All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானுரதி துரைராஜசிங்கமின் ‘வெள்ளை ரோஜாக்கள்’ - கதை திரி

Status
Not open for further replies.

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 8

IMG-20210701-WA0015~2.jpg

IMG-20210627-WA0025~2.jpg


தோட்டத்து மலர்களின் வாசத்தைச் சுமந்து வந்த காற்று நல்ல சுகந்தத்தை வீசிச் சென்றது…

கூண்டுக்குள் இருந்த குருவிகளின் சத்தமும் அழகுக்காகத் தொங்க விடப்பட்ட மணிகளின் சத்தமும் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது…

அந்த இனிமையான ஓசைகளினால் கூட ஆதித்யனை எட்ட முடியவில்லை…

அந்த அளவிற்கு அவனது அனைத்துப் புலன்களும் வேலைநிறுத்தம் செய்தது போல இருந்தது…

அவனது விழிகளைத் தவிர…

ஆனால் காயத்ரியிடம் அதிர்ச்சி ஏற்பட்டாலும் ஆதித்யன் அளவிற்கு அவளிடம் பாதிப்பு இருக்கவில்லை...

அந்த அதிர்ச்சியைக் கூட ஆதித்யன் ஸ்தம்பித்து நின்றிருந்த நேரத்தில் மறைத்துக் கொண்டாள்…

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததும் திகைத்து நின்றதைச் சூரியனும் கஸ்தூரியும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள்…

இருவரும் எதையாவது வாயைத் திறந்து பேசுவார்களா என்பது போல உள்ளிருந்த இருவரும் காத்திருக்க, வெளியில் நின்ற இருவரும் வாய்ப் பேச்சு எதற்கு கண் பேசும் வார்த்தைகள் போதாதா என்பது போல நின்றிருந்தார்கள்…

எவ்வளவு நேரம் அப்படியே நின்றானென்று ஆதித்யனுக்கே தெரியவில்லை…

முதலில் தன்னைச் சுதாரித்துக் கொண்ட காயத்ரி தலையைக் கவிழ்த்துத் தரையைப் பார்த்தாள்…

அவளிடம் அசைவைக் கண்டவன் தலையை அழுந்தக் கோதி விட்டபடி பார்வையைத் திருப்பிக் கொண்டான்…

அவன் பார்வையைத் திருப்பியதை அறிந்தவள் மீண்டும் அவனை நோக்கினாள்…

மீண்டும் ஏதோ உந்துதலில் காயத்ரியைப் பார்த்தவனின் கவனத்தை அப்போது தான் அவள் அணிந்திருந்த வெண்ணிறச் சேலை திசை திருப்பியது…

கண்களில் ஒரு விடை அறியும் பாவனையுடன் பார்த்தவனின் பார்வை திலகம் அற்ற அவளது வெற்று நெற்றியில் நிலைத்து நின்றது…

அவனது கூரிய பார்வையைத் தாங்கிக் கொள்ள முடியாதவளாகி மீண்டும் விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள் காயத்ரி…

வெற்று நெற்றியில் நின்ற பார்வை கீழிறங்கி மேடிட்டிருந்த அவளது வயிற்றில் தேங்கி நின்றது…

அந்த நொடி அவன் எப்படி உணர்ந்தான் என்பது அவனுக்கே தெரியவில்லை...

அவளது அந்தத் தோற்றம் அவளேதும் கூறாமலேயே அவனுக்கு அவள் நிலையை உணர்த்தியது…

ஆனாலும் அவளது குரலையாவது கேட்டு விட வேண்டும் என நினைத்தவன்

“எப்படி இருக்கிறாய்”
என்றான் அழுத்தத்தைக் குரலில் கொண்டு வர முயன்று…

ஆனாலும் அவனையும் அறியாமல் அவனது குரல் லேசாக உடைந்தது…

அதை உணர்ந்தவளுக்கு வார்த்தை வெளி வர மறுத்தது…

“இருக்கிறேன்”
என்றாள் மெல்லிய குரலில்...

“அது தெரிகிறது… நிம்மதியாக இருக்கிறாயா? என்று கேட்டேன்” என்றான் அதே அழுத்தமான குரலில்…

அவனது குரல் கூட அவளைப் பாதிக்கவில்லை…
ஆனால் அவன் கேட்ட கேள்வி அவளைப் பாதித்தது போலும்…

ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் மௌனம் சாதித்தபடியே நின்றிருந்தாள்…

“என் விஷயத்திலும் நான் கேட்கும் கேள்விகளிலும் நீ மௌனமாகத் தான் இருப்பாயா?”
என்றான் ஒரு இயலாமையுடன்…

இந்தக் கேள்வியில் நொடியில் உடைந்து போனவள்…

“நிம்மதியாக இருப்பதா? உங்கள் நிம்மதியைக் குழி தோண்டிப் புதைத்த எனக்கு எப்படிக் கிடைக்கும் நிம்மதி”
என்று மனதினுள் நினைத்தாளே தவிர வெளியே அமைதியாக நின்றிருந்தாள்…

அவள் ஏதும் சொல்லப் போவதில்லை என்பதைப் புரிந்து கொண்டவன்…

“எப்போதுமே நான் இவளுக்கு வேண்டப் பட்டவனாகத் தெரியவேயில்லை போலும்... இவள் வாழ்வில் இன்னொருவன் வருவதற்கு முன்னரே என்னைத் திரும்பியும் பார்க்காதவள்... இப்போதா திரும்பிப் பார்க்கப் போகிறாள்”
என நினைத்துக் கொண்டவன் அதன் பின்னரே பல்லவியைப் பார்த்தான்…

அவள் கையில் வைத்திருந்த பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்…

அவளருகில் சென்றவன் மெதுவாக அவளது தலையைக் கோதி விட்டு, காயத்ரியைப் பார்த்தான்…

அவளும் இருவரையும் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்…

“பல்லவி இங்கே இருப்பாள் என்று நினைத்து நான் இங்கு வரவில்லை… ஆனாலும் இனிமேல் இவளைத் தனியாக விடும் எண்ணமில்லை எனக்கு...“
என்றாள் அவனுக்குச் சொல்லுவது போல…

அவள் சொல்வதைக் கேட்டதும் கண்களை இறுக மூடித் திறந்து கொண்டான்…

“எது எப்படியோ… இனிமேல் பல்லவி பற்றிய கவலை எனக்குத் தேவையில்லை என்று நினைக்கிறேன்”
என்றான் ஒரு அர்த்தமான பார்வையுடன்…


அதே நேரத்தில் பக்கத்து அறையில் இருந்து வெளியே வந்தார்கள் சூரியனும் கஸ்தூரியும்…

ஏதேச்சையாக இந்தப் பக்கம் பார்த்தவன் அப்போது தான் கஸ்தூரியைப் பார்த்தான்…

கஸ்தூரியும் ஆதித்யனைப் பார்த்துப் புன்னகைத்தபடி தான் வந்து கொண்டிருந்தாள்…

அவளது புன்னகை முகத்தைப் பார்த்துப் பதிலுக்குப் புன்னகைத்தவன் அப்போது தான் அவளும் வெண்ணிறச் சேலையில் இருப்பதைக் கவனித்தான்…

அருகே வந்தவள்
“எப்படி இருக்கிறீர்கள்"
என்றாள் உண்மையான அக்கறையுடன்…

அவளது கேள்வியைக் கவனியாமல் அப்படியே நின்றிருந்தவனைச் சூரியன் தான் தொட்டு அசைத்தான்…

நொடியில் சுதாரித்துக் கொண்டு “பரவாயில்லை”
என்றான் ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக…

அதிக நேரம் அங்கே நிற்க முடியாதவளாகி
“நாங்கள் உள்ளே போகிறோம்”
என்றவாறு காயத்ரி பல்லவியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்…

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்…

கஸ்தூரியும் விடைபெற்றுப் போன பின்னர்…

அப்படியே நின்றிருந்த அண்ணனின் அருகில் வந்தான் சூரியன்…

“அண்ணா… மாடிக்குப் போய்ப் பேசலாமா”

“ம்ம்…”
என்றவாறு வீடு நோக்கி நடந்தான் ஆதித்யன்…

அவனைப் பின் தொடர்ந்தான் சூரியன்…

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

அறைக்குள் வந்த காயத்ரி சாளரத்தின் அருகே போடப் பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து தொடுவானத்தை வெறித்த படி அமர்ந்து இருந்தாள்…

அவளோடு வந்த பல்லவி அவளது மடியில் தலை சாய்த்துக் கீழே அமர்ந்து கொண்டாள்…

இவர்களைத் தொடர்ந்து வந்த கஸ்தூரி, காயத்ரியின் தனிமையை உடைக்காமல் படுக்கையில் அமர்ந்து கொண்டு யோசனையில் ஆழ்ந்து போனாள்…

“என் வாழ்வு எதை நோக்கிப் பயணிக்கிறது… நான் ஏன் மீண்டும் அவரைப் பார்க்க வேண்டும்…

அவரைப் பார்த்ததும் தாமரைத் தடாகத்தைக் கண்டதும் அன்னப் பறவை தாவி ஓடுவதைப் போல என் மனம் ஏன் தாவ வேண்டும்...

நான் தான் வேறு ஒருவரின் மனைவி ஆகி விட்டேனே அது மட்டுமா ஒரு குழந்தைக்கும் தாயாகப் போகிறேனே...

கணவனை இழந்த விதவை என்று என்னை விலக்கிய இந்த சமுதாயத்தில் எனக்கு என்று என்ன நிலை இருக்கிறது

அப்படி இருக்கையில் அவரைப் பார்த்ததும் என் மனம் துள்ளுவது சரிதானா?

அவருக்கும் திருமணம் ஆகி இருக்குமே…
அவர் மனைவி நம் அனுவாகக் கூட இருக்கலாம்…

ஆனால் அனுவுக்கு இந்த நிலை வர இவர் தான் காரணமோ?

புத்தி சுவாதீனம் இல்லாத மனைவியை அருகே வைத்துக் கொண்டு அவர் என்னை இப்படிப் பார்ப்பது சரியல்ல

இது சரியல்ல இனிமேல் என் மனதை நான் தான் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்

அப்படி முடியவில்லை என்றால் இங்கிருந்து தொலைவாகப் போய் விட வேண்டும்… ஆனால் பல்லவியும் கஸ்தூரியும்…

என் கஸ்தூரிக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும்... "

எனக் காயத்ரியின் மனமெங்கும் குழப்பம் எனும் மேகம் சூழ்ந்து கொண்டது…

காயத்ரியின் எண்ணப் போக்கு இப்படி இருக்க, கஸ்தூரியின் எண்ணமும் இதைத் தழுவியே கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது…


“அக்காவை நேசித்தவரை இவ்வளவு சீக்கிரம் திரும்பப் பார்ப்போம் என நான் நினைக்கவில்லையே...

அக்கா கணவரை இழந்து தன் வயிற்றில் ஒரு குழந்தையைச் சுமக்கிறாள் அவளை அவர் ஏற்றுக் கொள்ளுவாரா...

அவரது பார்வையில் அந்தப் பழைய நேசத்தை நான் பார்த்தேனே...

ஆனால் அவருக்குத் திருமணம் ஆகி இருக்குமே… இந்த அனு அக்கா இங்கே இருப்பதைப் பார்த்தால் இவள் தான் அவரின் மனைவி என்று நினைக்கிறேன்...

நிச்சயமாக அனு அக்கா தான் அவரின் மனைவியாக இருக்க வேண்டும்… ஆனால் அனு அக்கா புத்தி சுவாதீனமற்று இருக்கிறாளே...

மூவரின் வாழ்க்கையிலும் எப்போது வசந்தம் வீசுமோ..."

என எண்ணிக் கொண்டு இருந்தாள்…
இத்தனைக்கும் அவள் தன் வாழ்வு பற்றிச் சிந்திக்கவில்லை...

காயத்ரியும் கஸ்தூரியும் அவ்விதம் தான் கஸ்தூரி காயத்ரிக்காகவும் காயத்ரி கஸ்தூரிக்காகவும் தான் சிந்திப்பார்கள்…
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மாடியில் நின்று தொடுவானை வெறித்த ஆதித்யனின் எண்ணங்களிலும் காயத்ரி தான் வியாபித்திருந்தாள்…

“எங்கே இருந்தாலும் அவள் சந்தோஷமாக இருந்தால் போதுமென நினைத்திருந்தேனே...

ஆனால் இவளை மறுமுறை பார்க்கும் போது இப்படித் தானா பார்க்க வேண்டும்...

அவளது வாழ்க்கை இப்படி மலரும் முன்பே கருகிப் போனதை நான் பார்க்காமல் இருந்திருந்தாலாவது, எங்கோ சந்தோஷமாக இருக்கிறாள் என்ற நிம்மதியாவது இருந்திருக்குமே...

ஆனால் அவள் விழிகளில் ஏதோ ஒரு மாற்றத்தைப் பார்த்தேனே... அப்படியானால் அது என் பிரமையோ...

பிரமையாகத் தான் இருக்கும்... அவளாவது என் மீது அன்பு வைத்திருப்பதாவது...

ஒருத்திக்கு மட்டும் தான் இப்படி என்று பார்த்தால், இன்னொருத்தியின் வாழ்வும் இப்படியா மாறிப் போக வேண்டும்…

சூரியாவின் தோழி… இவர்கள் ஏதோ இக்கட்டில் இருப்பதாகச் சொன்னாளே…

எது எப்படியோ என் இடத்திற்கு வந்த பிறகு அவர்கள் என் பொறுப்பு..."

எனத் தனக்குள் உறுதி செய்து கொண்டான் ஆதித்யன்…

அண்ணனின் சிந்தனையில் குறுக்கிடாமல் கைகளைக் கட்டியவாறு நின்றிருந்தான் சூரிய வர்மன்…

அண்ணனது சிந்தனைப் போக்கு எதுவாக இருக்கும் என்பதை அறியாதவன் அல்லவே சூரியன்…

எப்போதோ ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்த உள்ளங்கள் இன்று ஒரு புள்ளியில் இணைந்தன…

இது நீடித்து நல்ல முடிவைக் கொடுக்குமா இல்லையா? என்பதைக் காலம் தான் பதில் சொல்லும்…
😌😌😌

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“நெடுங்காலமாய்ப் புழங்காமலே
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே
உனைப் பார்த்ததும் உயிர் தூண்டவே
உதடுகள் தாண்டித் தெறிக்கின்றதே
தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக
நீ அன்பாய்ப் பார்க்கும் பார்வையிலே
என் ஜீவன் வாழுதடி”
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 9

IMG-20210701-WA0016~2.jpg

8aa3a170a5996eb04eb8388d291a4d6f~3.jpg

IMG-20210627-WA0055.jpg

Screen-Shot-2018-01-08-at-5.40.36-PM~2.jpg

IMG-20210627-WA0050.jpg

IMG-20210627-WA0053.jpg

பௌர்ணமிக்கு ஒரு தினம் இருந்ததால் வெண்ணிலவு தாராளமாக ஒளி வெள்ளத்தைப் பாய விட்டுக் கொண்டிருந்தது…

பால்நிலவின் பால் போன்ற ஒளியைத் தோட்டமும் தாராளமாக இரவல் வாங்கிப் பிரகாசித்துக் கொண்டிருந்தது…

இராத்திரி நேரமாகையால் ஒரு விதக் குளுமை எங்கும் வியாபித்திருந்தது…

நிலவை அடிக்கடி மறைக்க முயற்சி செய்திருந்த மேகங்களையும் அவை கலைந்து போவதையும் பார்த்துக் கொண்டிருந்தாள் காயத்ரி தேவி…

எண்ணங்கள் எங்கெங்கோ சுற்றிச் சுழன்றடித்துக் கொண்டிருந்தன…

உள்ளே கஸ்தூரியும் பல்லவியும் அமர்ந்து பொம்மை ஒன்றிற்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள்…

அந்த நேரத்தில் அறையில் இருந்த தொலைபேசி மணி தன் மெல்லிய குரலில் சத்தம் போட்டது…

ஒரு தடவை முழுமையாக அடித்து ஓயும் வரை யாரும் அதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை…

இரண்டாம் முறையும் தொலைபேசி சத்தம் போடும் போதுதான் கஸ்தூரி லேசாகத் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்…

அப்போது தான் தொலைபேசி மணியின் சத்தத்தை உணர்ந்தாள்…

பார்வையில் காயத்ரி எங்கே எனத் தேடியவளுக்கு, வெளியே சுவரில் சாய்ந்தபடி இருந்த காயத்ரி கண்ணுக்குத் தெரிந்தாள்…

அவள் இப்போதைக்கு எழுந்து கொள்ளப் போவதில்லை என்பதைப் புரிந்து கொண்டவள் எழுந்து சென்று தொலைபேசியை எடுத்தாள்…

எதிர் முனையில் சொல்லப் பட்டதைக் கேட்டவள்…

கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லி விட்டுப் பின்வாசல் வழியே மெதுவாகத் தோட்டத்தில் இறங்கி நடந்தாள்…

பல்லவி பொம்மையிலும், காயத்ரி நிலவிலும் லயித்து விட்டதால் இப்போதைக்கு அவளைத் தேட மாட்டார்கள்…

தோட்டத்தின் நடுவே சிறிய அளவில் தாமரைத் தடாகம் ஒன்று அமைக்கப் பட்டிருந்தது…

தடாகத்துக்கு அருகே பந்தல் போட்டு மல்லிகைக் கொடியும், முல்லைக் கொடியும் படர விடப் பட்டு இருந்தது…

நறுமண மலர்கள் தண்ணீரில் நிறைய நிறையக் கொட்டிக் கிடந்தன…

வாசம் எங்கும் பரவி நாசிக்கு இதம் சேர்த்துக் கொண்டிருந்தது…

பால்நிலவின் வெளிச்சத்தில் இலக்கியங்களில் வரும் தாமரைத் தடாகம் போல அத்தனை அழகாக இருந்தது அந்தத் தடாகம்…

அதற்கு அருகே மூன்று பிரம்பு நாற்காலிகள் போடப் பட்டிருந்தன…

ஒன்றில் ஆதித்யனும் மற்றொன்றில் சூரியனும் அமர்ந்து இருந்தார்கள்…

அவர்கள் இருவரும் கஸ்தூரியின் வருகைக்காகக் காத்திருப்பது தெரிந்தது…

ஆதித்யன் எதற்கு அழைத்திருப்பான் என்பது பற்றிச் சிந்தித்தவாறே வந்து சேர்ந்தாள் கஸ்தூரி…

வந்தவளை மூன்றாவதாக இருந்த பிரம்பு நாற்காலியில் அமரச் சொன்னான் ஆதித்யன்…

“பரவாயில்லை… நான் நிற்கிறேன்”

“உன்னிடம் நிறையக் கேட்க வேண்டும்… இப்படியே எவ்வளவு நேரம் நிற்பதாக உத்தேசம்”
என்று ஆதித்யன் சொன்னதைக் கேட்டவள், மெதுவாக அமர்ந்து கொண்டு தரையைப் பார்த்தாள்…

சிறிது நேரம் காற்றின் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க, மூவரும் மௌனித்து இருந்தார்கள்…

அந்தக் கனத்த மௌனத்தைச் சூரிய வர்மன் உடைத்தெறிந்தான்…

“அண்ணா… நான் வேண்டுமானால் போகட்டுமா…?”
என்று தமையனைப் பார்த்துக் கேட்டான்…

ஏதோ யோசனையில் மூழ்கி இருந்தவன் அப்போது தான் தம்பியை நிமிர்ந்து பார்த்தான்…

லேசாக அவனை முறைத்தபடி
“போவதற்காகவா வரச் சொன்னேன்”
என்றான்...

“அதில்லை அண்ணா”

“ஒன்றும் பேசாமல் இங்கேயே இரு”
என்றவன் கஸ்தூரியை நிமிர்ந்து பார்த்தான்…

“நான் உன்னிடம் இருந்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்… ஆனால் அதை எப்படி…”
எனச் சிறிது நேரம் பேசாமல் இருந்தான் ஆதித்யன்…

அவன் எதைப் பற்றிக் கேட்க விளைகிறான் என்பதைப் புரிந்து கொண்டவள்…

“அக்காவுக்குத் திருமணம் நடந்தது மட்டும் தான் உங்களுக்குத் தெரியும்…”
எனத் தன் வாய்ப்பூட்டை உடைத்தாள்…

“அக்காவுக்குத் திருமணம் நடந்து, ஐந்து மாதத்திற்குப் பிறகு எனக்குத் திருமணம் நடந்தது…

அக்காவின் கணவரின், தம்பியைத் தான் எனக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்...

நான் செய்த பாவமோ தெரியவில்லை தாலி கட்டி வீட்டுக்குப் போகும் பாதையில் எங்கள் வாகனம் பெரிய விபத்தில் சிக்கி விட்டது...

அதே இடத்திலேயே அக்கா கணவரும் அவர் தம்பியும் இறந்து விட்டார்கள்…

மற்றவர்கள் வாயில் விழுந்து அரைபடவோ என்னவோ எனக்கு ஒன்றும் ஆகவில்லை…

அக்கா வேறு வாகனத்தில் வந்ததால் அவளுக்கும் ஒன்றுமில்லை...

அக்காவின் கணவர் இறந்து மூன்று தினங்களிற்குப் பிறகே அவள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது…

அதற்குப் பிறகு நடந்தது எல்லாமே நரக வேதனை தான்…

நித்தமும் அடிமை வாழ்க்கை தான்… உடல் வலியை விட மன வலி தான் அதிகம்...

இந்த இரண்டு கிழமைகளாக ரொம்ப மனவலி…

ஏஞ்சலினா அக்கா தான் ஏதாவது வேலை வாங்கித் தருவதாகச் சொன்னார்கள்… அந்தத் தைரியத்தில் தான் வீட்டை விட்டு வந்து விட்டோம்... "
எனச் சுருக்கமாகச் சொல்லி முடித்தாள்…

அவள் சொன்னதையெல்லாம் இருவரும் குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்தனர்…

தரையைப் பார்த்திருந்த அவள் விழிகள் கலங்கியதோ என்கின்ற சந்தேகம் சூரியனுக்கு…

லேசாக நிமிர்ந்தவளின் விழியில் சிறிதளவு கலக்கம் கூட இருக்கவில்லை…

அதைப் பார்த்த சூரியனுக்கு லேசான வியப்பு…

ஒரு துளி கூடக் கலங்காமல் இவளால் எப்படி இப்படிப் பேச முடிகிறது என அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்…

கஸ்தூரியோ வந்த வேலை முடிந்தது போல எழுந்து நின்றபடி
“அப்படியானால் நான் செல்லட்டுமா?”
என்றாள்…

பதிலுக்குத் தலையாட்டி வைத்தான் ஆதித்யன்…

கஸ்தூரி சென்று நெடு நேரமாகியும் அமைதியாக இருந்த அண்ணனின் முகத்தைப் பார்த்து எதையும் கணிக்க முடியவில்லை சூரியனால்…

“அண்ணா… போகலாமா?”

“நீ போ சூரியா”

“நீங்கள் வரவில்லையா?”

“நான் சிறிது நேரம் கழித்து வருகிறேன்”

தமையனின் சொல்லை மதித்து, மனமே இல்லாமல் உள்ளே சென்று விட்டான் சூரியன்…

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

ஒரு கிழமை யாருக்கும் காத்திருக்காமல் ஓடி மறைந்தது…

அந்த ஏழு தினங்களும் பெரும் பாடு பட்டு ஆதித்யனின் கண்களில் படாமல் இருந்து விட்டாள் காயத்ரி…

அவன் பல்லவியைப் பார்க்க வரும் போது, கஸ்தூரியை உடன் இருக்கச் செய்து தான் நழுவிக் கொள்ளுவாள்…

அவன் வீட்டு மாடியில் நிற்பதைப் பார்த்தால் அறை வாசம் இருந்து கொள்வாள்…

ஆதித்யன் நினைத்தால், அவளை அதிரடியாகப் பார்க்க முடியும்…

ஆனால் அவன் அப்படிச் செய்யவும் மாட்டான்…

அவள் ஒதுங்கிப் போவதைப் பேசாமல் பார்த்திருந்தான்…

ஓரு வருடமாக அவளைப் பார்க்காமல் இருந்தவன் தானே…

அப்போது அவள் வேறொருவனின் மனைவி...

ஆனால் இப்போது அப்படி இல்லையே என்று அவன் மனம் அடிக்கடி அவனோடு சண்டை போட்டது…

இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முடிவெடுத்தான்…

அந்த முடிவைச் செயல் படுத்தவும் காத்திருந்தான்…

ஆதித்யன் அமைதியாக இருந்தது… காயத்ரிக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தாலும்… கொஞ்சம் ஏக்கமாகவும் இருந்தது…

அவருக்குத் தானே நான் இறந்தகாலமாகி விட்டேன்...

நான் வேறொருவரின் மனைவி பிறகு எதற்கு இந்த ஏக்கம் எனத் தனக்குள் தன்னையே திட்டிக் கொள்ளுவாள்…

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

ஒரு தினம் பல்லவியைப் பார்ப்பதற்கு ஆதித்யனின் நண்பனும் மன நல வைத்தியனுமான சரண் குமார் வந்திருந்தான்…

அப்போதும் பல்லவி அருகில் காயத்ரி இருக்கவில்லை…

கஸ்தூரி தான் அமர்ந்து இருந்தாள்…

பல்லவியைப் பரிசோதித்துப் பார்த்த சரண்…

“ஆதி… ரொம்ப முன்னேற்றம் தெரிகிறது… என்னால் இதை நம்பவே முடியவில்லை…”
எனச் சந்தோஷமான செய்தி சொன்னான்…

சரண் சொன்னதைக் கேட்ட ஆதியின் முகம் பிரகாசிக்கவே,
நண்பனை இறுகக் கட்டிக் கொண்டு…
“ரொம்ப நன்றிடா சரண்…”
என்றான் சந்தோஷமாக…

“எனக்கு எதுக்கு ஆதி நன்றி எல்லாம்”
என்றான் சிறு முறைப்புடன்…

இருவருக்கும் இடையே புகுந்த சூரியன்
“சரி சரி விடுங்கள் எல்லாம் நல்லதே நடக்கும்... சரண் அண்ணா… பல்லவியை நன்றாகப் பார்த்துக் கொள்ள இருவர் இருக்கிறார்கள் “
என்றான் சரணையே பார்த்தபடி...

“யார் அந்த இருவர்”
என்றவாறு கஸ்தூரியைத் திரும்பிப் பார்த்த, சரண் லேசாகப் புருவங்களை உயர்த்தியபடி
“இது…”
என இழுத்தான்…

அப்போது எல்லோரும் போய் விட்டார்கள் என நினைத்தபடி உள்ளே வந்தாள் காயத்ரி…

அவளைப் பார்த்த சரண் திகைத்து நின்றான்…

சரணைப் பார்த்த காயத்ரி திகைக்கவில்லை...

அவன் ஆதித்யனின் நண்பன் என்பது அவளுக்குத் தெரியும் தானே…

தனது திகைப்பை மாற்றி முகத்தில் புன்னகையைக் கொண்டு வந்த சரண் காயத்ரியை நோக்கி வணக்கம் தெரிவித்தான்…

அவனது வணக்கத்தைச் சிறு புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாள் காயத்ரி…

காயத்ரியையும் ஆதித்யனையும் ஒரு முறை பார்த்த சரணுக்கு மனதினுள் ஏதோ ஒரு இனம்புரியாத நிம்மதி உருவாயிற்று…

இனியேனும் தன் தோழன் நன்றாக வாழ வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொண்டான்…

அதன் பின்னர் விடைபெற்று வெளியே செல்லத் திரும்பினான் சரண்…

அந்த நேரத்தில் கோபமாக வந்து வழிமறித்தபடி நின்றாள் பல்லவி…

அவளைப் பார்த்ததும் லேசாகத் தனது தலையைத் தட்டியவன் தன் சட்டைப் பையில் இருந்த இனிப்பை எடுத்து அவளது கைகளில் வைத்தான்…

அதைப் பார்த்தவள் துள்ளிக் குதித்தபடி அவனது கைகளைப் பிடித்துக் குலுக்கி விட்டுச் சிரித்தாள்...

அவளது தலையை லேசாகக் கோதிய சரண்
“சரி ஆதி எனக்கு நேரமாகிறது நான் பிறகு வருகிறேன்”
என்றவாறு விடைபெற்றுப் போய் விட்டான்…

அவன் சென்றதும் ஆதித்யன் காயத்ரியைப் பார்த்தான் அவளோ பல்லவியையே பார்த்துக் கொண்டிருந்தாள்…

அவள் வேண்டுமென்று தான் அப்படிச் செய்கிறாள் என்பதை அறியாதவன் அல்லவே ஆதித்யன்…

மெல்லிய புன்னகையுடன் வெளியே சென்று விட்டான்…

சூரியனும் அண்ணனோடு இணைந்து கொண்டான்…

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

இரண்டு தினங்கள் கடந்த நிலையில் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்த காயத்ரி மயங்கிக் கீழே சாய்ந்திருந்தாள்…

நல்ல வேளை எப்போதும் அவளையே கண்காணித்துக் கொண்டிருக்கும் ஆதித்யன் வீட்டில் இருந்ததால், பதறியபடி அவளிடம் ஓடிச் சென்றான்…

அப்போது தான் வீட்டுக்குள் வந்திருந்த சூரியனும் பதற்றத்துடன் ஓடி வந்தான்…

வந்த வேகத்தில் ஆதித்யன் காயத்ரியை இரு கரங்களில் ஏந்தி அறையில் படுக்க வைத்து விட்டு வைத்தியருக்கு அழைத்திருந்தான்…

அவனது குரலின் தவிப்பை உணர்ந்த வைத்தியரும் விரைந்து வந்தார்…

வந்தவர் காயத்ரியைச் சோதித்து விட்டு,
“ரொம்பவே பலவீனமாக இருப்பதால் தான் இந்த மயக்கம் சரியான கவனிப்பு வேண்டும்”
என்றார்...

“தனிமையில் விடாமல் கலகலப்பாக வைத்திருக்க வேண்டும்… நீ கூடவே இரு ஆதி”
என்றார் ஒரு நண்பராக…

இதைக் கேட்டுக் கொண்டிருந்த சூரியனுக்குக் கோபம் வந்து விட்டது…

அவன் கோபமாகக் கஸ்தூரியிடம் திரும்பினான்…

“அப்படி என்ன வேலை உனக்கு… இவ்வளவு தூரம் பலவீனமாகப் போகும் அளவிற்கு நீ என்ன செய்து கொண்டிருந்தாய்…? உன் அக்கா மீது அக்கறை கொஞ்சம் கூட உனக்கு இல்லையா?”
என்றான் வார்த்தைகளைக் கடித்துத் துப்பியபடி…

அவனது திடீர்க் கோபத்தில் மருண்டு விழித்தாள் கஸ்தூரி…

அவளது மருண்ட பார்வையைப் பார்த்தவன் ஒரு நொடி அமைதியாகி வேகமாக வெளியே சென்று விட்டான்…

அப்போது தான் சூரியனின் கோபத்தை உணர்ந்து ஆதியும் திரும்பிப் பார்த்தான்…

அதற்குள் சூரியா வெளியே சென்று விட்டிருந்தான்…

கஸ்தூரியின் கலங்கிய விழிகளைப் பார்த்த ஆதித்யன்
“அவன் பேசியதைக் கண்டு கொள்ளாதே… இதில் உன் தப்பு எதுவும் இல்லை…“
என்றான் அவளுக்குச் சமாதானமாக…

அவனது பதிலில் லேசாகப் புன்னகைத்த கஸ்தூரி தமக்கையின் அருகில் சென்றாள்…

“சிறிது நேரம் தூங்கட்டும்”
என்றார் வைத்தியர்…

காயத்ரியைத் தூங்க விட்டு அனைவரும் வெளியே வந்தார்கள்…

பல்லவி மட்டும் காயத்ரி அருகேயே தானும் படுத்துக் கொண்டு விட்டாள்…

எத்தனை நேரம் காயத்ரி தூங்கி இருப்பாளோ தெரியவில்லை…

அவள் எழுந்த நேரம் அவளருகில் ஆதித்யன் அமர்ந்திருந்தான்…

அவன் முகம் லேசாக இறுகி இருந்தது…

“உடம்பு பலவீனம் ஆகும் வரை நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?”
என்றான் அழுத்தமாக…

அவளோ கீழே பார்த்தபடி மௌனமாக இருந்தாள்…

அவள் வாயைத் திறக்கப் போவதில்லை என்பதை அறிந்தவன்…

கோபமாக வெளியே சென்று விட்டான்…

அவனது கோபம் அவளைப் பெரிதும் பாதித்தது…

அவன் சென்ற சிறிது நேரத்திலேயே பழச்சாறு கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான் அந்த வீட்டில் இருக்கும் சிறுவன் கணேசன்…

பழச்சாறைக் கொடுத்தவன் போகாமல் நிற்பதைப் பார்த்தவள்
“என்ன கணேசா…”
என்றாள் கேள்வியாக…

“அக்கா பழச்சாறு முழுவதையும் நீங்கள் குடித்த பின்னரே என்னை அண்ணா வரச் சொன்னார்…”
என்றான் அவனும் பதிலுக்கு…

அவன் சொன்னதைக் கேட்டதும் கோபமாகப் போனவன் அப்போதும் அவளைப் பற்றி நினைத்து இருக்கிறானே என்று அவள் மனம் லேசாகத் துடித்தது…

அருகே இருந்த வானொலியை ஒலிக்க விட்டாள் காயத்ரி...

அது அவளது மனதைப் பிரதிபலிப்பது போலப் பாடல் வரிகளைத் தவழ விட்டது...

வைர முத்துவின் வைர வரிகளில் இசைப்புயலின் இன்னிசையில் சுவர்ணலதாவின் சுவர்ணக் குரல் காது வழி புகுந்து மனதை ஏதோ செய்தது...

"எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்..."

இந்த இரண்டு உள்ளங்களும் ஒன்று சேருமா ? இல்லையா? காலம் தான் பதில் சொல்லும்...


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி

உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரி பாதி

கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்

இன்னிசை மட்டும் இல்லை என்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்"
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 10

4dcc74191b9ae099319ce366d0e722c6~2.jpg

IMG-20210701-WA0020~2.jpg

IMG-20210701-WA0034~2.jpg

f91fa8f24708c140649ef0281cf0c4aa~3.jpg

383265e8b68492e9a385129ab7f20a85~2.jpg


இரண்டு கிழமைகள் ஓடி மறைந்த பின்னர்...

ஆடிமாதக் காற்றின் வேகத்தில் தென்னை மரங்களின் ஓலைகள் நர்த்தனம் ஆடிக் கொண்டிருப்பதைப் போல இருந்தது…

தென்னை மரங்களுக்குப் போட்டியாக மற்றத் திசையில் பனை மரங்களும் இணைந்து கொண்டன…

தொலைவில் ஏராளமான வீடுகளில் தெரிந்த மின் விளக்குகளுக்கு எல்லாம் நடுநாயகமாகக் கோவிலின் கோபுரத்து உச்சியின் மின் விளக்கு ஜொலித்துக் கொண்டிருந்தது…

அதையெல்லாம் பார்த்துக் கொண்டு வெளியே நின்றிருந்தாள் காயத்ரி…

கண்ணில் தென்பட்ட இயற்கை அழகுகள் அவள் மனதைத் தொட்டதாகத் தெரியவில்லை…

ஏனெனில் அவள் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தாள்…

இரண்டு தினங்களுக்கு முன்னால் ஒரு விஷேசத்துக்கான அழைப்புடன் சரண்குமார் வந்திருந்தான்…

அது சரணின் தங்கை சரண்யாவின் திருமணத்திற்கான அழைப்பு…

ஆதித்யனுக்கும் சூரியனுக்கும் அழைப்பிதழைக் கொடுத்தவன்…

அதற்கு முன்னரே பல்லவியை அழைத்து வாருங்கள் என்று சொன்னான்…

பின்னர் காயத்ரி மற்றும் கஸ்தூரிக்கும் அழைப்பிதழைக் கொடுத்தான்…

அதுமட்டுமின்றி இருவரையும் அழைத்துக் கொண்டு தான் ஆதித்யன் திருமண வீட்டிற்கு வர வேண்டும் என்ற அன்புக் கட்டளையும் போட்டு விட்டே சென்றான்…

அவன் இலகுவாகச் சொல்லிவிட்டுச் சென்று விட்டான்…

ஆனால் காயத்ரிக்குத் தான் என்ன செய்வது, எப்படி அங்கே செல்வதைத் தவிர்ப்பது என்ற சிந்தனை…

அதைப் பற்றித் தான் யோசனை செய்து கொண்டிருந்தாள்…

விடிந்தால் திருமணத்திற்குச் செல்ல வேண்டும்…

சும்மாவே ஆதித்யன் அழுத்தக்காரன், இதில் சரண் வேறு இவர்களை அழைத்துக் கொண்டு தான் வர வேண்டும் என்று விட்டான்…

இனிமேல் தப்பிக்கவே முடியாது திருமணத்திற்கு அவளை அழைத்துக் கொண்டு தான் போவான்…

அதற்கு ஏற்றாற் போலச் சாயந்திரம் அவனுடனான அவளது சம்பாஷணை நினைவுக்கு வந்தது…

ஆதித்யன் பல்லவியைப் பார்க்க வந்திருந்த நேரம் அவனுக்கு முன்னால் போய் நின்றாள் காயத்ரி…

அவளைப் பார்த்ததும் எப்போதும் ஓடி மறைபவள் இன்று நேரில் நிற்பதனைப் பார்த்ததும் என்னவென்பதைப் போலப் புருவங்களை உயர்த்தினான் ஆதித்யன்…

“நாங்கள் இந்தத் திருமணத்திற்கு வரவில்லை…”

“நாங்கள்… என்றால் யார் யார்?”

“நானும் கஸ்தூரியும்”

“நீ வரவில்லை சரி கஸ்தூரியை ஏன் வர விடாமல் தடை செய்கிறாய்”

“நான் ஒன்றும் தடை செய்யவில்லை”

“அப்புறம்”

“அவளுக்கும் வர விருப்பம் இல்லை”

“அப்படி என்று உன்னிடம் சொன்னாளா?

“இல்லை… ஆனாலும்…”

“இதோ பார் நீங்கள் வருவதும் வராததும் உங்கள் இஷ்டம்”

இந்தப் பதிலைக் கேட்டதும் காயத்ரிக்கு அப்பாடி என்பதைப் போல இருந்தது…

அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனோ
“ஆனால் ஒன்று…”
என்றான் வழமையான அழுத்தக் குரலில்...

அவன் என்ன சொல்லப் போகிறானோ என்பது போலப் பார்த்திருந்தாள் காயத்ரி…

சற்றே தள்ளி நின்றவன் அவளை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைத்து,
“நீ வந்தால் மட்டுமே நானும் திருமணத்திற்குச் செல்வதைப் பற்றி யோசிப்பேன்”
என்று சொல்லி விட்டு அவளது பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் வெளியே சென்று விட்டான்…

அவன் சென்றதில் இருந்து கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக வெளியே அமர்ந்து என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறாள் காயத்ரி…

கஸ்தூரியோ அக்கா என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப் படுவேன் என்கிற ரகம்…

அதனால் அந்தக் கவலை கஸ்தூரிக்கு அவ்வளவாக இல்லை...

ஆனாலும் அக்கா யோசித்துக் கொண்டிருக்கிறாளே என அவளருகில் வந்து அமர்ந்து கொண்டாள்…

“அக்கா”

“ம்ம்”

“என்ன செய்யப் போகிறோம்”

“நீயே சொல்லி விடு?”

“நீங்கள் வந்தால் நானும் வருகிறேன்”

“இதென்னடி பதில்”

“அதெல்லாம் எனக்குத் தெரியாதக்கா”
என்றபடி சலுகையுடன் அவள் மீது சாய்ந்து கொண்டாள்…

தோள் மீது சாய்ந்தவளை லேசாக அணைத்துக் கொண்டவள் கண்களை லேசாக மூடிக் கொண்டாள்…

தோட்டத்தை ஊடுருவி வந்த காற்று அவர்கள் முகத்தின் மீது மோதி விட்டு விலகிச் சென்றது…

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

பொழுது புலர்ந்து நேரம் எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது…

அப்போது மூன்று துணிப்பைகளுடன் ஆதித்யனும் சூரியனும் உள்ளே வருவதைப் பார்த்தாள் காயத்ரி…

ஒரு பையைப் பல்லவியிடமும் இன்னொன்றைக் கஸ்தூரியிடமும் கொடுத்தான் சூரிய வர்மன்…

தன் கையில் இருந்த பையுடன் காயத்ரியை நோக்கி வந்தான் ஆதித்யன்…

அந்தப் பையை அவளருகில் வைத்து விட்டு வந்தவன் வாசலருகில் நின்று திரும்பிப் பார்த்தான்…

அவளும் அவனையே தான் பார்த்துக் கொண்டு நின்றாள்…

“திருமணத்திற்கு வராமல் இருப்பதற்காக அடுத்த கட்டமாக நீ உடை விஷயத்தைத் தான் கையில் எடுப்பாய் என்பது எனக்குத் தெரியாதா?”
என்றான்…

தான் நினைத்ததை அவன் சொன்னதும் திகைத்து நின்றாள் காயத்ரி…

சூரியவர்மன் பார்வையைத் திருப்பிக் கஸ்தூரியைப் பார்த்தபடி
“பையைத் திறந்து பார்க்கும் உத்தேசம் இல்லையோ”
என்றான் சிறு புன்னகையுடன்…

கஸ்தூரி அவனைப் பார்ப்பதும் காயத்ரியைப் பார்ப்பதுமாக இருந்தாள்…

இரு பெண்களையும் பார்த்த ஆதித்யன்
“என்ன செய்வதாக உத்தேசம்”
என்றான் லேசாகக் கோபம் ஏறிய குரலில்...

அந்தக் குரலைக் கேட்டதும் பட்டென்று பையை எடுத்து உள்ளிருந்த புடவையை வெளியே எடுத்துப் பார்த்தாள் காயத்ரி…

வெண்ணிறப் புடவை தான் ஆனாலும் சிவப்புச் சரிகைக் கரையிட்டு அழகாக இருந்தது…

அதற்கேற்றது போலச் சிவப்பு நிற மேற்சட்டையும் இருந்தது…

பையினுள் ஒரு நகைப்பெட்டியும் இருப்பதைப் பார்த்தவள் அதை எடுத்து,
“இது எதற்கு…”
என்றாள் மெல்லிய குரலில்…

“தூக்கிப் போட்டு விளையாடுவதற்கு…”
என வெடுக்கென ஆதித்யனிடம் இருந்து பதில் வந்தது…

அதைக் கேட்டவளுக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை…

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போதே கஸ்தூரியைப் பார்த்தான் சூரிய வர்மன்…

மற்ற இருவரதும் கருத்தைக் கவராத வகையில் அவளருகில் சென்றான்…

“உனக்கு மட்டும் தனியாகச் சொல்ல வேண்டுமா…”
என்றான் வேண்டுமென்றே கோபமாக்கப் பட்ட குரலில்…

அவனது குரலில் இருந்த கோபத்தை நிஜமென்று நினைத்தவள் மருண்டவாறு பையில் இருந்த புடவையை வெளியே எடுத்துப் பார்த்தாள்…

அவளது மருண்ட பார்வையைப் பார்த்தவனோ உள்ளுக்குள் லேசாகச் சிரித்தபடி...

“பரவாயில்லையே சூரியா உனக்குப் பயந்து போய் நீ சொன்னதைச் செய்யவும் இந்த உலகத்தில் ஒரு ஆள் இருக்கிரது போல”
என்று சொல்லிக் கொண்டான்…

கஸ்தூரி கையிலெடுத்துப் பார்த்த புடவை பச்சைக் கரையிட்ட வெண்புடவை, அதற்குத் தோதாகப் பச்சை நிறத்தில் மேற்சட்டையும் கச்சிதமாகப் பொருந்தி இருந்தது…

அவளது பையினுள்ளும் ஒரு நகைப்பெட்டி இருந்தது…

“மூன்று பேரும் தயாராகி விட்டு அங்கே வாருங்கள்”
என்ற சூரியன் உடனேயே
“இல்லை இல்லை இப்படிச் சொன்னால் நீங்கள் வர மாட்டீர்கள் நாங்களே இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்கே வருகிறோம்”
என்றான்…

பின்னர் அண்ணனை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்…

செல்வதற்கு முன்பு ஆதித்யன் காயத்ரியை ஒரு பார்வை பார்த்து விட்டே சென்றான்…

அந்தப் பார்வையின் கூர்மைக்குப் பிறகும் அவள் தயாராகாமல் நிற்பாளா என்ன…

இருவரும் வெளியே சென்றதும் பல்லவியைத் தயார் படுத்த வேண்டி, அவளது துணிப்பையை எடுத்தாள் கஸ்தூரி…

அதற்குள் இருந்த புடவையை எடுத்துப் பார்த்தவள் தமக்கையைத் திரும்பிப் பார்த்தாள்…

காயத்ரியும் அப்போது கஸ்தூரி கையில் வைத்திருந்த புடவையைத் தான்
பார்த்துக் கொண்டிருந்தாள்…

மஞ்சள் நிறத்தில் சரிகைக் கரையிட்ட வெண்ணிறப் புடவை அது…

தங்கள் இருவருக்கும் வெண்ணிறத்தில் எடுத்தது சரி, பல்லவிக்கு எதற்கு வெண்ணிறத்தில் எடுக்க வேண்டும் என்ற கேள்வி இருவரையுமே வண்டாகக் குடைந்தது…

“அக்கா பார்த்தீர்களா? நிறப் புடவை கொடுத்தால் வாங்க மாட்டோம் என்று இப்படிக் கொஞ்சமாக நிறத்தைப் பூசியது போலக் கொடுத்து இருக்கிறார்கள்”

“ஆனால் அக்கா… இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது அக்கா… அது தான் மூவருக்கும் ஒரே வகையில் எடுத்து இருக்கிறார்கள் போல”

“நானும் அப்படித் தான் நினைக்கிறேன்… சரி சரி முதலில் பல்லவியைக் கவனிப்போம்”

என்றவள் பல்லவிக்குப் புடவை உடுத்தி, அவளது இடுப்பு வரை இருந்த கூந்தலை லேசாகத் தளரப் பின்னி விட்டாள்…

காயத்ரி சிவப்புச் சரிகை இட்ட புடவையை உடுத்திய போது, அவளது தாய்மை அடைந்த தோற்றத்திற்கு அத்தனை அம்சமாக இருந்தது…

தோள் வரை இருந்த கூந்தலைக் கிள்ளிக் கட்டி விரித்து விட்டுக் கொண்டாள்…

கஸ்தூரி புடவையை உடுத்தி விட்டுத் தனது இடுப்பு வரை இருந்த கூந்தலைப் பின்னி விட்டிருந்தாள்…

மூவருக்கும் ஒரே மாதிரியான அமைப்பிலேயே நகைகள் இருந்தது…

மூவரும் தயாராகி முடிந்ததும் பதினைந்து நிமிடத்தில் ஆதித்யனும் சூரியனும் வந்து சேர்ந்தார்கள்…

மூவரைப் பார்த்த இருவருக்கும் மனதுக்குள் சந்தோஷமாக இருந்தது…

ஆதித்யன் காயத்ரியைக் கண்களால் படமெடுத்து மனதுக்குள் பொத்தி வைத்துக் கொண்டான்…

ஆதித்யனின் வாகனத்தில் பின்னால் பெண்கள் மூவரும் முன்னால் ஆண்கள் இருவரும் அமர்ந்து கொண்டார்கள்…

எப்போதும் அதி வேகமாகப் பயணிக்கும் ஆதித்யனின் வாகனம் அன்று நிதானத்தைத் தத்தெடுத்துக் கொண்டது போலச் சென்று கொண்டிருந்தது...

காரணத்தைத் தேடி வெகு தூரம் செல்லத் தேவையில்லை...

காயத்ரியின் உடல்நிலையே அதற்குக் காரணமாக இருந்தது...

எங்கெங்கோ இருந்தவர்கள் ஒரு புள்ளியில் இணைந்தது போல இருந்தார்கள் ஐவரும்...

ஐவரும் திருமண வீட்டிற்கு எந்த மனநிலையில் சென்றார்களோ அதே மனநிலையில் திரும்பி வருவார்களா? இல்லையா?

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"நேற்று தனிமையிலே போச்சு
யாரும் துணை இல்லை
யாரும் வழித் துணைக்கு வந்தா
ஏதும் இணையில்லை
உலகத்தில் ஏதும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம்
சேர்ந்தது போல"
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 11

IMG-20210627-WA0042.jpg

சாலையின் இரண்டு பக்கத்திலும் மரங்கள் குடை விரித்த படி அழகாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தது…

நாதஸ்வரத்தின் ஓசை காற்றில் கலந்து வந்து செவி தீண்டிச் சென்றது…

அந்த இனிய தருணத்தில் ஆதித்யனின் வாகனம் வாசலில் வந்து நின்றதைப் பார்த்ததும் சரண்குமார் ஓடோடி வந்தான்…

வாகனத்தில் இருந்து இறங்கிய ஐவரையும் பார்த்ததும் அவனது முகம் முழுவதும் பிரகாசமாக மாறியது…

சந்தோஷமாக ஆதித்யனை ஆரத் தழுவிக் கொண்டான்…

அதற்குள் கீழே இறங்கி விட்டிருந்த பல்லவி சரணைப் பார்த்ததும் அவனருகில் ஓடி வந்து இரண்டு கைகளையும் நீட்டினாள்…

அதைப் பார்த்த, காயத்ரி லேசாக அவளது கைகளைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டாள்…

காயத்ரி அப்படி இழுத்ததும் வேண்டுமென்றே கோபமாக முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு மீண்டும் கைகளை நீட்டினாள் பல்லவி…

பல்லவியின் செய்கையில் லேசாகப் புன்னகைத்த சரண் தன் சட்டைப் பைக்குள் இருந்த இனிப்பை எடுத்து அவளிடம் நீட்டினான்…

அவனுக்குத் தெரியும் பல்லவி தன்னைப் பார்த்தவுடனேயே இனிப்புக் கொடு என்பது போலக் கைகளை நீட்டிக் கொண்டு வருவாள் என்பது…

அதனாலே அவன் முன்னாயத்தமாக ஒரு இனிப்பைச் சட்டைப் பைக்குள் வைத்திருந்தான்…

அவன் கையில் இருந்த இனிப்பை வாங்கி விட்டு எப்போதும் போலச் சந்தோஷமாக அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு துள்ளினாள் பல்லவி…

அதன் பிறகு இனிப்பை வழமைபோல இரண்டு கைகளுக்கும் நடுவில் பொத்திக் கொண்டாள்…

இனிப்பு அடிக்கடி உண்ணக் கூடாது என்று சரண் தான் பல்லவியிடம் சொல்லி இருந்தான்…

அவன் சொன்னதைக் கேட்டதால் அடிக்கடி இனிப்பு உண்ணவும் மாட்டாள் அதே நேரத்தில் சரணிடம் இருந்து இனிப்பை வாங்காமல் இருக்கவும் மாட்டாள்…

ஐவரையும் திருமண மண்டபத்தினுள் அழைத்துச் சென்றான் சரண் குமார்…

பல்லவி சரணின் ஒரு கையையும் காயத்ரியின் ஒரு கையையும் பற்றிக் கொண்டு சிறு பிள்ளை போல நடந்து வந்தாள்…

அவள் இழுத்த வேகத்துக்கு நடக்க முடியாத காயத்ரி பல்லவியின் கையை விட்டு விட்டாள்…

இப்போது இரண்டு கைகளாலும் சரணின் வலது கையை இறுகப் பற்றிய படி நடக்கத் தொடங்கினாள் பல்லவி…

அதைச் சிலர் ஒரு மாதிரிப் பார்க்கவும் செய்தார்கள்...

ஆனால் சரண் அதனை எல்லாம் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை...

உள்ளே வந்ததும் ஐவரையும் முன் வரிசையில் அமர வைக்கப் போன சரணை இடை மறித்தாள் காயத்ரி…

“முன் வரிசை வேண்டாம்… பின்னால் ஏதாவது…”
என்று ஏதோ சொல்ல வந்தாள்...

அவளை இடை மறித்து
“சரி வா பின்னால் அமரலாம்”
என்றபடி பின் வரிசையில் சென்று அமர்ந்து கொண்டான் ஆதித்யன்…

அவன் தன்னோடு விதண்டாவாதம் செய்யாமல் விட்டுக் கொடுத்துப் பின்னால் சென்றதே காயத்ரிக்குப் பெரிதாகத் தோன்றியது...

பின்வரிசையில் ஐவரையும் அமரச் சொல்லி விட்டுத் திருமண வேலைகளைச் செய்யச் சரண் சென்று விட்டான்…

அதற்கு முன்னர் பல்லவியைச் சமாதானப் படுத்தி அமர வைப்பதற்குள் அவனுக்குப் போதும் போதுமென்றாகி விட்டது…

நல்ல வேளையாகச் சரண் சொல்லுவதைப் பல்லவி கேட்டு நடப்பதால் அவன் பிழைத்துக் கொண்டான்…

அதுவும் சிறிது நேரமாவது பல்லவியைச் சமாதானப் படுத்தப் போராடினால் தான் அவன் சொல்லுவதையும் கேட்டு நடப்பாள் பல்லவி…

பின் வரிசையில் ஐவரும் அமர்ந்திருந்தார்கள்…

சிறிது நேரம் சென்றதும் யாரோ தங்களைப் பார்ப்பது போல உணர்ந்தாள் கஸ்தூரி…

லேசாகத் தனது விழிகளைச் சுழற்றிப் பார்த்தவளது விழிகள் லேசாக வெறுப்பைத் தத்தெடுத்துக் கொண்டது…

உடனே தனக்கு அருகில் இருந்த காயத்ரியைச் சுரண்டினாள்…

தமக்கையிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லாமல் போகவே “அக்கா” என்ற படி அவள் பக்கம் திரும்பினாள் கஸ்தூரி…

திரும்பியவள் சற்றே திகைத்துப் போனாள்…

ஏனெனில் அவள் தமக்கை என நினைத்துச் சுரண்டியது சூரியவர்மனை…

அவனோ குறும்பாக என்னவென்பதைப் போலப் புருவங்களை உயர்த்தியபடி இருந்தான்...

அவனது முகத்தில் இருந்த குறும்புத் தனத்தைப் பார்த்தவளோ லேசாக அசடு வழிந்தாள்…

“அப்போதும் என்னதிது அக்காவின் கரம் இத்தனை கடினமாக உள்ளதே என்று நினைத்தேனே... இந்தக்கா எப்போது எழுந்து போனாள்… இவர் எப்போது என்னருகில் வந்தமர்ந்தார்”
என்றவாறு தமக்கையை விழிகளால் தேடினாள்…

அவளது சங்கடமான நிலையைப் பார்த்தவனோ லேசாகப் புன்னகைத்தான்…

அப்போது பல்லவியின் கையைப் பிடித்தவாறு காயத்ரி வந்து கொண்டிருந்தாள்…

வந்தவள் கஸ்தூரியின் அருகே தான் அமர்ந்திருந்த இடத்தில் சூரியவர்மன் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள்…

இப்போது ஆதித்யனுக்கு அருகிலே தான் இரண்டு கதிரைகள் வெறுமையாக இருந்தன…

சூரியன், காயத்ரியைத் தமையன் அருகில் அமரச் செய்வதற்காக, காயத்ரி எழுந்து சென்றதும் அவளது இருக்கையில் வந்தமர்ந்து விட்டான்…

காயத்ரியும் இப்போது ஆதித்யன் அருகில் அமரலாமா? வேண்டாமா? எனத் தனக்குள் ஒரு பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருந்தாள்…

அதற்குள் பல்லவி ஒரு கதிரை தள்ளி அமர்ந்ததால் இப்போது ஆதித்யனுக்கும் பல்லவிக்கும் நடுவே தான் காயத்ரி அமர வேண்டும் என்ற நிலை வந்தது…

அந்த இடத்தை விட்டு வேறெங்கும் சென்றாலும் ஆதித்யனிடம் இருந்து சரியான மண்டகப்படி கிடைக்குமே என்பதை உணர்ந்தவள்…
பேசாமல் ஆதித்யன் அருகில் அமர்ந்து கொண்டாள்…

அலைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தவன் அப்போது தான் தன்னருகே அமர்ந்த காயத்ரியைத் திரும்பிப் பார்த்தான்…

“என்னடா இது அம்மையார் என்னருகே வந்து அமர்ந்து விட்டாரே... "
என அப்போது தான் மற்றவர்களைப் பார்த்தான்…

“அது தானே பார்த்தேன்… இது சூரியாவின் வேலை தானா?”
எனத் தனக்குள் சொல்லிக் கொண்டான்…

கஸ்தூரியையே பார்த்துக் கொண்டிருந்த சூரிய வர்மன்
“அது சரி… என்ன இரகசியம் சொல்ல வேண்டும்”
என்றான் கேள்வியாக…

அப்போது தான் தமக்கையை எதற்காக அழைக்க இருந்தோம் என்பதை உணர்ந்தாள் கஸ்தூரி…

வேகமாக முதலில் பார்த்த திசையைப் பார்த்தாள்…

அங்கே நின்றவர்களைக் காணவில்லை…

“அங்கே என்ன பார்வை”
என்றான் சூரியன் கேள்வியாக…

“ஒன்றுமில்லை”
என்றாள் கஸ்தூரி மெல்லிய குரலில்…

அப்போதும் அவளை லேசான சந்தேகத்துடனேயே பார்த்தான் சூரியன்…

இப்போது கஸ்தூரி தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்…

அவளின் முகம் முதலில் வெறுப்புடன் மாறியதையும் பின்னர் தமக்கை என்று நினைத்துத் தன்னை அவசரமாக அழைத்ததையும் சூரியன் பார்த்துக் கொண்டு தானே இருந்தான்…

“யாரைப் பார்த்து இவள் இப்படி வெறுப்படைந்தாள்”
என அவள் பார்த்த திசையை நோக்கிய போது, அங்கே இரண்டு பெண்மணிகளும் ஒரு ஆணும் நின்றிருப்பதைப் பார்த்து விட்டான்…

கஸ்தூரியாக ஏதும் சொல்லுவாளோ என்பதைப் போல அவன் பார்த்திருக்க, அவளோ மௌனமாகத் தலையைக் குனிந்து கொண்டே இருந்தாள்…

அவள் எதையோ மறைக்கிறாள் என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது…

எது நடந்தாலும் அண்ணன் இருக்கிறான் பார்த்துக் கொள்ளுவான் என்கிற தைரியம் அவனுக்கு இருந்ததால் அமைதியாக இருந்தான்…

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

காயத்ரியும் கஸ்தூரியும் வீட்டை விட்டு வெளியேறியதும் எப்படியும் திரும்பி இங்கே தானே வந்தாக வேண்டும் என்று இந்திராணி நினைத்திருந்தார்…

ஆனால் அவர்கள் இருவரும் வீட்டை விட்டுச் சென்று கிட்டத்தட்ட ஒரு மாதமாகி விட்டது…

அவர்கள் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை…

எங்காவது தொலைந்து போகட்டும் என்றும் இருக்க முடியவில்லை…

வீட்டு வேலைகள் எல்லாம் இத்தனை நாளும் கன கச்சிதமாக நடந்து வந்தது…

ஆனால் இப்போது வீடே அலங்கோலமாகக் கிடந்து, காயத்ரியினதும் கஸ்தூரியினதும் தேவையை அறிவுறுத்திக் கொண்டே இருந்தது…

இந்திராணியும் அத்தனை கெட்டவர் அல்ல, சுற்றி இருப்போரின் தூபம் போடும் செயலும் துர் போதனைகளும் சேர்ந்து அவரை மாற்றி விட்டிருந்தது…

தக்க சமயத்தில் யாராவது தகுந்த அறிவுரை போதித்தால் அவர் தன் தவறை உணர்ந்து கொண்டு திருந்தக் கூடும் அளவில் இருந்தார்…

ஆனால் இப்போதும் அவருக்குத் துர் போதனைகளைப் போதிப்பதிலேயே சுற்றத்தார் இருந்தது அவரது கெட்ட காலம் போலும்…

அவருக்குச் சுய புத்தியும் சற்று அல்ல அதிகமாகவே மழுங்கி விட்டிருந்தது…

இந்த சமயத்தில் தான் இந்திராணியின் அண்ணனின் மகனுக்குத் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது…

அந்தத் திருமண வீட்டிற்கு வந்திருந்தார் இந்திராணி...
கூடவே அவரது பக்கத்து வீட்டுப் பரிமளம் மாமியும் அவர் வீட்டுக்காரரும் இணைந்து கொண்டார்கள்…

இந்திராணியின் இன்னொரு மகனும் மகளும் கூடத் திருமணத்திற்கு வந்திருந்தார்கள்…

அப்போது பக்கத்தில் நின்றிருந்த பரிமளம் மாமி மெதுவாக இந்திராணியைத் தட்டினார்…

“என்ன பரிமளம் என்ன விஷயம்”

“அங்கே பார் இந்திரா”

“என்ன அங்கே”

“அது உன் சின்ன மருமகள் கஸ்தூரி தானே”

“எது”
என்றவாறு பரிமளம் காட்டிய திசையைப் பார்த்தார் இந்திராணி…

அங்கே அமர்ந்திருந்தவளைப் பார்த்தவர் சற்றே திகைத்தார்…

அவள் பக்கத்தில் இருந்தவனுடன் ஏதோ சிரித்துப் பேசிய படி இருப்பது தெரிந்தது…

“அது கஸ்தூரியாக இருக்காது பரிமளம்”

“எதனால் அப்படிச் சொல்கிறாய்”

“என் மருமகள் இப்படி யாரோ தெரியாதவனுடன் இருந்து பேசிக் கொண்டிருக்க மாட்டாள்… அவள் குணம் எனக்குத் தெரியாதா…?”

அந்த நேரம் பார்த்து அங்கே வந்து சேர்ந்தார் இந்திராணியின் அண்ணன் கருணாகரன்…

அவருக்கு இந்திராணி சொன்னது கேட்டு விட்டது…

இவளைச் சிந்திக்க விட்டால் தங்களுக்கு அது ஆபத்தாகி விடும் என நினைத்தவர்…

“நீ ஏன் தான் இப்படி உலகத்தைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறாயோ என்று தெரியவில்லை”

“ஏன் அண்ணா”

“உன் மருமகள்கள் வீட்டை விட்டு ஓடியதே சொகுசான வாழ்க்கை வாழத் தானே”

“அப்படி இருக்…”

“போதும் தங்கச்சி உனக்கு ஒன்றுமே தெரியவில்லை… நல்ல வசதி உள்ளவனாக வலை போட்டுப் பிடித்து விட்டாள் உன் மருமகள்”

“என்ன அண்ணா சொல்கிறீர்கள்”

“அந்தப் பையன் என் மருமகளின் அண்ணனின் தோழன் தான்... சரியான வசதியான குடும்பம்…”

“உண்மையாகவா?”

“நான் ஏன் உன்னிடம் பொய் சொல்ல வேண்டும்”
என்றார் கருணாகரன் தந்திரத்துடன்…

“உன் வீட்டு மானத்தையே இப்படி ஏலத்திற்கு விடுகிறாளே உன் மருமகள்… வா அவளை நறுக்கென்று நான்கு வார்த்தை கேட்டு விட்டு வரலாம்…”

“வேண்டாம் அண்ணா அனைவருக்கும் நாங்கள் காட்சிப் பொருளாக வேண்டாம்…”

“இந்திரா... அண்ணா மீது மரியாதை வைத்திருந்தால் என்னுடன் வா”
என்றவர் விடு விடென கஸ்தூரி இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றார்…

அப்போது தான் தன்னை நோக்கி வந்தவரைக் கஸ்தூரி நிமிர்ந்து பார்த்தாள்…

நிச்சயமாக இவர் தன்னை நலம் விசாரிப்பதற்காக வரவில்லை என்பது அவளுக்குத் தெரியும் தானே…

முன்னைய கஸ்தூரியாக இருந்திருந்தால் கலங்கி இருப்பாள் போலும்…

ஆனால் இந்தக் கஸ்தூரிக்கு நிறையத் தைரியம் இருந்தது…
அதை விடப் பக்க பலமாக நிற்கவும் ஆட்கள் இருந்தார்கள்…

கஸ்தூரியின் இடது கை விரல் அவளையும் அறியாமல் சூரியனின் கையை லேசாகப் பற்றிக் கொண்டது…

அவளது கரம் பட்டதுமே என்னவெனத் திரும்பிப் பார்த்தவன் நொடியில் அவளது நிலையைப் புரிந்து கொண்டான்…

வந்து கொண்டிருக்கும் நபர் மீது அவளுக்கு வெறுப்பு இருப்பதை அவளது முக பாவனை அவனுக்குக் காட்டிக் கொடுத்தது…

ஒரு தோழனாக நான் இருக்கிறேன் என்பது போல அவளது விரல்கள் மீது தன் கையை வைத்து அழுத்தினான்…

அது வரை இருந்த கொஞ்ச நஞ்சத் தயக்கமும் அவளை விட்டுத் தூரமாகப் போயிற்று…

லேசாக முகத்தில் புன்னகையைப் பூசியவாறு நிமிர்ந்து அமர்ந்திருந்தாள்…

வேகமாக வந்த கருணாகரனைத் தொடர்ந்து பரிமளமும் இந்திராணியும் வந்து சேர்ந்தார்கள்…

கஸ்தூரிக்கு அருகே வந்தவர் அவளை ஏளனமாகப் பார்த்தபடி
“கணவன் இறந்து முழுதாக ஒரு வருடம் கூட ஆகவில்லை… அதற்குள் என்னடி இது கூத்து”
என்றார்…

கஸ்தூரியோ
“என்னிடமா பேசுகிறீர்கள்”
என்றாள் புருவங்களை உயர்த்தி…

தான் கேட்ட கேள்வியில் கலங்கி விடுவாள் என நினைத்திருக்க அவள் அதைக் கண்டு கொள்ளாமல் வேறு ஏதோ கேட்கவும் திகைத்து விழித்தார்…

அதற்குள் சுதாரித்துக் கொண்ட பரிமளம்
“ஏய் நீ கஸ்தூரி தானே?”
என்றார் சந்தேகம் கலந்த குரலில்…

பட்டென்று
“இல்லையே”
என்றாள் கஸ்தூரி…

“இல்லையா? எங்கள் வீட்டுப் பொண்ணு போலவே இருக்கிறாயே”
என்று இழுத்தார் இந்திராணி…

அவரைத் தொடர்ந்து யோசிக்க விடாமல்...

“என்ன பழக்கம் இது… இப்படித் தான் யாரென்றே தெரியாத பெண்ணிடம் வந்து நின்று தேவையற்ற பேச்சுகள் பேசுவீர்களா?”
என்றாள் கஸ்தூரி வேண்டுமென்றே கோபமாக்கப் பட்ட குரலில்…

கருணாகரன் வேகமாக வந்ததையும் கஸ்தூரியிடம் தேவையற்றுப் பேசியதையும் பார்த்திருந்த காயத்ரி ஆதித்யனின் பக்கம் திரும்பி அவனுடன் பேசுவது போல அமர்ந்து கொண்டாள்…

ஏனெனில் கஸ்தூரியை இப்போது வேறு யாரோ எனத் தடுமாறிக் கொண்டு நிற்பவர்கள் தன்னைப் பார்த்ததும் அவள் பொய் சொல்கிறாள் என்பதைக் கண்டு கொண்டு விடுவார்கள் என அவளுக்குப் புரிந்து இருந்தது…

கஸ்தூரியின் கோபக் குரலில் நிஜமாகவே கருணாகரனும் பரிமளமும் சங்கடமாக உணர்ந்தார்கள்…

எப்போதுமே வெண்ணிறச் சேலையில் சாதுவாக இருக்கும் கஸ்தூரி எங்கே, வெண் பட்டுப் புடவையில் பெரிய இடத்துப் பெண் போல இடக்காகப் பேசும் இவள் எங்கே என அவர்கள் தடுமாறினார்கள்…

உண்மையில் இவள் யாரோ தானோ என நினைத்தவர்கள் மெதுவாகக் கழன்று சென்று விட்டார்கள்…

அவர்கள் சென்றதும் சூரியன் கஸ்தூரியை மெச்சும் பார்வை பார்த்து லேசாகச் சிரித்தான்…

“பரவாயில்லையே கெட்டிக்காரி தான்”

“என் பக்கவாட்டில் அவர்கள் நின்றதால் என்னை அவர்களால் முழுவதும் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை”
என்று தானும் சிரித்தாள் கஸ்தூரி…

இவர்களுக்குள் இந்தச் சம்பாஷணை போய்க் கொண்டிருந்த நேரத்தில்…

தன்னை நோக்கித் திரும்பி இருந்த காயத்ரியிடம்
“பேசிக் கொண்டு இருப்பது போல நடிப்பதற்குப் பதில் ஏதாவது பேசலாமே”
என்றான் ஆதித்யன் குற்றம் சாட்டும் குரலில்...

அவனது செய்கையில் வந்த சிரிப்பைத் தலையைக் கவிழ்த்து மறைத்துக் கொண்டாள் காயத்ரி…

அந்த நேரத்தில் “காயூ” என்றவாறு ஏஞ்சலினா ஓடி வந்தாள்…

அவளைப் பார்த்த சந்தோஷத்தில் வேகமாக எழுந்தாள் காயத்ரி...

அவள் எழுந்து கொண்ட வேகத்தில் சற்றே தடுமாறிப் போய்க் கீழே விழப் போனாள்…

அவள் விழப் போன வேகத்திற்கு ஆதித்யன் மடியில் தான் விழுந்திருப்பாள்…

ஆனால் அவனோ அவளது கைகளைப் பிடித்து விழ விடாமல் தடுத்து நிறுத்தினான்…

இது தான் சந்தர்ப்பம் என மடியில் தாங்கிக் கொள்ளாமல் அவளது கைகளைப் பிடித்து அவன் நிறுத்தியது காயத்ரியின் மனதை வருடிச் சென்றது...

“மன்னித்துக் கொள்ளுங்கள்”

“மன்னிப்பு இருக்கட்டும்… எழுந்து கொள்ளும் போது நிதானமாக எழுந்து கொள்…”
என்றான் ஆதித்யன் கண்டிப்பான குரலில்…

"ம்ம்" என்றாள் அந்தக் குரலுக்குக் கட்டுப் பட்டவளாக...

காயத்ரியின் அருகே வந்த ஏஞ்சலினா சந்தோஷத்தில் பேசத் தொடங்கினாள்...

“எப்படி இருக்கிறாய்”

“எத்தனை நாட்களாயிற்று உன்னைப் பார்த்து, ஏன் எங்களைப் பார்க்க வரவில்லை”

“உங்கள் இருவரையும் பத்திரமான இடத்தில் தானே ஒப்படைத்து இருக்கிறேன்... அந்தத் தைரியத்தில் வேலை விசயமாக வெளியூருக்குச் சென்றிருந்தேன்”

“சரி அம்மா எப்படி இருக்கிறார்கள்”

“நன்றாக இருக்கிறார்கள் காயூ… “

இருவரது சம்பாஷணைக்குள்ளும் இடை புகுந்தான் சூரியன்…

“ஏன் ஏஞ்சல் வந்த இடத்தில் நலம் விசாரித்தால் சரியாகி விடுமா?”

“டேய் நீ வேறு ஏனடா இருவரையும் கொழுவி வைக்கிறாய்”

“நான் கொழுவவில்லை உண்மையைச் சொன்னேன்”

“சரி சரி விடுங்கள்… வெளியூருக்கு அவசரமாகப் போனதால் வந்து பார்க்க முடியவில்லை”
என உடனே பணிந்து விட்டாள் ஏஞ்சலினா…

அதன் பிறகே காயத்ரியினதும் கஸ்தூரியினதும் உடை மற்றும் எளிமையான அலங்காரத்தைப் பார்த்தாள் ஏஞ்சலினா…

“ஏய் காயூ… இந்தப் புடவையில் நீ அம்சமாக இருக்கிறாய் தெரியுமா… நம் கஸ்தூரிக்கும் எத்தனை எடுப்பாக இருக்கிறது இந்தப் புடவை”
என்றாள் உண்மையான மனதுடன்…

இவர்களது சம்பாஷணையை வேடிக்கை பார்த்திருந்த பல்லவி, ஏஞ்சலினாவின் அருகே வந்து தன் சேலையின் தலைப்பை மெதுவாகத் தொட்டுக் காட்டினாள்…

அவளது செய்கையில் வந்த சிரிப்புடன்
“எல்லோரையும் விட உனக்குத்தான் தான் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறது பல்லவி”
என்றவாறு அவளது முகத்தைக் கைகளால் சுற்றி விரல்களால் தன் தலையில் வைத்துச் சொடக்கினாள்...

அதைப் பார்த்த மற்றவர்கள் புன்னகைத்தார்கள்…

மேடையில் நின்ற மணமகன் வேறு காயத்ரி மற்றும் கஸ்தூரியைத் திரும்பத் திரும்பப் பார்த்தான்...

அவனைப் பார்த்த கஸ்தூரியோ திரும்பித் தொலைவில் நின்றிருந்த கருணாகரனைப் பார்த்தாள்...

பின்னர் திரும்பி மணமகனாக நின்ற அவரது மகனைப் பார்த்தாள்...

"இந்தப் பன்னாடையாவது கொஞ்சம் திருந்தி வாழுகிறதா என்று பார்ப்போம்" என மனதுள் சொல்லிக் கொண்டாள்...

மேடையில் பரிசு கொடுக்கச் செல்லும் போது அவனுக்கு வாழ்த்துவது போல
மெல்லிய குரலில்...

"திருமண மேடையில், தாலி கட்டிய மனைவியுடன் நின்றபடி அடுத்த பெண்களைக் குறுகுறுவென்று பார்த்தால் சாமி கண்ணைக் குத்துதோ இல்லையோ நான் கண்ணை நோண்டி விடுவேன்"
என்றாள் விரல்களால் குத்துவது போல...

அதில் நிஜமாகவே பயந்த கருணாகரனின் மகன் பட்டென்று கண்களை மூடிக் கொண்டான்...

கஸ்தூரியின் பின்னாலேயே கீழே இறங்கிய சூரிய வர்மன் அவள் சொன்னதைக் கேட்டு விட்டான்...

"அடிப்பாவி... என்ன ஒரு மிரட்டல்...
அதிலும் அவன் நிஜமாகவே பயந்தது தான் வேடிக்கை"
என்று சிரித்தான்...

அப்போது தான் சூரியனைக் கவனித்தவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள்...

இதைப் பார்த்திருந்த சரண் குமார்
"என்ன விஷயம்"
என்றான்...

அவனிடம் எதையும் மறைக்காமல் சொல்லி விட்டான் சூரியன்...

அப்போது சங்கடத்துடன் தலையைக் குனிந்தாள் கஸ்தூரி...

ஆயிரம் தான் இருந்தாலும் அவன் வீட்டு மாப்பிள்ளையை மட்டம் தட்டியதை அவனிடமே சொல்லுவதா என்றிருந்தது அவளுக்கு...

அவளது சங்கடத்தைப் புரிந்து கொண்ட சரண்...
"நீங்கள் கவலைப் படாதீர்கள்... அவன் இனியும் திருந்தா விட்டால் மாட்டு ஊசியில் இரண்டைக் குத்திப் பார்ப்போம்"
என்றான் புன்னகையுடன்...

சரணின் பதிலில் லேசாகச் சுருங்கியிருந்த கஸ்தூரியின் முகம் விரிந்தது...

அவளையே பார்த்திருந்த சூரியனின் புன்னகை நன்றாக விரிந்தது...

திருமண வீட்டில் இருந்து அனைவரும் விடை பெற்று வரும் வரையில் கூட அவன் கஸ்தூரி சொன்னதை நினைத்து நினைத்துச் சிரித்துக் கொண்டே வந்தான்...

அவனது சிரிப்புக்குக் காரணம் கேட்ட ஆதித்யனும் லேசாகப் புன்னகைத்தான்...

அதைக் கேட்டிருந்த காயத்ரிக்கும் சிரிப்பு வந்தது...

நால்வரும் சிரிப்பதைப் பார்த்த பல்லவி ஒன்றும் புரியாது விட்டாலும் தானும் கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினாள்...

இந்த உள்ளங்களின் மகிழ்ச்சி தொடருமா? இல்லையா?
காலம் தான் பதில் சொல்லும் 😌😌😌

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"நூறாண்டு வாழும் ஆசைகள்
இல்லை
அன்போடு வாழும் ஒரு நாளும் போதுமே
கோயில்கள் செல்லும் தேவைகள்
இல்லை
தெய்வங்கள் எல்லாம் நமது சொந்த
பந்தமே"
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 12

79931cccaeada2d4d10726b283ea54bb~3.jpg

IMG-20210701-WA0023~2.jpg

தோட்டத்தின் ஓரத்தில் திருவாத்தி மரமொன்று கிளை பரப்பிக் குடை பிடித்துக் கொண்டு நின்றது…

கீழே பச்சைப் புல்வெளி மீது திருவாத்தி மலர்கள் சிதறிக் கிடந்தன…

அந்த மரத்துக்கு நேர் எதிரே இரண்டு கொன்றை மரங்கள் தங்கள் மஞ்சள் நிறத்து மலர்களைச் சரம் சரமாகத் தொங்க விட்டுக் கொண்டிருந்தன…

மரங்களை ஊடுருவி வந்த தென்றல் மெல்ல மெல்லச் சாமரம் வீசிச் சென்றது…

மரத்திற்குக் கீழே பிரம்பு நாற்காலியில் சூரியனும் ஆதித்யனும் அமர்ந்திருந்தார்கள்…

பல்லவியோ கீழே கொட்டிக் கிடந்த மலர்களைச் சேகரித்துச் சூரியா மீது எறிந்து கொண்டிருந்தாள்…

அவனும் சிரித்தபடியே அவளெறிந்த பூக்களை அவள் மீதே திரும்பப் போட்டுக் கொண்டிருந்தான்…

அந்த நேரத்தில் காயத்ரியும் கஸ்தூரியும் இவர்களை நோக்கி வருவது தெரிந்தது…

ஆதித்யன் இருப்பதை அப்போது தான் பார்த்த காயத்ரி சட்டென்று அடுத்த திசையில் நடக்கத் தொடங்கி விட்டாள்…

தமக்கை வேறெங்கோ செல்வதைப் பார்த்த கஸ்தூரி தானும் அவளைப் பின் தொடர்ந்தாள்…

“அக்கா எங்கே செல்கிறீர்கள்”

“நான் சற்று நடந்து விட்டு வருகிறேன்”

“நானும் வருகிறேன்”

“நீ அவர்களோடு போய் அமர்ந்து கொள்”

“இல்லை நானும் உங்களோடு தான் வருவேன்”
என்ற கஸ்தூரி அவளோடு ஒட்டிக் கொண்டாள்…

காயத்ரியைத் தனியே நடக்க விட்டால், பிறகு சூரியனிடம் யார் வாங்கிக் கட்டிக் கொள்ளுவது…

"ஒரு நேரத்தில் கலகலப்பாகச் சிரித்துப் பேசுகிறான் ஒரு நேரத்தில் முறைத்துக் கொண்டு விறைப்பாக நிற்கிறான்…இவனையெல்லம் கட்டிக் கொண்டு எந்தச் சீமாட்டி குப்பை கொட்ட முடியாமல் முழிக்கப் போகிறாளோ ஈசனே…”
எனக் கஸ்தூரி மனதுக்குள் பேசிக் கொண்டே நடந்தாள்...


இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யனுக்கு உள்ளூரக் கடுப்பாக இருந்தது…

அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தான்…

காயத்ரி தன்னைத் தவிர்க்க முயல்வது நன்றாகவே புரிந்தது…

அதற்காக அவள் சொல்லப் போகும் காரணங்கள் என்னவென்பதும் புரிந்தது...

அந்த நேரத்தில் அவனது உள்ளத்தில் ஏற்கனவே போட்டு வைத்திருந்த திட்டத்தைத் தாமதிக்காமல் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு வலுவாகத் தோன்றியது…

அவனைப் பொறுத்தவரை அவன் வைத்தது தான் சட்டம் எனும் வகையில், அந்த வீட்டின் பெரியவன் அவன் தான்…

இன்று அவனது முடிவுகளுக்குத் தடை போடும் ஆட்கள் என்று யாருமேயில்லை...
அப்படியே ஆட்கள் இருந்தாலும் அவர்கள் அவன் விருப்பத்தை ஏற்றுக் கொள்வார்கள்...

கேள்வி கேட்பதற்கு யாருமேயில்லை என்பதற்காக அவன் தப்பு வழி செல்ல முயன்றதும் இல்லை…

அதே போன்று தான் சூரியனும்…

நாளை என்பது விடிவதற்காக அன்றைய தினத்தை நெட்டித் தள்ளிக் கொண்டிருந்தான் ஆதித்ய வர்மன்…

அதற்குள் நிறைய வேலைகள் எல்லாம் செய்ய வேண்டியும் இருந்தது…

ஆனால் அவற்றை எல்லாம் சூரியன் பார்த்துக் கொண்டான்…

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

அதிகாலையில் ஆதித்யனுக்குச் சீக்கிரமாகவே விழிப்பு வந்து விட்டது…

மெல்ல எழுந்து சென்று மாடியில் நின்று கொண்டான்…

கீழ்த்திசையில் சூரிய உதயம் அத்தனை ரம்மியமாகக் காட்டியளித்துக் கொண்டிருந்தது…

இரண்டு கைகளையும் விரித்தபடி தூய காற்றை ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டான்…

அவனது வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பமாகி விட்டது என்பது போல முற்றத்து மாமரத்தில் அமர்ந்திருந்த குயில் இனிமையாகக் கூவிக் கட்டியம் கூறியது…

அதே நேரத்தில் தனது படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து கொண்ட காயத்ரி சாளரத்தின் வழியே மலர்ந்திருந்த ரோஜாக்களைப் பார்த்தாள்…

நிறைய ரோஜாப் பூக்கள் மலர்ந்து லேசான குளிர் காற்றில் அசைந்து அசைந்து அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தன…

அந்த ரோஜாக்களில் ஒன்றையாவது தலையில் சூட வேண்டும் என்ற ஆசையில் சாளரத்தின் வழியே கரத்தை நீட்டினாள்…

நீட்டிய கரம் ஸ்தம்பித்து நின்றது…

நான் தான் மலர் சூடும் தகுதி அற்றவள் எனச் சமுதாயத்தால் ஒதுக்கப் பட்டவளாயிற்றே என்று மூலையில் ஒரு குரல் கேட்டது…

மலர்களை ஏக்கத்துடன் பார்த்தபடி மெல்ல எழுந்து குளியலறை நோக்கிச் சென்றாள் காயத்ரி…

அவளுக்கு முன்னரே பல்லவியும் கஸ்தூரியும் எழுந்து, குளித்து விட்டு வெளியே பூக்கள் கொய்து கொண்டிருந்தார்கள்…

குளித்து முடித்து வெளியே வந்த காயத்ரி பார்த்தது பூக்கூடையோடு நின்றிருந்த கஸ்தூரியின் சந்தோஷமான முகத்தை…

அவளுக்கு அருகே சிரித்தபடி பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள் பல்லவி…

“முகமெல்லாம் பிரகாசமாக இருக்கிறதே அப்படி என்ன விஷயம்…”

“அக்கா… ரொம்ப நாளைக்குப் பிறகு கோவிலுக்குப் போகப் போகிறோம்”

“போகிறோமா?”

“அப்படித் தானக்கா நான் பல்லவி அப்புறம்…”

“நான் வரவில்லை கஸ்தூரி”

“ஆனால் அக்கா…”

“ஆனால் என்ன…”

“அக்கா… அக்கா…”

“இப்போது என்ன... நீங்கள் வந்தால் தானக்கா நான் போவேன்... அப்படித் தானே”
என்றபடி முறைத்தாள் காயத்ரி…

லேசாகத் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள் கஸ்தூரி…

சிறிது நேரம் கஸ்தூரியைப் பார்த்த காயத்ரி
“சரி சரி உடனே முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ளாதே வருகிறேன் என்றாள்...

“அக்கா என்றால் அக்கா தான்”

“சரி சரி யார் யார் வருகிறார்கள்”

“நீங்கள் நான் பல்லவி அப்புறம்…”

“அப்புறம்…”

“அந்த வீட்டுல் சின்னவர் மட்டும் தானக்கா”
என்று முதன் முறையாகத் தமக்கையிடம் பொய்யுரைத்தாள் கஸ்தூரி…

“அப்படியா சரி சரி”
என்றவாறு உள்ளே போய் விட்டாள் காயத்திரி…

கஸ்தூரிக்கு ஒரே குதூகலம் ஆக இருந்தது…

நேற்றைய தினத்தில் மாலைப் பொழுதில் தான் சூரியன் வந்து கஸ்தூரியிடம் பேசியிருந்தான்…

அவள் மாலை நேரத்தில் சுவாமிக்கு வைப்பதற்காகப் பூப் பறித்துக் கொண்டிருந்தாள்…

அவளைத் தேடிக் கொண்டு வந்த சூரியன் அவள் தோட்டத்தில் நிற்பதைப் பார்த்து விட்டு அங்கே வந்தான்…

வந்தவன் தானும் பூக்களைப் பறித்து அவள் வைத்திருந்த பூக் கூடைக்குள் போடத் தொடங்கினான்…

அப்போது தான் அவனைப் பார்த்த கஸ்தூரி அப்படியே மருண்டபடி நின்றாள்…

ஆனால் அவனோ அவளை இலகுவாக்க எண்ணி லேசாகப் புன்னகைத்தான்…

அவனது புன்னகை அவளையும் தொற்றிக் கொள்ளவே தானும் பதிலுக்குப் புன்னகைத்தாள்…

“நாளைய தினம் எல்லோரும் கோவிலுக்குப் போகலாமா?”

“கோவிலுக்கா?”

“பின்னே கோலாலம்பூருக்கா போகக் கேட்டேன்”
என்றான் அவளைப் பார்த்தபடி…

“பக்கத்துக் கோவிலுக்கே போக முடிவதில்லை இதில் கோலாலம்பூருக்காம்”
என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்…

பின்னே வெளியே சொல்லி விட்டு அவனிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள அவளுக்கென்ன வேண்டுதலா…

“அக்காவிடம்…”
என்று கஸ்தூரி ஏதோ சொல்ல வரும் முன்பாகச் சூரியன் இடையிட்டான்…

“உன் அக்காவையும் அழைத்துக் கொண்டு நாளைக்குக் காலையில் தயாராக இரு…”
என்றவன் திரும்பி நடக்கத் தொடங்கினான்…

சற்றே நின்று அவளைத் திரும்பிப் பார்த்து
“நான் சொன்னது காதில் விழுந்தது தானே…”
என்றான் வேண்டுமென்றே குரலில் இறுக்கத்தைக் கொண்டு வந்து…

அவனுக்குத் தெரியும் அவனது இந்தக் குரலுக்குப் பயந்து நிச்சயமாக அவள் நடந்து கொள்வாள் என்று…

ஏனெனில் கஸ்தூரி சொல்வதை மட்டுமே காயத்ரி கேட்பாள் என்பது அவனுக்கு இந்த இரண்டு மாதங்களில் தெரிந்திருந்தது…


கோவிலுக்குக் கொண்டு செல்லுவதற்காகப் பறித்து வைத்த பூக்கள் அடங்கிய கூடையையும் எடுத்துக் கொண்டு வந்தாள் கஸ்தூரி…

பல்லவி மற்றும் காயத்ரி தயாராகி வந்தார்கள்…

வாகனத்தின் பின் இருக்கையில் மூன்று பெண்களும் ஏறிக் கொள்ள சூரியன் சாரதி இருக்கையில் அமர்ந்து கொண்டு வீட்டைப் பார்த்த வண்ணம் இருந்தான்…

வாகனத்தை எடுக்காமல் அங்கே என்ன பார்க்கிறான் என அவனது பார்வையைத் தொடர்ந்து பார்த்த காயத்ரி அசைவற்றுப் போனாள்…

பட்டு வேஷ்டி சட்டையுடன் கம்பீரமே உருவாக நடந்து வந்து கொண்டிருந்தான் ஆதித்ய வர்மன்...

எங்கெங்கோ அலை பாய்ந்த மனதை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தாள்…

அதன் பின்னரே அவனும் தங்களுடன் தான் வருகிறான் என்பதை உணர்ந்த காயத்ரி திரும்பிக் கஸ்தூரியைப் பார்த்தாள்…

அவளது பார்வைக்குப் பதிலாகப் பற்களை ஈ என்று இளித்துக் காட்டியபடி
“எனக்கே இப்போது தானக்கா தெரியும்”
என்றாள் அப்பாவியாக…

ஆதித்யன் வந்து வாகனத்தில் ஏறியதும் வாகனம் ஊரின் நடுநாயகமாக இருக்கும் அம்மன் கோவிலை நோக்கி விரைந்தது…

ஆதித்யன் வாகனத்தில் ஏறியதுமே தலையைக் குனிந்து தன் கைவிரல்களையே பார்த்தபடி அமர்ந்து இருந்தாள் காயத்ரி…

அவளது செய்கையைப் பின்னால் பார்ப்பதற்காகப் பொருத்தப் பட்டிருக்கும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்…

“பத்து விரல்களும் அதே இடத்தில் தான் இருக்கிறதா? என்று அம்மணி ஆராய்ச்சி செய்கிறார்கள் போல”
எனத் தனக்குள் சொல்லிக் கொண்டான்…

அவளது செய்கை அவனுக்குக் கடுப்பேற்றுவது போலவே இருந்தது…

கோவில் வாசலுக்கு வரும் வரையில் கூடக் காயத்ரி நிமிர்ந்து பார்க்கவில்லை…

கோவிலுக்கு வந்து சேர்ந்ததும் கஸ்தூரி அர்ச்சனைப் பொருட்களை வாங்கினாள்…

வெண்ணிறச் சேலை அணிந்திருந்த அவளை மற்றவர்கள் ஒரு மாதிரிப் பார்ப்பது போல அவள் உணர்ந்தாள்…

அது உண்மையா அல்லது அவளது பிரமையா என்பதை அவளால் கணிக்க முடியவில்லை…

வீணாக எதையும் போட்டு மனதைக் குழப்பக் கூடாது என நினைத்தவள் அர்ச்சனைப் பொருட்களைக் கொண்டு வந்தாள்…

ஐவரும் கால்களை அலம்பி விட்டுக் கோவிலின் வெளிப் பிரகாரத்தைத் தாண்டி உட் பிரகாரத்தினுள் உட் பிரவேசித்தனர்…

உள் நுழைந்து சிறிது நேரம் கண்களை மூடி நின்ற காயத்ரி அப்போது தான் அங்கே நின்றிருந்த மற்றவர்களைப் பார்த்தாள்…

சரண்குமார் மற்றும் ஏஞ்சலினா அங்கே நின்றிருந்தார்கள்…

கஸ்தூரிக்கும் காயத்ரிக்கும் ஆனந்தம் என்றால் பல்லவிக்கோ பேரானந்தம்…

அவள் ஓடிச் சென்று சரணின் கையைப் பிடித்துக் கொண்டாள்…

இப்போது அவள் கேட்காமலேயே இனிப்பை எடுத்து நீட்டினான் சரண்…

அதைப் பெற்றுக் கொண்ட பல்லவியும்
“நன்றி” என்று சொல்லிப் புன்னகைத்தாள்…

அதைப் பார்த்த சரணுக்கு ஆச்சரியமாகப் போயிற்று…

“எல்லாம் இவர்கள் கை வண்ணம்”
என்று சொல்லிக் காயத்ரியைப் பார்த்தான் சூரியன்…

ஏஞ்சலினா காயத்ரியை ஓடி வந்து கட்டிக் கொண்டாள்…

அம்மன் கோவிலில் ஏஞ்சலினாவைப் பார்த்த காயத்ரிக்கு அப்போது கொஞ்சம் கூடச் சந்தேகம் வரவில்லை…

ஏனெனில் அவளைப் பார்த்ததும் காயத்ரியின் மனம் சந்தோஷத்தில் மூழ்கி இருந்தது…

சந்தோஷமான தருணங்களில் கூட நம் மனம் சுற்றுப்புறத்தைக் கவனிக்க மறந்து விடுகிறது போலும்…

அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சூரியன்… அண்ணனின் காதில் ஏதோ கூறினான்…

காயத்ரியைக் கட்டியணைத்து நின்றிருந்த ஏஞ்சலினா
“இன்றோடு உன் துன்பங்கள் எல்லாம் தூள்தூளாக வேண்டுமென்று வேண்டிக் கொள் காயு... நான் உனக்காக ஆண்டவரை ஜெபித்தது அவன் காதுகளுக்கு எட்டி விட்டது”
என்றபடி அவளது நெற்றியில் முத்தமிட்டாள்…

அம்மன் சந்நிதானத்தில் அவளைக் கண்களை மூடி நின்று வேண்டிக் கொள்ளுமாறு சொன்ன ஏஞ்சலினா தானும் கண்களை மூடிக் கொண்டாள்…

காயத்ரி இரு கரம் கூப்பியபடி கண்களை மூடி நின்றாள்…

கஸ்தூரியும் கண்களை மூடிக் கொள்ள, இவர்களைப் பார்த்திருந்த பல்லவி தானும் கண்களை மூடியபடி நின்றாள்…

இடையிடையே ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து மற்றவர்கள் எல்லோரும் சரியாகத் தான் கண்களை மூடி இருக்கிறார்களா என்பதையும் கவனித்தாள் பல்லவி...

அவளது செயலில் வந்த சிரிப்புடன் அவளது காதை வலிக்காமல் முறுக்கினான் சரண்…

காயத்ரிக்குத் தெரியாமல் ஏதேதோ சமிக்ஞைகள் பரிமாறப் பட்டன...

கஸ்தூரியும் கண்கள் மூடி நின்றதால் அவள் எதையும் பார்க்கவில்லை...

கண்கள் மூடி நின்றிருந்த காயத்ரியின் முன்னால் போய் நின்றான் ஆதித்யன்...

அவளுக்கு முன்னால் ஏதோ நிழலாடுவதை உணர்ந்தவள் கண்களைத் திறக்கவில்லை...

"காயத்ரி தேவி"
என்றான் ஆதித்யன் அழுத்தமாக...

அந்த அழைப்பு அவளைக் கண்களைத் திறந்து அவனைப் பார்க்கச் செய்தது...

அவனது கண்களைப் பார்த்தவள் அசைவற்று நின்றாள்...

அவனும் அவளது விழிகளைப் பார்த்தபடி
"நான் உன்னோடு வாழ வேண்டும்"
என்றான் வேண்டுதலாக...

அவன் சொன்னதை உள் வாங்கும் முன்பாகவே அது நடந்தேறியது...

காயத்ரி தேவியின் கழுத்தில் இரு மனங்களை ஒருங்கிணைக்கும் அந்த மஞ்சள் கயிற்றால் மூன்று முடிச்சைப் போட்டு அவளைத் தனக்குரியவளாக்கினான் ஆதித்ய வர்மன்...

அவளது கழுத்தில் ஆதித்யன் தாலி கட்டும் போது பூக்களை அவர்கள் மீது போட்டு சரணும் சூரியனும் வாழ்த்தினார்கள்...

ஏஞ்சலினா தன் தோழியை மனதார வாழ்த்த, பல்லவி புன்னகைத்தவாறே நின்றிருக்க, கஸ்தூரி ஸ்தம்பித்து நின்றாள்...

அவன் என்ன செயலைச் செய்தான் என்பதை உணர்ந்த காயத்ரிக்குத் தலை கிறுகிறுத்தது...

அப்படியே மயங்கிக் கீழே விழப் போனவளைத் தாங்கிக் கொண்டான் அவள் கணவன் ஆதித்ய வர்மன்...

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"யாருக்கு யாரென்று எழுதியதை
இன்று தான் உலகம் அறிந்து கொள்ளும்...
பாதியில் வந்த சொந்தம் ஒன்றே
உயிர் விடும் வரையில் கூட
வரும்..."
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 13

7c17ec8eb59d55b03d85ba8207c2f8d2~2.jpg

IMG-20210627-WA0049.jpg

9421b2dee7e53c62ebc433999e03c6af~2.jpg


கோவிலின் கதவில் தொங்க விடப் பட்டிருந்த சிறுமணிகள் காற்றில் அசைந்து கலகலவெனச் சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தன…

கோவிலுக்கே உரிய ஒரு வித நறுமணம் நாசியைத் தீண்டிச் சென்றது…

அர்ச்சகரின் மந்திரம் ஒலிக்கும் குரலும் பூஜை நேரத்திற்கான இதர ஓசைகளும் செவி வருடிச் சென்றன…

இந்த அழகிய விடயங்களை இரசிக்க முடியாத அளவிற்கு அனைவருமே ஒரு விதமான கவலையுடன் காணப் பட்டார்கள்…

ஏனெனில் காயத்ரியின் மயங்கிய நிலையே அதற்குக் காரணமாகும்…

“அக்கா” என்றவாறு பதறிப் போய் அவளருகில் ஓடிச் சென்றாள் கஸ்தூரி…

அதற்குள் எங்கிருந்தோ சிறிதளவு நீர் கொண்டு வந்த சூரியன் அதனைக் காயத்ரியின் முகத்தின் மீது தெளித்தான்…

ஆனால் அவளிடம் எந்த அசைவும் இல்லாமல் போகவே பதறி விட்டான் ஆதித்யன்…

அதன் பின்னர் சற்றும் தாமதிக்காமல் எல்லோரும் வீடு நோக்கி விரைந்தனர்…

வீட்டிலேயே வைத்துக் காயத்ரிக்குச் சிகிச்சை நடந்தது…

இரண்டு மணி நேரத்தில் அனைவரையும் ஒரு வழி செய்துவிட்டு மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தாள் காயத்ரி தேவி…

அவளது விழிகள் ஆதித்யன் மீதே நிலைத்து நின்றது…

அந்தப் பார்வையில் குற்றஞ்சாட்டல் அப்பட்டமாகத் தெரிந்தது…

அதோடு ஒரு வித பதற்றமும் இயலாமையும் சேர்ந்து கொண்டது…
மேலும் கோபமும் கூடவே இணைந்து கொண்டது…

ஆதித்யனுக்கும் காயத்ரிக்கும் தனிமை கொடுக்க வேண்டி மற்றவர்கள் விலகி வெளியே சென்றார்கள்…

காயத்ரி அதன் பின்னர் ஆதித்யனை ஏறெடுத்துக் கூடப் பார்க்கவில்லை…

ஆதித்யன் செய்த திடீர்ச் செயலினால் ஒரு பெண்ணின் வாழ்வு கேள்விக் குறி ஆகி விட்டது என்ற கவலை…
ஆண் என்றால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாமா? எனது சம்மதம் முக்கியம் இல்லையா? என்ற கோபம்…

இனிமேல் என்ன செய்வது என்கின்ற பெருங் குழப்பம்… என ஏராளமான உணர்ச்சிக் கலவைகளால் சோர்ந்து போய்க் கிடந்தாள் காயத்ரி…

காயத்ரியையே பார்த்த வண்ணம் இருந்த ஆதித்யன் ஏதோ சொல்வதற்கு வாயைத் திறந்த போது, படுக்கையை விட்டு வேகமாக இறங்கினாள் காயத்ரி...

அவள் வேகமாக இறங்குவதைப் பார்த்துப் பதட்டம் அடைந்தவன் அவளருகில் ஓடி வந்து அவளைப் பிடித்துக் கொண்டான்…

ஒரு நொடி அப்படியே ஸ்தம்பித்து நின்றவள் மறு நொடியே தன் பலங் கொண்ட மட்டும் அவனை உதறித் தள்ளினாள்…

எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதமாக அவள் உதறித் தள்ளி விட்டதால், நிலை தடுமாறியவன் சட்டென்று தன்னைச் சுதாரித்துக் கொண்டான்…

“ஏய்…” என்று அவன் மீண்டும் ஏதோ சொல்ல முயன்ற போது…

“போதும்…”

“என்ன…”

“நீங்கள் செய்தது எல்லாம்…”

“நான் என்ன செய்தேன்…”

“நீங்கள் என்ன செய்யவில்லை…”

“காயத்ரி சொல்ல வருவதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்…”

“என்ன தெளிவாகச் சொல்ல வேண்டும்… புரியாதவர்களுக்குத் தான் தெளிவாகச் சொல்ல வேண்டும்…”

“புரியவில்லை…”

“புரியாதது போல நடிப்பவர்களிடம் எல்லாம் பேச முடியாது…”

“ஏய்… உன் பிரச்சினை தான் என்னடி…”

“பிரச்சினையைப் பற்றி நீங்கள் கேட்கிறீர்களா? பிரச்சினையே நீங்கள் தானே…”

“நானா?...”

“…………….”

“ஏன் இந்த அமைதி…”

“பேசப் பிடிக்கவில்லை…”

“எது பேசப் பிடிக்கவில்லையா? இல்லை பேசும் என்னையே பிடிக்கவில்லையா?...”

“உங்கள் பேச்சும் பிடிக்கவில்லை… உங்களுடன் பேசவும் பிடிக்கவில்லை… உங்களையும் பிடிக்கவில்லை… போதுமா?...”
என்றவள் அவனை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் வேகமாகத் தனது அறைக்குள் போய் விட்டாள்…

காயத்ரி சென்ற திசையையே ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்…

அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை ஆனாலும் அவளுக்கு இந்தத் திடீர்த் திருமணத்தால் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கும் என்று நினைத்தானே தவிர காயத்ரி தன்னை வெறுக்கத் தொடங்கி விட்டாள் என்பதை அறியவில்லை…

அதை அறியும் போது அவன் என்ன செய்வான் எவ்விதம் நடந்து கொள்வான் என்பது யாருக்குமே தெரியாதல்லவா?…

எல்லோரும் சாதாரணமாக வழமை போல் இருந்தார்கள்... இவர்களிடையே இருந்த முரண்பாடு யாருக்குமே தெரிந்திருக்கவில்லை...

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

மூன்று தினங்கள் கடந்த நிலையில் காலை நேரத்தில் தோட்டத்தில் தனியே அமர்ந்திருந்தாள் காயத்ரி…

அவள் தோட்டத்தில் இருப்பதைப் பார்த்த ஆதித்யன் அவளிடம் எவ்விதம் பேச்சைத் தொடங்குவது என்பது போல யோசித்தவாறே அவளை நோக்கி வந்தான்…

அவன் வருவதைப் பார்த்ததும் வழமைபோல எழுந்து செல்லத் தொடங்கியவளின் வலது கரத்தைப் பற்றி அவளைச் செல்லவிடாமல் தடுத்தவன்…

“இந்த நேரத்தில் உனக்கு ஏதாவது விருப்பங்கள் இருக்குமே?”
என்று கேட்டான் அவளது மேடிட்டிருந்த வயிற்றை நோக்கி...

அவன் கேட்டதன் அர்த்தம் புரிந்தாலும் வேண்டுமென்றே பேசாமல் நின்றிருந்தாள் காயத்ரி…

“உன்னைத் தானே கேட்கிறேன்…”
என்றவனை நிமிர்ந்து பார்த்தவள், தனது கரத்தைப் பற்றி இருந்தவனின் கரத்தையும் பார்த்தாள்…

ஒரு நொடிப் பொழுது இமைகளை அழுந்த மூடித் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவள் அவன் எதிர்பாராத வகையில் தன் கரத்தை உதறி அவனைத் தள்ளி விட்டாள்…

அவள் தள்ளி விட்ட வேகத்தில் சற்றே தடுமாறியவன் தன்னைச் சட்டென்று சுதாரித்துக் கொண்டு அவளைப் பார்த்தான்…

“என் விருப்பத்தையா கேட்கிறீர்கள்… அதிசயமாக இருக்கிறதே…
சரி இப்போதாவது கேட்க வேண்டும் என்று தோன்றியதே…
சொல்லுகிறேன் கேளுங்கள்… உங்களை விட்டு நான் தூரமாகப் போய் விட வேண்டும்…
உங்களைப் பார்க்கவே பிடிக்கவில்லை எனக்கு…”
என மூச்சிரைக்கத் தனது ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்து விட்டு விடுவிடென்று உள்ளே சென்று விட்டாள் அவள்…

அவள் தன்னுடன் சுமுகமாகப் பேசப் போவதில்லை என்று ஆதித்யனுக்குத் தெரிந்திருந்த போதும் அவளுடன் பேச வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்தவனுக்கு அவளது இந்த வார்த்தைகளைக் கேட்டதும் மனதை ஏதோ செய்தது…

அவளது விருப்பத்தை நிறைவேற்றி வைப்பது தனது தலையாய கடமை என்று கூட எண்ணினான்…

அந்த எண்ணத்தைச் செயல் படுத்துவது கஷ்டமாக இருக்கும் என்பதை அவன் அறியாமலும் இல்லை…

தனக்குள் ஒரு முடிவு எடுத்தவனாக அவன் அறைக்குள் சென்றான்…

எங்கெங்கோ அலைபேசியில் இருந்து தகவல்கள் பறந்தன…

இறுதியாக சூரியவர்மனைத் தனது அறைக்கு அழைத்துக் கொண்டான்…

“அண்ணா என்ன விஷயம்”

“நான் இன்றைக்கு இரவு நமது பழத் தோட்டத்துக்குப் போகப் போகிறேன் சூரியா”

“என்ன அண்ணா விளையாடுகிறாயா? இன்றைக்கே செல்லும் அளவிற்கு அங்கு என்ன அப்படிப் பெரிய வேலை”

“சூரியா உனக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை… இங்கே எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்துக் கொள்”
என்ற ஆதித்யன் அத்துடன் தான் சொல்ல வேண்டியதெல்லாவற்றையும் சொல்லி விட்டேன் என்பது போலக் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்…

இந்த அண்ணன் நான் இந்த அறைக்குள் நிற்கும் வரையிலும் வெளியே வரப் போவதில்லை என்பதைப் புரிந்து கொண்ட சூரியன் தன் அறைக்குச் சென்று விட்டான்…

ஆனாலும் இந்த அண்ணனுக்கு என்னவாயிற்று… அவனது வாழ்வில் எல்லாம் சரி ஆகி விட்டதே என்று நான் நினைத்துக் கொண்டிருக்க இவன் இப்படிச் சொல்லிக் கிளம்பப் பார்க்கிறானே…

முகம் வேறு பிரகாசம் இல்லாமல் ஏதோ போல இருக்கிறதே… இங்கே என்ன தான் நடக்கிறது என்றே புரியவில்லையே எனத் தனக்குத் தானே புலம்பிக் கொண்டான்…

அந்த நாளின் பகல் பொழுது யாருக்காகவும் காத்திருக்காமல் வேகமாக ஓடிச் சென்று ஓய்வு எடுத்துக் கொண்டு இரவை அனுப்பி வைத்தது…

ஆதித்யனின் வீடு என்றுமில்லாத வகையில் நிசப்தமாக இருந்தது…

இராப் பொழுதுக்கே உரிய அமைதியா? அல்லது அந்த வீட்டு அங்கத்தவர்களின் மனதில் குடி கொண்டிருந்த சொல்ல முடியாத உணர்வுகளா? ஏதோ ஒன்று தான் காரணமாக இருக்க வேண்டும்…

ஆதித்யன் பயணத்திற்குச் செல்ல வேண்டி வாகனத்தில் ஏறி அமரும் வரையிலும் தோட்டத்து வீட்டையே பார்ப்பதை நோக்கிய சூரியனுக்குத் தான் மனது கனத்தது…

அண்ணனுக்கும் அண்ணிக்கும் இடையே ஏதோ ஒரு மனஸ்தாபம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது அவனுக்குப் புரியாமல் இல்லை…

அதை அண்ணனாகச் சொல்லாத வரையில் தான் கேட்டு அவனைச் சங்கடப் படுத்தக் கூடாது என்ற இங்கிதம் தெரிந்தவன் என்பதால் ஒதுங்கியே நின்றான்…

வாகனத்தில் ஏறிய ஆதித்யன் சூரியனை அழைத்தது கூடத் தெரியாத அளவிற்கு அவனது எண்ணங்கள் எல்லாம் எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருந்தன…

ஆதித்யனின் பலமான அழைப்பில் திடுக்கிட்டு அவனருகில் ஓடியவனை
“என்ன சூரியா உனக்கும் ஏதாவது பிரச்சினையா?”
என்று கேட்ட தமையனையே பார்த்திருந்தவனது உள் மனது
“உனக்கும் ஏதும் பிரச்சனையா என்று அண்ணா கேட்பதில் இருந்தே புரிகிறது அவனுக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று… இது சீக்கிரமாகத் தீர வேண்டும்…”

“டேய் என்னடா நின்ற வாக்கிலேயே தூக்கமா?"

“இல்லை இல்லை ஒன்றுமில்லை அண்ணா நீங்கள் பத்திரமாகப் போய் வாருங்கள்”

“சூரியா… இங்கே எல்லாம் பார்த்துக் கொள்”

“நான் பார்த்துக் கொள்கிறேன் அண்ணா”

“வீட்டிலேயே இருந்து கொள் அது வந்து…”

“அண்ணா… அண்ணியைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன்… அவர்கள் என்னுடைய அண்ணி அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் எனக்குச் சொல்ல வேண்டுமா அண்ணா…”
என்ற தம்பியின் கரத்தை ஒரு முறை இறுகப் பற்றியவன்
அதன் பிறகு சிறிதும் தாமதிக்காமல் சென்று விட்டான்…

ஆதித்ய வர்மன் வீட்டை விட்டு வெளியே சென்றது காயத்ரிக்குத் தெரியாது…
ஆதித்யன் அது பற்றி எதுவும் சொல்லவும் இல்லை…

அதற்கான காரணமும் இருந்தது…
அவன் தனக்காகத் தான் திடீரெனக் கிளம்பிச் செல்கிறான் என்பது அவளுக்குத் தெரிந்து இருந்தால், அவனுக்கு முன்பாக அவள் வீட்டை விட்டுப் போய் இருப்பாள்…

அவள் அப்படி எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்பதற்காகவே ஆதித்யன் வேலையைக் காரணம் காட்டி வெளியே சென்று விட்டான்…

காலையில் வழமை போல எழுந்து தோட்டத்தில் நடந்த காயத்ரிக்கு மனதில் உற்சாகமே இருக்கவில்லை…

இந்த வீட்டில் இருப்பது ஆதித்ய வர்மன் என்று தெரிந்த உடனேயே தான் இங்கிருந்து சென்றிருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள்…

தான் நேசித்தவன் இப்படிச் சுயநலமாக நடந்து கொள்வான் என அவள் கனவிலும் எண்ணி இருக்கவில்லை…

அவளது உள்ளத்தில் உயரத்தில் இருந்தவன் நொடியில் பள்ளத்தில் விழுந்து தாழ்ந்து போனதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை…

கட்டிய மனைவியென்று ஒருத்தியை வீட்டில் வைத்துக் கொண்டு, என்ன தான் உயிராக நேசித்திருந்தாலுமே கூட தன் கழுத்தில் அவன் தாலி கட்டியது பெரும் குற்றம் என்று நினைத்துக் கொண்டாள்…

அவன் கட்டிய மஞ்சள் கயிறு பல்லவியின் வாழ்வை மாய்த்த கயிறு ஆக மாறிவிட்டது என்பதையும் புத்தி சுவாதீனம் இல்லாத மனைவியை எவ்விதம் நிராகரிக்கலாம் என்பதையும் காயத்ரி அடிக்கடி எண்ணிப் பார்த்துக் கொண்டாள்…

இது பல்லவிக்கு ஆதித்யன் செய்த துரோகம் என்பதையும் தாண்டிப் பல்லவிக்குக் காயத்ரி செய்த துரோகம் என்றும் ஆகி விடுமே…

எனத் தனக்குள்ளேயே புலம்பித் தவித்துக் கொண்டிருந்தவளருகில் வந்து அமர்ந்தாள் கஸ்தூரி…

மெதுவாகக் காயத்ரியின் தோளில் சாய்ந்தவாறு லேசாகப் பாடத் தொடங்கினாள்…

“தனிமையிலே இனிமை காண முடியுமா? தனிமையிலே இனிமை காண முடியுமா? தனிமையிலே…”

“அதற்கடுத்த வரி தெரியாதென்றால் விட்டு விடு… எதற்கு அண்ணியின் காதில் இரத்தம் வடிய வைக்கிறாய்…”
என்ற குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவளைப் பார்த்தபடி நின்றிருந்தான் சூரிய வர்மன்…

அவனைப் பார்த்ததும் சட்டென்று தலையைக் குனிந்து கொண்டாள் கஸ்தூரி…

அவளது சிவந்த முகத்தைப் பார்த்தவனுக்குச் சிரிப்பாக இருந்தது…
லேசாகச் சிரித்தபடி இருவரையும் கடந்து சென்று விட்டான்…

அவன் செல்வதையே பார்த்த கஸ்தூரி
“அக்கா ஒரு பேச்சுக்காவது காதில் இருந்தெல்லாம் இரத்தம் வடியவில்லை இவள் நன்றாகத் தான் பாடுகிறாள் என்று சொல்லி இருக்கலாமே”
என்று தமக்கையிடம் ஆதங்கப் பட்டாள்…

அப்போது தான் தங்கையைத் திரும்பிப் பார்த்தவளோ
“என்ன சொன்னாய்…”
என்றாள் ஒன்றும் புரியாமல்…

அவளது முகத்தைப் பார்த்த கஸ்தூரியோ
“என்ன சொன்னேனா? சரியாகப் போயிற்று… அப்படி என்றால் நீங்கள் இந்த உலகத்திலேயே இல்லை என்று சொல்லுங்கள் அக்கா”
என்றபடி கையைத் தலையில் வைத்துக் கொண்டாள்…

இதை எதையும் கண்டு கொள்ளாத காயத்ரி
“எனக்கு மனது சரியில்லை தேவிம்மா”
என்றாள் தங்கையின் தோளில் சாய்ந்தபடி…

எப்போதாவது அபூர்வமாகவே காயத்ரி, கஸ்தூரியைத் ‘தேவிம்மா' என்றழைப்பாள்…
அதிலும் அவளுக்கு மனது பாரமாக இருக்கும் போது தான் அந்தப் பெயரை உச்சரிப்பாள்…

அந்தப் பெயரைத் தமக்கை சொன்னதும் அவளை இறுக அணைத்துக் கொண்டாள் கஸ்தூரி...

“என்னவானது அக்கா உன் கஷ்டம் எல்லாம் தீர்ந்து போனது என்றல்லவா இந்த நொடி வரை நினைத்திருந்தேன்”

“இதுவரை நடந்தது எல்லாம் ஒரு கஷ்டமா என்பது போல இந்த நொடி ரொம்பக் கஷ்டமாக இப்போது இருக்கிறது தேவிம்மா”

“அக்கா எனக்கு ஒன்றும் புரியவில்லை”

“தேவிம்மா நான் சுயநலமானவளா?”

“பைத்தியமா அக்கா உனக்கு என்ன கேள்வி இது?”

“என் கழுத்தில் தொங்கும் இந்தக் கயிற்றைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

“இது வெறும் கயிறு இல்லை அக்கா உன் துன்பங்களை எல்லாம் பொடிப் பொடி ஆக்க வந்த மந்திரக் கயிறு என்று தான் நான் சொல்லுவேன்”

“ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லையே”

“என்னக்கா ஏதேதோ பேசுகிறாய்”

“தேவிம்மா… நான் பல்லவிக்குத் துரோகி ஆகி விட்டேன்”

“என்னக்கா பிதற்றுகிறாய்…”

“பல்லவி இங்கே ஏன் இருக்கிறாள் தெரியுமா? அவள் இந்த வீட்டின் மருமகள்… புத்தி சுவாதீனம் இல்லாத அவளுக்கு இங்கு நடப்பது எதுவும் தெரியாதல்லவா”

“ஐயோ அக்கா குழப்பாமல் விளக்கமாகச் சொல்லு”

“ பல்லவியின் கணவன் ஆதித்யன்… அப்படி இருக்கும் போது அவர் எப்படி என் கழுத்தில் தாலி கட்டலாம்…”

“அக்கா…”

“நாளைக்கே அவளுக்குக் குணமடைந்த பிறகு… ஐயோ என் உயிர்த் தோழி காயத்ரியே என் வாழ்க்கையைப் பறித்துக் கொண்டு விட்டாளே என்று நினைக்க மாட்டாளா?”

“……………………”

“அதன் பிறகு நான் ஒரு நொடி கூட உயிரோடு இருக்க மாட்டேன் தேவிம்மா”

“ஐயோ அக்கா”

“ஒரு காலத்தில் நான் அவரை நேசித்தேன் தான்... நான் அவரை நேசித்தது அவருக்கு கூடத் தெரியாது… அவர் தன் நேசத்தைச் சொன்ன போதும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அவரது நேசத்தை மறுத்துத் துன்பத்தைக் கொடுத்து விட்டு வேறு திருமணம் செய்து கொண்டவள்… ஆனால் திருமணத்தின் பின்னால் நான் என் கணவருக்கு உண்மையாகத் தான் இருந்தேன் தேவிம்மா…
மீண்டும் ஆதித்யனைப் பார்த்ததும் புதைத்து வைத்த நேசம் முளை விடத் தொடங்கி விட்டது..”

“நீங்கள் சொல்லியா அக்கா இதெல்லாம் தெரிய வேண்டும்”

“ஆனால் நான் நேசித்தவர் இப்போது இத்தனை தூரம் தரம் இறங்கிப் போய் ஒரு பெண்ணின் அதுவும் என் தோழியின் வாழ்க்கையைத் துச்சமாக நினைத்து விட்டாரே”

“அக்கா அழாதீர்கள் அக்கா நீங்கள் யாருக்கும் துரோகம் செய்ய நினைத்துக் கூடப் பார்க்க மாட்டீர்கள் அக்கா…”
என்றவாறு தமக்கையை ஆறுதல் செய்தவள் அவளறியாமல் தன் விழி நீரைத் துடைத்துக் கொண்டாள்…

அந்த நேரத்தில் கையில் பொம்மையுடன் வந்த அனுபல்லவி இருவரும் அழுவதைப் பார்த்து விட்டாள்…

ஓடி வந்து கையில் வைத்திருந்த பொம்மையைக் காயத்ரியின் கையில் வைத்தபடி
“அழுவாதே நீ… இந்தா என் பொம்மை உனக்குத் தான்… நானே கொடுப்பேனே உனக்கு…”
என்றவாறு அவளது முகத்தைப் பிடித்துக் கண்களைத் துடைத்து விட்டாள்…

பல்லவியின் வார்த்தைகளைக் கேட்ட கஸ்தூரி திடுக்கிட்டுத் திரும்பித் தமக்கையைப் பார்த்தாள் பொம்மையும் உன் கணவனும் ஒன்றா என்பது போல எண்ணம் ஓடியது அவளுக்கு…

காயத்ரியோ பல்லவியை இறுகத் தழுவி இருந்தாள்…

காயத்ரியின் தோளில் தலையை வைத்திருந்த பல்லவியோ
“உனக்கு என்ன வேணும்னாலும் என்னையே கேளு நான் கொடுப்பேன்”
என்றாள் சிறு பிள்ளையாக…

காயத்ரியின் தோளில் பல்லவி சாய்ந்திருக்க அப்படியே இருவரையும் சேர்த்து அணைத்துக் கொண்டாள் கஸ்தூரி…

“இறைவா இருவரது வாழ்வோடும் விளையாடி விடாதே”
என மானசீகமாக வேண்டிக் கொண்டாள்…

மாடியில் நின்றிருந்த சூரியனுக்கு மூவரையும் இந்த நிலையில் பார்த்ததும் அத்தனை சந்தோஷமாக இருந்தது…

இந்த அழகான உறவுகளின் அழகிய சங்கமத்தைத் தனது புகைப் படக் கருவியால் படம் பிடித்துக் கொண்டான்…

இந்த மூன்று பெண்களுக்கு இடையே விரிசல் விழுமா? இல்லையா? காலம் தான் பதில் சொல்லும்...

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“புன்னகையில் போட்டு வைத்த கோலம் இது
மழைமேகம் பொழிந்தாலும் அழியாதது
நாயகன் ஆடிடும் நாடகம் தான்
யாருக்கு யாரென்று எழுதி வைத்தார்…”
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 14

Screen-Shot-2018-01-08-at-5.40.36-PM~2.jpg

IMG-20210701-WA0040~2.jpg

காலை நேரத்திற்கே உரிய புத்துணர்வோடு வெளிக் காற்று மெது மெதுவாக மலர்களை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது…

மலர்களை வருடிக் கொடுத்ததால் இரண்டறக் கலந்து மலர்களின் இனிய சுகந்தத்தையும் சுமந்தவாறு வீசத் தொடங்கியது காற்று…

காற்றோடு கலந்திட்ட பூ வாசத்தை ஆழமாக உள்வாங்கிச் சுவாசித்த படி தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தான் சூரியவர்மன்…

அப்போது கஸ்தூரி வேகமாக வெளி வாசலை நோக்கிச் செல்வதைப் பார்த்தவன் அவளை நோக்கி விரைந்தான்…

அவள் வெளியே செல்வதற்கு முன்னர் அவள் முன்பாகச் சென்று அவளைத் தடுத்தவன்…

“இந்த நேரத்தில் எங்கே செல்கிறாய் கஸ்தூரி”

“அது வந்து…”

“அதை வந்து எல்லாம் சொல்ல வேண்டாம் இப்பொழுதே சொல்லு”

“ஐயோ அப்படி இல்லை… நான் ஒரு வேலையாக வெளியே போக வேண்டும்”

“நீ வேலையாகப் போகிறாயோ? இல்லை வெட்டியாகப் போகிறாயோ? அதையா கேட்டேன் எங்கே போகிறாய் என்று தானே கேட்டேன்”

“நாங்கள் முதல் இருந்த வீட்டுக்கு”

“அப்படியா… இரு இதோ ஐந்து நிமிடத்தில் வருகிறேன்”
என்றவன் வேகமாகச் சென்று தனது வாகனத்தை எடுத்து வந்தான்…

அவனையே பார்த்துக் கொண்டு நின்றவளை வாகனத்தில் ஏறுமாறு சொன்ன போதும் அவள் அப்படியே நின்றாள்…

“ஏய் என்ன யோசனை”

“இல்லை நானே வெளியே வேறு ஏதாவது வாகனத்தில்…”

"இதோ பார் முன்பு எப்படியோ ஆனால் இப்போது நீ என் அண்ணியின் தங்கை அதனால் ரொம்ப யோசிக்காதே"

"ஆனாலும்..."

“நீ இப்போது வாகனத்தில் ஏறப் போகிறாயா? இல்லையா?”
என்றவனின் குரலில் வேகமாக ஏறி அமர்ந்து கொண்டாள் கஸ்தூரி…

“எங்கே செல்கிறேன் என்று சொல்லாமல் நீ பாட்டுக்குக் கிளம்பிப் போய் விடுவாயா? நீ இப்படிப் போவது அண்ணிக்கு தெரியுமா?”

“தெரியாது… தெரிந்தால் அக்கா அங்கு போக விட மாட்டார்கள்…”

“நினைத்தேன்… அண்ணி அங்கு செல்ல உன்னை விட்டிருக்க மாட்டார்கள் என்று எனக்கும் தெரியும்…”

“அதனால் தான்…”

“அதனால் அம்மணி சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விட்டீர்கள் போலும்”

“…………………”

“ஏன் கஸ்தூரி அந்த வீட்டிற்கு இப்படித் தனியாகப் போகும் அளவிற்கு அப்படி என்ன தேவை இப்போது… இருந்தாலும் உனக்குத் தைரியம் அதிகம் தான்…”

“என்னுடைய ஒரு சில முக்கியமான வேலைவாய்ப்புக்குத் தகுதியான சான்றிதழ்கள் அங்கே எடுக்க வேண்டும்…”

“அது சரி… ஆனால் உன்னைப் போனவுடன் வரவேற்று அதை எல்லாம் கொடுப்பார்கள் என்றா நீ நம்புகிறாய்…”

கஸ்தூரி அந்த வீட்டிற்குச் சென்று தனது சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும் என்று காயத்ரிக்குச் சொன்ன போது அவள் ஒரேயடியாக மறுத்து விட்டாள்…

அந்த வீட்டிற்குப் போனால் கல்விச் சான்றிதழ் கிடைக்குமோ கிடைக்காதோ கஸ்தூரியின் பெண்மைக்கு அவமானச் சான்றிதழ் கண்டிப்பாகக் கிடைக்கும் என்பது காயத்ரிக்குத் தெரியாமலா இருக்கும்…

ஆனால் கஸ்தூரிக்குத் தான் மனம் கேட்கவில்லை…

எப்பாடு பட்டாவது அந்தச் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும் என்று மனது கிடந்து துடித்தது…

வீட்டை விட்டு வெளியே வந்தால் போதுமென்று இருந்தவளுக்கு அதை எடுத்து வர வேண்டும் என்ற எண்ணம் அப்போது தோன்றவே இல்லை…

இப்போது இந்த எண்ணம் தோன்றக் காரணம் அக்காவை எப்படியும் இனிமேல் ஆதித்யன் பார்த்துக் கொள்வார்...

ஆனாலும் அவர் அனு அக்காவைப் பற்றி யோசிக்காதது தான் பெரிய கவலையாக இருக்கிறது...
இதைப் பற்றிப் பிறகு சிந்திப்போம்...

இனியும் அக்காவுக்குச் சுமையாக நான் இருக்கக் கூடாது என்று நினைத்தாள்…

அவளது படிப்பிற்கு நிச்சயமாக அவளுக்கு ஒரு ஆசிரியர் தொழில் கிடைக்கும்…

அதற்கு முதலில் அவளது சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும் என்று நினைத்தாள்…

அதனால் அவர்கள் தேவையற்ற பேச்சுப் பேசினால் ஒரு கை பார்க்கலாம் என எண்ணி இருந்தவளுக்கு… அவர்கள் தன் மீதுள்ள வெறுப்பில் சான்றிதழ்களைக் கிழித்து விட்டால் என்ன செய்வது என்று கூட யோசித்துக் கொண்டிருந்தாள்…

அப்படி இருக்கும் போது சூரியவர்மனே இப்படி அந்த வீட்டைப் பற்றிக் கேட்டதும் அவளது கொஞ்ச நஞ்சத் துணிவும் முக்காடு போட்டுக் கொண்டு பதுங்கத் தொடங்கியது…

இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்
“போய்த்தான் பார்ப்போமே”
என்றாள் மெதுவாக...

“அது சரி தான் முயற்சி செய்து பார்ப்போம்... ஆனால் அதைத் தைரியமாகச் சொல்ல வேண்டும் கஸ்தூரி"
என்றான் சூரியவர்மன்…

அதற்கு மெல்லப் புன்னகைத்தவள் வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்…
அமைதியாகவே வாகனம் விரைந்தது…

பாதையை அவள் சொல்லாமலே அவன் வாகனம் செலுத்துவதை உணர்ந்தவள் மெல்ல அவனைத் திரும்பிப் பார்த்தாள்…

“ஏதாவது கேட்க வேண்டுமா?”

“உங்களுக்குப் பாதை தெரியுமா?”

“தெரியாமலா போய்க் கொண்டிருக்கிறேன்”

“அப்படி இல்லை… உங்களுக்கு அந்த வீடு தெரியாதல்லவா? ஆனால் எப்படிச் சரியாகப் போய்க் கொண்டிருக்கிறீர்கள்?”

“எனக்கு அந்த வீடு தெரியாது என்று உனக்குச் சொன்னேனா?”

“அப்படி என்றால் தெரியுமா?”

“தெரியும் என்று சொன்னேனா?”
என்றவனின் பதிலில் அவனை முறைத்தவள் அமைதியாக வெளியே பார்த்தாள்…

“அண்ணி அந்த வீட்டில் தானே இருந்தார்கள் அதனால் எனக்கு முன்பே தெரியும்… அண்ணாவுக்காகத் தெரிந்து வைத்திருந்தேன்… “
எனத் தானாகவே அவளுக்கு விளக்கம் கொடுத்தான் சூரியன்…

"அக்கா மீது ஆதித்யன் எவ்வளவு அன்பும் அக்கறையும் வைத்து இருக்கிறார்...
இப்படி ஒரு பாசம் கிடைக்க அக்கா எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்... ஆனால் ஆதித்யன் அனு விஷயத்தில் மட்டும் செய்தது பெரிய தவறு தானே..."
என எண்ணிக் கொண்டாள்...

அப்போது சூரியன் சரியாக வீட்டு வாசலின் முன்னால் வாகனத்தை நிறுத்தி விட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்…

கஸ்தூரியோ அவனையே திரும்பித் திரும்பிப் பார்த்தபடி கீழே இறங்காமல் அமர்ந்திருந்தாள்…

எதேச்சையாக அவளைப் பார்த்தவன் புருவங்களை உயர்த்தினான்.

“என்ன?”

“அதில்லை… நீங்களும் என் கூட வரமுடியுமா?”

“என்ன எண்ணத்தில் காலையில் தனியாகக் கிளம்பினாய்… நான் வராவிட்டால் என்ன செய்திருப்பாய்?”
என்றவனின் கேள்வியில் திகைத்தவள் பேசாமல் கீழே இறங்கி வீட்டினுள்ளே சென்றாள்…

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

காலையிலேயே பக்கத்து வீட்டுப் பரிமளம் மாமி மற்றும் அவர் கணவர் என இருவருடனும் கோவிலுக்குச் சென்றிருந்தார் இந்திராணி…

அதனால் வீட்டிலே இந்திராணியின் அண்ணன் கருணாகரன் மற்றும் அவர் மனைவி மட்டுமே இருந்தார்கள்…

வரவேற்பறையில் இருந்து செய்தித்தாள் புரட்டிக் கொண்டிருந்த கருணாகரன் வாசலில் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தார்…

அங்கே நின்றிருந்தவளைப் பார்த்ததும் திகைத்துப் போய் மனைவியை அழைத்தார்…

வெளியே வந்த அவர் மனைவி சீதாவும் கஸ்தூரியைப் பார்த்ததும் திகைத்து நின்றார்...

அந்தத் திகைப்பெல்லாம் சில நொடிகள் தான்...

“என்னம்மா போன இடத்தில் இருந்து வெளியே அனுப்பி விட்டார்களா? ஆமாம் உன் அக்கா எங்கே?”
என்றார் கருணாகரன் நக்கலாக…

“இந்த வீட்டை விட்டால் இவர்களுக்கு வேறு போக்கிடம் தான் இல்லையே… அதனால் இவளைச் சமாதானத் தூது அனுப்பி இருப்பாள் போல…”
என்றார் தன் பங்குக்கு கருணாகரனின் சம்சாரம் சீதா…

“நான் தான் அன்றைக்கே சொன்னேனே திரும்பவும் வந்து நம் காலடியில் தான் விழுவார்கள் என்று பார்த்தாயா? நான் சொன்னது நடந்து விட்டது”
என்ற கருணாகரனை மானசீகமாக முறைத்தபடி அவர்கள் பேசுவதைக் கேட்டவாறு அமைதியாக நின்றாள் கஸ்தூரி…

பின்னே தேவையற்று வாயைக் கொடுத்தால் சான்றிதழ்களின் கதி அதோ கதி ஆகிவிடுமே…
அவளுக்கு வந்த காரியம் சுமுகமாக முடிய வேண்டுமே…

அவளது அமைதியைச் சோதிக்கவென்றே கோவிலுக்குப் போனவர்களும் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டார்கள்…

வாசலில் நின்றிருந்த கஸ்தூரியைப் பார்த்ததும் இந்திராணியின் முகம் அவரையும் அறியாமல் லேசாக மலர்ந்தது…

இதைப் பார்த்த கருணாகரனின் முகம் கூம்பிப் போயிற்று.

கஸ்தூரியைப் பார்த்ததும் தன் ஒன்று விட்ட தங்கையின் முகத்தில் வெறுப்பு தோன்றும் என நினைத்திருக்க, அவளது முகமோ தன் மருமகளைப் பார்த்ததும் பிரகாசமாக மாறுகிறதே…

இதை இப்படியே தொடர விடக் கூடாது. அவளது மனதைக் கலைக்க வேண்டும் என நினைத்தவர்…

“உங்களைப் போன்ற பெண்களால் தான் புகுந்த வீட்டுக்கே கெட்ட பெயர்... நீங்கள் இருவரும் ஓடிப் போன பின்னால் என் தங்கைக்கு எவ்வளவு அவமானம் தெரியுமா?”

“அண்ணா அதெல்லாம் இப்போது…”
என ஏதோ சொல்லத் தொடங்கிய இந்திராணியை இடை மறித்தார் கருணாகரன்…

“நீ பேசாமல் இரு தங்கச்சி உனக்கு உலகமே தெரியவில்லை… இவர்கள் செய்த வேலைக்கு இவளை வீட்டு வாசலை மிதிக்கவே விட்டிருக்கக் கூடாது…”
என்றார் வேண்டுமென்றே குரலை உயர்த்தி…

“கணவன் இறந்த போதே இவளது முடியை வெட்டி மூலையில் அமர்த்தி இருக்க வேண்டும்… அப்படிச் செய்திருந்தால் இவ்வளவு தூரம் போய் இருப்பார்களா?”
என்றார் மீண்டும் அவரே…

அதைக் கேட்டுப் பதறிய இந்திராணி
“ஐயோ இது என்ன பேச்சு”
என்றார் உண்மையான வருத்தத்தோடு…

அவர் ஒரு காலத்தில் காயத்ரி, கஸ்தூரி என இருவரையும் வார்த்தைகளால் குத்தியவர் தான்…

ஆனால் அவரது மருமகள்கள் இருவரும் வீட்டை விட்டுச் சென்றிருந்த இந்த இரண்டு மாதங்களில் அவரில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டு விட்டது...

அதனால் உண்மையிலுமே பதறி விட்டார்...

இந்த சம்பாஷணையைப் பார்த்துக் கொண்டு இருந்த பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பரிமளம் மாமி
“அப்படிச் சொல்லுங்கள் தம்பி… இந்த இந்திராவுக்குத் தான் புத்தி இல்லை”
என்று ஒத்து ஊதி விட்டுத் தொடர்ந்து...

“இவள் போன்ற ஆட்களால் சுற்றத்தில் ஆச்சாரமாக இருக்கும் எங்களுக்கு தான் அவமானம்…”
என்றபடி தலையைத் தோளில் இடித்து நொடித்துக் கொண்டார்...

“இப்போது தான் வேறு போக்கிடம் இல்லாமல் திரும்பி வந்து விட்டாளே… இனிமேல் நான் சொன்னபடி செய்து மூலையில் தள்ளி விட வேண்டியது தான்"
எனக் கருணையற்றுச் சொன்னார் கருணாகரன்...

அப்போது
“என்ன ஒரு குரூர புத்தி… உங்கள் மகளுக்கு என்றால் இப்படிச் செய்ய மனது வருமா?”
என்ற குரலைக் கேட்டு அனைவரும் அதிர்ந்து போய்த் திரும்பிப் பார்த்தனர்...

அங்கே வாசலில் சாய்ந்தபடி சூரியவர்மன் நின்றிருந்தான்...

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

கஸ்தூரி வீட்டினுள்ளே போனதும் சூரியனுக்கு ஒரு மாதிரி ஆக இருந்தது.

நம்மையும் ஒரு ஆளாக மதித்து அவள் துணைக்கு அழைத்த போது, தான் அவள் மனதை நோகடித்து விட்டேனோ என்று நினைத்துக் கொண்டவன்…

உள்ளே செல்ல முடிவு எடுத்த போது தான் கோவிலுக்குப் போனவர்களும் உள்ளே செல்வதைப் பார்த்தான்.

அடடா உள்ளே ஒரு கூட்டத்தின் நடுவில் மாட்டிக் கொள்ளப் போகிறாளே என்ற எண்ணத்துடன் விரைந்து சென்றவன் அனைவரதும் பேச்சைக் கேட்டதும் கோபம் அடைந்தான்.

என்ன மனிதர்கள் இவர்கள் அடுத்தவர் துன்பத்தில் இன்பம் தேடுகிறார்களே என்றிருந்தது.

அதை விட என்னவொரு கீழ்த்தரமான எண்ணத்தை உள்ளத்தின் உள்ளே வைத்திருக்கிறார்கள் என்றுமிருந்தது.

அவர்கள் பேசியதைக் கேட்டதும் எத்தனை தூரம் கோபம் வந்ததோ அதை விடவும் அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டபடி கஸ்தூரி அமைதியாக நின்றது பெருங் கோபத்தைக் கொடுத்தது.

“இருடி உனக்குப் பிறகு இருக்கிறது”
என நினைத்தபடி மற்றவர்களை ஒரு கை பார்த்து விடக் களத்தில் இறங்கினான்.

திடீரென வேற்று ஆடவன் ஒருவன் தங்கள் வீட்டு வாசலில் நின்றபடி தங்களைக் கேள்வி கேட்டதும் அனைவரும் அப்படியே நின்று விட்டார்கள்.

அதற்குள் சுதாரித்துக் கொண்ட கருணாகரன்
“எங்கள் வீட்டுப் பெண்ணை நாங்கள் என்ன செய்தாலும் அது எங்கள் இஷ்டம்… அதைக் கேள்வி கேட்க நீ யார்?”
என்றார்.

“நான் யாரா? இந்தப் பெண்ணைத் துன்புறுத்தப் போகிறீர்கள் என்று காவல்துறையிடம் புகார் கொடுக்கப் போகின்ற இந்தப் பெண்ணின் நலன் விரும்பி”
என்ற சூரியனின் பதிலில் அனைவருமே மிரண்டு விழித்தார்கள்.

அந்தத் தருணத்தைப் பயன் படுத்திக் கொண்டவன் கஸ்தூரியைத் திரும்பிப் பார்த்து
“உள்ளே போய் என்னவெல்லாம் எடுக்க வேண்டுமோ சீக்கிரமாக எடுத்து வா… இந்த வீட்டுக்குள் நின்றாலே மூச்சு முட்டுகிறது”
என்றான் கோபமாக…

அப்போது தான் கஸ்தூரி அவனை நிமிர்ந்து பார்த்தாள்…

அவன் திடீரென வந்து தனக்குத் துணையாக நின்றதைப் பார்த்ததும் உள்ளூர அத்தனை சந்தோஷமாக இருந்தது.

அவன் சொன்னதைக் கேட்டதும் உள்ளே போய் எடுக்க வேண்டிய எல்லாவற்றையும் எடுத்து வந்தாள்.

இனி ஒரு தரமேனும் இந்த வீட்டுக்கு வரவே கூடாது என்ற முடிவை மட்டும் உறுதியாக உள்ளத்தில் நிலை நாட்டிக் கொண்டாள்.

அவள் வந்ததைப் பார்த்ததும்
“எல்லாம் சரி தானா? இனி ஒரு தரம் இங்கே வர வேண்டிய தேவை இருக்காது தானே?”
என்றவனுக்கு இல்லை என்று தலையாட்டினாள்.

சரி இனிப் போகலாம் என வாசலுக்குத் திரும்பியவன் ஏதோ நினைத்தவனாக மீண்டும் இவர்கள் பக்கம் திரும்பினான்.

அங்கே நின்றிருந்த ஒவ்வொருவருக்கும் கபாலத்தில் ஏறும் படி சில விஷயங்களைச் சொல்லத் தொடங்கினான்.

கருணாகரனிடம்
“உங்கள் வயதுக்கு நீங்கள் நடந்து கொள்வது அழகில்லை… வயதான காலத்தில் இந்தப் பாவங்கள் எல்லாம் பூமராங் போலத் திருப்பி அடிக்கும்…”

சீதாவிடம்
“உங்களுக்கும் ஒரு பெண் இருக்கிறாள் அவளையும் அவளது புகுந்து வீட்டில் நீங்கள் நடந்து கொள்வதைப் போலச் செய்யலாம்… பார்த்து நடந்து கொள்ளுங்கள்”

இந்திராணியிடம்
“மற்றவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு உண்மையான உறவுகளை இழக்காதீர்கள்… உங்களைச் சுற்றி மலை அட்டைகள் போல உறுஞ்சுவதற்குத் தான் இவர்கள் இருக்கிறார்கள்”

என அனைவரிடமும் சொன்னவன் பரிமளம் மாமியின் அருகில் வந்தான்.
“ஏன் மாமி ஆச்சாரமான குடும்பம் என்று சொல்லிச் சொல்லி இப்படி அபச்சாரமாகப் பேசலாமா? தள்ளி நில்லுங்கோ நீங்கள் எல்லாம் கிட்ட வந்தாலே எங்களுக்கு ஆகாது ஏனெனில் நாங்கள் ரொம்ப ஆச்சாரமான குடும்பம்”
என்றபடி தலையைத் தோளில் இடித்து நொடித்துக் காட்டினான்...

சூரியனின் பேச்சிலும் செய்கையிலும் அந்த வீடே ஸ்தம்பித்து நிற்க, கஸ்தூரியை அழைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டான் சூரியன்.

வெளியே வந்து வாகனத்தில் ஏறி அதைச் செலுத்தத் தொடங்கியவன் கஸ்தூரியைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

அவள் சொன்ன நன்றிக்குக் கூட எந்தப் பதிலும் கொடுக்கவில்லை.

அவனது அமைதியே அவனது கோபத்தைப் பறை சாற்றியது.

கொஞ்சத் தூரம் சென்றவன் வாகனத்தைக் கடற்கரையை நோக்கிச் செலுத்தினான்.

கடலோரம் வாகனத்தை நிறுத்தியவன் பட படவெனப் பொரிய ஆரம்பித்தான்.

“ஏய் உனக்கும் வாய் இருக்கிறது தானே… அவர்கள் பேசுவதை அப்படியே கேட்டுக் கொண்டு மரம் போல நிற்கிறாயே… வாயைத் திறந்து இரண்டு வார்த்தை நறுக்கென்று கேட்டிருந்தால் குறைந்தா போய் விடுவாய்?”

“…………………………”

“கஸ்தூரி… இப்படி அமைதியாக இருக்காதே எனக்குக் கோபம் கோபமாக வருகிறது…”

“அது வந்து…”

“முதலில் இந்த வந்து போய் என்பதை நிறுத்து”

“மன்னித்துக் கொள்ளுங்கள்”

“உடனே இதை மட்டும் கேட்டு விடு… மன்னிப்பாம் மன்னிப்பு”

“அதில்லை நான் ஏதாவது பேசி இருந்தால் சான்றிதழ்களை எப்படி எடுத்து வருவது என்ற பயம் அதனால் தான்”

“ஏய் பைத்தியமா நீ? வெறும் காகிதச் சான்றிதழ்களுக்காக எதை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டு நிற்பாயா நீ?”
அவன் திட்டத் தொடங்கியதும் அது வரை அணைக்குள் நின்ற கண்ணீர் அணையைத் தகர்த்துக் கொண்டு கீழிறங்கியது.

இன்னும் ஏதோ திட்ட இவள் பக்கம் திரும்பியவனோ அவளது கண்ணீரைக் கண்டதும் அதிர்ந்து போனான்.

உடனே தன் கைக்குட்டையை எடுத்து அவளருகில் நீட்டியபடி
“ஏய் என்னதிது”
என்றான் தடுமாறியபடி…

ஆனால் அவனது கைக்குட்டையை வேகமாகத் தள்ளி விட்டவளோ தனது ஆதங்கத்தைக் கொட்டத் தொடங்கியிருந்தாள்.

“என்ன தெரியும் என்று இப்போது இப்படித் திட்டுகிறீர்கள்…
ஐந்து மாதங்கள் அந்த வீட்டில் நரக வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன்… அப்போதெல்லாம் உங்களைப் போல யாருமே துணைக்கு வந்ததில்லை...
இப்போது நான் வாயே திறக்காமல் நின்றதால் இந்தப் பேச்சோடு விட்டார்கள்… நானும் ஏட்டிக்குப் போட்டியாக ஏதும் சொல்லி இருந்தால் இந்த ஊரில் உள்ள அத்தனை ஆண்பிள்ளைகளோடும் சேர்த்து வைத்துக் கேவலமாகப் பேசி இருப்பார்கள் தெரியுமா?
இங்கே அநேகமானவர்கள் தைரியமான பெண்களைச் சாய்க்கும் ஆயுதமாக இதைத் தான் பயன் படுத்துகிறார்கள்...”

அவளது பதிலில் திகைத்தவன் மெதுவாக அவளிடம் மன்னிப்புக் கேட்டான்.

“ஐயோ மன்னிப்பு எல்லாம் வேண்டாம் என்னுடைய நல்லதுக்குத் தானே நீங்கள் அப்படிப் பேசினீர்கள்… நான் தான் திடீரென உணர்ச்சி வசப் பட்டு விட்டேன் மன்னித்து விடுங்கள்”
என உடனே சமாதானமும் ஆனாள்.

“அதிருக்கட்டும் கஸ்தூரி உங்கள் அம்மா அப்பா கூடவா அண்ணியையும் உன்னையும் ஒதுக்கி வைத்து விட்டார்கள்”
என்றான் கேள்வியாக…

அவன் கேட்ட கேள்வியில் எதுவும் புரியாமல் அவனைப் பார்த்தாள்.

“என்ன கேட்கிறீர்கள் எனக்குப் புரியவில்லை”

“அதில்லை… இங்கே எல்லாம் பொதுவாகத் திருமணம் ஆனாலே பிறந்த வீட்டைப் பெண்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடிவதில்லை.
ஆனாலும் உங்களுக்குப் பிரச்சினை என்றதும் நீங்கள் இருவரும் உங்கள் பிறந்த வீட்டிற்குப் போய் இருக்கலாம் தானே என்று கேட்டேன்”

அவன் சொன்னதை அப்போது தான் புரிந்து கொண்டவளோ பிறந்த வீடா என்றபடி நகைக்கத் தொடங்கினாள்.

அவளது நகைப்பில் ஒரு வலி இழையோடுவதை உணர்ந்தவன் அவளே சொல்லட்டும் என்பது போல அமைதியாக இருந்தான்.

சிரித்து முடித்தவள் அவனை நேராகப் பார்த்து
“பிறந்த வீடென்று ஒன்று இருந்திருந்தால் இத்தனை துன்பமெல்லாம் நமக்கு வருமா என்ன?
நமக்கு ஒரு கஷ்டம் என்றால் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வருவது நம் பிறந்த வீடு தானே…
நம் கஷ்டத்தைப் பகிர யாருமே இன்னும் வரவில்லை என்றால் நமக்கு பிறந்த வீடென்று ஒன்று இல்லை என்பது தானே உண்மை…”
என்றவளைப் பார்த்தபடி பேச்சற்று இருந்தான் சூரிய வர்மன்…

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“என் தேவனே தூக்கம் கொடு
மீண்டும் அந்த வாழ்வைக் கொடு
பாலைவனம் கடந்து வந்தேன் பாதங்களை ஆற விடு”
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 15

af9f12421fcb24c0dd516d883db04184~2.jpg

IMG-20210701-WA0041~2.jpg

IMG-20210627-WA0053.jpg



நீலக் கடல் பெரும் இரைச்சலுடன் தன் அலைகளை அனுப்பிக் கரையைத் தொட்டுத் தொட்டுச் சென்றது.

கடலோரத்து வெண்மணலில் சின்னஞ் சிறிய பிள்ளைகள் மணல் வீடு கட்டி விட்டு அதை அலையின் கரங்களில் இருந்து பாதுகாக்கப் போராடிக் கொண்டிருந்தார்கள்.

தள்ளு வண்டியில் சுண்டல் விற்போரும் சோளம் விற்போரும் கூவிக் கூவி அங்குமிங்குமாக விற்பனையில் ஈடுபட்டிருந்தார்கள்.

கடலின் இரைச்சலோ,
குழந்தைகளின் ஆர்ப்பாட்டமோ,
தள்ளுவண்டிக்காரர்களின் சத்தமோ எதுவுமே சூரியனதும் கஸ்தூரியினதும் செவியை எட்டவில்லை.

அவர்கள் இருவரும் வெவ்வேறு மனநிலையில் மூழ்கி இருந்தார்கள்.

“என்ன உளறுகிறாய் நீ... பிறந்த வீடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவர்கள் உனக்கு என்ன கெடுதல் செய்தார்கள் ஒரு வேளை உன் மாமாவையும் மாமியையும் உனக்குப் பிடிக்கவில்லையா?…”

“……………………..”

“அண்ணனுக்காக அண்ணியைப் பற்றித் தெரிந்து கொள்ள முயன்ற போது அவர்கள் தாய்வீட்டு உறவான மாமா மாமியோடு இருக்கிறார்கள் என்பது எனக்குக் கிடைத்த தகவல்…”

“…………………..”

“அப்போது உன்னைப் பற்றி எனக்குத் தெரியாது ஆனால் அண்ணிக்கு ஒரு சகோதரி இருக்கின்றாள் என்பது வரை தெரியும்…”

“….……………….”

“கஸ்தூரி இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்… எனக்கு எதுவுமே புரியவில்லை… நீயாவது தெளிவாகச் சொல்லு”
என்றவனை அமைதியாகப் பார்த்திருந்தவள் சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு ஒரு பெரு மூச்சுடன் தன் கதை சொல்லத் தொடங்கினாள்.

“அப்பா, அம்மா, அப்புறம் என்னுடைய அக்கா என்று ஒரு சிறிய சந்தோஷமான குடும்பத்தில் பிறந்தவள் நான்.
உறவுகள் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வேறு யாரும் இருக்கவில்லை.

எனக்கு ஏழு வயது இருக்கும் போது ஒரு நாள் இரவோடிரவாக என் குடும்பமே எனக்கு இல்லவே இல்லை என்றானது.

ஒரு பெரிய விபத்தில் அப்பா அம்மா அக்கா என மூன்று பேருமே என்னைத் தனியாக விட்டு விட்டுப் போய் விட்டார்கள். இறுதிச் சடங்கைக் கூட அக்கம் பக்கம் இருந்தோர் தான் செய்து முடித்தார்கள்.

அந்த வயதில் அடுத்து என்ன செய்வது என்பதே தெரியாமல் தனியே நின்ற எனக்குத் துணையாக இருந்தது அயல் வீட்டு அக்கா தான்.

அக்காவை எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே தெரியும். அக்கா பிறக்கும் போதே அவளுக்கு அம்மா இல்லை. அப்பாவும், அக்காவுக்கு ஐந்து வயதிருக்கும் போது இறந்து விட்டார்.

அக்கா தன்னுடைய மாமா மாமியோடு தான் தங்கி இருந்தாள். வழமையான கதை போல அங்கே அவளுக்கு மதிப்பே கிடையாது.

இப்படி இருக்கும் போது தான் தனியே நின்ற என்னை அக்கா தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அங்கே என்னை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனாலும் அக்கா என் மீது எவ்வளவோ பாசம் வைத்திருந்தாள். அதனால் அடம் பிடித்து என்னைத் தன்னோடு தன் வீட்டில் வைத்திருந்தாள்.

அப்போது அக்காவுக்குப் பத்து வயது தான் இருக்கும். அவள் எனக்காக வாங்காத திட்டே இல்லை.
இப்படியே ஒரு ஐந்து வருடங்கள் நரகமாகவே ஓடி விட்டது.

ஒரு கட்டத்தில் எனக்காக அவள் ஏதோ பேசப் போய் அது பெரிய பிரச்சினை ஆகி விட என்னை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து விட்டாள்.

அக்கா வீட்டை விட்டு வந்ததைப் பற்றி யாருமே கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.
ஒரு சில நல்ல உள்ளங்களால், ஆசிரமம் ஒன்றில் சேர்ந்ததோடு வேலை செய்தபடியே படிக்கத் தொடங்கினோம்.

வெளியே யார் ஏதாவது கேட்டாலும் மாமா மாமி ஊரில் இருக்கிறார்கள் நாங்கள் படிப்பதற்காக இங்கே இருக்கிறோம் என்று அக்கா பொய் சொல்லிக் கொள்வாள்.

ஆசிரமத்தைப் பற்றிக் கேட்டால் இங்கே சேவை செய்கிறோம் என்று சொல்வாள். அதில் பாதி உண்மை இருக்கிறது. ஆசிரமத்தில் நாங்கள் இருவருமே எங்களால் முடிந்த சேவைகளைச் செய்தோம்.

ஏனக்கா இப்படிச் சொன்னாய் எனக் கேட்டால், யாருடைய அனுதாபமும் நமக்குத் தேவையில்லை என்று சொல்லி விடுவாள்.

அந்த ஆசிரமத்தில் தான் எங்கள் இருவருக்கும் இன்னொரு உறவு கிடைத்தது."
என்று சொல்லியபடி சூரியனைப் பார்த்தவள்

“உங்களுக்கு அந்த அயல் வீட்டு அக்கா, புதிதாகக் கிடைத்த உறவு யார் யாரெனப் புரிகிறதா?”
என்றாள் கேள்வியாக…
அவனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தாலும்
“நீயே சொல்…”
என்றான் மெதுவாக

“அந்த அயல் வீட்டு அக்கா தான் இப்போது நான் உயிராக நேசிக்கும் என்னுடைய காயத்ரி அக்கா… புதிதாக கிடைத்த உறவு உங்கள் வீட்டில் இருக்கும் அனு அக்கா”
என்றவள் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

அவளது மனநிலையைப் புரிந்து கொண்டவன் ஒன்றும் பேசாமல் அமைதி காத்தான்.

சில நொடிகளில் தன்னைத் தானே சுதாரித்துக் கொண்டவள் பேசத் தொடங்கினாள்.

“என்னுடைய பெயர் கூடக் கஸ்தூரி மட்டும் தான், அக்கா தான் தன் பெயரோடு பொருந்தும் வகையில் எனக்குக் கஸ்தூரி தேவி என்ற பெயர் வைத்தாள்.

ஆசிரமத்தில் நான், அக்கா, அனு அக்கா என்று மூன்று பேருமே உடன் பிறவாத சகோதரிகள் போலத் தான் இருந்தோம்.

அப்படி இருக்கும் போது தான் உங்கள் அண்ணாவின் அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு அவர் அக்காவிடம் காதல் சொல்லி அதை அக்கா மறுத்து, அவளுக்கு வேறொருவருடன் திருமணம் நடந்தது.

பிறகு ஒரு நாள் அனு அக்கா தான் காதலித்தவருடன் திருமணம் செய்யப் போவதாகவும் சந்தர்ப்ப சூழ்நிலையால் எதையும் சொல்ல முடியவில்லை என்றும், பிறகு வந்து சொல்கிறேன் என்று கடிதம் எழுதி வைத்துப் போய் விட்டாள்.

அவளை அதன் பிறகு பார்க்கவே இல்லை, அவள் இறந்து போய் விட்டாள் என்று கூடச் சொன்னார்கள்.
அதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பிறகு எனக்கும் திருமணம் நடந்தது. அதன் பிறகு நடந்தது எல்லாம் உங்களுக்குத் தெரியும் தானே”
என்று சொல்லி முடித்தவள் இருக்கையில் சாய்ந்து கொண்டாள்.

சில நொடிகள் கஸ்தூரியையே பார்த்திருந்தவன் மெதுவாகத் திரும்பிக் கடலை வெறித்தான்.

இருக்கையில் சாய்ந்திருந்தவள் ஏதோ நினைவு வந்தவளாக
“உங்கள் அண்ணனையா அனு அக்கா திருமணம் செய்தாள்”
எனத் தன் மனதுக்குள் அரித்துக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்டே விட்டாள்.

கடலை வெறித்துக் கொண்டிருந்தவனோ
“ஆமாம் என் அண்ணனைத் தான் பல்லவி திருமணம் செய்தாள்”
என்றான் உணர்ச்சி அற்ற குரலில்.

அவன் எண்ணங்கள் எங்கெங்கோ சுற்றிச் சுற்றி வந்தன.

கஸ்தூரியின் தலையில் இடி விழுந்தது போல் ஆனது.
அவளது இரண்டு சகோதரிகளினதும் வாழ்க்கையில் ஏன் இப்படி இறைவன் விளையாட வேண்டும்.

அனு அக்கா ஆதி அத்தானை விரும்பி இருக்கிறாள். ஆனால் ஆதி அத்தான் அக்காவை அல்லவா விரும்பி இருக்கிறார்.

ஆனாலும் அனு அக்காவைத் திருமணம் செய்து விட்டு இப்போது அக்காவுக்குத் தாலி கட்டியதால் அனு அக்காவுக்குத் துரோகமும் செய்து விட்டாரே.

கடவுளே இப்படியா நீ மூன்று பேரின் வாழ்விலும் விளையாட வேண்டும்.

இனிமேல் என்ன ஆகுமோ தெரியவில்லையே மனது வேறு அமைதி இல்லாமல் குழம்பித் தவிக்கிறதே.
எனக் கஸ்தூரி சிந்தனையில் மூழ்கிப் போய் இருந்தாள்.

அவளைப் போலவே தான் சூரியனும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.

இருவரும் அப்படியே நெடுநேரமாக மௌனமாக அமர்ந்திருந்தார்கள்.

இறுதியில் அந்த மௌனத்தை உடைத்த சூரியன்
“கஸ்தூரி… நான் உன்னையும் அண்ணியையும் பார்த்து ரொம்பப் பெருமைப் படுகிறேன். வாழ்க்கையில் எத்தனை தடைகளைத் தாண்டி வந்து இருக்கிறீர்கள். உங்கள் தைரியத்தைப் பார்க்கையில் நிஜமாகவே எனக்குப் புல்லரிக்கிறது.”
என்றான் உண்மையான பாராட்டும் குரலில்.

அவன் சொன்னதைக் கேட்டவளோ மறுப்பாகத் தலை அசைத்து
“ஒரு சின்னத் திருத்தம் அக்கா மட்டும் தான் தைரியமானவள். காயத்ரி தேவி என்றொருத்தி இல்லையென்றால் கஸ்தூரி தேவியைப் புதைத்த இடத்தில் புல் என்ன பெரிய விருட்சமே வளர்ந்திருக்கும். நான் ஒன்றுமே பெரிதாகச் செய்து விடவில்லை. என் பலம் பலவீனம் எல்லாமே என் அக்கா தான்”
என்றாள் பெருமையாக.

“அண்ணி நிஜமாகவே தைரியசாலி தான்… நீயும் ஒன்றும் குறைந்தவளில்லை.”
எனக் கஸ்தூரியைப் புகழ்ந்தான்.

அவன் சொன்னதைக் கேட்டவள் பதிலுக்கு லேசாகப் புன்னகைத்தாள்.
அந்தப் புன்னகைக்குப் பின்னால் ஒளிந்திருந்த வலியை அவனால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது.

இருவருள்ளும் இதற்கு முதல் இருந்ததை விடவும் அதிகப்படியான வகையில் புதுமையான நட்பொன்று துளிர் விட்டது.

ஆனாலும் கஸ்தூரிக்குச் சூரியன் கூறிய “என் அண்ணனைத் தான் பல்லவி திருமணம் செய்தாள்”
என்ற வார்த்தைகள் நெஞ்சை அறுத்துக் கொண்டிருந்தது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

வரவேற்பறையில் வீட்டு அங்கத்தவர்கள் எல்லோரும் அமர்ந்து தீவிரமாக எதைப் பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாத சரண்குமார் அலைபேசியில் தன் நண்பனுடன் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தான்.

“வர்மா… ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் கிளம்பிப் போய் விட்டாயே.”

“ஒரு அவசர வேலையடா”

“சரி அவசர வேலையாகப் போனவன் வேலையை உடனடியாக முடித்துக் கொண்டு கிளம்பி இருக்க வேண்டாமா?”

“கொஞ்சம் தாமதமாகும் போல”

“என்னடா இப்போது தான் எத்தனையோ தடைகளைக் கடந்து காயத்ரி கழுத்தில் தாலி கட்டி இருக்கிறாய் இந்த நேரத்தில் வேலை அது இதென்கிறாய்.”

“அதற்காக வேலைகளை அப்படியே விட முடியுமா?”

“என்னவோ போடா சீக்கிரமாக வந்து சேரும் வழியைப் பார்”

“சரிடா”

“நான் இப்போது உன் வீட்டுக்குத் தான் போகிறேன். பல்லவியின் நிலை இப்போது ரொம்ப ரொம்ப முன்னேற்றம் தெரியுமா?”

“உண்மையாகவாடா கேட்பதற்கே எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது”

“அவளது இப்போதைய நிலைக்கு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்தில் கூட அவளது நிலை சரியாகி விடும் போலத் தோன்றுகின்றது”

“நிஜமாகவா சொல்கிறாய் அப்படி மட்டும் நடந்தால் நீ என்ன கேட்டாலும் செய்து கொடுப்பேன் குமரா.”

“கண்டிப்பாகக் கேட்பேன் வர்மா அப்போது இல்லை என்று சொல்லாமல் செய்து கொடுக்க வேண்டும்”

“நம் நட்பின் மீது ஆணையாகச் செய்து கொடுப்பேன் குமரா”

“அவசரப் பட்டு வாக்குக் கொடுத்து விடாதே வர்மா பிறகு உன்னை இக்கட்டில் மாட்டி விடப் போகிறேன்”

“என் குமரனைப் பற்றி எனக்குத் தெரியும் என் மீது எனக்கு இருக்கும் அக்கறையை விட அவனுக்குத் தான் அதிகமான அக்கறை இருக்கிறது அதனால் எனக்கு ஒன்றும் பயமில்லை”

“அடேய் அடேய் அடங்குடா என்னமாகப் புல்லரிக்கிறது எனக்குத் தெரியுமா”

“உனக்குப் புல்லரிப்பது எனக்கு எப்படித் தெரியும்”

“போதும்டா சாமி வேலையை முடித்து விட்டு ஒழுங்காக வந்து விடு காயத்ரிக்குப் பக்கத்தில் நீ இப்போது இருக்க வேண்டிய நேரம் புரிந்ததா?”

“திவ்வியமாகப் புரிந்தது சீக்கிரமாக வருகிறேன்”

“சரிடா வர்மா நான் பிறகு பேசுகிறேன். உடம்பைப் பார்த்துக் கொள் நேரத்திற்குச் சாப்பிடு”

“சரி சரி சரி”

“சரி சரி சரி வைக்கிறேன்”
என்றவாறு அலைபேசியைத் துண்டித்தான் சரண் குமார்.

வரவேற்பறையில் சரண் எப்போது வருவான் என்பது போல அனைவரும் காத்திருந்தார்கள்.

அவன் வருவதைப் பார்த்த அவன் தந்தை
“சரண் இன்று எங்களுடன் நீ வெளியே வர வேண்டும்”
என்றார்.

“இல்லை அப்பா எனக்கு வேறு வேலை இருக்கிறது”

“எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை நீ கட்டாயம் வந்தே ஆக வேண்டும்”

“அப்படி வேலையை விட்டு விட்டு வரும் அளவிற்கு கட்டாயம் போயாக வேண்டிய இடம் என்ன அப்பா”

“உனக்குத் திருமணம் பேசி முடிவு செய்து விட்டோம். இன்று அந்த வீட்டிற்குப் பெண் பார்க்கப் போகிறோம்”

“என்னப்பா விளையாடுகிறீர்களா? என்னிடம் இதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே?”

“அது தான் இப்போது சொல்லுகிறேனே?”

"இப்போது சொல்கிறீர்களா? என்ன பதில் அப்பா இது?"

"சரண் உனக்கு எது தேவை என்று எனக்குத் தெரியும்"

"இல்லை அப்பா உங்களுக்குத் தெரியவில்லை"

"என்னடா சொல்கிறாய் நான் உன் மேல் உயிரே வைத்திருக்கிறேன்"

"நான் இல்லை என்று சொல்லவில்லையே அப்பா"

"நீ என் மேல் மரியாதை வைத்திருந்தால் நான் சொல்லும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்"

“நீங்கள் என் மீது உயிராக இருந்தால் என் விருப்பத்துக்கு மதிப்புக் கொடுங்கள். அப்பா என் திருமணம் எனக்குப் பிடித்தவளோடு தான் நடக்க வேண்டும் அதில் நான் உறுதியாக இருக்கிறேன்”

“சரண் நீ சொல்வது சரியில்லை”

“அப்பா நீங்கள் சொன்னது தான் சரியில்லை. நீங்கள் மட்டும் உங்களுக்குப் பிடித்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டீர்கள் தானே எனக்கு மட்டும் ஏன் இப்படி அநியாயம் செய்கிறீர்கள்”

“சரண் அந்தக் காலக் காதல் வேறு”

“அப்பா எந்தக் காலமானாலும் காதல் வேறு கிடையாது. காதல் எப்போதும் காதல் தான்”

“முடிவாக என்ன தான் சொல்ல வருகிறாய்”

“இப்போது திருமணம் வேண்டாம் அப்படியே நடப்பதாக இருந்தாலும் எனக்குப் பிடித்த பெண்ணுடன் தான் நடக்க வேண்டும்”
என்றவன் அத்தோடு பேச்சுவார்த்தை முடிந்தது என்பது போல வெளியே செல்லத் திரும்பியவன் தந்தையைத் திரும்பிப் பார்த்தான்.

"அப்பா இன்னொரு விஷயம்"

"என்ன?"

"எனக்குப் பிடித்த பெண் என்றால் நான் காதலிக்கும் பெண் என்று அர்த்தம் அப்பா"

"அப்படியானால் நீ..."

"ஆமாம் அப்பா நான் ஒருத்தியைக் காதலிக்கிறேன் திருமணம் செய்வதாக இருந்தால் அவளைத் தான் செய்வேன். அதுவும் உங்கள் அனுமதியோடு."
என்று தெளிவாகக் கூறி விட்டு வெளியே சென்று விட்டான்.

அவன் வெளியே செல்வதைப் பார்த்தபடி திகைத்துப் போய் நின்றார் சரணின் தந்தை ராமமூர்த்தி.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"கட்டுப்பாடு தான் இல்லாப் படகு கரையைச் சேர்ந்திடாது...
கட்டிப் போட்டுத் தான் வைச்சாப் படகு கடலைப் பார்த்திடாது...
காதல் செய்கிற பிள்ளை கண்ணுக்கு அப்பா தெரியாது...
மகனை நேசிக்கும் அப்பாவுக்கு இது தப்பாத் தெரியாது..."

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 16

IMG-20210701-WA0035~2.jpg

IMG-20210627-WA0008~2.jpg

IMG-20210701-WA0015~2.jpg

IMG-20210627-WA0011~2.jpg


மாலை மெது மெதுவாக மஞ்சள் சூரியனை மேற்கு வானத்தின் மூலையில் புதைத்துக் கொண்டிருந்தது.

சூரியன் மூலையில் புதைந்த போதும் அதனுடைய கதிர்கள் வானத்தின் ஒரு பக்கத்தில் ஏராளமான கோடுகளை இழுத்து விட்டிருந்தது.

சூரியக் கதிர்கள் இழுத்துச் சென்ற கோடுகள் வானத்தில் அத்தனை அழகாகத் தோற்றம் கொடுக்க, சில பறவைகள் கூட்டம் கூட்டமாகக் கூடுகளை நாடி விரைந்து கொண்டிருந்தது.

அந்த அழகிய காட்சியை அண்ணாந்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள் காயத்ரிதேவி.

அவள் பார்வை வானத்தில் நிலைத்து நிற்க, அவள் எண்ணங்கள் எங்கோ இருந்தது.

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக ஆதித்யவர்மனை அவள் பார்க்கவில்லை.

எங்கே போய் இருப்பார். ஒரு வேளை நான் சொன்னதைக் கேட்டதும் இது தான் வாய்ப்பு என்று தலை மறைவாகி விட்டாரோ?

செய்த தப்பு இப்போது புரிந்து இருக்கும் போல அது தான் என் முகத்திலும் அனு முகத்திலும் எப்படி விழிப்பது என்ற சங்கடத்தில் வேலையைக் காரணம் காட்டி வெளியே சென்று விட்டாராக இருக்கும்.

இந்த விதி தான் எங்கள் வாழ்வில் எப்படி எல்லாம் சதிராடுகிறது.
என்றவாறெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தவள் அருகில் வந்து அமர்ந்தாள் கஸ்தூரிதேவி.

“அக்கா யோசனை பலமாக இருக்கிறதே என்ன விஷயம்”

“எல்லாம் என் தலைவிதியைப் பற்றியது தான்”

“அக்கா நானும் கேட்க வேண்டும் என்று இருந்தேன் இதற்கு மேல் என்ன செய்யப் போகிறோம்”

“அதைத் தான் நானும் யோசனை செய்து கொண்டிருந்தேன். அனுவையும் அழைத்துக் கொண்டு எங்காவது போய் விடலாமா?”

“அனு அக்காவின் நிலைக்கு நம்மால் வெளியே எங்கும் வைத்தியம் பார்க்க முடியுமா?”

“அதனால் தான் என்னால் அதிரடியாக எதையும் செய்ய முடியவில்லை”

“இப்போது நீங்கள் என்ன முடிவுதான் எடுத்து இருக்கிறீர்கள். எது எப்படியோ நான் எனது சான்றிதழ்களை வைத்து ஏதாவது ஒரு இடத்தில் ஆசிரியர் ஆகி விடுவேன் அக்கா அதனால் நம் பொருளாதாரம் ஓரளவுக்கு நன்றாகவே இருக்கும்.”

“நாம் இருவரும் இங்கிருந்து எங்காவது சென்று விடுவோம். அது ஏஞ்சலினாவுக்குக் கூடத் தெரியாத இடமாக இருக்க வேண்டும்.”

“எல்லாம் சரிதானக்கா ஆனால் போகப் போகும் இடம் எதுவென்று தீர்மானிக்க வேண்டாமா?”

“அது தான் குழப்பமாக இருக்கிறது. ஆனாலும் நான் ஒரு பத்திரிகையில் பார்த்தேன் ஆசிரமம் ஒன்றில் பணிக்குப் பெண்கள் தேவை என்று போட்டு இருந்தது. அதை முயற்சி செய்து பார்ப்போம்”

“சரி அக்கா அப்படியே செய்வோம்”

“கொஞ்சமும் தாமதிக்க வேண்டாம் இன்றிரவே இந்த வீட்டை விட்டுப் போய் விட வேண்டும்.”

“அனு அக்காவைப் பிரிந்து போவதை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது. ஆனாலும் அவள் இங்கு பாதுகாப்பாக இருப்பாள் தானே அக்கா”

“அவள் உயிருடனே இல்லை என்று முதலில் இருந்த துன்பத்தை விட அவளைப் பிரியும் துன்பம் அத்தனை பெரிதாகத் தோன்றாது தேவிம்மா”

“அக்கா ஆதித்யன் இப்படி செய்ததால் இரண்டு பெண்களின் வாழ்க்கையே திசை மாறி விட்டதே.”

“அவரைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. இந்தப் பேச்சே வேண்டாம். நாங்கள் கொண்டு வந்த பொருட்களை மட்டுமே எடுத்துப் போக வேண்டும்.”
என இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது காயத்ரியிடம் பேசுவதற்காக வந்த சூரியன் அவர்கள் பேசியதைக் கேட்டு ஸ்தம்பித்து நின்றான்.

தங்கள் பேச்சு முடிந்தது என்பது போல எழுந்து கொண்டவர்கள் இவனைப் பார்த்து விட்டதால் இப்போது அவர்கள் திகைத்து நின்றனர்.

மூவரும் நெடுநேரம் வாய் திறந்து எதையும் பேசிக் கொள்ளவில்லை. மௌனமாக நின்றார்கள்.

முதலில் அந்தக் கனத்த மௌனத்தை உடைத்து எறிந்தான் சூரியன்.

“அண்ணி யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டுப் போகும் அளவிற்கு இங்கே அப்படி எந்த விடயம் உங்களுக்குப் பிடிக்கவில்லை”

“.....................”

“அண்ணனிடம் ஏதாவது மனஸ்தாபமா? ஆனாலும் அண்ணா உங்கள் மீது உயிரே வைத்திருக்கிறான் தெரியுமா? நீங்கள் இப்படி இரவோடு இரவாகப் போவதைப் பற்றி அறிந்தால் சுக்கு நூறாகிப் போவான்”

“………………….”

“தயவு செய்து என்ன விஷயம் என்று வாயைத் திறந்து சொல்லுங்கள் அண்ணி. நீங்கள் சொன்னால் தானே தெரியும்.”

“அது வந்து…”

“ஐயோ அண்ணி இழுக்காமல் முழுவதையும் சொல்லி விடுங்கள்”

“எனக்கு இங்கே இருக்கப் பிடிக்கவில்லை.”

“அது தான் ஏன் பிடிக்கவில்லை.?”

“……………….”

“சரி உங்களுக்கு என்னிடம் சொல்லப் பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் விட்டு விடுங்கள் நான் கட்டாயப் படுத்தவில்லை. ஆனால் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்”
என்றவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

அது வரை தலை குனிந்து நின்ற காயத்ரி என்னவென்பது போல நிமிர்ந்து பார்த்தாள்.

“இந்த வீடு உங்களுடையது அண்ணி. உங்களுக்கு இங்கே இருப்பது அல்ல இங்கே இருப்பவர்களைத் தான் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால் அவர்கள் தான் வெளியே போக வேண்டும் நீங்கள் அல்ல. எந்தக் காலத்திலும் எந்தக் காரணத்தைக் கொண்டும் நீங்கள் இந்த வீட்டை விட்டுப் போகக் கூடாது.”
என்றான் உறுதியாக.

அவன் சொன்னதைக் கேட்டதும் எப்படி உணர்ந்தாள் என்று காயத்ரிக்கே தெரியவில்லை.

அவள் அமைதியாக நிற்பதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட சூரியன்
“அண்ணி நீங்கள் போய்ப் பல்லவியுடன் இருங்கள். உங்களைக் காணவில்லை என்றால் உள்ளே ஆர்ப்பாட்டம் தொடங்கி விடும்”
என்றபடி அவளை உள்ளே அனுப்பி வைத்தான்.

அதுவரை இருந்த அவளது எண்ணப் போக்கு சடுதியில் அனுவைப் பற்றியதாக மாறியது.
அவளைத் தேடிக் கொண்டு விரைந்து போனாள் காயத்ரி.

காயத்ரியைப் பின் தொடர்ந்து செல்லப் போன கஸ்தூரியை
“ஒரு நிமிடம்”
எனத் தடுத்து நிறுத்தினான் சூரியன்.

அவளோ அவனது சொல்லுக்குக் கட்டுப் பட்டு நின்றாலும் கூட அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.

தலை கவிழ்ந்து தரையைப் பார்த்தபடி நின்றவளைச் சில நொடிகள் பார்த்திருந்தான்.

“தப்பு செய்தவர்கள் தான் தலை குனிந்து நிற்பார்களாம். நீ செய்த தப்பு என்னவென்பது உனக்குப் புரிகிறதா?”

“நான் என்ன தப்பு செய்தேன்?”

“அது சரி நல்ல கேள்வி தான். அண்ணி தான் குழம்பிப் போய் இருக்கிறார்கள் அதனால் ஏதேதோ முடிவு எடுத்து விட்டார்கள். நீயாவது கொஞ்சம் யோசிக்க வேண்டாமா?”

“அக்கா சொன்னதும் எடுத்த முடிவும் சரி தானே?”

“இரண்டு அறை விட்டேன் என்றால் இருக்கும் முப்பத்திரண்டு பல்லும் பறக்கும். நீ புரிந்து தான் பேசுகிறாயா?

“நான்…”

“என்ன நான்… அண்ணிக்கு இப்போது கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் அது தெரியாதா உனக்கு. இந்த நேரத்தில் அவர்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டாமா? வெளியே போய் அவரை எப்படிச் சரியாகப் பார்த்துக் கொள்வாய்?”

“ஐயையோ ஆமாம் என்ன”

“வாயை மூடிக் கொண்டு போய் விடு எனக்கு வருகிற கோபத்தில் ஏதாவது திட்டி விடுவேன்”

“நீங்கள் தானே நிற்கச் சொன்னீர்கள்… எனக்கும் குழப்பமாக இருந்தது. அதனால் தான் ஒன்றுமே தோன்றவில்லை. அக்கா சொன்னதற்கு எல்லாம் ஆமாம் என்று சொல்லி விட்டேன். அதற்கு இப்படித் திட்டுகிறீர்களே”
என்று விட்டால் அழுது விடுவேன் என்பது போலச் சொன்னாள் கஸ்தூரி.

கஸ்தூரியின் கலங்கிய கண்களைப் பார்த்தவனுக்கு அவனையும் மீறி லேசாகச் சிரிப்பு வருவது போல இருந்தது.

எங்கே தான் சிரித்தால் அதைச் சாக்காக வைத்துத் தன்னை ஏதேனும் பேசி விடுவோளோ என நினைத்தவன் சிரமப் பட்டுத் தன் சிரிப்பை அடக்கினான்.

அவன் என்ன முயன்ற போதும் அவனது சிரிப்பைக் கண்டு கொண்டு விட்டாள் கஸ்தூரி.

அதுவரை இருந்த அவளது இறுக்கம் லேசாகத் தளர்ந்தது.

“கஸ்தூரி நான் உன்னைத் தைரியமான பெண் என்று அல்லவா நினைத்து அன்று பாராட்டினேன். பார்த்தால் நீ இப்படிச் சின்ன விஷயத்திற்கே கண் கலங்குகிறாயே”
என்றான் சிறிது குறும்புத்தனமாக.

அவளது இறுக்கம் தளர்ந்ததால் அவன் சொன்னதற்கு அவளால் பதிலடி கொடுக்க முடிந்தது.

“நீங்களாக அப்படி நினைத்துக் கொண்டதற்கு நானா பொறுப்பு. நீங்களே சொல்லி விட்டீர்களே சிறிய விஷயம் என்று அப்படி ஆனால் சிறு விஷயத்திற்கு இப்படியா திட்டுவது. அதுவும் சும்மாவா திட்டினீர்கள் ஏதோ அறைந்தால் முப்பத்திரண்டு பல்லும் கொட்டுமாமே. அது மட்டும் ஒரு நாளும் நடக்காத விடயம் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்”
என்றாள் அவனுக்குப் பதில் சொன்ன திருப்தியில்.

அவள் பேசுவதைச் சிறு புன்னகையுடன் பார்த்திருந்தவன் இறுதியில் அவள் சொன்னதைக் கேட்டதும் புருவங்களை உயர்த்தினான்.

“என்ன என்ன நான் அறைந்தால் உன் முப்பத்திரண்டு பல்லும் கொட்டாதா? பரிசோதனை செய்து பார்ப்போமா?”

“வீண் முயற்சி செய்யாதீர்கள். பரிசோதனை பிழைத்துப் போய் விடும்”

“அவ்வளவு நம்பிக்கையா என்மேல்... நான் உன்னை அறைய மாட்டேன் என்பதில்…”
என்று கேட்டபடி ஒரு எட்டு எடுத்து வைத்தவனைப் பார்த்தவள் சட்டென்று பின்னால் சென்றாள்.

அவளது செய்கையைப் பார்த்தவன்
“நின்று அறையை வாங்கிக் கொண்டு அதன் பின்னர் பாரேன் முப்பத்திரண்டு பல்லும் கொட்டுகிறதா இல்லையா என்பதை”

“இருந்தால் தானே பார்ப்பதற்கு”

“புரியவில்லை”

“நீங்கள் அறை விட்ட பிறகு நான் உயிரோடு இருந்தால் தானே பார்ப்பதற்கு”
என்று லேசாகச் சிரித்தாள்.

அவள் சிரிப்பைப் பார்த்தவன்
“இப்போது ஒத்துக் கொள்கிறாயா நான் அடிக்கும் அடியில் உன் முப்பத்திரண்டு பல்லும் கொட்டும் என்பதை”

“இல்லை இல்லவே இல்லை”

“ஏய்…”

“எனக்குத் தான் முப்பத்திரண்டு பல்லும் இல்லையே. இரண்டு பற்களை ஏற்கனவே சொத்தை என்று பிடுங்கி விட்டார்களே. நீங்கள் அடித்தால் முப்பது பல்லு தான் கொட்டும்”
என்று சொல்லியபடி உள்ளே ஓடி விட்டாள் கஸ்தூரி.

உள்ளே ஓடியவள்
என்னடா இது இவ்வளவு நேரமும் நான் போட்ட மொக்கையில் அவன் என்னை விசித்திரமாகப் பார்த்திருப்பான் என எண்ணிய படி தலையில் கொட்டிக் கொண்டாள்.

ஆனால் வெளியே சூரியனோ அவள் போன திசையைப் பார்த்த படி வாய் விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தான் என்பதை அவள் அறியவில்லை.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

சூரியனுக்குப் பெரும் சங்கடமாகப் போய் விட்டது. அண்ணியைப் பற்றிய விஷயத்தை அண்ணனிடம் மறைப்பது அத்தனை சரியாக அவனுக்குப் படவில்லை.
அதனால் உடனேயே அண்ணனிடம் காயத்ரி பேசியதை அப்படியே சொல்லி விட்டான்.

சூரியன் தொலைபேசியில் சொன்ன செய்தியைக் கேட்டதில் இருந்து ஆதித்யனுக்கு இருப்பே கொள்ளவில்லை.

விடிந்ததும் முதல் வேலையாக அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு வீட்டிற்குச் செல்லும் வேலையைப் பார்க்க வேண்டும் என முடிவு எடுத்தான்.

அவன் வீட்டில் இருந்து இவ்வளவு தூரம் தனியே வந்ததற்குக் காரணமே காயத்ரியின் விருப்பத்திற்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

அவளுக்காக அவன் அத்தனை தூரம் யோசிக்கும் போது அவள் எப்படி வீட்டை விட்டுப் போக முடிவு செய்யலாம்.

வீட்டை நெருங்க நெருங்க ஆதித்யனின் கோபம் ஏகத்துக்கும் எகிறத் தொடங்கியது.

நிச்சயமாக இன்று யாரையேனும் குதறாமல் அவன் விடுவானா என்பது கேள்விக்குறி தான்…

அத்தனை கோபம் அவனுக்கு. அவளுக்காக என்று அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்தால், அதற்கு அவள் கொடுக்கும் பரிசு இது தானா?
இப்போது அவளுக்கு ஏழு மாதம் அடுத்த மாதம் அவளுக்கு வளைகாப்பு செய்ய வேண்டும் என்று நான் எத்தனை திட்டங்கள் போட்டு வைக்க, அவள் பாட்டிற்குச் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிப் போய் விடுவாளாமா?

அவள் அனுமதி கேட்காமல் தாலி கட்டியது தவறு தான், ஆனால் அனுமதி கேட்டிருந்தால் அவள் சம்மதம் சொல்லி இருக்க மாட்டாள் என்பதால் அப்படிச் செய்ய வேண்டி ஆயிற்று.

இந்தப் பாழாய்ப் போன காதலுக்கு என்று அடிமை ஆனேனோ அன்றே என் நிம்மதி போய் விட்டது.
அவன் எண்ணங்கள் எல்லாம் காயத்ரியையே சுற்றிச் சுற்றி வந்தது.

வாசலில் சத்தம் கேட்டதும் ஓடி வந்த சூரியன், அண்ணனை அங்கு பார்த்ததும் ஓடிச் சென்று கட்டிக் கொண்டான்.

தம்பியைத் தன்னோடு கட்டிக் கொண்டவனின் பார்வை தோட்டத்து வீட்டைச் சல்லடை செய்தது.

நிச்சயமாக இன்று காயத்ரிக்கு நல்ல மண்டகப்படி காத்திருக்கிறது.
அவன் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அவள் திணறத்தான் போகிறாள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
நெருப்புக்குச் சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
நிலவுக்கு வன்முறைகள் கற்றுக் கொடுத்தாய்”

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 17

IMG-20210627-WA0025~2.jpg

IMG-20210701-WA0016~2.jpg

whatsappimage2020-09-29at5-01-58pm-1601379240-1603547986~2.jpg

தோட்டத்து மூலையில் நின்றிருந்த கொன்றல் மரத்தின் மஞ்சள் மலர்கள் உதிர்ந்து, காற்றினால் உந்தப் பட்டுச் சாளரத்தின் வழியாக உள்ளே அறைக்குள் கொட்டிக் கிடந்தது.

அதோடு லேசான தென்றல் காற்று சாளரத்தின் வழியே அறையில் நுழைந்து ஒரு குளுமையை ஏற்படுத்தி விட்டிருந்தது.

அந்தக் குளுமையினால் கூட அறையில் நின்றிருந்த ஆதித்யனின் உள்ளத்து வெம்மையைத் தணிக்க முடியாமல் போயிற்று.

காயத்ரியின் வரவுக்காகத் தனது அலுவலக அறையில் காத்திருந்தான் ஆதித்யன்.

சூரியன் காயத்ரியிடம், அண்ணா உங்களிடம் ஏதோ முக்கியமாகப் பேச வேண்டுமாம் என்று அலுவலக அறைக்கு அனுப்பி வைத்திருந்தான்.

அவனிடம் முடிவாகப் பேசி விட்டே வீட்டை விட்டுப் போக வேண்டும் என்ற எண்ணத்தில் அலுவலக அறைக்குள் நுழைந்தாள் காயத்ரிதேவி.

அங்கே சாளரக் கம்பிகளை இறுகப் பற்றிய படி நின்றிருந்தான் ஆதித்யன்.

தான் வந்ததைத் தெரியப் படுத்துவதற்காக லேசாகத் தொண்டையைச் செருமிக் கொண்டவளை நிதானமாகத் திரும்பிப் பார்த்தான் அவன்.

அவளைப் பார்த்ததும் அதுவரை கட்டுப் பாட்டுக்குள் வைத்திருந்த கோபம் எல்லையைத் தாண்டியது.

ஆனாலும் அவளது தாய்மைத் தோற்றம் அவன் கோபத்தை மட்டுப் படுத்த முயன்றது.

கண்களை மூடித் தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தான்.

ஆதித்யனையே பார்த்துக் கொண்டு நின்றவளுக்கும் லேசாகக் கோபம் எட்டிப் பார்த்தது.
“உங்களிடம் நான் பேச வேண்டும்”
என்று தொடங்கினாள்.

அவனோ பதிலேதும் பேசாமல் அவளை மௌனமாகப் பார்த்திருந்தான்.

அவனது மௌனத்தைச் சம்மதம் என எடுத்துக் கொண்டு தன் உள்ளத்தில் இதுவரை நாளும் அரித்துக் கொண்டு கிடந்த விஷயங்களை எல்லாம் அவனிடம் கொட்டத் தொடங்கினாள்.

“பிழை செய்து விட்டுத் தலை மறைவாகி விட்டால் பிழை சரி ஆகி விடுமா? என் சம்மதம் கேட்காமல் எப்படி நீங்கள் எனக்குத் தாலி கட்டினீர்கள்.
அதுவும் உங்கள் முதல் மனைவியை வீட்டில் வைத்துக் கொண்டு. இது எவ்வளவு பெரிய பிழை.
நீங்கள் கூட இப்படித் தரம் இறங்கிப் போவீர்கள் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை ஆதி.”
என்றாள் கோபத்தை மறையாத குரலில்.

அவள் முதலில் பேசட்டும் என்று மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு அவள் இறுதியில் சொன்ன
'உங்கள் முதல் மனைவியை வீட்டில் வைத்துக் கொண்டு'
என்ற வார்த்தைகள் காதில் விழுந்ததும் புருவங்களை உயர்த்தியபடி அவளைக் கூர்ந்து நோக்கினான்.

அவன் புருவங்களை உயர்த்தியபடி நின்றதோடு சரி. வாய் திறந்து எதையும் சொல்லவில்லை என்பது அவள் கோபத்தை இன்னும் அதிகரித்தது.

“ஏன் இப்படி மௌனமாக இருக்கிறீர்கள். செய்த பிழைகள் உறுத்தவில்லையா?”
என்றாள் கடினமாக்கப் பட்ட குரலில்.

அப்போதும் எதையோ யோசித்தவன்
“செய்த பிழைகளா? அப்படி எத்தனை பிழைகள் செய்து விட்டேன் நான்”
என்றான் தெரிந்து கொள்ளும் வேகத்துடன்.

“அடடா என்னைக் கேட்டால் உங்களுக்குத் தெரியாதா நீங்கள் செய்த பிழைகள் பற்றி”

“நீ தானே நான் பிழைகள் செய்தேன் என்று குற்றம் கற்பிக்கிறாய். நீயே விளக்கமாகச் சொல்வது தானே”

“சரி நானே சொல்கிறேன் கேளுங்கள். முதலாவது பிழை என் சம்மதம் கேட்காமல் என் கழுத்தில் தாலி கட்டியது. இரண்டாவது பிழை முதல் மனைவிக்குத் துரோகம் செய்து விட்டீர்கள். மூன்றாவது பிழை அவளால் நீங்கள் செய்த துரோகத்தை உணர முடியாததிற்கு நீங்கள் தான் காரணம். போதுமா...”

“ஏய் கொஞ்சம் இரு முதல் மனைவி முதல் மனைவி என்கிறாயே யாருடைய முதல் மனைவி”

“தெரியாத மாதிரி கேட்கிறீர்களே உங்களுடையது தான்”

“என்னுடையதா சரி இருக்கட்டும் என்னுடைய முதல் மனைவி யார் என்று நீயே சொல்லி விடு அதையும் கேட்போம்”

“அனுபல்லவி... அவளை வீட்டில் வைத்துக் கொண்டு எனக்குத் தாலி கட்டி இருக்கிறீர்கள். அவளது இந்த நிலைக்குக் காரணம் கூட நீங்கள் தானே”
என்று காயத்ரி சொன்னதைக் கேட்டவன் கண்களில் கனல் வீச
“போதும் நிறுத்துடி”
என்று கிட்டத் தட்டக் கத்தினான்.

அவன் அப்படிச் சத்தமாகப் பேசியதும் ஒரு கணம் திடுக்கிட்டவள் உடனேயே சுதாரித்துக் கொண்டு
“சத்தமாகப் பேசினால் உண்மை பொய் ஆகாது தெரிந்து கொள்ளுங்கள்”
என்றாள் கோபமாக.

அவள் பேசுவதைக் கேட்டபடி அவளை வெறித்துப் பார்த்தபடி நின்றவன் ஒரு பெரு மூச்சுடன்
“அம்மா தாயே உனக்குத் தான் என் மேல் என்னவொரு அபிப்பிராயம்.
நினைக்கவே புல்லரிக்கிறது.
ஆக மொத்தம் உன் கழுத்தில் தாலி கட்டியது மட்டும் உன் வெறுப்புக்குக் காரணம் இல்லை.
ஏன்டி வாயைத் திறந்து எதையுமே கேட்க மாட்டாயா? நீயாகவே ஒரு கற்பனை செய்து கொண்டு என்னை ஒரு வில்லன் மாதிரி... மாதிரி என்ன வில்லனே தான். என்னை வில்லனாகவே நினைத்து விட்டாய் இல்லையா?”
என்றான் உணர்ச்சி அற்ற குரலில்.

தொடர்ந்து...
“நான் என்றாவது உன்னிடம் வந்து சொல்லி இருக்கிறேனா? பல்லவி என் மனைவி என்று. நீயாகவே அப்படி ஒரு முடிவு செய்து கொண்டு விட்டாய் .
ஒரு வார்த்தை என்னிடம் கேட்கத் தோன்றவில்லை உனக்கு அப்படித் தானே?”
என்றவனைச் சிறு குழப்பத்துடன் பார்த்தாள் காயத்ரி.

"நான் செய்த ஒரே பிழை உன் சம்மதம் கேட்காமல் தாலி கட்டியது மட்டும் தான். என் முதல் மனைவியும் நீ தான் கடைசி மனைவியும் நீ தான்.”
என்றவன் தலையை அழுந்தக் கோதியபடி அவள் விழிகளுக்குள் பார்த்தான்.

“நான் செய்த பிழைக்கு மன்னிப்புக் கேட்க வேண்டியது என் பொறுப்பு. இப்போதும் உனக்கு என் மேல் வெறுப்பு இருந்தால் உன் இஷ்டம் போல நீ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.”
என்றவன் பேச்சு முடிந்தது போல வெளியே செல்லத் திரும்பினான்.

ஏதோ நினைத்தவனாக அவளைத் திரும்பிப் பார்த்தவன்
“ஆனால் ஒரு நிபந்தனை குழந்தை பிறக்கும் வரையில் நீ இங்கே இருந்து தான் ஆக வேண்டும். அதன் பிறகு நீ உன் இஷ்டம் போல நடந்து கொள்ளலாம்.”
என்று அழுத்தமாகக் கூறி விட்டு வெளியே சென்று விட்டான்.

அவன் சென்ற திக்கைப் பார்த்தபடி திக்பிரமை பிடித்தவள் போல நின்றாள் ஆதித்யவர்மனின் மனைவி.

வெளியே வந்த ஆதித்யன் நேராகத் தோட்டத்தில் இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டான்.

அவனுக்கு அவள் சொன்ன வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கோபம் கோபமாக வந்தது. ஆக மொத்தம் அவ்வளவு தானா? என் மேல் கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லையா? அது சரி ஒரு காலத்திலும் அவள் தான் என்னை நேசித்ததே இல்லையே.
என்று அவனது மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

ஆதித்யவர்மன் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் காயத்ரிதேவி.

அப்படியானால் அனு அவரின் மனைவி இல்லையா? ஐயோ கடவுளே இது தெரியாமல் நானாகவே ஒரு முடிவெடுத்து வார்த்தைகளால் அவரின் மனதைக் கிழித்து விட்டேனே.

ஆனால் அனுவுக்கு இந்த வீட்டில் என்ன இடம் என்றே புரியவில்லை. இது பற்றி அவரிடம் கேட்டால் பார்வையாலேயே பொசுக்கி விடுவார்.

அவரின் காலில் விழுந்தாவது மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர் மன்னிக்காது விட்டாலும் பரவாயில்லை. என்னை வெறுத்து விடக்கூடாது அது போதும் எனக்கு. என அவள் எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"ஒரு நாள் சிரித்தேன்
மறுநாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா"
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

அதற்குப் பின்னர் வந்த நாட்களில் ஆதித்யன் காயத்ரியிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

அவளாக அவனிடம் பேச முயற்சி ஏதும் செய்தாலோ அவனுக்குத் திடீர் திடீரென ஏதாவது வேலைகள் முளைத்தது.

இதனால் காயத்ரியோ ஆதித்யன் தன்னை வெறுத்தே விட்டானோ என்று மனதுக்குள் மருகினாள்.

இப்படி இருக்கும் போது மீண்டும் ஏதோ வேலையாக வெளியே செல்வது பற்றிய பேச்சு வார்த்தை வந்த போது அதற்குத் தயாரானான் ஆதித்யன்.

ஆனால் இந்த முறை சூரியன் அதை அடியோடு மறுத்து அந்த வேலையைப் பார்ப்பதற்கு நான் போகிறேன் என்றபடி முடிவாகச் சொல்லி விட்டான்.

“உனக்கு எதற்குச் சிரமம் சூரியா.”

“இதில் சிரமம் ஒன்றுமே இல்லை அண்ணா. நீ இப்போது அண்ணியோடு இருக்க வேண்டும். பாவம் அவர்கள் எதையெதையோ நினைத்துப் பயந்து போய் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்”

“யாரு உன் அண்ணி எதையெதையோ நினைத்துப் பயந்து போய் இருக்கிறாளா? நன்றாக இருக்கிறது உன் கதை”

“ஏன் அண்ணா “

“ஆமாம் உன் அண்ணி எதையெதையோ எல்லாம் தானாகவே கற்பனை செய்வாளே தவிர ஒரு தடவை கூடச் சம்மந்தப் பட்டவர்களோடு அதைப் பற்றிக் கேட்கவே மாட்டாள்”

“பாவம் அண்ணா அண்ணி ”

“பாவம் தான் சூரியா ஆனால் உன் அண்ணி இல்லை உன் அண்ணா நான் தான் பாவம் அதைப் புரிந்து கொள்”

“சரி அண்ணா விவாதம் வேண்டாம் இருவருமே பாவம் தான் போதுமா? இருவரும் எதிரும் புதிருமாக இருக்காமல் ஒருவரைப் பற்றி ஒருவர் நன்றாகப் பேசிச் சுமுகமாகும் வழியைப் பாருங்கள்”
என்ற சூரியா பழத் தோட்ட வேலைகளைப் பார்க்கப் போவதற்குத் தயாரானான்.

......................................................................

ஆதித்யன் வீட்டிற்கு வந்து விட்ட செய்தி கேட்டதுமே சரண் குமார் ஓடோடி வந்தான்.

நண்பனைப் பார்த்ததும் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டவனைச் சந்தோஷமாக வரவேற்றான் ஆதித்யன்.

சரணின் முகத்தில் ஏதோ சரியில்லை என்பதைப் புரிந்து கொண்ட அவன் தோழன்
“குமரா என்னிடம் ஏதேனும் சொல்ல வேண்டுமா?”

“ஆமாம் வர்மா அது…”

“என்னடா இது என்னிடம் சொல்வதற்கு உனக்கு ஏன் இத்தனை தயக்கம்”

“அப்படியில்லை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை”

“நான் உன் வர்மாடா பட்டென்று சொல்லி விடு”

“வர்மா… நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறேன். ஆனால்”

“வாழ்த்துக்கள் குமரா வாழ்த்துக்கள் ஒரு வழியாகத் தேறி விட்டாய் என்று சொல்லு. ஆமாம் யார் அந்தப் பாக்கியசாலி…”

“…......................”

“என்னடா அமைதியாகி விட்டாயா? இல்லை என்றால் வெட்கமா?

“வர்மா… நான் பல்லவியைத் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறேன். அவளை எனக்கு மணம் முடித்துக் கொடுப்பாயா?”
என்று தன் விருப்பத்தை நண்பனிடம் போட்டு உடைத்தவன் அவனது முகத்தையே பார்த்திருந்தான்.

ஆதித்யனோ அதிர்ந்து போய் நின்றான். அவனது அதிர்ச்சியைச் சரணால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“என்னடா வர்மா இப்போது நீ அமைதி ஆகி விட்டாய்”

“குமரா நீ எல்லாம் தெரிந்து தான் பேசுகிறாயா?”

“எல்லாம் தெரிந்ததால் மட்டும் தான் பேசுகிறேன்”

“குமரா இது உன் வாழ்க்கை அதை வீணாக்க நான் விரும்பவில்லை”

“வர்மா இப்படிச் சொல்லாதே வேறு யாரும் இப்படிச் சொன்னாலும் எனக்கு அது பற்றிக் கவலையில்லை ஆனால் நீயே இப்படிச் சொல்லலாமா”

“இதோ பார் எனக்குப் பல்லவியின் நலன் முக்கியம் தான் ஆனால் அதை விட என் குமரன் வாழ்க்கை ரொம்ப ரொம்ப முக்கியம் புரிந்ததா?”

“அப்படி ஆனால் உடனே சம்மதம் சொல்லேன்டா”

“நீ தெரிந்து தான் பேசுகிறாயா? இந்தத் திருமணத்தால் நீ நிறைய உறவுகளை இழக்க நேரிடும்”

“எத்தனை உறவுகள் இல்லாமல் போனாலும் பரவாயில்லையடா எனக்குத் தான் நீயும் சூரியனும் இருக்கிறீர்களே அது போதும்”

“குமரா குமரா… எனக்கு உன் முடிவைக் கேட்டு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை”

“அப்படியானால் அழுது கொண்டே சிரி”

“குமரா உனக்கு எல்லாம் வேடிக்கை ஆக இருக்கிறதா? உண்மையைச் சொல் பல்லவி மீது நீ ஒன்றும் அனுதாபப் பட்டு இந்த முடிவு எடுக்கவில்லை தானே?”

“அடேய் என்னடா சொல்கிறாய். அப்படி எல்லாம் இல்லை. நிறைய பெண்கள் மீது அனுதாபம் இருக்கிறது. பல்லவி மீது மட்டும் ஏதோ ஒரு நட்பு இருக்கிறது”

“அது சரி”

“வர்மா நான் பல்லவிக்கு வாழ்வு கொடுக்கிறேன் என்று மட்டும் நினைக்காதே... திருமணம் என்று ஒன்று நடந்தால் அது கணவனை இழந்த ஒரு பெண் கூடத் தான் நடக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.”

“திவ்வியமாகப் புரிகிறது மச்சி… உன்னைப் போன்றவர்கள் இந்தப் பூமியில் இருக்கும் வரை இந்தப் பூமி வாழும்”
என்றபடி அரை மனதாகத் தன் உயிர் நண்பனின் விருப்பத்திற்குச் சம்மதித்தான்.

“ஆனால் ஒரு விடயம் வர்மா… பல்லவிக்குக் குணமாகும் வரை நான் காத்திருந்து அவள் சம்மதத்தோடு தான் அவள் கரம் பிடிப்பேன். அவளுக்கு விருப்பம் இல்லை என்றால் விலகி நிற்பேனே தவிர அப்பா பார்க்கும் எந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் ”
என்றான் சரண்.

“இது என்னடா பைத்தியக்காரத்தனம்”

“நான் உன் நண்பன் வர்மா. உன்னுடைய பைத்தியம் எனக்கும் தொற்றி விட்டது. காயத்ரி வேறொருவனைத் திருமணம் செய்து விட்டாள் என்று காலம் முழுவதும் திருமணமே வேண்டாம் என்று இருந்தவன் தானே நீ...”

“ஆனால் அது… காயத்திரி என்னை ஏமாற்றி விட்டுச் சென்று இருந்திருந்தால் நானும் வேறு வாழ்க்கை அமைத்துக் கொண்டு இருந்திருப்பேன்... அவள் தான் என் நேசத்தையே நிராகரித்து விட்டாளே என் காதலை ஏற்கவில்லையே என்ற ஆதங்கம் தான்”

“என்ன ஆனால் அது… உன் நல்ல மனதிற்குத் தான் காயத்ரியைக் கண்ணில் காட்டி இருக்கிறான் கடவுள்.”

“எதையாவது சொல்லி என் வாயை அடைத்து விடு”

“நீ எதையாவது சொல்லிக் கொண்டே இருந்தால் வேறு என்ன செய்ய முடியும்.”

“போடா வாயாடி”

“எல்லாம் உன்னோடு சேர்ந்ததால் கிடைத்த திறமை தான் வர்மா… அதெல்லாம் இருக்கட்டும் எப்போது காயத்ரிக்கு வளைகாப்பு.”

“அதையும் தான் யோசித்துக் கொண்டிருந்தேன்”

“யோசிப்பதை நிறுத்தி விட்டு ஒரு நல்ல நாளாகப் பார் வர்மா…”

“இன்னும் மூன்று கிழமைக்குப் பிறகு இரண்டு நல்ல நாட்கள் இருக்கிறது என்று நேற்றுச் சித்தி சொன்னார்கள் பார்ப்போம்”

“வளைகாப்பை வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டும் வர்மா”

“சிறப்பாகச் செய்து விடுவோம். வேலை விஷயமாக சூரியா தான் இம்முறை பழத்தோட்டத்திற்குப் போகிறான். அவன் இரண்டு கிழமைகளில் வந்து விடுவான் அதன் பின்னர் தான் வளைகாப்பு வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்.”

“சரி மச்சி நான் வந்த வேலை முடிந்து விட்டது. இப்போது என் கடமை என்னை அழைக்கிறது. பிறகு வருகிறேன்.”
என்றவாறு சரண் குமார் சென்று விட்டான்.

ஆதித்யனுக்குக் காயத்ரி மேல் கோபம் இருந்தாலும் அவளது வளைகாப்பிற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

பிடித்தவர்கள் மீது கோபம் இருப்பது எல்லாம் அவர்கள் வந்து ஒரு மன்னிப்புக் கேட்கும் வரை தான். சில சமயங்களில் மன்னிப்பு கேட்க முன்னரே கோபம் பறந்தும் போய் விடும்.

ஆதித்யனுக்குக் காயத்ரி மீதான கோபம் அவள் தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டாள் என்பதால் வந்தது.

இந்தக் கோபம் பாராமுகம் எல்லாம் எதுவரை போகிறது என்பதைப் பார்க்கலாம்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையே போதிக்கும் காதல் தினம் தேவை
கெஞ்சினால் மிஞ்சிடும் மிஞ்சினால் கெஞ்சிடும் காதல் அது போதை”
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Status
Not open for further replies.
Top