All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானுரதி துரைராஜசிங்கமின் ‘வெள்ளை ரோஜாக்கள்’ - கதை திரி

Status
Not open for further replies.

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 28

8aa3a170a5996eb04eb8388d291a4d6f~3.jpg

IMG-20210627-WA0005~3.jpg

கூண்டுக்குள் இருந்த சிறு சிறு குருவிகள் கூடக் கீச்சுடுவதை ஒரு நிமிடம் நிறுத்தி இருந்தன.

திடீரென ஓசைகள் எல்லாம் மட்டுப் பட்டது போல எங்குமே ஒரே நிசப்தம் நிலவியது.

ஏஞ்சலினாவின் அணைப்பில் இருந்து மெல்ல விலகிய காயத்ரி ஏஞ்சலினாவின் கண்ணீரைத் துடைத்து விட்டாள்.

“இந்த வாழ்க்கையே ரொம்ப விசித்திரமானது காயு... எப்போது என்ன நடக்கும் என்றே தெரியவில்லை… எது எப்படியோ உன் ஆதியோடு உன் வாழ்க்கை பிணைக்கப் பட்டு விட்டது அது போதும்…”

“நான் இதைக் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை ஏஞ்சல்… அவரை முதல் முதல் பார்த்தது, பேசியது,பழகியது,அவர் தன் காதலை சொல்லியது, நான் வேறொருவரை திருமணம் செய்தது, ஐந்து மாதத்திலேயே என் திருமண வாழ்வு முடிந்து போனது, அதன் பிறகு ஆதியைப் பார்த்தது, அவர் என் கழுத்தில் தாலி கட்டியது, அவரை நான் தவறாக நினைத்தது எல்லாமே கனவு போல இருக்கிறது… இதெல்லாம் நிஜமாகவே எனது வாழ்வில் நடந்தவை தானா? என்று தோன்றுகிறது ஏஞ்சல்”

“உன் வாழ்க்கையிலும் வசந்தம் வீசத் தொடங்கி விட்டது என்று சொல் காயு”

“நீ வேறு ஏஞ்சல்… இப்போது தான் புயலே வீசத் தொடங்கி இருக்கிறது…”

“ஏய் காயு… ஏன் அப்படி சொல்கிறாய்?”

“ஆதியின் முகத்தைப் பார்த்துப் பேசவே பயமாக இருக்கிறது ஏஞ்சல்… நான் செய்து வைத்த வேலை அப்படி… என்னைப் பார்த்தாலே அவர் முகம் கடுகடுவென்று மாறுகிறது தெரியுமா?”

“எல்லாம் சீக்கிரமே சரியாகும் காயு… அப்புறம் ஒரு விஷயம்… அனுபல்லவி இறந்து விட்டாள் என்று நீங்கள் நம்பத் தொடங்கிய பின்னர் இங்கே இந்த வீட்டில் அவளைப் பார்த்ததும் என்ன தோன்றியது உங்களுக்கு”

“ஏஞ்சல்… அதை வார்த்தைக்குள் கொண்டு வர முடியாது தெரியுமா?”
என்ற காயத்ரியின் கண்கள் மீண்டும் கலங்கின.

அருகில் இருவரும் பேசுவதைப் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்த கஸ்தூரி வாய் விட்டே அழத் தொடங்கினாள்.

அதே நேரத்தில் மெல்ல நடந்து வந்த அனுபல்லவி, காயத்ரி அருகே அமர்ந்து அவளது கண்களை மெல்லத் துடைத்து விட்டு, அவள் தோளோடு சாய்ந்து கொண்டாள்.

அதைப் பார்த்த கஸ்தூரி எழுந்து ஓடி வந்து அனுபல்லவியின் முன்னால் தனது முகத்தைக் காட்டவே, அவளது முகத்தை ஒரு தடவை உற்றுப் பார்த்த அனுவோ காயத்ரியை அண்ணாந்து பார்த்தாள்.

அவளது பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட காயத்ரி, சம்மதம் சொல்வது போல மெல்லத் தலையசைத்தாள்.
உடனே அனுபல்லவி, கஸ்தூரியின் கண்ணீரையும் துடைத்து விட்டாள்.

காயத்ரியைத் தனியே அழைத்து வந்த ஏஞ்சலினா தோட்டத்தில் போடப் பட்டிருந்த மரக்கதிரையில் அமர்ந்து கொண்டு,
“காயு… அனுவுடையதும் உன்னுடையதும் இந்த அழகான ஆழமான நட்பைப் பார்க்கின்ற போது எனக்குக் கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது தெரியுமா?”
என்றபடி தன் தோழியை இறுக அணைத்துக் கொண்டாள்.

தன்னை அணைத்தவளை மெல்ல விலக்கி அவள் முகம் பார்த்து,
“ஏன் ஏஞ்சல்… உன்னுடைய நட்பு மட்டும் எந்த விதத்தில் குறைந்தது. நாம் ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்ட காலம் கூட விரல் விட்டு, எண்ணக் கூடிய மாதக்கணக்கு தானே, அதற்குள் என்னைப் புரிந்து கொண்டு எனக்காக எத்தனை விடயங்கள் செய்திருக்கிறாய் தெரியுமா… அதுமட்டுமின்றி நாம் எத்தனை சந்தோஷ துக்கங்களை ஒருவரிடம் ஒருவர் உரிமையுடன் பகிர்ந்து இருக்கிறோம் தெரியுமா?”
என்றாள் உண்மையான நட்புடன்.

தன் தோழி கூறிய இறுதி வார்த்தைகளைக் கேட்ட ஏஞ்சலினாவிற்குத் தொண்டைக்குள் ஏதோ அடைப்பது போல இருந்தது.

காயத்ரிக்கு அருகே நெருங்கி அமர்ந்து கொண்டு அவளது கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“காயு நான்…நீ நினைப்பது போல் இல்லை தெரியுமா?”

“என்ன நான் நினைப்பது போல் இல்லை…”

“காயு நான் கூட உன்னிடம் ஒரு விடயம் பற்றிச் சொல்லவே இல்லை தெரியுமா?”

“ஏய்… அதற்கு ஏதாவது காரணம் இருக்கும் தானே?”

“நானும் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டே இருந்தேன் தெரியுமா?”

“நினைத்துக் கொண்டே இருந்தால் சரியா ஏஞ்சல்… மனதைத் திறந்து, வாயைத் திறந்து சொல்ல வேண்டியது தானே?”

“இது பற்றி உன்னிடம் சொல்வது அவசியமா? இல்லையா? என்கிற குழப்பம் தான் காயு…”

“என்னிடம் சொல்வதற்கு உனக்கு எதற்குக் குழப்பமும் தயக்கமும் ஏஞ்சல்… அப்படியானால் நீ என்னை உன் உயிர்த்தோழி என்று சொல்வதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சுத் தானா?”

“அட ஆண்டவரே… அப்படி எல்லாம் இல்லை காயு… நீயாக யோசித்து எதையாவது சொல்லி வைக்காதே”

“சரி நானாக ஒன்றும் சொல்ல வேண்டாம் என்றால் நீ சொல்ல நினைத்த விஷயத்தை முதலில் சொல்லி முடி…”

“அது வந்து காயு…”

“அடடா… ஜவ்வு போல இழுக்காமல் விடயத்தைப் பட்டென்று சொல்லு ஏஞ்சல்…”

“காயு… என் கடந்த கால வாழ்க்கை பற்றி உன்னிடம் சொல்ல வேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன்… ஆனால் நீயே நிறைய பிரச்சினையில் இருக்கிறாய் இதற்கிடையே என்னைப் பற்றி வேறு சொல்லி உன்னை மேலும் சங்கடப் படுத்த வேண்டுமா என்று தான் இத்தனை நாள் பேசாமல் இருந்தேன். ஆனால் இன்று ஏனோ உன்னிடம் என் கடந்த காலம் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும் போலத் தோன்றுகின்றது காயு…”

“நல்ல வேளை இப்போதாவது சொல்லத் தோன்றியதே… அது சரி ஏஞ்சல் ஏதாவது காதல் கடலில் குதித்து விட்டாயா? அம்மா ஏதும் மறுப்பு சொல்லி விட்டார்களா?”

“ஏய்… ஏய்… கொஞ்சம் இரு காயு… உன் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டது போதும்… நான் சொல்ல வந்த விஷயமே வேறு… நான் சொல்லி முடிக்கும் வரை நீ உன் திருவாயைத் திறக்காமல் இருந்தாலே போதும்”

“சரி சரி நீ சொல்லி முடி… நான் இடையில் ஒன்றுமே பேசவில்லை”
என்றபடி தனது வாயை இரண்டு கரங்களாலும் பொத்திக் கொண்டாள் காயத்ரி…

மரக்கதிரையில் இருந்து எழுந்து கொண்ட ஏஞ்சலினா மெல்ல நடந்து சென்று, வெள்ளை ரோஜாச் செடி ஒன்றினருகே நின்று அதனை மெல்ல வருடிக் கொடுத்தாள்.

தோட்டத்தில் நின்றிருந்த ஏஞ்சலினா காயத்ரிக்கு முதுகுப்புறத்தைக் காட்டியவாறு நின்றதால், அவளது முகம் பிரதிபலித்த உணர்ச்சிகளைக் காயத்திரியால் உணர முடியாமல் போய்விட்டது.

சில நிமிடங்கள் வரையில் ஏஞ்சலினாவிடம் இருந்து சத்தம் ஏதும் வராமல் போகவே, பொறுமையிழந்த காயத்ரி பட்டென்று எழுந்து தன் தோழியைச் சட்டென்று திருப்பினாள்.

“எத்தனை நேரம் இப்படியே மௌனமாக நிற்பாய் ஏஞ்சல்… வாயைத் திறந்து எதையாவது சொல், நீ இப்படித் தயங்கித் தயங்கிப் பேசும் பெண் இல்லையே… எதையும் பட்டென்று சொல்லி விடுவாயே”
என்று கேட்ட காயத்ரியின் விழிகளை ஒரு நொடிக்கும் குறைவாகப் பார்த்த ஏஞ்சலினா. தனது மனதினுள் புதைத்து வைத்த தன் கதையைத் தன் தோழியிடம் ஒப்புவித்தாள்.

ஏஞ்சலினா நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண். அவளது பெற்றோருக்கு அவள் ஒரே மகள்.
இவளது பதினெட்டாவது வயதிலேயே இவளுக்குத் திருமணம் செய்து வைப்பது தொடர்பான பேச்சு அடிபட்டது.

ஏஞ்சலினாவின் தந்தையின் நண்பனின் மகன் வெளிநாட்டில் இருந்து படிப்பை முடித்து விட்டு வந்திருக்கிறான் என்றும் அவனைத் திருமணம் செய்து கொள்ளுமாறும் ஏஞ்சலினா வற்புறுத்தப் பட்டாள்.

சிட்டுக்குருவி போலச் சுற்றித் திரிந்த பெண்ணுக்குத் திருமணம் என்கிற வார்த்தையே கசந்தது.

தன் பெற்றோரிடம் தனக்குத் திருமணம் செய்து கொள்வதில் சுத்தமாக விருப்பம் இல்லை. அதனால் என்னைப் படிக்க விடுங்கள் என்று மன்றாடிக் கேட்டுப் பார்த்தாள்.

தன்னைப் போலத் தன் மகளும் கஷ்டங்களை அனுபவிக்காமல் சகல செல்வங்களுடனும் வாழ வேண்டும் என நினைத்த ஏஞ்சலினாவின் தந்தை தானாகவே தேடி வந்த வரனை விட மனமில்லாமல், தன் நண்பனின் மகனுக்கும் தன் மகளுக்கும் திருமணம் முடித்து வைத்து விட்டார்.

கோடீஸ்வரர் வீட்டில் வாழ்க்கைப் பட்டுச் சென்ற ஏஞ்சலினாவிற்கு அந்த வீட்டில் கிடைத்த வரவேற்பு வேப்பங்காயெனக் கசந்தது.

திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகவில்லை. ஏஞ்சலினாவின் கணவனான அன்ரனி மரணித்து விட்டான்.

அவன் இறந்த பின்னர் தான் அவனுக்கு நுரையீரல் புற்றுநோய் இருந்திருக்கிறது என்ற விஷயமே ஏஞ்சலினாவுக்குத் தெரியும்.

கெட்ட பழக்கங்களுக்கு அடிமையான மகனுக்குத் தன்னுடைய ஊரில் ஒரு பெண்ணைப் பார்த்துக் கட்டி வைத்து விட வேண்டும் என்று இருந்த அன்ரனியின் தந்தைக்கு, தானாகச் சென்று மாட்டிய ஆடு என ஏஞ்சலினாவின் தந்தை மாட்ட, அதுவே ஏஞ்சலினாவின் வாழ்க்கை பலியாகக் காரணமாகியது.

அதன் பிறகு ஏஞ்சலினா தனது தந்தையிடம் முகம் கொடுத்துப் பேசுவதேயில்லை.

தந்தை மேல் ஏற்பட்ட கோபத்தில் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டாள்.
ஏஞ்சலினாவின் தாய் தான் மகளுடன் தானும் வருவேன் என்று பிடிவாதம் பிடித்து அவளுடன் வந்து வசிக்கிறாள்.

இத்தனை விஷயத்தையும் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் முழுமூச்சாக ஏஞ்சலினா சொல்லி முடித்தாள்.

ஏஞ்சலினா கூறியதை இடையூறு செய்யாமல் கேட்ட வண்ணம் இருந்த காயத்ரிக்கோ என்ன செய்வது எதைப் பேசுவது என்றே புரியவில்லை. அந்த நொடியை எப்படி உணர்ந்தாள் என்பதனை அவளாலேயே கணிக்க முடியவில்லை.

“ஏஞ்சல்… என்னடி இப்படி எல்லாம் சொல்கிறாய்?”

“என்ன எப்படி எல்லாம் சொல்கிறேன்?”

“இறைவன் ஏன் இப்படி எங்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்?”

“காயு… அவரும் பாவம் தானே அவருக்கும் பொழுது போக வேண்டாமா?”
என்று சிரித்தவளை இமைக்காமல் பார்த்திருந்த காயத்ரி அவளை இறுக அணைத்துக் கொண்டாள்.

“உனக்குக் கொஞ்சம் கூட வருத்தமாக இல்லையா?”

“ஏன் வருத்தமாக இல்லை… அதெல்லாம் ஒரு காலத்தில் இருந்தது காயு”

“ஒரு காலத்தில் இருந்ததா? அப்படியானால் இப்போது?”

“இப்போது துளி கூட வருத்தம் இல்லை காயு… உன்னைச் சந்தித்து, உன் நட்புக் கிடைக்கும் வரையில் நான் இந்த வாழ்க்கையை வெறுத்தவள் தான்… ஆனால் இப்போது உன்னையும் கஸ்தூரியையும் பார்க்கும் போது எனக்கும் வாழ வேண்டும் என்று ஆசை பிறந்து விட்டது தெரியுமா?”
என்றபடி புன்னகைத்தாள் ஏஞ்சலினா.

“இத்தனை விஷயத்தையும் இப்படி மனதினுள் புதைத்து வைத்து விட்டாயே ஏஞ்சல்”

“அப்படியில்லை காயு… நான் யாரிடமும் மனம் திறந்து பேசியதில்லை… எனக்குக் கிடைத்த அன்பான தோழி நீ மட்டும் தான்… உன்னிடம் இதை எல்லாம் சொல்லி உன்னை மேலும் வருத்தத்திற்கு உள்ளாக்க வேண்டாமே என்று இத்தனை நாட்கள் சொல்லவில்லை காயு… ஆனால் இன்று என்னவோ தெரியவில்லை உன்னிடம் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது காயு அது தான் எல்லாவற்றையும் கொட்டி விட்டேன்.”

“இப்போதாவது சொன்னாயே ஏஞ்சல்”

“காயு உன்னிடம் ஒன்று கேட்கட்டுமா?”

“ம்ம்ம்… தாராளமாகக் கேட்கலாமே”

“காயு… இப்போது போலவேயே என்னுடன் எப்போதும் நீ இருப்பாயா?”

“லூசு… இதென்ன கேள்வி… உன்னைத் தொந்தரவு செய்து கொண்டு உன்னோடு தான் நான் இருப்பேன் போதுமா?”
என்ற தன் தோழியை இறுக அணைத்துக் கொண்டு கண் கலங்கினாள் ஏஞ்சலினா.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“பூக்கள் எல்லாம் உன்னை தொட
தவம் இருக்கும்
நீயும் தொட சருகுக்கும்
உயிர் பிறக்கும்

வானவில் வந்துனக்கு
குடை பிடிக்கும்
எங்களுக்கும் அதற்குள்ளே
இடம் இருக்கும்”
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 29

4dcc74191b9ae099319ce366d0e722c6~2.jpg

IMG-20210701-WA0016~2.jpg

இராத்திரிப் பொழுதிலே, காலநிலை மாற்றத்தினால் காற்று சுழன்று சுழன்று வீசிக் கொண்டிருந்தது.

அதே நேரத்தில் மெல்லிய வெளிச்சத்தைப் பூமியை நோக்கிப் பொழிந்து கொண்டிருந்தது வெண்மதி.

தோட்டத்தின் ஓரமாகப் பந்தல் போட்டுப் படர விடப் பட்டிருந்த குண்டுமல்லிகையும், அதை ஒட்டி மலர்ந்திருந்த பாரிஜாத மலரும் போட்டி போட்டுக் கொண்டு மணம் பரப்பிக் கொண்டிருந்தன.

அந்த இனிய மலர்களின் நறுமணம் மெல்ல நாசி தீண்டிச் செல்வதை லேசாக இரசித்தபடி மேலே வானில் பவனி வந்து கொண்டிருந்த வெண்ணிலாவை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யவர்மன்.

பார்வை வெண்ணிலவில் நிலைத்து நின்றாலும் அவனது எண்ணங்கள் தன் வீட்டு நபர்களையே சுத்தி வந்தது.

காயத்ரிக்கு அடுத்த மாதத்தில் வளைகாப்பு செய்ய வேண்டும், நம் கஸ்தூரிக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணையைத் தேட வேண்டும், பல்லவிக்குச் சீக்கிரமாகக் குணமாக வேண்டும், பழத் தோட்டத்திற்குச் சென்ற சூரியனிடம் இருந்து இன்னும் எந்தப் பதிலும் வரவில்லை அதைப் பற்றியும் பேச வேண்டும்… என வரிசையாக எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன.

வெண்ணிலாவில் பார்வையையும் எண்ணங்களில் வீட்டினரையும் நிலைக்க விட்டுத் தனியே அமர்ந்திருந்த ஆதித்யனை, தோட்டத்து வீட்டில் இருந்து பார்த்து விட்ட காயத்ரி அவனை நோக்கி வந்தாள்.

அவனிடம் எப்படியாவது மன்னிப்புக் கேட்டு விட வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருந்தவளுக்கு, அவன் தனியே அமர்ந்திருந்தது சிறிது தைரியத்தைக் கொடுத்தது.

அவன் என்ன திட்டினாலும் அதை யாருமே கேட்காத தனி இடத்தில் இருந்து திட்டினால் அவளுக்கு நன்றாக இருக்கும் என்பது போலத் தோன்றியதால்… இன்று எப்படியும் மன்னிப்புக் கேட்டு விட வேண்டும் என்று வந்து விட்டாள்.

ஆதித்யனின் பின்னாலே வந்து நின்ற காயத்ரிக்கு, அவனை எப்படி அழைப்பது என்று குழப்பமாக இருந்தது.
அதனால் தனது வரவை உணர்த்த லேசாகச் செருமினாள்.

ஆனால் அவனிடம் இருந்து எந்த அசைவுமே இல்லை. அவனது கவனத்தைத் தன்னிடம் திருப்புவதற்காக மீண்டும் செருமியவளைத் திரும்பிக் கூடப் பார்க்காமல், உள்ளே எழுந்து சென்று விட்டான் ஆதித்யன்.

காயத்ரிக்கோ அழுகை வரும் போல இருந்தது. தன்னிடம் பேசாததைக் கூட அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அவன் திரும்பிக் கூடப் பார்க்காமல் சென்றது தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு தடவையாவது திரும்பிப் பார்த்தால் குறைந்தா போய் விடுவார் என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

ஆதித்யன் வீட்டினுள் சென்ற அடுத்த நொடியே காயத்ரியைத் தேடிக் கொண்டு கஸ்தூரி வந்தாள்.

“அக்கா… இந்தக் குளிருக்குள் இங்கே என்ன செய்கிறீர்கள்? உள்ளே வாருங்கள்… அத்தான் என்னைத் திட்டுகிறார்”
என்றபடி தமக்கையை உள்ளே அழைத்துச் சென்றாள்.

அவள் கூறிய வார்த்தைகளைக் கேட்டவளுக்கோ கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

“பரவாயில்லையே கோபமாக இருந்தாலும் கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதே அந்தச் சிடுமூஞ்சிக்கு…”
எனத் தன் கணவன் ஆதித்யனைப் பற்றிப் பெருமையாகவே நினைத்துக் கொண்டாள் காயத்ரி.

தன் அறையினுள் சென்ற ஆதித்யனுக்கு நெடு நேரமாகவே தூக்கம் வரவில்லை.

“இத்தனை நாள்களில் ஒரு நாளாவது வந்து என்னிடம் பேச வேண்டும் என்று அவளுக்கு தோன்றவில்லையோ… இன்று மட்டும் என்ன வந்ததாம்…”
என்று காயத்திரியை மனதினுள் வைதான்.

காயத்ரியைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவனின் சிந்தனையில் இப்போது சூரியன் சிம்மாசனம் இட்டு இருந்தான்.

“வர வர சூரியனுக்குப் பொறுப்பே இல்லாமல் போய் விட்டது… போன இடத்தில் இருந்து ஒரு அலைபேசி அழைப்பு எடுத்துத் தகவல் சொல்லக் கூட அவனுக்கு நேரமில்லையோ… அலைபேசியை வேறு அணைத்து வைத்திருக்கிறான் போல… தொடர்பே கிடைக்க மாட்டேன் என்கிறது…?”

“இவன் பழத் தோட்டத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டேன் என்று குறுஞ்செய்தி அனுப்பியதோடு சரி… வேறு எந்தத் தகவலும் சொல்லவில்லையே…”
என லேசான பதட்டத்துடனேயே யோசித்துக் கொண்டிருந்தான் ஆதித்யவர்மன். அவனுக்கு ஏதோ உள்ளுணர்வில் சொல்ல முடியாத இனம் புரியாத வலி ஒன்று உருவானது.

ஆதித்யனின் அந்த இனம்புரியாத வலிக்கும் காரணம் இருந்தது. ஒரு முறை பழத் தோட்டத்துக்கு சென்ற தாயும் தந்தையும் தாங்கள் தோட்டத்திற்கு வந்து விட்டோம் என்று குறுஞ்செய்தி அனுப்பியதோடு சரி, பிறகு எந்தத் தகவலுமே வரவில்லை… அதன் பிறகு பெற்றோர் இறந்து விட்டனர் என்ற செய்தி மட்டுமே ஆதித்யனுக்குக் கிடைத்தது.

அது போலவே சூரியனுக்கும் ஏதும் ஆகி விடுமோ என்று அவன் உள் மனது லேசாகப் பதறியது.

“இருக்காது… நான் தேவையில்லாமல் அதையும் இதையும் சேர்த்து யோசிக்கக் கூடாது. அவன் ஏதேனும் அதிக வேலையாக இருப்பான்…”
என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டான்.

இப்படியே யோசித்துக் கொண்டிருந்தவன் எப்போது தூங்கினானோ தெரியவில்லை. அவனது அறைக் கதவைத் தட்டிய ஓசை கேட்டே திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான்.

சற்று நொடிகளின் பின்னரே அறைக் கதவை யாரோ தட்டுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டவன், இவ்வளவு அதிகாலையில் யார் வந்து கதவைத் தட்டுகிறார்கள் என யோசித்தவாறே சென்று அறைக் கதவைத் திறந்தான்.

“அண்ணா… நேரம் ஒன்பது ஆகி விட்டது… இவ்வளவு நேரமும் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்… காலைச் சாப்பாட்டு நேரம் முடியப் போகிறதே…”
என்றபடி கஸ்தூரி நின்றிருந்தாள்.

“என்னது”
என்றபடி சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தவனோ லேசாக அசடு வழிந்துபடியே
“அடடா… இராத்திரி தூங்குவதற்கு நேரமாகி விட்டதம்மா… அதனால் காலை எழுந்து கொள்ளத் தாமதமாகி விட்டது.”
என்றான்.

“அது தான் நானும் யோசித்தேன் அண்ணா… சரியாக எட்டு மணிக்குக் காலை உணவுக்கு வரும் அண்ணாவைக் காணவில்லையே என்ன நடந்ததோ என்று தான் பார்க்க வந்தேன்”

“மற்றவர்கள் எல்லோரும் சாப்பிட்டு விட்டார்களா?”

“ஆமாம் அண்ணா… உங்களைக் காணவில்லையே என்று அக்கா சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தார்கள் ஒரு வழியாக அதட்டி உருட்டி உணவு உண்ண வைத்து விட்டேன்… இந்த நேரத்தில் அக்கா நேரத்துக்கு உணவு உண்ண வேண்டுமே… நீங்கள் சீக்கிரமாகக் குளித்து விட்டு வாருங்கள் அண்ணா”
என்றபடி கஸ்தூரி சென்று விட்டாள்.

கஸ்தூரி சென்றதுமே
“பரவாயில்லையே என்னைத் தேடக் கூட ஒன்றிரண்டு ஜீவன்கள் இருக்கிறதே”
என யோசித்தவாறு குளிக்கச் சென்றான் ஆதித்யன்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

காலை மெதுவாக மதியத்தைக் கடந்து மாலையை அடைந்து கொண்டிருந்தது.
பலப்பல பறவைகள் விதம் விதமாக ஒலி எழுப்பியவாறு தங்கள் கூடுகளை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன.

ஆதித்யனின் வரவுக்காக வீட்டின் தலைவாசலைப் பார்த்தவாறு தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தாள் காயத்ரி.

தொலைவில் ஆதித்யன் வருவதைப் பார்த்ததும் வேகமாகச் சென்று அவனை இடைமறித்தாள்.

“என் மேல் பிழை தான்… நான் செய்தது பெரிய தவறு தான்… அதற்காக ஏதோ காணாததைக் கண்டது போல என்னைக் கண்டால் ஏன் இப்படி வெறுத்து ஓடுகிறீர்கள்”
என்று மூச்சு வாங்கக் கேட்டாள்.

ஆதித்யனோ ஏதும் பேசாமல் எங்கோ பார்த்தபடி நின்றான்.
காயத்ரிக்கோ அழுகை வரும் போல இருந்தது.

“உங்களுக்கு என் மீது கொஞ்சம் கூட மரியாதை இல்லையா? இப்படி உதாசீனம் செய்கிறீர்களே”
என்று கேட்டவளை ஒரு முறை முறைத்துப் பார்த்தவனின் பார்வை அவளது வெற்று நெற்றியிலும் அவள் உடுத்தியிருந்த சேலையிலும் வந்து நின்றது.

“உன்னையும் உன் தோற்றத்தையும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்து விட்டு, யாரை யார் உதாசீனம் செய்கிறார்கள் என்று நீயே தெரிந்து கொள்… அதோடு நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்”
என்றவன் வேகமாக உள்ளே சென்று விட்டான்.

ஆதித்யன் உள்ளே சென்றதும்
“ஏன் என் தோற்றத்திற்கு என்ன வந்தது… அதோடு இவர் ஏன் இப்படி உயிரோடு இருக்கிறேன் அது இதென்று இந்தப் பேச்சுப் பேசுகிறார் “
என யோசித்தபடி தன் அறையினுள் சென்று அங்கிருந்த நிலைக் கண்ணாடி முன் நின்றாள்.

தன் கணவன் கோபமாகத் தனது நெற்றியைப் பார்த்தானே என யோசித்தவாறே நெற்றியைத் தடவிக் கொடுத்த அவளது விரல்கள் இரு புருவங்கள் மத்தியில் வந்து நின்றது.
உடனே குனிந்து தன் சேலையைப் பார்த்தாள்.

அப்போது தான் அவளுக்குத் தன் கணவன் கூற வந்த விடயம் புரிந்தது. அதோடு சுளீரென ஒரு உண்மையும் புரிந்தது.

ஆதித்யன் அவள் கழுத்தில் தாலி கட்டும் வரையில் வேண்டுமானால் அவள் நெற்றியில் திலகம் இல்லாமல் இருந்திருக்கலாம், பெரும் பாலும் வெள்ளை நிறம் கலந்த சேலையை உடுத்தி இருக்கலாம்.

ஆனால் இன்று அவள் ஆதித்யனின் மனைவி, ஆனால் அவளது நெற்றியில் குங்குமம் இல்லை, அவள் நிறப் புடவை உடுத்தவில்லை.

அவன் கூறிச் சென்ற
“அதோடு நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்”
என்ற வார்த்தை அவளைக் கொல்லாமல் கொன்றது.

தன் அறையை விட்டு வேகமாக வெளியே வந்தவள் நேராகச் சுவாமி அறைக்குச் சென்றாள்.

சுவாமி அறையில் மண்டி இட்டு அமர்ந்தபடி தீபத்தை ஏற்றிவிட்டு, அங்கிருந்த குங்குமத்தை விரல் நிறைய அள்ளி நெற்றியிலும் உச்சி வகிட்டிலும் தன் தாலியிலும் வைத்துக் கொண்டாள்.

இரண்டு சொட்டுக் கண்ணீர்த்துளி அவளது தாலியில் பட்டு அவளது சேலையில் தெறித்தது.

“அம்மா தாயே… இந்தத் தாலிக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது…என் ஆதியோடு நான் நிறைய வருடங்கள் வாழ வேண்டும்…”
என்று கண்களை மூடியபடி வேண்டிக் கொண்டவள். பின்னர் முகத்தை மூடிக் கொண்டு தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா...
வேறு துணை யாரம்மா...
அம்மா மடியேந்தி பிச்சை கேட்கிறேன்
மறுவாழ்வு உன்னைக் கேட்கிறேன்"
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 30

2c65b8fa0d02b46a7ea9e2921fc33ca2~2.jpg

IMG-20210701-WA0015~2.jpg

IMG-20210701-WA0034~2.jpg

காற்று சாமரம் வீசுவது போல மெல்ல மெல்ல வீசிக் கொண்டிருந்தது.

மரங்களோ மெது மெதுவாக அசைந்து கொடுத்துக் கொண்டிருந்தன.

பெரிய பரப்பு முழுவதும் விதம் விதமான பழமரங்களும் பழச் செடிகளும் செழிப்புடன் நின்றன.

பழமரங்கள் எல்லாம் இலையை மறைத்துப் பழங்களைத் தொங்க விட்டுக் கொண்டு, கண்ணுக்குக் குளிர்ச்சியாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தது.

பழத்தோட்டத்துக்கு நடுவே போடப் பட்டிருந்த மரக் கதிரையில் அமர்ந்து, தோட்டத்துக் கணக்கு வழக்குகள் அடங்கிய கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் சூரியவர்மன்.

பழத் தோட்டத்துக்கு வந்ததில் இருந்து கோப்புகளும் கையுமாக அவன் இருக்க வேண்டிய நிலை.

ஏராளமான கோப்புகள் குவிந்து கிடப்பது போல அவனுக்கு ஒரு பிரமை.

மேற்பார்வையாளர் முருகமூர்த்தி தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தாலும் கூடவே இன்னொரு நபரை வைத்திருந்தால் தான் வேலை சற்று இலகுவாகும் போல எனச் சூரியனுக்குத் தோன்றியது.

அண்ணனிடம் சொல்லி இன்னும் ஒருவரைக் கணக்கு வழக்குகள் பார்ப்பதற்கு அமர்த்த வேண்டும்.
இல்லாவிட்டால் இதைக் கையாள முடியாது.

எனக்கெல்லாம் படிக்கும் காலத்திலேயே கணித பாடம் என்றால் வேப்பங்காய்… அப்படிப்பட்ட என்னைப் போய்க் கணக்கு வழக்குகள் பார்ப்பதற்கு அனுமதித்த அண்ணனை என்னவென்று சொல்வது…
எனத் தனக்குத் தானே புலம்பியபடி மற்றைய கோப்புகளைத் திறந்தவனுக்கு நிஜமாகவே தலையைச் சுற்றியது.

நிறையக் கணக்கு வழக்குகள் தீர்க்கப்படாமலேயே இருந்தது.
இது ஒரு பெரிய தொல்லை… எனத் தன் நெற்றியைத் தேய்த்துக் கொண்டான் சூரியன்.

கோப்புகளில் மூழ்கி இருந்தவனுக்கு அலைபேசியை எடுத்து அண்ணனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புவற்குக் கூடத் தோன்றவில்லை…

பழத் தோட்டத்துக்கு வந்து மூன்று தினங்கள் வேறு ஆகி விட்டது.
அவனுக்கு வீட்டுக்குப் போக வேண்டும் போலத் தோன்றிக் கொண்டிருந்தது.

வீட்டுக்குப் போய் அண்ணனிடம் கலந்து பேசி விட்டு, இன்னொருவரைக் கணக்கு வழக்குகள் பார்ப்பதற்கு அமர்த்த வேண்டும் என்று முடிவு எடுத்தான்.
அப்போது தான் சரியாக இருக்கும்.
நான் வேறு தலைவலியில் ஏனோ தானோவென்று கணக்கு வழக்குகள் பார்த்தால் பெரிய குழறுபடி தான் ஏற்படும்.

கோப்புகளை மூடி அறையினுள் வைத்து விட்டு, முருகமூர்த்தியிடம் தகவல் சொல்லி விட்டு, வீட்டுக்குப் புறப்பட்டான் சூரியன்.

அவனுக்கு ஏனோ வீட்டு நினைப்பாகவே இருந்தது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

நேரம் அதிகாலை ஆறு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

கஸ்தூரி எழுந்து, தலைக்குக் குளித்து விட்டு, மலர்ந்திருந்த பூக்களைப் பறித்துப் பூக்கூடைக்குள் போட்டுக் கொண்டிருந்தாள்…

இந்த அக்கா இப்போதெல்லாம் என் கூட அமர்ந்து பேசுவதேயில்லை, தனியே அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டே இருக்க வேண்டியது.
நான் அருகே சென்று அமர்ந்தால் எழுந்து ஏதோ அவசர வேலை இருப்பது போலப் போக வேண்டியது. எனக்குத் தான் சுத்தமாகப் பொழுதே போகவில்லை.

அனுவக்காவோ அதற்கும் மேலாகப் போய், எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறாளே...
எனப் பலவாறாக யோசித்துக் கொண்டிருந்தாள் கஸ்தூரி.

அவளது யோசனை சுழன்று கொண்டிருந்த அதே நேரத்தில் வெளி வாசலில் வாகனம் ஒன்று வந்து நிற்பதைப் பார்த்து விட்டு, வாசல் கதவைத் திறக்க விரைந்தாள்.

இவ்வளவு சீக்கிரமாக ஆதியண்ணா எங்கே போய் விட்டு வருகிறார் என நினைத்தபடி வந்தவள், அப்போது தான் வாகனத்தினுள் இருந்தவனையே கவனித்தாள்.

அவளைப் பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை வீசிவிட்டு வாகனத்தை உள்ளே கொண்டு வந்தான் சூரியவர்மன்.

அடடா இப்படியும் ஒரு ஜீவன் இந்த வீட்டில் இருக்கிறது என்பதையே மறந்து விட்டோமே.
இவர் வீட்டில் இருந்தாலாவது எங்கேயாவது வெளியே அழைத்துச் செல்வாரே என யோசித்தவள் பதிலுக்கு தானும் சிரித்து விட்டு, தனது விட்ட வேலையைத் தொடங்கினாள்.

வாகனத்தில் இருந்து இறங்கிய சூரியன், கஸ்தூரியை ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டே வீட்டினுள் சென்றான்.

வழமை போல உணவு அறைக்கு வந்த ஆதித்யனும் காயத்ரியும் அப்போது தான் சூரியனைப் பார்த்தார்கள்.

சூரியனைப் பார்த்த ஆதிக்கு அப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

“எப்போது வந்தீர்கள் தம்பி…”

“அதிகாலையில் ஆறு மணிக்கே வந்து விட்டேன் அண்ணி”

“வீட்டை விட்டு, வெளியே சென்றால் ஒரு அலைபேசி அழைப்பை எடுத்துப் பேசுவது கூட அத்தனை சிரமமா தம்பி…”

“ஐயோ! அப்படியெல்லாம் இல்லை அண்ணி… அங்கே கணக்கு வழக்குகளைப் பார்த்ததுமே தொடங்கி விட்ட தலைவலி இன்னும் கூட நிற்கவில்லை… அதனால் தான்”

“அடடா தலைவலியா… இருங்கள் இதோ வருகிறேன்”
என்று பதட்டமாக எழுந்து சமையலறையினுள் புகுந்தாள் காயத்ரி.

“அண்ணி… எங்கே போகிறீர்கள்”

“ஒரு ஐந்து நிமிடங்கள் தம்பி… இதோ வருகிறேன்”
என்றவள். சரியாக ஐந்து நிமிடத்தில் கையில் ஒரு கண்ணாடித் தம்ளருடன் வெளியே வந்தாள்.

“என்ன அண்ணி இது… கசாயமா…”
என்று முகத்தைச் சுழித்தான் சூரியன்.

“ஒரு சொட்டு மிச்சம் வைக்காமல் குடியுங்கள் தம்பி… பிறகு பாருங்களேன் தலைவலி இருந்த இடம் தெரியாமல் பறந்து போய் விடும்…”

“நீங்கள் சமையலறைக்குள் சென்ற போதே… தலைவலி பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடிப் போய் விட்டது…”
என்று சொன்னவன் கசாயத்தையும் கண்களை இறுக மூடிப் பருகி முடித்தான்.

தன் மனைவியும் தம்பியும் பேசிக் கொண்டு இருப்பதை இரசனையுடன் பார்த்தும் பார்க்காததும் போல உணவருந்திக் கொண்டிருந்தான் ஆதித்யவர்மன்.

கசாயத்தை அருந்தி முடித்த சூரியன், அப்போது தான் தன் அண்ணியை நிமிர்ந்து பார்த்தான்.

நிமிர்ந்து பார்த்தவனுக்கு உண்மையில் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.

தன் அண்ணன் தாலி கட்டிய பிறகு, தான் பழத் தோட்டத்துக்குச் செல்லும் வரையில் கூட , அண்ணியின் தோற்றம் அவனுக்கு முழுதாகத் திருப்தியைக் கொடுக்கவில்லை.

நெற்றியில் குங்குமம் இல்லை, கையில் வளையல் இல்லை, நிறப்புடவை உடுத்தவில்லை… இப்படிப் பட்ட தோற்றத்தில் தான் காயத்ரி வலம் வந்தாள்.

ஆனால் இன்றோ அண்ணியைப் பார்ப்பதற்கே மங்களகரமாக இருந்தது.

கழுத்தில் தாலியையும் காதில் தோட்டையும் தவிர வேறெந்த நகையும் அணியாத போதும் கூட, நெற்றியில் வைத்திருந்த குங்குமமே அவளைக் கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காட்டியது.

சூரியனுக்கு அவனது தாயின் முகம் ஒரு கணம் நினைவுக்கு வந்து போனது.

அண்ணியின் நடை உடை பாவனை குணம் எல்லாமே அம்மாவைத் தான் ஞாபகப் படுத்துகிறது என நினைத்துக் கொண்டான்.

அவனுக்கு வீட்டுக்கு வந்ததே பெரும் நிம்மதியாக இருந்தது.

அண்ணி கொடுத்த கசாயமோ இல்லை அவளது அன்போ ஏதோ ஒன்று சூரியனின் தலைவலியை நொடியில் பறந்தோடச் செய்தது.

“அண்ணி உங்கள் கையில் ஏதோ மந்திரம் இருக்கிறது அண்ணி… இப்படித் தான் எங்கள் அம்மாவும் ஏதோ கசாயம் செய்வார்கள் நொடியில் தலைவலி பறந்து விடும்… உங்கள் கையில் அம்மாவின் பக்குவத்தை நான் உணர்கிறேன் அண்ணி… நான் சொல்வது சரி தானே அண்ணா”
என்றபடி தன் அண்ணன் ஆதியைப் பார்த்தான் சூரியன்.

ஆதியோ காயத்ரியைப் பார்த்தவாறே தலையை மட்டும் ஆமாம் என்பது போல ஆட்டி வைத்தான்.

ஆதித்யன் காயத்ரியை நேசித்ததே, அவளுக்கு தன் அம்மா போன்ற குணம் இருப்பதால் தானே…

அவன் எத்தனையோ பெண்களைக் கடந்து வந்திருக்கிறான், இன்னும் சொல்லப் போனால் அழகிகளைக் கடந்து வந்திருக்கிறான். ஆனால் அவனது மனது என்னவோ காயத்திரியின் காலடியில் தான் மண்டியிட்டு அமர்ந்து கொண்டது.

இத்தனைக்கும் காயத்ரி ஒன்றும் அத்தனை அழகி இல்லை... மாநிறமான தோற்றத்தில் பார்வைக்குச் சுமாராகத் தான் இருப்பாள்... தன் பேச்சாலும் குணத்தாலுமே பிறரைக் கவரக் கூடியவள்.
அப்படியே தான் ஆதியும் அவளை நேசிக்கத் தொடங்கினான்.

வாழ்க்கைத் துணைவியாக வருபவள் தனக்கும் தன் குடும்பத்துக்கும் தாயைப் போலப் பாசம் காட்டினாலே போதுமே ஒரு ஆண்மகனுக்கும் அவன் குடும்பத்துக்கும் இதை விடவும் ஒரு பாக்கியம் வேறு எதுவாக இருக்க முடியும்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நெத்திப் பொட்டை மட்டும் வைச்சு
தங்க நகை இல்லாமலே
கோடி கோடிப் பேரழகு
உன் முகத்திலே!
செல்வம் என்னம்மா
சொந்தம் சொல்லுமா
சொந்த பந்தமே
அன்பு தானம்மா!
அந்த அன்பு என்னும்
சின்ன நூலெடுத்து
நீ என்னை கட்டி போட்டுருக்க கண்ணுக்குள்ளே!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 31

IMG-20210627-WA0049.jpg

IMG-20210701-WA0016~2.jpg

மேற்கு வானம் மஞ்சளைக் குழைத்துப் பூசியது போலக் காட்சி கொடுத்தபடி மாலை நேரத்தை வரவேற்றுக் கொண்டிருந்தது.

தோட்டத்தின் நடுவே அமைந்திருந்த தடாகத்தின் அருகிலே பிரம்பு நாற்காலிகளைப் போட்டு அமர்ந்திருந்தார்கள் சூரியனும் ஆதித்யனும்…
கஸ்தூரி, அனுவை அழைத்துக் கொண்டு வந்து அவர்களுக்கு அருகே அமர்த்தி விட்டு உள்ளே செல்லத் திரும்பினாள்.

“எங்கே செல்கிறாய் கஸ்தூரி…”

“உள்ளே கொஞ்சம் வேலை இருக்கிறது அண்ணா”

“உள்ளே எப்போதும் வேலை இருந்து கொண்டு தான் இருக்கும்… நீ இப்படி வந்து அமர்ந்து கொள் பேசிக்கொண்டு இருக்கலாம்”

“இல்லை அண்ணா… நீங்கள் பேசிக்கொண்டு இருங்கள் நான் போய்…”

“நீ போனால் வர மாட்டாய் என்று எனக்குத் தெரியாதா? இங்கே இருப்பதால் உனக்கு என்ன பிரச்சினை…”

“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா”

“நிஜமாகவே ஒன்றும் இல்லையா?”

“இல்லை அண்ணா”

“அப்படியானால் அமர வேண்டியது தானே…”

“சரி அண்ணா”
என்றபடி அமர்ந்து கொண்டாள் கஸ்தூரி.

“இது நல்ல பிள்ளைக்கு அழகு”
என்று சிரித்தான் சூரியன்.

அவனை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தவள் மெல்லப் புன்னகைத்து விட்டுத் தலையைக் குனிந்து கொண்டாள்.

அதே நேரத்தில் கைகளில் பெரிய தட்டுடன் வந்தாள் காயத்திரி… அவளைப் பார்த்த சூரியன் எழுந்து ஓடிச் சென்று அந்தத் தட்டை வாங்கிக் கொண்டான்.

“ஏன் அண்ணி இந்த வேலையெல்லாம் நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள்… என்னை அழைத்திருக்கக் கூடாதா? “

“இதெல்லாம் ஒரு வேலையா தம்பி…”
என்றபடி ஆதிக்கு அருகே வந்து அமர்ந்து கொண்டாள் காயத்திரி.

அவள் தனக்கருகே அமர்வதைப் பார்த்த ஆதித்யனோ வேண்டுமென்றே அடுத்த பக்கம் திரும்பி அனுவுடன் பேசுவது போல் அமர்ந்து கொண்டான்.

அதைப் பார்த்த காயத்திரிக்குக் கோபம் கோபமாக வந்தது. இருந்தாலும் தன் கோபத்தைக் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தாள்.

“அண்ணி என்ன கொண்டு வந்தீர்கள்… வாசனையே ஆளைத் தூக்குகிறதே…”
என்றபடி தட்டை அங்கிருந்த சிறிய மேஜையில் வைத்தான் சூரியன்.

“தூதுவளைச்சாறு போட்ட தேநீரும், வாழைக்காய்ப் பஜ்ஜியும்”

“ஆகா ஆகா கேட்கும் போதே நன்றாக இருக்கிறதே அண்ணி…”

“ம்ம்ம்… சாப்பிட்டுப் பாருங்கள் இன்னும் நன்றாக இருக்கும்”

“அடுத்த வேலை அது தானே அண்ணி”
என்றபடி சாப்பிடத் தொடங்கியவன்… மற்றவர்கள் தன்னையே பார்த்தபடி இருப்பதைப் பார்த்ததும் என்னவென்பது போல சைகையில் கேடடான்.

“எல்லோரும் என்னையே வைத்த கண் வாங்காமல் ஏன் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்… நீங்களும் எடுத்துச் சாப்பிட வேண்டியது தானே”
என்றவன் தமையனின் காதருகே குனிந்து
“அண்ணா… அண்ணியுடன் உங்களுக்கு ஏதோ சண்டை என்று தெரிகிறது… அதற்காக மான ரோசம் பார்த்து அருமையான தேநீரையும் சூடான பஜ்ஜியையும் இழந்து விடாதீர்கள்…”
என்றான் லேசான சிரிப்புடன்…

சூரியன் அவ்வாறு சொன்னதும் ஒரு கணம் திகைத்த ஆதி உடனே தன் பங்கை எடுத்துக் கொண்டான்.

தனக்கும் அவளுக்கும் கருத்து வேறுபாடு என்பதை அவன் பறை சாற்ற விரும்பவில்லை.

ஏதேதோ கதைத்துப் பேசியவாறு தங்கள் மாலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டார்கள்.

சூரியனும் காயத்திரியுமே பேசிக் கொண்டார்களே தவிர ஆதித்யனும் கஸ்தூரியும் மௌனமாகவே இருந்தார்கள்.

அனு மட்டும் காயத்திரி பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஏதேதோ பேசிக் கொண்டிருந்த சூரியன் பேச்சைத் தொழில் விஷயத்தில் திருப்பினான்.

“அண்ணா… நம் பழத்தோட்டத்தின் கணக்கு வழக்குகள் நிறைய பார்க்கப்படாமலேயே இருக்கிறது… யாரவது ஒருவரை அதற்கு அமர்த்த வேண்டும்…”

“உண்மை தான் சூரியா… உனக்குக் கஷ்டமாக இருந்தால் இன்னொருவரைப் போட்டு அந்த வேலைகளை முடிக்கப் பார்… அந்த வேலைகள் இழுபட்டுக் கொண்டே செல்லக் கூடாது”

“அது தான் அண்ணா உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்… இன்னும் இரண்டு நாட்களில் மீண்டும் பழத்தோட்டத்திற்குச் செல்ல வேண்டும்…”

“அதற்குள் நம்பகமான யாராவது ஒருவரை அந்த வேலைக்குப் போட்டு விடு சூரியா…”

“அதைப் பற்றித் தான் அண்ணா யோசித்துக் கொண்டு இருக்கிறேன்…”
என்றான் சூரியன் ஏதோ யோசனையுடன்

……………………………………………...........

“அண்ணி… இன்று வெள்ளிக்கிழமை தானே… அதனால் மாலை ஆறு மணி போல கோவிலுக்குப் போய் வருவோமா?”

“நான் வரவில்லை தம்பி… கஸ்தூரியையும் அனுவையும் அழைத்துச் செல்கிறீர்களா?”

“நீங்கள் ஏன் அண்ணி வரவில்லை… உங்களுக்கு உடம்புக்கு ஏதும் பிரச்சினையா?”

“கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டும் போல இருக்கிறது தம்பி அவ்வளவு தான்…”

“சரி அண்ணி… அவர்களை அழைத்துச் செல்வதில் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை அண்ணி… ஆனால் நீங்கள் வராமல் அவர்கள் என்னுடன் வருவார்களா?”

“நான் கஸ்தூரியிடம் பேசுகிறேன் தம்பி… அப்படியே அவர்களை எங்காவது வெளியேயும் அழைத்துச் செல்லுங்கள் தம்பி… பாவம் வீட்டுக்குள்ளேயே இருந்து இருந்து கஸ்தூரிக்கு வெறுத்தே விட்டது… ஆனால் அதை எல்லாம் வெளியே சொல்லிக் கொள்ளவே மாட்டாள்.”

“நான் பார்த்துக் கொள்கிறேன் அண்ணி… நீங்கள் ஒரு வார்த்தை சொல்லி விடுங்கள் அண்ணி… ஒரு ஐந்தரை போலத் தயாராகி இருக்கச் சொல்லுங்கள் அண்ணி…”
என்றபடி சென்று விட்டான் சூரியன்.

பொம்மைக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்த அனுவையே பார்த்தபடி அறையில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள் கஸ்தூரி.

“என்ன கஸ்துமா என்ன யோசித்துக் கொண்டு இருக்கிறாய்”

“ஒன்றுமில்லை அக்கா”

“ம்ம்ம்… நம்பிவிட்டேன்”

“பொழுதே போக மாட்டேன் என்கிறது அக்கா…”

“அது போகவில்லை என்றால் என்ன நீ போக வேண்டியது தானே”

“போங்கள் அக்கா நீங்கள்… போகிற போக்கைப் பார்த்தால் நான் சோம்பேறி ஆகி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது தெரியுமா?”

“அப்படி எல்லாம் ஒன்றும் ஆக மாட்டாய்… இன்று மாலை கோவிலுக்குப் போய் வருகிறாயா? உன் மனதுக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்…”

“நிஜமாகவா அக்கா…”

“நிஜமாகத்தானடி... ஆனால் ஒன்று…”

“என்னக்கா… கோவிலில் பிரசாதம் கொடுக்க மாட்டார்களா? இன்று வெள்ளிக்கிழமை தானே?”

“அட ராமா… ஏன்டி இவளே… உனக்குக் கோவில் என்றாலே பிரசாதம் தானா நினைவு வரும்…”

“கோவில் என்று ஒன்று இருந்தால் அங்கு பிரசாதமும் கொடுக்க வேண்டும் அக்கா… கோவிலுக்கு அழகே பொங்கல், வடை, மோதகம் என்று பிரசாதம் கொடுப்பது தான்”

“சரி சரி நானும் அதை ஆமோதிக்கிறேன் போதுமா?... இப்போது நான் சொல்ல வந்ததை முழுமையாகக் கேள்…”

“சரி சொல்லுங்கள் அக்கா”

“கோவிலுக்கு நான் வரவில்லை… உடனே நீங்கள் வந்தால் தான் நானும் வருவேன் என்று ஆரம்பிக்காதேடியம்மா… எனக்குக் கொஞ்சம் ஓய்வு தேவை…”

“அப்படியானால் இன்னொரு நாள் போகலாம் தானே அக்கா…”

“இல்லை கஸ்தூமா… நீ அனுவையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று வா… அவளை ஒரு தடவையாவது கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் தானே…”

“நானே அடிக்கடி இங்கே எங்காவது இருக்கின்ற கோவிலுக்குச் சென்று வர யோசிப்பேன் அக்கா… ஆனால் இடமும் தெரியாது… தனியாகப் போவதற்கும் ஒரு மாதிரியும் இருக்கும் அக்கா”

“ம்ம்ம்… புரிகிறது… அதனால் தான் துணைக்கு ஆளை அனுப்புகிறேன்…”

“ஆதி அண்ணா வருகிறாரா? அக்கா…”

“இல்லை… சூரியன் வருகிறார்.”

“யாரு சின்னவரோ? ஐயோ! அக்கா அவருடன் நான் எப்படிப் போவது?”

“ஏன் ஏன்… என் கொழுந்தனாரோடு போவதற்கு என்ன? இன்னும் சொல்லப் போனால் என் கொழுந்தனோடு எத்தனை பெண்களை வேண்டுமானாலும் நம்பித் தனியாக அனுப்பி வைக்கலாம் தெரியுமா?”

“ஐயோ தாயே! உங்கள் கொழுந்துக் கீரை பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லை போதுமா… இப்போது என்ன உங்கள் கொழுந்துக் கீரையுடன் நாங்கள் கோவிலுக்குப் போக வேண்டும் அவ்வளவு தானே…”

“அடிப்பாவி… அதென்னடி கொழுந்துக் கீரை… அடிப்பேன் உன்னை…”

“சரி சரி உங்கள் கொழுந்துக் கீரையை தயாராகி வரச் சொல்லுங்கள் அக்கா… நானும் தயாராகப் போகிறேன்”
என்று சிரித்தபடி போய் விடடாள் கஸ்தூரி…

சரியாக மாலை ஐந்தரைக்கு மாடியில் இருந்து இறங்கி வந்தான் சூரியன்…

“பட்டு வேஷ்டியும் சட்டையுமாக எங்கே புறப்பட்டு விட்டாய் சூரியா… எங்கேனும் திருமண வைபவமா?”
என்றான் ஆதித்யன்.

“இல்லை அண்ணா… இங்கே கொஞ்சம் தூரத்தில் இருக்கின்ற அம்மன் கோவிலுக்குப் போகிறேன்…”

“அப்படியா… சரி சரி போய் விட்டு வா… தனியாகவா போகிறாய்?”
என்ற ஆதித்யனின் கேள்விக்குச் சூரியன் பதில் சொல்லும் முன்பாகவே கஸ்தூரியையும் அனுவையும் அழைத்து வந்தாள் காயத்ரி.

“ஓஓ… இவர்களும் வருகிறார்களா? சரி கவனமாகப் போய் வாருங்கள்”
என்று அவர்களை அனுப்பி வைத்தவனோ காயத்திரியை ஒரு பார்வை பார்த்து விட்டுக் கையில் ஒரு புத்தகத்துடன் தோட்டத்துக்குச் சென்று விடடான்.

அவனது பார்வையின் அர்த்தம் காயத்திரிக்குப் புரியாமல் இல்லை.
ஆதித்யன் பார்த்த அந்தப் பார்வைக்கு அர்த்தம்… அங்கே இங்கே ஓடித் திரியாமல் என் பார்வை படும் இடத்தில் வந்து அமர்ந்து கொள் என்பது தான்.

ஆனால் அவன் அதை வாயைத் திறந்து சொல்லாதது காயத்திரிக்குக் கடுப்பாக இருந்தது.

அதனால் இவன் என்ன பார்ப்பது நான் என்ன செய்வது என்று யோசித்தபடி உள்ளே செல்லத் திரும்பினாள்… ஆனால் ஏனோ அவளுக்கு அப்படிச் செய்ய மனம் இடம் கொடுக்கவில்லை.

தோட்டத்தில் அவன் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து பார்க்கும் போது தெரியக்கூடிய இடமாக அமர்ந்து கொண்டு பாட்டுக் கேட்கத் தொடங்கினாள்.

இந்த மாதிரி வயிற்றில் குழந்தை இருக்கும் போது நல்ல இசையைக் கேட்பது ரொம்ப நல்லது என்று ஆதித்யன் தான் நல்ல நல்ல பாடல்களை ஒலிநாடாவில் பதிந்து கஸ்தூரியிடம் கொடுத்து விட்டிருந்தான்.

கர்ப்பமாக இருக்கும் தாயொருத்தி நல்ல பாடலைக் கேட்டு இரசிப்பதன் மூலம் மன அமைதியோடு இனிமையான அனுபவமும் கிடைக்குமாம்… அதோடு குழந்தை தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதே அந்த அழகான மெல்லிய பாடலைக் கேட்பதால் குழந்தையின் உணர்ச்சிகள் வலுப் பெறுகிறதாம் .

மெல்லிய இசை மன அழுத்தத்தை குறைக்கிறதாம்… இசை நேர்மறையான அதிர்வுகளை ஏற்படுத்திக் குழந்தைக்கும் தாயுக்குமான ஒரு தூண்டுதலை ஏற்படுத்துமாம்…

என்று அதற்கு அவன் சொல்லி விட்ட விளக்கம் வேறு அவனுக்கு அவள் மீதான அக்கறையைப் பறைசாற்றியது…

இத்தனைக்கும் அவளின் அறையில் வீணையின் மெல்லிய ஒலி, கந்தசஷ்டிக் கவசம் என ஏதாவது மெலிதாக ஒலித்துக் கொண்டிருக்கும் படி ஆதித்யன் பார்த்துக் கொள்வான்…

கர்ப்பிணிப் பெண்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக் கூடாது… என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பதைக் காயத்திரியை விடவும் ஆதித்யன் தான் தேடித் தேடிப் படித்து அதை எல்லாம் கஸ்தூரியிடம் சொல்லி அவளைச் செய்ய வைப்பான்.

கண்களை மூடிக் கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டு இருந்த தன்னவளைக் கண்களில் இரசனையுடன் பார்த்தும் பார்க்காததும் போலப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்…

அவள் மீதிருந்த கோபம் எல்லாம் விட்டால் இப்போதே ஓடி விடுவோம் என்பது போல இருக்கவே… தன்னை நினைத்து மெல்லச் சிரித்துக் கொண்டான் ஆதித்யன்…

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“கண்களைத் திறந்து கொண்டு நான் கனவுகள் காணுகிறேன்
கண்களை மூடிக்கொண்டு நான் காட்சிகள் தேடுகிறேன்
உன் பொன் விரல் தொடுகையிலே நான் பூவாய் மாறுகிறேன்
பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்..."
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 32

IMG-20210701-WA0040~2.jpg

Screen-Shot-2018-01-08-at-5.40.36-PM~2.jpg

கோவிலின் வெளி வீதி எங்கிலும் அர்ச்சனைப் பொருட்கள், பூமாலைகள், தின்பண்டங்களை விற்பனை செய்யும் கடைகள் நிறைந்து இருந்தன.

கோவிலுக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கடைகளில் மொய்த்துக் கொண்டு இருந்ததால் கோவிலினுள் பெரிதாக ஜனங்களே இல்லை.

வாகனத்தில் இருந்து இறங்கிய கஸ்தூரி சுற்று முற்றிலும் வேடிக்கை பார்த்தபடி அனுவைக் கை பிடித்து இறக்கி விட்டாள்.

கோவிலும் அங்கே இருப்பவர்களும் முகமறியாத புதியவர்களாக இருந்ததால், ஆளைத் துளைக்கும் பார்வைகள் எதுவுமே அவளை நோக்கிப் பாயவேயில்லை.
அவளுக்கு ஏதோ புதுக் காற்றைச் சுவாசிப்பது போல் இருந்தது…

மெல்லக் கோவில் கோபுரத்தை அண்ணாந்து பார்த்தாள்.

மாலை நேரத்தில் கோவில் கோபுரத்தை அண்ணாந்து பார்த்த கஸ்தூரிக்கு மனப்பாரம் எல்லாம் குறைந்தது போல ஒரு உணர்வு…

“அதோ அந்த இடத்தில் காலை அலம்புங்கள் நான் வாகனத்தை நிறுத்தி விட்டு வருகிறேன்”
என்றபடி சூரியன் சென்று விட்டான்.

அனுவை அழைத்துக் கொண்டு கோவில் நோக்கிச் சென்று… கால்களை அலம்பிவிட்டுச் சூரியனுக்காகக் காத்திருந்தார்கள் இருவரும்.

“அர்ச்சனை ஏதும் செய்ய வேண்டுமா? நான் போய் அர்ச்சனைப் பொருட்கள் வாங்கி வரட்டுமா?”
என்றபடி வந்தான் சூரியன்.

“இல்லை இல்லை அதெல்லாம் வேண்டாம்…”

“வேண்டாமா? ஆனால்…”

“இல்லை பரவாயில்லை… வேண்டாம்…”

“சரி சரி… உள்ளே போகலாம்”
என்றபடி கோவிலினுள் சென்றவனைப் பின் தொடர்ந்தார்கள் அனுவும் கஸ்தூரியும்…

கோவிலுக்கே உரிய பிரத்யேகமான வாசனை நாசியைத் தீண்டிச் சென்று உள்ளத்தைப் பரவசப் படுத்தியது.

கஸ்தூரி கண்களை மூடி அனுவுக்காகவும் காயத்திரிக்காகவும் வேண்டிக் கொண்டாள்.

அனுவோ மூலஸ்தானத்தில் வீற்றிருந்த அம்மன் விக்கிரகத்தையே விழி எடுக்காமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இருவருக்கும் பின்னால் நின்றிருந்த சூரியன் தன் பார்வையைக் கோவிலின் உச்சிக் கூரையில் தீட்டப் பட்டிருந்த சித்திரங்கள் மீது நிலைக்க விட்டிருந்தான்.

தரிசனத்தை முடித்துக் கொண்ட கஸ்தூரி, அனுவின் கையைப் பிடித்தபடி சற்றுத் தள்ளிச் சென்று அமர்ந்து கொண்டாள்.

சித்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்த சூரியன், இருவரையும் காணாமல் சுற்று முற்றும் தேடி விட்டுப் பின்னரே அவர்கள் இருந்த இடம் நோக்கி வந்து தானும் ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

“கொஞ்சம் நேரம் இங்கே இந்தப் பூக்களைச் சுமந்து வரும் நறுமணமான காற்றை சுவாசித்து விட்டு போனால் போதும்”
என்று கஸ்தூரி சொல்லவே அதை ஆமோதிப்பது போல், தூணில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டான் சூரியன்.

அனு, அருகில் நின்றிருந்த செடியில் உள்ள இலைகளைப் பறித்துக் கீழே நிலத்தில் போட்டு ஏதோ செய்து கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் எந்த ஓசையும் இல்லாமல் அவர்கள் இருந்த இடமே நிசப்தமாக இருந்தது.

சூரியனுக்கு, கஸ்தூரியிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டி இருந்தது.
அந்தப் பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

கஸ்தூரியோ அங்கு நிலவிய அமைதியை உடைப்பதற்காக… சும்மா பேச்சுக் கொடுத்தாள்.

“பழத் தோட்ட வேலைகள் எல்லாம் எப்படிப் போய்க் கொண்டு இருக்கிறது…”

“ம்ம்ம்… பரவாயில்லை…”

“ஓஓ… அப்படியா…”

“நானும் உன்னை ஒன்று கேட்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன் கஸ்தூரி…”

“என்ன அது…”

“உன்னால் ஒரு உதவி ஒன்று ஆக வேண்டும்…”

“ம்ம்ம்… சொல்லுங்கள் முடிந்த வரை செய்து கொடுக்கிறேன்…”

“ஆனால் எனக்கு ஒரு விஷயம் தெரிய வேண்டுமே…”

“என்ன விஷயம் தெரிய வேண்டும்…”

“உனக்கு… இந்தக் கணித பாடம் எல்லாம் நன்றாக ஓடுமா?”

“கணித பாடமா… ம்ம்ம் பரவாயில்லை… ஆஹா ஓஹோ என்று ஓடா விட்டாலும் சுமாராக ஓடுமே… ஏன் கேட்கிறீர்கள்…”

“எல்லாம் காரணமாகத் தான்…”

“ஓஓஓ… எனக்கு வேலை போட்டுக் கொடுக்கப் போகிறீர்களா? உங்களுக்குப் புண்ணியமாகப் போகும் சம்பளம் கூடத் தேவையில்லை… வேலை மட்டும் வாங்கிக் கொடுத்தால் போதும்…”

“சம்பளமே வாங்காமல் வேலை பார்த்தால் மட்டும் போதும் என்ற அளவுக்கு அப்படி என்ன தான் நடந்தது…?”

“வீட்டில் இருக்கும் தோட்டம், சமையலறை,படுக்கையறையைத் தவிர எனக்கு வேறு உலகமே தெரியவில்லை… எங்கேயாவது வெளியே போக வேண்டும் என்று ஆசை வரும்… ஆனால் ஏனோ முடிவதில்லை… நினைத்தவுடன் கோவிலுக்கு வர வேண்டும் போல இருக்கும் அதுவும் நடந்ததில்லை… அந்த நான்கு சுவற்றுக்குள்ளேயே என் வாழ்க்கை முடிந்து போய் விடுமோ என்று பயமாக இருக்கிறது…”
என்று ஆதங்கத்துடன் சொன்னவளை இமைக்காமல் பார்த்திருந்தவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

ஒரு நொடி அமைதியாக இருந்தவன் நிஜமான வருத்தத்துடன் அவளிடம் மன்னிப்புக் கேட்டான்.

“மன்னித்து விடு கஸ்தூரி”

“ஐயோ! நீங்கள் எதற்கு மன்னிப்புக் கேட்கிறீர்கள்…”

“இல்லை கஸ்தூரி… நான் கூட, நீ இப்போது நிம்மதியாகத் தானே இருக்கிறாய் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்… ஆனால்… சரி அதை விடு… இப்போது நான் உன்னிடம் கேட்க நினைத்த உதவியை நீ செய்தால் இருவருக்குமே இலாபம் தான்…”

“என்ன உதவி அது?”

“நம் பழத் தோட்டத்தில் கணக்கு வழக்குகள் பார்க்க வேண்டிய வேலை இருக்கிறது… என்னோடு சேர்ந்து அந்த வேலையை நீ பார்த்துக் கொடுக்கிறாயா?”

“அதற்கென்ன நான் பார்த்துக் கொடுக்கிறேன்…”

“அதற்கு நாங்கள் பழத் தோட்டத்துக்குச் செல்ல வேண்டும்… அங்கே தோட்டங்களை மேற்பார்வையும் செய்ய வேண்டும்… எனக்கு வேலை நடந்த மாதிரியும் இருக்கும் உனக்குப் பொழுது போன மாதிரியும் இருக்கும்…”

“ம்ம்… இது நல்ல யோசனை தானே… சரி எப்போது அங்கே போகப்போகிறோம்…”

“ஏய் நிஜமாகத் தான் கேட்கிறாயா? நான் என்னவோ நீ உன் அக்காமார் புராணத்தைப் பாடி இதை மறுப்பாய் என்றல்லவா நினைத்தேன்…”

“அக்காமார் புராணமா?”

“ஆமாம் அண்ணியை விட்டு நீ பிரிந்து இருந்ததே இல்லை… இப்போது பல்லவி வேறு… நீ அங்கே இங்கே வர மாட்டேன் என்று சொல்லுவாய் என்று தான் நான் நினைத்தேன்…”

“சாதாரணமாக என்றால் அக்காவை விட்டு வந்திருக்க மாட்டேன் தான்… ஆனால் இப்போது அப்படி இல்லை”

“இப்போது மட்டும் அப்படி என்ன ஞானோதயம் கிடைத்தது… இங்கே அரச மரம் கூட இல்லையே”

“ஞானோதயம் கிடைக்க அரசமரத்தடி தான் தேவை என்றில்லை… பூவரசமரமோ, புளியமரமோ இருந்தால் கூட போதும் தான்… ஆனால் விஷயம் அதுவில்லை…”

“உன்னோடு பேசி வெல்ல முடியாது… சொல்ல வந்ததை நீயே சொல்லி முடி…”

“அக்காவுக்கும் அத்தானுக்கும் இடையே ஒரு சண்டையே போய்க் கொண்டு இருக்கிறது…நினைத்தால் இருவருமே நொடியில் சமாதானம் ஆகலாம்… ஆனால் பாருங்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள்… ஆளுக்கு ஒரு பக்கத்தில் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்…”

“ஆமாம் நான் கூடக் கவனித்து இருக்கிறேன்”

“நீங்களும் கவனித்தீர்களா சரி சரி…இந்த அத்தான், அக்காவுடன் ஏதும் பேச வேண்டும் என்றாலோ அல்லது அக்காவுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்றாலோ என்னைத் தான் தூது விடுகிறார்…”

“இது வேறு நடக்கிறதா?”

“நடக்கிறதா இல்லை நடந்து கொண்டே தான் இருக்கிறது…”

“ஓஓஓஓ…”

“நான் இங்கே வீட்டில் இல்லை என்றால் யாரைத் தூது விடுவார்கள்?”

“அது தானே…”

“அதோடு இன்னொரு விஷயம்… அனுவக்காவையும் எங்களோடு அழைத்துச் சென்று விடுவோம்… அதற்கும் இரண்டு காரணங்கள் இருக்கிறது…”

“இரண்டா?”

“ஆமாம்… ஒன்று அனுவக்காவுக்கும் வெளி இடங்களைப் பார்ப்பதால் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு…”

“மற்றது என்ன காரணம்”

“அனுவக்காவைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதைக் காரணம் காட்டிக் கொண்டே இந்த அக்கா அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார்கள்…”

“ஓஓஓ…”

“அதனால் அவர்கள் இருவரையும் தனியே விட்டுச் சென்றால்… வேறு வழியே இல்லை இருவருமே பேசித்தான் ஆக வேண்டும்… எப்படி என் திடடம்…”

“ம்ம்ம்ம்… பிரமாதம் பிரமாதம்… எப்படி எல்லாம் யோசிக்கிறாய்… உன்னைப் பழத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றால் நான் நிம்மதியாகத் தூங்கலாம் என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது…”

“உங்கள் பழத் தோட்டம் ஒரு குறையும் இல்லாமல் இயங்குவது உங்களுக்குப் பிடிக்கவில்லையோ?”

“அந்தளவுக்குப் போகாது… போக நீ விடவும் மாட்டாய்… வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்தே ஆக வேண்டுமே என்று உன் மனசாட்சி உனக்குச் சொல்லிக் கொண்டே இருக்கும்…”

“சம்பளமா…”

“ஏன் உனக்கு வேண்டாமா?”

“சும்மா என்னைப் பெரிய இவள் போலக் காட்டிக் கொள்ளச் சொல்லவில்லை… எனக்குப் பொழுது போவதற்கு ஏதாவது வேலை கொடுத்தால் மட்டும் போதும்…”

“சரி சரி… இதைப் பற்றிப் பிறகு பேசுவோம்… முதலில் அண்ணியிடம் சம்மதம் கேட்க வேண்டும்… அவர்கள் சம்மதிப்பார்களா?”

“அந்தப் பொறுப்பை என்னிடம் விட்டு விடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்…”
என்றவள் அப்போது தான் அனுவைத் திரும்பிப் பார்த்தாள்.

திரும்பிப் பார்த்தவள் திகைத்துப் போய்ச் சூரியனைப் பார்த்தாள்.

இவள் எதற்கு நம்மை இப்படிப் பார்க்கிறாள் என நினைத்தபடி அனுவை எட்டிப் பார்த்தவன் தானும் ஸ்தம்பித்துப் போனான்.

ஏனெனில் அனுபல்லவி, அருகில் நின்றிருந்த செடியில் உள்ள இலைகளைப் பறித்து ‘மகேந்திரன்’ என்ற எழுத்து வடிவத்தில் போட்டு வைத்திருந்தாள்.

“உங்கள் இரண்டாவது அண்ணனின் பெயர் இது தானே”
என்று அந்தப் பெயரைச் சுட்டிக் காட்டினாள் கஸ்தூரி…

அவள் கேட்ட கேள்வியில் கஸ்தூரியை நிமிர்ந்து பார்த்த சூரியன், மீண்டும் அனுவைப் பார்த்து விட்டு ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினான்.

பல்லவியை, சூரியனும் ஆதித்யனும் தங்கள் வீட்டுக்கு அழைத்து வரும் போது அவள் இருந்த நிலையை எண்ணிப் பார்த்த சூரியனுக்கு லேசாகக் கண்கள் கலங்கியது.

தன் கணவனின் பெயரை இலைகள் கொண்டு உருவாக்கும் அளவிற்கு அவள் முன்னேறி இருக்கிறாள் என்றால்... அவள் குணமாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று தானே அர்த்தம் என அவன் மனது சந்தோசமாகத் துள்ளிக் குதித்தது…

“இன்று கோவில் வந்து அம்மனை வேண்டிக் கொண்டதற்கு நல்ல பலனை அந்த அம்மனே கொடுத்து விடடாள்…”

“உண்மை தான்… எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை… அத்தனை சந்தோசமாக இருக்கிறது…”

“எனக்கும் தான்… இதை அக்காவிடமும் அத்தானிடமும் சொன்னால் எப்படி இருக்கும்”

“சந்தோசத்தில் துள்ளிக் குதிப்பார்கள்…”

“ஆனால்…”

“ஆனால் என்ன?”

“அனுவக்கா இந்த நிலையிலும் உங்கள் அண்ணனின் பெயரை இப்படி உருவாக்கி இருக்கிறாள் என்றால்… அவர் மீது எவ்வளவு அன்பு வைத்திருப்பாள்…”

“ஆமாம்… நிறைய அன்பு வைத்திருக்கிறாள்… அதற்கு என்ன இப்போது…”

“உங்களுக்குப் புரியவில்லையா? அனுவக்கா குணமானதும் தன் கணவர் இப்போது இல்லை என்பதை எப்படித் தாங்கிக் கொள்வாள்… அவளது சுபாவத்துக்கு, நானும் இறந்து போகிறேன் என்று தற்கொலை செய்து கொள்ளத் தான் முயற்சி செய்வாள்… அது தான் பயமாக இருக்கிறது…”

“என்ன கஸ்தூரி இப்படி இடியைத் தூக்கிப் போடுகிறாய்...”

“உண்மையைத் தான் சொல்லுகிறேன்… அவ்வப்போது இது பற்றி யோசிக்கும் போது சில நேரங்களில் அனுவக்கா இப்படியே இருந்தாலாவது எங்களுடன் எப்போதும் இருப்பாளே என்று கூடத் தோன்றும்… இது பற்றி அக்காவிடம் பேச முடியாது… இதனால் அக்கா மன அழுத்ததுக்கு ஆளாக நேர்ந்தால் அது அக்காவின் குழந்தையைப் பாதிக்குமோ என்று பயம்… அக்கா வேறு இப்போது தான் சந்தோஷமாக இருக்கிற மாதிரித் தோன்றுகிறது”

“நீ சொல்லும் போது தான் எனக்கே புரிகிறது கஸ்தூரி… அதற்காகப் பல்லவி குணமாவதைத் தவிர்க்க முடியாது தானே… ஆனால் ஒருவேளை அண்ணியைப் பார்த்து விட்டுப் பல்லவி மனசு மாறி வாழவும் ஆசைப் படலாம் தானே…”

“நீங்கள் சொல்லுவதும் சரிதான்…”

“எதையும் நேர்மறையாக யோசிக்க வேண்டும் கஸ்தூரி… என்றோ ஒரு நாள் சாகத் தானே போகிறோம் என்பதற்காக இன்றே சாக எண்ணுவது சரி ஆகுமா”

“ம்ம்ம்ம்… புரிகிறது… அம்மன் சந்நிதானத்தில் வைத்து அனுவக்காவுக்காக வேண்டி இருக்கிறேன்… நிச்சயமாக நல்லது தான் நடக்கும்…”

“நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும்…”
என்றபடி எழுந்து கொண்ட சூரியன்
“எங்காவது வெளியே போய் விட்டு வீட்டுக்குப் போகலாமா?”
என்று கேட்டான்…

“வேண்டாம் வேண்டாம் இந்தச் சந்தோசமான விஷயத்தை இப்போதே அக்காவிடம் சொல்ல வேண்டும்… இல்லாவிட்டால் எனக்குத் தலையே வெடித்து விடும்…எத்தனை எத்தனை துன்பங்களுக்குப் பிறகு இப்போது தான் ஏதோ இன்பமான நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்கிறது”
என்றபடி வீட்டுக்குச் செல்ல அவனை அவசரப் படுத்தினாள் கஸ்தூரி…

அவளைப் பார்த்துச் சிரித்தவனோ மறு பேச்சுப் பேசாமல் அவர்களை அழைத்துக் கொண்டு வீடு நோக்கி விரைந்தான்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“துன்பமென்ற சிப்பிக்குள் தான்
இன்பமென்ற முத்து வரும்
துணிந்த பின் பயம் இல்லையே
கண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள்
காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்"
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 33

Namitha-Pramod-Nimir-Movie-Beautiful-Stills-4~2.jpg

IMG-20210627-WA0055.jpg

மாலை மயங்கி மெல்ல மெல்ல இருளைத் தத்து எடுத்துக் கொண்டு இருந்தது…

தோட்டம் முழுவதும் மின்குமிழ்கள் ஒளிர்ந்து இருளை விலக்குவதற்குப் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தன.

தோட்டத்தைப் பார்த்தபடி வீட்டு வாசலின் முன் பக்க முகப்பில் நடை பயின்று கொண்டிருந்தாள் காயத்திரி…

அதே நேரத்தில் வீட்டினுள் வந்த வாகனத்தில் இருந்து ‘அக்கா’ என்று கத்தியபடி மூச்சிரைக்க ஓடி வந்தாள் கஸ்தூரி…

ஓடி வந்தவளை
“என்னடி என்ன நடந்தது”
எனப் பதட்டத்துடன் எதிர் கொண்டாள் காயத்திரி…

வேகமாக வந்த கஸ்தூரியோ தமக்கையை அணைத்துக் கொண்டு தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

“என்ன… என்ன… ஏதும் பிரச்சினையா? ஏன் இப்படி ஓடாத குறையாக வந்தாய்?”

“சொல்லுகிறேன் அக்கா… சொல்லுகிறேன்… அதைச் சொல்லத் தானே ஓடி வந்தேன்?”

“ஏன் கஸ்தூ… ஒன்றும் பிரச்சினை இல்லையே?”

“அக்கா… என்னைப் பார்த்தால் ஏதோ பிரச்சினையைக் கண்டு ஓடி வருபவள் போலவா இருக்கிறது?”

“சரி தான்… பிரச்சினை ஒன்றும் இல்லை என்றால் நல்லது தானே… நீ சொல்ல வந்த விஷயத்தைச் சீக்கிரமாகச் சொல்லு”

“நான் சொல்லப் போவதைக் கேட்டால் நீங்கள் அப்படியே சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கப் போகிறீர்கள்…”

“நான் அடிக்கிற அடியில் நீ தான் துள்ளிக் குதித்து ஓடப் போகிறாய் இப்போது”

“ஏன் அக்கா…”

“பின்னே என்னடி… சொல்ல வந்ததைப் பட்டென்று சொல்லாமல் இப்படி இழுத்துக் கொண்டே இருந்தால் கோபம் வராதா?”
என்று பொய்க் கோபத்துடன் கஸ்தூரியின் காதினை வலிக்காமல் முறுக்கினாள் காயத்திரி…

கஸ்தூரியின் பின்னே பல்லவியை அழைத்து வந்த சூரியனோ
“அண்ணீ… பல்லவி, மகேந்திரனின் பெயரைக் கோவில் மண்டபத்தில் இலைகளைப் போட்டு உருவாக்கி இருந்தாள் தெரியுமா?”
என்று விஷயத்தைப் போட்டு உடைத்தான்.

சூரியன் சொன்ன விஷயத்தைக் கேட்டவளோ சந்தோசம் தாழாமல்
“என்னது?”
என்றபடி அனுவை இழுத்து அணைத்துக் கொண்டு அழத் தொடங்கினாள்.

அதுவரை திடமாக நின்றிருந்த சூரியனுக்கும் காயத்திரி அனுவை அணைத்துக் கொண்டு அழுவதைப் பார்த்ததும் லேசாகக் கண் கலங்கத் தொடங்கியது.

“ஐயோ! அண்ணீ… அழாதீர்கள்”
என்றபடி யாருக்கும் தெரியாமல் தன் விழிநீரைத் துடைத்துக் கொண்டான்.

உள்ளே கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யன் வெளியே வாசலில் ஏதோ சத்தம் கேட்கவே ‘காயத்திரி வேறு வெளியே வாசலில் நின்றிருந்தாளே என்ன சத்தமாக இருக்கும்’ என யோசித்தவாறு என்ன சத்தம் எனப் பார்க்க வெளியே வந்தான்.

அங்கே காயத்திரி, அனுவை அணைத்துக் கொண்டு அழுவதையும், சூரியன் கண் கலங்கி நிற்பதையும் பார்த்து விட்டு
“என்ன என்ன… என்ன நடந்தது”
என்றபடி பதறிக் கொண்டு வந்தவன் காயத்திரியைத் தன் பக்கமாகத் திருப்பி மேலும் கீழும் பார்த்தான்.

“அண்ணிக்கு ஒன்றும் இல்லை அண்ணா”
என்று சூரியன் சொன்னதும் தான் அவனுக்கு மூச்சே வந்தது.

அதன் பிறகு சகஜ நிலைக்கு வந்தவன்
“அப்படியானால்… இவள் ஏன் அழுது கொண்டு நிற்கிறாள்?”
எனக் கண்ணில் கேள்வியுடன் கஸ்தூரியையும் சூரியனையும் பார்த்துக் கேட்டான்.

ஆதித்யன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வதற்காக அனுவின் பெயரைக் கஸ்தூரி உச்சரித்தது தான் தாமதம்,
மீண்டும் பதட்டத்துடன்
“ஏன்… பல்லவிக்கு என்ன? போன இடத்தில் எங்கும் விழுந்து விட்டாளா?”
என்றபடி இப்போது பல்லவியைப் பார்த்தான்.

“அப்படி எல்லாம் பதறும் அளவிற்கு ஒன்றும் நடந்து விடவில்லை அண்ணா… எல்லாம் சந்தோசமான செய்தி தான்”

“என்ன அது… எனக்கும் சொன்னால் நானும் சந்தோசப் பட்டுக் கொள்ளுவேனே…”
என்று சொன்னவனுக்குக் கோவிலில் நடந்த விஷயத்தை சந்தோசமாகச் சொன்னாள் கஸ்தூரி.

அவள் சொன்னதைக் கேட்டவனுக்கு ஒரு நொடி என்ன சொல்வது என்றே புரியவில்லை.

மெல்லத் திரும்பி அருகே நின்றிருந்த அனுவின் தலையை மெதுவாக வருடிக் கொடுத்தான். அந்த வருடலில் அனு மீது ஆதித்யனுக்கு இருந்த சகோதரபாசம் ஒன்று மெல்ல இழையோடியது…

வாழ வேண்டிய பெண்ணின் வாழ்வு வீணாகப் போய்க் கொண்டு இருக்கிறதே என்று அவன் தவித்திருந்த நேரத்து வலிகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லும் காலம் வெகு சீக்கிரமாக வரப் போகிறது என்பதை நினைத்தவனின் கண்களும் லேசாகப் பனித்தன.

தான் கண் கலங்கியதைச் சுற்றி நின்றவர்கள் பார்க்கும் முன்பாக அதை மறைத்தவன் தன் சந்தோசத்தையும் வெளியே காட்டிட
“இவ்வளவு சந்தோசமான செய்திக்கா இப்படிக் கட்டிப்பிடித்துக் கொண்டு உன் அண்ணி ஒப்பாரி வைக்கிறாள்.”
என்றபடி சூரியனைப் பார்த்து மெல்லச் சிரித்தான் ஆதித்யன்.

அவனது சிரிப்பு மற்றவர்களையும் தொற்றிக் கொண்டது.

“ஐயோ! அது ஒப்பாரி இல்லை ஆதியண்ணா… அக்காவின் ஆனந்தக் கண்ணீர்”

“ஓஓஓ… ஆனந்தக் கண்ணீரா… அது சரி உன் அக்கா ஆனந்தம் வந்தால் கண்ணீர் விட உன்னையும் பல்லவியையும் மட்டும் தானா கட்டிப்பிடிப்பாள்?”

“ஆகா! ஆகா! என்ன ஆதியண்ணா… இது ஆதங்கமா? இல்லை வயிற்றெரிச்சலா?”

“ஆகா! உனக்குப் புரியவில்லையா கஸ்தூரி… இதற்குப் பெயர் தான் வயிற்றுப்புகைச்சல்”
என்றபடி சிரித்தான் சூரியன்.

அவன் சிரிப்பதைப் பார்த்த ஆதித்யன் மெல்ல அவனது காதினை வலிக்காமல் முறுக்கியபடி
“என்னடா… கிண்டலா, அவனவன் ஆதங்கம் அவனவனுக்குத் தான் தெரியும்…”
என்றான்.

தமையனிடம் இருந்து விலகி, விட்டால் போதும் என உள்ளே ஓடி விட்டான் சூரியன்.

அவன் ஓடுவதைப் பார்த்த கஸ்தூரியோ காயத்திரியையும் ஆதித்யனையும் தனியே விட்டுச் செல்வதற்காக அனுவின் கைகளைப் பற்றினாள்.

ஆனால் அதற்குள் ஆதித்யனோ
“இருவரையும் உள்ளே அழைத்து வாம்மா கஸ்தூரி…”
என்றபடி காயத்திரியை ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே விரைந்தான்.

அதுவரை தன் கணவன் ஜாடை மாடையாகவேனும் தன்னுடன் பேசினானே என்ற பூரிப்பில் நின்றிருந்த காயத்திரிக்கு அவனது பார்வை கடுப்பேற்றியது…

“அடி… பார்த்தாயா? உன் அத்தானுக்கு இருக்கும் கொழுப்பை”

“அத்தானுக்குக் கொழுப்பா?”

“ஆமாம் கொழுப்பு தான்”

“ஏன் அக்கா… அப்படிச் சொல்லுகிறீர்கள்”

“இருவரையும் உள்ளே அழைத்து வாம்மா கஸ்தூரியாமே… ஏன் எனக்கு வரத் தெரியாதாமா? அல்லது என்னைப் பார்த்து உள்ளே வா காயத்திரி என்றால் வாயில் இருந்து முத்து பவளம் ஏதும் கொட்டி விடுமாமா?”

“சரி சரி இந்த ஒரு தடவை அத்தானை மன்னித்து விடுங்கள் அக்கா… அத்தான் சீக்கிரமாகவே உங்களிடம் பேசுவார்”

“யார் உன்னுடைய அத்தானா? பேசுவார் பேசுவார் நன்றாகத் தான் பேசுவார்…”

“என்னக்கா இப்படிச் சொல்லுகிறீர்கள்… அத்தானுக்கு உங்கள் மேல் வெறுப்பு எல்லாம் இல்லை… நீங்கள் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்களே என்கிற வருத்தமும் ஒரு சிறு கோபமும் தான்… உங்கள் மேல் கோபமாக இருக்கிறேன் என்பதைக் கூட அவ்வப் போது மறந்து போய் விடுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் அவர் உங்கள் மேல் கோபம் காட்டும் இலட்சணத்தை…”
என்று கண்சிமிட்டிச் சிரித்தாள் கஸ்தூரி.

“நீ என்ன சொன்னாலும் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவர் என் கூடப் பேசவே போவதில்லை…”
என லேசாக அலுத்தபடி அனுவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் காயத்திரி.

அவள் செல்வதையே பார்த்தபடி நின்றிருந்த கஸ்தூரியோ
“நீங்கள் இன்னும் அத்தானின் அன்பின் ஆழத்தைப் புரிந்து கொள்ளவில்லை அக்கா… அதைப் புரிந்து கொண்டால் இத்தனை துன்பம் இல்லை… உங்கள் புரிதலுக்காகத் தான் நானும் அனுவக்காவும் உங்களை விட்டுப் பிரிந்து செல்கிறோம்… தனியே இருந்து அத்தானைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்…”
எனத் தன் மனதினுள் சொல்லிக் கொண்டாள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

அந்த அகன்ற தார்ச்சாலையில் கறுப்பு நிறத்து வாகனம் அளவான வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது.

வாகனத்தின் சாரதி இருக்கையில் சூரியனும் பின் பக்கத்து இருக்கைகளில் கஸ்தூரியும் அனுபல்லவியும் அமர்ந்து இருந்தார்கள்.

ஆதித்யனின் மறுப்பு, காயத்திரியின் எதிர்ப்பு என்பவற்றைச் சரண்குமாரின் சிபாரிசில் ஒரு வழியாகச் சமாதானம் செய்து அனுவையும் தங்களுடன் பழத்தோட்டத்துக்கு அழைத்து வந்து விட்டார்கள்.

வாகனத்து ஜன்னலோரமாக இருந்தபடி வெளியே எட்டிப் பார்த்த கஸ்தூரியை வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் அனுபல்லவி.

மேலே நீல வானம் தெளிவாக விரிந்து கிடக்க, ஊடே அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பஞ்சுப் பொதிகளைப் பறக்க விட்டது போல் வெண்பஞ்சு மேகங்கள் கிடந்தன… வாகனம் செல்லும் வேகத்துக்கு ஏற்ப வானத்து மேகங்களும் தங்களுடன் வருவதை இரசித்துப் பார்த்தாள் கஸ்தூரி.

அவளுக்கு ஏனோ தெரியவில்லை மனசு பஞ்சு போல் லேசாகப் பறப்பது போலவே இருந்தது.

நேரம் செல்லச் செல்ல லேசான குளிர் ஊடுருவுவதை உணர்ந்த கஸ்தூரி அப்போது தான் பார்வையை வானத்தில் இருந்து தரைக்கு இறக்கினாள்.

அவர்களது வாகனம் மெல்ல மெல்ல மலைப் பிரதேசம் ஒன்றை அடைந்து கொண்டிருந்தது.

ஒரு திருப்பத்தில் வாகனத்தை நிறுத்திய சூரியன் இருவரையும் ஓரிடத்துக்கு அழைத்துச் சென்றான்.

கண்ணுக்கெட்டிய தூரம் எங்கிலுமே பச்சை நிறத்துச் சேலையைப் போர்த்தி விட்டது போலத் தேயிலைத் தோட்டம் விரிந்து கிடந்தது.

வானளவு உயரமான இரண்டு மரங்களுக்கு நடுவே ஒரு சிறிய தேநீர்க்கடை.
மரக் குற்றிகளை இருக்கை போலப் போட்டு வைத்திருந்தார்கள்.

குற்றியொன்றில் அமர்ந்து கொண்ட சூரியன் கஸ்தூரியையும் அனுவையும் அமரச் சொன்னான்.

சூரியனை எட்டிப் பார்த்த ஒரு வயதானவர் ஓடி வந்து
“தம்பி நலமா?”
என விழுந்தது போக மீதம் இருந்த பற்கள் அத்தனையும் தெரியச் சிரித்தார்.

“நலம் தான் தாத்தா நீங்கள் எப்படி நலம் தானே… உங்கள் சிரிப்பே சொல்லாமல் சொல்கிறதே உங்கள் நலத்தை…”
என்றவனைப் பார்த்து மீண்டும் சிரித்தவரோ கடையினுள் சென்று தேநீர் ஊற்றத் தொடங்கினார்.

அந்தத் தாத்தா தேநீரை இழுத்து இழுத்து ஆற்றிக் கொண்டு இருக்கும் ஒருவித ரிதத்தை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் கஸ்தூரி…

பசும் பாலில் மஞ்சள் போட்டு, ஏலக்காய் தட்டிப் போட்டு, கற்கண்டு போட்டு, மண்ணில் செய்யப்பட்ட குவளை நிறைய நுரை தள்ளத் தள்ள ஊற்றிக் கொடுத்தார் அந்த வயதானவர்.

குவளையைக் கையில் வாங்கி அந்தப் பசும் பாலின் இனிய நறுமணத்தை முகர்ந்து பார்த்து அதை ஒரு வாய் அருந்திய கஸ்தூரி நிஜமாகவே சொக்கித் தான் போனாள்.

தாமரை இலையில் சுடச் சுடக் கொண்டு வந்து கொடுக்கப் பட்ட வாழைக்காய்ப் பஜ்ஜி வேறு என் ருசி மட்டும் எந்த விதத்தில் குறைந்தது என்பது போல அத்தனை ருசியாக இருந்தது. ஏதோ பிறவிப் பயனை அடைந்தது போல் அவளுக்கு ஒரு உணச்சி.

தேநீர்க் கடையில் ஒரு பக்கமாக ஒரு ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த வானொலிப் பெட்டியில்
"பூமிக்கும் அந்த வானுக்கும் இடையில ஒவ்வொரு சுவைக்கும் மனசு லயிச்சிது...
இந்தப் பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது..."
என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது...

அந்தப் பாடலைக் கேட்டவளோ மெல்லப் புன்னகைத்தாள்...

திடீரென ஏதோ நினைத்தவளாக
“இப்போது தானே எனக்கு ஒரு விஷயம் புரிந்தது”
என்றாள் சூரியனைப் பார்த்து...

என்ன விஷயம் என்பது போலப் புருவங்களை உயர்த்தினான் சூரியன்.

“பழத்தோட்டம் பழத்தோட்டம் என்று நீங்கள் பறந்தது ஏன் என்று புரிந்து விட்டது”

“ஏன்?”

“இந்த அருமையான பால்த் தேநீருக்காகவும் இந்த அருஞ்சுவையான பஜ்ஜிக்காகவும் தானே…”

“பரவாயில்லையே கண்டுபிடித்து விட்டாயே…”

“துரோகி…”

“துரோகியா நானா?”

“பின்னே நானா? இவ்வளவு அருமையான இடங்களுக்கு முதலே அழைத்து வந்து இருக்கலாமே”

“அது தான் இப்போது அழைத்து வந்து விட்டேனே… இனிமேல் பாரேன் துரோகி என்று சொன்ன வாயாலேயே என்னைத் தெய்வமே என்று பாராட்டும் அளவிற்கு இடங்களையும் விதம் விதமான உணவுகளையும் அறிமுகப் படுத்துகிறேன்”
என்று சொன்னபடி வாகனத்தை ஓட்டத் துவங்கினான் சூரியன்.

வாகனம் வளைந்து நெளிந்து பயணத்தைத் தொடங்கியது.

அந்தப் பயணத்தின் முடிவு அவர்களுக்குக் கொடுக்கப் போகும் அந்தத் திருப்பத்தை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"சிறகுகள் நீளுதே
பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே
துள்ளித் துள்ளிப் போகுதே
புது வித அனுபவம்
நொடியினில் பெருகிடும்..."
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 34

IMG-20210627-WA0004~2.jpg

IMG-20210701-WA0042~2.jpg

IMG-20210627-WA0025~2.jpg

IMG-20210701-WA0020~2.jpg

காலைச் சூரியனின் இளங் கதிர்கள் மெல்ல மெல்லக் கிழக்கு வானில் பரவிப் படர்ந்து கொண்டிருந்தது.

மரங்களிலும் மரத்து இலைகளிலும் இருந்த பனித்துளிகளைக் கதிரவனின் ஒளிக் கற்றைகள் ஊடுருவி வர்ணஜாலத்தைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது.

பழத்தோட்டத்தில் வேலையாட்கள் தேனீக்களைப் போலச் சுறுசுறுப்பாகப் பழங்களைப் பறித்துக் கூடைக்குள் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பழங்களைப் பறித்துப் போடுவதையும், பழக் கூடைகளை வாகனத்தில் ஏற்றுவதையும் வேடிக்கை பார்த்தபடி கஸ்தூரி நின்றிருந்தாள்.

அதே நேரம் கையில் சில கோப்புகளோடு அவளை நோக்கி வந்தான் சூரியன்.

“என்ன கஸ்தூரி… வேலையெல்லாம் சரியாக நடக்கிறதா?”

“ம்ம்… ரொம்ப அருமையாக நடக்கிறது… இந்தப் பழங்கள் எல்லாம் எங்கே போகிறது?”

“கால்பகுதிப் பழங்கள் பழச்சந்தைக்குப் போகிறது, கால்பகுதி பழங்கள் நாங்கள் நடத்தும் இல்லங்களுக்குப் போகிறது, மீதி அரைப் பங்குப் பழங்கள் பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலைக்குச் செல்கிறது?”

“ஓஓஓ… உங்கள் பழத்தோட்டங்களில் என்னென்ன பழங்கள் இருக்கிறது?”

“நம் தோட்டத்தில் இல்லாத பழங்களே இல்லை”

“பொய் தானே... உங்கள் தோட்டத்தில் பனம்பழம் இருக்கிறதா? ஈச்சம்பழம் இருக்கிறதா? இலந்தைப்பழம் இருக்கிறதா? குறைந்தது வேப்பம்பழமாவது இருக்கிறதா?”

“அடிப்பாவி… உன்னிடம் பேசும் போது வார்த்தைகளைச் சரியாக உபயோகிக்க வேண்டும் என்பதை நான் அடிக்கடி மறந்து போகிறேன்…
அம்மா தாயே நம் தோட்டத்தில் பத்துக்கும் மேலான பழங்கள் இருக்கிறது அதனால் தான் அப்படிச் சொன்னேன்…
தெரியாமல் சொல்லி விட்டேன்…”
என்றவன் அவளது கைகளில் கோப்புக்களைத் திணித்து விட்டு
“உன் மூளையின் சக்தியை இதிலே பிரயோகித்து நல்ல வழி காட்டு தாயே!”
எனச் சொல்லியபடி வாகன ஓட்டுநர்களோடு பேசச் சென்று விட்டான்.

கோப்புக்களோடு அமர்ந்த கஸ்தூரி வேலையை முடித்து விட்டு எழுவதற்குக் கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் பிடித்தது…
அதன் பிறகே பல்லவி இருந்த இடத்தைத் தேடிச் சென்றாள்.

தோட்டத்துக்குச் சற்றே ஒதுக்குப் புறமாக ஒரு அளவான பெரிய வீடு… சமையலறை, சுவாமியறை, இரண்டு குளியலறை, ஐந்து படுக்கையறைகள் எனக் கச்சிதமாகக் கட்டப் பட்டிருந்தது.

வீட்டிற்குச் சுற்று வேலியோ சுற்று மதிலோ எதுவும் இல்லை.
வீட்டின் தலைவாசலைத் திறந்தால், பரந்தவெளியும் அதைத் தொடர்ந்து பழத்தோட்டங்களும் விரிந்து கிடந்தன.

வீட்டினுள் பல்லவியைக் காணாமல் வெளியே தேடிச் சென்றாள் கஸ்தூரி.

வீட்டில் இருந்து சற்றுத் தள்ளி ஒரு நீளமான மரக்கதிரை போடப்பட்டிருந்தது. அதில் அமர்ந்து கிழக்குப் பக்கமாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள் பல்லவி.

அவளை நோக்கி வந்த கஸ்தூரி பல்லவி பார்த்திருந்த திக்கைத் தானும் நோக்கினாள்.
அங்கே மலையின் உச்சியில் ஒரு கோவில் தெரிந்தது.

அனுவக்கா ஏன் அந்தக் கோவிலையே பார்த்துக் கொண்டு இருக்கிறாள் என யோசித்துக் கொண்டே அவளை உள்ளே அழைத்துச் சென்றாள் கஸ்தூரி.

அடுத்த நாள் காலையிலும் அந்த மலையில் இருந்த கோவிலைப் பல்லவி பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கஸ்தூரிக்கு ஒரே யோசனையாக இருந்தது.

சாதாரணமாகப் பார்க்கப் போனால், கோவிலை அடிக்கடி பார்ப்பது ஒரு விஷயம் இல்லை தான்…
ஆனால் பல்லவி இருக்கும் நிலைக்கு அவள் ஒரு இடத்தையே அதுவும் ஒரு கோவிலைப் பார்த்துக் கொண்டு இருப்பது யோசிக்க வேண்டிய விஷயம் அல்லவா எனச் சிந்தித்த கஸ்தூரி நேராகச் சூரியனிடம் போய் நின்றாள்.

“என்ன கஸ்தூரி… கோப்புக்கள் எல்லாவற்றையும் சரி பார்த்து விட்டாயா? ஏதும் பிழைகள் இருக்கிறதா?”

“நான் கோப்புக்கள் பற்றிப் பேச வரவில்லை… உங்களிடம் வேறு ஒன்று கேட்க வேண்டும்”

“வேறு ஒன்று கேட்க வேண்டுமா? சரி கேள்”
என்றபடி தன் கைகளில் இருந்த கோப்புக்களை மூடி வைத்து விட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“இங்கே கிழக்குப் பக்கமாக மலையின் உச்சியில் ஒரு கோவில் இருக்கிறதே…”

“ஆமாம் அங்கே ஒரு அம்மன் கோவில் இருக்கிறது… அது தான் எங்கள் குலதெய்வக் கோவில்”

“குலதெய்வக் கோவிலா?”

“ஆமாம் இந்தத் தொடர் நாடகங்களில் எல்லாம் வருமே… நாடகத்தின் ஒரு மாதக் காட்சிகளை வேறு அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றியே எடுப்பார்களே… அது தான் குலதெய்வக் கோவில்…”

“ஆனால் தொடர் நாடகங்களில் எல்லாம் குலதெய்வக் கோவில் கிராமங்களில் அல்லவா இருக்கும்… இங்கே என்ன மலை உச்சியில் இருக்கிறது…”

“கொஞ்சம் வித்தியாசமாக இருக்குமே என்று மலை உச்சியில் கட்டி இருப்பார்கள் போல”

“அதுவும் சரி தான்… ஆனால் பாருங்கள் அனுவக்கா அந்த அம்மன் கோவிலையே அடிக்கடி வெறித்து வெறித்துப் பார்க்கிறாள்... அதனால் தான் கேட்க வந்தேன்…”

“என்னது பல்லவி அந்தக் கோவிலை வெறித்துப் பார்க்கிறாளா? அப்படியானால் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது? அந்தக் கோவில் அவளுக்கு எதையோ நினைவு படுத்துகிறது போல…”

“உங்கள் குலதெய்வக் கோவில் அனுவக்காவுக்கு எதை நினைவு படுத்த முடியும்... அனுவக்கா இந்த இடத்திற்கு இப்போது தானே வருகிறாள்...
இதற்கு முதல் வந்ததில்லையே… அப்படி இருக்கும் போது எப்படி அந்தக் கோவிலைப் பார்க்கையில் ஏதாவது நினைவு வரும்?”

“இல்லை கஸ்தூரி… பல்லவி இங்கே பலமுறை வந்திருக்கிறாள்... சின்னண்ணாவுக்கும் பல்லவிக்கும் திருமணம் நடந்த உடனே இங்கே தான் வந்தார்கள்… கோவிலுக்குப் போய் விட்டு வரும் போது தான் அந்தக் கொடுமையான விபத்தே நடந்தது…”

“ஓஓஓ… அனுவக்காவுக்கு இந்த இடம் கொஞ்சம் கொஞ்சம் புரிகிறது போல… இதுவும் நல்ல முன்னேற்றம் தானே”

“ஆமாம் நல்ல முன்னேற்றம் தான்… பல்லவியை அடிக்கடி வெளியே அழைத்தும் செல்ல வேண்டும்… அது ரொம்ப நல்ல பலனைக் கொடுக்கும் என்று நினைக்கிறேன்…”

“அதுவும் சரிதான்…”

“அப்புறம் இன்னொரு விஷயம் கஸ்தூரி…
நான் நாளை ஒரு வேலை விஷயமாகப் பக்கத்துக் கிராமம் வரை போகிறேன்...
மாலையே திரும்பி வந்து விடுவேன்...
இருவரும் பத்திரமாக இருந்து கொள்ளுங்கள்… இங்கே ஆள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் அதனால் பயம் ஒன்றும் இல்லை சரியா…”
என்றபடி தன் வேலைகளைப் பார்ப்பதற்குச் சென்று விட்டான் சூரியன்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

பல்லவிக்கு உணவை ஊட்டி விட்டுச் சமையலறையை ஒதுக்கிய கஸ்தூரிக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.

கணக்குவழக்குப் பார்ப்பதற்கு என்று ஒரு கோப்புக் கூட இல்லை. இனிமேல் சூரியன் வந்து ஏதும் கோப்புக்களைக் கொடுத்தால் தான் உண்டு.

இங்கே சமையல் வேலை கூட இல்லை. மூன்று வேளை உணவுகளையும் பழத் தோட்டத்தின் மேற்பார்வையாளர் முருகமூர்த்தி தன் வீட்டில் இருந்தே அனுப்பி வைத்து விடுவார்.

அதனால் என்ன செய்யலாம் என யோசித்த கஸ்தூரிக்கு அப்போது தான் ஒரு யோசனை பிறந்தது.

பழத்தோட்டத்தில் அவர்கள் தங்கி இருந்த வீடு பழையபாணியில் அமைக்கப்பட்ட பூர்வீகமான வீடு. ஏராளமான பகுதிகள் மரங்களினால் அமைக்கப்பட்டிருந்தன.
கலைப் பொருட்களும் நிறைய அங்காங்கே வைக்கப்பட்டிருந்தன.

பேசாமல் வீடு முழுவதையும் சுத்தம் செய்தால் என்ன என்று யோசித்த கஸ்தூரி… சேலையை இழுத்துச் செருகியபடி வேலையில் இறங்கினாள்.

கிட்டத் தட்ட அனைத்து அறைகளிலும் இருந்த பொருட்களை வெவ்வேறு வடிவத்தில் அழகாக அடுக்கி வைத்த கஸ்தூரி கடைசியாக அந்த அறையை அடைந்தாள்.

அந்த அறையில் இருந்த சிறிய அலுமாரியைத் திறந்தவளின் முன்னால் ஒரு நாட்குறிப்பு தன் பக்கங்களை விரித்தபடி விழுந்தது.

அதை எடுத்து மெல்லத் திறந்து பார்த்தாள்.
முதல் பக்கத்திலேயே பல்லவியின் படம் ஒட்டப் பட்டிருந்தது.
அதற்குக் கீழே மகேந்திரவர்மன் என எழுதப் பட்டிருந்தது.

அடுத்தவர்களின் நாட்குறிப்பை அவர்களுக்குத் தெரியாமல் படிப்பது அநாகரிகமான செயல் என்பது கஸ்தூரிக்கு நன்கு தெரியும்.
ஆனாலும் ஏனோ அந்த நாட்குறிப்பைப் படிக்க வேண்டும் போல அவளது உள்ளுணர்வு சொல்லியது.

இதில் இருக்கும் ஏதாவது ஒரு விஷயம் அனுவக்காவின் முன்னேற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம் தானே எனத் தோன்றியது.

அதோடு இந்த நாட்குறிப்புக்குச் சொந்தமானவர் தான் இப்போது இல்லையே எனத் தனது மனசாட்சியைச் சமாதானப் படுத்தியபடி அந்த நாட்குறிப்பைப் படிக்கத் தொடங்கினாள்.

அந்த நாட்குறிப்பு இருண்டு கிடக்கும் ஆதித்யன் குடும்பத்துக்கு வெளிச்சம் கொடுக்கப் போகும் ஒளி விளக்கு என்பதை அப்போது கஸ்தூரி அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

படுக்கையில் இருந்து எழுந்து கொண்ட ஆதித்யன் சோம்பல் முறித்தபடி தன் அறையின் சாளரத்துத் திரைச்சீலையை மெல்ல விலக்கி வெளிக் காற்றை ஆழமாகச் சுவாசித்தபடி வெளியே நோட்டமிட்டான்.

காலையிலேயே மொட்டவிழ்ந்த மலர்களின் இனிய சுகந்தத்தைக் காற்று சுமந்து வந்து இதமாக நாசி தீண்டிச் சென்றது.

வெளியே தோட்டத்தில் பூக்கூடையை ஏந்தியபடி பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள் காயத்திரி.

தோட்டத்தை வலம் வந்த ஆதித்யனின் விழிகள் காயத்திரியைக் கண்டதும் அப்படியே தேங்கி நின்றன.

அவளது தோற்றமே முழுவதும் மாறிக் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருப்பதைப் பார்த்த அவன் விழிகள் அதை நம்ப மறுக்கவே தன் விழிகளைத் தேய்த்து விட்டபடி மீண்டும் அவளைப் பார்த்தான்.

மஞ்சள் பூசிக் குளித்திருப்பாள் போல மஞ்சள் முகமும் நெற்றியில் குங்குமமுமாய்த் தாய்மையின் பூரிப்புடன் நின்றிருந்தாள் அவன் மனைவி.

மஞ்சள் பூசி, நெற்றியில் அழகாய் ஒரு பொட்டு வைத்து விட்டால் எந்தப் பெண்ணுமே பேரழகி தான்... பார்ப்பதற்கே எத்தனை இலட்ஷணமாய் இருக்கிறாள் எனத் தனக்குத் தானே அவளைச் சிலாகித்துக் கொண்டான்.

அவள் மீது இருந்த கோபத்திலும், வேலையால் ஏற்பட்ட அழுத்தத்தினாலும் இந்த மாற்றம் கண்ணை எட்டிய போதும் தன் கருத்தை எட்டவில்லையே எனத் தன்னையே நொந்து கொண்டான்.

சில நொடிகள் தன்னை மறந்து தன்னவளை இரசித்திருந்தவனின் மனமோ
"என்ன இருந்தாலும் என் மீது அவளுக்கு நம்பிக்கை இல்லாமல் தானே என்னைப் பற்றித் தப்பாக நினைத்தாள்"
என மீண்டும் உச்சாணிக் கொப்பில் போய் உட்கார்ந்து கொண்டது.

அவளையே நினைத்து வாழ்ந்திருந்த என்னை என் நேசத்தை அவளால் எப்படித் தவறாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு வார்த்தை ஒரே வார்த்தை பல்லவி இங்கே எப்படி வந்தாள்? அவள் கணவன் யார்? அவளுக்கு ஏன் இந்த நிலைமை? என்று கேட்டு இருந்தால் குறைந்தா போய் விட்டிருப்பாள்.
என நினைத்தவனுக்கு மனது வலித்தது.

“என்னை எப்போதடி புரிந்து கொள்ளப் போகிறாய்”
என்று வாய் விட்டுச் சொல்லியபடி சுவற்றில் தன் வலது கை முஷ்டியால் ஓங்கிக் குத்தினான்.

கை லேசாக இரத்தம் கன்றிப் போய் வலியைக் கொடுத்தது.
அந்த வலியைப் பொருட்படுத்தாமல் குளியலறைக்குள் சென்றவனோ… தன் மனவலியைக் குறைக்கத் தண்ணீர்க் குழாய்க்குக் கீழே நெடு நேரமாக நின்றான்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணரத் தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே அந்த வார்த்தை இல்லை
அன்பே உன் புன்னகை எல்லாம்
அடி நெஞ்சில் சேமித்தேன்... "

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 35

20210122_215238~2.jpg

0417e805ebd316e8e7b638c204075876~2.jpg

இளந் தென்றல் காற்று குளுகுளுவென வீசிக் கொண்டிருந்தது.

வீட்டினுள் இருப்பதை விடவும் வெளிக்காற்றைச் சுவாசித்தபடி வெளியே இருக்கலாமே எனப் பழத் தோட்டத்தின் நடு நடுவே வைக்கப் பட்டிருந்த மரக் கதிரைகளில் ஒன்றில் வந்து அமர்ந்து கொண்டாள் கஸ்தூரி.

அவளது கைகளில் மகேந்திரவர்மனின் நாட்குறிப்பு இருந்தது.

பல்லவியின் புகைப்படம் ஒட்டப் பட்டிருந்த முன் பக்கத்தைக் கடந்து அடுத்த பக்கத்தைப் புரட்டினாள் கஸ்தூரி.

அனுவைப் பார்த்ததில் இருந்து, அவளைத் திருமணம் செய்தது வரை அந்த நாட்குறிப்பில் எழுதி இருந்தான் மகேந்திரன். ஆனால் ஒரு சில வார்த்தைகளிலேயே எழுதி இருந்தான்.

அவளின் பெயர் அனுபல்லவி…

என் ஆழ் மனதினுள் புகுந்து அடாவடியாய்ச் சிம்மாசனம் போட்டு அமர்ந்த அல்லிராணி அவள்…

அவளைப் பார்க்கும் வரையில் வெற்றுக் காகிதமாய் இருந்தவன்… அவளைப் பார்த்த பின்னரே கிறுக்கிக் கிழித்துக் கசக்கிப் போடும் கடதாசி உருண்டை ஆனேன்…

முதன் முதலில் அவளைச் சாலையோரமாகப் பார்த்தேன்…
அப்போது எனக்குத் தெரியாது என் வாழ்வு அவளோடு தான் இணையப் போகிறது என்பது… அதனால் சாதாரணமாகக் கடந்து சென்று விட்டேன்…

இரண்டாம் முறை பார்த்த போது, அவளின் சண்டைக்கோழித் தோற்றத்தைக் கண்டு மிரண்டு இருக்கிறேன்…

மூன்றாம் முறை பார்த்த போது, அவள் திருக்கரத்தினால் திருச்சாத்து வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்…

நான்காம் முறை பார்த்த போது, அவள் அனுதாபத்துக்கு ஆளாகி, ஐந்தாம் சந்திப்பில் அவள் நட்புக்கரத்தைப் பற்றிக் கொண்டேன்...

ஆறாவது சந்திப்பில் தன் மனம் விட்டுச் சந்தோச துக்கங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டாள்...

ஏழாவது சந்திப்பில் என்னிடம் காதலைச் சொன்னாள்...

அவளின் அந்த அற்புதமான காதலைத் தயங்கித் தயங்கிப் பத்தாவது சந்திப்பில் நான் ஏற்றுக் கொண்டேன்...

ஏதோ இனம் புரியாத சந்தோசம் என்னுள் ஊற்றெடுப்பதை அப்போது உணர்ந்தேன்...

எனக்கே எனக்கென இறைவன் அனுப்பி வைத்த பொக்கிஷம் அவள் என்பதை ஒவ்வொரு நொடிப் பொழுதும் உணர வைத்துக் கொண்டிருந்தாள் என்னுயிர்த் தேவதை...

காதல் வானிலே சுதந்திரப் பறவைகளாகச் சந்தோசமாகச் சிறகு விரித்துப் பறந்து கொண்டிருந்தோம்.


எனத் தனக்கும் பல்லவிக்கும் இடையிலான காதல் கதையை எழுதி இருந்த மகேந்திரன் அதன் பிறகே ஏதோ ஒரு பிரச்சினை குறித்து எழுதி இருந்தான்.

கஸ்தூரி நினைத்தது போல நாட்குறிப்பு முழுவதும் அவன் எழுதி வைக்கவில்லை. ஒரு சில பக்கங்களே அவன் தன் உள்ளக்கிடக்கையை எழுதி வைத்திருந்தான்.

கொஞ்சம் நாட்களாகவே அனுவிடம் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்கிறேன்.

என்னைச் சந்திப்பதைக் குறைக்கிறாள். நானே தேடிச் சென்றாலும் ஏதோ காரணம் கூறி என்னைத் தவிர்க்கிறாள்.

என்னைப் பார்ப்பதைத் தான் தவிர்க்கிறாள் என்று பார்த்தால் இப்போதெல்லாம் என்னுடன் பேசுவது கூடக் குறைந்து விட்டது.

இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமல் அவளைச் சந்தித்து ஏதாவது பிரச்சினையா? என்று கேட்டாலும்… ஒன்றுமில்லையே என்பதைத் தவிர வேறு எந்தப் பதிலும் இல்லை.

சரி அவளாகச் சொல்லட்டுமே ‘சரக்கு மலிந்தால் சந்தைக்கு வந்து சேரும்’ என்பது போல நானும் அமைதியாக இருந்து விட்டேன். ஆனாலும் மனது பாராமகத் தான் இருந்தது.

ஒரு நாள் திடீரென என் வாகனத்தைச் சில இனம் தெரியாத முகமூடி அணிந்த நபர்கள் வழி மாறித்தார்கள்.

என் அனுவை நிம்மதியாக வாழ விட வேண்டுமென்றால் தாங்கள் சொல்வதைச் செய்யச் சொன்னார்கள்.

என்னால் அவர்கள் சொன்னதைச் செய்யாமல் இருக்க முடியவில்லை. அது என் அனுவின் உயிருக்கு ஏதேனும் ஆபத்தைக் கொண்டு வந்து விடுமோ என்று உதறலாக இருந்தது.

அண்ணாவிடம் இது பற்றி ஏதும் சொன்னால் அவன் கோபமாக ஏதாவது செய்து விடுவானோ என்றும் பயமாக இருக்கிறது.

அந்த முகமூடி நபர்கள் வேறு இந்த விடயம் பற்றி யாரிடமும் மூச்சுக் கூட விட வேண்டாம் என்றும் மீறினால் என் குடும்பத்தையே கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டி விட்டுப் போய் விட்டார்கள்.

நான் தனி ஆளாக இருந்திருந்தால் இவர்களின் உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் பணிந்து போய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் குடும்பம் என்று வரும் போது தான் யோசிக்க வேண்டி இருக்கிறது.

சரி அவர்கள் சொல்வதைச் செய்து தான் பார்ப்போமே என்ற எண்ணத்தில், நான் என்ன செய்ய வேண்டும் என்பது போல அவர்களிடம் போய் நின்றேன்.

தாங்கள் சொல்வதைச் செய்யாது விட்டால் என் குடும்பத்தையும் அனுவையும் கொலை செய்வோம் என அவர்கள் சொன்ன போதே அவர்கள் என்னைச் செய்யச் சொல்லப் போகும் வேலை ஏதோ விபரீதமானதாக இருக்கும் என்பதை அப்போது நான் யோசிக்கவில்லை.

அந்த முக மூடி நபர்களின் தலைவன் போல நின்றிருந்தவன் என்னருகில் வந்து நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொன்னான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கோபமாக
என்னால் முடியாது என்று மறுத்து விட்டு அங்கிருந்து வெளியேற
முயன்றேன்.

ஆனால் அப்போது அவர்கள் ஒரு காணொளியைத் திரையில் ஓட விட்டார்கள். அதைப் பார்த்ததும் எனது கால்கள் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் ஆணி அறைந்தது போல அப்படியே
நின்றன.

அதில் அனுவை யாரோ மூன்று முகமூடி நபர்கள் துப்பாக்கியுடன் பின்தொடர்வதைப் பார்த்தேன்.
இவர்கள் சொல்வதை நான் நிராகரித்தால் அங்கே அனுவைக் கொன்று விடுவோம் என்று மீண்டும் மிரட்டினார்கள்.

எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அதனால் அவர்கள் சொன்னதெற்கெல்லாம் நான் இசைந்து கொடுத்தேன்.

அவர்கள் செய்யச் சொன்ன அந்த வேலை போதைப் பொருட்களைக் கடத்துவதற்கு நான் உடந்தையாக இருக்க வேண்டும் என்பது தான்.

அந்த நேரத்தில் எனக்கு அனுவைக் காப்பாற்ற வேண்டும் என்பதே மனதில் ஆழமாகப் பதிந்து இருந்தது.

அதனால் மறுத்துப் பேசாமல் முதலில் சரி என்று சம்மதம் சொன்னேன். ஆனால் எனது மனதினுள் வேறு ஏதோ எண்ணம் ஓடிக் கொண்டு இருந்தது. இந்த முகமூடி நபர்களுக்குத் சிங்களமொழியைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. அதை எனக்குச் சாதகம் ஆக்கிக் கொள்ள நான் திட்டம் போட்டேன்.

இவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன்னால் நிறுத்த வேண்டும் என்பதனை எனது முழு மூச்சாகக் கொண்டு இயங்கினேன்.

தனியாளாக இதனைச் செய்வது எனக்குப் பெரும் சவாலாக இருந்தது. ஆனாலும் நான் மனம் தளர்ந்து சோர்ந்து போகவில்லை.

போதை மாத்திரைகளுக்குப் பதில் மருத்துவரீதியான
மாத்திரைகளைக் கொண்டு சென்றேன்.

எனது சில பல செயல்களால் அம்மாவும் அப்பாவும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். அண்ணா வேறு எனக்காகத் தன்னைக் கஷ்டப் படுத்திக் கொண்டான்.

இதன் காரணமாக அம்மாவையும் அப்பாவையும் இங்கே இந்தப் பழத் தோட்டத்துக்கு அண்ணா அனுப்பி வைத்தான்.

இங்கேயே இருந்த நான் அனு பற்றியும் என் காதல் விடயம் பற்றியும் அம்மாவிடம் சொன்ன போது அவர்கள் அடைந்த சந்தோசம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அதோடு அம்மா ஏதோ கவலையுடனும் தீவிரமாக
யோசித்தார்கள். அதன் விளைவாக எனக்கும் அனுவுக்கும் திருமணம் ஏற்பாடு செய்தார்கள்.
ஆனாலும் அண்ணாவுக்குத் திருமணம் நடப்பதற்கு முன்பாக எனக்கு நடப்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் அம்மா அதற்காகச் சொன்ன காரணம் என்னை மறுத்துப் பேச விடாமல் சம்மதம் சொல்ல வைத்தது.

காரணம் சில நாட்களின் பின்னரே அந்த நபர்கள் ஏன் இவ்வாறு என்னுடன் விளையாடுகிறார்கள் என்பதை நான் தெரிந்து கொண்டேன். அதனை அனுவும் என்னிடம் சொன்னாள். அம்மாவும் என்னிடம் சொன்னார்கள்.

அண்ணாவுக்கும் சூரியனுக்கும் கூடத் தெரியாமல் எனக்கும் அனுவுக்கும் அம்மாவும் அப்பாவும் திருமணம் செய்து வைத்தார்கள்.

இதற்கிடையில் என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயன்று அந்த முக மூடி நபர்களைச் சட்டத்தின் முன்னால் கொண்டு வந்தேன்.

எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டு இருக்கிறது என்று தான் நானும் உறுதியாக நம்பிக் கொண்டு இருந்தேன். ஆனால் என்னைச் சுற்றிச் சதி வலை பின்னப் படுவதை நான் அறியவேயில்லை.

இன்று எனக்கும் அனுவுக்கும் திருமணம் நடந்து சரியாக ஒரு நாள் முடிந்து விட்டது.

நாளைய தினம் அம்மாவும் அப்பாவும் என்னையும் அனுவையும் குலதெய்வக் கோவிலுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

இப்போது நேரம் நள்ளிரவு ஒரு மணி... அனு நல்ல தூக்கத்தில் இருக்கிறாள்.

ஆனால் எனக்கு ஏனோ தூக்கம் வரவில்லை.

அனுவுக்கு நான் நிறைய வாக்குகள் கொடுத்திருக்கிறேன் அதையெல்லாம் நிறைவேற்றி அவளைச் சந்தோசமாக
வைத்திருக்க வேண்டும்.

ஆனால் எனக்கு ஏதோ விபரிதமாக நடக்கப் போகிறது என்று என் ஆழ் மனது சொல்லிக் கொண்டே இருக்கிறதே... ஆனால் அது என்னவென்று தான் புரியவில்லை.

அன்று ஒரு நாள் அந்த முகமூடிக் கூட்டத்தின் தலைவன் சிங்கள மொழியில் பேசியது எனக்குத் தெளிவாகக் கேட்டது. எனக்குச் சிங்கள மொழி தெரியாது என எண்ணி அவர்கள் பேசிக் கொண்டார்கள். யாரோ ஒருவரின் குடும்பத்தை அவர்கள் கடத்தப் போகிறார்களாம்... அவர்களைக் கொல்லாமல் மாதக் கணக்காகச் சுயநினைவு இழக்கச் செய்வது தான் அவர்களது முக்கிய
குறிக்கோளாம்...
அதோடு அவர்களை இறந்தது போலக் காட்டிட வேண்டுமாம்
இறந்த உடல்கள் கிடைக்கவில்லை என்று எல்லோரும் நம்பும் அளவிற்கு செய்ய வேண்டுமாம்... அப்போது தானாம் மற்றவர்களுக்குச் சந்தேகம் வராதாம்... என்று பேசிக் கொண்டான்...

அவர்கள் யார் என எனக்குத் தெரியவில்லையே... மனது வேறு ஏதோ போல இருக்கிறதே...


என்று மகேந்திரன் எழுதி இருந்தான். அதற்குப் பிறகு எதுவும் எழுதப் படவில்லை.

இதைப் படித்து முடித்த கஸ்தூரி சிந்தனையில் மூழ்கினாள். அவளுக்கு ஏதோ குழப்பமாக இருந்தது.

விரைந்து சென்று முருகமூர்த்தியை அழைத்தாள்.

"என்னம்மா?"

"சூரியனைக் கொஞ்சம் இங்கே சீக்கிரம் வரச் சொல்லுகிறீர்களா?"

"அவர் வேலைகள் விஷயமாக அடுத்த கிராமத்துக்குச் சென்று இருக்கிறார் அம்மா... எதுவும் தேவையா என்னிடம் சொல்லுங்கள் நான் செய்கிறேன்..."

"அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை... கொஞ்சம் முக்கியமாகப் பேச வேண்டும்..."

"அவர் நாளைக் காலையில் தானம்மா வருவார்..."

"ம்ம்ம்... சொன்னார்... நான் அவரிடம் பேச வேண்டுமே... இங்கே வீட்டில் தொலைபேசி ஒன்றையுமே காணோமே..."

"அங்கே அலுவலக அறையில் இருக்கிறதம்மா... நீங்கள் அங்கே சென்று பேசுங்கள்..."

"ஓஓ... நன்றி..."

"இருக்கட்டும் அம்மா"
என்றபடி அவர் சென்று விட்டார்.

தனது அலைபேசியில் அலுவலக எண்ணைப் பார்த்ததும் யாராக இருக்கும் என்ற யோசனையுடன் அழைப்பைக் காதில் வைத்தான் சூரியன்...

கஸ்தூரி தான் அழைத்து இருக்கிறாள் என்பதை அறிந்ததும் அங்கே ஏதும் பிரச்சினையோ என்பது போலப் பதறி விட்டான் சூரியன்.

"என்ன கஸ்தூரி ஏதும் பிரச்சினையா?"

"நான் உங்களை உடனே பார்த்துக் கொஞ்சம் பேச வேண்டும்"

"உடனேயா? நான் நாளைக் காலையில் வந்து விடுவேன்... அல்லது இன்றே வர வேண்டுமா? பிரச்சினை ஒன்றும் இல்லை தானே?"

"சரி நீங்கள் நாளைக் காலையிலேயே வாருங்கள்..."

"என்ன கஸ்தூரி... ஒன்றும் பிரச்சினை இல்லையே... நீ அது பற்றி வாயே திறக்க மாட்டேன் என்கிறாயே?"

"நீங்கள் நாளை வாருங்கள் நாங்கள் நேரிலேயே பேசிக் கொள்ளலாம்... இப்போதைக்கு ஒரு பிரச்சினையும் இல்லை..."
என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்.

அவள் பேசி முடித்ததும் தனது வேலைகளை வேகமாக முடிக்கத் தொடங்கினான் சூரியன். அவனது எண்ணம் யாவும் கஸ்தூரி அப்படி எந்த விஷயம் பற்றிப் பேசப் போகிறாள் என்பது பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை...
நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றுமில்லை...
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே..."

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 36

af9f12421fcb24c0dd516d883db04184~2.jpg

ae6227b3d98242134bf14d7367591a14~2.jpg


மலை உச்சியில் அமைந்திருந்த அம்மன் கோவிலில் வைகறை நேரத்திற்கான பூஜை மணி ஒலித்துக் கொண்டிருந்தது.

வெளியே பழச் சோலையில் விதம் விதமான புள்ளினங்களின் ஓசையும் கேட்டுக் கொண்டிருந்தது.

இந்தச் சத்தங்கள் எல்லாம் ஒன்று சேரவே, ஏற்கனவே தூக்கம் வராமல் வெறுமனே படுத்திருந்த கஸ்தூரி எழுந்து அமர்ந்து கொண்டாள்.

அவளுக்கு எப்போது கிழக்கே சூரியன் உதிப்பான் எப்போது சூரியன் வருவான் என்று இருந்தது.

வேக வேகமாக வேலைகளைச் செய்து முடித்து விட்டு ஆறு மணி வாக்கில் வெளி வாசலில் நடக்கத் தொடங்கினாள்.

சூரியன் காலையில் வருகிறேன் என்று சொல்லி இருந்தானே தவிர நேரத்தைச் சொல்லவில்லையே என்றபடி வாசலில் இருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் கஸ்தூரி.

நேரம் போய்க் கொண்டிருந்ததே தவிர சூரியனை மட்டும் காணவில்லை.

ஆதங்கத்துடன் வீட்டினுள் ஓடிச் சென்று நேரத்தைப் பார்த்தவள் உண்மையில் கடுப்பானாள்.
நேரம் ஒன்பதைத் தாண்டிக் கொண்டிருந்தது.

அதே நேரத்தில் வெளியே வாகனத்தின் சத்தம் கேட்கவே சூரியன் தானோ என்று ஓடிச் சென்று பார்த்த கஸ்தூரி ஏமாந்து தான் போனாள்.

யாரோ ஒரு பெண் ஒரு பெரிய வாகனத்தில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு முன்னால் அவளது பைகளைச் சுமந்த படி முருகமூர்த்தி வந்து கொண்டிருந்தார்.

அவர்களுக்கு உள்ளே செல்வதற்கு வழியை விட்ட கஸ்தூரி நின்றிருந்த வாகனத்தைத் தாண்டிப் பாதையை விழிகளினால் துளாவினாள்.

பின்னர் என்ன நினைத்தாளோ அலுவலக அறைக்கு ஓடிச் சென்று சூரியனுக்குத் தொலைபேசி அழைப்பை விடுத்தாள்.

இரண்டு மூன்று தடவைகள் அழைத்த பின்னரே சூரியன் அழைப்பை எடுத்துப் பேசினான்.

"காலையில் வருகிறேன் என்று சொன்னீர்களே... நேரம் பத்தைத் தாண்டிக் கொண்டிருக்கிறது..."

"ஆமாம் கஸ்தூரி... ஆனால் என் வாகனத்தில் ஏதோ கோளாறு... பாதி வழியில் நிற்கிறேன்... இப்போது தான் ஒரு பையன் உதவிக்கு வந்தான்..."

"அடடா... அப்படியானால் இன்று வர மாட்டீர்களா?"

"இப்போது தான் வர முடியாது... ஆனால் சாயந்திரத்திற்குள் வந்து விடுவேன்... நான் வர நேரமாகும் என்று மூர்த்திமாமாவிடம் சொல்லி இருந்தேன்... உன்னிடம் சொல்லி விடச் சொல்லுமாறு சொல்ல மட்டும் மறந்து விட்டேன்..."

"சரி பரவாயில்லை... முடிந்த வரை சீக்கிரம் வரப் பாருங்கள் உங்களிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும்... இங்கே அடிக்கடி வந்து என்னால் தொலைபேசியில் பேச முடியாது... நிறைய ஆள் நடமாட்டமாக இருக்கிறது..."

"ஓஓ... புரிகிறது புரிகிறது... நான் இன்றே வந்து விடுவேன்..."

"சரி நான் வைக்கட்டுமா..."
என்றபடி அழைப்பைத் துண்டித்தாள் கஸ்தூரி.

தொலைபேசியை வைத்த பின்னரே அந்தப் புதிய பெண் யாராக இருக்கும் என யோசித்த கஸ்தூரி உடனேயே யாராக இருந்தால் நமக்கு என்ன வந்தது என எண்ணியபடி வெளியே சற்றுத் தூரமாக அமர்ந்திருந்த பல்லவியை நோக்கிச் சென்றாள்.

சிறிது நேரத்திலேயே பல்லவியும் கஸ்தூரியும் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி முருகமூர்த்தியும் அந்தப் பெண்ணும் வந்தார்கள்.

"வணக்கம் அம்மா... இவள் என்னுடைய ஒரே மகள் சுமித்திரை..."
என்றபடி அந்தப் புதியவளை அறிமுகம் செய்து வைத்தார் முருகமூர்த்தி.

மெல்லிய முறுவலுடன் பதிலுக்கு அந்தப் பெண்ணைப் பார்த்து வணக்கம் வைத்தாள் கஸ்தூரி.

"உங்களுக்கு ஒத்தாசையாக இருக்கட்டுமே என்று அழைத்து வந்தேன்... என்ன உதவி வேண்டும் என்றாலும் இவளைக் கேளுங்கள்..."
என்றபடி அவர் போய் விட்டார்.

நின்று கொண்டிருந்த சுமித்திரையைப் பார்த்த கஸ்தூரி
"நிற்கிறீர்களே இங்கே அமருங்கள்..."
என்றபடி அவளுக்கு இடம் விட்டு அமர்ந்து கொண்டாள்.

பதிலுக்குப் புன்னகைத்தபடி கஸ்தூரிக்கு அருகில் அமர்ந்து கொண்டாள் முருகமூர்த்தியின் மகள்.

"உங்கள் பெயர் கஸ்தூரி தானே... ஆனால் இவர்களின் பெயர் என்ன...?"

"ஆமாம் என் பெயர் கஸ்தூரி தான்... இது அனுவக்கா... அனுபல்லவி என்பது தான் இவர்கள் பெயர்..."

"உண்மையாகவே உங்கள் இருவரது பெயரும் அழகாக உள்ளது..."

"மிகவும் நன்றி... பதிலுக்குச் சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை உங்கள் பெயர் கூட அழகாகத்தான் இருக்கிறது... இன்னும் சொல்லப் போனால் இராமாயணத்தில் வரும் எனக்குப் பிடித்த காதபாத்திரத்தின் பெயர் என்பதால் கூடுதல் அழகாகத் தெரிகிறது..."

"கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருக்கிறது..."

"எதைச் சொல்கிறீர்கள்?"

"பொதுவாக இராமாயாணத்தில் பிடித்த கதாபாத்திரம் என்று பார்த்தால் யாருமே சுமித்திரையின் பெயரைச் சொல்லி நான் கேட்டதேயில்லை... நீங்கள் தான் அபூர்வமாக இந்தப் பெயரைச் சொன்னீர்கள்... அதைத் தான் வித்தியாசமாக இருக்கிறது என்று சொன்னேன்..."

"ஓஓ... அப்படியா? எனக்கு இராமாயணத்தில் சுமித்திரையையும் ஊர்மிளையையும் தான் மிகவும் பிடிக்கும்... பிடிக்கும் என்பதை விட ஒரு வித அனுதாபம் என்று கூடச் சொல்லலாம்..."

"உண்மையாகவா? அதற்கான காரணத்தை எனக்கும் சொல்லுகிறீர்களா? எனக்கு இந்த இலக்கியங்கள் தொடர்பாக நிறைய ஆர்வம் இருக்கிறது..."

"எனக்கும் தான்... அதனால் உங்களுக்கு விளக்கம் கொடுப்பதில் எனக்கும் மிகவும் சந்தோசம் தான்..."

"இந்த அப்பா... என்னிடம் வந்து இங்கே தோட்டத்து வீட்டில் வந்து தங்கியிரு என்று சொன்னார்... அப்படியே உங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்றும் சொன்னார்... புதிய நபர்கள் எப்படிப் பேசுவார்களோ என்று தயக்கத்துடன் தான் வந்தேன் கஸ்தூரி... ஆனால் உங்களுடன் பேசுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது..."

"உண்மையாகவா?"

"உண்மையாகத்தான்... இப்போது சொல்லுங்கள் கஸ்தூரி உங்களுக்கு ஏன் சுமித்திரையைப் பிடிக்கும்... அதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது..."

"சுமித்திரை தன் புதல்வனான இலக்குமணனை இராமனோடு கானகம் செல்வதற்கு அனுமதி கொடுத்தார்... இன்னும் சொல்லப் போனால் அவர் நினைத்திருந்தால் தன் மகனைத் தன்னோடு இருக்குமாறு சொல்லி ஆர்ப்பாட்டம் செய்து இருக்கலாம்... கோசலை தன் மகனைப் பிரிந்தது விதி ஆனால் சுமித்திரை தன் மகனை இராமனுக்காக அல்லவா பிரிந்தாள்... சுமித்திரையை நான் ஒரு சுயநலமில்லாத தாயாகவே காண்கிறேன்..."

"அடடா... அருமையாகச் சொன்னீர்கள்..."

"எனக்குத் தோன்றியதைச் சொன்னேன் சுமித்திரை..."

"இங்கே தங்கியிருக்கப் போகும் நாட்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கப் போகிறது என்பது மட்டும் நன்கு புரிகிறது கஸ்தூரி..."
என்றபடி சிரித்தாள் புதிதாக வந்த சுமித்திரை.

அதன் பின்னர் சுமித்திரையும் கஸ்தூரியும் சேர்ந்து சில கணக்கு வழக்குகள் அடங்கிய கோப்புக்களைச் சரி பார்த்தார்கள்.

சுமித்திரை அறையில் தன் உடைகளை அடுக்கிக் கொண்டிருந்த நேரம்... கஸ்தூரி வெளியே ஏதோ வேலையாக வந்த போது அவளிடம் முருகமூர்த்தி வந்து பேசினார்.

"அம்மா... கொஞ்சம் நாட்களுக்குச் சுமி உங்களுக்கு உதவியாக இருக்கட்டும்... சூரியாத்தம்பி ஏதேனும் கேட்டால், ஒரு ஆள் உதவிக்குத் தேவை என்று நீங்கள் தான் என்னிடம் கேட்டீர்கள் என்று சொல்லி விடுங்கள்..."

"ஆனால்... எனக்கு எதற்கு உதவி... வீணாகச் சுமித்திரையைக் கஷ்டப் படுத்தாதீர்கள்..."

"பரவாயில்லை அம்மா... அதோடு சுமியை நம் சூரியாத்தம்பிக்குத் தான் மணம் முடித்துக் கொடுப்பதாக இருக்கிறேன்... இப்படி அவள் உங்களுக்கு உதவியாக இருந்தால் தானே அது தம்பிக்கும் பிடிக்கும் அம்மா..."

"அப்படியானால் சரி தான்... சுமித்திரை இங்கேயே இருக்கட்டும்... எனக்கும் பொழுது கொஞ்சம் போனது போல இருக்கும்..."

"சரி அம்மா நான் வருகிறேன்..."
என்றபடி முருகமூர்த்தி சென்று விட்டார்.

அவர் சென்றதுமே மனக் கண்ணிலே சூரியனையும் சுமித்திரையையும் அருகருகே நிறுத்திப் பார்த்த கஸ்தூரி
"ம்ம்ம்... பொருத்தமான ஜோடி தான்... நன்றாக இருந்தால் சரி தான்..."
என நினைத்தபடி பல்லவியைத் தேடிச் சென்றாள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

சரியாக மாலை நெருங்கிக் கொண்டு இருக்கின்ற போது சூரியவர்மன் வந்து சேர்ந்தான்.

அவனது வாகனம் வருவதைத் தூரத்தில் இருந்து பார்த்த கஸ்தூரி வேகமாக வந்தாள். கிட்டத் தட்ட ஓடி வந்தாள் என்றே சொல்லலாம்.

அவள் வந்த வேகத்தில் சூரியனின் வாகனத்தோடு லேசாக மோதிக் கொண்டு நின்றாள். அவனும் பதறிக் கொண்டு வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கினான்.

"ஏய் கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா? உனக்கு..."
என்று திட்டியபடி இறங்கியவனை நிமிர்ந்து பார்த்தவளோ
"அதைப் பற்றிப் பிறகு பேசலாம்... இப்போது உங்களிடம் வேறு விஷயம் ஒன்று பேச வேண்டும்... உங்களுக்குக்கு ஒரு பதினைந்து நிமிடங்கள் கொடுக்கிறேன் அதற்குள் வந்து விடுங்கள்..."
என்றாள் மூச்சு வாங்க...

கஸ்தூரியை நிஜமாகவே விசித்திரமாகப் பார்த்து வைத்தான் சூரியன்.

"அப்படி என்ன விஷயம் பேசப் போகிறாள் இவள்"
என யோசித்தவன் அப்போது தான் சற்றுத் தள்ளி வந்து கொண்டிருந்த சுமித்திரையைப் பார்த்தான்.

அவனது முகம் லேசாகப் பிரகாசமானது.
"இந்தக் காதல் விஷயம் பற்றி இன்று இவளுடன் முடிவாகப் பேசி விட வேண்டும்... எத்தனை நாட்களுக்குத்தான் வீட்டுக்குத் தெரியாமல் மறைப்பது..."
எனச் சூரியன் தன்னுள் சொல்லிக் கொண்டான்.

சுமித்திரையும் அவனைப் பார்த்ததும் மலர்ந்த முகத்துடன் தான் வந்து கொண்டிருந்தாள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்...
காதலை யாருக்கும் சொல்வதில்லை...
புத்தகம் மூடிய மயில் இறகாக,
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை..."

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 37

IMG-20210701-WA0041~2.jpg

ae6227b3d98242134bf14d7367591a14~2.jpg

0a324242791ba7ad8aaf8878704ad9e1~2.jpg

சூரிய தேவன் மெல்ல மெல்ல மலை முகடுகளுக்கு அந்தப் பக்கம் இறங்கிக் கொண்டிருந்தான்.

மலைப் பிரதேசம் என்பதால் மாலை மயங்கி வருகின்ற வேளையிலேயே மெல்லிய குளிரையும் துணைக்கு அழைத்து வந்திருந்தது.

தோட்டத்து வீட்டில் இருந்த குளியலறையில் தண்ணீர்க் குழாய்குக் கீழே நின்றிருந்த சூரியன் முதலில் யாரிடம் பேசுவது என்பதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான்.

கஸ்தூரி நேற்றில் இருந்தே ஏதோ முக்கியமான விஷயம் பேச வேண்டும் பேச வேண்டும் என்று ஒரே பரபரப்பாக இருக்கிறாள்...

இந்தச் சுமித்திரை வேறு இங்கே வந்து சேர்ந்திருக்கிறாள்...
அவள் பார்வையில் ஏதோ என்னிடம் அவசரமாகப் பேச வேண்டும் என்பதற்காகவே இங்கே வந்திருப்பது போலத் தோன்றுகிறதே...
இவர்கள் இருவரிலும் யாரிடம் முதலில் பேசுவது... எனச் சூரியனின் சிந்தனை போய்க் கொண்டிருந்தது.

அங்கே வெளியே தன் நடையால் தோட்டத்தை அளந்து கொண்டிருந்தாள் கஸ்தூரி...

அவளது பார்வை மட்டும் வீட்டு வாசலையே அடிக்கடி நோக்கிக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு சூரியன் வெளியே வந்தான்.

நேராக இவளிடம் வந்தவனோ
"கஸ்தூரி நான் சுமித்திரையிடம் கொஞ்சம் முக்கியமாகப் பேச வேண்டும்..."
என்றான்.

பொறுமை பொறுமை என்று நின்றிருந்தவளோ நொடியில் கடுப்பானாள்.

"நான் கூடத் தான் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று நேற்றில் இருந்து காத்திருக்கிறேன் அதை மறந்து விட்டீர்களா?"
என்று முறைத்தாள்.

"மறக்கவில்லை... ஒரு பதினைந்து நிமிடங்கள் மட்டும் தந்தால் இப்போது உடனே வந்து விடுகிறேன்..."
என்றவனை அதற்கு மேல் என்ன சொல்வது என்பது போல அமைதியானாள் கஸ்தூரி.

அதைச் சம்மதமாக எடுத்துக் கொண்டு வேகமாகச் சென்று விட்டான் சூரியன்.

வேகமாகச் சென்றவனையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தாள் கஸ்தூரி.

"துரைக்கும் காதல் வந்து விட்டது போல... சுமித்திரையைப் பார்க்க இந்த ஓட்டம் ஓடுகிறாரே..."
என எண்ணியபடி வெளியே சற்றுத் தள்ளிப் போடப் பட்டு இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டாள் கஸ்தூரி.

அதன் பிறகு அவளது எண்ணமெல்லாம் மகேந்திரனின் நாட்குறிப்பிலேயே வியாபித்திருந்தது.

பேசாமல் ஆதியண்ணாவுக்கு அழைத்துப் பேசலாமா என்று நினைத்த கஸ்தூரி உடனேயே அந்த நினைப்பைக் கை விட்டாள்.

ஆதியண்ணா இப்போது அக்காவுடன் துணையாக இருக்க வேண்டும்... வீணாக அவரைக் கலவரப் படுத்த வேண்டாம்...

நான் நாட்குறிப்பில் படித்த விஷயம் பற்றி சூரியனிடம் பேசிய பிறகே எந்த முடிவையும் எடுக்க வேண்டும்...

எனக்கே ஒரே குழப்பமாக இருக்கிறது... நான் நினைப்பது எல்லாம் என்னவென்று எனக்கே புரியவில்லையே என்று ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்தாள் கஸ்தூரி.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தோட்டத்து வீட்டின் கடைசியில் இருந்த அந்த அறைக் கதவை லேசாகத் தட்டினான் சூரியன்.

கதவைத் திறந்து அவனை உள்ளே அழைத்தாள் சுமித்திரை...

"என்ன சுமி... சொல்லாமல் கொள்ளாமல் வந்து விட்டாய்... நான் உன்னை இங்கே எதிர்பார்க்கவில்லை... வீட்டில் ஏதேனும் தெரிந்து விட்டதா? ஆனால் நீயும் எத்தனை நாளுக்குத் தான் மறைத்து வைத்திருப்பாய்?"

"....................."

"இதற்குத் தான் நான் ஆரம்பத்தில் இருந்தே சொன்னேன்... வீட்டில் முதலில் பேசு என்று சொன்னேன்... என் பேச்சைக் கேட்டால் தானே..."

"..................."

"இப்போது நான் போய் மூர்த்தி மாமாவிடம் பேசினால் அவர் அதை எப்படி எடுத்துக் கொள்வாரோ தெரியவில்லை... அண்ணா பேசினால் மட்டும் தான் ஏதாவது பலன் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது..."

".................."

"சுமி... நான் உன்னிடம் தான் பேசிக் கொண்டு இருக்கிறேன் அதுவும் உன்னைப் பற்றித் தான் பேசிக் கொண்டு இருக்கிறேன்... இப்படித் தரையையே பார்த்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்..."

"மன்னித்துக் கொள்ளுங்கள் சூரியாண்ணா... நான் இப்போது என்ன தான் செய்வது, மாறனை என்னால் சந்திக்கக் கூட முடியவில்லை... அப்பாவுக்கு இன்னும் ஒன்றும் தெரிய வரவில்லை... தெரிந்தால் என்ன ஆகுமோ என்று பயமாக இருக்கிறது சூரியாண்ணா..."

"இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன் உனக்கு அப்படி என்ன பயம்... காதலிக்கும் போது மட்டும் தைரியமாகக் காதலிக்கத் தெரிகிறதே... வீட்டில் சொல்வதற்கு மட்டும் உனக்கு என்ன பயம்..."

"என்ன சூரியாண்ணா நீங்களும் இப்படிப் பேசினால் நான் என்ன செய்வது?"

"வேறு எப்படிப் பேச வேண்டும் என்கிறாய்? நீ மணிமாறனை நேசிக்கிறேன் அண்ணா என்று என்னிடம் வந்து நின்ற போதே உனக்கு நான் என்ன சொன்னேன் என்று நினைவு இருக்கிறதா?"

"ஆமாம் நினைவு இருக்கிறது..."

"நினைவு இருந்தால் மட்டும் போதுமா அதைச் செயல் படுத்த வேண்டாமா?"

"அது வந்து அண்ணா..."

"போதும் சுமி... நீ மாறனை விரும்புகிறாய் என்று தெரிந்த போது நான் உன்னைப் பற்றி எப்படி எல்லாம் நினைத்தேன் தெரியுமா? இப்போது பார்த்தால் உன்னிடம் தடுமாற்றம் தெரிகிறதே... என்ன அவனை விட்டு உன் அப்பா காட்டும் பையனுக்குக் கழுத்தை நீட்டப் போகிறாயா? அதற்கு நீ பேசாமலேயே இருந்திருக்கலாமே... மாறனின் மனதைக் கரைக்க முயன்று ஏன் வீணாக அவனையும் காயப்படுத்த வேண்டும்..."

"அண்ணா வேண்டாம் அண்ணா இப்படி எல்லாம் சொல்லாதீர்கள்... நான் அப்பாவிடம் சொல்லத் தயங்குவது உண்மை தான் அதற்காக என் மாறனை விட்டு மற்றொருவனை மனதால் கூட நினைக்க மாட்டேன் அண்ணா... நான் அமைதியாக இருப்பதற்குக் காரணமே என் மாறனைப் பற்றி அப்பா தப்பாகப் பேசி விடக் கூடாது என்பதற்காகத் தான்..."
என்று சொல்லி விட்டு விசும்பியவளை மெல்ல நெருங்கி அவளது முடியைக் கோதி விட்டான் சூரியன்.

"சரி சரி உடனே குடத்தைக் கவிழ்க்காதே... என் தலையை அடைமானம் வைத்தாவது உன் மாறனை உனக்கு மணமுடித்துக் கொடுக்கிறேன் போதுமா?"
என்று அவளது மூக்கைப் பிடித்து ஆட்டியவனின் கைகளைத் தட்டி விட்டு மூக்கைத் தேய்த்துக் கொண்டவளோ
"தலையை அடைமானம் வைத்தால் என் திருமணத்தை எப்படிப் பார்ப்பீர்களாம்..."
என்று சொல்லிச் சிரித்தாள்.

"அதற்குள் அடைமானம் வைத்த தலையை நீ மீட்டு விடுவாய் என்கிற நப்பாசை தான் தங்கமே..."
என்று தானும் சிரித்தான் சூரியன்.

சில நொடிகள் சிரித்து விட்டுச் சில விஷயங்களைப் பேசிக் கொண்டார்கள்.

"இதோ பார் சுமி... மணிமாறன் திருமணம் ஆகி இரண்டு மாதங்களிலேயே மனைவியைப் பறி கொடுத்தவன்... மனைவி இறந்து இந்த நான்கு வருடங்களில் தனியாகவே வாழ்ந்து கொண்டிருந்தவனின் பண்பும் குணமும் உனக்குப் பிடித்துப் போனதால், அவன் பின்னாலேயே சுற்றி அவனைக் கரையோ கரையென்று கரைத்து உன் காதலை ஏற்றுக் கொள்ள வைத்த உன்னால் உன் அப்பாவின் சம்மதத்தை வாங்க முடியாதா?"

"வாங்க முடியும் அண்ணா... உங்களோடு பேசியதில் எனக்குப் புதுத் தென்பு கிடைத்து விட்டது."

"ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள் சுமி... பெற்றவர்கள் தான் முக்கியம் என்பவர்கள் காதலிக்கக் கூடாது, ஒருவேளை அனைத்தையும் மீறிக் காதலிக்கத் தொடங்கி விட்டால் பெற்றவர்களே தடுத்தாலும் காதலை விட்டுக் கொடுக்கக் கூடாது... உனக்கு நான் சொல்வது புரிந்ததா"

"திவ்வியமாகப் புரிந்தது அண்ணா... இனி நானே அப்பாவிடம் பேசுகிறேன் அவர் சம்மதம் சொன்னால் மாறனை மணமுடிப்பேன்... இல்லை என்றால் இருவருமே திருமணம் செய்யாமல் இப்படியே காதலித்துக் கொண்டே இருப்போம்..."
என்றவளை நிஜமான மெச்சுதலுடன் பார்த்தான் சூரியன்.

"சரி சரி அங்கே வெளியே கஸ்தூரி எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள் நான் போகிறேன் நீ ஏதாவது புத்தகம் எடுத்துப் படி சுமி..."

"என்ன அண்ணா அங்கே வந்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லாமல் சொல்கிறீர்களா?"

"புரிந்தால் சரி தான்..."

"புரிந்ததால் தான் அப்படிச் சொன்னேன்"

"அப்படி என்ன புரிந்து விட்டது உனக்கு"

"எல்லாமே புரிந்து விட்டது எனக்கு"

"சரியான புளுகுமூட்டை நீ"

"நீங்கள் தான் அண்ணா சரியான மர்மமூட்டை"

"யார் நானா?"

"ஆமாம் நீங்கள் தான்..."

"ஏன் அப்படி என்ன மர்மத்தைக் கண்டு விட்டாய் என்னிடம்..."

"ஊருக்கே உதவும் உத்தமருக்கும் கூட கடைசியில் அந்த வியாதி தொற்றி விட்டது என்று எனக்குத் தெரிந்து விட்டது ஆனால் நீங்கள் மர்மமாகவே விஷயத்தைக் கையாளுகிறீர்களே அண்ணா"

"காதல் வந்தால் தூக்கத்தில் உளறுவார்கள் என்று கேள்விப்பட்டேன் நீ என்ன பட்டப் பகலிலேயே உளறுகிறாய்"
என்று லேசாகச் சிரித்து விட்டுக் கஸ்தூரியைத் தேடிச் சென்றான் சூரியன்.

சுமித்திரை தன் மனங் கவர்ந்த மாறனுக்குக் குறிஞ்செய்தி அனுப்பத் தொடங்கினாள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"மனம் விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
"
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Status
Not open for further replies.
Top