All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானுரதி துரைராஜசிங்கமின் ‘வெள்ளை ரோஜாக்கள்’ - கதை திரி

Status
Not open for further replies.

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 38
IMG-20210701-WA0043~2.jpg

IMG-20210627-WA0008~2.jpg

குளிர் காற்று மெல்ல மெல்லத் தவழ்ந்து வந்து மேனி தீண்டிச் சென்றுகொண்டிருந்தது.​

மலைப் பிரதேசத்தின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மின்குமிழ்கள் ஒளிர்ந்து இருளை விலக்கப் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தன.

பழத் தோட்டத்திலும் அழகழகாக மின்குமிழ்கள் ஒளிர விடப் பட்டிருந்தன.

சிறிது நேரம் அந்த ஒளிகளின் வர்ணஜாலத்தையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் கஸ்தூரி.

பார்வை தான் ஒளி விளக்கில் பதிந்து இருந்ததே தவிர, அவளது சிந்தை வேறு எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது. நிறையக் குழப்பங்கள் மனதினுள் குமிழியிட்டுக் கொண்டிருந்தன. இடை நடுவே வீட்டு வாசலைப் பார்த்தவள்
"இத்தனை நேரம் அப்படி என்ன தான் பேசுகிறார்களோ தெரியவில்லை"
எனச் சலித்தும் கொண்டாள்.

லேசாகக் கால்கள் வலிப்பது போலத் தோன்றவே தான் அமர்ந்திருந்த நீளமான மரக் கதிரையில் கால்களை மடக்கிச் சப்பணமிட்டுக் கொண்டு தொலைவில் இருளில் தெளிவு இல்லாமல் தெரிந்த மலையின் வடிவத்தை நோக்கத் தொடங்கினாள்.

"தாமதத்திற்கு மன்னித்து விடு கஸ்தூரி"
என்றபடி அந்த நீளமான மரக் கதிரையில் ஒரு ஓரமாக வந்து அமர்ந்து கொண்டான் சூரியன்.

மன்னிப்புக் கேட்டபடி அவன் அமர்ந்ததைக் கூட அறியாமல் இருந்தவளைத் தொட்டுத் திருப்பவதற்காகக் கையை நீட்டியவன் ஒரு நொடி தயங்கி "கஸ்தூரி" என்று பலமாக அழைத்தான்.

அவன் அழைத்த சத்தத்தில் திடுக்குற்றுத் திரும்பியவள் அப்போது தான் அவனையே பார்த்தாள்.

"என்ன?"

"என்ன என்ன நீ தானே என்னை ஏதோ முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று வரச் சொன்னாய்"

"எப்போது வருகிறேன் என்று சென்றீர்கள்... எப்போது வந்திருக்கிறீர்கள்? கிட்டத் தட்ட ஒரு மணி நேரமாக இங்கே அமர்ந்திருக்கிறேன்..."

"அடடா மன்னித்து விடு கஸ்தூரி... ரொம்ப முக்கியமாகப் பேசிக் கொண்டு இருந்ததில் நேரத்தைக் கவனிக்கவில்லை... மன்னித்து விடு"

"சரி சரி விடுங்கள்..."

"சரி அவ்வளவு அவசரமாக எதற்கு வரச் சொன்னாய்... என்ன விஷயம்"

"இதை எப்படிச் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை... ஆனால் நான் நினைப்பது போல் தானா என்றும் குழப்பமாக இருக்கிறது... நான் நினைப்பது போல இருந்தால்... கடவுளே அதை எப்படிச் சொல்வது..."

"ஏய்... இப்போது நீ என்ன தான் சொல்ல வருகிறாய்... எனக்கு ஒரு மண்ணும் புரியவில்லை... கொஞ்சமாவது தெளிவாகச் சொல்லு..."
என்றவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தாள் கஸ்தூரி.

"இதென்ன இவள் இப்படிப் பார்க்கிறாளே இதற்கு என்ன தான் அர்த்தம்... ஆனால் ஏதோ தீவிரமாக யோசிக்கிறாள் என்பது மட்டும் புரிகிறது"
என்பது போலச் சூரியன் அவளையே பார்த்திருந்தான்.

தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு மெல்ல எழுந்து கொண்ட கஸ்தூரி சில நொடிகள் அங்கும் இங்கும் நடந்தாள்.
சூரியன் அமைதியாக அவளையே தான் பார்த்திருந்தான்.

அவனுக்கு முன்னால் நடை பயின்று கொண்டிருந்தவள் திடீரென நின்று அவனைப் பார்த்தாள்.

"உங்களின் இரண்டாவது அண்ணா மகேந்திரவர்மனின் நாட்குறிப்பை நான் படித்தேன்..."

"என்னது... சின்னண்ணாவின் நடக்குறிப்பா? அதை நான் கூடப் படித்ததில்லையே..."

"அதனால் தான் நான் படித்தேன்..."

"அதிலே பெரிதாக எதை நீ படித்தாய்... சின்னண்ணா பல்லவியைப் பார்த்தது முதல், திருமணம் செய்தது வரை தானே இருந்திருக்கும்..."

"அப்படித்தான் நானும் முதல் நினைத்துப் படிக்க வேண்டாம் என்று நினைத்தேன்... ஆனால் என்னவோ தெரியவில்லை அதை முழுமையாகப் படிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது அதனால் முழுவதும் படித்து விட்டேன்..."

"அதைப் படித்து விட்டுத் தானா என்னை அவசரமாக வரச் சொன்னாய்... அதில் முக்கியமாகப் பேசும் விஷயம் என்று என்ன இருக்கிறது ஒன்றுமில்லையே..."

"இல்லை... இருக்கிறது... ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் இருக்கிறது... நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் ஏன் என்று கேட்காமல் பதில் சொல்லுகிறீர்களா?"

"சரி கேள்..."

"உங்கள் சின்னண்ணா ஏதோ விபத்தில் தானே இறந்தார்?"

"ஆமாம்"

"அவரோடு உங்கள் அம்மா அப்பா மற்றும் அனுவக்காவும் தானே விபத்தில் மாட்டிக் கொண்டார்கள்"

"ஆமாம்"

"அனுவக்காவைத் தவிர மற்று மூவரும் இறந்து விட்டார்கள் தானே?"

"ஆமாம்"

"விபத்து நடந்தது பற்றி உங்களுக்கு முதலில் யார் தகவல் சொன்னது என்று நினைவு இருக்கிறதா?"

"அது..."

"சரி விடுங்கள் அதைப் பிறகு யோசிக்கலாம்... நான் கேட்கப் போகும் கேள்வி உங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கும் தான் ஆனாலும் தயவு செய்து நீங்கள் பதில் சொல்ல வேண்டும்..."

"அதெல்லாம் ஏற்கனவே வருத்தப்பட்டாயிற்று... நீ கேள்வியைக் கேள்... இத்தனை தூரம் நீ கேள்வி கேட்பதைப் பார்த்தாலே ஏதோ விஷயம் இருப்பது போலத்தான் தெரிகிறது..."

"ம்ம்... ஒரு விஷயம் இல்லை ஓராயிரம் விஷயம் இருக்கிறது..."

"சரி சரி கேள்வியைக் கேள்..."

"உங்கள் அம்மா அப்பா சின்னண்ணா மூன்று பேருக்கும் ஒன்றாகத் தானா இறுதிச் சடங்கு நடந்தது?"

"அப்படி எல்லாம் இல்லை... அவர்களின் உடலே கிடைக்கவில்லை... விபத்து நடந்த போது சின்னண்ணா ஓட்டிச் சென்ற வாகனம் அப்படியே மலை விளிம்பில் இருந்து விழுந்து விட்டது... இந்த மலைப் பிரதேசத்திலேயே அந்த விளிம்பு தான் அதி உயரமான இடம்... கீழே விழுந்தால் எலும்பு கூட மிஞ்சாது... ஆனாலும் விழும் போதே பல்லவியைப் பிடித்து யாரோ வெளியே தள்ளி இருக்க வேண்டும்... அதனால் தான் அவள் மட்டுமாவது பிழைத்துக் கொண்டாள்... விஷயம் தெரிந்த போது எங்களை இந்தப் பகுதிக்கு வருவதற்குக் காவல்துறை அனுமதிக்கவே இல்லை... பல்லவியின் நிலையே படு மோசமாக இருந்தது... அவளுக்குத் தலையில் பலத்த அடி பட்டு விட்டது... இரத்தம் சொட்டச் சொட்டத் தான் அவளை இங்கே இருந்த வைத்தியசாலையில் சேர்த்து இருந்தார்கள்... அவள் கண் திறந்து பார்க்கும் வரை நானும் பெரியண்ணாவும் பட்ட அவஸ்தை இருக்கிறதே அப்பப்பா நரகம்... பல்லவியோடு நாங்கள் அலைந்ததால் விபத்துப் பற்றி விசாரித்துக் கீழே விழுந்தவர்களில் யாரேனும் இருக்கிறார்களா என்பதை அறிந்து வருவதற்கு மூர்த்தி மாமாவைத் தான் அனுப்பினோம்... ஆனால் அவர் வந்து சொன்ன தகவல் கொடுமையானது... அந்தத் துயரத்தில் இருந்து மீளவே முடியாமல் நாங்கள் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமில்லை... பிறகு தான் ஒரு வழியாகப் பல்லவி கண் விழித்தாள்... அவளாவது உயிரோடு இருக்கிறாளே என்பது மட்டும் தான் அப்போது இருந்த ஒரேயொரு ஆறுதல்... "
என்று கோர்வையாகச் சொன்ன சூரியனையே பார்த்திருந்த கஸ்தூரியின் விழிகள் எதையோ உணர்ந்ததும் லேசாகப் பளிச்சிட்டது.

கஸ்தூரியின் விழிகளில் தெரிந்த ஒரு வித சந்தோசத்தைப் பார்த்த சூரியனோ
"என்ன இவள்... இவ்வளவு தூரம் ஒரு விஷயத்தைச் சொல்லி நான் கவலைப்படுகிறேனே அதற்குச் சேர்ந்து கவலைப்படக் கூடத் தேவையில்லை... இப்படிக் கண்ணால் சிரிக்காமலாவது இருக்கலாமே"
என்று எண்ணிக் கொண்டான்.

அதனை வாய் திறந்து கேட்கவும் செய்தான்.

"ஏன் கஸ்தூரி... என் கவலை உனக்குச் சந்தோசமாக இருக்கிறதா? எதற்கு இப்படிக் கண்ணால் சிரிக்கிறாய்... அதை விடவும் நன்றாகப் பற்கள் தெரியச் சிரிக்கலாமே..."
என்று நிஜமான ஆதங்கத்துடன் கேட்டான்.

கஸ்தூரியோ பதிலேதும் கூறாமல் அவனையே தான் பார்த்திருந்தாள்... ஆனால் மனம் வேறு ஏதோ கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது.

அவளது நிலையைப் பார்த்தவனோ
"ஏய்... அப்படி என்ன தான் உனக்கு நடந்து விட்டது... ஒரு வேளை காத்துக்கருப்பு ஏதும் அடித்து விட்டதோ..."
என்றபடி அவளது முகத்தின் முன்னால் கையை அசைத்தான்.

அசைத்தவனின் கையை இறுகப் பற்றியவள் அவனைக் கிட்டத் தட்ட இழுத்துக் கொண்டு வீட்டின் அந்தக் கடைசியாக இருக்கும் அறையை நோக்கி விரைந்தாள்.

சூரியனோ தன் கையைப் பிடித்திருந்தவளின் கையையே பார்த்தபடி அவள் இழுத்த இழுப்புக்கு அவள் பின்னாலேயே சென்றான்.

அறையினுள் வந்ததும் ஓரமாக இருந்த அலுமாரியைத் திறந்து, அதிலிருந்த நாட்குறிப்பை எடுத்து ஒரு பக்கத்தை விரித்துச் சூரியனின் கையில் கொடுத்தாள்.

அந்தப் பக்கத்தை முழுமையாகப் படித்தவனோ கஸ்தூரியை நிமிர்ந்து பார்த்து விட்டு, அருகே இருந்த கட்டிலில் தலையைப் பிடித்த படி அமர்ந்து விட்டான்.

அவனது நிலையை உணர்ந்தவள் அவன் முன்பாக மண்டியிட்டு அமர்ந்தபடி, தலையில் இருந்த அவனது கரத்தை விலக்கி விட்டபடி
"உங்கள் அம்மா அப்பா சின்னண்ணா எல்லோரும் உயிரோடு தான் இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது"
என்றாள் மெல்லிய குரலில்.

"ஆனாலும் அது எப்படிச் சாத்தியம் ஆகும்?"

"இந்த நாட்குறிப்பைப் படித்த பிறகும் நீங்கள் இப்படிக் கேட்கலாமா?"

"ஆனாலும்... உன்னாலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை தானே வெறும் ஊகம் தானே?"

"சரி நான் சொல்வது ஊகமாகவே இருக்கட்டும்... ஆனால் இன்னொரு விஷயத்தை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்..."

"அதென்ன..."

"அன்றைக்கு நடந்தது விபத்து இல்லை... அது ஒரு சதித்திட்டம்..."

"என்ன? புரியவில்லை எனக்கு..."

"உங்கள் குடும்பத்தினர் விபத்தில் இறந்து விட்டார்கள் என்று நீங்கள் நினைப்பது உண்மை இல்லை... அவர்கள் ஏதோ சதி வலையில் மாட்டி இருக்கிறார்கள்..."

"ஏய்... அது புரிகிறது எனக்கு... ஆனால் அதைச் சதி என்று எப்படி அத்தனை உறுதியாகச் சொல்கிறாய்..."

"நான் சொல்வதை நீங்கள் கவனமாகக் கேளுங்கள்... உங்களுக்கே புரியும்..."

"ம்ம்ம்..."

"உங்கள் குடும்பத்தினர் இங்கே குலதெய்வக் கோவிலுக்கு வந்த போது தானே விபத்து ஏற்பட்டது என்று நீங்கள் எல்லாம் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்..."

"ஆமாம்..."

"இங்கே இந்தப் பழத்தோட்டத்தில் இருந்து பார்க்கும் போது உங்கள் குலதெய்வக் கோவில் அப்படியே தெளிவாகத் தெரிகிறது..."

"ஆமாம் தெரிகிறது அதற்கு என்ன?"

"அதற்கு என்னவா? கொஞ்சமாவது யோசிக்க மாட்டீர்களா? விபத்து நடந்த இடம் இந்த மலைப் பிரதேசத்திலேயே உயரமான விளிம்பு உள்ள இடம் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்... கோவிலுக்குப் போனவர்கள் உயரமான விளிம்புக்கு ஏன் போக வேண்டும் சொல்லுங்கள்?"
என்று கேட்டவளின் கேள்வியில் ஒரு நொடி விக்கித்துப் போய் நின்றான் சூரியன்.

"இவள் என்ன சொல்கிறாள் ஒரு வேளை அப்படித் தானோ"
என நினைத்தவனுக்குத் தலை கிறு கிறுத்துப் போயிற்று...

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"கோடி விண்மீன்களில் எந்தன் விண்மீன் எங்கே
என்னை தாலாட்டுமே அந்த ராகம் எங்கே
எந்தன் சோகத்தை சொல்கின்ற சொல்லேது ..."
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 39

8aa3a170a5996eb04eb8388d291a4d6f~3.jpgIMG-20210701-WA0028~2.jpg

சூரிய தேவன் தன்னுடைய இளங் கதிர்களால் கீழ்த் திசையை ஒளி மயமாக்கிக் கொண்டிருந்தான்.

அவனது ஒளிவெள்ளத்தை மரஞ்செடிகள் மறைக்க முயன்று தோற்றுப் போன போதும் தங்கள் தோல்வியை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பது போல அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்தன.

இதே நேரத்தில் சூரியனின் ஒளிக்கற்றைகள் சாளரத்தினூடாக உள்ளே தெறிக்கும் இடத்தில் இருந்து செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தான் ஆதித்யவர்மன்.

செய்தித்தாளில் மூழ்கி இருந்தவனைத் தொலைபேசிமணிச் சத்தம் நிமிர்ந்து பார்க்கச் செய்தது.

யாராக இருக்கும் என நினைத்தபடி தொலைபேசியை எடுத்தவனிடம் அவனது சித்தி ரேகா தான் பேசினார்.

"ஆதிக்கண்ணா... எப்படி இருக்கிறாய்"

"நான் நலமாக இருக்கிறேன் சித்தி... நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? எப்போது இங்கே வருகிறீர்கள்?"

"எனக்கு என்ன குறைச்சல் கண்ணா நான் நன்றாகத் தான் இருக்கிறேன்... ஆனால் நீ தான் சித்தி என்று ஒருத்தி இருக்கிறாள் என்பதையே மறந்து விட்டாய்..."

"அப்படி எல்லாம் இல்லை சித்தி..."

"சரி சரி... ரொம்ப யோசிக்காதே... நான் எதற்கு அழைத்தேன் தெரியுமா?"

"சொன்னால் தானே தெரியும் சித்தி..."

"ம்ம்ம்... அது சரி... வருகின்ற வெள்ளிக்கிழமை நம் அக்காவுக்கும் அத்தானுக்கும் மகேந்திரனுக்கும் முதலாவது திதி ... அதை நினைவு படுத்த தான் அழைத்தேன்..."

"நானும் மறந்து விடவில்லை சித்தி..."

"இருந்தாலும் நினைவு படுத்துவது என்னுடையை கடமை ஆதிக்கண்ணா..."

"சரி சித்தி எப்போது இங்கே வருகிறீர்கள்... இன்று வெள்ளிக்கிழமை சரியாக இன்னும் ஆறு தினங்கள் தான் இருக்கிறது..."

"திங்களன்று வந்து விடுவேன் கண்ணா..."
என்று சொல்லியபடி தொலைபேசியை வைத்து விட்டார் ரேகா.

தொலைபேசியை வைத்த ஆதித்யவர்மன் சாளரத்தைத் தாண்டி வெளியே தெரிந்த வானத்தை வெறித்துப் பார்த்தபடி அருகில் இருந்த கதிரையில் தொப்பென்று விழுந்தான்.

அவனது எண்ணமெல்லாம் அவனது குடும்பமே வியாபித்து நின்றது. சரியாக ஒரு வருடத்துக்கு முதல் அவனது குடும்பம் எத்தனை சந்தோசமாக இருந்தது. ஆனால் இப்போதோ இப்படிக் கல்லெறி பட்ட குருவிக்கூடு போலச் சிதைந்து கிடக்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனது விழியோரம் லேசாக நனைந்தது... விழிகள் தான் லேசாக நனைந்தது. ஆனால் மனமோ பலத்த சூறாவளி தாக்கியது போலத் துன்பத்தால் மூழ்கிக் கிடந்தது.

சமையலறையில் கையில் தேநீர்க் கோப்பையுடன் நின்றிருந்த காயத்ரி இதைக் கொண்டு சென்று ஆதியிடம் கொடுக்கலாமா? வேண்டாமா? அவர் இதை வாங்ககுவாரா? மாட்டாரா? எனத் தனக்குள் விவாதமே செய்து கொண்டிருந்தாள்.

ஒரு வழியாக 'இப்போதெல்லாம் அவர் என்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வதில்லை தானே...நான் செய்த வேலைக்கு நானாகத்தானே சென்று பேச வேண்டும்...' என நினைத்தபடி ஆதித்யனைத் தேடிச் சென்றாள் காயத்ரி.

அந்தப் பெரிய அறையின் ஓரமாக இருக்கும் பெரிய கதிரையில் இருந்து வெளியே வெறித்துப் பார்த்தவாறு இருந்தவனின் பக்கவாட்டுத் தோற்றம் காயத்ரியின் மனதை ஏதோ செய்தது.

தேநீர்க் கோப்பையை அருகில் இருந்த மேஜை மீது வைத்தவள் தனது தயக்கத்தைத் தள்ளி வைத்து விட்டு அவனது தோளைத் தொட்டுத் திருப்பினாள்.

திரும்பியவனோ தன்னருகே நின்றிருந்தவளைப் பார்த்ததும் பட்டென்று அவளைக் கட்டிக் கொண்டு அவளது வயிற்றில் முகத்தைப் புதைத்தவாறு
"நீயும் என்னை விட்டுப் போய் விடாதேடி..."
என்று குரல் தழுதழுக்கச் சொன்னான்.
அவ்வளவு தான் பெண்ணவள் மொத்தமாக உருகி விட்டாள்.
அவளுக்கு வார்த்தைகளே வெளி வரவில்லை.

கணம் கூடத் தாமதிக்காமல் வயிற்றோடு முகம் புதைத்திருந்தவனை ஒரு போதும் விட்டுப் போக மாட்டேன் என்பது போல இறுக அணைத்துக் கொண்டாள் அவள்.

அப்படியே சிறிது நேரம் அவனை அணைத்திருந்தவள் மெல்ல அவன் முடியைக் கொதியபடி
"என்னாயிற்று ஆதி... நான் ஏன் உங்களை விட்டுப் போகப் போகிறேன்... முன்பு எப்படியோ ஆனால் இப்போது நீங்களே சொன்னால் கூட நான் உங்களை விட்டுப் போக மாட்டேன்..."
என்றாள் உறுதியாக...

அவளது பதிலில் மெல்ல நிமிர்ந்து அவளைப் பார்த்தவனோ
"நிஜமாகவா..."
என்றான் நம்பாத குரலில்.

தன் இரு கரங்களாலும் அவனது இரு கன்னங்களையும் தாங்கியபடி அவனது விழிகளுக்குள் பார்த்தவள்
"நிஜமாகத் தான்..."
என்றாள் மெல்லிய ஆனால் உறுதியான குரலில்.

தன்னை மறந்து சிறிது நேரம் அவளையே பார்த்திருந்தவனோ சட்டென்று அவளது கரங்களைத் தட்டி விட்டு
"போடி... நீ தான் என்னை நேசிக்கவே இல்லையே... அன்றைக்குக் கூட வீட்டை விட்டுப் போகிறேன் என்று கிளம்பியவள் தானே நீ..."
என்றான் இதுநாள் வரை அடக்கி வைத்திருந்த ஆதங்கத்தைக் கொட்டித் தீர்ப்பது போல.

தன் கரங்களைத் தட்டியவனின் கரங்கள் இரண்டையும் இறுகப் பற்றிக் கொண்ட காயத்ரி
"நான் செய்தது தவறு தான் என்னை மன்னித்து விடுங்கள் ஆதி..."
என்றாள் உள்ளே போய் விட்ட குரலில்.

ஆதித்யனோ பதிலேதும் சொல்லாமல் அவளது முகத்தையே பார்த்திருந்தான்.
ஏதும் பேசாமல் இருந்தவனேயே பார்த்தவளோ
"என்னை மன்னிக்கவே மாட்டீர்களா?"
என்றாள் கிட்டத்தட்ட அழாத குறையாக.

அவளது கன்னங்களைத் தன் கைகளினால் தாங்கிக் கொண்டவன்
"இப்போது கூட என்னை நேசிக்கிறாய் என்று வார்த்தைக்குக் கூடச் சொல்லவில்லையே நீ..."
என்றான் முன்பிருந்த அதே ஆதங்கத்துடன்...

அவன் கேட்ட கேள்வியில் அடடா இதற்குத்தானா நான் கூட என்னை மன்னிக்கவே மாட்டாரோ என்றல்லவா பயந்தேன் என நினைத்தவள் சிரித்தபடியே அழத் தொடங்கினாள்.

லேசாக அவனது நெற்றியை முட்டியபடி
"நான் உங்களை ரொம்ப ரொம்ப நேசிக்கிறேன் ஆதி... இதை நான் சொல்லாமலே நீங்கள் புரிந்து கொண்டு இருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன்..."
என்றாள் விழிகளில் இருந்து கண்ணீர் வடிய.

தன் மனைவியின் அந்த வார்த்தைகளில் ஆதித்யன் சிறகுகளே இல்லாமல் வானத்தில் பறந்தான்.

தன்னவளின் கன்னங்களில் வழிந்த கண்ணீரை மென்மையாகத் துடைத்தபடியே
"ஏண்டி...நான் வடக்குப் பக்கம் பார்த்தால் நீ கிழக்குப் பக்கம் பார்ப்பாய்... நான் கிழக்குப் பக்கம் பார்த்தாலோ நீ வடக்குப் பக்கம் பார்ப்பாய் பிறகு எங்கிருந்து உன்னைப் புரிந்து கொள்வது... கொஞ்சநஞ்சப் பழியாடி என் மீது போட்டாய்... நீ சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?"
என்று பேசிக் கொண்டே போனவனோ காயத்ரியின் முகம் சோகமாவதைப் பார்த்ததும் பேச்சை மாற்றினான்.

"அது சரி என்னை நேசிப்பது உனக்கு அவ்வளவு கஷடமாகவா இருக்கிறது? இப்படிக் கண்ணீர் வடித்துக் கொண்டு சொல்லுகிறாய்..."
என்றான் குறும்பாக.

காயத்ரியோ அவனின் குறும்பைப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை.
தன் ஏழுமாத வயிற்றைப் பிடித்தபடி அவனுக்கு முன்னால் மண்டியிட்டு மெல்ல அமர்ந்து அவனது கால்களைப் பற்றிக் கொண்டாள்.

அவனோ பதறியபடி
"ஏய்... என்ன செய்கிறாய்..."
என்றபடி அவளைத் தூக்கித் தன்னருகே அமர்த்தியபடி அணைத்துக் கொண்டான்.

அவனது அந்த மென்மையான அணைப்பில் கட்டுண்டவளோ அவனது தோளில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

"ஆதி..."

"ம்ம்ம்..."

"என்னை நிஜமாகவே மன்னித்து விட்டீர்களா? உங்களிடம் மன்னிப்புக் கேட்பதற்குக் கூட எனக்குத் தகுதியில்லை..."

"ஏய்... லூசு... நான் தான் இத்தனை நாள் பேசாமல் இருந்து உன்னை ரொம்ப நோகடித்து விட்டேன் போல..."

"இல்லை ஆதி... நான் தான் உங்களைக் காயப்படுத்தி விட்டேன்... உங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவும் இல்லை..."

"இப்போது புரிந்து கொண்டு விட்டாய் தானே... இன்றோடு இந்தப் பேச்சே வேண்டாம்... நாங்கள் புதிதாக ஒரு வாழ்க்கையை ஆரம்பிப்போம்..."

"இருந்தாலும் உங்களுக்கு ரொம்பப் பெரிய மனசு ஆதி..."

"எனக்கா?"

"ஆமாம் ஆதி... உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தால் அவ்வளவு சீக்கிரமாக உங்களை மன்னித்து இருக்க மாட்டேன் தெரியுமா? உங்களைச் சுத்த விட்டிருப்பேன்..."

"அடிப்பாவி..."
என்றபடி தன் மனைவியின் காதுகளை வலிக்காமல் முறுக்கினான் ஆதித்யவர்மன்.

அவனது தோள்களில் லேசாகச் சாய்ந்தபடி
"உங்களை ஒன்று கேட்கட்டுமா ஆதி..."
என்றாள் காயத்ரி.

"ம்ம்ம் தாராளமாகக் கேட்கலாம்..."

"என்ன திடீரென்று இந்தக் காலை நேரத்துச் சூரியோதயத்தில் உங்களுக்கு அறிவோதயம் பிறந்திருக்கிறது..."

"என்னடி நீ பெரிய தமிழ்ப்பண்டிதை என்பதை நிரூபிக்கிறாயா? ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை தாயே... எனக்குப் புரியும்படி பேசுடி..."

"இல்லை இன்று என்னிடம் பேசினீர்களே... இத்தனை நாள் பாராமுகமா இருந்து விட்டு இப்படித் பொசுக்கென்று பேசி விட்டீர்களே..."

"ஓஓ... அதுவா..."
என்றபடி வரும் வெள்ளிக்கிழமை தாய்தந்தைக்கும் தம்பிக்கும் முதலாவது நினைவுதினம் என்பதைச் சொல்லி அவர்களை இழந்து விட்டதையும் தம்பியிடம் தான் கோபமாக இருந்ததையும் அவனுடன் தன் கோபத்தை விட்டுத் தான் பேசும் முன்பாகவே அவன் தன்னை விட்டுப் போனதையும் பற்றிச் சொன்னான் ஆதித்யன்.

"ஓ... அப்படியா சங்கதி... தம்பியின் நினைவு வந்திருக்காவிட்டால் இப்போது கூட என்னிடம் கோபத்தைத் தானே காட்டிக் கொண்டிருந்திருப்பீர்கள்..."

"அடி போடி இவளே... இல்லாத கோபத்தை இருப்பது போல எத்தனை நாளுக்குத் தான் நானும் நடித்துக் கொண்டிருப்பது சொல்லு... இன்று இல்லாவிட்டால் நாளையாவது உன்னிடம் பேசி இருப்பேன்..."
என்றவளை பிளந்த வாய் மூடாமல் பார்த்திருந்தாள் அவன் மனைவி.

விரிந்திருந்தா அவளது உதடுகளைத் தன் விரால்களால் மூடியபடி
"நான் அசைவமே உண்ணாத பரமாத்மா என்று சொல்லிக் கொள்ள வேண்டியது... ஆனால் அடிக்கடி இப்படி வாயைப் பிளந்து பிளந்து வெளியே பறக்கும் கொசுக்களைக் கபளீகரம் செய்ய வேண்டியது"
என்றான் சிரியாமல்.

அவன் சொன்னதைக் கேட்டவளோ
"உங்களை..."
என்றபடி அவனது மார்பில் வலிக்காமல் குத்தினாள்.
குத்தியவளின் கையைப் பற்றயிழுத்து அவளைத் தன்னோடு சாய்த்துக் கொண்டு அவளின் முன்னுச்சியில் தன் நாடியைப் பத்தித்துக் கண்களை மூடிக் கொண்டான் ஆதித்யன்.

இருவருக்குமே காடு மேடு கடந்து வந்து வீடு சேர்ந்த உணர்வு. அப்படியே மோனநிலையில் லயித்துப் போய் இருந்தார்கள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"சுற்றி என்னை துரத்தும்,
துயரமடி என்னை நெற்றி பொட்டுக்கடியில், வைத்துக் கொள்ளடி
நெற்றி பொட்டு உதிர்ந்தால் வெயிலடிக்கும்
உன்னை, நெஞ்சுக்குள்ளே மறைப்பாள் இளையக்கொடி
மருந்துகள் இல்லா தேசத்தில்
கூட, மைவிழி பார்வைகள் போதும்
கவிதைகள் இல்லா மொழிகளில் கூட, காதலன் புன்னகை போதும்
உலகங்கள் ஏழும் பனி மூடும் போதும் உன் மார்பின் வெப்பம் போதும்"

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 40

IMG-20210627-WA0006~3.jpg

IMG-20210627-WA0049.jpg

IMG-20210701-WA0023~2.jpg

IMG-20210701-WA0043~2.jpg

வானம் அதிகாலை நேரத்திலேயே மெல்லிய தூறல் போட்டுக் கொண்டிருந்தது.

சூரியனை மெல்லிய கருமேகங்கள் மறைக்கப் பகீரதப்பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தன.

கருமேகங்களையும் கடந்து தன் இளங் கதிர்களை வெளியே மெல்ல மெல்லப் பரப்பிக் கொண்டிருந்தான் ஆதவன்.

அதை மொட்டை மாடியில் நின்று இரசித்துக் கொண்டிருந்தாள் காயத்ரி.

மழையின் மெல்லிய சாரல் மேனியில் பட்டு மேனியை லேசாகச் சிலிர்க்கச் செய்து கொண்டிருந்தது. கையில் இஞ்சி தட்டிப் போட்டுச் செய்த தேநீர் ஆவி பறந்து கொண்டு இருக்க, அதன் வாசனை நாசி தீண்டிச் சென்று கொண்டிருந்தது. மழையின் மெல்லிய தூறலில் நனைந்த படி தேநீரை ரசித்து ருசித்துக் குடிக்கத் தொடங்கினாள் அவள்.

நேரம் அப்போது தான் ஏழைத் தொட்டுக் கொண்டிருந்தது.
ஆதித்யன் சீக்கிரமாகவே எழுந்து அவளுக்கு மட்டும் இஞ்சித்தேநீரைத் தயாரித்துக் கொடுத்து விட்டு மீண்டும் படுத்துக் கொண்டு விட்டான்.

அவனுக்கு நிம்மதியாகத் தூங்கி நீண்ட நாட்கள் ஆகி விட்டதாம்... அதனால் சமத்தாகக் கொடுத்ததைக் குடித்து விட்டு உள்ளேயே இருந்து கொள் இயற்கையை இரசிக்கிறேன் நேசிக்கிறேன் என்று வெளியே சுற்றிக் கொண்டு திரியாதே... என்று காயத்ரிக்குச் சொல்லி விட்டுச் சென்று விட்டான்.

அவளோ அவன் தான் தூங்குகிறானே என்கிற தைரியத்தில் மொட்டைமாடி மழைத்தூறலில் சுகமாக நனைந்து கொண்டிருந்தாள்.

அதே நேரத்தில் உள்ளே ஆதித்யனின் கையடக்கத் தொலைபேசி
"பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை... பெண் இல்லாத ஊரிலே கொடி தான் பூப்பூப்பதில்லை..."
என்ற அழகிய வரிகளோடு சிணுங்கத் தொடங்கியது.

அந்த அழகான வரிகளையும் இசையையும் இரசித்தபடியே சிறிது நேரம் நின்றவள்... அதன் பின்னரே அவன் தூங்கிக் கொண்டல்லவா இருக்கிறான் என்றபடி உள்ளே அறையினுள் எட்டிப் பார்த்தாள்.

கதவோரம் நின்றபடி அவனது அலைபேசியைத் தான் எடுக்கவோ வேண்டாமோ என்று யோசித்தவளை
"யாரென்று பார்த்து எடுத்துப் பேசும்மா..."
என்ற ஆதித்யனின் குரல் கலைத்தது.

அவ்விதம் சொல்லி விட்டு அவனோ அடுத்த பக்கம் புரண்டு படுத்துக் கொண்டான். தூக்க கலக்கத்தில் புரண்டு படுத்த கணவனை இரசித்தபடியே அவனுக்கருகே கிடந்த அவனது அலைபேசியை எடுத்தவள் திரையில் ஒளிர்ந்த சூரியன் என்ற பெயரைப் பார்த்ததும் உற்சாகத்துடன் பேசத் தொடங்கினாள்.

எடுத்த எடுப்பிலேயே
"தம்பி எப்படி இருக்கிறீர்கள்... கஸ்தூரி எப்படி இருக்கிறாள்... அனு எப்படி இருக்கிறாள்...அங்கே வேலைகள் எல்லாம் எப்படிப் போகிறது.... எப்போது இங்கே வருகிறீர்கள்..."
என்று குசலம் விசாரித்துக் கொண்டே கேள்விக் கணகளைத் தொடுத்தாள்.

அவள் கேட்ட கேள்விகளுக்கு அடுத்த பக்கத்தில் இருந்து பதில் வருவதற்கு முன்பாக
"அவனையும் பேச விடும்மா... அப்போது தானே அவனால் பதில் சொல்லமுடியும்..."
என்றபடி எழுந்து அமர்ந்து கொண்டான் ஆதித்யன்.

"அண்ணி... அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். அதற்கு முன் ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் பேச வேண்டும்... அண்ணா எங்கே..."

"இங்கே அருகில் தான் இருக்கிறார்... பேசுங்கள்..."
என்றபடி அலைபேசியை ஆதித்யனிடம் கொடுத்தாள் காயத்ரி.

"சொல்லு சூரியா..."

"அண்ணா... பழத்தோட்டம் வரை வர முடியுமா?"

"ஏன் சூரியா... ஏதும் பிரச்சினையா?"

"அப்படி என்று சொல்ல முடியாது... மிக மிக முக்கியமான விஷயம் அண்ணா அது பற்றி இப்போது சொல்ல முடியாது... அதை நேரில் தான் பேசிக் கொள்ள முடியும்... நீங்கள் ஒரு முறை வந்தால் நன்றாக இருக்கும்... அண்ணியை ஏஞ்சலினாவின் வீட்டில் விட்டு வாருங்கள்... நான் இன்றே உங்களை இங்கே எதிர்பார்க்கிறேன்..."
என்றபடி அலைபேசியை வைத்து விட்டான் சூரியன்.

"என்ன ஆதி... ஏதாவது பிரச்சினையா? தம்பி எடுத்த வேகத்தில் அலைபேசியை வைத்து விட்டாரே..."
என்று கேட்டவளை யோசனையோடு பார்த்தவன்
"உன் தோழி ஏஞ்சலினா ஊரில் தானே இருக்கிறாள்..."
என்று கேட்டான்.

"ஆமாம்... ஆனால் ஏன்? என்னை அவள் வீட்டிற்கு அழைத்துச் செல்லப் போகிறீர்களா?"
என்று சந்தேகத்துடனேயே கேட்டாள் காயத்ரி.

"ஆமாம்... எனக்குப் பழத்தோட்டத்தில் கொஞ்சம் வேலை இருக்கிறதும்மா... உன்னை உன் தோழி வீட்டிலே விட்டு விட்டு நான் இன்றே புறப்படவேண்டும்"
என்றபடி தயாராகத் தொடங்கினான் ஆதித்யன்.

"எப்போது வருவீர்கள் ஆதி... நானும் உங்களுடனேயே வரட்டுமா?"
என்று சோகமாகக் கேட்டவளின் கன்னத்தில் லேசாகத் தட்டியபடி
"வேறு நேரம் என்றால் பரவாயில்லை உன்னை என்னுடனேயே அழைத்துக் கொண்டு செல்லலாம் ஆனால் இந்த நேரத்தில் நீ அவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டுமா? உன்னை அழைத்துச் செல்ல எனக்குக் கொஞ்சம் பயமாக இருக்கிறதும்மா... அதனால் நீ இங்கேயே இரு... நான் சீக்கிரமாக வந்து விடுவேன்..."
என்று விளக்கம் கொடுத்தான் அவன்.

அன்றைய தினமே காயத்ரியை ஏஞ்சலினாவின் வீட்டில் விட்டு விட்டுப் பழத்தோட்டம் நோக்கிப் புறப்பட்டான் ஆதித்யன்.

அதற்கு முன்னரே சரண்குமாரையும், மணிமாறனையும் பழத்தோட்டத்து வீட்டுக்கு வரவழைத்து இருந்தான் சூரியன்.

சூரியன் பெருங் குழப்பத்தில் இருந்தான். தனியாக எந்தவொரு முடிவையும் அவனால் எடுக்க முடியவில்லை. இந்த மாதிரி நேரத்தில் தான் ஆட்பலமும் அறிவாளித்தனமும் அதிகம் வேண்டும் என்பதைச் சூரியன் உணர்ந்து இருந்தான்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

மலைப் பிரதேசத்தில் தாரினால் போடப் பட்டிருந்த அந்த நீண்ட பாதையில் ஆதித்யனின் வாகனம் விரைந்து கொண்டிருந்தது.
வாகனம் செல்லும் வேகத்தை விட அவனது எண்ணங்கள் அதிவேகமாகப் பிரயாணித்துக் கொண்டிருந்தது.

"சூரியன் பேசும் போது அவனது குரலில் ஏதோ ஒரு பதட்டமோ குழப்பமோ இருந்தது போல எனக்குத் தோன்றியதே... அது போக நேரில் தான் பேச வேண்டும் என்கின்ற அளவிற்கு அப்படி என்ன விஷயமாக இருக்கும்... அங்கே வேறு ஏதும் புதுப் பிரச்சினை கிளம்பி இருக்குமோ? அப்பாம்மாவுக்கும் மகேந்திரனுக்கும் வரும் வெள்ளிக்கிழமை முதலாவது நினைவு தினம் வேறு இருக்கிறது. பிரச்சினை ஏதும் இல்லாமல் அந்த நாள் அமைதியாக விடிய வேண்டும். எதுவாக இருந்தாலும் நேரில் போய்ப் பார்த்தால் தான் புரியும் போல..."
என எண்ணியவாறே பழத்தோட்டத்து வீட்டுக்கு வந்து சேர்ந்தான் ஆதித்யவர்மன்.

வீட்டு வாசலில் சுமித்திரை, கஸ்தூரி,பல்லவி,சூரியன், சரண், மாறன் என ஒரு கூட்டமே நின்றிருந்தது. அதில் சரணையும் மாறனையும் பார்த்த ஆதித்யன் துணுக்குற்றான்.
ஏதோ விஷயம் பெரிது என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது.

"என்னடா இப்படிக் கும்பலாகக் கூட்டணி போட்டு இருக்கிறீர்கள்... என்ன ஏதும் பெரிய பிரச்சினையா?"
என்று கேட்ட ஆதியை மாறனும் சரணும் பாவமாகப் பார்த்தபடி நின்றார்கள்.

"எங்களுக்கும் ஒன்றும் தெரியாது... ஏதோ முக்கியமாகப் பேச வேண்டும் அதுவும் நேரில் பேச வேண்டும் என்றுதான் எங்களையும் வரச் சொன்னான்..."
என்றான் மணிமாறன்.

அவனது பதிலைக் கேட்ட ஆதித்யன்
"என்னடா சூரியா... ஒரே மர்மமாக இருக்கிறதே... எதற்காக இவர்களையும் வரச் சொல்லி இருக்கிறாய்..."
என்றபடி அங்கே நின்றிருந்த தன் தம்பி சூரியனைப் பார்த்தான்.

"சொல்கிறேன் அண்ணா... முதலில் எல்லோரும் உள்ளே வாருங்கள்... வாசலில் வைத்துப் பேச வேண்டாம்..."
என்றபடி எல்லோரையும் உள்ளே அழைத்துச் சென்றான் சூரியன்.

அனைவரையும் அந்த வீட்டில் கடைசியில் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றவனோ சுமித்திரையை அழைத்து அவளிடம் பல்லவியை ஒப்படைத்தான்.

பல்லவி சுமியிடம் சமத்தாக இருப்பாளா என்ற ஐமிச்சத்தில் இருவரையும் அந்த அறையிலேயே அமர்த்திக் கொண்டாள் கஸ்தூரி.

பல்லவி ஒரு பெரிய பொம்மையைக் கட்டிக் கொண்டு கட்டிலில் படுத்துக் கொள்ள, அவளது தலைமாட்டில் கஸ்தூரியும் கால்மாட்டில் சுமித்திரையும் அமர்ந்து கொள்ள மற்ற மூன்று ஆண்களும் மேசைக்கு மேலும் கதிரையிலும் என அமர்ந்து கொண்டு என்ன தான் இவன் சொல்லப் போகிறான் என்பது போலச் சூரியனையே பார்த்திருந்தனர்.

சூரியனோ எப்படி ஆரம்பிக்கட்டும் என்பது போல கஸ்தூரியைப் பார்த்தான்.

கஸ்தூரியோ தலையணைக்கு அடியில் வைத்திருந்த மகேந்திரனின் நாட்குறிப்பை எடுத்துச் சூரியனுக்கு முதலில் காட்டிய பக்கங்களை விரித்து ஆதித்யனிடம் நீட்டினாள்.

"என்ன கஸ்தூரி இது?"
என்றபடி நாட்குறிப்பை வாங்கிய ஆதித்யன் அதைப் படிக்கத் தொடங்கினான்.
அவனுக்கு லேசாகத் தலை சுற்றுவது போல இருந்தது.
என்னடா இது என்பது போலச் சூரியனை நிமிர்ந்து பார்த்தவனின் விழிகள் சிவந்து இருந்தது.
நாட்குறிப்பைச் சரணிடமும் மாறனிடமும் படிக்கக் கொடுத்தான் சூரியன்.

"என்ன சூரியா இது! இப்படி ஒரு பிரச்சினை நம் மகேந்திரனுக்கு நடந்து இருக்கிறது... அதைப் பற்றி அவன் என்னிடம் மூச்சுக் கூட விடவில்லையே... என் மகேந்திரன் தப்புவழி போக மாட்டான் என்று எனக்குத்தான் தெரியுமே... ஆனால் அதை அம்மாவிடமும் அப்பாவிடமும் தான் என்னால் நிரூபிக்க முடியாமல் போய் விட்டது... இந்த நாட்குறிப்பு மட்டும் இல்லை என்றால் அவன் அனுபவித்த மன உளைச்சல் பற்றி நமக்குத் தெரிந்தே இருக்காதே... எப்போது இதை எடுத்துப் படித்தாய்?"

"இதை எடுத்து என்னிடம் படிக்கக் கொடுத்ததே கஸ்தூரி தான் அண்ணா..."

"கஸ்தூரியா..."

"ஆமாம் அண்ணா... அதோடு அவள் இன்னொரு விஷயமும் சொன்னாள்... அதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை..."

"என்னவென்று சொல்லு சூரியா... இப்போது படித்த விஷயத்தையே என்னால் ஜீரணிக்க முடியவில்லை... இதை விடவா நீ சொல்லும் விஷயம் மோசமாக இருக்கப் போகிறது..."

"அண்ணா அப்படிச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்... ஆனால் இதை நாசுக்காகச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் எனக்குத் தோன்றவில்லை... அப்படியே போட்டு உடைத்துச் சொல்லி விட வேண்டும் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. அந்தளவிற்கு எனக்கு மூச்சு முட்டுகிறது அண்ணா..."
என்றபடி எல்லோரையும் ஒரு நொடி பார்த்தான் சூரியன்.

"எதுவாக இருந்தாலும் சொல்லு சூரியா... மனதுக்குள் போட்டுக் குழப்பாதே"
என்றபடி அவனருகில் சென்று அவனைத் தட்டிக் கொடுத்தான் சூரியனின் தோழன் மணிமாறன்.

தன்னைத் தானே திடப்படுத்திக் கொண்டு கஸ்தூரி சொன்னதை எல்லோரிடமும் ஒப்புவித்தான் சூரியன்.

"அண்ணா... அம்மாப்பாவுக்கும் சின்னண்ணாவுக்கும் நடந்தது விபத்து இல்லை அது ஒரு திட்டமிடப் பட்ட கொலை முயற்சி..."
என்று சூரியன் சொல்லி முடிக்கவும் ஆதித்யன் அதிர்ந்து போய் வேகமாக எழுந்து
"என்னடா உளறுகிறாய்"
என்றபடி அவனைப் பிடித்து உலுக்கினான்.

நொடியில் சூரியனை ஆதித்யனிடம் இருந்து விலக்கிய கஸ்தூரி
"அவர் ஒன்றும் உளறவில்லை ஆதியண்ணா... அன்று நடந்தது எதிர்பாராத விபத்து இல்லை... அது ஒரு சதிக்கொலை என்று நான் தான் கண்டுபிடித்தேன் அதற்கு என்னிடம் ஆதாரமும் இருக்கிறது... நீங்கள் முதலில் பதட்டப் படாமல் நாங்கள் சொல்லுவதை முழுமையாகக் கேளுங்கள் அதற்குப் பிறகு நீங்கள் தாராளமாகக் கோபப்படலாம்..."
என்று கிட்டத்தட்டக் கத்தினாள்.

அப்படியே உறைந்து போய் நின்றான் ஆதித்யன். கஸ்தூரி சொன்ன விஷயமும் அதிர்ந்து கூடப் பேசியிராத அவள் கத்திப் பேசிய விதமும் ஆதித்யனை நிஜமாகவே ஒரு உலுக்கு உலுக்கியது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 41


வெளியே மரங்கள் காற்றில் அசையும் சத்தமும், பழத்தோட்டத்தில் இருந்து சென்று கொண்டிருந்த வாகனங்களின் சத்தமும் தவிர வேறு எந்தச் சத்தமும் கேட்காத அளவிற்கு அந்த அறையே சில நிமிடங்கள் நிசப்தமாக இருந்தது.

எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் என்ன பேசுவது எதைப் பேசுவது என்பது போல நின்றிருந்தார்கள். அதிலும் ஆதித்யனின் நிலை தான் மோசமாக இருந்தது.

கஸ்தூரியைப் பார்த்து
"எப்படி உன்னால் அத்தனை உறுதியாகச் சொல்ல முடிகிறது... எனக்கு ஒன்றும் புரியவில்லையே..."
என்றபடி தன் தலையை இறுகப் பிடித்துக் கொண்டான் ஆதித்யன்.

"ஆதியண்ணா... உங்களுக்குப் புரியும்படியே சொல்கிறேன் கேளுங்கள்... நான் பேசி முடிக்கும் வரை யாருமே குறுக்கே பேச வேண்டாம்..."
என்று சொன்ன கஸ்தூரி தான் அன்று சூரியனிடம் விளக்கிச் சொன்ன விஷயத்தை இப்போது எல்லோரிடமும் தெளிவாகக் கூறினாள்.

"இதோ பாருங்கள் குலதெய்வக் கோவிலுக்கு வந்த போது கோவிலுக்கு அருகில் தானே அந்த விபத்து நடந்தது என்று நீங்கள் எல்லோரும் உறுதியாக நம்பிக் கொண்டு இருக்கிறீர்கள்... ஆனால் அது தான் இல்லை என்று நான் அவ்வளவு உறுதியாக ஏன் சொல்கிறேன் தெரியுமா? இங்கே வெளியே சென்று பார்த்தால் மலையில் இருக்கும் உங்கள் குலதெய்வக் கோவில் தெளிவாகத் தெரியும்... அதோடு கோவில் அமைந்து இருக்கும் அந்த மலை அவ்வளவு ஒன்றும் உயரம் இல்லை அளவான உயரம் தான்... ஆனால் வாகனம் தடம்மாறிக் கவிழ்ந்து விழுந்த இடம் இந்த மலைப் பிரதேசத்திலேயே ரொம்ப உயரமான விளிம்பு என்று உங்கள் தம்பி சொன்னார் ஆதியண்ணா... என்னுடைய கேள்வி எல்லாம் இது தான்... அவ்வளவு உயரத்தில் நடந்த விபத்தை முதலில் ஏன் இங்கே கோவிலுக்கு அருகில் நடந்த விபத்து என்று சொன்னார்கள்? அப்படிச் சொல்லச் சொன்னது யார்? இது கூடப் பரவாயில்லை ஏதோ தவறாகச் செய்தி வந்து விட்டது என்று விட்டு விடலாம்... இங்கே குலதெய்வக் கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் எதற்காக அவ்வளவு உயரமான இடத்துக்குப் போக வேண்டும்? இத்தனைக்கும் அந்த உயரமான இடத்துக்கு வாகனம் எதுவும் போக முடியாது என்று இங்கே பணிபுரியும் ஒரு அம்மா சொன்னார்கள்... அப்படி இருக்கும் போது எப்படி இல்லாத ஒரு வாகனம் தடம்புரண்டு கீழே விழுந்து இருக்க முடியும்... இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது யாரோ ஏதோ திட்டமிட்டுக் கதை கட்டி இருக்கிறார்கள்... நீங்கள் வேறு அனுவக்காவையாவது பிழைக்க வைக்க வேண்டும் என்ற பதட்டத்திலும் பயத்திலும் இருந்திருப்பீர்கள் அதனால் உங்களுக்கு அப்போது எந்தவிதமான சந்தேகமும் தோன்றி இருக்காது... இதே இந்தச் சதிக்குப் பின்னால் இருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்பாகப் போய் விட்டது... இது தான் என்னுடைய ஊகமாக இருந்தது... ஆனால் ஆழ்ந்து யோசிக்க யோசிக்க இது தான் உண்மை என்று எனக்குத் தெளிவாகப் புரிகிறது ஆதியண்ணா..."
என மடமட என்று பேசியவளைப் பார்த்த ஆதித்யனுக்கு அவள் எத்தனை தூரம் இது பற்றி யோசித்து இருப்பாள் என்பது தெளிவாகப் புரிந்தது... அவள் சொல்வது கூட உண்மை என்பதும் நன்றாகப் புரிந்தது.

ஆனாலும் ஆதித்யனால் அந்த உண்மையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சாதாரணமாகத் தனது குடும்பம் மரணித்துப் போய் விட்டது என்பதையே அவனால் இதுநாள் வரையிலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்படியிருக்கும் போது தன் குடும்பத்தையே யாரோ திட்டமிட்டு அழித்திருக்கிறார்கள் என்றால் அவனால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

அவனது கண்கள் முன்னை விடவும் சிவந்து போயிருக்க அவனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கன்னம் தொட்டது.

"நீ சொல்வது எனக்குப் புரிகிறது கஸ்தூம்மா ஆனால் மனது தான் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது... என் குடும்பத்துக்கு ஏன் இப்படி ஒரு சாபம்..."
என்று குரல் தழுதழுக்கச் சொன்ன ஆதித்யனை அவனருகில் நின்றிருந்த சரண்குமார் கட்டியணைத்துக் கொண்டான்.

"வர்மா... என்னடா இது நீயே இப்படிக் கலங்கிப் போய் நின்றால் உன்னை விடச் சின்னவன் சூரியன் அவன் பயந்து போகமாட்டானா?"
என்றபடி அவன் கண்களையும் துடைத்து விட்டான்.

"இதோ பாருங்கள் ஆதியண்ணா... இது நாள் வரை தெரியாத விஷயம் ஒன்று இப்போதாவது நமக்குத் தெரிய வந்திருக்கிறது... இனிமேல் இதற்குப் பின்னால் யார்யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் கண்டு பிடிக்க வேண்டும்... அதோடு இனிமேல் தான் நமக்குப் பெரிய பெரிய வேலைகள் இருக்கிறது... நீங்கள் தானே தைரியசாலி ஆதியண்ணா நீங்களே கலங்கி நிற்கலாமா?"
என்று தன் பங்குக்கு ஆதித்யனுக்குத் தைரியம் சொன்னான் மணிமாறன்.

"அதெல்லாம் சரிதான் மாறன்... ஆனால் அன்று என்ன நடந்தது என்பதனைத் தெரிந்த ஒரேயொரு ஆள் நம் பல்லவி மட்டும் தான்... அப்படி இருக்கும் போது நம்மால் வேறு எப்படித் தகவல்கள் பெற முடியும்..."
என்று சொன்னாள் சுமித்திரை.

"அப்படியானால் சுமி நாங்கள் முதலில் அப்பாவுக்குத் தொழிலில் யாரேனும் எதிரிகள் இருக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும்..."
என்று தன் யோசனையை முன்வைத்தான் சூரியன்.

"உங்கள் யாருக்கும் வேறு ஏதேனும் திட்டம் தோன்றுகிறதா?"
என்று கேட்டான் சரண்குமார்.

எல்லோரையும் விடக் கஸ்தூரி எதையோ படு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.

அந்நேரம் சுவரில் சாய்ந்திருந்த சூரியன் யோசனையில் மூழ்கியிருந்த கஸ்தூரியைப் பார்த்ததும் லேசாகத் தென்பானான்.

யாருக்குமே தெரியாத ஒரு உண்மையைத் தெளிவாக அதுவும் தனியாளாகக் கண்டு பிடித்திருக்கிறாள் இவளாள் இதற்கு நிச்சயமாக ஏதாவது புது வழியைக் கண்டுபிடிக்க முடியும். என்ற எண்ணத்துடன் சற்றே பெருமூச்சு விட்டான்.

யோசனையில் மூழ்கியிருந்த கஸ்தூரி திடீரென எல்லோரையும் நிமிர்ந்து பார்த்து
"சரி சரி... எல்லோரும் ரொம்ப நேரமாக இங்கேயே இருக்கிறீர்களே சாப்பிட்டு விட்டீர்களா? வயிற்றுக்குள் எதையாவது போட்டால் தானே தென்பாகவும் தெளிவாகவும் எதையாவது யோசிக்க முடியும்... சுமித்திரை நீங்கள் எல்லோரையும் உணவருந்த அழைத்துச் செல்லுங்கள்..."
என்று எல்லோரையும் வெளியே அனுப்பினாள்.

திடீரெனக் கஸ்தூரியின் இந்தச் செயலைப் பார்த்ததும் அவள் தன்னிடமோ அல்லது அண்ணனிடமோ எதையோ தனியாகச் சொல்ல விளைகிறாள் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டான் சூரியன்.

எல்லோரும் வெளியே போனதும் ஆதித்யன் கஸ்தூரியின் அருகில் வந்து அவளது கைகளைப் பற்றிக் கொண்டு
"எனக்கு என்ன சொல்லுவது செய்வது என்றே தெரியவில்லை கஸ்தூம்மா... ஆனால் நீ செய்தது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? ஒரு சில நிமிடங்களில் எத்தனை பெரிய உண்மையைக் கண்டுபிடித்து இருக்கிறாய்..."
என்றான் குரல் கமற...

அவனது நிலையைப் புரிந்து கொண்டவளோ
"நீங்கள் உங்களுக்கு நடந்த அந்த துயரத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் இருக்கும் போது இதைப் பற்றி நீங்கள் கேட்ட விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டீர்கள்... நான் ஒரு மூன்றாம் மனுஷியாக இதைப் பற்றி எளிதில் அறிய முடிந்தது அவ்வளவு தான் அண்ணா..."
என்றவள் சூரியனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவளது பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவனோ அறையின் கதவை மெல்ல மூடி விட்டு இருவருக்கு அருகிலும் வந்தான்.

கஸ்தூரியோ தன் மனதில் தோன்றியதை இவர்களிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற சிறு தயக்கத்தை மெல்ல உதறிவிட்டுத் தனக்குத் தோன்றியதை இருவரிடமும் கூறினாள்.

"உங்கள் இருவரிடமும் நான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்... அதனால் தான் மற்றவர்களை அனுப்பினேன்... ஆனால் நான் சொல்லும் விஷயத்தை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்ளுவீர்களோ என்று தான் கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது..."

"கஸ்தூரி... நீ சொல்லுவது தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை... கொஞ்சம் தெளிவாகச் சொல்லு... அப்புறம் எதற்குத் தயக்கம்"

"தயக்கம் தான் ஏனென்றால் உங்களுக்கு வேண்டப்பட்டவர் மீது நான் அபாண்டமாகப் பழி போடுகிறேன் என்று நீங்கள் நினைத்து விடுவீர்களோ என்கின்ற தயக்கம் தான்..."

"உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா கஸ்தூம்மா... நீ ஒரு விஷயம் சொன்னால் அது சரியாகத் தான் இருக்கும்... என்ன சொல்வதாக இருந்தாலும் தைரியமாகச் சொல்லும்மா..."

"நன்றி ஆதியண்ணா... அன்று நடந்த விபத்துப் பற்றி விசாரித்து வரும்படி உங்களுக்கு இங்கே பொறுப்பாக இருக்கும் முருகமூர்த்தியைத் தானே அனுப்பி வைத்தீர்கள்..."

"ஆமாம் மூர்த்திமாமாவைத் தான் அனுப்பினோம்... நாங்கள் தான் அப்போது பல்லவி கூட வைத்தியசாலையில் இருந்தோமே..."

"உங்களின் மூர்த்திமாமா பற்றித் தான் நான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்... இந்த விஷயத்தை எழுபது வீதம் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்... அவர் பற்றி அவரின் மகளின் முன்னிலையில் பேச முடியாது என்பதால் தான் இப்போது சொல்கிறேன்..."

"சரி சொல்லும்மா..."

"எனக்கு உங்கள் மூர்த்திமாமா மீது இரண்டு விதமான கருத்து இருக்கிறது... அதில் எது சரி என்பதை நாம் தான் கண்டு பிடிக்க வேண்டும்... ஒன்று உங்கள் மூர்த்திமாமா தான் உங்களுக்கு மறைமுகமான எதிரியாக இருக்க வேண்டும் அல்லது அவரை யாரோ மிரட்டிப் பணிய வைத்துத் தங்கள் கைப்பாவையாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும்..."

"என்னம்மா இப்படிச் சொல்லுகிறாய்... எதனால் இப்படி என்று உனக்குத் தோன்றுகிறது..."

"அண்ணா... அவர் தானே உங்களுக்கு இங்கே நடந்த விபத்துப் பற்றி எல்லாத் தகவல்களையும் சொன்னது..."

"ஆமாம்..."

"அப்படியானால் சொல்லுங்கள் எதற்காக எங்கோ உயரமாக நடந்த ஒரு கொடுமையான விஷயத்தை இங்கே குலதெய்வக் கோவிலுக்கு அருகில் நடந்தது என்று சொல்லி உங்களை நம்ப வைக்க வேண்டும்... இல்லாத ஒரு வாகனத்தை எப்படி மலையுச்சியில் இருந்து கவிழ்ந்து தான் விபத்து நடந்தது என்று உங்களிடம் பொய் சொல்ல வேண்டும்..."
என்று கேள்வி கேட்டவளைப் பேச்சற்றுத் திகைப்புடன் இருவரும் பார்த்தனர்.

"எதற்கு அமைதியாக இருக்கிறீர்கள் இருவரும் நான் கேட்டதற்குப் பதில் சொல்லுங்கள்..."
என்றாள் கஸ்தூரி.

திகைத்து நின்ற ஆதித்யனுக்கு அப்போது தான் சுரணையே வந்தது.

"இந்த ரீதீயில் நான் துளி கூட யோசித்துப் பார்க்கவில்லை கஸ்தூம்மா..."

"அது தான் நான் ஏற்கனவே சொன்னேனே அண்ணா நீங்கள் இருந்த நிலையில் உங்களுக்கு எதையுமே சந்தேகிக்கத் தோன்றவில்லை என்று..."

"உண்மைதான்..."

"உங்களின் அப்போதைய நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கி விட்டார்கள்... அவர்கள் யார் யார் என்று தான் நாம் கண்டுபிடிக்க வேண்டும்... ஆனால் ஒன்று நமக்கு விஷயம் தெரிந்தது வேறு யாருக்கும் தெரியக்கூடாது... அப்புறம் அவர்கள் உஷாராகி விடுவார்கள்... சந்தேகம் என்ற ஒன்று வந்த பின்னர் அதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது தான் சரி... அதோடு அந்தப் பொண்ணு சுமித்திரைக்கும் இது பற்றித் தெரிய வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்"
என்றபடி சூரியனை ஓரக்கண்ணால் பார்த்தாள் கஸ்தூரி.

"நீ நினைப்பது போலச் சுமிக்கு இது பற்றித் தெரிந்தால் என்னவாகுமோ என்று பதட்டம் தேவையில்லை கஸ்தூரி... அவளுக்கு இது பற்றிச் சொல்லி வைப்பது தான் சரி... இது பற்றி நீங்கள் என்ன அண்ணா சொல்லுகிறீர்கள்..."
என்றபடி தமையனைக் கேட்டான் சூரியன்.

தான் நினைத்தது போலச் சூரியன் அவளுக்காக வரிந்து கொண்டு வரவும் கஸ்தூரி லேசாகக் கடுப்பானாள்.

"ஆமாம் கஸ்தூம்மா... அவளுக்கு இது பற்றித் தெரிவது நல்லது தான்... தன்னால் முடிந்த உதவியைச் செய்ய வருவதோடு தனக்குத் தெரிந்ததைப் பற்றித் தன் தந்தையிடம் மூச்சுக் கூட விடமாட்டாள்... அவளைப் பொறுத்த வரை சூரியன் சொல்லுவது தான் அவளுக்கு வேதவாக்கு நம் சூரியன் கிணற்றில் குதி என்று சொன்னால் மறுபேச்சுப் பேசாமல் குதித்து விடுவாள்... அந்தளவிற்கு அவளுக்கு நாங்கள் என்றால் அவ்வளவு விருப்பம் அதிலும் சூரியன் என்றால் போதும் அவனுக்காக எதுவும் செய்வாள்... அதனால் அவளைப் பற்றி நீ யோசிக்காதே அதைச் சூரியன் பார்த்துக் கொள்வான்..."
என்று ஆதித்யன் விளக்கம் கொடுத்தான்.

"சரி அண்ணா... இது பற்றி நாம் இன்று மாலையே எல்லோரிடமும் பேசுவோம்... இப்போது போய்ச் சாப்பிடலாமா என் வயிற்றுக்குள் ரொம்ப நேரமாக ஒரு மின்சாரப் புகையிரதமே ஓடிக் கொண்டிருக்கிறது... அதற்குப் புல்லுப் போட்டுத் தண்ணீர் காட்டவில்லை என்றால் பெரிய பிரச்சினை ஆகி விடும்..."
என்றபடி அத்தனை நேரமும் இறுக்கமாக இருந்தவனைச் சற்றே இலகுவாக்கினாள்.

அவள் சொன்னதைக் கேட்டதும் மெல்லிய புன்னகையுடன் வெளியே சென்றான் ஆதித்யன்.
சூரியனோ வாய் விட்டுச் சிரித்தபடி போய் விட்டான்.

அவர்களைப் பின் தொடர்ந்தபடி சூரியனையும் சுமித்திரையையும் பற்றி ஆதித்யன் சொன்னதைச் சில நொடிகள் மீட்டிப் பார்த்தவளோ பின்னர் உடனேயே யார் சொல்லி யார் கிணற்றில் குதித்தால் என்ன குளத்தில் குதித்தால் என்ன நமக்கு என்ன வந்தது. நாம் நம் வேலையைப் பார்ப்போம் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 42

மாலை நேரத்தை மேலும் சிறப்பிப்பது போலத் தென்மேற்கு வானம் மஞ்சள் பூசிக் குளித்தது போல அழகான காட்சி கொடுத்துக் கொண்டிருந்தது.

மலைப் பிரதேசத்தின் ஒரு வளைவில் கல்லால் செய்யப்பட்ட ஆசனங்களும் போடப் பட்டு, வேலி போலக் கம்பியாலும் போடப் பட்டிருந்த இடத்தில் கஸ்தூரி, சுமித்திரை, பல்லவி,ஆதித்யன், சரண், சூரியன், மாறன் என ஒரு பட்டாளமே அமர்ந்திருந்து தங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களிடம் இப்போது எந்த ஒளிவுமறைவும் இருக்கவில்லை. சுமித்திரையிடம் கூட அவளது தந்தை பற்றித் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அப்படியே ஒப்புவித்துவிட்டான் சூரியன்.

அதனால் அனைவருமே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய யோசனையில் மூழ்கியிருந்தார்கள்.

"பேசாமல் மூர்த்திமாமாவிடமே இது பற்றிக் கேட்டு விடலாமா? ஏனென்றால் எப்படி யோசித்தாலும் இதற்கு வேறு வழி இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை..."
என்றான் சூரியன் இயலாமையுடன்.

அவன் சொன்னதைக் கேட்ட கஸ்தூரி கடுப்புடன் அவனை முறைத்தாள்.
அவள் முறைப்பதைப் பார்த்தவனோ
"அம்மா தாயே இப்போது எதற்கு இப்படி முறைக்கிறாய்... இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் அதனால் தான் அப்படிச் சொன்னேன்..."
என்றான் விளக்கம் கூறுவது போல.

"ஆமாம் நீங்கள் போய்க் கேட்டவுடனே அவர் எல்லாவற்றையும் சொல்லி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்... நமக்கு இது தொடர்பாக எதுவுமே தெரியாது என்பது போலத் தான் நாம் நடந்து கொள்ள வேண்டும்... அவருக்கும் இந்தச் சதிவேலைக்கும் இடையில் என்ன மாதிரியான தொடர்பு இருக்கிறது என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்... அதை விட்டு நாமே போய் மாட்டிக்கொள்ளக் கூடாது..."
என்றாள் விளக்கமாக...

அப்படிச் சொல்லும்போது அவள் இடையிடையே ஓரக்கண்ணால் சுமித்திரையைப் பார்ப்பதற்கும் தவறவில்லை.

என்னதான் இவர்கள் அந்தப்பெண் மீது நம்பிக்கை வைத்திருப்பது போலப் பேசி இருந்தாலும் அவளுக்கு அந்த முருகமூர்த்தி தந்தை அல்லவா... அப்படி இருக்கும் போது அவள் எப்படித் தன் தந்தையைப் பற்றி நாங்கள் இப்படிப் பேசும் போது பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாள்... அவள் என்ன எந்தப் பெண்ணுமே தம் தந்தைக்கு எதிராகச் செயற்பட மாட்டார்களே...
என்ற ஐயத்தில் தான் சுமித்திரையை யாருக்கும் தெரியாமல் நோட்டம் விட்டாள் கஸ்தூரி.

ஆனால் அங்கே சுமித்திரையின் முகத்தில் எந்த விதமான முகச் சுழிப்பும் இல்லை. சூரியனுக்கு அருகே இருந்து இது தொடர்பாகத் தான் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் அவள்.

இப்போது கஸ்தூரிக்கு ஒரு விஷயம் மட்டும் நன்றாகப் புரிந்தது. சூரியனை மணமுடிக்கப் போகும் சுமித்திரைக்கு இப்போது சூரியன் சொல்லுவது தான் வேதவாக்குப் போலும் அதனால் தான் இவள் இவர்களுக்காக யோசிக்கிறாள் போல... எது எப்படியோ நம் திட்டம் சொதப்பிக் கொள்ளாமல் நிறைவேறினால் சரி தான் என எண்ணிக் கொண்டாள் கஸ்தூரி.

தன்னைப் பார்த்தபடியே அவள் தீவிரமாக ஏதோ எண்ணுவதைப் பார்த்த சூரியன் என்னவென்பது போல அவளைப் பார்த்துப் புருவங்களை உயர்த்தினான்.
அதைப் பார்த்தவளோ ஒன்றுமில்லை என்பது போலத் தலையை வேகமாக ஆட்டியபடி தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.

"வேறு என்னதான் செய்வது எனக்குத் தலையே வெடித்து விடும் போல இருக்கிறது..."
என்றபடி ஆதித்யன் தன் அருகில் இருந்த சரணின் தோள்களில் சாய்ந்து கொண்டான்.

சாய்ந்தவனின் தலையை லேசாகக் கோதியபடி
"கவலைப்படாதே வர்மா... நிச்சயமாக ஏதாவது ஒரு வழி கிடைக்கும்... எனக்கு என்னவோ முதலாவது நினைவுநாள் வருவதற்குள் நமக்கு ஏதும் ஒரு சின்னத் தடயமாவது கிடைத்து விடும் என்றே தோன்றுகிறது..."
என்று தன் தோழனுக்கு ஆறுதல் சொன்னான்.

"நினைவுநாளுக்கு இன்னும் சரியாக ஆறு தினங்கள் இருக்கிறது ஆதியண்ணா... நிச்சயம் நமக்கு ஏதும் ஒரு வழி கிடைக்கும்..."
என்று தன் பங்குக்கு ஆறுதல் சொன்னான் மணிமாறன்.

யோசனையில் மூழ்கியிருந்த கஸ்தூரி மெல்ல அனுபல்லவியை நிமிர்ந்து பார்த்தாள்.

அவளது ஆழ்மனதின் ஒரு மூலையில்
அனுவக்கா சுயநினைவுக்கு வந்தால் இதற்கு எளிதில் ஒரு விடை கிடைக்குமே ஆனால் இப்போது என்ன செய்வது... எது எப்படியானாலும் அனுவக்கா குணமாகி வந்து எதையாவது சொல்லும் வரை ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது போல இருக்கிறதே... இப்போது அனுவக்காவைக் குணப் படுத்தும் விஷயத்தில் தீவிரமாக இறங்க வேண்டும்... அது தான் சரியாக இருக்கும் என்று இறுதியாக முடிவு எடுத்தவள் மெல்ல ஆழ்ந்த மூச்சை எடுத்துத் தன்னைச் சமநிலைப் படுத்திக் கொண்டாள்.

எல்லோரையும் நிமிர்ந்து பார்த்தவள்
"நாளைக் காலையில் நாம் எல்லோரும் ஒரு முக்கியமான இடத்துக்குப் போக வேண்டும்... எந்த இடம் ஏன் அங்கே போக வேண்டும் என்பதை யாரும் இப்போது கேட்க வேண்டாம்... கடவுளின் ஆசி நமக்கு இருக்கிறது நிச்சயமாக நமக்கு ஒரு நல்ல பலன் கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்... எல்லோரும் நாளைக் காலையில் எட்டுமணியளவில் தயாராகி நில்லுங்கள்... எல்லாவற்றையும் நாளை சொல்லுகிறேன்..."
என்றவள் மெல்ல எழுந்து அந்த மலைப் பிரதேசத்தைப் பார்வையால் அளந்தாள்.

ஒன்றும் புரியாமல் அவளையே எல்லோரும் பார்த்திருந்த போதும் அவள் சொன்னதற்குத் தங்களையறியாமலேயே எல்லோரும் தலையை ஆட்டி வைத்தார்கள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

இவள் என்ன சொல்லப் போகிறாள் எங்கே நம்மை அழைத்துச் செல்லப் போகிறாள் என்கின்ற பரபரப்புடன் எல்லோரும் வீட்டு வாசலில் நின்றிருந்தார்கள்.

அனுவை அழைத்துக் கொண்டு வெளியே வந்த கஸ்தூரி ஆதித்யன் முன்னால் வந்து நின்றாள்.
தாங்கள் இப்போது எங்கே போகப்போகிறோம் என்பதை எல்லோருக்கும் தெளிவு படுத்தினாள்.

"ஆதியண்ணா... நாம் எல்லோரும் இப்போது உங்களின் குலதெய்வக் கோவிலுக்குப் போகப் போகிறோம்..."

"கோவிலுக்குப் போவதற்கு எதற்குப் பல்லவி... அவள் பயந்து போய் விடுவாள் கஸ்தூம்மா..."

"நாங்கள் எல்லோரும் அந்தக் கோவிலுக்குப் போவதே அனுவக்காவுக்காகத் தான் ஆதியண்ணா..."

"புரியவில்லையே..."

"இப்போது எதுவும் புரியாது அங்கே வந்து பாருங்கள் தானாகவே புரியும்..."
என்றபடி எல்லோரையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குப் புறப்பட்டாள் கஸ்தூரி.

தன்னுடைய பெரிய வாகனத்தைக் கொண்டு வந்திருந்தான் மணிமாறன். ஏழுபேரும் தாராளமான வசதியுடன் அமர்ந்து கொண்டு அந்த மலைக் கோவிலுக்குப் புறப்பட்டார்கள்.

பல்லவியை ஜன்னலோர இருக்கையில் அமர்த்தியிருந்தாள் கஸ்தூரி.
வாகனம் மலையைச் சுற்றிப் போடப் பட்டிருந்த தார்ச்சாலையில் அளவான வேகத்துடன் பயணித்துக் கொண்டிருந்தது.

வாகனம் வளைந்து வளைந்து போவதையும் சாலையோரம் நின்றிருந்த அழகிய பச்சை மரங்கள் பின்னோக்கிப் போவதையும் வேடிக்கை பார்த்தபடியிருந்தாள் அனுபல்லவி.
அவள் முகம் லேசாக மலர்ந்து இருந்தது.

அவளையே பார்த்திருந்த கஸ்தூரி கோவில் எப்போது தான் வரும் என்பது போல அமர்ந்திருந்தாள்.
சரியாக இருபது நிமிடப் பயண முடிவில் கோவிலின் முன் வாசலருகில் மாறன் ஓட்டி வந்த வாகனம் போய் நின்றது.

அருகில் இருப்பது போலத் தெரிந்தாலும் பாதை சுற்றிச் சுற்றி வருவதால் கொஞ்சம் தூரம் தான் என நினைத்த கஸ்தூரி அந்த அம்மன் கோவிலின் கோபுரத்தை அண்ணாந்து பார்த்தாள்...

அந்த அம்மன் கோவில் பெரிய அகலமான படிகள் அமைக்கப்பட்டு அதன் முடிவில் அமைந்திருந்தது.
எத்தனை படிகள் என்பதை எண்ண முயன்ற கஸ்தூரியின் அருகே வந்த சூரியன்
"நூற்றியொரு படிக்கட்டுகள்..."
என்று சொல்லி விட்டு அவளைக் கடந்து சென்றான்.

காதருகில் அவன் வந்து சொன்னதைக் கேட்டதும் திடுக்குற்றவளோ
"இவனுக்கு எப்படித் தெரியும் நான் படிக்கட்டுகளை எண்ணிய விஷயம்..." என நினைத்தபடி அனுவின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

படிகள் ஆரம்பிக்கும் இடத்திலேயே கால்களை அலம்புவதற்காக இடம் அமைக்கப்பட்டிருந்தது.

ஆண்கள் எல்லோரும் கால்களை அலம்பி விட்டுப் படிகளில் ஏறும் வரை கொஞ்சம் தள்ளி நின்றிருந்தாள் கஸ்தூரி.

அவள் அனுவுடன் கீழே நிற்பதைத் திரும்பிப் பார்த்த சூரியன்
"என்ன கஸ்தூரி... நீங்கள் இருவரும் முன்னால் செல்லுங்கள் நாங்கள் பின்னால் வருகிறோம்..."
என்று சொல்லி முடிப்பதற்குள்
"இல்லை இல்லை... நீங்கள் முன்னால் செல்லுங்கள்... நாங்கள் பின்னால் வருகிறோம்..."
எனப் புடவையின் தலைப்பை இழுத்தபடி சட்டென்று சொன்னவளை
"இவளுக்கு என்னவாயிற்று எதற்கு இப்படிப் பதறுகிறாள்..."
எனப் புருவங்கள் உயர்த்திப் பார்த்தவனுக்கு அப்போது தான் ஏதோ புரிவது போல இருந்தது.

தங்களுக்கு முன்னால் படியேறிச் செல்ல அவள் கூச்சப் படுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டான் அவன். பின்னால் வருவது அத்தனை பேரும் ஆண்கள் என்பதால் அவர்களின் பார்வை நிச்சயம் அவள் மீது விழும் அதனால் அவள் கூச்சத்துடன் பின்னால் வரலாம் என ஒதுங்கி நிற்கிறாள் என்பதை உணர்ந்தவன்

"சரி சரி... பின்னாலேயே வாருங்கள் நான் உங்களுக்கு இரண்டு படிகள் முன்னால் செல்கிறேன்..."
என்றவனைப் பார்த்தவள் எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே புரியவில்லை.

அவனது புரிதலுடன் கூடிய அந்தக் கண்ணியம் அவளது இதழினோரம் லேசான முறுவலைத் தோற்றுவித்தது.

முதற்படியில் கால் வைத்த பல்லவி மேலே நிமிர்ந்து பார்த்தாள். கோவிலின் கோபுரம் அவளது விழிகளில் விழுந்து இதயத்துள் புகுந்தது.

ஒவ்வொரு படியாக ஏறியவளின் புருவங்கள் லேசாக நெரிந்தன. வலது கையைப் பிடித்திருந்த கஸ்தூரியின் இடது கையைத் தனது இடது கையால் இறுகப் பற்றிக் கொண்டு கண்களை மூடியபடி அப்படியே நின்று விட்டாள் அவள்.

அவளது ஒவ்வொரு அசைவையும் உள்வாங்கியபடி அருகில் வந்து கொண்டிருந்த கஸ்தூரிக்கு அவளின் நிலை புரிந்தது.

முன்பே அனுவக்காவை இங்கே அழைத்து வந்திருக்க வேண்டும் இத்தனை நாள் தாமதித்தது என் பிழைதான் என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

கண்மூடி நின்ற அனுவை அணைத்தபடி மேலே நடப்பதற்குத் தூண்டினாள்.

முன்னே சென்றவர்கள் கோவிலின் நுழைவாசலுக்கு அருகே போய் விட்டார்கள்.

அவர்கள் உள்ளே நுழைவதற்கும் அனுவும் கஸ்தூரியும் வாசலருகில் செல்வதற்கும் சரியாக இருந்தது.

வாசலருகில் வந்ததும் அனு அதற்கு மேல் போகாமல் ஆணியறைந்தது போல அப்படியே நின்றபடி இடது பக்கமாகப் பார்த்தாள்.

வாசலில் நின்றபடி கண்களை மூடிக்கொண்டு
"அனுவக்கா குணமாகி வந்து அன்று நடந்த விஷயங்கள் எல்லாம் சொல்ல வேண்டும்... நாங்கள் அவர்கள் எல்லோரையும் எப்படியும் மீட்க வேண்டும் தாயே... எனக்கு ஏன் அவர்கள் உயிரோடு தான் இருக்கிறார்கள் என்பது போலத் தோன்றிக் கொண்டே இருக்கிறது... நான் நினைத்தது போல எல்லாம் சரியாக நடந்தால்... உன் நூற்றியொரு படிகள் மீதும் உப்புப் போட்டு முட்டுக்காலில் ஏறி வந்து உனக்குத் தேங்காய் உடைக்கிறேன் தாயே..."
என்று மனதாற வேண்டிக் கொண்டாள் கஸ்தூரி.

தன் வேண்டுதலை முடித்தபடி கண்களைத் திறந்தவளுக்கு உள்ளே வீற்றிருந்த அந்த அம்பிகை கொஞ்சம் கொஞ்சமாக மனமிரங்கி அருள் வழங்கத் தொடங்கி விட்டாள் என்பது போல ஒரு சம்பவம் நடந்தது.

கோவிலின் வாசலில் அப்படியே நின்றிருந்த அனுபல்லவி இடது பக்கத்துக் கோவிலின் சுவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றதுமில்லாமல் அதனருகில் சென்று அதில் எதையோ தடவிக் கொடுத்தபடி நின்றிருந்தாள்.

வேகமாக அவளருகில் சென்று பார்த்த கஸ்தூரிக்குப் பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது. கோவிலின் இடது புறத்தில் இருந்த அந்தச் சுவற்றிலே அம்மனின் அழகான ஓவியம் ஒன்று வரையப் பட்டிருந்தது.

ஓவியம் தவிர்ந்த மற்ற இடங்களில் ஏதேதோ எழுதப் பட்டிருந்தது.
பாதியிடங்களில் வேண்டுதல்கள் எழுதப் பட்டிருந்தன.
இன்னும் பாதியிடங்களில் பெயர்கள் எழுதப் பாட்டிருந்தன.
அது அந்தக் கோவிலில் இருக்கும் ஒரு வழக்கம் போலும்.

அனுபல்லவி தடவிக் கொடுத்த இடத்தில் மகேந்திரவர்மன் அனுபல்லவி என அழகாக எழுதப் பட்டிருந்தது.

அதைப் பார்த்ததும் கஸ்தூரி அனுவின் முகத்தைப் பார்த்தாள் அவளது விழிகளில் இருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

சந்தோசம் தாளாமல் அனுவக்கா என்றபடி அனுவை இறுக அணைத்துக் கொண்டாள் கஸ்தூரி.

கஸ்தூரி அணைத்த போதும் கூட அனுவிடம் எந்த சலனமும் இல்லை அவளது விழிகள் அந்த எழுத்துக்களிலேயே நிலைகுத்தி நின்றன.

அதைக் கவனித்த கஸ்தூரி தனது அடுத்த கட்டத் திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்பதை எண்ணியபடி கோவிலினுள் எட்டிப் பார்த்து மற்றவர்களைச் சைகையில் அழைத்தாள்.

என்னவென்பது போல வெளியே வந்தவர்கள் கஸ்தூரி காட்டிய இடத்தையும் அனுவையும் பார்த்து விட்டுத் திகைத்துப் போய் நின்றார்கள்.

எல்லோருக்குமே கொஞ்சம் கொஞ்சமாகத் திகைப்புத் தெளிந்ததுமே சந்தோசம் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தது.

அந்தச் சந்தோசத்தை இரட்டிப்பாக்கி நிரந்தரமாக்குவதற்காகக் கஸ்தூரி அடுத்த திட்டத்தை செயற்படுத்தக் காத்திருந்தாள். அவளது அந்தத் திட்டம் நன்மையில் முடியுமா? இல்லையா? என்பதைக் காலம் தான் சொல்லும்...
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 43

மலையில் அமைந்திருக்கும் அம்மன் கோவிலுக்குச் சுற்று வட்டாரத்தில் இருந்து நிறைய மக்கள் வந்துபோய்க் கொண்டிருந்தார்கள்.

கோவிலின் உள்ளே தரிசனம் முடிந்ததுமே கோவிலின் வெளியே போடப்பட்டிருந்த மணிக்கடைகளையே ஈ மொய்ப்பது போல மக்கள் மொய்த்துக் கொண்டிருந்தார்கள்.

இதற்கு நடுவே அனுபல்லவியைச் சுற்றி நின்றிருந்த ஆறு பேரும் அவளது செய்கையைப் பார்த்துச் சந்தோசத்தில் திளைத்திருந்தார்கள்.

"ஆதியண்ணா... பார்த்தீர்களா அனுவக்காவிடம் மாற்றம் தெரிகிறது... அவள் சீக்கிரம் குணமாகி விடுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இப்போது வந்து விட்டது..."
என்றபடி கிட்டத்தட்ட சந்தோசத்தில் துள்ளிக் குதித்தாள் கஸ்தூரி.

அவளது அந்த உற்சாகம் மற்றவர்களையும் தொற்றிக் கொண்டது.

"என்னாலேயே இதை நம்ப முடியவில்லை... நாம் முன்பே பல்லவியை இந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்க வேண்டும் என்று இப்போது தான் தோன்றுகிறது... ஆனால் கஸ்தூரி உன்னைத்தான் பாராட்ட வேண்டும் உன் யோசனையால் தான் இன்று இவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கிறது..."
என்று மெய்யான மெச்சுதலுடன் கஸ்தூரியைப் பாராட்டினான் சூரியன்.
அவனோடு சேர்ந்து மற்றவர்களும் அவளைப் பாராட்டித் தள்ளினர்.

அவர்களது பாராட்டுக்களை எல்லாம் சிறு புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவள் தனது அடுத்த திட்டத்தை எல்லோரிடமும் முன்வைத்தாள்.

"இன்னொரு விஷயம் அனுவக்கா இன்னும் சுற்றுப்புறத்தைச் சரியாக உணரவில்லை... பார்வை அந்த எழுத்துக்களிலேயே நிலைகுத்தி நிற்கிறது..."

"ஆமாம் ஆமாம் பார்வை அதிலேயே தான் நிற்கிறது... இது வெறும் ஒரு சின்ன மாற்றம் தான்... ஏற்கனவே இது போல ஒரு தடவை சின்னண்ணாவின் பெயரையும் தன் பெயரையும் பல்லவி இலைகளால் போட்டிருக்கிறாள்... அதனால் சின்னண்ணாவின் பெயரை அவளால் உணரமட்டும் தான் முடிகிறது..."

"அதற்குத் தான் இன்னும் முன்னேற்றம் வருவதற்கு நான் இன்னொரு திட்டம் வைத்திருக்கிறேன்... அந்தத் திட்டம் மட்டும் பலிக்கவில்லை என்றால் அனுவக்காவை நாம் குணப்படுத்துவது என்பது குதிரைக்கொம்பு போலத்தான் என்று எனக்குத் தோன்றுகிறது... அதனால் அடுத்த திட்டத்தை இனிமேல் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் நாம் நிறைவேற்ற வேண்டும்..."
என்று சொன்ன கஸ்தூரியையே எல்லோரும் பார்த்திருந்தார்கள்.

அவர்களது பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவளோ மெல்ல அடுத்துப் போக வேண்டிய இடத்தின் பெயரை உச்சரித்தாள்.

அதைக் கேட்ட மற்றவர்கள் எல்லோரும் ஒரு நொடி திகைத்துப் போய் நின்றார்கள்.
அதிலும் ஆதித்யன்
"உனக்கு மட்டும் எப்படிக் கஸ்தூம்மா இப்படி எல்லாம் தோன்றுகிறது... சீக்கிரமாக அங்கே எல்லோரும் போகலாம்..."
என்றபடி எல்லோரையும் அழைத்துக் கொண்டு கோவிலை விட்டு வெளியே விரைந்தான்.

கஸ்தூரி அடுத்ததாகப் போக வேண்டும் என்று சொன்ன இடம் ஆதித்யனின் அம்மா அப்பா தம்பி மற்றும் அனு என நான்கு பேரும் பயணித்த வாகனம் கவிழ்ந்து விழுந்ததாகச் சொல்லப்பட்ட அந்த அதியுயரமான மலை உச்சிக்குத் தான்.

இப்போது ஆதித்யன் தான் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தான்... மலைப் பிரதேசத்தின் பாதையில் அந்த வாகனம் விரைந்து கொண்டிருந்தது...

அந்த மலையுச்சியின் பகுதிக்கு வாகனம் செல்ல முடியாது. முழுதாக ஒருமணிநேரப் பிராயாணத்தின் பின்னர் ஆதித்யன் ஓட்டிச் சென்ற வாகனம் ஒரு இடத்தில் நின்றது.

அங்கே ஒரு பெரிய பலகையில் இதற்குமேல் வாகனம் செல்லத் தடை என்று எழுதப் பட்டிருந்தது.
அதைப் பார்த்த எல்லோரும் வாகனத்தில் இருந்து கீழே இறங்கிக் கொண்டார்கள்.

"இதற்குப் பிறகு நடந்து தான் போக வேண்டும்... மேலே வாகனம் போகாது... ஒரே பாறையும் திட்டுமாகப் பாதை கடினமாகத் தான் இருக்கும்... எல்லோரும் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு கவனமாக ஏறிப் போக வேண்டும்..."
என்றபடி அனுவின் கையைப் பிடித்துக் கொண்டான் ஆதித்யன்.

ஆதித்யனும் சரணும் அனுவின் கைகளைப் பிடித்தபடி கவனமாக அந்தச் சரிவான பாதையில் ஏறத் தொடங்கினர்.
சுமித்திரையின் கையை மாறன் பிடித்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்து நடக்க, இப்போது சூரியன் கஸ்தூரியைத் திரும்பிப் பார்த்துக் கைகளை நீட்டினான்.

அவளோ இல்லை பரவாயில்லை நான் தனியே நடப்பேன் என்பது போல விலகி நடக்க முயன்றாள்.
தன் கைகளைப் பிடிக்காமல் அவள் செல்வதைப் பார்த்த சூரியனோ அவளைத் தன் முன்னே செல்ல விட்டு அவளைப் பின் தொடர்ந்தான்.

கொஞ்சம் தூரம் போனதும் அந்தக் கரடுமுரடான பாதையில் கிடந்த சிறியபாறைத் துண்டு ஒன்று கஸ்தூரியின் கால்களில் முட்டி அவளது கால்களை இடறி விட்டது.
பாறைத் துண்டு பட்ட வேகத்தில் தடுமாறியவள் சற்றுப் பின்னே வந்து கொண்டிருந்த சூரியனின் சட்டையைப் பற்றியிழுத்துத் தன்னை நிதானப் படுத்திக் கொண்டாள்.

அவள் தன்னைச் சமநிலைப் படுத்தும் வரையில் அசையாமல் நின்றவனோ
"இந்த மலைப் பாதையில் அங்கப் பிரதட்ஷணம் செய்யக்கூடாது என்பதற்காகவும் இப்படிச் சட்டையைப் பிடித்துக் கிழிக்கக் கூடாது என்பதற்காகவும் தான் நான் கையைப் பிடிக்கச் சொன்னேன்... யார் நம் பேச்சைக் கேட்கிறார்கள்..."
என்று வேண்டுமென்றே அலுத்துக் கொள்வது போலச் சொன்னான்.

சூரியன் அவ்விதம் சொன்னதைக் கேட்டவளோ அசடு வழிய
"மன்னித்துக் கொள்ளுங்கள்..."
என்றபடி அவனது வலது கரத்தை இறுகப் பற்றிக் கொண்டாள்.

தனது கையைப் பற்றியிருந்த அவளது கரத்தை ஒரு முறை பார்த்தவனோ இடது கையால் தன் தலைமுடியை அழுந்தக் கோதியவாறு மெல்லிய புன்னகையுடன் நடக்கத் தொடங்கினான். அவள் தன் கரங்களைப் பற்றியபடி தன் கூடவே நடந்து வருவது அவனுக்கு ஏனோ பிடித்திருந்தது. அது ஏன் என்று அவன் ஆராய முற்படவில்லை.

தங்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்த சுமித்திரையைப் பார்த்த கஸ்தூரி
"இவள் மட்டும் இப்போது திரும்பிப் பார்த்தால் என்ன நடக்கும்... தன்னுடைய காதலன் இன்னொரு பெண்ணின் கையைப் பிடித்து வருவதை அவளால் ஏற்க முடியுமா? பேசாமல் கையை விடுவித்துக் கொண்டு நடக்கலாமா? ஆனால் இந்தப் பாதையில் தனியே நடப்பது என்பது ரொம்பக் கஷ்டமான விஷயம்... ஆபத்துக்குப் பாவமில்லை இப்படியே இவரின் கையைப் பிடித்தபடி சென்றால் தான் அடி காயம் படாமல் மேலே செல்ல முடியும்"
என நினைத்தபடி சூரியனது கையை இன்னும் இறுகப் பற்றியபடி நடக்கத் தொடங்கினாள்.

பதினைந்து நிமிட நடைக்குப் பிறகு அந்த மலையுச்சியை ஏழு பேரும் அடைந்தார்கள்.
அங்கிருந்து பார்க்கும் போது முகில்கூட்டம் தலைக்கு மேலே போவது அப்படியே தெரியும் மேலே நீல வானமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைத் தோட்டங்களும் இருக்கும் என நினைத்திருந்த கஸ்தூரிக்கு அந்த இடத்தைப் பார்த்ததும் தலை கிறுகிறுத்துப் போயிற்று.

அவளது கால்கள் தடுமாறுவதைப் பார்த்த சூரியன் அவளை அருகேயிருந்த சிறிய பாறை ஒன்றின் மீது அமர்த்தினான்.
மற்றவர்களும் வந்த களைப்புத் தீர அமர்ந்தபடி அந்த இடத்தை நோட்டம் விட்டார்கள்.

அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து கொண்ட கஸ்தூரி மெல்ல நடந்து சென்று அந்த மலையுச்சியின் விளிம்பில் நின்றபடி மெல்ல எட்டிப் பார்த்தாள்.

"அம்மாடி... இது என்ன... இங்கிருந்து விழுந்தால் எலும்பு கூடக் கிடைக்காத அளவுக்குச் சிதறு தேங்காய் ஆகி விடுவோம் போல..."
என எண்ணியவளுக்கு இப்போது நிஜமாகவே தலை சுற்றியது.

ஆதித்யனிடம் ஏதோ பேசிவிட்டுத் திரும்பிய சூரியன் தன்னருகே அமர்ந்திருந்தவளைக் காணாமல் சுற்றுமுற்றும் தேடினான்.
அவள் மலை விளிம்பில் எட்டிப் பார்ப்பதைப் பார்த்தவனது இருதயம் ஒரு நொடி நின்று வேகமாகத் துடித்தது.

மெல்ல அவளருகில் சென்று அவளது கையைப் பிடித்து இந்தப் பக்கம் இழுத்தான்.
என்னவென்பது போலத் திரும்பிப் பார்த்தவள் அவனது முகத்தைப் பார்த்ததும் கிட்டத்தட்டப் பயந்தே போனாள்.
கண்கள் சிவந்துபோய் அவன் கோபமாக இருக்கிறான் என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன.

"கொஞ்சமாவது உனக்கு மூளை இருக்கிறதா? இல்லையென்றால் இருந்த மூளையையும் வரும் வழியில் அடகு வைத்து விட்டு வந்து விட்டாயா? அது என்ன நம் வீட்டுத் தண்ணீர்த் தொட்டியா இப்படி எட்டிப் பார்க்கிறாய்... ஒரு அடி சறுக்கினாலும் பூசணிக்காய்க் கணக்காகச் சிதறிப் போய் இருப்பாய் தெரியுமா?
என்று அவளைத் திட்டித் தீர்த்தான்.

அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் தலையைக் குனிந்து கொண்டவள் அவனது பிடியில் இருந்து மெல்லத் தன் கைகளை உருவியபடி ஆதித்யனின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

அவளையே பார்த்திருந்த சூரியனுக்குக் கோபம் மட்டும் குறையவே இல்லை. கொஞ்சம் தடுமாறியிருந்தால் என்னவாகி இருக்கும் என்ற நினைப்பு அவனது படபடப்பை அதிகரிக்கச் செய்தது.
இவளுக்குப் பிறகு நல்ல மண்டகப்படி இருக்கிறது என எண்ணிக் கொண்டவன் தமையனின் அருகில் அமர்ந்து கொண்டான்.

அதே நேரம் அங்கே அமர்ந்திருந்த அனுபல்லவி சாதாரணமாகத் தான் அமர்ந்திருந்தாள். கோவிலில் மகேந்திரனின் பெயரைப் பார்த்ததும் அவளது முகத்தில் தெரிந்த ஒரு உணச்சி கூட இப்போது அவளது முகத்தில் தோன்றவேயில்லை.

அவளிடம் எந்த அசைவுமே இல்லை. அதைப் பார்த்த ஆதித்யன் கஸ்தூரியிடம் திரும்பி
"என்ன கஸ்தூம்மா இவள் அப்படியே தான் இருக்கிறாள் அவளிடம் ஒரு மாற்றமும் இல்லை... அதோடு அவளுக்கு இந்த இடமே புரியக்கூடவில்லை..."
என்றான் ஆதங்கத்துடன்.

"அதைத்தான் நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஆதியண்ணா..."
என்றபடி தன்னிடத்தில் இருந்து எழுந்த கஸ்தூரி அனுவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டபடி அவளது முகத்தையே பார்த்திருந்தாள்.

சிறிது நேரத்திலேயே அவளது மூளையில் மின்னல் வெட்டியது போல ஒரு விஷயம் தோன்றியது.

விருட்டென்று எழுந்து கொண்டவளோ ஆதித்யனிடம் வந்து
"ஆதியண்ணா... கோவிலில் உங்கள் தம்பியின் பெயரைப் படித்ததுமே அனுவக்காவிடம் தோன்றிய அந்த மாற்றம் எதுவுமே இந்த இடத்தைப் பார்த்ததுமே தோன்றவில்லை... அனுவக்கா தான் ஏற்கனவே வந்த இடங்களை உணர்ந்து கொண்டு தான் தன் உணர்வை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்... அப்படிப் பார்க்கும் போது இங்கே அனுவக்கா இதற்கு முதல் வரவில்லை என்று தானே அர்த்தம்..."
என்று தனக்குத் தோன்றிய விஷயத்தைச் சொன்னாள்.

அவள் சொன்னதைக் கேட்டவர்களுக்கும் அது உண்மைதான் என்பது தெளிவாகப் புரிந்தது.

"அதோடு நாம் இங்கு வந்ததால் ஒரு பயனும் இல்லை... வாருங்கள் போகலாம்..."
என்று சலித்துக் கொண்டு அனுவை எழுப்பி விட்டாள் கஸ்தூரி.

"கஸ்தூரி சொல்வதும் சரி தான் இந்த இடத்திற்குப் பல்லவி இதற்கு முன்பு வந்து, அன்று நடந்தவற்றைப் பார்த்திருந்தால் நிச்சயமாக அவளிடம் கோவிலில் நடந்தது போல ஏதாவது மாற்றம் வந்து இருக்கும்..."
என்றபடி தானும் எழுந்து கொண்டான் சரண்குமார்.

"சரி வாருங்கள் போகலாம்..."
என்றபடி எல்லோரும் மெதுவாக அந்தச் சரிவான பாதைக்கு அருகில் வந்தார்கள். அதனருகில் வரும்வரை யாருமே ஒருவரை ஒருவர் பிடித்துக் கொள்ளவில்லை.

அனுவை எழுப்பி விட்ட கஸ்தூரி மீண்டும் ஒரு தடவை அந்தப் பகுதியைத் திரும்பிப் பார்த்தாள்.

அதே நேரம் எழுந்து நின்றிருந்த அனுபல்லவி சற்றுத் தள்ளி நின்றிருந்த பூச்செடியொன்றில் உட்கார்ந்திருந்த தும்பியைப் பார்த்து விட்டாள்.

அதைப் பிடிப்பதற்காக வேகமாக ஓடியவள் கீழே அங்குமிங்குமாகக் கிடந்த சிறிய பாறைத் துண்டுகளில் கால் இடறிக் கீழே விழுந்தாள்.

விழுந்த வேகத்தில் அவள் அந்தச் சரிவான பாதையில் உருண்டு சற்றுத் தள்ளிக் கிடந்த பெரிய பாறையில் மோதிக் கொண்டாள்.
மற்றவர்கள் சுதாரிக்கும் முன்பாக இந்த விடயம் நடந்து முடிந்திருந்தது.

ஆதித்யன் வேகமாக ஓடிச் சென்று அனுவைத் தூக்கினான். அவளது தலையில் அடிபட்டு இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.

சுமித்திரை தன் சேலைத் தலைப்பால் இரத்தத்தைத் துடைக்க, மாறன் தன் பெரிய கைக்குட்டையால் தலையில் கட்டுப் போட்டான்.

அனைவருமே பதறிப் போய் அனுவைக் கவனித்தபடி இருக்க, ஒருத்தி மட்டும் உறைந்து போய் நின்றிருந்தாள்.

கஸ்தூரி பேயறைந்தது போல நிற்பதைப் பார்த்த சூரியன் அவளது தோளைத் தொட்டு உலுக்கினான்.
அவ்வளவு தான் அப்படியே கீழே சடாரென விழுந்தாள் கஸ்தூரி... அவள் விழுந்த வேகத்தில் தலை கீழே கிடந்த பாறையில் நச்சென்று மோதியிருக்கும்... நல்ல வேளை அருகே நின்றிருந்த சூரியனும் சரணும் அவளைத் தாங்கிக் கொண்டார்கள்.

அனுவின் நிலையைப் பார்த்துக் கவலையில் இருந்தவர்கள்
"இப்போது இவளுக்கு என்னவாயிற்று..."
எனப் பதறிப் போனார்கள்.

அனு பேச்சு மூச்சற்றுக் கிடக்க, கஸ்தூரியோ மூச்சுப் பேச்சற்றுக் கிடந்தாள்.
இருவரையும் உடனே வைத்தியசாலையில் சேர்க்க வேண்டும் என்பதை உணர்ந்தவர்கள் அங்கிருந்து விரைவாகச் செல்ல முயன்றனர்.

ஆதித்யன் அனுபல்லவியைத் தூக்கிக் கொண்டான்.
சூரியன் கஸ்தூரியைத் தூக்கிக் கொண்டான்.
அனைவருமே மெது மெதுவாக சரிவான பாதையில் இறங்கி நடக்கத் தொடங்கினர்.

பாதையின் பாதித் தூரம் வந்ததுமே
மாறன் அனுவையும் சரண் கஸ்தூரியையும் மாற்றித் தூக்கிக் கொண்டார்கள்.

ஒருவழியாகச் சிரமப்பட்டு வாகனம் நின்ற இடத்தை அடைந்தவர்கள் அங்கிருந்து கொஞ்சம் தூரத்தில் இருந்த மருத்துவமனைக்கே இருவரையும் கொண்டு சென்றனர்.
நல்ல வேளையாக அங்கே ஒன்றுக்கு மூன்று வைத்தியர்கள் இருந்ததால் இரு பெண்களுக்குமே ஒரே நேரத்தில் சிகிச்சை வழங்கப் பட்டது.

கஸ்தூரியைப் பரிசோதித்த வைத்தியர்
"பயப்படும் அளவிற்கு ஒன்றுமில்லை... எதையோ கண்டு பயந்ததால் மயக்கம் போட்டு விட்டார்... அதோடு கொஞ்சம் பலவீனமாக இருக்கிறார்... சில சத்துமாத்திரைகள் எழுதிக் கொடுக்கிறேன் அதோடு சேர்த்து நல்ல போசாக்கான உணவுகளையும் கொடுங்கள்... ஒரு அரைமணி நேரத்தில் கண் விழித்து விடுவார்... இன்று வேண்டாம் நீங்கள் இரண்டு தினங்களுக்குப் பிறகு வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம்..."
என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

அடுத்து அனுவுக்கு என்ன சொல்லப் போகிறார்களோ என்றபடி அனைவரும் வெளியே காத்திருக்க, உள்ளே கட்டிலில் படுத்திருந்த பல்லவி கண்களைத் திறந்து பார்த்தபடி சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது விழிகள் எதையோ தேடியது, தேடியது கிடைக்கவில்லை என்றதும் சோர்ந்த விழிகள் மீண்டும் மூடிக் கொண்டன...
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 44

மலைப்பாதையோடு அமைந்திருந்த அந்த வைத்தியசாலையை ஒட்டி ஒரு சிறிய பிள்ளையார் கோவில் அமைந்திருந்தது.

அந்தக் கோவிலில் உயரமாகக் கட்டப் பட்டிருந்த மணிக்கூண்டில் இருந்த மணி ஓங்கி ஒலித்தது.

அந்தக் கோவில் மணியோசையைக் கேட்ட ஆதித்யன் அனுவுக்காக மனதாற வேண்டிக் கொண்டான்.

அவர்கள் வைத்தியசாலைக்கு வந்து கிட்டத்தட்ட ஒருமணி நேரம் முடிந்து விட்டது, கஸ்தூரி இன்னும் கொஞ்ச நேரத்தில் கண் முழித்து விடுவாள் என்று வைத்தியர் சொல்லி விட்டார் ஆனால் அனு மட்டும் இன்னும் கண் திறக்கவேயில்லை.

வைத்தியசாலையின் உள்ளே இருந்தவர்களில் மாறனும் சுமித்திரையும் வைத்தியசாலையில் இருப்பவர்களுக்கு மாற்றுத் துணியும் உணவும் எடுத்து வர வீட்டுக்குப் போய் விட்டார்கள்.

சூரியன் கஸ்தூரி படுத்திருந்த அறைக்குள் நுழைந்தான். அவன் உள்ளே சென்ற நேரம் அவள் மெல்லக் கண் திறந்து சுற்றுமுற்றும் பார்த்தபடி எழுந்து அமர முயன்று கொண்டிருந்தாள்.

அவளை மெதுவாகக் கட்டிலில் சாய்த்து அமர்த்தியவனைப் பார்த்தவளோ
"நான் எங்கே இருக்கிறேன்..."
என்றபடி கண்களைத் தேய்த்துக் கொண்டாள்.

அவள் அப்படிக் கேட்டதும் அவளை மேலும் கீழும் ஆராய்வது போலப் பார்த்தவனோ
"உனக்குத்தான் தலையில் அடிபடவே இல்லையே... பிறகு எப்படி இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறாய்..."
என்றான்.

"மயக்கம் போட்டு விழுந்த பிறகு என்ன நடந்தது என்று எனக்கு எப்படித் தெரியும்... அதனால் தான் அப்படிக் கேட்கிறேன்..."
என்றபடி அவனை முறைத்தாள் கஸ்தூரி.

"அப்பாடா... ஒரு வழியாக நீ மயக்கம் போட்டு விழுந்தது நினைவு வந்து விட்டதா... நான் கூட மயக்கம் போட்டதும் எல்லாமே மறந்து போய் விட்டாயோ என்று நினைத்துப் பயந்து விட்டேன்..."
என்று சிரியாமல் சொன்னவனை மீண்டும் முறைத்தவள் அடுத்த பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

சிறிது நேரம் அவளையே பார்த்திருந்தவன் மெல்லிய புன்னகையுடன் அவளுக்காகப் பழச்சாறு வாங்குவதற்கு வெளியே சென்று விட்டான்.

அதே நேரம் சரணும், ஆதியும் அவளைப் பார்ப்பதற்கு வந்தார்கள்.

"என்ன கஸ்தூம்மா... எப்படி இருக்கிறாய்..."

"இப்போது பரவாயில்லை ஆதியண்ணா..."

"ஒரு நொடியில் எங்களை எல்லாம் பதற வைத்து விட்டாயேம்மா கஸ்தூரி..."

"அனுவக்காவை அப்படிப் பார்த்ததும் பயந்து போய் விட்டேன் சரணண்ணா..."

"ம்ம்ம்... புரிகிறது... சரி நீ ஓய்வு எடுத்துக் கொள்ளம்மா நாங்கள் பிறகு வருகிறோம்..."
என்றபடி ஆதித்யனை அழைத்துக் கொண்டு வெளியே போய் விட்டான் சரண்.

அவர்கள் சென்றதும் அவளுக்காக வாங்கி வந்திருந்த பழச்சாற்றுடன் உள்ளே நுழைந்தான் சூரியன்.

கஸ்தூரி கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவளது கட்டிலின் அருகே நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு அதில் அமர்ந்தபடி கொண்டு வந்த பழச்சாற்றை அவளிடம் அருந்தக் கொடுத்தான் சூரியன்.

"இப்போது எப்படி இருக்கிறது..."

"இப்போது பரவாயில்லை... ஆனால் தலை தான் பயங்கரமாகச் சுற்றுகிறது..."

"வைத்தியரை அழைக்கட்டுமா?"

"அவரை எதற்கு அழைக்க வேண்டும்..."

"அதுவா... உன்னுடைய சுற்றும் தலையைச் சுற்றிப் பார்ப்பதற்குத் தான்... என்ன கேள்வி இது மருத்துவரை எதற்கு அழைப்பது அவர் ஏதாவது மாத்திரை கொடுத்தால் தலைவலி கொஞ்சமாவது மட்டுப்படுமே..."

"இல்லை இல்லை பரவாயில்லை... கொஞ்சநேரத்தில் அது தானாகவே குறைந்து விடும்..."
என்று அவசரமாகச் சொன்னவளை ஒரு மார்க்கமாகப் பார்த்து வைத்தவனோ
"ஏன் கஸ்தூரி உனக்கு மாத்திரை விழுங்குவது என்றால் பயமா..."
என்று கேட்டான் குறும்புடன் அவளையே பார்த்தபடி...

அவனது பார்வையில் அசடு வழிந்தவளோ அவன் சொன்னதை ஒப்புக்கொள்ளாமல்
"இல்லையே அப்படி எல்லாம் ஒன்றுமில்லையே... அடிக்கடி மாத்திரை எடுத்துக் கொள்வது கூடாது... அது நம் உடலைப் பாதித்து விடும்..."
என்று ஏதோ சொல்லி வைத்தாள்.

அவள் சொன்னதைக் கேட்டவனோ
"அடடா... உண்மையாகவா... அது சரி இன்று நீ அப்படி எத்தனை மாத்திரை போட்டாய்..."
என்று கேட்டு வைத்தான்.
அவன் கேட்ட கேள்வி காதில் விழாதது போலத் தன் படுக்கை விரிப்பைச் சரி செய்வது போலக் கீழே குனிந்தாள் கஸ்தூரி.

மெல்லிய புன்னகையோடு அவளையே பார்த்திருந்தவனோ அப்போது தான் நினைவு வந்தவனாக
"அது சரி கஸ்தூரி... அங்கே மலையுச்சியில் எதைக் கண்டு பயந்து போய் நீ மயங்கி விழுந்தாய்... நல்ல வேளை நானும் சரணண்ணாவும் பக்கத்தில் நின்று உன்னைப் பிடித்துக் கொண்டோம்... இல்லையென்றால் நீ விழுந்த வேகத்துக்கு உருண்டு உருண்டு வந்து தான் வீடு சேர்ந்திருப்பாய்..."
என்று அவள் ஏன் மயக்கம் போட்டாள் என்பதை விசாரித்தான்.

அவன் அப்படிக் கேட்டதும் தான் தனக்கு ஏன் மயக்கம் வந்தது என்பதே கஸ்தூரிக்கு நினைவு வந்தது. ஆனால் அதைச் சொன்னால் இவன் விழுந்து விழுந்து சிரிப்பானே இப்போது என்ன சொல்லிச் சமாளிப்பது என்பது போலத் தீவிரமாக யோசித்தாள் அவள்.

தான் கேட்ட கேள்விக்குப் பதிலேதும் சொல்லாமல் அவள் தீவிரமாக யோசிப்பதைப் பார்த்தவன்
"என்ன கஸ்தூரி... எதற்கு இப்படி யோசிக்கிறாய்..."
என்று கேட்டான்.

"இல்லையே நானொன்றும் யோசிக்கவில்லையே... அது வந்து நான் சொன்னால்... நீங்கள் என்னைக் கிண்டல் செய்யக்கூடாது..."
என்று இழுத்தாள் காஸ்தூரி.

"அது வந்து நீ... என்ன சொன்னால்... சரி கிண்டல் செய்ய மாட்டேன் சொல்லு..."
என்றான் சூரியன் அவளையே பார்த்தபடி

ஒரு முறை அவனை நிமிர்ந்து பார்த்தவளோ
"எனக்கு இரத்தம் என்றால் உடனே மயக்கம் வந்து விடும்..."
என்று விட்டுப் பட்டென்று முகத்தை மூடிக் கொண்டாள்.

அவளையே பார்த்திருந்தவனுக்குப் பட்டென்று சிரிப்பு வந்தது. உதட்டைக் கடித்துச் சிரிப்பை அடக்கிக் கொண்டபடி
"நீ இவ்வளவு பெரிய வீராங்கனை என்று சத்தியமாக எனக்குத் தெரியாது கஸ்தூரி..."
என்று சொல்லியபடியே அடுத்த பக்கம் திரும்பிக் கொண்டான்.

அவன் தன்னைப் பார்த்துச் சிரிக்கிறான் ஆனால் அதை மறைக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டவளோ
"என்ன கிண்டல் செய்கிறீர்களா..."
என்றபடி முறைக்க முயன்றவள் தோற்றுப் போய்ச் சிரித்து விட்டாள்.

"என்னைச் சொல்லி விட்டு நீயே சிரித்து விட்டாயே..."
என்று சிரித்தபடி வெளியே சென்று விட்டான் சூரியன்.

வெளியே சென்றவனுக்குச் சிரித்து முடிப்பதற்குச் சில நிமிடங்கள் பிடித்தது.

"அடிப்பாவி... பெரிய ஆள் போல நான் என்ன பேசினாலும் போட்டி போட்டுக் கதைக்க மட்டும் தெரிகிறது... உனக்கு இரத்தத்தைப் பார்த்தால் மயக்கம் வருமா? இது இத்தனை நாள் எனக்குத் தெரியாமல் போய் விட்டதே..."
என்று எண்ணிக் கொண்டான் சூரியன்.

அப்போது அவனை அழைத்த மருத்துவர்
"நீங்கள் அனுமதித்த மற்றப் பொண்ணு கண் விழித்து விட்டார்... ஆனால் ஒன்றுமே பேசுகிறார் இல்லை... ஒருவேளை உங்களைப் பார்த்தால் பேசக்கூடும்..."
என்றபடி அவனை அனுபல்லவி படுத்திருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.

அறையில் நுழைந்த சூரியனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

கட்டிலில் அனுபல்லவி அமர்ந்து இருந்தபடி சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அறை வாசலில் சத்தம் கேட்டுத் திரும்பியவள் சூரியவர்மனைப் பார்த்ததும்
"சூரியா..."
என்றபடி கட்டிலை விட்டு எழுந்து ஓடி வந்து அவனைக் கட்டிக் கொண்டாள்.

சூரியவர்மனுக்கு ஒரு நொடி ஒன்றுமே புரியவில்லை அவன் பிரமை பிடித்தவன் போல நின்றிருந்தான்.

சூரியனைக் கட்டிக் கொண்டு சில நொடிகள் நின்ற அனு மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்து
"சூரியா... இது எந்த இடம் நாங்கள் ஏன் இங்கே நிற்கிறோம்... அந்த வாகனத்தில் இருந்து நான் விழுந்த பிறகு எனக்கு நடந்தது எதுவுமே நினைவு இல்லை... ஆமாம் மகேந்தர் எங்கே... அத்தையும் மாமாவும் எங்கே... அவர்களை நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள் தானே... என்னை யார் இங்கே கொண்டு வந்து சேர்த்தது... நான் கண் திறந்து பார்த்த போது உங்கள் யாரையும் காணாமல் நான் பயந்து போய் விட்டேன் தெரியுமா? அந்தக் கொலைகாரப் பாவிகள் தான் உங்களையும் ஏதோ செய்து விட்டார்கள் என்று எனக்கு அழுகையே வந்து விட்டது தெரியுமா? உன்னைப் பார்த்ததும் தான் எனக்கு உயிரே வந்தது..."
என்று தன் போக்கில் சொல்லிக் கொண்டிருந்தவளையே விழி எடுக்காமல் பார்த்த வண்ணம் இருந்தான் சூரியவர்மன்.
அவனது விழிகளில் இருந்து கண்ணீர் தடை போட யாருமின்றி இறங்கிக் கொண்டிருந்தது.

வெளியே தனது அலைபேசியில் சில முக்கியமான வேலை தொடர்பாகப் பேசி முடித்த ஆதித்யன் அனுவைப் பார்ப்பதற்காக அவளது அறைக்கு வந்தான்.
வந்தவன் கண்ட காட்சி அவனது கால்களைக் கட்டிப் போட்டது. அப்படியே அசைவற்று நின்றான் ஆதித்யன்.

சூரியனின் கைகளைப் பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டேயிருந்த அனுபல்லவி எதேச்சையாக அறையின் வாசலைப் பார்த்தாள். அங்கே நின்றிருந்தவனைக் கண்டவள் சூரியனைப் பிடித்திருந்த கைகளை விட்டு ஓடி வந்து
"ஆதியண்ணா..."
என்றபடி அவனைக் கட்டிக் கொண்டாள்.

"ஆதியண்ணா... எனக்கு என்ன நடந்தது? மகேந்தரும் அத்தையும் மாமாவும் எங்கே? சூரியா வாயைத் திறந்து ஒன்றுமே பேசமாட்டேன் என்கிறான்... எனக்குப் பயமாக இருக்கிறது... நான் காயுவையும் குட்டியையும் போய்ப் பார்க்க வேண்டும்... அவர்கள் நிச்சயமாக என் மீது கோபமாக இருப்பார்கள் அண்ணா... ஆனால் யாரையும் காணோமே எல்லோரும் எங்கே அண்ணா..."
என்று அவனின் மார்பில் சாய்ந்தபடி கேட்டவளின் தலையைத் தனது நடுங்கும் விரல்களால் மெல்ல வருடிக் கொடுத்தான் ஆதித்யன்.
அவனது விழிகளும் விழிநீரில் நனைந்தன.

சிறிது நேரம் அவன் மீது சாய்ந்து நின்றவள்
"அண்ணா நீங்கள் ஏன் அண்ணா அமைதியாக இருக்கிறீர்கள்... நீங்கள் இருவரும் என்னிடம் இருந்து எதையாவது மறைக்கிறீர்களா?"
என்று சந்தேகமாக இருவரையும் பார்த்தாள் பல்லவி.

தன் அறையில் படுத்திருந்த கஸ்தூரி இப்படி வெட்டியாகப் படுத்து இருப்பதற்குப் பதில் அனுவக்காவின் அறையில் போய் இருக்கலாம் என நினைத்தபடி அவளின் அறைக்கு வந்தாள்.

அறையின் வாசல் கதவைத் திறந்தவளின் பார்வையில் முதலில் விழுந்தது சூரியன் தான் அவனைப் பார்த்ததும்
"இந்த மனுஷன் எதற்கு இப்படி இது பூலோகமா கைலாசமா என்பது போல நிற்கிறார்..."
என யோசித்தவள் அதன் பிறகே ஆதித்யனையும் அனுவையும் பார்த்தாள்.

அனு எழுந்து நிற்கிறாள் என்பதைப் பார்த்தவளுக்கு அப்பாடா ஒருவழியாக அனுவக்கா எழுந்து விட்டாள் என்று நிம்மதியாக இருந்தது.

அவள் சந்தோசமாக
"ஆதியண்ணா... ஒரு வழியாக அனுவக்கா கண் திறந்து பார்த்தாகி விட்டது... இப்போது தான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது..."
என்றபடி இருவருக்கு அருகிலும் போய் நின்று அனுவை மெல்லப் பிடித்துக் கொண்டாள்.

ஆதித்யனைப் பார்த்தவாறு நின்ற அனுபல்லவி யாரோ அறையினுள் நுழைந்து தன் பெயரை உரிமையோடு சொல்லிப் பேசுவதைக் கேட்டபடி தான் நின்றாள்.
ஆனால் அவளால் திரும்பிப் பார்க்க முடியவில்லை கழுத்து வலித்துக் கொண்டிருந்தது.

ஆனாலும் இந்தக் குரல் எனக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆன குரல் போல இருக்கிறதே எனக் கழுத்து வலியையும் பொருட்படுத்தாமல் திரும்பிப் பார்த்தவள் கஸ்தூரியைப் பார்த்ததும் புருவங்களைச் சுருக்கி ஏதோ யோசித்தாள்.

யோசித்தவளுக்கு விடை கிடைத்ததுமே
"ஏய் குட்டி... நீ இங்கே என்ன செய்கிறாய்? முதலில் எப்படி நீ இங்கே வந்தாய்... என்ன நீ ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி விட்டாய்? இதென்ன இப்படி வெள்ளை வெளேரென்று சேலை உடுத்தியிருக்கிறாய் குட்டி... உனக்குச் சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டேன் என்று உனக்கு என் மீது கோபம் தானே... நீ எவ்வளவு வேண்டுமானாலும் என் மீது கோபப்படு... ஆனால் என்னை வெறுத்து மட்டும் விடாதே... ஆமாம் காயு எங்கே..."
என்றபடி கஸ்தூரியின் கலைந்திருந்த முடிகளைக் கோதி விட்டபடி அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டாள் அனுபல்லவி.

இப்போது பேச்சற்றுப் போய் நிற்பது கஸ்தூரியின் முறையாயிற்று.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வலிகள் எல்லாம் விலகிச் செல்ல
வழிகள் எல்லாம் தடையகல
உறவுகள் எல்லாம் உணர்வுகளுடன் சங்கமிக்கும் நேரம் இது...
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 45

வாழ்க்கையில் இந்த விஷயம் நடந்து விடாதா நடந்து விடாதா என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அந்த விஷயம் ஒரு நாள் திடீரென நடந்தேறினால் எப்படி இருக்கும்

நிச்சயமாகத் திகைப்புத் தோன்றும் அல்லவா... அதிலும் அந்த விஷயம் ரொம்பப் பெரிய விஷயமாக இருந்தால் யாராக இருந்தாலும் என்ன செய்வது ஏது செய்வது என்பது போல ஒன்றும் தோன்றாமல் திக்பிரமை பிடித்தது போலத்தானே நிற்பார்கள்.
அதற்கு ஆதித்யன், சூரியன், கஸ்தூரி போன்ற சாமான்ய மனிதர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?
அனுபல்லவிக்குக் குணமாகிச் சுயநினைவு வந்து விட்டது என்ற அந்த ஆகப் பெரிய சந்தோசம் அவர்களைப் பேச்சற்றுப் பிரமை பிடித்தது போல அப்படியே நிற்க வைத்தது.

ஆனால் தனக்கு நடந்தது என்ன என்றோ அவர்கள் அப்படியே ஏன் நிற்கிறார்கள் என்றோ தெரியாத அனுபல்லவி அவர்கள் மூவரையும் விசித்திரமாகப் பார்த்து வைத்தாள்.

"ஏய்... நானொருத்தி தனியாகப் புலம்பிக் கொண்டிருக்கிறேன்... என்ன நீங்கள் மூன்று பேரும் வாயையே திறக்க மட்டேன் என்பது போல நிற்கிறீர்கள்... உங்களுக்கு என்னதான் நடந்தது..."
என்று மூன்று பேரையும் பார்த்துக் கேட்டாள்.

மூன்று பேரிலும் சூரியனுக்குக் கொஞ்சம் சுரணை வந்தது. அவன் அனுவை எப்படிச் சமாளிப்பது என வேகமாக யோசித்தான். அவசரமாக யோசித்ததில் அவனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. எப்படியாவது பேசிச் சமாளிப்போம் என நினைத்தவன் மெல்லப் பேசுவதற்கு வாயைத் திறந்தான்.

"இங்கே பார் பல்லவி... நீ முதலில் பதறாதே நாங்கள் இப்போது வைத்தியசாலையில் இருக்கிறோம்... உன் தலைக்காயம் முதலில் குணமாகட்டும் நாங்கள் எதுவாக இருந்தாலும் பிறகு பேசிக் கொள்ளலாம்... இப்போது நீ படுத்து ஓய்வு எடுத்துக் கொள் வா..."
என்றபடி அவளின் கையைப் பிடித்து வந்து கட்டிலில் படுக்க வைத்தான்.

பல்லவிக்கும் உடலும் மனமும் ரொம்பவே அசதியாக இருந்தது போலும் அவள் மறுத்துப் பேசாமல் படுத்தபடி கண்களை மூடிக் கொண்டாள்.
கண்களை மூடிக் கொண்டவள் அசதியில் உடனேயே தூங்கியும் விட்டாள்.

அவள் தூங்கி விட்டாள் என்பதனை அவளிடம் இருந்து வந்த சீரான மூச்சுப் பறைசாற்றியது.
அதன் பிறகே ஆதித்யனுக்கும் கஸ்தூரிக்கும் பேச்சு வந்தது.

"இது கனவா? இல்லை நனவா? என்னால் நம்பவே முடியவில்லை... எது நடக்க வேண்டும் என்று நாங்கள் எல்லோரும் ஆசைப்பட்டோமோ அது நடந்தே விட்டது... எனக்குச் சந்தோசத்தில் மூச்சே நின்று விடும் போல இருக்கிறது ஆதியண்ணா... நான் உங்களைக் கொஞ்சம் கிள்ளிப் பார்க்கட்டுமா... ஐயோ! கடவுளே என்னால் இன்னும் இதை நம்ப முடியவில்லையே..."
என்று கிட்டத் தட்டத் துள்ளியபடி சொன்னவளின் அருகில் வந்த சூரியன் அவளது வலது கையைப் பிடித்து நறுக்கென்று கிள்ளினான்.

அவன் கிள்ளிய வேகத்தில் வலித்த கையைத் தேய்த்தபடி முறைத்தவளிடம்
"இப்போது நம்புகிறாயா... அது என்னவென்றால் எனக்குக் கூட நம்ப முடியவில்லை அதனால் தான் உன்னைக் கிள்ளிப் பார்த்தேன்... நீ உன் கையைத் தேய்த்தபடி வழமையாக என்னை முறைப்பது போல முறைக்கிறாயே... அப்படியானால் இது உண்மை தான்..."
என்று சொன்னவன் தமையனிடம் திரும்பி
"இது ஒன்றும் கனவில்லை அண்ணா... இது நிஜம் தான்... இங்கே பாருங்கள் கஸ்தூரி முறைக்கிறாள்..."
என்றான்.

ஆதித்யனோ மற்ற இருவரும் சொன்னதைக் கேட்கும் நிலையில் இல்லை. அவனது பார்வை படுத்திருந்த அனுவின் முகத்தில் பதிந்திருந்தது... ஆனால் எண்ணங்கள் வேறு எங்கெங்கோ சுழன்று கொண்டிருந்தன.

அண்ணா ஏதோ தீவிரமாக யோசிக்கிறான் என்பதை அவனது முக பாவனையில் இருந்து புரிந்து கொண்ட சூரியன் தன் வேடிக்கைப் பேச்சை விட்டு அவனது தோளைத் தொட்டு என்னவென்பது போலப் புருவங்களை உயர்த்தினான்.

சூரியன் தொட்டதும் அவனைத் திரும்பிப் பார்த்த ஆதித்யன்
"என்னடா சூரியா இப்போது செய்வது... இவள் சுயநினைவுக்கு வந்து விட்டாள் என்று நினைத்துச் சந்தோசப் படுவதா... இல்லையென்றால் இப்போது அவளது கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என்பதை நினைத்துக் கவலைப் படுவதா... என்று தெரியவில்லையடா..."
என்றான் மெல்லிய கவலை இழையோட...

தன் தமையன் சொன்னதைக் கேட்டவனோ
"அண்ணா... பல்லவி குணமானதே நமக்குக் கிடைத்த பெரிய சந்தோசம் இப்போது அதை எந்தத் தடங்கலும் இல்லாமல் நாம் அனுபவிக்க வேண்டுமே தவிரக் கண்டதையும் நினைத்துக் கவலைப்படக் கூடாது... இதற்குப் பிறகு பல்லவியை எப்படிச் சமாளிப்பது யாரைக் கொண்டு சமாளிப்பது என்று எனக்குத் தெரியும்... அதனால் நீங்கள் ஒன்றும் அதிகமாக யோசித்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள்..."
என்று அவனுக்கு ஆறுதல் சொன்னான்.

அவன் அவ்விதம் சொன்னதுமே
"என்னடா சொல்லுகிறாய்... யாரை வைத்துச் சமாளிக்கப் போகிறாய்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை"
என்றபடி தன் தம்பி சூரியனைப் பார்த்தான் ஆதித்யன்.

அண்ணனின் கேள்விப்பார்வைக்கு
"அண்ணி..."
என்று பதில் சொன்னான் சூரியன்.

அந்தப் பதிலைக் கேட்டதுமே
"யார் காயத்திரியைச் சொல்லுகிறாயா? அவள் என்ன செய்ய முடியும் எப்படிப் பல்லவியைச் சமாளிக்க முடியும்..."
என்ற தனது ஐயத்தை முன் வைத்தான் ஆதித்யன்.

"அது தானே அக்காவால் என்ன செய்ய முடியும்... அவர்கள் இப்போது இங்கே இல்லையே..."
என்று தன் சந்தேகத்தையும் முன் வைத்தாள் கஸ்தூரி.

அவர்களது சந்தேகத்தைத் தீர்ப்பது போலப் பதில் அளித்தான் சூரியன்.

"அண்ணா... இந்த உலகத்திலேயே பல்லவிக்கு மிக மிகப் பிடித்த முதலாவது நபர் என்றால் அது நம் அண்ணி மட்டும் தான்... அவர்களுக்குப் பிறகு தான் கஸ்தூரி, நீங்கள், நான்... இவ்வளவு ஏன் சின்னண்ணா கூட அண்ணிக்குப் பிறகு தான்... அப்படி இருக்கும் போது சின்னண்ணா இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம் என்று பல்லவி ஆர்ப்பாட்டம் செய்யும் போது அவள் முன்னால் நம் அண்ணியை நிறுத்தினால் போதும்... அவ்வளவு தான் அவள் அப்படியே அடங்கி விடுவாள்... அப்புறம் அண்ணியை வைத்தே பல்லவியைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தேற்றி விடலாம்..."
என்று சொன்னவனையே மற்ற இருவரும் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவரையும் பார்த்தவனோ
"என்ன இப்படியே விழித்துக் கொண்டு நின்றால் என்ன அர்த்தம்... வாயைத் திறந்து என் அறிவைப் பாராட்டினால் இருவரும் தேய்ந்தா போய் விடுவீர்கள்... ஆனால் அண்ணா நீங்கள் சுத்த மோசம் கஸ்தூரி எது செய்தாலும் சொன்னாலும் மட்டும் உடனே விழுந்து விழுந்து பாராட்டுவீர்கள்... ஆனால் என்னை மட்டும் பாராட்டவே மாட்டீர்கள் அப்படித்தானே..."
என்று சிரியாமல் சொன்னான்.

அவன் சொன்னதைக் கேட்ட ஆதித்யனோ வந்த சிரிப்பை அடக்கியபடி அவனது முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தபடி
"நீயும் கெட்டிக்காரன் தான்டா..."
என்றான்.

தன் முதுகைப் புறங்கையால் தேய்த்தபடி
"அடிக்கடி நீங்கள் எனக்கு அண்ணா என்பதை நிரூபிக்கிறீர்கள்..."
என்றான் சூரியன் வேண்டுமென்றே வராத கண்ணீரைத் துடைத்தபடி...

அந்த நேர்த்தில் அங்கு வந்த மருத்துவர்
"நீங்கள் இரண்டு நாட்கள் இங்கே தங்கிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை... நீங்கள் அனுமதித்த இருவருமே இப்போது நன்றாகத் தான் இருக்கிறார்கள்... இன்றே கூட அவர்களை அழைத்துச் செல்லலாம்... தங்குவதானாலும் தங்கலாம்..."
என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.

"இங்கே இருந்து என்ன செய்யப் போகிறோம்... வீட்டுக்குப் போகலாம் ஆதியண்ணா... அனுவக்கா எழுந்ததுமே கிளம்பலாம்... அப்புறம் சுமித்திரையிடம் இங்கே வர வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி விடுங்கள்..."
என்றாள் கஸ்தூரி.

அவள் சொன்னதற்குச் சம்மதம் சொன்ன ஆதித்யன் பல்லவி குணமான சந்தோசத்தைச் சொல்லத் தன் உயிர் நண்பன் சரண்குமாரைத் தேடிச் சென்றான். அவன் வைத்தியசாலையில் அமைந்திருக்கும் சிற்றுண்டிச்சாலையில் எல்லோருக்கும் தேநீர் வாங்குவதற்குச் சென்றிருந்தான்.

சிற்றுண்டிச்சாலையில் நின்றிருந்த சரணை வெளியே அழைத்து வந்தான் ஆதித்யன்.

"என்ன வர்மா... என்ன விஷயம் நான் இன்னும் தேநீர் வாங்கவில்லை... அவசரமாக ஒரு அலைபேசி அழைப்பு வந்தது பேசி விட்டு இப்போது தான் உள்ளே போனேன் அதற்குள் நீ வந்து விட்டாய்..."

"குமரா... ஒரு ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமான விஷயம் ஒன்று உன்னிடம் சொல்ல வேண்டும்..."

"உன் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது ரொம்பப் பெரிய சந்தோசம் என்று... ஒரு வேளை ஏதாவது ஆதாரம் கிடைத்து விட்டதோ?"

"அதில்லை குமரா..."

"டேய் டேய் வர்மா... சோதிக்காமல் என்னவென்று சொல்லுடா... உனக்குப் புண்ணியமாகப் போகும்..."

"சரி சரி சொல்லுகிறேன்... அதைச் சொல்லத் தானே உன்னிடம் வந்தேன்... அங்கே பல்லவி கண் திறந்து விட்டாள்..."

"அடடா..."

"இருடா... நான் இன்னும் சொல்லி முடிக்கவில்லை... அவளுக்குச் சுயநினைவும் வந்து விட்டது..."

"வர்மா... என்னடா சொல்லுகிறாய்..."
என்றபடி இரு நண்பர்களும் கட்டியணைத்துக் கொண்டபடி தங்கள் சந்தோசத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

சரண்குமாரும் அனுபல்லவியும் நல்ல நண்பர்கள், சரணுக்கு ஒரு பதினைந்து வயது இருக்கும் போது அவனது சித்தி தற்கொலை முயற்சி செய்தார்... அவரது கணவன் இறந்ததும் அவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முன் வந்தனர்... திருமணம் மணமேடை வரை வந்து நின்று போனது... திருமணமேடையில் வைத்து இப்படி ஏற்கனவே திருமணமாகிக் கணவனை இழந்த பெண்ணை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மணமகன் சொன்னதும், ஏதேதோ பேச்சுக்கள் எல்லாம் அதிகமாகிச் சரணின் சித்தி என்னால் தானே எல்லாமே என்ற எண்ணத்தில் தற்கொலை செய்ய முயல அவரைக் காப்பாற்றி அவரது கழுத்தில் தாலி கட்டினார் அவனது சித்தப்பா...

அன்றிலிருந்து அவனுக்குத் தான் திருமணம் என்று ஒன்று செய்தால் அது திருமணமாகிக் கணவனை இழந்த ஒரு பெண்ணைத் தான் என்ற வைராக்கியமே வந்து விட்டது...

அந்த அடிப்படையில் தான் அவன் அனுவைத் திருமணம் செய்வது தொடர்பாக ஆதித்யனிடம் பேசி இருந்தான்.
அப்போது கூடப் பாவப்பட்டு ஒரு பெண்ணுக்கு நான் வாழ்வு கொடுக்கிறேன் என்று நெல்முனையளவு கூட அவன் எண்ணிப் பார்க்கவில்லை...

ஆனால் சரண்குமாருக்கான வாழ்க்கைத்துணை அனு இல்லை அவள் வேறொருத்தி என்று தான் இறைவன் எப்போதோ படைத்து விட்டாரே... இப்போது இருவரையும் சந்திக்க வைப்பதற்கான் அந்த நேரத்தைக் கணித்து விட்டு அந்தப் பெண்ணை அனுப்பி வைத்தார் போலும் இறைவன்... சரண்குமாருக்கு என்றே பிறந்தவள் அவன் தான் தானக்கானவன் என்பதை அறியாமலேயே அவன் இருக்கும் இடம் வந்து கொண்டிருந்தாள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

கையில் வைத்திருந்த 'வைரமுத்து எழுதிய தண்ணீர் தேசம்' என்ற புத்தகத்தைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த காயத்திரிக்கு ஒரே அலுப்பாக இருந்தது.

ஏஞ்சலினாவிடம் இருந்த புத்தகங்கள் அனைத்தையுமே காயத்திரி படித்து முடித்து விட்டாள். அடுத்து என்ன செய்வது என்பது போல இருந்தவள் அருகில் வந்து அமர்ந்தாள் ஏஞ்சலினா.

"என்ன காயு... எல்லாப் புத்தகமும் வாசித்து முடித்து விட்டாய் போல..."

"ஆமாம் ஏஞ்சல்... அடுத்து என்ன செய்வது... எனக்கு இப்படியே ஒன்றுமே செய்யாமல் ஒரே இடத்தில் இருப்பது அலுப்பாக இருக்கிறது... ஒரு வேலை கூடச் செய்ய விட மாட்டேன் என்கிறாய் நீ... ஏதாவது சமையல் செய்யட்டுமா?"

"அம்மா தாயே! நீங்கள் ஒரு வேலையும் செய்ய வேண்டாம்... என்ன சாப்பிட வேண்டும் என்று சொல்லு செய்து கொடுக்கிறேன்..."

"போடி இவளே... எனக்கு ஒன்றும் வேண்டாம்..."

"சரி சரி உடனே முகத்தை இப்படி முன்னால் இருக்கும் சுவற்றில் முட்டிக் கொண்டு இருக்கும் அளவுக்கு நீட்டாதே... வெளியே எங்கேயாவது போய் வருவோம்..."

"சும்மா போடி... நான் எங்கும் வர மட்டேன்..."

"உன் ஆத்துக்காரர் இருக்கும் இடத்துக்கும் வர மாட்டாயா..."

"என்னது... சும்மா என்னைச் சமாதானம் செய்வதற்காக எதையாவது சொல்லி வைக்காதே..."

"இல்லை காயு... நிஜமாகவே தான் கேட்கிறேன்... இப்படி நீ என் கூடத் தனியாக இருப்பதற்குப் பதில் நீ நேற்றுக் கேட்டது போல நான் உன்னை உங்களின் பழத் தோட்டத்து வீட்டுக்கு அழைத்துப் போகிறேன் போதுமா..."
என்ற தன் தோழியைச் சந்தோசமாகக் கட்டிக் கொண்டாள் காயத்திரி.

"ஏனோ தெரியவில்லை ஏஞ்சல்... ஆதியை எனக்குப் பார்க்க வேண்டும் போல இருக்கிறது... அவருக்குப் பக்கத்திலேயே இருக்க வேண்டும் போல இருக்கிறது..."
என்று தன் உள்ளக்கிடக்கையைத் தன் தோழியிடம் பகிர்ந்தாள் காயத்திரி.

அதன்படி அடுத்தநாட் காலையில் ஒரு பெரிய வாகனத்தில் காயத்திரியை அவளது உடல் நிலைக்கு ஏற்றவாறு அமர்த்திக் கொண்டு பழத் தோட்டத்தை நோக்கிப் பயணப்பட்டாள் ஏஞ்சலினா...

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 46


வெளிக் காற்று மெதுமெதுவாகத் திறந்திருந்த சாளரத்தின் ஊடாக அந்த அறையினுள் நுழைந்து நுழைந்து, கட்டிலில் படுத்திருந்த அனுவின் முடியை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

அந்த ஸ்பரிசத்தில் மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தவளுக்குக் கண்களில் விழுந்த சுற்றுப்புறம் கருத்தில் விழச் சற்று நேரம் பிடித்தது.

தான் படுத்திருந்த அறையில் யாருமே இல்லை என்பதை உணர்ந்தவள் மெல்ல இறங்கி அறைக்கதவை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

தலை விண்விண்ணென்று வலிப்பது போல இருந்தது.
அந்த வலியைப் பொருட்படுத்தாமல் அறைக்கதவைத் திறந்து வெளியே வந்தவளை வெளியே நின்று மருத்துவருடன் பேசிக் கொண்டிருந்த சூரியன் பார்த்து விட்டான்.

அவளிடம் வேகமாக வந்தவன்
"பல்லவி... நீ எதற்காக எழுந்து வந்தாய்... தலைக்காயம் ஆறும் வரை நீ ஓய்வு எடுக்க வேண்டும்... இப்படி எல்லாம் எழுந்து வரக்கூடாது..."
என்றபடி அவளது கையைப்பற்றி அவளை அறையை நோக்கித் திருப்பினான்.

தன் கையைப் பற்றியிருந்த சூரியனின் கைகளை உதறியவள்
"சூரியா... நீங்கள் எல்லோரும் என்னிடம் இருந்து எதை மறைக்கிறீர்கள்... நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கப் பார்க்க எனக்குப் பயமாக இருக்கிறது... உண்மையைச் சொல்லுடா அத்தையும் மாமாவும் எங்கே மகேந்தரைக்கூட ஆளையே காணோம்... ஒருவேளை அவர்கள் மூவரையும் அந்தக் கொலைகாரப் பாவிகள் அப்படியே கடத்திக் கொண்டு போய் விட்டார்களா? எதையாவது வாயைத் திறந்து சொல்லுடா... எனக்குத் தலையே வெடித்து விடும் போல இருக்கிறது சூரியா..."
என்று படபடத்தாள்.

சில நொடிகள் சூரியனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. "அண்ணனிடம் வேறு பெரிய தெனாவெட்டாக இவளை எப்படிச் சமாளிப்பது என்று எனக்குத் தெரியும் என்று சொல்லி விட்டேனே... அண்ணி கூட இப்போது இங்கே இல்லையே... என்ன செய்யப் போகிறேனோ..."
என்று நினைத்தவனுக்குத் தலை வலிப்பது போல இருந்தது.

பல்லவியின் கையைப் பற்றி அதைத் தட்டிக் கொடுத்தபடி
"இதோ பார் பல்லவி... நீ கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்லுகிறேன்... அதற்கு முன்னர் தயவுசெய்து நான் சொல்லுவதைக் கொஞ்சம் கேள்..."
என்றபடி அவளைச் சமாதானம் செய்ய முயன்றான் சூரியன்.

அவனை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்தவளோ சரி சொல்லு என்பதைப் போல அமைதியாக நின்றாள்.
அவளது அமைதியைத் தனக்குச் சாதகமாக்கிய சூரியன் அவளை மேலும் சமாதானப்படுத்தும் வகையில் பேசினான்.

"இப்போது நாங்கள் வைத்தியசாலையில் இருக்கிறோம் பல்லவி..."

"நான் என்ன மிருகக்காட்சிச்சாலையில் இருக்கிறோம் என்றா சொன்னேன்... சும்மா சமாளிக்காமல் விஷயத்துக்கு வாடா இவனே..."

"இப்படி நீ என்னைத் திட்டினால் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன் போ..."

"சரி சரி உடனே முகத்தைத் தூக்கி வைக்காதே... நான் திட்ட மாட்டேன் சொல்லு..."

"வீட்டுக்குப் போய் எல்லா விஷயங்களையும் ஆறஅமரப் பேசிக் கொள்ளலாம் பல்லவி... வீடு போய்ச் சேரும் வரையிலும் நீ கேள்வி கேட்டே என்னையும் அண்ணாவையும் சாவடிக்கக் கூடாது சரியா..."

"என்னடா இது... எதற்கு வீட்டுக்குப் போய்ப் பேச வேண்டும்... இங்கேயே சொல்லக்கூடாதா?"

"என்ன பல்லவி நீ... நாங்கள் எல்லோரும் கூட இதுவரை நடந்த விஷயங்களால் ஒரு மாதிரிப் பதட்டத்தில் இருக்கிறோம்... நீ கண் திறந்து பார்க்கும் வரை நாங்கள் பட்ட அவஸ்தை எங்களுக்குத் தான் தெரியும்... வீட்டுக்குப் போய்ப் பேசுவோம் என்றால் புரிந்து கொள்ள மாட்டாயா நீ..."
என்று வேண்டுமென்றே குரலில் கொஞ்சம் அழுத்தத்தை ஏற்றிச் சொன்னான் சூரியன்.

அவன் அவ்விதம் பேசியதற்குக் கொஞ்சம் பலன் இருந்தது.
தன் கைவிரல்களையே சில நொடி பார்த்து யோசித்தவள்
"சரி சரி சும்மா கத்தாதே... நான் ஒன்றுமே கேட்கவில்லை... வீட்டுக்குப் போய்ப் பாயைப் போட்டுப் படுத்துக் கொண்டே பேசலாம் போதுமா..."
என்றபடி சூரியனைப் பார்த்து மூக்கைச் சுழித்தவள் அறையினுள் போய் விட்டாள்.

அவள் அதற்கு மேலே கேள்வி கேட்க மாட்டேன் என்று சொன்னதும் சூரியனுக்கு ஏதோ மலையைப் புரட்டிப் போட்ட உணர்வில் பெரு மூச்சே வந்தது.

அப்பாடா என்று நெஞ்சை நீவி விட்டுக் கொண்டவன் மெல்ல நிமிரவும் அறையினுள் நுழைந்தவள் வேகமாக எட்டிப் பார்த்து
"அதெல்லாம் சரி சூரியா... இந்தக் குட்டி ஏன் இப்படி இருக்கிறாள்... குட்டியின் தோற்றமே வித்தியாசமாக இருக்கிறதே..."
என்று நாடியில் ஆட்காட்டி விரலை வைத்தபடி கேட்டாள்.

அறைக் கதவு அதிரும்படி அதைப் பிடித்துக் கொண்டு அவள் வேகமாக எட்டிப் பார்த்ததும் திடுக்குற்றுப் போன சூரியன்
"ஏய்... கொஞ்சம் இரு... யார் அந்தக் குட்டி... அதை முதலில் சொல்லு..."
என்றான் ஒன்றும் புரியாமல்.

"அதுவா சூரியா... நான் கஸ்தூரியைத் தான் குட்டி என்று சொன்னேன்... அவள் ஏன் இப்படி இருக்கிறாள்..."
என்று கேட்டபடி அவனருகே வந்தவளை முறைத்தவனோ
"மரியாதையாக ஓடிப் போய்விடு... உன் மட்டி பற்றியும் இப்போது ஒன்றும் சொல்ல முடியாது... எதுவாக இருந்தாலும் வீட்டுக்குப் போய்த்தான் சொல்ல முடியும்... இதற்குப் பிறகும் ஏதாவது கேட்டாய் என்று சொன்னால் இங்கே சொல்லி வாயில் ஊசி குத்தச் சொல்லி விடுவேன்... பேசாமல் படுத்து ஓய்வு எடு..."
என்று சொல்லியபடி அவளை இழுத்துப் போய்க் கட்டிலில் அமர வைத்தான்.

"ரொம்பத் தான் அடாவடி செய்கிறாய்... இரு ஆதியண்ணா வரட்டும்..."
என்றபடி கட்டிலில் சாய்ந்து கொண்டாள் பல்லவி.

"சரி தான் போ... நீ அண்ணாவையும் கேள்வி கேட்டுக் கொல்லக் கூடாது என்று சொன்னேனே மறந்து போய் விட்டதா... வீடு போய்ச் சேரும் வரை நீ மௌனவிரதம் சரியா..."
என்றவன் தமையனைத் தேடி வெளியே வந்தான்.

அதே நேரம் அனுவின் அறையை நோக்கி வந்து கொண்டிருந்தான் ஆதித்யன்.

தமையனைக் கண்டதும்
"அண்ணா வீட்டுக்குப் புறப்படலாம்... நான் இங்கே மருத்துவரிடம் பேசி விட்டேன்... சரணண்ணாவையும் கஸ்தூரியையும் வரச் சொல்லுங்கள்..."
என்றவன் ஆதியின் பின்னால் வந்த கஸ்தூரியிடம்
"கஸ்தூரி... நீ சரணண்ணாவோடு வீட்டுக்கு வா... வீடு போய்ச் சேரும் வரையில் பல்லவியின் கண்களில் பட வேண்டாம்... உன்னைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறாள் அவளை இப்போது தான் சமாளித்து இருக்கிறேன்..."
என்றவன் கஸ்தூரியைச் சரணுடன் அனுப்பி வைத்து விட்டு, அனுவை அழைத்துக் கொண்டு தமையனுடன் வீடு நோக்கிப் புறப்பட்டான் சூரியன்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

பழத் தோட்டத்து வீட்டில் இருந்த சமையலறையில் உணவு தயாரித்துக் கொண்டிருந்தாள் சுமித்திரை.

மாறன் இப்போது தான் இனிப்பு வாங்கி வருகிறேன் என்றபடி வெளியே போய் இருந்தான்.

அனு கண் விழித்து விட்டாள் அவளுக்குச் சுயநினைவு வந்து விட்டது என்று சூரியன் தகவல் சொல்லிய நேரத்தில் இருந்து இருவருக்குமே தலைகால் புரியவில்லை.

சுமித்திரை அனுவுக்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைத்து அவளுக்குக் கொடுக்க வேண்டும், அவளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டும் என்ற எண்ணத்தில் சமையலில் இறங்கி விட்டாள்.

சமையலறையில் இருந்து பார்க்கும் போது சமையலறை சாளரத்தின் வழியே வெளியே வீட்டுக்கு வரும் பாதை தெளிவாகத் தெரியும்.

சமையல் செய்தபடியே வெளியே மாறன் வருகிறானா இல்லையா என்பதைப் பார்த்தபடி இருந்தாள் சுமித்திரை.

அந்த நேரத்தில் ஏதோ வாகன சத்தம் கேட்கவே அனுவை அழைத்து வந்து விட்டார்களோ என்று எண்ணியபடி வேகமாக எட்டிப் பார்த்தாள் சுமித்திரை.

வெளியே வந்து நின்ற வாகனத்தில் இருந்து இரண்டு பெண்கள் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

யாராக இருக்கும் என நினைத்தபடி சமையலறையை விட்டு வெளியே வந்தாள் சுமித்திரை.

பழத் தோட்டத்து வீட்டின் முன்னால் வாகனத்தில் இருந்து இறங்கிய காயத்திரி அப்போது தான் அந்த வீட்டை முதல் தடவையாகப் பார்த்தாள்.

அவளைத் தொடர்ந்து இறங்கிய ஏஞ்சலினா
"என்ன காயு... வீடு எப்படி இருக்கிறது... கண்ணுக்குக் குளிர்ச்சியாக சும்மா அந்தமாதிரி இருக்கிறது அல்லவா..."
என்றபடி வாகனத்தின் உள்ளே இருந்த துணிப்பெட்டிகளை வெளியே எடுத்தாள்.

வீட்டு வாசலில் நின்று இவர்களைப் பார்த்த சுமித்திரை ஏஞ்சலினாவைப் பார்த்ததும் வேகமாக வந்து
"ஏஞ்சலக்கா... வாருங்கள் வாருங்கள் நேற்றுக் கூடப் பேசும் போது வருகிறேன் என்று ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லையே..."
என்றபடித் துணிப்பெட்டி ஒன்றைத் தூக்கினாள்.

"அது ஒன்றுமில்லை சுமித்தா... திடீரெனத் தான் கிளம்பினோம்..."
என்று பதில் சொன்ன ஏஞ்சலினா துணிப்பெட்டி ஒன்றை வீட்டு வாசலில் வைத்து விட்டு வந்தாள்.

துணிப்பெட்டியோடு திரும்பிய சுமித்திரை அப்போது தான் காயத்திரியைப் பார்த்தாள்.

அவளருகில் சென்று
"நீங்கள் ஆதியண்ணாவின் மனைவி காயத்திரி தானே..."
என்று கேட்டாள்.

அதற்குக் காயத்திரி பதில் சொல்லுவதற்கு முன்னர்
"உனக்கு எப்படித் தெரியும் சுமித்தா... இவளை இப்போது தானே முதல்தடவை பார்க்கிறாய்..."
என்று கேட்டாள் ஏஞ்சலினா.

அவள் அப்படிக் கேட்டதும்
"இவர்களின் புகைப்படம் தான் அண்ணாவின் சட்டைப் பையில் இருக்கிறதே..."
என்று பதில் சொன்னாள் சுமித்திரை.

அவர்கள் அவ்விதம் பேசிக் கொண்டு இருக்கும் போதே இன்னொரு வாகனம் வந்து நின்றது. அதில் இருந்து கஸ்தூரியும் சரணும் இறங்கினார்கள்.

வாகனத்தில் இருந்து இறங்கும் போதே வாசலில் நின்றிருந்தவர்களைப் பார்த்து விட்ட கஸ்தூரி ஓடி வந்து காயத்திரியையும் ஏஞ்சலினாவையும் சேர்த்துக் கட்டிக் கொண்டாள்.

அவள் கட்டிக் கொண்ட வேகத்தில் காயத்திரியை விழாமல் இருக்க அவளைப் பிடித்துக் கொண்டாள் சுமித்திரை.

"அக்கா... இருவரும் இப்போது தான் வந்தீர்களா? நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்... அதைக் கேட்டதும் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள் என்பதைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரே ஆசையாக இருக்கிறது..."
என்று சொன்னவளை ஒன்றும் புரியாமல் பார்த்தார்கள் மற்ற இருவரும்.

"என்னடி சொல்கிறாய்... எனக்கு ஒன்றுமே புரியவில்லை..."
என்ற காயத்திரியின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டுக் கைகொட்டிச் சிரித்தாள் கஸ்தூரி.

அப்படியே ஏஞ்சலினாவின் கன்னத்திலும் முத்தமிட்டு விட்டுக் கைகளைத் தட்டிக் கொண்டாள்.

அவளது அந்தச் சின்னப் பிள்ளை போன்ற அளவுக்கு அதிகமான சந்தோசத்தை அங்கே நின்றிருந்த நான்கு பேரும் இரசனையுடன் பார்த்திருந்தார்கள்.

சரணுக்கும் சுமித்திரைக்கும் அவளது அந்த எல்லையில்லாத சந்தோசத்துக்கான காரணம் தெரியும்.

ஆனால் ஏஞ்சலுக்கும் காயத்திரிக்கும் அவளது சந்தோசத்துக்கான காரணம் தெரியவில்லை.

ஆனாலும் அவளது சந்தோசம் அவர்களையும் தொற்றிக் கொண்டது.

அப்போது ஆதித்யனின் வாகனம் வீட்டுக்கு முன்னால் வந்து நின்றது.

முதலில் கீழே இறங்கிய ஆதித்யன் காயத்திரியைப் பார்த்து விட்டான்.

அவன் முகமெல்லாம் சந்தோசத்தில் பூரித்துப் போனது.
அவன் இங்கே மகேந்திரன் மற்றும் தாய் தகப்பனின் பிரச்சினையில் மூழ்கியிருந்த போதும் அவன் மனம் முழுவதும் அங்கே தன் மனைவி என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பதிலேயே இருந்தது.

அவளை நேரில் பார்த்ததுமே அவளைக் கட்டியணைத்து அவளின் நெற்றியில் முட்ட வேண்டும் போல அவனுக்கு இருந்தது.

சுற்றியிருப்பவர்களைக் கருத்தில் கொண்டவன் தன் தலைமுடியை அழுந்தக் கோதி அந்த எண்ணத்தை அப்போது அடக்கிக் கொண்டான்.

ஆதித்யனின் பின்னால் நின்ற அனுவை மெல்ல முன்னே அழைத்து வந்தான் சூரியன்.
கஸ்தூரிக்கு முன்னால் நின்றிருந்த காயத்திரி மெல்ல எட்டிப் பார்த்தாள்.

அவளது பார்வையில் அனுவே முதலில் விழுந்தாள்.
அதிலும் அவளது தலையில் கட்டியிருந்த கட்டுக் கண்ணில் பட்டுத் தொலைத்தது.

"ஐயோ! அனுவுக்கு என்ன நடந்தது..."
என்றபடி அனுவிடம் வேகமாக வந்தாள் காயத்திரி.

அப்போது தான் அனுபல்லவி தன்னை நோக்கி வேகமாக வந்தவளை நிமிர்ந்து பார்த்தாள்.

பார்த்தவளின் விழிகள் இமைக்க மறந்தன. அப்படியே அவள் நின்று விட்டாள்.

அனுவின் அருகில் வந்த காயத்திரி அவளது தலைக்காயத்தை மெல்லத் தொட்டு
"வலிக்கிறதா அனு..."
என்று மெல்லக் கேட்டாள்.

தன் தலையைத் தொட்டவளின் கரத்தையும் முகத்தையுமே பார்த்துக் கொண்டிருந்தாள் அனு... அவளது கண்கள் கலங்கியிருந்தன.

சில நொடிகள் அப்படியே நின்றவள் மெல்லக் காயத்திரியின் கரத்தை எடுத்துத் தன் கரங்களால் பொத்திப் பிடித்தபடி
"என்னை மன்னித்து விடு காயு... நான் உன்னிடம் சொல்ல வேண்டும் என்று தான் இருந்தேன்... ஆனால் என்னால் அப்போது சொல்ல முடியவில்லை... எனக்கு என்ன தண்டனை வேண்டும் என்றாலும் கொடு... ஆனால் கோபம் மட்டும் கொள்ளாதே..."
என்றபடி அழத் தொடங்கினாள்.

அவளது செய்கையில் அதிர்ந்து போன காயத்திரியின் தோளை அணைத்தபடி அவளது காதருகில் குனிந்து
"உன் அனுவுக்குச் சுயநினைவு வந்து விட்டது காயும்மா... ஆனால் உனக்கு நடந்தது எதுவும் அவளுக்குத் தெரியாது பார்த்துப் பேசு..."
என்று மெல்லச் சொன்னான் ஆதித்யன்.

அவன் சொன்னதைக் கேட்டவள் எப்படி உணர்ந்தாள் என்று அவளாலேயே கணிக்க முடியவில்லை.

சந்தோசம் தாங்க முடியாமல் அனுவை இழுத்து அணைத்தபடி
"அனு... எனக்குக் கோபம் எல்லாம் இல்லை... வருத்தம் தான்... நான் உன்னைப் போய்க் கோபித்துக் கொள்வேனா... நான் உன் மீது உயிரே வைத்திருக்கிறேன் அனு... இனிமேல் இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயும் போகக் கூடாது நீ..."
என்றாள் கலங்கிய கண்களுடன்...
இரண்டு தோழிகளும் கட்டியணைத்துக் கண்ணீரால் தம் நட்பின் மீது இது நாள் வரை கிடந்த தூசுதுணிக்கையைக் கழுவிச் சுத்தம் செய்து கொண்டார்கள்.

காயத்திரிக்குப் பின்னால் நின்றிருந்த ஆதித்யன் மீண்டும் காயத்திரியின் காதருகில் குனிந்து
"இவள் மீது மட்டும் தான் உயிரை வைத்து இருக்கிறாயா? அப்படியானால் என் மீது இல்லையா?"
எனச் சிறு பிள்ளை போலக் கேட்டான்.

அவன் அப்படிக் கேட்டதும் காயத்திரி அழுது கொண்டே சிரித்தாள்.

கஸ்தூரியோ இப்போது கட்டியணைத்தபடி இருந்த காயத்திரியையும் அனுவையும் இறுகக் கட்டிக் கொண்டாள்.

மூவரையும் பார்த்திருந்த சூரியன் தன் விரல்களால் அவர்களுக்குத் திருஷ்டி கழிப்பது போலச் செய்து நெற்றியில் விரல்களால் நெட்டி முறித்தான்.

காயத்திரியின் அணைப்பில் நின்றிருந்த அனுவுக்கு இந்த ஒரு வருடத்தில் நடந்தேறிய விஷயங்கள் தெரிய வரும் போது அவள் நிலை எப்படி இருக்கும்.

அதிலும் இப்போது அன்புப் பிடியில் நிற்பவள் சிறிது நேரத்தில் காயத்திரியின் தாய்மைத் தோற்றத்தைப் பார்த்ததும் இதுவரை மறைத்த விஷயங்கள் எல்லாம் அவளுக்குத் தெரிய வந்து விடும்.
அதன் பிறகு அனுவின் நிலை என்னவாகும்? அப்போது அவளுக்குக் காயத்திரி பலமாக நிற்பாளா?
 
Status
Not open for further replies.
Top