதாவது பிரச்சனையா?"



"ம்.. ஆமாம்.." என்று சொல்லியபடி நிமிர்ந்தவள் கண்களில் டிரைவர் உள்ளே மாட்டியிருக்கும் பின் பார்க்கும் கண்ணாடி வழியாக தங்கள் பின்னே இருப்பவர்களோடு கண்களாலேயே ஏதோ ஜாடை காட்ட, நிலைமையின் முழு தீவிரத்தை மனோ அப்போதுதான் உணர்ந்தாள், நிதானம் விவேகம் எல்லாம் பறந்துவிட, அநிச்சை செய்வாய், "ஹெல்ப்.. ஹெல்ப்" என்று கத்த ஆரம்பித்தாள். அதாவது அதற்கு முயற்சி செய்தாள். அவள், ஹெல்.. என்று சொல்வதற்குள் பின்னிருக்கும் பெண், இவள் வாயை ஒரு கையால் இறுக மூடி, இன்னொரு கையால் கத்தி ஒன்றை அவள் கழுத்தருகே வைத்து லேசாக அழுத்தியபடி, "சத்தம் வந்துச்சி, கொன்னுடுவேன்" என்று லேசாய்க் கத்தியில் அழுத்தம் கொடுக்க, மனோ கண்களை இறுக மூடினாள். ஒரு நொடி அதிர்ந்து பார்த்த மீனலோசனி, சுதாரித்து, ஹெல்ப் என்று கத்த ஆரம்பிப்பதற்குள், அவள் வாயில் கையும், கழுத்தில் கத்தியுப் இருந்ததன.



"ஒன்னைத்தானே பிடிச்சார சொன்னாங்க.. ரெண்டு வந்திருக்கு"



"நமக்கு என்னப்பா? ரெண்டுக்கு காசு தான்னு கேட்டிரலாம். நீ வண்டியைக் கிளப்பு"



யோசித்து செயல்பட நேரமில்லை..எங்கே போகப் போகிறார்களோ.. இப்போது இவர்கள் போவது பொது சாலை. இங்கேயே தப்பிக்க முடியாவிட்டால் தனி இடத்திற்குப் போய்விட்டால் வாய்ப்பே இல்லை.



இறுகப் பற்றியிருந்த கைப்பைக்குள் இருந்த மிளகுப் பொடியை எடுத்தவள், ஒரு கையால் தன் கழுத்தில் கத்தி வைத்திருந்தவளின் கைகளை இறுகப் பற்றி, அடுத்த கையால் திரும்பி மீனலோசனியின் கழுத்தில் கத்தி வைத்திருந்தவளின் முகத்தை நோக்கி வீசினாள். "ஆ" என்று அலறியபடி அவள் கைகள் சற்றே தளர, பின்னே நடக்கும் களேபரத்தில் வண்டியின் வேகமும் குறைந்ததைக் கவனித்து, பலம் கொண்ட மட்டும், மீனலோசனியை வண்டியை விட்டு வெளியே தள்ளினாள். "ஆ"என்று மீனலோசனி கீழே விழ, கழுத்தில் வைத்திருந்த கத்தியின் கைகளை இறுகப் பற்றியிருந்த, மனோவின் கை சற்றே தளர, சில் லென்று ஒரு வலி உயிர் வரை சென்றது‌. "நிப்பாட்டாதே.. நிப்பாட்டதே.. போய்கிட்டே இரு" என்று அந்த பெண் டிரைவருக்கு கட்டளை பிறப்பிக்க, மனோ கண்களை இறுக மூடி, பலம் கொண்ட மட்டும் தன் கழுத்தில் கத்தியைக் பதித்திருந்த கரத்தை தள்ளினாள். வெம்மையோடு மேனியில் பரவிய திரவத்தை உணர்ந்தவள், பயத்தில் கரங்கள் தவளத் தொடங்கிய போது, 'சட்சட்' டென்று சத்தம் கேட்க, ஆட்டோ நின்று, மனோவின் கழுத்தில் இருந்த கத்தி விலகி, அவளைப் பற்றியிருந்த பிடியும் தளர்ந்தது. 'பிடி.. பிடி..' 'அவனைப் பிடி..' 'அங்கே.' 'அதோ' என்று ஏதேதோ கூச்சல்கள் கேட்க, எதுவுமே கருத்தில் ஏறாமல்,ஆட்டோவிலிருந்து இறங்கி எல்லோரையும் விலக்கி அங்கிருந்து ஓட எத்தனித்தவளை இரு கரங்கள் இறுகப் பற்றி மார்போடு அணைத்தன. அடுத்து அவள்‌ கேட்டது தன்னுடைய இதயத்தை விட வேகமாகத் துடிக்கும் ஓர் இதயத்தின் துடிப்பு..



இதுநாள்வரை ஆதியை இப்படி என்ன, கை குலுக்குவதற்காக என்றுகூட தொட்டதில்லை. அவன் தொடுஉணர்வு எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆனால் முகம் பாராமலேயே, மனோவின் உடலின் ஒவ்வொரு அணுவுக்கும் தெரிந்தது இது ஆதி தான் என்று.



அவன் முகம் பார்க்கும் ஆவலில் தலைதூக்க, அவர்களுக்குள் இடைவெளிவிட, சற்றே விலக முற்பட்டவளை, அவன் கரங்கள் இன்னும் அழுத்தமாய் அழுத்தி, தன்னுள் புதைத்துக் கொண்டன.
 
Last edited:

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி 17

11894



ஆதியின்‌ அணைப்பில் மனோ கட்டுண்டிருந்தது சில நொடிகள்தான். சர்ரென்று ஒரு வண்டி அருகில் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கிய செழியன், "மனோ!" என்று கத்தியபடி ஓடிவர, ஆதியின் அணைப்பு தளர்ந்தது. விலகி தம்பியைப் பார்த்தவளுக்கு, தான் உதவி கேட்டு கத்திய சமயத்தில் அவன் அழைப்பில் இருந்தது நினைவு வர, "டேய்.. செழி.. ஒன்னும் இல்லைடா.. நான் நல்லா இருக்கேன்.. இங்கே பாரு.." என்றபடி ஆதியின் அணைப்பிலிருந்து விலகினாள்.



வந்து அவள் கரங்களைப் பற்றியவன், "என்ன ஆச்சி.. நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? ஏதேதோ பேசிட்டு, ஹெல்ப்னு கத்திட்டு ஒரே சத்தம்.. அடிச்சிபிடிச்சி ஓட்டிட்டு வந்தேன்."




"எனக்கு ஒன்னும் இல்லை செழி.. நல்லா இருக்கேன்"




கண்களில் கழுத்தில் படர்ந்திருந்த இரத்தக்கோடு‌பட, "அச்சோ.. கழுத்திலே இரத்தம் மனோ."



"அது லேசாதான் பட்டது. இப்போ ஃப்ரெசா வரவில்லை, பார் என்று தொட்டுக் காட்டினாள்"



செழியன் வந்து பேசத்துவங்கியதும் விலகிப் போன ஆதி, இப்போது வந்தான், "செழியன்.. இதோ இந்த கார்ல் அக்காவை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போ.. அப்புறம் எல்லாம் பேசலாம்"



சுற்றம்‌ பார்த்தவள், "லோசனி மேடம்?. அவங்களுக்கு கீழே விழுந்ததில் அடிபட்டிருக்கும்"



"அவளை எற்கனவே ஹாஸ்பிடல்லுக்கு கூட்டிட்டுப் போயாச்சி.. செழியன், கிளம்பு" என்று தம்பியிடம் பேசியவனை நிமிர்ந்து பார்த்தாள். கல்லாய் இறுகிய முகம். என்ன பிரச்சனை.. கோபமா? போலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஆதியின் அருகில் வர, இவளிடம் எதுவும்‌சொல்லாமல் அவரோடு பேசியபடி விலகிச் சென்றான். சுற்றிலும் நடப்பதை மனோ கவனித்தாள். ஆட்டோவில் இருந்த நால்வரையும், கூட வந்த இருவரையும் போலிஸ் பிடித்து அவர்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.



அதில் ஒருவன் திரும்பி முறைக்க, "என்னடா பார்வை.. கண்ணை நோண்டிடுவோம்" என்று சொல்லியபடி வண்டிக்குள் தள்ளினார். எந்த மாதிரி ஒரு பிரச்சனையிலிருந்து தப்பித்திருக்கிறாள், செழியனின் கைகளை இறுகப் பற்ற, " வா மனோ.. நாம் முதலில் கிளம்பலாம்.." என்று செழியன் பற்றிய கையோடு அவளை காரை நோக்கி அழைத்துச் சென்றான்.



காரில் ஏறி அமர்ந்தவளுக்கு ஆதி எப்படி இங்கே வந்தான் என்று கேட்கவேயில்லையே என்று தோன்றியது. அடுத்த முறை பார்த்ததும்‌ கேட்க வேண்டியதுதான். அடுத்த முறை பார்க்கும் போது!! இனிய கனவுகளில், கன்னங்கள் சிவக்க, முகத்தில் மென்னகை படர தலை குனிந்தவள், லேசாகத் தலையைத் திருப்ப, அவள் தம்பி கவலையே உருவாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். "தலையில் ஏதும் அடிபட்டதா மனோ?"



கண்கள் சுருக்கி, அவனை முறைத்தவள், "அப்போ படலைடா.. இப்போதான் படப்போகுது.. உன் தலையில்" என்று அவன் தலையில் ஒரு குட்டு வைக்க, "ஷ்.. ஆ.. வலிக்குது." என்று தலையில் தேய்த்துக் கொண்டவனைக் குறும்பாகப் பார்த்து, "அப்புறம்‌ செழி.. வந்ததும் பயந்துட்டேன்னு படபடத்தியே அதை ரெக்கார்டு பண்ணியிருக்கனும்..மிஸ் பண்ணிட்டேன்.. என் தம்பிக்கு என்மேல் எவ்வளவு பாசம்னு ஹிஸ்டரில பதிவாகியிருக்கும்ல. இப்போ.. " யோசிப்பது போல் சில நொடிகள் கடந்தவள், "இன்னொரு முறை அதே மாதிரி பேசிக் காட்றியா?" சீரியசான முகத்தோடு கேட்க, உதடுகளை கேலியாக வளைத்தவன், "அதெல்லாம் இருக்கட்டும்.. நான் வரும்போது பார்த்த சீனுக்கு சீக்கிரமா ஒரு நல்ல எக்ஸ்ப்ளனேசன் குடு,."



முகம் சிவக்காமல் காக்கப்‌ போராடியபடி "என்ன? என்ன சீன்?" என்று கெத்தாகக் கேட்டபடி ஜன்னல் பக்கம் திரும்பினாள்..



"அச்சச்சோ.. அதை நான் ஃபோட்டோ எடுக்காமல் போனேனே.. எடுத்திருந்தால் அதையும் ஹிஸ்டரில பதிஞ்சிருக்கலாம். சரி.. இப்போ எக்ஸ்ப்ளனெசன் கொடு.."



"அய்யோடா.. நீங்க பெரிய கலெக்டர்.. உங்க கிட்ட நான் எக்ஸ்ப்ளனேசன் குடுப்பதற்கு.."



"இதுக்கு கலெக்டருக்கு எதுக்கு மனோ எக்ஸ்ப்ளெயின் பண்ணனும். தம்பிக்குதான் சொல்லனும்"



"அதெல்லாம் முடியாது.. போடா.." சிறு கேலியும் கனவுகளுமாய் அந்த கார் பயணம் தொடர, ஆதி இங்கே எரிநிலையில் இருந்தான். தன் கைகளுக்கிடையில் உடலெல்லாம் பதறியபடி நின்ற மனோவின் நிலை அவன் வாழ்நாளிற்கும் மறக்க முடியாது.



அங்கே போலிஸ் பிடித்திருந்த ஆறு பேரையும் கொன்று போடும் அளவிற்கு ஆத்திரம். ஆனால் அதனால் என்ன பிரயோஜனம். எய்தவனை விட்டுவிட்டு அம்பை உடைத்து என்ன லாபம்.



இவன் கைகளைப் பற்றிக் குலுக்கிய சப் இன்ஸ்பெக்டர், "சரியான நேரத்தில் வந்தோம். ஆறு பேருமே வெவ்வேறு குற்றங்களுக்காக தேடப்படுகிறவர்கள்தான். இன்னும் சில வருடங்களுக்காவது வெளியே வரமுடியாத படி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்க ஸ்டேசன் வந்து கொஞ்சம் ஃபார்மாலிட்டீஸ் மட்டும் முடிச்சிடுங்க" என்று கூறி விடைபெற்றார்.



காரில் ஏறி அதை உயிர்ப்பித்தவன், கண்களில் மதியம் முதல் நடந்தது படம் போல் ஓடியது. இல்லை.. காலையிலிருந்து இன்று கொஞ்சம் மனம் சரியில்லை. காலை வரும்பொழுதே சித்தார்த்தும்,மனோவும் மனோவின் அறையில் அமர்ந்து ஏதோ மிகவும் சீரியசாகப் பேசிக்கொண்டிருந்தனர். கொஞ்சம் கடுப்பாக இருந்தாலும் வேலை செய்யும் இடத்தில் நட்பாக பேசக் கூடாதா என்ன என்று தனக்குள்ளே சமாதானப் படுத்திக் கொண்டான். அதன்பின் மனோவின் முகம் ஏதோ யோசிப்பது போலவே இருந்தது. மதியம் உணவுவேளைக்கு மூவரும் வெளியே சாப்பிடப் போனார்கள். காதின் இருபக்கமும் புகை வரத் தொடங்கிய நொடியில்தான் பெரியப்பா அழைப்பு வந்தது, உடனே அவரை அவரது சேர்மேன் அறையில் வந்து பார்க்கும்படி. போய் பார்த்தால், அங்கே அவனுக்கு முன்னே உலகநாதன் சாரும் அவர்களது ஆஸ்தான துப்பறியும் நிறுவனத்தின் தலைவரும் அமர்ந்திருந்தார்கள்.



புருவங்கள் மேலுயர அவர்களைப் பார்த்தவன், "சொல்லுங்க பெரியப்பா.. என்ன அவசரமான காரியம்?" என்றபடி அவரருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தான். முதலில் யார் பேச ஆரம்பிப்பது என்ற தயக்கம். உலகநாதனே அவ்விடத்தில் குமிழ்ந்திருந்த மௌனத்தை உடைத்தார், "எல்லாம் அந்த தறுதலை சிவாவால் வந்தது தம்பி.."



"என்ன ஆச்சி? மறுபடியும் கையாடலா?" ஆதியின் குரல் இதற்கே இறுகியது.




ஒரு நொடி தலை குனிந்த உலகநாதன், பின் தன்னையே தயார் செய்து கொண்டவராய் ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்தார். பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தவன், நடுவில் மனோவின் பங்கு வரும்பொழுது, "மனோவா?" என்றபோது குரலில் கொஞ்சம் ஸ்ருதி ஏறியிருந்தது.. "அந்த பொண்ணு செஞ்சது பெரிய ஹெல்ப் பா.. இப்போ அவன் வீடியோவை ஒன்றுமில்லாமல் ஆக்கிட்டோம். திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி அவனால் இதற்கு மேல் இதில் ஒன்றும் செய்யவும் முடியாது. அந்த ஆத்திரத்தில்..?"





"ஆத்திரத்தில்?"



"ஆத்திரத்தில் அந்த பொண்ணை மிரட்டுறதுக்கு என்று ஆள் பிடிச்சிருக்கான்."



"வாட்?"



இப்போதுதான் சங்கரன் பேச ஆரம்பித்தார், "நமக்குன்னு உதவிக்காக இதைச் செய்த பொண்ணு. அவளுக்கு இதுனால ஆபத்து வரக்கூடாதுன்னு நினைச்சேன். பெரிய விஷயம். ஒன்றுக்கு இரண்டு பேராய் வேலை செய்யலாம் என்றுதான் உனக்கும் சொல்லிவிட்டேன். "



"மனோவிற்கு ஒன்னும் ஆகாது!" அவருக்கு சொன்னானா..இல்லை.. தனக்கே சொல்லிக் கொண்டானா? எதற்கும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத பையனின் இறுகிய குரலில் இருந்த ஏதோ ஒன்றில், சங்கரன் சற்றே வியப்போடு ஆதியைப் பார்க்க, அந்த துப்பறியும் நிறுவனத் தலைவரிடம் திரும்பி, "உங்களிடம் இருக்கும் எல்லா தகவல்களையும் கொடுங்க" என்றான். "சிவாவும் அவன் நண்பர்களும் கடந்த சில நாட்களாக ஒரு குட்டி கேங்க் லீடரோடு ஆங்காங்கே பேசியிருக்கிறார்கள். அந்த கேங்க், கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், தேவைப்பட்டால் கொலை என்று ஒரு பெரிய கேங்காக மாறிக் கொண்டிருக்கும் நேரம். சிவா அவன் நண்பர்கள் அக்கௌன்டிலிருந்து சில லட்சங்கள் இரண்டு நாட்களாக, எடுக்கப்பட்டிருக்கின்றன. அப்புறம், காலையிலிருந்து அந்த கூட்டத்திலிருக்கும்‌ இரண்டு பேர் நம்ம கம்பெனி வாசலிலும், நான்கு பேர் மனோ இறங்கும் ஸ்டேசன் வாசலிலும் நிற்கிறார்கள். அதற்கடுத்த நேரங்களில் ஒரு கணம் கூட ஆதி விரயம் செய்யவில்லை. கம்பெனி செக்யூரிட்டிக்கு ஃபோன் செய்து அலர்ட்டில் வைத்தான். மனோவிற்கு போன் செய்தால் எடுக்கவில்லை. சத்யாவிற்கு ஃபோன் செய்தால் கிளம்பிவிட்டதாகச் சொன்னாள். அதற்குள்ளா? தாம்பரம் போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் நண்பனின் நண்பன் என்ற அளவில் தெரிய, அவர்களின் உதவியைக் கேட்டான். சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பி, வாசற்கதவு அருகே நின்று திரும்பி," இதுவரை என்கிட்ட ஏன் சொல்லலை?" பதில் தெரியும்தான். ஆனாலும் அவனுக்குக் கேட்கவேண்டியிருந்தது.



ஆதியின் செயல்களில் இருந்த கட்டுப்படுத்தப்பட்ட கோபமும், இறுகிய அவன் முகமும், குரலும், அவன் செய்வது தன் கீழ் பணிபுரியும் பெண்ணுக்காக என்பதற்காக மட்டுமல்ல என்பதாய்த் தோன்ற, சங்கரன் பேசினார்," நான்தான் வேண்டாம் என்று சொன்னேன், நான் செய்த தவறை நானே சரி செய்யலாம் என்று"



உலகநாதனிடம் திரும்பியவன், "மனோவிற்கு ஏதாவது ஆச்சின்னா, உங்க பையனை நீங்க உயிரோடு பார்க்க முடியாது சார்" என்று சொல்லி அங்கிருந்து வெளியேறி, அவன் போகும்போது அறைந்து சாத்திய கதவு அதிர்ந்ததில் அங்கிருந்த மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்,




மனோவின் போட்டோவை போலிசுக்கு அனுப்பி காரை எடுத்தவன், காலை ஆக்ஸிலரேட்டரிலிருந்து எடுக்கவேயில்லை. சரியாக இவன் வந்து சில நிமிடங்களில், அப்போதுதான் அங்கிருந்து கிளம்பி சில நூறு அடிகள் முன்னே சென்ற ஆட்டோவிலிருந்து ஒரு பெண் வெளியே விழுந்தாள், இருதயம் தொண்டைக் குழியில் துடிக்க, அங்கே ஓட அது மீனலோசனி. போலிஸோடு சேர்ந்து ஆட்டோவின் பின்னே ஓடினான். சில அடிகளில் ஆட்டோவும் நின்று வெளியில் தெரிந்தது மனோவின் பாதம். அடுத்த சில நொடிகளில் ஆட்டோவை அடைந்திருந்தார்கள். காவல்துறையினர் அந்த கடத்தல் ஆட்களை கவனித்துக் கொள்ள, பதறி வந்த மனோ அவன் மார்பில் தஞ்சமடைந்தாள்.. பயத்தினால்தான். யார் அணைப்பில் இருக்கிறோம் என்பதுகூட அவளுக்குத் தெரியுமா தெரியவில்லை.. சில நொடிகளிலேயே விலகவும் முயன்றாள்.‌ ஆனால் கடந்த மணி நேரங்களின் பாதிப்பிலிருந்து வெளிவர ஆதிக்குத்தான்‌ அந்த அணைப்பு இன்னும் சில நொடிகள் தேவைப்பட்டது.



மனோவை செழியனோடு‌ அனுப்பிவிட்டு காவல் நிலையம் சென்று அங்கு ஆக வேண்டிய அனைத்தையும் செய்தவன் காரில் ஏற, கார் நேரே மருத்துவமனைக்குச் சென்றது.. தன்னைப் பார்த்ததும் மனோ என்ன செய்வாள்? அப்போதுபோல் அவன் கைகளுக்குள், அவன் அணைப்பிற்குள் வருவாளா.. நினைக்கும்போதே உடலும் உள்ளமும் அடைந்த பரவசத்தில் ஆதிக்குத் தன்னை நினைத்தே வியப்பாக இருந்தது. இப்படிதான் காதல் இருக்குமா? இந்த உணர்வுகளுக்காகத்தானா ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனிதன் போராடிக் கொண்டிருக்கிறான்? ராஜ்யங்கள் வேண்டாம்; பெயர், புகழ் வேண்டாம்; உயிர் கூட வேண்டாம்.. அவள் மட்டும் போதும் என்று அனைத்தையும் துச்சமாக மதிக்க வைத்து, அவள் கைப்பற்றும் நொடியையே வாழ்வின் நோக்கமாக மாற்றுவதுதான் உயிர் நேசமா?



கிட்டத்தட்ட ஒரு கனவு நிலையில் காரைப் பார்க் செய்துவிட்டு மருத்துவமனைக்குள் சென்று‌ வரவேற்பில் மனோவின் பெயரை விசாரித்து அவசர சிகிச்சைப் பகுதியில் அவள் பகுதிக்குப் போனவனை வரவேற்றது, சித்தார்த்தின் அணைப்பிற்குள்‌ நிற்கும் மனோவின்‌ தரிசனம்தான்..
 
Status
Not open for further replies.
Top