All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் காதல் தீரா.... - கதை திரி

Status
Not open for further replies.

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் இனிமையான காலை வணக்கம் சுவீட்டிஸ்.....

இதோ உங்களின் காதல் தீரன் அத்தியாயம் - 18 வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்கமால் கூறுங்கள்.

இன்னும் ஒரு மூன்று கிழமைகளுக்கு ரெகுலர் அப்டேட் கொடுப்பது கொஞ்சம் சிரமம் அதனால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் போடுவேன் ப்ளீஸ்...


முயற்சி திருவினையாக்கும்
நந்தகி
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா🎻19
உண்மை என்னவென்றால் ஸ்ரீனிகா கௌதம் வீட்டிற்கு வந்த போது அவளுக்கு பதினைந்து வயது முடிந்து பதினாறு வயது தொடங்கியிருந்தது. அவள் பெண்ணாக மலர்ந்தது அதன் பின்னரே. கௌதம் வீட்டுக்கு வந்த போது அவள் பால்சதை மாறாத குழந்தை முகத்துடனே இருந்தாள்.

அதன் பின் எல்லா பெண்களுக்கும் போல் பருவமடைந்ததும் அவளது கன்னத்து எலும்புககள் மாற அவளின் முகமும் பெரியளவில் மாறிவிட்டிருந்தது.

அடுத்த இரண்டு வருடத்தில் சடசடவென உடலில் ஏற்பட மாற்றங்களுடன் அவள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களுடன், தொடர்சியான ஹொஸ்டல் வாசம், இரண்டும் கெட்டான் பருவத்தில் அடுத்தவர் கேலிப் பேச்சு, அதை அம்மாவிடம் சொல்லாமல் மறைத்து தனக்குள்ளேயே வைத்து மருகியது, சிறு வயதில் ஏற்பட்ட பயம் அதற்குரிய சிகிச்சையின்றி அப்படியே வளர்ந்தது இவற்றால் ஏற்பட்ட மனதின் உளைச்சலும் சேர அவளுக்கு மீண்டும் அந்த பூசினால் போல் உடல்வாகும் அந்த குண்டு கன்னம் வைக்கவும் இல்லை. கன்னங்கள் ஒட்டிப் போனதில் அவள் வட்ட முகமும் தொலைந்திருந்து. அவள் திருமணம் முடியும் வரை பூசினால் போல் உடலையும் அவள் குழி விழும் குண்டு கன்னத்தை மீண்டும் ஒருவரும் பார்க்கவும் இல்லை.

அவள் பெண்ணாக மலர்ந்து இரண்டு வருடங்கள் கழித்து பார்த்தவர்கள் அவளை அடையாளம் காண சிரமப்பட்டது உண்மையே. அவளை சில வருடம் கழித்து பார்த்த அவளது சித்தி சாரதா கூட அடையாளம் காண திணறிவிட்டிருந்தார். அந்த அளவு மெலிந்து உரு மாறி போயிருந்தாள்.

வாஷ்ரூம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போக எதிரே கண்ணாடி தென்பட அருகே சென்று தீவிரமாய் தன் முகத்தை கண்ணாடியில் ஆராய்ந்தாள். அதில் திருப்தியின்றி நாடியில் இரு விரல் வைத்து அவ் விரல்களால் இருபுறமும் முகத்தை திருப்பி திருப்பி பார்த்தாள். 'அந்தக் கன்னம் மட்டும் தான் இல்லை, ஏன் இவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை' மனதினுள் யோசித்தவள் தலையை உலுக்கி விட்டு முகத்தில் நன்றாக தண்ணி அடித்து கழுவி விட்டு திரும்பி சென்றாள்.

இன்னும் அவன் ஸ்ரீனி நினைவிலேயே இருப்பதைப் பார்த்து "க்கும்" தொண்டையை கணைத்தாள். மெல்லிய திடுக்கிடலுடன் திரும்பியவன் முன் சூடான காஃபியுடன் ஸ்ரீனிகா இருந்தாள்.

காபி கப்பின் வட்டத்தை விரலால் தடவியவாறு "எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் வேணும் சென்னை போய் வந்த பின் உங்களுக்கு எனது முடிவை சொல்லலாமா?" என கேட்டாள்.

"நிச்சயமாய்..." என்றவன் "எப்போது சென்னை போகிறாய்? சென்னையில் வைத்தே கூட உனது முடிவை சொல்லலாம்" என்றான்.

அவள் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்க்க "நான் சென்னைவாசிம்மா... தெரியும் தானே" கிண்டலாக கூறினான்.

“அப்படியானால் இங்கே” என்று ஆச்சரியமாய் கேட்டவளுக்கு பதிலாக “இங்கே ஆற்றங்கரைகளுக்கு அருகில் சில ஹோட்டல்களும் ஆறுகளில் சில போட் ஹவுஸ் கப்பல்களும் இருக்கு. அவை தொடர்பாக பார்ப்பதற்காக அடிக்கடி வந்து போவேன்" என்றான்.

"ஓ...." என்றவள் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. இந்த திடீர் அமைதியில் ஏதோ போல் உணர்ந்தவன் "எப்போது சென்னை போகிறாய்?" கேட்டான்.

"இன்றிரவு அல்லது நாளை காலை இன்னும் பஸ் புக் பண்ணல" ஏதோ சிந்தனையுடன் கூற யோசனையுடன் அவளை நோக்கியவன் "நாளை காலை ஒன்பது மணி ஃப்ளைட் வர முடியுமா?" ஏதோ சொல்ல எடுத்தவளிடம் "அங்கேயும் சில ஒப்பந்தங்களை பார்க்க வேண்டி இருக்கின்றது. அதற்கான அலவன்ஸ் ஆக வைத்து கொள்ளலாம்" இலகுவாக முடித்துக் கொண்டான்.

🎻🎻🎻🎻🎻

அந்த மருத்துவமனையின் ஐந்தாவது மாடியின் அறையில் அமர்ந்திருந்தாள் ஸ்ரீனிகா. முன்னே படுக்கையில் இருந்தவரையே வெறித்துப் பார்த்தவாறு இருந்தவள் கண்களில் இருந்து நீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது.

கட்டிலில் எலும்பும் தோலுமாய் படுத்திருந்தார் ஸ்ரீமதி. அவர் அழகையும் தன்னம்பிக்கை நிறைந்த சிரிப்பினையும் நோய் காவு கொண்டிருந்தது. நேரத்திற்கு உறங்குவார் விழிப்பார். கையை அழுத்தி பிடித்தால் வலியில் முகம் சுளிப்பார். எப்போதாவது ஸ்ரீனிகாவை அடையாளம் கண்டு புன்னகைப்பார். மொத்தமே பத்து தரம் ஸ்ரீனிகாவை அடையாளம் கண்டிருப்பார். இதோ விபத்து நடந்து ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகின்றது. நம்பிக்கையுடன் காத்திருக்கின்றாள் அம்மா பழைய அம்மாவாக எழுந்து வருவார் என்று.

அன்று தாத்தாவின் ஆசையை மறுக்க முடியவில்லை அவளால். அதிலும் அம்மா மகளின் தன்மான உணர்சியை மதித்து முற்று முழுதாக சுய சம்பாத்தியத்தில் உருவாக்கிய மில்லை கொடுத்தது உண்மையில் அவள் மனதை தொட்டிருந்தது. எனவே மில்லை தானே வைத்திருந்து அதிலிருந்து வரும் முழு வருமானத்தையும் கஷ்டப்பட்ட குழந்தைகளின் படிப்பு செலவிற்கு உதவுவோம் என்று தான் நினைத்தாள். ஆனால் யாருமில்லாதா தனியான பெண் என்ற எண்ணத்தில் தொழில் போட்டியில் அந்த மில்லை தொட்டு வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திணறி போனாள்.

அவர் கையை பிடித்து கன்னத்தில் வைத்து அழுத்தி கொண்டவள் “என்னால முடியல அம்மா போறவன் வாறவன் எல்லாம் மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று வாரான். அந்த மில்லை நான் என்ன செய்ய?” கண்ணீர் கோடாய் இறங்கி அவர் கையை நனைத்தது.

அவள் கண்ணீர் கையை நனைக்க அவரிடம் அசைவு தெரிந்தது. அவள் கையை இறுக பிடித்தவர் சிரமப்பட்டு தொண்டையை அசைத்து "ஸ்ரீம்மா, தைரியம்" மெதுவே கூறினார். கண்ணில் நீர் வழிய வேகமாக தலையட்டியவள் "அம்மா உங்கள் மருமகன் என்னை கல்யாணம் செய்ய கேட்டார்" அவர் நினைவு போகும் முன் அவசரமாக கூறினாள்.

அவர் கண்களில் ஆத்மார்த்த திருப்தி தென்பட தலையில் மிக கஷ்டபட்டு கைவைத்தார். ஆசீர்வதிப்பது போல். அதிக உணர்ச்சி வசப்பட திடீரென்று பிட்ஸ் வந்துவிட்டிருந்தது. வேகமாக எமர்ஜென்சி பெல்லை அடித்தாள். மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்து உறங்க வைத்து விட்டு அவளிடம் வந்தார். அவரும் பார்த்து கொண்டு தான் இருக்கின்றார். இந்த சிறு பெண் படும் பாட்டை.

"யூ நோ இட்ஸ் லூசிங் கேம்" என்றவருக்கு பதிலாய் தெரியும் என்று ஆமோதித்தவள் "எனக்கு வெடிங்... நினைவு வரும் போது சொல்லணும் என்று நினைத்தேன் சொல்லிட்டேன்" எந்த உணர்ச்சியும் இன்றி கூறியவளின் மனதில் கொந்தளிக்கும் உணர்வுகள் புரிய தோளில் தட்டிக் கொடுத்தார். "அந்த விபத்தில் அவர்களுடைய நரம்பு மண்டலம் மோசமாக சிதைந்து போய்விட்டது. அதுதான் அவர்களால் மீண்டு வர முடியாமல் இருக்கிறது" ஒரு கணம் இடைவெளி விட்டவர் "விரும்பினால் கருணை...." அவள் திகைத்த பார்வையில் பாதியில் நிறுத்தியவர் "அவர்கள் நரம்புகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டு வருகின்றது. அதிலும் கடந்த இரண்டு மாதங்களில் சிதைவு வீதம் அதிகமாக உள்ளது." மெதுவே கூறினார் "அதிகம் ஆறு மாதம் தான்"

புரிந்து கொண்டதாய் தலையாட்டி வைத்தாள். அதே நேரம் நிம்மதியாய் உணர்ந்தாள். நினைவு வந்த போது தன் திருமணத்தை பற்றி சொன்னது ஏதோ ஒரு விதத்தில் அவருக்கு மனதில் அமைதியை கொடுத்திருக்கும் என நினைத்தவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு "இப்போது பார்க்கலாமா?" என்றவளை ஆதுராமாய் பார்த்தவர் போ என்பது போல் கையசைத்து சென்றார்.

ஸ்ரீமதியின் அருகே சென்று அமர்ந்தவள் கையை பிடித்துக் கொண்டு 'அம்மா நான் தைரியமாக இருப்பேன். கல்யாணமும் செய்ய போறேன் இனி என்னை பற்றி கவலைப் பட வேண்டாம், நீ... நீங்... நீங்கள் எதை பற்றிய கவலையும் இன்றி அமைதியாக உறங்குங்கள்" சில கணங்கள் உதட்டை கடித்து தன்னை நிலைப்படுத்தியவள் "என் மகளாக வாங்க. இப்போது நான் பாட்டு பாடுகின்றேன் நீங்கள் உறங்குங்கள்” இப்படித்தான் அவருக்கு புரிகிறதோ இல்லையோ அவள் பேசிக் கொண்டே இருப்பாள்.

அவள் சிறுவயதில் தன்னை உறங்க வைக்க ஸ்ரீமதி பாடும் பாடலினை எப்போதுமே அவரருகே பாடிவிட்டே செல்வாள். தத்தாவுக்கும் இந்த பாடல் பிடிக்கும் என்று பாடுவார். அவளுக்குத்தான் தமிழ் பேசுவதில் சிரமம். ஸ்ரீமதி சரளமாகவே பேசுவதுடன் நன்றாக பாடவும் செய்வார். சங்கிதத்தில் அவளின் குரு அம்மாதான்.



பூங்காவியம் பேசும் ஓவியம்

ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ

வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ

பூங்காவியம் பேசும் ஓவியம்



பாட்டுத்தான் தாலாட்டுதான்

கேட்க கூடும் என நாளும்

வாடினால் போராடினால்

வண்ண தோகை நெடுங்காலம்



தாய் முகம் தரிசனம் தரும் நாளிது

சேய்மனம் உறவெனும் கடல் நீந்துது

பாசம் மீறும் போது பேசும் வார்த்தை ஏது

பாசம் மீறும் போது பேசும் வார்த்தை ஏது



ஓ ஓ ஓ ... மயக்கத்தில் மனம் சேர்ந்தது



பூங்காவியம் பேசும் ஓவியம்

ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ

வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ



யார் மகள் இப் பூ மகள்

ஏது இனி இந்த கேள்வி

கூட்டிலே தாய் வீட்டிலே

வாழும் இனி இந்த குருவி



பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம்

நாளெலாம் தளிர் விடும் இந்த பூவனம்

வானம் பூமி வாழ்த்தும்

வாடை காற்றும் போற்றும்(2)



ஓ.. ஓ.. ஓ.. ஓ.. புதுக்கதை அரங்கேறிடும்



பூங்காவியம் பேசும் ஓவியம்

பூங்காவியம் பேசும் ஓவியம்

ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ

வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ

பூங்காவியம் பேசும் ஓவியம்


மெல்லிய குரலில் இனிமையாய் பாட ஸ்ரீமதியின் முகத்தில் புருவ சுளிப்பு நீங்கி அமைதி ஏற்பட ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தார். அவர் கையை பற்றி அதில் கன்னத்தை வைத்தவாறே உறங்கி போனாள் ஸ்ரீனிகா.

🎻🎻🎻🎻🎻



கடிகாரத்தை பார்க்க மணி ஏழு ஐம்பது என்று காட்டியது. காலை எட்டு மணி அளவில் வருவதாக கூறிய ஸ்ரீனிகா இன்னும் வந்திருக்கவில்லை. விமானம் புறப்படுவதற்கு இன்னும் அரை மணி நேரமே இருக்க போனை எடுத்து அவளுக்கு அழைத்தான். உடனே பதில் அளித்தவள் "உள்ளே வந்துட்டேன் செக் இன் முடித்துவிட்டேன். உங்களை பார்த்துட்டன் வாரன்" கேள்வி கேட்பதற்கு முதல் தேவையான பதில்களை சொல்லியவாறு அவன் அருகில் வந்து நின்றாள்.

"வாவ்" மெலிதாய் வாய்க்குள் கூறியவன் "லெட்ஸ் கோ" என்றவாறு விமானத்தை நோக்கி நடந்தான். "சீட் அருகருகேவா இல்லை தூரமா?" அவன் வேகத்துக்கு ஈடு கொடுத்து நடந்தவாறே கேட்டாள். "அருகருகே தான் ஏன்?" கேள்வியாய் புருவத்தை உயர்த்தினான்.

"இல்ல விமானம் மேலெழும் போது பயம் அதுதான் கேட்டேன்" மெலிதாய் அசடு வழிந்தாள்.

"இன்னும் என்னவெல்லாம் பயம்" கேட்டவனுக்கு பதிலாய் "இடி மழை இருட்டு, அது தெனாலி கமல் மாதிரி ஒரு லிஸ்ட் இருக்கு" சிரித்தவளை பார்த்து "அத்தனையா....?" என்று புருவம் உயர்த்தினான்.

"ஹ்ம்ம் சிலது எனக்கே சிரிப்பாக இருக்கும்" பேசியவாறு இருவரும் விமானத்தில் உள்ளே ஏறி அவர்கள் இருக்கையை தேடி அமர்ந்தனர்.

"பயப்பட கூட பயப்படுவேன்"

"இன்ட்ரஸ்டிங்..."

சீட் பெல்ட் போடுமாறு அறிவிப்பு வர ஸீட் பெல்டை போட்டுவிட்டு கண்களை மூடி அவன் கையை இறுக பிடித்துக் கொண்டாள். கையைப் பிடித்துக் கொண்டு இருந்தவளை குனிந்து நோக்க உள்ளுனர்வு எதையோ ஞாபகப்படுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தது. கௌதம் அதை என்னவென்று கண்டு கொள்ள முடியாமல் தவித்தான்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் அவளை நோக்கி திரும்பி "என்னுடன் வீட்டிற்கு வருகிறாயா?" கேட்டான்.

"இல்லை, இன்று வேண்டாம். என்னோட ப்ரெண்ட் வர சொல்லியிருக்கேன். கொஞ்சம் வேலை இருக்கு, சந்திப்போம்" கை கொடுத்து விலகி சென்றவளை பார்வையால் பின் தொடர்ந்தான். அங்கே ஒருவன் அவளை கண்டதும் தூக்கி ஒரு தரம் சுற்றி இறக்கிவிட்டான். அவனைப் பார்த்ததில் ஸ்ரீனிகாவின் முகத்தில் ஆச்சரியம் வெளிப்படையாக தெரிய அவள் தோளில் கை போட்டு அழைத்துச் சென்றான். அவளும் புன்னகையுடன் அவனுடன் இணைந்து நடந்தாள்.

இங்கே இவனுக்கு அண்ட சண்டம் எல்லாம் பற்றிக் கொள்ள கை முஷ்டியாய் இறுகியது.

"நீங்க எப்படி இங்கே வசந்தை தானே வர சொன்னேன்.... சோ நீங்க சுகமா? சாரதாம்மா சுகமா? ஸ்ரீநிஷா என்ன செய்கிறாள்? படிப்பு முடிந்துவிட்டதா? திரும்பி வந்துட்டாளா? இன்றா நாளையா தாத்தா பாட்டியின் நினைவு நாள்?" கேள்வி மேல் கேள்வி கேட்டவளை பார்த்தவன் "இன்னும் ஒரு வார்த்தை மிஸ்ஸிங் அதையும் சேர்த்து கேட்டால் பதில் சொல்லுறேன்." இலகுவாக கூறியவாறே ஸ்டியரிங்கை திருப்பினான்.

உதட்டை சுழித்து தலையை வெட்டி திருப்பியவள் அடைய வேண்டிய இடத்தை அடைந்தும் வட்டமடித்தவனை பார்த்து முட்டை கண்ணால் முறைத்தவள் "இப்ப நீ உள்ளே போக போறியா இல்லையா?"

"நீ அந்த வார்த்தை சொன்ன மறு நிமிடம் உள்ளே தான்" உதட்டை இழுத்து வைத்து சிரித்தான்.

"ஓஹ் அப்படியா, சரிடா அண்ணா உள்ளே போவோம்டா"

காரை வீட்டினுள் திருப்பியவாறே சத்தமாய் சிரித்தவன் " யூ மீன் டா"

"ஆமாண்டா டால்டா"

"அஹ் ட்ரிபிள் டா" நெஞ்சில் கை வைத்தான். மெலிதாய் சிரித்தவாறே கதவை திறந்து இறங்கியவளை வரவேற்றார் சாரதா. "அம்மா எப்படி...?" என்றவருக்கு உதடு பிரியா புன்னகையை பதிலாய் கொடுத்தாள்.

அவர்களுடன் சிறிது நேரம் பேசியவள் “கிளைன்ட் கால் எடுப்பார்கள். அதோட பிளாட்டுக்கு புதிதாக வாடகைக்கு வர கேட்டிருந்தார்கள், இன்னும் இரண்டு மணி நேரத்தில் அங்கே வருவார்கள். அவர்களையும் பார்த்து பேச வேண்டும் சோ நான் போக வேண்டும்” என்று விடைபெற்று சென்னையில் ஸ்ரீமதி வாங்கியிருந்த வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

சாரதாவும் தடுக்கவில்லை. என்னதான் தன்னிடம் அன்பாக பழகினாலும் அம்மாவும் மகளும் ராஜாராமின் நிழல் விழும் இடத்தில் கூட இருக்க விரும்புவதில்லை என்று தெரிந்தே வைத்திருந்தார். இந்த இருபத்தி ஆறு வருடத்தில் அவர் திருந்தியிருப்பது சாரதாவுக்கு புரிந்தது. ஆனால் ஸ்ரீனிகாவின் இழப்பு பெரியது. சிலவேளை ஸ்ரீமதியின் வாழ்கையில் ராஜாராம் தலையிடாமல் இருந்திருந்தால், ஸ்ரீனிகா ஸ்ரீநிஷாவை விட நன்றாக, ஒரு சாம்ராஜ்ஜியத்தின் இளவரசி போல் இருந்திருப்பாள். அவர்கள் வாழ்கை இத்தனை மோசமாக திசை திரும்பி இருக்காது, மருத்துவமனையில் கழிந்திருக்காது.

சில ரணங்களை காலமும் ஆற்ற முடியாதோ என்று தான் எண்ண தோன்றியது. ஏனெனில் இன்று வரை ஸ்ரீனிகா முதல்லெழுத்தாக அம்மாவின் பெயரை தான் பயன்படுத்துகின்றாள். ஸ்ரீமதி நினைத்தது போல் அந்த பையனை மணமுடித்து வைத்து அதன் பின் இப்படி ஏதாவது நடந்திருந்தால் அவள் நிலை மாறியிருக்குமோ... அந்த பையன் யாரென்று ஸ்ரீமதி சாரதாவிடம் சொல்லவில்லை வெறுமே ஸ்ரீனிகா விரும்பும் பையன் என்று சொல்லி வைத்திருந்தார். அதை பற்றி ஏன் விசாரிக்காமல் போனேன் என்று சாரதா எண்ணாத நாளில்லை. ஸ்ரீனிகாவிடம் லேசாக விசாரித்து பார்த்தார். புன்னகை மட்டுமே பதிலாய் கிடைத்தது.

🎻🎻🎻🎻🎻

வீட்டிற்கு வந்து பிரஷ் ஆகி ஹாலில் அமர்ந்த ஸ்ரீனிகாவிற்கு அம்மாவின் நினைவு மேலெழ அதனுடன் சேர்ந்து அவர் சொன்ன அறிவுரையும் சேர்ந்தே நினைவு வந்தது. ‘துன்பம் ஒரு போதும் உன்னை அமிழ்த்த விட கூடாது. அது போன்ற நேரங்களில் மனதை வேறு காரியங்களில் செலுத்து’.

"அம்மா சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கு தானே இப்போ உனக்கு முன்னால் இருக்கிற பிரச்சினை பார்" தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டாள். இப்போது அவள் முன் உள்ள பிரச்சனை இரண்டு, ஒன்று மில் அடுத்தது கல்யாணம். எல்லாவற்றையும் விட இந்த திருமணத்தை பற்றி யோசிக்க வேண்டும்.

அவனை மணப்பதில் இஷ்டம் தான் அந்த வகையில் பிரச்சனை இல்லை. அவனுக்குதான் நான் யாரென்று தெரியவில்லை. அவனிடம் சொல்லிவிடுவோமா.... யோசித்தவள் சிறு ஈகோவும் குறும்பும் தலை தூக்க திருமணம் முடிந்த பின்னரே சொல்லுவோம் என்று முடிவெடுத்தாள். தன் முடிவை நினைக்க அவளுக்கே சிரிப்பாக இருந்தது. அப்படியானால் அவனை கல்யாணம் பண்ணிக் கொள்ள உனக்கு இஷ்டம் என்று சொல் மூளை மனதை கேலி செய்தது. திரும்பி அருகே இருந்த கண்ணாடியில் சிவந்த முகத்தை பார்த்தவள் கைகளால் மூடி கொண்டாள்.

அந்த மில்லை விற்பதானல் நிச்சயமாக சுரேஷுக்கு தான் விற்பதாக முடிவு செய்து விட்டாள். ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே வருடத்தில் ஒரு பத்து குழந்தைகளின் படிப்பு செலவை அந்த மில்லின் சார்பில் ஏற்க வேண்டும். ஆனால் இதை அவள் கட்டாயபடுத்தி கேட்க முடியாது அவளுக்கு புரிந்தே இருந்தது.

கௌதமை திருமணம் செய்து அவன் உதவி செய்வதாக இருந்தால் நிச்சயமாக மில்லை அவளே நடத்தி அதில் வரும் முழு வருமானத்தையும் கொண்டு ஒரு டிரஸ்ட் அமைத்து அதன் மூலம் கஷ்டப்பட்ட மாணவர்களின் படிப்பு செலவுக்கு பயன்படுத்த முடியும்.

அவள் உயர்ந்த நோக்கத்திற்கு கெளதம் உதவி செய்வானா இல்லை காலம் ஸ்ரீனிகாவின் காயத்தை கௌதமை வைத்து இன்னும் ரணமாக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வருவான்.....
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா🎻20

இத்தனை இலகுவாக நொடியில் முடிவெடுத்து விடுவாள் என்று தன்னையே அவளால் நம்ப முடியவில்லை. இப்போது முடிவை அவனிடம் சொல்ல வேண்டும் எப்படி, நேற்று யோசிக்க நேரம் வேண்டுமென்றவள் இன்று போய் சம்மதம் சொல்ல தயங்கினாள்.

அவன் உதவி செய்வதாக இருந்தால் அந்த மில்லை நடத்தி அதில் வரும் முழு வருமானத்தையும் பயன்படுத்தி தாத்தா அம்மாவின் பெயரில் டிரஸ்ட் ஒன்றை நிறுவ வேண்டும்.

அவனிடம் நான்தான் அவனின் ஸ்ரீனி என்று கூறும் போது என்ன சொல்வான். அவன் முகம் எப்படி சந்தோசத்தில் மலரும் என பலவித கற்பனைகள் எழ நீண்ட காலத்தின் பின் கண்களில் கனவு மிதக்க உறக்கம் தழுவியது.

🎻🎻🎻🎻🎻

அடுத்த நாள் எழுந்தவள் உற்சாகமாய் உணர்ந்தாள். இன்றிலிருந்து ஏழாவது நாள் அவளுக்கு மிக மிக முக்கியமான தினம்... அவள் பிறந்த நாள் மட்டுமில்லை. அவனை சந்தித்த நாள், அவள் பெண்ணாக மலர்ந்த நாள். கடந்த சில வருடங்களில் உறக்கம் விட்டு எழும்பும் போது பிறந்த நாள் என்பது மறந்ததுண்டு. ஆனால் அவனை சந்தித்த நாள் என்பது ஒரு தரம் கூட மறந்ததில்லை. திருமணம் எப்போது வேண்டுமானாலும் நடக்கட்டும். நான் யார் என்பதை அன்றே சொல்லிவிடுவோம் என நினைத்தவளாய் எழுந்து வேலைகளை பார்க்க தயாரானாள்.

அந்த வீடு வாடகைக்கு கேட்டவர்களை சந்தித்து ஒப்பந்தம் எழுதி அவர்கள் இன்னும் பதின்னான்கு நாட்களின் பின்னர் வருவதாக கூற, மாடியை எப்போதும் வாடகைக்கு விடுவதில்லை. தான் இங்கு வந்தால் தங்க இடம் வேண்டும் என்று கூற அதையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

அடுத்ததாக மூன்று நான்கு மருத்துவமனைகளுக்கு சென்று தன் அம்மா சம்பந்தப்பட்ட கோப்புகளை கொடுத்து அங்கே வைத்து பராமரிக்க முடியுமா? அதற்கான செலவு விபரங்களை பற்றி கேட்டறிந்தாள். அதன் பின் தாத்தாவின் சட்டத்தரணியிடம் சென்றாள். அவரிடம் அந்த உயில் தொடர்பாக மேலதிக விபரங்களை கேட்டு கொண்டவள் ஏனோ தன் திருமண விடயத்தை சாரதாம்மாவிடம் தெரிவிக்கமால் இருக்க மனம் வரவில்லை. டாக்ஸியை எடுத்துக் கொண்டு அங்கு சென்றாள்.

அன்பாகவே வரவேற்றவர் இன்று எப்படியாவது அந்த பையன் தெடர்பான விபரம் வாங்கி விட வேண்டும் என்று நினைத்து கொண்டவராய் மெல்ல பேச்சு கொடுக்க நினைக்க அவர் கைபேசி தொல்லை பேசியாக சத்தமிட்டது. ஏர்போர்ட்டில் இருந்து வரும் போது ஓர் விபத்தில் சிக்கிய ஸ்ரீநிஷா மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளதாக கிடைத்த தகவலில் ஸ்ரீராமுக்கு போன் மூலம் தகவல் சொல்லி இருவருமே மருத்துவமனை விரைந்தார்கள்.

ஸ்ரீநிஷாவுக்கு பெரிதாக காயம் இல்லை என்றாலும் இரண்டு நாள் கண்காணிப்பில் வைத்து பரிசோதனைகளை மேற் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.

அன்றும் அடுத்த நாள் முழுவதும் அவர்களுடனே இருக்க கௌதமை சந்திப்பதாக கூறியது நினைவில் இருந்தாலும் ஒரு வாரத்தினுள் முடிவு சொல்வதாக கூறி இருக்கவே அவனுக்கு அறிவிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. அன்று இரவே பரிசோதனை மூலம் மூளையில் ரத்தம் கட்டியாக இருப்பதாக கூற உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும் கட்டி இருக்கும் இடம் ஆபத்தானதாக இருந்தாலும் ஊசி மூலம் சிகிச்சை செய்யக் கூடிய இடத்திலேயே இருப்பதால் உடனடியாக செய்தால் ஆபத்தில்லை எனக் கூற லண்டனில் அவளுடன் மருத்துவம் படித்தவர்கள் உடனே அங்கே வரும்படி அழைத்தார்கள்.

இரண்டு வாரத்தின் பின்னர் பயணம் செய்யலாம் என மருத்துவர்கள் கூறி விட முதலில் ஸ்ரீராமும் ராஜாராமும் சென்று அவர்கள் வருவதற்கான ஏற்பாடுகளை கவனிக்க பின்னர் சாரதாவும் ஸ்ரீநிஷாவும் செல்வதாகவும் தீர்மானித்தார்கள். ஸ்ரீனிகா அன்றிரவு சாரதாவுடனேயே தங்கினாள். நடுச்சாமம் பன்னிரண்டு மணிக்கு போன் அடிக்க எடுத்து பார்த்தால் சுரேஷ் 'என்ன இந்த நேரத்தில்' என்று நினைத்தவள் காதுக்கு கொடுக்க அவசரமாக கேட்டான் "இப்போது நீ எங்கே இருக்கின்றாய்?"

என்னவென்று புரியாத போதும் "மருத்துவமனையில்" என்று அதன் பெயரை கூறினாள்.

"உன்னுடன் யார் இருக்கின்றார்கள்?" அவன் குரலில் இருந்த கவலை புரிய "அண்ணா.. சிறு வயத்திலிருந்தே எனக்கு துணை நான்தான் என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள்" கேட்டாள்.

"அந்த ஆலன் உன்னை தூக்கி செல்ல பிளான் என்று தகவல் வந்தது" தயக்கத்துடன் கூறினான். என்னால் தானே சிறு பெண்ணுக்கு அனைத்து பிரச்சனையும் என்ற குற்றவுணர்சியுடன் ஒலித்தது அவன் குரல்.

"தூக்கி சென்று....." ஆச்சரியத்துடன் கேட்டாள்.

"அவனே கல்யாணம் செய்து கொள்ள போகிறானாம். வேறு யாரும் செய்து சொத்தை தர மாட்டேன் என்று மறுத்தால் என்ன செய்வது என்ற பயம் என்று கேள்விப்பட்டேன்" என்றான்.

நெற்றியிலே அறைந்து கொண்டாள் ஸ்ரீனிகா. அவள் தவறு தான் அன்று ஆலனுடன் பேசும் போது விட்ட வார்தை. "இப்போது உன் பாதுக்காப்பு முக்கியம். என் மனைவியின் வீடு சென்னையில் தான் இருக்கு. பாதுகாப்பானது. அவள் அம்மா அப்பா எல்லோரும் இருப்பார்கள் வேண்டுமானால் நீ அங்கே தங்கி கொள்ள ஏற்பாடு செய்யட்டுமா?" உண்மையான அக்கறையுடன் கேட்க யார் என்ன என்று தெரியாமல் போக தயக்கமாய் இருந்தது. அவளுக்குத் தான் கௌதமிற்கும் சுரேஷிற்கும் இடையேயான உறவே தெரியாதே.

"தற்போது பாதுகாப்பில் எந்த பிரச்சனையும் இல்லை நான் உங்களுக்கு காலையில் அழைக்கின்றேன்" ஆயாசமாய் இருக்க களைத்து போய் கூறியவள் அப்படியே கண்மூடி சுவரில் தலை சாய்த்து அமர்ந்துவிட்டாள். இன்னும் எத்தனை பேரிடமிருந்து தான் ஓடுவது. இப்போதெல்லாம் பணம் சொத்து என்றாலே காத தூரம் ஓட வேண்டும் போல் இருந்தது. ஒருவருக்கு கூட அவள் மனது ஒரு பொருட்டில்லையா?

கண்ணின் ஓரம் ஒரு துளி வழிய மனம் அவளுக்கு ஆறுதலாய் ஒரே ஒரு பெயரை கூறியது 'கௌதம்'.

🎻🎻🎻🎻🎻

அடுத்த நாள் காலை சாராதாவிடம் குளித்து பிரெஷ் ஆகி சில வேலைகளை முடித்து வருவதாக கூறியவள் வீட்டிற்கு சென்று பிரெஷ் ஆகி கௌதமுக்கு போன் எடுத்தாள்.

டிராக் பான்ட் மட்டும் அணிந்து வெற்று மார்புடன் விரிந்த தோளும் பெண்களை போல் குறுகிய இடையும் ஒட்டிய வயிறுமாய் வியர்வையில் உடல் பளபளக்க ஜிம் டிரேட் மில்லில் ஓடியவன் மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருக்க கண் போனையே அடிக்கடி பார்த்து கொண்டிருந்தது.

அவனுக்குமே ஆலன் தொடர்பாக தகவல் கிடைத்திருக்க சுரேஷையும் அறிய செய்திருந்தான். கடந்த இரண்டு நாட்களாக அவன் மனம் ஒரு நிலையில் இல்லை. அவளை தொடர்பு கொள்ள போன் நம்பரை தவிர அவனிடம் வேறு தொடர்பும் இல்லை அன்று ஏர்போர்ட்டில் அழைத்து சென்றவன் முகத்தை கூட சரியாக பார்க்கவில்லை. எங்கே போய் தேடுவது என்று யோசித்தவன் அவள் மொபைலுக்கு அழைக்க பதிலில்லை.

ஓர் ஆறுதலாய் ஆலன் இன்னும் அவளை கடத்தவில்லை என்பது நிச்சயம் அப்படி ஏதாவது நடந்தால் உடனே அவனுக்கு தகவல் வரும்படி ஏற்பாடு செய்திருந்தான். இன்றும் அவளை தொடர்பு கொள்ள முடியாவிட்டால் டிடெக்ட்டிவை அழைத்து அவளை கண்டு பிடிக்க சொல்வோம் என்று நினைத்து கொண்டிருக்க அவன் போன் சத்தமிட ஒரு ரிங் போவதற்கு முன்னயே பதிலளித்தவன் பொரிய தொடங்கினான்.

"போன் என்ற ஒன்றை ஏன் வைத்திருக்கிறாய்? போனில் அழைத்தால் ஆன்செர் பண்ணனும் தெரியமா மிஸ் ஸ்ரீனிகா? எங்கே போயிருந்தாய்? கொஞ்சமாவது அறிவு இருக்கா?" ஓடிக் கொண்டே திட்டியதில் மூச்சு வாங்க அருகே இருந்த ஜிம்பாலில் கால் முட்டியில் கையூன்றி அமர்ந்தான்.

அவன் கோபத்தில் இத்தனை நேரம் மனதை அரித்து ஏதோ ஓர் உணர்வு அகன்று இதம் பரவுவதை உணர்ந்தவள் "ஹோச்பிடலில் இருந்தேன் அதான் போன் சைலண்ட்ல..." லேசாய் சிணுங்கினாள்.

சட்டென எழுந்து "ஏன் என்னாச்சு?" அவசரரமாய் விசாரித்தவாறே அருகே இருந்த டீ ஷிர்ட்டை எடுத்து அணிந்து கொண்டே கேட்டான் "இப்போது எங்கே நிற்கின்றாய்?"

"ஒரு விபத்து"

"எங்கே எப்போது" கார் கீயை எடுத்தவன் கீழே இறங்கினான்.

"எனக்கில்லை...."

"எங்கே" அழுத்தமாய் ஒலித்தது அவன் குரல்.

"மவுண்ட் ரோடு போற...."

"நீ எங்கே" பொறுமையற்ற மூச்சுடன் இடையிட்டான்.

கஃபேயின் பெயர் சொல்ல அது அவன் வீட்டிலிருந்து அடுத்த தெருவில் இருந்தது. வேகமாக வந்தவன் கண்ணில், எதிரே மோட்டார் பைக்கே சாவியை விரலில் சுழட்டியவாறே வந்த அஜா பட சாவியை பறித்தவன் "என்னோடு வா" என்று பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

அவனுக்கு ஒரு ஹெல்மட்டை மாட்டிய அஜா பின்னால் ஏறி தானும் ஒன்றை போட்டவாறே கேட்டான் "எங்கே போறோம் பாஸ்"

"கஃபே"

"ஏன் வீட்டில் யாரும் இல்லையா?"

அக்சிலேட்டரை முறுக்கியவாறே கேட்டான் "இருக்கிறாங்க ஏன் கேட்கிறாய்?"

"இல்ல ஒரு காபி கூடவா தரல"

"பேசாம மூடிட்டு வாடா"

கஃபேயின் முன் நிறுத்தியவன் "பார்க் பண்ணு" வேகமாக உள்ளே ஓடியவனை வியப்புடன் பார்த்த அஜா பார்க் செய்துவிட்டு உள்ளே சென்றான். காலையில் ஜிம் முடித்து குளிக்காமல் கீழேயே வராத கெளதம் இன்று வியர்வை வழிய கஃபேயினுல் செல்ல இது சரியில்லையே என்று அவன் பின்னாலேயே சென்றான் அஜா.

கஃபே உள்ளே சென்ற கௌதம் கண்களால் அலச கார்னரில் தலையை கையால் தாங்கியபடி அமர்ந்திருந்தாள் ஸ்ரீனிகா. வேகமாக அருகே செல்ல ஏதோ உணர்வு உந்த திரும்பியவள் அவனை கண்டு எழுந்து நிற்க அவன் கண்களோ அவளை மேலிருந்து கீழாக அலசியது. அவள் தோளை பிடித்து இரு பக்கமும் திருப்பி பார்த்தான். எங்காவது அடிபட்டு காயம் ஏதாவது உள்ளதா என்பது போல். அவளுக்கு எதுமில்லை என்ற பின்னரே அருகே இருந்த நாற்காலியில் சரிந்தவன் அவளை முறைத்தான்.

"இந்த போனை தூக்கி கடல்ல போடு" எரிச்சலுடன் கூறினான்.

"அதான் சொன்னனே..." வாய்க்குள் முனகினாள்.

"இப்ப மட்டும் அம்மணி எதுக்கு எடுத்தீங்க?" அப்போதும் சிறு கோபத்துடன் கேட்க பயந்து போய் சொல்லவா வேண்டாமா என்று விழித்தாள் ஸ்ரீனிகா.

"என்ன?" அதட்டினான்.

"இல்ல அந்த ஆலன் என்.... என்னை.." என்று தடுமாறினாள்.

"இந்த கௌதம் கிருஷ்ணாவின் மணப் பெண்ணை தொட தைரியம் இருக்கா அவனுக்கு" சர்வ அலட்சியமாய் கேட்டான் கௌதம்.

அவன் கேட்ட விதத்தில் மயங்கியவள் அப்போதுதான் அவனை சரியாக பார்த்தாள். வியர்வையில் கேசம் நெற்றியில் ஒட்டியிருக்க அப்போதும் சில துளிகள் காதருகே வழிய மெல்லிய தாடியுடன் வெள்ளை டீ ஷர்ட் நனைந்து உடலுடன் ஒட்டி கட்டுக் கோப்பான உடலை வெளிப்படுத்த, அவன் நீண்ட தாமரை விழிகளில் தென்பட்ட அலட்சியம், தைரியம், மெல்லிய ஆணவம் என அனைத்தையும் ரசித்தவள் விழுங்குவது போல் பார்த்து விட்டு சட்டென பார்வையை தாழ்த்தினாள். இன்றில்லை அவனை பார்த்த அதே தினம் அதே இடத்தில் வைத்தே சொல்ல வேண்டும்.

அவள் பார்வையை தழைக்க "ஓ... நீ இன்னும் உன் முடிவை சொல்லல இல்லையா?" யோசனையுடன் கேட்டான். ‘இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டுமோ....?’ யோசனை ஓட அவளே அதைத் தடுத்தாள்.

கன்னத்தில் மெல்லிய செம்மையுடன் "எனக்கு சம்மதம்" என்றாள்.

சட்டென நேராய் அமர்ந்தவன் "என்ன சொன்னாய்?" ஆச்சரியத்துடன் சிறு கூவலாய் கேட்டான்.

அவள் மெல்லிய நாணத்துடன் புன்னகைக்க மேஜையில் கையூன்றி சற்று குனிந்து அவள் முகம் பார்க்க முயன்றான். அவன் செயலில் இன்னும் முகம் சிவக்க தரையில் கட்டை விரலை அழுத்தி சமாளித்தாள். நாண புன்னகையுடன் சிவந்திருந்த அவள் முகம் பார்த்தவனுக்கு தானாய் புன்னகை மலர இன்னெதென்று புரியாத ஓர் உணர்வுடன் அவளையே பார்த்திருந்தான்.

"டொம்..."

ஏதோ கனமான பொருள் கீழே விழுந்ததில் நடப்புக்கு திரும்பிய இருவரும் சுற்றும் முற்றும் பார்க்க பூஜை வேளை மனித குரங்காக அஜா சிலை போல் நின்றான்.

உள்ளே வந்த அஜா கையிலிருந்த ஹெல்மட் நழுவி கீழே விழுந்தது கூட தெரியாமல் கௌதமையே ஆவென்று திறந்த வாய் மூடாமல் பார்த்து கொண்டிருந்தவனுக்கு தான் காண்பது கனவா இல்லையா என்ற குழப்பம் வர அருகே சென்ற வெயிட்டரை தடுத்து நிறுத்தினான்.

அழகான தருணத்தை கலைத்துவிட்டானே என்று முறைக்க, அவனோ அருகே நின்ற வெயிட்டரை பார்த்து "என்னை அடி" என்றான்.

‘லூசடா நீ’ என்பது போல் பார்க்க "கிள்ள முடியாது கிள்ளுவதற்கு தசை இல்லை அடி" என்றான்.

"அஜா..." கடித்த பற்களிடையே உறும, கீழே கிடந்த ஹெல்மட்டை தூக்கி கொண்டு அருகே வந்தவனை அருகே இருந்த இன்னொரு மேஜையில் அமரும்படி சைகை செய்தவன் "சோ, நம் திருமணத்தை எங்கே வைத்து கொள்ளலாம்?" சாதாரணமாக கேட்க அஜாதான் ஆடிப் போய்விட்டிருந்தான். இதயத்தை நீவி கொண்டு "பாஸ் சின்ன இதயம்... தாங்காது" மெதுவே முனகினான்.

ஸ்ரீனிகாவோ இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. மகிழ்ச்சியில் அவளுக்கு தலைகால் கூட புரியவில்லை. கண்கள் கூட லேசாய் பனித்திருந்தது. எத்தனை வருட தவம்... ஏக்கமாகவும் இருந்தது இந்த சந்தோசத்தை பகிர கூட அருகே யாருமில்லையே. சாரதாம்மாவிடம் கூறலாம் ஆனால் இப்போது உள்ள நிலைமையே வேறில்லையா?

ஒரு முறைப்பில் அஜாவை அடக்கிய கௌதம் மீண்டும் கேட்டான் "எப்போது"

"உடனடியாகவா...?"

"ஏன் உன் தரப்பில் இருந்து யாரிடமும் அனுமதி வேண்டுமா?" புருவத்தை உயர்த்தினான். அவன் அறிந்த வரையில் அப்படி எதுவும் இல்லையே...

உள்ளே எழுந்த வருத்தத்தை மறைத்து இல்லை என்று தலையாட்டினாள். சாரதாம்மா அம்மாயி கேசவன் அத்தரேயில்லு இருக்கின்றார்கள் தான். சாரதாம்மா தற்போது வர கூடிய நிலையில் இல்லை. அம்மாயி, கேசவன் இருவரும் துபாய் சென்றிருந்தனர். இவளையும் வர சொல்லி கேட்டார்கள் தான் இவள்தான் மறுத்துவிட்டாள். நல்லவேளை இல்லாவிட்டால் இவனை சந்தித்திருக்க முடியாது.

"பின்..."

"உங்கள் அம்மா அப்பா..." அவளுக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கின்றது இது வெறும் ஒப்பந்த கல்யாணம் ஆனாலும் திருமணம் செய்துவிட்டு அவரவர் பாட்டில் செல்ல முடியாது இல்லையா? அதோடு அவளை பொறுத்தமட்டில் வாணாள் முழுமைக்கானது.

"இந்த திருமணத்திற்கு அவர்கள் அனுமதி தேவையில்லை" அலட்சியமாக கூற அஜாவுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.

"திருமணத்தை கேரளாவில் வைத்து கொள்வோமா?" என்று கேட்க "இன்டரெஸ்டிங் அண்ட் நைஸ் ஐடியா எனக்கும் வசதி. இங்கே என்றால் எப்படியும் பரவிவிடும்" என்றவனை பார்த்து சந்தோஷமாகவே சிரித்தாள். அவள்தான் அவனிடம் சொல்லிவிடுவாளே பின் அதற்காக அவன் தானே வருத்தப்பட வேண்டும். என்னை தெரியல இல்லையா? கொஞ்சம் படட்டும் சிறு செல்ல கோபத்துடன் உதட்டை சுழித்தவாறே நினைக்க அதுவரை அவள் முகம் பார்த்து கொண்டிருந்த கௌதம் பார்வை சில கணங்கள் அவள் இதழ்களில் நிலைக்க சட்டென பார்வையை வேறு புறம் திருப்பினான்.

"திருமணம் முடிந்ததும் நான் இங்கே வரவா? இல்லை கேரளவிலேயே தங்கி விடவா? தலை சாய்த்து கேட்டாள். அவன் மனதின் மூலையில் எங்கோ சிறு ஆசையிருந்தாலும் தன்னுடன் அழைத்து செல்வான் என மனம் கூற அதை நம்பி கேட்டாள்.

மெலிதாய் முறைத்தவன் "கடைசியில் என் தலையிலேயே கை வைக்கிறாயே... நீ வராவிட்டால் என் திருமணத்தை நிறுத்துவது எப்படி?" கேட்க அஜாவே என்னடா எலி இந்த பக்கம் போகுதே என்று பார்த்தேன். அது காரணமா தான் போகுது என்று மனதில் நினைத்தவாறு கௌதமை பார்த்தான்.

"தாலி கூரை..." தயங்கியவாறே கேட்டவளை பார்த்து யோசித்தவன் "இன்று நீ ப்ரீயா.." என்று கேட்டான். "இன்று திரும்ப மருத்துவமனை போக வேண்டும்." என்றாள். இன்று நாள் அத்தனை நல்லமில்லை நாளையானால் நல்ல நாள் எப்படியும் இந்த திருமணம் நல்ல விதத்தில் தான் முடியும். பெரிதாய் நடக்கின்றதோ இல்லை சாதாரணாமாய் நடக்கின்றதோ நாள் பார்த்தே நடக்க வேண்டும் என்று விரும்பினாள். அதோடு அவனிடம் சொன்னால் இப்போது இருக்கும் அவன் மனநிலைக்கு அபசகுனமாய் ஏதாவது சொல்லிவிடுவான். அதுதான் மருத்துவமனை என்றுவிட்டாள்.

சில கணங்கள் மௌனத்தில் கழிய தயங்கியவாறே ஆவல் நிறைந்த கண்களுடன் "வரும் புதன் கிழமை நீங்கள் பிரீயா?" அன்று தான் அவனை சந்தித்த நாள் அன்றே அவனிடம் சொல்ல வேண்டும் போல் ஒரு எண்ணம்.

விதிதேவனோ அவளை பார்த்து சிரித்தான்.


வருவான்..........
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா 21
ஓர் கணம் தயங்கியவள் கேட்டாள் "வரும் புதன் கிழமை நீங்கள் பிரீயா?" அன்று தான் அவனை சந்தித்த நாள் அன்றே அவனிடம் சொல்லிவிடுவோம் என்று நினைத்து கொண்டாள்.

"சரி அன்றே வைத்து கொள்வோம்"

"எதை"

"திருமணத்தை தான் வேறு எதை"

சற்று யோசித்தவள் சிரிப்புடனேயே தலையாட்டினாள்.

"சோ நாளை மோர்னிங் ஷாப்பிங் போகலாம் தானே" அவன் கேட்க தலையை ஆட்டியவளை பார்த்து "அப்படியே ஈவ்னிங் கொஞ்சம் லீகல் வேலை இருக்கு அதையும் முடித்து தர முடியும் தானே" என்று அவள் முகம் பார்த்தான்.

அதற்கும் தலையாட்ட சிரித்தவாறே எழுந்தவன் அருகில் சென்று "எல்லாத்துக்கும் சூரன் மாதிரி தலையாட்டு கழன்று விழுந்திற போகுது" என்றவனை பார்த்து கண்கள் மின்ன பார்த்திருந்தாள். அன்று சொன்ன அதே வார்த்தைகள் ஒரு அட்சரம் கூட மறக்கவில்லையே....

என்ன கண் அசைவில் கேட்டவனிடம் "செய்திருவோம்" என்ற ஸ்ரீனிகா முகம் விகாசிக்க தலை சாய்த்து சிரிக்க ஒரு கணம் பதினாறு வயதி ஸ்ரீனி அவன் கண்களில் வந்து சென்றாள். தலையை உலுக்கி நினைவை அகற்றியவன் தன்னையறியாமலே அவள் தலையில் கை வைத்து செல்லமாய் ஆட்டிவிட்டு "போன் பண்ண அன்செர் பண்ணு மனுஷன தவிக்க விடாதே! சரியா?" சற்று நெருங்கினால் அங்கங்கள் தொட்டு விடும் தூரத்தில் நிற்க குனிந்து அவள் முகம் பார்த்தவன் உலகம் மறந்து நிற்க அவனில், அவன் வாசத்தில் தன்னை தொலைத்து நின்றாள் பாவை. கையிலிருந்த போன் அதிர நடப்புக்கு வந்தவன் விடை பெற்றான் "நாளை சந்திப்போம்".

மருத்துவமனை சென்றவள் ஸ்ரீநிஷாவை பார்க்க மருந்தின் வீரியத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். ராஜாராம் உள்ளே வர வெளியேறியவளையே வருத்தத்துடன் பார்த்து கொண்டிருந்தார். அவளின் அனைத்து துன்பத்திற்கும் தான் காரணமாக இருக்கும் போது மன்னிப்பு என்ற ஒன்றை கேட்க கூட முடியவில்லை அவரால். சிறிய மகளின் தலையை வருடி அவள் முகம் பார்த்தவருக்கு ஒன்று புரிந்தது கடவுள் ரெம்பவுமே நியாயவாதி.

வெளியே போட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்த ஸ்ரீனிகா மனதினுள் சாரதாம்மாவிடம் சொல்வதா? வேண்டாமா? என்று பட்டிமன்றம் நடத்தினாலும் அவரிடம் சொல்லாமல் செய்ய முடியவில்லை. தன் கணவர் தன்னை இவள் அம்மாவிற்காக ஏமாற்றினார் என்று தெரிந்தும் எதுவித எதிர்பார்ப்பும் இன்றி இன்றுவரை தன்னிடம் அன்பு செலுத்தும் ஓர் ஜீவன். ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டவள் எதிரில் வீட்டிற்கு சென்று பிரெஷ் ஆகி வந்து கொண்டிருந்தார்.

உள்ளே சென்று மகளை பார்த்து வெளியே வந்தவரிடம் செல்ல அந்நிலையிலும் "என்னம்மா என்னிடம் ஏதாவது சொல்ல வேண்டுமா?" என்றவரைக் காண கண் பனித்தது. ஓர் தாய் எப்போதும் எல்லோருக்கும் தாய்தானோ....

தலையாட்டியவளை அழைத்து கொண்டு வெளியே சிறு தோட்டத்தில் போட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தார். "சொல்லம்மா" என்றவரிடம் அனைத்தையும் கூறிவிட்டாள். மில் தொடர்பான பிரச்சனை, அதனால் ஆலனின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றம், கடைசியாய் கௌதமை சந்தித்ததை கன்னங்களில் செம்மையுடன் கூற "அந்த பையனாடா" ஆர்வமாய் கேட்டவரை குழப்பத்துடன் பார்த்தாள் ஸ்ரீனிகா.

"எந்த பையன்"

"நீ அம்மாவிடம் சொல்லி இருந்தாயே"

"அம்மா அது பற்றி உங்களிடம் பேசினாரா?" ஆச்சரியத்துடன் கேட்டாள்.

"தாத்தாவின் அந்தரட்டிக்கு வந்திருந்த போது, அந்த பையனின் அம்மா அப்பாவிடம் பேச போவதாக கூறினார். அப்படியே இங்கே, தமிழ்நாடு வந்து விடுவதாகவும் ஆனால்..." சற்று நேரம் அமைதியாய் இருந்தவர் "முழு விபரங்களை வந்து கூறுவதாக சொல்லி சென்றாள். விபத்தின் பின் அந்த பையன் யார் என்று தெரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டேன் என்னால் முடியவில்லை. உன்னிடம் கேட்டு உன் மனதையும் சிதற விட்டு விட கூடாது என்றுதான் யோசித்தேன். மறைமுகமாக கேட்டு கூட பார்த்தேன், சரியான அமுக்குனி.." செல்லமாய் தலையில் தட்டியவர் தொடர்ந்தார் "ஆனால் உன் அம்மாவின் ஆசீர்வாதம் நீ நினைத்தபடியே நடக்கின்றது" சந்தோசமாய் கூறி அவள் நெற்றியில் முத்தமிட அதை ஒரு ஜோடி கண்கள் வெறுப்புடன் நோக்கியது.

ஸ்ரீனிகாவிற்கு நல்லவேளை சாரதாம்மாவிடம் பேசினோம் என்று இருந்தது. அம்மாவின் ஆசையும் இதேதான் என்று தெரிய மனது நிறைந்த சந்தோசத்தில் கண்ணீல் மெல்லிய நீர் படலத்துடன் புன்னகைத்தாள்.

"திருமணத்தை கொஞ்சம் தள்ளி வைக்க கூடாதா? நானும் வந்து அனைத்தும் செய்வேனே" ஆதங்கத்துடன் கேட்டார். அனைத்தையும் சொன்னவள் கௌதமுக்கு தன்னை பற்றி தெரியாது என்பதையே அல்லது இருவருக்கும் இடையே ஒப்பந்தம் இருப்பதையோ கூறவில்லை. ஏனோ அவனை யாரும் தவறாக நினைப்பதும் பிடிக்கவுமில்லை. எப்படியும் தான் யார் என்று தெரியும் போது அனைத்தும் சரியாகி விடும் அப்போது அவனை யாரும் தவறாக பேசிவிட கூடாது.

"பரவாயில்லை சாரதாம்மா அவருக்கு வெளி நாட்டு வேலைகள் அதிகம் இப்போது விட்டால் அடுத்த ஒரு வருடத்திற்கு நேரமே கிடைக்காதாம் அதான் திருமணத்தை முடித்துவிட்டு வரவேற்பை பெரிதாய் வைக்க வேண்டும் என்று பிளான்" ஒருவாறு சமாளித்தாள். இன்று தொடங்கும் இந்த சமாளிப்புகள் வாணாள் முழுதும் தொடரும் என்று தெரிந்திருந்தால் ஆரம்பத்திலேயே முற்றுப் புள்ளி வைத்திருப்பாளோ.



🎻🎻🎻🎻🎻



தன் முன்னால் கடை ஊழியர் எடுத்து போட்ட சேலைகளை பார்த்து தலை சுற்றிப் போய் நின்றாள் ஸ்ரீனிகா. இதற்கு முன் இது போல் கல்யாண சேலைகளை பார்த்ததே இல்லை இது போன்ற நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் சந்தர்ப்பங்களும் அவளுக்கு அமையவில்லை. ஹாஸ்டல் வாசத்தின் போதும் சரி பின்னாளில் அம்மாவுடனான குறுகிய பொற்காலத்தின் போதும் சரி அவள் பெரிதாக சேலை அணிந்து இல்லை. அப்படியே அணிய வேண்டி வந்ததும் சாதாரண பட்டு சேலைகளே. அவற்றையும் பெரும்பாலும் ஸ்ரீமதியே வாங்கி வைத்திருப்பார்.

ஸ்ரீராமின் திருமணத்தின் போது கூட அம்மாவை பார்க்க வேண்டும் என்று தவிர்த்துவிட்டாள். அங்கே சென்றால் வரும் ஆயிரம் கேள்வியை சமாளிப்பதை விட தவிர்த்து விடுவது சுலபம் என்று போகாதிருந்து விட்டாள். இப்போதோ எதை தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் விழித்தவள் திரும்பி போனுடன் அமர்ந்திருந்தவனை பார்த்தாள். ஷாப்பிங் அழைத்து வந்தவன் எதோ அலுவலக அழைப்பு வர “நீயே பார்த்து எடு” என்று விட்டு போனுடன் அமர்ந்துவிட்டான்.

அவளின் திணறலை இனம் கண்ட கடை ஊழியர் "லவ் மேரேஜம்மா..." என்று கேட்கவே பொதுவாக தலையாட்டி வைத்தாள். "இப்போது நிறைய வண்ணத்தில் வந்தாலும் பொதுவாக அடர் மெரூன் அல்லது சிவப்பில் எடுப்பார்கள், டிசைன் உடல் முழுவதும் கொடி பூ கனி இருக்கும்படி பார்ப்பார்கள். உங்களுக்கு எதை கட்டட்டும்" என்று கேட்கவே அனுபவஸ்தர் சொல்லும் போது கேட்டுக் கொள்வோம் என நினைத்தவளாய் "நீங்களே சொல்வது போலவே காட்டுங்கள்" என்றுவிட்டாள்.

அவர் சேலையை எடுத்து போட இடையிடையே திரும்பி பார்த்தவள் மனமோ 'உனக்கு எதுக்குடி இந்த வெட்டி பந்தா பேசாமல் இப்போதே சொல்லிவிடுவோமா இது போல் தருணங்கள் திருப்பி கிடைப்பதிலையே' புலம்பி தள்ளியது.

எப்படியோ மூச்சுப் பிடித்து அதிக விலை இல்லாமல் அழகாய் ஒரு சேலையை தேர்வு செய்து விட்டிருந்தாள்.

போன் கதை பேசி முடித்து நிமிர்ந்தவன் கண்ணில் பட்டது அவளது நீண்ட அடர்த்தியான பின்னல் போட்டு இருந்த கேசம். அந்த முடியின் அழகில் மயங்கி அருகே வந்தவன் ஒரு விரலை பின்னலின் நெளிவுகளில் ஓடவிட்டு கேட்டான் "இதற்கு நீ என்ன போடுகின்றாய்?"

திடீரென காதருகே கேட்ட குரலில் துள்ளித் திரும்பியவள் கௌதமை பார்த்து ஆறுதலாய் நெஞ்சில் கை வைத்தாள். "நீங்களா நான் பயந்தே போனேன், என்ன கேட்டீர்கள்?" திருப்பி கேட்டாள்.

"இல்ல இந்த முடிக்கு நீ என்ன போடுகின்றாய் இப்படி நீளமாக அடர்த்தியாக பார்த்ததே இல்லை" என்றவன் விரலும் விழிகளும் பின்னலை விட்டு வர மறுத்து சண்டித்தனம் செய்தது. பின்னலில் இருந்த அவன் விரலைப் பார்த்தவள் கூச்சத்துடன் "அது...." என்று திணறவே மெல்லிய சிரிப்புடன் கையை எடுத்தவன் "நீ சேலை எடுத்துவிட்டாயா?" விசாரித்தான்.

"ம்ம்" என்றவள் எடுத்து வைத்திருந்த சேலையை காட்டவே "அழகாய் இருக்கு" மனம் திறந்து பாராட்டினான். வசிஷ்டர் வாயால் விஸ்வாமித்திரர் பட்டம் பெற்றது போல் உணர்ந்தவள் சந்தோசத்தில் துள்ளி குதிக்காத குறை.

வேறு ஏதாவது எடுக்க வேண்டுமா என்று கேட்டவனிடம் இல்லை "சாரி பிளவுஸும் இங்கேயே தைத்து தருவதாக கூறி விட்டார்கள் ஈவினிங் வந்து கலெக்ட் பண்ணலாம் என்று சொன்னார்கள்" சிறிது யோசித்து "உங்களுக்கு எதுவும் எடுக்கத் தேவையில்லையா?" என்று கேட்டவளுக்கு பதிலாக "எனக்கென்ன ஜீன்ஸ் ஷர்ட் ஓகே தானே" இலகுவாய் கேட்டான்.

'இவனை...' மனதினுள் தாளித்தவள் "எனக்கு என்ன ஒரு பிரச்சனையும் இல்ல, உங்கள் அம்மா சந்தேகப்படமாட்டாரே" அப்பாவி போல் கேட்டாள்.

மறுபேச்சின்றி "பட்டு வேட்டி சட்டை தான் எடுக்க வேண்டும் அங்கே இருக்கு" என்று நகர்ந்தான்.

அடுத்ததாக அதே கட்டிடத்தின் மறு தளத்தில் இருந்த நகை கடைக்கு அழைத்து சென்றவனிடம் நேராகவே சொல்லிவிட்டாள் "எனக்கு தாலி எடுப்பது பற்றி எதுவும் தெரியாது" அவள் சொன்ன வேகத்தில் வாய்விட்டு சிரித்தவன் "அண்ணா தங்கைக்கு எடுத்த அனுபவம் இருக்கு நானே எடுக்கிறன்" அவன் சொன்ன பின்னர் தான் நிம்மதியாக மூச்சுவிட்டாள்.

அவர்கள் வழக்கத்தில் பயன்படுத்துவது போல் தாலியும் கொடியும் எடுத்தவன் கூடவே மோதிரத்தையும் பார்க்க அவனுக்கே தெரியாமல் அவன் விரல் அளவிற்கு ரகசியமாய் ஒரு மோதிரம் எடுத்து அதில் இருவர் பெயரையும் அடிக்கும்படி ஆர்டர் கொடுத்தாள். அவள் எடுத்தற்கு இணை போல் பெண்கள் அணியும் ஒரு மோதிரம் அவளை கவர அவள் எடுப்பதற்கு முன் அதை கௌதம் எடுத்திருந்தான். இரு விரல் நடுவே வைத்து அழகு பார்த்தவன் அவள் கையை பற்றி மோதிர விரலில் போட்டுவிட்டவன் அழகு பார்த்தவாறே ஆர்வத்துடன் கேட்டு நோக்கினான் "அவளுக்கும் அழகாய் அளவாய் இருக்கும் இல்லையா?" .

லேசாய் நீர் கோர்த்த கண்களும் முகத்தில் மெல்லிய புன்னகையின் சாயலுமாய் தலையசைத்தாள். அவர்களுக்கும் இரு மோதிரத்தை எடுத்தவன் "வேறு ஏதாவது வேண்டுமா?" கேட்க தலையசைத்து மறுத்தாள்.

தாலியை கொடியில் கோர்த்து தர அதை தன் முன்னால் தூக்கி பிடிக்க அதனூடே தெரிந்த ஸ்ரீனிகாவின் முகமும் அன்று மல்லிகை பந்தலின் முன் பார்த்த முகம் போல் தோன்றவே அவனுக்கு தூக்கிவாரி போட்டது. நான் தான் குழம்புகின்றேனா?, இல்லை திருமணம் என்பதால் இப்படியெல்லாம் நினைக்கின்றேனா?, ஏதோதே எண்ணங்கள் அலைக்கழிக்க "ஆஃபீஸ் போவோமா?" கேட்டான்.

"இப்படியேவா" கையிலிருந்த பொருட்களையும் அவனையும் மாறிமாறிப் பார்த்தாள். அவனும் கோட் சூட் இல்லமால் சாதாரணமாய் ஜீன்ஸ் டீ ஷர்ட் அணிந்திருந்தான். "இதை காரிலேயே வைத்து செல்வோம், இன்று மீட்டிங் என்று எதுவும் பெரிதாக இல்லை சோ"

அவன் அலுவகத்தினுள் செல்ல முன்னே எதிர் கொண்ட யாதவ் "பாஸ் அந்த மில்" என்று தொடங்கி கௌதமின் எச்சரிக்கை பார்வையில் பாதியிலேயே நிறுத்தியிருந்தான். ஸ்ரீனிகாவை நன்றாகவே அடையாளம் தெரிந்தது. அவன் தானே போட்டோவுடன் அனைத்து விபரங்களும் சேகரித்தது. வெறும் மில் சம்பந்தப்பட்ட விடயம் தானே என்று மேலோட்டமாய் விசாரித்தவன் தேவையென்று நினைத்த தகவல்களை மட்டுமே பாஸுக்கு வழங்கியிருந்தான். வழமையாகவே தகவல்களை வடிகட்டி கொடுப்பதுதான் என்பதால் பெரிதாக எதையும் நினைக்கவில்லை. அதோடு அதிகம் பேர் ஸ்ரீநிஷா ஸ்ரீனிகா இருவரும் இரட்டையர் என்றே நினைத்தனர்.

அதனால் கௌதமுக்கு அவள் ராஜாராம் சாரதாவின் மகள், அப்பாவுடன் சிறிய மனத்தாங்கல் என்பதை தவிர்த்து வேறு எதுவும் தெரியாமலே போய்விட்டது அதோடு சில மாதங்களுக்கு மட்டுமே திருமணம் செய்து விவாகரத்து செய்வதற்கு எதற்கு தேவையற்ற தலையிடி என்றும் நினைத்தான். அப்பா மகளுக்கிடையில் என்ன பிரச்சனை இருந்தால் அவனுக்கு என்ன? அவனுக்கு தேவை அம்மாவின் நச்சரிப்பிலிருந்து விடுதலை அடுத்து அந்த மில் தங்கைக்கு போய் சேர்வது அதற்கு மேல் யோசிக்கவில்லை. அத்துடன் அவன் அனுபவத்தில் ஸ்ரீனிகாவினால் வேறு எந்த பிரச்சனையும் வராது என்பதில் உறுதியாய் இருந்தான்.

கடையில் அவன் கண் முன் வந்த தோற்றத்தில் மனம் குழம்பியிருந்தவன் அதிகம் பேசவில்லை. ஆனால் அவளை கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தவன் மனமோ 'சிலவேளை அந்த பெண் இவளாக இருக்குமோ?' என யோசிக்க மூளையோ 'அப்படி என்றால் அவளே சொல்லி இருப்பாள் இல்லையா? ஏற்கனவே நீ அவளிடம் சொல்லி இருக்கிறாய் தானே? ஆனால் அந்த கன்னக்குழி....' என்று திருப்பி கேட்டது. இதே சிந்தனையில் இருந்தவனை கலைத்தது அவள் குரல்.

"போவோமா?"

"ஹ்ம்... வேலை முடிந்துவிட்டதா? நேரத்தை பார்த்தான். மணி பின்னேரம் ஐந்தை நெருங்கி கொண்டிருந்தது. ஷாப்பிங் முடித்து மதியவேளை வந்தவர்கள். இத்தனை நேரமா இது பற்றிய யோசனையில் ஆழ்ந்திருந்தான். அவளை பார்க்க மீண்டும் மல்லிகை பந்தலின் கீழ் அவளை பார்த்த ஞாபகம் வர தலையை உதறி நடப்புக்கு வந்தவன் "போகலாம்..." கார் சாவியை எடுத்து முன்னே நடந்தான்.

அவன் முகம் இன்னுமும் குழப்பத்தை சுமந்திருந்தது.

"உங்களிடம் சற்று பேச வேண்டும்" அவனிடம் சொல்லி விடுவோம் எப்போது சொன்னால் என்ன என்று நினைத்தவளாய் கேட்டாள். ஆனால் விதி இடையே நின்று சிரித்தது.

"அவசரமா.... எனக்கு... மைண்ட் கொஞ்சம் டிஸ்டர்பா இருக்கு..." வழமையை விட நிதானமாக வார்தைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கூற "என்னாச்சு.." கவலையுடன் யோசிக்காமல் கேட்டிருந்தாள்.

நேர் எதிரே வெறித்தவாறு தலையசைத்தவன் "இல்ல சின்ன குழப்பம்..." சற்று இடைவெளி விட்டு கேட்டான் "நாளை பேசுவோமா?"

மறுபேச்சின்றி தலையாட்ட அவள் வசித்த வீட்டின் முன் இறக்கிவிட்டவன் "பிளைட் டிக்கெட்டினை மெசேஜ் செய்கின்றேன்" என்ற வார்த்தையுடன் ஸ்டியரிங்க் வீலை வளைத்து காரை திருப்பி கொண்டு சென்றுவிட்டான்.

வருவான்...
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் இனிமையான காலை வணக்கம் சுவீட்டிஸ்.....

இதோ உங்களின் காதல் தீரன் அத்தியாயம் - 21

உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கின்றேன் வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்கமால் கூறுங்கள்.


முயற்சி திருவினையாக்கும்
நந்தகி
 
Status
Not open for further replies.
Top