All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானுரதி துரைராஜசிங்கமின் ‘வெள்ளை ரோஜாக்கள்’ - கதை திரி

Status
Not open for further replies.

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 18

8ed4982c46f03ae88d456c0a6221fc15~2.jpg

224e0cae4960396071f09344975fabf4~3.jpg

IMG-20210627-WA0018~2.jpg

IMG-20210701-WA0020~2.jpg


மாமரத்து இலைகள் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தன.

இரண்டு பச்சைக் கிளிகள் சற்றே நிறத்துக் கொண்டிருந்த மாமரத்தின் செங்காய் ஒன்றைக் கொத்திக் கொண்டிருந்தன.

மாமரத்துக்குக் கீழே அமர்ந்திருந்த காயத்ரியின் தலையில் மாங்காயின் சிறுசிறு துகள்கள் சிதறிக் கிடந்தன.

அதைத் தட்டி விடக் கூடத் தோன்றாமல் வானத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அவள்.

தன்னைத் தானே நொந்து கொண்டு அமர்ந்திருந்தவளின் அருகே மெதுவாக வந்து அமர்ந்து கொண்டாள் ஏஞ்சலினா.

தான் அமர்ந்ததைக் கூட அறியாமல் அமர்ந்திருந்த காயத்ரியைத் தொட்டுத் தன் பக்கம் திருப்பினாள்.
அப்போது தான் ஏஞ்சலினாவைப் பார்த்தவளின் விழிகள் லேசாகக் கலங்கியது.

“ஏன் காயு ஏதேனும் விஷயமா? உன் முகமே சரியில்லையே”

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை”

“ஒன்றுமில்லை என்று உன் வாய் தான் சொல்கிறது”

“…....................”

“நான் உன் தனிமையில் குறுக்கிட்டுக் குறுக்கு விசாரணை செய்கிறேன் போல. நான் கிளம்புகிறேன்”

“ஐயோ அப்படி எல்லாம் இல்லை ஏஞ்சல். நிறைய நாட்களுக்குப் பிறகு உன்னைப் பார்க்கிறேன் அது தான் லேசாகக் கண் கலங்கி விட்டது.”

“நிறைய நாட்களுக்குப் பிறகு பார்த்ததால் நீ சந்தோசம் அல்லவா அடைய வேண்டும். அதை விட்டுக் கண் கலங்குகிறாய் என்றால் என்னவோ உனக்குக் கவலை முளைத்திருக்கிறது என்று தானே அர்த்தம்”

“என் கவலை என்னோடு போகட்டும் ஏஞ்சல் நீ எப்படி இருக்கிறாய்? அம்மா நலமாக இருக்கிறார்களா?”

“ஏன் காயு இப்படித் தான் என்னை ஒதுக்கி வைப்பாயா?”

“நான் எங்கே உன்னை ஒதுக்கினேன் ஏஞ்சல்”

“என் கவலை என்னோடு போகட்டும் என்பதற்கு என்ன அர்த்தம்”

“அது… உன்னையும் எதற்காகச் சங்கடப் படுத்த வேண்டும் என்று…”

“போதும் உன் விளக்கம் என்னை உயிர்த் தோழி என்று சொல்வது எல்லாம் சும்மா வாய் வார்த்தை தான் இல்லையா?”

“ஐயோ ஏஞ்சல் நீ வந்த உடனேயே எதற்காக மற்றதைப் பேசி உன்னையும் சங்கடப் படுத்த வேண்டும் என்று தான் நான் ஒன்றும் சொல்லவில்லை”

“………………………..”

“இங்கே என்னைப் பார் ஏஞ்சல் நான் செய்து வைத்த வேலையைக் கேட்டால் நீ கூட என் மேல் கோபம் கொள்வாயோ என்று தான் கொஞ்சம் தயங்கினேன் மற்றபடி உன்னிடம் எதையும் மறைக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை”

என்றபடி தான் ஆதித்யவர்மனைத் தவறாகப் புரிந்து கொண்டு அவனை எடுத்தெறிந்து பேசியதையும் அதன் பின்னர் உண்மை தெரிந்ததும் குற்றவுணர்வுடன் இருப்பதையும் ஏஞ்சலினாவிடம் ஒப்புவித்தாள்.

“அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ஏஞ்சல். ஆனால் பயமாக இருக்கிறது.”

“ஏய் பைத்தியம். உன் கணவரிடம் மன்னிப்பு கேட்க நீ ஏன் பயந்து சாக வேண்டும்”

“நான் செய்து வைத்த வேலை அப்படி இருக்கிறதே ஏஞ்சல். அவரை நம்பாமல் இருந்து விட்டேன். அதோடு அவராகவே நொந்து போகும் வரையில் கூட நான் அவரை நம்பவில்லை தானே”

“சரி நடந்தது நடந்து முடிந்து விட்டது. அதற்காகப் பேசாமலே இருந்து விடுவாயா? இந்த விடயத்தில் நீ தான் முதலில் போய்ப் பேச வேண்டும்”

“ஆமாம் நான் தான் போய்ப் பேச வேண்டும். ஏனெனில் அவராக வந்து என்னிடம் பேச மாட்டார்”

“எல்லாம் சீக்கிரமாகச் சரி ஆகி விடும் காயு. அதையே நினைத்துக் கொண்டு உடம்பையும் மனதையும் கெடுத்துக் கொள்ளாதே”

“சரி சரி உள்ளே போகலாம் வா ஏதாவது குடிக்கத் தருகிறேன். வீட்டுக்கு வந்தவளை வெளியே வைத்து அலட்டிக் கொண்டு இருக்கிறேன்”

“அப்பாடா ஒரு வழியாகப் புரிந்து கொண்டாயே. எங்கே ஒரு வாய்த் தண்ணீர் கூடத் தராமல் வாசலோடு அனுப்பி விடுவாயோ என்று பயந்து விட்டேன்”

“அனுப்பி இருக்கலாம் தான் ஆனால் மனது கேட்கவில்லை.”

“நீ அனுப்பினதும் நான் அப்படியே போய் விடுவேன் பார்”

“போடி போக்கிரி”

“எல்லாம் உன்னோடு சேர்ந்து வந்தது தான்”

“அது சரி”

“அப்புறம் ஒரு விடயம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் காயு. உனக்குப் பல்லவி பற்றித் தெரியுமா? ”

“ஆமாம் ஏஞ்சல் அது பற்றி உன்னிடம் நான் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன் இன்று சொல்கிறேன். வா எதையாவது அருந்தி விட்டு ஆற அமர இருந்து பேசுவோம்”

எனப் பேசியபடி தோழிகள் இருவரும் வீட்டினுள்ளே சென்றார்கள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

மாடி அறையில் சில கோப்புகளைப் பார்வையிட்டவாறு அமர்ந்திருந்தான் ஆதித்யன்.

அப்போது அறையை யாரோ லேசாகத் தட்டும் ஓசை கேட்கவே நிமிர்ந்து பார்த்தான்.

அங்கே தயங்கியபடி கஸ்தூரி நின்றிருந்தாள்.

காலையில் இருந்தே இறுகிய முகத்துடன் வலம் வந்தவனைப் பார்த்தவளுக்கு அவனிடம் எப்படிப் பேசுவது என்ற தயக்கம் இருந்தது.

எப்படியாவது பேசி விட வேண்டும் என்று வந்தும் விட்டாள். அவனது முகத்தைப் பார்த்ததும் தயங்கி நின்று விட்டாள்.

ஆனால் கஸ்தூரியைப் பார்த்ததும் இறுகிப் போய் இருந்த ஆதித்யனின் முகம் இளகத் தொடங்கியது.

“ஏன் வாசலிலேயே நிற்கிறாய் உள்ளே வா கஸ்தூரி”
என்றான் இறுக்கம் இல்லாத குரலில்.

தயங்கித் தயங்கி உள்ளே வந்து அவன் முன்னால் நின்றவளை ஏறிட்டவன்
“என்ன விஷயம் கஸ்தூரி. என்னிடம் ஏதேனும் கேட்க வேண்டுமா?”

“ஆமாம் அது வந்து…”
என அவனை எவ்விதம் அழைப்பது எனத் திணறினாள் கஸ்தூரி.

“அத்தான் என்றே என்னை அழைக்கலாம் கஸ்தூரி. அல்லது உனக்கு அப்படி அழைப்பது சங்கோஜமாக இருந்தால் நீ அண்ணா என்று கூட அழைக்கலாம்.”
என்றான் கனிவான குரலில் ஆதித்யன்.

அவன் அவ்விதம் சொன்னதும்
“என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா”
என்று கண் கலங்கினாள் கஸ்தூரி.

“நீ அண்ணா என்று அழைப்பது சந்தோஷமாக இருக்கிறது கஸ்தூரி. ஆனால் நீ ஏன் என்னிடம் மன்னிப்புக் கேட்கிறாய்.”

“அது வந்து அண்ணா. நான் உங்களைப் பற்றித் தவறாக நினைத்து விட்டேன். பிறகு தான் அக்கா எல்லாம் என்னிடம் சொன்னாள்”

“ஓ அதாவது வந்து பல்வியைத் திருமணம் செய்து வீட்டில் வைத்திருந்தபடி உன் அக்காவுக்குத் தாலி கட்டி விட்ட கிராதகன் என்று நினைத்து இருப்பாய்”

“தவறு தான் அண்ணா அதனால் தான் மன்னிப்புக் கேட்க வந்தேன்”

"அப்படி என்றால் கிராதகன் என்று தான் நினைத்து இருக்கிறாய்"

"அப்படி இல்லை..."
என்று இழுத்தாள்.

கஸ்தூரி அவனை விட எட்டு வயது குறைந்த சின்னப் பெண். எப்போதுமே அவள் மேல் ஒரு தனிப் பாசமே அவனுக்கு உண்டு.

அவள் தானாகவே வந்து மன்னிப்புக் கேட்கவும் அவனுக்கு உடனேயே லேசாகச் சிரிப்பு வந்தது.

ஆனாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல்
“நான் மன்னிக்கவில்லை என்றால்…”
என வேண்டும் என்றே முகத்தை இறுக்கமாக வைத்தபடி கேட்டான்.

ஆதித்யன் கோபமாக நடந்து கொள்வானோ என வந்தவளுக்கு அவன் முதலில் கனிவாகப் பேசியதே தென்பாக இருந்தது.
அந்தத் தென்பு அவளது கலகலப்பான சுபாவத்தை மீட்டுக் கொடுத்தது.

“மன்னிப்புக் கேட்பது தெய்வ குணம் மன்னிப்பது மனித குணம். உங்களுக்கு மனிதனாக இருக்க விருப்பம் இல்லையா?”
என்றாள் சிறு சிரிப்புடன்.

“அடிப்பாவி அது மன்னிப்புக் கேட்பது மனித குணம் என்றல்லவா வரும். நீ என்ன இப்படிச் சொல்கிறாய்”

“எப்பொழுதுமே எதையாவது சொதப்பி வைத்து விட்டு மன்னிப்புக் கேட்பது தான் என் வாடிக்கை. அதனால் எனக்கு ஏற்றவாறு அந்த வரிகளை மாற்றிக் கொண்டு விட்டேன்.”
என்றவளை மீண்டும் அடிப்பாவி என்பது போலப் பார்த்து வைத்தான் ஆதித்யன்.

“அண்ணா அப்புறம் இன்னொரு விஷயம். நான் உங்களைப் பற்றித் தவறாக நினைத்தேன் என்பதை நான் சொல்லாமல் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதனால் நேர்மையாக நடந்து கொண்டதற்காக நீங்கள் என்னை மன்னித்துத் தான் ஆக வேண்டும்.”

“அது சரி உன்னுடன் பேசி வெல்ல முடியுமா? உன்னைக் கட்டிக் கொள்ள வரப் போகும் மகாராஜன் பாவம் தான்”
என்று சொல்லிக் கொண்டே போனவன் சட்டென்று நாக்கைக் கடித்தபடி மன்னிப்புக் கேட்டான்.

அவன் சங்கடப் படுவதை உணர்ந்தவள்
“அண்ணா எப்போதுமே எனக்கு மட்டும் தான் தெய்வ குணம் இருக்க வேண்டும். நீங்கள் நல்ல மனித குணத்துடன் மன்னிப்பு மட்டும் கொடுங்கள்”
என்றாள் லேசாகப் புன்னகைத்தபடி

அவளது கள்ளமற்ற சிரிப்பைப் பார்த்தவனது புன்னகையும் விரிந்தது.

“போனால் போகட்டும் பிழைத்துப் போ”
என்றவனைப் பார்த்து
“அண்ணா இன்னொரு விஷயம். என்னையே சட்டென்று மன்னித்த உங்களுக்கு அக்காவை மன்னிக்க மனது வரவில்லையா?”
என்று மெதுவாகக் கேட்டாள்.

அதற்கு அவன் மௌனமானான்.

“மன்னித்து விடுங்கள் அண்ணா. ஏதோ ஒரு உரிமையில் கேட்டு விட்டேன்.”

“ஐயோ மன்னிப்பு எல்லாம் வேண்டாம் கஸ்தூரி. உன் விஷயம் வேறு உன் அக்காவின் விஷயம் வேறு. அதை எப்படி உனக்குப் புரிய வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை.”

“எனக்கு ஒரு விஷயம் மட்டும் சொல்லுங்கள் அண்ணா. அக்காவின் மீது உங்களுக்கு ஒன்றும் வெறுப்பு இல்லை தானே”

“அடப் பைத்தியமே உன் அக்காவை வெறுப்பது என்னை நானே வெறுப்பது போல. எந்தக் காலத்திலும் உன் அக்காவை நான் வெறுக்கவே மாட்டேன் போதுமா?”

“இது போதும் அத்தான். இந்த வார்த்தைக்குப் பிறகு எனக்கு வேறு என்ன வேண்டும்”
என்றவள் அந்த மகிழ்ச்சி தந்த துள்ளலோடு வெளியே ஓடினாள்.

அவளது செய்கையைப் பார்த்த ஆதித்யனுக்கு நிஜமாகவே ஆச்சரியம் தான்.

தன் சந்தோஷத்தை விடவும் தமக்கையின் சந்தோஷத்தைப் பெரிதாகப் பார்க்கிறாளே என்றிருந்தது.
இத்தனைக்கும் இவள் அவளுக்கு உடன் பிறந்த சகோதரி கூடக் கிடையாது. அற்புதமான பெண்.

இவள் மட்டுமா அற்புதமான பெண் அந்த ராட்சசி கூட அற்புதமான பெண் தான்.
என்று நினைத்தபடி தன் வேலையில் மூழ்கிப் போனான் ஆதித்யன்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

பேசிய படியே வீட்டினுள் நுழைந்த காயத்ரிக்காகவும் ஏஞ்சலினாவுக்காகவும் கையில் எலுமிச்சைச் சாறுடன் கஸ்தூரி காத்திருந்தாள்.

“பரவாயில்லையே தோழிக்கு அக்கறை இல்லை என்றாலும் தங்கைக்காவது என் மேல் அக்கறை இருக்கிறதே”
என்றபடி எலுமிச்சைச் சாற்றினை இரசித்துப் பருகினாள் ஏஞ்சலினா.

அந்த நேரத்தில் மாடியில் இருந்து வந்த ஆதித்யன் ஏஞ்சலினாவைப் பார்த்து லேசாகப் புன்னகைத்துத் தலையசைத்து விட்டு வெளியே சென்று விட்டான்.

அவளருகில் நின்றிருந்த காயத்ரியை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.

“பார்த்தாயா ஏஞ்சல் நீ இருக்கிறாயே அதற்காக என்றாலும் என்னைப் பார்த்துத் தலையை அசைத்து இருக்கலாம் தானே”

“சரி விடு காயு நீயாகப் போய்ப் பேசினால் எல்லாம் சரி ஆகி விடும்”
என்றவாறு தோழியை அணைத்துக் கொண்டாள்.

“நான் செய்தது பெரிய தவறு தானே ஏஞ்சல் அவரது கோபத்திலும் நியாயம் இருக்கிறது. எப்படி இருந்தாலும் அனு இவரது மனைவி என்று நினைத்தது மட்டும் இல்லாமல் அதை அவரிடமே கேட்டது பெரிய பிழை”

“காயு... அனு என்பது பல்லவியா? பல்லவியையா ஆதித்யனின் மனைவி என்று நினைத்தாய். இதைத் தான் தோட்டத்தில் வைத்தும் கூறினாய் அப்போதே ஒன்று சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் பாரேன் பேச்சு வாக்கில் மறந்து விட்டேன்”

“ஆமாம் ஏஞ்சல் அனுபல்லவியைத் தான் அவரின் மனைவி என்று நினைத்தேன். அதை மட்டுமா நினைத்தேன். அவளது இந்த நிலைக்குக் கூட இவர் தான் காரணம் என்றும் நினைத்தேன்.”

“அட ஆண்டவரே! பல்லவி இந்த வீட்டு மருமகள் தான் ஆனால் அவளது கணவர் ஆதித்யவர்மன் இல்லை மகேந்திர வர்மன்... அதாவது சூரியனின் இன்னொரு அண்ணா. பல்லவிக்குத் தாலி கட்டிய இரண்டு நாளிலேயே அவர் இறந்து விட்டார்.”

“ஐயோ இறைவா! என்ன ஏஞ்சல் சொல்கிறாய் “

“ஆமாம் காயு… பல்லவிக்குத் தாலி கட்டிய பிறகு அவளை அழைத்துக் கொண்டு மகேந்திரனும் அவருடைய அம்மா அப்பாவும் குலதெய்வக் கோவிலுக்குப் போன போது ஒரு பெரிய விபத்து. அந்த இடத்திலேயே மற்ற மூவரும் இறந்து விட்டார்கள். பல்லவிக்கு அதிர்ச்சியில் இப்படி ஆகி விட்டது.”
என்று ஏஞ்சலினா அனைத்து விடயத்தையும் போட்டு உடைத்து விட்டாள்.

அவள் சொன்னதை எல்லாம் கேட்ட கஸ்தூரியும் காயத்ரியும் விக்கித்துப் போய் அமர்ந்து இருந்தனர்.

அதிலும் காயத்ரி வெடித்து அழத் தொடங்கினாள். கஸ்தூரி அழக் கூடத் தோன்றாமல் தமக்கையையே பார்த்திருந்தாள்.

எழுந்து சென்று அவளை அணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூட அவளுக்குத் தோன்றவில்லை. அவளது மனது அந்தளவிற்கு மரத்துப் போய் விட்டிருந்தது.

தான் கூறிய சம்பவத்தைக் கேட்டதும் சாதாரணமாக மனிதாபிமான முறையில் தான் இருவரும் வருந்துகிறார்களோ என்று நினைத்த ஏஞ்சலினாவுக்கு அப்படி இல்லை இதற்கு மனிதாபிமானம் மட்டும் காரணம் இல்லை என்பது போலத் தங்களது பழைய கதையைச் சொல்லத் தொடங்கினாள் காயத்ரி.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிடத் திரும்பிட ஏக்கங்கள்"
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 19

2c65b8fa0d02b46a7ea9e2921fc33ca2~2.jpg

26-268675_namitha-pramod-in-puthiya-theerangal~2.jpg

6c4ab9580647422216cdc6d6371ebfe3~2.jpg


வானம் கரு மேகங்களைச் சுமந்தபடி பூமியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது.

பூமியில் பல தருணங்களில் வேற்று மனிதராலும் அறிய முடியாத அநியாயங்களை வானம் எந்த நேரமும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறது.

வானமும் செய்கையற்றுப் போய்த் தன்னால் முடிந்த வரையில் கரு மேகங்களை மழையாக்கி உனக்காகக் கண்ணீர் சிந்தவே முடியும் என்பது போல மெல்லிய தூரல் போடத் தொடங்கியது.

அந்தத் தூரலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் பதினாறு வயதுப் பாவையான காயத்ரி தேவி.

அவளது மனதில் நெடு நாளாக இருந்த ஒரு கவலை லேசாகக் கரைந்து போவது போல இருந்தது.

இனிமேல் என் கஸ்தூரியை யாருமே என்னிடம் இருந்து பிரிக்க மாட்டார்கள் என்ற எண்ணமே அவளுக்கு பெரும் மகிழ்ச்சி ஆக இருந்தது.

காயத்ரிதேவி, கஸ்தூரிதேவி மீது தன் உயிரையே வைத்திருந்தாள். கஸ்தூரிக்காகப் பரிந்து பேசப் போகத் தான் அது பெரிய பிரச்சினை ஆகிப் போகவே அவளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டே வெளியேறி விட்டாள்.
அப்போது அவர்களுக்கு அடைக்கலம் கிடைத்த இடம் இந்த இல்லம் தான்.

சரஸ்வதி இல்லம் என்ற பெயர்ப் பலகை இருவரதும் வாழ்க்கைக்கு வழி காட்டும் வழிகாட்டியாகவே இருந்தது.

சரஸ்வதி இல்லத்தில் நிராதரவான பெண் பிள்ளைகளுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். அங்கு உள்ள பெண் பிள்ளைகள் திருமணம் முடிக்கும் வரையில் அங்கே இருக்கலாம்.

அவர்களது படிப்புக்கான செலவுகளையும் அங்கிருப்பவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இந்த இல்லத்திற்குப் பெரும் புள்ளிகளின் ஆதரவும் இருந்தது.

ஏதேதோ எண்ணங்களில் மூழ்கி இருந்த காயத்ரியின் கண்கள் இல்லத்தினுள் வந்து கொண்டிருந்த அந்தப் பெண் மீதே நிலைத்திருந்தது.

ஏனோ நமக்குச் சிலரைப் பார்த்தவுடனேயே அவர்களை முதன் முதலில் பார்க்கிறோம் என்கிற எண்ணமே இருப்பதில்லை.
காலம் காலமாகப் பழகியவர்கள் போலத் தோன்றும்.

அது போலத் தான் அந்தப் பெண்ணைப் பார்த்த போதும் காயத்ரிக்கு அவளை முதன் முதலில் பார்ப்பது போலவே தோன்றவில்லை.

அந்தப் பெண்ணும் அப்போது காயத்ரியைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தாள்.
அந்த நொடியே இருவருக்குமான பந்தத்தை இறைவன் உருவாக்கி விட்டிருந்தான்.

புன்னகைத்த புதியவளை நோக்கிக் கையை நீட்டினாள் காயத்ரி.
அவளது கையைத் தனது நடுங்கும் கைகளால் இறுகப் பற்றியபடி காயத்ரியின் முகம் பார்த்தாள் வந்தவள்.

“நான் காயத்ரி தேவி. உங்கள் பெயர் என்ன?”

“என் பெயர் அனு”

“என்னவோ தெரியவில்லை உங்களை எனக்குப் பார்த்தவுடனேயே பிடித்து விட்டது அனு”

“உண்மையாகவா! எனக்கும் அப்படித் தான் உங்களை மிகவும் பிடித்து இருக்கிறது.”

“அப்படியானால் இன்றிலிருந்து நாம் இருவரும் தோழிகள் சரி தானா?”

“புது இடத்திற்குப் போகிறோமே அங்கே இருப்பவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்ற பயத்தில் வந்தேன் காயத்ரி. உங்களைப் பார்த்ததும் மனதுக்குள் சந்தோஷமாக இருக்கிறது.”
என இருவருக்கு இடையிலும் முதல் அறிமுகத்திலேயே அழகிய நட்பொன்று துளிர் விடத் தொடங்கியது.

இரண்டு மாதங்களின் பின்னர் ஒரு நாள் காலை நேரத்தில் எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள் காயத்ரி.

“அக்கா என்ன யோசிக்கிறீர்கள்” என்றவாறு அவளருகில் வந்து அமர்ந்தாள் கஸ்தூரி.

“அது தானே என்ன யோசிக்கிறாய் தேவி”
என்றபடி அனுவும் அவளருகில் வந்தமர்ந்தாள்.

“அனு உனக்கு அனுபல்லவி என்ற பெயர் இருந்தால் இன்னும் அழகாக இருக்கும்.” என்றாள் காயத்ரி.

“அதெற்கென்ன உனக்குப் பிடித்தால் சரி தான் தேவி... நீ என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்... அதற்காக பிசாசு, காட்டேரி என்று வைத்து விடாதே”
என்றாள் எவளோ ஒரு அனுவாக வந்து காயத்ரிதேவியின் அனுபல்லவியாகிய உயிர்த்தோழி.

அன்றிலிருந்து அனுவின் பெயர் சட்ட ரீதியாக அனுபல்லவி என்றானது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

ஐந்து வருடங்களுக்குப் பிறகு

“தேவி… தேவி… தேவீ…”

“என்னடி தேவியை ஏலம் போடுகிறாய்”

“எல்லாம் காரணமாகத் தான்”

“அனு… அப்படி என்னடி பெரிய காரணம்”

“நானும் குட்டியும் சேர்ந்து உனக்காக ஒரு பாட்டு இயற்றி இருக்கிறோம்”

“போச்சு… என் மானத்தை வாங்குவதற்குக் கூட்டுச் சதியா?”
என்று பொய்க் கோபம் காட்டினாள் காயத்ரி.

“இல்லை அக்கா நிஜமாகவே நானும் அனு அக்காவும் உங்களுக்கு ஒரு பாட்டு எவ்வளவு கஷ்டப்பட்டு எழுதினோம் தெரியுமா?"

“ஓ தெரியுமே… நீங்கள் எனக்காகக் கஷ்டப் பட்டுப் பாட்டு எழுதிய இலட்சணத்தைத் தான் பார்த்தேனே... அறை முழுவதும் எத்தனை கடதாசி உருண்டைகள்…”
என்றபடி காயத்ரி முறைத்தாள்.

அவள் முறைப்பதைப் பார்த்ததும் கஸ்தூரியும் அனுவும் தங்கள் அத்தனை பற்களையும் காட்டி இளித்து வைத்தார்கள்.

“சரி சரி பாட்டைக் கேள் தேவி”

“கேட்க மாட்டேன் என்றால் விடவா போகிறீர்கள் பாடுங்கள் பாடித் தொலையுங்கள்”
என்று அவள் அனுமதி கொடுத்ததும் மற்ற இருவரும் கோரஷாகப் பாடத் தொடங்கினார்கள்.

“எமக்கெனக் கிடைத்த நீ தான் எங்களின் அழகிய தேவி தேவி ...

உன்னாலே மட்டும் தான் இன்னும் வாழுதே எங்கள் ஆவி ஆவி...

எங்கள் அன்பெனும் வீட்டிற்கு நீயே தான் என்றும் சாவி சாவி...

நீ எங்கே விட்டுச் சென்றாலும் அழைப்போமே கூவிக் கூவி ...

உனை அன்போடு அணைப்போமே எப்போதும் தாவித் தாவி...

நீ இல்லாவிட்டால் நாங்கள் கட்டிப் போவோம் காவி காவி...

என்றும் உன் அன்பு கிடைக்காத மற்றவரெல்லாம் பாவி பாவி...

உனை நோகடிப்போருக்கு விடுவோம் சூனியத்தை ஏவி ஏவி...”

என்று பாடி முடித்து விட்டு அவளைப் பார்த்து எப்படிப் பாட்டு என்று கேட்டபடி நின்ற இருவரையும் முறைப்பாக மாற்றி மாற்றிப் பார்த்தவளுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“என்னங்கடி பாட்டு இது”
என்ற படி விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினாள் காயத்ரி.

அவள் சிரித்த தினுஷில் மற்ற இருவருக்கும் கூடச் சிரிப்பு வெடித்துக் கொண்டு வந்தது.

இல்லத்தில் இருந்த மற்றவர்கள் வந்து வேடிக்கை பார்க்கும் அளவிற்கு மூவரும் சிரித்துக் கொண்டே இருந்தார்கள்.

இதற்கு முன்னால் வாழ்வில் நடந்த துன்பங்களை எல்லாம் மூட்டை கட்டி மூலையில் போட்டு விட்டு மூவரும் தங்கள் வாழ்க்கையைத் தங்கள் பாசத்தினால் மெருகேற்றி இருந்தார்கள்.

ஒருநாள் அனுபல்லவிக்குச் சரியான பல்வலி.
அந்த வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவள் வைத்த ஒப்பாரியில் காயத்ரியும் கஸ்தூரியும் விடிய விடியச் சிவராத்திரி இருந்தார்கள்.

அனுவின் அவஸ்தையைப் பார்க்க முடியாமல் காயத்ரியும் கஸ்தூரியும் ஏதேதோ கை வைத்தியம் செய்து ஒரு வழியாகப் பல்வலியைக் குறைக்க முனைந்தார்கள்.

மூவரும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் கடற்கரைக்குச் செல்வது வழக்கம்.
அந்தப் பல்வலி நேரத்திலும் அனு அதை நினைவு படுத்தினாள்.

“பல்வலி எல்லாம் சரி ஆகட்டும் அனு அதற்குப் பிறகு எங்கு வேண்டுமானாலும் போய்க் கொள்ளலாம்”

“இல்லை தேவி… எனக்கு இப்போது பல்வலி கொஞ்சம் மட்டுப் பட்டு விட்டது. நாங்கள் கடற்கரைக்குப் போவோம்”

“சொன்னால் கேட்க வேண்டும் அனு”

“சொன்னால் கேட்க வேண்டும் தேவி”
என்று அடம் பிடித்தாள் அனுபல்லவி.

“அடியே கடற்கரைக்குச் சென்று வந்த பிறகு பல்லு வலிக்கிறது மண்ணு வலிக்கிறது என்று வந்து நில் அப்போது இருக்கிறது உனக்கு”
என்று முறைத்துக் கொண்ட போதும் அவளையும் கஸ்தூரியையும் அழைத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்றாள் காயத்ரி.

இல்லத்தில் இருந்து ஓரளவு தூரத்தில் தான் அந்த அழகிய கடற்கரை இருந்தது.

அந்தக் கடற்கரை மணலில் தான் மூன்று பேரும் தங்களை மறந்து சிறு பிள்ளைகளாகி விளையாடுவார்கள்.

காயத்ரி மணலில் வீடு கட்டினால் அதைக் கஸ்தூரியும் அனுவும் இப்படிச் செய்தால் அழகு அப்படிச் செய்தால் நன்று என்றபடி உடைத்து விட்டு, காயத்ரி அடிக்க வர அந்த இடமெங்கும் ஓடி விளையாடுவார்கள்.

அன்றும் மணலில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு விளையோடுவோமா என்று கேட்ட அனுவுக்கு காயத்ரியிடம் இருந்து நல்ல மண்டகப்படி கிடைத்தது.

அதனால் சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் உடனேயே தனது வேலையைக் காட்டினாள்.

“தேவி… நான் ஒரு பாட்டு இயற்றி வைத்து இருக்கிறேன் கேட்கிறாயா?”

“நினைத்தேன் அப்போதும் நினைத்தேன் நேற்றிரவு அத்தனை காகித உருண்டைகள் கிடக்கவே நினைத்தேன். ஆனாலும் இந்தப் பல்வலியில் நீ எப்படி பாட்டு எழுதி இருக்க முடியும் என்று பேசாமல் இருந்து விட்டேன்”

“அது கிடக்கட்டும் தேவி பாட்டைக் கேள். இந்த முறை நான் தான் பாட்டு எழுதி இசை அமைத்து மெட்டுப் போட்டுப் பாடினேன். குட்டி தூங்கி விட்டாள். அதனால் நான் மட்டும் தான் பாட்டு எழுத வேண்டி வந்தது”
என்று விட்டுக் குரலை லேசாகச் செருமிக் கொண்டு பாடத் தொடங்கினாள் பல்லவி

“வலிக்குதே ஐயோ வலிக்குதே
செய்வதோ என்ன செய்வதோ
எந்தன் பல்லுவலிக்கு தீர்வு ஏதும் இங்கு கிடைத்திடுமா
அந்த வலியும் தீர்வதற்குள் எந்தன் ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா

உள்ளுக்குள்ளே ரொம்ப வலிக்குதம்மா

வலிக்குதே ஐயோ வலிக்குதே...
செய்வதோ என்ன செய்வதோ...
எந்தன் பல்லு வலிக்கு தீர்வு ஏதும் கிடைத்திடுமா...
அந்த வலியும் தீர்வதற்குள் எந்தன் ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா...

வலிக்குதே ஐயோ...

என் பல்லு வலிக்கின்ற நேரங்களில் சாகத் தோன்றுமடி
என் பல்லு வலிக்கின்ற நேரங்களில் என் உயிரே போகுதடி
வலிக்குதே ஐயோ...

பஞ்சில் கறுவா வைத்து அதைப் பல்லில் வைத்திட வேண்டும்
பஞ்சில் கறுவா வைத்து அதைப் பல்லில் வைத்திட வேண்டும்...

அது வலியை மெல்லக் குறைத்திடுமா இல்லை
இருக்கின்ற வலியைக் கூட்டிடுமா...

வலிக்குதே ஐயோ...

நான் பல்லை முதலே பிடுங்கியிருந்தால் இந்த வலி ஒரு விஷயமில்லை...
வலிக்கும் நேரம் இல்லை என்றால் இந்த ஏக்கம் சிறிதுமில்லை...

வலிக்குதே ஐயோ வலிக்குதே...

எனக்குப் பல்லுவலி தான் வந்தால் என் தூக்கம் கொள்ளை போகும்...
எனக்குப் பல்லுவலி தான் வந்தால் என் தூக்கம் கொள்ளை போகும்...

பல்லுவலி கடும் தொல்லையம்மா...
மறுபடி அதுவும் வந்திடுமா...

வலிக்குதே பல்லு வலிக்குதே...”

நிஜமாகவே மூக்கில் விரலை வைத்தபடி காயத்ரியும் கஸ்தூரியும் அவள் பாடி முடிக்கும் வரை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவள் பாடி முடித்ததும்
“அடிப்பாவி அனு இந்தப் பாட்டு…”

“மெட்டுப் புரியவில்லையா உனக்கு… கோபமா என் மேல் கோபமா பேசம்மா ஒரு மொழி பேசம்மா பாட்டை அப்படியே உல்டா செய்து விட்டேன். எப்படி இருக்கிறது பாட்டு”
என்று கண்ணடித்துக் கேட்டாள் அனுபல்லவி.

அவ்வளவுதான் காயத்ரியும் கஸ்தூரியும் அவளைத் துரத்தத் தொடங்கினார்கள்
“எருமை மாடே… பல்வலியில் பாவம் துடித்துக் கொண்டு இருக்கிறாள் என்று நினைக்க நீ என்னடி வேலை பார்த்து வைத்திருக்கிறாய்”

“ஏன்டி பல்வலிக்காகப் பல்லவி பாடிய பல்லவி நன்றாக இல்லையா?”
என்று கேட்டவளைக் கொலைவெறியோடு துரத்தித் துரத்தி அடிக்கத் தொடங்கினார்கள்
காயத்ரியும் கஸ்தூரியும்…

முடிவில் களைத்துப் போய் மூவருமே கீழே இருந்து மூச்சு விட்டார்கள்.
அப்போது பக்கென்று வெடித்துச் சிரிக்கத் தொடங்கினாள் காயத்ரி
“இருந்தாலும் பல்வலிக்குப் பல்லவி பாடிய பல்லவி நீதான்டி”
என்று பொங்கிப் பொங்கிச் சிரிக்கத் தொடங்கினாள்.

மற்ற இருவரும் அவள் சிரிப்பில் இணைந்து கொண்டார்கள்.
மூவரது சிரிப்பையும் கடலலைகள் கூட ஒரு நிமிடம் அமைதியாக நின்று கேட்டது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“வாழ்வின் திசை மாறும்
பாதைகளும் மாறும்
நட்பு அது மாற்றம்
இன்றித் தொடரும்…
சொந்தம் நூறு வரும்
வந்து வந்து போகுமே
என்றும் உந்தன்
நட்பு மட்டும் வேண்டுமே”
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 20

5a1c20dc1693a3bc0e1faae2e103d130~2.jpg

MV5BODBhNDk5NWItYzgzMi00YWIzLWJmNjgtMTJiZTJiMDEzZmZkXkEyXkFqcGdeQXVyMjYwMDk5NjE@._V1_UY1200_CR...jpg

கடலோரமாக வெண்மணல் வெள்ளியை உருக்கி வார்த்து விட்டது போல நிரவிக்கிடந்தது.

கரையிலே தென்னை மரங்கள் காற்றில் அசைந்தாடிய படி கடலையே பார்த்துக் கொண்டிருந்தன.

தென்னை மரங்கள் மீது அணில்கள் ஏறுவதும் இறங்குவதுமாக விளையாடிக் கொண்டிருந்தன.

அதே நேரத்தில் கரையோற மணலில் கஸ்தூரியைத் துரத்தியபடி காயத்ரியும் அனுவும் ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.

காயத்ரியையும் அனுவையும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி ஓடி வந்த கஸ்தூரி ஏதோ தடுக்கிக் குப்புற மணலில் விழுந்தாள்.

அவள் விழுந்த வேகத்தில் அவளுக்குப் பின்னால் அவளைத் துரத்தியபடி ஓடி வந்த காயத்ரியும் அனுவும் கூடச் சுதாரித்துக் கொள்ள முடியாமல் ஒருவர் மேல் ஒருவராக விழுந்தனர்.

கஸ்தூரியின் மேல் அனுவும் அனுவின் மேல் காயத்ரியும் கடற்கரை மணலில் விழுந்த வேளையில் மூவருமே தாங்கள் விழுந்ததை நினைத்து விழுந்த நிலையிலேயே பொங்கிப் பொங்கிச் சிரிக்கத் தொடங்கினார்கள்.

சுற்றுப் புறத்தை மறந்து மூவரும் சிரித்துக் கொண்டிருக்க, யாரோ
“கை கை ஐயோ என்னுடைய கை”
என்று கத்துவது கேட்கவும் அப்போது தான் மூவரும் தங்கள் நிலையைப் பார்த்துப் பட்டென்று எழுந்து நின்றார்கள்.

கஸ்தூரி பின்னுக்குப் பார்த்தபடி ஓடி வந்ததால் தன் முன்னால் கட்டப் பட்டிருந்த ஒரு மணல் வீட்டில் தான் கால் தடக்கி விழுந்திருந்தாள்.

அவள் அப்படியே மணல் வீட்டுக்குக் குறுக்காக விழுந்ததால் மணல் வீடு அப்படியே முழுவதும் சிதைந்து போனது.
அந்த நேரத்தில் தான் மணல் வீட்டைக் கட்டிக் கொண்டிருந்த யாரோ ஒருவனின் ஒரு கைக்கு மேல் தான் மூன்று சீமாட்டிகளும் விழுந்து கிடந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

மூவரும் எழுந்து நின்று அவனையே அப்பாவியாகப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

அவனோ யாரையும் கண்டு கொள்ளும் நிலையில் இருக்கவில்லை. அவனது கைக்கு மேலே ஏதோ பெரிய குண்டைப் போட்டது போல அந்தப் புதியவனுக்கு விண்விண்ணென்று வலிக்கத் தொடங்கியது.

கையை உதறியபடி அவர்களைத் திட்டத் தொடங்கியவனைச் சமாளிக்கும் முகமாக அவனது தோள்களில் தட்டிக் கொடுத்தபடி இன்னும் ஒருவன் அவனுக்குப் பக்கத்தில் நின்றிருந்தான்.

கஸ்தூரி தான் முதலில் தன் வாய்ப் பூட்டைத் திறந்தாள்.

“மன்னித்துக் கொள்ளுங்கள் தெரியாமல் வந்து மோதி விட்டேன்”

“தெரியாமல் மோதி விட்டேனா? மோதி விட்டீர்கள்”

“…………………….”

“இறைவா! இந்தக் கொடுமையைப் பார் குமரா… ஒருத்தி வந்து விழுந்தாலே கை இற்றுப் போய் இருக்கும். இதில் மூன்று பேரும் வந்து விழுந்திருக்கிறார்கள். என் கை அதே இடத்தில் தான் இருக்கிறதா என்று பார்…”
என்றபடி பக்கத்தில் நின்றவனிடம் புகார்ப் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தான்.

அவன் கூறியதைக் கேட்ட மற்றவனோ லேசாகச் சிரித்தபடி
“சரி சரி விடு வர்மா... ஏதோ தெரியாமல் மோதி விட்டார்கள்”
என்றான்.

“ஆமாம் ஆமாம் தெரியாமல் மோதி விட்டோம்”
என்று விட்டால் அழுது விடுவேன் என்பது போலச் சொன்னாள் அனுபல்லவி.

கையின் வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஏதேதோ பேசியவனும் போனால் போகட்டும் என்று அவர்களை மன்னித்து விட்டான்.

மூவரும் விட்டால் போதுமென்று ஓடி வந்து விட்டார்கள்.
அது தான் காயத்ரிக்கும் ஆதித்யவர்மனுக்குமான முதல் சந்திப்பு…

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

பெரிய அரண்மனை போன்ற வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து கதை பேசிக் கொண்டு இருந்தார்கள் வீட்டு உறுப்பினர்கள்.

அந்த நேரம் மாடியில் இருந்து லேசாக ஒரு பாடலை முணுமுணுத்தபடியே இறங்கி வந்தான் ஆதித்ய வர்மன்…
அவனைப் பார்த்திருந்த எட்டு விழிகளும் கனிவைப் பரிமாறிக் கொண்டன.

“அண்ணா… வெளியே எங்கேயும் போகிறீர்களா… இல்லையென்றால் சரண் அண்ணாவுடன் நாம் எங்காவது வெளியே சுற்றி விட்டு வரலாமா?”
என்று கேட்டான் இளையவன்.

“இல்லை சூர்யா நான் இன்று சரஸ்வதி இல்லம் வரை போக வேண்டும். அதனால் எங்கேயும் வர முடியாது.”

“அப்படியானால் நானும் வருகிறேன்”
என்றவாறு தமையனுடன் தொற்றிக் கொண்டான் சூரியா.

வெளியே செல்லும் இருவரையும் பார்த்து
“அப்படியானால் நான்”
என்ற குரலுக்கு
“உனக்கும் விருப்பம் என்றால் வருவது தானே மகேந்திரா!”
என்று பதிலளித்தான் ஆதித்ய வர்மன்.
உடனே மூவரும் கிளம்பி வெளியே சென்று விட்டார்கள்.

தம் மூன்று மைந்தர்களையும் நினைத்துப் பூரித்துப் போய் இருந்தார்கள் அறுபது வயதை அடைந்து கொண்டிருந்த அந்த அன்பான தம்பதியர்.

“ஏன் காயத்ரி நம் குழந்தைகளுக்குத் தான் எத்தனை பக்குவம்”

“அவர்கள் உங்களுக்குக் குழந்தைகளா? எவ்வளவு தூரம் வளர்ந்து விட்டார்கள்”

“எவ்வளவு தூரம் வளர்ந்தாலும் அவர்கள் நமக்குக் குழந்தைகள் தானே”

“அது என்னவோ உண்மைதான் தான் மாமா”

“காயத்ரி… நீ என்னை மாமா என்று அழைத்துக் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகி விட்டது தெரியுமா? நீ அப்படி அழைக்கும் போது ஒரு சந்தோஷம் வருமே… அதைச் சொல்ல வார்த்தைகளே இல்லை”

“போங்கள் மாமா… உங்களுக்கு எப்போதும் வேடிக்கை தான்”

“காயத்ரி வெட்கப் படுகிறாயா? அம்மாடி”
என்றபடி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்தார் கவிவர்மன்.

அவரது நிலையைப் பார்த்துப் பயந்து போன அவரது மனைவி
“மாமா… மாமா… என்னாயிற்று மாமா…”
என்று பதறத் தொடங்கினார்.

“உன் அழகான வெட்கத்தைப் பார்த்து மயங்கி விட்டேன்”
என்றபடி லேசாகச் சுருக்கம் விழுந்திருந்த தன் மனைவியின் கன்னத்தைக் கிள்ளியவரின் கைகளைத் தட்டி விட்டார் காயத்ரி.

“உங்களை உதைப்பதற்கு ஆள் இல்லை”
என்றபடி நிஜமாகவே வெட்கப் பட்ட மனையாளை அன்புடன் பார்த்தார் அந்த அன்புக் கணவன்.

கவிவர்மன் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அவருக்கு ஏழை வீட்டுப் பெண்ணான காயத்ரியின் பண்பான குணத்தால் அவர் மீது காதல் மலர்ந்தது.

வழமை போல இரு தரப்பிலும் எதிர்ப்புக் கொடி பறக்க விட்டாயிற்று.

கவிவர்மனைக் கொலை செய்து விடுவோம் என்று காயத்ரியை மிரட்டிப் பணிய வைத்து அவருக்கு வேறு திருமணம் செய்து வைத்தார்கள்.

கவிவர்மனிடம் அந்த மிரட்டல் எல்லாம் எடுபடவில்லை தன் தேவதை சந்தோஷமாக வாழட்டும் தனக்குத் திருமணமே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்து விட்டார்.

இரண்டு வருடங்களில் காயத்ரியின் வாழ்க்கையே சூனியம் ஆனது.

ஏற்கனவே ஒருவனைக் காதலித்தவள் தானே என்று அவரை அவரது கணவன் கொடுமைப் படுத்தினான்.

தானும் குடித்துக் குடித்தே போதைக்கு அடிமையாகி இறந்தும் போய் விட்டான். அப்போது காயத்ரி நான்கு மாதக் கர்ப்பிணி.

தாங்கிக் கொள்ளவோ ஏந்திக் கொள்ளவோ ஆளில்லாமல் தவித்துப் போய் அதற்குத் தீர்வாக மரணத்தைத் தேர்ந்தெடுக்க முயன்றார்.

அவளது குடும்பம் குலைந்து போகாமல் அவள் சந்தோஷமாக இருந்தாலே எனக்குப் போதுமென அதுவரை அமைதியாக இருந்த கவிமர்மன் ரௌத்திரமானார்.

எதிர்த்த உறவுகளைத் தூக்கிப் போட்டு விட்டு, சொத்துக்களை உதைத்துத் தள்ளி விட்டுக் காயத்ரியை மணம் முடித்துக் கொண்டார்.

அப்போது கூட அதைப் பலமுறை மறுத்த காயத்ரியைத் தற்கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியே சம்மதிக்க வைத்தார்.

கவிவர்மன் காயத்ரியின் கழுத்தில் தாலி கட்டியவுடனேயே ஊரை விட்டு வெளியேறி விட்டார்.

அப்போது காயத்ரிக்கு எட்டு மாதங்கள்
எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்தார் ஆனால் மனைவியைக் கண்ணுக்குள் பொத்தி வைத்துப் பார்த்துக் கொண்டார்.

காயத்ரிக்குக் குழந்தை பிறக்கும் போது கஷ்டங்கள் ஓரளவு முடங்கிப் போனது.
குழந்தையைக் கையிலேந்திய கவிவர்மன் குழந்தைக்கு ஆதித்யவர்மன் என்று பெயர் வைத்தார்.

தனது கணவனின் பெருந்தன்மையைப் பார்த்து கர்வங் கொண்டார் காயத்ரி.
அதன் பிறகு அவர்களது வாழ்க்கை படிப்படியாக முன்னேறியது.
அடுத்தடுத்து மகேந்திரவர்மன், சூரியவர்மன் பிறந்தார்கள்.

கவிவர்மன் மனைவி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.
வயது ஏற ஏற அந்தப் பாசமும் ஏறியது. மகன்மார் கேலி செய்யும் அளவிற்கு மனைவியைத் தங்கத் தட்டத்தில் வைத்துக் கொண்டாடினார்.

இருவரும் இணைந்தே சரஸ்வதி இல்லம் என்றொரு இல்லத்தை ஆரம்பித்தார்கள். சரஸ்வதி என்பது காயத்ரியின் தாயார் பெயர்.

இருவரும் அந்த இல்லத்திற்காக உழைத்தார்கள்.

அது பெண்களுக்கான இல்லமாக அமைந்தது.
தனது மனைவி இளம் வயதில் சாவதற்கு முடிவெடுத்தது போல எந்தப் பெண்ணும் முடிவெடுக்கக் கூடாது என்பதற்காக இது போன்ற நான்கு இல்லங்களை உருவாக்கினார் கவி வர்மன்.

அவரது மூன்று புதல்வர்களும் தங்கள் உழைப்பையும் இல்லத்தில் கொட்டினார்கள்.

கவிவர்மனுக்கு ஆதித்யவர்மன் மீது ஒரு தனிப் பிரியமே இருந்தது. அதற்குக் காரணம் அவர் தனது மனைவி மீது கொண்ட காதல்.

அவரது இந்த முயற்சியே மனைவி மீது அவருக்கிருந்த பாசத்தைப் பறைசாற்றியது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே.”
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 21

IMG-20210701-WA0016~2.jpg

MV5BMjExNDgyMTM2OV5BMl5BanBnXkFtZTgwMjk5MTMzOTE@._V1_~2.jpg

Namitha-Pramod-Nimir-Movie-Beautiful-Stills-4~2.jpg

7eb3f8b45babfefedcb8ef20cd2db6a8~2.jpg

IMG-20210627-WA0012~2.jpg

கோடை காலம் முடிவுக்கு வந்து குளிர் காலம் தொடங்கி விட்டிருந்தது.

மாலை நேரம் தொடங்கினாலே லேசாகக் குளிரத் தொடங்கி இரவானதும் உடம்பு லேசாக விறைத்துப் போகும் அளவிற்குக் குளிர் காலம் தனது ராஜ்ஜியத்தை நிலை நாட்டிக் கொண்டிருந்தது.

வெறும் தரையில் ஓலைப் பாயை விரித்துத் தூங்கியது போய் ஏதாவது கம்பளியை விரித்தும் போர்த்தியும் மட்டுமே தூங்கலாம் என்ற அளவிற்கு கட்டாந்தரை நிலம் கூடக் குளிர்ந்தது.

சரஸ்வதி இல்லத்தின் பொறுப்பதிகாரியாகத் தனது சிறு வயதுத் தோழி ஒருத்தியையே கவிவர்மன் நியமித்திருந்தார்.

இல்லத்திற்கு என்ன வேண்டும் வேண்டாம் என்பதையும் அங்கு என்னென்ன வசதிகள் செய்ய வேண்டும் என்பதையும் அவரது தோழியே முடிவு செய்து கொள்வார்.
இதிலெல்லாம் கவிவர்மன் தேவையற்று மூக்கை நுழைக்க மாட்டார்.

அதனடிப்படையில் இல்லத்தில் இருப்போருக்குக் கட்டில் வசதி செய்து கொடுப்பதற்குக் கவிவர்மன் முன்வந்த போது அதை ஒரேயடியாக மறுத்துப் பேசி விட்டார் அவரது தோழி.

அதெல்லாம் தேவையற்ற செலவு நாங்கள் எல்லோரும் தரையில் பாய் விரித்தே தூங்கிக் கொள்வோம். என்று தானும் தரையிலேயே தூங்கிக் கொள்வார்.

கட்டில்கள் வாங்கத் தேவையான பணத்தைச் சேமிப்புத் தொகையாக மாற்றி விடுங்கள் என்று சொல்லி விட்டார் அந்தத் தோழி.

அவரது சொல்லுக்கு மதிப்புக் கொடுக்கத் தோன்றும் அளவிற்கு அவரது பேச்சும் நடத்தையும் இருக்கும். அவரின் பெயர் ‘வெண்பா'.

வெண்பாவிற்கு உறவுகள் என்று யாருமில்லை. அவரது வாழ்வின் பிடிமானமே இந்த இல்லம் தான்.
அந்த இல்லத்தின் பொறுப்பைத் தன்னிடம் கொடுத்த கவிவர்மன் மீது அவருக்கு அளவு கடந்த மரியாதை இருந்தது.

குளிர் காலத்தில் புதிதாகச் சில கம்பளிப் போர்வைகள் வாங்க வேண்டி வந்ததால் அந்த வேலையை அனுபல்லவியிடம் ஒப்படைத்தார்.

காயத்ரிக்கு லேசாகக் காய்ச்சல் காய்ந்ததால் அவளாலும் அவளைக் கவனிக்க வேண்டும் என்பதற்காகக் கஸ்தூரியாலும் அவளுடன் வெளியே செல்ல முடியவில்லை.

அதனால் அனு முதன் முறையாகத் தனியே வெளியே சென்றாள்.

வாங்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் வாங்கி விட்டு நேரத்தைப் பார்த்தவளோ அதிர்ந்து போனாள்.

அவள் செல்லும் பேருந்து வருவதற்கு இன்னும் ஐந்தே நிமிடங்கள் மட்டுமே இருந்தது.

அந்தப் பேருந்தைத் தவற விட்டால் அடுத்த பேருந்து வருவதற்கு இரண்டு மணித்தியாலங்கள் எடுக்கும்.

அதுவரை தனியே தான் மட்டும் என்ன செய்வது, தேவியும் தங்கச்சியும் வந்திருந்தாலாவது இது பெரிய கவலையாக இருந்திருக்காது என்று எண்ணியவள், இருகைகளிலும் வைத்திருந்த பொருட்கள் நிறைந்த பையுடன் கடையை விட்டு விரைந்து வெளியேறினாள்.

அவசரமாக ஓட்டமும் நடையுமாக வந்தவள் எதிரே வந்தவனுடன் நன்றாகவே மோதிக் கொண்டாள்.

அவள் மோதிய வேகத்தில் நச்சென்று சத்தமே கேட்டது. தலையில் பட்ட மோதலில் நன்றாக வலி எடுக்கவே அம்மா என்றபடி கையில் வைத்திருந்த பைகளைக் கீழே தவற விட்டாள்.

எதிரே அவளோடு மோதியவனும் தனது தலையைத் தேய்த்து விட்டபடி
“மன்னித்துக் கொள்ளுங்கள்”
என்றபடி அவளைப் பார்த்தான்... பார்த்தவனோ லேசாகப் புருவங்களைச் சுருக்கியபடி யோசித்தான்.

மன்னிப்புக் கேட்டு விட்டு இவன் எதற்காக யோசிக்கிறான் என யோசித்தவளுக்கு அப்போது தான் அவன் யாரென்று தெரிந்தது.

அன்றொரு நாள் கடற்கரையில் ஒருவனது கைக்கு மேல் தாங்கள் விழுந்து விட்டு மன்னிப்பு கேட்ட போது, தங்களை மன்னித்து விட்டு விடச் சொல்லிப் பரிந்துரை செய்தவன் இவன் தானென்று பளிச்சென்று நினைவுக்கு வந்தது.

இருவருக்கும் சட்டென்று சிரிப்பு வந்து விட்டது.
“மன்னித்துக் கொள்ளுங்கள் இப்போதும் தெரியாமல் மோதி விட்டேன்”
என்றவளைப் பார்த்துத் தானும் மன்னிப்புக் கேட்டபடி அவளது பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கியவன்
“உங்கள் பெயர் என்ன? அடுத்த தடவை மோதும் போது பெயரைச் சொல்லி மன்னிப்புக் கேட்பதற்கு…”
என்று சிரித்தான்.

அவனது சிரிப்பு அவளையும் தொற்றிக் கொண்டது.
“என் பெயர் அனுபல்லவி… உங்கள் பெயர்”

“நான் சரண் குமார்”
என்றபடி அவளது பைகளை அவனிடம் கொடுத்தான்.

அப்போது தான் பேருந்தின் நினைவே அவளுக்கு வந்தது ஐயோ என்றபடி தலையில் கை வைத்தாள்.

என்னவெனக் கேட்டவன் போகும் இடம் எதுவெனக் கேட்டு அந்தப் பாதையில் தான் போகிறேன் என்று அவளைத் தன் காரில் அழைத்துக் கொண்டு சென்றான்.

கார் பாதையில் விரைந்து கொண்டிருந்தது.

“ஏன் அனுபல்லவி… எந்த நம்பிக்கையில் என்னுடன் வருகிறீர்கள்… நான் இப்படியே எங்காவது கடத்திச் சென்றால் என்ன செய்வீர்கள்”
என்று சிறு புன்னகையுடன் கேட்டான்.

அதற்குத் தானும் லேசாகப் புன்னகைத்தாள் அனுபல்லவி.
“சிரித்து மழுப்பாமல் பதில் சொல்லுங்கள் அனுபல்லவி”

“பட்டப் பகலில் மருத்துவமனைக்குச் சொந்தமான வாகனத்தில் ஒரு பெண்ணைக் கடத்திச் செல்லும் அளவிற்கு உங்களுக்குத் தைரியம் போதாது”

“அடடா மருத்துவமனை வாகனத்தில் வந்ததை மறந்து விட்டேனே”
என்று லேசாகச் சிரித்தான் சரண்.

அவனது சிரிப்பைப் பார்த்திருந்தவளோ
“அதோடு நீங்கள் எந்த நம்பிக்கையில் என்னை அழைத்துச் செல்கிறீர்கள்… நான் திடீரென்று உங்களுக்கு மயக்கமருந்து கொடுத்து உங்களை எங்காவது கடத்திச் சென்றால் என்ன செய்வீர்கள்”
என்றாள் தானும் பதிலுக்கு…

அவளது பதிலைக் கேட்டவனோ விரிந்த புன்னகையுடன்
“உங்களுடன் பேசுவதற்கு முன்பாக யோசித்துப் பேச வேண்டும் என்று நன்றாகப் புரிந்து விட்டது அனுபல்லவி”
என்றான்.

“புரிந்தால் சரிதான்”
என்று சிரித்தவள் தான் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கிக் கொண்டு
“ரொம்பவும் நன்றி… உங்கள் உதவிக்கு”
என்றாள்.

“பரவாயில்லை அனுபல்லவி… அடுத்த சந்திப்பில் எங்கே மோதிக் கொள்ளப் போகிறோமோ தெரியவில்லை.”
என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டவள் மெல்லிய புன்னகையுடன் உள்ளே சென்று விட்டாள்.

அவள் உள்ளே சென்று மறையும் வரை பார்த்திருந்தவனோ மெல்லிய புன்னகையுடன் அங்கிருந்து சென்று விட்டான்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

வழமை போலக் கடற்கரை மணலில் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் கஸ்தூரி, காயத்ரி மற்றும் அனுபல்லவி.

“அக்கா… ஓடி ஓடிக் கால்கள் வலிக்கிறது. நாங்கள் மணல் வீடு கட்டுவோமா? ஆசையாக இருக்கிறது.”

“வேண்டாம் வேண்டாம் சிறு பிள்ளைகள் போல இருக்கும். பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்”

“என்ன காயு நீ… மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன? நாம் என்ன கொள்ளையா அடிக்கப் போகிறோம்… மணல் வீடு தானே கட்டப் போகிறோம்”

“அப்படிச் சொல்லுங்கள் அனுவக்கா… இந்த அக்கா எப்போதுமே இப்படித் தான் யாராவது ஏதாவது நினைப்பார்கள் என்றே சொல்லிக் கொண்டே இருப்பது”
என்றபடி கடலோரமாக மணல் வீடொன்று கட்டத் தயாரானாள் கஸ்தூரி.

அனுபல்லவியும் அவளோடு இணைந்து கொண்டாள்.

காயத்ரி சற்றே தயங்கியவாறு சுற்றும்முற்றும் பார்த்தாள்.

அவளை விடவும் வயதானவர்கள் கூட மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அதைப் பார்த்தவளுக்கு ஏதோ விநோதமாக இருந்தது.

“நான் தான் இப்படி எதெற்கெடுத்தாலும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன் போல… மற்றவர்கள் எல்லோரும் தங்கள் சந்தோசத்தை மட்டுமே பார்க்கிறார்கள்”
என்று எண்ணிக் கொண்டவள்.
தானும் மணல் வீடு கட்டுவதில் இணைந்து கொண்டாள்.

கஸ்தூரி தனது திறமைகள் எல்லாவற்றையும் கொட்டி முழுத் தீவிரத்துடன் மணல் வீட்டைப் படிப்படியாகக் கட்டிக் கொண்டிருந்தாள்.

ஒரு பக்கம் கஸ்தூரியும் மறு பக்கம் அனுவும் மண்ணைக் குடைந்து மணல் வீட்டைக் கட்ட, காயத்ரி அதில் சிறு சிறு படங்களை வரைந்து கொண்டிருந்தாள்.

அவர்கள் செய்வதை மூன்று வாண்டுகள் வேறு ஆவலாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

அந்த நேரம் பார்த்து ஒரு பெரிய நாயொன்று வேகமாகப் பாய்ந்து ஓடி வந்து கொண்டிருந்தது.

அந்த நாயைத் துரத்தியபடி யாரோ இரண்டு ஆண்கள் ஓடி வந்தார்கள்.

அந்த நாய் பெரிய இனமாக இருக்க வேண்டும் போல ஒரு ஆளின் பாதியளவிற்கு வளர்ந்திருந்தது.

கஸ்தூரியோ அனுவோ பாய்ந்தோடி வந்து கொண்டிருந்த அந்த நாயைக் கவனிக்கவில்லை.

ஆனால் அந்த நாயைக் காயத்ரி பார்த்து விட்டாள்.

நாயின் தோற்றத்தையும் பற்களையும் பார்த்தவள் இது வாய் வைத்தால் நம் உடம்பில் இருந்து எவ்வளவு கறி போகுமோ தெரியவில்லையே என்பது போலப் பிளந்த வாய் மூடாமல் திகைத்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நாயைத் துரத்தி வந்தவர்களையோ தன்னருகே இருந்தவர்களையோ அவளது மனது உள் வாங்கவே இல்லை.

அந்தளவிற்குக் காயத்ரி அதிர்ந்து போயிருந்தாள்.

நாய் ஒரே பாய்ச்சலாக அவர்கள் கட்டியிருந்த மணல்வீட்டைக் கடந்து பாய்ந்து சென்றது.

அது பாய்ந்து அந்தப் பக்கம் சென்றதும் தான் காயத்ரிக்குச் சுரணையே வந்தது.
'ஐயோ அம்மா’
என்றபடி துள்ளி எழுந்தாள்.

அவள் எழுந்த வேகத்தில் குடைந்து கொண்டிருந்த அவளது கை வேகமாக மேலெழுந்தது.
மணல் வீசி நான்கு பக்கமும் சிதறி விழுந்தது.

அதே போல் அவள் துள்ளி எழுந்ததில் நாயைத்துரத்திக் கொண்டு ஓடி வந்த ஒருவன் மீது வேகமாக மோதினாள்.

இருவரும் தடுமாறியதில் கீழே விழுந்தார்கள்.
அப்போதும் காயத்ரி எழுந்து கொள்வதற்கு முன்பாக
“என் கால்…”
என்று யாரோ கத்துவதைப் போல இருந்தது.

அப்போது தான் தன்னிலை உணர்ந்து அவள் எழுந்து கொள்ள முயன்றாள்.

காயத்ரியைக் கஸ்தூரியும் விழுந்தவனை அவனோடு வந்தவனும் தூக்கி விட்டார்கள்.

மண்ணைத் தட்டியபடி
“மன்னித்து விடுங்கள்”
என்று கேட்டபடி நிமிர்ந்தவள் அங்கே நின்றிருந்தவனைப் பார்த்ததும் திகைத்தாள்.

அவனுக்கும் இவளைப் பார்த்ததும் திகைப்பாக இருந்தது.

சிறிது நேரம் தான் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டு நின்றிருப்பார்கள் அதன் பிறகு பக்கென்று ஐவருமே சிரித்து விட்டார்கள்.

“ஐயோ நான் வேண்டுமென்றே மோதவில்லை”

“நானும் வேண்டுமென்றே மோதவில்லை”

“மன்னித்து விடுங்கள்”

“நீங்களும் மன்னித்து விடுங்கள்”

“அன்று போல இன்றும் திட்டப் போகிறீர்களோ என்று பயந்து விட்டேன்”

“திட்டத்தான் பார்த்தேன் அதற்குள் அன்றைய நினைப்பில் சிரிப்பு வந்து விட்டது”
என்று பதிலளித்தவனைப் பார்த்து மூன்று பெண்களும் சிரித்தார்கள்.

அப்போது தான் அனு அவனுக்கருகே நின்றிருந்தவனைப் பார்த்தாள்.
“அன்று நீங்கள் சொன்ன போது கூட நான் நம்பவில்லை சரண்குமார். ஆனால் பாருங்களேன் இன்று இப்படி ஆகி விட்டது.”
என்று சொல்லி விட்டு வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்.

எல்லோரும் அன்று நடந்ததையும் இன்று நடந்ததையும் நினைத்து நினைத்துச் சிரித்துக் கொண்டார்கள்.

இவன் என் நண்பன் ஆதித்யவர்மன் என்று அனுவுக்கு அறிமுகம் செய்து வைத்தான் சரண்குமார்.

அதற்குள் குளிப்பாட்டவெனக் கொண்டு வந்த நாயின் நினைவு வரவே ஆதித்யன் ஒரு சிறு தலையசைவுடன் அதை நோக்கி ஓடிப் போனான்.

இது காயத்ரிக்கும் ஆதித்யவர்மனுக்குமான இரண்டாவது சந்திப்பு.

சரண் குமாரும் சிறு கையசைத்து விட்டு அவனைத் தொடர்ந்தான்.

“நல்ல வேளை அக்கா… மூன்று பேரும் அவரது காலுக்கு மேலே விழவில்லை. இல்லாவிட்டால் அன்று போல அவரது கால் இற்றுப் போய் விட்டது என்று சொல்லிச் சண்டை பிடித்திருப்பார்.”

“உண்மைதான்… இந்தக் கடற்கரை மணலில் விழுந்து உருளுவது தான் என் வேலை என்று கூட நினைத்திருப்பார்கள். அது சரி அனு அவரை உனக்கு முதலே தெரியும் போல”

“ஆமாம் காயு… அன்றொரு நாள் பேருந்து இல்லாமல் நின்ற போது இல்லத்தில் கொண்டு வந்து விட்டார்”

“சரி சரி இப்படி வேறு யாரிடமும் இடி பட்டு அடி வாங்கும் முதல் இங்கிருந்து ஓடிப் போய் விடலாம்”
என்றவளைச் சிரித்தபடி மற்ற இருவரும் தொடர்ந்தார்கள்.

“அக்கா ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன்”

“என்ன?”

“உன்னுடையதும் அனுவக்காவுடையதும் திருமண விஷயம் பற்றி வெண்பாம்மா பேசிக் கொண்டிருந்தார்கள்”

“என்ன சொல்கிறாய்”

“ஆமாம் அக்கா இந்த இல்லத்தில் திருமணம் ஆகும் வரை தானே இருக்க முடியும். குறித்த வயதில் இவர்களே திருமணம் செய்து வைத்து விடுவார்கள் இல்லையா?”

“அதற்காக எல்லாம் திருமணம் செய்து கொள்ள முடியுமா? நாம் வெளியே தங்கிக் கொள்ள வேறு ஏதாவது இடம் பார்க்க வேண்டும்”

“ஆமாம் காயு… நாம் இதைப் பற்றி யோசிக்க வேண்டும்”

“அது தானே அக்கா மனதுக்குப் பிடித்த ஒருவரைத் தானே திருமணம் செய்ய முடியும். யாரோ தெரியாத ஒருவனை எல்லாம் கட்டிக் கொள்ள முடியாது.”

“எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது”

“அக்கா உங்களுக்கு வரப் போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறீர்கள்”

“அது தானே சொல்லு காயு”

“எனக்கு வரப் போகும் கணவனா… தெரியவில்லையே… வரும் போது பார்த்துக் கொள்ளலாம்”
என்றபடி நழுவி ஓடத் தொடங்கினாள் காயத்ரி.

அவளை மற்ற இருவரும் துரத்தத் தொடங்கினார்கள்.

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
“தாய் முகம் பார்த்த நாள்
தாவணி போட்ட நாள்
மறக்குமா மறக்குமா நெஞ்சே
மழைத்துளி ரசித்ததும்
பனித்துளி ருசித்ததும்
கரையுமா கரையுமா கண்ணில்
ஹைதர் கால வீரந்தான்
குதிரை ஏறி வருவானோ
காவல் தாண்டி என்னை தான் கடத்திக்கொண்டு போவானோ
கண்ணுக்குள் முதல் நெஞ்சுக்குள் வரை ஆசை சேமிக்கிறேன்
யாரவனோ யாரவனோ”
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 22

5878fa0b167ada122730d8e864300119~2.jpg

IMG-20210701-WA0015~2.jpg

அதிகாலை நேரத்தில் மரங்களிடையே அமர்ந்திருந்த பட்சிகள் சத்தம் போட்டுத் தங்கள் இருப்பை உணர்த்திக் கொண்டிருந்தன.

சரஸ்வதி இல்லத்தின் ஓரமாக அமைந்திருந்த நந்தவனத்தில் மலர்ந்திருந்த மலர்கள் எல்லாவற்றையுமே முருகன் கோவிலுக்காகப் பறித்துக் கொண்டிருந்தாள் காயத்ரி தேவி…

நேரம் ஆறைத் தொட்டுக் கொண்டிருந்தது.
இல்லத்தில் அவளையும் வெண்பாம்மாவையும் தவிர யாருமே எழுந்திருக்கவில்லை.

தொலை தூரத்தில் இருந்த முருகன் கோவிலின் மணியோசை காற்றோடு கலந்து வந்து ஆழ் துயிலில் முடங்கி இருந்தவர்களைத் தொட்டு எழச் செய்து கொண்டிருந்தது.

அதே நேரத்தில் இல்லத்தின் வாசலில் ஒரு வாகனம் சத்தத்துடன் வந்து நின்றது.

அந்தச் சத்தத்தில் திடுக்கிட்டவள் வாசலைத் திரும்பிப் பார்த்தாள்.
வாசல்கதவு இன்னும் கூடத் திறந்திருக்கவில்லை.

“அடடா வெளி வாசல் கதவு இன்னும் திறக்கப்படவில்லையே நம் இல்லத்திற்குத் தான் யாரோ வந்திருக்கிறார்கள் போல? ஆனாலும் இவ்வளவு அதிகாலையில் யார் வந்திருப்பார்கள்”
என யோசித்தபடி பூக்கூடையோடு அரக்கப்பரக்க வாசலுக்கு ஓடிச் சென்றாள் காயத்ரி…

அங்கே வாசலருகே ஒரு பெரிய வாகனம் நின்றிருந்தது. அதில் இருந்தவன் இறங்கி இல்லத்தின் வாசலுக்கு வந்து கொண்டிருந்தான்.

வெண்பாம்மாவைப் பார்க்க வந்திருப்பார்கள் போல என நினைத்தவள் வலது கையில் பூக்கூடை இருக்கவே அவசரமாக இடது கையினால் வாசல் கதவைத் திறந்து விட்டாள்.

அதே நேரத்தில் அவளது வலது கையில் இருந்த பூக்கூடையில் இருந்து பூக்கள் லேசாகச் சிதறவே இடது கையினில் இருந்த வாசலின் பூட்டைக் கீழே நழுவ விட்டு இரு கரங்களாலும் பூக் கூடையைத் தாங்கிக் கொண்டாள் அவள்.

அவள் பூட்டை நழுவ விட்ட நேரத்தில் முன்னே ஒரு எட்டு எடுத்து வைத்த அந்த வாகனத்திற்குச் சொந்தக்காரன் அம்மாவென்று அலறினான்.

அவனது அலறல் சத்தத்தில் பதறியவள் பூக்கூடையை அப்படியே கீழே போட்டு விட்டு அவனை ஏன் கத்துகிறாய் என்பது போலப் பார்த்தவள் தவறு செய்த குழந்தையாகித் திருதிருவென முழிக்கத் தொடங்கினாள்.

அவள் கீழே போட்ட அந்தப் பூட்டு அவனது பாதத்தில் விழுந்து தொலைத்திருந்தது.

“ஐயையோ மன்னித்து விடுங்கள் மன்னித்து விடுங்கள்”
என்று பதறத் தொடங்கியவளிடம்
“இதுவே உங்களுக்கு வேலையாகிப் போய் விட்டது”
என்றான் வலித்த பாதத்தை இறுகப் பற்றியவாறு.

“இவன் என்ன சொல்கிறான் எதுவே என்னுடைய வேலையாகப் போயிற்று…” என மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டவள் அப்போது தான் அவனது முகத்தையே பார்த்தாள்.

“ஐயையோ இது அவனல்லவா! பெயர் கூட ஆதித்யவர்மனோ ஆதித்யசர்மனோ என்று சொன்னானே… கடவுளே இதென்ன இவனைப் பார்க்கும் போதெல்லாம் ஒன்று நான் மேலே விழுந்து தொலைகிறேன் இல்லாவிட்டால் எதையாவது போட்டுத் தொலைகிறேனே”
என மனதுக்குள் புலம்பியவள் அப்பாவியாய் விழிகளை விரித்துக் கொண்டு அவனைப் பார்த்தபடி பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்றாள்.

பாதத்தை நன்றாகத் தேய்த்தபடி நிமிர்ந்து அவளைப் பார்த்தவனுக்கோ அவளது தோற்றத்தைப் பார்த்ததும் சிரிப்பே வந்து விட்டது.
வலியும் லேசாக மட்டுப் படுவது போலத் தோன்றியது.

“அம்மா தாயே… நான் போகும் இடமெல்லாம் தொடர்ந்து வந்து வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் அளவிற்கு அப்படி என் மீது என்ன கொலைவெறி?”
என்று கேட்டவனைப் பார்த்தவளோ
“நானா தொடர்ந்து வந்தேன் நீங்களாக வந்து வேண்டிக் கட்டிக் கொண்டால் நானா பொறுப்பு”
என்று முணுமுணுத்தாள்.

அவள் முணுமுணுத்தது அவனுக்கு நன்றாகவே கேட்டது.

“அதுவும் சரி தான் நானாகத் தான் வேண்டிக் கட்டிக் கொள்கிறேன் போல”
என்றபடி மறுபடியும் பாதத்தைத் தேய்த்து விட்டுக் கொண்டான்.

தான் சொன்னது அவனுக்குக் கேட்டு விட்டது என்றதும் நாக்கைக் கடித்துக் கொண்டவள் அவன் பாதத்தை தேய்த்துக் கொள்வதைப் பார்த்ததும் நிஜமாகவே பயந்து போனாள்.

“ரொம்பவும் வலிக்கிறதா? உள்ளே வாருங்கள் அங்கே வெண்பாம்மாவிடம் தைலம் ஏதாவது வாங்கிப் பூசிக் கொள்ளலாம்”
என்றபடி அவனை அழைத்தபடி திரும்பியவளிடம்
“ஒரு நிமிஷம்”
என்றபடி பூக்கூடையை எடுத்து அவளிடம் கொடுத்தான் ஆதித்ய வர்மன்.

இல்லத்து வெளி வாசலில் இருந்து கட்டடத்தை அடைய ஒரு நீண்ட பாதை அமைத்து இருந்தார்கள்.

அதன் இரு பக்கங்களிலும் வகை வகையான மலர்ச்செடிகள் சாடிகளில் வைத்துப் பராமரிக்கப் பட்டிருந்தன.

அந்தப் பாதை வழியே காலை லேசாகக் கெந்தியபடி அவன் நடந்து வர அவனோடு தானும் இணைந்து நடந்தவளுக்கு லேசாக மனதில் குறுகுறுத்தது.

“மன்னித்தவிடுங்கள்… ரொம்ப வலிக்கிறதா? மன்னியுங்கள்…”
என்று மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.

“பரவாயில்லை… கொஞ்சம் வலிக்கிறது தான்… இருந்தாலும் இத்தனை தடவை மன்னிப்புக் கேட்டதால் வலி கொஞ்சம் குறைந்தது போலத் தான் தெரிகிறது”
என்று லேசாக முறுவலித்தான் ஆதித்யன்.

“உங்களின் பெயர் ஆதித்யவர்மனா? ஆதித்யசர்மனா? வெண்பாம்மாவிடம் சொல்ல வேண்டும்… இவ்வளவு காலையில் வந்திருக்கிறீர்கள்…”

“என் பெயர் ஆதித்யவர்மன்… வேறொரு இடத்திற்கும் செல்ல வேண்டும்… அதனால் தான் வெண்பாம்மாவிடம் பேசி விட்டுச் செல்லலாமே என்று சீக்கிரமாக வந்தேன்”

“ஓ அப்படியா? இதற்கு முதலும் இங்கே வந்திருக்கிறீர்களா?”

“ஆமாம் பல தடவை வந்திருக்கிறேன். ஆனால் உங்களை இதற்கு முதல் இங்கே பார்த்ததே இல்லையே? அருகில் தான் உங்கள் வீடா? இங்கே பணி புரிகிறீர்களா?”

“இது தான் என்னுடைய வீடு. நீங்கள் வரும் போது நான் உள்ளே இருந்திருப்பேன்”

“ஓ மன்னித்துக் கொள்ளுங்கள்”

“எதற்கு மன்னிப்பு உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியாது. அதனால் தெரிந்து கொள்ளக் கேட்டீர்கள். இதற்கு எதற்கு மன்னிப்பு”

“அழகாகப் பதில் அளிக்கிறீர்கள். உங்கள் பெயர் என்ன?”

“நன்றி… எனது பெயர் காயத்ரிதேவி…”

“நிஜமாகவா அழகான பெயர் என்னுடைய அம்மாவின் பெயரும் காயத்ரி தான்”

“காயத்ரி என்ற பெயர் அழகாக இருக்கிறதா? இல்லை உங்களுடைய அம்மாவின் பெயர் அது என்பதால் அழகாக இருக்கிறதா?”

“நீங்கள் பதில் மட்டும் இல்லை கேள்வியும் அழகாகக் கேட்கிறீர்கள்… காயத்ரி என்கிற பெயர் அழகு தான் என் அம்மாவின் பெயரும் அது என்பதால் கூடுதல் அழகு”
என்றவனைப் பார்த்துப் புன்னகைத்தவள் வராண்டாவில் இருந்த நாற்காலியில் அவனை அமரச் சொன்னாள்.

“நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள் நான் அம்மாவை அழைத்து வருகிறேன்”
என்று உள்ளே சென்றவள் கையோடு கொண்டு வந்திருந்த தைலத்தை அவனிடம் கொடுத்து விட்டு மீண்டும் உள்ளே சென்று விட்டாள்.

ஒரு ஐந்து நிமிடத்தில்
“வாப்பா ஆதித்யா… இவ்வளவு அதிகாலையில் என்ன திடும் பிரவேசம் ஏதாவது விஷயமா?”
என்றபடி இல்லத்தின் பொறுப்பதிகாரி வெண்பா அங்கே ஆஜரானார்.

“இல்லத்திற்கு ஒரு குறிப்பிட்டளவு தொகையை அப்பாவின் நண்பர் ஒருவர் கொடுத்திருந்தார் அதைக் கையோடு கொண்டு வந்தேன் அம்மா”
என்றபடி தனது சட்டைப் பையில் இருந்த காசோலையை எடுத்து வெண்பாவின் கையில் வைத்தான் ஆதித்யன்.

“இதைப் பிறகு கூடக் கொண்டு வந்து கொடுத்திருக்கலாமே ஆதித்யா… இவ்வளவு காலையில் சிரமப் பட்டு வர வேண்டுமா?”

“அதில்லையம்மா இந்தப் பக்கம் ஒரு வேலை விஷயமாக வந்தேன் அங்கே ஏழு மணியளவில் இருக்க வேண்டும். அப்படியே கொடுத்து விட்டால் ஒரு வேலை முடிந்து விடுமே என்று தான்”

“சரிப்பா ஏதாவது குடித்து விட்டுத் தான் செல்ல வேண்டும்”

“ஐயோ வேண்டாம் அம்மா”
என்று மறுக்கப் போனவனின் முன்னால் தேநீர்க் கோப்பையை நீட்டினாள் காயத்ரி.

அவளது செய்கையைக் கண்ணால் பாராட்டிக் கொண்டார் வெண்பா.

அவள் நீட்டிய தேநீர்க் கோப்பையை மறுக்க முடியாமல் எடுத்துப் பருகினான் ஆதித்யன்.

நாவில் ஏதோ இனம் புரியாததொரு சுவையும் நாசியில் நறுமணமொன்றும் ஒட்டிக் கொண்டது.

அந்தச் சுவையை இதற்கு முன்னர் அவனது தாய் கொடுத்த தேநீரில் உணர்ந்தும் இருப்பது அவனுக்கு நினைவு வந்தது.

அவனது முகபாவனையைப் புரிந்து கொண்ட காயத்ரி
“துளசி இலைச் சாறும் தூதுவளைச் சாறும் கொஞ்சம் தேநீரில் கலந்திருக்கிறேன்”
என்று விளக்கமளித்தாள்.

ஒரு சொட்டு மிச்சம் வைக்காமல் அப்படியே தேநீரைக் குடித்து முடித்தவன்
“என் அம்மாவும் இப்படித்தான் தூதுவளை துளசி இலை என்று எதையாவது தேநீரோடு கலந்து தருவார்கள்… அதே சுவையும் வாசனையும் வரவும் தான் எங்கோ சுவைத்தது போல இருந்தது என்று தோன்றியது”
எனத் தானும் விளக்கமளித்தான்.

காலியான கோப்பையை அவளிடம் நீட்டியவன் நன்றி சொல்ல மறக்கவில்லை.

வெண்பாவிடம் விடைபெற்றவன் காயத்ரியிடம் ஒரு தலையசைவுடன் கிளம்பி விட்டான்.

அவன் சென்றதும் அவனைப் பற்றிப் புகழ்ந்து தள்ளி விட்டார் வெண்பா.
சிரித்த முகத்துடனேயே அவனது அருமை பெருமைகளைக் கடனே என்று கேட்டு வைத்தாள் காயத்ரி.

“இந்தம்மா எதற்காக இப்போது இவனைப் பற்றி இப்படிப் புகழுகிறார்கள். ஏதோ அவர் சொன்னபடி இருந்தால் சரி தான்”
என்று நினைத்தவள் தனது வேலைகளில் மூழ்கி விட்டாள்.

அங்கே தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தவனுக்கோ அவளது அந்தக் குழந்தை முகமே திரும்பத் திரும்பத் தோன்றி மறைந்தது.

இது தான் என் வீடு என்று சொன்னாளே… அப்படியானால் அவளுக்கு யாருமே இல்லையா? ஆனால் அவளது முகத்தில் ஒரு சிறு கவலை கூட இல்லை எப்போதுமே சிரித்த முகமாகவே இருக்கிறாளே…
இதற்கு முதல் பார்த்த போதும் தனக்குக் கிடைத்த பொழுதுகளைச் சந்தோஷமாகவே ஆக்கிக் கொண்டிருந்தாளே…
எது எப்படியோ அவளோடு பேசும் போது ஏதோ சுவாரஸ்யமாக இருக்கிறது.
என நினைத்துக் கொண்டான்…

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
"எனக்கென ஏற்கனவே
பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறுகட்டி
இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே ஆ..
என்னுளே என்னுளே
ஏதேதோ செய்கிறதே...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 23

IMG-20210627-WA0052.jpg

20210122_215238~2.jpg

9823450f2d1cfa98e0c380889f290118~2.jpg

9421b2dee7e53c62ebc433999e03c6af~2.jpg

Tulasi-Shivamani-at-Metro-Success-Meet-11~2.jpg

1620219058_VJayaprakash3~2.jpg


வானம் லேசாகத் தூறல் போட்டுக் கொண்டிருந்தது…
எங்கும் மப்பும் மந்தாரமுமாகக் காட்சி அளித்த வண்ணம் இருந்தது.

அதே நேரத்தில் சாலையில் ஒரு வாகனம் வேகமாக விரைந்து கொண்டிருந்தது.
வாகனத்தை ஆதித்யன் ஓட்டிக் கொண்டிருந்தான்.

அதிகாலை நேரம் சாலையில் யாருமே இல்லை என்பதாலும் சீக்கிரமாகச் செல்ல வேண்டும் என்பதாலும் அவன் வழமைக்கு மாறான வேகத்தில் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

அவனுக்கு அருகே "காற்றைப் பிடித்து வானத்தில் ஏறி நிலவைத் திறந்தேன் நீ தெரிந்தாய்... மேகம் உடைத்து மெதுவாய்ப் பார்த்தேன் துளியாய் அதிலே நீ தெரிந்தாய்... புல்லை எரித்துச் சாம்பல் விதைத்தேன் பூவாய் அதிலே நீ முளைத்தாய்... கடலைப் பிடித்து அலைகள் வடித்தேன் நுரைகள் முழுதும் நீ தெரிந்தாய்... " என்ற இதமான பாடலை முணுமுணுத்தபடி அவனது தம்பி மகேந்திரவர்மன் அமர்ந்திருந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

திடீரென வாகனத்திற்குக் குறுக்கே ஒரு பெண் ஓடவும் பதட்டத்துடன் சட்டென்று வாகனத்தை நிறுத்தி விட்டுக் கோபமாகக் கீழே இறங்கினான் ஆதித்யன்.

அண்ணன் வாகனத்தை வேகமாக நிறுத்தி விட்டுக் கோபமாக இறங்குவதைப் பார்த்தவன் என்னவென்பதைப் போல வெளியே எட்டிப் பார்த்தான்.

சாலையின் ஓரத்தே ஒருத்தி காதுகளை இறுகப் பொத்தியபடி நின்றிருக்க இன்னொருத்தி வாகனத்தின் முன்பாகக் காதுகளைப் பொத்தியபடி அமர்ந்திருந்தாள்.

யார் இவர்கள் என்ன செய்கிறார்கள் என யோசித்தவன் கீழே இறங்கிச் சாலையோரம் நின்றிருந்தவளருகில் சென்றான்.

“என்னம்மா ஏதும் பிரச்சனையா?”
என்று மகேந்திரன் கேட்ட கேள்விக்கு அவளிடம் இருந்து எந்தப் பதிலுமே வரவில்லை.

என்ன இவள் பேசாமல் நிற்கிறாள் என்பது போலப் பார்த்தவனுக்கு அப்போது தான் அவள் காதுகளைப் பொத்தியிருப்பது கருத்தில் பட்டது.

பேசாமல் கைகளைக் கட்டியபடி வாகனத்தில் சாய்ந்து கொண்டு நின்றபடி அண்ணனைத் திரும்பிப் பார்த்தான்.

அங்கே ஆதித்யன் கீழே இருந்த பெண்ணைத் திட்டிக் கொண்டிருந்தது தெரிந்தது.

லேசான சிரிப்புடன் அவனருகில் சென்றவன்
“அண்ணா எதற்காக உன் சக்தியை விரயமாக்குகிறாய்? அங்கே பார் அந்தப் பெண் காதுகளைப் பொத்திக் கொண்டு இருக்கிறாள். அநேகமாக நாங்கள் அவள் மீது வாகனத்தை ஏற்றி விட்டோம் என்று நினைத்து விட்டாள் போல”
என்றவனைத் திரும்பிப் பார்த்த ஆதித்யனின் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தன.

அண்ணனின் சிவந்த கண்களைப் பார்த்தவனுக்கு விளங்கி விட்டது. இன்று நடக்கவிருந்த ஒரு பெரிய விபத்தை அவன் எப்படி ஒரு நொடியில் நிறுத்தி இருக்கிறான் என்பது. வாகனம் வந்த வேகத்திற்கு மோதி இருந்தால் அந்தப் பெண்ணின் எலும்பு கூட மிஞ்சி இருக்காது என்பது நன்றாகவே புரிந்தது.

அப்போது தான் சாலையோரம் நின்றவள் இங்கே பார்த்து விட்டு இவர்களுக்கருகே ஓடி வந்தாள்.
ஓடி வந்தவள் வேறு யாருமில்லை அனுபல்லவி தான். அதே போல சாலையில் அமர்ந்திருந்தவள் காயத்ரி.

ஓடி வந்தவள் இவர்களைப் பார்த்து விட்டு நல்ல வேளை ஒன்றும் ஆகவில்லை என்று கடவுளைப் பிரார்த்தித்தபடி காயத்ரியை உலுக்கினாள்.

அப்போது தான் திடுக்கிட்டு நிமிர்ந்து திரும்பிப் பார்த்தாள் காயத்ரி. வாகனத்திற்கு முதுகுப் பக்கம் காட்டி அமர்ந்திருந்தவள் திரும்பிப் பார்த்ததும் தான் அவளது முகத்தைப் பார்த்தான் ஆதித்யன்.

முகவாயில் கை வைத்தபடி
“மறுபடியுமா? நல்ல வேளை வாகனத்தை மேலே ஏற்றவில்லை… என்னம்மா இப்படி எல்லாம் வந்து குறுக்கே விழுகிறீர்களே?”
என்றான் சற்றே கோபந் தணிந்தவனாக.

அப்போது தான் கீழே அமர்ந்திருந்தவள் மெதுவாக எழுந்து கொண்டாள்.
அவள் எழுந்ததும் அவளுக்கு முன்பாக அவள் மறைத்தபடி இருந்த இடத்தில் நான்கு நாய்க்குட்டிகள் ஒன்றுக்கு மேல் ஒன்று படுத்தபடி பேந்தப் பேந்த விழித்தபடி இருந்தன.

அந்தக் குட்டிகளைப் பார்த்ததும் தான் அவள் ஏன் சாலையில் குறுக்காக ஓடி வந்தாள் என்பது இவர்களுக்குப் புரிந்தது.

“நல்ல வேளை நீங்கள் முன்னே ஓடி வராமல் இருந்திருந்தால் அநியாயமாக நான்கு உயிர்கள் மீது வாகனத்தை ஏற்றிக் கொன்றிருப்போம் இல்லையா? ஒரு பெரிய பாவத்தில் இருந்து எங்களைக் காப்பாற்றியமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி”

“உண்மை தான் காயத்ரி மட்டும் அந்தக் குட்டிகளைப் பார்த்திரா விட்டால் என்ன ஆகி இருக்குமோ கடவுளே! நல்ல வேளை சாலைக்கு இந்தப் பக்கத்தில் நின்றிருந்ததால் அவளது பார்வைக்கு இந்த நாய்க் குட்டிகள் தெரிந்தன… இல்லாமல் போனால் என்ன ஆகி இருக்கும்”
என்றாள் அனுபல்லவி.

“உண்மை தான் ரொம்ப நல்ல காரியத்தைச் செய்தீர்கள்”
என்று மகேந்திரனும் தன் பங்குக்குப் பாராட்டினான்.

“இந்தக் குட்டிகளின் பால்மணம் இன்னும் கூட மாறவில்லை… பார்த்தாலே பாவமாக இருக்கிறது… இப்போது இவற்றை என்ன செய்வது இந்தக் குட்டிகளுக்குப் பால் கொடுக்க வேண்டுமே”
என்று கவலைப் பட்டாள் காயத்ரி.

“நீங்கள் அது பற்றிக் கவலைப்பட வேண்டாம் காயத்ரி… இந்தக் குட்டிகளை நாங்கள் மிருகங்களைப் பாதுகாக்கும் இடத்திற்குக் கொண்டு சென்று விடுகிறோம்”
என்று சொன்னான் ஆதித்யன்.

“அதுவும் நல்லது தான் பால்மணம் மாறாத குட்டிகளை நாங்கள் எடுத்துக் கொண்டு போய் வளர்த்தால், எசகுபிசகாகி இவற்றின் உயிருக்கு ஆபத்து வருமோ என்று பயமாக இருந்தது நீங்கள் நல்ல வழி சொன்னீர்கள்”
என்ற அனுபல்லவி அந்த நாய்க்குட்டிகளில் ஒன்றைப் பக்குவமாகத் தூக்கி வாகனத்தின் இருக்கையில் விட்டாள்.

அதே போல் மற்ற மூவரும் ஆளுக்கொரு குட்டியாகத் தூக்கி உள்ளே விட்டார்கள்.

“இன்னொரு விஷயம் வாகனத்தை வேகமாக ஒட்டாமல் மெதுவாக ஓட்டுகள்”
என்று சொன்ன அனுவும் காயத்ரியும் வாகனம் சென்று சாலையில் திரும்பும் வரை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“நல்ல வேளை அனு அந்தக் குட்டிகளை ஒரு வழியாகக் காப்பாற்றி விட்டோம் இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது”
என்ற காயத்ரி அனுவுடன் தங்கள் ஆசிரமம் நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

கீழ் வானில் மெதுவாக இளஞ் சூரியன் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது வருகை நோக்கிச் சூரியகாந்திப் பூக்கள் முகம் மலர்ந்து சிலிர்த்துக் கொண்டு நின்றிருந்தன.

சாளரத்தின் வழியே தெரிந்த அந்த மலர்களையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு தங்களது அறையில் அமர்ந்திருந்த காயத்ரி தனது இரண்டாவது மகனான மகேந்திரவர்மன் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்.

பூஜையறையில் மனைவியைக் காணாமல் தங்களது அறைக்கு வந்த கவிவர்மன் காயத்ரியின் தோற்றத்தில் சற்றே யோசனையோடு அவருக்கு அருகே அமர்ந்து கொண்டார்.

“என்ன காயத்ரி நீ பூஜை அறையில் இருப்பாய் என்று நினைத்து அங்கே தேடி விட்டு இங்கு வந்தேன்… நீ அப்படி எதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருக்கிறாய்?”

“மனதே சரியில்லை மாமா”

“என்ன காயத்ரி என்ன நடந்தது?”

“மாமா… நம் மகேந்திரன்…”

“அவனுக்கு என்னம்மா அவன் நன்றாகத் தானே இருக்கிறான்”

“அப்படித் தான் மாமா நானும் நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால்…”

“ஆனால் என்ன காயத்ரி தெளிவாகச் சொல்லு மகேந்திரனுக்கு என்ன?”

“மாமா… நேற்றிரவு நான் மகேந்திரனின் அறையைச் சுத்தம் செய்யச் சென்றேன்… அங்கே…”

“அங்கே என்ன?”

“அங்கே நிறைய மாத்திரைகள் ஊசிகள் எல்லாம் இருந்தது மாமா… என்னவென்று எடுத்துப் பார்த்தால் அவையெல்லாம் போதை மாத்திரைகள்”
என்று சொல்லி விட்டு முகத்தை மூடிக் கொண்டு அழத் தொடங்கினார் காயத்ரி.

மனைவி சொன்னதைக் கேட்டதும் இடியே தலையில் இறங்கியது போல அதிர்ந்து போய் அப்படியே அமர்ந்து விட்டார் கவிவர்மன்.

“அவனுக்கு என்ன பிரச்சினை மாமா… இல்லை அவனுக்கு அப்படி என்ன குறை வைத்தோம்… இவனுக்கு இப்படி ஒரு பழக்கம் இருக்கிறது என்று இது வரை இங்கே யாருக்காவது தெரியுமா? இப்போது தான் ஆரம்பமா? இல்லை ரொம்பத் தூரம் போய் விட்டானா? ஒன்றும் புரியவில்லையே மாமா...”
என்று தன் போக்கில் புலம்பிக் கொண்டிருந்தார் காயத்ரி.

மனைவியின் கண்ணீரும் மகனின் இந்தப் போதைப் பழக்கமும் அந்தப் பெரிய மனிதனை உலுக்கிப் போட்டது.

இது கலங்கி நிற்கும் நேரமில்லை இதற்கு ஏதாவது தீர்வு கண்டே ஆக வேண்டும் என்று ஒரு வழியாகத் தன்னைத் தேற்றிக் கொண்டவர். மனைவியையும் சமாதானப் படுத்த முயன்றார்.

மனைவிக்கு ஆறுதல் வார்த்தை கூறி விட்டு, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வாக்குக் கொடுத்த கவிவர்மன், ஆதித்யனை உடனடியாக வந்து தன்னைச் சந்திக்குமாறு தகவல் அனுப்பினார்.

வெளியே வேலையாக இருந்த ஆதித்யன் தந்தை எதற்காக இப்படி அவசரமாக வரச் சொல்கிறார் என நினைத்தபடி விரைந்து வீடு வந்து சேர்ந்தான்.

வீடே மயான அமைதியில் மூழ்கி இருப்பதைப் பார்த்தவனுக்கு ஏதோ சரியில்லை என்று மட்டும் புரிந்தது.

அவனது விழிகளோ தாயைத் தேடியது.
அவரை எங்குமே காணவில்லை. மூத்தவனது வரவுக்காக வாசலையே பார்த்திருந்த கவிவர்மன் அவனை நோக்கி விரைந்து வந்தார்.

தந்தையின் முகத்தில் தெரிந்த கலவரம் லேசாக அவனையும் தொற்றிக் கொண்டது. பிரச்சினை ஏதோ பெரிதாகத் தான் இருக்க வேண்டும் என்றும் அவனுக்குப் புரிந்தது.

என்னப்பா என்னவாயிற்று என்று கூட அவனுக்குக் கேட்கத் தோன்றவில்லை.
தந்தையே சொல்லட்டும் என்பது போல அவரது முகத்தையே பார்த்திருந்தான் ஆதித்யன்.

மூத்தவனைப் பார்த்ததும் தான் கவிவர்மனுக்கு லேசாக நெஞ்சுப் படபடப்புக் குறைந்தது போல இருந்தது.

இனிமேல் அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான் என்கிற தைரியமும் வந்தது.

“ஆதிப்பா… மகேந்திரன் உன் கூட வந்திருந்தானே அவன் எங்கே காணவில்லை”

“அவன் தன் நண்பர்களோடு சேர்ந்து வெளியே போகிறேன் என்று போய் விட்டான் அப்பா”

“ஓ அப்படியா?”

“என்னப்பா என்ன விஷயம்… ஏதோ பலமாக யோசித்துக் கொண்டிருக்கிறீர்களே?”

“ஆதிப்பா… உன்னிடம் தானே மகேந்திரன் அதிகமாக மனம் விட்டுப் பேசுவான்… அவன் ஏதாவது சொன்னானா?”

“ஏனப்பா என்ன விஷயம்”

“நம் மகேந்திரன் போதைப் பொருள் எடுத்துக் கொள்கிறானோ இல்லை போதைப் பொருள் கடத்துகிறானோ தெரியவில்லை… எனக்கும் உன் அம்மாவுக்கும் ஒரே வேதனையாக இருக்கிறது”

“என்னப்பா சொல்கிறீர்கள்… சரி இனிமேல் இந்த விடயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்”
என்று தந்தையைத் தட்டிக் கொடுத்து விட்டு மகேந்திரனைத் தேடிச் சென்றான் ஆதித்யன்.

அவனுக்கு எப்போதுமே மகேந்திரன் மேல் தனிப்பிரியம் உண்டு. மகேந்திரன் அமைதியான சுபாவம் உடையவன்... அவன் அதிகமாகப் பேசுவதே ஆதித்யனுடன் மட்டும் தான்... அதே போலத் தன் தம்பிமார் எப்போதுமே சந்தோஷமாக இருக்க வேண்டும் என உழைப்பவன் ஆதித்யன்.

அவர்களது விருப்பங்களை நிறைவேற்றப் போராடுபவன். நிச்சயமாக மகேந்திரன் தப்பு வழி போக மாட்டான் என அவன் உறுதியாக நம்பினான்.

தந்தையும் தாயும் ஏதோ தவறாகப் புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான்.
ஆனால் அங்கே அவனுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்ததை அப்போது ஆதித்யன் அறியவில்லை.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
"நம்மைப் போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாருமில்லை
தன்னைப் போல என்றும் எண்ணும்
நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை"
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 24

IMG-20210627-WA0052.jpg

8bc5107875fae2c0373a391b4e396039~2.jpg

Tulasi-Shivamani~2.jpg

jayaprakash-c9ac916f-0d8b-43a8-aa60-14954408983-resize-750~2.jpg


நேரம் நடுநிசியைத் தாண்டிக் கொண்டிருந்தது.
மழை மேகங்களைச் சுமந்திருந்த வானம் பெரும் சத்தத்துடன் மழையைப் பொழிந்து கொண்டிருந்தது.

அண்டசராசரங்களே அதிரும்படி இடி இடிக்கக் கண்ணைக் குருடாக்கும் அளவில் மின்னல் பளிச் பளிச்சென வெட்டிக் கொண்டிருந்தது.

தொலைவில் கோடாக வானம் பிளப்பது போல இருந்த அந்தக் காட்சியையும் கடலலைகள் வானளவில் ஆக்ரோஷமாக எழுந்து எழுந்து வீழும் சத்தத்தையும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மகேந்திரவர்மன்.

அதே நேரத்தில் தண்ணீர் குடிப்பதற்கு எழுந்து வெளியே வந்த ஆதித்யன் மாடி அறைக்கதவு திறந்திருப்பதைப் பார்த்ததும் அங்கே சென்றான்.

அங்கே… வெளியே நிகழ்ந்து கொண்டிருக்கும் இயற்கையின் சீற்றத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் மகேந்திரவர்மன்.
அவனிடம் எந்த அசைவும் இல்லை.

ஆராய்ச்சிப் பார்வையுடன் பின்னால் நின்று அவனைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்.

அவனது விழிகள் கடிகாரத்தை ஆராய்ந்தன. கடிகாரத்தின் ஒளிரும் முட்கள் நேரம் நள்ளிரவு ஒன்று என்பதைப் பளிச்சென்று காட்டிக் கொண்டிருந்தது.

“தம்பியை நாம் கவனிக்கத் தவறி விட்டோமா? எதையுமே என்னிடம் இவன் மறைத்ததில்லை என்று இறுமாந்திருந்தது ஒரு வேளை தவறோ? இல்லை இல்லை அப்படி எல்லாம் இல்லை… அம்மாவும் அப்பாவும் ஏதோ தவறாகப் புரிந்துகொண்டு கவலைப் படுகிறார்கள்… ஆனாலும் இந்த நேரத்தில் தூங்காமல் இவன் என்ன செய்து கொண்டிருக்கிறான். இன்று பகல் முழுவதும் என் கண்ணிலேயே படவில்லையே”
என்று தனக்குள் பேசிக் கொண்டான் ஆதித்யன்.

ஆதித்யன் அறையினுள் வந்ததைக் கூட உணராமல் நெடு நேரமாகச் சாளரத்தின் வழியே மின்னல் வெட்டும் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் மகேந்திர வர்மன்.

வெளியே இடி இடிப்பதைப் போல அவனது உள்ளத்தினுள்ளும் ஏதோ ஒரு விஷயம் இடிபோல இடித்துக் கொண்டிருந்ததோ? ஆனால் அதை அவனன்றி யாரறிவார்?

தம்பியின் தனிமையில் குறுக்கிடுவது போல அவனருகில் மெல்லச் சென்று அவனது தோளில் கை வைத்தான் ஆதித்யன்.

“மகேந்திரா! தூங்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

“அண்ணா நீங்களா?”

“நானே தான்… அதிருக்கட்டும் நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்”

“அது வந்து அண்ணா… தூக்கம் வரவில்லை”

“தூக்கம் வரவில்லையா? இப்போது நேரம் என்னவென்று உனக்குத் தெரியுமா? உன்னைப் பார்த்தால் இப்போது தான் நீ வீட்டிற்கே வந்திருக்கிறாய் போலத் தெரிகிறதே”

“……………………….”

“இப்படி மௌனமாக இருந்தால் என்ன அர்த்தம் மகேந்திரா! இது என்ன புதுப் பழக்கம் நடுராத்திரியில் வீட்டிற்கு வருவது… நீ இப்படிச் செய்வது அம்மாவுக்குத் தெரியுமா?”

“…………………………”

“வாயைத் திறந்து ஏதாவது சொல்லுடா… நீ இப்படி எல்லாம் செய்பவன் இல்லையே என்னாயிற்று உனக்கு?”

“………………….......”

“மகேந்திரா! அண்ணனிடம் ஏதாவது சொல்ல வேண்டுமாடா… டேய் ஏதாவது சொல்லுடா…”

“ஒன்றுமில்லை அண்ணா”

“ஒன்றுமில்லையா? ஏதோ இருக்கிறது… உனக்கு என்னிடம் சொல்ல இஷ்டம் இல்லை என்றால் பரவாயில்லை விடு… ஆனால் இந்த நேரத்தில் விழித்திருப்பது சரியில்லை… வா தூங்கலாம்… எதுவானாலும் நாளை காலையில் பேசிக் கொள்ளலாம்”
என்றபடி அவனை அழைத்துக் கொண்டு சென்றான்.

மகேந்திரனை அவனது அறையில் விட்டு வந்து தன் அறையில் நுழைந்த ஆதித்யனுக்குத் தூக்கம் தொலைவானது.

“இவன் முகமே சரியில்லையே… எதையோ என்னிடம் மறைக்கிறான் போலத் தெரிகிறதே என்னவாக இருக்கும்”
என யோசித்துக் கொண்டே இருந்தவனுக்கு எப்போது நித்ராதேவி அவனை ஆட்கொண்டாள் என்பது தெரியவில்லை.

அதிகாலை சூரிய வெளிச்சம் சாளரத்தின் வழியே ஊடுருவி வந்து கொண்டிருந்த நேரத்தில் மெதுவாக இமைகளைப் பிரித்துக் கடிகாரத்தைப் பார்த்த ஆதித்யன் வேகமாக எழுந்து அமர்ந்தான்.

நேரம் காலை எட்டைத் தொட்டுக் கொண்டிருந்தது.
இவ்வளவு நேரமாகவா தூங்கினேன். இந்த அம்மா எங்கே போனார்கள். வழமையாக ஆறு மணி ஆனதுமே சுப்ரபாதம் பாடத் தொடங்கி விடுவார்களே… என யோசித்தவாறு அவசரமாக வெளியே செல்வதற்குத் தயாரானான்.

வெளியே எங்குமே தாயைக் காணவில்லை என்பதால் அவரைத் தேடி அவரது அறைக்குச் சென்றவன் அங்கே கண்ட காட்சியில் திகைத்து நின்றான்.

ஆதித்யனின் தாய் காயத்ரி அழுது யாருமே பார்த்ததில்லை. அதிலும் முக்கியமாக ஆதித்யன் பார்த்ததில்லை. ஆனால் இன்று அவருக்கு என்னாயிற்று? இப்படித் தலைவிரி கோலமாக இருந்து அழுவதற்கான காரணம் என்னவென்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் இனம் புரியாத பயமொன்று உள்ளூர உருவாகுவதை அவனால் தடுக்க முடியவில்லை.

மெல்லத் தாயருகே சென்றவன் மண்டியிட்டு அவரது காலடியில் அமர்ந்து கொண்டான்.

மகன் வந்ததைக் கூட உணராமல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்த காயத்ரியின் விழிகளில் இருந்து விழிநீர் ஓடிக் கொண்டிருந்தது. விழிநீரைத் துடைக்கக் கூடத் தோன்றாமல் அவர் அப்படியே இருப்பதைப் பார்த்தவனுக்கு மனதை ஏதோ செய்தது.

மெதுவாக அவரது மௌனம் கலைக்க முயன்றான்.

“அம்மா”

“………………………..”

“அம்மா…”

“…………………………”

“அம்மா உங்களைத் தான்…”

“ம்ம்… என்ன மகேந்திரா…”

“அம்மா நான் ஆதித்யா”

“ஓ ஆதித்யாவா? என்னப்பா சாப்பிட்டாயா?”

“நீங்கள் சாப்பிட்டீர்களா? அம்மா”

“நான் சாப்பிட்டேனா? ஆமாம் சாப்பிட்டேன்”

“அம்மா உங்களுக்கு என்னாயிற்று”

“ஏன் கண்ணா எனக்கு என்ன? நான் நன்றாகத் தானே இருக்கிறேன்”

“எது நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? அதை நான் நம்ப வேண்டுமா? என்னம்மா நீங்கள் கண்கள் இரண்டும் கோவைப் பழம் போலச் சிவக்கும் அளவிற்கு அழுது இருக்கிறீர்கள்… பிறகு பார்த்தால் நான் நன்றாக இருக்கிறேன் என்று அப்பட்டமான பொய் சொல்கிறீர்களே?”

“அது வந்து…”

“என்னம்மா பிரச்சினை? என்னிடம் சொல்லக் கூடாதா? இல்லாவிட்டால் அப்பா கவலை படுவது போல் மகேந்திரனைப் பற்றிக் கவலைப் படுகிறீர்களா?”

“உனக்கும் தெரியுமா ஆதித்யா”

“அம்மா நீங்கள் அநாவசியமாகக் கவலைப் படுகிறீர்கள் தெரியுமா?”

“இல்லை ஆதித்யா… என்னுடன் வா”
என்றபடி தனது மூத்த மகனை அழைத்தபடி மகேந்திரனது அறைக்குச் சென்றார்.

அங்கே தான் முதலில் பார்த்த போதை மாத்திரைகள் எதுவுமே இப்போது இல்லை என்பதை உணர்ந்த காயத்ரி ஏதோ ஆவேசம் வந்தவராக தன் இரண்டாவது மகனின் அறையை சல்லடை போட்டுத் தேடத் தொடங்கினார்.

தாயின் செயலைப் பார்த்தவனோ பதறிப் போய்ப் பொறுமையிழந்தவனாய்
“அம்மா நான் தான் சொன்னேனே நீங்கள் அநாவசியமாகக் கவலைப் படுகிறீர்கள் புரிந்ததா? இல்லாத ஒரு பொருளை எவ்வளவு தான் தேடினாலும் அது கிடைக்கப் போவதில்லை”
என்றான் சற்றே குரலை உயர்த்தி… அப்போதாவது தாய் சாதாரண நிலைக்கு வருவார் என்ற எண்ணத்துடன்…

ஆனால் அவனது உயர்ந்த குரலில், முகத்தை மூடிக் கொண்டு சிறு பிள்ளை போலத் தேம்பி அழத் தொடங்கினார் காயத்ரி.
மீண்டும் பதறியபடி ஓடி வந்து தாயை அணைத்துக் கொண்டான் ஆதித்யன்.

“நான் பார்த்தது எல்லாம் பொய் என்கிறாயா? ஆதித்யா… என்னை நீ கூட நம்பவில்லை தானே”
என்று விம்மி அழுத தாயை என்ன சொல்லிச் சமாதானப் படுத்துவது என்று தெரியாமல் அவரை இறுக அணைத்துக் கொண்டான் ஆதித்யன்.

அவனது அணைப்பில் கட்டுண்டு கிடந்தவரோ
“எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்திருந்தேனே… யாருடைய கண் பட்டதோ தப்பு வழி போகிறானே உன் தம்பி…”
என்று புலம்பிக் கொண்டே இருந்தார்.

“அம்மா கவலைப் படாதீர்கள்… அவனை நான் பார்த்துக் கொள்கிறேன்… அவன் அப்படி எல்லாம் தப்பு வழி போக மாட்டான் அம்மா”
என்று தாயோடு சேர்த்துத் தனக்கும் தைரியம் சொல்லிக் கொண்டான் ஆதித்யன்.

அதே நேரத்தில் அறையில் நுழைந்த கவிவர்மனும் மனசு ஒடிந்து போய் மகனைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டார்.

“ஏன் ஆதித்யா! உன் தம்பிக்கு நாங்கள் அப்படி என்ன குறை வைத்தோம்… இப்படி வயதான காலத்தில் எங்கள் நிம்மதியைக் குழி தோண்டிப் புதைத்து விட்டானே”
என்று தன் பங்குக்கு அவர் புலம்பினார்.

தாயையும் தந்தையையும் இரு கரங் கொண்டு அணைத்தவனோ
“அம்மா… அப்பா… நான் பார்த்துக் கொள்கிறேன்… நீங்கள் இப்படி அழுது என்னையும் கலங்க வைக்காதீர்கள்… மகேந்திரனை நான் கவனித்துக் கொள்கிறேன்”
என்றபடி சூரியனை அழைத்தான்.

“அம்மா இது பற்றி சூரியனுக்கு ஒன்றும் தெரிய வேண்டாம்… நீங்கள் இப்படி ஒப்பாரி வைத்து சின்னப் பையனையும் பயம் கொள்ள வைக்காதீர்கள்… கண்ணைத் துடைத்துக் கொள்ளுங்கள்”
என்று தாயினதும் தந்தையினதும் கண்களைத் துடைத்து விட்டான் ஆதித்யன்.

அண்ணன் அழைத்ததும் ஓடி வந்த சூரியனிடம் தாயையும் தந்தையையும் ஒப்படைத்தவனோ கண் ஜாடையில் தாய்க்கும் தந்தைக்கும் எச்சரிக்கை கொடுத்தான்.

“சூரியா… நீ அம்மாவையும் அப்பாவையும் அழைத்துக் கொண்டு எங்கள் பழத் தோட்டம் வரையிலும் போய் வருகிறாயா?”

“சரி அண்ணா! எப்போது போகட்டும்”

“இன்றே புறப்படுங்கள்… இரண்டு வாரங்கள் இருந்து விட்டு ஆறுதலாக வாருங்கள் சரியா?”

“சரி அண்ணா! நான் என் உடைகளை எடுத்து வைக்கிறேன்”
என்றபடி உள்ளே விரைந்தான் சூரியவர்மன்.

சூரியன் எப்போதுமே ஆதித்யன் சொல்வதை மறு கேள்வி கேட்காமல் செய்பவன்.
மகேந்திரனும் அப்படித் தான் ஆனால்… இப்போது சிறிது நாட்களாகவே அவன் சரியில்லை. அவனாகவே சொல்வான் சொல்வான் என்று எதிர் பார்த்தது போதும். எனவே அவனுக்குப் பிரச்சினை என்னவென்று தெரிந்து கொள்ள ஆதித்யனே களத்தில் குதித்து விட்டான்.

ஆனால் அவன் மகேந்திரனின் பிரச்சினை என்னவென்று அறிய முனையும் போது காலங் கடந்து போய் விட்டது என்பதை அவன் அறியவில்லை.

நந்தவனம் போல இருந்த வாழ்வில் சூறாவளி ஒன்று சத்தமே இல்லாமல் வீசிக் கொண்டிருக்கிறது என்பதை இதுவரை யாருமே அறியவில்லை.
மகேந்திரவர்மனை அதற்குப் பிறகு தான் பார்க்கவே மாட்டேன் என்பதை ஆதித்யன் அப்போது அறியவில்லை.

ஆதித்யனோ தனது தாய் தந்தையின் கவலை வீண் கவலை என்பதை உணர்த்தி தன் தம்பி ஒன்றும் தப்பு வழி போகவில்லை என்பதையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று உறுதி செய்து கொண்டு மகேந்திரனைத் தேடிக் கொண்டு புறப்பட்டான்.

சூரியன் தாயையும் தந்தையையும் அழைத்துக் கொண்டு பழத் தோட்டத்திற்குப் புறப் பட்டான்.
பாதி வழியில் அவனது நண்பனிடம் இருந்து அவனுக்கு அவசர செய்தி ஒன்று வரவே, கவிவர்மன் தன் கடைசி மகனை அவனது நண்பனிடம் போகச் சொல்லி விட்டுத் தன் மனைவியுடன் பழத் தோட்டத்திற்குப் புறப் பட்டார்.

தங்கள் குடும்பமே திசைமாறி போகப் போகிறது என்பதை அந்தப் பெரிய மனிதன் அப்போது அறிந்திருக்கவில்லை.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“விதியின் விளையாட்டு
எப்போது முடியும் தெரியாதே…
விடியும் திசை என்ன
இப்போது அதுவும் தெரியாதே…
நாளை எது வாழ்க்கை என்றே நீ சொல்லி நடப்பாயோ?
பாசம் தாளாமல் அங்கேயும் உள்ளம் துடிப்பாயோ?
காலம் செய்த கோலம் என்றே
துன்பம் பொறுப்பாயோ?
சோகங்களே வாழ்க்கையின் வேதமோ?”
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 25

79931cccaeada2d4d10726b283ea54bb~3.jpg

IMG-20210701-WA0016~2.jpg


மழைத் துளிகள் மண்ணைத் தொடும் சத்தம் காதுகளைத் தீண்டிச் செல்லக் கண்களை மூடி எதையோ யோசித்தவாறு தனது படுக்கையில் படுத்திருந்தான் ஆதித்யன்.

வெளியே மழையின் சத்தம் உள்ளே மின்விசிறி சுழலும் சத்தம் என்பதைத் தவிர வேறு எந்த சத்தமும் சுற்றுப் புறத்தில் இருந்து வரவில்லை.

தாயையும் தந்தையையும் சூரியனையும் பழத் தோட்டத்திற்கு அனுப்பி இரண்டு தினங்கள் ஆகி விட்டது.

பழத் தோட்டத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டோம் என்று தந்தையிடம் இருந்து தகவல் வந்ததைத் தொடர்ந்து வேறு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
சரி அவர்களைச் சூரியன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் மகேந்திரனைத் தேடி அலைந்தான் ஆதித்யன்.

அவன் தேடி அலைந்தது தான் மிச்சம் மகேந்திரன் எங்கே போனான் என்பதே தெரியவில்லை.
ஏதாவது மனது சரியில்லை என்று நண்பர்களோடு சென்றிருப்பானோ? அப்படியே சென்றாலும் இங்கே வீட்டில் ஒரு வார்த்தை சொல்லி விட்டுச் சென்றிருக்கலாமே என்று ஆதித்யனுக்கு ஆதங்கமாக இருந்தது.

மகேந்திரனின் தொலைபேசி கூட அணைத்து வைக்கப் பட்டிருந்ததால், அவனது நண்பர்களுக்குச் சாதாரணமாக அழைத்துப் பேசுவது போல் பேசிப் பார்த்த போதும் நண்பர்களுடன் மகேந்திரன் செல்லவில்லை என்பது உறுதியானது.

பகிரங்கமாகத் தனது தம்பியைத் தேட முடியாமல் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளான ஆதித்யன் மகேந்திரனை எப்படித் தேடலாம் என்பது பற்றியே யோசித்தபடி தனது அறையில் படுத்திருந்தான்.

அப்போது நேரம் நடுநிசியைத் தாண்டிக் கொண்டிருந்தது.
தூக்கமே வரவில்லை அவனுக்கு... வீட்டில் உண்டான இந்தப் பிரச்சினையால் அவனது சொந்த விருப்பமும் சிக்கலானது.

மகேந்திரனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவன் ஒருத்தியைப் பற்றிச் சிந்திக்க மறந்தான்.

சிந்திக்க மறந்தான் என்பதை விட அவனுக்கு அவளைப் பறறிச் சிந்திக்க நேரமே இல்லாத அளவிற்குத் தம்பி மகேந்திரனின் பிரச்சினை பூதாகரமாக முன்னே நின்றது.

மகேந்திரனைப் பற்றியே யோசித்தவாறு உழன்று கொண்டிருந்த ஆதித்யனைப் பற்றி யோசித்தவாறு ஒருத்தி விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சரஸ்வதி இல்லத்தில் தங்களுக்கென்று கொடுக்கப் பட்ட அறையில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த அனுபல்லவிக்கு அருகே விட்டத்தைப் பார்த்தபடி அசையாமல் படுத்திருந்தாள் காயத்ரி.

அவளது எண்ணம் முழுவதும் ஆதித்ய வர்மனே வியாபித்திருந்தான்.
இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் அவன் அவளிடம் ஒரு கோரிக்கை ஒன்றை முன் வைத்திருந்தான்.

உண்மையிலும் அவளால் அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவளது நினைவு லேசாக இரண்டு தினங்கள் பின்னோக்கி நகர்ந்தது.

ஆதித்யன் அடிக்கடி நன்கொடை விஷயம் தொடர்பாகச் சரஸ்வதி இல்லம் போய் வந்து கொண்டிருந்ததால் காயத்ரிக்கும் அவனுக்குமான பழக்கம் நட்பில் வந்து முடிந்தது.

ஒருவரைப் பற்றி ஒருவரிடம் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு இல்லாவிட்டாலும் சிறிது நேரம் எதையாவது சந்தோஷமாகப் பேசிக் கொண்டார்கள். ஆதித்யன் காயத்ரியைப் பன்மையில் விழிப்பது போய் இப்போதெல்லாம் அவளை ஒருமையிலேயே அழைத்தான்.

அவள் அவனை விடச் சின்னவள் என்பதாலோ என்னவோ அவளால் அவனை ஒருமையில் அழைக்க முடியவில்லை.

இந்த நிலையில் ஒரு ஞாயிற்றுக்கிழமை இல்லத்திற்கு வந்தவன் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் அதனால் என்னுடன் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு வருகிறாயா? எனக் காயத்ரியை அழைத்தான்.

அவளுக்கும் அதை மறுக்கத் தோன்றவில்லை என்பதால் அவனுடன் கோவிலுக்குச் சென்றாள்.

கோவிலில் சுவாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு அருகே இருந்த தீர்த்தக்கேணியின் படிக்கட்டில் இருவரும் அமர்ந்து கொண்டார்கள்.

மேல் படிக்கட்டில் காயத்ரியும் இரண்டு படிகள் தள்ளிக் கீழே ஆதித்யனும் அமர்ந்ததால் கொலுசுகள் அணிந்த காயத்ரியின் பாதங்கள் அவனது பார்வை வட்டத்தில் நிலைத்து நின்றது.

அவளது கொலுசுகள் அணிந்த பாதங்களையே சில நொடிகள் இமைக்க மறந்து பார்த்திருந்தவன் சட்டென்று தலையை அழுந்தக் கோதியவாறு பார்வையைத் திருப்பிக் கோவில் கோபுரத்தைப் பார்த்தான்.

அவனது அமைதியைப் பார்த்தவளோ பேச்சை முதலில் தொடக்கினாள்.

“ஏதோ பேச வேண்டும் என்று சொல்லி விட்டு இப்படி வந்ததில் இருந்தே அமைதியாகவே இருக்கிறீர்களே? ஏதாவது பிரச்சினையா?”

“ஆமாம் கிட்டத்தட்ட வாழ்க்கைப் பிரச்சினை தான்”

“கடவுளே! என்ன சொல்கிறீர்கள் யாருக்கும் ஏதாவது…”

“அப்படியெல்லாம் இல்லை… இது என் வாழ்க்கை தொடர்பான ஒரு குழப்பம்… அதைப் பற்றி உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்”

“அடடா! என்னிடம் நீங்கள் ஆலோசனை கேட்கப் போகிறீர்களா? பிரச்சினையைச் சொல்லுங்கள் நான் தீர்வு சொல்கிறேன்”

“சொல்கிறேன் சொல்கிறேன் அதைச் சொல்லத் தானே உன்னை இங்கே அழைத்து வந்தேன்”

“ஆனால் நீங்கள் கீழே பார்ப்பதும் மேலே பார்ப்பதுமாக இருக்கிறீர்களே தவிரப் பிரச்சினையைச் சொல்ல மாட்டேன் என்கிறீர்களே?”

“காயத்ரி”

“சொல்லுங்கள் நான் தான்”

“வீட்டில் என் திருமண விஷயம் பற்றி அம்மா இன்று பேசினார்கள்”

“அடடா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்… யார் அந்த அதிஷ்டசாலி…”

“நான் காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தான் ஆசைப் படுகிறேன்”

“அதனால் என்ன உங்கள் அம்மா பார்த்த பெண்ணை இப்போது இருந்தே நேசிக்கத் தொடங்குங்கள்… அப்போது தான் திருமணத்தின் போது நேசித்த பெண்ணையே கைப்பிடிக்கலாம்.”

“அம்மா பார்த்த பெண்ணை நேசிப்பதாக இருந்தால், நான் நேசிக்கும் பெண்ணை என்ன செய்வது?”

“என்னது நீங்கள் ஒரு பெண்ணை நேசிக்கிறீர்களா? ஆதி”

“அதற்கு ஏன் இப்படி வாயைப் பிளக்கிறாய்? ஏன் நான் யாரையும் நேசிக்கக் கூடாதா?”

“அப்படி எல்லாம் இல்லை ஆதி… ஆனால் உங்கள் தேர்வு எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவலாக இருக்கிறது… கண்டிப்பாக நீங்கள் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் குணத்திற்குத் தான் முக்கியத்துவம் கொடுத்து இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும் தானே?”

“அவ்வளவு நம்பிக்கையா என் மேல்?”

“நிச்சயமாக”

“நீ சொல்வது உண்மைதான் காயத்ரி… அழகை வைத்து என்ன செய்வது அன்பு தான் முக்கியம் அப்போது தானே வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.”

“சரி சரி பேச்சை மாற்றாமல் நீங்கள் நேசிக்கும் பெண்ணைப் பற்றிச் சொல்லுங்கள்… ஆவலாக இருக்கிறது”

“அவளைப் பற்றிச் சொல்வது இருக்கட்டும் காயத்ரி… அவள் என் காதலை ஏற்றுக் கொள்வாளா? தெரியவில்லை.”

“ஏன் ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்று நினைக்கிறீர்கள்… உங்கள் குணத்துக்கும் பண்புக்கும் எந்தப் பெண்ணாக இருந்தாலும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள்”

“நிச்சயமாகவா?”

“நிச்சயமாகத் தான் ஆதி”

“அப்படியானால் நான் உன்னிடம் வந்து உன்னைக் காதலிக்கிறேன் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வாயா?”

“கண்டிப்பாக ஏற்றுக் கொள்வேன் ஆதி… ஆனால் பாருங்களேன் நீங்கள் வேறொரு பெண்ணை விரும்பி விட்டீர்களே”

“நிஜமாகத் தான் சொல்கிறாயா? அல்லது இதுவும் விளையாட்டுத் தானா?”

“நிஜமாகத் தான் சொல்கிறேன் ஆதி… உங்களை வேண்டாம் என்று சொல்வதற்கு எந்தக் காரணமும் எனக்கு இதுவரை தோன்றவில்லை”

“ஓ… அப்படியா? அப்படியானால் என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா?”

“இப்போது நீங்கள் விளையாடுகிறீர்களா? ஆதி”

“நிஜமாகத் தான் கேட்கிறேன் காயத்ரி நீ என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?”

“யாரோ ஒரு பெண்ணை நேசிக்கிறேன் என்று சொன்னீர்களே…”

“ஆமாம் சொன்னேன்… அந்தப் பெண் நீ இல்லை என்று சொல்லவில்லையே”

“ஆதி… நீங்கள் என்ன சொல்கிறீர்கள்”

“காயத்ரி… நான் உன்னை நேசிக்கிறேன் நீ என்னைத் திருமணம் செய்து கொள்வாயா? என்று கேட்கிறேன்”
என்றபடி அவளது விழிகளை நோக்கினான்.

அவன் அப்படித் திடுதிப்பென்று போட்டு உடைத்ததும் ஒரு நொடி அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டாள் காயத்ரி.

“என்னுடைய அம்மாவின் பெயர் தான் உன்னுடைய பெயரும் என்று எனக்குத் தெரிந்த போது எனக்கு உன்னைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. எப்படியும் பெயர் தான் அம்மாவின் பெயரோடு ஒத்துப் போகும் மற்றபடி என் அம்மாவின் குணத்திற்கு நீ ஈடாக மாட்டாய் என்று தான் நினைத்திருந்தேன்… ஆனால் நீயோ அப்படியே என் அம்மாவின் குணங்களையே கொண்டு இருந்ததும் உன் மேலே எனக்குத் தனிப் பாசமே உருவாகி விட்டது காயத்ரி”
என்று சொல்லி விட்டு அவளைப் பார்த்தான். அவளது அதிர்ச்சி இன்னும் கூடத் தெளியவில்லை.

தன் காதலை உரிய முறையில் அவளிடம் ஒப்புவிக்க வேண்டும் என்று எண்ணியவன் தொடர்ந்தும் தனது மனதைத் திறந்து பேசினான்.

“மற்றவர் மனதைக் காயப் படுத்தாத உன் பேச்சு, எப்போதுமே சுற்றி இருப்பவர்களது சந்தோஷத்தைத் தக்க வைக்கப் போராடும் குணம், கலகலப்பான பேச்சு, நல்ல இசைரசனை என்று உன் இயல்புகளைக் கண்டு உன் மேல் ஒரு பிடிப்பு எனக்குள் விதையாக உருவாகி அது நாளடைவில் விருட்சமாகி வளர்ந்து விட்டது… அம்மா இப்போது எனது திருமணம் பற்றிப் பேசும் போது உன் வருங்கால மனைவி பற்றிய உன் எதிர்பார்ப்பு என்னவென்று கேட்டார்கள் அப்போது எனக்கு உன் நினைப்புத் தான் வந்தது… தனியாக இருந்து யோசித்த போது தான் உன் மீது என்னை அறியாமலேயே காதல் தோன்றி விட்டது என்று தோன்றியது…”
என்றவன் அவளைப் பார்த்தான்.

அவனது பார்வையை எதிர் கொள்ள முடியாதவளோ தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். இப்போது அவனது பார்வை அவளது கவிழ்ந்திருந்த தலை மேல் படிந்தது.

தன்னிச்சையாக அவளது முடியைக் கோத எழுந்த கரத்தைப் பிடிவாதமாகக் கீழே இறக்கிக் கொண்டான்.

“என்ன இருந்தாலும் அவள் இன்னும் என்னைப் பிடித்திருக்கிறது என்று ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அவளது விருப்பம் தெரியாமல் அவளை நான் சாதாரணமாகக் கூட ஸ்பரிசிக்கக் கூடாது”
எனத் தனது மனதிற்குக் கடிவாளமிட்டுக் கொண்டான்.

அவள் தான் கேட்டதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாளோ என அவளையே பார்த்திருந்தவனது மனது மட்டும் அவள் நிச்சயமாகச் சம்மதம் சொல்வாள் என்று ஆணித்தரமாக நம்பியது.

ஆனால் காயத்ரியின் மனதினுள் ஓடிக் கொண்டிருந்தது என்னவென்பதைப் பாவம் அப்போது அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“அழகு பெண்ணழகு
ஆயிரம் தான் இருக்குதடி
ஆனா என் மனசு
உன் மடியில் விழுந்ததடி
ஓ.. பிடிச்சது முன்னழகோ
பின்னழகோ இல்லையடி
அதுக்கும் மேல ஒரு
தாயழகும் உள்ளதடி
அவள பொண்ணு கேட்டு
போடப் போறேன் தாலி
திருப்பரங்குன்றத்து கோயிலிலே..."
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 26

IMG-20210627-WA0049.jpg

IMG-20210701-WA0015~2.jpg


கோவிலுக்குள் இருந்து வந்த தேவார பஜனைகளின் ஒலியும், கற்பூர வாசனையும் மனதை ஏதோ இனம் புரியாத உணர்விற்குள் உட்படுத்திக் கொண்டிருந்தது.

சுற்றிப் படிக்கட்டுகள் அமைத்து விடப் பட்டிருந்த கோவில் கேணியில் இருந்து, ஒரு சில பக்தர்கள் குடம் குடமாக நீரை மொண்டு சென்று படிக்கட்டுக்கு மேற் புறமாக நிறுவப் பட்டிருந்த விக்கிரகத்திற்கு மேல் ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.

இதற்கு நடுவில் படியில் அமர்ந்திருந்த இரண்டு உள்ளங்கள் மட்டும் இந்த நிகழ்வுகள் எல்லாவற்றையும் கடந்து வேறொரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.

காயத்ரியின் வாயில் இருந்து உதிரப் போகும் சொல் முத்துக்களுக்காகத் தவம் கிடப்பது போல விழியெடுக்காமல் அவளையே பார்த்திருந்தான் ஆதித்யன்.

அவன் தனது பதிலுக்காகக் காத்திருப்பதை உணர்ந்தவளோ வெகு தீவிரமாகத் தனது பாதங்களை ஆராய்வது போலத் தலையைக் கவிழ்த்திருந்தாள்.

அவளது சிறிது நேர மௌனமே அவனைக் கொல்லுவது போல இருக்க, அடுத்து வரப் போகும் அவளது பதிலில் அவன் என்ன ஆகப் போகிறானோ என்பது போல இருந்தது.

ஆனாலும் நேரம் ஆக ஆக இவள் ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாள் ஒரு வேளை என்னை அவளுக்குப் பிடிக்கவில்லையோ என்ற கேள்வி ஆதித்யனுக்குள் பூதாகரமாகத் தோன்றத் தொடங்கவே அவளது மௌனத்தை உடைக்கும் நோக்கில் பேச்சுக் கொடுத்தான்.

“காயத்ரி… என்ன பதிலையே காணோம். நான் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டேனா?”

“……………………..”

“இப்படி மௌனமாக இருந்தால் நான் என்னவென்று எடுத்துக் கொள்வது. ஒரு வேளை மௌனம் சம்மதம் என்று எடுத்துக் கொள்ளட்டுமா?”

“ஐயோ! அப்படி எல்லாம் இல்லை”

“இரு இரு… எதற்கு இப்படிப் பதறுகிறாய்… வாயைத் திறந்து எதையாவது சொன்னால் தானே எனக்குத் தெரியும்”

“அது வந்து… நான்…”

“ம்… ஏதோ சொல்ல வருகிறாய் தெளிவாகச் சொல்லி விடு காயத்ரி”

“எனக்கு உங்கள் மீது மரியாதை இருக்கிறது... "

“சரி மரியாதை இருக்கட்டும்… அப்புறம்”

“அப்புறம் என்ன?”

“அப்புறம் என்ன என்றால்… என் மீது உனக்கு மரியாதை இருக்கிறது… வேறு என்ன இருக்கிறது என்று அறிய ஆவலாக இருக்கிறது”

“அப்படி வேறு ஒன்றுமே இல்லை”

“என்னது? காயத்ரி எனக்கு நீ சொல்ல வருவது தெளிவாகப் புரியவில்லை… என் மீது உனக்கு மரியாதை தவிர வேறொன்றும் இல்லை என்று சொல்கிறாயா?... இப்படித் தலையை ஆட்டாமல் வாயைத் திறந்து பதில் சொல்”
என்றவனின் குரலில் லேசான ஆதங்கம்,இறுக்கம், அதிர்ச்சி எல்லாமே கலந்திருந்தது.

அவனது முகத்தைப் பார்க்கத் தயங்கியவளோ எங்கெங்கோ எல்லாம் பார்த்தாளே தவிர மறந்தும் அவனது விழிகளை மட்டும் பார்க்கவில்லை.

அவள் தன்னை நேராகப் பார்ப்பதை ஏன் தவிர்க்கிறாள் என்ற கேள்வி அவனை லேசாகக் குடையத் தொடங்கியது.

“காயத்ரி... உனக்கு என்னைப் பிடிக்கவில்லையா?”

“பிடிக்கவில்லை என்று இல்லை… ஆனால்…”

“ஆனால் என்ன?”

“பிடித்தம் வேறு காதல் வேறு”

“ஓ… அப்படியா?”

“எனக்கு இந்தக் காதலில் எல்லாம் நம்பிக்கை இல்லை… நான் வாழ்வில் நிறைய சாதிக்க வேண்டும்…”

“இப்போது என்ன தான் சொல்ல வருகிறாய்…”

“உங்களின் நல்ல குணத்திற்கு உங்களுக்கு நல்லதொரு பொண்…”
என்று சொல்லத் தொடங்கியவளைப் போதும் என்பது போலக் கையசைவில் நிறுத்தினான் ஆதித்யன்.

“எனக்கு நல்ல பொண்ணும் வேண்டாம் கெட்ட பொண்ணும் வேண்டாம்… நீ மட்டும் தான் வேண்டும் போதுமா?”

“அதில்லை ஆதி...”

“நீ சொன்னவரைக்கும் போதும் காயத்ரி… நீ இப்போது குழப்பத்தில் இருக்கிறாய்… என் காதலை நீ புரிந்து கொள்ளும் வரை நான் உனக்கே உனக்காகக் காத்து இருப்பேன்… அது எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை…”
என்றவன் அவளை ஆழ்ந்த பார்வை ஒன்று பார்த்து விட்டு எழுந்து சென்று விட்டான்…

அவன் சென்ற திக்கையே நெடு நேரமாகப் பார்த்திருந்தவளது மனதில் அவன் மீதான நேசம் யாரும் அறியாமலேயே புதைக்கப் பட்டதை யாரும் அறியவில்லை.
அவன் மீது தனக்கு காதல் இருக்கிறது என்பதைக் கூட அவளால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தூக்கம் தூரமாகப் போனதால் மெல்ல எழுந்த காயத்ரி வெளியே தோட்டத்தோடு அமைந்திருந்த படிக்கட்டில் வந்து அமர்ந்து, இருண்ட வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

காயத்ரி எழுந்து தோட்டப் பக்கம் செல்வதைப் பார்த்த கஸ்தூரி தானும் எழுந்து தோட்டத்தை நோக்கி வந்தாள்.

படிக்கட்டில் அமர்ந்து இருண்ட வானை வெறித்துக் கொண்டிருந்த அக்காளின் அருகே சத்தமின்றி அமர்ந்து கொண்டு தானும் இருண்ட வானைப் பார்க்கத் தொடங்கினாள் அவள்.

தான் வந்ததைக் கூட உணராமல் அமர்ந்திருந்த தமக்கையின் அமைதியை உடைக்க மெதுவாகப் பேசத் தொடங்கினாள் கஸ்தூரி.

“அக்கா… நான் வந்ததைக் கூட உணராமல் இந்த இருட்டில் இருந்து என்ன யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

“ஒன்றும் இல்லை… ஒன்றுமே இல்லை…”

“இந்த ஒன்றும் இல்லை ஒன்றுமே இல்லை என்பதற்குள் ஓராயிரம் விஷயம் இருக்கிறது போலத் தெரிகிறதே அக்கா”

“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை”

“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று உங்கள் வாய் தான் சொல்கிறது அக்கா… சில நாட்களாகவே நீங்கள் ஒரு மாதிரித் தான் நடந்து கொள்கிறீர்கள்”

“ஒரு மாதிரி நடந்து கொள்கிறேனா? ஏன் எதற்காக அப்படி நடந்து கொள்கிறேன்?”

“என்னக்கா? நான் உங்களைக் கேட்டால் நீங்கள் என்னைக் கேட்கிறீர்களா? உங்களுக்குத் தானே தெரிய வேண்டும் எதனால் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று…”

“அது… அது அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை கஸ்தூரி…”

“அக்கா… இந்தக் கதையைப் போய் அனுவக்காவிடம் சொல்லுங்கள்… அனுவக்கா இருக்கும் நிலைக்கு அவர்கள் வேண்டுமென்றால் நீங்கள் சொல்லும் கதையை நம்புவார்கள்… ஆனால் நான் நம்ப மாட்டேன்”

“ஏன் அனுவுக்கு என்ன நடந்தது… அவள் இருக்கும் நிலைக்கு என்று சொல்கிறாய் நீ”

“அதையும் தான் யார் கண்டது… நீங்கள் இருவருமே சில நாட்களாகவே ஒரு மார்க்கமாகத் தான் நடந்து கொள்கிறீர்கள்… நீங்களாகவே வாய் திறந்து சொன்னால் தவிர நானாகவே ஊகிப்பது கொஞ்சம் கஷ்டம் தான் அக்கா”

“நீ நினைப்பது போல ஒன்றும் இல்லையடி…”

“நான் என்ன நினைக்கிறேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும் அக்கா… சும்மா எதையாவது சொல்லி என்னைத் திசை திருப்பாதீர்கள்”

“அப்படி எல்லாம்…”

“போதும் அக்கா நீங்கள் ஒன்றுமே சொல்ல வேண்டாம்… உங்களுக்கு என்னிடம் ஒன்றும் சொல்ல இஷ்டம் இல்லை என்னும் போது, நான் துருவித் துருவிக் கேட்டு என்ன ஆகப் போகிறது…”

“கஸ்தூரி என் மேல் கோபமா?”

“கோபம் எல்லாம் இல்லை அக்கா ஆனால் மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது… இதுவே நான் உங்கள் சொந்தத் தங்கையாக இருந்திருந்தால் நானாகக் கேட்கும் முன்பாகவே என்னிடம் எதையும் மறைக்காமல் சொல்லி இருப்பீர்கள்… ஆனால் நான் எங்கிருந்தோ வந்தவள் தானே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.”

“ஏய் வாயை மூடுடி… என்னடி பேச்சுப் பேசுகிறாய்… உனக்குக் கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லி இப்போது என்னை வார்த்தைகளால் காயப் படுத்துகிறாயா?”

“மன்னித்துக் கொள்ளுங்கள் அக்கா”

“மன்னிப்பாம் மன்னிப்பு போடி... யாருக்கு வேண்டும் உன் மன்னிப்பு... என் கூடப் பேசாதே… என்ன வார்த்தை சொல்லி விட்டாய் நீ?”
என்றபடி வேகமாக எழுந்த காயத்ரியின் கையைப் பற்றி இழுத்து அவளை அணைத்துக் கொண்ட கஸ்தூரியைத் தள்ளி விட முடியாமல் அசைவற்று நின்றாள் காயத்ரி.

“அக்கா மன்னித்துக் கொள்ளுங்கள் அக்கா… இப்படிச் சொன்னாலாவது உங்கள் பிரச்சினையை என்னிடம் பகிர்ந்து கொள்ளுவீர்கள் என்ற எண்ணத்தில் தான் அப்படிச் சொன்னேன் அக்கா”

“………………………….”

“அக்கா என் கூடப் பேச மாட்டீர்களா? இப்போதெல்லாம் நீங்களும் என்னைக் கண்டு கொள்வதில்லை… அனுவக்காவும் என்னைக் கண்டு கொள்வதில்லை… அந்த ஆதங்கத்தில் தான் ஏதோ பேசி விட்டேன்”
என்றபடி கட்டியணைத்துக் கண்ணீர் விட்டவளைக் காயத்ரியால் கண்டிக்க முடியவில்லை.

அழுதபடி இருந்தவளை மெல்ல நிமிர்த்தி அவளது கண்களைத் துடைத்துக் கூந்தலை ஒதுக்கியவள் அவள் நெற்றியில் மெல்ல முத்தமிட்டாள்.

“அடி அசடே! எதற்கு இப்போது இப்படிக் கண்களில் இருந்து குடம் குடமாக நீரைக் கொட்டி என்னை அபிஷேகம் செய்கிறாய்”

“போங்கள் அக்கா”

“உன்னை விட்டு நான் தனியாகப் போனால் நீ என்னை விட்டு விடுவாயாக்கும்”
என்றவளைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தாள் கஸ்தூரி.

கஸ்தூரியை அணைத்தபடி மீண்டும் படிக்கட்டில் அமர்ந்து கொண்ட காயத்ரி தங்கையின் முடியைக் கோதியவாறு மெல்லப் பேசத் தொடங்கினாள்.

“உன்னிடம் மறைத்து என்னிடம் எந்த விஷயமும் தங்காது என்று உனக்குத் தெரியாதா… இந்த இராத்திரி நேரத்தில் மோகினிப் பிசாசு போல என்னைப் பின் தொடர்ந்து வந்ததும் இல்லாமல் ஒப்பாரி வேறு வைக்கிறாய்… உன்னை என்ன தான் செய்வது சொல்”

“போங்கள் அக்கா… நான் ஒன்றும் ஒப்பாரி வைக்கவில்லை…”

“அப்படியானால் நீ மோகினிப் பிசாசு என்பதை ஒத்துக் கொள்கிறாயா?”

“ஆமாம் அக்கா ஒத்துக் கொள்கிறேன்… ஏனென்றால் என் அக்கா ஒரு மோகினிப் பிசாசாக இருக்கும் பட்சத்தில் நானும் மோகினிப் பிசாசு தானே”
என்று சொல்லிச் சிரித்தவளின் காதை வலிக்காமல் திருகினாள் காயத்ரி.

“சரி சரி காலை வாரி விட்டது போதும்… என் மனதில் ஓடிக் கொண்டிருந்ததை எப்படி உன்னிடம் சொல்வது என்று எனக்குக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது தெரியுமா? அதனால் தான் நான் உன்னிடம் ஒன்றும் சொல்லவில்லை”

“அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் அக்கா… நான் உங்களிடம் ஒரு விஷயம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்… இப்போது தான் ஞாபகமே வந்தது அக்கா”

“சரி சரி என்ன சொல்ல வேண்டும்… என்ன கேட்க வேண்டும்… மீண்டும் மறப்பதற்குள் சொல்லி விடு… கேட்டு விடு...”

“அக்கா… நம் இல்லத்திற்கு அடிக்கடி வருவாரே… ஆதி அண்ணா…”

“ஆமாம் அவருக்கு என்ன?”

“அதைத்தானே சொல்ல வருகிறேன்… குறுக்கே குறுக்கே பேசாமல் கவனமாகக் கேளுங்கள்”

“சரி சரி பேசவில்லை…”

“அவருக்கு உங்கள் மேல் ஒரு இது என்று தோன்றுகிறது அக்கா…”

“அவருக்கு என் மேல் ஒரு எது?”

“அது தான் அக்கா தல் தல் காதல்…”

“ஓ அப்படியா?”

“அப்படித் தான் அக்கா… உங்களுக்குத் தெரியாதா? இவ்வளவு நாளுக்குள் அவர் மனம் திறந்து உங்களிடம் பேசி இருப்பார் என்று நினைத்தேனே… இன்னும் பேசவில்லையா?”

“அடி போடி இவளே காதலுக்கும் நமக்கும் வெகு தூரம்”

“அந்தத் தூரக் கதை எல்லாம் எனக்குத் தேவை இல்லை அக்கா… ஆதி அண்ணா உங்களிடம் தன் காதலைச் சொன்னாரா? இல்லையா? அதைச் சொல்லுங்கள் முதலில்”

“…………………………”

“அக்கா… நீங்கள் இப்படி அமைதியாக இருப்பதைப் பார்த்தால் ஏதோ சங்கதி இருக்கிறது போல் தெரிகிறதே?”

“அதைப் பற்றித் தான் உன்னிடம் சொல்லலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தேன்”

“எதைப் பற்றி அக்கா… ஆதி அண்ணாவைப் பற்றியா? அப்படி ஆனால்…”

“ஆமாம் அவர் என்னிடம் வந்து தான் என்னை விரும்புகிறேன் என்று சொன்னார்”

“அடடா… அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள் அக்கா… சம்மதம் சொல்லி விட்டீர்களா?”

“இல்லையடி…”

“இல்லையா… அப்படியானால் என்ன சொன்னீர்கள்”

“எனக்கு உங்கள் மீது மரியாதை மட்டும் தான் இருக்கிறது என்று சொல்லி விட்டேன்”

“பைத்தியமா அக்கா உங்களுக்கு… யாராவது கைக்குக் கிட்டிய பொக்கிஷத்தை இப்படிக் காலால் உதைத்து விடுவார்களா?”

“எல்லாவற்றிற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் கஸ்தூரி… ஏற்கனவே ஆதி கூட சிநேகித முறையில் நான் பேசுவதையே காது மூக்கு வால் வைத்து அசிங்கமாகப் பரப்பி இருக்கிறார்கள்… இதில் காதலுக்கு சம்மதம் சொன்னால் அவ்வளவு தான்… அது மட்டும் இல்லாமல் எனக்கு இந்தக் காதலில் எல்லாம் நம்பிக்கை இல்லை…”

“என்னக்கா நீங்கள் யாரோ என்னவோ சொன்னார்கள் என்பதற்காக உங்கள் வாழ்க்கையை வீணாக்குவீர்களா?”

“கஸ்தூரி என்னைப் பெற்றவர்களின் வளர்ப்பையும் பெற்றவர்களையும் அசிங்கப் படுத்துவதை என்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது… அத்தோடு ஆதியின் காதலை ஏற்றுக் கொள்வது மட்டும் வாழ்க்கை இல்லை அதைப் புரிந்து கொள்”

“அக்கா… இப்போது புரிகிறது… நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து இப்படி ஒரு பாதுகாப்பான இடத்தில் வசிப்பதை உங்கள் மாமி வீட்டில் யாரோ ஏதோ தேவையில்லாத கதை கட்டி வத்தி வைத்து விட்டார்களா?”

“உண்மை தான் கஸ்தூரி”
என்றபடி ஒரு நாள் தன் மாமி வந்து தன்னிடம் பேசிய விடயங்களைக் கஸ்தூரியிடம் ஒப்புவித்தாள்.

வழமை போலக் கோவிலுக்குச் சென்ற காயத்ரியை வழி மறித்தார் காயத்ரியின் மாமி சாந்தி.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மாமியைப் பார்த்த சந்தோஷத்தில் பேசத் தொடங்கினாள் காயத்ரி
“எப்படி இருக்கிறீர்கள் மாமி… நலமாக இருக்கிறீர்களா?”

“உன்னைப் போல ஒருத்தியை உறவுக்காரியாக வைத்திருக்கும் போது எங்கிருந்து நலமாக இருப்பது?”

“என்ன மாமி நான் என்ன செய்தேன்… உங்களுக்குச் சுமையாக இருக்காமல் தூரமாகத் தானே இருக்கிறேன்”

“பேசாமல் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு கொடுக்கும் உணவை உண்டு வீட்டு மூலையில் கிடப்பது உனக்கு அவ்வளவு கசக்கிறதா? யாரோ ஒருத்திக்காக வீட்டை விட்டு வெளியே வந்து ஊருக்குள் எங்களைக் கொடுமைக்காரர்களாகக் காட்டி விட்டாயடி”

“மாமி…”

“சரி அதோடு விட்டாயா… இப்போதெல்லாம் யாரோ ஒருத்தன் கூட ஊர் சுற்றுகிறாயாமே? என்ன ரொம்பப் பெரிய இடமோ? உனக்குக் கேவலமாக இல்லையா? பணக்காரர்களைப் பார்த்தாலே மயக்கி விடுவாயோ”

“தேவை இல்லாமல் பேசாதீர்கள் மாமி… இவ்வளவு மோசமானவள் இல்லை நான்… அப்படி எண்ணத்தோடு நான் வளரவும் இல்லை”

“யார் நீயா? உன் அம்மாவைப் போல உனக்கும் கேவலமான குணம் தான் என்று தெரியாதா? உன் அம்மா கூட…”

“போதும் மாமி… தேவை இல்லாமல் இந்த உலகத்தில் இல்லாதவர்களைப் பற்றிப் பேச வேண்டாம்… உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? எதற்குத் தேடி வந்து விஷத்தைக் கக்குகிறீர்கள்”

“நீ மட்டும் சந்தோஷமாக இருக்கப் பார்க்கிறாயா? நீ ஊரைச் சுற்றுகிறாயே ஒருவனோடு, அவன் என் தோழியின் மகன் தான்… யாரோ ஒருத்தி எங்களது அந்தஸ்தையும் பணத்தையும் பார்த்து என் மகனை வளைத்துப் போட்டு விட்டாள் என்று சொல்லி ஆதங்கப் பட்டாள் தெரியுமா?”

“மாமி யாரோ என்னவோ சொன்னார்கள் என்பதற்காக அதை நீங்கள் நம்புவீர்களா?”

“உன் இலட்சணமும் உன் அம்மாவின் இலட்சணமும் எனக்குத் தெரியாதா?”
என்ற மாமி சாந்தியை அனல் கக்கும் பார்வை பார்த்தவள் அங்கிருந்து விருட்டென்று கிளம்பி வந்து விட்டாள்…

காயத்ரி சொன்னதைக் கேட்ட கஸ்தூரிக்கு இரத்தம் கொதித்தது.

“இவருக்கு ஏன் அக்கா இவ்வளவு கேவலமான எண்ணம்”

“யாருக்குத் தெரியும்”

“கடவுள் என்று ஒருத்தர் இருக்கிறாரா இல்லையா அக்கா…”

“அதை விடு கஸ்தூரி… இந்த உலகத்தில் இல்லாத என் அம்மாவை எவ்வளவு கேவலப் படுத்தி விட்டார் தெரியுமா? என் மாமி… அதனால் தான் ஆதியின் காதலை நான் ஏற்கவில்லை… அது போக நானும் ஒன்றும் பணத்துக்காக யாரையும் வளைப்பவள் கிடையாது என்று என் மாமிக்கும் தெரிய வேண்டும்.”

“அக்கா…”

“ஆதியின் அம்மா என்னை அப்படிக் கேவலமாகச் சொன்ன பிறகும் நான் ரோஷங் கெட்டுப் போக வேண்டுமா? எது எப்படியோ ஆதியின் நல்ல குணத்திற்கு அவருக்கு நல்ல வாழ்க்கைத் துணை நிச்சயமாக வாய்க்கும்… இனிமேல் நான் அவரிடம் இருந்து விலகியே தான் இருக்கப் போகிறேன்”
என்று உறுதி அளித்தாள் காயத்ரி.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

காலை நேரத்தில் காயத்ரியைத் தனது அறைக்கு அழைத்தார் வெண்பா.

காயத்ரியோடு ஒட்டிக் கொண்டு கஸ்தூரியும் அவரைப் பார்க்கச் சென்றாள்.

“காயத்ரி…”

“சொல்லுங்கள் வெண்பாம்மா”

“உனக்கு ஒரு வரன் வந்திருக்கிறது. மாப்பிள்ளை காவல்துறை அதிகாரி. அவருக்கு உன்னை நிச்சயம் செய்வதற்கு இரண்டு தினங்களில் இங்கே வரச் சொல்லவா… உனக்குச் சம்மதமா?”
என்றபடி ஒரு புகைப் படத்தை எடுத்து நீட்டினார் வெண்பா.

புகைப்படத்தை வாங்கிப் பார்த்தவளது விழிகளில் விழுந்த உருவம் மனதில் நுழைய மறுத்தது. மாறாக ஆதியின் உருவம் மனதில் தோன்றி அவளைத் திக்கு முக்காடச் செய்தது.

கண்களை இறுக மூடிக் தன்னை நிதானப் படுத்திக் கொண்டவள் சம்மதம் சொன்னாள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“அன்றாடம் நூறுவகைபூப்பூக்கும்
ஆனாலும் காயாகும்
சில பூக்கள் தான்
எல்லோர்க்கும் காதல் வரும் என்றாலும்
கல்யாண வைபோகம்
சில பேர்க்கு தான்
காதலன் காதலி தோற்பதுண்டு
காதல்கள் எப்போதும் தோற்பதில்லை
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 27

5878fa0b167ada122730d8e864300119~2.jpg

IMG-20210627-WA0008~2.jpg

வானம் மெல்லிய தூறலோடு மண்ணை விட்டு விட்டுத் தொட்டுச் சென்று கொண்டிருந்தது.

அம்மன் கோவிலின் மண்டபத்தில் அலங்காரப் பதுமையாக மணப் பெண் கோலத்தில் தலை குனிந்து அமர்ந்திருந்தாள் காயத்ரிதேவி….

அவளருகில் அவளுக்காக வெண்பாம்மா தேர்வு செய்த மணமகனான காவல்துறை அதிகாரி சஞ்சீவன் அமர்ந்திருந்தான்.

காயத்ரி கழுத்தில் சஞ்சீவன் அக்கினியைச் சாட்சியாக வைத்து அணிவித்த தங்கத்தாலி மினுமினுத்தது.

அதற்கும் மேலாகக் காயத்ரியின் விழியோரமாய் இறங்கி விட்டிருந்த கண்ணீர்த் துளி மினுமினுத்தது.

எரிந்து கொண்டிருந்த அக்கினியில் ஆதித்யனின் நினைவுகளையும் போட்டு எரித்து விட்டு, சஞ்சீவனுடனான வாழ்க்கைக்குத் தன்னைத் தயார்ப் படுத்த வெகுவாகப் பாடு பட்டாள் காயத்ரி.

ஆனாலும் பாவம் பேதையவள் மனது அவளுக்குச் சதி செய்து கொண்டே தான் இருந்தது.

இதுவரை எப்படியோ ஆனால் இனிமேல் உன் கணவனுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று புத்தி இடித்துரைத்தது.

நானும் ஒரு பெண் தானே எனக்கே எனக்கென்று உணர்வுகள் ஏதும் தனியாக இருக்கக் கூடாதா…? நானே நினைத்தால் கூட ஆதியை மறக்க முடியவில்லையே… என்று அவளது மனது புலம்பியது.

ஆதியை நான் நேசிக்கிறேனா? என்ற கேள்வி அவள் மனதில் அரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

இனி அதை ஆராய்வதால் என்ன ஆகப் போகிறது என அந்த எண்ணத்தைக் கை விட்டாள் காயத்ரி.

அவள் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாக நம்பினாள்.
நிச்சயமாக ஆதி என் திருமணத்திற்குப் பின்பாவது ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு காலப் போக்கில் என்னை மறந்து விடுவார்.
எது எப்படியோ அவர் எங்கிருந்தாலும் நன்றாக வாழ வேண்டும் என்று வேண்டியும் கொண்டாள்.

அதே நேரத்தில் அவளருகே மெல்ல வந்த அனுபல்லவி
“தேவி நான் ஒரு அவசர வேலையாக வெளியூர் போகிறேன்”
என்றாள்.

“ஏய் என் திருமணம் கூட இன்னும் முடியவில்லையே அதற்குள் வெளியூர் போகிறேன் என்கிறாயே அனு”

“அது… வந்து… உன் கழுத்தில் தான் தாலி ஏறி விட்டதே தேவி… நான் போகிறேனே”

“சரி சரி… போய் விட்டுச் சீக்கிரமாக வந்து விடு”

“முயற்சி செய்கிறேன் தேவி… இன்னொரு விஷயம் நம் கஸ்தூரியைக் கவனமாகப் பார்த்துக் கொள்”

“அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் அனு… நீ பத்திரமாகப் போய் வா”
என்றவளை ஒரு முறை இறுக அணைத்துக் கொண்ட அனு கலங்கிய கண்களுடன் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறினாள்.

திருமணத்திற்கு வந்திருந்த மற்றவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த காயத்ரியும் கஸ்தூரியும், அனுபல்லவியின் கலங்கி இருந்த முகத்தைக் கவனிக்கத் தவறி விட்டார்கள்.

காயத்ரியோ இந்த இல்லத்தை விட்டும் தன் தங்கையையும் தோழியையும் விட்டுப் போக வேண்டுமே என்ற கவலையில் இருக்க, கஸ்தூரியோ தன் உயிரினிலும் மேலான அக்காவைப் பிரியம் போகிறேனே என்கிற சோகத்தில் மூழ்கி இருந்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டார்கள். இரு பெண்களுக்கும் வெண்பாம்மா ஆறுதல் கூறித் தேற்றினார்.

வெண்பாம்மாவின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்ட புதுமணத் தம்பதிகளான காயத்ரியும் சஞ்சீவனும் அலங்கரிக்கப் பட்டிருந்த வாகனத்தில் ஏறிக் கொண்டார்கள்.

வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்த காயத்ரி… வாகனம் அந்த வளாகத்தை விட்டு நீங்கும் வரை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே இருந்தாள்.
அவளது பார்வையை விழிநீர் மறைத்தது.

மெல்லப் பார்வையைத் திருப்பிக் கொண்டவள் தன்னருகே அமர்ந்திருந்தவனை அப்போது தான் லேசாக விழி உயர்த்திப் பார்த்தாள்.

என்ன வாழ்க்கை இது? யார் என்றே தெரியாத ஒருவனோடு தான் இனிமேல் என் எதிர்காலமா? என்று அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

உள்மனது மட்டும் இவன் மோசமானவனாக இருக்கக் கூடாது. நல்லவனாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டே இருந்தது.

இறைவனை மனதார வேண்டியபடி வாகனத்தின் பக்கவாட்டுக் கண்ணாடி வழியே வெளியே பார்த்தாள் காயத்ரி… அங்கே யாருடனோ தீவிரமாகப் பேசியபடி நின்றிருந்தான் ஆதித்யன்.

அன்று தான் அவனைக் கடைசியாகப் பார்த்தாள் காயத்ரி.

காயத்ரியின் கணவன் சஞ்சீவன் கொஞ்சம் சுயநலம் நிறைந்தவன். ஆனாலும் காயத்ரியை கொஞ்சம் நன்றாகத் தான் வைத்திருந்தான்.
ஆனாலும் அவ்வப்போது தனது வீட்டினரின் சொல்லைக் கேட்டு அவளை வார்த்தைகளால் நோகடிக்கவும் மறக்கவில்லை.

இது தான் என் வாழ்க்கை என்று காயத்ரி அனைத்தையும் ஏற்றுக் கொண்டு வாழப் பழகிய தருணத்தில் ஒரு நாள் கஸ்தூரி அவளைப் பார்க்க வந்திருந்தாள்.

காயத்ரிக்கு வெளியே செல்லக் கூட நேரம் கிடைக்காத அளவிற்கு வேலை நெட்டி முறித்துக் கொண்டே இருக்கும்.
அப்போதெல்லாம் அதை அவள் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை.
காலப் போக்கில் தான் புரிந்து கொண்டாள். வேண்டுமென்றே தன்னிடம் அந்த வீட்டில் உள்ளவர்கள் அதிக வேலையைத் திணித்திருந்தார்கள் என்பதை.

கஸ்தூரி திடீரென தன்னைப் பார்க்க வந்ததும் ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது. கவலையாகவும் இருந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கையைப் பார்க்கிறோமே என்கிற சந்தோசம்… அனு பற்றி ஏதாவது கெட்ட செய்தி சொல்லப் போகிறாளோ என்கிற கவலை.

வேலைகள் எல்லாவற்றையும் முடித்து விட்டு வரவேற்பறையில் வந்து தங்கையோடு அமர்ந்து கொண்டாள் காயத்ரி.

வரவேற்பறையில் ஏதோ முக்கியமான வேலை இருப்பது போல அங்கேயும் இங்கேயுமாக நடை போட்டு அவர்கள் இருவரும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை காயத்ரியின் கணவன் வீட்டினர் வேவு பார்த்தனர்.

அப்போது தான் காயத்ரிக்குக் கொஞ்சம் இந்த வீட்டினரைப் பற்றிப் புரிந்தது.
தங்கையை அழைத்துக் கொண்டு தன் அறைக்குள் போய் விட்டாள்.

“என்ன விஷயம் கஸ்தூரி… திடீரென வந்து இருக்கிறாய்”

“அனுவக்கா பற்றிய விஷயம் தான் அக்கா”

“என்னடி… அனு எங்கே என்று ஏதும் தெரிந்ததா?”

“இரண்டு நாட்களுக்கு முன்னால் அனுவக்கா இல்லத்திற்கு வந்திருந்தாள்… எங்கே அக்கா சொல்லாமல் கொள்ளாமல் போனீர்கள் என்று கேட்டதற்குப் பதிலே இல்லை அக்கா”

“நான் கிளம்பி வரட்டுமா? அவளிடம் நிறைய பேச வேண்டும்”

“நீங்கள் அங்கு வந்து ஒரு பிரயோசனமும் இல்லை அக்கா”

“ஏன்… ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

“அனுவக்கா தான் அங்கே இல்லத்திலேயே இல்லையே”

“என்னடி…?”

“ஆமாம்… அக்கா… நான் கேட்ட கேள்விக்குப் பதில் ஒன்றும் சொல்லாத அனுவக்கா அடுத்த நாள் காலையிலேயே கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு மீண்டும் எங்கேயோ போய்விட்டார்கள்”

“இந்த அனுவின் நடவடிக்கையே கொஞ்ச காலமாகச் சரியில்லையே… ஏதாவது கவலை என்றால் கூட நான் துருவித் துருவிக் கேட்டால் தான் வாயே திறப்பாள்… நான் அவளைக் கவனிக்காமல் விட்டு விட்டேன் போல”

“நீங்கள் கவலைப் படாதீர்கள் அக்கா… அனுவக்கா சீக்கிரமாக வந்து விடுவார்கள்”

“கஸ்தூரி… நீ இல்லத்தை விட்டு அடிக்கடி வெளியே எங்குமே செல்லக் கூடாது சரியா…”
என்றபடி கஸ்தூரியை அனுப்பி வைத்தாள் காயத்ரி.

ஐந்து மாதங்கள் யாருக்கும் காத்திராமல் உருண்டோடிய நிலையில்… கடிதம் எழுதி வைத்து விட்டுப் போன அனுபல்லவி பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

செய்தித்தாளில் பெயர் கொடுத்தும் கூட அவள் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

காயத்ரி ஒவ்வொரு நாள் இரவையும் கண்ணீரில் கரைத்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல நேரமில்லாமல் அவன் கணவன் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருந்தான்.

வேலை ஏதும் இல்லாமல் வீட்டில் இருந்திருந்தால் கூட அவன் காயத்ரிக்கு ஆறுதல் சொல்லி இருப்பானா? என்பது கேள்விக் குறி தான்.

காயத்ரி தன் புகுந்த வீட்டில் இருந்து அனுபல்லவிக்காக கண்ணீர் விட கஸ்தூரியோ அங்கே இல்லத்தில் இருந்தபடி கண்ணீர் விட்டாள்.

இதற்கு இடையில் காயத்ரியின் கணவனான சஞ்சீவனின் தம்பி சாயிவனைக் கஸ்தூரிக்குப் பேசி முடித்தார் வெண்பாம்மா…

இதைக் கேள்விப்பட்ட அக்கா தங்கை இருவருமே அனு பற்றிய கவலையைக் கொஞ்சம் மறந்து சந்தோஷம் அடைந்தார்கள்.

இன்பமோ துன்பமோ இருவரும் ஒரே வீட்டில் வாழப் போகிறோம் என்கிற கொள்ளை சந்தோஷத்தில் திளைத்தார்கள்.

திருமண நாளும் நெருங்கியது.
கஸ்தூரியின் கழுத்தில் தாலி ஏறுவதைப் பார்த்த காயத்ரியின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர் மெல்ல இறங்கியது.

விதி இவர்கள் வாழ்வில் மெல்ல சதிராடத் தொடங்கியது.
மணமகனும் மணமகளும் ஏறிய வாகனத்தை சஞ்சீவன் ஓட்டி வர, காயத்ரி வேறு வாகனத்தில் வந்து கொண்டிருந்தாள்.

யாருமே எதிர்பாராத நேரத்தில் சாலையின் திருப்பத்தில் வந்த கனரக வாகனம் ஒன்றுடன் மோதி மணமக்கள் வந்து கொண்டிருந்த கார் தூக்கி வீசப்பட்டது.

காயத்ரியின் கணவனும் கஸ்தூரியின் கணவனும் சம்பவ இடத்திலேயே தங்கள் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டார்கள்.

கஸ்தூரிக்கும் பலத்த காயம்… அவள் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டாள்.

இதற்கு நடுவே கஸ்தூரியின் பெயரும் காயத்ரியின் பெயரும் இராசியில்லாதவர்கள் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது.

இறந்த கணவனுக்காக அழுவாளா? தங்கை உயிர் பிழைப்பாளா என்று அழுவாளா? தங்கையின் வாழ்க்கை இப்படி மொட்டிலேயே கருகி விட்டதே என்பதை நினைத்து அழுவாளா? அப்படித் துடித்துக் கொண்டு நின்றவள் அவ்வளவு அல்லோலகல்லோலத்திலும் தன்னையே குறி வைத்துத் தாக்கப்படும் விஷ வார்த்தைகளை எப்படி தாங்கக் கூடும்.

இறந்தவர்களின் உடல் தகனம் செய்யப்படும் வரையில் கூட கஸ்தூரி கண் விழித்தாள் இல்லை.

காயத்ரியை உயிரோடு வதைத்து விட்டு ஐந்து நாட்களின் பின்னர் மெல்லக் கண் விழித்துப் பார்த்தாள் கஸ்தூரி.
அதன் பின்னரே காயத்ரியின் போன உயிர் கொஞ்சம் மீண்டது.

கஸ்தூரியைப் பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டாள் காயத்ரி.
காயத்ரியின் அன்பான கவனிப்பில் மெல்ல மெல்லக் கஸ்தூரி தேறி வந்து கொண்டிருந்தாள்.

காயத்ரியின் கணவனும் கஸ்தூரியின் கணவனும் இறந்து பதினைந்து நாட்கள் கடந்த நிலையில் காயத்ரி கருவுற்றிருப்பது தெரிய வந்தது.

இது தான் வாழ்க்கை என்று மனதைக் கல்லாக்கிக் கொண்டு கட்டிய கணவனோடு வாழ்ந்த வாழ்க்கைக்கு அடையாளம் இதோ வயிற்றில்... ஆனால்
அந்தச் சந்தோஷத்தை அவளால் முழுதாக அனுபவிக்க முடியவில்லை.

இதற்கிடையில் அடுத்த இடி வந்து விழுந்தது.
அனுபல்லவி ஒரு வாகன விபத்தில் இறந்து விட்டதாகச் செய்தி வந்து சேர்ந்தது.

காயத்ரி அடியோடு கலங்கி விட்டாள். கஸ்தூரி தமக்கையைக் கட்டிக் கொண்டு கதறி அழுதாள்.

அந்தச் செய்தியை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாகத் தங்கள் புகுந்த வீட்டில் வாழத் தொடங்கினார்கள்.

வாழ்க்கை என்பது எத்தகைய விஷமிகள் சூழ்ந்த நரகம் என்பதைத் தங்கள் புகுந்த வீட்டில் இருவரும் கண்டு கொண்டார்கள்.

காயத்ரி தனது கடந்த காலத்தைச் சொல்லி முடிக்கவும் ஏஞ்சலினா அவளையும் கஸ்தூரியையும் இறுக அணைத்துக் கொண்டாள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“இன்பத்தில் பிறந்து
இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன்
யாருமில்லை
துன்பத்தில் பிறந்து
துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Status
Not open for further replies.
Top