All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கதைத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
வணக்கம் மக்கா இதோ புதிய முயற்சியுடன் நமது ஸ்ரீமாவின் தள எழுத்தாளர்கள் 21 பேருடன், அவர்களின் கதை நாயகர்களுடன் உங்களை சந்திக்க மிக விரைவில் வர இருக்கிறோம். இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம். காத்திருங்கள்...
 

sivanayani

விஜயமலர்
11420
கேபினில் இருந்த ஆரியன் மனதிலோ இந்த உல்லாச பயணம் சந்தோஷமாக நிறைவு பெற வேண்டுமென்ற அவா மட்டுமே நிறைந்து இருந்தது. அவனோ மானிட்டரை பார்த்துக் கொண்டு இருக்க.. அந்த அறைக்குள் இரு கறுப்புக் காபி கப்புகளுடன் நுழைந்தாள் தியா.

அவளோ காபி பிரியை, தொழிலில் சூட்டிகை என்றாலும், சுட்டித்தனத்தில் குறைவில்லை . கேப்டனான பின்..ஃபேமஸ் ஆரியனுடனான முதல் சந்திப்பு, பயணம் இது. மற்றைய கேப்டன் யாரும் ஆர்யனை போல இவ்வளவு கடுமையாக இது வரை அவளிடம் நடந்து கொண்டது இல்லை.

காபியுடன் நுழைந்தவள் ஆர்யனை தாண்டப் போன சமயம் சற்று விரிந்து இருந்த இருக்கைக் கால் பகுதி, தடுக்கி விட அவள் காபியோ ஆரியனின் வெள்ளை சீருடை மீதும் மானிட்டர் மீதும் ஊற்றுப் பட்டது.

சும்மாவே வானுக்கும் பூமிக்கும் குதிக்கும் கப்பல் காவலனுக்கு இந்த நிகழ்வை ஏற்றுக் கொள்ள முடியுமா என்ன? மானிட்டரில் இருந்த துளிகளைக் கண்டவள், பரபரப்புடன் கையில் இருந்த கப்பை பலகையில் வைத்து விட்டு துடைக்க டிஷ்யூவை எட்டி எடுத்து வேகமாக துடைத்துக் கொண்டே,

"ஓஹ் சாரி கேப்டன் "என்றாள். முடித்துவிட்டு நிமிர்ந்தவள் அவன் இருந்த நிலையை கண்டு மேலும் அதிர்ந்து போனாள். வெண்ணிற சீருடையிலா கறுப்புக் காப்பியின் சிதறல்கள்..

இரு கைமுஷ்டிகளும் இறுக, உடல் விண்ணென்று நிமிர்ந்திருக்கத் தன் கோபத்தை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தான் அவன். அதனால் அவன் முகம் இறுகி சிவந்து போயிருக்க, அந்த தோற்றமே அவளுக்குப் பெரும் கிலியை ஏற்படுத்தியது.

"ஹவ் டேயர் யு?" என்று சீறியவனின் அக்கினி கண்களை பார்த்து அவளும் பயத்தில் உறைந்து போனாள்.

மேலும் தொடர்ந்தவன் "இது என்ன உன்னோட வீடா? எப்படி நடந்துக்கணும்னு தெரியாதா? காபியை கொட்டியதும் இல்லாம, மானிட்டர் பக்கத்துலேயே அத வச்சு இருக்க.. ஓஹ் ஷீட், நீயெல்லாம்..." என்றவன் கஷ்டப்பட்டு தனது கோபத்தை கட்டுப்படுத்தியபடி "ஜஸ்ட் கெட் அவுட், என் கண் முன்னாடி நிற்காத," என்றான். அவளோ வெளியில் விழ இருந்த கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டு

"கேப்டன்.. " என்று அழைக்க

"கெட் லாஸ்ட் ஃப்ரம் மை காக்பிட்." என்றான் அழுத்தமான குரலில்.

அவளுக்கோ தன்னை வெளியே போக சொல்ல இவன் யார்... என்கிற கடுப்பில் அவனை பார்த்து முறைத்தாள் தியா.
 
Last edited:

sivanayani

விஜயமலர்
#Teaser

ஆதீரநந்தன் உடனே
"இங்க பாஸ்கெட் பால் கோர்ட் இருக்கு, ரெண்டு டீமுக்கான ஜெர்சியும் இருக்கும் கண்டிப்பா, சோ நாம ஏன் ஒரு மேட்ச் விளையாட கூடாது?" என்று கேட்க

"ம்ம் நைஸ் ஐடியா" என்ற ஆரோன்

"நீங்க ஆறு ஃப்ரன்ட்ஸும் ஒரு டீம், என் பக்கம் ஆறு பேர் சேர்த்துகிறேன் " என்று கூற
"எங்க டீம் கேப்டன் தீரஜ் " என்றான் பிரித்வி.. ஏற்கனவே தீரஜுக்கும் ஆரோனுக்கும் இடையிலான பகை அறியாமல்.

ஆரோன் திரும்பி கம்பீரமாக பார்க்க அக்கன்யன் கண்ணசைவில் சம்மதம் தெரிவிக்க, விதார்த், கிருஷ்ணா மற்றும் அகிலன் மூவரும் கூட தமது சம்மதத்தை தெரிவித்தனர். உடனே ஆரோன்
"இப்போ நாம ஐந்து பேர் தான் இருக்கோம். பிரவீன் அண்ட் லாயர் ஸர் என்ன சொல்றீங்க?" என்று கேட்க பிரவீனோ

"நான் ரெஃபரி யா வரேன். ஜிம்மில் வச்சு கொஞ்சம் மஸ்ஸில் கிராம்ப் ஆயிடுச்சு, விளையாடுறது கொஞ்சம் கஷ்டம் " என்றான்.

விஸ்வநாத ராயர்,"எனக்கும் கொஞ்சம் ஷோல்டர் பெயின், சோ நானும் ரெஃபரி" கூற அந்த தோள் மூட்டு வலி வர காரணமே கப்பல் பயணத்தின் முன்னைய நாள்.. ஒருத்தனை போட்டு அடித்த அடி என்று அறிந்த திகம்பரி ஒரு அவனை செல்லமாக முறைக்க அவனோ கண் சிமிட்டி அவளை சமாதானப் படுத்தினான்.

அதை கேட்ட ஆரோன் பெருமூச்சுடன் "எல்லாரும் இப்படி சொன்னா அப்புறம் என்ன பண்ணுறது?" என்று கேட்க தீரஜ் அடக்க முடியாமல் நக்கலாக சிறிய சிரிப்பை சிந்த।। அது ஆரோன் காதில் வேறு விழுந்து தொலைத்தது. கண்களை மூடி தன்னை சமநிலைப் படுத்திக் கொண்டான்.

ஆறடி உயரத்தில் ஆறு ஆண்மகன்கள் ப்ரித்வி, விவேக், கெளதம் ப்ரபாகர், ஆதீர நந்தன், தீரஜ் மற்றும் தர்ஷன் ஒரு புறமும், அவர்கள் உயரத்துக்கு சற்றும் குறையாத உயரத்தில் அக்கண்யன், விதார்த், கிருஷ்ணா, அகிலன், ஜெயவர்மன், ஆரோன் மற்றைய புறமும் இருக்க அனைவர் பார்வையும் சிநேகமான ஒருவருக்கொருவர் பதிந்து மீண்டது ...தீரஜ் மற்றும் ஆரோனின் பார்வையை தவிர..
அப்போது பாஸ்கெட் பால் நடுவராக கருப்பும் வெள்ளையும் சேர்ந்த நிறத்தில் டீஷர்ட் அணிந்து நின்ற பிரவீன் அருகே வந்த நாச்சி "பிரவீன் உங்களுக்கு நிஜமா விளையாட தெரியாது தானே" என்று நக்கலாக கேட்க அவளை மெல்லிய சிரிப்புடன் பார்த்தவன் "ஆமா தெரியாது" என்றான் வேண்டுமென்றே.

கணவனின் சாகசம் பற்றி ஏற்கனவே அறிந்த அவளின் கேள்வி.. கேலி போல அவனை உசுப்பேற்ற கேட்கப்பட்டது என்று அவனுக்கு தெரியாதா என்ன? ஆனால் அவள் எதிர் பார்த்தது போல அவன் கோப படாமல் இருக்க.. முகத்தை சுளித்தவள் மேலும் பேச வாயைத் திறக்க, சுட்டு விரலை வாயில் வைத்து பேச வேண்டாம் என்று சைகை செய்தவன்

"அங்கே போய் இருடி, வாய துறந்தா என் கூட நிக்கிற காசிவிசுவநாதன் பார்ட் டைம் ரௌடி தான். புடிச்சு கொடுத்துடுவேன் பார்த்துக்கோ " என்றான். அதை கேட்டு விழி விரித்தவள் "ஒஹ் இவர் ரௌடியா? வக்கீல் இல்லையா?" என்று கேட்க.. ஆயாசமடைந்து, "முடியல… தள்ளிப் போடி" என்றான் சலிப்புடன். அவளும் கோபமாக முறைத்து விட்டு பார்வையாளர் இருக்கையில் அமர்ந்து இருந்த மீரா அருகே போய் அமர்ந்து கொண்டாள்.

இதே சமயம் கூடைப்பந்து மைதானத்தில் நின்ற பன்னிரண்டு சிங்கங்களும் நடுவர்களின் கட்டளைக்கு கிடைத்ததும் விளையாட்டை ஆரம்பித்தனர். ஆறடி உயரத்தில் ஆர்ம் கட்டை மீறி தெரிந்த தசைக் கோளங்களும் அழுத்தமான அதே நேரம் ஆவேசமான கால் தடங்களுடனும் விளையாட்டை ஆரம்பித்தவர்கள்.. முதல் பாஸ்கட் போடவே திணறிப் போனார்கள்.

சம பலம் கொண்ட இரு அணிகள் என்றால் வெற்றி தோல்வி நிர்ணயிக்க கூடியது அல்லவே. தர்ஷன் கையில் இருந்த பந்தை நிலத்தில் தட்டிக் கொண்டே ஓட … இடையில் புகுந்த விதார்த் அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்து தனது பக்கம் கொண்டு சென்றான். ஆனாலும் எதிரணி விடுமா என்ன? இடையில் ஓடி வந்த பிரித்வி முறுக்கேறிய புஜத்தால் தள்ளி கரத்தை உள்ளே நீட்டி பந்தை அபகரித்தவன் சற்றும் தாமதிக்காமல் அதை கூடையில் போட்டான். உடனே அந்த அணியினர் போட்ட கூச்சலில் மற்ற அணியினர் முகம் கோணினாலும் ஆரோனுக்கு தீரஜின் குரல் மட்டும் தனியாக கேட்டு கோபத்தை உயர்த்தியது. தீரஜ் அணியினருக்கு ஒரு புள்ளியை பிரவீனும் விஸ்வநாத ராயரும் ஒரு கை நீட்டி சைகையில் வழங்க அடுத்த சுற்று ஆரம்பமானது.

முடியில் இருந்து வடிந்த வியர்வை முறுக்கேறிய புஜங்களில் விழ அதை சட்டை செய்யாமல் கையில் இருந்த கையில் இருந்த நிலத்தில் அடித்தபடி தமது பக்கத்தில் இருக்கும் கூடையை நோக்கி ஓடினான் அகிலன். அதை பார்த்த அமிர்தவர்ஷினி முகம் விசிக்க அந்த பூரிப்பில் மண்ணள்ளிப் போட்டான் கௌதம் பிரபாகர். ஆம் இப்பொது பந்து கெளதம் பிரபாகரின் கையில் தவழ்ந்தது. அடுத்த கணமே பந்தை கிருஷ்ணா தட்டி பறிக்க "கிருஷ்ணா பாஸ்" என்று கூடை அருகே நின்று அக்கண்யன் குரல் கொடுக்க கிருஷ்ணா கையில் இருந்த பந்து அக்கண்யன் கரத்துக்கு இடம் மாற கிட்டத்தட்ட கூடையின் உயரத்துக்கு பாய்ந்தவன் கரங்களில் இருந்த பந்து கூடைக்குள் இலகுவாக வழுக்கிக் கொண்டு போனது.

ஆரோனுக்கோ இது தான் சந்தர்ப்பம் என்ற வகையில் அதிகமாகவே தீரஜினை வெறுப்பேற்ற "யாஹூ" என்று கூச்சலிட்டான்.

இம்முறை புள்ளிகள் ஆரோன் அணியினருக்கு வழங்கப்பட இரு அணியினரும் சம புள்ளிகளில் இருந்தனர். அடுத்த சுற்று விவேக்கிடம் இருந்து ஆரம்பிக்க அவனிடம் இருந்து ஜெயவர்மனின் கைக்கு மாறிய பந்து மீண்டும் அதீரநந்தன் இடம் வந்து சேர்ந்தது. வேக எட்டுக்களுடன் அவனை மறித்த ஆரோன் கையில் அகப்பட்ட பந்தை சூறையாட வந்த தீரஜின் பாதம் ஆரோனின் காலை பதம் பார்த்தது. அது ஒன்றும் வேணுமென்று நடந்த சம்பவமல்ல. ஆனால் இரு துருவங்களுக்கு இடையான சம்பவம் ஆகியதால் அது ஒரு பூகம்பத்துக்கே வழி செய்தது. அடுத்த கணம் பந்தை கீழே போட்ட ஆரோன், தீரஜின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். தீரஜ் மட்டும் சளைத்தவனா என்ன அதே வேகத்தில் அவன் கையும் ஆரோனின் முகத்தை பதம் பார்த்தது. சுவாரசியமாக விளையாட்டையும் தம்மவர்களையும் ரசித்துக் கொண்டு இருந்த பெண்கள் அதிர்ச்சியுடன் சம்பவ இடத்தை நோக்கி செல்ல அங்கு விளையாடிக் கொண்டு இருந்த அனைவருக்குமே அது எதிர் பாராத அதிர்ச்சி தான்.....
 

sivanayani

விஜயமலர்
வணக்கம் வணக்கம் வணக்கம்... இதோ இதுவரை உங்களை காக்க வைத்த 'வாரியர்ஸ்' 16 கதை, வருகிற திங்களில் இருந்து உங்களோடு பயணிக்க போகிறது. இந்தக்கதை 16 பேர் சேர்ந்து எழுதியிருக்கிறோம். அனைவரும் இக்கதைக்கு தங்களால் ஆன முயற்சியை கொடுத்திருக்காங்க.

ஸ்ரீமா முதல் வணக்கமும், முதல் நன்றியும் உங்களுக்கு..... கேட்ட உடனே நீங்க ரொம்ப சந்தோஷமா கதைத்திரி ஓபன் பண்ணி கொடுத்தீங்க. அதனால இந்த கதையை உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம் ஸ்ரீமா.

தாமரை இல்லேன்னா இந்த கதை இதுவரை முடிவுபெற்றிருக்காது. தாமரை நீங்கதான் தொடர்பாளராக செயல்பட்டீங்க. எல்லாரோடையும் பேசி ஒன்றிணைத்து, நீங்க இந்த கதைக்காக மல்லுக்கட்டினது வார்த்தைகளால் சொல்ல முடியாது. நமக்கு நாமே நன்றி சொல்ல கூடாது. ஆனாலும் எல்லார் சார்பிலும் டான்க்ஸ்குபா...

இந்த கதை ஆரம்பித்தபோது நம்ம கூட சேர்ந்து அப்புறம் வேறு பல காரணங்களால் பயணிக்க முடியாம போனாலும், ஆரம்பத்தில் அவர்கள் தங்களால் ஆன பங்களிப்பை அதிகமாவே கொடுத்தாங்க. மனோலஷ்மி@ஆண்டாள் அருகன் நீங்க ரொம்ப ஆர்வமா நம்ம கூட பயணித்தீர்கள். ஆனா உங்க வேலை காரணமா நம்ம கூட பயணிக்க முடியல. ரிஷா, காருண்யா, ரிஷிவந்தி, நீங்க எல்லாரும் உங்களால் முடிந்த பங்களிப்பை எங்களுக்கு கொடுத்தீங்க. ஆனா உங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்கள் எங்க கூட பயணிக்க விடாம தடுத்துடுச்சு. இந்த இடத்தில உங்க நால்வருக்கும் நம்ம நன்றியை கூறிக்கிறோம்.

எழுத்தாளர்கள் இணைந்து எழுதுவது அடிக்கடி நிகழ்வது தான்.. ஆனால் இந்தக் கதைக்கு ஒரு சிறப்பு இருக்கு..

இந்த கதை தனிப்பட்ட ஒருவரின் கதை அல்ல. 16 எழுத்தாளர்களும், அவர்களின் புகழ்பெற்ற கதையின் நாயகர் நாயகிகள்.. கதாபாத்திரங்களாக கைகோர்க்கும் புதிய கதை. மேலும்... ஒவ்வொரு அதிகாரங்களும், 16 எழுத்தாளர்களும் கலந்துதான் எழுதி இருக்கிறோம். நிறைய விவாதங்கள், நிறைய சிந்தனைகள், நிறைய அறிவுபூர்வமான செய்திகள், நிறைய அனுபவம் அபப்டின்னு நாம 16 பேரும் பெற்றுக்கொண்டோம்.. பகிர்ந்துகொண்டோம். உண்மையா... இது ஒரு அழகிய சங்கமம் அப்படின்னே சொல்லலாம். இதில் கதை எழுதியதை விட நிறைய கற்றுக்கொண்டோம் என்று சொல்வது பொருந்தும். எல்லாரும் ஏகமனதாக ஒவ்வொரு அதிகாரங்களையும் செதுக்கினோம் அப்படின்னுதான் சொல்லணும். அதனால் வாசகர்களே... உங்கள் நிறை குறைகளை மறுக்காது மறக்காது கூறுங்கள். அது எங்களை மென் மேலும் செதுக்கும்.


இப்போதைக்கு எந்த எழுத்தாளர்கள், எந்த கதாபாத்திரங்கள் இந்த கதையூடாக பயணிக்க போறாங்க என்கிறதை சொல்றேன். தொடர்ந்து வெள்ளி அன்று முதலாவது அதிகாரத்துடன் உங்களை சாந்திக்கிறோம்.

இதில் ஆர்யன் அறிவுடை நம்பி நாயகனாக வருகிறான். இவன் கற்பனை பாத்திரம்.
தியா நாயகியாக வருகிறாள். இவள் துமியினுடைய 'முரணியல் கவிதை' என்னும் நாவலின் சுட்டிப்பெண்ணாக வந்தவள். இவர்களுடன் அபிராம்- சுவர்ப்னா, ஆனந்தன், சூரஜ் ஆகியோரும் கற்பனை பாத்திரங்கள்.

வாரியர்ஸ் 016


எழுத்தாளர்களும் அவர்களின் நாயக நாயகிகளும் ..
------------------------------
தாமரை:
“உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்.”
இராஜா ஜெயவர்மன்(ஜெய்)-மதிவதனா

பானு ரேகா:
“என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன்னை கையணைக்க”
இரத்னவேல்பாண்டியன்- தமிழரசி

ரம்யா (சரணிகா)தேவி:

“உயிருள்ள தீஞ்சுவையே உயிரே”
காசிவிஸ்வநாதன் ராயர் (ராயர்)- திகம்பரி

ஆனந்த லக்ஷ்மி( கண்ணம்மா) :

“உன் மனைவியாகிய நான்”
கிருஷ்ணா - கலை

சிவரஞ்சனி
:
“நீயின்றி வாழ்வில்லை”
அகிலன்- அமிர்தவர்ஷினி

பிரியா தர்ஷினி
:
“மரித்த இதயங்கள்”
ப்ருத்வி,விக்ரம்

ஷா சங்கரி:

“வான்முகிலின் வண்ணம் நீயடி”
ஆதீரநந்தன்- அம்ருதசாகரி

துமி
:
“முரணியல் கவிதை”
தியா

பொம்மு
:
“விழிகள் தேடும் மொழிகள்”
ப்ரவீன்- நாச்சிமுத்து (வருணிகா)

இனிதா(தமிழினி) :
“உன்னருகில் எனை அறிந்தேன்”
ஆரோன் – நன்விழி

அருணா
:
“என் இருள் வானில் ஒளி நிலவாய் நீ”
விதார்த் வருண்- மீரா

பிரஷா
:
“நீயே என் ஜனனம்”
அக்கண்யன் அருளானந்தம் – ஜனனி

ரேவதி முருகன்
:
“ஒரு புன்னகைப் பூவே”
தர்ஷன் - ஷாலினி

தீபாகோவிந்
:
“களவறியா காதலன் நான்”
அதீந்திரன்- ஆராத்தியா

தர்ஷி ஸ்ரீ :
“விதையில்லாமல் வேரில்லையே”
ஹரிஷ் -மதி

சிவநயனி முகுந்தன்(விஜய மலர்)

“நிலவே என்னிடம் நெருங்காதே“
அநேகாத்மன்-சர்வாமகி
 
Last edited by a moderator:

sivanayani

விஜயமலர்
11417


வாரியர் 16

அத்தியாயம்-1

ஆறு வருடங்களுக்கு முன்பு

நீல வானில், மஞ்சள் ஞாயிறு மெதுவாய் கீழே இறங்கிச் சென்ற நேரம்… அது பொறுக்காது தன் எழில் குறைந்துவிட்டதே என்று எண்ணிக் கோபம் கொண்டு செந்நிறத்தை தன் மீது பூசிக்கொண்ட வான்மகள், ஆழ் கடலிடம் குறை சொல்லிக்கொண்டிருந்த காலம்.

வான்மகளின் குறையைத் தீர்க்க முயன்றதாலோ என்னவோ, மெதுவாய் கொந்தளித்துக்கொண்டிருந்த கடலைக் கிழித்துக்கொண்டு வந்த அந்த சிறிய மோட்டார் படகை அது சற்றும் கவனிக்கவில்லை.

படகு சிறிது தூரம் பயணித்ததும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று சற்றுத் தாமதித்துப் பின் சத்தமாய் கேட்ட மோட்டாரை நிறுத்திவிட்டு இயக்க அது மெதுவாக நகரத்தொடங்கியது. பின் கண்ணுக்குத் தெரிந்த அந்தக் கரையோரத்தில் பெரிய பாறை ஒன்றிற்குப் பின்னால் அமைதியாக ஒதுங்கி நின்றது.

ஓடு மீன் ஓட உரு மீன் வரும்வரைக்கும் காத்திருக்கும் கொக்கு போல, நிதானமாய் நின்றிருந்தது அந்த படகு . அரை மணிநேரம், ஒரு மணி நேரம் அசையாது ஆடாது அங்கேயே நின்றிருக்க, பகலவனோ மேலும் மேலும் மங்கிப்போகத் தொடங்கிய தருணத்தில், மெல்லிய சிரிப்பொலியுடன், சங்குகள் உரசும் சத்தத்துடன் இரு சிறிய உருவங்கள் கடற் கரையை நோக்கி வரத்தொடங்கின.

அந்த உருவங்கள் ஓடுவதும் நிற்பதுவும், பின் ஓடுவதும் மறைவதுமாய் போக்குக் காட்டிக்கொண்டு வந்து அங்கிருந்த சங்குகளைப் பொறுக்கி எடுத்துச் சேகரிக்கத் தொடங்க, அது வரை அந்த சிறிய மோட்டாரில், அமைதியாக இருந்த ஒருவன் மெதுவாகக் கீழே குதித்தான்.

அவன் குதித்த சத்தத்தில், கவரப்பட்ட அந்த சிறிய உருவங்கள் அசையாது அப்படியே நிற்க, இவனும் அசையாது அப்படியே நின்றான்.

பின் அந்த உருவங்கள், அச் சத்தத்தை மாயை என்று எண்ணியதோ, மீண்டும் சங்குகளைப் பொறுக்கியவாறு கடற்கரையில் காலைப் பதிக்க, அந்த உருவம் எட்டிப் பார்த்தது. பன்னிரண்டு வயது சிறுமியும், எட்டு வயது சிறுவனும் நின்றிருந்தனர்.

அதைக் கண்டதும், அந்த உருவத்தின் முகம் மலர்ந்தது. அடுத்த கணம் மறைந்திருந்த உருவம் வெளிப்பட்டு அந்த சிறுவர்களை நெருங்கி இரு கரங்களிலும் பற்றி இழுத்துக்கொண்டு ஓடி, படகில் விட்டெறிந்துவிட்டு, தானும் பாய்ந்து மோட்டாரை இயக்க, அது படு வேகமாகக் கடலைக் கிழித்துக்கொண்டு திரும்பிச் செல்லத் தொடங்கியது.

இன்று...

வான் மகன், அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள், கொன்றைப் பூவை மாலையாக அணிந்தவாறு தன்னை நாடிவர முயன்ற காதலியான கடல் மகளை வருட முயன்றுகொண்டிருந்த நேரம். வான்மகளின் அழகைக் கண்டு காதல் கொண்டு, ஆரத் தழுவ வந்த முகில் பெண்களோ, அவன் கவனம் கடல் மங்கையின் மீது இருப்பதைக் கண்டு கோபம் கொண்டு ஊடலுடன் அவனை விட்டு விலகிச் சென்ற கணத்தில், முகில் இல்லாத அந்தி வானமாய், சற்று வெட்கப் பட்டாலும், தன் காதலியிடம் குழைந்து உருகி அவளைத் தீண்ட முயன்ற தருணம்.

பரந்து விரிந்த வானமும், பரந்தாமன் பள்ளி கொண்ட கடலும் சங்கமித்து சாதனை படைக்க முயன்ற தருணம். எட்டாக்கனி புளிக்கும் என்று அவற்றிற்குத் தெரியாதோ? மீண்டும் மீண்டும் ஒன்றை ஒன்று வருட முயன்ற வேளையில், வான் மகனின் நங்கயைவளின் மேனியில், அசைந்து செல்லத் தயாராகத் தரையில் நங்கூரமிட்டு அமர்ந்திருந்தது எஸ்.எம்.எஸ்.வாரியர்ஸ் 016 என்னும் அழகிய பேழை.

அது யாட் எனப்படும் உல்லாச சொகுசு கப்பல்... ஐந்து தளங்களையும் 30 பயணிகளையும் கொண்ட அந்த ஆடம்பர கப்பலில் குதூகலத்திற்கு அளவில்லையோ? பெரும் சிரிப்பொலிகள் வானைப் பிளந்தன..
அந்த கப்பலில் மேல் மூன்று தளங்கள்... பெரும் செல்வந்தர்களுக்கு உரியது போலும். அதன் அலங்காரமும், ஆடம்பரமும் அதை எடுத்துக் காட்ட, இரண்டாவது தளம், கேளிக்கைகளுக்கானதாக இருந்தது. முதலாவது தளம், நீச்சல் குளங்களும், விளையாட்டு மைதானமும் அமைக்கப்பட்டிருக்க,இன்னொரு பக்கத்தில் விதவிதமான அழகிய சித்திரங்களைக் கொண்ட கலைக்கூடம் இருந்தது. அங்கே வைக்கப்பட்டிருந்த சித்திரங்கள் ஒவ்வொன்றும் பல லட்சங்களைத் தாண்டிவிடும் என்பதைப் பார்த்த உடனேயே கூறிவிடலாம்.
கீழே கப்பலின் டெக்கின் முன் புறம் வெறுமையாகப் பயணிகளின் ஓய்விடமாக இருந்தது. உள்ளே நவீன வசதிகளைக் கொண்ட சாப்பாட்டறை, அதனுடன் சேர்ந்த மினிபாருடன் சமையலறையும், களஞ்சிய அறை, வேலை செய்வோருக்கான அறைகளுடன் அமைக்கப்பட்டிருந்தன.
கப்பலின் நிலவறையில், என்ஜின், அதன் முக்கிய பாகங்கள், அதைப் பரிசோதிக்கும் பொறியாளரின் அறைகள் என்று நவீன கப்பலுக்கு வேண்டிய அணைத்து அம்சங்களையும் கொண்டு இருந்தது அந்த யாட்.

அலையில்லா ஆழ்கடலில் அசைந்தாடிச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த இப்பயணத்தில்.. சுற்றி வர அங்கங்கே ஜோடிகளின் கொஞ்சலும், தம்பதியரின் குழைவும், வியாபார ஜாம்பவான்களின் காரசாரமான கலந்துரையாடல்களும், சிலரின் ஆராய்ச்சி பார்வைகளும், பிரமிப்பு பார்வைகளும், மதுவும், ஆட்டமும், பாட்டமுமாய் களை கட்டத் தொடக்கி இருந்தது அந்தக் கப்பல் அந்தக் கப்பல்.

இந்திரலோகத்தின் சொர்க்கபுரிக்குள் நுழைந்துவிட்டோமோ என்று எண்ணும் அளவுக்கு காட்சியளித்த அந்த உல்லாசக் கப்பலின் சொந்தக்காரன் அனேகாத்மன்... இவன் கனடா நாட்டில் தலைசிறந்த வழக்கறிஞன்.. உலகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய கோடீசுவரர்களில் ஒருவன்... சுருக்கமாகச் சொல்வதானால் இவன் ஒரு கலியுக சாணக்கியன்…

அனேகாத்மனுக்கு சொந்தமாக உள்ள ஒரு தீவில் நடக்கும் ஒன்றுகூடல் நிகழ்வுக்காகவே இந்தப் பயணம்.. அனேகாத்மன் இந்தியா மற்றும் இலங்கையிலிருக்கும் தனது தொழில்முறை நண்பர்களைச் சிறப்பு அழைப்பில், தனது கப்பலை அனுப்பி அழைத்து வரச் செய்திருந்தான்.

தத்தமது பேச்சுக்களில் சுவாரஸ்யமாக ஈடுபட்டிருந்த நாயக நாயகிகளின், கவனத்தைத் திசை திருப்பும் வகையில், கையிலிருந்த பழரச குவளையில் தாளமிட்டவாறு சற்று முன்வந்தான் ஆரோன்... சென்னையைச் சேர்ந்த இளம் தொழிலதிபன்.. அனேகாத்மனின் உற்ற நண்பன்... அவனுக்குப் பதிலாய் வந்தவர்களை வரவேற்று, அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்று உள்ளவன். ஆறடி உயரத்தில் அழகிய தோற்றத்திலிருந்தவன், பயணிகளின் கவனம் தன் பக்கம் திரும்பியதும், தாளமிட்ட கரண்டியை அங்கிருந்த மேசையில் வீசிவிட்டு, இடக்கையைக் கால்சட்டையின் பாக்கெட்டுக்குள் நுழைத்து மேடை போன்ற அந்தப்பகுதியில் ஏறி நின்று அனைவரையும் ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவன்... தன் சிம்ம குரலில்...

"ஹாய் எவ்ரி பாடி... இன்னிக்கு நம்முடைய வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான நாள்… நாம எல்லாரும் அனேகாத்மனின் அழைப்பினால் இந்தக் கப்பலில் கூடியிருக்கிறோம்.… இதில் சிலர் என்னோடு படித்தவர்கள்… சிலர் என் தொழில் சார் நண்பர்கள்… ஒஃப் கோர்ஸ்… நமக்குள் போட்டியும் உண்டு…"

அந்த கணம் ஆடைகைத்தொழில் துறையின் புரட்சி நாயகர்களான இரு இளம் சிங்கங்களின் பார்வை ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டது. அது வேறு யாருமல்ல அக்கண்யன் அருளானந்தனும், விதார்த் வருணும். இருவரின் இதழ்களிலும் ஒரு நகை. அதன் அர்த்தம் அறிந்து பார்த்துக்கொண்டிருந்த இருவரின் துணைவியர்களான மீரா, ஜனனியின் மனக் குரல்களோ…
'அய்யோ என்ன ஏழரைய கூட்ட போறாங்களோ தெரியலயே..' என ஒரு சேர அலறின.

ஆனால் இரு பெண்களின் முகங்களோ சினேகமாய் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டன… மீண்டும் ஆரோன் அவர்களை நோக்கி...

"ஓகே கைய்ஸ் அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, இன்னும் ஒரு ஏழு நாட்கள் அனைத்து வேலைகளையும் மறந்து, பகைமை மறந்து எல்லாவற்றையும் மறந்து நாம நம்முடைய லைஃப் பார்ட்னர்சோடு சந்தோஷமாக இருக்கப் போகிறோம்… சோ… ஃபீல் ஃப்ரீ… என்ஜோய் கைய்ஸ்… அன்ட்… அனேகாத்மனின் அழைப்பை ஏற்று இங்கே வந்த அனைவருக்கும் அவன் சார்பாக என் நன்றி…இப்போ உங்க எல்லாருக்கும் நான் ஒரு முக்கியமான நபரை அறிமுகப்படுத்த போறேன்.." என்றவன் பார்வை பக்கவாட்டில் திரும்பியது.
 

sivanayani

விஜயமலர்
அங்கே முறுக்கேறிய சிக்ஸ்பேக் உடல் கட்டும் ,வெள்ளை நிற சீருடை, ஒட்ட வெட்டிய தலைமுடி அதற்கு மேலே வெள்ளை நிற தொப்பி… வெள்ளி காப்பு அணிந்து, வலக்கையில் ஃபைலும், இடக்கையில் கைப்பேசியுடன் இரு விரல்களுக்கு நடுவே ரேபன் குளிர் கண்ணாடியுமாய் அட்டகாசமாய் வந்து நின்றான் முப்பத்திரண்டு வயது நிரம்பிய ஆண் அழகன்.

அவனுக்கு அருகில், வந்து நின்றாள் கொடி இடை அழகி. பிரம்மன் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய சிற்பம் போன்ற உடலை கப்டனுக்குரிய வெள்ளைச் சீருடையில் மறைத்து அடக்கியவளாய், அவனுடன் இணைந்து நின்று கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால் இன்னும் நால்வர் பணியாளர் சீருடையில் நின்றிருந்தனர்.

ஆரோன் கப்டனை ஒரு பார்வை பார்க்க அதைப் புரிந்து கொண்டவன்….

"ஹாய் எவ்ரி பாடி… உங்க எல்லோரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி... நான் ஆரியன் அறிவுடைநம்பி. இந்த யாட்சின் கேப்டன்... உங்களுடைய பயணம் முழுவதும் நான்தான் வரப்போகிறேன்… இந்தக் கப்பலில் என்ன குறை நிறைகள் இருந்தாலும் தயங்காமல் என்னிடம் சொல்லாம்…" என்றவன் துளி அமைதிக்குப் பின் தன் அருகில் நிற்பவளை ஒரு பார்வை பார்த்து...

"ஷீ இஸ் கோ கேப்டன் மிஸ். தியா சிவபிரஷாத்..." என்றதில் ஏளனம் தொனித்ததோ. அதை உணர்ந்தும் உணராதவளாக, அவனை அலட்சியமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அங்கிருந்தவர்களை நோக்கி முத்துப்பல் மினுங்கப் புன்னகைத்தாள்.

ஒரு கணம் அந்தப் புன்னகையை ஆழமாகப் பார்த்த ஆரியன் பின் திரும்பித் தன் பின்னால் நின்றிருந்தவர்களைக் காட்டி, “இது டானியல், இவர்தான் உங்க எல்லோருக்கும் சமைக்கப்போராரு… இவங்க சுலோசனா, அழகர் இவங்க இருவரும்தான் உங்க எல்லாருக்கும் பரிமாறப் போறாங்க… இது பரத்… இந்த யாட்சை சுத்தமாக வச்சிருக்கப் போறவரு இவர்தான்… உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் இவங்களைக் கேளுங்க… செஞ்சு கொடுப்பாங்க…” என்றவன் தன் இரு கரங்களையும் பின்னால் கட்டியவாறு,

“இன்னும் அரை மணி நேரத்தில இந்தக் கப்பால் புறப்படத் தயாராயிடும்… உங்களோடு பயணிக்கப் போகும் இந்த பயணம் புதுமையானதாக அமையும் என நம்புகிறேன்... என்ஜாய் எவ்ரி வன்…" என்றுவிட்டு ஆரோனைப் பார்த்துத் தலையசைத்துவிட்டு மீண்டும் திரும்பிப் பயணிகளைப் பார்த்தான்.

அங்கேயிருந்தவர்களின் சிரிப்பையும் மகிழ்ச்சியையும் கண்டவனின் இதழ்களிலும் மென்னகை.

உலகம் சுற்றும் இந்த பயணங்களில் மற்றவர்களின் முகத்தில் தோன்றும் இந்த சிரிப்பையும் சுவாரசியத்தையும் தன்னுள் அனுபவிக்கவே அவன் இந்த துறையைத் தனது லட்சியமாக ஏற்றது... ஒவ்வொரு பயணமும் அவனுக்கு ஒவ்வொரு அனுபவத்தைக் கற்றுக் கொடுத்ததோடு, வெற்றியையும் அள்ளிக் கொடுத்தது என்றுதான் சொல்லவேண்டும்.

ரசித்தவாறே திரும்பிச் சென்றவனைப் பார்த்துக் கொண்டிருந்த நாச்சி,

“அடி ஆத்தி… அந்த டிரைவர் எவ்வளவு உயரமா இருக்காரு பார்த்தீங்களா.?." என்று தன்னை மறந்து கூற, அவளருகே நின்றிருந்த அவளுடைய கணவன் பிரவீன் அவள் கூறியதைக் கேட்டு அதிர்ந்தவனாய்,

"என்னாது டிரைவரா..!!" என்றான்.

"பின்ன இல்லையா டவுன் பஸ் ஓட்றவர நம்மூர்ல டிரைவர்னு தானே சொல்றோம்... அவரு தரைல பஸ் ஓட்டுராரு இவரு கடல்ல கப்பல் ஓட்டுராரு...." என்று லாஜிக்காகப் பேசியவளை, டெரர் லுக்கோடு பார்த்தான் பிரவீன்.

"கப்பல் ஓட்டுனா ட்ரைவர் ஆஹ்?... ஹையோ இவன் ஊர்ல பஸ் ஓட்டுறவன் இல்லடி.. கப்பலோட்டுற கேப்டன்… இந்த பட்டிக்காட்டு பொண்ணை கட்டிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே" என்று கிண்டலுடன் சலித்துக் கொள்ள, அவளோ,

"ஓ... என்னை பட்டிகாடுனு சொல்றீங்களா? ...ம்.. அப்புறமா.. செல்லம் பள்ளம்னு சொல்லிட்டு என் கிட்ட வருவீங்க தானே அப்ப கவனிக்கிறேன்…" என்றாள் முறைப்போடு. பிரவீனோ உள்ளுக்குள் அலறியவனாய்…

"நோ பேபி. உன்னை நான் அப்படி சொல்லுவேனா? நீ எப்போவும் என்னோட செல்லம் தாண்டி... சும்மா சொன்னேன்.. நீ சொன்னதும் சரி தான்.. உன் அறிவு யாருக்கு வரும்? " என்று உடனேயே சரணாகதி அடைய, பக்கவாட்டில் "க்ளுக்" என்கிற சத்தம் கேட்கத் திரும்பிப் பார்த்தான்.

அங்கே, வாயிலே கையை வைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தாள் கலை.
கலை, தீ கிரேட் ஆர்டிஸ்ட் கிருஷ்ணனின் காதல் மனைவி…
தன் மனைவியின் நகைப்பில் தானும் கலந்துகொண்ட கிருஷ்ணனோ நமட்டுச் சிரிப்புடன்…
"என்ன ப்ரவீன்.. பெரிய டிஸ்கஷன் ஓடுது போல!! வழக்கம் போல.. சரண்டர் ஆ " என்றான்.
பிரவீனோ ஒற்றைக் கண்ணை அடித்து விட்டு
“அது இல்லையென்றால் எப்படி… அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா…” என்று கூற..
பெரிய சிந்தனைச் சிற்பியின் சாயலில் நாடியில் விரல் வைத்திருந்த நாச்சி.. வேகமாக கணவனிடம் திரும்பி,
" ஏங்க.. அப்போ ஸ்க்ரூ ட்ரைவர்… பென் ட்ரைவர்.. எல்லாம்.. எத ஓட்டுறவங்களுக்குப் பேரு?" என..
ப்ரவீனுக்கு குடித்துக் கொண்டிருந்த திரவம் மூக்கினுள் ஏறிக் கொண்டது..

கலை, " வாவ் எவ்ளோ அழகா புத்திசாலித்தனமா கேள்வி கேக்குறீங்க.. " எனக் கூற..
நாச்சி கெத்தாக தலையை நிமிர்த்தி ப்ரவீனை அடிப்பார்வையால் பார்த்தாள்.
ப்ரவீன் அசட்டுச் சிரிப்பு சிரிக்க
அருகே நின்றிருந்த காசி விஸ்வநாத ராயரும் அவன் மனைவி திகம்பரியும் குலுங்கிச் சிரித்தபடி அவர்களுடன் இணைந்து கொண்டனர்.
சற்றுத் தள்ளி, அவர்களுடன் பயணம் மேற்கொள்ள இருக்கும் அமிர்தவர்ஷிணியோ டெக்கின் கைப்பிடியில் நின்றவாறு இரு கைகளையும் விரித்து கண்களை மூடி காற்றை ஆழ்ந்து சுவாசித்தாள்.

அவளுடைய நீண்ட நாள் கனவிது… இப்படிக் கப்பலில் கடலில் பயணிப்பது என்பது. இன்றுதான் நிறைவேறப் போகிறது. அதுவும் அந்த அநேகாத்மன் புண்ணியத்தில். இல்லையென்றால் அகிலன் நிச்சயமாகப் புறப்பட்டிருக்க மாட்டான். தொழிலைக் கட்டிக்கொண்டு அழுதிருப்பான்… இப்போதே இந்தக் கப்பால் புறப்பட்டு நடுக்கடலை அடையாதா என்று ஏக்கமாக இருந்தது. நீலக் கடலின் மத்தியில், அவர்கள் மட்டும் தனியாய்… எண்ணும்போதே உள்ளம் சிலிர்த்தது. போதாததற்கு அந்த உப்புக் காற்று வேறு அவளை வா வா என்று அழைப்பது போல இருக்கத் தன்னை மறந்து லயித்திருந்த நேரம், அக்கணம் அவள் நாயகன் அகிலன் பின்புறம் நின்று அவளை இடையோடு தழுவி தன்னோடு பிணைக்க, மலர்ந்த அமிர்தவர்ஷிணியின் கண்கள் தாம் இருந்த இடத்தின் இடப்புறம் அவசரமாய் தொட்டு மீள்வதைக் கண்டு தானும் திரும்பிப் பார்த்தான்.

அங்கே தடுப்பு இரும்பு கம்பியைப் பிடித்த வண்ணம் தொலை வானில் எழும்பிக் கொண்டிருந்த மஞ்சள் கதிரவனிடம் தொலைந்து கொண்டிருந்தான் ராஜா ஜெயவர்மன்… இயற்கையின் மீது அலாதி மோகம் கொண்டவன். அவன் அமைதி தான் அவன் காதல், அழுத்தம், கோபம் எல்லாமே வெளிப்படும் வழி... அவன் விழிகள் வானத்தை நோக்க அவனின் சிந்தையோ தன் காதல் மந்தாகினியிடம்… அவளும் வந்திருந்தால், இந்தப் பயணம் இன்னும் இனித்திருக்குமோ? மெல்லிய ஏக்கம் பெருமூச்சாய் வெளிப்பட, அவனும் அந்தக் கப்பலின் புறப்பாட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கினான்.
அடுத்த அரை மணி நேரத்தில் கப்பல்

மெதுவாகப் பின் வாங்கிச் சற்றுத் தூரம் சென்றதும், வளைந்து திரும்பி நேராக ஒரு நேர்

கோட்டில் நடுக் கடலை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. அதன் பயணத்தை ஏற்றுக்கொண்டது போலக் கடலும், ஒரு முறை எழும்பிப் பின் கீழே சென்று மேலே வர, அலை கரங்கள் தழுவி விடுவித்தன..

ஆழ்கடலை நோக்கி, அசைந்தாடும் ரத்தினங்கள் பதித்த பேழையென மிதந்து சென்ற வாரியர்ஸ் 016, தனது குதூகலத்தை.. தண்ணீரில் விளையாடும் குழந்தையென குதியல் காட்ட, நிலமகளோ மௌனமாய் பார்த்திருந்தாள்...

http://srikalatamilnovel.com/community/threads/வாரியர்ஸ்-016-கருத்துத்-திரி.1160/

வணக்கம் கண்ணுகளா இதோ எஸ் எம் எஸ் வாரியார் 016 கதையோட முதல் அதிகாரரும் பதிந்துவிட்டோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காம சொல்லுங்க. இந்த கதை வெள்ளி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய 4 நாட்களும் பதியப்படும் என்பதை கூறிக்கொள்கிறோம். உங்கள் கருத்துக்கள் ஒருவரை அல்ல 16 பேரை குஷிப்படுத்தும் என்பதால், மறக்காமல் கருத்துக்களை பதிவிடுங்க.
 
Last edited:

sivanayani

விஜயமலர்
11426



அத்தியாயம் 2

ஏழு மணி நேரப் பயணத்தின் பிறகு,

காபினுக்குள் இருந்த ஆரியனோ தன் முன் இயங்கிக்கொண்டிருந்த திரையை உற்று நோக்கிக் கொண்டிருந்த போது ஒரே ஒரு நொடி, அவன் புருவமத்தியில் ஒரு முடிச்சு... அடுத்த கணமே இயல்புக்குத் திரும்பியவனாய் எழுந்தவன், ஒற்றைக் கதவைத் திறந்து வெளியே வந்து அமைதியாக இருந்த அந்த ஆழ்கடலின் அலாதி சுகத்தை மூச்சினுள் இழுத்து தன் நெஞ்சுக் கூட்டிற்குள் நிரப்பினான்… அந்த உப்புக் காற்றில், கடலுக்கே உரித்தான அலாதி மணம்.. , உள்ளம் சிலிர்த்தான். 'இந்த இளவயதிலேயே கடலைப் பற்றி முழுதும் அறிந்தவன்.. கப்பலின் நுணுக்கங்கள் தெரிந்த தலைசிறந்த மாலுமி..' என்றெல்லாம் புகழ் பெற்ற அவன் அறிவானா.. அது அமைதியான அலைகடல் அல்ல பல அதிசயங்களை நிகழ்த்த உள்ள ஆழ்கடல் என்று?



தன்னை மறந்து, கடலையே ஒரு வித போதையுடன் பார்த்துக் கொண்டிருந்த ஆரியன், பின்னால் சிறு அரவம் கேட்க, நின்ற நிலையை மாற்றாமலே தலையை மட்டும் திருப்பி பார்த்தான்.



அங்கே தியா சிவப்ரசாத் நின்றிருந்தாள். பெரும் செல்வக் குடும்பத்தில் பிறந்தவள். கப்பல் மீதிருந்த அலாதிப் பிரியம், பயணங்களில் ஆர்வம், தலைமை காப்டனாகுவதற்கான தகுதியை வளர்த்துக்கொள்வதற்காகப், பெரும் பணத்தில் புரண்டாலும் அதையெல்லாம் தள்ளி வைத்து விட்டு, அவனுக்கு உதவியாளராகப் பணி புரிய வந்திருக்கிறாள்.



அவளையும் அவள் கரத்திலிருந்த கோப்புகளையும் (files) கண்டவன், அவள் புறமாகத் திரும்பி நின்றான். இப்போது அவன் முகத்திலிருந்த அமைதி மெல்லமாக வடிந்து போயிற்று... அவனுக்குக் காரணம் தெரியவில்லை, அவளைக் கண்டால் அவனையும் மீறி அவனுடைய குண இயல்புகள் ஏதோ ஒரு விதத்தில் மாறத் தொடங்குகின்றன. அது நல்லதில்லை என்பது அவனுக்குத் தெரியும். ஆனாலும் அவனால் தடுக்க முடியவில்லை.



அவனிடம் அந்த கப்பலுக்கான சில தரவுகளைக் கொடுக்க வந்த தியா, அவன் முகத்தில் தெரிந்த மாற்றத்தைப் பார்த்துவிட்டாள் போலும்.



"கேப்டன் என்ன ஆச்சு?" என்று கேட்க அவளை அழுத்தமாகப் பார்த்து ஒன்றும் இல்லை என்ற தோரணையில் தலையை ஆட்டியவன், தன் இடம் விட்டு விலகி அவளை நெருங்கி, அவள் கரத்திலிருந்த கோப்புகளை பெறுவதற்காகத் தன் கரத்தை நீட்டினான்.



அவன் மௌனம் அவளுக்கு எரிச்சலாய் இருக்க 'சரியான உம்மணா மூஞ்சு, நாலு வார்த்தை சிரிச்சு பேசுனா பல்லுக் கொட்டிடும் பாரு' என்று முணுமுணுத்தவாறு அந்த கோப்புகளை நீட்ட அதை வாங்கிக்கொண்டவனுக்கு அவள் முனங்கியதில், 'உம்மணா மூஞ்சு…' மட்டும் தெளிவாகக் காதில் விழுந்தது.



அவளை அனல் தெறிக்க பார்த்தவன்



"ஷ்ட் அப்.. திஸ் இஸ் நோ ரூம் போர் யுவர் கிரேசி டாக்... பினிஷ் யுவர் டாஸ்க். " என்று பற்களைக் கடித்தவாறே சீற, அந்த கலகலப்பான பாவையவளும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனாள்



உடனே, தன் தவற்றை உணர்ந்தவளாய், "என்னை மன்னிச்சிடுங்க கேப்டன்" என்று உரைக்க அதற்கும் ஒரு அழுத்தமான பார்வையைச் செலுத்தினானே தவிர அந்த மன்னிப்பு ஏற்கப்பட்டதா இல்லையா என்று அவன் பார்வையும் உணர்த்தவில்லை.. வார்த்தைகளும் உணர்த்தவில்லை. அவளும் ஒரு வித கலக்கமான மனநிலையுடன் தன்னுடைய வேலையைச் செய்யத் தொடங்கினாள்.

இதே சமயத்தில் விருந்தினர் அறையில் அனைவரும் பேசிக் கொண்டு இருந்த போது கம்பீரமாக எழுந்து நின்ற கிருஷ்ணா,

"ஹாய் காய்ஸ்… இன்னைக்கு என்னோடதும் என் மனைவியோட கை வண்ணமும் சேர்ந்த பெயின்டிங்ஸ் அனேகாதமன் குடும்பத்துக்குப் பரிசாகக் கொண்டு வந்திருக்கோம்… அதை நீங்க எல்லாரும் பாக்கணும்னு ஆசைப்படறேன்…” என்றவன் விரைந்து சென்று நான்கடி உயரமும், மூன்றடி அகலமும் கொண்டு அழகாக பரிசுத்தாள் சுற்றப் பட்டு இருந்த ஒரு பொருளை தன் நண்பர்களின் முன்னால் கொண்டுவந்தான்.

அனைவரும் ஆவலாகப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, மிகக் கவனமாக அந்த முடிச்சை அவிழ்த்து, தாளை விலக்க, மெல்ல மெல்ல அந்த சித்திரம் வெளியே தெரியத் தொடங்கியது. அதைக்கண்டதும் அனைவரின் பார்வைகளும் அங்கும் இங்கும் அசைய மறுத்தன.

சிவப்பும் நீலமுமாய் இருவண்ணமாய் இருந்த இரையைக் கவ்வப் பாயும் சிங்கத்தின் கம்பீர முகத்தினுடைய மார்டன் ஆர்ட்.

அதைப் பார்க்கும் போதே, அநேகாத்மனின் உருவமும், அவன் குணமும்தான் அனைவரின் கண்களுக்கும் புலப்பட்டன.

சற்று நேரம் அதன் கம்பீரத்தில் வாயடைத்துப் போயிருந்தவர்கள், ஓரளவு சுயநினைவு பெற்றவர்களாக, அதன் நேர்த்தியில் வியந்தவர்களாக, கரவொலி எழுப்பி பாராட்டினர். தலை தாழ்த்தி வணங்கி நன்றி கூறியவன், மீண்டும் அதனைத் தாளில் பக்குவமாகப் பொதிந்து வைத்துவிட்டு, நிமிர்ந்து தன் நண்பர்களைப் பார்த்து,

“ஏற்கனவே இந்தக் கப்பலின் கலைக்கூடத்தில் இருக்கிற பெயிண்டிங்க்ஸ் எங்களிடம் அவர் வாங்கியது தான்…” என்றான் சற்று மலர்வுடன். அதைக்கேட்டதும்,

"ரியலி...வேர் இட் இஸ்” என்றான் அக்கண்யன் பார்க்கும் ஆவலில்.

“இதோ.. இங்கே ஆர்ட் கலரியில் இருக்கிறது... வாருங்கள் காட்டுகிறேன்..." என்றவாறு , அனைவரையும் அழைத்துக் கொண்டு அந்த கப்பலிலிருந்த ஆர்ட் கலேரிக்கு வழி நடத்தினான்.

எஸ்எம்எஸ் வாரியர் 016 யாட் கப்பலின் மிக அழகிய பகுதி…அது. கப்பல் சொந்தக்காரனின் ரசனையின் உச்சத்தை வெளிப்படுத்தும் இடம். அதைக் காட்டுவதற்காக அழைத்துச்சென்ற கிருஷ்ணா, 'அநேகாத்மன் ஆர்ட் கேலரி' என்ற ஆங்கில எழுத்துக்கள் முகப்பில் மின்னிக் கொண்டிருந்த கதவைத் திறந்து உள்ளே நுழைய மற்றவர்களும் பின் தொடர்ந்தனர்.

உள்ளே நுழைந்தவர்களை வரவேற்றது.. ஆளுயரத்தில் இருந்த அனேகாத்மன் சர்வாமகியின் அழகிய ஓவியம்.

ஃபோகஸ் மின்விளக்கு வெளிச்சத்தில் கம்பீரமாய் அளவான புன்முறுவல் காட்டிக்கொண்டிருந்தான் அந்தக் கம்பீர ஆண்மகன்.

அவனுக்கருகே, அந்தப் புன்னகைக்குக் காரணமான பெண்ணழகி நாணம் பூச நின்றிருந்தாள்… கூடவே சர்வமகி ஆண் மகவை ஏந்தியிருக்க, அநேகாத்மனோ முகத்தில் பெருமையுடனும் கர்வத்துடனும் தன் மகளைக் ஏந்தியிருந்தான். பார்ப்பதற்கு அது புகைப்படம் போன்ற மாயையைத் தோற்றுவித்தாலும், அது அப்பழுக்கில்லத கரங்களால் வரையப்பட்ட ஓவியமாக பார்ப்பவர்களைக் கவர்ந்திழுந்தது. அதுவும் விழிகளில் தெரிந்த மின்னல் கூடத் தத்ரூபமாக இருக்கப் பார்த்தவர்களால் தங்கள் கண்களை விலத்த முடியவில்லை. அது அந்த அழகிய குடும்பத்தைக் கண்டதாலா, இல்லை கிருஷ்ணாவின் கைவண்ணமா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.

ஒரு பக்கச் சுவர் முழுவதும் பலவிதமான சித்திரங்கள். ஒருபக்கம் இரவிவர்மனின் ஓவியங்களின் சாயலில் நின்ற அழகுப் பெண்கள் என்றால் அதைத் தொடர்ந்து பல வண்ணங்களின் கலவையில் மின்னிய நவீன சித்திரங்கள் கண்களைப் பறித்தன.

இரு வேறு ரசனைகளின் சங்கமம் அங்கே பார்ப்போரைப் பித்தம் கொள்ளச் செய்தன.

ஆனால் ரசனைகள் மாறுபடுவதுதானே இயற்கை...

அங்கிருந்த ஓவியங்களை ஆவலுடன் பார்த்துக்கொண்டு வந்த ஜனனிக்கோ நவீன சித்திரங்களின் பெண் வடிவைப் பார்த்ததும் பெரும் சங்கடமாகப் போய் விட்டது. விரல்கள் தீட்டிய சில வண்ணங்களில் ரசனை இருக்கும், அழகு இருக்கும் ஆனால் ஆடை இருப்பதில்லை. அச் சித்திரங்களைப் பார்க்க முடியாது கூச்சம் எழ, அக்கண்யனின் காதை நோக்கி எம்பி

"எனக்கு இதெல்லாம் பார்க்கும் போது கூச்சமா இருக்கு" என்றாள் வெட்கத்தில் நெளிந்தவாறு.

அவளை குனிந்து பார்த்து பற்கள் தெரிய அழகாக சிரித்தவன் "அப்போ கண்ணை மூடிக்கோ" என்று சொல்ல

"இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல" என்று அவள் முணுமுணுத்துக் கொண்டாள்.

மீராவும் அதே சங்கடத்துடன் முகத்தை திருப்பவும் இயலாமல் வெட்கத்துடன் பார்த்தும் பாராதது போல, செல்ல அவளைப் பார்த்து மெலிதாக சிரித்தபடி பின்னோடு நடந்து வந்தான் விதார்த்.

அக்கண்யன் கூறியதை ஜனனி செய்தாளோ இல்லையோ நாச்சி அப்படி தான் நடந்து வந்தாள்.. அதான் கண்களை மூடியவாறு… ஒரு கரத்தால் விழிகளை மூடி மறு கரத்தால் ப்ரவீனின் கரம் பற்றி... நடக்கத் தொடங்க அதைக் கண்டு பிரவீன் நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.

நடந்து வந்துகொண்டிருக்கும் போதே அங்கிருந்த ஒரு படத்தில் ஈர்க்கப்பட்டான் பிரவீன்.

"வாவ்.. இது என்ன மெஸ்மெரைசிங் ஆர்ட்" என்று வியக்க, உடனே கண் திறந்து கணவன் கூறிய படத்தைச் சட்டென்று பார்த்தாள் நாச்சி. முதலில் அவன் எதைச் சொல்கிறான் என்று குழம்பி அங்கிருந்த எல்லாப் படத்தையும் பார்த்தால். எந்தப் படமும் கணவன் சொல்லும் அளவுக்கொன்றும் அழகாய்த் தெரியவில்லை. இறுதியாக் கணவன் பார்த்த படம் எது என்பது புரிய அதை உற்றுப் பார்த்தாள்.

எவ்வளவுதான் முயன்று பார்த்தும் அந்த நவீன ஓவியத்தில் எதுவுமே புரியவில்லை. பின்னால் போய் முன்னால் வந்து தலையைச் சரித்து எத்தனை முயன்றும் அதில் உள்ள பொருள் அவளுக்குப் புரியவே இல்லை. அதைச் சுற்றிச் சுற்றி பார்த்த நச்சிக்குத் தெரிந்ததெல்லாம் வெறும் நான்கு வர்ணங்கள் மட்டுமே.

"இதுல என்ன இருக்குன்னு அப்படி.. இப்படின்னு புகழுறாங்க??" என்றவளுடைய விழிகள், அந்த ஓவியத்தின் கீழே மெல்லியதாக எழுதப்பட்ட அதன் பெறுமதியில் நிலைத்தன... முதலில் அலட்சியமாகத்தான் பார்த்தாள், பின்பு நம்ப முடியாமல் உற்றுப் பார்த்தாள்.... அதைக் கண்டதும் அவளுடைய விழிகள் அதிச்சியில் பெரிதாய் விரிந்தன. பிரவீன் கற்றுக் கொடுத்த படி கண்மூடி டாலரை தன் நாட்டு ரூபாய் மதிப்பு போட்டவள், நெஞ்சில் கைவைத்து,

"அடி ஆத்தி... என்ன ஐம்பதாயிரமா??? நாலு கலரை மாற்றி மாற்றி அடிக்க ஐம்பதாயிரமா... அன்னைக்கும் இப்படி தான் உங்களை யாரோ ஏமாற்றி அந்த நாலு கலரை கொட்டி கிறுக்கி இருந்த படத்த ஐம்பதாயிரத்துக்கு தந்தாங்க... நாலு பெயிண்ட் பிரஷ் வாங்கி தாங்க நானே இதை விட சூப்பரா அடிச்சு தரேன்” என்று நாச்சி கேட்க, அப்போதுதான் பழரசத்தை வாயில் எடுத்துக்கொண்டிருந்த விதார்த், அவள் சொன்னதைக் கேட்டுப் பிரக்கெடுத்துத் திணறி கண்ணீர் வருமளவு இரும அதைக் கண்ட மீரா பதறியடித்து ஓடிவந்து, அவன் தலையைத் தட்டிக் கொடுத்துக்கொண்டிருக்கும் போதே நாச்சி சொன்னதைக் கேட்டு பின் நின்ற கிருஷ்ணன் அதிர்ந்து போய் நின்றான்.

அதைக் கண்டு சுதாரித்த பிரவீன்

"ஹீ ஹீ… ஐ அம் சாரி கிருஷ்ணா.. என் மனைவிக்கு.. இது.. இந்த மாடர்ன் ஆர்ட் பற்றி பரிட்சயம் இல்லை… சாரி..." என்று சமாளித்தவன், நாச்சியை முறைத்தபடி அவள் கையை இழுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேற, அவன் இழுத்த இழுவையில், அவனுடைய கோபத்தைப் புரிந்துகொண்ட நாச்சி பயத்தில் தன் வாயை மூடிக்கொண்டாள்.

மனைவி மேல் ஆரம்பத்தில் கோபம் வந்தாலும் அவள் வெகுளித் தனத்தை அறிந்தவனால் அதிக நேரம் கோபத்தைப் பிடித்து வைத்திருக்க முடியவில்லை. இறுதியில் அவன்தான் அவளைச் சமாதானப் படுத்தவேண்டியானது என்பது வேறு கதை.
 
Last edited:

sivanayani

விஜயமலர்
அனைவரும் அங்கிருந்து நகர்ந்து விருந்தினர் அறைக்குள் நுழைந்த போது ஏற்கனவே அந்த ஆர்ட் கலரியைக் கண்டு தரிசித்தவர்கள் வெளியே இருந்து குதூகலமாக எதையோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் நகைப்பு அங்கு நுழைந்தவர்களின் கவனத்தைக் கவர அவர்களை நோக்கி அனைவரும் விரைந்தனர்.

அங்கு சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தவர்கள் வேறு யாருமல்ல ஒரே பாடசாலையில் பயின்ற மாணவர்களான ப்ரித்வி , சூரஜ், தர்ஷன், ஆனந்தன், அபிராம் மற்றும் ஆதீரநந்தன் ஆகிய அறுவருமே.. ஒரே பள்ளியில் பயின்று கல்லூரியில் வெவ்வேறு துறையிலிருந்தாலும் இறுகிய நட்பு அவர்களுக்குள். பல தொழில் துறையில் கால் பதித்த வல்லுநர்கள் அவர்கள். சூரஜ், ஆதீரநந்தன், தொழில் அதிபர்களாக இருக்க, ப்ரித்வி தலை சிறந்த டாக்டராகவும், தர்ஷன் கட்டுமான துறையில் கொடி கட்டியும் பறந்து கொண்டு இருந்தான். அதே சமயம் ஆனந்தன் ரோபாடிக் பொறியியல் முடித்து, அத்துறையில் மேலும் மேலும் ஆர்வம் கொண்ட ஆராய்ச்சியாளன். அவனுக்குச் சளைக்காத திறமை உடைய இயற்பியல் விஞ்ஞானி தான் அபிராம். இதில் அபிராம் அவன் மனைவி சுவர்ப்ணா, ஆனந்தன், மூவரும் வளர்ந்தது படித்தது எல்லாம் அநாதை ஆச்சிரமத்தில்தான். அவர்களுக்கு உறவென்று சொல்ல யாருமில்லை. ஆனாலும் அவர்களின் வெற்றியை அது தடை செய்யவும் இல்லை. சொல்லப்போனால் அவர்களின் திறமை எதிர்பார்க்காத அளவு சிறப்பான நட்புகளைக் கொடுத்தது என்றுதான் சொல்லவேண்டும். அவர்களின் வெற்றி உறவில்லா உறவுகளையும் பூக்கச் செய்திருந்தன.

அவர்களின் நட்பைப் பற்றி ஏற்கெனவே தெரிந்திருந்த ஆரோன் அவர்களை நோக்கி வந்து அவர்களின் பேச்சில் கலந்துகொள்ள, அடுத்த கொஞ்ச நேரம் சுவாரசியமாகப் போனது.

பேச்சு வாக்கிலேயே ஆனந்தனைப் பார்த்த ஆரோன்

"ஆர்ட்டிஃபிஷல் இன்டலிஜன்ட் டெலி ரோபோடிக்ஸ் பற்றிய உங்கள் ஆர்டிக்கில் படிச்சேன், வெரி இன்டெரெஸ்ட்டிங்" என்று உரைக்க மெலிதாக புன்னகையைச் சிந்தியவன்

"ஒரு சாம்பிள் கொண்டு வந்திருக்கேன்… அநேகாத்மனுக்காக… ரூம்ல இருக்கு, அப்புறமா அத வச்சு ஒரு டெமோ பாத்துடலாம்" என்று கூற

"வாவ், சூப்பர்டா" என்று அபிராம் தன் நண்பனின் உழைப்பை நினைத்து சந்தோஷப் பட்டான்.

அதே நேரம் ஆரோனைக் கண்டதும் சூரஜின் முகம் சற்று இறுகிப் போக அவன் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான். ஆரோனின் விழிகளும் அடிக்கடி அவனைத்தான் சற்றுக் கோபத்துடன் உரசி உரசி சென்றன.

இருக்காதா பின்னே… இருவரும் பிசினஸில் எலியும் பூனையுமாக இருப்பவர்கள் ஆயிற்றே. ஆனாலும் மற்றவர்கள் முன்னிலையில் தமது தொழில் பகையைக் காட்ட விரும்பாதவர்கள் என்பதால் அப்போதைக்குச் சற்று அடக்கி வாசித்துக் கொண்டு இருந்தனர். அந்நேரம் அங்கு வந்து சேர்ந்த அகிலன்,

"இங்க இப்போ நிறையப் பேர் இருக்கோம்.. ஏன் நாம ஒரு கேம் விளையாடக் கூடாது?" என்று கேட்க.. அதைத் தான் அனைவரும் ஆசைப்பட்டனர் போலும், உடனே சம்மதமாக தலை ஆட்டினார்கள்.

ஆதீரநந்தன் உடனே

"இங்க பாஸ்கெட் பால் கோர்ட் இருக்கு, சோ நாம ஏன் ஒரு மேட்ச் விளையாட கூடாது?" என்று கேட்க

"ம்ம் நைஸ் ஐடியா" என்ற ஆரோன்

"நீங்க ஆறு ஃப்ரன்ட்ஸும் ஒரு டீம், என் பக்கம் ஆறு பேர் சேர்த்துகிறேன் " என்று கூற அதற்குப் பிருத்வி

"எங்க டீம் கேப்டன் சூரஜ் " என்றான் இருவருக்கும் இடையிலான பகை அறியாமல்.

ஆரோன் திரும்பி கம்பீரமாகப் பார்க்க அக்கன்யன் கண்ணசைவில் சம்மதம் தெரிவிக்க, விதார்த், கிருஷ்ணா மற்றும் அகிலன் மூவரும் கூட தமது சம்மதத்தைத் தெரிவித்தனர்.

உடனே ஆரோன்

"இப்போ நாம ஐந்து பேர் தான் இருக்கோம். பிரவீன் அண்ட் ராயர் நீங்க என்ன சொல்றீங்க?" என்று கேட்க பிரவீனோ

"நான் ரெஃபரி யா வரேன். ஜிம்மில் வச்சு கொஞ்சம் மஸ்ஸில் கிராம்ப் ஆயிடுச்சு, விளையாடுறது கொஞ்சம் கஷ்டம்" என்றான்.

அவனுக்கு அருகே நின்றிருந்த விஸ்வநாத ராயர்,

"எனக்கும் கொஞ்சம் ஷோல்டர் பெயின், சோ நானும் ரெஃபரி" கூற அந்த தோள் மூட்டு வலி வர காரணமே கப்பல் பயணத்தின் முன் தினம்.. ஒருத்தனை போட்டு அடித்த அடி என்று அறிந்த திகம்பரி அவனை முறைக்க அவனோ கண் சிமிட்டி அவளைச் சமாதானப் படுத்தினான்.

அதைக் கேட்ட ஆரோன் பெருமூச்சுடன் "எல்லாரும் இப்படி சொன்னா அப்புறம் என்ன பண்ணுறது?" என்று கேட்க சூரஜ் அடக்க முடியாமல் நக்கலாகச் சிரிப்பை சிந்த அது ஆரோன் காதில் வேறு விழுந்து தொலைத்தது. கண்களை மூடி தன்னை சமநிலைப் படுத்திக் கொண்டவன்

"எங்கே நம்ம ஜெயவர்மன்?" என்று கேட்க

"வெளிய தான் இயற்கையோட ஒன்றிப்போய் இருக்கிறதைப் பார்த்தேன் கொஞ்சம் பொறுங்க அழைச்சுட்டு வர்ரேன்" என்றவாறு அகிலன் வெளியே சென்றான்.

ஜெயவர்மன் அகிலன் கணித்துக் கூறியவாறே கப்பலின் இரும்பு கம்பியைப் பிடித்தவாறு நீரினுள் இருந்து வெளியே துள்ளி எழும் மீன்களின் இடையே தெரிந்த நிலவின் நிழலில் தன்னவளின் அழகை மனக் கண்ணில் கண்டு ரசித்துக் கொண்டு இருந்தான்.;.

ஜெயவர்மன் இருந்த இடத்தை அடைந்த அகிலன் "என்ன சார்.. நிலவோட தான் பேசுவீங்களா.. எங்களோடெல்லாம் பேசிக்க மாட்டீங்களா…" என்று கேட்க, மெலிதாக சிரித்தபடி திரும்பிய ஜெயவர்மன்

“தாராளமா பேசிக்கலாமே.." என்றபடி அவன் தோளில் கை போட்டான்.

"தனிமைல இனிமை கண்டது போதும், வாங்க சார் ஒரு பாஸ்கெட் பால் மேட்ச் விளையாடலாம்" என்றான். மெல்லியதாகக் குழி விழ நகைத்தவன்,

"வை நாட்.." என்றவன் ஒரு மறுப்பும் சொல்லாமல் அவனுடன் ஒன்றி நடந்தான். தனிமையில் இருப்பவனுக்கு ஒரு மாற்றம் தேவைப்பட இந்த அழைப்பு அவனுக்கு பிடித்தமானதாகவே இருந்தது.

விருந்தினர் அறைக்குள் நுழைந்தவர்கள் இரு அணிகளாகப் பிரிந்து கொள்ள அனைவரும் சேர்ந்தே கூடைப்பந்து மைதானத்தை நோக்கி நடந்தனர். அங்கு இருக்கும் ஒரு அறையில் இரு அணிகளுக்குமான ஜெர்சி இருக்க அதை எடுத்தவர்கள் ஆளுக்கு ஒன்றாக அணிந்து கொண்டனர். சூரஜ் அணி கருப்பு நிற ஜெர்சியை எடுக்க ஆரோன் அணியோ வெள்ளை நிற ஜெர்சியை தெரிந்து எடுத்துக் கொண்டது.

ப்ரித்வி, அபிராம், ஆனந்தன், அதீரநந்தன், சூரஜ் மற்றும் தர்ஷன் ஒரு புறமும், அக்கண்யன், விதார்த், கிருஷ்ணா, அகிலன், ஜெயவர்மன், ஆரோன் மற்றைய புறமும் இருக்க அனைவர் பார்வையும் சிநேகத்துடன் ஒருவருக்கொருவர் பதிந்து மீண்டது சூரஜ் மற்றும் ஆரோனின் பார்வைகளைத் தவிர..

அப்போது பாஸ்கெட் பால் நடுவராகக் கருப்பும் வெள்ளையும் சேர்ந்த நிறத்தில் டீஷர்ட் அணிந்து நின்ற பிரவீன் அருகே வந்த நாச்சி

"பிரவீன் உங்களுக்கு நிஜமா விளையாடத் தெரியாது தானே" என்று கேட்க அவளை மெல்லிய சிரிப்புடன் பார்த்தவன்

"ஆமா தெரியாது" என்றான் வேண்டுமென்றே.

கணவனின் சாகசம் பற்றி ஏற்கனவே அறிந்த அவளின் கேள்வி.. அவனை உசுப்பேற்றுவதற்காகக் கேட்கப்பட்டது என்று அவனுக்கு தெரியாதா என்ன? ஆனால் அவள் எதிர் பார்த்தது போல அவன் கோபப் படாமல் இருக்க.. முகத்தைச் சுளித்தவள் மேலும் பேச வாயைத் திறக்க, சுட்டு விரலை வாயில் வைத்து பேச வேண்டாம் என்று சைகை செய்தவன்

"அங்கே போய் இருடி, வாய துறந்தா என் கூட நிக்கிற காசிவிசுவநாதன் பார்ட் டைம் ரௌடி தான். புடிச்சு கொடுத்துடுவேன் பார்த்துக்கோ" என்றான்.

அதை கேட்டு விழி விரித்தவள் "ஒஹ் இவர் ரௌடியா? இவர் தொழில் வக்கீல்னாங்களே… இல்லையா… அப்போ உங்களுக்கு ஏதாச்சும் பிரச்சனைன்னா… ரௌடி சார்கிட்ட கேக்கலாம்ல…?" என்று கேட்க, ஆயாசமடைந்த பிரவீன்,

"ஐயோ… முடியல… தள்ளிப் போடி" என்றான் சலிப்புடன். அவளும் கோபமாக முறைத்து விட்டுப் பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்களின் அருகே போய் அமர்ந்து கொண்டாள்.

இதே சமயம் கூடைப்பந்து மைதானத்தில் நின்ற பன்னிரண்டு சிங்கங்களும் நடுவர்களின் கட்டளைக் கிடைத்ததும் விளையாட்டை ஆரம்பித்தனர்.

ஆறடி உயரத்தில் ஆர்ம் கட்டை மீறி தெரிந்த தசைக் கோளங்களும் அழுத்தமாக அதே நேரம் உலகக் கோப்பைக்காக விளையாடும் வீரர்கள் போல, உற்சாகமாக அதுவும் ஆவேசமாக விளையாட்டை ஆரம்பித்தவர்களுக்கு முதல் கோல் போடவே திணற வேண்டியிருந்தது.

சம பலம் கொண்ட இரு அணிகள் என்றால் வெற்றி தோல்வி நிர்ணயிக்கக் கூடியது அல்லவே.

தர்ஷன் கையிலிருந்த பந்தை நிலத்தில் தட்டிக் கொண்டே ஓட… இடையில் புகுந்த விதார்த் அதனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்து தனது பக்கம் கொண்டு சென்றான்.

ஆனாலும் எதிரணி விடுமா என்ன? இடையில் ஓடி வந்த பிரித்வி முறுக்கேறிய புஜத்தால் தள்ளி கரத்தை உள்ளே நீட்டி பந்தை அபகரித்தவன் சற்றும் தாமதிக்காமல் அதை கூடையில் போட வர, இலகுவாகத் தடுத்த அகிலன் தன் பக்க அணிக்குப் பந்தைத் தட்டிவிட, இப்போது பந்து மறுபக்கம் சிரமப்பட்டே தாவித் தாவிப் போனது. இடையில் புகுந்த அபிராம் அதைத் தட்டிப் பதித்துத் தங்களுக்குரிய பக்கமாகக் கொண்டு சென்று பாய்ந்து கூடையில் போட, உடனே அந்த அணியினர் போட்ட கூச்சலுக்கு, மற்ற அணியினரின் முகம் கோணிப்போனது.

ஏனோ அந்த நிலையிலும், ஆரோனுக்கு சூரஜின் குரல் மட்டும் தனியாகக் கேட்டு கோபத்தை உயர்த்தியது. சூரஜ் அணியினருக்கு ஒரு புள்ளியை பிரவீனும் ராயரும் ஒரு கை நீட்டி சைகையில் வழங்க அடுத்த சுற்று ஆரம்பமானது.

முடியிலிருந்து வடிந்த வியர்வை முறுக்கேறிய புஜங்களில் விழ அதைச் சட்டை செய்யாமல் கையிலிருந்த பந்தை நிலத்தில் அடித்தபடி தமது பக்கத்தில் இருக்கும் கூடையை நோக்கி ஓடினான் அகிலன். அதைப் பார்த்த அமிர்தவர்ஷிணி முகம் விகசிக்க அந்த பூரிப்பில் மண்ணள்ளிப் போட்டான் அபிராம்.

ஆம் இப்போது பந்து அபிராமின் கையில் தவழ்ந்தது. அடுத்த கணமே பந்தைக் கிருஷ்ணா தட்டி பறிக்க "கிருஷ்ணா பாஸ்" என்று கூற, அருகே நின்று அக்கண்யன் குரல் கொடுக்க கிருஷ்ணா கையிலிருந்த பந்து அக்கண்யன் கரத்துக்கு இடம் மாற கிட்டத்தட்டக் கூடையின் உயரத்துக்குப் பாய்ந்தவன் கரங்களிலிருந்த பந்து கூடைக்குள் இலகுவாக வழுக்கிக் கொண்டு போனது.

ஆரோனுக்கோ இது தான் சந்தர்ப்பம் என்ற வகையில் அதிகமாகவே சூரஜை வெறுப்பேற்ற "யாஹ_" என்று கூச்சலிட்டான்.

இம்முறை புள்ளிகள் ஆரோன் அணியினருக்கு வழங்கப்பட இரு அணியினரும் சம புள்ளிகளில் இருந்தனர்.

அடுத்த சுற்று அபிராமிடம் இருந்து ஆரம்பிக்க அவனிடம் இருந்து ஜெயவர்மனின் கைக்கு மாறிய பந்து மீண்டும் அதிரநந்தன் இடம் வந்து சேர்ந்தது.

வேக எட்டுகளுடன் அவனை மறித்த ஆரோன் கையில் அகப்பட்ட பந்தைச் சூறையாட வந்த சூரஜின் பாதம் ஆரோனின் காலை பதம் பார்த்தது. அது ஒன்றும் வேணுமென்று நடந்த சம்பவமல்ல. ஆனால் இரண்டு பகையான துருவங்களுக்கு இடையான சம்பவம் ஆகியதால் அது ஒரு பூகம்பத்துக்கே வழி செய்தது.

அடுத்த கணம் பந்தை கீழே போட்ட ஆரோன், சூரஜின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

சூரஜ் மட்டும் சளைத்தவனா என்ன அதே வேகத்தில் அவன் கையும் ஆரோனின் முகத்தைப் பதம் பார்த்தது. சுவாரசியமாக விளையாட்டையும் தம்மவர்களையும் ரசித்துக் கொண்டு இருந்த பெண்கள் அதிச்சியுடன் சம்பவ இடத்தை நோக்கி ஓட, அங்கு விளையாடிக் கொண்டு இருந்த அனைவருக்குமே அது எதிர் பாராத அதிர்ச்சி தான்.

அடுத்த தாக்குதலை ஆரோன் நிகழ்த்த முன்னர் அவனை பின்னால் இருந்து அவன் அணியினர் பிடிக்க சூரஜின் அணியினரும் அவனை பிடித்தனர். இருவருக்கு கோபத்துடன் "விடுங்கடா" என்று திமிறினாலும் விட்டால் சம்பவம் சரித்திரம் ஆகிவிடும் என்று பயந்து யாரும் தமது பிடியை விடவில்லை.

குத்தியதில் இருவர் மூக்கிலிருந்தும் ரத்தம் கசிய அங்கிருந்த வேலையாளை அழைத்த ப்ருத்வி
"பெர்ஸ்ட் எயிட் பாகஸை எடுத்து வா" என்று கட்டளையிட்டான். ஒரு கட்டத்தில் இருவரையும் அடக்க முடியாமலிருக்க முன்னேறி நடுவில் வந்த ஜெயவர்மன் இருவர் மார்பிலும் தன் இருகரங்களை வைத்து "கொஞ்சம் நிறுத்துங்க" என்று சற்றே உரத்த குரலில் சொன்னான்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது போல உயர்ந்து ஒலித்த அவன் குரலில் அனைவரும் ஸ்தம்பித்து நிற்க

"இங்கன நாம சந்தோஷமா இருக்க வந்திருக்கோம், நண்பனின் வெற்றிய கொண்டாட.. உங்களுக்குள்ள ஆயிரம் பகை இருக்கலாம், இங்க உங்க பகையை காட்டி மிச்சம் இருக்கிறவங்களோட நிம்மதியைக் குலைக்க வேணாம்.. நம்மை அழைத்தவரை சங்கடப் படுத்த வேணாம்... கேட்டோ.. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருப்போம்." என்றான் அழுத்தமாக.

அவன் கூற்றிலிருந்த நியாயம் இருவரின் உள்ளத்தையும் சுட, திமிறிக் கொண்டு இருந்த ஆரோனும் சூரஜும் கூட கோப மூச்சுக்களைக் கட்டுப்படுத்திக் கொண்டார்கள் அன்றி முறைப்பை மட்டும் விடவில்லை.

இது தான் சந்தர்ப்பம் என்று அறிந்த அவர்களின் நண்பர்கள் அவர்களை அங்கிருந்த இருக்கைகளில் அமர வைக்க ப்ருத்வி இருவரின் காயங்களையும் ஆராய்ந்து பார்த்து, அதற்கு மருத்துவம் செய்ய வேண்டியதில்லை என்பதால், இருவரின் கரத்தையும் பற்றி மூக்கின் பாலத்தை இறுகப் பிடிக்குமாறு பணித்து தலையைக் குனிய வைக்க, சற்று நேரத்தில் வழிந்த இரத்தம் தடைப்பட்டது.

ஓரளவு சமாதானம் ஆனவுடன் பெருமூச்சுடன் நாச்சி

"ச்ச, சண்டை முடிஞ்சிடுச்சா?" என்றாள் சலித்தவாறு. அதைக் கேட்ட பிரவீன் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து,

"அடிப் பாவி" என்று வெளிப்படையாகவே வாயில் கை வைக்க அவளோ சாதாரணமாக

"எனக்காக ஒரு தடவை நீங்க சண்டை போட்டதோட சரி, இப்படி அடிக்கடி போட்டா தானே என் கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கும். நீங்களும் போட மாடீங்க, போடுறவங்களையும் போட விடமாடீங்க" என்று தோளில் நாடியை முட்டிக் கூறியவாறு புலம்பியவள், தன் அருகே நின்றிருந்த திகம்பரியைப் பார்த்து,

"ரௌடி அண்ணா அடிக்கடி சண்டை போடுவாரா?" என்றாள் ஆவலாக.

அதைக் கேட்டு திகம்பரி ஆமோதிப்பது போலச் சிரிக்க, மீண்டும் பிரவீனை பார்த்து

"விசு அண்ணா கிட்ட இருந்து கத்துக்கோங்க" என்றாள்.

அதை கேட்டு பிரவீன் வெளிப்படையாகத் தலையில் அடிக்க அவர்கள் உரையாடலைத் திகம்பரி பின்னால் நின்று கேட்டுக் கொண்டு இருந்த காசிவிஸ்வநாதராயரோ "ஹா ஹா" என்று சத்தமாகச் சிரித்தான்.

வெளியே நடந்த சண்டை பற்றி எதுவும் தெரியாத அரியனோ, தன் கேபினில் இருந்தவாறு, இந்த உல்லாச பயணம் சந்தோஷமாக நிறைவு பெற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் மிக அவதானமாகக் கப்பலைச் செலுத்திக்கொண்டிருந்தான்.

ஆந்த நேரம், அறைக்குள் இரு கறுப்புக் காபி கப்புகளுடன் நுழைந்தாள் தியா.

தொழிலில் சுட்டிகை என்றாலும், சுட்டித்தனத்திற்குக் குறைவிருந்ததில்லை. ஆனால் கேப்டனான பின் ஓரளவு தன் வால் தனத்தைச் சுருட்டி வைத்துக் கொண்டாலும், அதுவும் ஆர்யனுக்கு முன்பாக அடக்கி வைத்திருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும். இல்லையென்றால் வார்த்தையாலும், பார்வையாலும் அவளை ஒட்ட நடுக்கிவிடுவானே. ஆனாலும் அடிக்கடி தலைநீட்டும் துடுக்குத்தனத்தை அடக்குவது மட்டும் அவளுக்குச் சற்று சிரமமாகவே இருந்தது.

ஏனோ முதல் பார்வையிலேயே அவனுக்கு அவளைப் பிடிக்கவில்லை போலும். சிறு தப்பு செய்தாலும், பாரிய தவறு செய்த பாவனையைக் கொடுப்பான். அதனாலோ என்னவோ அடிக்கடி அவனைத் தாஜா செய்யவேண்டிய நிலை. அவளைப் பற்றிய குற்றப்பத்திரிகையைத் தந்தைக்குக் கொடுத்தால் போதும். அத்தோடு அவளுடைய வேலையை மூட்டை கட்டி வைத்துவிட வேண்டியதுதான்.

இதோ இப்போது கூட அவனிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக, காபியுடன் நுழைந்தவள் ஆரியனைத் தாண்டப் போன சமயம் சற்று தள்ளி இருந்த இருக்கைக் கால் பகுதி, தடுக்க, அவள் காபியோ ஆரியனின் வெள்ளைச் சீருடை மீதும் தட்டச்சின் மீதும் ஊற்றுப் பட்டது.

அம்மாவே வானுக்கும் பூமிக்கும் குதிக்கும் கப்பல் காவலனுக்கு இந்த நிகழ்வை ஏற்றுக் கொள்ள முடியுமா என்ன? திரையில் இருந்த துளிகளைக் கண்டவள், பரபரப்புடன் கையிலிருந்த கப்பைப் பலகையில் வைத்து விட்டுத் துடைக்க டிஷ்யூவை எட்டி எடுத்து வேகமாகத் துடைத்துக் கொண்டே,

"ஓஹ் சாரி கேப்டன்” என்றவாறு நிமிர்ந்து பார்க்க, அவன் இருந்த நிலையைக் கண்டு மேலும் அதிர்ந்து போனாள்.

வெள்ளை ஆடையில் ஆங்காங்கே கறுப்புக் காப்பி சிதறல்கள். இரு கை முஷ்டிகளும் இறுக, உடல் விண்ணென்று நிமிர்ந்திருக்கத் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தான் அவன். அதனால் அவன் முகம் இறுகிச் சிவந்து போயிருக்க, அந்த தோற்றமே அவளுக்குப் பெரும் கிலியை ஏற்படுத்தியது.

"ஹவ் டேயர் யு?" என்று சீறியவனின் அக்கினி கண்களைப் பார்த்து அவளும் பயத்தில் உறைந்து போனாள்.

மேலும் தொடர்ந்தவன் "இது என்ன உன்னோட வீடா? எப்படி நடந்துக்கணும்னு தெரியாதா? காபியைக் கொட்டியதும் இல்லாம, கீபோர்டு பக்கத்திலேயே அத வச்சு இருக்க.. ஓஹ் ஷீட், நீயெல்லாம்" என்றவன் கஷ்டப்பட்டு தனது கோபத்தைக் கட்டுப்படுத்தியபடி "ஜஸ்ட் கெட் அவுட், என் கண் முன்னாடி நிற்காத," என்றான். அவனுடைய இந்த திடீர் கோபத்தில், சற்று ஆடித்தான் போனாள் தியா. இதுவரை அவளை யாரம் இப்படித் திட்டியதில்லை. வெளியில் விழ இருந்த கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டு

"கேப்டன்" என்று அழைக்க

"கெட் லாஸ்ட் ஃப்ரம் மை காக்பிட்" என்றான் சற்றும் கொபம் தணியாமல்.

அவளுக்கோ தன்னை வெளியே போகச் சொல்ல இவன் யார்... என்கிற கடுப்பில் அவனைப் பார்த்து முறைத்தாள் தியா.

குடும்ப நண்பர் அநேகாத்மனின் கப்பலில் அவள் இருக்கிறாள்... அவளை வெளியே போகச் சொல்ல இவனுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது...

கோபம் ஒரு பக்கம் இருக்க, அதைக் காட்ட முடியாத ஆதங்கம் மறு பக்கம் இருந்தது.

பெருமூச்செடுத்து தன்னை கட்டுப் படுத்தியவள் வெளியேற முற்பட அவனோ சொடக்கிட்டு அவளை அழைத்தான். அவளும் அவனைத் திரும்பிப் பார்க்கக் கண்களால் காபி கப்பைக் காட்டியவன்

"இத யார் எடுத்து போவா?" என்று கேட்க மௌனமாக அதை எடுத்தவள் வெளியேறினாலும் அவள் மனதில் அவன் மீதான வெறுப்பு ஆழமாக விதைக்கப் பட்டு இருந்தது.


http://srikalatamilnovel.com/community/threads/வாரியர்ஸ்-016-கருத்துத்-திரி.1160/page-10#post-238407


வணக்கம் கண்ணுகளா இதோ எஸ் எம் எஸ் வாரியார் 016 கதையோட இரண்டாவது அதிகாரரும் பதிந்துவிட்டோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காம சொல்லுங்க. சென்ற பதிவுக்காக கருத்துக்கள் கூறி அத்தனை எழுத்தாளர்களையும் மகிழ்வித்த உங்க எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி.
 
Last edited by a moderator:

sivanayani

விஜயமலர்
11427


அத்தியாயம் 3

சென்னையில் பிரபலமான பொழுதுபோக்கு இடமான சௌக்கீதானிக்கு முன்பாக வந்து நின்றது அந்த வாகனம். அதிலிருந்து மிடுக்குடன் இறங்கினான் ரத்ன வேல்பாண்டியன். இரத்னவேல் பாண்டியன் ஐபிஎஸ். சென்னை மாநகரின் காவல் தலைவன். மறு பக்கத்திலிருந்து பொன் கொலுசும் புது மெட்டியும் அணிந்த வெண்ணிற பாதங்கள் தரையில் பதிய.. மார்டன் உடை தேவதையாய் இறங்கினாள் தமிழரசி.. அவனின் காதல் மனைவி.. இருவரும் புதுமணத் தம்பதியினர்.

இறங்கியவள் நிமிர்ந்து பார்க்கக் கண் முன்னால் காட்சியளித்த, இடத்தைக் கண்டு திகைப்புக்குள்ளானவளாகத் திரும்பித் தன் கணவனைப் பார்த்தாள். அவனோ மெல்லிய புன்னகையுடன் தன் ஒற்றைப் புருவத்தைத் தூக்கி, என்ன என்பது போலக் கேட்க, தமிழரசியோ பெரும் மகிழ்ச்சியுடன் மீண்டும் தன் கண் முன்னால் இருந்த கோட்டை போன்ற நுழைவு வாயிலைப் பார்த்தாள்.

" சர்ப்ரைஸ்.." என்று சொல்லி.. செல்லும் இடம் பற்றி சொல்லாமல் அழைத்து வந்தவன்.. அவளின் விரிந்த கண்களிலும் மலர்ந்த முகத்திலும் தானும் மலர்ந்தவனாய் கார் கதவினை சாற்றி எலக்ட்ரானிக் லாக் செய்தான். மாலை வெயில் கண்களைக் கூசச்செய்ய, சட்டையில் மாட்டி வைத்திருந்த கூலர்சை எடுத்து அணிந்தவாறு அவள் அருகில் வந்தான்.

தமிழரசி படித்துக் கொண்டிருந்த போதே.. தோழிகளுடனோ.. குடும்பத்தினருடனோ வரவேண்டும் என்று ஆசைப்பட்ட இடம். ஏனோ அப்போது வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதைப் பற்றிச் சொல்லாமலேயே.. அவளின் உள்மன ஆசையை அறிந்தவன் போல.. நிறைவேற்றி அசத்தி விட்டான் அவளின் காதல் கணவன்.

திகைத்து நின்றவளின் தோளை அணைத்தவன்.. கோட்டையின் நுழைவு வாயில் போன்ற இடத்தை நோக்கி அவளை அழைத்துச் சென்றான். பளீரிட்ட வண்ணங்களுடன் சுவர்களும்.. அமரும் திண்டுகளும்.. இருந்த வரவேற்புப் பகுதி நுழைவுச்சீட்டு வழங்கும் இடமாக இருந்தது. பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டி ஓரத்தில் நிற்க, வட இந்திய கிராமிய கலைப்பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது அவ்விடம். அவை தமிழரசியின் கலைக் கண்களுக்கு விருந்தாக.. ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்க்கலானாள். கடலணைய விழிகள் விரிய அவ்விடத்தின் அழகில் தொலைந்து போய் நின்றிருந்தவளைப் புன்னகையோடு பார்த்தவன்..

“பேபி… நீ இங்கேயே இரு நான் போய் என்ட்ரன்ஸ் டிக்கெட் வாங்கிட்டு வர்றேன்” என்று விட்டு செல்ல..

“சீக்கிரமா வாங்க…” என்கிற அறிவுறுத்தலுடன் அவ்விடத்தைச் சுற்றி தன் பார்வையைச் சுழற்றினாள் தமிழரசி.
காத்திருப்பவர்கள் அமர வசதியாக அழகழகான வண்ணக்குஷன்களுடன் கூடிய திண்டுகள், குழந்தைகளுக்கு அணிவித்து புகைப்படம் எடுக்கும் வகையில் பலவண்ணத் தலைப்பாகைகள்… பல வண்ண மணிகள் பதித்த அழகான பெட்டிகள் என்று முகப்பறை முழுவதுமே கலைடாஸ்கோப் எஃபெக்ட்டில் வண்ணங்களை வாரியிறைத்து அழகாக வடிவமைக்கப்பட்டிருக்க.. அதன் அழகை ஆர்வத்துடன் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தவள், தற்காலிகமாக ரத்ன வேல் பாண்டியனையே மறந்து போனாள்.

சற்றுநேரத்தில் அனுமதிச்சீட்டோடு திரும்பி வந்தவன்.. தன் மனைவியைத் தேட, அவளோ முகப்பறையில் அமர்ந்து.. அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த மண்ணால் டெரகோட்டாவாக செய்யப் ப டு.. பலவண்ண சோழிகளைக்கொண்டு உருவாக்கப்பட்டிருந்த பொருட்களை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

தோகையாய் விரிந்திருந்த கூந்தலை வெண்ணிற முத்துக்கள் பதித்த சென்டர் கிளிப்பில் அடக்கி.. வெண்மையில் சிவப்புப் பூக்களை அள்ளித் தெறித்திருந்த நீண்ட ஃபிரில் பாவாடையும் சிவப்பு நிற டாப்ஸூமாய் நின்றிருந்த தன்னவளின் நிறம்.. அந்த இடத்தின் பளீர் நிறங்களின் மத்தியில் மேலும் எடுப்பாகத் தெரிய.. அவ்வெழில் தோற்றத்தில் வழக்கம்போல தன்னைத் தொலைத்தவனாய் அவளைப் பார்வையால் பருகியவாறே நெருங்கியவன்.. பின்னால் நின்றவாறு அவள் காதுக்குள் மெதுவாய் ஊத, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் தமிழரசி. அங்கே மாயக் கண்ணனின் குறும்புச் சிரிப்புடன் நின்றிருந்த கணவனைக் கண்டு முகம் மலர, அவனோ அவளை நெருங்கி அமர்ந்து அவளது இடையோடு கைவிட்டு தன்னோடு இறுக்கமாய் சேர்த்தணைத்தவாறு,

“என்ன பார்க்கிறே பேபி… இது பிடிச்சிருக்கா… வாங்கலாமா?” என்றான் மென்மையாய். கணவன் கேட்டதில்.. புன்னகையோடு அவனைத் திரும்பிப் பார்த்தவள்..

“எதுக்கு… பரணில் போடவா? வேணாம்.. ” என்று விட்டு.. ரசனையுடன்.. “இந்த இடம் ரொம்பவே அழகா இருக்கு வேலு… எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! என் ஃப்ரெண்ட்ஸ் சொல்லி கேட்கும் போதே .. நம்ம கல்யாணத்துக்கு முன்னேயே.. இங்க வரனும்னு.. ஆசை! ஆனா ஏனோ என்னால் வரமுடியாமையே போயிடுச்சு..!. ஆமா... எனக்கு இந்த இடம் பிடிக்கும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?!” என்று உற்சாகமும் ஆவலுமாய் கேட்டவளை… ஆழப் பார்த்தவன்..

“என் பொண்டாட்டியை… அவளோட விருப்பு வெறுப்பு…இதெல்லாம் பற்றி தெரிஞ்சு வச்சிக்கலைன்னா நானெல்லாம் என்னடி புருஷன்?!” என்று சொல்ல.. பொய்க் கோபத்துடன் அவனை முறைத்துப் பார்த்தவள்,

“ம்க்கும்..! இருபத்திநாலு மணிநேரமும்… போலீஸ்ஸ்டேஷனையே கட்டிக்கிட்டு மாரடிக்கிறவரு… பேசுற பேச்சைப்பாரு…” என்று நொடிக்க.. அவளின் சுழித்த உதட்டைக் காதலாய் பார்த்தவன்…

“ஏண்டி இப்படி அபாண்டமா பேசுற ?! அந்த இருபத்தி நான்கு மணிநேரத்தில் தினமும் எட்டு மணிநேரம் உன்னை மட்டுமே கவனிக்கிறேனே அது போதாதா…?!” என்று குறும்பாய் கண்சிமிட்டி வினவியவனின் வார்த்தைகள் உணர்த்திய செய்தியில் நெஞ்சம் படபடக்க, முகம் சிவக்கத் தலை குனிந்தவளை…
சற்று நெருங்கி “என்ன பேபி சத்தத்தையே காணோம்…!” என்று மேலும் சீண்டினான் பாண்டியன். அவனைச் செல்லக்கோபத்தோடு முறைத்தவள்…

“ஏன் அந்த நேரமும் ஆபீஸையே கட்டிக்கிட்டு குடித்தனம் நடத்த வேண்டியது தானே…?! யாரு வேணாம்னு சொன்னா ..!" என்று அவள் நொடிக்க..

“அதெப்படி முடியும் பேபி…?! அந்த பதினாறுமணிநேரம் நான் வெளியே ஆக்டிவா வேலைசெய்யனும்னா… உங்கூட இருக்க இந்த எட்டு மணிநேரம் தான் எனக்கே எனக்கான பூஸ்டிங் டைம்டி.." என்று விஷமமாய் கண்சிமிட்டியவனை…

‘ராஸ்கல் பப்ளிக் ப்ளீஸ்ல கொஞ்சம் கூட வெட்கமேயில்லாம எப்படி கண்ணடிக்கிறான் பாரு..!’ என்று மனதிற்குள் செல்லமாய் கடிந்தாலும்.. அவனின் கிறக்கப் பார்வை அவளின் மேனியை சிவக்க வைக்க.. அதைக் கண்டு மோகத்துடன் காதலாய் புன்னகைத்தவன்..

“ வெளிய கூட்டிப்போன்னு சொல்ல வேண்டியது.. வந்தா.. மனுஷன வீட்டுக்கு எப்படா போவம்னு ஏங்க விட்றது.. வீட்டுக்கு போவமா பேபி... ” என்று கூறி அவளை இழுத்து தன்னோடு இறுக்க,

“அடாடாடாடா…. இப்படியொரு ரொமாண்டிக் சீனை நான் படத்துல கூட இதுவரை பார்த்ததில்லையே மாப்ள…! என் மாப்ள பாண்டியா இது? சும்மா..பின்னுறியேடா…" என்ற கிண்டல் குரல் பின்புறமிருந்து வர, இருவரும் சட்டென்று விலகித் திரும்பிப் பார்த்தனர்.

அங்கே இவர்களுக்கு எதிரில் பாண்டியன் வயதையொத்த இளைஞன் ஒருவனும் அவனது அருகில் இளம்பெண் ஒருத்தியும் நகைத்த வண்ணம் நிற்க… பாண்டியின் முகம் தனக்கெதிரே நின்றிருந்தவனை யோசனையுடன் நோக்கி.. பின்னர் அடையாளம் கண்டு கொண்டு சட்டென்று மலர்ந்து,

“டேய்…ஹரி! நீயாடா…? மச்சான்…. வாட் ஏ பிளசண்ட் சர்ப்ரைஸ்…. " என்று பாய்ந்து கட்டிக் கொண்டவனை ஹரியும் அணைத்துக்கொண்டான்.

ஹரிஷூம் பாண்டியும் பள்ளிப்பருவ நண்பர்கள். இருவரும் பள்ளி இறுதி வகுப்பை ஒன்றாகவே முடித்தனர்… இளங்கலை பட்டப்படிப்பை வெவ்வேறு கல்லூரிகளில் துவங்கியபோதும் அவர்களின் வார இறுதி நாட்கள் ஒன்றாகவே கழியும். பட்டப்படிப்பை முடித்து பாண்டி தனது ஐ.பி.எஸ் படிப்புக்காகவும்… ஹரிஷ் தன்னுடைய கணினி மேற்படிப்புக்காகவும் வெவ்வேறு நகரங்களுக்குப் பிரிந்து சென்றுவிட்டதால் அவர்களின் நட்பைத் தொடர இயலாத சூழ்நிலை. பாண்டியன் திருமணப் பத்திரிகை வைக்கத் தேடிய போது ஹரிஷ் வெளிநாடு சென்றிருந்ததால் திருமணத்திலும் சந்திக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகான சந்திப்பில் நண்பர்கள் இருவரும் கட்டி அணைத்து நலம் விசாரித்து.. தற்போதைய தங்கள் பணிகளைப் பற்றியுமாகச் சற்று நேரம் அளவளாவிவிட்டுத் தங்கள் இணைக்கு அறிமுகப் படுத்தலாம் என்று திரும்பிப் பார்த்தால் இருவரையும் காணவில்லை. எங்கே போனார்கள் என்கிற அதிர்வுடன் அங்கும் இங்கும் திரும்பிப் பார்க்க, அவர்களோ சற்றுத் தொலைவில் எதையோ பேசிச் சிரித்தவாறு வெல்கம் ட்ரிங்க் எனப்படும் குளிர்பானம் மற்றும் கச்சோடி எனப்படும் ஸ்னாக் வழங்கும் இடத்தில் ஆளுக்கு இரு தட்டுக்களை ஏந்தியவாறு நின்றிருந்தனர்.

அதைக் கண்டு பாண்டியனும், ஹரீஷூம் திகைப்புடன் ஒருவரையொருவர் பார்த்து

“டேய்…. நாம அறிமுகப் படுத்த முன்னமே சேர்ந்துகிட்டாங்களேடா… விட்டா நம்மள கழட்டி விட்டுட்டுப் போயிடுவாங்க போல…" என்றவாறு விரைந்து அவர்களை நெருங்க.. வந்தவர்களைக் கண்டு இருவரும் புன்னகையுடன் நிற்க..

“ஸ்ரீ … உனக்கு சிஸ்டரை ஏற்கெனவே தெரியுமா…” என்று ஹரீஷ் கேட்க “இல்லையே… ஏன் கேட்கிறீர்கள்!!” என்றாள் ஸ்ரீமதி.

" இல்லை… நீங்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தா, தெரிந்தவங்க பேசுறது போல இருந்துச்சா… அதுதான்…” என்று கூறிய ஹரீஷை முறைத்த ஸ்ரீ,

“பின்னே… எங்களை அழைத்து வந்துவிட்டு, நீங்கள் இருவரும் கடலை போட்டுக்கொண்டிருந்தால், நாங்கள் இருவரும் உங்க வாயை வேடிக்கை பார்ப்போம்னு நெனச்சீங்களா… பொண்ணுங்கதான்.. விடாம பேசிக்கிட்டே இருப்பாங்கன்னு சொல்லுவாங்க… ஆனா நீங்க ரெண்டு பேரும்… அடேங்கப்பா…" என்று கிண்டலடிக்க,

“ஏய் ரொம்ப நாளைக்கப்புறமா சந்திச்சிருக்கோம் டியர்… ஒருகாலத்தில ஒன்னாவே சுத்தினவங்க.…” என்று ஹரீஷ் சமாதானம் கூற, “கொஞ்சமில்ல டியர்ர்ர்ர்… அரைஐஐஐ மணி நேரம்…” என்று ர் இல் அழுத்தி.. மார்பில் கரங்களைக் கட்டியவாறு கிண்டலடிக்க,

“அரை மணி நேரமாவா…நிஜம்மாவா.. அடேங்கப்பா… நேரம் போனதே தெரியலயே…” என்று ஹரிஷ் அசடு வழிய,
பாண்டியனும் சங்கடப் பட்டவனாக..“ஐ ஆம் சாரிமா…” என்றான் மெல்லிய குரலில்..
அதைக் கேட்டவுடன் பக்கென்ற சிரித்த ஸ்ரீமதி..

“என்ன அண்ணா.. நிஜமா பயந்துட்டீங்களா.. அரை மணி நேரமில்ல.. பத்து நிமிஷமா பக்கத்தில இருந்தவங்கள மறந்து பேசிட்டு இருந்தீங்க.… உங்க தமிழ் ஸோ ஸ்வீட்.. என் கணவரை விட ரொம்ப அழகா கம்பனி கொடுத்தாங்க.…வீ ஹேவ் ஸேம் டேஸ்ட்...லைக்ஸ்.. நா… சும்மா இவரைக் கடுப்பேற்றச் சொன்னேன்…” என்று கூறி சிரிக்க,

“சரி சரி… நேரமாச்சு… வாங்கின டிக்கட்டைப் பயனுள்ளதா செலவளிப்போம்… உள்ளே போகலாம் வாங்க..” என்று தமிழரசி கூறியவாறு பாண்டியன் கரத்தைப் பற்றிக் கொள்ள.. அதன்பிறகு இரு ஜோடிகளும் சேர்ந்தே அவ்விடத்தைக் கேலியும் கிண்டலுமாய் சுற்றிப்பார்த்தனர்.

ஒட்டக சவாரி, மோடி மஸ்தான் வித்தை, கழைக் குத்தாட்டம், பப்பட் ஷோ, பானைகளைத் தலையில் அடுக்கிய கிராமிய பெண்ணின் நடனம் என ஒரு வட இந்திய கிராமத் திருவிழாவை நினைவூட்டும் அவ்விடத்தைச் சுவாரஸ்யத்துடன் சுற்றிப் பார்த்தனர் ஜோடிகள்.

சற்று நேரத்தில் பாண்டியின் அலைபேசி ஒலிக்க.. அதை எடுத்துப் பார்த்தவன்… அங்கே விக்ரமின் பெயர் திரையில் மின்ன, உடனே திரும்பி அங்கிருந்தவர்களைப் பார்த்து,

“ஒன் செக்… என்னுடைய அசிஸ்டன்ட் கூப்பிடுறார்… இதோ வர்ரேன்…” என்று அனுமதி வாங்கிக்கொண்டு கைப்பேசியைக் காதில் வைத்தவாறு, சற்று தள்ளிச் சென்று, "சொல்லுங்க விக்ரம்! எனி எமர்ஜென்ஸி?" என்று வினவினான்.

“எஸ் ஸார்… நாளைக்கு கோர்ட்டில் சப்மிட் பண்ண வேண்டிய ஃபைல்ல உங்க சைன் வேணும். இன்றைக்கே கொடுக்க சொல்றாங்க…” என்று கூற, சில நொடிகள் அமைதியாய் இருந்தான் பாண்டியன்.

விக்ரம், “சார்..ஸாரி.. சன்டே.. நீங்க இன்ஃபார்ம் பண்ணிட்டுத் தான் போனீங்க.. நீங்க சிரமப் படாதீங்க.. நானே வீட்டுக்கு வந்து வாங்கிக்கிறேன்…”

“இல்ல விக்ரம் நான் வெளியே இருக்கேன். சென்னை அவுட்டர்.. அம்யூஸ்மண்ட் பார்க்.. சௌக்கிதானில இருக்கேன்…” என்று கூற,

“சார் நான் பக்கத்தில.. பூந்தமல்லில தான் இருக்கேன்… பப்ளிக் ப்ராசிக்யூட்டர் சில டீடெய்ல்ஸ் கேட்டிருந்தாரு… அதைக் கொடுக்கிறதுக்காக வந்தேன்.. அவர் தான் இதுவும் வேணும்னு கேட்டார். மேக்ஸிமம் பதினஞ்சு நிமிஷத்தில அங்கே வந்திருவேன்…” என்றதும்,

ஒரு நொடி யோசித்தவன் “சரி… சீக்கிரமா வாங்க…” என்று விட்டு.. மீண்டும் தன் நண்பனின் அருகில் சென்று இணைந்து கொள்ளச் சற்று நேரம் சிரிப்பும் நகைப்புமாகப் போனது.

அங்கே வந்த விக்ரமின் காவல்துறை சீருடையைப் பார்த்து, உள்ளே விட, உள்ளே நுழைந்தவன் ரத்னவேல் பாண்டியனுக்குத் தொலைபேசி எடுத்து அவன் இருக்கும் இடத்தை அறிந்துகொண்டு நேராக அங்கே சென்றான்.

ரத்னவேல் பாண்டியனிடம் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டு நிமிர்ந்த விக்ரம், அங்கே மங்கிய ஒளியில் இருந்த இராஜஸ்தானிய நடனக் கூடத்தில் இருந்து சிரித்தவாறு மனைவியுடன் திரும்பி வந்த ஹரிஷைக் கண்டு, ஆச்சரியமானவனாய்,

“ மதி…. ஹரிஷ்…” என..
 
Last edited by a moderator:

sivanayani

விஜயமலர்
"ஹே..… விக்ரம்… வாட் எ ப்ளஸன்ட் சர்ப்ரைஸ்...” என்ற ஹரிஷ் தன் மனைவியைப் பார்க்க, ஸ்ரீமதியோ, புன்னகை மலர அருகே வந்தாள்.. அதைக் கண்டு வியந்த பாண்டி,

“விக்ரமைத் தெரியுமா உங்களுக்கு…” என்று கேட்க..

“அஃப் கோர்ஸ்… ஸ்ரீமதியோட பெரிப்பா பையன்.. அவளின் ஃபேவரைட் அண்ணன்… திருமணத்தின் போது நாங்க ரொம்ப க்ளோஸ் ஆயிட்டோம்… காவல்துறை அதிகாரியை கையில் போட்டு வச்சிருக்கிறதும் பாதுகாப்புத்தானே…” என்று ஹரிஷ் கூற, சிரித்த விக்ரம்,

“சென்னைல இருக்கோம்னு பேரு.. எதிர்பாராம சந்திச்சாத்தான் உண்டு…” என்று புன்னகையுடன் கூறியவன்,

“ஓக்கே ஹரி… கொஞ்சம் அவசர வேலை இருக்கு… நா கிளம்பறேன்…” என்றவாறு ரத்னவேல் பாண்டியனைப் பார்த்து,

“சார் உத்தரவு வாங்கிக்கிறேன்…” என்று விடைபெற முயல, உடனே அவனைத் தடுத்த பாண்டியன்,

“சாப்பிட்டீங்களா.. விக்ரம்" என்றான்.

“இன்னம் இல்லை சார்… வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக்கிறேன்…” என்று கூறியவாறு விலக முயல, அவனைத் தடுத்த பாண்டியன்,

“நாங்களும் சாப்பிடத்தான் போய்க்கிட்டிருக்கொம் வாங்க.. சேர்ந்தே சாப்பிடலாம்…” என்று கூற,

இவன் தயங்கியவாறு “இல்லை சார்… எய்ட்குள்ள இத கொடுக்கனும். நான் அப்புறமா…” என்று சங்கடத்துடன் இழுக்க,

"அதுக்கு இன்னும் ஒரு மணிநேரம் டைம் இருக்கே… வாங்க முதல்ல சாப்பிடலாம்…." என்றவாறு விக்ரமின் பதிலையும் கேட்காது, உணவுக் கூடத்தினுள் நுழைய.. உயரதிகாரியின் கட்டளையை மீறத் துணிவற்றவனாய் உடன் நடந்தான் ஏஸிபி விக்ரம்.

ராஜஸ்தானின் ஓவியங்களால் அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்த உணவுக் கூடத்தில் குட்டை மேஜையில் தரையில் அமர வைக்கப்பட்ட அவர்களுக்கு.. இரண்டடி விட்டமுள்ள பெரிய தட்டுக்கள்.. ராஜஸ்தானிய உணவு வகைகளால் நிறைக்கப்பட்டு வழங்கப் பட்டது.

புளிப்பும் இனிப்புமாய் இருந்த சுவையான உணவை அனைவரும் ருசி பார்க்க.. ஆண்கள் மூவரும் எதை எதையோ பேசி கலகலத்தவாறு உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது ஹரிஷின் கைப்பேசி ஒலித்தது.

அதைக் கண்ட ஸ்ரீமதி, “ ஹரி… இப்போதான் கொஞ்சம் ரிலாக்ஸா பேசிட்டு இருக்கோம்.. நோ பிஸினஸ் டாக்ஸ்.." என கடுப்புடன் சொல்ல... திரையில் தெரிந்த பெயரைக் கண்டு முகம் மலர்ந்தவன், “ஏய்… அபிராம்டி…” என்றுவிட்டு பாண்டியனைப் பார்த்து,

“என் கூட காலேஜில் ஒன்னா படிச்சவன்… ” என்றவன், எடுக்க முனைய.. அழைப்பு நின்றுவிட்டிருந்தது.

"ச்சே.. அவன்.. ஷிப்ல இருக்கான். கனடியன் ஃப்ரண்ட் ஒருத்தர் எல்லாருக்குமா சேத்து ஒரு தீவில ஒன்றுகூடல் ஏற்பாடு செய்திருந்தாரு… அதுக்கு நானும் போறதா இருந்தது. இரண்டு நாள்ல ஒரு முக்கியமான மீட் சென்னைல இருக்கு. அதனால போகலை. என்னைக் கடுப்பேத்த அப்பப்ப.. கால் பண்ணி அங்கே ஷிப்ல நடக்கிறதை லைவ் ரிலே பண்றான்.. ராஸ்கல்.." என்று சொல்லிய நேரத்தில்.. மீண்டும் அழைப்பொலி கேட்க.. வேகமாய்ப் பார்த்தவன்.." அவனே தான் " என்றவாறு காணொளிக் காட்சி அழைப்பை ஏற்க..

வேகமாய் அடித்த காற்றில் சுருண்டு தொங்கிய குழல்கள் அலைய, அதை இழுத்துப் பின்னே தள்ளியவாறு ஈரம் சொட்டச் சொட்ட நின்றிருந்தான் அபிராம்.

“ஹாய் டா..?” என்றான் மெல்லிய குறும்புப் புன்னகையுடன்.

"என்னடா.. அபிராம்… நீ என்ன கப்பலுக்குள்ள இருக்கியா.. வெளிய கடல்ல சுறாவோட டேட்டிங்ல இருக்கியா.. " எனக் கிண்டலாய் சிரித்தவாறு கேட்க..

"டேய்……. ஸ்விம் பண்ணிட்டு வந்தேன் டா.." என்றவாறு தான் இருக்கும் இடத்தைக் காட்டினான் அபிராம். நட்சத்திர விடுதியின் நீச்சல் குள தரத்தில் இருந்த சிறிய நீச்சல் குளம்.. மின் விளக்குகள் ஒளியில் அழகாய் இருந்தது.

"சூரஜ்.. ஆனந்த் என்ன பண்றாங்க… எப்படியிருக்கு சொகுசு கப்பல்ல பயணமெல்லாம்... ம் ம். செம என்ஜாய்ன்மெண்ட் தானா?" என்று கண்ணடித்து.. கேட்க...

“ ஆமாடா… ஃபேமிலிஸோட.. வந்திருக்காங்க எல்லோரும்.. செம என்ஜாய்மெண்ட்...." என்று சிரித்தவன். ஹரிஷை வெறுப்பேத்தவேண்டி,

“இங்கே நெனச்ச நேரம் சாப்பாடு. பாட்டு, டான்ஸ் விளாட்டுன்னு… எந்தக் கவலையும் இல்லாமல் போய்க்கிட்டிருக்கு… மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு… ஸ்ட்ரெஸ் எல்லாம் ரிலீஸ் ஆனா போல... ம்.. அடிக்கடி இப்படி பயணம் போகனும்னு தோனுது… நீயும் வந்திருக்கலாம்… ரொம்ப என்ஜாய் பண்ணியிருப்பே.. நீதான் ஏதோ ப்ராஜக்ட்... விட்டுட்டு வர முடியாதுன்னு சொல்லிட்டியே…" என்று அபிராம் குறைபட,

"என் வேலை பத்தி தெரியாதாடா… ?! இந்த ப்ராஜக்டை மிஸ் பண்ணினால் டென் க்ரோஸ் லாஸ் ஆயிடும்…" என்றான் மெய்யான வருத்தத்துடன் ஹரிஷ்.

“இட்ஸ் ஓக்கேடா… இப்போ நீ என்ன பண்ணிட்டு இருக்கே…” என்று கேட்டான் அபிராம்.

“இங்கே வைஃபோட சென்னையில் இருக்க சௌக்கீ தானிக்கு வந்தேன்… வந்த இடத்தில என்னோட பழைய நண்பனை சந்திச்சேன்… உன் கிட்டகூட சொல்லிருக்கேனே.. ஸ்கூல்ல பெஸ்ட் ஃப்ரெண்ட் .… ரத்னவேல் பாண்டியன்னு…” என்று கூற,

“யாரு… ஐபிஎஸ் சாரா…” என்று அபிராம் கேட்க,

“அவனேதான்… அவனையும் சந்திச்சேன்… நீ அவனைப் பாத்ததில்லைல… இப்ப பாரு…” என்றவன், கைப்பேசியை ரத்னவேல் பாண்டியன் பக்கம் திருப்ப,

பாண்டியன்,

“ஹாய்…” என்றவாறு தன் கரத்தை அசைக்க, மறுபக்கமிருந்த அபிராமும் கையை ஆட்டிப் பேசத் தொடங்கினான்.

அபிராம் ஹரிஷோடு பேசும்போதே மறுபக்கம் சூரஜூம், ஆனந்தனும் வந்து சேர்ந்து கொள்ள, சற்று நேரம் பெரும் சிரிப்பும் கும்மாளமுமாகப் போனது உரையாடல். தொடர்ந்து ஹரிஷ், தான் இருந்த இடத்தைத் திரையில் சுத்திக் காட்ட, அதே போல அபிராமும் அந்தக் கப்பலைக் கைப்பேசியின் மூலம் சுற்றிக் காட்டினான்..

கப்பலிலிருந்த அபிராம், சூரஜ், ஆனந்தன் சௌக்கிதானியை பார்க்க சௌக்கித்தானியில் இருந்தவர்களோ, ஆடம்பரக் கப்பலின் அழகான காட்சிகளைக் கண்டு வியந்தனர்.

அபிராம் எழுந்து, அந்தக் கப்பலின் ஆர்ட் கேலரி, சமையலறை, சாப்பாட்டறை, கேளிக்கைப் பகுதி, விளையாட்டுப் பகுதி, என்று ஒவ்வொரு இடமாகச் சென்று காட்டிக்கொண்டிருக்க, இவர்களோ, இங்கிருந்து அந்தக் காட்சிகளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

அதே நேரம், ரத்னவேல் பாண்டியன், சுவாரசியமாக அந்தக் கப்பலையும், அபிராம் காட்டிய இடங்களையும் பார்த்துக் கொண்டு வர, ஒரு கட்டத்தில் அவனுடைய கவனம், சற்று சிதைந்து, அந்த ஒளித்திரையில் முழுவதுமாகக் குவிந்து நின்றது. பின் அவசரமாக அவர்களை நெருங்கியவன், ஹரிஷின் கரத்திலிருந்து கைப்பேசியைப் பறித்து எதையோ உற்றுப் பார்த்தான். திடீர் என்று ரத்னவேல்பாண்டியன், கைப்பேசியைப் பறித்ததும், திகைத்த விக்ரம்,

“என்ன சார்… ஏதாவது ப்ராப்ளமா?” என்று திகைக்க, அவனை நோக்கி பொறுத்திருக்குமாறு.. கைகாட்டிவிட்டு, அபிராமிடம்,

“மிஸ்டர் அபிராம்… திரும்பி பாக்காதீங்க.. கொஞ்சம் உங்க பின்னாடி இருக்க பேரரை அவருக்கு தெரியாம ஒரு போட்டோ எடுத்து அனுப்புங்க" என்று பரபரப்புடன் கூறினான்.

குழம்பிய அபிராம், “என்னாச்சு சார்…” என்று திகைக்க,

“ஒன்றுமில்லை மிஸ்டர் அபிராம், அந்த பேரரை எங்கோ பார்த்ததுபோல் இருக்கு… அதற்காகத்தான் கேட்கிறேன்… அவருக்குத் தெரியாம.. போட்டோ எடுத்து உடனே ஹரி நம்பர்க்கு அனுப்புங்க…” என்று உத்தரவு போலக் கூற,

“ஷ்யுர் சார்…” என்ற அபிராம், கைப்பேசியை அணைத்துவிட்டு, ரத்னவேல்பாண்டியன் கேட்டதுபோல், கைப்பேசியில் அவன் சொன்ன பேரரை பல புகைப்படங்களை எடுத்து, ஹரிஷின் கைப்பேசிக்கு அனுப்பி வைத்தான். படம் கிடைத்ததும், அவற்றை தன் அலைபேசிக்கு வாட்ஸப் செய்து விட்டு விரைந்து வெளியேறிய ரத்னவேல் பாண்டியன், காரில் இருந்த தன் லேப்டாப்பை எடுத்து, அதில் குறிப்பிட்ட ஃபோல்டரைத் திறந்து.. படத்தை எடுத்து, அதோடு, ஹரிஷின் கைப்பேசியில் அனுப்பியிருந்த படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தவன், அதிர்ந்து போனான்.

அவனைப் பின் தொடர்ந்தவர்கள்.. ரத்னவேல் பாண்டியனின் முகத்தைக் கண்டு, திகைத்தனர்.

“என்னாச்சு சார் ஏதாவது பிரச்சனையா?” என்று விக்ரம் கேட்க, "விக்ரம் இவனை நல்லா பாருங்க… யாருன்னு தெரியுதா?” என்று கேட்க, அப்போதுதான் அந்த படத்தை உற்றுப் பார்த்த விக்ரமும் அதிர்ந்து போனான். “சார்… இவன்… பத்ரி... கொஞ்ச மாதங்கள் முன்னாடி தப்பிச்ச கைதியாச்சே… இவன் மேல ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கு… அதுவும் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் கிரிமினல்… இவனைத்தானே நாம தேடிக்கிட்டு இருக்கோம்… இவன் இங்க கப்பல்ல என்ன பண்றான்.. அதும் பேரரா.. சம்திங் ராங்….” என்ற ரத்னவேல்பாண்டியன்,

"அவன் என்ன நோக்கத்துல அங்க போயிருக்கான்னு தெரியல… ஹரிஷ்… அபிராமுக்கு திரும்ப கால் பண்ணு.…" என்று அவசரப் படுத்தினான் ரத்னவேல்பாண்டியன்.

ஹரீஷ் அபிராமுக்கு அழைக்க.. அழைப்பு செல்லாமல் " டயலிங்…" என்றே வர.. சில நொடிகள் மௌனித்து இருந்த அலைபேசி.. " நீங்கள் அழைக்கும் எண் ..சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.. " என்று பதிவு செய்ய பட்ட குரல் ஒலித்தது.. அதைக் கேட்ட ரத்னவேல் பாண்டியனின் முகம் இறுகியது…

http://srikalatamilnovel.com/community/threads/வாரியர்ஸ்-016-கருத்துத்-திரி.1160/page-13#post-238658


வணக்கம் கண்ணுகளா இதோ எஸ் எம் எஸ் வாரியர் 016 கதையோட 3ஆம் அதிகாரரும் பதிந்துவிட்டோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காம சொல்லுங்க. சென்ற பதிவுக்காக கருத்துக்கள் கூறி அத்தனை எழுத்தாளர்களையும் மகிழ்வித்த உங்க எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி.
 
Last edited:
Status
Not open for further replies.
Top