All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுதீக்க்ஷா ஈஸ்வரின் "எனை ந(நி)னைக்கும் சாரலே" - கதை திரி

Status
Not open for further replies.

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க? அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சாரி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மாதிரி நான் நடுவுல கொஞ்சம் காணாம போயிட்டேன். Fbல போஸ்ட் பண்ணி இருந்தேன். இந்த வருடக் கடைசிகுள்ள இந்த கதையை முடிச்சுடுவேன்னு நெனச்சு தான் திரும்ப எழுதவே ஆரம்பிச்சேன். ஆனா வழக்கம் போல பனி காலம், இந்த டிசம்பர் மாதம், என்னை வழக்கம் போல வச்சு செய்ய, first என்னோட ulcerஓட பத்து நாள், அப்புறம் என் மகனுக்கு காய்ச்சல், எனக்கு கையில அடி, எனக்கு காய்ச்சல் என்று இந்த வருடம் எனக்கு அமோகமா முடிந்தது.

வெறும் காரணம் மட்டும் சொல்ல எனக்கு வருத்தம் இருந்தாலும், என்னால ஒரு வார்த்தை கூட எழுத முடியலை. ஒரு கதைக்கான பதிவுகள் தொடர்ந்து இருந்தா தான் படிக்கவே interest வரும் எனக்கும் அது புரியுது ஆனா சுவர் இருந்தா தானே சித்திரம் வரைய முடியும் என்று விட்டுட்டேன். நெறைய பேருக்கு தெரியாது என்று நினைக்கிறேன். சோ கோச்சுக்காம இந்த பதிவை படிச்சுட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளுங்க மக்களே. உங்க கமெண்ட்ஸ் தான் எனக்கு பூஸ்ட் ஹோர்லிக்ஸ் எல்லாமே.


போன பதிவுக்கு லைக், கமெண்ட் செய்து தொடர் ஆதரவு தரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
Happy reading மக்களே.


சாரல் 28


அவனது வார்த்தைகளில், அதிர்ந்து போனவளின் கண்கள் கண்ணீரை சொரிய, வார்த்தைகள் தொண்டை குழியை விட்டு வராமல், மேலும் கீழும் சிக்கி தவிக்க, வறண்டிருந்த இதழ்களை பிரித்து, முயன்று, “மாமா” ஒட்டு மொத்த உயிரையும் அதில்
தேக்கி, பிருந்தா அழைக்க, அவளது தவிப்பையும், மாமா எனும் வார்த்தையிலும் உடைய முயன்ற மனதையும், கண்களையும் அடக்க முயல்வதே அவனுக்கு பெரும் சிரமமாக தான் இருந்தது. இருந்தும் தன்னை மீட்டுக் கொண்டவன், அடைத்த தொண்டையையும் செருமி சீர் செய்துக் கொண்டு, “ம்ம் மாப்பிள்ளை ரொம்ப பெரிய இடமாம் பிந்துகுட்டி! நீ….. நீ ரொம்ப….. வசதியா….. ரொம்….ப சந்…..தோ…ஷமா…..!” என்றவனின் வார்த்தைகள், “என்னை எங்கேயாவது கூட்டிட்டு போய்டு மாமா!” எனும் பிருந்தாவின் வார்த்தைகளில் தேங்கி போனது.


தளும்பும் கண்களை அவளுக்கு காட்டக் கூடாது எனும் முடிவில் தான், பிரம்ம பிரயத்தனங்கள் செய்து, மனதையும், குரலையும் இறுக்கி அவன் பேசிக் கொண்டு இருந்தது அனைத்தும், அவளது வார்த்தைகளில் தவிடு பொடி ஆகும் போல இருந்தது. தான் கேட்டது சரிதானா? தனது காதில் விழுந்தது சரிதானா? மனம் நம்ப மறுக்க! ஜன்னல் பக்கம் நின்று இருந்தவன், அதிர்வுடன் அவளை பார்க்க, அவனது நம்பாத பார்வைக் கண்டு, உதடு கடித்து தவிப்புடன் நின்றாள்.


முகம் முழுதும் அழுததால் சோர்ந்து போயிருக்க, கண்களில் கரை கட்டி நின்ற கண்ணீர் கன்னங்களையும் ஸ்பரிசம் செய்திருக்க, தனது அகம் நிறைத்தவனையே, பார்வையால் இறைஞ்சிய படி நின்ற பெண்ணவளை கண்டு உள்ளுக்குள் இதயம் வலித்தாலும், அதனை வெளிக்காட்டாது, “ப்ளீஸ் மாமா! என்னை எங்கேயாவது கூட்டிட்டு போய்டு! என்…எ…ன்…னால நீ இல்லாம இரு….க்க… முடியாது மாமா! செத்….துடுவேன்….!” தனது தவிப்பை, காதலை இந்த முறையும் அழகாய் வெளிப்படுத்தினாள், பாவை.


காதலை காதலனிடமே யாசித்தபடி நிற்கும் பெண்ணவளின் நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது. தனது காதல் நிறைவேறாமல் போய்விடுமோ? அவன் கை சேர முடியாது போய்விடுமோ? எனும் பயம் அவளை நிலையில்லாது தவிக்க விட செய்ய, காதல் கொண்ட மனதின் தவிப்பிற்கு வார்த்தைகளால் வடிவம் கொடுத்திருந்தாள், பிருந்தா.


அகமும் புறமும் நீக்கமற நிறைந்த காதலி! காதலி வாயால் காதலை கேட்பது எவ்வளவு சந்தோசம்? காதலிக்கப்படுவது எத்துணை பெரிய பாக்கியம்? எத்தனை இன்பம் தருவது? என அந்த நிமிடம் முழுமையாய் உணர்ந்தான், விஷ்வா. ஆனால் அந்த காதலுக்கு தான் தகுதியானவன் தானா? இத்தனை காதலுக்கான தகுதி கொண்டவன், நான் இல்லையே! மனதில் மலையளவு அவள் மீதான காதல் இருந்தும், அதனை வெளிபடுத்த முடியாத நிலையில் தன்னை வைத்திருக்கும் விதியின் சதியை அந்த நிமிடம் நிரம்பவே சபித்தான், ஆண்மகன். இவளின் காதலுக்கு என்னால் நியாயம் செய்ய முடியாதே! இவளின் காதலுக்கான ஆள் நான் கிடையாதே! அதற்கான தகுதி தான், எனக்கு கிடையாதே! என ஆண் மனம் திரும்ப திரும்ப அதையே உருப்போட்டுக் கொண்டிருந்தது.


சமூகம் பெண்ணுக்கு வகுத்திருக்கும் அத்தனை கோட்பாடுகளையும் மீறி, அவள் தான் தனது மனதை முதலில் வெளிபடுத்தினாள். அவளது கண்களில் வழியும் தனக்கான காதலிலும், தன்னை கண்டதும் மின்னலென பளிச்சிடும் விழிகளையும், பலமுறை அவனே கண்டிருக்கிறானே! அதனை எப்படி மறுப்பது? ஐயோ இந்த நிமிடமே தனது உயிர் பறவை இந்த கூட்டை விட்டு பறந்து விடக்கூடாதா? எனும் ஏக்கமே அந்நேரம் அவனது நெஞ்சம் முழுதும் வியாபித்திருந்தது.



அவளது கண்ணீர் எப்போதும் போல தன்னை பலவீனமாக்குவதை உணர்ந்தவன், இளகும் இதயத்தை மீண்டும் இரும்பாக இறுக்கிக் கொண்டான். “Beggers are not choosers!” என விரக்தியாய் நினைத்துக் கொண்டான். கலங்கும் விழிகளுடன் அவனது வதனத்தையே உள்ளுக்குள் பரவிய ஒரு வலியுடன் பார்த்திருந்தவள், அவனது பதிலுக்காக உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஒரு யாசகன் போல தவித்திருந்தாள், மாது. அவனது முகமும் அது காட்டும் பாவனைகளும் கண்டு உள்ளுக்குள் அவளுக்கு அபாயமணி அடிக்க, “ப்ளீஸ் மாமா என்னை எங்கேயாவது கூட்டிட்டு போய்டு!” இந்த முறை திடமாகவே வந்தது பெண்ணவளின் குரல்.


அவனுக்கு தான் அவளை நுனி முதல் அடி வரை தெரியுமே! இது இந்த பிருந்தா… தான் சொல்வதை கேட்டு தலையை ஆட்டுபவள் இல்லை! தனக்கு வேண்டியதை அழுத்தமாக சாதித்துக் கொள்ளும் பிருந்தாவின் குரல் என்பதை அவனும் உணர்ந்த தருணமது.


அந்நேரம் வரை மனதினுள் அவளை எண்ணி எண்ணி மடிந்து கொண்டிருந்தவன், அந்நொடி… அந்நொடி தீர்க்கமான முடிவெடுத்த நேரமது. அவளை ஒருமுறை கூர்ந்துப் பார்த்தவன், வதனமோ மெல்ல மெல்ல இறுக ஆரம்பித்தது. அவனது முகம் கண்டு, ஏதோ தவறாக நடக்க போகிறது என அவளும் உணர்ந்தாள். “இல்ல! இல்ல! எதுவும் சொல்லிடாதே சொல்லிடாதே…!” அவள் மனம் கதறுவதை அவனும் பாவை விழி வழி உணர்ந்து தான் இருந்தான். “இ…இது காதலே கிடையாது… பிந்துக்குட்டி! ஜஸ்ட் ஒரு infactuation!” இதனை சொல்லும் போது நடுங்கிய இதழ்களை உதடு கடித்து அடக்கிக் கொண்டான்.


“சின்ன வயசுல இருந்து நீயும் நானும் ஒன்னாவே சுத்தி இருக்கோம். அ… அது ஒருவகை ஈர்ப்பு! இதெல்லாம் காதல் இல்லை. நீயும் நானும் சின்ன வயசுல இருந்தே ஒருத்தரை ஒருத்தரை நல்லா தெரிஞ்சவங்க! சோ… ரெண்டு பேரும் ஒருத்தர்க்கு ஒருத்தர் லைப் பார்ட்னரா வந்தா நல்லா இருக்கும்னு நினைப்போம். அது தானே தவிர இது கா…தல்…. எல்லாம் கிடையாது!” அடைத்த தொண்டையை எச்சில் விழுங்கி சரி செய்தவன், “இப்ப எல்லாம் நல்லா தான் இருக்கும் பிந்துகுட்டி! ஆனா இந்த ஈர்ப்பு பின்னாடி மறைந்து போன அப்புறம் நம்ம காதல்னு நம்புறது காணாம போயிருக்கும்! இதை காதல்னு நம்பி நம்ம வாழ்க்கையை வேஸ்ட் பண்றதுக்கு பதிலா, இப்ப இதை கடந்து போய்டோம்னா பின்னாடி நம்ம லைப் நல்லா இருக்கும். இப்ப மாமா உனக்கு பார்த்து இருக்கிற மாப்பிள்ளையை நீ கல்யாணம் பண்ணிகிட்டனா ராணி…”


ஏதோ சொல்லிக்கொண்டே வந்தவன் அவளது பார்வையை சந்திக்க, அவளோ அவனையே பார்த்தபடி நின்றாள். அதற்கு மேல் அவளது தீட்சண்யமான பார்வையை சந்திக்க முடியாமல், தனது பார்வையை திருப்பிக் கொள்ள, “சொல்லு மாமா! இன்னும் எதோ சொல்ல வந்தியே? முழுசா அதையும் சொல்லிடு! மனசுக்குள்ள எதையும் வச்சுக்காத மாமா!” எனும் பிருந்தாவின் குரலில் வேகமாய் தனது பார்வையே அவளுடன் கலக்க,


“என்னை தவிர வேற… ஒருத்திய உன்னால நெனச்சு பார்க்க முடியுமா மாமா!” அவளது கேள்வி கூர்மையாய் வெளிவர, திடுக்கிட்டு தான் போனான், விஷ்வா. எப்படி அவனால் முடியும்? எப்படி முடியும்? அவன் மடிந்தால் மட்டுமே அது சாத்தியமென அவனுக்கு தெரியும் என்பது அவளுக்கும் தெரிந்து தான் இருந்தது.



“வேற எதாவது ட்ரை பண்ணு மாமா!” அவனது முயற்சி புரிந்து, வலி கலந்த சிறு புன்னகையுடன் அவள் சொல்ல, தன்னை கண்டுக்கொண்டாள் என்பதை உணர்ந்தவனுக்கு அந்த நொடியிலும் மனதில் உதிரம் வடிந்தாலும், உள்ளுக்குள் கீற்றாய் அவளை நினைத்து சிறு இதம் பரவ தான் செய்தது.



“பதில் சொல்லு மாமா! முடியுமா உன்னால? இது நம்ம வாழ்க்கை மாமா! அப்பா சொல்ற ஆளை கட்டிக்கிட்டா ராணி மாதிரி வசதியா வாழுவேன்! ஆனா உயிர்ப்போட இருப்பேனான்னு தெரியாது மாமா! என்னை இன்னொருத்தனுக்கு விட்டு கொடுத்துட்டு நீ இருந்துடுவியா மாமா! சொல்லு… சொல்லு… எனக்கு பதிலை சொல்லு… சொல்லு.. இருந்துடுவியா? இருந்துடுவியா?” என்றபடியே அவன் போட்டிருந்த பனியனை பற்றி உலுக்கியபடி கேட்டவள், கடைசியில் அவன் மீதே சாய்ந்து அழுகையில் கரைந்தாள்.



அவளது கேள்வியில் ஆவி நின்று துடித்தது, விஷ்வாவுக்கு. மனம் அவளது அழுகையில் இளகி நின்ற நொடி, மறுநொடியே எதனையோ நினைத்து, இளகிய மனம் மீண்டும் இறுக துவங்க, மீண்டும் தன் முடிவில் ஸ்திரமாய் நின்றான், விஷ்வா. அவன் நெஞ்சின் மீது சாய்ந்து கதறிக்கொண்டு இருந்தவள், அழுத விழிகளுடன் மெதுவாய் அவன் வதனத்தை ஏறிட்டு பார்க்க, சில நொடிகள் அவனது முகத்தையே அசையாது பார்த்தவள், அப்போது தான் ஒன்றை உணர்ந்தாள். மெதுவாய் தலையை திருப்பி பார்த்துவிட்டு, மீண்டும் அவன் முகம் கண்டவள், அவனது இறுக மடித்து வைத்திருந்த கைகளையும் கண்டாள். தன்னை ஆறுதல்படுத்த கூட அவன் அணைக்காததையும் உணர்ந்துக் கொண்டவள் இதழ்களிலோ விரக்தி சிரிப்பொன்று பரவியது.


சிறு வயதில் இருந்து அவள் அழுகும் போது, மற்றவர்களை விட, அதிகம் தாங்குவதும் விஷ்வா தான். அவனை அணைத்துக் கொண்டு, அவன் தோள் சாய்ந்து என அழுகையில் பிருந்தா அவனிடம் தான் அடைக்கலம் அடைவாள். எப்போதும் உனக்கு நான் இருக்கிறேன் என ஆறுதலாய் அவளை அணைத்துக் கொள்ளும் கரங்கள் இன்று இறுகி இருப்பதை கண்டே அவனது எண்ணம் செல்லும் திசையை அறிந்துக்கொண்டாள், மாது.



அவள் விலகியதும், வேகமாய் அவளுக்கு முதுகு காட்டி திரும்பிக் கொண்டவன், கண்களோ அடக்கப்பட்ட அழுகையில் சிவக்க ஆரம்பிக்க, வேகமாய் அவன் முன் நின்றவள், “உன்னால என்னை மறந்துட்டு வேற வாழ்க்கையை வாழ முடியும்னா சொல்லு மாமா! நா..நான் இப்பவே உன் வாழ்க்கையை விட்டு போயுடுறேன்!” கடைசி முறை என நினைத்துக் கொண்டு அவள் கேட்க, அவளது கேள்வியில், அவனது முகத்திலோ பல வர்ணஜாலம்.


“இது லவ்வே கிடையாதுடா பிருந்தா! ஜஸ்ட் ஒரு அட்ராக்ஷன்… இதுக்கு ஆயுசு ரொம்ப கிடையாது!” என அவன் சொல்ல,

“நான் கேட்டதுக்கான பதில் இது கிடையாது!” வெடுக்கென சொல்ல, அவள் முகம் காண மறுத்தான், விஷ்வா.

“ஐயோ என்னால முடியாதே! பாவி எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டு, என்னை உயிரோட கொல்றாளே!” அவன் மனம் உள்ளுக்குள் ஊமையாய் கதற, எப்படியாவது அவனது மனதை மாற்ற முடியாதா எனும் தவிப்பு, பிருந்தாவினுள் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்தது.



“முடியுமா விஷ்வா? அவ கேட்ட கேள்விக்கு உன்கிட்ட பதில் இருக்கா?” காதல் கொண்ட ஆண்மனம் கடைசி நொடிதனிலும், அவனது முடிவை மாற்ற தானும் போராட, “இல்லை வேண்டாம் விஷ்வா!” அவனுள் ஒரு குரல் ஒலிக்க, அதற்கு செவி மடுத்தான், விஷ்வா. அவளது கண்களை சந்திக்க முடியாது, விழிகளை மூடிக்கொண்டு “மு… முடியும்!” நடுங்கிய குரலை வெளிக்காட்டா வண்ணம் அவன் சொல்ல, உள்ளுக்குள் மொத்தமாய் நொறுங்கி தான் போனாள், பிருந்தா. எதிரே அரவம் இல்லாது போகவும், விழி திறந்து அவளை பார்க்க, “நீயா? நீயா சொன்னாய்?” எனும் கேள்வியை கண்களில் தேக்கி அவனை பார்த்தாள், பிருந்தா.


அந்நொடி, தன்னை தானே விஷ்வா வெறுத்த நொடியது. அவனது வார்த்தையில் வேகமாய் ஒரு துளி நீர் சரேலென அவளது கன்னத்தை நனைக்க, ஜீவனற்ற அவளது விழிகள் இவனை என்னவோ செய்தது. அவளது அசைவற்ற நிலை கண்டு, “பிந்த்…பிந்து..மா..!” தன்னை மீறி அவளை அழைக்க போக, அதற்குள் தன்னிலை அடைந்திருந்தவள், “வ..வரேன் மாமா!” அடக்கி வைத்த அழுகையுடன் சொன்னவள், அவனை திரும்பியும் பார்க்காமல் கடந்து செல்ல, என்ன நினைத்தாளோ, அறை வாயிலை கடக்கும் போது, “என் மாமாவுக்கு என்கிட்ட பொய் சொல்ல தெரியும்னு எனக்கு இப்பதான் தெரியும்!” உணர்வுகள் தொலைத்த, மரத்த குரலில் சொல்லிவிட்டு அவள் சென்றுவிட, அவளது வார்த்தைகளில் அதுவரை அவன் தனக்கு விதித்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் தகர்த்து கொண்டு, அடக்கப்பட்ட துக்கமனைத்தையும் அழுகையில் கரைத்தான், விஷ்வா.


சாரல் அடித்தது….
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்,


சாரல் 29 பதிவு செய்துட்டேன். இந்த முறையும் பதிவு தாமதம் ஆகிடுச்சு. நெறைய பேர் கதை படிக்குறீங்க. ஆனா அதுக்கான கமெண்ட்ஸ் வரது இல்லையே நட்பூஸ். கதை எங்கேயாவது போர் அடிக்குதா? இல்ல உங்களுக்கு notification எதுவும் வரது இல்லையா? இந்த கதை எனக்கு ரொம்ப பிடித்து எழுத ஆரம்பித்த கதை. நடுவுல எனக்கு பல தடங்கல்கள் காரணாம இந்த கதையை தொடர முடியாம போச்சு.


எதோ ஒருவித அழுத்தம், என்னால கதையில் கவனம் செலுத்த முடியலை. காட்சிகளை சரியா கோர்க்க முடியலை. முன்னாடி நான் பிளான் செய்து வைத்திருந்ததே வேற. இப்ப எனக்கு எப்படி தோணுதோ அப்படியே தான் எழுதிகிட்டு வரேன். அதாவது சில பல மாற்றங்கள் தான் செய்திருக்கேன். இந்த கதையை சரியா முடிக்கணுமே, ஒழுங்கா ud கொடுக்க முடியலையே எனும் அழுத்தம் என்னை இந்த கதையை எழுதவிடாம செய்யுது. இதனால் என் மேல் உங்களுக்கு வருத்தம் கூட இருக்கலாம்.


கொஞ்சம் நான் இந்த கதையில் இருந்து பிரேக் எடுத்துக்கவா மக்களே? கொஞ்சம் கணம் இல்லாத கதை எழுதினா படிப்பீங்களா நட்பூஸ். உங்களது கருத்தை என்னிடம் தெரியப்படுத்துங்க நண்பர்களே. இல்லை என்றால், நான் மெதுவாக தான் பதிவுகள் தர முடியும். இத்தனை வருஷம் கழிச்சு, ஏனோ தானோ என கதையை என்னால கொண்டு போக முடியாது. அதுனால தான் சொல்றேன். எதையும் திணிக்க எனக்கு விருப்பமும் இல்லை. போன பதிவுக்கு லைக், கமெண்ட் செய்து ஆதரவு தந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.


இதோட flashback முடியுது. சில விஷயங்களை கதையின் போக்குல அங்கங்கு பாக்கலாம். ஒரேடியா பிளாஷ்பாக் எழுத எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. அது கதையை இழுக்கிற மாதிரியான உணர்வு எனக்கு. தொடர்ந்து உங்க ஆதரவை தருவீங்களா மக்களே.



சாரல் 29


நேரம் நடுசாமத்தை தொடவிருந்தது. கூடத்தில் இருந்த உணவு மேஜையில், மகனுக்காக காத்திருந்தபடியே உறக்கத்தை தழுவியிருந்தார், வித்யா. திடீரென முழித்த சுந்தர், அருகில் மனையாளை காணாது அறையை விட்டு வெளியே வந்தவர், மனைவி கூடத்தில் அமர்ந்தபடியே உறங்குவதை கண்டு நேரத்தை பார்த்தார். அப்போது தான் அவரருகில் இரவு உணவு அப்படியே இருப்பது கண்டு புருவம் சுருக்கி யோசனையானார். “இந்த பையன் இன்னுமா வரல?” தனக்குள்ளே கேட்டுக் கொள்ள, அந்நேரம் வெளி கேட் திறக்கும் சத்தம் கேட்டவும், வாசலை பார்த்தார். அங்கே விஷ்வா தளர்ந்த நடையோடு வீட்டினுள் வந்தவன், கதவை பூட்டி விட்டு திரும்ப, நிச்சயமாய் தந்தையை அந்நேரம் எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவனது திகைத்த பார்வையே சொன்னது.


“இது தான் நீ வீட்டுக்கு வர நேரமா விஷ்வா?” தந்தை கேள்வி எழுப்ப, பதில் சொல்லாது தலை குனிந்தான், மகன். “கேட்கிறேன்ல!” குரலை உயர்த்த, என்ன சொல்வான் அவன்? என்னை துரத்தும் அவளின் நினைவுகளை கண்டு அஞ்சி ஒளிகிறேன் என்றா?


தந்தையின் அதட்டலில், நிமிர்ந்து அவர் முகம் காண, மகனின் வதனத்தில் இருந்து என்ன கண்டாரோ? அவரது விழிகள் தனயனின் பார்வையை எதிர்கொள்ள முடியாது தாழ்ந்தது. கணவரின் சத்தத்தில் விழித்துக் கொண்ட வித்யா, இருவரின் முகத்தையும் கண்டவர், “என்னப்பா இப்ப தான் வரியா? கை கால் கழுவிட்டு வா! அம்மா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்!” நிலைமையை சுமூகம் ஆக்கும் பொருட்டு கூற, “இல்லை வேண்டாமா பசிக்கலை!” குரலில் ஏகத்துக்கும் சோர்வும் வருத்தமும் மிதமிஞ்சி இருக்க, தாயின் முகம் பார்க்காது சொல்லிவிட்டு படியேறினான், விஷ்வா. மகனின் நிலைக்கண்டு தாய்க்கு கண்ணீர் அரும்ப, கணவனை கலங்கும் விழிகளோடு ஏறிட்டார், வித்யா. செல்லும் மகனை பார்த்த வண்ணமே, “நீ சாப்பாடு சூடு பண்ணி வை! நான் போய் அவனை கூட்டிட்டு வரேன்!” என்றவர் வேகமாய் படியேற துவங்கினார்.


மகனது அறைவாயில் வரை வந்து தயக்கம் கொண்டு அங்கேயே தேங்கி நின்றவர், சில நொடி தயக்கத்திற்கு பின், கதவை தட்ட, “அம்மா சாப்பாடு வேண்டாம்மா!” உள்ளிருந்து குரல் மட்டும் கேட்க, தயக்கம் துறந்து கதவை திறந்தார். கதவு திறக்கும் சத்தத்தில், கைகளால் முகத்தைமூடி படுத்திருந்த விஷ்வா, கைகளை விலக்கி பார்க்க, நிச்சயம் தந்தையை எதிர்ப்பார்க்கவில்லை. வேகமாய் எழுந்து அமர்ந்தவன், தந்தையின் முகம் காண மறுத்து, வெளியே தனது பார்வையை செலுத்த, மகனின் செய்கை வருத்தம் ஏற்படுத்தினாலும், அதனை வெளிக்காட்டாது, “சாப்பிட வா!” என அழைக்க, “பசி..!” பசிக்கவில்லை என சொல்ல வந்தவன், அவரின் பார்வையில், அமைதியாய் ஓய்வறைக்குள் புகுந்துக் கொண்டான். அவன் வரும் வரை காத்திருந்தவர் அவன் வந்ததும், கீழே செல்ல அமைதியாய் வந்தவன், தட்டில் என்ன இருக்கிறது என்று கூட பாராது பேருக்கு அனைத்தையும் விழுங்கிவிட்டு, அறைக்குள் முடங்கிக்கொண்டான்.


அவனது நிலைக்கண்டு பெற்றவர் இருவருக்கும் நெஞ்சியில் பாரமேறிதான் போனது. தளும்பும் விழிகளை துடைத்துக் கொண்டு பாத்திரங்களை எடுத்துக் கொண்டு உள்ளே மறைந்தார், வித்யா. படுக்கையில் படுத்த சுந்தருக்கு, மகனின் ஒட்டாத நிலை தளர செய்ய, முதல் முறை தவறு செய்து விட்டோமோ என மனம் கிடந்து அடித்துக் கொண்டது. எங்கே தவறி போனோம்? அவருள்ளே கேட்டுக் கொள்ள அதற்கு பதில் தான் கிடைக்கவில்லை.


ஓயாத யோசனைகள் அவரை அல்லலுற செய்ய, சிந்திக்க பிடிக்காதவராய் கண்களை மூடிக் கொண்டார், சுந்தர். மூடிய விழிகளுள் பல விஷயங்கள் அணிவகுக்க பட்டென கண்களை திறந்தவரின், அன்றைய தூக்கம் பறிபோனது. பாவம் அவரின் தூக்கம் இனிமேல் தொலைந்து போகபோவது அறியாது!



மறுநாள் எழுந்தவர், மகனிடம் பேச வேண்டும் என நினைத்துக்கொண்டு அவனது அறைக்கு செல்ல, வெற்று அறையே அவரை வரவேற்றது. இவ்வளவு சீக்கிரம் எங்க போயிருப்பான்? மகனை தேடி கண்களை சுழல விட்டவர் வெளியேற எத்தனித்த சமையம், அவனது படுக்கையில் படபடத்துக் கொண்டிருந்த அந்த காகிதம் அவரின் கருத்தை கவர்ந்தது.


ஏதோவொரு உந்துதலில் சென்றவர், அதனை எடுத்து பார்க்க, பார்த்தவரின் கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்துக் கொண்டது. “பிந்துமா விஷுத்தான்” என பிருந்தா எழுதிய காகிதம் அவரை குற்றம் சுமத்துவது போன்றிருக்க, கண்கள் உணர்த்திய செய்தியை நம்ப மறுத்து மனம் சண்டித்தனம் செய்தது. அடுத்த அதிர்ச்சியாய் சரண்யா இருவரையும் எடுத்த புகைப்படங்களில் சில அவரை கண்டு ஏளனம் செய்வது போல இருந்தது. கண்கள் கலங்கி காட்சிகளை மறைக்க, மகனின் மனம் அறிய தவறியதற்காக மனம் அவரையே குற்றம் சாட்டியது.


*****************************************


வாய்க்கால் கரையோரம் பாய்ந்து வரும் நீரை பார்த்தபடி நின்றிருந்தார், சுந்தர். அவரது மனதும் ஆழி போலவே ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. அடிக்கடி அவரின் விழிகள் வழியையே தொட்டு தொட்டு மீண்டது. அவர் வந்து கிட்டத்தட்ட அரைமணி நேரத்தை நெருங்கியிருக்க, மேலும் பத்து நிமிடங்கள் கடந்த பின்னே வந்தார், முத்துவேல்.


“என்னடா மாப்பிள்ளை போனை பண்ணி வர சொன்ன! எதுவும் முக்கியமான விஷயமாடா? வீட்டுல பேசாம இங்க வர சொல்லியிருக்க?” அடுக்கடுக்காய் கேள்விகள் தொடுத்தார், முத்துவேல். அவரின் சகஜமான பேச்சில் வார்த்தை வர மறுத்தது, சுந்தருக்கு. தனது பார்வையை அவர் மீது செலுத்தியவர் நாவோ அவரிடம் ஏதோ சொல்ல துடித்தது. பிள்ளைகள் இருவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு துணிவை திரட்டிக் கொண்டு, “மாப்பிள்ளை நான்… நான் அதுவந்து!” அவர் திணற, முத்துவேலின் கண்கள் கூர்மை பெற்றது.


நண்பன் முகம் காண மறுத்து, “மாப்பிள்ளை இந்த கல்யாண ஏற்பாட்டை நிறுத்திடலாம் மாப்பிள்ளை….” ஒருவழியாய் அவர் சொல்ல, எதிரே எந்த அரவமும் இல்லாது போகவும், நிமிர்ந்து நண்பனின் முகம் நோக்கினார், சுந்தர். “அது அது வந்து…” பிருந்தாவும் விஷ்வாவை காதலித்தாள் என்பதை பெற்றவனிடம் எப்படி சொல்வது என தவித்தவர், அந்த நேரமும் தங்கை மகளே ஆனாலும் அவள் பெயர் வெளிபடக்கூடாது என்றே நினைத்தார், சுந்தர்.



நண்பனின் சலனமற்ற பார்வை உள்ளுக்குள் எதோ செய்ய, “அது நம்ம பிருந்தாவும், விஷ்வாவும் ஒருத்தர்கு ஒருத்தர் விரும்புறாங்கடா… அந்த பிள்ளை மனசுல என்ன இருக்குனு தெரியாம நம்ம பாட்டுக்கு ஏதேதோ முடிவு செய்துட்டோம்! பாவம் ஆசைபட்டவங்களை பிரிச்ச பாவம் வேண்டாம்டா!” தட்டுதடுமாறி ஒருவழியாய் அவர் சொல்லி முடிக்க, அதே பார்வை தான் முத்துவேலிடம்.



நண்பனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பக்குவமாய் பேச வேண்டும் என பலமுறை மனதினுள் நினைத்தபடியே இருந்தார், சுந்தர். தனக்கே இந்த விஷயம் இவ்வளவு அதிர்ச்சி தரும்போது, தங்கையின் கணவன் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாதவன், மெதுவாய் விசயத்தை சொன்னால், முதலில் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், பின்னர் இருவரின் மனதையும் புரிந்துக் கொள்வான் என்றே சுந்தர் நினைத்திருந்தார்.


முத்துவேலின் அசையாத நிலை கண்டு மனதில் பயம் உதிக்க, “டேய்!” என அழைக்க, “இப்ப என்ன சொல்ல வர?” அவர் கேட்க, “அது நம்ம பிருந்தாவும்!” என ஆரம்பிக்க, “என்ன? பிருந்தாவும் விஷ்வாவும் காதலிக்குறாங்க! இந்த கல்யாண ஏற்பாட்டை நிறுத்திட்டு இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னா?” முத்துவேல் கேட்க, “ஆமா!” என்ற சுந்தருக்கு அப்போது தான் நண்பனின் குரல் உரைத்தது. நண்பனின் குரல் பேதத்தை அப்போது தான் உணர்ந்தவராய், நிமிர்ந்து பார்க்க, மனம் அதனை நம்ப மறுக்க, மூளையோ நீ உணர்ந்தது சரிதான் என செய்தி அனுப்பியது.



“அப்… அப்போ உனக்கு முன்…!” முடிக்க முடியாது கேட்க, “தெரியும்!” ஒற்றை வரியில் எதிரில் இருப்பவரின் உயிர் கொன்றார், முத்துவேல். செவியில் விழுந்த செய்தியை இதயம் நம்ப மறுக்க, கண்களில் அதிர்வை அப்பட்டமாய் தேக்கியபடியே தங்கை கணவனை வெறித்தார், சுந்தர்.


“ஏண்டா!” காற்றாகிப் போன குரலில் சுந்தர் கேட்க, பதில் சொல்ல பிடிக்காது முகத்தை திருப்பிக்கொண்டார், மனிதர். தன்னை மீட்டுக் கொண்டவர், “என்ன வேணா இருக்கட்டும்டா! பாவம் ஆசை பட்டவங்களை பிரிக்க வேண்டாம்டா!” நண்பரிடம் தனது பிள்ளைகளுக்காக இறைஞ்ச, மனம் இளகாது நின்றார், முத்துவேல்.



“கொஞ்ச நாள் அதெல்லாம் கஷ்டமா தான் இருக்கும்! கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் புருஷன், குடும்பம் குழந்தைங்கன்னு வந்த அப்புறம் எல்லாத்தையும் மறந்து போய்டுவா!” அசட்டையாய் பதிலிறுத்தார், முத்துவேல். தங்கை மகளின் குணம் தெரிந்தவராய், “டேய் நீ என்ன நம்ம பாப்பாவை அவ்வளவு லேசாவா நினைச்சிருக்க?” அவர் குரலில் ஏகத்திற்கும் பரிதவிப்பு நிறைந்திருக்க, எதிரில் இருப்பவரின் குரலில் நிரம்பியிருந்த பரிதவிப்பு வேறு விதமாய் அவரை சென்றைடைய, அதில் “என் மகளை என்னை விட இவனுக்கு நன்றாக தெரியுமா?” என அவரின் ‘தான்' எனும் அகம் விழித்துக் கொண்டது.

பாசம் கொண்ட மனதிற்கு தான் உறவு, நட்பு, உற்றார், உறவினர் என தெரியும். தனக்கு வேண்டியவர்களே தன்னை காயப்படுத்தினாலும், தனது சுயமிழந்து திரும்ப திரும்ப அவர்களிடமே சென்று நிற்கும். அதே ‘தான்’ எனும் அகந்தையை அணிந்துக் கொண்டிருக்கும் மனதிற்கு உறவுகளோ, அதன் முக்கியத்துவமோ எதுவும் தெரியாது. அதற்கு ‘தான்’ எனும் கர்வமும், செருக்கும் தான் பிரதானமாக இருக்கும். கர்வத்தில் அது தன்னை மட்டும் அழித்துக் கொள்ளாது, தன்னை சுற்றி இருப்பவர்களின் நிம்மதியையும், சந்தோசத்தையும், ஏன் சில நேரம் அவர்களேயே கூட தனது அகந்தைக்கு பலி கொடுத்துவிடும் என்பதை அந்த நேரம் முத்துவேல் உணராது தான் போனார்.


நண்பனின் இளகாத தோற்றம் கண்டு தானே இறங்கி வந்தார், சுந்தர். “வேண்டாம்டா! இது பிள்ளைங்களோட வாழ்க்கை. நம்ம இதுக்காக அவங்க வாழ்க்கையை அழிக்கிற உரிமை நமக்கில்லை. இதை என் மகனுக்காக மட்டும் நான் கேட்கலை. என்னோட மருமக பிருந்தாவுக்காகவும் தான் கேட்கிறேன் தயவு செஞ்சு இந்த ஏற்பாட்டை நிறுத்திடுடா! உனக்கு கோடி புண்ணியமா போகும்!” கிட்டதட்ட இறைஞ்சினார், சுந்தர்.



அமைதியாகவே நின்ற முத்துவேல், நெடுநேரம் கழித்து, “சரி!” எனவும் சந்தோசமடைந்த சுந்தர், நண்பனை பார்க்க, “சரி நீ சொல்ற மாதிரியே இந்த கல்யாண ஏற்பாட்டை நான் நிறுத்திடுறேன்!” என்றவுடன் கோடி பிரகாசம் சுந்தரின் வதனத்தில். “நிறுத்திட்டு… விஷ்வா பிருந்தாவுக்கே கல்யாண ஏற்பாடு நான் பண்ணுறேன்! ஆனா…” கேள்வியாய் நிறுத்த,


“ஆனா….” கேள்வியாக நண்பனின் முகத்தை பார்த்தார், சுந்தர். “ஆனா இவன் இந்த விவசாயம், வயலு, தோப்பு, துறவு, அப்புறம் பேக்டரி ஆரம்பிக்க போறேன், மக்களுக்கு வேலை கொடுக்க போறேன்னு பினாத்திக்கிட்டு இருக்கானே அதெல்லாம் விட்டுட்டு, எதாவது ஒரு வேலையில உட்காரணும். அவனை ஒழுங்கா படிச்சு, நாலு அஞ்சு வருஷத்துல… ஒரு கவர்ன்மென்ட் வேலையில உட்கார சொல்லு! முடியுமா உன்னால?” நண்பனிடம் எகத்தாளமாய் கேட்டார், முத்துவேல்.



எப்படி முடியும் அவரால்? அவனது சிறுவயது லட்சியம், கனவு அனைத்தும் இது அல்லவா? இதற்காக தானே அவன் இத்தனை கஷ்டங்கள் படுவது. அவனது உழைப்பின் அருமை அறிந்தவர் அவரல்லவா? அதனை விட்டு வா என்று எப்படி அவரால் சொல்ல முடியும்? பிருந்தாவுடனான அவனது காதல், அவனின் உயிர் என்றால், விவசாயம் அவனது உயிர்ப்பு அல்லவா? காதலுக்காக அவனது உயிர்ப்பை தொலைத்து எப்படி அவன் நடமாடுவான்? இப்போது காதல் கை கூடினாலும், அந்த மகிழ்ச்சி சிறிது நாட்களுக்கு தானே! பின்னர் இதுவே அவர்களின் வாழ்வில் புயல் வீச காரணமாகி விடாதா? அவர்களின் காதல் அந்த புயலில் காணாமல் போய்விடாதா? என பல பல சிந்தனைகள் சுந்தருக்கு சுழன்று அடித்தது.


“ஒன்னும் அவசரமில்லை மாப்பிள்ளை. நீ உன் மகன்கிட்ட பேசு! பேசிட்டு நாளைக்கு காலையில முடிவை சொல்லு!” என்றவாறு சென்றுவிட்டார், முத்துவேல். நண்பனின் வார்த்தைகள் தந்த தாக்கத்தில் இருந்து மீளாது, அங்கேயே நெடுநேரம் நின்றிருந்தார், சுந்தர். முடுக்கிவிடப்பட்ட இயந்திரம் போல எப்போது எப்படி வீட்டை அடைந்தார், என்றே தெரியவில்லை. அறைக்குள் முடங்கியவர் தான். என்றும் இல்லாத நாளாய் அறைக்குள் முடங்கிய கணவனை கண்டு சந்தேகம் கொண்டு வித்யா எழுப்ப, சோர்ந்து வாடி தெரிந்த முகம் கண்டு பதறி போனார், அவர் மனைவி. எவ்வளவு கேட்டும் அவர் பதில் சொல்ல மறுக்க, புலம்பியபடி, வெளியே சென்றார், வித்யா.



அன்றைய இரவு மகனுக்காக கூடத்தில் காத்திருந்த கணவனை ஆச்சரியமாக பார்த்தார், வித்யா. “தூக்கம் வரல. நீ முழிச்சுக்கிட்டு உடம்பை கெடுத்துக்காத. நான் தம்பி வந்தா சாப்பாடு போடுறேன்!” என்று மனையாளை விரட்டினார். அன்றைய தினமும் விஷ்வா தாமதமாக வர, தாய்க்கு பதிலாக காத்திருக்கும் தந்தையை கண்டு ஆச்சரியம் அடைந்தவன், பின்னர் எதையும் வெளிகாட்டவில்லை. அமைதியாக அவனுக்கு பரிமாறியவர், அவன் உண்டு முடிக்கும் தருவாயில், “உன்கிட்ட பேசணும் தம்பி கொஞ்சம் மேல வா!” அழைப்பு விடுத்துவிட்டு சென்றுவிட்டார், தந்தை.


அவனுக்கும் தந்தை தன்னிடம் எதோ பேச காத்திருப்பது புரிந்து தானிருக்க, அமைதியாய் பின்தொடர்ந்தான். அவன் சென்றபோது கண்டது, தூரத்து விண்மீனை வெறித்தபடி இருந்த தந்தையை தான். அரவம் உணர்ந்து மகன் புறம் திரும்பியவரின் வதனத்தில் சொல்லாவோண துயரம் மண்டிக் கிடந்தது. எத்தனை கஷ்டங்கள் வந்த போதும் கம்பீரமாக நின்ற தந்தையை இப்படி காண சகிக்கவில்லை, விஷ்வாவுக்கு. தனது கோபம் வருத்தம் அனைத்தும் மறந்தவனாய், “அப்பா!” தவிப்புடன் தந்தையை அழைக்க, “நீ இந்த விவசாயம் எல்லாத்தையும் விட்டுட்டு உன் தகுதிக்கு ஏற்ற மாதிரி ஒரு வேலை தேடிக்கயேன்பா!” மகனின் முகம் கண்டால், தனது உறுதி அனைத்தும் கரைந்துவிடும் என்று அவன் முகம் காண முடியாது, சட்டென்று சொல்லிவிட்டார், சுந்தர்.


முதலில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தனது காதில் விழுந்தது நிஜம் தானாவென நம்பமுடியாது நின்றான். தனக்கு எப்போதும், எதிலும், தனது அனைத்து முடிவிலும் உறுதுணையாக நின்ற தந்தையா இப்படி சொல்வது? என அதிர்ந்து நின்றான், விஷ்வா.


“வேண்டாம் விஷ்வா! இதுயெல்லாம் என்னோடவே போகட்டும்! நீயாவது உன் தகுதிக்கு ஏற்ற மாதிரி ஒரு நல்ல வேலையில உட்காரு!” மனதை கல்லாக்கிக் கொண்டு சொன்னாலும், என்ன முயன்றும் அவரின் மனதின் தவிப்பு அவரின் குரலில் வெளிப்பட்டுவிட்டது. தந்தையிடம் விரைந்தவன், அவரின் தோளை தொட, கலங்கி தவித் த தந்தையை கண்டு உடைந்து போனான், விஷ்வா. மேலோட்டமாய், அந்த நேரத்திலும் நண்பனை விட்டுக் கொடுக்காது அவர் சொல்ல, கேட்டிருந்த விஷ்வாவின் உடலோ ஒருநொடி இறுகியது. எதையோ சிந்தித்தவன், “வேண்டம்ப்பா பிந்துகுட்டி நல்லா இருக்கட்டும்!” தந்தையின் ஆசை உணர்ந்து, தனது காதலை தூக்கி எறிந்தான், விஷ்வா.


மகனது பதிலை கேட்டு தந்தையானவரின் மனம் பூரிக்க, வேகமாய் மகனை இறுக்கி அணைத்துக் கொண்டார், மனிதர். அவனின் பதில், பெற்றவர் மனதை குளிர்வித்தாலும், அவனது ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே எனும் வருத்தம் மனதின் ஓரம் இருக்க தான் செய்தது. தன்னை அணைத்திருந்த தந்தையின் கண்ணீர் தனது தோள்களில் விழுவதை உணர்ந்தவன், மனமோ ஊமையாய் கதறியது. இருந்தும் தந்தைக்காக என நினைத்தவன் மனமோ உறுதியாய் ஒரு முடிவெடுத்தது. கண்களை துடைத்துக் கொண்டவன், ஒருமுறை தந்தையை இறுக்கி அணைத்து கீழே சென்றான். மகன் சென்றதும், கண்களை துடைத்துக் கொண்டவர் மனமோ நண்பன் சொன்ன, “உன் மகனும் உன்னைய மாதிரியே பிழைக்க தெரியாதவனா தான் தோட்டம், துறவு, விவசாயம் வயல்ன்னு இருக்கான்!” என்ற வார்த்தைகளிலே உழன்றது.

அந்த நேரத்திலும், நல்லவேளை மகன் மாமனின் எண்ணத்தை அறியாது போனானே! என ஒருபுறம் நிம்மதி அடைந்தது. மகனிடம் இதெல்லாம் மறைத்தவர் மனதிலோ இத்தனை நாட்கள் நண்பனின் மனதில் தங்களை பற்றிய எண்ணமறிந்து விரக்தியாய் எண்ணிக் கொண்டது.



சாரல் அடிக்கும்…
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்,

வழக்கம் போல நானே. நான் முடிவு செய்தால், அது ஒருபக்கம் போகுது மக்களே. நிஜமா எனக்கே எனக்கா அவ்வளவு சோதனைகள் வருது. இதுக்கு இல்லையாடா ஒரு எண்டு.. என்று தான் எனக்கும் தோணுது.

என்னால முடிந்த அளவு பதிவுகள் சீக்கிரம் கொடுக்க பார்க்கிறேன் மக்களே. ஆனால் தொய்வு இல்லாமல் கதையை கொண்டு செல்லவே நினைக்கிறேன். எனக்கு அதுவே ஒரு அழுத்தமாக இருக்கு. அதான் என்னால தொடர் பதிவுகள் தர முடியலை. அதே மாதிரி நெறைய பேர் கமெண்ட் செய்து இருக்கீங்க. நிஜமாகவே எனக்கு எந்த notificationஉம வரலை மக்களே.

நானும் எப்போதும், பதிவு போட்டுட்டு அடிக்கடி இங்குட்டு வந்து பார்ப்பேன். இந்த முறை யார் கமெண்ட் செய்ததும் எனக்கு தெரியலை அதான் late reply. மன்னிச்சுக்கோங்க மக்களே. இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கிறேன். போன பதிவுக்கு லைக், கமெண்ட் செய்து ஆதரவு கொடுத்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. பதிவை படிச்சுட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க மக்களே.


சாரல் 30

மூடியிருந்த சாளரத்தின் கண்ணாடியினூடு, ஆதவன் தனது ஆதிக்கத்தை அறையினுள் செலுத்த முயல, ஆதவனின் பொன் மஞ்சள் கரங்கள் தன்னை தீண்டியதில் துயில் களைந்தாள், மாது. முகத்தில் பட்ட வெளிச்சத்தில் தூக்கம் தடைபட, எரிச்சலுடன் முகத்தை சுருக்கியவாறே திரும்பிப் படுத்தவள், போர்வையை தலைவரை போர்த்திக் கொண்டு விட்ட தூக்கத்தை தொடர முற்பட்ட நேரம், தனருகில் துயிலில் ஆழ்ந்திருந்த உருவத்தை கண்டு அதிர்ச்சியில் தூக்கம், அவளை விட்டு தொலைதூரம் சொல்லாது கொள்ளாது ஓடிவிட, உறங்கும் கணவனையே விழி அகற்றாது பார்த்தாள்.


“என்ன இவ்வளவு நேரம் தூங்குறான்? இந்நேரம் துரை விழுந்தடிச்சு எழுந்து ஓடியிருக்கணுமே!” மனதினுள் நினைத்தபடி இன்னும் தனது பார்வையை மாற்றாது யோசனையில் ஆழ்ந்தாள், அபிரக்ஷிதா. அப்போதுதான், முந்தைய தினம் இரவு நடந்த சம்பவங்கள் ஒன்றின் பின் ஒன்றாக அவளது நினைவடுக்கை தட்ட, தன்னவனிடம் பார்வையை நிலைக்கவிட்டவளின் மனம், மெல்ல நேற்றைய இரவை அசை போட துவங்கியது.
**********************************************
பல வருடங்களாக தனது மனதில் போட்டு அழுத்தி வைத்த பாரமனைத்தும், மனையாளிடம் பகிர்ந்ததாலோ என்னவோ மனம் சற்றே ஆசுவசமாகியிருக்க, தனது நினைவில் உழன்றவனை கலைத்தது, அவர்களது புதல்வியின் “அப்பா!” எனும் அழைப்பு. தாய்க்கு எட்டாத குழந்தையின் மெல்லிய அழைப்பும் தானும், தந்தையின் செவியை எட்டியதோ? வேக எட்டுக்களுடன் மனையாளுக்கு முன் மகளின் அறை நோக்கி விரைந்தவன், அரவம் எழுப்பாது நுழைய, தந்தையை காணாது பாதி தூக்கத்தில் எழுந்தமர்ந்து இருந்தாள், பிரகதி. விரைந்து மகளிடம் வந்தவன், “அம்முமா!” என குலைந்த குரலில் அழைக்க, அதில் ஒற்றை கண்ணை சிரமப்பட்டு திறந்து “அப்பா!” என அரை தூக்கத்தில் தந்தையை நோக்கி கையை நீட்டியது சின்ன சிட்டு. மகளை அலுங்காது தூக்கி கொண்டவன், தோளில் போட்டு தட்டிக்கொடுக்க, தந்தையின் அணைப்பு தந்த கதகதப்பில் சிறிது நேரத்திலேயே ஆழ்ந்து உறங்கினாள், குழந்தை.


அவள் உறங்கியது தெரிந்தும், மேலும் பல நிமிடங்கள் கழித்தே மகளை படுக்கையில் விட்டு நிமிர, அவன் கண்களுக்கு மகள் மறைந்து, “மாமா! மாமா!” என அனைத்துக்கும் தன்னை நூல் பிடித்துக் கொண்டு சுற்றும் பிருந்தாவே தெரிந்தாள். அதில் மலுக்கென கண்ணில் நீர் நிறைந்து பார்வையை மறைக்க, அவன் சுதாரிக்கும் முன்னே விழி நீர் அவனது கன்னங்களை ஸ்பரிசித்திருந்தது.


அபி பிரகதியை சுமந்த பொழுதில், அவன் மனையாளுடன் அதிகம் நேரம் செலவழித்ததில்லை. ஆசையாய் மகளுக்கு உணவு ஊட்டியதில்லை. வெளியே அழைத்து சென்றதுமில்லை. அவனுக்கு தெரிந்து அவனைவிட அவன் மனையாள் தான் குழந்தைக்கு அனைத்தும் செய்தது, செய்வது. இருந்த பொழுதிலும், ஏனோ தாயை விட தந்தையை தான் அதிகம் நாடுவாள் பிரகதியும். மகளை கண்டு, தன் மீதான மகளின் அளவற்ற பாசத்தை கண்டு தான் அஞ்சினான், விஷ்வாவும்.


மகள் தன்னை நாடும் பொழுதெல்லாம் “ஏற்கனவே தன்னையே சுற்றி சுற்றி வந்தவளின் மனதை உடைத்தது போதாதா? பிருந்தா கண்ணீர் சிந்தினாலே பொறுக்காத தான் தான், கடைசியில் அவளது கண்ணீருக்கு காரணமாகி போனேனே!” என நினைத்து மகளைளிடம் இருந்து ஓடி ஒழிந்தான் தந்தையானவன். இன்னும் அழுகையில் கரைந்து, கண்களில் உயிரை தேக்கி, ஒருமுறை தன்னை ஆழ்ந்து பார்த்துவிட்டு சென்ற பிருந்தாவின் முகம் அவனது மனதை விட்டு மறையாது இருக்க, அதன் தாக்கத்தில் மகளிடமும் மனைவிடமும் தள்ளியே இருந்தான், விஷ்வா. அவன் எத்தனை விலகி சென்றாலும், இரும்பை ஈர்க்கும் காந்தமென, உணர்வுகளை தொலைத்து இரும்பாய் இறுகி நின்றவனை, மகள் தனது பாசம் எனும் காந்தம் கொண்டு தந்தையை தன் பக்கம் இழுத்துக் கொண்டாள்.


அவனுக்கும் பிருந்தாவுக்கும் இடையே இருந்தது, ஒரு அழகான, எந்த வரையரைக்குள்ளும் அடங்காத ஒரு ஆத்மார்த்தமான பந்தம். பிரகதியின் ஒவ்வொரு அசைவிலும் அவன் பிருந்தாவை காணவில்லை. இருந்தாலும், இப்படி தானே அவளும் நம்மை வாய் ஓயாது அழைப்பாள்! இப்படிதானே ஒவ்வொரு சிறு விஷயத்துக்கும் நம்மை எதிர்பார்ப்பாள்! என நினைத்து நினைத்து உள்ளுக்குள் மருகினான், விஷ்வா. கணவன் தன்னிடம் இருந்து விலகி இருக்கவும், முதலில் தன்னால் முடிந்த அளவு அவனை நெருங்க முயற்சி செய்த அபிரக்ஷிதா, பின்னர் சோர்ந்தவளாய் அமைதியாகி போனாள். ஆனால் தாய்க்கும் சேர்த்தே தன்னையும் அறியாது தந்தை போட்டிருந்த தடைகள் அனைத்தையும் தகர்த்து வெற்றிகரமாக முன்னேறினாள், பிரகதி.


கண்களை துடைத்துக் கொண்டு மகளின் பிறை நுதலில் முத்தமிட்டு திரும்ப, அவனையே ஏக்கம் சுமந்த விழிகளோடு பார்த்திருந்த மனையாளின் பார்வையை சந்தித்தவன், பாவையின் பார்வைக்கு பதில் மொழி உரைக்க முடியாது, தனது பார்வையை தழைத்துக் கொண்டான், விஷ்வா. கணவனின் பார்வை தன் மீது விழுந்ததை உணர்ந்து வேகமாய் முகத்தை திருப்பிக் கொண்ட அபியின் மனதிலோ, எதிலோ தோற்ற உணர்வு அலை அலையாய் பரவுவதை என்ன முயன்றும் தடுக்க முடியவில்லை. அவளுக்கு தெரியும் கணவனுக்கு நிறைவேறாத காதல் ஒன்று உண்டென! அந்த காலத்து பெண்களைப் போல திருமணம் முடிந்ததும், அவனை என் அன்பால் மாற்றுவேன்! கணவன் மனதில் உள்ள வெற்றிடத்தை என் காதலால் நிரப்புவேன்! என்றெல்லாம் அவள் நினைத்ததில்லை.


அவள் கொஞ்சம் யதார்த்தமான பெண். என்னதான் சிந்தனை செயல் என நவநாகரீக பெண் என தன்னை நினைத்துக் கொண்டாலும், மனதின் அடியாழத்தில், தனது கணவனுக்கு தனக்கு முன்னால் ஒரு காதல் இருந்திருக்கிறது. இன்னமும் அது அவனை வதைக்கிறது என்பதை பெண்ணவளால் தாள முடியாமல் தான் போனது. இருவருக்குமான பேச்சு வார்த்தைகளும், புரிதல்களும் குறைவே என்பதால், அவனின் எண்ணவோட்டத்தை அவள் அறியாது தான் போனாள். அவனும் மங்கையின் மனதில் தைத்திருக்கும் முள்ளை அறியாது போனது இருவரின் துரதிர்ஷ்டமே.



யாரை சொல்லி என்ன பயன்? அனைவரின் முகம் கண்டே அவர்களின் மனதில் இருப்பதை அறிந்து கொள்ளும் விஷ்வா, தனது சரிபாதியிடம் சறுக்கி போனான் என்பது தான் நிஜம். அவனும் அவளது மனதை அறிய முயற்சிக்கவில்லை. அவளும், அவனுக்கு அவகாசமும் தரவில்லை. அவன் தென்முனையில் இருந்தால், இவள் வடமுனையில் இருப்பதுமாக இருக்க, அங்கே எங்கே புரிதல் ஏற்படும்? குடும்பம் எனும் பந்தத்தை உருவாக்கியதும் பிரகதி தான். உடையாது, பிரியாது அதனை பிணைத்து தக்க வைத்திருப்பதும் அவர்களது மகள் பிரகதி தான்.


நெடுமூச்சுடன் அறையை விட்டு மனையாளிடம் வந்தவன், மெளனமாக மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு நிற்க, அவனது வருகை உணர்ந்தும் திரும்பாது நின்றாள், அபி. சில நொடிகள் கழித்து, “நீங்க அதுக்கு அப்புறம் பிருந்தாவை பார்க்கவேயில்லையா?” நேரே வெறித்தபடி அவள் கேள்வியெழுப்ப, பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன், கரகரத்த குரலை சரி செய்தபடி, “இல்லை! அன்னைக்கு தான் நான் அவளை கடைசியா பார்த்தது” என்றான்.

அவனது பதிலில் திகைத்து சட்டென அவன் புறம் திரும்பியவள், “ஏன்?” என்றாள் ஒரு வார்த்தையில். “ஏன்னா… நான் அந்த ஊருலயே இல்லை! அதுக்கு அப்புறம் அவளை இத்தனை நாள் கழிச்சு இன்னைக்கு தான் பார்த்தேன்!” என்றவன் குரலில், காதலியை இன்னொருவன் உடமையாய் காணும் துக்கம் என்ன முயன்றும் வெளிப்பட்டது. அவனது குரலில், அவனது வார்த்தையில், உள்ளுக்குள் ஏதோ உடைவதை உணர்ந்தாள், அபிரக்ஷிதா. மனதில் பெரும் வலி உருவாக, தொண்டையை கவ்வி பிடித்த வலியை எச்சில் விழுங்கி போக்க முனைந்தாள், விஷ்வாவின் மனையாள். மனதில் ஒரு கேள்வி முணுமுணுவென அரிக்க, அதனை கேட்கவா? வேண்டாமா? எனும் போராட்டம் அவளுள். முடிவில், சராசரியான பெண்ணாக, அவளுள் இருந்த ‘விஷ்வாவின் மனையாள்’ எனும் எண்ணமே ஜெயிக்க, அவனிடம் தனக்குள் தோன்றிய கேள்வியை கேட்டாள், அபி.

“நீ…. நீங்க… என்னை ல…லவ் ப…ண்…ணுறீங்களா?” தனது உரிமையை, உரிமையாய் கேட்க முடியாது, அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி தடுக்க, திணறலாய் வெளிவந்தது அவளது வார்த்தைகள். தனக்குள் உழன்றுக் கொண்டிருந்த விஷ்வா, மனையாளின் குரலில் கலைந்தவன், அவளை ஒரு பொருள் விளங்கா பார்வை பார்க்க, அவனது பதிலில், உள்ளுக்குள் ஒருத்தி உயிர் வலியை அனுபவிக்க இருப்பது உணராது, “தெரியாது!” என்றான். இப்படியான ஒரு பதில் தான் அவனிடம் இருந்து வெளிப்படுமென தெரிந்தும், தெரிந்தே கேள்வி கேட்ட தனது மடத்தனத்தை நொந்துக் கொண்டவள், முயன்று தனது முகம் மாற்றத்தை அவன் அறியாது காக்க பாடுபட்டாள்.


“நீ…நீங்க இ…இன்னும் அ… அவ… அவங்களை… பிருந்தாவை லவ் பண்ணுறீங்களா?” எப்படியோ தைரியம் அனைத்தையும் ஒன்று திரட்டி கேட்டே விட்டாள். அவளது கேள்வியில் அதிர்ந்து மனையாளை பார்த்த விஷ்வாவினுள் முதலில், “என்னை பார்த்து அப்படி கேட்டுவிட்டாளே? என்னை பார்த்தால் அப்படியா தெரிகிறது? அடுத்தவன் மனைவியை இன்னும் மனதில் சுமப்பவன் போலவா என்னை அவளுக்கு தெரிகிறது? நான் என்ன அவ்வளவு கேவலமானவா? கணவன் மீது ஒரு நம்பிக்கை வேண்டாமா?” என்றெல்லாம் நொடி நேரத்தில் அவன் மனம் பொரும,

“டேய் அடங்குடா! ரொம்பதான் ஆடுற! நீ என்னைக்குடா உன் மனசை அவக்கிட்ட சொல்லியிருக்க? ரெண்டும் பாதி நாள் மண்டையை உடச்சுகிட்டு, ரூமை ரத்தகளரியாக்கி, கை காலுல பாண்டேஜ் போட்டுட்டு தான் திரிஞ்சீங்க! இதுல எங்க இருந்துடா அவளுக்கு உன் மனசுல இருக்கிறதை சொன்ன? அவ உன்னை புரிஞ்சிக்க?” அவனது மனசாட்சி அவனை காரி துப்ப,



“அதுக்காக… இத்தனை நாள் என்னை பார்த்துக்கிட்டு தானே இருக்கா? அப்ப கூடவா என்னை பத்தி தெரியாது!” அவனது ஆண் எனும் கர்வம் அவளிடம் சண்டையிட சொல்லி அவனுக்கு தூபமிட, அவன் பதில் சொல்ல எடுத்துக் கொண்ட, அந்த சில வினாடிகள் அவளுக்கு பல யுகங்களாக கழிய, தவிப்புடன் கணவனின் வாய்மொழிக்காக அவனது வதனம் பார்த்து காத்திருந்தாள், அபிரக்ஷிதா. அவளின் முகம் கண்டு, முதல்முறை அவளது உணர்வை உணர முயன்றானோ கோமகனும்?


“இல்ல…!” அவளின் வயிற்றில் பாலை வார்க்கும் விதமாக அவன் மொழிந்ததில், உள்ளுக்குள் பனியின் குளுமையை அவள் அனுபவித்ததை அவன் உணர வாய்ப்பில்லை. கண்கள் சடுதியில் கலங்கும் போல இருக்க, உதடு கடித்து ஆர்ப்பரிக்கும் மனதை கட்டுக்குள் வைக்க போராடினாள், அபிரக்ஷிதா. அவளுக்கு பதிலிறுத்துவிட்டு அவன் தொலைவானத்தை வெறிக்க ஆரம்பிக்க, வேறெதுவும் சொல்லவோ, கேட்கவோ தோன்றாது, அறைக்குள் திரும்பியவளின் நடை, கணவனின், “என்னை பார்த்தா அப்படியா உனக்கு தெரியுது?” எனும் கேள்வியில் தடை பெற்றது. என்ன முயன்றும் அவனை, அவனால் தடுக்க முடியாது போக, அவளிடம் கேட்டுவிட்டான்.


அவனது குரலில் திரும்பாது அப்படியே நின்றவள், சில நொடிகள் கழித்து, தலையை திருப்பி அவனை பார்த்தவள், “நமக்குள்ள அந்த அளவு ஒட்டுதல் இருக்கா என்ன?” எள்ளலாய், கன்னத்தில் உதடு வைத்து அவள் கேட்ட விதத்தில் அவனது அகந்தை சீண்டி விடப்பட, அவளை உறுத்து விழித்தவன், “எங்க அம்மா என்னை ஒன்னும் அப்படி மோசமா வளர்க்கலை!” சீறலாய் மொழிந்தவன், அவளை தாண்டி சென்று படுக்கையில் விழுந்தான். அவனையே பார்த்திருந்தவள் இதழ்க்கடையில், ஒரு ஏளன புன்னகை உதயமானது. அவனை பார்த்தப்படி படுக்கையில் மறுப்பக்கம் அவனுக்கு முதுகு காட்டியபடி திரும்பி படுத்தவள் மனதிலோ, ஆயிரம் எண்ண அணிவகுப்புகள். அனைத்தையும் யோசித்து பார்த்தவள், விழிகளோ அதற்கு மேல் யோசிக்க பிடிக்காமல் அலுப்பில் மூடிக்கொண்டது.
***********************************************
அனைத்தையும் நினைத்து பார்த்தவள், கண்களிலோ முன் முப்பதுகளில் இருந்த கணவனது ஆண்மை ததும்பும் கம்பீரமும், மிடுக்கும் அவளை என்றும் போல இப்போதும் கவரவே செய்தது. “என்ன சொல்லு அழகன்டா நீ!” அவன் மீது பித்துக் கொண்ட பூவை மனம், ‘இவன் என்னவன்’ என்பதில் கர்வம் கொண்டு அவனை கொஞ்சிக் கொண்டது.


“நீ தான் அவனை மெச்சுக்கணும்!” இன்னொரு மனம் அவளை நொடிக்க, “எங்க அது உண்மையில்லைன்னு சொல்லு பார்ப்போம்!” மனசாட்சி உள்ளே நுழைந்து, அவளது குட்டை அம்பலப்படுத்தியது. “இவ்வளவு பேசுறல.. அப்போ அவன் முழிச்சு இருக்கும் போது கொஞ்ச வேண்டியது தானே!” அவளின் பலவீனம் அறிந்து அதிலேயே அடிக்க, அதுநேரம் வரை இருந்த உற்சாகம், அவளிடம் இருந்து விடைபெற்றது. அதற்குள் விஷ்வாவிடம் இருந்து அரவம் எழும்ப, வேகமாய் கண்களை மூடி, அசையாது படுத்திருந்தாள், அபி. உடலை நெளித்து சோம்பல் முறித்தவன், அலுப்பாய் விழிகளை திறக்க, ஜன்னல் வழி வந்த வெளிச்சத்தைக் கண்டு, சடுதியாய் மணியை பார்க்க, அது ஏழு என காட்டவும், “என்ன இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா?” பதறி எழ முற்பட்டவனின் பார்வை வட்டத்தில் விழுந்தாள், அவனது மனையாள்.


எப்போதும் அவள் எழுவதற்குள் அறையை விட்டு வெளியேறி இருப்பவன், இன்று அவளை புதிதாக திருமணமானவன் பார்ப்பது போல பார்த்தான். இதுநாள் வரை அவன் இப்படி ஆற அமர அவளை பார்த்ததுண்டா? என்றால், அது அவனுக்கு நினைவிலுமில்லை. தூங்கும் தனது சரிபாதியாய் அளவிட்டது அவனது கண்கள்.


நேரமாவது உணர்ந்து, தலையை உலுக்கி, தன்னை மீட்டுக் கொண்டவன், வேகமாய் படுக்கையை விட்டு எழுந்து குளியறைக்குள் சென்று மறைந்தான். குளியலறை கதவு மூடும் சத்தத்தில், மெல்ல ஒருகண் திறந்து பார்த்த அபி, அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டாள். “அபி கல்யாணமாகி ஆறு வருஷம் கழிச்சு உன் புருஷன் உன்னை பார்க்கிறான். ரொம்ப பெரிய முன்னேற்றம் தான் போ!” மனம் அவளை கிண்டலடிக்க, அதில் அவளது முகமோ உணர்விழந்து தான் போனது.


மனையாளின் மனமறிந்து, அவளின் உணர்வுகளை மீளவும் (திரும்பவும்) மீட்பானா விஷ்வா? வண்ணமிழந்த அவர்களின் வாழ்வு தனை, கொண்டவளின் துணை கொண்டு, அவளது உள்ளத்து உணர்வுகளை தானும் மீட்டு, அவளை மீட்டி, அவர்களின் வாழ்வுக்கு வண்ணம் சேர்ப்பானா அபிரக்ஷிதாவின் கணவன்?

சாரல் அடிக்கும்….
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாரல் 31


அன்று விடுமுறை தினமாதலால் பொழுது சோம்பலாகவே விடிந்தது முகுந்தனுக்கு. நாள் முழுதும் பரபரவென வேலை செய்வதால், கிடைக்கும் அந்த இரண்டு நாட்களும் அவனுக்கு விலைமதிக்க முடியாதது தான். அதுவும் வெளியில் எங்கும் செல்லாது வீட்டினுள்ளேயே அடைந்து கிடக்கதான் தோன்றும் அவனுக்கு. மெதுவே எழுந்து உடலை வளைத்துக் கொடுத்தான். சமையல் அறைக்கு செல்லவே கடுப்பாக இருக்க, இருந்தும் கூப்பாடு போடும் வயிற்றின் கூக்குரலுக்கு செவி மடுக்கும் எண்ணம் கொண்டவனாய், குளியலறைக்கு சென்று தன்னை சுத்தம் செய்துக்கொண்டவன், அடுக்களைக்குள் புகுந்துக் கொண்டான். அடுப்பில் பாலை வைத்துவிட்டு அது கொதிக்கும் வரைக்கும் கூட பொறுமையின்றி போனது அந்த வளர்ந்து கெட்டவனுக்கு. கைகள் அதன் பாட்டுக்கு சக்கரையையும், காபி தூளையும் சரிவிகிதத்தில் போட, நிமிடத்தில் தயாரானது காபி. கோப்பையில் ஊற்றிக் கொண்டவன், பால்கனியில் இருந்த பிரம்பு ஊஞ்சலில் வந்து அமர்ந்துக் கொண்டு, சுற்றுப்புறத்தை வெறிக்க துவங்கியவனின் கவனத்தை கலைத்தது அவனது நண்பன் ஜேக்கின் குரல். “குட் மோர்னிங்டா மச்சான்!” சோம்பல் முறித்தபடி அறையை விட்டு வெளியே வந்தவனின் குரலில் நிமிர்ந்து பார்த்தவன், “மோர்னிங்டா!” தானும் பதில் வணக்கம் செலுத்தினான்.



“டேய் மச்சான்! ஒரு காபி போடேன்!” நண்பனை பணித்துவிட்டு, அவனது மறுமொழியைக் கூட கேட்காது, குடுகுடுவென பாத்ரூம்குள் நுழைந்துக் கொண்டான். பின்னே யார் அவனிடம் வாங்கிக் கட்டிக்கொள்வது? “பரதேசி நாயே எனக்கு வேலை வைக்கிறதுலயே இரு! இருடி! ஒரு நாள் என் கையில சிக்காமலா போயிடுவ? அன்னைக்கு இருக்குடி உனக்கு!” மேலும் சிலபல அச்சில் ஏற்ற முடியாத நல்ல வார்த்தைகள் கொண்டு நண்பனை அவன் அர்ச்சித்தாலும், கைகள் ஜேக்கிற்கு அவன் கேட்டதை கலந்தது. சிறிது நேரம் கழித்து, பொந்துக்குள் இருந்து எட்டிப் பார்க்கும் ஆமையை போல மெதுவே தலையை நீட்டினான், ஜேக். இருவரும் என்ன வெவ்வேறு கண்டதிலா இருக்கிறார்கள்? நண்பன் திட்டுவது இவனுக்கு கேட்காது போக? முகுந்தன் இருக்கிறானா? என இன்னும் தலையை நன்றாக நீட்டி பார்த்து, அவன் இல்லை எனவும், தைரியமாக வெளியே வந்தான், ஜேக்.



“அப்பாடி!” பெருமூச்சு விட்டபடி கோப்பையை எடுக்க போக, அவனது நிம்மதிக்கு ஆயுள் குறைவென்பது போல பின்னிருந்து முதுகில் ஒருஅடி போட்டான் முகுந்தன். “அடேய் விளங்காதவனே! ஒரு காபி தானேடா கேட்டேன்? அதுக்கு எதுக்குடா இப்படி அடிக்கிற?” கடுப்புடன் கேட்டாலும், காப்பியை மறக்கவில்லை அவன்.


அதில் அவனை நன்கு முறைத்த முகுந்தனின் பார்வையை தூசி போல் தட்டி விட்டவன், “சரி சரி கோச்சுக்காத மச்சான்!” நண்பனை சமாதானம் செய்தவன், “டேய் மச்சான் இன்னைக்கு எதாவது ஸ்பெஷலா செய்யே….!” என்றவனின் குரல் முகுந்தனின் முறைப்பில் தேய்ந்து மறைந்தது. “நாயே நானே எப்படா லீவ் கிடைக்கும் கீழ விழுகலாம்ன்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன்! இதுல ஐயாவுக்கு ஸ்பெஷலா கேட்குது!” என்றபடி ஜேக்கை தனது பிடிக்குள் கொண்டு வந்தவன், அவனது தலையில் நன்றாக கொட்டினான்.



“டேய் போதும் போதும் படுபாவி விடுடா!” அவனது பிடியில் இருந்து தப்பிக்க முயல, முகுந்தனின் பிடி இரும்பாய் இருக்க, கரும்பு இயந்திரத்தில் சிக்கிய கரும்பு போலானான், ஜேக். அந்நேரம் பார்த்து முகுந்தனின் போன் அடித்து அவனது கவனத்தை கலைக்க, “டேய் மச்சான்! போதும் விடுடா! நான் இங்க தான்.. உன்கூட தான் இருப்பேன்! என்னை அப்புறம் கூட கவனிச்சுக்கலாம். முதல போனை எடுடா ராசா!” என கெஞ்சவும் போனால் போகிறதென விட்டான், முகுந்தன். அவன் சென்றதும், தலையை தேய்த்துவிட்டுக் கொண்ட ஜேக், “ஐய்யாடி என்னா அடி அடிக்குறான்? பாவி பய என் மண்டையே பணியாரம் மாதிரில வீங்கி போச்சு!” என புலம்பியபடியே சோபாவில் அமர, சிறிது நேரம் கழித்து இறுகிய முகத்துடன் வந்தான் முகுந்தன்.


அவன் வதனம் கண்டே எதோ சரியில்லை என உணர்ந்த ஜேக், தனது விளையாட்டுத்தனத்தை விட்டொழித்தவனாய், “என்னடா மச்சான்? யாரு போன்ல? ஏன் உன் முகமே ஒரு மாதிரி இருக்கு?” அக்கறையாய் விசாரிக்க, அவனது தாடை எலும்புகள் இறுகியது. அதனை கவனித்த ஜேக், “ம்ம்ம்ச் என்னடா? ஏன் ஒருமாதிரி இருக்க?” நண்பனின் கரத்தை ஆதுரமாய் பற்றிக் கொள்ள, “ஒன்னுமில்லடா! எல்லாம் இந்த கிழவி தான்!” சலிப்பை தாங்கி வந்தது குரல்.


நண்பனின் குரலில் புரியாது விழித்த ஜேக், அமைதியாய் நோக்க, “அந்த கிழவியை…” கோபத்தில் பற்களை நெருநெருவென கடித்தான்.

“எங்க அப்பத்தா தான் போன் பண்ணுனது. அக்காவை போய் பார்த்துட்டு வரவாம். ஏதோ ஒரு தடவை போனா போகுதுன்னு விட்டா ரொம்ப ஓவரா தான் போறாங்க! அன்னைக்கே முடியாதுன்னு சொல்லியிருக்கணும்! அன்னைக்கு இவங்க சொன்னதுக்கெல்லாம் சரி சரின்னு மண்டையை மண்டையை ஆட்டுனது தான் இப்ப தப்பா போச்சு!” நண்பனின் கோபத்திற்கு பின்னிருக்கும் காரணத்தை அறிந்தவனாய் அமைதி காத்தான் ஜேக்.



“எனக்கு அப்படியே பத்திக்கிட்டு வருதுடா மச்சான்! எல்லாம் என்கூட பிறந்தவளை சொல்லணும்! அவ இப்படி இருக்கவும்தான்… எல்லாரும் நம்ம தலை மேல ஏறி ஆடுறாங்க! அவ சரியா இருந்திருந்தா எனக்கு இதெல்லாம் தேவையா? அவங்க என்ன சொன்னாலும் தலையை தலையை ஆட்டிக்கிட்டு, இவ பதில் பேசாம இருக்கவும் தான் அவங்க எல்லாரும், எங்களை கண்டா இளக்காரமா இருக்கு! எல்லாம் அவ கொடுத்த இடம் தான். அந்த சுண்டு தன்யா கூட அவளை மதிக்க மாட்டேங்குது!” அக்கா மகளின் நடத்தையை கண்டு அதிருப்தியாய் முகம் சுளித்தான், முகுந்தன்.


“அந்த வீட்டுல இருக்க எல்லாமே ஒரே மாதிரி தான் இருக்குதுங்க. கொஞ்சம் கூட மட்டு மரியாதை தெரியாம..!” கோபத்தில் கடுகடுத்தவனை அடக்கும் வழி தெரியாது விழித்து கொண்டிருந்தான், அவன் நண்பன். சலிப்பாய் தலையை பற்றிக் கொண்டு அமர்ந்தவனை கண்டு, “சரி விடுடா மச்சான்! நீ என்ன சொன்ன?” என கேட்க, “நான் என்ன சொல்வேன். முடியாதுன்னு நல்லா திட்டிவிட்டுடேன்!” சீற்றம் தணியாது கோபத்தில் ஏறியிறங்கியது, ஆணவன் மூச்சு. “ச்சு அவங்களே பாவம்டா! பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க?” நண்பனுக்கு புரிய வைக்க முயன்றான், ஜேக்.



“என்னடா பாவம்? என்ன பாவம்ங்குறேன்? ஒரு நல்ல மனுஷனை புரிஞ்சிக்காம, அவர் மனசை சிதறடிச்சுட்டு, எங்க அப்பா ஆடுன ஆட்டத்துக்கெல்லாம் எல்லாரும் அமைதியா இருந்தாங்க தானே. அப்ப அனுபவிக்கட்டும்! நல்லா அனுபவிக்கட்டும்!” கோவத்தில் சீறினான், முகுந்தன். அவனது வார்த்தைகளை கேட்டு அதிர்வுடன், “டேய்! யாரோ ஒருத்தர்காக உன் குடும்பத்தையே பலிப்பியாடா? இதெல்லாம் நல்லாயில்லடா சொல்லிட்டேன்!” நண்பனாய் அறிவுறுத்தினான்.



நண்பனது வார்த்தைகளில் கட்டுக்குள் வந்த முகுந்தன், “பாவம்டா அந்த மனுஷன்! அம்மா கூடவே இருந்தாலும், விஷ்வா மாமானா எனக்கு ரொம்ப பிடிக்கும்! அவர் முகத்துல எப்போதும் ஒரு சிரிப்பிருக்கும். நீயும் கூட சேர்ந்து சிரின்னு சொல்ற மாதிரி தான் அவரோட சிரிப்பிருக்கும்! எங்கக்கா அவரை கல்யாணம் பண்ணியிருந்தா, இப்ப இருக்கிறதைவிட ஓகோனு அவளை வாழ வச்சுருப்பார்டா அந்த மனுஷன்! எல்லாம் அவரை சொல்லணும்…. ஒரு மனுஷன் நல்லவரா இருக்கலாம் ஆனா அநியாத்துக்கு நல்லவரா இருக்க கூடாதுடா! அப்படியிருந்துட்டா இந்த உலகம் நம்மளை ஏறி மிதிச்சுட்டு போய்டும்னு நான் அவரை பார்த்து தாண்டா கத்துக்கிட்டேன்! மாமா மாமனு எங்க அக்கா அவர் பின்னாடியே சுத்துவா! அவர் கண்ணுல ஒரு சிரிப்பிருக்கும்! யாரு மனசையும் நோகடிக்க தெரியாதவர்டா சுந்தர் மாமா! ஆ… ஆனா அ…வரை போய் நோகடிக்க எப்படி எங்கப்பாக்கு மனசு வந்துச்சோ?” அன்றைய நினைவில் கோபம் அதிகமானாலும், ஒரு நல்லவரை வருத்திய வருத்தம் அவனது குரலில் மிகுந்திருந்தது.



“எங்கக்கா ரொம்ப அழுதுக்கிட்டே இருந்தா. அப்ப நான் சின்ன பையன்றதால எனக்கு நடக்கிறது ஒன்னும் புரியலை. திடீர்னு ஒரு நாள் எங்க வீட்டுக்கு யார் யாரெல்லாம் வராங்க. எங்க அக்காக்கு பூ வைக்குறாங்க. எங்க அக்காவும் அதெல்லாம் அமைதியா ஏத்துக்கிட்டா. எனக்கு அவமேல செம்ம கோபம். என்னடா இவ எதுவும் சொல்லாம அமைதியாகவே இருக்காளே? அப்ப இவ சம்மதத்தோட தான் எல்லாம் நடக்குதான்னு! எங்க விஷ்வா மாமாவை ஆளையே காணோம். எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. அவருக்கு இதெல்லாம் தெரியுமா தெரியாதான்னுட்டு. அன்னையில இருந்து எங்க அக்கா முகத்துல சிரிப்பேயில்லை. வீட்டுல எல்லாரும் எங்க அப்பாகாக தங்களை சந்தோசமா காட்டிக்கிட்டாங்க. அந்த கல்யாணம் நடக்க போறதுல சந்தோசமா இருந்த ஒரே ஆள் எங்க அப்பா தான். எப்பவும் அக்கா முகத்துல இருக்க சிரிப்பை, நான் அதுக்கு அப்புறம் பார்க்கவேயில்லை. கல்யாணத்துக்கு முந்தைய நாள் எதேச்சையா அவ ரூம் பக்கம் போகும் போது, சரண்யா அக்காவை கட்டிக்கிட்டு அவ அழுத அழுகையை நான் மறக்க முடியாது!” என்றவனுக்கு கண்கள் தானும் கலங்கியது அந்த நாளின் நினைவில்.




சாரல் அடிக்கும்….
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாரல் 32


தனது அத்தனை நாள் ஆதங்கத்தையும், மனக்குமுறலையும் அன்று நண்பனிடம் இறக்கி வைக்க சித்தம் கொண்டிருந்தானோ முகுந்தனும். மடை திறந்த வெள்ளமாய் அனைத்தையும் கொட்டிக் கொண்டிருந்தான்.

குரலை செருமி சரி செய்துக் கொண்டவன், “எங்க சுந்தர் மாமா, வித்யா அத்தை முகத்துலயும் சந்தோசமே இல்லை. அவங்களும் கல்யாண வேலைகள கலந்துக்காம ஒதுங்கியே இருந்தாங்க. எங்க அம்மா ஒருநாள் கேட்கவும் தான், ரெண்டு பேரும் வந்தாலும், அதிகமா ஒட்டல. அப்புறம் தாத்தா எங்கப்பா கிட்ட பேசும்போது தான் எனக்கு எல்லாமே தெரிய வந்துச்சு. அன்னைக்கு எங்க அப்பாவா இப்படின்னு நெனச்சு ரொ… ரொம்பவே உடைஞ்சு போய்ட்டேன்டா! எனக்கு எல்லாம் தெரியும்னு யார்கிட்டவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கல. அப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சு தான் விஷ்வா மாமாவை நான் பார்த்தேன். அவரை பார்த்து நான் அப்படியே திகைச்சு போய்டேன். ஆளே அடையாளம் மாறி, கண்ணு உள்ள போய், கருத்து….” அடைத்த தொண்டையை எச்சில் விழுங்கி சரி செய்துக் கொண்டவன், “அதவிட அவர் முகத்துல இருக்கிற அந்த சிரிப்பும், துள்ளலும் மறைஞ்சு போய், கண்ணுல ஒருவித சோகம் தான் நிறைஞ்சு இருந்தது பார்த்து நான் துடிச்சு போயிட்டேன். எங்க விஷ்வா மாமாவா இப்படின்னு? எனக்கே அப்படியிருக்கும் போது அவரை பெத்தவங்க அவரை பார்த்து எப்படி துடிச்சு போயிருப்பாங்க?” சிவந்த கண்களுடன் நண்பனிடம் கேட்டவனின் உள்ளத்து உணர்வுகள் புரிந்தவனாய், அமைதியாய் நின்றான் முகுந்தனின் நண்பன்.




“தன் பொண்ணோட வாழ்க்கைக்காக, ஒரு குடும்பத்தையே ஒட்டுமொத்தமா அழிச்சிட்டு, அந்த சமாதி மேல எங்க அக்க வாழ்க்கையை ஒய்யாரமா அடுக்குனார் எங்கப்பா!” என்றவனிடத்தில் எள்ளல் சிரிப்பொன்று உதயமானது. “ஆனா அடுத்தவங்க பாவம் சும்மா விடுமா? அதுக்கான பலனை அதுக்கான தண்டனையை கடவுள் எங்க அக்கா மூலமாகவே எங்கப்பாக்கு கொடுத்துட்டார். கல் கோட்டை மாதிரி மகளோட வாழ்க்கையை அமைச்சு கொடுத்துருக்கேன்னு இறுமாந்து கிடந்த எங்க அப்பாக்கு மகளோட வாழ்க்கை சீட்டு கட்டு மாளிகைனு தெரிஞ்சதுக்கு அப்பறம் மனுஷன் தன்னையே நொந்துக்காத நாளே இல்லை. என்ன இருந்தாலும், தன்னை உயிரா… உறவா… உயிர் நண்பனா… தன்னோட குடும்பத்துல ஒருத்தனா நினைச்ச.. எங்க சுந்தர் மாமாக்கு அவர் செஞ்ச துரோகம் தான் எங்க அக்கா வாழ்க்கை இப்படி அமைய காரணமாகி போச்சு போல…. பணம் மட்டும் வாழ்க்கையிலன்னு எங்க அப்பா இப்ப நல்லாவே புரிஞ்சிக்கிட்டு இருப்பார். ஆனா அவர் செஞ்சது எல்லாம் இல்லைன்னு ஆகிடுமா? பணம்….” விரக்தி சிரிப்பொன்றை உதிர்த்தவன், “அந்த பணம்… அளவுக்கு அதிகமாவே பிருந்தாகிட்ட இப்ப இருக்கு. ஆனா அவகிட்ட நிம்மதி தான் இல்லை. அவளை பார்த்தவுடனே எனக்கு அவ எந்த மாதிரி வாழ்க்கையை வாழ்றான்னு நல்லாவே புரிஞ்சி போச்சு… அவ அன்னைக்கு கொஞ்சம் தைரியமா முடிவெடுத்திருந்தா இன்னைக்கு கார், பங்களான்னு இல்லைனாலும், சந்தோசமா… நிம்மதியா… அவ ஆசைப்பட்ட விஷ்வா மாமாவோட… அவ ஆசைப்பட்ட வாழ்க்கைய நிறைவாகவே வாழ்ந்திருப்பா!” என்றவனுக்கு சகோதரியின் உயிர்ப்பற்ற முகமே அவளின் நிலையை சகோதரனுக்கு விளக்குவதற்கு போதுமானதாய்.



அதற்கு மேல் பெபட முடியாது தொண்டை அடைக்க, ததும்ப துடிக்கும் கண்ணீரை நண்பனுக்கு கட்ட மனமில்லாதவனாய் தனது அறைக்குள் புகுந்துக் கொண்டான், முகுந்தன். செல்லும் தனது நண்பனையே வேதனை மீதுற பார்த்திருந்தான், ஜேக்.



அன்றைக்கு நல்ல விதமாய் விடிந்த பொழுது நொடி நேரத்தில் இப்படியாகும் என் அவன் கனவிலும் நினைக்கவில்லை. அவனுக்கு சிறிது நேரம் தனிமையளிக்க முடிவு செய்தான் ஜேக். நேரம் மதியத்தை தொடவிருக்க, பசியில் குடல் கூப்பாடு போட துவங்கியது அவனுக்கு. எதுவும் சமைக்கவும் மனம் வராமல் நூடில்ஸ் மட்டும் செய்தவன், அவனை விட்டு உண்ணவும் மனமின்றி, நண்பனின் அறைக்கதவையே பார்த்திருந்தான், ஜேக். “இதற்கு மேல என்னால முடியாதுடா!” என கதறிய குடலின் கூக்குரலுக்கு செவி மடுத்தவன், முகுந்தனின் அறைக்கதவை தட்டினான். இரண்டுமுறை தட்டியும் பதிலின்றி போக, கதவை திறந்து உள்ளே நுழைந்தான் ஜேக். அங்கே கரங்களால் கண்களை மூடி படுத்திருந்தான், முகுந்தன். அவனை அப்படி காண மனம் வலித்தாலும், அவன் நலன் கருதி, “டேய் மச்சான் சாப்பிட வாடா!” என அழைக்க, “ம்ம்ச் எனக்கு சாப்பாடு வேண்டாம்டா!” சோர்வை முனங்கினான் முகுந்தன். “டேய் உனக்கு பசிக்கலைனா பரவாயில்லைடா! எனக்கு ரொம்ப பசிக்குதுடா!” முயன்று குரலை பாவமாகக வைத்துக் கொண்டு சொல்ல, கைகளை விலக்கி நண்பன் முகம் கண்டான், முகுந்தன்.



அவன் தன்னை பார்ப்பான் என உணர்ந்திருந்த ஜேக்கும், முகத்தை பாவம் போல வைத்துக் கொள்ள, நண்பனின் முயற்சி புரிந்து உதடுகளில் நெளிந்தது சிறு புன்னகை. “டேய் என்னை அப்புறம் சைட் அடிக்கலாம். எனக்கு நிஜமாகவே பசிக்குது. இதுக்குமேல என்னால முடியாதுடா யப்பா!” எனவும் வேகமாய் எழுந்து நண்பனுடன் இணைந்துக் கொண்டான்.



“கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கடா மச்சான்! வெளிய ஆர்டர் பண்ணலாம்னு பார்த்தேன். அப்புறம் இதுவே போதும்னு விட்டுட்டேன்!” என்ற நண்பனுக்கு மௌனத்தையே பதிலாக கொடுத்தான், ஜேக்கின் நண்பன். சாப்பிட்டுவிட்டு அறைக்குள் முடங்கினால் அவன் தனக்குள்ளே முடங்கி விடுவான் என்பதை நன்கு அறிந்திருந்த ஜேக், “வாடா மச்சான் வெளிய போய் ரொம்ப நாளாச்சு! எங்கேயாவது போய்ட்டு, நைட் டின்னரும் வெளியவே முடிச்சுட்டு வந்துடலாம்!” என அழைக்க, நண்பனின் அழைப்பில், அவனுக்கும் எங்கேயாவது சென்றால் தேவலாம் போலிருக்க, சம்மதமாய் தலையாட்டினான்.



அரைமணி நேரத்திற்கு பிறகு, இருவரும் நகர்வலம் செல்ல தயாராகி வர, முகுந்தனின் வண்டியில் ஏறிக்கொண்டான், ஜேக். பெரும்பாலும் சீருடையிலே இருப்பதால் அவர்களிடம் ஆடைகள் குறைவாக இருக்க, வழியில் ஒரு கடையில் நுழைந்தனர். ஜேக் ஒரு சட்டையை அணிந்து விட்டு வெளியே வர, தனக்கு பார்த்துக் கொண்டிருந்த முகுந்தன், ஒரு பெண்ணின் குரலில் கவனம் கலைந்தான். “ம்ம்கும் 400

ரூபா தான் தருவேன். அதுக்கு மேல ஒரு பைசா குடுக்க மாட்டேன்!” கடைகாரரிடம் அவள் பேரம் பேச, முகுந்தனின் கவனம் அவளிடம் குவிந்தது. “அட இன்னமா உங்களோட ஒரே ரோதனையா போச்சு! இதோட விலை 7௦௦ ரூபா நீங்க நானூறு ரூபாய்க்கு கேட்குறீங்க! அவ்ளோ குறைச்ச விலைக்கெல்லாம் தர முடியாதுமா!” என கடைக்காரர் மறுக்க, “சரி அப்ப எங்களுக்கு வேண்டாம் வாடி போகலாம்!” தோழியின் கைபிடித்து அவள் நடக்க, “அட நில்லுங்கம்மா! நீங்க கேட்ட விலைக்கே தரேன்!” கடைசியில் அவளது வழிக்கே வந்தார் அவர்.



கேட்ட விலையில் பொருள் கிடைத்த மகிழ்வில், “ஹே சூப்பர்டி!” அவளது தோழி அவளை பாராட்ட, “பார்த்தியா? நான் தான் சொன்னேன்ல!” இல்லாத காலரை தூக்கி விட்டு நண்பியிடம் பெருமையடித்தாள், அவள், அர்ச்சனா. அவளை அங்கே கண்ட அதிர்ச்சியில் கண்கள் இரண்டும் தெறித்து விழுவது போல முழித்தான், முகுந்தன்.


அதற்குள் நண்பனிடம் வந்த ஜேக், அவனது கவனம் இங்கு இல்லாததை கண்டு அவனும் தனது பார்வையை திருப்ப, “ஹே இது… இது உங்க அக்காவோட நாத்தனார் மாதிரியே இருக்காளேடா!” என சொல்ல, “அவ மாதிரி இல்லடா அவளே தான்!” அதிர்ச்சியில் இருந்து வெளியே வராது, இன்னும் பார்வையை அவளில் பதித்த வண்ணமே,


“அன்னைக்கு என்னவோ பெரிய பீட்டர் மாதிரி சலும்புனாளேடா! இன்னைக்கு என்ன பிளாட்பாரம் கடையில நின்னு பேரம் பேசிக்கிட்டு இருக்கா?” தானும் அதிசயித்து போனவனாய் கேட்க, சாரதாவின் அலட்டலை நினைத்து ஏளன புன்னகை சிந்தினான், முகுந்தன்.


அவனது நியாபக அடுக்கில், அந்த சம்பவம் நினைவிலாடியது. மறுவீடு சென்று வந்தபின், மணமக்களுக்கு தாங்கள் அளித்த உடையை பார்த்து, “என்ன துணியிது? கலரும், டிசைனும்! துணியோட குவாலிட்டியும் எதோ பிளாட்பாரம் கடையில எடுத்த மாதிரி வேற இருக்குது!” என சாரதா அனைவரின் முன்பும் நக்கலடித்தது பாலகன் மனமதில் பசுமரத்தாணியாய் பதிந்து போன நிகழ்வு மேலும்ப, அவனையும் அறியாது அத்தனை பேர் முன்பு கூனி குறுகி நின்றது இன்று நினைத்தாலும், அவனை இறுக செய்தது.


அதில், உடை எடுக்கும் மனநிலை சிறிதும் இல்லாது போக, “வாடா போகலாம்!” என்றான். நண்பனின் முகமாற்றம் கண்டு, “ஹையோ எங்க போனாலும் இவனுக்குன்னே எல்லாம் வருதே!” என மனதினுள் புலம்பியபடி முகுந்தனின் பின்னே சென்றான், ஜேக்.



அன்று முகுந்தனுக்கு நாள் சரியில்லை போலும் என்பதை நிரூபிப்பது போல மேலும் சில நிகழ்வுகள் நிகழ்ந்தேற, கடைசியில் அவனை ஏண்டா வெளியில் அழைத்து வந்தோம் என ஜேக் தான் நொந்துக் கொள்ளும்படி ஆனது.



சாரல் அடிக்கும்….
 
Status
Not open for further replies.
Top