All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானுரதி துரைராஜசிங்கமின் ‘வெள்ளை ரோஜாக்கள்’ - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
ரொம்ப ரொம்ப நன்றி மேம்
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நண்பர்களே...
நான் பானுரதி துரைராஜசிங்கம் 😊😊😊 இலங்கையின் யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவள்... இந்தத் தளத்தில் உங்கள் எல்லோருடனும் கை கோர்ப்பதில் மிகவும் சந்தோசம்... என்னுடைய கதையின் பெயர் 'வெள்ளை ரோஜாக்கள்' இந்தக் கதைக்கு உங்களது குறை நிறைகளைக் கூறி என்னை ஊக்குவிப்பீர்கள் என்று நம்புகிறேன்...

கேட்டதுமே எனக்குக் கதைத் திரி உருவாக்கிக் கொடுத்த ஸ்ரீகலா மேம்க்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 1

IMG-20210627-WA0049.jpgIMG-20210627-WA0043.jpg

சூரியதேவனின் அன்றைய நாளின் சேவை முடிவுக்கு வந்ததால், ஓய்வு பெற வேண்டித் தென் மேற்கு மூலையில் மெல்லென இறங்கிக் கொண்டிருந்தான்…

சூரியனின் மஞ்சள் நிறத்து மாலை நேரத்துக் கதிர்கள் கோபுரத்துக் கலசத்திலும் குளத்து நீரிலும் பட்டுத் தெறித்துக் கொண்டு இருந்தது…

அந்தக் கதிர்கள் நீரில் ஏற்படுத்திய வர்ணஜாலங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் காயத்ரி தேவி…

மஞ்சள் நிறத்துக் கதிர்கள் நீரை அழகு படுத்தியது மட்டுமல்லாமல் அவளது மாநிறத்தையும் மஞ்சளாக்கி அழகு சேர்த்தது…

அது மட்டுமல்லாமல் அவள் உடுத்தியிருந்த வெண்ணிறச் சேலைக்கும் நிறம் சேர்க்கப் பெரும் முயற்சி செய்து கொண்டிருந்தது...

அவளது இமையின் மெல்லிய அசைவும், இளந்தென்றல் வருடிய முடியின் அசைவும் இல்லையென்றால் கோவில் சிலையோ என்று எண்ணும் அளவிற்கு அவள் அசைவற்று நின்றிருந்தாள்…

எத்தனை நேரம் அப்படியே நின்றிருப்பாளோ தெரியவில்லை லேசாகக் கால்கள் வலித்து அவளது உடல்நிலையை அறிவுறுத்தியது…

மெல்ல அருகில் இருந்த படிக்கட்டில் கவனமாக அமர்ந்து கொண்டு கோபுரத்தை அண்ணாந்து பார்த்தாள்…

ஒரு ஆழ்ந்த மூச்சை உள்ளெடுத்தபடி கோபுரத்தின் மீதிருந்த விழிகளை மெல்லத் தாழ்த்தி மேடிட்டிருந்த தன் வயிற்றைப் பார்த்தவளின் விழிகளில் நீர் கோர்த்துக் கொண்டது…

அவளது முகமோ எண்ணிலடங்கா உணர்வுகளை மாற்றி மாற்றிப் பிரதிபலித்தது…

நீண்ட நேரமாகக் குளத்தங்கரைப் படிக்கட்டில் மௌனமாகத் தவமிருந்தவளை “அக்கா” என்ற அன்பு கலந்த குரல் நடப்புக்குக் கொண்டுவரவே கண்ணீர்த் துளியைச் சட்டென்று சுண்டி விட்டு, நிதானமாகத் திரும்பிப் பார்த்தாள்…

கையில் கோவில் பிரசாதத்துடன் நிலத்துக்கு நோகுமோ என மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள் கஸ்தூரி தேவி…

அவளைப் பார்த்ததும் காயத்ரிதேவியின் முகத்தில் இருந்த இறுக்கம் சட்டென்று விலகி அங்கே கனிவு வந்து அமர்ந்து கொண்டது…

அருகே வந்த கஸ்தூரி விபூதியை எடுத்துக் காயத்ரிக்குப் பூசி விட்டுத் தானும் பூசிக் கொண்டாள்…

அவளை ஏறெடுத்துப் பார்த்த காயத்ரி “ஏன் நீ அங்கே கோவிலுக்குள் விபூதியைப் பூசிக் கொள்ளவில்லையா?”
என்றாள் அவளது விழிகளை நோக்கி…

காயத்ரியின் பார்வையில் தலையைக் கவிழ்த்துக் கொண்டவள்
“இல்லையக்கா எனக்குக் கோவிலுக்குள் போகப் பிடிக்கவில்லை”
என்றாள் உணர்ச்சியை மறைக்கத் தெரியாத சிறு பிள்ளையாக…

அவளது கவிழ்ந்திருந்த தலையை வெறித்துப் பார்த்த காயத்ரி “பிடிக்கவில்லையா? பிடிக்காமல் போகுமாறு செய்து விட்டார்களா?” என்றாள் கட்டுப்படுத்திய கோபத்துடன்…

காயத்ரியின் அடக்கப் பட்ட கோபக்குரலைக் கேட்டவள் அவளை நோக்கியபடி
“வா அக்கா வீட்டுக்குப் போகலாம்” என்றாள் மிரட்சியுடன்...

கஸ்தூரியை முறைத்த காயத்ரி
“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை கஸ்தூரி”
என்றாள் அழுத்தமாக…

“அக்கா அது வந்து… பக்கத்து வீட்டுப் பரிமளம் மாமியும் மாமாவும் தான்… நானெல்லாம் கோவிலுக்கு உள்ளே வரக் கூடாது என்று சொன்னார்கள்…”
என்றாள் கஸ்தூரி உள்ளே போய் விட்ட குரலில்…

“அவர்கள் சொன்னதும் நீ அதை அப்படியே செய்தாயாக்கும்“
என்றாள் காயத்திரி மீண்டும் கோபமாக…

“அது வந்து... மாமியும் மாமாவும் பேசிய விதம் பிடிக்கவில்லை அக்கா… அதனால் தான் நான் பேசாமல் வந்து விட்டேன்…”

“ஏன் கஸ்தூரி உனக்கும் வாய் இருக்கிறது தானே”

“இல்லை அக்கா...”

“என்ன உனக்கு வாய் இல்லை என்கிறாயா?”

“ஐயோ அக்கா… அவர்களிடம் பேசி என்ன ஆகப் போகிறது”

“அப்படியென்று நீயே முடிவு செய்து விட்டாயா…?”

“அக்கா… பரிமளம் மாமிக்கும் மாமாவுக்கும் பொழுது போக்கே என் மனதை நோகச் செய்வது தானே…” என்றாள் கஸ்தூரி விரக்திச் சிரிப்புடன்…

அவளது பதிலைக் கேட்ட காயத்ரியின் முகம் கடினமாக மாறியது…

மெதுவாக எழுந்து கஸ்தூரியின் வலது கையை இறுகப் பற்றியபடி
“எது எப்படியோ உன்னை யாரும் எதுவும் சொன்னால் என் வாய் சும்மா இருக்காது தெரிந்து கொள்”
என்றாள் கோபமாக…

காயத்ரியின் வார்த்தைகளைக் கேட்ட கஸ்தூரிக்கு, விழி நீர் இப்போதே கீழே இறங்கட்டுமா? என்பது போல ஓரத்தில் வந்து நின்றது…

“இதை நீ சொல்லியா எனக்குத் தெரிய வேண்டும் அக்கா”
என்றபடி பிடித்திருந்த கைகளை இறுக்கமாகப் பிடித்தபடி… வீடு செல்லத் தெருவில் இறங்கினாள் கஸ்தூரி…

“அக்கா… கட்டிய கணவனை முழுதாகப் பறிகொடுத்த இராசி கெட்ட பாவி உனக்குக் கோவிலும் சாமியும் ஒரு கேடா… என்று அந்த மாமி கேட்டாளக்கா அதற்கு அந்த மாமாவும் நக்கலாகப் பார்த்துச் சிரித்தார் அக்கா…”
என்று கஸ்தூரியின் மனம் ஊமையாக உள்ளே உருகியதே தவிர வார்த்தைகள் எதுவும் வெளிப்படவில்லை…

“அக்கா… வீட்டில் எல்லோரும் வந்திருப்பார்களா?”
என்றாள் கஸ்தூரி பயத்தை மறைக்க முயன்று தோற்றவளாகி…

“அதை வீடென்றா நீ நினைக்கிறாய்?”

“நமக்கு அது தானேயக்கா வீடு”

“அங்கேயிருப்பவர்கள் என்றாவது அப்படி உன்னிடம் சொல்லி இருக்கிறார்களா?”

“………………….”

“ஏனிந்த மௌனம் கஸ்தூரி…”

“நமக்கு இதிலிருந்து விடுதலையே கிடைக்காதா அக்கா…”

“ஏன் கிடைக்காமல்... இன்னும் இரண்டு தினங்கள் பொறுமையாக இரு…”

“அதற்குப் பிறகு எல்லாம் சரியாகி விடுமாக்கா”

“சரியாகும்… சரியாக வேண்டும்”

“நீ சொன்னால் அது சரியாகி விடுமக்கா… இந்த உலகத்திலேயே நான் உன்னை மட்டும் தான் நம்புகிறேன்”

“அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவது உன் அக்காவின் கடமை கஸ்தூரி “ என்றாள் காயத்ரி உறுதியுடன்…

இருவரும் பேசியபடியே வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்…

கஸ்தூரி பயந்தது போலவே நடந்தும் விட்டது…

வீட்டு அங்கத்தவர்கள் அத்தனை பேரும் வரவேற்பு அறையில் அமர்ந்து இருக்க, வீட்டின் எஜமானியம்மா இந்திராணி வரவேற்பறையைத் தனது வேக நடையில் அளந்து கொண்டிருந்தார்…

இந்திராணியைப் பார்த்த கஸ்தூரி பட்டென்று காயத்ரியின் பின்னே மறைந்து கொண்டாள்…

இருவரும் வாசலைத் தாண்டி உள்ளே நுழையவும் இந்திராணியின் நாவில் இருந்து விஷம் தோய்ந்த சொல்லம்புகள் பாயத் தொடங்கின…

“வாங்கடியம்மா… எங்கே ஊர்சுற்றி விட்டு வருகிறீர்கள்”

“ஊர் சுற்றவில்லை அத்தை… கோவிலுக்குப் போய் விட்டு வருகிறோம்”
கஸ்தூரி மனதுள் சொல்லிக் கொண்டாள்…

காயத்ரி வழமை போல அவரது பேச்சை வலது காதில் வாங்கி இடது காதில் வெளியே விட்டாள்…

“என் பிள்ளைகளைக் கொன்று போட்ட இராசி கெட்ட உங்களிருவருக்கும் கோவில் ஒரு கேடா”
என்று இந்திராணியின் குரல் ஓங்கி ஒலித்தது…

அப்போதும் காயத்ரி அமைதியாகவே இருந்தாள்…

காயத்ரியின் பின்னால் நின்ற கஸ்தூரி அப்படியே மறைந்த படியே தான் நின்றிருந்தாள்…

“கோவிலுக்குப் போகிறோம் என்று தினமும் எவனைப் பார்க்க ஊர் சுற்றுகிறீர்கள்…”
என்று ஊடே தானும் ஒரு விஷ அம்பைத் தொடுத்தான் இந்திராணியின் அண்ணன்…

இன்னும் என்னென்னவோ சொல்லக் கூடாத, கேட்கக் கூடாத வார்த்தைகள் வந்து விழுந்தன…

பொறுமை பொறுமை என்று இருக்கும் பொறுமைசாலியான காயத்திரியிடம் இதுவரை நாளும் இருந்த சகிப்புத்தன்மை தூள்தூளாக உடைந்து நொருங்கியது…

பின்னால் நின்ற கஸ்தூரியிடம் இருந்து மெல்லிய விசும்பல் சத்தம் அவள் அழுகையை அடக்க முடியாமல் திணறுவதைத் தெளிவாகக் காயத்ரிக்கு உணர்த்தியது…

சட்டென்று திரும்பி அவளது கண்ணீரைத் துடைத்து விட்டவள் அவளது கரத்தைப் பற்றியபடி விடுவிடென்று வீட்டினுள்ளே விரைந்தாள்…

“ஏய் நில்…”
என்ற இந்திராணியின் குரலை அவள் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை…

அறையினுள் இருந்த, அத்தியாவசியமாக வேண்டிய பொருட்களை மட்டும் எடுத்து ஒரு பையினுள் போட்டுக் கொண்டவள் மறுபடியும் கஸ்தூரியின் கையைப் பற்றியபடி புயலென வெளியே வந்தாள்…

“எங்கள் இருவரது நடத்தைக்கும் தகுதிச் சான்றிதழ் கொடுக்கும் அளவுக்கு இந்த வீட்டில் யாருக்கும் உரிமையும் இல்லை தகுதியும் இல்லை”
என்றாள் அழுத்தமான குரலில்…

“என்னடி ரோஷம் வந்து விட்டதோ… வெளியே சென்று பிச்சை தான் எடுக்கப் போகிறீர்கள்”
என்றாள் இந்திராணி நக்கலாக…

யாருமே எதிர்பாராத வகையில் “உங்களுடன் இந்த வீட்டில் இருந்து குப்பை கொட்டுவதற்குப் பதில் பிச்சை எடுப்பது எவ்வளவோ மேல்… நீங்கள் வாருங்கள் அக்கா”
என்றபடி இப்போது காயத்ரியின் கரத்தைப் பற்றியது ஷாட்சாத் கஸ்தூரியே தான்…

அந்த நேரத்துச் சூழ்நிலையையே மறந்து வாயைப் பிளந்து கஸ்தூரியைப் பார்த்தாள் காயத்ரி…

காயத்ரியைப் பார்த்த கஸ்தூரி மெதுவாக அவள் பக்கம் குனிந்து “அக்கா ஏனக்கா இப்படி வாயைப் பிளந்து என் மானத்தை வாங்குகிறீர்கள்… வாருங்கள் இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி இப்படியே ஓடிப் போய் விடலாம்”
என்றாள்…

“அடிப்பாவி… உனக்கு எங்கிருந்தடி இவ்வளவு தைரியம் வந்தது”

“அக்கா… நீங்கள் என்னுடைய கையைப் பிடித்தாலே எனக்குத் தைரியம் தானாக வந்து விடும்…”

“அது சரி…”

“அக்கா… காட்டேரி நம்மையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருக்கிறது, போதாதற்குச் சுத்தி இருக்கும் பிசாசுகள் வேறு கொலைவெறியோடு பார்த்து வைப்பது போலத் தெரிகிறது... அது எல்லாம் சேர்ந்து ஏதாவது திட்டம் போடுவதற்குள் வெளியே ஓடி விடலாம்… “
என்ற கஸ்தூரியைப் பார்த்த காயத்ரிக்குச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை…

காயத்ரியைச் சிரிக்க வைக்கப் பாடு படும் ஒரே ஜீவன் கஸ்தூரி மட்டுமேயல்லவா...

இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார்கள்…

“போங்கடி… திரும்பவும் இங்கே தான் வந்து காலைப் பிடிப்பீர்கள்”
என்ற ஆங்காரக் குரல் இருவரது செவிகளையும் தீண்டி மறைந்தே போனது…

“சரி தான் போடி…”
என்று சிரித்தபடி காயத்ரியுடன் நடந்தாள் கஸ்தூரி…

சற்றே இலகுவாக இருந்த மனம் மீண்டும் இறுகத் தொடங்கியது...

“அக்கா… இனி என்ன செய்யப் போகிறோம்…? பெரிய இவளாட்டம் பேசி விட்டேனே”
என்றாள் கஸ்தூரி…

“பார்க்கலாம் கஸ்தூரி இந்தப் பெரிய உலகத்தில் நமக்கும் ஏதாவது ஒரு மூலையில் வாழ இடம் இல்லாமலா போகும்… என்ன இரண்டு நாட்களின் பின்னர் வீட்டை விட்டு வெளியே வர வேண்டியது… இன்றே வெளியே வந்து விட்டோம்…”
என்றபடி நடக்கத் தொடங்கினாள் காயத்ரி…

இருவரதும் வாழ்க்கை இருள் பாதையில் இருந்து வெளிச்சத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது…
இது நல்லவிதமாக முடியுமா? இல்லையா? என்பதைக் காலம் தான் பதில் சொல்லும்… 😌😌😌

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்...
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம் “

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2

IMG-20210627-WA0052.jpg

IMG-20210627-WA0055.jpg

IMG-20210627-WA0050.jpg


உலகத்தை மெல்ல மெல்ல இருள் ஆக்கிரமிக்கத் தொடங்கிய தருணமது…

ஆனாலும் சூரியனின் மஞ்சள் கதிர்கள் லேசாக எட்டிப் பார்க்கத்தான் செய்தன…

மேற்கு வானின் மூலையில் அந்த வெளிச்சம் இன்னமும் மறையவில்லை…

பறவைகள் தங்கள் கூடுகள் நோக்கிப் பறப்பதையும், வயலில் வேலை செய்வோர் பாட்டுப் பாடிய படி தம் வீடுகள் நோக்கிச் செல்வதையும் இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சூரியவர்மன்…

வீட்டின் மாடியில் நின்றதால் ஊர் முழுவதும் அவனது பார்வை வட்டத்துக்குள் அடங்கியதால் அந்த நேரத்தின் இனிமையை அவனால் இனிதாக இரசிக்க முடிந்தது…

இயற்கையின் அழகில் இலயித்திருந்தவனை “சூரியா” என்ற அழுத்தமான குரல் திடுக்கிட்டுத் திரும்ப வைத்தது…

அங்கே சிரிப்பதற்குக் கூலி கேட்கும் அழுத்தக்காரனான அருமை அண்ணன் ஆதித்யவர்மன் முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்…

“இவன் எதற்கு இப்போது தேவையில்லாமல் முறைக்கிறான்… சும்மா பார்த்தாலே முறைத்த மாதிரி தானே இருக்கும்”
எனத் தன்னுள் முணுமுணுத்தபடி அண்ணன் அருகில் சென்றான்…

“என்ன அண்ணா”
என்றவனின் கைகளில் கையடக்கத் தொலைபேசியைத் திணித்தபடி அவனை ஒரு பார்வை பார்த்தான் ஆதித்யன்…

“இப்போது எதற்கு இந்த அண்ணன்பையன் என்னைக் குறுகுறுவென்று பார்க்கிறான்…”
என நினைத்தபடி தொலைபேசியின் திரையைப் பார்த்தான் சூரியன்…

அதில் ஏஞ்சல் என்ற பெயரைப் பார்த்ததும்
“ஐயோ அண்ணா இது ஏஞ்சலினா… நீ நினைப்பது போல் வேறொன்றுமில்லை” என்றான் வேகமாக…

அவனது செய்கையைப் பார்த்த ஆதித்யனோ
“நான் உன்னை ஏதும் கேட்டேனா?” என்றான் புருவத்தை உயர்த்தியவாறு…

“நீ ஏதாவது கேட்டால் தானாடா… அது தான் ஒரு பார்வை வைத்திருக்கிறாயே”
வழமையாக மனதுக்குள் பேசிக் கொண்ட சூரியனை மீண்டும் ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போய் விட்டான் ஆதித்ய வர்மன்…

அண்ணன் சென்ற திக்கைப் பார்த்தபடியே தன் அலைபேசியைக் காதில் வைத்தான்…

அங்கே எதிர்முனையில் சொல்லப் பட்டதைக் குறுக்கிடாமல் கேட்டவன்…
பின்னர்
“அண்ணனைச் சரி என்று சொல்ல வைப்பது என் பொறுப்பு… சரி வரச்சொல்லுங்கள்… நாங்கள் போய் அழைத்து வர வேண்டுமா அல்லது… சரி சரி”
என்றபடி பேசி முடித்தான்…

ஒரு ஆழமான மூச்சை உள்ளிழுத்தபடி அண்ணனைத் தேடிச் சென்றான் சூரிய வர்மன்…

தோட்டத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து செய்தித் தாளில் மூழ்கியிருந்தான் ஆதித்யன்…

அண்ணனையே பார்த்தபடி அவனுக்கு முன்னால் வந்து நின்றான் சூரியன்…

தன் முன்பாக நிழலாடுவதனை உணர்ந்து நிமிர்ந்த ஆதித்யன்…

தம்பியைப் பார்த்ததும் என்னவென்பதைப் போலப் புருவங்களை உயர்த்தினான்…

“அண்ணா… பல்லவியைப் பார்த்துக் கொள்ள யாராவது நல்ல அனுபவம் உள்ள பெண் வேண்டும் என்று ஏஞ்சலினாவிடம் சொல்லியிருந்தேன்…”

“ம்ம்…”

“ஏஞ்சலினா தன் நெருங்கிய தோழி ஒருத்தியை அதற்கு அனுப்பி வைக்கட்டுமா என்று கேட்கிறாள்…”

“ம்ம்…”

“நீங்கள் அனுமதி கொடுத்தால் நான் ஏஞ்சலினாவிடம் சரி என்று சொல்லி விடுவேன் அண்ணா…”

“நமக்கு வேண்டியது வயதான பெண்மணி…”
என்றான் ஆதித்யன் வழமையான அழுத்தக் குரலில்…

“இல்லை அண்ணா… அவள் தோழிக்கு ஏதோ பிரச்சினை போலும்… அவளுக்கு உதவியாக இதைச் செய்யச் சொல்லிக் கேட்கிறாள்…”

“நாம் ஒரு உதவி கேட்டால், நம்மிடமே இன்னொரு உதவி கேட்டாயிற்றா…”

“அந்த உதவி செய்வதால் நமக்கு எந்தவித நஷ்டமும் இல்லை அண்ணா…”

“ஏதோ உன்னிஷ்டம்…”
என்றவாறு மீண்டும் செய்தித் தாளில் பார்வையைச் செலுத்தினான் ஆதித்யன்…

சற்றே மன நிம்மதியுடன் அந்த இடத்தை விட்டுச் செல்லத் திரும்பிய சூரியவர்மனை
“சற்று நில் சூரியா…”
என்ற ஆதித்யனின் குரல் மீண்டும் தடுத்தது…

“என்ன அண்ணா…”

“நம்பிக்கையானவர்களாக இருப்பார்களா?”

“நிச்சயமாக அண்ணா… அதற்கு நான் பொறுப்பு…”
என்று உறுதி அளித்தான் சூரிய வர்மன்…

சூரிய வர்மன் சென்றதும் தோட்டத்தின் ஒருபக்கமாக இருந்த சிறிய வீட்டின் பெரிய அறையை நோக்கிச் சென்றான் ஆதித்யன்…

அந்தப் பெரிய அறையின் சாளரத்தைத் திறந்து பார்த்தவனின் முகம் இளகிக் கண்ணில் லேசாகக் கண்ணீர் துளிர்த்தது…

அறையின் நடுவில் போடப் பட்டிருந்த படுக்கையில் சிறு குழந்தையைப் போலத் தூங்கிக் கொண்டிருந்தாள் பல்லவி…

இவளைப் பார்த்துக் கொள்ளுவதற்காகத் தான் ஒரு கிழமைக்கு முதல் சூரிய வர்மனின் தோழியிடம், சரியான நம்பிக்கையான ஒரு ஆள் வேண்டுமெனச் சொல்லியிருந்தார்கள்…

அவளும் வெளி ஆட்களை அதற்காக அழைத்து வருவதை விடவும் இப்போது இக்கட்டில் இருக்கும் தன் தோழியை இதற்காக அனுப்பலாமா எனச் சூரியனிடம் கேட்டு இருந்தாள்…

அதன்படி இன்னும் இரண்டு தினங்களில் பல்லவியைப் பார்த்துக் கொள்ளுவதற்காக ஆள் கிடைத்து விடும்… என்ற ஒரு சிறு நிம்மதி ஆதித்யனுள் துளிர் விட்டது…

சாளரத்தை விட்டு அறையின் கதவை அடைந்தவன் ஒரு கணம் தயங்கிப் பின்னர் அறையினுள் சென்றான்…

படுக்கையின் ஓரமாக அமர்ந்து பல்லவியின் காதோரத்து முடியை ஒதுக்கி விட்டவனின் கை லேசாக நடுங்கியது…

போர்வையை எடுத்து அவளது கழுத்து வரைக்கும் போர்த்தி விட்டு, மெதுவாக எழுந்து வந்து மீண்டும் அறைக் கதவைப் பூட்டி விட்டு வீடு நோக்கிச் சென்றான்…

சூரியவர்மன் முதலில் நின்றிருந்த மாடியில் இப்போது ஆதித்யன் நின்றிருந்தான்…

அவனது மனப் பாரத்திற்கு இந்த இயற்கையாவது ஆறுதலாக இருக்குமா என்பது போலத் தொலை தூரத்து வானத்தை வெறித்தபடி நின்றான் வெகு நேரமாக…

தோட்டத்தில் தமையனைக் காணாமல் மாடிக்கு வந்த சூரியன் அண்ணனின் தோற்றத்தைப் பார்த்ததும் விரைவாக அருகில் வந்து
“அண்ணா என்ன யோசிக்கிறீர்கள்”. என்று பேச்சுக் கொடுத்தான்…

“ஒன்றுமில்லை சூரியா…”

“அப்படி உங்கள் வாய் தான் சொல்லுகிறது அண்ணா”

“அது தான் ஒன்றுமில்லை என்றேனே…”

“சரி சரி விடுங்கள் அண்ணா... நான் ஒன்றும் கேட்கவில்லை…”

“ம்ம்…”

“அண்ணா… வாருங்கள் இருவரும் கடற்கரையில் கொஞ்ச நேரம் நடந்து விட்டு வரலாம்…”

“ம்ம்…”
என்றவாறு உடனே கிளம்பி விட்டான் ஆதித்யன்…

அவனுக்கு மூச்சு முட்டுவது போல இருந்தது…

கடலோரம் கடற்கரைக் காற்றை வாங்கியபடி, வெண்மணலில் காலாற நடந்தால் சற்றே நன்றாக இருக்கும் போல இருந்தது…

அதனால் சூரியன் கேட்டதற்கு அவன் உடனே சரி என்று விட்டான்…

தனது சித்தி ரேகாவை அழைத்துப் பல்லவியைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டே வந்தான்…

கடற்கரைக்குச் சற்றுத் தூரம் போக வேண்டும் என்பதால் இருவரும் தமது வாகனத்தை எடுத்துச் சென்றார்கள்…

கடற்கரையில் ஆட்கள் அதிகமாக இல்லை…

கடலலைகளும் அவசரம் இல்லாமல் நிதானமாகக் தரையைத் தொட்டுத் தொட்டுச் சென்று கொண்டிருந்தது…

இருள் மெதுவாகத் தனது ஆட்சியைத் தொடங்கி விட்டிருந்ததனால் கலங்கரைவிளக்கத்து வெளிச்சம் அந்த இருளை விரட்ட முயற்சித்துக் கொண்டிருந்தது…

கடலோரமாக நடக்கும் வேளையில் காற்று ஆதித்யனின் தேகம் தீண்டிச் சென்றது…

அவனது பாதங்கள் மணலினுள் புதைந்து புதைந்து சற்றே நிம்மதி தேடியது…

அண்ணனின் மனம் புரிந்தவனாகிய தம்பியுடையான் அமைதியே உருவாகி அருகில் நடை பயின்று கொண்டிருந்தான்…

இருவரது மனங்களிலும் இப்போது பல்லவியின் நினைவுகளே உலா வந்து கொண்டிருந்தது…

இருவரும் தமது கவலைகளைக் கடல் மணலினுள் புதைக்க வேண்டிக் கால்கள் ஓயும் வரை நடந்தார்கள் நடந்து கொண்டே இருந்தார்கள்…
இருவரதும் மனக் கவலைகள் தீருமா? தொடருமா? காலம் தான் பதில் சொல்லும்… 😌😌😌

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மழையைத் தானே யாசித்தோம்
கண்ணீர்த் துளிகளைத் தந்தது யார்…
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்…”

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3

IMG-20210627-WA0025~2.jpg

IMG-20210627-WA0008~2.jpg


IMG-20210627-WA0048.jpg

பகலெனும் பெண் சேவையை முடித்துச் சென்று விட்ட பின்னர் இரவுப் பெண் சேவைக்காக வந்திருந்த நேரமது...

இருளெனும் பெண் உடுத்தியிருந்த கரிய நிற ஆடையையும், அது விரவியிருந்த வானகத்தையும் தன் நீண்ட கருவிழிகளால் ஆழ்ந்து நோக்கிக் கொண்டிருந்தாள் காயத்ரி…

காரிருள் என்னவொரு அழகு, காரிருளில் தான் என்னவொரு அமைதி...

காற்று மெதுவாகச் சாமரம் வீசிட, அந்தக் குழுமையாலும் கூட அவளது உள்ளத்து வெப்பத்தைப் போக்கிட முடியவில்லை…

யாரும் இல்லாத அம்மன் கோவில் பிரகாரத்தில் அவள் கால்களை நீட்டி அமர்ந்திருக்க, அவள் மடியில் தலை சாய்த்துப் படுத்திருந்தாள் கஸ்தூரி…

இருளை விழிகள் ஊடுருவித் தொலைந்த வாழ்வைத் தொலைவில் தேடிட, கரங்கள் நான் இருக்கிறேன் உனக்கு என்பது போலக் கஸ்தூரியை அணைத்திருந்தது…

இனிமேல் இந்த வாழ்வில் எனக்கென்று என்ன இருக்கப் போகிறது எனக் கொடி போலத் துவண்ட பொழுதில் காயத்ரிக்குக் கொழுகொம்பென இருந்தவள் கஸ்தூரி…

இந்தப் பூமியில் இப்போது வரைக்கும் அவளுக்கே அவளுக்கென இருக்கும் ஒரே ஒரு ஜீவன் கஸ்தூரி மட்டும் தானே…

காயத்ரியின் வலது கரம் மெதுவாக மேடிட்டு இருந்த வயிற்றைத் தொட்டுப் பார்த்தது…

“இல்லை இன்னுமொரு சின்னஞ்சிறிய உயிரும் இருக்கிறதே…”
அவளது விழிகள் லேசாக நனைந்தன…

விழிநீர் அணைக்கட்டைத் தகர்த்து மெதுவாகக் கன்னத்தில் இறங்கிக் கஸ்தூரியின் முன்னுச்சியில் விழுந்து தெறித்தது…

திடுக்கிட்டு விழி விரித்துப் பார்த்தாள் கஸ்தூரி…

காயத்ரி கலங்கியிருப்பதைக் கணத்தில் புரிந்து கொண்டவள் “அக்கா” என்றபடி அவளைக் கட்டியணைத்து அவள் கண்களைத் தன் கரம் கொண்டு துடைத்து விட்டாள்…

கஸ்தூரி எழுந்ததுமே வெகு பிரயத்தனப் பட்டுத் தன் உணர்வுகளை அதன் எல்லைக்குள் கட்டி வைத்தாள் காயத்ரி…

“அக்கா நீங்களே கண் கலங்கினால் நான் என்ன செய்ய…”

“அதனால் தானடி உனக்குத் தெரியாமல் கொஞ்சம் அழ முயற்சி செய்தேன்…”

“அடடா… இது தெரியாமல் எழுந்து உங்கள் முயற்சியைத் தவிடுபொடியாக்கி விட்டேனா…”
என்றாள் கஸ்தூரி இலகுவாகி…

கஸ்தூரியின் காதை வலிக்காமல் திருகியபடி லேசாகப் புன்னகைத்தாள் காயத்ரி…

அதே நேரம் அவர்கள் இருவரையும் நோக்கி வேகமாக ஓடி வந்தாள் காயத்ரியின் தோழி…

அவளைப் பார்த்ததும் இரண்டு தேவிகளின் முகமும் ஒவ்வொரு விதமான உணர்வுகளைப் பிரதிபலித்தன…

காயத்ரி திருட்டுத்தனம் செய்து விட்டுத் தாயிடம் மாட்டிக் கொண்ட குழந்தை போலவும், கஸ்தூரி தொலைந்த தாயைக் கண்ட சேயைப் போலவும் வந்தவளைப் பார்த்தார்கள்...

“ஏன் காயு நான் உனக்கு யார்?”

“என்ன கேள்வி இது”

“எனக்குப் பதில் தெரிந்தாக வேண்டும்… தயவு செய்து உயிர்த் தோழி மயிர்த் தோழி என்று மட்டும் சொல்லி விடாதே… அப்படி நீ நினைத்திருந்தால் இப்படி இங்கே வந்திருப்பாயா?”

“ஏஞ்சல்…”

“ஏன் காயு நான் உனக்கு மூன்றாவது மனுஷியாகி விட்டேனா?”

“அப்படியில்லை…”

“நீ ஒன்றும் பூசி மெழுகத் தேவையில்லை… முதலில் இருவரும் கிளம்புங்கள்…”
என்றவாறு இருவரையும் அழைத்துக் கொண்டு தனது வீடு நோக்கி விரைந்தாள் ஏஞ்சலினா…

அங்கே ஏஞ்சலினாவின் தாய் வாயிலிலேயே காத்திருந்தார்…

அவரும் ஏதாவது மனம் நோகும் படி சொல்லக் கூடுமோ எனப் பயந்து கஸ்தூரி மீண்டும் காயத்ரியின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டாள்…

“வா காயும்மா… “
என்று அவர் மலர்ந்த வதனத்துடன் வரவேற்ற போது தான் கஸ்தூரி இலகுவானாள்…

இருவரையும் உள்ளே அழைத்து அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்து, உணவு பரிமாறி, அவர்கள் தூங்கச் செல்லும் வரை கூட யாரும் ஏதும் பேசவில்லை…

முக்கியமாக ஏஞ்சலினாவின் தாயார் அனாவசியமான முறையில் எதையும் கேட்கவில்லை…

அதுவே கஸ்தூரிக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது போலும்…

ஏதோ ஒரு தற்காலிகமான பாதுகாப்பு கிடைத்து விட்டது என்கின்ற நிம்மதி அவளுக்கு…

காயத்ரிக்கோ நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்கும் வரையிலும் மனது ஒரு நிலைக்கு வராமல் தவித்தது…

இந்த இருள் விலகி எப்போது விடியுமோ எனக் கொஞ்சம் மலைப்பாகவும் இருந்தது…

தான் இருக்கும் தைரியத்தில் தான் கஸ்தூரி இருக்கிறாள் என்பதனை அறியாதவள் அல்லவே காயத்ரி…

அதற்காகவே தனது கலக்கத்தை அவள் வெளியே காட்டிக் கொள்ளவில்லை…

ஒரு பெண் சுயமாக உழைத்துச் சம்பாதிப்பதென்பது எவ்வளவு தூரம் அவளுக்குக் கை கொடுக்கும் என்பதை அவள் இப்போது தெள்ளத் தெளிவாக உணர்ந்து விட்டிருந்தாள்…

யாரையும் சார்ந்திருக்காமல் சொந்தக் காலில் நின்றிருந்தால் இந்தத் துர்ப்பாக்கிய நிலை அவளுக்கு வந்திருக்குமா?
முன்பே முடங்கி இருக்காமல் அவள் எதையாவது செய்திருக்கலாம்…

அது சரி முடிந்ததை அப்படிச் செய்திருக்கலாமோ இப்படிச் செய்திருக்கலாமோ என எண்ணுவதால் இப்போது என்ன ஆகப் போகிறது…

இனிமேலாவது நன்றாகச் சிந்தித்துச் சுயமாக முடிவு எடுக்க வேண்டும்…
எனத் தனக்குள் தானே சொல்லிக் கொண்டாள்...

மெது மெதுவாக இருள் விலகி அடுத்த தினம் என்பதும் வந்து சேர்ந்தது…

குளித்து முடித்து வழமை போல் வெண்ணிறச் சேலையை உடுத்தியிருந்தார்கள் தேவிகள் இருவரும்…

அவர்களது தோற்றத்தைப் பார்த்ததும் ஏஞ்சலினாவின் முகம் லேசாக இறுகிற்று…

“ஏன் காயு ஏன்…? யாருக்காக இந்த வெள்ளை நிறம்… உங்கள் சம்பிரதாயங்களை நான் கொச்சைப் படுத்தவில்லை… ஆனால் உலகம் தான் மாறிக் கொண்டு வருகிறதே… நீங்கள் மட்டும் எதற்காக இப்படி இதைக் கட்டிக் கொண்டு அழுகிறீர்கள்…”

“அது…”

“எவ்வளவு தைரியமான பெண்ணையும் சமுதாயம் என்ற பெயரைப் போர்த்த சில அதிமேதாவிகள் நொடியில் சாய்த்து விடுவார்களோ?”

“அதில்லை ஏஞ்சல்... எனக்கும் இது பழகி விட்டது…”

“பழகி விட்டாதா? இல்லை பழக்கப் படுத்திக் கொண்டாயா?”

“ஏஞ்சல் இந்த விவாதம் வேண்டாமே”

“என்னவோ செய்… நான் சொன்னால் கேட்கும் ஆளா நீ”
என்றவாறு முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விட்டாள் ஏஞ்சலினா…

அவள் சென்ற திக்கைப் பார்த்தபடியே நின்ற காயத்ரியின் தோளில் கை வைத்து அழுத்தினாள் கஸ்தூரி…

அவளுக்கும் இந்த நிலை பிடிக்கவில்லை தான்…

ஆனால் எல்லாம் அவளுக்குப் பிடித்தது போலவா நடக்கிறது…
இந்த நிலையும் மாறலாம்…

ஆனால் அதற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் தேவைப் படலாம்… அன்று நாங்கள் தான் இருக்க மாட்டோமே… என அவள் மனம் அரற்றியது...

மனித வாழ்வில் சில வரைமுறைகளை வகுத்ததும் மனிதன் தானே…
அந்த வரைமுறைகளைத் தகர்ப்பதும் மனிதன் தானே…

பொறுத்திருந்து பார்க்கலாம்… கட்டுப்பாட்டை இழந்து இஷ்டம் போல வாழ மாட்டோம்... ஆனால் மூடக் கொள்கையைத் தகர்த்து கட்டுப்பாட்டுடன் விருப்பம் போலச் சுதந்திரமாக வாழலாம் தானே…?

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
சாஸ்திரங்கள் பலபல கற்பாராம்
சவுரியங்கள் பலபல செய்வாராம்
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பாராம்
மூடக் கட்டுக்கள் யாவும் தகர்ப்பாராம்
காத்து மானிடர் செய்கை அனைத்தையும்
கடவுளர்க்கு இனிதாகச் சமைப்பாராம்
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வாராம்
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ?”

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Last edited:

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 4

IMG-20210627-WA0055.jpg

IMG-20210627-WA0049.jpg

IMG-20210627-WA0043.jpg

IMG-20210627-WA0048.jpg

மெல்லென இருளைக் கிழித்து வெளிச்சம் பரவிக் கொண்டிருந்த நேரம்…

மழை லேசாக விட்டு விட்டு மண்ணை ஸ்பரிசித்துக் கொண்டிருந்தது…

வீடே துயிலில் ஆழ்ந்திருக்க, ஆதித்யன் மட்டும் அவசர அவசரமாகத் தயாராகிக் கொண்டிருந்தான்…

அவன் மாடி அறையை விட்டு வெளியே வருவதற்காகக் கீழே தூக்கக் கலக்கத்துடன் காத்திருந்தான் சூரியன்…

நேற்றிரவு தான் அவர்களது பழத் தோட்டத்தின் மேற்பார்வையாளர் முருகமூர்த்தி அலைபேசியில் அழைத்திருந்தார்…

யாரோ வேண்டுமென்றே பழங்கள் பழுப்பதற்காக மோசமான இரசாயன மருந்தைத் தெளித்து விட்டார்களாம்…
இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் அல்லவா…

“உடையவன் பார்க்கா விட்டால் ஒரு முழம் கட்டை”
என்பது இது தான் போலும்…

யாரையும் நன்றாக வாழ விட மாட்டார்களே ஏதாவது ஒரு வகையில் தொந்திரவு கொடுக்கத்தான் விளைகிறார்கள்…

ஆதித்யன் தான் இதற்குத் தீர்வு சொல்லுவான் என்பது முருகமூர்த்தியின் அசைக்க முடியாத நம்பிக்கை…

அதனால் ஆதித்யனை வரும் படி வேண்டி இருந்தார்…

இரவே ஆதித்யன் புறப்பட்டு இருப்பான் சூரியன் தான் அதிகாலையில் போகலாம் அண்ணா என்று தடுத்து விட்டான்…

அதனால் தான் இந்த அதிகாலை நேரத்துப் பயணத்திற்கான தயார்நிலை…

கீழே இறங்கி வந்த ஆதித்யனைப் பார்த்து சூரியன்
“அண்ணா இன்று தான் பல்லவிக்காக ஒழுங்கு செய்யப்பட்ட பெண்ணுடன் வருவதாக ஏஞ்சல் சொல்லி இருந்தாள்…”
என்றான்.

“அதனால் என்ன?”

“இல்லை அண்ணா… நீங்களும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்”

“நீ தான் இருக்கிறாயே சூரியா” என்றவாறு தம்பியின் தோளைத் தட்டியவன் தங்கள் பழத் தோட்டத்திற்குச் சென்று விட்டான்…

ஆதித்யனின் வாகனம் வீட்டு வாசலைக் கடந்து வலது பக்கம் திரும்பவும், இடது பக்கமாக இன்னொரு வாகனம் வந்து வாசலை அடைந்தது…

இன்னொரு வாகனத்தின் சத்தத்தைக் கேட்ட, சூரியன் விரைந்து வெளியே வந்தான்…

முதலில் ஏஞ்சலினா இறங்கி இவனை நோக்கி வந்தாள்…

அவளைத் தொடர்ந்து இறங்கியவளை ஒரு நொடிக்கும் குறைவாகப் பார்த்த சூரியன் மீண்டும் ஏஞ்சலினாவிடம் பார்வையைத் திருப்பிக் கொண்டான்…

“சூரியா… இருவருக்கு ஏற்ற வகையில் தங்குமிடத்தை ஒழுங்கு செய்து கொடுத்து விடுங்கள்”

“ஏற்கனவே ஒழுங்கு செய்தாயிற்று ஏஞ்சல்… இருவர் என்ன அங்கே நால்வர் கூடத் தங்கிக் கொள்ளலாம்…”

“சரி சூரியா…”
என்றவாறு பின்னால் திரும்பி, இறங்கி நின்றிருந்த கஸ்தூரியை அருகே அழைத்தாள்…

அருகில் வந்தவளை சூரியனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் ஏஞ்சலினா…

“சூரியா… இது கஸ்தூரி தேவி… என் உயிர்த்தோழியின் சகோதரி…”

“வணக்கம்…”
என்றான் சூரியன் சிறு தயக்கத்துடன் அவள் முகம் பார்த்து…

பதிலுக்கு அவளும்
“வணக்கம்” என்றாள்…
ஆனால் அவனது முகத்தைப் பார்க்கவில்லை…

“சூரியா… இன்றிலிருந்து என்தோழியும் இவளும் உங்கள் பொறுப்பு…”

“நிச்சயமாக”

“அப்படியானால் இவர்களை இன்றே இங்கு விட்டுச் செல்கிறேன்”

“உன் இஷ்டம்”

“அப்புறம் இன்னொரு விஷயம்” என்றவாறு காயத்ரி என்று அழைத்தாள் ஏஞ்சலினா…

அப்போது தான் வாகனத்தில் இருந்து மெதுவாக இறங்கி வந்தாள் காயத்ரி…

காயத்ரியைப் பார்த்த சூரியாவின் முகத்தில் ஒரு அதிர்வு…

அவன் சட்டென்று கஸ்தூரியைப் பார்த்தான் அவளோ தரையைப் பார்த்தபடி நின்றிருந்தாள்…

சூரியா ஏஞ்சலினாவைப் பார்த்து “இவர்களின் பெயர்…”
எனத் தடுமாறினான்…

“இவள்தான் காயத்ரி தேவி”
என்றாள் ஏஞ்சலினா சாதாரணமாக…

அதன் பின்னர் இருவரையும் அங்கேயே விட்டு விட்டு ஏஞ்சலினா விடைபெறும் வரையிலும் சூரியன் ஏதோ ஒரு தீவிரமான யோசனையில் தன்னை மூழ்கடித்திருந்தான்...

கஸ்தூரியையும் காயத்ரியையும் தோட்டத்தில் பல்லவி தங்கியிருந்த வீட்டில் விட்டு விட்டு சூரியனை மாத்திரம் தனியே அழைத்துக் கொண்டு வந்தாள் ஏஞ்சலினா…

“சூரியா… அவர்கள் இருவரையும் உன் பொறுப்பில் விட்டுப் போகிறேன்… காயத்ரி வேறு தாயாகப் போகிறாள்... இது அவளுக்கு ஐந்தாவது மாதம்... கவனமாகப் பார்த்துக் கொள்... "

“அவர்கள் இருவரும் இனிமேல் என் பொறுப்பு… நீ ஒரு யோசனையும் இல்லாமல் வீட்டுக்குப் போ ஏஞ்சல்”

“எனக்கு உன்னைப் பற்றித் தெரியாதா சூரியா… ஆனால்…”

“ஆனால்… என்ன? எதற்கு இராகம் இழுக்கிறாய்… சொல்ல வந்ததைச் சொல்லி விடு”

“உன் அண்ணன் இருக்கிறாரே… அவரை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது…”

“அவரை நினைக்கப் பயமாக இருந்தால் நினையாதே”

“ஏய்… “

“சரி சரி… அவனை நான் பார்த்துக் கொள்கிறேன்… நீ கவலைப்படாதே”
என்றான் சூரியா…

அதன் பிறகே சிறு நிம்மதியுடன் தன் வீட்டுக்குப் போனாள் ஏஞ்சலினா…

அங்கே புது வீட்டினுள் நுழைந்ததும் கஸ்தூரி கொண்டுவந்திருந்த தங்கள் பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தாள்…

காயத்ரி திறந்திருந்த சாளரத்தின் வழியே வெளியே பார்த்தாள்…

அங்கே அழகான பூச்செடிகள், கொடிப்பந்தல்கள், பழமரங்கள் எனத் தோட்டம் அத்தனை ரம்மியமாக இருந்தது…

தோட்டத்தை அடுத்து ஆடம்பரம் இல்லாத அளவான அழகான மாடி வீடு மனதை அமைதி கொள்ளச் செய்யும் வகையில் காணப் பட்டது…

காயத்ரியின் மனம் ஏதோ பாதுகாப்பான இடத்துக்கு வந்து விட்டது போல உணர்ந்தது…

பொருட்கள் அதிகம் இல்லாததால் தனது வேலையை முடித்து விட்டுத் தன் அக்காவைத் தேடி வந்தாள் கஸ்தூரி…

சாளரக் கம்பிகளைப் பிடித்திருந்த அக்காவின் அருகில் வந்தவள் அவளது தோள்களில் லேசாகச் சாய்ந்து கொண்டாள்…

“அக்கா… கடவுள் ஒருவேளை இருக்கிறார் போல…”

“என்னடி சொல்லுகிறாய்”

“இரண்டு தினங்களுக்கு முன்பு வரை நாம் அனுபவித்த நரக வேதனை என்ன…
இப்போது ஒரு சிறு விஷயத்தைக் கூட இரசித்துப் பார்க்க முடிவதென்ன… “

“அதற்கும் கடவுள் இருக்கிறார் என்று சொல்வதற்கும் என்னடி சம்மந்தம்”

“அக்கா… நமக்கு இப்படியொரு மாற்றம் ஏற்படும் என்று நேற்று வரை கூட நான் எண்ணி இருக்கவில்லை…”

“எண்ணம் போல நடப்பதற்கு இது என்ன நாமே இயக்கி நடிக்கும் திரைப்படமா? வாழ்க்கையடி பெண்ணே… எதிர்பாராத திருப்பங்கள் எதிர்பாராத போது நடந்தே தீரும்…”

“அக்கா… நீங்கள் நன்றாகப் பேசக் கற்றுக் கொண்டு விட்டீர்கள்”

“என்ன செய்ய வாயாடித் தங்கை வாய்த்த நேரம்… அதனால் எனக்கும் பேச வருகிறது”

“போங்கள் அக்கா… நான் ஒன்றும் வாயாடி இல்லை…”
என்றவாறு சிணுங்கினாள் கஸ்தூரி...

அவளைத் தன் கரம் கொண்டு தன்னோடு அணைத்துக் கொண்டாள் காயத்ரி…

அந்த நேரத்தில் திறந்திருந்த கதவை யாரோ தட்டுவது போல இருந்தது…

“யாரக்கா திறந்திருக்கும் கதவைத் தட்டுவது”

“யாரேனும் பண்பாடு தெரிந்த இங்கிதம் புரிந்தவர்களாக இருக்கும் “
என்றவாறு இருவரும் எட்டிப் பார்த்தனர்…

வெளியே சூரியவர்மன் நின்றிருந்தான்…

அவனருகில் ஒரு சிறு பையன் கையில் மூடிய தட்டுடன் நின்றிருந்தான்…

“உள்ளே வரலாமா…?”

“உள்ளே வாருங்களேன்… இது உங்கள் வீடு அல்லவா எதற்கு எங்களிடம் அனுமதி கேட்கிறீர்கள்”

“எங்கள் வீடானாலும் இப்போது நீங்கள் இருக்கும் இடம்”
என்றவாறு உள்ளே வந்தவன் தட்டை வைக்கச் சொன்னான்…

பின்னர் அவர்கள் இருவரையும் பார்த்து
“சௌகரியமாக இருக்கிறதா? உங்களுக்கு ஏதும் உதவி வேண்டுமெனில் என்னிடம் கேட்டுக் கொள்ளலாம்”
என்று சொல்லி விட்டுப் போய் விட்டான்…

“பரவாயில்லையே… இந்த உலகத்தில் பண்புள்ளவர்களும் இருக்கிறார்களே அக்கா”

“நாம் பார்த்த சில தகுதியற்றவர்களைப் போலவே எல்லோரும் இருக்க மாட்டார்கள் கஸ்தூரி…
பண்பானவர்களும் இருக்கிறார்கள் அதனால் தான் இந்த உலகம் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது…”

“உண்மை தானக்கா”

“இதோ பார் கஸ்தூரி ஒருவர் நமக்குத் துரோகமோ அல்லது கெடுதலோ செய்து விட்டால் எல்லோருமே அப்படித்தான் என்று விட்டு நம்பிக்கை இழந்து விடக் கூடாது… ஐந்து விரல்களும் ஒரே போல இருப்பதில்லை தானே அப்படித்தான் இதுவும்...”

“சரி அக்கா”

“சரி சரி வா… வந்த களைப்புத் தீரக் குளித்து விட்டு வரலாம்”
என்றவாறு எழுந்து கொண்டாள் காயத்ரி

இருவரது வாழ்வும் இனிமேல் எவ்விதம் இன்ப துன்பங்களைச் சுமந்து எப்படிப் பயணிக்கப் போகிறது என்பதைக் காலம் தான் பதில் சொல்லும்…😌😌😌

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வானகம் தூரம் இல்லை
வங்கக்கடல் ஆழம் இல்லை
நம்பிக்கை வைப்போம் இந்த வாழ்விலே...
சூரியனை வட்டம் இட்டு
தன்னைத் தானே சுற்றும் பூமி
நம்மைச் சுற்றி வருமே அந்த வானிலே”

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5

8aa3a170a5996eb04eb8388d291a4d6f~3.jpg

224e0cae4960396071f09344975fabf4~3.jpg

0417e805ebd316e8e7b638c204075876~2.jpg

காலையில் கீழ் திசையில் நின்ற கதிரவன் யாருக்காகவும் காத்திருக்காமல் வானத்தின் உச்சிக்கு வந்திருந்த நேரம்…

உச்சி வேளையின் உருக்கும் வெயிலுக்குத் தோட்டத்துக்குள் இருந்து சிலுசிலுவென வந்த காற்று இதமாக இருந்தது...

கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த சிறு சிறு குருவிகள் நாங்களும் இங்கே தான் இருக்கிறோம் என்பது போலக் கீச்சிட்டுக் கொண்டிருந்தன…

அந்த நேரத்தில் காயத்ரி, கஸ்தூரி இருவரையும் பல்லவியின் அறைக்கு அழைத்துச் சென்றிருந்தான் சூரியவர்மன்…

அங்கே பல்லவியோ சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு இருந்தாள்…

அறையினுள் நுழைந்ததும் பல்லவியின் நிலையைப் பார்த்ததும் காயத்ரிக்கு லேசாகக் கண்ணில் நீர் துளிர்த்தது…

உணவுத் தட்டைத் தூக்கி எறிந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்தவளை என்ன செய்து தடுப்பது என்பது போலச் சூரியவர்மன் விழித்துக் கொண்டு நின்றிருந்தான்…

அங்கே சூரியனின் சித்தி ரேகா அவளைச் சமாதானப் படுத்த முயன்று முயன்று களைத்திருந்தார்…

ஒரு நொடியில் நிலைமையைப் புரிந்து கொண்ட காயத்ரி சட்டென்று பல்லவி அருகில் சென்று அவளது கரத்தைப் பற்றிக் கொண்டாள்…

என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை அவளது கரம் பட்டதுமே கட்டுக்குள் வந்த புயல் போல அமைதியாக நின்றாள் பல்லவி…

இதைப் பார்த்திருந்த மற்ற மூவருள் இருவர் வியப்பாகப் பார்க்க, ஒருவன் மட்டும் அதை எதிர்பார்த்தது போல நின்றிருந்தான்…

பல்லவியை அமர வைத்த காயத்ரி அதன் பின்னரே அவள் முகத்தைப் பார்த்தாள்…

பல்லவியின் முகத்தைப் பார்த்ததும் அதிர்ந்து விழித்த காயத்ரியை சூரியவர்மனைத் தவிர மற்ற இருவரும் பார்க்கவில்லை…

அவளையும் மீறி அவளது உதடுகள்
“அனூ”
என்ற பெயரை உச்சரித்தது…

மெதுவாகப் பல்லவியின் முடி கோதித் தன்னோடு அணைத்துக் கொண்டாள். அவளது கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் இறங்கியது.

பல்லவியும் தாய்ப் பறவையின் சிறகுக்குள் ஒடுங்கும் குஞ்சைப் போல காயத்ரியுடன் ஒட்டிக் கொண்டாள்…

காயத்ரியைத் தொடர்ந்து அருகே வந்த கஸ்தூரி அப்போது தான் பல்லவியை முழுமையாகப் பார்த்தாள்…

பார்த்தவளோ
“அனூக்கா…”
என்றவாறு அவள் காலடியில் மண்டியிட்டு இருந்து கதறி அழத் தொடங்கினாள்…

புதிதாக வந்த இரு பெண்களதும் இந்தச் செய்கையை வியப்புடனும் விளங்காமலும் பார்த்திருந்த தன் சித்தி ரேகாவை அழைத்துக் கொண்டு தானும் வெளியே வந்து விட்டான் சூரிய வர்மன்…

“என்னப்பா சூரியா யாரிவர்கள்… நம் பல்லவிப் பொண்ணும் அவர்களோடு என்ன சமத்தாக இருக்கிறாள்… இவள் இப்படி யாரோடும் ஒட்டிக் கொள்ள மாட்டாளே…”

“சித்தி… எது எப்படியோ நமக்குப் பல்லவியின் நலன் தானே முக்கியம்”
எனப் பட்டுக் கத்தரித்தாற் போலச் சொன்ன சூரியனை முறைத்த படி
“சொல்ல விருப்பமில்லை என்று சொல்லுவது தானே சூரியா…”
என்றார் சித்தி...

“அப்படியில்லை சித்தி…”

“சரி நீ ஒன்றும் சொல்லத் தேவையில்லை… சாப்பிட வா”
என்றவாறு சூரிய வர்மனின் சித்தி ரேகா சென்று விட்டார்...

அவர் சென்றதும் மீண்டும் பல்லவியின் அறைக்குள் சென்றான் சூரிய வர்மன்…

“சாப்பிட வாருங்கள்”

“இல்லை இப்போது பசிக்கவில்லை”

“மதிய உணவு உண்ணும் நேரம் கடந்து விட்டது”

“இல்லை… நாங்கள் பிறகு சாப்பிடுகிறோம்”

“பசிக்காது விட்டாலும் நீங்கள் இந்த நேரத்தில் உணவில் அக்கறை செலுத்த வேண்டும் அல்லவா”
என்றான் சூரியன் மெதுவாக…

அப்போது தான் காயத்ரியைப் பார்த்த கஸ்தூரி
“பார்த்தீர்களா அக்கா நான் கூட மறந்து விட்டேன்… வாருங்கள் சாப்பிடலாம்”
என்றவாறு எழுந்து அவளது கரத்தைப் பற்றினாள்…

பல்லவியை அணைத்திருந்த கரத்தை விலக்கியபடி எழுந்த காயத்ரியின் கரத்தை இப்போது பல்லவி பற்றிக் கொண்டாள்…

அவளது கரத்தைப் பற்றியதும் இல்லாமல் தானும் அவளுடனேயே வருவேன் என்பதுபோல எழுந்து நின்றிருந்தாள்…

பல்லவியின் செய்கையைப் பார்த்த காயத்ரி சிறு தயக்கத்துடன் சூரியனைப் பார்த்தாள்..

அவனோ
"அழைத்து வாருங்கள்"
என்றவாறு வெளியே சென்று விட்டான்…

அவன் சென்றதும் மூவரும் மெதுவாக வெளியே வந்து சாப்பாட்டறை நோக்கி நடந்தார்கள்…

பல்லவி வாய் திறந்து எதுவும் பேசவில்லை ஆனால் அடிக்கடி காயத்ரியின் முகத்தை நிமிர்ந்து பார்ப்பதும் பிறகு கீழே பார்ப்பதுமாக நடந்து வந்தாள்…

சாப்பாட்டு அறையிலும் காயத்ரியின் அருகிலேயே அமர்ந்து கொண்டு அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் பல்லவி…

“அனூ சாப்பிடுகிறாயா…”
என்றவாறு ஒரு கை சாதத்தைப் பிசைந்து அவள் வாயருகே கொண்டு சென்றாள் காயத்ரி…

மறுப்பேதும் சொல்லாமல் மெதுவாக வாயைத் திறந்து சாதத்தை வாங்கிக் கொண்டாள் பல்லவி…

அடுத்த கை சாதத்தை ஊட்டக் கொண்டு வந்த காயத்ரியின் கரத்தைப் பற்றித் திருப்பி அவளது வாயருகே கொண்டு சென்றாள் பல்லவி…

பல்லவியின் இந்தத் திடீர் மாற்றத்தால் ஏதோ ஒரு இனம் புரியாத நிம்மதி தன்னுள் உருவாகுவதை உணர்ந்தான் சூரியன்…

“அண்ணா மட்டும் இதைப் பார்த்தால்... அப்புறம் என்ன அவனது வாய்க்குள்ளும் முப்பத்தியிரண்டு பற்கள் இருக்கிறது என்பதை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்…
சரியான சிடுமூஞ்சியாக மாறி விட்டானே அவனும் திரும்பி வந்ததும் முழுவதும் மாறிவிடுவான் என்ற நம்பிக்கை இப்போது எனக்கு வந்து விட்டது…
ஆனானப் பட்ட பல்லவியே இப்படி நடந்து கொள்கின்ற போது அண்ணா மட்டும் அப்படியே இருந்து விடுவானா என்ன?
ஆனால் இதற்கெல்லாம் காரணம்…”
என்ற எண்ணத்துடன் காயத்ரியைப் பார்த்தான் சூரியன்…

அவளோ சுற்றுப்புறத்தையே மறந்து தன் கருமமே கண்ணாகிப் பல்லவிக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள்…

பல்லவியைப் பார்த்ததும் காயத்ரி, அருகே இருந்த கஸ்தூரியையே முழுவதுமாக மறந்து விட்டாளெனும் போது சுற்றுப்புறத்தை எவ்விதம் கருத்தில் கொள்ளுவாள்…

உணவு உண்டு முடித்ததும் அவளை வெளியே அழைத்துச் சென்று விட்டாள் காயத்ரி…

இருவரையும் பார்த்தபடி சாதத்தைப் பிசைந்து கொண்டிருந்த கஸ்தூரி அவர்கள் இருவரும் எழுந்து செல்லவும் திக்கு முக்காடிப் போனாள்…

உணவை முடிக்காமல் எழுந்து கொள்ளவும் முடியவில்லை…
சூரியனோடு தனியாக இருந்து உண்ணவும் ஒரு மாதிரியாக இருந்தது…

அவளது நிலையைப் புரிந்து கொண்டவனான சூரியன்...
நிதானமாக உண்டு கொண்டிருந்த உணவை வேகமாக முடித்து விட்டு எழுந்து போய் விட்டான்…

எழுந்து சென்றவனையே பார்த்தவளுக்குச் சற்று நிம்மதியாக இருந்தது…

அதன் பின்னரே உணவை மெதுவாக உண்ணத் தொடங்கினாள் கஸ்தூரி...

இப்படிச் சிறு சிறு விஷயத்தில் கூட அவளுக்கு மதிப்புக் கொடுக்கப்பட்டதில்லை...

அவன் வேண்டுமென்றால் என் வீடு தானே என்பது போல அங்கேயே அதிக நேரம் இருந்திருக்கலாம் ஆனால் அவன் அவ்விதம் செய்யவில்லை என்று எண்ணினாள்...

பின்னர் உடனேயே அவனுக்குக் கூட இங்கே என் முன்னால் உண்பது சங்கோஜமாக இருந்திருக்கலாம்...
அதனால் தான் சீக்கிரமாகப் போய் விட்டான் என நினைத்துக் கொண்டபடி காயத்ரியைத் தேடிப் போனாள்...

தோட்டத்தில் போடப் பட்டிருந்த பிரம்பு நாற்காலியில் பல்லவியும் காயத்ரிமும் அமர்ந்திருந்தனர்...

கஸ்தூரி அங்கு சென்று இருவரதும் காலடியில் அமர்ந்து கொண்டு அவர்கள் இருவரையுமே அண்ணாந்து பார்த்தாள்…

அவளது பார்வையைச் சந்தித்த காயத்ரி
“என்னடி அப்படிப் பார்க்கிறாய்”
என்றாள்...

“அக்கா இரண்டு தினங்களுக்குள் எத்தனை எதிர்பாராத திருப்பங்கள் என்று வியப்பாக உள்ளது”

“உண்மை தான்”

“எனக்கு இப்போது தானக்கா தொலைந்த நிம்மதி தொலைவில் தெரிவது போன்றதொரு உணர்வு ஏற்படுகிறது…”
என்ற கஸ்தூரியைப் பார்த்த காயத்ரி லேசாகப் புன்னகைத்தாள்...

காயத்ரியின் லேசான புன்னகை எப்போது விரிந்த புன்னகை ஆகுமோ என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லும்…😌😌😌

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வருகின்ற சோகங்கள் நிரந்தரம் இல்லையே
சிறகுகள் சரியென்றால் வானம் பக்கம் தான்
அழகிய வானவில் தினம்தோறும் தோன்றுமே
நம்பிக்கை வைத்தாலே வாழ்க்கை சொர்க்கம் தான் “

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 6

9823450f2d1cfa98e0c380889f290118~2.jpg

af9f12421fcb24c0dd516d883db04184~2.jpg

c9e8212292bbbf472901fb8db9076e07~2.jpg

IMG-20210701-WA0016~2.jpg

IMG-20210701-WA0043~2.jpg

மலர்கள் மொட்டவிழ்ந்து மணம் பரப்பும் அதிகாலை நேரத்தில்…

மாமரத்துக் குயிலின் இனிய கானத்தில் மெதுவாகக் கண் விழித்துப் பார்த்தாள் காயத்ரி…

ஒரு நொடியில் தான் புது இடத்தில் இருப்பதைப் புரிந்து கொண்டாள்…

ஆனால் இரண்டு கைகளையும் அவளால் தூக்க முடியவில்லை…

என் கைகளுக்கு என்னவாயிற்று என யோசித்தவள்…
மெல்லத் தலை திருப்பிப் பார்த்தாள்...

அவளது வலது கையைப் பிடித்தபடி கஸ்தூரியும் இடது கையைப் பிடித்தபடி பல்லவியும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்…

மெல்லிய புன்னகை பூத்தவள் இருவர் கரத்தையும் மெதுவாக எடுத்து விட்டு ஓசைப் படாமல் எழுந்து சென்றாள்…

வாசலில் நின்று மீண்டும் திரும்பிப் பார்த்தாள்…

பல்லவியின் குழந்தைத்தனமான முகமும் கஸ்தூரியின் பெரியமனுஷித் தனமான முகமும் அவளை அமைதி கொள்ளச் செய்தது…

தொலைந்து போன ஒன்று இனிமேல் பார்க்கவே முடியாது என்றிருந்த ஒன்று மீண்டும் கண் முன்னே தோன்றும் போது மனமது எப்படிக் குதியாட்டம் போடும்…

பல்லவியைப் பார்த்ததும் அத்தகையதொரு நிலையில் இருந்தாள் காயத்ரி…

ஆனாலும் முன்பு இருந்ததைப் போல இல்லாமல் அவள் இப்படி மாறியதற்குக் காரணம் தான் என்ன?

இந்தக் கேள்வி தான் மரங்கொத்தியாகி மனத்தைத் துளையிட்டுக் கொண்டிருந்தது...

மெதுவாக வெளியே தனது பார்வையை ஓட விட்டாள்…

அதிகாலை நேரத்தில் தோட்டத்திலிருந்து வரும் சுகந்தமான தென்றல் அவளை வருடிச் சென்றது…

என்றுமில்லாத புத்துணர்வு அவளுள் உருவானதை அவள் இனிதாக இரசிக்கத் தொடங்கினாள்…

எத்தனை நேரம் அப்படியே நின்றாளோ தெரியவில்லை…

“அக்கா” என்ற கஸ்தூரியின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்…

கஸ்தூரியும் பல்லவியும் அப்போது தான் துயில் நீங்கி எழுந்திருந்தார்கள்…

அந்த நேரத்தில் அங்கு வந்த சூரியனின் சித்தி “பல்லவி” என்றழைத்தார்…

எவ்வித அசைவும் இல்லாமல் அமைதியாக அமர்ந்து இருந்தாள் பல்லவி…

அதனைப் பார்த்த காயத்ரி “நீங்கள் போங்கள் நாங்கள் அழைத்து வருகிறோம்” எனச் சொல்ல அவரும் போய் விட்டார்…

மெதுவாகப் பல்லவியின் அருகில் சென்றவள்
பல்லவியின் முகத்தை லேசாக நிமிர்த்தி அவளது விழிகளுக்குள் பார்த்தாள்...

“அனூ” என்று அவளது உதடுகள் உச்சரித்தன…

பதிலுக்கு அவள் அமைதியாக இருப்பாளோ என்று கஸ்தூரி நோக்கினாள்…

ஆனால் பல்லவியிடமிருந்து “ம்ம்ம்” என்ற சத்தம் கேட்டது…

மீண்டும் “அனூ” என்றதற்குக் காயத்ரியின் முகத்தை நிமிர்ந்து பார்த்துப் புன்னகை செய்திருந்தாள் பல்லவி…

அவளது புன்னகை முகம் பார்த்த காயத்ரிக்கு வானத்தில் பறப்பது போன்றதொரு உணர்வு…

“அக்கா… அக்கா… பாருங்களேன்… அனு அக்காவிற்கு எங்களைத் தெரிகிறது…”

“உண்மை தானடி”

“எங்களுடன் இனியாவது பேசுவார்களாக்கா”

“பேசுவாள் பேச வேண்டும்”
என்றாள் காயத்ரி கண்ணில் நீருடன்…

“அக்கா… அனு அக்கா இப்படிச் சிரிப்பதே முன்னேற்றம் தானே”
என்றாள் கஸ்தூரி தானும் கண்ணைத் துடைத்தபடி…

பல்லவியைக் குளிப்பாட்டி உடை அணிவித்து விட்டு, அவளுக்கு உணவை ஊட்டுமாறு கஸ்தூரியிடம் சொன்னவள்…

மெதுவாக வெளியே சென்றாள்…

இந்த நேரத்தில் சூரிய வர்மன் தனியாகவே இருப்பான் என்பதைக் கணித்தவள் பெரிய வீடு நோக்கிச் சென்றாள்…

தோட்டத்து வீட்டிலிருந்து வெளியே வந்த காயத்ரி தங்கள் வீடு நோக்கி வருவதனை சாளரத்தின் வழியே பார்த்தான் சூரிய வர்மன்…

அவள் ஏன் வருகிறாள் என்பதைப் புரிந்து கொண்டவன் மெதுவாக வரவேற்பு அறையில் வந்து அமர்ந்து கொண்டான்…

வீட்டு வாசலில் வந்து உள்ளே எட்டிப்பார்த்தாள் காயத்ரி

“இங்கே தான் இருக்கிறேன் உள்ளே வாருங்கள்”

“நான் உங்களைத் தேடித் தான் வந்தேனென்று உங்களுக்கு எப்படித் தெரியும்”

“எல்லாம் ஒரு ஊகம் தான்”

“ஊகமா? அப்படி எதை ஊகித்தீர்கள்”

“முதலில் வந்து அமருங்கள்… இப்போதைக்கு இங்கே யாரும் வர மாட்டார்கள்”

“நன்றி”

“பரவாயில்லை”

“அப்படியென்றால் நான் வந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா?”

“முழுமையாகத் தெரியாது… ஆனால் பல்லவி பற்றிப் பேசத்தான் வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்”

“உண்மை தான்”

“சரி என்ன கேட்க வேண்டும் நான் என்ன சொல்ல வேண்டும்”

“பல்லவிக்கு ஏன் இந்த நிலை என்று சொல்ல முடியுமா”

“பல்லவி தொடர்பான விஷயங்களை என் அண்ணனால் தான் கூற முடியும்... மன்னிக்க வேண்டும் என்னால் எதுவும் கூற முடியாது”
என்றான் சூரியன் வேண்டுமென்றே…

அதை அறியாதவளாகி
“உங்கள் அண்ணனுக்கு மட்டும் தான் தெரியுமா? சரி நான் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்”
என்றாள் காயத்ரி…

அவளை ஏறெடுத்துப் பார்த்தவன்
“ஆனால் அண்ணா இப்போது இங்கே இல்லை… இன்றிரவு தான் வருவதாகச் சொன்னான்”

“அப்படியா அவர் வந்ததும் என்னிடம் சொல்லுங்கள்… நான் அவரைப் பார்க்க வேண்டும்…”
என்றவாறு எழுந்து சென்றாள் காயத்ரி...

காயத்ரி செல்வதையே பார்த்துக் கொண்டு இருந்த சூரியன்...

“அவரைப் பார்க்க வேண்டுமா? நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டும் அதற்காகத் தானே நான் இவ்வளவு பாடுபடுகிறேன்”
என மனதினுள் பேசிக் கொண்டான்…

காயத்ரி சென்றதும் தன் அலைபேசியை எடுத்துத் தன் அண்ணனுக்கு அழைத்தான்…

எதிர்முனையில் அண்ணனின் குரல் கேட்டதும்
“எப்போது அண்ணா இங்கே வருகிறாய்… எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரப் பார்”
என்றவன் தமையன் பதில் சொல்லுவதற்கு முன்பே அழைப்பைத் துண்டித்தான்…

“உனக்கு மட்டுமாடா பேசிக் கொண்டு இருக்கும் போதே பதில் சொல்ல முன்பு அழைப்பைத் துண்டிக்கத் தெரியும்… எங்களுக்கும் தெரியும்”
எனத் தனக்குத் தானே சொல்லியபடி எழுந்து சென்று விட்டான் சூரிய வர்மன்…

மாலை மயங்கி மெதுவாக இருள் சூழும் நேரம் சூரியவர்மன் வாயிலைப் பார்ப்பதும் அலைபேசியைப் பார்ப்பதுமாக அங்குமிங்கும் நடை பயின்று கொண்டிருந்தான்…

தன் வேலைகளை முடித்து மீண்டும் அவ்விதமே வாசலைப் பார்த்தபடி நடக்கத் தொடங்கினான்...

நேரம் மெது மெதுவாகப் பத்தைத் தொட்டிருந்தது…

சூரியனுக்கும் கோபம் உச்சியைத் தொட்டிருந்தது…

“இந்த அண்ணனுக்கு நான் சொன்னது காதில் ஏறவில்லையா?”
என முணுமுணுத்துக் கொண்டிருந்தான்…

அந்த நேரத்தில் வாசலில் வாகனச் சத்தம் கேட்கவே ஓடிச் சென்று எட்டிப் பார்த்தான்…

அவன் எதிர்பார்த்தது போல ஆதித்யனின் வாகனம் தான் வாசலைத் தாண்டி வந்து கொண்டிருந்தது…

அண்ணனின் வாகனத்தைப் பார்த்ததும் அவ்வளவு நேரமும் இருந்த கோபம் போன இடம் தெரியவில்லை…

முகமெல்லாம் பிரகாசமாக வெளியே ஓடிச் சென்றான்…

வாகனத்தில் இருந்து இறங்கிய ஆதித்யன் ஒரு எட்டுக்கூட எடுத்து வைக்கவில்லை…

அவனைத் தாவிக் கட்டிக் கொண்டான் சூரியன்…

சூரியன் கட்டியணைத்த வேகத்தில் தடுமாறியவன் உடனே சுதாரித்துக் கொண்டு நின்றான்…

“டேய் எருமை இப்படியா வந்து மேலே பாய்வது”

“அண்ணா… எவ்வளவு பாசத்தில் ஓடி வந்தேன்… என்னைத் திட்டுகிறாயே”
என்றவாறு விலகியவனை

“சரி சரி உடனே முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ளாதே”
என்றவாறு அவனது தோளைத் தட்டிக் கொடுத்தான் ஆதித்யன்…

அண்ணன் தட்டிக் கொடுத்ததில் குஷியானான் சூரியன்...

“சரி சரி உள்ளே வா அண்ணா… போன காரியம் என்னவாயிற்று”

“போன காரியம் இருக்கட்டும் வீட்டு நிலவரம் எப்படி சூரியா… பல்லவி எப்படி இருக்கிறாள்”

“எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது… நீ இல்லை என்கிற குறை மட்டும் தான் அண்ணா…”
என்றான் உண்மையான கவலையுடன்…

சூரியா சொன்னதற்கு லேசான புன்னகையைத் தந்தவன் தோட்டத்து வீட்டைத் திரும்பிப் பார்த்தான்…

அண்ணனின் பார்வையைத் தொடர்ந்து தானும் தோட்டத்து வீட்டைப் பார்த்தான் சூரியா…

“பல்லவி எப்படி இருக்கிறாள் சூரியா”

“பல்லவிக்கு என்ன அண்ணா அவள் இப்போது முன்னை விட நன்றாக இருக்கிறாள்”

“உண்மையாகவா சூரியா”

“என்ன அண்ணா நீ... உன்னிடம் பொய் சொல்லுவேனா”

“அதில்லை சூரியா”

“அண்ணா முதலில் உள்ளே வா… வந்து ஓய்வெடு… விடிந்ததும் பல்லவியைப் பார்த்து உன் சந்தேகத்தைப் போக்கிக் கொள்”
என்றான் சூரியா..

ஆனால் மனதினுள் “பல்லவியை மட்டுமா பார்க்கப் போகிறாய்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்...

சூரியாவைத் தொடர்ந்து வீட்டினுள் நுழைந்தான் ஆதித்யன்

“சூரியா சித்தி ஊருக்குப் போய் விட்டார்களா”

“ஆமாம் அண்ணா”

“ஏன்”

“அதையெல்லாம் காலையில் பேசிக் கொள்ளலாம்… அறையில் உணவு வைத்துள்ளேன் சாப்பிட்டு விட்டுத் தூங்கு அண்ணா”
என்றவன் அண்ணனின் பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் தன் அறைக்குப் போய் விட்டான்…

“இவன் ஏன் ஒரு மாதிரி நடந்து கொள்கிறான்… நின்று பேசாமல் ஓடுகிறானே”
என எண்ணியபடி தன் வேலைகளைப் பார்த்தான் ஆதித்யன்...

அதிகாலையில் அவனுக்கு ஏற்படப் போகும் அதிர்ச்சி பற்றி ஏதும் அறியாமல் சாப்பிட்டு விட்டுத் தூங்கினான்…

எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் எதிர்பாராத நிகழ்ச்சிகளால் சூழப்பட்டது தானே இந்த வாழ்க்கை…

சூரிய வர்மனுக்கு இரவு முழுவதும் தூக்கம் தூரமாகிப் போனது…

அண்ணா காலையில் எப்படி நடந்து கொள்ளுவேனோ என்ற எண்ணமே அவனைத் தூங்க விடாமல் செய்திருந்தது…

எது எப்படியோ அண்ணாவின் வாழ்வில் சந்தோஷமும் நிம்மதியும் வந்தால் அதை விட வேறு என்ன வேண்டும் என நினைத்தான்…

இதே எண்ணத்துடன் கிழக்குத் திசையில் எப்போது சூரியன் உதயமாவான் எனக் காத்திருந்தான் சூரியன்…

இந்தக் காத்திருப்பும் கூட ஒரு விதமான வகையில் ஆறுதலாகவே இருந்தது…

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நெஞ்சிலே இந்த நெஞ்சிலே கடல் பொங்குதே ஆனந்தமாய்
கையிலே இந்தக் கையிலே வெற்றி வந்ததே ஆரம்பமாய்
அட வாழ்வில் இன்றே திறப்புவிழா இனி வாழ்க்கை எங்கும் வசந்தங்களா”

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 7

IMG-20210701-WA0016~2.jpg

IMG-20210701-WA0043~2.jpg

IMG-20210627-WA0025~2.jpg

IMG-20210627-WA0006~3.jpg

அதிகாலையில் வானம் மழையைப் பொழிந்து கொண்டிருந்தது…

அந்த நேரத்தில் மொட்டவிழ்ந்த மலர்களும் மரத்து இலைகளும் மழை நீரில் நனைந்து சிலுசிலுவென லேசான காற்றில் அசைந்து கொண்டிருந்தன...

தொலைவில் தேவாலயத்தின் மணி ஓசையும் பிள்ளையார் கோவில் மணி ஓசையும் ஒருங்கே காற்றில் கலந்து வந்தன…

தோட்டத்து வீட்டின் வாசற்படியில் சாய்ந்திருந்து அந்த நேரத்தில் மழை நீரில் உருவான குமிழிகளையே விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் கஸ்தூரி…

அதிகாலையிலேயே எழுந்து தலைக்குக் குளித்திருந்ததால் கூந்தலை விரித்து விட்டிருந்தாள்…

லேசான இளங் காற்று அவள் முடியைக் கலைத்துக் கலைத்துச் சென்று கொண்டிருந்தது…

எப்போதும் உடுத்திக் கொள்ளும் வெண்ணிறச் சேலையும் அணிந்து நெற்றியில் ஒற்றைக் கீற்றாய் விபூதியும் இட்டிருந்தாள்…

மழை நீரில் உருவான குமிழிகள் தோன்றியதும் அடுத்த நொடியே உடைவது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது…

முன்பு போலில்லாமல் இப்போதெல்லாம் அவளால் சிறு சிறு விஷயங்களைக் கூட நிதானமாக இரசிக்க முடிந்திருந்தது…

யாரும் அவளை அடிமை போல விரட்டவில்லை…

முன்னர் போல மூச்சு முட்டாமல், சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடிகிறது…

அவளது இதழோரம் லேசான புன்னகை எட்டிப் பார்த்தது…



கஸ்தூரி வாசற்படியில் சாய்ந்திருந்து மழையை இரசித்த அதே நேரத்தில், தன் வீட்டு மாடியில் நின்று சுடச் சுடத் தேநீர் பருகிக் கொண்டிருந்தான் சூரியவர்மன்…

இராத்திரி முழுவதும் உறக்கம் இல்லாததால் சீக்கிரமாக அறையை விட்டு வந்திருந்தான்…

சூரியனுக்கு எப்போதும் அதிகாலைச் சூரிய உதயத்தை இரசிப்பது என்றால் அலாதிப் பிரியம்…

வழமை போல மாடியில் நின்று கிழக்குத் திசையைப் பார்த்தபடி நின்றிருந்தான்…

கிழக்குத் திசையின் அடி வானில் இளங் கதிர்களைப் பரப்பிக் கொண்டு மெது மெதுவாகச் சூரியதேவன் பிரசன்னமாகத் தொடங்கினான்…

அந்த அழகைச் சூரியவர்மன் இரசிக்கத் தொடங்கியிருந்தான்…

மழை இப்போது சற்று ஓய்ந்திருந்ததால் மரக்கிளைகளிலும் இலைகளிலும் கிடந்த மழைத்துளிகளைக் காலைக் கதிர்கள் ஊடுருவி வர்ணஜாலத்தைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது…

அருந்தி முடித்த தேநீர்க் கோப்பையை வைத்து விட்டுக் கண்களை மூடி இரு கைகளையும் விரித்துத் தூய காற்றை ஆழ்ந்து சுவாசித்தான் சூரியவர்மன்…

நின்ற இடத்தில் இருந்து சிறிது திரும்பியபடி கண்களை மெதுவாகத் திறந்தான்…

அங்கே தோட்டத்து வாசலோரம் சாடியில் ஒற்றை வெள்ளை ரோஜா மலர்ந்திருந்தது அவனது கவனத்தைக் கவர்ந்தது…

அந்த வெள்ளை ரோஜாவைப் பார்த்தபடி இருந்தவனது பார்வை லேசாக உயர்ந்து வாசற்படியில் ஸ்தம்பித்து நின்றது…

அங்கே சாய்ந்திருந்தது இன்னொரு வெள்ளை ரோஜாவோ என்பது போலக் கஸ்தூரி அமர்ந்திருந்தாள்…

அவளை ஒரு நொடிக்கும் குறைவாகப் பார்த்தவன் சட்டென்று பார்வையை விலக்கிக் கொண்டான்…

தனித்திருக்கும் பெண்ணை அவள் அறியாமல் பார்ப்பது சரியல்ல என்று அந்த ஆண்மகனுக்குத் தோன்றியது போலும்…

எப்படியும் தான் ஒருவன் இங்கே நிற்பதை அவள் பார்த்தால் உள்ளே ஓடி விடுவாள் என்பதை உணர்ந்தவன் அவளது இரசனைக்குத் தடை இல்லாமல் தானே உள்ளே சென்றான்…

உனக்காக ஒருவன் ஒரு சிறு விஷயத்தைக் கூட விட்டுக் கொடுத்துச் சென்று விட்டான் என்று கஸ்தூரியிடம் சொன்னால் அவள் சிரித்திருப்பாள்…

ஆனால் அது தான் இங்கே நடந்தது…
இயற்கையிலேயே சூரிய வர்மன் பண்பானவன்…

அவனது தாயின் வளர்ப்பும் அத்தோடு சேரவே ஒரு சிறந்த ஆண்மகனாக அவன் உருவெடுத்து விட்டான்…

பெண்கள் என்றால் அத்தனை மதிப்புக் கொடுப்பான்…

ஆதித்யனும் சூரியனைப் போலத் தான் ஆனால் அவனிடம் ஒரு அழுத்தம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது…

பார்வையிலே பாசத்தைக் காட்டச் சூரியனால் முடியுமெனில் பார்வையில் கண்டிப்பைக் காட்ட ஆதித்யனால் முடியும்…

அது மட்டுமன்றிப் பார்வையிலேயே தப்பு செய்தவர்களைப் பணிய வைக்கும் ரகம் ஆதித்யன்..

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

வெளியே மழை என்பதால் நிதானமாக எழுந்து தயாராகி வந்தான் ஆதித்யன்…

இப்படி அறையை விட்டு வெளியே வருவது கூடப் பல்லவியைப் பார்க்க வேண்டும் என்பற்காகத் தான்…

இல்லையெனில் அறையிலிருந்து ஆதித்யன் வருவது என்பது அபூர்வமான விஷயம் தான்…

இந்த அறை வாசம் கூடக் கடந்த ஒரு வருடமாகத் தான்…

அதற்கு முன் இருந்த ஆதித்யனைப் பார்த்தால் அவனா இவன் என எண்ணத் தோன்றும்…

ஏனெனில் ஆதித்யன் சூரியனையே விஞ்சும் அளவிற்குக் கலகலப்பானவன்…

அதெல்லாம் ஒரு காலம் எனச் சொல்லும் அளவிற்கு இந்த ஒரு வருடம் அவனது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விட்டது…

அப்படித் தான் ஆதித்யன் அடிக்கடி சூரியனிடம் கூறிக் கொள்ளுவான்…


வரவேற்பறைக்கு வந்த ஆதித்யன் சூரியனை அழைத்தான்…

அண்ணனின் குரலைக் கேட்டதும் ‘இதற்குத் தானே காத்திருந்தேன்' என்பது போல ஓடோடி வந்தான் சூரியன்…

சூரியன் ஓடி வந்த வேகத்தில் ஆதித்யனுடன் மோதி நின்றான்…

அவன் மோதிய வேகத்தில் இருவரும் கீழே விழுந்து அங்கப் பிரதட்சணம் செய்யாமல் சுதாரித்துக் கொண்டு சூரியனை முறைத்தபடி நின்றான் ஆதித்யன்…

அண்ணன் பார்த்த பார்வையில் மெதுவாகத் தலையைக் குனிந்தவாறு வெளியே ஓடி விட்டான் சூரியன்…

“இவனுக்கு என்னதான் ஆயிற்று”
என யோசித்தவாறு தானும் வெளியே வந்தான் ஆதித்யன்…

வெளியே நின்ற தம்பியிடம் வந்தவன்…

“சூரியா… உனக்கு என்ன ஆயிற்று”

“ஏன் அண்ணா”

“நீ எதையோ என்னிடம் மறைக்கிறாயா?”

“அண்ணா வா… பல்லவியைப் பார்த்து விட்டு வந்து மீதியைப் பேசிக் கொள்ளலாம்”
என்றவன் முன்னே வேகமாகப் போய் விட்டான்…

நிதானமாக நடந்து வந்திருந்தால் அண்ணன் கேள்வி கேட்டே துளைத்து எடுத்து விடுவான் என்பது அவனுக்குத் தெரியாதா என்ன…

லேசாகத் திரும்பிப் பார்த்தபடி வேகமாக வந்த சூரியன் முன்னால் வந்த கஸ்தூரியை அப்போது தான் பார்த்தான்…

அவள் மீது மோத இருந்தவன் நொடியில் சுதாரித்து விலகியதில் வாசற் பக்கச் சுவரோடு நன்றாக மோதிக் கொண்டான்…

எதிரே வந்தவன் தன்னைப் பார்த்ததும் தான் விலகி சுவற்றில் மோதிக் கொண்டான் என்பதைப் புரிந்து கொண்டவள்…

“ஐயோ… “
எனப் பதறியபடி அவனைப் பார்த்தாள்…

அவளது பதற்றத்தைப் பார்த்தவன் லேசாகத் தலையைத் தேய்த்தபடி
“பெரிய அடி எல்லாம் இல்லை…”
என்றான் அவளுக்குச் சமாதானமாக…

அவனது பதிலைக் கவனியாதவள்
“அந்த அறையில் மருந்து இருக்கிறது போட்டுக் கொள்ளலாமே”
என்றாள் பதற்றத்துடன்…

அவளது பதற்றத்தைப் பார்த்தவன் அதற்கு மேலும் நின்றால் இவள் அழுதே விடுவாளோ என நினைத்து அடுத்த அறைக்குள் சென்று விட்டான்…

அவன் அங்கே சென்ற பின்னரே மருந்துப் பெட்டி தன் அறையில் இருப்பதைப் பார்த்தாள் கஸ்தூரி…

வேகமாக அதை எடுத்துக் கொண்டு அவன் சென்ற அறைக்குள் நுழைந்தாள்…

அங்கே அவனோ சாளரத்தின் வழியே எதையோ பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்…

அப்படி அவன் எதை அவ்வளவு தீவிரமாகப் பார்க்கிறான் என எண்ணியவள் தானும் மெதுவாக அடுத்த சாளரத்தின் வழியே எட்டிப் பார்த்தாள்…

அங்கே பல்லவியும் காயத்ரியும் அமர்ந்து இருந்தார்கள்…

பல்லவி லேசாகக் காயத்ரியின் மீது சாய்ந்திருந்தாள்…

இவர்கள் இருவரையும் இவன் ஏன் மறைந்து இருந்து பார்க்க வேண்டும் என நினைத்தவள் அதன் பின்னரே வீட்டுப் பக்கத்தைப் பார்த்தாள்…

அங்கே வந்து கொண்டிருந்தவனைப் பார்த்தவளுக்கு அவனை எங்கோ பார்த்தது போன்று தோன்றியது…

எங்கே என யோசித்துப் பார்த்தவளுக்கு உடனே புரிந்து போயிற்று…

“இறைவா…! அவரா இவர்”
என நினைத்தவள்…

உடனே சூரியனைப் பார்த்தாள்…

ஏதோ அசைவை உணர்ந்து திரும்பிய சூரியன், கஸ்தூரியின் பார்வையைச் சந்திக்க நேர்ந்தது…

அவனைப் பார்த்து
“ஆதித்யவர்மன் உங்களுக்கு…”
எனத் தடுமாறினாள் கஸ்தூரி...

அதற்குச் சூரியன் “அண்ணா” என்று பதிலளித்தான்…

அவனது பதிலைக் கேட்டதும் கஸ்தூரியின் முகம் தாமரை மலர் போல விரிந்தது…

அவளது முகமலர்வைப் பார்த்த சூரியனுக்கும் சந்தோஷமாக இருந்தது…

முக மலர்வாக நின்றிருந்த கஸ்தூரி சிறிது நேரம் எதையோ யோசித்துப் பார்த்தாள் போலும் உடனே அவள் முகம் வாடிப் போனது…

முகம் மலர்ந்திருந்தவள் சட்டென்று வாடியதும்
“என்னாயிற்று”
என்றான் சூரியன் கஸ்தூரியைப் பார்த்து…

அவனது கேள்வியில் தன்னை மீட்டவள்
“ஒன்றுமில்லை”
என்றாள் மெதுவாக…

அவளது வாட்டம் எதற்காக என்பதை அறியாதவன் அல்லவே சூரியன்…

“நீங்கள் நினைப்பது போல இல்லை… எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்” என்றான் சூரியன் கஸ்தூரிக்கு…

அவனது பதிலில் கஸ்தூரியின் தொலைந்த மலர்ச்சி லேசாகத் துளிர்க்க ஆரம்பித்தது…



சூரியன் வேகமாகப் போவதைப் பார்த்தபடி நிதானமாக நடந்து வந்து கொண்டிருந்த ஆதித்யன் வீட்டுக்குப் பக்கவாட்டில் இரு பெண்கள் இருப்பதைப் பார்த்து விட்டான்…

“ஒன்று பல்லவி, அந்த வெண்ணிறச் சேலையில் இருக்கும் பெண் சூரியனின் தோழிப் பெண் அனுப்பியவள் போல…”
என்ற எண்ணத்துடன் அருகே வந்து விட்டான் ஆதித்யன்…

“ஆனாலும்… இவள்…”
என அவன் உள் மனது ஏதோ சொல்ல விளைந்தது…

அதற்குள் காலடி ஓசை கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் காயத்ரி…

பார்த்தவளது விழிகள் இமைக்க மறந்தன...

அதே நிலை தான் ஆதித்யனுக்கும்...
இருவரது விழிகளும் சந்தித்த நேரம் இருவரும் ஸ்தம்பித்து நின்றார்கள்...

எது நடக்க வேண்டும் என்று சூரியன் விரும்பினானோ அது நடந்து விட்டது…

இனிமேல் சூரியவர்மனின் எண்ணப்படி எல்லாம் நடக்குமா? இல்லையா? என்பதைக் காலம் தான் பதில் சொல்லும்…

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“நதியின் தேடல் கடைசியில்
கடல் காண்பது
உயிரின் தேடல் கடைசியில்
உனைக் காண்பது
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் காதல் முகம் கண்டு கொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டு கொண்டேன்”
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Status
Not open for further replies.
Top